’’கார்ல் லெச்சே (karl Leche) வும் அவரது குழுவினரும் மடகாஸ்கரின் அடர்ந்த காட்டுக்குள்  கதோஸ்  பழங்குடியினர் அறியாது அவர்களைப் பின்தொடர்ந்து சென்று  சந்தடியில்லாமல்  அவர்களின் செயல்களை கவனித்துக்கொண்டிருந்தனர். 

பழங்குடியினர் அனைவரும் ஒரு ஆற்றங்கரையில் குழுமினர்.  அவர்கள் முன்னால்  சுமார் எட்டு அடி உயரமுள்ள அன்னாசியை போன்ற சதைப்பற்றான ஒரு தண்டும், அதன் உச்சியில் பெரும் நாகங்களைப் போன்ற, நீண்ட கைகளாக அமைந்திருந்த இலைகள் பச்சை நிறத்திலும் இருந்தன. இலைகளின் நுனி மாட்டின் கொம்புகளைப் போல கூராக இருந்தது. அம்மரத்தை பார்த்து பழங்குடிகள் அனைவரும்  ’’டீபே, டீபே’’ என்று கூவி வணங்கினார்கள். 

நிர்வாணமாக ஒரு பழங்குடி இளம்பெண்ணை அவர்கள் அம்மரத்தின் மீது ஏறும் படி சொன்னதும் அவள் மறுப்பேதும் சொல்லாமல்  ஏறினாள். இலைகள் அனைத்தும் குவிந்திருந்த மத்தியப் பகுதியில் இருந்த நீரை அருந்தும் படி அவர்கள் கீழிருந்து கூச்சலிட்டதும் அவள் அந்த நீரை அருந்தினாள்,  உடனே அம்மரத்தின் இலைகளான நாகங்களுக்கு உயிர் வந்ததுபோல அவை நெளிந்தன

’’கடும் பசிகொண்ட நாகங்களை போன்ற அந்த இலை நீட்சிகளால் அந்த பெண்ணை அம்மரம் சுற்றி வளைத்துக் கொண்டது.  கைகளையும் கழுத்தையும் பின்னர் தலையையும் சுற்றி சுற்றி அக்கைகளால்  இறுக்கப்பட்ட போது அந்த பெண் பயங்கரமாக ஓலமிட்டாள். பிறகு அந்த ஓலம் மெல்ல முனகலாக மாறி பின்னர் மெதுவாக அடங்கியது. மரத்தை சுற்றிலும் கொல்லப்பட்ட பெண்ணின் ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பச்சை பாம்புகள் போன்ற அக்கைகள் தளர்ந்து விடுபட்டு மீண்டும் நீண்ட போது அந்த பெண் அதற்குள் இருந்த சுவடே இல்லாமல் அம்மரத்தால் முழுவதுமாக உண்ணப்பட்டிருந்தாள். அவளை பலி கொடுத்த  பழங்குடியினர் அம்மரத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள்’’

26 ஏப்ரல் 1874ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில்  ஜெர்மானிய  தாவரவியலாளர் “Karl Leche” என்பவரின் மடகாஸ்கர் காட்டுப் பயண அனுபவம் இப்படி ஒரு செய்திக் கட்டுரையாக    எட்மண்ட் ஸ்பென்சர்( Edmund Spencer) என்னும் கட்டுரையாளரால் எழுதப்பட்டிருந்தது. அடர்  காடுகளில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்கள் இருப்பதாக பல செவிவழி செய்திகளும் கதைகளும் பல காலமாக  மக்களிடையே நிலவி வந்தாலும் முதன் முதலாக அச்சில் மனிதர்களை கொன்று தின்னும் மரங்களைப்பற்றி வெளியான  இந்த கட்டுரை பெரிதும் வாசிக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸின்  இந்தக்கட்டுரை உண்டாக்கிய பரபரப்பால் இதே  கட்டுரை  பிற பிரபல நாளிதழ்களில்  அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருந்தது. பலர் இந்த நரமாமிசம் உண்ணும் மரத்தையும் அந்த பழங்குடிகளையும் காண  மடகாஸ்கர் காடுகளுக்கு தேடல் பயணம் மேற்கொண்டார்கள். இந்த பரபரப்பு பல ஆண்டுகள் தொடர்ந்தது.

1889ல் வெளியான ’கடலும் நிலமும்’ என்னும்  நூலில் அதன் ஆசிரியர் ஜேம்ஸ் பூயல் (James W. Buel) கோபம் கொண்ட பெரும் நாகங்களை போன்ற, நச்சு முட்களும், நூற்றுக்கணக்கான  உறிஞ்சு வாய்களும் நிறைந்திருக்கும் கிளைகளுடன் இருக்கும் யா-டி-வியோ (ya te veo) என்னும்  ஆப்பிரிக்க காடுகளின் ஊனுண்ணி மரமொன்றைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

1891ல் லண்டன், நியூயார்க் மற்றும் மெல்பர்னில்  மாதமொருமுறை வெளியான சஞ்சிகையான Review of Reviews வின் ஆசிரியர்  வில்லியம் (William Thomas Stead) நிகரகுவாவின் மனிதர்களை உண்ணும் தாவரமொன்றைப் பற்றியும் அதனருகில் செல்லும் எவரையும் அது பிடித்து இரத்தத்தை உறிஞ்சி குடித்து கொல்லுவதையும் குறித்து எழுதினார்

19 ம் நூற்றாண்டில் இப்படி மனிதர்களையும், நாய்களையும் பிற விலங்குகளையும் பிடித்து கொன்று தின்னும் தாவரங்கள் பற்றிய பல கதைகளும் செய்திகளும் கட்டுரைகளும் உலகெங்கிலும் வெளியாகிக் கொண்டே இருந்தன. காடுகளில் பயணித்த மனிதர்களை நீண்ட கிளைகளால் சுற்றி வளைத்து விழுங்கிய கொலைகார தாவரங்களை பற்றிய கதைகள் வெகுவாக உலவின. 

அக்கதைகளில் வானளாவிய கிளைகளால் பறவைகளைக் கூட அத்தாவரங்கள் பிடித்து விழுங்கியது.. பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவருமான ஆர்தர் கொனான்  (Arthur Conan Doyle)  தனது குற்றக்கதைகளில் மனிதர்களை இறுகப்பிடித்து விழுங்கும் வீனஸ் ஊனுண்ணும் தாவரங்களை அறிமுகப்படுத்தினார்.

