லோகமாதேவியின் பதிவுகள்

Category: பொது (Page 2 of 2)

சமர்த், ராஜகோபால்,

ஒரு நீண்ட விடுப்பில்2019 ஆகஸ்டில் சென்னை  சென்றிருந்தேன். சென்னை விஷ்ணுபுரம் குழும நண்பர்கள்   சொல்லி , திரு ராஜகோபால் , (Samarth learning solutions) நடத்திய  இரண்டு நாட்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சியில்  17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்துகொண்டேன்

உண்மையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ’ஆளுமை மேம்பாட்டிற்கு என்ன இரண்டு நாட்கள் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது’ என்னும் அலட்சிய மனோபாவம் இருந்தது. மேலும் ”எனக்கென்ன இனி மேம்மடுத்திக்கொள வேண்டும், 12 வருடங்களாக நல்ல ஆசிரியையாகத்தானே இருக்கிறோம்? என்றும் ஒரு கேள்வி இருந்தது. எதற்கும் போகலாம் சென்னை குழும நண்பர்களை பரிச்சயம் செய்துகொண் டதுபோலிருக்கும் என்றே சென்றேன் உண்மையில்

 இதுபோன்ற நிறைய பயிற்சிகளை எங்களுக்கு கல்லூரியில் வருடா வருடம் அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.  அந்த பயிற்சிகள் என்பது, ஒருவர் மேடையில் ’’ எப்படி நாங்கள் இந்த உயரிய தொழிலை தெய்வமென நினைக்கவெண்டும், முன்னுதாரணமான ஆசிரியர்களின் வாழ்க்கை குறிப்பு’’ இப்படி சொற்பொழிவாற்றுவார், அல்லது எங்களுக்கு சில விளையாட்டுககள் நடத்துவார்கள் அன்றெல்லாம் மகிழ்ந்திருந்து வீடு திரும்புவோம் அவ்வளவுதான். பயிற்சி என்று சொல்லப்பட்ட அந்த நிகழ்வுகளிலிருந்து எங்களுக்கு  கற்றுக்கொள்ளவோ, மேம்படுத்திக்கொள்ளவோ  ஏதும் இருந்ததே இல்லை.

ஆனால் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நிறைவு செய்த பின்னரே இது எத்தனை அவசியமான ஒன்று என்பதையும் நான் மிகத்தாமதமாக இப்பயிற்சியினை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உண்ர்ந்து வருந்துகிறேன். 15பேர் கலந்துகொண்டோம். பெரும்பாலும் தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் என்னைதவிர இன்னொரு ஆசிரியரும். அனைவரும் விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்தவர்களே!

 12 வருட ஆசிரியத்தொழிலில் நான் முக்கியமென கருதிவந்தது, பெரும்பாலும் அன்பாயிருப்பது, தேவைப்பட்டால் கடுமைகாட்டுவது, நேரம் தவறாமை, மாணவர்களுக்கு  சரியாக விஷயத்தை கொண்டு சேர்ப்பது, மாணவர்களின் அந்த அவய்துக்கேயான சிக்கல்களையும் அன்னையென இருந்து தீர்வுகாண்பது  இவைகளை மட்டுமே.

ஆனால் இந்த பயிற்சியின் பின்னரே இன்னும் எத்தனை முக்கியமான நான் அவசியம் பின்பற்றவேண்டிய, எனக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து பயனளிக்கக்கூடிய  நுட்பமானவிஷயங்கள் இருக்கின்றன என்றறிந்து கொண் டேன்

ஆசிரியத்துக்கு மட்டுமல்ல,  ஒரு உரையாடலை எப்படி சாமார்த்தியமாக கொண்டு போவது, வியாபாரப்பேச்சுக்களை எப்படி வெற்றிகரகமாக நடத்துவது இப்படி ஏராளமாக கற்றுக்கொண்டோம்

பங்கேற்பாளர்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து மீண்டும் எங்களுக்கே போட்டுக்காண்பிக்கையில் அதில் நாங்கள் செய்தவையும் செய்யக்கூடாதவைகளும்  எங்களுக்கே தெளிவாக  தெரிந்தது

இந்த பயிற்சியின் வாயிலாக அல்லாது வேறெப்படியும் நாங்கள் இதுபோன்ற தவறுகளை, தோற்றப்பிழைகளை சரிசெய்துகொண்டிருக்கவும் ஏன் அறிந்துகொண்டிருக்கவும் கூட வாய்ப்பில்லை,. இரண்டு நாட்களுமே கொட்டும் மழையில் முழுக்க நனைந்து கொண்டும் கூட பின்மாலை வரை நீண்ட பயிற்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம்

ராஜகோபாலும் அவர் நண்பர் அருணும் இப்பயிற்சியை நடத்தினார்கள். இருவரும் மிக்க தோழமையுடன் சிரித்த முகத்துடன் சோர்வின்றி , கட்டணமுமின்றி எங்களுக்கு முழுமனதுடன்  பயிற்சி அளித்தனர். பயிற்சியாளர்களுடன் பங்கேற்பாளர்கள் இருந்ததைபோலல்லாமல்  நெருங்சிய சினேகிதரோ அல்லது சொந்த சகோதரனோ வந்திருந்து வீட்டு முன்னறையில் காபி குடித்துக்கொண்டே இயல்பாக பேசிக்கொண்டிருந்தது போன்ற ஒரு சுவாதீனமும் செளகரியமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது.

.திரு ராஜகோபால் அவர்களை வெண்முரசு வாசகராக விஷ்ணுபுரம் விழாவில் இலக்கிய வாசகராகத்தான் அறிமுகம் ஆனால்  இப்படியான பயிற்சிகளை நடத்துபவர் என்றே இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..

விடுப்பு முடிந்து இனி ஒரு ஆசிரியையாக  மாணவர்கள் முன்னால் நின்று முன்னைக்காட்டிலும் சரியாகவும் சிறப்பாகவும் என்னால் பாடங்களை நடத்த முடியும் என்று திடமான நம்பிக்கை வந்திருக்கிறது இப்போது

பங்கேற்பாளர்களில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.  அவர்களுடன் கலந்துரையாடியதும் நல்ல அனுபவமாயிருந்தது,. பயிற்சியளித்த ராஜகோபால் மற்றும் அருண் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் குழுமத்திற்கும் பயிற்சிக்கு  தன் வீட்டில் இடமளித்த திரு செளந்தருக்கும் நன்றி.

ஜா ஜா என்னும் ராஜகோபால்

இந்த பதிவு ஒரு கடிதமாக ஜெ வின் தளத்தில் வெளியானது, கடிதத்துக்கு சமர்த் குறித்த ஜெ வின் விரிவான பதில் இருக்கும் இணைப்பு;

சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்

இலங்கை நினைவுகள்

ஜெ தளத்தில் இன்று ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரையை மீள வாசித்தேன். எனக்கு இலங்கை நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கை தமிழ்

அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற  தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும்.  தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும்,  நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.

நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் நின்னுட்டு போறதுதானே? என்பார்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு  முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதான் இக்கட்டுரையில் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அதனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.

நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரம் அதில் பறித்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவம் மட்டும் சாப்பிடும் நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை  ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று  வேடிக்கை பார்த்தது, மினுங்கும் கருமையில் வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், இந்தியாவின்  நைட்டியைப் போலவே பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கியுடனேயே ஆண்கள் அலுவலகம் செல்வது, அங்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல்,   சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், இன்னும் மனதில்  சுவைத்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பமுமாக கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது.

பல் வைக்கப்பட்டிருக்கும் கருவறை

கொழும்பு வீட்டின் வாசலில் மாலைநேரங்களில் சிறு மணியொலி எழுப்பியபடி ஒரு பேக்கரிபொருட்களை விற்கும் வண்டி வரும். சூடான கேக்குகளும் பன்களும் ரொட்டிகளும் வாசனையாக புத்தம் புதியதாக கிடைக்கும். ஆர்வமாக வாங்கி மூவருமாக சாப்பிடுவோம். காரை வழியெல்லாம் நிறுத்தி நிறுத்தி மக்கள் இனிப்புக்களை வழங்கிக்கொண்டேயிருந்த ஒரு புத்த பூர்ணிமா நாளும், வெண்தாமரைகளுடன் சென்றிருந்த கண்டியின்புத்தரின் பல் இருந்த ஒரு கோவிலும் அதன் அமைதியும் அவ்வப்போது நினைவுக்கு வரும்.

