
மாட்டிறைச்சிக்காக நடைபெறும் கால்நடை திருட்டு , மாட்டிறைச்சி உண்பது ஆகியவை நவீன இந்திய அரசியலில் சூடான விவாதங்களுக்கு உரியவை, எனினும் 1800’ல் இருந்து இந்தியாவில் நிகழ்ந்த கால்நடை திருட்டு மற்றும் கொலை குறித்த பழமையான வரலாறு மற்றும் அதன் பின்னால் இருந்த தாவர நஞ்சொன்றின் பங்கை குறித்து அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது கால்நடைகளை குறிப்பாக பசுக்களை கொல்ல இரண்டு வழிகளே அதிகம் பயன்பாட்டில் இருந்தன. ஒன்று மிக எளிதாக கிடைத்த ஆர்சனிக்கை, தீவனத்தில் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுப்பது. இரண்டாவது சுதாரி அல்லது சுயி (‘sutaris’ / ‘suis) ’எனப்படும் குன்றிமணி நஞ்சினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கூர் ஆயுதத்தினால் பசுவின் உடலில் காயப்படுத்துவது.
வங்காளத்திற்கான அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும் நூலில், அவர் நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும், ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக எழுதியிருக்கிறார்.1. அந்த கைதிக்கு தண்டனையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. குன்றிமணி விதைகளிலிருந்து சுதாரி செய்வதை அந்த கைதி நேரடியாக செய்து காட்டினான்.
மேல் தோல் நீக்கப்பட்ட 30 அல்லது 40 குன்றிமணி விதைகள் உடைக்கப்பட்டு, பத்து நிமிடங்களுக்கு நீரில் ஊறவைக்க படுகின்றன, பின்னர் அம்மியில் எருக்கம்பால் சேர்த்து, இவை மை போல அரைக்கப்பட்டு 6 கூர் நுனி கொண்ட ஒரு இன்ச் நீளமுள்ள சிறு கூம்புகளாக கைகளால் உருட்டப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டு கடினமாக்க படுகின்றன. நீர் உட்புகாமல் இருக்க ஒரு இரவு முழுவதும் விலங்கு கொழுப்பில் அமிழ்த்தி வைக்கப்பட்ட இவை உலோகங்களை விட கடினமானதாகின்றன. பின்னர் இவை கற்களில் தீட்டப்பட்டு மேலும் கூராக்கப் படுகின்றன.
.

3 அல்லது 4 இத்தைகைய கூரான நச்சு முட்களை செருகி வைத்துக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் 3 இன்ச் அளவுள்ள மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கைப்பிடிகளில் இவை செருகப்பட்டு கொலை ஆயுதங்களாகின்றன. செருப்பு தைக்க பயன்படும் குத்தூசிகளைபோல் இருக்கும் இவற்றால் எந்த தடயமுமின்றி கால்நடைகளும் மனிதர்களும் அப்போது கொலை செய்யபட்டிருக்கின்றனர்.
மேஜர் ராம்ஸே அந்த கைதி உருவாக்கிய சுதாரியை சோதிக்க ஒரு பசுவை வரவழைத்தார் அந்த கைதி அப்பசுவின் கொம்புகளுக்கு அடியில், மூளையை தொடும்படி ஒரு முறையும், பசுவின் நாக்கிற்கு அடியில் இரண்டு முறையும், சுதாரி ஊசி நுனிகளால். மிக விசையுடன் குத்தி, கைப்பிடியை திருகி உடைந்த முள் பசுவின் உடலில் தங்கிவிடும்படி உருவி எடுத்தான். குத்தப்பட்ட எந்த காயமும், சுவடுமின்றி அந்த பசு 34 மணிநேரத்தில் இறந்தது. குத்திய இடத்தில் சீழ் முத்தொன்றை தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அப்பசுவின் உடலில்
இறந்த பசுவின் உடலில் இருக்கும் குன்றிமணியின் விஷம் ஆர்சனிக்கை கண்டுபிடிப்பதை காட்டிலும் கடினமானது.ஒரு வளர்ந்த பசுவை கொல்ல சுமார் 600 மில்லி கிராம் குன்றிமணி நஞ்சு போதுமானது. மேலும் விரைவாக பசுக்களை கொல்ல வேண்டி இருக்கையில் குன்றிமணி விழுதுடன் பாதரசம், ஊமத்தை இலைச்சாறு மற்றும் ஆர்சனிக்கும் சேர்க்கப்படும்.
