சமீபத்தில் பக்கத்து ஊரான பணக்கார செல்லப்பம் பாளையத்துக்கு ஒரு துக்கநிகழ்வுக்கு சென்றிருந்தேன், கல்லூரியின் முன்னாள் செயலரின் மனைவி இறந்துவிட்டார்கள்.அந்த ஊரில் பெரும்பாலும் அனைவருமே நிழக்கிழார்களும் செல்வந்தர்களுமே என்பதால் ஊர்ப் பெயரே அப்படி.
மிகப்பெரிய கட்டுவீடு. மதிலின் உட்புறங்களில் சிமெண்டுத்தரையில், அழகிய வட்டங்களில் தர்ப்பைப்புற்கள் வளர்த்தியிருந்தார்கள் முதன்முதலாக தர்ப்பையை இப்படி பச்சைப்புல்லாக அங்குதான் பார்க்கிறேன். தர்ப்பையை எங்கும் வளர்ப்பதில்லை அவை தானே வளரும் என்றே அதுவரையிலும் அறிந்திருந்தேன். செயலருக்கு தாவரங்கள் மீது தனித்த பிரியமுண்டு, நாக்பூர் ஆரஞ்சைகூட பல ஏக்கரில் சாகுபடி செய்து பார்த்திருந்தார் ஒருமுறை..
தர்ப்பையை எங்கு வாங்கினார் என்று கேட்க முடியாதபடிக்கு அசந்தர்ப்பமாக இருந்தது. எனினும் எனக்கு அந்த புற்களின் மீதே பார்வை போய்க்கொண்டிருந்து. ஒரே ஒரு புல், அடிக்கிழங்குடன் கிடைத்தால் வீட்டில் வளர்த்தலாமென்றே நினைவு ஓடியது. கொங்குப்பகுதியில் பிரபலமான ‘’பந்தலிலே பாவக்காய்’’ பாடல் நினவுக்கு வந்து மனதை கட்டுப்படுத்திக்கொண்டேன்.
உலர்ந்த தர்ப்பையை, அதுவரையிலும் வீட்டில் கடவுள் படங்களுக்கு அருகில் சம்பிரதாயத்துக்காகவும், கிரகண நாட்களில் உணவுகளிலும், நீரிலும் போடுகையிலும், ஹோமங்களிலும், கல்லூரி ஆய்வகத்தில் உலர் தாவரமாகவும்தான் பார்த்திருக்கிறேன்
வீடு திரும்புகையில் வெண்முரசில் தர்ப்பை வரும் இடங்களை எல்லாம் நினைத்துக்கொண்டே வந்தேன். வெண்முரசை வரிசைக்கிரமமாக பலமுறை வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.. மனம் சமநிலையிலில்லாத நாட்களில் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு நூலை மனம் சொல்லியபடி எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை பிரித்து வாசித்துவிட்டு நாளை துவங்குவதும் உண்டு.
இப்போது வெண்முரசில் தர்ப்பைகளை பற்றி சொல்லி இருப்பவைகளை மட்டும் தனியே மீண்டும் வாசிக்க துவங்கினேன். தர்ப்பை புல் படுக்கை, இருக்கை, மோதிரம், பாய் என்று அதன் பயன்பாடுகள் பலநூறு முறை வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றுடன் மிக முக்கிய உச்ச தருணங்களில் எல்லாமே வெண்முரசில் தர்ப்பையும் இருக்கிறது
முதற்கனலிலிருந்தே தர்ப்பை சொல்லப்பட்டிருல்கிறது. பிரஜாபதிக்கும் தீஷணைக்கும் விண்ணகப்பெருவெளியில் முளைத்தெழுந்த பொன்னிற தர்ப்பைபோல் பிராசீனபர்ஹிஸ் பிறந்ததையும் பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் மண்ணில் பட்ட இடங்களில் இருந்து தர்ப்பையும் நாணல்களும் மூங்கில்களும் உருவாகி வந்தையும் முதற்கனல் சொல்லுகிறது.
வனலீலையில் வேள்விக்குதிரையான நாய்க்குட்டி ஷிப்ரதேஜஸின் முகத்தில் அடித்து, முந்தையநாள்தான் திறந்த புத்தம்புதிய கண்களில் தர்ப்பையால் குத்துகிறான் .ஜனேமேஜயன். கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டேஇருக்கும் அவர் வேள்விமுகத்தில் கண்ணீருடன் தர்ப்பையும் நீருமாக தட்சனின் உயிரை காணிக்கையாக கொடுக்கிறார்..
தன்னிச்சைப்படி புத்திரசோகத்தால் உயிர்விட துணியும் வசிட்டர் தர்ப்பைப்புல்லை பரப்பி அதன் மீது அமர்கையில்தான் அதிர்ஸ்யந்தியின் வயிற்றிலிருக்கும் மைந்தன் வேதமுரைப்பதை கவனிக்கிறார். கிங்கரன் குழந்தையை கண்டுவிடாமலிருக்க கையில் தர்ப்பையுடன் குடில் வாயிலில் காவலிருக்கிறார் தவக்குடிலுக்கு வந்துவிடும் கிங்கரனை தர்ப்பையை தலைக்கு மேல் தூக்கி மன்னித்து விடுதலை செய்கிறார்.
துறவு பூண்டு அரண்மணையை விட்டு விலகும் தேவாபியின் கைகளில் சித்ரகரின் சீடர்கள் தர்ப்பை கங்கணத்தை அணிவித்த பின்னர் விட்டுவிடுகிறேன் என மும்முறை சொல்லச் செய்கின்றனர் . அதே பகுதியில் பால்ஹிகன் சந்தனுவை நோக்கி ’’எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை! ஆணை! ஆணை!” என்று தர்ப்பையை கையில் எடுத்துக்கொண்டே சொல்கிறான்
மழைப்பாடலில் குந்தியும் மாத்ரியும் தர்ப்பைக் காட்டில் நெருப்பெழுவதை உயரத்திலிருந்து பார்க்கையில் “தர்ப்பைக்குள் அக்னிதேவன் குடியிருக்கிறான் என்கிறார்கள்” என்கிறாள் மாத்ரி
ஆறாவது மாதத்தில் காந்தாரிக்கு சீமந்தோன்னயனம் நடக்கையில் வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வது சொல்லப்பட்டிருக்கிறது.
