70-களில் தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்த எல். விஜயலக்ஷ்மியை நினைவிருக்கிறதா? இந்தப் பாடலைச் சொன்னால் உடனே நினைவுக்கு வருவார். மாறுவேடத்தில் முறுக்கு மீசை வைத்துக்கொண்டு பஞ்சாபி உடையில் இருக்கும் எம். ஜி. ஆருடன் ’’ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’’ என்று பாங்கரா நடனமாடுவாரே அதே விஜயலக்ஷ்மிதான்.
பூனாவில் வசித்த தமிழ்பிராமணக் குடும்பத்துப் பெண்ணான விஜயலக்ஷ்மி, 5 வயதிலிருந்தே , இசை மற்றும் நாட்டியக்கலைஞரான தன் தாயிடமிருந்து நடனம் கற்றுக்கொண்டார். 9-வது வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த விஜயலக்ஷ்மி வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டார்.
சென்னையில் விஜயலக்ஷ்மியின் அரங்கேற்றம் குமாரி கமலா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. பல தென்னிந்திய மொழிகளில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த விஜயலக்ஷ்மி இந்தப் பாடலினால் வெகுவாக பிரபலமானார். சுமார் பத்தாண்டுகள் தென்னிந்திய திரைஉலகில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.
1969-ல் ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் இரு விஜயாக்களில் ஒருவராக கே ஆர் விஜயாவுடன் நடித்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்புத் தளத்தில் அவரது சகோதரனின் நண்பரும் பிலிப்பைன்ஸின் IRRI அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய வேளாண் விஞ்ஞானியுமான சுரஜித் குமார் தத்தாவை (Surajit Kumar De Dutta ) சந்தித்தார் விஜயலக்ஷ்மி.
காதல் வயப்பட்ட தத்தாவும் விஜயலக்ஷ்மியும் அந்த ஆண்டே திருமணம் செய்து கொண்டார்கள். ஊட்டி வரை உறவுதான் விஜயலக்ஷ்மியின் கடைசித் திரைப்படம், அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் மிக முக்கியமான நெல் கண்டுபிடிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த கணவர் தத்தாவுடன் அவரும் பிலிப்பைன்ஸ் சென்றார்.
தத்தா பணியாற்றிக் கொண்டிருந்தது பிலிப்பைன்ஸ் நாட்டின், லாகுனா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான IRRI யில் . IRRI பதினேழு நாடுகளில் 1,300 ஊழியர்கள் பணியாற்றும் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

1960- களில் ஆசியாவில் நிலவிய தானியப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அரிசி இனங்களை வளர்க்கும் பசுமைப் புரட்சி இங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பல விஞ்ஞானிகளின் முயற்சியால் உருவான நவீன நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது, IRRI-ல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நெல் ரகங்கள் மூன்று மடங்கு உற்பத்தியை அளித்தன.
இந்த ஆராய்ச்சியால் அரிசியை பிரதானமான உணவாகக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றன. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்தான் சுரஜித் தத்தா.
சுரஜித் குமார் தத்தா பசுமைப்புரட்சியில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவரது பங்களிப்பு போதுமான அளவு உலகின் கவனத்துக்கு வரவில்லை.
சுரஜித் தத்தா என்னும் இளம் வேளாண் விஞ்ஞானியான இவர்தான் IRRI-ல் தொடர்ந்து நடைபெற்ற வேளாண்மைச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட IR-8 எனப்படும் புதிய நெல் வகையின் ஆய்வுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருந்த விஞ்ஞானியாக இருந்தவர்.
உலகின் பல லட்சம் மக்களின் பிரதான உணவான அரிசி பல உலக நாடுகளில் விளைகிறது என்றாலும் மிக அதிகமாக விளைவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் தான்.
1960-களில் பல காரணங்களால் அரிசி உற்பத்தி உலகெங்கிலும் மிகக்குறைவாக இருந்தது. நெற்பயிரின் உயரம் மிக அதிகமாக இருந்ததால் காற்றில் பயிர்கள் உடைந்து விழுந்தது, மிகக்குறைவான நெல்மணிகளை உருவாக்கிய ரகங்கள், உரங்கள் மண்ணில் சேர்க்கப்பட்டாலும் அவற்றை எடுத்துக்கொள்ளாத ரகங்கள் எனப்பல காரணங்களால் உலகளாவிய நெல்லுற்பத்தி கடும் வீழ்ச்சியில் இருந்த காலமது.