அப்போது ஆர்சனிக் ’’அரிசி’’ என்னும் பெயரில் கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்பட்டிருக்கிறது. நன்கு விளைந்த சோள விதையை குடைந்து அதில் 2 அவுன்ஸ் ஆர்சனிக் நிரப்பப்பட்டு விதையின் வெளிப்புறத்தை மூடி இவை தீவனத்தில் கலக்கப்படும்
தோலுக்காக பசுக்களையும் எருதுகளையும் மட்டுமல்லாது மனிதர்களை கொல்லவும் குன்றிமணி விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.முதன்முதலாக 1854ல் வடமேற்கு இந்தியாவில் முதல் குன்றிமணியால் கொல்லபட்ட பசுக்கொலை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அந்த விசாரணையின் போதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன
சுதாரிகளால் பசுக்கொலைகளை செய்தவர்கள் இந்திய பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரும், எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாதியை சேர்ந்தவர்களுமான, சாமர் எனப்படுபவர்கள் (Charmar).2 இவர்கள் வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் வாழ்பவர்கள்.
இவர்களில் பெரும்பான்மையோர் தோல் பொருள் தயாரிப்பாளர்கள். கொலையான பசுக்களின் உடலை அகற்றும் சாமர்களுக்கு அப்பசுவின் தோலும் இறைசியும் சொந்தமென்பதால் தோலை அகற்றி விற்பனை செய்துவிட்டு இறைச்சியை உண்ண எடுத்துக்கொள்வார்கள். நோயுற்ற மற்றும் நஞ்சூட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை உண்ட இவர்களுக்கு அதனால் எந்த உடல் கோளாறுகளும் உண்டாகவில்லை என்பதை அவர்களுடன் இருந்து கவனித்த ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
பிராமணர்களுக்கு இறந்த பசுக்களை தொடுவது பாவம் என்பதால் இயற்கையாக மரணிக்கும் எல்லா பசுக்களும் சாமர்களுக்கு அப்போது சொந்தமானது. அவர்கள் இறந்த அப்பசுவின் உடலை அப்புறப்படுத்திவிட்டு தோலை உரித்து பதனிட்டும், இறைச்சியை உணவாகவும் எடுத்துக்கொண்டனர்.
1850களில் இருந்து சாமர்கள் சட்டவிரோதமாக மாடுகளை குன்றிமணி நஞ்சு மற்றும் ஆர்சனிக் உபயோகித்து கொல்லத்துவங்கினர். சுதாரியால் குத்தபட்டு இறந்த பசுக்களின் உடலில் நஞ்சூட்டியதற்கான எந்த தடயமும் இருக்காது என்பதால், அவை இயற்கையாக இறந்ததாகவே நம்பபட்டது. அவற்றின் தோல் பெரும்பாலும் பாட்னா மற்றும் கல்கத்தாவை சேர்ந்த இஸ்லாமிய தோல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வியாபாரிகளும் மாடுகளை கொல்லுவதற்கு ஆர்சனிக்கையும் , குன்றிமணி விதைகளையும் அதிக அளவில் சாமர்களுக்கு கொடுப்பதும் வழக்கமாக இருந்தது.
தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல்பொருட்களின் தொழிற்சாலைகளும் விரிவுபடுத்தப்பட்ட 1870 களுக்கு பிறகு இந்த பசுக்கொலைகள் மிக அதிகமாகி சாமர்கள் பசுவைகொல்லும் பிரிவினராகவே அறியப்பட்டனர்..3
முறைப்படுத்தப்பட்ட குற்றமாகவே இக்கொலைகள் நடைபெற்றுவந்த 1880 மற்றும் 1890 களில் மட்டும் 7 மில்லியன் மாட்டுத்தோல்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 1900-01 ல் மட்டும் சுமார் 113 மில்லியனுக்கு தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
பசுக்கொலைகளோடு மனிதர்களும் குன்றிமணி நஞ்சூட்டி கொல்லப்பட்டனர். 1880’ல் பெங்காலின் காவல்துறை ஆவணமொன்றில் 1871’ல் சுதாரியால் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு ஜோடி சுதாரிகளால் உடலின் பக்கவாட்டு பகுதியில் குத்தப்பட்டு இறந்தவரும், உறங்குகையில் சுதாரியால் குத்தப்பட்டு, சுதாரி நுனியை சதையை தோண்டி அகற்றிவிட்டாலும் 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த மற்றொருவரும், கன்னங்களில் சுதாரி குத்தப்பட்டதால் உயிரிழந்த இன்னொருவருமாக, இந்த கொலைகள் அந்த ஆவணத்தில் விளக்கமாக பதிவாகி இருக்கின்றன்.
