நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம். கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும் தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன்.
நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே அடுத்த சுங்கம் நிறுத்தம் வரை நடந்துவந்தோம்.அங்கு நான்கு வழிச்சாலையாதலால் அடிக்கடி பேருந்துகள் வரும்.
அவர் பெயர் கோகிலா, தினம் 3 மணிக்கு பணி முடிந்து புறப்படுவார் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் என்பதை எல்லாம் பேசிக்கொண்டு வந்தார், நல்ல திருத்தமாக புடவை உடுத்திக்கொண்டு தலையில் பூச்சரம் வைத்துக்கொண்டு அழகாக இருந்தார்.
நான் என்னசெய்கிறேன் என்றுகேட்கப்பட்ட போது டீச்சர் என்று சொன்னேன்.
சுங்கத்திலும் நல்ல கூட்டம். இன்று முகூர்த்த நாள், ஏதோ திருமணவிருந்தில் பணிபுரிந்து வீடு திரும்பும் சரிகைக்கரை இட்ட வெள்ளை முண்டும் அழுத்தமான நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டமொன்றும் இருந்தது. அனைவருமே வெகுவாக களைத்திருந்தார்கள்.
வெயில் முதுகில் அறைந்து மண்டையை பிளந்து உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது. பேருந்து அங்கும் வெகுநேரம்வரக்காணோம். என்னருகில் நின்று கொண்டிருந்த பெண் போனில் உரக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அன்றுதான் ICUவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கணவரும் உடன் சிகிச்சையில் இருந்து இப்போது அவரது அக்காவீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டார்.
20 நாட்களுக்கு முன்னர் அவர்களின் செல்ல நாய் சின்னுவுக்கு வெறி பிடித்து பால் சோறு கொடுக்க வந்த இவரை தலையில் கடித்து,காப்பாற்ற வந்த அவர் கணவரையும் கை,காலென்று ஏகத்துக்கும் கடித்துவிட்டது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பற்றி ஆம்புலன்ஸில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள். இனி 10 நாட்கள் கழித்தே தையல் பிரிக்கவேண்டும். ஊர்ப்பஞ்சாயத்தில் அந்த நாயை கொல்ல முடிவாகி கொன்றும் விட்டார்கள், அதை சொல்லுகையில் அவருக்கு குரல் கம்மியது. அவரது தலையின் மறுபக்கத்தில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டிருந்ததை பின்னரே கவனித்தேன். ’’நானே வளர்த்தி இப்படி கொல்லவேண்டியதாயிருச்சே’’ என்று புலம்பினார். ’’ பாடு தான் எப்பவும் பாடுதான் ஒருநாளும் விடியாது’’ என்றவர். தனக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லும்படி மீள மீள எதிர்முனையை கேட்டுக்கொண்டார்
50 வந்தது,நானும் கோகிலாவும் ஏறினோம். அகால வேளை என்பதால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. கோகிலா என்னருகில் அமர்ந்தார்.
அவரது வயர் கூடையில் இருந்த சிறு பெட்டியிலிருந்து பொன்மஞ்சள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து, பிரித்து இரண்டாக உடைத்து எனக்கு பாதியை அளித்தார். வாங்கிக்கொண்டேன். அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்குமென்றும் எப்போதும் பயணங்களில் சாப்பிட கையோடு கொண்டு வருவதாகவும்சொன்னார். வாழ்வென்னும் பெருவதை அவருக்கான இனிப்புச்சுவையை எப்படியோ விட்டுவைத்திருக்கிறது. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்புப்பிரியையான நான் இத்தனைகாலம் சாப்பிட்டதிலேயே ஆகச்சிறந்த இனிப்பு அதுதான். கோகிலாவை கட்டிக்கொள்ள நினைத்தேன். பேருந்தில் சாத்தியமில்லாமல் போனது.அவரது கையை ஒரு முறை பிடித்துக்கொண்டேன்.
பலர் நல்ல உறக்கத்திலும் வெயிலின் கிறக்கத்திலும் இருந்தார்கள்.நடத்துனர் ஓட்டுநர் இருவருமே சுவாரஸ்யமில்லாமல் இருந்தார்கள் . கட்டணமில்லை பெண்களுக்கு என்பதை வெகுநேரம் கழித்தே உணர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த பணத்தை பர்ஸில் வைத்துக்கொண்டேன். கோகிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு வஞ்சியாபுரம் பிரிவில் இறங்கிநடந்தேன். முந்தாநாள் மழையில் சங்கீதாவின் கடை வாசலில் குளமாக நீர் தேங்கி இருந்தது.
என் புடவை ரவிக்கையை தயாராக வைத்திருந்தார். திரும்ப வந்து சாலையை கடந்து எதிர்புறமாக நின்றேன்
20 நிமிட காத்திருப்பிற்கு மீண்டும் சுங்கம் வழியே உடுமலை செல்லும் மற்றொரு50 வந்தது. நல்ல கூட்டமதில். மூன்றாவது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டேன். அந்த இருக்கையில் இரு பெண்களும் அவர்களை பார்த்து திரும்பியபடி நின்று கொண்டு மற்றொருத்தியுமாக இருந்தார்கள், தோழிகள், ஒரே இடத்தில் பணிபுரிவர்கள் என தெரிந்தது. அவர்களில் மிக இளையவள் ‘’காலையில் 3 மணிக்கா, வீட்டைவிட்டு போன்னு சொல்லறாங்க்கா உள் ரூமை வேற பூட்டிவச்சுட்டான் பர்ஸ் அங்கே இருக்கு எங்கேக்கா போவேன் ஆட்டோ கூட இருக்காது அந்நேரெத்துக்கு ‘’என்றாள் அதை முன்னரே பல முறை பேசிஇருப்பார்கள் போல.’’மசநாயாயிருந்தாகூட குடும்பம் நடத்திடலாங்க்கா இவன்கூட முடியது கெரகம் மறுபடி அங்கேயே போரேன்பாருங்க இப்போ ‘’ என்றாள்.
சின்னப்பெண், வயது 20 அல்லது 22 தான் இருக்கும் சிவப்பில் பழைய சுடிதார், எண்ணெய் இறங்கிய ஒரு மூக்குத்தி, கழுத்தில் அழுக்காக ஒரு வெறுஞ்சரடு, காதில் ஒரு பிளாஸ்டிக் மொட்டுத்தோடு. இவர்களெல்லாம் ஒரு டிகிரி படித்திருக்கலாம், கம்ப்யூட்டரில் பில் போட 8000, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மேலும் 3000 என்று, அந்த அவன்களில் எவன் எத்தனை மணிக்கு போகச்சொன்னாலும் புறப்பட்டு வந்து தனியே கண்ணியமாக வாழ்ந்திருக்கலாம்.
சற்று நேரத்திலேயே மூவருமாக என்னமோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
துயர்களை இவர்கள் பெருக்கிக்கொள்வதில்லை மேலும் அவை இருப்பதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
சுங்கத்தில் இறங்கி செல்வம் கடைக்கு வந்தேன், ரேகாவும் இருந்தாள்.அக்ஷய திருதியைஅன்று நகைக்கடைபோல கூட்டம் நெரிபட்டது. இருவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு பச்சைமிளகாய்களும் புதினாஇலைகளும் மிதந்த குளிர்ந்த எலுமிச்சை ரசத்தை குடித்தேன். வெயில் உறிஞ்சிக்கொண்டிருந்த உயிர் திரும்ப வந்தது.
அங்கிருந்து நடந்து ஊருக்கு வரும் வழியில் பலர் என்னையும், ஏன் நடந்து வருகிறேனென்றும், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்கள். ஊமைக்கவுண்டர் சரண் எப்படி இருக்கிறான் என்று சைகையில் கேட்டார் நலமென்று தெரிவித்தேன். ’’போ போ’’ என்று கையாட்டி சிரித்தார்.
காவலர் பிரபுவின் அப்பா தன்னந்தனியே கோவில் வாசல் கல்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரும் மனைவியை இழந்திருந்தார் சில வருடங்களுக்கு முன்னர். அப்பா தளர்ந்துவிட்டார் என்றதும் ’’என்ன கண்ணு பண்ணறது உங்கம்மவோட போச்சு எல்லாம்’’ என்ற படி சுய பச்சாதாபத்தில் கண் நிறைந்து வேட்டி நுனியில் துடைத்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது.
மெல்ல நடந்துவந்தேன், வழியெங்கும் தீக்கொன்றைகள் மலரத் துவங்கி இருந்தன.புளியமரங்கள் தளிரும் மலருமாக நிறைந்திருந்தன புளியம்பூக்களை எனக்கு சாப்பிட பிடிக்கும் ஆனால் எட்டாத உயரத்தில் இருந்தன.
ஒரு வெள்ளை நாய் வாலாட்டிக்கொண்டே தொடர்ந்தது. நாய் இன்று மூன்றாவது முறையாக இடைபடுகிறது. கொல்லப்பட்ட சின்னு,3 மணிக்கு வெளியே போகச்சொன்ன ஒன்று, பிறகு இது.
லண்டனில் ஒரு மகளையும் அமெரிக்காவில் இன்னொருத்தியையும் கட்டிக்கொடுத்துவிட்டு கணவரும் இல்லாமல் தனியே வாழ்ந்துவரும் அந்த அரசமரத்துக்கருகிலிருக்கும் வீட்டம்மா கூடத்தில் கையை தலைக்கு வைத்து உறங்கிக்கொண்டிருப்பது திறந்திருந்த கதவு வழியே தெரிந்தது. அருகில் பால்வாங்க பாத்திரம் வைத்திருந்தார். எங்கோ வெகு தொலைவில் இருக்கிறதென்று நான் நினைக்கும் எதிர்காலம் ஒரு கணம் மிக அருகிலென வந்துசென்றது.
நல்ல இளங்காற்றில் புளியம்பூக்கள் உதிர்ந்தன, இன்றும் மழை வரலாம். மணி அண்ணன் வொர்க்ஷாப் அருகில் வந்ததும் திரும்பி அந்த வெள்ளைநாயிடம் ’போடா’ என்று அதட்டினேன். உடனே சொல்பேச்சு கேட்டு பவ்யமாக திரும்பி நடந்தது, டீச்சர் என்று தெரிந்திருக்குமோ?
வீடு வந்து வெளிவாசல் கதவை திறக்கையிலேயே இன்று பறிக்காமல் விட்ட ராமபாண மணம் கமழ்ந்தது.
குளிக்க செல்லுமுன்பு கொண்டைபோட தலை முடியை பிரிக்கையில் தலையிலிருந்து ஒரு புளியம்பூ விழுந்தது. வாயில் போட்டுக்கொண்டேன் நல்ல புளிப்பு.
நேற்று ஒரு பண்ணை வீட்டின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். பொதுவாக விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்படி சிறந்த இடங்களுக்கு செல்கையில் அவற்றை அனைவருடனும் பகிர்வார்கள்
அந்த பண்ணை வீட்டின் பேரில் தனித்த பிரியம் கொண்டிருக்கும், அங்கே அடிக்கடி கூடுகைகளுக்கு சென்று வரும் நண்பர்களில் சிலர் வாட்ஸப் குழுமங்களில் அவரது பண்ணையில் யானை வந்து நீரருந்திச்செல்வது, பலாப்பழங்களை பறித்துண்பது போன்ற காணொளிகளை பகிர்வது வழக்கம். நேற்று அப்படி பகிரப்பட்ட காணொளிகளில் கோடைக்கால கனிகளின் பல வகைகள் செறிந்து காய்த்தும் கனிந்தும் இருந்ததையும், அறுவடையையும் பகிர்ந்திருந்தார்கள்.