கண்டி புத்தரின் பல் கோவில்

இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா  கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்

நீல அல்லி

எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை  படித்த  தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று

பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டர நாயக சர்வதேச விமான நிலையத்தில்  மகன்களுடன் காத்திருக்கையில் எங்களை வரவேற்க அப்போதைய தேசிய மலரான நீலஅல்லி மலர்கொத்துக்களோடு காத்திருந்தார்  அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”. இப்போது இலங்கையின் தேசிய மலர் அல்லிதான், நீல அல்லி அல்ல.அவரின் மலையொன்றின் மீது அமைந்திருந்த அழகிய வீடும், வீட்டுவாசலில் செறிந்த கனிகளுடன் நின்ற எலுமிச்சைமரமும், காம்பஸ் வைத்து வரைந்தது போல வட்ட முகத்துடன் ஒரு சிறுமியைபோலிருந்த அவர் மனைவியையும் இப்போதுதான் சந்தித்ததுபோல நினவிலிருக்கின்றது.

அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும் ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரமும் , இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. தேவதைக்கதைகளில் வருவது போன்ற ஒரு நகரமது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம்  என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்.

1500 ஏக்கரில் பரந்து விரிந்த பசும்புல்வெளிகளுடன் இருந்த நுவரேலியாவின் அம்பேவல மாபெரும் மாட்டுப்பண்ணையும், சீஸ்தொழிற்சாலையும் அங்கு அருந்திய மிகச்சுவையான குளிர்ந்த பாலும் அடிக்கடி நினைவில் வந்து ஏக்கமுண்டாக்கும்.

நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் இனி சென்றால் மீள வராமல் அங்கே இருந்துவிட நினைக்கும் நாடென்றால் அது இலங்கைதான்.

அம்பேவல பண்ணை

பேய்ச்சி

 “பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ள’’தாகக்கூறி மலேசியா அரசின், 1984 ஆம் ஆண்டு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் செக்‌ஷன் 7(1) கீழ், நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலுக்கு மலேசிய உள்துறை அமைச்சு தடை விதித்திருக்கிறது.நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லப்படுகிறது. பாலியல் சொற்களும், பாலியல் காட்சிகளும் நாவலில் உள்ளன. இவை வரும் தலைமுறையை சீர்குலைக்கும் என காரணங்கள் சொல்லப்படுகின்றது. இந்த நூலோடு சேர்த்து, ‘Gay is OK! A Christian Perspective’ என்னும் நாவலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது .

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைச்சொல்லும் பேய்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது. புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்கிறார் நவீன்.

சென்ற வருடம் ஏறக்குறைய இதே சமயத்திலான பேய்ச்சி குறித்தான அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை காணொளியில்  முழுவதுமாக கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல  வருடிச்செல்கிறார். ஆனால்  முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் அதை அவர் சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது.

அருணா முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுவது ஜெ வின் இப்படியான உரைகளை நினைவூட்டியது. அவரும் ஒரு முறைகூட குறிப்பெழுதிய துண்டுக் காகிதங்களை  வைத்துக்கொண்டதும் பார்த்ததுமில்லை. இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு  குறிப்பை  பார்க்க எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை புறக்கணித்து மீண்டும் உளளத்திலிருந்தே சொல்லத்துவங்குகிறார்

பேய்ச்சியை அவர் விவரித்தவிதம் அழகோ அழகு. சின்னப்பிள்ளைகள் பள்ளியில் கதையையோ பாடலையோ சொல்லுவதுபோல அத்தனை அபிநயித்து லயித்து சொல்லிக்கொண்டிருந்தார்.

அரைமணிநேரத்திற்கு பின்னர் கொஞ்சம் களைப்படைந்து மூச்சுவாங்கினாலும் கதை உருவாக்கிய மகிழ்ச்சியும் உணர்வெழுச்சியும் செலுத்த தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்.

கதையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு  விரிவாக அவற்றைக்குறித்து பேசப்பட்ட பல உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் அருணா பேய்ச்சி கதைக்களத்துக்குள் நின்று, கதையுடன் இரண்டறக்கலந்து கதையை  சொல்லிக்கொண்டிருந்தார். அந்த போடியத்தையே பேய்ச்சி கதையின் களமாக்கி, அதற்குள்ளேயே அவரின் அழகிய கையசைவுகளால் காட்சிகளை விவரிக்கிறார். தூரம் என்பதற்கு தொலைவில் கையைக்காட்டி, கிணறு என்று சொல்லுகையில் விரல்களால் ஒரு சிறு வட்டம் வரைந்து அக்கிணற்றைக் காட்டி, அங்கிருந்து இங்கிருந்து கொண்டுவந்ததையெல்லாம் அப்படி அப்படியே கைகளைக்கொண்டு காட்டிக்காட்டி விவரிப்பது அழகு.

அங்கே ஓடை அங்கே மரங்கள் இங்கே கோவில் என்று அருணாவின் கைகள் சுட்டிக்காட்டிய இடங்களிலெல்லாம் என் மனம் ஓடிஓடிச்சென்றுகொண்டே இருந்தது. அவர் கதைக்குள்ளே சென்று சொல்வதல்லாமல் கேட்கும் என்னையும் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச்சென்று கதையை, அக்கதை மாந்தர்களை, நிகழ்வுகளை   சொல்லுகிறார்.

அபாரமான நினைவாற்றல் அருணாவுக்கு. ஏராளமான கதாபாத்திரங்களின் பெயர்களை, அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை  அவர்களின் இயல்புகளை  வரிசையாக சொல்லிக்கொண்டே போகிறார், கதையை மூன்று முக்கிய சரடுகளாக பிரித்துச் சொல்லி பின் உப சரடுடகளுடன் அவை பின்னப்பட்டதை சொன்னது மிகவும் சிறப்பு, இனி  பேய்ச்சியை வாசிக்கையில் இவ்விளக்கம் பெரும் உதவியாக இருக்கும். எல்லா நாவல்களையும் சில முறை வாசிக்கும் வழமை உள்ளவள் நான். பேய்ச்சியை அப்படியல்லாது ஒருமுறை வாசித்தாலே போதுமென்னும் அளவுக்கு அருணா விவரிப்பில் கதைகுறித்தான தெளிவான ஒரு முன்கட்டமைப்பு மனதினுள் உருவாகிவிட்டிருக்கிறது.

அவ்வபோது அடுத்து என்ன சொல்வதென்று கொஞ்சமே கொஞ்சம் தயங்கி பின்னர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புடவைகளில் ஒவ்வொன்றாய் தொட்டுத்தொட்டுப்பார்த்து  வேண்டியதை தெரிவு செய்து உருவி எடுப்பதைப்போல ஒவ்வொரு சம்பவமாய் நினைவின் அடுக்குகளிலிருந்து தேடிஎடுத்து முகம் மலர சொல்லுகையில் முகம் சாய்ந்து,  கருமணிகள் விழியின் ஓரத்திற்கு சென்று கழுவிய  புறாமுட்டைகள் போல அவரின் அகலக்கண்கள் இன்னும் பெரிதாக மலர்கிறது.

கவண்கல்லில் ஆங்ஸாவையே சிறுவன் அடித்ததை சொல்லுகையில் அதை அவரே செய்துவிட்டதுபோல  மெல்ல கிளுகிளுத்து சிரிக்கிறார். மஞ்சள் பறவை ரத்தம் சிந்தி மரணித்ததை சொல்லுகையில் குரல் இறங்கி முகம் மாறுபட்டு அச்சோகத்தை கேட்பவர்களுக்கும் கடத்துகிறார். அப்போய் குறித்தும் நாய்க்குட்டியை குறித்தும் சொல்லுகையில் அத்தனை குதுகாலம் அவரின் உடல்மொழியில். அப்போய் போன்ற சிறுவர்களின் கதாபாத்திரங்களை சொல்லுகையில் அருணாவின் வாசிப்பின், அறிவின் விசாலம் தெரிகின்றது பதேர் பாஞ்சாலியிலிருந்து நடாஷாவின் தம்பி வரை அடுத்தடுத்து சொல்லுகிறார்.

அதுபோலவே புதிய நிலத்தில் தங்களைபொருத்திக்கொள்ள முடியாமல், அப்பதற்றத்தில் குடிக்குள் மூழ்கும் ஆண்களை நீரில் வேரின்றி மிதக்கும் பாசிக்கும், ஆண்கள் அப்படியிருப்பதால், உளவிசை கூடிய பெண்கள் வேர்பிடித்த ஆல் போல அங்கு ஊன்றி வளரத்துவங்குகிறார்கள் என்று ஒப்பிட்டது வெகு சிறப்பு.

