ஒரு தற்கொலை செய்தி அல்லது ஒரு வன்கொடுமை செய்தியை கேள்விப்பட்டு அதற்கு எதிர்வினையாற்றி கொண்டிருக்கையிலேயே மற்றுமொன்று நிகழ்ந்துவிடும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு கொரோனா ஊரடங்கால் கொஞ்சம் அடங்கி இருந்தவர்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்.
இத்தகைய பெருந்தொற்றும், கண்முன்னே உற்றோரும் உறவுமாக கொத்துக்கொத்தாக மரணமடைந்து, இறப்பென்பது எங்கோ செய்திதாளில் வாசித்ததென்பது போக, அது நம்வீட்டுகதவை தட்டி நடுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த காலத்துக்கு பிறகும் தப்பி பிழைத்து புத்தி வராமல்,, அடுத்தவர்களின் பெண்களிடம் அத்துமீறுவதும், அழிப்பதுமாக இருக்கும்,இவர்களே தொற்றுக்கிருமியை காட்டிலும் அபாயகரமானவர்கள்
இந்த குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை அல்லது, குற்றத்தின் தீவிரத்துகேற்றபடி தண்டனை கொடுக்கப்படுவதில்லை. விஷயம் வெளி உலகிற்கு தெரிய வந்த சில மாதங்கள் ஊடகங்கள் அதை சுறு சுறுப்பாக கவனத்தில் எடுத்துக்கொண்டு பின்னர் அடுத்த விஷயத்துக்கு போய்விடுகிறார்கள்
பல ஓட்டைகள் வழியாக அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து வெளிவருகிறார்கள்’. சட்டத்தின் பிடி என்று ஒன்று உண்டா என்பதும் கேள்விக்குரியதே.
பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரும் வழியில், அவர்கள் வாங்கிக்கொடுத்த பிரியாணிக்காக சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு அனுமதித்த காவலர்களுக்கும் இருக்குமல்லவா பெண் குழந்தைகள்?
அவர்களின் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவளித்த ஒருவனிடம் பிரியாணி வாங்கி சாப்பிட முடியுமா அவர்களால்? அடுத்தவர் பெண்ணும், தனது பெண்ணும் வேறு வேறென்று நினைக்கும் இவர்களுக்கும்,மாணவியிடன் அத்துமீறும் ஆசிரியர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை
உயர்கல்வித்துறையில் கடந்த 20 வருடங்களாக ஆசிரியபணியிலிருப்பவள் என்னும் வகையில் இப்படியான அத்துமீறல்களில் அச்சுறுத்தல்களில் பாதிக்கப்படும் மாணவிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல்கலைக்கழகங்களில் நிலைமை கொஞ்சம் பரவயில்லை பிரச்சனையை குறித்து சக மாணவர்களிடம் பேசவும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் மறுக்கவும் துணிகிறார்கள் இப்போது. ஆனாலும் எல்லையை தாண்டிய அச்சுறுத்தல்களும் அவமரியதைகளும் வருகையில் மனமுடைந்து வேறு முடிவை தேடிக்கொள்கிறார்கள்
பள்ளிக்குழந்தைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. இது போன்ற பிரச்சனைகள் எப்போதும் இருக்கிறது எனினும் அவற்றை குறித்து பேசவும் வீட்டில் தெரிவிக்கவுமான சூழல் வீடுகளில் இல்லை என்பதுதான் இன்னும் பரிதாபத்துக்குரியது
ஒரு ஆசிரியையாக, அன்னையாக இந்த பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வாக இப்போது சுடச்சுட பல கல்வி நிறுவனங்களில் செய்து வரும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவது, கவுன்சிலிங் அளிப்பது மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரைகள் ஏற்பாடு செய்வது போன்றவை எனக்கு பொருளற்றவையாக தெரிகிறது. பதிலாக முதலில் வீட்டில் பெற்றோர்களிடம், வீட்டு பெரியவர்களிடம் பேசுவதுதான் அவசியம்.
