லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 2 of 6)

Richard Jewell-பழியும் பாவமும்

27 ஜூலை 1996 அன்று, ஜார்ஜியா மாகாணத்தின்  தலைநகரான அட்லாண்டாவில் கோடைக்கால விளையாட்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் பூங்காவில் நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த  குண்டுவெடிப்பில்  ஒரு நபர் கொல்லப்பட்டு 111 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பை அருகில் சென்று படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததுடன் இறப்பு எண்ணிக்கை இரண்டானது. அந்த குண்டு வைக்கப்பட்டிருந்த  சந்தேகத்திற்குரிய பையை அடையாளம் கண்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற உதவி வழிகாட்டிய  தன்னார்வலரும், அந்த விளையாட்டு போட்டிகளுக்கென பகுதிநேர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவரும், காவல்துறையில் பணியாற்றும் லட்சியத்துடன் இருந்தவருமான பாதுகாவலர் ரிச்சர்ட் ஜுவல் ஒரே நாளில் பிரபலமாகி ஹீரோவாக மக்களால் கொண்டாடப்பட்டார். ஏறக்குறைய 100 பேருக்கு மேல் அவரால் அன்று உயிர் பிழைத்தனர்..

பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்  ஜுவெல் பாராட்டப்பட்டார். அவரின் இந்த சாகசத்தை  ஒரு கதையாக எழுத அடுத்த நாளே ஒரு புத்தக ஒப்பந்தம் கூட வழங்கப்பட்டது. ஆனால் குண்டுவெடிப்பின் பின்னர் மூன்றாம் நாளில் FBI அலுவலர் ஒருவர் பத்திரிக்கை செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்ட ஒரு தவறான செய்தியால் எந்த ஆதாரமும்,  சாத்தியமான சந்தேகமும் இல்லாமல், குண்டுவெடிப்பு விசாரணையின் மையமாக ஜுவெல்  எதிர்பாராமல் குறிவைக்கப்பட்டார். இது அவரது வாழ்க்கையை ஒரு  நரகமாக்கியது

இந்த செய்தியும் இது தொடர்பாக நடந்த விசாரணைகளும் ஜுவெல்லின் தினசரி நடவடிக்கைகளும் சர்வதேச செய்தித்தாளான, தி டெய்லி டெலிகிராப் மூலம் தினமும் மக்களுக்கு சொல்லப்பட்டது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டிலிருந்து ஜுவெல் 8 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கபட்டு பகிரங்கமாக அவரிடம் காவல்துறையினர் மன்னிப்பு கேட்கப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் பெரிதும் கவன ஈர்ப்பை பெற்றது.  பிரபல இயக்குனர்   கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜுவல்லின்  இந்த வலிமிகுந்த, அநீதியான, அசாதாரண அனுபவத்தை சாம் ராக்வெல், கேத்தி பேட்ஸ், ஒலிவியா வைல்ட், ஜான் ஹாம் மற்றும் புதுமுகம் பால் வால்டர் ஹாஸர் ஆகியோரை கொண்டு சிறப்பான ஒரு திரைப்படமாக்கினார்

செய்தித்தாள் தலைப்புச் செய்தி ஒன்றை  ஈஸ்ட்வுட் எப்படி  நல்ல, வெற்றிகரமான திரைப்படமாக மாற்றினார் என்பதை 2019ல் வெளியாகி, தற்போது நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கும்  Richard Jewell படத்தில் காணலாம் 

இச்சம்பவம் குறித்து கெண்ட் அலெக்சாண்டர் மற்றும் கெவின் ஆகியோர் எழுதிய ’’The Suspect: An Olympic Bombing, the FBI, the Media, and Richard Jewell, the Man Caught in the Middle’’ நூலையும்,   சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளும் ஈஸ்ட்வுட்  கருத்தில் கொண்டே இப்படத்தை உருவாக்கினார். 1996 களில் நடப்பது போலவே காட்சிகளையும் அரங்குகளையும் சித்தரித்து  குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

தயாரிப்பு செலவை காட்டிலும் பத்து மடங்கு வசூல் செய்த வெற்றிப் படமான இது 2019 ஆம் ஆண்டின் சிறந்த பத்துப்படங்களில் ஒன்றாக தேர்வானது..ஜுவெல்லின் தாயாக நடித்திருந்த கேத்தி பேட்ஸ் இதில் பெரிதும் பாராட்டப்பட்டார். பல விருதுகளை பெற்ற இப்படத்தின் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. மகனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கும் காட்சியில் கேத்தியின் மிகச் சிறந்த  நடிப்பை நாமும் பார்க்கலாம்

ஜார்ஜியாவின் முக்கிய நாளிதளொன்றின் நிருபரான கேத்தி ஸ்ரக்ஸ் (Kathy Scruggs) FBI அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்து பெற்றுக்கொண்ட தகவலே பொதுவெளிக்கு வந்தது என்னும் காட்சி பலரின் கண்டனக்குள்ளானது. கேத்தி ஸ்ரக்ஸ் 2001ல்  மருத்துவரொருவர் பரிந்துரைத்த அதீத மருந்துகளின் விளைவாக மரணம் அடைந்தார். 

தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஜுவெல்லுக்கு நேர்ந்த அநீதியை பேசும் படமான கேத்திக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பத்திரிக்கையாளர்கள் தரப்பில் எதிர்ப்பிருந்த்து. பெண் பத்திரிகையாளர்களை இத்திரைப்படம் அவமதிப்பதாகவும் பல பெண்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். எனினும் ஈஸ்ட்வுட் அவருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், உண்மைக்கு புறம்பாக எந்த காட்சியும் இதில் இல்லை என்று குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.. 120 நிமிடங்கள் ஓடும் இப்படம் எந்த இடத்திலும் தொய்வின்றி ஈஸ்ட்வுட்டின் ஸ்டைலில் பரபரப்பாக, உணர்வுபூர்வமாக செல்கிறது. ஜுவெல் ஆக நடித்திருக்கும்  பால் வால்டெர் மிக சரியான மற்றும் பிரமாதமான தேர்வு அசல் ஜுவெலுக்கும் இவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையும் ஆசச்ர்யப்படவைக்கிறது.

ஜுவெல்லின் அப்பாவித்தனமும் எளிமையும் நிபந்தனைகளற்ற, அன்பும் பார்வையாளர்களை அவர் பக்கம் சாய வைத்துவிடும். அவருக்கும் அவர் சார்பாக வாதாடும் வக்கீல் சாம் ராக்வெல்’லுக்கும் இருக்கும் தோழமையும், சாம்’மின் புரிதலும் அன்பும், விசாரணையின் போதும் காவலதிகாரிகளின் தந்திரங்களை ஜுவெல் புரிந்துகொள்ளாமல் வெள்ளந்தியாக பதிலளிப்பதுமாக ஈஸ்ட்வுட்டின் இயக்கம் வழக்கம் போல் சிறப்பு

ரிச்சர்ட் ஜுவெல்  எப்படி பத்திரிக்கைகள் பரபரப்பான செய்திகளுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் எளியவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுவதை, உண்மைச் செய்திகளை விட வதந்திகள் ஊடகங்கள் வழியாக வேகமாக பரவுவதை, அறமற்ற அதிகாரிகள் காவல் துறையிலும் இருப்பதை  எல்லாம் தெளிவாக சொல்லும் படம்

தான் பிரபலமாக வேண்டும் என்று ஜுவெல் அந்த குண்டை அங்கே வைத்துவிட்டு மக்களை காப்பாற்றுவது போல நாடகமாடினார் என்றே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் நிராபராதி என அறிவிக்கப்பட்டவுடன் அவர் புகழ் இருமடங்காகியது.

 எனினும் அந்த 8 மாதங்கள் அவருக்கு நேர்ந்த மன உளைச்சலை இந்த திரைப்படம் நமக்கு காட்டுகிறது.  ஜுவெல் பின்னர் அவர் விரும்பியபடியே காவல் துறையில் பணியாற்றினார் குண்டு வெடிப்பின் .  உண்மைக்குற்றவளி 6 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யபட்டார்.

 தனக்கேற்பட்ட அநீதிக்கு ஜுவெல் தொடர்ந்த மான நஷ்ட வழக்குகள் பலவற்றில் அவர் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு பெருந்தொகை பிழையீடாக பின்னர் வழங்கப்பட்டது. 33 வயதாக இருக்கையில் இந்த அநீதி ஜுவெல்லுக்கு நிகழ்ந்தது, அவர் விடுவிக்கபட்டு 10 ஆண்டுகள் கழித்து தனது 44 வது  வயதில் மாரடைப்பால் ஜுவெல் காலமானார். என்றும் அவர் மக்கள் மனதில் நாயகனாக நினைவில் இருக்கிறார்.

உண்மை சம்பவங்களை மேலும் அறிந்துகொள்ள:

https://www.telegraph.co.uk/films/richard-jewell/who-was-richard-jewell/

https://law.jrank.org/pages/8241/Libel-Slander-Richard-Jewell-Olympic-Park-Bombing.html

https://law.jrank.org/pages/8241/Libel-Slander-Richard-Jewell-Olympic-Park-Bombing.html

# Home

ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் # Home  ஒரு நல்ல நிறைவான, குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய  மலையாளத் திரைப்படம்..

இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நேஸ்லென் கே. காஃபூர்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம் ரோஜின் தாமஸ், தயாரிப்பு ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் பேனரில் விஜய் பாபு,  இவரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ராகுல் சுப்ரமணியன், ஒளி இயக்கம் நீல் டி’ சுன்ச்சா.

