ஜெர்மன் நாட்டுப்புறங்களில் ஆல்ப் என்றொரு கண்ணுக்கு தெரியாத மிகத் தீங்கிழைக்கும் ஒரு ஆவியைப் பற்றிய கதைகள் உண்டு. கதவின் சிறு இடைவெளி, சுவர்களின் துளை, ஜன்னல்களின் விரிசல் என்று எந்த வழியாகவும் உள்ளே நுழைந்து உறங்கிக்கொண்டிருப்பவர்களின் நெஞ்சுக்குள் புகுந்துவிடும் ஆவி அது, அது உடலுக்குள் நுழைந்த பின்னர்தான் அதை உணரவே முடியும். பின்னர் ஆல்ப் பிடித்துக்கொண்டிருப்பவர் பலஹீனமாகி ஆற்றலையும் ரத்தத்தையும் இழந்து மெல்ல மெல்ல உயிரிழப்பார்கள்.
இது வெறும் கதைதான் ஆனால் இப்போது கண்ணுக்குதெரியாத இந்த கெட்ட ஆவியைப்போலவே ஒன்று நம் அனைவரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்து உணவு மேசையிலும் இடம் பிடித்து விட்டிருக்கிறது. அது நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல உறிஞ்சிக்கொண்டு இருப்பதை நம் அறியாமல் இருக்கிறோம்.

இப்போது நாம் அன்றாடம் உண்ணும் பதப்படுத்தபப்ட்ட இறைச்சி, பழச்சாறு, தயிர், மருந்து, பேக்கரித்திண்பண்டங்கள் என பலவகையான உணவுகளில் இருக்கும் இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் என்னும் நம் கண்ணுக்குத்தெரியாத தொழிற்துறை மாவுப்பொருள் தான் ஏராளமான ஆரோக்கியக் கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக மைதா, வெள்ளைச்சோறு, சர்க்கரை இவைதான் உடல்நலனுக்குக் கெடுதல் என்னும் புரிதலும் நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது என்றாலும் 1940-களிலிருந்து உணவு அல்லாத காகிதம், மருந்து, பசை மற்றும் வேறு பல தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் இப்போது பரவலாக உணவுத்தொழிற்சாலைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் அது கலந்திருக்கும் நாம் மிகச் சாதாரணமாகவும், அதிகமாகவும் வாங்கி உண்ணும் உணவுப்பொருட்கள் உண்டாக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளையும் நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை.
இந்த தொழில்துறை மாவுப்பொருள் (Industrial starch) என்பது மக்காச் சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிற, பல்துறை திறன் கொண்ட, இயற்கையான, மட்கக்கூடிய ஒரு கார்போஹைட்ரேட் பாலிமர். இது காகிதத் தயாரிப்பு, ஜவுளி, மருந்துப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு மூலப்பொருளாகவும், பல்வேறு உணவு அல்லாத தொழில்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பண்டைய பல நாகரீகங்களில் பாப்பிரஸ் புற்களிலிருந்து உருவாக்கப்பட்ட காகிதங்களை ஒட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்டார்ச் 18,19-ம் நூற்றாண்டுகளில் தொழில்புரட்சியின் போது ஜவுளி, காகிதம் மற்றும் அச்சுத்தொழில்களில் மிக அதிகமான அளவு பயனாகத்தொடங்கியது. பின்னர் அவற்றின் பலவகயான உபயோகங்களின் தேவை அதிகமானபோது அவற்றில் ரசாயன மாற்றங்களும் செய்யப்பட்டு உணவு மருந்து போன்ற தொழிற்சாலைகளிலும் அவற்றின் பயன்பாடு துவங்கியது.
இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் மிக அதிகமாகப் புழங்குவது காகிதத்தொழிற்சாலைகளில்தான். காகிதங்களின் வலிமை, அச்சிடக்கூடிய தன்மை மற்றும் மேற்பரப்பின் மிருதுத்தன்மை ஆகியவை இந்த ஸ்டார்ச்சினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
ஜவுளித்துறையில் நெசவு இழைகளை வலுப்படுத்தவும் இதே ஸ்டார்ச் உபயோகப்படுத்தப்படுகிறது .
மருந்துத்தொழிற்சாலைகளிலும் இந்த ஸ்டார்ச் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களில், செயல்புரியாத ஒரு துணை மூலப்பொருளாக மருந்துகளை ஒன்றிணைக்கும் பசையாகப் பயன்படுத்தபடுகிறது மேலும் அழகுசாதனப் பொருட்களில் சருமத்திற்குள் உறிஞ்சப்படும் பண்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்துறை மாவுப்பொருட்கள் அவற்றின் இயற்கையான வடிவத்திலிருந்து குறிப்பிட்ட தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பிரத்யேகமாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் தொழில்துறை மாவுப்பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை மாற்றி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கோதுமை ,மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை ஊறவைத்து அரைத்து, பிரித்தெடுத்து உலர்த்துதல் மூலம் மாவுச்சத்தைப் பெற்ற பிறகு, அதன் பாகுத்தன்மை, ஒட்டும் தன்மை மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த இவை மாறுபடுத்தப்படுகிறது (Modified).