அருணாவின் உள்ளம் முழுக்க கதைக்களத்துக்குள் முழுமையாக ஒன்றியிருப்பதை கேட்பவர்கள் உணரமுடிகின்றது. ஈரமூக்கை கைகளில் வைக்கும் நாய்க்குட்டியை சிறுவன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடிச்செல்லுவதை சொல்கையில் அருணா மேடையிலிருந்து ஓடிசெல்லாமலிருந்ததுதான்  வியப்பு. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் கதையை சொல்லுகிறார்

அருணா பேய்ச்சியை அடுக்கடுக்காக பிரித்து, அழகாய் கண் முன்னே காட்டுகையில் ஒரு மலரை அதன் பாகங்களை. ஆய்வுக்கூடத்தில் முதலில் புல்லிவட்ட இதழ்களை, பின்னர் அல்லிவட்ட இதழ்களை, பின்னர் சூலகம், மகரந்த காம்புகள் என ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன்  ஒப்பிட்டுக்கொண்டேன்

கதையை அதில் கூறப்பட்டிருக்கும் மக்களை நிலப்பரப்புக்களை மொழியை பின்னர் கதாபாத்திரங்களின் இயல்பை என ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றது மிக நன்றாக இருந்தது

 கோழிகள், விலங்குகள், யட்சி ராஜநாகம் தாவரங்கள், மூலிகைகள் என கலந்துவரும் பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தை இந்த உரை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே வாங்கி வாசிக்கத் துவங்கிவிட்டிருக்கிறேன். எப்போதும் பொருத்தமாக பாந்தமாகவெ உடையணீயும் அருணா இந்த உரையின் போதும் அணிந்திருந்த ஆழ்நீலத்தில் இளம்பச்சை சரிகைக்கரையிட்ட புடவையும் அவரின் கண்ணியமான தோற்றத்தை இன்னும் கூட்டிக்காட்டியது.

 இப்படி வரிவரியாக ஆழ்ந்து வாசித்து உணர்வெழுச்சியுடன் மணிக்கணக்காக  ஒரு கதையை பேசமுடியுமென்னும் அளவிற்கு ஒருவர், ஒரே ஒருவர் வாசிப்பார்களேயானால் அதன் பொருட்டு உயிரைக்கொடுத்தாவது ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்று எனக்கே கூட தோன்றியது ):

உரையை கேட்க ; https://www.youtube.com/watch?v=5QttdXnHZ9w

வாழ்தலும் பிழைத்தலும்!

ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால்  அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.

இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும் அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான் எனினும் அன்னைமையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன்.

ஆனால் இப்போது தனியே மகன்களின்றி, இங்கு இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகி விட்டது. புதிதாக கட்டப்பட்டிருக்கும்  20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை.  மரக்கன்றுகளை கொண்டு வந்து இப்போதுதான் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்

இவரை அனுப்பி காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டுமூன்று நாட்கள் கழித்துத்தான், நானே என்னுடன்  பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்தேன்.

புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும், எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை  வாசித்தேன் அவரின் எளிய கவிதைகளையும், நாட்குறிப்புக்களையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாக கூட தோன்றியிருக்கும்,  ஆனால் ஜெ’ தளத்தின் வாயிலாக நான் சுகந்தியை அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள்  என்னை பெரிதும் தொந்தரவு செய்தன

வாசல் தெளிக்க கோலம்போட என்று எந்த வேலையும் இல்லை பெரிதாக. புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும் கூட இங்கில்லை.

எல்லாவற்றையும் விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால்  இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள், எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில்  துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை

அங்கேயே இருக்கும் சிறிய  பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி  விளையாடும் குழந்தைகள். (கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த  குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு,  சிறகு என்று வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினைத்துக்கொண்டேன்) ஒரு  சிறிய விநாயகர் கோவில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும்  இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான் போல. பகலிலும் இரவிலுமாய் நாற்பது காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாக  காவற்காக்கின்றனர். பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப்புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும்.

வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காக. பெண்கள்  கூட்டமாக காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தை கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ”போன வாரமே  மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்

சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா  பார்க்க    ஆகும் செலவில் இங்கு ஒரு குடும்பம் தாராளமாக  ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம் அத்தனை செலவுள்ள விஷயம் அது.

அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையை கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு கண்ணைக்கட்டியது.  முன்னைப்போல முகமூடியுடனோ, ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் எண்ணையும் கரியுமாக பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்துமோ கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில்  சோளப்பொறி விற்றால் போதும் போலிருக்கிறது

ஆட்டோவிலும் இருசக்கரவாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக.  வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப்பெருநகரின் முகத்தைப்பார்த்து மிரண்டு போனேன்.

உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டெ இருந்தது. என்னால் அமைதியாக ஒரு மணி நேரம் கூட அங்கே இருக்கமுடியவில்லை.  பால்கனியை திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது..

அபோடுஹ் நிகழ்ந்துகொண்டிருந்த வெண்முரசின் தீயின் எடையும் தாங்க முடியவில்லை. குருதிபெருக்கெடுத்து ஓடியது குருஷேத்திரக்களத்தில், துரியோதனனின் பாவை தன்னந்தனியெ களத்தில் நின்றிருந்த அன்றும், பீமனை குரங்குகள் புறக்கணித்தபோதும் கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன்.  பாதிஇரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்துவங்கினேன் ஒரே வாரத்தில்

நல்லவேளையாக சென்னை  நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்களை வாசித்தபின்னரே என்னுடன் தமிழ்நதியும் ,யூமா வாசுகியும், கசீ சிவகுமாரும் சில நாட்கள் உடனிருந்தனர்

நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வெளிக்கதவை திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணிற்பிள்ளைகளையும், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்துகிடந்த ஈர வாசலையும் குலைதள்ளி இருந்த வாழைகளையும் பார்த்தபின்பே பழைய மனுஷியானேன.

இந்த இரண்டு வாரத்தங்கலில் எதையாவது மீள நினைத்துக்கொள்வேன் என்றால் அங்கிருந்த துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடனிருந்த மாபெரும் நீச்சல்குளத்தையும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையையும் தான்.

பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல் தான்.

இதைக்குறித்து திரு ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதமும் அதற்கு அவரின் பதிலும்.

சென்னையில் வாழ்தல்

ஊட்டி காவிய முகாம்

ஊட்டி முகாமிலிருந்து  வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள் இருவரும் வருகையிலேயே முதல் அமர்வு துவங்கியிருந்தது, அப்போதிருந்து மூன்றாம் நாளின் நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது

சென்ற வருடத்தைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தோம், பெண்களும் முன்பைவிட நிறையப்பேர் கலந்துகொண்டிருந்தோம்.

நாஞ்சில் நாடன்,P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்‌ஷ்மி மணிவண்ணன்,உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு    மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது

கவிதைகளின் சிறப்பம்சங்களை சில  விவாதங்களில்  பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில்,  எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில் கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்.

திரு.மோகனரங்கன்

மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த  உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது  ஜெ’வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது

கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை  ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது  கதை அரங்கு

நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய திருமூலனாதனின் தமிழறிவை வணங்குகிறேன்.   ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ சொல்லிய அந்த  பட்டு நூலை தூண்டிலில் கட்டுவது குறித்தான  விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.

சிங்கை சுபாவும், திருமூலநாதனும்

வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது

அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.

இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்

14டிகிரி குளிரிலும் அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய் குளித்து தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.

நாஞ்சில் நாடன் அவர்களின் யுத்தகாண்ட உரை அத்தனைஅருமை, இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்

அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும்  பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெ;விடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.

முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். ஊர் திரும்புகையில்  நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்

3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?

இந்திய ஞானமரபில் தத்துவம்,  இந்தியச்சிற்பக்கலை குறித்தும் நிறைய அறிந்துகொண்டேன்

புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக  கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து அவர் சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று  புரிந்தது

ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த  3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்தது

குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை.  இந்த 3 நாட்களைக்குறித்தான இத்தனை நீளக்கடிதத்தில் எழுதிய  அனுபவங்கள் அனைத்தையும் அந்தப்புகைப்படத்திலிருக்கும்  என் சிரிப்பு சொல்லிவிடும்

இப்படி  முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள்,  இன்னும் சில வருடங்களுக்கு  உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.

திரு பி ஏ கிருஷ்ணன்

(மே 2018)

தியடோர் பாஸ்கரன் இணையவழிச்சந்திப்பு

திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய வழி கூடுகை 12/9/2020 அன்று விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினால் ஒருங்கிணைக்கபட்டது. நிகழ்வு மிக சிறப்பானதாக நிறைவானதாக  இருந்தது. இந்த நோய்தொற்றுக்காலத்திலும் இணையம் வழியே திரு முத்துலிங்கம் , திரு நாஞ்சில் நாடன், திரு தியடோர் பாஸ்கரன்  என மிக முக்கியமான் ஆளுமைகளுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடவும் பலவற்றை அறிந்துகொள்ளவும் முடிந்ததில் மகிழ்ச்சி.