ஆலிவர் ட்விஸ்ட்டாக இந்திரன்ஸ் அவரின் அழகிய குடும்பமே கதைக்களம் மனைவி குட்டியம்மாவாக மஞ்சு பிள்ளை, ஒரு வெற்றிப்படம் கொடுத்து திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கிவிட்டு இரண்டாவது ஸ்கிரிப்டுக்காக முயன்று கொண்டிருக்கும் மூத்த மகன் ஆண்டனியாக ஸ்ரீநாத் பாஷி, எந்நேரமும் எதையாவது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டே இருக்கும் vlogger பதின்மவயது இளையவன் சார்லஸாக நேஸ்லென் கே. காஃபூர்

 இளையோரின்  உலகில் தானும் நுழைய முயன்று, இயலாமையும் தன்னிரக்கமுமாக வருந்தும் தந்தை ஒருவர், இளைய தலைமுறையினருடன் உருவாகி இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலாகிய இடைவெளியை நிரப்ப முயல்வதும், அதில் மகன்களுக்கும் தந்தைக்கும் ஏற்படும் உரசலும் முட்டலும் மோதலும் ,பின்னர் புரிதலுமே  கதை. 

ஆலிவர் என்னும் 60 வயது குடும்ப தலைவரொருவரின் கதை மட்டுமல்ல, இது நம்மில் பலரின் கதையும் தான். நம் வீடுகளிலுமே  புதிய திறன் பேசியை , மடிக் கணினியை இயக்கவும், கைப்பேசி வழியே வர்த்தகம் செய்வது குறித்தும் மகன்களிடமும் மகள்களிடமும் கேட்டறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அநேகம் பேர் இருப்போம்.

 இந்த தலைமுறை பிறந்து வளர்ந்ததே தொழில்நுட்ப அதீத  வளர்ச்சி காலத்தில்தான் எனவே அதில் அவர்கள் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். சில்லறை காசுகளை  எண்ணி எண்ணி செலவழித்தவர்களான   சென்ற தலைமுறையை  சேர்ந்தவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் கையிலிருக்கும் சிறு பெட்டி போன்ற  கருவியில் வர்த்தகம் செய்வதும், உணவை வரவழைப்பதுமாக உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டதை அறியாமலேயே மண் மறைந்தவர்கள். நாமோ இந்த தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த, சிக்கல்கள் அற்றது போல தோன்றும் வாழ்க்கையை  பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வேடிக்கை பார்த்துக் கொண்டும், மெல்ல மெல்ல  கற்றுக்கொண்டு இருக்கும் தலைமுறையினருக்கும், இமைக்கணத்தில் உலகை தொடர்பு கொள்ளும் இளைய தலைமுறைக்குமான உரசல்களை தான்  அழகிய கதையாக்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீநாத் பாஷி வழக்கம் போல சிறப்பான நடிப்பு,திரைத்துறையின் சவால்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர் பணப் பிரச்சனையிலும் இருக்கிறார். இரண்டாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க வேண்டிய காலக்கெடு கழுத்தை நெருக்குகையில் எப்படியும் எழுதிவிட வேண்டும் என சொந்த ஊருக்கு வருகிறார்.

வீட்டு வேலைகளில் எந்நேரமும் மூழ்கி இருந்தாலும் கணவனின் மனதை அறிந்திருக்கும், கணவனுக்கும் மகன்களுக்கும் இடையில் உண்டாகி இருக்கும் இடைவெளியை குறித்த கவலையுடன் குட்டியம்மா, மிக வயதான முழுநாளும் பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும் தள்ளாத  ஆலிவரின் தந்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மூத்த மகன், சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையான இளையவன், இருவரின் அணுக்கமும் கிடைக்கப்பெற  தந்தையான ஆலிவரின் உணர்வுபூர்வமான போராட்டம் நம்மை கதைக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

 இந்திரன்ஸ் அநாயசமாக நடிக்கிறார்.அதிகம் வசனங்கள் பேசாமல் நுணுக்கமான முக பாவனைகள், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் என, எளிதில் அவரது மனவோட்டத்தை திரையில் கொண்டு வந்துவிடுகிறார். ஆலிவர் புண் படும்போதெல்லாம் பார்வையாளர்களும் புண்பட்டு விடுகிறோம். அப்பாவியாக அவர் முகநூல் பக்கத்தை பற்றி கேட்டுக்கொள்ளுவதும், உயிர்த் தோழனிடம் தன் மனக்குமுறல்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும், இரவில் மனைவியிடம் மட்டும் தன் அந்தரங்க துயரை ஒரு சில சொற்களில் சொல்லுவதுமாக அசத்தி இருக்கிறார். பண்பட்ட முதிர்ந்த நடிப்பு இந்திரன்ஸுடையது. பலநூறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருந்தாலும் இந்த திரைப்படம் இவரது திரைப்பயண அனுபவத்தில் அவருக்கும், நமக்கும்  கிடைத்திருக்கும் ஒரு அருமணி.

திறன்பேசியை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்கன்வே சிக்கலில் இருக்கும் மகனின் வாழ்வில் பெரும் இக்கட்டொன்றை கொண்டு வந்துவிடும் தந்தை, அது உண்டாக்கும் விரிசல், காதலியின் மனக்கசப்பு, தந்தையின் துயர், என்று குழப்பமில்லாமல் திரைக்கதை போகிறது. தயாரிப்பாளர் விஜய் பாபு மனநல மருத்துவராக வருகிறார் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம்.

 அசாதாரணமான அந்த பிளாஷ்பேக் கதை இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதை வெற்றி பெற்றிருக்கும். அந்த கதையைக் கொண்டு அமைத்திருக்கும் கிளைமேக்ஸ் தவிர்க்கப்பட்டிருக்கலாம். KPAC லலிதாம்மாவின் பாத்திரமும், அவர் இந்திரன்ஸின் வீட்டுக்கு வருவதுமாக அந்த வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட கடைசிப்பகுதி அழகிய இக்கதைக்கு திருஷ்டிப்பொட்டு போல அமைந்து விட்டது. 

குட்டியம்மாவும் இயல்பான நடிப்பு. அந்த மழை நாள் இரவில் ஒரே கூரையின் கீழ் சம்பந்தி வீட்டினரும் அமர்ந்திருக்கையில் உள்ளக் கொந்தளிப்பு தாங்கமுடியால அவர் உடைவது  சிறப்பு.,குடும்ப உறவுகளில் ஆண்டனிக்கும் அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் பிரியாவுக்குமான் உறவும் சொல்லப்படுகின்றது.

ஆலிவரின் நண்பனாக வரும் ஜான் ஆண்டனியும் தயாரிப்பாளராக வரும் மணியன்பிள்ளை  ராஜுவும் நகைச்சுவைக்கு உதவுகிறார்கள்.

 தலைமுறை இடைவெளிகளை விரிவாக்கியிருக்கும் தொழிநுட்பங்களை மட்டுமல்லாது தொழில்நுட்பத்தின் மிகை பயன்பாடுகள் உருவாக்கி இருக்கும் உளச்சீர்கேடுகளையும், திறன்பேசிக்கு அடிமையாகி இருக்கும் இந்த தலைமுறையையும் இந்த திரைப்படம்   எளிமையாக, ஆனால் அழுத்தமாக சொல்லுகின்றது. திரைப்படம் துவங்கும் முன்னரே ’’தயவு செய்து இடையிடையே கைபேசியை பார்க்காதீர்கள்’’ என்னும் வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏனென்று படம் பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு புரிகின்றது.

 புதியவற்றை கற்றுக்கொள்ள விழையும் தந்தை ஒருவரின் கதைஎன்பதுடன் 160 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் பலம் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாய அநியாயங்களை சரியாக எடுத்துக் காட்டி இருப்பதிலும் இருக்கிறது.

ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், நடனம், வீர தீர சாகசங்கள் செய்யும் நாயகன், பேரழகாக ஒரு நாயகி என்னும் மரபான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்புவோருக்கானது அல்ல இந்த படம். மாறி வரும் திரைச்சூழலில் இப்போதைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சிக்கல்களில் ஒன்றை எடுத்து விரித்து அழகாக காட்டும் திரைப்படம் இது.

மலர்கண்காட்சியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மலர்க்கூட்டங்கள் அழகுதானென்றாலும், மலைச்சரிவில்  காட்டுச்செடி ஒன்றில் மலர்ந்திருக்கும் ஒற்றைச் சிறு மலரும் அழகுதானே! அப்படி ஒரு எளிய அழகான உணர்வுபூர்வமான திரைப்படம் தான் # Home.

குடும்பம் என்பதற்கான வரைமுறைகள்  மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் மிக முக்கியமாகிவிடுகிறது.  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது

மாலிக்

மலையாளத்தில் புகழ்பெற்ற டேக் ஆஃப் படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் மகேஷ் நாராயணன் இயக்கி, தொகுத்து, திரைக்கதை எழுதி 2021 ஜூலை 15ல் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் மாலிக்.

ஃபகத் ஃபாஸில், வினய் ஃபோர்ட் , திலீஷ் போத்தன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய பாத்திரங்களில். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ் ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஒளி இயக்கம் சானு ஜான் வர்கீஸ், இசை கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் இசையால் மிக பிரபலமான சுஷின் ஸ்யாம்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கடலோர புறநகர்ப் பகுதியான பீமா பள்ளியில் (Beemapally)  தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பீமா பள்ளி தர்கா மிக பிரபலமானது.

2009 ல் பொதுமக்களில் 42 பேர் படுகாயமுற்று 6 பேர் இறந்து, பல காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கமும் பணி மாறுதலும் செய்யப்பட  காரணமாயிருந்த பீமாபள்ளி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி உருவானதுதான் மாலிக்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மாப்பிள்ளா முஸ்லிம்களும் வசிக்கும் ரமத பள்ளி கடலோர கிராமத்தின் குற்ற உலகின் ராஜாவான அலிஇக்கா, அவரின் கிறிஸ்துவ காதல் மனைவி ரோஸ்லின், நடுத்தர வயது அலிஇக்காவான  ஃபகத் ஹஜ் புனித யாத்திரை கிளம்பும் நன்நாளில் கதை தொடங்கி விமானத்தில் நுழையும் போது  அவர் தடாவில் கைது செய்யப்படுவதிலிருந்து விரிந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.

