லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 5 of 24)

வீனஸ், பூச்சிஉண்ணும் தாவரம்

’’கார்ல் லெச்சே (karl Leche) வும் அவரது குழுவினரும் மடகாஸ்கரின் அடர்ந்த காட்டுக்குள்  கதோஸ்  பழங்குடியினர் அறியாது அவர்களைப் பின்தொடர்ந்து சென்று  சந்தடியில்லாமல்  அவர்களின் செயல்களை கவனித்துக்கொண்டிருந்தனர். 

பழங்குடியினர் அனைவரும் ஒரு ஆற்றங்கரையில் குழுமினர்.  அவர்கள் முன்னால்  சுமார் எட்டு அடி உயரமுள்ள அன்னாசியை போன்ற சதைப்பற்றான ஒரு தண்டும், அதன் உச்சியில் பெரும் நாகங்களைப் போன்ற, நீண்ட கைகளாக அமைந்திருந்த இலைகள் பச்சை நிறத்திலும் இருந்தன. இலைகளின் நுனி மாட்டின் கொம்புகளைப் போல கூராக இருந்தது. அம்மரத்தை பார்த்து பழங்குடிகள் அனைவரும்  ’’டீபே, டீபே’’ என்று கூவி வணங்கினார்கள். 

நிர்வாணமாக ஒரு பழங்குடி இளம்பெண்ணை அவர்கள் அம்மரத்தின் மீது ஏறும் படி சொன்னதும் அவள் மறுப்பேதும் சொல்லாமல்  ஏறினாள். இலைகள் அனைத்தும் குவிந்திருந்த மத்தியப் பகுதியில் இருந்த நீரை அருந்தும் படி அவர்கள் கீழிருந்து கூச்சலிட்டதும் அவள் அந்த நீரை அருந்தினாள்,  உடனே அம்மரத்தின் இலைகளான நாகங்களுக்கு உயிர் வந்ததுபோல அவை நெளிந்தன

’’கடும் பசிகொண்ட நாகங்களை போன்ற அந்த இலை நீட்சிகளால் அந்த பெண்ணை அம்மரம் சுற்றி வளைத்துக் கொண்டது.  கைகளையும் கழுத்தையும் பின்னர் தலையையும் சுற்றி சுற்றி அக்கைகளால்  இறுக்கப்பட்ட போது அந்த பெண் பயங்கரமாக ஓலமிட்டாள். பிறகு அந்த ஓலம் மெல்ல முனகலாக மாறி பின்னர் மெதுவாக அடங்கியது. மரத்தை சுற்றிலும் கொல்லப்பட்ட பெண்ணின் ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பச்சை பாம்புகள் போன்ற அக்கைகள் தளர்ந்து விடுபட்டு மீண்டும் நீண்ட போது அந்த பெண் அதற்குள் இருந்த சுவடே இல்லாமல் அம்மரத்தால் முழுவதுமாக உண்ணப்பட்டிருந்தாள். அவளை பலி கொடுத்த  பழங்குடியினர் அம்மரத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள்’’

26 ஏப்ரல் 1874ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில்  ஜெர்மானிய  தாவரவியலாளர் “Karl Leche” என்பவரின் மடகாஸ்கர் காட்டுப் பயண அனுபவம் இப்படி ஒரு செய்திக் கட்டுரையாக    எட்மண்ட் ஸ்பென்சர்( Edmund Spencer) என்னும் கட்டுரையாளரால் எழுதப்பட்டிருந்தது. அடர்  காடுகளில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்கள் இருப்பதாக பல செவிவழி செய்திகளும் கதைகளும் பல காலமாக  மக்களிடையே நிலவி வந்தாலும் முதன் முதலாக அச்சில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்களைப்பற்றி வெளியான  இந்த கட்டுரை பெரிதும் வாசிக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸின்  இந்தக்கட்டுரை உண்டாக்கிய பரபரப்பால் இதே  கட்டுரை  பிற பிரபல நாளிதழ்களில்  அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருந்தது. பலர் இந்த நரமாமிசம் உண்ணும் மரத்தையும் அந்த பழங்குடிகளையும் காண  மடகாஸ்கர் காடுகளுக்கு தேடல் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பரபரப்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது.

1889ல் வெளியான ’கடலும் நிலமும்’ என்னும்  நூலில் அதன் ஆசிரியர் ஜேம்ஸ் பூயல் (James W. Buel) கோபம் கொண்ட பெரும் நாகங்களை போன்ற, நச்சு முட்களும், நூற்றுக்கணக்கான  உறிஞ்சு வாய்களும் நிறைந்திருக்கும் கிளைகளுடன் இருக்கும் யா-டி-வியோ (ya te veo) என்னும்  ஆப்பிரிக்க காடுகளின் ஊனுண்ணி மரமொன்றைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

1891ல் லண்டன், நியூயார்க் மற்றும் மெல்பர்னில்  மாதமொருமுறை வெளியான சஞ்சிகையான Review of Reviews வின் ஆசிரியர்  வில்லியம் (William Thomas Stead) நிகரகுவாவின் மனிதர்களை உண்ணும் தாவரமொன்றைப் பற்றியும் அதனருகில் செல்லும் எவரையும் அது பிடித்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து கொல்லுவதையும் குறித்து எழுதினார்

19 ம் நூற்றாண்டில் இப்படி மனிதர்களையும், நாய்களையும் பிற விலங்குகளையும் பிடித்து கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய பல கதைகளும் செய்திகளும் கட்டுரைகளும் உலகெங்கிலும் வெளியாகிக் கொண்டே இருந்தன. காடுகளில் பயணித்த மனிதர்களை நீண்ட கிளைகளால் சுற்றி வளைத்து விழுங்கிய கொலைகார தாவரங்களை பற்றிய கதைகள் வெகுவாக உலவின. 

அக்கதைகளில் வானளாவிய கிளைகளால் பறவைகளைக் கூட அத்தாவரங்கள் பிடித்து விழுங்கியது.. பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவருமான ஆர்தர் கொனான்  (Arthur Conan Doyle)  தனது குற்றக்கதைகளில் மனிதர்களை இறுகப்பிடித்து விழுங்கும் வீனஸ் ஊனுண்ணும் தாவரங்களை அறிமுகப்படுத்தினார்.

மிச்சிகன் கவர்னரும் இயற்கை ஆர்வலருமான திரு சேஸ் ஓஸ்போர்ன் ( Chase Osborn ) எழுதி 1924 ல் வெளியான ’’மடகாஸ்கர்- மனிதர்களை கொன்று உண்ணும் மரங்களின் நிலம்’’  (Madagascar: Land of the Man-eating Tree)  என்னும் நூலிலும் மனிதர்களை கொன்றுண்ணும் மரங்களை பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. மடகாஸ்கர் பழங்குடிகளுக்கு மனிதர்களை உண்ணும் மரத்தை  குறித்து  நன்கு தெரிந்திருக்கிறது என்று  சேஸ் குறிப்பிட்டிருந்தார்.பல கதைகளில் மனிதர்களை நெரித்துக் கொன்று உண்ணும் மரங்களை குறித்த சித்திரங்கள் இடம்பெற்றன.

1955ல் ஜெர்மானிய -அமெரிக்க அறிவியல் கட்டுரையாளரும்,  cryptozoology. என்னும் மர்மமான உயிரினங்களை குறித்த அறிவியல் துறையில் நிபுணருமான  வில்லி லே  (Willy Ley) தனது ’’சாலமண்டர்களும் பிற அற்புதங்களும்’’ என்னும் நூலில்  (Salamanders and other Wonders)  இவை அனைத்தும் கட்டுக்கதைகள் அப்படி ஒரு பழங்குடியினரோ, மனிதர்களை பிடித்துண்ணும் மரங்களோ எதுவுமே உலகில் இல்லை  இவை வெறும் பரபரப்பு செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட  வதந்திகள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும் ஊனுண்ணித் தாவரங்கள் இருக்கின்றன, இல்லை என்னும் இரு தரப்பும் அறிவியல் உலகில் வலுவாக  காலூன்றி இருந்தது. பல அறிவியலாளர்கள் தொடர்ந்து அவற்றை தேடிச்சென்று கொண்டிருந்தனர்.

நகரும் விலங்குகள் வேட்டையாடி இரைகளை பிடித்துண்ணுவது இயற்கையென்றும், ஓரிடத்தில் வேர்பிடித்து நகராமல் இருக்கும் தாவரங்கள் வேட்டையாடுவது என்பது இயற்கையில்  நடக்கவே நடக்காத காரியம் என்றும் பலரல் உறுதியாக நம்பப்பட்டது.

ஊனுண்ணித் தாவரங்கள் இருப்பது  உண்மையென்றும்,  வெறும் கற்பனையென்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவிக்கொண்டிறூந்த வேலையில்தான் சார்லஸ் டார்வின் கடற்பயணங்களை மேற்கொண்டிருந்தார்

 1875 ல் டார்வின் ஊனுண்ணித்தாவரங்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்தபோது உலகம் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளானது.  இங்கிலாந்தின் சுஸெக்ஸ் வனப்பகுதியின் ஊனுண்ணி பனித்துளி தாவரம் (Sundew plant)குறித்த விளக்கமான கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டிருந்தன.

 பூச்சிகளால் உண்ணப்படும் தாவரங்களை மட்டுமே அறிந்திருந்த உலகம் முதல் முறையாக பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் இருப்பதை அதன்பிறகே  அறிந்துகொண்டது

ஊனுண்ணி தாவரங்களின் பரிணாம வளர்ச்சி

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கையின் மூலம் மட்டுமே உணவை தயாரித்து கொண்டிருந்த தாவரங்களில் சில இவ்வாறான ஊனுண்ணும் உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தது சுமார் பத்துமில்லியன் வருடங்களுக்கும் மேலாக மெல்ல மெல்ல நடந்திருக்கும் என்று தாவரவியலாளர்கள் யூகிக்கிறார்கள்.1

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை  பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் கொன்று தின்னுதலின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை.

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று ஜீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா (Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா (P. parviflora) ஆகியவை ஊனுண்ணிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இவையும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

இந்த பரிணாம வளர்ச்சியை குறித்த ஆய்வுகள் பல்லாண்டுகளாக தொடர்கின்றன. சமீபத்தில் ஜெர்மனியின் வுஸ்பர்க் பல்கலைக்கழகத்டின் (University of Würzburg) தாவரவியலாளர்களின் குழு  குறிப்பிட்ட மூன்று ஊனுண்ணித் தாவரங்களில் விரிவான ஆய்வுகளை செய்தது.

  • அதிலொன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கும் வீனஸ் பூச்சி பிடிக்கும் தாவரமான  Venus flytrap 
  • இரண்டாவது அத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஊனுண்ணித் தாவரமான நீர்ச் சக்கரம்(waterwheel) என்னும் பெயர் கொண்ட Aldrovanda vesiculosa.
  • மூன்றாவது பனித்துளி தாவரமாகிய ட்ரஸீரா( sundew plant)

ஆய்வின் முடிவுகள்  70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊனுண்னும் தாவரங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் அதற்கு பின்னரே நிலச்சத்துக்குறைபாடுகளை சமன்செய்ய, நகர முடியாத தாவரங்கள் அவற்றின் அருகில் வரும் பூச்சிகளை பிடிக்க பொறிகளை உருவாக்கி அப்பூச்சிகளின் உடலிலிருக்கும் சத்துக்களை கிரகித்துக்கொள்ளும் ஊனுண்ணி தாவரங்களாக மாறிவிட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தன.

ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகளும், சத்துக்களை சாறு வடிவில் உறிஞ்சும் வேர்களும் உபயோகமற்றுப் போன ஒரு கட்டத்தில் தாவரங்கள் தங்கள் வாழ்வை,  இருப்பை உறுதி செய்து கொள்ள புதிய வழிகளை தேடி, அவ்வாறு கண்டறிந்ததுதான் ஊனுண்ணுதல் என்பது.இது  மரபணு மாற்றங்கள் மூலமே சாத்தியமாகி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு

ஒரு நீர்வாழ் ஊனுண்ணித் தாவரத்திலும், நிலத்தில் படர்ந்து வளரும் பிரேசிலின் மற்றோரு ஊனுண்ணித் தாவரத்திலும் 2013ல் நடந்த ஆய்வுகளும் இந்த மரபணு மாற்றத்தினால் பரிணாம வளர்ச்சியடைந்த விஷயத்தையே உறுதி செய்திருக்கின்றன. வேர்களின் உறிஞ்ம் திறனுக்கும் இலைகளின் சூரிய ஒளியை கிரகிக்கும் திறனுக்கும் காரணமான மரபணுக்களை கணிசமாக உதிர்த்துவிட்டு(gene drop) புதிய பூச்சிகளை கவர்ந்து பொறிகளில் பிடித்து அவற்றை செரித்து சத்துக்களாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும் மரபணுக்களை இவை மெல்ல மெல்ல காலபோக்கில் பெற்றிருக்கின்றன என்கிறது ஆய்வு முடிவுகள்.

இவ்வாறாகத்தான் உலகின் சாதாரண,  சாதுவான தாவரங்கள் மிகச்சிறந்த வேட்டைக்கார தாவரங்களாகி விட்டிருக்கின்றன. இந்த ஊனுண்ணித் தாவரங்களின் சாமார்த்தியங்களும் தகவமைப்புக்களும் தாவரங்களின் அதிசயங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

சுமார் 16 நீண்ட வருடங்கள் இந்த தாவரங்கள் குறித்தான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த டார்வின் சில தாவரங்களின் இலைகள் பிரத்யேகமாக பூச்சிகளை பிடிக்கும் பொறிகளைப்போல உருமாற்றம் கொண்டு அவற்றை    பிடித்து செரித்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளுவதையும் நிரூபித்தார்.

 டார்வினின் இந்தத்தாவரங்கள்  குறித்த விளக்கங்களை கொண்ட 1875ல் வெளியான ’’ஊனுண்ணித் தாவரங்கள்’’ என்னும் நூலும்,(Insectivorous Plants,) 1880 ல் வெளியான ’’தாவரங்களின் அசைதலின் ஆற்றல்’’ (The Power of Movement in Plants) என்னும் மற்றுமோர் நூலும் ஊனுண்ணும் தாவரங்கள் குறித்த பெரும்பாலான புதிர்கள், கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளித்திருந்தது 

டார்வினின் இந்த கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதர்களுக்கு பெரும் ஆர்வமூட்டியது. தாவரவியல், பூச்சியியல், வேதியியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை ஊனுண்ணித் தாவரங்களில் குவித்தார்கள்  

அவர்களின் முயற்சியாலும் தேடல்களினாலும் பலவகைப்பட்ட ஊனுண்ணித்தாவரங்கள் கண்டறியப்பட்டன. சில தாவரங்கள் குடுவைகளாக மாறிய இலைகளில் நொதிகளை நிரப்பி வைத்து அதில் பூச்சிகளை பிடித்தன.  சில ஒட்டும் தன்மையுள்ள இலைகளை கொண்டு அதில் பூச்சிகளை ஒட்டவைத்து  கொன்று உண்டன. இன்னும் சில பூச்சிகளை கவரும் நறுமணமுள்ள பனித்துளி போன்ற சுரப்பி நீர்ச் சொட்டுக்களால் பூச்சிகளை ஈர்த்து கொன்று தின்றன. நீருக்கடியிலும் கொன்று தின்னும் தாவரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

வீனஸ் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது தாவரவியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) அதன் ஊனுண்ணுதல் குறித்து விவரித்து லின்னேயஸுக்கு கடிதம் எழுதினார்  அப்போது லின்னேயஸ் உலக புகழ் பெற்றிருந்த தாவரவியலாளர். தாவர வகைப்பாட்டியலின் தந்தையும் தீவிர இறையியலாளருமான லின்னேயஸினால் ஊனுண்ணும் தாவரங்கள் இருப்பதை நம்ப முடியவில்லை.

லின்னேயஸ் அப்படி  இறையை பிடித்துண்ணும் தாவரங்கள் இருப்பதை அடியோடு மறுத்தார். அது இயற்கையின் விதிகளுக்கு எதிரானது என்றும் அப்படி ஒரு உயிரினம் இயற்கையில் இருக்க வாய்ப்பே இல்லையென்றும் தீர்மானமாக பதில் எழுதினார். அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரும் அவர் இத்தாவரங்கள்  பொறிகளை உண்டாக்கி மழையிலிருந்து நனையாமல் இருக்க பூச்சிகளுக்கு அடைக்கலமாக செயல்படுகின்றன இரையாக பிடித்து தின்பதில்லை என்றார்

மேலும் நெஃபெந்தெஸ் போன்ற ஜாடிகளில் நொதிகளை கொண்டு பூச்சிகளை செரித்துண்ணும் தாவரங்கள் உண்மையில் உண்ணவில்லை அவற்றில் பூச்சிகளுக்கு அருந்த நீரளிக்கின்றன என்றார் அவர்.

இன்றைய நாள் வரையிலுமே இது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன வயிறு, இரைப்பை போன்ற பாகங்கள் இல்லாத தாவரங்கள் எவ்வாறு பூச்சி மற்றும் தவளை, எலி போன்ற சிறு விலங்குகளை செரித்து, சத்துக்களை முழுத்தாவர பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்பது இன்னும் சரியாக விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது.

Drosera  போன்ற இரையை ஒட்ட வைத்து பின்னர் சத்துக்களை எடுத்துக்கொள்ளும் ஊனுண்ணிகளிலிருந்து வீனஸ் ஊனுண்ணிகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்கலாம் என்றும்    ஒரு கருத்து இருக்கிறது.      

ஊனுண்ணித்தாவரங்களுக்கு தொல்லுயிர் புதை படிவங்கள் அதிகம் கிடைக்கவில்லை எனவே இவற்றின் தோற்றம் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை என்று சொல்லும் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக  உயிரியற்பியலாளர்   Rainer Hedrich  2021ல் ஊனுண்ணுதலின் தோற்றம் என்னும் கட்டுரையில் (the origins of carnivory ) ஊணுன்னும் இயல்புக்கான மரபணு எது?  அது எப்போது தாவரங்களுக்குள் புகுந்தது? என்னும் ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்கிறார்.

வீனஸ் பொறித் தாவரம்

ஊனுண்ணித்தாவரங்களின் பல வகைகள் இருப்பினும் உலகெங்கிலும் பலருக்கு தெரிந்ததும் பலர் வீடுகளில் வளர்க்க விரும்புவதும் வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் வீனஸ் பொறி தாவரம்

டார்வினுக்கு இவற்றின் மீது தனி பிரியம் இருந்தது அவர் தனது நூலில் ’’வீனஸ் தாவரங்கள் உலகின் மிக அற்புதமான தாவரங்களில் ஒன்று’’ என குறிப்பிட்டிருக்கிறார். 

1759ல் வடக்கு கரோலினா கவர்னரான, ஆர்தர் (Arthur Dobbs) தாவரவியலாளர்  பீட்டர் (Peter Collinson) க்கு எழுதிய கடிதமொன்றில்:

“We have a kind of Catch Fly sensitive which closes upon anything that touches it, it grows in the Latitude 34 but not 35° – I will try to save the seed here.” என்று எழுதி இருந்தார்.

பீட்டர்  பிலடெல்ஃபியா இயற்கையியலாளர் ஜான் (John Bartram) என்பவருக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை எழுதினார். பார்ட்ரம்மின் மகன் வில்லியம் பார்ட்ரம் வடக்கு கரொலினாவிற்கு சென்று தன் தந்தைக்காக வீனஸ் தாவரங்களை சேகரித்தார்

வில்லியம் அனுப்பி வைத்த உலர் தாவரங்களை ஜான் பார்ட்ரம் லின்னேயஸுக்கும் பீட்டர் கோலின்சனுக்கும் அனுப்பினார்   யாராலும் யாருக்கும் உயிருடன் வீனஸ் தாவரங்களை  அனுப்ப முடியவில்லை

1763ல்  ஆர்தர் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவை தாவர உலகத்தின் அற்புதங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். இவையே வீனஸ் தாவரங்கள்  குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம்

பெயர்கள்

வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் பெயர் முதன் முதலில் 1768ல் ஒரு லண்டன் பத்திரிக்கையில் அச்சில் வந்தது. ஒரு புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-“A New Sensitive Plant Discovered.”எனும் தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இப்பெயர் வெளியாகி இருந்தது   1793 ல் உயிரியற்பியலாளர் வில்லியம் பார்ட்ரம் இவை துடிப்பான தாவரங்கள் கவனக்குறைவான உயிரினங்கள் இவற்றிற்கு இரையாகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.  

வட அமெரிக்காவில் இருந்து பல இயற்கையான வீனஸ் தாவரங்களையும் அவற்றின் விதைகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பிய பிரிடிஷ் இயற்கையியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) இதற்கு 1768 ல் Dionaea muscipula என்று  அறிவியல் பெயரிட்டார்.  லண்டன் சஞ்சிகை ஒன்றில் எல்லிஸ் இத்தாவரத்துக்கு பெயர் வைக்க தான் பட்ட சிரமங்களை எழுதி இருந்தார். Dionaea muscipula என்னும் இப்பெயரை  ஆங்கிலத்தில் Venus flytrap அல்லது Venus mousetrap, என்று இருவிதங்களில் மொழிபெயர்க்கலாமென்றாலும் தனக்கு  flytrap என்னும் பெயரே பிடித்தமானது என்றும்  அதில் குறிப்பிட்டிருந்தார்.

