பொன்முத்தம்

வெண்முரசு மீள் வாசிப்பிலிருக்கிறேன். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய திறப்புக்கள், புதிய அறிதல்கள் என்று தீராமாலே இருந்துகொண்டிருக்கிறது வெண்முரசு. இம்முறை வேர்களை, இலைகளை மகரந்தங்களை,  மரங்களை எல்லாம் குறிப்பாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலிலிருந்து துவங்கி முதலாவிண் வரையிலுமே பயணிக்கும் மகரந்தங்கள் மிக மிக முக்கியமான நிகழ்வுகளில்  குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முதற்கனலில் எட்டுவகை ஸ்ரீதேவியராக  அறியப்படுகிற , விதைகளுக்குள் வாழும் தேவியான  விருஷ்டி, வேர்களையும் மகரந்தங்களையும்  தானே ஆள்பவள் என்கிறாள். வியாசருக்கு சுவர்ணவனத்தின்   பறவை குடும்பத்தின் சிறு குஞ்சொன்று  பூவின் மகரந்தத் தொகை போல  இருக்கிறது

முதலாவிண்ணில் அழும் சிறுமதலையை மெல்ல தட்டியபடி  அன்னை ‘ சிறு கரிச்சான் பைதலே, பாடுக குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை’’என்று தாலாட்டுகிறாள்.

மென்முகில் சேக்கையில் துயிலும்  சித்ரசேனனை சுற்றி   அவன் தேவி சந்தியை பூத்த காட்டிலிருந்து மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்புகிறாள்..

கிராதத்திலேயே மழையீரத்தில் கொன்றைகளுக்குக் கீழே உருவான கால் குழித் தடங்களில் பொன் பொடி என மகரந்தம் உதிர்ந்து கிடக்கிறது.

வண்ணக்கடலில் ஸ்தூனகர்ணன் ஆலய சுனை நீரை  அள்ளி வீசி தன் உடலிலிருந்து மகரந்தப் பொடிகளையும் தேன் துளி களையும் களையும் துரியோதனன்  முன்புதான் ஸ்தூனகர்ணன் தோன்றுகிறான்.

இமைக்கணத்தில் அத்ரிமலை முடி நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த சுகரின் முன்னால் எழுந்த விண்ணுரு நூறாயிரம் கோடி இடிகளென எழுந்த பெருங்குரலில் “நானே மாபெரும் அரசமரம். வானில் வேர் விரித்து மண்ணில் கிளையும் விழுதும் இலையும் தளிரும் மலரும் மகரந்தமும் பரப்பி நின்றிருக்கிறேன்” என்று  முழங்குகிறது.

.இளைய யாதவனின் விழிகளினூடாக தாமரை இதழ்களுக்குள் வண்டு என.நுழைந்த யமி அதன் மகரந்த மையத்தை அடைகிறாள்.

இளைய யாதவர் விதுரரிடம் அஸ்வதந்த அருமணியை கொண்டு வரச்சொல்லுகையில் விதுரர் செல்லும் அந்த  வைப்பறையின் காற்றில் வேப்பிலைச்சருகின் நாற்றமும் தாழம்பூம்பொடியின் மணமும், இருளின் மணமும் கலந்திருக்கிறது.

மாமலரில்   முண்டன்.  மரத்தில் மலர்ந்த அசோகசுந்தரியை பற்றிச் சொல்லும்போது   பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்த கல்பமரத்தின் அலை வளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தம் என்று மாற உருக்கொண்டெழுந்ததென்கிறான்

வெண்முகில் நகரத்தில் கிருஷ்ணனுடன் பகடை ஆடி சலிக்கும் சகுனி   கற்பனையில் அலையிலெழும் குதிரையில் ஏறி வருகிறது ஐந்து கைகள் கொண்ட ஒரு மலர். அம்மலர் வட்டம் சிலந்திவலை ஆகி, சிலந்தி எட்டு கைகளுடன் நச்சுக்கொடுக்குகளுடன் எழுந்து, புல்லிவட்டமாக சிதர் விரித்து மகரந்தம் காட்டுகிறது

