இன்று அஜிதனின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்த நாளில் தொடங்கி அவன் பள்ளிக்காலத்தைக் குறித்து ஜெ எழுதி இருந்த தேர்வு என்னும் பதிவை மீள வாசித்தேன்,(https://www.jeyamohan.in/488/#.VSOmPdyUf0d)
மகன்களின் இளமைக்காலத்தையும் பள்ளிக்காலத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். மகன்களின் பள்ளிப்பருவத்திலும் கொந்தளிப்பான காலம்தான்.. கடும் பொருளாதார நெருக்கடி, ஆனாலும் மகிழ்ந்திருந்தோம். எப்போதும் கதை கேட்பதும், சொல்வதுமாகவே கழியும் மாலைநேரங்களும் விடுமுறைநாட்களும்.

சிரிப்புச்சத்தம் கேட்டபடியே இருக்கும் வீட்டிலிருந்து .ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு வாசலில் மரத்தடியில் விறகடுப்புக்கூட்டி சமைப்போம் அடிக்கடி, மகன்களை அப்படி நட்புடன் நடத்தக்கூடாது என அப்பா என்னை கடுமையாக விமர்சிப்பார். முன்சகோதரி சங்கமித்ராவும் அதே எண்ணம் கொண்டிருந்தாள் எனினும் நேரடியாக தெரிவித்ததில்லை.
எனினும் இவர்களின் சகோதரனும் முன்சகோதரியின் மகனுமான சாந்தனுபரீக்ஷித் 11,12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணைப் பள்ளியில் சூட்கேஸில் பெரும்பணத்துடன் வரிசையில் காத்து நின்று சேர்க்கப்பட்டபோது சங்கமித்ரா என்னிடம் எந்தக் கூச்சமும் இல்லாமல் நேரடியாக’’… தேவி நீ அவன் ஸ்கூல் முடிச்சு வரவரைக்கும் அவனைப்பார்க்க வேண்டாம்,பேசவேண்டாம் லெட்டெர் கூட எழுதிராதே…’’ என்றாள். அப்படியே செய்தேன். மகன்களை எந்த சீரியஸ்னெஸும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக வளர்க்கும் கிறுக்கு அம்மாவாகத்தான் நான் பார்க்கப்பட்டேன். (பார்க்கப்படுகிறேன்)
அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டே வளர்ந்த ஆண்கள் உருப்பட்டதில்லை என்னும் விமர்சனத்தை நான் பெரும்பாலும் மாதா மாதம் கேட்பேன்.

பள்ளிக்கூடத்தில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் சரணுக்கு தமிழில் எழுதுவது பெரும் சிரமமாக இருந்தது தமிழ்ப்பாடமும் அவனுக்குப் புரியவில்லை. மதிப்பெண்கள் மிகக்குறைவாகவே வாங்கினான். ’’…..எனக்கு ழ ள ல ன ண இதெல்லாம் எங்கே எழுதனும்னு தெரியலைம்மா யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டேங்கறாங்க…’’ என்பான் வீட்டில்.
பள்ளியில் இருந்து அடிக்கடி என்னை வரச்சொல்லி அனுப்புவார்கள். ஜெ சொல்லியிருப்பது போலத்தான், முதலில் தடித்த கண்ணாடி போட்டுக்கொண்டு உக்கிரமாக இருக்கும் பிரின்சிபாலின் அறைக்கு முன்பாக அழகிய வரவேற்பாளினியால் அமரச்சொல்லப்படுவேன் பின்னர் உள்ளே சென்று மிகக்கடுமையாக சரணின் தமிழ் மார்க்கைக் குறித்து விமர்சனம் செய்து நான் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் தமிழாசிரியைப் பார்க்கனும் என்றும் அறிவுறுத்தப்படுவேன். மீண்டும் ஆசிரியர் அறைக்கு முன்னால் காத்திருத்தல் அந்த தமிழம்மா சரணை என்னவோ கூட்டுப், சரி வேண்டாம் அப்படி அவனைக் குற்றம் சொல்லி அதைக்காட்டிலும் கடுமையாக என்னையும் வசைபாடுவார்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வீடு வருவேன்.