எனக்கு எப்போதுமே அறுவடை செய்வதும் அதை காண்பதும் பெரும் பரவசமளிப்பவை
அந்த பண்ணை வீட்டின் பிரியர்களில் நானும் ஒருத்தி. தென்னை, மா, பலா, நாவல், முந்திரி கொய்யா உள்ளிட்ட பல பழவகை மரங்களும் மந்தாரையிலிருந்து பல வண்ண மலர்ச்செடிகளும் நிறைந்த பல்லுயிர் பெருக்கில் ததும்பும், முறையாக பராமரிககப்படும் தோட்டம் அது
முதல் முறை அங்கு சென்றபோது கோடைக்காலமாகையால் பகலில் பெண்கள் குழாம் நாவல் மரங்களை வேட்டியாடினோம், இரவில் பாலுவே பலாச்சுளைகளை அனைவருக்குமாக அளித்தார்
அங்கு எனக்கு சுவாதீனமுண்டு, அடுப்படியில் தேநீர் தயாரிப்பது மாலை விளக்கு ஏற்றுவது என்று, விஷ்ணுபுரம் வெறும் இலக்கியம் பேசும் குழுமம் மட்டும் அல்லவே அது ஒரு குடும்ப அமைப்புபோலத்தானே!
அப்படியான அந்த பண்ணையை நேற்று காணொளியில் பார்க்கையில் நூற்றுக்கணக்கில் மாங்கனிகள் மரத்தடியில் சிதறியும் இறைந்தும் கிடந்தன,பச்சைகாய்களை கொண்ட தென்னைகள் நிறைந்த குலைகளுடன் நின்றது. பலாவின் பெருங்கனியொன்று கிளையிலிருந்து உதிர மனமின்றி அதிலேயே வெடித்து பிளந்து சுளைகளைக் காட்டி ஆசையூட்டிக் கொண்டிருந்தது.
இது ஒருவேளை என் இடமாக இருந்திருந்தால், இப்போது இங்கு வேடசெந்தூர் வீட்டில் வெற்றிலைக்கொடியினருகிலேயே சுணணாம்பும், இனிப்பூட்டிய பாக்குத்தூளுமாக அமர்ந்து மனம் நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளுவதை போல பலா மரத்தடியில் அமர்ந்தே அச்சுளைகளை உண்டிருப்பேன்.
நேற்று மாலை அப்பா வீட்டில் பலாக்கனிகள் சில முற்றி நம் வீட்டில் விழுந்து உடைந்து சிதறிக்கிடந்தன. மாலை நல்ல மழையும் ஆதலால் வீடெங்கும் அதன் மணம் கமழ்ந்தது ஒருபோதும் நான் அந்த பழத்தை சுவைத்ததில்லை சுவைக்கவும் போவதில்லை. காலை அப்பா என்னிடம் பலாச்சுளைகளை சாப்பிடும்படி சொன்னார், அவர் கண்களை நேராக சந்தித்து ’’எனக்கு பலாப்பழமே பிடிக்காதே’’ என்றேன்.
ஆம், வஞ்சம்தான், அது எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது, இது என்னை அறமற்றவளென்று வகுக்குமேயானால் அவ்வாறே ஆகட்டும், அறியட்டும் உலகு நான் அறமற்றவள் என்று, வஞ்சம் புகையும் கல்நெஞ்சக்காரி என்றும் கூட. இப்பிறவியில் இவற்றிலிருந்து எனக்கு மீட்சியில்லை. மீட்சியை நான் விழையவும் இல்லை.
மனம் எங்கோ சென்றுவிட்டது பலாவின் மணத்துடன்,இதோ திரும்பி வருகிறேன்
ஆம் அறுவடை, அது எனக்களிப்பது பெரும் நம்பிக்கையை, காயும் கனியும் கீரையும் மலர்களுமாக தோட்டமும் பண்ணையும் வயல்களும் நிறைந்திருப்பதும் அறுவடை செய்யப்பட்டவை குவிந்துகிடப்பதையும் பார்க்கவே எனக்கு பெரும் கிளர்ச்சியண்டாகும்.
அறுவடை என்பது வளமையின் சாட்சி, செழிப்பின் சாட்சி தொடர்ந்து இவ்வுலகில் உயிர்கள் வாழும் சாத்தியத்திற்கான உத்திரவாதம், எனக்கு வாழ்வை தொடர வேண்டும் என்னும் பிடிப்பையும் பெருவிருப்பையும் அறுவடையும் அறுவடையை காணுதலும் உருவாக்கும்.
நீர் நிரம்பிய கலம் அவற்றில் மிதக்கும் வண்ண மலர்கள் தீபச்சுடரொளி இவைகளும் அப்படித்தான், மலரும் நீருமின்றி வீட்டிலிருந்து ஒருபோதும் பயணத்தை துவக்குவதில்லை, எப்போதும் காரில் ஓரிரு மங்கலங்கள் இருக்கவேண்டும் என்பதை மகன்களுக்கும் உணர்த்தியிருக்கிறேன்
மாலைவேளைகளில் விளக்கேற்றாவிட்டால் மனம் எப்படியோ வெறுமை கொண்டுவிடுகிறது, எவ்விதத்திலும் இருள் அணுகிவிடக்கூடாது என்னும் ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து முதல்முறை திரும்புகையில் கொண்டு வந்த ராம் சீதாப்பழத்தின் விதையினின்றும் ஒரு செடி இளம்பச்சை நீளிலைகளுடன் இங்கு வளர்ந்து நிற்கிறது.
அப்படி ஒரு நஞ்சில்லா நிலமொன்றில் பலவ்ற்றை விளைவித்து மகிழும் விழைவு எனக்குள் பல்லாண்டுகளாக நிறைவேறாமல் காத்திருக்கிறது. அவ்விழைவின் மீச்சிறு வடிவமாகவே வேடசெந்தூர்வீட்டிலும் வகை கனிமரங்களிலும் ஒவ்வொன்று, பாரதியின் காணி நிலம் போல 12 தென்னைகள், மலர்ச்செடிகளும் மூலிகைகளுமாக வைத்து வளர்த்து பசுமையும் செழுமையும் நிரம்பி, வளமை பொங்க வாழ்கிறேன்.
ஊட்டி ஃபெர்ன்ஹில் நித்யா ஆசிரமம் நல்ல மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் முழுவதும் மலர்ச்செடிகளாலும் இயற்கை புல்வெளியாலும் சூழப்பட்டிருக்கும் சொர்க்கத்துக்கு இணையான இடம் அது.அங்கு எனக்கு தாளமுடியாததென்றால் குளிர்மட்டுமே மற்றபடி திரும்பிவராமல் இறுதி மூச்சுவரை இருக்க விரும்பும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று.
அங்கு ஒரு கோடைக்கால காவிய முகாமின் போது தேவதேவன் அவர்களுடன் ஒரு மாலை நடை சென்றேன், மலர்கள் மலர்கள் மலர்களென்று முழுவதும் மலர்களை பார்த்து அவற்றின் பெயர்களை தெரிந்துகொண்டு அவற்றின் மணம் நுகர்ந்து கொண்டு அவற்றை பறித்து கையில் ஏந்திக்கொண்டு ஒன்றை தலையிலும் சூடிக்கொண்டு அனைத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டு மலர்களால் ஆன நாளாகவே அமைந்தது அன்று.
அன்று பிற்பகல் ஊர் திரும்பவே எனக்கு மனதில்லை நிர்மால்யாவிடம் அனுமதி பெற்று வட்டத் தலையணைகள் போல் நெருக்கமான வண்ணச்சிறுமலர்களால் ஆன ஹைட்ராஞ்சியா மலர்ப்பந்துகளில் ஒன்றை பறித்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தேன்
குருநித்யா ஆசிரமத்தின் ஒரு சிறு துண்டையே வீட்டுக்கு கொண்டு வந்தது போல் இருந்தது அம்மலரை பார்க்கையில் எல்லாம். கன்யாகுமாரி கவிதை முகாமிற்கு பிறகும் அங்கிருந்து என் கைக்கடிகாரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு வீடுவரை வந்த கடற்கரை மணலும் அப்படியான உணர்வை, அவ்விடத்தின் நினைவுகளின் நீட்சியை அளித்தது. அப்படித்தான் இந்த பண்ணை வீட்டு நினைவும்.
ராம் சீதாவும் அங்கிருக்கும் பல மரங்களில் ஒன்றொன்றாக இங்குமிருப்பதுமாக அப்பண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இங்குமிருக்கிறது, பெருமரங்களின் மீச்சீறு போன்சாய் வடிவங்களை போல.
இன்று ஜெ தன் பிறந்தநாளன்று அருணாவுடன் எர்ணாகுளம் சென்று விட்டு,மழை பெய்திருந்த நாகர்கோவில் திரும்பியதை சொல்லியிருந்தது போலவே நானும் இன்று நினைவுகளில் பசுமை வழியாகவே சென்று பசுமை வழியாகவே மீண்டேன்
வழக்கமில்லாத வழக்கமாக இந்த மாதம் இரண்டு முறை வார இறுதிகளில் 3 நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட்டது.
வெள்ளி சனி வீட்டில் ஓய்வாக இருந்தேன். நிறைய பாடல்கள் கேட்டேன்.குறிப்பாக லால் இஷ்க், அர்ஜித் சிங் குரலெல்லாம் தெய்வத்தினருள்தான். ராம் சீதா மரத்தடியில் நாளெல்லாம் அமர்ந்திருந்தேன். அதன் இளம்பச்சை நீள் இலைகளின் அடியில் மனமும் உடலும் குளிர்ந்திருந்தது.
சில தினங்களாக ஏதும் எழுதவேயில்லை, எழுத மனம் குவியவில்லை. தினம் தொகுக்கும், திருத்தும் விக்கியின் பக்கங்களையும் 2 நாட்களுக்கு முன்னர் திருத்தியது மீண்டும் துவங்கவில்லை,கல்லூரியிலிருந்து வந்ததும் கணினியும் கையுமாக இருக்கும் அதே தேவிதானா இது என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.
ஞாயிறு மாலா இனியா அபியுடன் ஜெகனின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு போக வேண்டி இருந்தது. எனக்கு உண்மையில் கோவையில் மாலை நிகழ்வென்றால் நள்ளிரவில் வீடு திரும்புவதும் மறுநாள்; கல்லூரி செல்வதும் பெரும் சிரமமாகி விடும் எனினும் மாலா மிக விருப்பப்பட்டதால் மாலதியை பார்க்கவென்றே போக நினைத்தேன்.
மாலை 4 மணிக்கு நல்ல எதிர்வெயிலில் புறப்பட்டேன். வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் கூடவே ராமபாண சரம் வைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பிடித்த அடர் தேன் நிற ப்ளெயின் புடவை. இதே போலொரு புடவையை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி இறந்த தினம் பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தது நினைவுக்கு வந்தது.
அபிக்கும் இனியாவுக்கும் இரண்டு சரங்கள் தனியே தொடுத்து எடுத்துக்கொண்டேன், மாலதிக்கு கொடுக்க முடியாமலாகிவிட்டது துயரளித்தது. ஆனால் மாலா ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது?
காரில் பொதுவாக ஏஸி போட்டுக்கொள்வதில்லை எனினும் வெயில் தாளாமால் போட்டுக்கொண்டேன். பொள்ளாச்சி வருவதற்குள் ராமபாண சுகந்தம் கமழ்ந்தது. தி ஜாவின் கதையில் வருமே ஸ்வாமி அலமாரியில் முந்தின நாள் வைத்திருந்த ஜாதிமல்லி அரும்புகளின் மணம் மறு நாள் காலையில் மனதை நிறைத்ததும் அந்த மனைவியை இழந்த ஒரு சிறு மகளின் தகப்பனார் உடனே ஒரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரே!அப்படி ஒரு மயக்கும் நறுமணம்.
கிணத்துக்கடவு வருகையில் மலர்மணம் பித்து பிடிக்க வைத்தது. மனம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மிதந்து பறந்துவிடும் போலானதும் ,ஏஸியை அணைக்க சொல்லிவிட்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டேன்.
