ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம் சுல்தான். தமிழிலும் தெலுங்கிலும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது
ஆக்ஷன் த்ரில்லர் என்ற ஜானரில் எடுக்கப்பட்டதாக சொல்லபட்டிருந்தாலும் கார்த்திக்கு பிடித்தமான, வழக்கமுமான குடும்ப செண்டிமெண்ட் படம்தான் இதுவும்
தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்
லால். யோகி பாபு, பொன்வண்ணன் மற்றும் ராமச்சந்திர ராஜு முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இசை விவேக்- மெர்வின் இணை. பின்னணி இசை மட்டும் யுவன் ஷங்கர் ராஜா. ஒளி இயக்கம் சத்தியம் சூரியன், படத்தொகுப்பு ரூபன்.
நூற்றுக் கணக்கான அடியாள்களுடன் வாழும் தாதா நெப்போலியன், அவர் மனைவி அபிராமி. அபிராமி விக்ரம் என்கிற சுல்தானை பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார். தாதாவான அப்பாவுடனும் அடியாட்களுடன் வளரும் தாயில்லாப்பிள்ளை கார்த்தி பின்னர் ரோபோடிக்ஸ் படிக்க வெளிநாடு செல்கிறார்.
படிப்பு முடிந்து விடுமுறையில் ஊர் திரும்பும் சுல்தானுக்கு திடீரென நிகழும் அப்பாவின் மரணத்தால், அப்பாவை நம்பியிருந்த அடியாட்களையும், இறக்கும் தருவாயில் பொன்வண்ணன் கிராமத்து பிரச்சனையை தீர்ப்பதாக அப்பா செய்து கொடுத்திருக்கும் வாக்கை காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பும் ஏற்படுகிறது.
அடியாட்களை திருந்திய குமரர்களாக்கும் முயற்சியில் சுல்தான் வெற்றி பெற்றாரா, பொன்வண்ணன் கிராமத்து பிரச்சினைகளை அப்பா வாக்கு கொடுத்தபடி அவரால் தீர்க்க முடிந்ததா, என்பதும், இடையில் ஏற்படும் காதலும்தான் மொத்த கதையும்.
கார்த்தியின் படங்கள் எல்லாம் தெலுங்கு மொழி மாற்றப் படுவதால் அவருக்கு என்று தெலுங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இது தெலுங்கு பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கிறது. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் அக்மார்க் தெலுங்கு ரகம். ராஷ்மிகாவுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை, அழகாக வருகிறார், சிரிக்கிறார், உதட்டை சுழித்து கொள்கிறார், இனிமையான பாடல்களில் வருகிறார் அவ்வளவே.
யோகிபாபு சமீபத்திய தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விட்டிருக்கிறார் எந்த திரைப்படம் ஆனாலும், எந்த பட்ஜெட் ஆனாலும் யோகிபாபுவின் அடர்ந்த சுருட்டை முடித்தலை தெரிகின்றது.
தெலுங்கு வாசனையுடன் தமிழ் பேசும் அந்த பிரதான வில்லன் ராமச்சந்திர ராஜூ உட்பட பல வில்லன்களின் அழகாக சுருண்ட அடர்ந்த கேசத்தை பார்க்கையில் எந்த எண்ணெயை தலையில் தேய்க்கிறார்கள் இவர்களெல்லாம் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜீப்பும், அடியாட்களுமாக லோக்கல் வில்லன் ஒருவர், அவருக்கு மேலே 10,000 கோடிகளில் பிசினஸ் செய்யும் கோட் போட்ட,விமானத்தில் வந்திறங்கும் இன்னொரு கார்ப்பரேட் வில்லன், ஒற்றை ஆளாக அத்தனை பேரையும் அடித்து அழிக்கும் கதாநாயகன், அவர் விரும்பும், சின்ன ரோல் பண்ணும் ஒரு கதாநாயகியுமாக வழக்கமான தமிழ் தெலுங்கு மசாலா கதை தான். சமீபத்திய கார்த்தி அவரது அண்ணன் சூர்யா படங்களை போலவே இதிலும் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
சுல்தானின் பாதுகாவலராக வரும் பிரம்மாண்ட நடிகர் ஜன்சீர் முன்பு குழந்தைகளுக்கான ஒரு தொடரில் நடித்தவர் என்பதால் குழந்தைகளுக்கும் இப்படம் பிரியமானதாகிவிட்டது.
சுல்தான் என்னும் தலைப்பை இந்து முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனமும் ஆட்சேபமும் தெரிவித்ததால், படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன பின் படக்குழுவினர் திப்பு சுல்தானை குறிப்பிடவில்லை இது ஒரு சாதாரண வழங்கு பெயர் தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.
அனிருத் குரலில் ’’ஜெய் சுல்தான்’’ மற்றும் ’’யாரையும் இவ்வளவு அழகா’’ பாடல்கள் சிறப்பு. அதிலும் சிலம்பரசனின் குரலில்’’யாரையும் இவ்வளவு அழகா’’ இனிமை.
கார்த்தி உடல எடையை குறைக்கவேண்டும். பல லாங் ஷாட் காட்சிகளில் சிவக்குமாரோ என்றே சந்தேகம் வருகின்றது. ஒரு வருடங்களுக்கு மேலாக நோய்த் தொற்றினால் மூடிக்கிடந்த திரையரங்குகளில் சமயத்தில் வெளியிடப்பட்டவைகளில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்னும் ரகத்திலான திரைப்படம் சுல்தான்.
Coming 2 America 2021 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும், இது 1988’ம் ஆண்டின் எடி மர்பி நடித்த coming to America திரைப்படத்தின் தொடர்ச்சி. திரைக்கதை ;கென்யா பாரிஸ், பாரி டபிள்யூ. ப்ளாஸ்டீன் மற்றும் டேவிட் ஷெஃபீல்ட் .இயக்கம்; கிரெய்க் ப்ரூவர். கெவின் மற்றும் எடி மர்பி தயாரிப்பு. எடி மர்பியுடன் முதல் பாகத்தில் நடித்த பலர் இதிலும் அதே பாத்திரங்களின் தொடர்சியாக நடித்திருக்கின்றனர். மிகத்தாமதமான இரண்டாம் பாகம்.
ஆர்செனியோ ஹால், ஜெர்மைன் ஃபோலர், லெஸ்லி ஜோன்ஸ், ட்ரேசி மோர்கன், கிகி லெய்ன், ஷரி ஹெட்லி, தியானா டெய்லர், வெஸ்லி ஸ்னைப்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஆகியோர் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். எடி மர்பியின் மகள் பெல்லா மர்பி அகீமின் இரண்டாம் மகளாக இதில் அறிமுகமாகியிருக்கிறார். Coming to America’வை தழுவி தமிழில் எடுக்கபட்ட மை டியர் மார்த்தாண்டனின் இரண்டாம் பாகம்தான் இது
படத்தின் விநியோக உரிமைகள் COVID-19 தொற்றால் அமேசான் பிரைமுக்கு விற்கப்பட்டு, மார்ச் 4, 2021’ல் படம் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியிடப்பட்டது..
மிக எளிய திரைக்கதை. ஜமுண்டாவின் இராணுவவாத அண்டை நாடான நெக்ஸ்டோரியாவால் ஜமுண்டா அச்சுறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறது. அகீமிற்கு முதல் பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மணமகளின் சகோதரரும், அதன் சர்வாதிகாரியுமான ஜெனரல் இஸி, முன்பு தவறவிட்ட சொந்தத்தை இப்போது மீண்டும் உண்டாக்க, அகீமின் மூத்த மகள் மீகாவை தனது மகன் இடி’க்கு திருமணம் செய்து வைக்கும்படி அழுத்தம் தருகிறார்
ஜமுண்டாவின் இளவரசர் அகீம் ,லிசா மெக்டோவலுடனான அவரது திருமணத்தின் 30 வது ஆண்டு நினைவு நாளில், இறக்கும் தருவாயிலிருக்கும் தந்தை கிங் ஜாஃப் ஜோஃபர் முன் வரவழைக்கப்படுகிறார். நியூயார்க்கின் குயின்ஸில் அவரது முதல் பயணத்தின்போது அவரறியாமலேயே ஒரு மகனுக்கு தந்தையாயிருப்பதாக ஜாஃப்பும் அவரது ஷாமன் பாபாவும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்,
ஒரு ஆண் வாரிசு மட்டுமே அரியணையில் அமர முடியும் என்னும் ஜமுண்டியன் பாரம்பரியம், லிசா மகள்களை மட்டுமே பெற்றிருப்பதால், மகனை மீட்டெடுக்க குயின்ஸுக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்தை அகீமுக்கு ஏற்படுத்துகின்றது..
கிங் ஜாஃப் உயிரிழக்கிறார், அவரது இறுதிச் சடங்கிற்குப்பின்னர் அகீம் மன்னரானதைத் தொடர்ந்து, அவரும் செம்மியும் குயின்ஸுக்குப் பயணம் செய்கிறார்கள், அவரது முறைகேடாக பிறந்த மகன் லேவெல் ஜான்சனையும்,.அவரது தாயார் மேரியையும் லேவெல்லின் மாமா ரீமையும் அகீம் ஜமுண்டாவுக்கு அழைத்துச் செல்கிறார், இதனால் குடும்பத்தின் அதிருப்திக்கு அகீம் ஆளாகிறார்
ஜெனரல் இஸி இதை அறிந்ததும் அடுத்த முயற்சியாக தனது மகள் போபோடோவை லேவெல்லுக்கு மணம் செய்துவக்க முயலுகிறார், ஏழை இளைஞனான லேவெல், ஒரு அரச இளவரசனாக தகுதி பெற, அபாயகரமான சோதனைகளை சந்தித்து வெற்றி பெறவேண்டியிருப்பதும் தன்னை வெறுக்கும் அகீமின் குடுமபத்தினரின் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் ஆளாகவேண்டி இருப்பதும்தான் கதை.
லேவெல் படிப்படியாக அகீமின் குடும்பத்தினருடன் ஒரு புரிதலை வளர்த்துக் கொள்வது, சகோதரிகளின் அன்பைப் பெறுவது, சோதனைகளை படாதபாடுபட்டு வெல்வது, எதிர்பாராமல் அவரின் ஒப்பனைக்கலைஞரான மிரெம்பேவுடன் காதல் வயப்படுவது என முதல் பாதியின் இழை அறுபடாமல் இரண்டாம் பாதியை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு போகிறார்கள். கணினி உபயோகக்காட்சிகள் அதிகம் இருப்பது சிறார் திரைப்படம் பார்க்கும் உணர்வ்ய் வருகின்றது
போபோடோவுடனான திருமணத்திலிருந்து விடுவிக்கபட்டு தந்தை அகீமின் ஆசியுடன் காதலியை லேவெல் கரம்பிடிக்கிறார் ஜாமுண்டாவின் பாரம்பரியத்தினை மாற்றி எழுதி, அகீம் தனது மகள் மீகாவை அரியணையில் ஏற அனுமதிக்கிறார், அச்சுறுத்தலாக இருந்த ஜெனரல் இஸி, ஜமுண்டா இளவரசிகளால் வெல்லப்பட்ட பின்னர் நட்பு நாடாக நெக்ஸ்டோரியாவை அறிவிக்கிறார். குயின்ஸில் இருந்து அகீமின் முடிதிருத்தும் நண்பர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் அரண்மனை விருந்துடன் படம் முடிகிறது. இறுதிக்காட்சிகளுக்கு பிறகு படப்பிடிப்பின் துண்டுக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
முதல் பாகத்தில் கணினி உதவியால் வடிவமைக்கப்பட்ட ஜமுண்டா அரன்மணை இந்த பாகத்தில் ஹிப்ஹாப் பிரபலமான ரிக் ராஸ் என்னும் செல்வந்தருக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கரில், ஏரியுடன் அமைந்திருக்கும் மாபெரும் எஸ்டேட் மாளிகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 100 நபர்கள் அமரும் வசதியுள்ள மாபெரும் உணவு மேஜையுடன் கூடிய உணவருந்தும் அறையில் படப்பிடிப்புக்கென மாட்டப்பட்ட பிரம்மாண்ட அழகிய சுவரோவியத்தை ராஸுக்கே படப்பிடிப்புக்குழுவினர் அன்பளிப்பாக வழங்கிவிட்டனர்.