விஷ்ணுபுரம் விழா, ஊட்டி,குரு நித்யா ஆசிரமத்தின் காவிய முகாம், ஈரோடு கூடுகைகளைப்   போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்படும் எல்லா விழாக்களையும் போலவே இணைய வழிகூடுகைகளும் மிகச்சிறப்பாக நேரஒழுங்குடன், முறையாக நடப்பது ஆச்சர்யமளிகின்றது.  பொதுவாக ஒழுங்குடன்  இருப்பதாக சொல்லப்படும்  கூட்டங்களில் காணப்படும் செயற்கையும், வெற்றுச்சம்பிரதாயமும், உயிரற்ற தன்மையும், இறுக்கமும் இல்லாமல் இங்கு  சிரிப்பும் பாட்டும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் கூடவே முறையான ஒழுங்கும் இருப்பதுதான் வியப்பு.

திரு ராஜகோபாலன் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக மலர்ந்த முகத்துடன்  நிகழ்ச்சியை  நடத்தினார்.  அவருக்கு பின்னிருக்கும் அன்னை யானையும் குட்டியும் தும்பிக்கைகளால் தொட்டுக்கொள்ளும் சித்திரம் அழகு

தியடோர் பாஸ்கரனை போல மிக முக்கிய ஆளுமைகளை இப்படி ஏராளமானோர் சந்திக்கையில்  பன்முக ஆளுமையும் அனுபவசாலியுமான அவரிடமிருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடிகின்றது. சூழல்மீதான் அவரது கரிசனமும் அறிவும் பிரமிப்பளிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்து தமிழ் நாளிதழில் சென்னையின் காணாமல் போகும் நீர்நிலைகளைக்குறித்தான அவரது கட்டுரையொன்றைக்குறித்து நான் அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்து. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னரனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். மிக சின்ன விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் என்பதற்கான் சான்று அந்நிகழ்வும். கடந்த ஆகஸ்ட் மாதமும் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள்  மத்திய அரசின் விஞ்யான் பிராசார் ஏற்பாடு செய்திருந்த ஒரு இணையவழிகூடுகையில் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மிக முக்கியமான சூழல் பதுகாப்பு குறித்த  உரையாற்றுகையில் நானும் கேட்க கொடுத்து வைத்திருந்தது

Slipper orchid வகையில் அரிதான ஒன்றான Paphiopedilum druryi குறித்தும், நாய்கள் பூனைகள் காட்டுயிர்களை குறித்துமான அவரது கருத்துக்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்லாது மிக முக்கியமனவையும் கூட.

Paphiopedilum druryi

ராணுவ அதிகாரி போன்ற மிடுக்கான தோற்றமும், பொருத்தமான ஆழ்ந்த குரலுமாக வசீகரமான ஆளுமை அவர், குறிப்பாக  அந்த கம்பீர மீசை. அவரது மனைவியை அறிமுகப்படுத்தியதும் அப்படித்தான், அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் புரிதலையும் அந்த சிலமணி நேரங்களிலேயே உணர முடிந்தது.

அவர்களின் செல்லப்பூனையின் குரல் அவ்வப்போது மெல்லிசாக கேட்டுக்கொண்டிருந்தது. அவரது மனைவியும் காமிராவின் முன்னால் வருகையில் பூனையை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டார். அது ஒரே செல்லச்சிணுங்கலும் புகாருமாக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. பின்னர் தாளமுடியாமல் தாவி மேசைக்கு வந்தேவிட்ட அதை அவரும் வாரி எடுத்து   மடியிலிருந்திக்கொண்டார்.  அவ்வப்போது இணையவழி கணவருக்கு தெளிவாக வந்து சேராத கேள்விகளை இவர் தள்ளி இருந்து  மெல்லிய குரலில் மீண்டும் சொல்லுவதும், இவரும் முழுநிகழ்விலும் மனைவியின் பக்கமாகவே ஒரு செவியை குவித்து வைத்துக்கொண்டதுமாக அவர்களது அன்னியோன்யம் மனதுக்கு மிகவும் நிறைவளித்தது

 அவர் பேசிக்கொண்டிருந்ததை ஒரு screen shot எடுத்து சேமித்து வைத்துக்கொண்டேன். அவருக்கு பின்னால் அடுக்கபட்டிருந்த புத்தகங்களும் சிறிய கண்ணாடிக்குடுவை நீரில் செருகப்பட்டிருந்த அழகிய பூங்கொத்துக்களும், புத்தர் சிலையும், வாஞ்சையுடன் அவரது மனைவி அணைத்துகொண்டிருந்த பூனைக்குட்டியுமாய்,   இயற்கைமீதும் உயிர்களின் மீதும்  கரிசனம் நிறைந்த  அவரது ஆளுமையைக்குறித்தும் அந்த ஒரு காட்சியே முழுக்க சொல்லிவிட்டது.

பச்சைபுல்வெளிகளைக் குறித்தான அவரது கருத்து மிக முக்கியமானது.  பலவகைப்படும் Ground cover plants எல்லாவற்றையும் நிரந்தரமாக அப்புறப்படுத்திவிட்டு புற்களை மட்டும் நிரப்பி, பெரும் நீர்ச்செலவில் அதை வளர்த்தி , அதை அழகு எனக்கொண்டாடுவதில் எனக்கும் பெரும் ஒவ்வாமை இருக்கின்றது.   ஒழுங்கற்ற பல்லுயிர்ப்பெருக்கின் அழகுதானே இயற்கையென்பது?

 காட்டுயிர் பாதுகாப்பு என்றாலே சிங்கம்,புலி, கரடி யானைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல  flora and fauna இரண்டும் சேர்ந்ததே  காட்டுயிரென்பதை தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொல்லுகையில் அது பலருக்கும் சென்று சேர்கிறது.

 எனவே தான், நான் எப்போதும் ஆதங்கப்படும் களைச்செடிகளின் அழிவு குறித்தும் பாதுகாப்பைக் குறித்தும் அவரிடம் கேட்க நினைத்தேன் WWF India வின் குழுவிலும் இருந்திருக்கும், இத்துறையில் அனுபவமிக்க அவரது கருத்துக்கள் எல்லாமே சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் மிக முக்கிமானது.

பத்து வருடங்களுக்கு முன்பு வெகு சாதாரணமாக சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் வேலிகளிலும் செறிந்து காணப்பட்ட நூற்றுக்கணக்கான களைச்செடிகள் இப்பொது அரிதாகவே காணக்கிடைக்கின்றன. அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் அவற்றை இழந்துகொண்டே இருக்கிறோம்

NBR  எனபடும் Nilgiri Biospehere reserve ஒரு மாபெரும் தாவர பொக்கிஷம். சில வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் மட்டுமே வளரும் endemic வகை தாவரங்களை காணும் பொருட்டு   மாணவர்களுடன் அங்கு சென்றிருக்கையில் சாலையின் இருபுறமும் ஆட்கள் செடிகளை வெட்டி துப்புரவாக்கிக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியாகி காரணம் கேட்கையில் மறுநாள்  ஒரு அரசியல் தலைவரின் வருகையின் பொருட்டு சாலைகள் தூய்மைப்படுத்தப்படுவதாக சொன்னார்கள்.  நீலக்குறிஞ்சி மலைமுழுதும் மலர்வதால் நீலகிரி எனப்பெயர் பெற்றிருக்கும் அம்மலையின் அரிய தாவரங்களையெல்லாம் அங்கு வரவிருக்கும் ஒரு பிரபலத்தின் பொருட்டு அகற்றுவதும் அழிப்பதுமெல்லாம்  எத்தனைஅநீதி?

கல்லூரியிலும் நான் பொறுப்பேற்றுக்கொண்டிருந்த ’அமுக்கரா, சர்ப்பகந்தி, திப்பிலி, வெப்பாலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தை கல்லூரித்தலைவரின் ’’பார்க்க அழகாக இல்லை’’ எனும் அபிபிராயத்தினால் அகற்றிவிட்டு பச்சைக்கம்பளம் விரித்தது போல கொரியன்  புல்வெளியை அமைத்திருக்கிறார்கள். ஒருவாரம் வரை வேருடன் செடிகள் பிடுங்கப்படுவதையும் திரும்பத்திரும்ப இருவித்திலைத்தாவரங்கள் எதுவும் முளைத்து விடாமலிருக்க நிலம் முழுவதும் ரசாயன களைக்கொல்லி அள்ளிக்கொட்டப்படுவதையும் திகைத்துப்போய் பார்த்தபடி இருந்தேன்.  நீர்தெளிப்பான்கள் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த பச்சைப்புல்வெளியை கடந்துதான்  தினமும் வகுப்புக்கு செல்வேன் வேதனையுடன்.

