
“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்
சிலுவைகளுக்கிடையில்
காற்றில் ஆடுகின்றன பாப்பிச்செடிகள்,
துப்பாக்கிச் சத்தங்களுக்கிடையே
மெலிதாக கேட்கிறது இத்தனைக்கும் பிறகும்
பாடிக்கொண்டிருக்கும் வானம்பாடிகளின் குரல்,
சில நாட்களுக்கு முன்பு வரையிலும்
உதயத்தையும், பொன்னொளிரும்
அந்தியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம்,
நேசித்துக்கொண்டும், நேசத்துக்குரிய வர்களாகவும்
வாழ்ந்திருந்த நாங்கள், இதோ,
ஃபிளாண்டர்ஸ் வயல்களின் கல்லறைகளில்
கிடத்தப்பட்டிருக்கிறோம்.
,
வீழ்கையில் எங்கள் கரங்களிலிருந்து
வீசியெறியப்பட்ட வெற்றிச்சுடரை உயரே
ஏந்திப்பிடித்தபடி இனி,
நீங்கள் தொடங்குங்கள் எதிரிகளிடம் போரை!
ஏனெனில்., எங்கள் கல்லறைகளுக்கருகில்
பாப்பிச்செடிகள் மலர்ந்தாலும்
வெற்றி செய்தியை கேட்கும் வரை
எங்களால் உறங்க முடியாது’’
இந்த துயரக் கவிதையை லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே போரில் இறந்த அவரது நண்பரின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் எழுதினார்.
உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா கலாச்சாரங்களிலும் போர்ச்சூழலில் பாடல்களும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன, எனினும், இந்த கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும், மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இதை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கிறது. ஏன் கல்லறைத் தோட்டத்தில் பாப்பிச்செடிகள் அப்படி செழித்து வளர்ந்திருந்தன?
ஃபிளாண்டர்ஸ் போர்க்களமானது தென் பெல்ஜியத்தில் 1914 லிருந்து 1917 வரை முதல் உலகப் போர் நடைபெற்ற மாபெரும் வெளி. அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பாப்பிச்செடிகள் வளர்ந்திருக்கவில்லை. அந்நாட்டின் வயல்களில் அவை சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும் ஃபிளாண்டர்ஸ் களத்தில் அதுவரையிலும் அவை வளர்ந்திருக்கவில்லை
இங்கு நடந்த போரில் 50 நாடுகளை சேர்ந்த ஏறத்தாழ 10 லட்சம் வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காணாமல் போனார்கள் மேலும் பலர் படுகாயமுற்றனர். போர் துவங்குகையில் வெறும் தரிசு நிலமாக வெறுமையாக காணப்பட்ட இடத்தில், போர் நடந்து கொண்டிருந்த 2’வது வருடமான 1915’ல் போர்க்களத்திலும், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகளுக்கிடையிலும் பாப்பிச்செடிகள் ஏராளமாக முளைத்து வளரத் துவங்கின. அங்கு வளர்ந்திருந்தவை வளமிக்க நிலங்களில் மட்டுமே செழித்து வளரும் சோள பாப்பிச் செடிகள் .

அதுவரை வலியும், இறப்பும், துயரும், குண்டு வீச்சும், குருதியும், பிணங்களும் ஓலங்களும் நிறைந்திருந்த இருந்த இடத்தில் அழகிய கிண்ணங்களைப்போல அடர்சிவப்பு மலர்களுடன் பாப்பிச்செடிகள் செறிந்திருந்தது போரில் ஈடுபட்டிருந்த அனைவருக்குமே புத்துணர்வையும் நம்பிக்கையையும் அளித்தது.
அதன்பின்னர் . போர்க்களத்திலிருந்து ஊருக்கு வரும் எல்லா கடிதங்களிலும் தழலைப்போல் சிவந்த மலர்களுடன் இருக்கும் பாப்பிச்செடிகளை குறித்த வர்ணனைகளும் இடம்பெற்றிருந்தன.
‘’உதயத்திலும், அந்தியில் நட்சத்திரங்கள் மினுங்கும் வானின் கீழும்
மெல்லிய காம்புகளில் தாங்கப் பட்டிருக்கும்
சிவந்த மலர்களைக் கொண்ட பாப்பிச்செடிகளை காண்கிறேன்,
கல்லறைகளை தழுவிக்கொண்டிருக்கும் அவற்றின்
செந்நிற மலர்கள் எங்களை உற்சாகப் படுத்தி,
சோர்வுறும் நாட்களில் நம்பிக்கை அளிக்கின்றன,
ஊழின் கருணை இருப்பின், வீடு திரும்பிய பின்னர்
கல்லறைகளுக்கிடையில் கண்ட பாப்பிகளை
சோளக்காட்டில் கதிர்களுக்கிடையிலும் பார்ப்பேனாயிருக்கும்’’
என்னும் கவிதை லெஃப்டினேண்ட் கர்னல் கேம்பெல் கால்பிரெய்த் என்பவரால் 1917ல் அவரது வீட்டுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்தது. (Lieutenant-Colonel W. Campbell Galbraith )

