லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 6 of 24)

துருவத்தாவரங்கள்

 தாவரங்கள் என்று  நமக்கு தெரிந்தவை எல்லாமே இலையும் கிளையும்  மலரும், வேரும் கொண்ட பெருமரங்களும், பச்சைக் கொடிகளும் பசுங்கத்திகளென இலை கொண்டிருக்கும் புற்களும், புதர்களும் செடிகளும்தான், ஒரு சிலரே பாசிகளும் பெரணிகளும் அடங்கிய  பூக்காத கீழ்நிலைத்தாவரஙகளை அறிந்திருப்பார்கள். துருவக்கரடிகளையும், பென்குவின்ப றவைகளையும், உறைபனிநீரில் மீன்பிடிக்கும் எஸ்கிமோக்களையும் மட்டுமே நம்மில் பலர் துருவப்பகுதியின் வாழ்வாக அறிந்திருப்போம் ஆனால் கடுமையான குளிர், அதிக காற்று மற்றும் மிகக் குறைந்த ஈரப்பதம் கொண்டிருக்கும் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில்  -125.8 டிகிரி பாரன்ஹீட் வரை  வெப்பநிலை குறைவாக பதிவு செய்யப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலிலும், தாவர -விலங்கு வாழ்க்கை  இருக்கிறது. 

ஆர்க்டிக் (Arctic) என்பது பூமியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். இது தென் முனையில் உள்ள அண்டார்டிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக் பகுதியானது, ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்கின் பகுதி), ரஷ்யா, அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை  உள்ளடக்கியது.ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது. இங்கு பொதுவாக பனிப்பகுதியில் வாழத் தகுதியான உயிரினங்களே (மனிதர் உட்பட) வாழுகின்றன. ஆர்க்டிக் பழங்குடி மக்களின் வாழ்க்கை குளிர் பிரதேசங்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது. ஆர்க்டிக் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான ஆர்க்டிகோஸ் என்பதிலிருந்து  “கரடிக்கு அருகே,,ஆர்க்டிக், வடக்கே”என்னும் பொருளில் வைக்கப்பட்டது. 

 பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதியான அண்டார்டிகா (Antarctica) பூமியின் தென் முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதன் காரணமாக கண்டம் முழுவதும்  பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். வருடத்தின்  ஆறு மாதங்கள் சூரிய  வெளிச்சமே இருக்காது. அண்டார்டிக்கா என்ற பெயர்  கிரேக்க மொழியில்   “ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான”, கரடி இல்லாத, “வடக்கிற்கு எதிரிடையாக” என்னும் பொருள்களை கொண்டிருக்கிறது.

 துருவப் பகுதிகளில் வாழ்க்கை நம்பமுடியாத அளவுக்கு கடினமாக இருக்கும். கடுமையான குளிர்ந்த காற்று நிலப்பரப்பு முழுவதும் சாட்டை போல் வீசி அடித்துக் கொண்டிருக்கும். மிக குறைந்த குளிர்கால வெப்பநிலை கொண்ட குளிர்கால இரவு பல மாதங்களுக்கு  நீடிக்கும். ஆனால் இந்த கடின, வறண்ட, வெற்று நிலப்பரப்புகளில் உயிர்கள் வாழ்கின்றன.

அண்டார்டிகாவின் பெரும்பகுதி  பனியால் மூடப்பட்டிருப்பதால், கண்டத்தின் நிலப்பரப்பில் 1 சதவிகிதம் மட்டுமே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. இச்சூழலில்  தாவரங்கள் தீவிர காலநிலையுடன் போராட பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.

துருவ நிலங்களில் இரண்டு முக்கிய தாவர மண்டலங்கள் காணப்படுகின்றன. தெற்கில், போரியல் காடுகளால் உருவாக்கப்பட்ட துணை ஆர்க்டிக் உள்ளது. வடக்கே இருக்கும் ஆர்க்டிக்கில் பொதுவாக துந்த்ரா தாவரங்கள் உள்ளன  ’’tundra’’  என்பது  “tunturia” – துந்திரியா அதாவது வெற்று நிலம் என்னும்  ஒரு திறந்த  சமவெளிக்கான ஃபின்னிஷ் வார்த்தையிலிருந்து உருவான சொல்.  துந்திரா காடுகள் உலகின் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கிறது. ஆர்க்டிக் துந்த்ரா வில் மணிக்கு 97 கி மீ வேகத்தில் பனிப்புயல் வீசும் 

ஆர்டிக்

ஆர்க்டிக் தாவரங்கள் குறைந்த வெப்பநிலை, கோடை காலத்தில் தொடர்ச்சியான பகல், வளமற்ற மண் மற்றும் நிரந்தரமாக உறைந்த நிலம், வலுவான, வறண்ட காற்று மற்றும் வீசும், பனிப்பொழிவு உள்ளிட்ட கடுமையான சூழலுடன் போராட வேண்டும். இத்தனையும் தாங்கி வளருவதால் இத்தாவரங்கள் பெரும்பாலும் வளர்ச்சி குன்றி காணப்படும் 

இத்தாவரங்களின் வாழ்வு சுழற்சிக்காலம் மிக குறுகியது. இவற்றில் annuals எனப்படும் வருடாந்தர தாவரங்கள் மிக அரிது, Perennials எனப்படும் பல்லாண்டுத்தாவரங்களே இங்கு அதிகம் வளரும் இவையும் சிறு வேர்க்கிழங்குகள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் மட்டுமே   செய்யும்

 பல தாவரங்கள் துருவப்பகுதியில் மோசமான காலநிலையில் இருந்து தப்பிக்க ஒன்றுடன் ஒன்று இணைந்து மெத்தை போல கூட்டமாக வளரும் துருவப்பகுதியில் வசந்த காலமன்பது பனிப்பொழிவும் உறைபனியும்  நிலத்தை மூடியிருக்கும் போதே தொடங்கும். மலர்தளும் விதை உருவாதலும் மிக குறுகிய காலத்திற்கு, சுமார் 6 வாரங்கள் வரை இருக்கும்.  ஒரே சமயத்தில் இத்தாவரங்கள் மலர்வது மிக சிறப்பான ஒரு நிகழ்வாக இருக்கும் பனிமூடிய வெற்று நிலம் திடீரென்று வண்ணமயமாக மாயவித்தையால் மாற்றப்பட்டது போல் காட்சி தரும்

மண்ணில்லாத பனி மூடிய ஆர்க்டிக் பனிப்பாலை வெற்று நிலம் என்று பார்வைக்கு தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் பல சிறு தாவரங்கள் இங்கு வாழ்வதை காணமுடியும்.

துந்திரா பகுதியில் லைக்கன்கள், mosses எனப்டும் பிரையோபைட்டுகள், சில சிறு பூக்கும் தாவரங்கள் ஆகியவை காணப்படும் பசும்புற்களும், குட்டை வில்லோ மற்றும் பிர்ச் மரங்களும் கூட  மேற்குப்பகுதியில் வளர்கின்றன. அலாஸ்காவின் வடக்குப்பகுதி வரையிலுமே இந்த தாவரங்களின் பரவலை காணமுடியும்.

துந்த்ரா காடு

பாறைகளில் திட்டுக்களாக பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் உயிரினங்களான லைக்கன்ஸ் வளர்ந்திருக்கும். இவற்றில் பஞ்சுபோல வளர்ந்திருக்கும் “rock tripe.” எனப்படும் கருப்பு லைக்கன்கள் உண்ணத்தகுந்தவை.இங்கு வரும் ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு  இவையே பல சமயங்களில் உணவாக இருந்திருக்கிறது பாறைப்பிளவுகளில் பிற பூக்கும் சிறு தாவரங்கள் வளரும். ஆர்க்டிக்கின் தெற்கு முனையில்  பாறைக்கூட்டங்களின் மறைவில் பனிப்புயலிலிருந்து பாதுக்காப்பாக  சிறு சிறு புதர்க்கூட்டங்களும் இருக்கும்.

கருப்பு லைக்கன்

 மித வெப்பம் இருக்கும் ஆர்க்டிக் பகுதிகளில் சிறு புதர்களும் வில்லோ, பிர்ச், ஜூனிபர் மற்றும் ஆல்டர் மரங்களும் வளர்கின்றன. தெற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் உயரமான வில்லோ, பிர்ச் மற்றும் ஆல்டர் மரங்கள் வளர்கின்றன. இவற்றையே எஸ்கிமோக்கள் விறகுக்காவும், பாய்களை பின்னவும் பயன்படுத்துகின்றனர்.

ஆல்டர்

துந்த்ரா தாவரங்களே இங்கிருக்கும் விலங்குகளுக்கும் உணவாகின்றன.தென் ஆர்க்டிக் பகுதியில் பனிமூடிய நிலத்தில்  பல வகை பழங்கள் ஏராளம் சிதறிக்கிடக்கும். இங்கு வசிக்கும் மக்கள் அதிகம் உண்ணுவது கருப்பு காக்காய் பழம்-  black crowberry (Empetrum nigrum), முகில் பழம்- cloudberry (Rubus chamaemorus), கருநீலப் பழம்- bilberry (Vaccinium uliginosum), மலைப்பழம்-  mountain cranberry (V. vitisidaea minus) ஆகியவற்றையே. காளான்களும் இங்கு பரவலாக வளர்கின்றன.

துணை ஆர்க்டிக் பகுதியில் துந்த்ரா காடுகளில் ஊசியிலை மர வகைகளும், அகன்ற இலைகள் கொண்ட பிர்ச் மரங்களும் உள்ளன.சுமார்  60  பூக்கும் தாவரங்கள் ஆர்க்டிக் பகுதியில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கில் மட்டும் சுமார் 1700  தாவரங்கள் வளர்கின்றன. இவற்றில் பூக்கும் தாவரங்களும், ,குட்டைப் புதர்களும், சிறு செடிகளும் பிரையோபைட்டுகளும், லைக்கன்களும் அடக்கம். இங்கிருக்கும் active layer எனப்படும் மிக மெல்லிய மண் படலத்தில் இவை வளருகின்றன.

active layer

 தடித்த இலைகளின் நீண்ட வடிவத்தினால் நாக்கு செடி என அழைக்கப்படும் குட்டை புதர் ஒன்று இங்கு வாழும் குழி முயல்களுக்கும் வேறு சில விலங்குகளுக்கும் உணவாகிறது

 பாஸ்க் செடி எனப்படும் சிறு மலர்களை உருவாக்கும் செடியும், கரடிப்பழம் எனப்படும் தடித்த தோல் போன்ற இலைகளும், கரடிகளுக்கு பிரியமான சிவப்பு பழங்களையும் கொடுக்கும் புதர்களும் (Bearberry) ஊதா நிறத்தில்  நட்சத்திரங்களைப் போன்ற சிறு மலர்களை கொடுக்கும் செடியான (Purple saxifrage), அழகிய கிண்ணம் போன்ற மலர்களுடன் ஆர்க்டிக் பாப்பி செடிகள்-Arctic poppy., பருத்திப்புல் எனப்டும்  வெண்ணிற புல் வகையான Cotton Grass,.இவற்றுடன்  Reindeer lichen எனப்படும் கொம்புகளைபொன்ற அமைப்புகளுடன் இருக்கும் துருவ கலைமான் லைக்கன்களும் அதிகம் இங்கு காணப்படும்.

ஆர்க்டிக்கை விட அண்டார்டிக்கா மிக குளிரான பிரதேசம் என்பதால் நிலம் எப்போதும் உறை பனிப்பொழிவால் மூடியே இருக்கும்.

10 இன்ச்களிலிருந்து 3 அடி ஆழம் வரை பனி உறைந்திருக்கும் நிலப்பரப்பை கொண்டிருக்கும் அண்டார்டிக்காவில் மரங்கள் வளர்வது சாத்தியமில்லை எனவே கீழ்நிலைத்தரங்களே இங்கு அதிகம் காணப்படுகிறன. அண்டார்டிகாவில் பாசிகள், பூஞ்சைகளுடன், சில பாக்டீரியாக்களும், 300 வகையான  பிரையோபைட்டுகளும், லைக்கன்கள் மட்டுமே சுமார் 800 வகைகளும், 300 பாசி இனங்களும் உள்ளன.

இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் டுஸாக் (Tussock) புற்களை கொண்டிருக்கும் சிறு சிறு புல்வெளி திட்டுக்களும் இங்கு உண்டு. 

டுஸாக் புல்வெளி

  சிறு சிறு  கூட்டங்களாக வளரும்  இழைப்புல் வகையும், அண்டார்டிக் முத்துச்செடியும் அண்டார்ட்டிக் பிரதேசத்துக்கு சொந்தமானவை. Antarctic hair grass (Deschampsia antarctica) & Antarctic pearlwort (Colobanthus quitensis). 

அண்டார்டிக் முத்துச்செடி

இரு துருவப்பகுதிகளிலும்  பொதுவாக வளரும் தாவரங்கள்:

  • Acaena magellanica (Prickly burr (or burnet)) 
  • Acaena tenera (Lesser prickly burr) 
  • Acaena tenera x magellanica (Hybrid prickly burr) 
  • Callitriche antarctica (Antarctic water-starwort) 
  • Colobanthus quitensis (Antarctic pearlwort) 
  • Colobanthus sublatus (Emerald bog) 
  • Deschampsia antarctica (Antarctic hair grass) 
  • Hymenophyllum falklandicum (Falkland filmy-fern) 
  • Montia fontana (Water blinks) 
  • Poa annua (Annual meadow-grass)2006ல் கண்டுஇடிகபட்ட 2006 February 20 by Jon Shanklin
  • Poa flabellata (Tussac-grass) 
  • Ranunculus biternatus (Antarctic buttercup)
  • Rostkovia magellanica (Short rush)

துருவ தாவரங்கள் அந்த கடினமான சூழலுக்கேற்ற சில தகவமைப்புக்களை கொண்டிருப்பதாலேயே அங்கு தொடர்ந்து வாழ்வை தக்க வைத்துக் கொள்கின்றன

அவை அளவில் மிக சிறியவைகளாகவும், மிக மிக குறைந்த வேர் தொகுப்பையும் கொண்டிருப்பதனால், மிக மெல்லிய மண் படலத்தில் அவற்றால் வாழ முடிகிறது

நிலத்துக்கு வெகு அருகில் குட்டையாகவே  அவை வளர்வதால், காற்றின் வேகத்தில் சேதமடையாமல் தப்பிக்கும்

இலைகளிலும் தண்டுகளிலும் மெல்லிய ரோமங்களை கொண்டிருப்பதால் பனிக்காற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பை அவை பெறுகின்றன

பனி பரப்பிற்கு அடியில் மறைந்து வாழ்வது, சூரிய ஒளி மலரின் மையத்துக்கு சென்று விடும்படி கிண்ணம் போன்ற மலரமைப்புக்களை கொண்டிருப்பது, சூரிய ஆற்றலை விரைவாக கிரகிக்கும்படி அடர் வண்ணங்களில் உடல் பாகங்களை கொண்டிருப்பது ஆகியவை இவற்றின் தகவமைப்புக்களில் முக்கியமானவையாகும்

 மேலும் பல தாவரங்கள் பல்லாண்டு வாழ்வதால் வெயில் காலத்தில் மட்டுமே பூத்து காய்த்து விட்டு  பனிக்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடுகின்றன.பெரும்பாலான தாவரங்கள் விதை உருவாக்கத்துக்கு ஆற்றலை வீணாக்காமல் பாலிலா இனப்பெருக்கத்தை  மெல்லிய சிறு வேர்க்கிழங்குகள் மூலம் செய்கின்றன.

