சமீபத்தில் நெடும்பயணமொன்று சென்றிருந்தேன். பயணத்தில் வழக்கம் போல யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கையில் சுமித்ரா சிவகுமார் டூயட் பாடலான ‘’அடடட மாமரக்கிளியே’’ வும் பார்த்தேன். அந்த பாடல் முன்பே பலமுறை கேட்டிருக்கிறேன் எனினும் காட்சியாக பார்ப்பது அதுவே முதன் முறை.
முந்திரித்தோப்பென்று பின்புலத்தில் இருக்க பின்கொசுவ சேலையை கணுக்கால் தெரிய கவர்ச்சியாக கட்டிக்கொண்டு ஏராளமான எனர்ஜியுடன் சுமித்ரா துள்ளிக்குதித்து ஆடிவருகையில் சிவக்குமார் ’’எனெக்கென்ன’’ என்னும் பாவனையில் மரத்தடியில் அசுவராஸ்யமாக கல்லைப் பொறுக்கி வீசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
பொதுவாகவே சிவகுமார் சாருக்கு காதல் காட்சிகள் டூயட்டுகள் என்றால் எட்டிக்காய்தான்.
காதலை முகத்தில், உடல்மொழியில் காண்பிப்பது என்பது அவருக்கு பெருவலிதான். அதுபோன்ற சமயங்களில் அவர் முகத்தில் பள்ளிக்கு இஷ்டமில்லாமல் புறப்படும் சிறுவனின் அல்லது PMS வேதனையில் இருக்கும் இளம் பெண்ணின் முகபாவனை இருக்கும்.(PMS ன்பொருளை கூகிள் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்).
சரி அவருக்குத்தான் பிரியமில்லையே, இந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவரை விட்டுவிடலாமல்லவா? விடமாட்டார்கள் காதலியுடன் நெருக்கமாக காதலன் இல்லாவிட்டால் அது எப்படி காதல் டூயட் ஆகும்? தமிழ் சினிமாவுக்கென்று ஒரு மரபிருக்கிறதல்லவா?
நெருக்கமாக போனால் சிவகுமாருக்கு இன்னும் சங்கடம் எனவே அவர் மையமாக காதலியின் கழுத்தோரம் கடிக்கப்போவது போல் பாசாங்கு செய்வார் அதுவே சிவகுமாரின் அதிகபட்ச நெருக்கக் காட்சி, எனக்கென்னவோ அக்காட்சிகளெல்லாமே ஆண் வேடமிட்டிருக்கும் வேம்பையர் வவ்வால்கள் இளம் பெண்களை மயக்கி கொஞ்சுவது போல போய் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துக் கொல்லுமே அதுதான் நினைவுக்கு வரும்,சிவகுமார் சாருக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர் வேம்பையர் பேட்!
வேறு ஏதோ ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு கிளியை அவுட் ஆஃப் ஃபோகஸில் பார்த்து ’’மாமரக்கிளியே’’ என்று துவக்கத்திலேயே தாவரவியல் தவறு செய்கிறார் சுமித்ரா.
மணலில் ஸ்டெப்ஸ் போடும் கஷ்டத்துடன் கூடுதல் கஷ்டமாக சிவகுமாரையும் இழுத்துச்செல்கிறார் அவரோ கையை வெடுக்கென்று உதறி விலக்கி தப்பித்து தப்பித்து வேறு திசையில் போகிறார்.//உன்ன நினச்சே மஞ்சள் அரைச்சேன் மாசக்கணக்கா பூசிக்குளிச்சேன்// என்னும் வரிகளில் மட்டும் மஞ்சள் தெரிகிறதா என்று சுமித்ராவின் முகத்தை கொஞ்சமாக ஆராய்கிறார்.
‘’கிட்ட வாயேன், தொட்டுபோயேன், உன்னை நான் தடுக்கல்லியே தடுக்கலியே ‘’ என்று ஹஸ்கியாக பாடிக்கொண்டே சுமி அவரை இழுத்து முகத்துக்கருகில் வைத்துக் கொள்ளும் போது ‘’அப்படின்னா’’ என்னும் பாவனையுடன் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அந்த படத்தை பார்க்கவேண்டும். ஏன் இத்தனை காதலை, நேரடியான அழைப்பை இவர் உதாசீனம் செய்து வயிற்றுவலிக்காரரைபோல் உட்கார்ந்திருக்கிறார்?
சுமித்ரா கொஞ்சம் கூடுதல் புஷ்டியாக இருப்பதாலா ? சே சே இருக்காது அப்போதெல்லாம் அதுதானே அழகு தமிழ்சினிமாவில்.
கதையில் அவருக்கு வேலை கிடைக்காத விரக்தியா? கிராமத்து கதைக்களமாச்சே தோப்பும் துரவுமாக இருக்குமிடத்தில் வேலையென்ன அப்படி பிரச்சனை?
அல்லது சுமித்ராவுக்கு பிளட் கேன்சரா? இல்லியே கமல் சாருக்கு பிளட் கேன்சர் வந்து ஸ்ரீதேவியை மறுக்கும் வாழ்வே மாயத்துக்கு பிறகுதானே தமிழ் சினிமாவுக்கே கேன்சர் வந்தது. இது அதற்கு முந்தினதாச்சே? மேலும் அப்போதுதான் பிடுங்கின கிழங்கு போலிருக்கும் சுமித்ராவுக்கு கேன்சரா? வாய்ப்பேயில்லை
கடற்கரை லொகேஷனுக்கு மாறி மிகக் கவர்ச்சியான அசைவுகளுடன் ஆடும் சுமியை முற்றாக புறக்கணித்து ஒரு பெரும் பாறைமீது சாய்ந்து தேமேவென்று அமர்ந்திருக்கும் அவரை நோக்கி //அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சி’’ என்று வெட்கம் மேலிட சுமி பாடியதும் சிவகுமார் ‘’அதிர்ந்து என்னது? பரிசமா?போட்டாச்சா’’ என்று திகைக்கிறார்
என்ன அநியாயக்கொடுமை ஒரு மனுஷனுக்கு இதைக் கூட சொல்ல மாட்டீங்களா? என்று எனக்கும் கோபமாகத்தான் இருந்தது. கல்யாணம் அத்தனை எளிய விஷயமா என்ன?
ஆனாலும் அடுத்தகாட்சியில் தமிழ் சினிமாவின் மரபுக்குட்பட்டு வேதனை வழியும் முகத்துடனேயே சுமித்ராவை அணைத்து கொஞ்சம்போல் வாசனை பார்த்துவிட்டு பின்னர் விலகிக்கொள்கிறார் என்னதான் கதாநாயகனுக்கு வேதனை இருக்கட்டும் படம் ஓடனுமே?
அடுத்த ஸ்டேன்சாவிலும் சுமியின் அத்தனை துள்ளலுக்கும் எதிர்வினையேது மில்லாமல் எதிலிருந்தோ தப்பிப்பதை குறித்த தீவிர ஆலோசனை செய்யும் பாவனையிலேயேதான் சிவகுமார் இருக்கிறார்.
கோரியோகிராபி யாரென்று தெரியவில்லை ஒரு சில நளினமான அசைவுகள் சுமித்ராவுக்கு இருந்திருக்கிறது எனினும் அவரது சதைத் திரட்சியை தாண்டி அவை வெளிப்பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.
அந்த சேலைக்கட்டு படம் முழுக்கவேவா அல்லது பாடலுக்கெனெ பிரத்யேக உடையலங்காரமா என்றும் தெரியவில்லை. சிட்டுக்குருவி என்னும் அப்படத்தை அவசியம் இந்த காரணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டாவது பார்க்க வேண்டும். ராஜாவின் இசை மட்டுமே மாபெரும் ஆறுதல் இப்பாடலில்,
ஆஸ்திரேலியரான ஹாலண்ட் பிரசவத்தில் மனைவி இறந்த பின் தாயை இழந்த தன் சிறு மகள் எலனுடன் தெற்கு வேல்ஸ் நகரில் ஒரு பெரும் பண்ணையை விலைக்கு வாங்கி குடிபெயர்ந்தார். ஹாலண்டின் இரு பெரும் சொத்துக்கள் அவரது பண்ணையின் நூற்றுக்கணக்கான யூகலிப்டஸ் மரங்களும் அவரின் பேரழகு மகள் எலனும் தான். பதின்ம வயது எலனின் அழகு அந்த ஊர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அவள் திருமண வயதை எட்டிய போது அந்த நாடே அவள் பேரழகை ஆராதித்தது.
வெற்று நிலமாக இருந்த அப்பண்ணையில் ஹாலண்ட் யூகலிப்டஸ் மரங்களை நடத்துவங்கினார். அம்மரங்களின் அழகும் கம்பீரமும், தைலமணமும் அவரை வசீகரித்ததில், யூகலிப்டஸ் மரங்களின் மீது அவருக்கிருந்த ஆசை பித்தாக மாறியது. தேடித்தேடி யூகலிப்டஸின் நூற்றுக்கணக்கான வகைகளை அங்கு வளர்க்க துவங்கினார்.அம்மரங்களுடன் எலனும் வளர்ந்தாள்.
எலனை மணமுடிக்க பலரும் முன்வந்தபோது ஹாலண்ட் தேவதைக் கதைகளில் வருவதுபோல ஒரு போட்டியை அறிவித்தார். அவரது பண்ணையில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்களை சரியான பெயர்களுடன் இனங்காணும் இளைஞனுக்கு எலன் மணமுடித்து தரப்படுவாள் என்னும் அப்போட்டி மிக விநோதமானது, இருந்தும் எலனின் தூய அழகின் பொருட்டு நூற்றுக்கணக்கானவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
எனினும் எவராலும் அப்பெருங்காடென பரந்து விரிந்திருந்த பண்ணையின் அத்தனை யூகலிப்டஸ் வகைகளையும் அடையாளம் காண முடியவில்லை.
அந்த போட்டியில் விருப்பமில்லாமல் யூகலிப்டஸ் பெருங்காட்டிற்குள் தன்னந்தனிமையில் தன்னை ஒடுக்கிக்கொண்ட எலன், அக்காட்டில் மர்மமும், வசீகரமும் கலந்த ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவன் அவளுக்கு பல சுவாரஸ்யமான கதைகளை சொல்லுகிறான். அந்நிய தேசங்களிலும், பாலை நிலங்களிலும் மழைக்காடுகளிலும் நடக்கும் அக்கதைகளில் ஒரு தந்தையும் மகளும் இருந்தனர் அம்மகளின் ஒரு விசித்திரமான காதலும் கதைகளில் இருந்தது.
தனது பெயரை கூட சொல்லாத அவனும் எலனும் விரைவில் காதல் வயப்படுகின்றனர். அதே சமயத்தில் பூமியின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் காணும் கோக் எனும் ஒரு இளைஞன் ஹாலண்ட் சொல்லியபடியே பண்ணையின் அனைத்து யூகலிப்டஸ் மரங்களையும் சரியான பெயர்களுடன் அடையாளம் காண்கிறான்.
எலன் போட்டியில் வென்றவனையா அல்லது தன் மனம் கவர்ந்தவனையா, யாரை திருமணம் செய்துகொண்டாள்?
இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட ’யூகலிப்டஸ்’ மிக அழகிய காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்
முர்ரே பெயில் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்தார்.. அவர் தற்போது சிட்னியில் வசிக்கிறார்.
1998ல் வெளியான இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சி பலமுறை துவங்கப்பட்டு கைவிடப்பட்டது. காதலை ஆஸ்திரேலிய கலாச்சாரத்துடன் சொல்லும் இந்நாவலின் துண்டு துண்டான சிறு பகுதிகள், சம்பவங்களை எல்லாம் தைல மணத்துடன் கூடவே வரும் யூகலிப்டஸ் மரங்கள் இணைத்து அழகான தொடர்ச்சியை கொண்டு வந்துவிடுகின்றன. இந்த நாவலை ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்று என்றும் கூறலாம்
யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்கின்றன. 10 நிமிட நடையில் ஒரு யூகலிப்டஸ் மரத்தை அங்கு பார்த்துவிடலாம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆஸ்திரேலிய பாடல்களில், சிறார் இலக்கியங்களில், பயணக்கட்டுரைகளில், திரைப்படங்களில் என்று எங்கும் யூகலிப்டஸ் மரங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆஸ்திரேலிய எழுத்தாளர் மே கிப்ஸின் (May Gibbs) ’ஸ்னக்கில்பாட்டும் கட்லி பையும்’ (Snugglepot and Cuddlepie) என்னும் பிரபல சிறார் இலக்கிய கதைத்தொடரில் 2 யூகலிப்டஸ் மலர்களின் கனிகளின் வடிவிலிருக்கும் குட்டி மனிதர்கள் இருப்பார்கள். இதில் இடம்பெறும் குட்டிப் பெண் குழந்தைகளின் தலைமுடி, இடையாடை, மற்றும் தொப்பி ஆகியவை யூகலிப்டஸ் மலர்களை போல் அமைந்திருக்கும். இக்கதை பல தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்தது.. 1985ல் மே கிப்ஸை கௌரவிக்கும் பொருட்டு இந்த கதையை சித்தரிக்கும் ஒரு தபால் தலை ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
ஐரோப்பாவில் ஊசியிலை மரங்களின் பல வகைகள் உள்ளன. வட அமெரிக்கா பைன், ஓக் ஆகியவற்றால் நிறைந்த அடர் காடுகளையும், புல்வெளிகளையும் கொண்டவை. ஆப்பிரிக்கா புல்வெளிகள், பாலைநிலங்கள் மற்றும் மழைக்காடுகள் நிறைந்தது. அண்டார்டிக்கா பல மரங்களின் புதைபடிவங்களை கொண்டிருக்கிறது, மழைக்காடுகளையும் அவற்றின் மரங்களையும் கொண்டிருக்கிறது தென்னமெரிக்கா. ஆனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் பிற தாவரங்களை காட்டிலும் யூகலிப்டஸே பெருமளவில் இருக்கிறது.(சுமார் 70சதவீதம்) .
யூகலிப்டஸின் 52 மில்லியன் வருடங்களுக்கு முன்பான தொல்புதைபடிவம் தென்னமெரிக்க தீவில் கிடைத்தது. ஆஸ்திரேலிய யூகலிப்டஸ் புதைபடிவங்கள் சுமார் 42 மில்லியன் வருடங்கள் பழமையானவை என்றாலும் ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தான் பரவிப் பெருகி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்
சிற்றினங்கள்
யூகலிப்டஸின் 800 சிற்றினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவையே. ஒரு சில வகைகள் மட்டும் நியூ கினியா மற்றும் இந்தோனேசியாவை தாயகமாக கொண்டது.
பழங்குடியினரின் யூகலிப்டஸ் பயன்பாடுகள்
tarunks
ஆஸ்திரேலிய பழங்குடியினர் இம்மரத்தின் கட்டைகளிலிருந்து ஈட்டிகள், கேடயங்கள், படகுகள் மற்றும் அம்புகளை செய்தார்கள். இம்மரங்களில் பூச்சிகள் இடும் துளைகளில் இருந்து கசியும் சுவையான மன்னா (Manna) எனப்படும் இனிப்பு திரவத்தை பழங்குடியினர் உண்பார்கள்
இம்மரத்தின் தடிமனான மரப்பட்டைகளை உரித்தெடுத்து நீர் கொள்கலன்களாகவும், தண்டின் முடிச்சுகளை (gnarled round growth) டாருன்க் (tarnuks) எனப்படும் பாத்திரங்களாகவும் உபயோகித்தார்கள்.
’முரே’ ஆற்றங்கரையோர பழங்குடியினர் இம்மரத்தின் உறுதியான பட்டையை நெடுக உரித்து அவற்றைக்கொண்டு கேனோஸ் (canoes) என்னும் சிறு மீன்பிடி படகுகள் செய்வர்கள்.
பல ஆண்டுகள் பழமையான யூகலிப்டஸ் மரங்களில் பழக்குடியினர் பட்டை உரித்தெடுத்த தழும்புகளும் சில எழுத்துக்களும் காணப்படும் இதுபோன்ற மரங்கள் தழும்பு மரங்கள் எனப்படும். இவற்றை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவீன்ஸ்லாண்டிலும் காணலாம்.
வரலாறு
டிசம்பர் 2, 1642 ல் வெளியான ஜன்ஸூன் டாஸ்மானின் (Abel Janszoon Tasman) கடற் பயணக்குறிப்பில் ஃபிஜி தீவுகளில் இருந்த கோந்துகளை சுரக்கும் மரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
சில ஆரம்பகால ஐரோப்பிய இயற்கையியலார்களால் யூகலிப்டஸ் மரங்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும் 1777 வரை இம்மரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வில்லை. கேப்டன் ஜேம்ஸ் குக் குடன் ஆஸ்திரேலிய கடற்கரையில் வந்திறங்கிய ஜோசப் (Joseph Banks) மற்றும் டேனியல் (Daniel Solander) ஆகியோர் அங்கிருந்த யூகலிப்டஸ் (E. gummifera) மரங்களின் பாகங்களை சேகரித்தனர். குயின்ஸ்லேண்டின் ஆற்றங்கரையோரமிருந்து மற்றொரு (E. platyphylla) மரத்தின் பாகங்களையும் சேகரித்தனர். அப்போது இவ்விரண்டுமே யூகலிப்டஸ் என்று பெயரிடப்பட்டிருக்கவில்லை.
