லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 10 of 15)

நீலி

வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்,  ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி  பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும்  நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய துணியில் அந்த விழுதை வைத்து கட்டி பசுஞ்சாணமிட்ட தரையின் ஓரங்களில் அதை பிழிந்து கரையிடுவார் . பிழிகையில் கருப்பாக இருக்கும் சாறு பின்னர் வெயிலேற ஏற அடர் ஊதா நிறத்தில் மிளிரும். பல வாரங்களுக்கு அந்த நீலக்கரை அப்படியே இருக்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரசாயன உரங்களின் ஆதிக்கம் வந்திருக்காத, அந்த கிராமத்தில் அவுரிச்செடிகளை நிலத்திலிட்டு பசுந்தாள் உரமாக உழுவதையும் கவனித்திருக்கிறேன் அவுரிச்செடி நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கும் என்பதால் நிலவள மேம்பாட்டிலும் பெரிதும் பயன்பட்டது.

அப்போது கிராமங்களில்  கைகளால் நெய்யப்பட்டு  அவுரியின் நீலச் சாயமிடப்பட்ட பருத்தி துணி ஆடைகளே,.மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. . நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கு வந்ததாகவும் கிராமங்களில் இன்றைக்கும் சொல்லப்படுவதுண்டு.

  ஜீன்ஸ் என்றாலே நினைவுக்கு வரும் நீலநிறமும், தலைமுடிக்கு வீட்டிலேயே இப்போது நாம் தயாரித்துக் கொள்ள முடியும் ஆபத்தான வேதி சேர்மானங்களில்லாத இயற்கை சாயமும் கொடுப்பது அதே அவுரி என்கிற இண்டிகோ சாயத்தை அளிக்கும் Indigofera tinctoria செடிகள்தான் 

மூன்று முதன்மை நிறங்களான மஞ்சள், சிவப்பு மற்றும் நீலத்தில் மற்ற இரண்டு நிறங்களும் இயற்கையில் தாவர விலங்குகளிலிருந்து எளிதில் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கையில், நீலநிறம் இண்டிகோவிலிருந்து மட்டுமே கிடைக்கின்றது.

 நீலி குறுஞ்செடி இந்தியாவின் தென்பகுதியிலும், வங்காளத்திலும் அதிகம் பயிராகிறது. இதற்கு வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. 

நீலியின் இண்டிகோ சாயம் மிக பழமையானது இந்த  நீலச்சாயம் கிருஸ்துவுக்கு  மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஜெர்மானிய இண்டிகோவான Isatis tinctoria என்னும் செடியிலிருந்து எடுக்கப்படும் வோட் (woad) எனப்படும். நீலச்சாயத்துக்கு  முன்னரே புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதைக்காட்டிலும் மிகுந்த அடர்த்தி கொண்ட நீலியின்  சாயமே அசல் இண்டிகோ சாயம் எனப்படுகின்றது.. உயர்ந்த  தரமும் நீடித்திருக்கும் தன்மையினாலும் நீலியின் சாயம் நீலத்தங்கமென்றும், சாயங்களின் அரசன் என்றும் உலகெங்கிலும் குறிப்பிடப்படுகிறது

 கடுகு குடும்பத்தை சேர்ந்த ஜெர்மானிய இண்டிகோதான் நீலிக்கு முன்னரே புழக்கத்தில் இருந்தது என்று வாதிடுவோர் உண்டு. இதற்கு ஆதாரமாக எகிப்தின் மம்மிகளை இறுக்கமாக சுற்றியிருக்கும் லினென் துணிகளில் நீலச்சாயத்தில் கரையிட்டிருப்பது சொல்லப்படுகின்றது. இந்த துணிகள் 2400 BC யை சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் மெஸ்படோமியாவும் துருக்கிக்கு மிக அருகிலிருப்பவை, ஜெர்மானிய இண்டிகோ செடியின் பல சிற்றினங்கள்  துருக்கியை சேர்ந்தவை எனவே மம்மிகளின்  லினன் துணிகள் ஜெர்மானிய நீலத்தைதான் கொண்டிருக்கின்றன என்ற கருத்தும் வலுவாக  முன் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டு நீலச்சாயங்களும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாதவை என்பதால் இவ்விஷயம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே  இருக்கிறது.

 நீலியின் இண்டிகோ சாயத்தின் பயன்பாடு  வெண்கல காலத்தில், மிகப்பண்டையதும் 5 மில்லியன் மக்களை கொண்டதாகவும் இருந்த  சிந்து சமவெளி நாகரிகத்திலேயே  (கிமு 3300-1300) இருந்திருக்கிறது, அகழ்வாய்வில் கிடைத்த அவுரியின் விதைகளும், நீலச்சாயமிடப்பட்ட துணிகளும் 2500 -1700 BC சேர்ந்தவைகள் என கணக்கிடப்பட்டது.

 கிரேக்கர்கள் இந்த நீலச்சாயத்தை’’ இந்தியாவிலிருந்து வந்தது என்னும்’’ பொருளில் இண்டிக்கான் ‘indikon’, என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சொல் பின்னர் ஆங்கிலத்தில் ’இண்டிகோ’வானது (indigo). இச்செடியின் மற்றொரு பெயரான நீலி என்பது சமஸ்கிருதத்தில் அடர்நீலமென்பதை குறிக்கும் சொல்லாகும். இதிலிருந்தே அரபி மொழியின் நீல நிறத்தை குறிக்கும் அல்-நீல் என்னும் சொல்  உருவானது (al-nil). அரபி அல்- நீல் ஸ்பானிஷ் மொழியில் அநீல் ஆனது  (anil).  இவை அனைத்தும் குறிப்பது நீலி என்னும் இண்டிகோவின் நீலச்சாயத்தைத்தான்  ஸ்பானிஷ் அநில் என்பதிலிருந்துதான் செயற்கை சாயங்களை குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான அனிலின் (aniline) வந்தது.

 சிலுவை போர்களின் போது,கிழக்காசியாவில் இருந்து தருவிக்கப்பட்ட இண்டிகோ மத்திய கிழக்கு நாடுகளின்  சந்தைகளில் தாராளமாக புழங்கியதை இத்தாலிய வணிகர்கள்  முதன்முதலாக கவனித்தனர்

ஜெர்மனி உள்ளிட பல நாடுகள் இண்டிகோ ஒரு கனிமத்தாது என நினைத்து சுரங்கங்கள் தோண்டி இண்டிகோவை எடுக்கும் முயற்சிகளையும் துவங்கவிருந்தனர்.  1200’களில் ஆசியாவிலிருந்து திரும்பிய மார்க்கோபோலோ இண்டிகோ நீலச்சாயம் கனிமத்தாதுவிலிருந்தல்ல, ஒரு தாவரத்திலிருந்து  பெறப்படுகிறது என்பதை விவரித்தார்

 12’ம் நூற்றாண்டின் தீராப்பயணி பிளைனியும் இந்தியாவின் நீலச்சாயமான இண்டிகோ  தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது என்று அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஐரோப்பாவில் அப்போது அவுரி விளையவில்லை . தொலைவு மற்றும் அதிக  விலை காரணமாக மிக குறைந்த அளவிலேயே அவுரியை  இறக்குமதி செய்ய முடிந்தால் ஐரோப்பாவில் விளைந்த வோட்’டில் இருந்த ஜெர்மானிய நீலமே அதிகம் பயன்பாட்டில் இருந்தது.

  1498 வில் இண்டிகோவை கடல்வழி பெறுவது எளிதென கண்டுபிடிக்கப்பட்ட போது இத்தாலியர்கள் பெருமளவில் இண்டிகோ பயிரை  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய துவங்கினர். அதற்கு முன்பு வரை அங்கு பயன்பாட்டிலிருந்த ஜெர்மனி நீலச்சாயமான வோட்’டை விட இந்திய இண்டிகோ சாயம் மிக உயர்தரமானதாயிருந்தது. இதனால் ஜெர்மனிய இண்டிகோ தயாரிப்பாளர்கள் தங்கள் தொழில் பாதிப்படைந்ததில் திகிலடைந்து இந்திய இண்டிகோ’வை ’’சாத்தானின் சாயம்’’ என்று குறிப்பிட துவங்கினர்.

15 ஆம் நூற்றாண்டில் வாஸ்கொடகாமா சீனாவிற்கு கடல்வழியை கண்டறிந்த பின்னர் இண்டிகோ நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டது. 1600’களில் மிக அதிக அளவில் இந்தியாவில் இண்டிகோ பயிர்கள் சாகுபடி செய்யபட்டபோதுதான் ஐரோப்பாவுக்கு நீலி ஏற்றுமதி வெகுவாக அதிகரித்தது. ஐரோப்பாவின் இண்டிகோ தேவைகளின் பொருட்டு இந்தியா, தென்னமரிக்கா, மற்றும் ஜமைக்காவில் அதிக அளவில் அவுரி  சாகுபடி செய்யப்பட்டது.

இண்டிகோவின் நீலக்கறை இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக படிந்திருக்கிறது.

பிரிட்டிஷார் இந்தியாவில் கால்பதித்த போது முதன்முதலாக அவர்கள் விலைமதிப்பு மிக்க இந்தியப்பொருளாக கவனித்தது  இண்டிகோ பயிரான நீலியைத்தான். அப்போது முதல்தரமான நீலி வடகிழக்கு ஆக்ராவில் விளைந்தது

இண்டிகோ நீலச்சாயம் ராணுவ சீருடைகளிலிருந்து அரசியின் படுக்கை விரிப்புக்கள் வரை அனைத்துரக துணிகளையும் சாயமேற்றியது .ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகள் காலம் காலமாக பயிரிட்டுக்கொண்டிருந்த  உணவுப்பயிர் வகைகளை பயிரிட அனுமதி மறுத்து, தங்கள் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி பயிரிடச் செய்த பயிர்வகைகளில் அவுரியும் ஒன்று

 வங்காளத்தில், ஆங்கிலேயர்கள் ஜமீன்தார்கள் மூலம் அவுரி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகள் அனைவரையும் வற்புறுத்தினார்கள். மிகப்பெரிய சுரண்டலுக்கு ஆளான வங்காள விவசாயிகளால் அவுரி ஏராளமாக பயிரடப்பட்டு,  19 ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்று பெயர் பெற்றது. ஆனால் உலக சந்தையின் இண்டிகோ லாபத்தில் வங்காள விவசாயிகளுக்கு வெறும் 2.5 சதவீதம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாயத்தொழிற்சாலை முதலாளிகளும், அரசாங்க அதிகாரிகளும் கூடுதல் உழைப்பிற்காக விவசாயிகளை துன்புறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது

 1848’ல் வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி.லதூர்,   “இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ சாயப்பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார்..

. 1858-59’ ல் அவுரி சாகுபடி செய்யச் சொல்லி பிரிட்டிஷாரால் கட்டாயப்படுத்தப்படும் இந்திய விவசாயிகளின் கண்ணீரை சொல்லுவதாக அமைந்த ’’நீலக்கண்ணாடி’’ என்று பொருள்படும் ’’நீல்தர்பன்’’ என்னும் பெயரிலான புகழ்பெற்ற வங்காள  நாடகாசிரியர்  தினபந்து மித்ரா’வின் நாடகம் வங்காளத்தில் பெரும்புகழும், அதற்கிணையான எதிர்ப்பையும் பெற்றது. பிரிட்டிஷ் அரசால் இந்த நாடகம், இதே பெயரிலான நூல்,  அதன் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கிறித்துவ போதகரான டாக்டர் லாங் இந்த நாடகத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தற்காக  சிறைத்தண்டனை பெற்றார்.

 பிரபல வங்காள நாடகாசிரியரும், எழுத்தாளரும், நடிகரும், இயக்குநருமான கிரீஷ் சந்திர போஸ் தனது  நேஷனல் தியேட்டர் என்னும் நாடக நிறுவனத்தின் மூலம் நீலக்கண்ணாடியை வங்காளத்தின் மூலை முடுக்குகளிலும் டெல்லி மற்றும் லக்னோவிலும்  காட்டினார்.  

விவசாயிகளின் .நிலைமை மிகவும் மோசமானபோது 1859-60 ல் இண்டிகோ புரட்சி 1 எனப்படும் பெரும் புரட்சி வெடித்தது . அப்புரட்சியை பிரிடிஷ் அரசு மிக கொடூரமாக அடக்க முயன்றது. 49 கொலைகள், கால்நடைகளும் மனிதர்களும் கடத்தப்பட்டது, பிற பயிர்கள் எரியூட்டப்பட்டது என பல கொடுமைகளுக்கும், வறுமை, அடக்குமுறை ,வன்முறை போன்ற பல இன்னல்களுக்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடந்தது. 

பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் விவசாயிகளுக்கு முழுஆதரவளித்தார்கள். 

 அரசு தலையிட்டு இந்த புரட்சிக்கு காரணமானவற்றிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.  விசாரணைக்குழு இறுதி அறிக்கையில் பல அநீதிகள் விவசாயிகளுக்கு இண்டிகோ பயிரிடுவதில் நடந்திருப்பதை உறுதி செய்தது..

  போராட்டம் வெற்றி பெற்று,   விவசாயிகளை அவுரி பயிரிட கட்டாயப்படுத்தக்கூடாது என்னும் தீர்ப்பும் அறிவிக்கபட்டது. இண்டிகோ சாயத்தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 1860 களுக்கு பிறகு அவுரிசாகுபடி வெகுவாக வங்காளத்தில் குறைந்தது. இந்த  போராட்டத்துக்கு நீலக்கண்ணாடி நாடகம் அடித்தளமாக இருந்தது 

பல வருடங்களுக்கு பிறகு இதே இண்டிகோ சாகுபடி பிரச்சனை பீகாரிலும் உருவானது.

 1813’லிருந்து பீஹாரில் இண்டிகோ தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன.  1850’லிருந்து பிற உணவுப்பயிர்கள் ஏதும் பயிரிடமுடியாமல், நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரியை பயிரிட்டு வந்தனர்.   

 அறுவடை செய்த அவுரிச்செடியினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு விற்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1910’களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானபோதும் விவசாயிகளில் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது ஒரு புதிய வரிகளை விதித்தும், அடிக்கடி அவ்வரி விகிதத்தை அதிகரித்தும் வந்தது.

 இதனால் 1910’ல்  அரசுக்கு எதிராக கலகங்கள்  துவங்கின. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915’ல் இந்தியா திரும்பியிருந்த காந்தியின் கவனத்துக்கு 1917’ல் பீகாரின்  சம்பரண் கிராமத்து விவசாயிகளின் நிலை கொண்டு செல்லப்பட்டது. நேரடியாக சம்பரண் வந்த காந்தி அங்கு ஆசிரமம் ஒன்றை நிறுவி அப்பகுதி மக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்தார். 

சம்பரண் மக்களை  ஒன்றிணைத்து அரசுக்கு வரி கொடாமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு காந்தி ஊக்குவித்தார். போராட்டம் வலுவடைந்தது. அறவழி போராட்டத்தை காந்தி  தொடர்ந்து நடத்தியதால், போராட்டக்காரர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் இறங்கி வந்து விவசாயிகளுடன் பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக உடன்படிக்கை செய்து கொண்டனர். அவுரி பயிரிடுவோருக்கு அதிக விலை கொடுப்பதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தின் போதுதான் காந்தி முதன்முதலில் “பாபூ” என்றும் “மகாத்மா” என்றும் அழைக்கப்பட்டார்.

 ஒரு நூற்றாண்டு தொடர்ந்த இந்த சுரண்டலை மகாத்மா காந்தி அறவழியிலேயே முற்றிலும் ஒழித்தார்..தனது சுயசரிதையில் இந்த வெற்றி குறித்து ’”இண்டிகோவின் நீலக்கறையை போக்கவே முடியாதென்னும் மூடநம்பிக்கையை இவ்வாறாக முற்றிலும் பொய்யாகி கறையை அழித்தோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.2  

மிக அதிகவிலை கொண்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட இண்டிகோவிலிருந்து நீலச்சாய்மேற்றப்பட்ட உடைகள் துவக்க காலத்தில் அரச குடும்பத்தினர்களுக்கும்  செல்வந்தர்களுக்கும் மட்டுமேயாயிருந்தது. அப்போதுதான் இதற்கு மாற்றாக அதே போலிருக்கும் மலிவான நீலச்சாயமளிக்கும் ஜெர்மானிய இண்டிகோ சாகுபடி ஐரோப்பாவில்  உருவாகியது. ஐரோப்பிய காலநிலை ஜெர்மானிய இண்டிகோ விளைச்சலுக்கு ஏற்றதாகவும் இருந்தது.

நிறத்தில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லாவிட்டாலும் ஜெர்மனிய இண்டிகோ சாயம் அப்போது போலி இண்டிகோ என்றும்  அழைக்கப்பட்டது .இந்த .செடியிலிருந்து சாயமுண்டாக்குதல் அசல் இண்டிகோவுக்கு நிகரான நேரத்தையும் உழைப்பையும் பொருட்செலவும் கொண்டிருந்தாலும் கிடைத்த சாயத்தின் அளவு  இதில் மிக குறைவாகவே இருந்தது அசல் இண்டிகோவிற்கு இணையான தாவரங்களின் தேடுதல் அப்போது பல நாடுகளில் மும்முரமாக நடந்தது. 

போலி என்றறியப்பட்டாலும் ஜெர்மானிய இண்டிகோவின் சந்தையும் மிகபிரபலமாயிருந்தது. இண்டிகோ நீலச்சாயமிட்ட துணிகளின் தேவை உலகளவில் வெகு அதிகமாந்தானதாகவே இருந்ததால் இந்த பயிரின் சாகுபடியும் அசல் இண்டிகோ பயிருக்கு இணையாகவே இருந்து வந்தது

17ம் நூற்றாண்டு வரை நீலியுடன் வோட்’டும் புழக்கத்தில் இருந்து வந்தது. நீலி இண்டிகோவின் விலை மிகவும் குறைந்த போது தான். ஜெர்மானிய இண்டிகோவின் பயன்பாடு முற்றிலுமாக நின்று போனது. நீலியின் சாயம் பல நேரடி மற்றும் மறைமுக வணிக போர்களுக்கும் காரணமாயிருந்தது. பல பேரரசுகளை நீலி வளமாக்கியும் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட இண்டிகோ செடி சாகுபடி செய்யப்பட்ட பல  நாடுகளில்  இதன் நீலக்கறை  மிக அழுத்தமாக  படிந்து இருக்கிறது.

அமெரிக்காவில் 1744ல் எலிஸா லூகாஸ் எனும் பெண் அவரது சொந்த பண்ணையில் இண்டிகோ பயிரை  முதன்முதலில் சாகுபடி செய்தார். 3

இத்தாலியின் பெரிய நகரங்களில் ஒன்றான ஜெனோவா (Genoa)   இந்த நீல துணிகளுக்கான மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தது. இந்நகரின் விற்பனையாளர்கள் ஐரோப்பாவின் அனைத்து இண்டிகோ சாயதொழிற்சாலைகளுடனும் வர்த்தக தொடர்பில் இருந்தார்கள் அக்காலகட்டத்தில்  மீனவர்கள், சுரங்க மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வசதிக்கும், பிரியத்துக்குமுரிய உடையாக  அதிகம் துவைக்க வேண்டியிருக்காத,  நீண்ட நாள் உழைக்கும் இண்டிகோ நீலச்சாயமிட்ட முரட்டுத் துணிகளில் தைக்கப்பட்ட உடைகள் இருந்தன.

 அங்கு ஃப்ரெஞ்ச் மொழியும் பரவலாக பேசப்பட்டு கொண்டிருந்ததால் இந்த முரட்டு துணியாலான  நீல உடைகள் அனைவராலும் Bleu de Gênes  -ஜெனோவாவின் நீல உடை என்றழைக்கப்பட்டது, அதுவே  ஆங்கிலத்தில்  ஜீன்ஸ் ஆனது. 

இந்த நீல துணி ஃப்ரெஞ்ச் நகரின் மிக பிரபலமான  நெசவாளர்களின் நகரமான  நிம்ஸ்’க்கு வந்து சேர்ந்தது (Nîmes).  அத்துணியை சாயமேற்றுவதில் பல கட்ட சோதனை முயற்சிகளுக்கு பின்னர் நிம்ஸ் நெசவாளர்கள் கம்பளி மற்றும் பட்டின் இழைகளை இணைத்து இரண்டு தனித்துவமான பரப்புகளைக் கொண்ட ஒரு துணியை உருவாக்கினர். இருவிதமான இழைகளின் இணைப்பில் உருவான அவ்வுடையின் நெடுக்கில் இருக்கும் இழைகள் இண்டிகோவின்  நீலத்திலும். குறுக்கு இழைகள் வெள்ளையாகவும் சாயமேற்றப்பட்டன. இத்துணிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜீன்ஸ்கள் பிரத்யேகமாக வெளிப்புறம் நீலத்திலும்,  வெள்ளை அல்லது மங்கிய    நீலம் உட்புறமாகவும் இருந்தது. வெகு விரைவில் பிரபலமான இந்த ஜீன்ஸ்களின் ஃப்ரெஞ்ச் மொழியில் அந்நகரின் பெயரில்  de Nîmes என்றழைக்கபட்டது. அதுவே ஆங்கிலத்தில்  டெனிம்- denim எனப்பட்டது.

 டெனிம் ஜீன்ஸ்களின் வரவுக்கு பிறகு இண்டிகோ சாயமிட்ட உடைகள் சமூகத்தின் உயரடுக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டுமேயானவை என்பதிலிருந்து உழைக்கும் மக்களின் உடையாகவும் ஆனது .தோராயமாக ஒரு டெனிம் ஜீன்ஸ் தயாரிக்க 3 கிராமிலிருந்து 12 கிராம் வரை இண்டிகோ சாயம் தேவைப்பட்டது. 

 ஐரோப்பாவின் தொழில்புரட்சியும் அமெரிக்காவின்  செல்வச்செழிப்பு மாக  உழைக்கும் வர்க்கத்தினருக்கான தேவை மிக அதிகரித்து,  இயற்கை சாய உற்பத்தியின் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால்  விலை மலிவான, செயற்கை நீலச்சாயங்களுக்கான முன்னெடுப்புக்கள் பல நாடுகளில் வேகமாக துவங்கப்பட்டன 

1870’ல் ஜெர்மனியின் வேதியியலாளர் அடோல்ப் வான் பேயர் செயற்கை இண்டிகோ சாயத்தை  ஐசட்டின் (isatin) என்னும் ஒரு கரிமப்பொருளில் இருந்து உருவாக்கினார் .எட்டு வருடங்கள் தொடர்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு அவரே பினைல் அசிட்டிக் அமிலத்திலிருந்தும் பின்னர்  சின்னமிக் அமிலத்திலிருந்தும் செயற்கை இண்டிகோவை வெற்றிகரமாக உருவாக்கி, தயாரிப்பின் சூத்திரங்களை ஜெர்மன் நிறுவனமான  BASF ற்கு 1897ல் விற்றார்

 1902 ற்குள் மெல்ல மெல்ல இயற்கை இண்டிகோவின் இடத்தை செயற்கை இண்டிகோ பிடித்துக் கொண்டது.செயற்கை நீலச்சாயம் கிலோ 400 ரூபாய்களுக்கு சந்தைப்படுத்தப்பட்டபோது 3000 ரூபாய்களுக்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த இயற்கைச்சாயம் அதனோடு போட்டிபோட முடியாமல் பின்வாங்கியது,. மேலும் இயற்கை, செயற்கை சாய்ங்களுக்கான வேறுபாடென்பதும் பயனாளிகளால் கண்டறிய முடியாதபோது இயற்கை சாயத்துக்கான தேவை முற்றிலுமாக  இல்லாமலானது.அடுத்த இருபது ஆண்டுகளில் இந்திய இயற்கை இண்டிகோ தொழில்துறை பெரும்பாலும்  அழிந்தது.

 இப்போது இயற்கை இண்டிகோ சாய்த்தொழிலில் அரிதாக சில நாடுகளே ஈடுபட்டிருக்கின்றன. பிரேசில், இந்தோனேசியா மற்றும் இந்தியாவில்  குடும்ப தொழிலாக வெகுசிலரே இந்த சாய முறையில் துணிகளுக்கு சாயமேற்றுகிறார்கள். அனைத்து டெனிம் ஜீன்ஸ்களும் செயற்கை நீலச்சாயமிட்டே தயாரிக்கப்படுகின்றன.  

பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த இன்டிகோஃபெரா டிங்டோரியா குறுஞ்செடியானது முட்டை வடிவ அடர் பச்சை நிற  கூட்டிலைகளையும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை கொத்துக்கொத்தாகவும்  கொண்டிருக்கும். இதன் பச்சை இலைகளில் இருந்து தான் நாற்றமடிக்கும், நொதித்தல் அல்லது புளித்தல்   என்னும் விரிவான செயல்பாட்டுக்கு பிறகு நீலச்சாயம் பெறப்படுகின்றது. இன்டிகோபெரா பேரினத்தின் 50 வகைகள் இந்தியாவில் வளர்கின்றன.

அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும், காய்கள் முதிர்ச்சி அடையும் போது கருப்பு நிறமாகவும் இருக்கும்    இச்செடி எங்கிருந்து தோன்றியது என்பதில் தாவரவியலாளர்களுக்கே குழப்பம் நீடிக்கின்றது  எனினும் இது ஆப்பிரிகாவை அல்லது இந்தியாவை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அறிவியல் பெயரான Indigofera tinctoria விற்கான   இணைப்பெயர்  Indigofera  sumatrana. இதன் பேரினப்பெயரான Indigo fera என்பது ’’இண்டிகோவை கொண்டிருக்கும்’’ என்றும் டிங்டோரியா என்றால் ’’சாயம்’’ என்றும் பொருள். தாவர அறிவியல் பெயர்களில்  fera என்பது அளிக்கும், கொடுக்கும், வைத்திருக்கும், கொண்டிருக்கும் என்னும் பொருளிலும் tinctoria என்பது சாயத்தையும் (Dye) குறிக்கும். பல சாயத்தாவரங்கள்  டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரை கொண்டிருக்கும்,  திராட்சைக்கொடி, மாமரம் போன்ற பலவற்றின் அறிவியல் பெயர்களைப்போல பெரா என்று முடியும் சிற்றின பெயர்களையும் ஏராளமாக காணலாம்.(Mangifera indica, Vitis vinifera).

18’ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  இண்டிகோ செடிகளை நொதிக்க வைக்கும் வழிமுறைகள் குறித்த விரிவான பல பதிவுகள் கிடைத்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக அடிப்படையில் எந்த மாற்றமுமின்றி  இயற்கைசாயம் உருவாக்கும் நாடுகளில் இந்த நொதித்தல் முறை தான் இன்றும் பின்பற்றப்படுகின்றது.  

அவுரி செடிகள் மலர்வதற்கு சற்று முன்பாக, செடி சுமார் 10 செமி உயரம் இருக்கையில் அறுவடை செய்யப்பட வேண்டும், அப்போதுதான் சாயத்தின் அளவு கூடுதலாக இருக்கும் அறுவடை செய்யப்பட்ட செடிகள் மூன்று மணி நேரத்துக்குள் நொதித்தல் நடைபெறும் பெரிய   தொட்டிகளுக்கு வந்து சேர வேண்டும்.

 பின்னர் செடிகளின் இலைகள் தொட்டி நீரில் அமிழ்த்தப்படுகின்றன. செடி நீரில் மிதக்காமல் இருக்க, மரத்துடுப்புகளால் மீண்டும் மீண்டும்  அவை அழுத்தப்படும்.   .

1 மணி நேரத்தில் இலைகள் அகற்றப்பட்டு கரைசல் மட்டும் இரண்டாம் தொட்டிக்கு மாற்றப்படுகின்றது. இலைகளில் இருக்கும் நீல நிறமி குளுகோஸிலிருந்து பிரிந்து வரும் வரை நீரில் இலைகள் ஊறி நொதிக்க வேண்டும்.  21 மணி நேர புளித்தல் அல்லது  நொதித்தலுக்கு பிறகு நாற்றமடிக்கும் கரைசல் வடிகட்டப்பட்டு மேலும் தெளிவாக்கப்பட்டு மற்றொரு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. இப்படி புளிக்க/நொதிக்க  வைப்பதால் அதில் உள்ள கிளைகோசைட் இண்டிகான் (glycoside indican) என்னும் பொருள் இண்டிகோட்டின் (indigotin) என்னும் நீலச்சாயமாக மாறுகின்றது.  

இந்த மூன்றாவது தொட்டியில் சேமிக்கப்படும் நீரிலிருந்து நீல நிறமிகள் தொட்டியின் அடியில் படிகின்றது. படிந்திருக்கும் நீலக்குழம்பும், தெளிந்த நீரும் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.  நீலக்குழம்பு செங்கல் சூளைகளில்  கொதிக்க வைக்கப்பட்டு,  களிமண்ணை போல தொட்டியின் அடியில் படிந்திருக்கும் குழம்பு வெயிலில் உலர்ந்தபின்னர் கட்டிகளாக்கப்படும்.. இதுவே இண்டிகோ நீலச்சாயம்.

இண்டிகோ நீலமானது பிற சாயங்களிலிருந்து நீரில் கரையாத தன்மையால் வேறுபடுகிறது. எனவே  முதலில் ஒடுக்க வினைகளால் (Reduction) கரைக்கும் தன்மைக்கு   கரைசலை கொண்டு வந்து,  பின்னர்  ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு நீல நிறம் கொண்டு வரப்படுகின்றது.   காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் இலைகளில் இருக்கும் இண்டிகோ நிறமியின் அளவு இவையனைத்தும் சரியாக அமைகையில் இந்த  நிறமாற்றம் நிகழ்கிறது.

 இலைகள் அகற்றப்பட்ட  மரகதப்பச்சை கரைசல் காற்றுடன் வினை புரிகையில், மாயம் போல அழகிய அடர்  நீல நிறம் உண்டாகிறது  200 கிலோ நீலி இலைகளிலிருந்து 1 கிலோ சாயம் கிடைக்கும். இண்டிகோவின் மற்றொரு பிரெத்யேக இயல்பு, அது சாயமிடப்படும் துணியின் மேற்பரப்பில் மட்டும் தங்குகிறது என்பதுதான்.

 அசல் இண்டிகோவின் நீலச்சாயத்தில் சாயமேற்ற வேண்டிய துணியை மீண்டும் மீண்டும் பலமுறை அமிழ்த்தியும் உலரவும் செய்த பின்னர்தான்  தேவையான அளவில் துணியில் இண்டிகோவின் பிரத்யேக  நீலச்சாயம் ஏற்றப்படுகின்றது.  

இண்டிகோ நொதித்தலானது கவனமுடன் செய்யப்படாவிட்டால் எளிதில் பிழையாகும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களிலும், இந்தோனேசியாவிலும் இண்டிகோ சாயமுண்டாக்குதலென்பது புனிதமானதாக கருதப்பட்டு, பல சடங்குகளுக்கு பின்னர் நடைபெறுகிறது. 

இந்திய கிராமங்களில் சாயத்தொட்டிகளில் செடிகளை போடும் முன்பு  வழிபாடுகள்  நடக்கும். ஆண்களை விலக்கிவிட்டு பல சாயத்தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டும் சாயத்தை கையாளுகிறார்கள் நீலச்சாய தொட்டிகளை ஆண்கள் பார்க்க கூடாதென்னும் விதிகள் கூட இருக்கின்றன.

முற்றிலும் மாறாக நீல அம்மன் பெண்களை சாயமுண்டாக்க அனுமதிக்கமாட்டாள் என்னும் நம்பிக்கை இருக்கும் பல பகுதிகளில் சாயத்தொட்டிகளில் ஆண்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

.இண்டிகோ விவசாயமும் சாய உற்பத்தியும் பிரதானமாக இருக்கும் இந்திய கிராமங்களில் பிறந்த குழந்தையை இண்டிகோ நீலச்சாயமுள்ள துணியில் முதன்முதலில் படுக்க வைப்பது அக்குழந்தையை நோயிலிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றுமென்னும் நம்பிக்கையும் உள்ளது. 

 புராதனமான இந்த சாயமேற்றும்  முறை மட்டுமல்லாது ’’நேரடி சாயமேற்றுதல்’’ என்னும் பிறிதொரு  முறையும் ஐரோப்பிய மற்றும் தென் தமிழக பகுதிகளில் புழக்கத்தில் இருக்கிறது. இம்முறையில் அவுரி இலை விழுதுடன் சுண்ணாம்பும், மாவுச்சத்தும் , நிறமிக்கு நீரில் கரையும் தன்மையை உருவாக்கும் ஆர்பிமெண்ட் எனப்படும் (Orpiment) எரிமலைக்குழம்பு அல்லது கொதிநீரூற்றுக்களின் வண்டலிலிருந்து கிடைக்கும் பொன்மஞ்சள் நிறமான  கனிமத்தாதுவையும் கலந்து  பசை போலாக்கி நேரடியாக துணிகளில் பிரஷ்மூலம் தேய்க்கப்பட்டு சாயமேற்றப்படும்..17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக நடைமுறையில் இருந்த இம்முறை  தொட்டிச்சாய முறையை போல (vatting) பிரபலமாகாமல்  அப்படியே வழக்கொழிந்துபோனது. மிகச்சில இடங்களில் இப்போதும் இது புழக்கத்தில் இருக்கிறது

 மிகை சாயமேற்றும் இந்தோனேசிய முறையில் இண்டிகோவுடன் நோனி (Morinda citrifolia) மரவேர்களும் சேர்க்கப்பட்டு ஆழ் நீலசாயமுண்டாக்கபட்டது.  1980 களுக்கு பிறகு நோனி வேர்களுக்கு மாற்றாக நேப்தால் சாயம் சேர்க்கப்பட்டது. செயற்கை சாயங்களின்  காலம் துவங்கியதை இந்த நேப்தால் சேர்ப்பு முன்னறிவித்ததென்று கூட  சொல்லலாம்.  நீல சாயமேற்றும் எந்த நாட்டிலும் நோனி வேர்கள் இப்போது பயன்பாட்டில் இல்லை 

 கிழக்கு ஆசியாவின்  Polygonum tinctorium, மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவில் அனீல் என்றழைக்கப்படும் செடியான Indigofera suffruticosa  மற்றும் இந்தியாவின் நடால் இண்டிகோ எனப்படும்  Indigofera arrectaஆகியவையும் இயற்கை இண்டிகோ நீலச்சாயத்தைபோலவே சாயங்களை அளிக்கும்.  ஆனால் இவற்றிலிருந்து  அவுரியிலிருந்து கிடைப்பதை போலல்லாது மிக குறைந்த அளவே சாயம் கிடைக்கும்.

