
1760-களின் இறுதியில் HMS Endeavour கப்பல் தென்பசிஃபிக் கடலின் மனிதவாசம் படாத பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப்பயணத்தினூடே பழங்குடியினரின் வாழ்விடங்களில் மட்டும் இருந்த செம்பருத்திச் செடியின் விதைகளும் மேற்கத்திய உலகிற்குப் பயணித்தன.
நம் வீடுகளில் எளிமையாக வளர்ந்து கொண்டிருக்கும் செம்பருத்தி வெறும் தாவரவியல் அற்புதம் மட்டுமல்ல; அது மனிதத் தேவைகளுக்கும், அந்தத் தேவைகளைத் தீர்ப்பதன் மூலம் தாங்களின் வாழ்வையும் பரவலையும் உறுதிசெய்துகொண்ட தாவரங்களின் நுண்ணறிவிற்கும் இடையே காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு உயிரியல் ஒப்பந்தமும் கூட.
1769-ல் கேப்டன் ஜேம்ஸ் குக்கும் அவரது கப்பலின் தாவரவியலாளரான ஜோசப் பேங்க்ஸும் தஹிதி தீவில் நுழைந்தார்கள். அவர்களுக்கு அழகிய செம்பருத்தி மலர்களால் ஆன மாலைகளை அணிவித்து அத்தீவின் பழங்குடியினர் வரவேற்பு அளித்தார்கள். மலர்களில் அழகென்றால் ரோஜாதான் என்று அறிந்திருந்த அவர்களுக்கு, இரத்தச் சிவப்பில் மிகப்பெரியதாக இருந்த, மலரின் நடுவில் இருந்து சிறு கம்பி போல நீட்டிக்கொண்டிருந்த மகரந்தக் குழாயுடன் கூடிய அந்த அழகிய மலர் பெரிய தாவரவியல் அதிசயமாகத் தெரிந்தது.
அதை தஹிதி தீவுவாசிகள் ‘கட்டுமர மலர்’ என அழைத்தார்கள். அவர்களின் முன்னோர்களின் கடற்பயணங்களில் கட்டுமரங்களில் அவர்களின் பயணத் துணையாக எப்போதும் இருந்ததால், அம்மலருக்கு அப்பெயர் வந்திருந்தது.

அக்காலத்தில் கடற்பயணங்களில் உணவுக்காக சேம்பு, கறிப்பலா, மற்றும் வாழை ஆகியவற்றைப் போலவே, மருத்துவ உபயோகங்கள் கொண்டிருந்த, அடர்நிறச் சாயம் அளித்த செம்பருத்தியும் தவறாமல் கொண்டு செல்லப்பட்டது. கடற்பயணங்களில், கரையொதுங்கிய பல தீவுகளிலிருந்த மலர்ச் செடிகளில் செம்பருத்திச்செடியின் ஆதிப்பயிர் கடற்பயணிகளால் கலப்பினச் சோதனைகளுக்கு உட்பட்டிருக்கலாம். நீண்டகாலப்பயணத்துக்குப்பிறகு இவை இந்தியா மற்றும் சீனாவை வந்து சேர்ந்தபோது, மனிதர்களால் முழுமையாக மேம்படுத்தப்பட்ட ஒரு பயிரிடு வகையாக (Cultigen) இப்போதிருக்கும் செம்பருத்திச்செடியாக மாறியிருக்கக் கூடும்.
குக்கும் பேங்க்ஸும் அந்த மலர்ச்செடி அந்தத் தீவின் காடுகளில் எங்கும் வளர்ந்திருக்கவில்லை என்பதை அறிந்தார்கள். அந்தத் தீவுவாசிகளால் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகிக்கும் ஒரு மலராக அது இருந்ததையும் அவர்கள் கவனித்தார்கள்.
கப்பல் குழுவினர் தஹிதியில் தங்கியிருந்த காலத்தில், அத்தீவுவாசிகள் மரவுரி ஆடைகளில் பிற தீவினரைப் போல சாயக் கற்கள் அல்லது கரியைக் கொண்டு சாயமிடாமல், செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கற்களுக்கடியில் வைத்து நசுக்கிப் பிழிந்து கிடைக்கும் சிவப்புச் சாற்றை, சிறிது நேரத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறம் கொண்டு விடும்போது அதைக்கொண்டு மரவுரிகளுக்குச் சாயமிடுவதை குக்கின் குழுவினர் அதிசயமாகக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதே சாயத்தைப் பெண்கள் புருவங்களுக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக்கொள்வதும் குக்கினால் ஆவணப்படுத்தப்பட்டது.
