சாம்பவி சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு இளங்கலை பொறியியல், தொழில்நுட்ப மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய அளவில் தரப்படுத்தப்பட்ட கணினி அடிப்படையிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை (பயப்பட ஒன்றுமில்லை JEE (Main என்பதை தமிழில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்) எழுதியிருந்தாள்.
வீட்டில் சரணுக்கு பிறகு சாம்பவிதான் இதை எழுதினாள். தருண் இந்த வழிக்கே போகவில்லை அவனது இலக்கான காட்டியலுக்கான தேர்வை மட்டும் எழுதினான். சரணும் சாம்பவியும் இந்த நுழைவுத்தேர்வுக்கென ஒருபோதும் பிரத்யேகமாக தயாரித்துக் கொள்ளவில்லை இதற்கென இருக்கும் சிறப்பு கட்டண கல்வி வகுப்புகளில் சேரவும் இல்லை.
சரண் 1 வார க்ரேஷ் வகுப்புகளில் சேர்ந்திருந்தான். முதல்நாளின் முதல் வகுப்பில் ஆசிரியர் தவறாக சொல்லிக் கொடுத்த ஒரு பாடத்தின் பகுதியை வகுப்பில் திருத்தினான் பின்னர் அவனும் வகுப்புகளுக்கு செல்லவில்லை. மிக நல்ல மதிப்பெண்களை பெற்றான்.
சாம்பவி சரண் தருண் மூவருமே அடிப்படையில் புத்திசாலிகள். தரமற்ற பள்ளிக்கல்வியும், பொருந்தாத வகுப்பறைச்சூழலும் ஆசிரியப்பணிக்கான அர்ப்பணிப்பும் தகுதியுமில்லாத, தரப்படுகின்ற சொற்ப சம்பளத்தின் அதிருப்தியை மாணவர்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தும் ஆசிரியர்களுமாக மொண்ணையாக்கியதன் பிறகும் தப்பித்து வந்தவர்கள் மூவரும்.
சரணும் தருணும் ஒரு நல்ல பள்ளியில் பள்ளி இறுதியை கற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள்.ஆனால் சாம்பவி அதை தவறவிட்டாள். வெண்முரசில் அம்பையை’’ நெய்யுண்ட வேள்விச்சுடர் போல்’’ என்று வர்ணிக்கும் ஒரு வரி வரும். அப்படி வீட்டின் கொற்றவையாக குலக்கொழுந்தாக இருக்கும் ஒற்றை மகளை வெளியே எங்கும் அனுப்ப முடியாத, அவள் முகம் காணமுடியாத மாலைகளில் வீடுதிரும்புவதை கற்பனையிலும் காணச் சகியாத விஜி என்னும் தகப்பனின் பலவீனத்தின் பலனை சாம்பவி இந்த இரு வருடங்கள் அனுபவித்தாள்.
இந்த இருவருடங்களும் அவள் கல்வி கற்ற (அல்லது அவள் இருந்த ) அந்த இடம் அவளை ஏகத்துக்கும் சிதைத்தது. கல்வியை வியாபாரமாக்கிய பல நிறுவனங்களில் அப்பள்ளியும் ஒன்று. இனி திரும்பக்கிடைக்கவே கிடைக்காத இளமைப்பருவத்தின் அரிய தருணங்களை அவளுக்கான ஓய்வை அவளுக்கான விருப்பங்களை இழந்தாள். தொடர்ந்த கடும் உழைப்பாலும் ஓய்வில்லாதாலும் கேசமிழப்பும் இருந்தது. அவளின் பத்திரத்தை உறுதி செய்யவும் அவள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளவும் விஜியும் இத்தனை ஆண்டுகள் பாடுபட்டதை காட்டிலும் இந்த இருவருடங்கள் கடுமையாக உழைத்தான்.
எளிதாக மகிழ்ச்சியாக பள்ளிக்கல்வியை நிறைவு செய்த காலங்கள் காணாமல் ஆகிவிட்டன. ஒரு விஷக்காய்ச்சல் போல அனைவரும் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டு இந்த இறுதி வகுப்புக்களை கடினமாக்கிக்கொண்டு குழந்தைகளையும் கொடுமைப்படுதிக்கொண்டு கல்விக்கூடங்களுகு வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சாம்பவி மிக எளிதாக விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் இந்த தேர்வை எழுதினாள். இந்த குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை அவள் எந்த சிரமமும் இல்லாமல் பெற்றது எனக்கு மகிழ்ச்சி மேலும் இதுபோன்ற சிறப்பு வகுப்புக்களின் அவசியமின்மையையும் இந்த தேர்வு முடிவுகள் காட்டுகிறது.
சாம்பவி புறத்தில் மட்டுமல்லாது அகத்திலும் அத்தையின் சாயலை கொண்டிருப்பவள். அவள் ஈடுபட்டிருக்கும் அனைத்திலும் அத்தையை கொண்டுதானே இருப்பாள்?
தெய்வமதி ஸ்ரீ சாம்பவிக்கு அன்பும் ஆசிகளும்!