ஜெ தளத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் அவருக்கு வழங்க விருப்பதாக செய்தி வந்ததுமே அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு தக்ஷசீலா பல்கலைக்கழகத்துக்குச் செல்லவேண்டும் என முடிவெடுத்தேன். ஜெ மீது இருக்கும் மரியாதை ஒரு பக்கம், முனைவர் பட்டத்தின் மீது இருக்கும் மரியாதை மறுபக்கம் என எனக்கு இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது.
முனைவர் பட்டத்தின் மீதான வசீகரம் எனக்கு இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்று முதுகலை தாவரவியல் படிப்பில் சேரும் போது முனைவர் பட்ட ஆய்வுகளைக் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. அங்கு சென்று அதைத் தெரிந்துகொண்டு அந்தபட்டத்தின் மீது பித்துப்பிடித்ததை ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.
நான் முதுகலை வகுப்பில் சேர்ந்து ஒரு வாரத்திலேயே tribal pulse -ல் ஆய்வு செய்த ராஜாராம் என்பவரின் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித்த்தேர்வு நடந்தது. எல்லா மாணவர்களும் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது, என்னவோ மீட்டிங் என நானும் போய் உட்கார்ந்திருந்தேன், அப்போது துணைவேந்தராக ஜெனிடிக் எஞ்சினீயரான மாரிமுத்து இருந்தார்.அவரும் அரங்கில் இருந்தார். ராஜாராம் அண்ணன் அவரது ஆய்வு முடிவுகளை வழங்கினார் நான் அசுவராஸ்யமாக கையில் என்னவோ சாப்பிடக் கொடுத்திருந்தார்கள் அதை பின் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திடீரென இனிமேல் ராஜா ராம் டாக்டர் ராஜாராம் என அழைக்கப்படுவார் என்று துணைவேந்தர் சொல்ல அனைவரும் பலமாக கைதட்டியதும் பித்துபிடித்தது போலானது. 12ம் வகுப்பு முடிந்ததும் டாக்டருக்கு படிக்க விரும்பினேன்.லட்சக்கணக்கில் செலவாகும் முடியவே முடியாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். பிறகு கால்நடை மருத்துவமாவது படிக்கக்கேட்டேன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் அந்தப்படிப்பு படிப்பவர்கள் காக்கி பேண்ட் ஷர்ட் போடவேண்டும். நம்ம குடும்பத்துப் பெண்கள் பேண்ட் ஷர்ட் போடுவதா என அதுவும் கைவிட்டுப் போனது.
எனவே தாவரவியல் படித்தும் டாக்டர் ஆகலாம் என்பது அன்றிலிருந்து ஒரு ஜுரம் போல என்னைப் பிடித்துக்கொண்டது, பிறகு நான் தென்னை நார்க்கழிவில் ஆய்வு செய்து மூன்றே வருடங்களில் முனைவராகி டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டது தனிக்கதை. இந்தக்கல்லூரியில் வேலைக்குச்சேர்ந்த புதிதில் கையெழுத்திடுகையிலும் பெயருக்கு முன்னால் dr என்று போட்டு அப்போது துறைத்தலைவராக இருந்த ss sir லோகமாதேவி, இங்க வா என்ன சைன் போடும்போதும் இப்படி டாக்டர்னு போடுவியா என்று ஒரு நாள் கடிந்துகொண்டபோதுதான் அது தவறென்று தெரிந்தது.;)
எனினும் நான் ஊசி போடும் டாக்டராக இல்லாமலிருந்தது மிகத்தாழ்வாக எண்ணப்பட்ட கதையும் நடந்தது அதை எழுதிப்பிரசுரித்திருக்கிறேன்.(https://solvanam.com/2021/02/27/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/)
எனவே இந்த விழாவுக்குப் போவதென்று முடிவு செய்து கோவையிலிருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் என்னை அழைத்துப்போவதாகவும் மற்றொருவர் உடன் இணைந்துகொள்வதகவும் சொன்னார்கள். நம்பினேன்.
நவம்பர் விடுமுறைக்காலம் என்பதால் ஒத்துக்கொண்ட ஒரு நிகழ்வுக்காக இடையில் சென்னை செல்லவேண்டி இருந்தது சென்னையிலிருந்து வந்த அன்று கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி. மறுநாள் திண்டிவனம் செல்லவேண்டும். சென்னையிலிருந்தே கோவை நண்பர்களிடம் பேசியபோது கட்டாயம் போகலாம் என்று சொன்னதால் அதைக்குறித்து கவலையில்லாமல் இருந்தேன், ஆனால் அன்று மாலையில், என்னை அழைத்துச் செல்வதாக சொன்னவர் பல்கலைக்கழக நிகழ்வன்றே அவரது தொழில் சார்ந்த ஒரு மீட்டிங் இருப்பதால் அநேகமாக வர முடியாது என்றார். திகைப்பாக இருந்தது அப்படி கட்டக்கடைசியில் சொன்னால் நான் மாற்று ஏற்பாடுகள் கூட செய்யமுடியாது.
உடன் வருவதாகச்சொன்ன மற்றொருவர் நான் அழைத்துக்கேட்ட பின்னர் கேப்பிட்டல் லெட்டரில் NO என்று பதில் அனுப்பினார்.
அத்தனை தூரம் தனியே செல்வதும் தனியே அறை எடுத்துத்தங்குவதும் எளிதல்ல. ஒரே நாள் நிகழ்வுகளுக்கு நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை ஆனால் இது அப்படியல்ல எனவே நிஜமாகவே மனமுடைந்தேன்.