குக் மற்றும் பேங்க்ஸ் வரைந்த நேர்த்தியான செம்பருத்திச் செடியின், மலரின் சித்திரங்களும், அவர்கள் சேகரித்த செம்பருத்திச் செடியின் உலர் தாவரங்களும், விதைகளும் கியூ ராயல் தாவரவியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்தன. பின்னர் உலகின் பல பாகங்களுக்கும் செம்பருத்தி அறிமுகமானது.
செம்பருத்தி மலர் ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. அந்த அழகிய மலர்ச்செடி பசிஃபிக் பகுதியினரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதையும், செம்பருத்தி ஒரு ‘மனிதப்பயிரிடு வகை’ என்பதையும், மனிதர்களால் அவர்களின் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வளர்க்கப்படும், காட்டு மூதாதையர்கள் ஏதுமில்லாத ஒரு தாவரம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகள் எதிலும் செம்பருத்தியின் காட்டு மூதாதையர்கள் இல்லை. எனவே, இவை இந்தியாவையோ அல்லது அந்த நாடுகளையோ பூர்வீகமாகக் கொண்டிருக்க முடியாது. இந்தியப் பெருங்கடல் தீவுகளில் இருந்த H. liliiflorus மற்றும் H. schizopetalus ஆகிய இரு இனங்களின் அழகிய மலர்களைக் கண்ட பண்டைய மாலுமிகள், கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கியவையே இன்றைய செம்பருத்தியின் மூதாதையர்களாக இருக்கக்கூடும். காட்டு மூதாதையர்கள் மட்டுமல்ல, புதைபடிம எச்சங்களும் (Fossils) செம்பருத்திக்கு இல்லை என்பது, இது ஒரு பயிரிடு வகை (Cultigen) என்பதற்குச் சான்றாகும்.

ஜேம்ஸ் குக்கினால் கண்டுபிடிக்கப்பட்ட செம்பருத்தி, பின்னர் வெகுவேகமாக உலகெங்குமே பெருகிப் பரவியது. தொடக்க நாட்களில் குக் ஆவணப்படுத்தியதிலிருந்து, கடற்பயணத் துணையான செம்பருத்தியின் பயன் உலகெங்குமே பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
விழியை இழந்த தாவரவியலாளர் ஜார்ஜ் ஈபர்ஹார்ட் ரம்பீயஸ் (Georg Eberhard Rumphius), 17-ம் நூற்றாண்டில் செம்பருத்திச் சாற்றை அம்போன் தீவுப் பெண்கள் கண் புருவம் மற்றும் தலைமுடிக்குச் சாயமேற்றப் பயன்படுத்துவதைத் தனது Herbarium Amboinense என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.
செம்பருத்தி அக்காலத்தில் அழகுத் தாவரமாக மட்டுமல்லாமல், அதன் மருத்துவக் குணங்கள் கொண்ட பிசுபிசுப்பான திரவம், சாயம் மற்றும் தண்டின் நார் போன்றவற்றுக்காகச் சாகுபடி செய்யப்பட்ட ஒரு பணப்பயிராகவே இருந்தது.
உண்மையில் செம்பருத்தி குக்கினால் கண்டுபிடிக்கப்பட்டு உலகளாவிய பயன்பாட்டுக்கு வந்தது என்பது வெறும் தற்செயலான ஒரு தாவரக் கண்டுபிடிப்புத்தான். உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து தாவரப் பொறியியல் மற்றும் கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட, அழகுக்கும் தாவரஅறிவியலுக்குமான உலகளாவிய குறியீடாகவே செம்பருத்தி இன்றுவரை இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் செம்பருத்திக்கென மிகத் தனித்துவமான ஒரு இடம் இருக்கிறது.
கூடவே செம்பருத்தித் தாவரத்தின் புத்திசாலித்தனமும் வியக்கவைக்கும் ஒன்று. மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நறுக்கப்பட்ட தண்டு (Stem cuttings) மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, இயற்கையாகவே வளர்ந்த செம்பருத்திச் செடிகள் மலர்களை உருவாக்கி, மகரந்தச் சேர்க்கையாளர்களைக் கவர்ந்து, பாலினப் பெருக்கம் செய்து விதைகளை உருவாக்கின. விதைகளை உருவாக்கச் செம்பருத்திச் செடிக்கு, பிற செடிகளைப் போலவே ஏராளமான ஆற்றல் தேவைப்பட்டது. உருவாகும் விதைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்து, சந்ததிகளின் வாழ்வை உறுதிப்படுத்தவும் ஆற்றல் தேவைப்பட்டது.