 Murex brandaris எனப்படும் கடல் நத்தைகளின் சுரப்பிகளிலிருந்து இயற்கை இண்டிகோவின் அதே நீல நிறத்தில் சாயம் எடுக்கப்படுகின்றது இதற்கு டைரியன் ஊதா என்று பெயர் (Tyrian purple) ,இந்த சாயம் இதுவரை செயற்கையாக தயாரிக்கப்படவில்லை

,ஜப்பான் மற்றும் தாய்வானில்  இண்டிகோவுக்கு  இணையான நீலச்சாயத்தை கனகாம்பர குடும்பத்தை சேர்ந்த Strobilanthes cusia என்னும் செடியிலிருந்து எடுக்கிறார்கள்.  100 வயதிற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் அதிகமாக வாழும், மிக பிரத்யேகமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றும் ஒகினாவா தீவின்  உலக பிரசித்தி பெற்ற நீல கைக்குட்டைகள்  இந்த செடியின் இயற்கை நீலத்தில் தான் சாயமிடப்படுகின்றன.4

சமீபகாலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்ரகாண்டில் மீண்டும் நீலி சாகுபடி துவங்கப்பட்டிருக்கிறது உத்ரகாண்டில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலியை சாகுபடி செய்துகொண்டிருக்கின்றனர்.  இந்தப்குதிகளில் உணவுப்பயிர்களின் சாகுபடியில் எந்த மாற்றமும் இல்லாமல் தரிசுநிலங்களில் மட்டும் நீலி பயிராகின்றது 

 இயற்கை இண்டிகோவின் தேவை வெகுவாக குறைந்துவிட்டிருப்பினும், மருத்துவம், உணவுமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கை வழிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் மீண்டும் இயற்கை இண்டிகோ தொழில் மலரும் வாய்ப்பும் இருக்கிறது. நீலிச்சாயமுண்டாக்கும் இந்தியாவின் பாரம்பரிய அறிவு பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல  புதிய தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டியதும் கூட.

  நவீன செயற்கை சாயங்களினால் உருவாகி இருக்கும் சூழல்மாசு மற்றும் அதிகரித்திருக்கும் நோய்களை எண்ணிப்பார்க்கையில்   நமது  சூழலையும், பாரம்பரியத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க நீலி சாகுபடியை அதிகரித்து, இயற்கை நீலச்சாய பயன்பாட்டுக்கு திரும்புவதே உகந்தது.

மேலதிக தகவல்களுக்கு:

  1. Indigo Revolt in Bengal | INDIAN CULTURE
  2. Gandhi’s Satyagraha in Champaran | INDIAN CULTURE 
  3. Eliza Lucas Pinckney | Encyclopedia.com
  4. https://japanobjects.com/features/indigo

தே, ஒரு இலையின் வரலாறு

ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

ஜெ தளத்தில்  தே குறித்த கடிதம் வந்த வாரத்திலேயே’ தே, ஒரு இலையின் வரலாறு’ வாங்கிவிட்டேன்.  இன்று June 12, 2021 அதிகாலை தொடங்கி ஒரே மூச்சில்  3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.

ஏழை விதவையின் மகனான  21 வயது , ராய் தேயிலை அல்லது புகையிலை  தோட்ட மேலாளராக தனக்கு வேலை  தேவை என்னும் விளம்பரத்தை  வெளியிட்டதில் தொடங்கும் நாவல்  மொத்தம்  250 பக்கங்களில்  தே’ இலையின் வரலாறு மற்றும் வளர்ச்சியை முழுக்க சொல்லுகின்றது. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பு சிறப்பு..தட்டச்சு பிழை திருத்தலில் மட்டும் இன்னும் சிறிது கவனமாக இருந்திருக்கலாம் .

கார் ஓட்ட தெரியும் என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு  தேயிலை வளர்ப்பு குறித்தும், நியூசிலாந்தை குறித்தும்  ஏதும் அறியாமல், அங்கு பேசப்படும் மொழியுமே தெரியாமல்  துணிச்சலாக புறப்படும்  ராயுடன்  விமான நிலையத்தில் குடியுரிமை சரி பார்த்ததிலிருந்து  பயணித்து தேயிலையின் வரலாற்றை, வளர்ச்சியை முழுக்க  அறிந்து கொண்டது   ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அளித்தது .

1747 ல் நடக்கும் ஒரு படகு கொள்ளையில் தொடங்கும் நாவல் அதன்பிறகு 1559’ல் எழுதப்பட்ட தேயிலை குறித்த  முதல்  குறிப்புகளிலிருந்து துவங்கி வரிசைக்கிரமமாக தேயிலையின் வரலாறு,  கண்டுபிடிப்பு,  தேநீர் தயாரிப்பு அதன் வகைகள், புதிய பிராண்டுகள், கலப்படங்கள், சட்டங்கள், அடிமைகள், கூலி தொழிலாளர்கள், பல்லாயிரக்கணக்கான  இறப்புக்கள் என்று  விரிகின்றது.

தேயிலையின் தாவரவியல் சார்ந்த  தகவல்களை தவிர, இதில் சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை குறித்து  எந்த அறிதலும் இன்றி கடைகளில் வாங்கி வந்த தேயிலைத்தூளை கொதிநீரில் இட்டு  ஒரு கோப்பை தேநீரை ரசித்து அருந்தி கொண்டிருந்திருக்கிறேன் என்பதுதான் பக்கத்துக்கு பக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த காலத்துக்கே மிகை என்னும் படிக்கு பல கொலைகள், மரண தண்டனைகளும் , பிற பல சுவாரஸ்யமான சம்பவங்களும்  இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

போர்ச்சுக்கல் அரசரொருவரின் மகளான காத்தரின் தனது வருகையை தெரிவிக்க எழுதப்பட்ட கடிதம் அவளது வருங்கால கணவருக்கு அனுப்படுகையில் அவர் நிறை கர்ப்பமாக இருக்கும் காதலியின் வீட்டில் இரவுணவு அருந்திக் கொண்டிருக்கிறார். இளவரசியின் வருகைக்கென அனைத்து வீட்டின் முன்பும் ஏற்றப்பட்டிருக்கும் கொண்டாட்ட நெருப்பு அந்த காதலியின் வீட்டு முன் ஏற்பட்டிருக்கவில்லை. காத்தரின் வரதட்சணை பொருட்களில் ஒரு பெட்டி தேயிலையும் இருக்கிறது.

சீனாவில் மிக சாதாரணமாக புழகத்தில் தேநீர் வந்து பல நூறு வருடங்கள் கழித்தே  ஐரோப்பாவிற்கு  வந்திருக்கிறது. 1652 களில் உருவான  முதல்  காபி ஹவுஸ்களில் பார்சல்  காப்பியும் தேநீரும்  வழங்கப்பட்டிருக்கிறது. உயர்குடியினர் பல தேநீர் கடைகளுக்கு அடுத்தடுத்து செல்லும் வழமையும், அவர்களை  தூக்கி செல்ல ’செடான்’ இருக்கைகளும் தூக்கு கூலிகளும் இருந்திருக்கிறார்கள். தேயிலைக்கான  ஏலம் கொளுத்தப்பட்ட மெழுகுதிரி ஓரங்குலம் எரிந்து முடியும் வரையிலும் ஏற்கபட்டிருக்கிறது, தேநீர், பானம் என்பதால் அதன் அளவுக்கேற்ப வரிவிதிக்க பட்டிருக்கிறது.

1757’ல்  ‘வீட்டில் கிடைக்கும் நல்ல  உணவில் திருப்தியில்லாமல் எங்கோ தொலை தூரத்தில் கிடைக்கும் சுவைக்காக மக்களின் கொடிய நாக்கு ஏங்கும் நிலை’  என்று  முதல் அத்தியாயத்தின் துவக்கத்தில்  ஜோனஸ்  சொல்லியிருப்பது நியாயம்தான் என்னும்படிக்கு  மக்களின் ஆதரவுடன் நடந்த தேயிலை கடத்தலும், அவ்வியாபரங்களில் நடந்த பல உள்ளடி வேலைகள்.சதிகள்  எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தேயிலையின் கலப்படத்தில்  ஸ்லோ, எல்டர் உள்ளிட்ட பல  மரங்களின் இலைகளும், இரசாயனங்களும், சாயங்களும், ஆட்டுச்சாணமும் கூட பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ’அடப்பாவிகளா, அப்போவே வா! ’ என்று அங்கலாய்க்க தோன்றியது.

தேநீர் அருந்துவதற்கு சார்பாகவும், எதிராகவும்  எழுதப்பட்ட கட்டுரைகள் வெகு சுவாரஸ்யமானவை. தேநீர் பூங்காக்களில் முதலில் உயர்குடியினர் சந்திப்புகள் நடந்திருக்கிறது,  பின்னர், மலிவு விலை புத்தகங்கள் தொடங்கி, சின்ன சின்ன வியாபாரங்களும். கொள்ளைக்கான  திட்டமிடல்களும் நடந்து,  பின்னர் கைதுகள் கூட அங்கேயே நடந்திருக்கிறது.

கல்கத்தாவில் 1819 ல் தொடங்கப்பட்ட  தேநீர் கேளிக்கையகத்தில் தேநீரை மேசை மீதோ அல்லது  அருகில் இருப்பவர் மீதோ கொட்டுபவர்களுக்கு இரண்டு அணா அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது மருந்துப் பொருளாக விற்கப்பட்டு கொண்டிருந்த தேநீர் பின்னர் பானமாகி மளிகைகடைக்காரகளும்  தேநீர் மற்றும் தேயிலை விற்பனையில் ஈடுபட்ட போது, தேயிலை முகவர்களுக்கான  அனுமதி சான்றிதழ்  கடைகளுக்கு முன்பு தொங்க விடப்படுவது கட்டாயமாக்க பட்டிருக்கிறது..

தேயிலை இறக்குமதி திடீரென  குறைந்தபோது  அமெரிக்கர்கள் ரோடோடென்ரான் செடிகளின் இலைகளில் இருந்து லாப்ரடார் தேயிலை தயாரித்திருக்கின்றனர். இன்றும்  அந்த தேயிலை பல நாடுகளில் புழக்கத்தில் தான் இருக்கிறது.

இடையிடையே  வரும் தேநீரையும் தேயிலையையும் குறித்த

‘’கொஞ்சம் தேயிலை கலந்தது கடலிலே

நூறாயிரம் பேர் ரத்த வெள்ளத்திலே’’

போன்ற  பாடல்களும் கவிதைகளும் அப்போது இந்த பானத்துக்கு இருந்த பிரபல்யத்தை சொல்லுகின்றன.

சீனாவில் தேயிலையின் தோற்றம் குறித்த பகுதிதான் இந்நூலில்  ஆகச் சிறந்தது என்று சொல்லலாம். காலத்து ட்டு தான் ச்சா வா என்பதில் தொடங்கி, ஹான் அரச வம்சம்,  டாங், மிங், அரச வம்சத்தினரின் ஆட்சிகளின் போது தேயிலையின் வரலாறு  பயன்பாடு, விற்பனை, வளர்ச்சி அனைத்தும் விரிவாக சொல்லப்படுகின்றது.

கண்டடைய முடியாத தேயிலைக்கான தேடல்கள், ”நீர் கொதிக்கையில் அது மீன்களின் கண்களை போன்று இருக்க வேண்டும் ”என்னும் தேநீருக்கான ரெசிப்பி, தேநீர் சடங்க்குகள்,.கொதிக்கும் நீரில் தேயிலையை வேகவைத்து தயாரிக்கப்பட்ட தேநீர் பின்னர் கொதிநீரை தேயிலைத்தூளில் ஊற்றி தயாரிக்கப்பட்டது, தேயிலை கொட்டப்படும்மேசையின்  ஜென்  நடுக்குழிவு, வித்தியாசமான நீள வரிசை ஜப்பானிய  தேயிலை தோட்டங்கள்,  அறுவடைக்கு முன்னர் போர்வைகள் கொண்டு மூடப்படும் தேயிலை செடிகள், மிங் ஆட்சியில் அறிமுகமான சீன களிமண்,கப்பலின் பலாஸ்டிங்க்கிற்காக  அவற்றை பயன்படுத்தி அப்படியே ஏற்றுமதியும் செய்தது, மன்னரொருவர்  தனது இறப்புக்கு பின்னர் தேயிலைகளை படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது, மிங்கு’கள்  தேயிலையுடன் மலரிதழ்களையும் கொதிக்க வைத்து தேநீர் தயாரிப்பது   என்று புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு ஏராளமான விஷயங்கள் அடுத்தடுத்து வருகின்றன.

தேயிலை தோட்டங்களில்  இன்றைக்கு வரை  கடைப்பிடிக்கப்படும் அறுவடை செய்ய வேண்டிய ‘’ ஒரு இலை மொக்கு,இரண்டு தளிர்கள், அல்லது  ஓரு மொக்கு, ஒரு தளிர்  அல்லது ஒரு இலை மொக்கு மட்டும்  என்ற   ‘’flush , golden flush’’  வரையரறைகள்   அப்போதே தீர்மானிக்க பட்டிருக்கின்றன.

1628 ல் சீனாவில் ஓபியம் தேயிலையின்  இடத்தை ஆக்கிரமித்ததை சொல்லும் அத்தியாயத்தில்,   மால்வா என்றழைக்கப்டும் ராஜஸ்தான் ஓபியமும் குறிப்பிடப்படுகிறது.  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில ஆளுமைகள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். உறங்காமல் இருக்க உயரமான  மேசை மீது ஏறி நின்று கொண்டு இரவெல்லாம்  விழித்திருந்து  ஓபியம் கடத்தலை  தடுக்க பணியாற்றுகிறார். சண்டைக்காரரும் ராஜதந்திரிமான   பாமெர்ஸ்டன் பிரபு , 1880களில் நடந்த தேயிலை கப்பல்களின்  ஓட்டப் போட்டியில் மிக விரைவாக சென்று   பரிசு தொகையை வாங்கிய.  வில்லியம் கிளிப்டன் என்னும் மாலுமிக்கு பிறகு  விரைவாக சென்று தேயிலையை சேர்க்கும் கப்பல்கள் பின்னர்  கிளிப்பர்ஸ் என்றே  அழைக்க பட்டிருக்கின்றன.

தேயிலை தோட்டங்களின் ஒரு அங்கமாக இருந்த யானைகளில். 1300 யானைகளைக் கொன்ற  ஒரு ஆங்கிலேயர் 41 வயதில் மின்னல் தாக்கி இறந்து போகிறார்.  ராணுவத்தினரின் உபயோகப்படுத்தப்பட்ட கோட்டுகள் தோட்ட தொழிலாளர்களுக்கு குளிருக்கு பாதுகாப்பாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் கொல்கத்தா தாவரவியல் பூங்காவுக்கு  வரவழைக்கப்பட்ட தேயிலை விதைகள்  துளிர்த்து இந்தியாவில்  தேயிலை செடிகள் நுழைகின்றது. தேயிலை வளர்ப்பை பிறருக்கு சொல்லி விட கூடாதென்று கொல்லப்பட்ட 12 சீனர்களிலிருந்து ,  மரணங்கள்  கொலைகள், சவுக்கடிகள்,  உடல் உறுப்புக்கள் வெட்டப்படுவது, பெண்கள்  மானங்கப்டுத்தபடுவது,, பிரம்படிகள் என பல பக்கங்கள் வலியிலும், வேதனையிலும் கண்ணீரிலும் ரத்தத்திலும்  நிறைந்துள்ளது.

நூலை  ஆழ்ந்து வாசித்தவர்கள் பின்னர் ஒரு கோப்பை தேநீர் கூட குற்றவுணர்வின்றி அருந்தமுடியாது .  மேல் அஸ்ஸாமில் கண்டுபிடிக்கப்பட்ட கெமிலியா அஸ்ஸாமிகா   வகையும் பின்னர் நடைபெற்ற  இனக்கலப்பு களும் விரிவாகச்  சொல்லப்பட்டிருக்கிறது

தேயிலையின்வரலாற்றை சொல்லும் பல நூல்களில் இல்லாத,  இந்தியாவில் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் இண்டிகோ சாயத்தையும் இண்டிகோ தோட்டங்களை குறித்தும்   கொஞ்சம் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளை உணவுப் பயிர்களுக்கு பதிலாக இண்டிகோவை பயிராக்கச்சொல்லி கட்டாயப்படுத்திய கதைகளை எல்லாம் ஒரு நூலாகவே எழுதிவிடலாம். அத்தனை கொடுமைகள் நடந்தது இப்பயிரினால்.

நான்சிறுமியாக இருக்கையில் அவுரி எனப்படும் இந்த இண்டிகோ செடியை என் பாட்டி பறித்து வர சொல்லி அரைத்து,  சாணி மெழுகிய  தரையில்  ஓரத்தில் இந்த விழுதால் நீலச்சாய கரையிடுவார். பல நாட்களுக்கு சாணிக்கறை போன பின்னும் நீலக்கறை அழியாமல் இருக்கும்..இன்றைக்கு நம் வீட்டு வாசலிலும்  சாலை ஓரங்களிலும் படர்ந்து கிடக்கும் இவை,  உலர்த்தப்பட்டு, தலைமுடிச் சாயத்திற்கென அமேசானில் விற்கப்பட்டு  காசாகிறது.

சிறில் அலெக்ஸ்

உயிரை காப்பாற்றிய சிவப்பு வைன்,  குயினைன் கருப்பு தண்ணீர் காய்ச்சல் உண்டாக்குவது  போன்ற   அப்போது நம்பப்பட்ட பல மருத்துவ தகவல்களும் உண்டு தேயிலை தோட்டக் கூலிகள் அவர்களின் சம்பளம், அவர்களை கண்காணிக்க அமர்த்தப்பட்ட  கங்காணிகள், கூலிக்காரர்களை கொள்ளையடிப்பது, கொத்தடிமை முறை,  5 வயது குழந்தைகளும் தோட்ட வேலை செய்வது, கணக்கில்லாத மரணங்கள் என்று அசாமில் நடந்த கொடூரங்கள் மனதை கனமாக்குகிறது.இத்தனைக்கு பிறகும் சொல்லப்பட்ட கொடுமைகள் உண்மையில் நடந்ததில் சிறிதளவே என்று வாசிக்கையில் கண் நிறைந்துவிட்டது

மசாலாவுக்கு பிரபலமாயிருந்த சிலோனில்  தேயிலை  அறிமுகமாகின்றது.  மஞ்சள் பூஞ்சை நோயால் காபி பயிர்கள் அழிந்த பின்னர் தேயிலை  அந்த இடங்களை பிடிக்கிறது. ’’மடிந்த காபி செடிகளின் கிளைகளுடன் வெட்டப்பட்ட  மரத்தண்டுகள்   தேநீர் மேசைகளுக்கு கால்களாக வைக்கப்பட்டன’’ எனும் வரி ஒரு பெரிய வீழ்ச்சியையும் ஒரு புதிய அறிமுகத்தையும் எளிதாக சொல்லிவிடுகிறது.

கல்கத்தாவிலிருந்து அசாம் தேயிலை செடியின் விதைகள் கண்டிக்கு அருகிலிருக்கும் பேராதனை ராயல் தாவரவியல் பூங்காவுக்கு வரவழைக்கப்படுகிறது.ஆங்கிலேய ஆட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று இந்த  தாவரவியல் பூங்காக்கள். 1821 ல் ஆறு வளைந்து செல்லும் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வது குறித்த என் பல கனவுகளில் நிறைவேறிய  ஒரே ஒரு கனவு நான் இந்த பேராதனை தாவரவியல் பூங்காவுக்கு சென்றதுதான். நிச்சயம் பல நாட்கள் செலவழித்தாலே முழு பூங்காவையும் பார்க்க முடியும் என்றாலும் எனக்கு ஒரு முழு நாள் வாய்த்தது. நான் பார்த்து பிரமித்த, தாவரவியல் படிக்கும் மாணவர்கள்  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் பூங்காக்களில் இதுவும் ஒன்று. அத்தனை வசீகரமான, விஸ்தாரமான , பிரமாதமான பூங்கா அது.  அங்கிருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பான உலர் தாவர சேகரிப்பு மிக சிறப்பானதாக இருந்த்து.

இந்திய தேயிலை குழுமம் மற்றும்   இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி கழகம் உருவான பின்பு    தேயிலை வளர்ப்பில் உரங்களின் பயன்பாடு, விதைகளுக்காக   தாய் செடியை தெரிவு செய்து அதிலிருந்து  நல்ல விதைகளை சேகரிப்பது, நோய் கட்டுப்பாடு  ஆகியவற்றினால் விளைச்சலும் கூடுகிறது கேளிக்கை விருந்துகளும் கிரிக்கெட் புல்வெளிகளுமாக தேயிலைதோட்டங்கள் நவீனமடைகையில் மிக மெல்ல தொழிலாளர்களின் நிலையும் உயர துவங்குகிறது.

புரூக் பாண்ட், லிப்டன், டை-ஃபூ, கோஆப் தேயிலை பிராண்டுகள் ஒவ்வொன்றும் உருவானதின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.  பரிசு ஸ்டிக்கர் திட்டம் மட்டுமல்லாது விதவைகள் ஓய்வூதிய திட்ட மெல்லாம் கூட தேயிலை தூள் பாக்கட்டுகள் வழியே மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

டீ பேக் எனப்படும் தேயிலை பைகள்  தற்செயலாக, தவறுதலாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நியூயார்க் தேயிலை வியாபாரி தனது உயர்குடி வாடிக்கையாளர்களுக்கு பட்டுத்துணியில் பொதிந்த தேயிலை தூள் அனுப்பியபோது , அவர்கள் அதை துணியுடன் கொதிக்கும் நீரில் இடவேண்டுமென தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள்.  பின்னர் இன்னும் மெல்லிய துணியில் பொதிந்து கொடுத்தால் வசதியாக இருக்குமென்னும் அவர்களின் கோரிக்கையில் பிறந்திருக்கிறது இப்போது பல கவர்ச்சிகரமான வடிவங்களில் சந்தைப்படுத்தப்ட்டிருகும் தேயிலை துணிப்பொதிகள்

முதல் அத்தியாயத்தில்  நியூசிலாந்து தேயிலை  தோட்டங்களுக்குள் சென்று மறைந்துவிடும் ராய் பின்னர் இறுதி அத்தியாயத்தில் தான் புலப்படுகிறார். வேலையையும் மொழியையும் கற்றுக்கொள்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில் ஓட்டுநர் உரிமம் வாங்கி விடுகிறார். லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரி  ராய்க்கு வைக்கும் சோதனை மிக புதுமை . ஐரோப்பியர் குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்று நம்பும் ஆப்பிரிக்க தாய்மார்கள் ராயை கண்டதும் குழந்தைகளுடன் ஒளிந்து கொள்கிறார்கள். .

ராய் வீடு திரும்பும் ஓரிரவில் ரேபிஸ் வெறிபிடித்த நாயொன்று அவர் வீட்டு கூடத்தில் நிற்கிறது, மற்றொரு இரவில் ராயின் காரில் மாட்டிக்கொள்ளும் முயலை  சாலையோரம் இருந்து கால் நீட்டி தட்டி பறிக்கின்றது சிறுத்தை  ஒன்று. காசோலைகள் இளம் பன்றியின்  பின்பக்கத்தில் எழுதித்தரப்பட்டு, அதே பின்பக்கத்தில் ஸ்டாம்ப்பு, வைக்கப்பட்டு  பணம் கைமாறிய பின்னர் பன்றி வங்கி ஊழியர்களுக்கு உணவாகிறது. இப்படி ராயின் நியூசிலாந்து அனுபவங்கள் நமக்கு   பெரும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன

தேயிலையின் வரலாறை போலவே, பிற முக்கியமான வணிக பயிர்களுக்கும் பணப்பயிர் களுக்கு இருக்கும் வரலாறையும், தொடர்புள்ள   சுவாரஸ்யமான உண்மை கதைகளையும் இப்படி  சொல்லி கற்றுக் கொடுத்தால் அதிகம் பேர் தெரிவு செய்யாத,  விலக்கி வைக்கிற, தாவரவியல் துறைக்கு மாணவர்கள்  விரும்பி வந்து சேர்ந்து கற்றுக் கொள்வார்களாயிருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் சிவப்பு தேயிலை செடிகளில் இருந்து கிடைக்கும் Rooibos tea எனப்படும் செந்தேநீர் , கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலை செடிகளில் இருந்து  இப்போது கிடைக்கும் அந்தோசயனின் நிறமிகள் அடர்ந்திருக்கும் ஊதா தேயிலை, சின்ன சின்ன ஜவ்வரிசி பந்துகள் மிதக்கும் குமிழி தேநீர், வெள்ளை தேயிலை, பச்சை தேயிலை, என்று நமக்கு கிடைக்கும் இத்தனை தேநீருக்கும் தேயிலை வகைகளுக்கும் பின்னே  பல்லாயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்கள் கண்ணீரிலும் குருதியிலும் எழுதப்பட்ட  நெடிய வரலாறு இருக்கிறதென்பதை இனி ஒவ்வொரு கோப்பை தேநீரும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.

சிறில் அலெக்ஸ்’க்கு வாழ்த்துக்கள்

பொன்முத்தங்கள்

பொன்முத்தம்

வெண்முரசு மீள் வாசிப்பிலிருக்கிறேன். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய திறப்புக்கள், புதிய அறிதல்கள் என்று தீராமாலே இருந்துகொண்டிருக்கிறது வெண்முரசு. இம்முறை வேர்களை, இலைகளை மகரந்தங்களை,  மரங்களை எல்லாம் குறிப்பாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலிலிருந்து துவங்கி முதலாவிண் வரையிலுமே பயணிக்கும் மகரந்தங்கள் மிக மிக முக்கியமான நிகழ்வுகளில்  குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முதற்கனலில் எட்டுவகை ஸ்ரீதேவியராக  அறியப்படுகிற , விதைகளுக்குள் வாழும் தேவியான  விருஷ்டி, வேர்களையும் மகரந்தங்களையும்  தானே ஆள்பவள் என்கிறாள். வியாசருக்கு சுவர்ணவனத்தின்   பறவை குடும்பத்தின் சிறு குஞ்சொன்று  பூவின் மகரந்தத் தொகை போல  இருக்கிறது

முதலாவிண்ணில் அழும் சிறுமதலையை மெல்ல தட்டியபடி  அன்னை ‘ சிறு கரிச்சான் பைதலே, பாடுக குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை’’என்று தாலாட்டுகிறாள்.

மென்முகில் சேக்கையில் துயிலும்  சித்ரசேனனை சுற்றி   அவன் தேவி சந்தியை பூத்த காட்டிலிருந்து மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்புகிறாள்..

கிராதத்திலேயே மழையீரத்தில் கொன்றைகளுக்குக் கீழே உருவான கால் குழித் தடங்களில் பொன் பொடி என மகரந்தம் உதிர்ந்து கிடக்கிறது.

வண்ணக்கடலில் ஸ்தூனகர்ணன் ஆலய சுனை நீரை  அள்ளி வீசி தன் உடலிலிருந்து மகரந்தப் பொடிகளையும் தேன் துளி களையும் களையும் துரியோதனன்  முன்புதான் ஸ்தூனகர்ணன் தோன்றுகிறான்.

இமைக்கணத்தில் அத்ரிமலை முடி நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த சுகரின் முன்னால் எழுந்த விண்ணுரு நூறாயிரம் கோடி இடிகளென எழுந்த பெருங்குரலில் “நானே மாபெரும் அரசமரம். வானில் வேர் விரித்து மண்ணில் கிளையும் விழுதும் இலையும் தளிரும் மலரும் மகரந்தமும் பரப்பி நின்றிருக்கிறேன்” என்று  முழங்குகிறது.

.இளைய யாதவனின் விழிகளினூடாக தாமரை இதழ்களுக்குள் வண்டு என.நுழைந்த யமி அதன் மகரந்த மையத்தை அடைகிறாள்.

இளைய யாதவர் விதுரரிடம் அஸ்வதந்த அருமணியை கொண்டு வரச்சொல்லுகையில் விதுரர் செல்லும் அந்த  வைப்பறையின் காற்றில் வேப்பிலைச்சருகின் நாற்றமும் தாழம்பூம்பொடியின் மணமும், இருளின் மணமும் கலந்திருக்கிறது.

மாமலரில்   முண்டன்.  மரத்தில் மலர்ந்த அசோகசுந்தரியை பற்றிச் சொல்லும்போது   பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்த கல்பமரத்தின் அலை வளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தம் என்று மாற உருக்கொண்டெழுந்ததென்கிறான்

வெண்முகில் நகரத்தில் கிருஷ்ணனுடன் பகடை ஆடி சலிக்கும் சகுனி   கற்பனையில் அலையிலெழும் குதிரையில் ஏறி வருகிறது ஐந்து கைகள் கொண்ட ஒரு மலர். அம்மலர் வட்டம் சிலந்திவலை ஆகி, சிலந்தி எட்டு கைகளுடன் நச்சுக்கொடுக்குகளுடன் எழுந்து, புல்லிவட்டமாக சிதர் விரித்து மகரந்தம் காட்டுகிறது

மகரந்தம்

நீர்ச்சுடரில் மகனிடம் எப்படியும் ஒருமுறை பேசத்துடிக்கும் சுபத்ரையின் கண்களில் தெரியும்   இரட்டை வெண்புழுக்களில் ஒன்றாக அபிமன்யூ நெளிவது ஒரு  தாமரை மலரின் மகரந்த பீடத்தில்தான்

தன்மேல் பெருங்காதல் கொண்ட சச்சியைக்காண  சிட்டுக்குருவியென அவளிடம் வந்துகொண்டிருந்த இந்திரன் மீது   மணந்ததும் மகரந்தம் தான்

கல்பொருசிறு நுரையில் மலையன் தயை  என்னும் சிறுமியுடன்  இளையாயாதவரை தேடி மந்தரம் எனும் ஆயர்சிற்றூரை அடைகையில்   கடக்கும் காட்டின் தரையையே பொன்னிற விரிப்பாக காட்டுவதும் உதிர்ந்த பூம்பொடிகள் தான்

களிற்றுயானை நிரையில் பாஞ்சாலியின் அறையின் மலர்கள் இதழ்கள் விரித்து, பூம்பொடி நிறைத்து காத்திருந்த  ஓவிய மலர் வெளியில் யுயுத்ஸு சிறகு முளைத்த சிறுவண்டென பறந்தலைகிறான்

தீயின் எடையில் அன்னை முறை கொண்டவளை புணர்ந்த ஸ்தூனகர்ணனிடம், ஸ்தூனன் ’’கிருதயுகத்தில் மானுடர் பூம்பொடி படர்ந்திருந்தாலும் மென்சேறு பூசப்பட்டிருந்தாலும் அசையாத பாறைகள் போலிருந்தனர்’’ என்கிறான்.

பைன் மகரந்தப்பொடி

வெய்யோனில் இந்திரபிரஸ்தத்திற்கு வந்த கர்ணன் அரண்மனைக்கு செல்லுகையில் அவைபுகும் வழியில் காணும் வெண்புரவியின் மென்மயிர் பரப்பில் வெயிலின் செம்மை பூம்பொடி உதிர்ந்தது போல பரவியிருந்தது என்னும் வெகு நுட்பமான இந்த விவரணை கற்பனை செய்து பார்க்கையில் பேரழகாக இருந்தது.

இருட்கனியில் இறந்த வெய்யோனை வணங்கும் அஜர் உரையிடைப்படும் பாட்டில் வரும் துயர் கொண்டிருக்கும் நீலத்தாமரைமலர்.’’என் இதழ்களுக்கு ஒளியாகிறீர்கள். என் பூம்பொடியில் நறுமணம் நிறைக்கிறீர்கள். என் அகக்குமிழில் தேன் என கனிகிறீர்கள்’’ என்கிறது கதிரவனிடம்.

இப்படி பல முக்கியமான தருணங்களில் மகரந்தங்கள் வெண்முரசில் குறிப்பிட பட்டிருக்கிறது.

வீட்டில் ஒரு கத்தி சவுக்கு மரம் இப்போதுதான் மலரத் தொடங்கி இருக்கிறது.  இலைகளே தெரியாமல் மரம் முழுவதும் பூத்திருக்கும் மஞ்சள் மஞ்சரிகளிலிருந்து நுண் மலர்களும்,மகரந்த பூம்பொடியும்  மழைபோல பொழிந்து வீடும் வாசலும் மஞ்சள் குளித்து கொண்டிருக்கிறது. ’மஞ்சுளா’ என்று மரத்திற்கு பெயரும் வைத்தாயிற்று. ஒரு மரத்திற்கு இத்தனை மகரந்தம் ஏராளம்தான் ஆனாலும் அடுத்த சந்ததிகளை உறுதிசெய்ய, காற்றில் நீரில் பரவும் போது, வீணாய் போகவிருக்கும் மகரந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தேவைக்கும் அதிகமாக, இப்படி ஏராளமாக மகரந்தங்களை  உருவாகுகின்றன தாவரங்கள்.

