லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 16 of 24)

லிங்கம்-வரலாறு, அமைப்பு, வகைகள் மற்றும் வழிபாடுகள்

ஆதியோகியும் ஆதிகுருவுமான சிவபெருமான் உரு, உரு-அரு, அரு(வம்) என்ற மூன்று விதங்களிலும் வழிபடப்படுபவர். தொன்மையான சிவஸ்தலமான சிதம்பரத்தில் தாண்டவக்கோனாகிய நடராஜப் பெருமான் உருவாகவும், ஸ்படிக லிங்கமாக உள்ள சந்திரமௌளீஸ்வரர் அரு-உருவாகவும், சிதம்பர ரகசியம் எனும் வெட்டவெளி அருவாகவும் மூன்று விதமாகவும் வழிபடப்படுகிறார். இது மட்டுமல்லாமல், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், லிங்கோத்பவர், பிக்ஷாடனர் போன்ற பல்வேறு வடிவங்களிலும் கூட சிவபெருமான் வழிபடப்படுகின்றார்.

சிந்து சமவெளி அகழ்வாய்வில் கிடைத்த லிங்க வடிவம்

எனினும் உலகம் முழுவதுமே சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியமானது. இந்தியாவிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  பரவியுள்ள லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. 

ஹம்பி

 ரிக் வேதத்தில் லிங்கம் பற்றீய குறிப்புக்களோ சொல்லோ இல்லை மாரக ருத்ரன் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதர்வவேதத்தில்  சொல்லப்பட்டிருக்கும் ஸ்தம்ப வழிபாடு என்பது லிங்கத்தின் வடிவையே குறிப்பதாக கொள்ளப்படுகின்றது. உபநிஷங்களில்தான் லிங்கம் எனும் சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்பமே புத்த ஸ்தூபிகளீன் வடிவினை அடிப்படியாக கொண்டு லிங்க வ்டிவாகி இருக்கலாமென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

புத்த ஸ்தூபி

சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ்வழிபாடு இருந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிரயபாஸ் (Prayapas) என்ற பெயரில் ரோமானியர்கள் சிவலிங்க வடிவத்தை வணங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரோமானியர்களுக்கு முன்னர் சிவலிங்க வடிவத்தை பாபிலோனாவிலும், பண்டைய காலத்து நகரமான மெசபடோமியா (Mesopotamia), ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவிலும் வழிபாட்டு வந்திருக்கிறார்கள். அயர்லாந்தில் ’ஊழின் கல்’ என்றழைக்கப்படும் லிங்க வடிவினை 500 வருஷங்களுக்கு முன்பே வணங்கி வந்திருக்கிறார்கள்.  

stone of Destiny-Ireland

தொல்காப்பியத்தில் ‘கந்தழி’ என்றும், சங்க இலக்கியங்களில் ‘கந்துடை நிலை’என்றும் சிவலிங்கம் சுட்டப்படுகின்றது.

சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி அதாவது உருவத்திற்கும் அருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு அடையாளமேயாகும். இதை,

காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

                                                                                  -என்கிறார் சேக்கிழார்.

லிங்க புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி அண்ட சராசரங்களையும் கீற்பகுதி அண்டசராசங்களை தாங்கி நிற்கும்  அளப்பரிய சக்தியையும் குறிக்கும் என செல்லப்படுகிறது. சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான – பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது.  இதனையே மாணிக்கவாசகர் ”அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்’’ என கூறுகிறார்.

சிவலிங்க வடிவம் சுயம்புவாக உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றெனும் கருத்தும் உள்ளது. இயற்கையோடு இசைந்த, நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமே லிங்கமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்கள் சொல்கின்கிறன.  தவஞானிகளின் ஆற்றல்களாலும், மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமான பேராற்றல் இயற்கையிலேயே லிங்க வடிவத்திற்கு உள்ளது என அறிவியலும் சொல்கின்றது.

25 அடி உயர லிங்கம்-ஜிரோ பள்ளத்தாக்கு அருணாச்சலபிரதேசம்

  சுவாமி விவேகானந்தர் பிரான்ஸில் 1900  ல் நடந்த ’சமயங்களின் சரித்திரங்கள்’ என்ற மாநாட்டில் சிவலிங்கம் என்பது யுப ஸ்தம்பம் அல்லது யுப கம்பம் அதாவது வேதங்களின் சாரங்களை அடிப்படையாகக் கொண்ட மகா பிரம்மத்தின் அடையாளச் சின்னமே எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போதும் சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன. மூவரின் ஆற்றலையும் உள்ளடக்கிய வடிவமே லிங்க வடிவம் என்கிறது ஸ்ரீருத்ரம்.


சிவதியானத்தில் முதல்படி நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் இருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது.  அருணகிரிநாதர் இதனால்தான் “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.


உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்கிற, அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதைத்தான் அத்வைத விளக்கமான  “தத்துவ மஸி” — நான் அது ஆதல். “அஹம் பிரமாஸ்மி” – நானே கடவுள் என வேதங்களும் சொல்கின்றன. ’தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே ’ என்கிறது  திருமந்திரம்.

இமயமலையில் பனி லிங்கமாகவும், இயற்கையில் விளைந்த பாணலிங்கமாகவும் சிவலிங்கங்கள் உள்ளன. மார்க்கண்டேயருக்கு  என்றும் பதினாறு ஆயுளைக் கொடுத்தது சிவலிங்க வழிபாடேயாகும். வேடுவனாக இருந்த ஒருவனை கண்ணப்பராக்கியதும் சிவலிங்கமே!

லிங்க வடிவின் அமைப்பு

அடிப்பகுதி, நடுப்பகுதி, ஆவுடையார், மேல்பகுதி ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் வெளியில் தெரியும ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன.

இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி  தாராபாத்திரம்  எனப்படும்  மூலவருக்கு மேல் தொங்கவிடப்பட்டிருக்கும் குடம்போன்ற பாத்திரத்தில் நீர் அல்லது பால் நிரப்பி லிங்கத்தின் மீது சொட்டும்படி அமைக்கப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

’’பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம்’’ என்று இதை விளக்குகின்றது சிவ புராண மந்திரம்

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும். ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு..யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

“ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா”
என்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். “ஆத்ம யோனி” என்றால் ஆத்மா செல்லும் பாதை.

எல்லா சிவலிங்கத்திலும் ஆவுடையார் இருக்காது, மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு. நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது. கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். பாணாசுரன், மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்து வழிபட்டிருந்ததால்  அந்த லிங்கங்களில் எப்போதும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

பாணலிங்கம்

இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான். நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் இவை கீறல் போன்ற ரேகையுடன், பளபளப்பாக, நீள் உருண்டை வடிவம் கொண்டதாக இருக்கின்றன. நாவற்பழத்தின் அடர்நிறம், தேன் நிறம், வண்டு நிறம், காவி, நீல, பச்சை, பழுப்பு  முதலிய பலவண்ணங்களில் பாணலிங்கம் இருக்கும்.

 திருப்பெருந்துறையில் மணிவாசகர் ஆலயத்தில் மேலே லிங்கமில்லாது வெறும் ஆவுடையார் மட்டும் இருக்கும்

சிவலிங்கத்தின் பீடமும் பலவகையான முறையில் அமைந்திருக்கும். பீடம் நாற்கோணமாயிருந்தால் இயக்கச் சத்தியாகும். பீடம் அறு கோணமாயிந்தால் கிடத்தற் சத்தியாகும். பீடம் வட்டமாயிருந்தால் இருத்தற் சத்தியாகும்

பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் லிங்கங்கள் வர்த்தமானக லிங்கம் எனப்படும்

ஆத்ய லிங்கம்  எனபவை பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கங்கள்.

சிவலிங்கத்தின் ருத்திர பாகமாகிய மேற்பகுதி உருண்டை அல்லது எட்டு மூலை அல்லது 16 மூலை என்ற முறையிலும் அமைவதுண்டு.

சிவலிங்கத்தின் உச்சி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நான்கு வகை லிங்கங்களாவன;,

ஆட்யலிங்கம் – சிவலிங்கத்தின் உச்சி அர்த்த சந்திரன் வடிவில் இருக்கும்.

அநாட்யலிங்கம் – உச்சி வெள்ளரிப் பழம் போல் இருக்கும்.
சுரேட்யலிங்கம் – உச்சி கோழி முட்டை வடிவில் இருக்கும்.
சர்வசமலிங்கம் – உச்சி குடை வடிவில் இருக்கும்.

சர்வசமலிங்கத்தில் மட்டும் முகலிங்கங்கள் எனப்படும், நான்கு அல்லது ஐந்து முகங்களைக் கொண்ட லிங்கம் அமைக்கப்படும்.

சதாசிவமூர்த்தம் எனப்படும் சிவலிங்கம் ஈசானம் என்னும் நடு உச்சிமுகம், தற்புருடம் (கிழக்கு), அகோரம் (தெற்கு), வாமதேவம் (வடக்கு), சத்தியோசாதம் (மேற்கு) ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டதாகும்.

 நான்கு முகங்கள் கொண்ட சிவலிங்கம் – ஈசானம் என்னும் உச்சிமுகம் தவிர, ஏனைய  நான்கையும் கொண்டிருக்கும்

மும்முக லிங்கத்தில், தற்புருடம்,வாம்தேவம்,அகீரம் ஆகியவை மட்டுமே அமைந்திருக்கும்

இரண்டு முக லிங்கத்தில் தற்புருடம், சத்தியோசாதம் ஆகிய இரண்டு மட்டும் அமைந்திருக்கும் .

ஒருமுக லிங்கத்தில் தற்புருடம் மட்டும் இருக்கும். கிழக்கு நோக்கியுள்ள இந்த முகம் பொன் நிறமானது. கோயில்களில் ‘நிருதி’ என்னும் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இவற்றை ‘நிருதி லிங்கம்’ என்பர். மனிதனை வாகனமாகக் கொண்டவர் நிருதி எனும் தேவன். அவரால் வழிபடப்படும் இந்த லிங்கத்தை வணங்குபவர்கள், ராஜயோகத்துடன், மனிதர்களை அடக்கி ஆளலாம் என்கிறார்கள்.

திருவண்ணாமலை அருணா சலேச்வரர் மூலஸ்தானம் அருகில் உள்ள நிருதி மூலையில் ஒருமுகலிங்கம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சபையிலும் ஒருமுகலிங்கம் இருக்கிறது

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் லிங்கத்துக்கு முகம் இல்லா விட்டாலும், வெள்ளி, தங்கக் கவசங்களில் கண், மூக்கு, வாய் முதலியவற்றை அமைத்து அணிவிக்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் கவசத்துடனான முகலிங்கம் உள்ளது.

.திருக்கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்தாற்போல உலோகத்தால் அமைத்து வழிபடுவதும் பின்வரும் ஐந்து கலைகளைச் சுட்டுவதன் பொருட்டேயாகும்.

  1. ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து விடுவிக்கும் நிவிர்த்திக் கலை
  2. ஆன்மாக்களை முத்திக்குச் செலுத்தும் பிரதிட்டாக் கலை
  3. பந்த நிலை  நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைக் கொடுக்கும் வித்தியா கலை
  4. அனுபவ ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய எல்லாவற்றையும் சாந்தமாகச் செய்வதற்கான சாந்தி கலை .
  5. விருப்பு, வெறுப்பு நீங்கிச் சாந்தமாக நின்ற ஆன்மாக்களுக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற நிலையை உண்டாக்கும் சாந்தியதீத கலை

தொன்மையான கோவில்களில் நான்முகலிங்கத்தினருகில் இரட்டைபாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்  அமைப்பை அறிவியலாளர்கள் DNA Helix அமைப்புடன் ஒப்பிடுகிறார்கள்.  

சிவலிங்கத்திலேயே நமசிவாய என்ற மந்திரத்தை அமைத்துக் காட்டும் முறையும் உண்டு. மேற்குமுகம் ஆகிய சத்தியோசாதம் ‘ந’, வடக்கு முகம் ஆகிய வாமதேவம் ‘ம’, தெற்கு முகம் ஆகிய அகோரம் ‘சி’, கிழக்கு முகம் ஆகிய தற்புருடம் ‘வா’, உச்சி முகம் ஆகிய ஈசானம் ‘ய’ – என்ற ஐந்தெழுத்து, ஐந்து முகங்ளாயின.

  ..

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க ரூபத்தில் வழிபாடு செய்வதே சிறந்தது’ என்று மகாபாரதத்தில் வியாசர் அருளியிருக்கிறார்.  அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மையும் கொண்டது  லிங்க வடிவங்கள் என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன.

அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்தி காத்துவரும் ஆற்றலின் வடிவம லிங்கம்.. இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதை அணுக்கரு உலைகள்(Nuclear Reactors) லிங்க வடிவிலிருப்பதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணம். சிவ புராணம், ஸ்கந்த புராணம் என எல்லாவற்றிலும் லிங்கத்தை பற்றிய வரலாறு உள்ளது! பிருகு முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

“திருமூலர்” லிங்க வடிவத்தை   பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே”

அடுத்த பகுதியில் லிங்கங்களின் பல்வேறு வகைகளைக் குறித்து காணலாம்

அமலபர்ணி-Rheum nobile

உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை   3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும்  2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில்  மட்டும் உள்ள தாவரங்கள் 45,000 (7.8%).  இவற்றில் 33% தாவரங்கள் இந்தியாவில் பூர்வீகமாக உள்ளவை. இதில் 15,000 பூக்கும் தாவர இனங்களாகும். இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் அரிய தாவரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இமாலய பகுதி உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கச்செறிவு உள்ள பகுதிகள் உலகிலேயே மொத்தம் 34 தான் உள்ளது

உலகின் பூங்கா என்றழைக்கப்படும் இந்தியாவெங்கிலுமே மருத்துவத் தாவரங்கள்  செழித்துக்காணப்படுகின்றது. பல்வேறு நாட்டுப்புற மருந்துகளும்,பாரம்பரியச் சிகிச்சை முறைகளும்  மிகப் பரவலாகப்புழக்கத்தில் உள்ள இந்தியாவில் மிகத்தொன்மையான காலந்தொட்டே அரிய மருத்துவக்குணங்கள் உள்ள தாவரங்கள் இமாலயத்தில் வளர்கின்றன

பனிசூழ்ந்த என்று பொருள் கொண்ட ’’இமாச்சல’ பகுதி, உலகின் மொத்த தாவர இனங்களின் 10 சதவீதத்தையும் இந்தியாவின் 50 % தாவரங்களையும் கொண்டது. வடகிழக்கு இமாலய பகுதி தாவர சிற்றினங்களின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது.  

இமயத்திலிருக்கும் அரிய தாவரங்களிலொன்றான அமலபர்ணி / ஏகாவீரா எனும் பெயரகளில் அழைக்கப்படும் Rheum nobile பனிமூடிய சிகரங்களின் உச்சியில் சுமார் 50,000அடி உயரத்தில் மிக அதிக புற ஊதாகக்திர்வீச்சும் பனிப்பொழிவுமாக இருக்கும் சூழலில் வளரும் ஒரு மருத்துவத்தாவரமாகும். பிரகாசமான தந்த நிறத்தில் கூம்புவடிவ கோபுரம்போல வளர்ந்திருக்கும் 2 லிருந்து 6 அடிவரை   வளரும் இத்தாவரம் பளபளப்பான இலைகளைக் கொண்டது. இதன் அறிவியல் பெயரில் Rheum என்பது செந்நிற தாவ்ரபாகங்களைக்கொண்டது என்றும் nobile என்பது இதன் ஆச்சர்யமூட்டும் உயரத்தையும் குறிப்பிடுகிறது.

 இமயமலையிலும், ஆஃப்கானிஸ்தான், திபெத், பூட்டான், பாகிஸ்தான், சிக்கிம் . சீனா மற்றும் மியான்மரில் உயரமான இடங்களில் மட்டும் இத்தாவரங்கள் காணப்படுகின்றன. சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் நகரத்தில் 14,000 அடி உயரத்தில் வளர்ந்திருந்த இத்தாவரத்தின் விசேஷமான வாழிடம், தோற்றம் மற்றும் பண்புகள்குறித்த  முதல் ஆய்வுக்கட்டுரை 1855-ல் தாவரவியலாளர்கள் ஹூக்கர் மற்றூம் தாமஸ் ஆகியோரால் எழுதி வெளியிடபட்டது. 

சிக்கிமில் இப்போது சுமார் 4000 அடி உயரத்தில் வளரும் இந்தத்தாவரம் சிக்கிம் சுந்தரி என்று அழைக்கப்படுகிறது.

தாவரவியலாளர் ஹூக்கர் வரைந்த சித்திரம்

சிவந்த இலைக்காம்பும் நரம்புகளும் கொண்ட, வட்ட வடிவில் அமைந்திருக்கும் இலைகளும் அவற்றின் மீது உயரமாகக்  கூம்பு வடிவில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியதுபோலத் தடிமனான  இலைச்செதில்களும் அமைந்திருக்கும் சிக்கிம் ருபர்ப் என அழைக்கப்படும் இந்த மருத்துவத்தாவரத்தின் நுனியில் மட்டும் இலைச்செதில்களின் விளிம்புகள் இளஞ்சிவப்பிலிருக்கும்.நுண்ணிய பசும்மலர்க்கொத்துக்கள் இலைச்செதில்களின் உள்ளிருக்கும்.

