அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 4 of 28

கூனை மலர்-ஆர்டிசோக் மலரரும்புகள்

கிரேக்க தொன்மவியலில் ஆகாயம்  இடி ஆகியவற்றின்  கடவுளான ஜீயஸ் தனது சகோதரர் பொசைடனைச் சந்திக்கச் சென்றபோது, சைனாரா என்ற அழகான பெண்ணைக் கண்டார். உடனடியாக அவள் மீது காதலில் விழுந்த அவர்அவளை ஒரு தேவதையாக்கி தன்னுடன் ஒலம்பஸ் மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிகவும் தனிமையிலிருந்த சைனாரா ஜீயஸுக்கு தெரியாமல் தனது குடும்பத்தைப்  பார்க்க ரகசிய பயணங்களை மேற்கொண்டார். ஜீயஸ் இவற்றைக் கண்டுபிடித்தவுடன்  கோபமடைந்து, ஒலிம்பஸ் மலையில் இருந்து சைனாராவை  ஒரு கூனைப்பூவாக மாற்றி கீழே தள்ளிவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.

இக்கதையின் பேரில்தான் கூனைப்பூ என்னும் ஆர்டிசோக் (artichoke ) கின் அறிவியல் பெயரும் சைனாரா கார்டன்குலஸ் (Cynara cardunculus, variety scolymus)  என வைக்கப்பட்டது.

மனிதர்களின் பழமையான உணவுகளில் கூனை மலர்களும் ஒன்று இந்த சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சதைப்பற்றான உண்ணக்கூடிய மலரரும்புகள்தான் ஆர்டிசோக்குகள் . இவை உருண்டை அல்லது பிரெஞ்ச் ஆர்டிசோக்குகள், முள் முட்டைக்கோசு  ஆகிய பெயர்களிலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

 ஆங்கில சொல்லான artichoke  என்பது 16 ம் நூற்றாண்டில் ’கூரிய’ என்னும் பொருள் கொண்ட  (அரபிச்சொல்லின் வேர்களை கொண்ட)  இத்தாலிய சொல்லான articiocco என்பதிலிருந்து பெறப்பட்டது.

மத்திய தரைக்கடல் பகுதிக்கும் வட ஆப்பிரிகாவுக்கும் சொந்தமான இந்த தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே உணவாகப் பயன்பட்டுவருகின்றன. இத்தாலியில்  1400 ம் ஆண்டில் கூனைப்பூ உண்ணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அப்போது இதன்  தளிரிலைகளும் உண்ணப்பட்டன.

இவை பண்டைய கிரேக்கத்தில் மருந்தாகவும் உணவாகவும் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய ரோமானிய செல்வந்தர்கள் மட்டும் இவற்றை உணவில் விரும்பி உண்டார்கள் அக்காலத்தில் ரோமானிய குடிமக்களில் வறியவர்கள் கூனை மலர்களை உண்ணத் தடை இருந்தது.  பல நாடுகளில் கூனைமலர்கள் பாலுணர்வை தூண்டும் இயல்புடையதென்பதால் பெண்கள் அவற்றை உண்ணவும் தடை இருந்தது.

15 ம் நூற்றாண்டில் இவை ஐரோப்பாவில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. டச்சு மக்களால் இங்கிலாந்துக்கு 1530 ல் ஆர்டிசோக்குகள் அறிமுகமாயின. 19 ம் நூற்றாண்டில்   அமெரிக்காவிற்கு பிரஞ்சு குடியேறிகளால் கொண்டு வரப்பட்ட இவை லூசியானாவில் முதலில் சாகுபடி செய்யபட்டன

7 அடி உயரம் கொண்ட  பல்லாண்டுத் தாவரங்களான கூனைச்செடிகள்  9 அடி சுற்றளவுக்கு பரந்து வளரும். ரோஜா மலர்களைப்போல சுற்றடுக்கில் அமைந்திருக்கும் அடர்பச்சை  இலைகள் 1 மீ  நீளம் .வரை வளரும் ஒவ்வொரு வருடமும் மலரும் காலம் முடிகையில் இலைகளும் வாடி உதிர்ந்து பின்னர் மீண்டும் புதிதாக தளிர்க்கும்

தாவரம் வளரத்துவங்கிய 6 வது மாதத்திலிருந்து மலர் அரும்புகளை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு  மலர்த்தண்டிலும்  1 லிருந்து 5 கூனைப்பூக்கள் உருவாகும்.  ஒரு வருடத்தில்  ஒரு தாவரத்தில் சுமார் 20 கூனைப்பூக்கள் உருவாகும்.

இச்செடிகளின் மலர்கள் மலர்ந்து விரியும் முன்னர்  மலரும்புகளின் கூர் நுனி கொண்ட தோல் போன்ற தடித்த  இதழ்களைப்போலிருக்கும்  மலரடிச்செதில்களின் (bracts) உள்ளிருக்கும் சதைப்பற்றான மாவுபோன்ற பொருள் உண்ணத்தகுந்தது. அரும்புகளின் இதயம் எனப்படும்  சதைப்பற்றான மையப்பகுதி மிகச்சுவையானது.

அறுவடை செய்யாத  அரும்புகள் அழகிய ஊதா நிற  மலர்களாக  மலரும். 8 வருடங்கள் வரை பலனளிக்கும் இவை விதைகளை உருவாக்கினாலும்  தாவரங்களிலிருந்து தோன்றும் பக்கச்செடிகளிலிருந்தும் வேர்த்துண்டுகளிலிருந்தும் இவற்றை எளிதாக வளர்க்கலாம்.

ஆர்டிசோக்குகளில்  பொட்டாஷியம், வைட்டமின் C , நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

சிறிய அரும்புகள் அதிக சுவையுடன் இருக்கும். இவற்றை  முழுமையாக  நீரில் அல்லது  நீராவியில் வேகவைத்தும்,  சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம்

இவற்றில் பல நிற மலர்கள் இருந்தலும் மிக அதிகம் சாகுபடி செய்யபடுவது பசைநிற மலர்வகைகளே. உணவுப்பயிர்களாகவும் அலங்காரச்செடிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன.

உலகின் மிக அதிக ஆர்டிசோக் உற்பத்தியாளராக இத்தாலி, எகிப்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன.  பிரபல இத்தாலிய மதுவகையான சைனார் (Cynar) ஆர்டிசோக் மலர்ரும்புகளை நொதிக்கச்செய்து உருவாக்கப்படுகின்றது. 16 சதவீத ஆல்ஹகாலை கொண்டிருக்கும் இம்மது  உணவுக்கு முன்னர் பசியுணர்வை தூண்ட அருந்தும் மதுவகைகளில் மிக பிரபலமானது. (aperitif).

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இவை மிக அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கலிஃபோர்னியாவின் மாண்டெரே (Monterey) பகுதி உலகின் ஆர்டிசோக் மையம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மார்ச் 16 ஆர்டிசோக் நாளாக கொண்டாடப்படுகிறது கலிஃபோர்னியாவின் வருடா வருடம் நடைபெறும்அர்டிசோக் கொண்டாட்டங்களில் 59 வது கொண்டாட்டம் 1948ல்  நடைபெற்ற போது மர்லின் மன்றோ ஆர்டிசோக் அரசியாக பட்டமளித்து சிறப்பு செய்யப்பட்டார்.

கார்டூன் எனபடும் இவற்றின் காட்டுமூதாதை (Cynara cardunculus) யின்  இளம் இலைகளும் மலரும்புகளும் தண்டுகளும் வேர்களும் கூட  உண்ணத்தகுந்தவை இவையும் இப்போது ஆர்டிசோக்குகளுடன் சாகுபடியாகின்றன

.

 ஜெருசேலம் ஆர்ட்டிசோக் எனப்படுபவை இந்த கூனைப்பூக்கள் அல்ல. Helianthus tuberosus என்னும் தாவரத்தின் கிழங்குகள்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன.. வியட்நாமில் இதிலிருந்து தேநீர் தயாரித்து மருத்துவக் காரணங்களுக்காக அருந்தப்படுகிறது

  இவை சுவைக்காக, உடல்நலனுக்காக,, ஈரல் பாதுகாப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கான சிகிச்சைக்கு என பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காவும் உண்ணப்படுகின்றன. இவற்றின் இரு முக்கிய வேதிப்பொருட்கள் சையனாரின் மற்றும் சிலிமாரின்  (cynarin and silymarin).

ஆர்டிசோக் மலரரும்புகளை எளிதாக சமைத்து உண்ணுதலை கற்றுத்தரும் காணொளி: https://youtu.be/CPwEX4Q1QAs

தீக்கொன்றை

தாவர அறிவியல் பெயர்: Delonix regia

SS Naturals15 Royal Poinciana seeds, Gulmohar, Delonix Regia tree, Flame tree, Flamboyant Tree,Krishnachura, Kempu torai,ornamental tree, Landscaping,Fastest growing Tree : Amazon.in: Garden & Outdoors

 ஆங்கிலப்ப்பெயர்கள்: Flamboyant, Royal Poinciana, Gulmohar tree,  Flame tree, Peacock flower tree, Mayflower tree ,  flame of the forests, flame tree, , poinciana,

தமிழ்பெயர்கள்: தீக்கொன்றை, குல்மொஹர், நெருப்புக்கொன்றை, காட்டுத்தீ மரம், மயூரம், செம்மயில்கொன்றை, மயிற்கொன்றை, மேமாதப்பூ மரம் 

பயறுவகைத்தாவரங்களின்பேபேசிகுடும்பத்தின்துணைக்குடும்பமானஸிசல்பீனியேசி (Caesalpiniaceae)குடும்பத்தை  சேர்ந்தஇம்மரம்மடகாஸ்கரைதாயகமாக கொண்டது.

 உலகநாடுகள் பலவற்றில் பல பெயர்களில் இம்மரம் அழைக்கப்படுகிறது,.அமெரிக்காவில்  தீக்கொன்றை மரங்களை  அறிமுகப்படுத்திய ’’பிலிப் டிலாங் வில்லியர்ஸ் போயின்சி’’- (Phillippe de Longvilliers de Poincy) என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ராயல்போயின்ஸியானா –Royal Poinciana  என அழைப்பதுண்டு.

கேரளாவில் ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையில் இருந்த இம்மரத்தின் மீது ஏசுவின் ரத்தத்துளிகள் சிதறியதில் இம்மலர்கள் ரத்த சிவப்பு நிறம் வந்ததாக  நிலவும் ஒரு நம்பிக்கையில் இம்மரத்தின் மலர்களை கல்வாரிப்பூ எனக்குறிபிடுகிறார்கள். கேரளாவில் இவற்றை வாகையென்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள் 

வியட்நாமில்  ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க படுகையில் இவை மலர்வதால்இம்மரம்  அங்கு மாணவ மரம் என்று அழைக்கப்படுகிறது.  

இந்தியாவில் 200 வருடங்களுக்குமுன்பிருந்தே காணப்படும் இம்மரம்பிரிட்டிஷ் இந்தியாவில் தேயிலை தோட்டங்களில் நிழல் தரும் பொருட்டு பிரிட்டிஷாரால்அறிமுகப்படுத்தபட்டது. மடகாஸ்கரில்19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வென்ஸலாஸ்போஜரால் (Wenceslas   Bojer) கண்டறியப்பட்டஇம்மரங்களின் எண்ணிக்கை  இப்போது மடகாஸ்கரில்அருகிவிட்டாலும்உலகின் பல பகுதிகளில் இவை ஏராளமாக சாலையோரம் நிழல் தரும் அழகு மரங்களாகவும், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின்வளாகங்களில்அழகுக்காகவும்வளர்க்கப்படுகின்றன..

delonix regia | pressed flowers by margaret woermann | Plantae, Ideias de tatuagens, Tatoo

தீக்கொன்றை மரங்கள் 15 மீட்டர் உயரம் வளரக்கூடியவை.மரத்தண்டு2 மீட்டர் அகலம் வரை பெருத்திருக்கும். பெரும்பாலும் பசுமை மாறாமரமாக இருக்கும், இது குறைந்த காலத்துக்கு குறிப்பிட்ட மாதங்களில்உலகின் சில இடங்களில் மட்டும் இலைகளை உதிர்க்கும்இயல்புடையது. இவற்றின் மலரும் காலம் இந்தியாவில் மே முதல் ஜூலை வரை ஆனால் பிற நாடுகளில் இந்த காலம் வெகுவாகமாறுபட்டிருக்கும்.இந்தியாவில் தீக்கொன்றைகள்மார்ச்சில் இருந்து ஜூலை வரை இலைகளை உதிர்த்திருக்கும்.  

வேகமாக வளரும் இவை 3 வருடங்களில் சுமார் 8 மீட்டர் உயரம் வரை வளர்ந்து விடும்  4 லிருந்து5 வருடங்களில் மலர துவங்கும்.  

மயிலிறகு போல அகன்ற இருகூட்டிலைகள்அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் சுமார் 60 செமீநீளமும்20 லிருந்து40 ஜோடி கூட்டிலைகளை எதிர் எதிராகவும்கொண்டிருக்கும். மரத்தின் மேற்பரப்பு ஏராளமான இலைகளையும்பெருங்கொத்துக்களாகமலர்களுடனும் அகன்று இருக்கும்.

File:Gulmohar (Delonix regia) leaves.jpg - Wikimedia Commons

கூட்டிலைக்காம்பு சற்று பருத்திருக்கும், கிளை நுனிகளிலும், கணுவிடுக்குகளிலிருந்தும், மலர் மஞ்சரிகள் உருவாகும். மஞ்சரிகளில்மலர்க்காம்புகளின் நீளம் ஓரளவுக்கு சரிசமமாக இருக்கும். கிளை நுனியில் தோன்றும் மஞ்சரிகள் அளவில் பெரியதாக இருக்கும். மலர்களின் நிறம் அடர் சிவப்பிலிருந்து ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என வேறுபடும். 4லிருந்து 5 செமீஅளவுள்ள பெரியமலர்கள் ஐந்து இதழ்களுடன் இருக்கும். 4 இதழ்கள்சிவப்பிலும் ஒருஇதழ் சற்று பெரிதாக மஞ்சள் வெள்ளை தீற்றல்களுடனும் இருக்கும்

Flamboyant (Delonix regia) | Delonix regia FABACEAE-CESALPIN… | Flickr

இதழ்கள் பெரிதான நகங்களை போலிருப்பதால் கிரேக்கமொழியில் dilo என்பது’’தெளிவாக’’என்னும் பொருளிலும் onix என்றால்’’நகங்கள்’’(Claws) என்றும் பொருள்தரும் இருசொற்களை சேர்த்து இம்மரத்தின்பேரினத்தின்பெயரிடப்பட்டது. சிற்றினமான ரீஜியா என்பது’’அரசனைப்போல’’என்றுபொருள்தரும் இலத்தீன சொல்லிலிருந்து பெறப்பட்டது

தீக்கொன்றையைபோலவே சிறப்பான இயல்புகளைகொண்டிருக்கும் பலதாவரங்களின் சிற்றினங்களுக்கு ரீஜியா எனபெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

Delonix regia, the flame tree with dry p... | Stock Video | Pond5

5 செமீ அகலமும் 30 லிருந்து 60 செமீ நீளமும் கொண்டிருக்கும் நீண்ட தட்டையான கனிகள் கடினமான தோலுடன் இருக்கும். பளபளப்பான பெரிய  விதைகளும் கடினமான விதையுறையைகொண்டிருக்கும்.. 20லிருந்து40 விதைகள்கனியில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..விதைகள் மூலம் இனப்பெருக்கம் நடக்கும்..

மரப்பட்டை சாம்பல் கலந்த  மண் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்..விதைகள் மிக கடினமான வெளியுறைகொண்டிருப்பதால் கொதி நீரில் மூழ்க வைத்து எடுத்து. ஈர காகிதங்களில்பொதிந்து வைத்து உலராமல்பாதுகாத்தால்.ஒரு வாரத்தில் இவை முளைக்கும். இயற்கையாக விதைகள்முளைக்க  வருடங்களாகும் 

இதன் மரம் அடர்த்தி குறைவானெதென்பதாலும், கரையான் மற்றும் பூச்சி தாக்குதலுக்குஆளாவதாலும்இவற்றிலிருந்து  மரச்சாமான்கள்செய்யப்படுவதில்லை. சிறு பொம்மைகள் செய்வது, சமையலறை கத்திகளின்கைப்பிடிகள் ஆகியவை செய்யவே  இவற்றை பயன்படுத்துகிறார்கள். கிளைகள் குச்சிகள் ஆகியவை விறகுக்காக பயன்படுகின்றன

மரப்பட்டையில் கிடைக்கும் பிசின் நீரில் கரைந்து  கொடுக்கும் பசை மாத்திரைகளைபிசைந்து உருவாக்க பயன்படுகிறது..