பூச்சிகளை கவர்ந்திழுக்கும் இத்தாவரத்தின் பொதுவான வழங்கு பெயரான வீனஸ் என்பது காதல், காமம், வளமை மற்றும் அழகின் ரோமானிய  தெய்வமான வீனஸின் பெயரால் வைக்கப்பட்டது.  இதன் அறிவியல் பெயரின் Dionaea என்பதும் Dione ன் மகளான கிரேக்க தெய்வமான Aphrodite ஐ குறிக்கிறது, இதன் சிற்றினப்பெயரான muscipula,   இதன் இரை பிடிக்கும் செயலை குறிக்கும் விதமாக  எலிப்பொறி என்று பொருள் படுகிறது (mus (“mouse”) decipula (“trap”),  

வீனஸ் தாவரங்களை குறித்து ஆண் ஆய்வாளர்கள் மத்தியில்,அக்காலத்தில் கிண்டலான கருத்து பரிமாற்றங்களும் நடந்தன. வீனஸ் தாவரப் பொறிகள் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதாக கருதி ஒரு வேடிக்கையான பெயரிட்டு அதை  “Tipitiwichit  என்று குறிப்பிட்டு தங்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டனர். 

1962 ல்,பார்ட்ரம்  நண்பரான கோலின்சனுக்கு எழுதிய கடிதத்திலும் கோலின்சன் ஆர்தருக்கு 1762ல் எழுதிய கடிதங்களிலும் இப்பெயர் வேடிக்கையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது இந்த பெயரை  பார்ட்ரம் வைத்திருக்கலாமென்றும் யூகிக்கப்படுகிறது. 

தாவரவியல்

இயற்கையாக இவை அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் மட்டுமே வளர்கின்றன. வடக்கு கரோலினாவின்  100 மைல் சுற்றளவில் இருக்கும் சதுப்பு நிலங்களில் இவை இயற்கையாக அடர்ந்து வளர்கின்றன

ட்ரொசிரேசி குடும்பத்தை சேர்ந்த வீனஸ் தாவரம் பொதுவாக 6-7 இன்ச் சுற்றளவு கொண்டிருக்கும். 5 அல்லது 6 தண்டுகளும் அவற்றில் பொறிகளாக உருமாற்றம் கொண்டிருக்கும் இலைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு இலைப்பொறியும் ஒரு இன்ச் அளவில் இருக்கும். சாதாரணமாக பொறிகள் விரல் நகங்களின் அளவில் இருக்கும். வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் வீனஸ் செடிகள் இயற்கையான செடிகளை காட்டிலும் சிறியவையாக இருக்கும். மலர்த்தண்டு தாவரத்திலிருந்து சுமார் 1 அடி உயரத்தில் மலர்களை தாங்கி நிற்கும்.வீனஸ் தாவரம் 4 ஆண்டுளில் மலரளிக்கத்துவங்கும்.

இவை பல்லாண்டு தாவரங்கள், வருடா வருடம் மலர்ந்து கனியளிக்கும் இவற்றின் மலர்களின் வெண்ணிற இதழ்களில் பசுமையான நரம்புகள் காணப்படும்

பூச்சிகளால்  மகரந்த சேர்க்கையும் பின்னர்  கருவுறுதலும் நிகழ்ந்து 4 லிருந்து 6 வாரங்களுக்குள் சிறிய பளபளப்பான நீர்த்துளி வடிவ கருப்பு விதைகள்  சிதறி புதிய தாவரங்கள் அதிலிருந்து முளைத்து வளரும். வீனஸ் தாவரங்கள் அடிக்கிழங்குகளிருந்தும் புதிய தாவரங்களை உருவாக்கும். 

மகரந்த சேர்க்கை

நூற்றுக்கணக்கான பூச்சி இனங்கள் வீனஸ் தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் பச்சை பூச்சியான Augochlorella gratiosa, வண்டினமான Trichodes apivorus மற்றும் நீள் மூக்கு வண்டினமான  Typocerus sinuatus ஆகியவை மூன்று முக்கிய இனங்கள். 

பூச்சிகளை வேறுபடுத்துதல்

இவற்றின் புத்திசாலித்தனமான உடல் அமைப்பு தாவரவியலாளர்களின் ஆச்சரியத்துக்கு உரியதாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது மலர்க்காம்பு மிக நீண்டு தாவரத்தின் உடலுக்கு மேலே மலர்களை தோற்றுவிப்பதால் மகரந்த சேர்க்கை செய்பவரும் பூச்சிகள் பொறிகளில் அகப்படாமல் மகரந்த சேர்க்கை செய்துவிட்டு மலருக்கு மலர் தாவிச்செல்கின்றன

இரையை கவருவதற்கும் மகரந்த சேர்கைக்கான பூச்சிகளை கவரவும் இவை வேறுபட்ட வேதிப்பொருட்களை சுரப்பதும் மிக பெரிய புதிராக இருக்கிறது. எப்படி இவை இரையையும் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளையும் வேறுபடுத்துகின்றன என்பதையும் இன்னும் பலநாடுகளின் நடைபெற்ற நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டறிய முடியவில்லை

எவ்வகையான் மலரமுதை (Nectar) இவை சுரக்கின்றன இவற்றை மகரந்த சேர்க்கை செய்யவரும் பூச்சி இனங்களுக்கும் இவற்றிற்குமான தொடர்பு ஆகியவற்றை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 

இரையை பிடித்தல்

வீனஸ் தாவரங்களின் பொறிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இரை தேவைப்படும் சமயங்களில் காற்றில் ஆவியாகி கலந்து மணம் பரப்பும் சில வேதிப்பொருட்களை இந்த தாவரம் சுரந்து பூச்சிகளைக் கவர்ந்து அவற்றை அருகில் வரவழைத்து பொறியில் பிடித்து உண்ணுகின்றன. 

சில வீனஸ் தாவரங்கள் நறுமணமும் சுவையும் மிக்க வேதிப்பொருட்களோடு செந்நிற நிறமிகளையும் சுரந்து பூச்சிகளை கவருகின்றன

இவற்றின் பொறிகளின் உட்புறம் மயிரிழைகள் போன்ற   கூர்மையான நீட்சிகள் காணப்படும்.   இந்த உணர் நீட்சிகள் வெளிப்புற தொடுகைக்கு   உடன் எதிர்வினை ஆற்றும்  thigmonasty எனப்படும் ஒரு செயலினால் இரைகளின் உடல் பட்டதும் உடனே வெகு விரைவாக மூடிக்கொண்டு இரையை தப்ப முடியாமல் இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன.

 ஊசி போன்ற கூரிய இழைகளில் இரையின் முதல் தொடுகைக்குபின்னர்  பொறிகள் துடிப்புடன் காத்திருக்கின்றன இரண்டாம் தொடுகை நிகழ்ந்த மறுகணம் பொறிகள் மூடிக்கொள்கின்றன. இந்த தொடுகைகள் இரண்டும் முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்தால் மட்டுமே பொறிகளில் இரை சிக்கிக்கொள்ளும். உள்ளே மாட்டிக்கொண்ட இரை வெளியேறச் செய்யும் முயற்சிகளில் உண்டாகும் தொடரும் தொடுகைகளில் ஐந்தாவது தொடுகையில் பூச்சிகளை செரிக்கும் நொதிகள் பொறிகளில் உருவகின்றன

ஒரு வினாடியில் பத்தில் ஒருபங்கு கால அளவில் பொறிகள் மூடிக்கொள்கின்றன. பெரிய இரைகள் சிக்கிக்கொள்ளுகையில் 20 வினாடிகளில் பொறிகள் மூடிக்கொள்ள முடியாவிட்டால் இரையை பொறிகளை திறந்து இவை விடுவிக்கின்றன  

இரை முழுவதும் செரித்தபின்னர் பொறிகள் மீண்டும் திறந்து அடுத்த இரைக்காக காத்திருக்கும்.·ஒருமுறை இரையை பிடித்து செரித்து சத்துக்களை எடுத்துக் கொண்டால் பின்னர் அடுத்த இரையை பிடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த தாவரங்கள் பொறியில் சிக்கிய இரைகளை முழுவதுமாக செரிக்க 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.

பொதுவாக ஒரு தாவரத்தை பூச்சிகள் தொடுகையில் அவற்றால் உண்ணப்படும் ஆபத்தை தெரிவிக்கும் ஜாஸ்மோனிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சுரந்து தாவரங்கள் தங்களை பூச்சிகள் உண்ணுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்வேதிப்பொருட்களை சுரக்கும். பரிணாம வளர்ச்சியில் பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதற்கு மாறாக பூச்சிகளை தாவரங்கள் உண்ண வேண்டி வந்தபோது இதே வேதிப்பொருள் சுரப்பை மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்கிறது இவற்றில் நடைபெற்ற பல ஆராய்ச்சிகளின் முடிவுகள். 

டார்வின் பொறிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மிகச்சிறிய பூச்சிகளை வீனஸ் தாவரம் விரும்பாததால் அவை வெளியேறிச் செல்ல வசதியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதினார். ஆனால் பிற்பாடு இக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டது. வீனஸ் தாவரம் மிக சிறிய உயிர்களையும் இரையாக்குகிறது.

 வீனஸ் தாவரங்களின் பொறிகள் பலமுறை இரையை பிடித்தபின்னரே காய்ந்து கீழே விழுகின்றன. மீண்டும் புதிய பொறிகளை அடிமட்ட கிழங்கிலிருந்து இவை உருவாக்கிக்கொள்ளும். இவற்றின் வாழ்நாட்களை மிகச்சரியாக கணிக்க முடியவில்லை எனினும் வீனஸ் தாவரங்களின் வாழும் காலம் 20 வருடங்களுக்கும் மேல் என்றே கருதப்படுகிறது. பிற தாவரங்களை போலவெ வீனஸ் தாவரமும் சிறிய அளவில் ஒளிச்சேர்க்கை செய்தும் உணவை தயாரிக்கின்றது. மேலதிகமான சத்துக்களை இரையை பிடித்து உண்ணுவதால் பெறுகிறது

பல ஊனுண்ணித்தாவரங்கள் பிரத்யேக இரைகளை தேர்வு செய்கின்றன. வீனஸ் ஃப்ளை ட்ராப், வண்டுகள் சிலந்திகள் மற்றும் மெல்லுடலிகளையே  அதிகம் இரையாக்குகின்றது.  வீனஸ் தாவரத்தின் ஊன் உணவில் 33%  எறும்புகள், 30% சிலந்திகள், 10% வண்டுகள் மற்றும் 10% வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. இவற்றின் ’மெனு’வில்  5% மட்டுமெ பறக்கும் பூச்சிகள் உள்ளன

இரையின் அளவு

இலைப்பொறிகளின் அளவை காட்டிலும் சிறியதாக இருக்கும், பொறிகளின்  உள்ளே மாட்டிக் கொள்ளும் அளவிலான இரைகளையே இவை தேர்வு செய்கின்றன.ஒருபோதும் பொறிகளைக்காட்டிலும் பெரிதான இரைகளை இவை முயல்வதே இல்லை.  

அலங்கார செடிகளாக வீனஸ்

இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே பல ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் (Thomas Jefferson)  பாரீஸில் 1786ல் தங்கி இருந்தபோது வீனஸ் தாவரங்களை சேகரித்தார். மேலும் இவற்றின் விதைகளையும் கடல்வழி அனுப்ப ஏற்பாடுகளை  செய்துவிட்டே பாரீஸிலிருந்து புறப்பட்டார், தாமஸ் வீனஸை ’’சென்சிடிவ் தாவரம்’’ என்று கடிதங்களில் குறிப்பிட்டார்.  தாவரங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த பச்சை கட்டைவிரல்காரர் என்று அழைக்கப்பட்ட மாமன்னர் நெப்போலியனின் மனைவி ஜோஸபைன் வீனஸ் தாவரங்களை தனது  வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார் 

  தொடர்ந்து நடைபெற்ற தாவர பெருக்க சோதனைகளில் பலவிதமான வீனஸ் தாவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றில் மாபெரும் பொறிகளை கொண்டவைகளும், கூடுதல் பொறிகளை கொண்டவைகளும் அடங்கும்.  அவ்வாறான பிரபல  வகைகளுக்கு Sawtooth, Big Mouth மற்றும் Red Piranha போன்ற பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன.

புதிய வீனஸ் வகையான ஜஸ்டினா டேவிஸின்  (Justina Davis) பெயருக்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.வடக்கு கரோலினாவின் கவர்னர் ஒருவர் தனது 73வது வயதில் இரண்டாவது மனைவியாக ஜஸ்டினா டேவிஸ் என்னும் 15 வயது பெண்னை மணம் புரிந்துகொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன

ஜஸ்டினாவின் இளமையை கருத்தில்கொண்டு பொறிகளின் உட்புறம் ஒருபோதும் சிவப்புநிறம் கொண்டிராத, முழுத்தாவரமும் எப்போதும் பசுமை நிறைந்திருக்கும் வகைக்கு ஜஸ்டினா டேவிஸ் என பெயரிடப்பட்டது. இது முழு முதிர்ச்சி அடைந்த பின்னும் இளமையாவே தோற்றமளிக்கும் வகை

இவை சதுப்பு நிலங்களில் வளருபவை என்றாலும் மிக அதிகமாக நீர் தேங்கி இருக்கையில் வீனஸ் தாவரங்களின்  வேர்கள் அழுகி விடும், தொட்டிகளிலும், குடுவைத்தோட்டங்களிலும்(Terrarium)  இவற்றை வளர்க்கலாம். எதில் வளர்த்தாலும் மண்ணில் அமிலச்சத்து இருப்பது அவசியம்

இவை நச்சற்றவை எனவே வீடுகளில் வளர்க்கலாம், வீடுகளுக்கு வெளியில் வளர்கையில் இவை தனது இரையை தானே தேடிக்கொள்கின்றன. வீடுகளின் உள்ளே அலங்காரத் தாவரங்களாக வளர்க்கப்படுகையில் பிற தாவரங்களுக்கு நீரூற்றுவதைப் போல, ஒளி கிடைக்க வசதி செய்வதைப்போல வீனஸ் தாவரங்களுக்கு பூச்சிகள் இரையாக கிடைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.வீடுகளில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களுக்கு,  மாதமொரு முறையாவது  பூச்சிகளை அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை மெல்ல அழிந்துவிடும்

பூச்சிகளல்லாத பிற இறைச்சி இரைகள் வீனஸ் தாவரங்களை கொன்று விடும். மேலும் இறந்த பூச்சிகளை விட இவை உயிருள்ள இரைகளையே விரும்பும். 

 இவற்றின் குளிர்கால உறக்க நிலை சுமார் 10 மாதங்களுக்கு தொடரும்,  அலங்காரச் செடிகளாக இவற்றை வளர்ப்பவர்கள் மலர்கள் உருவானதும் மலர்களை அகற்றி விடலாம்.  இனப்பெருக்கத்துக்கு இத்தாவரம் செலவழிக்கும் ஆற்றலை இதன் மூலம் சேமிக்கலாம்

கடுங்குளிர் காலத்தில் கருகி மடியும் இவை மீண்டும் துளிர்த்து வளரும் எனவே அவை இறந்து விட்டதாக கருதி அவற்றை பிடுங்க வேண்டியதில்லை

இயற்கையாகவே வளம் குறைந்த நிலப்பகுதிகளில் வாழ்வதால் வீனஸ் தாவரங்களுக்கு அதிக உரம் இடுவதும் அவற்றை  கொல்லும்.

சூரிய ஒளி சுமார் 6 மணி நேரங்களுக்கு இவற்றிற்கு தேவைப்படுகிறது இதற்கும் குறைந்த அல்லது அதிகமான கால அளவில்  இருக்கும் ஒளி இவற்றின் வளர்ச்சியை பாதித்து தாவரத்தின் இலைகளை உதிரச்செய்துவிடும்.

இவை குளிர்ந்த காலநிலையில் நன்கு வளரும் ஆனால் அதிக குளிரும் அதிக வெப்பமும் இவற்றை அழித்துவிடும்.

அமேஸான் வீனஸ் தாவாங்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறது.திசு வளர்ப்பில் உருவாக்கப்பட்ட  ஒரு வீனஸ் தாவரம் 5 டாலர்களுக்கு கிடைக்கிறது.

பாதுகாக்க வேண்டிய இனம்

அரிய வகை தாவரங்களின் அழிவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1976ல் தெற்கு கரோலினா பாரம்பரிய அறக்கட்டளை (The South Carolina Heritage Trust) உருவாக்கப்பட்டது. தெற்கு கரோலினா இயற்கை வளங்களுக்கான் துறை (South Carolina Department of Natural Resources) அதன் கட்டுப்பாட்டில்  83,000  ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது. அந்நிலத்தில் சுமார் 3,000 இயல் தாவரங்கள் இருக்கின்றன அவற்றில் வீனஸ் தாவரங்கள் உள்ளிட்ட  700 வகைகள்  மிக மிக அரியவை. 2005ல் வீனஸ் தாவரம் வடக்கு கரோலினாவின் மாநில மலராக அடையாளப்படுத்தப்பட்டது.  

மரபணு மாற்றங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அலங்கார வீனஸ் தாவரங்கள் பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டு வீடுகளில் வளருகின்றன   இவற்றில் ‘Akai Ryu மற்றும் ‘South West Giant’ ஆகிய வகைகள் ராயல் தோட்டக்கலை தங்க விருதை பெற்றுள்ளன

பசுங்குடில்களில் இவை சாகுபடி செய்யப்படுகின்றன எனினும் இயற்கையான வாழிடங்களில் 1979 லிருந்தவற்றின் எண்ணிக்கையில் தற்போது 7 சதவீத தாவரங்கள் மட்டுமே இருக்கின்றன 

வாழிட அழிப்பும் வீனஸ் தாவரங்களின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.சமதளமான நிலப்பரப்பும் அமிலத்தன்மை உள்ள சதுப்பு மண்ணும் நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் தான் இவை செழித்து  வளர்கின்றன சூழல் மாசு மற்றும் விவசாய நிலங்களாக இயற்கை வாழிடங்கள் மாற்றபடுவது ஆகியவற்றால் வீனஸ் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கரோலினாவின் மக்கள் தொகைப்பெருக்கத்தினால் சாலை உருவாக்கமும் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக இவற்றின் வாழிடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது.வடக்கு கரோலினாவில் வீனஸ் தாவரங்கள் சிறப்பு கவனம் கோரும் தாவரங்கள் என்னும் பிரிவில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன

வீனஸ் செடி அழியும் தாவரங்களில் ஒன்றாகவும் பாதுகாக்கபட வேண்டிய இனமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால்  சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது.

இந்த தாவரங்களின் அழிவிற்கு இவற்றை சட்டவிரோதமாக சேகரிப்பதும் முக்கிய காரணமாயிருக்கிறது. பொது இடங்களில் இயற்கையாக வளரும் வீனஸ் தாவரங்களை  சேகரிப்பது சட்டப்படி குற்றமென வடக்கு கரோலினாவில் 1958லிருந்தே அறிவிக்கப்பட்டிருக்கிறது . பசுங்குடில்களில்  ஆயிரக்கணக்கான வீனஸ் தாவரங்கள் வளர்க்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டிருக்கிறது. 

எனினும் 2016 நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை பசுங்குடில்களில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களை காட்டிலும் இயற்கையான வாழிடங்களில் வளரும் தாவரங்களுக்கான தேவையே அதிகம் என்கிறது. வடக்கு கரோலினாவில் இப்போது வீனஸ் தாவரங்களை சட்டவிரோதமாக சேகரிப்பது கடும் தண்டனை குரிய பெருங்குற்றமாக கருதப்படுகிறது (felony). 

2014லிருந்து அமெரிக்காவில் வீனஸ் செடிகளை  அனுமதியின்றி எடுப்பது 25 மாத சிறைத்தண்டனைக்கான குற்றமாக கருதப்படுகிறது. . கடத்தல்காரர்கள் இயற்கையான வாழிடங்களில் இருப்பவற்றில் மிகப்பெரிய தாவரங்களையே தேர்வு செய்து எடுக்கிறார்கள். எனவே அவற்றிலிருக்கும் ஏராளமான விதைகளும், அவ்விதைகளிலிருந்து முளைக்கவிருக்கும் நூற்றுக்கணக்கான அடுத்த சந்ததி தாவரங்களுக்கும் சேர்த்தே கூடுதல் சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது

உள்ளங்கையிலும் சட்டை பாக்கெட்டுகளிலும் கூட பல வீனஸ் தாவரங்களை மறைத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இவற்றின் கள்ளத்தனமான சேகரிப்பை கண்டுபிடித்து தடை செய்வது மிக கடினமாக இருக்கிறது.

இவற்றை வாங்குபவர்களுக்கு அவை இயற்கையான வாழிடங்களிலிருந்து திருடிகொண்டு வரப்பட்டதா அல்லது பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டதா என்று தெரியாததால் அவை எளிதில் சந்தைப்படுத்தப் படுகின்றன’

சர்வதேச அளவிலான வீனஸ் தாவரக் கடத்தல்களும் நடைபெறுகின்றன. பால்டிமோர்- வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பெரணிகள் என்னும் பெயரில் இருந்த பெட்டிகள் சோதனையிடப்பட்ட போது அவற்றில் 9000 வீனஸ் தாவரங்கள் இருந்தன.

இவை பொதுவாக மரங்களின் அடுக்குகளுக்கடியில் அவ்வப்போது காட்டு நெருப்பு உண்டாகும் இடங்களில் செழித்துவளர்கின்றன. குறிப்பாக விதைகள் முளைக்க நெருப்பு எரிந்த பின்னர் இருக்கும் சாம்பல் மண் மிகவும் அவசியமாக இருக்கிறது. நெருப்பின் வெப்பம் இவற்றின் வளர்ச்சிக்கு நேரடியாக தேவைப்படுகிறது. காட்டு நெருப்பு மனிதர்களுக்கு ஆபத்தேற்படுத்தும் என்பதால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுவதும் இவற்றின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.  