மன்னராக நடித்திருக்கும் 88 வயதான ஜேம்ஸ் ஜோன்ஸ் வரும் காட்சிகள் தனியாக படம்பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Akeem எனும் தந்தையின் பெயரை திருப்பி போட்டால் வரும் Meekaa வைத்தான் முதல் இளவரசியின் பெயராக படத்தில் வைத்திருக்கிறார்கள்.
நைஜீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றது Coming 2 America. சிங்கத்தின் மீசை முடியை நறுக்கும் காட்சியில், சகோதரனுக்கு உதவும் மீகா நைஜீரிய தேசியக்கொடியின் பச்சை வெள்ளை நிற உடையணிந்திருக்கும் காட்சி ஏகோபித்த வரவேற்புடன் அங்கு பார்க்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த சாமுவேல் ஜாக்ஸன் இதிலில்லை.
தற்போது 58 வயதாகும் எடிமர்பி தன் 75 ஆவது வயதில் இத்திரரைப்படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆடைவடிவமைப்பும் ஆப்பிரிகாவின் ஆபரணங்களும் மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது
படம் பார்க்கையில் சிரிக்கிறோமென்றாலும் மனம் விட்டு சிரிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லை, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் பெரும்பாலான காட்சிகள் அதன் காப்பியைபோல இருப்பது இப்படத்தின் அசுவராசியங்களுள் ஒன்று. ஆபாசக்காட்சிகள், வசனங்கள் மிக அதிகம். அந்த சலூனில் பேசப்படுபவை நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எடி மர்பி தனது இயல்பான நடிப்பினால் சரியும் படத்திற்கு முட்டுக்கொடுக்கிறார். ஆனாலும் முதல் அரைமணி நேரத்திலேயே பார்வையாளர்கள் மீதிப்படத்தை யூகிக்கமுடிகின்றது. இதன் இயக்குனர் கிரெய்க்கும், எடி’யும் இணந்து சென்றஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற Dolemite Is My Name. திரைப்படத்துடன் coming 2 America வை ஒப்பிடுகையில் ஏமாற்றமே.
பொதுவில் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் சுவாரஸ்யம் குறைவான படமென்றுதான் சொல்லவேண்டும். பார்க்கலாம் வகை திரைப்படம்.அவ்வளவுதான். காட்சித்தொடர்ச்சிகளில். இட வலப் பிழைகளும் அகீமின் மகன் , நேர்காணலின்போது சொல்லும் வில் ஸ்மித்தின் அல்லாவுதீன் பற்றிய தகவலின் கருத்துபிழைகளும், சிங்கத்தின் மீசை முடியை வெட்டி எடுக்கும் காட்சியின் தோற்றபிழைகளும் போல பல பிழைகள் திரைப்படத்தில் இருக்கின்றன.
2013 ல் வெளியான திருஷ்யம் படத்தின் அடுத்த பாகமான திருஷ்யம் -2 அதே ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் ஆசிர்வாத் சினிமாவின் அந்தோனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிப்ரவரி 19 ,2021’ல் அமேஸான் ப்ரைமில் வெளியானது.சதீஷ் குருப் ஒளி இயக்கம்.
முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே தொடுபுழாவில் பெரும்பாலான காட்சிகளும் , ஒருசில காட்சிகள் மட்டும் கொச்சியிலுமாக மொத்தம் 46 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.
முதல் திருஷ்யத்தின் அதே மோகன்லால், மீனா, அன்சிபா ஹாஸன் மற்றும் எஸ்தர் அனில் கூட்டணி இதிலும் . 6 வருடங்களில், கொஞ்சம் வளர்ந்திருக்கும் மகள்களும் மாறியிருக்கும் வீட்டின் கட்டமைப்புமாக இரண்டாம் பாகத்திற்கு தேவையான மாற்றங்கள்இயல்பாக அமைந்திருக்கிறது..
குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும், அது கொலையானாலும், கொலையை தடயமின்றி மறைப்பதானாலும் தயங்காத குடும்பத்தலைவனும் எந்த அச்சுறுத்தலும் மிரட்டலும் சித்திரவதையும் வந்தாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குடும்பத்தினருமாக பிரமாதமான வெற்றிப்படமாக அமைந்து விட்டிருந்தது முதல் பாகம். மற்ற எதைக்காட்டிலும் குடும்ப நலனெனும் அறத்தில் விடாப்பிடியாக நிற்கும் தந்தையாக, கணவனாக மோகன்லாலெனும் அசல் கலைஞன் பிரமாதாப்படுத்தியிருந்த படமது.
மிக அழகாக, முழுமையாக முடிந்த , இனி இரண்டாம் பாகமாக தொடர எந்த சாத்தியங்களும் இன்றி கச்சிதமாக, நேர்த்தியாக முடிக்கப்பட்ட ஒரு படத்தை, மிக சாமார்த்தியமாக, புத்திசாலித்தனமாக, பிரமாதமாக இரண்டாம் பாகமாக எடுத்து அதை வெற்றிப்ப்படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத,போலீஸாரால் துரத்தப்படும் குறறவாளி ஜோஸ், ஓடிவருவதும், பின்னர் பிடிபடுவதும், பிடிபடும் முன்பு காவல் நிலையத்தில் சவத்தை புதைத்துவிட்டு திரும்பும், ஜார்ஜ்குட்டியை ஒரு சிறிய இடைவெளி வழியாக அவன் பார்ப்பதுமாக பரபரப்பான துவக்கக்காட்சிகள்.
துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து 6 வருடங்களாகியும் அந்தக்குடும்பத்தினர் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமலிருக்கின்றனர். எனினும் காலப்போக்கில் மெல்ல மெல்ல தேறிக்கொண்டும் வருகின்றனர். 12 ல் படிக்கும் இ்ளைய மகளும் படிப்பை முடித்து வீட்டில் திருமணத்திற்கு காத்திருக்கும் மூத்தவளும், சினிமாபித்து பிடித்திருக்கும் ஜார்ஜ் குட்டி திரையரங்கு உரிமையாளராகி இருப்பதும் ,அதன்பொருட்டு வாங்கிய கடனில் மீனாவுக்கு அதிருப்தி இருப்பதுமாக கதை சாதரணமாக நகருகின்றது. ஆனால் டீக்கடையிலும் ஆட்டோ ஸ்டாண்டிலும் ஜார்ஜ் குட்டிதான் அக்கொலையை செய்திருக்ககூடுமென்றும், அவர் மகளும் செத்துப்போன அந்த பையனும் காதலித்து, நெருக்கமாக வீட்டிலிருக்கையில் ஜார்ஜ்குட்டி பார்த்து பின்னர் கொலை நடந்ததாகவும் அரசல் புரசலாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பழைய நினைவுகளினால் அஞ்சுவுக்கு அவ்வப்போது வலிப்பு வருகின்றது , வருந்தும் மீனா இரண்டு வருடங்களுக்கு முன்பாக பக்கத்தில் குடிவந்திருக்கும் சரிதாவுடன் மட்டும் நட்புடன் கவலைகளை பகிர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறாள். முன்பு போல ஜார்ஜ்குட்டி நல்லவனென்று இப்போது ஊருக்குள் பேச்சில்லாததற்கு பிறர் கண்களை உறுத்தும் அவர்களின் செல்வச்செழிப்பும் ஒரு காரணமாகிவிட்டிருக்கிறது.
வினய்சந்திரன் என்னும் ஒரு பெரிய தயாரிப்பாளரை அவ்வப்போது சந்தித்து, ஜார்ஜ்குட்டி, தான் எடுக்கவிருக்கும் ஒரு திரைப்படம் குறித்தும், அதன் திரைக்கதையை குறித்தும் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்.அதை மீனா விரும்பாவிட்டாலும் தொடர்ந்து செய்கிறார்
6 வருடங்களாகியும், அந்த கேஸை முடிக்க முடியாமலானதாலும், செத்துப்போனது காவல் உயரதிகாரியின் மகனென்பதாலும் போலிஸும் ரகசியமாக ஜார்ஜ் குட்டியை கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றது.
மகனின் உடல் பாகங்கள் கிடைத்தாலே ஆத்ம சாந்திக்கான பரிகார பூஜைகள் செய்ய முடியுமென்பதால் மீண்டும் ஜார்ஜை அவனது தந்தை தேடி வருகிறார், மகளின் கல்யாணமுயற்சிகளுக்கு தடையாக ஊருக்குள் அவளைப்பற்றி உலவும் கட்டு்க்கதைகள் இருப்பதில் மீனா மனமொடிந்திருக்கிறார், சரியாக இதே வேளையில் 6 வருடங்களுக்கு முன்பு கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்துவந்த முதற்காட்சியின் ஜோஸ் விடுதலையாவதுமாக கதை வேகமெடுக்கிறது.
மிக சிறப்பான இந்த அடிப்படை விஷயங்ளைக்கொண்டு மேலே கதையை பின்னிப்பின்னி சாமார்த்தியமாகவும் எந்த தொய்வுமின்றியும் கொண்டு செல்கிறார்கள்.
ஜோஸ் செய்த கொலையால் அவன் குடும்பவாழ்வு சிதைந்திருப்பது, அதற்கு பிழையீடாக அவனுக்கு பணம் தேவைப்படுவது, செத்துபோனவனின் உடல் இருக்கும் இடம் குறித்து துப்புக்கொடுத்தால் பெருந்தொகை பரிசாக காவல்துறை அளிக்கும் என்றூ தெரிந்துகொண்ட ஜோஸ் அவனுக்கு தெரிந்த உண்மையை போலீஸில் சொல்ல முடிவெடுப்பதுமாக இரண்டாம் பாதி பரபரப்பாக நகருகின்றது
ஜோஸ் உண்மையை சொன்னதும் போலீஸ் ஸ்டேஷன் தோண்டப்படுகிறது, DNA பரிசோதனைகளுக்குபின் ஜார்ஜ் குட்டியை இந்தமுறை எப்படியும் பிடித்தே ஆகவேண்டுமென போலீஸ் முனைகிறது, குடும்பத்தை மீண்டும் காவலில் எடுது விசாரிக்கிறார்கள். மனைவியும் மகள்களும் அச்சத்தில் ஜார்ஜ்குட்டியின் திட்டங்களை சிதைக்கிறார்கள். படம் பல திடீர் திருப்பங்களுடன் செல்கின்றது
வெளிப்படும் சிலரின் சுயரூபங்கள், போலீஸ் விரித்திருந்த கண்காணா வலையில் ஜார்ஜ்குட்டியின் மனைவியும் மகள்களும் விழுந்துவிடுவது என எதிர்பாரா இத்திருப்பங்களால் நாமும் திகைத்துப்போகிறொம்
புதைத்த உடல் திரும்ப கிடைத்ததா? ஜார்ஜ் குட்டியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதா? என்னவானது மீதிக்கதை என்று அவசியம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். முதற்பாகத்தின் மிகச்சரியான தொடர்ச்சி என்பதால் அதைப்பார்க்காமல் இந்த பாகத்தைப் பார்கையில் கதை புரியாமலாகும் சாத்தியமிருக்கிறது. எனவே பார்க்காதவர்கள் இரண்டையும் சேர்த்துப்பார்ப்பது மிக நல்ல திரையனுபவமாக இருக்கும்
ஆர்ட் டைரக்டர் ’ராஜீவ் கோவிலகத்து’ மிகப்பிரமாதமாக முன்பாகத்தின் அதே தெரு, அதே டீக்கடை, போலீஸ் ஸ்டேஷன், கேபிள் டிவி அலுவலகெமென்று, அச்சுப்பிசகாமல் மீண்டும் செட் போட்டதற்கும், கோவிட் பரிந்துரைகளுக்கென ஒரு மேற்பார்வைக்குழுவொன்றை அமைத்து அதன் தலைமையில் மிகக்கட்டுப்பாட்டுடனும் தேவையான எல்லா பாதுகாப்புடனும் 56 நாட்களுக்கு கணக்கிட்ட முழுப்படப்பிடிப்பை 46 நாட்களிலேயே முடித்ததற்கும், தொடர்ந்து திருஷ்யம் 3 எடுக்கும் அளவுக்கு இந்த பாகத்தை வெற்றிகரமாக கொடுத்திரு்ப்பதற்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்
திருஷ்யம் 2 தெலுங்கில் வெங்கடேஷும், ஹிந்தியில் அஜய்தேவகனும் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழில் கமல் சம்மதிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி.