மகரந்தம்

நீர்ச்சுடரில் மகனிடம் எப்படியும் ஒருமுறை பேசத்துடிக்கும் சுபத்ரையின் கண்களில் தெரியும்   இரட்டை வெண்புழுக்களில் ஒன்றாக அபிமன்யூ நெளிவது ஒரு  தாமரை மலரின் மகரந்த பீடத்தில்தான்

தன்மேல் பெருங்காதல் கொண்ட சச்சியைக்காண  சிட்டுக்குருவியென அவளிடம் வந்துகொண்டிருந்த இந்திரன் மீது   மணந்ததும் மகரந்தம் தான்

கல்பொருசிறு நுரையில் மலையன் தயை  என்னும் சிறுமியுடன்  இளையாயாதவரை தேடி மந்தரம் எனும் ஆயர்சிற்றூரை அடைகையில்   கடக்கும் காட்டின் தரையையே பொன்னிற விரிப்பாக காட்டுவதும் உதிர்ந்த பூம்பொடிகள் தான்

களிற்றுயானை நிரையில் பாஞ்சாலியின் அறையின் மலர்கள் இதழ்கள் விரித்து, பூம்பொடி நிறைத்து காத்திருந்த  ஓவிய மலர் வெளியில் யுயுத்ஸு சிறகு முளைத்த சிறுவண்டென பறந்தலைகிறான்

தீயின் எடையில் அன்னை முறை கொண்டவளை புணர்ந்த ஸ்தூனகர்ணனிடம், ஸ்தூனன் ’’கிருதயுகத்தில் மானுடர் பூம்பொடி படர்ந்திருந்தாலும் மென்சேறு பூசப்பட்டிருந்தாலும் அசையாத பாறைகள் போலிருந்தனர்’’ என்கிறான்.

பைன் மகரந்தப்பொடி

வெய்யோனில் இந்திரபிரஸ்தத்திற்கு வந்த கர்ணன் அரண்மனைக்கு செல்லுகையில் அவைபுகும் வழியில் காணும் வெண்புரவியின் மென்மயிர் பரப்பில் வெயிலின் செம்மை பூம்பொடி உதிர்ந்தது போல பரவியிருந்தது என்னும் வெகு நுட்பமான இந்த விவரணை கற்பனை செய்து பார்க்கையில் பேரழகாக இருந்தது.

இருட்கனியில் இறந்த வெய்யோனை வணங்கும் அஜர் உரையிடைப்படும் பாட்டில் வரும் துயர் கொண்டிருக்கும் நீலத்தாமரைமலர்.’’என் இதழ்களுக்கு ஒளியாகிறீர்கள். என் பூம்பொடியில் நறுமணம் நிறைக்கிறீர்கள். என் அகக்குமிழில் தேன் என கனிகிறீர்கள்’’ என்கிறது கதிரவனிடம்.

இப்படி பல முக்கியமான தருணங்களில் மகரந்தங்கள் வெண்முரசில் குறிப்பிட பட்டிருக்கிறது.

வீட்டில் ஒரு கத்தி சவுக்கு மரம் இப்போதுதான் மலரத் தொடங்கி இருக்கிறது.  இலைகளே தெரியாமல் மரம் முழுவதும் பூத்திருக்கும் மஞ்சள் மஞ்சரிகளிலிருந்து நுண் மலர்களும்,மகரந்த பூம்பொடியும்  மழைபோல பொழிந்து வீடும் வாசலும் மஞ்சள் குளித்து கொண்டிருக்கிறது. ’மஞ்சுளா’ என்று மரத்திற்கு பெயரும் வைத்தாயிற்று. ஒரு மரத்திற்கு இத்தனை மகரந்தம் ஏராளம்தான் ஆனாலும் அடுத்த சந்ததிகளை உறுதிசெய்ய, காற்றில் நீரில் பரவும் போது, வீணாய் போகவிருக்கும் மகரந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தேவைக்கும் அதிகமாக, இப்படி ஏராளமாக மகரந்தங்களை  உருவாகுகின்றன தாவரங்கள்.

