லோகமாதேவியின் பதிவுகள்

மும்பை -நற்செய்தி!

எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கமென்பது பள்ளிக்காலத்திலிருந்தே இருக்கிறது. கிறிஸ்துவத்துடனல்ல, கிறிஸ்துவுடன் மட்டும்தான். Son preference உள்ள குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாது பெண்குழந்தைகளை பாரமாகவும் பெரும் சுமையாகவும் நினைத்து பாரபட்சமாக நடத்தும் குடும்பத்தில் பிறந்ததால் நானும் மித்ராவும் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டோம். வீட்டுவேலைகள் செய்ய எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள், அவ்வளவுதான். நல்ல உடை, போதுமான உணவு, கவனிப்பு, அன்பு, ஆதரவு எதுவுமில்லை.

அப்பாவைக் குறித்து பெரும் அச்சம் நிரம்பி இருந்த பால்யமாகையால், வீட்டிலிருந்து தப்பித்து பள்ளிக்குச்செல்வது பெரும் விடுதலையாக இருந்தது. வகுப்பறைகளில் நானே உருவாக்கிக்கொண்ட ஒரு கற்பனைக்குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருப்பேன். அப்போதெல்லாம் அரசு இலவசமாகக் கொடுக்கும் நோட்டுப்புத்தகங்கள் தான். அதில் கடைசிப்பக்கத்தில் மனதில் துயர் நிரம்பி இருக்கையில்  அல்லது அவரது முறம் போன்ற கையால்  அடிவாங்கி  மூக்குச்சில்லுடைந்து ஈரக்கர்சீப்பை மூக்கில் வைத்துக்கொண்டு வரும் நாட்களில் என் கற்பனை அப்பாவுக்கு கடிதம் எழுதுவேன். அப்பாவுக்கு மட்டும்தான். அம்மா என்னிடம் அன்பாக இருந்ததில்லையெனினும், அப்பாவைப் போல அச்சுறுத்துதலும் மிரட்டலும் அம்மாவிடம் இல்லை. எனவே ஒரு அன்பான, அடிக்காத, கார்க் குண்டுகள் போட்ட துப்பாக்கியைக் காட்டி சுட்டுக்கொன்று விடுவதாய் மிரட்டும் அப்பாவுக்கு மாற்றாக மனதில் கற்பனை செய்து வைத்திருந்த அந்த அப்பாவுக்கு “ஏன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்? எப்போ வந்து கூட்டிப் போறீங்க? என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை” என்றும், பல சமயங்களில் ’ரொம்ப பசிக்குதுப்பா’ என்றும் கடிதம் எழுதுவேன்.

 கடிதம் எழுதி அந்த காகிதத்தை கிழித்து டெஸ்க்கிற்கு உள்ளே வைத்துவிடுவேன். அப்படி உள்ளே போட்டுவைத்த அந்த கடிதம் அந்த கற்பனை அப்பாவிடம் போய் சேர்ந்துவிடும் என்று எப்படியோ நம்பி, பதில் வருமென்று கூட காத்திருந்திருக்கிறேன்.  முற்றிலுமாக மனம் சிதைந்திருந்த நாட்கள் அவை . அப்படி கடிதம் எழுதுகையில் எல்லாம் சொட்டுச்சொட்டாக தாளில் விழும்படி கண்ணீருடன்தான் எழுதுவேன். இவையெல்லாம் 7, 8 வகுப்புகளின் போது.

 9-ல் படிக்கையில் ஒருநாள் மாலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருக்கையில், முறையாக அனுமதி பெற்ற கன்னியாஸ்திரீகள் சாம்பல் நிற அங்கியும், நீளமான சங்கிலியில் தொங்கும் சில்வர் சிலுவையுமாக வந்திருந்து, அழகிய சிறிய பைபிளை எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அத்தனை நல்ல உள்ளங்கை அளவிலான, விளிம்பில் ஆரஞ்சு வர்ணம் தீட்டிய, தோலட்டை போடப்பட்ட, மிக வசீகரமான என்னவோ  வாசனை அடிக்கும் ஒரு புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தது பெரிய விஷயமாக இருந்தது. அந்த பைபிளை பொக்கிஷமாக ஆனால் வகுப்பறையிலேயே வைத்துக்கொண்டேன்.

