லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 5 of 6)

GULLY BOY

பாலிவுட்டின் பிரபலங்களான ஜாவீத் அக்தர் -ஹனி இராணி இணையின் மகளும் பிரபல நடிகர் ஃபர்ஹான் அக்தரின் சகோதரியுமான ஜோயாஅக்தரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி 2019,ல் திரைக்கு வந்து பலத்த வரவேற்பு பெற்றிருக்கும் ஹிந்திமொழி திரைப்படம் ‘’ Gully Boy’’.

இந்திய ராப் பாடகர்களான டிவைன் மர்றும் நேஜியின் (Divine and Naezy) வாழ்வின் மீதான ஈர்ப்பில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைக்குடியிருப்பான (சேரி) தாராவியை சேர்ந்த ஒரு இளைஞனின்   ராப் இசைக்கனவையும் பயணைத்தையும் சொல்லும் படமிது.

Gully_Boy_poster

முராத் ஆக ரன்வீர் சிங்கும், சஃபீனாவாக அலியாபட்டும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

தாராவியின் நெரிசலான தெருக்களில் ஒன்றில் வசிக்கும், கல்லூரி இறுதியாண்டு படிக்கும், ராப் இசையின் மீதான காதலுடன் இருக்கும் முராத் நாயகன்.அவன் தந்தை மகனை விட இளைய ஒருபெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வருகிறார்.  முராதுடன் தீவிர காதலில்  மருத்துவம் படிக்கும் சஃபீனா.அடிக்கடி ரகசிய சந்திப்பும் முத்தங்களுமாக காதல் தொடருகிறது. முராதின் ராப் இசையின் மீதான  ஆர்வத்தை  அப்பா கண்டிக்கிறார்.  ஒரு செல்வந்தரின் கார் ஓட்டுநராக இருக்கும் அப்பாவிற்குக்கு காலில் அடிபட்டதையடுத்து தற்காலிக ஓட்டுநராக அங்கு செல்லும் முராத் வாழ்வின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், மன அமைதிக்கும் மகிழ்வுக்கும் பணம் ஒருபொருட்டாக இல்லாமலிருப்பதையும், மிக அண்மையிலென காணும் அந்நாட்களில் அவ்வனுபவங்களையும், வாழ்வின் முரண்களையும்,  இவையனைதிற்குமிடையில் துளிர்க்கும் நம்பிக்கைகளையும்  பாடல்களாக சந்தங்களுடன் எழுதத்துவங்குகிறான்

MC Sher  என்னும் பெயரில் ராப் இசைப்பாடகனாக புகழ்பெற்றிருக்கும் ஒருவனின் நட்புடன் முராதும் தன் பாடல்களை மெட்டமைத்து யூ ட்யூபில் பதிவேற்றுகிறான்.அது புகழ்பெறுகின்றது. போஸ்டன் இசைக்கல்லூரியில் பயிலும் ஸ்கை  (கல்கி கோச்லின்) ஒரு புதிய பாடலை தாராவியில் MC Sher மற்றும் முராத்தின் ராப் இசை, மற்றும் நடனத்துடன் பதிவுசெய்து  வெளியிட,அதுவும் மிகப்பிரபலமாகின்றது. Gully Boy என்னும் பெயரில் முராத் ராப் இசைப்பாடகனாக புகழ்பெறுகிறான்

தவிர்க்கமுடியாமல் ஒருமுறை இரவில் ஸ்கையுடன் நெருக்கமாக இருந்துவிடும் முராத் இதை சஃபீனாவிடன் மறைக்கிறான்.உண்மை தெரிந்து காதலியுடன்  மனக்கசப்பு,   அதே சமயத்தில் மாற்றாந்தாய் வந்தபின்னால் அம்மாவுக்கு ஏற்படும் அவமானங்களால் வீட்டை விட்டு தாயுடன் முராத் வெளியேறும் நிலை.  இசைக்கனவை மூட்டைக் கட்டி தூர வைத்துவிட்டு வாழ்வின் நிதர்சனங்களை ஏற்கும்  கட்டாயத்தில் தன் மாமாவிடம் வேலைக்கு சேருகிறான் முராத்