வெண்முரசின் 26 நூல்களிலுமே மிக அதிகமாக மிக விரிவாக தர்ப்பையை குறித்து சொல்லப்பட்டிருப்பது வண்ணக்கடலில் தான். பிரபஞ்சத்தாமரை எனும் அனல்குவை வெடித்து அவ்விளையாடலின் ஒரு கணத்தில் இளம்பச்சை நிறமான உயிர்த்துளி பூமியை மூடும் பசும்புற்களாகி ஒன்று தர்ப்பையாகவும்,, பாலூறியது நெல்லாக, தேனூறியது கோதுமையாக, தன்னுள் இனித்தது கரும்பாக, தன்னுள் இசைத்தது மூங்கிலாக என ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு வடிவை அடைந்தை சொல்லும் பரத்வாஜர் “புற்களில் புனிதமானது என தர்ப்பை கருதப்படுகிறது. ஏனென்றால் நீரும் நெருப்பும் அதில் ஒருங்கே உறைகின்றன. வேதங்களை ஜடங்களில் நதிகளும், மலர்களில் தாமரையும், தாவரங்களில் தர்ப்பையும், ஊர்வனவற்றில் நாகங்களும்,நடப்பனவற்றில் பசுவும், பறப்பனவற்றில் கருடனும் கேட்டறிகின்றன என்கிறார்
“குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விஸ்வாமித்திரம், யவை என தர்ப்பையின் ஏழுவகைகளையும், குசை காசம் ஆகிய முதலிரண்டும் வேள்விக்கும், தூர்வையும் விரிகியும் அமர்வதற்கும், மஞ்சம்புல் தவச்சாலையின் கூரை வேய்வதற்கும், போர்க்கலைக்கு .விஸ்வாமித்திரம், யவை நீத்தார் கடன்களுக்குரியது என்னும் விளக்கமும் வண்ணக்கடலிலேயே வருகிறது.மங்கலவேள்விகளுக்கு நுனிப்பகுதி விரிந்த பெண் தர்ப்பை, பெருவேள்விகளுக்குரியது திரண்டு, அடிமுதல் நுனிவரை சீராக இருக்கும் ஆண் தர்ப்பை, அடிபெருத்து நுனிசிறுத்தத வேள்விக்குகந்தல்லாத நபும்சக தர்ப்பைகளையும் அவரே விவரிக்கிறார்.
பரத்வாஜரின் மாணவர்கள் குருநிலையில் தமக்குரிய தர்ப்பையை தொட்டெடுத்துக்கொள்ளுவதும், விடூகர் துரோணரை முன்னிருத்தி வேண்டிக்கொள்ளுவதும், துரோணர் விஸ்வாமித்ர புல்லை தேர்ந்தெடுப்பதுமாக அந்தப்பகுதி முன்பு வாசித்தவைதான் ஆனால் இப்போது தர்ப்பையை முன்னிருத்தி வாசிக்கையில் மனம் பொங்கிக்கொண்டே இருந்தது. அதுவும் துரோணரை விலக்கிவிட்டு பரத்வாஜர் மாணவர்களுடன் காயத்ரி சொல்லுகையில் மறைந்திருந்து துரோணர் பார்க்கும் காட்சியில் அவன் ஒரு அணுவிடை முன்னகர்ந்தால் அதை தன் அகத்தால் கேட்டுவிடமுடியும். ஆனால் அந்த எல்லைக்கு ஒரு மாத்திரை இப்பால் நின்று அவன் ஆன்மா முட்டிமுட்டித்தவித்தது. இந்த வரிகளில் நான் என்னையறியாமல் கண்ணீர் விட்டழுதேன்…
தர்ப்பைக்காட்டில் பிறந்த துரோணர் விடூகரின் கையை பிடித்துக்கொண்டு கையில் தர்ப்பையுடன் செல்லும் காட்சியை ஷண்முகவேலின் ஓவியத்தில் இப்போது புத்தம் புதிதாக பார்ப்பது போலிருகிறது. வெண்முரசில் பல இடங்களில் தர்ப்பை சொல்லப்பட்டிருந்தாலும் தர்ப்பையை முன்னிறுத்தி சொல்லப்பட்ட இந்த பகுதி மிகவும் உணர்வுபூர்வமானது. தர்ப்பையை குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பகுதியில் இருக்கிறது.
அதுபோலவே வண்ணக்கடலில் துரோணர் அர்ஜுனனையும் பிறரையும் பந்துவிளையாட்டின்போது சந்திப்பதும் கிணற்றிலிருக்கும் பந்தை மிகச்சரியாக கிணற்றின் ஆழத்தை கணக்கிட்டு பிடுங்கிய தர்ப்பைக்கீற்றுக்களால் எடுத்து வானில் நிறுத்திக்காட்டுவதும், அர்ஜுனன் அவர் தாள்பணிவதுமாக மிக முக்கியமான அப்பகுதியிலும் தர்ப்பை இருக்கிறது.
அதே வண்ணக்கடலில் தான் மண்ணில் புல்லிதழ் களாக எழுந்த குசை. பச்சைக்கரங்களை வான் நோக்கி விரித்து வெய்யோன் விடுத்த அமுதை வாங்கி உண்கிறாள்.. ஒரு சொல்லைகூட தாங்கமுடியா அகத்துடன், தாடி பறக்க, குழல் அவிழ்ந்திருக்க, விழிகள் அலைபாய பற்களால் கடிக்கப்பட்டு குருதி வழியும் உதடுகளுடன் இருந்த துரோணரின் கையில் இருந்த தர்ப்பையை மெல்ல தொடுகிறாள் குசை. இருளுக்குள் நடந்துகொண்டிருந்த அவர் முன் அலையடிக்கும் பசுந்தளிர் ஆடையும் விரிந்து காற்றிலாடும் வெண் மலர்க்கொத்து போன்ற கூந்தலுமாக குசை வந்து நின்று துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை அவளது சுட்டு விரலென்கிறாள்
அந்த பகுதியின் இறுதியில் அவளையும் பிரிவதாக தர்ப்பையை ஓங்கியபடி துரோணர் கூச்சலிடுகையில், இவனுள் ஓடும் காயத்ரிக்கு அனல் சிறகுகள் முளைக்கட்டும். என்னும் குரலுக்கு பின்னர் தர்ப்பைக்காட்டில் அனல் எழுகிறது. அந்த பகுதியிலும் ஷண்முகவேலின் அனல்வடிவ அன்னையும் பற்றிக்கொண்டிருக்கும் தர்ப்பைக்காடும், துரோணருமாக அபாரமான ஓவியம் அந்த தருணத்தை கண்முன்னே நிறுத்தும்.