தாவரங்களுடன் துருவ கலைமான்கள்,(ReinDeer), கஸ்தூரி எருதுகள்  (musk-oxen), ஓநாய்கள், துருவக்கரடிகள், (ஆர்க்டிக் பகுதியில்), முயல்கள் மற்றும் சில கொறித்துண்ணிகள் உள்ளிட்ட   48 வகையான விலங்குகள் துந்த்ரா காடுகளில் வாழ்கின்றன, சில பறவை இனங்களும்,பூச்சி இனங்களில் கருப்பு ஈ, மான் ஈ,கொசு,ஆகியவையும் உண்டு.  பென்குவின்களும், சீல்களும் அண்டார்டிக்காவில் வாழ்கின்றன,  

மில்லியன் கணக்கான மக்கள் ஆர்க்டிக்கில் வசிக்கின்றனர், ஆனால் 1959  உடன்படிக்கையால் அண்டார்டிகா கண்டம் அமைதி மற்றும் அறிவியலுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கான இடமாக  பாதுகாக்கப்படுவதால் இங்கு நிரந்தர மக்கள் இல்லை.  இருப்பினும் பல ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அவ்வப்போது ஆராய்ச்சிக்காக இப்பகுதியில் தற்காலிகமாக வசிக்கின்றனர். இந்தியாவின் தக்‌ஷிண் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி என்னும் இரு ஆய்வகங்கள் அங்கு அமைத்துள்ளன. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.அண்டார்டிக்காவின்  14,000,000 km2 பரப்பளவில் 2 சதவீதமே பனியால் மூடப்படாமல் இருக்கும். எனினும் அண்டார்டிகாவும் கூட காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு  உள்ளாகி இருக்கிறது.  ஆர்க்டிக் இதனினும்  கூடுதலாக, பாதிக்கப்பட்டுள்ளது.

தக்‌ஷிண் கங்கோத்ரி

கனிமச் சுரங்கப்பணி, திமிங்கல வேட்டை, அதிக மீன் பிடிப்பு, மாசு, ஓஸோன் அடுக்கு சேதம், ஓஸோன் ஓட்டை, பசுங்குடில் வாயு வெளியேற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய ஆபத்துக்களை துருவப்பகுதி யின் தாவரங்களும் விலங்குகளும்  சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துக்களால் பனிக்கரடிகள் மற்றும் பென்குவின்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது

மைத்ரி

அண்டார்டிக்காவின் நிலப்பகுதி பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய 6 நாடுகளுக்கு உரியதாக இருப்பதால் எந்த நாடு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்று பல ஆண்டுகள் குழப்பம் நீடித்தது. 1961 அண்டார்க்டிக் உடன்படிக்கை (Antarctic Treaty System-1961) மற்றும் பல  சர்வதேச உடன்படிக்கைகளின் வழியே சட்டங்கள் இயற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது. அதன்படி அன்டார்க்டிக்கா வின் அனைத்து சுரங்கங்களும் தடைசெய்து, அண்டார்டிக்கா “சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை பிரதேசம்” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஆய்வுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடக்கின்றன. 

அண்டார்டிகா

# Home

ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் # Home  ஒரு நல்ல நிறைவான, குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய  மலையாளத் திரைப்படம்..

இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நேஸ்லென் கே. காஃபூர்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம் ரோஜின் தாமஸ், தயாரிப்பு ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் பேனரில் விஜய் பாபு,  இவரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ராகுல் சுப்ரமணியன், ஒளி இயக்கம் நீல் டி’ சுன்ச்சா.

ஆலிவர் ட்விஸ்ட்டாக இந்திரன்ஸ் அவரின் அழகிய குடும்பமே கதைக்களம் மனைவி குட்டியம்மாவாக மஞ்சு பிள்ளை, ஒரு வெற்றிப்படம் கொடுத்து திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கிவிட்டு இரண்டாவது ஸ்கிரிப்டுக்காக முயன்று கொண்டிருக்கும் மூத்த மகன் ஆண்டனியாக ஸ்ரீநாத் பாஷி, எந்நேரமும் எதையாவது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டே இருக்கும் vlogger பதின்மவயது இளையவன் சார்லஸாக நேஸ்லென் கே. காஃபூர்

 இளையோரின்  உலகில் தானும் நுழைய முயன்று, இயலாமையும் தன்னிரக்கமுமாக வருந்தும் தந்தை ஒருவர், இளைய தலைமுறையினருடன் உருவாகி இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலாகிய இடைவெளியை நிரப்ப முயல்வதும், அதில் மகன்களுக்கும் தந்தைக்கும் ஏற்படும் உரசலும் முட்டலும் மோதலும் ,பின்னர் புரிதலுமே  கதை. 

ஆலிவர் என்னும் 60 வயது குடும்ப தலைவரொருவரின் கதை மட்டுமல்ல, இது நம்மில் பலரின் கதையும் தான். நம் வீடுகளிலுமே  புதிய திறன் பேசியை , மடிக் கணினியை இயக்கவும், கைப்பேசி வழியே வர்த்தகம் செய்வது குறித்தும் மகன்களிடமும் மகள்களிடமும் கேட்டறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அநேகம் பேர் இருப்போம்.

 இந்த தலைமுறை பிறந்து வளர்ந்ததே தொழில்நுட்ப அதீத  வளர்ச்சி காலத்தில்தான் எனவே அதில் அவர்கள் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். சில்லறை காசுகளை  எண்ணி எண்ணி செலவழித்தவர்களான   சென்ற தலைமுறையை  சேர்ந்தவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் கையிலிருக்கும் சிறு பெட்டி போன்ற  கருவியில் வர்த்தகம் செய்வதும், உணவை வரவழைப்பதுமாக உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டதை அறியாமலேயே மண் மறைந்தவர்கள். நாமோ இந்த தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த, சிக்கல்கள் அற்றது போல தோன்றும் வாழ்க்கையை  பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வேடிக்கை பார்த்துக் கொண்டும், மெல்ல மெல்ல  கற்றுக்கொண்டு இருக்கும் தலைமுறையினருக்கும், இமைக்கணத்தில் உலகை தொடர்பு கொள்ளும் இளைய தலைமுறைக்குமான உரசல்களை தான்  அழகிய கதையாக்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீநாத் பாஷி வழக்கம் போல சிறப்பான நடிப்பு,திரைத்துறையின் சவால்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர் பணப் பிரச்சனையிலும் இருக்கிறார். இரண்டாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க வேண்டிய காலக்கெடு கழுத்தை நெருக்குகையில் எப்படியும் எழுதிவிட வேண்டும் என சொந்த ஊருக்கு வருகிறார்.

வீட்டு வேலைகளில் எந்நேரமும் மூழ்கி இருந்தாலும் கணவனின் மனதை அறிந்திருக்கும், கணவனுக்கும் மகன்களுக்கும் இடையில் உண்டாகி இருக்கும் இடைவெளியை குறித்த கவலையுடன் குட்டியம்மா, மிக வயதான முழுநாளும் பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும் தள்ளாத  ஆலிவரின் தந்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மூத்த மகன், சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையான இளையவன், இருவரின் அணுக்கமும் கிடைக்கப்பெற  தந்தையான ஆலிவரின் உணர்வுபூர்வமான போராட்டம் நம்மை கதைக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

 இந்திரன்ஸ் அநாயசமாக நடிக்கிறார்.அதிகம் வசனங்கள் பேசாமல் நுணுக்கமான முக பாவனைகள், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் என, எளிதில் அவரது மனவோட்டத்தை திரையில் கொண்டு வந்துவிடுகிறார். ஆலிவர் புண் படும்போதெல்லாம் பார்வையாளர்களும் புண்பட்டு விடுகிறோம். அப்பாவியாக அவர் முகநூல் பக்கத்தை பற்றி கேட்டுக்கொள்ளுவதும், உயிர்த் தோழனிடம் தன் மனக்குமுறல்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும், இரவில் மனைவியிடம் மட்டும் தன் அந்தரங்க துயரை ஒரு சில சொற்களில் சொல்லுவதுமாக அசத்தி இருக்கிறார். பண்பட்ட முதிர்ந்த நடிப்பு இந்திரன்ஸுடையது. பலநூறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருந்தாலும் இந்த திரைப்படம் இவரது திரைப்பயண அனுபவத்தில் அவருக்கும், நமக்கும்  கிடைத்திருக்கும் ஒரு அருமணி.

திறன்பேசியை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்கன்வே சிக்கலில் இருக்கும் மகனின் வாழ்வில் பெரும் இக்கட்டொன்றை கொண்டு வந்துவிடும் தந்தை, அது உண்டாக்கும் விரிசல், காதலியின் மனக்கசப்பு, தந்தையின் துயர், என்று குழப்பமில்லாமல் திரைக்கதை போகிறது. தயாரிப்பாளர் விஜய் பாபு மனநல மருத்துவராக வருகிறார் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம்.

 அசாதாரணமான அந்த பிளாஷ்பேக் கதை இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதை வெற்றி பெற்றிருக்கும். அந்த கதையைக் கொண்டு அமைத்திருக்கும் கிளைமேக்ஸ் தவிர்க்கப்பட்டிருக்கலாம். KPAC லலிதாம்மாவின் பாத்திரமும், அவர் இந்திரன்ஸின் வீட்டுக்கு வருவதுமாக அந்த வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட கடைசிப்பகுதி அழகிய இக்கதைக்கு திருஷ்டிப்பொட்டு போல அமைந்து விட்டது. 

குட்டியம்மாவும் இயல்பான நடிப்பு. அந்த மழை நாள் இரவில் ஒரே கூரையின் கீழ் சம்பந்தி வீட்டினரும் அமர்ந்திருக்கையில் உள்ளக் கொந்தளிப்பு தாங்கமுடியால அவர் உடைவது  சிறப்பு.,குடும்ப உறவுகளில் ஆண்டனிக்கும் அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் பிரியாவுக்குமான் உறவும் சொல்லப்படுகின்றது.

ஆலிவரின் நண்பனாக வரும் ஜான் ஆண்டனியும் தயாரிப்பாளராக வரும் மணியன்பிள்ளை  ராஜுவும் நகைச்சுவைக்கு உதவுகிறார்கள்.

 தலைமுறை இடைவெளிகளை விரிவாக்கியிருக்கும் தொழிநுட்பங்களை மட்டுமல்லாது தொழில்நுட்பத்தின் மிகை பயன்பாடுகள் உருவாக்கி இருக்கும் உளச்சீர்கேடுகளையும், திறன்பேசிக்கு அடிமையாகி இருக்கும் இந்த தலைமுறையையும் இந்த திரைப்படம்   எளிமையாக, ஆனால் அழுத்தமாக சொல்லுகின்றது. திரைப்படம் துவங்கும் முன்னரே ’’தயவு செய்து இடையிடையே கைபேசியை பார்க்காதீர்கள்’’ என்னும் வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏனென்று படம் பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு புரிகின்றது.

 புதியவற்றை கற்றுக்கொள்ள விழையும் தந்தை ஒருவரின் கதைஎன்பதுடன் 160 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் பலம் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாய அநியாயங்களை சரியாக எடுத்துக் காட்டி இருப்பதிலும் இருக்கிறது.

ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், நடனம், வீர தீர சாகசங்கள் செய்யும் நாயகன், பேரழகாக ஒரு நாயகி என்னும் மரபான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்புவோருக்கானது அல்ல இந்த படம். மாறி வரும் திரைச்சூழலில் இப்போதைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சிக்கல்களில் ஒன்றை எடுத்து விரித்து அழகாக காட்டும் திரைப்படம் இது.

மலர்கண்காட்சியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மலர்க்கூட்டங்கள் அழகுதானென்றாலும், மலைச்சரிவில்  காட்டுச்செடி ஒன்றில் மலர்ந்திருக்கும் ஒற்றைச் சிறு மலரும் அழகுதானே! அப்படி ஒரு எளிய அழகான உணர்வுபூர்வமான திரைப்படம் தான் # Home.

குடும்பம் என்பதற்கான வரைமுறைகள்  மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் மிக முக்கியமாகிவிடுகிறது.  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது

ஊனுண்ணித்தாவரங்கள்

மண்ணிலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை  வேர்களால் உறிஞ்சிக்கொண்டு, பச்சை இலைகளால் உணவை தயாரிக்கும், நகர முடியாத, செயலற்ற உயிரினங்களாக அறியப்படும் தாவரங்களில் ஊனுண்ணுபவையும் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான விஷயம்.   

ஊனுண்ணித் தாவரங்கள் எனப்படுபவையும் பிற தாவரங்களை போலவே இலைகளின் பச்சையத்தினால், சூரியஒளியை கொண்டு உணவை தயாரிப்பவைதான் ஆனால் இத்தாவரங்கள் வளரும்  வளமற்ற நிலங்களில் இல்லாத சத்துக்களை பெறுவதற்காகத்தான் அருகில் வரும் பூச்சிகளையும் சிறு விலங்குகளையும் இவை பொறிகளில் பிடித்து ஜீரணித்து சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. இத்தாவரங்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக CPs எனப்படுகின்றன. (Carnivorous plants). பிரிடிஷ் இயற்கையாளரும் பரிணாமவியலின் தந்தையுமான சார்லஸ் டார்வின்தான் 1875 ல் insectivorous plants என்னும் இத்தாவரங்களைக்குறித்த முதல் புத்தகத்தை எழுதினார்.

பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வகையான ஊனுண்ணித் தாவரங்கள் ஓரிடத்தில் சேர்ந்து வாழும். உதாரணமாக சாரசீனியா, டுரோசீரா மற்றும் பிங்க்யூக்குலா ஆகியவை, மிக நெருக்கமாக அருகருகே வளரும்.

இத்தாவரங்கள்  ஈரமான ஒளி நிறைந்த வளம் குன்றிய இடங்களில் தான் வாழ்கின்றன. இவை  வளரும் இடங்களின் நிலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் சத்து இருக்காது அல்லது   மிகக் குறைவாகவே இருக்கும்.

