நேற்று மாலை இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை கடந்தே செல்லவேண்டும்.
இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை. நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்
எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்
ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று
அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை. திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்
இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.
நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது. ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான். நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.
துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்
இளையராஜாவின் இம்சைகள் இப்போதெல்லாம் கூடிப்போய் விட்டிருக்கிறது. அவரது இசையை அவரது குரலை எப்போது கேட்கத் துவங்கினேன் என்று நினைவில்லை, சிறுமியாக இருக்கையில் எப்போதும் கேட்டது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இசைதான். பின்னர் அப்பா எங்களை எழுப்பவென்றே உரக்க வைக்கும் பக்திப்பாடல்கள். ஐந்தாவது படிக்கும் வரை இவை மட்டுமே எனக்கான இசையாக இருந்தன
அப்போது திருமண வயதிலும் காதலிலும் இருந்த ஒரு அத்தை எப்போதும் வானொலியில் பாடல்கள் கேட்பார். அதிகம் கமல்ஹாசனின் குரலில் ’’ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நானவள் பூவுடலில் புது அழகினை ரசிக்கவந்தேன்’’ என்னும் பாடல் அப்போது ஒலிபரப்பாகும் அத்தைக்கு அதில் தனித்த பிரியமுண்டு. அப்படி நல்லிசை எனக்கு அறிமுகமாகியது.
அன்னக்கிளி படம் பார்த்த நினைவிருக்கிறது //மச்சானை பார்த்தீங்களா// என்னும் கேள்வியை, தேடலை, பாடலை, அதன் இசையை விட கடைசிக் காட்சியில் சுஜாதா தியேட்டர் நெருப்பில் முகமெல்லாம் தீக்காயத்துடன் செத்துப் போவது தான் மனதில் பாவமாக பதிந்திருந்தது.அந்த வயது அப்படி.
ஒருவேளை பதின்பருவத்தில் ராஜாவின் பாடல்கள் மனதில் நுழைந்திருக்கலாம். குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வானொலியில் கேட்பது பேருந்தில் கேட்பது திரைப்படம் பார்க்கையில் கேட்பது என்பது மட்டுமல்லாமல் இசையை கேட்க வென்றெ பிரத்யேக நேரமொதுக்கி கேட்டதெல்லாம் முதுகலைப்படிப்பை முதன் முதலில் வீட்டிலிருந்து அகன்று,பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த வருடங்களில் தான்.
இப்போது வாழ்வின் இயங்கியலில் ராஜாவும் கூடவே இருக்கிறார். ராஜாவின் இசையமைப்பில் பல திரைப்படங்களை பார்த்து அவரது இசைக்குள் நுழைந்து திளைக்கும் பல கோடியினரில் நானும் இருக்கிறேன். தன்னந்தனிமையில் காலை சமைக்கையில் எப்போதும் இவரும் கூட இருந்து பாடிக்கொண்டிருப்பார். ’’கொஞ்சம் அடுப்பை பார்த்துக்குங்க இதோ வந்துட்டேன்’’ என்று அவரிடம் சொல்லாத குறைதான். எனினும் கடந்த சில வருடங்களாக அவரது இசை பெரும் சித்திரவதை ஆகிவிட்டிருக்கிறது
இத்தனை வருடங்களில் பலவிதமான மனிதர்களை பார்த்தாகிவிட்டது, கொடுமைக்காரர்கள், கல்நெஞ்சர்கள் அப்பா என்பவரைப்போல வன்முறையாளர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று ஆனால் இவர்களில் இளையராஜாவைபோல கொடூரர் ஒருவரும் இல்லை (கொடூரன் என சொல்ல முடியாதல்லவா, என்ன இருந்தாலும் பெரிய மனிதர், ஞானி)
வெண்முரசில் சுநீதி சுருசி இருவரின் உளப்போராட்டங்களை சொல்லுகையில் அதிலொருத்தியின் கடுஞ்சொல், உடலுக்குள் கத்தியை சொருகி, சுழற்றி வெளியே இழுப்பது போல என்று ,அப்படித்தான் வெறுமனே இதயத்தை கீறிவிட்டுச்செல்வது, எளிதாக குத்திக் கொலைசெய்வதெல்லாம் இல்லை , இசையென்னும் பெயரில் ராஜா கத்தியை ஆழச்செருகி, சுழற்றி பின்னர் ஆன்மாவையும் பிடித்து வெளியே இழுப்பார். முன்னைக்காட்டிலும் இப்போது கூடுதல் பணிச்சுமை வயதும் கூடிகொண்டே இருக்கிறது இருந்தும் முன்னெப்போதையும் விட இப்போது ராஜாவின் இசையும் குரலும் படுத்தி எடுக்கிறது
ஒருவேளை கடந்த சில வருடங்களாக முழுத்தனிமையில் இருப்பதாலும் இருக்கலாம்.
சமயங்களில் தோன்றும் ராஜா பாட்டுக்கு இசையமைக்கையிலேயே மிகுந்த வன்மத்துடன் ’’இதை இரவில் தனிமையில் முடிவற்று நீண்டிருக்கும் இருளை பார்த்துக்கொண்டு கேட்டிருப்பவர்களை ஒரேயடியாக கொல்லட்டும்’’ என்ற ஒரே உத்தேசத்துடன் இசையமைத்திருப்பாரோ என்று! அத்தனைக்கு கொடுமையாக இருக்கும் தனித்திருக்கும் இரவுகளில் கேட்க.
ராஜாவின் இசை பயங்கரவாதம் என்றால் அவருடன் கங்கைஅமரன் கூட்டுசேர்ந்தால் அதுவே தீவிரவாதமாகிவிடும்.’’சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’’ அந்த வகை கொலையாயுதம். நான் மீள மீள கேட்பவற்றில் இதுவுமொன்று.
சென்ற மாத முழுநிலவன்று நான் ஒரு இரவுப்பயணத்திலிருந்தேன். நிலவு கூடவே பயணித்துக்கொண்டிருந்தது காரில் இருந்த குட்டி மீனாக்ஷிக்கு வைத்திருந்த பாரிஜாதம் மணக்கிறது, தலையில் வைத்திருந்த ராமபாணம் கூட சேர்ந்துகொண்டது ,ஒரு பாலத்தில் கார் திரும்புகையில் நிலவு அப்படியே அள்ளி எடுத்து மடியில் வைத்துக்கொள்ளலாம்போல வெகு அருகிலிருக்கையில் ,ராஜா
//தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்// என்று பாடிக்கொண்டிருந்தார். ’’சார் கொஞ்சநேரம் சும்மா இருக்கீங்களா? ’’என்று கடிந்துகொண்டேன் அவர் காதில் போட்டுக்கொள்ளாமல்
//நிதமும் தொடரும் கனவும்
நினைவும் இது மாறாது//
என்று போய்கொண்டே இருந்தார். கொலைகாரப்பாவி என்று மனதில் வைதுகொண்டேன்
எப்படியோ துயரை அழைத்துக்கொண்டு வரும் அந்தியின் மழையைபோல ராஜாவின் பாடல்களும் தனிமையை மன்மடங்கு பெருக்கி தவிக்கச்செய்துவிடுபவை
பக்திப்பாடல்களிலும் மனதை கரையச்செய்துவிடுபவர் அவர் மட்டுமே
காமாட்சி கருணாவிலாசினியில் ’’மந்தஹாசினி மதுரபாஷினி சந்தரலோசனி சாபவிமோசனி ‘’என்னும் அவர் குரல் எப்போதும் துயர் துடைப்பது.
கல்லூரிக்காலங்களில் மிகவும் இம்சை செய்த குரலுடன் கூடிய அவர் பாடல் ’’வழிவிடுவழிவிடு என் தேவி வருகிறாள்’’ தான். பொதுவில் எவர் இசையமைத்திருந்தாலும், யார் குரலாயிருப்பினும் தேவி என்னும் பெயர் வருவதெல்லாமே எனக்கு தனித்த பிரியமுள்ள பாடல்களாகவே இருக்குமென்றாலும் இதில் ராஜாவின் குரல் காதலில் அதுவும் கொஞ்சம் மனம் பிசகின காதலில் தோய்ந்திருக்கும்.
’’என் மீதுதான் அன்பையே பொன் மாரியாய்த் தூவுவாள் என் நெஞ்சையே பூ என தன் கூந்தலில் சூடுவாள்’’ இவ்வரிகளை எத்தனை முறை கேட்டிருப்பேன் ?
அப்பாடல் வெளியான சமயத்தில் மனம் கலங்கிய, குழம்பிய, பிசகிய ஒருவரை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என பிரியப்பட்டதுண்டு, பிற்பாடு அதற்கென மெனக்கெட வேண்டியதில்லை என்று தெரிந்திருந்தது.
ராஜாவை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அவரது புதுவீட்டின் கட்டுமானம் பற்றிய ஒரு செய்தியில் அவர்மனைவி ஜீவா வீட்டு முகப்பில் ஒரு மாபெரும் கல்தாமரையை அமைத்திருக்கிறார் என கேள்விப்பட்டேன். கருங்கற்களில் செய்யப்பட்டவைகளில் தனித்த பிரியமுள்ளவள் என்பதால் என்றைக்கேனும் அதை பார்க்கவேண்டும் என்னும் பெருவிருப்புள்ளது. அதை கல்லில் வடிக்க நினைத்ததே ராஜாவின் கலையின் அழிவின்மையை குறிக்கும் பொருட்டுத்தான் என நினைப்பேன். இன்னும் பார்த்திராத என்றேனும் உறுதியாக பார்க்கவிருக்கும் அந்த தாமரையில் அமர்ந்துகொண்டிருக்கும் சரஸ்வதியின் வடிவம்தான் அவர்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். உலகெங்கிலும் எல்லார் வீட்டிலும் எப்போதும் இசைவடிவில் அழியாமல் இருக்கும் பேறுகொண்டவர் நீங்கள்.
நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம். கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும் தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன்.
நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே அடுத்த சுங்கம் நிறுத்தம் வரை நடந்துவந்தோம்.அங்கு நான்கு வழிச்சாலையாதலால் அடிக்கடி பேருந்துகள் வரும்.
அவர் பெயர் கோகிலா, தினம் 3 மணிக்கு பணி முடிந்து புறப்படுவார் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் என்பதை எல்லாம் பேசிக்கொண்டு வந்தார், நல்ல திருத்தமாக புடவை உடுத்திக்கொண்டு தலையில் பூச்சரம் வைத்துக்கொண்டு அழகாக இருந்தார்.
நான் என்னசெய்கிறேன் என்றுகேட்கப்பட்ட போது டீச்சர் என்று சொன்னேன்.
சுங்கத்திலும் நல்ல கூட்டம். இன்று முகூர்த்த நாள், ஏதோ திருமணவிருந்தில் பணிபுரிந்து வீடு திரும்பும் சரிகைக்கரை இட்ட வெள்ளை முண்டும் அழுத்தமான நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டமொன்றும் இருந்தது. அனைவருமே வெகுவாக களைத்திருந்தார்கள்.
வெயில் முதுகில் அறைந்து மண்டையை பிளந்து உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது. பேருந்து அங்கும் வெகுநேரம்வரக்காணோம். என்னருகில் நின்று கொண்டிருந்த பெண் போனில் உரக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அன்றுதான் ICUவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கணவரும் உடன் சிகிச்சையில் இருந்து இப்போது அவரது அக்காவீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டார்.
20 நாட்களுக்கு முன்னர் அவர்களின் செல்ல நாய் சின்னுவுக்கு வெறி பிடித்து பால் சோறு கொடுக்க வந்த இவரை தலையில் கடித்து,காப்பாற்ற வந்த அவர் கணவரையும் கை,காலென்று ஏகத்துக்கும் கடித்துவிட்டது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பற்றி ஆம்புலன்ஸில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள். இனி 10 நாட்கள் கழித்தே தையல் பிரிக்கவேண்டும். ஊர்ப்பஞ்சாயத்தில் அந்த நாயை கொல்ல முடிவாகி கொன்றும் விட்டார்கள், அதை சொல்லுகையில் அவருக்கு குரல் கம்மியது. அவரது தலையின் மறுபக்கத்தில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டிருந்ததை பின்னரே கவனித்தேன். ’’நானே வளர்த்தி இப்படி கொல்லவேண்டியதாயிருச்சே’’ என்று புலம்பினார். ’’ பாடு தான் எப்பவும் பாடுதான் ஒருநாளும் விடியாது’’ என்றவர். தனக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லும்படி மீள மீள எதிர்முனையை கேட்டுக்கொண்டார்
50 வந்தது,நானும் கோகிலாவும் ஏறினோம். அகால வேளை என்பதால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. கோகிலா என்னருகில் அமர்ந்தார்.
அவரது வயர் கூடையில் இருந்த சிறு பெட்டியிலிருந்து பொன்மஞ்சள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து, பிரித்து இரண்டாக உடைத்து எனக்கு பாதியை அளித்தார். வாங்கிக்கொண்டேன். அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்குமென்றும் எப்போதும் பயணங்களில் சாப்பிட கையோடு கொண்டு வருவதாகவும்சொன்னார். வாழ்வென்னும் பெருவதை அவருக்கான இனிப்புச்சுவையை எப்படியோ விட்டுவைத்திருக்கிறது. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்புப்பிரியையான நான் இத்தனைகாலம் சாப்பிட்டதிலேயே ஆகச்சிறந்த இனிப்பு அதுதான். கோகிலாவை கட்டிக்கொள்ள நினைத்தேன். பேருந்தில் சாத்தியமில்லாமல் போனது.அவரது கையை ஒரு முறை பிடித்துக்கொண்டேன்.
பலர் நல்ல உறக்கத்திலும் வெயிலின் கிறக்கத்திலும் இருந்தார்கள்.நடத்துனர் ஓட்டுநர் இருவருமே சுவாரஸ்யமில்லாமல் இருந்தார்கள் . கட்டணமில்லை பெண்களுக்கு என்பதை வெகுநேரம் கழித்தே உணர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த பணத்தை பர்ஸில் வைத்துக்கொண்டேன். கோகிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு வஞ்சியாபுரம் பிரிவில் இறங்கிநடந்தேன். முந்தாநாள் மழையில் சங்கீதாவின் கடை வாசலில் குளமாக நீர் தேங்கி இருந்தது.
என் புடவை ரவிக்கையை தயாராக வைத்திருந்தார். திரும்ப வந்து சாலையை கடந்து எதிர்புறமாக நின்றேன்
20 நிமிட காத்திருப்பிற்கு மீண்டும் சுங்கம் வழியே உடுமலை செல்லும் மற்றொரு50 வந்தது. நல்ல கூட்டமதில். மூன்றாவது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டேன். அந்த இருக்கையில் இரு பெண்களும் அவர்களை பார்த்து திரும்பியபடி நின்று கொண்டு மற்றொருத்தியுமாக இருந்தார்கள், தோழிகள், ஒரே இடத்தில் பணிபுரிவர்கள் என தெரிந்தது. அவர்களில் மிக இளையவள் ‘’காலையில் 3 மணிக்கா, வீட்டைவிட்டு போன்னு சொல்லறாங்க்கா உள் ரூமை வேற பூட்டிவச்சுட்டான் பர்ஸ் அங்கே இருக்கு எங்கேக்கா போவேன் ஆட்டோ கூட இருக்காது அந்நேரெத்துக்கு ‘’என்றாள் அதை முன்னரே பல முறை பேசிஇருப்பார்கள் போல.’’மசநாயாயிருந்தாகூட குடும்பம் நடத்திடலாங்க்கா இவன்கூட முடியது கெரகம் மறுபடி அங்கேயே போரேன்பாருங்க இப்போ ‘’ என்றாள்.
சின்னப்பெண், வயது 20 அல்லது 22 தான் இருக்கும் சிவப்பில் பழைய சுடிதார், எண்ணெய் இறங்கிய ஒரு மூக்குத்தி, கழுத்தில் அழுக்காக ஒரு வெறுஞ்சரடு, காதில் ஒரு பிளாஸ்டிக் மொட்டுத்தோடு. இவர்களெல்லாம் ஒரு டிகிரி படித்திருக்கலாம், கம்ப்யூட்டரில் பில் போட 8000, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மேலும் 3000 என்று, அந்த அவன்களில் எவன் எத்தனை மணிக்கு போகச்சொன்னாலும் புறப்பட்டு வந்து தனியே கண்ணியமாக வாழ்ந்திருக்கலாம்.
சற்று நேரத்திலேயே மூவருமாக என்னமோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
துயர்களை இவர்கள் பெருக்கிக்கொள்வதில்லை மேலும் அவை இருப்பதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
சுங்கத்தில் இறங்கி செல்வம் கடைக்கு வந்தேன், ரேகாவும் இருந்தாள்.அக்ஷய திருதியைஅன்று நகைக்கடைபோல கூட்டம் நெரிபட்டது. இருவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு பச்சைமிளகாய்களும் புதினாஇலைகளும் மிதந்த குளிர்ந்த எலுமிச்சை ரசத்தை குடித்தேன். வெயில் உறிஞ்சிக்கொண்டிருந்த உயிர் திரும்ப வந்தது.
அங்கிருந்து நடந்து ஊருக்கு வரும் வழியில் பலர் என்னையும், ஏன் நடந்து வருகிறேனென்றும், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்கள். ஊமைக்கவுண்டர் சரண் எப்படி இருக்கிறான் என்று சைகையில் கேட்டார் நலமென்று தெரிவித்தேன். ’’போ போ’’ என்று கையாட்டி சிரித்தார்.
காவலர் பிரபுவின் அப்பா தன்னந்தனியே கோவில் வாசல் கல்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரும் மனைவியை இழந்திருந்தார் சில வருடங்களுக்கு முன்னர். அப்பா தளர்ந்துவிட்டார் என்றதும் ’’என்ன கண்ணு பண்ணறது உங்கம்மவோட போச்சு எல்லாம்’’ என்ற படி சுய பச்சாதாபத்தில் கண் நிறைந்து வேட்டி நுனியில் துடைத்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது.
மெல்ல நடந்துவந்தேன், வழியெங்கும் தீக்கொன்றைகள் மலரத் துவங்கி இருந்தன.புளியமரங்கள் தளிரும் மலருமாக நிறைந்திருந்தன புளியம்பூக்களை எனக்கு சாப்பிட பிடிக்கும் ஆனால் எட்டாத உயரத்தில் இருந்தன.
ஒரு வெள்ளை நாய் வாலாட்டிக்கொண்டே தொடர்ந்தது. நாய் இன்று மூன்றாவது முறையாக இடைபடுகிறது. கொல்லப்பட்ட சின்னு,3 மணிக்கு வெளியே போகச்சொன்ன ஒன்று, பிறகு இது.