இச்செடி அசாதாரணசூழலில் வாழும் பொருட்டான பல தகவமைப்புக்களை கொண்டிருக்கிறது. வரிசையாக ஒன்றின் மீதொன்று படிந்திருக்கும் இலைச்செதில் (bracts) அமைப்புக்களினுள்ளே மலர்களையும் கனிகளையும் பொதிந்து வைத்து உறைபனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்,  Quercetin flavonoids என்னும் வேதிப்பொருளின் உதவியால் புறஊதாக்கதிர்களை வடிகட்டி, ஒளியை தனக்குள்ளே கடத்தும் அரிய தகவமைப்புக்கொண்ட இந்த தாவரம் இமயத்தின் பல அற்புதங்களில் ஒன்றாகும்.

 பாலிகோனேசியே குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரத்தின் வேர்கள் உட்பகுதி அடர் மஞ்சளாக, முழங்கை  தடிமனில் 7 அடிஆழம் வரை சென்றிருக்கும்.’’சுக்கா’’ என்றழைக்கப்படும் மெல்லிய அமிலச்சுவையுடன் இருக்கும் இதன் தண்டுகளை உள்ளூர் வாசிகள் உணவாக உட்கொள்ளுகின்றனர். மூங்கில்களைப்போல் உட்புறம் காலியாக இருக்கும் தண்டுகளுக்குள் துல்லிய இனிய சுவையான நீரிருக்கும்

மகரந்தச்சேர்க்கை

ஜூன்-ஜூலை மதங்களில், மலர்கள் மலர்ந்த பிறகு  தனித்தனியே பிரிந்து ஆழ்ந்த சிவப்பு நிறமாகிவிடும் இலைச்செதில்கள், கனிகள் முதிர்ந்தபின்னர் உதிர்ந்துவிடும். அடர் காபிக்கொட்டை நிறத்தில் கொத்துக்கொத்தாக பழங்கள் இலைகளற்ற தண்டுகளில் அழகாக தொங்கிக்கொண்டிருக்கும்.

ஒளியை வடிகட்டி தேவையான ஒளியை மட்டும் தனக்குள்ளே ஊடுருவிச்செல்ல அனுமதித்து இலைச்செதில்களின் உட்புறம் மிதமான வெப்பத்துடன் இருப்பதால், இத்தாவரம் ’’ glasshouse plant ’’ என்றும் அழைக்கப்படுகிறது .

இருபாலின மலர்களில் காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும்.  கனிகள் ஆகஸ்ட் செப்டம்பரில் முதிர்ந்து விடும்.  பனிப்பொழிவு மிகுந்த வாழிடமாதலால் மகரந்தசேர்க்கைக்கு தேவையான பூச்சிகளும் இங்கு மிகக்குறைவு அதற்கு தேவையான தகவமைப்பையும் கொண்டிருக்கும் இச்செடியின் 93 % மலர்களில் மகரந்ச்சேர்க்கை நடந்து விடுகின்றதென்பதும் அதிசயமே! Bradysia என்னும்  சிறிய பறக்கும் பூச்சி இனங்கள் இச்செடியின் இலைச்செதிலுக்குள்ளிருக்கும் வெப்பத்தில் தங்களது முட்டைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, இந்த உதவிக்கு மாற்றாக  இச்செடியின் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றது. இந்த  இரு உயிரினங்களும் பரஸ்பரம் உதவியாக இருந்து தொடர்ந்து இப்பகிர்வாழ்வில் இருந்து வருவதும் அதிசயமே. இப்பூசிகளை கவரும் வேதிப்பொருட்களை இச்செடி சுரந்து காற்றில் பரப்புகின்றது.

தாவரபாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் ஜீரணத்தை தூண்டவும் குடற்புழுக்களை நீக்கவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் சேர்ந்திருக்கும் அசுத்த நீரை வெளியேற்றவும் வீக்கங்களை வடியச்செய்து குணமாக்கவும் இவை அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதன் மருத்துவ குணங்களுக்கு இவற்றிலுள்ள Rutin, quercetin 3-O-rutinoside, Guaijaverin, quercetin 3-O-arabinoside, Hyperin, quercetin 3-O-galactoside, Isoquercitrin, quercetin 3-O-glucoside,, quercetin 7-O-glycoside, quercetin , kaempferol glycoside& feruloyl ester ஆகிய வேதிப்பொருட்களே  காரணமாக இருக்கின்றன

டாகா (‘taga’)என அழைக்கபடும் இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயத்தில், அந்தப்பகுதி மக்கள் கம்பளிகளுக்கு சாயமேற்றுகிறார்கள்.

அப்படியான அசாதாரண வாழிடங்களில், அத்தனை உயரத்தில் வளரும் பல தாவரங்கள் பாறைகளின் பின்னே மறைந்தும் தரையோடு தரையாக பரவி வளர்ந்தும், சிற்றிலைகளை மட்டும் உருவாக்கியும், அங்கிருக்கும் மிகக்குறைந்த வெப்பம், கடும் பனிப்பொழிவு மற்றும் அதிக புறஊதா கதிர்வீச்சு ஆகிவற்றிலிருந்து தப்பிக்கும் ஆனால் அமலபர்ணி அப்படியல்ல,  தௌந்த தகவமைப்புக்களுடன் நிமிர்ந்து பெரிய முறம்போன்ற இலைச்செதில்களுடன், சிறு கோபுரம்போல எழுந்து  6அடி வரை வளர்ந்து கம்பீரமாக மனிமலையின் உச்சியில்  நிற்கிறது.

இந்த தாவரத்தை பொது ஊடகங்களில் சிலர் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும்  அதிசய மகாமேரு என்று  உண்மைக்கு புறம்பான செய்தியை பலஆண்டுகளாக  புகைப்படத்துடன் பகிர்ந்தவாறே இருக்கிறார்கள். இது  அரியதுதான், இயற்கையின்  அதிசயங்களிலொன்றுதான் ஆனால் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் தாவரமல்ல, வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரம்தான். நூற்றுக்கணக்கான் வருடங்களுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரமேதும் இப்புவியில் இல்லை.

மோஹநாசினி

சங்கு புஷ்பம் – Clitoria ternatea

சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், கருவிளை, மாமூலி, காக்கட்டான், காக்கரட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதா என பலபெயர்களில் அழைக்கப்படுகின்ற  இக்கொடி ஃபேபேசியே குடும்பத்தை சேர்ந்தது. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ எனறழைப்பார்கள். இதன் ஆங்கிலப்பெயர்களாவன;  Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea,  Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea, மகாபாரதம் இதனை அபராஜிதா என்கிறது, ‘’கார்க்கோடப் பூ” என்கிறாள் ஆண்டாள். அரவிந்த அன்னை இம்மலரை’’ கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார்

சங்குப்பூ காடுகள்.தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. இச்செடியின் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. இதில் வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் அரிதாக வளர்வதுண்டு. வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளுமே மருத்துவப் பயன் கொண்டவை.

  சங்குப்பூ ஏறு கொடி வகையை (Climber) சார்ந்தது. இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் அடர்நீல நிறமான மலர்களையும் உடையது. சிறிய நீளமான காய்கள் தட்டையாக இருக்கும். இச்செடியின் பூ நன்றாக விரிந்து மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போல தோன்றுவதால் சங்குப்பூ என்று பெயர் வந்தது.  வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட மலர்கள் இருக்கின்றன.

தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ்  50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும்   Clitoria ternatea  தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora Voigt செருவிளை எனவும் தமிழ்ப்பெயர்களை கொண்டிருக்கின்றன.

 ஆசியாவை தாயகமாக கொண்ட இச்செடி தற்பொழுது ஆப்பிரிக்காஅமெரிக்காஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது.  கொடி போல் வளரும் இயல்புடைய இவை பற்றிக்கொள்ள துணை  இல்லாத இடங்களில் தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவி வளரும். ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் இச்செடி செழித்து  வளரும். சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10  தட்டையான விதைகள் இருக்கும்.  ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள்   வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி  மண்ணை  வளமாக்குகிறது. 

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் வகையான இக்கொடியில் 4×3 செமீ அளவில்  நன்கு மலர்ந்த மலர்கள் இருக்கும் . மலர் உள்ளிட்ட இச்செடியின் பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்கள்  ternatins , triterpenoidsflavonol glycosidesanthocyanins , steroids, Cyclic peptide-cliotides  ஆகியவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும்  anthocyanins வகையைச்சேர்ந்த  delphinidin.  என்னும் நிறமியால் உணடானது. மலர்கள் பட்டாம்பூச்சியின் இறகுகளைப்போல அழகுற அமைந்திருக்கும்.

இச்செடி முதன்முதலில் 1678ல் Rumpf என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளரால் Flos clitoridis ternatensibus  என்று பெயரிடப்பட்டிருந்தது.  பிறகு 1800ல் மற்றோரு ஜெர்மானிய தாவரவியலாளரால்   இவை டெர்னேஷியா தீவுகளில் கண்டறியப்பட்டபோது மலர்களின் அமைப்பைக்கொண்டு அதே பெயரில்தான் அழைக்கப்பட்டன.

 இதன் பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்ப்தால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பை குறிக்கின்றது.  ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக ஒரு தாவரத்திற்கு பெயரிடுவது குறித்து தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea  போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள் ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் நிலைத்தது. பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’விலிருந்து கொண்டு வந்த செடிகளாதலால்  தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் சிற்றினப்பெயராக  ternatea என்பதையே வைத்தார்.  

இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இச்செடியின் மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும்.

வேகமாக வளரும் இயல்புடைய,  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்

குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும்  சிதம்பர நாத மாமுனிவர்  இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது

 பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும்.
கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது

மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)

மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற்றிணை 221/1,2

பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறுந்தொகை 110/4

தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற்றிணை 262/1

கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1

நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/

கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/11

உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளன் உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனப்பட்டான்.  இச்செடியின் வெண்மலர்கள் அரிதாகவே காணக்கிடைப்பதைபோலவே இலக்கியங்களிலும் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது . அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத தென்னிந்தியாவை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant)  இருக்கின்றது.

 தென்கிழக்கு ஆசியாவில்  உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது.  மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் அநேக மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம்

 சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களும் விதைகளும் கூட உணவில் சேர்க்கப்படுகின்றது

சீன பரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும்  பலநோய்களுக்கு தீர்வாகும் முக்கியமான  மருந்தாக இது உபயோகிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மலர்கள் நினைவாற்றலுக்கும் மனச்சோர்வு நீங்கவும் வலிப்புநோய் தீரவும் தூக்கம் வரவழைக்கவும் கொடுக்கப்படுகின்றது. பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும்  சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறது .

மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிபொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று. இச்செடியின் வேர்கள் conjunctivitis. எனப்படும் இமைப்படல அழற்சிக்கு நல்ல மருந்தாகும்

சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

மலர்களில்   Antioxidants நிறைந்துள்ளதால் சருமத்தை பாதுகாத்து உடல் கழிவுகளை வெளியேற்றும். கேசப்பராமரிப்பிற்கான குணங்களையும் கொண்டிருக்கும் சங்குபுஷ்ப பானம் இளநரையை தடுத்து, கேசத்தின் வேர்களை பலமாக்கி, கேசமுதிர்வதையும் குறைக்கின்றது. ஜீரணத்திற்கும் குடற்புழுக்களை நீக்கவும் உதவுகின்றது இம்மலர்ச்சாற்றின் பானம்

மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின்  மனதை அமைதிப்படுத்துகின்றது. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தைக் குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்

மலர்களின் சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும் சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும்

தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang  என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில்  அரிசிச்சோற்றை நீலநிறமாக்க  சங்குப்பூச்சாறு  பயன்படுத்தப்படுகின்றது

மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும்  உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில்  dok anchan  எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும்  நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தில் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பு சங்குப்பூக்கொண்டு செய்யப்படுகிறது.

பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். ஜின் போன்ற பானங்களிலும் கூட இப்போது பலநாடுகளில் இம்மலரைச் சேர்த்து நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது

செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகளால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு நல்ல வரவேற்இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிபோன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)

இறைவழிபாட்டில் இம்மலர் மிக சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. சிவபூஜைக்குரிய மலர்களில் காலை, மதியம், மாலை என படைக்கப்படும் மலர்களின் பட்டியலில் சங்கு புஷ்பம் மதியம் பூஜை செய்யவேண்டிய மலர்கலின் பட்டியலில் இருக்கின்றது

வெண்சங்குபுஷ்பம் சிவனுக்கும், நீலம் விஷ்ணுவுக்கும் உரியது அம்பாளுக்கும் உரியதுதான் நீல சங்குபுஷ்பம். திருமியச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆலயத்தில் சதய நட்சத்திரத்தன்று தாமரை மலருக்குள் சங்குபுஷ்பத்தை வைத்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் மேகநாதனருக்கு அர்ச்சனை செய்வது மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

கோவை கொட்டிமேடு என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஷ்வரி சமேத ஸ்ரீ சங்கநாதருக்கும் சங்குபூஷ்பங்களால் அர்ச்சனை அலங்காரம் ஆகியவை  விசேஷமாக செய்யப்படுகின்றது.

இத்தனை அழகிய எளிதில் வளரக்கூடிய சங்குபுஷ்ப செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும்  வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யபடுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. தற்போது இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால்  ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன.

Changeling!

Changeling

ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளில் தேவதைகளும், யட்சிகளும் தங்களுக்கு பிடித்தமான மனிதக்குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் அடிமைகளாக்கி சேவை செய்ய வைத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதே சாயலுள்ள, தீய குணங்களுள்ள வேறு குழந்தைகளை கொண்டு வந்து மாற்றி வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. அப்படி மாற்றபட்ட குழந்தைகளே ‘changelings’ எனப்படுவார்கள்.

லாஸ் ஏஞ்சலஸில் 1928 ஆம் வருடம், திருமதி கிரிஸ்டைன் கோலின்ஸ் பணியிலிருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் தனித்திருந்த அவரது 9 வயது மகன் வால்ட்டர் காணாமல் போயிருந்தான்.  காவல்துறையில் புகாரளித்தும் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு  வால்ட்டர், இல்லினாய்ஸில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையிலிருந்து செய்து வருகின்றது. ஆனால்  ரயில் நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த அன்னை கோலின்ஸிடம் வால்ட்டர் என்று ஒப்படைக்கப்பட்டதோ  உயரம், சாயல், உடல்மொழி, பாவனை என அனைத்திலும் வேறுபட்டிருந்த மற்றொரு சிறுவன். அது தன் மகனில்லை என்ற கோலின்ஸின் மறுப்புக்கு காவல்துறை செவிசாய்க்காமல், அது வால்ட்டர்தான் 5 மாதங்களில் சாயல் மாறிவிட்டது என்று சாதித்துவிட்டு, ஊடகங்களில் காணாமல்போன சிறுவனை விரைவில் கண்டுபிடித்த  தங்களின் சாகசத்தை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

 அச்சிறுவன் தன் மகனில்லை என்பதை நிரூபிக்க கோலின்ஸ் செய்யும் முயற்சிகள், போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப்போகையில், திருச்சபையின்  மதகுரு ஒருவரின் உதவியால்  லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் செயலின்மையும், ஊழலும் வெளிச்சத்துக்கு  வந்து, கடத்திச்செல்லபட்டு கொடூரமாக கொலைசெய்யபட்ட பலகுழந்தைகளைப்பற்றியும் பின்னர் தெரிய வந்து புலன்விசாரணை நடக்கிறது. அதன்பிறகும் வால்டரைக்குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தன்னிடம் அளிக்கப்பட்ட சிறுவன் தன் மகனல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற கோலின்ஸை மனநோயாளி என முத்திரை குத்தி காப்பகத்துக்கு அனுப்பி சித்ரவதை செய்கிறார்கள்.கடும் போராட்டத்துக்கு பிறகு காப்பகத்திலிருந்து வெளிவரும் கோலின்ஸ் மீண்டும் முழுவீச்சில் தன் மகனைதேடுவதை தொடர்கிறார்.