மகேஷ் நாராயணனின் விறுவிறுப்பான கதை சொல்லல்  படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது, ஆழமான, அட்டகாசமான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.

கொஞ்சம் நீளமான ஃப்ளேஷ்பேக். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எடவத்துறை கடலோரத்தை சேர்ந்த  சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அலி, டேவிட், பீட்டர் என்னும் சிறுவர்கள் தாதா சந்திரனின் ஆளுகைக்கு கீழ் வந்து அவருக்காக  குற்றங்கள் செய்ய தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் சந்திரனிடமிருந்து பிரியும் அவர்கள் சந்திரனுக்கு எதிராக திரும்புவதுடன் தனியே  கள்ள கடத்தல  வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.

சின்ன திருட்டுகளில் ஈடுபடும்  சிறுவன்   அலி, பின்னர் கடல் கடத்தலில் இறங்கி மெல்ல மெல்ல வளர்ந்து துணை ஆட்சியரின் நம்பிக்கைக்கு ஆளாகி குப்பைக்கூளங்களை அகற்றி அவ்விடத்தில் பள்ளி கூடம் அமைத்து நலப்பணிகளில் ஈடுபட்டு அலிஇக்கா என்னும் நாயகனாவதும், ஒற்றுமையாயிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அந்த விரோத நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும், துணைபோகும்  காவல்துறையும், இடையில் உண்டாகும் ஃபகத்தின் ரோஸ்லின் மீதான் காதலும் அவரைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளும் அவருடனெயே இருந்து மெல்ல வளர்ந்து அரசியல்வாதியாகும் திலீஷ்போத்தனின் நயவஞ்சகமும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கலவரமுமாக கதை வளர்கின்றது.

 குற்றப் பின்னணி, கடல் வணிகம், கள்ளக்கடத்தல் , எளிய மக்களின் நாயகன், அவர் மீதான கொலை முயற்சி, அவர் மகன் அநியாயமாக கொல்லப்படுவது, ஒற்றை மகள் என  கதை கமலின் நாயகனை கண்முன்னே கொண்டு வருகிறது.  இப்படியான திரைக்கதைகளில் இனி 70களின் காட் ஃபாதரும் 80 களின் நாயகனும் நினைவுக்கு வராமல் இருக்கும் சாத்தியமே இல்லை.

ஃபகத்தின் நடிப்பை குறித்து புதிதாக சொல்ல ஏதுமில்லை. மூன்றாவது முறையாக இயக்குநர் மகேஷுடன் இணைந்திருக்கும் ஃபகத் வழக்கம்போல அசத்தல். பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டிருக்கும் ஃபகத்தின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு மாலிக். 

திரைஉலகின் பொற்கதவுகளை திறந்து நுழைந்திருக்கும் 24 வயதே ஆகும் நிமிஷா சஜயனுக்காக  காத்திருக்கும் திரைக்களங்களையும் அவர் அடையப்போகும் உயரங்களையும் நம்மால் இப்போதே கணிக்கமுடிகின்றது. மகன் இறக்கும் காட்சியில் பள்ளிவாசலில் அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் கதறும் கதறலுடன் அவர்  வயதையும் அவரது நடிப்பனுபவங்களையும் எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.  ஃபகத்துக்கு இணையாக நடித்து இருக்கிறார்.

வழக்கமாக ஆங்காங்கே தலைகாட்டும் திலீஷ் போத்தன்  இதில் படம் நெடுகிலும் வருகிறார், சிறப்பான நடிப்பையும் அளித்திருக்கிறார், காவலதிகாரியாக இந்திரன்ஸ். எந்த முகமாறுபாடுமின்றி அரசியல்வாதிகளின் ஆணைக்கு துணைபோகும், எந்த சிந்தனையுமின்றி சிறைக்குள்ளே  அநீதி இழைக்கும் காவலதிகாரிகளின் ஒட்டுமொத்த பிம்பமாக அவரை காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிகளற்ற முகத்துடன்   பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினய் ஃபோர்ட் மிக சிறப்பான,இயல்பான நடிப்பு.  

கூரான, கவனிக்க வைக்கும் வசனங்கள். குறிப்பாக திலீஷ் போத்தனிடமும், துணை ஆட்சியரிடமும் பேசுவதும் , வினயிடம்   கைகளை அகல விரித்தபடி அனைத்துலக மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தழுவ நிற்கும் ஏசு கிறிஸ்துவின் சிலையை காட்டியும்  ஃபகத் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பானவை.

ஏறக்குறைய மூன்று மணி நேர படத்தின் நீளம்,பெரும்பாலும் யூகிக்க முடிகிற திரையோட்டம்,  நீளமான பிளாஷ்பேக் ஃபகத்தின் மகனின் இறப்பை சரியாக விளக்காமல் போனது, கமலின்  நாயகனையும், அனுராக் காஷ்யப்பின் சில படங்களையும் அதிகம்  நினைவூட்டுவது ஆகியவை இப்படத்தின் சறுக்கல்கள் எனக்கொண்டால், நல்ல இயக்கம், சிறப்பான திரைக்கதை  தற்கால அரசியல் மற்றும் சமூக அமைப்பு, அதன் பகடைக்காய்களாக மைனாரிட்டி மக்களின் பிரச்சனைகளை அரசியலாளர்கள் பயன்படுத்துவது குறித்த கதை, மற்றும் முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக  பாராட்டுக்கு உரிய படம்தான்

மாலிக் , நிச்சயம் பார்க்க வேண்டிய மலையாள நாயகன்

Luca-லூக்கா

கடற்கரைக்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் வரும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் புதிய நட்புகளும், புது புது உணவுகளும் ஸ்கூட்டர் சாகச  பயணங்களுமாய் மகிழ்ச்சியில் திளைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடக்கின்றது. அவ்வனுபவங்களும்  அம் மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவன்  மனிதனல்ல ஆழ் கடலின் அடியில் இருக்கும்  ஓருலகின் உயிரினம் என்னும் ரகசியமும்தான் கதை.

1950 களில் நடக்கும் கதைக்களத்தில், வெகுநாட்களுக்கு பிறகு சாகசங்களும் மாயங்களும் உணர்வெழுச்சிகளுமாய் ஒரு குழந்தைகளுக்கான திரைப்படம். 

இத்தாலியின் ஒரு அழகான நகருக்கு அருகில் இருக்கும் கடலில், மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வெறுக்கப்படும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அவற்றை அந்நகர மக்கள் வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள் எப்போது அவை கண்ணில் பட்டாலும் வேட்டையாடி கொல்லவும் காத்திருக்கிறார்கள். அந்த உயிரினங்களும் மனிதர்களை அஞ்சி வெறுக்கின்றன. நீலம் பச்சை என பல நிறங்களில் மீன்களை போல் செதில்களுடனும் வாலுடனும் இருக்கும் அவர்களும் கடலுக்கு அடியில் மிக அழகிய உலகில், வீடுகளில்  குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். அவ்வுயிர்கள் நீரிலிருந்து வெளியே வந்தால் மனிதர்களின் உடலை அடைந்துவிடுவார்கள்.இவ்வுலகில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன் லூக்கா.

லூக்காவிற்கு கடற்கரைக்கு சென்று கடலுக்கு வெளியே இருக்கும் உலகை காணும் ஆசை பல நாட்களாக இருக்கிறது ஆனால் லூக்காவின் அம்மாவோ அங்கு செல்ல கூடாது என்று கடுமையாக  எச்சரித்திருக்கிறார், அவனை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

அதே உலகைச் சேர்ந்த ஆனால் அவ்வப்போது கடலை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் தீவில் வசிக்கும் கதையின் மற்றொரு நாயகனான ஆல்பெர்ட்டோவும் லூக்காவும் சந்திக்கும் புள்ளியிலிருந்து கதை கொண்டாட்டமாக நகர்கின்றது. ஆல்பர்டோ லூக்காவை மனிதர்களின் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறான். ஆல்பெர்ட்டொ திருடிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஏராளமான பொருட்களுடன் இருக்கும் ஒரு வெஸ்பா ஸ்கூட்டியின் படம் இரண்டு சிறுவர்களையும் கற்பனையில் பறக்க வைக்கிறது

லூக்காவின் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் இத்தாலியின் போர்டரோஸோ என்னும் அழகிய நகருக்கு செல்வது,   மனிதர்களை போல இருந்தாலும் நீரில் நனைந்தால் கடல்வாழ் உயிரிகளாக அவர்கள் மாறிவிடும் அபாயம், அவர்களுக்கு ஏற்படும் புதுப்புது நட்புக்கள், எதிரிகள், வெஸ்பா ஸ்கூட்டர் பரிசாக கிடைக்கவிருக்கும் ஒரு  போட்டி என்று கதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது

இரு சிறுவர்களுக்கும் குலியா என்னும் தோழி கிடைக்கிறாள். அவர்கள் அனாதை சிறுவர்கள் என்றெண்ணி தனது வீட்டில் தங்க இடம் கொடுக்கும் குலியாவுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகளை திகட்ட திகட்ட பார்க்கலாம். 

லூக்காவை தேடிக்கொண்டு அவன் பெற்றோர்களான டேனியெல்லாவும் லொரென்ஸோவும் அதே நகருக்கு வருவதும்,  நூடுல்ஸ் சாப்பிடும், நீந்தும், மற்றும் சைக்கிள் ஓட்டும் மூன்று போட்டிகள் கொண்ட அந்த  ட்ரை எத்தெலான் போட்டிக்கு இவர்கள் தயாராவது, அவர்களுக்கு அந்நகரில் பெரும் தொல்லை கொடுக்கும் வில்லன் என  கதை சுவாரஸ்யம்.