தாவரங்களின்  மகரந்தச் சேர்க்கை என்பது  காதல் செய்வதுதான். பிற உயிர்களை போல தன் இணையை தேடி செல்ல முடியாமல், வேர்களால் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருப்பதால் தாவரங்களில் இணையைத் தேடி காதலுடன் பயணிப்பது மகரந்தங்களே. ஆண் மரங்களிலிருந்து மகரந்தம் பெண் மரங்களின் மலர்களை தேடி அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர்கள் வரை பயணிப்பதும், அப்போது பெண் மலர்கள் கருவுறுதலுக்கு தயாராக இருந்து மகரந்தத்தை வாங்கிக்கொள்ளுவதும். காற்றில் கலந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பிற தாவரங்களின் மகரந்தங்களினால்  பெண்மலர்கள் சூல் கொள்ளாமலிருக்க தேவையான தடுப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வதும், பலவீனமான மகரந்தங்கள் வந்துசேர்கையில் அவற்றை முளைக்க விடாமல் பெண்மலர்களே அழித்துவிடுவதுமாய் கருவுறுதலின் ஏற்பாடுகளை  மலர்கள் அதீத கவனத்துடன், புத்திசாலித்தனமாக மேற்கொள்கின்றன. ’’Pollination Romance’’ என்றுதான் நான் கற்பிக்கையில் குறிப்பிடுவேன்.

நுண்ணோக்கியில் மகரந்தங்கள்

தாவரங்களிலும்  தென்னையை போல ஒரே பாளையில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியாகவும், செம்பருத்தியைப்போல ஒரே தாவரத்தில் இருபால் மலர்களும், பப்பாளி, ஜாதிக்காய் மரங்களைப் போல ஆண்பெண்மரங்கள் தனிதனியே இருப்பதும் பலருக்கு தெரிவதில்லை.

மலர்கள் கொண்டிருக்கும் மரங்களனைத்தும் கனிதரும் என்று நினைக்கிறார்கள் அப்படி கனி தராதவை மலட்டு மரமென்று வெட்டப்படுகின்றன.

பலர் வீடுகளில் பப்பாளியின் ஆண் மரங்களை அது காய்க்காத மரம் என்று வெட்டி விடுகிறார்கள். ஒரே ஒரு ஆண் மரமாவது, எங்கோ ஓரிடத்தில் இருந்தால் தால் அதன் மகரந்தங்கள் தேடிச்சென்று காதல் கொண்டபின், அந்த ஊரின் அனைத்து பப்பாளி மரங்களும் கனி கொடுக்கும். இங்கு வீட்டில் இருந்த  ஆண் மரமொன்றை வெட்டிவிட சொல்லி, தோட்டத்தை  சுத்தப்படுத்த உதவும் லக்ஷ்மி சொன்னபோது நான் அவளிடம் இந்த ஆண் பெண் காதல் கதையை விளக்கினேன். முகவாயில் கைவைத்துக்கொண்டு ’’மனுஷங்க மாதிரியே இதிலயும் ஆம்பளை, பொம்பளை இருக்குதுங்களே’’ என்று வியந்தாள்.

உலகின் பூக்கும் தாவரங்களில் 330,000 தாவரங்களுக்கு பாலினப்பெருக்கம் செய்ய மகரந்த சேர்க்கை  அவசியமாக இருக்கின்றது. இதன் பொருட்டு மகரந்தங்கள் மிகச் சரியான பருவத்தில் வெளியாகி, அவற்றின்  இணையை தேடி பயணிப்பதும், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதும் , மிக ஆச்சர்யம் அளிப்பவை .இந்த காதலுக்கு நீரும், காற்றும், பறவைகளும் ,தேனீக்களும், குளவிகளும், வண்டுகளும், எறும்புகளும், விலங்குகளும் துணை செய்கின்றன.

காற்றினால்  நிகழும் மகரந்த சேர்க்கையும் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது.  கிராதத்தில் அர்ஜுனனிடம் காளன் ’’அலை அலையென எழுந்துவரும் முடிவிலா காற்றே, பருவங்களைச் சமைத்து, மலர்களை முகிழவிழச் செய்து. மகரந்தங்களால் சூலுறச்செய்து காயும் கனியும் ஆக்குகிறது என்கிறான்

பூச்சிகளால் நிகழும் மகரந்த சேர்க்கையும் ஒரு அழகிய கவிதையை போல சொல்லப்பட்டிருக்கிறது

இளைய யாதவர். ப்த்ரரிடம் ” “மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. தான் செல்ல விரும்பும் திசை நோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!”என்கிறார்,

சூல்முடியில் முளைவிடும் மகரந்தங்கள்

தன் மகரந்த சேர்க்கைக்கான எல்லா வசதிகளும் இருக்கையில், மலர்களின் மெல்லிய அசைவிலேயே மகரந்தம் பெண் மலர்களின் மீது பொழியும் என்றாலும் வீரியமிக்க சந்ததிகளை இம்முறையில் உண்டாக்க முடியாதென்பதை அறிந்து,   அயல்மகரந்த சேர்க்கையை விரும்பும் தாவரங்களின் அறிவை என்னவென்று சொல்வது?. இருபால் மலரான  செங்காந்தளை பார்த்தால் தெரியும் தன் சூலக முடியில் தனது மகரந்தங்கள் விழுந்துவிடக்கூடாதென்பதற்காக, ஆண் பகுதியிலிருந்து,  சூலக முடியினை முடிந்த வரையிலும்  தள்ளி அமைத்திருக்கும்

ஆண் பகுதியிலிருந்து மகரந்தம் எளிதில் வெளிவராத சில குறிப்பிட்ட வகை குழல் மலர்களில், வண்டுகள் தங்களது உடலை மலர்களில்  வேகமாக உரசி மகரந்தத்தை வெளிவர செய்து தங்கள் உடம்பில் எடுத்துக்கொண்டு போகும் Buzz pollination என்பதுவும் தாவரவியலின் ஆச்சர்யங்களில் ஒன்று. இந்த உரசலின் அலைவரிசை மிகத்துல்லியமாக  இருந்தால் மட்டுமே இம் மலர்களிலிருந்து மகரந்தம் வெளியே வரும். உலகின் 9 சதவீத மலர்களில் இந்த  உரசல் தேவையாக இருக்கிறது.உரசலின்போது மகரந்தம் வண்டுகளின் உடலின் அடிப்பாகங்களிலும், கால்களுக்கு இடையிலும் பீய்ச்சி அடிக்கப்படுகின்றது, மகரந்த பொடி பூசிய இவ்வண்டுகள் பிற மலர்களில் அமரும்போது எளிதாக காதல் நடக்கின்றது. இந்த பீய்ச்சியடிக்கும் வேகமானது   புவி ஈர்ப்பின் வேகத்தைவிட 30 மடங்கு அதிகமென கணக்கிடப்பட்டிருக்கிறது.

இவ்வண்டுகள்  அமர்ந்து சென்ற மலர்களின் மீது அடர் மஞ்சள் மகரந்த துணுக்குகள் பொன்முத்தங்களென அமைந்திருக்கும்.நம் கண்ணுக்கு தெரியாத இந்த காதலின் போது  ஆண் பெண் தாவரங்கள் தங்களுக்கிடையே  சரியான இணையை தேடுவதும், சமிஞ்சை அளிப்பதையும், பின்னர் பிழையின்றி அதே இனத்தின் பெண் மலரை கண்டடைவதையும்  குறித்த பல ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிற உயிரினங்களில் நடப்பது போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட மகரந்தங்கள் பெண் மலரில் விழுந்து,அனைத்துமே முளைத்து ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பெண் முட்டையை அடைந்து விதிக்கப்பட்ட ஒன்றே ஒன்றின் குழல் வெடித்து விந்து வெளியேறி, இணைந்து கருவுறுதல் நிகழ்கின்றது.

மகரந்தம்

மழைப்பாடலில் கர்ணனை கருக்கொண்டிருக்கும் பிருதை அனகையிடம் . நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்? எனக்கேட்கிறாள்.

பாலையின் மகரந்தச்சேர்க்கை மற்ற நிலப்பரப்புக்களை விட சிறப்பானதாயிருக்கும். அங்கு வரும் பூச்சிக்களின் எண்ணிக்கை குறைவென்பதால் வரும் பூச்சிகளுக்கு பரிசாக இனிப்புக்களையும் எண்ணெய்த்துளிகளையும் அமினோ அமிலங்களையும் மலர்கள் மகரந்தக்குவையின் மீதே வைத்திருக்கும்.

பாலைப்பெருமலர்வு ( Desert super bloom ) எனப்படும் அரிய தாவரவியல் நிகழ்வில் வழக்கத்துக்கு மாறான மிக அதிக  மழைப்பொழிவு இருக்கும் போது, முந்தைய மழையில் உருவாகி பாலை மணலில் புதைந்திருக்கும் விதைகள் முளைத்து  மிக அதிக அளவில் பாலைத் தாவரங்கள் ஒரே சமயத்தில் மலர்ந்து, மகரந்தம் பரப்பி, சூல்கொண்டு, மீண்டும் ஏராளமான விதைகளை உருவாக்கும். கலிஃபோர்னியா பாலைகளில் பத்து ஆண்டுகளுக்கொருமுறை இம்மலர்வு நிகழும். 1990களுக்கு பிறகே பாலை பெருமலர்வென்னும் இந்த சொல் புழக்கத்தில் வந்தது

எழுதழலில் சந்திரசூடருடன் அரண்மனைக்கு செல்லும் வழியில் தான் இளைய யாதவரின் மைந்தர்களுடன் வளர்ந்ததை  நினைவுகூறும் அபிமன்யூ “அவருக்கு எத்தனை மைந்தர்?” என்று  கேட்கும் பிரலம்பனிடம் // “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்”// பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.” என்கிறான்

இளையயதவரின் காதல்களுக்கு  மகரந்தத்தை ஒப்புமையாக்கி அவரை உளத்தலைவராக ஏற்றிருக்கும் பல்லாயிரம் பெண்களையும், அவரின் பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும்,  அவர்களின் லட்சம் மைந்தர்களியும்  குறிக்கும் இந்த வரி எத்தனை அழகானது!

மகரந்தக்குளியல்

கார்கடலில் போர் சூழ்கையொன்றை குறித்த விவாதத்தில் கர புஷ்பம் என்றொரு தாமரை  சூழ்கையை அஸ்வத்தாமன் இப்படி விவரிக்கிறான் ’’தேன் நாடி வண்டுகள் தாமரைக்குள் வருகின்றன. மையத்திலுள்ள மகரந்தத் தாள்களுக்கு அடியில் வந்தாலொழிய அவற்றால் தேனருந்த இயலாது. அங்கிருந்து அவை எளிதில் பறந்தெழ இயலாமல் தேனும் பூம்பொடியும் தடுக்கும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்றுகூடி குவிந்து வண்டை சிறைப்படுத்தும். நாம் வகுக்கும் சூழ்கையில் அர்ஜுனன் அல்லது பீமன் விழ வேண்டும்//என்கிறான். மலர்பொறி சூழ்கை அது. தாமரையினுள்ளிருக்கும்  மலரமுதை அருந்தி, அங்கிருக்கும், மித வெப்பத்தில் மதிமயங்கி, வண்டுகள் உள்ளேயே இரவெல்லாம் சிறைபட்டு பின்னர் காலையில் வெளியே வருவதை பல பழந்தமிழ்பாடல்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

இயற்கையிலேயே Trap blossoms எனப்படும் மலர்ப்பொறிகள்  தாமரையல்லாத மலர்களிலும் உண்டு. சில கொடித்தாவரங்கள் நெருக்கமாக ஒன்றையொன்று தழுவி கொண்டிருக்கும் மலர் மஞ்சரிகளை கொண்டிருக்கும், அவற்றை  தேடி வரும் பூச்சிகளை அந்த மஞ்சரிகளுக்குள்ளேயே சிறிது நேரம் வெளியேற முடியாத வகையில் பிடித்து வைத்துக் கொண்டு, பின்னர் மகரந்தம் அவற்றின் உடல் முழுக்க பூசப்பட்ட பின்னர் அவற்றை விடுவிக்கும்

மலர்களிலிருந்து மலரமுதினை (Nectar) மட்டுமல்லாது மகரந்தங்களையும் பல பூச்சிகள் உண்ணும். சொல்வளர் காட்டில் இளைய யாதவர் பத்ரரிடம்  ’’மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண் சாரத்தையே அது கொண்டு செல்கிறது, அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது. என்பார்.

ஒரு மரத்தின் நுண்சாரமான மகரந்தத்தில் அபரிமிதமான சத்துக்கள் அடங்கி இருப்பதால் பல நாடுகளில் தேனைப்போலவே மகரந்தங்களும் சேகரிக்கப்பட்டு, மனிதர்களுக்கு உணவாகின்றது. பைனஸ் மகரந்தங்கள் இவற்றில் மிக பிரபலமானது. கொரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஆண்டுக்கொன்றென நீள ஸ்கேல் போன்ற அட்டையில் பொதிந்திருக்கும்  Dasik சிறப்பு பிஸ்கட்டுகள் பைன் மகரந்தங்களை கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.

பூச்சிகளும் மலரமுதுடன் மகரந்தங்களையும் உண்ணும், அவற்றை சேகரித்து கூடுகளுக்கு எடுத்துச்செல்லும். மகரந்தத்தை சேகரிக்கும் கூடை போன்ற அமைப்பினை ( pollen Basket ) பல வண்டுகளும் தேனீக்களும் பின்னங்கால்களில் கொண்டிருக்கின்றன. இன்னும் சில பூச்சி இனங்கள் மகரந்தத்தை சேகரிக்க உடலின் பின் பகுதியில் அடர்ந்த முடி அமைப்பை கொண்டிருக்கும். மகரந்தங்களை  உண்ணும் உயிர்கள் Palynivore எனப்படுகின்றன.

மகரந்தக்கூடை

தேனீக்களை வளர்த்து தேன் சேகரிப்பவர்கள் தேன் கூடுகளின் பின்புறம் தேனீக்கள் நுழைகையில் அவற்றின் உடலில் இருந்து மகரந்தங்களை மட்டும் பிரித்தெடுக்கும் சல்லடைப் பொறிகளை வைத்திருப்பார்கள்.வளர்ந்த நாடுகளில் பழப்பண்ணை களில் தேவைப்படும் தேனீக்களை பண்ணைக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் கூடுகளில் வளர்க்கும்  கட்டுப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடத்தவென  சிறப்பு தொழிநுட்பங்களும் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றன.

மலருயிரியல் எனப்படும் Floral biology யின் துணை அறிவியலான  Anthecology, என்பது மகரந்த சேர்க்கையை, அதற்கு துணைபோகும் உயிரினங்களை, இவற்றிற்கிடையேயான தொடர்புகளை, புரிதல்களை பற்றிய அறிவியல். மகரந்த துகள்களை பற்றிய பிரத்யேக அறிவியல் palynology எனப்படுகிறது.

மகரந்த  சேர்க்கையின் முக்கியதுவமறிந்த பல நாடுகளில் இந்த பூச்சிகளின் வழித்தடங்கள் பாதுகாப்படுகிறது முதன் முதலில் மகரந்த வழித்தடங்கள் (pollinator corridors ) என்னும் சொல்லை   சூழலியலாளர் ஃப்ளெமிங் (Ted Fleming ) 1993’ல் உருவாக்கினார். வலசை செல்லும் சிறு பறவைகளும் பூச்சி இனங்களும் மகரந்த சேர்க்கை செய்தபின்னர் திரும்பி செல்லும்  பயணவழியில் சோர்வடையாமல் இருக்க மகரந்தம் கொண்டிருக்கும் மலர்கள் அவற்றிற்கு கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்னரே சேமித்து வைத்திருந்து அளிக்கின்றன. காலநிலை மாற்றங்களினால் இந்த மகரந்த வழித்தடங்களில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் மாற்றம் அல்லது சேதம் பல தாவரங்களின் இனப்பெருக்கத்தை நேரடியாக பதிகின்றது.இவ்வழித்தடங்களில் இருக்கும் தாவரங்களும் அவற்றில் அடுத்தடுத்து மகரந்த சேர்க்கையும்,கருவுறுதலும் நிகழும் காலங்களும், அவற்றிற்கு  உதவும் பூச்சி இனங்களும் குறித்த ஆய்வுகள் மிக முக்கியமானவை.

இவ் வழித்தடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆக்கிரமிப்பு தாவரங்களினாலும், பல தாவரங்களின் பருவம் தவறிய  மலர்தலினாலும் பல வழித்தடங்கள்  நிரந்தரமாக அழிந்துவிட்டதை காட்டுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையெனில் கருவுறுதலும், விதை உருவாதலும், அடுத்த சந்ததியும் இல்லாமல் போகிறது.

மகரந்த  சேர்க்கைக்குதவும் உயிரினங்கள் மற்றும் மகரந்த வழித்தடங்களின் அழிவு மனிதர்களின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாகும் காலம் வெகு சமீபத்தில் தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்

பல அமெரிக்க பழங்குடியினர்களில் பலிச் சடங்குகளில் பலி விலங்கின் மீது நாம் மஞ்சள் நீர் ஊற்றுவது போல  மகரந்தப்பொடியை தூவும் வழக்கம் இருக்கிறது. அரிஸோனா மற்றும் மெக்ஸிகோ பழங்குடியினர் மகரந்தத்தால்  பூசப்படுகையில் உடல் புனிமடைவதாக  நம்புகின்றனர்.

பெரும்பாலான பூச்சியினங்களுக்கு மஞ்சள் நிறம்மட்டுமே கண்ணுக்கு புலப்படும் என்பதால்தான் மகரந்தங்கள் பொதுவாக மஞ்சளில் உருவாக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வகை பூச்சியினங்ளுக்காக இளநீலம் வெள்ளை பச்சை. சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களிலும் மகரந்தங்கள் உருவாகின்றன.

பிற உயிரினங்களில்  ஆண் பெண்ணை கவர பிரத்யேகமான அழகும், இறகும் ,அலங்காரங்களும், நிறங்களும்  கொண்டிருப்பது போலவே, மனிதனின்  கண்ணுக்கே தெரியாத மின்னணு நுண்ணோக்கியில் மட்டுமே காணக்கிடைக்கும் மகரந்தங்களும், அவற்றின் மேற்புறத்தில் இருக்கும் அழகிய சிற்பங்களின்  நுண் செதுக்கல்களை போன்ற வடிவங்களும், நிறங்களும் இருக்கின்றன. நுண்ணோக்கிகள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் நம்மால் பார்க்க முடியாமல் போயிருக்கும் மகரந்தங்களின் இப்பேரழகை குறித்து  சமீபத்தில் நீங்கள் பாலுறவின் ஆன்மீகத்தில்   சொல்லியவற்றை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்,

// நீங்கள் ‘பார்ப்பதற்காக’ அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு மெய்மையைச் சிற்பமாக்கும் பொருட்டு அவை அங்கே செதுக்கப்பட்டுள்ளன. எவருமே பார்க்கவில்லை என்றாலும் ஆலயம் குறைவுபடுவதில்லை. பாருங்கள், எவருமே பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம்கூட சிற்பங்கள் நிறைந்திருக்கும். சில ஆலயங்களில் மண்ணுக்கு அடியில்கூட சிற்பங்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவை அந்த ஆலயத்தின் இயல்பான நுண்கூறுகள், அவ்வளவுதான்.அங்கே அவை இருப்பது மனிதனின் தேர்வு அல்ல. மனிதன் விலக்கக்கூடுவதும் அல்ல. அது படைப்பின் பகுதி. இயற்கையின் பகுதி. நன்று தீது என்பதற்கு அப்பாலுள்ளது// எனக்கு மகரந்தங்களின் அழகை காண்கையில் தெய்வ தரிசனமாகவேதான் தோன்றுகிறது.

(மகரந்தங்களின் பல அழகிய புகைப்படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்-Awesome Microscope Images of Pollen Grains (17 pics) – Izismile.com )

மரவள்ளி

மருத்துவத்துறையில் தாவர மயக்கமூட்டிகளின் வரலாறு குறித்து கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். கட்டுரை தலைப்பாக ’மயக்கமென்ன’ என்று வைக்கலாமாவென யோசித்து அந்த தலைப்பில் வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தேடுகையில் ஜெ வின் மரவள்ளி கிழங்கு மயக்குதல் கட்டுரை  கிடைத்தது. எப்படி இதை நான் வாசிக்காமல் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. அடிக்கடி ’மயக்குதல் என்னும் சமையல் முறையை அவர் எழுதி வாசித்திருக்கிறேன் அது என்னவென்று தெரியாமல் இருந்தது.. இந்த கட்டுரை அதையும் இன்னும் பல விஷயங்களையும் சொல்லியது. மிகச் “சுவையான’’ கட்டுரை.

மரவள்ளி தொடர்பான பல நினைவுகளை இந்த வாசிப்பு கிளர்த்திவிட்து. எங்கள் ஊரான பொள்ளாச்சி கேரளாவிற்கு அருகில் என்பதால் மரவள்ளி பயன்பாடு பிற கோவை பகுதிகளை விட சற்று அதிகம்தான். ஆனால் மைய உணவாக இல்லை மாலை வேளைகளில் அல்லது மிக வறிய காலங்களில் சமைக்கப்படும் உணவுதான்.

நான் சிறுமியாக இருக்கையில் பக்கத்து வீட்டில் ஒரு கிருஸ்துவ குடும்பம் இருந்தது. மிக வறுமையில் இருந்தவர்கள் அவர்கள். 5 பிள்ளைகளுடன் 7 பேர் வீட்டில். பெரும்பாலும் அவர்களின் உணவு மரவள்ளிக்கிழங்கில் சமைக்கபட்ட எதோ ஒன்றாகவே இருக்கும். சமயங்களில் என்னுடனும் அதை பகிர்ந்து இருக்கிறார்கள்.

நான் தாவரவியல் இளங்கலை படிக்கையில் இறுதி வருடத்தின் இறுதி செய்முறை தேர்வு பொருளாதார தாவரவியல்.  ஆய்வக மேசையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தாவரப்பொருட்களை பார்த்து, அவை எந்த தாவரத்திலிருந்து பெறப்பட்டவை, என்ன அறிவியல் பெயர், என்ன உபயோகம் என எழுத வெண்டும். அந்த வரிசையில் ஒரு அழிரப்பர் இருந்தது.. எனக்கு அதன் குடும்பம் நினைவில் இருந்தது, ஆனால் பெயர்  சந்தேகமாக இருந்தது. Manihot esculenta   என்று எழுதி விட்டேன். அப்போது எங்களின் கண்டிப்பான ஆசிரியர் திரு. ஷண்முக சுந்தரம் பரீட்சை முடிந்து வீட்டுக்கு செல்ல அனுமதிக்க மாட்டர் புறநிலை தேர்வாளர் சென்ற பின்பு ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி படு பயங்கரமாக கோபித்துக் கொள்வார். அவர் அழைக்கிறார் என்றாலே அழும் மாணவர்கள் இருந்தோம்.

அன்று என்னையும் வரச்சொல்லி  அவர் மேசையின் முன்னால் நிற்க வைத்து பிற மாணவர்களிடம் ’’லோகமாதேவி பின்னாளில் ஒரு பெரிய சயிண்டிஸ்டாக வரப்போறா  தெரியுமா’’ என்றார் எனக்கு வெலவெலத்து விட்டது. ’’அவ மரவள்ளிக்கிழங்கிலிருந்து ரப்பர் தயாரிக்கப்போறா’’ என்ற போதுதான் எனக்கு ரப்பருக்கு பதில் மரவள்ளியின் பெயரை எழுதியதும், ரப்பரின் அறிவியல் பெயரும் ஒருசேர நினைவில் வந்தது.  ஒருபோதும் மறக்க முடியாததாகிவிட்டது  அந்த மரவள்ளி கிழங்கு ரப்பர்.

இலங்கையில் இருக்கையில் அங்கு மரவள்ளிகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். மாண்டியோக்கா என்பார்கள் அதை அங்கு. கடைகளில்  உலர்ந்த மரவள்ளி வற்றல்களும், மாவும் சாக்குசாக்காக இருக்கும். ஒரு விருந்தில்  பாலில் வேகவைத்த சோற்றுக் கட்டிகளுடன் மிக சுவையான தேங்காய் பாலில் செய்த மரவள்ளி குழம்பை சாப்பிட்டேன்.. அவித்து தாளித்த மரவள்ளியுடன்   தேங்காய் வெங்காயம் கலந்த ஒரு உலர் சம்பலும் அடிக்கடி கிடைக்கும் உணவு அங்கு. அங்குதான் ஒரு அம்மாள் எனக்கு மரவள்ளியை ஒருபோதும் குக்கரில் வேக வைக்க கூடாது என்றும் திறந்த பாத்திரங்களில் வேக வைக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள்.

முன்பு வீட்டுத்தோட்டத்தில் மரவள்ளிகளை பயிரிட்டிருந்தேன். அதன் கிழங்குகளுக்காக அருகிலிருக்கும் வயல்களிலிருந்து சாம்பல் வண்ண முயல்கள் வந்துகொண்டே இருக்கும். அவற்றிற்கு என்று நான் தொடர்ந்து  பயிரிட்டு கொண்டிருந்தேன்.  களைத்து வீடு திரும்பும் மாலைகளில் வாசல் கேட்டை திறக்கையில் காலடியில் சிவப்பு கண்களுடன் சாம்பல் வண்ண முயல்கள் விரைந்து ஓடுவது அத்தனை மகிழ்வளிக்கும். பின்னர் பெருச்சாளிகள் கிழங்குகளை தோண்டி குழிபறிக்க துவங்கியதால் அவற்றை  பயிரிடுவது நின்று போனது.

மயக்கமென்னவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல மரவள்ளி கிழங்குகள் அமேஸானை சேர்ந்தவைதான். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அவற்றின் காட்டுமூதாதைகளான Manihot esculenta ssp peruviana  , Manihot escculenta ssp fabellifoliya ஆகியவற்றிலிருந்து இன்று நாம் உண்ணும் வகைகள்  உருவாக்கபட்டன. Manihot பேரினத்தில் சுமார் 98 சிற்றினங்கள் உலகெங்கும் இருக்கின்றன.இவற்றில் பிரேசிலில் மட்டும் 40 சிற்றினங்கள் உள்ளன.

உலகின் ஆறாவது முக்கிய உணவுப்பயிரான மரவள்ளிக்கிழங்கில் கலப்பின வகைகள் புதிது புதிதாக கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கின்றன கிழங்குகளின் சத்துக்கள், அளவு மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க கலப்பின சோதனைஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இலைகளின் டானின் அளவும் கலப்பினங்களில் அதிகரிக்கப்படுகிறது.

.சாகுபடி முறையில் நுட்பமான மாற்றங்கள் செய்தும் கிழங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். ஒளி அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் துரிதமாக அதிக கிழங்குகள் கிடைக்கும் என்பதால்,  குறைந்த பகல்பொழுதுகளிருக்கும் பருவங்களில் மரவள்ளிகள் பயிரிடப்படுகிறது.

இவற்றில் குறைந்த நச்சை கொண்டிருப்பவைகளும் அதிக நச்சு கொண்டிருக்கும் கசப்பு வகைகளும் இருக்கின்றன.

மானிகாட் என்னும் அறிவியல் பெயரில்   Mani oca என்பது பிரேசிலில் ’மரம் போன்ற கிழங்கு’ என்னும் இதன் வழங்கு பெயர். இதுவே அறிவியல் பெயராகவும் ஆனது. esculenta என்றல் மிக சுவையான, உண்ணக்கூடிய என்று பொருள்(latin).. பிரேசிலிய மொழியில்  tipi என்றால் கசடு, அடியில் தங்குகிற என்று பொருள். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து  மாவாக்கிய பின்னர் எஞ்சும் கசடுகளை குறித்த இச்சொல்லிலிருந்தே  (Tapioca )டேபியோக்காவும் வந்தது..

மரவள்ளி கிழங்கு பயிர் பிரேசிலிலிருந்து ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு 16 ஆம் நூற்றாண்டில்  போர்சுகீசிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவிலும் 18 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களே இதை  அறிமுகப்படுத்தினார்கள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் இறுதியில்  இவை பெரும்பாலான ஆசிய பகுதிகளில் அறிமுகமாயிருந்தன.

இவற்றில் மலர்களும் அரிதாக உருவாகும், கிளைத்த மஞ்சரிகளில் சிவப்பு தீற்றல்களூடன் பச்சையும் பழுப்பும் கலந்த சிறு மணி வடிவ  ஆண் பெண் மலர்கள் தனித் தனியே காணப்படும்.. ஒரே மஞ்சரியில் ஆண் மலர்கள் உச்சியிலும் பெண்மலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படும்.. சிறு கனி (1 செமீ அளவில்) நுண் விதைகளுடன் இருக்கும்

இவற்றின் நச்சுப்பொருளான சையனோஜென்கள் (cyanogens) இளம் இலைகளில் மிக அதிகமாகவும் முதிர்ந்தவைகளில் குறைந்தும் காணப்படும். கிழங்குகளிலும் நச்சின் அளவு அடிப்பகுதியிலிருந்து கிழங்கின் நுனிப்பகுதிக்கு அதிகரித்துக்கொண்டே வரும். கிழங்கின் மையப்பகுதியில் ஒரங்களைவிட நச்சு குறைவாக இருக்கும். வறட்சி, வளம் குறைவான நிலம் போன்ற  சூழியல் காரணிகளாலும் நச்சின் அளவு கூடுவதுண்டு

பிற புரத உணவுகளுடன் கலந்து மரவள்ளியை உண்ணுகையிலும் இதன் விஷத்தன்மை  மட்டுப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஆப்பிரிகாவில் பூஞ்சைகளைக்கொண்டு நொதிக்க வைத்து நச்சகற்றப்படுகிறது. டான்ஸானியா மற்றும் உகாண்டாவில் குவியல் நொதித்தல் முறையில் நச்சு நீக்கப்படுகிறது  தோலுரிக்கப்பட்டு 3 நாட்கள் வெயிலில் உலரச்செய்த கிழங்குகளை பெருங்குவியல்களாக அடுக்கி சாக்குகளால் மூடி வைக்கையில்  உள்ளிருக்கும் வெப்பம் வெளியில் இருப்பதைவிட 12 பாகை அதிகமாக இருக்கும்.  இந்த வெப்பத்தில் Neurospora sitophila, Geotrichum candidum and Rhizopus oryzae.  போன்ற பூஞ்சைள் கிழங்குகளில் வளரும்.  சில நாட்களில் கிழங்குகள் வெளியில் எடுக்க்பட்டு  பூஞ்சைகள்  சுரண்டி எடுக்கப்பட்டபின்னர் மீண்டும் வெயிலில் உலர்த்தி பொடித்து சலித்து சேகரித்து வைத்துக் கொள்கின்றனர். இம்முறையில் நச்சு பெரும்பாலும் நீக்கப்படுகிறது.

வெயிலில் உலர்த்துவது, அதிக அளவு நீரில் வேக வைப்பது ஆகியவை நச்சுநீக்கும் எளிய முறைகள் எத்தனை அதிக நீரில் வேகவைக்கப்படுகிறதோ அத்தனைக்கு நச்சு வெளியேறும்

மரவள்ளிக் கிழங்கிலிருந்து மது வகைகளும் உருவாக்கப்படுகின்றன. பிரேசில் பழங்குடியினர் மரவள்ளிக்ழங்கை வேகவைத்து,  வாயிலிட்டு மென்று பின்னர்  பெரிய மண்பானைகளில் நொதிக்க வைக்கிறார்கள் மனித எச்சில் கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக  மாறும் நொதித்தலை துவங்கி வைக்கிறது. பின்னர் அதை மதுவாக்குக்கிறது. இதே முறையில் பண்டைய ஜப்பானில் அரிசி மதுவான சாகேவும் செய்யபட்டுக்கொண்டிருந்து. இந்த மது cauim எனப்படுகிறது. இந்த மதுவை பழங்குடியின பெண்கள் மட்டும் உருவாக்குகின்றனர். வட்டமாக அமர்ந்து வேகவைத்து குளிர்விக்கப்பட்ட கிழங்குகளை வாயிலிட்டு மென்று சிறு சிறு கிண்ணங்களில் துப்பி சேர்த்து ,பின்னர் அவற்றை பெரிய பானைகளில் இடுகிறார்கள்..நொதித்த மதுவை வெதுவெதுப்பாக அருந்துகிறார்கள் இவற்றை பரிமாறுவதும் பெண்களே. இந்த மதுவை ஒரே மடக்கில் அருந்த வேண்டும் என்பதும் அவ்வினத்தின் நியதி..இப்போதும் இந்த மது அமேஸான் பகுதிளில் தயாராகின்றது

இந்த மதுவை தயாரிக்கையில் பானைகளின் அடியில் தங்கும் கசடுகள்,  வட்டமாக ரொட்டிகளை போல உருட்டி தேய்த்துத் திறந்த அடுப்புக்களில் இருபுறங்களிலும் மீண்டும் மீண்டும் நீர் தெளித்து  வாட்டப்படுகின்றன. வாட்டிய ரொட்டிகளில் 35 சதவீதம் ஈரம் இருக்கையில் அவற்றை மரக்கட்டைகளின் மீது மரவள்ளி இலைகளால் பொதிந்து கீழே விழாத அளவிலான உயரத்தில் அடுக்குகிறார்கள். 3 நாட்கள் கழித்து அவற்றில் முழுக்க பூஞ்சை படர்ந்த பின்னர் மூடிய மண் பானைகளில் 1, 2 நாட்கள் வைத்திருந்து கிடைக்கும் மஞ்சள் நிற  திரவம் மற்றுமொரு மதுவகையான் tiquira  எனப்படுகிறது. இந்த மஞ்சள் கரைசலை உடனடியாகவோ அல்லது உலரச்செய்து தேவைப்படும்போது நீர்ல் கரைத்தும் அருந்துகிறார்கள்.இன்றும் பிரேசில் நகரங்களில் இம்மது கிடைக்கிறது.