 வீட்டுக்குக்கொண்டு போனால் அடிவிழும் என்று எப்படியோ தெரிந்திருந்தது. அந்த பைபிளை மறுநாள் திறந்து பார்க்கையில், அதனுள்ளே கர்த்தரின் ஒரு வண்ணப்படம் இருந்தது. ஒரு கையை ஆசீர்வதிப்பதுபோல் உயர்த்தி, சிலுவை அணிந்து, பிடரி வரை புரண்ட பொன்னிற கூந்தலும், நீலக்கண்களும், தலைக்கு பின்னே வானிலிருந்து பாய்ந்த ஒளிவெள்ளமுமாய் இருந்த அவரது புகைப்படத்திற்குக் கீழே ‘’பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தது. அந்த வாசகமும், அந்த புகைப்படமும், கருணை நிரம்பிய அந்த கண்களும் எனக்களித்த ஆசுவாசத்தையும்,  நம்பிக்கையையும்  சொல்லவே முடியாது.

முரட்டு மீசையும் அரிவாளும் அலட்டலும் கட்டுச்சேவல் சண்டையும் ஜாதிவெறியுமாக இருந்த குடும்பத்து ஆண்களுக்கு மாற்றாக, கருணை ததும்பும் புன்னகைக்கும் நம்பியூட்டும் கர்த்தரே பதின்மவயதில் நான் கண்ட முதல் ஆணழகன். அந்தக் கைகைளை மானசீகமாக பற்றிக்கொண்டேன்.

அந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கானமுறை எடுத்துப் பார்த்திருப்பேன். அதன் பிறகு அந்த கற்பனை அப்பாவுக்கு கடிதங்கள் ஏதும் எழுதியதில்லை.  கர்த்தர் உடனிருக்கிறார் நான் தனியாக இல்லை எதற்கும் பயப்படவேண்டாம் என எப்படியோ ஒரு குழந்தைத்தனமான தைரியம் வந்துவிட்டிருந்தது..

பைபிளின் எழுத்துக்கள் பொடிப்பொடியாக இருந்ததால் சரியாக வாசிக்க முடியவில்லை. எனினும் அந்த புகைப்படம் எனக்கு மிக மிக நெருக்கமானதாக இருந்தது. பல வருடங்களுக்குப்  பின்பு11-ம் வகுப்பிற்கு பள்ளி மாறுகையில், அதை வீட்டிற்கு கொண்டு வந்து அப்பாவிற்குத் தெரியாமல் ஒளித்து வைத்தது மட்டும் நினைவில் இருக்கிறது.  பின்பு அது காணாமல் போனது.

அப்படி எனக்கும் கர்த்தருக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்தது. பிற்பாடு கல்லூரியில் பைபிள் வாசித்திருக்கிறேன். ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று பக்கத்து வீட்டு ஸேவியரின் மகள் பாரதியுடன் அவர்களது கத்தோலிக்க திருச்சபைக்குச் சென்று முழங்காலிட்டு அப்பமும் திராட்சைரசமும் பல் படாமல் விழுங்கி இருக்கிறேன். பசித்தவனுக்கு ரொட்டி தருவதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடு என்று சொன்ன ரேஷனலிஸ்டாக தேவனை வெகுவாகப் பிடித்திருந்தது. ஒரு சில பைபிள் வசனங்களும் மனதில் நினைவிலிருந்தது, அவ்வளவுதான்.

இப்போது இந்த மெதடிஸ்ட் திருச்சபைக்கு வந்தது ஒரு அற்புதம்தான். பல நாட்களாக நானும் காட்சனும் பைபிள் தாவரங்களைக் குறித்து பேசியிருக்கிறோம். எனினும் அதில் ஈடுபட்டு வாசிக்க எனக்குப் பொழுதே இல்லாமலிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தாவரங்களின் உலகளாவிய பரவலைக் குறித்து, அதன் வரலாறுகளை வாசித்துக்கொண்டிருக்கையில், காற்றில், நீரில், பறவைகளால், விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு இப்படிப் பரவியது போலவே மனிதர்களாலும் தாவரங்கள் பரவியிருந்ததை வாசித்தேன்.

அதிலும் intentional, accidental என்று இரண்டு வகை. Accidental வகையில்,  மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களின்  உடல்களில், செருப்புகளில் ஒட்டிக்கொண்டும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் பைகளிலும், செருப்புகளில் ஒட்டும் விதைகள் வழியாகவும் பல தாவரங்கள் பரவியிருக்கின்றன.

