Coming 2 America 2021 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும், இது 1988’ம் ஆண்டின் எடி மர்பி நடித்த coming to America திரைப்படத்தின் தொடர்ச்சி. திரைக்கதை ;கென்யா பாரிஸ், பாரி டபிள்யூ. ப்ளாஸ்டீன் மற்றும் டேவிட் ஷெஃபீல்ட் .இயக்கம்; கிரெய்க் ப்ரூவர். கெவின் மற்றும் எடி மர்பி தயாரிப்பு. எடி மர்பியுடன் முதல் பாகத்தில் நடித்த பலர் இதிலும் அதே பாத்திரங்களின் தொடர்சியாக நடித்திருக்கின்றனர். மிகத்தாமதமான இரண்டாம் பாகம்.
ஆர்செனியோ ஹால், ஜெர்மைன் ஃபோலர், லெஸ்லி ஜோன்ஸ், ட்ரேசி மோர்கன், கிகி லெய்ன், ஷரி ஹெட்லி, தியானா டெய்லர், வெஸ்லி ஸ்னைப்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஆகியோர் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். எடி மர்பியின் மகள் பெல்லா மர்பி அகீமின் இரண்டாம் மகளாக இதில் அறிமுகமாகியிருக்கிறார். Coming to America’வை தழுவி தமிழில் எடுக்கபட்ட மை டியர் மார்த்தாண்டனின் இரண்டாம் பாகம்தான் இது
படத்தின் விநியோக உரிமைகள் COVID-19 தொற்றால் அமேசான் பிரைமுக்கு விற்கப்பட்டு, மார்ச் 4, 2021’ல் படம் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியிடப்பட்டது..
மிக எளிய திரைக்கதை. ஜமுண்டாவின் இராணுவவாத அண்டை நாடான நெக்ஸ்டோரியாவால் ஜமுண்டா அச்சுறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறது. அகீமிற்கு முதல் பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மணமகளின் சகோதரரும், அதன் சர்வாதிகாரியுமான ஜெனரல் இஸி, முன்பு தவறவிட்ட சொந்தத்தை இப்போது மீண்டும் உண்டாக்க, அகீமின் மூத்த மகள் மீகாவை தனது மகன் இடி’க்கு திருமணம் செய்து வைக்கும்படி அழுத்தம் தருகிறார்
ஜமுண்டாவின் இளவரசர் அகீம் ,லிசா மெக்டோவலுடனான அவரது திருமணத்தின் 30 வது ஆண்டு நினைவு நாளில், இறக்கும் தருவாயிலிருக்கும் தந்தை கிங் ஜாஃப் ஜோஃபர் முன் வரவழைக்கப்படுகிறார். நியூயார்க்கின் குயின்ஸில் அவரது முதல் பயணத்தின்போது அவரறியாமலேயே ஒரு மகனுக்கு தந்தையாயிருப்பதாக ஜாஃப்பும் அவரது ஷாமன் பாபாவும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்,
ஒரு ஆண் வாரிசு மட்டுமே அரியணையில் அமர முடியும் என்னும் ஜமுண்டியன் பாரம்பரியம், லிசா மகள்களை மட்டுமே பெற்றிருப்பதால், மகனை மீட்டெடுக்க குயின்ஸுக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்தை அகீமுக்கு ஏற்படுத்துகின்றது..
கிங் ஜாஃப் உயிரிழக்கிறார், அவரது இறுதிச் சடங்கிற்குப்பின்னர் அகீம் மன்னரானதைத் தொடர்ந்து, அவரும் செம்மியும் குயின்ஸுக்குப் பயணம் செய்கிறார்கள், அவரது முறைகேடாக பிறந்த மகன் லேவெல் ஜான்சனையும்,.அவரது தாயார் மேரியையும் லேவெல்லின் மாமா ரீமையும் அகீம் ஜமுண்டாவுக்கு அழைத்துச் செல்கிறார், இதனால் குடும்பத்தின் அதிருப்திக்கு அகீம் ஆளாகிறார்
ஜெனரல் இஸி இதை அறிந்ததும் அடுத்த முயற்சியாக தனது மகள் போபோடோவை லேவெல்லுக்கு மணம் செய்துவக்க முயலுகிறார், ஏழை இளைஞனான லேவெல், ஒரு அரச இளவரசனாக தகுதி பெற, அபாயகரமான சோதனைகளை சந்தித்து வெற்றி பெறவேண்டியிருப்பதும் தன்னை வெறுக்கும் அகீமின் குடுமபத்தினரின் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் ஆளாகவேண்டி இருப்பதும்தான் கதை.
