என் பால்யம் இப்போது முழுமையாக நகரமயமாகி விட்டிருக்கும் நகரத்திலல்லாமல் சுற்றிலும் சிறு சிறு கிராமங்கள் சூழ்ந்திருந்த, இயற்கை எழில் நிறைந்த பசிய பொள்ளாச்சியிலும், எனது பூர்வீக கிராமமான வேட்டைக்காரன் புதூரிலும் கழிந்தது. அதிர்ஷ்ட வசமாக இணையமும் தொலைக்காட்சியும் கணினியும் அப்போது அறிமுகமாகாததால் இயற்கையோடு இணைந்த இளமைப்பருவம் வாய்த்திருந்தது. மரத்தடி வகுப்புகளில் பள்ளிப்பாடங்கள் கற்றுக்கொள்ள முடி ந்தது. விடுமுறைகளில் வேப்பமுத்து சேகரிக்கவும், பருத்தி, மிளகாய் பறிக்கும் அத்தைகளுடன் இருக்கவும் கொடுத்து வைத்திருந்தது.
பள்ளிப்படிப்புக்காக தாராபுரம், பொள்ளாச்சி என அடிக்கடி ஊர் மாறினாலும் எங்கேயும் என்னுடன் இயற்கை இருந்துகொண்டே இருந்தது. முருங்கைப்பிசினை சுரண்டித் தின்பதும், கள்ளிப்பழங்கள் கனியும் வரை காத்திருந்து அதன் முட்களோடு வாயிலிட்டுச் சுவைத்ததும், வேர்க்கடலை எப்படி கண்ணுக்கு தெரிந்து மலர்ந்து நிலத்தடியில் காய்க்கிறது என்று வியப்பதும், சீனிப்புளியங்காயை மரமேறிப்பறிப்பதுமாக எந்நேரமும் செடிகொடி மரங்களுடன் இருந்த அந்த இளமைக்காலத்தில் என் அகத்திலும் இயற்கையின் தீண்டல் நிகழ்ந்திருந்தது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கேனும் காடுகளில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கும் என்னை தேடிக்கண்டுபிடிக்கவே வீட்டில் ஆள் வைத்திருந்தார்கள்.
எப்பொதும் பசுமை சூழவே இருந்தேன் சமையலறைத் தேவைகளுக்கான சிறிய வீட்டுத்தோட்டத்திலும், தென்னை நகரென்பதால் தோப்புகளிலும் வயல்களிலுமாகவே என் இளமைப்பருவம் இருந்தது.
பள்ளிப்படிப்புக்கு பின்னர் இளங்கலையில் எனக்கு பிடித்த தாவரவியல் படிப்பையே தேர்ந்தெடுத்தேன். நல்லாசிரியர்கள் வகுப்பில் கற்றுக்கொடுத்ததோடு களத்தாவரவியலுக்கென்று (Field Botany) பல இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை மீதான என் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினார்கள். இளங்கலை இறுதியாண்டில் தொட்டபெட்டா மலைச்சிகரத்திலிருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளம் போல் விரிந்திருந்த குறிஞ்சியை மாணவியாக பார்த்த பரவச அனுபவமும், தமிழக, கர்நாடக காடுகளுக்குள்ளும் அமைதிப்பள்ளத்தாக்கிலும் செலவழித்த நாட்களும் மேலும் மேலுமென என்னைத் தாவரங்களை நோக்கிச் செல்ல வைத்தது.
பிறகு முதுகலை தாவரவியலை நேரடியாக மேற்குமலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் இருந்த கோவைப் பல்கலைக்கழகத்தில் தங்கிக் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. மருதமலைச்சரிவுகளில் தாவரவகைப்பாட்டியலையும், ஊட்டி வெலிங்டன் கோதுமை வயல்களில் தாவர மரபியலையும் குருசடைத்தீவுகளில் கடற்பாசிகளையும் நேரடியாகக் கற்றுக்கொண்ட பொற்காலமது. பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில் இலக்கியப்பரிச்சயமும் அப்போதுதான் உண்டானது. தி.ஜானகிராமனையும், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்களையும் அப்போதிலிருந்துதான் அறிந்துகொண்டேன்.
