பலர் இது மனதை கனக்கச்செய்ததாகச் சொல்லி இருந்தார்கள் எனக்கென்னவோ படம் பார்த்து முடிந்ததும் பெரிய விடுபடல் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சி காட்டும் காதலை துறத்தல்,மன்னித்தல் மறத்தலினால் அல்ல. இன்னாது அம்ம இவ்வுலகு என்பதை மீண்டும் நினைவு படுத்திய திரைப்படம் என்பதால்.
தாமஸ் குட்டியின் அந்த நீல நிற ஃபைலை பார்த்துவிட்டுப் பார்வதி சவப்பெட்டியின் முன்னமர்ந்து ஊர்வசியிடம் பேசுவதும், ’’நின்ன கட்டியவனாடி இவிட கிடக்குன்னது’’ என்னும் ஊர்வசிக்கு பார்வதி திரும்பச்சொல்வதும் நிறைவளித்தது.
அந்த சிஸ்டர் தெரிவிக்கும் உண்மையும், பிறகு இருட்டில் சமையலறையில் பார்வதியின் அம்மா சொல்லுவதும் எனக்கு அதிர்ச்சியாகவே இல்லை. இங்கும் ஒரு ’சிஸ்டர்’ இங்கும் ஒரு அன்னை என்று நினைத்துக்கொண்டேன்.புன்னகைத்தும் கொண்டேன். இறுதியில் பார்வதிக்காவது பற்றிக்கொள்ள ஊர்வசியின் தளர்ந்த கைகள் இருந்தது ஆசுவாசம் அளித்தது. எனது உள்ளொழுக்கின் வேகம் இனி மட்டுப்படலாம்.
இன்று ஆடிப்பெருக்கு. தொடர் மழையில் ஆறு குளம் அணைக்கட்டு எல்லாம் நிரம்பி இருக்கிறது. அம்பராம்பாளையம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஆழியார் அணையின் கொள்ளளவை நீர் எட்டிவிட்டதால் 11 மதகுகளிலும் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது, ஆற்றையும்அணையையும் வேடிக்கை பார்க்க இன்று ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.
தென்னிந்தியா முழுக்க ஆடிப்பெருக்கு என்றால் ஓடும் நீரை பார்ப்பதும் கலந்த சாதம் சமைத்து எடுத்துச்சென்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து உண்பதுவும் தான் வழக்கம்
ஆனால் வேட்டைக்காரன் புதூர் ஆனைமலை கிராமங்களில் மட்டும் இன்றைய தினம் குழம் நோம்பி எனப்படும். நான் சிறுமியாக இருக்கையிலிருந்தே இங்கு மூங்கிலில் சிறிய குழல் போலச் செய்து அதில் பாப்பட்டாங்காய் எனும் சிறு மணி போன்ற காய்களை நுழைத்து ஒரு குச்சியால் அடித்து டப் என்னும் ஓசை வருவது விளையாட்டாக மகிழ்ந்து கொண்டாடப்படும்
அந்தப் பாப்பட்டாங்குழல் இன்றும் வேட்டைக்காரன்புதூரில் மட்டுமே செய்யப்படுகிறது. இதைக் கைத்தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சில வயதானவர்கள் இதை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயிற்றுவித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்தப் பண்பாடு அழிந்துபோகக்கூடும்.
காடுகளில் மிகச்சரியாக இந்தச் சமயத்தில் பச்சைக்குண்டுகளாகக் கொத்துக்கொத்தாகக் காத்திருக்கும் பாப்பட்டங்காயை இதற்கெனப் பறித்துக் கொண்டு வந்து இந்தக் குழலுடன் சேர்த்து விற்பார்கள்.
இந்தக் குழல் பாப்பட்டாங்குழல் இந்தக் காய் பாப்பட்டாங்காய்.
இதன் தாவர அறிவியல் பெயர் பாவெட்டா இண்டிகா.
ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் தமிழ்ப்பெயர் காட்டுக்கரணை, மலையாளத்தில் இது மல்லிகை முட்டி. மராத்தியில் பாப்பட்.தெலுங்கில் பாப்பிடி. இந்தப் பாப்பட்டாங்காய் என்பதும் பாவெட்டா என்னும் லத்தீன் பெயரின் மருவூதான். பாவெட்டா என்பது எப்படியோ வேட்டைக்காரன் புதூர்க்காரர்களுக்கு தெரிந்து இதைப் பாவட்டாங்காய் என்று அழைக்கத்துவங்கி அது இப்போது பாப்பட்டாங்காய் ஆகி இருக்கிறது.
இப்படித்தான் ஒரைஸா என்னும் நெல்லின் லத்தீனப்பெயர் தமிழின் அரிசியிலிருந்து வந்தது.
இந்தப் பாப்பட்டாங்காய் வெடிக்கும் விளையாட்டுத் தமிழர் பண்பாட்டில் இணைந்த ஒன்று அதுவும் குறிப்பாக வேட்டைக்காரன் புதூரில் ஆனைமலையில் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியவில் வேறெங்கும் இது இல்லை
இப்படி பண்பாட்டுடன் இணைந்த இது போன்ற இயற்கை கொண்டாட்டங்களை அவசியம் நாம் தொடர வேண்டும்
இளம் மூங்கில் குச்சிகளில் சிறு குழல்போலச் செய்யப்படும் இந்த விளையாட்டுக் கருவியில் சிறுகாய்கள் உடைகையில் உருவாகும் ஒலி பெருக்கிக்கேட்கவெனக் குழலின் வாய்ப்பகுதி அகலமாகப் புனல் போலச் செய்யப்பட்டிருக்கும். வண்ணக்காகிதங்களால் அந்த வாய்ப்பகுதி அலங்கரிக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். பொட்டு வெடி என்னும் ஒரு பட்டாசை கல்லில் கொட்டுகையில் உண்டாகும் ஒலியைப்போலவெ இதிலும் உருவாகும் என்பதால்ல இதைக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள். ஆடி 18 அன்று உறவினர்களின் குழந்தைகள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் இதை அடித்து விளையாடி மகிழ்வார்கள்.
ஆபத்தற்ற, சூழல் மாசுண்டாக்காத, இயற்கையோடு இணைந்த இந்த விளையாட்டுத்தான் எத்தனை இனிது!!
நான் ஒவ்வொரு வருடமும் மகன்கள் வீட்டில் இருந்தாலும் இல்லையெனினும் இவற்றை வாங்கி வந்துவிடுவேன். பண்டிகையன்று இதில் காய்களை நுழைத்து அடித்து விளையாடுவேன்.
இந்தப் பாவட்டா 2 லிருந்து 4 மீ உயரம் அவரை வளரும் புதர் செடி. நல்ல நறுமணமுள்ள வெண்ணிற மலர்கள் கொத்துகளாக உண்டாகும்.மலர்களைத் தேடி எண்ணற்ற பட்டாம்பூச்சிகளும் சிறு வண்டுகளும் ஈக்களும் வரும். பச்சை நிற காய்கள் தான் இந்தக் குழலில் அடித்து விளையாடப்படுகின்றன
காய்கள் பழுத்துக் கனிகையில் கருப்பு நிறமாகி விடும்.இதன் வேர் இலை மரப்பட்டை ஆகியவை பல்வேறு சிகிச்சைகளுக்குக் கைவைத்தியமாகக் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஜுலையில் மலர்கள் முதிர்ந்து சரியாக ஆடிமாதத்தில் இந்தப்பண்டிகையின்போது காய்கள் திறண்டு காத்திருக்கும். வேட்டைக்காரன்புதூரை சுற்றியுள்ள காடுகளில் இந்தப் பண்டிகை காலத்தில் இவை ஏரளமாகக் காய்த்துக்கிடக்கும்.
எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் ஈழத்தில் பாலைப்பழம் பழுக்கும் காலத்தில் காடுகளுக்குள் மொத்த கிராமமே கூட்டமாகச் சென்று பாலைப்பழம் உண்பார்களாம். இது அவர்களின் பண்பாட்டின் ஒரு பகுதி என்றார். அப்படியான பண்பாடுகளை எல்லாம் நாம் ஏறக்குறைய இழந்து விட்டிருக்கிறோம். இந்தப் பாவட்டங்காய் அடித்து விளையாடும் பண்டிகை இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டியதன் மகிழ்சியையும் அவசியத்தையும் உணர்த்தும் ஒன்று. இன்று சரணும் தருணும் சாம்பவியும் இல்லை எனினும் அவர்கள் எப்போது விடுமுறைக்கு வந்தாலும் அவர்கள் விளையாட வென்று குளிர்சாதனப்பெட்டியில் காய்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்.
எதிர்காலத்தில் இந்த வீட்டுவாசலில் சிறு குழந்தைகள் பாப்பட்டாங்குழலால் ஒருவர் மீது ஒருவர் காய்களை அடித்து விளையாடிச் சிரித்து பூசலிட்டுக்கொள்வதை பார்க்கக் காத்திருக்கிறேன். இன்று விஜியும் ஜோதியும் வந்திருந்து விளையாடினார்கள் மாலை புதுப்புனல் காண உறவினர்களுடனும் நண்பர்களுடனும் செல்லவெண்டும்.
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கடல் மட்டத்துக்கு 1500 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது ஏற்காடு தாவரவியல் பூங்கா
1963ல் துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பூங்கா BSI -ன் தெற்கு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 18.4 ஹெக்டேரில் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்கா பிற தாவரவியல் பூங்காக்களைப் போல அழகிய மலர்களும் புல்வெளிகளும் கத்தரிக்கப்பட்ட உயிர்ச்சிற்ப மரங்களும் கொண்டதல்ல. அரிய வகை தாவரங்கள் பலவற்றை கொண்டிருக்கும் முழுக்க முழுக்க வேறுபட்ட ஒரு அனுபவத்தை அளிக்கும் ஆராய்ச்சி பூங்கா இது. வருடா வருடம் மாணவர்களுடன் இங்குச் சென்று வருகிறேன்
இங்குப் பல நூறு வகை ஆர்கிட் செடிகள் வண்ணமயமான மலர்களுடன் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின் அன்னியச் செலாவணிக்கு மிக முக்கிய காரணமானவை இந்த ஆர்கிடுகள். இவை பூச்சாடிகளில் பல நாட்கள் வாடாமல் இருப்பது, பலவகைப்பட்ட வண்ணங்களில் இருப்பது மற்றும் மிக வித்தியாசமாக வண்ணத்துப்பூச்சி வடிவில் இருப்பது ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற மலர்கள்.
ஏற்காடில் மட்டுமே வளரும் ஓரிட ஆர்கிடுகள்(எண்டமிக்) மட்டுமே இந்தப் பூங்காவில் சுமார் 30 வகைகள் இருக்கின்றன. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆர்கிட் தோட்டம் இதுதான்
இங்கு 3000 மரங்கள் 1800 புதர்ச்செடிகள் உள்ளன. இந்தப் பூங்காவில் இருக்கும் பல அரிய வகை தாவரங்களில் ஊனுண்ணித் தாவரம் நெப்பந்தஸ் காசியானா, மரக்கொடி வகையைச் சேர்ந்த நீட்டம் உலா, சைகஸின் ஆண் மரம், வாழும் புதைபடிவம் எனப்படும் ஜப்பானில் அணுகுண்டு வீச்சில் கூடச் சேதமடையாமல் இருந்ததால் அங்குக் கடவுளாகவே வழிபடப்படும் அழகிய பிளவுபட்ட விசிறி இலைகள் கொண்ட ஜின்கோ ஆகியவை உள்ளன.
.
தாவரங்களில் சிறு செடி, புதர் ,மரம், ஆகிய அடிப்படையான மூன்று வகைகளிலிருந்து மாறுபட்டது இந்த மரக்கொடியான லயானா என்பது.
மிக உறுதியான தடிமனான மரமே கொடிபோல் வளைந்து பிற மரங்களில் ஏறி வளர்ந்திருக்கும்.
இவற்றோடு கள்ளிவகைகள், லில்லிச்செடிகள் ஆகியவையும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர், இலைகள் நாணயம் போலிருக்கும் நாணயச் செடி , மீன்முள் கள்ளி எனப்படும் மீன் முட்களைப் போலவே இலையமைப்பு கொண்டிருக்கும் கள்ளிகள் ஆகியவை இங்கு இருக்கின்றன.
நெப்பந்தஸ் காசியானா, மேகாலயா மாநிலத்தில் உள்ள காசி மலையில் மட்டும் வளரக் கூடியது. கடந்த 50 ஆண்டுகளாக ஏற்காடு தோட்டத்தில் இவற்றின் மூன்று செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவின் மிகப் பெரிய பூச்சியுண்ணும் தாவரங்கள் என்ற சிறப்பும் இந்தத் தாவரங்களுக்கு உண்டு. ஷில்லாங்கிலிருந்து மண்ணுடன் அப்படியே இவை எடுத்துக் கொண்டு வரப்பட்டன. இவற்றின் பிட்சர் எனப்படும் பூச்சிகளை கவர்ந்திழுத்து உண்ணும் பொறிகளான குடுவைகளை மிக அதிகமாக அக்டோபர் டிசம்பரில் பார்க்க முடியும்.ஏற்காட்டில் நன்கு வளர்ந்த இவை பல வருடங்களுக்குப் பிறகு 2009ல் மலர்ந்தன. இந்தியாவின் வடகிழக்கு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தாவரம் தென்னிந்தியாவின் நிலப்பரப்பில் வளர்வதை பார்ப்பது மிகவும் அரியது.
வண்ன வண்ண தீக்குச்சிகளை போலவெ மலர்களைக் கொண்டிருகும் Aechmea Gamosepala செடியும், துன்பெர்ஜியா மைசூரென்சிஸ் என்னும் பந்தலில் வளர்ந்து அதன் நீளமான தோரணம்போல் தொங்கும் மலர்கள் கொண்டிருக்கும் கொடியும் இங்கிருக்கிறது .