1777 ல் ஜேம்ஸ் குக்கின் மூன்றாவது பயணத்தின் போது உடனிருந்த டேவிட் (David Nelson) கிழக்கு டாஸ்மானியாவிலிருந்த ஒரு யூகலிப்டஸ் மரத்தின் பாகங்களை சேகரித்தார். அவை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பிரெஞ்ச் தாவரவியலாளர் ஹெரிடியர் (L’Héritier) அம்மரத்துக்கு Eucalyptus obliqua என்று பெயரிட்டார். இதன் பேரினப்பெயர் ’யூகலிப்டஸ் என்பதில் கிரேக்க சொல்லா eu என்பது ’நன்றாக’ என்றும் calyptos என்பது ’மூடப்பட்டிருக்கும்’ என்றும் பொருள் தரும். யூகலிப்டஸ் மரங்களின் மலரரும்புகளை மூடியிருக்கும் தொப்பி போன்ற அமைப்பைக்கொண்டு இவர் அந்த பெயரை உருவாக்கினார்
சிற்றினப்பெயர் Obliquus இம்மரத்தின் இலைக்காம்பின் இருபுறமும் இருக்கும் சமச்சீரற்ற அடிப்பகுதிகளை குறிக்கிறது.
1788-89 ல் வெளிவந்த இம்மரத்தின் இந்த விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையே தாவரவியல் அடிப்படையில் யூகலிப்டஸின் முதல் ஆவணம். மிகச்சரியாக ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஏக காலத்தில்தான் நடந்தது. பின்னர் 19 நூற்றாண்டுக்குள் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் சிட்னி பகுதியில் கண்டறியபட்டு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பான்மையானவை ஆங்கிலேயே தாவரவியலாளர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித்தினால் (James Edward Smith) அடையாளம் காணப்பட்டன
1867 ல் வெளியான ’ஆஸ்திரேலியாவின் தாவரங்கள்’ (Flora Australiensis) என்னும் மிக முக்கிய நூலில் பல நூறு ஆஸ்திரேலிய தாவரவியலாளர் களின் யூகலிப்டஸ் குறித்த பங்களிப்புக்கள் இருந்தன.3
பரவல்
ஆஸ்திரேலியாவிலிருந்து 1770 க்குப் பிறகு யூகலிப்டஸ் பல நாடுகளுக்கு அறிமுகமானது குறிப்பாக கலிபோர்னியா, தென் ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தென்னமெரிக்கா.
1774 ல் இவற்றின் விதைகள் இங்கிலாந்து கியூ பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன ஆனால் கடும் பனி பொழிவிருந்த காலங்களாதலால் அவை அங்கு வளரவில்லை. மீண்டும் 1800 ல் டாஸ்மானியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகள் வளரத்துவங்கின
1800 களில் இவற்றின் பல வகைகள் ஐரோப்பா அல்ஜீரியா, தெகிடி, இந்தியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அமெரிக்கவிற்கு அறிமுகமாகின.
இலங்கையில் இவை 19 ம் நூற்றாண்டில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் காற்றுத்தடுப்பிற்கென அறிமுகமாயின.தற்போது யுகலிப்டஸின் 10 சிற்றினங்கள் அங்கு இருக்கின்றன
1850 ல் கலிபோர்னியாவுக்கு தங்க வேட்டைக்கு சென்ற ஏராளமானவர்கள் யூகலிப்டஸ் விதைகளை அங்கு பயிரிட்டனர்.
இந்தியாவில் யூகலிப்டஸ் 1790 ல் மைசூரில் திப்பு சுல்தானால் அறிமுகம் செய்யப்பட்டது. அவரது அரண்மனை தோட்டங்களில் முதலில் 16 வகைகள் வளர்ககப்பட்டன.
1843 ல் நீலகிரி பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவை பின்னர் அதிக அளவில் இந்தியாவின் பல பகுதிகளில் பண்ணை நிலங்களில் வளர்க்கப்பட்டன. தற்போது யூகலிப்டஸின் 170 சிற்றினங்கள் இந்தியாவில் இருக்கின்றன.அவற்றில் மைசூர் கோந்தை உருவாக்கும் யூகலிப்டஸ் வகை (E. tereticornis) மிக பிரபலமானது. இத்துடன் E. grandis, E. citriodora, E. globulus, and E. camaldulensis.ஆகியவையும் இந்தியாவில் அதிகமாக வளர்கின்றன
இந்தியாவில் 1960-80 க்குள் ஏராளமான யூகலிப்டஸ் பண்ணைகள் உருவாகின. சமுக காடுகள் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டன.
வோன் முல்லர் (von Müller) 1884 ல் வெளியிட்ட Descriptive Atlas of the Eucalypts of Australia – Eucalyptographia என்னும் நூல் இலைகளிலிருந்து தைலம் எடுப்பதையும், தைலத்தின் பல்வேறு பயன்களையும் விரிவாகப் பேசுகிறது. முல்லர் யூகலிப்டஸ் தைலத்தையும் விதைகளையும் பிரான்ஸ், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.
20 ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் இவை பரவலாக காணப்பட்டது வேளான் விஞ்ஞானி எட்மண்டோ (Edmundo Navarro de Andrade) வின் முயற்சியால் பெருமளவிலான தென்னமெரிக்க நிலப்பரப்புகள் யூகலிப்டஸ் காடாகின
தாவரவியல் பண்புகள்
மிர்ட்டேசியே குடும்பத்தை சேர்ந்த இவை வேகமாக வளரக்கூடியவை. யூகலிப்டஸின் வெகுசில வகைகளே இலை உதிர்ப்பவை, மற்ற அனைத்துமே பசுமை மாறாதவை
இலைகள்: பசுமைமாறா பளபளப்பான இலைகள் வளைந்து கதிரரிவாள் போலிருக்கும். இலைகளில் எண்ணெய் இருப்பதால் இவை பிரத்யேக தைல வாசனையுடன் இருக்கும்
காம்பற்ற இளம் இலைகள் சாம்பல், வெள்ளி அல்லது நீலப்பச்சை வண்ணம் கொண்டிருக்கும். முதிர்ந்த மரங்களின் இலைகள் காம்புடன் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இளம் இலைகள் காம்பற்று எதிரடுக்கில் அமைந்திருக்கும். இலையமைப்பு இளம் மரங்களிலும் முதிர்ந்த மரங்களிலும் முற்றிலும் வேறு பட்டிருக்கும், இலைகள் எளிதில் வாடாது.
மலர்கள்: மூன்றிலிருந்து 6 வருடங்களில் யூகலிப்டஸ் மரங்கள் மலரத் துவங்கும். இவை பெரும்பாலும் கோடையில் மலரும். மலர்கள் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும். மலர் நிறமென்பது ஆண் பகுதியான மகரந்த தாள்களின் நிறமே. பல நிறங்களில் மலர்கள் இருப்பினும் பெரும்பான்மையான மலர்கள் வெள்ளை அல்லது மங்கிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இவற்றில் மலரிதழ்கள் என்று தனித்த அமைப்புகள் இல்லை. மலர்கள் அரும்பாக இருக்கையில் அல்லி மற்றும் புல்லி வட்டங்கள் இணைந்த சிறிய மூடி போன்ற அமைப்பினால் மூடப்பட்டிருக்கும். (operculum). அரும்புகள் மலருகையில் இந்த மூடி உதிர்ந்து விழுந்துவிடும்
கனிகள்: மிக கடினமான இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கும் கனிகள் கோந்துக் கொட்டைகள் எனப்படுகின்றன (gum nuts). பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள் 250 லிருந்து 400 வருடங்கள் உயிர் வாழும்
அலங்கார மரங்களாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. பூந்தொட்டிகளிலும் குட்டை மர வகைகள் வளர்க்கப்படுகின்றன.
இணைப்பேரினங்கள்
யூகலிப்டஸின் ஏராளமான வகைகளை தாவரவியலாளர்கள் மூன்றாக வகைப்படுத்துகிறார்கள். இவற்றில் மிக அதிகமானவை யூகலிப்டஸ் வகை, வடக்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் இருப்பவை கோரிம்பியா ( Corymbia) மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் வளரும் அங்கோஃபோரா வகை. (Angophora). கோரிம்பியா மற்றும் அங்கோஃபோரா இரண்டு வகையும் யூகலிப்டஸின் இணைப்பேரினங்கள் என கருதப்படுகின்றன.
மரப்பட்டை
வானவில் யூகலிப்டஸ்
யூகலிப்டஸ் மரங்களின் சிறப்பியல்பாக அவை பட்டை உரிப்பதை சொல்லலாம். மரங்கள் வளர்கையில் பட்டையை உரித்து, உள்ளிருக்கும் பளபளப்பான வெளிறிய புதிய உள்பட்டையை வெளிக்காட்டும். வானவில் யூகலிப்டஸ் பல வண்ணங்களில் உள்பட்டையை கொண்டிருக்கும்
சில மரங்களின் பட்டை மென்மையாக வழவழப்பாக இருக்கும். மேலிருந்து கீழ் பாதி மரங்கள் மட்டும் பட்டை உரித்து மீதி பழைய பட்டையுடன் இருக்கும் மரங்களையும் சாதாரணமாக காணமுடியும். அடிக்கடி நிலத்தில் தீப்பிடிக்கும் இடங்களில் வளரும் மரங்களின் கீழ்ப்புற பட்டை மட்டும் மிக தடிமனாக சொறசொறப்பாக காணப்படும்
சில மரங்களில் நாரிழைகள் நிறைந்த பட்டை காணப்படும். சிலவற்றில் கரிய சொற சொறப்பானவையும், இன்னும் சிலவற்றில் மேடுகளும் பள்ளங்களும் வரிகளும் உள்ள பட்டைகளும், ரிப்பன்களை போன்றவைகளும் இருக்கும்.
இவற்றிற்கு காய்ச்சல் மரம், நீல கோந்து மரம், எலுமிச்சை யூகலிப்டஸ் மற்றும் வெள்ளி ஓக் இரும்பு பட்டை மரம் என்று பல வழங்கு பெயர்கள் உள்ளன. அடிக்கடி இவற்றின் கனமான கிளைகள் உடைந்து விழுந்து மர அறுவையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் இறப்பு நேர்வதால் இவை விதவைகளை உருவாக்கும் மரங்கள்- Widow maker trees என்றும் அழைக்கப்படுகின்றன.
தைலம்
யூகலிப்டஸ் மரங்களின் இலைகள், கனிகள், மலரும்புகள் மற்றும் இளங்கிளைகளில் இருக்கும் எளிதில் ஆவியாகும் இன்மண எண்ணெயின் (Essential oil) அளவு 1.5 லிருந்து 3.5%. இருக்கும்
யூகலிப்டஸில் அடங்கி இருக்கும் அதன் மருத்துவ பண்புகளுக்கு காரணமான வேதிசேர்மங்கள்; சிட்ரொனெல்லால், யூகலிப்டால் , கேம்ஃபீன் ஃபென்சீன்( fenchene), லிமோனீன், ஃபெல்லாண்ட்ரீன் மற்றும் பைனீன் ஆகியவை. இந்த எண்ணெய்களில் இம்மரங்களின் நறுமணத்திற்கு, தைல வாசனைக்கு காரணமான யூகலிப்டால் 70 லிருந்து 95% இருக்கிறது.( eucalyptol)
1778 ல் டென்னிஸ் மற்றும் ஜான் வயிட் ( Dennis Considen & John White) ஆகிய இரு அறுவை சிகிச்சை நிபுணர்கள் யூகலிப்டஸ் இலைகளை காய்ச்சி வடிகட்டுதல் மூலம் அவற்றின் இலை எண்ணையை தைலம் ஆக்கினார்கள் எனினும் அவர்களால் பெருமளவில் தைலத்தை தயாரிக்க முடியவில்லை
.1852 ல் ஜோசப் போஸிஸ்டோ (Joseph Bosisto) என்னும் மெல்பர்ன் நகரின் பிரபல மருந்தாளுநர் வணிகரீதியான யூகலிப்டஸ் தைல தயாரிப்பை துவங்கினார்.
1870 ல் யூகலிப்டஸ் தைலம் ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான தொழிற்சாலை உற்பத்தி பொருளானது. அப்போதிலிருந்து சர்வதேச சந்தைகளில் ஆஸ்திரேலிய யூகலிப்டஸ் தைலம் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.
ஒரு பவுண்டு தைலம் உருவாக்க சுமார் 50 பவுண்டு யூகலிப்டஸ் தேவைப்படுகிறது. இதன் வலிநிவாரண, குடற்புழு நீக்க, கிருமி நீக்க பண்புகள் இந்த எண்ணெயை உலகின் மிக அதிக பயன்படுத்தப்படும் தைலமாக முன்னிலையில் வைத்திருக்கிறது. இலைத்தைலம் நுண் கிருமிகளுக்கு, எதிரானது, பல்வலி, சுவாசக்கோளாறு, வைரஸ் தொற்று போன்ற சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. நறுமண சிகிச்சையிலும் இந்த தைலம் வெகுவாக உபயோகத்திலிருக்கிறது
முதல் உலகப்போரின் போது யூகலிப்டஸ் தைலம் வெகுவாக தேவைப்பட்டது. 1919 ல் பரவிய தொற்று வியாதிகள் குணமாக பெரிதும் இந்த தைலம் உபயோகிக்கப்பட்டது.
யூகலிப்டால் (சினியோல் என்றும் இது அழைக்கப்படும்- cineole) உட்கொள்பவர்களுக்கு கடும் பாதிப்புகளை உண்டாக்கும். யூகலிப்டஸ் இலைகளை யாரும் உண்பதில்லை எனினும் இலைகளை உலர்த்தி தேநீர் உண்டாக்கி சளி காய்ச்சல் சமயங்களில் அருந்தும் வழக்கம் பல நாடுகளில் இருக்கிறது.
தேநீராக தயாரிக்கப் படுகையில் யூகலிப்டாலின் அளவு மிக குறைவாக, உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவிற்கே இருப்பதாக சொல்லப்பட்டாலும், தேவைக்கதிகமான பயன்பாடு குடல் அழற்சி, மனச்சிதைவு, மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் உயிரிழப்பை உண்டாக்கும்
2013ல் மஞ்சள் பெட்டக மரம் என்றழைக்கப்டும்.Eucalyptus mellidora பூச்சித் தாக்குதலை தவிர்க்க தன் இலை மணத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்
உயரம்
இவை பொதுவாகவே மிக உயரமான மரங்கள்.. 85 மீட்டர் க்கும் மேல் வளரும் இயல்புடைய மலை சாம்பல் மரம் (E. regnans) உலகின் மிக உயரமான மர வகைகளில் ஒன்று. 4
கிழக்கு டாஸ்மேனியாவில் இருக்கும் 99.6 மீட்டர் உயரமுள்ள ”நூறான்” என்றழைக்கப்படும மரமே உலகின் மிக உயரமான யூகலிப்டஸ். ஹைபெரியன் (Hyperion) செம்மரத்தின் உயரம் இதைவிட 16 மீட்டர்தான் அதிகம். (115.6)
1881ல் ஜார்ஜ் விக்ட்டோரியா பகுதியில் விழுந்து கிடந்த ஒரு யூகலிப்டஸின் உயரம் 114.3 மீ என்று அளக்கப்பட்டது. ஹைபெரியன் இதை 1 மி உயரம் குறைவு
1872ல் வில்லியம் 133 மீ உயரமுள்ள யூகலிப்டஸ் விழுந்துகிடப்பதை பதிவுசெய்தார்
100 மீ உயரத்துக்கும் அதிகமாக வளரும் மர வகைகளும் அதிகபட்சமாக 10 மீ உயரம் வளரும் புதர் வகைகளும் யூகலிப்டஸில் உண்டு
வளரியல்பு
மாலி (mallee)
யூகலிப்டஸின் புதர் வகைகள் மாலி எனப்படுகின்றன.கிளைத்த தண்டுகளுடன் இவை அதிகபட்சம் 10 மீ உயரம் வரை வளரும்.இவற்றின் புடைத்த வேர் தரைமட்டத்திற்கு மேல் காணப்படும்
மர்லோக் (marlock)
கிளைகளற்ற குறுமரங்களான இவற்றில் முட்டை வடிவ வெளுத்த இலைகள் அடர்த்தியாக அமைந்திருக்கும்.