லண்டனில் ஒரு மகளையும் அமெரிக்காவில் இன்னொருத்தியையும் கட்டிக்கொடுத்துவிட்டு கணவரும் இல்லாமல் தனியே வாழ்ந்துவரும் அந்த அரசமரத்துக்கருகிலிருக்கும் வீட்டம்மா கூடத்தில் கையை தலைக்கு வைத்து உறங்கிக்கொண்டிருப்பது திறந்திருந்த கதவு வழியே தெரிந்தது. அருகில் பால்வாங்க பாத்திரம் வைத்திருந்தார். எங்கோ வெகு தொலைவில் இருக்கிறதென்று நான் நினைக்கும் எதிர்காலம் ஒரு கணம் மிக அருகிலென வந்துசென்றது.
நல்ல இளங்காற்றில் புளியம்பூக்கள் உதிர்ந்தன, இன்றும் மழை வரலாம். மணி அண்ணன் வொர்க்ஷாப் அருகில் வந்ததும் திரும்பி அந்த வெள்ளைநாயிடம் ’போடா’ என்று அதட்டினேன். உடனே சொல்பேச்சு கேட்டு பவ்யமாக திரும்பி நடந்தது, டீச்சர் என்று தெரிந்திருக்குமோ?
வீடு வந்து வெளிவாசல் கதவை திறக்கையிலேயே இன்று பறிக்காமல் விட்ட ராமபாண மணம் கமழ்ந்தது.
குளிக்க செல்லுமுன்பு கொண்டைபோட தலை முடியை பிரிக்கையில் தலையிலிருந்து ஒரு புளியம்பூ விழுந்தது. வாயில் போட்டுக்கொண்டேன் நல்ல புளிப்பு.
நேற்று ஒரு பண்ணை வீட்டின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். பொதுவாக விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்படி சிறந்த இடங்களுக்கு செல்கையில் அவற்றை அனைவருடனும் பகிர்வார்கள்
அந்த பண்ணை வீட்டின் பேரில் தனித்த பிரியம் கொண்டிருக்கும், அங்கே அடிக்கடி கூடுகைகளுக்கு சென்று வரும் நண்பர்களில் சிலர் வாட்ஸப் குழுமங்களில் அவரது பண்ணையில் யானை வந்து நீரருந்திச்செல்வது, பலாப்பழங்களை பறித்துண்பது போன்ற காணொளிகளை பகிர்வது வழக்கம். நேற்று அப்படி பகிரப்பட்ட காணொளிகளில் கோடைக்கால கனிகளின் பல வகைகள் செறிந்து காய்த்தும் கனிந்தும் இருந்ததையும், அறுவடையையும் பகிர்ந்திருந்தார்கள்.
எனக்கு எப்போதுமே அறுவடை செய்வதும் அதை காண்பதும் பெரும் பரவசமளிப்பவை
அந்த பண்ணை வீட்டின் பிரியர்களில் நானும் ஒருத்தி. தென்னை, மா, பலா, நாவல், முந்திரி கொய்யா உள்ளிட்ட பல பழவகை மரங்களும் மந்தாரையிலிருந்து பல வண்ண மலர்ச்செடிகளும் நிறைந்த பல்லுயிர் பெருக்கில் ததும்பும், முறையாக பராமரிககப்படும் தோட்டம் அது
முதல் முறை அங்கு சென்றபோது கோடைக்காலமாகையால் பகலில் பெண்கள் குழாம் நாவல் மரங்களை வேட்டியாடினோம், இரவில் பாலுவே பலாச்சுளைகளை அனைவருக்குமாக அளித்தார்
அங்கு எனக்கு சுவாதீனமுண்டு, அடுப்படியில் தேநீர் தயாரிப்பது மாலை விளக்கு ஏற்றுவது என்று, விஷ்ணுபுரம் வெறும் இலக்கியம் பேசும் குழுமம் மட்டும் அல்லவே அது ஒரு குடும்ப அமைப்புபோலத்தானே!
அப்படியான அந்த பண்ணையை நேற்று காணொளியில் பார்க்கையில் நூற்றுக்கணக்கில் மாங்கனிகள் மரத்தடியில் சிதறியும் இறைந்தும் கிடந்தன,பச்சைகாய்களை கொண்ட தென்னைகள் நிறைந்த குலைகளுடன் நின்றது. பலாவின் பெருங்கனியொன்று கிளையிலிருந்து உதிர மனமின்றி அதிலேயே வெடித்து பிளந்து சுளைகளைக் காட்டி ஆசையூட்டிக் கொண்டிருந்தது.
இது ஒருவேளை என் இடமாக இருந்திருந்தால், இப்போது இங்கு வேடசெந்தூர் வீட்டில் வெற்றிலைக்கொடியினருகிலேயே சுணணாம்பும், இனிப்பூட்டிய பாக்குத்தூளுமாக அமர்ந்து மனம் நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளுவதை போல பலா மரத்தடியில் அமர்ந்தே அச்சுளைகளை உண்டிருப்பேன்.
நேற்று மாலை அப்பா வீட்டில் பலாக்கனிகள் சில முற்றி நம் வீட்டில் விழுந்து உடைந்து சிதறிக்கிடந்தன. மாலை நல்ல மழையும் ஆதலால் வீடெங்கும் அதன் மணம் கமழ்ந்தது ஒருபோதும் நான் அந்த பழத்தை சுவைத்ததில்லை சுவைக்கவும் போவதில்லை. காலை அப்பா என்னிடம் பலாச்சுளைகளை சாப்பிடும்படி சொன்னார், அவர் கண்களை நேராக சந்தித்து ’’எனக்கு பலாப்பழமே பிடிக்காதே’’ என்றேன்.
ஆம், வஞ்சம்தான், அது எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது, இது என்னை அறமற்றவளென்று வகுக்குமேயானால் அவ்வாறே ஆகட்டும், அறியட்டும் உலகு நான் அறமற்றவள் என்று, வஞ்சம் புகையும் கல்நெஞ்சக்காரி என்றும் கூட. இப்பிறவியில் இவற்றிலிருந்து எனக்கு மீட்சியில்லை. மீட்சியை நான் விழையவும் இல்லை.
மனம் எங்கோ சென்றுவிட்டது பலாவின் மணத்துடன்,இதோ திரும்பி வருகிறேன்
ஆம் அறுவடை, அது எனக்களிப்பது பெரும் நம்பிக்கையை, காயும் கனியும் கீரையும் மலர்களுமாக தோட்டமும் பண்ணையும் வயல்களும் நிறைந்திருப்பதும் அறுவடை செய்யப்பட்டவை குவிந்துகிடப்பதையும் பார்க்கவே எனக்கு பெரும் கிளர்ச்சியண்டாகும்.
அறுவடை என்பது வளமையின் சாட்சி, செழிப்பின் சாட்சி தொடர்ந்து இவ்வுலகில் உயிர்கள் வாழும் சாத்தியத்திற்கான உத்திரவாதம், எனக்கு வாழ்வை தொடர வேண்டும் என்னும் பிடிப்பையும் பெருவிருப்பையும் அறுவடையும் அறுவடையை காணுதலும் உருவாக்கும்.
நீர் நிரம்பிய கலம் அவற்றில் மிதக்கும் வண்ண மலர்கள் தீபச்சுடரொளி இவைகளும் அப்படித்தான், மலரும் நீருமின்றி வீட்டிலிருந்து ஒருபோதும் பயணத்தை துவக்குவதில்லை, எப்போதும் காரில் ஓரிரு மங்கலங்கள் இருக்கவேண்டும் என்பதை மகன்களுக்கும் உணர்த்தியிருக்கிறேன்
மாலைவேளைகளில் விளக்கேற்றாவிட்டால் மனம் எப்படியோ வெறுமை கொண்டுவிடுகிறது, எவ்விதத்திலும் இருள் அணுகிவிடக்கூடாது என்னும் ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து முதல்முறை திரும்புகையில் கொண்டு வந்த ராம் சீதாப்பழத்தின் விதையினின்றும் ஒரு செடி இளம்பச்சை நீளிலைகளுடன் இங்கு வளர்ந்து நிற்கிறது.
அப்படி ஒரு நஞ்சில்லா நிலமொன்றில் பலவ்ற்றை விளைவித்து மகிழும் விழைவு எனக்குள் பல்லாண்டுகளாக நிறைவேறாமல் காத்திருக்கிறது. அவ்விழைவின் மீச்சிறு வடிவமாகவே வேடசெந்தூர்வீட்டிலும் வகை கனிமரங்களிலும் ஒவ்வொன்று, பாரதியின் காணி நிலம் போல 12 தென்னைகள், மலர்ச்செடிகளும் மூலிகைகளுமாக வைத்து வளர்த்து பசுமையும் செழுமையும் நிரம்பி, வளமை பொங்க வாழ்கிறேன்.
ஊட்டி ஃபெர்ன்ஹில் நித்யா ஆசிரமம் நல்ல மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் முழுவதும் மலர்ச்செடிகளாலும் இயற்கை புல்வெளியாலும் சூழப்பட்டிருக்கும் சொர்க்கத்துக்கு இணையான இடம் அது.அங்கு எனக்கு தாளமுடியாததென்றால் குளிர்மட்டுமே மற்றபடி திரும்பிவராமல் இறுதி மூச்சுவரை இருக்க விரும்பும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று.
அங்கு ஒரு கோடைக்கால காவிய முகாமின் போது தேவதேவன் அவர்களுடன் ஒரு மாலை நடை சென்றேன், மலர்கள் மலர்கள் மலர்களென்று முழுவதும் மலர்களை பார்த்து அவற்றின் பெயர்களை தெரிந்துகொண்டு அவற்றின் மணம் நுகர்ந்து கொண்டு அவற்றை பறித்து கையில் ஏந்திக்கொண்டு ஒன்றை தலையிலும் சூடிக்கொண்டு அனைத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டு மலர்களால் ஆன நாளாகவே அமைந்தது அன்று.
