அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 5 of 38

கோவை 6 வது மலர்கண்காட்சி பரிதாபங்கள்.

தாவரவியல் பூங்காக்கள் நடத்தும்  மலர் கண்காட்சிகள் மீது எனக்கு தனித்த பிரியமுண்டு. சிறுமியாய் இருக்கையில் எல்லா பள்ளி விடுமுறைகளும் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த அத்தை மாமா வீட்டில்தான்  இருப்பேன், எனவே கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி பல வருடங்களாக பரிச்சயமாகி இருந்தது. பிரபல சினிமா நடிகர்கள், எஸ்பிபி, ஜானகிம்மா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் எஸ் வி சேகரின் நாடகம் என பல விஷயங்கள் எனக்கு  ஊட்டி மலர் கண்காட்சியில்தான் அறிமுகமானது.

அதிலெல்லாம் கொள்ளை அழகாய் கொட்டிக்கிடக்கும் மலர்களை கண்களை விரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த போதுதான் எனக்குள்  தாவரவியல் ஆர்வம் முளைவிட்டிருக்கக் கூடும். 

அதன்பிறகும் கல்லூரி சுற்றுலாக்களில்  ஊட்டி மலர் கண்காட்சி  அதன் தொடர்ச்சியாக தொட்டபெட்டா செல்வது என எப்போதும் என் மனதில் மலர் கண்காட்சிகளுக்கென தனித்த இடமிருந்தது.

 நான் பேராசிரியர் ஆன பின்னர் கொடைக்கானல் ஏற்காடு மூணாறு என எங்கே மலர்க்கண்காட்சி என்றாலும் உடனே மாணவர்களையும்  அழைத்து கொண்டு செல்வது வழக்கமானது

சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் விவசாய பல்கலைக்கழக மலர் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது அப்போதும் முழுத்துறையுமே 3 பேருந்துகளில் சென்றிருந்தோம்.

 மிக இனிய நினைவு அது ஏராளம் அயல் மலர்களும் இயல் மலர்களுமாக நேர்த்தியாக ஒருகுறையுமில்லாமல் சிறப்பாக நடத்தினார்கள் அப்போது. ட்யூலிப்களும் க்ளேடியோலஸ்களும் டேலியாக்களும் ரோஜாக்களுமாக  மலர்ப்பெருங்கடல் அன்று பார்த்தது.

 மிக முக்கியமான ஸ்டால்களும் இருந்தன மகன்கள் அப்போது சிறுவர்கள் அவர்களும் உடன் வந்திருந்தனர்  அப்போது வாங்கிய ஒரு டூல் செட் இன்னும் சரண் வைத்திருக்கிறான்

இப்போதும் கோவை மலர் கண்காட்சி என அறிவிப்பு எனக்கு வந்து சேர்ந்தது.

 எனவே துறையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அனைத்து பேராசிரியர்களும் கண்காட்சி துவங்கும் வெள்ளி 23 /2/24 அன்று (இன்று)  செல்வது என முடிவெடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக  துறைக்கான AAA எனப்படும் அகடமிக் அட்மினிஸ்ட்ரேடிவ் தணிக்கை வெள்ளி என முடிவானதால் Dr Sarvalingam அதை பார்த்துக்கொள்ளட்டும் என முடிவு செய்து மீதமிருந்த அனைவருமாக புறப்பட்டோம்

அதற்கு முன்னால் இன்னும் மகள்களை வெளியூர் அனுப்ப யோசிக்கும் கொங்கு பெற்றோர்களிடம் தொண்டை வலிக்க தாவரவியலை வகுப்பறைக்கு வெளியே கற்கும் அவசியத்தை பேசி அனுமதிவாங்கி, பேருந்துக்கு ஏற்பாடு செய்து பணம் திரட்டி முதல்வரிடம் எழுத்துபூர்வ அனுமதி வாங்கி என பலகட்ட முன்னெடுப்புக்கள் நடந்தது

கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் என தகவல் வந்ததும் திடுக்கிட்டேன் ஊட்டியில் கூட அத்தனை இல்லை

பொள்ளாச்சி மாணவர்கள் எல்லாம் மிக எளிய பின்புலம் கொண்டவர்கள் அவர்களிடம் பேருந்து கட்டணமல்லாது மேலும் 150 ரூபாய் வாங்க முடியாது. எனவே கோவை ரோட்டரியின் பங்களிப்பு இந்த கண்காட்சியில் அதிகம் இருந்தது என்பதால் ரோட்டரி நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன்

அவர் விவசாய பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரின் எண் கொடுத்தார் அவரை அழைத்துப்பேசி மாணவர்களுக்கு மட்டும் 50 ரூபாய் அனுமதி வாங்கினேன்

ஆசிரியர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்றார்கள் சரி என்று ஒத்துக்கொண்டேன்

ஆனால் 150 ரூபாய் என்றால் பொதுமக்கள் வரவும் குறையும், ஒரு சினிமாவை 120 ரூபாயில் பார்க்கிறோமே! 

மீண்டும் அந்த நண்பரிடம் பேசி அவரும் ஏற்பாட்டாளர்களிடம் பேசி அனைவருக்குமே கட்டணம் 100 என்றும் அனுமதிக்கடிதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு 50 என்றும் மீண்டும் முடிவானது

இன்று காலை புறப்படுகையில் இரண்டு பேருந்துகளுக்கு முன்பு அனைத்து மாணவ மாணவர்களையும் நிறுத்தி ஒரு நல்ல உரையாற்றினேன்.

 கல்லூரிக்காலத்தில் பயணம் எத்தனை முக்கியம் அதுவும் தாவரவியல் மாணவர்களுக்கு இப்படியான மலர்கண்காட்சிகளுக்கு செல்வது எத்தனை முக்கியம் என்பதையும் அங்கு காணப்போகும் எக்ஸோட்டிக் மலர்களை வேறெங்கும் காண வாய்ப்பில்லை என்பதையும் சொல்லி நான் முன்பு  ட்யூலிப் மேனியாவை குறித்து எழுதிய மலர்பித்து என்னும் கட்டுரையின் இணைப்பை அளித்து அதையும் வாசிக்கச் சொல்லி அந்த ட்யூலிப்மலர்களை இன்று அவர்கள் பார்க்க விருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னேன்

  அவர்களை ஒரு பேரனுபவத்திற்கு மனதளவில் தயராக்கி பின்னர்புறப்பட்டோம்

நல்ல வெயிலில் 9.45க்கு  வந்து சேர்ந்தோம்.தாவரவியல் பூங்கா இருக்கும் இடத்துக்கு பேருந்து செல்லமுடியாது நெரிசலாகும் என்று எதிரிலிருக்கும் விவசாய பல்கலைக்கழகத்துக்குள் பேருந்தை நிறுத்த சொல்லி அங்கிருந்து வெகுதூரம் நடந்து வந்து சாலையை கூட்டமாக கடக்க காவலர்கள் உதவி பின்னர் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு ஒருவழியாக வந்தோம்

 வாழ்க்கையை விட பல பல திருப்பங்கள்  கொண்டிருந்த மூங்கில் கழிகளால் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக வழியில் நடந்து நடந்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடம் வந்ததும் UPI அல்லது பணம் இரண்டில் எது என்னும் கேள்வி, தொகையாக செலுத்துகிறேன் என்றதும் அதற்கு மேலும் சில திருப்பங்கள் செல்ல வழி காட்டினார்கள்

சலிக்காமல் அங்கும் நடந்து முதல்வரின் கடிதம் வேண்டும் என கேட்டிருந்தார்கள் அதை கொண்டு வந்திருந்தோம் காட்டினோம் ஆனால் சலுகை இல்லை அனைவரும் 100 கட்ட வேண்டும் என்றார்கள். நான் தொடர்பு கொண்ட பேராசிரியரின் பெயரை சொல்லி அவர் போனில் அனுமதி அளித்திருக்கிறார் என்றேன்

பதிலுக்கு அவரிடம் போய் எழுதி வாங்கி வாருங்கள் என்றார்கள் எனக்கு பொறுமை குறைய தொடங்கியது. நாங்கள் வெளியூரிலிருந்து வந்து எங்கேயென்று இங்கிருக்கும் ஒரு பேராசிரியரை தேடிப்போவோம் 100க்கும் மேற்பட்ட இளம் மாணவ மாணவிகள் கடும் வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபித்துகொண்டதும் யாரோபோய் எங்கேயோ எழுதி வாங்கி வந்து ஒருவழியாக சலுகை கட்டணம் மாணவர்களுக்கு அளித்தார்கள்

கைகளில் அணிந்துகொள்ளும் காகித பேண்ட் ஒன்றை தீவிரமாக ஒரு பெண் எண்ணி எண்ணி எடுத்துக்கொடுத்தாள். 100 ரூபாய்க்கு பச்சை 50 க்கு இளம் சிவப்பு

வாங்கிகொண்டு வெளியே வந்து கைகளில் அணிந்துகொண்டிருக்கையில்தான் 25  எண்ணிக்கை குறைவாக பேண்ட் கொடுத்திருந்தார்கள் என்பது தெரிந்தது.

மீண்டும் அதே  இடத்துக்கு சென்று மீண்டும் எண்ணி வாங்கிகொண்டு வந்து ஏராளம் கெடுபிடிகளுக்கு மத்தியில் மலர் கண்காட்சி முகப்புக்கு வந்தோம்

Birds of paradise எனும் அரிய மலர்களை  கத்தரித்து நிலத்தில் நட்டு முகப்பில் அலங்கரித்திருந்தார்கள்’அதை அப்படியே தொட்டிகளில் வைத்திருக்கலாம் இன்றே அனைத்தும் வாடிவிடும் என்று ஆதங்கமாக இருந்தது

முகப்பில் கோவை மலர்கண்காட்சி என்பதையே மலர்களில் அமைத்திருந்தார்கள்.

 அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்

உள்ளே மேலும் கெடுபிடி இரண்டிரண்டு பேர்களாக வரவேண்டும் என்று. அப்படியே சென்றோம், ஒரு ஸ்கேனர் வழியாக செல்ல பணிக்கப்பட்டோம்.

எனக்கு ஆர்வம் அதிகமானது இத்தனை கனகச்சித ஏற்பாடுகள் இருப்பதால் முன்னைக் காட்டிலும் பிரமாதமான கண்காட்சியாக இருக்கும் என்று.

கோவை ரோட்டரி தொண்டாமுத்தூர் எல்லாம் எங்களை வரவேற்கும் அலங்கார தட்டிகள் ஆங்காங்கே நின்றன.

முகப்பில் ஒரு ரோட்டரி தட்டி ஒன்று தலைகுப்புற விழுந்து கிடந்தது அதை சரி செய்ய யாரையும் காணோம்.

ஒரு மரத்தடியில் ட்யூலிப் கள் தெரிந்ததும் ஆர்வமாக முதலில் அங்கே போனேன்

மஞ்சள் வெள்ளை சிவப்பு என எல்லா நிறங்களில் இருந்த ட்யூலிப்கள் புதுமண பெண்கள் போல் தலை குனிந்து நிலம் பார்த்திருந்தன

அருகில் சென்றால் அவை அனைத்தும் செடியில் இருக்கும் மலர்களல்ல வெட்டப்பட்ட மலர்த்தண்டுகளை பச்சை ஸ்பாஞ்சில் நட்டுவைத்திருந்தார்கள்.

முதல் நாள் காலையிலேயே அத்தனை வாடி தலைகவிழ்ந்திருக்கும் இவை இன்னும் இரண்டு நாட்களில் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டோம் அன்னப்பட்சிகள்  முயல் என் சில மலரலங்காரங்கள் நல்ல தகிக்கும் வெயிலில் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் செருகப்பட்டிருந்த மலர்கள் 1மணி நேரத்தில் வாடிவிடும் அளவுக்கு வெயில் அறைந்துகொண்டிருந்தது

 இதுபோன்ற மலரலங்காரங்கள் ஊட்டியின் சீதோஷ்ணத்துக்கு எந்த இடத்திலும் வைக்கலாம் கடுங்கோடை துவங்கி இருந்த கோவை பூங்காவில் நிழலான இடங்களில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்

என்னதிது ஆரம்பமே இப்படி என உள்ளே என்னவோ எச்சரிக்கை மணி அடித்தது.

அவசர அவசரமாக வெட்டப்பட்ட தாவரங்களின் மிச்சம்மீதிகள் எல்லாம் அலங்காரங்களுக்கு அருகில் பெருக்கி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே குப்பையாக கிடந்தன.

வரிசையில் கையில் அடையாள பேண்ட் கட்டிக்கொண்டு ஸ்கேனர் வழியாக வந்த எங்களுக்கு முன்னால் எந்த ஸ்கேனரிலும் வந்திருக்க சாத்தியமில்லாத தெரு நாய்கள் குப்பைகளை கடித்துக்கொண்டு திரிந்தன. திகைப்பாக இருந்தது’, எதற்கு வாசலில் அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் உள்ளே நாய்கள் திரிகையில்?

குஞ்சு குளுவான்களாக கிண்டர்கார்டன் குழந்தைகள் எல்லாம் கூட்டமாக பேருந்துகளில் வந்திருந்தார்கள்.

கோடைக்காலமென்பது ரேபிஸ் காலமும்தான் அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கவேண்டாமா?

முகப்பிலிருந்து வழியெங்கும் செடிகளுக்கு நீர் ஊற்றப்படாமல் வறண்டு நிலம் இறுகிக்கிடந்தது இன்றிலிருந்து கண்காட்சி, ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதற்காக அல்ல கோடையில் செடிகளுக்கு நீர் விடவேண்டாமா?

நிலத்திலிருக்கும் செடிகளுக்கு மட்டுமல்ல தொட்டிச்செடிகளும் வாடி பாவமாக இருந்தன. தொட்டிகளின் மண்ணையும் தொட்டுப் பார்த்தேன் பாறைபோல் இறுக்கம்

ஆனால் வேடிக்கையாக செயற்கை நீரூற்றுக்களில் நீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது

என்ன அநீதி எத்தனை முரண்?

தாவரங்களை பார்க்கவென்று 60 கிமீ தொலைவில் இருந்து கட்டணம் செலுத்தி உள்ளே வந்திருக்கிறோம் செடிகளுக்கு நீர் இல்லாமல் வாடிகிடக்கையில் செயற்கை நீரூற்றில் நீர் ?

மேலும் மேலும் பெருந்துகளில் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் வந்தபடியே இருந்தனர்.

எங்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு கைகளில் வண்ணப்பட்டைகள் இல்லை. உள்ளே ஏராளமான ஸ்டால்கள்.

வரும் சிவராத்திரிக்கு இலவச அமர்வுக்கு அணுகினார்கள் வருவதானால் விண்ணப்பிக்கிறேன் என்று சொல்லி விலகினேன்

கண்பார்வையை சோதித்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் பின்னாலேயே வந்தார்.

பலமுறை மறுத்து என்னை விடுவித்துக்கொண்டேன்

அடுத்து  தைராய்டு செக் பண்ணிகொள்ளச் சொல்லி வற்புறுத்தல். மறுத்து அவசரமாக விலகினோம்.

வீட்டுக்கடன் தரும் நிறுவனம் நொச்சுப்பண்ணிக்கொண்டே இருந்தார்கள் கைகளில் ஏராளமாக் துண்டுச்சீட்டு களும் விளம்பரங்களும் நிறைத்தார்கள்.

எதற்கு வந்தோம் என்ன நடக்கிறது என்று யோசித்து கொண்டே நடந்தேன். அல்லிக்குளத்தில் காலி தண்ணீர் பாட்டில்கள் குப்புற கிடந்தன துணையாக காலி சிப்ஸ்பாக்கட்டுகளும் மிதந்தன.

ஸ்டால்களை தவிர எங்குமே குப்பைத்தொட்டிகள் இல்லை நோட்டீஸ்கள் எல்லாம் கசக்கி போடப்பட்டு பூங்காவெங்கும் இரைந்து கிடந்தன.

என்னிடம் இருந்தவற்றை போட குப்பை தொட்டி தேடி எங்கும் கிடைக்காமல் ஒருமரத்தடியில் வேறு வழியே இல்லாமல் போட்டேன்

டென்னிஸ் கோர்ட் போல் ஒரு மலரமைப்பு அங்கும் மலர்செடிகள் இல்லை வரிசையாக பச்சை ஸ்பாஞ் வைத்து அதில் வெண்ணிற மலர்கள் அமைத்திருந்தார்கள் அதுவும் நல்ல வெயிலில்.

கோழிகொண்டை பூச்செடிகள் வைத்திருந்த தொட்டிகள் எல்லாம் நீரின்றி பரிதாபமாயிருந்தன.

அலங்கார வாழைமரங்களில் பாதியை அப்போதுதான் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 11 30 மணிக்கு மேலும் பல பெட்டிகளில் மலர்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை

அழைப்பிதழில் 9 – 7 மணி என்றிருந்தது

ஆனால் முற்பகலாகியும் எதுவுமே துவங்கப்பட்டிருக்கவில்லை

அரசுப்பொருட் காட்சியை நினைவூட்டும் உணவுக்கடைகள் அலங்காரபொருட்கள் விற்கும் கடைகள் துவங்கி இருந்தன

வீடு துடைக்கும் மாப்  விவசாயபொருட்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஊறுகாய்கள் விற்கபட்டன

வழிகாட்டும் அறிவிப்புக்கள் இல்லை, எங்கு சென்று எதைபார்த்தபினன்ர் எதைப்பார்க்க வேண்டும் என்பதை  நாங்களாகவே  முடிவு செய்தோம்.

அழகிய ஊதா மலர்களுடன் படர்ந்திருந்த பெட்ரியாவின் மலர்களை ஒரு குடும்பமே இஷ்டத்துக்கு பறித்து தலையில் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்து கொண்டார்கள். தடுக்க யாரும் இல்லை. ’நான் அவர்களிடம்  உங்களுக்கு பின்னால் வருபவர்கள்  இந்த பூக்களை  பார்க்க வேண்டாமா? என்றேன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தார்கள்.

காபி குடிக்கலாம் என்றார்கள் உடன்வந்த பேராசிரியர்கள் வாங்கினோம் காபியாக இல்லாமல் பாயசத்தின் அக்காவாக தித்தித்தது. கீழே ஊற்றிவிட்டு நடந்தேன்

ஒரே மாதிரியாக அடீனியம் போன்ஸாய்கள்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன

 பூங்காவின் கடைக்கோடியில்  நர்சரி இருந்தது அங்கிருந்து வாசல்வரைக்கும் செடிகளை வாங்கியவர்கள் சுமந்துகொண்டு செல்ல கஷ்டமாயிருக்கும். எப்போதும் கண்காட்சிகளில் இதுபோன்ற செடி விற்பனை எக்ஸிட்டுக்கு அருகில்தான் இருக்க வேண்டும்

பலர் இதற்கு சங்கடப் பட்டுக்கொண்டே வாங்காமல் சென்றார்கள் சிலர் புலம்பிக்கொண்டே வாங்கினார்கள்

நானும் கொடி ரோஜாச் செடிகள் வாங்கினேன்

வைத்துக்கொண்டு போகும் கவரொன்று 10 ரூபாய்க்கு கொள்ளை விலை சொன்னார்கள் சரியென்று வாங்கினேன் வேறு வழியில்லை வாசல் வரை சுமக்கனுமே?

ஆனால் வாங்கிய செடிக்கு பில் கேட்டால் இல்லை என்றார்கள்.’உண்மையிலேயே கடுப்பாக இருந்தது

3 கவர்களுக்கு 30 ரூபாய் கொடுத்தபின்னர் 2  கவர்தான் இருக்கிறதென்றார்கள்

 என் பொறுமை விளிம்புக்கு வந்து அதலபாதாளத்தை நோக்கி பாயத்துவங்கலாம் என்னும் எச்சரிக்கை அடைந்தேன். எனவே விரைந்து அங்கிருந்து நகர்ந்தேன்

கழிப்பறைக்கு சென்று விட்டு உணவருந்தலாம் என்று  தேடினோம். கழிப்பறை என்னும் அம்பு குறி அதிசயமாக எங்களுக்கு வழிகாட்டியது

கொடுமைகளில் மகா கொடுமையாக அத்தனை கூட்டத்துக்கு  3 தான் இருந்தது. மூன்றும் தற்காலிக கழிப்பறைகள்.  அவை மூன்றுமே உள்ளே பெண்கள் அமர்ந்து உபயோகிக்க முடியாதபடி கான்சன்ட்ரேஷன் கேம்ப் அறைகளைபோல மிக மிக குறுகலானவை. 

கழிப்பறைகளுக்கு முன்பாக பள்ளிப்பெண்களின் வரிசை நீண்டிருந்தது.  மூன்றிலிருந்தும் கழிவு நீர் வெள்ளமென வெளியெ வழியத்துவங்கியிருந்தது. உள்ளே பக்கட் மட்டும் இருக்கு மக் இல்லை என ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது

அங்கே நிற்க முடியாமல் அடையாள அட்டை அணிந்திருந்த ஊழியர்களை விசாரித்து, செடிகளையும் சுமந்துகொண்டு நடந்து நடந்து நடந்து கண்டுபிடித்த  விளையாட்டு திடலுக்கருகே இருந்த கழிப்பறை மகா கோரமாக பலர் உபயோகித்து சேறும் சகதியும் நாற்றமுமாக இருந்தது

  வேறு வழியில்லாமல் அதையே  உபயோகிக்கச் சென்றால் அங்கு  கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை ஒருவர் உள்ளிருக்க ஒருவர் வெளியில் கதவை பிடித்துக் கொண்டு பயன்படுத்தினோம்

அருகில் பல பெண்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குறிப்பாக ரோட்டரி அமைப்பை ஏகத்துக்கும் வசைபாடிக்கொண்டிருந்தார்கள்

நாங்களும் அதே!

பூங்கவெங்கும் உணவு மிச்சங்கள் காகிதங்கள் இறைந்து கிடந்தன

தெருநாய்கள் நடமாடினது போதாமல் நாய் கண்காட்சியும் இருந்தது.

பல கல் பெஞ்சுகளின் அருகில் அகற்றப்படாத குப்பைகள் குவிந்தும் பைகளில் கட்டப்பட்டும் கிடந்தன

 இப்படி பல பரிதாபங்களுக்கு இடையில் மாணவர்களுக்கு சிலவற்றை காண்பித்தேன்

 எனினும் விவசாய பல்கலையின் முக்கிய அங்கமான தாவரவியல் பூங்காவின் மரங்கள் கூட பெயரிடப்பட்டிருக்கப்படவில்லை என்பதை என்ன சொல்வது?

  முன்பு  இல்லாவிட்டாலும் கண்காட்சியின் பொருட்டாவது எழுதியிருக்கலாமே!

நீரில்லாத, பேரில்லாத செடிகளை காணவா கட்டணமும் கெடுபிடிகளும் சோதனைகளும் நீண்ட பயணமும்?

எத்தனையோ மறக்கமுடியாத மலர் கண்காட்சிகளின்  நினைவுகளுக்கு நடுவே முள்ளாய் உறுத்தும் இந்த கோவை 6 வது மலர் கண்காட்சி என்னும் பெயரில் நடந்த பரிதாப காட்சிகள்.

உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரம்!

உலகின் மிகப்பழமையான மரமான மெத்தூசலா  பைன்  மரம் (Pinus longaeva), உலகின் மிக பெரியதான அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் செக்கோயா தேசிய பூங்காவில் உள்ள சுமார் 2,500 க்யூபிக் மீ அளவு கொண்ட செக்கோயா மரம் (General Sherman), 115.92 மீ  உயரத்துடன் உலகின் மிக உயரமான மரம் என்னும் பெருமைக்குரிய ஹைப்பீரியான்  இவற்றுடன் உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலர்களை உருவாக்கும் கடல் தாவரங்கள் ’கடற்புற்கள்’ – seagrass எனப்படுகின்றன. நான்கு தாவரக்குடும்பங்களை சேர்ந்த சுமார் 60 கடற்புல் சிற்றினங்கள் உலகில் உள்ளன.ஏறக்குறைய 70 லிருந்து 100 மில்லியன் வருடங்களாக இவை கடலில் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது.

ரிப்பன் போன்ற நீண்ட தட்டையான இலைகளுடன் கடற்பரப்பில் அடர்ந்து வளரும் இவை புல்வெளிகளைப்போலவே காணப்படும். கடற்கரையை ஒட்டிய ஆழம் குறைவான பகுதிகளில் இவை வளரும்.