இங்கு RET -rare endengered threatened எனப்படும் அரிய, அழிந்து கொண்டு வரும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் தாவரங்களும் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன.
lady’s slipper orchid எனப்படும் செருப்பு வடிவ அழகிய மலர்களைக் கொண்டிருக்கும் ஆர்கிடுகளை இங்குத் தவறாமல் பார்க்க வேண்டும்.
மிக முக்கியமாக ஏற்காடு மலைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்ட வெர்னோனியா சேர்வராயன்சிஸ் என்னும் அரிய மரமும் இங்கிருக்கிறது( Vernonia Shevaroyensis). இந்த மரம் சூரியகாந்தி குடும்பமான அஸ்ட்ரேசியை சேர்ந்தது. இந்தத் தாவர குடும்பத்தின் ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் மூன்று மட்டுமே மர வகைகள். அதிலொன்று இந்த வெர்னோனியா சேர்வராயன்சிஸ் மரம்.
ஏற்காட்டின் இயல் மரங்களான இவை முன்னொரு காலத்தில் எராளமாக அங்கு வளர்ந்தன பின்னர் படிப்படியாக அழிந்துபோய் எஞ்சி இருந்த சில மரங்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லபட்ட பிறகு இப்போது இந்தப் பூங்காவில் இந்த ஒரே ஒரு தாய் மரம் மட்டுமே காப்பாற்றப்ட்டு வளர்ந்து வருகிறது.
ஏற்காடு மலைப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள இந்த ஆராய்ச்சிப் பூங்காவில் 1,100 வகையான தாவரங்கள் உள்ளன. இவற்றில் உலகில் அழியும் நிலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் 60 உள்ளன
.
இங்குத் தவறாமல் பார்க்கவேண்டிய தாவரங்கள்”:
Curcuma neilgherrensis-காட்டுமஞ்சள்
மக்னோலியா கிராண்டிஃபுளோரா (Magnolia Grandiflora)
நெப்பந்தஸ் காசியானா (Nepenthes Khasiana)
வெர்னோனியா சேவாராயன்சிஸ் (Vernonia Shevaroyensis)
டையூன்எட்யூல் (Dioon edule)
Psilotum nudum எனப்படும் பெரணி வகை தாவரங்களில் ஒருவகை
தீக்க்குச்சி செடி-Aechmea Gamosepala
Thunbergia mysorensis
ஹைட்ரில்லாவெர்டிசிலேட்டா
Bulbophyllum fuscopurpureum
Galphimia glauca
மற்றும் Bentinckia condapana, Solandra maxima, Begonia வின் எண்ணற்ற வகைகள், காசித்துமையான Impatiens, பெரணியான Botrychium ஆகியவற்றையும் பார்க்கலாம்.
இவற்றோடு bonsai garden, foliage garden, topiary garden, rock garden, water garden, herbal garden, sensory garden , Syzygium palghatensis ன் டைப் ஸ்பெசிமன், உலர்தாவர தொகுப்பான herbarium அவற்றில் பூச்சித்தாக்குதல் வராமல் தடுக்கும் முறைகள் ஆகியவை தாவரவியலாளர்களால் கவனிக்கப் படவேண்டியவை.,
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் அரசு வேலை கிடைத்தவர்கள் பெரும்பாலும் மறுத்து விட்டு வேறு இடங்களுக்கு செல்வதுண்டு. எப்போதும் மழையும் குளிருமாக இருக்கும் பொள்ளாச்சியில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் கூட தயங்குவார்கள்.
தை மாத பட்டிப்பொங்கலின் போது மழை எப்போது நிற்கும் என கவலையுடன் வானத்தை பார்த்தபடிக்கு பதின்பருவம்வரை நாங்கள் காத்திருந்தது பசுமையாக நினைவிலிருக்கிறது. பொங்கலின் குதூகலங்களை மழை இல்லாமலாக்கிவிடுமோ என்னும் கவலை பொங்கல் பண்டிகையின் முதல்நாளிலிருந்தே எங்களுக்கெல்லாம் இருக்கும். 17ம் நூற்றாண்டின் ’’ரெயின் ரெயின் கோ அவே’’ என்னும் சிறார் பாடல் இப்படித்தான் உருவாகி இருக்கக்கூடும் .
பருவ மழைக்காலங்களில் எங்களது தோப்பை சுற்றி ஓடும் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் நாங்கள் மாட்டுவண்டியுடன் பலமுறை சிக்கியிருக்கிறோம்.
மழை நாட்களில் காட்டுக்கிணறுகள் நிறைந்து கடவோடி சாலையெங்கும் சிற்றாறுகள் பெருக்கெடுத்திருக்கும். வீட்டு மதில்களில் ஓட்டுக்கூரைகளில் படுவப்பாசிகள் பசும்பட்டுப் போர்வைபோல வளர்ந்திருக்கும். 50 அடி ஆழமுள்ள எங்கள் வீட்டுக்கிணறு பல முறை நிறைந்து வழிந்து, கைகளால் கிணற்று நீரை அளைந்து விளையாடியிருக்கிறோம்.
அப்படி பருவமழை பொய்க்காதிருந்து பொருளாட்சி நடந்து செழித்திருந்த அதே பொள்ளாச்சியில் கடந்த 5 மாதங்களில் விசும்பின் ஒரு துளி கூட வீழாமல் அசாதாரணமான வெப்பம் நிலவுகிறது.
42 பாகை வெப்பம் பொள்ளாச்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. காலை எழுந்து நாளை துவக்குகையிலெயே 32 பாகை வெப்பமிருந்த இந்த சில மாதங்கள் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையின்மையை உண்டாக்கி விட்டது. அடுத்த சந்ததியினருக்கு எதை விட்டுவிட்டு போகப்போகிறோமென்னும் கேள்வி பேருருவம் கொண்டு எதிரில் நிற்கிறது
வெப்பம் தாளமுடியாமலாகி பொள்ளாச்சியில் பல நூறு வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது, ஏராளமான தென்னைகளும் பனைகளும் உச்சி கருகிச் சாய்ந்தன, வானம்பார்த்த பல வெள்ளாமைகள் வீணாகின.
பொள்ளாச்சியின் காலநிலை மெல்ல மெல்ல சீர்கெட்டதற்கு பல காரணங்களை சொல்லலாம். கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப்பணிகளுக்காக தொடர்ந்து நூற்றுக்கணக்கில் முதிர்ந்த பெருமரங்கள் வெட்டப்பட்டதும், ஏராளமான நிலப்பரப்பில் உண்டாக்கிய தென்னை ஒருமரப்பயிரிடுதலும் (Monoculture) முக்கிய காரணங்கள்.
ஒரு பிரதேசத்தின் பலவகைப்பட்ட தாவரங்களை அழித்துவிட்டு பொருளாதார காரணங்களுக்காக ஒரு பயிரை மட்டும் தொடர்ந்து பயிராக்குகையில் அந்த நிலப்பரப்பின் நீர்ச்சுழற்சி (Water cycle) வெகுவாக மாற்றமடைந்து அச்சூழல் சமநிலையை இழந்து விடுகிறது.
ஒரு நிலப்பரப்பில் பல வகையான தாவரங்கள் வளர்கையில் அவற்றின் வேர்கள் ஒவ்வொன்றும் நிலத்தடியில் வேறு வேறு ஆழங்களில் இருப்பதால் நிலத்தடி நீரின் பல அடுக்குகளிலிருந்து அவை நீரை எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். சேமித்து வைத்த நீர் வறண்ட காலங்களில் உபயோகப்படும்.
தனிமரப்பயிரிடல் இந்த சாத்தியங்களை முற்றாக இல்லாமல் செய்துவிடுகின்றது. ஏனெனில் ஒரே மாதிரியான வேர் ஆழம் கொண்டிருக்கும் ஏராளமான மரங்கள் நிலத்தின் குறிப்பிட்ட அடுக்கில் இருக்கும் நீரை மட்டுமே நம்பி இருக்கின்றன.
கடல், நிலம், வளிமண்டலம் என தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் நீர் சுழற்சியில் தனிமரப்பயிரிடுதல் உண்டாக்கும் விளைவுள் மிக முக்கியமானவை.
ஒரே மாதிரியான மரங்கள் விரிந்த நிலப்பரப்புகளில் பயிராகும்போது அந்த பிரதேசத்தின் இயற்கை பேரிடர்களையும், பயிர்களில் உண்டாகும் நோய் தாக்குதல்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை அச்சூழல் இழந்துவிடுகின்றது. காடுகளை அழித்து தனிமரங்களை பயிரிடுகையில் அந்த நிலப்பரப்பின் நீர் சேமிக்கும் திறனும் வெகுவாக குறைந்து விடுகிறது
எனவேதான் வறட்சியான காலங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை உண்டாகின்றது. சில வருடங்களாக தனி மரப்பயிரிடல் நடக்கும் பகுதிகளில் மழைக்காலங்களில் கூடுதல் வெள்ளமும், பருவமழை பொய்த்து கடும் வறட்சியும் உண்டானது இதனால்தான்.
இந்த குறிப்பிட நிலப்பரப்புக்கள் இந்த சூழல் மாறுபாட்டால் பேரிடர்களை அடிக்கடி சந்திக்கும் பிரதேசங்களாகி விட்டிருக்கின்றன.
கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகளின் போது நூறும், ஐம்பதும் வயதான நூற்றுக்கணக்கான பெருமரங்கள் எளிதாக வெட்டிச்சாய்க்கப்பட்டன. பலவீனமான எதிர்ப்பு கூட எந்த துறையிலிருந்தும் இதற்கு எழவில்லை
ஒரு சில பெருநிறுவனங்கள் வேருடன் பெயர்த்தெடுத்த சில மரங்களை எடுத்துச்சென்று அவர்களின் வளாகத்தில் நட்டன எனினும் அவை எதுவும் பிழைக்கவில்லை. மாதக்கணக்கில் வான் பார்த்தபடி சாலையோரம் கிடந்தன பெருமரங்களின் பிரம்மாண்ட வேர்ப்பகுதிகள்
6 மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி முத்தூர் சாலையில் 50 க்கும் மேற்பட்ட பெருமரங்கள், (ஒவ்வொன்றும் நான் சிறுமியாக இருக்கையிலேயே பெருமரங்களாக இருந்தவை, அனேகமாக அனைத்துமே 100 ஆண்டுகளை கடந்தவை) அனைத்தும் சாலை விரிவாக்கம் என்னும் பெயரில் முழுக்க வெட்டி அகற்றப்பட்டன. இன்று வரை அச்சாலையில் எந்த விரிவாக்கமும் செய்யப்படவில்லை இருகிராமங்களை இணைக்கும் அச்சாலை விரிவாக்கம் செய்யவேண்டிய அத்தனை முக்கிய வழிச்சாலையும் அல்ல.
தற்காலிக லாபத்தின் பொருட்டு வெட்டப்பட்டிருக்கும் அப்பெருமரங்கள் எல்லாம் சில லட்சங்களாகியிருக்கக்கூடும். அச்சாலையெங்கும் இன்றும் வீழ்ந்து கிடக்கின்றன காரணமின்றி வெட்டப்பட்ட மரங்களின் ஒரு உணவு மேஜையின் அகலம் கொண்ட அடிவேர்க்கட்டைகள்.
மார்ச்சின் காற்றும், ஏப்ரலின் மழைச்சாரலும் மே மாதத்தின் மலர்களை திறக்கும் என்னும் பிரபல சொற்றொடர் சென்ற பல வருடங்களாக பொய்த்து விட்டது. ஆடிப்பட்டம் தேடி எதுவும் விதைக்கப் படவில்லை, தை தான் பிறந்தது வழியொன்றும் பிறக்கவில்லை.
தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றத்தினால் சென்னையை மூழ்கடித்த மாமழையை, கூட்டம் கூட்டமாக ஒட்டகங்களை அடித்துச்சென்ற பாலையின் பெருவெள்ளத்தை, பருவத்தே பயிர்செய்யமுடியாத கடும் வறட்சியை நாம் சமீப காலங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மழை இல்லாமல் போவதற்கும் மரங்கள் வெட்டப்படுவதற்கும் இருக்கும் மிகநேரடியான தொடர்பை ஒருவரும் அறிந்திருப்பதில்லை இப்படி மரத்தை வெட்டியவர்களும், மரங்கள் வெட்டப்படுகையில் வேடிக்கை பார்த்தவர்களும், ஆட்சேபிக்காதவர்களும், மரங்களை வெட்டி கிடைத்த பணத்தை அனுபவித்தவர்களுமாகத்தான் குடிநீர் பற்றாக்குறைக்காக குடங்களுடன் சாலை மறியலும், மழை வேண்டி வருண ஜெபமும் செய்கிறார்கள்
பொள்ளாச்சியின் அணைகளும் வாய்க்கால்களும் முற்றிலும் வறண்டு காய்ந்து போனபின்னர் கோவில்களில் கூழ் ஊற்றி மழையை வேண்டிக்கொண்டார்கள் . பொள்ளாச்சி அருகே இருக்கும்தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் ஒரு சிறுமி அருள் வந்து மூன்று நாட்களில் மழை வருமென்றாள் ஆனால் வரவில்லை. தெய்வத்தின் வாக்கும் பொய்த்துப் போனது.
பல்வேறு பொருளாதார காரணங்களுக்காக மரங்களை வெட்டி அகற்றுதலும், காடழித்தலும் உலகெங்கிலும் தொடர்ந்து நடக்கிறது.