மாலட் (mallet)
இவை மெல்லிய நடுத்தண்டும் சிறு கிளைகளும் கொண்டவை தண்டுகளில் செம்புளிகள் இருக்கும்
பிற முக்கிய வகைகள்
உலகின் உயரமான மர வகைகளில் ஒன்றான மலைச்சாம்பல் மரம் ( Mountain ash -Eucalyptus regnans)
முண்டுகளுடன் காணப்படும் பனி மரம்- (gnarly snow gum -Eucalyptus pauciflora)
பல கிளைகளுடன் அடர்ந்து வளரும் மாலி வகை. (mallee -Eucalyptus behriana)
ஆப்பிள் யூகலிப்டஸான பேய் கோந்து மரம் (apple ore ghost gum -Corymbia flavescens)
கிளைகள் திருகி காணப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் சிவப்பு கோந்தை அளிக்கும் மரம். (twisted Sydney red gum -Angophora costata).
மரப்பட்டை உரிந்து தெரியும் உள் மரப்பட்டை பல வண்ணங்களில் இருக்கும் வானவில் மரம். (Rainbow Eucalyptus-Eucalyptus deglupta)
எலுமிச்சை யூகலிப்டஸ் (Eucalyptus citriodora)
பளபளக்கும் வெள்ளி நிற இலைகளை கொண்டிருக்கும். வெள்ளி இளவரசி. (silver princess – Eucalyptus caesia ).இவை தாழ்ந்து நிலம்தொடும் கிளைகளை கொண்டிருக்கும் மரப்பட்டை சிவப்பு நிறத்திலிருக்கும்.
நீல மரம் (Eucalyptus Baby Blue – Eucalyptus pulverulenta) இவற்றின் இலைகள் வெள்ளைப் பொடி தூவிய நீலச்சாம்பல் நிறம் கொண்டிருக்கும்
வெள்ளித்துளி மரம் (Eucalyptus Silver Drop -Eucalyptus gunnii). அழகிய வெள்ளி நிற இலைகள் கொண்ட இவை செடார் கோந்து மரம் என்றும் அழைக்கப்படும்.
வெள்ளி நாணய மரம்-(Silver Dollar Eucalyptus Tree -Eucalyptus cinerea) நாணயம் போன்ற வெள்ளி நிற வட்ட வடிவ இலைகள்
கொண்டிருக்கும். 15மீ உயரம் வரை வளரும் இதன் இலைகள் அலங்காரத்துக்காக உபயோகிக்க படுகின்றன.
இனிப்பு கோந்து மரம்-(Sugar Gum Tree -Eucalyptus cladocalyx). இவற்றின் மரப்பட்டை மஞ்சள் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கும். உண்ணக்கூடிய கோந்து இனிப்பு சுவையுடன் இருக்கும்.
செம்புள்ளி மரம்(Red Spotted Gum Tree -Eucalyptus mannifera). சாம்பல் வண்ண மரப்பட்டையை கொண்டிருக்கும்
வட்ட இலை மரம்.(Round Leaved Moort -Eucalyptus platypus)
மலைக் கோந்து மரம். (Mountain Gum -Eucalyptus dalrympleana) இதன் இலைகள் இலவங்க பட்டையின் மணம் கொண்டிருக்கும்
பனிக்கோந்து மரம். (Snow Gum Tree -Eucalyptus pauciflora).அளவான உயரம் கொண்டிருக்கும் இவற்றின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று திருகி பின்னிக் கொண்டிருக்கும்
யூகலிப்டஸ் இளவரசன்.(The Prince of the Eucalypts –Eucalyptus globulus) யூகலிப்டஸ் மரங்களில் மிக விலை அதிகமான கட்டையையும் நீலக்கோந்தையும் அளிக்கும் இதன் அழகிய மலர்களே டாஸ்மேனியாவின் மலர் சின்னமாக இருக்கிறது.
யூகலிப்டஸ் கிறுக்கல் மரம்- (Scribbly Gum tree-Eucalyptus haemastoma) மரத்தின் கோந்து மரப்பட்டையில் கிறுக்கல்களைப்போல ஒழுகி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. கிறுக்கல் கோந்து அந்து பூசியான Ogmograptis scribula கோந்து ஒழுகல்களி குடைந்து வழி உண்டாக்கி மரப்பட்டைகளில் முட்டையிடுவதால் இவ்வடிவங்கள் உருவாகின்றன.
ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான முக்கியத்துவம் கொண்ட காரி (Eucalyptus diversicolor, karri) மற்றும் ஜரா (Eucalyptus marginata-s jarrah) யூகலிப்டஸ் வகைகள்
கிறுக்கல் மரப்பட்டை மரம்
யூகலிப்டஸும் நெருப்பும்
இவற்றின் எண்ணெய் நிறைந்த இலைகளும் உலர்ந்த மரப்பட்டையும் எளிதில் தீ பிடிக்கும் இயல்புடையவை.
இலைகளின் எண்ணெயும் ஏராளமான இலைகள், கிளைகள் உதிர்ர்து மரங்களினடியில் சேர்ந்திருக்கும் இலைக்குப்பைகளின் அழுத்தமும் சேர்ந்து எளிதில் யூகலிப்டஸ் காடுகள் தீப்பிடிக்கிறது.ஆஸ்திரேலியா வெங்கும் எரிந்த யூகலிப்டஸ் இலைகளின் மணம் பரவியிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இக்காடுகளில் அடிக்கடி தீப்பிடிக்கிறது. தைலமணம் கொண்ட காற்று நெருப்பு வேகமாக பரவ வழி செய்கிறது .
இவற்றில் பெரும்பாலான மரங்கள் நெருப்பில் எரிந்தாலும் மீண்டும் தழைக்கும், பல மரங்கள் நெருப்பில் பாதிப்படையாத கனிகளும் விதைகளும் கொண்டவை . முழுவதுமாக எரிந்தாலும் சில யூகலிப்டஸ் மரங்கள் அவற்றின் மரப்பட்டைகளுக்குள் பொதிந்திருக்கும் இலை மொட்டு களிலிருந்து மீண்டும் துளிர்த்து வளரும்.
இப்படி நெருப்பை தாங்கி வளர்பவை, முழுவதும் நெருப்பில் எரிந்த பின்னும் முளைவிட்டு தளிர்ப்பவை, நெருப்புக்கு பின்னர் சேதமடையாத கனிகளிலிருந்து, விதைகளிலிருந்து மீண்டும் புது வாழ்வை தொடரும் தாவரங்கள் பைரோஃபைட்டுகள் (Pyrophytes) எனப்படுகின்றன. பல தொல்குடி இனங்களின் தலைவர்கள் இவ்வாறு எரிந்த காட்டில் கிடைக்கும் சாம்பலாகாத உறுதியான மரக்கம்புகளைத்தான் கைகளில் வைத்துக் கொள்வார்கள்
2019-20ல் நிகழ்ந்த ஆஸ்திரேலிய புதர் தீ விபத்தில் 18.6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு முழுவதும் எரிந்து சாம்பலானது.
பயன்கள்
தைலம்,மரக்கூழ்,கரிக்கட்டை மற்றும் அறுவை மர தொழிற்சாலைகளில் இம்மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன
டிஜெரிடூ எனப்படும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவர்களின் இசைக்கருவியும் பூமராங்கும் யூகலிப்டஸ் மர்ங்களிலிருந்து செய்யபடுகின்றன
டிஜெரிடூ உருவாக்க கரையான்களால் நடுப்பகுதி துளையிடப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் மட்டும் தேர்வு செய்யபடுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் சவப்பெட்டிகளும் கூட யூகலிப்டஸ் மரங்களிலிருந்து செய்யப்படுகின்றன.
ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும், நீராவி ரயில்களின் எரிபொருளாகவும் யூகலிப்டஸ் மரக்கட்டைகள் பயன்படுத்தபடுகின்றன. கினோ கோந்து எனப்படும் யூகலிப்டஸ் கோந்துகள் மருந்து பொருட்களாக பயன்பாட்டில் இருக்கின்றன. சில குறிப்பிட்ட வகை சிகரட்டுக்களிலும், பல நறூமண திரவியங்களிலும் யூகலிப்டஸ் தைலம் சேர்க்கப்படுகின்றது.
மரக்கட்டைகளின் செல்லுலோஸை கொதிக்கவைக்கையில் கிடைக்கும் நாரைழைகளைக்கொண்டு ஆடைகளும் உருவாக்கப்படுகின்றன
ஆஸ்திரேலியாவின் O Estado de São Paulo நாளிதழின் குறிப்பிட்ட சில வருட இதழ்கள் முழுக்க யுகலிப்டஸ் மரக்கூழிலிருந்து உருவாக்கப்பட்டன. உறுதியான இம்மரங்களில் இருந்து வீடுகட்டும் மரப்பலகைகள், வண்டிகள், மரச்சாமான்கள் மற்றும் பாலங்கள் உருவாக்கப்படுகிறது
இம்மரங்களிலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, பச்சை மற்றும் சாக்கலேட் நிறங்களில் சாயங்கள் எடுக்கப்படுகின்றன. சாயமெடுத்தபின் எஞ்சியிருக்கும் மரக்கழிவு நல்ல உரமாக பயன்படுகிறது
சமீபத்தில் நிலத்திலிருக்கும் பொன் துகள்களை யூகலிப்டஸ் இலைகளில் சேமித்து வைத்திருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்தியா போன்ற தாவர நார்களின் பற்றாக்குறை நிலவும் நாடுகளில் யூகலிப்டஸ் மரங்கள் பெருமளவில் உதவுகின்றன
உலகின் பலபகுதிகளிலும் இதன் கட்டைகள் எரிவிகாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. மலரலங்காரங்களிலும் நிர்ப்பிகள் (fillers) எனப்படும் மலரல்லாத தாவர பொருட்களில் அதிகம் உபயோகப்படுவது விரைவில் வாடிவிடாத யூகலிப்டஸின் இளம் இலைகள் தான்.
மொனார்க் பட்டுப்பூச்சிகள் குளிர்காலங்களில் யூகலிப்டஸ் மரங்களில் தஞ்சமடைகின்றன. தேனி வளர்ப்பின் மூலம் மலர்களின் அமுதிலிருந்து மிகத்தரமான ஒரு மலர்த் தேன்(uni floral honey) எடுக்கப்படுகிறது
வேகமாக வளரும் இவை வரிசையாக நெருக்கமாக வளருகையில் காற்றுத்தடை மரங்களாகவும் பயன்படுகின்றன
விலங்குகளுடன் தொடர்பு
யூகலிப்டஸ் இலைகளின் எண்ணெய் அதிக அளவில் உட்கொண்டால் ஆபத்தை விளைவிக்கும் எனினும் கோலா கரடி மற்றும் சில சிறு விலங்குகள் (marsupial herbivores) அவற்றை தொடர்ந்து அதிக அளவில் உண்ணுகின்றன’. இலைகளில் சத்துக்கள் மிக குறைவாகவே இருந்தாலும் இலைகளின் தைல மணத்தை இவ்விலங்குகள் வெகுவாக விரும்புகின்றன
யூகலிப்டஸ் மலர்கள் ஏராளமான மலரமுதினை (Nector) கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய பல்லியினங்கள் பல இம்மலர் சாற்றை விரும்பி உண்ணும்.
யூசொசியா (Eusocia) வண்டுகள் எப்போதும் இம்மரங்களில் வசிக்கின்றன.
யூகலிப்டஸ் மரங்களின் எடை மிகுந்த கிளைகள் எளிதில் உடையும் இயல்பு கொண்டவை.குறிப்பாக கோடைக்காலங்களில் கிளைமுறிதல் அதிகமாயிருக்கும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலநாடுகளின் பூங்காக்களில் யூகலிப்டஸ் மரங்களினடியில் செல்கையில் கிளைமுறிந்து விழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்
பிரபல ஆஸ்திரேலிய சிறார் இலக்கியக் கதையான ஏழு குட்டி ஆஸ்திரேலியர்களில் (Seven Little Australians) வரும் ஜூடி என்னும் சிறுமி ஒரு பூங்காவில் முறிந்த யூகலிப்டஸ் கிளைகளின் அடியில் சிக்கி உயிரிழக்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள நீல மலைத்தொடர் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏழு தேசியப் பூங்காக்கள் மற்றும் ஒரு சரணாலயம் உள்ளது. மாபெரும் இந்த நீல மலைத்தொடர் 1.03 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இங்கு பலவகையான உயிர்த்தொகுதி இருப்பினும் 70 சதவீதம் அவற்றில் யூகலிப்டஸ் மரங்களே இருக்கின்றன. இங்கு மட்டுமே காணப்படும் பல அரிய உயிரினங்களுடன் 91 யூகலிப்டஸ் சிற்றினங்களும் உள்ளன.
நீல மலைத்தொடர்கள் என்னும் பெயர் இவற்றின் மீதிருக்கும் நீலப்புகைப்படலங்களினால் வந்தது. யூகலிப்டஸ் இலைகளின் எண்ணெய் திவலைகள், புழுதி மற்றும் நீராவியுடன் கலந்து நீலக்கம்பளி போல் மலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் அற்புதமான காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் தினமும் கண்டு களிக்கின்றனர். 5
யூகலிப்ட் ஆஸ்திரேலியா (Eucalypt Australia) என்பது ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு இயற்கை அறக்கட்டளையின் பெயர். இந்த அமைப்பு யூகலிப்டஸ் மரங்களின் பாதுகாப்பு, அவற்றைக்கு்றித்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. யூகலிப்டஸ் தொடர்பான பணிகளுக்கு உதவித்திட்டங்கள், நிதி உதவிகள் மற்றும் பரிசுகளையும் இவ்வமைப்பு அளிக்கின்றது.
சர்ச்சைகள்6
யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும் , இவை வளர மிக அதிக நீர் தேவைப்படும். இவை மண் வளத்தை குறைத்துவிடும் ஆகிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானவை
யூகலிப்டஸ் நீரைஅதிகம் உறிஞ்சும் என்றாலும் 25 அடி ஆழத்துக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர் இம்மரங்களின் வேரினால் உறிஞ்சப் படுவதில்லை மரங்களின் வேர்கள் 20 அடிக்கு கீழ் வளருவதில்லை. அதிகபட்சமாக இம்மரங்களின் ஆணிவேர் தொகுப்பு 2-4 அடி வரை இறங்கி இருக்கும். நிலத்தடி நீர யூகலிப்டஸ் மரங்களினால் குறைந்ததற்கான எந்த ஆதாரமும் அறிவியல் அடிப்படையில் இதுவரை இல்லை என்பதை பல ஆய்வுகள் என்று திட்டவட்டமாக நிரூபித்திருக்கின்றன
இந்திய தேசிய பசுமை ஆணையம் 2015ல் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் யூகலிப்டஸ் எந்த சூழல் கேடையும் உருவாக்குவதில்லை என்றும் பிற விவசாய பயிர்கள் மற்றும் மரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே இவை நீரை எடுத்துக் கொள்கின்றன என்பதையும் தெரிவித்திருந்தது
பிரபல வேளான் விஞ்ஞானியான தினேஷ் குமார் தனது ’இந்தியாவில் யூகலிப்டஸ் -கடந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்’ என்னும் நூலில் இம்மரத்தின் சூழலுக்கு சாதகமான பல இயல்புகளை விவரித்திருக்கிறார்
வனவிஞ்ஞானியன வினயக்ராவ் படில் தனது’’ யூகலிப்டஸ் – ஒரு இந்திய அனுபவம்’’ எனும் நூலில் ( Vinayakrao Patil Eucalyptus—An Experience in India” (1995), )
யூகலிப்டஸ் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுவதில்லை
இவை வளர மிக அதிக நீர் தேவையில்லை
இவை பிற தாவரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நில வளத்தை உறிஞ்சிக்கொள்வதில்லை
இவை மண் வளத்தை குறைப்பதில்லை
என்பதை தெரிவித்திருக்கிறார்.
இவை நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை வளமற்றதாகும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள்.
உலக நாடுகளில் அதிக அளவில் யூகலிப்டஸ் மரங்களை உற்பத்தி செய்பவர்கள் சீனா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், தென்னாப்ரிக்கா ஆகியவை
அழகிய கம்பீரமான தோற்றம், அபாரமான உயரம், பிரகாசமான மலர்கள், பசுமை மாறா நறுமணமிக்க இலைகள், தேன் கொண்டிருப்பது, நெருப்பையும் தாங்கி சாம்பலிலிருந்து முளைத்தெழும் இயல்பு என யூகலிப்டஸ் பிற மரங்களை விட தனித்துவம் வாய்ந்தது
பகல்முடிந்து மாலையானதுமே நாமனைவரும் இரவின் மடியில் உறங்குவதற்கான ஆயத்தங்களை செய்யதுவங்கிவிடுகிறோம். இரவில் அணைவது என்பது நமக்கு குருதியிலேயே இருக்கும் ஓருணர்வு. செயல்பாடுகளை மெல்லமெல்ல குறைத்து பின்னர் முழுவதுமாக நிறுத்தி பாதுகாப்பாக தாழிட்டுக்கொண்ட வீடுகளுக்குள் போர்வையின் கதகதப்புக்குள் உறவுகளினருகாமையில் ஆழ்ந்துறங்குவதே நமக்கெல்லாம் இரவென்பது.