என்னவோ அதிசயமாக சாலையில் போக்குவரத்து மிகவும் நீர்த்திருந்தது. கற்பகம் வழியே பைபாஸ் சாலையில் சென்று நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டேன். யூ டர்ன் போடுகையில் கடந்த ஜென்னிஸ் கிளப் ஒரு மின்னலை உண்டாக்கியது. அந்த பழங்காலத்திய அரங்கிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன்.
மாலதி அரைமணி கழித்து வருவதாக சொன்னதும் பாதியில் இருந்த நைட் ஏக்ஷன் தொடரை பார்க்க நினைத்தேன் எனினும் மனம் ஒரு நிலையில் இல்லை எனவே அமைதியாக அந்த மரநிழலில் காத்திருந்தேன்.
ஜெகனும் மாலதியும் ஒரே சமயத்தில் வந்தார்கள் ஜெகன் என்னை கண்டதும் வியப்பாகினான். நான் அவனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தேன்.இனியா வந்திருந்தாள் அபி மருத்துவமனையில் கூட்டமதிகமென்பதால் பின்னர் வரவிருந்தாள்.மாலதி என்னை இறுக்க கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டதும் நானும் கட்டிக்கொண்டேன். அரங்கில் அமர்ந்த பின்னரும் மற்றுமொரு முறை மாலா என் கன்னத்தில் முத்தமிட்டு ’’இன்னிக்கு என்னவோ ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்றாள்
.
ஓரளவுக்கு கூட்டம், எனக்கு தெரிந்த வேண்டிய முகங்களை தேடினேன் யாரும் இல்லை. நிகழ்ச்சியில் நானும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் பலமுறை. அபியும் வந்துவிட்டாள் .
ஜெகன் ஜெ வின் சில நகைச்சுவைகளை நகலெடுத்தான். கூட்டத்தில் பலவயதுள்ளோரும் இருந்தோம் சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை. ஆடியன்ஸ் பல்ஸ் என்பார்களே அதை நன்றாக பார்த்து தக்கபடி பேசிய ஜெகன் அந்த கூட்டத்தில் பேசியிருக்க வேண்டாத பெரியவர்களுக்கேயான சிலவற்றை பேசியது எனக்கு உவக்கவில்லை.
அதில் நகைச்சுவை இருக்கலாம் எனினும் அத்தனை அந்தரங்கமான விஷயத்தை தன் சொந்த வாழ்வில் இணைத்து அப்படி பரஸ்யமாக்கியது எனக்கு ஒரு விலகலை அளித்தது, மாலதிக்காக முக மாறுபாடுகளை கவனமாக மறைத்துக்கொண்டேன்
நிகழ்ச்சி முடிய 9 மணியானது, பின்னர் அந்த தீப்பிடித்தது போலான போக்குவரத்து நெரிசலில் அண்ண பூர்ணா சென்று இரவுணவுக்கு பின்னர் புறப்பட இரவு 10 மணிக்கும் மேலானது. அபியை இருசக்கர வாகனத்தில் அனுப்பி விட்டு புறப்பட்டோம். பின்னாலேயே மாலதியும் இனியாவும் அவர்கள் காரில் வந்தனர்
மாலதி கார் ஒட்டிக்கொண்டு வந்தது எனக்கு பெரும் மனநிறைவை அளித்தது.
பைபாஸில் அத்தனை போக்குவரத்து இல்லை. பீளமேடு சாலையில் வானில் நிலவில்லை, சின்னியம்பாளையும் கிளைச்சாலையில் திரும்பியதும் என் இடப்பக்கம் பொன்னென முழுநிலவெழுந்தது,
நல்ல குளிர் காற்றில், வானின் அப்பெரு வெளியில் ஒரு மேகப்பிசிறோ விண்மீனோ இன்றி தன்னந்தனித்திருந்தது நிலவு. முழு நிலவு தோன்றி சிலநாட்களாயிருந்தது, நீர் பட்டுக்கலைந்த ஓவியம் போல கொஞ்சம் கலைந்திருந்தது. எனினும் கீழ்ப்பகுதியின் பிறை வடிவு மட்டும் கூடுதல் ஒளிகொண்டிருந்தது.
அத்தனை வசீகரமாக அத்தனை பேரழகுடன் அத்தனை தனித்திருந்த நிலவு பெரும் துயரளித்தது.போதாக்குறைக்கு வானொலியில் ’’செந்தாழம்பூவில்’’ பாடிக்கொண்டிருந்தார் தாஸேட்டன்.
ஷோபாவின் எளிய அழகையும் சரத்பாபுவின் கனவில் மிதக்கும் கண்களையும் அந்த மலைப்பாதை ஜீப் பயணத்தையும் நினைவில் மீட்டிக்கொண்டேன்.
கற்பகம் சந்திப்பில் மாலாவிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஞாயிறென்பதால் பல கடைகள் அடைத்திருந்தன. பல தெருக்கள் சந்தடியின்றி இருந்தன. என்னவோ ஒரு இனம்புரியாத துக்கம் நெஞ்சில் கல்லைப்போல அழுத்திக்கொண்டிருந்தது
நிலவு என்னையும் நான் நிலவையும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டே பயணித்தோம். நிலவை புகைப்படம் எடுத்துக்கொண்டேன், ஒரு மேம்பால வளைவில் கொஞ்சம் முயன்றால் கையில் அள்ளி எடுத்து விடலாம் போல நிலவு வெகுஅருகில் வந்தது.
சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வழி வருகையில் நள்ளிரவு 12 மணி ஒரு பூக்கடையின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக பலர் பூத்தொடுத்து கொண்டிருந்தனர்.
அவர்களுக்கும் மலரின் சுகந்தம் மனம் மயக்குமா, மலர் தொடுத்தலை ஒரு தொழிலாக அகாலத்தில் செய்து கொண்டிருக்கையில் அப்படியான இனிமையை மனம் உணருமா?
வால்பாறை சாலையில் ஓரிடத்தில் வரிசையான விளக்குகள் ஒளிர ஒரு அம்மன் கோவில் விழா நடந்த அடையாளங்கள் மிச்சமிருந்தன, சிம்மவாஹினியை ஒளிரும் பலவண்ண சிறு விளக்குகளால் சாலையோரம் அமைத்திருந்தார்கள் சற்றுத்தள்ளி இளமுருகனும் வேலும் மயிலுமாக குறுஞ்சிரிப்புடன் ஒளிர்ந்தான,கைகூப்பி வணங்கி இருக்கிறீர்கள் தானே தெய்வங்களே ?என்று மானசீகமாக வினவினேன் கண் நிறைந்தது. நெஞ்சின் எடையுடன் தொண்டைக்குழியிலும் ஒன்று அடைத்துக்கொண்டது.
வீட்டுக்கு வரும்வரை நிலவு தொடர்ந்துகொண்டிருந்தது. என் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறதோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்
சரி நிலவாவது இருக்கிறதே என்னுடன் இணைந்து பயணிக்க!
வீடு திரும்பும்அரசமர வளைவிலும் தொடர்ந்த நிலவு மலைவேம்பின் கிளைகளுக்குள் புகுந்து புன்னையின் மின்னிலைகளுக்கு மேல் நின்று கொண்டு விடை கொடுத்தது.
ஏன் இந்த ஒற்றை நிலவு இன்று இத்தனை துயரளித்தது?
என்னைபோலத்தான் அதுவும், தனித்தது, துயருற்றது, மனதளவில் எங்கோ வெகு தொலைவில் இருப்பது, லேசாக கலைந்திருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்திலாவது மினுங்கலை மிச்சம் வைத்திருப்பது. களைத்திருந்தேன் எனினும் இன்றைய நாளை எழுதவிரும்பினேன்.
அத்தனை அமைதியாக என் முன்னே முடிவற்று நீண்டு கிடந்த இரவை முன்வாசல் அகல்விளக்கின் சுடரொளி திரைச்சீலை அசைகையில் உண்டான இடைவெளிகளின் வழியே கீறி கீறிச் சென்றுகொண்டிருக்கிறது.
சில நாட்கள் முன்பு அம்மாவின் அண்ணனும் எனது தாய் மாமனும், சென்ற மாதம் அம்மா காலமாகும் வரை நாங்கள் பார்த்தே இராதவருமாகிய மருதமுத்து மாமன் வீட்டு திருமணத்தில் அம்மாவின் சார்பாக கலந்து கொண்டேன். எனக்கு அம்மாவின் சாயலே இல்லை நான் அப்பாவை கொண்டிருப்பவள் எனினும் அங்கிருந்த பலருக்கு நான் , 55 வருடங்கள் தன் பிறந்த வீட்டையே பார்த்திராத, வைராக்கியமாக மின்மயானம் சென்ற அம்மாவை நினைவுபடுத்தி இருப்பேன் போலிருக்கிறது.
பலர் வந்து பேசினார்கள் பலர் தொலைவில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கைகளை பிடித்துக் கொண்டும், முகத்தை தடவியும் வாஞ்சையுடன் பேசினார்கள். குற்றவுணர்வில் ஒரு சிலர் கண்ணீர் வடித்தார்கள்
நான் பொதுவாக பொன்நகைகளில் விருப்பமில்லாதவள், எனக்கான அங்கீகாரம் என் தோற்றத்தில் மட்டும் இல்லை என்று நம்புபவள் மேலும் எனக்கு அணிகலன்களில் அத்தனை விருப்பமும் இல்லை. ஆனால் அன்று நான் அங்கு அம்மாவின் சார்பாக சென்றதால் வழக்கத்துக்கு மாறாக நகைகள் அணிந்திருந்தேன் அவற்றையும் பல கண்கள் கணக்கெடுத்துக்கொண்டன.
மாமன் நடுங்கும் விரல்களால் எனக்கு நெற்றாக உலர்ந்துபோன அடுக்கு நீல சங்குமலர்காய்களை கொடுத்தார். உலர்ந்துவாடி இருந்த அக்காய்களுக்குள் விதைமணிகள் புறாக்கண்களைபோல சிறு குழிவுகளில் அமர்ந்திருந்தன. அவற்றில் உயிர் நிறைந்திருந்தது பளபபளப்பிலேயே தெரிந்தது. அவற்றில் இருந்து புதிய சந்ததிகள் இனி முளைத்து வருமாயிருக்கும்.
இரவு உணவுக்கு முன்னர் மணமக்கள் அலங்காரம் முடிந்து வர அனைவரும் நெடுநேரம் காத்திருந்தோம். என் பின்னாலிருந்த ஒரு அம்மாள் ’’என் கல்யாணத்தப்போ அதிகமா மஞ்சள் தேச்சுகிட்டேன் அவ்வளவுதான் இப்ப என்னன்னா ஆளே அடையாளம் தெரியாம பூசி மெழுகி பொம்மையாட்டம் பண்றதுக்கு இத்தனை நேரம் ,கொள்ளை காசு’’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.
சுமார் 2 மணி நேரமானபின்னர் மணமகள் இளஞ்சிவப்பு உடையில் பார்பி பொம்மைபோல மேடைக்கு வந்தார்,
அதன்பின்னர் அரைமணி நேரம் கழித்து மணமகன் வந்தார், காத்திருந்த இடைவெளியில் என் அருகில் இருந்த ஆத்தா என்னிடம் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு அழைப்பு வந்தது, நான் என் அலைபேசியை எடுத்து பேசிவிட்டு அணைத்தேன். என் அலைபேசியின் லாக் ஸ்கிரீனை பார்த்த ஆத்தா அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ’’யாரு கண்ணு, மகனா? என்றார் நான் திகைத்து திடுக்கிட கூட சமயம் கொடுக்காமல் மூத்தவனா இளையவனா? என்றார்
நான் சமாளித்து பதில் சொல்லமுயற்சிப்பதற்குள் ‘’பின்னர் எங்கே காட்டு’’ பாப்போம் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்தேன் நிச்சயம் நான் அந்த ஸ்கிரீனில் வைத்திருக்கும் நபரை இங்குள்ளோருக்கு , குறிப்பாய் இந்த ஆத்தாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவே தைரியமாக எடுத்து காட்டினேன்.