உலகெங்கிலும் தீவிரமாகி வரும் பருவ நிலை மாற்றங்களின் வேகத்தை குறைக்கவேண்டும் வாழிடப்பற்றாக்குறையால் அழியவிருக்கும் காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும், எட்டு பில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்னும் தற்போது உலகு எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான பெரிய சிக்கல்களுக்கான தீர்வில் நிச்சயம் மரங்களின் பங்களிப்பு இருக்கிறது
எனினும் பெருமளவில் மரங்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
காடழித்தல் என்பது இயற்கையாகவே உருவாகும் காட்டுத்தீயினால் மரங்கள் அழிவதல்ல. தேயிலை காபி போன்ற மலைப்பயிர் தோட்டங்களையும் வணிகக்காடுகளையும் அழிப்பதையும் இது குறிப்பிடுவதில்லை. மனிதர்களின் பல பொருளாதார காரணங்களுக்காக இயற்கையான பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்திருக்கும் காடுகள் அழிக்கப்படுவதைத்தான் காடழித்தல் என்று குறிப்பிடுகிறது.
கடந்த 8000 வருடங்களில் மனிதர்களால் விவசாயநிலங்களை உருவாக்கும் பொருட்டு பூமியின் பாதியளவு காடு அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் காடழித்தலின் வேகம் மிக மிக கூடியிருகிறது என்பது மிகவும் கவலையளிக்கும் ஒன்று
பூமியின் 31% நிலப்பரப்பை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் காடுகளே உலகின் நீர்த்தேவைக்கு பிரதான காரணிகளாக இருக்கின்றன.
உலகளவில் 300-லிருந்து 350 மில்லியன் மக்கள் காடுகளுக்கருகிலும் காடுகளை சார்ந்தும் வாழ்கிறார்கள். ஒரு பில்லியன் மக்கள் காடுகளின் விளைபொருட்களைக் கொண்டே வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் பல லட்சம் பேருக்கும் காடுதான் வாழ்வாதாரமாக இருக்கிறது. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் நேரடியாக காடுகளில் அச்சூழலைசார்ந்தே வாழ்கிறார்கள்.
மழைப்பொழிவில், மண் பாதுகாப்பில், வெள்ளத்தடுப்பில் புவி வெப்பமாவதை தடுப்பதில் காடுகளின் பங்கு இன்றியமையாதது.
உலகின் மொத்தப்பரப்பளவில் சுமார் 30 % காடுகளால் ஆனது ஆனால் அவை மிக அபாயகரமான வேகத்தில் அழிந்துகொண்டே இருக்கின்றன. 1990 களிலிருந்து நாம் சுமார் 420 மில்லியன் ஹெக்டேர் காடுகளை(100 கோடி ஏக்கர்) முற்றிலுமாக இழந்திருக்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் காடுகள் சூழ்வெளியிலிருந்து சுமார் 2 பில்லியன் மெட்ரிக் டன் கார்பனை தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. காடுகளின் மரங்கள் சூழலில் இருக்கும் கரியமில வாயுவை உறிஞ்சி அதை கார்பனாக மாற்றி கிளைகள், இலைகள், மரத்தண்டு, வேர்கள் மற்றும் நிலத்தில் சேமிக்கிறது. இந்த கார்பனை தேக்கி வைக்கும் காடுகளின் பணி காலநிலை மாற்றத்தை வெகுவாக மட்டுப்படுத்துகிறது. மிதவெப்ப காடுகளை காட்டிலும் வெப்பமண்டலக்காடுகளே அதிக கார்பனை தேக்கி வைக்கின்றன
கடந்த 50 வருடங்களில் அமேஸான் மழைக்காடுகளில் 17% த்தை இழந்து விட்டிருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டன. வருடத்திற்கு 10 மில்லியன் ஹெக்டேர் காடழிப்பு 2015-லிருந்து 2020-ற்கு இடையில் மட்டும் நடந்தது. இதில் பெரும்பங்கு சோயா மற்றும் எண்ணெய்ப் பனைக்காக அழிக்கப்பட்டதுதான். இறைச்சிக்கான பன்றிகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாக அளிக்கத்தான் சோயாப்பயிர் அழிக்கப்பட்ட காடுகளில் பயிரிடப்படுகிறது
மிகச்சிறிய பொருளாதார லாபத்தின் பொருட்டு செல்வாக்குள்ளவர்களால் உலகநாடுகளெங்கும் மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் சிறுகச்சிறுக பலநாடுகளில் தொடர்ந்து மரம்வெட்டுதல் நடக்கையில் அதன் விளைவு காடழிதலின் விளைவுகளுக்கு இணையானதாகிவிடுகிறது
இப்போது புழக்கத்தில் இருக்கும் விவசாய முறைகளும் தொழிற்சாலைகளுக்கு அடுத்தபடியாக பசுங்குடில் வாயுமிழ்தலை செய்கின்றன. இரசாயன உரங்களை அதிகம் உபயோகிக்கும் பயிர்ச்சாகுபடி முறைகளினால் மீத்தேன் நைட்ரஸ் ஆக்ஸடு ஆகியவை சூழலில் வெளியேறுகின்றன.
பசுங்குடில் வாயு உமிழ்வு என்னும் பேராபத்துடன் பல உயிரினங்களின் வாழ்விட அழிப்பு, பழங்குடியினரின் வாழ்வாதார அழிப்பு, சூழல் சமநிலை குலைப்பு போன்ற பலவற்றிற்கும் காடழித்தல், காரணமாகி விடுகின்றது. கொசுக்களால் மனிதர்களுக்கு பரவும் நோய்களும், காபி இலைத்துருநோயான ரோயா போன்ற பெருங்கொள்ளை நோய்களும் காடழித்தலினாலும் புவி வெப்பமடைந்ததினாலும் உண்டான மறைமுகமான பாதிப்புக்கள் தான்
காகிதத்திற்கும், மரக்கட்டைத்தேவைகளுக்குமாக உலகின் எல்லா காடுகளிலும் கணக்கற்ற மரங்கள் வருடா வருடம் வெட்டப்படுகின்றன. மரம் வெட்டுபவர்களில் சிலர் கள்ளத்தனமாக அடர் காடுகளுக்குள்ளும் பாதையமைத்து காடழித்தலை மேலும் விரைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காடுகள் நகர விரிவாக்கதின் பொருட்டும் வேகமாக அழிந்து கொண்டு வருகின்றன.
உலகநாடுகள் அனைத்திலும் தொழிற்சாலைகள் ஏராளமான பசுங்குடில் வாயுக்களை சூழலில் வெளியேற்றுகின்றன. குறிப்பாக நிலக்கரித் தொழிற்சாலைகள் ஒவ்வொருநாளும் ஏராளமான கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. உதாரணமாக நாளொன்றுக்கு 34,000 டன் நிலக்கரியை எரிக்கும் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஷீரர் (Scherer) ஒவ்வொரு வருடமும் 25 மில்லியன் டன் கரியமில வாயுவை சூழ்வெளியில் கலக்கிறது.
காடழித்தலால் மற்றுமோர் ஆபத்தும் இருக்கிறது. வாழிடங்களை இழந்த காட்டு விலங்குகளால் மனிதர்களுக்கு 60 % வைரஸ் உள்ளிட்ட தொற்று வியாதிகள் உருவாகின்றன. இயற்கையான வனச்சூழல் அழிந்து மனிதர்களுக்கான வாழிடங்கள் காடுகளின் எல்லையை தாண்டுகையில் விலங்குகளால் மனிதனுக்கு உண்டாகும் நோய்களும் பெருகுகின்றன.
2014-ல் வடக்கு ஆப்பிரிக்காவில் காடழிந்ததால் வாழிடம் இழந்த பழந்தின்னி வவ்வால்கள் ஊருக்குள் நுழைந்து மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை கடித்ததால், பரவிய எபோலா வைரஸ் சுமார் 11,000 மக்களை காவு வாங்கியது
1997-ல் இப்படி இந்தோனேசியாவின் காடுகள் விவசாயப் பயிர் சாகுபடிக்காக பெருமளவில் நெருப்பிட்டு எரிக்கப்பட்டபோது அங்கிருந்த மரங்கள் வெப்பத்தினால் கனியளிக்க முடியாமல் ஆனது.
அப்போது உடலில் இருந்த கொடிய நுண்ணுயிர்களுடன் பழந்தின்னி வவ்வால்கள் உணவுக்காக வேறு வழியின்றி ஊருக்குள் நுழைந்தன இந்த வவ்வால்கள் மலேசிய பழப்பண்ணைகளுக்குள் வாழத்தொடங்கிய சிறு காலத்திலேயே அவை கடித்துத் துப்பிய பழங்களை உண்ட இறைச்சிக்கென வளர்க்கப்பட்ட பன்றிகள் நோயுற்றன.
பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவி 1999ல்- 265 பேருக்கு தீவிரமான மூளைவீக்கம் உண்டாகி அவர்களில் 105 பேர் மரணமடைந்தனர். நிபா வைரஸால் உண்டாகிய இந்த முதல் சுற்று மரணங்களுக்குப் பிறகு தென்கிழக்காசியாவில் அதன் பாதிப்புகள் தொடர்ந்தன.
வெப்பமண்டலங்களை சுற்றி இருக்கும் பழமையான காடுகள் பயிர்ச் சாகுபடிக்கென ஏராளமாக அழிக்கப்படுகையில் காடுகளில் சேகரிக்கப்பட்ட கார்பன் மீண்டும் கரியமில வாயுவாக சூழலில் வெளியிடப்படுகிறது.
காடழித்தல் போன்ற பூமியின் நிலப்பரப்பில் உண்டாகும் பெருமளவிலான மாற்றங்கள் 12-20% பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வை அதிகரிக்கின்றன. பசுங்குடில் வாயுக்கள் அகஊதா கதிர்களைத் தடுத்து நிறுத்திவிடுவதால் புவி மேலும் வெப்பமாகிறது.
1850-லிருந்து 30% கரியமில வாயுமிழ்வு காடழித்தலினால் மட்டுமே உண்டாயிருக்கிறது. பெருமளவிலான காடலித்தலினால்தான் வடஅமெரிக்காவிலும் யுரேஷியாவிலும் வெப்ப அலைகள் உண்டானதை அறிவியலாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். காடழித்தல்தான் தென்கிழக்காசியாவின் கரியமில வாயு உமிழ்வுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
2020-ல் உலகக்காடுகள் அழியும் வேகம் 21 % அதிகமாகிவிட்டிருக்கிறது என்கிறது அமேஸான் மழைக்காடுகள் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனம்
மலேசியா, இந்தோனேஷியாவின் காடுகள் எண்ணெய்ப்பனை சாகுபடியின் பொருட்டு வேகமாக அழிக்கப்படுகின்றன. மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும் பெரும்பாலும் அனைத்து உபயோகப்பொருட்களிலும் பனை எண்ணெய் கலந்திருக்கும்
காட்டு மரங்களின் இலைப்பரப்பினால் மட்டும் சுமார் 23 சதவீத காலநிலை மாற்றத்தைத் தணிக்க முடியும். ஆனால் காட்டின் தரைப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் வராமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மரங்களின் இலைப்பரப்புக்கள் மரங்களை வெட்டும்போது இல்லாமல் போவதால் அந்த இடைவெளியில் காட்டின் உள்ளே நுழையும் சூரியனின் வெப்பம் அங்கே வாழும் பல தாவர விலங்கு உயிரினங்களுக்கும், மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருக்கும் சிறு பூச்சிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
காடழித்தலால் காடுகள் எடுத்துக்கொண்ட கார்பனின் அளவைவிட சூழலில் வெளியேற்றும் கார்பனின் அளவு அதிகரிக்கிறது. அதாவது கார்பன் தேக்கிடங்களாக (Carbon sink) இருக்க வேண்டிய காடுகள் கார்பனை வெளியிடும் முக்கிய காரணிகளாகி (Carbon source) விடுகின்றன.
புதைப்படிவ எரிபொருள்கள் எரிக்கப்படுவது, காடழிவதால் கார்பன் தேங்கிடங்கள் சிதைவது போன்ற செயல்பாடுகளால் இப்போது மீதமிருக்கும் காடுகளால் எடுத்துக் கொள்ளப்படுவதை காட்டிலும் அதிக அளவு கரியமில வாயு சூழலில் சேர்கிறது.
அமேஸான் மழைக்காடுகளின் தென்கிழக்கு பகுதிகளில் எவ்வளவு கார்பன் சேகரமாகிறதோ அதற்கு இணையாகவே கார்பன் அங்கிருந்து சூழலில் வெளியேறுகிறது.
2015—2017 க்கு இடைப்பட்ட காலத்தின் வெப்ப மண்டல காடழித்தல் மட்டும் வருடத்திற்கு 4.8 பில்லியன் டன் கரியமில வாயுவை சூழலில் வெளியேற்றி இருக்கிறது. இப்போது சூழலில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்திருக்கிறது.
வறட்சி, வெப்பமண்டல புயல், பாலையாகுதல் மற்றும் கடுங்கோடைக்காலம் ஆகியவை உலகெங்கிலுமே அதிகரித்துக் கொண்டு வருவதன் நேரடிக்காரணமும் இதுதான். மேலும் மேலும் காடுகள் அழிக்கப்படுவது மேலும் மேலும் காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்துகிறது.
.
உலகின் 80 சதவீத தாவரங்களும் விலங்கினங்களும் காடுகளில்தான் வாழ்கின்றன. காடழிதலால் இவற்றில் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
.