அதைதாண்டிய இரவென்றால் நாமறிந்தது இரவு நேர காவலாளிகள், திருடர்கள், பாலியல் தொழில்கள், தொழிலாளிகள், குற்றங்கள், இரவுப்பயணங்கள், இரவு ஷிப்ட் பணியாற்றுபவர்கள் ஆகியவற்றை மட்டுமே
இப்படி இரவுகளில் குறிப்பிட்ட அந்தரங்க, வாழ்வியல் மற்றும் பணிச்சூழல் காரணமாக விழித்திருப்பர்களை தவிர இரவுவாழ்வு குறித்தும் இரவுலகு குறித்தும் நாமதிகம் அறிந்திருக்கவில்லை
ஆனால் இரவுலகை அதன் பல மர்மங்களை அதிலிருக்கும் உயிராற்றலை இன்னும் பலவற்றை சொல்லும் பிரிட்டிஷ் இயற்கை ஆவணப்படத்தொடரான ‘’ Night on Earth ’’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. பிரபல அமெரிக்க திரைநட்சத்திரமும், வர்ணனையாளருமான சமீராவில்லியின் கம்பீரக்குரலில் உருவாகி இருக்கும் இந்த அற்புதமான தொடரை ப்லிம்சோலி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இச்சிறு தொடரின்
நிலவின்புலத்தில்சமவெளிகள்
உறைந்தஇரவு
வனத்தின் இரவு
இருண்டகடல்கள்
உறங்காநகரங்கள்
விடியும்வரை
-ஆகிய ஆறு அத்தியாயங்களும் ஜனவரி 29, 2020ல் வெளியாகியுள்ளது.. ஒவ்வொரு அத்தியாயமும் ஒருமணி நேர நீளமுள்ளது.
ஒளிப்படக்குழுவினர் உலகின் அசாதாரணமான வாழிடங்களின் உயரங்களில் ஏறி, ஆழங்களில் இறங்கி, பனியில் உறைந்து, குளிரில் நடுங்கி, நீரில் குதித்து , புழுங்கி வியர்த்து, வன்பாலையில் வதங்கி, மழையில் நனைந்து, வெயிலில் வாடி, மிகக்குறைந்த கேமிரா வெளிச்சத்தில்,நிலவும் நட்சத்திரங்களும் அளித்த இயற்கை ஒளியிலேயே இத்தொடரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பது பிரமிப்பூட்டுகின்றது
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள் உள்ளிட்ட 30 நாடுகள்ன் பல வாழிடங்களில் படமாக்கப்பட்ட இத்தொடரில் அதிநவீன தொழில்நுட்பங்களுடைய காமிராக்களும், இராணுவத்தில் உபயோகிக்கும் தொழில்நுட்பங்களும், உடல்வெப்பத்தை காட்சியாக்கும் சாதனங்களும், ட்ரோன் காமிராக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறன
பீட்டர் ஃபிசனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், முதல் அத்தியாயத்தில் நிலவின் புலத்தில் ஆப்பிரிக்கவின் சவன்னா புல்வெளிகளிலிருந்து பெரூவியப்பாலைகள் வரையில் தேய்ந்து வளரும் நிலவின் பாதையினூடே , அந்நிலவொளியிலேயே, கொன்று தின்னிகளையும் அவற்றின் இரைவிலங்குகளையும், அவ்விரு உயிர்களையும் யுகங்களாக பிணைத்திருக்கும் இப்புவியின் இரக்கமற்ற விதியையும் துல்லியமாக காண்பிக்கின்றது.
இதுவரையிலும் நாம் கனவிலும் கற்பனையிலும் கூட கண்டிருக்காத, காண்பதற்கான சாத்தியங்களும் இல்லாத காட்சிகளே தொடர்முழுவதும் இருப்பவை. ஒருசில காட்சிகளைத்தவிர பிற அனைத்துக் காட்சிகளுமே இரவொளியிலும், பாலெனப்பொழியும் நிலவின் புலத்திலும், நட்சத்திரங்களின் மெல்லிய ஒளியிலும்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன.வேட்டைவிலங்கின் கண்களாகவும் உயிரச்சத்தில் ஓடும் இரைவிலங்கின் உடல்மொழியாகவும் இருட்டில் நமக்கு தெரியும் கமிராக்கண்கள் வழியே விரியும் நாமறியாததோர் இரவுலகு நம்மை அதிசயத்திலாழ்த்துகின்றது.
இதுவரையிலு திரையில் மிகையொளிக்காட்சிகளையே அதிகம் கண்டு பழகியிருக்கும் நமக்கு நிலவின் புலத்தில் வேட்டை விலங்கின் பசியை இரைவிலங்கின் உயிரச்சத்தை, கொல்லுதலும், கொல்லப்படுதலும்,இரைதேடலும் இணைதேடுதலுமானதோர் இயற்கையின் ஆடலை , இரவாடிகளின் உலகினை மிக நெருக்கத்தில் காட்டுகிறார்கள், உண்மையில் திரையை நாம் காண்பது காட்டின் கண்களில்
ஒளிரும் கூழாங்கல் கண்களுடன் விலங்குகளை அவற்றின் துள்ள்லை தேடலை விண்மீன்களின் செறிவை முகில் மறைக்கும் நிலவை காட்டிதுவங்குகின்றது காட்சி மரங்களும் இருக்கும் புல்வெளிகளின் இரவு வாழ்வை சொல்லும் முதல் அத்தியாயம் சவன்னாவில் நெருக்கமின்றி வளர்ந்திருக்கும் மரங்களும் இருக்குமாதலால் பல்வகைப்பட்ட உயிர்களுக்கு அது வாழிடமாக இருக்கின்றது.அச்சூழலில் உயிர்களின் அச்சத்தை விழைவை விரைவை எப்படியும் தக்க வைத்துக்கொண்டாகவேண்டிய வாழ்வை என அனைத்தயுமே காண்கிறோம் நிலவின் மென்னொளியில்.
அந்திச்சூரியனின் செவ்வொளி மீதமிருக்கும் வானின் பின்னணியில் பகலில் மட்டுமே தனித்து வேட்டையாடுமென நம் அறிந்திருக்கும் சிறுத்தைகள் கூட்டமாக இரைதேடுகின்றன.செந்நிறஒளியில் தீப்பிடித்ததுபோல் எரியும் புல்மலர்க்குவைகளின் நடுவே விலங்குகளை காண்பது, முழுநிலவு நாளில், சூரியனைவிட 4 லட்சம் மடங்கு மங்கிய அதன் ஒளியில், பரந்துவிரிந்த புல்வெளியின் நடுவே ஒற்றைப்பெருமரமும் ஒரிடத்தில் கூட்டமாக கொன்றுதின்னிகளும் அமர்ந்திருப்பது,, அவை இரைதேட புறப்படுவது, அந்நேரத்தில் புல்லுண்ண வந்திருக்கும் மான்கூட்டங்களை அவை தேடிச்செல்வது, இரவரசனான சிங்கங்களின் இரை தேடலும்,கொண்றுண்ணலும் இரவிலேயே நிகழ்வது,கொழுத்த நீர்யானைகளின் உடளளவில் நான்கில் ஒரு பங்கே இருக்கு இளம் சிங்கங்களினால் வேட்டையை வெற்றிகரமாக நடத்தமுடியாமலாவது,கூரியமுட்களுடன் உடல் சிலிர்த்து நிற்கும் ஒரு அன்னை முள்ளம்பன்றி சூழ்ந்திருக்கும் சிங்கங்களின் முகத்தை தன் உடல் முட்களால் காயப்படுத்துவது, அன்னைமைக்கு முன்பாக கொல்லுதல் தோற்றுப்போவது,என்று விலங்குகளின் வாழ்வின் மர்மங்கள் ஒவ்வொன்றாக கண்முன் விரிகிறது
இதுமட்டுமல்ல இன்னுமிருக்கிறதென்று மெக்ஸிகோ பாலையின் இரவுத்தாவரங்களின் ரகசிய வாழ்வுக்குள் நம்மை அழைத்துச்செல்கின்றது கேமிரா. அவ்விடத்தின் கள்ளிகள் பெரும்பாலும் இரவில் மலருகின்றன .இரவாடிகளான மெக்சிகோவின் நீளநாக்கு வெளவால்கள் தங்களின் மீயொலி(ultra sound) அலைகளை கணக்கிட்டு மலர்களை அடைந்து உடலின் நீளத்திற்கு இணையாக இருக்கும் நாக்குகளால் தேனருந்தி ஒன்றிலிருந்து மற்றோரு மலருக்கு செல்லுகையில் எடுத்துச்செல்லும் மகரந்தந்ததுகள்களால் மகரந்தசேர்க்கையையும் செய்கின்றன. வெளவால்களுக்கு உணவு, கள்ளிகளுக்கு இனவிருத்தி இரண்டும் ஒரிரவில் நிலவொளியில் நடைபெறும் காட்சிகள் அத்தனை துல்லியமாக, அத்தனை தெளிவாக, அத்தனை அழகுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான் பகி்ர்வாழ்வினால்தான் பாலையும் உயிர்ப்புடனிருக்கின்றது, இப்படி தேனும் மலரும் மகரந்தமுமாக அழகு மட்டுமல்லாது,கொடிய நஞ்சுடைய கிலுகிலுப்பை பாம்புகளும்,விஷச்சிலந்திகளும் அதே பாலையின் அவ்விரவில்தான் நடமாடுகின்றன. பகலின் வெப்பம்மிக அதிகமானதால் இவை அனைத்துமெ இரவில்தான் வெளியே வருகின்றன.
தேள்களின் உடல்ரோமங்கள் கூட தெளிவாக தெரியும்படியான காட்சிகளுக்கு படப்பிடிப்பு குழுவினருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய அடர்ரோமங்களுடைய உடல்கொண்ட தேள்கள் புற ஊதாகதிரொளியில் மின்னுவது ஏனென்று அறிவியலாலேயே விளக்கமுடியாத புதிர்தான் இணைசேர்ந்துகொண்டிருக்கும் தேள்களிரண்டை உண்ணவரும் பாலையின் சின்னஞ்சிறிய எலி. தேளின் கொடும் நஞ்சு எலியை ஒன்றும் செய்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.
ஓருயிர் இணை சேர இரவில் வெளியே வந்தால் இன்னோர் உயிர் இரைதேட வருகின்றது . இயற்கையின் இப்படியான பல அதிசயங்களை இத்தொடர் நமக்கு காட்டியபடியே இருக்கின்றது.
அந்த பெருவிய பெரும்பாலை கொடும்பாலைதான் எனினும் பாலை பசிஃபிக் பெருங்கடலை சேருமிடத்தில் மற்றோரு உலகம் இயங்குகின்றது.அங்கு வாழும் நீர்நாய்களின் வாழ்வும் காட்டப்படுகின்றது..நீர்நாய்களின் குட்டிகள் இரவில் வேடடையாடுகின்றன ரத்தம் குடிக்கும் வெளவால்களும் கடல்சிங்கங்ளும். இரவின் மிகக்குறைந்த ஒளியில் ஆயிரக்கணக்கில் மேய்ந்துகொண்டிருக்கும் விலங்குளை அவற்றின் ஒளிரும் கண்களுடன் காண்பது ஒரு பெரும் அனுபவமென்றால் ஒற்றையாக அவற்றிலொன்றை ஒரு பெண்சிங்கம் வேட்டையாடுவதை பார்ப்பது அதனினும் பெரிய அனுபவமாகிவிடும்.
நிலவேயில்லா நாளொன்றில் நிலவொளியை காட்டிலும் 200 மடங்கு மங்கிய ஒளியை கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மெல்லொளியிலும் நிகழ்கிறது தேடல் நிறைந்த அவற்றின் வாழ்வு.
வெறும் மூன்று செமீ அளவுள்ள சின்னஞ்சிறிய சிலந்தியொன்று தொட்டுவிடாலாமென்னும் அண்மையில் தெரியும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் செறிந்தொளிரும் வானின் கீழ் பரந்துவிரிந்த ஒழுங்கான மணல்வரிகளுடன் இருக்குமந்த பாலையில் 400 மீட்டர்கள் கடந்துசென்று தன் இணையை தேடுவதும் அதற்குள் அதை இரையாக்க வரும் இன்னொன்றுமாக ஒரு மர்மத்திரைப்டத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத உண்மை காட்சிகள் நிறைந்துள்ள தொடர் இது.
மகாபாரதக்கதையை சொல்லுகையில் ’’இப்புவியில் எக்கதையும் புதிதல்ல ’’என்பார்கள், அவ்வாறே இவ்விரவுலகக் கதைகளும் , நிகழ்வுகளும் புதியவைகளல்ல, யுகங்களாக நிகழ்ந்துகொண்டேயிருந்து உலகின் சமநிலைக்கு காரணமாயிருப்பவை, நாமிதுவரை அறியாதவைகளும் காணாதவைகளுமான இவை, நாமனைவருமறிந்து கொள்ளவேண்டியவையும் கூட. இரவுலகைஅறிவதென்பது இயற்கையின் இன்னொரு முகத்தை அறிவதுதான்,
தென்னிந்திய கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களின் சிறு வயது நினைவுகளில் மருதாணி வைத்துக்கொண்டதும் நிச்சயம் பசுமையாக இருக்கும். மருதாணி்ச் சிவப்பில் பளபளக்கும் விரல் நுனிகளும் இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொண்டு தூங்காமல் கழித்த இரவுகள், யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்னும் ஒப்பீடுகள், கைகளைக் கழுவியவுடன் சாப்பிடும் உணவில் வீசும் மருதாணி வாசமும் இந்த தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்காதவைகள். இன்றும் தென்னிந்திய கிராமங்களில் கை விரல்களுக்கு மருதாணி வைத்துக்கொள்ளும் பழக்கம் பரவலாக புழக்கத்தில்தான் இருக்கிறது. நகர்ப்புறங்களில்தான் ரசாயன ஹென்னா பசைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
மருதாணிப் பசையில் உடலில் சித்திரங்கள் வரையும் கலை மிக மிகப் பழமையானது. மருதாணி எப்போதிலிருந்து அழகுப் பொருளாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது என்றாலும் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழகு சாதனப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் மருதாணி இருந்திருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
மருதாணி பற்றிய தொல்லியல் சான்றுகள் எகிப்திலிருந்து கிடைத்திருக்கின்றன. மம்மிகளாக்கப்படும் முன்பு இறந்த உடல்களின் கை மற்றும் கால்விரல் நகங்களில் மருதாணிப் பசை பூசும் வழக்கம் எகிப்தில் இருந்திருக்கிறது. கிளியோபாட்ரா மற்றும் இரண்டாம் ராம்செஸ், ஆகியோரின் மம்மி ஆக்கப்பட்ட உடல்களில் மருதாணி சாயத்தில் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலை சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணி சித்திரங்களை வரைந்து கொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது மிக பழமையான இந்திய கடவுள்களின் சித்திரங்களிலும் மருதாணி வடிவமிட்ட கைவிரல்களை பார்க்க முடியும்..
இறைத்தூதர் நபி அவர்கள் இஸ்லாமிய ஆண்கள் தங்கள் தாடிகளை மருதாணியால் சாயமேற்றிக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமியப் பெண்களும் அவரது வழிகாட்டுதலின் பேரில் கை விரல்களையும் உள்ளங்கைகளையும் மருதாணிச் சித்திரங்களாலும் வடிவங்களாலும் சாயமேற்றி அழகுபடுத்திக் கொள்ளுகிறார்கள்.
ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வாழும் ’பெர்பெர்’ பழங்குடியினத்தவர்களில் மருதாணி வைத்துக்கொள்வது மிக முக்கிய சடங்கு. பருவமடைந்த பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது அவள் நல்ல குழந்தைகளை பெற்றுத்தர வழிவகுக்கும் என்றும் பெண்களை தீய சக்திகள் நெருங்காமலிருக்கவும் மருதாணி உதவும் என்று நம்புகிறார்கள். மருதாணி விழுதை அவர்கள் சியலா ( Siyala ) என்கிறார்கள்.