ஆத்தா பார்த்துவிட்டு ’’ மூத்தவனா, ராமராஜ் வூட்டு கலியாணத்துக்கு வந்தப்போ இத்துணூன்டு கீரைத்தண்டாட்டம் இருந்தான் இப்போ வெள்ளைகாரனாட்டம் இருக்கானே? என்றார். நான் சிரிப்பை மென்று விழுங்கினேன்
அவரே தொடர்ந்து இப்போ என்ன செய்யறான்? என்றார். ’’வெளிநாட்டில் படிக்கறான்’’ என்றேன்.
’’ஆ அதான் அமெரிக்கா போன பின்ன மீசை வச்சுகிட்டா இருப்பான், , சரி இருக்கட்டும் விடு பையன் நல்ல மூக்கும் முழியுமா இருக்கான் நம்ம சனத்தில் இவனுக்கு பொண்ணே இல்லை கேட்டுக்கோ’’ என்றார்
பொண்ணா இவருக்கா ஏற்கனவே 4 கல்யாணம் பண்ணிகிட்டவராச்சே என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அமெரிக்கா இல்லை என்று சொல்ல நினைத்து அதை சொல்லவேண்டாம் என் விட்டுவிட்டேன். ஆத்தாவிற்கு வெளிநாடென்றால் அமெரிக்கா அதை ஏன் மாற்றனும்?
ஆத்தா தொடர்ந்து நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்து ’’நம்ம ஏரிப்பட்டி பாப்பாத்தி இருக்காளே, உனக்கு நங்கையாதானே,அவங்க வகையில் ஒருத்தி அமெரிக்காவில் இருக்கா, என்னமோ பெரிய படிப்பு படிக்கறாளாம், மூக்கும் முழியுமா நல்லத்தான் இருப்பா, நிறந்தான் மட்டு எதுக்கும் சாதகம் வாங்கட்டா ? என்றார்.
நான் ’’இல்லீங்க ஆத்தா அவன் இன்னும் படிச்சுட்டு இருக்கான் 2 3 வருஷம் போகட்டும்’’ என்றேன் ஆத்தா விட்டால் அப்போதே நிச்சயதார்த்தம் கூட செய்து முடித்திருப்பார்
லாக் ஸ்கிரீனில் இருக்கும் அந்த ஹாலிவுட் நாயகன் பக்கவாட்டில் திரும்பி சிரித்துகொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமீபத்தில்தான் என் அலைபேசியில் தருண் வைத்து கொடுத்தான், கல்லூரி காலத்திலிருந்து நான் அவரின் ரசிகை.ஆத்தா சொன்னதுபோல மூக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான் அந்த நடிகருக்கு
நல்லவேளை ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் புதிய பாதைக்காரரை ஆத்தா பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இவனாரு இளையவனா? என்று கேட்டு அவனுக்கும் ஒரு பெண்பார்த்திருப்பார்
2005ல் ஒரு வயதான தருணையும் சரணையும் அழைத்துக்கொண்டு விஜியின் திருமணத்தின் பொருட்டு ஒரேயடியாக இந்தியா வந்த பின்னர் அவனை பள்ளியில் சேர்த்தோம். பள்ளி அவனுக்கு எட்டிக்காயாகவே இருந்தது. பள்ளியில் அவன் அலறும் குரல் எனக்கு அடுத்த தெருவை தாண்டும் வரை கேட்கும், நானும் கண்ணீருடன் வீடு வருவேன்.அவனுடன் சேர்ந்து புத்தகங்களுக்கு மணிக்கணக்காக அட்டை போடுவது பளளி பெற்றோர் ஆசிரிய கூட்டங்களுக்கு கல்லூரியில் அனுமதி வாங்கி அடித்து பிடித்து போவதுமாக சரணுடன் நெருக்கமாக இருந்த நாட்களவை
இந்த வேடசெந்தூர் வீட்டை கட்டிக் கொண்டிருக்கையில் கல்லூரி முடிந்து பேருந்தில் மாலை மூவருமாக பொள்ளாச்சியில் இருந்து வேடசெந்தூர் வந்துவிட்டு பின்னர் திரும்ப இரவு பொள்ளாச்சி வருவோம். பொள்ளாச்சி வீட்டில் இருக்கவே முடியாதபடி நெருக்கடிகள் அளித்தவர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்லுவேன் அத்தனை நெருக்கடிகள் இல்லாதிருந்தால் இந்த வீட்டை கட்டி இருக்கவே மாட்டேன்.
அப்படி ஒருநாள் வேடசெந்தூர் வந்துவிட்டு காரில் விஜியுடன் 14 கி மீ கடந்து பொள்ளாச்சி சென்று, வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய பின்னர் அத்தனை தூரம் என்னருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னருகில் நின்று கொண்டே பயணித்த சரண் காலடியில் இருந்த ஒரு பெரிய பாம்பொன்று சரேலென வெளியே சீறி பாய்ந்தது. அது விஷம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் பார்க்க சந்தர்ப்பமே வாய்க்க விலை.அது சரணை எதுவும் செய்யாமலிருந்தது தெய்வாதீனம்தான்.
விஜி.வண்டி ஓட்டுகையில் அதை பார்த்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருந்தன
அதுபோலவே ஏதோ ஒரு பரீட்சைக்காக சென்னைக்கு அவனையும் அழைத்துக்கொண்டு போயிருக்கையில் அபயம் அத்தையின் வேளச்சேரி வீட்டில் முன்பக்கம் சரண் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தான்.
எதற்கோ அவனை நானழைத்து, அவன் அங்கிருந்து விலகி என்னை நோக்கி நடக்க துவங்கிய மறு நொடி போர்டிக்கோவில் மேல்பக்கம் பதித்திருந்த கனத்த ஓடுகள் சில கீழே விழுந்து நொறுங்கின.
அங்கேதான் சரண் அத்தனை நேரம் நின்றிருந்தான்.எனக்கு திகைப்படங்கவே நெடு நேரமாயிற்று
அவனுடன் எதோ தெய்வனுக்ரஹம் இருக்கிறது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அவனுடன் மட்டுமல்ல ஆதரவற்றவர்களுடன் எப்போதும் அறியாத்தெய்வமொன்று எப்போதும் துணையிருக்கும், திக்கற்றவர்களுக்கு தெய்வமன்றி வேறு என்ன துணையிருக்கும்? எங்களுக்கு இருந்தது, இருக்கிறது. இருக்கும்.
சரண் சாந்தி பள்ளியில் படிக்கையில் 6 அல்லது 7ல் என்று நினைக்கிறேன். அவன் பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது மாலை வரும்படி. என்னவாக இருக்கும் எதேனும் புகரா என்று யோசித்தபடியே சென்றேன்
முதல்வரின் அறையில் அமரவைத்து சரண் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்ததற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு தங்கப்பதக்கமும் கணிசமான ஒரு தொகைக்கு காசோலையும் வந்திருந்தது
அந்த போட்டித்தேர்வுக்கும் அதன் பின்னரான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்குமே அலட்டிக்கொள்ளாமல் வீட்டில் தயாராகாமல்தான் சென்றான் பின்னர் மற்றொரு தேசிய அளவிலான போட்டியில் அதே வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் சிறந்த மாணவன் என்னும் சான்றிதழ் சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில் வைத்து ஒரு பெரிய விழாவில் ஒய் எஸ் ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் எப்போதும் இருக்கும் சின்மயா பள்ளியின் ஆகச்சிறந்த கௌரவ் விருதும் காசோலையும் 12 ம் வகுப்பில் சரணுக்கு வழங்கப்பட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழக சான்றிதழையும் தங்கப்பதக்கதையும் வைத்துக்கொண்டு சரண் நின்றிருக்கும் புகைப்படத்தை தினமலர் அலுவலகத்தில் கொடுக்க மகாலிங்கபுரம் வீதிகளில் நான் தன்னந்தனியே நடந்து சலித்து அலுவலகத்தை கண்டுபிடித்து அதை அடுத்த நாள் நாளிதழ்களில் வரவழைத்தது.
பின்னர் தருணும் அவனுமாக வாங்கிய தங்கப்பதக்கங்கள் எல்லாம் ஒரு வட்டப் பெட்டியில் கொட்டிக்கிடக்கின்றன. சாத்வீகியாக சாந்த ஸ்வரூபியாக இருந்த சரணை குறும்பனாக மாற்றிய பெருமை அவன் இளவல் தருணையே சேரும்.
தருணும் சரணுக்கு இணையாக படிப்பில் சுட்டி அவனை தினம் மாலை பள்ளியில் கண்டுபிடித்து காரிலேற்றுதே பெரும்பாடு.
சரணை குறித்த பதிவென்பதால் இதில் தருணை குறித்து அதிகம் எழுதவில்லை அண்ணன் மீது மாளாநேசம் கொண்டவன் தருண், அவன் பள்ளிக்கு செல்ல துவங்கியிருக்காத, சரண் கேஜி வகுப்புகளுக்கு சென்ற காலங்களில் தினம் அண்ணன் வரும் ஆட்டோவை மாடியிலிருந்து பார்த்ததும் குதித்து கும்மாளமிடுவான்.
மாலை வீட்டுக்கு வரும் அவனுக்கு ஷூ சாக்ஸ் கழட்டி பணிவிடை செய்வது தினம் தினம் தருந்தான்,சரணுக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் நான் மருத்துவமனை செல்ல ஆட்டோவுக்கு போன் பண்ணுகிறென் என்றால் உடனே குட்டி தருண் ஓடிபோய் சரணுக்கு இரண்டு செட் உடை, தண்ணீர்பாட்டில் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து வைத்து மருத்துவமனைக்கு தயாராகிவிடுவான். லகஷ்மணன் கூட ராமனுக்கு இத்தனை அனுசரணையாக இருந்திருக்க மாட்டான்
சரணை பள்ளியில் ஒரு பையன் அடித்து விட்டான், சரண் தேமே என்று அடி வாங்கிக்கொண்டு வந்தான், ஆனால் மறுநாள் அண்ணனை அடித்தவனை தருண் அடித்து ஒரு புதருக்குள் தள்ளிவிட்டு அந்த விசாரணைக்கு நான் பள்ளிக்கு விடுப்பெடுத்து செல்ல வேண்டி வந்தது.
கார் வாங்கிய பிறகு மாலை வேளைகளில் நானே அவர்களை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன் கடைசி பீரியட் வகுப்பு முடிந்ததும் சாக்பீஸ் படிந்த கைவிரல்களும் கலைந்த தலையுமாக பள்ளிக்கு வரும் என்ன பார்த்து அங்கே முன்கூட்டியே வந்து அமர்ந்து குடும்ப கதை பேசிக்கொண்டும் டப்பர் வேர் வியாபாரம் செய்துகொண்டும் இருக்கும் மேல்தட்டு பெடிக்யூர் மெனிக்யூர் செய்த ஒப்பனை கலையாத அம்மாக்கள்’’ இதான் சரண் தருண் அம்மா’’ என்று என்னை காட்டி உயர்வாக பேசிக்கொள்ளுவர்கள்.
பெற்றோராசிரிய கூட்டங்களில் மூன்று பள்ளிகளிலும் இருவரைக்குறித்தும் ஒருபோதும் ஒரு புகாரும் சொன்னதில்லை.இருவரும் 12 ம் வகுப்பு வரைக்கும் எந்த ட்யூஷனுக்கும் சென்றதில்லை.
