லோகமாதேவியின் பதிவுகள்

மும்பை-  மீட்கப்பட்ட கொள்ளிக்கட்டை

சாமுவேல் மற்றும் சூசன்னா வெஸ்லே தம்பதியினருக்கு 19 பிள்ளைகள்.

19 பிள்ளைகளை வளர்ப்பதைக் குறித்துச் சிந்திப்பதை விட அத்தனை கர்ப்பகாலத்தையும் 19 பிரசவங்களையும் கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது. அதுவும் இப்போதிருக்கும் எந்த நவீன மருத்துவ வசதிகளும் இல்லாத காலத்தில். 

சாமுவேல் இறைப்பணியாளர். சூசன்னா இல்பேணுநர்.  ஆனால் சூசன்னாதான்  மெதடிஸப் பிரிவின் தாய் என்று குறிப்பிடப்படுகிறார். அப்படி ஒரு கட்டுக்கோப்பான முறையில் குடும்பத்தை அவர் நடத்தினார். 19-ல் 10 பிள்ளைகள் பல காரணங்களால் இறந்து போனார்கள் 9 பேரை நன்கு வளர்த்து ஆளாக்கினார்.

மூன்று தளங்கள் கொண்ட வசதியான பெரிய வீடு அவர்களுடையது. ஆனால் அந்த வீடு தேவாலயத்தால் அவர்கள் வசிக்க அளிக்கப்பட்டது, அவர்களுடைய சொந்த வீடு அல்ல. அது மரப்பலகைகளும் வைக்கோலும் கொண்டு கட்டப்பட்ட, எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும் படியான வீடு. அக்காலத்தில் இறைப்பணியாளர்கள் மேல்மட்டவாசிகளைப் போல இருக்க வேண்டும் என்று தேவாலயங்கள் எதிர்பார்த்தன. எனவே சாமுவேல்  அந்த வீட்டில் வசித்து, கண்ணியமான உயர்ந்த ஆடைகள் அணிந்து குழந்தைகளை ஆக்ஸ்போர்டு பள்ளியில் படிக்க அனுப்ப வேண்டியிருந்தது. அத்தனை வசதியில்லாத அவர் அதன் பொருட்டு பல கடன்களிலும் சிக்கி இருந்தார்.

அவர்கள் வசித்த Epworth என்னும் ஒருசதுப்பு நிலமும் சிறு சந்தைப்பகுதியையும் மையமாகக் கொண்ட சிறு நகரத்தில் இருந்த மக்கள், அயலவரை எதிர்கொள்வதில் பரிச்சயமற்றவர்களாகவும் அவர்களிடம் கடுமை காட்டுபவர்களாகவும் இருந்தனர். உள்ளூர்வாசிகளும் கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் சாமுவேல் வெஸ்லே சார்ந்திருந்த கிறிஸ்தவப் பிரிவைச் சாராதோர். 

1700-களில் அங்கிருந்த அனைவருமே கிறிஸ்தவர்கள் தான் என்றாலும் அதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இரு பிரிவுகள் இருந்தனர். சாமுவேல் வெஸ்லே உள்ளூர்வாசிகளிடம் வரி வசூலிக்கும் தேவாலயத்தைச் சேர்ந்தவராக உயர்ந்த பிரிவிலும், பிற உழைக்கும் உள்ளூர் வாசிகள் தாழ்ந்த, தேவாலயங்களுக்கு வரி செலுத்தும் பிரிவிலும் இருந்தனர். மேலும் சாமுவேல் மிகுந்த கண்டிப்பான இறைப்பணியாளராக இருந்து உள்ளூர்வாசிகள் மது அருந்துவது, சுகாதாரமின்றி இருப்பது ஆகியவற்றைப் பாவம் எனக் கண்டித்தார். 