தாவரங்களின்  மகரந்தச் சேர்க்கை என்பது  காதல் செய்வதுதான். பிற உயிர்களை போல தன் இணையை தேடி செல்ல முடியாமல், வேர்களால் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருப்பதால் தாவரங்களில் இணையைத் தேடி காதலுடன் பயணிப்பது மகரந்தங்களே. ஆண் மரங்களிலிருந்து மகரந்தம் பெண் மரங்களின் மலர்களை தேடி அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர்கள் வரை பயணிப்பதும், அப்போது பெண் மலர்கள் கருவுறுதலுக்கு தயாராக இருந்து மகரந்தத்தை வாங்கிக்கொள்ளுவதும். காற்றில் கலந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பிற தாவரங்களின் மகரந்தங்களினால்  பெண்மலர்கள் சூல் கொள்ளாமலிருக்க தேவையான தடுப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வதும், பலவீனமான மகரந்தங்கள் வந்துசேர்கையில் அவற்றை முளைக்க விடாமல் பெண்மலர்களே அழித்துவிடுவதுமாய் கருவுறுதலின் ஏற்பாடுகளை  மலர்கள் அதீத கவனத்துடன், புத்திசாலித்தனமாக மேற்கொள்கின்றன. ’’Pollination Romance’’ என்றுதான் நான் கற்பிக்கையில் குறிப்பிடுவேன்.

நுண்ணோக்கியில் மகரந்தங்கள்

தாவரங்களிலும்  தென்னையை போல ஒரே பாளையில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியாகவும், செம்பருத்தியைப்போல ஒரே தாவரத்தில் இருபால் மலர்களும், பப்பாளி, ஜாதிக்காய் மரங்களைப் போல ஆண்பெண்மரங்கள் தனிதனியே இருப்பதும் பலருக்கு தெரிவதில்லை.

மலர்கள் கொண்டிருக்கும் மரங்களனைத்தும் கனிதரும் என்று நினைக்கிறார்கள் அப்படி கனி தராதவை மலட்டு மரமென்று வெட்டப்படுகின்றன.

பலர் வீடுகளில் பப்பாளியின் ஆண் மரங்களை அது காய்க்காத மரம் என்று வெட்டி விடுகிறார்கள். ஒரே ஒரு ஆண் மரமாவது, எங்கோ ஓரிடத்தில் இருந்தால் தால் அதன் மகரந்தங்கள் தேடிச்சென்று காதல் கொண்டபின், அந்த ஊரின் அனைத்து பப்பாளி மரங்களும் கனி கொடுக்கும். இங்கு வீட்டில் இருந்த  ஆண் மரமொன்றை வெட்டிவிட சொல்லி, தோட்டத்தை  சுத்தப்படுத்த உதவும் லக்ஷ்மி சொன்னபோது நான் அவளிடம் இந்த ஆண் பெண் காதல் கதையை விளக்கினேன். முகவாயில் கைவைத்துக்கொண்டு ’’மனுஷங்க மாதிரியே இதிலயும் ஆம்பளை, பொம்பளை இருக்குதுங்களே’’ என்று வியந்தாள்.

உலகின் பூக்கும் தாவரங்களில் 330,000 தாவரங்களுக்கு பாலினப்பெருக்கம் செய்ய மகரந்த சேர்க்கை  அவசியமாக இருக்கின்றது. இதன் பொருட்டு மகரந்தங்கள் மிகச் சரியான பருவத்தில் வெளியாகி, அவற்றின்  இணையை தேடி பயணிப்பதும், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதும் , மிக ஆச்சர்யம் அளிப்பவை .இந்த காதலுக்கு நீரும், காற்றும், பறவைகளும் ,தேனீக்களும், குளவிகளும், வண்டுகளும், எறும்புகளும், விலங்குகளும் துணை செய்கின்றன.