படத்தின் இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராப் இசைப்பாடகரான  நாஸ் (Nas) மும்பையில் நடத்தும் ஒரு இசைப்போட்டியில் கலந்துகொள்ளும் முராத் இறுதிசுற்றுக்கு வருகிறாரா, வெல்கிறாரா, காதலியுடனான கசப்பு மறைந்ததா என்பதே மீதிக்கதை

இசையை அடிப்படையாக கொண்ட படமென்பதால்  நிறைய பாடல்கள் இருக்கின்றன.  டிவைன், நேஜி, மற்றும் அமெரிக ராப் பாடகர் நாஸ் உடன் ரன்வீர் சிங்கும் பல ராப் இசைக்கலைஞர்களும் இணைந்து பாடி படத்தின் இசையனுபவத்தை மறக்கமுடியாததொன்றாக்கி இருக்கிறார்கள். ’’அப்னா டைம் ஆயகா’’  இப்போது  பெரும்பாலான இளைஞர்களின் விருப்பப்பாடல்.

காதலர் தினத்தன்று உலகிங்கிலும் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு  தயாரிப்புச்செலவான 84 கோடிக்கு மேல்  234 கோடியை வசூலித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற இத்திரைப்படம், 8 mile  என்னும் 2002ல் வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி எனும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது

ரன்வீர் மற்றும் அலியாவின் நடிப்பிற்கு இணையாக ஜோயாவின் இயக்கமும்  விஜய் மெளரியாவின் வசனங்களும் படத்தின் மிகப்பெரும் பலங்களென்று சொல்லலாம். தாராவியின் நெரிசலான தெருக்களிலும், அடைசலான தீப்பெட்டிகளை கலைத்துக்கட்டியது போன்ற வீடுகளுக்குள்ளும் நம்மை அநாயாசமாக அழைத்துசெல்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே ஒஸா, நிதினின் படத்தொகுப்பும் வெகுவாக பாராட்டப்படவேண்டியது

கள்ளத்தனமும் குறும்பும் நிறைந்த அலியா நாயகி. மர்மமான சிரிப்பும் ,படபடவென பொரியும்  பேச்சும் , துள்ளலும் துடிப்பும், ஸ்கையை பாட்டிலில் அடித்து மண்டையை உடைக்கும் ஆங்காரமும், தீவிரக்காதலும் அப்பா அம்மாவிடம் சர்வசதாரணமாக காதலின் பொருட்டு சொல்லும் பொய்களுமாக மிக மிகப்பொருத்தமான, அலியாமட்டுமே இயல்பாக செய்யவும் பொருந்தவும் முடிகின்ற பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. பொங்கித்ததும்பும் இளமையும் நிஷ்களங்கமான  அழகுமாக அலியா வருகையில் திரையே  கூடுதலாக ஒளிர்கின்றது.

ராப் இசைக்கனவு, மாற்றாந்தாயுடனிருக்கும் கண்டிப்பான அப்பா, வறுமை, துயரிலிருக்கும் தாய், நண்பன், கூடுதல் பிடிப்புடனிருக்கும் காதலி, இப்படி கலவையான விஷயங்களால் அலைக்கழிக்கப்படும் சேரிப்பகுதியைச்சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருக்கும் ரன்வீரை எத்தனை பாராட்டினாலும் தகும்,

வேலைக்காரனின் மகன் வேலைக்காரன்தான் ஆகவேண்டும் என அடிக்கடி முராதின் மாமா சொல்லும் அவ்விதியை கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் கூடிவந்ததால் மாற்றியமைத்து, விரும்பிய கனவை நனவாக்கும் ஒரு சேரிப்பகுதி இளைஞனின் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம் இது.

தெருவிலிருக்கும், எளிய, சாதாரண பையன் என்னும் பொருள்படும் Gully Boy  என்னும் பெயரில்  இத்திரைபப்டம் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாழ்வின் பின்புலங்களும் வசிப்பிடமும் பொருளாதாரமும் ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறது.