தொடர்ந்த போரினால் நிலம் பலமுறை கிளரவும், அகழவும் பட்டதால் நிலத்தடியில் புதைந்திருந்த பாப்பிச்செடிகளின் விதைகள் மேற்பரப்புக்கு வந்து ஆயுதக்கழிவுகளிலிருந்தும், வெடிமருந்துகளிலிருந்தும் கிடைத்த நைட்ரஜனையும், இடிந்த கட்டிடங்களின் சுண்ணாம்பும் கலந்திருந்த மண்ணில் செழித்து வேகமாக வளரத் துவங்கின.
மேலும், போரில் இறந்த பல லட்சக்கணக்கான வீரர்களின், குதிரை கழுதை மற்றும் நாய்களின் இரத்தம் மற்றும் எலும்புகளும் அந்நிலத்தை வளமாக்கி இருந்தன. போர் நீடிக்க நீடிக்க இறப்புக்களும் நீடித்தன இறப்புக்கள் நீடித்தபோது பாப்பிகளும் அதிகம் வளர்ந்தன.
அச்சமயத்தில் தான் மே 2 ,1915 அன்று மருத்துவ முகாமில் பணியாற்றிக்கொண்டிருந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் மெக்ரேவின் (Lieutenant-Colonel John McCrae) உற்ற நண்பரும் அப்போரில் பணியாற்றியவருமான லெஃப்டினண்ட் கர்னல் அலெக்ஸிஸ் ஹெல்மெர் ஒரு பீரங்கி தாக்குதலில் உடல் சிதறி இறந்தார். ஹெல்மெரின் உடல் பாகங்களை தேடி, சேகரித்து இறுதி சடங்குகள் நடத்தி புதைத்த பின்னர், அந்த ஃப்ளேண்டர்ஸ் கல்லறைத்தோட்டத்திலேயே துயரம் நிறைந்த மனதுடன் புத்தம் புதிதாக உருவாகிக்கொண்டிருகும் கல்லறை மண் மேடுகளையும் அவற்றிற்கிடையே வளர்ந்து மலர்ந்திருக்கும் பாப்பி செடிகளையும் பார்த்தபடி உலகப்புகழ்பெற்ற ’’ஃபிளாண்டர்ஸ் வயல்களில்’’ என்னும் இந்த கவிதையை எழுதினார்
டிசம்பர் 8, 1915 அன்று நாளிதழ்களில் வெளியான இந்த கவிதை உடனடியாக போர்ச்சூழலில் வெகுவாக பாராட்டப்பட்டு பிரபலமானது, அப்போதிலிருந்து பாப்பி மலர்கள் போரில் இறந்த வீரர்களின் அடையாளமானது.போரில் இறந்தவர்களின் ஆன்மாவே லட்சக்கணக்கான பாப்பிச்செடிகளாக மலர்ந்திருக்கிறது என்றும் மக்களால் கருதப்பட்டது.
நிலத்தின் சுண்ணாம்பும் நைட்ரஜனும் உறிஞ்சப்பட்ட பிறகு பாப்பி செடிகள் காணாமல் போவதும் பின்னர் மீண்டும் வளர்வதுமாக இருந்த நாட்களில்,ஜனவரி 28, 1918’ல் ஜான் மெக்ரேவும் நிமோனியாவால் உயிரிழந்தார். அவரது கல்லறையில் வைப்பதற்கு பாப்பி செடிகளின் மலர்கள் அவரது நண்பர்களுக்கு கிடைக்காதபோது செம்பட்டு துணியால் செய்யப்பட்ட செயற்கை பாப்பி மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையமொன்றை தயாரித்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
போரில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஏதேனும் உதவிகள் செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த ஆசிரியை மொய்னா பெல்லி மைக்கேல் இந்த கவிதையால் ஈர்க்கப்பட்டார், போரில் அவருடைய மாணவர்களும் நண்பர்களும் உயிரிழந்திருந்தனர். ஏறக்குறைய ஒற்றைப்பெண்ணாக, மொய்னா சிப்பாய்களை கௌரவிப்பதற்கும், நினைவுகூருவதற்கும் செயற்கை சிவப்பு பாப்பி மலர்களை சின்னமாக நிறுவவும், அந்த சின்னம் என்றென்றும் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

பல லட்சக்கணக்கான, பட்டி (Buddy) என்றழைக்கபடும் செயற்கை பாப்பி மலர்களை செம்பட்டுத்துணியில் உருவாக்கி விற்பனை செய்து கிடைத்த 106,000 டாலர் தொகையையும் முதல் உலகப்போரில் இறந்த, காயமுற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ அளித்தார். இவர் வரலாற்றில் பாப்பி பெண்மணி என்றே குறிப்பிடப்படுகிறார்

ப்ரான்ஸின் அன்னா குவென் (Anna Guerin) என்னும் பெண்மணியும் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் போர் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமொன்றை அணுகி செம்பட்டு பாப்பி மலர்களை நீத்தோர் நினைவுநாளுக்கு அடையாளமாக்கும் யோசனையை தெரிவித்தார், அப்போதிலிருந்துதான் நவம்பர் 11 நினைவு நாளாகவும், பாப்பி தினமாகவும் அங்கீகரிக்கபட்டு அன்னாவும் பாப்பி பெண் என்றே அறியப்பட்டார்.
1921’ல் 9 மில்லியன் செம்மட்டு பாப்பிமலர்களை, அந்த வருட நீத்தோர் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நவம்பருக்குள் விற்றது அந்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம். செயற்கை பாப்பி மலர்களை அணிவது பிரபலமான போது ரிஷ்மண்டில் 1933’ல் லட்சக்கணக்கான செயற்கை மலர்ளை வருடந்தோறூம் உருவாக்கும் தொழிற்சாலையும் உருவாகி, போர்வீரர்களின் விதவைகளுக்கும் குடுமபத்தினருக்கும் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டது

கடந்த 11 ஆம் தேதி, (நவம்பர் 11, 2021) அன்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் 100’வது நீத்தோர் நினவு மற்றும் பாப்பி தினம் விமரிசையாக நடைபெற்றது. 1921 லிருந்து பாப்பி மலர்களின் வடிவம் சிறிது சிறிதாக மாறி இருந்தாலும் நீத்தோரின் நினைவு நாளன்று செம்பட்டு பாப்பிகளை உடையில் அணிந்துகொள்வது இன்றும் தொடர்கிறது.