 இந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையிலான  குற்றமும் மர்மமும் கலந்த திரைப்படம்தான் 2008ல் வெளியான ’’Changeling’.’ தயாரிப்பும், இயக்கமும், பிண்ணனி இசையும் பிரபல இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood ). திரைக்கதை மிக்கேல் ஸ்ட்ரேக்ஜின்ச்கி (Michael Straczynski). இக்கதையில் அக்காலகட்டத்தின் குழந்தைக்கடத்தல்,  பெண்களுக்கெதிரான குற்றங்கள், வன்முறைகள், அரசியல் ஊழல், மனநோய் காப்பகங்களில் நடந்த அநீதிகள், ஆகியவையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஏஞ்சலினா ஜோலி, திருமதி கோலின்ஸ் ஆக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கும் மிக்கேல் எதேச்சையாக இந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டு அதன்பின்னர் அதன் குற்றப்பின்ணனியை காவலதிகாரிகளால் எரிக்கப்படவிருந்த  பல்லாயிரக்கணக்கான பக்கங்களடங்கிய   குற்றம் தொடர்பான ஆவணங்களையும், கோலின்ஸுடனான நீதிமன்ற  விசாரணைகளையும் வாசித்து,  சம்பவத்துடன் தொடர்பிலிருந்த பல இடங்களுக்கு பிரயாணித்து, பல வருடங்கள் ஆய்வு செய்தே இக்கதையை எழுதியிருக்கிறார். இது அவரின் முதல் வெள்ளித்திரைக்கதை. ஊடகவியல் மற்றும் இதழியலில் அவருக்கிருந்த அனுபவம் திரைக்கதையை செம்மையாக்கியிருக்கிறது Imagine Entertainment மற்றும் Universal Pictures ஆகியவையும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் பங்கு கொண்டனர்

 Period film வகையிலான  இத்திரைப்படத்தில் மகனை இழந்த, நம்பிக்கை இழக்காமல் இறுதிவரை போராடும் அன்னையின் கதாபாத்திரத்திற்கு பல முன்ணனி நடிகைகள் போட்டியிட்டும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் 1920களில் நடக்கும் கதைக்கான முகமும்,  அன்னைமை மிளிரும் தோற்றமும் இருப்பவராக  ஏஞ்சலினாவையே   தேர்வு செய்தார். ஏஞ்சலினாவுடன்  Jeffrey DonovanJason Butler HarnerJohn MalkovichMichael Kelly, மற்றும் Amy Ryan.ஆகியோரும் முக்கியப்பாத்திரமேற்றிருக்கின்றனர்

2007 அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவில் துவங்கி நடத்தப்பட்ட படப்பிடிப்பு விரைவாக நடந்து 43 நாட்களில்  முடிவடைந்தது. அதன் பின்னர் post production வேலைகளாக கணினியில்  70 வருடங்களுக்கு முன்னரான நகரநிர்மாணம் மற்றும் சாலைப்போக்குவரத்து, உடையலங்காரம் உள்ளிட்ட பழமை ஒவ்வொரு காட்சியிலும்  பிழையின்றியும் சிறப்பாகவும் இருக்கும்படி கவனமாக இணைக்கப்பட்டது  

.அக்டோபர் 2008ல் உலகெங்கிலும் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் காட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கான எதிர்ப்பும் கொஞ்சம் இருந்ததென்றாலும் 55 மில்லியனில் தயாரிக்கபட்ட இத்திரைப்படம் 113 மில்லியன் லாபமீட்டி பெருவெற்றி பெற்றது சந்தேகமில்லாமல். ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு பரிந்துரைககப்பட்டு, மிக முக்கியமான பலவிருதுகளையும் பெற்றது ‘’changeling’’.

 ஏஞ்சலாவின் பிரமாதமான நடிப்புக்கு இப்படமும் மற்றுமொரு உதாரணம். படத்தின் துவக்கத்தில் அவரின் அழகியதோற்றத்தில், குறிப்பாக ரத்தச்சிவப்பு சாயமிட்ட அவரின் உதடுகளிலிருந்து கவனத்தை திருப்ப கொஞ்சம் பிரயத்தனப்படவேண்டியிருப்பினும் சில காட்சிகளிலேயே அவர் மகனை இழந்த அன்னையான கோலின்ஸ் ஆக மட்டுமே உணர்வுபூர்வமாக திரையில் தெரியத்தொடங்குவதால் கதையோட்டத்தில் நாமும் கலந்துவிடுகிறோம்.

மகனுடன் அவனுக்கு புரியும் மொழியில் உரையாடியபடியே நாளைத்துவங்குவது, தன் அப்பா ஏன் தன்னுடன் இல்லையென்ற அவன் கேள்விக்கு  வெகுசாமர்த்தியமான பதிலைச்சொல்லுவது, மகன் காணாமல் போனபின்பு பரிதவிப்பது, விடாமுயற்சியுடன் அவனை தேடுவது, அக்காலகட்டத்தில் வழக்கத்திலிருந்தது போல் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து லாவகமாக பணிசெய்வது, காவல் துறையினரிடம் தன் கருத்தை திரும்பத் திரும்ப மனம் தளராமல் எடுத்துரைப்பது, மகனல்லவென்று தெரிந்திருந்தும் அந்த மாற்றி அனுப்பப்பட்டிருந்த சிறுவனிடமும் கரிசனத்துடன் இருப்பது என ஏஞ்சலினா  கோலின்ஸாகவே மாறி விட்டிருக்கிறார்

இயற்கையில் மலரிதழ்களின் மிகச்சரியான எண்ணிக்கை, அவற்றிற்கிடையேயான  சீரான இடைவெளி, மிகத்துல்லியமான இடைவெளியில் அமைந்திருக்கும் சூரியகாந்திப்பூக்களின் விதைகள், பைன் கோன்கள் ஆகியவற்றின் அமைப்பை கணிதவியல் தங்கக்கோணம், Golden  Angle அல்லது Golden Ratio என்கிறது. அப்படியான மிகத்துல்லியமான அளவுகளில் தங்கவிதியின்படி அமைந்திருக்கும் முகம் கொண்டவரென்று (golen ratio face) அறியப்பட்ட பிரபலமான ஏஞ்சலினா தன் அழகுக்கு அழகு சேர்க்கும் நடிப்பை இப்படத்தில் அளித்திருக்கிறார்.  இல்லினாய்ஸிலிருந்து ரயிலில் வரும் காணாமல் போன மகனுக்காக  பரிதவிப்புடன் காத்திருப்பதும் மகனல்லவென்று சந்தேகம் வந்தாலும் ஊடகங்களின் முன்னால் எப்படி மறுத்துச்சொல்வதென்ற தயக்கமும், காவலதிகாரியின் வற்புறுத்தலால் வந்த குழப்பமுமாக இருக்கையில், இவர்தான் நாயகி என்னும் கிளிண்ட் ஈஸ்வுடின் கணிப்பு எத்தனை சரியென்பது புலனாகும் பார்வையாளர்களுக்கு.

 இத்திரைப்படத்தின் பொருட்டு ஸ்கேட்டிங் ஷூக்களில் விரைவாக நடப்பதற்கான பயிற்சியையும் ஏஞ்சலினா எடுத்துக்கொண்டிருக்கிறார்.

 திரும்ப கிடைத்திருப்பது தன் மகனல்ல, இன்னும் எங்கேயோ தன்மகன் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறான் என்பதை நிரூபிக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே  மனதை பிசைபவை. இப்படி ஒரு ஒற்றைத்தாய் முன்னெப்போதோ அல்லலுற்றிருக்கிறார் என்னும் உண்மையை கண்முன்னே கொண்டு வந்து காட்டிவிடுகிறார் ஏஞ்சலினா.

மாற்றபட்ட சிறுவனின் உயரம் குறைவாக இருப்பது, சிறுவனின் ஆணுறுப்பின் முனைத்தோல் நீக்கப்பட்டிருப்பது, அவன் பற்களின் அமைப்பு மாறியிருப்பது, அவன் பள்ளி ஆசிரியையின் இது வால்டரல்ல என்னும் வாக்குமூலம்  போன்ற மறுக்க முடியாத ஆதாரங்களை மறுநாள் ஊடகங்களின் முன்வைக்கப்போகிறார் என்று தெரிந்ததும் சொந்த மகனை மறுக்கும் மனப்பிறழ்வு உள்ளவரென காட்டி கோலின்ஸை காவல்துறை மனநோயாளிகளின் காப்பகத்துக்கு அனுப்புவதும், அங்கு அவருக்கு நடக்கும் இழிவுகளும், கிடைத்திருப்பது வால்ட்டர்தான் என்று ஒத்துக்கொள்ளும்படி அவருக்கு  கொடுக்கப்படும் நேரடியான மிரட்டல்களும், உயிராபத்துக்களுமாக திரைப்படம் உண்மைச்சம்பவம் நடைபெற்ற காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று கலங்க வைத்து விடுகின்றது.

 மதகுருவின் ஒத்துழைப்பால் பல குழந்தைப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து குற்றவாளி நார்த்காட்(Northcott) பிடிபடுகிறான்.20 குழந்தைகளை கொன்று புதைத்தாக ஒத்துக்கொண்ட  அவனிடமிருந்து தப்பி வந்த சிறுவனின் வாக்கு மூலமும், அவனுடன் தப்பித்த சிறுவர்களைப்பற்றிய தகவல்களும், சிறைத்தண்டனையில் இருக்கும் நார்த்காட் 2 வருடங்களுக்கு பிறகு தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள், கோலின்ஸை சந்தித்து வால்டரைக்குறித்து பேச விருப்பப்படுவதாக சொல்லுவதும்,  தூக்கிலடப்படும் இறுதி நிமிடம்வரை பரிதவித்தபடி காத்திருக்கும் அன்னையிடம் அவன் என்ன சொன்னானென்பதுவும், வால்டர் மீண்டும் கிடைத்து அன்னையும் மகனும்  இணைந்தார்களா என்பதையும் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே உசிதம்.

இச்சம்பவத்தில்  சம்பந்தப்பட்ட ஊழல் காவலதிரிகாரிகள் உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் (Captain Jones & Chief Davis ) அரசியல்வாதி ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலிஃபோர்னியவின் நீதித்துறை மனநாயாளிகளை விடுதியில்  சேர்ப்பது குறித்த முறையான சட்டங்களை இதன்பிறகே பிறப்பித்தது. குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட வைன்வில்லி (Wineville) நகரம் கொலைகளினாலேயே  பிரசித்தி பெற்றுவிட்டதால் சில வருடங்களுக்கு பிறகு நகரமே மிரா லோமா (Mira Loma ) எப்பெயர் மாற்றபட்டது   

 குற்றவாளி Northcott,  ஆக நடித்திருக்கும்   Jason Butler Harner  ன் நடிப்பை பாராட்ட வேண்டும். மனம் பிசகியவர்களுக்கேயான பித்தேறிய கண்களும் கொஞ்சம் குழறலான உச்சரிப்புமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

 படப்பிடிப்பு தளங்களில் பழையபாணி கட்டிடங்களும், அப்போதிருந்த புகைப்படக்கருவிகள், நெருப்பை உபயோக்கும் காமிரா ஃப்ளாஷ்கள் புகைவண்டி, 1918லிருந்து 1928 வரை புழக்கத்திலிருந்த கார்களை சேகரித்து வைத்திருந்தோரிடமிருந்து  வாங்கிய 150 கார்கள்  என மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும் பின்ணனி திரைக்கதையை உறுத்தாமல் கொண்டு போகின்றது. ஒரு சில காட்சிகள் கோலின்ஸ் வாழ்ந்த தெருவிலேயே படமாக்கவும் பட்டிருக்கிறது. பல வரலற்றுஆய்வாளர்களும் படப்பிடிப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளனர்

   ஆடைவடிவமைப்பளர் Deborah Hopper, பள்ளி , கல்லூரிகளின் மிகப்பழைய ஆண்டு மல்ர்கள்,  LIFE உள்ளிட்ட எராளமான பழைய சஞ்சிகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே உடைகளை வடிவமைத்திருக்கிரார். 1930ல் பிறந்தவரான கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனது பால்யகால நினைவுகலிருந்தும் சில விஷயங்களை சொல்லி உதவியிருக்கிறார்

 ஒளி இயக்குநர் டாமுக்கு ( Tom Stern)  இது ஆறாவது திரைப்படம். ஒளிப்பயன்பாட்டை வெகுவாக குறைத்து திரையில் ஏஞ்சலீனாவை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் காட்சியமைப்புக்களை  சிறப்பாக செய்திருக்கிறார். படத்தொகுப்பு மூன்றே நாட்களில் முடிவடைந்திருக்கிறது.

 தேவதைகளின் பிரதேசமென அறியப்பட்ட லாஸ் ஏஞ்சலஸ், மெல்ல மெல்ல   குற்றங்களும், வன்முறையும், ஊழலும் மலிந்த நகரமாக மாறியதையும் இப்படம் பதிவுசெய்கின்றது

குழந்தை கடத்தலை மையமாக கொண்ட எல்லா மொழித்திரைப்படங்களிலும் பழிவாங்குதலே பிரதானமாக இருக்கும். changeling இம்மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மகன் மீண்டும் கிடைக்கும் வரை போராடிக்கொண்டேயிருந்த  அன்னையின் கதையைசொல்லும் வகையில் மிக முக்கியமானதாகின்றது.. திரைக்கதையை காலையில் கேட்டுவிட்டு அன்று மதியமே இயக்குவதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருக்கிறார் ஈஸ்ட்வுட்

 இயக்குநரின் மகள் கைல் இசையமைப்பில் உதவியிருக்கிறார். மற்றொரு மகள் மோர்கன், ’’வால்ட்டரை பார்க்கவில்லை’’ என்று கோலின்ஸிடம் சொல்லும் ஒரு சிறுமிகளில் ஒருவராக திரையில் ஒரே காட்சியில் தோன்றுகிறார்.

பலவருடங்களுக்கு முன்பான பழமையை திரையில் காட்டவென இத்திரைப்படத்திற்கென படக்குழுவினர் மேற்கொண்ட கடின உழைப்பைக்குறித்து இணையத்தில் வாசிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.இதற்காகவே இப்படத்தை பார்க்கலாம்

அரியதும் தற்காலிகமானதும்!

2018 ல் பின்தெருவில் புதுக்குடித்தனம் வந்தார்கள் ஒன்றரை வயது மகனுடன் ஒரு தம்பதியினர். குடிவந்த மறுநாளே அதிகாலை அந்தப்பெண் என்னை சமையலறை ஜன்னல்வழியே அழைத்து பின்மதிலுக்கு வெளியே செறிந்து மலர்ந்திருக்கும் தங்கரளி மலர்களை பறித்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதிலிருந்து எங்கள் ஸ்நேகிதம் தொடங்கியது. செல்வம் ரேகா தம்பதியினர், மகன் தர்ஷன்

செல்வம் ஒவ்வொரு, வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உணவு/ சமையல் கலையில் பட்டம் பெற்றிருக்கும், கின்னஸில் இடம் பிடித்திருக்கும், தேனியருகிலிருக்கும் ஒரு ஊரை சேர்ந்தவர். 20 வருடங்கள் ஹாலிவுட் உணவகமொன்றில் chef ஆக பணிபுரிந்துவிட்டு இங்கு ஆழியாறு அணையருகே ஒரு உணவகம் துவங்கும் திட்டத்துடன் வந்திருக்கிறார்.

முன்வாசல் எனக்கு கொஞ்சம் நடக்கவேண்டும் என்பதாலும் சமையலறையின் மிக அருகே பின் வாசலும் மதிலும் இருப்பதாலும், மதிலைத்தாண்டி கைநீட்டியே பால், காய்கறி, கீரை வாங்குதல், அங்கேயே கொடியில் துணி உலர்த்த கறிவேப்பிலை கிள்ள என்று பெரும்பாலான புழங்குதல் பின்வாசலில்தான். எனவே அடிக்கடி பார்த்துப்பேசி  விரைவிலேயெ அவர்கள் நல்ல அணுக்கமாகிவிட்டனர். தர்ஷன் என்னை கண்டால் வெட்குவதும் முறுக்கு மீசையுடன் சரணைக்கண்டால் அஞ்சி உள்ளே ஓடுவதுமாக சிலநாட்கள் இருந்தான்.

பின் மெல்ல மெல்லப்பழகினான். என்ன  காரணத்தினாலோ 2 வயதை நெருங்கும் அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லாமே சைகையில்தான். மருத்துவர்கள் குழப்பமேதுமில்லை காத்திருக்கலாமென்றார்கள், ஆனால் வெகுபுத்திசாலி.

கொரோனா விடுமுறையில் தேனிக்கு சென்றவர்கள் அங்கிருந்து ஓரிரவில் தர்ஷன் எனக்கு ‘’டே,யட்டை, சன்னன்னா, நுன்னைட்’’ என்று தேவியத்தைக்கும் சரணன்னாவுக்கும் குட்நைட் சொன்னதை குரல் பதிவாக வாட்ஸப்பில் அனுப்பினார்கள்

ஊர் திரும்பியவன் பேசாமலிருந்த 2 வருஷங்களுக்குமாக சேர்த்து பேசுபேசென்று பேசத்துவங்கினான். சன்னன்னாவுடன் ஒரே ஒட்டுதல் எந்நேரமும் ஈஷிக்கொண்டே இருப்பான். செல்வம் ஹாலிவுட்டில் இருந்ததால் திரைப்படங்கள் பார்ப்பதில் அவனுக்கும் அலாதி பிரியம். வீட்டுக்கூடத்தில் பிரம்மாண்டமான திரையில் எந்நேரமும் எதாவது படம் ஓடிக்கொண்டிருக்கும். தர்ஷனுக்கு தமிழில் ஆங்ரிபேர்ட் அல்லது லயன்கிங் நாளெல்லாம் திரும்பத் திரும்ப ஓடவேண்டும். அவன் எளிதாக அந்த டப்பிங் தமிழை கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தான்

 ’’கப்பல் முழுகுது எல்லாரும் ஓடிவாங்க அடி செம தூள், ஆபத்து காப்பாற்றுங்கள், மக்கள் எல்லாரும் எங்கே போறாங்க? என்ன அருமையான காலம், உற்சாகம் பொங்குமே, தொல்லையில்லை கவலையேதுமில்லை, என்றெல்லாம் கலந்துகட்டி  பேசத்துவங்கினான்.

மேலும் அவன் உலகமே கேள்விகளாலாயிருந்தது

தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் ’’ பச்சைதண்ணியா, சுடுதண்ணியா’’?

8 மணியானால் என்னிடம் ‘’ நீ காரேஜ்(காலேஜ்) கிளம்பித்தியா’’? யாரை  எதிரில் பார்த்தாலும் நல்லாக்கியா?சாப்பித்தியா?