குற்றவாளிகளான சாமர்கள் மிகுந்த வறுமையில் இக்கொலைகளை மிகக்குறைந்த கூலிக்காகவும், செய்திருப்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஒரு கொலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி 16.5 ரூபாய்கள் தான்.
1865-69 வட இந்தியாவில் மட்டும், 1462 பசுக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 1900;ல் உச்சத்தை எட்டியது. அனைத்து கொலைகளையும் சாமர் இனத்தவர்களே செய்தனர்.
அக்கொலை விசாரணைகள், பல கைதுகளுக்கு பிறகு சாமர்கள் ஆர்சனிக் மற்றும் குன்றிமணிகளை வைத்திருப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1899ல் பெங்காலில் 148 மாடுகள் இறந்ததை ஆராய்ந்த வேதியியல் ஆய்வாளர் இறந்தவைகளில் 75 சதவீதம் நஞ்சூட்டப்பட்டிருந்ததை தெரிவித்தார்.
இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்பதாலும் அவற்றின் தோலை அகற்றி விற்பதாலும், அவர்களின் சுத்தமின்மை காரணமாக தீண்டத்தகாதவர்களாக உயர்குடியினரால் அக்காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட இனமாக இருந்த சாமர்கள் இப்பசுக்கொலை விசாரணைகளின் போது பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் சந்தித்தனர். காவல்துறையினரின் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளினாலேயே இப்பசுக்கொலைகள் மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகின்றது.
.ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் அமர் சித்ர கதா வில் வங்காளத்தில் உண்டான ஒரு பஞ்சத்தின் போது மக்களுக்கு வித்யாசாகரும் அவரது தோழர்களும் உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில் ஒரு சாமருக்கு எண்ணையை தரப்போன அவரது தோழர் மிகத் தொலைவில் நின்று அவருக்கு வழங்கியதை கண்டித்து, வித்யாசாகர் சாமரை தொட்டுத் தழுவி ’’இவரைத் தொட்டால் ஒன்றுமில்லை’’ என்று சொல்வது போல் ஒரு கதையில் சித்தரிக்கபட்டிருக்கிறது.
இந்திய தலித் பிரிவில் ஒரு துணை பிரிவான இவர்களின் பெயரான சார்மர் அல்லது சாமர் என்னும் சொல் ’’தோல் பதனிடுபவர்’’ என்று பொருள் கொண்ட சார்மகரா- ‘Charmakara’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது.
இந்திய தொன்மங்களில் சாமர்களின் தோற்றம் பற்றிய கதைகள் பல உண்டு. உயர்குடியில் பிறந்த, இறந்த பசுவின் உடலை வேறு வழியின்றி அகற்றிய இளைஞன் ஒருவனே முதல் சாமர் என்றும், இறந்த எருதின் உடலை தனியே அகற்ற முடியாத உயர்குடி இளைஞன் ஒருவனுக்கு சிவன் உதவிசெய்து, இறந்த பசுவின் உடலின் மீது சிறுநீர் கழிக்க சொல்லிய போது அந்த உடலிலிருந்து எழுந்து வந்தது முதல் சாமர் என்றும் கதைகள் உள்ளன
இமாச்சலபிரதேசம், டில்லி, ஹரியானா, பீகார், பஞ்சாப் உத்தரபிரதேசம் மற்றும் நேபாளில் இவர்களுக்கு ’’சாம்பார் போளி, சாம்பாரி மற்றும் சாம்ரி எனவும் பெயர்களுண்டு. செருப்பு தைப்பது, தோல் பதனிடுதல் மற்றும் விவசாய வேலைகளை செய்துவந்த இவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.