இருவரும் மிக சிறுவர்களாக இருக்கையில் தெருமுனையில் மூவருமாக நின்று போக்குவரத்தை மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்போம். கார் ஒருத்தருக்கு, பஸ் ஒருத்தருக்கு, பைக் ஒருத்தருக்கு என்று எங்களுக்குள் பிரித்துக்கொண்டு யாருடைய வண்டி அதிகம் கடந்து செல்கிறதோ அவர்கள் வெற்றியாளர்கள் என்னும் விளையாட்டு விளையாடுவோம். அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அனைவராலும் கைவிடப்பட்டிருந்த புறக்கணிக்கப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது எனினும் எங்களின் அந்தரங்க வாழ்வை நாங்களே அன்பினால் நிறைத்து ததும்பிக்கொண்டோம்.
பள்ளி விடுமுறைகளும் கல்லூரி விடுமுறைகளும் வேறு வேறு சமயங்களில் இருக்குமென்பதல் மகன்களை பெரும்பாலும் வீட்டுக்குள் விட்டு கதவை பூட்டிவிட்டு செல்வேன் ஹால் முழுக்க செய்தித்தாள்களை பரப்பி அதில் உணவை எடுத்து வைத்திருப்பேன் மாலை திரும்ப வந்து மூவருமாக வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பார்ப்போம்.
அப்போதிலிருந்து கல்லூரி பள்ளி விடுதிக்கு போகும் வரை சமையல், துணி துவைத்து காயப்போடுதல், பாத்திரம் தேய்த்தல், அம்மிக்கல்லில் அரைத்தல், தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் என்று எதுவாகினும் மூவரும் சேர்ந்தே செய்வோம், எங்களுக்குள் நல்ல புரிதலும் அதனாலேயே உண்டாகியிருந்தது.
அந்த நாட்கள் கனவு போல கலைந்து மறைந்து போய்விட்டது, அக்காலத்தை நான் இப்போதும் நினைத்து ஏங்குகிறேன். பள்ளிக்கு அவர்கள் வேனில் செல்ல துவங்கிய போது. அவர்களை அனுப்பி விட்டே நான் கல்லூரிக்கு புறப்படுவேன். பள்ளியின் மஞ்சள் நிற வேன் கண்ணுக்கு தெரியும் வரை தாத்தாரப்புச்சி மரத்தின் புடைத்த வேரில் அமர்ந்து வெண்முரசு கதை கேட்டபடி காத்திருப்பார்கள்.
சின்மயா பள்ளியில் சரணுக்கு துவக்கக்தில் விருப்பமின்றி இருந்தது, அக்காலத்தில் ஏகத்துக்குமழுகை.பின்னர் சரியாகி சின்மயா இப்போது அவன் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டிருக்கிறது.
மாதா மாதம் அவர்களை காணச் செல்லும் ஞாயிறுகளில் அதி்காலை எழுந்து அவர்களுக்கு பிடித்ததை சமைத்து ஓட்டமாக ஓடி பள்ளிக்குச் செல்வேன். கோவை நகருக்கு சிலநாட்களில் செல்வதுண்டு, பலநாட்கள் பள்ளிக்கு வெளியே சாலையோரம் இருந்த கொடிக்கம்ப படிகளிலமர்ந்து வெண்முரசு கதையை நாள்முழுக்க கேட்டுவிட்டு உணவை காரில் சாப்பிட்டு விட்டு மாலை பள்ளியில் திரும்ப கொண்டு விட்டு விட்டு இருக்கிறேன் வெண்முரசு மகன்களுடன் கூடவே வளர்ந்துவந்தது.
பள்ளி முடித்து கல்லூரிசேர்க்கைக்கு அவனுக்கு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தது. வேலூர் வெய்யில் என்பதால் எனக்குஅவனை அங்கு அனுப்ப பிரியமில்லை. ஆரவல்லி மலைத்தொடரருகில் ஒரு பல்கலைக்கழகத்தில் உபகாரச்சம்பளத்துடன் அனுமதி கிடத்தது அந்த நேர்முகத்தில் சரணிடம்’’ நீ வாங்கிய விருதுகளில் எதை உயர்வாக சொல்லுவாய்’’ என்னும் கேள்விக்கு நான் எந்த வெற்றியை அடைந்தாலும் அது என் அம்மாவின் முகத்தில் உருவாக்கும் புன்னகைக்கு மேலான விருதை இன்னும் தான் பெறவில்லை என்று சொன்னான்.
பல இடங்களில் இடம் கிடைத்தும் அம்ரிதா ஒரு பெருங்காட்டைப்போல் இருந்ததால் அங்கேயே சரண் சேரட்டும் என விரும்பினேன் .
அம்ரிதா கல்லூரியில் விடுதியிலிருந்து வாரமொருமுறை சரண் வருகையில் நான் பேருந்தில் அவன் வரும் வரை தெருமுனையில் காத்திருப்பேன் அவன் வந்ததும் அவனது பையின் கைப்பிடியை இருவரும் ஆளுக்கொன்றாக பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வீடுவருவொம் மீண்டும் ஞயிறு பேருந்துநிலையம் வரை அவனுடன் பேசிக்கொண்டு சென்று 3.30 மணி பேருந்தில் அனுப்பி வைப்பேன்
சரண் என்னைப் போலில்லை நான் எப்போதும் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவள் ஆனால் சரண் தர்க்க ரீதியாகவே எல்லாவற்றையும் பார்ப்பவன். மிகுந்த ஏழை மனம் கொண்டவன் ஆனாலும் வரம்புகளுக்குட்பட்டே அவனது மனம் இயங்கும் இதை பல முறை கண்டிருக்கிறேன்.
அவன் படித்த அம்ரிதா பல்கலைக்கழகத்தில் அசைவம் வளாகத்தில் எங்குமே உண்ணப்படக் கூடாதென்னும் கடுமையான நெறி இருந்தது.ஆனாலும் சில மாணவர்கள் திருட்டுத்தனமாக அசைவ உணவுகளை கொண்டு வந்து விடுதியில் சாப்பிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பருவம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதும் நடந்தது. சொந்த வாகனங்களில் வருபவர்களை சோதைனையிடமாட்டார்கள் என்பதால் அப்படி வரும் நண்பர்களின் வாகனங்களில் அசைவ உணவுகளை விடுதிக்குள் கொண்டு செல்வதும் நடக்கும்.
நானும் சரணும் ஒரு ஞாயிறு மாலை விடுதிக்கு சரணை கொண்டு விட போயிருந்தபோது நுழைவு வாயிலிலேயே இருக்கும் ரயில்வே கிராஸ் அடைக்கப்பட்டிருந்தது,அப்போது சரணுக்கு பரிச்சயமில்லாத ஒருவன் வந்து சரணிடம் தன்னிடம் அசைவ உணவு இருப்பதாகவும் காரில் ஏறி விடுதி வரை வரட்டுமா என்றும் கேட்டான் சரண் உடனடியாக அதில் அவனுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான் அந்த சரண் வயதே இருக்கும் பையன் விலகி சென்று விட்டான். எனக்கு என்னவோ மனக்கஷ்டமாகி விட்டது ’’ஏண்டா அவன் எப்படியும் சாப்பிட போறான் நம்ம காரில் கொண்டு போய் இறக்கி விட்டா என்ன’’ என்றேன்.
’’நாம ஒரு அமைப்புக்குள் இருக்கோம்னா அதன் நெறிகளுக்கு கட்டுப்பட்டு உடன்பட்டுத்தான் அதுக்குள்ள இருக்கனும். அம்ரிதாவில் யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லலை அந்த கேம்பஸில் சாப்பிடாதீங்கன்னுதான் சொல்லறாங்க. ஞாயிற்றுக்கிழமையே அவன் வரனும்னு இல்லை அவன் நல்லா அசைவம் சாப்பிட்டுட்டு திங்கட்கிழமை காலையில் கூட 9 மணிக்கு முன்னாடி வந்துருக்கலாம், திருட்டுத்தனமா கொண்டு வந்து விடுதியில் சாப்பிடறதும் மத்தவங்களுக்கு இப்படி சாப்பிட கொடுக்கறதும் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது, இங்கு சொல்லப்படும் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு மாறா ஒருத்தன் நடக்கும் போது அதில் நானும் பங்கெடுத்துக்கனும்னு அவசியம் இல்லை. நான் அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டேன் மேலும் என் பேர் யாரு எது சொன்னாலும் கேட்டுக்கற லோகமாதேவியும் இல்லை சரண் ‘’ என்றான் அவன் சொன்னதின் நியாயங்கள் பிறகு எனக்கு புரிந்தது.
பள்ளியில் ஒரு பெரும் செல்வந்தரின் மகன் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பள்ளியை விட்டு நீக்கப்பட்டபோதும் அவன் செல்வசெருக்கில் செய்த அந்த தவறை சரணால் மன்னிக்கவே முடியவில்லை. இப்படி பல விஷயங்கள் அவன் ஆளுமையை எனக்கு உணர்த்தி இருக்கின்றன.
சரண் வேர் கொண்டவன் தருண் சிறகு கொண்டவன். ஐரோப்பா செல்லும் முன்பு விமான நிலையத்தில் அவன் கண்ணிருடன் கண்ணாடி தடுப்பிற்கு அப்பால் நின்ற சித்திரம் கண்ணிலேயே இருக்கிறது.
இன்னும் சில வருடங்கள். பின்னர் அவன் நல்ல குடும்ப வாழ்வில் இருப்பதை பார்த்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.
சரன் தருண் திருமணங்களின் போது விழாவிற்கு வரும் உறவினர்களின் பார்வையில் படும்படி மலர்களும் ரிப்பனும் அமைக்கப்பட்டிருக்கும் உயர்ரக காரும், இடுப்பிலும் கையிலும் ஒட்டியாணம் வங்கியுமாக பொன்னால் ஜொலிக்கும் மருமகளும் எனக்கும் சரணுக்கும் தருணுக்கும் வேண்டியதில்லை காரும் பணமும் வசதியும் எல்லாம் இருந்தும் தோல்வியுற்ற பல தாம்பத்தியங்களை மகன்களும் என்னுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை தாயின் பரிவுடன் அன்புசெலுத்தி பார்த்துக்கொள்ளும் அவர்களைப்போன்ற ஆண்மகனின் முழு அன்புக்கும் பாத்தியமான,அவர்களின் மனதுக்குகந்த எளிய குடும்பப் பெண் போதும்.
பல வருடங்களுக்கு முன்னர் சரணை மசானிக் மருத்துவர் பரிசோதித்து அவன் நல்ல இயற்கை சூழலில் ஓடியாடி விளையாடினால் போதும் என்று சொன்ன பின்னர் தான் இந்த வீட்டைகட்ட முனைத்தேன். இங்கு வந்ததிலிருந்து படிப்படியாக குணமாகி ஆரோக்கியமான இளைஞனாக இன்று வளர்ந்து 23 வயதை தொட்டிருக்கிறான். சரணையும் தருணையும் வளர்த்திய காலத்து கஷ்டப்பாடுகளனைத்துமே இப்போது கனவென மாறிவிட்டன.
சரண் 11ல் படிக்கையில் நான் பாண்டிச்சேரிக்கு ஒரு சிறுகதை பட்டறைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதன்பொருட்டு அவன் தலையிட்டு பேசத்துவங்கிய பின்னர் என் பொறுப்பை, என் வாழ்வை முழுக்க அவன் கைகளில் எடுத்துக்கொண்டான். அன்றிலிருந்தே என் சுதந்திரத்தை என்னால் உபயோகிக்க முடிந்தது.எல்லைகளை தாண்டாமல் அவற்றை உணர்ந்து அதற்குள் என்னால் இப்போது விரும்பும் உயரம் வரை பறக்க முடிந்திருப்பது சரண் மற்றும் தருணால் மட்டுமே.
நான் மகன்களுக்கு உயிர்கொடுத்தேன் என்றால் அவர்களும் என்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து என்னையும் மீண்டும் புதிதாக பிறக்க செய்திருக்கிறார்கள் சரணும் தருணும் எனக்கு மகனும் அன்னையும் தந்தையும் நண்பனுமானவர்கள். இருவருக்கும் என் அன்பும் ஆசிகளும் எப்போதும்.