மிச்சிகன் கவர்னரும் இயற்கை ஆர்வலருமான திரு சேஸ் ஓஸ்போர்ன் ( Chase Osborn ) எழுதி 1924 ல் வெளியான ’’மடகாஸ்கர்- மனிதர்களை கொன்று உண்ணும் மரங்களின் நிலம்’’  (Madagascar: Land of the Man-eating Tree)  என்னும் நூலிலும் மனிதர்களை கொன்றுண்ணும் மரங்களை பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. மடகாஸ்கர் பழங்குடிகளுக்கு மனிதர்களை உண்ணும் மரத்தை  குறித்து  நன்கு தெரிந்திருக்கிறது என்று  சேஸ் குறிப்பிட்டிருந்தார்.பல கதைகளில் மனிதர்களை நெரித்துக் கொன்று உண்ணும் மரங்களை குறித்த சித்திரங்கள் இடம்பெற்றன.

1955ல் ஜெர்மானிய -அமெரிக்க அறிவியல் கட்டுரையாளரும்,  cryptozoology. என்னும் மர்மமான உயிரினங்களை குறித்த அறிவியல் துறையில் நிபுணருமான  வில்லி லே  (Willy Ley) தனது ’’சாலமண்டர்களும் பிற அற்புதங்களும்’’ என்னும் நூலில்  (Salamanders and other Wonders)  இவை அனைத்தும் கட்டுக்கதைகள் அப்படி ஒரு பழங்குடியினரோ, மனிதர்களை பிடித்துண்ணும் மரங்களோ எதுவுமே உலகில் இல்லை  இவை வெறும் பரபரப்பு செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட  வதந்திகள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும் ஊனுண்ணித் தாவரங்கள் இருக்கின்றன, இல்லை என்னும் இரு தரப்பும் அறிவியல் உலகில் வலுவாக  காலூன்றி இருந்தது. பல அறிவியலாளர்கள் தொடர்ந்து அவற்றை தேடிச்சென்று கொண்டிருந்தனர்.

நகரும் விலங்குகள் வேட்டையாடி இரைகளை பிடித்துண்ணுவது இயற்கையென்றும், ஓரிடத்தில் வேர்பிடித்து நகராமல் இருக்கும் தாவரங்கள் வேட்டையாடுவது என்பது இயற்கையில்  நடக்கவே நடக்காத காரியம் என்றும் பலரல் உறுதியாக நம்பப்பட்டது.

ஊனுண்ணித் தாவரங்கள் இருப்பது  உண்மையென்றும்,  வெறும் கற்பனையென்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவிக்கொண்டிறூந்த வேலையில்தான் சார்லஸ் டார்வின் கடற்பயணங்களை மேற்கொண்டிருந்தார்

 1875 ல் டார்வின் ஊனுண்ணித்தாவரங்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்தபோது உலகம் பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளானது.  இங்கிலாந்தின் சுஸெக்ஸ் வனப்பகுதியின் ஊனுண்ணி பனித்துளி தாவரம் (Sundew plant)குறித்த விளக்கமான கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டிருந்தன.

 பூச்சிகளால் உண்ணப்படும் தாவரங்களை மட்டுமே அறிந்திருந்த உலகம் முதல் முறையாக பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் இருப்பதை அதன்பிறகே  அறிந்துகொண்டது

ஊனுண்ணி தாவரங்களின் பரிணாம வளர்ச்சி

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கையின் மூலம் மட்டுமே உணவை தயாரித்து கொண்டிருந்த தாவரங்களில் சில இவ்வாறான ஊனுண்ணும் உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தது சுமார் பத்துமில்லியன் வருடங்களுக்கும் மேலாக மெல்ல மெல்ல நடந்திருக்கும் என்று தாவரவியலாளர்கள் யூகிக்கிறார்கள்.1

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை  பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் கொன்று தின்னுதலின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை.

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று ஜீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா (Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா (P. parviflora) ஆகியவை ஊனுண்ணிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இவையும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

இந்த பரிணாம வளர்ச்சியை குறித்த ஆய்வுகள் பல்லாண்டுகளாக தொடர்கின்றன. சமீபத்தில் ஜெர்மனியின் வுஸ்பர்க் பல்கலைக்கழகத்டின் (University of Würzburg) தாவரவியலாளர்களின் குழு  குறிப்பிட்ட மூன்று ஊனுண்ணித் தாவரங்களில் விரிவான ஆய்வுகளை செய்தது.

  • அதிலொன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கும் வீனஸ் பூச்சி பிடிக்கும் தாவரமான  Venus flytrap 
  • இரண்டாவது அத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஊனுண்ணித் தாவரமான நீர்ச் சக்கரம்(waterwheel) என்னும் பெயர் கொண்ட Aldrovanda vesiculosa.
  • மூன்றாவது பனித்துளி தாவரமாகிய ட்ரஸீரா( sundew plant)

ஆய்வின் முடிவுகள்  70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊனுண்னும் தாவரங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் அதற்கு பின்னரே நிலச்சத்துக்குறைபாடுகளை சமன்செய்ய, நகர முடியாத தாவரங்கள் அவற்றின் அருகில் வரும் பூச்சிகளை பிடிக்க பொறிகளை உருவாக்கி அப்பூச்சிகளின் உடலிலிருக்கும் சத்துக்களை கிரகித்துக்கொள்ளும் ஊனுண்ணி தாவரங்களாக மாறிவிட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தன.