அழகிய பளபளப்பான விதைகளைக் கொண்டு ஆபரணங்கள் செய்யப்படுகிறது இனிப்பு சுவையும்புரதமும்   கொண்ட பிஞ்சுக்காய்களும்இலைகளும்மனிதர்களுக்கும்கால்நடைகளுக்கும்உணவாகிறது

இலைச்சாறு பல வேதிச்சேர்மங்களை கொண்டிருப்பதால் களை கொல்லியாகவும்பயன்படுத்தப்படுகின்றது.  பார்த்தீனியநச்சுக்களைவளர்ச்சியை  இதன் இலைச்சாறு ஓரளவுக்கு கட்டுபடுத்துவது  சமீபத்திய ஆய்வுகளில்கண்டறியப்பட்டிருக்கிறது

விதைகளும்மரப்பட்டையும், பாரம்பரிய  மருத்துவ முறைகள் பல்வேறு சிகிச்சைகளுக்குமருந்தாக  பயன்படுகிறது. 

சத்து நிறைந்த மலர்கள் பசியை தூண்டும், பலவீனம் போக்கும்,வயிற்றுப்போக்கு மூக்கில் ரத்தம் வடிதல், சர்க்கரை வியாதி, ஆகியவற்றிற்கு மருந்தாகும், பழங்குடியினர் மரப்பட்டைசாற்றை தலைவலி நிவாரணியாக  பயன்படுத்துகின்றனர்.மரப்பட்டை சாறு வெட்டுக்காயங்களில்  ரத்தப்பெருக்கைஉரையச்செய்து கட்டுப்படுத்தும், சிறு நீர் பெருக்கும் வலி நிவாரணமளிக்கும்.

Flame of the Forest - Delonix Regia - Gulmohar Tree | Delonix regia, Poinciana, Royal poinciana

அரிதாக மஞ்சள் மலர்கள் இருக்கும் வகையும்தீக்கொன்றைகளில்  காணப்படுகிறது.Delonix regia var. flavida என்னும் அறிவியல் பெயர் கொண்டிருக்கும் மஞ்சள் கொன்றை மரத்திற்குபதிலாக  பலநூல்களில் இயல் வாகை மரத்தின் பெயரும்படமும்   தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கும்.தீக்கொன்றைகளில் பொன்ஸாய் மரங்களும் உருவாக்காப்படுகின்றன.

Amazon.com : Bonsai Flamboyant Flame Tree Seeds to Grow | 20 Seeds | Delonix regia, Prized Flowering Tropical Bonsai Tree Seeds : Patio, Lawn & Garden

தீக்கொன்றைகள் பல நாட்டு தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளன.

Delonix regia ASCENSIÓN 11/05/1981 | Post stamp, Postal stamps, Postage stamps

கடலும், நிலவும் கவிதைகளும் !

கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்,அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத , மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற வரிகளுக்கு கணிசமான பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அப்படியான கவிதைகளே அப்பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் அந்த பத்திரிகையில் என் படைப்பு ஏதேனும் வெளிவர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.  எனக்கு கவிதைகளில் நல்ல ரசனை உண்டு ஆகச்சிறந்த கவிதைகள் வாசிப்பவள். எனினும் கவிதை முயற்சிகள் செய்திருக்கிறேனே தவிர நல்ல கவிதையொன்றை இன்று வரை  எழுதவில்லை. அந்த பத்திரிகையில் வந்திருப்பவைகளைப்போல ஒரே நாளில் பல நூறு கவிதைகள் என்னால் எழுத முடியும். எனவே அப்போதே  வெகு சுமாரான சில வரிக்கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். இரண்டு நாட்களில் என் கவிதை பிரசுரிக்க தேர்வான  தகவல் வந்து, இரண்டாவது வாரம் பிரசுரமாகி அடுத்த மாதம் சன்மானத்தொகையும் வந்தது.

ஆனால் அச்சில்  என் பெயருடன் கவிதையை பார்த்ததும் எனக்கு என்னை குறித்தே மிக தாழ்வான அபிப்பிராயம் உண்டானது. ஏதோ உள்ளுண்ர்வின் தூண்டுதலால் அக்கவிதைக்கு பிழை என்றே தலைப்பிட்டு இருந்தேன். எப்போதும் வாட்ஸ்அப் நிலைத்தகவல்களில் என் படைப்புகள் குறித்த  தகவல்களை வைக்கும் நான் இதை ரகசியமாக வைத்துக் கொண்டேன்

போகன் சங்கரின் 

‘’ஒரு தோல்வியை எங்கு வைப்பது என்று தெளிவாக தெரிந்திருந்தும் ஒரு வெற்றியை ஒளித்து வைப்பது’’ என்னும் அருமையான கவிதை ஒன்று இருக்கிறது.

அப்படி அந்த கவிதை பிரசுரத்தை ஒளித்து வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எனக்கு தெரிந்த யாரும் இதுவரை அதை பார்க்கவில்லை. எனினும் நல்ல கவிதையொன்றை எழுதும் கொதி அதிகரித்திருந்தது.

மார்ச்சில்  நண்பர் சாம்ராஜ், லக்‌ஷ்மி மணிவண்ணன் மற்றும் ஆனந்த்குமார் நடத்தும் கன்னியாகுமரி கவிதை அரங்கு குறித்து தகவல் சொன்னார்.  அந்த கவிதை பிரசுரமானதன் பிழையீடாக இக்கவிதை அரங்கில் கலந்து கொள்ள விரும்பினேன். மேலும்  சித்திரை முழுநிலவன்று கடற்கரை கவிதையரங்கு என்னும் கற்பனையே வசீகரமாக இருந்தது

கடல் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை. இத்தனை வயதில் நான் மொத்தமாக நாலோ ஐந்தோ முறை தான் கடற்கரையில் இருந்திருக்கிறேன். சென்னை மெரினா, திருச்செந்தூர்,ராமேஸ்வரம்  என்று. ஆனால் அங்கெல்லாம் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போல கூடியிருந்த  ஜனக்கூட்டங்கள் தான் கடலா கடலலையா என்று எண்ண வைக்கும் . கடல்கண்டு  திரும்பிய பின்னரும் எனக்கு நினைவில் கடலோ அலையோ இருந்ததில்லை. உடல் கசகசப்பு, மாங்காய் பத்தை, குதிரைச் சவாரி, பலூன்,  நெரிசல் இவைகளே நினைவிலிருக்கும். நீர்நிலைகளின் அருகில் செல்கையில் உண்டாகும் இனம்புரியா அச்சமும் இருப்பதால் அதிகம் கடலை நெருங்கியதுமில்லை

எனவே கடல், அங்கு நடக்க இருக்கும் கடற்கரை கவியரங்கம் என்று உற்சாகமாக இருந்தது.

எனினும் தனியே அத்தனை தொலைவு செலவது குறித்தும் யோசனையாக இருந்தது. ஆனால் சரணும் தருணும் தனியே போய்த்தான் ஆகவேண்டும் பழகிக்கொள் என்று படித்துபடித்து பாடம் எடுத்தார்கள்.அவர்களின் வற்புறுத்தலின் பேரில் ரயில் இரவுப்பயணத்திற்கென சரணுடன் சென்று எனக்கு பழக்கமில்லாத குர்த்திகளை வாங்கினேன். ஆபத்பாந்தவனாக ஆனந்த் அழைத்து கோவையிலிருந்து கதிர்முருகனும் வருவதாக சொன்னார். இருவரும் இணைந்துசெல்ல முடிவானது.

புறப்படும் அன்று. மாலை கனமழை வீட்டு வாசலில் இருந்து காரில் ஏறுவதற்குள் முழுக்க நனைந்தேன். 8 மணி ரயிலுக்கு மாலை 6 மணிக்கே ரயில் நிலையம் போயிருந்தேன்.

நான் நினைத்துக்கொண்டிருந்தது போலல்லாமல் ரயில் நிற்கும் இடத்தை கண்டுபிடிக்க அத்தனை சிரமமெல்லாம் இல்லை. சரண் போனில் வழிகாட்ட நேராக சென்று குறிப்பிட்ட ரயில் பெட்டியின் எதிரே அமர்ந்து கதிருக்கு காத்திருந்தேன்.

தம்பி கதிர்ருமுருகனும் வந்தார். இரவுணவை இருவருமாக இருக்கையில் அமர்ந்து உண்டோம். கோவிட் தொற்றுக்கு பிறகு இப்போதுதான் ரயிலில் போர்வை கம்பளி எல்லாம் கொடுக்கிறார்கள்.  எங்கள் பெட்டியில் இரு இளைஞர்கள் இருந்தார்கள் மிக உரக்க பேசிக்கொண்டு பாடல்கள் ஒலிக்க செய்து கொண்டுமிருந்தார்கள். இரவு நெடுநேரமாகியும் அப்படியே தொடர்ந்தார்கள்.கதிர் மென்மையாக சொல்லிப் பார்த்தும்  பிரயோஜனமில்லை. பின்னர் டிக்கெட் பரிசோதகரை அழைத்துவந்து கண்டித்த  பின்னர் அவர்கள் அமைதியானார்கள்.முப்பது வயதுக்குள்தான்  இருக்கும் அவர்களுக்கு 

குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி முன்னதாகவே நாகர்கோயில் வந்துசேர்ந்தோம் ரயில் நிலைய வாசலிலேயே எங்களை வரவேற்க இலைகளைக் காட்டிலும் அதிக  மலர்களுடன்  தங்க அரளிச்சிறு மரமொன்று நின்றிருந்தது 

அதே ரயிலிலும் ,சில நிமிட இடைவெளியில் வந்த மற்றொரு ரயிலிலுமாக  சுதா மாமி, மதார், ஆனந்த ஸ்ரீனிவாசன்,நேசன் உள்ளிட்ட பதினைந்து பேர் இருந்தோம் அந்த நேரத்திலேயே ஆனந்தகுமார், லக்ஷ்மி மணிவண்ணன் இருவரும் காரில் வந்திருந்தார்கள் எல்லாருமாக புறப்பட்டு லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின்   கடையருகில் தேநீர் அருந்திவிட்டு அந்த கடற்கரை விடுதிக்கு வந்தோம்.

ஊருக்கு மிக ஒதுக்குப்புறமான விடுதி. அத்தனைஅ ருகில் கடல் இருக்கும் நான் எண்ணி இருக்கவில்லை. முதலில் எனக்கு கடலின் சீற்றம் மனசிலாகவே இல்லை. அருகில் எங்கோ பேருந்துகள் சீறிக் கொண்டு செல்கின்றன என்றே நினைத்தேன் . அத்தனை அருகில் கடலை, அத்தனை நீண்ட தூய மணற் கடற்கரையை, புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை பார்த்ததும் முதலில் திடுக்கிட்டேன் கற்பனையில் நான் நினைத்திருந்ததை காட்டிலும் மிக வசீகரமான கடல் யாருமற்று தன்னந்ததனித்திருந்தது.

அந்த கடற்கரையில் பாறைகள் அதிகம் என்பதால் யாரும் அங்கு குளிக்க இறங்க வேண்டாம் என்று அப்போதிலிருந்தே பலமுறை  எச்சரிக்கப்பட்டோம்.

தனித்தனி குடில்களாக  தங்குமிடம். நானும் சுதா மாமியும் ஒரு குடிலில். அந்த குடிலின் கட்டுமானம் பிரமிப்பளித்தது, மிகச்சிறிய  ஒழுங்கற்ற இடங்களை மிக சமார்த்தியமாக உபயோகித்து அறையை வடிவமைத்திருந்தார்கள். குடிலறையிலும் அரங்கிலும் எங்கெங்கும் மணல் காலடியில் நெறி பட்டது.

.

குளித்து கடல் பார்த்து ,கால் நனைத்து நல்ல உணவுண்டு அமர்வுகளுக்கு தயாரானோம். விஷ்ணுபுரம்  வட்ட நண்பர்கள் பலர் இருந்தார்கள் அவர்களை எல்லாம் எப்போது பார்த்தாலும் ’குடும்பத்தில் எத்தி’ என்று நினைத்து நெஞ்சம் பொங்கும் எனக்கு. 

விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் பார்த்திருக்காத பலர் இருந்தார்கள். அதிகம் இளைஞர்களும்

சுதந்திர வல்லி , சுதா மாமியுடன்

லக்‌ஷ்மி மணிவண்ணன் அவர்களின் மனைவி மக்களும் வந்திருந்தார்கள் அவர் மனைவி சுதந்திர வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பறவையுடையதைப் போல மிக இனிமையான குரல் அவருக்கு. பேசப் பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருந்தது

அருண்மொழியும்  வந்துவிட்டார்கள் அமர்வுகள் துவங்கும் முன்பே. .அருணாவை 2017 ஊட்டி காவிய முகாமில் சந்தித்து அறிமுகமாயிருந்தேன். இந்த வருடம்தான் அவரது தொடரை வாசித்து, பின்னூட்டமிட்டு, அடிக்கடி பேசி என்று நெருக்கமாயிருந்தேன். ஜெவையும் அருணாவையும் வெண்முரசையும் கொஞ்சமும் அறியாதவர்களும் இருந்தார்கள் அவர்கள் பல எதிர்பாராத ஆனால்  சுவாரஸ்யமான  கேள்விகள் கேட்டார்கள்.அவற்றிற்கெல்லாம் நான் முன்புபோல பதட்டப்படாமல் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். மனமுதிர்ச்சி மட்டுமல்ல  எனக்கு வயதாகிவிட்டதையும் முதன்முதலாக அப்பதில்களின்  போது உணர்ந்தேன் . ஒரு சிலர் மறக்க முடியாதர்வளாகிவிட்டிருக்கிறார்கள்

அருகில் அருணா பின் வரிசையில் கதிர்முருகண், ஜி எஸ் வி நவீன்

அமர்வுகள் துவங்கும் முன்பு அனைவரும் அறிமுகம் செய்து கொண்டோம் அருணா தான் கவிதைகளை கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதாக சொன்னார். இளைஞர்களில் இருவர் சிறுவர்களைப்போல 7 அல்லது 8ல் படிப்பார்கள் என்று எண்ணத்தக்க தோற்றத்தில் இருந்தார்கள் எனக்கு எப்போதுமே இலக்கிய கூட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

ஆனந்த் சீனிவாசன் மிக இனிமையான, பொருத்தமான சரஸ்வதி துதியொன்றை பாடி அமர்வுகளை துவக்கி வைத்தார்,தாடி இல்லாமல் இருந்த அண்ணாச்சியை வெகு நேரம் கழித்தே அடையாளம் கண்டு கொண்டேன்.

கண்டராதித்தன், சபரி, அதியமான் உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள் லக்‌ஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் அமர்வுகள், பின்னர் தேநீர் இடைவேளை அதன் பிறகு போகன் சங்கர் அமர்வு

போகன்

கவிதைகளில் என்ன இருக்கலாம், இருக்கவேண்டியதில்லை, தோல்வியுறும் கவிதைகளின் அழகு என்று மிக விரிவான, வேறெங்கும் கிடைக்கப் பெறாத தகவல்களுடன் அமர்வு களைகட்டி இருந்தது

மதிய உணவு முதன் முதலாக வல்லரிச்சோறுடன் நாகர்கோவில் பக்க உணவு

எனக்கு இந்த முகாம் கலந்து கொண்டதில் பல முதன் முதலாக இருந்தன

அப்படி துவரன், தீயல், வல்லரிச்சோறு, பிரதமன் என்று சிறப்பான உணவு. விஷ்ணுபுர குழுமம் எப்போதும் குடும்பமாக கூடியிருந்தே விழாக்கள் நடைபெறும் என்பதால் இங்கும் விளம்புவதும், இலைபோடுவதும், சுத்தம் செய்வதுமாக பலர் முனைந்திருந்தனர் புதியவர்களும் இதைக்கண்டு இயல்பாக கலந்து புழங்கினார்கள்

கவிழ்ந்து விழுந்த எச்சில் இலைகள் நிறைந்து இருந்த ஒரு பீப்பாயை சிவாத்மா பொறுமையாக நிமிர்த்தி  சரியாமல்  நிற்கவைத்து  கொண்டிருந்தார்,

அருணாவும் சுதந்திராவுமாக எனக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உணவு வகைகளின் செய்முறைகள் சொல்லிக்கொடுத்தார்கள் இருவருமாக ஒரு புத்தகம் எழுதினால் பிரமாதமாக இருக்கும். அருணா சக்கையை அரைத்து செய்யும் ஒரு இனிப்பை அவரது வழக்கம்போலான அபிநயத்தில் சொல்லி அங்கே காணாப்புலத்தில் எங்கள் முன்னிருந்த அந்த இனிப்பை ஒரு கரண்டி எடுத்து , ரொட்டியில் தடவி சுவைத்ததை பார்க்கவே நாவூறியது. அவசியம் செய்து பார்க்க போகிறேன் அவற்றை.

மதிய அமர்வுகளில் மதாரும் ஆனந்தும்.  மதார் புதுக்கவிதை தொகுப்புக்களிலிருந்து உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். 