தியோடர் பாஸ்கரன் அவர்களைப்போல  இயற்கைச்சூழல் மீதும், உயிர்களின் மீதும் அக்கறைகொண்டிருக்கும்  ஒருசில செல்வாக்குள்ள அதிகாரிகளாவது இப்போது செயலாக இருந்தால் மீதமிருக்கும் காட்டுயிர்களையாவது காப்பாற்றலாம். இந்த நிகழ்சிக்கு பிறகு பலர் என்னிடம் களைச்செடிகளை குறித்து ஆர்வமாக பேசுகிறார்கள்.  இப்படி விஷ்ணுபுரம் நிகழ்வுகள் ஏற்படுத்திக்கொடுக்கும் திறப்புக்களுக்கும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்குமாக, திரு ஜெயமோகன் அவர்களுக்கும்,  திரு ராஜகோபாலன், ஆஸ்டின் செளந்தர், மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட நிகழ்வு நல்லபடியாக நடக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

குள்ளச்சித்தன் சரித்திரம்-யுவன்

 

குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் வேம்பு குறித்து விஷ்ணுபுரம் விழாவில் கேட்ட ஒரு வரி உள்ளேயே  உறுத்திக்கொண்டு இருந்தது. அதன்பொருட்டே அப்புத்தகத்தை தேடத்துவங்கி  மிகுந்த பிரயாசைக்கு பிறகு கிடைக்கப்பெற்றேன். உண்மையில் எங்குமே குள்ளச்சித்தன் சரித்திரமும் பகடையாட்டமும் கிடைக்கவே இல்லை. அலைந்து திரிந்து யார் யாரிடமோ சொல்லி எப்படியோ சென்னையிலிருக்கும் சகோதரர் யோகீஷ்வரனின் உதவியால் தருவித்தேன். நான் எதிர்பார்த்திருந்ததும் என் மனதில் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து (வேம்புவை மையமாகக்கொண்டு) நானே உருவக்கிக்கொண்டிருந்த சித்திரமும், இப்புத்தகம் கொடுத்த வாசிப்பனுபவமும் முற்றிலும் வேறு எனினும் நான் பல ஆண்டுகளாக தொடர்புடைய சித்தர்கள் கதையாக இது இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

சமீபத்தில் நான் வாசித்த வெளியேற்றம், ஊர்சுற்றி, நினைவுதிர்காலம் இவற்றுடன் குள்ளச்சித்தன் சரித்திரம் வாசிக்கையில்  இவையெல்லாமே தொடர்ந்துவரும்  ஒரே கதையின் தொடர்ச்சி என்று கூட உணர்ந்தேன். நினைவுதிர்காலத்தின் விசிலிசைக்கலைஞனைக்கூட, (ஆற்றில் மறைந்துபோனானே அவனை) குள்ளச்சித்தனின்  நெருப்பைக்குடித்துக்கொண்டு எரிந்துகொண்டிருந்த அந்த இளம் இசைமேதை ப்ருத்வியுடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். அருந்தவத்தை, ஊர்சுற்றியில் வரும் ஒரு பெண்பயணியுடன், இப்படி நானாகவே ஒரு தொடர்சியை உருவாக்கிக்கொண்டேன் .

பல வரிசையில் புள்ளிகளிட்டு எங்கோ துவங்கி எங்கெங்கொ நுழைத்து, வளைத்து ஒவ்வொன்றையும் சுற்றியும் இணைத்தும்  கோடுகளிட்டு இறுதியில் அழகிய வசீகரிக்கும் வடிவிலான ஒரு நெளிக்கோலம் போடுவதைபோல சிகப்பி, அய்யர், வேம்பு, ஆலாஸ்யம், சித்தர், முத்துசாமி, மௌல்வி, செய்யது ராமாமிர்த்தம்மாள்,பென்குவின் கழுகு புலி பழனி, ராமநாதன் என்று கதைமாந்தர்களை காட்டிகொண்டெ வருகிறீர்கள், ஒவ்வொருவரும் பிறருடன் எப்படியோ எங்கேயோ தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணியில் சந்திக்கிறார்கள் இறுதியில் காணக்கிடைக்கும் அந்த கோலம் அத்தனை அழகு. எல்லாப்புள்ளிகளும் தனித்தனியாக தெரிகின்றது எல்லாமே ஒற்றைக்சரடொன்றினால் இணைக்கவும் பட்டிருக்கிறது.

சாமான்யர்களும், காலங்கள் கடந்த நினைவுகளும், ஜென்மவாசனையும், சாமான்யர்கள் இயங்கவியலா தளங்களில் இயங்குபவர்களுமாக கதை வசீகரம். அழுக்குசாமி சித்தர் வாழ்ந்து மறைந்த  வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவளென்பதாலும் ஒரு ஆசிரியையாக சித்தர்களை குறித்து அனேக வருடங்களாக பாடமெடுத்துக்கொண்டிருப்பவளாகவும் கதைக்குள் நான் ஆழ்ந்திருந்தேன் வாசிக்கையில்.

  நான் பிறந்து வளர்ந்த வேட்டைக்காரன்புதூரில் இப்போதும் அழுக்குசாமி சித்தரின் ஜீவசமாதி,  பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது, சிறுமியாக ஆத்தா அப்பாரின் கைகளைபிடித்துக்கொண்டு அங்கு சென்ற நினவுகளும் சித்தரைக்குறித்து கேட்டிருந்த ஏராளம் கதைகளும் குள்ளச்சித்தனை வாசிக்கையில் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

குதிரை வியபாரத்திலிருந்த என் அப்பாரு எப்போதும் வீட்டில் இருந்ததில்லை திடீரென வருவார் சிலநாட்கள் இருப்பார் மீண்டும் வியாபாரத்திற்கு சென்று விடுவார். அப்படி வீடு தங்கும் நாட்களில், இரவுகளில் வீட்டு முன்திண்ணையில் இருந்த  பளபளப்பாய் மினுங்கும் ஈட்டி மர பெஞ்சில் என்னையும் சேர்த்து ஒரு கருப்புக்கம்பளியில் போர்த்திக்கொண்டு ராமாயணமும் மகாபாரதமும்  , திகம்பரராக அக்கிராமத்திற்கு வந்த அழுக்குச்சாமி சித்தர் கதையையும் சொல்லிக்கொண்டிருப்பார். அப்பாருவிடமிருந்து வீசும் புகையிலை வாசனையும், கம்பளியும் கதையும் கொடுக்கும் கதகதப்புமாக அவர் அணைப்பிலேயே நான் உறங்கிய இரவுகள் அனேகம்.

ஆத்தாவும் எத்தனையோ முறை சித்தரைபற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவரை உடைஉடுத்தச்செய்ய ஊர்ப்பெரியவர்கள் பட்ட பாட்டையும்,  இரண்டு முறை ரெட்டைப்பிள்ளைகள் பிறந்து இறந்துபோனதும், அழுக்குசாமி சித்தர் தன் உடலின் அழுக்குகளை திரட்டி அதையே மருந்தாகத் தந்து அதை உண்டபின்னரெ என் அப்பா அழுக்குராசு பிறந்து தங்கியது பின்னர் மூன்றுஅத்தைகளும் இரண்டு சிற்றப்பன்களுமாய் குடும்பமும் வறுமையும் பெருகியது, சித்தர் இரவுகளில் உடல்பாகங்களை தனித்தனியெ கழட்டி வைத்துவிட்டு கிடந்த கோலம், பலருக்கும் அழுக்கையே தீர்வாக அளித்தது, ஒரே சமயத்தில் கிராமத்திலும் வேறு பல இடங்களிலும் அவரைக்கண்ட கதைகள், அவரது மேல் துண்டை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்குச் சென்று  வழக்குகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகள் ,அவரால் தூக்கிவிடப்பட்டு பெரிய மனிதர்களானவர்கள் இப்படி கதைகளின் வழியே கேட்டுக்கேட்டு சித்தர் என் இளமைப்பிராயத்திலிருந்து என்னுடனேயெ இருக்கிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை நான்  அடிக்கடி செல்லும் கோவிலும் இந்த சித்தர் கோவில்தான். முன்பு கோவிலினருகில் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது ஆறு, இப்போது அது வெறும் புதர்மண்டிய மந்தைத்தடம்.

சித்தர் கோவிலைக்குறித்து உதிரி உதிரியாக பல நினைவுகள் எனக்குள் இருக்கும் குள்ளச்சித்தனில் சொல்லியிருப்பது போலவே. அந்த ஆற்றுநீரில் அப்பாருவின் கண்காணிப்பில் விளையாடியது, மீன் பிடித்தது ஒரு அண்ணனின் திருமணம் அக்கோவிலில் நடந்தபோது மணப்பெண்ணுடன் கருக்கிருட்டில் ஆற்றிற்கு குளிக்க வந்து  விசையுடன் இருந்த ஆற்றுத்தண்ணீரில் புதுப்பெண்ணின் சந்திரப்பிரபை அடித்துச்செல்லபட்டது, அப்போதிலிருந்து அங்கிருக்கும் மகிழமரங்கள் அதனடியில் நான் உணரும் விளங்கிக்கொள்ள முடியாத பிறருக்கு விளக்கியும் சொல்ல முடியாத மனஅமைதி, அங்கிருக்கும் சித்தர் திருவுருவின் ஓவியங்கள்,  இப்படி

இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் என் மகனின், அங்கு நடைபெறுவதாக இருக்கும் திருமணத்தை பல்லாயிரம் முறை மனக்கண்ணில் காட்சியாக்கி பார்த்தபடிக்கிருப்பேன் அங்கிருக்கையிலெல்லாம்.