எனவே வறுமை மற்றும் பட்டினியைக் குறைக்கவும், நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் நெல் விவசாயத்தின் சுற்றுச் சூழலை மேம்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டு பிலிப்பன்ஸில் International Rice Research Institute என்கிற IRRI நிறுவனம் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது.
IRRI நிறுவனம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் 15 விவசாய ஆராய்ச்சி மையங்களில் ஒன்று. ஆசியாவின் மிகப்பெரிய இலாபநோக்கமற்ற விவசாய ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது IRRI,
IRRI யின் கிளைகள் உருவாக்கப்பட்ட நாடுகளில் தேசிய விவசாயக் கூட்டு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்த முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் IRRI-ல் இணைந்தனர்.
IRRI-ன் இயக்குநராக சாண்ட்லர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க தோட்டக்கலைத்துறை நிபுணரான சாண்ட்லரின் தலைமையின் நவீன நெல் கலப்பின உருவாக்கத்துக்கான குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் சுரஜித் தத்தாவும் இருந்தார், உலகெங்கிலும் இருந்த பல முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் சாண்ட்லரின் தலைமையில் ஆயிரக்கணக்கான நெல் வகைகளைச் சேகரித்து பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி கலப்பின ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
IRRI விஞ்ஞானிகள் உயரம் குறைவான, உரங்களை எடுத்துக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் கலப்பின High Yielding Variety என்பதைக் குறிக்கும் HYV நெல் ரகங்களை உருவாக்கும் சோதனைகளைத் துவங்கினார்கள்.
தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளில் இந்தோனேஷியாவின் நெட்டை நெல் ரகமான பீட்டாவையும் (Peta) சீனாவின் டீ ஜியோ வூ ஜென் (Dee Geo Woo Gen – DGWG) என்னும் நடுத்தர உயரம் கொண்ட நெல் வகை ஒன்றையும் கலந்து ஒரு புதிய கலப்பின நெல் ரகத்தை உருவாக்கினார்கள்.
அந்த கலப்பின நெல் ரகம் பீட்டாவை விட உயரம் குறைவாகவும், DGWG-யை விட உறுதியாகவும், நேராக நிமிர்ந்தும் இருந்தது. அதன் இலைகள் மிக அதிகச் சூரிய ஒளியை பெறும்படி அமைந்திருந்தன எனவே அவற்றில் வழக்கமாக உருவாவதைக் காட்டிலும் மிக அதிகமான நெற்கதிர்கள் உருவாகின.
இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தவர்களில் முதன்மையானவரான சுரஜித் தத்தா. இந்த மிக முக்கியமான, நெல் உற்பத்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆய்வின் முடிவை பல வேளாண் சஞ்சிகைகளிலும் IRRI-யின் சஞ்சிகைகளிலும் வெளியிட்டார். அந்த நெல் ரகம் உரம் போடாமல் ஒரு ஹெக்டேருக்கு 5 டன்னும் உரமிட்டால் 9.4 டன்னும் உற்பத்தியை அளித்தது என்பது உலகெங்கிலும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாகியது. அதற்கு முன்பு எந்த நெல் வகையும் எங்கும் 9.4 டன்/ஹெ உற்பத்தியை அளித்தது இல்லை.
இந்த புதிய நெல் ரகம் IRRI-யில் நடைபெற்ற 38 கலப்பின சோதனைகளில் 8 ஆவது சோதனையில் உருவானது என்பதால் ஆய்வுக்கட்டுரைகளில் IR8-288-3 என்று குறிப்பிடப்பட்டது.
அந்த நவீன, அதிக விளைச்சல் தரும் நடுத்தர உயரம் கொண்ட நெல் ரகம் IR-8 என இறுதியாக IRRI-யினால் பெயரிடப்பட்டு வெப்பமண்டலத்தின், பாசன வசதி கொண்ட தாழ் நிலங்களில் பயிர் செய்ய அறிமுகமானது.
IR-8 நெல் ரகத்தின் ஒரு குறிப்பிட்ட ஜீன் (semidwarf-1 gene – Os01g0883800) நெற்பயிரின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கச்சாறான ஜிப்பரலினை ஒழுங்குபடுத்துவதால் அது நடுத்தர உயரம் கொண்டிருந்தது. அதன் விளைச்சல் ஒரு ஹெக்டேருக்கு 6- லிருந்து 10 டன் வரை இருந்தது.
1966-ன் வறட்சி நிலவிய பருவத்தில் நைட்ரஜன் உரத்தை எடுத்துக்கொண்டு முன்னைக்காட்டிலும் மூன்று மடங்கு விளைச்சல் கொடுத்த IR-8 ஐக் குறித்து தத்தா மீண்டும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார்.