மாலை சரண் தருணிடம் வீடியோ அழைப்பில் பேசும் போது கண்கலங்கினேன். சரண் ’’உனக்கு தனியா போக என்ன கஷ்டம்? நான் ரூம் போட்டுத்தரேன்’’ என்றான், மகன்கள் ஒருபோதும் நான் மனக்கஷ்டப் படுவதை அனுமதிப்பது இல்லை. கூடவே சரண் நான் கோவை நண்பர்களைக் குறித்து குறைப்பட்டுக் கொண்டபோது ’’யாரையும் குறையா சொல்லாத மீ, அவங்களுக்கு என்ன நெருக்கடியோ விடு, நான் உன்னை எப்படியும் அனுப்பறேன் , பாண்டிச்சேரிக்கு போய் அங்கே தங்கிட்டு அங்கிருந்து 1மணி நேரத்தில் அந்தபல்கலைக்கழகம் இருக்கும் போயிட்டு வந்துரு செலவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே உனக்கும், டிரைவருக்கும் தனித்தனியா நல்லரூம் போட்டுத்தறேன்’’ என்றான் சரணின் மனமுதிர்ச்சி எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும்,
நான் தயங்கினேன், உடனே தருண் ’’ மீ நான் 3 நாள் லீவ் போடறேன் இன்னைக்கு நைட் கிளம்பி பஸ்ஸில் பொள்ளாச்சி வரேன் காலியில் நேரத்திலயே புறப்படலாம் நான் உன் கூட வரேன் கவலைப்படாமல் வா ஜாலியா போயிட்டு வரலாம்’’ என்றான். தருண் எப்போதுமே சரணைப்போலவே படிப்பில் அக்கறை கொண்டவன் வருகை 100 சதவீதம் இருப்பதில் மிகக் கவனமாக இருப்பவன் ஆனாலும் 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவே புறப்பட்டான்.
நானும் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வெளியூரிலிருந்து வந்த பேராசிரியர்களுக்கெல்லாம் சன்மானத்தொகையை வாங்கிக் கொடுத்து அவர்களை அனுப்பவே பின்மாலையானது. பின்னர் கார் டயர் சோதித்து பெட்ரோல் டேங்க் நிரப்பி வீடுவந்து சேர்ந்து கைக்குக்கிடைத்த உடைகளை அவசரமாக எடுத்து வைத்து உறங்கச் செல்லும்போது, டிரைவர் அழைத்து தனக்கு காய்ச்சலென்றும் பாண்டிச்சேரி வரமுடியாதென்றும் சொன்னான். அயர்ந்துபோனேன். எத்தனை தடங்கல்கள்
பிறகு 10, 15 ஆக்டிங் டிரைவர்களைக் கேட்டு அலுத்துப்போய் எப்படியோ ஒருவனைப்பிடித்தேன். தருண் டிரைவர் கிடைக்கலைன்னா நானே ஒட்டிட்டுவரேன் என்றான் எனினும் இரவெல்லாம் பயணித்து வந்து மீண்டும் 450கிமீ ஓட்டுவது எளிதல்ல என்பதால் ஒரு டிரைவரை அமர்த்திக்கொண்டேன்.
மறுநாள் காலை நல்ல மழை. 8 மணிக்குப் புறப்பட்டு அருமையான சாலையில் பொறுமையாகப் பிடித்த பாடல்களைக்கேட்டபடி பயணித்து மதியம் 3 மணிக்கு பாண்டிச்சேரி வந்தோம்.
சரண் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலும் அறையும் மிக நன்றாக இருந்தது. நல்ல குளிர், மாலை கடற்கரைக்கு சென்றோம் நானும் தருணும்.