தேவாலயங்களுடன் அரசும் இணைந்து கொண்டு வழிபாடுக்கான விதிகளை மக்களிடையே திணித்தது. எனவே, வெளியூரிலிருந்து வந்து நம்மைக் கண்டித்து, விதிகளுக்குட்படச் செய்து, வரி வசூலித்து, எப்படி வழிபட வேண்டுமென வகுப்பெடுப்பவர்கள் என அந்தப் பிரிவின் மீது உள்ளூர்க்காரர்களுக்கு வெறுப்பு உண்டாகி அது சாமுவேலின் மீதான வெறுப்பாக வளர்ந்து கொண்டிருந்தது. 

சாமுவேலின் நாயைக் கல்லெறிந்து கால் ஒடித்தார்கள். சாமுவேல் வீட்டுப் பசுக்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார்கள். இரவுகளில் பலமுறை வீட்டின் மீது கல்லெறியப்பட்டது. மிகச் சிறிய தீ விபத்து இரண்டு முறை உண்டாக்கப்பட்டு அப்போதே கவனிக்கப்பட்டதால் அணைக்கப்பட்டது. சாமுவேல் குடும்பத்தினர் மீது உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு புகைச்சல் இருந்தது.

எப்வொர்த் நகரிலிருந்து சிறு குளங்களும் நதிகளும் இணைந்த  மாபெரும் சதுப்புநிலத்தை நம்பியே அங்கிருந்தோர் வாழ்ந்தனர். அந்தச் சதுப்புநிலத்திலேயே நாணலைக் கொண்டு எடையற்ற வீடுகளைக் கட்டிக்கொண்டு மீன் பிடித்தும் பறவைகளை வளர்த்துக்கொண்டுமிருந்தார்கள்.மழையற்றுப்போய் சதுப்பு நிலம் வறண்டபோது அங்கு கால்நடைகளை மேய்த்தார்கள்.

ஆனால் முதலாம் சார்லஸ் மன்னர் காலத்தில் அரசு டச்சு பொறியாளர்களை வரவழைத்து “Draining the fens” என்னும் முரண்பாடுகள் அதிகமிருந்த ஒரு  பொறியியல் முறையை அறிமுகம் செய்து, அதை நடைமுறைப்படுத்தி அந்தச் சதுப்புநிலத்தின் நீரை முழுக்க வெளியேற்றி அங்கு மண்ணைக்கொட்டி மேடாக்கி கோதுமை வயல்களை உருவாக்கினார்கள். புதிய வயல்கள் பெரும் பணக்காரர்களுக்கும் , சாமுவேல் உள்ளிட்ட இறைப்பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு அங்கு விளைந்த தானியம் அரச குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது.

நகர மேம்பாட்டுத் திட்டம் என்னும் பெயரில் இது நடந்ததால் உள்ளூர்க்காரர்களின் வாழ்வாதாரம் முழுக்கப்  அழிந்தது. சாமுவேல் இந்த நகர மேம்பாடு என்னும் அரசின் திட்டத்தை ஆதரித்ததாலும் அவர் மீது உள்ளூர் மக்களுக்கு விரோதம் வந்தது. சாமுவேலுக்குச் சொந்தமான வயல்வெளி முழுக்கத் தீயிட்டு எரிக்கப்பட்டது. அவரது வீடும் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டது.

சாமுவேல் fenland மக்கள் என அழைக்கப்பட்ட அந்த சதுப்பு நில மக்களின் சுகாதாரமின்மையை இந்த வளர்ச்சித் திட்டம் மேம்படுத்துமென நினைத்தே அதற்குச் சாதகமாக நடந்துகொண்டார்.

உண்மையில் அந்த நகரவாசிகள் எதிர்த்தது சாமுவேல் என்னும் தனிமனிதரையல்ல, அரசையும் , வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்த அரசாங்கத்தையும், இழந்த பொருளாதாரத்திற்கான பழிவாங்கலாகவுமே அவர்கள் சாமுவேலை எதிர்த்தார்கள். அரசியல் பொருளாதாரம் மற்றும் இறையியல் காரணங்கள் அவர்களின் எதிர்ப்போடு பின்னப்பட்டிருந்தன. 