ஆனந்த்குமார் அமர்வு அபாரம் குறிப்பாக அந்த பழங்குடியினரின் மொழிக் கவிதையை அவர் மொழியாக்கம் செய்து, அவர்களின் மொழியிலும் வாசித்தது இன்னும் காதில் ஒலிக்கிறது

’வீழ்ந்து கிடந்த மரக்கொம்பில் உயிர் இருக்கோ இல்லியோ’ என்று துவங்கிய அக்கவிதை, அக்கொம்பில்  முளைக்கும் இருதளிர்களில்  ஒன்றில் அன்பென்றும் மற்றொன்றில் வாழ்வென்றும் எழுதியதாக செல்கின்றது.முகாமில் வாசிக்கப்பட்ட அனைத்திலுமே  அதுவே அபாரமானது

மரக்கொம்பு- சாந்தி பனக்கன்

***காட்டிலொரு மரக்கொம்புமுறிந்துகிடக்கிறது

இறந்துவிட்டதாஉயிர் உள்ளதா?
தினமும் நானதை கடந்து போகிறேன்

ஒரு நாள் அதில்இரண்டிலை தளிர்த்தது

ஓரிலையில் நான் அன்பென்றெழுதினேன்

மற்றொன்றில் வாழ்வென
வேர் நீர் பிடித்து தண்டு உரம் பிடித்து

நீலக்கல் வைத்த ஆகாயம் தொட்டது.
உழுதிட்ட வயலைக் காணதலை நீட்டி நீட்டிகொம்பு மரமானது

மகனொரு ஏறுமாடம் கட்டினான்

மகளொரு ஊஞ்சலிட்டாள்

பறவையொரு குடும்பம்சேர்க்க

இலையொரு நிழல்விரித்தது
நானொரு குடில் கட்டிவேலி நடவும்வேர்கள் எல்லை கடந்தன

அதனால்தான் அதனால்தான்நாங்கள் அதை வெட்டியிட்டோம்

கொண்டுபோக உறவில்லாமல்உதிரம் துடிக்கக் கிடக்கிறது

நேற்று நான் கண்ட கொம்பும்நாளை நான் காண விழைந்த காடும்.-

பணியர் மொழியில்:கோலு கொம்பு- சாந்தி பனக்கன்-காட்டிலொரு கோலு கொம்புஒடிஞ்சு கிடக்கிஞ்சோ.சத்தணோ அல்லசீம உளணோ?ஓரோ நாளு நானவெ கடந்து போஞ்சே,ஒரு நாளுஇரண்டிலே வந்த.ஓரிரெம்பே நானு..இட்ட எஞ்செழுத்தே.பின்னொஞ்சும்பே ஜீவிதனும்வேர் நீர் வச்சுதண்டு தடி வச்சுநீலே கால்லு வெச்ச மானத்தொட்டு.ஊளி இட்ட கட்ட காம.நீலே நீட்டி நீகொம்பு மராத்த.மகனொரு ஏறுமாடம் கெட்டுத்த.மகளொரு ஊஞ்ஞாட்டளு.பக்கியொரு குடும்ப உண்டாக்குத்த.இலயொரு தணலுட்டநானொரு கூடு கட்டிவேலி திரிச்சக்குவேரு அதிரு கடந்தா.அவேங்காஞ்சு அவேங்காஞ்சு வெட்டியுட்டே..கொண்டு போவ குடிப்படில்லடெ..சோரெ புடச்சு கிடந்துளஇன்னலெ நானு கண்ட கோலுகொம்பும்நாளெ ஞான் காமதிரச்ச காடும்

.-சாந்தி பனக்கன் பணியர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர். கேரளத்தின் வயநாடு மாவட்டம் நடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.(தகவல் நன்றி: நிர்மால்யா, ஆவநாழி)

மாலை கதிரணைவை பார்க்க கடற்கரை சென்றோம். கடலுக்குள் மெல்ல இறங்கும் மாபெரும் தீக்கோளம் கண்ட பிரமிப்பு  நீங்கு முன்பே சுதந்திரா சுட்டிக்காட்டியதும் எதிர்திசையில் திரும்பினால் வெள்ளித்தாம்பாளமாக முழுநிலவு மெல்ல எழுந்துகொண்டிருந்தது, உண்மையில் அத்தனை பரவசமாக இருந்தது. நெஞ்சு பொங்குதல் என்றால் என்ன என்று அப்போது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனந்த்குமார்  அங்கிருந்தவர்களுக்கு மணலில்அமர்ந்து சில கவிதைகளை வாசித்து காட்டினார் . குளித்துவிட்டு வீடு நுழையும் ஒருவனுடன் பிரியமான நாய்க் குட்டியை போல தொடர்ந்து நீர்த்துளிகளும், ஈரக்கால்சுவடும் வருவதை சொல்லும் கவிதை. அருமையான இனி ஒருபோதும் மறக்கவியலாத கவிதை அது

sargassum

கடற்கரையில் ஒரு பதின்பருவ மீனவப்பெண் பிளவு பட்ட இதய வடிவில் கடற்கரையெங்கும் பரவி வளர்ந்திருந்த சிறு செடிகளின் இலைகளை சேகரித்துக்கொண்டிருந்தாள். மான் நிறம் பளிச்சிடும் சிறிய கண்கள். எண்ணெய் மினுங்கும் சருமம் கொள்ளை அழகு . பெயர் ஜென்ஸி என்றாள், ஒரு எளிய நைட்டியில் அத்தனை அழகாக ஒருத்தி இருக்கமுடியுமென்பதை யாரேனும் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்கமாட்டேன். இந்த இலைகளை ஆடுகளுக்கா எடுத்துபோகிறாய்? என்று கேட்டேன் ‘’இல்ல மொசலுக்கு ‘’ என்றாள் புதியவர்களை கண்ட கூச்சத்தில் நாணி இன்னும் அழகானாள். அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டாள்

”’இந்த செடிக்கு என்ன பேரு’’?/என்றென் ’’மாமனுக்கு தான் தெரியும் ‘’என்று சற்று தூரத்தில் சவுக்கு மரங்களுக்கிடையில் தெரிந்த ஒருவரைக்காட்டினாள். காடு நீலி நினைவில் வந்தாள் இவள் கடல்புரத்து நீலி

நிறைய கிளிஞ்சல்கள், கடல் குச்சிகள், சங்குகள் சேகரித்தேன். சர்காசம் என்னும் காற்றுக்குமிழிகளை கொண்டிருக்கும் ஒரு கடற்பாசி உலர்ந்து கரை ஒதுங்கி இருந்தது. இராவணன் மீசை என்னும் ஒரு கடற்கரை மணலை பிணைக்கும் வேர்களை கொண்ட,   கொத்துக் கொத்தாக  புற்களை  கொண்டிருக்கும் புல்வகையை பல வருடங்களுக்குப் பின்னால் பார்த்தேன்.Spinifex littoreus என்னும் அதை எனக்கு ராமேஸ்வரத்தில் காட்டி விளக்கிய  மறைந்த  என் பெருமதிப்புக்குரிய பேராசிரியரை நினைத்துக்கொண்டேன். மலையாளத்தில்  எலிமுள்ளு எனப்படும் இப்புல் C4 மற்றும் CAM ஒளிச்சேர்க்கைகளை  விளக்கும் மிக முக்கியமான பரிணாம வரலாற்றை கொண்டிருப்பவை. இவற்றின் கூரிய விதைகள் காற்றிலும் நீரிலும் பரவி மணலில் குத்தி நின்று  கடற்கரை எங்கும் வளரும்.

ராவணப்புல்

இரவு கவிதை அமர்வில் பல புதியவர்களும் இளைஞர்களும் கவிதைகள் வாசித்தார்கள் பல கவிதைகள் கறாராக விமர்சிக்கப்பட்டன. யாமம், பிரளயம் போன்ற சிக்கலான வார்த்தைகளை தேவையற்று உபயோகிப்பதை குறித்தும் சொல்லப்பட்டது. சிலர் அவர்களுக்கு பிடித்த கவிதைகளையும் வாசித்தார்கள். கவிதைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த நான்கு நாட்கள் விடுமுறையில் பொதுவாக இளைஞர்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களுக்கு செல்லாமல் கவிதை முகாம் வந்து சாதாணரமாகவேனும் கவிதைகளை வாசிக்கும் இளைஞர்கள் குறித்து  மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அந்த இளைஞர்கள் நிச்சயம் பேரருவியின் முன் நின்று ஊளையிடமாட்டார்கள் காடுகளில் பீர்பாட்டிலை உடைத்து வீசமாட்டார்கள் ரயிலில், பிற பொது இடங்களில் சகமனிதர்களை  தொந்தரவு செய்ய மாட்டார்கள்  என்னும் உறுதி எனக்கு இருந்தது

கவிதை முகாமின்  முதல் நாள் நிறைவாக பள்ளி மாணவனை போலிருந்த அந்த  துடிப்பான இளைஞன் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதையாக ,

’’சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

 அப்பறவைக்குத் தருகிறது

 இக்கடல்’’

என்பதை வாசித்தார்

கடல்மணல்  காலடியில் நெறி பட்டுக்கொண்டிருந்த, கடலின் சீற்றம்  கேட்டுக் கொண்டிருந்த ஓர் அரங்கில் அக்கவிதை அன்றைய நிகழ்வை முடித்துவைக்க  மிகப்பொருத்தமானதாக இருந்தது.மனம் கனத்திருந்தது.

இரவுணவிற்கு பிறகு அனைவருமாக முன்னிரவில் கடற்கரை சென்றோம் ஆங்காங்கே சிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு கடல் பார்த்தோம். முழு நிலவின் ஒளி புறண்டெழுந்து மடங்கி, உருண்டு,  பாறைகளில் அறைபட்டு வேகம் குறைந்து தவழ்ந்தபடி கரை நோக்கி  வரும் அலைகளின் நுனிகளை  வெள்ளியாக மினுக்கியது. எனக்கு  கடலே புதிது, அதுவும் இந்த கடல் தூய கடற்கரையுடன் மிகப்புதிது,  சித்திரை முழுநிலவில் இப்படி நிலவொளியில் மினுங்கும் அலைவிளிம்புகளை பார்த்துக்கொண்டிருந்தது  மிகமிக புதியது. காரணமில்லாமல் கண் நிறைந்தது.

முதலில் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின்னர் அமைதியனோம் அனைவருமே அவரவர் கடலுடனும், நிலவுடனும் தனிக்திருந்த கணங்கள் அவை.  கடற்கரையில் விடுதியின் ஏராளமான நாய்கள் திடீரென வெறியேறி ஒன்றுடன் ஒன்று உருண்டுபுரண்டு சண்டையிட்டுக் கொண்டன பின்னர் தனித் தனியே அவையும் அமர்ந்து அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருந்தன.  அவை எப்போதும் முழுநிலவில் அப்படி பார்க்குமாயிக்கும். நாங்கள் தான் எப்போதாவது பார்க்கிறோம்.

மனம் துடைத்து கழுவியது போலிருப்பது  என்பார்களே உண்மையில் அப்படித்தான் இருந்தேன். எந்த பராதியும் யார் பேரிலும் அப்போது இல்லை மிகத் தூய தருணம் என் வாழ்வில் அது.  கரையை மீள மீள தழுவிக்கொள்ள யுகங்களாய் புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை,  பொழிந்துகொண்டிருந்த நிலவொளியில் பார்க்கையில் என்னவோ உள்ளே உடைந்தும், முளைத்தும் இழந்தும் நிறைந்தும் கலவையாக மனம் ததும்பி கொண்டிருந்தது

.

 எனக்கு ஒருவரிடம் தீராப்பகை இருந்தது. சாதரணமான கோபம் இல்லை மாபெரும் வஞ்சமிழைக்கப்பட்ட. உணர்வில் நான் கொந்தளித்த காலத்தின் கோபம்.

ஜெ நஞ்சு சிறுகதையில் சொல்லி இருந்தது போல அது வெறும் அவமதிப்பல்ல, இளமை முதலே பேணி வந்திருந்த ,என் அகத்தில் இருந்த, நான் என்று எண்ணி வருகையில் திரண்டு வரும் ஒன்று உடைந்த நிகழ்வது, அதன் பின்னால் அந்த நபரின் எண்ணை நான் தடைசெய்து விட்டிருந்தேன். அந்த வீழ்ச்சியிலிருந்தும்  எழுந்துவந்து விட்டிருந்தேன்

அத்தனை வருடங்கள் கழித்து, கவிதை முகாமிற்கு வரும்போது ரயிலில் தடைசெய்யப்பட்டிருந்த அந்த  எண்ணிலிருந்து பலமுறை தவறிய அழைப்புக்கள் வந்திருந்ததை பார்த்தும் பொருட்படுத்தாமலிருந்தேன்

நிலவை கண்டுவிட்டு நள்ளிரவில் குடிலறைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் வந்த  அழைப்பை எடுத்து எந்த கொந்தளிப்புமில்லாமல் சாதரணமாக பேசிவிட்டு வைத்தேன். நிலவு மேலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் விடுதலையுணர்வை அடைந்தேன். முழுவதுமாக அதிலிருந்து என்னை நான் மீட்டுக் கொண்டிருந்தேன்.  என் வாழ்வை நான் மீண்டும் திரும்பி பார்க்கையில் என்னைக்குறித்து நானே பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரு சிலவற்றில் இதுவும் இருக்கும். அந்த நஞ்சை  நான் கடந்து விட்டிருந்தேன்.

வழக்கம்போல கனவும் நனவுமாக இல்லாமல் ஆழ்ந்து உறங்கி அதிகாலை எழுந்தேன் கடலின் இரைச்சல், இடியின் ஒலி, இளமழையின் குளிர்ச்சியுமாக இருந்தது புத்தம் புது காலை

யாரும் எழுந்திரித்திருக்க வில்லை நான் குளித்து தயராகி அந்த அதிகாலையில் கடலுக்கு சென்றேன். பொன்னாவாரை மலர்ந்து கிடந்தது வழியெங்கும்.

முந்தியநாளின் இரவில் நாங்கள் அமர்ந்திருந்த இடங்களில் அப்போது கடல் இருந்தது.நிலவு மிச்சமிருந்தது தூரத்தில்அலைகள்  உயரத்தில் இருந்து கொண்டிருந்தது. கரையோரம் நடந்தேன். அங்கேயே பலமணி நேரம் இருந்தேன்

 நானும் கடலும் மட்டும் தனித்திருந்தோம். எங்களுக்குள் உரையாடிக் கொள்வதுபோல அலைகள் என்னை  தொட்டுத்தொட்டு திரும்பிக்கொண்டிருந்தன. கிளிஞ்சல்களை கொண்டு வந்து அளிப்பதும் பிறகு அவற்றை எடுத்து செல்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது கடல்.  மிகச்சிறிய மணல் நிறத்திலேயே இருந்த நண்டுகள் ஊர்ந்துசென்ற புள்ளிக்கோலங்களையும் அலை அழித்தழித்துச் சென்றது.

என்னை தழுவிக்தழுவி ஆற்றுப்படுத்தி. கழுவிக்கழுவி தூயவளாக்க அலைகளை அனுப்பிக் கொண்டே இருந்தது கடல்.

சில பேரலைகள் காலடி மண்ணுடன் என்னையும் சேர்த்து உள்ளே இழுத்தன.  பிரிய   நாய்குட்டிகள் வா வாவென்று நம்மையும்  விளையாட அழைக்குமே அப்படி அலைகள் என்னை  அழைத்தன. ஒரு கட்டத்தில் அந்த அழைப்புக்களை தட்ட முடியாதவளாகி இருந்தேன் ஒரு பித்துநிலை என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.

கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்று முறை கடலுக்குள் இறங்க நினைத்தேன்.  கடலுக்குள் இறங்கி அப்படியே காணாமலாகிவிடுவதை எந்த பயமும் இன்றி விரும்பி எதிர்பார்த்த கணம்அது. எப்படி அவ்விழைவிலிருந்து மீண்டு வந்தேன் என இப்போதும் தெரியவில்லை

அலைகள் வேகம் குறைந்தன, காலடியில் இருந்த .சில சங்குகளில் உள்ளே மெல்லுடலிகள் உயிருடன் இருந்தன.அத்தனை மெல்லிய உடலுக்கு எத்தனை கடின ஓடு? மிகஅருகே வந்த அலையொன்று ஒரு பெரிய வெள்ளை சிப்பியை கொண்டுவந்து தந்தது.

பட்டாம்பூச்சியின் ஒற்றைச்சிறகு போன்ற  அச்சிப்பியின்  மேற்புறத்தில்  ஒரு புள்ளியிலிருந்து துவங்கி அகல விளிம்பு வரை நீளும் நூற்றுக்கணக்கான  மெல்லிய இணை வரிகள் இருந்தன

அந்த வரிகளை அதே அளவில் , அதே இடைவெளிகளில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தவறில்லாமல் வரைய சில நாட்களாவது வேண்டும் மனிதனுக்கு. எப்படி, எதற்கு ஒரு சிப்பிக்கு இத்தனை ஒரு அழகு வடிவம்?அந்த சிப்பியை மொழுக்கென்று ஒரே வெண்பரப்பாக கூட படைத்திருக்கலாமல்லவா இந்த பேரியற்கை?