வெண்ணிற இலைக்குடுவைகளுடன் சாரசீனியா லியூகோஃபில்லா

விதிவிலக்காக ட்ரோஸோஃபில்லம் லுஸிடேனியகம் (Drosophyllum lusitanicum ) மட்டுமே போர்ச்சுக்கல் மற்றும் மொரோக்கோவின் கனிம வளம் நிறைந்த மலைப்பகுதிகளில் வளருகின்றன

Drosophyllum lusitanicum

ஊனுண்ணி தாவரங்களின் பிரத்யேக மூன்று இயல்புகளே இவற்றை பிற தாவரங்களிலிருந்து வேறு படுத்துகின்றன

அவை:

  1. அருகில் வரும் இரையை அவை தப்பிக்க இயலாத படி பிடித்துக் கொள்ளுதல்
  2. சிக்கிக்கொண்ட பூச்சிகளை ஜீரணிக்க சிறப்பான அமைப்புக்களும் , நொதிகளும் கொண்டிருத்தல்
  3. இரையின் உடலில் இருந்து அவற்றிற்குதேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளுதல் 

ஊன் உண்ணும் அல்லது பூச்சியுண்ணும் தாவரங்கள் தங்களது இலைகளை இரை வந்து மாட்டிக் கொள்ளும் பொறியாக மாற்றி அமைத்து .வண்டு, தேனீ போன்ற சிறு பூச்சிகளையும் சிலந்திகள், மெல்லுடலிகள் மற்றும் நீர்வாழ் சிறு உயிரிகள், எலிகள், தவளைகள், பல்லிகள், சிறு பறவைகள் ஆகியவற்றையும் உண்ணும். 

சில இலைப்பொறிகள் இரையை கவர்ந்திழுக்க பிரகாசமான தனித்துவமான நிறங்களுடன் இருக்கும், இன்னும் சிலவற்றில் இனிப்பு திரவம் சுரக்கும் சுரப்பிகள் இருக்கும், அடர்ந்த முடிகளை போன்ற மெல்லிழைகள், குடுவை போன்ற நீட்சிகள், ஒட்டிக்கொள்ளும் பசை நுனிகளுடனிருக்கும் மொட்டுக்கள், கூரான முட்களுடன் கூடிய கிளிப் போன்ற அமைப்புகள் என்று பலவிதமான பொறிகளை இவை கொண்டிருக்கும்.

1859ல் ஜாவா தீவுகளுக்கருகிலிருக்கும் போர்மியோ தீவுகளில் மட்டும் காணப்படும் Nepenthes rajah கண்டுபிடிக்கபட்டது. இது ஒரு மிக அரிய வகை மிகப்பெரிய ஊனுண்ணித்தாவரமாகும். இதன் குடுவையில் 3 லிட்டர் வரை நொதிக்கும் திரவம் நிறைந்திருக்கும்.

Nepenthes rajah
நெபெந்தெஸ் ராஜா காணப்படும் போர்மியோ தீவுகள்

இலைகளை இரையை பிடிப்பதற்கு ஏதுவாக, தேவைகளுக்கேற்ற வடிவங்களிலும் அளவுகளிலும் இத்தாவரங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும். குடுவை தாவரங்கள் (Pitcher plants) இலையின் நுனியில் மூடிகளுடன் கூடிய ஆழமான குழிகள் உள்ள  குடுவைகளை கொண்டிருக்கும். குடுவையினுள் இரையாகும் பூச்சிகளை ஜீரணிக்கும் நொதிகளடங்கிய திரவம் நிரம்பியிருக்கும்.

பட்டர் வொர்ட் செடிகளின் (butterworts) இலைகளின் பரப்பெங்கும் ஒட்டிக்கொள்ளும் பிசுபிசுப்பான திரவம் இருக்கும்.   வீனஸ் பறக்கும் பொறி தாவரத்தில் இரண்டு பாகங்களாக இருக்கும் இலைகளின் ஓரத்தில் கூரிய முட்கள் இருக்கும் (Venus flytrap -Dionaea muscipula), சன் ட்யூக்களில் (sundews) சுரப்பிகளுடன் கூடிய மெல்லிழைகள் தாவர உடலெங்கும் நிறைந்திருக்கும், பிளேடர் வொர்ட்டில் (bladderwort) பைகளை போன்ற அமைப்பிருக்கும். லாப்ஸ்டர் குடுவை பொறித்தாவரமான  (Lobster-pot traps) ஜென்லிஸா பேரினங்களில் (genus Genlisea), மாட்டிக்கொண்ட் இரையை குடுவையின் ஆழத்திற்கு தள்ளிவிடும் கீழ்நோக்கி அமைந்திருக்கும் ஏராளமான் கூரிய முட்கள்  இருக்கும். 

Venus flytrap -Dionaea muscipula

மலேசியாவின் குரங்குதொப்பிசெடி எனப்படும் பெரும் நெஃபெந்தெஸ் செடிகளில் எலிகளும் பல்லிகளும் சுலபமாக சிக்கிக்கொள்ளும். கொலம்பியா மற்றும் பிரேசிலை சேர்ந்த ப்ரோச்சீனியாவின் (Brocchinia reducta) இளம் பச்சை இலைகளில் சிக்கிக்கொள்ளும் பூச்சிகளை அவை பாக்டீரியாக்களை கொண்டு ஜீரணிக்கின்றன.

Sarracenia alata

Darlingtonia மற்றும் Nepenthes போன்ற தாவரங்கள் சிக்கிக்கொண்ட இரையின் உடல் சத்துக்களை கிரகிக்க சில பாக்டீரியாக்களை சார்ந்திருக்கின்றன. சாரசீனியா அலாட்டாவில் (Sarracenia alata), ஒளிச்சேர்க்கைக்கெனவும் பூச்சிகளை பிடிப்பதற்கும் தனித்தனி இலைகள் ஒரே தாவரத்தில் அமைந்திருக்கும் 

விலங்குகளின் வயிற்றில் ஜீரணம் நடப்பது போலவே பாக்டீரியாக்களையும், நொதிகளையும் உபயோகித்து ஊனுண்ணித்தாவரங்கள் இரையை முற்றிலுமாக கரைத்து நைட்ரஜன் மற்றும் உப்புக்களாக சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.

இவற்றில் மிக சிறிய டுரோசிராக்களிலிருந்து, கொடிகளாக வளரும்  நெஃபன்தஸை போல பெரிய தாவரங்களும் உள்ளன.

ஊனுண்ணித்தாவரங்கள் லெண்டிபுலேரியெசியே-(Lentibulariaceae), ட்ரொஸீரேசியே (Droseraceae.),  ட்ரோஸோஃபில்லேசியே (Drosophyllaceae), ஸெஃபலோட்டேசியே,(Cephalotaceae) சாரசினியேசியே (Sarraceniacea), நெபெந்தேசியே (Nepenthaceae), பைப்லிடேசியே (Byblidaceae), அன்னாசி பழத்தின் குடும்பமான புரோமீலியேசியே (Bromeliaceae) என இந்த ஊனுண்ணி தாவரங்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் உறவும் இல்லாதவை என்பதும் ஒரு புதிர்தான்

 

 இவற்றின் பொறிகளின் வடிவங்கள் பல வகைப்படும். பாம்பின் படம் போலிருக்கும் நாக அல்லி, (Cobra lily), சக்கரம் போலிருக்கும்   Water wheel ஆகியவற்றுடன் ஸ்பெயின், மொராக்கோ மற்றும் போர்ச்சுக்கலில்  இலைகளிலிருந்து நல்ல நறுமணத்தை பரப்பி பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பனிப்பைன் போன்ற (dewy pine) ஊசியிலை தாவரங்களும் உள்ளன.

பனிப்பைன்

இவற்றின் வாழிடங்கள் பொதுவாக சேற்றுப்பரப்பு மற்றும் சதுப்பு நிலங்கள், அட்ரிகுலேரியா (Utricularia) மற்றும் ஆல்ட்ரோவாண்டா (Aldrovanda)  இவையிரண்டும் நன்னீர் வாழிடங்களின் ஊனுண்ணித்தாவரங்களாகும்.

இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை கண்களால் பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை. 

பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக  பூச்சிகளை கவர்ந்து அவற்றை  தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின்  மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை. 

இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை  தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று சீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா ( Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா( P. parviflora) ஆகியவை ஊனுண்னிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது

பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி  அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இதுவும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்

ரோரிடூலா

இரைகள் கிடைக்காதபோது இவைகளும் பிற தாவரங்களைப் போல ஒளி சேர்க்கை செய்து மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும், இரைகள் கிடைத்து அவற்றை ஜீரணித்து சத்துக்களை உறிஞ்சிய பின்னர் இவற்றின் வளர்ச்சி துரிதமாகும்.

உலக இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பான ‘’பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்’’ (International Union for Conservation of Nature – IUCN),   ஊனுண்னித்தாவரங்களில் 50 சதவீதம் அழியும் ஆபத்தில் இருப்பதாக சொல்கின்றது. 

சூழல் மாசுபாடு,  வாழிடங்கள் அழிந்து கொண்டு வருவது, மனிதர்களின் செயல்பாடு போன்ற பல காரணங்களுடன் வேறு சில பிரத்யேக காரணங்களாலும் இவை அழிந்து வருகின்றன,  பல ஊனுண்ணி தாவரங்கள் மிக மெதுவாக  வளர்வதால் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும் இலைக் குப்பைகளால் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துவிடுகின்றன. பிங்யூக்குலா வேலிஸ்நீரிஃபோலியா   (Pinguicula vallisneriifolia) தாவரம் தனதருகில் மகரந்தசேர்க்கைக்கென வரும் பூச்சிகளையும் இரையென நினைத்து கொன்றுவிடுவதால் அழியும் அபாயத்தில் இருக்கிறது. இந்த தவறை செய்ய கூடாதென வீனஸ் பறக்கும் தாவரம் புத்திசாலித்தனமாக தனது மலர்களை இலைகளிலிருந்து வெகு உயரத்தில் தோற்றுவிக்கிறது,

பொறிகளிலிருந்து மிக உயரத்தில் மலர்களை தோற்றுவித்திருக்கும் வீனஸ் தாவரம்

அலபாமாவில் மட்டுமே வளரும் அரிய வகை ஊனுண்ணித்தாவரமாகிய சாரசீனியா (Sarracenia Rubra ssp. Alabamensis) மிக அழகிய மரூன் நிற மலர்களை தோற்றுவிக்கும் இவற்றினழகுக்காகவே இவற்றை தேடி தேடி சேகரிப்போரால் இவை இப்போது மிக குறைந்த  எண்ணிக்கையில் அழியும் ஆபத்தில் இருக்கிறது.

Sarracenia Rubra ssp. Alabamensis

இவற்றின் பிரத்யேக வாழிடங்களினாலும், வளர்ச்சிக்கு தேவைப்படும் சிறப்பான சத்துக்களினாலும் இவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கடினமாகி விட்டிருக்கிறது. எனினும் ஒருசில ஊனுண்ணித்தாவரங்களை தோட்டக்கலைத்துறையினர்  பசுமைக்குடில்களிலும், சிறப்பாக உருவக்கப்பட்ட வாழிடங்களிலும் வளர்க்கிறார்கள். வீனஸ் பறக்கும் பொறித்தாவரம் உள்ளிட்ட சில வகைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனையாகின்றன.

கொல்லுதல், கொன்று தின்னுதல் என்னும் வார்த்தை பிரயோகங்களால் தாவரங்களை குறிப்பிடுவது பொருத்தமற்றதாக கூடத் தோன்றலாம் ஆனால் பலநூறு ஆண்டுகளாக சுய தேவைக்காக உள்நோக்கத்துடன் ஒரு உயிர் மற்றொரு உயிரை கொல்லுவதென்பது கொலைதான். ஆனால் டார்வின் சொல்லியிருப்பது போல எப்படியேனும் உயிர்பிழைக்க எந்த வழியையாவது கண்டுபிடிக்கும் போதுதான் உயிரினங்களில் பரிணாம்வளர்ச்சியென்பது உருவாகின்றது. தங்களுக்கு தேவையான சத்துக்களை ஒரே இடத்தில் இருந்தபடி பலவழிமுறைகளை மேற்கொண்டு நிறைவேற்றிக்கொள்ளும் இவற்றின் புத்திசாலித்தனத்தை பாராட்டவேண்டும் தானே!

மாலிக்

மலையாளத்தில் புகழ்பெற்ற டேக் ஆஃப் படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் மகேஷ் நாராயணன் இயக்கி, தொகுத்து, திரைக்கதை எழுதி 2021 ஜூலை 15ல் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் மாலிக்.

ஃபகத் ஃபாஸில், வினய் ஃபோர்ட் , திலீஷ் போத்தன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய பாத்திரங்களில். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ் ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஒளி இயக்கம் சானு ஜான் வர்கீஸ், இசை கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் இசையால் மிக பிரபலமான சுஷின் ஸ்யாம்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கடலோர புறநகர்ப் பகுதியான பீமா பள்ளியில் (Beemapally)  தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பீமா பள்ளி தர்கா மிக பிரபலமானது.

2009 ல் பொதுமக்களில் 42 பேர் படுகாயமுற்று 6 பேர் இறந்து, பல காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கமும் பணி மாறுதலும் செய்யப்பட  காரணமாயிருந்த பீமாபள்ளி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி உருவானதுதான் மாலிக்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மாப்பிள்ளா முஸ்லிம்களும் வசிக்கும் ரமத பள்ளி கடலோர கிராமத்தின் குற்ற உலகின் ராஜாவான அலிஇக்கா, அவரின் கிறிஸ்துவ காதல் மனைவி ரோஸ்லின், நடுத்தர வயது அலிஇக்காவான  ஃபகத் ஹஜ் புனித யாத்திரை கிளம்பும் நன்நாளில் கதை தொடங்கி விமானத்தில் நுழையும் போது  அவர் தடாவில் கைது செய்யப்படுவதிலிருந்து விரிந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.

மகேஷ் நாராயணனின் விறுவிறுப்பான கதை சொல்லல்  படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது, ஆழமான, அட்டகாசமான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.

கொஞ்சம் நீளமான ஃப்ளேஷ்பேக். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எடவத்துறை கடலோரத்தை சேர்ந்த  சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அலி, டேவிட், பீட்டர் என்னும் சிறுவர்கள் தாதா சந்திரனின் ஆளுகைக்கு கீழ் வந்து அவருக்காக  குற்றங்கள் செய்ய தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் சந்திரனிடமிருந்து பிரியும் அவர்கள் சந்திரனுக்கு எதிராக திரும்புவதுடன் தனியே  கள்ள கடத்தல  வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.

சின்ன திருட்டுகளில் ஈடுபடும்  சிறுவன்   அலி, பின்னர் கடல் கடத்தலில் இறங்கி மெல்ல மெல்ல வளர்ந்து துணை ஆட்சியரின் நம்பிக்கைக்கு ஆளாகி குப்பைக்கூளங்களை அகற்றி அவ்விடத்தில் பள்ளி கூடம் அமைத்து நலப்பணிகளில் ஈடுபட்டு அலிஇக்கா என்னும் நாயகனாவதும், ஒற்றுமையாயிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அந்த விரோத நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும், துணைபோகும்  காவல்துறையும், இடையில் உண்டாகும் ஃபகத்தின் ரோஸ்லின் மீதான் காதலும் அவரைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளும் அவருடனெயே இருந்து மெல்ல வளர்ந்து அரசியல்வாதியாகும் திலீஷ்போத்தனின் நயவஞ்சகமும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கலவரமுமாக கதை வளர்கின்றது.