அப்போது மாலைநேரத்தில் என்னிடம் சும்மா கூட இருக்கவென்று சித்தேஷ் என்று ஒரு சிறுவன் வருவான். அப்போது 8-லிலோ 9-லிலோ படித்துக்கொண்டிருந்த அவன் பிற்பாடு போட்டித்தேர்வுகள் எழுதவிருந்தான். அவன் அம்மா என்னை எப்படியோ தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவதுபோல தெரிந்துகொண்டு மாலைவேளைகளில் என் செளகரியத்தை கேட்டுக்கொண்டு என்னுடன் இருக்கவென்று காரில் அனுப்பி வைப்பார்.

நான் அவனுடன் தாவரங்களையும் பொதுவான அறிவியலையும் பற்றிப்பேசிக்கொண்டெ வீட்டு வேலைகளைப் பார்ப்பேன். அவன் வாசிப்பில் ஆர்வமாக இருந்த சரணுக்கு ஹாரிபோர்ட்டர் வரிசை புத்தகங்கள் அனைத்தையும் மொத்தமாகப் பரிசளித்தான். அதில் தீவிரமாகியது சரணின் வாசிப்புப்பித்து. அவன் வாசிக்கும் வேகம் என்னைவிட பலமடங்கு அதிகம் என்னை இன்னும் ’’…..நிஜமாகவே வாசிச்சிங்களா இல்லை சும்மா மேலோட்டமா பார்த்தீங்களா…’’ என கேட்பவர்கள் உண்டு மிக விரைவாக வாசிப்பவள் நான்.
சரண் என்னைக் காட்டிலும் வேகம். மாசக்கடைசிகளில் பொள்ளாச்சி எதிர்வெளியீடின் சின்ன புத்தகக்கடை வழியாக அவனைக் கூட்டிக்கொண்டு போகவே தயங்குவேன் ஏதாவது புத்தகதை கட்டாயமாக வாங்குவான். பள்ளியில் 5-ல் படித்துக்கொண்டிருந்த அவனது வகுப்பில் அப்போது மாலைநேரங்களில் ராமேஸ்வரத்திலிருந்து வரும் ஒரு ஆசிரியர் சில சிறப்பு வகுப்புகள் எடுத்தார், குறிப்பாக புதிய சொற்களை கற்றுக்கொண்டு வந்து எனக்கும் சொல்லிக்கொடுப்பான். எனக்கு நினைவிருக்கிறது biscuit என்னும் சொல்லுக்கு twice baked, bi- scuit என்று பொருள் என்று அவன் சொல்லிக்கொடுத்தது.அறிதலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான். புதிய புத்தகம் வாங்காமல் இருக்கையில் வாசித்ததையே மீண்டும் மீண்டும் வாசிப்பான் ஆனால் ஆங்கிலம் மட்டுமே தான் எனவே ஆங்கிலம் வாசித்து வாசித்துத்தான் தமிழ் வரவில்லயோ என் சந்தேகமாக இருந்த எனக்கு,
பேருந்துப்பயணங்களில் நின்றுகொண்டே கூட வாசிப்பான் கல்யணம் காட்சி என எங்கு அழைத்துச்சென்றாலும் ஒரு மூலையை கண்டுபிடித்து அமர்ந்து வாசித்துக்கொண்டிருப்பான்.
நான் அவர்கள் இருவருக்கும் பாடம் சொல்லிக்கொடுத்ததே இல்லை ஆனால் உறவினர்களும் பள்ளியில் பிற பெற்றோர்களும் நான் ஸ்கேலும் கையுமாக மாலைவேளைகளில் ட்யூஷன் எடுப்பேன் என்று ஆணித்தரமாக நம்பினார்கள். நான் இருவரையும் எல்கேஜியிலிருந்து 12ம் வகுப்பு வரை எந்த ட்யூஷனுக்கும் அனுப்பாததற்கும் பலரால் வன்மையாக கண்டிக்கப் பட்டேன்.
