முள் நாறிப்பழம்- துரியான்
துரியான் மரம் Durio zibethinus என்னும் அறிவியல் பெயர் கொண்டது.இது கனிகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது
நல்ல வெப்பமுள்ள இடங்களில் மட்டுமே செழித்து வளரும் இயல்புடையவை இந்த துரியன் மரங்கள். போர்னியோ ,சுமத்ரா தீவுகளை தாயகமாக கொண்ட இம்மரங்களின் அறிவியல் பெயரின் duri என்பது மலாய் மொழியில் ’முள்’ என்று பொருள்படும். துரியான் பழங்களின் முட்களை இச்சொல் குறிக்கிறது.
15 ம் நூற்றாண்டில் துரியான் பழங்களும் முட்களை கொண்ட முள்சீதா (Annona muricata) பழங்களும் ஒன்று என கருதபட்டு குழப்பம் நிலவியது. 17ம் நூற்றாண்டில் ஜெர்மானிய தாவரவியலாளர் ஜி இ ரம்ஃபிஸ் என்பவர் துரியான் பழ மரங்களை குறித்தான விரிவான விளக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை வெளியிட்ட போதுதான் இக்குழப்பம் தீர்ந்தது.
ரம்ஃபிஸ் அந்த நூலில் எப்படி அமெரிக்க பழங்குடி வேட்டைக்காரர்கள் துரியானின் கெடுமணத்தையும் சுவைமிகுந்த கனிச்சுளைகளையும் கொண்டு புனுகுப் பூனைகளை (civet cat) பிடிக்கிறார்கள் என்பதை விவரித்திருந்தார். துரியானின் அறிவியல் பெயரின் zibethinus என்பது இத்தாலிய சொல்லான zibetto என்பதன் பொருளான புனுகுப்பூனையை குறிக்கிறது.
நிமிர்ந்த தண்டும், அகன்ற அடிப்பகுதியும் முட்டைவடிவ இலைப்பரப்புமாக மிக கம்பீரமான தோற்றமுடையது இம்மரம்.
இலைகள் லென்ஸ் வடிவத்தில் இரு நுனிகளும் கூராக இருக்கும் இலைகளின் மேற்பரப்பு மென்மையாகவும் பளபளப்பாகவுமிருக்கும் அடிப்பகுதி மங்கலான நிறத்திலிருக்கும். வனப்பகுதிகளில் 130 அடி உயரம் வரை வளரும் துரியான் மரங்கள் சுமார் 200 வருடங்கள் வாழும்.
கலப்பின துரியான் மரங்கள் இவற்றில் பாதி உயரத்தையே கொண்டிருக்கும். 20லிருந்து 30 மலர்களை கொண்ட தொங்கு மஞ்சரிகள் மிக அழகாக கவிந்த மணிகளை போலிருக்கும்.
மலர்கள் நல்ல தடித்த கிளைகளில் மட்டுமே தோன்றும். மலர்களின் நிறம் கனிகளின் நிறத்தை ஒத்திருக்கும் மஞ்சள் கலந்த மலர்களிலிருந்து மஞ்சள் நிற சுளை கொண்ட கனிகளும் வெள்ளை அல்லது சிவப்பு மலர்களிலிருந்து வெள்ளை அல்லது சிவப்பு சதைப்பகுதியை கொண்ட கனிகளும் உருவாகும்
அரும்பு மலர ஒரு மாத காலமாகும். துரியான் மரங்களில் அயல் மகரந்த சேர்க்கை வவ்வால்கள் தேனீக்கள் பறவைகள் மற்றும் எறும்புகளினால் நடைபெறும். மகரந்த சேர்க்கை முடிந்த மலர்களிலிருந்து 3 மாத்த்தில் கனிகள் உருவாகும்.
துரியான் கனிகள் 12 இன்ச் குறுக்களவும் முட்கள் நிறைந்த மேல்தோலும் கொண்டவை. ஒரு பழம் சுமார் 6லிருந்து 8 கிலோ எடைகொண்டிருக்கும். ஒரு மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும்..
கனிகளில் பெரிதான 5 சுளைகளே காணப்படும் பொதுவாக மஞ்சளிலும் அரிதாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது நீலநிறத்திலும் சுளைகள் இருக்கும். இக்கனிகளின் தனித்துவமாக இவற்றின் கெடுமணம் இருக்கிறது
பலருக்கு இம்மணம் விருப்பத்துக்குகந்ததாகவும் பலருக்கு இம்மணம் கெடு நாற்றமாகவும் இருக்கிறது. சிலர் இம்மணத்தை கெட்டுப்போன வெங்காய மணத்தை, டர்பன்டைனின் நெடியை ஒத்திருக்கிறது என்பார்கள். சுவையும் அப்படியே பலருக்கு இது பிடித்தமானதாகவும் பலரால் இதை உண்ணுவதை நினைத்துப்பார்க்கக்கூட முடியாததாகவும் இருக்கிறது. மலேசியாவில் இது பலரின் விருப்பக் கனியாக இருக்கிறது. சிங்கப்பூரில் இந்த கெடுமணத்தினால் இவற்றை ரயில் மற்றும் பேருந்துகளில் எடுத்துச்செல்ல சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருக்கிறது
வருட்த்திற்கு இருமுறை கிடைக்கும் துரியான் கனியை உடைத்து உடனே சிலமணி நேரத்தில் உண்டுவிடவேண்டும் இல்லாவிட்டால் இதன் சுவையும் சத்துக்களும் மாறுபட்டுவிடும். இவற்றின் கொட்டை மிக மிக கடினமானது.
முள்நாறிப்பழமான துரியானில் சுமார் 35 க்கும் அதிகமான் வகைகள் உள்ளன. பல பழங்கள் காயாக இருக்கையிலேயே முட்கள் நீக்கப்பட்டு முள்ளில்லா துரியான் என விற்பனை செய்யப்படுகின்றன . இயற்கையிலேயே முள்ளில்லா துரியான் கனிவகை இன்னும் உருவாக்கப்படவில்லை.
தோட்டக்கலைத்துறையினால் உருவாக்கப்பட்ட துரியான் மரங்களின் பெயர்கள் அனைத்தும் D என்னும் எழுத்தை கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறியின் புகழ் பெற்ற ரகங்கள்.
துரியன் கனிகளின் ஏற்றுமதியில் தாய்லாந்து முதன்மை வகிக்கின்றது. தென் கிழக்காசியாவைத்தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இப்பழம் விளைகின்றது.
துரியான் கனிகளில் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து இவற்றோடு வைட்டமின் B12, C,B 6, மேங்கனீஸ் மெக்னீஷியம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றுடன் ஆந்த்தோசயானின் போன்ற பல முக்கிய நிறமிகளையும் இக்கனி கொண்டுள்ளது. பல சத்துக்கள் கொண்டுள்ள இக்கனி புற்று நோய்க்கெதிராகவும் உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உடலை வலுவாக்கவும் பயன்படுகிறது.
துரியன் கனிகளுடன் மதுவை சேர்துக்கொலவ்து ஆபத்தை விளைவிக்கும்.
ஈஸ்ட்ரொஜென்னை போன்ற இயக்கச்சாற்றை (Hormone) கொண்டிருக்கும் துரியான் கனிகள் குழந்தை பேறற்றவர்களின் குறையைபோக்கும் என்னும் நம்பிக்கை உலகின் பல நாடுகளில் இருக்கிறது. எனினும் இதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.