அத்தனை போக்கிரித்தனங்கள் செய்யும் ஆல்பெர்டோ வின் துயர பின்னணியும், லூக்காவும் அவனும் பிரியும் காட்சியும், இது குழந்தைகளுக்கான   அனிமேஷன்  படம்  என்பதை  மறக்கவைத்து  நம்மையும் துயரிலாழ்த்திவிடும்.வானில் தெரியும் விண் ’’மீன்’’களும் என்ன பொருளென்றே தெரியாமல் ஆல்பெர்ட்டொ அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகளும், குட்டிச் சுட்டிகளின் முகபாவனைகளும் கொள்ளை அழகு. 

அந்த நகரில் கடல் உயிரினங்களை கொல்ல காத்திருக்கும் மனிதர்களுக்கிடையில், தேடி கண்டுபிடித்து ஆழ்கடல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனிதர்களாக மாறி வந்திருக்கும் பெற்றோர்களின் கண்களில் இருந்து தப்பி, கடல் உயிரினங்களை கொல்ல எப்போதும் ஆயுதங்களுடன் இருக்கும் குலியாவின் அப்பாவுடன் அதே வீட்டில்  இருந்துகொண்டு, போட்டியில் இவர்கள் கலந்து கொள்வதை எப்படியாவது தடுத்து  நிறுத்த முயற்சி செய்யும் இன்னொரு பொறாமைக்கார சிறுவனின் திட்டங்களை எதிர்கொண்டு எப்படி மூவரும் போட்டிக்கு செல்கிறார்கள். இறுதிச்சுற்றில் மழை வந்தபோது என்னவானது, கொல்லக்காத்திருக்கும் மனிதர்களிடமிருந்து தப்பினார்களா, அவர்கள் இருவரின் கனவான வெஸ்பா கிடைத்ததா என்பதையெல்லாம் திரையில் பார்க்கையில் கிடைக்கும் குதூகலத்தை  வாசிப்பில் இழந்துவிடக்கூடாது

நம்மால் வெறுத்து,ஒதுக்கப்பட்டவர்களின் தரப்பையும் சொல்லும் இக்கதை தோழமை, அன்பு,  சாகசம் வீரம்,  விடாமுயற்சி என்று பல கலவையான உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது

அனிமேஷன் படத்தை  இத்தனை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கும் படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். இறுதிச்சுற்றில் தாண்ட வேண்டிய வெற்றிக்கோடு,   மனிதர்களாக மாறும் சில காட்சிகள், சூரிய வெளிச்சத்தில் நிழல்களின் கோணம், ரயில் வரும் திசை உள்ளிட்ட பல காட்சிப் பிழைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்த வேண்டாமென்னும் அளவிற்கு படத்தின் கதை உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன

இயக்குநருடன் கதையையும்,திரைக்கதையையும் மேலும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.லூக்காவிற்கு ஜேகப்  ட்ரெம்ப்ளேவும்,ஜேக் டிலன் கிரேஸர் ஆல்பெர்டோ விற்கும், எம்மா பெர்மன் குலியாவிற்கும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

ஒளி இயக்கம் டேவிட் ஜுவான் மற்றும் கிம் வயிட்,படத்தொகுப்பு கேத்ரின் மற்றும் ஜேஸன்.அனிமேஷன் மேற்பார்வை மைக் வெண்ட்ரூனி

வால்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸர் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் 1.30 மணி நேரம் ஓடும் இப்படம் பலநூறு தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பால் உருவாகி இருக்கிறது. பிக்ஸரின் முந்தைய திரைப்படங்களின் பிரம்மாண்டங்களை  இதிலும் எதிர்பார்த்திருந்த  ரசிகர்கள் லூக்காவை யானைப்பசிக்கு அளிக்கப்பட்டிருக்கும்  கீரைத் தண்டு என்கிறார்கள். உலகெங்கிலும் திரையரங்குகளிலும், Disney +லும், 17 மற்றும் 18 ஜூன் 2021 ல் வெளியானது லூக்கா

  அதிகம் வெளி உலகிற்கு வர தயங்கிய, கூச்ச சுபாவம் கொண்டிருந்த தன்னை, தான் மூழ்கி இருந்த ஆழுலகிலிருந்து எடுத்து, வெளியே எறிந்து உலகை காட்டிய தனது பால்யகால நண்பன் ஆல்பெர்டோ வின் பெயரை இதில் லூக்காவின் நண்பனுக்கு வைத்திருக்கும் அறிமுக  இயக்குநர்  என்ரிக்கோ காகரோஸா ( ENRICO CACAROSA)  தான் இளமைபருவத்தை கழித்திருந்த நகரைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இக்கதையின் கடல் உயிரிகளின் பாத்திர உருவாக்கம் இத்தாலிய தொன்மங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

பெரிய கண்களால் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல் பார்க்கும்  லூக்கோவும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் பார்த்து ரசிக்கையில், தங்கள் இளமைப்பருவத்தை திரும்பிப் பார்க்கும்   சென்ற தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எந்நேரமும் செல்போனும் லேப்டாப்புமாகவே இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கும் ’’அடடா இதையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறொமே’’ என்று ஏக்கமுண்டாகும்

 நம் நெஞ்சில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளம் வயது தோழமையை சொல்லும் படமான லூக்காவின் அடுத்த பாகத்தையும் எடுக்கவிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி

உடல் ஊனம், வறுமை, ஓரினச்சேர்க்கை, நிறம், இனம், பொருளாதார நிலை என நம்மை விட எதிலாவது வேறுபட்டு இருப்பவர்கள் மீதான மனிதர்களின் வெறுப்பையும் விரோதத்தையும் சுட்டிக்காட்டும் படமாகவும் இதை காணலாம். அவரவர் வாழ்வென்பது அவரவர் தரப்பு நியாயங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை வளரும் தலைமுறையினராவது  இளமையிலேயே அறிந்து கொள்ளட்டும் .லூக்காவை போலவே புறப்பாடுகள் குறித்த கனவுகள் இல்லதவர்களே உலகில் இல்லை, அவர்களனைவருக்குமான படம் லூக்கா!

ஜகமே தந்திரம் (Jagame Thanthiram)

கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கி ’வய் நாட் ஸ்டூடியோஸ்’ தயாரித்திருக்கும். ’ஜகமே தந்திரம்’ தனுஷின 40 ஆவது திரைப்படம். தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், Game of thrones புகழ்  ஜேம்ஸ்  காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.ஒளி இயக்கம் ஸ்ரேயஸ் க்ருஷ்ணா, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்.

கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகளில்     வெளியிடமுடியாமல்  2021, ஜூன் 18’ல் நெட்ஃப்ளிக்ஸில்  17 மொழிகளில், 190 நாடுகளில்  வெளியானது ஜகமே தந்திரம்.

 லோக்கல் தாதாவான சுருளி என்னும் தனுஷ், கடல் தாண்டிய ஒரு பகைவிவகாரத்துக்கு லண்டன் செல்லும் ஒற்றை வரிக்கதையை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

 கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் போகுமளவிற்கு, மதுரையில் பரோட்டாக்கடை நடத்தும் சுருளியின் ரவுடித்தன்ங்கள் பிரபலமாகி இருக்கிறது. சுருளியின் ரவுடித்தனத்தை பார்க்கும் , லண்டன்  தாதா பீட்டரின் வலதுகையான ஜான் , லண்டனில் பீட்டருக்கு தொல்லையாக இருக்கும் சிவதாஸ் என்னும் தாதாவை ஒழித்துக்கட்ட  மிகப்பெரும் தொகையை கூலியாக பேசி சுருளியை லண்டனுக்கு வரவழைக்கிறார்., . அதை முடித்துக்கொடுத்து பணத்தை வாங்கிகொண்டு, வாழ்க்கையில் ரவுடித்தனத்தை விட்டொழிக்கலாமென்று சுருளியும் ஒத்துக்கொள்கிறான். சிறு மகன் தீரனின் அன்னையான,  இலங்கை பாடகி அடிலாவை  லண்டனில் சந்தித்து காதலாகிறான் சுருளி.

சொன்னபடியே சிவதாஸை கொல்ல பீட்டருக்கு சுருளி உதவமுடிந்ததா, சிவதாஸ் யார்? ஏன் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்து சுருளியை அழைத்துச்சென்றார்கள்? காதல் நிறைவேறியதா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

சின்ன குழந்தைகளுக்கு சொல்லப்படும் தாதா கதையைப்போல சொல்லப்ட்டிருக்கிறது கதை. படத்திற்கு துப்பாக்கி சண்டை என பெயரிட்டிருக்கலாமென்னும் அளவிற்கு  சுட்டுத்தள்ளுகிறார்கள் விதம் விதமான துப்பாக்கிகளில். தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாயக வழிபாட்டில் இளைஞரான கார்த்திக் சுப்பராஜும் நம்பிக்கை கொண்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.        ஒற்றை ஆளாக பலரை அடித்து துவம்சம் செய்வது, துப்பாக்கி குண்டுகள் மழையென பொழிந்தாலும்  நாயகனுக்கு ஒன்றும் ஆகாதது என வழக்கமான, தமிழ்சினிமா கடந்து வந்த முக்கால் நூற்றாண்டான பாதையிலேயே கார்த்திக்கும் செல்கிறார். 

மீசை, சிரிப்பு ,பாடல்கள் என்று ரஜினியை தனுஷ் நினைவூட்டிக்கொண்டே இருப்பது , முருகேசன் என்னும் பாத்திரம் ஆகியவை கவனிக்க வைக்கி றது. ’’ரகிட ரகிட’’ பாடல் மட்டும் பரவாயில்லை ரகம்

தயாரிப்பு தரப்புக்கும் தனுஷுக்கும்  இடையே நெட்ப்ளிக்ஸில் திரையிடுவது தொடர்பான  மோதலும், தொடர்ந்து விநியோகஸ்தர் தரப்பிலிருந்து ’வய் நாட்’   ஸ்டியோவிற்கு  ரெட்கார்ட் கொடுத்ததுமாக படம் வெளியாகுமுன்னேயே பிரச்சனைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருந்தது.