அன்று பிற்பகல் ஊர் திரும்பவே எனக்கு மனதில்லை நிர்மால்யாவிடம் அனுமதி பெற்று வட்டத் தலையணைகள் போல் நெருக்கமான வண்ணச்சிறுமலர்களால் ஆன ஹைட்ராஞ்சியா மலர்ப்பந்துகளில் ஒன்றை பறித்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தேன்
குருநித்யா ஆசிரமத்தின் ஒரு சிறு துண்டையே வீட்டுக்கு கொண்டு வந்தது போல் இருந்தது அம்மலரை பார்க்கையில் எல்லாம். கன்யாகுமாரி கவிதை முகாமிற்கு பிறகும் அங்கிருந்து என் கைக்கடிகாரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு வீடுவரை வந்த கடற்கரை மணலும் அப்படியான உணர்வை, அவ்விடத்தின் நினைவுகளின் நீட்சியை அளித்தது. அப்படித்தான் இந்த பண்ணை வீட்டு நினைவும்.
ராம் சீதாவும் அங்கிருக்கும் பல மரங்களில் ஒன்றொன்றாக இங்குமிருப்பதுமாக அப்பண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இங்குமிருக்கிறது, பெருமரங்களின் மீச்சீறு போன்சாய் வடிவங்களை போல.
இன்று ஜெ தன் பிறந்தநாளன்று அருணாவுடன் எர்ணாகுளம் சென்று விட்டு,மழை பெய்திருந்த நாகர்கோவில் திரும்பியதை சொல்லியிருந்தது போலவே நானும் இன்று நினைவுகளில் பசுமை வழியாகவே சென்று பசுமை வழியாகவே மீண்டேன்
வழக்கமில்லாத வழக்கமாக இந்த மாதம் இரண்டு முறை வார இறுதிகளில் 3 நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட்டது.
வெள்ளி சனி வீட்டில் ஓய்வாக இருந்தேன். நிறைய பாடல்கள் கேட்டேன்.குறிப்பாக லால் இஷ்க், அர்ஜித் சிங் குரலெல்லாம் தெய்வத்தினருள்தான். ராம் சீதா மரத்தடியில் நாளெல்லாம் அமர்ந்திருந்தேன். அதன் இளம்பச்சை நீள் இலைகளின் அடியில் மனமும் உடலும் குளிர்ந்திருந்தது.
சில தினங்களாக ஏதும் எழுதவேயில்லை, எழுத மனம் குவியவில்லை. தினம் தொகுக்கும், திருத்தும் விக்கியின் பக்கங்களையும் 2 நாட்களுக்கு முன்னர் திருத்தியது மீண்டும் துவங்கவில்லை,கல்லூரியிலிருந்து வந்ததும் கணினியும் கையுமாக இருக்கும் அதே தேவிதானா இது என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.
ஞாயிறு மாலா இனியா அபியுடன் ஜெகனின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு போக வேண்டி இருந்தது. எனக்கு உண்மையில் கோவையில் மாலை நிகழ்வென்றால் நள்ளிரவில் வீடு திரும்புவதும் மறுநாள்; கல்லூரி செல்வதும் பெரும் சிரமமாகி விடும் எனினும் மாலா மிக விருப்பப்பட்டதால் மாலதியை பார்க்கவென்றே போக நினைத்தேன்.
மாலை 4 மணிக்கு நல்ல எதிர்வெயிலில் புறப்பட்டேன். வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் கூடவே ராமபாண சரம் வைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பிடித்த அடர் தேன் நிற ப்ளெயின் புடவை. இதே போலொரு புடவையை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி இறந்த தினம் பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தது நினைவுக்கு வந்தது.
அபிக்கும் இனியாவுக்கும் இரண்டு சரங்கள் தனியே தொடுத்து எடுத்துக்கொண்டேன், மாலதிக்கு கொடுக்க முடியாமலாகிவிட்டது துயரளித்தது. ஆனால் மாலா ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது?
காரில் பொதுவாக ஏஸி போட்டுக்கொள்வதில்லை எனினும் வெயில் தாளாமால் போட்டுக்கொண்டேன். பொள்ளாச்சி வருவதற்குள் ராமபாண சுகந்தம் கமழ்ந்தது. தி ஜாவின் கதையில் வருமே ஸ்வாமி அலமாரியில் முந்தின நாள் வைத்திருந்த ஜாதிமல்லி அரும்புகளின் மணம் மறு நாள் காலையில் மனதை நிறைத்ததும் அந்த மனைவியை இழந்த ஒரு சிறு மகளின் தகப்பனார் உடனே ஒரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரே!அப்படி ஒரு மயக்கும் நறுமணம்.
கிணத்துக்கடவு வருகையில் மலர்மணம் பித்து பிடிக்க வைத்தது. மனம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மிதந்து பறந்துவிடும் போலானதும் ,ஏஸியை அணைக்க சொல்லிவிட்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டேன்.
என்னவோ அதிசயமாக சாலையில் போக்குவரத்து மிகவும் நீர்த்திருந்தது. கற்பகம் வழியே பைபாஸ் சாலையில் சென்று நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டேன். யூ டர்ன் போடுகையில் கடந்த ஜென்னிஸ் கிளப் ஒரு மின்னலை உண்டாக்கியது. அந்த பழங்காலத்திய அரங்கிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன்.
மாலதி அரைமணி கழித்து வருவதாக சொன்னதும் பாதியில் இருந்த நைட் ஏக்ஷன் தொடரை பார்க்க நினைத்தேன் எனினும் மனம் ஒரு நிலையில் இல்லை எனவே அமைதியாக அந்த மரநிழலில் காத்திருந்தேன்.
ஜெகனும் மாலதியும் ஒரே சமயத்தில் வந்தார்கள் ஜெகன் என்னை கண்டதும் வியப்பாகினான். நான் அவனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தேன்.இனியா வந்திருந்தாள் அபி மருத்துவமனையில் கூட்டமதிகமென்பதால் பின்னர் வரவிருந்தாள்.மாலதி என்னை இறுக்க கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டதும் நானும் கட்டிக்கொண்டேன். அரங்கில் அமர்ந்த பின்னரும் மற்றுமொரு முறை மாலா என் கன்னத்தில் முத்தமிட்டு ’’இன்னிக்கு என்னவோ ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்றாள்
.
ஓரளவுக்கு கூட்டம், எனக்கு தெரிந்த வேண்டிய முகங்களை தேடினேன் யாரும் இல்லை. நிகழ்ச்சியில் நானும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் பலமுறை. அபியும் வந்துவிட்டாள் .
ஜெகன் ஜெ வின் சில நகைச்சுவைகளை நகலெடுத்தான். கூட்டத்தில் பலவயதுள்ளோரும் இருந்தோம் சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை. ஆடியன்ஸ் பல்ஸ் என்பார்களே அதை நன்றாக பார்த்து தக்கபடி பேசிய ஜெகன் அந்த கூட்டத்தில் பேசியிருக்க வேண்டாத பெரியவர்களுக்கேயான சிலவற்றை பேசியது எனக்கு உவக்கவில்லை.
அதில் நகைச்சுவை இருக்கலாம் எனினும் அத்தனை அந்தரங்கமான விஷயத்தை தன் சொந்த வாழ்வில் இணைத்து அப்படி பரஸ்யமாக்கியது எனக்கு ஒரு விலகலை அளித்தது, மாலதிக்காக முக மாறுபாடுகளை கவனமாக மறைத்துக்கொண்டேன்
நிகழ்ச்சி முடிய 9 மணியானது, பின்னர் அந்த தீப்பிடித்தது போலான போக்குவரத்து நெரிசலில் அண்ண பூர்ணா சென்று இரவுணவுக்கு பின்னர் புறப்பட இரவு 10 மணிக்கும் மேலானது. அபியை இருசக்கர வாகனத்தில் அனுப்பி விட்டு புறப்பட்டோம். பின்னாலேயே மாலதியும் இனியாவும் அவர்கள் காரில் வந்தனர்
மாலதி கார் ஒட்டிக்கொண்டு வந்தது எனக்கு பெரும் மனநிறைவை அளித்தது.
பைபாஸில் அத்தனை போக்குவரத்து இல்லை. பீளமேடு சாலையில் வானில் நிலவில்லை, சின்னியம்பாளையும் கிளைச்சாலையில் திரும்பியதும் என் இடப்பக்கம் பொன்னென முழுநிலவெழுந்தது,
நல்ல குளிர் காற்றில், வானின் அப்பெரு வெளியில் ஒரு மேகப்பிசிறோ விண்மீனோ இன்றி தன்னந்தனித்திருந்தது நிலவு. முழு நிலவு தோன்றி சிலநாட்களாயிருந்தது, நீர் பட்டுக்கலைந்த ஓவியம் போல கொஞ்சம் கலைந்திருந்தது. எனினும் கீழ்ப்பகுதியின் பிறை வடிவு மட்டும் கூடுதல் ஒளிகொண்டிருந்தது.
அத்தனை வசீகரமாக அத்தனை பேரழகுடன் அத்தனை தனித்திருந்த நிலவு பெரும் துயரளித்தது.போதாக்குறைக்கு வானொலியில் ’’செந்தாழம்பூவில்’’ பாடிக்கொண்டிருந்தார் தாஸேட்டன்.
ஷோபாவின் எளிய அழகையும் சரத்பாபுவின் கனவில் மிதக்கும் கண்களையும் அந்த மலைப்பாதை ஜீப் பயணத்தையும் நினைவில் மீட்டிக்கொண்டேன்.