’….ஒழுங்கா காலையிலயும் சாயங்காலமும் ட்யூஷன் அனுபினா 10த்லயும் 12த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்து தெருமுனைகளில் பள்ளிவாசலில் போஸ்டரில் போட்டோ வரும் புத்திசாலிப்பசங்களைக் கதை சொல்லிச்சொல்லி கெடுக்கிறேன்…’’ என்பது என்மீதான பொதுவான குற்றச்சாட்டாகவே இருந்தது.
’’..சரண் உன் போட்டோ பேனரில் ஸ்கூல் வாசலில் வரணுமாடா? ட்யூஷனுக்கெல்லாம் போறியா?…’’
’’….வேண்டாம்மா. இந்த வருஷம் ஃபர்ஸ்ட் வந்தவங்க பேனரை இப்போ ஸ்கூல் ஆயாம்மா எல்லாம் மழை வந்தா நனையாம இருக்க கிழிச்சு ஒரு கூரை மாதிரி கட்டி இருக்காங்க , இதுமாதிரியெல்லாம் போட்டோவும் பேனரும் எனக்கு வேண்டாம், ட்யூஷனுக்கே நான் போகமாட்டேன்..’’
கதை கேட்டுத்தான் வளர்ந்தார்கள் இருவரும் . ஒரே ஒரு சிறப்பு வகுப்பிற்கு கூட இருவருமே போனதில்லை.
இந்த தமிழம்மா தொல்லையை சரி செய்யவேண்டி இருந்தது. நான் சமையலறையில் வேலையில் இருக்கையில் இருவரையும் கூடவே தரையில் அமரச்சொல்லி நாளிதழ்களின் தலைப்புசெய்திகளை உரக்க வாசிக்கச் சொல்லுவேன் மாலையில் எஃப் எம் ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களின் முதல்வரியை அடுத்த பாடல் ஒலிக்கும் முன்பு எழுதிக்காண்பிக்கச் சொல்லுவேன்.

அதை ஆர்வமாகச் செய்தார்கள். தருணுக்கும் தமிழ் தகராறு தான் எனினும் புகார் சொல்லும் அளவுக்கு அவன் மதிப்பெண்கள் இல்லை அவன் ஆங்கிலமும் வாசிக்கவில்லை. ஆனால் தமிழை தப்புத்தப்பாகப் புரிந்துகொள்வான், ஒரு கூட்டத்தில் தாத்தா ஒருவர் (பள்ளிக்கு வந்து உரையாற்றிய பெரியவர்) சொன்னதாக கண்ணகி பட்டினி கிடந்து கஷ்டப்பட்டாள் என்று தருண் வீட்டுக்கு வந்து சொல்வதும் அவ பட்டினி இல்லடா பத்தினி என்று நான் திருத்தி பத்தினின்னா என்னவென்று பதிலுக்கு அவன் கேட்டு உரையாடல் உக்கிரமாகப் போகும் அவனுடன்.
நல்லவேளையாக தமிழம்மா வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய் சரணுக்கு எந்தக்காரணத்தாலோ மிகவும் பிடித்துப்போன சங்கீதா என்னும் ஒரு இளம் ஆசிரியை வந்தார் அதன்பிறகு சரண் தமிழில் விருப்பம் கொண்டு நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். வெண்முரசு தொடர்ந்து கேட்பதும் அவனும் மெல்ல மெல்ல வாசிப்பதுமாக சரணுக்கு அறிமுகமே ஜெ வின் மிகச்செறிவான மொழிதான்.
பிற்பாடு அவன் ஜெ வுக்கு எழுதிய கடிதங்கள் அவரது தளத்தில் பிரசுரமாகின அவன் 7லிலும் தருண் 5லும் படிக்கையில் இருந்தே விஷ்ணுபுரம் கூட்டங்களுக்கு என்னுடன் வர துவங்கினார்கள்.மகன்களை படிப்பில் சோடை போன காரணத்தைச்சொல்லி ஒருபோதும் நான் கடிந்துகொண்டதே இல்லை.