இவை கடல்மட்டத்திலிருந்து 2-4மீ உயரத்தில் இருப்பதால் புயல் மழை போன்றவற்றினால் கடல்மட்டம உயருகையில் இவை அழிகின்றன.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வீனஸ் தாவரங்களின் இயற்கை வாழிடங்களை GPS  கருவி மூலம் கணக்கெடுத்தது. 1970களிலிருந்து நடைபெற்ற கணக்கெடுப்புக்களோடு ஒப்பிட்டதில் சுமார் 70 சதவீத வாழிடங்கள் இப்போது அழிந்துவிட்டிருப்பதாக  முடிவுகள் தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் அவற்களது வாழ்வில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆய்வுகளிலும் மனம் உடையும் ஒரு ஆய்வு இதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த நிலைமை தொடர்ந்தால்  வீனஸ் தாவரம் புராணங்களிலும் காப்பியங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்றிருந்த ஒரு  தாவரமாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது.

வீனஸ் தாவரத்தின் சாறு கார்னிவோரா  (Carnivora) என்னும் பெயரில்  மூலிகையாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் எய்ட்ஸ் மற்றும் சருமப்புற்று நோய்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இவை அந்நோயை குணமாக்குவதற்கான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இருக்கும் இடத்திலிருந்தே தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து உயிர்வாழவும் தாவரங்கள் பலவகையான, மிக சாமர்த்தியமான தகவமைப்புகளை கொண்டிருக்கின்றன. மற்றொரு  உதாரணமாக புகையிலை செடிகளின்  இலைகளை உண்ணும் கம்பளிப்பூச்சிகளுக்கு நிகோடின் தசைபலவீனத்தை உடனடியாக உருவாக்குவதை சொல்லலாம்.  தசை பலவீனமடைவதால் அவை புகையிலை உண்ணுதலை தொடர்வதில்லை

இது போன்ற தாவரங்களின் சிறப்பு தகவமைப்புகள் ஆச்சர்ய மூட்டுபவை. ஒரு தாவரத்தின்  95% இலைகளை நீக்கிவிட்டாலும் அவை மீதமிருக்கும் இலைகளைக் கொண்டே உணவு தயாரித்து, உயிர்வாழ்ந்து இனப்பெருக்கமும் செய்யும். நம்மைக் காட்டிலும் சூழல் தகவமைப்பு கொண்டவை அவை. தாவரங்கள் மனிதர்களைக் காட்டிலும்  சூழலை மிக நுண்மையாக கவனித்து அவற்றின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வை கண்டுபிடித்து விடுகின்றன. 

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதா? மூளை என்னும் அமைப்பு இருக்கிறதா? நரம்பு மண்டலம் இருக்கிறதா? எப்படி அவற்றை உயிருள்ளவை என சொல்ல முடியும் போன்ற கேள்விகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம் இவற்றுடன் மட்டும் தாவரங்களை ஒப்பிடாமல்   இப்போது பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிலும் மூளை இல்லை நரம்பு மண்டலம் இல்லை ஆனால் ஒரு வலைப்பின்னல் போல அபாரமாக செயல்படும் அவற்றின் சாமார்த்தியங்களை நாம் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறோம், அதுபோலத்தான் இந்த தாவரங்களின் நுண்ணறிவும்,  

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து தாவரங்கள் கொண்டிருக்கும் அறிவைத்தான் இந்த நூற்றாண்டில் மனிதர்கள் மிகத்தாமதமாக கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாவரங்களும் விலங்குகளும்  நம்மைக்காட்டிலும் கீழ்நிலை உயிரிகள் அவற்றால் நம்மைப்போல சிந்திக்கும் தரமற்றவை என்று இன்னும் நம்புபவர்கள் டேவிட் அட்டன்பரோவின் BBC க்கான இந்த 

காணொளியை காணலாம். இதில்   வீனஸ் தாவரங்களின் இரை பிடிக்கும் பொறியமைப்பும், செயல்பாடுகளும்  துல்லியமாக காண்பிக்கப்படுகிறது.

  • ஏறுகொடியொன்று பற்றுக்கம்பிசுருள்களைக்கொண்டு ஆதரவாக  அருகிலிருக்கும் கம்பியை பற்றிக்கொண்டு மேலேறி வளர்வதை காட்டும் இந்த https://youtu.be/5NvlkEqMtVY காணொளியையும் பார்க்கலாம்.

1. https://logamadevi.in/2045

வாழைகளின் வகைகள்

 

வாழை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என தாவரவியலாளர்களால் கருதப்படுகிறது. உலகின் முதல் உண்ணும் பழமும் வாழைதான் என கருதப்படுகிறது. ஆதாம் ஏவாள் உண்டதும் வாழைதான் என்போரும் உண்டு.

தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட வாழை அரேபியர்களால் உலகின் பல பாகங்களுக்கு  கி மு 327 ல் அறிமுகம் செய்யப்பட்டது

வணிக ரீதியிலான வாழை சாகுபடி 1834 ல் தொடங்கியது.  1889களில் உலகெங்கும் மிக பரவலாக வாழை சாகுபடி ஆனது  

அலெக்ஸாண்டர் இந்திய படையெடுப்பின் போது கிடைத்த கதலிப்பழங்களின் சுவையை மிக விரும்பி இந்தியாவிலிருந்து வாழையை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்தார் அங்குதான் பொன்னிற பருத்த விரல்களை போன்ற வாழைப்பழங்களுக்கு  ’பனான்’ (banan)  என்னும் விரல்களை குறிக்கும் அரபிச்சொல் பெயராக வைக்கப்பட்டது

 பின்னர் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளுக்கு 15ம் நூற்றாண்டிலும் அங்கிருந்து பெர்முடாவுக்கும் வாழை அறிமுகமானது. பெர்முடாவிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் வாழை பெருமளவில் இங்கிலாந்துக்கு கடல்வழி அனுப்பப்பட்டது.

 1835 ல் இங்கிலாந்தின் பிரபல தோட்டக்காரர் ஜோஸஃப் பாக்ஸ்டன் ஒரு புதிய மஞ்சள் பழங்களை அளிக்கும் வாழை வகையை உருவாக்கினார். அவரது எஜமானர் வில்லியம் கேவெண்டிஷ்  பெயரிலேயே அதற்கு  Musa cavendishii என்று பெயரிடப்பட்டது.

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நன்கு  பழுத்த வாழைப்பழங்களில் வைட்டமின் B6 ,C, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வாழைப்பழங்களும் வாழைத்தண்டும் வாழைப்பூக்களும் ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவுண்ணுவதும் ஆரோக்கியமான வழக்கம்.

ம்யூஸேசி குடும்பத்தை சேர்ந்த வாழையின் உண்ணக்கூடிய பழங்கள் ஆங்கிலத்தில் bananas  என்றும் சமைத்து உண்ணும் வாழைக்காய்கள்  plantains எனவும் குறிப்பிடப்படுகின்றன

இவை மரம் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் சதைப்பற்றான தண்டுகள் இலைத்தாள்களின் சுற்றடுக்குகளால் ஆன போலித்தண்டுகள்தான் .

வாழையில் சுமார் 70 சிற்றினங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன.  ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்த வாழை விரைவில் வளரும் இயல்புடையது.

இதன் கலப்பினங்கள் உயரத்திலும் அளவிலும் பழம் பூ இலை ஆகியவற்றிலும் வேறுபட்டிருக்கும். இவைஅதிக பட்சமாக 15 மீ உயரம் வரை வளரும்.ஓராண்டில் மலர்ந்து பலனளிக்கும்.

 உலகெங்கிலும் விரும்பி உண்ணப்படும் விதைகளற்ற சதைப்பற்றான வாழைப்பழங்களை கொடுக்கும் வாழைமரங்கள் அனைத்துமே  Musa acuminata மற்றும் Musa balbisiana  ஆகிய இரு காட்டு வாழைகளின் கலப்பினம் தான்

சிறப்பு வாழை வகைகள்

  • சீன குட்டை வாழை அல்லது தங்கத்தாமரை வாழை எனப்படும்  Musella lasiocarpa  கடல்மட்டத்துக்கு மேல் 2500 அடி உயரத்தில் வளரும் இவற்றின் போலித்தண்டின் உச்சி பொன்னிறத்தில்  இதழ்களாக விரிந்து தாமரை போலிருக்கும். இவை அலங்கார வாழைகள்  
  • Musa ornata, என்பது மலர் வாழை. இதன் கனிகள் உண்ணத்தகுந்தவையல்ல. அழகிய இளஞ்சிவப்பு மலர்களுக்காக இவை உலகெங்கிலும்  சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • Musa velutina,  வகை அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமாலயப்பகுதிகளில் காணப்படும் மலர்களும் பழத்தோலும் அடர் ரோஜா நிறங்கொண்ட வாழை வகை
  • கேரட் வாழையின் (M×troglodytarum,L) கனிகள்  சிறிதாக  உருளைக்கிழங்கை போல் இருக்கும் இவற்றின் சதை நல்ல ஆரஞ்சு நிறம்  கொண்டிருக்கும். இவற்றில் ஆந்தோசயானின் நிறமிகள் உள்ளதால் பல மருத்துவ பயன்களும்கொண்டது
  • நீல ஜாவா வாழை ஐஸ்கிரீம் போன்ற வெனிலா வாசனைகலந்த  இனிப்புச்சுவை கொண்டிருக்கும். 
  • Musa textilis என்பது நார் வாழை. இந்த வாழை நார் ஆங்கிலத்தில் ’Abacá’  எனப்படுகிறது.  பின்னலாடை தொழிலுக்கேற்ற உறுதியான நாரிழைகளை கொடுக்கும் இந்த வாழை பிலிப்பைன்ஸில்  ஒரு முக்கிய வணிகப்பயிர். இவற்றின் சிறு கனிகள் உண்ணத்தகுந்தவை அல்ல.
  • இலைகளின் அடிப்பகுதியில் மழை நீரை சேர்த்துவைத்து, கடும் கோடையில் பயணிப்பவர்களுக்கு குடிநீர் அளிக்கும் விசிறி வாழை (Ravenala madagascariensis,) மடகாஸ்கரை தாயகமாக கொண்டது
  • உலகின் மிகப்பெரிய வாழையினமான ராட்சஷ வாழை எனப்படும்  Musa ingens,  இந்தோனேசியாவில் காணப்படுகிறது.

இவற்றின் இலைகள் 1மீ அகலம் 16 மீ நீளமும் கொண்டிருக்கும்.தண்டு 50 அடி உயரம் வரை வளரும் உச்சியில் சுமார் 20 நீண்ட இலைகளும் மிகப்பெரிய வாழைத்தாரும் கொண்டிருக்கும் இவையே உலகின் மென்மரங்களில் மிக உயரமானவை. இவற்றின் சுற்றளவு1- 2 மீ இருக்கும். ஒரு பழம் சுமார் 3 லிருந்து 4 கிலோ எடை கொண்டிருக்கும் இதன் மிகப்பெரிய மலரிலிருந்து  லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டிருக்கும் 18லிருந்து 25 செ மீ நீளமிருக்கும்  300 பெரிய பழங்கள் உருவாகும். 

உலகிலேயே அதிக நீளம் கொண்ட இலைக்காம்பு சுமார் 15 மீ நீளம் கொண்டது

1989ல் தாவரவியலாளர்   ஜெஃப் டேனியல்ஸ் (Jeff Daniels), இந்த ராட்சஷ வாழையை இந்தோனேசியாவில் கடல்மட்டதுக்கு 2000 மீ உயரத்தில்  முதன்முதலாக கண்டறிந்தார்

இந்தியாவில் வாழை கலச்சார முக்கியத்துவம் வாய்ந்தது வாழையடி வாழையாக என்னும் பழமொழி தொடர்ந்து வரும் சந்ததிகளைகொண்ட குடும்பத்தை குறிக்கும் முது சொல்லாக இருக்கிறது

பூத்து காய்த்து, கனியளித்து தானழிந்து சந்திகள் வளர வழிசெய்யும் வாழை இந்தியாவில் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது,. இந்திய  மங்கல நிகழ்வுகளில் வாழை நுழைவுவாயிலை அலங்கரிக்கும்

 இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழை கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. வாழையின் வேர், இலை, மலர், கனி, காய், தண்டு, நார் என அனைத்தும் உபயோகம் கொண்டதால் கற்பக விருட்சம் என்றும் இதற்கு பெயருண்டு.

துரியான் – முள் நாறி

முள் நாறிப்பழம்- துரியான்

துரியான் மரம் Durio zibethinus என்னும் அறிவியல் பெயர் கொண்டது.இது கனிகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது

நல்ல வெப்பமுள்ள இடங்களில் மட்டுமே செழித்து வளரும் இயல்புடையவை இந்த துரியன் மரங்கள். போர்னியோ ,சுமத்ரா தீவுகளை தாயகமாக கொண்ட  இம்மரங்களின் அறிவியல் பெயரின்  duri  என்பது மலாய் மொழியில் ’முள்’ என்று பொருள்படும். துரியான் பழங்களின் முட்களை இச்சொல் குறிக்கிறது.

 15 ம் நூற்றாண்டில் துரியான் பழங்களும் முட்களை கொண்ட முள்சீதா (Annona muricata) பழங்களும் ஒன்று  என கருதபட்டு குழப்பம் நிலவியது.  17ம் நூற்றாண்டில் ஜெர்மானிய தாவரவியலாளர் ஜி இ ரம்ஃபிஸ் என்பவர் துரியான் பழ மரங்களை குறித்தான விரிவான விளக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை வெளியிட்ட போதுதான் இக்குழப்பம் தீர்ந்தது.

 ரம்ஃபிஸ் அந்த நூலில் எப்படி அமெரிக்க பழங்குடி வேட்டைக்காரர்கள் துரியானின் கெடுமணத்தையும் சுவைமிகுந்த கனிச்சுளைகளையும் கொண்டு புனுகுப் பூனைகளை (civet cat) பிடிக்கிறார்கள் என்பதை விவரித்திருந்தார். துரியானின் அறிவியல் பெயரின் zibethinus என்பது இத்தாலிய சொல்லான  zibetto என்பதன் பொருளான  புனுகுப்பூனையை குறிக்கிறது.

நிமிர்ந்த தண்டும், அகன்ற அடிப்பகுதியும் முட்டைவடிவ இலைப்பரப்புமாக மிக கம்பீரமான தோற்றமுடையது இம்மரம்.

இலைகள் லென்ஸ் வடிவத்தில் இரு நுனிகளும் கூராக  இருக்கும் இலைகளின் மேற்பரப்பு மென்மையாகவும் பளபளப்பாகவுமிருக்கும் அடிப்பகுதி  மங்கலான நிறத்திலிருக்கும். வனப்பகுதிகளில் 130 அடி உயரம் வரை வளரும் துரியான் மரங்கள் சுமார் 200 வருடங்கள் வாழும்.

கலப்பின துரியான் மரங்கள் இவற்றில் பாதி உயரத்தையே கொண்டிருக்கும். 20லிருந்து 30 மலர்களை கொண்ட தொங்கு மஞ்சரிகள் மிக அழகாக  கவிந்த மணிகளை போலிருக்கும்.

 மலர்கள் நல்ல தடித்த கிளைகளில் மட்டுமே தோன்றும். மலர்களின் நிறம் கனிகளின் நிறத்தை ஒத்திருக்கும் மஞ்சள் கலந்த மலர்களிலிருந்து மஞ்சள் நிற சுளை கொண்ட கனிகளும் வெள்ளை அல்லது சிவப்பு மலர்களிலிருந்து வெள்ளை அல்லது சிவப்பு சதைப்பகுதியை கொண்ட கனிகளும் உருவாகும்

 அரும்பு மலர ஒரு மாத காலமாகும். துரியான் மரங்களில்  அயல் மகரந்த சேர்க்கை வவ்வால்கள் தேனீக்கள் பறவைகள் மற்றும் எறும்புகளினால் நடைபெறும். மகரந்த சேர்க்கை முடிந்த மலர்களிலிருந்து 3 மாத்த்தில் கனிகள் உருவாகும்.

 துரியான் கனிகள் 12 இன்ச் குறுக்களவும் முட்கள் நிறைந்த மேல்தோலும் கொண்டவை. ஒரு பழம் சுமார் 6லிருந்து 8 கிலோ எடைகொண்டிருக்கும். ஒரு மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும்..

கனிகளில் பெரிதான 5 சுளைகளே காணப்படும் பொதுவாக மஞ்சளிலும்  அரிதாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது நீலநிறத்திலும் சுளைகள் இருக்கும்.  இக்கனிகளின் தனித்துவமாக இவற்றின் கெடுமணம் இருக்கிறது

பலருக்கு இம்மணம் விருப்பத்துக்குகந்ததாகவும் பலருக்கு இம்மணம் கெடு நாற்றமாகவும் இருக்கிறது. சிலர் இம்மணத்தை கெட்டுப்போன வெங்காய மணத்தை, டர்பன்டைனின் நெடியை ஒத்திருக்கிறது என்பார்கள். சுவையும் அப்படியே பலருக்கு இது பிடித்தமானதாகவும் பலரால் இதை உண்ணுவதை நினைத்துப்பார்க்கக்கூட முடியாததாகவும் இருக்கிறது. மலேசியாவில் இது பலரின் விருப்பக் கனியாக இருக்கிறது. சிங்கப்பூரில் இந்த கெடுமணத்தினால் இவற்றை ரயில் மற்றும் பேருந்துகளில் எடுத்துச்செல்ல சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருக்கிறது

 வருட்த்திற்கு இருமுறை கிடைக்கும் துரியான் கனியை உடைத்து உடனே சிலமணி நேரத்தில் உண்டுவிடவேண்டும் இல்லாவிட்டால் இதன் சுவையும் சத்துக்களும் மாறுபட்டுவிடும். இவற்றின் கொட்டை மிக மிக கடினமானது.

முள்நாறிப்பழமான துரியானில் சுமார் 35 க்கும் அதிகமான் வகைகள் உள்ளன. பல பழங்கள் காயாக இருக்கையிலேயே  முட்கள் நீக்கப்பட்டு  முள்ளில்லா துரியான் என விற்பனை செய்யப்படுகின்றன . இயற்கையிலேயே முள்ளில்லா துரியான் கனிவகை  இன்னும்  உருவாக்கப்படவில்லை.

தோட்டக்கலைத்துறையினால் உருவாக்கப்பட்ட துரியான் மரங்களின் பெயர்கள் அனைத்தும் D என்னும் எழுத்தை கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறியின் புகழ் பெற்ற ரகங்கள்.

துரியன் கனிகளின் ஏற்றுமதியில் தாய்லாந்து  முதன்மை வகிக்கின்றது. தென் கிழக்காசியாவைத்தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இப்பழம் விளைகின்றது.

துரியான் கனிகளில் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து இவற்றோடு வைட்டமின் B12, C,B 6, மேங்கனீஸ் மெக்னீஷியம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றுடன் ஆந்த்தோசயானின் போன்ற பல முக்கிய நிறமிகளையும் இக்கனி கொண்டுள்ளது. பல சத்துக்கள் கொண்டுள்ள இக்கனி புற்று நோய்க்கெதிராகவும் உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உடலை வலுவாக்கவும் பயன்படுகிறது.

 துரியன் கனிகளுடன் மதுவை சேர்துக்கொலவ்து ஆபத்தை  விளைவிக்கும்.

ஈஸ்ட்ரொஜென்னை போன்ற இயக்கச்சாற்றை (Hormone) கொண்டிருக்கும் துரியான் கனிகள் குழந்தை பேறற்றவர்களின் குறையைபோக்கும் என்னும் நம்பிக்கை உலகின் பல நாடுகளில் இருக்கிறது. எனினும் இதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.

மெத்தூசலா!

உலகின் மிகப் பழமையான மரம்மெத்தூசலா

சுமார் 4500 வருடங்களுக்கு முன்பு, கிஸாவில் எகிப்திய பிரமிடுகள் கட்டப்பட்ட சமயத்தில் பிரிஸில் கோன் பைன் மரமான பைனஸ் லாங்கேவா (Pinus longaeva) மரத்தின் விதையொன்று கிழக்கு கலிஃபோர்னியாவின் வெண்மலைத் தொடரின் சரிவொன்றில் விழுந்தது. 

இறகுகள் கொண்டிருக்கும் அந்த விதை காற்றில் பறந்து வந்திருக்கலாம் அல்லது விதைகளை கூடுகளில் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்ட பறவை ஒன்றினால் கொண்டு வரப் படுகையில் தவறி அங்கு விழுந்திருக்கலாம். எப்படியோ எங்கிருந்தோ வந்து, அந்த பைன் விதை அங்கு  விழுந்த போது நிலம் ஈரமாக இருந்திருக்கிறது  சில நாட்களிலேயே அது முளைத்து இளம்பச்சை  நிற தண்டும் குருதிலையுமாக வளரத்துவங்கியது

 அந்த சரிவின் நிலம் மிக அதிக சுண்ணாம்புச்சத்து கொண்டிருக்கும் எனவே, அங்கு முளைக்கும் பெரும்பாலான  தாவரங்கள்  விரைவிலேயே அழிந்துவிடும் அந்த மலைச்சரிவு முழுக்க அப்படி மடிந்துபோன பல  இளம் பைன் மரங்களின் உடைந்த துண்டுகள்  நிறைந்திருக்கும்.