அக்னிவேசரின் குருகுலத்துக்கு தர்ப்பையுடன் வந்ததுபோலவே அங்கிருந்து வெளியேறுகையிலும் தர்ப்பையை எடுத்துச்செல்கிறார் துரோணர்
நாற்பத்தொன்றாம் நாள் அக்னிவேசரின் நீர்க்கடன்கள் முடிந்தபின் மான்தோல் மூட்டையில் ஒரே ஒரு மரவுரியாடையை மட்டும் எடுத்துக்கொண்டு குருகுலத்திலிருந்து விடைகொண்டு கிளம்பும் துரோணர். திரும்பி குருகுலத்தின் ஓங்கிய அசோகமரங்களையும் தேவதாருக்களையும் நடுவே அக்னிவேசரின் குடிலுக்குப்பின்னால் நின்ற அரசமரத்தையும் சிலகணங்கள் நோக்கியபின் குனிந்து தன் காலடியில் நின்றிருந்த தர்ப்பையின் ஒரு தாளைப் பிய்த்து கையில் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்குகிறார்.
வண்ணக்கடலில் மகாபலி கதையை சொல்கிறார் பூரணர். தன்னை வெல்ல ஒரு மைந்தன் பிறந்திருப்பதை சுக்ரர் கணித்த சுவடிகளிலிருந்து அறிந்த மகாபலி, மண்ணிலிறங்கி தன் அன்னை பூத்து நிறைந்திருக்கும் மலையடிவாரத்தை அடைந்து சுக்ரர் முன்னிற்க இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சய வேள்வியை தொடங்குகிறான். தன் அரியணையை, செங்கோலை, கருவூலத்தை, நாட்டை, உறவுகளை, வெற்றியை, புகழை அவ்வேள்வியில் மூதாதையருக்கு பலியாக்கிவிட்டு, இறுதியில் எடுத்த தர்ப்பையால் தானெனும் உணர்வை பலியாக்கும் கணத்தில்தான் அங்கே கூனுடலும் குறுநடையும் சிறுகுடையுமாக வந்த பிராமணன் ஒருவனைக் காண்கிறான்.. ”குற்றடி தொட்டளக்கும் மூவடி மண் அளிப்பாயாக!’ என்று வாமனன் கேட்கையில், “அவ்வண்ணமே ஆகுக!’ என்று சொல்லி நிறைகுடுவை நீருடனும் தர்ப்பையுடனும் கிழக்கு நோக்கி நின்று வாமனனின் கையில் நீரூற்றி ‘அளித்தேன் மூன்றடி மண்ணை’ என்கிறான்..
ஏகலைவனுக்கு வில்வித்தையை துரோணர் மறுக்கும் பகுதியிலும் தர்ப்பைக்காடும், தர்ப்பை துகள்களும், தர்ப்பை மண்டிய ஆற்றங்கரையும் வருகின்றன.தனக்கு சுகபோகங்களில் விருப்பமில்லை என்னும் துரோணர் தன்னால் கைப்பிடி தர்ப்பையுடன் தன்னால் எங்கும் எப்படியும் வாழமுடியும் என்கிறார்
இளநாகனிடம் வடபுலத்து சூதரான உதர்க்கர் “தெய்வங்கள் பருவுடல் இன்மை என்னும் துயர்கொண்டவை. அவற்றின் அகம் வெளிப்பட உயிர்களும் உடல்களும் தேவையாகின்றன” என்கிறார்.“துரோணரில் எழுந்தவள் குசை. தர்ப்பையில் வாழும் தெய்வம் அவள். அனலை தன்னுடலின் ரசமாகக் கொண்டது தர்ப்பை என்கின்றன நூல்கள்” என்கிறார்
விடூகர் அக்னிவேசரின் குருகுலத்தில் துரோணரை விடுகையில் “நான் எளிய சமையற்கார பிராமணன். தர்ப்பையை தீண்டவும் தகுதியற்றவன்’’ என்கிறார்
ஒருநாள் அதிகாலையில் கங்கைக்கு நீராட சென்றிருந்தபோது துரோணர் தர்ப்பைகளைப் பிய்த்து நீரில் வீசிக்கொண்டிருப்பதையும், தன் இடக்கையில் வைத்திருக்கும் தர்ப்பைத்தாள்களை வலக்கையால் எடுத்து காலைநீரில் கங்கையில் கொத்துக்கொத்தாக செல்லும் நீர் குமிழிகளில் ஒன்றை உடைக்கும் போது பிற குமிழிகள் ஏதும் உடையாத வண்ணம் உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு திகைக்கிறார் அக்னிவேசர். துரோணர் யாரென்று குரு கண்டுகொள்ளும் முக்கியப்பகுதி அது.
குருநிலையில் மாளவனுடன் போரிடுகையில் அவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசி, அவை மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் குத்தி நிற்கிறது.
வெள்ளிமுளைப்பதற்கு முன்னர் துரோணர் கங்கைக் கரைக்குச் சென்று வில்லில் தர்ப்பைப் புல்லை அம்புகளாக்கி பயிற்சி செய்வதை அங்க நாட்டு இளவரசன் பீமரதன் கண்டு பிறருக்குச் சொல்கிறான்.
அதே பகுதியில் எதிரே கையில் தர்ப்பையும் ஈர மரவுரியாடையுமாக வந்த துரோணனைக் கண்டதும் யக்ஞசேனன் விலகி வழிவிட்டு சில அடிகள் எடுத்து வைத்து கடந்து சென்றான்
சரத்வானிடம் தர்ப்பைத்தாளை கன்யாகல்பமாக கொடுத்துவிட்டுத்தான் கிருபையை துணைவியாகிக்கொள்கிறார் துரோணர் மணம் முடித்த பின்னர் செல்வழியில் ஓய்வெடுக்க. ஒரு குகையில் தர்ப்பையும் நாணலையும் பிடுங்கி இருக்கை செய்து அமர்ந்திருக்கையில் கூரையில் இருந்து வந்த நாகத்தை கண்ட துரோணரின் தோள்கள் தர்ப்பையுடன் எழுவதற்குள் கிருபை நாகத்தின் நாவில் நாணல் துண்டை சொருகிவிடுகிறாள் . அச்சமயத்தில் இருவருமாக பேசிக்கொள்ளுபவை அழகு
வண்ணக்கடலில் முதன் முதலாக தேர் ஓட்டும் 12 வயது கர்ணன் அரசமோதிரம் பரிசு பெறும் பகுதியில் சொல்லப்படும் ஒரு கதையில் ரிஷ்யசிருங்கர் தர்ப்பையுடன் மான்தோலாடையும் தலையில் புரிமான்கொம்பும் மார்பில் மலர் மாலையும் அணிந்திருக்கிறான்;
ஏழன்னையர் ஏறியமர்ந்த காட்டரசனான யானையின் துதிக்கையில் வாழும் சக்தையை காண விரும்பும் துரியோதனன் செல்லும் வழியிலிருக்கும் சதுப்புக்குட்டையை சுற்றி கோரையும் தர்ப்பையும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன.