கற்பகம் சந்திப்பில் மாலாவிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஞாயிறென்பதால் பல கடைகள் அடைத்திருந்தன. பல தெருக்கள் சந்தடியின்றி இருந்தன. என்னவோ ஒரு இனம்புரியாத துக்கம் நெஞ்சில் கல்லைப்போல அழுத்திக்கொண்டிருந்தது
நிலவு என்னையும் நான் நிலவையும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டே பயணித்தோம். நிலவை புகைப்படம் எடுத்துக்கொண்டேன், ஒரு மேம்பால வளைவில் கொஞ்சம் முயன்றால் கையில் அள்ளி எடுத்து விடலாம் போல நிலவு வெகுஅருகில் வந்தது.
சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வழி வருகையில் நள்ளிரவு 12 மணி ஒரு பூக்கடையின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக பலர் பூத்தொடுத்து கொண்டிருந்தனர்.
அவர்களுக்கும் மலரின் சுகந்தம் மனம் மயக்குமா, மலர் தொடுத்தலை ஒரு தொழிலாக அகாலத்தில் செய்து கொண்டிருக்கையில் அப்படியான இனிமையை மனம் உணருமா?
வால்பாறை சாலையில் ஓரிடத்தில் வரிசையான விளக்குகள் ஒளிர ஒரு அம்மன் கோவில் விழா நடந்த அடையாளங்கள் மிச்சமிருந்தன, சிம்மவாஹினியை ஒளிரும் பலவண்ண சிறு விளக்குகளால் சாலையோரம் அமைத்திருந்தார்கள் சற்றுத்தள்ளி இளமுருகனும் வேலும் மயிலுமாக குறுஞ்சிரிப்புடன் ஒளிர்ந்தான,கைகூப்பி வணங்கி இருக்கிறீர்கள் தானே தெய்வங்களே ?என்று மானசீகமாக வினவினேன் கண் நிறைந்தது. நெஞ்சின் எடையுடன் தொண்டைக்குழியிலும் ஒன்று அடைத்துக்கொண்டது.
வீட்டுக்கு வரும்வரை நிலவு தொடர்ந்துகொண்டிருந்தது. என் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறதோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்
சரி நிலவாவது இருக்கிறதே என்னுடன் இணைந்து பயணிக்க!
வீடு திரும்பும்அரசமர வளைவிலும் தொடர்ந்த நிலவு மலைவேம்பின் கிளைகளுக்குள் புகுந்து புன்னையின் மின்னிலைகளுக்கு மேல் நின்று கொண்டு விடை கொடுத்தது.
ஏன் இந்த ஒற்றை நிலவு இன்று இத்தனை துயரளித்தது?
என்னைபோலத்தான் அதுவும், தனித்தது, துயருற்றது, மனதளவில் எங்கோ வெகு தொலைவில் இருப்பது, லேசாக கலைந்திருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்திலாவது மினுங்கலை மிச்சம் வைத்திருப்பது. களைத்திருந்தேன் எனினும் இன்றைய நாளை எழுதவிரும்பினேன்.
அத்தனை அமைதியாக என் முன்னே முடிவற்று நீண்டு கிடந்த இரவை முன்வாசல் அகல்விளக்கின் சுடரொளி திரைச்சீலை அசைகையில் உண்டான இடைவெளிகளின் வழியே கீறி கீறிச் சென்றுகொண்டிருக்கிறது.
சில நாட்கள் முன்பு அம்மாவின் அண்ணனும் எனது தாய் மாமனும், சென்ற மாதம் அம்மா காலமாகும் வரை நாங்கள் பார்த்தே இராதவருமாகிய மருதமுத்து மாமன் வீட்டு திருமணத்தில் அம்மாவின் சார்பாக கலந்து கொண்டேன். எனக்கு அம்மாவின் சாயலே இல்லை நான் அப்பாவை கொண்டிருப்பவள் எனினும் அங்கிருந்த பலருக்கு நான் , 55 வருடங்கள் தன் பிறந்த வீட்டையே பார்த்திராத, வைராக்கியமாக மின்மயானம் சென்ற அம்மாவை நினைவுபடுத்தி இருப்பேன் போலிருக்கிறது.
பலர் வந்து பேசினார்கள் பலர் தொலைவில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கைகளை பிடித்துக் கொண்டும், முகத்தை தடவியும் வாஞ்சையுடன் பேசினார்கள். குற்றவுணர்வில் ஒரு சிலர் கண்ணீர் வடித்தார்கள்
நான் பொதுவாக பொன்நகைகளில் விருப்பமில்லாதவள், எனக்கான அங்கீகாரம் என் தோற்றத்தில் மட்டும் இல்லை என்று நம்புபவள் மேலும் எனக்கு அணிகலன்களில் அத்தனை விருப்பமும் இல்லை. ஆனால் அன்று நான் அங்கு அம்மாவின் சார்பாக சென்றதால் வழக்கத்துக்கு மாறாக நகைகள் அணிந்திருந்தேன் அவற்றையும் பல கண்கள் கணக்கெடுத்துக்கொண்டன.
மாமன் நடுங்கும் விரல்களால் எனக்கு நெற்றாக உலர்ந்துபோன அடுக்கு நீல சங்குமலர்காய்களை கொடுத்தார். உலர்ந்துவாடி இருந்த அக்காய்களுக்குள் விதைமணிகள் புறாக்கண்களைபோல சிறு குழிவுகளில் அமர்ந்திருந்தன. அவற்றில் உயிர் நிறைந்திருந்தது பளபபளப்பிலேயே தெரிந்தது. அவற்றில் இருந்து புதிய சந்ததிகள் இனி முளைத்து வருமாயிருக்கும்.
இரவு உணவுக்கு முன்னர் மணமக்கள் அலங்காரம் முடிந்து வர அனைவரும் நெடுநேரம் காத்திருந்தோம். என் பின்னாலிருந்த ஒரு அம்மாள் ’’என் கல்யாணத்தப்போ அதிகமா மஞ்சள் தேச்சுகிட்டேன் அவ்வளவுதான் இப்ப என்னன்னா ஆளே அடையாளம் தெரியாம பூசி மெழுகி பொம்மையாட்டம் பண்றதுக்கு இத்தனை நேரம் ,கொள்ளை காசு’’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.
சுமார் 2 மணி நேரமானபின்னர் மணமகள் இளஞ்சிவப்பு உடையில் பார்பி பொம்மைபோல மேடைக்கு வந்தார்,
அதன்பின்னர் அரைமணி நேரம் கழித்து மணமகன் வந்தார், காத்திருந்த இடைவெளியில் என் அருகில் இருந்த ஆத்தா என்னிடம் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு அழைப்பு வந்தது, நான் என் அலைபேசியை எடுத்து பேசிவிட்டு அணைத்தேன். என் அலைபேசியின் லாக் ஸ்கிரீனை பார்த்த ஆத்தா அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ’’யாரு கண்ணு, மகனா? என்றார் நான் திகைத்து திடுக்கிட கூட சமயம் கொடுக்காமல் மூத்தவனா இளையவனா? என்றார்
நான் சமாளித்து பதில் சொல்லமுயற்சிப்பதற்குள் ‘’பின்னர் எங்கே காட்டு’’ பாப்போம் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்தேன் நிச்சயம் நான் அந்த ஸ்கிரீனில் வைத்திருக்கும் நபரை இங்குள்ளோருக்கு , குறிப்பாய் இந்த ஆத்தாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவே தைரியமாக எடுத்து காட்டினேன்.
ஆத்தா பார்த்துவிட்டு ’’ மூத்தவனா, ராமராஜ் வூட்டு கலியாணத்துக்கு வந்தப்போ இத்துணூன்டு கீரைத்தண்டாட்டம் இருந்தான் இப்போ வெள்ளைகாரனாட்டம் இருக்கானே? என்றார். நான் சிரிப்பை மென்று விழுங்கினேன்
அவரே தொடர்ந்து இப்போ என்ன செய்யறான்? என்றார். ’’வெளிநாட்டில் படிக்கறான்’’ என்றேன்.
’’ஆ அதான் அமெரிக்கா போன பின்ன மீசை வச்சுகிட்டா இருப்பான், , சரி இருக்கட்டும் விடு பையன் நல்ல மூக்கும் முழியுமா இருக்கான் நம்ம சனத்தில் இவனுக்கு பொண்ணே இல்லை கேட்டுக்கோ’’ என்றார்
பொண்ணா இவருக்கா ஏற்கனவே 4 கல்யாணம் பண்ணிகிட்டவராச்சே என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அமெரிக்கா இல்லை என்று சொல்ல நினைத்து அதை சொல்லவேண்டாம் என் விட்டுவிட்டேன். ஆத்தாவிற்கு வெளிநாடென்றால் அமெரிக்கா அதை ஏன் மாற்றனும்?
ஆத்தா தொடர்ந்து நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்து ’’நம்ம ஏரிப்பட்டி பாப்பாத்தி இருக்காளே, உனக்கு நங்கையாதானே,அவங்க வகையில் ஒருத்தி அமெரிக்காவில் இருக்கா, என்னமோ பெரிய படிப்பு படிக்கறாளாம், மூக்கும் முழியுமா நல்லத்தான் இருப்பா, நிறந்தான் மட்டு எதுக்கும் சாதகம் வாங்கட்டா ? என்றார்.