இந்த  பைன் விதை தனது முன்னோர்களின் மட்கிய உடல்களிலிருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டு நன்றாக வளர துவங்கியது. பைன் மரங்கள் பிற மரங்களை போலல்லாது மிக மெதுவாக வளரும் இயல்பு கொண்டது.  5 வருடங்களில் அந்த விதை சில இன்ச்  அளவுக்குத்தான் வளர்ந்திருந்து.அதன்அடர் பச்சை நிற  ஊசி இலை குருத்துக்கள் அழகாக வெளியே தெரிய துவங்கி இருந்தன.  பல  பத்தாண்டுகள் கடந்த பின்னர் அம்மரம் ஒரு மனிதனின் உயரத்துக்கு வந்திருந்தது

  கிறிஸ்துமஸ் மரத்தை போல தோன்றிய அம்மரம் சில நூற்றாண்டுகள் கழித்து பண்டைய எகிப்து அரசின் வீழ்ச்சிக்கு பின்னர் 45 அடி உயரம் வளர்ந்திருந்தது

 ஊசியிலை மரங்கள்  சாதாரணமாகவே  நூற்றாண்டுகளை கடந்தும் வாழும். செகுவா மரம், யூ மரம், ஓக், சைப்பரஸ் மற்றும் ஜூனிபர் மரங்களிப்படி நூற்றாண்டுகளுக்கு மேலும் வளர்ந்து கொண்டிருக்கும்.

 பிரிஸில் கோன் பைன் மரங்கள் சுண்ணம்புச்சத்து மண்ணிலும் வறண்ட் மண்ணிலும் நன்கு வளரும் இயல்புடையது எனவே அச்சரிவின் வறண்ட மண்ணும்,  காலநிலை மாற்றங்களும் அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லை.

பொதுவாக மலை மரங்களை துளையிட்டு சேதப்படுத்தும் மலைவண்டுகள் பிரிஸில் பைன் மரத்தை துளையிட முடியாதபடிக்கு மிக கடினமான மரப்பட்டையை இவை கொண்டிருந்தன.

அக்காலத்தில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பல சாம்ராஜ்யங்கள் உதித்து எழுந்தன பல அழிந்தன பல நூறு போர்கள் நடந்தன ஆனால் கிமு 2500 லிருந்து அந்த மரம் எந்த சேதமும் இல்லாமல் மிக மெதுவாக வளர்ந்துகொண்டிருந்தது. ஒரு வருடத்திற்கு  1 இன்ச்சில் 200 பங்கு அளவில் இதன் பருமன் அதிகரித்துக்கொண்டிருந்தது. அவற்றில் ஆண்டு வளையங்கள் தோன்றின

ஆண்டுவளையங்கள் அந்த குறிப்ட்ட ஆண்டுகளின் கால்நிலையை குறிப்பிடும் அடையாளங்களை கொண்டிருப்பவை. அதிக மழைப்பொழிவு இருந்த சமயங்களில் அகலமான வளையங்கள் உண்டாகின. எரிமலை வெடிப்பு இருந்த காலங்களில், கடும் வறட்சியின் போது தீ விபத்து நடந்த போது அதற்கேற்ற அடையாளாங்கள் ஆண்டு வளையங்களில் உருவாகின. இவ்வளையங்களை கொண்டே பொதுவாக மரங்களின் வயது கணக்கிடப்படுகிறது.

 1957ல் டூசான் (Tucson)  மரவளைய ஆய்வகத்தின் விஞ்ஞானி எட்மண்ட் ஷூல்மேன்   (Edmund Schulman)  மற்றும் டாம் ஹார்லன் ஆகியொர் இம்மரம் 4,789  வருடங்கள் பழமையானது என்று கணித்தனர். 

எகிப்தின் பிரமிடுகளை காட்டிலும் பழமையான இந்த பைன் மரம் உலகின் மிகப் பழமையான மரம் என்பதை  மரவளைய கணக்கீட்டு ஆய்வுகளின் மூலம் இவர்கள் கண்டறிந்தனர்.

Edmund Schulman

 இம்மரத்திற்கு எட்மண்ட், மிகப் பழமையான மனிதரும் மிக அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும் பைபிளில்  சொல்லப்பட்ட மெத்தூசலாவின்  பெயரிட்டார். (Methuselah).  

அடுத்த வருடத்திலிருந்து அமெரிக்க வனத்துறை அவ்விடத்தில் பிரிஸில் சோன் பைன் மரக்காடுகளை உருவாக்கியபோது அக்காட்டின் பிரத்யேக அடையாளமாக நின்றது மெத்தூசலா மரம். அம்மாம் அங்கிருப்பதை கேள்விப்பட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத்துவங்கினர். 

அதன் பின்னர் மரத்தின் பாதுகாப்பை  உறுதி செய்ய அம்மரம் இருக்கும் இடம் மட்டும் பார்வையாளர்களுக்கு தடைசெய்யப்பட்டது.அம்மரத்தை பாதுகாக்கும் பொருட்டு  அதனருகில் செல்லும் யாராகினும்  அவர்களது ஆயுட்காலத்தையும் அம்மரம் எடுதுக்கொண்டுவிடுவதால், இளமையிலேயெ இறந்துவிடுவார்கள் என்னும் கட்டுக்கதைகளும் உலவுகின்றன.

இந்த பழமையான பிரிஸில் பைன் மரம் ஒரு துறவியாக  கடவுளாக கருதப்படுகிறது.  இம்மரம் வளரும் பள்ளத்தாக்கு மூதாதையர்களின் காடு என்று அழைக்கப்படுகிறது. மெத்தூசலா மரத்தின் அருகில் மேலும் பல ஆயிரமாண்டுகள் பழமையான மரங்கள் வளர்கின்றன. மெத்தூசலாவின் அருகிலிருக்கும் இன்னொரு மரம் மெத்தூசலா விற்கு 2300 ஆண்டுகளுக்கு பின்னர் வளரத்துவங்கியது 

Old Tjikko

சமிபத்தில் ஸ்வீடன் பனிப் பகுதியில் இருக்கும்  Old Tjikko. என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு ஸ்புரூஸ் மரத்தின் வயது 9500 வருடங்கள் என கணக்கிடப்பட்டது. எனினும் இந்த ஸ்புரூஸ் மரம் தன் பழைய தண்டுகள் கிளைகளை இழந்து இழந்து பல புதிய கிளைகளை உண்டாக்கி வளர்வதால் இதை  clonal வகை மரங்களில்  மிகப்பழமையானது என்றும் மெத்தூசலா non clonal வகையில் பழமையானமரம்  என்றும் கருதப்படுகிறது. கின்னஸ் புத்தகத்தில் மெத்தூசலா மரம் உலகின் பழமையான மரம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.


ரெஃப்லேஷியா மலர்த்தாவரம்

  1818 ம் ஆண்டு மே மாதத்தில் சுமத்ரா தீவுகளுக்கு வந்திருந்த தேடல் பயணக்குழுவினருடன்   சுமத்ராவின் பிரிட்டிஷ் கவர்னர் த  திரு ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் ஒரு காலை நடைக்கு புறப்பட்டிருந்தார். அவருடன்  தாவரவியலாளரான மனைவி சோபியாவும், மருத்துவரும் இயற்கையார்வலருமான திரு ஜோசப் அர்னால்டும் இணைந்துகொண்டனர். (Sir Stamford Raffles,  Lady Sophia Raffles &  Dr Joseph Arnold)

Sir Stamford Raffles

காட்டுப்பயணங்களில் உடன் வரும் பழங்குடியினப் பணியாள் ஒருவர் ஒரு மாபெரும் மலரை அன்று காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் ஆர்வமுத்துடன் மூவரும்  மன்னா ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தனர். குழுவின் பிற அங்கத்தினர் அவர்களுக்கு பின்னே வெகு தூரத்தில் அப்போதுதான் நடையை துவங்கி இருந்தனர்.

Sophia hull

பழங்குடியின பணியாள் அடர்ந்த மரங்களினடியில் ஒரு மாபெரும் மலரொன்றை காட்டியபோது ஜோசப் அதிர்ச்சியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டர். பொதுவில் மலரென்று சொல்லப்படும் வரையறைகளுக்குள் அடங்காத மாபெரும் இரத்தசிவப்பு மலரொன்று அங்கு இதழ்விரித்து கெடுமணம் வீசிக்கொண்டு மலர்ந்திருந்தது. அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்ததுபோல ஒரு செடியில் இலைகளும் கிளைகளும் சூழ இருக்கும் சாதாரண மலர்களை போலல்லாது வெறும் மலர் மட்டுமே தண்டுகளோ இலைகளோ வேர்களோ இன்றி இருந்தது. முழுத்தாவரம் என்பதே மலர்தான் என்பது அதுவரை அவர்கள் காணாதது கற்பனையிலும் கண்டிருக்காதது

Dr Joseph Arnold

அவருக்கு சற்று பிந்தி வந்த ஸ்டாம்ஃபோர்ட் மற்றும் சோபியாவும் கூட ஆச்சர்யத்தில் அப்படியே உறைந்து போனார்கள்.  மலரின் மீது பெருங்கூட்டமாக சிறு பூச்சிகள் பறந்துகொண்டும் முட்டையிட்டுக் கொண்டும் இருந்தன. அப்பழங்குயினர் அம்மலரை சாத்தானின் வெற்றிலை பெட்டி என அழைத்தார்கள்.

கெட்டுப்போன மாட்டிறைச்சியின் கெடுமணம் கொண்டிருந்த அந்த மலர் 1.5 மீ சுற்றளவுடன், சுமார் 12 கிலோ எடையுடன் இருந்தது.உலகின்  மிகப்பெரிய மலரான  அதன் பெயர் பின்னர்  ரெஃப்லேஷியா அர்னால்டி என அதை முதன் முதலில் பார்த்த, அடையாளப்படுத்திய ஜோசப் அர்னால்டின் பெயரில் சிற்றினப்பெயரும்,  சுமத்ரா கவர்னரான ராஃபில்ஸின் பெயரில் பேரினமும் கொண்ட Rafflesia arnoldi  அழைக்கப்படுகிறது

இதன் தாவரக்குடும்பம் ரெஃப்லேஸியேசி( Rafflesiaceae) அர்னால்டு அம்மலரை அப்போதே  வண்ணச்சித்திரமாக வரைந்து, அம்மலரை பற்றிய குறிப்புக்களையும் அங்கேயே எழுதி பத்திரப்படுத்திக் கொண்டார். அப்பழங்குடிப்  பணியாளிடம்  அம்மலரை கவனமாக எடுத்து பாதுகாப்பாக வைக்கும்படி  பணித்தார். பத்திரப்படுத்தியும் அம்மலர் சிலநாட்களிலேயே உலர்ந்தும், பூச்சித்தாக்குதலால் அழிந்தும் போனது.

 துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களில்  சுமத்ரா தீவில் உண்டான நோய்த் தொற்றினாலும் காய்ச்சலினாலும்  ஜூலை 1818ல்  அர்னால்ட் மறைந்தார்.    இந்த மலரை கண்டுபிடித்ததை குறித்து திரு ரேஃபில்ஸ் ராயல் சொசைட்டிக்கு 13 ஆகஸ்ட் 1818ல் எழுதியனுப்பினார். அக்கடிதத்தில் அர்னால்டின் மறைவையும் ரேஃபில்ஸ் குறிப்பிட்டிருந்தார். பிற்பாடு அர்னால்டின் சித்திரங்களும், குறிப்புக்களும் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு இங்கிலாந்தின்   பிரபலமான இயற்கை ஆர்வலரான ராபர்ட் பிரவுனிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

ராபர்ட் பிரவுன் 1820ல் லண்டன் லின்னேயஸ் சொசைடியில் ’’ரெஃப்லேஷியா என்னும்  ஒரு புதிய பேரினம்’’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்.அக்கட்டுரையில்தான் இம்மலருக்கு   அர்னால்ட் மற்றும்  அந்த தேடல் பயணத்துக்கு நிதி உதவி அளித்த ரேஃபில்ஸின் பெயர்களை இணைத்து அறிவியல் பெயர் வைக்காலமென்னும் பரிந்துரையையும் அளித்திருந்தார். 

இக்கண்டுபிடிப்பிற்கு   20 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 1794ல் இப்படியான ஒரு மாபெரும் மலரை ஜாவா தீவுகளில்  பிரெஞ்சு மருத்துவர் அகஸ்டே என்பவர் கண்டறிந்திருந்தார்.அது Rafflesia patma, என்று  பிற்பாடு பெயரிடப்பட்டது.

  Tetrastigma liana- வில் ரெஃப்லேஸியா அரும்பு

ரெஃப்லேஸியா சுமத்ரா, ஜாவா மழைக்காடுகளில், மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வேர் ஒட்டுண்ணித் தாவரம். குறிப்பாக டெட்ராஸ்டிக்மா என்னும் வகை மரக்கொடிகளை (Tetrastigma woody vines.) ஒட்டியே இவை உயிர் வாழும்.

 மிக அரிய தாவரமான இவற்றை ஆய்வகங்களில்  உருவாக்கவும் மலர்களைப் பாதுகாக்கவும் முடியாது. உலகின் மிகப்பெரிய அதிக எடைகொண்ட மலரான ரெப்லேஷியா. 9 லிருந்து 12 கிலோ எடைகொண்டிருக்கும். இந்தத் தாவரத்துக்கு வேர்களோ இலைகளோ தண்டுகளோ இல்லாமல் மரக்கொடிகளில் அரும்புகளாக முளைத்துப் பின்னர் பெரிதாக மலரும்.

பொதுவாக மலரில் ஆண் பெண் இரு இனப்பெருக்க உறுப்புக்களும் இருக்கும். அரிதாக ஆண் மலரும் பெண் மலரும் தனித்தனியாகவும் மலருவதுண்டு.இது இறைச்சி மலர் பிணமலர் என்று பல மொழிகளில் அழைக்கப்படுகிறது.( corpse flower) ஐந்து சதைப்பற்றான இதழ்கள் ஒரு மீட்டர் சுற்றளவில்  பெரிதாக மலர்ந்திருக்கும்.இதழ்களில்  மங்கிய வெள்ளை நிறத்தில் பெரிய திட்டுக்களும் புள்ளிகளும் காணப்படும்.

 முழுவதும் மலர்ந்து 7 நாட்களுக்கு வாடாமல் இருக்கும் இவற்றைத் தேடி வரும் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சி இனங்களை கவர கெடுமணத்தை பரப்பும்.

சிவப்பு நிறம் கொண்ட மலரின் நடுப்பகுதி ஊதா கலந்த சிவப்பில் இருக்கும்/ கிண்ணம் போன்ற மத்திய அமைப்பில் இனப்பெருக்க உறுப்புகள் அமைந்திருக்கும்.இதன் கனியில் பிசுபிசுப்பாக ஒட்டும் தன்மையுள்ள விதைகள் இருக்கும். இவற்றைக் கொறித்துண்ணும் சிறு விலங்குகளால் இவை இயற்கையாகவே பரவிக் காடுகளில் வளரும்.

அர்னால்டினால் கண்டறியப்படுவதற்கு முன்னரே பழங்குடியினர் இம்மலரை மருத்துவ சிகிச்சையில் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். மகப்பேற்றிற்கு பிறகான கருப்பை சுருங்குதலுக்கும் ரத்தப்போக்கை நிறுத்தவும் இம்மலரின் அரும்புகளை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

 மலேய பழங்குடியினர் பாலுணர்வு ஊக்கியாக இம்மலரின் சாற்றை பருகினர்.

தாய்லாந்து பழங்குடியினர் இம்மலரின் சதைப்பற்றான இதழ்களை நறுக்கி உண்ணுகின்றனர். மலேசியாவின் சில பகுதிகளில் இதை சாத்தானின் மலரென்று அதன் கெடுமணத்தினால் கருதி மங்கல நிகழ்வுகளில் பயன்படுத்த கூடாத மலரென்று கருதப்படுகிறது.

1990களில் தாய்லாந்தின் மூன்று தேசிய மலர்களில் ரெஃப்லேஷியாவும் ஒன்றாக வைக்கப்பட்டது..

அரிய வகை மலரான இவற்றின் எண்ணிக்கை இப்போது மிகக் குறைந்து விட்டதால் தாய்லாந்து அரசு அந்நாட்டின் பழங்குடியினரை இம்மலரின் பாதுகவாலர்களாக  அறிவித்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

சிங்கப்பூர் தேசிய பூங்காவில் ரேஃப்லேஷியாவின்   சிற்றினங்களான  Rafflesia hasseltii மற்றும்  Rafflesia tuan-mudae  ஆகியவற்றின் இரு உலர் மலர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  1985ல் ரெஃப்லேஷியா சார்ந்து வளரும் மரக்கொடியான Tetrastigma lanceolarium வை வளர்த்து அதனருக்கில் ரெஃப்லேஷியாவின் விதைகளை வளர்க்கும் முயற்சி சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்டது எனினும்   அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.

ரெஃப்லேஸியாவின் பிற மொழிபெயர்கள்: Bunga patma, Yak-yak, Patma raksasa, Patma kemubut, Krubut, Pakma (Sarawak), Kukuanga (Sabah), Wusak-tombuakar (Tambunan), Ambun ambun, Kemubut (Sumatra), Kerubut, Petimun Sikinlili (Sumatra). Devil’s betel box, sun toadstool, stinking corpse lily.

 2001 ல் அதிகார பூர்வமாக ரெஃப்லேஸியாவின் சிற்றினங்களும், அவை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் வெளியாகின

1821: Rafflesia arnoldi, Sumatra, Borneo.

1841: Rafflesia manillana, Leyte Island, Philippines.

1850: Rafflesia rochussenii, Sumatra, Java.

1868: Rafflesia tuan-mudae, Borneo.

1879: Rafflesia hasseltii, Sumatra.

1884: Rafflesia schadenbergiana, Mindanao, Philippines

1910: Rafflesia cantleyi, Peninsular Malaysia

1918: Rafflesia borneensis, Borneo.

1918: Rafflesia ciliata, Borneo.

1918: Rafflesia witkampii, Borneo.

1984: Rafflesia gadutensis, Sumatra.

1984: Rafflesia keithii, Borneo.

1984: Rafflesia kerrii, Thailand and Peninsular Malaysia.

1984: Rafflesia micropylora, Sumatra.

1984: Rafflesia pricei, Borneo.

1989: Rafflesia tengku-adlinii, Borneo

இதன் ஒரு சிற்றினமான R. magnifica மிக ஆபத்தில் இருக்கும்  அழிந்து வரும் இனமாக சிவப்பு பட்டியலிடப் பட்டிருக்கிறது. ( IUCN Red List of Threatened Species).

செயற்கை ரெஃப்லேஷியாவுடன் மலேசிய எழுத்தாளர் ம . நவீன்.

இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் ரெஃப்லேஷியா மலர்களின் புகைப்படங்கள் அனைத்தும் திரு நவீன் அவர்கள் கொடுத்துதவியது. நவீனுக்கு அன்பும் நன்றியும்.

சோமக்கொடி

பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள்  கொண்ட  தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  இவை குறித்த ஆய்வுகளை கல்லூரியில் மாணவர்களுக்கு அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நான்  தனிப்பட்ட முறையில் தரவுகளை சேகரித்து கட்டுரைகள் எழுதுகிறேன்.

எந்த பழங்குடியினப் பகுதிகளுக்கு சென்றாலும் இந்த தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஆர்வமுடன் இருப்பேன்.  

திரு ஜெயமோகன் அவர்கள் ஏற்பாடு செய்த, கோவை பாலு அவர்களின் பண்ணை வீட்டில் நடந்த கவிதை முகாமில் கலந்து கொள்ளும் முந்தைய நாள் தருணுடன் பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றிருக்கையில் கொஞ்சமும் எதிர்பாராமல் யானைப் புளி எனப்படும் எண்டடா ரீடி என்னும் கொடியை பார்த்தேன். அதை நேரில் பார்க்க முடியும் என்று நினைத்திருக்கவில்லை. மாபெரும் பச்சை வாட்களைபோல அவற்றின் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன.  

இக்கொடியை ஆப்பிரிக்காவில் கனவுக்கொடி என்று அழைக்கிறார்கள். ஆப்பிரிக்க பழங்குடியினர் இதன் கடினமான விதைகளை உடைத்து, எரித்து அந்த போதை தரும் புகையை நுகர்கிறார்கள். இந்த புகை மறைந்துபோன முன்னோர்களிடம் தொடர்புகொள்ளவும், கடவுளிடம் பேசவும் வைப்பதாக நம்புகிறார்கள். 

அங்கிருந்த (ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் போலவே இருந்த) பழங்குடியின முதியவர் ஒருவரின் அனுமதி பெற்று கொஞ்சம் விதைகளை எடுத்து வந்தேன். சிலவற்றை பரிசளித்துவிட்டு சில விதைகளை  என் அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன்.

கொழிஞ்சாம்பாறை எனும் கேரளப் பகுதியில் சந்தித்த ஒரு பழங்குடியினத்தவர் உலர்ந்த மிளகுக்கொடிகளை துண்டுகளாக்கி இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார், அவ்வப்போது அவற்றை பீடி போல புகைக்கிறார். அவர்கள் இனத்தில் அது பலநூறு ஆண்டுகளாக பழக்கம் என்றார் . மிக மிக புதிதாக  அந்த உபயோகத்தை கேள்விப்பட்டேன். 

யானைப்புளி

அவர் எனக்கு சில வெள்ளை இஞ்சித் துண்டுகளை அளித்தார். அவை ஷாம்பு ஜிஞ்சர் (Zingiber zerumbet) எனப்படும் தாவரத்தின் அடிக்கிழங்குகள். சிறு கூம்பு போல அவற்றிலிருந்து உருவாகும் மலர்களில் சேகரமாகும் பிசிபிசுப்பான திரவம் தலைமுடியை அலச பயன்படுத்தப்படுகிறது என்றார். இப்போது அவை என் வீட்டில் செழித்து வளர்கின்றன.  நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். நல்லதொரு ஆய்வு கட்டுரையையும் அதை குறித்து எழுதி வெளியிட்டேன்.  இதுபோல தொல்குடித்தாவரவியல் துறை அளிக்கும் சுவாரஸ்யங்கள் எண்ணற்றவை.