பெண் குழந்தைகளுக்கு பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் ,அலுவலகத்தில், பேருந்தில், ரயிலில், விமானத்தில், கழிப்பறையில் திரையரங்குகளில், ஷாப்பிங் மால்களில், எங்கு வழக்கத்திற்கு மாறான, அவர்களுக்கு பிடிக்காத, அவர்களுக்கு தொந்தரவு தரும் விஷயங்கள் நடந்தாலும் முதலில் வீட்டில் பெற்றோர்களிடமும் சகோதர, சகோதரிகளிடமும் அதை வெளிப்படையாக சொல்லலாம் என்னும் நம்பிக்கையை, புரிதலை முதலில் குடும்பம் என்னும் அமைப்பு அளிக்க வேண்டும்
அங்குதான் பிரச்சனை தொடங்குகிறது. விதி விலக்குகள் இருக்கும் ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தேர்வு முடிவுகளில் வரும் எண்களுக்கு கொடுக்கும் மரியாதையை குழந்தைகளின் உடல், மன நலனுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கும் கொடுப்பதில்லை
குழந்தைகளின் உலகில் பெற்றோர்கள் இருப்பது அவசியம் தொடக்கக்கல்வியில் இருந்தே பல சிறப்பு வகுப்புகள், அபாகஸ், நீச்சல், ஓவியம் ஸ்லோகம் உள்ளிடட பயிற்சிகள், பின்னர் சலங்கை பூஜை போன்ற அறிவித்தல் விழாக்கள் என குழந்தைகள் நாள் முழுவதும் எதிலாவது ஈடுபட்டுக்கொண்டும், படித்துக்கொண்டும், பரீட்சை எழுதிக்கொண்டும் இருப்பதில் பல பெற்றோர்கள் வெகு கவனமாக இருக்கிறார்கள்
அந்த வயதுக்கென தேவைப்படும் விளையாட்டுக்கள், தோழமைகள், ஓய்வு, குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் இவை எதுவுமே கிடைக்கப்பெறாமல் ஒரு கேள்விக்கான பதிலை நூற்றுக்கணக்கான முறை பதில் எழுதி எழுதி மனனம் செய்துகொண்டு எந்த புரிதலும் அரவணைப்பும் இல்லாத, மதிப்பெண்களையும் அதன்பேரில் செலவிட்டிருக்கும் பெருந்தொகையையும் சொல்லி சொல்லி காட்டி மேலும் அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்களையும் கொண்ட குழந்தைகள் எப்படி இதுபோன்ற தலையாய பிரச்சனைகளை வீட்டில் சொல்ல துணிவார்கள்?
. குழந்தைகளின் உலகின் தானும் இருந்தபடி, அவர்களின் தேவைகளை, சிக்கல்களை புரிந்து கொண்டு, எதுவானாலும் நான் இருக்கிறேன் உன்னுடன் என்னும் நம்பிக்கயளிக்கத்தவறும் பெற்றொர்கள் தான் முதல் குற்றவாளிகள்
பாடப்புத்தகங்களை தவிர பிற வாசிப்புக்கு அனுமதிக்காத , பயணங்களில் ஈடுபடுத்தாத, ஒருநாளின் ஒருவேளை உணவையாவது குழந்தைகளுடன் குடும்பமாக அமர்ந்து சாப்பிடாத, ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் பாரபட்சமாக பாவிக்கிற, சில மணி நேரங்களைக்கூட அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத, அதே பருவத்தை கடந்து வந்தவர்கள் நாம் என்பதை மறந்து விட்ட,வெறும் மதிப்பெண்களால் மட்டும் கிடைக்கவிருக்கும் ஒரு மாயப் பொன்னுலகை குறித்த பகற்கனவை கொண்டிருக்கும், அக்கனவின் பேரில் குழந்தைகளை சித்திரவதை செய்கிற பெற்றோர்களும் குற்றவாளிகள் தான்
மகளை இழந்தவர்களின் கண்ணீர்க்கதைகளையும் பெண்களிடம் அத்து மீறுவோரை குறித்து ஆவேசமாக எதிர்வினையாற்று பவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும் நீதி கேட்போரையும் ஊடகங்களில் பார்க்கிறேன்,
அவர்களில் எத்தனை பேருக்கு மகன் அல்லது மகளின் உடல் மொழியில், உணவுண்பதில், உறங்குவதில், பேசுவதில், இருக்கும் நுண்மையான மாறுபாடுகளை கவனிக்கத் தெரியும்? எத்தனை பேர் அவர்களின் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்க தயாராக இருந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தன் அலுவலக வேலைகளை, அன்றைய நாளை,குடும்ப விஷயங்களை, தான் வாசித்தவற்றை, பார்த்தவற்றை, குழந்தைகளுடன் பகிர்ந்து, அதே பகிர்தலை அவர்களும் எதிர்பார்கிறார்கள் என்பதையெல்லாம் புரிய வைத்திருக்கிறார்கள்?