 குற்றப் பின்னணி, கடல் வணிகம், கள்ளக்கடத்தல் , எளிய மக்களின் நாயகன், அவர் மீதான கொலை முயற்சி, அவர் மகன் அநியாயமாக கொல்லப்படுவது, ஒற்றை மகள் என  கதை கமலின் நாயகனை கண்முன்னே கொண்டு வருகிறது.  இப்படியான திரைக்கதைகளில் இனி 70களின் காட் ஃபாதரும் 80 களின் நாயகனும் நினைவுக்கு வராமல் இருக்கும் சாத்தியமே இல்லை.

ஃபகத்தின் நடிப்பை குறித்து புதிதாக சொல்ல ஏதுமில்லை. மூன்றாவது முறையாக இயக்குநர் மகேஷுடன் இணைந்திருக்கும் ஃபகத் வழக்கம்போல அசத்தல். பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டிருக்கும் ஃபகத்தின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு மாலிக். 

திரைஉலகின் பொற்கதவுகளை திறந்து நுழைந்திருக்கும் 24 வயதே ஆகும் நிமிஷா சஜயனுக்காக  காத்திருக்கும் திரைக்களங்களையும் அவர் அடையப்போகும் உயரங்களையும் நம்மால் இப்போதே கணிக்கமுடிகின்றது. மகன் இறக்கும் காட்சியில் பள்ளிவாசலில் அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் கதறும் கதறலுடன் அவர்  வயதையும் அவரது நடிப்பனுபவங்களையும் எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.  ஃபகத்துக்கு இணையாக நடித்து இருக்கிறார்.

வழக்கமாக ஆங்காங்கே தலைகாட்டும் திலீஷ் போத்தன்  இதில் படம் நெடுகிலும் வருகிறார், சிறப்பான நடிப்பையும் அளித்திருக்கிறார், காவலதிகாரியாக இந்திரன்ஸ். எந்த முகமாறுபாடுமின்றி அரசியல்வாதிகளின் ஆணைக்கு துணைபோகும், எந்த சிந்தனையுமின்றி சிறைக்குள்ளே  அநீதி இழைக்கும் காவலதிகாரிகளின் ஒட்டுமொத்த பிம்பமாக அவரை காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிகளற்ற முகத்துடன்   பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினய் ஃபோர்ட் மிக சிறப்பான,இயல்பான நடிப்பு.  

கூரான, கவனிக்க வைக்கும் வசனங்கள். குறிப்பாக திலீஷ் போத்தனிடமும், துணை ஆட்சியரிடமும் பேசுவதும் , வினயிடம்   கைகளை அகல விரித்தபடி அனைத்துலக மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தழுவ நிற்கும் ஏசு கிறிஸ்துவின் சிலையை காட்டியும்  ஃபகத் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பானவை.

ஏறக்குறைய மூன்று மணி நேர படத்தின் நீளம்,பெரும்பாலும் யூகிக்க முடிகிற திரையோட்டம்,  நீளமான பிளாஷ்பேக் ஃபகத்தின் மகனின் இறப்பை சரியாக விளக்காமல் போனது, கமலின்  நாயகனையும், அனுராக் காஷ்யப்பின் சில படங்களையும் அதிகம்  நினைவூட்டுவது ஆகியவை இப்படத்தின் சறுக்கல்கள் எனக்கொண்டால், நல்ல இயக்கம், சிறப்பான திரைக்கதை  தற்கால அரசியல் மற்றும் சமூக அமைப்பு, அதன் பகடைக்காய்களாக மைனாரிட்டி மக்களின் பிரச்சனைகளை அரசியலாளர்கள் பயன்படுத்துவது குறித்த கதை, மற்றும் முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக  பாராட்டுக்கு உரிய படம்தான்

மாலிக் , நிச்சயம் பார்க்க வேண்டிய மலையாள நாயகன்

மூன்று சகோதரிகள்

 நியூயார்க்கின் வடக்கு பகுதியில் வாழ்ந்த 6 இனக்குழுக்களின் ( Cayuga,Mohawk, Oneida,Onondaga,Seneca and  Tuscarora.) கூட்டான பழங்குடியமைப்பு   இரா குயிஸ் (Iroquois)  வேட்டையாடிகளும், விவசாயிகளுமான  மக்களை கொண்டது. இவர்களனைவருக்குமான பொதுவான சட்டங்களும் வரையறைகளும் உள்ளன.

இப்பழங்குடியினரின் தொன்மங்களிலொன்று  இரட்டை ஆண்குழந்தைகளின் மகப்பேறில் இறந்த ஆகாயதேவதையின் உடலிலிருந்து மகன்களுக்கு உணவளிக்கும் பொருட்டு முளைத்த மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் செடிகள், பின்னர்  அம்மக்களனைவருக்கும் உணவளித்ததென்கிறது.

 இணைபிரியாத மூன்று சகோதரிகள் பற்றிய இம்மக்களின் மற்றொரு தொன்மம்    டியோ-ஹா-கோ (Deo-ha-ko) என்றழைக்கப்படும் இச்சகோதரிகள்  இம்மூன்று பயிர்களையும் காப்பதாக சொல்லுகின்றது.

மக்காச்சோளப் பயிர் பூமியில் விளைவிக்கப்பட்ட தானியப் பயிர்கள்களில் மிகப்பழமையானது.  பலவிதமான பழங்களை அளிக்கும் ஸ்குவாஷ் கொடியின் காய்களும் கனிகளும் பலநாட்களுக்கு சேமித்து வைக்கும் படியான கடினமான வெளித்தோலை கொண்டவை. கிமு 20 ஆம் நூற்றாண்டிலேயே மெசோ அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட ஆரம்பகால பழக்கப்பட்ட பயிர்களில்  பீன்ஸ் செடியும் இருக்கிறது. புரதம் நிரம்பிய இதன் காய்களும் விதைகளும் இன்றுவரையிலும் உலகெங்கிலும் மிக முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது,

இராகுயிஸ் மக்களே மூன்று சகோதரி பயிர்களென்னும் மக்காச்சோளம் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பழங்களை ஒன்றாக பயிரிடும் முறையை உருவாக்கியவர்கள். ஒன்றுக்கொன்று துணையாகவும், பயனுள்ளதாகவும் இவை மூன்றும் இருந்ததால் இவை சகோதரி பயிர்கள் என அவர்களால் அழைக்கப்பட்டன. இப்பயிரிடும் முறையை பிற பழங்குடி இனங்களும் கற்றுக்கொண்டு இம்முறையை பரவலாக்கினர்

பீன்ஸ் பயிர்கள் தென்அமெரிக்காவிலும்,மத்திய அமெரிக்காவில் ஸ்குவாஷ் பயிர்களும் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவற்றிற்கு ஆயிரமாண்டுகளுக்கு பின்பே மக்காச்சோள பயிர் உருவானது என்பதால் இம்மூன்றும் எப்போதிலிருந்து ஒன்றாக பயிரிடப்பட்டன என்று துல்லியமான கணக்குகள் கிடைக்கவில்லை. எனினும் தொல்லியல் ஆதாரங்கள் இம்மூன்று பயிர்களும் சுமார் 3500 வருடங்களுக்கு  முன்பிருந்து துணை பயிர்களாக விளைவிக்கப்பட்டதற்கான  சான்றுகளை அளிக்கிறது.

பீன்ஸ் கொடி பற்றி படர மக்காச்சோள செடி  தனது உயர்ந்து வளரும் தண்டுகளை அளிக்கிறது, பீன்ஸ் கொடி தனது வேர் முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது, பூசணிக்காய் குடும்பத்தை சேர்ந்த ஸ்குவாஷ் செடி நிலத்தில் பரவிப் படர்ந்து தனது அகலமான இலைகளால் நிலத்தை மூடி, ஈரத்தை வேர்களுக்கடியில் சேமித்து, களைகள் முளைக்கா வண்ணம் செய்கிறது.

30 செமீ உயரமும் 50 செமீ அகலமமும் கொண்ட தட்டையாக்கப்பட்ட மண் மேடுகளின் நடுவில்  ஏராளமான மக்காச்சோள விதைகள் விதைக்கப்பட்டு அவற்றிற்கு உரமாக மீன்களும் புதைக்கப்படுகின்றன. 15 செமீ உயரத்துக்கு மக்காச்சோள பயிர்கள் வளர்ந்ததும் அவற்றின் அடியில் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிர்களின் விதைகள் அடுத்தடுத்து விதைக்கபட்டு கொத்துக்கொத்தாக இம்மூன்று பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இப்பயிரிடும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த மாற்றமுமின்றி  பின்பற்றப்படுவருகின்றது

வடஅமெரிக்காவின் வறட்சியான பகுதிகளில் மட்டும் நான்காவது சகோதரியாக ஸ்குவாஷ் மற்றும் பீன்ஸ் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகளை கவரும் மலர்கள் கொண்ட செடியான  Cleome serrulata வையும் பயிரிடுகிறார்கள். சிலநாடுகளில்  மூன்று சகோதரிப்பயிர்களுடன் , தோட்டத்தின் வடக்குப் பகுதியில் இச்செடிகளுக்கு நிழல் தராதவாறு சூரியகாந்தி செடிகளும் வளர்க்கப்படுகிறது.

Cleome serrulata

மக்காச்சோளம் வளருகையில் மண்ணின் நைட்ரஜன் சத்தை முழுவதுமாக உறிஞ்சி கொண்டுவிடும். மண்ணில் குறையும் நைட்ரஜனை பீன்ஸ் பயிர் மீண்டும் கொண்டு வரும், மண்ணில் இருக்கும் ஈரம் காய்ந்துவிடாமல்  தனது அகலமான் இலைளால் காபந்து செய்து  கூடவே வளரும் ஸ்குவாஷ் செடிகள் மக்காச்சோளம் உண்டாக்கும் மண் அரிப்பையும் தடுக்கின்றன. பயிர் சுழற்சியால் மட்டுமே சாத்தியமாகும்  இழந்த சத்துக்களை, மண்ணில் மீண்டும் நிறைக்கும் முறையை, பயிர் சுழற்சி இல்லாமலேயே மூன்று சகோதரி பயிர்கள் கொடுக்கின்றன

கூட்டு பயிரிடும் முறையான இது இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் சிறு விவசாயிகள் பின்பற்றும் வெற்றிகரமான ஒரு விவசாய முறையாக இருக்கிறது. அமெரிக்காவில் மிக பரவலாக இருக்கும் இம்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு மூன்று சகோதரி பயிர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க  நாணயமொன்று 2009 ல் வெளியிடப்பட்டது.

அமெரிக்க பழங்குடியினரின் விவசாய முறையான இதிலிருந்து கிடைக்கும் மூன்று விளைபொருட்களில் மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச்சும், பீன்ஸில் இரருந்து புரதமும், ஸ்குவாஷ் பழங்களிலிருந்து வைட்டமின்களும் கிடைப்பதால் சரிவிகித உணவினால் உடலாரோக்கியமும் இக்கூட்டு விவசாயமுறையினால் மண்வளமும் மேம்படுகிறது. அமெரிக்க பழங்குடியினரின் இந்த முறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றும் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளில்  தயாரிக்கப்படும் சிறப்பான உணவுகளில் இம்மூன்று விளைபொருட்களும் கலந்து இருக்கும்.

நஞ்சை வாயிலே கொணர்ந்து! .’

அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன்  இருந்தார்.

சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று  விஷமளிக்கும் பணியாளரை அழைத்துவந்தான். கைதி அவரை நேராக நிமிர்ந்துபார்த்து ‘’ நான் இப்போது என்ன செய்யவேண்டும்‘’ என  எந்த தயக்கமும் பதட்டமுமின்றி கேட்டார். கையிலிருந்த விஷக்கோப்பையை காட்டி ‘’இதை  முழுவதுமாக அருந்திவிட்டு மெல்ல நடந்துகொண்டிருங்கள், கால்கள் கனக்க துவங்கியதும் அமர்ந்துகொள்ளலாம்’’ என்று அவர் பதிலளித்தார்.

எந்த மாறுபாடும் இல்லாத அதே மலர்ந்த முகத்துடன் ‘’நான் இதை அருந்தும் முன்பு ஏதேனும் சொல்லலாமா அதற்கு அனுமதியுண்டா’’ என்று கைதி கேட்டபோது. ’’தேவையான நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்’’ என்று பதில் வந்தது,

கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ‘’இப்பூமியில் இருந்த மகிழ்ச்சி கல்லறைக்கப்பாலும் தொடரட்டும் என்று வேண்டிக்கொள்ளுவோம் இதுவே என் பிரார்த்தனை இது நிறைவேறட்டும்’’ என்றவர் எந்த தயக்கமுமின்றி கோப்பையிலிருந்த ஹெம்லாக் நச்சுத்தாவரத்தின் சாறான அந்த விஷத்தை அருந்தினார்

அதுவரையிலும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த அவரது நண்பர்களும் மாணவர்களும் அவர் கடைசித்துளி விஷத்தையும் அருந்தி முடித்தபோது கட்டுப்பாடுகளை  இழந்து கதறி அழத்துவங்கினர்

ஒருசிலர் அழுதபடி அந்த அறையிலிருந்து வெளியேறினர், இன்னும் சிலர் முகத்தை துணியினால் மறைத்தபடி அத்தனை நல்ல மனிதரை என்றென்றைக்குமாக இழந்துவிடப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் விம்மி  அழத்துவங்கினர்.  

’’என்ன இது, ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்?  இப்படி நடக்கக்கூடாதென்றுதான் பெண்களை முன்பே வெளியேறச் சொன்னேன் இப்போது நீங்களும் அழுதால் எப்படி?. மரணமென்பது அமைதியாக அல்லவா நிகழவேண்டும்? என்று அவர் சொன்னதும். அருகிலிருந்த அனைவரும் தங்களை சமநிலைப்படுத்திக்கொண்டு அமைதியானார்கள்.

அந்த அறையிலேயே மெல்ல நடந்துகொண்டிருந்தவர், கால்கள் கனத்து, குளிரத் துவங்கியதும்  அங்கிருந்த பீட்த்தில் அமர்ந்தார்.  தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்ட அவரை உதவியாள், முதுகை சாய்த்து மல்லாந்து படுக்க உதவினான்.

 அவரது பாதங்களை தொட்டும் தேய்த்தும் அந்த தொடுகையை உணர முடிகின்றதா என உதவியாள் கேட்டபோது இல்லையென பதிலளித்தார். பின்னர் கணுக்காலுக்கு மேலே ஆடுசதையை மெல்ல கிள்ளியபோதும் அதை உணரமுடியவில்லை என்றவரின் முழங்காலுக்கு மேலும் குளிர துவங்கியதும் ’’இனி விஷம் நேராக இதயத்துக்கு சொன்று விடும்’’ என்றான்  அந்த அடிமை சிறுவன்.

 கை மணிக்கட்டுகளும் குளிர்ந்து விரைக்க துவங்கியபோது தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி ’’கிரிட்டோ, நான் அஸ்கிலிபியஸுக்கு ஒரு சேவலை நேர்ந்து கொண்டிருக்கிறேன், அதை மறக்காமல் நிறைவேற்றிவிடுகிறாயா’’  என்றார். ‘’நிச்சயம் செய்துவிடுகிறென் வேறு எதாவது சொல்ல வேண்டுமா’’ என்ற அவரது மாணவன் கிரிட்டோ கேட்ட கேள்விக்கு முழுவதும் குளிர்ந்துவிட்ட அவரிடமிருந்து பதில் வரவில்லை ,கண்கள் நிலைத்துவிட்டிருந்த்து. 