யானைப்புளியின் பெரிய விதைகள்

முதன்முதலாக   நான் வாசித்த பழங்குடியினத்தவர்கள் சடங்குகளில் பயன்படுத்தப்படும் போதையேற்றும், மனமருட்சி உண்டாக்கும் மற்றும் இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் தாவரங்களான  Enthoegens குறித்த நூல் ’’தெய்வங்களின் தாவரங்கள்’’. 

அமெரிக்க உயிரியலாளர், மனிதவியலாளர் மற்றும் நான் ஈடுபட்டிருக்கும் தொல்குடித்தாவரவியல் துறையை தோற்றுவித்தவரான ரிச்சர்ட்,  புல்லரிசிப் பூஞ்சையிலிருந்து LSD யை கண்டறிந்த  வேதியியலாளர் ஆல்ப்ரெட் ஹாஃப் மேனுடன் இணைந்து எழுதிய நூல் இது.(“Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers -Richard Evans Schultes & Albert Hofmann Christian Hofmann)

20 ஆண்டுகளுக்கு முன்னர் இரவலாக  வாசிக்க கிடைத்த இந்த நூலே நான் ஈடுபட்டிருந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கழிவுகளை மட்க செய்து உரமாக மாற்றி மண்வளத்தை, பயிர்களின் சாகுபடியை மேம்படுத்தும் ஆய்வுகளிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து Ethnobotany என்னும் தொல்குடித்தாவரவியலுக்குள் என்னை அழைத்து சென்றது.

ரிச்சர்ட் பல ஆண்டுகள் அமேஸான் பழங்குடியினருடனேயே வாழ்ந்து இந்த நூலை எழுதினார்.இந்த நூல் போதைத்தாவரங்கள் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம்,  பழமையான சமூகங்களில் உள்ள இனவியல், வரலாறு மற்றும் நரம்பு மருந்தியல் தகவல்கள் அடங்கிய  மிக  பயனுள்ள தொகுப்பு. 

“தெய்வங்களின் தாவரங்கள்”  அமேஸான் பழங்குடிகள் உள்ளிட்ட உலகின் பல பழமையான கலாச்சாரங்களின் மதச் சடங்குகள் சார்ந்த, பரவசமூட்டும், கிளர்ச்சியடையச் செய்யும், மாயத்தோற்றம் உண்டாக்கும் அல்லது மனம் பிறழச் செய்யும் பொருட்களை அளிக்கும் தாவரங்கள், அச்சடங்குகளின் தெய்வங்கள், அவற்றின் வேதிப்பொருட்கள், பிற தாவரவியல் தகவல்கள், அவை கிடைக்கும் பருவங்கள் , குணப்படுத்தும் நோய்கள், அவற்றை மருந்தாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. இவற்றின் பக்க விளைவுகளும் நச்சுத்தன்மையால் விளையும் ஆபத்துக்களும் கூட குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பழங்குடியின மதச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் புனிதத் தாவரங்களின் நூற்றுக்கணக்கான அழகிய வண்ணப் புகைப்படங்களும், விரிவான விளக்கங்களும் கொண்ட இந்நூல் ஒரு  அரிய தாவரவியல் பொக்கிஷம்.

இதில் மாண்ட்ரேக் கிழங்குகள், ஊமத்தை மலர்கள், கொடைக்கானலில் இப்போது கிடைக்கும் போதைக்காளான்கள், அட்ரோபா பெல்லடோனா, மெக்ஸிகோவின் பெயோட்டி போதைக்கள்ளிகள் உள்ளிட்ட பல போதைத் தாவரங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நூல் அளித்த ஆர்வத்தினால் hallucinogenic plants குறித்து தமிழில் ஒரு நூல் எழுதவிருக்கிறேன். அவை குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.மெக்ஸிகோவின் நீலக்கள்ளிகளிலிருந்து கிடைக்கும் டெக்கீலா, ஜப்பானின் அரிசி மதுவான ஸாகெ, கோவாவின் முந்திரிக்கனிச்சாற்றின் ஃபெனி ஆகியவற்றை குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.அவை ஒரு தொகுப்பு நூலாக வெளிவரவிருக்கின்றது.

வெண்முரசிலும் பல வகையான தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மது வகைகளும், சிவமூலி, அகிபீனா, சோமக்கொடி போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பீமன் பாறைக்குழிவுளில் நொதிக்க வைத்து குரங்குகளுடன் அருந்தும் பழ மது, ஈச்சங்கள், பனங்கள், பிரபாச புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் மது, பீதர்நாட்டு எரி மது, யவன மது,  திரிகர்த்த நாட்டு கடும் மது, இன் தேறல்கள், தானியங்களை நொதிக்க செய்து எடுக்கும் சூரம், காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுக்கப்பட்ட சோமகம், ஊனை புளிக்க வைத்து எடுக்கப்பட்ட துர்வாசம்.  அகிபீனாவின் இலைகளை கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம், மதூக மலரை அழுகச் செய்து நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் மலர் மது,  பீமனுக்கு அளிக்கப்படும்  விஷம் கலந்த வடிநறவம் என்று பல வகைகள் வெண்முரசில் இருக்கின்றன.

பூரிசிரவஸின் நாட்டின் மத்யகீடம் என்னும் கடுமையான மலைமது இளம்சூடாக இருக்கையில்  சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை அதில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்க தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள்.  

கிழங்குகளிலிருந்தும் அரிசியிலிருந்தும் வாற்றி எடுக்கப்பட்ட எரியும் அனல் துளி போன்ற கடும் மது, வெல்லத்தை நீரில் ஊறவைத்து புளிக்கவிட்டு நொதித்த கலவையை மெல்லிய வெம்மை அளித்து ஆவியாக்கி அதை குளிரவைத்து எடுக்கும் மரபான மது, ஊன் புளிக்க வைத்த குமட்டும் கெடுமணம் கொண்டதும் பித்தெடுக்கவைப்பதுமான அரிதாக சிலரால் அருந்தப்பட்ட மது ஆகியவையும் வெண்முரசில் சொல்லப்படுகிறது. 

வெண்முரசின் வேள்விகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சோமக்கொடி, சோமச்சாறு, சோமரசம் ஆகியவை சடங்குகளில் பயன்படுத்தப்படும் entheogen  வகையில் வருகிறது.

இந்த சோமக்கொடி அல்லது செடி என்னவென்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிராகவே இருக்கிறது.

ராஜசூயம் போன்ற பெரு வேள்விகளில் மட்டுமல்லாது வேறு பல இடங்களிலும் சோமக்கொடியின் ரசம் வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

முதற்கனலில் பொற்கிண்ணத்தில் சியாமை கொண்டுவரும் சோமக்கொடி போட்டு காய்ச்சி எடுத்த புதுமணம் கொண்ட திராட்சை மதுவை சத்யவதி அருந்துகிறாள். அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருக்கும் சத்யவதிக்கு அவ்விருளின் துளி ஒன்றை அவளுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்து பரவும் ஒளிக்கு மேல் இருளைப் பரப்புவதே அதன் பணி என்பதுபோல சோமம் பரவுகிறது

//நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக் கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது// 

இந்த வரிகள் சத்யவதிக்குள் சோமபானம் செய்வதென்ன என்பதை சொல்லுகின்றது 

வேதங்களில் சோமரசம் எடுப்பதை குறித்து பல இடங்களில்   வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பது போலவே சொல்லப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் சோமரசம், சோமக்கொடிகளை கல்லில் இட்டு இடித்து சாறு எடுக்கப்பட்டிருக்கிறது  பார்லியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டோ அல்லது பால்/ தயிரில் கலந்தும்  தயாரிக்கப்பட்டிருக்கிறது

பன்னிரு படைக்களத்தில் இந்திரபிரஸ்த வேள்வியில் பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவிக்கிறார்.பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக் குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்து எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கின்றனர்.

 “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டதும் மரத்தாலான நூற்றெட்டு உரல்களில் இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கி, அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்குகின்றனர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதுகின்றனர் வைதிகர்கள்.

ரிச்சர்டின்  ’’தெய்வங்களின் தாவரங்கள்’’ நூலுக்கு அடுத்து வெண்முரசில் இவற்றை வாசிக்கையில் இரண்டும் இணைந்து தொல்காலத்தில் எப்படி சடங்குகளில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்னும் சித்திரம் உருவானது.

வெய்யோனில் கெளரவர்கள் ஜெயத்ரதனுடனும் நடத்தும் கள்ளாட்டில் துரியோதனன் “கள் அல்ல. இமய மது அது. திரிகர்த்தர்களின் நாட்டிலிருந்து வருகிறது. சோமக்கொடியின் நீரைப் பிழிந்து அதில் நறுமணம் சேர்த்து இந்த மதுவை செய்கிறார்கள். இதை அருந்துபவர்கள் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள தேவகன்னியருடன் ஆடி மீள்வர்’’ என்கிறான் 

இமைக்கணத்தில் அர்ஜுனனிடம் இறைவைன் ’’மூன்றுவேதம் அறிந்தோர், சோம மது உண்டோர், பழியகன்றோர் என்னை வேள்விகளால் வழுத்தி வானுலகை வேண்டுகின்றனர்’’ என்கிறார்

இமைக்கணத்திலேயே உதங்கரிடம் இளைய யாதவர் சோம மதுவின் இனிமையை குறிப்பிடுகிறார் 

வெண்முகில் நகரத்தில் திருதிராஷ்டிரர் திரௌபதி நகர் நுழைகையில் ’’நகரத்தையே சோமச்சாறால் நிரப்புங்கள்’’ என ஆணையிடுகிறார்.

பல வேள்விகளில் சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. 

சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள் என்கிறது பிரயாகை 

இப்படி சோமக்கொடி, அது முக்கிய சடங்குகளில் இடம்பெற்றிருப்பது, சோமக்கொடியிலிருந்து சாறு பிழிவது, சோம ரசம் அருந்துவது என பல இடங்களில் வெண்முரசு சோமக்கொடியை பேசுகிறது

அதர்வ வேதம் சோமச்செடியினை போன்ற இயல்புடைய பிற செடிகளையும் குறிப்பிடுகிறது அவற்றில் கசகசா செடி, பார்லி மற்றும் தர்ப்பை ஆகியவை உள்ளன. அதர்வ வேதம் கூனைப்புல் எனப்படும் Imperata cylindrica  என்னும் நாணல் வகையையும் போதை தருவதாக குறிப்பிடுகிறது. இந்த நாணலின் தோற்றம் வெண்முரசின் பிரபாச புல்லை ஒத்திருக்கிறது.

எளிதில் எரியும் தன்மை கொண்ட, காட்டெரிக்கு காரணமாக இருக்கும், வெண்னிற மலர்க்குவையை கொண்டிருக்கும் இந்த புல்லை வெண்முரசு படைப்புல் அத்தியாயத்தில்;

//அந்நாணல் தன்னுள் நெய் நிரப்பி வைத்திருப்பது. ஆகவே செந்தழலுடன் சீறி வெடித்து எரியத்தொடங்கியது. 

’’நாணல் புல்லின் நுரை போன்ற வெண்மலரின் மகரந்தத்தையும் தேனையும் பிழிந்தெடுத்துச் செய்த மது.”

’’சதுப்பில் மலரும் பெருங்குவளை மலரின் தேனும் பொடியும் சேர்த்த மது பலராலும் விரும்பப்பட்டது. ஒருவகை கொடியின் தண்டு மதுவில் நுரையை நிறைத்தது.//

இந்த விவரிப்புக்கள் பிரபாசபுல்லென்பது  கூனைப்புல்லாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது

அதே பகுதியில் //பிரஃபாச க்ஷேத்திரத்தின் கடலோர எல்லையில் செறிந்திருக்கும் பெருநாணலின் இளந்தளிரைப் பிழிந்து சாறெடுத்து அதை மதுவுடன் கலக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அது மதுவின் மயக்கை மேம்படுத்தியது. அதை அருந்தினால் எண்ணங்களும் கனவுகளும் மட்டுமன்றி கண்முன் தெரியும் காட்சிகளும்கூட நொறுங்கி ஆயிரம் பல்லாயிரம் சிதறல்களாக மாறிவிடும் என்று கூறினார்கள்//. என்று சொல்லப்பட்டிருக்கும்.

மெக்ஸிகோ பழங்குடியினர் இப்போதும் பெயோட்டி கள்ளிகளை உலரவைத்து சமயச் சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளியை உண்ணும் போது வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பதைப்போலவே  உலகம் கலைடாஸ்கோப்பின் வண்ணச்சிதறல்களாகி விடுவதாக சொல்லுகிறார்கள். மெக்ஸிகோவில் பெயோட்டிகள் நோய்களை குணப்படுத்தும் சடங்குகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.

வேதங்களும் புராணங்களும் , சோமக்கொடியை சுற்றி பெரும் மாயமும் தெய்வீக சக்தியும் இருந்ததாக சொல்கின்றன சோமக்கொடியே ஒரு  தெய்வமாகக் கருதப்பட்டது,   

சோமம் கடவுளாகவும் கருதப்பட்டு சோமன் என்னும் தெய்வமாகவும் வழிபடப்பட்டது. சோமன்   மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப்பாடல்கள்  பத்து  வெண்ணிறக் குதிரைகள் கொண்ட மூன்று சக்கரங்கள் கொண்ட தேரில் வரும் இவனைப் போற்றுகின்றன. “சோமலதை” எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்படுகிறான்.  

டயோனிசஸ்

இதுபோலவே கிரேக்க தொன்மங்களில் டயோனிசஸ் திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் நாடகக்கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார் . இவரே ரோமானிய தொன்மங்களில் பேக்கஸ் எனப்படுகிறார்.

‘’சோமா குடிப்பவருக்கான  இரவு  இன்பத்திற்கானது

 தூய  சோமத்துளிகள் தயிருடன் கலக்கப்படுகின்றன

பரிபூரண பலத்துடன் இருக்கும் இந்திரனே 

நீ சோம பானத்தை அருந்தவே உருவானவன்

வலிமை மிக்க இந்திரனே, 

இசையை நேசிக்கிறவனே, இந்த வேகமான சோமபானம்

இந்த முனிவர்களுக்குள்  நுழைந்து 

அவர்களுக்கு  ஆனந்தத்தைக் கொண்டு வரட்டும்’’

இப்படி பல நூறு பாடல்களில் சோமத்தை குறித்து சொல்லும் ரிக் வேதம்  சோமத்தாவரங்களில் பல வகைகள் இருந்ததாகவும் சொல்லுகிறது

ரிக்வேதத்தின் 9வது மண்டலம் 114 பாடல்களில் சோம ரசத்தை தூய்மைப்படுத்துவதை விவரிக்கிறது.. ஒரு பெண் தன்னை ஆண்களின் முன்பாக கவர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள சோமச்செடிகளை மென்று தின்றாள் என்கிறது இதே வேதம்.

சோம ரசம் பிழிகையில அதனுடன் பொன்னும் அருமணிகளும் சங்குகளும் நன்முத்துக்களும் வைடூர்யமும் கலந்து இடிக்கப்பட்டதாவும் பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன.

சோமத்தாவரம் ஒரு கொடி, ஒரு நீர்த்தாவரம், அது தாமரை, அது அல்லி, அது ஒரு மலைப்பகுதிச்செடி,  அது ஒரு பாலை நிலத்தாவரம் என பலவகையான யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் உறுதியாக சோமக்கொடி அல்லது செடி என்பது இதுதான் என இப்போது வரை எதுவும் அடையாளம் படுத்தப்படவில்லை

அரளிக்குடும்பத்தை சேர்ந்த  மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் கொடித்தாவரமான Asclepias acida என்னும் தாவரம்தான் இது என்று  சிலர் கருதுகிறார்கள். சோமக்கொடியின் சாற்றுடன் கஞ்சா இலை, மாதுளங்கனி, நீலத்தாமரை கொடியின் தண்டு, பால் மற்றும்  சில நச்சுக்காளான்களும் சேர்ந்ததே சோமபானம் என்பது ஒரு தரப்பினரின் கருத்து

பலர் பெர்சியாவின் தாவரமான ephedra தான் சோமக்கொடி என யூகின்றனர். எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு. மலர்களை உருவாக்காமல் சூலகங்களை நேரடியாக உருவாக்கும் கீழ்நிலைத்தாவரங்களாகிய ஜிம்னோஸ்பெர்ம்ஸ் என்னும் வகையை சேர்ந்த எஃபிட்ரா தான் சோமச்செடி என கருதுகிறேன்

சோமலதை என்னும் பெயரையும் கொண்டிருக்கும் இது கொடியை போன்ற வளரியல்பு கொண்டது. சீனாவில்  ’மா ஹுவாங்’ (Ma huang) எனப்படும் இந்த செடி இந்தியா, ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதிலிருந்து உருவாக்கப்படும் பல பானங்கள் செயலூக்கத்தை அதிகரிக்கும் (performance enhancers) பானங்களாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியர்கள் இதை சோமபானம் என்றும் ஈரானியர்கள் இதை ஹோமபானமென்றும் அழைக்கின்றனர். 

சிறு தவறுக்கு கூட தலை கொய்யும் வழக்கமுடைய மங்கோலிய மகா பேரரசர் செங்கிஸ்கான்  வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகையில், படைப்பிரிவினர் யாராவது  சோர்ந்தோ அல்லது உறங்குவதையோ பார்த்தால் அங்கேயே தலை வெட்டப்படும் என்பதால் அவரது படை வீரர்கள் அனைவரும், எப்போதும் விழிப்புடன் உற்சாகமாய் இருக்க வைக்கும் இந்த  மா ஹுவாங் தேநீரை அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்,

சரத்துஸ்திரர்களின் புனித நூலான அவெஸ்தா (Avesta) சோமக்கொடியை சிறு கிளைகள் கொண்டது, நறுமணம் மிக்கது,  பசுமஞ்சள் நிறம் கொண்டது, மலைப்பாங்கான இடங்களில் நெருக்கமான புதராக வளரும், அழுத்தி பிழியப்படும் வகையில் மெனமையானது என்கிறது.

Ephedra

இந்த விவரிப்புகள் அனைத்தும்  ஈரானில் haoma என்றும் குறிப்பிடப்படும் சோமலதையான் எஃபிட்ராவின் இயல்பை ஒத்திருக்கிறது. பலர் இதுதான் சோமக்கொடி என்று கருதுகிறார்கள் 

Avesta

1999  ல் நெதர்லாந்தில்  நடைபெற்ற  Haoma-Soma கருத்தரங்கில், Jan E. M. Houben  என்னும் விஞ்ஞானி தனது ஆய்வுக்கட்டுரையில் ’’இனி பேசிக்கொண்டிருக்க தேவையே இல்லை,சோமக்கொடி என்பது எஃபிட்ராதான்’’ என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர், அவரது பெற்றோர்கள் ஹோமா கொடியை பாலில் கலக்கி அருந்திய பின்னர் பிறந்தார் என்கிறது அச்சமய வரலாறு.

James Darmesteter, 1875 ல் எழுதிய ’அவெஸ்தாவின் தொன்மங்கள்’ என்னும் ஆய்வேட்டில் எஃபிட்ராவின் குச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ரிக் வேதம்.சோமச்செடி நீர்நிலைகளுக்கருகில் வளரும், அவற்றிலிருந்து பால் வடியும் என்கிறது. இது எஃபிட்ராவுக்கு பொருந்தாது. எஃபிட்ரா வறண்ட மலைப் பகுதிகளில் வளர்வது, பால் இல்லாதது.

Ephedra

மேலும் சில பண்டைய நூல்கள் சோமச்செடி என்பது  அரளிச்செடியின் குடும்பத்தை சேர்ந்த Cynanchum acidum என்கிறது. இதுவும் எஃபிட்ராவை போலவே இலைகளின்றி குச்சி குச்சியான தண்டுகளுடன் இருக்கும் புதர்ச்செடிதான்.

சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த கோஷ்டம் என்ப்படும் Saussurea lappa என்னும் தாவரத்தையும் சோமக்கொடியென்று சிலர் கருதுகிறார்கள்.

சரக மற்றும் சுஸ்ருத சம்ஹிதைகள் சோமச்செடியில் நாளொன்றுக்கு என 15 இலைகள் முழு நிலவு வரை வளர்ந்து பின்னர் கருநிலவு நாள் வரை ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் என்று குறிப்பிடுகின்றன..சுஷ்ருதர் சோமச்செடிகள் என 24 வகைகளையும் அவற்றை போலவே மனம் மயக்கும் இயல்பு கொண்ட வேறு 18 தாவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார் 

Psilocybe cubensis

இன்னும் சில நூல்கள் Amanita muscaria, Psilocybe cubensis, Stropharia cubensis போன்ற நச்சுக்காளான்களை சோமச்செடி என்று குறிப்பிடுகின்றன ஆனால் நிச்சயம்  அது காளானாக இருக்க முடியாது. ஏனெனில்   பல நூல்களில் சோமக்கொடி வேள்விகளில் கழுத்தில் மாலையாக அணிவது சொல்லப்பட்டிருக்கிறது.

Stropharia cubensis 

1921ல்  கஞ்சா செடி தான் சோமச்செடி என் பிரஜாலால் முகர்ஜி (Braja Lal Mukherjee)  Royal Asiatic Society யின் சஞ்சிகையில் “The Soma Plant” என்னும் கட்டுரையில் எழுதினார்.