சூசன்னா குழந்தைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் வளர்த்தார். அனைவருக்கும் இறையியல், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிப் பாடங்கள் பள்ளிப் பாடங்களுடன் அன்றாடம்  வீட்டிலேயே நடந்தது. மிகக் கண்டிப்பாக மணி அடித்தால் சாப்பாடு என்பார்களே அப்படி  உணவுக்கான காலம் கடைப்பிடிக்கப்பட்டது. இரவு உணவு மாலை 6 மணிக்கே முடிந்து அனைவரும் படுக்கைக்குப் போக வேண்டும் என்னும் நெறியையும் சூசன்னா கட்டாயமாக்கி இருந்தார்.

எந்தப் பொருள் வேண்டுமென்றாலும் கம்பீரமாக வந்து அதைக் கேட்டுப் பெற வேண்டும்; ஒருபோதும் அழுது அடம்பிடிக்கக்கூடாது. அப்படி அடம்பிடித்தால் அந்தப் பொருள் கிடைக்கவும் கிடைக்காது என்பதை சூசன்னா நடைமுறைப்படுத்தி இருந்தார். இரவுகளில் ஒவ்வொரு குழந்தையின் அருகிலும் அவர் அமர்ந்து ஜெபித்தோ அல்லது கதைகள் சொல்லியோ பாடல்கள் பாடியோ உறங்கச் செய்து பின்னர் அடுத்த படுக்கைக்கு வருவார். இப்படி சூசன்னாவின் கட்டுப்பாடான முறைமைகளுக்குட்பட்ட வாழ்க்கை முறைதான் பின்நாட்களில் ஜான் வெஸ்லே மெத்தடிஸம் என்னும் பிரிவைத் துவங்க அடித்தளமிட்டது.

1709 பிப்ரவரி 9-ம் தேதி இரவில் சூசன்னா உடல்நலமின்றி அவரது படுக்கையறையில் இருந்தார். சாமுவேல் அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். குழந்தைகள் அனைவரும் நர்சரி என அழைக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் இருந்த அவர்களுடைய படுக்கையறையில் இருந்தார்கள். அப்போது வீட்டின் கூரையில் சாமுவேலுக்கு எதிரானவர்களால் தீ வைக்கப்பட்டது. 

புகையில் விழித்துக்கொண்ட வேலைக்காரப் பெண் சாமுவேலையும் சூசன்னாவையும் எழுப்பினார். கூரையிட்டிருந்த காய்ந்த வைக்கோலில் தீ மளமளவெனப் பற்றி எரிந்ததால் சாமுவேல் மனைவியையும் மற்ற குழந்தைகளையும் தோட்டத்துக் கதவு வழியாகவும் ஜன்னல் வழியாகவும் விரைந்து காப்பாற்றி அழைத்துச் சென்றார். அத்தனை பேரும் வெளியே வந்தபோதுதான் தெரிந்தது, அப்போதுதான் 5 வயது முடிந்திருந்த ஜான் வெஸ்லே அங்கு இல்லை என்பது. சாமுவேல் பலமுறை மீண்டும் வீட்டுக்குள் நுழைய முயன்றும் தீக்கொழுந்துகளின் வேகம் அவரை நுழைய விடவில்லை. படிக்கட்டுக்கள் முழுவதுமாக எரிந்து விழுந்துவிட்டிருந்ததால் மேல் தளத்துக்குச் செல்ல வழியே இல்லை.

இரண்டாம் தளத்தின் ஜன்னல் வழியே அழுதுகொண்டு எட்டிப் பார்த்த ஜானைக் கண்ட உள்ளூர்வாசிகள் சிலர் (அவர்களில் நெருப்பு வைத்தவர்களும் இருந்தார்கள் எனினும் ஒரு குழந்தை நெருப்பில் இறப்பதை அவர்கள் விரும்பவில்லை), ஒருவர் தோள் மீது ஒருவர் நின்று ஒரு மனித ஏணியை உருவாக்கி ஜானைக் காப்பாற்றினார்கள். ஜானை ஒருவர் தனது தோளில் தாங்கிக்கொண்ட மறு வினாடி வீட்டின் கூரை முழுவதுமாக எரிந்து கீழே சரிந்து சாய்ந்தது.