சுமார் 90 மில்லியன் சார்மர்கள் இந்தியாவில் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 சதவீதம் சாமர்கள். தற்போது அவர்களில் பலர் மிகப்பெரிய சமூக அந்தஸ்துடன் இருக்கிறார்கள்
இப்போது பஞ்சாப்பில் இவர்கள் இரு பிரிவினராக ஆதிதர்மிகள் மற்றும் ரவிதாஸர்கள் என்று பெரும் செல்வாக்குடைய இனத்தவர்களாக இருக்கிறார்கள். பல பஞ்சாபி சாமர்கள் ராணுவத்தில் உயர் பதவியில் இருக்கிறார்கள் பஞ்சாபின் சம்கிலா உள்ளிட்ட பல பிரபல பாடகர்களும் கவிஞர்களும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் .
இந்திய ராணுவத்தின் மிக புகழ்பெற்ற, ஏராளமான விருதுகளை வழக்கமாக பெற்றுக்கொண்டிருக்கும் படைப்பிரிவான சீக்கிய காலாட்படை, பெரும்பாலும் சாமர் மற்றும் மஷாபி சீக்கியர்களை கொண்டுள்ளது.
முன்னாள் இந்திய துணை பிரதமர்- ஜகஜீவன் ராம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கன்ஷிராம் மற்றும் நான்கு முறை உத்திரபிரதேச முதலவராக இருந்த மாயாவதி ஆகியோர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள்
உலகம் முழுவதும் தாவரத்திலிருந்து பெறப்படும் விஷத்தில் முதல் இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.4 ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றிமணி போதுமானது. குன்றிமணியின் பயன்களையும் நச்சுத்தன்மையையும் குறித்து உலகின் பல பாகங்களிலும் பல நூல்களிலும், ஆய்வறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு களைச்செடி போல எங்கும் படர்ந்து வளர்ந்து இருக்கும், பட்டாணி குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த குன்றிமணி உறுதியான நடுத்தண்டும், மெல்லிய கிளைத்தண்டுகளும், சிறிய இளம்பச்சை கூட்டிலைகளும், அவரை போன்ற காய்களுடன் மரங்களிலும், புதர்களிலும் பற்றி படர்ந்து வளரும் ஒரு பல்லாண்டு கொடித் தாவரம்.

குன்றிமணி செடியின் தாவர அறிவியல் பெயர் Abrus precatorius. கிரேக்க மொழியில் Abrus என்பது அழகிய மென்மையான என்னும் பொருளில் இச்செடியின் அழகிய இலைகளை குறிக்கின்றது, precatorius என்பது பிரார்த்தனைக்குரிய என்று பொருள்படும். குன்றிமணி விதைகள் ஜெபமாலைகள் செய்ய பெரிதும் பயன்பாட்டில் இருந்ததால் சிற்றினத்துக்கு இந்த பெயரிடப்பட்டது. ஆப்ரஸ் பேரினத்தில் 17 சிற்றினங்கள் இருப்பினும் உலகெங்கிலும் அழகிய விதைகளின் பொருட்டு பிரபலமாயிருப்பது குன்றிமணி எனப்படும் Abrus precatorius கொடிகளே! (Abrus precatorius L.)
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இச்செடியின் விதைகளான குன்றிமணிகள் பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன,.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாவரம் ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக ஹவாய், கரீபியன் தீவுகள், பாலினேஷியா மற்றும் அமெரிக்காவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டது. ஃப்ளோரிடாவின் உயரமான மனிதர்களின் நடமாட்டமே இல்லாத ஊசியிலை மலைக்காடுகளில் கூட இவை பரவியுள்ளன
மிக ஆழத்தில் வேறூன்றி இருக்கும் குன்றிமணியின் உறுதியான வேர்கள் காட்டுத்தீயில் கூட அழியாது மாற்றடுக்கில் அமைந்திருக்கும் இறகுகளை போன்ற,மிதமான இனிப்பு சுவையுடன் இருக்கும், அழகிய கூட்டிலைகள் 8 லிருந்து 20 சிற்றிலை ஜோடிகளை கொண்டிருக்கும். 10லிருந்து 20 அடி நீளம் வளரும் இக்கொடித்தண்டுகள் முற்றிய பின்னர் நல்ல உறுதியானவைகளாக இருக்கும்.
வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த சிறு மலர்கள் கொத்தாக மலரும்.3 செ மீ நீளமுள்ள காய்கள் 1 செ மீ அளவுள்ள 3 அல்லது 5 கடினமான பளபளப்பான அடர் சிவப்பில் கருப்பு மருவுடன் இருக்கும் அழகிய விதைகளை கொண்டிருக்கும். இவையே குன்றிமணி எனப்படுகின்றன.
குன்றிமணியின் பல்வேறு ஆங்கில பெயர்கள்; jequirity, Crab’s eye, rosary pea, paternoster pea, love pea, precatory bean, prayer bead, John Crow Bead, coral bead, red-bead vine, country licorice, Indian licorice, wild licorice, Jamaica wild licorice, Akar Saga, coondrimany, gidee gidee, Jumbie bead ratti/rettee/retty, goonjaa/gunja/goonja ,weather plant. & paternoster pea,
குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி,குலாகஞ்சி குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை,குன்னி குரு பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் குன்றி மணி நூற்றாண்டுகளாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் பல்வேறு சிகிச்சைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் வண்ணமயமான பளபளக்கும் மணிகளைப்போல இருக்கும் விதைகளால் இத்தாவரம் பரவலாக அறியப்படுகிறது .குன்றிமணி விரைவில் பல்கி பெருகும் இயல்புடையது.
குன்றிமணி விதைகளில் இருக்கும் ஆப்ரின் நஞ்சு (Abrin) 5 மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் தன்மையுடையது. ஆப்ரின் நஞ்சில் A B என இரு முக்கியமான புரதங்கள் உள்ளன. இவையே மனிதர்களின் உடலில் புரதம் உருவாகாமல் தடுத்து பிற மோசமான விளைவுகளை துரித படுத்துபவை. ஒரே ஒரு மூலக்கூறு ஆப்ரின் மனித உடலின் 1500 ரிபோசோம்களை ஒரு நொடியில் செயழிழக்க செய்துவிடும்.

ஆப்ரினின் நச்சுத்தன்மை ஆமணக்கு விதைகளில் இருக்கும் ரிசினின் நச்சுத்தன்மையை காட்டிலும் (Ricin) இருமடங்கு அதிகம் எனினும் இரண்டிற்குமான நஞ்சின் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். ஆமணக்கின் கனியை கடித்து மென்று விழுங்கினால் சிகிச்சைக்கு பிறகு பிழைப்பது ஓரளவுக்கு சாத்தியம் ஆனால் குன்றிமணியை கடித்து விழுங்கினால் உயிரிழப்பு நிச்சயம் உண்டாகும் கடிக்காமல் தவறுதலாக முழுதாக விழுங்கப்பட்ட குன்றிமணி எந்த நோய் அறிகுறியையும், ஆபத்தையும் விளைவிப்பதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் கூட நரம்பு மண்டலம் தொடர்பான கடுமையான சில நோய்கள் உருவாகும்..மனிதர்களின் உயரிழப்புக்கு 0.1 மி கி அளவு ஆப்ரினே போதுமானதாக இருக்கிறது, குதிரைகளும் மனிதர்கள் அளவுக்கே குன்றிமணி நஞ்சினால் பாதிப்படைகின்றன.
.குன்றிமணியை கடித்து உண்டால் வாந்தி, கடும் காய்ச்சல், தொடர்ந்து அதிக அளவில் எச்சில் ஒழுகுதல், ஈரல் சேதம், சிறுநீரக செயழிழப்பு, கண்களில் ரத்தம் வடிதல் வலிப்பு, சிகிச்சை அளிக்காத பட்சத்தில் உயிரிழப்பு ஆகியவை உண்டாகும்.