தனது  கட்டுரைக்கு ஆதரமாக முகர்ஜிவேதக் கிரியைகள், சுக்ல யஜுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் சதபதபிராமணம் என்னும் நூலில் சோமச்செடி  “Usana,”  என குறிப்பிடப் பட்டிருப்பதை காட்டியிருந்தார். கஞ்சா செடியின்  சமஸ்கிருத பெயரான “Sana.” என்பதை ஒப்பிட்டு இது கஞ்சாதான் என வாதிட்டு எழுதியிருந்தார்

கஞ்சாவின் பிறமொழிப்பெயர்களான் திபெத்திய ’’சோமரஸ்தா’’ மற்றும் திபெத்–பர்மா மொழிகளில் ஒன்றான சீனப்பழங்குடியினரின் தாங்குடு மொழியின் ’’ஸ்கோமா’’ (dschoma) ஆகியவற்றையும் தனது வாதத்திற்கு துணையாக்கிக் கொண்டார். சதபதபிராமணம், சோமச்செடி கிடைக்காதபோது உபயோகிக்கலாமென்னும் மாற்றுச்செடிகளையும் பட்டியலிடுகிறது 

ரஷ்யாவின் கரா–கம் பாலைவனத்தில் நடைபெற்ற அகழாய்வில் கஞ்சா எஃபிட்ரா மற்றும் கசகசா செடிகளின் இடித்த எச்சங்கள் கிடைத்ததை கொண்டு இம்மூன்றும் சேர்ந்த கலவையே சோமபானமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது 

19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த   ஐரோப்பிய தாவர வியலாளர்கள், வேதவிற்பன்னர்கள் மற்றும் இறையியலாளர்கள்  சோமச்செடியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள் அவர்களில்  Hillebrandt, (1891) மற்றும் Monnier- Williams (1899)ஆகிய இருவரும் மிக குறிப்பிட்டுச் சொல்லும்படியான தேடலில் ஈடுபட்டவர்கள்

20 ம் நூற்றாண்டில்  சோமச்செடியை தீவிரமாக தேடிய வாஸன் (R. Gordon Wasson-1968) ல் இது ஒரு காளான்தான் என  உறுதியாக அறிவித்த போது அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன

இவர்  Amanita muscaria என்னும் காளான்தான் சோமச்செடி என்று பலவருடப் பயணம் மற்றும் ஆய்வுகளுக்கு பின்ன 1968 ல் வெளியான தனது     Soma: the Divine Mushroom of Immortality. என்னும் நூலில் விவரித்திருந்தார்

இந்நூலில் ‘’ இக்காளான்களை பிழிந்து சாறெடுத்து நீரில், பாலில், தயிரில் அல்லது தேனில் கரைத்து சோம பானமாக அருந்தலாம் என்றும், அக்காளான்களை உண்டவர்களின் சிறுநீரிலும் அதன் வேதிப்பொருட்கள் இருக்குமென்பதால் அதையும் சோமபானமென்று கருதலாமென்றும் வாஸன் குறிப்பிடுகிறார்

 வாஸன் இந்திய குகை ஓவியங்களின் காளான் சித்திரங்கள், வேதங்கள், மற்றும் பல தொல் நூல்களிலிருந்து ஆதாரங்களை அளித்திருந்ததால் இந்நூல் பிரபலமாக பேசப்பட்டது.

சோமத்தாவரம் குறித்த விவரங்கள் தெளிவாக எந்த பண்டைய நூலிலும் அளிக்காப்படாததற்கு இவை அதிக போதை உண்டாக்கும் தன்மை கொண்ட,  மதம் சார்ந்த முக்கியச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது காரணமாயிருக்கலாம்.

இன்னும் சோமபானம் எடுக்கப்பட்ட தாவரம் எதுவென்று தெரியாவிட்டாலும்  ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உரிய மனம் மயக்கும் போதை தாவரங்கள் இருப்பதால், அந்தந்த நிலப்பகுதியில் இருந்த தாவரங்கள் அப்பகுதி மக்களால்  சோமச்செடி என்னும் பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. . 

இன்று வரையிலும் சோமச்செடியை குறித்த தேடல்களும், கருத்துக்களும், சர்ச்சைகளும் நீடிக்கின்றன. புதிய போதை தாவரங்களும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கின்றன.சமீபத்தில்  சிரியாவின் தாவரமான Peganum harmala சோமச்செடியின் இயல்புகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் இதுவே பண்டைய சோமச்செடி என்று பேசப்படுகிறது

கோவிட் தொற்றுக்கு முன்பு 2018ல் என் அமெரிக்க தோழி ஜாய்  பெரூ வில் நடக்கும் 6 நாட்களுக்கான ஆயவாஸ்கா (Ayahuasca) அனுபவத்தில் கலந்துகொண்டாள்  கட்டணம் 2000 டாலர்கள்  

தெய்வங்களின் தாவரங்கள் எழுதிய ரிச்சர்ட் தான் முதன்முதலில் ஆயவாஸ்கா என்கிற அமேஸான் பழங்குடியினத்தவர்களின் மதச்சடங்குகளிலும், குணப்படுத்தும் சடங்குகளிலும் அருந்தப்படும் சாற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு உலகிற்கு அதை தெரியப்படுதியவர். அவருடன் இச்சடங்கு பானம் குறித்து வசியத்துயில் மருத்துவத்தையும் ஆன்மீக மரபுகளையும் இணைத்து சிகிச்சையளிக்கும் துறையின் முன்னோடிகளில் ஒருவரான கிளாடியோ பெஞ்சமினும் (Claudio Benjamín) இணைந்திருந்தார்.கிளாடியோ கடந்த 2019ல் மறைந்தார்.

எனக்கும் இந்த சிகிச்சை அல்லது அனுபவத்தில் ஆர்வம் இருந்தது என்றாலும் கட்டணம் மிக அதிகம்  என்பதால் அப்போது செல்லவில்லை. 

உலகெங்கிலும் இருந்து பல நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பழங்குடியினத்தவர்கள் வந்து சில பிரார்த்தனை பாடல்கள் பாடி வழிபாடுகளில் இவர்களையும் ஈடுபட சொல்லி, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மிகக் கசப்பான மூன்று தாவரங்களின் சாற்றை கலந்து அருந்த கொடுத்திருக்கிறார்கள்

அரை மணி நேரத்தில் பலரும் வாந்தி எடுத்து அலறி கூச்சலிட்டு விழுந்து புரண்டு இருக்கிறார்கள். தானும் வாந்தி எடுத்ததாக சொன்ன ஜாய்’ யினால் அதன் பிறகு நடந்தவைகளை ஓரளவுக்கு விளக்க முயன்றாள்.

joi

அலறிக்கொண்டு கீழே பாயில் புரண்டு கொண்டிருந்த  அவளை, அவளிடமிருந்து பிரிந்து மேலே சென்ற   அவளே பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் வெகு விரைவாக தான் எங்கெங்கோ பயணித்ததையும், மறைந்த தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததையும் சொல்லும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதைக்கேட்ட பின்பு போதைத்தாவரங்கள் குறித்த நூலை எழுதும் முன்பு இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று    தோன்றியது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இச்சடங்குகளில்  உபயோகப்படும் இந்த தாவரங்களில் ஒன்றோ அலல்து அனைத்துமோ கூட  சோமக்கொடியாக  இருக்கலாம்.  

பிக்மி பழங்குடியினர் Tabernanthe iboga, என்னும் மரத்தின் வேர்ப்பட்டைகளை மனம்பிறழவைக்கும் அனுபவத்தின் பொருட்டு சடங்குகளின் போது பயனபடுத்துகிறார்கள்.

வெண்முரசில் ’’மதுவுக்கு நம்மை அளிக்காவிட்டால் மதுவின் தெய்வம் இறங்கிவருவதில்லை” என்று துரியோதனன் கர்ணனிடம் சொல்லுவான்.

ஹரிதர் விருஷாலியிடம் ’’தன்னை தலைகீழாக்க மானுடன் கொள்ளும் உள்விழைவை தொட்டு முளைக்க வைக்கிறதா மது? தலைகீழாக நின்று இவ்வுலகையே அவ்வண்ணம் திருப்பிக்கொள்கிறார்களா?” என்று கேட்கிறார்.

கல்பொருசிறுநுரை மது வேட்கையை ’’உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு’’ என்கிறது.  

கிராதம் “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்கிறது. 

வெண்முரசு காட்டும் இதுபோன்ற மது குறித்தான செய்திகளையும், மது எழுப்பும் மெய்யிலி  உலகங்களையும், சோமம் உள்ளிட்ட தாவர மதுவகைகளையும், அவை பயன்படுத்தப்படும் தொல் சடங்குகளையும்  இணைத்து ஒன்றாக அறிந்து கொள்கையில்  கிடைக்கும் சித்திரம் மிக புதியது, மிக சுவாரஸ்யமானது..

பாஷைப்பாம்பு

PC Tharun

இப்போது தேர்வு கால விடுமுறை எனவே வீட்டிலிருந்தேன் விஷ்ணுபுரம் விழாவில் இருந்து நேற்றுத்தான் திரும்பினேன்.  மதிய உணவுக்கு பின்னர் அலைபேசியில் விழா புகைப்படங்களை  பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென பின் தெருவிலிருந்து தீதி, தீதி’’ என்று அழைக்கும் குரல் கேட்டது

அப்படி யாரும் என்னை இங்கு அழைத்தது இல்லை.

வேகமாக வீட்டை சுற்றிக் கொண்டு சென்று பார்த்தேன் பின் தெருவின்  பேக்கரி செல்வத்தின் வீட்டில்  சில பிஹாரி இளைஞர்கள் வசிக்கிறார்கள் தேர்ந்த சமையல் வல்லுநர்கள். சில நாட்களில் வீட்டு வாசலில் அவர்கள் சமைக்கும் வாசனை தாளமுடியாத பசியுணர்வு அளிக்கும்.சுத்தமாக தமிழ் தெரியாது அவர்களுக்கு.

அவர்களில் ஒருவன் அங்கே மதிலுக்கு பின்னர் எனக்கென  காத்திருந்தான். என்னவென்று விசாரிக்க ’க்யா’?  என்றேன் எனக்கு மிக கொஞ்சமாக சல்மான், அமீர் மற்றும் ஷாருக் கான்கள் கற்றுக்கொடுத்த இந்திதான் தெரியும்.

அவன் அடர்ந்து வளர்ந்து மதிலை தழுவிப் படர்ந்திருந்த அலமண்டா புதர்செடியை  காட்டிக்காட்டி பரபரப்பாக ஏதோ சொன்னான். 

அலமண்டாவும் ராமபாணமும்

நான் புரிந்துகொண்டேன் கொம்பேறி மீண்டும் தலையை காட்டி இருக்கிறது. இவர்கள் முதன்முறையாக பார்க்கிறார்கள், அதுதான் பயந்து அழைத்திருக்கிறார்கள்.

 அந்த புதர் செடியில்  அடிக்கடி ஒரு கொம்பேறி நாகன் வந்து ஓய்வெடுத்துவிட்டு அதுபாட்டுக்கு சென்றுவிடும். தருண் அதை பாஸ்கிங் -Baskingஎன்று விளக்கி இருக்கிறான். சற்று நேரம் கொடியில் உடலைச்சுற்றி  தலையை மட்டும்  வெயிலில் காட்டியபடி கம்பீரமாக வெயில் காய்ந்துவிட்டு பின்னர் சரசரவென்று  செடிகளுக்குள் கரைந்து காணாமல் போய்விடும்.

அலமண்டாவில் எப்போதும் இருக்கும் கொம்பேறி மூக்கன் :புகைப்படம் தருண்

 

முன்பெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன் , பின்னர் அது விஷமும், ஆபத்துமற்றது என்று தருண்  கற்பித்த பின்னால் அதுபாட்டுக்கு அதுவும் நான் பாட்டுக்கு  நானும் சேர்ந்தே பின்வாசலில் இருப்போம். சில சமயம் முன்வாசல் மோட்டார் சுவிட்ச் பெட்டிக்குள்ளே வயர்களோடு வயராக சுருண்டு கிடக்கும் நான் சுவிட்ச் போட போனால் ஒரு சம்பிரதாயத்துக்கு பயந்ததுபோல் கொஞ்சமாக உள்ளே சுருண்டு கொள்ளும், அவ்வளவுக்கு மரியாதை இருந்தால் போதுமென்று நானும் கண்டுகொள்ளாமல் இருப்பேன்.

 அந்த பையன்களிடம் ‘’அது ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம்’’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல தெரியவில்லை, ‘’ஸ்நேக் நோ ப்ராப்ளம் வெரி ஸ்மால்’’ என்று கைவிரலை பென்சில் போல காட்டி  சிரித்தேன். அவன் பலமாக தலையாட்டி கைகளை படம் எடுப்பது போல் ஒன்றின்  மீது ஒன்று குவித்து வைத்து காட்டினான்

 பிக் ஒன் ? என்றேன் அதற்கும் அதே கை பொதியும் சைகை. இப்போது எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டிருந்தது. இவன் காட்டும் அளவில் பத்தி கொண்ட பாம்பென்றால் கொம்பேறி அல்லவே. மீண்டும் செடிக்குள் நுழைந்து தேடினேன் .  கொம்பேறியை காணவில்லை ஆனால் சர சரவென்று சத்தம்  மட்டும் கேட்டது. 

அலமண்டா  தண்டுகளின் அதே வண்ணத்தில் அதே அளவில் தான் அதுவும் இருக்கும், எனவே நன்றாக தேடினேன் காணவேயில்லை.

ஒருவேளை  அடுத்திருந்த  ராமபாணம்  மல்லிகை பந்தலில் இருக்குமோ என்று அங்கே சென்று தேடினேன்

அந்த  இளைஞன் பரபரப்பாக என்னிடம் வானத்தை காட்டி அதிலிருந்து அலமண்டாவிற்கு வந்தது போல சைகை செய்து காட்டினான்.

PC Tharun

இப்போது கொஞ்சம் கவலையாகியது.ஏதோ பறவை வானில் இருந்து கொண்டு வந்து பாம்பை போட்டிருக்கிறது போல, அப்படியானால் அது விஷப் பாம்பாகத்தான் இருக்கும்.

PC Tharun

அருகிலே சமையலறை ஜன்னல் வேறு திறந்திருந்தது.மதியம் உண்ட களைப்பில் கண்ணசந்திருந்த  சில பெண்மணிகள்  எழுந்து வந்து கூடி நிற்க துவங்கினர்

 சிலர் நான் எதிர்பார்த்தது போலவே’ இப்படி புதராட்டம் செடிக இருந்தா பாம்பு வராம ‘ என்று துவங்கினர்கள். அய்யோ தருண் இருந்தால் அனைவருக்கும் ஒரு வகுப்பெடுத்திருப்பானே, அவனும் இல்லையே என்று கவலைப்பட்டேன்.

அதுமட்டும் அகப்படவில்லை கண்ணுக்கும் தட்டுப்படவில்லை

நான் பாம்பு படமெடுக்கும்சைகை செய்து எத்தனை பெரிது என்று எப்படியோ அவனுக்கு புரிய வைக்க முயன்றேன். அவன் அதே கைகளை பொதிந்து காட்டும் சைகை செய்தான். தலை வலித்தது.

ஒருவேளை மோட்டார் ரூமில் இருக்குமோ என்று தேடினேன், அங்கும் இல்லை அலமண்டாவின் ஒவ்வொரு தண்டாக பிரித்துப்பிரித்து தேடினேன்’ ‘’மகனைப்போலவே அம்மாவும் பாரு  பயமில்லாம பாம்பை தேடுது’’என்று ஒரு விமர்சன குரல் வந்தது.ஏறக்குறைய ஒரு மணி நேரம் தேடல் தொடர்ந்தது. திடீரென அந்த இளைஞன் ’’சுண்டூ’’ என உற்சாகமாக கத்தியபடி ராமபாண  புதருக்குள் கைகளை விட்டு ஒரு சிறு பழுப்பு நிற புறாவை எடுத்தான்.

 சுண்டூ அவன் வளர்ப்பு பறவையாம்  தீபாவளிக்கு ஊருக்கு போய் திரும்பியவன் அதையும் கூட கொண்டு வந்திருக்கிறேன். இன்று சுண்டு அவனை ஏமாற்றிவிட்டு பறந்து இங்கு வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறது

சுண்டூவை செல்லமாக அதட்டி கோதுமை மாவு மூட்டைகளுக்குள் இறக்கி விட்டுவிட்டு என்ன பார்த்து கைகளை  கூப்பி மொச்சைகொட்டை பற்களை காட்டி பெரிதாக சிரித்து’’ நமஸ்தே தீதி’’ என்றான்.

PC Tharun

அத்தனை நேரம் எங்களுக்கிடையில் ஒளிந்து விளையாடிய  பாஷைப்பாம்பு அப்போதுதான் காணாமல் போனது.

கிறுஸ்துமஸ் மரங்களின் கதை

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், மரக்கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.

மர வழிபாடு ஐரோப்பிய பாகன் பழங்குடிகளின் மரபாக இருந்தது. (pagan European). 723ல் ஜெர்மானிய இறையியலாளர் புனித போனிபேஸ் கிறிஸ்தவத்தை பரப்பும் இறைப்பணியில் இருந்தபோது  பாகன் பழங்குடியினர்  அவர்களின் கடவுளாக கருதப்பட்ட ஓக் மரமொன்றை வழிபடுவதை கண்டார். கிறுஸ்துவை அல்லாது மரத்தை வழிபடும் அவர்கள் மீது கோபம் கொண்ட அவர் அந்த ஓக் மரத்தை கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வீழ்ந்த ஓக் மரத்தின் அடியில் இருந்து ஒரு பசுமை மாறா மரம் அப்போதே முளைத்து எழுந்ததை கண்ட துறவி அம்மரத்தை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அடையாளமாக கொண்டு வழிபட துவங்கினார்.  பகன் பழங்குடியினரும் கிறுஸ்துவத்தை தழுவினர்.

அதன் பிறகே கிறுஸ்துவ வழிபாடுகளில் பசுமை மாறா மரங்கள் பங்குபெற்று படிப்படியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் அவை இடம்பெற்றன என நம்பப்படுகிறது.   கிறிஸ்துமஸ் மரத்தை குறித்து பெரும்பாலான ஜெர்மானிய மக்களால் சொல்லப்படும் இக்கதையின் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்குரியது என்றாலும் இன்று வரை பசுமை மாறா மரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக இருக்கின்றன.

இவ்வாறு பசுமை மாறா மரக்கிளைகளை, இலை மற்றும் மலர்களால் ஆன வளையங்களை, மாலைகளை,அழியா வாழ்வின் குறியீடாக பயன்படுத்துவது பண்டைய எகிப்தியர்கள் மற்றும், சீனர்களின் வழக்கமாக இருந்தது.

ஸ்கேண்டினேவியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வீட்டை பசுமைமாறா புதிய மரக்கிளைகளால் அலங்கரிப்பதும் மரம் போன்ற அமைப்பை வீட்டு முன்பு அமைத்து அதில் பறவைகள் தங்க கூடுகளைஅமைப்பதும் தீய சக்திகளை விரட்டி, நீளாயுள் தரும் எனும் நம்பிக்கை இருந்தது, 

ஜெர்மனியில் வீட்டு முன்பாகவும் வீட்டினுள்ளும் யூல் மரக்கிளைகளை குளிர்கால விடுமுறையில்  நட்டு வைப்பது வழக்கம். நூற்றாண்டுகளாக கிருஸ்துமஸ் காலங்களில் வீட்டு முகப்பில் மிஸ்ஸெல்டோ-Mistletoe என்னும் ஒரு வகை மர ஒட்டுண்ணி செடியை வைப்பதும் அங்கு வழக்கமாக இருக்கிறது.   காலம் காலமாக காதலுணர்வின் அடையாளமாக இச்செடி கருதப்படுவதால் அச்செடியை கடந்து வீட்டினுள் நுழையும் யாராக இருந்தாலும் உடனே முத்தமிடப்படவேண்டும் என்பது ஒரு  மரபாக இருக்கிறது

பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் பசு மரக்கிளைகள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

1500 களில் கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர், ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில்  ஊசி இலைக்காடுகளின் வழியே காலைநடையில் ஈடுபட்டிருக்கையில், அப்பசுமை மாறா கூம்பு வடிவ மரங்களில் சூரிய ஒளி பட்டு அவை பொன்மஞ்சளில் ஒளிர்வதை கண்டார்.

அவ்வழகில் மனம் மயங்கிய அவர் ஒரு ஃபிர் மரத்தை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார். இதுவே அதிகார பூர்வமாக  கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் விழாக்களில் இடம்பெற்ற தருணம்  என வரலாய்வாளர்கள் கருதுகிறார்கள்

நவீன கிறிஸ்துமஸ் மரம் மேற்கு ஜெர்மனியில் உருவானது. இதன் துவக்க கால நோக்கம்  ஆதாமுக்கும் ஏவாளுக்கும்  விலக்கப்பட்ட கனியை அளித்த  சொர்க்க மரம் போன்ற ஒன்றை கிறிஸ்துமஸ் சமயங்களில் அமைப்பதுதான். பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24 நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது அக்காலங்களில் அத்தி மரக்கிளைகளில் ஆப்பிள்களை கட்டி தொங்கவிட்டு ஏதென் தோட்டம் போல வீட்டை அலங்கரிப்பது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் முக்கிய அங்கமாக இருந்தது

அம்மரத்தில் கிறிஸ்துவின் கடைசி  இரவு உணவை குறிக்க வேஃபர் பிஸ்கட்டுகள் கட்டி தொங்கவிடப்பட்டன. தொடர்ந்த காலங்களில் வேஃபர்களுக்கு பதிலாக பல வடிவ பிஸ்கட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் மரக்கட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய பிரமிடும்  பிறகு இணைந்துகொண்டது அதில் தேவனின் புகைப்படங்களும், நட்சத்திர வடிவமும், உலகின் ஒளியான கிறிஸ்துவின் அடையாளமாக கருதப்பட்ட மெழுகுவர்த்திகளும்  வைக்கப்பட்டன 

16.’ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் மரங்களும் பிரமிடும் இணைந்து அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களாகின. 1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரிஸ் நகருக்கு கொண்டுவந்து விழா கொண்டாடியது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முக்கிய நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. 