ஆனால் intentional வகையில் 1492-க்கு பிறகு கொலம்பஸ் பல நாடுகளுக்கும் பல கண்டங்களுக்குமிடையே தாவரங்களைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதனால், 1492 என்னும் வருடம்  Columbian exchange என்னும் பரவலில் மிக முக்கியமானதாக இருந்தது. நான் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட எந்தப் பதிப்பாளர்களும் முன்வருவதில்லை. எனினும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். 1492 என்னும் தலைப்பில் தாவரப் பரவலைக் குறித்து விரிவாக ஒரு நூல் எழுத, மீண்டும் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

என் குருதி என திராட்சை ரசத்தை தேவனே கடைசி விருந்தில் சொல்லியதால் உலகெங்கிலும் தேவாலயங்கள் திராட்சை ரசம் மட்டும்தான் அளிக்க நினைத்தன ஆனால் எல்லா நாடுகளிலும் திராட்சைக்கொடி வளரவில்லை. எனவே கிறிஸ்துவ மிஷனரிகள் திராட்சைக்கொடியின் நறுக்கிய தண்டுகளை கப்பல் பயணங்களில் கொண்டு சென்று பல்வேறு நாடுகளிலும் திராட்சை வளர்ப்பைத் துவங்கி  அது ‘Mission Grapes’ என்று அழைக்கப்பட்டதை அறிந்து, அதன்பின்னேயே பல மாதங்கள் சென்று தரவுகள் சேகரித்தேன்.

திராட்சைக்கொடி வளர்க்க காலநிலை ஏதுவாக இல்லாத நாடுகளில், திராட்சை ரசம் அளிக்க முடியாதபோது என்ன செய்வது என்னும் பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட பலவிதமான பரிந்துரைகளில், கெட்டியான திராட்சை சிரப் கொண்டு வந்து அதை நீரில் கலந்து அளிக்கலாம் என்னும் யோசனை, மெதடிஸ்ட் கிறிஸ்துவ பிரிவை உருவாக்கியவரான ஜான் வெஸ்லேயும் சொல்லியதை வாசித்தேன்.

மீண்டும் காட்சன் அழைத்தபோது நான் மும்பை வர விருப்பதாகச் சொல்லி, அங்கே ஒரு ஞாயிறு உரையாற்றுவதாக முடிவானது. ஜான் வெஸ்லே இரண்டு தாவரவியல் நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பழங்குடியினர் தாவரங்களை எப்படி, எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பதை அவரது 2,50,000 மைல் தூர குதிரைப் பயணத்தில் கவனித்து எழுதியதையும் அறிந்தேன். காட்சன் சார்ந்திருந்ததும் மெதடிஸ்ட் தேவாலயம் என்பது எனக்கு பெரும் ஆச்சரியமளித்தது.

நான் வெஸ்லேவின் நூல்களைக் கொஞ்சமாகக் குறிப்பிட்டுவிட்டு, கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்வது மண்ணில் விதையை நடுவதுபோல் என்று துவங்கி, வேர்பிடித்து வளர்ந்து, மலர்ந்து, கனியளித்து அறுவடை செய்வது என்று என் உரையைத் தயாரித்தேன். பின்பு பைபிள் சொல்லும் 7 தாவரங்களை , Consider the lilies மற்றும் I am the vine, you are the branches, குருத்தோலை ஞாயிறுக்கு ஏன் பேரீச்சையின் குருத்தோலை மட்டும்,என்று தொடர்ந்து, கர்த்தர் எப்படி இந்த பூமியென்னும் தோட்டத்திற்குத் தோட்டக்காரராகவும், தாவரவியலாளராகவும் இருக்கிறார் என்பது போன்ற உரையைத் தயாரித்திருந்தேன்.  The duel role of christ as a gardener and botanist என்னும் அந்தத்தயாரிப்பைத்தான் கருணையின்றி சரண் முற்றிலும் மாற்றச் சொல்லிவிட்டான்.

சனியன்று நள்ளிரவு வரை அமர்ந்து  ஜான் வெஸ்லேயின் இறையியல் எப்படி தாவரங்களை அறிவதன் மூலம் படைத்தவனின் அற்புதங்களை அறியச் சொல்கிறது என்று புதிதாகத் தயாரித்தேன். உண்மையிலே முதல் உரை நான் தயாரித்தது, இரண்டாவது உரை நான் உணர்ந்து பேசியது. எனவே தேவாலயத்திற்குச் செல்கையில் மிகுந்த மனநிறைவுடன் சென்றேன்

Leave a Reply to 💹 BITCOIN Compensation Activated ➡️ telegra.ph/Blockchaincom-03-17?hs=6b4e2aa7217dac1beb3d304f53b077a9& 💹 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