இப்படி கோடானுகோடி சிப்பிகளை, கோடானுகோடி வடிவங்களை, உயிர்களை, ரகசியங்களை கொண்டிருந்த கடல் கண்முன்னே இருந்தது. அச்சிப்பியை பத்திரமாக எடுத்துக்கொண்டேன். என் மகன்களை காட்டிலும் முக்கியமென நான் ஒருவேளை யாரையேனும் நினைப்பேனேனெறால் அவளுக்கு அல்லது  அவனுக்கு அதை பரிசளிக்கவிருக்கிறேன்

முகாமிற்கு வந்திருந்த கலியபெருமாள் என்பவர் கடற்கரையில் தனித்திருந்த என்னை தூரத்திலிருந்து படம்பிடித்து பின்னர் அனுப்பினார்.

சரியான முக்கோண வடிவில் ஒரு கல் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டேன்.  மெல்ல மெல்ல ஒவ்வொருவராக  கடல் காண  வந்தார்கள்  சுதா மாமியும் ஜெயராமும் மணல் வீடு கட்டினார்கள் ஜெ சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களை இழப்பதில்லை என்று.

ஜெயராம் மணல்மேட்டில் ஒரு வினாயகர் முகத்தை அமைத்து அதன் தந்தங்களை  நீட்டி  நீட்டி கடலலயை பருகும்படி அமைத்தான் தும்பிக்கை ஒரு மாநாகம்   போல வெகுதூரம் சென்றிருந்தது.

ஜெயராமுடன் நாய்கள் ஓடிப்பிடித்து கடற்கரையில் விளையாடின. திடீரென ஒரு மாபெரும் வானவில் எங்கள் முன்னே எழுந்தது. ஒரு நாளில் எத்தனை பரிசுகள் ? திகைப்பாக  பரவசமாக இருந்தது

அங்கே அமர்ந்திருக்கையில் ஒரு புதியவர் வேள்பாரியையும் வெண்முரசையும் ஒப்பிட்டால் எது சிறந்தது என்னும் கேள்வியை முன்வைத்தார். அப்படி வெண்முரசுடன் ஒப்பிடும் படியான படைப்புக்கள் ஏதும் இல்லை என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லியதோடு அக்காலை இனிதே நிறைவுற்றது.

பின்னர் ஜெ வந்ததும் மேலும் மெருகேறியது அமர்வுகள். அருணா உணர்வுபூர்வமாக முந்தின நாளின் அமர்வுகளை குறித்தும் கவிதைகளை குறித்தும் உரையாற்றினார். அவர் பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பார்ப்பது மேலும் அழகு கண்களின் உருட்டல், உணர்வு மேலீட்டில் மிகலேசாக திக்குவது,  கம்மலும் தெளிவுமாக கலவையான அவர் குரல், விரல்களின் நாட்டியமும் உடலசைவுமாக  ரம்மியம் எப்போதும் போல

அவரது நினைவாற்றலையும் வாசிப்பின் வீச்சையும் வழக்கம் போலவே பிரமிப்புடன் கவனித்தேன். வெள்ளைப் பல்லி விவகாரம் வெளியிடப்பட்டது.வாங்கி வந்திருக்கிறேன் வாசிக்கவேண்டும்

வெள்ளைப்பல்லி விவகாரம்

பிறகு ஜெவின்  ஆக சிறந்த அந்த  உரை. கவிதைக்கு இன்றியமையாத மூன்று இன்மைகளை பற்றி சொன்னார்.

கூடவே இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் இருக்கும் மூன்று தேவையில்லாதவைகளையும் விளக்கினார், அந்த பிரபல பத்திரிகையில் வந்த என் கவிதையின் நினைவு வந்து வெட்கினேன் ஊருக்கு வந்ததும் என் இணையப் பக்கத்திலிருக்கும் அதைப் போன்ற அசட்டுக்கவிதைகளையெல்லாம் ஒரேயடியாக நீக்கிவிட முடிவு செய்துகொண்டேன்

அந்த அமர்வுடன் அன்றைய நிகழ்வும் கவிதை முகாமும் முடியவிருந்தன . மதிய உணவிற்கு பின்னர் கலையலாம் என்றும் சொல்லப்பட்டது அனைவரும் இறுதி நிகழ்வில் லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின் உரையை கவனித்துக்கொண்டிருந்தோம் ஜன்னல்வழியே பார்க்கையில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் உணவுண்ணும் மேசைகளை ஒரு பழந்துணியால் பொறுமையாக ஒருமுறைக்கு பலமுறையாக துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார்.  கண்ணும் நெஞ்சும் நிறைந்தது இது குடும்பம் இது குடும்பம் என்று மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அந்த  விடுதியின்  ஆரஞ்சு வண்ண சீருடையிலிருந்த முதல்நாளிலிருந்தே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு துரும்பை கூட எடுத்து போடாத, நான் குந்தாணி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட அந்த பெண் பணியாளர் அவர் துடைப்பதை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

.லக்‌ஷ்மி மணிவண்ணன்  நிறைவுரையில் சரஸ்வதி தேவி பலிக்கல்லில் இருபது வருடங்களாவது படுக்கப்போட்டு பலிகொடுத்த பின்னரே நல்ல கவிதை வருமென்றார்.

அப்படியனால் நான் என் அபத்தக்கவிதைகளை அழிக்க வேண்டியதில்லை. இன்னும் 19 வருடங்களில் நிச்சயம் செறிவும் கவிதைக்கணங்களும் நிறைந்த, புரட்சியும் தன்னிரக்கமும், பொய்யுமில்லாத நல்ல கவிதையை என்னாலும் எழுத முடியும்

சிவாத்மாவின் சுருக்கமான இனிமையான பாடலுடன் விழா நிறைவுற்றது

மதிய உணவுக்கு பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டனர். கடைசியாக கடலை காண சென்றேன் விடைபெற்றுகொள்கையில் என் காலடிச்சுவடை ஒரு பேரலை வந்து அள்ளிச்சென்றது.

என்னை அருணா கன்னியாகுமரி சுற்றி காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் நான் அனைவரும் புறப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

லக்‌ஷ்மி மணிவண்ன அவர்களும் ஆனத்குமாரும் ஒய்வொழிச்சலும் உறக்கமும் இன்றி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து  செய்துகொண்டிருந்தார்கள். ஆனந்த்  சோர்வை காட்டிக்கொள்ளவே இல்லை பம்பரமாய் சுற்றி புறப்பட ஏற்பாடு செய்வது, அங்கிருந்த நாய்களுக்கு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாத படிக்கு தனிதனியே உணவிடுவது, எல்லா வேளைக்கும் அந்த குந்தாணி அம்மாவுக்கு அவர் கொண்டு வந்த அனைத்து பாத்திரங்களிலும் நிறைய  உணவை கொடுப்பதுமாக இருந்தார்.

ஆனந்துக்கு விருது என தெரியவந்ததும் அவர் நாய்களுக்கு சோறிட்டதும் அந்த அம்மாளுக்கு அவரளித்த சோறும் அதன் பின்னரே அவர் கவிதைகளும் நினைவுக்கு வந்தன

இவ்விருதை வாங்க மிக பொருத்தமான  கவிஞர், மிகப் பொருத்தமான மனிதரும் கூட 

அனைவரும் சென்ற  பின்னர் நான் அருணா, கதிர் மற்றும் நவீன் கன்னியாகுமரி சென்றோம்.

நல்ல கடைத்தெருவொன்றை அங்கு பார்த்தேன்.பலவித பொருட்கள் சங்கு,  சங்கு வளை, கிளிஞ்சல், சோழி, சங்குகளில் திரைச்சீலை, தொப்பிகள், மலிவு விலை உடைகள் பொம்மைகள் என்று ஏராளம்.  ஒவ்வொன்றாக பார்த்ததே எல்லாவற்றையும் வாங்கியதுபோல மகிழ்ச்சி அளித்தது

முதன்முதலாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டேன் அருணா வாங்கிக்கொடுத்து. நான் நினைத்திருந்தது போல  அது பயங்கர காரமெல்லாம் இல்லை கடலை மாவு தோல் போர்த்திய பசுதான் அது. காந்திமண்டபம் சென்றோம். குமரி முனையில் பாசம் வழுக்கி விடாமல் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நானும் அருணாவும் கால் நனைத்துக்கொண்டோம். 

வள்ளுவர் சிலை, மாயம்மா ஆலயம், காந்திமண்டபம்  என்று ஒவ்வொன்றாக பார்த்தோம்

அருணா எல்லாவற்றையும் புத்தம் புதிதாக பார்க்கும் உற்சாக மனநிலையிலேயே இருக்கிறார். எங்களை யாரேனும் கவனித்திருந்தால்,  கன்யாகுமரியில்  பிறந்து வளர்ந்த நான்  அருணாவை அங்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று  நினைத்திருக்க கூடும் அப்படி எல்லாவற்றையும்  ஒரு சிறுமியின் குதூகலத்துடன் பார்க்கிறார் ரசிக்கிறார். அருணாவே எனக்கு ஓரிரவில் திடீரென வளர்ந்து பெரிதாகிவிட்ட சிறுமியை போலத்தான் தெரிந்தார்.

மேலும் அருணா ஒரு தகவல் சுரங்கம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் வள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்குமான படகுச்சவாரி குறித்து கேட்டதும் அந்த இரு படகுகளின்  பெயர்களையும்  சவாரி நேரங்களையும் கூட துல்லியமாக சொன்னார்.  

பிறகு குமரி அன்னை ஆலயம் . திரையிட்டிருந்தார்கள். கூட்டமே இல்லை

சிறப்பு அனுமதியில் முன்னால்  ஒரு இளம் தம்பதியினர் சிறுமகளுடன் அமர்ந்திருந்தனர்.

நீலப்பட்டாடை அணிந்திருந்த அந்த குழந்தை தன் சதங்கைச்சிறுகாலினால் முன்னிருந்த ஒரு கயிற்றை உதைத்துக்கொண்டும் அவள் முன்னே ஒரு வாளியில் கொட்டிகிடந்த செந்தாமரை மொட்டுக்களை  எடுக்க தாவுவதுமாக இருந்தாள். குமரித்துறைவி நினைவுக்கு வந்தது.

திரை விலகி பல சுடராட்டுக்களில் அன்னையும் சிறுமியுமாக கண்ணார தரிசனம் கிடைத்தது.சங்குவளைகள் இரு ஜோடிகள் வாங்கிக்கொண்டேன். வெளியே வந்தோம் வள்ளுவர் சிலை  ஜகஜ்ஜோதியாக விளக்குகளுடன் ரம்மியமாக இருந்தது.

பிறகு சுசீந்திரம். ஓட்டுநர் சந்தேகித்த படி வாகன நெரிசல் இல்லாமல் விரைவில் போய் சேர்ந்தோம் அங்கே காரில் காத்திருந்த ஆனந்த் என்னிடம் ’’அக்கா உங்களுக்கு பழம் பறி வாங்கி கொடுக்க நினச்சிருந்தேன் இந்தாங்க’’ என்று நீட்டினர் குடும்பமல்லாது இது வேறென்ன?

  கோவிலுக்குள் நுழைகையில் தலவிருட்சம் சரக்கொன்றை பொன்னாய் பூத்து நிறைந்திருந்தது வாசலிலேயே. நல்ல தரிசனம் அங்கே. வெளியே போலி முத்து மாலைகளும் பலவித உணவுகளும் விற்றார்கள்.கடலை வறுபடும், கடலை மாவு, வேகும், சோளம் வாட்டும் வாசனை கூடவே வந்தது. பல வண்ண ரப்பர் பேண்ட் களை விற்கும் இரு சிறுமிகள் அங்கமர்ந்திருந்த முழங்கால்களுக்கு கீழ் இரு கால்களையும் இழந்த்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் பணத்தை கொடுத்து சில்லறை மாற்றி கொண்டிருந்தார்கள் 

ஒரு நல்ல உணவகத்தில் இரவுணவு .முதன்முதலாக ரசவடை. என்னது ரசத்தில் வடையை போடுவார்களா? என்று முதலில் துணுக்குற்றாலும் சரி சாம்பார் வடை இருக்கிறது தயிர் வடையும் இருக்கிறது இடையில் இருக்கும் ரசத்திலும் இருப்பதுதானே நியாயம் என சமாதானமானேன்

இனிய தோழி அருணா, அவருடன் பழகுகையில் பேசுகையில் எனக்குள் எந்த  தயக்கமும் இல்லை பல்லாண்டுகள் பழகிய உணர்வை அவரால் அவரருகிலிருப்பவர்களுக்கு அளிக்க முடிகின்றது.

 என்னையும் கதிரையும் ரயிலடியில் விட்டுவிட்டு அருணா சென்றார் நினைவுகளின் எடையில் மூச்சு திணறிக்கொண்டு உறக்கமின்றி ரயிலில் இரவு கழிந்தது. காலை கோவையில் கதிரும் நானும் விடைபெற்றுக்கொண்டோம்.  சொந்த தம்பியை காட்டிலும் அன்புடனும் பொறுப்புடனும் என்னுடன் கதிர் வந்தார்

பொள்ளாச்சி வந்து கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு குளிக்கச் செல்ல கைக்கடிகாரத்தை கழற்றினேன். கடிகார பட்டைக்குள்ளிருந்து  மேசையில் உதிர்ந்தது கொஞ்சம் கடற்கரை மணல்

 என்னை வா வாவென்று அழைத்தும் நான் வராததால்,  கடல் தானே கொஞ்சம் என்னுடன் வந்துவிட்டிருந்தது.

ஸ்ரீபதி பத்மநாபாவின் ஒரு கவிதை இருக்கிறது. ஒரு காதலனும் காதலியும் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நடந்து சென்று ஒரு பேருந்துக்காக காத்து நிற்பார்கள் வழக்கத்துக்கு மாறாக காதலி அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டதும் காதலன் இனி காதலைப் பற்றி தான் கவிதை எழுத வேண்டியதில்லை என்று நினைப்பதாய் முடியும் அது

 மனம் முழுக்க   ராவணப்புல்லாக பிடித்து இறுக்கியபடி  நிறைந்திருக்கும் கவிதை முகாமின் இனிய நினைனவுகளே போதும், ஒருபோதும் நல்ல கவிதைகளை  எனனால் எழுதமுடியாவிட்டலும் என்று தோன்றியது.

உங்களுக்கும், லக்‌ஷ்மி மணிவண்னனுக்கும் ஆனந்த்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்

கொமாட்சுனா

தோட்டத்தில் கொமட்சுனா கீரைகளை பார்வையிடும் யமஷிடா

20 கிராம் சுமார்  28 000 அமெரிக்க டாலர்கள் விலைகொண்ட   ட-ஹாங்- போ (Da-Hong Pao ) தேயிலைகளையும், யானைகளுக்கு சாக்கலேட், சோளம் மற்றும் உயர்தர காபி பழங்களை உணவாக கொடுத்து அவற்றின் சாணத்தில் செரிமானமாகாமல் கிடைக்கும் காபிக்கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும்   ஒரு கிலோ சுமார் 400 டாலர்கள்  விலை கொண்ட கருப்பு தந்த காபித்தூளைபோல (Black ivary coffee) மேலும் பல அரிய, அதிக விலைகொண்ட தாவரபொருட்கள் உள்ளன.அவற்றில் கொமட்சுனோ கீரையும் ஒன்று இது யமஷிடா கீரை என்றும்  அழைக்கப்படுகிறது:

டோக்கியோவை சேர்ந்த அஸஃபுமி யமஷிடா (Asafumi Yamashita) 25 வருடங்களுக்கு முன்பு பாரிஸுக்கு  சென்றார். பொன்ஸாய் கலைஞரான அவர் தான் உருவாக்கிய அழகிய பொன்ஸாய் மரங்களை அங்கு விற்று பொருளீட்டி வாழ்ந்தார். உலகெங்கும் பொன்சாய் மரங்கள் திருட்டுப் போவது போலவே யமஷிட்டாவின் தோட்த்திலிருந்தும் 2 போன்ஸாய் மரங்களை தவிர அனைத்தும் ஒரு துரதிர்ஷடமான் நாளில் திருட்டு போயின.

மனம் வெறுத்துப்போன யமஷிட்டா  பொன்ஸாய் தொழிலை கைவிட்டு தான் கொண்டுவந்திருந்த சில அரிய ஜப்பனிய வகை காய்கறிகளின் விதைகளை கொண்டு பாரீஸில் கிடைக்காத ஜப்பனிய கீரைகளையும் காய்கறிகளையும் அந்த தோட்டத்தில் பயிரிட்டார்.