1790களில் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் மனைவியும் ஜெர்மானிய பெண்ணுமான சார்லட் விடுமுறை காலங்களில் தோட்டத்து மரங்களை  அலங்கரிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.  

இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் ஜெர்மனி பயணங்கள் அவருக்கு ஜெர்மன் நாட்டு இளவரசர் ஆல்பர்ட்டுடன் காதலை வளர்த்தது. இவர்களின் திருமணத்துக்க் பிறகு,  1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின்அதிகாரபூர்வமான இங்கிலாந்து பிரவேசம்.

அதன் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் டிசம்பர் 24 அன்று  விக்டோரியன் கிறிஸ்துமஸ் மரம் என்றழைக்கப்பட்ட அவற்றில் கேக்குகளும், பல வண்ண ரிப்பன்களும், வண்னக்காகிதங்களும் வழக்கமான சிறு பரிசுகளுடன் இணைத்து தொங்கவிடப்பட்டன. பரிசுப்பொருட்கள் கிருஸ்துமஸ் தினத்தன்று திறந்து பார்க்கப்பட்டன.  

கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் இயற்கையாகவே சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பதும், தந்தை, மகன், தூய ஆவியை குறிக்கும்  முக்கோண வடிவம் அதில் காணப்படுவதும் மிக அதிர்ஷ்டமென்று கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் சுமார் நான்கடி உயரத்திலும், அமெரிக்காவில் 10 அடிக்கும் மதிகமாக வீட்டுக் கூரை வரை உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரங்களும் பயன்பாட்டில் உள்ளன.

17ம் நூற்றாண்டில் வடக்கு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த ஜெர்மானியர்கள்  அங்கும் இவ்வழக்கத்தை அறிமுகம் செய்தார்கள்.  எனினும் துவக்கத்தில் இம்மரம் அமெரிக்கர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை

இவ்வழக்கம் 18  நூற்றாண்டு வரை  லூதரன் கிருஸ்துவர்களால் உலகெங்கும் பரவலாக்கப்பட்டது. 1820க்கு பிறகுதான் கிருஸ்மஸ் கொண்டாடங்கள்  அமெரிக்காவில் புத்துயிர் பெற்று, கிறுஸ்துமஸ் மரங்களும்புழக்கத்துக்கு வந்தன.

1830ல்தான் முதன்முறையாக நாட்டின் கிறிஸ்துமஸ் மரமொன்று  காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு கிறிஸ்துமஸ் மரங்களின் பிரபலத்துக்கு அப்போது செல்வாக்குடன் இருந்த  சஞ்சிகையான  Godey’s Lady’s Book,  ஒரு முக்கிய காரணமாயிருந்தது. 

 19ம் நூற்றாண்டில் ஜெர்மானிய கலாச்சாரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஆழ வேரூன்றியது பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.

முதல் கிருஸ்துமஸ் மர விற்பனை அங்காடி அமெரிக்காவில் 1851ல் மார்க் சார் (Mark Carr ) என்பவரால் நியூ யார்க்கில் துவக்கப்பட்டது. 1887-1933 களில் அமெரிக்க துறைமுகங்களில் நங்கூரம் இடப்பட்ட கப்பல்களிலும் கிருஸ்துமஸ் மரங்கள் விற்பனையாகின.

1870களில் ஊது கண்ணாடி அலங்கார பொருட்கள் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அறிமுகமாயின.  அப்போது  பல வண்ணங்களில் சிறு  மின்விளக்குகளும் கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டன.

கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடுவதெற்கென்றே பலவகையான உலோகங்கள்,  பருத்தி, காகிதங்கள் மற்றும் கண்ணாடிகளால்  அலங்காரப் பொருட்கள் செய்யும் பணிமனைகள்  ஜெர்மனியிலும் பொஹிமியாவிலும் ஏராளமாக நடத்தப்பட்டன அமெரிக்காவின் பிரபல பொதுவணிக நிறுவனமான F.W. Woolworth 1890களில் மட்டுமே 25 மில்லியன்  மதிப்பிலான அலங்கார பொருட்களை சந்தைப்படுத்தின.

19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில்  சீனாவிலும் ஜப்பானிலும் மேற்கத்திய மிஷனரிகளால் அறிமுகமான கிருஸ்துமஸ் மரங்களில் சிக்கலான  காகித  வடிவங்கள் தொங்கவிடப்பட்டன

கிறிஸ்துமஸ் மரம் எனப்படும் பசுமை மாறா மரம் பொதுவாக பைன் ஸ்ப்ரூஸ் அல்லது ஃபிர் மரங்களாக இருக்கும்.  இம்மரங்கள் புதிதாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு வெட்டபடும் அல்லது  வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும். பலர் செயற்கை மரங்களையும் பயன்படுத்துகின்றனர். பலவிதமான பொருட்களை மறு சுழற்சி செய்தும் இம்மரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன

இந்த வாரம் 2022 கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தை சரண் ஆஃபன்பெர்கின் முதியவர்களுடன் கொண்டாடினான். அந்நகரில் வீழ்ந்த மரங்களின் பட்டைகளிலிருந்து கிறுஸ்துமஸ் மரங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சுமார் மூன்று கோடியே முப்பது லட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

அமெரிக்காவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மர வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது

செயற்கை நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் பயன்பாடு 1930களில் துவங்கியது 1950 மற்றும் 60களில் ஏராளமான செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பச்சை மரங்கள் கிடைக்காத நாடுகளில்,இவை வேகமாக புகழ்பெற்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பைன்களின் பல வகைகளான வெள்ளை பைன்  (Pinus strobus),  ஸ்காட்ச் பைன்  (P. sylvestris), மற்றும் விர்ஜினியா பைன் (P. virginiana) ஆகியவைகளும், பால்சம் ஃபிர்  (Abies balsamea), ஃப்ரேசர் ஃபிர்  (A. fraseri), பெரும் ஃபிர்  (A. grandis),வெள்ளி ஃபிர்(A. alba) மற்றும் வெள்ளை ஃபிர் (A. concolor);மரங்களும் பல ஸ்ப்ரூஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் மரங்களாக பயன்படுகின்றன

சைப்ரஸ், செடார் மரங்கள் கிருஸ்துமஸ்  வளையங்கள்  செய்ய அதிகம் பயன்படுகின்றன.

அமெரிக்காவில் அம்ட்டும் 1500க்கும் அதிகமான கிருஸ்துமஸ் மரப்பண்னைகள்3லட்சத்து 5 ஆயிரம் எகர் நிலபப்ரப்பில் உள்ளன அங்கு ஏறக்குறிஅய 350க்மில்லியன் மர்னக்கள் வளர்ககப்டுகின்றன 

செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கிறிஸ்மஸ் மரங்கள்,அவற்றை அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்படும்  பொருட்களுக்கான வணிகம் உலகின் மிகப்பெரிய வியாபாரத் தளமாகிவிட்டிருக்கிறது

அந்தரத்தாமரை, Pistia stratiotes

 நீர்வாழ்தாவரங்களில், மிதப்பவை,  முற்றிலுமாக நீரில் மூழ்கியிருப்பவை, நீரினாழத்தில் மண்ணில்  வேரூன்றிய, ஆனால் இலைகளும் மலர்களும் நீரின் மேல்மட்டத்தில் இருப்பவை, பாசிகள், என பலவகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் நாம் அதிகம் காண்பது ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை என்னும் water hyacinth (Pontederia crassipes). அதைக்காட்டிலும் இன்னும் சற்று சிறிய அளவில் பச்சைரோஜா மலர்களைப்போல மிதந்தபடி இருக்கும், அந்தரத்தாமரையை அதிகம் யாரும் கவனிப்பதில்லை.. இதுவும் ஆகாயத்தாமரையைபோலவே ஒரு ஆக்ரமிப்பு நீர்க்களைத் தாவரம்தான்

 நீர் முட்டைகோஸென்றும் அழைக்கப்படும் இவை உண்ணத்தக்கவையல்ல. சிறிய மிதக்கும் வேர்கள் கன்ணுக்குப்புலப்படாமல் நீரில் மூழ்கி இருப்பதால் இவற்றை அந்தரத்தில் மிதக்கும் தாமரையென அழைப்பதுண்டு. இவை முதன்முதலில்  ஃப்ளோரிடாவில் ஜான் மற்றும் வில்லியம் ஆகியோரால் 1765-1774 ல்  அடையாளம் காணப்பட்டது. பிரேசிலை தாயகமாகக்கொண்ட ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்தவையான இவை (Monocot) அண்டார்டிகாவைத் தவிர பிற அனைத்து கண்டங்களிலும்  பரவியுள்ளன.   நைல் நதியிலும் இவை அடர்ந்து காணப்படுகின்றன

ஆங்கிலப்பொதுப்பெயர்கள்; Water Cabbage, Water Lettuce, Nile Cabbage,  Shellflower,  floating Aroid.

 Lettuce  (Lactuca sativa)  எனப்படும் சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்த கீரைவகைச்செடியின் இலைகளைப்போல  இவற்றின் தோற்றமிருப்பதால் இவற்றின்  Water lettuce என்னும் பொதுப்பெயர் உலகெங்கிலும் பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. இவற்றில் மிகச்சிறிய (Dwarf water lettuce) வகையும் இருக்கின்றன. இவையே அலங்காரச்செடிகளாக  தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. குழித்தாமரை என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

ஒன்றிலிருந்து பலவாக அந்தரத்தாமரைகள்  மிக விரைவாக பெருகும் இயல்புடையது. இவை தனித்தும், பல தாவரங்கள் இணந்த கூட்டமாகவும் நீரில் மிதந்தபடி இருக்கும், சிறிய நீர்நிலைகளை முழுவதையும் ஆக்ரமிப்பதும் உண்டு

இணையறிவியல் பெயர்கள்; (Synonyms)

  • Pistia stratiotes var. cuneata 
  • Pistia stratiotes var. linguiformis 
  • Pistia stratiotes var. obcordata (Schleid.)
  • Pistia stratiotes var. spathulata (Michx.)

 இதன் Pistia stratiotes, என்னும் அறிவியல் பெயரில் Pistia  என்பது நீர் அல்லது திரவம் எனவும் stratiotes என்பது நீர்வீரன் எனவும் கிரேக்க மொழியில் பொருள்படும். ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீரில் மிதக்கும்  வகையான தாவரமான, இளம் பச்சை ரோஜா மலரைப்போல சற்றேறக்குறைய ரோஜா மலரின் அளவில் அல்லது அதைக்காட்டிலும் சிறிது பெரியதாக, பட்டுப்போன்ற மிருதுவான இதழமைப்பில் இருக்கும் காம்புகளற்ற இலைகளால் ஆன இவை ஏரேசியே (Araceae) குடும்பத்தை சேர்ந்தவை.

 பொதுவாக 3-25 செமீ உயரம் வரை வளரும் ஒற்றைத்தாவரம், 5 லிருந்து 25 செமீ விட்டம் கொண்டிருக்கும். காம்புகளற்ற, அடிகுறுகி நுனி அகன்று விரிந்து, சதைப்பற்றுடனுமிருக்கும். இலைகள் சாம்பல்பச்சை நிறத்தில், தெளிவான இணைக்கோடுகளும் மென்ரோமங்களும் கொண்டிருக்கும் இந்த மென்ரோமங்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நீர்க்குமிழிகள் இவற்றின் மிதவைத்தன்மையை (Buoyancy) அதிகரிக்கும்.

 Offshoot/stolons எனப்படும் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இலைகளை இணைந்திருக்கும் அடித் தண்டுகளிலிருந்து புதிய தாவரங்கள் முளைத்து வளரும். இந்த அடித்தண்டுகள் மிக மெலியதாக உடையும் இயல்புடன் இருக்கும். இறகு போன்ற,  மென்மையான, 50 செமீ நீளமுள்ள கிளைத்த,  நீரில் அசைந்துகொண்டு மிதந்தபடி இருக்கும் வேர்த்தொகுப்பைக் கொண்டிருக்கும்.

இலைகளின் அடியிலிருந்து உண்டாகும், சிறிய சதைப்பற்றான காம்புகளிலிருந்து  ஏராளமான நுண்ணிய மலர்கள் இலையிதழ்களுக்குள், மெல்லிய மங்கலான இளம்பச்சை நிறத்திலிருக்கும் செதில்போன்ற உறையினால் சூழப்பட்டு  மறைந்திருக்கும். ஒற்றைப்பெண்மலர் அடியிலும் அதன்மேலே  வட்டஅடுக்கில் நிறைய ஆண்மலர்களும் காணப்படும். மிகச்சிறிய 6-10 மிமி அளவுள்ள விதைகள் அடர்நிற நுண்விதைகளுடன் உருவாகும்

மிதக்கும் நீர்வாழ் தாவரங்களில் மிக முக்கியமான ஆக்ரமிப்புக்களையாக கருதப்படும் இவை (Invasive aquatic weed) இயற்கையான வாழ்விடங்களில் பல்கிப்பெருகி நீர்மாசை உண்டு பண்ணுகின்றது.  கால்வாய்களை அடைத்து நீரோட்டத்தை துண்டிக்கவும் செய்கின்றன.


உலகளாவிய ஆக்கிரமிப்பு இனங்களின் தரவுத்தளம் (Global Invasive Species Database GISD) இவற்றையும் உலகின் தொல்லைதரும் ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைத்திருக்கின்றது. அமெரிக்காவிலும் இவை பரவுதலை கட்டுப்படுத்த வேண்டிய தாவரங்களின் பட்டியலில்தான் இருக்கிறன.

உயிரிக்கட்டுப்பாட்டு முறையில் சிலநாடுகள் இவற்றின் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து கொண்டுமிருக்கின்றன. தாய்லாந்தில் அந்தரத்தாமரைகளின் இலையை உண்ணும். Neohydronomous affinis, பூச்சிகளை தென்னமரிக்காவிலிருந்து தருவித்து, இவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் ஃபிஜி தீவுகளிலும் பரிந்துரைககப்பட்ட ரசாயனக் களைக்கொல்லிகளை உபயோக்கிறார்கள்.

அழுகிரந்தி குஷ்ட மடர்ந்த கரப்பான்

புழுவுறு மக்கூடு முதற்போகும் – அழகாகும்

மிந்திர நீலக்கருங்க ணேந்திழையே யெப்போழ்து

மத்திரத் தாமரையா லாய்.

என்னும் சித்த வைத்திய பதாற்தகுண விளக்கப்பாடலொன்று  இந்த  அந்தரத் தாமரை அழுகின ரணம், குஷ்டம், கரப்பான், மார்புக்குள் கூடு கட்டுகின்ற நுண் கிருமிகள் ஆகிவற்றை அழிக்கும் என்கின்றது. எனவே  இவற்றைக்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஆய்வுகளை செய்யலாமென்கிறன சித்தவைத்திய அமைப்புக்கள். இவற்றை உலர்த்தி சுட்ட சாம்பலை தொழுநோய்ப் புண்களுக்கும் மருந்தாக பயன்படுத்துகின்றனர்

இவை சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டிருப்பதால்  இவற்றை அதிகம் உண்ணும் கால்நடைகளுக்கு உடலுபாதைகள் உண்டாகும். சீனாவில் உலர்த்திய அந்தரத்தாமரைகளை கால்நடைத்தீவனங்களில் கலந்து (குறிப்பாக பன்றிகளுக்கு,) கொடுக்கப்படுகின்றது. சீன பாரம்பரிய மருத்துவத்தில் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இவை மருந்தாகவும் பயன்படுகின்றது. மீன் தொட்டிகளிலும் அலங்காரத்தொட்டிகளிலும் இவை அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.   அந்தரத்தாமரையின் சாற்றை துணிகளில் படிந்திருக்கும் கறைகளைப் போக்கவும் பயன்படுத்தலாம். உலர்ந்த இலைகளை பூச்சிகள் வராமலிருக்க அலமாரிகளில் போட்டுவைக்கலாம்.

.

ஸ்கோவில் அளவீடு

கோவிட் பெருந்தொற்றினால் உலகடங்குவதற்கு  முன்பாக 2019’ல் தெற்கு கரோலினாவின் ஃபோர்ட் மில் நகரில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த  பக்கர் பட் நிறுவனம் (Puckerbutt Pepper Company)  நடத்திய  அந்த சர்வதேச உண்ணும் போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளாக காத்துக் கொண்டிருந்தார்கள். காணொளி எடுப்பவர்களும் போட்டியை நடத்துபவர்களுமாக அந்த மேடை சந்தடியாக இருந்தது ஒரு சிறு மேடை.யிலிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 போட்டியாளர்களும். ஒவ்வொருவராக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

பல வருடங்களாக இப்போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் சித் பார்பரை பலருக்கு தெரிந்திருந்ததால், அவரை பலரும் உற்சாகப்படுத்தி கூச்சல் இடுகிறார்கள். போட்டியாளர்களும் இன்னும் பலரும் அடர் சிவப்பு மிளகாயின் சித்திரம்  இருக்கும் கருப்பு நிற சட்டை அணிந்திருக்கின்றனர்.

 போட்டியாளர்களின் முன்பு குளிர்ந்த பால் ஒரு கிண்ணமும், சிறு கூடையொன்றில் சமமான எடையில் உலகின் அதிக காரமான  மிளகாய்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆம் அது ஒரு சர்வதேசஅளவிலான  அதிக காரமான மிளகாய்கள் உண்ணும் போட்டிதான்.

மிளகாய்களின் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு, அடர்சிவப்பு என வேறு பட்டிருக்கின்றன. மொத்தம் 12 தகுதி சுற்றுக்களில் சுற்றுக்கு ஒன்றாக  குறைந்த பட்ச கார அளவிலிருந்து, மெல்ல மெல்ல அதிக கார அளவிற்கு மிளகாய்கள் போட்டியாளர்களுக்கு உண்ணத் தரப்படுகின்றன 

முதல் சுற்றில் Scotch Bonnet எனப்படும் 3,50000 SHU  கார அளவுள்ள மிளகாய்கள் . அடுத்ததாக 60000 SHU, அளவுள்ள ரீப்பர் நீரா  (Reaper Neeraa) தொடர்ந்து பூத் ஜலாக்கியா என்னும் 1000000 SHU கொண்ட  இந்திய பேய் மிளகாய், அடுத்து  மஞ்சள் நிறத்திலிருக்கும் 1,600000 SHU  கார அளவுள்ள மிளகாய் ( Yellow 7 pot), பின்னர் 2,000000 SHU, கொண்டிருக்கும் கொக்கோ லோகோ ஸ்பைசி மிளகாய் (Cocoa Loco Spicy Chile) ஆகியவைகள் கொடுக்கப்படுகின்றன.

 இரண்டாம் சுற்றில் ஒருவர் தன்னால் தொடர முடியாது என்று சொல்லி போட்டியில் இருந்து விலகுகிறார். போட்டியாளர்களுக்கு ஏராளமாக  வியர்க்கிறது, குமட்டுகிறது கண்ணில் நீர் வழிகிறது ஆனாலும் அத்தனை காரமான புதிய மிளகாய்களை கடித்து மென்று விழுங்கி கொண்டே இருக்கிறார்கள். சிலர் குளிர்ந்த பாலை அருந்தி போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறார்கள் 

 ஆறாம் சுற்றில் 1,6000000 SHU கார அளவுள்ள கரோலினா ரீப்பர் கொடுக்கப்படுகையில் மொத்தம் 7 போட்டியாளர்கள்தான் இருக்கிறார்கள், ஏழாம் சுற்றில்  சாக்கலேட் (Chocolate) மிளகாய்கள் 1,80000 SHU அளவில் கொடுக்கப்படுகிறது, எட்டில் 2,200000 SHU உள்ள நெஞ்செரிப்பான் (Heartburn) மிளகாய்கள் கொடுக்கப்பட்ட போது ஐந்தே போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.

ஒன்பதாம் சுற்றில் 2,300000 SHU உள்ள  ஒற்றை சக்கரம் (One ring) கொடுக்கப்பட்டபோது  மற்றொரு போட்டியாளரும் வெளியேறுகிறார். அலற வைக்கும் பீச் மிளகாய்கள்  (Peaches & Scream)  கார அளவு குறிப்பிடப்படாமல் பத்தாவது சுற்றில் கொடுக்கப்பட்ட போது இறுதி போட்டியாளர்களாக சித், பெல்லா மற்றும் ஜஸ்டின் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள்

 பின்னர் உலகின் மிக அதிக காரமான2,600000  SHU அளவுள்ள  பெரிய வகை மிளகாயான Giant Carolina Reaper கொடுக்கப்பட்டு 20, 10 5 என குறைந்து கொண்டே வரும்  விநாடிகளுக்குள் கொடுக்கப்பட்ட மிளகாய்கள் அனைத்தையும்   விழுங்குபவர்களே வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட சில விநாடிகளில் எதிர்பாராமல் முன்னணி போட்டியாளர் சித் தன்னால் முடியாது சைகை காண்பித்துவிட்டு குளிர்ந்த பாலை  அருந்தி விலகுகிறார். அழகிய ஒப்பனையில் இருந்த பெல்லாவும், ஜஸ்டினும் மட்டுமே மேடையில்

  கடைசி வரை அலட்டிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தமான சிற்றுண்டியைப் போல அத்தனை மிளகாயையும் உண்டு முடித்து வெற்றியாளராகிறார் ஜஸ்டின். அவருக்கு பரிசாக ஓராயிரம் டாலர்களுக்கு காசோலையும் உலக உருண்டையின் மீது  சிவப்பில் கரோலினா ரீப்பர் மிளகாயின் சிறு சிற்பம் இருக்கும் கோப்பையும்  கொடுக்கப்படுகிறது. 