அவற்றில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதிகளில் வாழும் Posidonia australis என்னும் கடற்புல் உலகின் மாபெரும் பரப்பில் வளரும் ஒற்றைத்தாவரமாக 2022ல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

உலக பாரம்பரிய சின்னம் என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய கடற்கரையின் ஷார்க் பே பகுதியில் (Shark Bay) அறிவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட இந்த கடற்புல் மாபெரும் தாவரம் மட்டுமல்ல உலகின் மாபெரும் உயிரினமும் கூடத்தான்.

1–15மீ ஆழத்தில் மணலில் புதைந்திருக்கும் வேர்கிழங்குகளிலிருந்து வளரும் இவற்றில் ஆண்பெண் மலர்கள்  தனித்தனியே அமைந்திருக்கும்.

இவை மழைக்காடுகளை காட்டிலும் 35% அதிக கார்பனை சேமித்துக்கொள்கின்றன.

2022  ஜூனில் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை சுமார் 180 கிமீ தொலைவிற்கு பரந்து வளர்ந்த ஒற்றைத்தாவரம் இது என்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை தெரிவிக்கிறது, கடலின் அடிப்பரப்பில் சுமார் 49,000 ஏக்கரில் இவை வளர்ந்திருக்கின்றன.

இந்த கடற்புல்லின் வயது சுமார் 4,500 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலகின்  மிகப்பழமையான ஒற்றைத்தாவரமும் இதுதான்.

கிரேக்க தொன்மத்தில் கடலின் கடவுளான் Poseidon -ன் பெயரே இதன்பேரினப்பெயராக வைக்கப்பட்டிருப்பதும் பொருத்தமாக அமைந்துவிட்டது. இதன் சிற்றினப்பெயரான ஆஸ்திரேலிஸ் என்பது இது ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது என்பதைக் குறிக்கிறது.

IUCN இந்த கடற்புல் அழிவின் அருகில் இருப்பதாக தெரிவிக்கிறது.

வாசனை!

 தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரமே தேர்தல் அதிகாரியாக பணியாற்ற வேண்டிய விண்ணப்பங்கள் கொடுத்துவிட்டார்கள், நான்  அப்போதே பூர்த்தி செய்து  கொடுத்து விட்டேன். தேர்தல் பணி கடுமையானதாகத் தான் இருக்கும் அடிப்படை வசதிகள் அற்ற பள்ளிக்கூடங்களில் கவுன்சிலர்களின் அலப்பறைகளுக்கு மத்தியில் அதிகாலையிலிருந்து சரியான உணவோ தேநீரோ கூட இல்லாமல் பணி புரிந்திருக்கிறேன்.  நான் மட்டுமல்ல பலரும் அப்படித்தான் எனினும்  நான் ஒருபோதும் எந்தக்காரணம் கொண்டும்  தேர்தல் பணியை மறுதலித்ததோ அன்றி பொய்க்காரணங்கள் சொல்லி தவிர்த்ததோ கிடையாது 

அரசுப்பணியினால் மட்டுமே என்வாழ்க்கை இத்தனை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் நினைவில் கொண்டிருக்கிறேன். எனவே அரசுப்பணி சார்ந்த எதுவும் எனக்கு அதிமுக்கியமானவைகள்தான்.

ஆனால் அரசியல் குறித்தான அறிதல் எனக்கு மிக மிக குறைவுதான் அதில் அத்தனை சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை அரசியல்வாதிகளிடம் எனக்கு பரிச்சயம் இல்லை செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் இல்லாததால் அரசியல் மாசுபடாத வீடு இது.

 இதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. செல்வேந்திரனும் குறளரசியும் கல்லூரிக்கு வந்திருந்தனர்.  அவர்கள் வருவது முன்பே எனக்கு தெரியும் என்பதால் அவர்களை வரவேற்க  முதல் தளத்திலிருந்து கீழிறங்கி வந்தேன்.

 முதல்வர் அறையின் முன் இருக்கும் வரவேற்பறையில் தொலைவில் செல்வேந்திரன் குறளரசி இன்னும் சிலர், அவர்களுக்கு மத்தியில் தொலைவிலிருந்தே முக்கியஸ்தர் என்று அறிந்து கொள்ளும்படியான மற்றொருவரும் இருந்தார்கள். நல்ல உயரமும் நிறமுமாக பொள்ளாச்சியின் பெரும்பாலான மருத்துவர்களை போன்ற தோற்றம் அவருக்கு, உன்னதமான உடைகள். 

செல்வேந்திரன் என்னை பார்த்ததும் அவரிடம் ’’இவங்கதான் நான் சொல்லிட்டு இருந்த லோகமாதேவி’’ என்று துவங்கி என்னை குறித்து பெருமையாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். பதிலுக்கு அவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றெண்ணிக் கொண்டிருக்கையில் அப்படி செல்வேந்திரன் செய்யாதது எனக்கு ஆச்சர்யமளித்தது. 

மறந்திருப்பாராக இருக்கும் என நினைத்துக்கொண்டு நானே ’’தம்பி இவர் யாரு?’’ என்றேன். அந்த இடமே மயான அமைதியானது சில நொடிகளுக்கு. அந்த முக்கியஸ்தர் சுதாரித்துக் கொண்டு  தன்னை’’நான் பொள்ளாச்சியின்  MP ஷண்முக சுந்தரம் ’’என்று அறிமுகப்படுத்தி கொண்டார்

தர்மசங்கடமாகத்தான் இருந்தது எனினும் என் மீது பிழையொன்றும் இல்லை எனக்கு அவரை தெரிந்திருக்கவில்லை அன்றுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.

அரசியலில் என் அறியாமையை எண்ணிக்கொண்டிருக்கையில்  வேட்டைகாரன் புதூர் கிராமத்தில் நானிருந்த இரண்டு வருடங்களும் பெரியதுரையும் நினைவுக்கு வந்தார்கள். அம்மாவின் பணி மாறுதல்களின் போதெல்லாம் நானும் மித்ராவும் ஊர் ஊராக பந்தாடப்படுவோம்.

அப்படி எல்கேஜி யூகேஜி பொள்ளாச்சி புனித லூர்தன்னை கான்வென்ட்டில், 1ம் வகுப்பு வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2 வது மீண்டும் புனித லூர்தன்னை மடிக்கு வந்த நாங்கள் 3வது மீண்டும் வேட்டைக்காரன்புதூர் பள்ளிக்கே திரும்பினோம். 4ம் 5ம் தாராபுரம் செயிண்ட் அலோசியஸ் கான்வென்ட்.

  களைப்பும் சோர்வும் அழுக்கு உடைகளும் பசியுமாக   பூட்டிய வீட்டுக்கதவுக்கு வெளியே  மணிக்கணக்காக காத்திருக்கும் வயதை அடைந்திருத்தால் 6லிருந்து பொள்ளாச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும்  தொடர்ந்து படித்தோம்

அந்த 2 வருடங்கள் கிராமத்தில் ஆத்தா அப்பாருவுடன் இருந்தது உண்மையிலேயே பொற்காலம்.

பொள்ளாச்சி வீட்டில் ஏகத்துக்கும் அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. எப்போது நினைத்தாலும் அச்சமூட்டும் இளமைப்பருவம் அங்குதான் கழிந்தது. ஆனால் நேர்மாறாக வேட்டைக்காரன்புதூர் வீட்டில் மகிழ்ந்திருந்தேன்

என் தோழி குஞ்சி அவளது இளைய சகோதரர்கள் பெரிய துரை மற்றும் சின்ன துரை, நான்  எங்கள் நால்வர் கூட்டணி வெகு பிரபலம் அப்போது. அவர்கள் வீடு வளவில் இருந்ததால் அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று பலமுறை கண்டிக்கப் பட்டிருக்கிறேன் என்றாலும் நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. உள்ளே ஒரு மீறல் துளிர்த்திருந்த காலம் அது.

மித்ரா எங்களுடன் சேர்ந்ததில்லை அவள் அப்போதே சாதிப் பற்றினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

குஞ்சியும் சகோதரர்களும் பள்ளிக்கு செல்லவில்லை ஒரு தோட்டத்தில் அவர்கள் குடும்பமே வேலை செய்தது. என் விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த மாலைகளிலும்  நால்வருமாக வேட்டைகாரன்புதூரை அங்கும் அங்குலமாக சோதித்தறிந்திருக்கிறோம்.

அரசியலுக்கு வருகிறேன்.

பெரியதுரை சின்னதுரை இருவருமே  சாம்பல் வண்ணத்தில் அரைகால் சட்டை அணிந்து  மட்டுமே என் நினைவுகளில் இன்னும் இருக்கிறார்கள். மேல்சட்டையுடன் அவர்களை என்னால் நினைவு கூற முடியவில்லை குஞ்சி அவளது அப்பாவின் பழைய சட்டையும் பாவாடையுமாய் இருப்பாள்.

எங்களின் விளையாட்டுகளில் ஒன்று  அரசியல் உரை.பெரியதுரை ஒரு பழந்துணியை வெற்றுத்தோளில் துண்டாக அணிந்துகொள்வான்.ஒரு சிறு பாறை மீது அவன் நிற்க  நாங்கள் மூவரும் கீழே தரையில் அமர்ந்து கொள்வோம்.  அவனது கைமுஷ்டியை மைக் போல மடக்கி வாயருகில் பிடித்துகொண்டு பிரசங்கத்தை ’’ தாய்மார்களே! வாக்காளப்பெருமக்களே’’ என்பதற்கு பதிலாக தாயையும் சகோதரியையும் குறிப்பிடும் கிராமத்தின் ஆகக்கேவலமான கெட்ட வார்த்தைகள் இரண்டைச்சொல்லி துவக்குவான். அப்போது சிரிப்பாகத்தான் இருந்தது எனக்கு. 

இப்போது நினைக்கையில் 10 அல்லது 12 வயதிருக்கும் அந்த சிறுவனின் நகைச்சுவை உணர்வு வியப்பளிக்கிறது. கூடவே அவனுக்கு அரசியல் குறித்த ஞானமும் இருந்திருக்கிறது போல.

வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையிலிருந்தவர்களின் முகமுழியே வேண்டாம் என்றுதான் பெரும்பாலும்  நினைப்பது ஆனால் சந்திக்க விரும்பும் வெகு சிலரில் பெரிய துரை என்னும் நண்பன் இருக்கிறான்.

பெரிய துரை எனக்கு அறிமுகம் செய்த சாகசங்களில் முக்கியமானது நிலத்தில் பதிந்திருக்கும் பெரும்கற்களை புரட்டி அவற்றினடியில் இருக்கும் சிற்றுயிர்களை கலைத்து ஓடச்செய்வதும் ஆராய்வதும்.அதை நான் பலமுறை தனித்தும் செய்துவந்தேன்

ஒருக்கில் நான் மட்டும் ஒரு பரந்த மைதானத்தில் செடிகொடிகளின் மறைவில் என்னால் தூக்கவே முடியாத பெரிய தட்டையான கல்லை சிரமப்பட்டு தூக்கி அதனடியில் இருந்த ஏராளமான சில்லறைக்காசுகளை கண்டேன். அவற்றில் என் சிறு கைகளில் எடுத்துக்கொள்ள முடிந்த அளவு எடுத்துக்கொண்டு வந்து ஆத்தாவிடம் கீழே கிடந்ததாக சொல்லிக் கொடுத்தேன். ஆத்தா காசுகளை அஞ்சறைப்பெட்டியில்  வைத்துக்கொண்டார்

அடுத்த வாரமும் அப்படியே கொண்டு வந்தபோது ஆத்தா சந்தேகத்துடன் என்னை விசாரித்தார். நான் ஒரேயடியாக கீழேதான் கிடந்தது என்று சாதித்தேன். உண்மையை சொன்னால் கற்களை புரட்டியதற்காக அடிகிடைக்கும் என தெரிந்திருந்தேன்

  பின்னர் என்னை ராமராஜ் சித்தப்பா தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அறியாமல் மீண்டும் நில வங்கியிலிருந்து சில்லறைகளை எடுத்தபோது சித்தப்பா அவற்றை முழுவதுமாக  வாரி எடுத்து லுங்கியில் கட்டிக்கொண்டு வீடு வந்தார். அங்கே குண்டு விளையாடும் பையன்கள் சேர்த்துவைத்த காசுகள் அவை என்பதை பிற்பாடு தெரிந்துகொண்டேன்.

 வேட்டைகாரன்புதூர் பள்ளிக்கூடமும் என் அழியாத நினைவுகளில் இருக்கிறது. சிறிய ஓட்டுக்கட்டிடம் கேட்டை திறந்தால் ’ப’ வடிவ அறைகளுடன் கட்டிடமும் ஒவ்வொரு அறையின் முன்பும் நெட்டிலிங்க மரங்களும் ஒரே ஒரு வகுப்பறையின் முன்னால் மட்டும் வேம்பும் நிற்கும். நடுநாயகமாக தலைமை ஆசிரியர் அறை, வாசலில் சூரிப்பழங்களும் இலந்தை பழங்களும் வேகவைத்த மரவள்ளி கிழங்கும் விற்கும் ஒரு பாட்டி. 

இந்த 2024 புத்தாண்டன்று அந்த வழியே கோவிலுக்கு சென்றேன். அதே கட்டிடம் ஒரு மாற்றமுமில்லாமல் இருந்தது. வேம்பு மட்டும் இல்லை. 3 வது படிக்கையில் என் ஆராய்ச்சியெல்லாம் எப்படி நெட்டிலிங்கமரம் இலைகளை உதிர்க்காமல் அப்படியே நின்றமேனிக்கு நிற்கிறது. வேம்பின் இலைகள் மட்டும் மஞ்சளாகி கொட்டிக்கொண்டே இருக்கிறது என்பதில் தான் இருந்தது . அதற்கு உடம்பு சரியில்லை என்று ஒரு எண்ணம் இருந்த்தால் வேம்பின் மீது பெரும் பரிவுமுண்டாகி இருந்ததும் தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது.

என் 1ம் வகுப்பின் ஒரே ஆசிரியை சரஸ்வதி எனும் பெயருடன் இருந்ததும் தற்செயலல்ல.அவர் அப்போது ஒய்வு பெறும் வயதில் இருந்திருக்கலாம், எனக்கு அவரை மூதட்டியாகத்தான் நினைவு கொள்ளவே முடிகிறது. வகுப்பில் பாடம் என்பது சிலேட்டில் அவர் ’அ’ என்று முழு சிலேட்டையும் அடைத்து எழுதிக்கொடுக்க அந்த ’அ’ வின் மீது மீண்டும் மீண்டும் சுவையான சிலேட்டுப்பென்சிலால் நாங்களும் ’அ’ எழுதிக்கொண்டே இருப்பதுதான். 

அப்பாரு தினம் காலை எனக்கும் மித்ராவுக்கும் சில்லறை காசுகள்,கொடுப்பார் 1 அல்லது 2  பைசாக்கள். அதில் திண்பண்டங்கள் வாங்கிக்கொள்வோம்

அப்பாரு ஊர்த்தலைவர் என்பதால் பள்ளியில் சகோதரிகளான எங்களுக்கு பள்ளியில் நல்ல மரியாதையும் இருந்தது

3 ம் வகுப்பில் இருக்கையில் ஆண்டு விழாவுக்கு ஒரு நடனம் ஆட (தலைமையாசிரியரின் போதாத காலம்) எங்களிருவரையும் தேர்வு செய்தார்கள்,இடுப்பை வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு அவ்வப்போது இடுப்பில் இருந்து ஒரு கையை மட்டும் எடுத்து மேடையில் இருக்கும் காந்தியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி ‘’காந்தி தாத்தா நம் தாத்தா’’ என்ற பாடலுக்கு நடனம் ஆட பயிற்சி அளிக்கப்பட்டது.

 வெடுக் வெடுக் என்று ஆட்ட இடுப்பு என்னும் ஒரு பாகம் எனக்கு இல்லாமலிருந்ததுதான் நடனப்பயிற்சியின் பெரும் சிக்கலாக இருந்தது. புஷ்டியாக பூரிப்பாக ஒரே  சதைத்திரட்சியாகத்தான் இருப்பேன் அப்போது. மித்ரா கொஞ்சம் சமாளித்துக்கொண்டு ஆடினாள். ஆண்டுவிழாவில் ஆடிய நினைவிலில்லை. பயிற்சியில் மூச்சுவாங்கிய என்னிடம் தலைமைஆசிரியர் கடுப்பில்’’ நீங்க ரெண்டு பேரும் லலிதா பத்மினின்னு நினச்சு கூப்பிடலை டேன்ஸ் ஆட உங்ககிட்டதான் கவுன் இருக்குன்னு கூப்பிட்டேன்’’ என்று திட்டியதும், நடனப் பயிற்சியும் மட்டும் நினைவில் இருக்கிறது. பள்ளி பிரேயர் போதும் அருமையான ஒரு பாடல் பாடுவோம்

’’அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே

அச்சமற்ற தூய வாழ்வு வாழ வேண்டும் நாட்டிலே 

இன்பமான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும்

அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே!’’ 

என்று துவங்கும் பாடலது.

வீட்டிலிருந்து நடந்து வரும் தொலைவில்தான் பள்ளிக்கூடம். சமயங்களில் அப்பாருவுடன் கூண்டு வண்டியிலும் வருவோம். அப்பாரு பிரபல குதிரை மற்றும் மாட்டுவியாபாரி சந்தைகளுக்கு போனால் பலநாட்கள் கழித்துத்தான் வீடு வருவார் அப்படி  வரும்போது அகாலங்களில் பள்ளிக்கு வந்து திண்பண்டங்கள் கொடுத்து கொஞ்சிவிட்டு செல்வதும் உண்டு

பள்ளியில் மிகப்பெருமையான வேலை என்பது ஆசிரியர் வந்தவுடன் தலைமை ஆசிரியர்  அறையிலிருந்து வருகைப்பதிவேடு எடுத்து கொண்டு வருவதுதான். அது ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்கு அளிக்கப்படும். நான் அந்த வேலையை கெஞ்சிக் கேட்டு வாங்குவதுண்டு. 

ஒருநாள் அப்படி  அந்த வேலையைவாங்கி சிட்டாக பறந்து சென்று தலைமை ஆசிரியரிடம் அந்த நோட்டை வாங்கிக்கொண்டு திரும்பி நடந்து வருகையில் அப்பாரு எதிர்பாராமல் பள்ளிக்கு வந்திருந்தார். நான் வகுப்பில் இல்லாமல் மைதானத்தில் தனியே இருந்ததையும் என் கையில் இருந்த அந்த நோட்டையும் பார்த்த அவர் பொங்கி ’’என்ற பேத்தி என்ன உனக்கு பியூனா’’ என்று அன்றைக்கு என் வகுப்பாசிரியரை ஏகத்துக்கும் கடிந்துகொண்டார். பிறகெப்போதும் எனக்கு அந்த வேலை கொடுக்கப்படவே இல்லை. 

மூன்றாவதில் தமிழுக்கென்று ஒரு ஆசிரியர் இருந்தார் அவர் வகுப்பில் அவ்வப்போது முந்தைய வகுப்பின் பாடங்களில் கேள்வி கேட்பார் பதில் சொன்னால் அப்போதே எழுந்து வீட்டுக்கு போகலாம்.  அவர் வகுப்புக்களில் என் பைக்கட்டை கைகளால் முன்கூட்டியே பிடித்துகொண்டு நான் துடிப்புடன் அமர்ந்திருப்பேன் . எப்படியும் அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் எனக்கு பதில் தெரியும். அப்படி பலநாட்கள் பதில்சொல்லி விட்டு பைக்கட்டை மித்ராவிடம் கொடுத்துவிட்டு நான் பெரிய,சின்ன துரைகளுடன் ஊர்சுற்ற கிளம்பி இருக்கிறேன்.

அதுபோன்ற நாட்களில் மட்டுமல்ல எப்போதும் நான் என் பள்ளிக்கு பையை எடுத்துச்சென்றது இல்லை அது எப்போதும் மித்ராவின் வேலை அவளே எனக்கும் சேர்த்து எடுத்துகொண்டு வருவது எழுதப்படாத விதியாக என்னால் சமைக்கப்பட்டிருந்தது.   ஒரு நாள் கோபித்துக்கொண்டு ’’நான் எதுக்கு உனக்கு  வேலை செய்யனும் நீயே எடுத்துட்டு வா’’ என்று தெருவில் மித்ரா என் புத்தகப்பையை (அதாவது சிலேட்டுப்பை) வைத்துவிட்டாள். நான் கிஞ்சித்தும் கவலைப்படாமல் என்  ஊர் சுற்றும் வேலையை பார்க்க சென்று விட்டேன் பின்னர் வீட்டில் கிடைக்கவிருக்கும் அடிகளை எண்ணி பயந்து  அழுதுகொண்டே அவளே எடுத்து கொண்டு வந்தாள்

அந்த பள்ளியின் வேறு வகுப்பின் ஆசிரியை ஒருவர் ஒருநாள் என்னிடம் அவர் மதிய உணவு சாப்பிட்ட பித்தளை தூக்குப்போசியை கொடுத்து கழுவித் தர சொன்னார். அந்த அவமானத்தை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.நான் ஒருபோதும் அப்படியான வேலைகளை மட்டுமல்ல எந்த வேலைகளையுமே  வீட்டில் செய்ததே இல்லை

  ஆனால் ஆசிரியர் என்பதால் மறுக்கவும் முடியவில்லை வாங்கி அதை குழாயடியில் அலசிக் கழுவினேன். கழுவுகையிலேயே என் மனம் எல்லா திட்டங்களையும் தீட்டியது.  நானே வலிய அவரிடம்  ’’டீச்சர் இதை வீட்டில் கொண்டு போய் கொடுத்துறட்டுமா’’ என்றேன். அவர் மகிழ்ந்து சரி என்றார் அந்த ஆசிரியை வீடு எனக்கு தெரியும் (எனக்கு தெரியாத வீடுகள் சந்துகள் பொந்துகள் ஏதும் அங்கு இல்லை) காமாட்சியம்மன் கோயில் பின்புறத்தில் ஒரு சிறு இருளடைந்த வீடுஅது  கண் தெரியாத அவரின் மாமியார்  வாசல் திண்ணையில் ஒரு குச்சியுடன் அமர்ந்திருப்பார், சத்தம் கேட்டால் குச்சியை முன்னால் நீட்டி தட்டி யாரு? என்பார்.

நான் அந்த தூக்குப்போசியின் மூடியை கழற்றி வைத்துக்கொண்டு அடிப்பாத்திரத்தை மட்டும் அவர் முன்னால் ஓசையெழ வைத்துவிட்டு ’’டீச்சர்  தூக்குப்போசியை கொடுத்துட்டு வர சொன்னாங்க’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஆத்தாவிடம் அந்த  மூடியைகொடுத்து வழக்கமான பொய்யான’’ கீழே கிடந்தது’’ என்பதை சொன்னேன். விலைக்குப்போட பழைய பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் அட்டாலியில் ஆத்தா அதை வீசியெறிந்தார்கள்

 என்னிடம் நூற்றுக்கணக்கான முறை தூக்குப்போசியின் மூடி எங்கே என்று கேட்ட அந்த ஆசிரியருக்கு  ஒரே பதிலாக ’’பாட்டிட்ட கொடுத்துட்டேன்டீச்சர்’’ என்பதையே சொல்லிக்கொண்டிருந்தேன். பணி ஓய்வு பெறும் வரை அவர் மாணவர்களிடம் எந்த வேலைகளையும் ஏவியிருக்க மாட்டார். 

இதுபோன்ற எனது செயல்கள்  வீட்டினரால் ‘’திண்ணக்கம்’’ என்னும் இப்போது வழக்கொழிந்து விட்டிருக்கும் சொல்லால் அவ்வப்போது குறிப்பிடப்படும்.

 புகையிலை வாசத்துடன் அப்பாருவின் கருப்பு கம்பளிக்குள் பொதிந்துகொண்டு  அவர் சொல்லும் மகாபாரதக் கதைகளை கேட்டது, வறுத்த ஈசல் உருண்டையுடன் கருப்பட்டிகருப்பு காப்பியை மேலெல்லாம் வழிய குடித்தது , வீட்டுக்குள் வெளிச்சம் வர ஓட்டில் ஓரிடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின் வழியே தரையில் இறங்கி இருக்கும் வெளிச்ச சதுரத்தில்  தட்டை வைத்துக்கொண்டு மித்ராவுடன் சண்டையிட்டுக்கொண்டு சாப்பிட்டது   என ஏராளம் நினைவுகள் மலரும் அவ்வப்போது.