 கிரிட்டொ  அவரது வாயையும் கண்களையும் மெல்ல மூடினான். அத்துடன்  முடிந்தது ஆகச்சிறந்த மெய்யியலாளரும், மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்ந்தவரும், பகுத்தறிவாளருமான  சாக்ரடிஸின் வாழ்வு.

சாக்ரட்டிஸ் மரண தண்டனை பெற்று நஞ்சருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளை அப்போது உடன் இருந்த அவரது நண்பனும் மாணவனுமாகிய பீடோ உரையாடல்கள் மூலம்  எக்கிகிரேட்டஸ் என்பவருக்கு விளக்குவது போல பிளேட்டோவால் எழுதப்பட்ட நூலான ’பீடோ’வில் இவையனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.  ஹென்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160’ல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழியிலும்,  பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய மொழிகளிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட  இந்நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

சிறுவனாக இருந்தபோதிலிருந்தே கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சாக்ரட்டிஸினால் கேள்விகள் வழியாகவே பிறரின் சிந்தனைகளை தூண்டிவிடும் ’’சாக்ரட்டிஸ்  தத்துவ முறை’’ உருவாகி இருந்தது.   அவரது மரணத்துக்கு பிறகும் அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா?, இறந்த பிறகு உயிரின் நிலை என்ன? எங்கு போகும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாக்ரட்டீஸ்   (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15)   பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸில் பிறந்த ஒரு அறிஞர், ஆசிரியர் மற்றும் மெய்யியலாளர். 469 அல்லது 470 இவற்றில் எந்த ஆண்டு இவர் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள்  கிடைக்கப்பெறவில்லை கேள்விகளை கேட்டு சிந்தனையை தூண்டும்  அவரது சாக்ரட்டிஸ் முறையானது, தர்க்கம் மற்றும் தத்துவத்தின் மேற்கத்திய அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளரும் இவரே..

 சிற்பியான சோப்ரோனிஸ்கஸுக்கும் மருத்துவச்சியான ஃபீனாரீட்டேவுக்கும்  பிறந்த சாக்ரடீஸ், அடிப்படை கிரேக்கக் கல்வியைப் பெற்ற பின்பு இளம் வயதிலேயே தனது தந்தையின் தொழிலை  கற்றுக்கொண்டார்.  தனது வாழ்க்கையை தத்துவத்திற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் சிற்பியாகவும் பணியாற்றினார்..

 சாக்ரடீஸ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மிர்ட்டோவின் மூலம் இரண்டு மகன்கள். மிர்ட்டோவின்  மரணத்துக்குப் பிறகு அவரைக்காட்டிலும் மிக இளையவரான ஸாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஸாந்திப்பிக்கு பிறந்த மற்றொரு மகனுமாய் லாம்ப்ரோக்கிள்ஸ், சோஃப்ரோனிஸ்கஸ் மற்றும் மெனெக்செனஸ் (Lamprocles, Sophroniscus , Menexenus) ஆகிய மூன்று மகன்களுக்கு தந்தையான சாக்ரட்டிஸுக்கு .குடும்ப வாழ்வில் அக்கறை  காட்டுவதை விட ஏதெனிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையாக  இருந்திருக்கிறது. இதனால் கணவர் மீது ஸாந்திப்பிக்கு மனக்குறை இருந்திருக்கிறது.

ஸாந்திப்பியுடன் சாக்ரட்டிஸ்

 ஏதென்ஸின் ஆண்கள் 18 லிருந்து 60 வயதுக்குள் எப்போது அழைத்தாலும் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்னும் சட்டமிருந்தது. சாக்ரடிஸும் முகமூடி அணிந்த கவச காலாட்படையான ஹாப்லிட்’ல் (hoplite) ல் பணிபுரிந்தார் 

Hoplite

பண்டைய கிரேக்கத்தில் மிகப்பெரிய ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்த ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவிற்கும் கிமு 431-405 வரை நடைபெற்ற பெலொபோனிஷிய போரில் ஈடுபட்டிருந்தபோது சாக்ரட்டிஸ், அல்சிபயடீஸ் என்னும் புகழ்பெற்ற  ஏதெனிய தளவபதியின் உயிரை போர்க்களத்தில்  காப்பாற்றினார் 

முடிந்தவரை அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்துவந்த சாக்ரட்டிஸ், பெலொபோனிஷியப் போரின் முடிவைத் தொடர்ந்து  இருதரப்பிலிருந்தும் நண்பர்களை தேடிக்கொண்டார். கிமு 406’ல்  பண்டைய கிரேக்க ஜனநாயகமான டெமோக்ரேஷியாவின் (Demokratia) மூன்று கிளைகளில் ஒன்றான, எக்லீசியா சட்டமன்றத்தில் பணியாற்றும்படி  (Ekklesia) சாக்ரடிஸுக்கு அழைப்பு வந்தது.

அவர் அங்கு பணியாற்றுகையில், ஸ்பார்டாவிற்கு எதிரான போரில் இறந்தவர்களை மீட்கத் தவறியதற்காக ஏதென்ஸின் உயர்மட்ட ஜெனரல்களின் குழுவை குற்றம் சாட்டும் ஒரு சட்டவிரோத முன்மொழிவுக்கு சாக்ரடீஸ் தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் சாக்ரடீஸின் சட்டமன்ற சேவை முடிந்ததும் அந்த தளபதிகள் தூக்கிலிடப்பட்டனர்.

 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  ஏதெனியன் அரசு சாக்ரடீஸை  ’’குற்றத்தின் நிழல் கூட படிந்திருக்காத ’’ என்று பிளேட்டோவால் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய பிரமுகரும், நேர்மையாளருமான லியோனின் கைது மற்றும் மரணதண்டனையில் பங்கேற்குமாறு கட்டளையிட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார் இதன் பொருட்டு அவருக்கு அரசின் கட்டளைகளை அவமரியாதை செய்த குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் சாக்ரடீஸைத் தண்டிப்பதற்கு முன்னர் கொடுங்கோலர்கள் அதிகாரத்திலிருந்து இறங்கினர்,

தத்துவ சிந்தனைகளில் தீவிரமாக ஆழ்ந்த சாக்ரட்டிஸ் பலருடன் கலந்து உரையாட துவங்கினார். ஏதென்ஸின் மூலை முடுக்குகளிலும் தெருக்களிலும் அவரது உரைகளை கேட்கவும் விவாதங்களில் பங்கேற்கவுமாக எப்போதும்  இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. நண்பரும் நாடக ஆசிரியருமான அரிஸ்டோஃபேனியஸின் முகில் என்னும் நாடகமொன்றில் கோமாளி வேடமிட்டு  வேடிககை பேச்சுக்களை போலவே உயர்ந்த தத்துவங்களை கூறிய சாக்ரட்டிஸ்  மேலும்  புகழ்பெற்று பரவலாக அறியப்பட்டார். சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது ஏதென்ஸ் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது.

ஏதெனிய இளைஞர்களுடன் சாக்ரட்டிஸ்

399’அம் ஆண்டில் ஏதெனிய கடவுள்களை மதிக்கத் தவறியதற்காகவும், ஓரினச்சேர்க்கையாளரென்றும், இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், இளைஞர்கள் மனதை கலைத்து, அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் 70 வயதாயிருந்த சாக்ரடீஸ் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாக  பெரும்பாலான  வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

நீதிமன்றம்

 இந்த வழக்கு ஏதென்ஸின் மையப்பகுதியில் நடந்தது, பார்வையாளர்கள் கூடியிருந்த  அக்கூடத்தில் நீதிபதிகள். சாக்ரடீஸை குற்றம்சாட்டிய அம்மூவருக்கும்  தங்கள் வழக்கை முன்வைக்க மூன்று மணிநேரம் ஒதுக்கினார்கள், அதன் பிறகு, சாக்ரட்டிஸ் தனது தரப்பினை விளக்கவும் மூன்று மணிநேரம் அளிக்கபட்டது. கிரேக்க நீதி மன்றங்களில் நேரக்கணக்கு நீர்க்கடிகாரங்களின் மூல்ம் கணக்கிடபப்ட்டது

நீர்க்கடிகாரம்

 அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும்படி  வாதிட்டனர். சாக்ரடீஸுக்கு தனது தரப்பை சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டபோது, தனக்கு தண்டனை அளிப்பதற்கு பதில் தனது  செயல்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்ற கிண்டலான பரிந்துரையை வழங்கினார்.  சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது.  இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிக்குழுவினரிடம்  அவரது குற்றத்தின் பேரில் வாக்களிக்குமாறு கேட்கப்பட்டது.

மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகளில் வட்டுக்களை செலுத்தி வாக்களிக்கும் முறையில் நீதிக் குழுவின் 501 ஆண்களில் 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர்.  குற்றம்சாட்டியவர்களும் சாக்ரடிஸும் அவரவர் தரப்பை தொகுத்து முன்வைத்த இறுதிக்கட்ட விசாரணையின்போது சாக்ரட்டிஸ் தனக்கு அபராதம் விதிக்கும்படியும், எதிர்தரப்பினர் மீண்டும் மரணதண்டனையையும் பரிந்துரைத்தனர். மீண்டும் வாக்கெடுப்பு நடத்தபட்டபோது, 300 வாக்குகள் மரணதண்டனையையும் 140 வாக்குகள் அபராதத்தையும் முன்மொழிந்ததால்,  குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சாக்ரடீஸுக்கு நச்சு ஹெம்லாக் சாற்றை குடித்து இறக்கும்  மரணதண்டனையை அந்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

வாக்களிக்க பயன்படுத்தப்படும் வட்டுக்கள்

டிலோஸ் என்னுமிடத்தில் ஏதென்ஸின் தெய்வங்களுக்கு திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இந்த மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. பூசைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டிலோஸ் சென்று திரும்பி வரும் ஒரு மாத நோன்புக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் மரணம் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, சாக்ரடீஸ் அருகிலுள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்,.

சாக்ரட்டிஸ் இருந்த சிறை

 அந்த சமயத்தில் அவரது நண்பர்கள் சாக்ரட்டிஸை  ஏதென்ஸிலிருந்து தப்பிக்கவைக்க   காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயன்றார்கள் ஆனால் தான்  அரசின் இந்த தீர்ப்பை மதிப்பதாகவும் இறுதிவரை சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாகவே இருக்க போவதாகவும் கூறிய  சாக்ரட்டீஸ் அதற்கு உடன்படவில்லை. தனது கடைசி நாட்களிலும் அவரது உடல்மொழியிலும் நடவடிக்கைகளிலும், பேச்சிலும் எந்த அச்சமும் கலவரமும், கவலையும் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்வுடனும் அவர் இருந்ததாக  பிளேட்டோ கூறுகிறார்.

பிளேட்டோ தனது  Apology of Socrates * நூலில்  விசாரணையின் போது தனது நற்பண்புகளையும், தான் குற்றமற்றவரென்பதையும் உணர்வுபூர்வமாக   நடுவர் மன்றத்தின் முன் விவரித்த சாக்ரட்டீஸ், இறுதியில் அவர்களின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகிறார். இந்த விசாரணையின் போதுதான். சாக்ரடீஸ் இப்போது புகழ்பெற்றிருக்கும் சொற்றொடரான “ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது” என்று கூறினார்

 ஏதென்ஸ் அரசியலில் பழைய கணக்குகளை தீர்க்கவும், தனிமனித மேம்பாட்டுக்கும், கைதிகளை கொல்லவும், தற்கொலைக்கும் அப்போது ஹெம்லாக் நஞ்சே பயன்படுத்தபட்டது.  கேரட் குடும்பமான ஏபியேசியேவை சேர்ந்த ஹெம்லாக்கின்  தாவர அறிவியல் பெயர் கோனியம் மேகுலாட்டம். (Common Hemlock; Conium maculatum). கோனியம் எனும் சொல்லுக்கு கிரேக்க மொழியில் தலைசுற்றல் என்று பொருள் இந்த செடியின் நஞ்சு உடலில் தோற்றுவிக்கும் விளைவுகளில் பிரதானமானதை  இது குறிப்பிடுகின்றது மேகுலாட்டம் என்பது புள்ளிகள் என்ற பொருளில் செடியின் மீதுள்ள ஊதா புள்ளிகளை குறிப்பிடுகிறது.

நச்சு ஹெம்லாக் என்று அழைக்கப்படும் இத்தாவரம்  வளர்ந்த இரண்டாம் வருடம் மலர்களை கொடுக்கும் பையென்னியல்  (Biennial)   வகையை சேர்ந்தது முதல் வருடத்தில்   கொத்துமல்லியை போல் இருக்கும் இலைகள் மட்டுமே செழித்து வளரும், சதைப்பற்றான வேர்கள் பழுப்பு நிறத்தில் கேரட் வடிவில் இருக்கும். .உள்ளே வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் மேல் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் புள்ளிகளும், தீற்றல்களும் காணப்படும். அந்த ஊதாநிறமே இச்செடியின் நச்சுத்தன்மையை சொல்லுவது போலிருக்கும்

 இரண்டிலிருந்து மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடியின்  தட்டையான குடை போலிருக்கும் மஞ்சரியில் சிறு வெண் மலர்கள் செறிந்திருக்கும்.  ஒவ்வொரு செடியும், கடும் நஞ்சுள்ள  நுண்விதைகளை ஏராளமாக உருவாக்கும் .

ஹெம்லாக் செடி

 மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்தில்  பரவியிருக்கும் இச்செடி நீர்நிலைகளின் அருகிலும் சாலையோரங்களிலும் ,தரிசு நிலங்களிலும் சாதாரணமாக காணப்படும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நஞ்சு.

எல்லா பாகங்களிலும் நஞ்சு நிறைந்திருக்கும்  இந்த தாவரத்தின்  எட்டு முக்கியமான ஆல்கலாய்டுகளில்  கொனைன், சி-கொனிசைன், கொன்ஹைட்ரைன், சூடோகொன்ஹைட்ரின் மற்றும் என்-மெத்தில் கொனைன் ஆகிய ஐந்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. (coniine, c-coniceine, conhydrine, psuedoconhydrine and N-methylconiine.). புகையிலையின் நிகோட்டினுக்கு இணையான வேதிக்கட்டமைப்பை கொண்டிருக்கும் கொடிய நஞ்சான  கொனைன் மிகச்சிறிய அளவிலேயே மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி, சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில்   மூச்சுதிணறலில் மரணத்தை உண்டாக்கும் .