சண்ணன்னா பெயர் எப்படியோ வாயில் வந்தாலும் தருணன்னனா வரவேயில்லை எனவே தருண் ’இன்னோன்னு சண்ணன்னா’’ வாகிவிட்டான்

கோகுலகிருஷணன் போல தெருவில் எல்லார் வீட்டிலும் எப்போதும் இருந்தான் மதிலுக்கு பின்னிருந்துஉருவம் தெரியாமல் ’’தூக்கு தூக்கு என்று கீச்சுக்குரல் கேட்டு, எட்டிப்பார்த்தால் கைகளிரண்டையும் தூக்கிக்கொண்டு நிற்பான். யாரோ ஒருத்தர் தூக்கி விடவும் மீண்டும் இறக்கிவிடுவதுமாக ஒருநாளைக்கு பலமுறை உடற்பயிற்சி செய்துகொண்டிருப்போம். எப்போதும். என்னுடன் சரிக்குச்சரி பேசிக்கொண்டு கூடவே இருப்பான். ஓயாத அவன் கேள்விகளால் என் காதிரண்டும் நிரம்பி வழியும். ’’ஏன் இந்தச்செடி இந்தகலர்ல பூக்குது, அந்த செடி வேற கலர்ல பூக்குது’’? போன்ற என்னால் விடையளிக்க இயலாத கேள்விகளும் இருக்கும்.

யாரிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தாலும் பேசிக்கொண்டிருக்கையிலே அவனிடம் என்னை அழைத்தவரின் பெயரை ஜாதகத்துடன் சொல்லி என்ன பேசுகிறோம் என்பதையும் சுருக்கமாக சொல்லியே தீரவேண்டும். சில சமயம் பேசும் விஷயத்தையும் கவனித்து, ’என்ன லீவ்’ என்றோ ’யாருக்கு காய்ச்சல்’ ’ஏன் இன்னும் சம்பளம் வரலை’ என்றும் கேள்விகள் வரும்.

இன்னும் தீவிரமாக, போனில் யாரு ? என்பதற்கு பதிலாக ”என்  பிரண்டு சுபா” எனறால் ’’ இல்ல சுபா என் பிரண்டு, என் பிரண்டு என்று ஆவேசமாய் ஆட்சேபித்து  சண்டைக்கு வருவதும் நடக்கும்.

லாக் டவுன் காலங்களில் ஆன்லைன் வகுப்புக்களுக்கும் பழக்கமாகிவிட்டான். அவன் வருகையில் நாங்கள் கணினி முன்பாக அமர்ந்திருந்தால் ரகசியமாக ’’காஸா? என்பான் (கிளாஸா) ஆமென்றால் அமைதியாக பிஸ்கட் இருக்குமிடம் தெரியுமாதலால் எடுத்துக்கொண்டுவந்து சமர்த்தாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். சம்மணம் கட்டி அவன் அமர்வதும் மழலையில் முதிர்ச்சியான பேச்சுக்களை பேசுவதும் அத்தனை அழகு.

ஜாமுக்கு பிரட்டையும் சாஸுக்கு பூரியையும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அவன் வழக்கம் .அவ்வப்போது ‘எமன்’ ஜுஸ் கேட்பதும் உண்டு.

சப்பாத்தி தேய்க்கிறேன் பேர்வழியென்று சமையலறையின் புலனையும் தாண்டி கூடம் வரை கோதுமைமாவு பறக்க, குட்டிக்காலில் மிதித்து வீடெல்லாம் மாவை பரப்பி  எனக்கு சமையலில் உதவி செய்வதும் உண்டு. என் எல்லா நாட்களிலும் அனைத்து வேலைகளிலும் தர்ஷனின் பங்களிப்பு இருக்கும்.

என் வாட்ஸப் நிலைத்தகவல்களை தொடர்ந்து பார்க்கும் ஒரு  மூத்த பேராசிரியர் வேறு ஒரு அலுவலின் பொருட்டு ஒருமுறை என்னை அழைத்தபோது  ’’எப்படி மேடம் இத்தனை வேலைகளை தினம் செய்யறீங்க என்று கேட்கையில் தர்ஷனும் உடனிருந்தான்.  

ஜெ அதற்கு முந்தின வாரம் ’’வாழ்க்கை அரியதும் தற்காலிகமானதும் கூட இதில் சோம்பலுக்கு கொடுக்க பொழுதே இல்லை’’  என்று சொல்லி இருந்தாரென அந்த பேராசிரியரிடம் சொல்லி அதான் நான் எந்நேரமும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்றேன்.   எதிர்பார்த்தபடியே ’’என்ன வாழ்க்கை’’? என்று தர்ஷன் கேட்டன்

அரியதும் தற்காலிகமானதும் என்பதை இவனுக்கு எப்படி சொல்லுவதென்று யோசித்து ’’நாம காலையில் எழுந்திருச்சு சாப்பிட்டு விளையாடிட்டு மறுபடி சாப்பிட்டு மறுபடி தூங்கறோமில்ல அந்த வாழ்க்கை ஒரு பப்பிள் மாதிரி சீக்கிரம் உடைஞ்சு காணாம போயிரும்,அதைதான் சொன்னேன்’’ என்றேன் ’’வாழ்க்கை ஒரு பப்பிளா’’ என்று எதிர்க்கேள்வி கேட்டான், ’’ஆமா வாழ்க்கையே ஒரு பப்புள், அவ்வளவுதான்’’ என்றேன்.

அந்த சொற்றொடர் என்னவோ  அவனுக்கு மிகப்பிடித்துவிட்டது அடிக்கடி ’’வாழ்க்கையே ஒரு  பப்பிள்’’ என  ரைம்ஸ் சொல்லுவது போல் சொல்லத்துவங்கினான்.

’’சின்னப் பையனுக்கு இதைப்போய் சொல்லியிருக்கியே?’’ என்று சரண் என்னை கோபித்துக்கொண்டு அப்படி சொல்லக்கூடாது என்று அவனை மிரட்டியும் வைத்தான். அதன்பின்னர் இன்னும் தீவிரமாக பிடிவாதமாக அடிக்கடி சொல்லத்துவங்கினான்.   அவனுடைய மூன்று சக்கர சைக்கிளை தோழர்கள் தோழிகளுடன் ஓட்டும் ஒருமாலையில் ’பூனிக்கா’ என அவனால் அழைக்கப்படும் பூரணியிடம் ’’பூனீக்கா வாழ்க்கையெ ஒரு பப்பிள்’’ என்று கூவியபடியே பின்னால் துரத்திக்கொண்டு சென்றதை பார்த்தேன்

காகங்களுக்கு உணவு வைக்க பின் கதவைத் திறக்கும் அதிகாலைகளில்  சிலசமயங்களில்  அப்போதுதான் கண்விழித்து வாசலுக்கு வரும் அவன் என்னைப்பார்த்து, ‘’ டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’ என்பான். அதிகாலையில் வாழ்வை அத்தனை தத்துவார்த்தமாக  துவங்குவது எனக்கே பகீரென்றுதான்  இருக்கும்.

சென்றவாரம் இரவு 11 மணிக்கு மேல் கட்டிலில் உயரமாக அடுக்கி வைத்திருக்கும் தலையணைகளின் மீது ஏறி கீழே குதிக்கும் சாகசச்செயலில் தர்ஷன் ஈடுபட்டிருக்கையில் கணக்குத் தவறி அவன் முகம் தரையில் பட்டு நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமாகிவிட்டது.

அடித்துப்பிடித்து எங்கள் குடும்ப மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். கோவிட் தொற்றால் தினமும் ஓய்வொழிச்சலின்றி பணி புரிந்து களைத்துப்போயிருந்த மருத்துவர் தையல் போட்டுமுடித்துவிட்டு ’’ஏண்டா போன மாசம் மூக்கில் அடிபட்டு தையல், இப்போ நெத்தியிலா, சும்மாவே இருக்க மாட்டியா?’’ என்ற கேட்டபடி கொரோனாவால் வாழ்க்கை எப்படி தலைகீழால மாறிவிட்டதென்பதை பொதுவாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

வாழ்க்கை என்று காதில் கேட்டதும் இவன்  திரும்பி‘வாழ்க்கையே ஒரு பப்பிள் ‘’ என்றிருகிறான். இறப்பையும் பிறப்பையும் மிக அருகில் தினம் சந்திக்கும் மருத்துவர் திகைத்து பேச்சிழந்து என்ன சொல்லறான்? என்று கேட்டிருக்கிறார்.’’ தேவிக்கா  ஜெயமோகன்னு ஒருத்தர் சொன்னதை இவனுக்கு சொல்லி இருக்காங்க’’ என்று விளக்கியிருக்கிறார்கள்.அநேகமாக மருத்துவர் இரவு உறங்கியிருக்க மாட்டாரெண்ணிக்கொண்டேன்.

  வைரஸ் தொற்று உலகளவில் 3 கோடியை தாண்டிவிட்டதை செய்தியில் கேட்டு வருந்திக்கொண்டிருந்த போது நெற்றியில் தையல் பிரித்துவிட்டு உற்சாகமாக  வீட்டுக்கு வந்து ’’டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’என்றான். இனி துயருற்றுக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லையல்லவா,  அவனை வாரி எடுத்து அழுந்த முத்தமிட்டு ’ஆமாண்டா’! என்றேன். ஜெ’வின் மிக இளைய வாசகன் தர்ஷன்தானென்பதை, வாழ்க்கையே ஒரு பப்பிளாயிற்றே, அவருக்கு சீக்கிரம் எழுதவேண்டும்.

பொன்மகள் வந்தாள்

சூர்யாவின் 2 D நிறுவனம் தயரித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஒ.டி.டி யில் (OTT, Over the top) வெளியாகியுள்ள தமிழ் சினிமாவின் முதல் பெரிய படம்.

மார்ச் மாத இறுதியிலேயே திரையரங்குகள் வைரஸ்தொற்றினால் மூடப்பட்டதால் ஓ.டி.டி தளங்களின் பார்வையாளர் எண்ணிக்கை 60%  அதிகரித்துள்ள நிலையில் நேரடியாக இதில் வெளியிடுவதாக ஒப்பந்தமிட்டால் கூடுதலாக சில கோடிகள் லாபமென்பதால் தயரிப்பாளர்கள் கவனம் முழுக்க இதை நோக்கியே திரும்பியிருக்கிறது. சூர்யாவின் நிறுவனமும் படத்தை அமேசான் பிரைமுக்கே கொடுத்ததால், மே 29 அன்று ரசிகர்களின் வீடுகளுக்கே பொன்மகள் வந்தாள்

படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி என்று நடிகர்களின் பட்டாளமே இருக்கிறது. ஒளிப்பதிவு    ராம்ஜி, இசை    கோவிந்த் வசந்தா,  ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்க்கின் இயக்கத்தில் இது முதல் படம். படத்தொகுப்பு ரூபன்.5 மாதஙகளில் முழுப்படப்படிப்பும் முடிந்திருக்கிறது. சூர்யாவின் தங்கை பிருந்தாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்

2004 ஆம் வருடத்தில் ஊட்டியில் பல குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக சொல்லப்பட்ட சைக்கோ ஜோதி என்னும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைகாரியின்  வழக்கை 15 வருடங்க.ள் கழித்து மீண்டும் தோண்டி எடுக்கும்  பெத்துராஜ் என்கிற பாக்கியராஜ், அவரது மகள் வழக்குரைஞர் வெண்பாவாக  ஜோ. சைக்கோ கொலையாளி எனப்படும் ஜோதி எப்படி கொலை செய்யப்பட்டாள், குழந்தைகளை கடத்தியதும் கொலைசெய்ததும் உண்மையில் யார்? வழக்கின் மறுவிசாரணைக்கான பலத்த எதிர்ப்பு,  மறுக்கப்பட்ட நீதியையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும்   வெண்பா போராடி வெளிச்சத்துக்கொண்டு வருவது, இந்த வழக்கில் ஏன் இவர்களுக்கு இத்தனை அக்கறை என்பதெல்லாம்தான் கதை

ஜோதி அப்பாவி, அரசியல் மற்றும் பணபலமுள்ளவர்களே உண்மைக்குற்றவாளிகள் என்னும் அதே அரதப்பழசான கதை. முதல் பாதி ஆமைவேகம் என்றால் பின்பாதி நத்தை வேகம். தேவையேயில்லாமல் 5 இயக்குநர்கள் வந்து, யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கோர்ட் வாசலில் இருக்கும் டீக்கடைக்காட்சிகள் அனைத்துமே அநாவஸ்யம் அங்கு பேசப்படும் வசனங்களும் அபத்தம். நமக்கு அறிமுகமான ஏராளமான துணைநடிகர்கள் திருமண வீடுபோல கும்பலாக வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

தியாகராஜனுக்கு கழுத்திலே என்ன பிரச்சனையோ! இறுக்கமாக கழுத்தை வைத்துக்கொண்டு இயந்திர மனிதனைப்போல நடிக்கிறார். எளிய மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர்களை தொட்டுவிட்டு பின்னர்  கையை சோப் போட்டுக்கழுவும் வில்லனெல்லாம் போன ஜென்மத்துப்பழசு.

 ஜோவையும் பாக்கியராஜையும் தவிர அனைவருமே அநியாயத்துக்கு கெட்டவர்களாக இருக்கிறார்கள். Character assassination  பாக்கியராஜிலிருந்து துவங்குகிறது. மகள் 15 வருடஙகள் கழித்து திரும்ப எடுத்திருக்கும் அவர்களிருவருக்கும்  மிக முக்கியமான ஒரு வழக்கு, ஜோ முழுப்படத்திலுமே சோகமே உருவாக இருக்கிறார் , ஆனால் அப்பாவோ பெண் நீதிபதியை மாமி , மாமி என்பதும், அவரது பிரத்யேக நக்கல் பேச்சுகளுமாக இருக்கிறார். நீதியரசராக வரும் ப்ரதாப்போத்தனையும் திடீரென லஞ்சம் வாங்கவைத்து கெட்டவராக்கிவிட்டிருக்கிறார்கள்.அதைபோலவே  வில்லனுடன் அணுக்கமாக இருக்கும் சாட்சிகளை திசை திருப்பும் கெட்ட வழக்குரைஞராக பார்த்திபன், தேவையேயில்லாமல் திணிக்கபட்ட பாத்திரத்தில் பாண்டியராஜன்

மிகச்சிறிய இடைவெளிகளில் திரும்ப திரும்ப வரும் நீதிமன்றக் காட்சிகளும் உப்புச்சப்பில்லாத குறுக்கு விசாரணைகளும் அலுப்பூட்டுகின்றது. சட்டவல்லுநர்களை எல்லாம் இயக்குநர் கலந்தாலோசித்து எடுகப்பட்ட காட்சிகள் அவை என்றறியும் போது இன்னும் ஆயாசமாக இருக்கின்றது.

 நீதிமன்ற அவமதிப்பை குறித்து துவக்கத்தில் ஜோ பேசுவதும் பின்னர் தொடர்ந்து அதுவே அங்கு நடப்பதும் முரண். பிரதாப் போத்தனும் பார்த்திபனும் நேருக்கு நேராக உரக்கக் கத்தி சண்டை போட்டுக்கொள்கிறார்கள் நீதிமன்றத்தில்!

 நீதிமன்றக்காட்சிகள் எல்லாமே ஒட்டுமொத்த அபத்தம். எந்த வலுவான  விசரணையும் குறுக்கு விசாரணையுமே இல்லாமல் பார்த்திபன் ஜோவை அவருக்கேஉரித்தான் பாணியில் நையாண்டி செய்வதும்,  நீதிபதி குறுக்கிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இரண்டு வழக்குரைஞர்களும் இஷ்டத்துக்கு விவாதித்துக்கொண்டிருப்பது, பலமான சாட்சியங்கள் ஆணித்தரமான விவாதங்கள், மறுக்கமுடியாத உண்மைகள் என்று நிரூபிக்க வேண்டிய ஒரு வழக்கின் மறுவிசாரணையை கண்ணீரும் கம்பலையுமாக உணர்வுபூர்வமாக நீதிமன்றத்தில்  ஜோ முன்வைப்பது என்று வேடிக்கையாக இருக்கிறது. நீதிமன்றம் நாடகமேடையா என்ன?

ஜோ உள்ளிட்ட எல்லா முக்கிய கதாபாத்திரங்களுமே சொதப்பல்தான். புறப்பட்ட இடத்துக்கே திரும்பத்திரும்பவந்து திரைக்கதை முட்டிக்கொண்டு நிற்கிறது.

பெண்குழந்தைகளின்  பாதுகாப்பை வலியுறுத்தும் கருத்துச்சொல்லும் படமான இதில் வழக்குரைஞராக வரும் ஜோவை இறுதிகாட்சி நீங்கலாக எல்லா காட்சிகளிலும் பார்த்திபன் இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு குள்ளமான  பெண் நீதிபதி நிதிமன்றத்துக்கு வெளியே இருக்கும் கோவில் மணியை எட்டி அடிக்க முடியாத காட்சி எதற்கு திணிக்கப்பட்டிருக்கிறது? அது நகைச்சுவையா? அவரை  பாக்கியராஜ்  மாமி என அழைப்பதும் அப்படியே முற்றிலும் தேவையில்லாத காட்சி. இன்னொரு பெண் வக்கீல் நீதிமன்ற வாசலிலேயே பிரபல வழக்குரைஞரான பார்த்திபனுடன் செல்ஃபி எடுக்க முண்டியடிக்கிறார். அந்த செல்ஃபியைக்காட்டி பெருமையடித்துக்கொள்கிறார். சொல்ல வந்த கருத்துக்கு முரணாக பெண்களை கொச்சைப்படுத்தும், மலினப்படுத்தும் பலகாட்சிகளை சேர்த்திருப்பது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுவதல்லாமல் வேறென்ன?