சூசன்னா, ஜான் உயிர்பிழைத்தது ஒரு அற்புதம் என்றும், ஏதோ ஒரு பெரிய காரணத்திற்காகவே அவர் அந்தத் தீ விபத்திலிருந்து பிழைத்திருப்பதாகவும் நம்பினார்.

‘பைபிளில் குறிப்பிட்டிருக்கும்’ “இது அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளிக்கட்டையல்லவா?” “The Lord rebuke you, O Satan! The Lord who has chosen Jerusalem rebuke you! Is this not a brand plucked from the fire?” (Zechariah 3:2) என்னும் வசனத்தைச் சொல்லி, ஜான் அப்படி முழுமையாக எரிந்து சாம்பலாகப் போகும் ஒரு நெருப்புத் தணலிலிருந்து, ஒரு துண்டு விறகை மட்டும் கடைசி நேரத்தில் கையை விட்டு எடுப்பதைப் போலக் கடவுளால் காப்பாற்றப்பட்டவன் என்றார். இது ஜானின் மனதில் ஆழப் பதிந்தது.

ஜான் வெஸ்லே தன் வாழ்நாள் முழுக்க இந்த வாசகத்தை மறக்கவில்லை. ஒரு “மீட்கப்பட்ட கொள்ளிக்கட்டை”யான தான், தனக்குக் கிடைத்த இந்த மறுவாழ்வை மக்களுக்காகவும் இறைவனுக்காகவும் செலவிட வேண்டும் என்று கருதினார். பிற்காலத்தில் அவர் வரைந்த தனது அதிகாரப்பூர்வ ஓவியத்தில், பின்னணியில் எரியும் வீட்டையும், கீழே இந்த வாசகத்தையும் இடம்பெறச் செய்தார்.

தீவிபத்திற்குப் பிறகு சாமுவேல் வீட்டைப் புதுப்பிக்க 400 டாலர்கள் வரை தேவாலயத்திலிருந்து கடன் பெற்றார். ஏற்கனவே இருந்த பல கடன்களுடன் அதுவும் சேர்ந்துகொண்டு அவரை மரணம் வரை பெருங்கடனாளியாக்கியது. ஆனால் வீட்டை மீண்டும் அவர் புதுப்பித்தார்.

 1711-1712 காலப்பகுதியில், சாமுவேல் வெஸ்லே லண்டனில் நடந்த ஒரு முக்கிய மதக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற தற்காலிகப் பாதிரியார் திறமையாகப் பிரசங்கம் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூசன்னா, தனது குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் வீட்டிலேயே வேதாகமப் பாடங்களை நடத்தத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் சூசன்னாவின் குழந்தைகளும் உறவினர்களும் பணியாட்களும் கலந்துகொண்ட ஒரு குடும்ப வழிபாடாகத்தான் அது இருந்தது. ஆனால், இதைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தனர். விரைவில் சூசன்னாவின் சமையலறையில் 50 பேர், பிறகு 200 பேர் என மக்கள் குவியத் தொடங்கினர். இடமில்லாமல் பலர் வாசலுக்கு வெளியேயும் நின்று கவனித்தனர். அந்தக் காலத்தில் ஒரு பெண் பொதுமக்களுக்கு மதப் போதனை செய்வது என்பது மிகப்பெரிய புரட்சியாகவும், சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டது. 

ஊர் திரும்பிய சாமுவேல் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தேவாலயம் நிச்சயமாக இதை விரும்பாது என சூசன்னாவைக் கண்டித்துப் பிரசங்கக் கூட்டத்தை உடனே நிறுத்தச் சொன்னார்.சூசன்னா இதற்கு இப்படி ஒரு பதிலைச்சொன்னார்.