குருகுலத்திலிருந்து வெளியேறி பாரிஜாதரின் வழிகாட்டுதலின்படி மலைச்சரிவினூடாக நடந்துசென்று அஷ்டமுடி என்னும் மலைக்காட்டை அடையும் துரோணன்., நாணலும் தர்ப்பையும் கோரையும் அடர்ந்த சேற்றுக்கரை வழியை கடந்துதான் பாரிஜாதர் சொல்லிய பஞ்சாப்சரஸை அடைகிறார்
பிரயாகையில் சாலிஹோத்ர குருகுலத்தின் குடில்களில் மாணவர்களின் வருவதை பார்க்கும் பீமன், உதடுகளில் மந்திரங்கள் அசைந்துகொண்டிருக்க, சால்வையால் உடல் மூடி கையில் தர்ப்பையுடன் சற்று விலகி அனைத்தையும் நோக்கிக் கொண்டிருக்கும் தருமனை கற்பனையில் காண்கிறான்.
குரோதத்தின் அனலை அணைக்க முடியாத துர்பதனுக்காக செய்யப்படும் பூத யாகத்தின் போது சமித்துக்களில் கைக்குழந்தை தாய்மடியில் தவழ்ந்தேறுவது போல ஏறி சிறு பொற்கரங்களை விரித்து எழுந்த தழலில் வெண்கடுகு, அட்சதை, எள், தயிர், பால், தர்ப்பைப்புல், அருகம்புல், செண்பக இலை, தாமரைப்பூ முதலியவை வரிசையாக ஹோமிக்கப்படுகின்றன. வேள்விப்பந்தலின் கூரையும் தர்ப்பையில்தான் வேயப்பட்டிருக்கும்
கடோத்கஜனுக்கு கதை சொல்லும் பீமன் அஞ்சன வனத்தின் அஞ்சனைக்கும் அவள் கணவனான கேசரி என்னும் ஆண் குரங்கிற்கும் பிறந்த குரங்குக் குழந்தை’’ மாந்தளிர் நிறத்தில் தர்ப்பைப் புல்லால் ஆன படுக்கையில் தீப்பிடித்ததுபோல தோன்றியதை’’ சொல்கிறான்.
பஞ்ச பாண்டவர் பாஞ்சாலியை மணம் கொள்ளும் நிகழ்வில் பத்ரர் தௌம்யரை வணங்கி மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோருகையில் அவர் தர்ப்பை மோதிரம் அணிந்த கைதூக்கி வாழ்த்தி ஒப்புதலளித்ததும் மணநிகழ்வுகள் துவங்குகின்றன.
வெய்யோனில் பரசுராமர் மாலையில் கதிர்வணக்கம் செய்யும் பொருட்டு உலர் தர்ப்பை கொய்து வரும்படி சொல்லி, தர்ப்பையை வாங்கி தோலாடை களைந்து சிற்றாடை அணிந்து அலை வளைந்தமைந்த நீர்ப்படலத்தில் இறங்கி குனிந்து நோக்கி நிற்கிறார்.
நகரமைக்க இடம் தேடும் தேடும் பாஞ்சாலியை குறித்த நாடகத்தில் காண்டவ காட்டை அணுகச்சொல்லும் அவளிடம் முதுநாகன் ’’அங்கு வாழ்பவை மாநாகங்கள். வடக்கே நாகபுரத்தில் முடிகொண்டு ஆண்ட தட்சநாகமான பிரபவர் குலத்துடன் எரித்தழிக்கப்பட்டபோது அவர் பல்லில் எஞ்சிய ஒருதுளி நஞ்சை ஒரு தர்ப்பை புல்நுனியில் தொட்டு எடுத்துக்கொண்டு இங்கு வந்தன அவர் குலத்து நாகங்கள் ஐந்து ’’ என்கிறான்.
பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுடன் மற்போரிட, ஸ்நாதக பிராமணர்களின் வெண்ணிற ஆடையும், தர்ப்பை திரித்த புரிநூலும் அணிந்த.பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் செண்டுவெளிக்குள் நுழைகின்றனர்.
இந்திரபிரஸ்தத்தில் அந்த பெருவேள்வி நிகழ்கையில் தர்ப்பை மோதிரம் அணிந்திருக்கும் பைலரும் மாணவர்களும் தர்ப்பைச்சுருள் பற்றிக்கொண்டதும் வேள்வியை துவங்கி, தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு தேவர்களுக்கு அவியாக்குகின்றார்கள்’
ராஜசூய வேள்வியின் போது முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் தர்ப்பைப் பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறார்.
இந்நூலில் மற்றொரு உச்ச தருணத்திலும் தர்ப்பை இருக்கிறது காம்பில்யத்துக்கு துருபதனை காணச்செல்லும் துரோணர் அக்னிவேசரிடம் பயின்றதற்கு சான்றாக இடையிலிருந்து தர்ப்பையை எடுத்துக் காட்டுகிறார். மன்னனால் அவமதிக்கப்பட்ட போது ’’இம்மண்ணிலேயே ஆற்றல் மிகுந்த தாவரம் போல ஒருவன் இங்கே நிற்கிறான்’’ என்கிரார் தர்ப்பையை கையிலேந்தியபடி
தர்ப்பையை “இது ஆயிரம் ஆலமரங்களுக்கு நிகரானது. இலையாலோ கிளையாலோ ஆனதல்ல, வேராலானது. தன் உயிர்ச்சாரமாக நெருப்பை கொண்டிருப்பது.” என்கிறார். உதடுகளில் காயத்ரி துடிக்க, தர்ப்பையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கால்களைப் பரப்பிவைத்து தலைகுனிந்து அசைவற்று துரோணர் நிற்க்கும் காட்சி வெண்முரசு காட்டும் உச்ச தருணங்களில் தலையாயது. இதில் தர்ப்பைக்கு சொல்லப்படும் அனைத்து இயல்புகளும் துரோணருக்கும் பொருந்தும்
சொல்வளர்க்காட்டில் தன்முன் நிரை வகுத்தமர்ந்திருக்கும் மாணவர்களிடம் சாந்திபனி முனிவர் ’’எல்லையற்றதை சொல்லும் சிறு சொல், முளைத்துதிராத விதையென்றாகி வேள்வியும் ஊழ்கமும் அதுவேயாகி, மேழியும் துலாவும் வாளும் தர்ப்பையும் அதுவே ஆனதை’’ சொல்கிறார்.