இவை வளரும் நாடுகளில் மிகச் சாதாரண   களைச்செடிகளைப்போலவே காணப்படும் இவற்றை குறித்த அடிப்படை அறிதலாவது இருப்பது அவசியம். இலைகள் கசக்கப்படுகையில், ஒவ்வாமை அளிக்கும் நாற்றம் உண்டாகும். இவற்றை  தொட்டாலோ, இதன் மகரந்ததுகள்களை நுகர்ந்தாலோ, இதன் வாசனையோ  முகர்ந்தாலோ எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இவை கேரட் அல்லது பார்ஸ்லி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு உணவாக எடுத்துக்கொள்ளும் அசந்தர்ப்பங்களில் தான் ஆபத்தாகின்றது.

நீர் ஹெம்லாக் எனப்படும் மற்றோரு தாவர இனமான சிகுட்டா தாவரங்கள்  (water hemlocks-Cicuta species) நச்சு ஹெம்லாக்கை போலவே இருந்தாலும் அவற்றின் இலைநரம்பமைப்பை கொண்டு அவற்றை வேறுபடுத்தலாம் நீர் ஹெம்லாக்குகளும் நஞ்சு நிறைந்தவையே. 

 சாக்ரட்டிஸ் நஞ்சூட்டி கொல்லப்பட்ட நிகழ்வு  வரலாற்று ஆய்வாளர்களுக்கு எத்தனை முக்கியமானதோ, அதற்கு இணையாக  இது மருத்துவ உலகிலும் சர்ச்சைக்குரியதாவே இருக்கின்றது

சாக்ரடிஸுக்கு அளிக்கபட்ட நஞ்சு ஹெம்லாக் தாவரத்தின் சாறு அல்லது அதன் இலைகளை காய்ச்சி எடுத்த பானமென்றுதான் பிளேட்டோவின்  நூலிலிஉர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பீடோ  நூலில்  சாக்ரட்டிஸின் மரணத்தருவாயை பற்றிய விளக்கங்களில் முதலில் அவரின் கால்கள் கனத்து, விரைத்து, குளிர்ந்துபோவதும், பின்னர் உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து தசை செயலிழப்பு மேல் நோக்கி செல்வதுமாக, மிகச்சரியாக  ஹெம்லாக்  நஞ்சின் விளைவுகள்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   

  இந்த நூல் சாக்ரடிஸின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் அப்போது 29 வயதாயிருந்த அவரது மாணவரான  பிளேட்டொவினால் எழுதப்பட்டது.ஆனால் சாக்ரடிஸ் விஷமருந்தி மரணித்த போது பிளேட்டொ அவரருகில் இருக்கவில்லை அப்போது உடனிருந்த அவரது சகமாணவரான பீடோ மற்றூம் கிரிட்டோ ஆகியோரின் விவரணைகளை அடிப்படையாக கொண்டே பிளேட்டோ அந்நிகழ்வை எழுதினார்.

 கிரேக்க மொழியில் எழுதப்பட்டு லத்தீன மொழியாக்கம் செய்யப்பட்ட  அதன் சில பத்திகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது , இறப்பின் போது நிகழந்தவையும் நஞ்சின் பெயரும் கிரேக்க மொழியின் உபயோகப்படுத்தப்பட்டிருந்த  அதே சொற்களின் பொருளில் மொழியாக்கம் செய்யபட்ட்து.

விஷம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணம் சம்பவித்ததும், உயிரிழப்பிற்கு முந்திய கணம் வரை சாக்ரட்டிஸ் நினைவுடன் இருந்ததும், கைகளை அசைத்து முகத்தின் துணியை அகற்றியதும்,  பேசிக்கொண்டிருந்ததும் எல்லாம் ஹெம்லாக் நஞ்சின் இயல்புகளைத்தான் காட்டுகின்றது

 ஆனால்  சாக்ரட்டிஸுக்கு கடும் வலியோ, குமட்டலோ,  வாயுமிழ்தலோ, வலிப்போ வந்ததாக பிளேட்டொ  குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால், அவருக்கு அளிக்கப்பட்டது ஹெம்லாக் சாறாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒருதரப்பும் அப்போது கிரேக்க அரசியல் கொலைகளில் பலவற்றிற்கு காரணமாயிருந்த ஹெம்லாக்தான் சாக்ரட்டிஸுக்கும் அளிக்கபட்டிருக்கும் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தார்கள்.

  சாக்ரட்டிஸுடன் அப்போது உடனிருந்தவர்கள் அவரது இறப்பை மிக கெளரவமாக உலகிற்கு காட்ட வேண்டி குமட்டல், வலி போன்ற அறிகுறிகளை பதிவுசெய்யாமல் இருந்திருக்கலாமென்றும், விரும்பத்தகாத  விளைவுகளை ஹெம்லாக் உண்டாக்குமென்பதை அறிந்து அவருக்கு அந்நஞ்சுடன் அதிக அளவில் ஓபியம் கலந்திருக்கலாமென்றும் கருதப்பட்டது.

 ஹெம்லாக் தாவரத்தின்  வளர்பருவங்களுக்கேற்றபடி, நஞ்சின் அளவிலும் இயல்பிலும் மாற்றமிருக்குமென்பதால், ஹெம்லாக் நஞ்சூட்டப்பட்ட  எல்லா கொலைக்கைதிகளின் இறப்பு அறிகுறிகளும் ஒன்றெபோலிருக்காதெனவும் ஒரு வாதம் இருக்கிறது

சாக்ரடிஸின் வாழ்விலிருந்த அழகியலும் பெருமையும் அவரது மரணத்திலும் இருக்கவேண்டும் என அவரது மாணவர்களும் நலம் விரும்பிகளும் நினைத்து அவரது மரண நிகழ்வை புனிதப்படுத்தி விட்டார்கள், அவரது இறப்பு திரித்து சொல்லப்பட்டுவிட்டது, சில உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன  என  இரண்டாயிரமாண்டுகளுக்கு பின்னும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்தன.

1970 ல்களில் பண்டைய சிந்தனைகள் மற்றும் தத்துவ ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோஃபர் கில்’லும்  (Christopher Gil ) நோயியல் நிபுணரான வில்லியம் ஓபரும் பிளேட்டொ   வேண்டுமென்றேதான் சில அறிகுறிகளை பதிவுசெய்வதை  தவிர்த்துவிட்டு சாக்ரடிஸின் இறப்பை புனிதப்படுத்திருக்கிறார், ஹெம்லாக் நஞ்சு நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என உறுதியாக தெரிவித்தார்கள். 1, 2

 மீண்டும் 1991’ல் இதே சர்ச்சை தலைதூக்கிய போது  பிளேட்டோ அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையென்றும் சாக்ரட்டிஸின் மரணம் ரகசியமாக நடக்கவில்லை, அவரருகில் அப்போது ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். எனவே பிளேட்டோ  நேர்மையாகத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று அப்போதும் விவாதங்கள் எழுந்தன.

பிளேட்டோ அவரது பதிவில் எங்குமே ஹெம்லாக் என்று குறிப்பிட்டிருக்கவில்லை கிரேக்க மொழியில்’’kôneion’’ மருந்து என்ற பொருளிலேயே கோப்பையில் இருந்த திரவத்தை  அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  கிரேக்க மொழியின்  kôneion லத்தீன மொழியாக்கத்தில்  cicuta ’வாக மாறி பின்னர் ஆங்கிலத்தில் hemlock ஆகிவிட்டிருக்கலாமென்றும் கருதப்பட்ட்து

எந்த ஹெம்லாக், எத்தனை அளவில், எப்படி தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதென்பதையெல்லாம் இன்றும் தாவரவியல், நோயியல், மெய்யியல், மொழியியல் என்று பல கோணங்களில் .விவாதத்திற்குரியவையாகி விட்டிருக்கின்றன.

 ஹெம்லாக்கின் கொல்லும் தன்மை மற்றும் செயல்புரியும் வேகம் ஆகியவை  ஓபியம் போன்ற மூலிகளுடன் கலக்கப்படுகையில அதிகரிப்பதாக  தாவரவியல்துறையின் தந்தையான தியோஃப்ரேஸ்டஸ் குறிப்பிட்டிருக்க்கிறார். சிலமணிநேரங்களிலேயே மரணம் நிகழ்ந்த்தால் சாக்ரடிஸுக்கு நஞ்சினை தயாரித்தவர் இதை செய்திருக்கும் சாத்தியமும் இருக்கிறது.

19ஆம் நுற்றாண்டின் மருத்துவர்களும், விஞ்ஞானிகள் பலரும் ஹெம்லாக் நஞ்சின் வீரியத்தை பல்வேறு வழிகளில் சோதித்தார்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோயாளிகளுக்கும் ஹெம்லாக் நஞ்சினை வேறு வேறு அளவுகளில் கொடுத்து விளைவுகளை கண்காணித்ததுடன், பல நச்சியலாளர்கள் தாங்களே அதை அருந்தி சோதித்ததும் நடந்திருக்கிறது . இவர்களிள் ஜான் ஹெர்லி  (John Harley ) குறிப்பிட்டு சொல்லும்படியானவர். ஹெம்லாக் சாறை பல அளவுகளில் அருந்தி அதன் விளைவுகளை கவனித்து அவற்றை  புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சாவின் விளிம்பு வரையிலும் சென்று மீண்டு ஹெம்லாக் நஞ்சினை குறித்து எழுதிய இவரின் கட்டுரைகள் மிக முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.3

 ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் இறந்துமிருக்கிறார்கள். ஒரு ஸ்காட்டிஷ் தையல்காரரான கெள 1845’ல்  ஹெம்லாக்கை பார்ஸ்லி என்று நினைத்து அதைக்கொண்டு உண்டாக்கிய  ஒரு சாண்ட்விச்சை உண்ட 3 மணி நேரத்தில் உயிரிழந்தார். அவரை மரணத்துக்கு இட்டுச்சென்ற அறிகுறிகள் அனைத்துமே சாக்ரட்டிஸின் மரணத்தில் இருந்ததாக பிளேட்டோ எழுதியவைகளுடன் ஒத்துப்போனது. கெள’விற்கும் கடைசி வரை நினைவிருந்தது அவருக்கும் வலியோ, வாயுமிழ்தலோ, குமட்டலோ வலிப்போ இல்லை. கால்களிலிருந்து செயலின்மை துவங்கி  உடலின் மேல்பாகங்களுக்கு பரவி பின்னர் மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்தது

 எடின்பர்க் மருத்துவமனையில் கெள உயிரிழந்தபோது அங்கு  ஜான் ஹூக் பென்னெட் மருத்துவராக பணியிலிருந்தார். அப்போது பெரிய விவாத ப்பொருளாக இருந்த சாக்ரட்டிஸின் இறப்புடன் தொடர்புடைய கெள’வின் இறப்பின் அதிமுக்கியத்துவம் பென்னெட்டுக்கு தெரிந்தது. கெள’வின் இறப்பின் போது  உடனிருந்தவர்கள், அந்த சாலையில் அப்போது  பயணித்தவர்கள்.  அவரை மருத்துவமனையில் அனுமதித்தவர்கள் என அனைவரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் கெள’வின் பிரேதப்பரிசோதனையையும் அவரே நடத்தி கெள உட்கொண்டது கோனியம் மேகுலேட்டமென்னும் ஹெம்லாக்தான் என்பதையும் உறுதிசெய்தார்.பென்னெட் சாக்ரடிஸின் மரணத்தை கெள’வின் மரணத்துடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள்  மிக முக்கியமானதாக இன்றளவிலும் கருதப்படுகின்றது.4

  தாவரவியல், நோயியல் மற்றும் மொழியியல் மர்மங்கள் விலகி சாக்ரடீஸின் மரணம் குறித்த பலநூற்றாண்டுகால , தொடர்ச்சியான சர்ச்சை இவ்வாறாக  பண்டைய மற்றும் நவீன ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணித்து முடிவை எட்டியது.

 பிளேட்டோ சொன்னது போலவே சாக்ரடீஸ் ஹெம்லாக் விஷமருந்தி,  அமைதியாக இறந்தார். பிளேட்டோ அம்மரணத்தின் உண்மையை மருத்துவ துல்லியத்துடன்தான் பதிவுசெய்திருக்கிறார். ஏசு கிருஸ்துவுக்கு சிலுவையைப்போல, சாக்ரட்டிஸின் மரணத்துடன் ஹெம்லாக் நஞ்சு அழிவின்றி உடனிருந்து கொண்டிருக்கிறது.

வரலாற்றில், ஹெம்லாக் நஞ்சளித்து கொல்லப்பட்டவர்களில் ஏதென்ஸின் அரசியலாளரும், தளபதியும், பெலொபோனிஷிய போரின் இறுதிப்பகுதியில் பெரும்பஙகாற்றியவருமான திராமினிஸூம், நல்லவர் என்று செல்லப்பெயரிடப்பட்டிருந்த  நேர்மையாளரும் புகழ்பெற்ற அரசியலாளருமான ஃபோசியானும்  முக்கியமானவர்கள்.

1.Christopher Gill (’The Death of Socrates’, Classical Quarterly, 23, 1973, pp. 25-8) 

2. William Ober (’Did Socrates Die of Hemlock Poisoning?’, New York State Journal of Medicine, 77.1, Feb., 1977, pp. 254-8) 

3. Harley, J., The Old Vegetable Neurotics: Hemlock, Opium, Belladonna and Henbane, Macmillan, 1869) 

4. Bennett, J. H., Clinical Lectures on the Principles and Practice of Medicine, Samuel & Wood, New York, 1860, pp. 413-8.

*.Apology of Socrates- கிரேக்க மொழியில் Apology என்பது மன்னிப்பென்றல்ல . ’’defence’’ என்னும் பொருள் கொண்டிருக்கிறது

Luca-லூக்கா

கடற்கரைக்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் வரும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் புதிய நட்புகளும், புது புது உணவுகளும் ஸ்கூட்டர் சாகச  பயணங்களுமாய் மகிழ்ச்சியில் திளைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடக்கின்றது. அவ்வனுபவங்களும்  அம் மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவன்  மனிதனல்ல ஆழ் கடலின் அடியில் இருக்கும்  ஓருலகின் உயிரினம் என்னும் ரகசியமும்தான் கதை.

1950 களில் நடக்கும் கதைக்களத்தில், வெகுநாட்களுக்கு பிறகு சாகசங்களும் மாயங்களும் உணர்வெழுச்சிகளுமாய் ஒரு குழந்தைகளுக்கான திரைப்படம். 

இத்தாலியின் ஒரு அழகான நகருக்கு அருகில் இருக்கும் கடலில், மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வெறுக்கப்படும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அவற்றை அந்நகர மக்கள் வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள் எப்போது அவை கண்ணில் பட்டாலும் வேட்டையாடி கொல்லவும் காத்திருக்கிறார்கள். அந்த உயிரினங்களும் மனிதர்களை அஞ்சி வெறுக்கின்றன. நீலம் பச்சை என பல நிறங்களில் மீன்களை போல் செதில்களுடனும் வாலுடனும் இருக்கும் அவர்களும் கடலுக்கு அடியில் மிக அழகிய உலகில், வீடுகளில்  குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். அவ்வுயிர்கள் நீரிலிருந்து வெளியே வந்தால் மனிதர்களின் உடலை அடைந்துவிடுவார்கள்.இவ்வுலகில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன் லூக்கா.

