1818 ம் ஆண்டு மே மாதத்தில் சுமத்ரா தீவுகளுக்கு வந்திருந்த தேடல் பயணக்குழுவினருடன்   சுமத்ராவின் பிரிட்டிஷ் கவர்னர் த  திரு ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் ஒரு காலை நடைக்கு புறப்பட்டிருந்தார். அவருடன்  தாவரவியலாளரான மனைவி சோபியாவும், மருத்துவரும் இயற்கையார்வலருமான திரு ஜோசப் அர்னால்டும் இணைந்துகொண்டனர். (Sir Stamford Raffles,  Lady Sophia Raffles &  Dr Joseph Arnold)

Sir Stamford Raffles

காட்டுப்பயணங்களில் உடன் வரும் பழங்குடியினப் பணியாள் ஒருவர் ஒரு மாபெரும் மலரை அன்று காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் ஆர்வமுத்துடன் மூவரும்  மன்னா ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தனர். குழுவின் பிற அங்கத்தினர் அவர்களுக்கு பின்னே வெகு தூரத்தில் அப்போதுதான் நடையை துவங்கி இருந்தனர்.

Sophia hull

பழங்குடியின பணியாள் அடர்ந்த மரங்களினடியில் ஒரு மாபெரும் மலரொன்றை காட்டியபோது ஜோசப் அதிர்ச்சியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டர். பொதுவில் மலரென்று சொல்லப்படும் வரையறைகளுக்குள் அடங்காத மாபெரும் இரத்தசிவப்பு மலரொன்று அங்கு இதழ்விரித்து கெடுமணம் வீசிக்கொண்டு மலர்ந்திருந்தது. அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்ததுபோல ஒரு செடியில் இலைகளும் கிளைகளும் சூழ இருக்கும் சாதாரண மலர்களை போலல்லாது வெறும் மலர் மட்டுமே தண்டுகளோ இலைகளோ வேர்களோ இன்றி இருந்தது. முழுத்தாவரம் என்பதே மலர்தான் என்பது அதுவரை அவர்கள் காணாதது கற்பனையிலும் கண்டிருக்காதது

Dr Joseph Arnold

அவருக்கு சற்று பிந்தி வந்த ஸ்டாம்ஃபோர்ட் மற்றும் சோபியாவும் கூட ஆச்சர்யத்தில் அப்படியே உறைந்து போனார்கள்.  மலரின் மீது பெருங்கூட்டமாக சிறு பூச்சிகள் பறந்துகொண்டும் முட்டையிட்டுக் கொண்டும் இருந்தன. அப்பழங்குயினர் அம்மலரை சாத்தானின் வெற்றிலை பெட்டி என அழைத்தார்கள்.

கெட்டுப்போன மாட்டிறைச்சியின் கெடுமணம் கொண்டிருந்த அந்த மலர் 1.5 மீ சுற்றளவுடன், சுமார் 12 கிலோ எடையுடன் இருந்தது.உலகின்  மிகப்பெரிய மலரான  அதன் பெயர் பின்னர்  ரெஃப்லேசியா அர்னால்டி என அதை முதன் முதலில் பார்த்த, அடையாளப்படுத்திய ஜோசப் அர்னால்டின் பெயரில் சிற்றினப்பெயரும்,  சுமத்ரா கவர்னரான ராஃபில்ஸின் பெயரில் பேரினமும் கொண்ட Rafflesia arnoldi  அழைக்கப்படுகிறது

இதன் தாவரக்குடும்பம் ரெஃப்லேஸியேசி( Rafflesiaceae) அர்னால்டு அம்மலரை அப்போதே  வண்ணச்சித்திரமாக வரைந்து, அம்மலரை பற்றிய குறிப்புக்களையும் அங்கேயே எழுதி பத்திரப்படுத்திக் கொண்டார். அப்பழங்குடிப்  பணியாளிடம்  அம்மலரை கவனமாக எடுத்து பாதுகாப்பாக வைக்கும்படி  பணித்தார். பத்திரப்படுத்தியும் அம்மலர் சிலநாட்களிலேயே உலர்ந்தும், பூச்சித்தாக்குதலால் அழிந்தும் போனது.

 துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களில்  சுமத்ரா தீவில் உண்டான நோய்த் தொற்றினாலும் காய்ச்சலினாலும்  ஜூலை 1818ல்  அர்னால்ட் மறைந்தார்.    இந்த மலரை கண்டுபிடித்ததை குறித்து திரு ரேஃபில்ஸ் ராயல் சொசைட்டிக்கு 13 ஆகஸ்ட் 1818ல் எழுதியனுப்பினார். அக்கடிதத்தில் அர்னால்டின் மறைவையும் ரேஃபில்ஸ் குறிப்பிட்டிருந்தார். பிற்பாடு அர்னால்டின் சித்திரங்களும், குறிப்புக்களும் இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு இங்கிலாந்தின்   பிரபலமான இயற்கை ஆர்வலரான ராபர்ட் பிரவுனிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

ராபர்ட் பிரவுன் 1820ல் லண்டன் லின்னேயஸ் சொசைடியில் ’’ரெஃப்லேஸியா என்னும்  ஒரு புதிய பேரினம்’’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்.அக்கட்டுரையில்தான் இம்மலருக்கு   அர்னால்ட் மற்றும்  அந்த தேடல் பயணத்துக்கு நிதி உதவி அளித்த ரேஃபில்ஸின் பெயர்களை இணைத்து அறிவியல் பெயர் வைக்காலமென்னும் பரிந்துரையையும் அளித்திருந்தார். 

இக்கண்டுபிடிப்பிற்கு   20 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 1794ல் இப்படியான ஒரு மாபெரும் மலரை ஜாவா தீவுகளில்  பிரெஞ்சு மருத்துவர் அகஸ்டே என்பவர் கண்டறிந்திருந்தார்.அது Rafflesia patma, என்று  பிற்பாடு பெயரிடப்பட்டது.

  ரெஃப்லேஸியா சுமத்ரா, ஜாவா மழைக்காடுகளில், மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வேர் ஒட்டுண்ணி தாவரம். குறிப்பாக டெட்ராஸ்டிக்மா என்னும் வகை மரக்கொடிகளை (Tetrastigma woody vines.)ஒட்டியே இவை உயிர் வாழும்.

 மிக அரிய தாவரமன இவற்றை ஆய்வகங்களில்  உருவ]வாக்கவும் மலர்களை பாதுகாக்கவும் முடியாது. உலகின் மிகப்பெரிய அதிக எடைகொண்ட மலரான ரெப்லேஸியா. 9 லிருந்து 12கிலோ எடைகொண்டிருக்கும். இந்த தாவரத்துக்கு வேர்களோ இலைகளோ தண்டுகளோ இல்லாமல் மரக்கொடிகளில் அரும்புகளாக முளைத்து பின்னர் பெரிதாக மலரும்

பொதுவாக மலரில் ஆண் பெண் இரு இனப்பெருக்க உறுப்புக்களும் இருக்கும். அரிதாக ஆண் மலரும் பெண் மலரும் தனித்தனியாகவும் மலருவதுண்டு.இது இறைச்சி மலர் பிணமலர் என்று பல மொழிகளில் அழைக்கப்படுகிறது.( corpse flower) ஐந்து சதைப்பற்றான இதழ்கள் ஒரு மீட்டர் சுற்றளவில்  பெரிதாக மலர்ந்திருக்கும்.இதழ்களில்  மங்கிய வெள்ளை நிறத்தில் பெரிய திட்டுக்களும் புள்ளிகளும் காணப்படும்.

 முழுவதும் மலர்ந்து 7 நாட்களுக்கு வாடாமல் இருக்கும் இவற்றை தேடி வரும் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சி இனங்களை கவர கெடுமணத்தை பரப்பும்.

சிவப்பு நிறம் கொண்ட மலரின் நடுப்பகுதி ஊதா கலந்த சிவப்பில் இருக்கும்/ கிண்ணம் போன்ற மத்திய அமைப்பில் இனப்பெருக்க உறுப்புகள் அமைந்திருக்கும்.இதன் கனியில் பிசுபிசுப்பாக ஒட்டும் தன்மையுள்ள விதைகள் இருக்கும். இவற்றை கொறித்துண்ணும் சிறு விலங்குகளால் இவை இயற்கையாகவே பரவி காடுகளில் வளரும்.