காற்றினால்  நிகழும் மகரந்த சேர்க்கையும் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது.  கிராதத்தில் அர்ஜுனனிடம் காளன் ’’அலை அலையென எழுந்துவரும் முடிவிலா காற்றே, பருவங்களைச் சமைத்து, மலர்களை முகிழவிழச் செய்து. மகரந்தங்களால் சூலுறச்செய்து காயும் கனியும் ஆக்குகிறது என்கிறான்

பூச்சிகளால் நிகழும் மகரந்த சேர்க்கையும் ஒரு அழகிய கவிதையை போல சொல்லப்பட்டிருக்கிறது

இளைய யாதவர். ப்த்ரரிடம் ” “மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. தான் செல்ல விரும்பும் திசை நோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!”என்கிறார்,

சூல்முடியில் முளைவிடும் மகரந்தங்கள்

தன் மகரந்த சேர்க்கைக்கான எல்லா வசதிகளும் இருக்கையில், மலர்களின் மெல்லிய அசைவிலேயே மகரந்தம் பெண் மலர்களின் மீது பொழியும் என்றாலும் வீரியமிக்க சந்ததிகளை இம்முறையில் உண்டாக்க முடியாதென்பதை அறிந்து,   அயல்மகரந்த சேர்க்கையை விரும்பும் தாவரங்களின் அறிவை என்னவென்று சொல்வது?. இருபால் மலரான  செங்காந்தளை பார்த்தால் தெரியும் தன் சூலக முடியில் தனது மகரந்தங்கள் விழுந்துவிடக்கூடாதென்பதற்காக, ஆண் பகுதியிலிருந்து,  சூலக முடியினை முடிந்த வரையிலும்  தள்ளி அமைத்திருக்கும்

ஆண் பகுதியிலிருந்து மகரந்தம் எளிதில் வெளிவராத சில குறிப்பிட்ட வகை குழல் மலர்களில், வண்டுகள் தங்களது உடலை மலர்களில்  வேகமாக உரசி மகரந்தத்தை வெளிவர செய்து தங்கள் உடம்பில் எடுத்துக்கொண்டு போகும் Buzz pollination என்பதுவும் தாவரவியலின் ஆச்சர்யங்களில் ஒன்று. இந்த உரசலின் அலைவரிசை மிகத்துல்லியமாக  இருந்தால் மட்டுமே இம் மலர்களிலிருந்து மகரந்தம் வெளியே வரும். உலகின் 9 சதவீத மலர்களில் இந்த  உரசல் தேவையாக இருக்கிறது.உரசலின்போது மகரந்தம் வண்டுகளின் உடலின் அடிப்பாகங்களிலும், கால்களுக்கு இடையிலும் பீய்ச்சி அடிக்கப்படுகின்றது, மகரந்த பொடி பூசிய இவ்வண்டுகள் பிற மலர்களில் அமரும்போது எளிதாக காதல் நடக்கின்றது. இந்த பீய்ச்சியடிக்கும் வேகமானது   புவி ஈர்ப்பின் வேகத்தைவிட 30 மடங்கு அதிகமென கணக்கிடப்பட்டிருக்கிறது.

இவ்வண்டுகள்  அமர்ந்து சென்ற மலர்களின் மீது அடர் மஞ்சள் மகரந்த துணுக்குகள் பொன்முத்தங்களென அமைந்திருக்கும்.நம் கண்ணுக்கு தெரியாத இந்த காதலின் போது  ஆண் பெண் தாவரங்கள் தங்களுக்கிடையே  சரியான இணையை தேடுவதும், சமிஞ்சை அளிப்பதையும், பின்னர் பிழையின்றி அதே இனத்தின் பெண் மலரை கண்டடைவதையும்  குறித்த பல ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிற உயிரினங்களில் நடப்பது போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட மகரந்தங்கள் பெண் மலரில் விழுந்து,அனைத்துமே முளைத்து ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பெண் முட்டையை அடைந்து விதிக்கப்பட்ட ஒன்றே ஒன்றின் குழல் வெடித்து விந்து வெளியேறி, இணைந்து கருவுறுதல் நிகழ்கின்றது.

மகரந்தம்

மழைப்பாடலில் கர்ணனை கருக்கொண்டிருக்கும் பிருதை அனகையிடம் . நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்? எனக்கேட்கிறாள்.