நான் ’’இல்லீங்க ஆத்தா அவன் இன்னும் படிச்சுட்டு இருக்கான் 2 3 வருஷம் போகட்டும்’’ என்றேன் ஆத்தா விட்டால் அப்போதே நிச்சயதார்த்தம் கூட செய்து முடித்திருப்பார்
லாக் ஸ்கிரீனில் இருக்கும் அந்த ஹாலிவுட் நாயகன் பக்கவாட்டில் திரும்பி சிரித்துகொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமீபத்தில்தான் என் அலைபேசியில் தருண் வைத்து கொடுத்தான், கல்லூரி காலத்திலிருந்து நான் அவரின் ரசிகை.ஆத்தா சொன்னதுபோல மூக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான் அந்த நடிகருக்கு
நல்லவேளை ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் புதிய பாதைக்காரரை ஆத்தா பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இவனாரு இளையவனா? என்று கேட்டு அவனுக்கும் ஒரு பெண்பார்த்திருப்பார்
2005-ல் ஒரு வயதான தருணையும் சரணையும் அழைத்துக்கொண்டு விஜியின் திருமணத்தின் பொருட்டு ஒரேயடியாக இந்தியா வந்த பின்னர் அவனை பள்ளியில் சேர்த்தோம். பள்ளி அவனுக்கு எட்டிக்காயாகவே இருந்தது. பள்ளியில் அவன் அலறும் குரல் எனக்கு அடுத்த தெருவை தாண்டும் வரை கேட்கும், நானும் கண்ணீருடன் வீடு வருவேன்.அவனுடன் சேர்ந்து புத்தகங்களுக்கு மணிக்கணக்காக அட்டை போடுவது பளளி பெற்றோர் ஆசிரிய கூட்டங்களுக்கு கல்லூரியில் அனுமதி வாங்கி அடித்து பிடித்து போவதுமாக சரணுடன் நெருக்கமாக இருந்த நாட்களவை
இந்த வேடசெந்தூர் வீட்டை கட்டிக் கொண்டிருக்கையில் கல்லூரி முடிந்து பேருந்தில் மாலை மூவருமாக பேருந்தில் பொள்ளாச்சியில் இருந்து வேடசெந்தூர் வந்துவிட்டு பின்னர் திரும்ப இரவு பொள்ளாச்சி வருவோம். பொள்ளாச்சி வீட்டில் இருக்கவே முடியாதபடி நெருக்கடிகள் அளித்தவர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்லுவேன் அத்தனை நெருக்கடிகள் இல்லாதிருந்தால் இந்த வீட்டை கட்டி இருக்கவே மாட்டேன்.
அப்படி ஒருநாள் வேடசெந்தூர் வந்துவிட்டு காரில் விஜியுடன் 14 கி மீ கடந்து பொள்ளாச்சி சென்று, வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய பின்னர் அத்தனை தூரம் என்னருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னருகில் நின்று கொண்டே பயணித்த சரண் காலடியில் இருந்த ஒரு பெரிய பாம்பொன்று சரேலென வெளியே சீறி பாய்ந்தது. அது விஷம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் பார்க்க சந்தர்ப்பமே வாய்க்க விலை.அது சரணை எதுவும் செய்யாமலிருந்தது தெய்வாதீனம்தான்.
விஜி.வண்டி ஓட்டுகையில் அதை பார்த்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருந்தன
அதுபோலவே ஏதோ ஒரு பரீட்சைக்காக சென்னைக்கு அவனையும் அழைத்துக்கொண்டு போயிருக்கையில் அபயம் அத்தையின் வேளச்சேரி வீட்டில் முன்பக்கம் சரண் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தான்.
எதற்கோ அவனை நானழைத்து, அவன் அங்கிருந்து விலகி என்னை நோக்கி நடக்க துவங்கிய மறு நொடி போர்டிக்கோவில் மேல்பக்கம் பதித்திருந்த கனத்த ஓடுகள் சில கீழே விழுந்து நொறுங்கின.
அங்கேதான் சரண் அத்தனை நேரம் நின்றிருந்தான்.எனக்கு திகைப்படங்கவே நெடு நேரமாயிற்று
அவனுடன் எதோ தெய்வனுக்ரஹம் இருக்கிறது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அவனுடன் மட்டுமல்ல ஆதரவற்றவர்களுடன் எப்போதும் அறியாத்தெய்வமொன்று எப்போதும் துணையிருக்கும், திக்கற்றவர்களுக்கு தெய்வமன்றி வேறு என்ன துணையிருக்கும்? எங்களுக்கு இருந்தது, இருக்கிறது. இருக்கும்.
சரண் சாந்தி பள்ளியில் படிக்கையில் 6 அல்லது 7-ல் என்று நினைக்கிறேன். அவன் பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது மாலை வரும்படி. என்னவாக இருக்கும் ஏதேனும் புகரா என்று யோசித்தபடியே சென்றேன்
முதல்வரின் அறையில் அமரவைத்து சரண் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்ததற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு தங்கப்பதக்கமும் கணிசமான ஒரு தொகைக்கு காசோலையும் வந்திருந்தது
அந்த போட்டித்தேர்வுக்கும் அதன் பின்னரான 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்குமே அலட்டிக்கொள்ளாமல் வீட்டில் தயாராகாமல்தான் சென்றான் பின்னர் மற்றொரு தேசிய அளவிலான போட்டியில் அதே வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் சிறந்த மாணவன் என்னும் சான்றிதழ் சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில் வைத்து ஒரு பெரிய விழாவில் ஒய் எஸ் ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் எப்போதும் இருக்கும் சின்மயா பள்ளியின் ஆகச்சிறந்த கௌரவ் விருதும் காசோலையும் 12 ம் வகுப்பில் சரணுக்கு வழங்கப்பட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழக சான்றிதழையும் தங்கப்பதக்கதையும் வைத்துக்கொண்டு சரண் நின்றிருக்கும் புகைப்படத்தை தினமலர் அலுவலகத்தில் கொடுக்க மகாலிங்கபுரம் வீதிகளில் நான் தன்னந்தனியே நடந்து சலித்து அலுவலகத்தை கண்டுபிடித்து அதை அடுத்த நாள் நாளிதழ்களில் வரவழைத்தது.
பின்னர் தருணும் அவனுமாக வாங்கிய தங்கப்பதக்கங்கள் எல்லாம் ஒரு வட்டப் பெட்டியில் கொட்டிக்கிடக்கின்றன. சாத்வீகியாக சாந்த ஸ்வரூபியாக இருந்த சரணை குறும்பனாக மாற்றிய பெருமை அவன் இளவல் தருணையே சேரும்.
தருணும் சரணுக்கு இணையாக படிப்பில் சுட்டி அவனை தினம் மாலை பள்ளியில் கண்டுபிடித்து காரிலேற்றுதே பெரும்பாடு.
சரணை குறித்த பதிவென்பதால் இதில் தருணை குறித்து அதிகம் எழுதவில்லை அண்ணன் மீது மாளாநேசம் கொண்டவன் தருண், அவன் பள்ளிக்கு செல்ல துவங்கியிருக்காத, சரண் கேஜி வகுப்புகளுக்கு சென்ற காலங்களில் தினம் அண்ணன் வரும் ஆட்டோவை மாடியிலிருந்து பார்த்ததும் குதித்து கும்மாளமிடுவான்.
மாலை வீட்டுக்கு வரும் அவனுக்கு ஷூ சாக்ஸ் கழட்டி பணிவிடை செய்வது தினம் தினம் தருண்தான்,சரணுக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் நான் மருத்துவமனை செல்ல ஆட்டோவுக்கு போன் பண்ணுகிறென் என்றால் உடனே குட்டித் தருண் ஓடிப்போய் சரணுக்கு இரண்டு செட் உடை, தண்ணீர்பாட்டில் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து வைத்து மருத்துவமனைக்கு தயாராகிவிடுவான். லகஷ்மணன் கூட ராமனுக்கு இத்தனை அனுசரணையாக இருந்திருக்க மாட்டான்
சரணைப் பள்ளியில் ஒரு பையன் அடித்து விட்டான், சரண் தேமே என்று அடி வாங்கிக்கொண்டு வந்தான், ஆனால் மறுநாள் அண்ணனை அடித்தவனை தருண் அடித்து ஒரு புதருக்குள் தள்ளிவிட்டுவிட்டான். அந்த விசாரணைக்கு நான் பள்ளிக்கு விடுப்பெடுத்து செல்ல வேண்டி வந்தது.
கார் வாங்கிய பிறகு மாலை வேளைகளில் நானே அவர்களை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன் கடைசி பீரியட் வகுப்பு முடிந்ததும் சாக்பீஸ் படிந்த கைவிரல்களும் கலைந்த தலையுமாக பள்ளிக்கு வரும் என்ன பார்த்து அங்கே முன்கூட்டியே வந்து அமர்ந்து குடும்ப கதை பேசிக்கொண்டும் டப்பர் வேர் வியாபாரம் செய்துகொண்டும் இருக்கும் மேல்தட்டு பெடிக்யூர் மெனிக்யூர் செய்த ஒப்பனை கலையாத அம்மாக்கள்’’ இதான் சரண் தருண் அம்மா’’ என்று என்னை காட்டி உயர்வாக பேசிக்கொள்ளுவர்கள்.
பெற்றோராசிரிய கூட்டங்களில் மூன்று பள்ளிகளிலும் இருவரைக்குறித்தும் ஒருபோதும் ஒரு புகாரும் சொன்னதில்லை.இருவரும் 12 ம் வகுப்பு வரைக்கும் எந்த ட்யூஷனுக்கும் சென்றதில்லை.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே எங்களை முற்றிலும் கைவிட்ட நிராதரவான காலம் இருந்தது. தன்னந்தனித்திருந்தோம். சரண் தருண் இருவரும் மிகச் சிறுவர்களாக இருக்கையில் தெருமுனையில் மூவருமாக நின்று போக்குவரத்தை மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்போம். கார் ஒருத்தருக்கு, பஸ் ஒருத்தருக்கு, பைக் ஒருத்தருக்கு என்று எங்களுக்குள் பிரித்துக்கொண்டு யாருடைய வண்டி அதிகம் கடந்து செல்கிறதோ அவர்கள் வெற்றியாளர்கள் என்னும் விளையாட்டு விளையாடுவோம். எப்போதும் கதை சொல்லுவேன் கண்கள் விரியக் கேட்பார்கள். அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அனைவராலும் கைவிடப்பட்டிருந்த புறக்கணிக்கப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது எனினும் எங்களின் அந்தரங்க வாழ்வை நாங்களே அன்பினால் நிறைத்து ததும்பிக்கொண்டோம்.