ஒளிச்சேர்க்கை செய்யும் இலைகளும், சத்துக்களை சாறு வடிவில் உறிஞ்சும் வேர்களும் உபயோகமற்றுப் போன ஒரு கட்டத்தில் தாவரங்கள் தங்கள் வாழ்வை,  இருப்பை உறுதி செய்து கொள்ள புதிய வழிகளை தேடி, அவ்வாறு கண்டறிந்ததுதான் ஊனுண்ணுதல் என்பது.இது  மரபணு மாற்றங்கள் மூலமே சாத்தியமாகி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு

ஒரு நீர்வாழ் ஊனுண்ணித் தாவரத்திலும், நிலத்தில் படர்ந்து வளரும் பிரேசிலின் மற்றோரு ஊனுண்ணித் தாவரத்திலும் 2013ல் நடந்த ஆய்வுகளும் இந்த மரபணு மாற்றத்தினால் பரிணாம வளர்ச்சியடைந்த விஷயத்தையே உறுதி செய்திருக்கின்றன. வேர்களின் உறிஞ்ம் திறனுக்கும் இலைகளின் சூரிய ஒளியை கிரகிக்கும் திறனுக்கும் காரணமான மரபணுக்களை கணிசமாக உதிர்த்துவிட்டு(gene drop) புதிய பூச்சிகளை கவர்ந்து பொறிகளில் பிடித்து அவற்றை செரித்து சத்துக்களாக எடுத்துக் கொள்ள உதவி செய்யும் மரபணுக்களை இவை மெல்ல மெல்ல காலபோக்கில் பெற்றிருக்கின்றன என்கிறது ஆய்வு முடிவுகள்.

இவ்வாறாகத்தான் உலகின் சாதாரண,  சாதுவான தாவரங்கள் மிகச்சிறந்த வேட்டைக்கார தாவரங்களாகி விட்டிருக்கின்றன. இந்த ஊனுண்ணித் தாவரங்களின் சாமார்த்தியங்களும் தகவமைப்புக்களும் தாவரங்களின் அதிசயங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

சுமார் 16 நீண்ட வருடங்கள் இந்த தாவரங்கள் குறித்தான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த டார்வின் சில தாவரங்களின் இலைகள் பிரத்யேகமாக பூச்சிகளை பிடிக்கும் பொறிகளைப்போல உருமாற்றம் கொண்டு அவற்றை    பிடித்து செரித்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளுவதையும் நிரூபித்தார்.

 டார்வினின் இந்தத்தாவரங்கள்  குறித்த விளக்கங்களை கொண்ட 1875ல் வெளியான ’’ஊனுண்ணித் தாவரங்கள்’’ என்னும் நூலும்,(Insectivorous Plants,) 1880 ல் வெளியான ’’தாவரங்களின் அசைதலின் ஆற்றல்’’ (The Power of Movement in Plants) என்னும் மற்றுமோர் நூலும் ஊனுண்ணும் தாவரங்கள் குறித்த பெரும்பாலான புதிர்கள், கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளித்திருந்தது 

டார்வினின் இந்த கண்டுபிடிப்புகள் சாதாரண மனிதர்களுக்கு பெரும் ஆர்வமூட்டியது. தாவரவியல், பூச்சியியல், வேதியியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை ஊனுண்ணித் தாவரங்களில் குவித்தார்கள்  

அவர்களின் முயற்சியாலும் தேடல்களினாலும் பலவகைப்பட்ட ஊனுண்ணித்தாவரங்கள் கண்டறியப்பட்டன. சில தாவரங்கள் குடுவைகளாக மாறிய இலைகளில் நொதிகளை நிரப்பி வைத்து அதில் பூச்சிகளை பிடித்தன.  சில ஒட்டும் தன்மையுள்ள இலைகளை கொண்டு அதில் பூச்சிகளை ஒட்டவைத்து  கொன்று உண்டன. இன்னும் சில பூச்சிகளை கவரும் நறுமணமுள்ள பனித்துளி போன்ற சுரப்பி நீர்ச் சொட்டுக்களால் பூச்சிகளை ஈர்த்து கொன்று தின்றன. நீருக்கடியிலும் கொன்று தின்னும் தாவரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

வீனஸ் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது தாவரவியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) அதன் ஊனுண்ணுதல் குறித்து விவரித்து லின்னேயஸுக்கு கடிதம் எழுதினார்  அப்போது லின்னேயஸ் உலக புகழ் பெற்றிருந்த தாவரவியலாளர். தாவர வகைப்பாட்டியலின் தந்தையும் தீவிர இறையியலாளருமான லின்னேயஸினால் ஊனுண்ணும் தாவரங்கள் இருப்பதை நம்ப முடியவில்லை.

லின்னேயஸ் அப்படி  இறையை பிடித்துண்ணும் தாவரங்கள் இருப்பதை அடியோடு மறுத்தார். அது இயற்கையின் விதிகளுக்கு எதிரானது என்றும் அப்படி ஒரு உயிரினம் இயற்கையில் இருக்க வாய்ப்பே இல்லையென்றும் தீர்மானமாக பதில் எழுதினார். அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரும் அவர் இத்தாவரங்கள்  பொறிகளை உண்டாக்கி மழையிலிருந்து நனையாமல் இருக்க பூச்சிகளுக்கு அடைக்கலமாக செயல்படுகின்றன இரையாக பிடித்து தின்பதில்லை என்றார்

மேலும் நெஃபெந்தெஸ் போன்ற ஜாடிகளில் நொதிகளை கொண்டு பூச்சிகளை செரித்துண்ணும் தாவரங்கள் உண்மையில் உண்ணவில்லை அவற்றில் பூச்சிகளுக்கு அருந்த நீரளிக்கின்றன என்றார் அவர்.

இன்றைய நாள் வரையிலுமே இது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன வயிறு, இரைப்பை போன்ற பாகங்கள் இல்லாத தாவரங்கள் எவ்வாறு பூச்சி மற்றும் தவளை, எலி போன்ற சிறு விலங்குகளை செரித்து, சத்துக்களை முழுத்தாவர பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்பது இன்னும் சரியாக விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது.

Drosera  போன்ற இரையை ஒட்ட வைத்து பின்னர் சத்துக்களை எடுத்துக்கொள்ளும் ஊனுண்ணிகளிலிருந்து வீனஸ் ஊனுண்ணிகள் பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்கலாம் என்றும்    ஒரு கருத்து இருக்கிறது.      

ஊனுண்ணித்தாவரங்களுக்கு தொல்லுயிர் புதை படிவங்கள் அதிகம் கிடைக்கவில்லை எனவே இவற்றின் தோற்றம் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை என்று சொல்லும் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக  உயிரியற்பியலாளர்   Rainer Hedrich  2021ல் ஊனுண்ணுதலின் தோற்றம் என்னும் கட்டுரையில் (the origins of carnivory ) ஊணுன்னும் இயல்புக்கான மரபணு எது?  அது எப்போது தாவரங்களுக்குள் புகுந்தது? என்னும் ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்கிறார்.