இந்தியாவிற்கு மருதாணி முகலாயர்களால் 12ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், மருதாணியை உடலில் பூசிக்கொள்ளும் கலையை ஷாஜகானின் காதல் மனைவி மும்தாஜ் அறிமுகப்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. முகலாய அரச குடும்பத்து பெண்கள் வடிவங்கள், சித்திரங்களை வரைந்துகொள்ளாமல் கைகளையும் பாதங்களையும் மருதாணி சாற்றில் முழுவதும் நனைத்து சிவப்பாக்கி கொள்ளும் வழக்கமே இருந்திருக்கிறது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட அழகிய இயற்கை வடிவங்களை வரைந்து கொள்வது 1940க்குப் பிறகு வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
மருதாணியே உலகின் மிகப் பழமையான இயற்கை ஒப்பனை பொருள் என்பதில் சந்தேகமில்லை. உலகின் பல கலாச்சாரங்களில் கொண்டாட்டங்கள்,விழாக்கள் மற்றும் குடும்ப மற்றும் பொது நிகழ்வுகளின் போது அழகு படுத்திக் கொள்ளும் பொருட்டு மருதாணி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மருதாணி / மருதோன்றி / மயிலாஞ்சி என அழைக்கப்படும் செடியின் தாவரவியல் பெயர் Lawsonia inermis. இது லைத்திரேசியே (Lythraceae) குடும்பத்தைச் சேர்ந்தது. வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கும் இத்தாவரம் பலுசிஸ்தானில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்தே இது உலகெங்கிலும் பரவியிருக்க வேண்டும்
’மெஹந்திக’ என்னும் மருதாணி செடியை குறிக்கும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே ’மெஹந்தி‘ என்னும் சொல் வந்தது. மருதாணி அலங்காரத்திலும் அதில் வரையப்படும் வடிவங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. பிரதானமாக அராபிய, வடிவம் இந்திய வடிவம் மற்றும் பாகிஸ்தானிய வடிவங்கள் உள்ளன. மரபான பல மருதாணி சித்திரங்கள் செல்வம், வளமை, அதிர்ஷ்டம் மற்றும் மக்கட்பேறுக்கான ரகசிய குறியீட்டு வடிவங்களாகவும் இருக்கின்றன.
பல நாடுகளில் இது வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. Lawsonia inermis என்னும் இத் தாவரத்தின் அறிவியல் பெயரின் வேரை தேடினால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தாவர வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படும் லின்னேயஸின் (Linnaeus) நண்பரும் லின்னேயஸின் நூல்களை பிரசுரம் செய்வதில் மிக உதவியாக இருந்தவருமாகிய லாசோன் (lawson) என்பவரை கவுரவிக்கும் விதமாக இதன் பேரினத்துக்கு இப்பெயரை லின்னேயஸ் இட்டிருக்கிறார். inermis என்னும் சிற்றினப் பெயருக்கு ’கூரிய முட்களற்ற’ என்று பொருள். தமிழில் இச்செடி அலவணம், ஐவணம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மருதாணி செடி கிளைகள் நிறைந்த குறுமரம் ஆகவோ அடர்ந்த புதராகவோ வளரும் இயல்புடையது. ஒரு சில வகைகளில் மட்டுமே முற்றிய தண்டுகளில் முட்கள் காணப்படும். உறுதியான தண்டுகளும் எதிரடுக்கில் மிகக்குறுகிய இலை காம்புகளுடன் சிறிய நீள் முட்டை வடிவ இலைகள் இருக்கும். வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களில் கொத்து கொத்தாக நறுமணமுள்ள மலர்கள் காணப்படும். சிறிய உருண்டை வடிவ, நான்கு பகுதிகளாக இருக்கக்கூடிய ஏராளமான உலர்விதைகளுடன் கனிகள் இருக்கும். விதை உறை மிக கடினமானது.
லாசானியா பேரினத்தில் இருக்கும் ஒற்றைச் சிற்றினம் இனர்மிஸ் மட்டுமே ஆகும் எனவே இது ’monotypic genus’ எனப்படுகின்றது. இச்செடி நல்ல வெப்பமான காலநிலையில் மட்டும் செழித்து வளரும். 11 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் இச்செடி வளர்ச்சி குறைந்து இறந்துவிடும்.
.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கைகளையும் கால்களையும் மருதாணி விழுதால் அழகுபடுத்திக் கொள்வதும், மணப்பெண்ணின் உடல் முழுக்க மருதாணி சித்திரங்கள் வரைந்து விடுவதும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மொராக்கோவில் கர்ப்பிணிகள் மருதாணி இட்டுக் கொள்வதால் தங்களை தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் இன்னும் பல சமுதாயங்களில் மருதாணி இட்டுக் கொள்வது மங்கலம் என்றும் நம்பப்படுகிறது. இன்னும் சில கலாச்சாரங்களில் மணமகன் பெயரை மணமகளின் உடலில் மறைவாக மருதாணியால் எழுதிவிட்டு மணமகன் அதை அவர்கள் சந்திக்கும் முதல் இரவில் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் வழக்கம் இருக்கிறது.
பாகிஸ்தானில் மருதாணி விருந்து என்பது மணமகள் குடும்பத்தினரால் கொண்டாடப்படும் முன் திருமண நிகழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும் பங்களாதேஷில் சம்பிரதாயபூர்வமாக மருதாணி இட்டுக் கொள்வது இருநிகழ்வுகளாக மணமகன் மற்றும் மணமகள் இருவரின் தரப்பிலும் மிக விரிவாக நடத்தப்படும். பல நாடுகளில் மணமகள் கைவிரல்களில் மருதாணி சாயம் முற்றிலும் அழிந்து போகும் வரையில் அவள் புகுந்த வீட்டு வேலை செய்ய வேண்டியதில்லை என்னும் பழக்கம் இருக்கிறது. எத்தனை அதிகமாக சிவக்கின்றதோ.அத்தனைக்கு தம்பதியினர் அன்புடன் இருப்பார்கள் என்னும் நம்பிக்கையும் பல சமூகங்களில் இருக்கிறது. இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் எனும் இடத்தில் மருதாணி நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறும்.
இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்களில் மருதாணி மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் ’ரொங்கலி பி’கு என்னும் நிகழ்வில் மருதாணி மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
வட இந்தியாவில் கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க,கார்த்திகை மாத முழு நிலவுக்கு பின்னரான நான்காம் நாளில் மனைவியர் நோன்பிருக்கும் ’கர்வா செளத்’ (Karwa Chauth) என்னும் பண்டிகையின் போது அனைத்து பெண்களும் விரல்களில் மருதாணி இட்டுக் கொள்ளும் சடங்கு முக்கியமானதாக இருக்கும்
மருதாணி இலைகளில் 2-hydroxy 1.4 naphthoquinone (Lawson) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது இதுவே இலைச்சாற்றின் அடர்செம்மண் நிறத்துக்கு காரணமாகும். நல்ல வெப்பமான இடங்களில் வளரும் மருதாணி செடிகளின் இலைகளின் அதிகமாக காணப்படும் இந்த வேதிப்பொருள் சருமத்தை இளம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து கருஞ்சிவப்பு நிறம் வரை சாயமேற்றும். பித்த உடல் கொண்டவர்களின் சருமம் கருஞ்சிவப்பிலும் பிறருக்கு செம்மண் நிறத்திலும் மருதாணி சாயமுண்டாக்கும். இவ் வேதிப்பொருள் இலை நரம்பிலும் தளிரிலைகளிலும் அதிகம் காணப்படும்.
இலைகளை அரைக்கையில் இந்த வேதிப்பொருள் கசிந்து வெளியேறி பின்னர் சருமத்திலும் நகங்களிலும் உள்ள புரதங்களுடன் இணைந்து சிவப்பு சாய மூட்டுகிறது. உடலின் பிற பாகங்களை விட உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளின் தடித்த சருமத்தில் மருதாணி சாறு மிக நன்றாக சாயமூட்டி பல நாட்கள் மருதாணிச்சிவப்பை அவ்விடங்களில் தக்கவைக்கிறது.
மருதாணி விழுதில், எலுமிச்சை சாறு, கிராம்பு சாறு, புளி, சர்க்கரைக் கரைசல், காப்பி, டீ ஆகியவற்றை சிறிதளவு சேர்க்கையில் சாயத்தை இன்னும் அடர்த்தியாக்கும். மருதாணி இலைகளை அரைத்த விழுதை சருமத்தில் பூசிய பின்னர் நீராவியில் காட்டுவதாலும் சாயம் அடர்த்தியாகும்.
நான்கிலிலிருந்து ஆறு மணிநேரம் சருமத்தில் வைத்திருந்த பின்னர் நீரில் கழுவுகையில் ஆக்ஸிஜனேற்றம் (oxidation) ஏற்பட்டு சாயத்தின் அடர்த்தி குறையும் என்பதால் உலர்ந்த மருதாணியைத் தாவர எண்ணெயைக்கொண்டு அகற்றலாம். காய்ந்த மருதாணி விழுதை வெதுவெதுப்பான உப்பு நீரிலோ, சர்க்கரை கலக்கபட்ட தேங்காய் எண்ணையாலோ அல்லது உப்பு சேர்க்க்கப்பட்ட ஆலிவ் எண்ணெயாலோ அகற்றுகையில் சருமம் உலர்வது தடுக்கபட்டுச் சிவப்பு நிறமும் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும்.
மருதாணியை அரைத்துப் பூசுகையில் சாயம் சருமத்தின் ஒவ்வொரு அடுக்காக ஊடுருவிச்சென்று சாயமேற்றுகின்றது. சருமத்தின் மேலடுக்கு அடர்ந்த நிறத்திலும் கீழே செல்லச் செல்ல நிறம் குறைந்து கொண்டே வரும். ஒரு மாதம் வரைக்கும் இருக்கும் இந்த சாயம் பின்னர் மெல்ல மெல்ல புதிய சரும அடுக்குகள் உருவாகும் போது மங்கிக்கொண்டே வரும்.
மருதாணி தலைமுடியையும் நிறமூட்டுகின்றது. தலைக்கு மருதாணி சாயமேற்றிக்கொள்கையில் அது முடி வளர்ச்சிக்கு உதவி தலையில் பேன் மற்றும் பொடுகு களையும் அழித்துவிடுகிறது. தலைமுடிக்கு உபயோகப்படுத்தும் போது அரைத்த மருதாணி விழுதை 8 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும் விழுது தலைமுடியில் 20 நிமிடங்கள் இருந்தால் போதும்.
பண்டிகை காலங்களிலும்,, திருமண விழாக்களிலும் அழகுபடுத்தி கொள்வதற்காக மருதாணி சாறு அதிகம் பெண்களாலும் குறைந்த சதவீதத்தில் ஆண்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சில நாடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்கும் மருதாணியிட்டு அழகு பார்க்கிறார்கள் கால்நடைகளின் உடலில் வரும் சிறு சிறு காயங்களுக்கும், கொப்புளங்களுக்கும் இந்திய கிராமங்களில் மருந்தாக மருதாணி அரைத்து பூசும் வழக்கம் இருக்கிறது..
கோடையில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்து தலையில் பூசி குளிக்கையில் உடல் வெப்பம் பெருமளவில் குறையும் கைகால்களில் மருதாணி இட்டுக்கொள்வது உடலை குளிர்விக்கும். மருதாணி மலர்களை ஒரு துணியில் கட்டி தலையணைக்குள் வைத்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும். மருதாணி இட்டுக் கொள்வதால் மன அழுத்தம் தலைவலி காய்ச்சல் சரும வியாதிகள் ஆகியவை நீங்கும்
மருதாணி உடலை குளிர்விப்பதால் பெண்கள் இதை வைத்துக் கொள்ளுகையில் அவர்களின் மாதவிலக்கை ஒத்திப்போடலாம். இதன் பொருட்டே பல சமூகங்களில் முக்கிய மங்கல விழாக்களின் போது குடும்பத்தின் அனைத்து பெண்களும் மருதாணி வைத்து தங்களை அழகு படுத்திக் கொள்ளும் வழக்கம் வந்தது. மருதாணியின் மணம் பாலுணர்வை தூண்டும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஜந்தா குகை ஓவியங்களில் மருதாணிச் சாற்றின் வண்ணங்களை இன்றும் காணலாம். மருதாணி சாற்றில் வலம்புரி ஸ்வஸ்திகம் வரைந்து கொள்வது வட இந்திய வியாபாரிகளிடம் பலகாலமாக இருந்து வரும் வழக்கமாகும்.
மலர்களிலிருந்து நல்ல மணமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மருதாணி எண்ணெய் எடுக்கப்படுகிறது. இலைச்சாறு தசையினை இறுக்கும் தன்மை கொண்டது. கிருமிகளையும் அழிக்கும். துணிச்சாயமாகவும் கூட இவை அதிகம் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மருதாணி வணிகரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் மிக அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ராஜஸ்தான் பாலி கிராமத்தில் 150 வருடங்களாக மருதாணி முக்கிய பயிராக இருக்கிறது..
3 மாதங்கள் வளர்ந்த மருதாணி செடிகளிலிருந்து தொடர்ந்து இலைகளை எடுத்துக்கொண்டு இருக்கலாம் மருதாணி எல்லா விதமான மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைகளிலிருந்தும் போத்துகள் எனப்படும் வெட்டிய தண்டுகளிலிருந்தும் மருதாணி சாகுபடி செய்யலாம் விதைகள் கடினமான விதையுறையுடன் இருப்பதால் சில நாட்கள் நீரில் ஊற வைத்த பின்னர் முளைக்க வைக்க வேண்டும்.
மருதாணியைப்போலவே சாயமேற்றப்பயன்படுத்தப்படும் மற்றொரு தாவரம் லிப்ஸ்டிக் மரம் என அழைக்கப்படும் Bixa orellana. அமெரிக்க பழங்குடியினரால் இதன் விதைச்சாற்றிலிருந்து,Annatto எனப்படும் சாயம் எடுக்கப்பட்டு உடலில் பலவகையான சித்திரங்களை தீட்ட பயன்படுகிறது. பிரேசில் பழங்குடியினரும் இதே விதை சாற்றை உடலில் வண்ணங்கள் தீட்டி கொள்ளப் பயன்படுத்துகிறார்கள்
கருநீல வண்ணத்துக்காக Genipa Americana என்னும் தாவரத்திலிருந்து ஜாகுவா எனபப்டும்( jagua) சாறு எடுக்கப்பட்டு வட மற்றும் தென் அமெரிக்க பழங்குடியினரால் உபயோகப்படுத்தப்படுகிறது.
தற்போது பரவலாக புழக்கத்தில் இருக்கும் வெள்ளை மருதாணி இயற்கையான மருதாணி அல்ல அது தோலில் ஒட்டிக்கொள்ளும் பிளாஸ்டிக் .அதைப்போலவே நடனமாடுபவர்க்ளும், திரை நடிகர்களும் கைவிரல்களலும், பாதங்களிலும் பூசிக்கொள்ளும் ’அல்டா’ எனப்படும் செம்பஞ்சுக்குழம்பு மருதாணி அல்ல முன்பு வெற்றிலை சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட அல்டா தற்போது அரக்கு மற்றும் செயற்கை வேதி பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகின்றது. இச்சாயம் மருதாணி போல அதிக நாட்கள் நீடிக்காது.
சந்தையில் கிடைக்கும் மருதாணியில் வேறு இலைகளின் பொடிகளும் வேதிப்பொருட்களும் அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது.அழகியல் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் உலர்ந்த மருதாணி இலைகளின் விலை கிலோ 50 ரூபாய்கள். பல விவசாய நிலங்களில் உயிர்வேலியாகவும் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் மருதாணி பயிரிடப்படுகின்றது. பூச்சியோ நோயோ தாக்குவதில்லை என்பதால் எந்த செலவுமின்றி இதை வளர்க்கலாம். அழகு சாதனப்பொருட்கள், கேசத் தைலம், இயற்கைச் சாயம் மருந்து பொருட்கள் எனப் பல தொழில்களில் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுவதால், மருதாணி வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும்.
காவல் துறை சார்ந்த ஒரு முக்கிய நடவடிக்கைக்கு பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜித் மதுரை தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் ’’நாங்க வேற மாறி, வேற மாறி’’ என்று நடனமாடுகையிலேயே மீதி படத்தை யூகிக்க முடிகிறது. வலிமை வெளியாக வருடக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களை அஜித் நிறைவுறச் செய்திருக்கிறாரா? உண்மையில் இது ’வேற மாறி’ படம்தானா?
துவக்கம் வழக்கமான அஜித் படங்களைப் போலவே அந்நிய நாட்டில்தான். ஒரு காய்ந்த புதரிலிருந்து கொகெய்ன் இலைகள் பறிக்கப்பட்டு சுடச்சுட அங்கேயே அரைத்து பாலெடுத்து கலக்கி பொடியாக்கி பார்சல் செய்யப்பட்டு லாரியிலும் ஏற்றப்படுகிறது
அங்கிருந்து பாண்டிசேரி பின்னர் சென்னை என பல கைகள் மாறி அப்பாவி இளைஞர்களின் வாய்க்கும் மூக்குக்கும் வந்து சேர்கிறது. அஜித் முன்பே சொன்னதுபோல ’வேற மாறி’ காவல் அதிகாரி, உயிரடுப்பதில் விருப்பமில்லாதவர், கால் அல்லது கைக்கட்டு போடுகிறார். குற்றவாளிகள் போடும் ஸ்கெட்ச்சை முன்பே அறிந்து அந்த இடங்களுக்கெல்லாம் முன்னதாகவே போய் அடி தூள் கிளப்புகிறார். நாயகி இல்லை. ஆனால் அறிமுகக்காட்சியில் கொம்பும் சங்கும் துந்துபியும் முழங்க துர்க்கை பின்னணியில் எழுந்துவர, அஜித் காரின் டாப்பை திறந்து காட்சிதருவது போன்ற மாமுலான காட்சிகளுண்டு.