சரணுக்கு நான் சொல்லி ச்சொல்லி வசந்த சார் மீது அளவற்ற மதிப்பும் பிரியமும் இருந்தது. இடையிடையே இந்தியா வரும்போதெல்லாம் தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளின் பொருட்டொ சரணுக்கு ஊசி போட வேண்டி வந்தால் ஒருபோதும் வசந்த அதை செய்ய மாட்டார் ’செல்ஸ்’ என்று குரல் கொடுப்பார் செலினாதான் போடுவார்கள்.சரணுக்கு இன்றும் ஊசி என்றால் குலை நடுங்கும். ஒரு முறை மைசூரு சென்று வந்த போது வசந்த சாருக்கென சிறு கள்ளிச்செடி வாங்கி வந்து பரிசளித்தான் அதையும் அவன் பரிசளித்த ஒரு குட்டி பொம்மையையும் அவர் தனது மருத்துவமனை மேசையில் பல காலம் வைத்திருந்தார்.
அபுதாபியில் ஒருநாள் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்னின் சகோதரியின் கணவர் காலமாகி விட்டார் என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்கு அந்த பெண் என்னை ’சேச்சி’ என்று கட்டிக்கொண்டு கதறியபோது சரண் அரண்டு போய் ’’என்ன என்ன’’ என்று அழுகையுடன் கேட்டான். ’’இந்த அத்தையின் சொந்தக்காரர் செத்துப்போயிட்டாரம் சரண்’’ என்று நான் சொன்னதும் அவன் என்னைக் கட்டிக்கொண்டு ’’அதான் வசந்த் டாக்டர் இருக்காரில்ல அவர் காப்பாத்துவாரு காப்பாத்துவாரு, அழுகாதே’’ என்று வீறிட்டான். இதை என்றைகாவது வசந்த் சாரிடம் சொல்லவேண்டும் என்றிருக்கிறேன்.
ஒருமுறை ஜெயந்தி கிருஷ்ணசாமி தம்பதிகளுடன் முஸாஃபாவிலிருந்து அபுதாபிக்கு சென்றிருக்கையில் இரவில் கார் கதவின் கண்ணாடி வழியே பிறைநிலவை பார்த்தபடி ’’அம்மா பாதி நிலா இங்கே இருக்கு மீதி நிலா எங்கே இருக்கு’’? என்றான் கவிதையாக.
சுட்டி விகடனில் வரும் சின்ன சின்ன போட்டிகளை அவனுக்கு சொல்லி புரியவைத்து, அவன் சொல்லும் பதில்களை விகடனுக்கு எழுதிப் போடுவேன் அப்படி ஒரு புதிர்ப்போட்டி பதிலுக்கு அவனை ’’குட்டி ஷெர்லக் ஹோம்’’ என்று சொல்லிய ஒரு சான்றிதழ் வந்தது.
விகடன் படித்துமுடித்துவிட்டால் மேலும் கதைகள் கேட்பான் எனவே நானே இட்டுக்கட்டிய கதைகளை தொடர்ந்து சொல்லுவேன். தட்டிக்கொடுப்பதையும் கதையையும் எப்போது நிறுத்தினாலும் விழித்துக்கொண்டு மீண்டும் சொல்லச் சொல்லுவான்.
கணினியில் எளிய விளையாட்டுக்களை என்னுடன் சேர்ந்து என் கைகளின் மீது அவன் சிறு கையை வைத்து அவனும் விளையாடுவான். கணினி அவனுக்கு மிக பரிச்சயமானதும் பிடித்தமானதுமாகிக்கொண்டிருந்தது.
அருகிலிருந்த ஏர்போர்ட் பார்க்குக்கு மாலைவேளைகளில் அவனை அவன் தோழிகள் சியா சிது அல்லது நவ்யா ஆகியோரின் குடும்பத்துடன் அழைத்துச் செல்வதுமுண்டு.சியா சிது குடும்பத்தினர் மாப்ளா முஸ்லிம்கள் எங்களுடன் வீட்டை பகிர்ந்துகொண்டிருந்தனர். என்னை ’மூத்தம்மே’ என்றழைக்கும் சியாவுக்கும் சரணுக்கும் மிகபிடித்தமான விளையாட்டு வீட்டில் இருக்கும் பெரிய காலி அட்டைப்பெட்டிகளுக்குள் அமர்ந்துகொள்வது.
முஸாஃபாவில் அப்போதுதான் அமைந்திருந்த கேரிஃபோர் பிரம்மாண்ட மாலுக்கு முதன்முறை சென்றிருக்கையில் அங்கிருந்த கூட்டத்தில் சரண் தொலைந்து போனான் வளாகம் முழுக்க அனைத்து தளங்களிலும் அறிவிப்பு செய்த பின்னர் எங்கிருந்தோ அலமாரிகளுக்கிடையில் விளையாடிக்கொண்டிருந்தவனை அரபி ஒருவர் கண்டுபிடித்து கொண்டு வந்தார்.
அதே கேரிபோரில் தள்ளுவண்டியில் முன்பக்க கூடையில் சரண் அமர்ந்துகொண்டிருந்த ஒருநாளில் அமைதியாய் கூடையில்நான் எடுத்துப்போடும் பொருட்களை பார்த்தபடி வந்துகொண்டிருந்தவன் ஃபேர் அண்ட் லவ்லி எடுத்துபோடப்பட்டதும் அலறி ’’இது வேண்டாம் வேண்டாம்’’ என அழதுவங்கினான்
அவனை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவில்லை ’’இது அம்மா முகத்துக்கு போடறதுக்குடா’’ என்றபோது வீறிடுதல் இன்னும் அதிகமானது.. பின்னர் அதை எடுக்கவேயில்லை.
அடுத்த வெள்ளியன்று மாலை சன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கையில் ஃபேர் லவ்லி விளம்பரம் வந்தது. ஆறே நாட்களில் சிகப்பழகு என்னும் அந்த விளம்பரப்பெண்ணின் முகமாறுபாடுகள் அடுக்கடுக்காக காண்பிக்கப்பட்டபோது சரண் அச்சத்துடன் ’’அம்மா பாத்தியா அந்த க்ரீம் போட்டா உனக்கும் இப்படி நிறைய மூஞ்கி வந்துரும் அப்புறம் உன்னை பார்த்தா எனக்கு பயமாயிரும்’’ என்றான்.
அவன் பிரியதுக்குரியவளாக ரீமா சென் இருந்தாள். சாப்பிட அடம்பிடிக்கும் சரணுக்கென்றே அவளின் ’’மே மாதம் 98ல்’’ பாடலை பதிவு செய்து வைத்திருந்தேன். ரயில் நிலையத்தில் ரீமா சென் கனத்த தொடைகளை தட்டிக்கொண்டு குதித்தாடதுவங்கினால் சரணும் வாயைத்திறந்து பார்ப்பான் மட மடவென்று சாதம் ஊட்டி முடித்துவிடுவேன்
இன்று சரணின் 23 ம் பிறந்த நாள் காலம் எத்தனை வேகமாக ஓடி விட்டது என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. அபுதாபியில் உஷா என்னும் அரபி பேசத்தெரிந்த அண்டை வீட்டுப் பெண்ணுடன் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு டாக்ஸியில் வீடு திரும்பிய நாள் நேற்று போல நினைவிலிருக்கிறது.
சரண் வயிற்றில் இருக்கையில் அவனுக்கு போஷாக்கான உணவுகள் என் வழியே அளிக்க முடிந்ததில்லை என்னும் மனக்குறை இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும். இளம் வயதில் அவனது உடல்நிலை சரியில்லாமல் போகும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்லும்.
தாம்பத்யத்தின் துவக்க கால சிடுக்குகளில் சிக்குண்டு இருந்த காலத்தில் சரண் உருவாகி இருந்தான். படிப்பு, வேலை ,கனவுகள், உற்றார் உறவுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு கண்காணாத பாலை நிலத்துக்கு வந்த அதிர்ச்சியே விலகாத நிலையில் கர்ப்பம் அதுசார்ந்த உடல் கோளாறுகள் அதீத பசி, சமைக்க முடியாமல் இருந்தது உதவிக்கு மட்டுமல்ல மனம் விட்டு பேசவும் யாரும் அருகில் இல்லாதது பொருளாதார சார்பு, இப்படி பல சிக்கல்கள் என்னை சூழ்ந்திருந்தன. வார இறுதிகளில் வீட்டில் இருப்பவர்களுடன் பேசுகையில் எனக்கு அவர்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் எந்தபூகாரும் இன்றி என்னை எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொடுthதுக்கொண்டு வாழத்துவங்கி இருந்தகாலமது
வயிற்றில் சரண் துடிப்பை உணர ஆரம்பித்த நாட்களில் நான் மெல்ல மெல்ல மாறினேன், எனக்குள் ஒரு உயிர் வளர்வது பெரும் நம்பிக்கையை பொறுப்பை பிடிப்பை வாழ்வின் மீதான விருப்பை மீண்டும் அளித்தது.
எனக்கு என்னை நம்பி என் வயிற்றில் ஓருயிர் என்பதுவும் என்னால் ஒரு உயிரை தரமுடியும் என்பதுவும் பெரும் உத்வேகத்தை அந்த சிக்கலான சமயத்தில் அளித்தது
சரணுக்கு நானும் அவன் எனக்கும் பரஸ்பரம் உயிர்கொடுத்துக்கொண்டோம் என்றும் சொல்லலாம்..
அச்சமயத்தில் எனக்கு மிகth தேவையாயிருந்த ஓய்வும் பொருளாதார காரணங்களுக்காக உடன் தங்க அனுமதித்திருந்த மற்றொரு குடும்பத்தினால் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. கொடுங்கனவு போலான நாட்கள் அவை.
கிருஷி விஞ்ஞான் கேந்திரா வின் மூலம் கிடைத்திருந்த சணல் ஆய்வு மையத்தின் சயின்டிஸ்ட் பணியை குடும்பத்தினரால் இழந்து கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து , அதையும் கல்யாணத்தின் பொருட்டு ராஜி வைத்துவிட்டு வந்த இழப்பின் வலி எப்போதும் இருந்த நாட்கள் அவை. கல்யணத்துக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த பிறகு எழுதவும் துவங்கி இருந்தேன். ஆதித்தனார் நினைவு போட்டிக்கென சரக்கொன்றை என்னும் முழுநாவலை கைப்பட எழுதி முடித்து அதை தட்டச்ச காத்திருந்தேன். நான் இழந்த பலவற்றிலதுவும் ஒன்று.
கண்ணில் பசுமையே தட்டுப்படாமல் உள்ளும் புறமும் வெறிச்சோடியிருந்த பாலைவாழ்வு. மணற்புயல் ஏஸி அமைப்பின் வழியே வீடங்கும் அடிக்கடி மண்ணை நிறைத்துவிட்டு போகும் அதைச் சரிசெய்யக்கூட தோன்றாமல் மலைத்து போய் களைத்தமர்ந்திருப்பேன்.
குமட்டி வாயுமிழ்ந்துவிட்டு மீண்டும் சமைக்க வருவேன் இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கெல்லாமே உண்டாவதுதான் எனினும் எனக்கு அருகில் உதவிக்கென யாருமற்ற நிராதரவான நிலையென்பதால் எல்லாமே அதீதமாக இருந்தது. அப்போது எனக்கு அன்புடன் உதவி செய்ததாக நான் நினைத்த ஒரு பெண் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் தெரிய வந்தபோது தருண் பிறந்திருந்தான். அவள் வீட்டில் நான் கர்ப்ப காலத்தில் ருசித்து உண்ட உணவின் ஒவ்வொரு பருக்கையும் மனதில் செரிக்கவே இல்லை.பிரசவத்துக்கு இந்தியா வந்தேன்.