பிலிப்பைன்ஸில் 88 கிலோ நெல் விதைகள் விதைக்கப்பட்டு 71 டன் நெல் அறுவடை செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அப்போதைய பிலிப்பன்ஸ் பிரதமர் மார்கோஸ் (Ferdinand Marcos) IRRI நிறுவனத்துக்கு 1966-ல் வருகை தந்து தத்தாவின் ஆய்வுகளைக் குறித்து தெரிந்துகொண்டு அவரை மனமாரப் பாராட்டியதோடு கையோடு தத்தாவிடிமிருந்து 2 கிலோ IR-8 நெல் விதைகளையும் பெற்றுக்கொண்டார்.
தனது ஆட்சிக்காலத்தில் பிலிப்பைன்ஸின் பஞ்சத்தைப் போக்குவதாக சபதமேற்ற மார்கோஸ் ’’Masagana 99’’ என்னும் பெயரிடப்பட்ட நெல்பயிரிடும் இயக்கத்தைத்தொடங்கி இந்த விதைகளை விவசாயிகளுக்கு அளித்து 3 ஆண்டுகளில் பிலிபபைன்ஸை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச்செய்தார்
அதற்குப் பின்னர்தான் நெல் ரகங்களைத்தேடி தாய்நாடு வந்த தத்தா தனது நண்பரின் தங்கை நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு நடந்த ஊட்டிக்கு வந்து தன் காதல் மனைவி விஜயலக்ஷ்மியைச் சந்தித்தார்.
உலகளவில் பெரும் புரட்சியை உண்டாக்கிய ஒரு IR-8 நெற் பயிர் 1970-களில் இந்தியாவில் பட்டினியை, பசியைப் போக்கி பல உயிர்களைக் காப்பாற்றியது

1950, 60- களில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலமென்பதால் உருவான உணவுப்பற்றாக் குறையோடு பெரும் வறட்சியும் பஞ்சமும் இந்தியாவில் உருவாகி இருந்தது. பிரிட்டிஷ் அரசு புகுத்திய நவீன வேளாண் முறைகளோடு இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகளும் கலந்திருந்த காலகட்டமும் அதுதான்.
எனவே இந்தியா பசுமைப்புரட்சியை 60-களில் தழுவிக்கொண்டு அரிசி மற்றும் கோதுமையின் விளைச்சலை அதிகரித்தது. பிலிப்பைன்ஸின் IR -8 நெல் விதைகள் இந்தியாவில் அறிமுகமானது.
மேற்கு கோதாவரியைச் சேர்ந்த 29 வயது இளம் விவசாயி நெக்கந்தி சுப்பாராவ்தான் (Nekkanti Subba Rao) 1967-ல் இந்தியாவில் IR-8 பயிரிட்ட முதல் விவசாயி. IR-8 நெல் ரகத்தை தனது நிலத்தில் பயிரிட்டு அதன் அதீத விளைச்சலை மற்ற விவசாயிகளுக்கும் சுப்பாராவ் காண்பித்தார்,

தனது நிலத்தில் IR8 ரகத்தை தொடர்ந்து பயிரிட்டதோடு சுப்பாராவ் சுற்றியிருந்த சுமார் 2000 ஏக்கர் நிலத்திலும் IR-8 பயிரிடுவதை, அவற்றிற்கான பாசன வசதியை, உரமிடுப்படுவதை எல்லாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் இருந்தார்.
சுப்பாராவுக்கு ஆந்திராவில் Mr.IR8 என்றும் அரிசி விற்பன்னர் என்றும் பெயர் வந்துவிட்டிருந்தது. இதே சுப்பாராவ்தான் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத Swarna-Sub1, என்னும் 1979-ல் கண்டுபிடிக்கப்பட்ட நெல் ரகத்தை IR-8 ஐப்போலவே பிரபலபடுத்தியவர்.
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் IR-8 பரவலாகப் பயிரிடப்பட்டது. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் IR-8ன் விளைச்சல் விவசாயிகள் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. அற்புத அரிசி IR-8 என்றே அதற்குப் பெயர் வந்துவிட்டிருந்தது.
திருவண்ணாமலை விவசாயியான கணேசன் IR-8 பயிரிட்டு அதன் அதீத விளைச்சலால் குடும்பம் நிமிர்ந்ததால் அப்போது பிறந்த தன் மகனுக்கு ’அய்யாரெட்டு’ என்றே பெயரிட்டார். ஹெக்டேருக்கு 2 டன் நெல் விளைந்துகொண்டிருந்த அவரது நிலத்தில் IR-8 பயிரிட்டபோது 16 டன் /ஹெ கிடைத்தது.