பாப்பி மலரை இடது பக்கத்தில், இதயத்தின் மீது அணிய வேண்டும். நினைவு தினத்தின் புனித சின்னமாக இருப்பதால், இம்மலரை ஊசியால் பிணைக்காமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒட்டும் கொக்கிகளால் உடையுடன் அவை இணைக்கப்படுகின்றன., ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் கடைசி வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 11 வரை, கனேடியர்கள் போர் வீரர்கள் செய்த தியாகங்களுக்கான நினைவின் அடையாளமாக பிரகாசமான செம்மட்டு செயற்கை பாப்பி மல்ர்களை அணிந்துகொள்ளுகிறார்கள். வீரர்களின் கல்லறைகளிலும் பாப்பிமலர்களை சமர்ப்பிக்கிறார்கள்.
70’க்கும் மேற்பட்ட பாப்பி செடி வகைகள் உலகில் இருக்கின்றன, அனைத்தும் பொதுவில் பப்பாவரேசி (Papaveraceae) குடும்பத்தை சேர்ந்த பாப்பிச்செடிகள் என அழைக்கப்பட்டாலும் இவற்றின் வளரியல்பு, செடிகளின் உயரம், மலரிதழ்களின் அடுக்குகள் மற்றும் எண்ணிக்கை, கனிகளின் அளவு மற்றும் வடிவம், வேதிச்சேர்மானங்களின் அளவும் வகைகளும் என பல வேறுபாடுகள் இருக்கிறது.

பாப்பிகளின் பல வகைகளில் ஆண்டுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு இரண்டு முறை மற்றும் பல்லாண்டுகள் பூத்துக் காய்க்கும் வகைகள் உள்ளன. ஒரே ஒரு முறை மலர்ந்து அழிந்துவிடும் மானோகார்பிக் வகைகளும் உண்டு.(Monocarpic). பெரும்பாலான பாப்பிச்செடிகளில் பால் வடியும். .கிழக்காசிய பாப்பியின் மகரந்தங்கள் அடர்நீலத்திலும், சோளப்பாப்பியின் மகரந்தங்கள் அடர் பச்சையிலும் இருக்கும்.

ஃபிளாண்டர்ஸ் தோட்டங்களில் வளர்பவை சோளப்பாப்பி எனப்படும் பப்பாவர் ரோயோஸ் (Papaver rhoeas) வகைகள். சோளப்பாப்பியின் கலப்பின வகைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன. .இவற்றில் பல இனங்கள் பல்லாண்டுத்தாவரங்களாகவும் இருப்பதால் லாபம் தரும் அலங்கார செடிகளாக விவசாயிகளால் விரும்பப்படுகிறது .இந்திய சமையலில் பயன்படும் கசகசா விதைகளை அளிக்கும் ஓப்பியம் பாப்பி “opium poppy” (Papaver somniferum). செடிகளல்ல இவை
மேலும் சில பாப்பி வகைகள் உலகில் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் கிழக்காசிய பாப்பி எனப்படும் ஓரியண்டல் பாப்பி செடிகள் (Oriental poppy.-Papaver orientale) இறகுகள் போன்ற அழகிய இலைகளும், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற கிண்ணங்களை போன்ற மலர்களையும் கொண்டிருக்கும்.
ஐஸ்லாந்து பாப்பி அல்லது ஆர்க்டிக் பாப்பிகள் (Iceland Poppy -Papaver nudicaule) மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு கிண்ணங்களை போன்ற மலர்களை கொண்டிருக்கும்’

இமாலய பாப்பிகள் (Himalayan Poppy -Meconopsis grandis) மிக அழகிய வான் நீல மலர்களை கொண்டிருக்கும்,

தோகை பாப்பிகள் (Plume Poppy- Macleaya cordata) மிக அலங்காரமாவை. இவற்றின் வெண்ணிற மலர்கள் கிண்ணங்களை போல இருக்காமல் கொத்துக்கொத்தான தோகை போன்ற மஞ்சரிகளில் அமைந்திருக்கும்.

சாலையோரங்களில் வளரும் சிலாண்டைன் பாப்பிகள் (Greater Celandine – Chelidonium majus), வருடத்திற்கு இருமுறை மஞ்சள் மலர்களை கொடுக்கும்.

இரத்தப்பாப்பிகளும் (Bloodroot -Sanguinaria canadensis) பாப்பிச்செடிவகைதான் என்பதே வியப்பளிக்கும், தண்டுகளில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக இலைகளும் மலர் காம்புகளும் உண்டாகும் இதில் மலர்கள் வெண்ணிறத்தில் இருக்கும். இச்செடியின் வேர்களை நறுக்குகையில் செந்நிறச்சாறு வருவதால் இதற்கு இரத்தச்செடி என்று பெயர்.
சில பாப்பி வகைகள் 4 அடிவரை வளரும். இலைகளில் மெல்லிய ரோமங்கள் இருக்கும். இதழ்களின் அடியில் கருப்பு நிற விளிம்பிருக்கும். கூட்டிலைகள் ஏராளமான மடிப்புக்களையும், பற்களை கொண்ட இலை விளிம்புகளையும் கொண்டு இலைகாம்புகளின்றி நேரடியாக இலையின் அடிப்புறம் தண்டுகளின் மீது மாற்றடுக்கில் இணைந்திருக்கும்.
கசகசா செடியான ஓபியம் பாப்பியிலிருந்துதான் (Opium Poppy -Papaver somniferum) ஓபியம், ஹெராயின் மற்றும் பல போதை பொருட்களும், மருந்துகளும் கிடைக்கிறது இச்செடிகளில் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு ஊதா மற்றும் வெள்ளை மலர்கள் இருக்கின்றன. சாம்பல் பச்சை இலைகளுடன் இருக்கும் இவை ஒரு மீட்டர் உயரம் வரை வளர்ந்து, 15 செமீ விட்டமுள்ள மலர்களை உருவாக்கும். மலர்கள் 4 அல்லது 6 இதழ்களை கொண்டிருக்கும். மலரிதழ்கள் பிரகாசமான நிறங்களில், அடுக்கிலோ அல்லது ஒற்றை வரிசையிலோ அமைந்திருக்கும். அரும்பாக இருக்கையில் இதழ்கள் சுருங்கி இருக்கும்