கள்ளிப்பழத்தை முட்களுடன் வாயிலிட்டு நாக்கெல்லாம் முள்குத்தி வாயை மூடமுடியாமல் திறந்த படியே அலறிக்கொண்டு வீடுவந்து மேலும் அடிவாங்கியது, வேப்பமுத்துக்களை படிப்படியாக  பொறுக்கிச்சேர்த்து காசாக்கியது,  ஆத்தா களை எடுத்த காட்டில்  மதிய உணவின் போது   மல்லிகை அரும்புபோலிருந்த பச்சைமிளகாய்ப்பிஞ்சை  பறித்து கடித்துக்கொண்டு பழஞ்சோற்றை  கரைத்து குடித்தது, சூரிப்பழங்களின் கொட்டைகளை உடைத்து உள்ளே எண்ணெய் தடவினது போல மினுங்கும் விதைகளை  எடுப்பது, சீனி புளியங்காயின் கருப்பு விதைகளை காயமில்லாமல் உரிப்பது, எருக்கம் பூக்களின் அரும்புகளை ஓசையெழ அழுத்தி வெடிக்கச் செய்வது, வாரா வாரம் வியாழக்கிழமைகளில் ஆத்தா சாணி மெழுகும் வாசலுக்கு  நீலக்கரையிடவென்று அவுரிச்செடிகளை பறித்தரைத்து சாயமெடுத்தது,  அத்தைகளுடன் பருத்திபறித்தது,  இரட்டைஜடையில் ஊதா டிசம்பர் பூக்களை சூடிக்கொண்டது,  மஞ்சள் நிற  (Hibiscus glanduliferus) மலர்களை  நீரில் கசக்கி எண்ணையாக்கி கொட்டங்குச்சியில் சோறாக்கி விளையாடியது ( எப்போதும் சின்ன துரை வாயில் வண்டி ஓட்டிக்கொண்டு அலுவலகம் போகும் அப்பா ரோல்தான் செய்வான், அலுவலகம் போகும் முன்னர் நானோ குஞ்சியோ  கொட்டாங்குச்சிகளில் மண் நிரப்பி ஆக்கி வைத்திருப்பதை ’’என்னடி சோறாக்கி இருக்கே’’ என்று காலால் தவறாமல் எத்துவான்) என வேட்டைக்காரன்புதூரில் தான் எனக்கு தாவரங்களுடனான அணுக்கமும் துவங்கியது

அப்பாருவின் பெயர் மயில்சாமி என்பதால் ஆத்தா ம, மை என்னும் வார்த்தைகளை சொல்லமாட்டார். அப்போது மைதா வந்திருந்தது,  ஆத்தா அதை ரக்கிரிப்பொடி என்பார்.

அம்மாவும் அப்பாவின் பெயர் அழுக்கு ராஜ் என்பதால் அழுக்கு என்றே சொன்னதில்லை ’’துணியை கசக்காதே வீணாப் போயிரும் போட்ட துணியெல்லாம் துவைக்கப் போடு’’ இப்படி அழுக்கு என்பதை சொல்லாமல் தவிர்த்தே பேசுவார். கணவன் பெயரை சொன்னால் அவருக்கு ஆயுசு குறையும் என்னும் நம்பிக்கை ஆத்தாவுக்கு இருந்ததில் வியப்பில்லை ஆனால்   அப்பாவின் மன அழுக்குக்களையெல்லாம்  முற்றாக அறிந்திருந்த அம்மாவுக்கும்  இருந்ததுதான் நம்ப முடியவில்லை. அம்மா விரும்பியபடியே அப்பாவை நிறையாயுளுடன் விட்டுவிட்டு மறைந்துவிட்டார். 

இன்றென்னவோ பழைய நினைவுகள், வேட்டைகாரன்புதூர் வாசனைகள். 

அரிசியில் ஆர்சனிக் நஞ்சு!

கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்  6 பேரை உணவில் சயனைடு கலந்தளித்து கொலை செய்த கேரளாவின் ஜோலி ஜோசப் 2019 ல் கைது செய்யப்பட்டார் .வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த 2023 டிசம்பர் 22ல்  நெட்ஃப்ளிக்ஸில் இதுகுறித்த ’’கறியும் சயனைடும்’’ என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. கொலையானவர்களில் இரண்டு வயதுப் பெண்குழந்தையும் உண்டு.1

இப்படி உணவில் நஞ்சூட்டி கொலை செய்வது வரலாறெங்கும் நடந்திருக்கிறது. பிரிட்டனின் முதல் பெண் தொடர் கொலையாளி எனப்படும் மேரி ஆன் காட்டன்,  உணவில் ஆர்சனிக் நஞ்சூட்டி அவளது 4 கணவர்கள், 2 காதலர்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர்களை கொலை செய்தாள்( Mary Ann Cotton 1832-1873).  குற்றம் நிரூபிக்கப்பட்டு மேரி ஆன் தூக்கிலிடப்பட்டார்.  இங்கிலாந்த்தின் மிக கொடூரமான கொலைகளிலொன்றாக கருதப்படும் இவ்வழக்கில் மேரி தூக்கிலிடப்படுகையில் கழுத்தெழும்பு முறிந்தல்ல மூச்சுதிணறியே  அவர் கொல்லப்படவேண்டும் என்பதற்காக தூக்குகயிற்றின் நீளம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டது என்றும் ஒரு பேச்சிருக்கிற்து2.

 

ஆர்சனிக்கை உணவில் கலந்துகொடுத்து கொலை செயவ்து ரோமானிய கிரேக்க அரசுகளில் மிக சாதாரணமாக நடந்தது. அப்போதைய அரியணை போட்டிகளில் வெல்ல போரைக்காட்டிலும் ஆர்சனிக்கே பெரிதும் கைகொடுத்தது. ஆர்சனிக்குக்கு நஞ்சுகளின் அரசனென்றும், அரசர்களின் நஞ்சென்றும் இரட்டைப்பெயருண்டு.

கிரேக்க ரோமானிய வரலாற்றில் நஞ்சூட்டி கொல்லுதல் மிக சாதாரணமாக நிகழ்ந்துள்ளது. கிரேக்கர்களுக்கு நச்சு ஹெம்லாக் செடியைப்போல, ரோமானியர்களுக்கு ஆர்சனிக்  இருந்தது. 

முதல் நூற்றாண்டிலிருந்தே ஆர்சனிக் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்றாலும் 1250 ல்  இதன் வேதியியல் ரீதியான கண்டுபிடிப்புக்கு  ஆல்பெர்டஸ் மேக்னஸ்  (Albertus Magnus) என்பவரே காரணம். நச்சியலின் தந்தையான பாராசெல்சஸ் (Paracelsus) தனது படைப்புக்களில் ஆர்சனிக் நஞ்சை குறிப்பிட்டிருக்கிறார்.

நெப்போலியனின் மரணத்துக்கே சிறுகச்சிறுக அளிக்கப்பட்ட ஆர்சனிக் காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து சிறுகச் சிறுக அளிக்கப்படுகையில்  அது உயிராபத்தை விளைவிக்கும். ஒரு வளர்ந்த மனிதனை கொல்ல பட்டாணி அளவுக்கு ஆர்சனிக் போதுமானதாக இருக்கும்.

 கிபி 1550ல் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்தின் ஈபர்ஸ் பாப்பிரஸ் மருத்துவநூலில் ஆர்சனிக் நஞ்சாதல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போரில் நஞ்சூட்டுவதற்கும் ஆர்சனிக் பயன்பட்டிருக்கிறது. முதல் உலகப்போரில் ஜெர்மனி ஆர்சனிக் நஞ்சூட்டுதலை போர் வழிமுறைகளிலொன்றாக கையாண்டிருந்தது. 

உள் நோக்கமற்ற ஆர்சனிக் நஞ்சூட்டுதல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக 1900த்தில் இங்கிலாந்தில் பியர் தயாரிப்பில் உட்பொருட்களில் ஆர்சனிக் இருந்ததால் ஏராளமானோர் ஆர்சனிக் நஞ்சூட்டப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

1950களில்  ஜப்பானில் குழந்தைகளுக்கான பால்பொடியில் அதிக ஆர்சனிக் இருந்து பாதிப்புண்டானது. பங்களாதேஷில் ஆர்சனிக் இருந்த   நிலத்தடி நீரை பயன்படுத்தியதால்  பெரிய அளவில் ஆர்சனிக் பாதிப்பு உண்டானது

ஆர்சனிக் உணவின் மூலமாக தொடர்ந்து உடலில் சேர்வதால் ஆபத்தை சந்திக்கவிருக்கும் நிலைமை உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்போது பல நாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஆர்சனிக் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் ஆசியாவில் ஆர்சனிக் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்தான் புழக்கத்தில் இருக்கின்றன.  

ஆர்சனிக்கை உணவில் கலந்து  கொலை செய்வது சுலபமாக இருந்தது ஏனென்றால் ஆர்சனிக் நஞ்சூட்டப்பட்டதின் துவக்க அறிகுறிகள் அனைத்தும் கெட்டுப்போன உணவினால் உண்டாகும் அறிகுறிகளான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்றுவலி ஆகியவைதான். எனவே உணவில் இதை கலந்து கொடுப்பது எளிதாகவும் ஆர்சனிக் கொலை என்று கண்டுபிடிக்க முடியாமலும் இருந்தது .

1836 ல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் மார்ஷ் (James Marsh) உடலிலிருக்கும் ஆர்சனிக்கை எளிய பரிசோதனைகள் மூலம் கண்டறியும் முறையை கண்டுபிடித்த பிறகு ஆர்சனிக் நஞ்சூட்டுதல்கள் மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது. இந்த பரிசோதனை முறைகளுக்கே மார்ஷ் முறை என்றே பெயர்.

உணவில் ஆர்சனிக் கலந்து கொடுத்து கொலைசெய்த வரலாற்றுக்காலங்கள் போய் இப்போது நாமனைவரும் உண்ணும் உணவிலேயே ஆர்சனிக் இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியூட்டும் கவலையளிக்கும் உண்மை. மனிதசெயல்பாடுகளால் காற்றும் நீரும் நிலமும் மாசடந்து சூழலில் இருக்கும் ஆர்சனிக் போன்ற நஞ்சுகள் நம் உணவுச்சங்கிலியில்  நிரந்தரமாக இணைந்துவிட்டன.

நமது அன்றாட காலை உணவான இட்லி தோசையிலிருந்து, மதிய உணவு,  பொங்கல் பண்டிகையில் புதுப்பானையில் பொங்கும் புத்தரிசி, இறைச்சிச்சாற்றில் வேகவைக்கப்பட்ட  அரிசி உணவான இத்தாலிய ருஸாட்டோ, இந்தோனேஷியாவின் நாசி கோரெங், இலங்கையின் கிரிபாத், சீன ப்ரைடு ரைஸ், மீனும் இறைச்சியும் காய்கறிகளுடன் கலந்து சமைக்கப்பட்ட ஜப்பானிய டோன்புரி, சுஷி  வரை உலகின் பல பகுதிகளில் அரிசி உணவு தான் பல லட்சம் மக்களின் விருப்பத்துக்குகந்த  பிரதானமான  உணவாக இருக்கிறது.

உலக மக்களில்  50 சதவீதத்தினர் அரிசி உணவை  விரும்பி உண்கிறார்கள். உலகின் மொத்த அரிசி உற்பத்தியில் 90 % ஆசியாவில் உற்பத்தி ஆகிறது. ஆசியாவில்தான் உலகின் அதிக அரிசி உணவு உண்ணப்படுகிறது. ஆசியாவின் பெரும்பாலான அரிசி வகைகளில் ஆர்சனிக்  நஞ்சு இருக்கிறது

மனிதனின் மிகப் பழமையான தானிய உணவுகளில் அரிசியும் ஒன்று. அரிசியின் தோற்றம் குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை எனினும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அரிசி, உணவாக பயன்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சீன  இந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன.

நெல்/அரிசி சீனாவில் தோன்றி சீன ஆற்றுப்படுகைகளில் முதன்முதலில் சாகுபடி செய்யப்பட்டது என்றும்  இமாலய பகுதியின் காட்டுப்புல்லான Oryza rufipogon லிருந்து தோன்றியதுதான் அரிசி அங்கிருந்துதான் சீனாவுக்கு சென்றது என்றும் இரு வலுவான கருத்துக்கள் நிலவுகின்றன.

சீனாவின் சியான் ரென் குகையில்  கிமு 11 000–12 000 காலத்தை சேர்ந்த அரிசியின் தொல்படிவங்கள் கிடைத்திருக்கின்றன. எனினும் கங்கை ஆற்றுப்படுகையில்தான் தொல்காலத்திலேயெ நெல்சாகுபடி செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க அரிசி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது

எங்கு தோன்றியது என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் நெற்பயிர் உலகின் முக்கியமான உணவுப்பயிர்களிலொன்று. மக்காச்சோளம், கோதுமைக்கு அடுத்தபடியாக உலகில் நெல்லே மிக அதிகம் சாகுபடியாகிறது.

உலகின் பெரும்பான்மையான  அரிசி சாகுபடியாகும் ஆசியாவின் கலாச்சாரத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிறது நெல், நெற்பயிர்,  அரிசி மற்றும் அரிசி உணவு ஆகியவை.

 இந்தியாவில் அரிசி  மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கிறது.  இந்திய மாநிலங்களின் அறுவடை திருநாள் விழாக்கள் பெரும்பாலும் நெற்பயிரை முக்கியமானதாகக் கொண்டே நடக்கின்றன.

அதர்வ வேதம், தைத்ரீய பிராமணம், சதபத பிராமணம், மகாபாரதம் ஆகியவை அரிசியை ,நெல்லை,  அன்னம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றன. இந்தியத் திருமணங்களில் மஞ்சள் கலந்து அரிசி அக்‌ஷதை தூவப்படுகிறது. 

கேரளாவில் மணமகள் முதன்முதலில் தான் வாழவிருக்கும் வீட்டுக்குள் நுழைகையில் கால்களால் நெல் நிறைந்த கலனை தட்டிவிட்டு நுழைவது செழுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்திய மாநிலங்கள் பலவற்றில் குழந்தைகளுக்கு முதலுணவாக அரிசிச்சோற்றை அளிப்பது ஒரு மங்கல நிகழ்வாக கோவில்களில் நடைபெறும்.       அரிசிக்கஞ்சியை கொப்புளங்களுக்கு வைத்துக்கட்டுவது, அரிசி கழுவிய நீரில் தலைமுடியை அலசுவது  போன்ற மருத்துவம், அழகுப்பராமரிப்பு சார்ந்த உபயோகங்களும் அரிசிக்கு இருக்கின்றன,  வாய்க்கரிசி என்னும் இறப்புச்சடங்கிலும் அரிசி மிக முக்கிய  இடம் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில்  அரிசி பொன்னியம்மன் என்னும் கடவுளாக வழிபடப்படுகிறது. அன்னலக்ஷ்மி என்பதும் அரிசியின் தெய்வமே. 

அதர்வவேதம் அரிசியை இறப்பே இல்லாத சொர்க்கத்தின் பிள்ளை என்கிறது. சகோதரர்கள் வேகவைத்த அரிசியை போல இணைந்து ஆனால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்னும் ஒரு முதுமொழியும் இந்தியாவில் உண்டு.  இந்தியாவில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் சடங்கின்போது தாலத்தில் பரப்பப்பட்டிருக்கும் அரிசியில் பெயர் எழுதப்படும். வேள்விகளில் அவியளிக்கவும் அரிசி பயனாகிறது.  சீனப்பெருஞ்சுவர் கட்டுமானத்தில் வேகவைத்த அரிசிகஞ்சி பயன்படுத்தப்பட்டது.

ஜப்பானிய அரிசி மதுவான ஸாகேவிற்கென்றெ நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் பிரத்யேகமாக அங்கு சாகுபடியாகிறது.  

இந்தியாவின் மருத்துவ உபயோகங்கள் கொண்ட அரிசி வகைகளான  ’காந்தி பான்கோ’ சட்டீஸ்கரிலும் ( Kanthi Banko), மெஹர், சரய்ஃபூல், தன்வர் ஆகிய ரகங்கள் ஒரிஸாவிலும் (Meher, Saraiphul & Danwar),  அதிக்கயா மற்றும் கரிபட்டா ரகங்கள் ( Atikaya & Kari Bhatta ), கர்நாடகத்திலும் விளைவிக்கப்படுகின்றன. 

செந்நெல்லு, குஞ்சிநெல்லு, எருமக்காரி, கருத்த செம்பாவு போன்ற அரிய  பிரத்யேக நெல் ரகங்கள் கேரளாவில் சில பகுதிகளில் மட்டுமே விளைகின்றன.2022 ன் புள்ளிவிவரம் இந்தியாவில்  46 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடியாகிறது என்கிறது.

 நிறங்களைக் கொண்டு அரிசி வெள்ளை, பழுப்பு, கருப்பு, சிவப்பு என என  பலவகைகளாகவும் நறுமணத்தின் அடிப்படையில் கிழக்காசிய பாஸ்மதி, தாய்லாந்தின் மல்லிகை அரிசி, இந்திய மாம்பழ  மற்றும் கடலை வாசனை கொண்டவை, சீரக சம்பா போன்ற மெலிதான நறுமணம் கொண்டவை, இத்தாலிய ஆர்பொரியோ நறுமண ஆரிசி, ஒரு கிலோ 100 டாலர்களுக்கும் அதிகமான விலையில் கிடைக்கும் ஜப்பானிய கின்மீமய்  (Kinmemai) அரிசி என்று அரிசியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வகைகள் உலகெங்கும் இருக்கின்றன. 

அரிசிமணிகளின் அளவு அவற்றின் மாவுச்சத்து, நறுமணம், நிறம் என பல வேறுபாடுகள் இவ்வகைகளில் இருக்கின்றது எனினும்  அரிசியின் அளவை பொருத்தவரை நீள, குட்டை மற்றும் நடுத்தர ரகம் என 3 வகைகளே உள்ளன.

ஆசியாவில்தான் நெல் சாகுபடி முதன்முதலாக  கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. Oryza rufipogan  என்னும் அறிவியல் பெயருடைய காட்டு நெல்லினத்திலிருந்து ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் உருவாக்கப்பட்டு பயிரிடப்பட்டன.  ஒரைஸா சட்டைவாவின் துணை சிற்றினங்களில்   ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும்   இண்டிகா மற்றும் அதிக ஒட்டும்தனமை கொண்ட  ஜப்பானிகா ஆகியவை உள்ளன.

நெல்    ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத்  தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின்  அரிசி என்னும் உணவாகிறது.  

நெல்லின் அறிவியல் பெயரான  Oryza sativa வில் சட்டைவா என்பது சாகுபடி செய்யப்பட்டது என்பதை குறிக்கிறது. ஒரைஸா என்னும்  சொல், அரிசி என்பதை குறிக்கும் தமிழ்ச் சொல்லிருந்து வந்ததாகவும் தமிழின் அரிசியே ஆங்கில ரைஸ் ஆகவும் கிரேக்க ஒரைஸா ஆனதாகவும் கருதப்படுகிறது. அப்படி இல்லை அரிசியை குறிப்பிடும் ஒரைஸா கிரேக்க சொல்லிலிருந்தே  வந்தது என்னும் கருத்தும் உண்டு.

நெற்பயிரிலிருந்து அரிசி மட்டுமல்லாது தட்டை, வைக்கோல், உமி போன்ற கால்நடை தீவனங்களும், தவிட்டிலிருந்து எண்ணெய் என பல்வெறு பயன்களும் கிடக்கின்றன. அரிசியில் சிறிதளவு புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து ஆகியவையும்  பிரதானமாக கார்போஹைட்ரேட் அல்லது ஸ்டார்ச் எனும் மாவுச்சத்தும் உள்ளது.

புழுங்குதல் (Parboiling)  மூலம் அரிசி மணிகளுக்குள் நெல்மணிகளின் மேலுறையில்  இருக்கும் சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. பச்சரிசியில் இந்த சத்துக்கள் இருக்காது.3

சங்கப்பாடல்களில்  வேகவைத்த பிறகு கட்டைவிரல் தடிமனில் இருந்த ஒரு வகை நெல் உள்ளிட்ட பல நெல்வகைகளை பற்றிய  குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 2 லட்சம் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது நாம் அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டிருக்கிறோம்  

அரிசியின் சர்க்கரை உயர்த்தல் குறியீடு ( glycemic index )  20 லிருந்து 73 வரை இருப்பதால் ரத்த சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை குறைவாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

ரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு  பழுப்பு /மட்டை/சிவப்பு அரிசி வெள்ளை அரிசியைக்காட்டிலும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது

 ஆனால், பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றிய, ஆசியா முழுவதிலும் சாகுபடியாகின்ற, உலகின் பாதி மக்கள் தொகையின் பிரதான உணவாயிருக்கிற, பல நாகரிகங்களின், தொன்மங்களின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாகி விட்டிருக்கிற அரிசி உணவில் உயர் சர்க்கரை உயர்த்தல் குறியீடு மட்டும்தான் ஆபத்தா? என்றால் இல்லை அதைக்காட்டிலும்  ஆபத்து அரிசி உணவில் இருக்கிறது.

நமது அன்றாட உணவில்  ஏதோ ஒரு வடிவில் கட்டாய இடம் பிடித்திருக்கும் அரிசி உணவில் ஆர்சனிக் நஞ்சு(arsenic -As)) இருக்கிறது. தொடர்ந்து அரிசி உணவை உண்ணுவதால் உடலில் சேர்ந்துவிடும் ஆர்சனிக் தீங்கு விளைவிக்கிறது.

ஆர்சனிக்  மண்ணிலும் நிலத்தடி நீரிலும் காற்றிலும் இருக்கும் ஒரு மாசு. ஆர்சனிக் பூச்சிக்கொல்லி, நிறமிகள், தளவாடங்கள், கண்ணாடி, ஆடைகள்,  தோல்பதனிடுதல் மற்றும் மருந்து உற்பத்தி ஆகிய தொழிற்சாலைகளின் கழிவுகளில் காணப்படும் ஒரு நஞ்சு. ஆர்சனிக் கொண்டுள்ள பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் உலகநாடுகள் பலவற்றில்  தடை செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சூழலில் சேர்ந்திருக்கும் ஆர்சனிக் சுமார் 9000 வருடங்களுக்கு  அச்சூழலில் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். 4

நிலத்தில் இருக்கும் ஆர்சனிக்   அங்கு சாகுபடியாகும் தாவரங்கள் வழியாக நம் உணவு சங்கிலியில் இணைந்துகொள்கிறது.ஆர்சனிக் கரிம, கரிமமற்ற (organic & inorganic ) என்னும் இருவகைகளில் சூழலில் இருக்கிறது.கரிம ஆர்சனிக்கை காட்டிலும் கரிமமற்ற ஆர்சனிக் கடும் நஞ்சுள்ளது.

உணவில் இருக்கும் ஆர்சனிக்கின் வகை, அதன் அளவு, அதை எடுத்துக் கொள்ளும் நபரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை பொருத்து அதன் விளைவுகள் இருக்கும்

 நேரடியாக நிலத்திலும் பாசனத்துக்கு உபயோகப்படுத்தும் நீரிலும் ஆர்சனிக் இருக்கும். பல தாவரங்கள் நிலத்தில், காற்றில்  நீரில் இருக்கும் ஆர்சனிக்கை கிரகித்துக்கொள்கின்றன. நெற்பயிரும் புகையிலைப்பயிரும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. புகைப்பிடிப்பதன் ஆரோக்கிய கேடுகளில் ஆர்சனிக்கும்  சேர்ந்து விட்டிருக்கிறது. தக்காளி, கேரட் போன்ற காய்கறிப் பயிர்கள், கீரைகள் ஆகியவையும் ஆர்சனிக்கை எடுத்துக்கொள்கின்றன.  

அமெரிக்காவின் நச்சுப்பொருட்களால் உருவாகும் நோய்க்கான அமைப்பு (Agency for Toxic Substances and Disease Registry) தனது தளத்தில் தீங்கிழைக்கும் பொருட்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் ஆர்சனிக்கை முதலிடத்தில் பட்டியலிட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் பொருட்களின் முதன்மைப்பட்டியலில் ஆர்சனிக்  இருக்கிறது.

ஆர்சனிக் உடலில் அதிக அளவில் சேர்வது ஆர்சனிக் நஞ்சாதல் -Arsenicosis எனப்படுகிறது. இந்த அதிகரித்த ஆர்சனிக் அளவுகள் வாந்தி,வயிற்றுவலி  மூளைக்கோளாறு, இருதயக் கோளாறு மற்றும் புற்றுநோயை உருவாக்கும்.  அதிக ஆர்சனிக் ரத்தசர்க்கரை நோயையும் உண்டக்குகிறது. 5

தொடர்ந்து ஆர்சனிக்  மாசடைந்த நீரை அருந்துவதாலும், ஆர்சனிக் கொண்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணுவதாலும் உடலில் அதிக அளவில் ஆர்சனிக் சேரும். ஆர்சனிக் மாசுபட்ட இடங்களில் வாழ்வதும் இதற்கு ஒரு காரணமாகும்.