இந்தியா மட்டுமல்லாது வியட்நாம், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் IR-8 உணவுப் பற்றாக் குறையைப் போக்கி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது.
பிலிப்பன்ஸ் தீவொன்றில் உரங்களிடாமல் பயிரிடும்போது ஹெக்டேருக்கு 7 டன்னும் உரங்களிட்டபோது 10 டன் விளைச்சலும் கிடைத்தது.
மற்ற நெல் ரகங்கள் 150-170 நாட்களில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கையில் IR-8 ரகம் 105 – 130 நாட்களில் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகிறது.
IR- 8 பயிரிட்டு ஒரே ஒரு சாகுபடியில் லாபம் கிடைத்து ஹோண்டா பைக் வாங்க முடிந்ததால் வியட்நாமில் IR-8 க்கு ஹோண்டா அரிசி எனப் பெயர் வந்திருந்தது.
IR-8, அற்புத அரிசி எனப் பெயர்வந்தது அதன் மிக உயர்வான தன்மைகளினால் அல்ல. IR-8 எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டிருந்த, தடிமனான, வேகவைத்த பிறகு மேலும் தடிமனாகவும் கடினமாகவும் சுண்ணாம்பு போலவும் ஆகிவிடுகிற அரிசியை அளிக்கும் நெற்பயிர்தான் என்றாலும் பஞ்சகாலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி பட்டினியைப் போக்கியதால் அது அற்புத அரிசியாக இருந்தது.
எனவே IR-8 நெல் ரகம் மேம்படுத்தப்பட வேண்டி இருந்தது. IRRI-யின் தாவரப் பெருக்கத்துறையின் தலைவராக 1972-ல் பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய தாவரவியலாளரான குருதேவ் சிங் குஷ் இந்தப்பணியை முன்னெடுத்தார்.
IR-8 நெல் ரகத்தை மேலும் பல கலப்பின ஆய்வுகளுக்குள்ளாக்கி IR-36, எனும் நோயெதிர்ப்பு திறன் அதிகம் கொண்டிருக்கும், மெல்லிய, சுவையான அரிசியை அளிக்கும், IR-8 ரகத்தைக் காட்டிலும் விரைவிலேயே முதிர்ந்துவிடும் ரகத்தை குஷ் கண்டுபிடித்தார்.
IR-36, 80-களில் மிகப்பரவலாக சாகுபடியான ரகமாக இருந்தது. தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில் குஷ் IR- 20 , மற்றும் IR-50 ரகங்களையும் கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது பணிக்காலத்தில் 300-க்கும் மேற்பட்ட நவீன நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு ஆசியா,ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நெல் பயிராகும் பிரதேசங்களுக்கு அறிமுகமானது,
குஷ் 1996-ல் அரிசி உற்பத்தியில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக அமெரிக்கப் பயிர்பெருக்க நிபுணரான ஹென்றியுடன் (Dr. Henry Beachell) உலக உணவு விருதினைப் பகிர்ந்துகொண்டார்.
2016 நவம்பரில் IR-8-ன் 50-வது பிறந்த நாள் தலைநகர் தில்லியில் அரசியல் தலைவர்கள். வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 2021 நவம்பர் 28 அன்று IR-8 -ன் 55 வது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது
நியூயார்க்கில் 1981-ல் வெளியிடப்பட்ட தத்தாவின் Principles and Practices of Rice Production என்னும் நூல் அரிசிச்சாகுபடியின் அகராதி என்றே கருதப்படுகிறது.
அதற்கு முன்பே தத்தா மேலும் இரண்டு முக்கியமான நூல்களை எழுதி யிருந்தார்.
“Availability of Phosphorus and Utilization of Phosphate Fertilizers in Some Great Soil Groups of Hawaii”என்னும் நூல் 1963-லும் “Availability of Phosphorus to Sugar Cane in Hawaii as Influenced by Various Phosphorus Fertilizers and Methods of Application” என்னும் நூல் 1965-லும் வெளியானது.
தத்தா 27 வருடங்கள் IRRI நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக நெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
தத்தாவிற்கு 1992-ல் இந்தியாவின் வேளாண் அறிவியல் பங்களிப்பிற்காகவும் பசுமைப்புரட்சியில் அவரது முக்கியப் பங்களிப்பிற்கும் பெருமை மிக்க Norman Borlaug விருது அளிக்கப்பட்டது.