நாட்குறிப்புகளாக தாவரங்களைக் குறித்து எனக்கே எனக்கென்று கொஞ்சமாக எழுதத்துவங்கி இருந்தேன். முதுகலை படிக்கையில்தான் எனக்கான ஆய்வுத்துறை தொல்குடித் தாவரவியல் என்று தெய்வாதீனமாக முடிவானது. மாணவர்களுக்கு முன்னால் துறைகளின் பெயர் எழுதிச்சுருட்டப்பட்ட காகிதங்கள் இருக்கும் யார் எதை எடுக்கிறோமோ அதுவே அவர்கள் ஆய்வைத் தொடரவேண்டிய துறையாகும். என் கைகள் Tribal pulse lab என எழுதியிருந்த அந்தக் காகிதச் சுருளை தேர்ந்தெடுத்த போது ஏதேனும் ஒரு அறியாத்தெய்வம் உடனிருந்திருக்கக்கூடும்.
அப்போது ஆய்வின் பொருட்டு சந்தித்த பழங்குடியினரின் தாவரங்கள் குறித்த தொல்லறிவு பிரமிப்பேற்படுத்தியது மட்டுமல்லாமல் ஆவணப்படுத்தப்பட்டிருக்காத அவ்வறிவு வேகமாக அழிந்து கொண்டிருக்கும் ஆபத்தும் புரிந்தது.
பின்னர் முனைவர் பட்ட ஆய்வை இந்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதிநல்கையுடன் தொடர்ந்தேன். நிதிநல்கை அளிக்கப்பட்டிருந்ததால் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுதில்லி சென்றதும் அப்படிச் சென்றிருந்த ஒரு சமயத்தில் நகரெங்கும் மலர்ந்து நறுமணத்தால் மூச்சுத்திணற வைத்த ஏழிலைப் பாலைமரங்களுக்கருகில் கழித்த நாட்களும் இப்போதும் ஆய்வுக்காலத்தைத் திரும்பிப்பார்கையில் மனமெங்கும் வாசனை வீசுபவை.
தாவர உலகின் அற்புதங்களைக் கவனித்துக் குறிப்பு எடுக்கத் தொடங்கிய காலமது.
பொள்ளாச்சியில் அப்போது சூழல் மாசை உருவாக்கிக் கொண்டிருந்த தென்னைநார்க்கழிவை மட்கச்செய்து இயற்கை உரமாக்கும் முனைவர் பட்ட ஆய்வை மூன்றே வருடங்களில் முடித்து கைவசம் பல சர்வதேச சஞ்சிகைகளில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளும் இருந்ததால் பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியில் இணைந்தேன்.
பணியில் இருந்த 2- வது வருடம் திருமணமாகி வேலையை விட்டுவிட்டு வளைகுடா நாடொன்றில் 6 வருட வாழ்வு. பொள்ளாச்சிப் பசுமையில் இருந்தவளுக்கு அந்த பாலை அளித்த வெறுமையைச் சொல்லவே முடியாது.
பேரீச்சை மரங்களின் வரிசைக்கு இடையில் எப்போதாவது கண்ணுக்கு தெரியும் வேப்பமரங்கள் நெருங்கிய உறவினர்களை எதிர்பாராமல் சந்தித்ததுபோல கண்ணை நிறைத்துவிடும்.
இருமகன்கள் பிறந்து அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வயதில் இந்தியாவுக்குத் திரும்பி வால்பாறை மலையடிவார குக்கிராமொன்றில் துண்டு நிலம் வாங்கி செடிகொடி மரங்களுக்கும் இடமிருக்கும் ஒரு தோட்ட வீட்டைக் கட்ட முற்பட்ட போது ஒரே ஒருவர் கூட என் முடிவை ஆதரிக்காததோடு மூர்க்கமாக எதிர்க்கவும் செய்தார்கள். உலகமே நகரமயமாக்கலின் பின் மண்டியிட்டுத் தொழுது பின் செல்கையில் நான் கிரமப்புறமொன்றிற்கு செல்வதை பெரும் முட்டாள்தனமென்று கண்டித்தார்கள்.
வளரும் பருவத்தில் இருந்த மகன்களின் கராத்தே, அபாகஸ், கணிதம் போன்ற சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போவதையும், என் தாவரக்கிறுக்கினால் மகன்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி விடுவதும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் நான் மகன்கள் இயற்கையுடன் நெருங்கி வளரவேண்டும் என்பதில் கவனாமகவும் பிடிவாதமாகவும் இருந்து அந்த வீட்டை கட்டி முடித்தேன். வீடு கட்டி முடிக்கப்பட்ட போது சுற்றிலும் பசுமை சூழத்துவங்கி இருந்தது.