பாலையின் மகரந்தச்சேர்க்கை மற்ற நிலப்பரப்புக்களை விட சிறப்பானதாயிருக்கும். அங்கு வரும் பூச்சிக்களின் எண்ணிக்கை குறைவென்பதால் வரும் பூச்சிகளுக்கு பரிசாக இனிப்புக்களையும் எண்ணெய்த்துளிகளையும் அமினோ அமிலங்களையும் மலர்கள் மகரந்தக்குவையின் மீதே வைத்திருக்கும்.

பாலைப்பெருமலர்வு ( Desert super bloom ) எனப்படும் அரிய தாவரவியல் நிகழ்வில் வழக்கத்துக்கு மாறான மிக அதிக  மழைப்பொழிவு இருக்கும் போது, முந்தைய மழையில் உருவாகி பாலை மணலில் புதைந்திருக்கும் விதைகள் முளைத்து  மிக அதிக அளவில் பாலைத் தாவரங்கள் ஒரே சமயத்தில் மலர்ந்து, மகரந்தம் பரப்பி, சூல்கொண்டு, மீண்டும் ஏராளமான விதைகளை உருவாக்கும். கலிஃபோர்னியா பாலைகளில் பத்து ஆண்டுகளுக்கொருமுறை இம்மலர்வு நிகழும். 1990களுக்கு பிறகே பாலை பெருமலர்வென்னும் இந்த சொல் புழக்கத்தில் வந்தது

எழுதழலில் சந்திரசூடருடன் அரண்மனைக்கு செல்லும் வழியில் தான் இளைய யாதவரின் மைந்தர்களுடன் வளர்ந்ததை  நினைவுகூறும் அபிமன்யூ “அவருக்கு எத்தனை மைந்தர்?” என்று  கேட்கும் பிரலம்பனிடம் // “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்”// பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.” என்கிறான்

இளையயதவரின் காதல்களுக்கு  மகரந்தத்தை ஒப்புமையாக்கி அவரை உளத்தலைவராக ஏற்றிருக்கும் பல்லாயிரம் பெண்களையும், அவரின் பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும்,  அவர்களின் லட்சம் மைந்தர்களியும்  குறிக்கும் இந்த வரி எத்தனை அழகானது!

மகரந்தக்குளியல்

கார்கடலில் போர் சூழ்கையொன்றை குறித்த விவாதத்தில் கர புஷ்பம் என்றொரு தாமரை  சூழ்கையை அஸ்வத்தாமன் இப்படி விவரிக்கிறான் ’’தேன் நாடி வண்டுகள் தாமரைக்குள் வருகின்றன. மையத்திலுள்ள மகரந்தத் தாள்களுக்கு அடியில் வந்தாலொழிய அவற்றால் தேனருந்த இயலாது. அங்கிருந்து அவை எளிதில் பறந்தெழ இயலாமல் தேனும் பூம்பொடியும் தடுக்கும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்றுகூடி குவிந்து வண்டை சிறைப்படுத்தும். நாம் வகுக்கும் சூழ்கையில் அர்ஜுனன் அல்லது பீமன் விழ வேண்டும்//என்கிறான். மலர்பொறி சூழ்கை அது. தாமரையினுள்ளிருக்கும்  மலரமுதை அருந்தி, அங்கிருக்கும், மித வெப்பத்தில் மதிமயங்கி, வண்டுகள் உள்ளேயே இரவெல்லாம் சிறைபட்டு பின்னர் காலையில் வெளியே வருவதை பல பழந்தமிழ்பாடல்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

இயற்கையிலேயே Trap blossoms எனப்படும் மலர்ப்பொறிகள்  தாமரையல்லாத மலர்களிலும் உண்டு. சில கொடித்தாவரங்கள் நெருக்கமாக ஒன்றையொன்று தழுவி கொண்டிருக்கும் மலர் மஞ்சரிகளை கொண்டிருக்கும், அவற்றை  தேடி வரும் பூச்சிகளை அந்த மஞ்சரிகளுக்குள்ளேயே சிறிது நேரம் வெளியேற முடியாத வகையில் பிடித்து வைத்துக் கொண்டு, பின்னர் மகரந்தம் அவற்றின் உடல் முழுக்க பூசப்பட்ட பின்னர் அவற்றை விடுவிக்கும்

மலர்களிலிருந்து மலரமுதினை (Nectar) மட்டுமல்லாது மகரந்தங்களையும் பல பூச்சிகள் உண்ணும். சொல்வளர் காட்டில் இளைய யாதவர் பத்ரரிடம்  ’’மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண் சாரத்தையே அது கொண்டு செல்கிறது, அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது. என்பார்.