 3000 சதுர அடிமட்டுமே கொண்ட அவரது தோட்டத்தில் 50 வகையான அரிய ஜப்பானிய தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பாரிஸின் மிக அதிக பொருளீட்டும் தோட்டக்காரராக யமஷிடோ இப்போதுஅறியப்படுகிறார்.

அவரது சின்னஞ்சிறு தோட்டத்தில் வளரும் அரிய வகை தாவரங்களில்  ஹினோனா என்னும் ஊதா டர்னிப் கிழங்குகளும், (hinona),  கொமாட்சுனா என்னும் கீரையும் (komatsuna),  சிவப்பு  கத்தரிக்காய்களும், அரிய பட்டாணி வகைகளும் குட்டித்தக்காளிகளும் பாரிஸீல் உயர்தர உணவகங்களின் வாடிக்கையாளர்களின் விருப்ப உணவாகி விட்டிருக்கிறது.

அதிக நார் சத்து நிறைந்த இந்த கொமாட்சுனா கீரைகள் ஒரு கிலோ 400 டாலர்கள் வரை விலைகொண்டவை. இந்த கீரைகளை அவர்  ஃப்ரான்ஸின் மிஷெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களின் சமையற்கலைஞர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்

 இந்த கொமாட்சுனா கீரையின் தாவர அறிவியல் பெயர் Brassica rapa var. perviridis. இந்த கடுகுக்கீரை வகை ஜப்பானிலும் தாய்லாந்திலும் மட்டுமே வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகின்றது.

கொமாட்சுனா என்றல் ஜப்பானிய மொழியில் ’’கொமாட்சின் கீரை’’ என்று பொருள்.. ஜப்பானிய கிராமமான கொமாட்ஸுகாவா வை சேர்ந்த கீரைகள் இவை (Komatsugawa). அந்த கிராமத்தில் 17 ம் நூற்றாண்டிலிருந்து இக்கீரைகள் சாகுபடியாகின்றன.

ஜப்பானிய பேரரசர்களால் நியமிக்கப்படும்  ஷோகன் எனப்படும் மிக செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய ராணுவ அதிகாரிகளில்  எட்டாவது  அதிகாரியான டோக்குகவா யொஷிமுனே (Tokugawa Yoshimune) என்பவர் அந்த கிராமத்துக்கு  1719ல் வேட்டைக்கு சென்று திரும்பும் வழியில் மதிய உணவுக்கு வந்திருந்தார். ஒரு எளிய மடாலயத்தில் அவருக்கு காய்கறி சூப்பும் வேகவைத்த அரிசியும்   வதக்கிய உள்ளூர் கீரைகளும் கொடுக்கப்பட்டன. அந்த கீரையின் சுவையிலும் மணத்திலும் மயங்கிய அவர்  அங்கே ஓடிகொண்டிருந்த  கொமட்ஸு ஆற்றின் பெயரையே வைத்து கொமட்ஸுனா கீரை எனப் பெயரிட்டர் இப்போதும் அந்த ஷின் கொய்வா கட்டொரி மடாலயத்தில் புத்தாண்டின் போது இந்த  கீரை உணவு அனைவருக்கும் வழங்கப்படுகிறது (Shin-Koiwa Katori Shrine). அந்த மடாலயத்தின் தெய்வங்களுக்கும் அன்று இந்த கீரையே படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது

இந்த கீரைச்செடியின் எந்த பருவத்திலும் கீரைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். முற்றிய அல்லது இளங்கீரைகள் இரண்டுமே நல்ல சுவையான சத்தானவை.  அடர் பச்சை இலைகளுடன் 20 லிருந்து 80 நாட்களில் வளரும் இந்தச்செடி சுமார் 30 செமீ உயரம் வரை வளரும். அதிக வெப்பத்தை தாங்காத இந்த செடி நல்ல நிழலான இடங்களிலும் பசுமைகுடில்களிலும் மட்டுமே வளரும்.

கீரைகளை நறுக்கி எடுத்தபின்னர் அடித்தண்டுகளிருந்து மீண்டும் 3 முறை கீரைகள் வளர்ந்து அறுவடை செய்யப்படும்

லேசான இனிப்புச்சுவையையும் நல்ல மணமும் கொண்டிருக்கும் இந்த கீரையை சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம், வேகவைத்தோ, வாட்டியோ, வதக்கியோ அல்லது பொறித்தோ உண்ணலாம். சாலட்களிலும் சூப்புகளிலும் சேர்க்கலாம். இந்த கீரையிலிருந்து ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகின்றன.

கால்சியம், நார்சத்து போன்றவைகளையும் பல வைட்டமின்களையும் கொண்டிருக்கும் இந்த கீரை ஜப்பானியர்களின் விருப்ப உணவுகளில் ஒன்று,

கொமாட்சுனா கீரை விதைகள் அமேஸான் வர்த்தகத்தில் கிடைகின்றன.

யமஷிடா

தாமரை நாரிழைகள்

பின்னலாடைத் தொழிலில் இயற்கை நாரிழைகளின் நீடிக்கும் தன்மையில் உள்ள  சிக்கல்கள், மேலும் பல புதிய இயற்கை நார் இழைகளை குறித்த  ஆராய்ச்சிகளுக்கு  வழி வகுத்துள்ளன.

உலகெங்கிலும்  பல்வேறு தாவரங்களில் இருந்து இழைகள் பெறப்படுகின்றன. கற்றாழை, வாழை, யானைக்கற்றாழை, சணல், சணப்பை, மூங்கில், பால் நார், சோளம், சோயா,  புல்நார், நிலக்கடலை ஓடு,  காபி பீன்ஸ் கழிவுகள், அன்னாசி இலைகள் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அவற்றில் சில. 

இயற்கை இழைகள் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் பொருட்டு  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை சர்வதேச இயற்கை இழைகளின் ஆண்டாக அறிவித்தது – IYNF

samatoa

பின்னலாடை தொழிலில் மிகவும் விரும்பத்தக்க வடிவம் இறைவழிபாட்டுடன்  நெருங்கிய தொடர்புடைய தாமரை மலரின் வடிவம்தான், பிற மதங்களை காட்டிலும் இந்து மற்றும் புத்த மதம் தாமரையுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவை.  புத்த மதத்தின் மிக முக்கிய குறியீடு தாமரை. பண்டைய காலத்தில் கம்போடிய புத்த துறவிகள் தாமரை நாரிழைகளால் பின்னப்பட்டு இயற்கை சாயமிடப்பட்ட ஆடைகளையே  தூய்மை, தெய்வீகத்தன்மை மற்றும் அமைதியை குறிக்க அணிந்தனர். தாய்லாந்திலும் மியான்மரிலும் தாமரை நாரிழைகளிலான ஆடைகள் மிக ஆடம்பரமான உயர்தர ஆடைகளாக கருதப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட பாரம்பரிய  நாரிழைகளும் ஆடைகளும் உள்ளன. கம்போடியாவின் தாமரை நாரிழைகளாலான ஆடைகள் அவ்வாறான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மற்ற இயற்கை இழைகளுடன் ஒப்பிடும்போது இவை மிக்குறைவாகவே  பிரபலமாயிருக்கின்றன.

தாமரை நாரிழைகளின் பயன்பாடு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு 1910 ல்  டா சா ஊ என்னும்  இந்த்தா (intha)பழங்குடி இனப்பெண் ஒருவரால் துவங்கப்பட்டது. (Daw Sa Oo)  அப்பெண்மணி தாமரை இலைகளின் நீண்ட காம்புகளை கத்தரித்து அவற்றிலிருந்து நார்களை சேகரித்து அடுத்த ஒருவருடம் முழுவதும் அவற்றைக்கொண்டு ஆடைகளை நெய்வதில் ஈடுபட்டிருப்பார். அருகிலிருந்த புத்த மடத்தின் துறவிகளுக்கென அவர் அந்த ஆடைகளை உருவாக்கினார்.அவரது மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தினரால் சிறிய அளவில் இத்தொழில் செய்யபடது

 தாமரை இழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே உலகின்  ஆகச்சிறந்த சுற்றுச்சூழலுக்கு  உகந்த  மற்றும் புனிதமான ஆடை என கருதப்படுகிறது, ஒரு காலத்தில் துறவிகளுக்கு மட்டுமே பயன்பட்ட இவற்றை. இப்போது வணிகமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்ப்ட்டிருக்கின்றன..

கம்போடியாவின் தாமரை சாகுபடி செய்யப்படும் நீர்வயல்களிலிருந்து Padonma-kya என்று அவர்களால் அழைக்கப்படும் இந்திய தாமரையான Nelumbo nucifera வின் தண்டுகள் அதிகாலைகளில் நறுக்கி அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.

 அறுவடை செய்யப்படும் இலைத்தண்டுகளில் நீளவாக்கில் சுமார் 20ருந்து 30 நாரிழைகள் வரை இருக்கும், அவை உருவி எடுக்கப்பட்டு திருகித் திருகி ஒற்றை இழையாக்கப்பட்டு  பின்னர் கழுவி உலர்ந்தபின்னர் மூங்கில் தறிகளில் நெய்து ஆடையாக்கப்படுகின்றன.

தாமரை இழைகளை நெய்கையில் அவ்வப்போது நீர் தெளித்துக்கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை பயன்படுத்த முடியாத அளவிற்கு உலர்ந்துவிடும். தண்டுகள் அறுவடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவற்றை நெய்துவிடவேண்டும் இல்லாவிட்டால் நார்கள் வீணாகப்போய்விடும். தாமரை இழை நெய்தலில் ஒரு சிறு துண்டு நார் கூட வீணாவதில்லை நீளமான நாரிழைகள் ஆடைகளுக்கு பயன்படும் என்றால் உடைந்த சிறு நாரிழைகள் விளக்குத் திரிகளாக உபயோகிக்கப்படும் 

அறுவடையிலிருந்து ஆடை உருவாக்கம் வரை முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்படும் இச்செயல் அதிக நேரத்தையும், அதிக உடலுழைப்பையும் கோருவது. சுமார் 1,20,000  தண்டுகளிலிருந்து ஒரு ஆடை உருவாக்கப்படும். அதாவது ஒரு சதுர மீட்டர் அளவிலான துணியை உருவாக்க 8000 தாமரைத்தண்டுகளும் 20 நாட்களும் தேவைப்படுகிறது.

முழுக்க முழுக்க இயற்கையான வழிகளில் இந்த நாரிழைகளிலிருந்து ஆடைகள் உருவாவதால் இவற்றிற்கு GOTS  எனப்படும் உலகின் மிக சிறந்த சூழலுக்குகந்த ஆடையிழைகள்  என்னும் அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது.   (Global Organic Textile Standard) 

தாமரை இழை ஆடைகள் புற ஊதாகதிர்களை தடுக்கும், ஈரத்தை உறிஞ்சும், காற்றை உள்ளே அனுமதிக்கும், மிக மிருதுவாகவும் செளகரியமாகவும் அணிபவர்களுக்கு இருக்கும் மேலும் இவை நீடித்தும் உழைக்கும் தாமரை இழையாடைகளில் கறை படியாது தாமரையைப் போலவே இவையும் தூய்மையானவை.

 இந்த ஆடைகளை அணிபவர்களுக்கு மனஅமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது, பருத்தி மற்றும் லினென் துணிகளுடன் ஒப்பிடுகையில் தாமரை  இழைகளே உயர்ந்த தரத்துடன் இருக்கின்றன

 தாமரை இழைநார் ஆடைகள் மருத்துவதுறை மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கான உடைகளை உருவாக்க பயன்படுகிறது

 ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இவ்விழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. புத்த துறவிகளும் இவற்றையே விரும்பி அணிகிறார்கள்

உலகளவில்  தாமரை இழைகளில் உருவாக்கபட்ட ஆண்களின் ஆடைகளில் Nomark  சட்டைகளும், பெண்களுக்கான Kyar hi கழுத்துகுட்டைகளூம் (scarf)  பிரபலம். 2012ல் யுனெஸ்கோவின் தனிச்சிறப்பான SOE முத்திரை அந்தஸ்தையும் இவ்விழையாடைகள் பெற்றிருக்கின்றன. (Seal of Excellence). Samatoa என்னும் பிரபல பெயரிலும் தாமரை இழைஆடைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. 

கழுத்துக்குட்டை

  சாயமேற்றப்படாத இழைகளின் நிறம் பால் வெண்மையில் இருக்கும், இயற்கை சாயங்களில் ஆரஞ்சு மஞ்சள் நீலம் பச்சை ஆகியவையே இவ்வாடைகளுக்கு நிறமேற்ற அதிகம் பயன்படுகின்றன.

மருத்துவ காரணங்களுகாகவும், தண்டு, வேர்க்க்கிழங்கு ஆகியவற்றின் சத்துக்கள் மற்றும் சுவைக்காக உணவுக்காகவும், அழகிய தூய மலர்களுக்காகவும் மட்டும அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இவற்றின் இலைத்தண்டுகள் வீணாகிக்கொண்டிருந்தன. தற்போது அவற்றிலிருந்து உலகின் மிக அதிக விலையுள்ள மிகத் தரமான ஆடைகள் உருவாககப்படுகின்றன

கம்போடியா, வியட்னாம் மற்றும் மியான்மரிலும், இந்தியாவின் மணிப்பூர் மற்றும் குஜராத்திலும் தாமரைகள் நாரிழைகளின் பொருட்டு சாகுபடி செய்யப்படுகின்றன.  தாமரை இழைகளிலிருந்து ஆடைகள் மட்டுமல்லாது ஆபரணங்களும்  உருவாக்கப்படுகின்றன.

மணிப்பூரின் பிஷ்ணூபுர் மாவட்ட்த்தைச் சேர்ந்த 27 வயது பிஜியஷாந்தி ( Bijiyashanti Tongbram) தாமரை இழையாடை தொழிலை 2019ல் அங்கு பிரபலமாக்கியவர். தாவரவியல் பட்டதாரியான அவரது வீட்டிற்கருகேதான் இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தின் மிகப்பெரிய நீர்நிலையான லோக்டாக் நன்னீர் ஏரியும் (Loktak lake) அதனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தாமரைக்கொடிகள் வளர்ந்திருக்கும் பும்டி  என்கிற நூற்றுக்கணக்கான மிதக்கும் மணிபூரின் பிரெத்யேகமான சிறு தீவுத்தொடர்களும் உள்ளன.கம்போடியாவின் தாமரைநாரிழை தொழிலைக்கேள்விப்பட்டு அது குறித்தான ஏராளமான காணொளிகளையும் பார்த்து தானும் தாமரைநார் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார் பிஜியஷாந்தி

பிஜியஷாந்தி

அவருடைய சொந்த நிறுவனமான சனாஜிங் சனா தம்பால் (‘Sanajing Sana Thambal’) தாமரை நாரிழைகளை தயாரிப்பதோடு அந்த ஊர்பெண்களுக்கும் இத்தொழிலில் வேலைவாய்ப்பும் வழங்குகின்றது. சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் திரு நரேந்திர மோடி பிஜிஷாந்தியின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.

மணிப்பூரின் பும்டி மிதக்கும் தீவுகள்

அதழ்

தாவரவியல் அகராதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் நினைத்ததைக்காட்டிலும் பெரும்பணியாக இருக்கிறது. பல தமிழ்சொற்களுக்கு வாரக்கணக்கில் தேடுகிறேன். அப்படி perianth/tepal என்னும் அல்லியும் புல்லியும் சேர்ந்த மலரின் இதழைபோன்ற பகுதிக்கு அதழ் என்னும் பெயர் கிடைத்தது. எத்தனை அழகான பெயர்! இந்த தளத்தின் பெயரையும் மென்மொழிகளிலிருந்து அதழ் என்றே மாற்றிவிட்டேன்.

மாதுளை

திராட்சை, அத்தி மற்றும் மாதுளை ஆகிய மூன்றும் தான் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் மூன்று கனி வகைகள்  என கருதப்படுகிறது. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் உணவில் மாதுளை இருந்திருக்கிறது.

Punica granatum என்னும் அறிவியல் பெயர் கொண்ட மாதுளை ஆங்கிலத்தில் pomegranate எனப்படுகிறது. ஈரானுக்கும் இந்தியாவின் வடக்கு பகுதிக்கு சொந்த மான இந்த தாவரம் 16/17ஆம் நூற்றாண்டில்  அரேபியா, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அறிமுகமாகி சாகுபடி செய்யப்பட்டது. மருதாணியின் குடும்பமான லித்ரேசியை சேர்ந்த சிறு மர இனமான இது 5 லிருந்து 10 மீட்டர் உயரம் வரை வளரும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் இருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாதுளைகள் சாகுபடி செய்யப் பட்டிருக்கலாம் என்று அகழாய்வு கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

Pomegranate என்னும் இதன் ஆங்கில பெயர் லத்தீன மொழியில்  ஆப்பிளை குறிக்கும் pōmum என்னும் சொல்லையும்  விதைகள் கொண்ட என்று பொருள் தரும்  grānātum  என்னும் சொல்லையும் இணைத்து பல விதைகள் கொண்டிருக்கும் ஆப்பிள் என்னும் பொருளில் வைக்கபட்டது. மாதுளை பல ஆண்டுகள் வாழும் தாவரம்.. ஃப்ரான்ஸில் 200 ஆண்டுகளையும் கடந்து வாழும் மாதுளை செடிகள் உண்டு.மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள்   எனவும் பெயர்களுண்டு.

