வாழை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என தாவரவியலாளர்களால் கருதப்படுகிறது. உலகின் முதல் உண்ணும் பழமும் வாழைதான் என கருதப்படுகிறது. ஆதாம் ஏவாள் உண்டதும் வாழைதான் என்போரும் உண்டு.
தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட வாழை அரேபியர்களால் உலகின் பல பாகங்களுக்கு கி மு 327 ல் அறிமுகம் செய்யப்பட்டது
வணிக ரீதியிலான வாழை சாகுபடி 1834 ல் தொடங்கியது. 1889களில் உலகெங்கும் மிக பரவலாக வாழை சாகுபடி ஆனது
அலெக்ஸாண்டர் இந்திய படையெடுப்பின் போது கிடைத்த கதலிப்பழங்களின் சுவையை மிக விரும்பி இந்தியாவிலிருந்து வாழையை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்தார் அங்குதான் பொன்னிற பருத்த விரல்களை போன்ற வாழைப்பழங்களுக்கு ’பனான்’ (banan) என்னும் விரல்களை குறிக்கும் அரபிச்சொல் பெயராக வைக்கப்பட்டது
பின்னர் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளுக்கு 15ம் நூற்றாண்டிலும் அங்கிருந்து பெர்முடாவுக்கும் வாழை அறிமுகமானது. பெர்முடாவிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் வாழை பெருமளவில் இங்கிலாந்துக்கு கடல்வழி அனுப்பப்பட்டது.
1835 ல் இங்கிலாந்தின் பிரபல தோட்டக்காரர் ஜோஸஃப் பாக்ஸ்டன் ஒரு புதிய மஞ்சள் பழங்களை அளிக்கும் வாழை வகையை உருவாக்கினார். அவரது எஜமானர் வில்லியம் கேவெண்டிஷ் பெயரிலேயே அதற்கு Musa cavendishii என்று பெயரிடப்பட்டது.
வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நன்கு பழுத்த வாழைப்பழங்களில் வைட்டமின் B6 ,C, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வாழைப்பழங்களும் வாழைத்தண்டும் வாழைப்பூக்களும் ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவுண்ணுவதும் ஆரோக்கியமான வழக்கம்.
ம்யூஸேசி குடும்பத்தை சேர்ந்த வாழையின் உண்ணக்கூடிய பழங்கள் ஆங்கிலத்தில் bananas என்றும் சமைத்து உண்ணும் வாழைக்காய்கள் plantains எனவும் குறிப்பிடப்படுகின்றன
இவை மரம் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் சதைப்பற்றான தண்டுகள் இலைத்தாள்களின் சுற்றடுக்குகளால் ஆன போலித்தண்டுகள்தான் .
வாழையில் சுமார் 70 சிற்றினங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன. ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்த வாழை விரைவில் வளரும் இயல்புடையது.
இதன் கலப்பினங்கள் உயரத்திலும் அளவிலும் பழம் பூ இலை ஆகியவற்றிலும் வேறுபட்டிருக்கும். இவைஅதிக பட்சமாக 15 மீ உயரம் வரை வளரும்.ஓராண்டில் மலர்ந்து பலனளிக்கும்.
உலகெங்கிலும் விரும்பி உண்ணப்படும் விதைகளற்ற சதைப்பற்றான வாழைப்பழங்களை கொடுக்கும் வாழைமரங்கள் அனைத்துமே Musa acuminata மற்றும் Musa balbisiana ஆகிய இரு காட்டு வாழைகளின் கலப்பினம் தான்
சிறப்பு வாழை வகைகள்
- சீன குட்டை வாழை அல்லது தங்கத்தாமரை வாழை எனப்படும் Musella lasiocarpa கடல்மட்டத்துக்கு மேல் 2500 அடி உயரத்தில் வளரும் இவற்றின் போலித்தண்டின் உச்சி பொன்னிறத்தில் இதழ்களாக விரிந்து தாமரை போலிருக்கும். இவை அலங்கார வாழைகள்
- Musa ornata, என்பது மலர் வாழை. இதன் கனிகள் உண்ணத்தகுந்தவையல்ல. அழகிய இளஞ்சிவப்பு மலர்களுக்காக இவை உலகெங்கிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.