இரண்டு தலைமுறையாக சினிமாவில் இருக்கும் குடும்பம், பிண்ணனிப்பாடகியான தங்கை உட்பட மொத்தம் 5 பேர் தமிழ்ச்சினிமாவில் காலூன்றி இருக்கும் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு என்னும் எந்த உண்மையையும் படத்தின் தரத்துடன் ஒப்பிடமுடியாத அளவில்தான் சூர்யா படத்தை தயாரித்திருக்கிறார்.

ஒரு நூற்றாண்டான  இந்தியச்சினிமாவை திரையரங்குக்கு சென்று வெள்ளித்திரையில் பார்ப்பதென்பது வெறும் திரையனுபவமாக மட்டும் இல்லாமல்   பல உளவியல் விடுதலைகளை அளிக்கும் ஒரு கேளிக்கை நிகழ்வாகவும்  இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றேபோலான அன்றாடங்கள் அளிக்கும் சோர்விலிருந்து விடுபடவும், சமையலறைக்கும் வீட்டுவேலைகளுக்கும் வெளியெ வந்து  சற்று மூச்சுவிட்டுக்கொள்ளவும், அலங்கரித்துக்கொள்ளவும்,  திரளாக அதே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மனிதர்களை காண்பதுவுமாக  திரைப்படம் பார்க்கும் அனுபவம் பலருக்கும் பல விதங்களில் தேவையாக இருந்துவருகின்றது.   அந்த அனுபவங்களுக்கு இணையாக ஓ.டி.டி வெளியீடு எதையும் செய்யமுடியாதென்றாலும் அவற்றிற்கு மாற்றாகவாவது ஏதேனும் செய்ய முயற்சித்திருக்கலாம்.

ஒரு பாடல் கூட முழுதாக கேட்கமுடியாத ரகம். மனதில் நிற்காத வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கியதுபோல் வழவழ வசனங்கள், எந்த முக்கியத்துவுமும் இல்லாத ஏராளமான துணைக்கதாபாத்திரங்கள், தெளிவற்ற திரைக்கதை,  ஜோதி சரணடைந்தாள் பின்னர் சரணடையவில்லை, நானே கைதுசெய்தேன், இல்லை கைதுசெய்தது நானில்லை, உண்மையில் கைதுசெய்த அதிகாரி கொலை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணி எடுத்த வீடியோ, சிசிடிவிகாட்சி, கருப்பாக அம்மா ஜோ வெள்ளையாக துயரே உருவான  மகள் ஜோ என்று குழப்பியடித்து  கதை வாலறுந்த பட்டமாக மனம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறது

 திரைக்கதையில் உள்ள இத்தனை குழப்பங்கள் போதாமல் இறுதியில் வெண்பா ஏஞ்சலாவது என்னும் இன்னொரு திருப்பமும் இருக்கின்றது., எல்லாபக்கத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார் சூர்யா அத்தனை நாட்கள் ஜோவை  முடிந்தவரை கிண்டலடித்து விட்டு திடீரென காகிதத்தில் சிறகுகள் வரைந்து  பார்த்திபன் ஏஞ்சலை  பாராட்டுவது அம்புலி மாமா கதை  ரகம்

நேரடியாக ஓ.டி.டி வெளியீடு என்னும் முன்னெடுப்பிற்கும், அருமையான ஒளி இயக்கத்துக்கும் மட்டும் பொன்மகளைப் பாராட்டலாம்.

 கேளிக்கைகளுக்கு வழியில்லாத இரண்டு மாத சமூக விலகலின் போது நேரடியாக வீட்டுக்கே வரும் புதுப்படம் என்னும் எதிர்பார்ப்பில் அமேசான் பிரைமில் பொன்மகள் வெளியானதும் பார்த்துவிட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு வரை விழிந்திருந்தனர். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் சூர்யா நியாயம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,   ஒரு சொதப்பலான படத்தை தந்து அநியாயமல்லவா செய்துவிட்டிருக்கிறார்?

’’மின்னுவதெல்லாம் பொன்னல்ல!’’

நசீர்

நசீர் பார்த்த கையோடு இதை எழுதுகிறேன். கூடுதல் பணிச்சுமையிலிருந்தேன் இன்னும் ப்ரியாவின் கதையை சாயின் சுட்டிப்பேச்சை எதையுமே பார்க்கவில்லை. எனினும் நசீரை பார்த்துவிடுங்கள் என்று அதிக அழுத்தம்  மாதவனின் பேச்சில் தெரிந்தது. சொல்முகம் நரேனும் இதைபார்க்கவேண்டிய அவசியத்தை சொல்லிக்கொண்டிருந்தார் அதற்கு காரணமின்றி இருக்காது என்று தோன்றியது. படம் முழுக்க பார்த்தேன். பிரமாதம். இன்று உண்மையில் என்னால் மிக அவசரமாக எழுதி முடிக்கவேண்டிய எதையும் துவங்க முடியாத அளவிற்கு சோர்வாக இருந்தேன். நசீரைப் பார்த்த பின்பு அப்படி எழுதாமல் இருக்கவே முடியாது என்றே தோன்றியது.
இந்து இஸ்லாமிய பிரச்சனைகளைக் குறித்து “கருத்து” சொல்லும் ஏராளமான படங்களை சலிக்க சலிக்கப் பார்த்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன், பின்னர் அப்படியே மறந்துமிருக்கிறேன். ஏனெனில் நசீர் சொல்லியிருப்பதைப் போல இத்தனை ஆழமாக, இவ்வளவு வலிக்கும் படியாக இதற்கு முந்தின எந்தப் படமும் இதை சொல்லியிருக்கவேயில்லை.
ஒரு சாமான்யனின்  ஒற்றை நாள் எப்படி துவங்கி எப்படி முடிகின்றது என்பதே கதை.  மிக மிக மெதுவாக நசீரின் காலை பள்ளியில் பாங்கு விளிப்பதிலிருந்து துவங்குகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறரகள் என்று சொல்லவே தயக்கமாக இருக்கிறது. அத்தனை இயல்பாக வந்துசெல்கிறார்கள் திரைக்கதையில். அந்தச் சந்துகளில் மார்க்கெட்டின் அடைசலான வழிகளில், துணிக்கடையில் ஹாஸ்டலில் எல்லாம் உண்மையில் காமிரா இருந்ததா என்றே சந்தேகம் வந்துவிட்டது. அந்த வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் காட்சியெல்லாம் அபாரம். நசீர் என்று டைட்டில் போடும்போதே அந்த எழுத்து வடிவத்தின் வித்தியாசம் படத்தின் பேரிலான கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து செய்வதென்பார்களே, அப்படியான படைப்பு இது.
எழுத்தாளர் திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ யை மையமாகக்கொண்டே இத்திரைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளருக்கு ஒரு கைகுலுக்கல். பிரமாதப்படுத்தியிருக்கிறார். பேகத்தின் கம்மலும் கல்லு மூக்குத்தியும் பளிச்சிடும் அந்தக் காட்சியிலிருந்தே காமிராக் கண்களை சிலாகிக்காமல் படத்தை தொடர முடியவில்லை
நசீரின் பாத்திரப் படைப்பும் மிக நன்று. இளமை இறங்குமுகமாக இருக்கையிலும் அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யமும் காதலும் , பேரன்பும் ரசிக்கும்படியாக இருந்தது. இக்பால் இவர்களின் குழந்தையல்ல என்பதும் வியப்பளித்தது.
எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்காத, சிடுசிடுக்காத, மனைவியின் மீது பிரேமையுடனும், அவளின் மூன்று நாள் பிரிவுக்கே முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும், கடிதங்கள் எழுதும், பழைய காலத்தின் நினைவுகளில் மூழ்கும் பாடல்களை கவிதைகளை நினைவுகூரும், அம்மிஜானின் நோயைக்குறித்து வருந்தும், மிக நேர்மையான தொழில் சிரத்தையுள்ள,  அன்பான சகிப்புத்தன்மை கொண்ட ஒருவராக சித்தரிக்கபட்டுள்ள பாத்திரம். அத்தனை எளிய கதாபாத்திரம் என்பதாலேயே இறுதிக்காட்சியின் அநீதி  அதிகம் வலிக்கின்றது.
பின்னணியில் இசையின்றி அக்கம்பக்கத்தினர் பேசுவதே பிண்ணனியில் ஒலிப்பது  புதுமையாகவும் கவனிக்கும்படியும் இருப்பது படத்தின் காட்சியுடன் நம் அணுக்கத்தை இன்னும் கூட்டிவிடுகின்றது. நசீர் துணிக்கடைப் பெண் பொம்மையின் மூக்கை செல்லமாக நிமிண்டும் காட்சி அழகு. அவரின் தொழில் மீதான விருப்பத்தையும் அவரின் கலாரசனை மிகுந்த மனதினையும் நாம் உணரும் காட்சி அது.
மனைவியுடன் பேருந்து நிலையத்திற்கு நடந்து வருகையில் கடைவீதியில் இருக்கும் பல வண்ண பிள்ளையார் பொம்மைகளை  அவர்கள் கடக்கிறார்கள். அப்போதே மனம் படபடக்க துவங்கிவிட்டது.  கோவைக்காரியான எனக்கு இதில் பல  முன் நினைவுகள் இருந்ததால், என்னவோ சரியாக இல்லையே என்று  பதைபதைத்தது மனது. .
வெட்டி வெட்டிக் காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தன. சாமன்யர்களின் வாழ்வின் வண்னங்களை சட் சட்டென்று காட்டிச் செல்லும் காட்சிகள் படம் முழுக்கவே நிறைந்திருந்தன. பொதுக் கழிப்பறை, அங்கிருக்கும் ஒற்றை ரோஜாச் செடி, இட்லி விற்கும் பெண்மணி, வர்ணப் பூச்சை இழந்து பல்லிளிக்கும் வீட்டுச் சுவர்கள் என்று  காட்சிகள் அடுத்தடுத்து வந்து அடித்தட்டு மக்களின் வாழ்வியலையே ஒரு சித்திரம் போல நம் முன்னால் வைத்து விடுகின்றது.
மிக இயல்பான உரையாடல்கள், காட்சிகள் வழியே நசீரின் எந்த திருப்பமும் இல்லாத ஒரு மிகச் சாதாரண வாழ்வு நமக்கு முன் அப்படியே திறந்து வைககப்டுகின்றது.
நசீருக்கு அவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் என்பது அவர் தொடர்ந்து வாழ்வை நடத்த உதவும் ஒரு மார்க்கம் அவ்வளவே. ஆகம விதிகளின் படி உடல் தூய்மை செய்துகொண்டு பள்ளிக்குப் போய் வேண்டிக்கொள்வதோடு அவரது மத உணர்வின் தீவிரமற்றத்  தன்மையைக் காட்டுகிறார்கள்.கடை முதலாளி “துலுக்கனுங்க” என்று பேசுகையிலும் நசீர் எந்த உணர்வுமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதிர்ந்துகூட பேசாத, தொழிலில் மிக நேர்மையாக இருக்கின்ற மனவளர்சியில்லா உறவுக் குழந்தையை சொந்த மகனைப் போல பார்த்துக்கொள்கிற, இசை கேட்கிற,  கவிதை எழுதுகின்ற மனைவி மீது பேரன்புடன் இருக்கிற முதலாளி சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்கிற என்று நசீரின் பாத்திரம் வெகு எளிமை.
அந்தத் துணிக்கடை, முதலாளியின் கொங்கு பாஷை நன்று. கோவை உணவகங்களின் விவரணையெல்லாம் இயக்குநரின் வாய்ஸ் ஓவெர் போலிருக்கிறது. முழுக்க சரிதான்):
மிக மெதுவே நகரும் படமாதலாலும் அந்த சந்துக்குள் தன் மனைவிக்கான கடிதத்தை மனதிற்குள் சொல்லியபடி வீட்டுக் கடமைகளை, கடன் கிடைக்காமல் போனதை  எல்லாம்  நினைத்தபடி வந்து கொண்டிருக்கும் நசீருக்கு திடீரென வெறியுடன் கோஷமிட்டபடி சந்தில் நுழையும் வெறிகொண்ட இளைஞர் கூட்டத்தால் என்ன நடந்தது, என்னதான் ஆகியிருக்கும் என அக்காட்சி முடிந்து திரை அமைதியாகும் வரையிலும் மனம் பதைபதைத்துகொண்டே இருந்தது.
அந்தச் சாலையில் மெல்லிய வெளிச்சத்தில் கிடப்பது நசீராக இருக்கக்கூடாது என்று  பதட்டத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தேன் அது நசீர்தானென்று தெரிந்திருந்தும்.
நசீரைப்போலவே மதங்களின் வேறுபாடு குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் தான் பிறந்த மதத்தின் விதிகளை முழுமனதாக பின்பற்றிக்கொண்டு தனக்கேயான கடமைகளில் தவறாமல், தன் எல்லைக்குட்பட்ட மகிழ்வின் சாத்தியங்களை அனுபவித்துக்கொண்டு இருத்கும் பல்லாயிரக்கணக்கான சாமான்யர்களும் இப்படி சம்பந்தமே இல்லாமல் வெறியர்களால் தாக்கப்பட்டு மிச்சமின்றி அழிக்கபட்டிருக்கிறார்கள். கடைசிக் காட்சியின் பதட்டமும் யார் யாரை அடிக்கிறார்கள் என்னும் அச்சமும் நிச்சயம் படம் பார்த்த அனைவருக்கும் வந்திருக்கும்.
ஒரு சாமான்யனின் ஒரு நாளின் கதையைச்சொல்வதிலேயே வாழ்வின் அழகியலை அவலத்தை குரூரத்தை சொல்லமுடிவதென்னும் சவாலில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார் வெகு நிச்சயமாக.
பாய்ஸ் ஹாஸ்டல் கேட் வாட்ச்மேனும், நசீரும் பீடியை பகிர்ந்து கொள்ளும் காட்சியும் அழகு. எத்தனையோ அல்லல்கள் இருக்கின்றது நம் அனைவருக்கும் , எனினும் எளியவர்களுக்கு இப்படியான் ஒரு தோள் பகிரல், எடையை தற்காலிகமாக இறக்கிவைத்தல் என்பது எப்படியும் நடந்துவிடுகின்றது. பணத்தேவை, மனைவியின் தற்காலிய ’இன்மை’ இக்பால் அம்மிஜானின் உடல்நிலை, அலைச்சல் என்று கஷ்டங்கள் இருப்பினும் நசீரும் அவருமாக அந்த பீடியை பகிர்ந்துகொள்ளுதல் என்பது துயரையும் பகிர்ந்துகொள்வதுதான்.  கழுத்தை அழுத்தும் ஊழின் விரல்களை அகற்றி  கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளும் தருணங்கள் அல்லவாஅவை? அக்காட்சி எனக்கு மிக நுண்மையானதாக பட்டது.
நசீரை நடக்கையில், ஸ்கூடர் ஓட்டுகையில், பல்தேய்க்கையில், குளிக்கையில் மனைவியை முத்தமிடுகையில், பணியில், புடவைகளை எடுத்துக்காட்டுகையில் என்று  காமிரா தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வகையில் கதை சொல்லபட்டிருப்பதால், நாமும் அவரை நெருக்கமாக பின்தொடர்ந்து கொண்டே இருந்து ஒரு கட்டதில் நாமும் நசீராகிவிட்டிருக்கிறோம். அந்த கடைசிக்காட்சி அதனால்தான் மிகவும் அதிர்ச்சியாக அந்த வன்முறை நம்மீதே நடந்ததுபோன்ற உணர்வை தந்து, அந்த  கொஞ்சமும் எதிர்பாராத சந்துக்காட்சிகள்  நம்மையும் முற்றாக அழித்துவிட்டதுபோல செயலற்றுப்போய் பார்க்கவைத்து விடுகினறது.
அத்தனை நேரம் மிக மெல்ல ஓசைகள் அடக்கிவைக்கப்ட்ட காட்சிகளில் மூழ்கி இருக்கும் நமக்கு அந்த கூச்சலும் ஆரவாரமும் வெறியும் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் அதிர்ச்சியுமே படத்தின் வெற்றி
ஊருக்கு போயிருக்கும் மனைவி கருப்பைப் புற்றுநோயாளியான அம்மீஜான், மூளை வளர்ச்சியற்ற இக்பால் இவர்களில் யாருக்கு முதலில் தகவல் போய்ச்சேரும் என்று பார்வையாளர்களை கவலைப்பட வைத்து விட்டிருக்கும் படம் இது. கோவையின் மிகப் பரிச்சயமான தெருக்களில் காட்சிகள் இருப்பதால் திரைக்கதையுடன் இன்னும் நான் அணுக்கமாகி விட்டிருந்தேன்
அலங்கோலமான அந்தச் சாலையில் யாருமற்று கிடக்கும் நசீரின் உடல், அன்று மதியம் நசீர் சொல்லிகொண்டிருந்த வாழ்வென்பதே தனிமைதான் என்னும் கவிதை வரிகளை நினைவுப்படுத்தியது.
மனைவிக்கான மானசீக கடிதமொன்றை முடிக்குமுன்பே முடிந்துவிடுகின்றது நசீரின் துயர்களும் கனவுகளும் கடமைகளும் எல்லாமும்.”Shame on us” என்று வெட்கித் தலைகுனிய வைக்கும் வெகுசில படங்களில் நசீரும் ஒன்று.
இப்படி 24 மணி நேரம் மட்டுமே காணக்கிடைக்கும் என்னும் அழுத்தமும் நல்லதே.  பிறகு பார்த்துக்கொள்லலாம் என்று ஒத்திப்போடாமல் தரமான படைப்புக்களை அப்போதே பார்க்க ஒரு நல்வாய்ப்பல்லவா இந்த கட்டாயம்.
இயக்குநர் அருண் மற்றும் எழுத்தாளர் திலீப் குமார் இருவருக்கும் படப்பிடிப்புக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாரட்டுக்களும். இவர்கள் எட்டப்போகும் உயரங்களை இப்போதே யூகிக்க முடிகின்றது.
நீங்கள் சொல்லியிருக்கா விட்டால் நான் இதை நிச்சயம் தவற விட்டிருப்பேன்.
நன்றி தம்பி!