கசரி (kasiri ) எனப்படும் மற்றொரு வகை மரவள்ளி மது தென்னமெரிக்காவின் சில பழங்குடியினரால் தயாரிக்கப்படுகிறது . தோல் உரித்த கிழங்குகளை துருவி நீரில் ஊறவைத்து பின் அவற்றை கட்டைகளால் அழுத்தி பிழிந்து  கிடைக்கும் சாற்றை  காய்ச்சி கொதிக்க வைத்து நொதித்த பின்னர்  தயாரிக்கும் மது இது. இவற்றில் எச்சில் உமிழ்வதும் உண்டு. இந்த மதுவை காயஙகளை ஆற்றவும் பயன்படுத்துகிறார்கள்.ஆப்பிரிக்காவிலும் பிரேசிலிலும் கிடைக்கும் இம்பாலா என்னும் மரவள்ளி பீர் மிகவும் பிரசித்தம்

வடக்கு பிரேசிலின் வாய்-வாய் பழங்குடியின மக்கள் இதே எச்சில் நொதித்தலை இருமுறை செய்து கிடைப்பது parakari  என்னும் கிழங்கு மது. Sarawi  என்பதும் இதே கிழங்கில் உருவாக்கும்  வடக்கு பிரேசிலின் மற்றொரு  பழங்குடியினரின் (Wapisiana) மது வகை.. nihamanchi  என்பது தென்னமெரிக்க ஜிவேரோ பழங்குடியின பெண்களால் உருவாக்கப்படும் மரவள்ளி மது. அரைத்த மரவள்ளி மாவை சமைத்து கூழாக்கி அதில் மென்று துப்பிய கிழங்கையும் சேர்த்து நொதிக்க வைக்கப்படும் இம்மதுவை நீருக்கு பதிலாக அன்றாடம் இவர்கள் அருந்துகிறார்கள் அவசியமேற்பட்டால் மட்டுமே நீரருந்தும் வழக்கம் இவர்களுக்கு இருக்கிறது Masato என்னும் நுரைத்து பொங்கும் மதுவகையும் அமேஸான் பழங்குடியினரால் விழாக்காலங்களில் அருந்தப்படுகிறது, இதுவும் மரவள்ளிக்கிழங்கு மாவில்  தயாராவதுதான்.

இந்தியாவிலும் tarul ko   மது இந்த கிழங்குகளில்;இருந்து தயாராகிறது. குறிப்பாக சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்க் பகுதிகளில். சிக்கிம் வரும் சுற்றுலா பயணிகள் அவசியம் சுவைத்துப் பார்க்க வேண்டியவைகளின்  பட்டியலில் இதுவும் இருக்கிறது.

ஆப்பிரிக்காவின் Casabe ரொட்டிகள், தாய்வானின் குமிழி தேநீர் என உலக புகழ்பெற்ற மரவள்ளிக்கிழங்கு உணவுகள் இப்போது அனைத்து நாடுகளிலும் கிடைக்கின்றன.தென்அமெரிக்காவின்  மரவள்ளிக்கிழங்கின் சிச்சா பீரும் புகழ்பெற்றது

தானிய மற்றும் பயறு வகை உணவுகளுக்கு  அடுத்ததாக வரும் கிழங்கு உணவுகளில் இதுவே அரசன் என கருதப்படுகிறது. உலகின் பலநாடுகளின் பஞ்சகால பயிராகவும் மரவள்ளிக்கிழங்கு இருக்கிறது.  தற்போது 102 நாடுகளில் முக்கிய உணவுப் பயிராகவும்,  வணிகப் பயிராகவும் மரவள்ளி கிழங்கு சாகுபடியாகிறது.

இன்று முழுவதுமே மரவள்ளிக்கிழங்குகளை பற்றியே வாசித்துக்கொண்டிருந்தேன்.எதிர்பாராமல் ஒரு தகவல் கிடைத்தது. அன்று தவறான பதில் எழுதியதாக ஆசிரியர் கண்டித்த, அந்த ரப்பர் கிழங்கு குறித்த வருத்தம் எனக்கு நேற்று வரை இருந்தது. ஆனால் இதை எழுதும் பொருட்டு வாசிக்கையில்தான் தெரிந்துகொண்டேன் மரவள்ளி கிழங்கின் ஒரு வகையிலிருந்து ரப்பரும் தயாரிக்கப்படுகிறது.

பிரேசிலை சொந்தமாக கொண்ட மேனிஹாட்டின் ஒரு சிற்றினத்திலிருந்து ரப்பரும் உருவாக்கப்படுகிறது. Manihot glaziovii, என்கிற சியரா ரப்பர் மரம் என்றழைக்கப்டும் மரவள்ளிப் பாலிலிருந்து ரப்பர்  உருவாக்கப்படுகிறது.( Ceara rubber tree), 1877ல் கியூ தோட்டத்திலிருந்து இந்த ரப்பர் மரவள்ளியின் விதைகள் உலகெங்கும் பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது.   கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 1 லட்சம் ஏக்கரில் 1912ல் இந்த ரப்பர் மரவள்ளிக்கிழங்கு பயிரானது, இதிலிருந்து கிடைக்கும் ரப்பரின் அளவு ரப்பர் மரத்தில் கிடைக்கும் ரப்பரை விட மிக்குறைவென்பதால் இது பிரபலம் ஆகவில்லை. பிரேசிலின் சியாரா நகரத்தில் இது மிக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு ரப்பர் தயாராகின்றது. எனவே நான் அன்று அந்த கேள்விக்கான விடையைத்தான் தவறாக எழுதியிருக்கிறேன். தாவரவியல் ரீதியாக அது தவறல்ல என்றும் மகிழ்ந்துகொள்கிறேன்

சுவையான கட்டுரைக்கும் அந்த கட்டுரையால் மரவள்ளிக்கிழங்கு குறித்து  மேலதிகமாக தெரிந்து கொண்டதற்குமான  நன்றிகளுடன்.

தர்ப்பை

சமீபத்தில் பக்கத்து ஊரான பணக்கார செல்லப்பம் பாளையத்துக்கு  ஒரு துக்கநிகழ்வுக்கு சென்றிருந்தேன், கல்லூரியின் முன்னாள் செயலரின் மனைவி இறந்துவிட்டார்கள்.அந்த ஊரில் பெரும்பாலும் அனைவருமே நிழக்கிழார்களும் செல்வந்தர்களுமே என்பதால் ஊர்ப் பெயரே அப்படி.

மிகப்பெரிய கட்டுவீடு. மதிலின் உட்புறங்களில் சிமெண்டுத்தரையில், அழகிய வட்டங்களில் தர்ப்பைப்புற்கள் வளர்த்தியிருந்தார்கள் முதன்முதலாக தர்ப்பையை இப்படி பச்சைப்புல்லாக அங்குதான் பார்க்கிறேன். தர்ப்பையை எங்கும் வளர்ப்பதில்லை அவை தானே வளரும் என்றே அதுவரையிலும் அறிந்திருந்தேன். செயலருக்கு தாவரங்கள் மீது தனித்த பிரியமுண்டு, நாக்பூர் ஆரஞ்சைகூட பல ஏக்கரில் சாகுபடி செய்து பார்த்திருந்தார் ஒருமுறை..

தர்ப்பையை எங்கு வாங்கினார் என்று கேட்க முடியாதபடிக்கு அசந்தர்ப்பமாக இருந்தது. எனினும் எனக்கு  அந்த புற்களின் மீதே பார்வை போய்க்கொண்டிருந்து. ஒரே ஒரு புல், அடிக்கிழங்குடன் கிடைத்தால் வீட்டில் வளர்த்தலாமென்றே நினைவு ஓடியது. கொங்குப்பகுதியில் பிரபலமான ‘’பந்தலிலே பாவக்காய்’’ பாடல் நினவுக்கு வந்து மனதை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

உலர்ந்த தர்ப்பையை, அதுவரையிலும் வீட்டில் கடவுள் படங்களுக்கு அருகில் சம்பிரதாயத்துக்காகவும், கிரகண நாட்களில் உணவுகளிலும், நீரிலும் போடுகையிலும், ஹோமங்களிலும், கல்லூரி ஆய்வகத்தில் உலர் தாவரமாகவும்தான் பார்த்திருக்கிறேன்

வீடு திரும்புகையில் வெண்முரசில் தர்ப்பை வரும் இடங்களை எல்லாம் நினைத்துக்கொண்டே வந்தேன். வெண்முரசை வரிசைக்கிரமமாக பலமுறை வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்..  மனம் சமநிலையிலில்லாத நாட்களில் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு நூலை மனம் சொல்லியபடி எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை பிரித்து வாசித்துவிட்டு நாளை துவங்குவதும் உண்டு.

இப்போது வெண்முரசில் தர்ப்பைகளை  பற்றி சொல்லி இருப்பவைகளை மட்டும் தனியே மீண்டும் வாசிக்க துவங்கினேன். தர்ப்பை புல் படுக்கை, இருக்கை, மோதிரம், பாய் என்று அதன் பயன்பாடுகள் பலநூறு முறை வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றுடன் மிக முக்கிய உச்ச தருணங்களில் எல்லாமே வெண்முரசில் தர்ப்பையும்  இருக்கிறது

முதற்கனலிலிருந்தே தர்ப்பை  சொல்லப்பட்டிருல்கிறது. பிரஜாபதிக்கும் தீஷணைக்கும் விண்ணகப்பெருவெளியில் முளைத்தெழுந்த பொன்னிற தர்ப்பைபோல் பிராசீனபர்ஹிஸ் பிறந்ததையும் பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் மண்ணில் பட்ட இடங்களில் இருந்து தர்ப்பையும் நாணல்களும் மூங்கில்களும் உருவாகி வந்தையும் முதற்கனல் சொல்லுகிறது.

வனலீலையில் வேள்விக்குதிரையான நாய்க்குட்டி ஷிப்ரதேஜஸின் முகத்தில் அடித்து, முந்தையநாள்தான்  திறந்த புத்தம்புதிய கண்களில் தர்ப்பையால் குத்துகிறான் .ஜனேமேஜயன். கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டேஇருக்கும் அவர் வேள்விமுகத்தில் கண்ணீருடன் தர்ப்பையும் நீருமாக தட்சனின் உயிரை காணிக்கையாக கொடுக்கிறார்..

தன்னிச்சைப்படி புத்திரசோகத்தால் உயிர்விட துணியும் வசிட்டர் தர்ப்பைப்புல்லை பரப்பி அதன் மீது அமர்கையில்தான் அதிர்ஸ்யந்தியின் வயிற்றிலிருக்கும் மைந்தன் வேதமுரைப்பதை கவனிக்கிறார். கிங்கரன் குழந்தையை கண்டுவிடாமலிருக்க கையில் தர்ப்பையுடன் குடில் வாயிலில் காவலிருக்கிறார் தவக்குடிலுக்கு வந்துவிடும் கிங்கரனை தர்ப்பையை தலைக்கு மேல் தூக்கி மன்னித்து விடுதலை செய்கிறார்.

துறவு பூண்டு அரண்மணையை விட்டு விலகும் தேவாபியின் கைகளில் சித்ரகரின் சீடர்கள் தர்ப்பை கங்கணத்தை அணிவித்த பின்னர் விட்டுவிடுகிறேன் என மும்முறை சொல்லச் செய்கின்றனர் . அதே பகுதியில் பால்ஹிகன் சந்தனுவை நோக்கி ’’எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை! ஆணை! ஆணை!” என்று தர்ப்பையை கையில் எடுத்துக்கொண்டே சொல்கிறான்

மழைப்பாடலில் குந்தியும் மாத்ரியும் தர்ப்பைக் காட்டில் நெருப்பெழுவதை உயரத்திலிருந்து பார்க்கையில் “தர்ப்பைக்குள் அக்னிதேவன் குடியிருக்கிறான் என்கிறார்கள்” என்கிறாள் மாத்ரி

ஆறாவது மாதத்தில் காந்தாரிக்கு  சீமந்தோன்னயனம் நடக்கையில்  வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வது சொல்லப்பட்டிருக்கிறது.

வெண்முரசின் 26 நூல்களிலுமே மிக அதிகமாக மிக விரிவாக தர்ப்பையை குறித்து சொல்லப்பட்டிருப்பது  வண்ணக்கடலில் தான்.  பிரபஞ்சத்தாமரை எனும் அனல்குவை வெடித்து அவ்விளையாடலின் ஒரு கணத்தில்  இளம்பச்சை நிறமான உயிர்த்துளி  பூமியை மூடும் பசும்புற்களாகி   ஒன்று தர்ப்பையாகவும்,, பாலூறியது நெல்லாக, தேனூறியது கோதுமையாக, தன்னுள் இனித்தது கரும்பாக, தன்னுள் இசைத்தது மூங்கிலாக என ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு வடிவை அடைந்தை சொல்லும் பரத்வாஜர் “புற்களில் புனிதமானது என தர்ப்பை கருதப்படுகிறது. ஏனென்றால் நீரும் நெருப்பும் அதில் ஒருங்கே உறைகின்றன. வேதங்களை ஜடங்களில் நதிகளும், மலர்களில் தாமரையும், தாவரங்களில் தர்ப்பையும், ஊர்வனவற்றில் நாகங்களும்,நடப்பனவற்றில் பசுவும், பறப்பனவற்றில் கருடனும் கேட்டறிகின்றன என்கிறார்

“குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விஸ்வாமித்திரம், யவை என தர்ப்பையின் ஏழுவகைகளையும், குசை காசம் ஆகிய முதலிரண்டும் வேள்விக்கும், தூர்வையும் விரிகியும் அமர்வதற்கும், மஞ்சம்புல் தவச்சாலையின் கூரை வேய்வதற்கும்,  போர்க்கலைக்கு .விஸ்வாமித்திரம், யவை நீத்தார் கடன்களுக்குரியது என்னும் விளக்கமும் வண்ணக்கடலிலேயே வருகிறது.மங்கலவேள்விகளுக்கு நுனிப்பகுதி விரிந்த பெண் தர்ப்பை, பெருவேள்விகளுக்குரியது திரண்டு,  அடிமுதல் நுனிவரை சீராக இருக்கும் ஆண் தர்ப்பை,    அடிபெருத்து நுனிசிறுத்தத வேள்விக்குகந்தல்லாத நபும்சக தர்ப்பைகளையும்  அவரே விவரிக்கிறார்.

பரத்வாஜரின் மாணவர்கள் குருநிலையில் தமக்குரிய தர்ப்பையை தொட்டெடுத்துக்கொள்ளுவதும்,  விடூகர் துரோணரை முன்னிருத்தி வேண்டிக்கொள்ளுவதும், துரோணர் விஸ்வாமித்ர புல்லை தேர்ந்தெடுப்பதுமாக அந்தப்பகுதி முன்பு வாசித்தவைதான் ஆனால் இப்போது தர்ப்பையை  முன்னிருத்தி வாசிக்கையில் மனம் பொங்கிக்கொண்டே இருந்தது. அதுவும் துரோணரை  விலக்கிவிட்டு பரத்வாஜர் மாணவர்களுடன் காயத்ரி சொல்லுகையில் மறைந்திருந்து துரோணர் பார்க்கும் காட்சியில் அவன் ஒரு அணுவிடை முன்னகர்ந்தால் அதை தன் அகத்தால் கேட்டுவிடமுடியும். ஆனால் அந்த எல்லைக்கு ஒரு மாத்திரை இப்பால் நின்று அவன் ஆன்மா முட்டிமுட்டித்தவித்தது. இந்த வரிகளில் நான் என்னையறியாமல் கண்ணீர் விட்டழுதேன்…

தர்ப்பைக்காட்டில் பிறந்த துரோணர் விடூகரின் கையை பிடித்துக்கொண்டு கையில் தர்ப்பையுடன் செல்லும் காட்சியை ஷண்முகவேலின் ஓவியத்தில் இப்போது புத்தம் புதிதாக பார்ப்பது போலிருகிறது. வெண்முரசில் பல இடங்களில் தர்ப்பை சொல்லப்பட்டிருந்தாலும் தர்ப்பையை முன்னிறுத்தி சொல்லப்பட்ட இந்த பகுதி மிகவும் உணர்வுபூர்வமானது.  தர்ப்பையை குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பகுதியில் இருக்கிறது.

அதுபோலவே வண்ணக்கடலில் துரோணர் அர்ஜுனனையும் பிறரையும் பந்துவிளையாட்டின்போது சந்திப்பதும் கிணற்றிலிருக்கும் பந்தை மிகச்சரியாக கிணற்றின் ஆழத்தை கணக்கிட்டு பிடுங்கிய தர்ப்பைக்கீற்றுக்களால் எடுத்து வானில் நிறுத்திக்காட்டுவதும், அர்ஜுனன் அவர் தாள்பணிவதுமாக மிக முக்கியமான அப்பகுதியிலும் தர்ப்பை இருக்கிறது.

அதே வண்ணக்கடலில் தான்  மண்ணில் புல்லிதழ் களாக எழுந்த குசை. பச்சைக்கரங்களை வான் நோக்கி விரித்து வெய்யோன் விடுத்த அமுதை வாங்கி உண்கிறாள்.. ஒரு சொல்லைகூட தாங்கமுடியா அகத்துடன்,  தாடி பறக்க, குழல் அவிழ்ந்திருக்க, விழிகள் அலைபாய பற்களால் கடிக்கப்பட்டு குருதி வழியும் உதடுகளுடன்   இருந்த துரோணரின் கையில் இருந்த தர்ப்பையை மெல்ல தொடுகிறாள் குசை.  இருளுக்குள் நடந்துகொண்டிருந்த அவர் முன் அலையடிக்கும் பசுந்தளிர் ஆடையும் விரிந்து காற்றிலாடும் வெண் மலர்க்கொத்து போன்ற கூந்தலுமாக குசை வந்து நின்று துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை அவளது சுட்டு விரலென்கிறாள்

அந்த பகுதியின் இறுதியில்  அவளையும் பிரிவதாக தர்ப்பையை  ஓங்கியபடி துரோணர் கூச்சலிடுகையில், இவனுள் ஓடும் காயத்ரிக்கு அனல் சிறகுகள் முளைக்கட்டும்.  என்னும் குரலுக்கு பின்னர் தர்ப்பைக்காட்டில் அனல் எழுகிறது. அந்த பகுதியிலும் ஷண்முகவேலின்  அனல்வடிவ அன்னையும் பற்றிக்கொண்டிருக்கும் தர்ப்பைக்காடும்,  துரோணருமாக  அபாரமான ஓவியம் அந்த தருணத்தை கண்முன்னே நிறுத்தும்.

அக்னிவேசரின் குருகுலத்துக்கு தர்ப்பையுடன் வந்ததுபோலவே  அங்கிருந்து வெளியேறுகையிலும் தர்ப்பையை எடுத்துச்செல்கிறார் துரோணர்

நாற்பத்தொன்றாம் நாள் அக்னிவேசரின் நீர்க்கடன்கள் முடிந்தபின்  மான்தோல் மூட்டையில் ஒரே ஒரு மரவுரியாடையை மட்டும் எடுத்துக்கொண்டு குருகுலத்திலிருந்து விடைகொண்டு கிளம்பும் துரோணர். திரும்பி குருகுலத்தின் ஓங்கிய அசோகமரங்களையும் தேவதாருக்களையும் நடுவே அக்னிவேசரின் குடிலுக்குப்பின்னால் நின்ற அரசமரத்தையும் சிலகணங்கள் நோக்கியபின் குனிந்து தன் காலடியில் நின்றிருந்த தர்ப்பையின் ஒரு தாளைப் பிய்த்து கையில் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்குகிறார்.

வண்ணக்கடலில் மகாபலி கதையை சொல்கிறார் பூரணர். தன்னை வெல்ல ஒரு மைந்தன் பிறந்திருப்பதை சுக்ரர் கணித்த சுவடிகளிலிருந்து அறிந்த மகாபலி, மண்ணிலிறங்கி தன் அன்னை பூத்து நிறைந்திருக்கும் மலையடிவாரத்தை அடைந்து சுக்ரர் முன்னிற்க இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சய வேள்வியை தொடங்குகிறான். தன் அரியணையை, செங்கோலை, கருவூலத்தை, நாட்டை, உறவுகளை, வெற்றியை, புகழை அவ்வேள்வியில் மூதாதையருக்கு பலியாக்கிவிட்டு,  இறுதியில் எடுத்த தர்ப்பையால் தானெனும் உணர்வை பலியாக்கும் கணத்தில்தான் அங்கே கூனுடலும் குறுநடையும் சிறுகுடையுமாக வந்த பிராமணன் ஒருவனைக் காண்கிறான்.. ”குற்றடி தொட்டளக்கும் மூவடி மண் அளிப்பாயாக!’ என்று வாமனன் கேட்கையில், “அவ்வண்ணமே ஆகுக!’ என்று சொல்லி நிறைகுடுவை நீருடனும் தர்ப்பையுடனும் கிழக்கு நோக்கி நின்று வாமனனின் கையில் நீரூற்றி ‘அளித்தேன் மூன்றடி மண்ணை’ என்கிறான்..

ஏகலைவனுக்கு வில்வித்தையை துரோணர் மறுக்கும் பகுதியிலும் தர்ப்பைக்காடும், தர்ப்பை துகள்களும், தர்ப்பை மண்டிய ஆற்றங்கரையும் வருகின்றன.தனக்கு சுகபோகங்களில் விருப்பமில்லை என்னும் துரோணர் தன்னால் கைப்பிடி தர்ப்பையுடன் தன்னால் எங்கும் எப்படியும் வாழமுடியும் என்கிறார்

இளநாகனிடம் வடபுலத்து சூதரான உதர்க்கர் “தெய்வங்கள் பருவுடல் இன்மை என்னும் துயர்கொண்டவை. அவற்றின் அகம் வெளிப்பட உயிர்களும் உடல்களும் தேவையாகின்றன” என்கிறார்.“துரோணரில் எழுந்தவள் குசை. தர்ப்பையில் வாழும் தெய்வம் அவள். அனலை தன்னுடலின் ரசமாகக் கொண்டது தர்ப்பை என்கின்றன நூல்கள்” என்கிறார்

விடூகர் அக்னிவேசரின் குருகுலத்தில் துரோணரை விடுகையில்  “நான் எளிய சமையற்கார பிராமணன். தர்ப்பையை தீண்டவும் தகுதியற்றவன்’’ என்கிறார்

ஒருநாள் அதிகாலையில் கங்கைக்கு நீராட சென்றிருந்தபோது துரோணர் தர்ப்பைகளைப் பிய்த்து நீரில் வீசிக்கொண்டிருப்பதையும்,  தன் இடக்கையில் வைத்திருக்கும் தர்ப்பைத்தாள்களை  வலக்கையால்  எடுத்து காலைநீரில் கங்கையில் கொத்துக்கொத்தாக செல்லும் நீர் குமிழிகளில் ஒன்றை உடைக்கும் போது பிற குமிழிகள் ஏதும் உடையாத வண்ணம்  உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு திகைக்கிறார் அக்னிவேசர். துரோணர் யாரென்று குரு கண்டுகொள்ளும் முக்கியப்பகுதி அது.

குருநிலையில்  மாளவனுடன் போரிடுகையில் அவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசி, அவை மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் குத்தி நிற்கிறது.

வெள்ளிமுளைப்பதற்கு முன்னர் துரோணர் கங்கைக் கரைக்குச் சென்று வில்லில் தர்ப்பைப் புல்லை அம்புகளாக்கி பயிற்சி செய்வதை  அங்க நாட்டு இளவரசன் பீமரதன் கண்டு பிறருக்குச் சொல்கிறான்.

அதே பகுதியில் எதிரே கையில் தர்ப்பையும் ஈர மரவுரியாடையுமாக வந்த துரோணனைக் கண்டதும் யக்ஞசேனன் விலகி வழிவிட்டு சில அடிகள் எடுத்து வைத்து கடந்து சென்றான்

சரத்வானிடம் தர்ப்பைத்தாளை  கன்யாகல்பமாக கொடுத்துவிட்டுத்தான் கிருபையை துணைவியாகிக்கொள்கிறார் துரோணர் மணம் முடித்த பின்னர் செல்வழியில் ஓய்வெடுக்க. ஒரு குகையில் தர்ப்பையும் நாணலையும் பிடுங்கி இருக்கை செய்து அமர்ந்திருக்கையில் கூரையில் இருந்து வந்த நாகத்தை கண்ட துரோணரின் தோள்கள் தர்ப்பையுடன் எழுவதற்குள் கிருபை நாகத்தின் நாவில் நாணல் துண்டை சொருகிவிடுகிறாள் . அச்சமயத்தில் இருவருமாக பேசிக்கொள்ளுபவை அழகு

வண்ணக்கடலில் முதன் முதலாக தேர் ஓட்டும் 12 வயது கர்ணன் அரசமோதிரம் பரிசு பெறும் பகுதியில் சொல்லப்படும் ஒரு கதையில் ரிஷ்யசிருங்கர் தர்ப்பையுடன் மான்தோலாடையும் தலையில் புரிமான்கொம்பும் மார்பில் மலர் மாலையும் அணிந்திருக்கிறான்;

ஏழன்னையர் ஏறியமர்ந்த காட்டரசனான யானையின் துதிக்கையில் வாழும் சக்தையை காண விரும்பும் துரியோதனன் செல்லும் வழியிலிருக்கும் சதுப்புக்குட்டையை சுற்றி கோரையும் தர்ப்பையும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன.

குருகுலத்திலிருந்து வெளியேறி பாரிஜாதரின் வழிகாட்டுதலின்படி மலைச்சரிவினூடாக நடந்துசென்று அஷ்டமுடி என்னும் மலைக்காட்டை அடையும் துரோணன்., நாணலும் தர்ப்பையும் கோரையும் அடர்ந்த சேற்றுக்கரை வழியை கடந்துதான் பாரிஜாதர் சொல்லிய   பஞ்சாப்சரஸை அடைகிறார்

பிரயாகையில் சாலிஹோத்ர குருகுலத்தின் குடில்களில் மாணவர்களின் வருவதை பார்க்கும் பீமன்,  உதடுகளில் மந்திரங்கள் அசைந்துகொண்டிருக்க, சால்வையால் உடல் மூடி கையில் தர்ப்பையுடன் சற்று விலகி அனைத்தையும் நோக்கிக் கொண்டிருக்கும் தருமனை கற்பனையில் காண்கிறான்.

குரோதத்தின் அனலை அணைக்க முடியாத துர்பதனுக்காக செய்யப்படும் பூத யாகத்தின் போது  சமித்துக்களில் கைக்குழந்தை தாய்மடியில் தவழ்ந்தேறுவது போல ஏறி சிறு பொற்கரங்களை விரித்து எழுந்த தழலில் வெண்கடுகு, அட்சதை, எள், தயிர், பால், தர்ப்பைப்புல், அருகம்புல், செண்பக இலை, தாமரைப்பூ முதலியவை வரிசையாக ஹோமிக்கப்படுகின்றன.  வேள்விப்பந்தலின் கூரையும் தர்ப்பையில்தான் வேயப்பட்டிருக்கும்

கடோத்கஜனுக்கு கதை சொல்லும்  பீமன் அஞ்சன வனத்தின் அஞ்சனைக்கும்  அவள் கணவனான கேசரி என்னும் ஆண் குரங்கிற்கும் பிறந்த குரங்குக் குழந்தை’’ மாந்தளிர் நிறத்தில் தர்ப்பைப் புல்லால் ஆன படுக்கையில் தீப்பிடித்ததுபோல தோன்றியதை’’ சொல்கிறான்.

பஞ்ச பாண்டவர் பாஞ்சாலியை மணம் கொள்ளும் நிகழ்வில்  பத்ரர்  தௌம்யரை வணங்கி மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோருகையில் அவர் தர்ப்பை மோதிரம் அணிந்த கைதூக்கி வாழ்த்தி ஒப்புதலளித்ததும் மணநிகழ்வுகள் துவங்குகின்றன.

வெய்யோனில்  பரசுராமர் மாலையில் கதிர்வணக்கம் செய்யும் பொருட்டு உலர் தர்ப்பை கொய்து வரும்படி சொல்லி, தர்ப்பையை வாங்கி தோலாடை களைந்து சிற்றாடை அணிந்து அலை வளைந்தமைந்த நீர்ப்படலத்தில் இறங்கி குனிந்து நோக்கி நிற்கிறார்.

நகரமைக்க இடம் தேடும் தேடும் பாஞ்சாலியை குறித்த நாடகத்தில்  காண்டவ காட்டை அணுகச்சொல்லும் அவளிடம் முதுநாகன் ’’அங்கு வாழ்பவை மாநாகங்கள். வடக்கே நாகபுரத்தில் முடிகொண்டு ஆண்ட தட்சநாகமான பிரபவர் குலத்துடன் எரித்தழிக்கப்பட்டபோது அவர் பல்லில் எஞ்சிய ஒருதுளி நஞ்சை ஒரு தர்ப்பை புல்நுனியில் தொட்டு எடுத்துக்கொண்டு இங்கு வந்தன அவர் குலத்து நாகங்கள் ஐந்து ’’ என்கிறான்.

பன்னிரு படைக்களத்தில்  ஜராசந்தனுடன் மற்போரிட, ஸ்நாதக பிராமணர்களின் வெண்ணிற ஆடையும்,  தர்ப்பை திரித்த புரிநூலும் அணிந்த.பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் செண்டுவெளிக்குள் நுழைகின்றனர்.

இந்திரபிரஸ்தத்தில் அந்த பெருவேள்வி நிகழ்கையில் தர்ப்பை மோதிரம் அணிந்திருக்கும் பைலரும் மாணவர்களும் தர்ப்பைச்சுருள் பற்றிக்கொண்டதும் வேள்வியை துவங்கி, தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு தேவர்களுக்கு அவியாக்குகின்றார்கள்’

ராஜசூய வேள்வியின் போது முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் தர்ப்பைப் பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறார்.

இந்நூலில்  மற்றொரு உச்ச தருணத்திலும் தர்ப்பை இருக்கிறது காம்பில்யத்துக்கு துருபதனை காணச்செல்லும் துரோணர் அக்னிவேசரிடம் பயின்றதற்கு சான்றாக இடையிலிருந்து தர்ப்பையை எடுத்துக் காட்டுகிறார். மன்னனால் அவமதிக்கப்பட்ட போது ’’இம்மண்ணிலேயே ஆற்றல் மிகுந்த தாவரம் போல ஒருவன் இங்கே நிற்கிறான்’’ என்கிரார் தர்ப்பையை கையிலேந்தியபடி

தர்ப்பையை “இது ஆயிரம் ஆலமரங்களுக்கு நிகரானது. இலையாலோ கிளையாலோ ஆனதல்ல, வேராலானது. தன் உயிர்ச்சாரமாக நெருப்பை கொண்டிருப்பது.” என்கிறார். உதடுகளில் காயத்ரி துடிக்க,   தர்ப்பையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கால்களைப் பரப்பிவைத்து தலைகுனிந்து அசைவற்று துரோணர் நிற்க்கும் காட்சி  வெண்முரசு காட்டும் உச்ச தருணங்களில் தலையாயது. இதில் தர்ப்பைக்கு சொல்லப்படும் அனைத்து இயல்புகளும் துரோணருக்கும் பொருந்தும்

சொல்வளர்க்காட்டில் தன்முன் நிரை வகுத்தமர்ந்திருக்கும் மாணவர்களிடம் சாந்திபனி முனிவர் ’’எல்லையற்றதை சொல்லும் சிறு சொல்,  முளைத்துதிராத விதையென்றாகி வேள்வியும் ஊழ்கமும் அதுவேயாகி, மேழியும் துலாவும் வாளும் தர்ப்பையும் அதுவே ஆனதை’’ சொல்கிறார்.

கிராதத்தில் தர்ப்பை வெட்ட சென்றபோது ஒரு  முனிவர் பொன்னிற மானையும் பொன்னிற உடல்கொண்ட சிறுவனையும் கண்டதை படுகிறார் சண்டன்

அபிசார வேள்விக்கு ’’எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்கிறார் மகாகாளர்.

முதிய அந்தணன் வடிவிலிருக்கும் இந்திரன்  வருணனை வரவழைக்கும் பொருட்டு, அனல் கட்டையும் தர்ப்பையையும் கைகளில் வைத்துக்கொண்டு கழியால் அலைகளை  அடித்து கிழிக்கிறான்

கிராதத்திலேயே அத்ரி முனிவரின் செளகந்திக காட்டில் காட்டாளனின் பின்னே பெண்களும் குழந்தைகளும் செல்கையில் அத்ரி ’’இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட  கையிலெடுக்கும் தர்ப்பை பொசுங்கி எரிந்து தழலாகிறது.

நீர்க்கோலத்தில் நளமன்னரின் கதையை சொல்லும் ஆபர் ’’கர்ணிகளில் ஒருவனான் சிஷுகன் பரசுராமரை தேடிச்சென்று அனல் சாட்சியாக அந்தணன் ஆனபின்னர், தர்ப்பைப் புல்லில் அனலும், நாவில் வேதமுமாக வரும் அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்பதை சொல்கிறார்.

வெண்முரசின் மற்றொரு உச்சம் குருதிச்சாரலில் தன்னாகுதி அளிக்க தெரிவு செய்யபட்ட இளம் வைதிகனான அவிரதன் வரும் பகுதி. அவனுக்கு தர்ப்பையில் மட்டுமே அமர ஒப்புதல் இருக்கிறது. தன் அன்னையை, இளமையிலிருந்த அவளின் அழகு ஒரு புன்னகையில் மட்டும் மிச்சமிருப்பதை, தர்ப்பையுடன் அலையும் தந்தையை நினைத்துக்கொண்டு தர்ப்பைபுல் பாயில் அமர்ந்திருப்பதும், இப்போது கூட பின்னடி எடுத்து வைக்கலாமென்று சொல்லப்படுகையில் மனம் இதுவல்ல எண்ணுவது என்று பதறிக்கொண்டிருக்கையிலேயே புன்னகையுடன் “இதுவே என முடிவெடுத்துவிட்டேன், ஆசிரியரே என்பதும் பின்னர் அவன் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்து தர்ப்பை புல்லாழி அணிந்துகொள்வதுமாக மனதை பிழியும் பகுதி அது.