அர்னால்டினால் கண்டறியப்படுவதற்கு முன்னரே பழங்குடியினர் இம்மலரை மருத்துவ சிகிச்சையில் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். மகப்பேற்றிற்கு பிறகான கருப்பை சுருங்குதலுக்கும் ரத்தப்போக்கை நிறுத்தவும் இம்மலரின் அரும்புகளை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

 மலேய பழங்குடியினர் பாலுணர்வு ஊக்கியாக இம்மலரின் சாற்றை பருகினர்.

தாய்லாந்து பழங்குடியினர் இம்மலரின் சதைப்பற்றான இதழ்களை நறுக்கி உண்ணுகின்றனர். மலேசியாவின் சில பகுதிகளில் இதை சாத்தானின் மலரென்று அதன் கெடுமணத்தினால் கருதி மங்கல நிகழ்வுகளில் பயன்படுத்த கூடாத மலரென்று கருதப்படுகிறது.

1990களில் தாய்லாந்தின் மூன்று தேசிய மலர்களில் ரெஃப்லேஸியாவும் ஒன்றாக வைக்கப்பட்டது..

அரிய வகை மலரான இவற்றின் எண்ணிக்கை இப்போது மிக குறைந்து விட்டதால் தாய்லாந்து அரசு அந்நாட்டின் பழங்குடியினரை இம்மலரின் பாதுகவாலர்களாக  அறிவித்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

சிங்கப்பூர் தேசிய பூங்காவில் ரேஃப்லேசியாவின்   சிற்றினங்கலான  Rafflesia hasseltii மற்றும்  Rafflesia tuan-mudae  ஆகியவற்றின் இரு உலர் மலர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  1985ல் ரெஃப்லேஸியா சார்ந்து வளரும் மரக்கொடியான Tetrastigma lanceolarium வை வளர்த்து அதனருக்கில் ரெஃப்லேஸியாவின் விதைகளை வளர்க்கும் முயற்சி சிங்கப்பூரில் முன்னெடுல்லப்பட்டது எனினும்   அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.

ரெஃப்லேஸியாவின் பிற மொழிபெயர்கள்: Bunga patma, Yak-yak, Patma raksasa, Patma kemubut, Krubut, Pakma (Sarawak), Kukuanga (Sabah), Wusak-tombuakar (Tambunan), Ambun ambun, Kemubut (Sumatra), Kerubut, Petimun Sikinlili (Sumatra). Devil’s betel box, sun toadstool, stinking corpse lily.

 2001 ல் அதிகார பூர்வமாக ரெஃப்லேஸியாவின் சிற்றினங்களும், அவை கண்டுபிடிக்கப்பட்ட் ஆண்டுகளும் வெளியாகின

1821: Rafflesia arnoldi, Sumatra, Borneo.

1841: Rafflesia manillana, Leyte Island, Philippines.

1850: Rafflesia rochussenii, Sumatra, Java.

1868: Rafflesia tuan-mudae, Borneo.

1879: Rafflesia hasseltii, Sumatra.

1884: Rafflesia schadenbergiana, Mindanao, Philippines

1910: Rafflesia cantleyi, Peninsular Malaysia

1918: Rafflesia borneensis, Borneo.

1918: Rafflesia ciliata, Borneo.

1918: Rafflesia witkampii, Borneo.

1984: Rafflesia gadutensis, Sumatra.

1984: Rafflesia keithii, Borneo.

1984: Rafflesia kerrii, Thailand and Peninsular Malaysia.

1984: Rafflesia micropylora, Sumatra.

1984: Rafflesia pricei, Borneo.

1989: Rafflesia tengku-adlinii, Borneo

இதன் ஒரு சிற்றினமான R. magnifica மிக ஆபத்தில் இருக்கும்  அழிந்து வரும் இனமாக சிவப்பு பட்டியலிட பட்டிருக்கிறது. ( IUCN Red List of Threatened Species)