வீனஸ் பொறித் தாவரம்

ஊனுண்ணித்தாவரங்களின் பல வகைகள் இருப்பினும் உலகெங்கிலும் பலருக்கு தெரிந்ததும் பலர் வீடுகளில் வளர்க்க விரும்புவதும் வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் வீனஸ் பொறி தாவரம்

டார்வினுக்கு இவற்றின் மீது தனி பிரியம் இருந்தது அவர் தனது நூலில் ’’வீனஸ் தாவரங்கள் உலகின் மிக அற்புதமான தாவரங்களில் ஒன்று’’ என குறிப்பிட்டிருக்கிறார். 

1759ல் வடக்கு கரோலினா கவர்னரான, ஆர்தர் (Arthur Dobbs) தாவரவியலாளர்  பீட்டர் (Peter Collinson) க்கு எழுதிய கடிதமொன்றில்:

“We have a kind of Catch Fly sensitive which closes upon anything that touches it, it grows in the Latitude 34 but not 35° – I will try to save the seed here.” என்று எழுதி இருந்தார்.

பீட்டர்  பிலடெல்ஃபியா இயற்கையியலாளர் ஜான் (John Bartram) என்பவருக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை எழுதினார். பார்ட்ரம்மின் மகன் வில்லியம் பார்ட்ரம் வடக்கு கரொலினாவிற்கு சென்று தன் தந்தைக்காக வீனஸ் தாவரங்களை சேகரித்தார்

வில்லியம் அனுப்பி வைத்த உலர் தாவரங்களை ஜான் பார்ட்ரம் லின்னேயஸுக்கும் பீட்டர் கோலின்சனுக்கும் அனுப்பினார்   யாராலும் யாருக்கும் உயிருடன் வீனஸ் தாவரங்களை  அனுப்ப முடியவில்லை

1763ல்  ஆர்தர் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவை தாவர உலகத்தின் அற்புதங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். இவையே வீனஸ் தாவரங்கள்  குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம்

பெயர்கள்

வீனஸ் ஃப்ளை ட்ராப் என்னும் பெயர் முதன் முதலில் 1768ல் ஒரு லண்டன் பத்திரிக்கையில் அச்சில் வந்தது. ஒரு புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-“A New Sensitive Plant Discovered.”எனும் தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இப்பெயர் வெளியாகி இருந்தது   1793 ல் உயிரியற்பியலாளர் வில்லியம் பார்ட்ரம் இவை துடிப்பான தாவரங்கள் கவனக்குறைவான உயிரினங்கள் இவற்றிற்கு இரையாகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.  

வட அமெரிக்காவில் இருந்து பல இயற்கையான வீனஸ் தாவரங்களையும் அவற்றின் விதைகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பிய பிரிடிஷ் இயற்கையியலாளர் ஜான் எல்லிஸ் (John Ellis) இதற்கு 1768 ல் Dionaea muscipula என்று  அறிவியல் பெயரிட்டார்.  லண்டன் சஞ்சிகை ஒன்றில் எல்லிஸ் இத்தாவரத்துக்கு பெயர் வைக்க தான் பட்ட சிரமங்களை எழுதி இருந்தார். Dionaea muscipula என்னும் இப்பெயரை  ஆங்கிலத்தில் Venus flytrap அல்லது Venus mousetrap, என்று இருவிதங்களில் மொழிபெயர்க்கலாமென்றாலும் தனக்கு  flytrap என்னும் பெயரே பிடித்தமானது என்றும்  அதில் குறிப்பிட்டிருந்தார்.

பூச்சிகளை கவர்ந்திழுக்கும் இத்தாவரத்தின் பொதுவான வழங்கு பெயரான வீனஸ் என்பது காதல், காமம், வளமை மற்றும் அழகின் ரோமானிய  தெய்வமான வீனஸின் பெயரால் வைக்கப்பட்டது.  இதன் அறிவியல் பெயரின் Dionaea என்பதும் Dione ன் மகளான கிரேக்க தெய்வமான Aphrodite ஐ குறிக்கிறது, இதன் சிற்றினப்பெயரான muscipula,   இதன் இரை பிடிக்கும் செயலை குறிக்கும் விதமாக  எலிப்பொறி என்று பொருள் படுகிறது (mus (“mouse”) decipula (“trap”),  

வீனஸ் தாவரங்களை குறித்து ஆண் ஆய்வாளர்கள் மத்தியில்,அக்காலத்தில் கிண்டலான கருத்து பரிமாற்றங்களும் நடந்தன. வீனஸ் தாவரப் பொறிகள் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதாக கருதி ஒரு வேடிக்கையான பெயரிட்டு அதை  “Tipitiwichit  என்று குறிப்பிட்டு தங்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டனர். 

1962 ல்,பார்ட்ரம்  நண்பரான கோலின்சனுக்கு எழுதிய கடிதத்திலும் கோலின்சன் ஆர்தருக்கு 1762ல் எழுதிய கடிதங்களிலும் இப்பெயர் வேடிக்கையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது இந்த பெயரை  பார்ட்ரம் வைத்திருக்கலாமென்றும் யூகிக்கப்படுகிறது. 

தாவரவியல்

இயற்கையாக இவை அமெரிக்காவில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் மட்டுமே வளர்கின்றன. வடக்கு கரோலினாவின்  100 மைல் சுற்றளவில் இருக்கும் சதுப்பு நிலங்களில் இவை இயற்கையாக அடர்ந்து வளர்கின்றன

ட்ரொசிரேசி குடும்பத்தை சேர்ந்த வீனஸ் தாவரம் பொதுவாக 6-7 இன்ச் சுற்றளவு கொண்டிருக்கும். 5 அல்லது 6 தண்டுகளும் அவற்றில் பொறிகளாக உருமாற்றம் கொண்டிருக்கும் இலைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு இலைப்பொறியும் ஒரு இன்ச் அளவில் இருக்கும். சாதாரணமாக பொறிகள் விரல் நகங்களின் அளவில் இருக்கும். வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் வீனஸ் செடிகள் இயற்கையான செடிகளை காட்டிலும் சிறியவையாக இருக்கும். மலர்த்தண்டு தாவரத்திலிருந்து சுமார் 1 அடி உயரத்தில் மலர்களை தாங்கி நிற்கும்.வீனஸ் தாவரம் 4 ஆண்டுளில் மலரளிக்கத்துவங்கும்.