அவன் அன்னையின் புன்னகையை சொல்லுகையில் ’உடைந்திருந்தாலும் களிம்பிருந்தாலும் விளக்கின் சுடர் ஒளிகுன்றுவதில்லை’என்னும் வரிகளில் மனம் அப்படியே நின்றுவிடுகிறது சொல்லப்பட்ட அவ்வழகிலிருந்து விடுபடவே முடிவதில்லை எப்போது வாசித்தாலும்

குருதிச்சாரலில் வேள்வியரங்கில் அங்கரை அமர்த்துவது குறித்த முக்கியமான பகுதியில் ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு, ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், விளாமிச்சை வேர், சந்தனம், நொச்சி, நாயுருவி, தேவதாரி, மா என தனித்தனியாக கொண்டுவந்து குவிக்கப்பட்ட வேள்விக்கான. எரிவிறகுகளில் தர்ப்பைப் புல்லும் இருக்கிறது. வேள்வியில் அனலூட்ட அமர்வபர்கள் தர்ப்பைத் திரியால் வேள்விப்புரிநூல் அணிந்துதான் உள்ளே வருகின்றனர்.

புருஷமேத வேள்வியில் அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கான தர்ப்பை விரிக்கப்பட்ட தாமரை வடிவு கொண்ட மணைகளும் அமைந்திருந்தன..

இமைக்கணத்தில் இறைவன் அர்ஜுனனுக்கு யோகத்திலேற விழைவோருக்கானவைகளை  சொல்கையில் ’தூய இடத்தில் துணி, மான்தோல், தர்ப்பை ஆகியவற்றின் மேல் உயரமில்லாமல் தாழ்விலாமல் உறுதியான இருக்கையை அமைத்துக்கொண்டு அதிலமர்ந்து சித்தத்தையும் புலன் செயல்களையும் ஒருங்கிணைத்து கூர்மையாக்கி ஆத்மா தூய்மை கொள்ளும் பொருட்டு யோகத்தில் அமைய வேண்டும் ’ என்கிறார்.

ஊழ்கம் பயில விரும்பும் வியாசர் ஏழாவது முறை கேட்டும் தந்தை மறுத்தபோது, தன்னை மாய்த்துக்கொள்ள  எண்ணி  அருகிலிருக்கும் தர்ப்பையின் கூர் நுனியை கழுத்தில் வைக்கையில்தான்  ஆசிரியரிலிருந்து தந்தை எழுந்து ’’நில் மைந்தா’’ என கூவுகிறார்.

செந்நாவேங்கையில்  சிதைகளில்  எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றும்.  வைதிகர்கள் ஒரு கூண்டு வண்டியில் இருந்து இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்தி வெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக்கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வருகின்றனர்

திசைதேர்வெள்ளத்தில் முரு’விடம் ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக!” என்கிறார்.

இருட்கனியில் சிதை பீடத்தின் மீதமர்ந்து ஊழ்கத்திலிருக்கும் கர்ணன் கண் திறக்கையில் அவன் முன்னிருக்கும் செண்பக மரத்தில்  வலக்கையில் தர்ப்பையும் இடக்கையில் மின்படையும் கொண்டு எழும் வஹ்னி.’’என்றும் உன் படைக்கலமாகி உடன் இருப்பேன்’’ என்கிறான்.

இருட்கனியில் கர்ணனிடம் பரசுராமரின் கதையை பிரவாகர் பாடியபின்னர்,   சூதரான உத்வகர்  அக்கதையை  அவனுக்கு மேலும் விரித்துரைக்கையில் “பார்க்கவ குருமரபின் பதிநான்காவது பரசுராமர் இப்போது இருப்பவர். முதல் பரசுராமர் பாரதவர்ஷத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து ஷத்ரிய குலங்களை அமைத்தார். அந்நிலங்களின் பழங்குடிகளில் வேதமும் தர்ப்பையும் அளிக்கப்பட்டவர்கள் பிருகு குலத்து பிராமணர்களானார்கள். செங்கோலும் மணிமுடியும் அளிக்கப்பட்டவர்கள் அக்னிகுல ஷத்ரியர்களானார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரசுராமர் அமைந்தார்’’ என்கிறார்

நீர்ச்சுடரில் எரிகுளங்களை சுற்றி பாண்டவர்கள் ஐவரும் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

களிற்றியானை நிரையில் சார்வாகரை நோக்கி கைகளில் தர்ப்பை வைத்திருந்த அந்தணன் ’’வேதம் பொய் என்கிறாயா’’ என கூவுகின்றான். அந்நூலிலேயே வேள்விக்காவலனாக யுதிஷ்டிரன் அமர்ந்திருக்கும் அஸ்வமேத யாக்த்தின்போது பந்தல்மேல் எழுகிறது   வேள்விக்குரிய தர்ப்பைக் கொடியும். இணையாக அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியும்..

கல்பொருசிறுநுரையில் வசுதேவரும் சூரசேனரும் மண்மறைந்த பின்னர், அரசியர் ரோஹினியும் தேவகியும் நீர்புகுந்து, பலராமரும் வடக்கிருக்கும் பகுதியிலும் தர்ப்பை வருகிறது. வடக்கிருத்தலின் இடத்தில் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்தே 7 நாட்கள் உணவும் நீரும் இன்றி பலராமர் மறைகிறார்.

முதலாவிண்ணில் தருமனிடம் இறுதியாக விடைபெறும் விதுரர்  தர்ப்பையால் ஆன மரணப்படுக்கையில் தான் இருக்கிறார்.

இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரருடன் இருக்கும் சங்குலன் அவருக்காக நீரும் ,கனியும் கிழங்குகளும், சேகரிப்பது, தர்ப்பைப்புல் படுக்கை அமைப்பது போன்ற பணிவிடைகளை செய்கிறான்.

தர்ப்பையில் வாழும் தெய்வம் குசை, புல்லின் அதிதேவதை குசை, பசும்புல்லில் வாழும் தெய்வம் குசை எனவும், வியாசர் தர்ப்பை பாயில் துயில் கொள்வது, கணிகர் தர்ப்பைப் பாயின் மேல் தன் ஒடிந்த உடலைக் கிடத்தி அமர்வது இளைய யாதவரின் தர்ப்பை புல் இருக்கை, தர்ப்பையை கையில் பற்றியபடி தீச்சொல் இடுவது என தர்ப்பையும், குசையும்  மேலும் பற்பல இடங்களில் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது.

Desmostachya bipinnata என்னும் அறிவியல் பெயருடைய தர்ப்பை வேத காலத்திலிருந்தே சோமக்கொடிகளுக்கு அடுத்த முக்கியமான  புனித்ததாவரமாக  யாகங்களிலும் பலிச் சடங்குகளிலும் உபயோகத்தில் இருந்திருக்கிறது.

இதன் அறிவியல் கிரேக்க மொழிப் பெயரில்  ’’கட்டுவதற்கு/ இணைப்பதற்கு உபயோகப்படுகிற’’ என்று Desmo என்னும் சொல்லும் ’நீண்ட மஞ்சரிகள்’ என்பதை  stachya  என்னும் சொல்லும், bipinnata என்பது எதிரெதிரெ அமைந்திருக்கும் இலைகளையும் குறிக்கிறது. அஸ்ஸாமில் இதன் நீண்ட மென் மஞ்சரிகளில் துடைப்பம் செய்கிறார்கள்.

.ஆஃப்ரிக்கா, அல்ஜீரியாவிலிருந்து இந்தியா வரை பரவி இருக்கும் தர்ப்பை சொமாலியா மற்றும் சூடானில் தோன்றியது, உலகின் பிற பகுதிகளுக்கு இவை மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படாமல் தானாகவே காற்றில் விதைகளின் மூலம் பரவியிருக்கலாமென்றே கருதப்படுகின்றது. பல புனிதப்புற்களை குறிப்பிடும் ரிக் வேதம் குசரா என்று தர்ப்பையை குறிப்பிடுகிறது, அதர்வவேதமும் குசையை குறிப்பிடுகின்றது. பிரம்ம புராணம் மகாவிஷ்ணுவின் உடல் ரோமங்களிலிருந்து தர்ப்பை உருவானதாக சொல்கிறது

வால்மீகி ராமாயணத்தில் தர்ப்பை குசை என்னும் பெயரில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வால்மீகி தர்ப்பை புல்லாசனத்தின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து, மடிந்த உள்ளங்கைகளுடன், தனது தவ ஆற்றலைப் பயன்படுத்தி ராமரின் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளை தேடினார் என்கிறது பாலகாண்டம்

சுந்தர காண்டத்தில் சீதை அனுமனிடம் ராமன் தன் அமர்ந்திருந்த தர்ப்பை ஆசனத்தின் ஒற்றைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்திரம் செய்து ஏவியதை பெருமையுடன் விவரிக்கிறாள். மேலும் பல இடங்களில் தர்ப்பை கூரை வேயவும்,  சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது சொல்லப்பட்டிருக்கிறது.

பஞ்சவடியில் குடிலமைக்கையில் ராமர் லக்ஷ்மணரிடம் ’’எங்கு வைதேகியும் நானும் மகிழ்ந்திருக்கும்படி நீரும் அழகிய இயற்கை காட்சிகளும் இருக்கிறதோ, எங்கு பூஜைக்குரிய விறகுகளும் மலர்களும் கிடைக்கிறதோ, எங்கு குசை வளருகிறதோ அங்கு குடில் கட்ட இடம் தேர்வு செய்’’ என்கிறார்.

துளசிதாசரும் ராவணனிடம் பேசுகையில் தனக்கும் ராவணனுக்கும் இடையில் தர்ப்பையை அரணாக வைத்துக்கொண்டு சீதை பேசினாள் என்கிறார். ரகு வம்சத்தின் அருமணியாகிய ராமன் எளிமையான குசை புல் பாயில் படுக்க நேர்ந்த அவலத்தையும் வருந்தி விவரிக்கிறார் துளசிதாசர்

இந்து மதம் தர்ப்பை புல்லுக்கு  தனித்துவமான ஆன்மீக பண்புகள் இருப்பதாக சொல்கிறது.  ஆபத்தான  கதிர்வீச்சு மற்றும்  எதிர்மறை ஆற்றல்களிலிருந்தும்,  சாபங்கள், பேய்கள், எதிர்மறை எண்ணங்கள்  ஆகியவற்றிலிருந்தும் தர்ப்பை மனிதர்களை காக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக பல்லாயிரம் ஆண்டுகளாக நம்பிக்கை நிலவுகிறது.

போதி மரத்தடியில் ஞானமடைந்த போது புத்தர் அமர்ந்திருந்தும்,  பகவான் கிருஷ்ணர் தியானிக்கையில் அமர்ந்திருந்ததும் தர்ப்பை ஆசனத்தில்தான். .   ஊழ்கத்திலிருக்கையில் உடலில் கூடும் ஆற்றல், பாதங்களின் வழியாக அதிலிருந்து விலகிச் செல்லாமல் தர்ப்பை புல்லாசனம் காக்கிறது.

தர்ப்பை காடுகள் நிறைந்திருக்கும் உத்தரபிரதேச குஷி நகரில் தான் புத்தர் இறந்து எரிக்கப்பட்ட புனிதத்தலம் இருக்கிறது

வலது கை மோதிர விரலில் பூஜைகள் செய்கையிலும் மந்திரங்கள் சொல்லப் படுகையிலும் தர்ப்பை மோதிரம் அணிந்து கொள்ளப்படும். சுப, அசுப நிகழ்வுகள் அனைத்திலும் தர்ப்பை தவறாமல் இடம் பெறுகிறது.

மரணச்சடங்குகளுக்கு ஒற்றைப்புல் மோதிரமும், சுப நிகழ்ச்சிகளில் இரண்டு புல் தாளாலான மோதிரமும், இறப்பல்லாத அமாவாசை தர்ப்பணம் நீர்க்கடன் போன்ற சடங்குகளில் மூன்று தர்ப்பைப்புல் மோதிரம், ஆலய வழிபாடுகளின் போது நான்கு தர்ப்பை புல்லாலான மோதிரமும் அணிந்து கொள்ளப்படுகிறது.. நுனி நறுக்கப்பட்ட தர்ப்பையின் பயன்கள் வெகுவாக குறைந்துவிடுகிறதென்றும் சொல்லப்படுகிறது. தர்ப்பை புல் நுனி ஒலி அதிர்வுகளை துல்லியமாக கடத்துவதை ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. ஹோமகுண்டங்களின் நாற்புறங்களிலும் நாலு திசையிலிருந்தும் வரும் எதிர்மறை சக்திகளை தடுக்க தர்ப்பை வைக்கப்படும்.

பொதுவில்  முழு நிலவுக்கு மறுநாள் தர்ப்பை அறுவடை செய்யப்படுகின்றது .தர்ப்பையை அமாவாசையில் அறுவடை செய்தால் ஒருமாதமும். பௌர்ணமியில் செய்தால் ஒரு பட்சமும் .புரட்டாசியில் செய்தால் ஆறு மாதங்களும் ஆவணியில் அறுவடை செய்தால் ஒரு வருடம் உபயோகிக்கலாமென்றும்,  சிரார்த்த காலத்தில் அறுத்தால் அன்றே உபயோகிக்க வேண்டுமெனவும் கணக்குகள் இருக்கின்றன.

அசுப காரியங்களுக்கு உபயோகிக்கப்பட்ட தர்ப்பை அதன்பிறகு உபயோகிக்கப்படுவதில்லை. வேறு தர்ப்பை கிடைக்காதபோது, மங்கல சடங்குகளுக்கு உபயோகித்த தர்ப்பையை மீண்டும் ஏழு முறை உபயோகிக்கலாம் என்று நெறி இருக்கிறது. நறுக்கி எடுத்து வந்த 6 மாதங்களுக்கு பிறகு தர்ப்பையின் ஆற்றல் குறைந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.

சந்திரிக ஸ்மிரிதி தர்ப்பையின் வேரில் பிரம்மனும் நடுவில் கேசவனும் நுனிப்புல்லில் சிவனும் உறைவதாக சொல்கிறது.

ராமேஸ்வரம் அருகில் இருக்கும் திருப்புல்லாணியில் கரங்களில் தர்ப்பையுடன் தர்ப்ப சயனராமர் இருக்கிறார். இத்தலத்தில் ஸ்ரீராமர் தர்ப்பைப்பாயில் படுத்து உறங்கியதாக ஐதீகம். இங்கு ஆகஸ்ட்-செப்டமப்ர் மாதங்களில் வரும் தர்பாஷ்டமியன்று கடவுளாகவே தர்ப்பை வணங்கப்படுகிறது

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் முதல் மொட்டை அடிக்கும் முன்பு குழந்தைகளின் தலையில் தர்ப்பையால் தொடுவது வழக்கம்.

பாய்களுக்கு நீளமான தர்ப்பையும் தலையணைகளுக்கு குட்டையாக நறுக்கப்பட்ட தர்ப்பையும் உபயோகிக்கப்படுகிறது. தர்ப்பை பாயில் உறங்குகையில் அசுப கனவுகள் வராது என்றும்,  உடலும் மனமும் பரிசுத்தமாகும் எனவும் சொல்லப்படுகிறது பல வேத பாடசாலை மாணவர்களுக்கு உறங்க தர்ப்பை பாய் தான் கொடுக்கப்படுகிறது.

வறண்ட மணல் பகுதிகள், உவர் நிலங்கள்,சதுப்பு நிலம், தரிசு நிலம் நீர் நிலைகளின் கரையில் என எங்கும்  தர்ப்பை செழித்து வளரும்.தானிய வயல்களில் இவை களைச்செடியாக காணப்படுகின்றன. பல்லாண்டுத்தாவரமாதலால் இலைகள் காய்ந்து.உதிர்ந்து மீண்டும் புதிதாக அடிக்கிழங்குகளிலிருந்து முளைத்துக் கொண்டே இருக்கும். சல்லி வேர்கள் நிலத்தடியில் 5 மீட்டர் ஆழம் வரையிலும், வேர்க்கிழங்குகள் 2 மீட்டர் ஆழத்திலும்  இருக்கும்

சூடானில் வீடுகளின் கூரைகளை வேயவும், கயறு திரிக்கவும், துடைப்பம் செய்யவும், தர்ப்பையை பயன்படுத்துகிறார்கள். தர்ப்பைப்புல் கூழிலிருந்து காகிதமும் தயாரிக்கிறார்கள். .புரதம் நிரம்பிய இளம் தண்டுகளையும், புல்லையும் கால்நடை தீவனமாக பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.

தர்ப்பை தாளின் ஓரங்கள், பிற புல் வகைகளை காட்டிலும் கைகளை கிழிக்கும் அளவுக்கு கூராக இருக்கும். பாற்கடலை கடைந்த போது தர்ப்பையும் கிடைத்ததாகவும்,  தேவர்கள் அமுதம் அருந்துகையில் கீழே விழுந்த சில துளிகள் தர்ப்பையின் மீதும்  விழுந்து, அதை நக்கி அருந்த முற்பட்ட நாகங்களின் நாக்கு அப்போதிலிருந்து நான் கூர்மையான தர்ப்பை புல்லின் ஓரங்களினால் இரண்டாக பிளவு பட்டதாகவும் தொன்மக் கதைகள் இருக்கின்றன.

கர தர்ப்பை மற்றும் மிருது தர்ப்பை என இருவகையான தர்ப்பை இருப்பதாக தாவர அறிவியல் சொல்லுகிறது சொரசொரப்பான இலைத்தாள்களுடன் இருப்பது கரதர்ப்பை எனும் Desmostachya bipinnata மென்மையான புல்தால்களை கொண்டிருப்பது மிருது தர்ப்பை என்னும் Eragrostis ciliaris.

தூப்புல்லென்றும்,(தூயபுல்),திருப்புல்லென்றும் பெயரிருக்கும் தர்ப்பையின்  சாம்பலில்தான்  செப்பு விக்ரகங்களை தூய்மை செய்கிறார்கள். தர்ப்பை புல்லுக்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருக்கிறது.

அடி சிறுத்து, நுனி பெருத்து இருப்பது அது பெண் தர்ப்பை ,அடிப்பகுதி பெரிதாக இருப்பது நபும்சக தர்ப்பை, அடி முதல் நுனி வரை ஒரே  சமமாக இருப்பது ஆண் தர்ப்பை எனப்படுகிறது.

தர்ப்பை, நாணல், யாவைப் புல், அறுகு, நெற்புல், விழல் மற்ற தானியங்களின் புல், மருள்பட்டை, சவட்டை, கோரைப்புல், கோதுமைப்புல் ஆகியவையும் பத்து விதமான  தர்ப்பைகள் என கருதப்படுகின்றன. தர்ப்பை கிடக்காத சமயங்களில் இவற்றை தர்ப்பையாக கருதுவதும், வழக்கத்தில் உள்ளது.

தர்ப்பையின் பல வகைகளை குறித்து அறிவியல் ரீதியான சந்தேகங்களும் குழப்பங்களும் இன்று வரையிலும் நீடிக்கின்றன. 1987ல் வாரணாசியை சேர்ந்த ஷர்மா என்னும் பேராசிரியர்  குசை என்பதும் தர்ப்பை என்பதும் இணையான பெயர்களும் ஒரே தாவரத்தை குறிப்பிடுவதும் அல்ல,  குசை எனபது ரிக் அதர்வ வேதங்கள் குசரா என்று குறிப்பிடும் Desmostachya bipinnata,  தர்ப்பை என்பது மிருது தர்ப்பையான  Eragrostis ciliaris என்கிறார்.

மஞ்சரிகளின் நீளம், புல்தாளின் நீள அகலம், அடித்தண்டுகளின் எண்ணிக்கை,  மலரும் பருவம் என்று தர்ப்பையில் காணப்படும் வேறுபாடுகள் அனைத்தும் அவற்றின் வாழிடங்களின் வேறுபாடுகளால், வளரியல்பில் உருவாகிய மாற்றங்கள்தான், அவை எதுவும் தர்ப்பையின் புதிய வகைகளல்ல என்றும் அவை எல்லாமே புதிதாக கண்டறியப்பட்ட வெவ்வேறு வகைகள் தானென்றும் சர்ச்சைகள் தொடருகின்றன. அதைப்போலவே தர்ப்பையும் குசையும் ஒன்றே, என்றும், அல்ல அவை வேறு வேறென்றும், பச்சைப்புல் குசை,  உலர்புல் தர்ப்பை என்னும் விவாதங்களும் உள்ளன.

வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கும்  ஏரளமான தாவரங்களை மட்டும் முன்னிருத்தி மீண்டும் மீண்டும் வாசிக்கையில் புத்தம் புதிதாக வெண்முரசு விரிந்துகொண்டேயிருக்கிறது.

கல்லூரி பாடத்திட்டத்தில் புல் குடும்பத்தில் நெல்லை மட்டுமே கற்றுத்தருகிறோம். அறிவியல் ரீதியாக நிரூபிக்கபட்ட இத்தனை பயன்களை கொண்ட, நம் பாரம்பரிய  மதச்சடங்குகளில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் தர்ப்பையையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். இதை செயல்படுத்தும், பரிந்துரைக்கும் இடத்தில் இப்போது நானில்லை எனவே காத்திருக்கிறேன்.

மேலும் சோமக்கொடியை குறித்தும், அது எந்த தாவரமாக இருக்கலாம் என்னும்   யூகங்களும் சாத்தியங்களும் பல ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது நான் சோமக்கொடி என்பது பூக்காத கீழ்நிலை தாவரமாகிய  எஃபிட்ரா (Ephedra)  என்று  கருதுகிறேன். அதை குறித்தும் நிறைய வாசித்தறிய வேண்டி இருக்கிறது.

தர்ப்பை புற்களை,  கதிர்வீச்சை தடுக்க செல்போன்களின் உறையிலும், பாதுகாப்பான பயணங்களுக்கு வாகனங்களிலும்,  ஆரோக்கியம் மேம்பட நோயுற்றவர்கள் அருகிலும்,  நீர்தேக்க தொட்டியில் நீரின் அசுத்தங்களை போக்கவும் பலர் வைத்துக்கொள்கிறார்கள்.

நான் கல்லூரியிலும் வீட்டிலும் பயணங்களிலும் எப்போதும் வெண்முரசின் நூலொன்றை உடன் வைத்துக்கொள்கிறேன்.

தானியப்போலிகள்/ தானிய பதிலிகள்-Pseudocereals

தானியங்கள் என்பவை புல் குடும்பமான போயேசியை சேர்ந்த தாவரங்களின் விதை மணிகள். தாவர அறிவியல், உலர் ஒருவிதைகனிகளான இவற்றை கேரியாப்சிஸ் (caryopsis) என்கிறது. உலகின் மிக பிரபலமான, மிக அதிகம் விளைவிக்கப்பட்டு உணவாக பயன்பாட்டில் இருக்கும் 7 தானியங்கள்; கோதுமை,மக்காச்சோளம், அரிசி, பார்லி, ஓட்ஸ்,  புல்லரிசி மற்றும் சோளம்  (wheat, maize, rice, barley, oats, rye & sorghum) ஆகியவை. உலகெங்கிலும் பிற உணவுப்பயிர்களை காட்டிலும் தானியப்பயிர்கள் மிக அதிக அளவில் பயிராகின்றன.  

தானியங்கள் வைட்டமின்கள், மாவுச்சத்து, சிறிதளவு புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து,  பிற நுண் சத்துக்கள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது காலை உணவுக்கு தானியங்களே பெரும்பாலும் உலகின் பல நாடுகளில் பயன்படுகின்றன.

மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கையில், நகரமயமாக்கல், விளைநிலங்கள் குறைந்துகொண்டே வருவது ஆகியவற்றால் உணவு பாதுகாப்பு பெரும் சவாலாக விட்டிருக்கிறது. சூழல் மற்றும் தேக ஆரோக்கியத்தை குறித்த அக்கறை உள்ளவர்களின் ஊட்டச்சத்து மிக்க புதிய வகை உணவுகளுக்கான தேடலும் விருப்பமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. புதிய உணவுகளின் வரவில் மிக அதிகம் பிரபலமாகி இருப்பது தானியபோலிகள் என்னும் விதைகள்.

ஒரு வித்திலை தாவரங்களின் குடும்பமான போயேசி எனப்படும் புல் குடும்பத்தை (Poaceae) சேராத பிற இருவித்திலை தாவரங்களிலிருந்து கிடைக்கும், தானியங்களை போலவே பயன்படுத்தக்கூடிய விதைகள் தானியப்போலிகள் அல்லது தானியபதிலிகள் (pseudocereals/  cereal replacers).எனப்படுகின்றன. இவை தானியங்களைக் காட்டிலும் அளவில் சிறியவை

இவற்றின் விதைகளையும் தானியங்களை போலவே உணவில் பயன்படுத்தலாம். மாவாக அரைத்தும் பயன்படுத்தலாம். தற்போது சந்தையில்  அதிகம் கிடைக்கும் தானிய போலிகள் கீன்வா, நெளிகோதுமை மற்றும் சியா விதைகள்

நெளிகோதுமை அல்லது மர கோதுமை (Fagopyrum esculentum- Buckwheat) யின் பெயரில் கோதுமை இருந்தாலும் இது புல் தாவரம் அல்ல என்பதால் கோதுமையோடு எந்தவகையிலும் உறவு கொண்டதல்ல. நெளிகோதுமையில் இருக்கும் ரூடின் பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். புரதம் மாவுச்சத்து நார்ச்சத்து பிற நுண் சத்துக்கள் அடங்கிய இவ்விதைகள் தற்போது பலரால் விரும்பி உண்னபப்டும் தானியபோலியாகி விட்டிருக்கிறது.இதில் குளூட்டன் என்னும் பசையம் இல்லை.

கீன்வா ((Quinoa- keen-wah- (Chenopodium quinoa)  எனப்படும் புரதம் நிரம்பிய, குளூட்டன் இல்லாத இந்த விதை தானியபோலிகளில் மிக அதிக புழக்கத்தில் இருக்கிறது. கீன்வாவை பயன்படுத்தலும் சமைத்தலும் மிக எளிது.  

கீரை (அமரந்தேசியே) குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமான  இது அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காகப் பயிரிடப்படும் ஓராண்டுச் செடிவகை; இந்த விதைகளில் மற்ற தானியங்களை விட கூடுதலான புரதமும் நார்ப்பொருளும் பிற உயிர்ச்சத்துகளும் கனிமச் சத்துகளும் உள்ளன.   

கீன்வா பயிர்

கீன்வாவில் நீரும் ,மாவுப்பொருளும், புரதமும், கொழுப்பும் உள்ளது. 100 கிராம் அளவு பச்சைக் கினோவாவில் 20%ற்கும் கூடுதலான அளவு புரதமும் நார்ப்பொருளும் பல உயிர்ச்சத்துகளும் , இலைச்சத்தும், கனிமச்சத்தும் மக்னீசியமும், பாஸ்பரசுமும், மாங்கனீசும் உள்ளன. கீன்வாவில் கருப்பு வெள்ளை மற்றும் சிவப்பு வகைகள் உள்ளன.

கீன்வாவைஅவிட சிறிய விதைகளான கனேவா(Kañiwa -kan-yee-wah,)   மற்றொரு தானிய போலி. கீன்வாவை விட இது எளிதான சமைக்கப்படுகிறது.இவற்றின் புரதம் பால் மற்றும் கோழி முட்டையில் இருக்கும் புரதத்துக்கு இணையானது.  

Salvia hispanica எனப்படும் துளசிக்குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சியா என்றழைக்கப்படும் விதைகளும் பிரபல தானிய பதிலியாக இப்போது சந்தைப்படுத்த பட்டுள்ளது. சியா விதைகளில் மாவுச்சத்து கொழுப்பு,  புரதம்  ஆகியவை அபரிமிதமாக உள்ளது. இவ்விதைகளை  அவை நீரிலிடுகையில் பவழுவழுப்பாகி அளவில் அதிகரிக்கும் இயல்பு கொண்டவை என்பதால் இவற்றை உபயோகப்படுத்தும் முன்பு நீரில் ஊறவைக்க வேண்டும்.

சியா விதைகள் முழுமையாகவும், அரைத்தும் பானங்களில் கலக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன. உடற்பயிற்சிக்கு முன்னதாக அருந்தப்டும் ஆற்றல் தரும் பானங்களிலும் , உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கான பானங்களிலும் சியா விதைகள் பயன்படுத்தபடுகின்றன.  

 தானியப்போலிகள் மிக வறண்ட, வளமற்ற  பிற பயிர்களை பயிரிடவே முடியாது எனப்படும் நிலங்களிலும் நன்கு வளரும். இவற்றிற்கு  மிக குறைவான நீரே போதுமானது

தற்போது சந்தைப்படுத்தஒபட்டிருக்கும் தானியப்போலிகளின் பட்டியல்:

  • Chia Seeds
  • Quinoa
  • Buckwheat
  • Amaranth
  • Wattleseed 
  • Kaniwa
  • Breadnuts
  • Pitseed Goosefoot
  • Fat Hen
  • Hanza

உணவே மருந்து என்னும் நியூட்ராசூடிக்கல் அறிவியலின் அடிப்படையாகவும் இருக்கும் இந்த தானிய போலிகள் எலும்பு த்தேய்மானம், மறதி நோயான அல்சீமர் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்க பயன்படுகிறது. தானியங்களைக் காட்டிலும் இருமடங்கு சத்துக்கள் கொண்டிருக்கும் இவை எதிர்காலத்தின் உணவு பாதுகாப்பு என்னும் சவாலுக்கு தீர்வாக இருக்கும்.  

தாமரையும் அல்லியும்!

நீர்வாழ் பல்லாண்டுக் கொடித்தாவரமான தாமரையின் அறிவியல் பெயர் நெலும்போ நூசிஃபெரா (Nelumbo nucifera).  இது நெலும்போனேசி குடும்பத்தை சேர்ந்தது. தாமரை மலர் பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாக போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்குரியதாகவும் இருந்தது. தாமரையின், வடிவங்கள் அக்காலவழிபாட்டுத்தலங்கள் மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களில்  அதிகமாக இடம்பெற்றிருந்தது. தாமரை ஓட்டமில்லாத நீர்நிலைகளிலும் நீர்தேக்கங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரும்.

 இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய மலரும் தாமரையே.(செந்தாமரை) இந்த நீர்வாழ் தாவரத்தில் தற்போது உலகில் இருப்பது இரண்டே இரண்டு சிற்றினங்கள்தான். ஆசியாவிற்கு  சொந்தமான இளஞ்சிவப்பில் இருக்கும் செந்தாமரை என்று பொதுவாக அழைக்கப்படும் நெலும்போ நூசிஃபெரா (Nelumbo nucifera) மற்றும் வட மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு சொந்தமான இளமஞ்சள் மற்றும் வெண்ணிற தாமரையான நெலும்போ லூட்டியா (Nelumbo lutea.)

நெலும்போ என்னும் லத்தீன் சொல் ’புனிதமான  உணவு’ என்று  தாமரையின் சத்துக்கள் நிறைந்த உண்ணக்கூடிய விதைகளையும் பல கலாச்சாரங்களில் இருக்கும் இம்மலரின் புனித தன்மையையும் குறிக்கும் ’நிலம்பா’ என்னும் சிங்கள மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இரண்டு வகை தாமரைகளின் அறிவியல் பெயர்களின் சிற்றினப்பெயர்களில் இருக்கும் நியூசிஃபெரா  விதைகளை கொண்டிருக்கிற என்றும், லூட்டியா  சேறு எனவும் பொருள்படும்.

தாமரை வேர்க்கிழங்கிலிருந்து நேராக வளரும். நீர் ஒட்டாத, மெழுகுப்பூச்சு கொண்ட, பெரிய இலைகளையும் காற்றுப்பைகள் கொண்டிருக்கும் தண்டுகளையும் கொண்டிருக்கும் .தாமரை இதழ்களிலும் நுண்ணிய காற்றுப்பைகள் இருப்பதால் மலரிதழ்களும் நீர்ல் நனையாது.   

இளஞ்சிவப்புத் தாமரையானது, புனிதத் தாமரை, ஆசியத் தாமரை  அல்லது இந்தியத் தாமரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாமரை இந்தியா, சீனா,  வியட்நாமில் மிக முக்கியமான சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் மலர். 3000 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனாவில் சாகுபடிசெய்யப்பட்டு வரும் தாமரை இந்து மதம் மற்றும் புத்த மதங்களின் மிக முக்கியமான குறியீடாகவும் உள்ளது. இந்தியத் தொன்மங்களில்  குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான மலர்களில் தாமரையும் ஒன்று. 

 எகிப்திய, வியட்நாமிய மற்றும் இந்தியக் கோவில்களின் சுவர்களிலும் கூரைகளிலும் தாமரை மலர்கள் வரையப்பட்டிருக்கும், கோலங்களும் பச்சைகுத்தும் மற்றும் மருதாணிச் சித்திரங்களும் தாமரை மலர் வடிவில் இருக்கும். உலகெங்கிலுமே ஆபரணங்களில் தாமரை வடிவம்  நூற்றாண்டுகளாக மக்களின் விருப்பத்துக்குகந்ததாக இருக்கிறது.

 புராதனக் கட்டிடங்களின் முகப்புகள் தாமரை வடிவில் இருப்பதைக் காணலாம். புத்தர் உள்ளிட்ட பல கடவுள்களின் இருக்கையாக தாமரை மலர் இருக்கும். தாமரைத்தண்டு திரிகளில் விளக்கேற்றுவதும் தாமரை விதை மாலைகளை பூசையறையில் வைத்திருப்பதும் இந்துக்களின் வழக்கம்.