விமான பயண தகுதியையும் கடந்து 9 மாதங்கள் முடிந்த நிலையில் போலியாக ஒரு பயண தகுதி சான்றிதழ் வாங்கி ஒரு வழியாக இந்தியாவுக்கு வர விமானபயணம் உறுதியானது. அங்கு சென்றதிலிருந்து வியர்வை சுரக்காமல் கர்ப்பகால பருமனும் சேர்ந்து எடை கூடி விட்டிருந்தது ஆளும் உருமாறியிருந்தேன். அந்த 9 மாதங்களில் எனக்கு நிகழ்ந்தது ஆளுமைச்சிதைவென்று இப்போது நிதானத்தில் இருக்கையில் அறிய முடிகின்றது.
என்னையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் யாரோ எதோ செய்துவிடுவார்கள் என்னும் அச்சம் ஒவ்வொரு நொடியும் பீடித்திருந்தது யாரும் சாப்பிட எதாவது கொடுத்தனுப்பினால் அவற்றை ரகசியமாக சின்க்கில் கழுவி ஊற்றி விடுவேன்.
கடும் பசியும் சில குறிப்பிட்ட உணவுகளின் பேரிலான பெரு விருப்பமும் அவற்றை உண்ண முடியாத ஏக்கமுமாக கழிந்த அந்த கர்ப்பகால ஆதங்கம் இன்னும் இருக்கிறது.
எப்பாடு பட்டாவது குழந்தையை, துர்கா என்று நான் பேர் வைத்திருந்த மகளை காப்பாற்ற வேண்டும் என்று சதா நினைப்பிருக்கும். இந்தியாவுக்கு பயணிக்கையில் அபுதாபி வந்து ராகவன் அகல்யா வீட்டில் தங்கி இருந்தேன் ஒரிரவு. அவர்களது சிறுமகனின் விளையாட்டு கார் பொம்மைகள் இனம்புரியா கிளர்ச்சியை உண்டாக்கின அச்சமயத்தில்
காலை விமானத்தில் தன்னந்தனியே வயிற்று குழந்தையை தடவிக்கொண்டு அமந்திருந்தேன். அம்மா வீட்டுக்கு வருவதிலும் பெரிய ஆர்வமும் விருப்பமும் இல்லாமல் இருந்தது, இருந்தும் தாம்பத்தியத்தில் இருக்கவேண்டிய அன்பு பாசம் காதல் இவற்றைக்காட்டிலும் சம்பிரதாயங்கள் முதன்மையாக கருதப்பட்டதால் தாய்வீட்டுக்கு செல்லவேண்டி வந்தது. ஒருவகையில் அந்த பாலையிலிருந்தும் ஓயாத பணிகளிலிருந்தும் தற்காலிகமாகவேனும் விடுபட்டு வந்தது ஆசுவாசமாயிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதைதான் மீண்டும் நடந்தது
கோவை விமான நிலையத்தில் ஏதோ பழுது காரணமாக விமானம் ஒரு டன் செங்கல்லை போல் டமாரென்று தரையிறங்கியதும் எனக்கு இடது பக்க முகம் முழுவதும் உணர்ச்சியற்று மரத்துப்போனதுபோல ஆனது அச்சமயதில் அந்த பக்க பார்வையும் மங்கிவிட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் மீண்டும் பார்வையும் முகமும் சீரானது.
விமான நிலையத்தில் அக்கா அம்மா அப்பா விஜி காத்திருந்தனர். அனைவருக்கும் என் உடல் எடை கூடியிருந்தது பெரும் திகைப்பை உண்டாக்கி இருந்தது.
எனக்கு முகத்தில் இப்படி நேர்ந்ததை சொன்னந்தும் நேராக ஆல்வா மருத்துவமனைக்கே செல்ல முடிவானது.
ஆல்வா முதன்முறையாக நீங்க போய் பாபுவை பாருங்க என்றார்
பாபு என்றது அவரது மகன் மருத்துவர் வசந்தை
நான் வசந்தை குறித்து முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன் எங்களை விட சற்று மூத்தவர் அவரது சகோதரி மித்ராவின் பள்ளித் தோழி.
ஆனால் அவரை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.அதன்பிறகு பல நூறு முறை சென்று குடும்பத்தில் பலரும் உயிருடன் இருக்கக் காரணமாயிருந்த அம்பராம்பாளையம் மருத்துவமனைக்கு அன்றிரவு தான் முதன் முதலில் சென்றேன்.
வசந்த சார் அறையில் காத்திருந்தார். ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு அங்கே புதிதாக வந்திருந்த பெண் மருத்துவர் பிரசித் மரியா என்று நினைவு அவரை சந்திக்க சொல்லி ஒரு சிறு குறிப்பை எழுதித்தந்தார்.எதிரில் அமைந்திருந்த அவரின் அறைக்கு நான் அந்த குறிப்புடன் அறையை விட்டு வெளி வருவதற்குள் மீண்டுமழைத்து அதில் தான் எழுதியிருந்த please see logamadevi my friend என்றிருந்ததை அடித்து our family friend என்று எழுதிக்கொடுத்தார்.
செலினா என்னும் தாயைபோல் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் என்னை கவனித்துக்கொண்ட செவிலியையும் அன்றதாதன் சந்தித்தேன். என்னை பரிசோதித்து விட்டு மருத்துவர் எல்லாம் நலமாக உள்ளது என்றும் ஸ்கேனில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னும் ஒருவாரத்தில் பிரசவம் ஆகிவிடும் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.
வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததால் பலர் என்னை வந்து பார்த்தார்கள். பலகாரங்கள் பூக்களால் நிறைந்திருந்தது வீடு
ஆசிரியர் ராஜ்குமார் சாரும் அவரது மனைவியும் எனக்கு பலகாரங்கள் வாங்கி வந்திருந்தனர் மாலை அப்பாவுடன் நடந்து போய் ஒரு இளநீரை நான் காசு கொடுத்து வாங்கி குடித்துவிட்டு வருவேன் சிலநாட்கள்
ஈரோடில் சிம்னி என்னும் ஹோட்டலில், வளைகாப்பு அதிலும் எனக்கு நினைவு வைத்துக்கொள்ளும்படியாக ஏதும் இல்லை. குடும்பத்து ஆண்களின் பெருமிதமும் அன்பும் காதலும் அறிவும் பண்பும் பல தலைமுறை தொடர்ச்சியாக வரவேண்டுமல்லவா எனவே எனக்கும்ஆண் குழந்தையாக பிறக்கட்டுமென்று மடியில் கொஞ்சம் வளர்ந்துவிட்டிருந்த இந்திரா அக்காவின் மகன் ப்ரதீப்பை அமரவைத்தார்கள் இன்னும் மணமாகி இருக்காத பாப்பிக்காவை நேரிட்டு பார்க்க சங்கடப்பட்டேன்
ருக்மணி அத்தை நீ படற பாட்டை பாத்தா இன்னும் ரெண்டு நாளில் பிரசவம் ஆயிரும் போலிருக்கே என்றார்கள்.
மித்ரா வழக்கம் போல பல பழைய விஷயங்களை மிகைப் படுத்திக்கொண்டு வழியெங்கும் கதறி அழுது என்னையும் அழவைத்துக்கொண்டு வந்த அந்த இரவு கார் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு சிக்னலில் கார் காத்திருக்கையில் ஒரு இளைஞன் என்னவோ விற்பனை செய்ய வந்தான், பட்டுப்புடவை , பூவும் நகைகளுமாய் இருந்துகொண்டு கண்ணீருடன் இருந்த என்னை பார்த்து திகைத்து விலகிச் சென்றான்.
அம்மாஅப்பா நிறைகர்ப்பிணியாயிருந்த என்னை எப்படி கவனித்துக்கொண்டார்கள் என்பதை நான் எழுத்திலும் குறிப்பிட விரும்பவில்லை
ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது குனிந்து நிமிர்ந்து வீட்டை பெருக்கினால் சுகப்பிரசவம் ஆகும் சிசேரியனுக்கு செலவும் குறையும் என்னும் அம்மாவின் நிர்தாட்சண்யமான கருத்துப்படி கூட்டி பெருக்கிக்கொண்டிருக்கையில் அந்த ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து வாசித்தேன் அதில் குழந்தையின் மூளை ரத்த நாளங்களில் ஒன்று விரிவடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. என்னிடம் அதை காண்பிக்காமல் வைத்திருந்திருக்கிறார்கள்.
ஈரக்குலை நடுங்குவது என்றால் என்னவென்று அன்று உணர்ந்தேன் கதறி அழுது வீட்டுக்கு அப்பா விஜி வந்ததும் உடனே வசந்த் டாக்டரை பார்க்கவேன்டும் என ஆர்ப்பாட்டம் செய்து புறப்பட்டேன்.அப்பாவிடம் அப்போது அம்பாஸடர் கார் இருந்தது.
வசந்த சார் பொறுமையாக அன்று விமானம் தரையிறங்கிய அந்த அதிர்வில் இப்படி டைலேட் ஆகியிருக்கும் ஆனாலும் அதுவே சரியாகி இருக்கும் வாய்ப்புமிருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று தைரியம் கூறினார் அன்றிலிருந்து சரண் நலமுடன் பிறந்த 4 ம் தேதிவரை அச்சம் என்னைநிழல் போல பின்தொடர்ந்தது
.
பிரசவத்துக்கு குறிப்பிட்ட நாளும் கடந்துவிட்டதால் வசந்த் மருத்துவமனைக்கு வந்து தங்கிவிட சொன்னார்
கருப்பை சுருங்கி விரியும் அறிகுறி இல்லாததால் அதற்கான ஆக்சிடாசின் ஜெல் தடவியும் வலிவரவில்லை. தனா அக்கா உடனிருந்தார்கள் அறுவை சிகிச்சை என முடிவானது அறுவை சிகிச்சையை குறித்தும் முதல் பிரசவம் குறித்தும் எனக்கு சிறிதும் பயமேயில்லை சிசேரியனுக்கு ஆகும் செலவை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கத்தான் பயமாயிருந்தது.
தலை பாதங்களில் படும்படி முதுகை வளைத்து உச்சகட்ட வலியை கொடுத்த அந்த ஊசியை முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தி என் கண்களை கட்டியபின் அவர்களுக்குள் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்தார்கள். சரணின் அழுகுரல் கேட்டது. செலினா சிஸ்டர் காதில் பையன் என்றார்கள்.
நான் அம்மா ஆகிவிட்டேன் என்று அந்த அழுகுரல் எனக்கு உணர்த்தியது. ஆனால் வேறு ஏதும் நினைக்குமுன்பே மயக்கமானேன், பிறகு வெகுநேரம் கழித்து என்னை ஸ்ட்ரெச்சரில் அறைக்கு தள்ளிக் கொண்டு போகையில் தான் தனாக்கா எனக்களிக்கப்பட்டிருந்த அறை என் 8 என்பதை கவனித்து செவிலியரை கடிந்துகொண்டு வேறு அறை அளிக்க உத்தரவிட்டார்கள்
மயக்கமா உறக்கமா என்று தெரியாமல் சிலமணி நேரம் கழிந்தபின்னரே சரணை காட்டினர்கள் பூப்போல இருந்தான் கைவிரல்களை இறுக்க மூடியிருந்தான் கண்களும் மூடி இருந்தது மிகச்சிறிய சின்னஞ்சிறிய ஓருயிர், பசி பொறுக்கமாட்டான்.