திரைக்கதை நாயகனின் பார்வையில் நகர்வதாலும், அந்தகொலையின் நியாயம் நமக்கு விளக்கப்பட்டிருப்பதாலும் பார்வையாளர்களாகிய நாமும் ஜார்ஜ்குட்டி செய்த கொலை மறைக்கப்படவேண்டுமெனவே விரும்புவது உறுத்தலான விஷயமாக இருக்கிறது உலக நியதிக்கெதிரானதல்லவா இது? மகனை இழந்த எதிர்தரப்பின் நியாயமென்று ஒன்று இருக்கிறதே!ஒருவேளை இனி வரப்போகும் திருஷ்யம்- 3 ல் இந்த உறுத்தலுக்கும் தீர்வு இருக்குமாயிருக்கும்
M.S ஆனந்தனின் (அறிமுக) இயக்கம் மற்றும் திரைக்கதையில் 2021 பிரவரி 19 அன்று உலகெங்கிலும் பலமொழிகளில் வெளியான தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘சக்ரா’. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கெஸான்ட்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில், தயாரிப்பு விஷால்
ரோபோ ஷங்கர் , நீலிமா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, வெகுகாலத்துக்கு பிறகு கே ஆர் விஜயாம்மா ஆகியோரும் இருக்கிறார்கள்.
2018ல் வெளியான விஷாலின் இரும்புத்திரை திரைப்படத்தின் (ஒருவிதத்தில் ) தொடர்ச்சிதான் சக்ராவாம்..
சுதந்திர தினத்தன்று நகரில் தொடர்ந்து 50 வீடுகளில் நடக்கும் தொடர்கொள்ளைகள் என்னும் ஒரே புள்ளியை ஜவ்வாக இழுத்து முழுநீள திரைப்படமாக்கி 1.30 மணி நேரத்திற்கு பாடாய்படுத்தி எடுக்கிறார்கள்
ஆச்சரயமாக இருக்கின்றது, உலகசினிமா சென்று கொண்டிருக்கும் பாதையைக்குறித்தும், வெள்ளித்திரை என்னும் சக்திவாய்ந்த ஊடகத்தில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்றும் கொஞ்சமும் அறிதல் இல்லாமல், சினிமாவிற்கான அடிப்படை சிரத்தைகூட இல்லாமல் இந்தக்காலத்திலும் இத்தனை போட்டி நிறைந்த தொழிலில் சக்ராவை எடுத்திருப்பதை நினைக்கையில்.
கதை (?) இதுதான். முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் 49 வீடுகளில் சுதந்திர தினத்தன்று பெரும்பாலான காவலதிகாரிகள் முக்கியஸ்தர்களுடன் கொடியேற்றும் விழாக்களுக்கு பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கையில் தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். 50 ஆவது வீடு ராணுவத்தில் பணியாற்றும் நாயகன் விஷாலின் பாட்டி வீடென்பதை நாயகனி்ன் காதலியும் காவலதிகாரியுமான ஷ்ரத்தா தெரிந்து கொள்கிறார்.
கொள்ளை போனவற்றில் ராணுவதிகாரியாக இருந்து இறந்த, விஷாலின் அப்பா வாங்கிய அசோக சக்ரா பதக்கமும் இருந்ததால் அதை எப்படியும் மீட்டெடுக்க உறுதிபூண்ட நாயகன் தன் காதலியின் துறையான காவல்துறையில் இஷ்டம் போல புகுந்து விளையாடி குற்றவாளிகளை, அது சைபர் க்ரைமென்பதால் கையும் கம்யூட்டருமாக பிடிக்கிறார்.
துவக்கத்தில் கொள்ளை நடந்த ஒவ்வொரு வீடாக சாவகாசமாக காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கொட்டாவியுடன் அடுத்து கதை எப்போது நகரும் என்று காத்திருக்கையில் நாயகன் வந்து விசாரிக்கிறேன் பேர்வழி என்று காலொடிந்த நத்தையின் வேகத்தில் படத்தை நகர்த்துகிறார். இந்த கதைக்கு இரண்டு நாயகிகள் வேறு.
ஷ்ரத்தா கொஞ்சம் நல்லபெயருடன் முன்னுக்கு வந்துகொண்டிருந்தார், சக்ரா அவருக்கு திருஷ்டிப்படம்
ப்ளம்பர், டயல் ஃபார் ஹெல்ப், விதவை மனைவி, வேலைக்காரப்பெண், எப்போதோ இறந்துபோனவரின் அலைபேசி, கம்ப்யூட்டரில் சேமித்த தகவல்களை திருடி திருட்டு, ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே குறி, விஷாலுக்கு விடுக்கப்படும் மர்ம தொலைபேசி சவால் என்று கதை இலக்கில்லாமல் நூலறுந்த, வாலறுந்த பட்டமாக எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
விசாரணையின் முக்கிய பாயிண்டுகளை விஷால் போர்டிலெல்லாம் எழுதி துப்பறிகிறார். கடைசியில் அந்த முக்கிய குற்றவாளி அப்படியொன்றும் திறமையான கம்ப்யூட்டர் திருட்டையெலலாம் செய்யவில்லை சாதா திருட்டுதான் செய்கிறார்.
அப்பாவின் பதக்கத்திற்கும் விஷாலுக்குமான உணர்வுபூர்வமான பந்தமேதும் சொல்லப்படவே இல்லை. வில்லியின் ஃப்ளாஷ் பேக் கதை எல்லாம் மனதில் ஒட்டவேயில்லை. அம்மாவை குடிகார அப்பா கொலைசெய்யும், சித்தி கொடுமை செய்யும் அரதப்பழசான முன்கதையெல்லாம் எரிச்சலூட்டுகிறது. கட்டக்கடைசியிலாவது எதாவது உருப்படியாக காட்டுவார்களென்றால் அதுவும் இல்லை. முடிவல்ல தொடக்கமென்று வில்லி குரலில் சொல்லி பயப்படுத்துகிறார்கள் , இனியும் தொடருமா என்று கலக்கமாக இருக்கிறது.
உயரிய ராணுவ விருதான அசோக சக்கரா விருதினை மையமாக கொண்டே சக்ரா எனதலைப்பாம் சக்கரமென்றே வைத்திருக்கலாம் , கதை சுத்திச்சுத்தி வந்துகொண்டே இருக்கிறது.
ஒரே சமயத்தில் இந்தப்படம் ஆங்கிலம் உள்ளிட்ட இன்னும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பது, இந்தபடத்திற்கான காப்பி ரைட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால். விஷால் வாழ்வா சாவா என்னுமளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து, கோர்ட் கேஸ் என்று அலைந்து நஷ்டயீடு கொடுத்ததெல்லாம் வியப்பளிக்கிறது. இத்தனை துயரப்பின்னணிகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதியில்லாத, திரைக்கதையாக்கம், திரையாக்கம், இயக்கம் மற்றும் நடிப்பு
மனதில் நிற்காவிட்டால் போகிறது காதில் கேட்பதுபோலக்கூட பாடல்கள் இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவா இசை? என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒளி இயக்கமும் கதைக்களங்களும் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரோபோ ஷங்கர் போன ஜன்ம பழசான நகைச்சுவையைத்தான் செய்கிறார். சிரிப்புக்கு பதிலாக கோபம் வருகிறது. வசனங்களும் இரும்புத்திரையிலி்ருந்து எடுத்து தூசு தட்டப்பட்டவைதான் புதிதாக ஒன்றுமே இல்லை. நாயகிக்கு வேலையே இல்லை லாஜிக் என்பதே திரைக்கதையில் எங்கும் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. சிக்கலான காவல்துறை விவகாரமொன்றை, பெண்காவலதிகாரியின் ராணுவ காதலரே கடைசி வரை கையாளுகிறார்.
தேவையில்லாத காட்சிகளும் வீண்வசனங்களுமாய் நிறைந்திருக்கிறது படம்முழுக்கவே. அந்த ATM விஷயமெல்லாம் திணி திணியென்று திணிக்கப்பட்டது. வில்லியைக்குறித்தும் அவரது கம்ப்யூட்டர் திருட்டுக்களைக் குறித்தும் பலமாக பில்டப் கொடுத்து விளக்கிக்கொண்டே இருக்கும் முதல்பாதி ரோதனையென்றால் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லமால் மொக்கை வாய்சவடால்களாக பேசிக்கொண்டு இருக்கும் இரண்டாம் பாதி வேதனை. அதுவும் அந்த செஸ் விளையாட்டு உரையாடல்களெல்லாம் போதுமடா சாமி என்று அலறவைக்கின்றது. வில்லியை வலைவீசிப் பிடிக்கும் காட்சிக்கு நல்லவேளையாக விஷாலே நமக்கு பதிலாக சிரித்து விடுகிறார். படத்தில் ஒரே நல்ல விஷயம் காதல் காட்சிகளும் காதல் பாட்டுக்களும் இல்லையென்பதுதான்.
சக்ராவை பார்த்ததற்கு பிழையீடாக, அர்ஜுன், சமந்தாவெல்லாம் இருக்கும் இரும்புத்திரையை இன்னொரு முறை பார்க்கலாம்
கேராளாவின் Neestream என்னும் மலையாளத்திரைப்படங்களுக்கான புதிய இணையதளத்தின் இவ்வருடத்தின் முதல், புதிய வெளியீடாக ஜனவரி 15, 2021 அன்று வெளியிடப்பட்டது. ‘’ The Great Indian Kitchen. புதிய தளத்தின் பிரமாதமான வெளியீடு இந்த அழகிய குடும்பச்சித்திரம்.
இயக்குநர் ஜியோ பேபி, இசை சூரஜ் குரூப் மற்றும் மேத்யூஸ் புலிக்கன். நிமிஷா சுஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சிரமூடு பிரதான பாத்திரங்களில் (இரண்டாவது முறையாக ஜோடியாக.)ஒரு சில காட்சிகளைத்தவிர முழுப்படமுமே கோழிக்கோட்டில் ஒரே வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதே வீட்டில்தான் முன்பு 1993ல் மிதுனம் திரைப்படமாக்கபட்டது. பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே கோழிக்கோடு நாடக நடிகர்கள்
ஒரு கண்ணாடியையோ அல்லது கேமிராவையோ இந்தியவீடுகளில்,குறிப்பாக தென்னிந்திய வீடுகளில் வைத்தால் தெரியவருவதைத்தான் முழுப்படமும் காட்டுகிறது..
நாயகி நம்மைப்போல, அடுத்த வீட்டுபெண்ணைப்போல, தோழியைப்போல நாம் அன்றாடம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான் பெண்களில் ஒருத்தியைப்போல இருப்பதும் படத்தின் பெரிய பலம். இது நம் கதை என அனைத்து இந்தியப்பெண்களும் விதிவிலக்கின்றி உணருவார்கள் திரையில் நிமிஷா சுஜயனை பார்க்கையில்.
நிமிஷா நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரி கலாரஞ்சனியை அதிகம் நினைவூட்டும் முகச்சாயலையும் உடல்மொழியையும் கொண்டிருக்கிறார். முழுப்படத்தின் ஆத்மாவே நிமிஷாதான். சூரஜின் நடிப்பு வழக்கம் போலவே பிரமாதம். உடலெடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார். பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.இயல்பான சிறப்பான நடிப்பு.
மேசை நாகரீகம் குறித்து விளையாட்டாக சொல்லுவது போல சொன்ன மனைவியை கடிந்துகொண்டு அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுவதும் ,அவள் மன்னிப்பை கேட்டவுடன் அகமலர்வதையும் அத்தனை அசலாக காட்டுகிறார். சிதல்புற்றுபோல ஆணவக்கரையான்களால் பெருகி வளர்ந்திருக்கும் இந்திய ஆணாதிக்க சமுகத்தின் பிரதிநிதியாக பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார் சூரஜ்.
யானைப்பசியைப்போல ஆண்களின் இந்த வீங்கிய ஆணவத்திற்கு, கீரைக்கட்டுகளை தீனி போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் பெண்களுக்கான விதி.
சாலு கே தாமஸின் ஒளி இயக்கத்துக்கு, தனித்த பராட்டுக்களையும் அன்பையும் தெரிவித்தாக வேண்டும். அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். துவக்க காட்சிகளில் நிமிஷாவின் நடன அசைவுகளின் போது அவர் முகத்தின் தெளிவை, மலர்வை, உறுதியை, கண்களின் ஒளியை அழகாக காட்டியவர், பின்னர் அவரே யோசனையில் ஆழ்ந்திருக்கும் களைஇழந்த முகத்துடன் இயந்திரமாக பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பதை, கலவியின் போது அவரின் மனஓட்டங்களை, சமையலறையில் மீள மீள வறுப்பதை, பொரிப்பதை, நறுக்குவதை, அரைப்பதை, பிறர் உண்ணுவதை என்று காட்சிகளை அருமையாக காட்டியிருக்கிறார்.
பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு பெயரில்லை என்பதுவும் இத்திரைப்படத்தின் சிறப்பு. இது நம் கதை என்னும் உணர்வு பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே இதனால் இன்னும் மேலோங்குகின்றது.
பள்ளிஆசிரியரான சூரஜ் நிமிஷாவை பெண்பார்க்கும் காட்சியில் திரைப்படம் துவங்கி சட் சட்டென்று காட்சிகள் மாறி, சூரஜ் தன் பெற்றோருடன் வசிக்கும் வீட்டில் வாழ வருகிறார் நிமிஷா.
திடுக்கிடவைக்கும் திருப்பங்களோ, எதிர்பாரா சம்பவங்களோ, அவிழ்க்கப்படவேண்டிய மர்ம முடிச்சுகளோ இல்லாதது மட்டுமல்ல இதுபோல முன்பு வந்திருக்கும் பாலின சமத்துவம் குறித்தான திரைப்படங்களில் இருக்கும் வன்முறையும் இதிலில்லை. அன்பின் பெயரால், மரபின் பெயரால், சம்பிரதாயங்களின் பெயரால், சமூக கட்டுப்பாடுகளின் பெயரால், பெண்களுக்கு காலம் காலமாக அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை சொல்லும் படமிது.
5 பாடல்களும், இடையிடையே சண்டைகளும் நடனங்களும் நிறைந்த வழக்கமான மரபான சினிமா இல்லை இது
துவக்கத்தில் முதல் அரைமணி நேரங்களுக்கு திரும்பத்திரும்ப காய்கறிகள் நறுக்கப்படுவது, நேந்திரம்பழங்கள் ஆவியிலடப்படுவது, இறைச்சி வெட்டப்படுவது, ஆப்பங்கள் ஊற்றப்படுவதென்று காண்பிக்கப்படுகையில் சிலருக்கு சலிப்புத்தட்டிவிடும். என்ன இது திரும்பத்திரும்ப இதையே காட்டுகிறார்களே என்று. அந்த சலிப்புத்தான் இப்படம் எதிர்பார்க்கும் வெற்றி.. அரைமணி நேரத்துக்கு திரும்பத்திரும்ப பார்க்கையில் சலிப்புத்தட்டும் விஷயத்தைத்தான், வாழ்நாள் முழுக்க எந்த உதவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மீள மீள செய்துகொண்டிருப்பதை சொல்லும் படமிது.
வெளியிலிருந்து பார்க்கையில் மகிழ்ச்சியான இல்லமென்று தோன்றும் ஆனால் உள்ளே ஆண்களின் நாக்கு, உடல், ஆணவம் இவற்றின் தேவைகளுக்கென வீட்டுப்பெண்களின் இளமையும் நேரமும் ஆரோக்கியமும் லட்சியங்களும், முழுவாழ்வுமே சுரண்டி உறிஞ்சி எடுத்துக்கொள்ளப்படுவதை, திருமணம் என்னும்பெயரில் பெண்கள் மிச்சமின்றி காலடியில் இட்டு நசுக்கப்படுவதை இப்போது நம் இந்தியச் சமூகத்தில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக காட்டும் படமிது
தெளிவான திரைக்கதை. இயக்குநர் அழகாக கதையைக்கொண்டு போகிறார். பொருத்தமான மென்மையான இசை, சிறப்பான படத்தொகுப்பு, அற்புதமான ஒளிப்பதிவு என மிக நல்ல ஒரு அனுவத்தை தருகின்றது இத்திரைட்பம்
ஆண்களின் இதயத்திற்கு அவர்களின் வயிற்றின் வழியேதான் பெண்கள் செல்லவேண்டுமென்னும் பழஞ்சொல் புழக்கத்திலிருக்கும் நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களின் இதயத்திற்குள் ஆண்கள் நுழையும் வழிகுறித்து சொல்லப்பட்டதேயில்லை.
தினம் தினம் இறைச்சியும் காய்கறிகளும் நறுக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. திரும்பதிரும்ப பரிமாறுதலும், எச்சிலெடுப்பதும், பாத்திரம் தேய்ப்பதும், துணி துவைப்பதும், வீடு கூட்டுவதும், மாடிப்படிகளிலிருந்து சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வரையிலும் துடைத்து சுத்தமாக்குவதும், விறகடுப்பில் அரிசிச்சோற்றை சமைப்பதும், அனைத்தையும் முடித்து, இரவில் வீட்டுக்கதவை தாளிடுவது வரை முடித்த பின்னர் காத்திருக்கும் கணவனின் உடல் பசிக்கும் இரையாவதுமாக அப்படியே ஒரு இந்திய சமூகத்தை காட்டியிருக்கிறார்கள்.
பெண்கள் இப்படி அடுப்படியிலும், துவைக்கும் கல்லிலும், எச்சிலெடுத்தும் வீணாய்போகையில் ஆண்கள் சீட்டு விளையாடிக்கொண்டும், அலைபேசியில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், யோகா செய்துகொண்டும் தன்னை, தன் நலனை, தன் தேவையை, தன் ஆரோக்கியத்தை, தன் சுவையை, தன் வாழ்வை பார்த்துக்கொள்ளுகிறார்கள். எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அப்பட்டமான படம்
அடைத்துக்கொண்டு ஒழுகும் சமையலறை சின்க்கை சரிசெய்ய ப்ளம்பரை வரச்சொல்லி பலமுறை நினைவூட்டியும் கடைசிவரை அது அப்படியேதான் இருக்கிறது. ஒரு காட்சியில் சமையலறை எச்சில் அடைத்துக்கொண்ட சின்க்கின் நாற்றம் தன் மீது அடிக்கின்றதா என நாயகி கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரத்திலும் முகர்ந்து பார்த்துக்கொள்கிறாள். அது சின்க்கின் நாற்றம் மட்டுமல்ல, தேய்த்துக்கழுவினால் போய்விடுவதற்கு, அன்பின்மையின், புரிந்துகொள்ளாமையின், சுரண்டப்படுதலின், பகிர்தலற்ற வெற்று வாழ்வின் நாற்றம் அது, எத்தனை தேய்த்துக்கழுவினாலும் போகாதது.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் நிமிஷாவின் தோழி ஒருத்தி மாடிப்படிகளில் அமர்ந்திருக்கையில் கணவன் மனைவிக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வருவதையும், அன்றிரவு அவர் சமைக்கபோவதாகவும் சொல்லும் காட்சியையும் வைத்திருக்கிறார்கள். விதிவிலக்கான ஆண்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்று காட்ட.
நிமிஷா நடனஆசிரியையாக வேலைக்கு போக விரும்புவதைக்குறித்துச் சொல்லுகையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கணவனும் மாமனாரும் ’’அதெல்லாம் குடும்பத்துக்கு சரிவராது’’ என்று மறுத்துவிட்டு, உடனே ’’இன்று கடலைக்கறி பிரமாதம்’’ என்கிறார்கள். அந்த பாராட்டு நிமிஷாவுக்கும் நமக்கும் சொல்லுவதென்னவென்றால் எங்களுக்கு பிடித்ததுபோல சமைப்பதற்கு பிறந்து வளர்ந்திருப்பவர்கள் பெண்கள் என்பதைத்தான்.
நிமிஷாவின் மாதவிலக்கு நாட்களில் வீட்டுக்கு வேலைக்கு வரும் ஒரு பெண் வீடு கூட்டி துடைக்கையில் தனக்குள்ளே மெதுவாக பாடிக்கொண்டிருக்கிறாள். இப்படி வேலைக்கு வெளியெ வருவது பெண்களின் சின்ன சின்ன மகிழ்வுகளை சுதந்திரங்களை அனுபவிக்க வழிகாட்டுகிறது என்பதை அந்தகாட்சி நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் வேலைக்கு போகும் பெண்களுக்கு இரட்டைப்பணிச்சுமைதான் இருந்தும் வேலைக்கு போக விரும்புவது வீட்டிலேயே இருக்கையில் அவர்களின் கழுத்தை நெறிக்கும் மானசீக விரல்களிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்து மூச்சுவிட்டுக்கொண்டு மீண்டும் மாலை அதனிடம் அகப்பட்டுக்கொள்ளும் பொருட்டுத்தான்
இரவில் சமையலறை வேலைக்கு உதவ வரும் மருமகளை மாமியார் தடுத்து படுக்கையறைக்கு போகக்சொல்லுகிறார். அவருக்கு தெரியும் அங்கு அவரின் மகனென்னும் ஆணுக்கு இவள் தேவைப்படுவாளென.
அக்காட்சியில் படுக்கையறையில் இளம்பெண்ணின் உடல் ஆளப்படுவதும் சமையலறையில் இன்னுமொரு மூத்த பெண்ணின் உழைப்பு சுரண்டப்படுவதும் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்.’’ 7 மணிக்கு மேல நீ இன்பலட்சுமி ’’பாடலை கூடங்களில் கேட்டு மகிழும் சமூகமல்லவா இது?
ஓயாத வீட்டுவேலைகளுக்குப்பிறகு உடலும் உள்ளமும் களைத்திருக்கும் பெண்களுக்கு, இன்பலட்சுமியாக இருக்கமுடியாமல், தாம்பத்ய உறவும், பாத்திரம் கழுவுவதைப்போல, எச்சில் எடுப்பதைப்போல, துணிதுவைப்பதைப்போல மற்றுமொரு வீட்டுவேலைகளிலொன்றாகி போய்விடுகின்றது என்பதையும் ஆண்கள் அன்றும் இன்றும் புரிந்துகொள்ளவேயில்லை
நெட்ஃப்லிக்ஸும் அமேஸான் பிரைமும் இப்படத்தை நிராகரித்ததற்கு காரணம் இதில் சொல்லப்பட்டிருக்கும் மத நம்பிக்கை தொடர்புடைய விஷயங்கள் என்கிறார்கள் இந்தப்படம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கண்டிக்கவில்லை, மாறாக சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபு, குடும்ப வழக்கங்கள், காலம்காலமாக கடைப்பிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை விட, வாழ வந்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமென்பதைத்தான் சொல்லுகின்றது.
அக்குடும்பத்தின் சந்ததியினரை உருவாக்குபவளை, கணவனுடன் இணைந்து இறுதி மூச்சு வரை வாழ்பவளை, புரிந்துகொள்ள, அவளின் தேவைகளை அறிந்துகொள்ள, நிறைவேற்ற, ஆண்கள் முன்வரவேண்டுமெனவும் வீட்டுவேலைகளில் அவர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்லவேண்டியே அக்காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள்
இந்தப்படத்தை ஆண்கள் அவசியம் பார்க்கவேண்டுமென்றெல்லாம் பரிந்துரைக்க வேண்டியதில்லை. ஏனெனில் சிலமணிநேர திரைப்படத்தில் திருந்தும் சமூகமல்ல இந்தியச்சமூகம். முழுச்செவிடான சமூகத்தின் காதுகளில் இப்படியான சங்குகளை ஊதுவது வீண்.
காலம்காலமாக இப்படி அடுப்படியில் அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும் அனுபவித்துக்கொண்டெ இருப்பவர்களுக்கும், நமக்கு முன்னே இவ்வாறு தன் இளமை, வாழ்நாள், கனவு, ஆற்றலெல்லாவற்றையும் இப்படியே இழந்து மறைந்துபோனவர்களுக்கும் , இனிமேலும் தொடரவிருக்கும் இந்த அநீதிக்கு இரையாகப்போகும் இன்றைய சிறுமிகளும் எதிர்காலத்து பெண்களுக்குமான சமர்ப்பணமாக இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டு,பெண்கள் அவசியம் இதை பார்க்கவேண்டும்.
ஒரு காட்சியில் பல தலைமுறைகளை சேர்ந்த தம்பதியினரின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக மெதுவாக காமிரா காட்டிக்கொண்டிருக்கையில் பின்னணியில் தேங்காய் துருவும், தாளிக்கும், சமைக்கும் ஓசைகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதைப்போல கேட்டுக்கொண்டிருக்கும்.
நிமிஷா என்னவானாள்? ஒழுகிக்கொண்டேயிருந்த அந்த சமையலறைக்குழாய் சரிசெயயப்ட்டதா? நிமிஷா வேலைக்குப் போகிறாளா? அதே வீட்டின் அதே தேநீர்கோப்பையை கழுவிக்கொண்டிருக்கும் தங்கவளையல்கள் நிறைந்திருக்கும் அந்தக்கைகள் யாருடையவை?