மகன்களுடனேயே மரங்களும் வளர்ந்தன. சுற்றிலும் பசுமரங்கள் சூழ இருந்த நான்கே அறைகள் கொண்ட சிமிழ் போல் ஒரு சிறுவீடு. தொலைக்காட்சிப்பெட்டி இல்லததால் மகன்கள் தோட்டத்தில் விளையாடியும், செடிகொடிகளை பராமரித்தும் மேலும் மேலுமென இயற்கையை அறிந்துகொண்டார்கள்.
அந்தியில் கிளிகளும் மயில்களும் வரும் தோட்டமிருக்கும், அதிகாலையில் குயில் கூவி கண் விழிக்கும் , தென்னையும், பலாவும் மாவும், புன்னையும், புங்கையுமாக நிறைந்திருக்கும் வீட்டில் மகன்கள் வளர்ந்ததில் நான் மகிழ்ந்திருந்தேன்.
கல்லூரியில் தாவரவியல் கற்பிப்பதோடு தொல்குடித்தாவரவியல் ஆய்வுகளும் செய்துகொண்டிருந்தேன். என் வழிகாட்டுதலில் ஆய்வு மாணவர்கள் கோவில் காடுகளைக் குறித்தும், வளர்ப்பு யானைகளுக்கு பழங்குடியினப் பாகன்கள் அளிக்கும் தாவரமருந்துகள் மற்றும் மகப்பேறியலில் தொல்குடிகள் உபயோகப்படுத்தும் மூலிகைகள் குறித்தும் ஆய்வுகள் செய்தார்கள்
மியாவாக்கி அடர்வனம் அமைக்கவும், பெரு நிறுவனங்கள், வீடுகள் மற்றும் தங்கும்விடுதிகளில் தோட்டக்கலை (landscape gardening) அமைக்கவும் நான் பரிந்துரைகள் அளிக்கத் தொடங்கினேன். மரமோ செடியோ கொடியோ புதரோ கொடியோ அதன் வளரியல்பின்படி எப்படி வளரும் , எத்தனை இடைவெளி இருக்கலாம், என்ன நிறத்தில் மலர்கள் உருவாகும், எதற்கு எவ்வளவு சூரிய ஒளி தேவை, எங்கெங்கு என்ன வைக்கலாம், வைக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை பலவருட தாவரவியல் கற்பித்தல் மற்றும் கற்றலில் இருந்து அறிந்து கொண்டிருந்தேன். பரிந்துரைகளோடு தேவையான மரக்கன்றுகளும் நாற்றுகளும் எங்கு கிடைக்கும் என்பதையும் தெரிவித்துவிடுகிறேன்.
வலைப்பூவில் மட்டும் எழுதிக்கொண்டிருந்த போது 2016-ல் தினமலரில் தொடர்ச்சியாக தாவரங்களைக் குறித்து எழுத வாய்ப்பு வந்தது. அப்போது எழுதத்துவங்கி, இன்றுவரை பல ஊடகங்களில் இணையப்பத்திரிகைகளில் தாவர உலகின் அற்புதங்களை, அவற்றைக் கவனித்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை, ஒவ்வொரு தாவரத்துடனும் இணைந்திருக்கும் சுவாரஸ்யமான கதைகளை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கட்டுரைகளின் தொகுப்பு முதல்பிரசுரமாக இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் வெளியீடாக வந்தது. பின்னர் விஷ்ணுபுரம், அகநி, மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், NCBH ஆகிய பதிப்பகங்களில் பிரசுரமானது.
ஒரு சில கட்டுரைகளை, நேர்காணல்களை மொழியாக்கமும் செய்துகொண்டிருக்கையில் தான் அரிஸோனா பல்கலைகழகத்தின் (Arizona State University, Arizona, United States.) இணையதளத்தில் அறிவியல் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இணையத்தளத்தில் வெளியான முதல் தமிழாக்கம் நான் செய்தது தான்.
ஜெர்மானியக் காட்டியலாளர் பீட்டரின் ‘’The hidden life of trees’’ என்னும் பிரபல நூலின் தமிழாக்கம் ’’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் காலச்சுவடிலிருந்தும், மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 3-வது நூலாக ’’நுண்ணுயிருலகு’’ என்னும் கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.