முழு சிவப்பிலிருக்கும், கருப்பும் சிவப்புமான மணிகள் ஆபரணங்களில் அதிகமாக இணைக்கப்படுகின்றன. இவற்றை துளையிட்டு ஆபரணங்களாக்கும் தொழிலாளிகளுக்கும் இந்த நஞ்சினால் ஆபத்துகள் உண்டாவதாக ஆதரங்களற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரின் நஞ்சை குறித்த மிக முக்கியமான 256 ஆய்வறிக்கைகளில் ஒன்றில் கூட குன்றிமணியை தொழில் ரீதியாக கையாளுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை
முழு வெள்ளை, சிவப்பும் கருப்பும் கலந்தது, முழு சிவப்பு, முழு கருப்பு, பச்சை, நீலம் மஞ்சள் என இம் மணிகளில் பல வகைகள் உள்ளன.அனைத்து விதைகளும் கடும் நஞ்சுள்ளவை. மருத்துவர்கள் அளிப்பதை தவிர இத்தாவரத்தின் எந்த பாகங்களையும் சுயமாக முயன்று பார்ப்பதும், மருந்தாக உபயோகிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
மருத்துவமனைகளில் குன்றிமணி நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஞ்சின் வீரியத்தை குறைக்க செயற்கை சுவாசம் அளித்து இரத்தை சுத்தம் செய்வது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். குன்றிமணி நஞ்சுக்கு முறிமருந்து என்று ஏதும் இல்லை என்பதும் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது.
1877ல் வெளியான உதய் சந்த் தத்தின் ’’இந்துக்களின் மருந்துசரக்குகள்’’ ( The Materia Medica of the Hindus ) நூலில் குன்றிமணியின் விவரிப்பும் அதன் பாலுணர்வு தூண்டுதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் விரிவாக குறிப்பிடபட்டுள்ளது .
அமரசிம்மரின் பிரபல சமஸ்கிருத நூலான ”அமரோக்ஷா” வின் காடுகளிலிருந்து கிடைக்கும் மருந்து பொருட்கள் பற்றிய இரண்டாவது அத்தியாயத்தில் குன்றிமணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1889 ல் வெளியான ஆஸ்திரேலியாவின் முக்கிய தாவரங்கள் என்னும் நூலில் இத்தாவரத்தின் பாகங்களின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 தாவரங்களில் குறுநறுங்கண்ணி எனப்படுவது குன்றிமணியே.இவை நாளடைவில் பிற விதைகளைப்போல சுருங்குவதில்லை என்பதால் தங்க நகைகளில் இவற்றை பதிப்பது பல நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.
.

மேற்கிந்திய தீவுகளில் குன்றிமணி பதிக்கப்பட்ட கைப்பட்டைகளை அணிந்துகொள்வது தீய ஆவிகளில் இருந்து காப்பாற்றும் என்னும் நம்பிக்கை உள்ளது.
இவ்விதைகள் எடையில் மிகவும் சீரானவை, நீர் ஊடுருவ முடியாத கடின விதையுறையின் காரணமாக வெவ்வேறு ஈரப்பத நிலைமைகளின் கீழ் கூட இவற்றில் ஈரம் புகுவதில்லை. குப்பையில் இருந்தாலும் குன்றி மணி சுருங்காது என்னும்பழஞ்சொல்லும் உண்டு;
குன்றிமணி விதைகள் தங்கத்தை துல்லியமாக அளவிட முன்பு பயன்பாட்டில் இருந்தது .இந்தியாவில் குன்றிமணியை கொண்டு அளவிடும் அளவைகளுக்கு ராட்டை என்று பெயர். தோராயமாக 130 மி கி எடை கொண்டிருக்கும் ஒரு குன்றிமணி 2 கோதுமை மணிகளின் எடைக்கும், 3 பார்லி மணிகளின் எடைக்கும் 4 அரிசிகளின் எடைக்கும் 18 கடுகுகளின் எடைக்கும் சமமானதாக இருக்கும்.
8 ராட்டை = 1 மாஷா
12 மாஷா = 1 டோலா (11.6 கிராம்)
மூன்றே முக்கால் குன்றி மணி எடை ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை ஒரு விராகன் எடை.
இரண்டு குன்றி மணி எடை ஒரு உளுந்து எடை.
பத்து விராகன் எடை ஒரு பலம்.
இவ்வாறு பொன்னை அளவிடுதல் போன்ற நுட்பமான நிறுத்தல் அளவுகளுக்கு குன்றிமணி பயன்படுத்தப்பட்டதால் தான் குந்துமணித்தங்கம் என்னும் சொற்பிரயோகம் புழக்கத்தில் இன்னும் கூட இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குன்றிமணி குறிப்பிடப்பட்டுள்ளது.