அச்சமயம் ஒரு அன்னையாகி இருப்பது என்னவென்று பெண்களுக்கு மட்டுமே புரியுமென்று நினைக்கிறேன்.அந்த பொங்கிப்பெருகும் உணர்வை எழுத்தில் கொண்டுவரமுடியாது
மித்ரா குழந்தையின் கைவிரல்கள், நகம் ஆகியவற்றில் குற்றம் கண்டுபிடித்தாள் எனக்கு அவளை நினைந்து ஆச்சர்யமாக இருந்தது ஆறுமுகம் சார் சொல்லுவாரே எஜுகேட்டெட்இல்லிட்ட்டெரேட் என்று. மறுநாளே கொசுக்கடி, வசதிகுறைவான அறையின் உறக்கம் இவற்றின் பொருட்டு மாமா அழைத்து திட்டுகிறாரென்னும் வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றாள்
அம்மா கணக்குப்போட்டது போலவும் நான் பயந்தது போலவும் இல்லாமல் 13 ஆயிரம் ரூபாய்களே வசந்த சார் கட்டணமாக கேட்டிருந்தார். இத்தனைக்கும்நானிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்கும் இடையில் ஒரு கதவு இருந்ததால் அந்த அறையும் எங்களுக்கே வசந்த் சார் அளித்திருந்தார் எனவே இரண்டு அறைகளிலும் வசதியாக தங்கிகொண்டிருந்தோம். வசந்த் என்னும் மருத்துவரை மாமனிதரை குறித்தறிந்து கொள்ள துவங்கிய நாட்கள் அவை.
வீட்டுக்கு வந்தும் ஓய்வின்றி உடனே அபுதாபி புறப்பட ஆயுத்தங்கள் நடந்தன என்னை யாரும் ஏன் பச்சை உடம்புடன், அறுவை சிகிச்சை செய்துகொண்ட உடம்புடன் உடனே போகிறாய்? இத்தனை சிறிய குழந்தையை எப்படி வளர்ப்பாய் என்று கேட்கவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இரண்டுமே வாழ்விடங்கள் அல்ல வசிப்பிடங்கள் என்பது தெரிந்திருந்தது.
உன் உடல் முற்றிலும் கட்டுக்குலைந்து மாறிவிட்டிருந்ததைக்கூட வேறொருவர் சொன்ன பின்னர் கவனித்தேன். அதைகுறித்து எனக்கு புகாரெல்லாம் இல்லை நான் அந்த 1 வருடத்தில் எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தேன் பலவற்றை இழந்திருந்தேன் குறிப்பாக என் சுயசார்பையும் தன்மதிப்பையும் எனவே உடல் மாற்றத்தை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை.
சரண் என்று பெயரிடுவதில் ஒரு சிக்கல் வந்தது ஆனால் நான் அந்த பெயர் வைக்க உறுதியாக இருந்தேன்,மருத்துவமனையிலேயெ பிறப்புசான்றிதழ் வாங்க வேண்டி வந்ததால் அப்பொழுதே பெயர் வைத்தாயிற்று.
அதே உடம்புடன் சரணை எடுத்துக்கொண்டு ஈரோடு செல்லும் சம்பிரதாயம் அங்கே தங்க வேண்டிய சம்பிரதாயம் அங்கிருப்பவர்களும் குழந்தையை பார்க்க வேண்டும் என்னும் சம்பிரதாயம்,
பச்சை உடம்புக்காரிக்கும் பச்சிளம்சிசுவுக்கும் சில செளகரியங்கள் அடைப்படையான வசதிகள் தேவை பயணத்தை என் உடல் தாங்குமா என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரமும் மனமும் இல்லை. காருக்கு எரிபொருள் போடுவதிலிருந்து மருத்துவ செலவு வரை அம்மா அப்பாவையோ சரண் அப்பாவையோ சார்ந்திருக்கும் புதிய அவல நிலை என்னை கீழானவளாக உணரசெய்து கொண்டிருந்தது.
பத்திய சாப்பாடு, பால் ஊற சிறப்பு உணவு கருப்பை சுருங்க லேகியம் இவை எல்லாம் நான் இன்னும் கதைகளில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்காதவைகள் நானிழந்தவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அளிக்க சரண் வந்திருக்கிறான் என்னும் ஒரே எண்ணம் மட்டும் ஆழப்பதிந்திருந்தது.
அதே உடம்புடன் பச்சிளம் சரணை எடுத்துக்கொண்டு கோவைக்கு அலைந்து பாஸ்போர்ட் எடுத்து அவனுக்கு 21 நாள் ஆகி இருக்கையில் அவனை சரியாக பிடித்துக்கொள்ளக்கூட தெரியாத நான் கோவை விமான நிலையத்திலிருந்து அபுதாபி சென்றேன்.
விமானத்தில் ஒரு மூத்த பணிப்பெண் அவன் தலையை சேர்த்து பாதுகாப்பாக எப்படி பிடித்து கொள்வது என கற்றுக்கொடுத்தார்
இருக்கையிண் முன்பாக ஒரு சிறு தொட்டில், கடைகளில் எடை பார்க்கும் சில்வர் ட்ரே போல இருக்கும் அதில் வெல்வெட் போர்த்தப்பட்டிருக்கும், அதை என் முன்னே கொண்டு வந்து வைத்தார்கள் அதில் சரணை படுக்க வைத்தேன் எனினும் விமானபயணம் எனக்களிக்கும் அச்ச்சத்தில் ஒருவேளை விபத்தேற்பட்டால் சரணும் நானும் தனித்தனியே பிரிய நேரிடும் என்று தீவிரமாக யோசித்து அவனை மடியில் வைத்துக்கொண்டேன்.அவன் பசியாற்றவும் விமான இருக்கையில் பெரும் சிரமம் இருந்ததுஒருவழியாக அபுதாபி சென்று சேர்ந்தேன்.
அபுதாபி வாழ்வில் தொடர்ந்த இருளிலும் சிறு சுடராக சரணே ஒளியேற்றிக்கொண்டிருந்தான்.
நல்ல உருண்டை முகமும் சுருட்டை தலைமுடியுமாக வளர துவங்கினான். டுட்டூ என்று எதோ ஒரு கதையில் வாசித்த பெயர் எனக்கு பிடித்து அதையே அவன்செல்லப்பெயராக்கினேன், விஜி அவனை டிப்பு குமார் என்று அழைப்பான்
அவனுக்கு அப்போது நல்ல உணவுகள் அளிக்க முடிந்தது. தாய் பகை குட்டி உறவென்னும் நம் மரபு வேடிக்கையானது.
ஆனால் ஒரு வயதிருக்கையில அவனுக்கு எதனாலோ ஒவ்வாமை வந்தது எப்போதும் வாயுமிழ்தலும் வயிற்றுப்போக்குமாக இருந்து மெலிந்துபோனான்
அந்த குளிருட்டப்பட்ட வீடா மணற்புயலால் வந்துசேரும் துகள்களா அல்லது உணவா எதுவென்று தெரியவில்லை எனினும் ஒவ்வொருநாளும் அவதிப்பட்டான். ஒவ்வொரு இரவும் நிச்சயம் வாயுமிழ்வான் எனவே அவனுக்கு மூச்சுதிணறிவிடும் என்று பயந்து கண்விழிதுப்பார்த்தபடிக்கே இருப்பேன் எப்போதுமவன் வாயுமிழ்வதை பிடிக்க ஒரு பாத்திரம் படுக்கைக்கு அருகில் இருக்கும்
ஓரிரவு கூட நான் முழுக்க உறங்கி இருக்கவில்லை
கடற்கரைக்கு சென்று வந்த ஒரு நாள் ஏதோ விஷ பூச்சி கடித்து அவன் கால்களிரண்டும் வீங்கி இறுகி விட்டது வலியில் துடிதுடித்தான், ஒரு இந்திய மருத்துவர் உடனே அவனை ஸ்பெலிஷ்டிடம் காட்ட வேண்டும் என்றார். யாருக்கும் அஊ என்னவென்றும் எப்படி குணமாக்குவது என்றும் தெரியவே இல்லை
இந்தியாவுக்கு எத்தனை முறை போன் முயன்றும் அன்று வசந்த உட்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, கருத்து நீலம் பாரித்த கால்களுடன் வீறிட்டு அலறிகொண்டே இருந்த சரணுக்கு ஒரு இளஞ்சிவப்பு லோஷனை தடவியபடி எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு இரவெல்லாம் சுவரில் தலைசாய்த்து மடியில் அவனை போட்டுக்கொண்டு விழிந்திருந்தேன் சரண் அழுதழுது களைத்து உறங்கிப்போயிருந்தான் காலையில் அவன் கால் வீக்கம் வடிந்து தெய்வாதீனமாக முன்பு போல சரியாக இருந்தது,
அவனை கையில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகள் துணி துவைப்பது உட்பட செய்து முடித்து குளிக்கப்போகையில் மட்டும் அவனைச் சுற்றி தலையணை அமைத்துவிட்டு போவேன். எப்படியோ கண்டுபிடித்து கதற துவங்குவான்.
வீட்டுவேலைகளை முடித்தபின்னர் அவனை மடியிலிருத்திக்கொண்டு கணினிதிரையில் சுட்டிவிகடனில் சித்திரக்கதைகளை காட்டிக்காட்டி கதை சொல்லுவேன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான்
.
ராய் அவனை உள்ளார்ந்த அன்புடன் சரண் சிங்கே என்றழைப்பார் சரணுக்கு இரண்டு வயதாகும் போது தருண் வயிற்றில். அந்த காலகட்டம் மற்றுமோர் கொடுங்கனவு. இந்தியாவுக்கும் அபுதாபிக்குமாக பந்தாடப் பட்டேன்.
கர்ப்பமாக சிறு மகனையும் தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு ஒருநாள் மதிய வெயிலில் வந்தேன். செயலாளர் இப்போது ஏதும் வேலை தரும்படி இல்லை என்றார். மெல்ல மாடிப்படி ஏறி நான் அமர்ந்திருந்த அறை லேப் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். லேபில் எனக்கு பதிலாக வந்த கண்ணன் என்பவர் என்னவோ சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து குளியலறையில் கதறி அழுதேன்.
சரண் ஐந்து வயதாகும் வரை அங்கிருந்தான் அதற்குள் அவனது சிறு சைக்கிளை சைக்கிளுக்கென்றமைக்கப்பட்டிருக்கும் சிறுநடைபாதையில் அவனாக ஓட்டிக்கொண்டு செல்வது வழக்கமாகி இருந்தது.
1வயது வரை அவன் பேச துவங்கவில்லை பின்னர் மெதுவே மாமா அம்மா அப்பா என துவங்கினான் எப்போதும் புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.
வண்ணப்புகைப்படங்களை கண்கொட்டாமல் பார்ப்பான் விமான பயணத்தில் கொடுத்த பஸில் விளையாட்டு அட்டைகளை அறை முழுவதும் பரப்பி வைத்து அவற்றின் வடிவங்களை பொருத்தி விளையாடுவதும் ஒரு சிறு நடைவண்டியை அதன் பல விளக்குகள் மினுங்க ஓட்டிச்செல்வதும் பிடிக்கும் அவனுக்கு.
இட்லி தட்டில் எஞ்சியிருக்கும் துணுக்குகள் அவனது விருப்ப உணவு.
2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான் முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு முன்பு அவரைச் சந்தித்ததில்லை. ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம் என்ற கறாரான திருத்தல்கள், பொருத்தமான இடங்களில் சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில் குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.
அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது
முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை, பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.
பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.
கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில் அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.
சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின் விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது
அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்
முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.
போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும் அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும் பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும், மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது ஆதிரனின் கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்
ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி
போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.
ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.
பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை, வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்
வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.
போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும், கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.
பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன் எழுதியிருக்க முடியும். யுத்தத்தின் தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி
தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.
அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.
அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று
உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை
வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு, உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும், சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும், பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.
கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும், அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும், ஓவியனும், கபிலனும், ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும் இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.
நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.
ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது
அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது. யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும் இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.
கிபிர் தாக்குதலும், ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும், விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர் உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும் பொங்கிப்பெருகிறது.
யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.
அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும், பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.
அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.
நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.
இத்தனை உணர்வுபூர்வமாக புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின், இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.
விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை இத்தனை கனம் கொண்ட மொழியில் சொல்லும் அகரமுதல்வனாகத்தான் அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது
அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.