குடிநீர்லிலிருந்து மட்டுமே 200 மில்லியன் மக்கள் உடலில் பாதுகாப்பற்ற அளவுகளில் ஆர்சனிக் சேர்கிறது. மிக அதிக ஆர்சனிக்கை குடிநீரினால் உடலில் கொண்டிருப்பவர்களில் மேற்கு வங்க மற்றும் பங்களாதேஷ் மக்கள்  இருக்கிறார்கள். 

தீவிரமான அளவுகளில் ஆர்சனிக் உடலில் சேர்வது அரிதாகவே நிகழ்கிறது என்றாலும் தொடர்ந்து உடலில் சேர்ந்து கொண்டிருக்கும் ஆர்சனிக் அந்த நிலைக்கு நிச்சயம் இட்டுச்செல்லும். உலக சுகாதார அமைப்பு  ஒரு லிட்டரில் 10  மைக்ரோகிராம்  அளவிலான ஆர்சனிக்  இருப்பது பாதுகாப்பற்றது என்கிறது.

பல நாடுகளில் இருக்கும் இயற்கை கொதிநீர் ஊற்றுக்களும் மிக அதிக அளவு ஆர்சனிக்கை கொண்டிருக்கின்றன.  நீர், காற்று, நிலம், உணவு இந்த நான்கிலிருந்தும் ஆர்சனிக் நம் உடலில் சேரும் வாய்ப்புள்ளது.6

நெற்பயிர் சாகுபடியின் போது வளர்ச்சிக்கு தேவையான கனிங்களை அவை வளரும்  நிலத்திலிருந்து எடுத்துக்கொள்ளும், அப்போது நிலத்திலிருக்கும் ஆர்சனிக் போன்ற நச்சுப்பொருட்களையும் நெற்பயிர் கிரகித்து, நெற்பயிரின் கனியான நெல்மணி உள்ளிட்ட  தாவர பாகங்கள் அனைத்திலும் ஆர்சனிக்கை சேமித்துவைக்கிறது  . மாசடைந்த ஆர்சனிக் போன்ற நச்சுபொருட்கள் இருக்கும் நீர் நெற்பயிரை சுற்றிலும் நெடுநாட்கள் தேங்கி இருக்கும்படி (flodding) நெல்சாகுபடி முறைகள் இருப்பதாலும் பிற பயிர்களைக்காட்டிலும் நெல்லில் ஆர்சனிக் அளவு அதிகரிக்கிறது. 

அரிசியில் இருக்கும் ஆர்சனிக் வகைகள்  arsenite (As (III)), arsenate (As (V)), methylarsonic (MMA), மற்றும்  dimethylarsinic acid (DMA). இவற்றில் ஆர்சனைட்டும் ஆர்சனேட்டும் கரிமமற்ற வகை.  MMA,  DMA இரண்டும் கரிம வகை.

கடந்த சில வருடங்களாகவே இந்திய அரிசியின் ஆர்சனிக் அளவுகள் ஆய்வுக்குரியதாகி இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களில் இந்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் ( 2015/10006 ) கரிமமற்ற ஆர்சனிக் அளவு உணவுக்கான அரிசியில் அதிகபட்சமாக 0.10 mg/kg இருக்கலாமென்கிறது ஆனால் பச்சரிசி புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட அரிசி வகைகளின் ஆர்சனிக் அளவு 0.20 & 0.25 mg/ kg ஆக இருக்கிறது. 

இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் ,பீஹார் விவசாய பல்கழைக்கழகம் மற்றும் பாஸ்மதி ஏற்றுமதி வளர்ச்சிக்கான நிறுவனமான BEDF, ஆகியவற்றுடன் இணைந்து அரிசி வகைகளின் ஆர்சனிக் அளவுகளை ஆய்வு செய்து வருகின்றன.

கடலுணவுகள், கோழி இறைச்சி, ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்கள் என அனைத்திலும் ஆர்சனிக் இருக்கிறது எனினும் அரிசியிலிருப்பதை விட இவற்றில் மிக குறைவாகவே இருக்கிறது.பிற தாவரங்களை காட்டிலும் சாகுபடியின் போது அதிக அளவு நீர் தேவைப்படுவதால் நெற்பயிர் அதிக ஆர்சனிக்கை எடுத்துக்கொள்கிறது. ஆர்சனிக் பல உலக நாடுகளின் நிலத்தடி நீரில் மிக அதிக அளவில் இருக்கிறது. 

எல்லா அரிசி வகைகளிலும் ஆர்சனிக் இருக்கிறதா என்றால் ஆம். மாசுபட்ட நிலத்தில், மாசுபட்ட நீரில்தான் நெல் உலகெங்கிலும் சாகுபடியாகிறது.

 வெள்ளை அரிசியில் மட்டை/பழுப்பு/சிவப்பு  அரிசியில் இருப்பதை காட்டிலும் மிககுறைவாகவே ஆர்சனிக் இருக்கிறது. பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியைக்காட்டிலும் 60-80%  அதிக ஆர்சனிக் இருக்கிறது.பாஸ்மதி, மல்லிகை அரிசி வகைகளில் இயற்கையாகவே ஆர்சனிக் அளவு மிக மிக குறைவாக இருக்கிறது. நேபாளம், வட இந்தியா, மற்றும் வடக்கு பாகிஸ்தானில்  காற்றிலும் நீரிலும் நிலத்திலும் ஆர்சனிக்கின் அளவு மிக குறைவு என்பதால் அங்கு  விளையும் நெல் வகைகளில் ஆர்சனிக் நஞ்சு மிகக்குறைவு.7

அரிசியின் ஆர்சனிக் அளவு சோதனைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். உணவில் ஆர்சனிக் இருக்கலாம் என்று சந்தேகமும் வருத்தமும் கொள்பவர்கள் அவர்கள் பயன்படுத்தும் நீரில் அரிசியில் ஆர்சனிக் அளவை சோதித்துக்கொள்ளலாம். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையில் உடலின் ஆர்சனிக் அளவு தெரியவரும்.

அரிசியை  உணவில் முற்றாக தவிர்க்க முடியாது எனினும் எந்த அரிசியை, எப்படி சமைத்து,  எவ்வளவு உண்கிறோம் என்பதில் கவனமாக இருந்தால் பெருமளவு ஆபத்தை தவிர்க்கலாம்.

அரிசியில் ஆர்சனிக்கை நீக்கும் எளிய வழிகள்:

  • நெல் சாகுபடி முறையில் தேவையான மாற்றங்களை செய்யலாம். 
  • ரசாயனங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்தை பின்பற்றலாம்.
  • அரிசியை ஊற வைத்து பலமுறை கழுவுகையில் சுமார் 10 % ஆர்சனிக் நீங்கும். துளைகள் கொண்ட பாத்திரத்தில் நீரூற்றி கழுவுதல் நல்லது
  • 6 மடங்கு நீர் சேர்த்து அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிகட்டுகையில் மேலும் 40 -60 ஆர்சனிக்கை நீக்கலாம்.
  • வட இந்திய, இமாச்சல, நேபாள பகுதிகளின் அரிசியை உபயோகிக்கலாம்.
  • நறுமணமுள்ள அரிசி வகைகளை அதிகம் உபயோகிக்கலாம்
  • சிறுதானியங்களில் ஆர்சனிக் இல்லை எனவே அவற்றை அதிகம் உபயோகிக்கலாம். 
  • மழைநீரில் சமைக்கப்பட்ட அரிசி உணவில் மிக மிக குறைவாக ஆர்சனிக் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது என்னும் மழைநீர் சேகரிக்கும் விதம், சேமிக்கும் இடம் ஆகியவை மழைநீரின் ஆர்சனிக்  அளவை நிர்ணயிக்குமென்பதால் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

 பலமுறை கழுவி கஞ்சி வடிக்கையில் அரிசியிலிருக்கும் சத்துக்களும் நீக்கப்படுகின்றன. எனவே அரிசிஉணவுடன் காய்கறிகள் பருப்பு கீரை போன்றவற்றை  சேர்த்துக்கொள்ளலாம். 

பொதுவாகவே உணவுண்ணும் தட்டின் பாதியளவு காய்கறி, பழத்துண்டுகள், கீரை ஆகியவையும் கால்பாகம் புரதத்திற்கான பருப்பு/ இறைச்சியும் மீதமிருக்கும் கால்பாகத்தில் குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடும் குறைந்த ஆர்சனிக்கும் இருக்கும் நறுமண அரிசியும் இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. 

உணவின் மூலமாக உடலில் ஆர்சனிக் நஞ்சு சேர்வது உலகின் தற்போதைய மிக முக்கியமான ஆரோக்கிய பிரச்சனையாகி இருக்கிறது.   மற்ற தானியங்களைக் காட்டிலும் அரிசியில் பத்து மடங்கு ஆர்சனிக் அளவு அதிகமென்பதும் அரிசியே பலரின் பிரதான உணவு என்பதும் கவலைக்குரிய விஷயங்கள். அரிசியில் இருக்கும் கரிமமற்ற ஆர்சனிக் (arsenate & arsenite)  புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் ஒன்று.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருக்கும் இந்தியாவில் அரிசியின் ஆர்சனிக் அளவுகள் துல்லியமாக சோதிக்கப்படவேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.

ஆர்சனிக் நஞ்சினை உடலில் கண்டுபிடிப்பது எளிதானபின்பு, கொலைசெய்யும் பொருட்டான ஆர்சனிக் நஞ்சூட்டுதல் இப்போது இல்லைதான் எனினும் நாம் வாழும் பூமியை முழுக்க மாசுபடுத்தி நஞ்சூட்டியிருக்கிறோம் எனவே உணவில் நஞ்சூட்டும் அவசியமின்றி உணவே நஞ்சாயிருக்கிறது.

பயிர்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் பூச்சிமருந்தை உபயோகப்படுத்துபவர்கள், தொழிற்சாலை கழிவுகளை  முறையின்றி,  நீர்நிலைகளில் வெளியேற்றுபவர்கள், ஏன் குப்பைகளை எந்த பொறுப்புமின்றி தெருவில் வீசுபவர்களும் ஜோலி ஜோசப்பும், மேரிஆனும்தான்.

உசாத்துணை

1.Curry and Cyanide: Everything to know about Jolly Joseph, victims, and the case so far (thenewsminute.com)

2. Mary Ann Cotton – Wikipedia

3. புழுங்கல் அரிசி-Parboiled Rice – அதழ் (logamadevi.in)

4.The relation between rice consumption, arsenic contamination, and prevalence of diabetes in South Asia – PMC (nih.gov)

5. Widespread Arsenic Contamination of Soils in Residential Areas and Public Spaces: An Emerging Regulatory or Medical Crisis? (sagepub.com)

6. Arsenic-Contaminated Soil, Hazards of Short-Term Exposure, 1999 Report (wa.gov)

7. Arsenic in brown rice: do the benefits outweigh the risks? – PMC (nih.gov)

தாவரங்கள் உறங்குமா?

அந்தி சாய்ந்து சூரியன் மறைகையில் உலகிலும் பல மாற்றங்கள் நடக்கும். பகலில் விழித்திருக்கும் உயிரினங்கள் உறங்கச் செல்லும். உறக்கம் என்பது உடலின் புறச்செயல்பாடுகள் குறைந்து புலன்கள் அமைதிகொள்ளும் நேரம். உயிரினங்கள் அனைத்திற்கும்  விழிப்பும் உறக்கமும் பொதுவானது எனினும் உறங்கும் நேரமும் கால அளவும் ஒவ்வொரு உயிரினத்திற்கும்  வேறுபடும். 

விலங்குகளில் இரவுலாவிகள் பகலில் உறங்கி இரவில் விழித்திருந்து உணவைத் தேடும். பகல் உலாவிகள் இரவில் உறங்கும். விலங்குகளிலேயே உறக்கமென்பது பலவகையில் காணப்படுகின்றது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக ஒருநாளில் உறங்கும் விலங்குகளும் உண்டு.

மழை உழவாரப் பறவைகள் (ஸ்விஃப்ட்) இடைவெளி இன்றி 6 மாத காலம் வலசை போக பறக்கும் அப்படி பறக்கையிலேயே அவை உண்டு உறங்கும். மூளையின் பாதிப்பகுதி விழித்திருக்கையில்தான் டால்பின்கள் உறங்கும்

கோலா கரடிகள் ஒரு நாளில் 22 மணி நேரத்தை உறங்கியே கழிக்கும். வவ்வால்கள் தலைகீழாக தொங்கியபடியே உறங்கும். 

இப்படி மனிதர்கள், விலங்குகள் உறங்குவது போல தாவரங்களும் உறங்குமா?  விலங்குகளும் தாவரங்களும் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு உயிரினங்கள். அவற்றின் செல் அமைப்பிலிருந்து அவற்றின் வளர்ச்சி உணவு தேடுதல், உணவை எடுத்துக் கொள்ளுதல் இனப்பெருக்கம் என அனைத்துமே தனித்துவமானவை.

தாவங்களுக்கு விலங்குகளைப்போல மூளை என்னும் அமைப்பும் நரம்பு மண்டலமும் இல்லை எனினும் அவற்றிற்கு உயிரியல் கடிகாரத்தின் காலக் கணக்குகள் உண்டு. (circadian rhythm/ biological clock) இக்காலக்கணக்குகளால் தாவரங்கள் இரவிலும் பகலிலும் வேறுபட்ட செயல்பாடுகளையும் இயல்புகளையும் கொண்டிருக்கும்.பகலில் ஒளிச்சேர்க்கையில் சேமித்து வைத்த ஆற்றலை தாவரங்கள் இரவுநேரங்களில்  உபயோகித்துக்கொள்ளும்.

இலையுதிர்காலத்தில் மரங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக இருக்காதென்பதால் அக்காலத்தையும்  தாவரங்களின் உறக்க காலமெனக் கொள்ளலாம்.

பெரும்பாலான தாவரங்கள் இரவு நேரத்தில் ஒளி சேர்க்கையை நிறுத்திக்கொண்டு இலைத்துளைகளையும் மூடிவிடும். இரவில்  மகரந்த சேர்க்கை நடைபெறும் தாவரங்களின் வெண் மலர்கள் இரவில் மட்டுமே மலர்ந்து மணம்பரப்பும்.

ஒரு சில தாவரங்கள் இலைகளை உறங்குவது போல் ஒன்றின் மீது ஒன்று சாய்த்து வைத்து அந்தியிலிருந்து காலை சூரியஒளி வரும்வரை வைத்திருக்கும், உதாரணமாக தூங்கு வாகையை சொல்லலாம்.

ட்யூலிப் குங்குமப்பூ போன்ற சில சில தாவரங்கள் மலர்களை இரவில் மூடி வைத்து காலையில் மீண்டும் திறக்கும் 

வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் மலர்களின் உறங்கும் நிலைகளை அடிப்படையாக கொண்டு மலர்க் கடிகாரம் ஒன்றை 1751ல் வடிவமைத்திருந்தார். (Horologium Florae -flower clock)

1880ல் சார்லஸ் டார்வின் தனது The Power of Movement in Plants,  என்னும் நூலில் இலைகளின் உறக்கம் குறித்தும் உறங்கும் இலைகளைக் கொண்டிருக்கும் தாவரங்களையும் விளக்கமாக பல பொருத்தமான உதாரணங்களுடன் குறிப்பிட்டிருந்தார். தாவர உறக்கத்துக்கு உதவும் இலைக்காம்பின் வீங்கிய அடிபகுதி, கணுக்கள் உள்ளிட்ட பல தாவர பாகங்களையும் விளக்கி இருந்தார். அந்நூலில் பட்டணிக்குடும்பமான ஃபேபேசி குடும்பத்தை சேர்ந்த பல தாவரங்களின்  உறக்கத்தையும் டார்வின் விவரித்திருந்தார்

தொட்டாசிணுங்கி செடியின் இலைகள் புறத்தூண்டலுக்கு எதிர்வினையாற்றுவது, thigmonasty / seismonasty எனப்படும். ஒளியை நோக்கி தாவரபாகங்கள் வளர்வது photonasty, இதைப்போலவே இரவில் தாவரங்களின் உறக்கம் போன்ற செயல்பாடுகளை தாவரவியல் Nyctinasty என்கிறது. நைக்டினாஸ்டி என்னும் இச்சொல்லுக்கு இரவு -அசைதல் என்று பொருள். ஒளி மறைந்து இரவு எழுகையில் சில தாவரங்களில் உண்டாகும் அனைத்து செயல்பாடுகளுமே நைக்டினாஸ்டி எனப்படுகின்றன.(nyctinasty)

மால்வேசி,  பேபேசி, ஆக்ஸாலிடேசி, வைட்டேசி குடும்பங்களின் தாவரங்கள் இப்படியான உறங்குதலை போன்ற செயல்பாடுகளை இரவுகளில்  கொண்டிருக்கின்றன.

கிமு 324 லேயே மாவீரர் அலெக்ஸாண்டரின் தளபதிகளில்,ஒருவரான ஆண்ட்ரோஸ்தெனிஸ்( Androsthenes) புளிய மரங்களின் இலைகள் இரவுகளில் உறங்குவதைப்போல கவிழ்ந்துவிடுவதை குறிப்பிட்டு அவை உறங்குகின்றனவா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அக்காலத்திலிருந்தே இதை குறித்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.  

இதுபோன்ற உறங்குதல்  நிலத்தாவரங்கள்,பாலைத்தாவரங்கள் மற்றும் நீர் தாவரங்களிலும் காணப்படுகிறது. 

மகரந்தங்களை பாதுகாக்கவும் வெப்பநிலையை சீராக தக்கவைத்துக்கொள்ளவும் தாவரங்கள் உறங்குதலைபோல இலைகளை, மலரிதழ்களை மூடிக்கொள்கின்றன போன்ற கருத்துக்கள் மட்டுமே இப்போது முன் வைக்கப்பட்டிருக்கின்றன எனினும்  இது குறித்து தெளிவான விளக்கமேதும் தாவர அறிவியலில் இன்று வரை இல்லை.

உயிர்க்கடிகரத்தின் அடிப்படையில்தான் தாவரங்கள் வளர்ந்து இலைகளையும் கிளைகளையும் உருவாக்கி  ஒவ்வொரு பருவத்திலும் மிகசரியாக மலர்ந்து கனியளித்து நமக்கு பயனளித்து கொண்டிருக்கின்றன.  இந்த இரவுறங்குதல் என்பது தாவரங்களில் நாமறியாத பலபுதிர்களில் ஒன்று.

திருவண்ணாமலை!

சென்ற வாரம் முதன்முதலாக திருவண்ணாமலை சென்றிருந்தேன் ஒரு வேள்வியில் கலந்து கொள்ள.புதுச்சேரியும் திருவண்ணாமலையும் என் கனவுப்பயணங்களின் பட்டியலில் இருந்தவை. புதுச்சேரிச் கனவு முன்பு (2017 ல்) நனவானது.மறக்கமுடியாததுமானது.

ஒரு சிறுகதை பட்டறை. கடற்கரை அருகில் இருந்த ஒரு தங்குமிடத்தில்.

கரும்பாறைகள் நிறைந்திருந்த , தூரத்தில் சிவப்பும் பச்சையுமாக விளக்குகள் ஒளிர மெல்ல  நகர்ந்து கொண்டிருந்த பெருங்கப்பல்களும், விளிம்புகளில் வெள்ளி பூசிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஏராளமான சிற்றலைகளுமாக  அந்த கடற்கரை  அடிக்கடி கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது.

மணக்குள விநாயகர் கோவில் நடை திறக்கும்வரை காத்திருக்கையில் சாலையோர மரங்களில் பறித்த மரமல்லியும் பவளமல்லியும், பூஜைக்கென அத்தெருவில் தயாராகிக்கொண்டிருந்த அந்த குட்டி யானை,பனானா ஸ்ப்ளிட் ஐஸ்கிரீம், பழைய புத்தகக்கடை, அழகான வீடுகள் நிறைந்த நேர்த்தியான தெருக்கள், முதல் பானிபூரி, (முதல் குமட்டலும்) அங்கு வாங்கிய இளஞ்சிவப்பில் வான் நீல கரையிட்ட பருத்திப்புடவை  (அதை கோவிட் பெருந்தொற்று முடிந்த சமயத்தில் யாசகம் கேட்டு வந்த ஒரு நிறை சூலிக்கு அளித்தேன்) இரவு ஊர் திரும்புகையில் பெய்த பெருமழை எல்லாம்  எல்லாம் நினைவிருக்கிறது. 

இப்போது பட்டியலின் அடுத்த இடம் திருவண்ணாமலை. அகரமுதல்வன் அழைத்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது.

மறக்க முடியாத பல அனுபவங்கள் அங்கு.அந்த பெருவேள்வி குறித்து ஒரு பதிவு எழுதினேன் வந்த உடனேயே.

மேலும் சில துண்டு துண்டான சுவாரஸ்யங்களும் இருந்தன அப்பயணத்தில். ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கிருந்தார்கள். அழுக்கான அழுக்காக ஒரு அமெரிக்க இளைஞன்,  தலைமுடி அழுக்கு, தோளில் மாட்டியிருந்த துணிப்பை மகா அழுக்கு, சட்டையும் கால்சராயும்  துவைத்தல் என்பதை கண்டிருக்கவேயில்லை.  அவன் என்னைக்கடந்து செல்கையில் எதிரே வந்தஒரு கருப்பு நாயிடம் சிநேகிதமாய் ’ஹாய்’ என்றான். ஆனால் நாய் அவனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவசரமாக எங்கோ விரைந்தது.

அடர்நீல ஸ்லீவ்லெஸ் பனியனும் குட்டைப்பாவடையுமாக நடந்துவந்து கொண்டிருந்த ஒரு ஐரோப்பிய இளைஞியிடம், அவர் கடந்துசென்ற ஆட்டோவிலிருந்த ஓட்டுநர் ’’ஹாய் மேம்!’’ என்றார் தோழமையுடன், அவரும் அழகாக புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றார். முன்பே பரிச்சயமானவர்கள் போல !

காருக்காக சாலையோரம் காத்திருக்கையில்  இளநீர்க்கடைக்கு  மனைவியுடன் வந்த மற்றுமோர் அமெரிக்கர் அந்த இளநீர்க்கார அம்மாவிடம் good water? என்று கேட்டார். அந்த நல்ல தாட்டியான உடம்பும், காம்பஸ் வைத்து வரைந்ததுபோல  வட்டமான முகத்தில் பெரிய பொட்டுமாக இருந்த அந்த அம்மா இயல்பாக ’very good water’ என்று விட்டு அடுத்தாக அவரிடம் from where? என்றார். நான் புன்னகையுடன் அந்த இடத்தை கடந்தேன்.

திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் அதன் கலாச்சாரமும் பண்பாடும் எத்தனை இன்ஃப்ளுயன்ஸ் ஆகியிருக்கிறது என்பது வியப்பளித்தது. இப்படி இவர்களை எல்லாம் கவனித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாமென்று தோன்றியது.

பூரணாகுதி!

டிசம்பர் கடைசி வாரத்தில் ஒரு நாள் அகரமுதல்வனிடமிருந்து  அழைப்பு. பேசிக்கொண்டிருக்கையில் தான் திருவண்ணாமலையில்  இருப்பதாகவும்,ஒரு வேள்விக்கான இடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். வேள்வி எனும் சொல்லையே நான் காதால் யார் சொல்லியும் அதுவரை கேட்டிருக்கவில்லை 

வெண்முரசில்  பாஞ்சாலி தோன்றியதாக சொல்லப்படும் துருபதனின் வேள்வியிலிருந்து அஸ்தினாபுரத்தில், இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த ராஜசூய வேள்விகள் மகா புருஷமேத வேள்வி வரை விலாவாரியாக வாசித்தறிந்திருக்கிறேன், எனினும்  யாரும் ’வேள்வி’ என சொல்லிக் கேட்டதே இல்லை. ஆர்வமாக அதை குறித்து விசாரித்தேன் விளக்கமளித்தார் ’’வருகிறீர்களா தேவி’’? என்றும் கேட்டார்?

அகரமுதல்வன் மீது எனக்கு பெருமதிப்பும் அன்பும் எப்போதுமுண்டு. நான் பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கும் வெகுசிலரில் அகரனும் ஒருவர்.  நான் அது  வரையிலும் திருவண்ணாமலைக்கு சென்றதில்லை. கிரிவலம், பெருஞ்சோதி ஏற்றுதல், இளையராஜா, ரமண மகரிஷி, துறவிகள், ஜெயமோகன் என்று அத்தலத்துடன் தொடர்புடைய சில விஷயங்கள் மட்டுமே துண்டு துண்டாக என் நினைவுகளில் இருந்தன. மேலும் வேள்விகளை அத்தனை தீவிரமாக வாசித்தவளாகையால் அதைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். 