கிராதத்தில் தர்ப்பை வெட்ட சென்றபோது ஒரு முனிவர் பொன்னிற மானையும் பொன்னிற உடல்கொண்ட சிறுவனையும் கண்டதை படுகிறார் சண்டன்
அபிசார வேள்விக்கு ’’எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்கிறார் மகாகாளர்.
முதிய அந்தணன் வடிவிலிருக்கும் இந்திரன் வருணனை வரவழைக்கும் பொருட்டு, அனல் கட்டையும் தர்ப்பையையும் கைகளில் வைத்துக்கொண்டு கழியால் அலைகளை அடித்து கிழிக்கிறான்
கிராதத்திலேயே அத்ரி முனிவரின் செளகந்திக காட்டில் காட்டாளனின் பின்னே பெண்களும் குழந்தைகளும் செல்கையில் அத்ரி ’’இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட கையிலெடுக்கும் தர்ப்பை பொசுங்கி எரிந்து தழலாகிறது.
நீர்க்கோலத்தில் நளமன்னரின் கதையை சொல்லும் ஆபர் ’’கர்ணிகளில் ஒருவனான் சிஷுகன் பரசுராமரை தேடிச்சென்று அனல் சாட்சியாக அந்தணன் ஆனபின்னர், தர்ப்பைப் புல்லில் அனலும், நாவில் வேதமுமாக வரும் அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்பதை சொல்கிறார்.
வெண்முரசின் மற்றொரு உச்சம் குருதிச்சாரலில் தன்னாகுதி அளிக்க தெரிவு செய்யபட்ட இளம் வைதிகனான அவிரதன் வரும் பகுதி. அவனுக்கு தர்ப்பையில் மட்டுமே அமர ஒப்புதல் இருக்கிறது. தன் அன்னையை, இளமையிலிருந்த அவளின் அழகு ஒரு புன்னகையில் மட்டும் மிச்சமிருப்பதை, தர்ப்பையுடன் அலையும் தந்தையை நினைத்துக்கொண்டு தர்ப்பைபுல் பாயில் அமர்ந்திருப்பதும், இப்போது கூட பின்னடி எடுத்து வைக்கலாமென்று சொல்லப்படுகையில் மனம் இதுவல்ல எண்ணுவது என்று பதறிக்கொண்டிருக்கையிலேயே புன்னகையுடன் “இதுவே என முடிவெடுத்துவிட்டேன், ஆசிரியரே என்பதும் பின்னர் அவன் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்து தர்ப்பை புல்லாழி அணிந்துகொள்வதுமாக மனதை பிழியும் பகுதி அது.
அவன் அன்னையின் புன்னகையை சொல்லுகையில் ’உடைந்திருந்தாலும் களிம்பிருந்தாலும் விளக்கின் சுடர் ஒளிகுன்றுவதில்லை’என்னும் வரிகளில் மனம் அப்படியே நின்றுவிடுகிறது சொல்லப்பட்ட அவ்வழகிலிருந்து விடுபடவே முடிவதில்லை எப்போது வாசித்தாலும்
குருதிச்சாரலில் வேள்வியரங்கில் அங்கரை அமர்த்துவது குறித்த முக்கியமான பகுதியில் ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு, ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், விளாமிச்சை வேர், சந்தனம், நொச்சி, நாயுருவி, தேவதாரி, மா என தனித்தனியாக கொண்டுவந்து குவிக்கப்பட்ட வேள்விக்கான. எரிவிறகுகளில் தர்ப்பைப் புல்லும் இருக்கிறது. வேள்வியில் அனலூட்ட அமர்வபர்கள் தர்ப்பைத் திரியால் வேள்விப்புரிநூல் அணிந்துதான் உள்ளே வருகின்றனர்.
புருஷமேத வேள்வியில் அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கான தர்ப்பை விரிக்கப்பட்ட தாமரை வடிவு கொண்ட மணைகளும் அமைந்திருந்தன..
இமைக்கணத்தில் இறைவன் அர்ஜுனனுக்கு யோகத்திலேற விழைவோருக்கானவைகளை சொல்கையில் ’தூய இடத்தில் துணி, மான்தோல், தர்ப்பை ஆகியவற்றின் மேல் உயரமில்லாமல் தாழ்விலாமல் உறுதியான இருக்கையை அமைத்துக்கொண்டு அதிலமர்ந்து சித்தத்தையும் புலன் செயல்களையும் ஒருங்கிணைத்து கூர்மையாக்கி ஆத்மா தூய்மை கொள்ளும் பொருட்டு யோகத்தில் அமைய வேண்டும் ’ என்கிறார்.
ஊழ்கம் பயில விரும்பும் வியாசர் ஏழாவது முறை கேட்டும் தந்தை மறுத்தபோது, தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணி அருகிலிருக்கும் தர்ப்பையின் கூர் நுனியை கழுத்தில் வைக்கையில்தான் ஆசிரியரிலிருந்து தந்தை எழுந்து ’’நில் மைந்தா’’ என கூவுகிறார்.
செந்நாவேங்கையில் சிதைகளில் எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றும். வைதிகர்கள் ஒரு கூண்டு வண்டியில் இருந்து இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்தி வெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக்கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வருகின்றனர்
திசைதேர்வெள்ளத்தில் முரு’விடம் ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக!” என்கிறார்.
இருட்கனியில் சிதை பீடத்தின் மீதமர்ந்து ஊழ்கத்திலிருக்கும் கர்ணன் கண் திறக்கையில் அவன் முன்னிருக்கும் செண்பக மரத்தில் வலக்கையில் தர்ப்பையும் இடக்கையில் மின்படையும் கொண்டு எழும் வஹ்னி.’’என்றும் உன் படைக்கலமாகி உடன் இருப்பேன்’’ என்கிறான்.