ஆனால் இருவருமே பாடத்தைத்தவிர மற்றவற்றில் ஆர்வமாக இருந்தார்கள். 7ம் வகுப்பில் சரணுக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் state level best student award அளித்து அப்போது நான் வாங்கிய சம்பளத்தில் 4 – ல் ஒரு பங்கை விருதுத்தொகையாகவும் அளித்தார்கள். சென்னைக்கு மூவருமாக ரயிலில் சென்று, எங்கேயோ தங்கி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அந்த விருதை வாங்கினோம். ஒரு யோகா போட்டிக்கு தருணை வெளியூருக்கு அழைத்துசென்று நாள் முழுவதும் காத்திருந்து அலுத்துப்போய் போட்டி முடிந்ததும் முடிவுகளைக்கூட கேட்டுக்கொள்ளாமல் ஊருக்கு திரும்பிவிட்டேன் மறுநாள் பள்ளியில் முந்தைய நாளின் போட்டியில் மாநில அளவில் முதலிடத்துக்கான தங்கபதக்கத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு புழுதிபறக்க தருண் என்னைப்பார்த்ததும் ஓடிவந்தான். இப்படி பல போட்டிகள் பல வெற்றிகள் ஆனால் 9ம் வகுப்பு வரை பாடங்களில் இருவருமே சொல்லிக்கொளும் படியில்லைதான். அதைக்குறித்து மூவருமே கவலைப்பட்டதுமில்லை. இருவரும் வாங்கிய தங்கவெள்ளி வெண்கல பதக்கங்கள் குப்பையாக ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம்
நல்லாசிரியர்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, நல்ல கல்விக்கூடம் வாசிப்புப்பழக்கம் இவையெல்லாம் இளமைப்பருவத்தில் எத்தனை முக்கியம் என்பதற்கு சரணும் தருணுமே உதாரணம். பள்ளிக்கூடம் ஒரு மாணவனை அடையாளப்படுத்துவதே அவனது மெய்யான அடையாளம் என்று நம்ப வேண்டியதில்லை என்பதற்கும்.
தருணுக்கு மத்தகம் கதையின் கேசவன் குட்டி கற்பனை விளையாட்டுத் தோழனாக இருந்து ஒரு கட்டத்தில் தருண் தானே கேசவன் குட்டி யானை என நம்பத்தலைப்பட்டு நாலு காலில் நடந்து வீட்டில் என்னையும் சரணையும் முட்டித்தள்ளிக்கொண்டிருந்தான்.அதைக்குறித்து சரண் ஜெவிற்கு எழுதின தப்பும் தவறுமான கடிதம்தான் தளத்தில் முதன்முதலில் ஒரு சிறுவனின் கடிதம் என்று பிரசுரமானது. பின்னரே பலவருடங்கள் கழித்து நான் எழுதினேன். https://www.jeyamohan.in/18020/
சரணின் அந்தக்கடிதத்துக்கு பதில் அளித்த ஜெ உங்கள் சகோதரர் சிறந்த காட்டிலாகா அதிகாரியாக ஆக வாழ்த்துக்கள் என்றிருந்தார்.
தருண் யானை டாக்டரும் காடும் வாசித்து சொல்லக்கெட்டு காட்டியல் படிக்க விரும்பி இப்போது காட்டியலாளன் (அல்லது காட்டாளன்) ஆகியிருப்பதும் சரண் சின்மயா பள்ளியில் best outgoing student விருது கௌரவ் விருது என ஏகப்பட்ட விருது வாங்கியதும் வரலாறு.
இப்போது 26 வயதாகும் சரண் 23 வயதிற்குள் அர்த்தசாஸ்திரம் முழுமையாக வாசித்து எனக்கும் அதன் சாரத்தை சொன்னான். காமசூத்ரா எனப்து ஒரு sex manual என்று நினைத்திருந்த எனக்கு அது ஒரு தனி நூலல்ல 7 தொகுதிகளும் பல அத்தியாயங்களுமாகச் சொல்லப்பட்ட art of living என்பதை அவனே விளக்கினான். பிரஜாபதி நந்திகேசர் உள்ளிட்ட பலர் அத்தியாயங்கள் எழுதி வாத்ஸ்யாயனர் அதை தொகுத்தார் என்பதையும் அவனிடமிருந்தே அறிந்தேன். அதன் பிறகு என் அறிதல்கள் எல்லாமே ஜெ அவருக்கு அடுத்தபடியாக சரண் ஆகிய இருவரிடமிருந்துதான். சில மாதங்களுக்கு முன் அரிஸ்டாட்டிலின் Politiks (ஆம் k தான்) வாசித்து முடித்து அதைக்குறித்துப் பேசினோம். சமீபத்தில் அவன் பரிந்துரைத்த medical apartheid வாசித்து இன்னும் அந்த நூல் உருவாக்கிய குற்றவுணர்விலிருந்து மீளமுடியாமலிருக்கிறேன்.