ஆனால் செம்பருத்தி ஒரு பயிரிடு இனமாக மனிதர்களால் மாற்றப்பட்ட பிறகு, அது பாலினப் பெருக்கத்திற்குச் செலவழித்த, 20 விதைகள் கொண்ட கனியை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றல் அப்படியே மீதமானது. பலமுறை கலப்பினச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதால், 4, 6 அல்லது சில சமயங்களில் 8 ஜோடி குரோமோசோம்களைக் (Polyploidy) கொண்ட செடியாக இருந்ததால், வீரியம் அதிகமுள்ள அதிக வெப்பம் உள்ளிட்ட பல சூழல் சிக்கல்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டிருந்த ஒரு செடியாக மாறிய செம்பருத்திக்கு விதைகள் உருவாகாத மலட்டுத்தன்மையும் உண்டானது.
தானாகவே மலட்டுத்தன்மையை உருவாக்கிக்கொண்ட செம்பருத்திச் செடியிலிருந்து முளைதிறன் இல்லாத விதைகள் சிறிது காலம் உருவாகின. பிற்பாடு தனது புத்திசாலித்தனத்தினால், முளைக்காத விதைகளை அளிக்கத் தேவைப்பட்ட ஆற்றலை, மலர்களை மிக அழகாகவும் மிகப் பெரியதாகவும் உருவாக்குவதற்குச் செலவழித்து கனிகள் உருவாக்கத்தை நிறுத்திக்கொண்டது செம்பருத்தி.
மனிதர்களின் மலர்களுக்கான ஆசையைத் தூண்டி, அதன் மூலம் தனது இனப்பெருக்கத்தையும் சந்ததிப்பரவலையும் உறுதி செய்துகொண்டது செம்பருத்தி.
செம்பருத்திச் செடி தனது அழகான, பெரிய வண்ணமயமான மலர்களையும், மருத்துவப் பயனுள்ள வழுவழுப்புத் தன்மையையும் மனிதர்களைத் தன்பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு உத்தியாகக் கையாண்டது.
“நான் உங்களுக்கு அழகையும் பயன்களையும் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் என்னை அழிந்துபோகாமல் அடுத்தடுத்த இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்னும் ஒரு உயிரியல் ஒப்பந்தத்தின் மூலம் இன்றுவரை உலகின் மிக விரும்பப்படும் பாலிலா இனப்பெருக்கம் மூலம் பரவும் செடியாகச் செம்பருத்தி இருக்கிறது.
தனது இனப்பெருக்கத்திற்கு விதைகளை நம்பியிருக்காமல் மனிதனின் தேவையையும் ஆசையையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் பரவிய தாவரங்களில் செம்பருத்தி முதன்மையானது. கடற்பயணங்களில் தேவைப்படும் மருந்துகளுக்கும் சாயத்துக்கும் மிக அவசியமானதொரு செடியாக இருந்ததன் மூலம் தனது கடல்வழிப் பயணத்தையும் செம்பருத்தி உறுதி செய்துகொண்டது.
இதன் புத்திசாலித்தனத்திற்கு இன்னும் ஒரு உதாரணமாகச் செம்பருத்திச் செடி ஒரு ‘பேக்-அப்’ (Back-up) உத்தியையும் வைத்திருக்கிறது. ஒருவேளை மனிதர்களுக்குச் செம்பருத்தியின் மீதான ஆசையோ தேவையோ அற்றுப் போனாலும், மீண்டும் பழையபடி விதைகளை உருவாக்கும் திறனையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. இதை அவ்வப்போது நம் வீடுகளில் இருக்கும் செம்பருத்திச் செடிகள் கனிகளை உருவாக்குவதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
செம்பருத்தி எப்படி விதைகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டுத் தண்டுகள் மூலம் பரவி உலகின் ராணியாக இருக்கிறதோ, அதேபோல மக்காச்சோளமும் மிகத் தடிமனாகவும், பல அடுக்குகளாகவும் இருந்த தனது கதிர் உறையை மெலிதாகவும். எண்ணிக்கை குறைவாகவும் மாற்றி, அதற்குத் தேவைப்பட்ட ஆற்றலைக் கதிர்மணிகளின் நிறம் மற்றும் அளவை அதிகரிக்கப் பயன்படுத்திக்கொண்ட பயிர். மக்காச்சோளமும் மனிதர்கள் இல்லாவிட்டால் உலகெங்கும் பரவ முடியாத ஒரு பயிர். தனித்தன்மை வாய்ந்த மிகப்பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டுச் சோளத்தை (Teosinte), பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் தொடர்ந்து கலப்பின ஆய்வுகளுக்கு உட்படுத்தியதால், விதைகளுக்கான சதவீதத்தை அதிகரித்துக் கொண்ட ஒரு பயிர் இது.