மேலும் இந்த மாவுப்பொருட்களிலில் நார்ச்சத்து , க்ளூட்டன் உள்ளிட்ட புரதங்கள், கொழுப்பு, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் முற்றிலுமாக நீக்கப்படுவதால் இதில் அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் என்னும் ஸ்டார்ச் பாலிமர்கள் மட்டுமே இருக்கும். பலமுறை சுத்திகரிக்கப்பட்டு (Refining) தூய மாவாக மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் இவற்றில் மாவல்லாது வேறு எந்த சத்துக்களுமே இருப்பதில்லை.
முன்-ஜெலாட்டினேற்றம் (Pre-gelatinization) போன்ற இயற்பியல் மாற்றத்தில் மாவுப்பொருளை சமைத்து மீண்டும் உலர்த்துவதன் மூலம், அதற்கு குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும் திறன் அளிக்கப்படுகிறது, இது உடனடி உணவுகளுக்கு மிகவும் ஏற்றதோர் இயல்பு.
இறுதியாக, என்சைம்கள் பயன்படுத்தப்பட்டு இந்த மாவின் சங்கிலிகள் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் சிரப், மால்டோடெக்ஸ்ட்ரின்ஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
இந்த மாறுபடுத்தப்பட்ட மாவுப்பொருட்கள் தான் தொழிற்சாலை மாவுப்பொருள் என்னும் பெயரில் அவற்றின் மேம்படுத்தப்பட்ட நிலைப்புத்தன்மை மற்றும் குளிர்ந்த நீரில் கரையும் திறன் போன்ற இயல்புகளின் காரணமாக, உணவு மற்றும் உணவு அல்லாத தொழில்களில் ஒரு அத்தியாவசியமான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பிரதான செயல்பாடுகள்
இந்தத் தொழிற்துறை மாவுப்பொருட்கள் பலவகையான உணவுப் பொருட்களில் கீழ்க்கண்ட பயன்பாடுகளுக்காக உபயோகப்படுதப்படுகின்றன.
- ஸ்டார்ச் சூப், சாஸ், புட்டிங் போன்ற உணவுபொருட்களில் திண்மையாக்கியாக (thickening agents) மிக அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பேக்கரிப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களின் உள்ளடக்கங்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது.
- தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் நீர் தனியே பிரிவதைத் தடுத்து, இவ்வுணவுகளின் சீரான தன்மையைப் பராமரிக்க உதவுகிறது.
- இது கொழுப்புக் குறைக்கப்பட்ட பொருட்களில் கொழுப்பை மாற்றியமைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
- மிட்டாய்கள், ஜெல்லிகள் மற்றும் பேக்கரி ஃபில்லிங்ஸ் போன்றவற்றில் உறுதியான கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுகிறது.
- மாவுச்சத்து மாற்றியமைப்பான்கள் (Starch modifiers) ஈரப்பதத்தை தக்கவைத்து, ரொட்டிகளில் புத்துணர்ச்சியை (freshness) நீட்டிக்கின்றன.
- கேக்குகள், மிட்டாய்கள் மற்றும் பிஸ்கட்டுகளில் மிருதுத்தன்மையை மேம்படுத்துகின்றன.
- டெக்ஸ்ட்ரின்ஸ் (Dextrins) போன்ற தொழிற்சாலை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் இனிப்பு வகைகளில் சர்க்கரைப் பூச்சுகளுக்குப் (glazes) பயன்படுத்தப்படுகின்றன.
- உறைந்த உணவுகளில் நீர்ச்சத்து பிரிந்து வருவதை இவை தடுத்து நிறுத்துகின்றன.
- முன்-ஜெலாட்டினேற்றம் செய்யப்பட்ட மாவுப்பொருள் (Pre-gelatinized starch) உடனடியாகக் கரைந்து, உடனடியாகத் தடிமனாகிறது. எனவே இது உடனடி சூப்கள், சாஸ்கள் மற்றும் டெஸர்ட்களில் அத்தியாவசியமானது.
- பழச்சாறுகள் மற்றும் காய்கறிச் சாறுகள் போன்ற பானங்களில் கூழ்மத் துகள்களைப் பிடித்து வைத்திருக்கவும், பானத்தின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்கவும் இம்மாவு பயன்படுத்தப்படுகிறது.