பள்ளி விடுமுறைகளும் கல்லூரி விடுமுறைகளும் வேறு வேறு சமயங்களில் இருக்குமென்பதல் மகன்களை பெரும்பாலும் வீட்டுக்குள் விட்டு கதவை பூட்டிவிட்டு செல்வேன் ஹால் முழுக்க செய்தித்தாள்களை பரப்பி அதில் உணவை எடுத்து வைத்திருப்பேன் மாலை திரும்ப வந்து மூவருமாக வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பார்ப்போம்.
அப்போதிலிருந்து கல்லூரி பள்ளி விடுதிக்கு போகும் வரை சமையல், துணி துவைத்து காயப்போடுதல், பாத்திரம் தேய்த்தல், அம்மிக்கல்லில் அரைத்தல், தோட்டச் செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் என்று எதுவாகினும் மூவரும் சேர்ந்தே செய்வோம், எங்களுக்குள் நல்ல புரிதலும் அதனாலேயே உண்டாகியிருந்தது.
அந்த நாட்கள் கனவு போல கலைந்து மறைந்து போய்விட்டது, அக்காலத்தை நான் இப்போதும் நினைத்து ஏங்குகிறேன். பள்ளிக்கு அவர்கள் வேனில் செல்ல துவங்கிய போது. அவர்களை அனுப்பி விட்டே நான் கல்லூரிக்கு புறப்படுவேன். பள்ளியின் மஞ்சள் நிற வேன் கண்ணுக்கு தெரியும் வரை தாத்தாரப்புச்சி மரத்தின் புடைத்த வேரில் அமர்ந்து வெண்முரசு கதை கேட்டபடி காத்திருப்பார்கள்.
சின்மயா பள்ளியில் சரணுக்கு துவக்கக்தில் விருப்பமின்றி இருந்தது, அக்காலத்தில் ஏகத்துக்குமழுகை.பின்னர் சரியாகி சின்மயா இப்போது அவன் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டிருக்கிறது.
மாதா மாதம் அவர்களை காணச் செல்லும் ஞாயிறுகளில் அதி்காலை எழுந்து அவர்களுக்கு பிடித்ததை சமைத்து ஓட்டமாக ஓடி பள்ளிக்குச் செல்வேன். கோவை நகருக்கு சிலநாட்களில் செல்வதுண்டு, பலநாட்கள் பள்ளிக்கு வெளியே சாலையோரம் இருந்த கொடிக்கம்பப் படிகளிலமர்ந்து வெண்முரசு கதையை நாள்முழுக்க கேட்டுவிட்டு உணவை காரில் சாப்பிட்டு விட்டு மாலை பள்ளியில் திரும்ப கொண்டு விட்டு விட்டு இருக்கிறேன் வெண்முரசு மகன்களுடன் கூடவே வளர்ந்துவந்தது.
பள்ளி முடித்து கல்லூரிச்சேர்க்கைக்கு அவனுக்கு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தது. வேலூர் வெய்யில் என்பதால் எனக்குஅவனை அங்கு அனுப்ப பிரியமில்லை. ஆரவல்லி மலைத்தொடரருகில் ஒரு பல்கலைக்கழகத்தில் உபகாரச்சம்பளத்துடன் அனுமதி கிடத்தது அந்த நேர்முகத்தில் சரணிடம்’’ நீ வாங்கிய விருதுகளில் எதை உயர்வாக சொல்லுவாய்’’ என்னும் கேள்விக்கு நான் எந்த வெற்றியை அடைந்தாலும் அது என் அம்மாவின் முகத்தில் உருவாக்கும் புன்னகைக்கு மேலான விருதை இன்னும் தான் பெறவில்லை என்று சொன்னான்.
பல இடங்களில் இடம் கிடைத்தும் அம்ரிதா ஒரு பெருங்காட்டைப்போல் இருந்ததால் அங்கேயே சரண் சேரட்டும் என விரும்பினேன் .
அம்ரிதா கல்லூரியில் விடுதியிலிருந்து வாரமொருமுறை சரண் வருகையில் நான் பேருந்தில் அவன் வரும் வரை தெருமுனையில் காத்திருப்பேன் அவன் வந்ததும் அவனது பையின் கைப்பிடியை இருவரும் ஆளுக்கொன்றாக பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வீடுவருவொம் மீண்டும் ஞயிறு பேருந்துநிலையம் வரை அவனுடன் பேசிக்கொண்டு சென்று 3.30 மணி பேருந்தில் அனுப்பி வைப்பேன்.
சரண் என்னைப் போலில்லை நான் எப்போதும் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவள் ஆனால் சரண் தர்க்க ரீதியாகவே எல்லாவற்றையும் பார்ப்பவன். மிகுந்த ஏழை மனம் கொண்டவன் ஆனாலும் வரம்புகளுக்குட்பட்டே அவனது மனம் இயங்கும் இதை பல முறை கண்டிருக்கிறேன்.
அவன் படித்த அம்ரிதா பல்கலைக்கழகத்தில் அசைவம் வளாகத்தில் எங்குமே உண்ணப்படக் கூடாதென்னும் கடுமையான நெறி இருந்தது.ஆனாலும் சில மாணவர்கள் திருட்டுத்தனமாக அசைவ உணவுகளை கொண்டு வந்து விடுதியில் சாப்பிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பருவம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதும் நடந்தது. சொந்த வாகனங்களில் வருபவர்களை சோதைனையிடமாட்டார்கள் என்பதால் அப்படி வரும் நண்பர்களின் வாகனங்களில் அசைவ உணவுகளை விடுதிக்குள் கொண்டு செல்வதும் நடக்கும். (இப்போது வெளிநாட்டு விருந்தினர்களுக்கென அசைவ உணவு அளிக்கும் கேண்டீன்கள் வளாகத்திலேயே இயங்குகிறதாம்)
ஒரு ஞாயிறு மாலை விடுதிக்கு சரணை கொண்டு விடப் போயிருந்தபோது நுழைவு வாயிலிலேயே இருக்கும் ரயில்வே கிராஸ் அடைக்கப்பட்டிருந்தது,அப்போது சரணுக்கு பரிச்சயமில்லாத ஒருவன் வந்து சரணிடம் தன்னிடம் அசைவ உணவு இருப்பதாகவும் காரில் ஏறி விடுதி வரை வரட்டுமா என்றும் கேட்டான் சரண் உடனடியாக அதில் அவனுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான் அந்த சரண் வயதே இருக்கும் பையன் விலகி சென்று விட்டான். எனக்கு என்னவோ மனக்கஷ்டமாகி விட்டது ’’ஏண்டா அவன் எப்படியும் சாப்பிட போறான் நம்ம காரில் கொண்டு போய் இறக்கி விட்டா என்ன’’ என்றேன்.
’’நாம ஒரு அமைப்புக்குள் இருக்கோம்னா அதன் நெறிகளுக்கு கட்டுப்பட்டு உடன்பட்டுத்தான் அதுக்குள்ள இருக்கனும். அம்ரிதாவில் யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லலை அந்த கேம்பஸில் சாப்பிடாதீங்கன்னுதான் சொல்லறாங்க. ஞாயிற்றுக்கிழமையே அவன் வரனும்னு இல்லை அவன் நல்லா அசைவம் சாப்பிட்டுட்டு திங்கட்கிழமை காலையில் கூட 9 மணிக்கு முன்னாடி வந்துருக்கலாம், திருட்டுத்தனமா கொண்டு வந்து விடுதியில் சாப்பிடறதும் மத்தவங்களுக்கு இப்படி சாப்பிட கொடுக்கறதும் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது, இங்கு சொல்லப்படும் கடைப்பிடிக்கப்படும் விதிகளுக்கு மாறா ஒருத்தன் நடக்கும் போது அதில் நானும் பங்கெடுத்துக்கனும்னு அவசியம் இல்லை. நான் அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டேன் மேலும் என் பேர் யாரு எது சொன்னாலும் கேட்டுக்கறதுக்கு நான் லோகமாதேவியும் இல்லை சரண் ‘’ என்றான் அவன் சொன்னதின் நியாயங்கள் பிறகு எனக்கு புரிந்தது.
பள்ளியில் ஒரு பெரும் செல்வந்தரின் மகன் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பள்ளியை விட்டு நீக்கப்பட்டபோதும் அவன் செல்வசெருக்கில் செய்த அந்த தவறை சரணால் மன்னிக்கவே முடியவில்லை. இப்படி பல விஷயங்கள் அவன் ஆளுமையை எனக்கு உணர்த்தி இருக்கின்றன.
சரண் வேர் கொண்டவன், தருண் சிறகு கொண்டவன். ஐரோப்பா செல்லும் முன்பு விமான நிலையத்தில் அவன் கண்ணிருடன் கண்ணாடி தடுப்பிற்கு அப்பால் நின்ற சித்திரம் கண்ணிலேயே இருக்கிறது.
இன்னும் சில வருடங்கள். பின்னர் அவன் நல்ல குடும்ப வாழ்வில் இருப்பதை பார்த்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.