கடினமான பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டு வாழைப்பழங்களிலிருந்துதான் மனிதர்கள் தொடர்ந்து கலப்பின சோதனைகள் செய்து பார்த்து, மிகச்சிறிய மென்மையான விதைகளும் அதிக சுவையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும் இன்றைய வாழைப்பழத்தை உருவாக்கினார்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ப்ரோக்கலி, என்று இப்படியான கல்டிஜென்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன.
இந்தத் தாவரங்களின் உயிரியல் ஒப்பந்தம் அவற்றின் தாவரப் புத்திசாலித்தனத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. தங்களுக்கென இருக்கும் பிரத்யேக உயிர்வாழும் உத்தியினால் மனிதர்களுடன் இணைந்து, அவர்களின் வாழ்வியலில் ஒரு தனித்துவமான, பிரத்யேகமான, நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளன இந்தத் தாவரங்கள்.
Hibiscus rosa-sinensis என்னும் தாவரவியல் பெயர் கொண்டியிருக்கும் செம்பருத்தி, இப்போது உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஒரு சாகுபடி மலர். ‘சீனச் செம்பருத்தி’ அல்லது ‘ஷூ பிளாக் பிளாண்ட்’ (Shoeblack plant) என்று அழைக்கப்படும் செம்பருத்தி, பருத்தியின் குடும்பமான மால்வேசியை (Malvaceae) சேர்ந்தது. இது 1.5 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமைமாறாப் புதர்ச் செடி. மிக வளமான நிலங்களில் ஒரு குறுமரமாகவும் வளரும் இயல்பு கொண்டது.
பல்லாண்டுகளாகச் செம்பருத்தி இதழ்களின் வழுவழுப்பான சாற்றைக் கொண்டு, செயற்கை பாலிஷ் கண்டுபிடிக்கப்படும் வரை ஷூக்களைப் பாலிஷ் செய்யப் பயன்படுத்தியதால், இந்தச் செம்பருத்திக்கு ‘ஷூ பிளாக் பிளாண்ட்’ என்று பெயர் வந்தது.
இதன் இலைகள் பளபளப்பாகவும், முட்டை வடிவிலும், விளிம்புகளில் ரம்பம் போன்ற அமைப்பையும் கொண்டவை. இதன் மலர்கள் பொதுவாகச் சிவப்பு மற்றும் பல அழகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. மலர்கள் 10–15 செ.மீ விட்டம் கொண்டவை; ஐந்து இதழ்கள் மற்றும் ஒரு நீளமான மகரந்தத் தூணைக் (Staminal column) கொண்டவை.
இது ஆண்டு முழுவதும் பூத்தாலும், அரிதாகவே கனிகளை உருவாக்குகிறது. அவ்வாறு உருவாகும் முட்டை வடிவக் கனிகள், ஐந்து பகுதிகளாகப் பிரிந்து, 20 விதைகள் வரை கொண்டிருக்கும். வெப்பமண்டலக் காலநிலையில் செழித்து வளரும் இத்தாவரம், முழுமையான சூரிய ஒளியை விரும்புகிறது.
ஐரோப்பிய ஆய்வாளர்கள் சீனக் கோவில்களுக்கு அருகில் இதன் பல சாகுபடி வகைகளைக் கண்டறிந்தனர். எனவே இதன் பூர்வீகத்தை உறுதி செய்துகொள்ளாமல், தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், 1753-ம் ஆண்டில் (லின்னேயஸின் Species Plantarum வெளியானது 1753-ல் தான்) இதற்கு அதிகாரப்பூர்வமாக Hibiscus rosa-sinensis என்று பெயரிட்டார்.
