கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கடல் மட்டத்துக்கு 1500 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது ஏற்காடு தாவரவியல் பூங்கா

1963ல் துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பூங்கா BSI -ன் தெற்கு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 18.4 ஹெக்டேரில் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்கா பிற தாவரவியல் பூங்காக்களைப் போல அழகிய மலர்களும் புல்வெளிகளும் கத்தரிக்கப்பட்ட உயிர்ச்சிற்ப மரங்களும் கொண்டதல்ல. அரிய வகை தாவரங்கள் பலவற்றை கொண்டிருக்கும் முழுக்க முழுக்க வேறுபட்ட ஒரு அனுபவத்தை அளிக்கும் ஆராய்ச்சி பூங்கா இது. வருடா வருடம் மாணவர்களுடன் இங்குச் சென்று வருகிறேன்

இங்குப் பல நூறு வகை ஆர்கிட் செடிகள் வண்ணமயமான மலர்களுடன் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின் அன்னியச் செலாவணிக்கு மிக முக்கிய காரணமானவை இந்த ஆர்கிடுகள். இவை பூச்சாடிகளில் பல நாட்கள் வாடாமல் இருப்பது, பலவகைப்பட்ட வண்ணங்களில் இருப்பது மற்றும் மிக வித்தியாசமாக வண்ணத்துப்பூச்சி வடிவில் இருப்பது ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற மலர்கள். 

ஏற்காடில் மட்டுமே வளரும் ஓரிட ஆர்கிடுகள்(எண்டமிக்) மட்டுமே இந்தப் பூங்காவில் சுமார் 30 வகைகள் இருக்கின்றன. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆர்கிட் தோட்டம் இதுதான்

 இங்கு 3000 மரங்கள் 1800 புதர்ச்செடிகள் உள்ளன. இந்தப் பூங்காவில் இருக்கும் பல அரிய வகை தாவரங்களில் ஊனுண்ணித் தாவரம் நெப்பந்தஸ் காசியானா, மரக்கொடி வகையைச் சேர்ந்த நீட்டம் உலா, சைகஸின் ஆண் மரம், வாழும் புதைபடிவம் எனப்படும் ஜப்பானில் அணுகுண்டு வீச்சில் கூடச் சேதமடையாமல் இருந்ததால் அங்குக் கடவுளாகவே வழிபடப்படும் அழகிய பிளவுபட்ட விசிறி இலைகள் கொண்ட ஜின்கோ ஆகியவை உள்ளன.

  தாவரங்களில் சிறு செடி, புதர் ,மரம், ஆகிய அடிப்படையான மூன்று வகைகளிலிருந்து மாறுபட்டது இந்த மரக்கொடியான லயானா என்பது.

மிக உறுதியான தடிமனான மரமே கொடிபோல் வளைந்து பிற மரங்களில் ஏறி வளர்ந்திருக்கும்.

இவற்றோடு கள்ளிவகைகள், லில்லிச்செடிகள் ஆகியவையும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர், இலைகள் நாணயம் போலிருக்கும்  நாணயச் செடி , மீன்முள் கள்ளி எனப்படும் மீன் முட்களைப் போலவே இலையமைப்பு கொண்டிருக்கும் கள்ளிகள் ஆகியவை இங்கு இருக்கின்றன.

 நெப்பந்தஸ் காசியானா, மேகாலயா மாநிலத்தில் உள்ள காசி மலையில் மட்டும் வளரக் கூடியது. கடந்த 50 ஆண்டுகளாக ஏற்காடு தோட்டத்தில் இவற்றின் மூன்று செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவின் மிகப் பெரிய பூச்சியுண்ணும் தாவரங்கள் என்ற சிறப்பும் இந்தத் தாவரங்களுக்கு உண்டு. ஷில்லாங்கிலிருந்து மண்ணுடன் அப்படியே இவை எடுத்துக் கொண்டு வரப்பட்டன.  இவற்றின் பிட்சர் எனப்படும் பூச்சிகளை கவர்ந்திழுத்து உண்ணும் பொறிகளான குடுவைகளை மிக அதிகமாக அக்டோபர் டிசம்பரில் பார்க்க முடியும்.ஏற்காட்டில் நன்கு வளர்ந்த இவை பல வருடங்களுக்குப் பிறகு 2009ல் மலர்ந்தன. இந்தியாவின் வடகிழக்கு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தாவரம் தென்னிந்தியாவின் நிலப்பரப்பில் வளர்வதை பார்ப்பது மிகவும் அரியது.