சரண் தருண் திருமணங்களின் போது விழாவிற்கு வரும் உறவினர்களின் பார்வையில் படும்படி மலர்களும் ரிப்பனும் அமைக்கப்பட்டிருக்கும் உயர்ரக காரும், இடுப்பிலும் கையிலும் ஒட்டியாணம் வங்கியுமாக பொன்னால் ஜொலிக்கும் மருமகளும் எனக்கும் சரணுக்கும் தருணுக்கும் வேண்டியதில்லை. காரும் பணமும் வசதியும் எல்லாம் இருந்தும் தோல்வியுற்ற பல தாம்பத்தியங்களை மகன்களும் என்னுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை தாயின் பரிவுடன் அன்புசெலுத்தி பார்த்துக்கொள்ளும் அவர்களைப்போன்ற ஆண்மகனின் முழு அன்புக்கும் பாத்தியமான,அவர்களின் மனதுக்குகந்த எளிய குடும்பப் பெண் போதும்.
பல வருடங்களுக்கு முன்னர் சரணை மசானிக் மருத்துவர் பரிசோதித்து அவன் நல்ல இயற்கை சூழலில் ஓடியாடி விளையாடினால் போதும் என்று சொன்ன பின்னர் தான் இந்த வீட்டைகட்ட முனைத்தேன். இங்கு வந்ததிலிருந்து படிப்படியாக குணமாகி ஆரோக்கியமான இளைஞனாக இன்று வளர்ந்து 23 வயதை தொட்டிருக்கிறான். 25இப்போது )(சரணையும் தருணையும் வளர்த்திய காலத்து கஷ்டப்பாடுகளனைத்துமே இப்போது கனவென மாறிவிட்டன.
சரண் 11ல் படிக்கையில் நான் பாண்டிச்சேரிக்கு ஒரு சிறுகதை பட்டறைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதன்பொருட்டு அவன் தலையிட்டு பேசத்துவங்கிய பின்னர் என் பொறுப்பை, என் வாழ்வை முழுக்க அவன் கைகளில் எடுத்துக்கொண்டான். அன்றிலிருந்தே என் சுதந்திரத்தை என்னால் உபயோகிக்க முடிந்தது.எல்லைகளைத் தாண்டாமல் அவற்றை உணர்ந்து அதற்குள் என்னால் இப்போது விரும்பும் உயரம் வரை பறக்க முடிந்திருப்பது சரண் மற்றும் தருணால் மட்டுமே.
சரண் ஐரோப்பாவில் அரசு வேலையிலும் தருண் பெங்களூருவில் MBA இரண்டாம் ஆண்டிலும் இருக்கிறார்கள்
.
நான் மகன்களுக்கு உயிர்கொடுத்தேன் என்றால் அவர்களும் என்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து என்னையும் மீண்டும் புதிதாக பிறக்க செய்திருக்கிறார்கள் சரணும் தருணும் எனக்கு மகனும் அன்னையும் தந்தையும் நண்பனுமானவர்கள். இருவருக்கும் என் அன்பும் ஆசிகளும் எப்போதும்.
சரணுக்கு நான் சொல்லி ச்சொல்லி வசந்த சார் மீது அளவற்ற மதிப்பும் பிரியமும் இருந்தது. இடையிடையே இந்தியா வரும்போதெல்லாம் தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளின் பொருட்டொ சரணுக்கு ஊசி போட வேண்டி வந்தால் ஒருபோதும் வசந்த அதைச் செய்யமாட்டார் ’செல்ஸ்’ என்று குரல் கொடுப்பார் செலினாதான் போடுவார்கள்.சரணுக்கு இன்றும் ஊசி என்றால் குலை நடுங்கும். ஒரு முறை மைசூரு சென்று வந்தபோது வசந்த் சாருக்கெனச் சிறு கள்ளிச்செடி வாங்கி வந்து பரிசளித்தான் அதையும் அவன் பரிசளித்த ஒரு குட்டி பொம்மையையும் அவர் தனது மருத்துவமனை மேசையில் பல காலம் வைத்திருந்தார்.
அபுதாபியில் ஒருநாள் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் சகோதரியின் கணவர் காலமாகி விட்டார் என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்கு அந்த ப்பெண் என்னை ’சேச்சி’ என்று கட்டிக்கொண்டு கதறியபோது சரண் அரண்டு போய் ’’என்ன என்ன’’ என்று அழுகையுடன் கேட்டான். ’’இந்த அத்தையின் சொந்தக்காரர் செத்துப்போயிட்டாரம் சரண்’’ என்று நான் சொன்னதும் அவன் என்னைக் கட்டிக்கொண்டு ’’அதான் வசந்த் டாக்டர் இருக்காரில்ல அவர் காப்பாத்துவாரு காப்பாத்துவாரு, அழுகாதே’’ என்று வீறிட்டான். இதை என்றைகாவது வசந்த் சாரிடம் சொல்லவேண்டும் என்றிருக்கிறேன்.
ஒருமுறை ஜெயந்தி கிருஷ்ணசாமி தம்பதிகளுடன் முஸாஃபாவிலிருந்து அபுதாபிக்கு சென்றிருக்கையில் இரவில் கார் கதவின் கண்ணாடி வழியே பிறைநிலவை பார்த்தபடி ’’அம்மா பாதி நிலா இங்கே இருக்கு மீதி நிலா எங்கே இருக்கு’’? என்றான் கவிதையாக.
சுட்டி விகடனில் வரும் சின்ன சின்னப் போட்டிகளை அவனுக்கு சொல்லிப் புரியவைத்து, அவன் சொல்லும் பதில்களை விகடனுக்கு எழுதிப் போடுவேன் அப்படியொரு புதிர்ப்போட்டி பதிலுக்கு அவனை ’’குட்டி ஷெர்லக் ஹோம்’’ என்று சொல்லிய ஒரு சான்றிதழ் வந்தது.
விகடன் படித்துமுடித்துவிட்டால் மேலும் கதைகள் கேட்பான் எனவே நானே இட்டுக்கட்டிய கதைகளைத் தொடர்ந்து சொல்லுவேன். தட்டிக்கொடுப்பதையும் கதையையும் எப்போது நிறுத்தினாலும் விழித்துக்கொண்டு மீண்டும் சொல்லச் சொல்லுவான்.
கணினியில் எளிய விளையாட்டுக்களை என்னுடன் சேர்ந்து என் கைகளின் மீது அவன் சிறு கையை வைத்து அவனும் விளையாடுவான். கணினி அவனுக்கு மிகப் பரிச்சயமானதும் பிடித்தமானதுமாகிக்கொண்டிருந்தது.
அருகிலிருந்த ஏர்போர்ட் பார்க்குக்கு மாலைவேளைகளில் அவனை அவன் தோழிகள் சியா, சிது அல்லது நவ்யா ஆகியோரின் குடும்பத்துடன் அழைத்துச் செல்வதுமுண்டு.சியா சிது குடும்பத்தினர் மாப்ளா முஸ்லிம்கள் எங்களுடன் வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். என்னை ’மூத்தம்மே’ என்றழைக்கும் சியாவுக்கும் சரணுக்கும் மிகபிடித்தமான விளையாட்டு வீட்டில் இருக்கும் பெரிய காலி அட்டைப்பெட்டிகளுக்குள் அமர்ந்துகொள்வது.
முஸாஃபாவில் அப்போதுதான் அமைந்திருந்த கேரிஃபோர் பிரம்மாண்ட மாலுக்கு முதன்முறை சென்றிருக்கையில் அங்கிருந்த கூட்டத்தில் சரண் தொலைந்து போனான் வளாகம் முழுக்க அனைத்து தளங்களிலும் அறிவிப்பு செய்த பின்னர் எங்கிருந்தோ அலமாரிகளுக்கிடையில் விளையாடிக்கொண்டிருந்தவனை அரபி ஒருவர் கண்டுபிடித்து க்கொண்டு வந்தார்.
அதே கேரிபோரில் தள்ளுவண்டியில் முன்பக்க கூடையில் சரண் அமர்ந்துகொண்டிருந்த ஒருநாளில் அமைதியாய் கூடையில்நான் எடுத்துப்போடும் பொருட்களைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தவன் ஃபேர் அண்ட் லவ்லி எடுத்துபோடப்பட்டதும் அலறி ’’இது வேண்டாம் வேண்டாம்’’ என அழத்துவங்கினான்
அவனை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவில்லை ’’இது அம்மா முகத்துக்குப் போடறதுக்குடா’’ என்றபோது வீறிடுதல் இன்னும் அதிகமானது.பின்னர் அதை எடுக்கவேயில்லை.
அடுத்த வெள்ளியன்று மாலை சன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கையில் ஃபேர் லவ்லி விளம்பரம் வந்தது. ஆறே நாட்களில் சிகப்பழகு என்னும் அந்த விளம்பரப்பெண்ணின் முகமாறுபாடுகள் அடுக்கடுக்காகக் காண்பிக்கப்பட்டபோது சரண் அச்சத்துடன் ’’அம்மா பாத்தியா அந்த கீம் போட்டா உனக்கும் இப்படி நிறைய மூஞ்கி வந்துரும் அப்புறம் உன்னைப் பார்த்தா எனக்குப் பயமாயிரும்’’ என்றான்.
அவன் பிரியதுக்குரியவளாக ரீமா சென் இருந்தாள். சாப்பிட அடம்பிடிக்கும் சரணுக்கென்றே அவளின் ’’மே மாதம் 98ல்’’ பாடலைப் பதிவு செய்து வைத்திருந்தேன். ரயில் நிலையத்தில் ரீமா சென் கனத்த தொடைகளை தட்டிக்கொண்டு குதித்தாடத் துவங்கினால் சரணும் வாயைத்திறந்து பார்ப்பான் மட மடவென்று சாதம் ஊட்டி முடித்துவிடுவேன்.