கனியிலும் தண்டுப்பகுதியிலும் இருக்கும் பால் போன்ற திரவத்தில் போதையேற்றும் வேதிச்சேர்மானங்கள் (opiate alkaloids) இருக்கின்றன. ஒரு செடி சுமார் 15,000-20,000 விதைகளை உற்பத்தி செய்கின்றது.

ஓபியம் பாப்பிகள் துருக்கியை தாயகமாக கொண்டது. பாப்பியின் காய்களில் இருக்கும் போதையூட்டும் தன்மை இல்லாத விதைகளான கசகசாவிற்காகவும் இவை பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன் சிறிதாக, சிறுநீரக வடிவில் இருக்கும் கசகசா விதைகள் சாம்பல், கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கிறன.

உருண்டையான கனிகளின் உச்சியில் சூலகமுடிகள் ஒன்றிணைந்து தட்டையாக மூடியைப்போல அமைந்திருக்கும். சூலகத்தின் கழுத்துப்பகுதியில் இந்த மூடியின் அடியிலிருக்கும் துளைகள் வழியே முதிர்ந்த விதைகள் காற்றில் கனிகள் அசைகையில் வெளியேறும். இவ்விதைகள் பல ஆண்டுகளுக்கு முளைக்காமல் மண்ணிற்கடியிலேயே இருக்கும். தேவையான வளம் மண்னில் நிறைந்த பின்னர் இவை முளைக்கும். இதை ’’நிலவிதை வங்கி’’ என்கிறது தாவர அறிவியல் (soil seed bank).

ஓப்பியம் பாப்பியின் துணைச்சிற்றினங்களில் Papaver somniferum subsp. setigerum என்பது வணிக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இதிலும் பல கலப்பினங்களும் வகைகளும் உள்ளன. Papaver somniferum var. Paeoniflorum என்பதில் இரட்டை அடுக்கிதழ்களுடன் மலர்கள் இருக்கும். Papave somniferum var. Laciniatum ஆழமான கிண்ணப்பகுதியும் அடுக்கு மலரிதழ்களும் கொண்டிருக்கும். கசகசா விதைகளுக்கான பிரத்யேக வகையான சுஜாதா என்னும் ஒரு கலப்பின வகையின் கனிகளின் பிசினில் ஓபியம் அறவே இருக்காது.
ஓபியம் பாப்பி செடியிலிருந்து மார்ஃபின், கோடின், தெபெய்ன், ஓரிபாவின், பப்பாவரின் மற்றும் நோஸ்கேபின் ஆகிய ஆல்கலாய்டுகள் கிடைக்கின்றன. இந்த பாப்பி செடிகளை பயிரிடுவதன் மூன்று முதன்மை நோக்கங்களில் ஒன்று, கசகசா விதை என்று அழைக்கப்படும் உண்ணப்படும் விதைகளை உற்பத்தி செய்வது. இரண்டாவது, மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்காக அபினி என்கிற ஓபியத்தை உற்பத்தி செய்வது. மூன்றாவது மற்ற ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்வது, முக்கியமாக தெபெய்ன் மற்றும் ஓரிபாவின் போன்றவற்றை. ஒபியம் பாப்பி செடியிலிருந்தே மிக வீரியமுள்ள வலி நிவாரணியான மார்ஃபின் கிடைக்கிறது.
ஓபியம் பாப்பிகள் கிழக்கு மற்றும் தெற்காசியாவில் அதிகம் விளைகின்றது. தென்கிழக்கு ஐரோப்பாவிலும் சாகுபடி செய்யப்படும் இவற்றின் பல வகைகள் மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. எல்லா பாப்பி வகைகளுமே மருத்துவ குணங்களை கொண்டவை. ஃப்ளேண்டர்ஸ் பாப்பிகள் மனிதர்களில் போதை உண்டாக்கும் ரோயடின் என்னும் வேதிச்செர்மானத்தை கொண்டிருக்கிறது, ஆனால் ஒப்பியத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைவான விளைவுகளையே உண்டாக்குகிறது
பாப்பிச்செடியின் விதைகள் உள்ளிட்ட பாகங்கள் மருந்தாக மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகப்படுத்த பட்டிருக்கிறது.
கிரேக்க தொன்மங்கள் இறந்தவர்கள் விண்ணேகும் முன்பு முந்தைய வாழ்வை முற்றிலும் மறப்பதற்கு நீரருந்தும் ’லீத்’ ஆற்றின் கரைகளில் பாப்பிகள் வளர்ந்திருந்ததை குறிப்பிடுகின்றன. கிரேக்க மற்றும் ரோமானிய கல்லறைகளில் நிரந்தர உறக்கத்தையும், மறுவாழ்வையும் குறிப்பிட பாப்பி மலர்கள் வைக்கப்பட்டன. பாப்பி மலர்களின் குருதிச் சிவப்பு நிறம் மறுபிறப்பின் சாத்தியங்களை உறுதிப்படுத்தும் அடையாளமாகவும் அவர்களால் கருதப்பட்டது.