1915 ல் வெளியான பிரஜேந்திரநாத்தின் பண்டைய இந்துக்களின் நேர்மறை அறிவியல் என்னும் நூலில் (The Positive Sciences Of The Ancient Hindus) ஒரு பொற்கொல்லரிடம் பொன் பேசுவதாக வரும் இரு வரிகளில் ’’ நான் முதல் தரமான பொன் என் தரத்தை கருப்பு முகமுடைய மணிகளைக் கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்’’என்றிருக்கிறது
திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றிமணியை குறிக்கிறது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே விதை குன்றி மணிதான்
“புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து’
குன்றிமணியின் சிவப்பு போல் வெளித்தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பார்கள் என்பது இதன் கருத்து.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
. என்னும் மற்றொரு குறள் குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள். என்கிறது.
திருப்புகழில்
”குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்
வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை
கொன்ற குமரேச குருநாதா ”
என்னும் பாடல் வரிகள். குண்றிமணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி,
தனது அழகிய கூர்மையான வாயில் அந்தப் பாம்பை கொத்திக்
கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே என்கிறது. .
முழு வெள்ளையில் இருக்கும் குன்றிமணிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாலுணர்வு ஊக்கியாக பயன்படுகிறது. குன்றிமணி கொடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் காய்ச்சலுக்கும், இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் விதைகள் கொதிநீரில் இடப்பட்டு நஞ்சு நீக்கிய பின்னர் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது.
ஆயுர்வேதம் இத்தாவர பாகங்களை விலங்குகளால் உண்டான சிராய்ப்புகள், மற்றும் காயங்களுக்கு மருந்தாக உபயோகிக்கிறது. உள்மருந்தாக வெண்குஷ்டம், ஜன்னி மற்றும் வெறிநாய்க்கடிக்கும் ஆயுர்வேதம் குன்றிமணியிலிருந்து தயாரித்த மருந்தையே கொடுக்கிறது. ஆயுர்வேதம் தலைமுடி வளர்ச்சிக்கு குன்றிமணியை உபயோகப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இவ்விதைகள் பாலில் 3 மணி நேரம் வேக வைக்கப்பட்ட பின்னரே சிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

குன்றிமணி விதைகளை பாலில் வேகவைத்து பின்னர் உலர்த்துவது, ஆமணக்கு எண்ணெயில் குன்றிமணி பொடியை கலந்து நஞ்சை நீக்குவது போன்ற இதன் நஞ்சினை நீக்கும் பல்வேறு வழிகளை ”சுத்திசெய்தல்” என்னும் தலைப்பில் சித்தர்கள் விவரித்துள்ளனர்.
இந்தியா, பிரேசில், ஜமைக்கா போன்ற நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குன்றிமணியை கண் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ,தேனுடன் இலைச் சாற்றை கலந்து வீக்கங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் பல மாநிலங்களில் குன்றிமணிகளை பூஜை அறையில் வைத்து பூசை செய்வது வழக்கம். குன்றிமணிகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது தீய சக்திகள் நெருங்காது என்னும் நம்பிக்கை இந்தியாவின் பல பாகங்களில் இருக்கிறது
தென்னாப்பிரிக்காவின் ஜுலு மக்கள் குன்றிமணிகளை கொண்டு ஆபரணங்கள் செய்து பொருளீட்டுவதை முக்கிய தொழிலாகவே செய்கின்றனர்.
சுஷ்ருதர் குன்றிமணியின் மருத்துவ உபயோகங்களை குறிப்பிட்டிருப்பதால் மிகபழங்காலத்திலிருந்தே இது மருந்தாக பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை அறியலாம்
.இந்தியாவைப்போலவே, இலங்கையிலும் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்கு குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றில் குன்றிமணி பயன்படுத்தப்படும். சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாக கருதப்படுகிறது.பல்லாங்குழி, தாயம் ஆகிய விளையாட்டுக்களிலும் குன்றிமணியை உபயொகிப்பது இன்றும் தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது.
பிள்ளையார் சதுர்த்தியின் போது கைகளால் பிசைந்து வீடுகளில் செய்யப்படும் பிள்ளையாருக்கு கண்களாக குன்றிமணியை பதிப்பது இந்தியா முழுவதிலுமே பொதுவான வழக்கம். குன்றிமணிச் சம்பா என்று சற்றே தடிமனான செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை தமிழகத்தில் இருந்தது.