நாம் சுவாசிக்கையில் வெளியேற்றும் கரியமில வாயுவையும், மனிதர்களின் பல்வேறு செயல்களால் வெளியேற்றப்படும் பசுங்குடில் வாயுக்களையும் எடுத்துக்கொள்ளுவது உள்ளிட்ட பல பயன்கள் நமக்கு மரங்களால் கிடைக்கின்றன. மிகச்சிறிய பொருளாதாரப் பலன்களுக்காக,காடுகளும் மரங்களும் அழிக்கப் படுகையில் அவை அளிக்கவிருக்கும் நெடுங்காலத்திற்கான முக்கியமான சூழல் பங்களிப்புக்களும் அவற்றுடன் சேர்ந்தே அழிகின்றன
மேய்ச்சல், விவசாயம், சுரங்கம் தோண்டுதல் ஆகியவற்றிற்காக மட்டுமே இதில் பாதியளவு காடுகள் அழிக்கப்படுகின்றன. பிரத்யேகமான காட்டு நடவடிக்கைகள், காட்டுத்தீ, நகரமயமாக்கல் ஆகியவை மீதமிருக்கும் காடுகளை அழிக்கின்றன
தென்னமரிக்காவின் அமேஸான் பகுதி மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதி மற்றும் தென்கிழக்காசியாவில் தான் உலகின் மாபெரும் மழைக்காடுகள் இருக்கின்றன. இந்த பிரதேசங்களில் நடைபெறும் காடழித்தலின் விளைவுகள் புவிவெப்பமடைதலில் குறிப்பிட்ட பங்காற்றுகின்றன
பிரேசிலின் காடழித்தல் உருவாக்கும் பசுங்குடில் வாயுமிழ்வு 2020-ல் மிகவும் உயர்ந்திருந்தது. நாடோடி வேளாண்மை முறை எனப்படும் மரபான (traditional shifting cultivation) விவசாய முறை நடைமுறையில் இருப்பதால் காங்கோ பள்ளத்தாக்கில் காடழித்தல் மற்ற இரு பிரதேசங்களைக் காட்டிலும் சற்றுக்குறைவு.
தொழில்துறை வளர்ச்சி மிகஅதிகமாக இருக்கும் சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்காதான் உலகின் மிக அதிக பசுங்குடில் வாயு வெளியேற்றுகின்ற ( 80 % மற்றும் 70% ) முதலிரண்டு நாடுகளாக இருக்கின்றன. இந்தோனேசியா மற்றும் பிரேசில், மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இருக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் வேகத்தை மட்டுப்படுத்த நமக்கிருக்கும் ஒரே வழி மீதமிருக்கும் காடுகளை பாதுகாப்பதும் மேலும் மரங்களை நட்டு வளர்ப்பதும்தான். இப்போது நட்டுவைக்கும் மரங்களாலான காடுகள் குறைந்தது 19-20 வருடங்கள் ஆனபிறகுதான் 5% கரியமில வாயுவை தேக்கிக்கொள்ளத் துவங்கும் என்பதிலிருந்து வளர்ந்த மரங்களை வெட்டிச்சாய்ப்பதின் ஆபத்துகளை உணரலாம்.
ஏற்கனவே சுற்றுலா என்னும் பெயரில் மலைவாசஸ்தலங்கள், பல்லுயிர்ப்பெருக்கு நிறைந்த பகுதிகளை குப்பை மேடாக்கி இருக்கிறோம். காடுகளையும் முழுக்க அழித்துவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்ல மாசும், நோயும், கிருமிகளும் நிறைந்த உலகு மட்டும்தான் இருக்கும்.
இறைச்சி உணவுகளுக்காக சோயா பயிரிடுதலும், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் போன்ற திண்பண்டங்களுக்காகவும் ஷாம்பு போன்ற செயற்கை அழகுப்பொருட்களுக்கான தயாரிப்புக்கான எண்ணெய்ப் பனை வளர்ப்பும் காடழிதலில் பெரும் பங்காற்றுவதால் நம் உணவு மற்றும் வாழ்க்கை முறையும் புவிவெப்பமாதலில் ஒரு காரணம்தான்
2021-ல் நடந்த COP26 மாநாட்டில் (UN Conference of Parties) உலகின் 85% காடுகளை கொண்டிருக்கும் 100 நாடுகள் 2030-க்குள் காடழித்தலை முழுக்க நிறுத்திவிடுவதாக உறுதிபூண்டிருப்பது ஒரு நல்ல செய்தி
உலகமே முடங்கிக்கிடந்த இரண்டு வருடங்ளுக்கும் அக்காலத்தில் நாம் பறிகொடுத்த லட்சக்கணக்கான உயிர்களுக்கும் காரணமாயிருந்த கோவிட் வைரஸ் பெருந்தொற்று இயற்கையுடனான நமது உறவில் உண்டாகி இருக்கும் மாற்றங்களால்தான் உருவானது. இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது இது நமக்கான கடைசி வாய்ப்பு.
இயற்கையை மட்டுமல்ல நமது எதிர்காலத்தையும் பாதுகாக்கவே காடழித்தலை உடனே நிறுத்த வேண்டி இருக்கிறது ஆரோக்கியமான காடுகளே ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதிசெய்கின்றன.
2011 -ம் ஆண்டு சர்வதேச வன ஆண்டாக அறிவிக்கப்பட்டதும் காடழிப்பின் விளைவுகளை உலகநாடுகள் கவனத்துக்குக் கொண்டு வரும் பொருட்டுத்தான்.
தீர்வுகள்:
காடு உருவாக்கம், மீள் காடாக்குதல் இயற்கை மீளுருவாக்கம் இவற்றின் மூலமாக மட்டுமே காடழித்தலால் உருவாகி இருக்கும் காலநிலை மாற்றங்களை படிப்படியாக குறைக்கமுடியும்
காடு உருவாக்கம் என்னும் Afforestation குறைந்தது 50 வருடங்களுக்காவது காடுகள் இருந்திராத இடங்களில் காடுகளை உருவாக்குவதைக் குறிக்கிறது.
மீள் காடாக்குதல், என்னும். Reforestation காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் மரங்களை நட்டுவைத்து மீண்டும் காட்டை உருவாக்குவது
இயற்கை மீளுருவாக்கம் என்னும் Natural regeneration, மரங்களை நட்டுவைப்பதில்லை, மாறாக சேதமுற்ற காடுகளின் மரங்களின் வெட்டப்பட்ட அடிப்பகுதிகளில் coppicing எனப்படும் மறுதாம்பு துளிர்த்தலுக்கு உதவுவது, மலர்ந்து கனி அளிக்காமல் இருக்கும் மரங்களை மீண்டும் இனப்பெருக்கதுக்கு தயாராக்குவது போன்ற செயல்பாடுகளின் மூலம் காடுகளை இயற்கையாக மீட்டெடுப்பது
இம்மூன்று செயல்பாடுகளையும் மிகக்கவனமாக செயல்படுத்தினால் மட்டுமே காடழித்தலின் ஆபத்துக்களை சற்றேனும் ஈடுசெய்யமுடியும். ஏனெனில் காலநிலை மாற்றதுக்கெதிரான போரில் நம்மை முற்றாக தோற்கவைப்பது காடழித்தலாகத்தான் இருக்கும்
இயற்கைச் சூழல்களை பேணிப்பாதுகாப்பது,காடுகளை பொறுப்பான முறையில் மேலாண்மை செய்வது, அழிக்கபட்டக் காடுகளை மீண்டும் உருவாக்குவது ஆகியவற்றால் பசுங்குடில் வாயு உமிழ்வுகளை குறைக்கமுடியும். காடுகள் மீளுருவாகப்படுகையில் சூழல்வெளியிலிருக்கும் கரியமிலவாயுவின் அடர்த்தியை வெகுவாகக் குறைக்கமுடியும், இதனால் புவிவெப்பம் அடைவதையும் தவிர்க்கலாம்.
நிலக்கரி பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்ற புதைப்படிவ எரிபொருள் உபயோகத்தையும் நாம் வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இவையனைத்தையும் செய்யும் போதுதான் காலநிலைமாற்றத்தின் தீவிரத்தைக் கொஞ்சமாவது குறைக்க முடியும்.
2050ல் உலகமக்கள் தொகை 9 பில்லியனை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கையில் மீதமிருக்கும் காடுகளை அழிப்பதை நிறுத்துவதற்கு இணையாக காடுகளை உருவாக்குவதும் நடக்கவேண்டும்.
குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சல், காடுகளைப் பாதிக்காத வகையிலான வாழ்வுமுறை போன்ற காலநிலை மாற்றத்துக்கான பிற தீர்வுகளையும் முயற்சிக்கலாம்.
ஐந்தாவது மாதமாக மழைபொய்த்துப்போன பொள்ளாச்சியில் கோடை மழையாவது வரவேண்டி வீடுகளில் விநாயகர் சிலைகளை நீரில் அமிழ்த்தி வைத்திருக்கிறார்கள்.
யானை முகமும் தும்பிக்கையும் தொப்பை வயிறுமாக நாம் ஒருபோதும் பார்த்தே இராத ஒரு தெய்வவடிவம் குளிர்ந்தால் மழைவரும் என்று நம்பிக்கை கொள்பவர்களால், இருந்த இடத்திலிருந்தபடியே மக்களின் உணவு, உடை,மருந்து, காற்று,மழைநீர், புவிவெப்பத்தை தடுப்பது என உயிரினங்களின் சகலதேவைகளையும் பூர்த்திசெய்யும் மரங்களை ஏனோ இறைவடிவமாக காணமுடிவதில்லை.
நினைவில் கொள்ளுங்கள் இந்த கட்டுரை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே எங்கேனும் கால்பந்து மைதானத்தின் அளவிலிருக்கும் ஒரு பெருங்காட்டின்பகுதி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம். நாம் அழிக்க அனுமதித்துக்கொண்டு இருப்பது காடுகளை மட்டுமல்ல நாளைய சந்ததியினரின் வாழ்வையும்தான்.
சில இன்ச் உயரம் மட்டுமே வளரும் அழகிய ஊதா டெய்ஸி செடிகளிலிருந்து 300 அடி உயரம் வரை வளரும் பிரம்மாண்டமான யூகலிப்டஸ் மரங்கள் வரை உலகில் சுமார் 250,000 பூக்கும் தாவர வகைகள் உள்ளன.
லெம்னேசி (Lemnaceae) குடும்பம் குளம் குட்டை மற்றும் ஓடைகளில் மிதக்கும் ஐந்து பேரினங்களை சேர்ந்த நுண்ணிய 38 வகையான பூக்கும் நீர்த்தாவரங்களை கொண்டிருக்கிறது அவற்றில் ஒன்றான வுல்ஃபியா (Wolffia) உலகின் மிக மிகச் சிறிய தாவரம். உலகெங்கும் வுல்ஃபியாவின் 11 சிற்றினங்கள் நீர்நிலைகளின் மேற்பரப்பில் மாவுத்துகள்கள் போல படிந்திருப்பதால் நீர் மாவு என்னும் வழங்கு பெயரும் இவற்றிற்கு உண்டு
வுல்ஃபியா 1 மிமீ அளவிலிருக்கும் மிகச்சிறிய மிதவைத்தாவரம். வேரோ, இலையோ, தண்டுகளோ இல்லாமல் முட்டை அல்லது உருண்டை வடிவ உடலால் ஆனது வுல்ஃபியா.
வுல்ஃபியா சிற்றினங்களில் மிக சிறியவை இரண்டு :உலகெங்கும் சாதாரணமாக காணமுடியும் சிற்றினம் W. globosa மற்றும் 1980ல் கண்டறியப்பட்ட ஆஸ்திரேலிய சிற்றினமான W. angusta, இவற்றின் மொத்த எடை 150 மைக்ரோ கிராம்கள் மட்டுமே அதாவது இரண்டு உப்புக்கற்களின் எடைகொண்ட இவை பூக்களை உருவாக்கி பால் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள் என்பது ஆச்சரியமான உண்மை.வுல்ஃபியாவின் சின்னஞ்சிறிய மலர்களில் ஒரே ஒரு சூலக முடியும் ஒற்றை மகரந்த தாளும் உள்ளது.
ஆஸ்திரேலிய யூகலிப்டஸின் அளவை விட வுல்ஃபியா 165,000 மடங்கு சிறியது. வுல்ஃபியாவில் இருக்கும் சிறு குழிவில் இதன் நுண்மையான மலர்கள் உருவாகின்றன. இதன் மலர்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது என்பது கூடுதல் ஆச்சர்யம்.. வுல்ஃபியாவின் ஒரு விதை கொண்ட கனியே உலகின் மிகச் சிறிய கனி.
1999ல் நமீபிய கடற்கரையில் கண்டறியப்பட்ட நுண்னோக்கி உதவியின்றி கண்களால் காண அமுடியும் அளவில் இருக்கும் Thiomargarita namibiensis என்னும் பெரிய பாக்டீரியம் வுல்ஃபியாவின் அளவில் இருக்கினது.
நீர்ப்பறவைகளின் கால்களில் ஒட்டிக் கொள்ளும் இவை பல்வேறு நீர்நிலைகளுக்கு பரவுகின்றன. நுண்ணிய விதைகள் மூலமும் உடல் இனப்பெருக்கம் மூலமும் இவை பல்கிப் பெருகுகின்றன.
இவை மிக வேகமாக இனபெருக்கம் செய்யக்கூடியவை. இந்திய வுல்ஃபியா சிற்றினமான Wolffia microscopica ஒவ்வொரு 36 மணி நேரத்திலும் ஒரு புதிய செடியை உருவாக்கும் அதாவது. நான்கு மாதங்களில் ஒரு வுல்ஃபியா தாவரம் ஒரு நொனிலியன்(one nonillion -1 followed by 54 zeros.) தாவரங்களை தோற்றுவிக்கிறது.
பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல வைட்டமின்கள் பாஸ்பரஸ் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் 40 % புரதச்சத்தும் இருப்பதால் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நீர் முட்டை என்னும் பெயரில் இவை உணவாகவும் பயன்படுகிறது. தாய்லாந்தில் இவை ”Kai Naam” என்றழைக்கப்படுகின்றன. பல கிழக்காசிய நாடுகளில் நன்னீரில் இவை உணவுக்காக வளர்க்கப்பட்டு சந்தைப்படுத்த படுகின்றன.
water meal என்னும் பெயரில் தாய்லாந்தில் சந்தைப்படுத்தப்படும் வுல்ஃபியா
ஒரு முக்கியமான மொழியாக்கத்தை முடிக்க வேண்டி இந்த விடுமுறையை முழுக்க செலவிட்டுக்கொண்டிருக்கிறேன். இடையில் பரீட்சை பேப்பர் திருத்துவது காவிய முகாமில் கலந்துகொள்வது சரண் தருண் வருகை எதிர்பாரா வீட்டு மராமத்துப் பணிகள் என நாட்கள் தீர்ந்துவிட்டதால் இந்த மாதகடைசிக்குள் முடிக்க வேண்டும் என்னும் கெடு கழுத்துக்கு அருகில் வந்துவிட்டிருந்தது. ஏறக்குறைய முடித்துவிட்டிருக்கிறேன் எனவே ஒரு விடுபடலுக்காக ஏதேனும் ஒரு திரைப்படம் பார்க்க நினைத்தேன். பிரைமில் அநீதி இருந்தது. முன்பே அதை கேள்விப்பட்டிருந்ததால் அதையே பார்க்க முடிவு செய்தேன்
நேற்று முழுவதுமாக பார்த்து முடித்தேன். தன் குடும்பத்துக்கு நேர்ந்த அநீதியால் மனம் அல்லது மூளை பிறழ்கிறது ஒரு சிறுவனுக்கு. அவன் இளைஞனானதும் மேலும் மேலும் அநீதிகள் அவனுக்கும் அவனுக்கு வேண்டியவர்களுக்கும் தொடர்ந்து நடக்கிறது .அதில் அவன் மூளைக்கோளாறு தீவிரமடைந்து எல்லாரையும் கொல்லனும்னு நினைக்க மட்டும் செய்யறான். நிலைமை கைமீறிப்போகையில் அவனும் சகட்டுமேனிக்கு எல்லாரையும் கொல்லும் அநீதியை செய்கிறான்.
என்ன மூளைக்கோளாறானாலும் காதலியை கொல்லும் அநீதியை இறுதியில் செய்யமுடியவில்லை அவனால், ஏனென்றால் மூளை, மனப்பிறழ்வுகளையெல்லாம் கடந்ததுதானே காதல்.அல்லது காதலும் ஒரு தீவிரமான மனப்பிறழ்வுதானே? இதுதான் படம் என்று புரிந்து கொண்டேன். முகத்தை ரத்தத்தில் கழுவும் அளவுக்கு படத்தின் ரத்தக்களறி ஒரு அநீதியென்றால் அந்த நிலோஃப்ர் நகைச்சுவை மாபெரும் அநீதி அதை எதுக்கு உள்ளே கொண்டு வந்தார்கள் என்று புரியவேயில்லை!
நிலோஃபரின் மொக்கை நகைச்சுவை காட்சி முடிந்த அடுத்த காட்சியிலேயே வீட்டு வாசலில் அமெரிக்க பிள்ளைகள் வந்துவிடுகிறார்களே? ஏன் தேவை இல்லாமல் நிலோஃபர்?
வாசற்கதவின் இடைவெளி வழியே மருதாணி இட்ட கை வந்து பார்சலை வாங்கிக்கொள்வது, மழையில் நனைந்தவனுக்கு துவட்டிக்கொள்ள துண்டு தருவது போன்ற சாத்வீக காட்சிகள் ஒன்றிரண்டுதான் மீதி எல்லாமே ரத்தம் தெறிக்கிறது. அர்ஜுன்தாஸ் சவலைப்பிள்ளை போலிருக்கிறார். அந்த நாயகி பரவாயில்லை அவரைவிட ஆரோக்கியம்.
அநீதி இழைக்கப்பட்டதால் அநீதி இழைப்பவனாக மாறிய ஒருவனின் அநீதி நிறைந்த வாழ்வையும், அறியாப்பருவத்தில் நிகழும் அநீதி எப்படி ஒரு சிறுவனை வன்முறையாளனாக வளர்த்தெடுக்கிறது என்பதை படம் சொல்லுகிறது. மற்றபடி தீர்வெல்லாம் சொல்லவில்லை.
எனக்கு ஒரு உம்மை மட்டும் தெரிஞ்சாகனும்,ocd என்கிற பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு என்பதை நான் இதுவரை தீவிரமான சுத்தம் பேணுவது,எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கவிரும்புவது போன்ற உபத்திரவம் இல்லாத north 24 katham படத்தின்பகத்ஃபாசிலுக்கு இருக்கும் சிக்கல்போலத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அநீதியில் அர்ஜுன் தாஸின் கண் பாப்பாவெல்லாம் சுருங்கி விரிந்து கொலைவெறி எல்லாம் வருகிறதே! உண்மைதானா?
யான் அறக்கட்டளை பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஜக்கர்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட இருக்கிறார்கள். அந்த கிராமத்தை பசுமையாக்கும் அவர்களின் முயற்சியில் நானும் இணைந்திருக்கிறேன். இன்னும் சில வருடங்களில் அந்த கிராமம் ஒரு குறுங்காடாக காட்சியளிக்கும். இளம் மாணவர்கள் அந்த செயல்திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
நேற்று அந்த கிராமத்துக்கு சென்று விட்டு வெகுகாலத்துக்கு பிறகு பேருந்தில் வீடு திரும்பினேன். 80களின் தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க சாரல் மழையில் பயணம். அந்த பேருந்து 80 களிலேயே நின்றுவிட்டது போல. நான் கல்லூரிக்காலத்தில் சென்ற பயணத்தில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. ஜன்னலோர இருக்கை வேறு கிடைத்தது. மானசீகமாக கொஞ்சம் பின்னோக்கி பயணித்துக்கொண்டேன்.
பேருந்தில் நல்ல கூட்டம் பலர் நின்று கொண்டிருந்தனர். எனக்கு முன்பாக பல பெண்கள் வயல்வேலைகளுக்கும் மில் வேலைகளுக்கும் சென்று திரும்பி கொண்டிருப்பவர்கள். வயர்கூடைகளில் தண்ணீர் பாட்டில்களும், எவர்சில்வர் சாப்பாட்டுபாத்திரங்களும் கூடவே மழைக்காலமாதலால் வயலில் பிடுங்கிய பண்ணை, கும்மிட்டி, தொய்யக் கீரைகள் இருந்தன. பல பெண்கள் வெற்றிலையும் புகையிலையும் மென்றனர்.
எனக்கு இரு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் நின்றிருந்தாள். நல்ல கருப்பு, உருண்டை முகம், கைகள் நல்ல உருளையாக திடமாக இருந்தன. கூடையோ வேறு பையோ கொண்டு வந்ததுபோல் தெரியவில்லை, நேர்கொண்டபார்வை. யாருடனும் அவள் பேசிக்கொண்டிருக்கவும் இல்லை. அவ்வபோது வெளியே மழையை பார்க்க திரும்புகையில் அவள் முகம் தெரிந்தது நெற்றிப்பொட்டில்லை, சிறிய கோடாலிக்கொண்டை அலட்சியமாக போடப்பட்டிருந்தது.
காவாலதிகாரிகள் முதுகுப் பக்கம் துப்பாக்கியை செருகி வைத்திருப்பதைபோல அவள் ஒரு கருக்கரிவாளை பின்னால் செருகி இருந்தாள். முள் மரம் வெட்டவோ, நெல்லறுக்கவோ கடலை பிடுங்கவோ சென்று திரும்புவாளாயிருக்கும்.எனக்கென்னவோ அது அப்படி பிடித்திருந்தது. அவள் நிற்பதிலும் ஒரு கம்பீரம். இருக்கை காலியாகிறதா, எப்போது உட்கார இடம் கிடைக்கும் என்றெல்லாம் கண்ணும் மனசும் அலையவேயில்லை அவளுக்கு. கம்பியை பிடித்த ஒற்றைக்கை அசையாமல் அப்படியே நின்ற மேனிக்கு நின்றாள்.
40,45 வயதிருக்கலாம் ஆனால் உடல்கட்டுக்குலையாமல் உறுதியாக இருந்தது கழுத்திலும் வெறுமை ஒருவேளை திருமணம் ஆகாமல் தப்பித்திருக்கலாம். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது அப்படி கருக்கரிவாள் செருகி இருந்ததில் அவளின் ஆளுமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த கிராமத்தில் பிறந்து விவசாய வேலைகளில் ஈடுபடுவோரை பல்லாண்டுகளாக பார்த்து வரும் எனக்கு இப்படி ஒருத்தியை பார்த்த நினைவே இல்லை. எந்த ஊருக்கு செல்கிறாள் என்றும் தெரியவில்லை அவளை பார்த்து புன்னகைக்கவாவது நினைத்தேன் வாய்ப்பில்லாமல் போனது.
நான் ஊரில் இறங்கியபின்னரும் அவள் பயணித்தாள். அவளுக்கு தெய்வானை என்று பெயரிட்டேன்.என் ஆத்தாவின் பெயர் இது. வாழ்நாளில் ஒரு தென்னிந்தியப்பெண்ணுக்கான எல்லா அநீதிகளும் இழைக்கப்பட்டவர். 80 வருட வாழ்வில் கோவையை தாண்டியதில்லை ஆத்தா. அப்பாருவின் மண உறவைத்தாண்டிய உறவுகளை குறித்துக் கூட வாய் பேசாதவர், குழாயடியில் குடுமிபிடி சண்டை நடக்கையில் கூட குடத்துடன் ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த ஆத்தாவின் சித்திரம் என் மனதில் அப்படியே இருக்கிறது. இந்த பெண்ணுக்கு அவர் பெயரிட்டது ஒரு பிழையீடு போல.
தெய்வானையை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னை இப்படி வசீகரித்த பெண்கள் திரிபுரசுந்தரி என்னும் என் பள்ளிக் கால ஆங்கில ஆசிரியையைத் தவிர வேறு யாரும் இல்லை. அதுவும் அப்படி ஸ்டைலாக இடுப்பின் பின்புறம் அரிவாளை செருகிக்கொண்டிருக்கும் அவள் தோற்றம் எனக்கு பெரும் கிளர்ச்சியை அளிக்கிறது நினைக்கும் போதெல்லாம்.
வீட்டில் அவளை நிந்திக்கவும், சந்தேகப்படவும், அவள் சம்பாத்தியத்தை பிடுங்கிகொள்ளவும், குடித்துவிட்டு அடிக்கவும் ஒரு ஆண் இல்லை என்று நானே கற்பனையும் முடிவும் செய்துகொண்டேன். அவளை கரிசனத்துடன் தோள் சாய்த்துக்கொள்ளவும் ,காதல் ததும்ப முத்தமிடவும், அணைத்துக் கொள்ளவும் கூட ஆண் என்று ஒருவன் அவள் வாழ்வில் இருக்கவேண்டியதில்லை என்று முடிவு செய்ததில் நல்ல மனநிறைவு உண்டானது எனக்கு. தெய்வானையின் வாழ்வில் எந்த மாதிரியான ஆண் இருந்தாலும் அவளுக்கு அது ஒரு தொல்லையாகத்தான் இருக்கும். எளிய உயிர்களான ஆணுக்கானவளல்ல அவள்.
ஐந்திலும் ஏழிலும் படித்துக்கொண்டிருந்தார்கள் சரணும் தருணும் ஒரு முழுநிலவு நாளில் தென்னை மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் இருந்தபடி யானை டாக்டர் கதையை கேட்கையில்.பள்ளிக்காலங்களில் நாங்கள் கதைகள் படிக்காத கேட்காத இரவுகளே இல்லை. வார இறுதிகளில் முழுநாளுமே கதைகள்தான். வெண்முரசு வாசித்தும் கேட்டுமிருந்த காலங்கள் எங்கள் நினைவுகளில் மிக இனிமையானவை.
யானை டாக்டர் வாசித்து சொல்லிக் கொண்டிருக்கையில் யாரோ குடித்துவிட்டு வீசி எறிந்த உடைந்த பீர் பாட்டில் யானையின் காலில் குத்தி உள்ளே ஏறியதை கேட்டதும் தருண் ’’ உணர்வு மேலிட’’ நான் ஃபாரஸ்ட் ஆஃபீசராகி இவனுங்களை எல்லாம் சவுக்கில அடிக்க போறேன் பாரு ’’என்று சொல்லி கதறி கதறி அழுதான்.
அதன் பிறகான பல ஆண்டுகள் கழிந்து இதோ இன்று மாலை விமானத்தில் டேராடூனில் இருந்து இளங்கலை காட்டியல் படிப்பை நான்கு வருடங்கள் படித்து முடித்த தருண் வீடு திரும்புகிறான்.
இடையில் எந்த கட்டத்திலும் அவன் வேறு படிப்பை குறித்து சிந்திக்கவும் இல்லை. யானைகளில் இருந்த கவனம் மெல்ல ஊர்வனவற்றில் குறிப்பாக பாம்புகளுக்கு திரும்பியிருந்தது. மைசூரில் அறிவியல் ரீதியாக பாம்புகளை கையாள்வது குறித்த ஒரு முக்கிய பயிற்சியை இரண்டுகட்டங்களாக முறையாக இடையில் எடுத்துக் கொண்டான். STORM- scientific training on reptile management என்னும் அந்த பயிற்சிக்கு பிறகு பல பாம்புகளை தருண் பொதுமக்கள் அடித்து கொல்லாமல் காப்பாற்றி இருக்கிறான்.வீட்டில் எங்களுக்கும் விஷம், விஷமற்றவை என பாம்புகளை வேறுபடுத்தி அடையாளம் காணவும், பாம்புகளை கண்டதுமே பீதியடைய தேவையில்லை என்பதையும் கற்றுக் கொடுத்தான்.