கிபி.1324’ல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் டூடன்காமன் கல்லறையிலும், அவரது கழுத்தணியிலும், சில மரவேலைப்பாடுகளிலும் பாப்பி மலர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருந்தது. டூடன்காமன் ஆட்சியில் ஓபியம் பயன்பாடு மற்றும் வர்த்தகம் செழித்திருந்தது. பல எகிப்த்திய கல்லறைகளில் பாப்பி மலர்களின் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது

பண்டைய எகிப்தில் பாப்பிமலர்கள் மரணத்தின் கடவுளான ஒசைரிஸை குறித்தன. உறக்கம், அமைதி, மறுபிறப்பின் குறியீடாகவும் பாப்பிகள் எகிப்தில் கருதப்பட்டன. கிரேக்க ரோமானிய மற்றும் பல கலாச்சாரங்களில் இறந்தவர்களுக்கு பாப்பி மலர்களை படைத்து வழிபடும் வழக்கமும், கல்லறைகளில் பாப்பி மலர்களின் சித்திரத்தை செதுக்கும் வழக்கமும் இருந்தது. எகிப்திய தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த அரசியரின் காதணிகளும் பாப்பி மால்ர் வடிவங்களில் இருந்தன.

ஆல்ப்ஸ் மலைகளில் கிடைத்த நியோலித்திக் மனித மிச்சங்களின் அருகே சிறுசிறு பொதிகளில் கோதுமை பார்லி மற்றும் கசகசா விதைகள் இருந்தன. ஸ்பெயினில் 1935ல் அகழ்வாய்வின் போது கிமு 4000 ’ சேர்ந்த புதைகுழிகளில் பாப்பிவிதைகள் இருந்தன.
கிரீட் தீவில் வளர்ந்தோங்கிய வெண்கலக் காலத்திய மினோவன் நாகரிகத்தை சேர்ந்த (Minoan civilization) 3000 ஆண்டுகள் பழமையான பாப்பி பெண் தெய்வச்சிலையொன்று பாப்பி கனிகளால் ஆன தலையணியுடன் காணப்படுகின்றது

கிபி 6000’த்திலிருந்து 3500’க்குள் ஓபியம் பாப்பிகள் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பழங்குடியினரால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்டிருக்கலாமென்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள், எனினும் பாப்பிச்செடிகளிலிருந்து ஓபியம் முதலில் சுமேரியர்களால்தான் கண்டறியப்பட்டது. இதற்கு சுமேரியர்களால் ‘ஹல் கில்’ அதாவது ’’மகிழ்வூட்டும் செடி’’ என்ற பெயரிடப்பட்டிருந்த்து.
பாப்பிபயிர் சாகுபடியும் கனிகளிலிருந்து பிசின் அறுவடை செய்யும் கலையும் சுமேரியர்களிடமிருந்து அசீரியர்களுக்கும், பாபிலோனியர்களுக்கும் பின்னர் எகிப்தியர்களுக்கும் கடத்தப்பட்டது. ஓபியம்/அபினி கண்டுபிடிக்கப்பட்டதற்கான சரியான தேதி கிடைதிருக்கவில்லை என்றாலும், அதன் போதை மற்றும் வலி நிவாரணி விளைவுகளுக்காக அது உட்கொள்ளப்பட்டது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இந்த போதை மருந்து பல நூற்றாண்டுகளாக ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
வலி மற்றும் பதட்டத்தை குறைக்கவும், தூக்கக் கோளாறுகளுக்கும், அழும் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை அமைதிப்படுத்தவும் பண்டைய பழங்குடியினரால் ஓபியம் பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஓபியம் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
கசகசா விதை பல பண்டைய நாகரிகங்களின் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு 1550 இல் எழுதப்பட்ட, எகிப்திய எபிரஸ் பாப்பிரஸ் சுருள், கசகசா விதையை மயக்க மருந்து என்று குறிப்பிடுகிறது. பல பண்டைய நாகரீகங்களும் அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த பால்,ஓபியம் மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தியது. குழந்தைகளுக்கு ஓபியம் அளிக்கப்பட்டதால்தான் இதன் லத்தீன அறிவியல் பெயரின் பேரினம் “papaver” என்பது மழலை உணவு ( baby food) என்றும் சிற்றினத்தின் somnifera என்பது உறக்கத்தை அளிக்கும் எனவும் பொருள்படுகிறது.
ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டுகளில்தான் கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் பட்டுப்பாதையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டபோது ஓபியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாலை ஐரோப்பாவை இந்தியா, சீனா மற்றும் மத்திய ஆசியாவிற்கு இணைத்தது, பின்னர் ஓபியமும் பாப்பிவிதைகளும் பட்டுப்பாதைகள் வழியே உலகின் பலபாகங்களை சென்றடைந்தன.
பல அரபு அறிஞர்கள் மயக்க மருந்து, அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரணி போன்ற துறைகளில் அதன் வளர்ச்சிக்கு பங்களித்தனர். பாக்தாத்தில்தான் ஓபியம் மாத்திரைகளாகவும், தொழுநோய்க்கான களிம்புகளாகவும் மாற்றப்பட்டது. அல்-கிண்டி மற்றும் அல்-ரஸி போன்ற மருத்துவர்கள் மயக்க மருந்து உட்பட பல்வேறு நோய்களுக்கு சரியான அளவு ஓபியத்தை வழங்கிய முன்னோடிகள்.
உலக நாடுகள் பலவற்றில் ஓபியம் 15 ஆம் நூற்றாண்டில் மகிழ்வூட்டும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது ஒரு அரிய மருந்தும் கூட என்பதால், மிக அதிக விலையை கொண்டிருந்த இதன் பயன்பாடு குறைவாகவே இருந்தது. 17ஆம் நூற்றாண்டு வரை அபினியைப் பயன்படுத்துவது சீன வரலாற்றின் வழக்கமான பகுதியாக மாறியிருக்கவில்லை, பின்னர் , அபினி புகையிலையுடன் கலக்கப்பட்டு சீனாவில் புகை பிடிக்கப்பட்ட போதுதான் இதன் அடிமையாக்கும் இயல்பு முதலில் கவனிக்கப்பட்டது.17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் கிரேட் பிரிட்டனும் பிற மேற்கத்திய நாடுகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அபினியை ஏற்றுமதி செய்து சீனாவுக்கு விற்றபோது அபினி வர்த்தகம் முழுவீச்சில் தொடங்கியது.
ஓபியத்துகாக பாப்பிகள் வளர்கப்படுகையில் பழுக்க துவங்கும் லேசான மஞ்சள் நிறம் கொண்டிருக்கும் பச்சைக் கனிகளில் மிகக்கூரான கத்திகளால் லேசான கீறல்கள் உண்டாக்கபட்டு பிசின் சேகரிக்கப்படும்.மழை காற்று, பனிப்பொழிவு இவற்றால் பிசின் கலப்படமாகாமல் இருக்க அதிக கவனத்துடன் இந்த கீறல்கள் பெரும்பாலும் மதிய நேரத்தில் உண்டாக்கப்படும்