இவை பல்லாண்டு தாவரங்கள், வருடா வருடம் மலர்ந்து கனியளிக்கும் இவற்றின் மலர்களின் வெண்ணிற இதழ்களில் பசுமையான நரம்புகள் காணப்படும்

பூச்சிகளால்  மகரந்த சேர்க்கையும் பின்னர்  கருவுறுதலும் நிகழ்ந்து 4 லிருந்து 6 வாரங்களுக்குள் சிறிய பளபளப்பான நீர்த்துளி வடிவ கருப்பு விதைகள்  சிதறி புதிய தாவரங்கள் அதிலிருந்து முளைத்து வளரும். வீனஸ் தாவரங்கள் அடிக்கிழங்குகளிருந்தும் புதிய தாவரங்களை உருவாக்கும். 

மகரந்த சேர்க்கை

நூற்றுக்கணக்கான பூச்சி இனங்கள் வீனஸ் தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் பச்சை பூச்சியான Augochlorella gratiosa, வண்டினமான Trichodes apivorus மற்றும் நீள் மூக்கு வண்டினமான  Typocerus sinuatus ஆகியவை மூன்று முக்கிய இனங்கள். 

பூச்சிகளை வேறுபடுத்துதல்

இவற்றின் புத்திசாலித்தனமான உடல் அமைப்பு தாவரவியலாளர்களின் ஆச்சரியத்துக்கு உரியதாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது மலர்க்காம்பு மிக நீண்டு தாவரத்தின் உடலுக்கு மேலே மலர்களை தோற்றுவிப்பதால் மகரந்த சேர்க்கை செய்பவரும் பூச்சிகள் பொறிகளில் அகப்படாமல் மகரந்த சேர்க்கை செய்துவிட்டு மலருக்கு மலர் தாவிச்செல்கின்றன

இரையை கவருவதற்கும் மகரந்த சேர்கைக்கான பூச்சிகளை கவரவும் இவை வேறுபட்ட வேதிப்பொருட்களை சுரப்பதும் மிக பெரிய புதிராக இருக்கிறது. எப்படி இவை இரையையும் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சிகளையும் வேறுபடுத்துகின்றன என்பதையும் இன்னும் பலநாடுகளின் நடைபெற்ற நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலமும் கண்டறிய முடியவில்லை

எவ்வகையான் மலரமுதை (Nectar) இவை சுரக்கின்றன இவற்றை மகரந்த சேர்க்கை செய்யவரும் பூச்சி இனங்களுக்கும் இவற்றிற்குமான தொடர்பு ஆகியவற்றை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன 

இரையை பிடித்தல்

வீனஸ் தாவரங்களின் பொறிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இரை தேவைப்படும் சமயங்களில் காற்றில் ஆவியாகி கலந்து மணம் பரப்பும் சில வேதிப்பொருட்களை இந்த தாவரம் சுரந்து பூச்சிகளைக் கவர்ந்து அவற்றை அருகில் வரவழைத்து பொறியில் பிடித்து உண்ணுகின்றன. 

சில வீனஸ் தாவரங்கள் நறுமணமும் சுவையும் மிக்க வேதிப்பொருட்களோடு செந்நிற நிறமிகளையும் சுரந்து பூச்சிகளை கவருகின்றன

இவற்றின் பொறிகளின் உட்புறம் மயிரிழைகள் போன்ற   கூர்மையான நீட்சிகள் காணப்படும்.   இந்த உணர் நீட்சிகள் வெளிப்புற தொடுகைக்கு   உடன் எதிர்வினை ஆற்றும்  thigmonasty எனப்படும் ஒரு செயலினால் இரைகளின் உடல் பட்டதும் உடனே வெகு விரைவாக மூடிக்கொண்டு இரையை தப்ப முடியாமல் இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன.

 ஊசி போன்ற கூரிய இழைகளில் இரையின் முதல் தொடுகைக்குபின்னர்  பொறிகள் துடிப்புடன் காத்திருக்கின்றன இரண்டாம் தொடுகை நிகழ்ந்த மறுகணம் பொறிகள் மூடிக்கொள்கின்றன. இந்த தொடுகைகள் இரண்டும் முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்தால் மட்டுமே பொறிகளில் இரை சிக்கிக்கொள்ளும். உள்ளே மாட்டிக்கொண்ட இரை வெளியேறச் செய்யும் முயற்சிகளில் உண்டாகும் தொடரும் தொடுகைகளில் ஐந்தாவது தொடுகையில் பூச்சிகளை செரிக்கும் நொதிகள் பொறிகளில் உருவகின்றன

ஒரு வினாடியில் பத்தில் ஒருபங்கு கால அளவில் பொறிகள் மூடிக்கொள்கின்றன. பெரிய இரைகள் சிக்கிக்கொள்ளுகையில் 20 வினாடிகளில் பொறிகள் மூடிக்கொள்ள முடியாவிட்டால் இரையை பொறிகளை திறந்து இவை விடுவிக்கின்றன  

இரை முழுவதும் செரித்தபின்னர் பொறிகள் மீண்டும் திறந்து அடுத்த இரைக்காக காத்திருக்கும்.·ஒருமுறை இரையை பிடித்து செரித்து சத்துக்களை எடுத்துக் கொண்டால் பின்னர் அடுத்த இரையை பிடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த தாவரங்கள் பொறியில் சிக்கிய இரைகளை முழுவதுமாக செரிக்க 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.

பொதுவாக ஒரு தாவரத்தை பூச்சிகள் தொடுகையில் அவற்றால் உண்ணப்படும் ஆபத்தை தெரிவிக்கும் ஜாஸ்மோனிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சுரந்து தாவரங்கள் தங்களை பூச்சிகள் உண்ணுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள எதிர்வேதிப்பொருட்களை சுரக்கும். பரிணாம வளர்ச்சியில் பூச்சிகள் தாவரங்களை உண்ணுவதற்கு மாறாக பூச்சிகளை தாவரங்கள் உண்ண வேண்டி வந்தபோது இதே வேதிப்பொருள் சுரப்பை மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்கிறது இவற்றில் நடைபெற்ற பல ஆராய்ச்சிகளின் முடிவுகள். 