தனுஷின் நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலமென்றால் திரைக்கதையின் தொய்வு, சொதப்பலான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் மைனஸ். மிகப்பழைய, புளித்துப்போன கேங்ஸ்டர் கதையை மறுபடியும் சொல்லுகையில், அதுவும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளைஞர்கள் சொல்லுகையில் புதிதாக எதேனும் இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் படம் அதே பழைய பாணிதான். இரண்டாம் பாதியில் திரைப்படம் நத்தை வேகத்தில் செல்கிறது. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, ஈழத்தமிழர்கள் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தொடும் படம் நிச்சயம் வேறு ஒரு தளத்தில் இருந்திருக்க வேண்டும்.  

புலம் பெயர்ந்த மக்களின் கவிதையொன்றின்’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ என்னும் ஒரு வரி நமக்கு அளிக்கும் உளச்சித்திரத்தை, மனத்துயரை  இந்த முழுநீள திரைப்படம் ஒரு சதவீதம் கூட கொடுக்க வில்லை.

 கார்த்திக் சுப்பராஜின் படு சுமாரான படமென்று இதை நிச்சயம் சொல்லலாம். மாமனாரின் பேட்ட’யை மருமகனை வைத்து எடுக்க நினைத்து தோல்வியடைந்த படமென்றும் சொல்லலாம்.

நவம்பர் ஸ்டோரி

 குற்றத்திகில் வகையை சேர்ந்த  வலைத்தொடரான நவம்பர் ஸ்டோரி   தமிழ் , இந்தி,  தெலுங்கு மொழிகளில்  2021 மே 20  அன்று டிஸ்னி- ஹாட் ஸ்டாரில் வெளியானது. இயக்கம்  இந்திரா சுப்பிரமணியன், தயாரிப்பு விகடன் குழுமம்.

 தமன்னா மற்றும் பசுபதி முன்னணி பாத்திரத்தில். இவர்களுடன் GM குமார், விவேக் பிரசன்னா, நமிதா கிருஷ்ணமுர்த்தி, குழந்தை நட்சத்திரம்  ஜானி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். 

மொத்தம் ஏழு அத்தியாயங்கள். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபல குற்றக் கதை நாவலாசிரியர் அவருக்கு சொந்தமான, விற்பனைக்கிருக்கும் ஒரு பழைய வீட்டில், கொலையான ஒரு சடலத்துடன் இருக்கிறார். அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. அவரது மகளான அனு என்னும் தமன்னா அப்பாவை காப்பாற்றவும், கொலையை துப்பு துலக்கவும் தடயங்களை மறைக்கவும் முயற்சிப்பது தான் கதை

தமன்னா ஒரு ஹேக்கர். காவல்துறையின் எல்லா ஆவணங்களையும் கணினி மயமாக்குதலில் அவரும் நண்பரும் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்ஸைமர்ஸ் பிரச்சனையால் அவதிப்படும் அப்பாவை குணமாக பணத்தேவையில் இருப்பதால் அப்பாவின் விருப்பமின்றி சொந்த வீட்டை விற்கும் முயற்சியில் இருக்கிறார்,ஒரு ஜான் முன்னே போனால் இரண்டு முழம் சறுக்குக்கிறார்

 அப்பாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல துணியும் மகளாக தமன்னா. பிற கதாபாத்திரங்களுடன் இணைந்து போக முடியாத நிறமும் உடல்வாகுமாக இருப்பது தமன்னாவுக்கு ப்ளஸா மைனஸா என்றூ பட்டிமன்றமே நடத்தலாம்,  இந்த 7 அத்தியாயங்களிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாமல்  ஒரே மாதிரி இறுக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.

 கதாநாயகிக்கு பிரச்சனைகள் வரலாம்தான் அதற்காக இப்படியா? தமன்னாவை கதையில் எப்போதும், எல்லா திசைகளிலும் பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டு நெருக்குகிறது.  முழு தொடரையும் தமன்னாவை நம்பி, அவரை முதன்மைப்படுத்தியே கொண்டு போகும் உத்தேசம் இருந்தால் காதலன் ரோலும்  இல்லவே இல்லை.  தனித்தனி சரடுகளாக கதைகள் வந்து பின்னர் எல்லாம் இணைந்து கொள்கின்றன. 

-கருப்பு வெள்ளையில் கன்னியாஸ்த்ரீ வளர்க்கும் ஒரு தாயில்லா சிறுவன், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டுமென்னும் அவன் கனவு, அவனுக்கிருக்கும் உளவியல் மற்றும் சமுதாய சிக்கல்கள்,

-தமன்னாவின் பணச்சுமை, ஹேக்கிங் செய்வதில் உண்டாகும் பிரச்சனை, அப்பாவினால் உண்டாகும் குழப்பங்கள், வீடு விற்பதில் பிரச்சனை, கொலையில் அப்பாவை சம்பந்தப்படுத்தும் நிகழ்வுகள், காவல்துறையின் சந்தேகம்

-மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண், அவரை கடத்தும் 3 இளைஞர்கள், 

 -ஹேக்கிங்கில் வரும் பிரச்சனையும், கடத்தபட்ட இளம்பெண்ணும், காணாமல் போன ஹைதெராபாத் இளைஞர்களும், விற்காமலிருக்கும் தமன்னாவின் வீடும், துவக்கத்தில் நடக்கும் பேருந்து விபத்தும், அந்த பெயிண்ட் கொலையு்ம் சந்திக்கும் ஒருபுள்ளியில் கதை என்னவென்று நமக்கு ஒருவழியாக புரிந்து விடுகிறது

காட்சிகள் மிக மெதுவாக செல்வது, தமன்னாவின் உணர்ச்சிகள் அற்ற முகம், கடைசி அத்தியாயங்களை போட்டு குழப்பி அடித்திருப்பது, அத்தனை வேகமாக துப்புத் துலக்கும் அருள்ராஜ் கடைசியில் ஆளே எட்டிப்பார்க்காமலிருப்பது என பல ஓட்டைகள் இருக்கின்றன. தணிக்கை இல்லையென்பதால் பல காட்சிகள் ரத்தக்களறியாக இருக்கிறது குறிப்பாக போஸ்ட் மார்ட்டம் காட்சிகள் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. தமன்னாவின் அப்பா குமார்  கொஞ்சம் மிகை நடிப்பு, மைனா  நந்தினி அருமையான இயல்பான பாந்தமான நடிப்பு. காவலதிகாரியாக அருள் ராஜ்  பிரமாதமான தேர்வு, சிறப்பாக செய்திருக்கிரார்

ஏகப்பட்ட மர்மங்களை    ப்ளாஷ்பேக்கில் காட்டி பலவற்றை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.  தமன்னாவின் தங்கை குறித்தும், அம்மாவின் மரணம் குறித்தும் ஏன் அவருக்கு சொல்லப்படவில்லை என்று கதையில்  யாரும் மெனக்கெடவே இல்லை. எல்லா நிகழ்வுகளும் ஏன் நவம்பர்  16ல் நடக்கிறது என்பதற்கும் லாஜிக் இல்லை

ஆனா்லும் தமிழில் இப்படி ஒரு திகில் தொடரை ஒரளவுக்கு  சுவாரஸ்யமாக கொடுதிருப்பதற்கு  பாராட்டலாம். அருமையான வசனங்கள், இயல்பான காட்சியமைப்புகள்,  பசுபதியின் பிரமாதமான நடிப்பு, தமிழில் வரும் பிற தொடர்களை ஒப்பிடுகையில் காட்சியமைப்பு, இசை, ஒலி, காமிராக்கோணம், இயக்கம் எல்லாம் பிரமாதம். இவற்றிற்காகவே இந்த தொடரை பாரக்கலாம

பல முடிச்சுக்களை காட்டிவிட்டு கடைசியில்  பல மர்மங்களை சொல்லாமல் மர்மமாகவே நீடிக்க விட்டிருக்கிறார்கள். அத்தியாயங்களின் எண்ணிக்கையையும் தமன்னாவின் பிரச்சனைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் ஒரு தொடராக இருந்திருக்கும்.

Sandeep Aur Pinky Faraar –தலைமறைவான சந்தீப்பும் பிங்கியும்

இந்தியாவின் இருவேறுபட்ட வாழ்வியலில் இருக்கும், முற்றிலும் வேறுவேறு தளங்களில் இயங்கும் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து பயணிக்க வேண்டிய அசாதாரணமான ஒரு பயணத்தில்   ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அவநம்பிக்கை, வெறுப்பு சந்தேகங்கள் வழியே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஒரு அழகிய கதையை சொல்லும் இந்தி திரைப்படமான இது 19, மார்ச் 2021அன்றுதிரையரங்குகளிலும்,பின்னர் அமேஸான் பிரைமிலும் வெளியானது.

 தயாரிப்பு மற்றும் இயக்கம் திபாகர் பானர்ஜி. விநியோகம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். பரினிதி சோப்ராவும் அர்ஜுன் கபூரும் முக்கிய கதாபாத்திரங்களில். உடன் நீனா குப்தாவும் , ரகுவீர் யாதவும் இருக்கிறார்கள்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஹரியானா காவலதிகாரி பிங்கி எனப்படும் சத்யேந்த்ராவும் ஒரு கார்ப்பரேட் வங்கியின் உயர்மட்ட பொறுப்பிலிருக்கும் சந்தீப் வாலியாவும் முதன்முதலில் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, அவர்கள் மீதான கொலை முயற்சிகளினால் உயிருக்கு அஞ்சி தலைமறைவாகி விடுவதும், தப்பிக்க மேற்கொள்ளும் பயணங்களும் போராட்டங்களும் தான் கதை.

மிகச்சாதாரணமாக காரில் மூன்று இளைஞர்கள் இளமைக்கே உரிய அசட்டுத்தனங்களும், கொந்தளிப்பும் சிரிப்புமாக பயணிப்பதில் டைட்டில்   துவங்கி, அவர்களின் எதிர்பாரா படுகொலையில்  படம் வேகமெடுக்கிறது. அந்த இளைஞர்கள் கடந்து வரும் காரில் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர்.