லூக்காவிற்கு கடற்கரைக்கு சென்று கடலுக்கு வெளியே இருக்கும் உலகை காணும் ஆசை பல நாட்களாக இருக்கிறது ஆனால் லூக்காவின் அம்மாவோ அங்கு செல்ல கூடாது என்று கடுமையாக  எச்சரித்திருக்கிறார், அவனை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

அதே உலகைச் சேர்ந்த ஆனால் அவ்வப்போது கடலை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் தீவில் வசிக்கும் கதையின் மற்றொரு நாயகனான ஆல்பெர்ட்டோவும் லூக்காவும் சந்திக்கும் புள்ளியிலிருந்து கதை கொண்டாட்டமாக நகர்கின்றது. ஆல்பர்டோ லூக்காவை மனிதர்களின் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறான். ஆல்பெர்ட்டொ திருடிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஏராளமான பொருட்களுடன் இருக்கும் ஒரு வெஸ்பா ஸ்கூட்டியின் படம் இரண்டு சிறுவர்களையும் கற்பனையில் பறக்க வைக்கிறது

லூக்காவின் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் இத்தாலியின் போர்டரோஸோ என்னும் அழகிய நகருக்கு செல்வது,   மனிதர்களை போல இருந்தாலும் நீரில் நனைந்தால் கடல்வாழ் உயிரிகளாக அவர்கள் மாறிவிடும் அபாயம், அவர்களுக்கு ஏற்படும் புதுப்புது நட்புக்கள், எதிரிகள், வெஸ்பா ஸ்கூட்டர் பரிசாக கிடைக்கவிருக்கும் ஒரு  போட்டி என்று கதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது

இரு சிறுவர்களுக்கும் குலியா என்னும் தோழி கிடைக்கிறாள். அவர்கள் அனாதை சிறுவர்கள் என்றெண்ணி தனது வீட்டில் தங்க இடம் கொடுக்கும் குலியாவுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகளை திகட்ட திகட்ட பார்க்கலாம். 

லூக்காவை தேடிக்கொண்டு அவன் பெற்றோர்களான டேனியெல்லாவும் லொரென்ஸோவும் அதே நகருக்கு வருவதும்,  நூடுல்ஸ் சாப்பிடும், நீந்தும், மற்றும் சைக்கிள் ஓட்டும் மூன்று போட்டிகள் கொண்ட அந்த  ட்ரை எத்தெலான் போட்டிக்கு இவர்கள் தயாராவது, அவர்களுக்கு அந்நகரில் பெரும் தொல்லை கொடுக்கும் வில்லன் என  கதை சுவாரஸ்யம்.

அத்தனை போக்கிரித்தனங்கள் செய்யும் ஆல்பெர்டோ வின் துயர பின்னணியும், லூக்காவும் அவனும் பிரியும் காட்சியும், இது குழந்தைகளுக்கான   அனிமேஷன்  படம்  என்பதை  மறக்கவைத்து  நம்மையும் துயரிலாழ்த்திவிடும்.வானில் தெரியும் விண் ’’மீன்’’களும் என்ன பொருளென்றே தெரியாமல் ஆல்பெர்ட்டொ அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகளும், குட்டிச் சுட்டிகளின் முகபாவனைகளும் கொள்ளை அழகு. 

அந்த நகரில் கடல் உயிரினங்களை கொல்ல காத்திருக்கும் மனிதர்களுக்கிடையில், தேடி கண்டுபிடித்து ஆழ்கடல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனிதர்களாக மாறி வந்திருக்கும் பெற்றோர்களின் கண்களில் இருந்து தப்பி, கடல் உயிரினங்களை கொல்ல எப்போதும் ஆயுதங்களுடன் இருக்கும் குலியாவின் அப்பாவுடன் அதே வீட்டில்  இருந்துகொண்டு, போட்டியில் இவர்கள் கலந்து கொள்வதை எப்படியாவது தடுத்து  நிறுத்த முயற்சி செய்யும் இன்னொரு பொறாமைக்கார சிறுவனின் திட்டங்களை எதிர்கொண்டு எப்படி மூவரும் போட்டிக்கு செல்கிறார்கள். இறுதிச்சுற்றில் மழை வந்தபோது என்னவானது, கொல்லக்காத்திருக்கும் மனிதர்களிடமிருந்து தப்பினார்களா, அவர்கள் இருவரின் கனவான வெஸ்பா கிடைத்ததா என்பதையெல்லாம் திரையில் பார்க்கையில் கிடைக்கும் குதூகலத்தை  வாசிப்பில் இழந்துவிடக்கூடாது

நம்மால் வெறுத்து,ஒதுக்கப்பட்டவர்களின் தரப்பையும் சொல்லும் இக்கதை தோழமை, அன்பு,  சாகசம் வீரம்,  விடாமுயற்சி என்று பல கலவையான உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது

அனிமேஷன் படத்தை  இத்தனை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கும் படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். இறுதிச்சுற்றில் தாண்ட வேண்டிய வெற்றிக்கோடு,   மனிதர்களாக மாறும் சில காட்சிகள், சூரிய வெளிச்சத்தில் நிழல்களின் கோணம், ரயில் வரும் திசை உள்ளிட்ட பல காட்சிப் பிழைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்த வேண்டாமென்னும் அளவிற்கு படத்தின் கதை உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன

இயக்குநருடன் கதையையும்,திரைக்கதையையும் மேலும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.லூக்காவிற்கு ஜேகப்  ட்ரெம்ப்ளேவும்,ஜேக் டிலன் கிரேஸர் ஆல்பெர்டோ விற்கும், எம்மா பெர்மன் குலியாவிற்கும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

ஒளி இயக்கம் டேவிட் ஜுவான் மற்றும் கிம் வயிட்,படத்தொகுப்பு கேத்ரின் மற்றும் ஜேஸன்.அனிமேஷன் மேற்பார்வை மைக் வெண்ட்ரூனி

வால்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸர் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் 1.30 மணி நேரம் ஓடும் இப்படம் பலநூறு தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பால் உருவாகி இருக்கிறது. பிக்ஸரின் முந்தைய திரைப்படங்களின் பிரம்மாண்டங்களை  இதிலும் எதிர்பார்த்திருந்த  ரசிகர்கள் லூக்காவை யானைப்பசிக்கு அளிக்கப்பட்டிருக்கும்  கீரைத் தண்டு என்கிறார்கள். உலகெங்கிலும் திரையரங்குகளிலும், Disney +லும், 17 மற்றும் 18 ஜூன் 2021 ல் வெளியானது லூக்கா

  அதிகம் வெளி உலகிற்கு வர தயங்கிய, கூச்ச சுபாவம் கொண்டிருந்த தன்னை, தான் மூழ்கி இருந்த ஆழுலகிலிருந்து எடுத்து, வெளியே எறிந்து உலகை காட்டிய தனது பால்யகால நண்பன் ஆல்பெர்டோ வின் பெயரை இதில் லூக்காவின் நண்பனுக்கு வைத்திருக்கும் அறிமுக  இயக்குநர்  என்ரிக்கோ காகரோஸா ( ENRICO CACAROSA)  தான் இளமைபருவத்தை கழித்திருந்த நகரைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இக்கதையின் கடல் உயிரிகளின் பாத்திர உருவாக்கம் இத்தாலிய தொன்மங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

பெரிய கண்களால் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல் பார்க்கும்  லூக்கோவும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் பார்த்து ரசிக்கையில், தங்கள் இளமைப்பருவத்தை திரும்பிப் பார்க்கும்   சென்ற தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எந்நேரமும் செல்போனும் லேப்டாப்புமாகவே இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கும் ’’அடடா இதையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறொமே’’ என்று ஏக்கமுண்டாகும்

 நம் நெஞ்சில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளம் வயது தோழமையை சொல்லும் படமான லூக்காவின் அடுத்த பாகத்தையும் எடுக்கவிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி

உடல் ஊனம், வறுமை, ஓரினச்சேர்க்கை, நிறம், இனம், பொருளாதார நிலை என நம்மை விட எதிலாவது வேறுபட்டு இருப்பவர்கள் மீதான மனிதர்களின் வெறுப்பையும் விரோதத்தையும் சுட்டிக்காட்டும் படமாகவும் இதை காணலாம். அவரவர் வாழ்வென்பது அவரவர் தரப்பு நியாயங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை வளரும் தலைமுறையினராவது  இளமையிலேயே அறிந்து கொள்ளட்டும் .லூக்காவை போலவே புறப்பாடுகள் குறித்த கனவுகள் இல்லதவர்களே உலகில் இல்லை, அவர்களனைவருக்குமான படம் லூக்கா!

மரவளைய காலக்கணக்கீட்டியல்- Dendrochronology

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி  19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை, அமெரிக்காவின் பிரபல வானியல் நிபுணரான ஆண்ட்ரூ டக்ளஸ் (Andrew Ellicott Douglass,-1867-1962,) முதிர்ந்த மரங்களின் ஆண்டு வளையங்களையும், சூரிய சுழற்சி எனப்படும் 11 ஆண்டுகால சூரியனின் மாற்றத்தையும்  ஒப்பிட்டு ஆய்வு செய்து, மரங்களின் வயதை  கணக்கிடும் மரவளைய காலக்கணக்கீட்டு துறையை உருவாக்கினார்.

 ஆங்கிலத்தில் Dendrochronology எனப்படும் இந்த அளவீட்டின்படி  மரங்களின் வயதை கணக்கிடுவதன் மூலமாக  வரலாற்றின் காலநிலை மாற்றங்கள், சூழல் மாற்றங்கள், புராதனப்பொருட்களின் காலம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியுமென்பது அறிவியலில் ஒரு  மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. பண்டைய கிரேக்க சொல்லான  dendron மரத்தையும், khronos என்பது காலத்தையும் குறிக்கின்றது.

டக்ளஸ்

 இளம் வானிலை ஆய்வாளராக அரிஸோனாவின் லோவெல் வானிலை ஆய்வுக்கூடத்தில் (Lowell Observatory) பணியாற்றிக்கொண்டிருந்த டக்ளஸுக்கு சூரியனை அறிந்துகொள்வதில் பெரும் ஆர்வமிருந்தது. குறிப்பாக சூரிய மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடுகளின் அடிப்படையில் அளவிடப்படும் சூரிய சுழற்சியின் மாறுபாடுகளை அவர் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிந்தார்.

அவ்வாய்வின் போதுதான் மரங்களின் ஆண்டுவளையங்களின் அளவிற்கும், அவை வாழுமிடத்தின் காலநிலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை அவர் முதன்முதலாக கண்டறிந்தார். அரிஸோனா பல்கலைக்கழகத்தில் ஒரு மர வளைய ஆய்வகத்தையும் உருவாக்கி,  மரங்களின் ஆண்டுவளையங்களின் அடுக்குகளைக்கொண்டு அவை கடந்துவந்த காலங்களை, அக்காலங்களின் முக்கிய நிகழ்வுகளை, இடர்பாடுகளையெல்லாம் கண்டறியும் இம்முறையையும் இவர் உருவாக்கினார். cross-dating எனப்படும் ஒரு மரத்தின் ஆண்டுவளையங்களை பிற மரங்களின் ஆண்டு வளையங்களுடன் ஒப்பிட்டு காலநிலையின் வரலாற்றை கணிக்கும் அடிப்படை ஆய்வு முறையையும் இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

மரவளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர் தாவரவியலின் தந்தையான தியொஃப்ரேஸ்டஸ், லியோ நார்டோ டாவின்ஸி துவங்கி  மேலும் பலர்  மரவளையங்களை குறித்து  நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பதிவு செய்திருக்கின்றனர்.

ஒரு மரத்தின் உயரமானது அதன் வாழ்விடத்தின் மண் வளம், மண்ணின் நுண்ணுயிரிகள் மற்றும் கடல் மட்டதுக்கு மேலான அச்சூழலின் உயரம் ஆகியவறினால் நிர்ணயிக்கப்படுகின்ற்து. எனினும், மரங்களின் பருமனானது பெரும்பாலும் காலநிலை காரணிகளாலேயெ உண்டாகிறதென்பதால் மரங்களின் வயதை மரவளையங்களின் இயல்பைக்கொண்டு கணக்கிடுவது மிகச்சரியான கணக்கீட்டு முறையாக இருக்கின்றது 

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மரம் அல்லது கட்டை என்ற சொல் முதிர்ந்த மரங்களின் நடுவிலிருக்கும் கழி எனப்படும்  xylem’ பகுதியை குறிக்கிறது. ஒரு மரத்தின் வளர்பருவத்தில், இரண்டாம் நிலை வளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெறும்  பொழுது, வெளிறிய நிறத்திலிருக்கும் வெளிப்பகுதி சாற்றுக்கட்டை (Alburnum) அல்லது மென்கட்டை (early wood) எனவும். கருமையான நிறத்திலுள்ள மையப்பகுதி வைரக்கட்டை  (Duramen) அல்லது மென்கட்டை (late wood)  எனவும் அழைக்கப்படுகிறது இவையிரண்டிற்கும் முறையே Heart wood, sap wood என்றும் பெயருண்டு.

மரம் வளருகையில், இவ்விரண்டு கட்டைகளுமாக சேர்ந்து வளையங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கேற்றபடி வசந்த காலத்தில் வெளுத்த நிறத்திலிருக்கும் வளையங்களையும், இலையுதிர்காலத்தில் அடர்நிறத்தில் வளையங்களையும், குளிர்காலத்தில் மிகத்துல்லியமான  வளையங்களையும் உருவாக்குகின்றன.

இவ்வாறு பெருமரங்கள் வாழ்நாளில் கடந்துவந்த காலங்களை அவற்றின் வளையங்களிலிருந்து கணக்கிட்டு மரங்களின் வயது கணக்கிடப்படுகின்றது, ஈரப்பதம் மிக அதிகமாகவும், நீண்ட வளர்பருவமும் இருக்கையில் அகலமான ஆண்டு வளையங்களும், வறட்சியான வருடங்களில் மெலிதான வளையங்களும் உருவாகும்

 பொதுவாக மர வளையங்களின் இயல்பு மரங்களின் வாழிடங்களை பொருத்து மாறுபடும். மலையுச்சியில் வாழும் மரத்தின் அகலமான வளையம் வெப்பமான காலத்தையும், மெல்லிய வளையம் குளிர்நிரம்பிய காலத்தையும் காட்டுகின்றது 

 இறந்த மரங்களில் மட்டுமல்லாமல் உயிருடன் இருக்கும் மரங்களிலும் அவற்றை சேதப்படுத்தாமல் வளையங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒரு பென்சிலின் அளவுள்ள மரத்தின் உட்பகுதி, பிரத்யேகமாக இக்கணக்கீடுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும்  increment borer   என்னும்,  சிறிய விட்டம் கொண்ட ஒரு எளிய உலோக துளைப்பானை, மரத்தின் நடுப்பகுதி வரை செலுத்தி நீண்ட உருளைகளாக சேகரிக்கப்படுகின்றது. இதனால் மரங்களில் உண்டாகும் சிறு காயம் இயற்கையாகவே  விரைவில் ஆறிவிடும். 