இந்த பிழையான பெயரிடலை 18-ம் நூற்றாண்டின் கடற்பயணங்கள் எப்படி நவீனத் தாவரவியலை வடிவமைத்தன என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். லின்னேயஸ் ஒருவேளை மலர்ந்த புத்தம் புதிய செம்பருத்தியைப் பார்த்திருப்பாரேயானால், அதன் மகரந்தத் தூணைப் பார்த்து அது ரோஜாக்களில் ஒன்றல்ல என்பதை எளிதில் கண்டறிந்திருக்கலாம்.
ஆனால், சீனத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் வந்த தாவரங்களில் ஒன்றாகச் செம்பருத்தி இருந்ததாலும் அவரிடம் வந்து சேர்ந்த போது மலர்கள் வாடித்துவண்டு போயிருந்ததாலும், லின்னேயஸ் அதைச் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவரம் எனக் கருதினார். பிற்பாடு அறிவியலாளர்கள் இதன் கொடிவழியைத் தேடிச் சென்று, செம்பருத்தி மொரிஷியஸ் தீவுகளுக்கு அருகில் இருக்கும் மஸ்கரீன் தீவுகளைச் (Mascarene Islands) சேர்ந்தது என்று கண்டறிந்தார்கள்.
அந்தத் தீவுகளிலிருந்துதான் கடற்பயணங்களின் வழியாக, ஐரோப்பியத் தாவரவியலாளர்கள் மற்றும் கடற்பயணிகளால் பார்க்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மற்றும் சீனாவிற்கு இது அறிமுகமாகியிருக்க வேண்டும்.
கேப்டன் குக்கிற்குப் பிறகு, 1731-ல் பிலிப் மில்லர் (Philip Miller) இதனை இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் இதன் உலகளாவியப் பரவல் வேகம் எடுத்தது. 1810-ல் ஜான் ரீவ்ஸ் (John Reeves) சீனக் கலைஞர்களைக் கொண்டு இதன் பல்வேறு வகைகளை ஆவணப்படுத்தினார்.
1900-களின் தொடக்கத்தில் புதிய கலப்பினங்களை உருவாக்குவதில் ஹவாய் முக்கியப் பங்காற்றியது. 1923-இல் செம்பருத்தி ஹவாயின் மாநில மலராக மாறியது. 1950-களில் ‘அமெரிக்கன் ஹைபிஸ்கஸ் சொசைட்டி’ (American Hibiscus Society) உருவாக்கப்பட்ட பிறகு, இதன் வகைகள் தரப்படுத்தப்பட்டு இன்று உலகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இன்றைய நவீன செம்பருத்திகளின் மரபணுத் தளம் எட்டு அசல் இனங்களைக் கொண்டது. இவற்றிலிருந்தே ஆயிரக்கணக்கான செம்பருத்தி வகைகள் உருவாக்கப்படுகின்றன:
- மொரிஷியஸ்: H. fragilis, H. genevii, H. liliiflorus
- மடகாஸ்கர்: H. schizopetalus
- ஹவாய்: H. arnottianus, H. kokio
- பிஜி: H. storckii
- சீனா/இந்தியா: H. rosa-sinensis
அலங்கார அழகைத் தாண்டி, இது இயற்கைச் சாயத்துக்காகவும், பாரம்பரிய மருத்துவத்திலும், தேநீர் தயாரிப்பிலும், நிலப்பரப்பு வடிவமைப்பிலும் (Landscaping) பயன்படுகிறது. இந்தியாவில் காளி தேவிக்கு உகந்த புனித மலராகவும், ஹவாயில் அழகின் அடையாளமாகவும், பல்வேறு கலாச்சாரச் சடங்குகளிலும் இது ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில், மனநலம் குன்றியவர்களுக்கு அதன் இயற்கையான அமைதிப்படுத்தும் (Natural Calmative), பதற்ற எதிர்ப்பு (Anti-Anxiety) மற்றும் மனச்சோர்வு எதிர்ப்பு (Antidepressant) இயல்புகளினால் செம்பருத்தி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, கேரளாவில் “காதில் செம்பருத்தி வைப்பது” (செவியில் செம்பருத்தி வைப்பது) என்பது, தமிழில் “தலையில் எலுமிச்சை தேய்த்துக்கொள்வது” என்னும் சொலவடையைப் போல, மனநலம் குன்றியதைக் குறிக்கும் கிண்டலாக இருக்கிறது.