என் மனதின் அடியாழத்தில் இருந்த நினைவுகளையும் குள்ளச்சித்தனின் கதையையும் கலந்தேதான் நான் வாசித்தேன் என்பதால் புதுவிதமான வாசிப்பனுபவம் கிடைத்தது.

அந்த வேம்பு,  அய்யர் அய்யருடன் வேம்பு உடன்கட்டை ஏறியது இவையெல்லாம் எனக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணுகின்றது நினைக்கையிலெல்லாம். இந்தகதையை மட்டும்  விரிவாக்கி  வேறு கதையாக  யுவன் எழுதியிருக்கிறாரா?எனக்கே அப்படி ஒரு மயக்கா? நான் அவரது எழுத்துக்களை தேடித் தேடி  இப்போதுதான் (சுரேஷ் பிரதீப்பின் ‘ நினைவுகளை தொடுத்தெழுதும் வரலாறு’’ க்குபின்னர்)  வாசிக்கத்துவங்கியிருக்கிறேன். 

எங்கோ ஆதரவற்றிருந்த, அய்யரால் ஒத்தாசை செய்யபட்ட, பெண் தன்மையுடன் ஒரு உதவியாள் பல வருட விஸ்வாசம் பின்னர் அதுவே ஒருதலையாக விருப்பம் பின்னர் அய்யரின் மறைவு வேம்புவும் உடன்கட்டைஏறுவது என்று விரிவாக ஒரு கதையை யுவன் எழுதிவிட்டதாக நானே  நினைத்துக்கொண்டு  அந்த கதையை வாசிக்கும் உத்தேசத்துடன்தான் இப்புத்தகத்தை பிரித்தேன்.

கதைமொழி எளிமை எந்த ஜாலங்களும் இல்லை, சரளமும் கூட உரையாடல்களின் இயல்புத்தன்மை இக்கதைக்கு பெரும் பலம்.  உரையாடல்களின் வழியே சொல்லப்பட்டவைகளை அதே உணர்வுநிலைகளில் யுவன் அல்லது கதைமாந்தர்கள் உத்தேசித்தை சரியாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. முன்பின்னாக மாற்றிச்சொல்லப்பட்டிருக்கும் சில தகவல்களை நிகழ்வுகளை, பிறிதொருவரின் பார்வையில் கோணத்தில் மீண்டும் சொல்லப்பட்டிருந்தவைகளை வாசிக்கையிலும்  எந்த குழப்பமும் இல்லாமல் கதை மனதுக்குள் செல்கின்றது.

முத்துசாமியின் மறைவு குறித்து வெகுநேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில் பெருங்கொன்றைகள் இப்போது பூத்திருக்கின்றன. வகுப்புக்களுக்கு செல்கையில் அடர்மஞ்சள் கொத்துக்களிலிருந்து மலர்கள் மெல்ல மெல்ல  ஓசையின்றி மிதந்து உதிர்வதை பார்த்துக்கொண்டே செல்வேன். அவற்றிற்கு உதிர்வதில் எந்த புகாரும் இல்லை அவை உதிர்கையிலேயே காப்பிக்கொட்டை நிறத்தில் நுண்விதையொன்றின் வடிவில் அதே மரத்தில் தங்களை விட்டுச்செல்கின்றன . மலர் உதிர்வதைப்போல இயல்பாக உதிர்வது என்பதைகுறித்து அடிக்கடி நினைத்துக்கொள்ளுவேன் முத்துச்சாமி மண் மறைந்தது அப்படித்தான் இருந்தது.

குள்ளச்சித்தன் சரித்திரம் குறித்த என் புரிதல் மிகவும் நேரடியானதும் எளிமையானதும் தான். எனினும் யுவனின் இக்கதையை நான் வாசிக்கவில்லை கேட்கவில்லை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் இக்கதை சித்தர் குறித்த நினைவுகளில்  பலவற்றை கிளர்த்தி விட்டது..

இக்கதைகுறித்து ஜெ எழுதிய ‘’மாற்று மெய்மையின் மாய முகம்” .

மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்

இந்தியப்பயணம்- ஜெயமோகன்

இந்த விடுமுறையில் எந்த பிரயாணமும் இல்லாமல் புத்தகங்களாகப் படித்துக்கொண்டே இருந்தேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள்  எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு புத்தகமும் கையுமாக தென்னை மரத்தடியில் அமர்ந்து நாள் முழுதும் வாசிக்கும் அருமையை, சுகத்தை எந்த இடையூறுமின்றி இப்போதுதான் அனுபவிக்கிறேன்

இந்தியா என்னும் கனவிற்குள் ஒருதவம் போல ஜெ பிரயாணம் செய்த ’’இந்தியப்பயணத்தை’’ நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வழக்கமாக ஜெ’வின் பயண அனுபவங்கள்  எனக்கு ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி இம்முறை இல்லாமல், என்னவோ நானே நீண்ட பயணமொன்றை போய் வந்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது.    பழகிப்போன செளகரியங்களிலிருந்து வெளியே வந்தால் எனக்கும் பயணம் சாத்தியம்தான்   என்றும் தோன்றியது. இதுவரை போகலைன்னாலும் இனி போகலாமென்னும் நம்பிக்கையும் வந்திருக்கின்றது

’’இந்தியா இன்னும் தீர்ந்துபோகவில்லை, எஞ்சி இருக்கின்றது’’, எனறு ஜெ சொல்லியிருப்பதை எனக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன்

எப்படி அவருக்கு இப்பயணம் மறக்கமுடியாத ஒன்றோ அப்படியே இந்த பயண அனுபவத்தின் வாசிப்பு, எனக்கும் மறக்கமுடியாத ஒன்று. அன்றன்றைக்கான  நிகழ்வுகளை இரவு உறங்கப்போகும் முன்னர் சுடச்சுட எழுதியிருக்கிறாரென்பதால் உடன் நானும் பயணிக்கும் உணர்வுடனே வாசித்தேன்.  .

இருள் பிரியா நேரத்தில்  கவித்துவமாக துவங்கிய இந்த பிரயாணம் அத்தனை அழகாக  உடன் வந்த அனைவரின் பார்வையிலும் இந்தியா என்னும் கனவினை வாசிப்பவர்களுக்கும் விரித்து விரித்து காட்டிக்கொண்டே செல்கிறது.

சென்ற இடங்களையும் ஊர்களையும் மட்டும் சொல்லிச்செல்லாமல் அந்த நிலக்காட்சிகளை, அரசியலால் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, உடைகளும் உணவும் மாறிக்கொண்டே வருவதை, விவசாயத்தை, தேநீர் கூட  அரைப்பங்கு கால்பங்காகி, அவுன்ஸ் கணக்கில் குறைந்ததை, தங்குமிட செளகரியங்கள் அசெளகரியங்களை, அறை வாடகைகள் உணவுக்கான செலவு, அங்கங்கு இருக்கும் சாதி அமைப்புக்களை,  நதிகளை, கால்நடைகளை, அவற்றின் வகைகளை, அவ்வப்போது வரலாற்றை,  பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி பல இந்தியப்புராதன சின்னங்களை நாம் இழந்துகொண்டிருப்பதன் பொருட்டான அவரின் ஆதங்கத்தை, எல்லாம்   தொடர்ச்சியாக சுவாரஸ்யமாகவும் மனவருத்தத்துடனும், சொல்லிக்கொண்டேயிருப்பதால் ஒரு அழகிய நெடுங்கதையொன்றினை வாசிப்பதுபோல தொடர்ந்து வாசிக்க முடிந்தது.

திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது போல நிலப்பரப்பும் மக்களும், தட்பவெப்பமும் சம்பவங்களுமாய் மாறிக்கொண்டே வருகின்றது ஜெயமோகனின் விவரிப்பில்

சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் போன்ற மிக நுட்பமான விஷயங்களுடன், சாப்பிடுகையில் ‘ஆ’ கேட்ட குட்டிப்பெண்னை, ஆங்கிலம் தெரிந்த ஒரே ஒருத்தரை, 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை, கடந்து  சென்ற பேரழகிகளை, எரியும் சவங்களை, இப்படி ஏராளம் தகவல்களுடன்  பயணத்தை சொல்லுகிறார்.

தீயாக கொட்டிய  வெயிலில்  வாடியும், பொழிந்த நிலவின் புலத்தில் நனைந்தும், நதிநீரில் திளைத்தும், தூசியிலும், பசியிலும்  களைத்தும், பல்லாயிரம் முகங்களைக்கண்டபடி எத்தனை எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன அவருக்கு   இந்த ஒரே பயணத்தில்?