துவக்கத்திலிருக்கும் வேகம் பின்னர் மட்டுப்பட்டாலும் காதல், கர்ப்பம், நம்பிக்கை துரோகம், ப்ளேக் மெயில் பொதுமக்களின் பணத்தை ஏமாற்றும் பரிவர்த்தன் வங்கியின் ஒரு திட்டம், வாடகைக் கொலையாளி, பரினிதியின் கர்பத்தில் இருக்கும் குழந்தை, காவலர்கள்  வலைவீசி இருவரையும் தேடுவது என  சுவாரஸ்யமான திருப்பங்கள் நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது,

கர்ப்பமாயிருக்கும், ஆபத்திலிருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யபட்ட  இளம்பெண் பாத்திரத்தில் பரினிதி அர்ஜுன் கபூரை விடவும் பிரமாதப்படுத்தி நடித்திருக்கிறார். அலட்சிய இளைஞனாக அறிமுகமாகி தனக்கே தெரியாமல் தான் பலிகடா ஆக்க பட்டிருப்பதில் வெறுப்பாகி பரினிதியையும் வெறுத்து , பின் ஒரு கட்டத்தில் அவரை காப்பாற்றும் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளும் பாத்திரத்தில் அர்ஜுன் கபூரும் சிறப்பாக பொருந்துகிறார்.

நீனா குப்தாவின் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருக்கும் காட்சிகள் அழகு. கடைசி அரைமணி நேரத்தில் நேபாளத்தை தாண்டும் முயற்சிகள் சஸ்பென்ஸ் நிறைந்தவை. குறிப்பாக வங்கி மேலாளரின் திடீர் வன்முறை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

அந்த நீண்ட பாலத்தில் சுட்டுக்கொல்ல தயாராக காத்திருக்கும் காவலதிகரிகளும் அப்பாலத்தை கடக்க காத்திருக்கும் திருமண ஊர்வலத்தில் மறைந்திருக்கும் சந்தீபும், பிங்கியுமாக இறுதிக்காட்சி பரபரப்பு . வழக்கமான பாலிவுட் படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்த படம் பெரியவர்களுக்கானது.

My Octopus Teacher

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் பல பாடங்களை பலரிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறான். ’’கஷ்டமான அனுபவங்கள்தான் சிறந்த பாடங்கள்’’ என்பது ஒரு முதுசொல்லும் கூட. அப்படி  ஒரு திரைப்பட தயாரிப்பாளரின், சொந்த வாழ்வின் சிக்கல்களுக்கு  அசாதாரண சூழலில் வசிக்கும்   ஒரு கடலுயிரி அளித்த தீர்வையும், அந்த உயிரியுடனான  நெருக்கமான உறவையும் குறித்த   ஆவணப்படமான My Octopus Teacher.  நெட்ப்ளிக்ஸில் 2020 செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது

கிரெய்க் என்கிற ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும்,கெல்ப் காட்டின், கடல் வாழ் உயிரியான ஒரு  ஆக்டோபஸுக்கும் இடையிலான கற்பனை செய்யமுடியாத, நம்பமுடியாத நட்பை விவரிக்கும் ஒரு இயற்கை ஆவணப்படமான இது,உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து, இந்த வருடத்தின் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருது,(Oscar 2021) ,சிறந்த திருத்தப்பட்ட ஆவணப்படத்திற்கான ஏசிஇ எடி விருது,(American Cinema Editors Award, USA 2021)  மற்றும் சிறந்த ஆவணப்படத்திற்கான பாஃப்டா விருது (BAFTA Awards 2021) ஆகியவற்றை பெற்றிருக்கிறது. மேலும் சிறந்த ஒளி இயக்கத்திற்கான  விருதான Critics’ Choice Documentary Awards 2020, சிறந்த ஆவணப்பட இயக்கத்திற்கான சர்வதேச விருதான Guangzhou International Documentary Film Festival (GZDOC) 2020, சிறந்த ஆவணப்பட விருதான Houston Film Critics Society Awards 2021,சர்வதேச சிறந்த ஆவணப்பட விருதான International Documentary Association 2020.  Millennium Docs Against Gravity 2020, மற்றும்  சிறந்தஆவணப்பட தயாரிப்பிற்கான விருதான PGA Awards  2021அகியவற்றை அள்ளிக்குவித்துள்ளது.

கெல்ப் காடு, அல்லது கிரேட் ஆப்பிரிக்க கடல் வனப்பகுதி என்பது,  பல்லுயிர் வாழ்வு செறிந்திருக்கும் கடல் நீருக்கடியில் இருக்கும் காடு. கெல்ப் எனப்படுவது கடல் பூண்டு எனப்படும் மண்ணில் ஊன்றப்பட்டிருக்கும் அடிப்பகுதியுடன், மிதந்து கொண்டிருக்கும் நீண்ட் ரிப்பன்களை போன்ற இலைகளைக் கொண்டிருக்கும்,மாநிற கடற்பாசிகளான (BROWN ALGA/Sea Weeds) கீழ்நிலை தாவரங்கள். கெல்ப் காடுகளான ஆப்பிரிக்க கடல் காடுகள் இயற்கை அதியங்களில் ஒன்றாகும்,  பல வகையான அபூர்வ உயிரினங்களின் வாழ்வு  இங்கு நிறைந்திருக்கும்  

52 வயதான க்ரெய்க், கடலுக்கு அருகில் தான் வளர்ந்தார்,தனது குழந்தை பருவத்தின் பல ஆண்டுகளை  அருகிலுள்ள பாறைக் குளங்களுக்குள் நீச்சலில் கழித்திருந்தார் எனவே கடல் அவருக்கு மிகவும் பரிச்சயமான வாழிடம்.  கெல்ப் காடுகள் குறித்த ஒரு ஆவணப்படம் எடுக்கும் பொருட்டு, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையின் எமரிட்டஸ் பேராசிரியர் சார்லஸ் எல். கிரிஃபித்ஸின் வழிகாட்டுதலுடன், பல ஆண்டுகளாக இந்த கெல்ப் காட்டை  ஆராய்ந்து கொண்டிருந்த கிரெய்க் பின்னர், பேராசிரியரிடம்  பி.எச்.டி பட்டம் பெற்றிருந்த இளம் டாக்டர் ஜேன்ஸ் லேண்ட்ஷாஃப்பு’டன்  இணைந்து பணியாற்றத் தொடங்கினார், கெல்ப் காட்டின்  அனைத்து உயிரிகள்  மற்றும்  அவற்றின் நடத்தைகளை அடையாளம் காணவும், வகைப்படுத்தவுமான. மிகக்கடினமான தனித்துவமான பணியை  க்ரெய்க்  மேற்கொண்டிருந்தார்.   அவர் ஒவ்வொரு நாளும் அந்த அசாதாரண சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்தபடி, தான் பார்த்த அனைத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டிருந்தார். 

எதிர்பாராமல், க்ரெய்க்  2010 ஆம் ஆண்டில் கடலுக்கடியிலான இந்த கெல்ப் காட்டில் ஒரு ஆக்டோபஸை முதலில் சந்திக்கிறார். அதனை தினமும் கவனித்தபடி இருக்கையில் அதன் புத்திசாலித்தனத்தையும் சமயோசித புத்தியையும் அறிந்துகொண்டபோதுதான், ஆவணப்படுத்துதலில்  தனக்கு ஒரு  உணர்வுபூர்வமான கதையும் இருப்பதை உணர்கிறார்.

தன்னந்தனியே பல ஆண்டுகளாக,  நீரடி வாழ்வை ஆவணப்படுத்திக்கொண்டிருந்த க்ரெய்க் பின்னர் இந்த ஆக்டோபஸினை ஆவணப்படுத்துவதில், ​​விருது பெற்ற கேமரா ஆபரேட்டரும் கிரெய்கின் பழைய நண்பருமான ரோஜர் ஹாராக்ஸையும் இணைத்துக் கொண்டார். இருவரும் பலநாட்கள் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் நீருக்கடியில் கழித்து,  பிபிசியின் ப்ளூ பிளானட் II க்கான ஒரு தொடரை உருவாக்கினர்.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவரின் இந்த  ஆக்டோபஸுடனான அசாதாரண நீருக்கடியிலான அனுபவங்களை ஒரு ஆவணப்படமாக வடிவமைக்க சிறப்பு கடல் பாதுகாப்பு பத்திரிகையாளர், கதைசொல்லி மற்றும் இளம் திரைப்படத் தயாரிப்பாளருமான பிப்பா எர்லிச்  படமாக்குதலில் இணைந்தார். பின்னர் படத்தொகுப்பிலும் பிப்பா பெரிதும் உதவினார்.

 கிரெய்க் மற்றும் பிப்பா இருவருக்கும் ஆக்டோபஸின் கதையை ஒரு ஆக்டோபஸின் மனநிலையிலேயே சொல்லவேண்டும் என தோன்றியது, அப்போதுதான் அக்கதை உணர்வுபூர்வமாக இருக்கும்  என அவர்கள் நம்பினர். 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில்,  ஏறக்குறைய ஒரு வருட காலம் நடந்துகொண்டிருந்த படத்தொகுப்பினிடையே , கனடாவின் லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆக்டோபுஸ் உளவியலாளரும் ஆக்டோபஸ் நடத்தை வல்லுநருமான டாக்டர் ஜெனிஃபர் மாதர் கேப் டவுனுக்கு வந்து, சில முக்கியமான  அறிவியல் ஆலோசனைகளுடன் அவர்களுடன்  படத்தொகுப்பில் இணைந்தார்.

 கிரெய்க் படம்பிடித்திருந்த  சிக்கலான விலங்கு நடத்தைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள விரிவான அறிவியல் உள்ளீடு களும் தேவையாக இருந்தது.