லின்னேயஸ் , ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், எட்மண்ட் ஆல்பஸ் போன்ற தாவர அறிவியலில் பெரும் சாதனைகளைச் செய்த ஆளுமைகளைக் குறித்து ’’இரண்டாம் ஆதாம்’’ என்னும் நூலை எழுதி முடித்திருக்கிறேன். அதை அடுத்ததாக வெளியிடவேண்டும்.
தற்போது Plant arithmetic என்னும் தாவரக்கணக்கீட்டு அறிவு குறித்து ஆர்வம் கொண்டிருக்கிறேன். பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தோம், எங்களில் கணிதமேதைகள் இருக்கீறார்கள் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் நமக்கு, பல லட்சம் வருடங்கள் முன்பு தோன்றிய தாவரங்களில், மலரிதழ்கள் ,இலைகள், கணுக்களின் நீள அகலம் எப்படி மிகச்சரியான அளவுகளில் அமைந்திருக்கிறது, branching architecture-ன் துல்லியம், ராமனெஸ்கோ பச்சைப் பூக்கோசின் பின்ன வடிவமைப்பு (Fractal design), சூரியகாந்திப் பூவின் தங்கக்கோண அமைப்பு என ஒவ்வொன்றும் அளிக்கும் ஆச்சர்யம் அளவற்றது. அதைக்குறித்து ஒரு நூல் எழுதும் உத்தேசம் இருக்கிறது. இப்போது ஈடுபட்டிருக்கும் தாவரவியல் அகராதித் தயாரிப்பு ஏராளமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது அதை முடித்தபின்னர் இந்த நூலை எழுதவிருக்கிறேன்.
மரங்கள் சூழஇருக்கும் இந்த வீட்டில் வளர்ந்த மகன்கள் இருவரும் வீட்டுத் தோட்டத்தைப் போலவே வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். மூத்த மகன் சரண் ஐரோப்பாவில் முதுகலை சைபர் பாதுகாப்பு முடித்து ஜெர்மனியில் அரசு வேலையில் இருக்கிறான். வளரும் நாடுகளுக்கு சைபர் பாதுகாப்பு தொழிநுட்பத்தை அளிக்கும் ஐரோப்பாவின் திட்டமொன்றில் ஆய்வாளராகப் பணிபுரிகிறான். இளையவன் தருண் டேராடூனில் காட்டியல் முடித்துவிட்டு இந்திய வனத்துறைத் தேர்வெழுதவிருக்கிறான். காட்டுயிர்ப் புகைப்பட நிபுணரான தருண் பாம்புகளைப் பிடிக்கும் சிறப்புப்பயிற்சிகளும் பெற்றிருப்பதால் அவன் அறிவுக்கும் கண்ணுக்கும் எட்டியவரையில் எந்தப்பாம்பையும் அடித்துக்கொல்ல விடுவதில்லை. எப்படியும் போராடி அவற்றைக் காப்பாற்றி காடுகளில் விட்டுவிடுகிறான்.
மேலும் பாம்புகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் பொறுப்புடன் காட்டுயிர்ப் புகைப்படமெடுப்பது (Responsible wildlife Photography) குறித்தும் மேடைகளில் உரையாற்றுகிறான். காட்டுயிர்கள் குறித்து ஆங்கிலக்கட்டுரைகளும் எழுதுகிறான். இயுற்கை எழில் சூழ வளர்ந்ததினால் நகர்ப்புற இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இழந்தாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இலக்கியப்பரிச்சயமும் மனிதநேயமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தாவரங்களின் மகத்துவத்தை, தாவர உலகின் அற்புதங்களைச் சொல்லும் கட்டுரைகளின் இந்தத் தொகுப்பு தன்னறம் வெளியீடாக வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுரைகளின் வாசிப்புவழியே இலைகளையும் கொடிகளையும் மலர்களையும் கடந்து வருபவர்களுக்கு நிச்சயம் தாவரங்கள் மீதான அபிமானம் உண்டாகி இருக்கும்.
இந்த கட்டுரைகளை மெய்ப்புப் பார்ப்பதிலிருந்து எல்லா உதவிகளையும் செய்த மீனாட்சி ரவீந்திரன் தம்பதிகளுக்கும் சிவராஜுக்கும், குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பினர் அனைவருக்கும் எனது தனித்த பிரியங்களும் அன்பும்.
இந்த நூலை எங்கள் குடும்ப மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான திரு. வசந்த் ஆல்வா அவர்களுக்குச் சமர்பிப்பதில் மகிழ்கிறேன்.
Leave a Reply