2004-ல் தத்தா பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டார்.

IRRI – பணிக்குபின்னர் தத்தா அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வர்ஜீனியா பல தொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia Polytechnic Institute and State University) சர்வதேச ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனமான OIRED-ல் இணைத்தலைவராக 20 வருடங்கள் பணியாற்றி அந்நிறுவனத்தின் நிதி நிலைமையை வெகுவாக மேம்படுத்தினார், (Office of International Research, Education, and Development). அதே பல்கலைக் கழகத்தில் விஜயலக்ஷ்மியும் பணியிலிருந்தார்.
தத்தாவின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான விருதுகள் அளிக்கப்பட்டன. அமெரிக்காவின் சர்வதேச வேளாண் சேவைக்கான விருதைப்பெற்ற முதல் நபர் தத்தாதான். தற்போது ஓய்வு பெற்றிருக்கும் தத்தாவும் விஜயலஷ்மியும் கலிஃபோர்னியாவில் டேவிஸ் நகரில் வசிக்கிறார்கள். அவர்களது ஒரே மகன் சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் உலக அரிசி ஆராய்ச்சி அறக்கட்டளை விஜயலக்ஷ்மி மற்றும் தத்தா ஆகிய இருவரின் பெயரிலும் (SK and Vijji De Datta Award for Rice Research) சிறந்த அரிசி ஆராய்ச்சிக்கு US$130,000 பரிசுத்தொகை அளிப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
’ஆடலுடன் பாடலைக்கேட்டு’ நடனத்தில் விஜயலக்ஷ்மி ஆடப்போவதாகத் தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவரது நடனத்திறமையை முன்பே கேள்விப்பட்டிருந்ததால் 5 நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்புக்கு வந்தார் என சொல்லப்படுகிறது. அத்தனை பிரபலமான நட்சத்திரமாக இருந்த அவர் கணவரின் வேளாண் ஆராய்சிக்கென தனது மிகப் பிரகாசமான எதிர்காலத்தை துறந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்றது சாதாரணத் தியாகமல்ல.
திருமணத்துக்குப் பிறகு மெட்ரிகுலேஷன் தனித்தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்ற விஜயலஷ்மி சென்னைப்பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர் பல ஆண்டுகள் ஆடிட்டராகப் பணியாற்றினார்
எல். விஜயலட்சுமி கலப்பின அரிசி வளர்ச்சியின் அறிவியல் ஆய்வுகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் அவரது மனப்பூர்வமான ஆதரவு தத்தாவை தனது புதிய ஆய்வுகளை எந்த இடைஞ்சல்களுமின்றித் தொடர அனுமதித்தது. அந்த வகையில்,IR-8 கண்டுபிடிப்பில் விஜயலக்ஷ்மியின் பங்களிப்பு மறைமுகமானது ஆனால் மிகவும் முக்கியமானது.
தனது பொது வாழ்க்கையைத் துறந்து, கல்வியைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்ததன் மூலம், கணவர் தனது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த விஜயலக்ஷ்மி உதவினார். கணவருடன் பிலிப்பைன்ஸுக்கும் பின்னர் கண்டம் தாண்டியும் பயணித்தார்.
ஒரு ஆணின் வெற்றிக்குபின்னால் இருக்கும் பெண்ணிற்கான மிகச்சிறந்த உதாரணமாக விஜயலக்ஷ்மி இருக்கிறார்.
IRRI-யின் தொடர்ந்த ஆய்வுகளால் 1966-ல் 257 மில்லியன் டன்னாக இருந்த உலக அரிசி உற்பத்தி 2010-த்தில் 686 மில்லியன் டன்னாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் பசியாறினார்கள்.
இந்திய மணவிழாக்களில் மஞ்சள் கலந்த பொன்னிற அரிசியை அக்ஷதையாக மணமக்களின் மீது தூவுதல் என்பது நூற்றாண்டுகள் பழமையான இந்திய பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த அக்ஷதைதான் மணமக்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான ஆசிகளை அளிக்கிறது.
இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க ஒரு புதிய அரிசி வகையை கண்டறிந்த காதல் கணவருடனான விஜயலக்ஷிமியின் வாழ்க்கைக்கான ஆசீர்வாதம் லட்சோபலட்சம் பசித்த வயிறுகள் குளிர்ந்த போது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். இன்னும் பல்லாண்டுகள் இதே பேரன்புடன் இவர்கள் வாழ்வு தொடரட்டும். இருவருக்கும் வணக்கங்களும் அன்பும்.
Leave a Reply