ஒப்பீட்டளவில் பிற ஆவணப்படங்களை போலல்லாமல் கெல்ப் காடுகளின் அதீத குளிர் நீர், குறைந்த மற்றும் அடிக்கடி மாறுபடும் ஒளி, அறியா கடல் உயிரிகள் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என  இந்த படப்பிடிப்பு, படக்குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர்ந்த, ஓரளவு ஆழமற்ற நீரில் பல ஆண்டுகளாக தினசரி டைவிங் செய்த அவர், ஸ்கூபா அல்லது  வெட் சூட்டு கள் எனப்படும் நீச்சல் ஆடைகளின்றி,  நீரின் குளிர்ச்சியை சமாளிக்க தனது உடலை பழக்கினார்..பிப்பாவும் தனது உடலை இந்த வழியில் பயிற்றுவித்தார்.

 எளிமையாக துவங்கும் படம், ஆக்டோபஸ் தன்னை ஷெல்களால் சுற்றிக் கொண்டு மாறுவேடமிட்டு கொள்ளும் போது ஆர்வத்தை தூண்டுகிறது. க்ரெய்க் ஆக்டோபஸை முதலில்  பார்க்கையில்  அது பயந்தபடி தன் உணர் நீட்சிகளை பின்னுக்கிழுத்துக்கொண்டு தப்பிக்க தயாராக ஜாக்கிரதையாக இருப்பது, பின்னர் அவரை மெல்ல மெல்ல பரிச்சயம் பண்ணிக்கொண்டு அவரது இருப்பை உணர்ந்தபடியே கடலுக்குள் தனது வழக்கமான வாழ்வை தொடருவது, க்ரெய்க் ஒருநாள் மெல்ல தன் விரலை நீட்டுகையில் அதுவும் தயங்கியபடி தன் கைநீட்சியொன்றினால் அவரைத் தொடுவது பின்னர் அவர் மீதே படுத்துக் கொள்வது அவருடனே நீந்துவது அவரை சுற்றிசுற்றி வருவது என அவர்களிருவருக்குமான உறவு அத்தனை பிரமிப்பூட்டும்படி இருக்கிறது. க்ரெய்க் ஆக்டோபஸை குறித்து பேசுகையில் பிரியமான ஒரு தோழியை குறித்து பேசும் உடல்மொழி தான் இருக்கிறது.

ஆவணப்படத்தில் பார்த்தபடி, கிரெய்க்கிற்கு   டாம் என்னும்  ஒரு மகன் இருக்கிறார்( முன்னாள் மனைவியுடனான வாழ்வில் பிறந்த மகன்). க்ரெய்க்  தற்போது இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும், நிருபருமான  சென்னை பெண்ணுமான ஸ்வாதி தியாகராஜனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஸ்வாதி,தென்னாப்பிரிக்காவின் கெல்ப் காடு மற்றும் கடல் வாழ்வைப் பாதுகாக்கும் அமைப்பான கடல் மாற்ற திட்டத்தின் முக்கிய உறுப்பினராக உள்ளார்(Sea change) 

காமிராவின் துல்லியம் வியப்பூட்டுகிறது. படம் பார்க்கையில் க்ரெய்க்குடன் நாமும் அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர் நீல நீரில் மூழ்கி, நீந்திச்செல்கிறோம்,நம்மை சுற்றிலும் வளர்ந்து நெருக்கும் கெல்பைக் கண்டு  திணறுகிறோம், க்ரெய்க் கடற்கரையில் வெறுங்காலுடன் நடந்து செல்லும்போது  காலடியில் நெருடும் வெள்ளை மணல் துகள்களை கூட உணர்கிறோம். 

 மூச்சுக்காற்றுக்கு ஆக்சிஜன் தொட்டிகளை கூட எடுத்துக் கொள்ளாமல், தனது தோற்றம் ஆக்டோபஸை எந்த விதத்திலும் அச்சுறுத்த கூடாதென்று கவனமாக இருக்கும் க்ரெய்க்கின் அர்ப்பணிப்பும், அந்த எளிய உயிரியின் மீதான அன்பும் ஆச்சரயபப்டவைக்கின்றது

 தனது புதிய நண்பரான அந்த பெண் ஆக்டோபஸினை நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்காக, தினமும், க்ரெய்க் வீட்டிற்கு திரும்பி விஞ்ஞான இதழ்களில் உள்ள கடல் உயிரினங்களை பற்றிய ஏராளமான கட்டுரைகளை படிக்கிறார். “மற்ற கடல் உயிரினங்களையும் அறிந்து கொள்ள அவள் எனக்குக் கற்றுக் கொடுத்தாள்”, என்று படத்தில் க்ரெய்க் பகிர்ந்து கொள்கிறார்.‘ஆக்டோபஸ்கள் இரவுநேர உயிரினங்கள்’ என்று படித்தறிந்த பிறகு, இரவிலும் நீரில் மூழ்கி, அவளது வேட்டையை கவனிக்கிறார்

   ஆக்டோபஸ்  தொடர்ந்து உடலெங்கும் வரிக்கோடுகளிட்டிருக்கும் பைஜாமா சுறா  என்னும்  வேட்டை விலங்குகளால் துரத்தப்படுவதை, பல தப்பித்தல்களுக்கு பிறகு அவற்றினால் ஆக்டோபஸ்  காயமுற்று நோய்வாய்ப்படுவதை , வேட்டைக்கும் செல்லமுடியாமல் உணவின்றி குகைக்குள்ளேயே பலநாட்கள் இருந்ததை பின்னர் வெட்டுப்பட்ட உணர்நீட்சி மீண்டும் புதிதாக முளைத்து புதிய வாழ்வை முன்புபோலவே துவங்குவதை எல்லாம் க்ரெய்க் கவனித்து ஆவணப்படுத்துகிறார்.

.தனது சொந்த வாழ்வின்சிக்கல்களிலிருந்தும், துயர்களிலிருந்தும்  மீண்டு வர இந்த ஆக்டோபஸ் வாழ்க்கைப்பாடம் தனக்கு உதவியாக இருந்ததை க்ரெய்க் உணர்கிறோம்..தங்கள் இருவரது வாழ்வும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக நம்பும் க்ரெய்க், அத்தனை சிறிய உயிரி தன்னை தற்காத்துக் கொண்டு ஆபத்திலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்ததை தனக்கான பாடமாகக் கொண்டு தானும் வாழ்வின் இயங்கியல் சிக்கல்களிலிருந்து மீள்கிறார்.

  ​​அத்தனை சுமுகமாயில்லாதிருந்த  தன் மகனுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்ட க்ரெய்க்  மகனுடன்,  டைவிங் செய்து, அவரையும் ஆக்டோபஸை சந்திக்க வைக்கிறார். 

சுமார் 320 வது நாட்கள், க்ரெய்க்கின் தொடர்ந்த ஆவணபடுத்துதலுக்கு பிறகு,அந்த  ஆக்டோபஸ் ஒரு ஆண் ஆக்டோபஸை சந்தித்து,  இனச்சேர்க்கை. நடைபெற்று கருவுருகின்றது

ஒரு ஆக்டோபஸின் வாழ்க்கைச் சுழற்சியில் பெண் ஆக்டோபஸ் உடலின் பெரும்பகுதி முட்டைகளை பராமரிக்கவும், பின்னர் குஞ்சு பொரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.மெல்ல மெல்ல தன் அடுத்த தலைமுறைக்கு தனதுடலை தியாகம் செய்துவிட்டு இரக்கமற்ற இந்த புவியின் விதிகளுக்கு தன்னை எந்த புகாருமின்றி  ஆக்டோபஸ் ஒப்புக்கொடுத்து மரணிப்பது பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது , இறுதியில் ஒரு பைஜாமா சுறா வந்து அவளது உடலை எடுத்துச் செல்கையில் நாம் கண்ணீருடன் தான் அக்காட்சியை பார்க்க முடியும். 

இனி  இறைச்சி கடைகளில்  கூட்டமாக ஒன்றின் மீதொன்றாக கிடத்தப்பட்டிருக்கும், நிலைத்த விழிகளும் வெறித்த உடலுமாக கிடக்கும் கடலுயிரிகளை பார்க்கையிலெல்லாம் நமக்கு  இந்த ஆக்டோபஸ் நினைவுக்கு வரும்.குடும்பத்துடன், குறிப்பாய் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய முக்கியமான, அருமையான படம் இது

சாப்ஸ்டிக்ஸ்

  சாப்ஸ்டிக்ஸ் சச்சின் யார்டி, இயக்கத்தில் அஸ்வினி யார்டியின் தயாரிப்பில் 2019ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தி திரைப்படம். ஒரு புதிய கார் வாங்கிய அன்றே திருட்டு போவது அதை தொலைத்த பெண் மற்றும் அதை தேடி கண்டுபிடிக்க உதவும் ஆண் இருவரின் வாழ்வும், இந்த சம்பவத்தின் பின்னர் அந்தப்பெண் மற்றும். எதிர்நாயகனாக வரும் ஒருவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமே கதை. ஆர்டிஸ்ட் என்னும் பெயரில் அபே தியோல் நாயகன்., நாயகி நிர்மாவாக மிதிலா பால்கர்.

கன்னக்குழியழகால் டிம்பி என்றழைக்கப்படும் ஆபே ஒரு குற்றப்பின்னணி உள்ள, சமையற்கலையிலார்வமுள்ள, பலருக்கு பல உதவிகளை திரைமறைவில் சட்டத்துக்கு  புறம்பாக செய்து தரும் சுவாரஸ்யமானவர்.

நிர்மா வெளியூரிலிருந்து நகரத்துக்கு வந்து ஸ்வாமிஜி புகைப்படத்தை தினம் தொட்டுக்கும்பிட்டுகொண்டு அம்மா சொல்லும் முன்னேற்றத்திற்கான முப்பது வழிகளை தினம் மனப்பாடம் செய்து கொண்டு, அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு கனவுகளை நிறைவேற்றும் வழி தெரியாத, தயக்கங்களும் தாழ்வுணர்வுமான ஒருத்தி.