“நீங்கள் இதை நிறுத்தச் சொன்னால், நான் நிறுத்திவிடுவேன். ஆனால், இந்த மக்களின் ஆன்மீகத் தேவையை முறையாக  நிறைவேற்றாததற்காகக் கடவுள் கேட்கும் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தீர்ப்பு நாளில் என்னை விடுவித்து, உங்கள் மீது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் எழுதிக் கொடுத்தால், நான் நிறுத்திவிடுகிறேன்.”

சாமுவேல் அதன்பினன்ர் மறுபேதும் சொலல்வில்லை

சாமுவேல் வெஸ்லே 1735 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று, தனது 72-வது வயதில் எப்வொர்த் நகரில் காலமானார்.

அவர் இறக்கும் தருவாயில் அவரது மகன்கள் ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லே அவர் அருகில் இருந்தனர். அவர் தனது பிள்ளைகளை ஆசீர்வதித்து, அமைதியான முறையில் உயிர் நீத்தார்.அவர் இறந்தபோது குடும்பம் கடும் கடன் சுமையில் இருந்தது. அவரது மனைவி சூசன்னாவின் கையில் ஒரு பைசா கூட இல்லை. அடக்கச் செலவுக்காகவும் கடன்களை அடைக்கவும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாமுவேல் வெஸ்லே  40 ஆண்டுகள் பணியாற்றிய எப்வொர்த் புனித ஆண்ட்ரூ தேவாலய முற்றத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

 பிற்காலத்தில் மெதடிச பிரிவை உருவாக்கிய காரணத்தால் தேவாலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜான் வெஸ்லே புனித ஆண்ட்ரூ தேவாலயத்துக்கு வந்தபோது, தேவாலயத்திற்குள் பிரசங்கிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லறைத்தோட்டத்தில் அவர் தனது தந்தையின் கல்லறையின் மீது நின்றுகொண்டே அங்கு கூடிருந்த மக்களுக்குப் பிரசங்கம் செய்தது மிகக் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வு.

சூசன்னா ஜூலை 23,1742-ல் இறக்கும் தருவாயில் பிள்ளைகளிடம் தன் உயிர் உடலைவிட்டுப்பிரிகையில் தேவைனைப்போற்றிப் பாடலொன்றை பாடும்படி கேட்டுக்கொண்டார். அப்படியே பாடப்பட்டது.

ஆகஸ்ட் 1, 1742 அன்று லண்டனில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடந்த தாயின் அடக்க ஆராதனைக் கூட்டத்தில் வழக்கமாக சம்பிரதாயமாக வாசிக்கப்படும் இரங்கல் செய்திக்கு மாற்றாக ஜான், தாய் தங்களை எப்படி வளர்த்தினார் என்பதை கூடியிருந்த ஆயிரக்காணோருக்கு முன்பாக வாசித்துச்சொன்னார். கூடவே கடவுளின் இறுதித்தீர்ப்பை, வெள்ளை நிற அரியாசனத்தில் வீற்றிருக்கபோகும் தேவனை, கிரியைகளின் புத்தகங்களும் ஜீவபுத்தகங்களும் திறககப்படுவதைக் குறித்தும் நீண்ட உரையாற்றினார்.

தனது தாயார் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தவர் , அவருடைய பெயர் “ஜீவ புத்தகத்தில்” நிச்சயம் இருக்கும் என்பதை கூடியிருந்த மக்களுக்கு உணர்த்தவே இந்தப் பகுதியை ஜான் உரையாற்றத் தேர்ந்தெடுத்தார்.

தொடரும்……

3 Comments

  1. phl63 login philippines

    Pinoy gamers! If you’re looking for PHL63 login in the Philippines, this is the official site I use: phl63 login philippines. Good luck and have fun!

  2. wjslot

    Wjslot is my go-to when I’m bored. It’s pretty straightforward and they seem to add new games regularly. Quick and easy way to have some fun so check it out here: wjslot

  3. codere deportes

    For all your sports betting needs, ‘Codere Deportes’ has you covered. Great odds and a huge selection of sports. I’m always finding something to bet on! codere deportes

Leave a Reply to wjslot Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