இந்தியா,ஈரான்,ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் பாப்பியின் கனிகளில் கீறலை உண்டாக்க பிரெத்யேகமாக நிஷ்தார் (nishtar) எனும் உபகரணம் புழக்கத்தில் இருகிறது பெர்ஷிய மொழியில் நிஷ்தார் ’’கூரிய கத்தி’’ என பொருள்படும்.
நிஷ்தாரில் 2 அல்லது 3 கூரிய சிறிய கத்திகள் 3 மிமி இடைவெளியில் ஒரே கைப்பிடியில் அமைந்திருக்கும் இவறைக்கொண்டு ககசா கனிகளில் கீழிருந்து மேலாக ஒரு சில முறை கீறல்கள் 1’லிருந்து 3 நாட்களுக்கு இடைவெளி விட்டு உண்டாக்கப்படும். ஒவ்வொரு கீறலுக்கு பிறகும் மறுநாள் காலையில் கசகசா கண்ணீர் (Poppy tear) என குறிப்பிடப்படும் வடிந்து காய்ந்திருக்கும் பாலின் பிசுபிசுப்பான பசை சுரண்டி சேகரிக்கப்படும் .இப்படி ஒரு ஏக்கரில் சுமார் 5 கிலோ ஓபியம் சேகரிக்கலாம்.

ரஷ்யாவில் கனிகளை குறுக்கில் காயப்படுத்தி மூன்று முறை ஓபியம் பசை சேகரிக்கப்படும். சீனாவில் கனிகளின் மேற்பகுதி சீவப்பட்டு, பின்னர் சொரசொரப்பான ஊசிகளால் கனிகள் துளையிடப்பட்டு, 48 மணிநேரத்திற்கு பின்னர் பசை சேகரிக்கப்படுகிறது.
1803 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் பிரெட்ரிக் செர்ட்யூனர் முதல் முறையாக பாப்பி கனிகளின் பிசினிலிருந்து மார்ஃபினை தயாரித்தார், மேலும் இதன் மூலப்பொருட்களையும் கண்டுபிடித்தார், கிரேக்க கனவுகளின் கடவுளான மார்பியஸின் பெயரால், தூக்கத்தை ஏற்படுத்தும் அதன் இயல்பின் அடிப்படையில் மார்ஃபின் எனபெயரிட்டார்.

மார்ஃபின் கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்பட்டது. புற்றுநோய் உள்ளிட்ட உச்சவலிகளுக்கு நிவாரணமாக இன்று வரையிலும் மார்ஃபினே பயன்படுத்தப்படுகின்றது. ஓபியம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாப்பிகளின் பயிரிடப்படும் வகைகளில் காணப்படும் முதன்மையான ஆல்கலாய்டு மார்ஃபின் ஆகும். கச்சா ஓபியத்தில் உலர்ந்த எடையில் 8-14% மார்ஃபின் உள்ளது,
ஆல்கஹாலில் கரைத்த ஓபியம் லாடானம் எனப்படும் (Laudanum). இதை 1527ல் பார்செல்ஸஸ் என்பவர் தயரித்தார். 19 ஆம் நூற்றண்டு வரை இந்த லாடானம் பல்வேறு பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்பட்டது

எடின்பரோவின் டாக்டர் அலெக்சாண்டர் வுட் 1843’ல் மார்ஃபினை ஊசி மூலம் செலுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். ஊசி மூலம் செலுத்தப்பட்ட மார்ஃபினின் விளைவுகள் உடனடியாகவும், மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருந்தன.