சில நாட்கள் முன்பு பெட்ரோல் நிலையமொன்றில் வரிசையில் பெட்ரோல் போட காத்திருக்கையில் முன்னால் இருந்த காரில் பள்ளி சீருடையுடன் ஒரு சிறுவன் வெளியே ஏதோ ஒன்றை கவனித்து முகம் கொள்ளா சிரிப்புடன் அருகிலமர்ந்திருக்கும் அம்மாவை பலமுறை தொட்டு தொட்டு அழைக்கிறான், மும்முரமாக செல்போன் திரையில் ஆழ்ந்திருந்த அவர்,அழைக்கும் மகனின் சிறு கையை தட்டிவிடுகிறார். அந்த சிறுவன் பள்ளியில் நடக்கும் ஒரு அவமதிப்பை, ஒரு சிக்கலை எப்படி அம்மாவிடம் சொல்லுவான்.
ஆன்லைன் வகுப்புக்களை சரிவர கவனிக்காமல் விளையாடியதற்கே நெஞ்சுக்கூடு உடையும் படி முதுகில் பலமாக தொடர்ச்சியாக அறையும் ,அச்சமூட்டும் ஆளுமையாக இருக்கும் பெற்றோர்களிடம் சிறு மகனோ மகளோ நாளை என்ன அந்தரங்க பிரச்சனையைத் தைரியமாக சொல்ல முன்வருவார்கள்?
வேரில் நோய் தாக்குதல் இருக்கையில் இலைகளுக்கும் கிளைகளுக்கும் மருந்தடிப்ப்துபோலத்தான் இப்போது கல்வி நிறுவனங்களை குறைசொல்லிக்கொண்டிருப்பதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதுமெல்லாம்.,
கல்விநிலையங்களில் மட்டுமல்ல, எங்கும் இருக்கும் இப்படியான சிக்கல்களும் ஆபத்துக்களும். வீடு என்னும் அமைப்பு அதற்கான முன்தயாரிப்பை நம்பிக்கையை, பாதுகாப்பை அளிக்கும் இடமாக இருக்கிறதா என்பதுதான் முதன்மையான பிரச்சனை இப்போது. வயது வந்த பிள்ளைகள் முன்பாக சண்டையிடும் பெற்றோரிடம் எந்த குழந்தையும் தன் சிக்கல்களை சொல்லாது.
வீட்டில் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் பொழுதுகளை கவனமாக உருவாக்கி மகிழ்ச்சியான சூழலை தக்க வைத்திருக்க வேண்டும். அடிக்கடி தொட்டும், கைகளை பிணைத்துக்கொண்டும், தட்டிக்கொடுத்தும் பெற்றோர்கள் தங்கள் அண்மையை, நெருக்கத்தை அந்த தொடுகையில் தெரிவிக்கவேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் தொடுவதே இப்போது அபூர்வமாகி விட்டிருக்கிறது
இவற்றில் எதுவுமே செய்யாத பெற்றோர்கள் எவர் மீதும் கல்லெறியும் அருகதை அற்றவர்கள், குற்றத்தின் கூட்டுப்பங்காளிகளும் கூட.
இறுதியாக மற்றுமொன்று. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதிலிருந்தே கல்லூரியிலும், ஊரிலும், பல நாடுகலிலிருக்கும்நண்பர்களிடமிருந்தும் மகன்கள் இருவரும் படித்த சின்மயாபள்ளிதானே இது ? என்ன இப்படியான பள்ளியிலா மகன்களை சேர்த்தீர்கள்? எங்களுக்கும் பரிந்துரைத்தீர்கள் ? என கேள்விமேல் கேள்விகள்.
இல்லை அது சின்மயா சர்வதேச உறைவிட ப்பள்ளி. இந்த அசம்பாவிதம் நடந்தது சின்மயாவித்யாலயா. இந்த பெயரில் இந்தியாவில் கோவையில் பல பள்ளிகள் இருக்கின்றன.ஆனால் மகன்கள் படித்த இன்னும் தொடர்பில் இருக்கிற இனியும் என்றென்றைக்கும் தொடர்பில் இருக்கபோகிற பள்ளியான CIRS -Chinmaya international residential school இந்தியாவிலேயே ஒன்றுதான் இருக்கிறது. அங்கு மகன்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன், எந்த மன அழுத்தமும், சிக்கலும், அச்சுறுத்தலும் இல்லாமல் படித்தார்கள் படிக்கிறார்கள் ,இனியும் படிப்பார்கள்