 ஏராளமான கிளைகளைக் கொண்டிருக்கும் இத்தாவரத்தின் பளபளப்பான இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும் . 3 லிருந்து 7 இதழ்களை கொண்டிருக்கும் அடர் ஆரஞ்சு நிற  அழகிய மலர்களுக்காகவெ உருவாக்கப்பட்ட கனிகளை உருவாக்காத மலர் மாதுளைச் செடிகளும் உண்டு.

கடினமான கனியின் வெளி ஓட்டினுள் வெண்ணிற தோல் போன்ற உறையால் உருவாக்கப்பட்ட சமச்சீரற்ற அறைகளில் விதைகள் நிறைந்திருக்கும்.  ஒவ்வொரு விதையையும் சுற்றியிருக்கும் அடர் சிவப்பு நிற சதைப்பற்றான உரை சார்கோடெஸ்டா எனப்படும். (sarcotestas),ஒரு மாதுளம் கனியில் 400 லிருந்து 1500 விதைகள் வரை இருக்கும்.

அழகுக்காக தொட்டிகளிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படும் நானா மாதுளை ரகம் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது. (P. granatum var. nana). இந்த வகையில் இருந்து தான் மாதுளையின்  போன்ஸாய் மரங்களும் செய்யப்படுகிறது

யேமனில் மட்டுமே விளையும் சொசொட்ரான் மாதுளை (Punica protopunica) மிகச்சிறிய கனிகளையும் இளஞ்சிவப்பு மலர்களையும் கொண்டிருக்கும். நாக்கை புண்ணாக்கும் அளவிற்கு மிக புளிப்பான சாறும்,  கசக்கும் விதைகளையும் கொண்ட இக்கனியின் உள்ளிருக்கும் வெண்ணிற சதைப்பற்றான உறை மட்டுமே இங்கு உண்ணப்படுகிறது. இதன் பிற பாகங்கள் கால்நடை தீவனமாக பயன்படுகிறது.  பச்சைக் காய்களின் தோலை சிறிது நீரில் கசக்கி அந்த புளிப்பு நீரை பாலை தயிராக்க பயன்படுத்துகிறார்கள்.

எகிப்தின் 18 ஆவது அரச் வம்சத்தை சேர்ந்த  1478 BC  ல் ஆட்சி புரிந்த அரசி    (Hatshepsut) ஹாட்ஷெஸ்ப்சுட்டின் மம்மி வைக்கப்பட்டிருந்த பிரமிடில் உலர்ந்த பெரிய மாதுளங்கனி இருந்தது. பண்டைய எகிப்தில் மாதுளை வளமையின் குறியீடாக கருதப்பட்டது.ஒவ்வொரு நாளும் குளியலுக்கு முன்னர் உண்ணும் ஒரு மாதுளை உங்கள் இளமையை தக்க வைக்கும் என்றொரு முதுமொழி உண்டு எகிப்தில்

கிபி 14 ஆம் நூற்றாண்டில் துருக்கியில் கப்பல் விபத்தொன்று நிகழ்ந்தது. அதன் உடைந்த பாகங்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரால் 1982ல் கண்டறியப்பட்ட போது/ அக்கப்பலின் பல அறைகளில் இருந்த  யானைதந்தங்கள், நீர்யானையின் பற்கள், அருமணிகள் உள்ளிட்ட பலவேறு விலையுயர்ந்த பொருட்களுடன் பல சீசாக்களில் முழு மாதுளைகளும்  இருந்தன.

கறுப்பு மாதுளை

பண்டைய கிரேக்கத்தில் மாதுளைகள் வைனின் கடவுளான டையோனிசிஸின் (Dionysus)   குருதியிலிருந்து உருவானவை என்று நம்பப்பட்டது. அங்கு இது வளமை மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்பட்டது.. புதிய வீடுகளுக்கு வருகை தரும் விருந்தினர்கள் அவசியம் முதல் பரிசாக மாதுளைகளையே அளிக்கும் வழக்கமும் இருந்து.பல பண்டைய நாகரிகங்களின் நாணயங்களிலும் மாதுளங்கனி சித்தரிக்கப்பட்டிருக்கிறது

பல பண்டைய நாகரீங்களில் மாதுளையைபோன்ற அணிகலன்கள் இருந்தன. வைரக்கற்கள் பதிக்கபட்ட கழுத்தணிகளும் காதணிகளும் அரசகுடும்பத்தினரின் பிரியத்துக்குரியவையாக இருந்திருக்கின்றன. அவற்றில் பல அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

யூதர்களில் ஒரு சாரார் ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் அல்ல மாதுளை தான்  என்று கருதுகிறார்கள்

பல ஐரோப்பிய தேவாலயங்களிலும் ஏசுவின் ஓவியங்களிலும் சிலைகளிலும் மாதுளையின் வடிவம் இடம்பெற்றிருக்கும். தேவாலயங்களின் திரைச்சீலைகளிலும் தையல்வேலைகளில் மாதுளைகளை காணமுடியும் லியானர்டோ டாவின்சியின் ஓவியங்களில் கன்னிமேரியும் குழந்தை ஏசுவும் கைகளில் மாதுளையை வைத்திருப்பார்கள்.  சில தேவாலயங்களின் இறப்பு சடங்குகளில் மாதுளை கலந்த உணவுகள்  பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுண்டு.விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ‘’நாம் அதிகாலையில் தோட்டத்துக்கு சென்று மலர்ந்திருக்கும் மாதுளைகளை காணலாம் ‘’ என்னும் வரி இருக்கிறது.பாதிரிகளின் உடைகளில் மாதுளையின் உருவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் 

மூன்று முறை குரானிலும் இக்கனி குறிப்பிடப்பட்டிருக்கிறது கடவுளுக்கு விசுவாசமயிருப்பவர்களுக்கான கனியான மாதுளையின் ஏதோ ஒரு விதை நேரடியாக சொர்க்கத்திலிருந்து வந்திருக்கும் என்கிறது இஸ்லாம்..

ஆர்மீனிய மணப்பெண் மாதுளையுடன்

ஆர்மீனியர்களின் கலாச்சாரத்திலும் மாதுளை மிக நெருங்கிய தொடர்புடையது. அங்கும் இது செல்வம், வளமை, மற்றும் குடும்ப வாழ்வின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆர்மீனிய திருமணங்களில் மனமகளுக்கு மணமகனால் தரப்படும் ஒரு மாதுளை சுவற்றில் வீசி எறியப்படும் அதிலிருந்து சிதறி விழும் முத்துக்கள் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் என கருதப்படும். ஆர்மீனியாவில் மாதுளைக்கென சிலையுண்டு.

 பலநாட்டின் கொடிகளிலும் விளையாட்டு வீரர்களின்  உடைகளிலும் மாதுளை இடம்பெற்றிருக்கும். மாதுளை திருவிழாக்களும் பல நாடுகளில் நடைபெறுகிறது

பண்டைய பெர்சியாவில் மாதுளை செடிகள் கோவில்களில் வளர்க்கப்பட்டன. பசுமைமாறாத அதன் இலைகள் அழியாமைக்கு அடையாளமாக சொல்லப்பட்டன.

ஹன் வம்ச ஆட்சிக்காலத்தில் (206 BC–220 AD) சீனாவுக்கு மாதுளை அறிமுகமானது. அப்போதிலிருந்தே சீனகலாச்சாரத்தில் மாதுளைக்கு மிக முக்கிய இடமுண்டு.இன்றும் சீன வீடுகளின் முகப்பறையில் பிளந்த மாதுளங்கனியின் சித்திரம் இருக்கும்.1195ல் சீனாவில் உருவாக்கப்பட்ட போதிதர்மரின் ஆலயமெங்கும் மாதுளைச்செடிகள் நிறைந்திருக்கின்றன. மாதுளைக்கு சீன ஆப்பிள் என்றும் பெயருண்டு

ரோமானியர்களின் கலாச்சாரத்திலும் மாதுளைக்கு முக்கிய இடமுண்டு. பண்டைய ரோமில் திருமணமான பெண்கள்,மணமானவர்கள் என்னும் அடையாளத்தை காட்டும் விதமாக மாதுளைச்செடியின் சிறு குச்சிகளை தலைப்பின்னலில் செருகிக்கொள்ளுவார்கள்.

புத்த மதம் மூன்று புனித கனிகளாக எலுமிச்சை, பீச் மற்றும் மாதுளையை குறிப்பிடுகின்றது.பிம்பிசாரின அரண்மனைக்கு வருகை தந்திருந்த புத்தரை காண வந்த ஏராளமானோர் அவருக்கு விலை உயர்ந்த பல பரிசுகளை அளிக்க காத்திருக்கையில் வெகு தொலைவிலிருந்து வந்திருந்த ஒரு பெண் கொடுத்த ஒற்றை மாதுளையையே புத்தர் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாராம்,  

கிமு 485–465ல்  வீரத்தின் அடையாளமாக கருதப்ட்ட மாதுளைகளை ஈட்டி நுனிகளில் செருகிக்கொண்டு பெர்ஸிய வீரர்கள் கிரேக்கத்துக்கு போரிட சென்றார்கள் 

மாதுளைச்சாயமிட்ட நூலிழைகள்

ஈரானிலும் இந்தியாவிலும் மாதுளை  சமயங்களுடன் தொடர்புடைய வளமையின் குறியீடாக கருதப்படுகிறது. ஈரானிய அசைவ சமையல்களில் மாதுளை தவறாமல் இடம்பெறும். மாதுளியின் சாறை கம்பளிகளுக்கும் பட்டுக்கும்சாயமேற்றவும் அங்கு பயன்படுத்துகிறார்கள்.ஈரானில் இறைச்சியை மிருதுவாக்க மதுளைச்சாற்றீல் ஊற வைக்கும் வழக்கம் இருக்கிறது. ஈரானில் மட்டுமே விளையும் கறுப்பு மாதுளை பல மருத்துவ பயன்பாடுகள் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய நாடோடிப்பாடல்களில் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் அத்திகளும் ஆலிவ்களும் மாதுளைகளும் செறிந்திருக்கும் வீட்டுத்தோடட்த்துக்கு திரும்புவதன் ஏக்கம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். இஸ்ரேலிய கவிதைகளில் காதலியின் கன்னங்கள்  பிளந்த மாதுளையுடன் ஒப்பிடப்பட்டிருக்கும்

பிறப்பு, இறப்பு, இனப்பெருக்கம், பாலுணர்வு, வளமை என பலவற்றின் குறியீடாக பல நாகரீகங்களில் மாதுளை இருந்திருக்கிறது. அறுவடைக்குப் பின்னும் பல நாட்கள் சேமித்து வைத்திருக்கக் கூடிய கனியாக பயணிகளால் பெரிதும் விரும்பப்பட்ட கனியாக மாதுளை இருந்தது, குறிப்பாக பாலை மற்றும் கடல் வழி பயணிகளுக்கு.

சீன திபெத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் மாதுளையின் கனி, கனிச்சாறு,  கனியோடு, விதை, மலர்கள், வேர் பட்டை ஆகியவை பல நோய்களுக்கு மருந்தாக அளிக்கப்படுகின்றது.

கொரிய கலாச்சாரத்திலும் சொர்க்கத்தின் கனியாக மாதுளை குறிப்பிடபடுகிறது. பண்டைய் ஜெர்மனியில் மணமகள் மாதுளை சித்தரிக்கப்பட்டிருக்கும் பீங்கான் பாத்திரங்கள் வரதட்சணையாக கொண்டு வரும் வழக்கம் பரவலாக இருந்து.

இயற்கையிலேயே கனியில் ஒரு சிறு கிரீடம் இருந்ததாலோ என்னவோ பல அரசர்கள் மாதுளையை கொடிகளிலும், நாணயங்களிலும் சின்னமாக அமைத்து கொண்டிருந்தனர். கிரீடம் இருந்தும் சாமான்யர்களுக்குமான கனியாகவே இருந்தது மாதுளை. 

உலகெங்கிலும் மாதுளங்கனிகள் அவற்றில் நிரம்பி இருக்கும் சத்துக்களுக்கவும் சுவைக்காகவும் விரும்பப்படுகின்றன. பெரும்பாலும் கனிரசமாக சுவைக்கப்படும் இவற்றை சைவ அசைவ உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகின்றது. இந்தியாவின் சில பிரத்யேக சந்தைகளில் மட்டும் இவை உணவில் சேர்க்கப்படுவதற்கென இவற்றின் உலர் விதைகள் கிடைக்கின்றன 

2 மாதங்கள் வரை மாதுளையை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். மாதுளையை ஃப்ரீஸரில் சிறிதுநேரம் வைத்திருந்து பின்னர் உரித்தால் சுலபமாக விதைகளை எடுக்கலாம். மாதுளையின் ஓட்டை கரண்டியால் மெல்ல தட்டி பின்னர் உரித்தாலும் விதைகள் எளிதில் வெளிவரும்.

மாதுளங்கனியின் ரத்தச் சிவப்புக்கென்றே  balaustine  என்று தனித்த ஒரு ஆங்கிலச் சொல்லுண்டு

அறிமுகமான நாடுகளில் எல்லாம் இதன் சுவையான சாறு நிரம்பிய சதைப்பற்றான தாகம் தீர்க்கும் கனிகளுக்காக  இவை பெரிதும் விரும்பப் பட்டன.உலகின் பல நாடுகளில் இவை இப்போது சாகுபடி செய்ய பட்டாலும் தெற்கு சீனாவும் ஆஃப்கானிஸ்தானும் மிக அதிக அளவில் மாதுளைகளை பயிராக்குகின்றன.

.மாதுளையின் 500க்கு மேற்பட்ட கலப்பின வகைகள் தற்போது உலகெங்கிலும் சாகுபடியாகின்றன .மிக அதிகமாக இந்தியாவில்தான் மாதுளை விளைகிறது. உலகின் இரண்டாவது மிக அதிக மாதுளை விளைவிக்கும், ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான்தான் .வருடா வருடம் இங்கு   மாதுளை திருவிழா வெகு விமரிசையாக  நடைபெறுகிறது.

உலகின் மிகசிறந்த மாதுளைகள் ஆஃப்கானில் விளைகின்றன. மாதுளையின் நாடு எனவே ஆஃப்கானிஸ்தான் அழைக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகமான ரகங்களில் மாதுளை செடிகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ளது.உலக சந்தையில் ஆஃப்கான் மாதுளைகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இரவுலகு

பகல்முடிந்து மாலையானதுமே நாமனைவரும் இரவின் மடியில் உறங்குவதற்கான ஆயத்தங்களை செய்யதுவங்கிவிடுகிறோம். இரவில் அணைவது என்பது நமக்கு குருதியிலேயே இருக்கும் ஓருணர்வு. செயல்பாடுகளை மெல்லமெல்ல குறைத்து பின்னர் முழுவதுமாக நிறுத்தி பாதுகாப்பாக தாழிட்டுக்கொண்ட வீடுகளுக்குள் போர்வையின் கதகதப்புக்குள் உறவுகளினருகாமையில் ஆழ்ந்துறங்குவதே நமக்கெல்லாம் இரவென்பது.

அதைதாண்டிய இரவென்றால் நாமறிந்தது இரவு நேர காவலாளிகள், திருடர்கள், பாலியல் தொழில்கள், தொழிலாளிகள், குற்றங்கள், இரவுப்பயணங்கள்,  இரவு ஷிப்ட் பணியாற்றுபவர்கள் ஆகியவற்றை மட்டுமே

 இப்படி இரவுகளில் குறிப்பிட்ட அந்தரங்க, வாழ்வியல் மற்றும் பணிச்சூழல் காரணமாக  விழித்திருப்பர்களை தவிர இரவுவாழ்வு குறித்தும் இரவுலகு குறித்தும் நாமதிகம் அறிந்திருக்கவில்லை

 ஆனால் இரவுலகை அதன் பல மர்மங்களை அதிலிருக்கும் உயிராற்றலை இன்னும் பலவற்றை சொல்லும்  பிரிட்டிஷ்  இயற்கை ஆவணப்படத்தொடரான  ‘’ Night on Earth  ’’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. பிரபல அமெரிக்க திரைநட்சத்திரமும், வர்ணனையாளருமான சமீராவில்லியின் கம்பீரக்குரலில் உருவாகி இருக்கும் இந்த அற்புதமான தொடரை  ப்லிம்சோலி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இச்சிறு தொடரின்

 • நிலவின் புலத்தில் சமவெளிகள்
 • உறைந்த இரவு
 • வனத்தின் இரவு
 • இருண்ட கடல்கள்
 • உறங்கா நகரங்கள்
 • விடியும் வரை

-ஆகிய ஆறு அத்தியாயங்களும் ஜனவரி 29,  2020ல் வெளியாகியுள்ளது.. ஒவ்வொரு அத்தியாயமும் ஒருமணி நேர நீளமுள்ளது.