இந்த காட்சிகளுக்கெல்லாம் அனைத்து சென்டர்களிலும் படம் ஓடவேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டிருக்கும் அஜித் நாயகி விஷயத்திலும் சமரசம் செய்து கொண்டிருக்கலாம். அசத்தலான காவல்துறை அதிகாரியின் வேற மாதிரி நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் ’’நீங்க வேற மாறி’’ என்று பாடி ஆட இவரும் இறங்கி கூட ஆடுவதில் மட்டும் ஏன் சமரசம் செய்து கொண்டார்? இதற்கு வழக்கமான நாயகி, அபத்த நகைச்சுவை, குத்து பாட்டு என்றே படம் பண்ணி இருக்கலாமே? அரதப்பழசான குடும்ப செண்டிமெண்ட். தேவையில்லா குடிகார அண்ணன் காட்சிகள்.அஜித் கஷ்டப்பட்டு ஸ்டெப்ஸ் போட்டு பாத்திரத்துக்கு பொருத்தமில்லாமல் நடனமாடுகிறார்
அஜித் மீசையும் இல்லாமல் மொழுமொழு முகத்தில் என்ன உணர்ச்சிகளை காண்பிக்கிறார் என்றும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் கருப்புக்கண்ணாடியும் போட்டுக்கொள்கிகிறார்.தமிழ் படத்தின் நாயகன் ஏன் தமிழ்நாட்டின் ஆண்மகனை போல் இருக்கக் கூடாது?. தன்னை தல என்றும், அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்க வேண்டாம் அஜித் என்று அழைத்தால் போதும் என்று வேண்டி விரும்பி அஜித் கேட்டுக்கொள்ளும் போஸ்டர்கள் திரையரங்கங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த வித்தியாசமெல்லாம் படத்தில் காணோம்.
கிராஃபிட்டி, ஸ்கேன், ஹேக்கிங், பிளாக் செய்வது போன்ற காட்சிகள் புரிந்ததோ இல்லையோ அஜித் என்று பெயர் வருகையிலும் அஜித் தோன்றுகையிலும் அப்பாவி ரசிகர்கள் ஆராவாரம் கூரையை பிளக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு நியாயம் செய்யாவிட்டாலும் அநியாயம் செய்யாமலாவது இருந்திருக்கலாம்’
நாயகிக்கு பதில்பில்லாவை நினைவுட்டும் உடைகளில் இரு சக பெண் அலுவலர்கள்,, நகைச்சுவையும் வில்லனும் டூ இன் ஒன் கார்த்திகேயாவேதான். இளம் நெப்போலியனை நினைவுட்டும் முகச்சாயல். தனக்குத்தானே கெக்க பிக்கேவென்று அவ்வப்போது சிரித்துக்கொண்டு வெறும் வாய் சவடால் பேசிக்கொண்டு நகைச்சுவைக்கென்று தனி நடிகர் இல்லாத குறையை வெகுவாக தீர்க்கிறார். தமிழ்சினிமாவின் மாறாத நூற்றாண்டு மரபுப்படி இறுதிக்காட்சியில் சட்டையை கிழித்து விட்டு திமிறும் தசைத்திரளை காண்பிக்கிறார். நல்லவேளைக்கு அஜித் பதிலுக்கு சட்டையை கழற்றவில்லை என்பதில் ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம்
நீதி போதிக்கும் வசனங்கள், தேவைக்கும் அதிகமான நீளத்தில் துரத்தல் காட்சிகள், தேவையற்ற கடத்தல் தொடர் கண்ணிகள் என்று நீண்டுகொண்டே போகிறது படம்.கடைசி காட்சியில் முத்தாய்ப்பாக என் ’’குடும்பத்தை ஒன்னும் பண்ணாதே’’ என்று வில்லனிடம் இறைஞ்சுகிறார் நாயகன் அஜித்
வலிமையை எந்த காலத்தில் நினைத்தலும் உறுமிக்கொண்டு சீறிப்பாய்ந்த பைக்குகள் தான் நினைவில் வரும். ஏராளம் பைக்குகள் என்றால் பைக் சண்டைகளோ தாராளம். 3 மணி நேரத்துக்கான படம் எப்போது முடியும் என கடிகரத்தை பார்க்காதவர்கள் இல்லை திரையரங்கில்.
இந்த படத்துக்கு எதற்கு இத்தனை நேரம்? இந்த படத்திற்கு எதற்கு இத்தனை இத்தனை வருட காத்திருப்பு?
இறுதிகாட்சியில் அஜித்தின் அண்ணன் கையில் இருக்கும் ஜிபிஎஸ் உதவுவதை காட்டவா அத்தனை நீநீநீநீநீநீள குடிகார அண்ணன், அண்ணி சண்டை என்று காட்சிகள்?
கார்த்திகேயாவுடன் சுமித்ராம்மாவும் இன்னொரு வில்லியென்றுதான் சொல்லவேண்டும். துறைசார்ந்த டார்ச்சர் போதாதென்று சுமித்ராம்மாவும் அவர் பங்குக்கு வீட்டில் சாப்பிட முடியாதென்று சொல்லி அஜித்தை படுத்தி எடுத்து, படுத்துக் கொள்கிறார் கடைசியில் காதலியை சுட்ட குட்டியை மிதி மிதியென்று மிதித்துவிட்டு, சுமித்ராம்மாவையும் வில்லன் இரண்டு மிதி மிதிக்கையில் நாம் அஜித்தாக இருந்து ஆசுவாசமடையலாம் அத்தனைக்கு டார்ச்சர் அம்மா. இளம் சுமித்ராவாக உமா வருவது இதமளித்தது
410 இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் பிச்சை எடுக்கிறார்களா?? எங்கு இத்தனை துல்லியமான புள்ளி விவரக்கணக்கு கிடைத்தது? வேலையில்லா பட்டதாரி, குடும்ப செண்டிமெண்ட், வேற மாதிரி காவலதிகாரி, போதும் போதும் என்னும் அளவுக்கு பைக் ரேஸ் என்று கலந்துகட்டி குழப்பி ஒரு படம் 2.55 மணி நேரத்துக்கு
வில்லனே சொல்வதுபோல ஒருத்தருக்கும் தொழில்நுட்ப காட்சிகள் விளங்கவில்லை. சர்வர், இடம் மாறிக்கொண்டே இருக்கும் தலைமையகம் அதை ஹேக் செய்வது, ஆயிரக்கணக்கான கணினி திரையின் முன் கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகள் சிஸ்டம் கிராஷ் ஆனதும் ’ஓ’ என்று கத்திக்கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டு எழுந்து நிற்பதெல்லாம் எப்படி யோசித்திருப்பார்கள் திரைக்குழுவினர் என்று நாம் தனியாக ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கிறது
அஜித் பைக் பிரியர் என்பதால் படம் முழுக்க பைக் துரத்துகிறது. உண்மையிலேயே இதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் ஆகியோர் படம் பார்க்க செல்லாமல் இருப்பது உசிதம், அத்தனை வன்முறை காட்சிகள். கழுத்து செயின் பறிக்கபட்டு அத்தனை பெண்கள் சாலையில் விழுந்து இறக்கும் காட்சிகள், கார் ஓட்டுநர்களை கழுத்தில் செயின் கட்டி காருக்குள் இருந்து வெளியில் இழுத்துக் கொல்வது, பைக் சேஸிங் காட்சியில் உச்சம் தொடும் இசையுமாக ரத்த கொதிப்பு இருப்பவர்களும் பார்க்கக்கூடாத படம்
யாரையும் என்கவுண்டர் செய்யக் கூடாது குற்றவாளிகளை திருந்தவேண்டும் என்றெல்லாம் முதல் பாதியில் சொல்லும் ’’வேற மாறி அஜித்’ சர்வசாதாரணமாக பைக்கில் துரத்துபவர்களை பஸ்ஸால் அடித்து தள்ளி விட்டு போவதும், துரத்தி வரும் கார் மற்றும் பைக்குகளின் மீது குண்டுகளை எறிந்து தீப்பிழம்புகளில் புகுந்து வெளியே வருவதுமாக இரண்டாம் பாதியில். வேற வேற மாறி ஆகிவிடுகிறார் என்ன லாஜிக்கோ?
பல ஸ்லீப்பர் செல்கள் தலைமையை நேரில் பார்த்ததில்லை பலர் கட்ட க்கடைசியில் தான் பார்க்கிறார்கள் ஆனால் அஜித் தம்பி குட்டி மட்டும் முதலிலேயே வில்லனால் கவனிக்கப்பட்டு ,அடுத்த காட்சியிலேயே வில்லனுடன் பைக்கில் ஊர் சுற்றுவது எப்படி என்று புரியவில்லை. குட்டி வசனம் பேசுவதும் நடிப்பதும் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்தது போலத்தான். வேலை இல்லாத விரக்தியாம், ஆனால் காதல் மட்டும் செய்வாராம் குட்டி.
பாராட்டும்படியானவைகள் என்றால் அருமையான நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் மெனக்கெட்டு இருப்பதுதான். திலீப் சுப்பராயன் ஹாலிவுட்டுக்கு நிகராக அமைத்திருக்கிறார் பல காட்சிகளை. அந்த மழையில் நடக்கும் சண்டை பிரமாதம். ஒளி இயக்கமும் பாராட்டுக்குரியது. செல்வம் என்னும் பாத்திரத்தில் நடித்தவர் தனித்துத் தெரிகிறார் நல்ல தேர்வு.வேற மாறி நடனக்காட்சியில் குழுவினரின் உடையலங்காரம் சிறப்பு.
உதிரிப்பூக்கள் விஜயன் சாயலில் இருக்கும் அஜித்தின் குடிகார அண்ணனுக்கும், போலீஸ் கமிஷனருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை வேறு குழப்புகிறது. முதல் பாதிமுழுக்க அஜித்தின் அண்ணன் கமிஷனர் ஆனால் பாவம் குடிகாரர், அஜித் துணை கமிஷனர் என்று நினைத்துக் கொண்டிருந்து, இரண்டாம் பாதியில் தான் தெளிந்தேன்
அப்பாவி(?).பைக் இளைஞர்களை கைது செய்திருக்கையில் காவல் நிலையத்துக்கு வெளியே கதறிக்கொண்டு காத்திருக்கும் அம்மாக்களும், அஜித்தின் போதனைகளில் உடனடியாக திருந்தி கதவை திறந்ததும் கூட்டமாக ஓடி வந்து அவரவர் அம்மாக்களை கட்டிக்கொண்டு கதறும் திருந்திய குமரர்களுமாக ஏகத்துக்கும் நெஞ்சை பிழிந்த்தெடுக்கிறார்கள்.கடைசிகாட்சியிலும் விடாமல் அறம் போதிக்கிறர்கள். வினோத் என்னதான் பிரச்சனை உங்களுக்கு?
மொத்தத்தில் புரியாத தொழில்நுட்பக் காட்சிகள், நீளமான நெஞ்சை பதறவைக்கும் பைக் துரத்தல்கள், அரைத்து புளித்து நொதித்துப்போன கொலம்பிய கொகெய்ன் கடத்தல் கதை, மெழுகு பொம்மைபோல அஜித் என்று தாறுமாறாக கட்டமைக்கப்பட்ட படம்.
புதுமாறியும் வேற மாறியும் எதுவுமில்லாமல் அதே பழைய மாறியான படம்தான்
கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 2021 ல் வெளியானது ரஜினியின் ’’அண்ணாத்தே’’. கோவிட் தொற்று காலத்துக்கு பிறகு திரையரங்குகளில் திரையிடப்பட்டதாலும், தீபாவளி ரிலீஸ் என்பதாலும் வழக்கமாக இருக்கும் அதீத எதிர்பார்ப்பை விட இந்த முறை மிக அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்களும் பொதுமக்களும் காத்திருந்தார்கள். முதல் சில நாட்களில் டிக்கட் விலை பல்லாயிரங்களில் இருந்தது.
ரஜினியுடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, பாண்டியராஜன், ஜகபதி பாபு,, லிவிங்ஸ்டன், கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், யோகி பாபு என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை என்று எதுவும் இல்லை. பாசமலர் உள்ளிட்ட பல பழைய படங்களை, ரஜினியின் பழைய படங்கள், அண்ணன் தங்கை செண்டிமெண்டில் எடுக்கப்பட்ட அஜித் மற்றும் கார்த்தி ஆகியோர் படங்களை எல்லாம் எடுத்து கலக்கி கொடுக்கப்பட்ட திரைக்கதை நிறைவை கொடுக்காவிட்டால் போகிறது எரிச்சலை கொடுக்கிறது.
அலுப்பூட்டும் தொடர் நாடகம் பார்க்கும் உணர்வு முதல்பாதியிலேயெ வந்துவிடுகிறது. மிக தளர்ந்திருக்கும் ரஜினியும் அவருடன் காதல் காட்சிகளில் ஒட்டாமல் நடித்திருக்கும் நயன்தாராவும், படு பயங்கரமான ஒப்பனையில் கண்ணைப் பறிக்கும் நிறத்திலான ஆடைகளில் மீனா மற்றும் குஷ்புவும், சகிக்க முடியாத நகைச்சுவை என்னும் பேர் கொண்ட காட்சிகளில் லிவிங்ஸ்டனும் பாண்டியராஜனுமாக காட்சிக்கு காட்சி சொதப்பலும் எரிச்சலுமாக இருக்கிறது
அண்ணன் ரஜினி மீது அத்தனை உயிரை வைத்திருக்கும் தங்கை ஊர் நடுவே ’’உன் முடிவுதாண்ணா என் முடிவும், உன் விருப்பம் தாண்ணா என் விருப்பமும்’’ என்று நிஜமாகவே மைக் வைத்து சொல்லிவிட்டு, கல்யாணத்துக்கு முந்தின நாள் காதலனுடன் அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போவதும், அதையும் மன்னிக்கும் பாசக்கார அண்ணன் திடீரென்று ஏழையாகும் தங்கைக்கு. அவளுக்கு தெரியாமல் உதவி, சிக்கலிலிருந்து மீட்பதுதான் படத்தின் கதையாம்.
டைட்டில் காட்சியில் படம் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது, வன்முறை நிறைந்தது என்று காட்டுகிறார்கள். பார்வையாளர்கள் மீது காட்டப்பட்ட வன்முறைதான் அது என்பது பிறகே தெரிகிறது
எக்கச்சக்க உணர்ச்சி பொங்கல்கள் படம் முழுவதும். தங்கை, அண்ணன்,அண்ணனின் காதலி, பாட்டி என ஒருவர் பாக்கி இல்லாமல் நெஞ்சை கசக்கி பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
ரஜினி நயனின் காதல் காட்சிகள் என்னும் பெயரில் ’’பட்டூ. காள்ஸ் என்னும் கொஞ்சல்கள் எல்லாம் தலைவலிக்க வைக்கும் அளவுக்கு செயற்கை.சூரி தனியே காமடி பண்ண முயற்சிக்கிறார் மொத்த படமும் பார்வையாளர்களை பார்த்து சிரிப்பதால் தனியே காமெடி எடுபடவில்லை.
ரசிகர்களின் துவக்க கூச்சல்களும் ஆரவாரங்களும் அடங்கிய பின்னர் அரங்கில் மயான அமைதி நிலவுகிறது. ரஜினி என்னும் பிம்பம் அவர் நடிக்க வந்தபோது பிறந்தே இருக்காத இன்றைய இளைஞர்களின் நெஞ்சில் உருவாக்கும் எழுச்சி அவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து உருவாகியதுதான். ரஜினி நடிக்கவேண்டும் என்பதில்லை ஒரு திரைப்படத்தில் அவரது புகைப்படமோ அவரது பெயரோ இடம் பெற்றிருந்தாலும் கூச்சலிட்டு அதை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்னும் போது திரைக்கதை தேர்வில் அவர் இன்னும் எத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டில் புதிதாக என்ன? என்று ரஜினி கதை சொல்ல படுகையில் ஏன் கேட்கவில்லை? படப்பிடிப்பில் அரைத்து, புளித்து , நொதித்து கள்ளாகிவிட்ட காட்சிகளே மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகையில் கூட ‘’ஏன் இதையே எடுக்கிறோம். புதிதாக ஒன்றும் இவற்றில் இல்லையே? என்று ஏன் அவர் கேட்கவில்லை,
திரைக்கதை அபத்தம், காட்சிகள் அபத்த களஞ்சியம் என்றால் பாடல்களும் இசையுமாவது கேட்கும்படியாக இருக்கலாம் அதுவும் இல்லை, இசை பாடல் இயக்கம், ஒப்பனை ,கதை என எதுவுமே உருப்படியாக இல்லை
படத்துக்கான எதிர்வினைகளில் ரசிகர்கள் ஏமாற்றத்தை கோபமாகவும் அழுகையாகவும் வெளிப்படுத்தினார்கள். இயக்குனர் சிவாவை சகட்டுமேனிக்கு வசை பாடினார்கள்
ரஜினி தன் வயதுக்கேற்ற பாத்திரங்கள் இருக்கும்படி சொல்லப்படும் கதைகளை கேட்க ஏன் முன்வருவதில்லை. கடைசி காட்சியில் தங்கையான கீர்த்தி சுரேஷிடம் ’’நீ வயசுக்கு வந்தப்போ கூட’’ என்று துவங்கி ரஜினி பேசும் வசனங்களெல்லாம் தணிக்கை செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டு பெண்களை பெற்ற ரஜினிக்கு சக்தி வாய்ந்த ஊடகத்தில் பேசும் இந்த வசனத்தை பற்றி ஆட்சேபமேதும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது
தர்பார், கபாலி, காலாவிலிருந்தே திரைக்கதை என்ற ஒன்றே இல்லை என்பதை ரஜினி இன்னும் கவனிக்கவில்லை. இளமையை இழந்து விட்ட பின்பு கதையில் கவனம் செலுத்த வேண்டியது தான் வெற்றிகரமாக இருந்த அதே துறையில் கண்ணியமாக நீடித்திருக்க ஒரே வழி என்பதும் ரஜினிக்கு தெரியவில்லையா?
என் துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?என்று ரஜினி முன்பு பாடலில் தெரிவித்திருக்கிறார். முதல் காட்சிகளிலிருந்து ஆயிரங்களும் நூறுமாக ரசிகர்கள் செலவு செய்திருக்கும் பணத்திற்கும் அதன்பொருட்டு அவர்கள் சிந்தி இருக்கும் ஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் பதிலாக ரஜினி செய்திருப்பது வெறும் அநியாயம் மட்டுமே.
நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் சமீபத்தில் மிக அதிகம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வெற்றிப்படமுமான ஜெய்பீம் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நல்ல தமிழ்ப்படம்.
திரைப்படங்கள் கேளிக்கைக்கானவைகள் மட்டுமல்ல மக்களுக்கு பல முக்கிய விஷயங்களையும், சகமனிதர்களுக்கு நிகழும் அநீதிகளையும், சொல்லவும் இந்த சக்திவாய்ந்த ஊடகம் பயன்படுமென்பதை ஜெய்பீம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.
நீதிமன்ற வழக்கை அடிப்படையாக கொண்டு ஜோதிகாவை வைத்து எடுத்த ’பொன்மகள் வந்தாள்’ படத்திற்கான பிழையீடாக இந்த திரைப்படத்தை சூர்யா சொந்த தயாரிப்பில் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
நீண்ட வழக்கு விசாரணைகளை, சோர்வடைய வைக்காமல் பார்வையாளர்களையும் விசாரணையுடன் ஒன்றச்செய்யும் விதமாக அமைத்திருக்கிறார்கள். கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, பின்னணி இசை, ஒளி இயக்கம், படத்தொகுப்பு, இயக்கம் ,சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே வெகு சிறப்பு
நீதிமன்ற வழக்கை அடைப்படையாக கொண்டு வந்திருக்கும் முந்தைய திரைப்படங்களிலிருந்து ஜெய்பீம் வேறுபடுவது எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது இதில் பழங்குடியினப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதும், அந்த இனத்துக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதிலும்தான்.
1995’ல் ஹேபியஸ் கார்பஸ் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிபிக்கபட்ட வழக்கொன்றை நீதியரசர் சந்துரு என்பவர் கையிலெடுத்து, அவ்வழக்கில் நீதியை பெரும் போராட்டத்துக்கு பின்னர் வாங்கிக்கொடுத்தார் அந்த உண்மை வழக்கையே ஜெய்பீம் ஆக்கி இருக்கிறார் சந்துருவாக நடித்திருக்கும் சூர்யா.
அப்பாவியான ராஜாக்கண்ணு என்னும் பழங்குடியின இளைஞனொருவனை திருட்டு வழக்கில் முறையின்றி கைதுசெய்து, பின்னர் லாக்கப்பிலிருந்து அவன் தப்பி விட்டதாக சொன்ன காவல்துறைக்கெதிரே வழக்கு தொடர்ந்து, தன் கணவனை கண்டுபிடிக்க போராடிய கர்ப்பிணியான செங்கேணியின் கதை இது
.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து கொண்டிருப்பவர்களிடம் நேரிடையாக அவரவர் ஜாதியை கேட்டு அதன்படி அவர்களை வரிசையில் நிற்க வைக்கும் காட்சியும், விடுதலையாகி வரப்போகும் கைதிகளுக்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவர்களின் எளிய பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், அவர்கள் கண்முன்னே கைதிகளுக்கு நடக்கும் கொடுமையுமாக தொடக்க காட்சியிலேயே நம் மனதை கலங்கடிக்கிறார்கள்
எண்ணெய் காணாத தலைமுடியும், ஒட்டி உலர்ந்த தேகமுமாக இருக்கும் அவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஷ்பிரயோகமும் வன்முறையையும் பார்வையாளர்களால் மறக்க முடியாத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது
திரைப்படம் காட்டுவது உண்மையில் நடந்தவற்றில் மிக்குறைவு என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது.
சூர்யாவுடன் திரைக்கதையும் இணைநாயகனன்று சொல்லுமளவுக்கு கச்சிதமாக, சிறப்பாக இருக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.கலை இயக்குனருக்கு தனித்த பாராட்டுக்கள்.
மணிகண்டனின் திரைவாழ்வில் என்றென்றைக்குமாக அவர் பேர் சொல்லப்போகும் முக்கியமான திரைப்படம் இது. மகேஷிண்டெ பிரதிகாரத்தில் குட்டிப்பெண்ணாக வந்த லிஜோமோளா செங்கேணியாக இத்தனை சிறப்பாக நடித்திருப்பது என்றூ வியக்காமல் இருக்கமுடியவில்லை.
காவல்துறையின் அதிகார எல்லைகள், விசாரணைக்கொலைகள், சாதீய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை குறித்து தமிழில் இத்தனை விரிவாக, இத்தனை சிறப்பாக முன்பு திரைப்படங்கள் வந்ததில்லை.
பாடல்கள் அனைத்துமே திணிக்கப்பட்டவைகளாக இல்லாமல் கதையுடன் காட்சியுடன் இணைந்து படத்துக்கு இன்னும் வலுசேர்க்கின்றன.
ஆவணப்படமாக மாறக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக இருந்தும் கதை சொல்லும் சாமார்த்தியத்தால் சுவாரஸ்யம் குறையாமல் இதை அழகிய திரைப்படமாக்கியதற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். தொடக்க காட்சிகளுக்கு பிறகு திரைப்படம் பார்க்கும் உணர்வு காணமல் போய், கதாபாத்திரங்களின் உணர்வுகளும், இழப்பும் வலியும் துயரும் அச்சமும் எல்லாமுமே நமக்கே உண்டானதைப் போல படத்துடன் ஒன்றிப் போகிறோம். பிரச்சாரநெடியும் இல்லாமல் கவனமாக படமாக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.
நகைச்சுவையும், பாட்டும்.நடனமும், மசாலாவுமான படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாயிருக்கும் சூர்யா இந்த சந்துரு பாத்திரதை ஏற்று சிறப்பாக நடித்திருப்பதும், இந்த படத்தை சொந்த தயாரிப்பில் உருவாக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது..
முதல் ஒருமணிநேர திரைக்கதை நம் மனதில் உண்டாக்கும் வலியும் தொந்தரவும் இனி எப்போதும் நீடித்திருக்கும், அத்தனைக்கு அசலான காட்சிகள் அசலான நடிப்பு. அலறல் நிஜம் அடி நிஜம் துயரம் நிஜம் என்று மனதை கசக்கும் காட்சிகள். அதுவும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு லாக்கப்பில் நடப்பதை பார்க்க மனோதைரியம் வேண்டும்.
இரண்டாம் பாதியில் படம் இன்னும் வலுவாக, இன்னும் ஆழமாக செல்கின்றது. வாத பிரதிவாதங்களின் போது சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். 2.45 நிமிடம் நீளமென்றாலும் தொய்வின்றி இருக்கை நுனியில் நம்மை கொண்டு வரும் பல காட்சிகளுடன் இருக்கிறது ஜெய் பீம். பழங்குடியினருக்கு கல்வியளிக்கும் ஆசிரியை பாத்திரமும் சிறப்பு
எந்த எந்த காரணங்களுக்காக தங்களை காவல்துறை கைது செய்தார்கள் என்பதை சிறுவர்களும், பெண்களும் வயதானவர்களுமாக பழங்குடியினர் விவரிக்கையில் நம்மால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியாது.
இணையத்தில் ராஜாக்கண்ணுவின் வழக்கும், சந்துரு அவர்களின் விசாரணையும், தீர்ப்பும் பிற விவரங்களும் கிடைக்கிறது படத்தை பார்க்கும் முன்பு அவற்றை குறித்தும் அறிந்துகொள்வது படத்தை மனதுக்கு இன்னும் அணுக்கமாக்கும் சகமனிதர்களின் துயரை மிகச்சரியாக அறிந்துகொள்ளவும் முடியும்.
செங்கேணியின் மகள் அல்லியாக வரும் சிறுமியின் இயல்பான நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. அத்தனை துயரங்களுக்கு இடையிலும் அல்லி எழுதப்படிக்க கற்றுக்கொள்ளுவதும் இறுதியில் சூர்யாவுக்கு இணையாக அவளும் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாளிதழை வாசிப்பதும் காலம் மாறும் என்னும் நம்பிக்கையை விதைக்கும் காட்சிகள்.
அமேஸான் பிரைமில் இருக்கும் ஜெய்பீம் அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். லாக்கப் வன்முறைக்காட்சிகள் பெரியவர்களுக்கே மன நடுக்கத்தை தருமென்பதால் குழந்தைகளுடன் பார்க்க உகந்ததல்ல.
27 ஜூலை 1996 அன்று, ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் கோடைக்கால விளையாட்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் பூங்காவில் நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு நபர் கொல்லப்பட்டு 111 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பை அருகில் சென்று படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததுடன் இறப்பு எண்ணிக்கை இரண்டானது. அந்த குண்டு வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய பையை அடையாளம் கண்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற உதவி வழிகாட்டிய தன்னார்வலரும், அந்த விளையாட்டு போட்டிகளுக்கென பகுதிநேர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவரும், காவல்துறையில் பணியாற்றும் லட்சியத்துடன் இருந்தவருமான பாதுகாவலர் ரிச்சர்ட் ஜுவல் ஒரே நாளில் பிரபலமாகி ஹீரோவாக மக்களால் கொண்டாடப்பட்டார். ஏறக்குறைய 100 பேருக்கு மேல் அவரால் அன்று உயிர் பிழைத்தனர்..
பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் ஜுவெல் பாராட்டப்பட்டார். அவரின் இந்த சாகசத்தை ஒரு கதையாக எழுத அடுத்த நாளே ஒரு புத்தக ஒப்பந்தம் கூட வழங்கப்பட்டது. ஆனால் குண்டுவெடிப்பின் பின்னர் மூன்றாம் நாளில் FBI அலுவலர் ஒருவர் பத்திரிக்கை செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்ட ஒரு தவறான செய்தியால் எந்த ஆதாரமும், சாத்தியமான சந்தேகமும் இல்லாமல், குண்டுவெடிப்பு விசாரணையின் மையமாக ஜுவெல் எதிர்பாராமல் குறிவைக்கப்பட்டார். இது அவரது வாழ்க்கையை ஒரு நரகமாக்கியது
இந்த செய்தியும் இது தொடர்பாக நடந்த விசாரணைகளும் ஜுவெல்லின் தினசரி நடவடிக்கைகளும் சர்வதேச செய்தித்தாளான, தி டெய்லி டெலிகிராப் மூலம் தினமும் மக்களுக்கு சொல்லப்பட்டது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டிலிருந்து ஜுவெல் 8 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கபட்டு பகிரங்கமாக அவரிடம் காவல்துறையினர் மன்னிப்பு கேட்கப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் பெரிதும் கவன ஈர்ப்பை பெற்றது. பிரபல இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜுவல்லின் இந்த வலிமிகுந்த, அநீதியான, அசாதாரண அனுபவத்தை சாம் ராக்வெல், கேத்தி பேட்ஸ், ஒலிவியா வைல்ட், ஜான் ஹாம் மற்றும் புதுமுகம் பால் வால்டர் ஹாஸர் ஆகியோரை கொண்டு சிறப்பான ஒரு திரைப்படமாக்கினார்
செய்தித்தாள் தலைப்புச் செய்தி ஒன்றை ஈஸ்ட்வுட் எப்படி நல்ல, வெற்றிகரமான திரைப்படமாக மாற்றினார் என்பதை 2019ல் வெளியாகி, தற்போது நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கும் Richard Jewell படத்தில் காணலாம்
இச்சம்பவம் குறித்து கெண்ட் அலெக்சாண்டர் மற்றும் கெவின் ஆகியோர் எழுதிய ’’The Suspect: An Olympic Bombing, the FBI, the Media, and Richard Jewell, the Man Caught in the Middle’’ நூலையும், சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளும் ஈஸ்ட்வுட் கருத்தில் கொண்டே இப்படத்தை உருவாக்கினார். 1996 களில் நடப்பது போலவே காட்சிகளையும் அரங்குகளையும் சித்தரித்து குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது
தயாரிப்பு செலவை காட்டிலும் பத்து மடங்கு வசூல் செய்த வெற்றிப் படமான இது 2019 ஆம் ஆண்டின் சிறந்த பத்துப்படங்களில் ஒன்றாக தேர்வானது..ஜுவெல்லின் தாயாக நடித்திருந்த கேத்தி பேட்ஸ் இதில் பெரிதும் பாராட்டப்பட்டார். பல விருதுகளை பெற்ற இப்படத்தின் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. மகனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கும் காட்சியில் கேத்தியின் மிகச் சிறந்த நடிப்பை நாமும் பார்க்கலாம்
ஜார்ஜியாவின் முக்கிய நாளிதளொன்றின் நிருபரான கேத்தி ஸ்ரக்ஸ் (Kathy Scruggs) FBI அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்து பெற்றுக்கொண்ட தகவலே பொதுவெளிக்கு வந்தது என்னும் காட்சி பலரின் கண்டனக்குள்ளானது. கேத்தி ஸ்ரக்ஸ் 2001ல் மருத்துவரொருவர் பரிந்துரைத்த அதீத மருந்துகளின் விளைவாக மரணம் அடைந்தார்.
தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஜுவெல்லுக்கு நேர்ந்த அநீதியை பேசும் படமான கேத்திக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பத்திரிக்கையாளர்கள் தரப்பில் எதிர்ப்பிருந்த்து. பெண் பத்திரிகையாளர்களை இத்திரைப்படம் அவமதிப்பதாகவும் பல பெண்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். எனினும் ஈஸ்ட்வுட் அவருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், உண்மைக்கு புறம்பாக எந்த காட்சியும் இதில் இல்லை என்று குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.. 120 நிமிடங்கள் ஓடும் இப்படம் எந்த இடத்திலும் தொய்வின்றி ஈஸ்ட்வுட்டின் ஸ்டைலில் பரபரப்பாக, உணர்வுபூர்வமாக செல்கிறது. ஜுவெல் ஆக நடித்திருக்கும் பால் வால்டெர் மிக சரியான மற்றும் பிரமாதமான தேர்வு அசல் ஜுவெலுக்கும் இவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையும் ஆசச்ர்யப்படவைக்கிறது.
ஜுவெல்லின் அப்பாவித்தனமும் எளிமையும் நிபந்தனைகளற்ற, அன்பும் பார்வையாளர்களை அவர் பக்கம் சாய வைத்துவிடும். அவருக்கும் அவர் சார்பாக வாதாடும் வக்கீல் சாம் ராக்வெல்’லுக்கும் இருக்கும் தோழமையும், சாம்’மின் புரிதலும் அன்பும், விசாரணையின் போதும் காவலதிகாரிகளின் தந்திரங்களை ஜுவெல் புரிந்துகொள்ளாமல் வெள்ளந்தியாக பதிலளிப்பதுமாக ஈஸ்ட்வுட்டின் இயக்கம் வழக்கம் போல் சிறப்பு
ரிச்சர்ட் ஜுவெல் எப்படி பத்திரிக்கைகள் பரபரப்பான செய்திகளுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் எளியவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுவதை, உண்மைச் செய்திகளை விட வதந்திகள் ஊடகங்கள் வழியாக வேகமாக பரவுவதை, அறமற்ற அதிகாரிகள் காவல் துறையிலும் இருப்பதை எல்லாம் தெளிவாக சொல்லும் படம்
தான் பிரபலமாக வேண்டும் என்று ஜுவெல் அந்த குண்டை அங்கே வைத்துவிட்டு மக்களை காப்பாற்றுவது போல நாடகமாடினார் என்றே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் நிராபராதி என அறிவிக்கப்பட்டவுடன் அவர் புகழ் இருமடங்காகியது.