லேவெல் படிப்படியாக அகீமின் குடும்பத்தினருடன் ஒரு புரிதலை வளர்த்துக் கொள்வது, சகோதரிகளின் அன்பைப் பெறுவது, சோதனைகளை படாதபாடுபட்டு வெல்வது, எதிர்பாராமல் அவரின் ஒப்பனைக்கலைஞரான மிரெம்பேவுடன் காதல் வயப்படுவது என முதல் பாதியின் இழை அறுபடாமல் இரண்டாம் பாதியை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு போகிறார்கள். கணினி உபயோகக்காட்சிகள் அதிகம் இருப்பது சிறார் திரைப்படம் பார்க்கும் உணர்வ்ய் வருகின்றது
போபோடோவுடனான திருமணத்திலிருந்து விடுவிக்கபட்டு தந்தை அகீமின் ஆசியுடன் காதலியை லேவெல் கரம்பிடிக்கிறார் ஜாமுண்டாவின் பாரம்பரியத்தினை மாற்றி எழுதி, அகீம் தனது மகள் மீகாவை அரியணையில் ஏற அனுமதிக்கிறார், அச்சுறுத்தலாக இருந்த ஜெனரல் இஸி, ஜமுண்டா இளவரசிகளால் வெல்லப்பட்ட பின்னர் நட்பு நாடாக நெக்ஸ்டோரியாவை அறிவிக்கிறார். குயின்ஸில் இருந்து அகீமின் முடிதிருத்தும் நண்பர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் அரண்மனை விருந்துடன் படம் முடிகிறது. இறுதிக்காட்சிகளுக்கு பிறகு படப்பிடிப்பின் துண்டுக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
முதல் பாகத்தில் கணினி உதவியால் வடிவமைக்கப்பட்ட ஜமுண்டா அரன்மணை இந்த பாகத்தில் ஹிப்ஹாப் பிரபலமான ரிக் ராஸ் என்னும் செல்வந்தருக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கரில், ஏரியுடன் அமைந்திருக்கும் மாபெரும் எஸ்டேட் மாளிகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 100 நபர்கள் அமரும் வசதியுள்ள மாபெரும் உணவு மேஜையுடன் கூடிய உணவருந்தும் அறையில் படப்பிடிப்புக்கென மாட்டப்பட்ட பிரம்மாண்ட அழகிய சுவரோவியத்தை ராஸுக்கே படப்பிடிப்புக்குழுவினர் அன்பளிப்பாக வழங்கிவிட்டனர்.
மன்னராக நடித்திருக்கும் 88 வயதான ஜேம்ஸ் ஜோன்ஸ் வரும் காட்சிகள் தனியாக படம்பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Akeem எனும் தந்தையின் பெயரை திருப்பி போட்டால் வரும் Meekaa வைத்தான் முதல் இளவரசியின் பெயராக படத்தில் வைத்திருக்கிறார்கள்.
நைஜீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றது Coming 2 America. சிங்கத்தின் மீசை முடியை நறுக்கும் காட்சியில், சகோதரனுக்கு உதவும் மீகா நைஜீரிய தேசியக்கொடியின் பச்சை வெள்ளை நிற உடையணிந்திருக்கும் காட்சி ஏகோபித்த வரவேற்புடன் அங்கு பார்க்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த சாமுவேல் ஜாக்ஸன் இதிலில்லை.
தற்போது 58 வயதாகும் எடிமர்பி தன் 75 ஆவது வயதில் இத்திரரைப்படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆடைவடிவமைப்பும் ஆப்பிரிகாவின் ஆபரணங்களும் மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது
படம் பார்க்கையில் சிரிக்கிறோமென்றாலும் மனம் விட்டு சிரிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லை, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் பெரும்பாலான காட்சிகள் அதன் காப்பியைபோல இருப்பது இப்படத்தின் அசுவராசியங்களுள் ஒன்று. ஆபாசக்காட்சிகள், வசனங்கள் மிக அதிகம். அந்த சலூனில் பேசப்படுபவை நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எடி மர்பி தனது இயல்பான நடிப்பினால் சரியும் படத்திற்கு முட்டுக்கொடுக்கிறார். ஆனாலும் முதல் அரைமணி நேரத்திலேயே பார்வையாளர்கள் மீதிப்படத்தை யூகிக்கமுடிகின்றது. இதன் இயக்குனர் கிரெய்க்கும், எடி’யும் இணந்து சென்றஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற Dolemite Is My Name. திரைப்படத்துடன் coming 2 America வை ஒப்பிடுகையில் ஏமாற்றமே.
பொதுவில் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் சுவாரஸ்யம் குறைவான படமென்றுதான் சொல்லவேண்டும். பார்க்கலாம் வகை திரைப்படம்.அவ்வளவுதான். காட்சித்தொடர்ச்சிகளில். இட வலப் பிழைகளும் அகீமின் மகன் , நேர்காணலின்போது சொல்லும் வில் ஸ்மித்தின் அல்லாவுதீன் பற்றிய தகவலின் கருத்துபிழைகளும், சிங்கத்தின் மீசை முடியை வெட்டி எடுக்கும் காட்சியின் தோற்றபிழைகளும் போல பல பிழைகள் திரைப்படத்தில் இருக்கின்றன.
Leave a Reply