பெல்லா இரண்டாவது வந்தாலும் பார்வையாளர்களில் ஒருவர் பெல்லாவை பாராட்டி ஓராயிரம் சன்மானம் கொடுத்ததுடன் அப்போட்டி முடிவுக்கு வருகிறது.1

 போட்டியின் போது அவசர உதவிக்கான மருத்துவ வாகனங்களும், மருந்துகளும், போட்டியிலிருந்து விலகுபவர்கள் வாயுமிழவென்றே பக்கட்டுகளும் தயாராக இருக்கின்றன. பல போட்டியாளர்களுக்கு உதடும் நாக்கும் புண்ணாகி ரத்தம் கசிகிறது. சிலர் வாயுமிழ்ந்தபடி இருக்கிறார்கள். 

இதுபோல விநோதமான காரம் கூடிய மிளகாய்களை உண்ணும் போட்டி உலகெங்கிலும் வருடா வருடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் டாலர் என்னும் சிறு தொகைக்காவா தங்களை இத்தனை வருத்திக்கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்?   பல நாடுகளில் பரிசாக சன்மானம்  கூட கொடுப்பதில்லை மாறாக கோப்பைகளும், பல மூட்டை மிளகாய்களும், நட்சத்திர விடுதி தங்கல்களும் கூட பரிசாக கொடுக்கப்படுகிறது. இப்போட்டியின் வசீகரத்துக்காகவும் பிரபல்யத்துக்கவுமே இவை தொடர்ந்து நடைபெறுகின்றன.புதிய மிளகாய் கலப்பினங்களை உருவாக்கும் நாடுகள் தங்கள் பெருமையை பறை சாற்றிக்கொள்ளவும் இப்போட்டிகளை முன்நின்று நடத்துகின்றன..

 நாக்கை எரிய செய்து  கண்ணில் நீர் வடிய செய்யும் மிளகாய்களையும் அதன் சுவையையும்   அறிந்திருந்த உலகம், கனெக்டிசுட்டில் 1865 ஜனவரி 22ல் பிறந்த வில்பர் ஸ்கோவிலுக்கு (Wilbur Scoville) பிறகுதான் மிளகாய்களின் காரத்தை அளவிட முடியுமென்பதையும் அறிந்து கொண்டது. 

 வில்பர் ஸ்கோவில் ஒரு பிரபல வேதியியலாளரும், பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், மருந்தாளுமையில் பேராசிரியருமாவர். அமெரிக்க மருந்தக அமைச்சகத்தின் இரண்டாம் துணைத் தலைவராகவும் இருந்த  இவரின் The Art of Compounding என்னும்  பிரபல நூலில்தான் முதன்முதலாக ’’மிளகாய் காரத்துக்கு  முறிமருந்து பால்தான் நீரல்ல’’  என குறிப்பிட்டிருந்தார். இவரது Extracts and Perfumes  என்னும் நூலும்  வேதியியலில்  மிக முக்கியமானது

திரு. ஸ்கோவில் டெட்ராய்டில் அமைந்திருந்த பிரபல பார்க் டேவிஸ் (Parke-Davis) மருந்தகத்தின் தலைவராக இருக்கையில் மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட’’ ஹீட்’’ (Heet) என்னும் பெயரிலான வலிநிவாரண பசையில் முக்கிய வேதிப்பொருளாக மிளகாயின் கேப்ஸெய்சின் (Capsaisin) இருந்தது. தேவையான கேப்ஸெய்சினை பிரித்தெடுக்க ஆய்வக கருவிகள் கண்டுபிடிக்க பட்டிருக்காததால் மிள்காய்களிலிருந்தே சாறெடுத்து தயாரித்தனர். ஆனால் இதில் காப்ஸெய்சினின் அளவை துல்லியமாக மருந்தில் கலப்பதில் நடைமுறை சிக்கல்கள்  இருந்த வந்தது.

அப்போது  ஸ்கோவிலால்  கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்கோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test)  எனப்படும் இந்த காரவெப்ப அளவீடு முறை.

 ஒரு காரமான பொருள் சர்க்கரை நீரில் எவ்வளவு நீர்த்துப்போக வேண்டும் என்பதை இந்த சோதனை அளவிட்டது.  இம்முறையில் ஸ்கோவில் மதிப்பீடுகள் கார சர்க்கரை- நீர்த்தல்களுக்கு மனித எதிர்வினைகளைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன

ஸ்கோவில் சுவைப்பவர்களின் நாக்கை எரிக்காத வரை கார சர்க்கரை கரைசல்களை படிப்படியாக நீர்த்துப்போகச் செய்வார், மிகச்சிறந்த கார வெப்பத்தை அறியும் நாவினைக்கொண்ட தன்னார்வலர்களுக்கு அவற்றை ருசிக்க கொடுத்து எந்த அளவிலான நீர்த்த கலவையில் ஐந்தில் மூன்று நபர்களால் காரத்தை கண்டறியவே முடியவில்லையோ அந்த அளவீட்டை குறித்துக்கொள்ளுவார். ஒரு மிளகாயின் கார வெப்பத்தை முழுமையாக நீக்குவதற்காக அக்கரைசல் எத்தனை முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பதன் அடிப்படையில் அந்த மிளகாய்க்கு ஸ்கோவில் ஒரு எண் மதிப்பீட்டை வழங்கினார். உதாரணமாக, ஜலபெனோ மிளகாய் 10,000 ஸ்கோவில் அளவீட்டை கொண்டுள்ளது, அதாவது இதன் வெப்பம் நடுநிலையாக்கப்படுவதற்கு முன்பு ஜலபெனோ கரைசல் 10,000 முறை நீர்க்கப்பட வேண்டும்.  

 இம்முறை பரவலாக பயன்பாட்டில் இருந்தது என்றாலும் ஒவ்வொரு மனிதனின் காரம் தாங்கும் திறனென்பது வேறுபடுமென்பதால் இதில் முடிவுகள் மிகத்துல்லியமாக இருக்கவில்லை.

.1980 களில் இருந்து தான்   உயர் செயல்திறன் திரவ நிறப்பிரிகை (எச்பிஎல்சி),   (High-Performance Liquid Chromatography -HPLC),  முறையில் கேப்ஸெய்சினை பிரித்து கார அளவீடுகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

 1912 முதல் இந்த கார அளவீட்டு முறை அதை கண்டறிந்தவரான வில்பர் ஸ்கோவிலின் பெயராலேயே  ’’Scoville Heat Units,  SHU’’ என குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க மருந்து சங்கம் 1922 இல் ஸ்கோவிலுக்கு எபெர்ட் பரிசையும், 1929 இல் ரெமிங்டன் ஹானர் பதக்கத்தையும் வழங்கியது..ஸ்கோவில் தனது 77 ஆவது வயதில் 1942ல்’ மரணமடைந்தார். கடந்த 2016 ஜனவரி 22ல் வில்பர் ஸ்கோவிலின் 151 ஆவது பிறந்த நாளை சில சிறப்பு விளையாட்டுக்களுடன் கூகுள் டூடுல் உண்டாக்கி அவரை சிறப்பித்திருந்தது.2

 சமகால பயன்பாடுகள் கார வெப்பத்துக்கு பொறுப்பான  கேப்ஸெய்சினின் அளவுகளை  அளவிட பலவித  இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இவை மிக துல்லியமாக ஒவ்வொரு மிளகாய்க்கும் கார வெப்ப அளவீட்டை தெரிவிக்கின்றன. உதாரணமாக குடைமிளகாய் பூஜ்ஜியத்தின் ஸ்கோவில் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது அதாவது அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவில் கேப்ஸெய்சின்கள் இல்லை, அதே நேரத்தில் ஹாபனேரோ மிளகாய்த்தூள் 300,000 ஸ்கோவில் மதிப்பீட்டை  கொண்டுள்ளது,

 ஸ்கோவில் காரவெப்ப அளவீடு மிளகாய்களின் காரவெப்பத்துக்கு காரணமாயிருக்கும் காப்சினாய்டுகளின்  (Capsaicinoids) தொகுதியில் உள்ள கேப்ஸெய்சினின் அளவையே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது. கேப்ஸெய்சின் நீரில் கரையாது எனவே அதிக மிளகாயின் காரத்துக்கு நீர் குடிப்பது ஒருபோதும் நிவாரணமாகாது. நீர் கேப்ஸெய்சினை மேலும் பரவச்செய்து கார வெப்பத்தை அதிகரிக்கும். எனவே இந்த காரத்தை மட்டுப்படுத்தும் ஒரே வழி, குளிர்ந்த பால், ஐஸ்கிரீம், சோடா அல்லது எலுமிச்சை சாறு, பாலாடைக்கட்டி போன்ற அமில உணவுகளுடன் அதை கலப்பதுதான்.

கரோலினா ரீப்பரை போல காரம் கூடிய அதிக SHU அளவீடுகளை  கொண்ட ’சூப்பர் ஹாட்’ மிளகாய்களை விளைவிக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்துமே முனைப்புடன் இருக்கிறது என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரெலியாவுக்கிடையேதான் 1990’களிலிருந்து இதில் கடும்போட்டி நிலவுகிறது.

 மிளகாய்களின் கார அளவீடுகளை குறிக்கும் ஸ்கோவில் அளவீடு கண்டறியப்பட்ட பின்னரே சூப்பர் ஹாட் மிள்காய்கள் அதிகம் உருவாக்கப்பட்டன. பொதுவாக  1,000,000 SHU க்களுக்கு மேல் இருப்பவையே  சூப்பர் ஹாட் மிளகாய்களாக கருதப்படுகின்றன. 

1990 களுக்கு முன்பு 3,50000 SHU களுக்கு அதிகமாயிருந்தவை  ஸ்காட்ச் போனெட் மற்றும் ஹேபனேரோ ஆகிய  (Scotch bonnet & habanero) இரண்டு மிள்காய் வகைகள் தான்

 1994 ல் கலிபோர்னியா விவசாயி ஃப்ரான்க் கார்சியா Frank Garcia  ஹேபனேரோவின் உட்கலப்பினமொன்றை ’’சிவப்பு சவினா’’ என்னும் பெயரில் (Red Savina,) 570,000 SHU அளவீட்டில்   உருவாக்கியபோது அதுவே உலகின் உயர்ந்தபட்ச கார அளவாக இருக்குமென கருதப்பட்டது.

 ஆனல் 2001ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மிளகாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான பால் போஸ்டாண்ட் (Paul Bosland) இந்தியாவுக்கு வந்து அஸ்ஸாமில் விளையும்  பேய் மிளகாய், பூத் ஜலாக்கியா, நாகராஜ மிளகாய் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிரபல மிளகாய்களை ஆய்வு செய்து அவை 1 மில்லியன் SHU க்களுக்கு மேல் காரம் கொண்டிருப்பதை கண்டறிந்தார், 

 பல வருடங்களாக உலக நாடுகள் பல மும்முரமாக புதிய கலப்பின  மிளகாய் வகைகளை அதிக கார அளவுகளில்  உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. 1994ல் சிவப்பு சவினா உலகின் காரம் கூடிய மிளகாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது, 2006’ல் டோர்செட் நாகாவும், (Dorset Naga), 2007ல் பேய் மிளகாயும்,(Ghost Pepper) முந்தைய சாதனைகளை முறியடித்தன.

  2011’ல் முதலில் இன்ஃபினிட்டி மிளகாயும் ,(Infinity) பின்னர் அதே வருடத்தில்  நாக வைப்பரும்,(Naga Viper,) பின்னர்  2 மில்லியன் SHU அளவுடன் ட்ரினிடாட் ஸ்கார்பியன் புட்ச் மிளகாய்களும்,(Trinidad Scorpion Butch T pepper) அடுத்தடுத்து  சாதனைப் பட்டியலில் இடம் பெற்றன. 

  2013  நவம்பரில் இருந்து இன்று வரையிலும் உலகின் காரம் கூடிய மிளகாயாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது 1,400,000 லிருந்து  2,200,000 SHU அளவுகள் கொண்டிருக்கும் கரோலினா ரீப்பர் மிளகாய்களே, (Carolina Reaper) இவற்றில் பெரிய மற்றும் சிறிய வகை மிளகாய்கள் உள்ளன, 

கரோலினா ரீப்பர்

 காரம் குரைந்த மிளகாய்கள் காரத்துக்கு கரணமான கேப்ஸெய்சினை , மிளகாயின் நடுவிலிருக்கும் பஞ்சுபோன்ற நீண்ட பகுதியில் (pith) சேமித்து வைக்கின்றன ஆனால் சூப்பர் ஹாட் மிளகாய்கள் தங்களின் பித்’திலும் சதைப்பகுதியிலும் கேப்ஸெய்சினை சேமித்துவைகின்றன. எனவே பிற மிளகாய் வகைகளில் நடுவிலிருக்கும் பித்தையும் விதைகளையும் நீக்கும் போது கார அளவு  குறையும் என்பது,சூப்பர் ஹாட் மிளகாய்களுக்கு பொருந்தாது.

பல நாடுகளின் கேள்விகளுக்கும், கண்டங்களுக்கும் இப்போட்டிகள் உட்பட்டு இருப்பினும்,.மிள்காய் சாஸ்களும் மிளகாயின் காரத்தை அடிப்படையாக கொண்ட உணவுப்பொருட்களின்  விற்பனையையும் அதிகரிக்க செய்யும் பொருட்டு இப்படியான கலப்பின வகைகளை உருவாக்கும் நாடுகள் இரக்கமின்றி தொடர்ந்து போட்டிகளை நடத்திக்கொண்டே தான்  இருக்கின்றன. 

இம்மிளகாய்களின் விதைகளும் பெரும் விலைகொடுத்து வாங்கப்படுபவதால் விதை வணிகமும் இப்போது மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மிளகாய் உண்ணும் போட்டிகளை நடத்தி யூ ட்யூபில் வெளியிட்டு அதில் பணம் பார்ப்பவர்களும்  பெருகிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் நாகலாந்தில் மிகப்பிரபலமான ஹார்ன்பில் திருவிழாவிலும் காரமிளகாய்களை உண்ணும் போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது.

கண்ணீர் புகைக்குண்டுகளைப்போல கலவரம் நடக்கும் இடங்களில் கூட்டத்தை கலைக்க அஸ்ஸாமின் பேய் மிளகாயின் தூள் நிரப்பப்பட்டிருக்கும் கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. இந்த கையெறி குண்டுகள் (Chilli Grenades) விஷமற்ற ஆயுதங்களின் பட்டியலில் வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பிருந்து, இந்த மிளகாய் கையெறி குண்டுகள் அஸ்ஸாம் படைப்பிரிவில் புழக்கத்தில் இருக்கிறது.  இந்த பேய்மிளகாய் கலவையை பெண்கள் தங்களது தற்காப்பிற்காக பயன்படுத்தும் ஸ்ப்ரேக்களில் சேர்க்கும் யோசனையும்  அரசுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது 

 இந்த காரத்தை உணர்தல் என்பது பாலூட்டிகளுக்கு மட்டுமேயான திறன் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகளுக்கு இந்த காரம் உரைப்பதில்லை. நாம் சாதரணமாகவே வளர்ப்புக்கிளிகள் மிளகாய்ப்பழங்களை விரும்பி உண்ணுவதை பார்த்திருக்கிறோம்.

இதனால்தான் தாவரங்களை உண்ண வரும் விலங்குகள் காரமுள்ள பழங்களை கொண்ட தாவரங்களை தவிர்த்துவிடுகின்றன,. ஆனால் பறவைகள்  காரமுள்ள பழங்களை உண்டு எந்த பிரச்சனையும் இன்றி விதை பரவலுக்கும் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகின்றன. இயற்கையின் அதிசயங்களில் இதுவுமொன்று

 மிக மிக அதிக காரம் விரும்பி உண்ணும் நபர்களுக்கு  “Pyro-Gourmaniac என்று பெயருண்டு. Pyro என்றால் நெருப்பென்றும் Gourmaniac என்றால் உணவின் மூலம் தன்னை வருத்திக்கொள்ளுபவர்கள் என்றும் பொருள். இவர்கள் படிப்படியாக தங்களின் கார வெப்பம் தாங்கும் அளவை அதிகரித்துக் கொண்டுவிடுகிறார்கள். இயற்கையாகவே சிலரின் ஜீன் கட்டமைப்பிலேயே அதிக காரம் தாங்கும்படியும் இன்னும் சிலருக்கு மிக குறைந்த அளவே தாங்கும் திறனும் இருக்கும் 

  ஒரு நாளின் உணவில் ஒரு நபருக்கு 50 கிராம் கேப்ஸெய்சின் என்பது பக்க விளைவுகளும் ஆபத்துமற்றதென்கிறது பல ஆய்வுகள் அதற்கு அதிகமாகும்போது உயிரிழப்போ அல்லது கடும் உடல் பிரச்சனைகளோ வராது. இரைப்பை மற்றும் உணவுக்குழாய் வீக்கம், அழற்சி, இரைப்பை புண்ணாகுதல், வாயுமிழ்தல், கண்ணெரிச்சல் மற்றும் வலி, வியர்வை பெருக்கு, வயிற்றுபோக்கு நெஞ்செரிச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அதிக கேப்ஸெய்சினை உட்ள்வதால் வரும் பக்கவிளைவுகள்.  நீடிக்கும் உடலாரோக்கிய பிரச்சனைகளை கேப்ஸெய்சினின் கூடுதல் அளவுகள் உருவாகுவதில்லை.  

பேய்மிளகாய்

 உலகின் மிக அதிக மிளகாய் சாகுபடி செய்யும் நாடாக சீனாவே இருந்துவருகிறது இந்தியாவின் பங்கு மொத்த மிளகாய் உற்பத்தியில் 36 சதவீதம்தான். கடந்த 2008 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நாகலாந்த்தின்  பேய்மிளகாய்கள்  ஜூலை 2021ல் தான் முதன் முதலாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட துவங்கியிருக்கின்றன..3  சுமார் 2.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு $3.68 பில்லியன்) ஆக உள்ள உலகளாவிய காரஉணவுகளின்  சந்தை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. இது மேலும் 2028 க்குள் $4.38 பில்லியனிலிருந்து $5.95 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல மிளகாய் வகைகளின் ஸ்கோவில் அளவீடுகள்:

  •    Bell Pepper (0 SHU/ 0 SCU)
  •    Ghost Pepper (855,000 to 1,041,427 SHU)
  •    7 Pot Jonah (800,000 to 1,200,000 SHU)
  •    Trinidad 7 Pot Pepper (1,000,000 to 1,200,000 SHU)
  •     Infinity Pepper (1,067,286 to 1,250,000 SHU)
  •     7 Pot Primo (800,000 to 1,268,250 SHU)
  •    7 Pot Barrackpore (1,000,000 to 1,300,000 SHU)
  •   7 Pot Brain Strain (1,000,000 to 1,350,000 SHU)
  •   Naga Viper (900,000 to 1,382,118 SHU)
  •   Trinidad Scorpion “Butch T” (800,000 to 1,463,700 SHU)
  •     Naga Morich (1,000,000 to 1,500,000 SHU)
  •     Dorset Naga (1,000,000 to 1,598,227 SHU)
  •     7 Pot Douglah (923,889 to 1,853,986 SHU)
  •     Trinidad Moruga Scorpion (1,200,000 to 2,000,000 SHU)
  •      Komodo Dragon Pepper (1,400,000 to 2,200,000 SHU)
  •     Carolina Reaper (1,400,000 to 2,200,000 SHU)

வருடா வருடம் புதிய இனங்கள் கண்டு பிடிக்கபட்டு கொண்டிருப்பதால் இந்த பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும், இந்த வரிசையில்  இன்னும் சேர்ந்திருக்காத    சிறப்பிடம் பெற்றவை என சொல்லப்படும்  2,480,000 SHU கொண்ட  டிராகன் மூச்சு மிளகாய்களையும், (Dragon’s Breath Pepper), பெப்பர்  X எனப்படும் (Pepper X) 3,180,000 SHU கொண்ட  சூப்பர் ஹாட் மிளகாய்களையும் வெறும் கைகளால் தொட முடியாது. அவற்றை கையுறைகளை அணிந்து கொண்டு கண்களில் விதைகள் தெறித்து விடாமலிருக்க பாதுகாப்பு கண்ணாடிகளையும் அணிந்துதான் கையாளவேண்டும். 

 ஸ்கோவில் அளவீட்டு முறையில் மிளகாய்களின் காரம் மட்டுமல்ல குருமிளகின் பைப்பெரின் (Piperine) இஞ்சியின் ஜிஞ்சரோல் (Gingerol). ஆகியவற்றையும் அளவிடலாம்.

தாவரங்களிலிருந்து கிடைக்கும் வேதி பொருட்களில் மிக மிக காரமானது என்று அறியப்பட்டிருக்கும்   Resinifera Toxin  (RTX) என்னும் நச்சுப்பொருள் மொராக்கோ மற்றும் நைஜீரியாவில் வளரும் Euphorbia resiniferaஎன்னும் கள்ளிச்செடியின் பிசினில் இருந்து கிடைக்கிறது இதன் ஸ்கோவில் அளவானது மிளகாயிலிருக்கும் கேப்ஸெய்சினைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகும். (சுமார் 16 பில்லியன் ஸ்கோவில் யூனிட்டுக்கள்). இனி மிளகாய் சாஸ்களை வாங்குகையில் அதில் அதன் கார வெப்ப அளவீடுகள் எத்தனை SHU  என்பதை கவனிக்கலாம்.

அடிக்குறிப்புகள்:https://www.youtube.com/embed/fC0sMIue5qk?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=ta-IN&autohide=2&wmode=transparent

  1.  2019 ல் நடந்த போட்டியின் காணொளி இணைப்பு : https://youtu.be/fC0sMIue5qk
  2. கூகுள் டூடுல்: https://www.google.com/doodles/wilbur-scovilles-151st-birthday
  3. https://www.republicworld.com/world-news/uk-news/india-exports-shipment-of-bhut-jolokia-worlds-hottest-chilli-to-england.html

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