எனினும் அந்த 8 மாதங்கள் அவருக்கு நேர்ந்த மன உளைச்சலை இந்த திரைப்படம் நமக்கு காட்டுகிறது. ஜுவெல் பின்னர் அவர் விரும்பியபடியே காவல் துறையில் பணியாற்றினார் குண்டு வெடிப்பின் . உண்மைக்குற்றவளி 6 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யபட்டார்.
தனக்கேற்பட்ட அநீதிக்கு ஜுவெல் தொடர்ந்த மான நஷ்ட வழக்குகள் பலவற்றில் அவர் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு பெருந்தொகை பிழையீடாக பின்னர் வழங்கப்பட்டது. 33 வயதாக இருக்கையில் இந்த அநீதி ஜுவெல்லுக்கு நிகழ்ந்தது, அவர் விடுவிக்கபட்டு 10 ஆண்டுகள் கழித்து தனது 44 வது வயதில் மாரடைப்பால் ஜுவெல் காலமானார். என்றும் அவர் மக்கள் மனதில் நாயகனாக நினைவில் இருக்கிறார்.
ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் # Home ஒரு நல்ல நிறைவான, குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய மலையாளத் திரைப்படம்..
இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நேஸ்லென் கே. காஃபூர்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம் ரோஜின் தாமஸ், தயாரிப்பு ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் பேனரில் விஜய் பாபு, இவரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ராகுல் சுப்ரமணியன், ஒளி இயக்கம் நீல் டி’ சுன்ச்சா.
ஆலிவர் ட்விஸ்ட்டாக இந்திரன்ஸ் அவரின் அழகிய குடும்பமே கதைக்களம் மனைவி குட்டியம்மாவாக மஞ்சு பிள்ளை, ஒரு வெற்றிப்படம் கொடுத்து திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கிவிட்டு இரண்டாவது ஸ்கிரிப்டுக்காக முயன்று கொண்டிருக்கும் மூத்த மகன் ஆண்டனியாக ஸ்ரீநாத் பாஷி, எந்நேரமும் எதையாவது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டே இருக்கும் vlogger பதின்மவயது இளையவன் சார்லஸாக நேஸ்லென் கே. காஃபூர்
இளையோரின் உலகில் தானும் நுழைய முயன்று, இயலாமையும் தன்னிரக்கமுமாக வருந்தும் தந்தை ஒருவர், இளைய தலைமுறையினருடன் உருவாகி இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலாகிய இடைவெளியை நிரப்ப முயல்வதும், அதில் மகன்களுக்கும் தந்தைக்கும் ஏற்படும் உரசலும் முட்டலும் மோதலும் ,பின்னர் புரிதலுமே கதை.
ஆலிவர் என்னும் 60 வயது குடும்ப தலைவரொருவரின் கதை மட்டுமல்ல, இது நம்மில் பலரின் கதையும் தான். நம் வீடுகளிலுமே புதிய திறன் பேசியை , மடிக் கணினியை இயக்கவும், கைப்பேசி வழியே வர்த்தகம் செய்வது குறித்தும் மகன்களிடமும் மகள்களிடமும் கேட்டறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அநேகம் பேர் இருப்போம்.
இந்த தலைமுறை பிறந்து வளர்ந்ததே தொழில்நுட்ப அதீத வளர்ச்சி காலத்தில்தான் எனவே அதில் அவர்கள் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். சில்லறை காசுகளை எண்ணி எண்ணி செலவழித்தவர்களான சென்ற தலைமுறையை சேர்ந்தவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் கையிலிருக்கும் சிறு பெட்டி போன்ற கருவியில் வர்த்தகம் செய்வதும், உணவை வரவழைப்பதுமாக உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டதை அறியாமலேயே மண் மறைந்தவர்கள். நாமோ இந்த தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த, சிக்கல்கள் அற்றது போல தோன்றும் வாழ்க்கையை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வேடிக்கை பார்த்துக் கொண்டும், மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு இருக்கும் தலைமுறையினருக்கும், இமைக்கணத்தில் உலகை தொடர்பு கொள்ளும் இளைய தலைமுறைக்குமான உரசல்களை தான் அழகிய கதையாக்கி இருக்கிறார்கள்.
ஸ்ரீநாத் பாஷி வழக்கம் போல சிறப்பான நடிப்பு,திரைத்துறையின் சவால்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர் பணப் பிரச்சனையிலும் இருக்கிறார். இரண்டாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க வேண்டிய காலக்கெடு கழுத்தை நெருக்குகையில் எப்படியும் எழுதிவிட வேண்டும் என சொந்த ஊருக்கு வருகிறார்.
வீட்டு வேலைகளில் எந்நேரமும் மூழ்கி இருந்தாலும் கணவனின் மனதை அறிந்திருக்கும், கணவனுக்கும் மகன்களுக்கும் இடையில் உண்டாகி இருக்கும் இடைவெளியை குறித்த கவலையுடன் குட்டியம்மா, மிக வயதான முழுநாளும் பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும் தள்ளாத ஆலிவரின் தந்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மூத்த மகன், சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையான இளையவன், இருவரின் அணுக்கமும் கிடைக்கப்பெற தந்தையான ஆலிவரின் உணர்வுபூர்வமான போராட்டம் நம்மை கதைக்குள் கொண்டுவந்துவிடுகிறது.
இந்திரன்ஸ் அநாயசமாக நடிக்கிறார்.அதிகம் வசனங்கள் பேசாமல் நுணுக்கமான முக பாவனைகள், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் என, எளிதில் அவரது மனவோட்டத்தை திரையில் கொண்டு வந்துவிடுகிறார். ஆலிவர் புண் படும்போதெல்லாம் பார்வையாளர்களும் புண்பட்டு விடுகிறோம். அப்பாவியாக அவர் முகநூல் பக்கத்தை பற்றி கேட்டுக்கொள்ளுவதும், உயிர்த் தோழனிடம் தன் மனக்குமுறல்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும், இரவில் மனைவியிடம் மட்டும் தன் அந்தரங்க துயரை ஒரு சில சொற்களில் சொல்லுவதுமாக அசத்தி இருக்கிறார். பண்பட்ட முதிர்ந்த நடிப்பு இந்திரன்ஸுடையது. பலநூறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருந்தாலும் இந்த திரைப்படம் இவரது திரைப்பயண அனுபவத்தில் அவருக்கும், நமக்கும் கிடைத்திருக்கும் ஒரு அருமணி.
திறன்பேசியை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்கன்வே சிக்கலில் இருக்கும் மகனின் வாழ்வில் பெரும் இக்கட்டொன்றை கொண்டு வந்துவிடும் தந்தை, அது உண்டாக்கும் விரிசல், காதலியின் மனக்கசப்பு, தந்தையின் துயர், என்று குழப்பமில்லாமல் திரைக்கதை போகிறது. தயாரிப்பாளர் விஜய் பாபு மனநல மருத்துவராக வருகிறார் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம்.
அசாதாரணமான அந்த பிளாஷ்பேக் கதை இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதை வெற்றி பெற்றிருக்கும். அந்த கதையைக் கொண்டு அமைத்திருக்கும் கிளைமேக்ஸ் தவிர்க்கப்பட்டிருக்கலாம். KPAC லலிதாம்மாவின் பாத்திரமும், அவர் இந்திரன்ஸின் வீட்டுக்கு வருவதுமாக அந்த வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட கடைசிப்பகுதி அழகிய இக்கதைக்கு திருஷ்டிப்பொட்டு போல அமைந்து விட்டது.
குட்டியம்மாவும் இயல்பான நடிப்பு. அந்த மழை நாள் இரவில் ஒரே கூரையின் கீழ் சம்பந்தி வீட்டினரும் அமர்ந்திருக்கையில் உள்ளக் கொந்தளிப்பு தாங்கமுடியால அவர் உடைவது சிறப்பு.,குடும்ப உறவுகளில் ஆண்டனிக்கும் அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் பிரியாவுக்குமான் உறவும் சொல்லப்படுகின்றது.
ஆலிவரின் நண்பனாக வரும் ஜான் ஆண்டனியும் தயாரிப்பாளராக வரும் மணியன்பிள்ளை ராஜுவும் நகைச்சுவைக்கு உதவுகிறார்கள்.
தலைமுறை இடைவெளிகளை விரிவாக்கியிருக்கும் தொழிநுட்பங்களை மட்டுமல்லாது தொழில்நுட்பத்தின் மிகை பயன்பாடுகள் உருவாக்கி இருக்கும் உளச்சீர்கேடுகளையும், திறன்பேசிக்கு அடிமையாகி இருக்கும் இந்த தலைமுறையையும் இந்த திரைப்படம் எளிமையாக, ஆனால் அழுத்தமாக சொல்லுகின்றது. திரைப்படம் துவங்கும் முன்னரே ’’தயவு செய்து இடையிடையே கைபேசியை பார்க்காதீர்கள்’’ என்னும் வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏனென்று படம் பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு புரிகின்றது.
புதியவற்றை கற்றுக்கொள்ள விழையும் தந்தை ஒருவரின் கதைஎன்பதுடன் 160 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் பலம் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாய அநியாயங்களை சரியாக எடுத்துக் காட்டி இருப்பதிலும் இருக்கிறது.
ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், நடனம், வீர தீர சாகசங்கள் செய்யும் நாயகன், பேரழகாக ஒரு நாயகி என்னும் மரபான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்புவோருக்கானது அல்ல இந்த படம். மாறி வரும் திரைச்சூழலில் இப்போதைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சிக்கல்களில் ஒன்றை எடுத்து விரித்து அழகாக காட்டும் திரைப்படம் இது.
மலர்கண்காட்சியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மலர்க்கூட்டங்கள் அழகுதானென்றாலும், மலைச்சரிவில் காட்டுச்செடி ஒன்றில் மலர்ந்திருக்கும் ஒற்றைச் சிறு மலரும் அழகுதானே! அப்படி ஒரு எளிய அழகான உணர்வுபூர்வமான திரைப்படம் தான் # Home.
குடும்பம் என்பதற்கான வரைமுறைகள் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் மிக முக்கியமாகிவிடுகிறது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது
மலையாளத்தில் புகழ்பெற்ற டேக் ஆஃப் படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் மகேஷ் நாராயணன் இயக்கி, தொகுத்து, திரைக்கதை எழுதி 2021 ஜூலை 15ல் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் மாலிக்.
ஃபகத் ஃபாஸில், வினய் ஃபோர்ட் , திலீஷ் போத்தன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய பாத்திரங்களில். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ் ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஒளி இயக்கம் சானு ஜான் வர்கீஸ், இசை கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் இசையால் மிக பிரபலமான சுஷின் ஸ்யாம்.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் கடலோர புறநகர்ப் பகுதியான பீமா பள்ளியில் (Beemapally) தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பீமா பள்ளி தர்கா மிக பிரபலமானது.
2009 ல் பொதுமக்களில் 42 பேர் படுகாயமுற்று 6 பேர் இறந்து, பல காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கமும் பணி மாறுதலும் செய்யப்பட காரணமாயிருந்த பீமாபள்ளி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி உருவானதுதான் மாலிக்.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மாப்பிள்ளா முஸ்லிம்களும் வசிக்கும் ரமத பள்ளி கடலோர கிராமத்தின் குற்ற உலகின் ராஜாவான அலிஇக்கா, அவரின் கிறிஸ்துவ காதல் மனைவி ரோஸ்லின், நடுத்தர வயது அலிஇக்காவான ஃபகத் ஹஜ் புனித யாத்திரை கிளம்பும் நன்நாளில் கதை தொடங்கி விமானத்தில் நுழையும் போது அவர் தடாவில் கைது செய்யப்படுவதிலிருந்து விரிந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.
மகேஷ் நாராயணனின் விறுவிறுப்பான கதை சொல்லல் படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது, ஆழமான, அட்டகாசமான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.
கொஞ்சம் நீளமான ஃப்ளேஷ்பேக். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எடவத்துறை கடலோரத்தை சேர்ந்த சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அலி, டேவிட், பீட்டர் என்னும் சிறுவர்கள் தாதா சந்திரனின் ஆளுகைக்கு கீழ் வந்து அவருக்காக குற்றங்கள் செய்ய தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் சந்திரனிடமிருந்து பிரியும் அவர்கள் சந்திரனுக்கு எதிராக திரும்புவதுடன் தனியே கள்ள கடத்தல வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.
சின்ன திருட்டுகளில் ஈடுபடும் சிறுவன் அலி, பின்னர் கடல் கடத்தலில் இறங்கி மெல்ல மெல்ல வளர்ந்து துணை ஆட்சியரின் நம்பிக்கைக்கு ஆளாகி குப்பைக்கூளங்களை அகற்றி அவ்விடத்தில் பள்ளி கூடம் அமைத்து நலப்பணிகளில் ஈடுபட்டு அலிஇக்கா என்னும் நாயகனாவதும், ஒற்றுமையாயிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அந்த விரோத நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும், துணைபோகும் காவல்துறையும், இடையில் உண்டாகும் ஃபகத்தின் ரோஸ்லின் மீதான் காதலும் அவரைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளும் அவருடனெயே இருந்து மெல்ல வளர்ந்து அரசியல்வாதியாகும் திலீஷ்போத்தனின் நயவஞ்சகமும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கலவரமுமாக கதை வளர்கின்றது.
குற்றப் பின்னணி, கடல் வணிகம், கள்ளக்கடத்தல் , எளிய மக்களின் நாயகன், அவர் மீதான கொலை முயற்சி, அவர் மகன் அநியாயமாக கொல்லப்படுவது, ஒற்றை மகள் என கதை கமலின் நாயகனை கண்முன்னே கொண்டு வருகிறது. இப்படியான திரைக்கதைகளில் இனி 70களின் காட் ஃபாதரும் 80 களின் நாயகனும் நினைவுக்கு வராமல் இருக்கும் சாத்தியமே இல்லை.
ஃபகத்தின் நடிப்பை குறித்து புதிதாக சொல்ல ஏதுமில்லை. மூன்றாவது முறையாக இயக்குநர் மகேஷுடன் இணைந்திருக்கும் ஃபகத் வழக்கம்போல அசத்தல். பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டிருக்கும் ஃபகத்தின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு மாலிக்.
திரைஉலகின் பொற்கதவுகளை திறந்து நுழைந்திருக்கும் 24 வயதே ஆகும் நிமிஷா சஜயனுக்காக காத்திருக்கும் திரைக்களங்களையும் அவர் அடையப்போகும் உயரங்களையும் நம்மால் இப்போதே கணிக்கமுடிகின்றது. மகன் இறக்கும் காட்சியில் பள்ளிவாசலில் அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் கதறும் கதறலுடன் அவர் வயதையும் அவரது நடிப்பனுபவங்களையும் எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. ஃபகத்துக்கு இணையாக நடித்து இருக்கிறார்.
வழக்கமாக ஆங்காங்கே தலைகாட்டும் திலீஷ் போத்தன் இதில் படம் நெடுகிலும் வருகிறார், சிறப்பான நடிப்பையும் அளித்திருக்கிறார், காவலதிகாரியாக இந்திரன்ஸ். எந்த முகமாறுபாடுமின்றி அரசியல்வாதிகளின் ஆணைக்கு துணைபோகும், எந்த சிந்தனையுமின்றி சிறைக்குள்ளே அநீதி இழைக்கும் காவலதிகாரிகளின் ஒட்டுமொத்த பிம்பமாக அவரை காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிகளற்ற முகத்துடன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினய் ஃபோர்ட் மிக சிறப்பான,இயல்பான நடிப்பு.
கூரான, கவனிக்க வைக்கும் வசனங்கள். குறிப்பாக திலீஷ் போத்தனிடமும், துணை ஆட்சியரிடமும் பேசுவதும் , வினயிடம் கைகளை அகல விரித்தபடி அனைத்துலக மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தழுவ நிற்கும் ஏசு கிறிஸ்துவின் சிலையை காட்டியும் ஃபகத் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பானவை.
ஏறக்குறைய மூன்று மணி நேர படத்தின் நீளம்,பெரும்பாலும் யூகிக்க முடிகிற திரையோட்டம், நீளமான பிளாஷ்பேக் ஃபகத்தின் மகனின் இறப்பை சரியாக விளக்காமல் போனது, கமலின் நாயகனையும், அனுராக் காஷ்யப்பின் சில படங்களையும் அதிகம் நினைவூட்டுவது ஆகியவை இப்படத்தின் சறுக்கல்கள் எனக்கொண்டால், நல்ல இயக்கம், சிறப்பான திரைக்கதை தற்கால அரசியல் மற்றும் சமூக அமைப்பு, அதன் பகடைக்காய்களாக மைனாரிட்டி மக்களின் பிரச்சனைகளை அரசியலாளர்கள் பயன்படுத்துவது குறித்த கதை, மற்றும் முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக பாராட்டுக்கு உரிய படம்தான்