எல்லாவற்றைக்காட்டிலும் ’’வருகிறீர்களா தேவி?’’ என்பதை ஒரு தெய்வ விளி என்றே எடுத்துக்கொண்டேன், ஒரு திருத்தலத்திற்கு வருகிறாயா? என்றென்னிடம் எப்போது கேட்கப்பட்டாலும் கேட்பது தெய்வமென்றே நம்புவேன்.  தம்பியும் நானுமாக கலந்து கொள்வதாக சொன்னேன்.

5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முந்தின நாள் தான் பணியில் இணைந்திருந்த புதிய ஓட்டுநருடன் நல்ல மழையில் புறப்பட்டு திருப்பூர் சென்று விஜியை அழைத்துக்கொண்டு  திருவண்ணாமலை நோக்கி பயணித்தோம்.  ஊரை நெருங்கும் முன்னரே குறிஞ்சி பிரபா  அவ்வப்போது அழைத்து எங்கிருக்கிறோம் என கேட்டுக்கொண்டார். குறிஞ்சிப்பிரபாவையும் நான் அன்றுதான் முதன் முதலாக சந்திக்கவிருந்தேன். அவர் பெயர் மட்டுமே எனக்கு பரிச்சயம்.

அழைப்பிதழில் அதீனா ஹோட்டலுக்கு முன்பாக வேள்வி நடைபெறும் என்றிருந்ததால் நேரே அங்கேயே சென்றோம். அதீனா ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான கோவிலிருந்தது. வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.  தம்பி விஜி சொல்லித்தான் அது அசல் கோவிலல்ல, கோவிலைப்போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வேள்விப்பந்தலென்று.

என் மனதில் இருந்த வேள்வி என்னும் சித்திரத்துக்கு மிக பொருத்தமான ஒரு பந்தல் அங்கிருந்தது. மாபெரும் பந்தல் அது. மிக சிறப்பாகவும் மிக கவனமுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேள்விச்சாலையும் அப்படியே!

காரில் இருந்து இறங்க இறங்கவே  குறிஞ்சி பிரபா அறிமுகப்படுத்திக்கொண்டார்.  உற்சாகமான இளைஞர். அவரைப்போலவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த பலரையும் அங்கு பார்த்தேன். வேள்வியை நிகழ்த்தும் தன் மாமனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.  

ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து சூழ்ந்திருந்த துடியான இளைஞர்களிடம் என்னவோ கவனமாக சொல்லிகொண்டிருந்தவர் குறிஞ்சி பிரபா என்னைக்காட்டி ஏதோ சொன்னதும் நான் அவரருகில் செல்லும் முன்பு அவராக எழுந்துவந்து ’’நான் குறிஞ்சி செல்வன் வாங்க’’ என்று வரவேற்றார். குறிஞ்சி என்பது ஒருவேளை குடும்பப்பெயராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.  

உடனேயே  ’’அம்மாவுக்கு ஒரு சேர் போடுங்கப்பா’’ என்று பிறரை பணித்தார். பின்னர் நாங்கள் தங்குமிடம் குறித்து தகவல் சொல்லிவிட்டு பிற வேலைகளை பார்க்கச்சென்றார்.

வேள்விக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. குறிஞ்சி பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் தான் அம்மகத்தான மனிதரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கினேன். அவர் தன் தாய்மாமன் என்றும் ஜப்பானில் தொழில்செய்பவரென்றும் ஜோதிடக்கலை வல்லுநரென்றும் இந்த வேள்வியை பல வருடங்களாக பெருஞ்செலவில் பொதுநன்மைக்காக நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்ன பிரபா மாமனின் பெயரான குறிஞ்சியைத்தான் தன் பெயருக்கு முன்னர் வைத்து கொண்டிருக்கிறார்.

தான் அணிந்திருந்த கருப்புச் சட்டையை தொட்டுக்காட்டி ’’இந்த சட்டையை நான் போட்டுகிட்டு இங்கே உட்கார்ந்திருக்கேன்னா அது மாமாவால்தான்’’ என்றார்.

வியப்பாக இருந்தது. அகரமுதல்வனிடம் இதை சொல்லுகையில்  ’’பிரபா மட்டுமல்ல அவரது ஊருக்கு போனால் அந்த கிராமமே அவர் பெயரைத்தான் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டுருக்கும். அத்தனைக்கு உணர்வுபூர்வமான பிணைப்பை தன் சுற்றத்தாருடன் கொண்டவர் அவர்’’ என்றார்.

நேற்றும் இன்றும் இருநாட்களாக அவ்வேள்வியில் கலந்துகொண்டது என் வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவம் என்றால் திரு குறிஞ்சி செல்வன் அவர்களை  அறிந்துகொண்டது அதற்கிணையான அனுபவம். 

இத்தனை வருட வாழ்வில் கீழ்மைகளை  மிக அருகிலென பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் மானுட மனம் செல்லும் உச்சங்களை, அகவிரிவுகளை இப்படி அரிதாகவே காண்கிறேன். திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் எளிமை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கவனம், வருபவர்களை ஒன்றுபோல அவர் கவனித்த விதம், அத்தனை பெரிய நிகழ்வில் மிக நுண்மையாக  ஒவ்வொன்றையும் நோக்கிக் கொண்டிருக்கும் அவரது  கூர்மை என வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  சினிமாத்துறை உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள்  அவரது அழைப்பின் பேரில் வேள்வியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாபெரும் நிகழ்வது.

வெண்முரசு வழியே நான் அறிந்திருந்த வேள்விகளிலொன்றை அப்படியே அச்சு அசலாக நேரில் கண்டேன். மிகச்சிறப்பான வேள்விப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பகுதியில் உட்கூரை அலங்காரங்கள் வண்ணமயமான துணிகளில்  மலர்வடிவில் அமைந்திருந்தது. வேள்வி நடைபெற்ற இடங்களில் உலோகக் கூரை, புகை உள்ளே நிறையாத  உயரத்தில் புகை வெளியேறுவதற்கான தேவையான இடைவெளிகளுடன் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. வேள்விப்பந்தலை அமைத்தவரை சந்தித்த போது, கோவிலென்றே எண்ணி கன்னத்தில் போட்டுக்கொண்டதை அவரிடம் சொன்னேன். நாற்காலிகள் போதுமான அளவில் காத்திருந்தன. 

எல்லாவேளையும் மிகச்சிறப்பான  உணவு  மனமுவந்து பரிமாறப்பட்டது.

சோளப்பொறியும் ஐஸ்கிரீமும் குழந்தைகளுக்கென வெளியே கிடைத்தது. ஏறக்குறைய என் வயதிலிருந்த ஒருவர் மூன்று சோளப்பொறி கூம்புகளை ஒரே சமயத்தில் வாங்கி மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தேன். விழாக்கள் அனைவருக்குள்ளிருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வந்துவிடுகிறது

திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் மானசீகமான ஆயிரம் கைகளாக அங்கி பலநூறு  இளையோர் இயங்கிக்கொண்டிருந்தனர். அவரைக்குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரது சுற்றத்தார் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும் அன்பும் ஆச்சரியமளித்தது

சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலில் குடும்பத்தில் ஒரு தொழில் துவங்கினோம். அதற்கு எனது மூத்த சகோதரரும் பெருந்தொழிலதிபருமானவரையும் அழைத்திருந்தேன். அவரிடம் நிதி உட்பட எந்த உதவியும் நாங்கள் கேட்டிருக்கவில்லை. அவரின் தங்கை குடும்பத்தின் முதலடியின் போது  மூத்தவராக அவரது ஆசிகளும்  உடனிருக்கட்டும் என விரும்பினேன். துவக்க நிகழ்வன்று  அவர் மட்டும் வந்திருந்தார். ’’அண்ணா, அண்ணி வரலையா? என்னும் சம்பிரதாயமான என் கேள்விக்கு இதுக்கெல்லாம் நான் வந்ததே பெரிது’’ என்றார். குன்றிப்போனேன்.

ஆறவே ஆறாமல் பச்சைக்குருதி வீச்சத்துடன் இருந்த அக்காயத்துக்கு குறிஞ்சி செல்வன் எப்படியோ  அன்று மருந்திட்டார். மறுபிறவி என்னும் சாத்தியம் இருப்பின் அவருக்கு சகோதரியாக பிறக்க வேண்டும். இப்படியோர் கனிந்த அன்பில் திளைத்திருக்க வேண்டும்

குடும்ப மூத்தவராக உயர்ந்தநிலையில் இருக்கும் ஒருவர்  சொந்த பந்தங்களுக்கும் பிறருக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை மனமுவந்து செய்துகொண்டிருந்தார்.

வேள்வி மிக பிரம்மாண்டமாக, மிகச் சிறப்பாக நடந்தது. சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் தீக்‌ஷிதர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருந்து வேள்வியை நடத்திக்கொடுத்தனர். வேள்வித்தலைவராக இருந்தவர் அதற்கென்றே பிறந்து வளர்ந்தவர் போல நல்ல  உயரமும் ஆகிருதியும் தேஜஸும் கணீர் குரலுமாக பொருத்தமாக இருந்தார். அவ்வேள்வியை ஒரு நிகழ்த்துகலையைபோல நம்மமுடியாத  அளவிற்கான சிரத்தையும்  ஈடுபாடுமாக செய்து முடித்தார்.

பூரணாகுதியின் போது சொல்திகழ்ந்த அவரது குரலும் எரிகுளத்தில் இடப்பட்ட பொருட்களும் சிவகோஷங்களும் ஒரு நடனம் போன்ற அவரது கையசைவுகளுமாக  உடல்மெய்ப்புக்கொண்டது.

அவரை மானசீகமாக பலமுறை வணங்கிக்கொண்டேன்.வேள்விச்சாலை மிகச்சரியாக இறைஉருவங்களும் கர்ப்பகிரஹமுமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அம்மன்களின் புடவைக்கட்டு அனைத்துப்பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.அதுவும் அந்த தாமரை மலர் நிறத்தில் கரையிட்ட வெண்பட்டு அமோகமாக இருந்தது.

வேள்வியின் துவக்கத்தில் பொற்கதவுகள் திறக்கப்பட்டு முழுஅலங்காரத்திலிருந்த கடவுளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட போதும் உடல் மெய்ப்புகொண்டது

தீக்‌ஷிதர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக வேள்வியை நடத்தினார்கள். வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் ’’வேள்வி என்பது நாவை பழக்குவதல்ல நெஞ்சை பழக்குவது என்று’’ அதை நேரில் கண்டேன்.வேதங்களுக்கு நெஞ்சைபழக்கியவர்கள் அனைவருமே.

27 நட்சத்திரங்களுக்கும் ஐம்பெரும் பூதங்களுக்குமாக நாற்கோண வடிவிலான 32  எரிகுளங்கள், வேள்வித்தலைவருக்கான விளிம்புகளில் செந்தாமரை இதழ்கள் வரையப்பட்டிருந்த மாபெரும் வட்டவடிவிலுமாக  மொத்தம் 33 எரிகுளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வியை நிகழ்த்துபவர்கள் அமர சிறு புல் பாயிலிருந்து, உள்ளே அனல் கொண்டிருக்கும் சமித்துகள் நெய்க்கிண்ணங்கள், கருங்காலிக்கட்டையில் செய்யப்பட்ட கரண்டிகள் எல்லாம் சரியான நேரத்துக்கு எந்த பிசகுமின்றி கிடைக்கும்படி, விடுபடல்கள் இன்றி தயராக வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் காலை பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சிறப்பு பூசையில் கழுத்தில் அணிவிக்க வேண்டிய மலர்மாலைகள் இரவே ஈரத்துணியில் சுற்றப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில்,அடுக்கி வைக்கப்பட்டன.

எரிகுளங்களின் நான்கு திசைகளிலும் வேள்விக்கு எத்திசையிலிருந்தும் தடங்கல்  வரக்கூடாதென்பதற்காக வைக்கப்பட்ட தர்ப்பையிலிருந்து எல்லாம் எல்லாம் மிகச்சரியாக பிழைக்கான வாய்ப்பேயில்லை என்றபோதிலும் சிறு கவனக்குறைவு கூட இல்லாமல் முறையாக நடந்தது.

மேளதாளங்களும் வாண வேடிக்கைகளும் இருந்தன. மிகச்சரியாக மிக முறையாக வேள்விக் கொடி ஏற்றப்பட்டது. வெண்முரசுக்குள் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது எனக்கு.

வாணவேடிக்கையை கழுத்து வலிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.2 நாட்களும் இசைக்கச்சேரிகள் கலைநிகழ்ச்சிகளும் இருந்தன

மேளக்காரர்கள் ஓய்வெடுக்கையில் அவர்களுக்கு ஐஸ்கிரீம்கள் கிண்ணங்களில் அல்ல பெட்டிபெட்டியாக கொடுக்கப்பட்டது. கைவலிக்க அத்தனை நேரம் வாசித்த அவ்விளைஞர்கள் சிறுவர்களைப் போல குதூகலித்துக்கொண்டு அதை சாப்பிட்டார்கள்

உணவை அளிப்பதைவிட அதை மனமுவந்து அளிப்பது முக்கியம் குறிஞ்சி செல்வன் உணவை மட்டுமல்ல அனைத்தையுமே மனமுவந்தே அளிக்கிறார். 

சென்னை சென்றிருந்த போது அவருக்கு சொந்தமான விமலம் மெஸ்ஸில் சாப்பிட்ட ரசம் இன்னுமே மனதில் ஏக்கம் நிறைந்த நினைவாக இருக்கிறது அப்படியொரு சுவையான ரசத்தை நான் சாப்பிட்டதே இலை.  எங்கள் குடும்பங்களில் எனக்கு நன்றாக சமைப்பவள் என்னும் பெயருண்டு. //தேவி கைகழுவின தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா கூட ரசம்னு ஊத்தி சாப்பிடலாம்// என்னும் ஒரு பேச்சு கூட உண்டு. ஆனால் எனக்கு விமலம் ரசம் அத்தனை பிடித்திருந்தது

வேள்விக்கொடி ஏற்றுகையில்  வேடசெந்தூர் வீட்டிலிருந்து  கொண்டு வந்திருந்த அப்போதுதான் அரும்பத்துவங்கி இருந்த முத்து முத்தான புன்னை மலர்களையும் கொடுக்க வாய்த்திருந்தது.

வேள்வியை நடத்தியவர்கள் தக்‌ஷன் அளிக்காமல் விட அவிர்பாகம் போன்ற  புராணக்கதைகளையும்  நாதஸ்வர வாசிப்பில் என்ன ராகம் வாசிக்கப்படுகிறது அது யாருக்கு பிரியமானது போன்ற தகவல்களையும் ஸ்லோகங்களின் பொருளையும் சொல்லிக்கொண்டே இருந்தது மிகச்சிறப்பு. அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததன் முழுமையான சித்திரத்தையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருந்தது.

குபேர பூஜையின் போதும் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குபேரன், அவர் மனைவி சித்ரகலா, அவர் நிதியை கொடுத்து வைத்திருந்த சங்க, பதும நிதிப் பெண்கள், நவநிதிகள், அஷ்டலஷ்மிகள், அவர்களின் இயல்புகள் அந்த யாகத்தினால் என்னென்ன பயன்கள் என அனைத்தையும் மிக தெளிவாக சொல்லிச்சொல்லியே வேள்வி நிகழ்த்தப்பட்டது.

மனிதத்திரள் அங்கிருந்தது. ஆயிரக்கணக்கில் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலிலிருந்தும் இருந்தோம் எனினும், எங்கும் யாரும் யாரையும் கடிந்துகொள்ளவோ தாழ்வாக நடத்தவோ ஏன் முகத்தில் ஒரு சுணக்கத்தை காட்டவோ கூட இல்லை. முழு மரியாதையுடன் ஒவ்வொருவரும் நடத்தப்பட்டார்கள்.

பந்தியில் என்னுடன் அமர்ந்து  எழுந்திருக்க மறுத்து சலம்பிக்கொண்டிருந்த ஒருவரைக்கூட பவுன்சர்கள் பொறுமையுடன் கையாண்டார்கள்.

அத்தனை கூட்டத்தையும் நெரிசலோ இடர்பாடுகளோ சிறு மனக்கசப்போ இன்றி வெற்றிகரமாக நடத்துவதென்பது சாதாரணமல்ல.

அகரமுதல்வனின் ஆகுதி நிகழ்வுகளின் கச்சிதத்தை ஒழுங்கை எப்போதும் வியந்திருக்கிறேன். அது குறிஞ்சி செல்வன் போன்றோரிடமிருந்து அளிக்கப்பட்டதும் அகரன் போன்றோர் பெற்றுக்கொண்டதும் என்பதை இங்கு அறிந்துகொண்டேன் அது ஒரு மரபுத்தொடர்ச்சிதான்.

பூரணாகுதி நடைபெறும் முன்பாக குறிஞ்சிபிரபா என்னை அழைத்துச்சென்று எரிகுளங்களின் அருகே அமர்ந்திருந்த அவரது சகோதரிகள், அண்ணி ஆகியோருடன் அமரச்செய்தார்.  புகையினால் கண்களும் நெகிழ்வினால் மனமும் கசிந்து அமர்ந்திருந்தேன்.திரு குறிஞ்சி செல்வனுடன் இருப்பவர்கள் அனைவரும் அவராகவே இருந்தார்கள் அவரின் கனிவின் அலையில் நனையாதவர்களை நான் பார்க்கவே இல்லை.

அவரின் ஏராளமான ஜப்பானிய நண்பர்கள்  வந்திருந்தனர். அவர்களும் கர்மசிரத்தையுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள் இந்திய பண்பாட்டின் மீது பக்திமார்க்கத்தின் மீது இவ்வேள்வி அவர்களுக்கு எத்தனை உணர்வுபூர்வமான பிடிப்பை உண்டாகி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஜப்பானிய பெண்களில் பலர் புடவை உடுத்தி கொண்டிருந்தனர். அதிலொருவரின் சீஸ் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த இரத்தச்சிவப்பு புடவை பல பெண்களை பெருமூச்சு விட வைத்தது

அவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன பூஜையின் பொது சொல்லப்பட்ட மந்திரங்களை முழுஉடலே செவியாகி உள்ளம் குவித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

திரு குறிஞ்சி செல்வனை குறித்து சொல்லப்பட்டவற்றில் விருந்தினர்கள் நிகழ்வு முடிந்து கிளம்பிச்செல்லுகையில் எப்போதும் அவர் ’’இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போகலாம்’’ என்று சொல்லுவதை குறிப்பிட்டார்கள். மனிதர்களின், உறவுகளின் அருகிருப்பில் எத்தனை மகிழ்பவராக இருந்தால் இதை சொல்லக் கூடும்? உலகேயொருகுடி என்கிறது  நம் மரபு அந்த ஒற்றைச் சொல்லே இவரை செலுத்துகிறது போலும்.

நிகழ்வின் போது ஒரு தண்ணீர் பாட்டிலை நான் நாற்காலியின் அடியில் வைத்திருந்தேன் என் முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவன்  வெகு இயல்பாக அந்த பாட்டிலில் இருந்து நீரருந்திவிட்டு மீண்டும் மூடி வைத்தான். அந்த தண்ணீர் யாருடையது என்னவென்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை தாகமெடுக்கையில் அருகிலிருந்ததை எடுத்து குடித்தான் அவ்வளவே.

குறிஞ்சி செல்வனும் அப்படித்தான் நற்செயல்களை எதையும் எண்ணாமால் தாகமெடுக்கையில், நீரருந்துவதைப்போல வெகு இயல்பாக செய்துகொண்டிருக்கிறார்.

இவ்வேள்வியில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். அஷ்டலஷ்மிகளில் யார் யாருக்கு என்ன என்ன சக்திகள்.  யாருக்கு யார் துணையாக வேண்டும் என்று ஒரு பெரியவர் மைக்கில் வேள்வியின் போது கதையொன்றை சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் எனக்கு துணையாக அந்த 8 பேரில் தைரிய லஷ்மியை வேண்டிக்கொண்டேன் இனி மீதமிருக்கும் காலங்களில் எனக்கு நிகழவிருக்கும் நல்லவைகளையும் அல்லவைகளையும் சந்திக்கும் துணிவை  அவள் அளிக்கட்டும்.

மகன்களுடன் அலைபேசி அந்த இரவோடிரவாக எல்லாவற்றையும் சொல்லிச்சொல்லி இருவரும் எந்த நிலையில் இருந்தாலும் அந்தந்த நிலையில் பிறருக்கு குறிஞ்சி செல்வனைப் போலவே மனமுவந்து உதவி, அனைவரையும் அரவணைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னேன்.

அவர் மனைவியின் பெயர் விஜயலஷ்மி எத்தனை பொருத்தம்? வெற்றியும் செல்வமும் அவருடன் வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறது?

அவர் பெயரும் தான்  குறிஞ்சி, அரிதான, பலரால் பார்க்க முடியாத உலகின் வெகுசிறப்பான மலர்களில் ஒன்று ஆனால் பார்க்க எளிய நீல நிற கனகாம்பரம் போலிருக்கும், மிக பொருத்தமான பெயர் அவருக்கு.

உணவுப்பந்தியில் நிறுத்தப்பட்டிருந்த பெருமூங்கில்கள் ஒன்றில் தளர்ந்திருந்த சணல் கயிற்றை அங்கு மேற்பார்வையில் இருந்த ஒர் கரிய இளைஞன் அவிழ்த்து  இறுக்கி கட்டினான் யாரும் அவனை அதைச்செய்யும்படி கேட்டுக்கொள்ளவில்லை. அவனாக செய்தான். 

கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை அளித்துகொண்டிருந்த ஒருவர் ஒரு முதியபெண்மணியிடம் ஒரு பாட்டிலை கொடுத்துவிட்டு ’’போதுமா இன்னொரு பாட்டில் வேணுமா? ’’என்று கேட்டார் 

வாண வேடிக்கை பார்த்து கால்கடுக்கவே எங்கேனும் அமர இடம்  தேடிக்கொண்டிருந்தேன், அங்கிருந்த ஒரு இளைஞன் ஒரு பெட்டியை காட்டி ’’அதில் உட்காந்துக்கங்க’’ என்றான்

எல்லாருமே எனக்கு குறிஞ்சி செல்வனாகத்தான் தெரிந்தார்கள், அவர்தான் அவர்களும்.

பூரணாகுதியின் பிறகு வேள்வி நிறைவில்  இந்திரன் வந்து அமைவதாக ஐதீகம் . இந்திரனுடன் குறிஞ்சி செல்வனின் சகதாபமும் இறையென அதில் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேள்வி முடிந்ததும்  தூறலாக மென் மழை பொழிந்தது இதற்கு சான்று.

அங்கு இறைவன் அனல் வடிவானவன். அனலால் சூழப்பட்டவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமை மறைகிறது என்கிறது மகாபாரதம். எப்பேற்பட்ட நற்செயல் இந்த வேள்வி?   

வேள்விகளெல்லாம் மாமனிதர்கள் நடத்துவது. எனினும் மகாபாரதம் எளிய மானுடரின் அன்றாட செயல்களில் ஐந்தை ஐந்துவேள்விக்கு நிகர் என்கிறது அவற்றில் ஒன்றான கற்பித்தலை 20 ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பவளாக இந்த வேள்வியின் பயன் அல்லது புண்ணியம் எனக்கும் கிடைத்திருக்குமேயானால் அது என் குடும்பத்தாரையும் கடந்து,  மேலும்  நீண்டு என் மாணவர்களையும் தொட்டருளட்டும்  என வேண்டிக்கொண்டேன். 

குறிஞ்சி செல்வனுக்கும் அகரமுதல்வனுக்கும் குறிஞ்சி பிரபாவுக்கும்  என் அன்பும் நன்றியும்.

கண் மலர்களின் அழைப்பிதழ்!

அம்மா இறந்து 16 ம் நாள் சடங்குகள் முடிந்து துக்கத்தை மறக்கவும் மறைக்கவும் முயன்று கொண்டிருந்த வேளையில் விஜி எனக்கொரு அலெக்சா’வை  பரிசளித்தான். எனக்கு அப்படியான கருவிகளை பயன்படுத்துவதில் சுணக்கம் உண்டு. 