Neestream ல் திரைப்படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஊரடங்கு காலத்தில் அமேசான் பிரைமில் பேகம் ஜான் பார்த்து முடித்தேன். காலையில் துவங்கி இடையிடையேஆன்லைன் வகுப்புக்களும் மதியம் கல்லூரியில் நடந்த ஒரு ஜூம் கூடுகையுமாய் இடைவெளிவிட்டு பார்த்ததில் என்னவோ நிறைவில்லாமல், கதையோட்டத்துடன் உணர்வுபூர்வமாக என்னை பிணைத்துகொள்ளமுடியாமல் இருந்ததால் மீண்டும் மாலை எல்லா முக்கிய வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழுதாக இடையூறுகளும் இடைவெளிகளும் இன்றி பார்த்தேன். என் மனதின் ரணங்கள் காய்ந்து கெட்டிப்பட்டுவிட்டதென்று நினைத்திருந்தேன் ஆனால் இன்னும் ஈரமிருக்கின்றது போல. கசிந்து அழுதே விட்டேன் இரண்டு முறை என்னையறியாமல்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இப்படி பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பார்வையில் திரைப்படமாக எடுக்க முடியுமென்பதே எனக்கு பெரும் வியப்பளித்தது. வித்யாபாலன் நல்ல தேர்வு அவரில்லாவிட்டால் தபு செய்திருப்பார். வித்யாவும் தபுவும் ஒன்றேபோலானவர்கள் என்பதுதான் என் அபிப்பிராயம் எனினும் தபுவுக்கு உடல்மொழியிலும் தோற்றத்திலும் கூடுதல் முதிர்ச்சி. வித்யாவில் எங்கோ ஒரு நெகிழும் தன்மை அல்லது ஒரு மென்மை இருப்பதை நம்மால் உணர முடியும் குறிப்பாக அவரது அகலக்கண்கள். ஆண் பிள்ளைச்சட்டைபோல உடைகள், கால்களை அகலமாக வைத்து உட்காருவது, ஹூக்கா பிடிப்பது, முதுகுபிடித்து விடச்சொல்லி கட்டிலில் படுத்துக்கொண்டே பேசுவது, அறைவது, என்று எத்தனை ஆண்பிள்ளைத்தனங்களை வித்யா செய்துகொண்டிருந்தாலும் அவரது அகலக்கண்களில் பெண்மை மிளிர்கிறது. அதன் பொருட்டே அவரை இதில் தெரிவு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
வலிமிகுந்த கதை
எனக்கு எப்போதுமே பாலியல் தொழில்செய்யும் பெண்களின் மீது கரிசனமும் பிரியமும் வாஞ்சையும் உண்டு. பாலுறவை ஒரு தொழிலாக செய்து உடலை, உயிரை, வயிற்றை, குடும்பத்தை வளர்ப்பெதென்பது எத்தனை அவலம்? எத்தனை வலி மிகுந்த வாழ்வு அவர்களுடையது இல்லையா?
நாஞ்சில் சார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேட்டார்,//உடலுறவு என்னும் சொல்லே அகராதியில் இல்லை மனம் பெரும் பங்காற்ற வேண்டிய ஒரு செயலை எப்படி வெறும் உடல்களின் உறவென்று சொல்ல முடியுமென்று///
இருளிலும் கண்களை மூடி சகித்துக்கொள்ளும் நிகழ்வாக இது நம்மைச்சுற்றியும் எத்தனையோ ஆயிரம் பெண்களுக்கு இருக்கிறதல்லவா?
இதிலும் உடலை ஒருவனுக்கு ஆளக்கொடுத்துவிட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டோ, விருப்பமானவனை நினைத்துக்கொண்டோ, ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டோ பெண்கள் படுத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.
வீட்டு உதவியாளனும் பாலியல்தொழிலுக்கு ஆள் பிடித்துவருபவனாகவும் வரும் அந்த ஆணின் காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது அவனும் அவளும் ஒரு மொட்டைப்பாறையில் மனதை திறந்து பகிர்ந்துகொள்ளும் காட்சி சிறப்பாக இருந்தது. உண்மையில் முதல் பாதியின் தீவிரம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இந்த திரைப்படம் இன்னும் நல்ல சிறப்பான இடத்திற்கு வந்திருக்கும். அந்தப்பெண் ///மார்பும் யோனியும் எல்லாம் வெறும் சதைத்திரள், என் ஆத்மாவில் இருக்கிறது உன்மேலான காதலென்று// சொல்லும் காட்சி அத்தனை நெகிழ்சி.
அந்த மாஸ்டரை ஏன் திடீரென வில்லனாக்கினார்களென்று தெரியவில்லை அவர் குலாபோவை ஏமாற்றும் காட்சி எனக்கு மிகவும் வலித்தது. அவளை அந்த ஜட்காவோ ரிக்ஷாவோ, அதில் ஏற்றிவிட்டு ’விபச்சாரிகளுக்கு கணவர்களல்ல, வாடிக்கையாளர்கள் தான் கிடைப்பார்கள்’ என்று சொல்லும் காட்சியில் நான் அழுதேன் . அந்த காட்சியின் தீவிரத்தினால் மட்டுமல்ல, எத்தனை புத்திசாலிகளாகவும் அழகிகளாகவும் முதிர்ச்சியுடனும் இருந்தாலும் அன்பின் பேரால் பெண்கள் யுகம் யுகமாக எத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்களென்னும் உண்மை எனக்கு வலித்ததினாலும் அழுதேன்.
அந்த பெண்ணை அங்கேயே அனுபவிக்கத்துவங்கிய அந்த ஆணுடன் அந்த வண்டி நகருகையில் குலாபோவின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கும்
சமீபத்தில் நான் இப்படி மனம் கலங்கியதில்லை .
அதுபோலவே ஒரு 10 வயதுபெண்ணின் தகப்பனான காவலதிகாரியின் முன்னால் அந்த சிறுமி தன் உடைகளை களைந்துவிட்டு நிற்கும் காட்சியும்
எங்கேயோ பார்த்து போலிருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டே இருந்து பின்னர் கண்டுபிடித்தேன் இலா அருணை. அந்த லுங்கியும் பனியனுமாக வரும் வில்லன் சஞ்சய் பாண்டே, சஞ்சய்தத்தை போலவே தெரிந்தார் எனக்கு.
என் அபிமானத்துக்கு உரிய நஸ்ருதீன் ஷாவும் இருக்கிறார். படுக்கையில் சாய்ந்தவாறு நஸ்ருதீனும, அவரெதிரே வித்யாவும் இருக்கும் அந்த ஒரு காட்சியில் மங்கலான ஒளியில் மின்னும் ஆபரணங்களும் உடைகளும் உலோகப்பொருட்களுமாக அக்காட்சியின் பழமையை காட்டும் ஒளியமைப்பு அத்தனை பிரமாதமாக இருந்தது. வித்யாவுக்கு மட்டுமான கூடுதல் பிரகாசத்தில் முகம் ஒளிர அவர் நயந்தும் சினந்தும் கெஞ்சியும் கொஞ்சியும் பேசுவது சிறப்பு
இரண்டாம் பாதியை மிக செயற்கையான நாடகத்தன்மையுடன் எடுக்காமல் முன்பாதியைப்போலவே எடுத்திருக்கலாம் என்று ஆதங்கமாக இருந்தது. நல்லவேளையாக இது முழுவதும் உண்மைக்கதையல்லவென்பதும் ஆறுதலாக இருந்தது.
அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் செப்டம்பர் 14, 2018ல் வெளியான மனதின் விழைவென்னும் பொருள் கொண்ட இந்தித்திரைப்படம் மன்மர்ஜியான். தயாரிப்பு Eros International, Phantom Films மற்றும் Colour Yellow. அபிஷேக் பச்சன், விக்கி கெளஷல் மற்றும் தாப்ஸி பன்னு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில். திரைக்கதை கனிகா, இசை அம்ரித் திரிவேதி, படத்தொகுப்பு ஆர்த்தி பஜாஜ், ஒளி இயக்கம் சில்வெஸ்டர் பொன்சேகா; இந்தியாவில் மட்டும் 1500 அரங்குகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்paட்ட இப்படம் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது.
முதன் முதலாக விக்கி கெளஷல், விக்கி என்னும் பெயரிலேயே வருகிறார், முதன்முறையாக படு கிளாமராக தாப்ஸி , முதன் முறையாக அபிஷேக் சர்தார் பாத்திரத்தில், முதன் முதலாக அனுராக் தானெழுதாத திரைக்கதையை இயக்கியிருக்கிறார்.
மூன்று நபர்களுக்கிடையேயான முக்கோணக்காதல் கதையை பார்த்திருக்கிறோம், இதுவும் அப்படித்தான் ஆனால் காதல் காமம் கல்யாணமென்னும் புதிய முக்கோணத்தை சொல்லும் படமிது. காதலின் நிறங்களை சொல்லும் “Grey Waala Shade”, பாடலிலேயே இயக்குநர் கதையை கோடிட்டு காட்டிவிடுகிறார். இந்தப்பாடலே, படம் கொடுக்கவிருக்கும் கலாச்சார அதிர்ச்சிகளுக்கும், மரபு மீறல்களுக்கும் நம்மை தயார் செய்துவிடுகிறது. படமும் அப்படியேதான். காதலைக்குறித்தும், காதலைச்சொல்லும் சினிமாவை குறித்தும் இதுநாள் வரை நமக்கிருந்த பார்வையையும் எண்ணங்களையுமே மொத்தமாக கலைத்துவிடுகிறது. புறாக்கள், கடிதங்கள், நண்பர்கள் வழியே வளர்ந்து, பின்னர் மின்னஞ்சல் முகநூல் என்று பரிணாம் வளர்ச்சி அடைந்துகொண்டே வந்த காதல் இதில் டிண்டரின் தாக்கத்தை சொல்லுகின்றது.
கதவுக்குப்பின்னே மறைந்து கொள்ளுவது, கால்விரல்களால் தரையில் கோலம்போடுவது, காதலனின் பேரைக்கூட சொல்லாமலிருப்பது, முகத்தைப்பார்க்கமலேயே காதலிப்பது, காதலுக்காக உயிரைவிடுவது என்றெல்லாம் பார்த்த பல நூறு படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் காதலென்பதைக் குறித்த மனச்சித்திரத்தின் மீது பெரிய சுத்தியலால் ஒரேயடியாக அடித்து நொறுக்குகிறது இந்தப்படம்.
கட்டிபிடித்தலும் ஆழ்ந்தமுத்தங்களுமாக மொட்டைமாடிக்கு ரகசியமாக வரும் காதலன் விக்கியும் , வீட்டுப்பெரியவர்கள் கதவை உடையும்படி தட்டினாலும் திறக்காமல் துணிந்து காதலனுடன் நெருக்கமாக இருக்கும் தாப்ஸியுமாக படம் அதிரடியாக துவங்குகிறது
ரூமியாக தாப்ஸி, விக்கியாகவே விக்கி,ராபியாக அபிஷேக். தாப்ஸியின் பாத்திரம் மிகச்சிக்கலானது. தீவிர காதலில் விக்கியுடன் இருக்கிறார். உண்மையில் அவர்களுக்கிடையே இருப்பது காட்டாறைப்போல அவர்களை இழுத்துச்செல்லும் கட்டற்ற, இளமையின் வேகத்தில் காதலென்னும் போர்வையில் இருக்கும் காமம்தான்
.பெற்றாரை இழந்த, உறவினர்களின் ஆதரவில் இருக்கும், ஹாக்கி விளயாடும், எல்லைகளை மிகசுலபமாக தாண்டும், வேலிகளை உடைக்கும், கருக்கலைப்பு செய்துகொள்ளும், கணத்துக்குகணம் முடிவுகளை மாற்றிக்கொள்ளும், ஆவேசமான காதலில் இருப்பது, காதல் கைகூடவில்லையெனில் உடன் இன்னொரு அப்பாவியை கல்யாணம் செய்துகொள்ளுவதென்று இந்த யுகத்தின் இளைஞியாக கலவர கேரக்டர் ரூமியுடையது.