ஒரு மரத்தின் நுண்சாரமான மகரந்தத்தில் அபரிமிதமான சத்துக்கள் அடங்கி இருப்பதால் பல நாடுகளில் தேனைப்போலவே மகரந்தங்களும் சேகரிக்கப்பட்டு, மனிதர்களுக்கு உணவாகின்றது. பைனஸ் மகரந்தங்கள் இவற்றில் மிக பிரபலமானது. கொரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஆண்டுக்கொன்றென நீள ஸ்கேல் போன்ற அட்டையில் பொதிந்திருக்கும்  Dasik சிறப்பு பிஸ்கட்டுகள் பைன் மகரந்தங்களை கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.

பூச்சிகளும் மலரமுதுடன் மகரந்தங்களையும் உண்ணும், அவற்றை சேகரித்து கூடுகளுக்கு எடுத்துச்செல்லும். மகரந்தத்தை சேகரிக்கும் கூடை போன்ற அமைப்பினை ( pollen Basket ) பல வண்டுகளும் தேனீக்களும் பின்னங்கால்களில் கொண்டிருக்கின்றன. இன்னும் சில பூச்சி இனங்கள் மகரந்தத்தை சேகரிக்க உடலின் பின் பகுதியில் அடர்ந்த முடி அமைப்பை கொண்டிருக்கும். மகரந்தங்களை  உண்ணும் உயிர்கள் Palynivore எனப்படுகின்றன.

மகரந்தக்கூடை

தேனீக்களை வளர்த்து தேன் சேகரிப்பவர்கள் தேன் கூடுகளின் பின்புறம் தேனீக்கள் நுழைகையில் அவற்றின் உடலில் இருந்து மகரந்தங்களை மட்டும் பிரித்தெடுக்கும் சல்லடைப் பொறிகளை வைத்திருப்பார்கள்.வளர்ந்த நாடுகளில் பழப்பண்ணை களில் தேவைப்படும் தேனீக்களை பண்ணைக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் கூடுகளில் வளர்க்கும்  கட்டுப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடத்தவென  சிறப்பு தொழிநுட்பங்களும் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றன.

மலருயிரியல் எனப்படும் Floral biology யின் துணை அறிவியலான  Anthecology, என்பது மகரந்த சேர்க்கையை, அதற்கு துணைபோகும் உயிரினங்களை, இவற்றிற்கிடையேயான தொடர்புகளை, புரிதல்களை பற்றிய அறிவியல். மகரந்த துகள்களை பற்றிய பிரத்யேக அறிவியல் palynology எனப்படுகிறது.

மகரந்த  சேர்க்கையின் முக்கியதுவமறிந்த பல நாடுகளில் இந்த பூச்சிகளின் வழித்தடங்கள் பாதுகாப்படுகிறது முதன் முதலில் மகரந்த வழித்தடங்கள் (pollinator corridors ) என்னும் சொல்லை   சூழலியலாளர் ஃப்ளெமிங் (Ted Fleming ) 1993’ல் உருவாக்கினார். வலசை செல்லும் சிறு பறவைகளும் பூச்சி இனங்களும் மகரந்த சேர்க்கை செய்தபின்னர் திரும்பி செல்லும்  பயணவழியில் சோர்வடையாமல் இருக்க மகரந்தம் கொண்டிருக்கும் மலர்கள் அவற்றிற்கு கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்னரே சேமித்து வைத்திருந்து அளிக்கின்றன. காலநிலை மாற்றங்களினால் இந்த மகரந்த வழித்தடங்களில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் மாற்றம் அல்லது சேதம் பல தாவரங்களின் இனப்பெருக்கத்தை நேரடியாக பதிகின்றது.இவ்வழித்தடங்களில் இருக்கும் தாவரங்களும் அவற்றில் அடுத்தடுத்து மகரந்த சேர்க்கையும்,கருவுறுதலும் நிகழும் காலங்களும், அவற்றிற்கு  உதவும் பூச்சி இனங்களும் குறித்த ஆய்வுகள் மிக முக்கியமானவை.