ஓபியம் பிசினில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மார்ஃபின் பிசினின் மொத்த எடையை 88% குறைக்கிறது. பின்னர் இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்த ஹெராயின் ஆக மாற்றப்பட்டு, சந்தை மதிப்பிலும் அதிகரிக்கிறது. பிசினாக கடத்தப்படுவதை காட்டிலும் குறைக்கப்பட்ட எடைகொண்ட மார்ஃபின் கள்ளச்சந்தைக்கு கடத்துதலை எளிதாக்குகிறது.
சர்வதேச மாநாடுகளில் ஓபியத்தின் போதை காரணமாக பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு பாப்பி செடிகள் பயிரிடப்படுவதை கண்காணிப்பதின் தேவையை குறித்து 1900’த்தில் பல நாடுகளை சேர்ந்தவர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
ஓபியம் பாப்பிகளை வளர்ப்பது அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறிதொரு வகையான இரட்டை அடுக்கிதழ்களை கொண்டிருகும் Papaver paeoniflorum வளர்க்கவும் அங்கு சட்டப்படி தடை இருக்கிறது
மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியில், கசகசா செடிகளை வளர்ப்பது சட்டபூர்வமானது. ஜெர்மனிக்கு இவற்றை சாகுபடி செய்ய உரிமம் தேவைப்படுகிறது. செக் குடியரசில் ஜனவரி 1999 முதல், 100 சதுர மீட்டருக்கு அதிகமான பெரிய வயல்களில் வளரும் கசகசா செடிகள் அரசின் கண்காணிப்புக்கு உரியதாகின்றது ஐக்கிய இராச்சியத்தில் கசகசா செடி சாகுபடிக்கு உரிமம் தேவையில்லை, ஆனால் மருத்துவப் பொருட்களுக்காக பிசினிலிருந்து அபினி பிரித்தெடுக்க உரிமம் தேவையாகிறது.
கசகசா விதைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் தயாரிப்புகள், மற்றும் ஆல்கலாய்டுகள் ஆகியவற்றை வைத்திருப்பது, தேடுவது அல்லது பெறுவது ஆகியவற்றை கனடா தடை செய்கிறது.
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், இவற்றை பயிரிடுவது சட்டவிரோதமானது, ஆனால் டாஸ்மேனியாவில், உலக விநியோகத்தில் சுமார் 50% பயிரிடப்படுகிறது. நியூசிலாந்தில், தடை செய்யப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படாத வரை கசகசா செடிகளை பயிரிடுவது சட்டபூர்வமானது. தென் கொரியாவில், அபினி கசகசா பயிரிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டபூர்வமான அபினி/ஓபியம் உற்பத்தி அரசின் கண்காணிப்புடன் மத்தியபிரதேசம் உத்தரபிரெதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் நடக்கிறது. ஓபியம் கசகசா பயிரிட உரிமம் பெற்ற விவசாயிகள் தங்கள் உரிமங்களை தக்க வைத்துக்கொள்ள 56 கிலோ கிராம் கலப்படமற்ற பச்சைஓபியம் பசையை சேகரிக்க வேண்டும். பசையின் விலையானது, தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப அரசாங்கத்தால் சராசரியாக கிலோகிராமுக்கு சுமார் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.. கசகசா கனிகளை உலர்த்தி விதைகளை சேகரிப்பதன் மூலமும் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவைக்காட்டிலும் சற்றே அதிகமாக ஒரு சிறிய பகுதி ஓபியம் அவர்களின் நெருக்கமான வட்டத்தில் நுகரப்படும் அல்லது கள்ளச்சந்தைக்கு திருப்பிவிடவும்படும். ஓபியம் பசை உலர்த்தப்பட்டு, ஏற்றுமதிக்காக அரசாங்க ஓபியம் மற்றும் ஆல்கலாய்டு தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுகிறது. குறிப்பிட அளவு பசையின் வேதிச்செர்மானங்களின் சுத்திகரிப்பு இந்தியாவில் செய்யப்படுகிறது, பெரும்பலான பசை அப்படியே வாங்கப்பட்டு வெளிநாட்டு இறக்குமதியாளர்களால் அந்தந்த நாடுகளிலும் செய்யப்படுகிறது.
இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து சட்டத்துக்குட்பட்ட அபினி இறக்குமதி அமெரிக்காவில் மல்லிங்க்ரோட், நோராம்கோ, அபோட் ஆய்வகங்களால், நடத்தப்படுகிறது, மேலும் சட்டபூர்வமான அபினி உற்பத்தி கிளாக்ஸோ, ஸ்மித்கிளைன், ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் நடத்தப்படுகிறது
ஓபியம் பாப்பியிலிருந்து கிடைக்கும் கசகசா விதைகள் ஒரு முக்கியமான உணவுப் பொருளாகவும், பல பயன்பாடுகளைக் கொண்ட சமையல் எண்ணெயான கசகசா விதை எண்ணெயின் ஆதாரமாகவும் உள்ளன, விதைகள் மிகவும் குறைந்த அளவு மயக்க மருந்துகளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் இன்னும் குறைவாகவே இவற்றைக்கொண்டுள்ளது.
கசகசா விதைகள் மாவ் என்னும் பெயரில் பறவை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றில் தயாமின், ஃபோலேட் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உட்பட. பல சத்துக்கள் நிறைந்துள்ளன. கசகசா விதைகள் 6% நீர், 28% கார்போஹைட்ரேட், 42% கொழுப்பு மற்றும் 21% புரதம் ஆகியவற்றையும் கொண்டவை.
நல்ல உறக்கத்தை அளித்தல், மன அழுத்தத்தை அகற்றுதல், வாய் புண் சிகிச்சை, உடல், மன ஆற்றலை அதிகரித்தல்,மன ஆரோக்கியத்தை அதிகரித்தல், எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்றவை கசகசா விதைகளின் குறிப்பிடத்தக்க நன்மைகளாகும்.
2018 ஆம் ஆண்டில், கசகசா விதைகளின் உலக உற்பத்தி 76,240 டன்களாக இருந்தது, இதில் துருக்கியின் பங்களிப்பு மட்டும் மொத்த உற்பத்தியில் 35% ஆக இருந்தது., அதைத் தொடர்ந்து செக் குடியரசு மற்றும் ஸ்பெயின் முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன . பப்பாவர் சாம்னிஃபெரம் செடியைத்தவிர மற்ற பாப்பி வகைகளின் விதைகள் உண்ணப்படுவதில்லை, ஆனால் அவையனைத்தும் அழகிய மலர்களுக்காக அலங்காரச்செடிகளாக பயிரிடப்படுகின்றன.
2005 லிருந்து சீனாவில் கசகசா விதை மற்றும் கசகசா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் மசாலா கலவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மத மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு விதிகளின் பேரில் சவுதி அரேபியாவிலும் கசகசா விதைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
கசகசா விதைகள் ஊக்கமருந்து சோதனையில் தவறான நேர்மறையான முடிவுகளை (false positive) ஏற்படுத்துவதால், இந்திய விமான நிலையங்களில் கசகசாவை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவை தடை செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் பயணிகள் கசகசா விதைகளால் சிரமங்களுக்கும், கடுமையான தண்டனைகளுக்கும் ஆளாகிறார்கள்.
மார்ஃபின் உள்ளடக்கம் காரணமாகவும், முளைக்கும் திறன் உள்ள விதைகள் கலந்திருக்கும் சாத்தியங்களினாலும் சிங்கப்பூரிலும், தைவானிலும் கசகசா விதைகள் ’’தடை செய்யப்பட்ட பொருட்களின்’’ பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஓபியத்துக்கான சில வட்டார வழக்கு சொற்களில் அதிகம் புழக்கத்தில் இருப்பவை “பிக் ஓ”,(Bio O) “ஷாங்காய் சாலி”, “மயக்கமருந்து (Dop)”, “ஹாப்”, “நள்ளிரவு எண்ணெய்”, “ஓ.பி.”(OP).ஆகியவை
“தார் என்பது ஹெராயினை குறிக்கிறது. பாரம்பரியமாக அபினி புகைப்படும் நீண்ட குழாய் “கனவு குச்சி” (Dream Stick) என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுப்பான திரவங்களை அதுவரையிலும் குறித்துவந்த ‘Dop’ என்னும் சொல். ‘மயக்கமருந்து’ என்று பொருளில், புகைபிடிக்க தயாராக இருக்கும்போது, பிசுபிசுப்பாக இருக்கும் ஓபியத்தையும் 1888 முதல் குறிக்க பயன்படுத்தப்படுகிறது,

விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான பாப்பிச் செடிகளில் இருந்து 2500 வெவ்வேறு வகையான வேதிச்சேர்மங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள் இவற்றில் முக்கியமான வகையான. ஓபியாயிட்’கள் உச்ச வலி நிவாரணிகளாக மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஓபியாயிட் மருந்துகளின் சந்தைப்படுத்துதலை மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்த முடியாததற்கு இவற்றின் இந்த வலிநிவாரணம் தரும் இயல்பே காரணமாக இருக்கிறது. ஓபியாய்டுகளுக்கு சிறந்த மாற்றுகள் கண்டுபிடிக்கப்படும் வரை, இவை வலி நிவாரணி என்னும் வடிவில் புழக்கத்தில்தான் இருக்கும்
சட்டவிரோத போதைப்பொருள்கள் பயன்படுத்துவதில் ஒட்டுமொத்த உலக (0.70%) மற்றும் ஆசிய நாடுகளின் (0.46%) சராசரியைவிட இந்தியாவின் (2.06%) சராசரியே மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய UNODC அறிக்கை எச்சரிக்கிறது. என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளதும் கவலை அளிக்கிறது.(Narcotics drugs and Psychotropic Substances act 1985)
இந்தியாவில் திரைப்பட பிரபலங்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்குகள் மீதான கூடுதல் ஊடக கவனம், போதைப்பொருள் பயன்பாடென்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் இயல்பு என்ற தவறான தோற்றத்தை உருவாக்குகிறது. ஊடகங்கள் தெரிவிப்பதற்கு மாறாக போதை மருந்துகள் இந்தியாவின் எல்லா சமூக அடுக்களிலும் பரவியிருக்கும் ஒரு பரவலான, மிக முக்கியமான பிரச்சினையென்பதுதான் உண்மை.
கல்லறைகளில் மலர்ந்த பாப்பிக்களின் நினைவாக செம்பட்டு பாப்பிமலர்களை அணிவதன் 100 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் நடந்த அதே நவம்பர் 11 அன்று இந்தியாவில் மருந்துசீட்டுக்கள் மூலம் வாங்கப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அபாயகரமான அளவிற்கு அதிகரிதுள்ளது என மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கவலை தெரிவித்திருக்கிறது.

.செம்பட்டு சோளப்பாப்பி மலர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாய்நாட்டுக்காக உயிரிழந்த பல லட்சம் வீரர்களின் இழப்பிலிருந்தும் துயரிலிருந்தும், தலைமுறைகளாக நம்பிக்கையும், அவர்களின் தியாகத்தின் பொருட்டான நன்றியும் வளர்ந்து கொண்டிருப்பதை காட்டுகிறது. ஆனால் ஓபியம் பாப்பிகளோ அணு ஆயுதப்போர், உயிரிஆயுத போர்களுக்கடுத்து போதைப்பொருள் போரின் சாத்தியங்களை காட்டுகிறது.
