நல்ல வெயில் இப்போதெல்லாம். இப்படி புரட்டாசியில் வெயிலடித்ததே இல்லை. பாம்புகள் வீட்டைச்சுற்றிலும் மண்ணுக்குள் இருக்க முடியாமல் வெளியே திரிகின்றன.

எப்போதும் தோட்டத்துக்குள்ளிருக்கும் அந்த பெரிய மஞ்சள் சாரை இன்று தண்ணீர்த்தொட்டிக்கருகில் தென்பட்டு திடுக்கிடவைத்தது. அதன் முழங்கை பருமனும் நெகுநெகுவென்னும் தேகமும் பொன்மஞ்சள் நிறமும் அதன் விரைவும் , நமக்குக் கண்ணில் அதிகம்படும் உடல்வடிவங்களிலிருந்து வெகுவாக அந்நியப்பட்டிருக்கும் உடல்வடிவமுமாக என்னதான் அவற்றைக்குறித்த அறிதலிருந்தாலும் திடீரெனப் பார்க்கையில் மனம் திடுக்கிட்டுவிடுகிறது. (இப்படியே என்னைக்குறித்து அந்தச்சாரையும் ’’இந்தம்மாவை தினம் பார்க்கிறோம் ஆனாலும் இன்னிக்கு நீலக்கலர் புடவையில் திடீர்னு குறுக்கே வந்ததும் பகீர்னுச்சு’’ என்று நினைத்திருக்கக்கூடும்)

பின்னர் ஆயிரங்களின் அன்னை திமுதிமுவென வளர்ந்திருக்கும் தொட்டியில் ஒரு க்க்க்க்குட்ட்ட்டிப் பச்சைக்கொடிப்பாம்பு. அதன் பெற்றோர்களையும் நானறிவேன். நம் வீட்டில்தான் ஜாகை. ஒருமுறை அவையிரண்டும் காதலின்பத்தில் மெய்மறந்து தென்னை மரத்திலிருந்து தொப் எனக் கீழே விழுந்து ஸ்தம்பித்து பின்னர் சுதாரித்துக்கொண்டு விரைந்தோடி இலைதழைப்புக்குள் மறைந்தன. அவற்றின்சாயல் (? ) இந்தகுட்டியில் எனக்குத் தெரிந்தது. என்னைபார்த்தும் பயப்படாமல் அங்கேயே அதன் குட்டியூண்டு நாக்கை நீட்டிக்கொண்டு இருந்தது.

நான் அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதன் அம்மாவிடம் அதற்கு இன்று நன்றாகக் கிடைத்திருக்கும். அபாயகரமான, கண்ணில் பட்டால் உயிராபத்தை உண்டாக்கும் மனிதர்களைக் கண்டால் ஓடிஒளிந்து கொள்ளும்படி அதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும் அது இப்படி கவனக்குறைவாக இருந்ததற்கு இன்னிக்கு உண்டு,

தென்னைமர ஓலைகள் பெருஞ்சத்தத்துடன் அவ்வப்போது விழுகின்றன, குரும்பைகளும் வெயில் தாங்காமல் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதுபோல இடியெல்லாம் இடித்து, போக்குக்காட்டிவிட்டு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

காலை 9 மணி வெயிலில் ’அக்கா அக்கா’வென ஒரு தீனக்குரல் பின்வாசல் கதவுக்குவெளியே ஒரு கருத்த, ஏறு வெயிலில் தளர்ந்த 23/24 வயதிருக்கும் ஒருத்தி நின்றாள். கழுத்தில் எண்ணெய்ப் பிசுக்ககேறிய சரடு மட்டும் , கைகளில் கண்ணாடி வளை. அழுக்குச்சுரிதார். உடன் ஒரு 3 வயதுகூட நிரம்பி இருக்காத சிறுமகன். இன்னும் மொட்டை அடிக்கவில்லைபோல முடி பிடரிவரை நீண்டிருந்தது, உச்சியில் ஒரு குடுமி.