ஜப்பானிய தேநீர் சடங்கு!

 

ஜப்பானில் தேநீர் அருந்தும் பொழுதுகளில் அடிக்கடி சொல்லப்படுவது Ichigo Ichie– அதன் பொருள் ’’ஒரு கணம் ஒரு சந்திப்பு’’. அதாவது அதே விருந்தாளி. அதே தேநீர் அளிப்பவர்தான் மீண்டும் மீண்டும் சந்திக்கிறார்கள் என்றாலும் அந்தப்பொழுதின் ஒளி அளவு, அப்போது வெளியில் வீசும் காற்றின் வேகமும் ஒலியும், அப்போது பரிமாறப்படும் தேநீரின் குமிழிகள் ஆகியவை ஒருபோதும் ஒன்றல்ல, மீண்டும் அதே போல் அமையவும் அமையாது என்பதுதான்

ஜப்பான் போனதில்லை எனினும் தேநீர் செடிகளைக் குறித்து தாவரவியல் ஆசிரியையாக தகவல்கள் சேகரிக்கத்துவங்கி இந்த சுவாரஸ்யமான சடங்கைக்குறித்தும் கற்றுத்தருகிறேன் வணிகப்பயிர்களைக் குறித்த தாவரப்பொருளாதாரப் பாடத்தில்.

கமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும்  தேயிலைச்செடியின் ஒற்றை இலை மொக்கு மற்றும் இரண்டு குருத்து இலைகளைக் கொண்ட flush எனப்படும் தொகுதியை உலர்த்தி நீராவியில் வேகவைத்து பதப்படுத்தி உருவாக்கப்படுவதே தேயிலை.  சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. சீனாவில் தோன்றிய தாவரச்சிற்றினங்களின் பெயர் சினன்சிஸ் என்றே இருக்கும்

பொதுவாக மூன்று வகை தேயிலைச் செடி வகைகள் பயிரிடப்படுகின்றன. சிறிய இலைகளைக் கொண்ட சீன வகை (கமிலியா சினென்சிஸ் சினென்சிஸ்), கொஞ்சம் பெரிய இலைகளைக் கொண்ட அசாமிய வகை (கமிலியா சினென்சிஸ் அசாமிக்கா) இவையிரண்டிற்கும் நடுவிலுள்ள  கம்போட் வகை, நடுத்தர அளவுள்ள இலைகளைக் கொண்டது.

சீனாவில் 618-907-ல் தாங் அரசமரபில் உலர்த்தப்பட்ட தேயிலைகளை சிறிதளவு மாவும் உப்பும் கலந்து அழுத்தி கட்டிகளாக்கபட்டு வியாபாரம் செய்யப்பட்டன.  கட்டிகள் பின்னர் தேவைப்படுகையில் உடைக்கப்பட்டு கொதிநீரில் இட்டு தேநீர் தயாரிக்கபட்டது.

பின்னர் சோங் மரபில் (960-1279) தான் தேயிலையை உலர்த்தி தூளாக்கி கொதிநீரில் இட்டு பானமாக தயாரிக்கத்துவங்கினார்கள். 762-ல் சீன எழுத்தாளர் லூ யூவின் தேயிலை குறித்த உலகின் முதல் தேயிலை பற்றிய புத்தகம் வந்துவிட்டது (Lu Yu’s The Classic of Tea,) அதில் தேயிலையை நீராவியில்,வேகவைத்தல், உலர்த்தித்   தூளாக்குதல் கொதிநீரில்  இட்டு பானமாக்குதல் பற்றிய குறிப்புக்கள் விவரமாக தரப்பட்டிருக்கும்

தேயிலையும் தேநீரும் சீனாவிலிருந்து 700-களிலேயே ஜப்பானுக்கு அறிமுகமாயிருந்தாலும் அதிகம் பயன்பாட்டுக்கு வந்திருக்கவில்லை. 8 -ம் நூற்றாண்டில் ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற இரு துறவிகள்  சீனக்கலாச்சரத்தை பற்றி தெரிந்துகொண்டு அங்கிருந்து தேயிலைச்செடியின் விதைகளை ஜப்பானுக்கு கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. எனினும் இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை

மாமன்னர் சாகாவின் ஆட்சி  (Saga-809-823)   sinophile  அதாவது சீனக்கலாசாரத்தின் மீது குறிப்பாய்  சீனர்களைபோல் தேநீர் அருந்துவதிலும், தேநீர் குறிதத சீனாவின் ஏரளமான கவிதைகளை வாசிப்பதிலும் பெருவிருப்பு கொண்டிருந்த ஒன்றாகவே விவரிக்கப்படுகின்றது. அவரும் சீனாவிலிருந்து தருவித்த விதைகளைக்கொண்டு  ஜப்பானில் 5 இடங்களில் தேயிலைத்தோட்டங்களை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. அதன்பிறகும் தேநீர் அத்தனை பிரபலமாகவில்லை. அறிமுகமான் 8 -ம் நூற்றாண்டிலிருந்து துறவிகளும் அரசகுடும்பத்தினரும் செல்வந்தர்களுமே தேநீரை அருந்திவந்தனர்

பின்னர் கமகுரா காலத்தில் (1192-1333), ஜென் புத்தமதத்தை தோற்றுவித்தவரான  துறவி எய்சை (Eisai-1141-1215) சீனாவிலிருந்து தேயிலைச்செடியின் விதைகளையும் தூளாக்கப்பட்ட தேயிலையையும் கொண்டுவந்து பச்சைத்தேநீர்  தயாரிப்பதையும் தேயிலைச்சாகுபடியையும் ஜப்பானுக்கு அறிமுகபடுத்தினார். பின்னரே கியோட்டொ உள்ளிட்ட முக்கிய இடங்களில் முழுவீச்சில் தேயிலை சாகுபடி செய்யபட்டது.

தேயிலையின் மருத்துவ உபயோகங்களை குறித்தான இவரின் ’’ஆரோக்கிய வாழ்வுக்கான தேநீர்’’ நூல் மிகவும் பிரசித்தம். (Drink Tea and Prolong Life). இதுவே ஜப்பானில் தேநீரைக் குறித்து எழுதப்பட்ட முதல் புத்தகம். தேநீரின் மென்கசப்பு அப்போது ஜப்பானியர்களுக்கு அதிகமாக இருந்த இருதயப்பிரச்சனைகளுக்கு நல்லதீர்வாக இவரால் பரிந்துரைக்கபட்டிருந்தது.

மாருமோச்சி காலத்தில் (1333-1573), தேநீர் ஜப்பான் முழுவதுமே மிகப் பிரபலமான பானமாகியது.  தேநீர் விருந்துகளும்,  தேநீர் அருந்தி அதை எந்த பிரதேசத்தில் விளைந்தது என கண்டுபிடிக்கும் போட்டிகளும், கொண்டாட்டங்களும் நடந்தபடியே இருந்தன. சென்ச்சா (Sencha) எனப்படும் உலர்த்தபட்ட முழுத்தேயிலைகளை கொதிநீரில் இட்டு தேநீர் தயாரிக்கும் கலை  ஜப்பானில் 18 -ம் நூற்றாண்டில் மிகப் பிரபலமானதாகியது.  இன்று வரையிலுமே உலகெங்கிலுமே தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் அருந்தப்படும் பானமாக தேநீரே இருக்கிறது. காபி மூன்றாவது இடத்தில்

தேநீரை அருந்துவதை ஒரு சடங்காக துவங்கியது ஜென் துறவிகளே 1103 -ல் எழுதப்பட்ட Rules of purity for the chan monastery என்னும் நூல் தேநீர் சடங்கை விரிவாக சொல்லுகின்றது. சீனாவில் பிரபலமாகி இருந்த தேநீர் சடங்கு 13/14 -ம் நூற்றாண்டுகளில் தான் ஜப்பானின் பரம்பரியத்திலும் இணைந்தது

ஜப்பானில் இச்சடங்கை தோற்றுவித்தவர் சென் நோ ரிக்யூ (Sen no Rikyū) இவர் தேநீர் உள்ளிட்ட  பல நாசுக்கான புதிய கலாச்சரங்களுக்கு பெயர்பெற்ற சகாய் (இப்போது ஒசாகா) நகரிலிருந்து வந்தவர்.  தன் 19 -வது வயதிலேயே தேநீர் சடங்கினைக்குறித்து டேக்கனோவிடம் (Takeno) கற்றறிந்தார். தனது 52 ஆவது வயதில் இவர் ஜப்பானின் மிக முக்கியமான ராணுவத்தலைமையில் இருந்த  ஒடா நோபுநகா (Oda Nobunaga -1534–1582)  மற்றும் போர்வீரராக இருந்து ராணுவத்தளபதியாக வளர்ந்த டொயொட்டொமி ஹிதயோஷி (Toyotomi Hideyoshi 1537–1598). ஆகிய இருவருக்கும் தேநீர் தயாரித்துக்கொடுக்கும் நிபுணராக இருந்தவர். அப்போது ஹிதயோஷி பேரரசர் ஒகிமாச்சிக்கு அளிக்கும் அரசியல் காரணங்களுக்கான தேநீர் விருந்துகளை அரண்மனையிலும்  ரிக்யூவே நடத்தினார், ஜப்பானிய வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படும் 1587-ல் நடைபெற்ற மாபெரும் கிடானொ தேநீர் விருந்தையும் இவரே நடத்தினார்,

ரிக்யூதான் ஜப்பானின் தேநீர் சடங்கை தோற்றுவித்து அவற்றிற்கான நெறிகளையும் வகுத்தவர். அதுவரையிலும் கொண்டாட்டமாக கேளிக்கையாக  நடைபெற்று வந்த தேநீர் விருந்துகளை வாபி-சாபி (Wabi–sabi) எனப்படும் நிரந்தரமற்ற, அழியும் சாத்தியமுள்ள, வாடி உதிரும் இயல்புடைய, நேர்த்தியற்றவைகளின் அழகை ஆராதிக்கும்,  எளிமையைப் போற்றும், பாசாங்கற்ற ஒரு எளிய கலையாக, ஒரு ஆன்மீக சடங்காக இதை வகுத்தார்,

இதுவே அவர் தோற்றுவித்த இன்று வரையிலும் ஜப்பானிய பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் சா-னோயூ அல்லது தேநீரின் மார்க்கம்

இந்த தேநீர் சடங்கில் மாச்சா (matcha) எனப்படும் பிரத்யேகமாக நிழலில் வளர்த்தப்பட்டு நிழலிலேயே உலர்த்தபட்டு தூளாக்கபட்ட பச்சைநிற தேயிலையே பயன்படுத்தப்படுகின்றது.  நிழலில் வளர்ந்த செடிகளிலிருந்து 20 நாட்களுக்கொருமுறை  வளரும்  தளிர்கள் பறிக்கப்பட்டு இலைக்காம்பும் இலைகளின் மெல்லிய நரம்புகளும் கூட நீக்கப்படுகின்றது.

நிழலில் வளருகையில் சூரிய ஒளி அதிகம் விழாததால் அடர்பச்சை நிறமாகிவிடும் இலைகளில்  Caffenine மற்றும் Theanine  அளவுகள் அதிகரிக்கும். சூரிய ஒளியை தடுக்க தேயிலைச்செடிகளை ’”கன்ரைஷா” எனப்படும் கனத்த படுதாக்களால் மூடிவைத்து வளர்க்கும் முறை உலகிலயே ஜப்பானில் மட்டுமே பின்பற்றப்படுகின்றது. கோடைக்காலங்களில் வெப்பம் செடிகளை நெருங்காமல் இருக்க சுற்றிலும் மூங்கில் தப்பைகளால் மறைப்பும் ஏற்படுத்தப்படும்.

நாமனைவரும் பருகும் தேநீர் சூரிய ஒளியில் வளர்க்கபடும் செடிகளிலிருந்து தயாரிக்கப்படுபவை இவை ஜப்பானில் சென்ச்சா (Sencha) எனப்படுகின்றன. சிலவாரங்கள் நிழலிலும் பின்னர் சூரியஒளியிலும் வளர்க்கப்படும்  கியோகுரோ ( Gyokura), 1 அல்லது  2 வாரங்களுக்கு மட்டும் படுதாக்களால் மூடப்பட்டு வளர்க்கப்படும் காபூஸ் வகை (Kabuse) என்று நுணுக்கமான சாகுபடி வேறுபாடுகளால் வகைப்படுத்தபடும் ஜப்பானிய தேயிலை வகைகள் ஏராளம் உண்டு. ஜப்பானின்  பிரபல 20க்கும் மேற்பட்ட தேநீர் வகைகளை குறித்து தெரிந்து கொள்ள ;https://www.japan-talk.com/jt/new/japanese-tea

தேர்ந்த ஆட்களால் கைகளால் கவனமாக பறிக்கப்பட்டு மூங்கில் கூடைகளில் சேகரிக்கப்படும் தளிர்  இலைகளில் இருந்து  மாச்சா தயாரிக்க 20 நாட்களாகின்றது. இயந்திரங்களில் அரைபடுகையில் வெப்பம் வருமாதலால்  கற்செக்குகளிலேயெ மிக மெதுவாக  இலைகளின் நறுமணமும் பச்சைவாசமும் கொஞ்சமும் மாறாமலிருக்கும்படி  இவை தூளாக்கப்படும்.   ஏறக்குறைய 1 மணி நேரத்தில் 30 கிராம் தூள் மட்டுமே தயாராகும். தூளாக்காமல் இலைகளை உலர்த்தமட்டும் செய்து உருண்டைகளாக உருட்டப்பட்டவை டென்ச்சா எனப்படும். இவையும் தேநீர் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றது.

செடியின் வயது, அது வளர்க்கப்படும் கோணம், மண்ணின் சத்துக்கள் போன்றவற்றால்  மாச்சாவின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

கிரானைட் கற்களில் தூளாக்கபட்ட மிக உயர்தர மாச்சா  100 கிராம் 150 அமெரிக்க டாலர்கள் வரை விலையிருக்கும் இவை புத்தக்கோவில்களிலும் அரசகுடும்பத்திலும் தேநீர் சடங்கில் உபயோகிக்கப்படும்.

செல்வந்தர்கள் வீட்டில் உபயோகிக்கப்படும் ப்ரீமியம் வகை 80 டாலர் வரை விலை இருக்கும்.

உணவு மாச்சா எனப்படும் ரகமே  சாதாரண மக்கள் அனைவரும்  உபயோப்பதும் சுற்றுலாப் பயணிகளிக்கு வழங்குவதும் இது 100 கிராம் 15 லிருந்து 40 டாலர் வரை இருக்கும். இது பெரும்பாலும் தளிரிலைகளல்லாது, தேயிலைச்செடியின் கீழ்புறமிருக்கும் முதிர்ந்த  இலைகளிலிருந்து தயாரிக்கப்படுபவை.

பெரும்பாலான வீடுகளில் இச்சடங்கிற்கென தேயிலை அறைகளென்றே தனியே அறைகளும் இருக்கின்றது. இவ்வறைகளில் டடாமி  (tataami) எனப்படும் வைக்கோல்   பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும். இச்சடங்கு வெண்முரசில் உண்டாட்டுகளில் சொல்லபட்டிருப்பதைப் போலவே ஏராளமான ஒடுக்குநெறிகளையும் செலுத்துநெறிகளையும் கொண்டது

தேநீர் சடங்கிற்கு விருந்தினர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே வந்து காத்திருக்கும் அறையின் சுவற்றில்  தொங்கிகொண்டிருகும் துணிச்சுருளில் அன்றைய தேநீர் விருந்து பற்றிய குறிப்புகளை வாசித்து அறிந்தபின்னர் ஒவ்வொருவராக அடுத்த அறைக்கு சென்று கல்லாலான வாஷ்பேசினில் கைகள் வாய் ஆகியவற்றை நீரால் சுத்தம் செய்துவிட்டு, அங்கிருந்து தேநீர் அறைக்கு மூன்றடிக்கும் குறைவான நுழைவுவாயிலில் ஏறக்குறைய தவழ்ந்தபடி உள்ளே சென்று உள்ளே விரிக்கபட்டிருக்கும் பாய்களில் செய்சா (Seiza) எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய அமரும் முறையான முழந்தாளிட்டு  சமூக அந்தஸ்தின் படிநிலைகளின் படி வரிசையில் அமரவேண்டும் இறுதியாக வரும் விருந்தாளி அறைக்கதவை மெதுவாக அடைக்கும் ஓசையை கேட்ட பின்னரே விருந்தளிப்பவர் அறைக்குள் நுழைவார்.

பாரம்பரிய வணக்கங்கள் அறிமுகங்கள் செய்துகொண்டபின்னர் முதலில் சாகே அரிசி மதுவும் ’’வாகாசி’’ என்னும் தாவரப்பொருட்களிலிருந்து எடுக்கப்படும் இனிப்பும் வழங்கப்படும். அவற்றை உண்டபின்னர் வரிசையாகத் தேநீர் அறையுடன் இணைந்த சிறு தோட்டத்துக்குள் சென்று ஒரு உலாத்தலை செய்து கொண்டிருக்கவேண்டும்.