அழுகல் பழங்களையே திரும்ப திரும்ப  தலையில் கட்டியவர்களை, அறைவாடகையை உயர்த்தி ஏமாற்றியவர்களை,   உணவிற்கான தொகையை கூடுதலாக வாங்கியவர்களை என்று இவர்களைப்பற்றி சொல்லும் போதும் புகாராகவோ குற்றசாட்டாகவோ இல்லாமல் ,  வாழ்வின் இயங்கியலில்  அவர்களுக்கு ஏமாற்றுதல் ஒரு அங்கமாகிப் போயிருப்பதை ஆதங்கத்துடன்தான் சொல்லுகிறார்.

ஆணும் பெண்ணுமாய் பேசிக்கொண்டே  கூட்டம் கூட்டமாய் வெட்டவெளியில் மலம் கழிப்பது, மின்சாரமே இல்லாமல் இருளிலேயே இயல்பாக வாழ்க்கையை நடத்துவது, சேறு மிதிபடும் தரையுள்ள வீடுகள்  இவையெல்லாம்  இன்றைக்குமிருக்கும்  இதே இந்தியாவில்,  நானும், கதவைபூட்டிவிட்டு, இரவுடையை அணிந்துகொண்டு , குளியலறை இணைந்த படுக்கையறையில் கொசுவலைக்குள் பாதுகாப்பாக உறங்குவதும் , அனைத்து வசதிகளுடனான வாழ்வை வாழ்வதும் குற்ற உணர்வைத்தருகின்றது

ஜெயமோகன் சென்றிருந்த இத்தனை ஊர்களில் நாக்பூருக்கும் காசிக்கும் மட்டுமே நான் சென்றிருக்கிறேன்

ஆராய்சி மாணவியாக இருந்த போது, நாக்பூருக்கு ஒரு கருத்தரங்கின் பொருட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தது போல குளிர்ந்த ரயில் பெட்டியில் நடுங்கிக்கொண்டே சென்று, ஸ்ரீகுந்த் எனப்படும் அங்கு மட்டுமே கிடைக்கும் எனச்சொல்லப்பட்ட ஒரு இனிப்பையும்,  ஆரஞ்சுகளையும் சுவைத்திருக்கிறேன். அங்கு விளையும் ஒரு குட்டி ஆரஞ்சுப்பழத்தின் சாகுபடி நுட்பங்களை அங்கேயெ சிலகாலம் தங்கியிருந்து தெரிந்துகொண்டு வந்த என் உறவினர் ஒருவர் அதை இங்கு அவர்   தோட்டத்தில்  வெற்றிகரமாக விளைவித்தார்

7ஆம் வகுப்பிலோ 8ஆம் வகுப்பிலோ படித்துக்கொண்டிருக்கும் போது  தலைமை ஆசிரியராக இருந்த அம்மா பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில் குடும்பத்தினர் இலவசமாக உடன்  பயணிக்கலாமென்னும் வசதியினால் நானும் அக்காவும் அவர்களுடன் காசிக்கு சென்றிருந்தோம். ஜெ விவரித்திருந்த எதுவுமே எனக்கு பார்த்ததாக நினைவிலில்லை எல்லா இடங்களையும் போலவே அங்கும்  சந்தடியும் நெரிசலுமாயிருந்தது. மறக்க முடியாத ஒன்றென்றால் எங்கோ, ஒரு அகல அகலமான படிக்கட்டில் வரிசையாக  உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு , ஒரு பச்சைப்புடவையை வித்தியாசமாக கட்டிக்கொண்டிருந்த, நெற்றியில் பெரியவட்டமாக குங்குமம் வைத்திருந்த, வெள்ளை வெளேரென்ற ஒரு அம்மாள் தங்கம் போல பளபளத்த ஒரு தூக்குச்சட்டியில் பிசைந்த தயிர்சாப்பாட்டையும் அவருக்கு பின்னால் ஒரு மாமா  எவர்சில்வர் பாத்திரத்தில் ஜிலேபியுமாக  கொடுத்துக்கொண்டே வந்தார்கள். என்னால நம்பமுடியாதபடிக்கு அதில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள், எட்டி பாத்திரத்தில்  என்ன இருக்கிறதென்று பார்த்துவிட்டு  வேண்டாமென்று  மறுத்துவிட்டார்கள்’

அப்போது  நாங்கள் மிக வறுமையிலிருந்தோம். வயிறு நிறைய சாப்பிட்ட நினைவே இல்லாத காலமது .  அந்த தயிர்சோற்றையும் இனிப்பையும் அவர்கள் மறுத்தது எனக்கு பெரும் துக்கமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இப்போதும் அது ஏனென்று எனக்கு புரியவில்லை. அதற்கு முந்தைய கணம் வரைபுதிய இடம் அளித்த அச்சத்தினால், கூட்டத்தில் தொலைந்துவிடுவேன்னும் பயத்தில் யாராவது ஒருத்தரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்த நான், அதற்கப்புறம் தொலைந்து போகவேண்டுமென்று விரும்பினேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரும் திரும்பிப்போன பின்னால், அங்கே பிச்சைக்காரியாக இருந்து சோற்றை வேண்டாமெனச்சொல்லாமல் அள்ளி அள்ளி உண்பதை கற்பனை செய்துகொண்டேயிருந்தேன். ஆனால் பத்திரமாக அதே பழைய வாழ்க்கைக்கு என்னை திரும்பக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

காசி என்றால் இது மட்டுமே இன்னும் நினைவிலிருக்கிறது.

நிச்சயம் இந்த  எல்லா ஊர்களுக்கும் இதே வரிசைப்படி மகன்களுடன் கூடிய விரைவில் செல்லப்போகிறேன் இப்படி இதை  முன்கூட்டியே சொல்லிக்கொள்வது ஒருவிததில் புறப்பட   உந்துசக்தியாகவும் இருக்கும்

ஜெ மிகச்சமீபத்தில் சொல்லியிருப்பது போல ‘’பயணம் ஒரு தெய்வம், அதை உபாசிப்பவர்களுக்கே அது அமையும்’’ நானும் உபாசித்துக்கொண்டுதானிருக்கிறென். அருளப்பட காத்திருக்கிறேன்

பாவக்கதைகள்

வைரஸ் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இணையவெளியில் படங்கள் நேரடியாக ஒளிபரப்பாகும் இக்காலத்தில், இப்போது  அனைத்து இந்திய மொழிகளிலும் மிகப்பிரபலமாயிருக்கிற தொகுப்புக் கதைகள் அல்லது குறும்படங்களின் திரட்டு (anthology  movie)   என்னும் வகையில் இன்னொரு புதுவரவு நான்கு குறும்படங்களின் தொகுப்பான பாவக்கதைகள் சுதா கோங்குரா, கெளதம் வாசுதேவ மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் இயக்கத்தில்  உறவுகளின் சிக்கலை அடிப்படையாகக்கொண்ட நான்கு கதைகளை சொல்லும் இப்படம் 2020 , டிசமப்ர் 18ல்  நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியானது

காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ், அஞ்சலி, சிம்ரன், கெளதம் வாசுதேவ மேனன், கல்கி கோச்லின், ஜாஃபர் ஷாதிக், ப்ரகாஷ்ராஜ் ,சாய் பல்லவி மற்றும் சிலர் முக்கிய கதாபத்திரங்களில் .

 முதல் படமான ’’தங்கம்’’ சுதாவின் இயக்கத்தில், சாந்தனுவும் காளிதாஸூம் முக்கிய பாத்திரமேற்றிருக்கின்றனர்

இரண்டாவது ’லவ் பண்ணா வுட்ரனும்’ அஞ்சலி இரட்டைவேடத்தில், கமலாகோச்லினுடன், இயக்கம் விக்னேஷ் சிவன்

மூன்றாவது கெளதம் மேனனின் ‘வான் மகள்’ சிம்ரனுடன் கெளதம் மேனனும் முக்கிய பாத்திரத்தில் வருகிறார்

நான்காவது வெற்றிமாறனின் ‘ஓரிரவு’” சாய்பல்லவி, பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரங்களில்

மூன்று படங்களில் கெளரவக்கொலை நடக்கின்றது வான் மகளில் மட்டும் கெளரவக்கொலையைக்குறித்து கற்பனை மட்டும் செய்கிறார்கள் நல்லவேளையாக, நிச்சயமாக நான்கு கதைகளுமே பார்வையளர்களை தொந்தரவு செய்கின்றன. அதிலும் மிக மிக மனக்கலக்கம் உண்டுபண்ணுகிறது’’ ஓர் இரவு’’ இது  உண்மைக்கதையும் கூட

கல்கிகோச்லின் இதில் தமிழில் சொந்தக்குரலில் பேசுகிறார் அதுவும் மிகமோசமான பாலியல்தொடர்பான வசவுகளை சரளமாக பேசுகிறார்.

