கல்லூரி விடுமுறை முடிந்து நாளை புதிய கல்விப் பருவத்துக்குக் கல்லூரி திறக்கிறது. இந்த விடுமுறையையும் வழக்கம்போல வாசிப்பு, எழுத்து, பாடல்கள், பயணம், மேடை உரைகள், நிகழ்வுகள் என்று செலவழித்தேன். சென்னை,பாண்டிச்சேரி, கோவை, பெருந்தலையூர் என்று பயணித்துக்கொண்டிருந்தேன். இடையில் கல்லூரியில் தேர்வுப்பணி, திருத்தும்பணி என்றும் செல்லவேண்டி இருந்தது.  

என்ன வேலையாக இருந்தாலும் எங்கு பயணித்தாலும் தமிழ்விக்கி பணியைத் தேங்க விடுவதில்லை அவ்வப்போது அதைத் திருத்தி விடுகிறேன்.

புதிதாகத் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் பழைய நூல்களிலிருந்து தமிழக மாவட்டங்களின் flora வைத் தொகுத்து திருத்தி, மேம்படுத்திப் புதிய ஆவணமாக்கிக்கொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அதில் இப்போது 4 மாவட்டங்களைத் தொகுத்து முடித்து அனுப்பிவிட்டேன். மீதமுள்ளவற்றை செய்துகொண்டிருக்கிறேன்.

18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய நூல்களில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் விவரங்கள் மலைப்பேற்படுத்துகின்றன. அவற்றைப் பெரும்பாலும் முழுமையாகப் படித்துவிடுகிறேன். Hemingway , Baliga ஆகியோரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் அத்தனை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது படிக்கையில். அப்போது இருந்த ஜாதி அடுக்குகள், ஜாதி சார்ந்த சடங்குகள், உணவுப்பழக்க வழக்கங்கள், சமூக அமைப்பு என்று சங்கிலித் தொடர்போலச் சுவரஸ்யமாகப்  படிக்கப் படிக்க நல்லவேளை நான் இந்தப்பணியை ஒத்துக்கொண்டேன் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

 ஒரு குறிப்பிட்ட ஜாதியில் இறப்பு நிகழ்ந்தால் இறந்தவரைச் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் முன்பு அவரது வலதுகையை சாணத்தில் முக்கி அவர் வாழ்ந்த வீட்டின் சுவற்றில் கை அச்சைப் பதித்தபின்னரே கொண்டு செல்கிறார்கள் என்னும் தகவல், குகைஓவியங்களில் இருக்கும் கைச்சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. ரெஃபெரென்ஸ்க்கு அளிக்கப்பட்ட நூல்களை நானே வைத்துக்கொள்ளலாம் என்பது கரும்பு தின்னக்கூலி தான். 

புதிதாக மாறி இருக்கும் தாவரங்களில் பெயரைகளை மாற்றி,  பிழைகளைக் கண்டறிந்து திருத்தி, ஒவ்வொரு அறிவியல் பெயருக்கும் அந்தபெயரை வைத்தவரின் பெயரை இணைத்து. எல்லாப்பெயர்களையும் இட்டலைஸ் செய்து அட்டவணை இட்டு என ஏராளமான நேரம் ஒதுக்கி, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது தவறு நேர்ந்துவிடாமல் கவனமாகவும் இருக்க வேண்டி இருக்கிறது என்றாலும் மிகுந்த மனநிறைவுடன் இந்தப்பணியைச் செய்கிறேன். சீமைக்கருவேலத்தின் பெயர் இப்போது ப்ரொசாஃபிஸ் ஜூலிஃப்ளோரா என்பதிலிருந்து நெல்டுமா ஜூலிஃப்ளோரா என மாற்றப்பட்டிருக்கிறது எனவே இப்படியான மாற்றங்களுக்காக ஒவ்வொன்றையும் சரிபார்த்து எழுதவேண்டி இருப்பது எனக்குப் புதிய கற்றலுக்கும் உதவியாக இருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!