பாண்டிச்சேரி அத்தனை ஜனத்திரள் இல்லாமல் இருந்தது டீக்கடைகளில் துணிக்கடைகளில் சாலைகளில் எங்குமே கூட்டமில்லை, 70-களில் சென்னை இருந்தது போல் என்று நினைத்துக்கொண்டேன். கடற்கரையிலும் கூட்டமில்லை.
கடலைப்பார்த்தபடி ஒரு தம்பதி பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அந்தி சாய்ந்துகொண்டிருந்தது மேகமூட்டமாகவும் இருந்ததால் வானும் கடலும் இணைந்து அவர்களுக்கெதிரே கருநீலத்தில் ஒற்றைப்பெரும் பரப்பாய் விரிந்திருந்தது. தருண் அவர்களை பின்னாலிருந்து அழகாக ஒரு புகைப்படம் எடுத்தான். முகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்ததால் அவர்களிடம் நானும் அவனுமாகப்போய் அதைக்காட்டி அவர்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விட்டு புகைப்படத்தை அழித்துவிடுகிறோம் என்று சொன்னோம் இருவரும் ஒரே குரலாக போட்டோ எங்களுக்கு வேண்டாம் அழித்துவிடுங்கள் என்றார்கள்.

எனக்கு ஒரே ஆச்சர்யம் ’’அத்தனை அழகான புகைப்படம் அது அதைப்போய் வேண்டாம்னு சொல்றாங்களே? என்னை யாராவது இப்படி எடுத்திருந்தா அதை ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி இருப்பேன்’’ என்று புலம்பிக்கொண்டெ வந்தேன் தருண் மெதுவாக ’’இல்லம்மா ஒருவேளை அவங்க கணவன் மனைவியா இல்லாமல் கூட இருக்கலாமில்லையா ஏதோ நிம்மதியா உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க நாம போட்டோ எடுத்திருக்கக்கூடாது விடு’’ என்றான். இந்த மனமுதிர்ச்சியும் ஆச்சர்யமாக இருந்தது.
கடற்கரையில்தான் விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு பெரும் கூட்டமாக பாண்டிச்சேரி வந்திருப்பதை தெரிந்துகொண்டேன், எல்லாருமே கடற்கரையில் இருந்தார்கள். ஜெ அத்தனை நேரம் அங்கே இருந்துவிட்டு அப்போதுதான் புறப்பட்டார் என்றார்கள்.
நடந்து, டீ குடித்து புகைப்படமெடுத்துக்கொண்டு பிரிந்தோம்.
கடற்கரை முழுக்க கற்பாறைகள் இருந்ததால் கடல்நீரில் கால் நனைக்க முடியவில்லை. கால் நனைக்காமல் பிறகென்ன கடல்? நான் ஆர்வமிழந்து திரும்பலாம் என்றேன். கடற்கரையெங்கும் கொகோலோபா யுவிஃபெரா என்னும் கடல் திராட்சை மரங்கள் நின்றன கூடவே தென்னையும் புன்னையும் பூவரசும் கொஞ்சமாக.
அறைக்கு வந்து ஐஸ் கட்டிபோல் சில்லிட்டிருந்த தரைக்குப் பயந்து கட்டிலிலேயே அமர்ந்துகொண்டு இரவுணவை வரவழைத்து சாப்பிட்டோம்.
மறுநாள் காலையில் மணக்குளம் விநாயகர் கோவில் போனோம். பிரபலமான கோயில் என்றார்கள். அல்லியும் தாமரையும் அருகும் கட்டுக்கட்டாக விற்றுக்கொண்டிருந்தார்கள். சேவித்துவிட்டு வெளியே வருகையில் கொஞ்சம் செவ்வல்லி மலர்களை வாங்கிக்கொண்டேன். கோவிலுக்கு உள்ளே போகையில் அல்லிகளைக் கொண்டுபோனவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
வாசலில் வெண்பொங்கல் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் தருணும் தங்கி இருந்த ஹோட்டலில் காம்ப்ளிமென்ட் காலை உணவை சாப்பிட்டிருந்தோம். அதிலும் இந்த வாரம் சொல்வனத்துக்கு ஜெ வும் அருணாவும் மேப்பிள் மரங்களுக்கிடையில் நின்றிருந்த புகைப்படங்களைப் பார்த்ததால் உணவு குறித்த தொடருக்கு அடுத்ததாக மேப்பிள் சிரப் பற்றி எழுதலாம் என்று முந்தினநாள் இரவுதான் தருணிடம் சொன்னேன். காலை உணவில் மேப்பிள் சிரப்பும் பேன்கேக்கும் வைத்திருந்தார்கள். நான் முதன்முதலாக அங்குதான் சுவைத்தேன் அதை. எனவே பசிக்கவில்லை.
பொங்கலை தொன்னையில் நிறைத்து அடுக்கி வைத்திருந்தார்கள் அத்தனை வேண்டாம் ஆனால் கோயில் பிரசாதம் சாப்பிடவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றேன்.
பொங்கலைக் கொடுத்துக்கொண்டிருந்த இருவரில் ஒரு பெண் முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு ’’அந்தப்பக்கம் வாங்க’’ என்றார். நான் ’’எனக்கு அத்தனை வேண்டாம் எனவே காலித்தொன்னையை எடுத்துக்கொண்டு கொஞ்சமாக வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி தொன்னையை எடுத்தேன் அவர் மீண்டும் நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்து ’’அந்தப் பக்கம் வச்சிருக்கும்மா’’ என்றர் சிடுசிடுப்புடன் நான் பொறுமை இழக்காமல் எனக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லி ஒரு ஸ்பூன் அளவு வாங்கிக் கொண்டேன். நானும் தருணுமாகச்சாப்பிட்டோம். சுவை அபாரமாக இருந்தது. உணவு அளிப்பவர்கள் கொஞ்சம் மனமுவந்து முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாலென்ன?