ஒளிப்படக்குழுவினர் உலகின் அசாதாரணமான வாழிடங்களின் உயரங்களில் ஏறி, ஆழங்களில் இறங்கி, பனியில் உறைந்து, குளிரில் நடுங்கி, நீரில் குதித்து , புழுங்கி வியர்த்து, வன்பாலையில் வதங்கி, மழையில் நனைந்து, வெயிலில் வாடி, மிகக்குறைந்த கேமிரா வெளிச்சத்தில்,நிலவும் நட்சத்திரங்களும் அளித்த இயற்கை ஒளியிலேயே இத்தொடரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பது பிரமிப்பூட்டுகின்றது

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் உள்ளிட்ட 30 நாடுகள்ன் பல வாழிடங்களில் படமாக்கப்பட்ட இத்தொடரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடைய காமிராக்களும், இராணுவத்தில் உபயோகிக்கும் தொழில்நுட்பங்களும்,  உடல்வெப்பத்தை  காட்சியாக்கும் சாதனங்களும், ட்ரோன் காமிராக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறன

பீட்டர் ஃபிசனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், முதல் அத்தியாயத்தில்  நிலவின் புலத்தில் ஆப்பிரிக்கவின் சவன்னா புல்வெளிகளிலிருந்து பெரூவியப்பாலைகள் வரையில் தேய்ந்து வளரும் நிலவின் பாதையினூடே , அந்நிலவொளியிலேயே, கொன்று தின்னிகளையும் அவற்றின் இரைவிலங்குகளையும்,  அவ்விரு உயிர்களையும் யுகங்களாக பிணைத்திருக்கும் இப்புவியின் இரக்கமற்ற  விதியையும்  துல்லியமாக காண்பிக்கின்றது.

இதுவரையிலும் நாம் கனவிலும் கற்பனையிலும் கூட கண்டிருக்காத, காண்பதற்கான சாத்தியங்களும் இல்லாத காட்சிகளே தொடர்முழுவதும் இருப்பவை. ஒருசில காட்சிகளைத்தவிர  பிற அனைத்துக் காட்சிகளுமே இரவொளியிலும், பாலெனப்பொழியும் நிலவின் புலத்திலும், நட்சத்திரங்களின் மெல்லிய ஒளியிலும்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன.வேட்டைவிலங்கின் கண்களாகவும் உயிரச்சத்தில் ஓடும் இரைவிலங்கின் உடல்மொழியாகவும் இருட்டில் நமக்கு தெரியும் கமிராக்கண்கள் வழியே விரியும் நாமறியாததோர் இரவுலகு நம்மை அதிசயத்திலாழ்த்துகின்றது.

இதுவரையிலு திரையில் மிகையொளிக்காட்சிகளையே அதிகம் கண்டு பழகியிருக்கும் நமக்கு நிலவின் புலத்தில் வேட்டை விலங்கின் பசியை இரைவிலங்கின் உயிரச்சத்தை,  கொல்லுதலும், கொல்லப்படுதலும்,இரைதேடலும் இணைதேடுதலுமானதோர் இயற்கையின் ஆடலை , இரவாடிகளின் உலகினை மிக நெருக்கத்தில் காட்டுகிறார்கள், உண்மையில் திரையை நாம் காண்பது காட்டின் கண்களில்

ஒளிரும் கூழாங்கல் கண்களுடன் விலங்குகளை அவற்றின் துள்ள்லை தேடலை விண்மீன்களின் செறிவை முகில் மறைக்கும் நிலவை காட்டிதுவங்குகின்றது காட்சி மரங்களும் இருக்கும் புல்வெளிகளின் இரவு வாழ்வை சொல்லும் முதல் அத்தியாயம் சவன்னாவில் நெருக்கமின்றி வளர்ந்திருக்கும் மரங்களும் இருக்குமாதலால் பல்வகைப்பட்ட உயிர்களுக்கு அது வாழிடமாக இருக்கின்றது.அச்சூழலில் உயிர்களின் அச்சத்தை விழைவை விரைவை எப்படியும் தக்க வைத்துக்கொண்டாகவேண்டிய வாழ்வை என அனைத்தயுமே காண்கிறோம் நிலவின் மென்னொளியில்.

அந்திச்சூரியனின் செவ்வொளி மீதமிருக்கும் வானின் பின்னணியில் பகலில் மட்டுமே தனித்து வேட்டையாடுமென நம் அறிந்திருக்கும் சிறுத்தைகள் கூட்டமாக இரைதேடுகின்றன.செந்நிறஒளியில் தீப்பிடித்ததுபோல் எரியும் புல்மலர்க்குவைகளின் நடுவே விலங்குகளை காண்பது, முழுநிலவு நாளில், சூரியனைவிட 4 லட்சம் மடங்கு மங்கிய அதன் ஒளியில், பரந்துவிரிந்த புல்வெளியின் நடுவே ஒற்றைப்பெருமரமும் ஒரிடத்தில் கூட்டமாக கொன்றுதின்னிகளும் அமர்ந்திருப்பது,, அவை இரைதேட புறப்படுவது, அந்நேரத்தில் புல்லுண்ண வந்திருக்கும் மான்கூட்டங்களை அவை தேடிச்செல்வது, இரவரசனான சிங்கங்களின் இரை தேடலும்,கொண்றுண்ணலும் இரவிலேயே நிகழ்வது,கொழுத்த நீர்யானைகளின் உடளளவில் நான்கில் ஒரு பங்கே இருக்கு இளம் சிங்கங்களினால் வேட்டையை வெற்றிகரமாக நடத்தமுடியாமலாவது,கூரியமுட்களுடன் உடல் சிலிர்த்து நிற்கும் ஒரு அன்னை முள்ளம்பன்றி சூழ்ந்திருக்கும் சிங்கங்களின் முகத்தை தன் உடல் முட்களால் காயப்படுத்துவது,  அன்னைமைக்கு முன்பாக கொல்லுதல் தோற்றுப்போவது,என்று விலங்குகளின் வாழ்வின் மர்மங்கள் ஒவ்வொன்றாக கண்முன் விரிகிறது

இதுமட்டுமல்ல இன்னுமிருக்கிறதென்று மெக்ஸிகோ பாலையின் இரவுத்தாவரங்களின்  ரகசிய வாழ்வுக்குள் நம்மை அழைத்துச்செல்கின்றது கேமிரா. அவ்விடத்தின் கள்ளிகள் பெரும்பாலும் இரவில் மலருகின்றன .இரவாடிகளான மெக்சிகோவின் நீளநாக்கு வெளவால்கள் தங்களின் மீயொலி(ultra sound)  அலைகளை கணக்கிட்டு மலர்களை அடைந்து உடலின் நீளத்திற்கு இணையாக இருக்கும் நாக்குகளால் தேனருந்தி ஒன்றிலிருந்து மற்றோரு மலருக்கு செல்லுகையில் எடுத்துச்செல்லும் மகரந்தந்ததுகள்களால் மகரந்தசேர்க்கையையும் செய்கின்றன. வெளவால்களுக்கு உணவு, கள்ளிகளுக்கு இனவிருத்தி இரண்டும் ஒரிரவில் நிலவொளியில் நடைபெறும் காட்சிகள் அத்தனை துல்லியமாக, அத்தனை தெளிவாக, அத்தனை அழகுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான் பகி்ர்வாழ்வினால்தான் பாலையும் உயிர்ப்புடனிருக்கின்றது, இப்படி தேனும் மலரும் மகரந்தமுமாக அழகு மட்டுமல்லாது,கொடிய நஞ்சுடைய கிலுகிலுப்பை பாம்புகளும்,விஷச்சிலந்திகளும் அதே பாலையின் அவ்விரவில்தான் நடமாடுகின்றன. பகலின் வெப்பம்மிக அதிகமானதால் இவை அனைத்துமெ இரவில்தான் வெளியே வருகின்றன.

தேள்களின் உடல்ரோமங்கள் கூட தெளிவாக தெரியும்படியான காட்சிகளுக்கு படப்பிடிப்பு குழுவினருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய அடர்ரோமங்களுடைய உடல்கொண்ட தேள்கள் புற ஊதாகதிரொளியில் மின்னுவது ஏனென்று அறிவியலாலேயே விளக்கமுடியாத புதிர்தான்   இணைசேர்ந்துகொண்டிருக்கும் தேள்களிரண்டை உண்ணவரும் பாலையின் சின்னஞ்சிறிய எலி. தேளின் கொடும் நஞ்சு எலியை ஒன்றும் செய்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.

ஓருயிர் இணை சேர இரவில் வெளியே வந்தால் இன்னோர் உயிர் இரைதேட வருகின்றது . இயற்கையின் இப்படியான பல அதிசயங்களை இத்தொடர் நமக்கு காட்டியபடியே இருக்கின்றது.

அந்த பெருவிய பெரும்பாலை கொடும்பாலைதான் எனினும் பாலை பசிஃபிக் பெருங்கடலை சேருமிடத்தில் மற்றோரு உலகம் இயங்குகின்றது.அங்கு வாழும் நீர்நாய்களின் வாழ்வும் காட்டப்படுகின்றது..நீர்நாய்களின் குட்டிகள் இரவில் வேடடையாடுகின்றன  ரத்தம் குடிக்கும் வெளவால்களும் கடல்சிங்கங்ளும். இரவின் மிகக்குறைந்த ஒளியில் ஆயிரக்கணக்கில் மேய்ந்துகொண்டிருக்கும் விலங்குளை அவற்றின் ஒளிரும் கண்களுடன் காண்பது ஒரு பெரும் அனுபவமென்றால் ஒற்றையாக அவற்றிலொன்றை ஒரு பெண்சிங்கம் வேட்டையாடுவதை பார்ப்பது அதனினும் பெரிய அனுபவமாகிவிடும்.

 நிலவேயில்லா நாளொன்றில் நிலவொளியை காட்டிலும் 200 மடங்கு மங்கிய ஒளியை கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மெல்லொளியிலும் நிகழ்கிறது தேடல் நிறைந்த அவற்றின் வாழ்வு.

வெறும் மூன்று செமீ அளவுள்ள சின்னஞ்சிறிய சிலந்தியொன்று தொட்டுவிடாலாமென்னும் அண்மையில் தெரியும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் செறிந்தொளிரும் வானின் கீழ் பரந்துவிரிந்த ஒழுங்கான மணல்வரிகளுடன் இருக்குமந்த பாலையில் 400 மீட்டர்கள் கடந்துசென்று தன் இணையை தேடுவதும் அதற்குள் அதை இரையாக்க வரும் இன்னொன்றுமாக ஒரு மர்மத்திரைப்டத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத உண்மை காட்சிகள் நிறைந்துள்ள தொடர் இது.

மகாபாரதக்கதையை சொல்லுகையில் ’’இப்புவியில் எக்கதையும் புதிதல்ல ’’என்பார்கள்,  அவ்வாறே இவ்விரவுலகக் கதைகளும் , நிகழ்வுகளும் புதியவைகளல்ல, யுகங்களாக நிகழ்ந்துகொண்டேயிருந்து உலகின் சமநிலைக்கு காரணமாயிருப்பவை, நாமிதுவரை அறியாதவைகளும் காணாதவைகளுமான இவை, நாமனைவருமறிந்து கொள்ளவேண்டியவையும் கூட. இரவுலகைஅறிவதென்பது இயற்கையின் இன்னொரு முகத்தை அறிவதுதான்,  

அசோகவனத்து சீதை

அசோக மரங்கள்

 இந்தியா முழுவதுமே காணப்படும் Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரத்தைக்குறித்தும், அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடும் மற்றொரு மரத்தையும் குறித்தும் அறிந்துகொள்ளலாம். அசோகு, பிண்டி, செயலை என்று வெவ்வேறு பெயர்களில் தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்த மரத்தின் அறிவியல் பெயர் சரகா அசோகா (Saraca Asoca). இது சிசால்பீனியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. 

மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தமயந்தியின் கதையில் அசோகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  கணவன் காணாமல் போன பின்பு, தமயந்தி கண்ணீருடன், பூத்துக் குலுங்கி நிற்கிற அசோகமரத்தின் அருகில் சென்று, அதனுடைய பெயருக்கு ஏற்றவாறு தன்னுடைய துயரத்தை நீக்கி, கணவன் மீண்டும் தன்னோடு சேர வேண்டும் என்று வேண்டுகிறாள்.  

கடவுளை வணங்குவதற்குத் தகுந்த மரமாக அசோகம் பல காலமாக இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்று பிரகத் சம்ஹிதை நூல் கூறுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி சமண மதத்தினரும், புத்த மதத்தினரும்  அசோக மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றனர். துர்க்கைக்கு உரித்தான ஒன்பது தாவரங்களில் அசோகமும் ஒன்று. சிவன் மட்டுமின்றி காமதேவனின் பக்தர்களும் இதைப் புனிதமாகக் கருதுகின்றனர். சமண அருகனுக்கு விருப்பமான இந்த மரத்தின் அடியில்தான், வர்த்தமான மகாவீரர் கடவுள் நிலையை அடைந்தார்.. சாக்கியமுனி அசோக மரத்தடியில்தான் பிறந்தார் எனப்படுவதால் புத்த மதத்தினரும் இம்மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

பல சமஸ்க்ருத நூல்களில் அழகிய அசோகமரங்கள் அடர்ந்த இந்திய புத்தகோவில்கள் விவரிக்கபட்டிருக்கின்றன.பேங்காக்கின் பகோடாக்களில் வழிபட செல்பவர்கள் அசோக மலர்களை தவறாமல்  கொண்டு செல்வார்கள்

 நல்ல மணமுடைய இதன் தளிரையும் மலரையும் பண்டைய இந்திய மக்கள்  தலையிலும் காதிலும்   மார்பிலும் அணிந்ததாக இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.  அத்வைத வனத்திலும், இந்திரபிரஸ்தத்திலும் இந்த மரம் காணப்பட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

சலங்கை அணிந்த ஓர் இளம்பெண்ணின் கால்களால் மென்மையாக உதைக்கப்பட்டால் இம்மரம் பூத்துக் குலுங்கும் என்று காளிதாசர் மேகதூதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   சமணர்களின் ஆசாரங்க சூத்ரமும், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும்  அசோகத்தைக்குறித்துக் கூறுகின்றன. மத நம்பிக்கை அடிப்படையிலும், பண்பாட்டு ரீதியிலும் இந்த  அசோக மரம்  மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

வங்காளப்பெண்கள் அசோக சஷ்டி தினத்தன்று  இம்மலரின் மொட்டுக்களை உண்ணுவதும் மலர்ச்சாற்றை குழந்தைகளின் மீது தெளித்தால் அவர்கள் துயரின்றி வாழ்வார்கள் என்று நம்புவதும் வழக்கதிலிருக்கிறது.

சமஸ்கிருதச் சொல்லான அசோகு தமிழில் அசோகம் என்றாயிற்று. சாயை, அங்கணப்பிரியை, கிருமிகாரகம் , மலைக்கருணை, தாமிர பல்லவம், வஞ்சுளம், வீத சோகம் எனவும் அழைக்கப்படும் இம்மரத்திற்கு  சரிபம், ஹேமபுஷ்பா, தாம்ரபல்லவா என வடமொழியிலும் பல பெயர்கள் உண்டு.

இது அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த மினுங்கும் இலைகளும் மஞ்சல் கலந்த ஆரஞ்சுவண்ண மலர்க்கொத்துக்களும் செறிந்திருக்கும் ஒரு  பசுமை மாறாமரம்

கூட்டிலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். தளிரிலைகள் செம்பு நிறத்திலும் முதிர்ந்தவை மினுங்கும் பச்சைநிறத்திலும் இருக்கும். முதிர்ந்த மரப்பட்டை அடர் பச்சையில் நீலச்சாம்பல் திட்டுக்களுடன் காணப்படும். 4 லிருந்து 8 நீள் முட்டை வடிவ விதைகளுடன் இருக்கும் தோல்போன்ற தடித்த உறைகொண்ட தட்டையான கனி இருபுறமும் கூரான நுனி கொண்டிருக்கும்.

விதைகள்

அசோகம் இந்திய மண்ணில் எங்கும் சாதாரணமாக வளரக்கூடியது. குறிப்பாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு மலைத்தொடர் பகுதிகளிலும், கோவா, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளிலும் இயல் தாவரமாக இது காணப்படுகிறது.   இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வளர்ப்பு மரமாகவும் இருக்கிறது.     ஒடிசாவின் மாநில மலரும் அசோக மலரே.