விருந்தளிப்பவர் செய்யும் மணியோசை அழைப்பை  கேட்ட பின்னர்   மீண்டும் உள்ளே வந்து அமரவேண்டும். இப்போது பூசை செய்வது போல தேநீர்க்கோப்பைகளை  கிண்ணங்களை மெல்ல நடன அசைவு போன்ற உடலசைவுகளுடன் அடுக்கி கரியடுப்பில் ஒவ்வொன்றாக கரியிட்டு பற்ற வைத்து மந்திர உச்சாடனம் போல மெல்லியகுரலில் முணுமுணுத்து விட்டு மாச்சா பச்சைத்தேயிலைத்தூளை  இச்சடங்கிற்கெனவே இருக்கும் ஒரு உலோகச் சல்லடையில்  கொட்டி மரக்கரண்டியாலோ அல்லது சிறு கல் கொண்டோ தட்டித்தட்டி சலிக்கபட்டு, சக்கி எனப்படும் மூடியுடன் கூடிய  செராமிக் அல்லது மூங்கில் கெட்டிலில் கொட்டப்படுகின்றது

சக்கியிலிருந்து  ஒரு சிறு மூங்கில் கரண்டியால்  4 கிராம் அளவுக்கு எடுக்கப்பட்ட தூள் சாவன் எனப்படும் தேநீர்க்கிண்ணத்தில் கொட்டப்பட்டு உடன் 60- 80 மில்லி வெந்நீரும் சேர்க்கப்படும். மூங்கிலில் செய்யபட்ட (Chasen) சேசன் எனப்படும் பிரத்யேக கலக்கி ஒன்றினால் இக்கலவை கட்டிகள் இன்றி  கோப்பையின் உட்சுவரில் தூகள் ஒட்டாதவண்ணம் மெல்ல  கலக்கப்படும்.

பச்சைக்குழம்பு போன்ற இந்த கொய்ச்சா (koicha) திரவத்தை  ஒரு அகன்ற கிண்ணத்தில்  விருந்தளிப்பவர் ஒரு வாய் அருந்திவிட்டு கிண்ணத்தின் விளிம்பைத் துடைத்துவிட்டு முதல் விருந்தாளியிடம் கொடுப்பார், அவரும் கொஞ்சமாக அருந்திவிட்டு விளிம்பை துடைத்து சுத்தம்செய்து அடுத்தவருக்கு அளிக்கவேண்டும் இப்படி ஒவ்வொருவராக கொடுத்துக்கொண்டிருக்கையில் தேநீர் சிறப்பாக இருந்தது என்னும் முகக்குறிப்பை காட்டலாம்.

மீண்டும் இடைவேளை, மீண்டும் தோட்டத்தில் உலாத்தல் பின்னர் அமர்கையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக்கோப்பைகளில் கொடுக்கப்படுவது மாச்ச்சாத்தூளுடன் மூன்று மடங்கு கொதிநீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட நீர்த்த உசுச்சா (usucha) கரைசல். இம்முறை மெதுவாக பேசிக்கொள்ளலாம். பின்னர் கோப்பைகளை மெல்லிய முறையான அசைவுகளுடன் விருந்தளித்தவர் சுத்தம் செய்வார்

பின்னர் விருந்தளிப்பவரிடம் முறையான அனுமதி பெற்று உபயோகப்படுத்தபட்ட  கெட்டில் கோப்பை, கிண்ணங்கள் ஆகிவற்றை தொட்டுப்பார்க்கலாம். அவை எல்லாம் மிக விலையுயர்ந்த ,பண்பாட்டு முக்கியத்துவமுள்ளவை என்பதால் அதற்கென இருக்கும் ஒரு அலங்கார துணியினால் பிடித்து மிகக் கவனமாக பார்க்கவேண்டும். இப்படிப்பார்த்து  அவற்றின் கலைநயத்தினையும் அழகையும்  சிலாகிப்பது விருந்தளிப்பவருக்கு விருந்தாளிகள் செய்யும் ஆகச்சிறந்த கெளரவமாக கருதப்படும்.

இறுதியில்  விருந்தளித்தவர் கதவுக்கு அருகே நின்று குனிந்து வணங்கியதும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொள்ளவேண்டும் . மரபான தேநீர்சடங்கு குறைந்தபட்சம் 4 மணிநேரத்திலிருந்து முழுநாள் வரைக்குமே காலம், கலந்துகொள்பவர்களின் அந்தஸ்து,  எண்ணிக்கை இவற்றை பொருத்து வேறுபடும்

ஒரு வருடத்தை ஜப்பானிய தேநீர் வல்லுநர்கள் நவம்பர் முதல் ஏப்ரல் வரை குளிர்காலமென்றும் மே முதல் அக்டோபர் வரை  கோடைக்காலமென்றும் இரண்டாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கேற்றபடி தேநீர்ச்சடங்கில் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள் கோப்பைகள் ஆகியவற்றையும்  வேறுபடுத்தி, காலத்துக்கேற்றபடி தேநீர் அறையில் செய்யவேண்டிய  மாற்றங்களையும் முறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த சம்பிரதாயங்கள் பொதுவில் ”தெமாயே” (temae.) எனப்படுகின்றன.

ஜப்பனிய பாரம்பரிய மலரலங்காரம் இகபானா என்றால் தேநீர் சடங்கிற்கான மிக எளிய பிரத்யேக மலரலங்காரம் சா-பானா-(தேநீர் மலர்). ஒன்றிரண்டு மலர்கள். மூங்கில் குச்சிகள், கண்ணாடி சீசாக்கள் அள்லது மூங்கில் கூடைகள், செராமிக் கூஜாக்கள்  ஆகியவையே இதற்கு உபயோகப்படுத்தப்படும்.

தேநீர் சடங்கிற்கு ஆண்கள் தேசிய உடையான கிமானோவிலும் பெண்கள் அவர்களுக்கான்  ஐரோமூஜியையும் அணிந்திருப்பார்கள். குளிர்கால சடங்கில் ஆண் பெண்ணிருவருமே உள்ளே கனத்த அடித்துணி வைத்துத் தைக்கப்பட்டிருக்கும் கிமானோவையே ஒன்றே போல அணியலாம்.

ஜப்பானில் தேநீர் சடங்கு குறித்த வகுப்புக்கள் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக அளவுகளில் நடத்தப்படுகின்றன. தனியார் வீடுகளிலும் தோட்டங்களும் பூங்காக்களிலும் இவ்வகுப்புக்கள் இளம் பெண்கள், வயதானவர்கள்,  இல்லத்தரசிகள் என  பலதரப்பட்ட குழுக்களாக கலந்துகொள்பவர்களுக்கு நடத்தப்படுகின்றன.  தேநீர் சடங்கு நடத்துபவர் மரபுகளுக்கேற்றபடி தேநீரை தயாரித்து விருந்தினருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம்.

ஜப்பானிய தேநீர்ச்சடங்கு நான்கு முக்கியமான அடிப்படைகளை கொண்டது

1. இயற்கையுடனான ஒத்திசைவை சொல்லும் “Wa”, ’இதன்பொருட்டே தேநீர் அறையுடன் இணைந்த தோட்டம். தோட்டங்களிலும் பிரகாசமான நிறமும் மணமுள்ள மலர்ச்செடிகள் மனதை திசை மாற்றலாமென்பதால் எளிய தாவரங்களே வளர்க்கப்படும். தேநீர் கோப்பைகள் கிண்ணங்கள் அவற்றின் வண்ணங்கள்,  தீட்டப்பட்டிருக்கும் சித்திரங்கள், எழுத்துக்கள்  ஆகியவையுமே ஒன்றுக்கொன்று இயைந்து ஒத்திசைவுடன் இருக்கும்

  1. “Kei” என்பது பணிவைக்குறிப்பது. மிகக்குனிந்து வரவேண்டிய அந்த நுழைவு வாயில், முழந்தாளிட்டு அமர்வது, இடுப்பை வளைத்து வணங்குவது, அமைதியாக இருப்பது அனுமதிபெற்றே பொருட்களைத் தொடுவது என்று ஒவ்வொன்றிலும் மரியாதையும் பணிவும் இருக்கும் சடங்கு இது
  2. “Sei” தூய்மையை குறிக்கும். அறையும் பொருட்களும் மட்டுமல்லாது விருந்தாளிகளும் விருந்தளிப்பவரும் அகத்தூய்மையுடன் இருப்பதையும், நுழைவுவாயிலுக்கு வெளியே தங்கள் மன அழுக்குகளையும் விகாரங்களையும் களைந்துவிட்டே வரவேண்டும் என்பதையும் இது குறிக்கின்றது. விருந்தளிப்பவர் தன் தூய இருதயத்தையும் ஆன்மாவையுமே மனம் சிதறாமல் தேநீராக விருந்தினருக்கு அளிப்பதாகவும் கருதப்படுகின்றது. தேநீரறையே ஒரு அழகிய துயரற்ற இனிமையும் தோழமையும் நிரம்பிய  தூய உலகமாக கருதப்படுகின்றது.
  3. “Jaku”என்பது தேநிர் விருந்தின் நினைவுகள் கலந்துகொண்டவர்களுக்கும் அளித்தவருக்கும் அளிக்கும் ஆழ்மன அமைதியை குறிக்கின்றது.

தேநீர்ச் சடங்கு நடத்துனர் தேநீர் மற்றும் தேயிலை வகைகள், தயாரித்தல், பரிமாறல் போன்ற கலைகளில் மட்டுமல்லாமல், ஜப்பானிய பாரம்பரியத்துக்கேயான பல கலைகளையும் அறிந்து தேநீர்ச்சடங்கில்  அவற்றின் பங்கினையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இக்கலையை முழுமையாக கற்க பல ஆண்டுகள் தேவைப்படும்.

தேநீர்ச் சடங்கை வெறும் தேநீர் அருந்தும் ஒரு நிகழ்ச்சியாக பார்க்காமல் ஆன்மீக, உளவியல், சமூக நிலையில்  அணுகினாலே ஜப்பானிய பண்பாடுகளில் அதற்கு இருக்கும் முக்கியதுவத்தை புரிந்து கொள்ள முடியும்

தோழமையை, தேநீரின் உன்னத சுவையினை, வெகு எளிமையான அதன் தயாரிப்பு முறையை, விருந்தோம்பலின் மேன்மையை, பாரம்பரியத்தின்  முக்கியத்துவத்தை போற்றும், கொண்டாடும் ஒரு அற்புதக்கலையாக, ஆன்மிக ஒழுங்குகளுடன் அளிக்கப்படும், கலந்து கொள்ளப்படும் ஒரு மிக முக்கியச்சடங்கு இது

ஜப்பானின் மூன்று முக்கிய தேநீர் நகரங்களில் ஒன்றான ’மட்சூ’ வில்  எப்போதும் தேநீர் சடங்கு நடந்தபடி இருக்கும். கடைத்தெருவில் வகாசி இனிப்புக்களும் தேநீர் சடங்கிற்கு தேவையான கிண்ணங்கள், கரி அடுப்புக்கள், கோப்பைகளை விற்பனை செய்யும் கடைகளும் நிறைந்திருக்கும். இங்கு 1779- லிருந்து பேணப்பட்டு வரும்  மீ மீ  என்னும்  தோட்டத்துடன் இணைந்த பாரம்பரிய தேநீர் இல்லத்துக்கு சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமே இருப்பார்கள். இங்கு நடக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள  200-லிருந்து 400 யென் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

தேயிலையே இல்லாமல் மல்லிகைப்பூவை கொதிநீரில் இட்டு சான்பின்ச்சா (sanpincha) எனப்படும் மல்லிகைத்தேநீரையும், பார்லியை கொதிக்கவைத்து முகிச்சா(Mugicha) என்னும் பார்லித்தேநீரையும், கடற்பாசிகளையும் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்கலை கலந்து7 நொதிக்கவைத்த  புளிப்புச்சுவையுள்ள கொம்புச்சா(Kombucha) தேநீரையும்  ஜப்பானியர்கள் விரும்பி அருந்துவார்கள்

ஜப்பனிய செர்ரி மரமான சகுரா பூக்கும் காலத்தில் சகுரா மலரிதழ்களை வினிகரும் உப்புமிட்டு பதபப்டுத்தி கொதிக்க வைத்து செர்ரி மலர்த்தேநீரும் அருந்துவார்கள். பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் இலவசமாக உணவிற்கு பின்னர் பச்சைத்தேநீர் அளிக்கும் வழக்கமும் இங்கு  உண்டு.

இந்தச் சடங்கு வெறும் பானம் தயாரிக்கும், அருந்தும் முறை மட்டுமல்ல; அவசரமான இந்த உலகில் நாம் தொலைத்துவிட்ட ‘நிதானத்தை’ மீட்டெடுக்கும் ஒரு கலையும்தான். ‘இச்சிகோ இச்சி’ என்ற தத்துவத்தின்படி, தேநீர் பருகும் தருணமும் , அந்த தேநீரும் மீண்டும் ஒருமுறை நம் வாழ்வில் வராது என்பதையும் இச்சடங்கு நமக்கு நினைவூட்டுகிறது.

உலகின் மிக அதிக விலைகொண்ட தேநீர்

சீனாவில்  வூயி  மலைப்பகுதியில்  இரும்புச்சத்தும் பிற மிக முக்கியமான நுண் சத்துக்களும் நிறைந்த மண்ணில் வளர்ந்திருக்கும்  ஆயிரமாண்டுகள் பழமையான மூன்று உயர்ரக தேயிலைப்புதர்களிலிருந்து எடுக்கப்படும் உலகிலேயே மிக விலையுயர்ந்த தேயிலை ட-ஹாங்-பாவ் (Da-hong pao).  ஒருகிலோ சுமார் 1 லட்சத்து இருபத்தைந்தாயிரம் அமெரிக்க டாலர்கள் ( 7 அல்லது 8 கோடி ரூபாய்கள் ) விலையுள்ள இத்தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் சீனாவுக்கு வரும் மிக மிக முக்கிய விருந்தாளிகளுக்கு மட்டும்  அளிக்கப்படும்

இதற்கு அடுத்து  இருப்பது ஒரு கிலோ 3300 அமெரிக்க டாலர்கள்(இரண்டரை லட்சம் ரூபாய்கள் )  விலையுள்ள   டீகுன்யன்  (Tieguanyin)  தேயிலை.

 

 

வானம் கொட்டட்டும்!

 

வானம் கொட்டட்டும்

பிப்ரவரி 7 , 2020ல் தேதி உலகெங்கிலும் ரிலீஸானது வானம் கொட்டட்டும்.. இயக்குனர் காற்றுவெளியிடையில் மணிரத்தினத்திடம் உதவியாளராயிருந்த படைவீரன் தனா. திரைக்கதையை தனாவும் மணிரத்தினமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். மணிரத்னத்தின் மெட்ரஸ் டாக்கீஸுடன் லைக்கா  அல்லிராஜா சுபாஷ்கரனும் இணைந்து தயாரித்துள்ளனர்

வெகு எளிமையான, தமிழ்த்திரையுலகிற்கு மிகப்பரிச்சயமான  வெட்டுப்பழி குத்துப்பழி கதைதான். சட்டென வந்த ஒரு கோபத்தில் அண்ணனை வெட்டியவர்களை, பிள்ளைகளின் முன்னிலையிலேயே வெட்டிச்சாய்த்துவிடுகிறார் சரத். அதுவும். இரட்டைப்பிள்ளைகளின் முன்னால். கொலைக்குற்றத்துக்காக சரத் சிறைக்குச் சென்ற பின்னர் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து படாதபாடுபட்டு குழந்தைகளை வளர்க்கிறார் ராதிகா. எதிர்த்தரப்பிலோ, இறந்தவரின் இரட்டைப்பிள்ளைகளில், ஒருவன் கோபமாகவும் இன்னொருவன் பழியுணர்வுடனும் வளர்கிறார்கள்.

சிறைக்கு சென்ற சரத் திரும்ப வருகையில் மகன் மகளுக்கும் அவருக்குமிடையேயான இடைவெளி அதிகமாவது, அவரின் இருப்பு குழந்தைகளுக்கு சங்கடமாக இருப்பது,  வாழ்வின் இயங்கியலில் வழக்கமாக  ஏற்படும் மனஸ்தாபங்கள், கோபதாபங்கள், சண்டைகள் என முட்டிமோதி, அந்த மோதலிலேயெ ஒருவரை ஒருவர் புரிந்து, அறிந்து இணங்கி, மீண்டும் அவர்கள் ஒரு குடும்பமாவது, அவரைக்கொல்ல காத்திருக்கும் இரட்டையரில் ஒரு நந்தா, சகோதரன் அவரைக்கொல்லாமல் தடுக்க நினைக்கும் இன்னொரு நந்தா, தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷின் காதல், அவளை விரும்பும் உறவினரான திரையில் கொஞ்சநேரமே வரும் (அந்த கொஞ்சநேரத்திலும் பைக்கிலேயே வரும்) சந்தனு பாக்கியராஜ், ஐஸ்வர்யாவை விரும்பும் இன்னோரு காதலன், (வேலையில்லா பட்டதாரி இளம்வில்லன்) அப்பாவைப்போலவே கோபக்கார விக்ரம் பிரபு, அவரின் வாழைத்தார் மண்டி வியாபாரம்  அதன் பிரச்சனைகள், இறுதி சண்டைக்காட்சி பின்னர் சுபம்.