காதலுக்கும் காமத்திற்கும் இடையிலிருக்கும் கோட்டை முற்றிலுமாக அழித்துவிட்டு எல்லா விதிகளையும், நெறிகளையும், கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறும், இதயமும், ஹார்மோன்களும் சொல்லுவதை மட்டுமே பின்பற்றும் பஞ்சாபி பெண்ணாக ரூமி. அவளுக்கு காதலனும் வேண்டும் கணவனும் வேண்டும். காதலனுடனும் கோபம், கணவனுடனும் கோபம், ஆனால் இருவருடனும் காமம் கொள்கிறாள்
அவளின் துடிப்பும் உற்சாகமும், துள்ளலும், வேகமும், கோபமும் நம்மையும் தொற்றிக்கொள்ளும். ரூமிதான் முழுப்படத்தையும் ஆள்கிறார். நிச்சயமாக தாப்ஸியின் மிகச்சிறந்த படங்களில் இதை முதலாவதாக சொல்லிவிடலாம்.
அபிஷேக்கின் ராபி பாத்திரமும் புதிர்தான். திருமணத்துக்கு பிறகும் முன்காதலை நினைத்துக்கொண்டே இருக்கும், முன்காதலனுடன் தொடர்பிலும் , உடலுறவிலும் இருக்கும் மனைவியையும் மனதார நேசிக்கிறார் அவளை எந்த கேள்வியும் கேட்பதில்லை மெளனமாகவே இருக்கும் ’’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’’ என்னும் மனநிலை கொண்ட, எப்போதும் புன்சிரிப்புடனிருக்கும் ஏறக்குறைய துறவி கேரக்டர். விமான நிலையத்தில் வந்து தலைப்பாகை அணிந்து கொள்ளும் சமத்து சர்தார். பதிவிரதைபோல இவர் பத்தினி விரதர்.
எந்த கட்டுப்பாடுகளும், ஒழுங்கும், குறிக்கோளும், திடசித்தமும் இல்லாத காதலனாக விக்கி. அவரது சிகை அலங்காரமே சொல்லிவிடும் அவரது பாத்திரத்தின் இயல்புகளை.
இருவருக்குமே ரூமியின் மீது கண்மூடித்தனமான காதல். காதலனும் சரி கணவனும் சரி ரூமியின் கட்டற்ற வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். ராபி, விக்கி இருவருக்குமான பாத்திரப்படைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நிலையிலா மனம் கொண்டிருப்பதில் மட்டும் ரூமியுடன் ஒத்துபோகிறான் விக்கி. இருவரும் பெண்டுலம் போல முன்னும் பின்னுமாக உசலாடிச்கொண்டெ இருக்கிறார்கள் படம் நெடுகவே!
ஒரு நல்ல அக்மார்க் கணவனாக ராபியின் பாத்திரத்தை காட்டியிருப்பதாக திரைக்கதை சொன்னாலும் பார்வையாளர்களுக்கு ’’அடப்பாவி இப்படியும் ஒரு ஏமாந்தவன் இருப்பானா’’ என்றே அங்கலாய்க்க தோன்றுகிறது. அன்புக்கும் எல்லைகள் உண்டே!. மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பது வேறு, அவள் மனைவியாகவே இல்லாமலிருக்கையிலும் சுதந்திரம் கொடுப்பதென்பது முற்றிலும் வேறு. ’’மெளன ராக’த்தை மாய்ந்து மாய்ந்து இன்னும் பேசும் நமக்கெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுக்கின்றது இத்திரைப்படம்.. விட்டுப்பிடிப்பதற்கும், ஒரேயடியாக விட்டுவிடுவதற்குமான வேறுபாடு மிக முக்கியமல்லவா?
ரூமியின் இரட்டை மனதின் குழப்பங்களையும், கணவன் காதலன் என இருதிசைகளிலும் இருக்கும் ரூமியின் விழைவுகளுக்கும் குறியீடாக பாடல்களிலும் காட்சிகளிலும் இரட்டைச்சகோதரிகள் இடையிடையே வருவது நல்ல உத்தி. இரட்டை சகோதரிகள் ப்ரியங்கா ஷா, பூனம் ஷா இருவரும் B fusion எனப்படும் பரதநாட்டியம், பாங்ரா, பாலிவுட் நடனம் இவற்றின் கலவையை ஹிப்ஹாப்’புடன் கலந்து ஆடுகிறார்கள்.
பத்துப்பாடல்கள். எல்லாமே அருமை குறிப்பாக, காதலனுடன் மனைவி நெருக்கமாக இருப்பதை ராபி, நேரில் பார்த்தபின்பு வரும் ’’ஹல்லா’’ மனதை உருக்குகின்றது.
இதில் வரும் மூன்று பாத்திரங்களுமே மரபை, சம்பிரதாயங்களை, இல்லறமென்னும் அமைப்பின் அடிப்படைகளை அல்லது கற்பிதங்களை கேள்வி கேட்கின்றன, கேலி செய்கின்றன.
திரைப்படம் பார்த்தபின்பு இப்படியான விஷயங்கள் சாதாரணமாக நடைபெறும் காலம் வெகுதூரத்தில் இல்லையென்பதையும் நாம் உணரமுடியும். நிச்சயம் இது பெரியவர்களுக்கு மட்டுமேயான திரைப்படம்.
நவம்பர் 12 ஆம் தேதி அமேஸான் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட ’சூரரைப்போற்று’ நடிகர், தயாரிப்பாளர் சூர்யாவின் 2D Entertainment சொந்த தயாரிப்பில், சுதா கோங்குராவின் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படம், இதில் சூர்யாவுடன் மலையாள நடிகை அபர்ணா பாலகிருஷ்ணன், ஊர்வசி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆர் எஸ் சிவாஜி, காளி வெங்கெட் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர். இசை ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா , வசனங்கள் விஜயகுமார். ஒரே சமயத்தில் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் சூரரைப்போற்று வெளியாகி இருக்கிறது.
Air Deccan – ஏர்டெக்கான் நிறுவனத்தின் தலைவர் திரு கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அவரது simply fly நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.
எளிய கிராமத்துப் பின்னணி கொண்ட நெடுமாறன் ராஜாங்கமான சூர்யா ராணுவ விமான பைலட்டாகிறார். மரணப்படுக்கையில் இருக்கும், சொந்த கிராமத்தை முன்னெடுக்க பல முயற்சிகளை சாத்விகமாக செய்து தோல்வியுற்ற, தன் தந்தையை பார்க்க வர விமான பயணக்கட்டணம் அதிகமென்பதால் அவ்வாய்ப்பை தவறவிட்டு தந்தையை இறுதியாக காணமுடியாமலாகும் மாறன் தானே சாமான்யர்களும் குறைந்த கட்டணக்களில் பயணிக்கும் பட்ஜெட் விமான நிறுவனம் துவங்க முடிவு செய்வதும், அதை சாதமாக்க அதே தொழிலில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் செய்யும் சதிகளும், இம்முயற்சியில் மாறன் சந்திக்கும் தோல்விகளும், சோதனைகளும், நிதி உள்ளிட்ட பல தடைகளும், அனைத்தையும் மாறன் முறியடித்து நினைத்தபடியே விமான சேவையை துவங்குவதும் தான் முக்கிய கதை. இடையில் காதல், குடும்பம், குழந்தை, நட்பு, தந்தையுடன் கருத்துமோதல் செண்டிமெண்ட் என பலவற்றை சேர்த்திருக்கிறர்கள்.
மோகன் பாபு தெலுங்கு நெடியுடன் பேசும் வசனங்களும் காட்சிகளும் ஓகே ரகம் தான் இந்த பாத்திரத்துக்கு ஏன் அவரை மெனெக்கெட்டு அழைத்துவந்தார்கள்?. கருணாஸும் காளி வெங்கட்டும் வழக்கம் போல அப்பாவி பாத்திரங்களில் ஒரு மாற்றமுமின்றி வந்து போகிறார்கள்
விமான நிறுவனம் ஒன்றை சொந்தமாக தயாரிக்கும் ஒருவரின் கனவைக்குறித்த படமென்பதால் அந்த தொழிலைக்குறித்த பிரத்யேக சிக்கல்கள் நெளிவு சுளிவுகள், போட்டிகள் என்று படத்தின் மையக்கரு அதிகம் தொழிநுட்பம் சார்ந்ததாகவே இருப்பதும் ,சாமான்யர்களுக்கு புரியாத பல காட்சிகளும் வசனங்களுமாக, படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையவில்லை.
கோபிநாத்தின் சுயசரிதையை அப்படியே திரைப்படமாக்கவில்லை தழுவல் மட்டுமே என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றது. தழுவல் என்றான பின்னர் ஏன் அத்தனை சிக்கலான காட்சிகளை கொடுக்க வேண்டும். தழுவலில் ஏன் பொம்மி ஒரு நகரத்தில் பேக்கரி தொழிலை துவங்கி இருப்பதாக காட்டியிருக்கக்கூடாது? கதையின் ரியல் நாயகன் கோபிநாத் ஒரு பிராமணர் ஆனால் மாறனுக்கு அப்படியான சாதி அடையாளங்கள் ஏதும் காட்டப்படவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மதுரைத்தமிழனாகவே காட்டப்படுகிறார். இத்தனை வணிகரீதியான மாற்றங்களிருக்கையில் இந்திய விமான சேவையின் வரலாற்றில் மிக முக்கியமான அடையாளம் கொண்டிருக்கும் டெக்கான் ஏர் நிறுவன உரிமையாளரின் சுயசரிதைக்கு ஏன் போகவேண்டும். வழக்கமான கற்பனைக்கதையாகவே எடுத்திருக்கலாமே ?
மாபெரும் விமான நிறுவனத்தை உருவாக்கும் சூர்யாவின் நெடுமாறன் பாத்திரத்தின் ’உன்னதமாக்கல்’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. இத்தனை பெரிய நிறுவனம் துவங்க இருக்கும் ஒரு கிராமத்து இளைஞன், லஞ்சம் கொடுக்காமலும், எந்த குறுக்கு வழியிலும் போகாமலும், கோடிகளை ஒருவர் கொடுக்கையிலும் மறுப்பது போலவும் காட்டியிருக்கிறார்கள். விஜய் மல்லையா அளிப்பதாக சொல்லும் பெருந்தொகையை மாறன் மறுப்பதை மட்டும் காட்டும் திரைகதை ஏர் டெக்கான் விஜய்மல்லையாவுடனே பிறகு இணைந்ததை சொல்லவில்லை
இயக்குநர் சுதா தெலுங்கு தேசமென்பதால் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் தூக்கலாகவே இருக்கின்றது. குறிப்பாக ஊர்மக்கள் 100, 200 என்று பணம் அனுப்பி சூர்யாவின் தொழிலுக்கு உதவுவது, பணம் அனுப்ப ஊரே திரண்டு வருவது, மாற்றி மாற்றி போனில் பாசம் காட்டும் காட்சிகளிளெல்லாம் ஆந்திர நெடி அடிக்கின்றது
அதிலும் ஊர்வசி கண்ணீரும் கம்பலையுமாக மாறனுக்கு கொடுக்கும் உணர்வுபூர்வமான அழுத்தம் மாறனோடு சேர்த்து நமக்கும் பதட்டத்தை அளிக்கின்றது. ‘’ ஜெயிச்சுருவியில்ல மாறா, ஜெயிச்சுருடா ஊரே உன்னைத்தான் நம்பி இருக்கு’’ என்று அவர் பிழிந்து ஊற்றுகையில் நமக்கே பயத்தில் நெஞ்சடைக்கின்றது, அத்தனை ஓவராக பாசம் காட்டும் ஊர்மக்கள் சூர்யாவின் சிறு தோல்விக்கே அவரை இகழ்ந்து பேசி தூக்கி வீசுவதும் பின்னர் மறுபடியும் பாட்டிகளும் தாத்தாக்களும் குழந்தை குட்டிகளும் பொண்ணு மாப்பிள்ளையுமாக விமானத்தில் வந்து, காது வளர்த்தி பாம்படம் போட்ட பாட்டிகள் சூர்யாவை நெட்டிமுறித்து வாழ்த்துவதுமாக படம் செண்டிமெண்ட் ட்ராக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பறந்து கொண்டே இருக்கிறது. விமான நிலையத்தில் சூர்யா பணம் கேட்டுக்கெஞ்சி அழும் காட்சிகளும் அதிகப்படிதான். மசாலா நெடியை குறைத்திருக்கலாம். தெலுங்கு டப்பிங் படம்பார்க்கும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது
பெண்பார்க்க கதாநாயகன் செல்லும் காட்சிகள் ஏராளம் பார்த்திருக்கிறோம் இதில் முதல் காட்சியிலேயே மாப்பிள்ளையை பார்க்க நாயகி செல்வது புதுமை. அபர்ணா நன்றாக நடித்திருக்கிறார் முற்றின முகம் என்பதால் சூர்யாவுக்கு அக்காபோல இருக்கிறார். துவக்க காட்சிகளின் அதிரடி இயல்புகள் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு காணாமல் போய் , கணவனுக்கு உணவை ஊட்டிவிடும் குழந்தையை பார்த்துக்கொள்ளும்,, தோல்வியில் துவண்டுபோகையில் கணவனுக்கு உத்வேகம் தரும் நஷ்டமேற்பட்டால் கடன் ,தரும் கைக்குழந்தையுடன் தனியே விமானத்தில் பயணிக்க தயாராகும் உன்னத மனைவியாகிவிடுகிறார்.