பின் அச்சுபிச்சு என்று என்னன்னவோ விற்கும் கடைகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்கெங்கிலும் மதுபானக்கடைகள் இருந்தன வடிசாலைகளும் நிறைய. பெண்கள் எல்லோருமே பேரழகாக, மிகப்பொருத்தமாக அழகிய நவீன உடைகளில் இருந்தார்கள். தருணை விட நான்தான் பெண்களை அதிகமாக வேடிக்கை பார்த்தேன். தருண் பாண்டிச்சேரி போன்ற ஒரு இடத்திற்கு தனது இளமையின் உச்சத்தில் அம்மாவுடன் வரவேண்டி இருந்த துயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி வருந்தினான். ’’இன்னொரு நாள் நண்பர்கள் கூட வந்துக்கோடா இப்ப என்ன பெங்களூருவில் இருந்து பக்கம்தானே?’’ என்று சமாதானம் பண்ணினேன்.

முற்பகல் 11. 45-க்கு 5 கார்களில் பாண்டிச்சேரி நண்பர்கள் இணைந்து பல்கலைக்கழகம் செல்லலாம் என நண்பர் சிவாத்மா தெரிவித்திருந்தார். எனவே குறிப்பிட இடத்துக்கு வந்தோம். அங்கிருந்து எல்ல்லாருமாக பல்கலைக்கழகம் சென்றோம். மாபெரும் கட்டிடங்களால் ஆகி இருந்தது பல்கலைக்கழகம்.
வாசலிலிருந்தே ஜெ வுக்கான வாழ்த்துப்பதாகைகள் வரிசையாக இருந்தன. அகரமுதல்வன், அரங்கசாமி, சக்திகிருஷ்ணன், ஈரோடு கிருஷ்ணன், விஜயசூரியன்,ரேணு, வேணு வேட்ராயன், குளித்தலை ஷண்முகம், மூர்த்தி, மணிமேகலை, அஜிதன், தன்யா , சைது, நவீன், மானஸா, க்ருபா, செல்வேந்திரன், சிறில் அலெக்ஸ், குருதிப்பலி செந்தில் என எல்லாருமே இருந்தார்கள்;
எல்லோருமே குடும்ப விழாவுக்கான மனநிலையில் இருந்தோம். நான் உள்ளே வரும்போது ஜெ வும் அருணாவும் மதிய உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஜெ வுக்கு வாழ்த்துச் சொன்னேன். தருண் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தி தெரிவித்தான்.

எங்கள் அனைவருக்குமே உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டு நிகழ்வு அரங்கிற்கு வந்தோம். முந்தின நாளே அந்தப்பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மகாகவி என்னும் ஒரு பெண் என்னை அழைத்துப் பேசி இருந்தாள். நாங்கள் அவசரமாக இடம்பிடித்து அமர்ந்து கொண்டோம்.விழா சிறப்பாக நடந்தது. ஜெ வரும்போதும் பேசும் போதும் அவரைக்குறித்து ஆவணப்படம் போடப்பட்டபோதும் பட்டம் அளிக்கப்பட்ட போதும் ரஜினி படத்துக்கு ரசிகர்கள் செய்வதுபோல் நாங்கள் கூச்சலிட்டு கைதட்டி கத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் கூட அமைதியாக இருந்தார்கள்.
ஜெ சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசினார். பி டி உஷாவும் இருந்தார் அவரும் சுருக்கமான உரைதான். விழா முடிந்து ஜெ வும் முக்கியஸ்தர்களும் உள்ளே சென்றார்கள். ஜெ கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றார்.