தனது புதிய காரை வாங்கிய அன்றே தொலைக்கும் நிர்மா காவல்துறையினரின் வேகத்தை நம்பாமல் இப்படியான விஷயங்களை திறம்பட செய்து கொடுக்கும் அபேவை நாடுகிறார். அந்த கார் ஒரு வில்லனிடம் இருக்கிறது அவரிடமிருந்து எப்படி அதை திரும்பப் பெறுகிறார்கள் என்பது தான் கதை. 

100 நிமிடங்களுக்கு ஓடும் சிறிய feel good வகை திரைப்படம் இது. அபே முன்னரே அறியப்பட்ட நடிகர் ஆனால் மிதிலா புதியவர். இந்த கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தி நடித்திருக்கிறார். அவர் அவ்வப்போது அபே செய்யும் குறும்புகளை நிஜமென்று எடுத்துக்கொண்டு அப்பாவியாக, எதிர்வினையாற்றுவதும்,, அபே அவற்றை ரசித்து கன்னக்குழி நிறைய சிரிப்பதுமாக  வரும் காட்சிகள் எல்லாம் அழகு, மற்றும் மிக இயல்பு

புகழ் பெற்ற தியோல் குடும்பத்திலிருந்து இப்படியான எளிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்த முதல் நடிகராக அபே இருப்பதற்கும் பாராட்டுக்கள். ஒரு நடிகராக வணிக ரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களையே வாழ்நாளெல்லாம் தெரிவு செய்து கொண்டிராமல், தனக்கும் ஆத்ம திருப்தி அளிக்கும், பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியேறுகையில் முகம் புன்னகையில் நிறைந்திருக்கும்படியான திரைப்படங்களையும் அவ்வப்போது தேர்ந்தெடுக்கலாம். அபே அப்படி தேர்ந்தெடுத்திருக்கும் படம்தான் சாப்ஸ்டிக்ஸ்.

அபேவுக்கும் நிர்மாவுக்குமான காட்சிகளில் காதலை சொல்லாமல் , மெல்ல மெல்ல ஒரு நட்பு உண்டாகி வருவதை சொல்லி இருப்பது சிறப்பு.. திக்கி திக்கி சீன பாஷையில் பேசிக் கொண்டு பயந்தவளாக வரும் நிர்மா அபேயிடமிருந்து வாழ்க்கை பாடங்கள் கற்றுக்கொண்டு புத்தம் புதிய மனுஷியாகும் அந்த பயணம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. சீனர்களிடமே சீனாவைப் பற்றி எக்குதப்பாக உளறிக்கொட்டி,  மேலதிகாரியிடம் திட்டு வாங்கும் நிர்மா இறுதிக்காட்சியில் சீன விருந்தாளிகளுக்கு இந்திய கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பதும் சிறப்பு. இப்படி பல எளிய ரசிக்கும்படியான காட்சிகளுக்காகவே இந்த திரைப்படத்தை  பார்க்கலாம்

மிக மெதுவாக படம் நகர்வதும், சுமாரான பின்னணி இசையும் மட்டுமே விமர்சனத்துக்குரியது, அதிலும் கவனம் செலுத்தி இருந்தால் இப்படம் இன்னும் நல்ல உயரங்களுக்கு  சென்றிருக்கும். 

இந்தி திரைப்படத்துக்கான எந்த இலக்கணங்களும்  இல்லாத, திரைப்படம் இது. மசாலா இல்லாமல், ஆபாச காட்சிகள், அபத்த நகைச்சுவைகள், தேவையற்ற நாயக நாயகி புகழாரங்கள்,சாகஸங்களெல்லாம் இல்லாமல் வாழ்வில் பலர் அநேகமாக கடந்து வந்திருக்கும், அல்லது கடக்கவிருக்கும் ஒரு சின்னஞ்சிறிய சம்பவத்தினை அழகாக தொட்டுதொட்டு விரித்து திரைக்கதையாக்கி இருக்கின்றனர். இதுபோன்ற படங்களை நிச்சயம் வரவேற்க வேண்டும்.

 இயல்புக்கு மாறான அதீத சாகஸக்காரர்களாக சித்தரிக்கப்படும் நாயகர்களைக்குறித்த புனைவுக்கதைகளை காட்டிலும், சாமான்யர்களின் வாழ்வில் நடக்க சாத்தியமுள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அனைவராலும் பார்க்கப்படவேண்டும். நிச்சயம் நம் வாழ்வின் ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர வைக்கும் படம் இது.

சுல்தான்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம் சுல்தான். தமிழிலும் தெலுங்கிலும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக  இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது

  ஆக்‌ஷன் த்ரில்லர் என்ற ஜானரில் எடுக்கப்பட்டதாக  சொல்லபட்டிருந்தாலும் கார்த்திக்கு பிடித்தமான, வழக்கமுமான  குடும்ப செண்டிமெண்ட் படம்தான் இதுவும்

தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்

 லால். யோகி பாபு, பொன்வண்ணன் மற்றும் ராமச்சந்திர ராஜு முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இசை விவேக்- மெர்வின் இணை. பின்னணி இசை மட்டும் யுவன் ஷங்கர் ராஜா. ஒளி இயக்கம் சத்தியம் சூரியன், படத்தொகுப்பு ரூபன்.  

நூற்றுக் கணக்கான அடியாள்களுடன் வாழும் தாதா நெப்போலியன், அவர் மனைவி அபிராமி. அபிராமி  விக்ரம் என்கிற சுல்தானை பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார். தாதாவான அப்பாவுடனும் அடியாட்களுடன் வளரும் தாயில்லாப்பிள்ளை கார்த்தி பின்னர் ரோபோடிக்ஸ் படிக்க வெளிநாடு செல்கிறார்.

படிப்பு முடிந்து விடுமுறையில் ஊர் திரும்பும் சுல்தானுக்கு திடீரென நிகழும் அப்பாவின் மரணத்தால், அப்பாவை நம்பியிருந்த அடியாட்களையும், இறக்கும் தருவாயில் பொன்வண்ணன் கிராமத்து  பிரச்சனையை தீர்ப்பதாக அப்பா செய்து கொடுத்திருக்கும்  வாக்கை காப்பாற்றும்  தார்மீகப் பொறுப்பும் ஏற்படுகிறது.

அடியாட்களை திருந்திய குமரர்களாக்கும் முயற்சியில் சுல்தான்  வெற்றி பெற்றாரா, பொன்வண்ணன் கிராமத்து பிரச்சினைகளை அப்பா வாக்கு கொடுத்தபடி அவரால் தீர்க்க முடிந்ததா, என்பதும், இடையில் ஏற்படும் காதலும்தான் மொத்த கதையும்.

 கார்த்தியின்  படங்கள் எல்லாம் தெலுங்கு மொழி மாற்றப் படுவதால் அவருக்கு என்று தெலுங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இது தெலுங்கு பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கிறது. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் அக்மார்க் தெலுங்கு ரகம். ராஷ்மிகாவுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை, அழகாக வருகிறார், சிரிக்கிறார், உதட்டை சுழித்து கொள்கிறார், இனிமையான பாடல்களில் வருகிறார் அவ்வளவே.

 யோகிபாபு சமீபத்திய தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விட்டிருக்கிறார் எந்த திரைப்படம் ஆனாலும், எந்த பட்ஜெட் ஆனாலும் யோகிபாபுவின் அடர்ந்த சுருட்டை முடித்தலை  தெரிகின்றது.

  தெலுங்கு வாசனையுடன் தமிழ் பேசும் அந்த பிரதான வில்லன் ராமச்சந்திர ராஜூ உட்பட பல வில்லன்களின்  அழகாக சுருண்ட அடர்ந்த கேசத்தை பார்க்கையில் எந்த  எண்ணெயை தலையில் தேய்க்கிறார்கள்  இவர்களெல்லாம் என்று கேட்கத் தோன்றுகிறது.

 ஜீப்பும், அடியாட்களுமாக    லோக்கல்  வில்லன் ஒருவர்,  அவருக்கு மேலே 10,000 கோடிகளில் பிசினஸ் செய்யும் கோட் போட்ட,விமானத்தில் வந்திறங்கும் இன்னொரு  கார்ப்பரேட் வில்லன், ஒற்றை ஆளாக அத்தனை பேரையும் அடித்து அழிக்கும் கதாநாயகன், அவர் விரும்பும், சின்ன ரோல் பண்ணும் ஒரு கதாநாயகியுமாக வழக்கமான தமிழ் தெலுங்கு மசாலா கதை தான்.  சமீபத்திய  கார்த்தி அவரது அண்ணன் சூர்யா படங்களை போலவே இதிலும் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

சுல்தானின் பாதுகாவலராக வரும் பிரம்மாண்ட நடிகர்    ஜன்சீர் முன்பு குழந்தைகளுக்கான ஒரு தொடரில் நடித்தவர் என்பதால் குழந்தைகளுக்கும்  இப்படம் பிரியமானதாகிவிட்டது.  

சுல்தான் என்னும் தலைப்பை இந்து முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனமும் ஆட்சேபமும் தெரிவித்ததால், படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன பின் படக்குழுவினர் திப்பு சுல்தானை குறிப்பிடவில்லை இது ஒரு சாதாரண வழங்கு பெயர் தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள். 

 அனிருத் குரலில் ’’ஜெய் சுல்தான்’’ மற்றும்  ’’யாரையும் இவ்வளவு அழகா’’ பாடல்கள் சிறப்பு. அதிலும் சிலம்பரசனின் குரலில்’’யாரையும் இவ்வளவு அழகா’’ இனிமை.

 கார்த்தி உடல எடையை குறைக்கவேண்டும்.  பல லாங் ஷாட் காட்சிகளில் சிவக்குமாரோ என்றே சந்தேகம் வருகின்றது. ஒரு வருடங்களுக்கு மேலாக  நோய்த் தொற்றினால் மூடிக்கிடந்த திரையரங்குகளில் சமயத்தில் வெளியிடப்பட்டவைகளில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்னும் ரகத்திலான திரைப்படம் சுல்தான்.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