Incremental borer

இக்கணக்கீட்டில்,  இவ்வாறு எடுக்கப்பட்ட உட்பகுதி உருளை குச்சிகளின் வளையங்களை, அதே வாழிடத்தை சேர்ந்த இறந்த மற்றும் உயிருள்ள மரங்களின்  பலநூறு மாதிரி வளையங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் உயிருள்ள மரங்களின் வயது  கணக்கிடப்படுகிறது.  இறந்த மரங்களின் குறுக்கு வெட்டு பகுதியின் வளைய அளவுகளை ஒரு வரைபடத்தாளில் குறிப்பிட்டு  கணக்கிடுகையில், அம்மரத்தின்   ஒவ்வொரு வளையத்தையும், அவை எந்த ஆண்டு உருவானதென்று கணக்கிட முடியும், இது  crossdating முறை என்ப்படுகின்றது 

 புராதன மரப்பொருட்களின் வயதை கணக்கிடுவதற்கும், வரலாறு, தொல்லியல், கலை உள்ளிட்ட பல துறைகளிலும் இக்கணக்கீடு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இறந்த மரங்களின் வயது, அவை வாழ்ந்த காலத்தின் முக்கிய சூழல் நிகழ்வுகள், மரங்களுக்கு உண்டான இடர்பாடுகள் என பலவற்றை இக்கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக  வளையங்கள்  மிக மெல்லியதாக அதிக இடைவெளியுடன் இருப்பது கடும் வறட்சியான காலத்தையும், மெல்லிய, அடுக்கடுக்கான, நெருக்கமாக அமைந்திருக்கும் ஏராளமான வளையங்கள் அம்மரம் வறட்சியிலிருந்து மீண்டு வந்ததையும் காட்டுகிறது.

வளையங்களின் நிறம் அளவு மட்டுமல்லாது, வேதியியல் சோதனைகளும், கதிரியக்க  கரிம காலக்கணக்கீட்டியல் எனப்படும் ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating) முறைகளும் இணைந்து, இக்கணக்கீட்டு முறையின்  பயன்பாட்டை  மேலும் பல துறைகளில் முன்னெடுத்து செல்கின்றது. 

  கலிஃபோர்னியாவின்  மெதுசில்லா பகுதியின் பிரிஸ்டில் கோன் பைன்மரம் இம்முறையில் கணக்கிடப்பட்டபோதுதான், அது 4852 வருடங்களுக்கு முன்பிருந்தே வளர்ந்துவரும் உலகின் மிகப்பழமையான உயிருள்ள மரமென்று அறியப்பட்டது. 

 இத்துறையின் உட்பிரிவுகளான  காலநிலைமாற்றங்களை கணக்கிடும் Dendroclimatology  , சூழல் மாற்றங்களை ஆய்வு செய்யும்  Dendroecology, பனிப்பாறை  உருகிய வண்டல்கள், பனிப்பாறை விரிவாக்கம், அவற்றின் பின்வாங்கல் மற்றும் கீழிறங்கும் நிகழ்வுகளை குறித்த  ஆய்வுகளுக்கு இக்கணக்கீட்டினை பயன்படுத்தும் முறையான Dendroglaciology , தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை சோதிக்கும்  Dendroarchaeology ஆகியவற்றில் மிக முக்கியமான ஆய்வுகள் நடைபெறுகின்றன.

 வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் புனரமைப்புத்துறையில் (Paleo environmental reconstruction) இக்கணக்கீடு மிகவும் நம்பத்தகுந்த துல்லியமான காலக்கணக்குகளை தெரிவிக்கிறது.

 நெருப்பிலிருந்து தப்பிய மரங்களின் தீத்தழும்புகளை சுற்றி புதிய வளையங்கள் உண்டாகி இருக்கும். இவற்றைக் கொண்டு அம்மரங்கள் வாழ்ந்த காலத்தின்  தீ விபத்துக்களை பற்றி அறிந்துகொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளின்  எரிமலை வெடிப்புக்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், காட்டுத்தீ, பெருவெள்ளம், போன்ற  பல சூழல் முக்கியத்துவமுள்ள காரணிகளை ஆய்வுசெய்ய இம்முறை பெரிதும் பயன்பட்டது.. 

 மரத்தடயவியல் (Wood forensics) ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இக்கணக்கிட்டினால் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று நம்பப்பட்டு வந்த, லண்டன் அருங்காட்சியகத்திலிருந்த ஸ்காட்லாந்தின் அரசி மேரியின் ஓவியத்தின் மரச்சட்டத்தின் வயதை கணக்கிட்டபோதுதான் அது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.

அகழ்வாய்வாளர்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு ஜெர்மனியில் விபத்துக்குள்ளாகி இருந்த ஒரு கப்பலின் மரக்கட்டைகளின் வளையங்களை கணக்கிட்டபோது அவை 1448-1449 ஆண்டுகளின் குளிர்காலத்தில்  வெட்டப்பட்ட மரங்கள் என தெரிய வந்தது. இப்படி பலநூறு முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு இத்துறை உதவி வருகின்றது.

1990’லிருந்து அமெரிக்காவில் இயங்கி வரும் சர்வதேச மரவளைய தகவல் வங்கி ( The International Tree-Ring Data Bank (ITRDB)) உலகெங்கிலும் இருக்கும் மரவளைய ஆய்வாளர்களுக்கு  தேவையான தகவல் உதவிகளை அளித்து வருகின்றது.

தாவர அறிவியலில், மரவளையங்களைக்கொண்டு காலங்களுக்கிடையில்  முன்னும் பின்னுமாக   பயணித்து   பல முக்கிய  கண்டுபிடிப்புக்களை அளிக்கும்  இத்துறை மிக முக்கியமானதும் சுவாரஸ்யமானதும் கூட. அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து இன்னும் பற்பல கண்டுபிடிப்புக்களுக்கான  சாத்தியஙகளையும் இத்துறை தற்போது அளித்திருக்கிறது.

ஜகமே தந்திரம் (Jagame Thanthiram)

கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கி ’வய் நாட் ஸ்டூடியோஸ்’ தயாரித்திருக்கும். ’ஜகமே தந்திரம்’ தனுஷின 40 ஆவது திரைப்படம். தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், Game of thrones புகழ்  ஜேம்ஸ்  காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.ஒளி இயக்கம் ஸ்ரேயஸ் க்ருஷ்ணா, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்.

கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகளில்     வெளியிடமுடியாமல்  2021, ஜூன் 18’ல் நெட்ஃப்ளிக்ஸில்  17 மொழிகளில், 190 நாடுகளில்  வெளியானது ஜகமே தந்திரம்.

 லோக்கல் தாதாவான சுருளி என்னும் தனுஷ், கடல் தாண்டிய ஒரு பகைவிவகாரத்துக்கு லண்டன் செல்லும் ஒற்றை வரிக்கதையை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

 கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் போகுமளவிற்கு, மதுரையில் பரோட்டாக்கடை நடத்தும் சுருளியின் ரவுடித்தன்ங்கள் பிரபலமாகி இருக்கிறது. சுருளியின் ரவுடித்தனத்தை பார்க்கும் , லண்டன்  தாதா பீட்டரின் வலதுகையான ஜான் , லண்டனில் பீட்டருக்கு தொல்லையாக இருக்கும் சிவதாஸ் என்னும் தாதாவை ஒழித்துக்கட்ட  மிகப்பெரும் தொகையை கூலியாக பேசி சுருளியை லண்டனுக்கு வரவழைக்கிறார்., . அதை முடித்துக்கொடுத்து பணத்தை வாங்கிகொண்டு, வாழ்க்கையில் ரவுடித்தனத்தை விட்டொழிக்கலாமென்று சுருளியும் ஒத்துக்கொள்கிறான். சிறு மகன் தீரனின் அன்னையான,  இலங்கை பாடகி அடிலாவை  லண்டனில் சந்தித்து காதலாகிறான் சுருளி.

சொன்னபடியே சிவதாஸை கொல்ல பீட்டருக்கு சுருளி உதவமுடிந்ததா, சிவதாஸ் யார்? ஏன் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்து சுருளியை அழைத்துச்சென்றார்கள்? காதல் நிறைவேறியதா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

சின்ன குழந்தைகளுக்கு சொல்லப்படும் தாதா கதையைப்போல சொல்லப்ட்டிருக்கிறது கதை. படத்திற்கு துப்பாக்கி சண்டை என பெயரிட்டிருக்கலாமென்னும் அளவிற்கு  சுட்டுத்தள்ளுகிறார்கள் விதம் விதமான துப்பாக்கிகளில். தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாயக வழிபாட்டில் இளைஞரான கார்த்திக் சுப்பராஜும் நம்பிக்கை கொண்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.        ஒற்றை ஆளாக பலரை அடித்து துவம்சம் செய்வது, துப்பாக்கி குண்டுகள் மழையென பொழிந்தாலும்  நாயகனுக்கு ஒன்றும் ஆகாதது என வழக்கமான, தமிழ்சினிமா கடந்து வந்த முக்கால் நூற்றாண்டான பாதையிலேயே கார்த்திக்கும் செல்கிறார். 

மீசை, சிரிப்பு ,பாடல்கள் என்று ரஜினியை தனுஷ் நினைவூட்டிக்கொண்டே இருப்பது , முருகேசன் என்னும் பாத்திரம் ஆகியவை கவனிக்க வைக்கி றது. ’’ரகிட ரகிட’’ பாடல் மட்டும் பரவாயில்லை ரகம்

தயாரிப்பு தரப்புக்கும் தனுஷுக்கும்  இடையே நெட்ப்ளிக்ஸில் திரையிடுவது தொடர்பான  மோதலும், தொடர்ந்து விநியோகஸ்தர் தரப்பிலிருந்து ’வய் நாட்’   ஸ்டியோவிற்கு  ரெட்கார்ட் கொடுத்ததுமாக படம் வெளியாகுமுன்னேயே பிரச்சனைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருந்தது.

தனுஷின் நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலமென்றால் திரைக்கதையின் தொய்வு, சொதப்பலான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் மைனஸ். மிகப்பழைய, புளித்துப்போன கேங்ஸ்டர் கதையை மறுபடியும் சொல்லுகையில், அதுவும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளைஞர்கள் சொல்லுகையில் புதிதாக எதேனும் இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் படம் அதே பழைய பாணிதான். இரண்டாம் பாதியில் திரைப்படம் நத்தை வேகத்தில் செல்கிறது. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, ஈழத்தமிழர்கள் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தொடும் படம் நிச்சயம் வேறு ஒரு தளத்தில் இருந்திருக்க வேண்டும்.  

புலம் பெயர்ந்த மக்களின் கவிதையொன்றின்’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ என்னும் ஒரு வரி நமக்கு அளிக்கும் உளச்சித்திரத்தை, மனத்துயரை  இந்த முழுநீள திரைப்படம் ஒரு சதவீதம் கூட கொடுக்க வில்லை.

 கார்த்திக் சுப்பராஜின் படு சுமாரான படமென்று இதை நிச்சயம் சொல்லலாம். மாமனாரின் பேட்ட’யை மருமகனை வைத்து எடுக்க நினைத்து தோல்வியடைந்த படமென்றும் சொல்லலாம்.

ரம்புட்டான்:(Rambutan)

தாவரவியல் பெயர்: ‘நெப்பேலியம் லப்பாசியம்’ (Nephelium Lappaceum)

ரம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழ மரத் தாவரம். ‘சாப்பின்டாசியே’ (Sapindaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தில். ஆண், பெண் மரங்கள் தனித்தனியாகவும், ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே மரத்திலுமாகவும் காணப்படும். இது கிழக்கு ஆசியா (சீனா), தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகிறது.

13லிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையில் இந்திய பெருங்கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபிய வணிகர்களால் இப்பழமரங்கள் உலகின் பல பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

75 வருடங்களுக்கு முன்பு இலைங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இந்தியாவிற்கு அறிமுகமான இம்மரங்கள், முதலில் கேரளாவில் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் அறிமுகமானது.

 ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற  மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. பழத்தின் தோலும், பழுப்பு நிற விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் லேசான புளிப்பு கலந்த இனிப்பான வெண்மையான  நுங்கு போன்ற வழுவழுப்பான, சாறு நிறைந்த சதைப் பகுதி மட்டுமே உண்ணத்தகுந்தது.. இது ஒரு குளுமையான பழம்


ஈரிலைத் தாவரமாகிய ரம்புட்டான் மரம் 12 முதல் 20 மீட்டர் வரை வளரும். மரத்தின் குறுக்களவு 60 செ.மீ. அளவிலும், பசுமை மாறா இலைகள் மாற்றொழுங்கானவையாக (Alternate ) 10 முதல் 30 செ.மீ. நீளம், 3 முதல் 11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலையாகவும் இருக்கும். சிற்றிலைகள் 5 முதல் 15 செ.மீ. நீளமும், 3 முதல் 10 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த மரத்தை விதை மற்றும் ஒட்டுக்கன்று முறைகளில் வளர்க்கலாம். நடப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் பழம் கொடுக்கத் தொடங்கிவிடும்.


பழம் முழுமையாகப் பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். பிஞ்சாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலும் இந்தப் பழம் இருக்கும். பழங்களின் உள்ளே சிறிய பழுப்பு நிற கொட்டை இருக்கும்.ரகங்களுக்கு ஏற்றார்போல இந்த மரம் மார்ச் மாதத்திலிருந்து மே வரை நறுமணம் மிக்க வெள்ளை கலந்த பச்சை நிறப்பூக்களையும், ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் 80 முதல் 200 கிலோ வரையிலான பழங்களையும் கொத்துக்கொத்தாகத் தரும். களிமண் அல்லது வண்டல் நிறைந்த வளமான மண்ணில் மிக நன்றாக வளரும்.

நிறைய மாவுச்சத்தும் புரதமும் நிறைந்த இந்தப் பழம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் அகியவற்றைக் குணமாக்கும். வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், செம்புச் சத்து (Copper), இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை, உடல் எடை குறைப்பு, சருமப் பளபளப்பு போன்றவற்றிற்கும் உதவும். இந்தப் பழத்தின் விதையிலிருந்து மஞ்சள் நிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சோப்பு, மெழுகுவத்திகள் தயாரிக்கவும் உதவுகிறது. ரம்புட்டான் பழங்களும் மரத்தின் பிற பாகங்களும் மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும் பல நூறு ஆண்டுகளாக மருந்தாக உபயோகிக்கப்படுகிறது.

ரம்புட்டான்  பழங்கள் வாங்கும்போது புதிதாகவும், மேல்தோலின் நிறம் அடர்ந்த மஞ்சளுடன் கூடிய சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். . பழங்களின்  மேற்புறத்தில்  முடியானது விறைப்பாக இருக்க வேண்டும்.

சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்களும், குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரையிலும் இப்பழத்தினை வைத்திருந்து பயன்படுத்தலாம். 200 க்கும் மேற்பட்ட வகைகளில் ரம்புட்டான் பழங்கள்  இருந்தாலும் அதிகம் சந்தைப்படுத்தப்பட்டிருப்பது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப்பழங்களே.

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