கணவன் ஒரு பொது இடத்தில் எதிர்பாரா சிக்கலில் இருக்கையில் பிரசவ வலி வர, தான் பார்த்துக்கொள்வதாக தைரியமாக சொல்லிச் செல்வதும், கடைவீதியில் இருக்கையில் வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் டென்ஷனாகும் மாறன் மனைவியை மறந்து பைக்கில் புறப்பட எத்தனிக்கையில் தான் ஆட்டோவில் வந்துவிடுவதாகவும் மாறன் போகலாமென்றும் சொல்லும் காட்சியும் சிறப்பு. இப்படியான நல்ல புரிதல் உள்ள, அழகிய, கேட்கையிலெல்லாம் கடனளிக்கும், கனவுகளுக்கு கைகொடுக்கும், காதலிக்கும், சாப்பாடு ஊட்டிவிடும் மனைவிக்கான ஏக்கத்தை பொம்மி பாத்திரம் இளைஞர்களுக்கு அளித்திருக்கிறது
பல வருடங்களுக்கு பிறகு கருணாஸுடனும் முதல் முறையாக ஊர்வசியுடன் முழுப்படத்திலும் சூர்யா இதில் நடிக்கிறார். ஊர்வசி மிகத் தளர்ந்திருக்கிறார்.
உடலைக்கட்டுக்குள் வைத்து பாத்திரத்திற்கு பொருந்தும் தோற்றத்துடன் இருக்க கடுமையான உணவுகட்டுப்பாட்டில் இருந்ததற்கு சூர்யாவிடம் நல்ல பலன் தெரிகின்றது. சீருடையில் பிரமாதமாக இருக்கிறார். வயதையே யூகிக்க முடியாத உடற்கட்டும் இளமையும் வலிமையுமாக வருகிறார். பாராட்டுக்கள்
சொந்தக்குரலில் மதுரைத்தமிழில் சரளமாக பேசும் அபர்ணா, சூர்யாவிடம் உணர்வுபூர்வமாக உச்சஸ்தாயியில் ஆக்ரோஷமாக பேசும் மொட்டைமாடிக் காட்சி வசனங்களில் மட்டும் மலையாள நடிகை என்பதை காட்டிவிடுகிறார். தாய்மொழியின் வலிமையல்லவா அது!
சென்சாரில் U சான்றிதழ் வாங்கி இருந்தும் சூர்யா ஆபாச வசவுகளை ஏராளமாக பேசுகிறார். சிவகுமார் சார் கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?
கோபமும், கனவுகளும், வேகமும் வெற்றிக்கான துடிப்பும் நிறைந்த இளைஞனாக, மாறனாகவே மாறி இருப்பதற்கும், அகரம் அமைப்பின் மூலமாக ’’தனது பெரிய கனவு’’ என்னும் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 70 பேரை இலவசமாக விமானத்தில் பயணம் செய்ய வைத்து, அந்த பயணத்தில், வெய்யோன் சில்லி’யென்னும் அருமையான பாடலை நடுவானில் விமானத்தில் ரிலீஸ் செய்திருப்பதற்கும், புத்திசாலித்தனமாக இணையத்தில் படத்தை வெளியிட்டு சொந்த தயாரிப்பில் நஷ்டம் வராமல் பார்த்துக்கொண்டதற்கும், படத்தை அமேஸானுக்கு விற்ற தொகையில் 5 கோடிகளை கொரோனா பணியாளர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளித்ததற்குமாக சூர்யாவை போற்றுவோம்.
Nordic noir, அல்லது Scandinavian noir, வகையைச்சேர்ந்த காவல்துறையினரின் பார்வையில் சொல்லப்படும் குற்றப்புலனாய்வு கதைகளின் நெடுந்தொடர் ’’மார்செல்லா’’
இந்த மூன்று சீசன்களும் 24 பகுதிகளுமான நெடுந்தொடரை எழுதி இயக்கி தயாரித்துமிருப்பவர் ஸ்வீடன் நாட்டு திரைக்கதாசிரியரும், 2011ல் வெளிவந்து 10 நாடுகளில் ஒளிபரப்பான புகழ்பெற்ற குறறப்பின்னணிக் கதையான‘ The Bridge’’ தொலைக்காட்சித் தொடரை எழுதி இயக்கியவருமான (Hans Rosenfeldt,) ஹான்ஸ் ரோசன்.
விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பரபரப்பாகவே செல்லும் கதைத்தொடர் இது. கடத்தல், கொலை, குடும்ப வன்முறை, காவல் துறை குற்றப்புலனாய்வு, தாய்மை, காதல், பிறழுறவு, வன்முறை, போதை மருந்து, கடத்தல், ஊழல், இளமை, பயணம் ஆள் மாறாட்டம் , நம்பிக்கைத்துரோகம் என எல்லா அம்சங்களும் உள்ள ஒரு நெடுந்தொடர் மார்செல்லா. ஒவ்வொரு எபிசோடும் மிக சுவரஸ்யமாகவே கட்டமைக்கப்ட்டிருக்கிறது.
குடும்பத்தை கவனிக்கவென காவல்துறைப்பணியிலிருந்து விலகியிருந்த காவல் அதிகாரியான மார்செல்லா 11 வருடங்களுக்கு முன்பு தொடர் கொலைகள் செய்துகொண்டிருந்த குற்றவாளி மீண்டும் கொலைகளை செய்யத்துவங்கிருக்கலாமென்னும் சந்தேகத்தின் பேரில் அக்கொலைகளை விசாரிக்கவென மீண்டும் பணியில் இணைகிறார்.
சவாலான பணி, சீர்கெட்டுக்கொண்டிருக்கும் குடும்ப வாழ்வு, மனப்பிறழ்வு, கட்டுபடுத்தமுடியாத கோபம், இப்படி பலவற்றுடன் போராடும் 30களின் இறுதியில் இருக்கும் பெண் காவலதிகாரி மார்செல்லாவாக ’துணிந்து’ நடிப்பதில் பெயர் பெற்ற பிரிடிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான அன்னா ஃப்ரெயெல் (Anna Friel) . அவரைத்தவிர வேறு யாராலும் இத்தொடரின் மார்செல்லா பாத்திரத்தை இத்தனை சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதை பார்வையாளர்களை முதல் சீசன் முடியும் போதே உணர வைத்துவிடுவார். காவலதிகாரியாக நடிக்கையிலேயே, குடும்பத்தலைவியாக், கணவனின் அன்புக்கு ஏங்குபவளாக , நல்ல அன்னையாக கணவனின் துரோகத்தை தாங்க முடியாமல் சீறுபவராகவும் நடி்ப்பதென்பது பெரிய சவால். அன்னா இதை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். பொருத்தமான உடற்கட்டும் கூட.
மார்செல்லாவின் கணவராக அன்னாவைபோலவே திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துகொண்டிருக்கும் புகழ்பெற்ற நடிகர் நிக்கோலஸ். (Nicholas Andre Pinnock)
லண்டனை தலைமையகமாக கொண்ட பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV யில் 2016ல் ஒளிபரப்பான மார்செல்லா தற்போது நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.
முதல் தொடர்;
பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்கொலைகளை செய்த குற்றவாளி மீண்டும் அதே பாணியில் மூன்று கொலைகளை செய்திருப்பதாக சந்தேகப்படுவது, அந்த குற்றப்புலனாய்வும் அதன் திடுக்கிடும் திருப்பங்களும், செல்வந்தரும் கணவன் பணியாற்றும் தொழில்குடும்பத்தின் வாரிசுமான் கிரேஸ் கொலையாவதும், அந்தகொலையை மார்செல்லாவே மனம்பிறழ்ந்திருந்த சமயத்தில் செய்திருக்கலாமென்ன்னும் சாத்தியமும் , இறந்துபோன கிரேஸுக்கும் மார்செல்லாவின் கணவனுக்குமான பிறழ் உறவு , கிரேஸின் கர்ப்பம், குடும்ப வன்முறை குழந்தைகளுடனான் முரண், கணவன் மணவிலக்கு கோருவது, என கலவையான, உணர்வெழுச்சிகளுடனான் கதைகள் நிறைந்தது இந்த முதல் தொடர்.
இரண்டாம் தொடர்;
மார்செல்லாவின் மகனின் பள்ளித்தோழன் உட்பட பல குழந்தைகள் காணாமல் போய், பின்னர், தொடர்ந்து கொல்லப்படுவதை புலனாய்வு செய்யும் இந்த தொடரில் குழந்தைகளுடன் உற்வுகொள்ளும் முன்னால் குற்றவாளி, ஒரு செல்வந்தர் , மிகப்பிரபலமானெ முன்னால் பாடகர் என ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவது, இடையே வரும் மாந்த்ரீக குறியீடுகள், விலகிச்சென்றுவிட்ட கணவன் மணவிலக்குக்கு முன்பாகவே ஒரு நர்சுடன் வாழத்துவங்குவது, மார்செல்லாவின் மனப்பிறழ்வு அதி்கரித்திருப்பது, குழந்தைகள் மார்செல்லாவை புரிந்து கொள்ளாமலிருப்பது என விறு விறுப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.
மூன்றாம் தொடர்;
மார்செல்லா, தான் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு கெய்ரா எனும் புதிய பெயரில் under cover அதிகரியாக மாபெரும் குற்றசாம்ராஜ்ஜியத்துக்கே சொந்தமான வீட்டிலேயே வாழத்துவங்குவதும் அந்த வீட்டு வாரிசுடன் நெருங்கிப் பழகுவதும் அவர் எதிர்கொளும் பிரச்சனைளுகம், அவர் கெய்ரா இல்லை மார்செல்லாதான் என கண்டுபிடிக்கப்படும் சாத்தியங்கள் அவ்வப்போது இடைபட்டுக்கொண்டே இருப்பதும்தான் கதை
முதலிரண்டு தொடர்களை ஒப்பிடுகையில் மூன்றாம் தொடர், நாடகபாணியில் பிரம்மாண்ட வீடு, மர்மமான பல நிகழ்வுகள், என பழைய சிவாஜிகணேசன் திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றது..
சர்வசாதாரணமான கொலைகள், கெளரவக்கொலைகள் என இதிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.
8 பகுதிகளை கொண்டிருக்கும் மூன்று தொடர்களுமே இறுதிப்பகுதிகலில் இருக்கை நுனிக்கு நம்மை கொண்டு வந்துவிடும். அத்தனை பரபரப்பு, மர்மம் ,அத்தனை வேகம், அத்தனை எதிர்பாராமை கொண்டவைகளாக இருக்கும் காட்சிகள்.
சிறந்த இயக்கம்,பொருத்தமான கதாபாத்திர தேர்வு, பிரமாதமான திரைக்கதையாக்கம் மற்றும் அபாரமான படத்தொகுப்பு
குற்றப்ப்புலனாய்வு கதைப்பிரியர்கள் அவசியம் பார்க்கவேண்டிய சிக்கலான சுவாரஸ்யமான ஒரு தொடர் மார்செல்லா. காவல் துறை குற்றப்புலனாய்வு என்று ஒரே பாதையில் திரைக்தையை அமைக்காமல் குடும்பச்சிக்கல்களையும், சேர்த்திருப்பதால் இத்தொடர் மற்றவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஆபாசவசைச்சொற்கள், போதை மருந்து பயன்பாடு, வன்முறை , கொலை, இறப்பு இறந்த உடல்கள், மற்றும் நெருக்கமான ஆண்பெண் உறவுக்காட்சிகள் நிறைந்திருப்பதால் மார்செல்லா பெரியவர்களுக்கு மட்டுமேயான தொடர்.
அக்டோபர் 16,2020 அன்று நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான தமிழ்ப்படம் ‘புத்தம் புது காலை’’, சுதா கொங்காரா, கெளதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் , ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என ஐந்து இயக்குநர்களின், 5 குறும்படங்களின் தொகுப்பு படமாகும் (Anthology/package film).