நானும் தருணும் இன்னும் சிலருமாக அவரைச்சந்திக்க அங்கே செல்லமுயன்றபோது ஒரு பெண் குறுக்கிட்டு தடுத்து ’’யாரைப் பார்க்கணும்? என்றாள் நான் ’ஜெ’ வை என்று சொன்னேன். அவரைப்பார்த்து ’’விஷ் பண்ணவா? என்றாள். ‘’ஆம்’’ என்றேன். ’’மேம் அவர் இப்போ கான்ஃபெரென்ஸ் ஹாலில் இருக்கார் அங்கெல்லாம்’’ என்று அவள் சொல்லத் துவங்கையிலேயே உள்ளிருந்து விஷ்ணுபுரம் நண்பர் ஒருவர் வேகமாக வெளியே வந்து என்னிடம் ’’ஜெ எல்லாரையும் உள்ளே வரச்சொல்லறார்’’ என்று கூவினார். திகைத்துப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பெண்னை சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு நானும் மற்றவர்களும் திமு திமுவென உள்ளே போய் ஜெ வை சூழ்ந்துகொண்டோம்
ஜெ உற்சாகமாக இருந்தார். முகம் கொள்ளாத சிரிப்பு வழக்கம் போல. அவருக்கு பொன்னாடை போர்த்துவதும் புகைப்படம் எடுப்பதும் வெடித்துச் சிரிப்பதுமாக டிபிகல் விஷ்ணுபுர கூடுகை அது. ’’எல்லாரையும் உள்ளே வரச்சொல்லுங்க எல்லாரையும் வரச்சொல்லுங்க’’ என்று ஜெவும் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்தப்பல்கலைக்கழகம் இப்படி ஒரு முக்கியஸ்தரைச் சுற்றி இந்தனை பேர் கூட்டமாக நின்று கட்டித் தழுவிக் கொண்டாடுவதை அதுவரையிலும் பார்த்திருக்க மாட்டர்கள் இனியும் பார்க்கப்போவதில்லை. அன்பெனும் பெரு வெளி அது.
பாண்டிச்சேரி நண்பர்கள் சார்பாக ஜெ வுக்கு ஒரு சாக்லேட் மாலை போடப்பட்டது. நான் முதன்முதலாக இப்படி சாக்லேட்டில் மாலை போடுவதைப் பார்க்கிறேன். அந்த மாலையை ஜெ கழற்றிய மறுநிமிடம் நண்பர்கள் அதிலிருந்து சாக்லெட்டுகளை பிய்த்தெடுத்து சாப்பிட்டு எனக்கும் ஒன்று கொடுத்தார்கள்.கட்டற்ற அன்பும் பிரியமும் ஜெ’வை சூழ்ந்திருந்தது.
நான் அவருக்கு பொன்னாடை அளித்தபோது ’’தருண் எங்கே’’ என்று கேட்டு அவனை வரச்சொல்லி இறுகத் தழுவிக்கொண்டார். எனக்கு பெருமிதத்தில் மூச்சடைத்தது.

பிறகு விடைபெற்றுக்கொண்டு அறைக்கு வந்தோம். சிவாத்மா இரவுணவை சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் தருண் அசைவம் சாப்பிட விரும்பினான். சிவாத்மாவுடன் அசைவம் சாப்பிடுவது அத்தனை சரியாக இருக்காது என்பதால் அவரிடம் சொல்லி விட்டு அகரமுதல்வன் பரிந்துரையின் பேரில் மன்னா மெஸ்ஸில் சாப்பிட்டோம். உணவு சுவையாக இருந்ததோடு பரிமாறிய பெண்களும் அத்தனை வாஞ்சையுடன் அருகிருந்து பார்த்துப்பார்த்து பரிமாறினார்கள். என்னவோ உறவினர்கள் வீட்டுக்கு போய்ச் சாப்பிட்டதுபோல் இருந்தது.
தருணை அங்கிருந்தே பெங்களூரு அனுப்பி விட்டு மறுநாள் காலை புறப்பட்டு 3 மணிக்கு வீடுவந்தேன். என்னமோ நானே மீண்டும் ஒரு பெரிய பட்டம் வாங்கினதுபோல பூரித்திருந்தேன்.

Leave a Reply