1958-ல் மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர், தேசிய மலரைத் தேர்வு செய்ய மல்லிகை, தாமரை மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட ஏழு மலர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இவற்றில் அனைத்து வீடுகளிலும் எளிதாக வளரும், மிக அழகிய மலர்களைக் கொண்டிருப்பதோடு, மக்களையும் இணைக்கும் ஒரு காரணியாகச் செம்பருத்தி இருந்ததால், அதுவே தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் ஐந்து முக்கியக் கொள்கைகளுக்கான குறியீடாக செம்பருத்தியின் ஐந்து இதழ்கள் கருதப்படுகின்றன. “Bunga Raya” என்பது மலாய் மொழியில் தேசிய மலரான சிவப்புச் செம்பருத்தி மலரைக் குறிக்கும்.
பல பண்டைய இந்திய நூல்களில் செம்பருத்தி ‘ஜப புஷ்பம்’ (Japa Kusuma) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியக் கடவுளுக்கான ‘ஆதித்ய ஹ்ருதயம்’ நூலின் முதல் வரி:
“Japa Kusuma Sankarsham” – “செம்பருத்தியைப் போல் ஒளிர்பவனே!” எனச் சூரியனைப் போற்றுகிறது.
பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் சிவனுக்கான மலராக ‘ருத்ர புஷ்பம்’ எனச் செம்பருத்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டில் உருவான சுஸ்ருத மற்றும் சரக சம்ஹிதைகளில், செம்பருத்தி ‘பித்த தோஷ’ சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பண்டைய சித்த மருத்துவ நூல்களும் தலைமுடி அலசிக் குளிக்கவும், தலைமுடி கருப்பாக இருக்கவும் செம்பருத்தியைப் பரிந்துரைக்கின்றன.
பண்டைய சீனத்தில் மண்பாண்டங்களில் செம்பருத்தியின் சித்திரங்கள் அதிகமாக வரையப்பட்டன. சீனக் கவிதைகளிலும் செம்பருத்திக்கு முக்கியமான இடமிருந்தது. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு 16-ம் நூற்றாண்டில் (1578-ல் நிறைவுபெற்ற) சீன மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான மற்றும் விரிவான தாவரவியல் கலைக்களஞ்சியமான ‘பென்காவ் காங்மு’ (Bencao Gangmu), புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளரான லி ஷிஜென் (Li Shizhen) என்பவரால் தொகுக்கப்பட்டது. இந்த மூலிகை மருத்துவ நூலில், ஐரோப்பியர்களால் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்பே செம்பருத்திச் சாற்றின் கூந்தல் ஆரோக்கியம் மற்றும் நிறம் தரும் பண்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதன் இதழ்களைச் சாப்பிடுவது இளமையைத் தக்கவைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
தாவரமும் மனிதனும் ஒன்றையொன்று சார்ந்து பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் இணைப் பரிணாமக் கொள்கைக்கான (Co-evolution) மிகச்சிறந்த உதாரணம் செம்பருத்திதான். ஒரு தாவரம் தனது உயிர்வாழ்தல் மற்றும் பரவலுக்காக மனிதனைப் பயன்படுத்துகிறது; மனிதன் தனது தேவைக்காகத் தாவரத்தைப் பயன்படுத்துகிறான். இது ஒரு உயிரியல் ஒப்பந்தம் மட்டுமல்ல, “கொடுத்தல்-வாங்கல்” (Mutualistic contract) ஒப்பந்தமும்கூட.
விதைகளை நம்பியிருக்காமல், தாவரத்தின் தண்டுப்பகுதியைக் (Stem cuttings) கொண்டு புதிய செம்பருத்திச் செடிகள் உருவாக்கப்படுவதால், அந்தத் தாவரத்தின் அசல் மரபணுக்கள் மாறாமல் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு கடற்பயணி தனது கட்டுமரத்தில் எடுத்து வந்த அதே செம்பருத்தியின் மரபணுவை, இன்று நம் தோட்டத்தில் உள்ள செடியிலும் காண முடியும்.
“பரவுக” என்னும் கட்டளை ஒவ்வொரு தாவரத்திற்கும் இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளையின்படி, சொந்த நிலமற்ற ஒரு மலர்ச்செடி மனிதர்களை உபயோகித்துக்கொண்டு உலகெங்கிலும் பரவி இருப்பது எப்பேற்பட்ட ஒரு ஆச்சரியம்.
Leave a Reply