குழந்தைகளைக்குறித்து பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை, பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைக் குறித்து உருவாக்கும் பிம்பங்களை நம்பாமல் இருந்தால் நல்ல இளமைப்பருவமும் அவர்களுக்கு மிக நல்ல எதிர்காலமும் அமையும் என்று நான் நம்புகிறேன்..
இந்த கட்டுரை குழந்தை வளர்ப்புக்கான மிகச் சிறந்த வழிகாட்டி Mam. சுற்றி இருப்பவர்கள் என் குழந்தை வளர்ப்பைப் பற்றி கூறும்போது ஏற்படும் குற்ற உணர்ச்சி நீங்கிவிட்டது. மிகவும் நன்றி Mam.
சரண் தருண் இருவரின் அம்மாவாக லோக மாதேவி மேடம் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் நல்ல அம்மா, இனி பிள்ளைகள் அவருக்கு திருப்பி செலுத்தி அவரை மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டும்.
மிக அருமையான பதிவு mam. நான் கூட என் மகனின் (அவனின் சிறுவயதில்) படிப்பு விஷயத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதுண்டு. தேர்வு கட்டுரை வாசித்த பின்பு ஒரு தெளிவு கிடைத்து அதன் பின் சிறு மாற்றம் அடைந்துள்ளேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இன்னமும் சற்று என்னை அறியாமலே கவலை வந்து விடும் மதிப்பெண் விஷயத்தில். இந்த பதிவு என்னை இன்னும் தெளிவு படுத்திக் கொள்ள உதவும். மிக்க நன்றிகள். உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்புடன்
ஈஸ்வரி
உண்மையின் சொற்கள், மிக அழகான பதிவு. இதில் ஒரு அன்னையின் நேர்மறை சிந்தனையும், நம்பிக்கையும் நன்கு தெரிகிறது. நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதும் அதுவே. மிக்க நன்றி 🙏
நீங்கள் எழுதிய கல்லெழும் விதை குடும்பத்துடன் நேற்று வாசித்து கொண்டிருந்தோம். உங்கள் எழுத்து எனக்கும் ஓர் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது குழந்தை வளர்ப்பில். எனக்கு ஜெ எவ்வாறோ அதைப்போன்று உங்கள் எழுத்தும் எங்கள் குடும்ப வாழ்க்கையை அவ்வளவு இனிமையாக்குக்றது. உதரணமாக பிரதிக்க்ஷாவுக்கு தமிழ் இன்னும் நன்றாக வாசிக்க வராது ஆகையால் நான்தான் உங்கள் புத்தகங்களை அவளுக்கும் நித்ரனுக்கும் வாசித்து கொண்டிருக்கிறேன். நேற்று கூட பிரதிக்க்ஷா ஏன் டாடி எல்லா நல்ல புக்கும் தமிழில இருக்கென்று, அது எனக்கு ஒர் மிக பெரிய நம்பிக்கையை அளித்தது. இயற்கை ஆதி அன்னை நம்மை சுற்றி பல வழிகளில் நம்முடன் உரையாடி கொண்டே இருக்கிறாள். “இவர்கள் என் குழந்தைகள் கவலை கொள்ளாதே, இதோ பார் என்று அறிமுகம் செய்வதே உன் கடமை” உங்கள் எழுத்தும் இந்த பதிவும் அந்த ஆதி அன்னை உங்கள் வழியாக எனக்கு கூறுவதாகவே உள்ளது. “கவலை கொள்ளதே இவர்கள் என் குழந்தைகள்” நீங்கள் எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஜெ வழியாக கிடைத்த அடுத்த அற்புதம் மேம். நன்றி