சத்தாரும் சரவணன் என்னும் தங்கமும் சத்தாரின் தங்கையும்

’’தங்கம்’’ 80’களில் நடக்கும் ஒரு முக்கோண காதலைச்சொல்லுகிறது.  ஆண்-பெண் முக்கோணக்காதலுக்கு மாறாக இதில் ஆண்-ஆணிலி-பெண் என்னும் புதிய முக்கோணம். சத்தாரென்னும் இடைப்பாலினத்தவராக மிகச் சிறப்பாக காளிதாஸ். அவர் விரும்பும் தங்கமாக சாந்தனு, சாந்தனு சத்தாரின் தங்கையை விரும்புகிறார். சத்தார் ஆணுமல்ல பெண்ணுமல்ல தோற்றத்தில் ஆனால் மனதில் தன்னை பெண்ணாகவே பாவிக்கிறார் எனவே தங்கத்தை, (சாந்தனுவை) விரும்புகிறார். ஆனால் தங்கமோ சத்தாரின் தங்கையை காதலிக்கிறார். உண்மை தெரிந்து காதலர்களை சேர்த்துவைத்துவிட்டு சத்தார் உயிரைவிடுகிறார்.

சத்தார் தன்னை   சிலர் துரத்துகையில் வீடு வீடாக சென்று கதவைத்தட்டி கெஞ்சிக்கதறுவதெல்லாம்  ஆந்திர நெடி அடிக்கும் காட்சிகள்.  பொதுவாகவே தெலுங்குத்திரைப்படங்களில் லாஜிக் என ஏதும் இருந்தால் அதை சல்லடையிட்டு தேடி க் கண்டுபிடித்து அதன் மென்னியை திருகி கொன்று குழிதோண்டி புதைத்து விட்டே கிளைமேக்ஸ் காட்சிகளை அமைப்பார்கள். இதிலும் அப்படியே! எப்பவோ செத்துப்போன சத்தாரின் கைப்பையும் அதனுள்ளிருக்கும் சாந்தனு கொடுத்த பரிசான உதட்டுச்சாயமும் அப்போது ஊருக்கு வரும் சாந்தனுவின் கண்ணில்படவேண்டி ஆற்றில் காத்திருக்கிறது.

காளிதாஸ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். சாந்தனுவும் இதில் பாத்திரத்துக்கு பொருந்தி நடித்திருக்கிறார். இதில்தான் பழைய பாக்கியராஜின் சாயல் அங்கங்கே தென்படுகின்றது சாந்தனுவின் உடல்மொழியில் . இரண்டு வாரிசுகளை ஒன்றாக திரையில் பார்ப்பது அதுவும்  நன்றாக நடிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது கதை 80களில் நடப்பதாக காட்டுகிறார்கள் 80களில் வெளிவந்திருக்கவேண்டிய கதையும் கூட.

கல்கி கோச்லினும் அஞ்சலியும்

’’லவ் பண்ணா வுட்ரனும்’’, அஞ்சலி இரட்டைவேடங்களில் முதல்காட்சியிலேயே மிகச்சிக்கன உடையில் தாராளமாக ஏராளமாக வருகிறார். ஆதிலட்சுமிஅஞ்சலி வீட்டு கார் ஓட்டுநரைக் காதலித்து கெளரவக்கொலை செய்யப்படுகின்றார். அக்கா உயிரழந்த அதே நாளில் தங்கை ஜோதிலட்சுமிஅஞ்சலியும் தன் காதலைச்சொல்ல வீட்டுக்கு வருகிறார் கல்கி கோச்லின் அஞ்சலியின் தோழி. இவர்களிருவருக்கும் ஒருபால் உறவு இருப்பதுபோல துவக்கத்திலிருந்து கதையை கொண்டுபோய் இறுதியில் உண்மை என்னவென்று போட்டு உடைக்கிறர்களாம். இன்னும் கொஞ்சம் கவனமாக துவக்க காட்சியின் வசனங்களை கட்டமைத்திருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கும்  அப்படியேதான் கதையை காட்டுகிறார்கள் துவக்கத்தில். நரிக்குட்டியாக ஜாஃபர் ஷாதிக் பிரமாதமான, இயல்பான நடிப்பு அதிலும் அவரது கார்வையான குரல் மிகச்சிறப்பு. இனி கவனிக்கப்படுவார், கவனிக்கப்படவேண்டும்.  காதலனான கார் ஓட்டுநரின் குரலும் அப்படியே, கம்பீரம்

ஜாதி அடிப்படையில் நடக்கும் கெளரவக்கொலையை சொல்லும் படம்தான் இதுவும். இடையிடையே கதாபாத்திரங்கள் அத்தனை முக்கிய நிகழ்வுகள்,  வன்முறைகள் சுற்றிலும் நடக்கையில் சிரித்துக் கொண்டிருப்பது எரிச்சலூட்டுகிறது. அப்பா பாத்திரத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் அந்த பாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை. ’’தங்கத்தி’’ல் பெண்களின் அறையில் உறங்கியதற்காக் ஆவேசமாக மகன் சத்தாரை எட்டிஎட்டி உதைக்கும் அந்த அப்பாவின் ஆக்ரோஷம் இவருக்குமல்லவா இருப்பதாக காட்டியிருக்கனும்?

இறுதிக்காட்சியில் சொந்தச்சகோதரியை ஈவிரக்கமின்றி கொலைசெய்த அப்பாவிடம், அஞ்சலி எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் பள்ளிக்குழந்தைகள் மனப்பாடச்செய்யுளை ஒப்புவிப்பதுபோல பேசும் மொக்கை வசனங்களும் அப்படியேதான், கதையின் மையஒட்டத்துடன்  பொருந்தாமல் இருக்கிறது

வான்மகளில் பருவம் வந்திராத சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படும் பாவத்தை சொல்லுகின்றார்கள் .சிம்ரன் இத்தனை தளர்ந்துவிட்டரா?

கெளதம் வாசுதேவ மேனன் சிம்ரனின் கணவராக இரு பெண்குழந்தைகளுக்கு தகப்பனாக வருகிறார். மனைவியுடன் காதல்மொழி பேசுகையிலும், மகள்களுடன் பாசமொழி பேசுகையிலும் ஒருபெரும் பிரச்சனைக்குப் பின்னர் மனமுடைந்து துயரமொழி பேசுகையிலும் சரி ஒரே மாதிரியான  கூர்ந்த முகபாவத்துடன் ’’ ஹார்பர்லருந்து இன்னிக்கு பொருளை எப்படியும் தூக்கிறனும்’’  என்று கள்ளக்கடத்தல் கும்பலின் தலைவன் பேசுவதைப்போலவோ அல்லது கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளியை அணுகும் காவலதிகாரியை போலவோதான்  படம்முழுக்க வருகிறார், பார்க்கிறார் பேசுகிறார்.

நல்ல கதை நல்ல காட்சியமைப்புக்கள்,  நல்ல கதைக்களம். அந்த கற்பனைக் கொலைக்காட்சியை தவிர்த்திருக்கலாம். தலைப்பில் பாவம் இருப்பதால் வலிய சேர்த்திருக்கிறார்களோ என்னவோ! இதை நேர்மறையான ஒரு கதையாகவே கொண்டு போயிருக்கலாம்

வெற்றிமாறனின் ’’ஒரிரவை’’மனதை கல்லாக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டும் கொலைவெறியுடன் எடுத்திருக்கிறார். திரையில் பார்க்கையிலேயே இப்படியென்றால் இது உண்மையில் நடந்திருப்பதை நினைக்கையில் துக்கம் தாளமுடியவில்லை தணிக்கைசெய்தே வெளியிட்டிருக்கவேண்டும் என்று நினைக்கவைத்த பெரும் மானசீக அவஸ்தையை கொடுக்கும் காட்சிகள் பல.

அந்த இரவில்!

சாய்பல்லவி அழகு நன்றாக நடித்திருக்கிறார் உண்மையிலேயே கர்ப்பிணியை போல் ஒப்பனைவேறு

கதையை மிகவும் இளகின மனசுள்ளவர்கள் பார்க்காமலிருப்பதே உத்தமம். வாழ்நாளில் மறக்கமுடியாத திரைக்கதை. இப்படி ஜாதிவெறி பிடித்தவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு மோசமான முன்னுதாரணமாக  ஆகிவிடக்கூடாதே என்னும் பதைபதைப்பும் சேர்ந்துகொண்டது பார்க்கையிலேயே

பிரகாஷ்ராஜ் வழக்கம்போல மிரட்டுகிறார் நடிப்பில். இந்த பாத்திரமெல்லாம் அவருக்கு தண்ணீர்பட்ட பாடு

வெளியுலகின் குரூரங்களிலிருந்து தப்பி பாதுகாப்பாக குடும்பமென்னும் சிறகினுள் வந்து அடைந்துகொள்ளுதல் என்னும் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் கதைகள் இவை. தற்போதைய இந்தியாவின் இன்னொரு முகத்தை அப்பட்டமாக காட்டும் கதைகளும் கூட.

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