ஒருமுறை வால்பாறைக்கு புகைப்படம் எடுக்க எல்லோருமாக சென்று திரும்பி கொண்டிருக்கையில் ஆழியாறு அணைப்பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தினுள்ளே புகுந்துவிட்டிருந்த பாம்பை பிடிக்க சிறு கூட்டம் கூடி இருந்தது. காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடிப்போய் அதை வெளியில் மிகுந்த பிரயத்தனத்துக்கு பிறகு தருண் கொண்டு வந்தான்.
பாம்பு வெளியில் வந்த மறு நொடி அங்கிருந்த பருமனான ஒருவர் அதை கால்களால் மிதிக்கச் சென்றார் . தருண் பதறி அவரின் அழுக்குப்பிடித்த கனத்த செருப்புக்கடியே அவன் கைகளை வைத்து அதை தடுப்பதை காரிலிருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த பாம்பு மீண்டு நழுவிச்சென்று சாலையோரம் மாங்காய் பத்தை விற்கும் ஒரு அம்மாளின் டிவிஎஸ் 50 வண்டிக்குள் புகுந்து விட்டது. அந்த அம்மாள் தருணை கெட்ட வார்த்தைகள்சொல்லி வைது கொண்டே இருந்தார்.
முயற்சியில் சற்றும் மனம் தளராத தருண் சுமார் 3 மணி நேரம் செலவழித்து அந்த விஷமற்ற பாம்பை பிடித்து பத்திரமாக ஆழியாறு வனப்பகுதியில் விட்டபின்னரே வீடு திரும்பினோம்.
அப்படியே சென்ற வருடம் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆழியாறு அணையின் உபரி நீர் சேகரமாகும் ஒரு அழகிய இடத்திற்கு நண்பர்களுடன் சென்றிருக்கையில் அங்கிருந்த உபயோகத்திலில்லாத ஒரு மீன்வலையில் பல நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த உயிரிழக்கும் அபயகரமான கட்டத்தில் இருந்த ஒரு பாம்பை தருண் கண்டுபிடித்து சாலையில் செல்லும் யார் யாரையோ கேட்டு ஒரு கத்தி வாங்கி மீன்வலையை கிழித்து பல நாட்கள் பட்டினியிலும் கழுத்துப்பகுதியில் காயங்களுமாக இருந்த அதை காப்பாற்றினான்.
அந்த பாம்பை காப்பாற்றும் முன்பு அதன் வாலை அவன் தொட்டபோது உயிரச்சத்தில் இருந்த அந்த பாம்பு அவன் விரலை, ஒரு சிறு குழந்தை எப்படி இறுகப்பற்றிக்கொள்ளுமோ அப்படி சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டது.
அக்கம் பக்கம் சிறுவர்களுக்கு பாம்புகளை சரியானபடி கையாளுவதை குறித்து கற்றுக் கொடுத்திருக்கிறான்.வீட்டில் இருக்கும் மரங்களிலும் மோட்டார் சுவிட்ச் இருக்கும் பெட்டிகளிலும் இப்போது பாம்புகளை அடிக்கடி பார்க்கிறோம் இருந்தாலும் நாங்களும் அவற்றை பொருட்படுத்துவதில்லை.அவையும் எங்களை கண்டுகொள்வதில்லை. வீட்டில் பல பெட்டிகளில் பாம்புச்சட்டைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.
பாம்புகள் இருப்பதாக தகவல்வந்தால் உடனடியாக நேரில் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட நண்பர்களை வரவழைத்தோ அவற்றை காப்பாற்றிக்கொண்டிருக்கிறான்
அப்பா வீட்டில் சமையலுக்கு உதவும் மாணிக்கா சென்ற மாதம் செடிகளுக்குள்ளிருந்த பாம்பொன்றை விரட்டிவிட்டு வழக்கம்போல வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தருண் இன்னும் சில நாட்களில் சேரவிருக்கும் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்பிற்கான நேர்காணலில் அவனது கானுயிர் புகைப்படங்கள் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்த தேர்வுக்குழுவினர் ’’ஒரு காட்டியல் படித்தவனாக இதுவரை என்ன சாதித்திருக்கிறாய்?என்று கேட்டார்கள். ’’ வீட்டில் இருக்கும் ஒரு படிப்பறிவில்லாத பணிப்பெண் பாம்பை பார்த்ததும் பயந்துவிடாமல், அடித்துக்கொன்றுவிடாமல் அதை விரட்டிவிட்டு வேலைபார்க்கும் அளவுக்கு என்னால் முடிந்த சிறு வட்டத்தில் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கிறேன்’’ என்று தருண் பதிலளித்தான். அவனுக்கு இடம் கிடைத்து விட்டிருக்கிறது.
டேராடூனின் இந்த கல்லூரி காட்டியல் படிப்பு குறித்த அவன் எதிர்பார்ப்புக்களை எல்லாம் முழுக்க தோற்கடித்தது. இப்போதைய பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்களை போலவேதான் அங்கும் துறைசார்ந்த அறிவும்,பொது அறிவும், பொதுவான அறிவும், கல்வி கூடத்திற்கான கற்பித்தலுக்கான அடிப்படை ஒழுக்கமும் நேர்மையும் இல்லாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.ஆனாலும் முயற்சி செய்து இந்த படிப்பை அவன் முடித்துவிட்டான். வகுப்பில் தருண் கேட்கப்போகும் கேள்விகளுக்கான பயத்துடன் வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் அங்கே இனி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்.
canopy எனப்படும் காட்டுமரங்களின் உச்சி இலைப்பரப்பின் இடைவெளிகள் வழியே நுழையும் சூரியஒளியின் அளவு ஷொரியா ரொபஸ்டா என்னும் ஒரு மரத்தின் வளர்ச்சியில் கொண்டிருக்கும் பங்களிப்பு குறித்த தருணின் காட்டியல் படிப்பிற்கான சிறு ஆய்வும் இளங்கலை படிப்புக்கு ஏற்றதுதான்.
காட்டியல் படிப்பின் ஒரு பகுதியாக மேற்கு மலை தொடர்ச்சி காடுகளில் சுமார் 100 நாட்கள் பயிற்சியில் இருக்கையில்தான் தருணுக்கு காட்டில் பணியாற்றுதல் என்பதின் உண்மை நிலவரம் தெரிந்தது. இரவு ரோந்து பணிக்கு சென்றது, உச்சிக்காட்டில் மலர்ந்திருந்த நீலக்குறிஞ்சியை கண்டது, யானைகளை காத்திருந்து இரவில் பார்த்தது என பல நேரடி கள அனுபவங்கள் அவனை மேலும் செம்மையாக்கின. அவன் மாணவனென்று அறியாமல். காட்டிலாகா அதிகாரியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எப்படியோ அங்கிருந்த பணியாளர்கள் நம்பினார்கள். அவனுடன் நான் அக்காட்டுக்கு சென்ற போது அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளில் அதை நானும் உணர்ந்தேன்.
பயிற்சி முடித்தபின்னர் வனச்சரக அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க அவனுடன் நானும் சென்றிருந்தேன். ஜீப்பில் உள்ளே செல்கையில் வழியில் இருந்த அரளிச்செடியில் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண் தருணை பார்த்ததும் அவசரமாக தூக்கிச் செருகியிருந்த புடவையை இறக்கிவிட்டுவிட்டு நெற்றியில் கையை வைத்து ஒரு சல்யூட் அடித்தார். தருணுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை எனக்கு பெருமிதமாக இருந்தது.
தருண் இந்த காலகட்டத்தில் சென்ற காட்டு பயணங்களும் , எடுத்த முக்கியமான கானுயிர் புகைப்படங்களும் responsible wild photography குறித்த அவன் மேடைப்பேச்சுக்களும், அறிவியல் சஞ்சிகைகளில் காட்டுயிர் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் எனக்கு பெருமகிழ்ச்சி அளித்தவை. குறிப்பாக Cicada என்கிற சிள்வண்டுகுறித்த அவனது கட்டுரையின் கவித்துவமான இறுதிப்பத்தி எனக்கு பெரும் நிறைவளித்தது. பிற்காலத்தில் தருணின் அம்மா லோகமாதேவி என்றறியப்படப்போகிறேன் என்பதை சொல்லியவை அக்கட்டுரைகள்.
தருண் கடந்த ஜனவரியில் வீட்டிலிருக்கையில் சிலருடன் காட்டுக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு பரவி வளர்ந்திருந்த செடிகளை அங்கிருந்தவர்களுக்கு காட்டி இதுதான் கம்யூனிஸ்ட் பச்சை எனப்படும் தாவரம் முன்பு கேரளமெங்கும் பல்கிப்பரவிக் கொண்டிருந்த இதற்கு இப்படி பெயர்வந்தது என்று சொல்லிவிட்டுஅதன் அறிவியல் பெயர் Eupatorium odoratum என்று சொன்னேன்.தருண் இடைப்பட்டு நான் சொன்னது அதன் இணைப்பெயர்தான் ஆனால் புழங்கு பெயர் Chromolaena odorata என்று திருத்தினான்.
பிரேஸில் கடற்கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காலில் கட்டுப்போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்த புகழ்பெற்ற தாவரவியலாளார் கம்மர்சன், போகன்வில்லா கொடியை கொண்டு வந்து காட்டிய ஆண் வேடத்திலிருந்த அவரது காதலியும் உதவியாளருமான ழான் பாரேவிடம் ’’இந்த மலர்கள் தான் எத்தனை அழகு’’ என்றபோது ழான் பாரே ’’வண்ணமயமான இவை மலர்களல்ல அன்பே, மலரடிச்செதில்கள்’’ என்று திருத்தியபோது அடைந்த திகைப்பை நானும் அடைந்தேன்.
தருண் எனது மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பதில் ஒரு அன்னையாகவும் ஆசிரியையாகவும் மகிழ்கிறேன். முதுகலை படித்து முடித்து ஒரு மாத இடைவெளியில் ஜெர்மனியில் அரசு வேலையில் இணைந்து 22 வருடங்களுக்கு பிறகு நான் இப்போது வாங்கும் சம்பளத்தின் மும்மடங்கு சம்பளம் வாங்கும் , கடினமானது என்று கருதப்படும் எல்லா கணினி சார்ந்த வேலைகளையும் எளிதில் முடித்துவிடும் அதிபுத்திசாலி சரணும் என் மற்றொரு வடிவம்தான் . ஒரு பெண்ணாக மகளாக சகோதரியாக மனைவியாக நான் இழந்த பலவற்றின் பள்ளங்களை ஒரு அன்னையாக நிரப்பிக்கொண்டு, ததும்பி வழிந்துகொண்டு இருக்கிறேன்.
தருண் இனி முதுகலை முடித்துவிட்டு IFS தேர்வு எழுதவிருக்கிறான். அதுவரையிலும் நேர்மையான அதிகாரியாக காட்டில் பணியாற்ற வேண்டுமென்னும் அவனது கனவு கலையாதிருக்கட்டும், உறுதி குலையாதிருக்கட்டும்.நல்வரவு தருண்.
நீண்ட பயணத்திற்கு பின் நேற்று முன்னிரவில் தான் வீடு வந்தேன். உடலும் மனமும் சோர்ந்திருந்தது. நல்ல பசியும் கூட. வழக்கமாக நேரம் பிந்தி வீடு திரும்புகையில் ஓட்டுநரிடம் ஏதேனும் நல்ல உணவகத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி சாப்பிட வாங்கிக்கொண்டு வருவேன். ஆனால் நேற்று வீட்டில் சாப்பிடவேண்டுமென்ற கொதி உள்ளே இருந்தது எனவே அதை செய்யவில்லை.
குளித்து விளக்கேற்றி சாதம் வடித்து சாப்பிட பின்னிரவாகிவிட்டது. எனினும் தளர்வாக பிசைந்த இளஞ்சூடான தயிர் சாதத்தை மிளகாயின் நெடி மட்டும் கொண்ட, அறவே காரமில்லாத முருகலாக கருகலாக வறுத்த, நெடிய மோர்மிளகாய்களுடன் சாப்பிட்ட பின்புதான் தொலைவில் போய்க்கொண்டிருந்த உயிர் திரும்ப என்னிடம் வந்தது.
பயணத்தில் புதிதாக சில மனத்துயரங்கள் இருந்தன ஆனாலும் அந்த உணவு தற்காலிகமாக அவற்றை மறக்கச் செய்தது.
எனக்கு உணவென்பது வெறும் பசி தீர்ப்பதல்ல, பல நிகழ்வுகளுடன் தொடர்புடைய உணர்வுபூர்வமான ஒன்று. சமீபத்தில் ’’ இருப்புக்கொள்ள முடியவில்லை’’ என்பார்களே அப்படி ஒரு இருப்புக் கொள்ளாத இடத்தில் இருக்கவேண்டி வந்தது. என்னால் அங்கு ஒரு நொடியும் என்னை பொருத்திகொள்ள முடியவில்லை. பல காரணங்கள் இருந்தன அவற்றில் முதன்மையானது எந்த அக்கறையுமின்றி, சுவையாக சமைக்கப்படாத, போதுமான அளவுக்கு பரிமாறப்படாத உணவு அதையும் வாங்கி உண்ணவேண்டிய ஒரு சூழல்.