புத்த மதம் கூறும் 8 புனிதங்களில் தாமரையும் ஒன்று. டுடன் காமன் கல்லறை  திறக்கப்பட்டபோது அவரது உடலின் மீது தாமரை இதழ்கள் தூவபட்டிருந்ததை கண்டார்கள்.

தாமரை இறந்தவர்களை மீட்டெடுக்கும் என்றும், சில மந்திரங்கள் ஒரு நபரை தாமரையாக மாற்றிவிடும் எனவும் எகிப்தியர்கள் நம்பினார்கள்.  எகிப்திய நீலத் தாமரை எனப்படும் நீர் அல்லி,  பல்வேறு சடங்குகளில் பயன்படுத்தப்ட்டது

பண்டைய பெர்சியா (ஈரானில்) தாமரை தூய்மை, பிரபுத்துவம், பரிபூரணம், ஆன்மீகம், பெண்மை மற்றும் வாழ்க்கைசுழலை குறிக்கிறது.

சீன வரலாறு மற்றும்  கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றுள்ள  தாமரை  சீன மொழியில் ‘லியான்ஹுவா ( Lianhua)  என அழைக்கப்படுகிறது. சீன உணவுகள், சூப்புகள், திண்பண்டங்களில் தாமரைக்கொடியின் பாகங்கள் இருக்கும் . சீனாவின் பிரபல மூன் கேக் தாமரை விதைகளின் விழுதில் தயாரிக்கபடுவது.

தாய்லாந்தில், ‘புவா’ என்று அழைக்கப்படும் தாமரை புத்த மதம் சார்ந்த பல சடங்குகள் மற்றும் வழிபாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது.  இங்கு பிரார்த்தனைகளின் போது மெழுகுவர்த்திகள் மற்றும்  தூபக் குச்சிகளுடன்  தாமரைகளையும் வைத்து வழிபடுகிறார்கள்.

தாய்லாந்தின் நோங் ஹான் ஏரியின் ஆழமற்ற நீரில் செழித்து வளரும் ஆயிரக்கணக்கான அழகிய இளஞ்சிவப்பு தாமரைகள் சுற்றுலாப்பயணிகளை பல வருடங்களாகவே ஈர்த்துவருகிறது. 

இந்து மதமும் தாமரையை கொண்டாடுகிறது. தாமரை இல்லாத இந்து தொன்மங்களோ கலாச்சாரமோ இல்லை எனக் கொள்ளலாம். விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வளர்ந்த  தாமரையிலிருந்து, படைப்பாளரான பிரம்மா தோன்றினார் என்கிறது இந்துமதம். தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்று வர்ணனைகளும், தாமரைச்செல்வி, தாமரைக்கனி, தாமரைக்கண்ணன், செந்தாமரை என்ற பெயர்களும்  தமிழகத்தில் பிரபலம்.

யோகாசனங்களிலும் தாமரை வடிவிலான பத்மாசனம் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

இந்து மற்றும் புத்த மதங்களில் உள்ள சிக்கலான வடிவியல் வடிவமைப்புகளைக் கொண்ட பிரபஞ்சத்தின் காட்சிப் பிரதிநிதித்துவம் மண்டலம் எனப்படும் இதில் தாமரை மண்டலம் என்பதும் ஒன்று. ஆன்ம மண்டலமான இவை தியானத்தின் போது மனதை குவிக்கப் பயனபடுத்தப்படுகிறது. புத்த மதத்தின் , அறிவொளிக்கான பாதையையும் வாழ்க்கை சுழற்சியையும் அடைய உதவும் கொண்டிருக்கும்  Unalome சின்னம் தாமரை வடிவத்தையும் கொண்டிருக்கும்.  உலகெங்கிலும் ஆற்றலுக்கான பச்சைகுத்துதலின் பிரபல வடிவமாக இந்த சின்னம் இருக்கிறது.

பகவத் கீதையிலும் கிருஷ்ணர் ”எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.என்கிறார்.

மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.  மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகிறது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது

மூன்று நாட்களுக்குக் காலையில் மலர்ந்தும் இரவில்  மூடியும் மீண்டும் காலை மலர்ந்தபடியும் இருக்கும் தாமரையை மலர்ந்த ஐந்து நாட்களுக்கு வழிபாட்டுக்கு பயன்படுத்தலாம் என்கிறது புஷ்பவிதிகளை சொல்லும் நூல். சித்தரான உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் மிதந்து வந்த தாமரை மலர்களை வழிபட்ட ஒன்பது ஊர்களில் தான் நவ கைலாயங்களான  சிவாலயங்கள் இருக்கின்றன. மகாலட்சுமி உறையும் இடமும் தாமரையே.

அமெரிக்கத் தாமரையான வெண்தாமரை அமெரிக்க பழங்குடியினரால் வடஅமெரிக்காவில் பரவலாக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. 

ஆசியத் தாமரையான Nelumbo nucifera ஆசியாவில் மட்டுமே இயற்கையாக நீர்நிலைகளில் தானாகவே வளரும். இவற்றை வேறெங்கும் இயற்கையாக காண முடியாது. பல நாடுகளில் இவற்றை நீர்நிலைகளில் வளர்க்கிறார்கள் இந்தத் தாமரையின் இணை அறிவியல் பெயர்கள்: Nelumbium speciosum, Nelumbo komarovii, Nymphaea nelumbo. தாமரை மலர்கள் மகரந்தச் சேர்க்கை செய்ய வரும் பூச்சி இனங்களுக்கேற்ப  மலரின் வெப்பநிலையை மாற்றியமைத்துக்கொள்ளும் என்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன.

வெண்தாமரையான Nelumbo lutea பெரும்பாலும் வட அமெரிக்காவிலும் சிலசமயம் மத்திய அமெரிக்கவிலும் காணப்படுகிறது. இவை தூய வெள்ளை நிறத்திலும் சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

தாமரைகளையும் அல்லிகளும் ஒன்றெனவே நினைப்பவர்கள் பலருண்டு. பழைய தாவர வகைப்பாட்டியல் முறைகளில் தாமரை அல்லிக் குடும்பத்தில் வைக்கப்பட்டிருந்தது  (Nelumbo as part of Nymphaeaceae) பின்னர் இவற்றை அடையாளம் காண்பதில் உண்டான பிழைகளால் ,இவையிரண்டும் தனித்தனியான குடும்பங்களில் வைக்கப் பட்டன.  

அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். 

எகிப்தில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.இவைகளும் எகிப்திய தாமரைகள் எனவே அழைக்கப்படுகின்றன. 

மேலும் ஆங்கிலத்தில் தாமரை லோட்டஸ் எனப்படுகிறது தாவரவியலில் லோட்டஸ் என்னும் பெயரில் முற்றிலும் தாமரையை காட்டிலும் வேறுபட்ட மலர்களைக் கொண்டிருக்கும் வேறு ஒரு பேரினமும் இருப்பதால் (a genus called Lotus)  தாமரையை இனங்காண்பதில்  குழப்பம் உண்டாகிறது.  

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடித்தாவரத்தையும் அதன் மலரையும் குறிக்கிறது. அல்லிக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனை களிலும், சிற்றாறுகளிலும் காணப்படும். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன.

அல்லிகள் நிம்ஃபயேசி (Nymphaeaceae) குடும்பத்தை சேர்ந்தவை.நிம்ஃபயேசி குடும்பத்தில் 5 பேரினங்களும், 70க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன .அல்லி அமெரிக்காவைத் தாயகமாக கொண்டது. வெள்ளை அல்லியான Nymphaea alba ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது.

பங்களாதேஷின் தேசிய மலர் அல்லி. ஆந்திரபிரதேசத்தின் மாநில மலரும் அல்லியே .(தெலுங்கானா பிரிவினைக்கு முன்பு வரை அல்லி இப்போது ஆந்திராவிற்கு மல்லிகையும், தெலுங்கானாவிற்கு ஆவாரையும் மாநில மலர்கள்.)  இலங்கையின் தேசிய மலராக நீல அல்லி (Nymphaea stellata இருக்கிறது.

நீர்நிலைகளின் மலர்ந்திருப்பவற்றை பொதுவில் தாமரையென்றே பலரும் நினைப்பதுண்டு. அல்லிகளையும் தாமரைகளையும் பிரித்தறிய பலருக்கு தெரியாது. தாமரையும் அல்லிகளும் தாவரவியல் ரீதியாக இருவேறு பேரினத்தைச் சேர்ந்தது என்றாலும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டு  தாவரங்களுக்கும்,  மலர்களுக்கும்  இடையே அடிப்படையான மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன

நீர் அல்லிகள் நிலத்தில் உறுதியாக பதிந்திருக்கும் வேர்களையும், நீர்பரப்பில்  மிதக்கும் வட்ட வடிவமான இலைகளையும் மலர்களையும் கொண்டிருப்பவை.

தாமரையின் வேர்களும் நீர்நிலைகளின் அடியில் மண்னில் ஆழ ஊன்றியிருக்கும், இவற்றின் தட்டையான முட்டைவடிவ/ஏறக்குறைய வட்ட வடிவத்திலிருக்கும் இலைகள் அலையலையான விளிம்புகளைக் கொண்டிருக்கும். இலைக்காம்புகளும் மலர்த்தண்டுகளும் நீர்ப்பரப்பைக் காட்டிலும் சற்று உயர்ந்து இருப்பதால் தாமரை  மலர்களும் இலைகளும் நீர்ப்பரப்பிற்கு மேலே  காணப்படும்.இலைக்காம்பு, இலையின் அடிப்பகுதியில் மத்தியில் காணப்படும் இவ்வமைப்பு பெல்டேட் எனப்படும்.(peltate)

அல்லி மல்ர்களும் கோடையில் நீர்மட்டத்தைக்காட்டிலும் உயர்ந்துகாணப்படுவதுண்டு.

peltate leaves

அல்லி இலைகளின் நடுவில் தெளிவாக  முடிச்சு போன்ற ஒரு அமைப்பிருக்கும். வெளிவிளிம்பிலிருந்து உள்நோக்கிய ஒரு வெட்டினால் இலைகள் இரண்டாக பிளவுபட்டிருக்கும்.

அல்லி மலரிதழ்கள் அகலம் குறைவாக  நுனி கூராகவும் அடிப்பகுதி தடித்தும் இருக்கும்.தாமரை இதழ்கள் அகலமாகவும், முனை மழுங்கியும் மெலிதாகவும்  இருக்கும்.ஒரு தாமரை மலரில் குறைந்தது 8 லிருந்து அதிகபட்சம் 20 இதழ்கள் வரை இருக்கும்.

அல்லிகளே உலகில் தாமரைகளைக் காட்டிலும் அதிகமாக பரவியிருக்கின்றன.

நீரின் மேற்பரப்பில் அல்லி மலர் -சற்று உயர்ந்து தாமரை

 தாமரை மலரின் மத்தியில்   இருக்கும் விதைகள் நிறைந்திருக்கும் கூம்பு வடிவ மெத்தை போன்ற  கனியும் அல்லிகளில் இருக்காது.

அல்லி மலர்களின் மத்தியில் இப்படி கனிகளை காணமுடியாது. அல்லிக்கனிகள் உருண்டையாக கடினமான தோலுடன்  ஸ்பான்ஞ் போன்ற  மென்மையான உட்பகுதியுடன்  இருக்கும். வெள்ளையான கனியின் சதை ஆயிரக்கணக்கான நுண்விதைகளைக் கொண்டிருக்கும். விதைகள் பழுப்பு அலல்து கருப்பு நிறத்திலிருக்கும். இவ்விதைகள் பொறித்து உண்ணப்படுகின்றன.  அல்லியின் அனைத்து பாகங்களுமே உண்ணத்தக்கவை.

அல்லிக்கனிகள்

பலநூற்றாண்டுகளாக மாவுச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களைக் கொண்ட சுவையான தாமரை வேர்க்கிழங்குகளும் விதைகளும் சீனாவில் உண்ணப்பட்டுவருகின்றன.

தாமரைக்கனிகளும் விதைகளும்

தாமரை வேர்க்கிழங்கை (Rhizome) தூளாக்கி மாவாகவும் அங்கு உபயோகிப்பது உண்டு. சீனா கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் தாமரை இதழ்கள், வேர் மற்றும் இலைகளிலிருந்து   தேநீர் தயாரிப்பதும் பிரபலம். தாமரைத்தண்டுகளும் உண்ணத்தக்கவை. இந்தியா முழுவதிலுமே தாமரைத்தண்டுகள் உண்ணப்படுகின்றன.

Nymphaea lotus என்னும் அறிவியல் பெயருடைய எகிப்திய தாமரை என்றழைக்கப்படுபவை  வெள்ளிஅல்லிகளே. அவை தாமரைகள் அல்ல .

நீலத்தாமரை என எகிப்தில் குறிப்பிடபப்டுபவைகளும் தாமரைகள்அல்ல அவை , Nymphaea  caerulea எனப்படும் நீல நீரல்லிகள்.

Nelumbo nucifera எனப்து ஆசியாவின், இந்தியாவின் செந்தாமரை

Nelumbo-lutea அமெரிக்காவின் வெள்ளை அல்லது இளம் மஞ்சள் தாமரை. இது முன்பு Nelumbium luteum & Nelumbo pentapetala போன்ற அறிவியல் பெயர்களால் அறியப்பட்டன.இப்போதும் இவை இணைப்பெயர்களாக பயன்பாட்டில் இருக்கின்றன. 

தாமரைகள் செல்வம், வளமை மற்றும்  மறுபிறப்பு, இறைமை ஆகிவற்றின் குறியீடாக  உலகின் பல சமயங்களில் கருதப்படுகின்றது,  ஜோதிடவியலில் உதிக்கும் சூரியனை குறிக்க தாமரை பயன்படுகிறது 

அல்லிகளிலும் பல கலப்பின வகைகளுள்ளன. அவற்றில் மிக பிரபலமானது சிவப்பும் மஞ்சளும் கலந்த அல்லியான Nymphaea Wanvisa.பிரகாசமான நீல இதழ்களும் மஞ்சள் மத்தியப்பகுதியுமாக இருக்கும் Nymphaea Blue Aster அல்லியும் மிக அழகானது 

இதுபோன்ற இரட்டை வண்ணங்கள் கொண்ட கலப்பினங்கள்  தாமரைகளில் இல்லை. ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ர தாமரைகள் எனப்படும் கலப்பினத் தாமரைகள் கேரளத் தமிழகக் கோவில்களிலும் தனியார் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.  

கேரளா திருப்புனித்தராவை சேர்ந்த கணேஷ் தாமரைக்கொடிகளை கலப்பினம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரது முயற்சியால் பல தாமரைக் கலப்பின வகைகள் உருவாகி இருக்கின்றன .கோவிட் பெருந்தொற்றின் முதல் அலைக்காலத்தில் இவர் வீட்டில் ஆயிரமிதழ் கொண்ட தாமரை மலர்ந்தது

சீனாவின் ஷாங்காய் உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர்  டாய்க்கே டியான் (Daike Tian) 2009-ல் சீனாவில் Zhinzun Qianban என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த தாமரைக்கொடியை கண்டறிந்தார். அவரிடமிருந்து கணேஷுக்கு பரிசாக வழங்கப்பட்டஇந்த தாமரைதான் இப்போது வளர்ந்து மலர்ந்திருக்கிறது.

சகஸ்ர தாமரை-கணேஷ்

இவர் அமெரிக்காவிலிருக்கும்   சர்வதேச நீரல்லி மற்றும் நீர்த்தோட்டக்கலை அமைப்பிலும் (International Waterlily and Water Gardening Society (IWGS)) உறுப்பினராக இருக்கிறார். 2015-ல் இவர் முதன்முதலாக உருவாகிய  தாமரை கலப்பினத்துக்குத் தனது அன்னையின் பெயரையே  Nelumbo ‘alamelu’ என்று வைத்திருக்கிறார்.

இந்தியாவில் ஒற்றை இதழ் வரிசை கொண்டவை பல அடுக்கு மலரிதழ்களை கொண்டவை என இளஞ்சிவப்பு மற்றும் வெண்தாமரைகள் மலர்கின்றன. அஸ்ஸாமில் வெண்தாமரை இதழ் நுனிகளில் சிறிது இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் பொற்குளத்தில் வெண்மஞ்சள் தாமரை மலர்ந்திருக்கும். 

அஸ்ஸாமிய தாமரை

அல்லிகளின் அரசி எனப்படும் அமேசான் காடுகளின் மாபெரும் அல்லிகளான Victoria amazonica வைத் தவிர்த்து அனைத்து அல்லிகளும் தாமரைகளும் நீருக்கடியில் 2 அல்லது 3 மீட்டர் உயரமுள்ள தண்டுகளை கொண்டிருக்கும். நீருக்கு மேலே தாமரைகளின் தண்டுகள் 4 -6 அடிகளும், அல்லிகள் 2-3 அடிகளும் உயரம் கொண்டிருக்கும். அல்லி தாமரை இருமலர்களுமே மென் நறுமணம் கொண்டவை.

அரச அல்லிகள்

 அரச அல்லியின் இலைகளும் மலர்களும் மிகப்பெரியவை. அரச அல்லிகளின் இலைகள் 35 லிருந்து 40 கிலோ எடையை தாங்கும்.

பிங்டி அல்லது பிங்டோ தாமரைகள் எனப்படுபவை சீனாவில் மட்டும் காணப்படும் ஒற்றை மலர்த் தண்டில் ஒட்டியே மலரும் இரட்டை தாமரை மலர்களாகும். (Bingdi  Bingtou lotus). கியான் பென் தாமரைகள் எனப்படும் இவை தாவர உலகின் அரிய மலர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.( Qianban lotus)

சீன இரட்டைத் தாமரை

தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகைகளில், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தாமரை மலர்  இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.   தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு  உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.

தாமரையின் பிற பெயர்கள்:

அரவிந்தம்,பங்கேருகம், கோகனகம், பதுமம், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம், பங்கஜம், அம்புஜம்

இரண்டு மலர்களையும் வேறுபடுத்தி காண உதவும் காணொளி: https://youtu.be/7aKS4286hG4

சோளபாப்பியும், ஓபியம் பாப்பியும்

“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்

சிலுவைகளுக்கிடையில்

காற்றில் ஆடுகின்றன  பாப்பிச்செடிகள்,

துப்பாக்கிச் சத்தங்களுக்கிடையே

மெலிதாக கேட்கிறது இத்தனைக்கும் பிறகும்

பாடிக்கொண்டிருக்கும் வானம்பாடிகளின் குரல்,

சில நாட்களுக்கு முன்பு வரையிலும்

உதயத்தையும், பொன்னொளிரும்

அந்தியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம்,

நேசித்துக்கொண்டும்,  நேசத்துக்குரிய வர்களாகவும்

வாழ்ந்திருந்த நாங்கள், இதோ,

ஃபிளாண்டர்ஸ் வயல்களின் கல்லறைகளில்

கிடத்தப்பட்டிருக்கிறோம்.

,

வீழ்கையில் எங்கள் கரங்களிலிருந்து

வீசியெறியப்பட்ட வெற்றிச்சுடரை உயரே

ஏந்திப்பிடித்தபடி இனி,

நீங்கள் தொடங்குங்கள் எதிரிகளிடம் போரை!

ஏனெனில்., எங்கள் கல்லறைகளுக்கருகில்

பாப்பிச்செடிகள் மலர்ந்தாலும்

வெற்றி செய்தியை கேட்கும் வரை

எங்களால் உறங்க முடியாது’’

இந்த துயரக் கவிதையை  லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே போரில் இறந்த அவரது நண்பரின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் எழுதினார்.  

உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா கலாச்சாரங்களிலும்  போர்ச்சூழலில் பாடல்களும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன, எனினும், இந்த கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும், மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இதை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கிறது. ஏன் கல்லறைத் தோட்டத்தில் பாப்பிச்செடிகள்  அப்படி செழித்து வளர்ந்திருந்தன?

ஃபிளாண்டர்ஸ் போர்க்களமானது தென் பெல்ஜியத்தில்   1914 லிருந்து 1917 வரை முதல் உலகப் போர் நடைபெற்ற  மாபெரும் வெளி. அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பாப்பிச்செடிகள் வளர்ந்திருக்கவில்லை. அந்நாட்டின் வயல்களில் அவை சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும் ஃபிளாண்டர்ஸ் களத்தில் அதுவரையிலும் அவை வளர்ந்திருக்கவில்லை

இங்கு நடந்த போரில்  50 நாடுகளை சேர்ந்த ஏறத்தாழ 10 லட்சம் வீரர்கள்  உயிரிழந்தனர். பலர் காணாமல் போனார்கள் மேலும் பலர் படுகாயமுற்றனர். போர் துவங்குகையில் வெறும் தரிசு நிலமாக வெறுமையாக காணப்பட்ட இடத்தில், போர் நடந்து கொண்டிருந்த 2’வது வருடமான 1915’ல் போர்க்களத்திலும், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகளுக்கிடையிலும்  பாப்பிச்செடிகள் ஏராளமாக முளைத்து வளரத் துவங்கின. அங்கு வளர்ந்திருந்தவை வளமிக்க நிலங்களில் மட்டுமே செழித்து  வளரும் சோள பாப்பிச் செடிகள் .

அதுவரை வலியும், இறப்பும், துயரும், குண்டு வீச்சும், குருதியும், பிணங்களும் ஓலங்களும் நிறைந்திருந்த இருந்த இடத்தில் அழகிய கிண்ணங்களைப்போல அடர்சிவப்பு மலர்களுடன் பாப்பிச்செடிகள் செறிந்திருந்தது போரில் ஈடுபட்டிருந்த அனைவருக்குமே புத்துணர்வையும் நம்பிக்கையையும் அளித்தது. 

அதன்பின்னர் . போர்க்களத்திலிருந்து ஊருக்கு வரும் எல்லா கடிதங்களிலும் தழலைப்போல் சிவந்த மலர்களுடன் இருக்கும் பாப்பிச்செடிகளை குறித்த வர்ணனைகளும் இடம்பெற்றிருந்தன.

‘’உதயத்திலும்,  அந்தியில் நட்சத்திரங்கள் மினுங்கும் வானின் கீழும்

மெல்லிய காம்புகளில் தாங்கப் பட்டிருக்கும்

சிவந்த மலர்களைக் கொண்ட பாப்பிச்செடிகளை காண்கிறேன்,

கல்லறைகளை தழுவிக்கொண்டிருக்கும் அவற்றின்

செந்நிற மலர்கள் எங்களை உற்சாகப் படுத்தி,

சோர்வுறும் நாட்களில் நம்பிக்கை அளிக்கின்றன,

ஊழின் கருணை இருப்பின், வீடு திரும்பிய பின்னர்

கல்லறைகளுக்கிடையில்  கண்ட பாப்பிகளை

சோளக்காட்டில் கதிர்களுக்கிடையிலும்  பார்ப்பேனாயிருக்கும்’’

  என்னும் கவிதை  லெஃப்டினேண்ட் கர்னல் கேம்பெல் கால்பிரெய்த் என்பவரால் 1917ல் அவரது வீட்டுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்தது. (Lieutenant-Colonel W. Campbell Galbraith )

 தொடர்ந்த போரினால் நிலம்  பலமுறை கிளரவும், அகழவும் பட்டதால் நிலத்தடியில் புதைந்திருந்த பாப்பிச்செடிகளின் விதைகள் மேற்பரப்புக்கு வந்து ஆயுதக்கழிவுகளிலிருந்தும்,  வெடிமருந்துகளிலிருந்தும் கிடைத்த நைட்ரஜனையும், இடிந்த  கட்டிடங்களின் சுண்ணாம்பும் கலந்திருந்த மண்ணில் செழித்து வேகமாக வளரத் துவங்கின.

மேலும், போரில் இறந்த பல லட்சக்கணக்கான  வீரர்களின், குதிரை கழுதை மற்றும் நாய்களின் இரத்தம் மற்றும் எலும்புகளும் அந்நிலத்தை வளமாக்கி இருந்தன. போர் நீடிக்க நீடிக்க இறப்புக்களும் நீடித்தன இறப்புக்கள் நீடித்தபோது பாப்பிகளும் அதிகம் வளர்ந்தன.

 அச்சமயத்தில் தான் மே 2 ,1915 அன்று மருத்துவ முகாமில் பணியாற்றிக்கொண்டிருந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் மெக்ரேவின் (Lieutenant-Colonel John McCrae) உற்ற நண்பரும் அப்போரில் பணியாற்றியவருமான லெஃப்டினண்ட் கர்னல் அலெக்ஸிஸ் ஹெல்மெர்  ஒரு பீரங்கி தாக்குதலில்  உடல் சிதறி இறந்தார். ஹெல்மெரின் உடல் பாகங்களை தேடி, சேகரித்து இறுதி சடங்குகள் நடத்தி புதைத்த பின்னர், அந்த ஃப்ளேண்டர்ஸ் கல்லறைத்தோட்டத்திலேயே துயரம் நிறைந்த மனதுடன் புத்தம் புதிதாக உருவாகிக்கொண்டிருகும் கல்லறை மண் மேடுகளையும் அவற்றிற்கிடையே வளர்ந்து மலர்ந்திருக்கும் பாப்பி செடிகளையும் பார்த்தபடி உலகப்புகழ்பெற்ற ’’ஃபிளாண்டர்ஸ் வயல்களில்’’ என்னும் இந்த கவிதையை எழுதினார்

 டிசம்பர் 8, 1915 அன்று நாளிதழ்களில் வெளியான இந்த கவிதை உடனடியாக போர்ச்சூழலில் வெகுவாக  பாராட்டப்பட்டு பிரபலமானது,    அப்போதிலிருந்து பாப்பி மலர்கள் போரில் இறந்த வீரர்களின் அடையாளமானது.போரில் இறந்தவர்களின் ஆன்மாவே லட்சக்கணக்கான பாப்பிச்செடிகளாக மலர்ந்திருக்கிறது என்றும் மக்களால் கருதப்பட்டது. 

 நிலத்தின் சுண்ணாம்பும் நைட்ரஜனும் உறிஞ்சப்பட்ட பிறகு பாப்பி செடிகள் காணாமல் போவதும் பின்னர் மீண்டும் வளர்வதுமாக இருந்த நாட்களில்,ஜனவரி 28, 1918’ல் ஜான் மெக்ரேவும் நிமோனியாவால் உயிரிழந்தார்.  அவரது கல்லறையில் வைப்பதற்கு பாப்பி செடிகளின் மலர்கள் அவரது நண்பர்களுக்கு கிடைக்காதபோது செம்பட்டு துணியால் செய்யப்பட்ட செயற்கை பாப்பி மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையமொன்றை தயாரித்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.      

போரில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஏதேனும் உதவிகள் செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த ​​அமெரிக்காவை சேர்ந்த  ஆசிரியை மொய்னா பெல்லி மைக்கேல் இந்த கவிதையால் ஈர்க்கப்பட்டார், போரில்  அவருடைய மாணவர்களும் நண்பர்களும் உயிரிழந்திருந்தனர். ஏறக்குறைய ஒற்றைப்பெண்ணாக, மொய்னா சிப்பாய்களை கௌரவிப்பதற்கும், நினைவுகூருவதற்கும் செயற்கை சிவப்பு பாப்பி மலர்களை சின்னமாக நிறுவவும், அந்த சின்னம் என்றென்றும் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காகவும்  வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

பல லட்சக்கணக்கான, பட்டி (Buddy) என்றழைக்கபடும் செயற்கை பாப்பி மலர்களை செம்பட்டுத்துணியில் உருவாக்கி விற்பனை செய்து கிடைத்த 106,000 டாலர் தொகையையும் முதல் உலகப்போரில் இறந்த, காயமுற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு  உதவ அளித்தார். இவர் வரலாற்றில் பாப்பி பெண்மணி என்றே குறிப்பிடப்படுகிறார் 

ப்ரான்ஸின் அன்னா குவென் (Anna Guerin) என்னும் பெண்மணியும் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் போர் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமொன்றை  அணுகி செம்பட்டு பாப்பி மலர்களை நீத்தோர் நினைவுநாளுக்கு அடையாளமாக்கும் யோசனையை தெரிவித்தார், அப்போதிலிருந்துதான் நவம்பர் 11 நினைவு நாளாகவும், பாப்பி தினமாகவும் அங்கீகரிக்கபட்டு அன்னாவும் பாப்பி பெண் என்றே அறியப்பட்டார்.  

 1921’ல்  9 மில்லியன் செம்மட்டு பாப்பிமலர்களை, அந்த வருட நீத்தோர் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நவம்பருக்குள்  விற்றது அந்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம். செயற்கை பாப்பி மலர்களை அணிவது பிரபலமான போது ரிஷ்மண்டில் 1933’ல் லட்சக்கணக்கான செயற்கை மலர்ளை வருடந்தோறூம் உருவாக்கும் தொழிற்சாலையும் உருவாகி, போர்வீரர்களின் விதவைகளுக்கும் குடுமபத்தினருக்கும் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டது

கடந்த 11 ஆம் தேதி, (நவம்பர் 11, 2021) அன்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் 100’வது நீத்தோர் நினவு மற்றும் பாப்பி தினம் விமரிசையாக நடைபெற்றது. 1921 லிருந்து பாப்பி மலர்களின் வடிவம் சிறிது சிறிதாக மாறி இருந்தாலும் நீத்தோரின் நினைவு நாளன்று செம்பட்டு பாப்பிகளை உடையில் அணிந்துகொள்வது இன்றும் தொடர்கிறது.  

பாப்பி மலரை  இடது பக்கத்தில், இதயத்தின் மீது அணிய வேண்டும். நினைவு தினத்தின் புனித சின்னமாக இருப்பதால், இம்மலரை ஊசியால் பிணைக்காமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒட்டும் கொக்கிகளால் உடையுடன் அவை இணைக்கப்படுகின்றன.,  ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் கடைசி வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 11 வரை, கனேடியர்கள் போர் வீரர்கள் செய்த தியாகங்களுக்கான நினைவின் அடையாளமாக பிரகாசமான செம்மட்டு செயற்கை பாப்பி மல்ர்களை அணிந்துகொள்ளுகிறார்கள். வீரர்களின் கல்லறைகளிலும் பாப்பிமலர்களை சமர்ப்பிக்கிறார்கள்.

70’க்கும் மேற்பட்ட பாப்பி செடி வகைகள் உலகில் இருக்கின்றன, அனைத்தும் பொதுவில் பப்பாவரேசி (Papaveraceae) குடும்பத்தை சேர்ந்த பாப்பிச்செடிகள் என அழைக்கப்பட்டாலும் இவற்றின் வளரியல்பு, செடிகளின் உயரம், மலரிதழ்களின் அடுக்குகள் மற்றும் எண்ணிக்கை, கனிகளின் அளவு மற்றும் வடிவம், வேதிச்சேர்மானங்களின் அளவும் வகைகளும் என பல வேறுபாடுகள் இருக்கிறது.

பாப்பிகளின் பல வகைகளில் ஆண்டுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு இரண்டு முறை மற்றும் பல்லாண்டுகள் பூத்துக் காய்க்கும் வகைகள் உள்ளன. ஒரே ஒரு முறை மலர்ந்து அழிந்துவிடும் மானோகார்பிக் வகைகளும் உண்டு.(Monocarpic). பெரும்பாலான பாப்பிச்செடிகளில் பால் வடியும். .கிழக்காசிய  பாப்பியின் மகரந்தங்கள் அடர்நீலத்திலும், சோளப்பாப்பியின் மகரந்தங்கள் அடர் பச்சையிலும் இருக்கும். 

 ஃபிளாண்டர்ஸ் தோட்டங்களில் வளர்பவை சோளப்பாப்பி எனப்படும் பப்பாவர் ரோயோஸ்  (Papaver rhoeas)  வகைகள். சோளப்பாப்பியின் கலப்பின வகைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன. .இவற்றில் பல இனங்கள் பல்லாண்டுத்தாவரங்களாகவும் இருப்பதால் லாபம் தரும் அலங்கார செடிகளாக விவசாயிகளால் விரும்பப்படுகிறது .இந்திய சமையலில் பயன்படும் கசகசா விதைகளை அளிக்கும் ஓப்பியம்  பாப்பி  “opium poppy” (Papaver somniferum). செடிகளல்ல இவை

 மேலும் சில பாப்பி வகைகள் உலகில் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் கிழக்காசிய பாப்பி எனப்படும் ஓரியண்டல் பாப்பி செடிகள் (Oriental poppy.-Papaver orientale) இறகுகள் போன்ற அழகிய இலைகளும், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற கிண்ணங்களை போன்ற மலர்களையும் கொண்டிருக்கும்.

ஐஸ்லாந்து பாப்பி அல்லது ஆர்க்டிக் பாப்பிகள் (Iceland Poppy -Papaver nudicaule) மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு கிண்ணங்களை போன்ற மலர்களை கொண்டிருக்கும்’

Iceland Poppy -Papaver nudicaule

இமாலய பாப்பிகள் (Himalayan Poppy -Meconopsis grandis)  மிக அழகிய வான் நீல மலர்களை கொண்டிருக்கும்,

Himalayan Poppy -Meconopsis grandis

தோகை பாப்பிகள் (Plume Poppy- Macleaya cordata) மிக அலங்காரமாவை. இவற்றின் வெண்ணிற மலர்கள்  கிண்ணங்களை  போல இருக்காமல் கொத்துக்கொத்தான தோகை போன்ற மஞ்சரிகளில் அமைந்திருக்கும்.

Plume Poppy- Macleaya cordata

சாலையோரங்களில் வளரும் சிலாண்டைன் பாப்பிகள் (Greater Celandine – Chelidonium majus), வருடத்திற்கு இருமுறை மஞ்சள் மலர்களை கொடுக்கும்.