இருட்கனியில் கர்ணனிடம் பரசுராமரின் கதையை பிரவாகர் பாடியபின்னர், சூதரான உத்வகர் அக்கதையை அவனுக்கு மேலும் விரித்துரைக்கையில் “பார்க்கவ குருமரபின் பதிநான்காவது பரசுராமர் இப்போது இருப்பவர். முதல் பரசுராமர் பாரதவர்ஷத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து ஷத்ரிய குலங்களை அமைத்தார். அந்நிலங்களின் பழங்குடிகளில் வேதமும் தர்ப்பையும் அளிக்கப்பட்டவர்கள் பிருகு குலத்து பிராமணர்களானார்கள். செங்கோலும் மணிமுடியும் அளிக்கப்பட்டவர்கள் அக்னிகுல ஷத்ரியர்களானார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரசுராமர் அமைந்தார்’’ என்கிறார்
நீர்ச்சுடரில் எரிகுளங்களை சுற்றி பாண்டவர்கள் ஐவரும் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
களிற்றியானை நிரையில் சார்வாகரை நோக்கி கைகளில் தர்ப்பை வைத்திருந்த அந்தணன் ’’வேதம் பொய் என்கிறாயா’’ என கூவுகின்றான். அந்நூலிலேயே வேள்விக்காவலனாக யுதிஷ்டிரன் அமர்ந்திருக்கும் அஸ்வமேத யாக்த்தின்போது பந்தல்மேல் எழுகிறது வேள்விக்குரிய தர்ப்பைக் கொடியும். இணையாக அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியும்..
கல்பொருசிறுநுரையில் வசுதேவரும் சூரசேனரும் மண்மறைந்த பின்னர், அரசியர் ரோஹினியும் தேவகியும் நீர்புகுந்து, பலராமரும் வடக்கிருக்கும் பகுதியிலும் தர்ப்பை வருகிறது. வடக்கிருத்தலின் இடத்தில் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்தே 7 நாட்கள் உணவும் நீரும் இன்றி பலராமர் மறைகிறார்.
முதலாவிண்ணில் தருமனிடம் இறுதியாக விடைபெறும் விதுரர் தர்ப்பையால் ஆன மரணப்படுக்கையில் தான் இருக்கிறார்.
இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரருடன் இருக்கும் சங்குலன் அவருக்காக நீரும் ,கனியும் கிழங்குகளும், சேகரிப்பது, தர்ப்பைப்புல் படுக்கை அமைப்பது போன்ற பணிவிடைகளை செய்கிறான்.
தர்ப்பையில் வாழும் தெய்வம் குசை, புல்லின் அதிதேவதை குசை, பசும்புல்லில் வாழும் தெய்வம் குசை எனவும், வியாசர் தர்ப்பை பாயில் துயில் கொள்வது, கணிகர் தர்ப்பைப் பாயின் மேல் தன் ஒடிந்த உடலைக் கிடத்தி அமர்வது இளைய யாதவரின் தர்ப்பை புல் இருக்கை, தர்ப்பையை கையில் பற்றியபடி தீச்சொல் இடுவது என தர்ப்பையும், குசையும் மேலும் பற்பல இடங்களில் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது.
Desmostachya bipinnata என்னும் அறிவியல் பெயருடைய தர்ப்பை வேத காலத்திலிருந்தே சோமக்கொடிகளுக்கு அடுத்த முக்கியமான புனித்ததாவரமாக யாகங்களிலும் பலிச் சடங்குகளிலும் உபயோகத்தில் இருந்திருக்கிறது.
இதன் அறிவியல் கிரேக்க மொழிப் பெயரில் ’’கட்டுவதற்கு/ இணைப்பதற்கு உபயோகப்படுகிற’’ என்று Desmo என்னும் சொல்லும் ’நீண்ட மஞ்சரிகள்’ என்பதை stachya என்னும் சொல்லும், bipinnata என்பது எதிரெதிரெ அமைந்திருக்கும் இலைகளையும் குறிக்கிறது. அஸ்ஸாமில் இதன் நீண்ட மென் மஞ்சரிகளில் துடைப்பம் செய்கிறார்கள்.
.ஆஃப்ரிக்கா, அல்ஜீரியாவிலிருந்து இந்தியா வரை பரவி இருக்கும் தர்ப்பை சொமாலியா மற்றும் சூடானில் தோன்றியது, உலகின் பிற பகுதிகளுக்கு இவை மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படாமல் தானாகவே காற்றில் விதைகளின் மூலம் பரவியிருக்கலாமென்றே கருதப்படுகின்றது. பல புனிதப்புற்களை குறிப்பிடும் ரிக் வேதம் குசரா என்று தர்ப்பையை குறிப்பிடுகிறது, அதர்வவேதமும் குசையை குறிப்பிடுகின்றது. பிரம்ம புராணம் மகாவிஷ்ணுவின் உடல் ரோமங்களிலிருந்து தர்ப்பை உருவானதாக சொல்கிறது
வால்மீகி ராமாயணத்தில் தர்ப்பை குசை என்னும் பெயரில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வால்மீகி தர்ப்பை புல்லாசனத்தின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து, மடிந்த உள்ளங்கைகளுடன், தனது தவ ஆற்றலைப் பயன்படுத்தி ராமரின் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளை தேடினார் என்கிறது பாலகாண்டம்
சுந்தர காண்டத்தில் சீதை அனுமனிடம் ராமன் தன் அமர்ந்திருந்த தர்ப்பை ஆசனத்தின் ஒற்றைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்திரம் செய்து ஏவியதை பெருமையுடன் விவரிக்கிறாள். மேலும் பல இடங்களில் தர்ப்பை கூரை வேயவும், சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது சொல்லப்பட்டிருக்கிறது.
பஞ்சவடியில் குடிலமைக்கையில் ராமர் லக்ஷ்மணரிடம் ’’எங்கு வைதேகியும் நானும் மகிழ்ந்திருக்கும்படி நீரும் அழகிய இயற்கை காட்சிகளும் இருக்கிறதோ, எங்கு பூஜைக்குரிய விறகுகளும் மலர்களும் கிடைக்கிறதோ, எங்கு குசை வளருகிறதோ அங்கு குடில் கட்ட இடம் தேர்வு செய்’’ என்கிறார்.