நான் ஒருபோதும் உணவில் எந்த குறையும் வைத்துக்கொள்ளாதவள். ஏராளமாக சமைத்து தாராளமாக பரிமாறி நிறைவாக உண்பவள்
உண்பதில் எனக்கு எந்த குற்ற உணர்வும் தயக்கமும் இருப்பதில்லை ஏனெனில் வருடங்களாக நான் என் சுய சம்பாத்தியத்தில் குடும்பத்திற்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்கிறேன்
அன்றாடம் என் கையால் 50க்கும் அதிகமான பறவைகள் அதிகாலையில் அவைகளுக்கு பிடித்தமான உணவை உண்கின்றன.
இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிகாலையில் நிறைய காகங்கள் எனக்காக காத்திருக்கும். அவை உண்ட பின்னர் தவிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இரட்டைவால் குருவிகளும் பொறுக்குகளை தேடி உண்ணும், பின்னர் கட்டெறும்புகளும் சிற்றெறும்புகளும் எஞ்சியவற்றை உண்ணும் , பின்னர் மீதமிருக்கும் உப்புசுவைக்கென அணில்கள் வரும், நுண்ணுயிரிகளும் வருமாயிருக்கும். ஒரு நாளை இப்படி அன்னமிட்டுத்தான் நான் துவக்குகிறேன்.
அன்னக்கையின் விளிம்பில் கால்பாகத்துக்கும் குறைவான இடத்தில் எடுக்கப்பட்ட உணவை காட்டி போதுமா? என்று கேட்கப்பட்ட கேள்வி என்னை வெகுவாக காயப்படுத்தியது. தோசையோ சப்பாத்தியோ எத்தனை வேண்டும்? என்ற கேள்வியும் அப்படித்தான். நான் ஒருபோதும் அந்த கேள்வியை கேட்பதில்லை. என் காதுபட அப்படி யாரும் கேட்பதை வீட்டில் நான் அனுமதிப்பதும் இல்லை. சமையலறை பொறுப்பை இதன்பொருட்டே நான் என் வசம் வைத்திருக்கிறேன்
வயிற்றுக்கு போதாமல் அளிக்கப்பட்ட. தாழ்வாக உணரும்படி அளிக்கப்பட்ட உணவு என் பழைய காயங்களின்பொருக்கை கிள்ளி மீண்டும் ரத்தம் கசிய செய்துவிட்டது
இளமையில்நான் பசியாலானவளாக இருந்தேன்.
பெண்குழந்தைகளுக்கான பாரபட்சம் நிறைந்த வீட்டில், மகன் பிறப்பான் என்னும் எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, புத் எனும் நரகத்துக்கு போகாமல் இருக்கும் வாய்ப்பை இரண்டாவது முறையாக பொய்யாக்கிவிட்டு பிறந்த மகள் என்னும் காழ்ப்பு என்மீது எப்போதும் இருந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து போதுமான அளவில் உள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் படியான உணவு கிடைத்ததில்லை. 18 அறைகளுடன் கூடிய மாபெரும் வீடும் இரண்டுஅரசு உத்தியோகஸ்தர்களும் இருந்த வீடென்பதால் நிச்சயம் வறுமை காரணமல்ல.
அப்போது குக்கர் வந்த புதிது குக்கரின் உள்ளே சாதம் வைக்க பெரிய பாத்திரம் ஒன்றும் அதன் விளிம்பில் பொருந்திகொள்ளும்படி காய்கறிகளும் பருப்பும் வேகவைக்கவென்று ஒரு சிறு பாத்திரமும் இருக்கும். அம்மா எப்போதும் அந்த சிறு பாத்திரத்தில்தான் சாதம் வைப்பார்கள். ஐந்து நபர்கள் கொண்ட் அவ்வீட்டின் உணவு நேரத்தின் போதுகடும் பசியுடன் அமர்ந்திருக்கும் ஒரு சிறுமிக்கு அந்த பாத்திரத்தை பார்த்ததுமே கண்ணில் நீர் நிறைந்துவிடும் உணவளிக்கையில் தயங்கும் கைகளையும் கண்டிக்கும் அதட்டும் கட்டுப்படுத்தும் குரலையும் கேட்டு வளர்ந்தவளாதலால் இளமையிலிருந்தே நல்ல உணவை சமைக்கவும் அளிக்கவும் பெருங்கனவுகள் இருந்தன
என் அக்காவுக்கும் எனக்கு நிகழ்ந்ததுதான்.
நாங்களிருவரும் விளையாட்டுத்தோழனான கேவி விஸ்வநாத் என்றழைக்கப்பட்ட பக்கத்துவீட்டு பிரபாவுமாக கற்பனை கதைகளை பேசிக்கொள்வோம். தயிர்சாதத்தில் மாம்பழம் பிசைந்து வெள்ளித்தட்டில் மணக்க மணக்க உணவுன்னும் பிரபா மாயாவிக்கதைகளை சொல்லுவான்.
எங்கள் தரப்பு கதைகளில் நாங்கள் செல்லும் ஒரு அடர்காட்டில் அண்டாக்களில் நிறைந்து வழியும் உணவும் இனிப்புகளும் போதாக்குறைக்கு பலாவும் மாவும் வாழையுமாக சொப்பிக்காய்த்திருக்கும் மரங்களும் நிறைந்திருக்கும்.அப்போதைய எங்களின் சிற்றுண்டி என்பது அரிந்த தக்காளியில் சர்க்கரை தூவி சாப்பிடுவது மட்டும்தான்
என் இளமையே பசியாலும் போதாமைகளாலும் நிறைவின்மையாலும், முறம் போன்ற கைகளால் மூக்கு சில்லு உடையும்படி அறையும், கார்க் குண்டு போடப்பட்டிருக்கும் மரத்துப்பாக்கியை காட்டி சுவரில் பல்லி போல ஒட்டிகொண்டு கதறும் எங்களை சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டும் அப்பாவை குறித்த அச்சத்தாலும் தான் ஆக்கப்பட்டிருந்தது.
இளங்கலை படித்துமுடிக்கும் வரை இதே நிலைதான். மூன்றாம்வருடம் படிக்கையில் என் சி சியில் ஆனைமலை காந்தி ஆசிரம கட்டிடவேலைகளுக்கென அழைத்துச்செல்லப்பட்டோம், காரைச்சட்டி, செங்கல்சட்டி தூக்குவது, மணல் சுமப்பது என கடினமான வேலைகள் எனினும் அதைக்காட்டிலும் கடினமான வேலைகளை வீட்டில் செய்து பழகிய எனக்கு அது பொருட்டாக இல்லை. என்சிசி பொறுப்பாளராக சுசீலா என்னும் ஆசிரியர் இருந்தார். முதல்நாள் மதியம் அக்கிராமத்தின் ஒரு ஓட்டுவீட்டின் உயரமான திண்ணையில் எங்களுக்கு தலைவாழை இலைபோட்டு வடை பாயாசத்துடன் விருந்தளிக்கப்பட்டது என் வாழ்க்கையில் முதல் முழுமையான உணவு அது. அன்று சுசீலா என்னும் அந்த அன்னை நீலத்தில் சிவப்பு மலர்களிட்ட புடவை கட்டியிருந்தார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இருக்கிறது.
கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் அவர்களுடன் அலைபேசியில் பேசவாய்பு கிடைத்தது, இதைச் சொன்னேன் மறுமுனையில் சற்று நேரம் கனத்த அமைதி நிலவியது, பின்னர் தழுதழுத்த குரலில் என்னிடம் ’’ வைக்கிறேன் தேவி’’ என்றுவிடை பெற்றுக் கொண்டார்கள். நான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பணி என நினைக்கும், நம்பும் இந்த தாவரவியல் அகராதியை சுசீலாம்மாவுக்கே சமர்ப்பிக்கவிருக்கிறேன்
நான் 7-ல் படிக்கையில் இருந்தே சமைக்கவும் ஆணையிடப்பட்டேன் எனினும் அம்மாவின் கட்டளைகள், குறைவாக எண்ணெய் ஊற்ற, அளவாக பொருட்களை எடுக்க உடனிருந்து கொண்டே இருக்கும்
முதுகலை படிக்க முதன்முறையாக கோவை பல்கலைக்கழக விடுதியில் இருக்கையில் முதல் நாள் வகுப்பு முடிந்து நெடுந்தூரம் நடந்து வந்து விடுதியின் உணவுக்கூடத்திற்கு வந்தேன்
அண்டாக்களில் சாதமும் கறியும் இரண்டு வகை ,குழம்பும், கட்டித்தயிரும் கூடவே அப்பளமும் ஊறுகாயும் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது, மேலும் பரிமாற யாரும் இல்லை நாமே எடுத்துப்போட்டு சாப்பிடலாம் என்பதுவும் எனக்கு பெரும் திகைப்பளித்தது
கருப்பாக ஒல்லியாக இடுப்புக்கு கீழ் நீண்டிருந்த பின்னலை தவிர இளமையின் அம்சமென்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லாத, போஷாக்கில்லாமல் கண்களில் மட்டும் உயிரை வைத்துக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் அன்றைய திகைப்பை அந்த உணவு அவளுக்களித்த நிறைவை இதற்குமேலும் எழுதவிடாமல் தன்மதிப்பு கையை பிடித்து தடுக்கிறது.
பல்கலைகழகத்தின் என் எல்லா சொல்லிக்கொள்ளும் படியான செயல்பாடுகளுக்கும் அந்த நல்ல உணவே பின்னணியில் இருந்தது.
அப்போதுதான் முதுகலை படிப்புக்கள் துவங்கி இருந்ததால் விடுதி முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டிருக்கவில்லை.சமையலறையில் இரவுணவின் போது நாங்களும் கூடமாட ஒத்தாசை செய்தோம் அந்த சமையல்கார தாத்தா எனக்கு பல சமையல் நுணுக்கங்கள் கற்றுக்கொடுத்தார். அம்மாவின் அதட்டல்கள் கட்டுப்படுத்தல்கள் இல்லாமல் சமையல் கற்றுக்கொண்ட, நிறைவாக சாப்பிட்ட காலம் அதுதான்
நான் நன்றாக சமைப்பவள் என்னும் பெயர்பெற்றதும் அதன்பிறகுதான்.
என் முன்சகோதரி சங்கமித்ரா (முன் காதலன், முன் கணவன் இருக்கையில் ஏன் இப்போது சகோதரியாக இல்லாத ஒருத்தியை இப்படி குறிப்பிடக் கூடாது?) ’’தேவி கைகழுவிய தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா அது ரசமாயிரும்’’ என்று சொன்னதெல்லாம் அதீதம்தான் என்றாலும் நன்றாக சமைக்கிறேன்தான்,
கொஞ்சம் உடல் பருமன் அதிகமாக இருந்த தருணின் இளமைக்காலத்தில் எங்கள் குடும்பமருத்துவர் வசந்த் அவனிடம் ’’டேய் கொஞ்சம் சாப்பாட்டை கம்மி பண்ணுடா’’ என்றபோது ’’ அலட்டிக்கொள்லாமல் மிதப்பாக //அம்மாவ முதல்ல டேஸ்டா சமைக்கவேண்டாம்னு சொல்லுங்க// என்ற புட்டு தருணின் பாராட்டைவிட மேலுமொன்று எனக்கு கிடைக்கப் போவதே இல்லை.
இரண்டாண்டுகளுகு முன்பு காலமாகும் வரை ஒரு முறைகூட அம்மா என் சமையலை பாராட்டியதே இல்லை எதுவுமே குறை சொல்ல முடியாமல் மிக விரிவாக சமைத்த நாளிலும் ’’சாப்பாடு இன்னும் ஒரு விஸில் கூட வச்சிருக்கலாம்’’ என்றாவது சொல்லி விடுவார்கள்.
சமைக்கும் சுதந்திரம் என் கைகளுக்கு வராமல் அம்மா கவனமாக இருந்தார்கள் எனினும் எனக்குள் நான் ஒரு குடும்பத்தை எதிர்காலத்தில் நிர்வகிக்கையில் தாராளமாக சமையல் செய்யும் திட்டம் வலுவாக இருந்தது.
இப்போது என் தம்பி மற்றும் மகன்களின் குற்றச்சாட்டே ’’எதுக்கு இத்தனை அதிகமாக சமைக்கிறே’’? என்பதுதான் அதற்கான பதில் தம்பிக்கு தெரியும் மகன்களுக்கு முழுமையாக தெரியாது.
எப்போதும் பல பிடி அதிகமாகத்தான் சமைக்கிறேன். யாராவது விருந்து வராத வாரஇறுதிகள் என வீட்டில் இல்லவே இல்லை.
அபுதாபியின் என் இரு கர்ப்பகாலங்களிலும் பசியறிந்து உணவிட யாருமில்லை. சமைக்க முடியாத கர்ப்பகால தொந்தரவுகளிலும் நான் சமைத்துக்கொண்டுதான் இருந்தேன். மிக கடிமான காலங்கள் அவை. இப்போதைய என் மனக்கட்டிக்கான காரணமும் அந்தக் காலம்தான்.
அப்போது (எனக்கு பிற்பாடு தெரியவந்த வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும்) மகேஸ்வரி என்னும் பெண் (தோழி அல்ல) மிகப்பெரிய அகன்ற நானே அமர்ந்துகொள்ளலாம் என்னுமளவிலான தட்டில் எனக்கு வாய்க்கு பிடித்தமானவைகளை பலமுறை சமைத்தளித்திருக்கிறாள். அந்த உணவும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அறியாச்சிறுமிகளான எங்களிருவரையும் சென்னைக்கு காரில் அழைத்துச் சென்று அதே இரவில் அரசியலில் சம்பாதித்த அண்ணா நகரின் பிரம்மாண்ட பங்களா முழுக்க கழுவி துடைக்க வைத்து தூக்கமும் அசதியுமாக இருந்த எங்களுக்கு எம் எல் ஏ பெரியம்மா பழனியம்மாள் கொடுத்த இரவுணவான ஃப்ரிஜ்ஜில் இருந்த விறைத்து குளிர்ந்துபோன வல்லரிசிச்சோறும் ஊசிப்போய் நூல்விட்டிருந்த வெண்டைகாய் குழம்பும் இன்னும் என் நினைவுகளில் செரிக்காமல் இருக்கிறது. அந்த வீட்டின் துர்மரணங்களுக்கு இந்த அநீதியும் ஒரு காரணமாக இருக்ககூடும்.