Chelidonium majus

இரத்தப்பாப்பிகளும் (Bloodroot -Sanguinaria canadensis) பாப்பிச்செடிவகைதான் என்பதே  வியப்பளிக்கும், தண்டுகளில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக இலைகளும் மலர் காம்புகளும் உண்டாகும் இதில் மலர்கள் வெண்ணிறத்தில் இருக்கும். இச்செடியின் வேர்களை நறுக்குகையில் செந்நிறச்சாறு வருவதால் இதற்கு இரத்தச்செடி என்று பெயர்.

சில பாப்பி வகைகள் 4 அடிவரை வளரும். இலைகளில் மெல்லிய ரோமங்கள் இருக்கும். இதழ்களின் அடியில் கருப்பு நிற விளிம்பிருக்கும்.  கூட்டிலைகள்  ஏராளமான மடிப்புக்களையும், பற்களை கொண்ட இலை விளிம்புகளையும் கொண்டு இலைகாம்புகளின்றி நேரடியாக  இலையின் அடிப்புறம் தண்டுகளின் மீது மாற்றடுக்கில்  இணைந்திருக்கும்.

கசகசா செடியான ஓபியம் பாப்பியிலிருந்துதான் (Opium Poppy -Papaver somniferum) ஓபியம், ஹெராயின் மற்றும் பல போதை பொருட்களும், மருந்துகளும் கிடைக்கிறது இச்செடிகளில் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு ஊதா மற்றும் வெள்ளை மலர்கள் இருக்கின்றன. சாம்பல் பச்சை இலைகளுடன் இருக்கும் இவை ஒரு மீட்டர் உயரம் வரை வளர்ந்து, 15 செமீ விட்டமுள்ள மலர்களை  உருவாக்கும். மலர்கள் 4 அல்லது 6 இதழ்களை கொண்டிருக்கும். மலரிதழ்கள் பிரகாசமான நிறங்களில், அடுக்கிலோ அல்லது ஒற்றை வரிசையிலோ அமைந்திருக்கும். அரும்பாக இருக்கையில் இதழ்கள் சுருங்கி இருக்கும்

ஓபியம் பாப்பி மலர்

  கனியிலும் தண்டுப்பகுதியிலும் இருக்கும் பால் போன்ற திரவத்தில் போதையேற்றும் வேதிச்சேர்மானங்கள் (opiate alkaloids) இருக்கின்றன. ஒரு செடி சுமார் 15,000-20,000 விதைகளை உற்பத்தி செய்கின்றது.

ஓபியம் பாப்பிகள் துருக்கியை தாயகமாக கொண்டது. பாப்பியின் காய்களில் இருக்கும் போதையூட்டும் தன்மை இல்லாத  விதைகளான கசகசாவிற்காகவும் இவை பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன் சிறிதாக, சிறுநீரக வடிவில் இருக்கும் கசகசா விதைகள் சாம்பல், கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கிறன.

உருண்டையான கனிகளின் உச்சியில் சூலகமுடிகள் ஒன்றிணைந்து தட்டையாக மூடியைப்போல அமைந்திருக்கும்.  சூலகத்தின் கழுத்துப்பகுதியில் இந்த மூடியின் அடியிலிருக்கும் துளைகள் வழியே முதிர்ந்த விதைகள்  காற்றில் கனிகள் அசைகையில் வெளியேறும். இவ்விதைகள் பல ஆண்டுகளுக்கு முளைக்காமல் மண்ணிற்கடியிலேயே இருக்கும். தேவையான வளம் மண்னில் நிறைந்த பின்னர் இவை முளைக்கும். இதை ’’நிலவிதை வங்கி’’ என்கிறது தாவர அறிவியல்  (soil seed bank).

செக் குடியரசின் நீலக்கசகசா விதைகள்

ஓப்பியம் பாப்பியின் துணைச்சிற்றினங்களில்  Papaver somniferum subsp. setigerum  என்பது  வணிக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இதிலும் பல கலப்பினங்களும் வகைகளும் உள்ளன. Papaver somniferum var. Paeoniflorum என்பதில் இரட்டை அடுக்கிதழ்களுடன் மலர்கள் இருக்கும். Papave somniferum var. Laciniatum ஆழமான கிண்ணப்பகுதியும் அடுக்கு மலரிதழ்களும் கொண்டிருக்கும். கசகசா விதைகளுக்கான பிரத்யேக வகையான சுஜாதா என்னும் ஒரு  கலப்பின வகையின் கனிகளின் பிசினில் ஓபியம் அறவே இருக்காது.

 ஓபியம் பாப்பி செடியிலிருந்து மார்ஃபின், கோடின், தெபெய்ன், ஓரிபாவின், பப்பாவரின் மற்றும் நோஸ்கேபின் ஆகிய ஆல்கலாய்டுகள் கிடைக்கின்றன. இந்த பாப்பி செடிகளை பயிரிடுவதன்  மூன்று முதன்மை நோக்கங்களில் ஒன்று, கசகசா விதை என்று அழைக்கப்படும் உண்ணப்படும் விதைகளை உற்பத்தி செய்வது. இரண்டாவது, மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்காக அபினி என்கிற ஓபியத்தை உற்பத்தி செய்வது.  மூன்றாவது மற்ற ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்வது, முக்கியமாக தெபெய்ன் மற்றும் ஓரிபாவின் போன்றவற்றை.  ஒபியம் பாப்பி செடியிலிருந்தே மிக வீரியமுள்ள வலி நிவாரணியான மார்ஃபின் கிடைக்கிறது.

ஓபியம் பாப்பிகள் கிழக்கு மற்றும் தெற்காசியாவில் அதிகம் விளைகின்றது. தென்கிழக்கு ஐரோப்பாவிலும்  சாகுபடி செய்யப்படும் இவற்றின் பல வகைகள் மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. எல்லா பாப்பி வகைகளுமே மருத்துவ குணங்களை கொண்டவை. ஃப்ளேண்டர்ஸ் பாப்பிகள் மனிதர்களில் போதை உண்டாக்கும்  ரோயடின் என்னும் வேதிச்செர்மானத்தை கொண்டிருக்கிறது, ஆனால் ஒப்பியத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைவான விளைவுகளையே உண்டாக்குகிறது 

 பாப்பிச்செடியின் விதைகள் உள்ளிட்ட பாகங்கள் மருந்தாக மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகப்படுத்த பட்டிருக்கிறது.

கிரேக்க தொன்மங்கள் இறந்தவர்கள் விண்ணேகும் முன்பு முந்தைய வாழ்வை முற்றிலும் மறப்பதற்கு  நீரருந்தும்  ’லீத்’ ஆற்றின் கரைகளில் பாப்பிகள் வளர்ந்திருந்ததை குறிப்பிடுகின்றன.  கிரேக்க மற்றும் ரோமானிய கல்லறைகளில் நிரந்தர உறக்கத்தையும், மறுவாழ்வையும் குறிப்பிட  பாப்பி மலர்கள் வைக்கப்பட்டன. பாப்பி மலர்களின் குருதிச் சிவப்பு நிறம் மறுபிறப்பின் சாத்தியங்களை உறுதிப்படுத்தும் அடையாளமாகவும் அவர்களால் கருதப்பட்டது.

வெள்ளை கசகசா விதைகள்

கிபி.1324’ல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் டூடன்காமன் கல்லறையிலும்,   அவரது கழுத்தணியிலும்,  சில மரவேலைப்பாடுகளிலும் பாப்பி மலர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருந்தது.  டூடன்காமன் ஆட்சியில் ஓபியம் பயன்பாடு மற்றும் வர்த்தகம் செழித்திருந்தது. பல எகிப்த்திய கல்லறைகளில் பாப்பி மலர்களின் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது

பண்டைய  எகிப்தில் பாப்பிமலர்கள் மரணத்தின் கடவுளான  ஒசைரிஸை குறித்தன. உறக்கம், அமைதி, மறுபிறப்பின் குறியீடாகவும் பாப்பிகள் எகிப்தில் கருதப்பட்டன. கிரேக்க ரோமானிய மற்றும் பல கலாச்சாரங்களில் இறந்தவர்களுக்கு பாப்பி மலர்களை படைத்து வழிபடும் வழக்கமும், கல்லறைகளில் பாப்பி மலர்களின் சித்திரத்தை செதுக்கும் வழக்கமும் இருந்தது.  எகிப்திய தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த அரசியரின் காதணிகளும் பாப்பி மால்ர் வடிவங்களில் இருந்தன.

ஆல்ப்ஸ் மலைகளில் கிடைத்த நியோலித்திக் மனித மிச்சங்களின் அருகே சிறுசிறு பொதிகளில் கோதுமை பார்லி மற்றும் கசகசா விதைகள் இருந்தன. ஸ்பெயினில் 1935ல் அகழ்வாய்வின் போது கிமு 4000 ’ சேர்ந்த புதைகுழிகளில் பாப்பிவிதைகள் இருந்தன. 

 கிரீட் தீவில் வளர்ந்தோங்கிய வெண்கலக் காலத்திய மினோவன் நாகரிகத்தை சேர்ந்த (Minoan civilization)  3000 ஆண்டுகள் பழமையான பாப்பி பெண் தெய்வச்சிலையொன்று பாப்பி கனிகளால் ஆன தலையணியுடன் காணப்படுகின்றது

poppy godess

கிபி 6000’த்திலிருந்து 3500’க்குள் ஓபியம் பாப்பிகள் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பழங்குடியினரால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்டிருக்கலாமென்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள், எனினும் பாப்பிச்செடிகளிலிருந்து ஓபியம் முதலில் சுமேரியர்களால்தான் கண்டறியப்பட்டது. இதற்கு சுமேரியர்களால் ‘ஹல் கில்’ அதாவது ’’மகிழ்வூட்டும் செடி’’ என்ற பெயரிடப்பட்டிருந்த்து.

பாப்பிபயிர் சாகுபடியும் கனிகளிலிருந்து பிசின் அறுவடை செய்யும்  கலையும் சுமேரியர்களிடமிருந்து அசீரியர்களுக்கும், பாபிலோனியர்களுக்கும் பின்னர் எகிப்தியர்களுக்கும் கடத்தப்பட்டது. ஓபியம்/அபினி கண்டுபிடிக்கப்பட்டதற்கான சரியான தேதி கிடைதிருக்கவில்லை என்றாலும், அதன் போதை மற்றும் வலி நிவாரணி விளைவுகளுக்காக அது உட்கொள்ளப்பட்டது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.  இந்த போதை மருந்து பல நூற்றாண்டுகளாக ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 

வலி மற்றும் பதட்டத்தை குறைக்கவும், தூக்கக் கோளாறுகளுக்கும், அழும் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை அமைதிப்படுத்தவும்  பண்டைய பழங்குடியினரால் ஓபியம் பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஓபியம் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

 கசகசா விதை பல  பண்டைய நாகரிகங்களின் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு 1550 இல் எழுதப்பட்ட, எகிப்திய எபிரஸ் பாப்பிரஸ் சுருள், கசகசா விதையை மயக்க மருந்து என்று குறிப்பிடுகிறது.     பல பண்டைய நாகரீகங்களும் அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த  பால்,ஓபியம் மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தியது. குழந்தைகளுக்கு ஓபியம் அளிக்கப்பட்டதால்தான் இதன் லத்தீன அறிவியல் பெயரின் பேரினம்  “papaver” என்பது மழலை உணவு ( baby food) என்றும் சிற்றினத்தின் somnifera என்பது உறக்கத்தை அளிக்கும் எனவும் பொருள்படுகிறது. 

ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டுகளில்தான் கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் பட்டுப்பாதையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டபோது ஓபியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாலை ஐரோப்பாவை இந்தியா, சீனா மற்றும் மத்திய ஆசியாவிற்கு இணைத்தது, பின்னர் ஓபியமும் பாப்பிவிதைகளும் பட்டுப்பாதைகள் வழியே உலகின் பலபாகங்களை சென்றடைந்தன. 

பல அரபு அறிஞர்கள் மயக்க மருந்து, அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரணி போன்ற துறைகளில் அதன் வளர்ச்சிக்கு பங்களித்தனர். பாக்தாத்தில்தான் ஓபியம் மாத்திரைகளாகவும், தொழுநோய்க்கான களிம்புகளாகவும் மாற்றப்பட்டது. அல்-கிண்டி மற்றும் அல்-ரஸி போன்ற மருத்துவர்கள் மயக்க மருந்து உட்பட பல்வேறு நோய்களுக்கு சரியான அளவு ஓபியத்தை வழங்கிய முன்னோடிகள்.

 உலக நாடுகள் பலவற்றில் ஓபியம் 15 ஆம் நூற்றாண்டில் மகிழ்வூட்டும்   நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது ஒரு அரிய மருந்தும் கூட  என்பதால், மிக அதிக விலையை கொண்டிருந்த இதன் பயன்பாடு குறைவாகவே இருந்தது. 17ஆம் நூற்றாண்டு வரை அபினியைப் பயன்படுத்துவது சீன வரலாற்றின் வழக்கமான பகுதியாக மாறியிருக்கவில்லை, பின்னர் , அபினி புகையிலையுடன் கலக்கப்பட்டு சீனாவில் புகை பிடிக்கப்பட்ட போதுதான் இதன் அடிமையாக்கும் இயல்பு முதலில் கவனிக்கப்பட்டது.17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் கிரேட் பிரிட்டனும் பிற மேற்கத்திய நாடுகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அபினியை ஏற்றுமதி செய்து சீனாவுக்கு விற்றபோது அபினி வர்த்தகம் முழுவீச்சில் தொடங்கியது.

ஓபியத்துகாக பாப்பிகள் வளர்கப்படுகையில் பழுக்க துவங்கும் லேசான மஞ்சள் நிறம் கொண்டிருக்கும் பச்சைக் கனிகளில் மிகக்கூரான கத்திகளால் லேசான கீறல்கள் உண்டாக்கபட்டு பிசின் சேகரிக்கப்படும்.மழை காற்று, பனிப்பொழிவு இவற்றால் பிசின் கலப்படமாகாமல் இருக்க அதிக கவனத்துடன் இந்த கீறல்கள் பெரும்பாலும் மதிய நேரத்தில் உண்டாக்கப்படும்

ஆஃப்கானிஸ்தானில் ஓபியம் சேகரிப்பு

இந்தியா,ஈரான்,ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் பாப்பியின் கனிகளில் கீறலை உண்டாக்க பிரெத்யேகமாக நிஷ்தார் (nishtar) எனும் உபகரணம் புழக்கத்தில் இருகிறது பெர்ஷிய மொழியில் நிஷ்தார்  ’’கூரிய கத்தி’’  என பொருள்படும்.

நிஷ்தாரில் 2 அல்லது 3 கூரிய சிறிய கத்திகள் 3 மிமி இடைவெளியில் ஒரே கைப்பிடியில் அமைந்திருக்கும் இவறைக்கொண்டு ககசா கனிகளில் கீழிருந்து மேலாக ஒரு சில முறை கீறல்கள் 1’லிருந்து 3 நாட்களுக்கு இடைவெளி விட்டு உண்டாக்கப்படும். ஒவ்வொரு கீறலுக்கு பிறகும் மறுநாள் காலையில் கசகசா கண்ணீர் (Poppy tear) என குறிப்பிடப்படும் வடிந்து காய்ந்திருக்கும் பாலின்  பிசுபிசுப்பான பசை சுரண்டி சேகரிக்கப்படும்  .இப்படி ஒரு ஏக்கரில் சுமார் 5 கிலோ ஓபியம் சேகரிக்கலாம்.

 ரஷ்யாவில் கனிகளை குறுக்கில் காயப்படுத்தி மூன்று முறை ஓபியம் பசை சேகரிக்கப்படும். சீனாவில் கனிகளின் மேற்பகுதி சீவப்பட்டு, பின்னர் சொரசொரப்பான ஊசிகளால் கனிகள் துளையிடப்பட்டு, 48 மணிநேரத்திற்கு பின்னர் பசை சேகரிக்கப்படுகிறது. 

1803 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் பிரெட்ரிக் செர்ட்யூனர் முதல் முறையாக பாப்பி கனிகளின் பிசினிலிருந்து மார்ஃபினை தயாரித்தார், மேலும் இதன்  மூலப்பொருட்களையும் கண்டுபிடித்தார், கிரேக்க கனவுகளின் கடவுளான மார்பியஸின் பெயரால், தூக்கத்தை ஏற்படுத்தும் அதன் இயல்பின் அடிப்படையில் மார்ஃபின் எனபெயரிட்டார்.

மார்ஃபின் கண்டுபிடிக்கப்பட்டது  மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்பட்டது. புற்றுநோய் உள்ளிட்ட உச்சவலிகளுக்கு நிவாரணமாக இன்று வரையிலும் மார்ஃபினே பயன்படுத்தப்படுகின்றது. ஓபியம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாப்பிகளின் பயிரிடப்படும் வகைகளில் காணப்படும் முதன்மையான ஆல்கலாய்டு மார்ஃபின் ஆகும்.  கச்சா ஓபியத்தில் உலர்ந்த எடையில் 8-14% மார்ஃபின் உள்ளது,  

ஆல்கஹாலில் கரைத்த ஓபியம் லாடானம் எனப்படும் (Laudanum). இதை 1527ல் பார்செல்ஸஸ் என்பவர் தயரித்தார். 19 ஆம் நூற்றண்டு வரை இந்த லாடானம் பல்வேறு பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்பட்டது

எடின்பரோவின் டாக்டர் அலெக்சாண்டர் வுட் 1843’ல் மார்ஃபினை ஊசி மூலம் செலுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். ஊசி மூலம் செலுத்தப்பட்ட மார்ஃபினின் விளைவுகள் உடனடியாகவும், மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருந்தன.

அலெக்ஸாண்டர் வுட்

 ஓபியம் பிசினில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மார்ஃபின் பிசினின்  மொத்த எடையை 88% குறைக்கிறது. பின்னர் இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்த ஹெராயின் ஆக மாற்றப்பட்டு, சந்தை மதிப்பிலும் அதிகரிக்கிறது. பிசினாக கடத்தப்படுவதை காட்டிலும் குறைக்கப்பட்ட எடைகொண்ட  மார்ஃபின்  கள்ளச்சந்தைக்கு  கடத்துதலை  எளிதாக்குகிறது.

சர்வதேச மாநாடுகளில் ஓபியத்தின் போதை  காரணமாக பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு பாப்பி செடிகள் பயிரிடப்படுவதை கண்காணிப்பதின் தேவையை குறித்து 1900’த்தில்  பல நாடுகளை சேர்ந்தவர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

 ஓபியம் பாப்பிகளை வளர்ப்பது அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறிதொரு வகையான இரட்டை அடுக்கிதழ்களை கொண்டிருகும்  Papaver paeoniflorum வளர்க்கவும்  அங்கு சட்டப்படி  தடை இருக்கிறது 

மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியில், கசகசா செடிகளை வளர்ப்பது சட்டபூர்வமானது. ஜெர்மனிக்கு இவற்றை சாகுபடி செய்ய உரிமம் தேவைப்படுகிறது. செக் குடியரசில் ஜனவரி 1999 முதல், 100 சதுர மீட்டருக்கு அதிகமான பெரிய வயல்களில் வளரும் கசகசா செடிகள் அரசின் கண்காணிப்புக்கு உரியதாகின்றது  ஐக்கிய இராச்சியத்தில் கசகசா செடி சாகுபடிக்கு உரிமம் தேவையில்லை, ஆனால்  மருத்துவப் பொருட்களுக்காக பிசினிலிருந்து  அபினி பிரித்தெடுக்க உரிமம் தேவையாகிறது.

கசகசா விதைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் தயாரிப்புகள், மற்றும் ஆல்கலாய்டுகள் ஆகியவற்றை வைத்திருப்பது, தேடுவது அல்லது பெறுவது ஆகியவற்றை  கனடா தடை செய்கிறது.

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், இவற்றை பயிரிடுவது சட்டவிரோதமானது, ஆனால் டாஸ்மேனியாவில், உலக விநியோகத்தில் சுமார் 50% பயிரிடப்படுகிறது. நியூசிலாந்தில், தடை செய்யப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படாத வரை கசகசா செடிகளை பயிரிடுவது சட்டபூர்வமானது. தென் கொரியாவில், அபினி கசகசா பயிரிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டபூர்வமான அபினி/ஓபியம் உற்பத்தி  அரசின் கண்காணிப்புடன் மத்தியபிரதேசம் உத்தரபிரெதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் நடக்கிறது. ஓபியம் கசகசா பயிரிட உரிமம் பெற்ற விவசாயிகள் தங்கள் உரிமங்களை தக்க வைத்துக்கொள்ள 56 கிலோ கிராம் கலப்படமற்ற பச்சைஓபியம் பசையை சேகரிக்க வேண்டும். பசையின் விலையானது, தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப அரசாங்கத்தால் சராசரியாக கிலோகிராமுக்கு சுமார் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.. கசகசா கனிகளை உலர்த்தி விதைகளை சேகரிப்பதன் மூலமும்  விவசாயிகளுக்கு  கூடுதல் லாபம் கிடைக்கும்.

ராஜஸ்தானில் பாப்பி வயல்

மேலும்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவைக்காட்டிலும் சற்றே அதிகமாக  ஒரு சிறிய பகுதி ஓபியம் அவர்களின் நெருக்கமான வட்டத்தில் நுகரப்படும் அல்லது கள்ளச்சந்தைக்கு திருப்பிவிடவும்படும். ஓபியம் பசை உலர்த்தப்பட்டு, ஏற்றுமதிக்காக   அரசாங்க ஓபியம் மற்றும் ஆல்கலாய்டு தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுகிறது. குறிப்பிட அளவு பசையின் வேதிச்செர்மானங்களின் சுத்திகரிப்பு இந்தியாவில் செய்யப்படுகிறது, பெரும்பலான பசை அப்படியே வாங்கப்பட்டு வெளிநாட்டு இறக்குமதியாளர்களால் அந்தந்த நாடுகளிலும்  செய்யப்படுகிறது. 

இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து சட்டத்துக்குட்பட்ட அபினி இறக்குமதி அமெரிக்காவில் மல்லிங்க்ரோட், நோராம்கோ, அபோட் ஆய்வகங்களால், நடத்தப்படுகிறது, மேலும் சட்டபூர்வமான  அபினி உற்பத்தி கிளாக்ஸோ, ஸ்மித்கிளைன், ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் நடத்தப்படுகிறது  

ஓபியம்  பாப்பியிலிருந்து கிடைக்கும் கசகசா விதைகள் ஒரு முக்கியமான உணவுப் பொருளாகவும், பல பயன்பாடுகளைக் கொண்ட சமையல் எண்ணெயான கசகசா விதை எண்ணெயின் ஆதாரமாகவும் உள்ளன, விதைகள் மிகவும் குறைந்த அளவு மயக்க மருந்துகளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் இன்னும் குறைவாகவே இவற்றைக்கொண்டுள்ளது. 

கசகசா விதைகள் மாவ் என்னும் பெயரில்   பறவை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றில் தயாமின், ஃபோலேட்   கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம்  உட்பட. பல சத்துக்கள் நிறைந்துள்ளன. கசகசா விதைகள் 6% நீர், 28% கார்போஹைட்ரேட், 42% கொழுப்பு மற்றும் 21% புரதம்  ஆகியவற்றையும்  கொண்டவை.

 நல்ல உறக்கத்தை அளித்தல்,  மன அழுத்தத்தை அகற்றுதல், வாய் புண் சிகிச்சை, உடல், மன ஆற்றலை  அதிகரித்தல்,மன ஆரோக்கியத்தை அதிகரித்தல், எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்றவை கசகசா விதைகளின் குறிப்பிடத்தக்க நன்மைகளாகும்.  

 2018 ஆம் ஆண்டில், கசகசா விதைகளின் உலக உற்பத்தி 76,240 டன்களாக இருந்தது, இதில் துருக்கியின் பங்களிப்பு மட்டும் மொத்த உற்பத்தியில் 35% ஆக இருந்தது., அதைத் தொடர்ந்து செக் குடியரசு மற்றும் ஸ்பெயின் முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன . பப்பாவர் சாம்னிஃபெரம் செடியைத்தவிர மற்ற பாப்பி  வகைகளின் விதைகள் உண்ணப்படுவதில்லை, ஆனால் அவையனைத்தும் அழகிய மலர்களுக்காக அலங்காரச்செடிகளாக பயிரிடப்படுகின்றன.

 2005 லிருந்து சீனாவில் கசகசா விதை மற்றும் கசகசா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் மசாலா கலவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  பல்வேறு மத மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு விதிகளின் பேரில் சவுதி அரேபியாவிலும் கசகசா விதைகள் தடை செய்யப்பட்டுள்ளது.   

கசகசா விதைகள் ஊக்கமருந்து சோதனையில் தவறான நேர்மறையான முடிவுகளை (false positive) ஏற்படுத்துவதால், இந்திய விமான நிலையங்களில் கசகசாவை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவை தடை செய்யப்பட்டிருக்கும்  ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  செல்லும் பயணிகள் கசகசா விதைகளால்   சிரமங்களுக்கும், கடுமையான தண்டனைகளுக்கும் ஆளாகிறார்கள்.

மார்ஃபின் உள்ளடக்கம் காரணமாகவும், முளைக்கும் திறன் உள்ள விதைகள் கலந்திருக்கும் சாத்தியங்களினாலும் சிங்கப்பூரிலும், தைவானிலும் கசகசா விதைகள் ’’தடை செய்யப்பட்ட பொருட்களின்’’ பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. 

ஓபியத்துக்கான சில வட்டார வழக்கு சொற்களில் அதிகம் புழக்கத்தில் இருப்பவை “பிக் ஓ”,(Bio O) “ஷாங்காய் சாலி”, “மயக்கமருந்து (Dop)”, “ஹாப்”, “நள்ளிரவு எண்ணெய்”, “ஓ.பி.”(OP).ஆகியவை

 “தார் என்பது  ஹெராயினை குறிக்கிறது. பாரம்பரியமாக அபினி புகைப்படும் நீண்ட குழாய்  “கனவு குச்சி”  (Dream Stick) என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுப்பான திரவங்களை அதுவரையிலும் குறித்துவந்த ‘Dop’ என்னும்  சொல்.    ‘மயக்கமருந்து’  என்று பொருளில், புகைபிடிக்க  தயாராக இருக்கும்போது, பிசுபிசுப்பாக இருக்கும் ஓபியத்தையும் 1888 முதல் குறிக்க பயன்படுத்தப்படுகிறது,

விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான பாப்பிச் செடிகளில் இருந்து  2500 வெவ்வேறு வகையான வேதிச்சேர்மங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்   இவற்றில் முக்கியமான வகையான. ஓபியாயிட்’கள் உச்ச வலி நிவாரணிகளாக மருத்துவத்தில் பயன்படுகிறது.

ஓபியாயிட் மருந்துகளின் சந்தைப்படுத்துதலை  மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்த முடியாததற்கு  இவற்றின் இந்த வலிநிவாரணம் தரும் இயல்பே காரணமாக இருக்கிறது.  ஓபியாய்டுகளுக்கு  சிறந்த மாற்றுகள் கண்டுபிடிக்கப்படும் வரை, இவை வலி நிவாரணி என்னும் வடிவில் புழக்கத்தில்தான் இருக்கும்

சட்டவிரோத போதைப்பொருள்கள் பயன்படுத்துவதில் ஒட்டுமொத்த உலக (0.70%) மற்றும் ஆசிய நாடுகளின் (0.46%) சராசரியைவிட இந்தியாவின் (2.06%) சராசரியே மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய UNODC அறிக்கை எச்சரிக்கிறது. என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளதும் கவலை அளிக்கிறது.(Narcotics drugs and Psychotropic Substances act 1985)

 இந்தியாவில் திரைப்பட பிரபலங்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்குகள் மீதான கூடுதல் ஊடக கவனம், போதைப்பொருள் பயன்பாடென்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் இயல்பு என்ற தவறான தோற்றத்தை உருவாக்குகிறது. ஊடகங்கள் தெரிவிப்பதற்கு மாறாக போதை மருந்துகள் இந்தியாவின் எல்லா சமூக அடுக்களிலும் பரவியிருக்கும் ஒரு பரவலான, மிக முக்கியமான பிரச்சினையென்பதுதான் உண்மை.

கல்லறைகளில் மலர்ந்த பாப்பிக்களின் நினைவாக செம்பட்டு பாப்பிமலர்களை அணிவதன் 100 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் நடந்த அதே நவம்பர் 11 அன்று இந்தியாவில் மருந்துசீட்டுக்கள் மூலம்  வாங்கப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அபாயகரமான அளவிற்கு அதிகரிதுள்ளது  என மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கவலை தெரிவித்திருக்கிறது.

.செம்பட்டு சோளப்பாப்பி மலர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாய்நாட்டுக்காக உயிரிழந்த பல லட்சம் வீரர்களின் இழப்பிலிருந்தும் துயரிலிருந்தும், தலைமுறைகளாக நம்பிக்கையும், அவர்களின் தியாகத்தின் பொருட்டான நன்றியும் வளர்ந்து கொண்டிருப்பதை  காட்டுகிறது. ஆனால் ஓபியம் பாப்பிகளோ அணு ஆயுதப்போர், உயிரிஆயுத போர்களுக்கடுத்து போதைப்பொருள் போரின் சாத்தியங்களை காட்டுகிறது.

குன்றிமணி-கொல்லும் அழகு

மாட்டிறைச்சிக்காக நடைபெறும் கால்நடை திருட்டு , மாட்டிறைச்சி உண்பது ஆகியவை  நவீன இந்திய அரசியலில் சூடான விவாதங்களுக்கு உரியவை, எனினும் 1800’ல் இருந்து இந்தியாவில் நிகழ்ந்த கால்நடை திருட்டு  மற்றும் கொலை குறித்த பழமையான  வரலாறு மற்றும் அதன் பின்னால் இருந்த தாவர நஞ்சொன்றின் பங்கை குறித்து அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அப்போது கால்நடைகளை குறிப்பாக பசுக்களை கொல்ல இரண்டு வழிகளே அதிகம் பயன்பாட்டில் இருந்தன. ஒன்று மிக எளிதாக கிடைத்த ஆர்சனிக்கை,  தீவனத்தில் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுப்பது. இரண்டாவது சுதாரி அல்லது சுயி (‘sutaris’ / ‘suis) ’எனப்படும் குன்றிமணி நஞ்சினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கூர் ஆயுதத்தினால் பசுவின் உடலில்  காயப்படுத்துவது. 

வங்காளத்திற்கான அப்போதைய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட  ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும்  நூலில், அவர்  நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும்,  ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த  சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக  எழுதியிருக்கிறார்.1. அந்த கைதிக்கு தண்டனையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. குன்றிமணி விதைகளிலிருந்து சுதாரி செய்வதை அந்த கைதி   நேரடியாக செய்து காட்டினான்.  

மேல் தோல் நீக்கப்பட்ட 30 அல்லது 40  குன்றிமணி விதைகள்  உடைக்கப்பட்டு, பத்து நிமிடங்களுக்கு நீரில் ஊறவைக்க படுகின்றன, பின்னர் அம்மியில் எருக்கம்பால் சேர்த்து, இவை மை போல அரைக்கப்பட்டு 6 கூர் நுனி கொண்ட ஒரு இன்ச் நீளமுள்ள சிறு கூம்புகளாக கைகளால் உருட்டப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டு கடினமாக்க படுகின்றன. நீர் உட்புகாமல் இருக்க ஒரு இரவு முழுவதும்  விலங்கு கொழுப்பில் அமிழ்த்தி வைக்கப்பட்ட இவை உலோகங்களை விட கடினமானதாகின்றன. பின்னர் இவை கற்களில் தீட்டப்பட்டு மேலும் கூராக்கப் படுகின்றன.

.  

Abrus precatorius, threaded seeds.

3 அல்லது 4 இத்தைகைய கூரான நச்சு முட்களை செருகி வைத்துக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் 3 இன்ச் அளவுள்ள   மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கைப்பிடிகளில் இவை  செருகப்பட்டு கொலை ஆயுதங்களாகின்றன. செருப்பு தைக்க பயன்படும் குத்தூசிகளைபோல் இருக்கும் இவற்றால் எந்த தடயமுமின்றி கால்நடைகளும்  மனிதர்களும் அப்போது கொலை செய்யபட்டிருக்கின்றனர்.

   மேஜர் ராம்ஸே அந்த கைதி உருவாக்கிய சுதாரியை சோதிக்க ஒரு பசுவை வரவழைத்தார் அந்த கைதி அப்பசுவின் கொம்புகளுக்கு அடியில், மூளையை தொடும்படி ஒரு முறையும், பசுவின் நாக்கிற்கு அடியில் இரண்டு முறையும், சுதாரி ஊசி நுனிகளால். மிக விசையுடன்  குத்தி, கைப்பிடியை திருகி உடைந்த முள் பசுவின் உடலில் தங்கிவிடும்படி உருவி எடுத்தான். குத்தப்பட்ட எந்த காயமும், சுவடுமின்றி அந்த பசு 34 மணிநேரத்தில் இறந்தது. குத்திய இடத்தில் சீழ் முத்தொன்றை தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அப்பசுவின் உடலில்

 இறந்த பசுவின் உடலில் இருக்கும் குன்றிமணியின் விஷம் ஆர்சனிக்கை கண்டுபிடிப்பதை காட்டிலும் கடினமானது.ஒரு  வளர்ந்த பசுவை கொல்ல சுமார் 600 மில்லி கிராம் குன்றிமணி நஞ்சு  போதுமானது. மேலும் விரைவாக பசுக்களை கொல்ல வேண்டி இருக்கையில் குன்றிமணி விழுதுடன் பாதரசம், ஊமத்தை இலைச்சாறு மற்றும் ஆர்சனிக்கும் சேர்க்கப்படும்.