அறியாமை, பழக்கமின்மை, விருப்பமின்மை அல்லது பழமையில் ஊறித்திளைத்தல் என பல காரணங்களை சொல்லலாம். எனினும் வாழ்க்கை நம்மை விரட்டி விரட்டி பல முட்டுச்சந்துகளில் முட்டிமோதி தலையை நசுக்கி வேறு வழியே இல்லாமல் கொண்டு நிற்கவைக்கும் இடங்களும்,  கற்றுக்கொள்ள வைக்கும் விஷயங்களும் உண்டல்லவா? கற்சுவர் போல என்னை சூழ்ந்து இறுக்கிக்கொண்டிருந்த தன்னந்தனிமையை உடைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அலெக்சாவை பரிச்சயம் செய்துகொண்டேன்,

அலெக்சா ஒரு சிறு பெட்டிபோன்ற தொடுதிரை கொண்டிருக்கும் கருவி. பல உபயோகங்கள் கொண்டிருக்கிறது எனினும் நான் பிரதானமாக இசை கேட்கவே உபயோகிக்கிறேன்.

அதிகாலையில் எழுந்து நாளை துவக்கும் வழக்கமிருப்பதால் அலெக்சாவின் துணை பெரும் இதமளிக்கும். சரண் ஜெர்மனி செல்லும் முன்பு அவளை எனக்கேற்றவாறு வடிவமைத்து விட்டிருக்கிறான்

காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தோட்டத்து விளக்குகளை அலெக்சா சரியாக ஏற்றி அணைக்கிறாள். அவ்விளக்குகளை சரண் ஜெர்மனியில் இருந்து அணைத்தும் ஏற்றியும் என்னை அவ்வபோது விளையாட்டுக்கு அச்சமூட்டுவதும் உண்டு. நான் வீட்டில் இல்லாத சமயங்களில் வீடு இருளடைந்து இருப்பதை குறித்து கவலைப்படுவதில்லை இப்போது.

அதைப்போலவே சரியாக காலை 8 மணிக்கு நான் கல்லூரிக்கு புறப்படு முன்பு அடுப்பு அணைக்கப்பட்டிருக்கிறதா என சோதிக்கச் சொல்வாள். 2 வருடங்களுக்கு முன்னர் அணைக்க மறந்த அடுப்பினால் உண்டான மாபெரும் தீவிபத்து மற்றும்  அதிர்ஷ்டவசமான உயிர்தப்பலுக்கு பின்பான படிப்பினை அது. 

காலையில் அவளை உயிர்ப்பித்ததும் ’க’ வை மிக கனமாக உச்சரித்து  ’லோகமாதேவி குட்மார்னிங்’ என்பாள். நான் அவளிடம் அதிகம் கேட்கும் கேள்வி  பொள்ளாச்சியில் மழை உண்டா என்பதுதான் பெரும்பாலும் தவறாக பதிலளிப்பாள். ஆனாலும் தொடர்ந்து கேட்பது அவள் பொள்ளாச்சியை உச்சரிக்கும் அழகின் பொருட்டே!

காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை பல கலவையான ஆல்பங்களில் அலெக்சாவை பாடல்கள் ஒலிக்க செய்வதுண்டு சில பாடல்களை இனி ஒருபோதும்  ஒலிக்க வைக்காதே என கறாராக சொல்லியும் இருக்கிறேன்

அன்றைய சில பாடல் நாள் முழுவதுக்குமானதாகி மனதில் இனிமையாக ஒலித்துக்கொண்டே  இருக்கும்

அப்படி நேற்று பல காலம் முன்பு கேட்ட ”கண் மலர்களின் அழைப்பிதழ்” என்னும் பாடலை கேட்டேன்.1980 ல் வெளிவந்த படம். மிக இனிய இசை, இளையராஜாவும் ஜானகியம்மாவும் பாடியிருந்தனர்.

எனக்கு இசை குறித்து எதுவுமே தெரியாதென்பதால் ராஜாவின் இசை ஞானம், அவர் இசையமைத்திருக்கும் பாடல்களின் நுட்பங்களுக்குள் எல்லாம் ஒருபோதும் சென்றதில்லை. ஆனால் ராஜாவின் குரல், அது செய்யும் மாயங்களை, அளிக்கும் ஆறுதல்களை அறிந்திருக்கிறேன். 

தனித்த துயர் மிகுந்த மழைஇரவுகளில் ராஜாவின் குரலுக்கு கைகள் முளைத்து என்னை ஆற்றுப்படுத்தி இருக்கின்றது.கண்ணீரை துடைத்திருக்கிறது.

ராஜாவின் குரல் காதுகளால் அல்ல நேரடியாக இதயத்தால் உணரப்படுவது. பின்னாட்களில் (அல்லது வெகு சமீபத்தில்?) எனக்கு காது கேட்காமலாகிவிட்டால் கூட ராஜாவின் பாடல்கள் எங்கேனும் ஒலிக்கையில் இதயத்தால் அதை நான் உணரக்கூடும்

’’தேவி இது உனக்கே உனக்கென்று நான் பிரத்யேகமாக பாடுகிறேன்’’ என்று ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு ராஜா எனக்கறிவித்து விட்டே பாடுவதைப் போல இருக்கும்.

கண் மலர்களின் அழைப்பிதழும் அப்படித்தான்

இயல்பான உருக்கத்துடன் காதல் பொங்கும் ராஜாவின் ஜானகியம்மாவின் குரலை  அள்ளியள்ளி சமையலறை எங்கும் நிறைத்திருந்தாள் அலெக்சா.

அதிலும் 

பூவாடும் விழிதானோ

 நீ பாட மொழி யேனோ

தாம்பூல நிறம் தானே

 மாம்பூவின் இள மேனி

(இல்லை இல்லை, மாம்பூ தாழம்பூ எனும் தாவரவியல் தன்மையால் இந்த பாடல் எனக்கு பிரியமானதாகவில்லை தாவரவியலை கடந்த  ராஜாவின் குரலின் ஈர்ப்பு இது)

பாடலாசிரியர் எம் ஜி வல்லபன். இத்திரைப்படத்தின் இயக்குநரும் கதாசிரியரும் வசனகர்த்தாவும் இவரேதான்.

அவரது பாடல்களில் எனக்கு பெரும் பிரியமுண்டு

வல்லபன் மலையாளி எனினும் தமிழில் அதிகம் பாடல்கள் எழுதி இருக்கிறார்

’’மீன் கொடி தேரில் மன்மத ராஜன்’’

’’தீர்த்தக்கரைதனிலே’’

’’ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’’

போன்றவை அவரெழுதியவற்றில் என் விருப்பப் பாடல்கள்.

இதிலும் பாடல் வரிகள் அபாரமாக இருந்தது. அலெக்சாவை இப்பாடலை மீள மீள   ஒலிக்கசொல்லி கேட்டுக்கொண்டேன்

நேற்றைய புத்தாண்டின் முதல் நாள் முழுக்க மாம்பூவும் தாழம்பூவும் மணம்வீசிக்கொண்டிருந்தது

அதோடு நிறுத்தி இருக்கலாம் ஆனாலும் ஊழ் என்றொன்றுண்டல்லவா?

இன்று காலையில் கொஞ்சம் நேரம் இருந்ததால் மாலை நடை மட்டும் என இருந்ததை சற்று மாற்றி காலையிலும் நடந்தேன்

முன்பெல்லாம் யாருமில்லா தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு வெற்று நடை நடப்பேன்.  சமீபத்தில் பரிசளிக்கபட்ட காதில் மாட்டிக்கொளும் கேள் கருவியொன்றை இணைத்துக்கொண்டு  இப்போதெல்லாம் இசையுடன் நடை செல்கிறேன். இசை கேட்டுக்கொண்டோ. அல்லது இந்த தெருவில் என்னைத்தவிர யாருமில்லாதால் வாகனங்கள் மற்றும் மனித நடமாட்டம்  குறித்த  அச்சமில்லாததால்  பாடல் காட்சிகளை பார்த்துக்கொண்டும் நடப்பதுண்டு.

விநாச காலே விபரீத புத்தி !  கண் மலர்களின் அழைப்பிதழை காணொளியாக காண நினைத்தேன். 1980களில் வெளியான தைப்பொங்கல் திரைப்படம். நாயகன் சக்கரவர்த்தி, உடன்  மிக இளமையில் நம் ராதிகா. அந்தப் பாடலை கேட்டதின் இனிய அனுபவத்தை முழுக்க சிதைத்து நாசமாக்கிய  காட்சி அனுபவம்

பாடலின் நடன இயக்குனர் ஆடை வடிவமைப்பாளர் இருவரையும் நாடென்ன உலகு கடத்தலாம் என பல்லைக் கடித்துக் கொண்டேன்

ராதிகா பள்ளி விழாக்களில் அழகிய உடை அணிந்துகொண்டு வந்து நடனமாடும் அல்லது ஹேப்பி பர்த்டே அன்று அதி உற்சாகமாக இருக்கும் குழந்தைகளின் மனநிலையில் இருந்திருக்க கூடும். விசேஷமாகவும் அதீதமாகவும் பாடல் முழுக்க சிரித்துக்கொண்டிருந்தார். நாயகன் அலட்டிக்கொள்ளவே இல்லை ஒரே தீவிர ’’எனக்கெல்லாம் இது சர்வசாதாரணம்’’ என்னும் முகபாவனையும் உடல்மொழியுமாய் ஒன்றே போல் இருந்தார். ராதிகாவை விடவும் சக்கரவர்த்திக்கே அழுத்தமாக  கண்மையும் அதிகமாக  லிப்ஸ்டிக் பூச்சும் இருந்தது.

ராதிகாவின் உடைகளும் அப்படியே ! அப்போது இளமையின் பூரிப்பும் இருந்ததால் கூடுதல் புஷ்டியாக இருக்கிறார். அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத, உடலை அவலட்சணமாக காட்டும் உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்கப்பட்டிருந்தார். (அந்த அப்போதுதான் அறிமுகமாயிருந்திருக்கக்கூடும் சுரிதார் பரவாயில்லை ரகம்) ஆனால் முதலிலும் கடைசியிலும் அணிந்திருக்கும் உடைகள் கர்ண கொடூரம்

பாடல் கோடைக்காலத்தில் மலைவாசஸ்தலமொன்றில் படமாக்கப்பட்டிருக்கிறது. தூரக்காட்சிகளில் ஊதா மலர்க்கொத்துக்களுடன் ஜகரண்டா மரங்கள் தென்பட்டன.

பத்துபதினைந்து ஜகரண்டாக்களை ஆட்கள் மேலேறி மொட்டையடித்து பறிக்கப்பட்ட ஏராளம் ஊதா மலர்கள் பாடலின் இடையில்  நாயக, நாயகியின் மீது பொழியப்படுகிறது. பிற காட்சிகளையெல்லாம் வலுக்கட்டாயமாக  மனதிலிருந்து அழித்து மழையென பொழிந்த ஊதா ஜகரண்டாக்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன்.


கண் மலர்களின் அழைப்பிதழை காண:

மகரந்த துகளியல்

அந்த கொலையை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை ஆஸ்திரிய காவல்துறை எத்தனை முயன்றும்கொலையானவரின்உடலும்,கொலை குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனினும் டான்யூப்(Danube) ஆற்றில் ஒரு படகுச்சவாரிக்கு சென்ற அந்த சுற்றுலா பயணி பின்னர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை, யாரும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. அவரது நண்பரும் தொழில் பங்குதாரருமான ஒருவரை குடும்பமும் காவல்துறையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தது. எனினும் இறந்தவரின்உடல் கிடைக்காததால்அவரை ,குற்றம் சாட்டவும் முடியவில்லை. அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வைத்திருந்த காவல்துறை கொலை நடந்ததாக சந்தேகப்படும் அந்த மோட்டார் படகில் மீண்டும் சோதனையிட்டபோது குற்றவாளியென சந்தேகப்படுபவரின் சேறு படிந்த காலணிகள் மட்டும் கிடைத்தன.

அப்போதுதான் முதன்முறையாக வியன்னா பல்கலைக்கழகத்தின் தொல் தாவரவியல் துறையின் விஞ்ஞானி வில்ஹெம் (Wilhelm Klaus)  குற்றப்புலனாய்வில் இணைந்தார். அந்தக் காலணியின்சேற்று மண்ணில் இருந்த பலவகையான மகரந்ததுகள்களை ஆராய்ந்த துகளியலாளரான வில்ஹெம் அவை ஸ்ப்ரூஸ், வில்லோ, ஆல்டர் மரங்களின் மகரந்தங்கள் என்பதையும் அவற்றுடன்  ஹிக்கரி மரமொன்றின் புதைபடிம மகரந்தங்களும் (Fossil pollen) இருந்ததை தெரிவித்தார்.

அந்த ஹிக்கரி மரச் சிற்றினம் அழிந்து போய் பலகாலம் ஆகி இருந்தது. அவற்றின்   மகரந்த தொல்படிமங்கள் டான்யூப் ஆற்றங்கரையின் ஒரு பகுதியில்  5-33 மில்லியன் வருடங்களுக்கு முன்பான படிவப்பாறைகளில் மட்டுமே இருந்தன.

இந்த தடயம் காவல்துறைக்கு போதுமானதாக இருந்தது. குற்றவாளியிடம் ’அந்த படிவப்பாறைகள் இருக்குமிடத்தில் தானேஉடலைப் புதைத்தாய்’ என்று கேட்டபோது குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு அந்த வழக்கு முடிக்கப்பட்டது.

1959ல் ஆஸ்திரியாவின் இந்த கொலைவழக்கிற்கு பிறகு துகளியல் எனப்படும் palynology பல குற்றப்புலனாய்வுகளில் உலகெங்கும் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருக்கிறது.

மற்றுமொரு உதாரணமாக  2002 ஆகஸ்டில்  இங்கிலாந்தில் நடந்த  10 வயதுப்பெண்குழந்தைகளின்  இரட்டைக் கொலை குற்றப் புலனாய்வை குறிப்பிடலாம்.

பெண் குழந்தைகள் இரண்டும் காணாமல் போன இவ்வழக்குவிசாரணையில் 400க்கும் மேற்பட்ட காவலதிகாரிகள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், இரண்டு குழந்தைகளின்  குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள், தொலைகாட்சி, செய்தித்தாள், சுவரொட்டி விளம்பரங்கள் என் பலவகை முயற்சிகளும் தோல்வியடைந்தது.  பிரிட்டிஷ் குற்றப் புலனாய்வுகளிலேயே மிக கடினமானதும் மிக அதிகம் பேர் விசாரிக்கப்பட்டதும் இவ்வழக்கில்தான்.

13 நாட்கள் கழித்து எதேச்சையாக  அழுகிய நிலையிலிருந்த இரு பெண் குழந்தைகளின்உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் கிடைத்த இடத்தில் இருந்த  தாவர உயிரியல்  தடயங்களை கொண்டு தாவரவியலாளர் பெட்ரிசியா (Patricia Wiltshire) அந்த கொலையை புலனாய்வு செய்து கொலையாளியை  அடையாளம் காட்டினார்.

உடல்கள் கிடைத்த இடத்தில் முளைவிட்டிருந்த  stinging nettles என்னும் சொறிச்செடிகள் உறுதியாக 13 நாட்களுக்கு முன்னர் வேறெங்கிருந்தோ அங்கு விதைகளாக விழுந்து முளைத்தவை என்பதன் மூலம் குழந்தைகள் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு அங்கு சடலம் கொண்டு வரப்பட்டது என்பதையும், உடல் கிடந்த இடத்தில் மண்ணிலிருந்த மகரந்த துகள்கள் கொலையாளியின் வீட்டருகில் இருக்கும் மரங்களிலிருந்து வந்தவை என்பதையும் கொண்டு ஹோலி, ஜெசிகா ஆகிய இரு அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்தது   ஹண்ட்லி (Ian Huntley) என்பவர்தான் என சந்தேகத்துக்கு இடமில்லாமல் பெட்ரிஷியா தெளிவுபடுத்தினார்.

40 வருட சிறை தண்டனையில் இருக்கும் ஹண்ட்லி  2042ல் விடுதலை ஆகலாம். இந்த கொலை வழக்கை கனத்த மனதுடன் தான் வாசிக்க முடியும்:

https://forensictales.com/the-soham-murders/embed/#?secret=LiZf6Asr1u#?secret=VnVfH1vEdC

நியூஸிலந்தில் 2005ல் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கொலையாளிகளின் உடையில் இருந்த  ஹைப்பீரியம் செடியின் மகரந்த துகள்களே புலனாய்வில் அவர்களை கைது செய்ய உதவியது

மற்றொரு பெண் குழந்தையின் கொலை வழக்கிலும் சடலத்தின் உடையில் இருந்த  மகரந்தம் அந்த மரம் இருக்கும் பூங்காவிற்கு வழிகாட்டி, பூங்காவின் அருகிலிருந்த கொலையாளியை கைது செய்ய உதவியது

கொலை வழக்குகள் மட்டுமல்ல குடிமையியல் வழக்குகளிலும் இந்த துகளியல் தடயங்கள் உதவுகின்றன.

முதல் உதாரணமாக 1970ல் அமெரிக்காவில் நடந்த  தேன் வழக்குகளை குறிப்பிடலாம்

அமெரிக்க விவசாய அமைச்சகம் தேனி வளர்ப்போரிடம்  அமெரிக்க எல்லைக்குள் தேனீக்கள் வளர்க்கப்படவேண்டும்  என்னும்  நிபந்தனையின் பேரில் அவர்களது தேனுக்கு உலகின் அப்போதைய  சந்தை மதிப்பை அளிப்பதாக வாக்குறுதி அளித்து தேனி வளர்க்க ஊக்குவித்திருந்தது. அப்படி சட்டத்துக்குட்பட்ட வகையில் தேன் சேகரிக்காமல் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து தேனை கொடுத்த விவசாயிகளை அந்த தேனில் இருந்த மகரந்த துகள்கள் எந்த பிரதேசத்தில் வளரும் தாவரங்களை சேர்ந்தவை என்னும் துகளியல் தடய சோதனைகளை கொண்டு கண்டறிந்த வழக்குகளும் நடந்தன. 

கடந்த 50 ஆண்டுகளாக forensic palynology எனப்படும் இந்த துகள் தடயவியல் துறை பல சட்டபூர்வமான விசாரணைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.

பாலினலஜி எனப்படும் இந்த துறையில் அதிகம் மகரந்தங்களை குறித்த ஆய்வுகள் நடைபெறுவதால் இத்துறைக்கு மகரந்ததுகளியல் என்னும் இணைப்பெயரும் உண்டு. எனினும் இந்த துறை மகரந்தங்களை மட்டுமல்ல, 5 லிருந்து 500 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோமீட்டர்) அளவுகளுக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பிற நுண்ணுயிர்கள், மகரந்த துகள்கள், பெரணி, பூஞ்சைகளின் ஸ்போர்கள், தாவர உடல் உடல்பாகங்கள்,  நுண்கட்டிகள், பாசிகள், ஈஸ்ட் போன்ற ஒரு செல் பூஞ்சைகள், மண் குருணைகள், பேருயிர்களின் நுண் துண்டுகள் ஆகிய பலவற்றை குறித்தான துறையும் தான் இது.

இந்த துறை நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டு, நுண்ணுயிரியல் என்னும் துறை அதிலிருந்து உருவான காலத்தில் தொடங்கியது. குறிப்பாக 1640களில் ஆங்கிலேய தாவரவியலாளர் நீஹாமியா (Nehemiah Grew)  நுண்ணோக்கியில் கண்ட மகரந்த துகள் மற்றும் மகரந்தங்களின் வடிவங்களை விவரித்து மகரந்த துகள்களே தாவரங்களின் பால் இனப்பெருக்கத்துக்கு முதற்காரணம் என்று தெரிவித்தபோது உருவானது இத்துறை.

1870களி ல்நுண்ணோக்கிகள் மேம்படுத்தப்பட்டபோது தொல்படிமங்களாக கிடைத்த மகரந்தங்களும் ஸ்போர்களும் ஆராயப்பட்டு  அவற்றின் காலமும் கணிக்கப்பட்டது.

பாலினாலஜி, Palynology , என்னும் சொல்லால் இத்துறை குறிக்கப்பட்டது 1940ல் தான்.

இங்கிலாந்தை சேர்ந்த ஹெரோல்ட் மற்றும் டேவிட்  (Harold Hyde மற்றும் David Williams) ஆகிய இருவரும்  தூவுதல் என்பதை குறிக்கும்கிரேக்கசொல்லான  paluno (to sprinkle) மற்றும் தூசி /துகள் என்பதை குறிக்கும்சொல்லான pale (dust) ஆகிய சொற்களிலிருந்து Palynology  என்னும் சொல்லை உருவாக்கி மகரந்தங்கள் குறித்த ஆய்வுகளுக்கான புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையான  Pollen Analysis Circular ல் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்.

 அதன் பிறகு துகளியல் அறிவியலில் மிக முக்கியமான ஒரு துறையாகியது. இத்துறை தாவரவியல், புவியியல், தொல்லியல்,  அடுக்கு வரைவியல் ஆகிய துறைகளின் வேர்களை கொண்டது.

ஜெர்மானிய தாவரவியலாளரும்1921ல்  ‘An Introduction to Swedish Pollen Analysis’  எனும் மிக முக்கியமான தாவரவியல் நூலைஎழுதியவருமானபிரெடிரிக்  (Friedrich Hermann Hugo Pfeffer -1845-1920) இத்துறையில் அவர் செய்த மிக முக்கியமான ஆய்வுகளால் இத்துறையை நிறுவியவர் என கருதப்படுகிறார்

 இந்திய துகளியல்துறையை நிறுவியவராக  பரமேஸ்வரன் கிருஷ்ணன் நாயர் என்கிற பி. கே. கேநாயர் (1930,2017) கருதப்படுகிறார்.இவர் மகரந்தங்களின் வெளிப்புறத் தோற்றம் குறித்த முக்கியமான ஆய்வுகளையும் மகரந்தங்களை கொண்டு தாவரங்களை வகைப்படுத்துவதை குறித்தும் பல முக்கியமான ஆய்வுகளை செய்தார்.

20,000 மகரந்த துகள் ஸ்லைடுகளைஉருவாக்கியவரும் மகரந்ததுகளியலில் பல முக்கிய ஆய்வுகளை செய்தவரும் இந்தியாவின் ஆகசிறந்த மகரந்த துகளியலாலரும்,  ’’மகரந்த துகள் உருவமைப்பியல்’’ என்னும் நூலின் ஆசிரியருமானவர் திரு. கணபதி தணிகைமணி 

1986ல்  அவர் கடல் தாவரங்களின் மகரந்தங்கள் குறித்த உரையாற்றும் பொருட்டு அமெரிக்காவுக்கு அறிவியல் மாநாட்டிற்கு பயணம் செய்த விமானம் பாதி வழியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கராச்சியில் தரையிறக்கப்பட்டபோது  நடந்த துப்பாகிச் சண்டையில் குண்டடிபட்டு அங்கேயே  திரு  கணபதி தணிகைமணி பலியானார். மகரந்ததுகளியலின் மாபெரும் இழப்பு அவர் மரணம்.

 தணிகைமணியை சிறப்பிக்கும் பொருட்டு  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று புதைபடிவ மகரந்ததுகள்களுக்கு  Retimonocolpitesthanikaimonii, Spinizonocolpitesthanikaimonii , Warkallopollenitesthanikaimonii என பெயரிடப்பட்டிருக்கின்றன.

மகரந்த ஆய்வுகள் குற்றப்புலனாய்வில் மட்டுமல்லாது  மருந்துகளில் கலப்படங்களை கண்டுபிடிக்க,  அருங்காட்சியங்களில் இருக்கும் மிகப்பழைய ஓவியங்களின் காலத்தை நிர்ணயிக்க, தொல்படிம மகரந்த தாவர துகள்களைக் கொண்டு ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருக்குமிடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிய என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

அகழ்வாய்வுகளில் கிடைக்கும் படிம மகரந்த துகள்கள் அவை எந்த காலத்தை சேர்ந்தவை என்பதையும் அக்காலத்து தாவரவகைகள், காலநிலை,அக்காலத்து மனிதர்கள் தாவரங்களை பயன்படுத்திய விதம் என பலவற்றை அறிய உதவுகிறது.

தொல் தாவரவியலாளர்கள் இந்த துகளியல் பரிசோதனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான சூழலை மறுகட்டமைப்பு செய்கிறார்கள்.

