இன்று ஜெ தளத்தில் தமிழ் விக்கியில் இருக்கும் என் பக்கம் வந்திருந்தது. பலர் அழைத்துப்பாராட்டினார்கள். இன்றிருக்கும் இந்த இடத்துக்கு ஜெ வைத்தவிர வேறு யாருமே காரணமில்லை. நன்றியுடன்அவரை நினைத்துக்கொள்ளாத நாளுமில்லை.

இன்றென்னவோ நான் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கடந்து வந்த காலங்களை கடினப்பாதைகளை,  விழுங்கிய கசப்புக்களை பிடுங்கப்பட்ட வாய்ப்புகளை, தலைகுப்புற தள்ளிவிடப்பட்ட படுகுழிகளை, பறிக்கப்பட்ட மகிழ்வுகளை இப்போதிருக்கும் கண்ணியமான வாழ்வை என்று வேகமாக காணொளிக்காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்ப்பதுபோல மனம் பார்த்துக்கொண்டது. கடந்து வந்த மனிதர்களை குறித்த புகார்கள் பெரிதாக இல்லை. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால் அவர்களுக்கும் என் அன்பு . இதோ விரைவில் என்னை இறுகப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு தளையிலிருந்து முற்றாக வெளியேறவிருக்கிறேன்.

சரியான மனிதர்களுடன் வாழக்கொடுத்து வைக்காததைக் காட்டிலும் சரியில்லாதவர்களோடான வாழ்வுதான் வதையாகிவிடுகிறது. அன்னைமையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தளையிடுகிறது.

நான் அன்னைமையை  ஒருபோதும்உணர்ந்ததில்லை எனவே அதை அத்தனை இழக்கவேயில்லை. எனினும் அன்னையை இழந்தேன் மூன்று வருடங்களுக்கு முன்னர்.

எழுதிக்கொண்டு வாசித்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறேன். முன்னைக்காட்டிலும் ஏராளம் தோழமைகள். மகன்கள் வேர்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் வெகுவிரையில் காலூன்றி கொள்வார்கள். 

இழந்துகொண்டிருக்கும் இளமையை குறித்த வருத்தமேதும் இல்லை. சரண் தருண் இருவரின்  தோளும் நெஞ்சும் அகமும் விரிந்திருப்பதில்  என் இளமையின் பங்களிப்பு இருக்கிறதே! நான் தான் அவர்களும்.

 நான் இழந்தவை  அவர்களில் மெல்ல மெல்ல நிரம்புவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இளமையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை மாறாக இந்த வயதிற்கான தோற்றத்தின் கண்ணியத்திலும் கம்பீரத்திலும் கவனமாக இருக்கிறேன். i am aging gracefully. முன்னெப்போதைக்காட்டிலும் நம்பிக்கையுடன் உள்ளொளியுடன் நிறைவுடனும் இருக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன். மிகுந்த மகிழ்வுடனும் இருக்கிறேன்.

வெண்முரசில் ஒரு வரி இருக்கும் மீட்டப்படாத யாழும் இசையாலானதே என்று.அப்படி எனக்குள்ளும்  நாதம் இருந்தது . நானே அதை வெகு தாமதமாக அறிந்துகொண்டேன். புழுதியில் எறியப்பட்டிருந்த நல்லதோர் வீணையை  எடுத்தேன். தூசி தும்புகளை துடைத்துச் சுத்தம் செய்தேன்  தந்திகளை சீராக்கினேன். அரிதாக மீட்டினேன் எழுந்த சுகநாதத்தை மனமகிழ்ந்து ரசித்தேன். மீட்டாதபொழுதுகளிலும் நினைவில் இருக்கும் அவ்விசையை நினைத்துக்கொண்டேன்.

அன்பு!