துளசிதாசரும் ராவணனிடம் பேசுகையில் தனக்கும் ராவணனுக்கும் இடையில் தர்ப்பையை அரணாக வைத்துக்கொண்டு சீதை பேசினாள் என்கிறார். ரகு வம்சத்தின் அருமணியாகிய ராமன் எளிமையான குசை புல் பாயில் படுக்க நேர்ந்த அவலத்தையும் வருந்தி விவரிக்கிறார் துளசிதாசர்
இந்து மதம் தர்ப்பை புல்லுக்கு தனித்துவமான ஆன்மீக பண்புகள் இருப்பதாக சொல்கிறது. ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் எதிர்மறை ஆற்றல்களிலிருந்தும், சாபங்கள், பேய்கள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்தும் தர்ப்பை மனிதர்களை காக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக பல்லாயிரம் ஆண்டுகளாக நம்பிக்கை நிலவுகிறது.
போதி மரத்தடியில் ஞானமடைந்த போது புத்தர் அமர்ந்திருந்தும், பகவான் கிருஷ்ணர் தியானிக்கையில் அமர்ந்திருந்ததும் தர்ப்பை ஆசனத்தில்தான். . ஊழ்கத்திலிருக்கையில் உடலில் கூடும் ஆற்றல், பாதங்களின் வழியாக அதிலிருந்து விலகிச் செல்லாமல் தர்ப்பை புல்லாசனம் காக்கிறது.
தர்ப்பை காடுகள் நிறைந்திருக்கும் உத்தரபிரதேச குஷி நகரில் தான் புத்தர் இறந்து எரிக்கப்பட்ட புனிதத்தலம் இருக்கிறது
வலது கை மோதிர விரலில் பூஜைகள் செய்கையிலும் மந்திரங்கள் சொல்லப் படுகையிலும் தர்ப்பை மோதிரம் அணிந்து கொள்ளப்படும். சுப, அசுப நிகழ்வுகள் அனைத்திலும் தர்ப்பை தவறாமல் இடம் பெறுகிறது.
மரணச்சடங்குகளுக்கு ஒற்றைப்புல் மோதிரமும், சுப நிகழ்ச்சிகளில் இரண்டு புல் தாளாலான மோதிரமும், இறப்பல்லாத அமாவாசை தர்ப்பணம் நீர்க்கடன் போன்ற சடங்குகளில் மூன்று தர்ப்பைப்புல் மோதிரம், ஆலய வழிபாடுகளின் போது நான்கு தர்ப்பை புல்லாலான மோதிரமும் அணிந்து கொள்ளப்படுகிறது.. நுனி நறுக்கப்பட்ட தர்ப்பையின் பயன்கள் வெகுவாக குறைந்துவிடுகிறதென்றும் சொல்லப்படுகிறது. தர்ப்பை புல் நுனி ஒலி அதிர்வுகளை துல்லியமாக கடத்துவதை ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. ஹோமகுண்டங்களின் நாற்புறங்களிலும் நாலு திசையிலிருந்தும் வரும் எதிர்மறை சக்திகளை தடுக்க தர்ப்பை வைக்கப்படும்.
பொதுவில் முழு நிலவுக்கு மறுநாள் தர்ப்பை அறுவடை செய்யப்படுகின்றது .தர்ப்பையை அமாவாசையில் அறுவடை செய்தால் ஒருமாதமும். பௌர்ணமியில் செய்தால் ஒரு பட்சமும் .புரட்டாசியில் செய்தால் ஆறு மாதங்களும் ஆவணியில் அறுவடை செய்தால் ஒரு வருடம் உபயோகிக்கலாமென்றும், சிரார்த்த காலத்தில் அறுத்தால் அன்றே உபயோகிக்க வேண்டுமெனவும் கணக்குகள் இருக்கின்றன.
அசுப காரியங்களுக்கு உபயோகிக்கப்பட்ட தர்ப்பை அதன்பிறகு உபயோகிக்கப்படுவதில்லை. வேறு தர்ப்பை கிடைக்காதபோது, மங்கல சடங்குகளுக்கு உபயோகித்த தர்ப்பையை மீண்டும் ஏழு முறை உபயோகிக்கலாம் என்று நெறி இருக்கிறது. நறுக்கி எடுத்து வந்த 6 மாதங்களுக்கு பிறகு தர்ப்பையின் ஆற்றல் குறைந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.
சந்திரிக ஸ்மிரிதி தர்ப்பையின் வேரில் பிரம்மனும் நடுவில் கேசவனும் நுனிப்புல்லில் சிவனும் உறைவதாக சொல்கிறது.
ராமேஸ்வரம் அருகில் இருக்கும் திருப்புல்லாணியில் கரங்களில் தர்ப்பையுடன் தர்ப்ப சயனராமர் இருக்கிறார். இத்தலத்தில் ஸ்ரீராமர் தர்ப்பைப்பாயில் படுத்து உறங்கியதாக ஐதீகம். இங்கு ஆகஸ்ட்-செப்டமப்ர் மாதங்களில் வரும் தர்பாஷ்டமியன்று கடவுளாகவே தர்ப்பை வணங்கப்படுகிறது
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் முதல் மொட்டை அடிக்கும் முன்பு குழந்தைகளின் தலையில் தர்ப்பையால் தொடுவது வழக்கம்.
பாய்களுக்கு நீளமான தர்ப்பையும் தலையணைகளுக்கு குட்டையாக நறுக்கப்பட்ட தர்ப்பையும் உபயோகிக்கப்படுகிறது. தர்ப்பை பாயில் உறங்குகையில் அசுப கனவுகள் வராது என்றும், உடலும் மனமும் பரிசுத்தமாகும் எனவும் சொல்லப்படுகிறது பல வேத பாடசாலை மாணவர்களுக்கு உறங்க தர்ப்பை பாய் தான் கொடுக்கப்படுகிறது.