- Musa velutina, வகை அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமாலயப்பகுதிகளில் காணப்படும் மலர்களும் பழத்தோலும் அடர் ரோஜா நிறங்கொண்ட வாழை வகை
- கேரட் வாழையின் (M×troglodytarum,L) கனிகள் சிறிதாக உருளைக்கிழங்கை போல் இருக்கும் இவற்றின் சதை நல்ல ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கும். இவற்றில் ஆந்தோசயானின் நிறமிகள் உள்ளதால் பல மருத்துவ பயன்களும்கொண்டது
- நீல ஜாவா வாழை ஐஸ்கிரீம் போன்ற வெனிலா வாசனைகலந்த இனிப்புச்சுவை கொண்டிருக்கும்.
- Musa textilis என்பது நார் வாழை. இந்த வாழை நார் ஆங்கிலத்தில் ’Abacá’ எனப்படுகிறது. பின்னலாடை தொழிலுக்கேற்ற உறுதியான நாரிழைகளை கொடுக்கும் இந்த வாழை பிலிப்பைன்ஸில் ஒரு முக்கிய வணிகப்பயிர். இவற்றின் சிறு கனிகள் உண்ணத்தகுந்தவை அல்ல.
- இலைகளின் அடிப்பகுதியில் மழை நீரை சேர்த்துவைத்து, கடும் கோடையில் பயணிப்பவர்களுக்கு குடிநீர் அளிக்கும் விசிறி வாழை (Ravenala madagascariensis,) மடகாஸ்கரை தாயகமாக கொண்டது
- உலகின் மிகப்பெரிய வாழையினமான ராட்சஷ வாழை எனப்படும் Musa ingens, இந்தோனேசியாவில் காணப்படுகிறது.
இவற்றின் இலைகள் 1மீ அகலம் 16 மீ நீளமும் கொண்டிருக்கும்.தண்டு 50 அடி உயரம் வரை வளரும் உச்சியில் சுமார் 20 நீண்ட இலைகளும் மிகப்பெரிய வாழைத்தாரும் கொண்டிருக்கும் இவையே உலகின் மென்மரங்களில் மிக உயரமானவை. இவற்றின் சுற்றளவு1- 2 மீ இருக்கும். ஒரு பழம் சுமார் 3 லிருந்து 4 கிலோ எடை கொண்டிருக்கும் இதன் மிகப்பெரிய மலரிலிருந்து லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டிருக்கும் 18லிருந்து 25 செ மீ நீளமிருக்கும் 300 பெரிய பழங்கள் உருவாகும்.
உலகிலேயே அதிக நீளம் கொண்ட இலைக்காம்பு சுமார் 15 மீ நீளம் கொண்டது
1989ல் தாவரவியலாளர் ஜெஃப் டேனியல்ஸ் (Jeff Daniels), இந்த ராட்சஷ வாழையை இந்தோனேசியாவில் கடல்மட்டதுக்கு 2000 மீ உயரத்தில் முதன்முதலாக கண்டறிந்தார்
இந்தியாவில் வாழை கலச்சார முக்கியத்துவம் வாய்ந்தது வாழையடி வாழையாக என்னும் பழமொழி தொடர்ந்து வரும் சந்ததிகளைகொண்ட குடும்பத்தை குறிக்கும் முது சொல்லாக இருக்கிறது
பூத்து காய்த்து, கனியளித்து தானழிந்து சந்திகள் வளர வழிசெய்யும் வாழை இந்தியாவில் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது,. இந்திய மங்கல நிகழ்வுகளில் வாழை நுழைவுவாயிலை அலங்கரிக்கும்
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழை கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. வாழையின் வேர், இலை, மலர், கனி, காய், தண்டு, நார் என அனைத்தும் உபயோகம் கொண்டதால் கற்பக விருட்சம் என்றும் இதற்கு பெயருண்டு.