கருப்பு குன்றிமணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பு குன்றிமணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அங்கு காளியின் அம்சமாக கருப்பு குன்றிமணி கருதப்படுகிறது.
ராஜஸ்தானின் புகழ்பெற்ற நாட்டுபுறப்பாடலான சிர்மி பாடல் குன்றிமணியை குறித்தானது. திருமணமான பெண்ணொருத்தி தன்னை காண புகுந்த வீட்டுக்கு வரும் தன் தந்தையையும் சகோதரனையும் காண குன்றிமணி செடிகளின் மீது ஏறி நின்று பாடும் ”சிர்மி” அங்கு மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல். ராஜஸ்தானில் சிர்மி என்பது குன்றிமணியை குறிக்கும் சொல்
அரளி விதைகள், ஊமத்தை இலைகள், குன்றிமணிகள், ஆமணக்கு கொட்டைகள், செங்காந்தள் வேர் என கொடிய நஞ்சினை கொண்டிருக்கும் தாவரங்களை குழந்தைகள் தவறுதலாக கடித்தும் விழுங்கியும் உயிராபத்தை வரவழைத்துக் கொள்வது பல வளரும் நாடுகளில் மிக அதிகம் நிகழ்கிறது.
ஆச்சர்ய படும்படியாக இந்த தாவரம் மிக அதிகமாக காணப்படும் இலங்கையில் இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு கடந்த பத்து ஆண்டுகளில் 9 குழந்தைகள் மட்டுமே குன்றிமணியை கடித்ததால் மருத்துவமனைக்கு வந்தவர்கள். அதேபோல் குன்றிமணி அதிகம் விளையும் கேரளாவிலும் இதனால் பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது.
கேரளா குருவாயூரில் குழந்தைகளுக்கு சோறூட்டும் அன்னபிரசன்னம் நிகழ்வில் குழந்தைகள் கைகளால் அளைவதற்கென்று உருளியில் நிறைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற மணிகள் மலையாளிகளால் சில சமயம் குன்னிக்குரு என்றழைக்கப் பட்டாலும் அவை குன்றிமணிகள் அல்ல Adenanthera pavonina என்னும் மஞ்சாடியின் விதைகள்.

தாவர நஞ்சினால் உலகெங்கிலும் மிக அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே! குன்றிமணியின் ஆபத்துக்களில் முதலாவது இதை உட்கொண்ட பலமணி நேரம் கழித்தே அறிகுறிகள் தெரிவது, இரண்டாவது இதை உட்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இந்த தாவரம் வளர்ந்திருக்கும் இடங்களிலோ, விளையாடும் இடங்களிலோ அலல்து பள்ளியிலோ இருப்பதால் விஷயம் பெரியவர்களுக்கு தெரியவர நேரம் ஆகிவிடுகிறது மூன்றாவதும் மிக முக்கியமானதும் குன்றிமணி இத்தனை நஞ்சுள்ளதென்பது அநேகம் பேருக்கு தெரியாது என்பதுதான்.
குன்றிமணி நம் சுற்றுப்புறங்களில் மிகச் சாதாரணமாக தென்படும் ஒரு களைத்தாவரம். நம் கலாச்சாரத்தில் பல சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருக்கும் இதன் அழகிய விதைகளை குழந்தைகள் அதிகம் கையாளும், பயன்படுத்தும் சாத்தியங்களும் அதிகமிருப்பதால் குன்றிமணியின் நச்சுத்தன்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் விபத்துகளை தவிர்க்க முடியும்.

பள்ளிக்கூடங்களில் சுற்றுபுறங்களில் எளிதாக காணப்படும் இதுபோன்ற நச்சுத் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரைகளை, நாடகங்கள் நிகழ்ச்சிகளை அவசியம் நடத்த வேண்டும். A for Apple, C for Carrot என்று கற்றுக் கொள்வதோடு நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களையும் பள்ளியில் அடிப்படை கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தாவரங்களை குறித்த முறையான அறிவும், ஆபத்துக்களை தவிர்க்கும் அறிதலும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும்.
மேலும் தகவல்களுக்கு:
- Detective Footprints, Bengal, 1874-1881: With Bearings for a Future Course
Major h m ramsey dysp bengal.
3 History of Cattle Poisoning in British India – Telangana Mata