வறண்ட மணல் பகுதிகள், உவர் நிலங்கள்,சதுப்பு நிலம், தரிசு நிலம் நீர் நிலைகளின் கரையில் என எங்கும் தர்ப்பை செழித்து வளரும்.தானிய வயல்களில் இவை களைச்செடியாக காணப்படுகின்றன. பல்லாண்டுத்தாவரமாதலால் இலைகள் காய்ந்து.உதிர்ந்து மீண்டும் புதிதாக அடிக்கிழங்குகளிலிருந்து முளைத்துக் கொண்டே இருக்கும். சல்லி வேர்கள் நிலத்தடியில் 5 மீட்டர் ஆழம் வரையிலும், வேர்க்கிழங்குகள் 2 மீட்டர் ஆழத்திலும் இருக்கும்
சூடானில் வீடுகளின் கூரைகளை வேயவும், கயறு திரிக்கவும், துடைப்பம் செய்யவும், தர்ப்பையை பயன்படுத்துகிறார்கள். தர்ப்பைப்புல் கூழிலிருந்து காகிதமும் தயாரிக்கிறார்கள். .புரதம் நிரம்பிய இளம் தண்டுகளையும், புல்லையும் கால்நடை தீவனமாக பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.
தர்ப்பை தாளின் ஓரங்கள், பிற புல் வகைகளை காட்டிலும் கைகளை கிழிக்கும் அளவுக்கு கூராக இருக்கும். பாற்கடலை கடைந்த போது தர்ப்பையும் கிடைத்ததாகவும், தேவர்கள் அமுதம் அருந்துகையில் கீழே விழுந்த சில துளிகள் தர்ப்பையின் மீதும் விழுந்து, அதை நக்கி அருந்த முற்பட்ட நாகங்களின் நாக்கு அப்போதிலிருந்து நான் கூர்மையான தர்ப்பை புல்லின் ஓரங்களினால் இரண்டாக பிளவு பட்டதாகவும் தொன்மக் கதைகள் இருக்கின்றன.
கர தர்ப்பை மற்றும் மிருது தர்ப்பை என இருவகையான தர்ப்பை இருப்பதாக தாவர அறிவியல் சொல்லுகிறது சொரசொரப்பான இலைத்தாள்களுடன் இருப்பது கரதர்ப்பை எனும் Desmostachya bipinnata மென்மையான புல்தால்களை கொண்டிருப்பது மிருது தர்ப்பை என்னும் Eragrostis ciliaris.
தூப்புல்லென்றும்,(தூயபுல்),திருப்புல்லென்றும் பெயரிருக்கும் தர்ப்பையின் சாம்பலில்தான் செப்பு விக்ரகங்களை தூய்மை செய்கிறார்கள். தர்ப்பை புல்லுக்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருக்கிறது.
அடி சிறுத்து, நுனி பெருத்து இருப்பது அது பெண் தர்ப்பை ,அடிப்பகுதி பெரிதாக இருப்பது நபும்சக தர்ப்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்ப்பை எனப்படுகிறது.
தர்ப்பை, நாணல், யாவைப் புல், அறுகு, நெற்புல், விழல் மற்ற தானியங்களின் புல், மருள்பட்டை, சவட்டை, கோரைப்புல், கோதுமைப்புல் ஆகியவையும் பத்து விதமான தர்ப்பைகள் என கருதப்படுகின்றன. தர்ப்பை கிடக்காத சமயங்களில் இவற்றை தர்ப்பையாக கருதுவதும், வழக்கத்தில் உள்ளது.
தர்ப்பையின் பல வகைகளை குறித்து அறிவியல் ரீதியான சந்தேகங்களும் குழப்பங்களும் இன்று வரையிலும் நீடிக்கின்றன. 1987ல் வாரணாசியை சேர்ந்த ஷர்மா என்னும் பேராசிரியர் குசை என்பதும் தர்ப்பை என்பதும் இணையான பெயர்களும் ஒரே தாவரத்தை குறிப்பிடுவதும் அல்ல, குசை எனபது ரிக் அதர்வ வேதங்கள் குசரா என்று குறிப்பிடும் Desmostachya bipinnata, தர்ப்பை என்பது மிருது தர்ப்பையான Eragrostis ciliaris என்கிறார்.
மஞ்சரிகளின் நீளம், புல்தாளின் நீள அகலம், அடித்தண்டுகளின் எண்ணிக்கை, மலரும் பருவம் என்று தர்ப்பையில் காணப்படும் வேறுபாடுகள் அனைத்தும் அவற்றின் வாழிடங்களின் வேறுபாடுகளால், வளரியல்பில் உருவாகிய மாற்றங்கள்தான், அவை எதுவும் தர்ப்பையின் புதிய வகைகளல்ல என்றும் அவை எல்லாமே புதிதாக கண்டறியப்பட்ட வெவ்வேறு வகைகள் தானென்றும் சர்ச்சைகள் தொடருகின்றன. அதைப்போலவே தர்ப்பையும் குசையும் ஒன்றே, என்றும், அல்ல அவை வேறு வேறென்றும், பச்சைப்புல் குசை, உலர்புல் தர்ப்பை என்னும் விவாதங்களும் உள்ளன.
வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏரளமான தாவரங்களை மட்டும் முன்னிருத்தி மீண்டும் மீண்டும் வாசிக்கையில் புத்தம் புதிதாக வெண்முரசு விரிந்துகொண்டேயிருக்கிறது.
கல்லூரி பாடத்திட்டத்தில் புல் குடும்பத்தில் நெல்லை மட்டுமே கற்றுத்தருகிறோம். அறிவியல் ரீதியாக நிரூபிக்கபட்ட இத்தனை பயன்களை கொண்ட, நம் பாரம்பரிய மதச்சடங்குகளில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் தர்ப்பையையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். இதை செயல்படுத்தும், பரிந்துரைக்கும் இடத்தில் இப்போது நானில்லை எனவே காத்திருக்கிறேன்.
மேலும் சோமக்கொடியை குறித்தும், அது எந்த தாவரமாக இருக்கலாம் என்னும் யூகங்களும் சாத்தியங்களும் பல ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது நான் சோமக்கொடி என்பது பூக்காத கீழ்நிலை தாவரமாகிய எஃபிட்ரா (Ephedra) என்று கருதுகிறேன். அதை குறித்தும் நிறைய வாசித்தறிய வேண்டி இருக்கிறது.
தர்ப்பை புற்களை, கதிர்வீச்சை தடுக்க செல்போன்களின் உறையிலும், பாதுகாப்பான பயணங்களுக்கு வாகனங்களிலும், ஆரோக்கியம் மேம்பட நோயுற்றவர்கள் அருகிலும், நீர்தேக்க தொட்டியில் நீரின் அசுத்தங்களை போக்கவும் பலர் வைத்துக்கொள்கிறார்கள்.
நான் கல்லூரியிலும் வீட்டிலும் பயணங்களிலும் எப்போதும் வெண்முரசின் நூலொன்றை உடன் வைத்துக்கொள்கிறேன்.