இவ் வழித்தடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆக்கிரமிப்பு தாவரங்களினாலும், பல தாவரங்களின் பருவம் தவறிய  மலர்தலினாலும் பல வழித்தடங்கள்  நிரந்தரமாக அழிந்துவிட்டதை காட்டுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையெனில் கருவுறுதலும், விதை உருவாதலும், அடுத்த சந்ததியும் இல்லாமல் போகிறது.

மகரந்த  சேர்க்கைக்குதவும் உயிரினங்கள் மற்றும் மகரந்த வழித்தடங்களின் அழிவு மனிதர்களின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாகும் காலம் வெகு சமீபத்தில் தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்

பல அமெரிக்க பழங்குடியினர்களில் பலிச் சடங்குகளில் பலி விலங்கின் மீது நாம் மஞ்சள் நீர் ஊற்றுவது போல  மகரந்தப்பொடியை தூவும் வழக்கம் இருக்கிறது. அரிஸோனா மற்றும் மெக்ஸிகோ பழங்குடியினர் மகரந்தத்தால்  பூசப்படுகையில் உடல் புனிமடைவதாக  நம்புகின்றனர்.

பெரும்பாலான பூச்சியினங்களுக்கு மஞ்சள் நிறம்மட்டுமே கண்ணுக்கு புலப்படும் என்பதால்தான் மகரந்தங்கள் பொதுவாக மஞ்சளில் உருவாக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வகை பூச்சியினங்ளுக்காக இளநீலம் வெள்ளை பச்சை. சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களிலும் மகரந்தங்கள் உருவாகின்றன.

பிற உயிரினங்களில்  ஆண் பெண்ணை கவர பிரத்யேகமான அழகும், இறகும் ,அலங்காரங்களும், நிறங்களும்  கொண்டிருப்பது போலவே, மனிதனின்  கண்ணுக்கே தெரியாத மின்னணு நுண்ணோக்கியில் மட்டுமே காணக்கிடைக்கும் மகரந்தங்களும், அவற்றின் மேற்புறத்தில் இருக்கும் அழகிய சிற்பங்களின்  நுண் செதுக்கல்களை போன்ற வடிவங்களும், நிறங்களும் இருக்கின்றன. நுண்ணோக்கிகள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் நம்மால் பார்க்க முடியாமல் போயிருக்கும் மகரந்தங்களின் இப்பேரழகை குறித்து  சமீபத்தில் நீங்கள் பாலுறவின் ஆன்மீகத்தில்   சொல்லியவற்றை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்,

// நீங்கள் ‘பார்ப்பதற்காக’ அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு மெய்மையைச் சிற்பமாக்கும் பொருட்டு அவை அங்கே செதுக்கப்பட்டுள்ளன. எவருமே பார்க்கவில்லை என்றாலும் ஆலயம் குறைவுபடுவதில்லை. பாருங்கள், எவருமே பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம்கூட சிற்பங்கள் நிறைந்திருக்கும். சில ஆலயங்களில் மண்ணுக்கு அடியில்கூட சிற்பங்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவை அந்த ஆலயத்தின் இயல்பான நுண்கூறுகள், அவ்வளவுதான்.அங்கே அவை இருப்பது மனிதனின் தேர்வு அல்ல. மனிதன் விலக்கக்கூடுவதும் அல்ல. அது படைப்பின் பகுதி. இயற்கையின் பகுதி. நன்று தீது என்பதற்கு அப்பாலுள்ளது// எனக்கு மகரந்தங்களின் அழகை காண்கையில் தெய்வ தரிசனமாகவேதான் தோன்றுகிறது.

(மகரந்தங்களின் பல அழகிய புகைப்படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்-Awesome Microscope Images of Pollen Grains (17 pics) – Izismile.com )