கையில் இருந்த வயர்க்கூடையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வண்ணத்திரவங்கள் இருந்தன. ’’அக்கா மகளிர் சுய உதவிக்குழுவிலிருந்து வரேங்க்கா, இது டைல்ஸ் வாஷ்பேசின் கறையெல்லாம் சுத்தமா எடுத்துரும் நான் வேணா எடுத்துக்காமிக்கறேன் அதுக்கு காசுவேண்டாம் பார்த்துட்டு பிடிச்சா வாங்குங்கக்கா’’ என்றாள்.

நான் அப்படியான பொருட்களை வாங்குவதில்லை. எனவே ’’வேண்டாம்மா’’ என்று சொல்லிவிட்டென் எனினும் அந்த வெயிலில் தலைக்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் முகத்தில் வழிய ஒரு பழைய சிறு செருப்புப்போட்டுக்கொண்டிருந்த, அம்மாவுடன் இன்று நாள் முழுவதும்,தெருத்தெருவாக அலையவிருக்கிற கூட நின்ற அந்தக்குழந்தையைப்பார்த்து மனம் கலங்கியது.

‘’ எவ்வளவும்மா’’? என்று கேட்டேன், அவள் 120 ரூபாய்க்கா என்று சொல்லச் சொல்லவே அந்தக் குழந்தையும், கேட்டுக்கேட்டுப் பழகி விட்டிருக்கும் போல மழலையில் ’’நூயிருபது’’ என்று மிழற்றியது. கண்ணீரை மறைத்தபடி அவசரமாக ஒரு பாட்டிலை வாங்கிக்கொண்டேன். மீண்டும் பணம் கொடுக்கச்செல்லுகையில் அந்தக்குழந்தையை கவனமாகப் பார்க்காமலிருந்தேன். சீக்கிரமே அவனை ஸ்கூலுக்கு கொண்டு விடும் காலத்தில் அந்தகுழந்தை இப்படி அலைய வேண்டி இருக்காது என்று என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

வாழ்வென்னும் வதை.

அமேஸானில் நான் ஆர்டர் செய்திருந்த ஒன்று வந்திருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. ’’நான் வீட்டிலிருக்கிறேன் வீடு தெரியுமா’’வெனக் கேட்க ’’தெரியுங்க்கா’’ என்று பதில் வந்தது.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் அழைப்பு நான் எடுக்க ’’அக்கா வாசலில் நிற்கிறேன்’’ என்றான் அவன். போனேன் வியர்த்து வழிந்தபடி பைக்கிலிருந்து இறங்கி கையிடுக்கில் ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு என்னிடம் பார்சலைக் கொடுத்தான் நன்றி சொல்லிவிட்டு நான் திரும்ப எத்தனிக்கையில் ’’அக்கா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்கதானே’’? என்றான்.

திரும்பி நின்று நேராக அவனைப்பார்த்து ’’இல்லை சொல்லு’’ என்றேன்.

’’உங்கபோனில் வச்சிருக்கற அந்தப்பாட்டை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லைக்கா, ரொம்ப ரொம்ப நல்லா இருந்துது அதான் மறுபடியும் கூப்பிட்டேன்’’ என்றான்

புன்னைகைத்து ‘’அப்படியா அந்தப் பொன் என்பேன் எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு. நான் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த பாட்டு அது, இதேதான் ரொம்ப வருஷமா வச்சிருக்கேன்’’ என்றேன். மறுபடியும் தயங்கி ’’அக்கா, அது எந்தப்படத்திலன்னு சொன்னீங்கன்னா நானும் அதையே வச்சுக்குவேன்’’ என்றான்.

’’போலீஸ்காரன் மகள்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன் பின்னாலிருந்து ’’அக்கா ரொம்ப நல்லா இருக்கு பாட்டு’’ என்று குரல் கேட்டது. தேங்ஸ் என்றேன்

வெயில் முகத்தில் அறைந்தது.