- வணிக ரீதியாகத் தயாரிக்கப்படும் வெள்ளை ரொட்டிகளில், கேக்குகள், பேஸ்ட்ரிகள்,மற்றும் பொரித்த பொருட்களின் Chips and Fried Snacks) மேல் பூச்சுக்கு அல்லது பிணைப்புக்கு இந்த மாவுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது
- ஊறுகாய்கள் மற்றும் சாஸ்களின் கெட்டிப்புத் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க இந்த மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- மயோனைஸ், சூப் மிக்ஸ்கள் மற்றும் இன்ஸ்டன்ட் சூப்கள், மற்றும் சில வணிக ரீதியான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலாப் பொடிகளில் நிரப்பியாகவும் பிணைப்பானாகவும் இந்த ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது.
- ஜாம் மற்றும் ஜெல்லிகளுக்குத் தேவையான கெட்டிப்புத் தன்மையைக் கொடுக்க இந்த மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
- குறைந்த கொழுப்புள்ள தயிர், ஐஸ்கிரீம் (Low-Fat Dairy) போன்றவற்றில், கொழுப்பை நீக்கியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய (கெட்டியாக்க) இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
- இன்ஸ்டன்ட் நூடுல்ஸின் அமைப்பை மேம்படுத்த இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
- பல இனிப்புப் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக புருக்டோஸ் சோளப் பாகு (High Fructose Corn Syrup – HFCS)இந்த வகை ஸ்டார்ச்சில் , இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
- சைவ பர்கர்கள் அல்லது மாற்று இறைச்சித் துண்டுகள் (Meat Substitutes) போன்றவற்றில், கூறுகளை ஒன்றாகப் பிணைக்க இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
- விளையாட்டுப் பானங்கள் (Sports Drinks), செயற்கை இனிப்புகள் (Artificial Sweeteners), இன்ஸ்டன்ட் ஓட்ஸ் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன.
ஆரோக்கியக்கேடுகள்:

மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள் (Modified Starches) இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது அவற்றின் சர்க்கரை உயர்த்தல் குறியீட்டை (Glycemic Index – GI) பொறுத்து மாறுபடும்.
சாதாரண மாவுப்பொருட்களை விட, அதிக செயலாக்கம் செய்யப்பட்ட மற்றும் என்சைம் மூலம் சிதைக்கப்பட்டஇந்த வகை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் (Maltodextrins, Dextrose) விரைவான இரத்த சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை வேகமாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இந்த வடிவங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
இவற்றின் அதீத பயன்பாடு இதயநோய்களையும் உண்டாக்கலாம். நார்ச்சத்து இல்லாததால் ஜீரணமண்டலம் மற்றும் ஈரலின் செயல்பாடுகளும் இந்த மாவுப்பொருளினால் சீர்கெடும்
போலி ஸ்டார்ச் என்றும் உலகின் மிக மோசமான ஸ்டார்ச் என்றும் அழைக்கப்படும் இவை உணவுப் பொருட்களின் அலமாரி வாழ்வையும் நீட்டிக்கின்றன என்பதால் பெரும்பாலான பேக்கரிகளில் இவை அதிகம் புழங்குகின்றன.
உணவுப்பொருட்களில் கலக்கப்படும் தொழில்துறை ஸ்டார்ச் அதில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவைகளினால் மனித உடலுக்கு நஞ்சாகி, செரிமானக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதன் உணவு சார்ந்த பயன்பாடுகளுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது. இந்த வகை ஸ்டார்ச் கொண்டிருக்கும் உணவுபொருட்களில் இவை எத்தனைச் சதவீதம் இருக்கிறது என்பதையும் இதனால் உண்டாகக்கூடும் ஆரோக்கியக்கேடுகளும் தெளிவாகக்குறிப்பிடப்பட வேண்டும்.
லேபிள்களில் இருந்து தொழில்துறை மாவுப்பொருட்களை கண்டறிதல்:
தொழில்துறை மாவுப்பொருட்கள் அல்லது அதன் வழித்தோன்றல்கள் பல்வேறு பெயர்களில் லேபிள்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு எனப் புரிந்துகொள்ளலாம்:
- சுத்திகரிக்கப்பட்ட மாவு (Refined Flour): மிகவும் பொதுவான வடிவம். நார்ச்சத்து முற்றிலும் நீக்கப்பட்டது.
- சோள மாவு (Corn Starch): கெட்டிப்பாக்கி அல்லது நிரப்பியாகப் (Thickener or Filler) பயன்படுத்தப்படுகிறது.
- மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து (Modified Starch): இதன் பொருள், சோளம், உருளைக்கிழங்கு அல்லது அரிசியில் இருந்து எடுக்கப்பட்டு வேதியியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட ஸ்டார்ச். இது சாஸ்கள், சூப்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
- மால்டோடெக்ஸ்டிரின் (Maltodextrin): இது ஸ்டார்ச்சில் இருந்து பெறப்படும் ஒரு வகை சர்க்கரை/நிரப்பி. அதிக கிளைசெமிக் குறியீட்டைக் (High GI) கொண்டது. விளையாட்டுப் பானங்கள் மற்றும் மசாலாப் பொடிகளில் அதிகம் காணப்படும்.
- உருளைக்கிழங்கு மாவு (Potato Starch) / அரிசி மாவு (Rice Starch): இவை பிணைப்பான்களாகப் (Binders) பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஊட்டச்சத்து அட்டவணையைக் கவனிப்பதன் மூலமும் இந்த வகை ஸ்டார்ச்சின் சேர்க்கையைக் கண்டறியலாம்.
- குறைந்த நார்ச்சத்து (Low Fiber): ஒரு உணவில் உள்ள மொத்த கார்போஹைட்ரேட்டுடன் ஒப்பிடும்போது, நார்ச்சத்து (Dietary Fiber) மிகக் குறைவாக இருந்தால், அந்த உணவு சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு ரொட்டியின் 20 கிராம் கார்போஹைட்ரேட்டுக்கு 1 கிராம் மட்டுமே நார்ச்சத்து இருந்தால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டது என்று பொருள்.
- சர்க்கரை அளவு (Sugar Content): மால்டோடெக்ஸ்டிரின் அல்லது HFCS போன்ற ஸ்டார்ச்-சார்ந்த இனிப்பான்கள் சேர்க்கப்பட்டிருந்தால், “சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின்” (Added Sugars) அளவு அதிகமாக இருக்கும்.
தயாரிப்புத் தகவலை சரிபார்த்தல்:
உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பைப் பற்றி அளிக்கும் விளக்கங்களையும் கவனிக்கலாம்:
முழு தானிய முத்திரை (Whole Grain Stamp): உண்மையாக நார்ச்சத்து நிறைந்த முழு தானிய உணவுகளில், “100% முழு தானியம்” என்னும் வாசகமோ அல்லது அதற்குரிய முத்திரையோ இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த முத்திரை இல்லை என்றால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளின் கலவையாக இருக்கலாம்.
“மைதாவற்றது” அல்லது “நார்ச்சத்து நிறைந்தது” (Maida-Free or High-Fiber): ஒரு உணவுப்பொருள் இந்தத்தகவல்களைக்கொண்டிருந்தால், வாங்கும் முன்பு உள்ளடக்கப் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவது நல்லது.
காகிதத் தொழிற்சாலைகள், ஜவுளித் துறை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் வரை தொழில்துறை ஸ்டார்ச்சின் பங்கு இன்றியமையாதது. அதன் பரந்த பயன்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக அமைகிறது என்றாலும் அதன் பயன்பாட்டின் மறுபக்கம் மறைக்கப்பட்ட, நம் கண்ணுக்குத்தெரியாத ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. இந்தத் தொழில்துறை மூலப்பொருளின் உணவு சார்ந்த பயன்பாட்டிற்கு சரியான கவனம் அளிக்கப்படாவிட்டால் மனித ஆரோக்கியத்திற்கு இது நிச்சயமாக அச்சுறுத்தலாக மாறக்கூடும்.
வீடுகளில் சமைப்பது குறைந்துபோய் ஹோட்டல்களில் இருந்தும் பேக்கரிகளில் இருந்தும் வரவழைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டிருக்கும் இந்த அவசரயுகத்தில் உணவு சார்ந்த ஆரோக்கியக்கேடுகள் வராமலிருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். படிப்பு மற்றும் வேலைகளின் பொருட்டு வீட்டை, சொந்த மாநிலத்தை, நாட்டைவிட்டு வெளியே தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஸ்டார்ச் பெரும் ஆபத்துக்களை உண்டு பண்ணக் கூடும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
2025-ல் 14.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் இந்த வகை மாவுப்பொருட்களின் உலகச்சந்தை மதிப்பு 2030-ல் 17.30 பில்லியனாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பு, அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த மாவுப்பொருட்களின் உலகளாவிய தேவையைக் காட்டுகிறது. எனவே இவ்வகை ஸ்டார்ச் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு, சத்தான உணவுகுறித்த விழிப்புணர்வு போன்றவை மிக மிக அவசியமாகிவிட்டிருக்கிறது.





