வண்ன வண்ண தீக்குச்சிகளை போலவெ மலர்களைக் கொண்டிருகும் Aechmea Gamosepala செடியும், துன்பெர்ஜியா மைசூரென்சிஸ் என்னும் பந்தலில் வளர்ந்து அதன் நீளமான தோரணம்போல் தொங்கும் மலர்கள் கொண்டிருக்கும் கொடியும் இங்கிருக்கிறது .

இங்கு RET -rare endengered threatened எனப்படும் அரிய, அழிந்து கொண்டு வரும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் தாவரங்களும் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன.

lady’s slipper orchid எனப்படும் செருப்பு வடிவ அழகிய மலர்களைக் கொண்டிருக்கும் ஆர்கிடுகளை இங்குத் தவறாமல் பார்க்க வேண்டும்.

மிக முக்கியமாக  ஏற்காடு மலைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்ட  வெர்னோனியா சேர்வராயன்சிஸ் என்னும் அரிய மரமும் இங்கிருக்கிறது( Vernonia Shevaroyensis). இந்த மரம் சூரியகாந்தி குடும்பமான அஸ்ட்ரேசியை சேர்ந்தது. இந்தத் தாவர குடும்பத்தின் ஆயிரக்கணக்கான தாவர வகைகளில் மூன்று மட்டுமே மர வகைகள். அதிலொன்று இந்த வெர்னோனியா சேர்வராயன்சிஸ் மரம். 

ஏற்காட்டின் இயல் மரங்களான இவை முன்னொரு காலத்தில் எராளமாக அங்கு வளர்ந்தன பின்னர் படிப்படியாக அழிந்துபோய் எஞ்சி இருந்த சில மரங்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லபட்ட பிறகு இப்போது இந்தப் பூங்காவில் இந்த ஒரே ஒரு தாய்  மரம் மட்டுமே காப்பாற்றப்ட்டு வளர்ந்து வருகிறது.

ஏற்காடு மலைப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள இந்த ஆராய்ச்சிப் பூங்காவில் 1,100 வகையான தாவரங்கள் உள்ளன. இவற்றில் உலகில் அழியும் நிலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் 60 உள்ளன

.

இங்குத் தவறாமல் பார்க்கவேண்டிய தாவரங்கள்”:

Curcuma neilgherrensis-காட்டுமஞ்சள்

மக்னோலியா கிராண்டிஃபுளோரா (Magnolia Grandiflora)

நெப்பந்தஸ் காசியானா (Nepenthes Khasiana)

வெர்னோனியா சேவாராயன்சிஸ் (Vernonia Shevaroyensis)

டையூன்எட்யூல் (Dioon edule)

Psilotum nudum எனப்படும் பெரணி வகை தாவரங்களில் ஒருவகை 

தீக்க்குச்சி செடி-Aechmea Gamosepala

Thunbergia mysorensis

ஹைட்ரில்லாவெர்டிசிலேட்டா

Bulbophyllum fuscopurpureum

Galphimia glauca

மற்றும் Bentinckia condapana, Solandra maxima,  Begonia வின் எண்ணற்ற வகைகள், காசித்துமையான Impatiens, பெரணியான Botrychium ஆகியவற்றையும் பார்க்கலாம்.

இவற்றோடு bonsai garden, foliage garden, topiary garden, rock garden, water garden, herbal garden, sensory garden , Syzygium palghatensis ன் டைப் ஸ்பெசிமன், உலர்தாவர தொகுப்பான herbarium அவற்றில் பூச்சித்தாக்குதல் வராமல் தடுக்கும் முறைகள் ஆகியவை தாவரவியலாளர்களால் கவனிக்கப் படவேண்டியவை.,