காலச்சுவடுக்காக ’’அலையிடைவெளியில்’’  மொழியாக்க நூலையும்  இரவு பகலாக எழுதிச் சரிபார்த்து முடித்து அனுப்பினேன்.  சென்ற வாரம் தருண் பெங்களூருவில் ஒரு காட்டுயிர் கருத்தரங்கில் கலந்துகொண்டு அங்கிருந்த புத்தகக்கடையில் எனக்குப்பரிசளிக்க ஒரு  நூலைத் தேடியிருக்கிறான். விற்பனையில் இருந்த பெண் ’’….உங்கள் அம்மாவுக்கு எந்த  மாதிரியான நூல் பிடிக்கும்…’’ என்று கேட்டபோது ’’…சூழல், தாவரங்கள், இயற்கை தொடர்பானவை…’’ என்று தருண் சொல்லி இருக்கிறான். 

அந்தப்பெண் ’’…அப்படியானால்  அவருக்கான மிகச்சிறந்த ஒன்றாக இதுதான் இருக்க முடியும்…’’ என்று இவான் ஏவ்ஸின் intertidal நூலை எடுத்துத்தந்திருக்கிறார், தருண் பெருமிதத்துடன் ’’…இந்த நூலை என் அம்மாதான் மொழிபெயர்த்திருக்கிறார்..’’ என்று சொல்லி அந்தப்பெண்ணை ஆச்சர்யப் படுத்திவிட்டு  ஜானகி லெனினின் எனது கணவரும் ஏனைய விலங்குகளும் இரண்டாம் பாகத்தையும், கண்ணுக்குப்புலப்படாத வைரஸ்களின் உலகம் குறித்த இன்னொன்றும் வாங்கி வந்தான். வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். மைந்தரால்  பொலியும் அன்னை.

தாவரவியல் அகராதிப்பணியை மீண்டும் தொடங்கி இருக்கிறேன். அதில் முழுக்கவனம் குவிக்க முடியாமல் தொடர்ந்து இருக்கும் பணிகள் அலைக்கழிக்கின்றன.

சரண் இந்தியா வந்துவிட்டிருக்கிறான் எனினும் இன்னும் வீட்டில் ஒரு நாள் கூட இருக்கவில்லை. அவன் இருந்து முடிக்க வேண்டிய முக்கியவேலை ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

 இரண்டு கட்டுரைத்தொகுப்புக்களை பிரசுரத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. டிசம்பரில் சிலநாட்கள் விடுமுறை வருகையில் அதைச்செய்ய வேண்டும். 

விழாக்களில் அநேகமாக எல்லா நண்பர்களையும் சந்திக்க முடிந்தது பெருமகிழ்வளித்தது.

நல்ல மழை இருந்ததால் புதிய விதைகளையும் செடிகளையும் நட்டு வைத்திருக்கிறேன். சமீபத்தில் சென்ற ஒரு பயணத்தின் நினைவாக அந்த ஊரிலிருந்தே பிரகாசமான மஞ்சள் சிறு மலர்களை அளிக்கும் ஒரு புதர்ச்செடியின் செம்பு நிற உலர்வெடி கனிகளைக் கொண்டு வந்து விதைத்திருக்கிறேன். அந்த ஊரின், அந்தத் தங்கலின், அந்த நினைவுகளின், அந்த இனிமையின் சாட்சியாக அது இனி முளைத்து வளர்ந்து முதிர்ந்து மலரளிக்கவிருக்கிறது.

கல்லூரியில் இந்தப்பருவத்தில் தோட்டக்கலைப் பாடத்தையும், புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் தாவரங்களின் அடிப்படை இயல்புகள்குறித்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கவிருக்கிறேன். மாணவர்களுக்கு எப்படியோ எனக்கு கல்லூரி திறப்பது வழக்கம்போல ஆர்வத்தைத்தான் எழுப்பி இருக்கிறது.

வகுப்பறைக்குச் சென்று சாக்பீஸ் பிடிக்காமல் இருக்கும் நாட்களின் பதட்டம் மெல்ல உருவாகி விட்டது., நாளைசரியாகிவிடும். 🙂