5 இயக்குநர்கள்
ஜெயராம், ஜெயராமின் மகன் காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷிணி, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், பாபிசிம்ஹா, குருசரண், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் இந்த தொகுப்புப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர். ஐந்து படங்களுமே கோவிட் தொற்றின் வீடடங்கு காலத்தில் படம்பிடிக்கப்பட்டவை, அனைத்து படங்களுமே வைரஸ் வீடடங்கு பல குடும்பங்களில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களையும், அதன்பேரில் முகிழ்க்கும் காதலை, புதிய துவக்கத்தை, தோழமையை, நம்பிக்கையை பேசுகின்றன.
புத்தம் புதுகாலையை துவங்கிவைப்பது’ ஜெயராம் மற்றும் ஊர்வசியின் ’’இளமை இதோ இதோ’’. மிக நல்ல தொடக்கம். இளமை இறங்கு முகத்திலிருக்கும், தத்தமது துணையை இழந்திருக்கும் ஆனாலும் மீதமிருக்கும் வாழ்நாளை தகுந்த, நேசமிக்க துணையுடன் வாழ நினைப்பவர்களாக மிகசிறப்பாக நடித்திருக்கிறார்கள் ஊர்வசி மற்றும் ஜெயராம் இருவருமே. மனைவியை இழந்த ஜெயராமும் கணவனை இழந்த ஊர்வசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஜெயராமின் வீட்டில் அவரை சந்திக்க ஊர்வசி வந்திருக்கையில் வைரஸ் தொற்றினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊர்வசி ஜெயராமுடனேயே 21 நாட்கள் தங்கும்படி ஆகின்றது. அவர்கள் பரஸ்பரம் ஒரு துணை மட்டுமல்ல நல்ல தோழமையும் புரிதலும் உள்ளவர்களாகவும் இருப்பதை அந்த சில நாட்களில் உணருகின்றனர்.
இருவரின் மனதிலிருக்கும் இளமையான உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்திருப்பதும் ஜெயராமின் இளம் வடிவமாக அவர் மகன் காளிதாஸே இருப்பதும் மிகப்புதுமை. ஊர்வசியின் இளமை வடிவமாக லிஸியின் மகள் கல்யாணி. மிகபொருத்தமான தேர்வு. காளிதாஸ் கண்களிலும் சிரிப்பிலும் அப்படியே அம்மா பார்வதியைக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சாக்லெட் ஹீரோ காளிதாஸ் தான் இனி. மணிரத்தினத்திடன் உதவியாளராக இருந்த சுதா இயக்கத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
இரண்டாவதாக ’அவரும்நானும்-அவளும் நானும்’ வைரஸ் தொற்றுக்காலத்தில் தனிமையில் இருக்கும் தாத்தாவை கவனிக்கவென்று வந்திருக்கும் மகள் வயிற்றுப்பேத்தியின் பார்வையிலும், காதல் திருமணம் செய்துகொண்டதால் மகளிடமிருந்து விலகிவிட்ட தந்தையாக, பேத்தியுடன் தங்குவதை எதிர்பார்த்து காத்திருக்கும் தாத்தாவின் பார்வையிலுமாக ஒரு அழகுக்கதைக்களம்.
மகளை பேத்தியில் கண்டு மகிழும் தாத்தாவாக MS பாஸ்கர், அம்மாவையும், அம்மாவின் காதலையும் அங்கீகரிக்காத தாத்தாவின் மீதான மனவிலக்கத்துடனேயே உள்ளே வரும் பேத்தியாக ரிதுவர்மா.
MS Baskar and Ritu
மிகச்சிறப்பாக இயல்பாக நடித்திருக்கிறார் பாஸ்கர். முதலில் இருந்த தயக்கத்தையும் விலக்கத்தையும் மெல்ல மெல்ல கடந்தும் மறந்தும், தாத்தாவின் கோணத்தை புரிந்து மனமிரங்கும் பேத்தியாக ரிதுவும் மிகபிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார். ரிது களங்கமற்ற இளமையில் பூரிக்கும் அழகுடன் தூய வெள்ளுடைகளில் வருகையில் அவரது வசீகரதோற்றம் நெஞ்சை அள்ளுகின்றது. சமையலறைக்காட்சி ஒன்றில் ஒற்றைக்கல் மூக்குத்தி பளீரிட தெரியும் ரிதுவின் க்ளோஸப் காட்சியிலிருந்து மனதை திருப்பவே முடியாது. நீர்த்துளி வடிவ கண்ணாடியில் ரிதுவின் முகம் தெரியும் ஒரு காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது.
நல்ல கதை நல்ல பாத்திரத்தேர்வு அந்த ’கண்ணா’ பாடலும் அழகு. இருவேறு தலைமுறையினரானாலும் அவர்களுக்கிடையேயான இடைவெளியை ரத்த உறவும் புரிதலும் நிறைத்து விடுகிறதென்பதை அலங்காரங்கள் ஏதுமில்லாமல் நிதானமாய் சொல்லி இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும் இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன். பி சி ஸ்ரீராமின் காமிரா வழியே ரிதுவையும் அந்த மிக அழகிய பசுமை சூழ்ந்த வீட்டையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அடுத்து வரும் காஃபீ எனி ஒன்? (coffee any one?) இயக்கம் சுஹாசினி, திரைக்கதை மணிரத்னம் மற்றும் சுஹாசினி. அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் சுஹாசினி என்று சகோதரிகள் மூவருமே நடித்திருக்கிறார்கள். சுஹாசினியின் அம்மாவாக நடித்திருப்பவர் கோமளம் சாருஹாசன், சுஹாசினியின் அம்மாவேதான். ஒரு குடும்பப்படம்.
விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவது அன்புக்கு நான் அடிமை ஓட்டுநர் கணேசன். வெகுநாட்களுக்கு பின்னர் அனுஹாசன் திரையில். முதன்முறையாக இயல்பான நடிப்பில் ஸ்ருதிஹாசன். மிக எளிய கதை. கோமாவில் இருக்கும் அம்மாவை பார்க்க வரும் இரு சகோதரிகள், வராத இன்னுமொரு செல்லத்தங்கை. அம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பராமரிக்கும் அப்பாவை கோபித்துக்கொள்ளுகிறார்கள் மகள்கள். ஆனால் அம்மாவின் உடல்நிலையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் தெரிவதுதான் கதை.
சுஹாசினியும் அவரது அம்மாவும்
சுஹாசினியும் அனுவும் நாடகத்தனமாக வெகு செயற்கையாக நடித்திருக்கின்றனர். காத்தாடி ராமமூர்த்தி மிகசிறப்பான நடிப்பு, பொருத்தமான தேர்வும் கூட. கோமாவில் இருந்த அம்மா மெல்ல மெல்ல குணமடைவதாக காட்டியிருக்கலாம். கண்விழித்து உடனே சமையலறையில் கணவர் கொடுக்கும் காபியை குடிப்பதெல்லாம் அதிசயம்தான். படத்தின் தலைப்பாக மெடிகல் மிராக்கிள் என்று வைத்திருக்கலாம்.
ஸ்ருதி ஹாசன் அதிக இடைவெளியில் பெற்றோரின் வயதான காலத்தில் பிறந்தவரென்பது ஓகே அத்தோடு நிறுத்தி இருக்கலாம். தேவையில்லாமல் அனுஹாசனின் கர்ப்பம் உறுதியானதை சேர்த்திருப்பது ஓவர்டோஸ்
ஐந்தில் ஒரு கதை என்னும் போது குறைந்த நேரத்தில் சுருக்கமாக சிறப்பாக கதையை சொல்ல முயற்சிக்காமல் குழப்பியடித்திருப்பது திரைத்துரையில் ஆழக்கால் பதித்த குடும்பத்தினர் என்பதுதான் வருத்தம். அறிமுக இயக்குநர்கள் படமென்றால் இது குறையாக சொல்லவேண்டி இருந்திருக்காது. இந்தப்படத்திற்கு இந்த பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இந்த சின்னக்கதைக்கும் மிகபிரபலமான இயக்குநர் கதாசிரியர் என்பதால் இயல்பாகவே பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பிருக்கும். ஆனால் அதற்கு பொருத்தமான விஷயங்களுடன் இந்த மூன்றாவது பகுதி இல்லையென்பது ஏமாற்றமே!
நான்காவதாக Reunion. ஆண்டிரியா, குருசரண் மற்றும் லீலா சாம்சன் ஆகியோரின் கதை. திரைக்கதை, இயக்கம் மற்றும் ஒளி இயக்கம் ராஜீவ் மேனன். பள்ளித்தோழனின் பெயரை வீட்டு மதில் சுவற்றில் பார்த்துவிட்டு தன் இருசக்கர வாகனம் பழுதானதால் வீட்டுக்குள்ளே வரும் ஆண்டிரியா வைரஸ் தொற்றாலும் வீட்டங்கு உத்தரவாலும் அங்கேயே தங்கவேண்டி வருவதும் மெல்ல மெல்ல தோழனுடன் காதலரும்புவதும் கதை
ஆண்ட்ரியாவும் குருசரணும்
ஐந்து படங்களிலும் கிளாமர் இல்லையென்ற குறை வந்துவிடக்கூடாதென்றே ஆண்ட்ரியாவை சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கின்றது. கவர்ச்சியாக வசீகர உடைகளில் வருகிறார் ஆண்ட்ரியா. நண்பன் மருத்துவரென்பதும் வைரஸ்தொற்று இருக்கலாமெனும் சந்தேகத்தின் பேரில் அவர் மாடியிலும் ஆண்ட்ரியாவும் லீலா சாம்சனும் கீழ்தளத்திலும் தங்கியிருப்பதும் பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பவர்களுக்குள் நெருக்கம் வருவதெல்லாம் சரிதான் ஆண்டிரியாவின் போதைப்பழக்கத்தை தேவையில்லாமல் வலிந்து உள்ளே திணித்திருக்கிறார்கள்
மன அழுத்தம், பணிச்சுமை, போதைப்பழக்கம் என்றெல்லாம் தேவையில்லாமல் குழப்பாமல் பள்ளித்தோழமை மெல்ல மெல்ல காதலாக மிளிரத்துவங்குவதை மட்டும் அழகாக சொல்லி இருக்கலாம். மிக நன்றாக துவங்கி மோசமாக முடிந்திருக்கும் படம் இது. லீலா சாம்சன் சரண்யா பொன்வண்ணனைப்போலவே அக்மார்க் அம்மா வேடத்துக்கு மிகப்பொருத்தம். ஆண்ட்ரியாவும் குருசரணும் சேர்ந்திருக்கும் அந்த நிஜ பள்ளிப்புகைப்படம் எதிர்பாரா இனிய அதிர்ச்சியை இறுதியில் அளிக்கின்றது
இறுதிப்படம் பாபி சிம்ஹா நடித்திருக்கும் ’மிராக்கிள்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. புதிய இயக்குநர்கள் யாரேனும் எடுத்திருந்தாலும் அதன் தரம் இப்படித்தான் இருந்திருக்கும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்று சொல்லும்படியான ஒருகாட்சி கூட படத்தில் இல்லை. அற்புதத்தை நம்பும் இரு இளைஞர்களுக்கு அது நடக்காமல் போவதும், அற்புதம் நிகழுமென்னும் நம்பிக்கையின்றி சாகத்துணிந்த ஒருவருக்கு அற்புதம் நடப்பதுமான எதிர்பாராமையின் கதை
.
பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா என்னும் மிகத்திறமையான, வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் நடிகரைத்தவிர சொல்லிகொள்ளும் படியாக எதுவுமே இல்லை படத்தில்.
ஐந்து படங்களும் ஒரு பொன்மஞ்சள் நிற மலரின் ஐந்து இதழ்களாக காட்டி ஒவ்வொரு படம் முடியும் போதும் அம்மலரிதழ்களில் ஒவ்வொன்றாக வண்ணத்தில் நிறைப்பது மிக அழகு
ஐந்தில் முதலிரண்டும் சிறப்பு, பிறகு வரும் மூன்றும் பார்க்கலாம் ரகம் அவ்வளவுதான்
ஐந்து கதைக்களங்களும் முற்றிலும் வேறானவை. பிரபல பாடல்களின் முதல்வரிகளையே பொதுத்தலைப்பாகவும் கதைகளின் தலைப்புக்களில் சிலவற்றிலும் பயன்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தகக்து.
FEFSI யின் ஊரடங்கு காலத்துக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி படத்தை எடுத்தமைக்காகவும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்