டார்வின் பொறிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மிகச்சிறிய பூச்சிகளை வீனஸ் தாவரம் விரும்பாததால் அவை வெளியேறிச் செல்ல வசதியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதினார். ஆனால் பிற்பாடு இக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டது. வீனஸ் தாவரம் மிக சிறிய உயிர்களையும் இரையாக்குகிறது.

 வீனஸ் தாவரங்களின் பொறிகள் பலமுறை இரையை பிடித்தபின்னரே காய்ந்து கீழே விழுகின்றன. மீண்டும் புதிய பொறிகளை அடிமட்ட கிழங்கிலிருந்து இவை உருவாக்கிக்கொள்ளும். இவற்றின் வாழ்நாட்களை மிகச்சரியாக கணிக்க முடியவில்லை எனினும் வீனஸ் தாவரங்களின் வாழும் காலம் 20 வருடங்களுக்கும் மேல் என்றே கருதப்படுகிறது. பிற தாவரங்களை போலவெ வீனஸ் தாவரமும் சிறிய அளவில் ஒளிச்சேர்க்கை செய்தும் உணவை தயாரிக்கின்றது. மேலதிகமான சத்துக்களை இரையை பிடித்து உண்ணுவதால் பெறுகிறது

பல ஊனுண்ணித்தாவரங்கள் பிரத்யேக இரைகளை தேர்வு செய்கின்றன. வீனஸ் ஃப்ளை ட்ராப், வண்டுகள் சிலந்திகள் மற்றும் மெல்லுடலிகளையே  அதிகம் இரையாக்குகின்றது.  வீனஸ் தாவரத்தின் ஊன் உணவில் 33%  எறும்புகள், 30% சிலந்திகள், 10% வண்டுகள் மற்றும் 10% வெட்டுக்கிளிகள் இருக்கின்றன. இவற்றின் ’மெனு’வில்  5% மட்டுமெ பறக்கும் பூச்சிகள் உள்ளன

இரையின் அளவு

இலைப்பொறிகளின் அளவை காட்டிலும் சிறியதாக இருக்கும், பொறிகளின்  உள்ளே மாட்டிக் கொள்ளும் அளவிலான இரைகளையே இவை தேர்வு செய்கின்றன.ஒருபோதும் பொறிகளைக்காட்டிலும் பெரிதான இரைகளை இவை முயல்வதே இல்லை.  

அலங்கார செடிகளாக வீனஸ்

இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே பல ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் (Thomas Jefferson)  பாரீஸில் 1786ல் தங்கி இருந்தபோது வீனஸ் தாவரங்களை சேகரித்தார். மேலும் இவற்றின் விதைகளையும் கடல்வழி அனுப்ப ஏற்பாடுகளை  செய்துவிட்டே பாரீஸிலிருந்து புறப்பட்டார், தாமஸ் வீனஸை ’’சென்சிடிவ் தாவரம்’’ என்று கடிதங்களில் குறிப்பிட்டார்.  தாவரங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த பச்சை கட்டைவிரல்காரர் என்று அழைக்கப்பட்ட மாமன்னர் நெப்போலியனின் மனைவி ஜோஸபைன் வீனஸ் தாவரங்களை தனது  வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார் 

  தொடர்ந்து நடைபெற்ற தாவர பெருக்க சோதனைகளில் பலவிதமான வீனஸ் தாவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அவற்றில் மாபெரும் பொறிகளை கொண்டவைகளும், கூடுதல் பொறிகளை கொண்டவைகளும் அடங்கும்.  அவ்வாறான பிரபல  வகைகளுக்கு Sawtooth, Big Mouth மற்றும் Red Piranha போன்ற பெயர்கள் இடப் பட்டிருக்கின்றன.

புதிய வீனஸ் வகையான ஜஸ்டினா டேவிஸின்  (Justina Davis) பெயருக்கு பின்னால் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.வடக்கு கரோலினாவின் கவர்னர் ஒருவர் தனது 73வது வயதில் இரண்டாவது மனைவியாக ஜஸ்டினா டேவிஸ் என்னும் 15 வயது பெண்னை மணம் புரிந்துகொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன

ஜஸ்டினாவின் இளமையை கருத்தில்கொண்டு பொறிகளின் உட்புறம் ஒருபோதும் சிவப்புநிறம் கொண்டிராத, முழுத்தாவரமும் எப்போதும் பசுமை நிறைந்திருக்கும் வகைக்கு ஜஸ்டினா டேவிஸ் என பெயரிடப்பட்டது. இது முழு முதிர்ச்சி அடைந்த பின்னும் இளமையாவே தோற்றமளிக்கும் வகை

இவை சதுப்பு நிலங்களில் வளருபவை என்றாலும் மிக அதிகமாக நீர் தேங்கி இருக்கையில் வீனஸ் தாவரங்களின்  வேர்கள் அழுகி விடும், தொட்டிகளிலும், குடுவைத்தோட்டங்களிலும்(Terrarium)  இவற்றை வளர்க்கலாம். எதில் வளர்த்தாலும் மண்ணில் அமிலச்சத்து இருப்பது அவசியம்

இவை நச்சற்றவை எனவே வீடுகளில் வளர்க்கலாம், வீடுகளுக்கு வெளியில் வளர்கையில் இவை தனது இரையை தானே தேடிக்கொள்கின்றன. வீடுகளின் உள்ளே அலங்காரத் தாவரங்களாக வளர்க்கப்படுகையில் பிற தாவரங்களுக்கு நீரூற்றுவதைப் போல, ஒளி கிடைக்க வசதி செய்வதைப்போல வீனஸ் தாவரங்களுக்கு பூச்சிகள் இரையாக கிடைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.வீடுகளில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களுக்கு,  மாதமொரு முறையாவது  பூச்சிகளை அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை மெல்ல அழிந்துவிடும்

பூச்சிகளல்லாத பிற இறைச்சி இரைகள் வீனஸ் தாவரங்களை கொன்று விடும். மேலும் இறந்த பூச்சிகளை விட இவை உயிருள்ள இரைகளையே விரும்பும். 