இது விக்ரம்பிரபுவுக்கு நல்ல பாத்திரம் கொடுத்தால் அருமையாக நடிப்பார் என்று சொல்லும் படமும் கூட

ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்குகையிலும், அப்பாவுடன் முறைத்துக்கொள்ளும்போதும்,  பல காட்சிகளில் உடல்மொழியிலும் கூட அக்னிநட்சத்திரம் கார்த்திக்கை நினைவூட்டுகிறார். ஆனால் படம் முழுவதுமே முகத்தில் கோபம் நிறைந்து சீரியஸாக விறைப்பாகவே இருக்கிறார். காதலியுடன் நெருக்கமாக இருக்கும் அந்த ஒற்றைக்காட்சியிலும் கூட அப்படித்தான். கொஞ்சம் சிரிங்க பாஸ்  இனிவரும் படங்களில்.

மடோனா செபாஸ்டியன் மட்டுமே எந்த வேலையும் இன்றி சம்பந்தமில்லாமல் அப்பா பிசினஸ், இன்கம் டேக்ஸ்,  கடன்,  குடி என்று குழப்பியடித்து எப்படியோ விக்ரம்பிரபு காதலித்ததும்  (அதாவது அப்பா இறந்த அன்று இரவு விக்ரம் பிரபு மடோனாவை மெல்ல அணைத்துக்கொள்வதை காதலென்று நாம் எடுத்துக்கொண்டால்)  அவர் பாத்திரத்துக்கு முற்றும் போடப்படுகின்றது. காதலி இல்லாமலும் விக்ரம் பிரபுவின் பாத்திரம் நன்றாக பேசப்பட்டிருக்கும்

ஐஸ்வர்யா ராஜேஷ் வசீகரம். இயல்பாக பொருந்தி நடிக்கிறார். சமீபத்திய படங்களை பார்க்கையில் இவர்  தமிழ்சினிமாக்களில் நிரந்தர தங்கச்சியாகிவிடும் அபாயம் தெரிகின்றது. பாலாஜி சக்திவேல் பிரமாதம். நல்ல குணசித்திர நடிகரராக அசத்தியிருக்கிறார்.

ராதிகா, சரத்குமார்  மிகப்பிரமாதமான ஜோடி. அவர்கள் சந்திக்கும் உணர்வுமயமான காட்சிகளிலெல்லாம் பிண்ணனியில் வரும் ’’ கண்ணு, தங்கம் ராசாத்தி” பாடல்  மனதைஉருக்குகின்றது. அது ஒன்றுதான் படத்தில் உருப்படியான பாடலும் கூட

சித்ஸ்ரீராம் அறிமுக இசைஇயக்குனர், ஆனால் பாடல்களில் மட்டுமல்ல பிண்ணனி இசையிலும் ஏமாற்றமளிக்கிறார்.

எளிய பழைய கதை ஆனால் தனாவின் இயக்கத்தில் பல காட்சிகள் குறிப்பிட்டுசொல்லும்படியாக இருக்கின்றது. திரையரங்கில் தன்னை கண்டிக்கும் சரத்தை  ஐஸ்வர்யா ”அப்பா”வென முதன்முதலில் அழைப்பது, அப்பாவின் சட்டையில் மகன் பணம் வைப்பது, மழைநாளில் குடையுடன் அப்பாவைத்தேடி அம்மா கிளம்புகையில் தடுத்துவிட்டு மகன் போவது வாழைத்தாரின் கைப்பகுதியை சீவி அதில் கணக்கை பேனாவால் எழுதுவது, பெரியப்பா வாங்கி வந்த முறுக்கு பாக்கட்டை அப்போதே ஐஸ்வர்யா பல்லில்கடித்து திறப்பது,  கொலைக்குப்பிறகு ரத்தக்கறைச் சட்டையுடன் இருக்கும் சரத் ராதிகாவிடம் கோவிலில் பேசிக்கொண்டிருக்கையில் பிண்ணனியில் தெரியும் நேர்த்திக்கடன் மரத்தொட்டில், கம்பிக்கு வெளியில் மனைவியை பார்க்கும் சரத்தின் உணர்வுபூர்வமான் நடிப்பு, வானம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாலையில் வாழைக்காய் பாரமேற்றிய லாரியின் மேல் அமர்ந்து சரத் வரும் காட்சி, ஒரே பாடலில் அண்ணாமலையைபோல் பணக்காரராகாமல் கஷ்டப்பட்டு  படிப்படியாக விக்ரம் பிரபு  வாழைமண்டி வியாபாரத்தில் முன்னுக்கு வருவது என்று  தனா பல  எளிய, இயல்பான அழகிய இடங்களில் நம்மை கவனிக்க வைக்கிறார்.

விக்ரம் பிரபு வெகுநாட்களுக்கு பிறகு மிக நன்றாக பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் படம் இது.

அபியும் நானும்புகழ் பிரீதா ஜயராமன் ஒளி இயக்குனர் ஒளிப்பதிவு  மணிரத்தினம் படத்திற்கேயானது. மலையடிவார கிராமத்தில் துவங்கிய கதைக்களம்  சென்னையிலும்  தொடர்கின்றது உயிரோட்டத்துடன்

ராதிகா சென்னையில் தங்கியிருக்கும், குடியிருப்பு வளாகம், சந்துகள், எதிரில் ஓடிவந்து மோதும் குழந்தைகள், குதூகலித்துக்கொண்டு கன்றுக்குட்டிபோல் துள்ளித்திரியும், விளையாட்டாய் சிகரட் கூட பிடித்துப் பார்த்திருக்கும் ஐஸ்வர்யா, மர்மமான குடும்பப்பிண்ணனி கொண்ட கதாநாயகி, முறுக்கிகொண்டே விரைப்பாகத் திரியும் நாயகன் என மணிரத்தினம்  தயாரிக்கும் படத்தின்  எல்லா அம்சங்களும்  இதிலும் இருக்கின்றது காதலர்களின் நெருக்கமான காட்சிகள் நீங்கலாக.

சரத் கம்பீரம் குறையாமல் அப்படியே இருக்கிறார். ராதிகாவும் அழகு, அவருக்கு வயதானாலும் அவரின் கொஞ்சும் குரல் என்றென்றும் இளமையுடன் அப்படியே இருக்கிறது. இவர்கள் இருவரையும் இன்னும் கொஞ்சம் மையப்படுத்தி திரைக்கதையை கொண்டுபோயிருந்தால் திரைப்படம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், தெலுங்கு பண்ணையார் அவரது குடும்பத்தினர், அவரது மகனான இன்னொரு காதலன் என்று, ஒரே கூட்டமாக இருக்கின்றது திரையில்.

சரத்தின் அண்ணன் உழுதவயலில் வெட்டுப்பட்டு விழும் காட்சியுடன் துவங்கும் படத்தின் விறு விறுப்பு போகப்போக குறைந்து மிக மெதுவே நகருவதும் குறைதான்.

மடோனா ஏன் கதைக்குள் வந்தார்? எப்படி, ஏன் அவர் கதாபாத்திரம் முடிகின்றது, ஏன் எதற்கு அவரை விக்ரம் பிரபு காதலிக்கவேண்டும்  என்ற கேள்விகளெல்லாம் அப்படி அப்படியே கிடக்கின்றது படம் முடிந்த பின்னரும்

ஒரு நந்தாவே பழிவாங்க போதுமென்றிருக்கையில் எதுக்கு இன்னொரு நந்தா?

்இப்படி ஒருசில குறைபாடுகள் இருப்பினும், பகையும் பழிவாங்கலுமான அதே பழைய கதைதான் என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விதத்திலும் கதாபாத்திரத்தேர்விலும், அவர்களின் மிகபொருத்தமான நடிப்பிலும், நேர்த்தியான திரைமொழியிலும், தனாவின் இயக்கத்திலும் வானம்  திருப்தியாகவே கொட்டியிருக்கின்றது. வெகுநாட்களுக்கு பின்னர் வந்திருக்கும் ஒரு குடும்பக்கதை. குடும்பத்துடன் சென்று பார்க்கலாமென்னும் படமும் கூட

வாழ்த்துக்கள் தனா!

பிகில்

AGS எண்டர்டயின்மெண்ட் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் அட்லீ விஜய் கூட்டணியில் (மூன்றாவதாக), இந்த மாதம், அக்டோபர் 2019,  தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக உலகெங்கிலும் வெளியானது ‘’பிகில்’’. இசை ரஹ்மான், இசைக் கூட்டணியும் மூன்றாவது முறை, நாயகி நயன்தாரா.

இந்நாள் ரவுடியும் முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான மைக்கேல் ராயப்பன், அவரின் காதலி ஏஞ்சல், நண்பரும் பெண்களின் கால்பந்தட்ட பயிற்சியளருமான கதிர், மைக்கேலின் எதிரி டேனியல் என்று கதை துவங்கி, கதிருக்கு டேனியலினால்  முதுகெலும்பு முறிந்ததால் 7 வருடத்திற்கு முந்தைய மைக்கேலின் ஃப்ளேஷ் பேக்’கிற்கு நகர்கின்றது

ரவுடி ராயப்பனின் மகன் மைக்கேலும் நண்பன் கதிரும் கால்பந்தாட்ட வீரர்கள். மகன் தன்னைபோலல்லாமல் நல்ல விளையாட்டு வீரராக வர விரும்பும் அப்பா ராயப்பன் ரவுடி அலெக்ஸினால் மகன் கண்முன்னாலேயே கொல்லப்படுகிறார். பழிக்கு பழி வாங்க கால்பந்தட்ட கனவை மறந்து ரவுடியாகி, பின்னர் மீண்டும் கால்பந்தாட்டத் துறைக்கே பயிற்சியாளராகிறார் பிகில் என்றழைக்கப்படும் மைக்கேல்

நட்புக்காக மைக்கேல் பயிற்சியாளராவது, ஷர்மா அவரை பழி வாங்குவது, குற்றப்பிண்ணனி உள்ள விஜயை ஆட்சேபித்து, வெறுத்து பயிற்சிக்கு உடன்பட  மறுக்கும் விளையாட்டு வீராங்கனைகள், கொலை முயற்சி அடிதடி, கடத்தல், கொக்கைன், அமில வீச்சு , கால்பந்தாட்ட  விளையாட்டில் மைக்கேலின் அணி வெற்றி பெறாமல் இருக்க நடக்கும் உள்ளடி வேலைகள் என்று ஏராளம் பிரச்சனைகளுடனும் எளிதாக  யூகிக்க முடியும் அரதப்பழசான திருப்பங்களுடனும் படம் நகர்கின்றது.

துவக்க காட்சியிலேயே விஜய் ’’தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா’’ என்று சொல்ல அரங்கம் ரசிகர்களின் கூச்சலில் அதிர்கின்றது.

ஏறத்தாழ 3 மணிநேர நீளமுள்ள இத்திரைப்படத்தில் எந்த கணக்குமின்றி திரைக்கதை துண்டு துண்டாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான முந்தைய தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களிலிருந்து காட்சிகளை அப்பட்டமாக நினைவூட்டும், நிறைய லாஜிக் ஓட்டைகளும் இருக்கும் திரைக்கதை. பாதிக்குமேல் பாட்ஷாவின் ரீமேக் என்றே சொல்லிவிடலாம் அதில் முன்பு ரவுடியாக இருந்து ஆட்டோ ஒட்டுவார் இதில் பின்னர் ரவுடி, ஆட்டாவுக்கு பதில் கால்பந்தாட்டம் அவ்வளவுதான்.

ஏஞ்சலாக .நயன் தாராவுக்கு அழகாய் திரையில் தோன்றுவதைத்தவிர வேறு வேலையே இல்லை. ’’நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ, போ, போ’’ என்று பாடாத குறையாக விஜயுடன் கூடவே வந்து கொண்டிருக்கிறார்

ஜாக்கி ஷெராஃப் ஷர்மாவாக சோபிக்கவேயில்லை.  தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சங்களில் ஒன்றாகிவிட்டிருக்கும் யோகிபாபுவும் இருக்கிறார்.

90 களில் இந்தியாவின் புகழ்பெற கால்பந்தாட்ட வீரராக இருந்த  அர்ஜுனா விருது பெற்ற  கேரளாவைச் சேர்ந்த திரு  I M விஜயனை (Inivalappil Mani Vijayan), பிகிலில் வில்லனாக நடிக்க வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து உலகப்புகழ்பெற்ற விளையாட்டு வீரராக இருக்கும் ஒருவரை இப்படியா எதிர்மறையாக திரையில் சித்தரிப்பது? அதுவும் அவர் ஈடுபட்டிருந்த அதே விளையாட்டுத்துறையை சார்ந்த திரைக்கதையில்?

30 மணி நேரத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை 3 மணிநேரத்தில் கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையை திணிப்பதென்பார்களே அப்படித் திணிக்கிறார் அட்லீ. வேலுநாயக்கரை, பாட்ஷாவை, அமீர்கானை ஏன் சிவகார்த்திகேயனைக்கூட நினைவுக்கு கொண்டு வரும் காட்சிகள் ஏராளம்..  பல  காட்சிகளில் வசனங்களும்  பெண்கள் அணியின் பயிற்சியாளருக்கானதாக இல்லாமல் விஜய் என்னும் அரசியல் உத்தேசம் உள்ள நடிகருக்கானவையாகவே இருப்பதும் ஆதங்கமாக இருக்கிறது.. விஜயை தமிழகத்தின் தன்னிகரில்லா தனிப்பெரும்தலைவனாக காட்ட நினைத்திருக்கிறார் அட்லீ.

விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த  அறிமுகப்பாடல், சண்டை, கால்பந்து  விளையாட்டு என அடுக்கிக்கொண்டே போகும் காட்சிகளால் முன்பாதி இழுவை , அறுவை மற்றும் ஓவர் டோஸ். பின்பாதியில் கால்பந்தட்ட போட்டிகளின் விறுவிறுப்பு மட்டுமே கதையை தாங்கிப்பிடித்து கரைசேர்க்கின்றது.

கடந்த ஜூன் மாதம் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு மெதுமெதுவே இரட்டை வேடமென்பதையும் நள்ளிரவில் விஜயின் பிகிலுக்கான தோற்றமென்னவென்பதையும் அறித்தபோது எழுந்த ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கைக்கூட  திரைப்படம் முழுதாய் பார்க்கும் போது ஏற்படுத்தவில்லை

படத்தின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பு முற்றிலும் அணைந்தேவிட்டது படம் பார்க்கையில். முதல்பாதியிலியே. லாஜிக் மீறலின் எல்லைகளை தாண்டிய ஹீரோயிசம் செய்கிறார் விஜய். காவல் நிலையத்தில் குண்டு வைப்பது முதலமைச்சர் வரும் வழியில் தகராறு என . இவற்றை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி கூச்சலிடுவதை பார்க்கையில் திகிலாயிருக்கிறது..

இத்திரைப்படம் காட்சி ஊடகம் என்பதையே படக்குழுவினர் மறந்தது  போல பல விஷயங்கள் காட்டப்படுவதற்குப்பதில்  சொல்லப்படுவது  எரிச்சலைத்தருகின்றது. பாடல்களில் ’சிங்கப்பெண்ணே’   பரவாயில்லை. ரஹ்மானும் அட்லியும் சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்கள்

விஜய், இந்தப்படத்திற்கும் இத்தனை வசூலை அள்ளிக்கொடுத்திருக்கும், திரையில் விஜயின் தோற்றத்திற்கே வெறிக்கூச்சலிடும் ரசிகர்களுக்கு இன்னும் கவனமாக கதையை தேர்வு செய்திருக்கலாம். பண்டிகைக்காலங்களில் புதிய திரைப்படங்களை பார்ப்பதென்பது முக்கால் நூற்றாண்டாக தமிழகத்தில் ஒரு மரபாகிவிட்டிருக்கையில் தீபாவளீ ரிலீஸ் படமான இதில் 63 படங்களில் நடித்திருக்கும் விஜய் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் விவேக், ரோஹினி, தேவதர்ஷிணி, போன்ற தேர்ந்த முக்கிய நடிக, நடிகையர்களும் கூட இதில் சில காட்சிகளில் மட்டும் வந்து  வீணடிக்கபட்டிருக்கிறார்கள். படத்தின்  ஒரே ஆறுதல் விஜய் மட்டுமே! முன்னை விட இள்மையாக முன்னை விட துடிப்புடன் இருக்கிறார்.

அப்பா கெட்டப்பில் உப்பும் மிளகுமான தலைமுடியில் வந்தாலும் இளமையையும் மிடுக்கையும் ஸ்டைலையும் மறைக்க முடியவில்லை ஒப்பனையாலும். ஆச்சர்யம் ! நடனம்  மற்றும் சண்டைக்காட்சிகளிலும் அதே வேகமும் ஸ்டைலும்

G.K விஷ்னுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்களை சொல்லியே ஆகவேண்டும் . அனல் அரசுவும் சண்டைக்காட்சிகளை திருப்தியாகவே  அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு திணறியிருக்கிறது .

முதன்முதலாக எகிப்தில் திரையிடப்படும் தமிழ்த்திரைப்படமாகிறது பிகில். இரண்டே நாட்களில் ஒரு கோடியே 85 லட்சங்களை தாண்டி  சாதனை வசூல் படைத்து ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

விஜய்  படம் எப்படி இருப்பினும் திரையில் அவரை பார்த்தாலே போதும் என  படத்தை கொண்டாடி வசுலை அள்ளிகுவிக்கும் ரசிகப்பட்டாளங்களுக்காகவாவது இன்னும் கவனமாக  நன்றாக பிகிலை ஊதியிருக்கலாம்

 

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