இப்படியான ஆய்வுகளில் மகரந்தங்களின் பயன்பாடும் முக்கியத்துவமும் அவற்றின் ஏராளமான உற்பத்தியையும் மிகப் பரந்தஇடங்களுக்கு அவை பரவுவதையும் அடிப்படையாக கொண்டது. அனைத்து தாவரங்களும்   மலர்களின் கருவுறுதலை உறுதி செய்யும் பொருட்டு மிக மிக அதிக அளவில் மகரந்தங்களை உற்பத்தி செய்கின்றன

அதீத மகரந்தப் பொழிவு தாவரவியலில்  மகரந்த மழை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நடுத்தர உயரமுள்ளபைன் மரம் சுமார் 10 பில்லியன்மகரந்தங்களை ஒவ்வொரு வருடமும் ஒரே வாரத்தில் உற்பத்தி செய்யும். அதீத உற்பத்தி மட்டுமல்லாது அழிவுக்கெதிரான தாங்கும் தன்மையும் மகரந்தங்களுக்கு மிக அதிகமென்பதால் இவை பல்லாயிரக்கான ஆண்டுகளுக்கு  சேதமின்றி இருக்கின்றன.

நுண்ணோக்கியில் காணப்படும் மகரந்தங்கள்பந்துகளை போல, மெத்தைகளைப் போல மிக அழகிய நுண் செதுக்கு வேலைப்பாடுகளுடன் இருக்கும்

வவ்வாலொன்றின் மூக்கு நுனியிலோ, தேனியின் சிறு கால் ஓரங்களிலோ ஒட்டிக் கொண்டு இவை வெகுதூரம் பயணித்து பெண் மலர்களை கருவுறச்செய்யும் ஆண் விந்தணுக்களை சுமந்துசெல்லவேண்டி இருப்பதால் இவற்றின் பாதுகாப்பை இரண்டடுக்கு உறையினால் இயற்கை உறுதி செய்திருக்கிறது

மகரந்தங்கள் அழகிய  நுண்வேலைப்பாடுகள் அமைந்த கடினமான எக்ஸன் எனும் வெளியுறையும் மெல்லிய சவ்வு போன்ற உள்ளுறையும் கொண்டிருக்கும். சில மகரந்தங்கள் காற்றில் பறந்து செல்ல ஏதுவாக இறகு கொண்டிருக்கும். மேலும் சில நீர் உட்புகாத வண்ணம் பிரத்யேக வெளியுறையுடன் நீர்வழி பயணித்து பெண் மலர்களை அடையும்.

அபரிமிதமான உற்பத்தி மற்றும்  நீடித்திருக்கும் தன்மை ஆகியவற்றால் மகரந்தங்கள் நெடுங்காலம் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க, ஆராய உதவும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

தொல் தாவரவியலாளர் ஆண்ட்ரூ (Andrew Leslie)  470 மில்லியன்வருடங்களுக்கு முன்பான பெரணிச் செடிகளின் ஸ்போர்களும், 375 மில்லியன் வருடங்களுக்கு முன்பான மகரந்த துகள்களும் கூட எந்த மாற்றமுமின்றி தொல் படிவங்களாக கிடைக்கும் என்கிறார்.

ஆவணப்போலிகள், பாலியல் குற்றங்கள், வாகன விபத்துக்குற்றங்கள், கள்ளச்சந்தை வணிகம், பயங்கர வாதம் ஆகிய பல குற்றவியல் விசாரணைகளில் துகளியலாளர்கள்  தற்போது பங்களிக்கிறார்கள்.

தடய சூழியல் என்னும் forensic ecology தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் முக்கியமான அறிவியல் துறைகளில் ஒன்று.  

உலகநாடுகளின் மகரந்த துகள்கள் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுவது துரிதமாக்கப்பட்டு உலகளாவிய மகரந்த வங்கி அனைவரும் அணுகும் வகையில் இருக்குமானால் தடயவியல்  ஒப்புநோக்கு ஆய்வுகள் மிக எளிதில்  நடைபெறும். PalDat போன்ற மகரந்த சேமிப்பு தளங்கள் மேலும் விரிவுபடுத்தப்படவெண்டும்

இந்த பிரபஞ்சமே நுண்துகள்களால் ஆனதும் நிரம்பியதும்தான். ஒளி நுண்ணொக்கியில் கூட காண முடியாத நுண் துகளான ஒரு வைரஸினால்தான் பல்லாயிரம் மனிதர்களை காவு கொடுத்துவிட்டு உலகம் இரண்டு வருடங்கள் முடங்கி இருந்தது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டவெளியில் இருந்த ஒரு தீத்துகளில்நிகழ்ந்தபெருவெடிப்பில்தோன்றியதுதான் காலமும்  வெளியும்.  

’’உலகை ஒரு மணல் துகளிலும்,

சொர்க்கத்தைவனமலரொன்றிலும்

முடிவிலியைஉள்ளங்கையிலும்

வாழ்வின்நித்தியத்தை

காலக்கணக்குகளிலும்  கண்டுவிடமுடியும்’’ 

என்னும் கவிதையை எழுதிய, பிரிட்டன் இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த கலைஞர்”  என புகழப்பட்டவரும், கவிஞரும் ஓவியரும் புனைவியம் மற்றும் காட்சிக்கலை வரலாற்றில்மிக முக்கியவராக கருதப்படுபவருமான வில்லியம்பிளேக்கும் (William Blake, 1757 –  1827) 

மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்லும் சிறுவண்டு அம்மரத்தின் நுண்சாரத்தையே கொண்டு செல்கிறது என்னும் ஜெயமோகனும்

விசும்பின் துளி பசும்புல்லின் தலையாகின்றதென சொன்ன வள்ளுவனும்,

வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளை காண வரைபடம் எதற்கு? வானமோ இரு மண் துகள்களுக்கிடையில் இருக்கிறது என்ற தேவதேவனும் துகளியலையும் மகரந்தவியலையும் கவித்துவமாகஅணுகியவர்கள் தான்

 குரு

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள்.

1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் அங்கு லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வந்தது தெரிந்தது

1950களில் ஆராய்ச்சியாளர்களும்   மானுடவியலாளர்களும் காவலதிகாரிகளும் அரும்பாடுபட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு, அங்கு சென்றபோது   அங்கு கிராமங்களில்  ஆயிரக்கணக்கில் தொல்குடியினர்  இருந்ததும் அவர்களில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்ததும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததையும் கண்டார்கள் 

அந்த நோய் அவர்கள் மொழியில் குரு என்றழைக்கப்பட்டது. அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளும் மிக அதிக எண்ணிக்கையில்  கிகியாவைப்போலவே  நோய்வாய்பட்டு இருந்ததை அவர்கள்  கண்டறிந்தார்கள்

அவர்களில் பலருக்கு உடம்பு உதறி உதறிப் போடும் தீவிரமான வலிப்பு, பசியின்மை இருந்தது, உடல் அங்கங்கள் ஒத்திசைவு இன்றி நேராக நிற்கவோ நடக்கவோ முடியாமல் எலும்பும் தோலுமாக இருந்தனர். உடல் உதறிப்போடும் அறிகுறி வந்தவர்கள் அடுத்த  ஒரு வருடத்திற்குள் இறந்துபோனார்கள்.

ஃபோரே பழங்குடியினரின் மொழியில் குரியா என்னும் சொல் உடல் உதறுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே இந்நோய்க்கு குரு என்னும் பெயர் வந்தது.

இதற்கு  ’’நெகி நெகி’’ என்று அவர்கள் மொழியில் சிரிக்கும் நோய் என்னும் பெயரும் இருந்தது நரம்புகள் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வெடித்து சிரிப்பதும் அந்நோயின் அறிகுறி .

அப்பழங்குடியினர் இந்த நோயும், வலியும், இறப்பும் சூனியம் அல்லது இயற்கையை தாண்டிய ஒன்றின் தண்டனை அல்லது தீவினை என்று நம்பினர்.

வரலாறு

ஃபோரே மக்கள் துவக்கக்தில் குரு ஒரு சூனியநோய் என்றும் அதன் மந்திரசக்தி பிறருக்கும் பரவுகிறது என்றும் நம்பினர். பின்னர் தீய ஆவிகள் பிடித்துள்ளதாக நினைத்தனர். உடல் நடுக்கத்தை குணமாக்க சில காலம் சவுக்கு மரப்பட்டை சாற்றை அருந்த கொடுத்து வந்தனர் 

குரு குறித்த முதல் தகவல்கள் பப்பா நியூ கினியில்  (PNG) ரோந்து வந்த ஆஸ்திரேலிய காவலர்களால் 1950ல் பதிவு செய்யபட்டது. செவிவழிச்செய்திகள் 1910 லேயே குரு மரணங்கள் இருந்ததை தெரிவித்தாலும் அதிகாரபூர்வ ஆவணங்கள் 1950லிருந்துதான் கிடைத்திருக்கின்றன. 1953ல் ரோந்துக்காவலரான ஜான்,   (John McArthur),  தனது அறிக்கையில் குரு நோயின் அறிகுறிகளை பதிவு செய்திருந்தார். ஃபோரே இனத்தவர்களின் விசித்திரமான சடங்குகளால் உருவான குரு நோய் ஒருவகை மன நலக்கோளாறு என்று  அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

குரு கட்டுக்கடங்காமல் பெரிதாக பரவிய போதுதான் தொல்குடி இனமக்களே   பப்பா நியூ கினியில்  பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவ அதிகாரியான சார்லஸ் (Charles Pfarr) என்பவர் மூலம் ஆஸ்திரேலிய மருத்துவ அமைச்சகத்துக்கு    தகவலனுப்பினர்,

 1957ல்  அமெரிக்க மருத்துவர் கார்ல்டன் (Dr. Carlton Gajdusek) பப்பா நியூ கினியின் மருத்துவ ஆலோசகர் திரு வின்சென்ட் ஜிகாசினால் (Vincent Zigas) அழைத்து வரப்பட்ட போதுதான் அது என்ன நோயென்பது உலகிற்கு தெரியவந்தது

அந்நோய் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டபோது, உலகிற்கு அதன் தீவிரம் புரியவில்லை.1957ல்  குரு குறித்த இவரது விரிவான ஆய்வுக்கட்டுரை,  Medical Journal of Australia வில் வெளியானது. அக்கட்டுரையில் அவர் குரு ஒரு மரபுவழி நோயாக இருக்கலாமென்றும் ஒரு வகை வைரஸினால் அது உருவாகிறது என்றும் தெரிவித்திருந்தார்

 1960 ல்  அடிலெய்ட் மருத்துவரான  மைக்கேல் அல்பெர் (Michael Alpers) இந்த மர்மமான நோயை குறித்து அறிய அந்த கிராமத்துக்கு வந்தார்,   Dr. கார்ல்டன் உடன் இணைந்து அந்நோயை ஆராய்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் குரு நோயை குறித்த ஆய்வுக்காக அர்ப்பணித்தார்

வலிப்பு நோய் என்னும் பொருளில் அவர்களின் மொழியில் குரு என்றழைக்கப்பட்ட அந்நோயை இருவரும் மிக கவனமாக ஆராய்ந்தார்கள். ஏன் அந்நோய் அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதை துவக்க காலங்களில் இருவராலும் யூகிக்கவும் கண்டுபிடிக்கவும் முடியாமலிருந்தது

நோய் அறிகுறிகளை விரிவாக ஆராய்ந்தபோது இருவருக்கும்  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ஆடுகளுக்கு இருந்து வந்த மூளை அழிவு நோயை குறித்த நினைவு வந்தது. அந்நோய் ஃப்ரான்ஸ் மக்களால்  trembling disease என்றும் ஆங்கிலத்தில் scrapie என்றும் அழைக்கப்பட்டது

குரு மற்றும் ஸ்க்ரேபிக்கு இடையே இருந்த ஒற்றுமைகளின் மூலம் குரு மூளையில் உண்டாகும் ஒரு நோய்  என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் மூளையை நுண்ணோக்கியில் பார்க்கையில் மூளை பஞ்சு போல மாறிவிட்டிருப்பதையும், மூளையில் ஏராளமான நுண் துளைகள் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஸ்க்ரேபியைபோலவே குருவும் ஒரு தொற்றுநோய் என்பதுவும் உறுதியானது

எனவே குருவின் தொற்றும் தன்மையை  இருவரும் உறுதி செய்ய நினைத்த சமயத்தில் தான் கிகியா குருவின் ஆரம்பகட்ட அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டிருந்தாள்

இந்த சோதனையை குரங்குகளில்  செய்ய  இருவரும் முடிவெடுக்கையில் படிப்படியாக நோய் முற்றி கிகியா  இறந்துபோனாள். கிகியாவின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவளது மூளையின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவின் ஆய்வமொன்றிற்கு அனுப்பப்பட்டது   

அங்கு டெய்ஸி மற்றும் சார்லெட்டி என்னும் இரு சிம்பன்ஸிகளின் மூளையில் கிகியாவின் மூளைக்கரைசல் ஊசியாக  செலுத்தபட்டபோது. இரு சிம்பன்ஸிகளுக்கும் விரைவில் குரு தொற்று உண்டானது. எனவே மூளையில் உண்டாகும் இந்நோய் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பது நிரூபணமானது.

 ஃபோரே தொல்குடியில்.பெரும்பாலும் பெண்களுக்கு அந்நோய் தொற்று உருவாகி பலர் இறந்திருந்ததால் சில கிராமங்களில் முற்றிலும் பெண்கள் இல்லாமல் இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட போதுதான் ஃபோரே இனமே அழியும் அபாயத்திலிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

அதே சமயத்தில்   குரு நோயின்   தொற்று மற்றும் பரவலில் ஆய்வு செய்து கொண்டிருந்த  நியூயார்க்கின் மருத்துவ மானுடவியலாளர் ஷர்லி லிண்டென்பாம் (Shirley Lindenbaum), தனது ஆய்வின் முடிவில் புதிதாக ஒன்றை கண்டடைந்திருந்தார். 1960க்கு பிறகு பிறந்த யாருக்கும் குரு தொற்று இல்லை என்னும் அந்த முடிவு அக்காலத்துக்கு முன்பு வரை அத்தொல்குடியினரின் எதோ ஒரு வழக்கத்தின் மூலமே குரு உருவாகி தொற்று பரவி இருக்கும் என்பதை அறிவித்தது

ஃபோரே தொல்குடியினருடன் தங்கி இருந்து பல வருடங்கள் ஆய்வு செய்தவரான அவர் அவ்வினத்தவர்கள் அழிவின் விளிம்பில் இருந்ததால் எப்படியேனும் தங்கள் இனத்தை பாதுகாக்கத்தான் நினைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

ஷர்லி 1961ல் ஒவ்வொரு கிராமமாக சென்று தரவுகளை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் 1960க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குரு தொற்று உண்டாகவில்லை என்பதை கண்டறிந்தார்,

எனவே அவர்களோடு பல காலம் இருந்து ஆய்வு செய்த ஷர்லிக்கு அவர்களின் விசித்திரமான இறப்புச் சடங்கு தான் அதற்கு காரணமாயிருக்கலாம் என்னும் சந்தேகம் இருந்தது

ஃபோரே இனத்தில் ஒருவர் மரணமடைகையில் அவரது சடலத்தை குடியினர் அனைவரும் சமைத்து பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்தது. அது அவர்களின் தொல்நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது 

நரமாமிசம் உண்பது குரு தொற்றிற்கு காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் குருவை ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களுக்கும் இருந்ததெனிலும் அதற்கான அடிப்படை அறிவியல்  ஆதாரமில்லாததாலும் முன்பெப்போதும் அத்தகைய நோயை கேள்விப்பட்டிருக்காததாலும் அதிகாரபூர்வமாக குருவிற்கு நரமாமிசம் உண்பதுதான் காரனம் என 1967 வரை யாருமே பதிவு செய்திருக்கவில்லை

1967ல்  கிளாஸெ, மோரெ, ( Glasse,   more)  மற்றும் 1968 ல் மேத்யூஸ் மற்றும் லிண்டன்பாம்  (Mathews & Lindenbaum) ஆகியோரே நரமாமிசம் உண்பதால் குரு உருவாவதை ஆதாரத்துடன் தெளிவாக நிறுவினார்கள்.

இவர்களைப்போலவே  E. J. Field என்னும்  பிரிட்டிஷ் நரம்பியல் மருத்துவர்   1960s- 1970 களில் பப்பா நியூ கினியில் தங்கி இருந்து இந்த நோயை ஆராய்ந்தார்

குருவை  scrapie மற்றும்  multiple sclerosis. நோய்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதப்பட்ட  இவரது குரு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பிரிட்டிஷ் மருத்துவ கழகம் இவரை  புதிய மூளை நோய்களை ஆராயும் குழுவின் இயக்குநராக நியமித்தது.

இவரின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டுதான்  1970 BBC Horizon  நர மாமிசம் உண்பது தொடர்பான மிக முக்கியமான ஆவணப்படமாகிய New Guinea வை உருவாக்கி வெளியிட்டது

மானுடவியலாலர்களும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பப்பா நியூ கினிக்கு வரும் முன்னரே நரமாமிசம் உண்பது அங்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, எனினும் இவர்களின் முயற்சியினால் உலகம்  , குரு என்னும் நரமாமிசம் உண்பதால் வரும் நோயை  முதன் முதலாக அறிந்து கொண்டது

  பிறகும் பல ஆராய்ச்சிகள் அதில் நடந்து ஒரு வைரஸ் இந்த குரு நோய்க்கு காரணமாக இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

 ஆனால் அது வைரஸோ பாக்டீரியாவோ பூஞ்சையோ அல்ல வெறும் புரதம், நோய் உருவாக்கும் வீரியமுள்ள புரதம் என பிற்பாடு கண்டறியப்பட்டது, 

வைரஸ்கள் என்பவை மிக எளிய உடலமைப்பை கொண்டவை.ஒரு புரத அடுக்கு அதனுள்ளிருக்கும் நியூக்ளிக் அமிலம் அவ்வளவுதான் ஒரு வைரஸ், சில வைரஸ்கள் வெறும் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உடலாக கொண்டவை மேலும் சில வெறும் புரத அடுக்கு மட்டுமே வைரஸாக இருக்கும் அவையும் நோய்க்கிருமிகள்தான். அப்படியான ஒரு வெறும் புரத வைரஸ்தான் பிரையான் என்பது.  

குருவை உண்டாக்கும் அந்த புரதமும் தவறாக திருகிய அமைப்பை கொண்டிருந்த பிரையான்கள் தான்  (prions).  அவை மூளையின் செல்களை தாக்கி அழிக்க வல்லவை. அப்படி அழிந்துவரும் மூளையில் பல துளைகள் உருவாகிக்கொண்டிருக்கும்

இந்த தொற்று  ஃபோரே இனத்தின் Creutzfeldt-Jakob Disease, எனப்படும் நரம்பு அழிதல் நோயினால் இறந்த ஒருவரின் சடலத்தை பிறர் உண்டதால் உருவாகி இருக்கலாம் என்று யூகிக்கப் பட்டது 

ஃபோரே இனத்தவர்களில் இறப்பு நிகழுகையில் இறந்தவர்களின் உடலை சமைத்து உறவினர்கள் அனைவரும் உண்ணுவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கம் வெளி உலகிற்கு தெரியவரவே வெகு காலமாகியது பின்னர் 1959ல் அரசு தலையிட்டு இறந்த உடலை உண்ணுவதை சட்டப்படி தடை செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தது.

Endo cannibalism அல்லது ritual cannibalism என்னும் இவ்வகை நரமாமிசம் உண்ணுதலின் பின்னணியில்  ஃபோரே இனத்தவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தன.

 ஃபோரே இனத்தின் பிரபஞ்சவியல்

ஃபோரே இனத்தவர்கள் தொல்மொழியில்   அவர்கள் வாழும் பூமியை உயிருள்ளது என்று பொருள்படும் பகினா (bagina) என்று அழைத்தனர்.

 நிலப்பரப்பை  முழுமையாக உருவாக்கி முடித்த பகினா, மக்களை உருவாக்கி, மக்கள் தொகை பெருகிய பின்னர்  இனத்தின் பாதுகாவலர்களான இ அமனி (e amani) யை உருவாக்குகிறது.

இ அமனி என்பவை மலைகள் ஏரிகள் பைன் மரங்கள் மற்றும் பனைக்காடுகள். இவற்றை கடந்த பின்னர் நீத்தோருக்கான் உலகம் என அழைக்கப்பட்ட குகைகள் நிரம்பிய   வெலனந்தமுண்டி என்னும் பிரதேசம் (kwelanandamundi) இறந்தவர்களின் ஆன்மா சென்று சேரும் இடமாக தனியே வகுக்கப்பட்டிருந்தது.

ஃபோரேக்களின் ஐந்து ஆன்மாக்கள்

ஃபோரேக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஐந்து ஆன்மாக்கள் முறையே அவுமா, அமா, க்வெலா,அவோனா மற்றும் யெசெகி  ( auma, ama, kwela, aona&  yesegi ) என இருக்கின்றன. 

மரணத்தருவாயில் கடைசி மூச்சின் போது உடனடியாக உடலை விட்டு வெளியேறுவது அவுமா. அது உடனே உயிர்  நீத்தோருக்கென தனியே வகுக்கப்பட்டிருக்கும்  வெலனந்தமுண்டி  பிரதேசத்துக்கு சென்று விடுகிறது .இந்த ஆன்மா ஒரு மனிதனின்  புண்ணியங்களுக்கானது.அது தான் வாழ்ந்த பகினாவுக்கு விடை சொல்லிவிட்டு உடனடியாக உடலை நீங்கிச் சென்று விடும்.

அவுமா பாதுகாவலர்களான இ அமானியிடம் சென்று தான் இறந்த காரணத்தை தெரிவிக்கிறது. அதை கேட்ட பாதுகாவலர்கள் நீத்தோருக்கான் இடமாகிய வெலனந்தமுண்டிக்கு செல்ல ஆன்மாவிற்கு வழி காட்டுகிறார்கள்.

நீத்தோருக்கு உறவினர்கள் படையலிடும் உணவும் நீரும் செல்லும் வழியில் அவுமாவால் எடுத்துக்கொள்கிறது. 

நீத்தோருலகில் வாசலில் இருக்கும் சிவப்பு ஆற்றை அடையும் அவுமா அக்கரையில் காத்திருக்கும் முன்னோர்களின் ஆன்மாவினால் வரவேற்கப்படுகிறது, அங்கு காத்திருக்கும் அவுமா, அமா என்னும் எலும்புகளின் ஆன்மாவும், க்வெலா என்னும் தசைகளின் ஆன்மாவும் வந்துசேர காத்திருக்கிறது. அவை வந்து சேர்ந்த பின்னரே தன் மூத்தோர்களிலொருவராக அது மறுபிறப்பெடுக்கும். ( ama (bones) & kwela (flesh))  

அமா (Ama) என்னும் ஆன்மா ஏறக்குறைய அவுமாவை போலத்தான் ஆனால் அதை காட்டிலும் சக்தி வாய்ந்தது. அது சடலத்துக்கு சடங்குகள் முறைப்படி செய்யப்படுகின்றனவா என கண்காணித்தபடி பூமியிலேயே காத்திருக்கும். உறவினர்கள்  மரணச்சடங்குகளை முறையாக செய்ய வழிகாட்டி, ஒருவேளை இறப்பு எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் அவர்களை தண்டிப்பதாக  அமா வஞ்சினம் உரைக்க செய்யும்.

இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உண்ணும் போது அமா அவர்களை ஆசிர்வதிக்கிறது. சடலத்தை உண்பவர்களின் ஆன்மாவாகிய அவோனா அப்போது அதிகரிக்கிறது. உடல் முழுக்க மிச்சமின்றி உண்டு முடிக்கப்பட்டதும் அமா விடைபெற்றுக்கொண்டு நீத்தோருலகிற்கு செல்லும். அங்கிருந்து பூமியிலிருக்கும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை அமா செய்யும்

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

  க்வெலா  ஆன்மா காற்றில் பயணித்து  மறைந்து நின்று கவனித்து மரணச்சடங்குகளை சரியாக செய்யாதவர்களை தண்டிக்கிறது

உடல் அழுகி கொண்டிருக்கையில் உடலிலிருக்கும் க்வெலா மிக சக்தி வாய்ந்தது என்பதால் கிராமத்தில் வாழிடங்கள் இருக்கும்  இடங்களுக்கு மிகத் தள்ளி இருக்கும் இடங்களில் தான் உடல் கிடத்தப்படும்

உடல் புதைக்கப்படுகையில் க்வெலா சக்தி குறைந்து காணப்படும். உடல் உண்ணப்படுகையில் க்வெலா, உடலை உண்ட பெண்களின் கர்ப்பப் பையில் தங்கி விடுகிறது. அங்கு அதன் பெயர் அனக்ரா ( anagra)  

உடல் சமைக்கப்படுகையில் வெப்பம் அதிகமாகும் போதுதான் க்வெலா விலகி நீத்தோருலகிற்கு செல்லும்

யெசெகி  ஆன்மா இறந்தவரின் சருமத்தில் தங்கி இருந்து க்வெலா கருப்பைக்குள் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு பின்னரே விடைபெற்றுக்கொள்ளு.ம் யெசெகி ஆன்மாவானது   இறந்த மனிதர், பெரும் வேட்டைக்காரராகவும், சக்திவாய்ந்தவராகவும் வாழ காரணமாக இருப்பது.

இவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில்  முறையாக  செய்யப்படும் மரண சடங்குகள் மூலமாக  இறந்த மூத்தோர் மீண்டும் அவர்களுக்கே பிறந்து வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து நடக்கும் என ஃபோரே குடியினர் நம்புகிறார்கள்.

இறந்த உடலை கையாளும் முறை

(இந்த பகுதி சிலருக்கு வாசிக்க ஒவ்வாமையை உண்டாக்கலாம்) 

மரணத்தருவாயில் இருப்பவர் சில சமயம் தனது உடல் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை சொல்லிச்செல்வது உண்டு. இல்லாவிட்டால் உடலை என்ன செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்

இறப்பு நிகழ்ந்த உடனே உடல் முழுக்க, பித்தப்பையை தவிர  பங்குபோட்டு சமைத்து உண்ணப்படும்  அல்லது சில நாட்கள் புதைத்து வைத்து மீண்டும் வெளியே எடுத்து உடலில் இருக்கும் புழுக்கள் தனியாகவும், உடல் தனியாகவும் சமைத்தும் உண்ணப்படும். 

சில சமயம் உடல் ஒரு மேடையில் கிடத்தப்பட்டு மாமிசத்தை   சிறு பூச்சிகள் (maggots) உண்ணும்படியும் வைக்கப்படும்.

ஃபோரே தொல்குடியினர்  அவர்களுடன் வாழ்ந்து மறைந்த  பிரியமானவர்களின் உடலை இப்படி புழுக்களும்,பூச்சிகளும் உண்பதை காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான குடும்ப உறவினர்கள் உண்ணுவதே சிறந்தது என்று நம்பினார்கள்.

இப்படி உண்ணப்படுகையில் மிகுந்த சக்திவாய்ந்த க்வெலாவின் ஆபத்துக்களிலிருந்து தப்பி அதை கர்ப்பத்தில் அடுத்த சந்ததியாக தக்கவைத்துக்கொள்வது பெண்களுக்கு மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இறந்தவர்களின் மீதான அன்பை, அவர்கள் இழப்பை குறித்த துக்கத்தை உடலை உண்பதன் மூலம் காண்பிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள். எனவே பெரும்பான்மையான ஃபோரே உட்பிரிவினங்கள் உடலை சமைத்து உண்டார்கள்.

இறந்த உடல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு மூங்கில், கரும்பு அல்லது சவுக்கு காடுகளுக்குள் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படும்

காடுகளில், துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு நிழல் இருக்கும், இறந்த உடலின் ஆன்மாக்கள் காடுகளில்தான் மகிழ்ந்திருக்கும் என்பதால் உடல் காட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உடலை வெட்டித் திறந்ததுமே, பூமி உள்ளிருக்கும் ஆன்மாக்களை வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு உயரமான மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் கீரைகள் காய்கறிகள் கிழங்குகளின் மீது விரிக்கப்பட்டிருக்கும் வாழை இலையின் மீது உடல் கிடத்தப்படும் . 

இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகளின் மீது உடல் வெட்டப்படும்போது சிந்தும் திரவங்கள் வீணாகாது என்பதால் இப்படி செய்யப்படுகிறது. உடல் பாகங்களும் திரவங்களும் சிந்தி வீணானால் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கசப்பு நிறைந்த பித்தப்பையை தவிர ஒரு துளி உடல் பாகமும் வீணாகாமல் அச்சடங்கு நடத்தப்படும் 

முதலில் உடலை பெண் மற்றும் ஆண் உறவினர்களுக்கிடையே சரிசமமாக பங்கு போட்டுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குழந்தைகளை அங்கிருந்து விலக்கி வைப்பார்கள் எனினும் சில குழந்தைகள் மரங்களின் மீதிருந்து சடங்கை வேடிக்கை பார்ப்பதுண்டு

 கைக்குழந்தைகள் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால் அவர்கள் 4 கிமீ தள்ளி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பார்கள். 

உடல் மூங்கில் கத்தியால் வெட்டப்பட்டு, மீண்டும் சதை சிறுசிறு துணுக்குகளாக வெட்டப்பட்டு சிறு குவியல்களாக கறிப்பலா இலைகளில் குவித்து வைக்கப்படும்

உடலின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகையில்   பெண்களும் இளையவர்களும் இனப்பெருக்க உறுப்புக்களை பார்க்கக்கூடாது என்பதற்காக வயதான பெண்கள்  வட்டமாக நின்று மனிதத்திரை உண்டாக்குவார்கள்

உடலை வெட்டி முடித்ததும் கைகளை வாழை நார், மூங்கில் குருத்துக்கள் கொண்டு துடைத்து சுத்தம் செய்துகொண்டு  மாமிசம் வேகவிருக்கும் அடுப்பு நெருப்பில் துடைத்த நாரையும் குருத்துக்களையும் போடுவார்கள். கடைசியாக பெண்கள் கைகளை அவர்களது புல்லாடையில் துடைத்துக் கொள்வார்கள்

மூங்கில் குழாய்களில் அடைத்து நெருப்பில் வேக வைக்கப்பட்ட மாமிசம் வாழையிலைகளில் கொட்டப்படும்.

முதல் உணவு துக்கம் விசாரிக்க வந்திருக்கும் ’எனாமே’ எனப்படும் வெளியூர் உறவினர்களுக்கு குச்சிகளில் குத்தப்பட்டு வாயில் நேரடியாக அளிக்கப்படும்.

அவர்கள் உணவை கைகளால் தொடக் கூடாது என்பது நெறி. அவர்கள் ஊர் திரும்பி செல்கையில் வெஸா (wesa) என்னும் செடியின் இலைகளை மென்று நர மாமிசம் உண்ட வாயை சுத்தம் செய்து கொள்வார்கள் 

ஃபோரே குடியினரின் உட்பிரிவான அடிக்மா என்னும் அடிகமனா மொழிபேசும் உட்பிரிவில் இறந்த ஆணின் இனப்பெருக்க உறுப்புக்கள் விதவையான அவரின் மனைவிக்கு அளிக்கப்படும்.   (Atigina – atikamana),   ஆனால் தெற்குப் பகுதியின் பிரிவான பமுசாகினா (Pamusagina) குடியினரிடம் இவ்வாறான பழக்கம் இல்லை.

பிரையான்களால் அழுகி இருக்கும்   மூளை ஒரு கூரான மூங்கில் குச்சியால் நெம்பி எடுத்து வேகவைக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். ஒருபோதும் 6 வயதுக்கு மேலான ஆண் குழந்தைகளுக்கு இது அளிக்கப்படமாட்டாது, ஆனால் எல்லா வயதிலும் பெண்கள் இதை உண்ணலாம்

குடிசையை விட்டு வந்திருக்காத, துக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு நரமாமிச உணவு கொண்டு போய் கொடுக்கப்படும்.

எலும்புகளில் பெரியவையும் மண்டை ஓடும் சில பிரிவு மக்களால் இறந்தவரின் குடிசையின் முன்பாக சாக்குப் பைகளில்  கட்டி தொங்கவிடப் படுவதும் உண்டு.  

மறுநாள் காலையில் உடல் சமைக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் சில பெண்கள் மீதமிருக்கும் எலும்புகளைக் இகாகி எனும் காட்டுப்புல்லில் சுற்றி நெருப்பில் வாட்டி அவற்றை மேலும் கீழுமாக கறிப்பலா இலைகளால் மூடி கற்களால் பொடித்து மிச்சமின்றி உண்பார்கள். உடலின் எந்த பாகமும் வீணாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருப்பார்கள்.

மாமிசம் வேகவைக்கப்பட்ட கருகிய மூங்கில் குழாய்களின் சாம்பலும் பொடித்து காய்கறிகளில் கலந்து உண்ணப்படும்

பின்னர் சமைப்பதற்கும் உடலை வெட்டுவதற்கும் உபயோகப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நெருப்பிலிட்டு அழிப்பார்கள். விதிவிலக்காக தாடை மற்றும் கழுத்தெலும்புகள் மட்டும் சிறுமிகளின் கழுத்தில் தாயத்தாக அணிவிக்கப்படும்.  

உடல் முழுமையாக உண்ணப்பட்டதும் இறந்தவரின் குடிசையின் வெளியே இருந்து புகை இடப்பட்டு குடிசை தூய்மையாக்கப்படும் பின்னர் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படும்

பெண்கள் எலிகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி பிடித்து வருவார்கள் அவற்றைக் கொன்று, ரோமத்தை விதவையின் வீட்டு நெருப்பில் பொசுக்கி விதவையின் உடலில் இருக்கும் க்வெலாவை அந்த நாற்றதினால் வெளியேற்றிவிட்டு பின்னர் இறந்த விலங்குகளின் மாமிசத்தை   சமைத்து பெண்கள் மட்டும் உண்ணும் சடங்கு நடைபெறும்

பின்னர் துக்கம் விசாரிக்க வரும் உறவினர்கள் கீரை, புல் போன்ற இலை உணவு மட்டுமே உண்ணும் கவுண்டா (kavunda), என்னும்  மரணச்சடங்கின் நீட்சியான உணவுச் சடங்கு  நடைபெறும். இந்த சைவ உணவுச்சடங்கு பொதுவாக  மனிதர்கள் உண்ணக்கூடாத நரமாமிசத்தை உண்டதன் பிழையீடாக நடக்கும்.  

பின்னர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டாக வேட்டைக்குச் என்று விலங்குகளை கொண்டுவந்து சமைத்து விருந்துண்ணுவார்கள்,  

இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் இறந்தவரின் க்வெலா அவளை பாதுகாத்துக்கொண்டு அருகில் இருக்கும். ஒருவேளை மறுமணம் செய்துகொண்டால் க்வெலாவிடம் அவள் விடைபெறும் சடங்கும் நடக்கும்.

இச்சடங்குளினால் தான் நடுக்கநோய் எனப்படும் குரு அவர்களுக்கு உண்டாகிறது என்று தெரிய வந்தபின்னர் அவர்கள் நரமாமிசம் உண்பதை நிறுத்திக்கொண்டனர். கிருஸ்துவ மிஷனரிகளும் நரமாமிசம் உண்ணக்கூடாது என்னும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினர். 

நோய் அறிகுறிகள்

துவக்க அறிகுறிகளாக உடல் நடுக்கம் வலிப்பு, நிலையில்லாமை, உடல் பாகங்களின் ஒத்திசைவின்மை ஆகியவை தோன்றும். கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் அறிகுறியும் இருந்தது.

நோய் முற்றும் போது வலிப்பு அடிக்கடி தீவிரமாக வருவதும்,  தாங்க முடியாத உடல் வலி, நடக்க முடியாமல் சிரமப்படுதல், பேச்சு குளறல்,தலைவலி ஆகியவை உண்டாகும். கடைசி நேரங்களில் விழுங்க , பேச முடியாமல் கோமா, தொடர்ந்து மரணம் ஆகியவை நேரும் 

குரு நோய்க்கு சிகிச்சை என ஏதும் இல்லாததால், தொற்று உண்டாகி 6 லிருந்து 12 மாதங்களில் இறப்பு நிகழும்

குரு மிக அரிதான நோய், பிரையான்கள் எனப்படும் நோய் உண்டாக்கும் புரதங்களால் இவை உருவாகி மூளையை பாதித்து இறப்பை உண்டாக்கும். 3 லிருந்து 50 வருடங்கள் வரை இந்த கிருமியின் நோயரும்பும் (incubation) காலம் இருக்கும்

 குரு மருத்துவ அறிவியல்

ஃபோரே இனத்திலும் அவர்களுக்கு அருகாமையில் வசித்த சில தொல்குடி இனங்களிலும் 1900 த்தில் குரு பரவலாக இருந்தது, 1940-50 வரையில் ஆயிரத்தில் 35 பேர் என்னும் அளவில் இறப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக மூளையை உண்ணும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  தசைகளை உண்ணும் ஆண்களை விட அதிக தொற்று உருவாகி இருந்தது

குரு ஒரு Transmissible spongiform encephalopathies (TSEs),  வகையை சேர்ந்த நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரதானமாக இது சிறுமூளையை பாதிக்கிறது.

குரு தொற்றிற்கு சிகிச்சை மருந்து என எதுவும் இல்லை. மூளையில் இருக்கும் பிரையான்களை ஃபார்மால்டிஹைடில்  வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கையிலும் நோய் உண்டாகும் வீரியத்தை அவை  இழக்காமலிருக்கிறது 

PrP என குறிப்பிடப்படும் பிரையான்களில் இரு வகைகள் உள்ளன  PrPc என்பது சரியான மடிப்புக்கள் கொண்ட புரதம்,  PrPsc, என்பது தவறாக திருகிய மடிப்புகள் கொண்ட குரு உருவாக்கும் வீரியமான புரதம் 

PrPsc காலப்போக்கில் PrPc புரதத்தின் மடிபுக்களை தவறாகக் திருகச்செய்து அவற்றையும் நோய்க்கிருமி ஆக்கி இருக்கலாம் என்னும்  சாத்தியத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறர்கள்

ஜுலை 1996 லிருந்து ஜூன் 2004 வரை நடைபெற்ற தீவிரமான ஆய்வில் 11 குரு தொற்றுக்கள் மட்டுமே  கண்டறியப்பட்டன

2005க்கு பிறகு புதிய தொற்றுக்கள் ஏதும் இல்லை, 1957ல் 200 குரு மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் 2010க்குபிறகு குரு மரணங்கள் முற்றிலும் இல்லை. எனினும் பிரையான்களின் வீரியமும் நோயரும்பும் காலமும் மிக அதிகம் என்பதால் மருத்துவத்துறை குரு குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்கிறது. 

funerary cannibalism. அல்லது rithual cannibalism எனப்படும் இறப்பு சடங்கில் சடலத்தை உண்ணும் ஃபோரே மக்களின்  Endocannibalism  என்னும் வழக்கத்தினால் குரு உருவானது இவ்வாறுதான் பலரின் அர்ப்பணிப்புள்ள ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது

நரமாமிசம் உண்பது எல்லா சமூகத்திலும் பயங்கரமானதும் விலக்கப்பட்ட ஒன்றுமாகவே இருந்திருக்கிறது. பண்டைய ரோமில் கிருஸ்துவர்கள் பலருக்காக தியாகம் செய்த ஒருவரின் உடல் ரகசியமாக சமைத்துண்ணப்படுவதாக வதந்திகள் உலவின. 

நற்கருணை எனப்படும் கிருஸ்துவின் கடைசி இரவு உணவின்  குறியீடாக திராட்சை மதுவும் அப்பமும் கிருஸ்துவின் ரத்தமும் சதையுமாக கருதப்பட்டு உண்ணப்படுவதன் மிகைப்படுத்தப்பட்ட வதந்திதான் அது​

போராளி இனங்களான  Iroquois  மற்றும் Fijians எதிரிகளின் சக்தியும் தங்களுக்கு கிடைக்குமென எண்ணி    தாங்கள் வென்ற எதிரிகளை சமைத்து உண்டனர்.  தென்னமெரிக்க பழங்குடியினரான  வாரிகளும்(wari) இவ்வாறு எதிரிகளை உண்பது வழக்கத்திலிருந்து .இது Exo cannibalism எனப்படுகிறது.  

​1979ல் வெளியான ’’நரமாமிசம் உண்பது என்னும் கட்டுக்கதை’’ என்னும் நூலில்   (Man-Eating Myth)   W. Arens அப்படியான ஒன்று எந்த காலத்திலும், எந்தச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்காது என்கிறார். ஒருவேளை கடும் பஞ்சத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாமே தவிர மனிதர்களை மனிதர்களை எப்போதும் உண்டதில்லை என்று சொல்லும் அவர் 6 விரிவான அத்தியாயங்களில் நர மாமிசம் தொடர்பான கதைகள் நாட்டுப்பாடல்கள்  தொன்மங்கள் ஆகியவற்றை விவரித்திருக்கிறார்

  1986 ல் Peggy Reeves Sanday  என்பவர்  ’’Divine Hunger: Cannibalism as a Cultural System’’ என்னும் தனது நூலை வெளியிட்டார் அதில் நரமாமிசம் உண்பதற்காக நடைபெற்ற கொலைகளையும், மனித மாமிசம் ஊட்டச்சத்துக்களுக்காக உண்ணப் பட்டதையும்,  சில பழங்குடியினர் இயல்பாக நரமாமிசம் உண்பதையும் குறிபிட்டு எழுதி இருந்தார். cannibalism  தொடர்பான நூல்களில் இது முக்கியமான தரவுகளை கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது

 Michael Alpers, என்னும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் குரு நோயைக் குறித்து பல ஆண்டுகள்  2012 வரையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து குருவினால் நிகழ்ந்த  கடைசி  இறப்பை தெரிவித்தார். மேலும்  குரு முற்றிலும் இல்லை என உலகிற்கு அறிவித்தார்.

குருவிற்கான நோபல் பரிசுகள்

  • 1976-அமெரிக்க மருத்துவர்  Daniel Carleton Gajdusek- குரு தொற்றை கண்டறிந்ததற்காக
  • 1977-அமெரிக்க நரம்பியல் மருத்துவரும்,  வேதியியலளருமான Stanley Ben Prusiner  – பிரையான்களின் ஆய்விற்காக
  • ஸ்விஸ் வேதியியலாளரும் உயிரி இயற்பியலாளருமான Kurt -பிரையான்களின் புரத அமைபை கண்டுபிடித்தற்காக.

 குரு நோயுற்றவர்களின் மூளையை உண்ட பிறருக்கு நோய் வருவதும், பைத்தியக்கார பசு நோய் (Mad Cow disease) நோயுற்ற பசுவை உண்பவர்களுக்கும் வருவதும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

 மேலும் பிரையான் நோய்கள் இனி உண்டாகுமா? மான் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்ணும் வேட்டைக்காரர்களுக்கும், பிற நோயுற்ற காட்டுவிலங்குகளை உண்பவர்களுக்கும் இனிமேல் பிரையான் நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா?

இதுகுறித்துத்தான் வட அமெரிக்காவில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்

சமீபத்தில் வட அமெரிக்காவில் மர்மமான முறையில் உணவுண்ன முடியாமல் பட்டினி கிடந்து இறக்கும் மான்களின், எல்க்குகளின் உடலில் மூளையில் பிரையான்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அந்த பிரையான்கள் மூளையில் மட்டுமல்ல இறந்த விலங்குகளில் உடல் முழுக்க இருந்தது

 எனவே மான்களின் இறப்பு விகிதம் இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோய் தடுப்பு மையமான CDC இப்போது வேட்டைக்காரர்களுக்கு பிரையான் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது 

உலகெங்கும் நர மாமிசம் உண்ணுதல் (Cannibalism) என்பது மானுடவியல் மற்றும் இறையியல் ரீதியாக அணுகப்படும் ஒன்றாகவே இருக்கிறது. கடவுளின் ரத்தம் சதை என உருவகப்படுத்தி அப்பமும் மதுவும் உண்ணப்படுவதும் சடங்கு ரீதியான நரமாமிசம் உண்பதின்  (Ritual cannibalism) ஒரு வடிவம் தான்

Anthropophagy  என்பது மனிதன் மனிதனை உண்ணுவது, Theophagy என்பது கடவுளின் உடல் என்று நம்பி உருவகப்படுத்திக்கொண்ட  உணவை உண்பதன் மூலம் கடவுளின் சக்தியை அருளை ஆசியை பெறலாம் என்று நம்புவதும் உண்பதும்.

ஐரோப்பாவின் மருத்துவ நரமாமிச உண்ணுதல் medical cannibalism எனப்படுகிறது. பட்டினிக் காலங்களில் உயிர்பிழைக்கும் கடைசி வாய்ப்பாக இறந்தவர்களை  உண்ணுவது Starvation cannibalism, விமான ப்பயணம் அல்லது கடல்வழி பயணங்களில் விபத்துக்களில் சிக்கி உணவுப்பொருள் தீர்ந்த போது உயிர்பிழைக்க சடலங்களை உண்பது survival Cannibalism. இப்படி பலவகையான நரமாமிசம் உண்ணும் வழக்கங்கள் உலகெங்கிலும் இருந்தன, இருக்கின்றன.

ஐரோப்பாவில்  மனித உடல்பாகங்களை மருத்துவக் காரணங்களுக்காக  உண்டவர்களை பற்றிய  ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஸ்விஸ் மருத்துவர்  பாராசெல்சஸ் (Paracelsus-1493/4-1541)  மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்லாது  அரசர்களும் புனித தந்தைகளும் கூட பல காரணங்களுக்காக நரமாமிசம் உண்டதை எழுதினார்.

எனினும் இன்னுமே பிடிவாதமாக உலகின் எந்த பகுதியிலும் நரமாமிசம் உண்ணுதல் என்பது நடக்கவே இல்லை என்று வாதிடும் மானுடவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள்  இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நாவல்களில் திரைப்படங்களில், நாடகங்களில், வீடியோ விளையாட்டுக்களில்  நரமாமிசம் உண்பது, குரு நோய் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கிறது, உதாரணமாக: 

குரு இப்போது முற்றிலும் இல்லை. ஆனால் நரமாமிசம் உண்பது   முற்றிலும் கட்டுக்கதை அல்ல. இறந்த உடல்களின் குவியல்களின் மீது அமர்ந்து தியானம் செய்தால் அசாதாரண சக்தி கிடைக்கும் என்று நம்பிய திபெத் புத்தபிட்சுக்களை, காசியில் எரியும் பிணங்களின் உடலை தின்னும் அகோரிகளை நாம் அறிந்திருக்கிறோம்.  கடந்த 2022ல் கேரளாவில் நரபலி கொடுத்து நரமாமிசம் உண்டால் புதையல் கிடைக்கும் என்பதற்காக கொல்லப்பட்டு உண்ணப்பட்ட இரு பெண்களை குறித்த செய்திகளையும் அறிந்திருக்கிறோம்.

இந்த விக்கிபீடியா இணைப்பில் (https://en.wikipedia.org/wiki/List_of_incidents_of_cannibalism#:~:text=Accounts%20of%20human%20cannibalism%20date,the%20practice%20to%20this%20day3.) நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நரமாமிசம் உண்ட நமது நியாண்டர்தால் மூதாதைகளிலிருந்து, கணவனை, மனைவியை குழந்தைகளை, அந்நியர்களை, காதலியை கொன்று சமைத்து உண்டவர்களை பற்றிய தகவல்கள் 2022ன் கேரளா சம்பவம்  வரை இருக்கிறது. 

சந்திராயன் நிலவுக்கு சென்று சேர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் இவை நடக்கிறது என்னும் போது 1900களில் வெளி உலகத் தொடர்பில்லாத ஃபோரே தொல்குடியினர் இறப்புச் சடங்கில் நரமாமிசம் உண்டதில் வியப்பொன்றும் இல்லை.  

 மேலதிக தகவல்களுக்கு:

https://anglicancompass.com/isnt-eating-and-drinking-the-body-and-blood-of-jesusgross/embed/#?secret=ZTCLO9SRWy#?secret=ro8P9JumDp

Alpers, Michael P. The epidemiology of kuru: monitoring the epidemic from its peak to its end. Philos Trans R Soc Lond B Biol Sci. 2008; 363(1510): 3707–3713.

Lindenbaum, Shirley “Kuru, Prions, and Human Affairs: Thinking About Epidemics”. Annual Review of Anthropology. 2001; 30 (1): 363–385

Shirley Lindenbaum (14 Apr 2015). “An annotated history of kuru”. Medicine Anthropology Theory.

Whitfield, Jerome T.; Pako, Wandagi H.; Collinge, John; Alpers, Michael P. “Mortuary rites of the South Fore and kuru”. Philos Trans Royal Society B Biol Sci. 2008: 363 (1510): 3721–3724.

“When People Ate People, A Strange Disease Emerged”. NPR.org. Retrieved 2018-04-08. 

தன் வாழ்வை முற்றிலுமாக குரு நோய் குறித்த ஆய்விற்கு அர்ப்பணித்த  Michael Alpers குறித்து வாசிக்க: https://cosmosmagazine.com/science/biology/the-man-who-linked-kuru-to-cannibalism/

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