எனக்கு மனமுவந்து உணவளித்தவர்களும் உண்டு. ஊட்டி ராஜி வீட்டில் இருந்த பத்து நாட்கள். சின்ன வேலையும் கூட செய்யவிடாமல் நல்ல உணவும் முழு ஓய்வும் எனக்கு ராஜி மட்டுமே அளித்தாள். மிக சுத்தமாக பராமரிக்கப்பட்ட அந்த வீட்டில் எப்போதுமே எதையாவது எனக்கு சாப்பிட கொடுத்துக்கொண்டே இருந்தாள். கைகழுவ வெதுவெதுப்பான நீரிலிருந்து வாசிக்க கதைபுத்தகங்கள் வரை எல்லாம் எல்லாம் என்னெதிரே தயாராக இருக்கும். மாலைவேளைகளில் சுரேஷ் நகைக் கடையிலிருந்து வருகையில் மீண்டும் சுடச்சுட திண்பண்டங்கள் கொண்டு வருவார். மூவரும் ரக்ஷித்தை அருகில் அமர்த்திக்கொண்டு தரையில் அமர்ந்து கதையான கதை பேசிக்கொண்டு சாப்பிட்ட நிறைவான நாட்களின் நினைவு ,
வீட்டில் குடியிருந்த மணி அண்ணன் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வீட்டு தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்க கூட்டமாக அமர்ந்திருக்கும் நானுள்ளிட்ட அனைவருக்கும் வாங்கிவரும் வெண்ணைக்காகித கவரில் இருக்கும் வறுத்த கோழிக்கறி.
நாகமாணிக்கம் அண்ணன் முதல்முறையாக கார் வாங்கியபோது என்னையும் அவர்கள் குடும்பத்துடன் அழைத்து சென்று ஆர் எஸ் புரத்தின் மிக உயர்தர அசைவ உணவகத்தில் வாங்கிக்கொடுத்த மீன்முட்டை பொரியலும், கோழி ஈரல் வறுவலும்,
ஒரு நண்பர் விஷ்ணுபுர விழாவின்போது எங்களில் சிலரை அழைத்துக்கொண்டுபோய் கொடுத்த அசைவ உணவு விருந்தின்போது. நான் போதுமென்று மறுத்தபோதும் விடாமல் அவர் எடுத்து என் இலையில் வைத்த ஒரு பெரிய இறைச்சித்துண்டு ,
என் தாத்தா வாயிலிட்டு மென்று எனக்கும் அளிக்கும் வெற்றிலை குதப்பல் இந்த நினைவுகளெல்லாம் மின்மயானம் போகும்போதும் உடன் வரும் பட்டியலில் இருப்பவை.
உணவு மட்டுமல்லாது பிறர் உவந்தளித்த வேறு சிலவும் என் நினைவுகளில் பசுமையாக இருந்து என் ஆளுமையில் பெரும் மாற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது
கல்யாண அழைப்பிதழ் கொடுக்க அப்பாவுடன் இனிஷியல்களால் மட்டும் குறிப்பிடப்படும் வேட்டைக்காரன்புதூரின் ஒரு பெரியமனிதர் வீட்டுக்கு சென்றிருக்கையில் அந்த வீட்டம்மா நான் எத்தனை மறுத்தும் கேட்காமல் பெரும் சிரமத்துக்கிடையில் கொக்கிச்சல்லை கொண்டுமிக உயரமாக வளர்ந்து விட்டிருந்த செண்பக மரத்திலிருந்து செஞ்சுடர்போல ஆரஞ்சு நிறத்திலிருந்த ஒரு பூவை பறித்துக்கொடுத்தார்.
அதற்கு பின்னர் நான் சூடிக்கொண்ட ஆயிரக்கணக்கான செண்பக பூக்களிலும் அன்று என் கையில் குளிர்ந்த பொன்போல மணம்வீசிக்கொண்டிருந்த அதே மலரின் வாசனை தானிருக்கின்றது. செண்பகபூக்களை எனக்கு வாங்கிக்கொடுப்பவர்கள் எல்லாரையுமே அந்த அம்மாளாகத்தான் கருதுகிறேன்.
அப்படியே ஒரு தோட்டத்திலிருந்து புறப்படுகையில் அதன் உரிமையாளர் எனக்களித்த ஒரு கனிந்த முள்சீதா பழமும் இருக்கிறது. அதன் விதைகள் முளைத்து இந்த வீட்டிலும் அதே சீதாமரம் இப்போது கனியளிக்கிறது. அந்த மரத்தை வளர்ப்பதென்பது அவரது அதே அன்பை வளர்த்தல்தான்.
இங்கு வந்து கிளம்பிசெல்பவர்களுக்கு ஒரு கொத்து கறிவேப்பிலையாவது கொடுக்காமல் என் மனம் நிறைவதில்லை
இல்லாமைகளாலும் நிராகரிப்புக்களாலும் நிரம்பியிருந்த என் இளமைக்காலத்தின் நினைவுகளிலிருந்து தப்பிக்கவே நான் இவற்றை செய்கிறேனாயிருக்கும்
நான் போட்டுக்கொடுத்த தேநீரோ காப்பியோ நன்றாக இருப்ப்தாக முதல் வாயிலேயே சொல்பவர்களும் என் நேசத்துக்குரியவர்களே!
தருணும் ராம்ராஜ் அப்பாவும் அதில் இருக்கிறார்கள்
எந்த எளிமையான உணவானாலும் இருவரும் மனம் நிறைய பாராட்டி வயிறு நிறைய உண்பவர்கள். சாப்பிடுகையில் தொலைக்காட்சியோ வேறு கவனச்சிதறல்களோ இல்லாமல் உணவை மட்டும் கவனித்து சாப்பிடுபவர்கள் இருவரும்
உணவை அளிக்க தயங்கும் கைகளை நான் வெறுக்கிறேன் அது அறியாமை உள்ளிட்ட எந்த காரணமாயினும்.அந்த உணவையும் வரிசையில் நின்று வாங்கி உண்ட தாழ்மையை இனி எப்படியும் நினைவில் இருந்து நீக்க முடியாதென்னும் உண்மையும் வலிக்கிறது.
இந்த நெடிய கட்டுரை அப்படியான ஒரு உணவை சாப்பிடவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான தாழ்மை உருவாக்கிய காயங்களுக்கான மருந்துதான்.
வெண்முரசில் பீமன் அரண்மனை அடுமடையில் அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கும் பேருருளி இப்புடவி என்றறிவதை சொல்லும் அத்தியாயத்தில் ’’அன்னத்தை உண்ணும் அன்னமே உடல். பசி என்பது அன்னத்துக்காக அன்னம் கொள்ளும் வேட்கை. சுவை என்பது அன்னத்தை அன்னம் கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது அன்னம் அன்னமாகும் தருணம். வளர்வதென்பது அன்னம் அன்னத்தில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது அன்னத்திடம் அன்னம் தோற்கும் கணம். அன்னமே பிரம்மம். அது வாழ்க!”என்றிருக்கும்
ஐரோப்பாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு சரண் வீடு திரும்பி இருக்கிறான். ஒரு மாத விடுமுறை காலத்தின் பின்னர் மீண்டும் மே மாதம் ஜெர்மனியில் பணியில் சேர வேண்டும்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவுக்கு ஐரோப்பா இணையப் பாதுகாப்பளிக்கிறது. அந்த பல்லாண்டு திட்டத்தில் சரணும் முக்கிய பொறுப்பிலிருக்கிறான். அவனுக்கு ஐரோப்பா வாழ்க்கை அத்தனை உவக்கவில்லை எனினும் இந்த பணியில் ஈடுபாடு இருக்கிறது. சைபர் தொழில்நுட்பத்தின் தேவை கானா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இப்போது தான் துவங்கி இருப்பதால் அந்த அடிப்படை முன்னெடுப்புக்களில் தன் பங்களிப்பும் இருப்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறான். இதில்
எனக்கும் மகிழ்ச்சிதான்.
சரணை பார்க்க நண்பர்களும் உறவினர்களுமாக வந்துகொண்டிருப்பதால் இத்தனைநாள் சந்தடி இல்லாமல் தனிமையும் நானும் மட்டுமாக இருந்த வீடு கலகலவென்றிருக்கிறது, அப்படி யாரும் வராத தினங்களில் நானும் அவனும் பயணிக்கிறோம்.
இந்த கிராமத்து வீட்டில் சரணும் தருணும் மிகச்சிறுவர்களாக இருக்கையிலேயே வசிக்கத்துவங்கி விட்டிருந்தோம். இருவரையும் மாதா மாதம் இந்த கிராமத்து நாவிதர் மணியின் சலூனுக்கு அழைத்துச் செல்வேன். கடைவாசலில் நான் தெருவை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் முடிவெட்டும் வரை நாளிதழ்கள் வாசித்துக்கொண்டிருப்பேன்.
மணியிடம் முடிவெட்டுதல் என்பது ஏறக்குறைய செடிகளுக்கு பாத்தி கட்டுதல் அல்லது செடிகளை தறித்தல் என்பதற்கு நிகரான ஒன்றுதான். சட்டிகிராப் என்பார்கள் இங்கெல்லாம். தலையில் ஒரு சட்டியை கவிழ்த்து சட்டிக்கு வெளியே தெரியும் முடியை முழுக்க வெட்டி அகற்றும் ஸ்டைல் அது. மணிக்கு சட்டி தேவையில்லை தலையின் அளவுக்கேற்ற அப்படி ஒன்றை மானசீகமாக கவிழ்த்து முடிவெட்டி விடுவார். கோவிட் காலங்களில் வீட்டுக்கு வந்து மகன்களுக்கு முடி திருத்திய மணியின் உதவியை மறக்கவே முடியாது.
சரணும் தருணும் விடுமுறைக்கு வீடுவந்தால் மரியாதை நிமித்தம் மணி வந்து அவர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு போவது வழக்கம்
இன்றும் மணி வந்திருந்தார். சரணிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்படுகையில் ’’தம்பி, கிரிஜாம்மணி செளக்கியங்களா’’? என்றார்
சரண் பதறி’’ அண்ணா ஏன்னா இன்னும் அதை கேட்கறீங்க”என்றான் வெட்கம் பிடுங்கி தின்ன.
ஒரு சுவாரஸ்யமான ஃப்ளேஷ்பேக்!
சரண் 6 அல்லது 7-ல் படிக்கையில் ஒரு மாதாந்திர முடிவெட்டுதலுக்காக மணி கடைக்கு போயிருந்தோம். நான் வழக்கம் போல வெளியில் அமர்ந்திருந்தேன்.
சரணுக்கு மணி முடிவெட்டிகொண்டிருந்தார், தருண் அடுத்ததாக வெட்டிக்கொள்ள காத்திருந்தான்.
திடீரென மணி வெளியே முகம் முழுக்க சிரிப்புடன் வந்து ’’பெரிய தம்பி என்னமோ சொல்லறாப்பிலங்க’’ என்றார்
மகன்கள் இருவரும் திருத்தமாக முடிவெட்டிக்கொள்வதில் நான் கவனமாக இருந்தேன் அப்போதெல்லாம். இப்போது தருணின் பிடரிவழியும் கேசத்தை பார்க்கையில் ’’அந்தக்காலம் அது அது அது ஒரு கனவு காலம்’’ என்று தோன்றும்.
எனவே எனக்கு தெரியாமல் சரண் சற்று கீழிறக்கி கிருதா வைத்துக்கொள்ள விரும்பியிருக்கிறான். ஆனால் சரணுக்கு அவன் வைத்துக்கொள்ள விரும்பியதின் பெயர் கிருதா என்பது தெரியவில்லை அது எப்படியோ கிரிஜா என்று மனதில் பதிந்திருக்கிறது
எனவே மணியிடம் ’’அண்ணா கிரிஜாவை ஒண்ணும் பண்ணாதீங்க, விட்ருங்க நான் வச்சுக்கறேன்’’ என்று சொல்லி இருக்கிறான். நானும் மணியுமாக வெகுநேரம் சிரித்தோம் அன்று.
அந்த கிரிஜாவை பின்னர் பலமுறை மணி நலம் விசாரிப்பதுண்டு கிரிஜாவை தவிர்க்கவேண்டியே மணியிடம் போவதை நிறுத்திக்கொண்டு பலநூறுகள் கொடுத்து முடிவெட்டினது போலவும் வெட்டாதது போலவும் காட்டும் நேச்சுரல்ஸுக்கு சரண் மாறி இருந்தான்.
ஆனாலும் இப்படி வீடுவரை வந்து கிரிஜாவை அவ்வப்போது மணி விசாரிப்பதுண்டு
பல ஆண்டுகளுக்கு பிறகென்பதால் நாங்களும் கிரிஜாவை பேசிப்பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்
இப்போது வளர்ந்து வாலிபனாகி இருக்கும் சரணின் வருங்கால மனைவிக்கு ஒருவேளை கிரிஜாவை பற்றி தெரிய வந்தால் என்னவாகும் என்பது கவலை அளிக்கிறது
அப்படி கிரிஜாவின் மீது உள்ளார்ந்த அன்பு கொண்டிருந்த சிறுவன் சரண் நாளை 24 வயதை நிறைவு செய்கிறான். மனமார்ந்த அன்பும் ஆசிகளும், சரணுக்கும் அவன் கிரிஜாவுக்கும்!