 இவற்றின் குளிர்கால உறக்க நிலை சுமார் 10 மாதங்களுக்கு தொடரும்,  அலங்காரச் செடிகளாக இவற்றை வளர்ப்பவர்கள் மலர்கள் உருவானதும் மலர்களை அகற்றி விடலாம்.  இனப்பெருக்கத்துக்கு இத்தாவரம் செலவழிக்கும் ஆற்றலை இதன் மூலம் சேமிக்கலாம்

கடுங்குளிர் காலத்தில் கருகி மடியும் இவை மீண்டும் துளிர்த்து வளரும் எனவே அவை இறந்து விட்டதாக கருதி அவற்றை பிடுங்க வேண்டியதில்லை

இயற்கையாகவே வளம் குறைந்த நிலப்பகுதிகளில் வாழ்வதால் வீனஸ் தாவரங்களுக்கு அதிக உரம் இடுவதும் அவற்றை  கொல்லும்.

சூரிய ஒளி சுமார் 6 மணி நேரங்களுக்கு இவற்றிற்கு தேவைப்படுகிறது இதற்கும் குறைந்த அல்லது அதிகமான கால அளவில்  இருக்கும் ஒளி இவற்றின் வளர்ச்சியை பாதித்து தாவரத்தின் இலைகளை உதிரச்செய்துவிடும்.

இவை குளிர்ந்த காலநிலையில் நன்கு வளரும் ஆனால் அதிக குளிரும் அதிக வெப்பமும் இவற்றை அழித்துவிடும்.

அமேஸான் வீனஸ் தாவாங்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறது.திசு வளர்ப்பில் உருவாக்கப்பட்ட  ஒரு வீனஸ் தாவரம் 5 டாலர்களுக்கு கிடைக்கிறது.

பாதுகாக்க வேண்டிய இனம்

அரிய வகை தாவரங்களின் அழிவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1976ல் தெற்கு கரோலினா பாரம்பரிய அறக்கட்டளை (The South Carolina Heritage Trust) உருவாக்கப்பட்டது. தெற்கு கரோலினா இயற்கை வளங்களுக்கான் துறை (South Carolina Department of Natural Resources) அதன் கட்டுப்பாட்டில்  83,000  ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது. அந்நிலத்தில் சுமார் 3,000 இயல் தாவரங்கள் இருக்கின்றன அவற்றில் வீனஸ் தாவரங்கள் உள்ளிட்ட  700 வகைகள்  மிக மிக அரியவை. 2005ல் வீனஸ் தாவரம் வடக்கு கரோலினாவின் மாநில மலராக அடையாளப்படுத்தப்பட்டது.  

மரபணு மாற்றங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அலங்கார வீனஸ் தாவரங்கள் பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டு வீடுகளில் வளருகின்றன   இவற்றில் ‘Akai Ryu மற்றும் ‘South West Giant’ ஆகிய வகைகள் ராயல் தோட்டக்கலை தங்க விருதை பெற்றுள்ளன

பசுங்குடில்களில் இவை சாகுபடி செய்யப்படுகின்றன எனினும் இயற்கையான வாழிடங்களில் 1979 லிருந்தவற்றின் எண்ணிக்கையில் தற்போது 7 சதவீத தாவரங்கள் மட்டுமே இருக்கின்றன 

வாழிட அழிப்பும் வீனஸ் தாவரங்களின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.சமதளமான நிலப்பரப்பும் அமிலத்தன்மை உள்ள சதுப்பு மண்ணும் நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் தான் இவை செழித்து  வளர்கின்றன சூழல் மாசு மற்றும் விவசாய நிலங்களாக இயற்கை வாழிடங்கள் மாற்றபடுவது ஆகியவற்றால் வீனஸ் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கரோலினாவின் மக்கள் தொகைப்பெருக்கத்தினால் சாலை உருவாக்கமும் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக இவற்றின் வாழிடங்கள் குறைந்து கொண்டே வருகின்றது.வடக்கு கரோலினாவில் வீனஸ் தாவரங்கள் சிறப்பு கவனம் கோரும் தாவரங்கள் என்னும் பிரிவில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன

வீனஸ் செடி அழியும் தாவரங்களில் ஒன்றாகவும் பாதுகாக்கபட வேண்டிய இனமாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால்  சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது.

இந்த தாவரங்களின் அழிவிற்கு இவற்றை சட்டவிரோதமாக சேகரிப்பதும் முக்கிய காரணமாயிருக்கிறது. பொது இடங்களில் இயற்கையாக வளரும் வீனஸ் தாவரங்களை  சேகரிப்பது சட்டப்படி குற்றமென வடக்கு கரோலினாவில் 1958லிருந்தே அறிவிக்கப்பட்டிருக்கிறது . பசுங்குடில்களில்  ஆயிரக்கணக்கான வீனஸ் தாவரங்கள் வளர்க்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டிருக்கிறது. 

எனினும் 2016 நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை பசுங்குடில்களில் வளர்க்கப்படும் வீனஸ் தாவரங்களை காட்டிலும் இயற்கையான வாழிடங்களில் வளரும் தாவரங்களுக்கான தேவையே அதிகம் என்கிறது. வடக்கு கரோலினாவில் இப்போது வீனஸ் தாவரங்களை சட்டவிரோதமாக சேகரிப்பது கடும் தண்டனை குரிய பெருங்குற்றமாக கருதப்படுகிறது (felony). 

2014லிருந்து அமெரிக்காவில் வீனஸ் செடிகளை  அனுமதியின்றி எடுப்பது 25 மாத சிறைத்தண்டனைக்கான குற்றமாக கருதப்படுகிறது. . கடத்தல்காரர்கள் இயற்கையான வாழிடங்களில் இருப்பவற்றில் மிகப்பெரிய தாவரங்களையே தேர்வு செய்து எடுக்கிறார்கள். எனவே அவற்றிலிருக்கும் ஏராளமான விதைகளும், அவ்விதைகளிலிருந்து முளைக்கவிருக்கும் நூற்றுக்கணக்கான அடுத்த சந்ததி தாவரங்களுக்கும் சேர்த்தே கூடுதல் சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது

உள்ளங்கையிலும் சட்டை பாக்கெட்டுகளிலும் கூட பல வீனஸ் தாவரங்களை மறைத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இவற்றின் கள்ளத்தனமான சேகரிப்பை கண்டுபிடித்து தடை செய்வது மிக கடினமாக இருக்கிறது.