இந்தியா இலங்கை மற்றும் நேபாளில் மிகப்புனிதமான மரமாக கருதப்பட்டு வழிபடப்படும் மரங்களில் அசோகமும் ஒன்று. புத்த மதத்திலும் இந்து மதத்திலும் தொடர்புடைய மரம் இது. ராமாயணம் உள்ளிட்ட பல புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மரம் இந்த அசோகம். இந்தியாவில் இந்த மரத்துக்கு உயிரும் ஆன்மாவும் உண்டு என்றும், “மக்களின் துயரத்தில் இது துயர்கொள்ளும், மக்களின் மகிழ்ச்சியில் இது மகிழ்வு கொள்ளும்” என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் பெண் இருபாலருக்கும் கொடுக்கப்படுகின்றது ஆயுர்வேதத்தில். தேக ஆரோக்கிய பலம் மற்றும் நோய் நீக்குதலில் அசோக மரப்பட்டை பெரும் பங்கு வகிக்கின்றது

 மரப்பட்டை, உலர்ந்த மலர்கள் ஆகியவற்றிற்கு  பெண்களுக்கு வரும் உடல்நிலை, மனநிலை மற்றும் கருப்பைக், கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உண்டு

Dysmenorrhoea எனபடும் ஒழுங்கற்ற வலியுடனான மாதவிலக்கு. Amenorrhoea எனப்படும் மாதவிலக்கு துவங்காமை, ஆகியவற்றிற்கும், மலட்டுத்தன்மையை போக்கவும் இம்மரப்பட்டைச்சாறு மருந்தாக பயன்படுகிறது.  

 இம்மரத்தின் காற்று வீசும் இடத்தில் கூட பெண்களுக்கு கருப்பை தொடர்பான எந்த நோயும் குறைகளும் வராது என்பது நம்பிக்கை. மாசி பங்குனி மாதங்களில் மலரும் அசோகமலரின் நறுமணத்தை நுகரும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் காரணமற்ற மனஅழுத்தங்களும் விலகும்.   ராவணன் அந்தப்புரமகளிரின் ஆரோக்கியத்தின் பொருட்டே இம்மரங்களை அங்கு வைத்திருந்தாரென்பதை இதன் மருத்துவகுணங்களினின்றும் நாம் அறிந்துகொள்ளலாம்

சரும மென்மைக்கும் மரப்ட்டைச்சாறு உதவுகின்றது, சருமத்தினடியில் தேங்கி இருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்கி சருமத்தை பொலிவுடன் விளங்கச்செய்யும் இப்பட்டைச்சாறு.  

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் அசோகரிஷ்டம், அசோகாதிவடி, அசோகாதி குக்குலு மற்றும் அசோகாதிசூரணம் ஆகியவை மலட்டுத்தன்மை மற்றும் கருப்பை நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும். பட்டைசாறு கர்ப்பஷ்ய ரசாயனம் எனப்படுகிறது

அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன குணமாகும். அசோக மரத்துப் பூவின் தேநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது.


  புராணங்களில் இம்மரங்களில் யட்சிகள் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்திய சிற்பங்கள் பலவற்றில் அசோகமரத்தினை பற்றிக்கொண்டிருக்கும் யட்சிகளைக் காணலாம். மலட்டுத்தன்மை நீக்கி காமம்பெருக்கும் குணமுள்ள அசோக மலர் காமனின் கரும்பு வில்லின் ஐந்து மலர்கணைகளில் ஒன்று.

சில இடங்களில் நெட்டிலிங்கம் என்னும் நெடிதுயர்ந்து வளரும் மரங்களை (Manoon longifolia-False Asoka tree) தவறாக அசோக மரம் எனக்கூறும் வழக்கம் இருந்து  வருகின்றது. இது  தவறு.

அசோகமும் நெட்டிலிங்கமும்

 அசோகமரம் என்பது Saraca asoka என்னும் அசோகமே. நெட்டிலிங்கம் உயரமான பெரும்பாலும் கிளைகளற்ற ஆப்பிள் பச்சை வண்ண மலர்கொத்துக்களையும் நாவற்பழம் போன்ற கனிகளையும் கொண்டிருக்கும் அன்னோனேசியே குடும்பத்தாவரம். இதன் இலைகள் நீளமாக ஓரங்களில் அலையலையான அமைப்புடன் காணப்படும், மரங்கள் நீளவாக்கிலான கூம்புகளைபோல காணப்படும், இவை அசோகமல்ல

இத்தாலிய சைப்ரஸ் மரங்கள்

.இவை பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிடிஷாருக்கு பிரியமான  உயரமான இத்தாலியன் சைப்ரஸை நினைவூட்டியதால்  இந்தியாவில் பரவலாக வளர்க்கபட்டது. இம்மரங்கள் இந்தி மொழியில் அஷோக் எனபடுகின்றன. அப்பெயரே தவறாக தமிழிலும் அசோகம் என்றாகிவிட்டது

முன்பு மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களிலும் கிழக்கு இமாலய மலைப்பிரதேசங்களிலும் செறிந்து வளர்ந்திருந்த அசோக மரங்கள் இப்போது மிக மிக குறைந்த எண்ணிக்கையில் பூங்காக்களில் காணப்படுகின்றது.

ராமனை பிரிந்து அரண்மனைச்சிறையிலிருக்க மறுத்து அசோக வனச்சிறையிலிருந்த சீதையை, அந்த அமைதியான வனமும் கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்த ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு மஞ்சரிகளும், அடர்த்தியான  அவற்றின் நீடித்த, மென்மையான நறுமணமும் நிச்சயம் வசீகரித்திருக்கும். அடர் ஆரஞ்சுசிவப்பு நிற கூம்புக் கோப்பைபோன்ற மஞ்சரிகளின் மலர்களின் உள்ளே இருக்கும் ஊதா நிற மகரந்த காம்புகள் ஒவ்வொரு மலரிலிருந்தும்  வெளியே வந்திருப்பது  வானவேடிக்கை போல இருக்கும்.  மலர்களை தேடி ஏராளமான் பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் வந்தபடி இருக்கும்.

கங்கையின் துணை ஆறுகளில் ஒன்றான கோஷியாற்றங்கரையிலிருந்த அசோக வனம் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் சீதைக்கு மிகவும் பிரியதுக்குரியதாக இருந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. ஸ்கந்த புராணம் சீதை ராமனிடம்’’ .இது வைகாசி மாதம் நாம் இந்த வனத்திலேயே தங்கி இருந்து இந்த ஆற்றீல் நீராடலாம் ‘’ என்று சொன்னதாக குறிபிடுகிறது. இப்போது இந்த ஆற்றுக்கே சீதா பானி என்று பெயர். அசோகமரம் சீதா அசோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

நீலச்சிறுமலர்- ஸ்வேதை

தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம்.

ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான பின்னணியையும் பொருளையும் கொண்டிருக்கும். தாவர வகைப்பாட்டியலின் தந்தையென கருதப்படும் லினேயஸினால் 17ஆம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட இப்பெயர்கள் இன்று வரை எந்த குழப்பமும் இல்லாமல் உலகெங்கிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றது. அதிலொன்றுதான் சங்குபுஷ்பம் எனப்படும் Clitoria ternatea. பெயரை மட்டுமல்லாது இச்செடியை குறித்து அறிந்து கொள்ள வேறு பல முக்கிய விஷயங்களும் உள்ளன.

சங்கு போன்ற தோற்றத்தில், அடர்நீல நிறத்தில் இருக்கும் இம்மலர் பூஜைக்குகந்ததாகவும், தாவர மருத்துவத்தில் மிக முக்கியமானதொன்றாகவும் இருக்கின்றது.

குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதம்பரநாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது.


பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும், கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய” – நற் 221/1,2.

(நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர், ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய)


”தண் புன கருவிளை கண் போல் மா மலர்” – நற் 262/1

(குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது)


”பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி” – குறு 110/4

(மயில்தோகையின் ஒளிரும் கண்ணினைப்போன்ற கருவிளம்பூவை ஆட்டி)
”கருவிளை முரணிய தண் புதல் பகன்றை”–அகம் 255/11

(பகன்றையும் கருவிளையும் நிறத்தால் மாறுபட்டவை)
மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
கண் என கருவிளை மலர – ஐங் 464/1
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294

அழற்படுகாதையில் இளங்கோவடிகள் நால்வகைச்சாதியினரில் உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளனை உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனக்குறிப்பிடுகிறார்.
திருத்தில்லையில் பட்டினத்தாரும் ’’காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி’’ என்கிறார்.

இலக்கியங்களில் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் தலைவியும், தோழியும் குவித்து விளையாடி தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் இதுவும் ஒன்று.

ஆசியாவில் தோன்றி, தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும் காணப்படுகின்ற இத்தாவரத்திற்கு ‘’காக்கணம், உயவை, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சங்குப்பூ ,சங்கு புஷ்பம், கன்னிக் கொடி, இரிகன்னு, கருவிளை, காக்கரட்டான், சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதை, ஸ்வேதா’’ எனவும் பெயர்களுண்டு.
கிரிகணிக்கி, கிர்குணா என்று கன்னடத்திலும், ஷேங்கபுஷ்ப என்று மராத்தி மற்றும் கொங்கணியிலும், கோகர்ணிகா, அர்த்ரகர்ணி என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகின்ற இக்கொடி அவரை, துவரை, உளுந்து போன்ற பயறு வகைகளின் குடும்பமாகிய ஃபேபேசியே’வை சேர்ந்தது. இலங்கையில் இது நீல காக்கணை.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் அபராஜிதாவும், ஆண்டாள் ’கார்க்கோடப் பூ” என்பதுவும் இதே மலரைத்தான். ”கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார் இதை அரவிந்த அன்னை. நீலக்குருவியொன்றை ’’கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம்’’ என்கிறார் ஜெயமோகன் வெண்முரசின் நீலத்தில்

இதன் ஆங்கிலப்பெயர்கள்; Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea, Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea.

சிவாலயங்களில் காலை, மாலை, பகல் பூஜைகளுக்கென்று தனித்தனியே மலர்களை குறிப்பிடும் ஆகமம் சங்குபுஷ்பத்தை பகல்நேர பூஜைக்கு உகந்ததாக குறிப்பிடுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவனுக்கு செய்யப்படும் விசேஷபூஜையில் மிக முக்கியமானதாக கருதப்படுவதும் வெண்சங்கு புஷ்பமே. அதற்குப்பிற்குதான் வில்வமும், கொன்றையும், மகிழமும், மல்லிகையும்.

கோயம்புத்தூர், கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமேஸ்வரர். ஆலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் இறைவனுக்கு சங்கீஸ்வரன் என்றே பெயர். இவரை வழிபட்ட விஜயநகரப் பேரரசுக்கு சங்கவம்சம் என்ற பெயரும் உண்டு.

பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, நோயை, நோய் தீர்க்கும் வழிகளை, நோய் அணுகாதிருக்கும் வழிமுறைகளை, உணவை, மரணத்தை, இயற்கையை, மண்ணை, என வாழ்க்கையின் அனேக துறைகளை உள்ளடக்கிய நூலான சரக மகரிஷி தொகுத்தளித்த சரகசம்ஹிதையில், கற்கும் திறன், பகுத்தறிவு, ஞாபகத்திறன் ஆகியவற்றை அதிகரிக்க உதவும் நான்கு மூலிகைகளாக வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி, சங்குபுஷ்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது…

Clitoria ternatea near the fence.


சங்குப்பூச்செடி, காடுகள், தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக காற்றில் பரவிவரும் சிறு விதைகளால் முளைத்து வளர்கின்றது. ஈரப்பதமான மண்ணில் செழித்து வளரும் ஏறு கொடி வகையை (Climber) சார்ந்த இவை, மாங்களையோ கொழுகொம்புகளையோ பற்றிக்கொண்டும் பற்றுக் கொம்பில்லாதபோது தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவியும் வளரும். இச்செடி இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் மலர்களையும் உடையது. 4×3 செமீ அளவில், நன்றாக விரிந்து மலர்ந்திருக்கையில், சங்கைப்போல தோன்றும் இதன் மலர்கள் வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட இருக்கின்றன. நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட செடிகளும் அரிதாக வளர்வதுண்டு. சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10 தட்டையான விதைகள் இருக்கும். ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள் இக்குடும்பத்தின் பிற தாவரங்களைப்போலவே வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.

வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளிலுமே இலை, வேர், மலர்கள், விதை ஆகிய அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுபவை.

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் செடியான இதன் மலர் உள்ளிட்ட அனைத்து பாகங்களில் இருக்கும் பல வேதிப்பொருட்களில் ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides ஆகியவை மிக முக்கியமானவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும் anthocyanins வகையைச்சேர்ந்த delphinidin. என்னும் நிறமியால் உணடானது.

தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும் Clitoria ternatea தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora, செருவிளை (கரிசண்ணி, வெள்ளைக்காக்கணம்) எனவும் அழைக்கப்படுகின்றன…

இதன் (Genus/Generic name) பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பின் பகுதியான clitoris என்பதை குறிக்கின்றது.

இச்செடி முதன் முதலாக 1678 ல் Johann Philipp Breyne எனும் ஜெர்மானிய தாவரவியலாளரால் இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’வில் கண்டறியப்பட்டபோது Flos clitoridis ternatensibus என்று பெயரிடப்பட்டது.

பிறகு David krieg என்பவர் 1698’ல் நீல நண்டுகளுக்கு பெயர்பெற்ற மேரிலாண்டில் கிடைத்த சங்கு புஷ்ப செடிகளை, Clitoria mariana என்னும் பெயரில் குறிப்பிட்டு உலர்தாவரமாக்கினார். இந்த ஹெர்பேரியம் இன்றும் Edinburg ,Royal botanical garden அருங்காட்சியகத்தில் ல் பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கின்றது.

ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக பெண்ணுறுப்பைக்குறிக்கும் பெயரை ஒரு தாவரத்திற்கு வைத்ததற்கு, தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள். ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் இன்று வரையிலுமே நிலைத்திருக்கிறது. தாவரங்களுக்கு இருபெயரிடும் binomial முறையைக்கொண்டு வந்தபோது லினேயஸ் Genus எனப்படும் பேரினத்துக்கு அதே clitoria வையும் Species எனப்படும் சிற்றினத்திற்கு ternatea என்பதையுமே வைத்தார்.

பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இம்மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும். வேகமாக வளரும் இயல்புடைய, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்.

கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது. அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத இப்பகுதியை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant) இன்னும் இருக்கின்றது.

மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்த பத்து வாயுக்களும் நம் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன, இவையே நம் உடலை பாதுகாப்பவையும் கூட. இவற்றில் பிராணன், ஆபானன், வியானன், உதாதனன், சமானன் ஆகியவை பஞ்சபிராணன் எனப்படும். உடம்பில் நடுப்பகுதியில் உள்ள, உணவை செரிக்க உதவும் சமானன் வாயுவின் பணியில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யக்கூடிய ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.

சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனஅமைதியின்மை, உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கும் சங்கு புஷ்பக் கொடி நிவாரணமளிக்கின்றது. ஆயுர்வேதத்தில் மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ரத்தக்குழாய் அடைப்புக்கும், யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள், மலர்ச்சாறு ஆகியவை சிறந்த மருந்தாகும். சங்கு புஷ்பக் கொடியின் விதை மற்றும் வேர்ப் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம். சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும். சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தையும் இச்சாறு குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இயற்கை மருத்துவமுறை இது.

சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் சேர்த்து பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களையும் விதைகளையும் கூட உணவில் சேர்த்துக்கொள்லாம்.

பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும் சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறதென்பதை அறிகையில் மனித உடல் உறுப்புக்களின் வடிவிலிருக்கும் தாவர பாகங்கள் அதே உடலுறுப்பின் குறைகளை, நோய்களை தீர்க்குமென்பதைச்சொல்லும் doctrines of signature என்பதின் முக்கியத்துவத்தை நினைக்கவேண்டியிருக்கிறது.

மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிப்பொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று.

மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை அமைதிப்படுத்துகின்றது. வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

மலர்ச்சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும்.
செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகள் அதிகமென்பதால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில் அரிசிச்சோற்றை நீலநிறமாக்க சங்குப்பூச்சாறு பயன்படுத்தப்படுகின்றது.

மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும் உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில் dok anchan எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும் நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தின் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பும் சங்குப்பூவைக்கொண்டு செய்யப்படுகிறது.

பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். பலநாடுகளில் இம்மலரின் சாறை ஜின் போன்ற பானங்களிலும் சேர்த்து, நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிப்போன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)

இத்தனை அழகிய, எளிதில் வளரக்கூடிய நலம்பயக்கும், நோய்தீர்க்கும் பக்கவிளைவுகளற்ற சங்குப்பூச்செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யப்படுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் அதிகம் விற்பனையில் இருக்கின்றன.

« Older posts Newer posts »

© 2023 அதழ்

Theme by Anders NorenUp ↑