அப்போது ஆர்சனிக் ’’அரிசி’’ என்னும் பெயரில் கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்பட்டிருக்கிறது. நன்கு விளைந்த சோள விதையை குடைந்து அதில் 2  அவுன்ஸ்  ஆர்சனிக் நிரப்பப்பட்டு விதையின் வெளிப்புறத்தை மூடி இவை  தீவனத்தில் கலக்கப்படும்  

தோலுக்காக பசுக்களையும் எருதுகளையும் மட்டுமல்லாது மனிதர்களை கொல்லவும் குன்றிமணி விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.முதன்முதலாக 1854ல் வடமேற்கு இந்தியாவில் முதல் குன்றிமணியால் கொல்லபட்ட பசுக்கொலை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அந்த விசாரணையின் போதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன

சுதாரிகளால் பசுக்கொலைகளை செய்தவர்கள் இந்திய பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரும், எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாதியை சேர்ந்தவர்களுமான,  சாமர் எனப்படுபவர்கள் (Charmar).2  இவர்கள்  வட இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம்  வாழ்பவர்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் தோல் பொருள் தயாரிப்பாளர்கள். கொலையான பசுக்களின் உடலை அகற்றும் சாமர்களுக்கு அப்பசுவின் தோலும் இறைசியும் சொந்தமென்பதால்  தோலை அகற்றி விற்பனை செய்துவிட்டு இறைச்சியை உண்ண எடுத்துக்கொள்வார்கள். நோயுற்ற மற்றும் நஞ்சூட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை உண்ட இவர்களுக்கு அதனால் எந்த உடல் கோளாறுகளும் உண்டாகவில்லை என்பதை அவர்களுடன் இருந்து கவனித்த ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். 

பிராமணர்களுக்கு இறந்த பசுக்களை தொடுவது பாவம் என்பதால் இயற்கையாக மரணிக்கும் எல்லா பசுக்களும் சாமர்களுக்கு அப்போது சொந்தமானது. அவர்கள் இறந்த அப்பசுவின் உடலை அப்புறப்படுத்திவிட்டு தோலை உரித்து பதனிட்டும், இறைச்சியை உணவாகவும் எடுத்துக்கொண்டனர். 

1850களில் இருந்து சாமர்கள் சட்டவிரோதமாக மாடுகளை குன்றிமணி நஞ்சு மற்றும் ஆர்சனிக் உபயோகித்து கொல்லத்துவங்கினர். சுதாரியால் குத்தபட்டு இறந்த பசுக்களின் உடலில் நஞ்சூட்டியதற்கான எந்த தடயமும் இருக்காது என்பதால்,  அவை இயற்கையாக இறந்ததாகவே நம்பபட்டது.  அவற்றின் தோல் பெரும்பாலும்  பாட்னா மற்றும் கல்கத்தாவை சேர்ந்த  இஸ்லாமிய தோல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வியாபாரிகளும் மாடுகளை கொல்லுவதற்கு ஆர்சனிக்கையும் , குன்றிமணி விதைகளையும் அதிக  அளவில்  சாமர்களுக்கு கொடுப்பதும் வழக்கமாக இருந்தது.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல்பொருட்களின் தொழிற்சாலைகளும் விரிவுபடுத்தப்பட்ட 1870 களுக்கு  பிறகு இந்த பசுக்கொலைகள் மிக அதிகமாகி சாமர்கள் பசுவைகொல்லும் பிரிவினராகவே அறியப்பட்டனர்..3

முறைப்படுத்தப்பட்ட  குற்றமாகவே இக்கொலைகள் நடைபெற்றுவந்த 1880 மற்றும் 1890 களில் மட்டும் 7 மில்லியன் மாட்டுத்தோல்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 1900-01 ல் மட்டும் சுமார் 113 மில்லியனுக்கு  தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பசுக்கொலைகளோடு மனிதர்களும் குன்றிமணி நஞ்சூட்டி கொல்லப்பட்டனர். 1880’ல்  பெங்காலின் காவல்துறை ஆவணமொன்றில் 1871’ல்  சுதாரியால் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஜோடி சுதாரிகளால் உடலின் பக்கவாட்டு பகுதியில்  குத்தப்பட்டு இறந்தவரும், உறங்குகையில் சுதாரியால் குத்தப்பட்டு, சுதாரி நுனியை சதையை தோண்டி அகற்றிவிட்டாலும் 3 நாட்களுக்கு பிறகு  உயிரிழந்த மற்றொருவரும், கன்னங்களில் சுதாரி குத்தப்பட்டதால் உயிரிழந்த இன்னொருவருமாக, இந்த கொலைகள் அந்த ஆவணத்தில் விளக்கமாக பதிவாகி இருக்கின்றன்.

குற்றவாளிகளான சாமர்கள் மிகுந்த வறுமையில் இக்கொலைகளை மிகக்குறைந்த கூலிக்காகவும், செய்திருப்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஒரு கொலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி 16.5 ரூபாய்கள் தான்.

1865-69 வட இந்தியாவில் மட்டும், 1462 பசுக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 1900;ல் உச்சத்தை எட்டியது.  அனைத்து கொலைகளையும் சாமர் இனத்தவர்களே செய்தனர்.

அக்கொலை விசாரணைகள், பல கைதுகளுக்கு பிறகு சாமர்கள் ஆர்சனிக் மற்றும் குன்றிமணிகளை வைத்திருப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1899ல் பெங்காலில்  148 மாடுகள் இறந்ததை ஆராய்ந்த வேதியியல் ஆய்வாளர் இறந்தவைகளில் 75 சதவீதம் நஞ்சூட்டப்பட்டிருந்ததை  தெரிவித்தார்.

 இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்பதாலும் அவற்றின் தோலை அகற்றி விற்பதாலும், அவர்களின் சுத்தமின்மை காரணமாக தீண்டத்தகாதவர்களாக உயர்குடியினரால் அக்காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட இனமாக இருந்த சாமர்கள் இப்பசுக்கொலை விசாரணைகளின் போது பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் சந்தித்தனர். காவல்துறையினரின் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளினாலேயே இப்பசுக்கொலைகள் மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகின்றது.

.ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் அமர் சித்ர கதா வில் வங்காளத்தில் உண்டான ஒரு பஞ்சத்தின் போது மக்களுக்கு வித்யாசாகரும் அவரது தோழர்களும் உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில்  ஒரு சாமருக்கு எண்ணையை தரப்போன அவரது தோழர் மிகத் தொலைவில் நின்று அவருக்கு வழங்கியதை கண்டித்து, வித்யாசாகர் சாமரை தொட்டுத் தழுவி ’’இவரைத் தொட்டால் ஒன்றுமில்லை’’ என்று சொல்வது போல் ஒரு கதையில் சித்தரிக்கபட்டிருக்கிறது. 

 இந்திய தலித் பிரிவில் ஒரு துணை பிரிவான இவர்களின் பெயரான  சார்மர் அல்லது சாமர் என்னும் சொல் ’’தோல் பதனிடுபவர்’’ என்று பொருள் கொண்ட சார்மகரா- ‘Charmakara’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது.

இந்திய தொன்மங்களில் சாமர்களின் தோற்றம் பற்றிய கதைகள் பல உண்டு.  உயர்குடியில் பிறந்த, இறந்த பசுவின் உடலை வேறு வழியின்றி அகற்றிய இளைஞன்  ஒருவனே முதல் சாமர் என்றும், இறந்த எருதின் உடலை தனியே அகற்ற முடியாத உயர்குடி இளைஞன் ஒருவனுக்கு சிவன் உதவிசெய்து,  இறந்த பசுவின் உடலின் மீது சிறுநீர் கழிக்க சொல்லிய போது அந்த உடலிலிருந்து எழுந்து வந்தது முதல் சாமர் என்றும் கதைகள் உள்ளன

இமாச்சலபிரதேசம்,  டில்லி, ஹரியானா, பீகார், பஞ்சாப் உத்தரபிரதேசம் மற்றும் நேபாளில் இவர்களுக்கு ’’சாம்பார் போளி, சாம்பாரி மற்றும் சாம்ரி எனவும் பெயர்களுண்டு. செருப்பு தைப்பது, தோல் பதனிடுதல் மற்றும் விவசாய வேலைகளை செய்துவந்த இவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

சுமார் 90 மில்லியன் சார்மர்கள் இந்தியாவில் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 சதவீதம் சாமர்கள். தற்போது அவர்களில் பலர் மிகப்பெரிய சமூக அந்தஸ்துடன் இருக்கிறார்கள்

இப்போது பஞ்சாப்பில் இவர்கள் இரு பிரிவினராக ஆதிதர்மிகள்  மற்றும் ரவிதாஸர்கள் என்று பெரும் செல்வாக்குடைய இனத்தவர்களாக இருக்கிறார்கள். பல பஞ்சாபி சாமர்கள் ராணுவத்தில் உயர் பதவியில் இருக்கிறார்கள் பஞ்சாபின் சம்கிலா உள்ளிட்ட பல பிரபல பாடகர்களும் கவிஞர்களும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் .

இந்திய ராணுவத்தின் மிக புகழ்பெற்ற, ஏராளமான விருதுகளை வழக்கமாக பெற்றுக்கொண்டிருக்கும்   படைப்பிரிவான சீக்கிய காலாட்படை, பெரும்பாலும் சாமர் மற்றும் மஷாபி சீக்கியர்களை கொண்டுள்ளது.

முன்னாள் இந்திய துணை பிரதமர்- ஜகஜீவன் ராம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கன்ஷிராம் மற்றும்  நான்கு முறை உத்திரபிரதேச முதலவராக இருந்த   மாயாவதி ஆகியோர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள்

உலகம் முழுவதும் தாவரத்திலிருந்து பெறப்படும் விஷத்தில் முதல் இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.4 ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றிமணி போதுமானது. குன்றிமணியின் பயன்களையும் நச்சுத்தன்மையையும் குறித்து உலகின் பல பாகங்களிலும் பல நூல்களிலும், ஆய்வறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு களைச்செடி போல எங்கும் படர்ந்து வளர்ந்து இருக்கும், பட்டாணி குடும்பமான ஃபேபேசியை  சேர்ந்த குன்றிமணி உறுதியான நடுத்தண்டும், மெல்லிய கிளைத்தண்டுகளும், சிறிய இளம்பச்சை  கூட்டிலைகளும், அவரை போன்ற காய்களுடன் மரங்களிலும், புதர்களிலும் பற்றி படர்ந்து வளரும் ஒரு பல்லாண்டு கொடித் தாவரம்.

குன்றிமணி செடியின் தாவர அறிவியல் பெயர்  Abrus precatorius. கிரேக்க மொழியில் Abrus  என்பது அழகிய மென்மையான என்னும் பொருளில் இச்செடியின் அழகிய இலைகளை குறிக்கின்றது,  precatorius என்பது பிரார்த்தனைக்குரிய என்று பொருள்படும். குன்றிமணி விதைகள் ஜெபமாலைகள் செய்ய பெரிதும் பயன்பாட்டில் இருந்ததால் சிற்றினத்துக்கு இந்த பெயரிடப்பட்டது.   ஆப்ரஸ் பேரினத்தில் 17 சிற்றினங்கள் இருப்பினும் உலகெங்கிலும் அழகிய விதைகளின் பொருட்டு பிரபலமாயிருப்பது குன்றிமணி எனப்படும் Abrus precatorius  கொடிகளே! (Abrus precatorius L.) 

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இச்செடியின் விதைகளான குன்றிமணிகள் பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன,.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாவரம் ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக ஹவாய், கரீபியன் தீவுகள், பாலினேஷியா மற்றும் அமெரிக்காவின் சில குறிப்பிட்ட பகுதிகளில்  அறிவிக்கப்பட்டது. ஃப்ளோரிடாவின் உயரமான மனிதர்களின் நடமாட்டமே இல்லாத ஊசியிலை மலைக்காடுகளில் கூட இவை பரவியுள்ளன

மிக ஆழத்தில் வேறூன்றி இருக்கும் குன்றிமணியின் உறுதியான வேர்கள் காட்டுத்தீயில் கூட அழியாது  மாற்றடுக்கில் அமைந்திருக்கும் இறகுகளை போன்ற,மிதமான இனிப்பு சுவையுடன் இருக்கும், அழகிய கூட்டிலைகள் 8 லிருந்து 20 சிற்றிலை ஜோடிகளை கொண்டிருக்கும். 10லிருந்து 20 அடி நீளம் வளரும் இக்கொடித்தண்டுகள் முற்றிய பின்னர் நல்ல உறுதியானவைகளாக இருக்கும்.

 வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த சிறு மலர்கள் கொத்தாக மலரும்.3 செ மீ  நீளமுள்ள காய்கள் 1 செ மீ அளவுள்ள  3 அல்லது 5 கடினமான பளபளப்பான அடர் சிவப்பில் கருப்பு மருவுடன் இருக்கும் அழகிய விதைகளை கொண்டிருக்கும். இவையே குன்றிமணி எனப்படுகின்றன.

குன்றிமணியின் பல்வேறு ஆங்கில பெயர்கள்;  jequirity, Crab’s eye, rosary pea, paternoster pea, love pea, precatory  bean, prayer bead, John Crow Bead, coral bead, red-bead vine, country licorice, Indian licorice, wild licorice, Jamaica wild licorice, Akar Saga, coondrimany, gidee gidee, Jumbie bead ratti/rettee/retty, goonjaa/gunja/goonja ,weather plant. &  paternoster pea,

குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி,குலாகஞ்சி குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை,குன்னி குரு பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும்  குன்றி மணி நூற்றாண்டுகளாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் பல்வேறு சிகிச்சைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் வண்ணமயமான பளபளக்கும் மணிகளைப்போல இருக்கும் விதைகளால் இத்தாவரம் பரவலாக அறியப்படுகிறது .குன்றிமணி விரைவில் பல்கி பெருகும் இயல்புடையது. 

குன்றிமணி விதைகளில் இருக்கும் ஆப்ரின் நஞ்சு (Abrin) 5 மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் தன்மையுடையது. ஆப்ரின் நஞ்சில் A B என  இரு முக்கியமான புரதங்கள் உள்ளன. இவையே மனிதர்களின் உடலில் புரதம் உருவாகாமல் தடுத்து பிற   மோசமான விளைவுகளை துரித படுத்துபவை. ஒரே ஒரு மூலக்கூறு ஆப்ரின் மனித உடலின் 1500 ரிபோசோம்களை ஒரு நொடியில் செயழிழக்க செய்துவிடும்.

ஆப்ரினின் வடிவம்

 ஆப்ரினின் நச்சுத்தன்மை ஆமணக்கு விதைகளில் இருக்கும் ரிசினின் நச்சுத்தன்மையை காட்டிலும் (Ricin) இருமடங்கு அதிகம் எனினும் இரண்டிற்குமான நஞ்சின் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். ஆமணக்கின் கனியை கடித்து மென்று விழுங்கினால் சிகிச்சைக்கு பிறகு பிழைப்பது ஓரளவுக்கு சாத்தியம் ஆனால் குன்றிமணியை கடித்து விழுங்கினால் உயிரிழப்பு  நிச்சயம் உண்டாகும் கடிக்காமல் தவறுதலாக முழுதாக விழுங்கப்பட்ட குன்றிமணி எந்த நோய் அறிகுறியையும், ஆபத்தையும் விளைவிப்பதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் கூட  நரம்பு மண்டலம் தொடர்பான கடுமையான சில நோய்கள் உருவாகும்..மனிதர்களின் உயரிழப்புக்கு 0.1 மி கி அளவு ஆப்ரினே போதுமானதாக இருக்கிறது, குதிரைகளும் மனிதர்கள் அளவுக்கே குன்றிமணி நஞ்சினால் பாதிப்படைகின்றன.

 .குன்றிமணியை  கடித்து உண்டால் வாந்தி, கடும் காய்ச்சல், தொடர்ந்து அதிக அளவில்  எச்சில் ஒழுகுதல், ஈரல் சேதம், சிறுநீரக செயழிழப்பு, கண்களில் ரத்தம் வடிதல் வலிப்பு, சிகிச்சை அளிக்காத பட்சத்தில் உயிரிழப்பு ஆகியவை உண்டாகும். 

முழு சிவப்பிலிருக்கும், கருப்பும் சிவப்புமான  மணிகள் ஆபரணங்களில் அதிகமாக  இணைக்கப்படுகின்றன. இவற்றை துளையிட்டு ஆபரணங்களாக்கும் தொழிலாளிகளுக்கும் இந்த நஞ்சினால் ஆபத்துகள் உண்டாவதாக ஆதரங்களற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரின் நஞ்சை குறித்த மிக முக்கியமான  256 ஆய்வறிக்கைகளில் ஒன்றில் கூட குன்றிமணியை தொழில் ரீதியாக கையாளுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை

முழு வெள்ளை, சிவப்பும் கருப்பும் கலந்தது, முழு சிவப்பு, முழு கருப்பு, பச்சை, நீலம் மஞ்சள்  என இம் மணிகளில் பல வகைகள் உள்ளன.அனைத்து விதைகளும் கடும் நஞ்சுள்ளவை. மருத்துவர்கள் அளிப்பதை தவிர இத்தாவரத்தின் எந்த பாகங்களையும் சுயமாக முயன்று பார்ப்பதும், மருந்தாக உபயோகிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவமனைகளில் குன்றிமணி நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஞ்சின் வீரியத்தை குறைக்க செயற்கை சுவாசம் அளித்து இரத்தை சுத்தம் செய்வது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். குன்றிமணி நஞ்சுக்கு முறிமருந்து என்று ஏதும் இல்லை என்பதும் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது. 

1877ல்  வெளியான உதய் சந்த் தத்தின் ’’இந்துக்களின் மருந்துசரக்குகள்’’ ( The Materia Medica of the Hindus ) நூலில் குன்றிமணியின் விவரிப்பும் அதன் பாலுணர்வு தூண்டுதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் விரிவாக குறிப்பிடபட்டுள்ளது .

அமரசிம்மரின் பிரபல சமஸ்கிருத நூலான ”அமரோக்‌ஷா” வின் காடுகளிலிருந்து கிடைக்கும் மருந்து பொருட்கள் பற்றிய இரண்டாவது அத்தியாயத்தில் குன்றிமணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1889 ல் வெளியான ஆஸ்திரேலியாவின் முக்கிய தாவரங்கள் என்னும் நூலில் இத்தாவரத்தின் பாகங்களின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99  தாவரங்களில் குறுநறுங்கண்ணி எனப்படுவது குன்றிமணியே.இவை நாளடைவில் பிற விதைகளைப்போல சுருங்குவதில்லை என்பதால் தங்க நகைகளில் இவற்றை பதிப்பது பல நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.

.

 மேற்கிந்திய தீவுகளில் குன்றிமணி பதிக்கப்பட்ட கைப்பட்டைகளை அணிந்துகொள்வது தீய ஆவிகளில் இருந்து காப்பாற்றும் என்னும் நம்பிக்கை   உள்ளது.

இவ்விதைகள் எடையில் மிகவும் சீரானவை, நீர் ஊடுருவ முடியாத  கடின விதையுறையின் காரணமாக வெவ்வேறு ஈரப்பத நிலைமைகளின் கீழ் கூட இவற்றில் ஈரம் புகுவதில்லை. குப்பையில் இருந்தாலும் குன்றி மணி சுருங்காது என்னும்பழஞ்சொல்லும் உண்டு;

குன்றிமணி விதைகள் தங்கத்தை துல்லியமாக அளவிட முன்பு பயன்பாட்டில் இருந்தது .இந்தியாவில் குன்றிமணியை கொண்டு அளவிடும் அளவைகளுக்கு ராட்டை என்று பெயர். தோராயமாக 130 மி கி எடை கொண்டிருக்கும் ஒரு குன்றிமணி 2 கோதுமை மணிகளின் எடைக்கும், 3 பார்லி மணிகளின் எடைக்கும் 4 அரிசிகளின் எடைக்கும் 18 கடுகுகளின் எடைக்கும் சமமானதாக இருக்கும்.

  8 ராட்டை = 1 மாஷா

 12 மாஷா = 1 டோலா (11.6 கிராம்)

மூன்றே முக்கால் குன்றி மணி எடை  ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை ஒரு விராகன் எடை.

இரண்டு குன்றி மணி எடை       ஒரு உளுந்து எடை.

பத்து விராகன் எடை        ஒரு பலம்.

இவ்வாறு  பொன்னை அளவிடுதல் போன்ற நுட்பமான நிறுத்தல் அளவுகளுக்கு குன்றிமணி  பயன்படுத்தப்பட்டதால் தான் குந்துமணித்தங்கம் என்னும் சொற்பிரயோகம் புழக்கத்தில் இன்னும் கூட இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குன்றிமணி குறிப்பிடப்பட்டுள்ளது.

1915 ல் வெளியான பிரஜேந்திரநாத்தின் பண்டைய இந்துக்களின் நேர்மறை அறிவியல் என்னும் நூலில் (The Positive Sciences Of The Ancient Hindus) ஒரு பொற்கொல்லரிடம் பொன் பேசுவதாக வரும் இரு வரிகளில் ’’ நான்  முதல் தரமான பொன் என் தரத்தை கருப்பு முகமுடைய மணிகளைக் கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்’’என்றிருக்கிறது

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றிமணியை குறிக்கிறது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே விதை குன்றி மணிதான்  

“புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து’ 

குன்றிமணியின் சிவப்பு போல் வெளித்தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பார்கள் என்பது இதன்  கருத்து.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்

. என்னும் மற்றொரு குறள் குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள். என்கிறது.

திருப்புகழில்

”குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்

வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை

கொன்ற குமரேச குருநாதா ” 

என்னும் பாடல் வரிகள். குண்றிமணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி,

தனது அழகிய கூர்மையான வாயில் அந்தப் பாம்பை கொத்திக்

கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே என்கிறது. .

முழு வெள்ளையில் இருக்கும் குன்றிமணிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாலுணர்வு ஊக்கியாக பயன்படுகிறது. குன்றிமணி கொடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் காய்ச்சலுக்கும், இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் விதைகள் கொதிநீரில் இடப்பட்டு நஞ்சு நீக்கிய பின்னர் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது.

 ஆயுர்வேதம் இத்தாவர பாகங்களை விலங்குகளால் உண்டான  சிராய்ப்புகள், மற்றும் காயங்களுக்கு மருந்தாக உபயோகிக்கிறது. உள்மருந்தாக வெண்குஷ்டம், ஜன்னி மற்றும் வெறிநாய்க்கடிக்கும் ஆயுர்வேதம் குன்றிமணியிலிருந்து தயாரித்த மருந்தையே கொடுக்கிறது. ஆயுர்வேதம்  தலைமுடி வளர்ச்சிக்கு குன்றிமணியை உபயோகப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இவ்விதைகள் பாலில் 3 மணி நேரம் வேக வைக்கப்பட்ட பின்னரே சிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

குன்றிமணி விதைகளை பாலில் வேகவைத்து பின்னர் உலர்த்துவது, ஆமணக்கு எண்ணெயில் குன்றிமணி பொடியை கலந்து  நஞ்சை நீக்குவது போன்ற இதன் நஞ்சினை நீக்கும் பல்வேறு வழிகளை ”சுத்திசெய்தல்”  என்னும் தலைப்பில் சித்தர்கள் விவரித்துள்ளனர். 

இந்தியா, பிரேசில், ஜமைக்கா போன்ற நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குன்றிமணியை கண் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ,தேனுடன் இலைச் சாற்றை கலந்து வீக்கங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றன. 

இந்தியாவில் பல மாநிலங்களில் குன்றிமணிகளை பூஜை அறையில் வைத்து பூசை செய்வது வழக்கம். குன்றிமணிகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது தீய சக்திகள் நெருங்காது என்னும் நம்பிக்கை இந்தியாவின் பல பாகங்களில்  இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஜுலு மக்கள் குன்றிமணிகளை கொண்டு ஆபரணங்கள் செய்து பொருளீட்டுவதை முக்கிய தொழிலாகவே செய்கின்றனர்.

சுஷ்ருதர் குன்றிமணியின் மருத்துவ  உபயோகங்களை குறிப்பிட்டிருப்பதால் மிகபழங்காலத்திலிருந்தே  இது மருந்தாக பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை அறியலாம்

.இந்தியாவைப்போலவே, இலங்கையிலும் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்கு குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றில் குன்றிமணி பயன்படுத்தப்படும். சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாக கருதப்படுகிறது.பல்லாங்குழி, தாயம் ஆகிய விளையாட்டுக்களிலும் குன்றிமணியை உபயொகிப்பது இன்றும் தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. 

பிள்ளையார் சதுர்த்தியின் போது கைகளால் பிசைந்து வீடுகளில் செய்யப்படும் பிள்ளையாருக்கு கண்களாக குன்றிமணியை பதிப்பது இந்தியா முழுவதிலுமே பொதுவான வழக்கம். குன்றிமணிச் சம்பா  என்று சற்றே தடிமனான செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை தமிழகத்தில் இருந்தது.

கருப்பு குன்றிமணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பு குன்றிமணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அங்கு காளியின் அம்சமாக கருப்பு குன்றிமணி கருதப்படுகிறது. 

ராஜஸ்தானின் புகழ்பெற்ற நாட்டுபுறப்பாடலான  சிர்மி பாடல் குன்றிமணியை குறித்தானது. திருமணமான பெண்ணொருத்தி தன்னை காண  புகுந்த வீட்டுக்கு வரும் தன் தந்தையையும் சகோதரனையும் காண குன்றிமணி செடிகளின் மீது ஏறி நின்று பாடும் ”சிர்மி” அங்கு மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல். ராஜஸ்தானில் சிர்மி என்பது குன்றிமணியை குறிக்கும் சொல்

அரளி விதைகள், ஊமத்தை இலைகள், குன்றிமணிகள், ஆமணக்கு கொட்டைகள், செங்காந்தள் வேர் என  கொடிய நஞ்சினை கொண்டிருக்கும்  தாவரங்களை குழந்தைகள் தவறுதலாக கடித்தும் விழுங்கியும் உயிராபத்தை வரவழைத்துக் கொள்வது பல வளரும் நாடுகளில் மிக அதிகம் நிகழ்கிறது.

ஆச்சர்ய படும்படியாக இந்த தாவரம் மிக அதிகமாக காணப்படும் இலங்கையில்  இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு கடந்த பத்து ஆண்டுகளில் 9 குழந்தைகள் மட்டுமே குன்றிமணியை கடித்ததால் மருத்துவமனைக்கு வந்தவர்கள். அதேபோல் குன்றிமணி அதிகம் விளையும் கேரளாவிலும் இதனால் பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. 

கேரளா குருவாயூரில் குழந்தைகளுக்கு சோறூட்டும் அன்னபிரசன்னம் நிகழ்வில் குழந்தைகள் கைகளால் அளைவதற்கென்று  உருளியில் நிறைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற மணிகள் மலையாளிகளால் சில சமயம் குன்னிக்குரு என்றழைக்கப் பட்டாலும் அவை  குன்றிமணிகள் அல்ல Adenanthera pavonina என்னும்   மஞ்சாடியின் விதைகள்.

மஞ்சாடி விதைகளும் மஞ்சரியும்

தாவர நஞ்சினால் உலகெங்கிலும் மிக அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே! குன்றிமணியின் ஆபத்துக்களில் முதலாவது இதை உட்கொண்ட பலமணி நேரம் கழித்தே அறிகுறிகள் தெரிவது, இரண்டாவது இதை உட்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இந்த தாவரம் வளர்ந்திருக்கும் இடங்களிலோ, விளையாடும் இடங்களிலோ அலல்து பள்ளியிலோ இருப்பதால் விஷயம் பெரியவர்களுக்கு தெரியவர நேரம் ஆகிவிடுகிறது மூன்றாவதும் மிக முக்கியமானதும் குன்றிமணி இத்தனை நஞ்சுள்ளதென்பது அநேகம் பேருக்கு தெரியாது என்பதுதான்.

குன்றிமணி நம் சுற்றுப்புறங்களில் மிகச் சாதாரணமாக தென்படும் ஒரு களைத்தாவரம்.  நம் கலாச்சாரத்தில் பல சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருக்கும் இதன் அழகிய  விதைகளை குழந்தைகள் அதிகம் கையாளும்,  பயன்படுத்தும் சாத்தியங்களும் அதிகமிருப்பதால் குன்றிமணியின் நச்சுத்தன்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் விபத்துகளை தவிர்க்க முடியும்.

 பள்ளிக்கூடங்களில் சுற்றுபுறங்களில்  எளிதாக காணப்படும்  இதுபோன்ற நச்சுத் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரைகளை, நாடகங்கள் நிகழ்ச்சிகளை அவசியம் நடத்த வேண்டும். A  for Apple, C for Carrot  என்று கற்றுக் கொள்வதோடு நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களையும் பள்ளியில் அடிப்படை கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். இதன் மூலம்  தாவரங்களை குறித்த முறையான அறிவும், ஆபத்துக்களை தவிர்க்கும் அறிதலும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும்.

மேலும் தகவல்களுக்கு:

  1. Detective Footprints, Bengal, 1874-1881: With Bearings for a Future Course

Major h m ramsey dysp bengal. 

2.Chamar – Wikipedia 

3 History of Cattle Poisoning in British India – Telangana Mata

4. 10 Most Poisonous Plants in the World | Planet Deadly

5.Abrin – Wikipedia

தந்திச்செடி

தொட்டாச்சிணுங்கியை அறிந்திருக்கும் பலருக்கு தொழுகண்ணியை குறித்து தெரிந்திருக்காது.  Codariocalyx motorius எனப்படும் இந்த  தொழுகண்ணி  சூரியனை நோக்கி அசையும் இலைகளை கொண்டிருப்பதாலும் சூரிய ஒளியில் இலைகள் வேகமாக அசைந்துகொண்டே இருப்பதாலும் உலகின் அனைத்து மொழிகளிலும் இது நடனமிடும் செடி அல்லது தந்திச்செடி என்று அழைக்கப்படுகின்றது.( இணையறிவியல்பெயர்: Desmodium motorium)

   பட்டாணி குடும்பத்தை சேர்ந்த 25-35 இன்ச்உயரம் வரை வளரும் குறுஞ்செடிவகையை சேர்ந்த தொழுகண்ணி உலகெங்கிலும் வனப்பகுதிகளில் காண்படுகிறது. இவற்றின் அடர்பச்சை நீள்முட்டை வடிவ இலைகள் பெரியதும் சிறியதுமாக இரண்டு வகையிலும் காணப்படும். ஒவ்வொரு பெரிய இலையின் அடியிலும் இரண்டு சிறு இலைகள்அமைந்திருக்கும்

 காயகல்ப மூலிகயான இதன் சணப்பையை போலிருக்கும் இலைகள் அசைந்து அருகிலிருக்கும் இலையுடன் இணைந்து  தொழும் கைகளை போல கூப்பியும் விலகியும் அசைவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.

2 வருடங்கள் வரை வாழும் இச்செடியில்,வண்ணத்துப்பூச்சிகளை கவரும் சிறிய இளம்ஊதா நிற மலர்கள் குளிர்கால துவக்கத்தில் தோன்றும். அவரையை போன்ற இளம் பச்சை நிறக்காய்களில் சிறிய கருப்பு  நிற விதைகள் இருக்கும். விதைகளிலிருந்தும், நறுக்கிய  தண்டுகளிலிருந்தும் இச்செடியை வளர்க்கலாம். இவற்றின்விதைகள் கடிமான விதையுறையை கொண்டிருப்பதால் 10 லிருந்து 12 மணி நேரம் இவற்றை நீரில் ஊற வைத்தபின்னரே அவை முளைக்கும் திறனை அடையும்

 சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் பிரிந்தும்  வேகமக அசைந்துகொண்டெ இருக்கும் சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனால் இது நிகழலாம் என்கிறது தாவர அறிவியல். ஆசியாவை தாயகமாக கொண்ட இந்த தாவரம், சதுரகிரி மலையில் அதிகம் காணப்படுகின்றது. இந்த மூலிகை உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 சூரிய ஒளி படுகையில் சிற்றிலைகள் முதலில் வேகமாகவும், அவற்றை தொடர்ந்து பெரிய இலைகள் மெதுவாகவும் அசைந்து கொண்டே இருப்பது மனிதர்களுக்கு கேட்காத சங்கீத்தின் தாளத்துக்கேற்றாற்போல் அவை நடனமிடுவது போலிருக்கும். எப்போது அசையவேண்டும் என பெரிய இலைகளுக்கு, சிற்றிலைகள் தகவல் சொல்லுகிறது என்னும் பொருளில்  இவற்றிற்கு  தந்திச்செடி என்றும் பெயருண்டு

 அதிசயதக்க விதமாக அதிக அளவிலான ஒலியிலும் இவற்றின் இலைகள் அசைகின்றன. ஒலி மற்றும் ஒளிக்கேற்ப இலைகள் அசையும் காரணத்தை இன்னும் துல்லியமாக அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை

Dr.  ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த தாவரத்தில்தான் பல ஆய்வுகளை செய்தார். அசையும் தாவரங்களின் ஆற்றல் என்னும் தனது நூலில் சார்லஸ் டார்வினும் இந்த செடிகளை குறித்து விவரித்திருக்கிறார் (The Power of Movement in Plants1880.)

இதன் வேர்கள் பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில் முடக்குவாதம், வெட்டுக்காயங்கள் மலேரியா, மற்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் பல வேதிச்சேர்மானங்கள் நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே இதனை மருந்தாக உட்கொள்ள வேண்டும். இவை அலங்காரச்செடிகளாக உலகெங்கிலும்  தொட்டிகளிலும் வளர்க்கப்படுகிறது.

இலைகளின் நடனத்தை காண: https://youtu.be/m3-LJmFZ5X4

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