இவற்றை வாங்குபவர்களுக்கு அவை இயற்கையான வாழிடங்களிலிருந்து திருடிகொண்டு வரப்பட்டதா அல்லது பசுங்குடில்களில் வளர்க்கப்பட்டதா என்று தெரியாததால் அவை எளிதில் சந்தைப்படுத்தப் படுகின்றன’

சர்வதேச அளவிலான வீனஸ் தாவரக் கடத்தல்களும் நடைபெறுகின்றன. பால்டிமோர்- வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பெரணிகள் என்னும் பெயரில் இருந்த பெட்டிகள் சோதனையிடப்பட்ட போது அவற்றில் 9000 வீனஸ் தாவரங்கள் இருந்தன.

இவை பொதுவாக மரங்களின் அடுக்குகளுக்கடியில் அவ்வப்போது காட்டு நெருப்பு உண்டாகும் இடங்களில் செழித்துவளர்கின்றன. குறிப்பாக விதைகள் முளைக்க நெருப்பு எரிந்த பின்னர் இருக்கும் சாம்பல் மண் மிகவும் அவசியமாக இருக்கிறது. நெருப்பின் வெப்பம் இவற்றின் வளர்ச்சிக்கு நேரடியாக தேவைப்படுகிறது. காட்டு நெருப்பு மனிதர்களுக்கு ஆபத்தேற்படுத்தும் என்பதால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுவதும் இவற்றின் அழிவுக்கு காரணமாயிருக்கிறது.  

இவை கடல்மட்டத்திலிருந்து 2-4மீ உயரத்தில் இருப்பதால் புயல் மழை போன்றவற்றினால் கடல்மட்டம உயருகையில் இவை அழிகின்றன.

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் வீனஸ் தாவரங்களின் இயற்கை வாழிடங்களை GPS  கருவி மூலம் கணக்கெடுத்தது. 1970களிலிருந்து நடைபெற்ற கணக்கெடுப்புக்களோடு ஒப்பிட்டதில் சுமார் 70 சதவீத வாழிடங்கள் இப்போது அழிந்துவிட்டிருப்பதாக  முடிவுகள் தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் அவற்களது வாழ்வில் ஈடுபட்டிருந்த அனைத்து ஆய்வுகளிலும் மனம் உடையும் ஒரு ஆய்வு இதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

இந்த நிலைமை தொடர்ந்தால்  வீனஸ் தாவரம் புராணங்களிலும் காப்பியங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்றிருந்த ஒரு  தாவரமாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது.

வீனஸ் தாவரத்தின் சாறு கார்னிவோரா  (Carnivora) என்னும் பெயரில்  மூலிகையாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் எய்ட்ஸ் மற்றும் சருமப்புற்று நோய்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இவை அந்நோயை குணமாக்குவதற்கான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இருக்கும் இடத்திலிருந்தே தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து உயிர்வாழவும் தாவரங்கள் பலவகையான, மிக சாமர்த்தியமான தகவமைப்புகளை கொண்டிருக்கின்றன. மற்றொரு  உதாரணமாக புகையிலை செடிகளின்  இலைகளை உண்ணும் கம்பளிப்பூச்சிகளுக்கு நிகோடின் தசைபலவீனத்தை உடனடியாக உருவாக்குவதை சொல்லலாம்.  தசை பலவீனமடைவதால் அவை புகையிலை உண்ணுதலை தொடர்வதில்லை

இது போன்ற தாவரங்களின் சிறப்பு தகவமைப்புகள் ஆச்சர்ய மூட்டுபவை. ஒரு தாவரத்தின்  95% இலைகளை நீக்கிவிட்டாலும் அவை மீதமிருக்கும் இலைகளைக் கொண்டே உணவு தயாரித்து, உயிர்வாழ்ந்து இனப்பெருக்கமும் செய்யும். நம்மைக் காட்டிலும் சூழல் தகவமைப்பு கொண்டவை அவை. தாவரங்கள் மனிதர்களைக் காட்டிலும்  சூழலை மிக நுண்மையாக கவனித்து அவற்றின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வை கண்டுபிடித்து விடுகின்றன. 

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதா? மூளை என்னும் அமைப்பு இருக்கிறதா? நரம்பு மண்டலம் இருக்கிறதா? எப்படி அவற்றை உயிருள்ளவை என சொல்ல முடியும் போன்ற கேள்விகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. மனிதர்களின் மூளை, நரம்பு மண்டலம் இவற்றுடன் மட்டும் தாவரங்களை ஒப்பிடாமல்   இப்போது பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதிலும் மூளை இல்லை நரம்பு மண்டலம் இல்லை ஆனால் ஒரு வலைப்பின்னல் போல அபாரமாக செயல்படும் அவற்றின் சாமார்த்தியங்களை நாம் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறோம், அதுபோலத்தான் இந்த தாவரங்களின் நுண்ணறிவும்,  

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து தாவரங்கள் கொண்டிருக்கும் அறிவைத்தான் இந்த நூற்றாண்டில் மனிதர்கள் மிகத்தாமதமாக கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாவரங்களும் விலங்குகளும்  நம்மைக்காட்டிலும் கீழ்நிலை உயிரிகள் அவற்றால் நம்மைப்போல சிந்திக்கும் தரமற்றவை என்று இன்னும் நம்புபவர்கள் டேவிட் அட்டன்பரோவின் BBC க்கான இந்த 

காணொளியை காணலாம். இதில்   வீனஸ் தாவரங்களின் இரை பிடிக்கும் பொறியமைப்பும், செயல்பாடுகளும்  துல்லியமாக காண்பிக்கப்படுகிறது.

  • ஏறுகொடியொன்று பற்றுக்கம்பிசுருள்களைக்கொண்டு ஆதரவாக  அருகிலிருக்கும் கம்பியை பற்றிக்கொண்டு மேலேறி வளர்வதை காட்டும் இந்த https://youtu.be/5NvlkEqMtVY காணொளியையும் பார்க்கலாம்.

1. https://logamadevi.in/2045