 Under play செய்திருக்கறார் என்றுகூட  சொல்லும் அளவிற்கு ரன்வீரும் மிக மென்மையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்சமும் தயக்கமுமாக அவர் தன் முதல்பாடலை பாடுவதும், நெருக்கமான காட்சிகளில் அலியாவின் கை சற்றே மேலோங்குகையில் அவற்றை கண்களில் காதலுடன்  ஆமோதித்து எற்றுக்கொள்வதும் நண்பர்களுடன் இயல்பாய் கூடிக்கொள்வதும் தன் சொந்த சேரி மக்களின் வாழ்வை படம்பிடித்து  உலகிற்கு காட்டியதில் பெருமிதம் அடைவதுமாய் நடிப்பில் மிளிர்கிறார்

ராப் இசையையே பிரதானமாக சொல்லும் படமென்றாலும் வழக்கத்தைக்காட்டிலும் கொஞ்சம் நீளமான இப்படம் எந்தவிதத்திலும் சலிப்புபூட்டாமல் அழகாக  நகர்கின்றது.. இசை, காதல்,  பிறிதொரு காதல் ,கூடல், ஊடல், கடின உழைப்பு குடும்பப்பிரச்சினைகள், நட்பு என்று பல உணர்வெழுச்சிகளுடனான கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வையும் கனவையும் சொல்லும் இப்படம்  அமேசான் பிரைமிலும் தற்போது வெளியிடபட்டிருக்கிறது.

To-let

செழியன்,  ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ’To let’’  திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். 21 பிப்ரவரி 2019,ல் திரைக்கு வந்த இதுவே இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம். பிரேமா செழியன் இப்படத்தை தயாரித்துள்ளார். 25 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட, பாடல்கள் இல்லாத ஒரு அழகிய தமிழ்திரைப்படம் இது

மிக எளிய திரைக்கதை. திரைப்படத்துறையில் கதாசிரியனாகும் பெரும் கனவுடன் இருக்கும், தற்போது கிடைக்கும் சின்ன சின்ன திரைத்துறை சார்ந்த வேலைகளை செய்துவரும் இளங்கோ என்னும்  இளைஞன்,  வேற்று மதத்தை சேர்ந்த காதல் மனைவியுடனும் இளம் மகனுடனும் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். IT துறையில்  பணிபுரிபவர்கள் அதிக வாடகை கொடுக்க முடியும் என்பதால் அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர் வீட்டை வடகைக்கு கொடுக்க முடிவு செய்து இவர்களை ஒரு குறிப்பிட்ட, வெகு சமீபத்திலிருக்கும் ஒரு தேதிக்குள் காலி செய்ய சொல்வதும் வீடுதேடி இவர்கள் குடும்பமாக அலைவதும், வீடு கிடைப்பது  சார்ந்த துயரங்களுமே கதை

மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள். செழியனின் உதவியாளரும் கவிஞர் விக்ரமாதித்யனின் மகனுமான  சந்தோஷ் இளங்கோவாகவும் , அவர் மனைவி அமுதாவாக நடனக்கலைஞர் ஷீலாவும்,  குட்டிப்பையன் தருணாக சித்தார்த்தும், வீட்டின் உரிமையாளராக நாடகக்கலைஞர் ஆதிரா பாண்டிலட்சுமியும் நடித்திருக்கின்றனர்.பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும்  நடிப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் மிகச்சாதாரண 3 அறைகள் இருக்கும் வீடுதான் கதைக்களம். மிகச்சிறிய பேசுபொருள் ஆனால் மிக அழகாக திரைமொழியை கையாண்டு இதை ஒரு அற்புதமான திரைப்படமாக செழியன் உருவாக்கியிருக்கிறார்.

 இப்படத்தில் பிண்ணனி இசையும் இல்லை. இயல்பான வாகனப்போக்குவரத்து ஒலிகளும் தொலைக்காட்சி, வானொலிச் சத்தங்களும், மகன் ஏதேதொ மிளற்றியவாறே விளையாடும் ஓசைகளும்  அமைதியுமே படத்தை நடத்திக்கொண்டு போகின்றது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவுக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

குடியிருக்கும் அவ்வீட்டின் கதவு திறக்கையில் துவங்கி அதே கதவை மூடுகையில் முடிகின்றது திரைக்கதை.  சந்தோஷ் மற்றும் அமுதா தமிழ்திரையுலகிற்கு  நம்பிக்கையூட்டும் புது வரவு. ’’திட்டமாட்டியே’’ என்று தயக்கமாக துவங்கி உரையாடுவதும், அவமானத்தை கணவனிடம் கொட்டித்தீர்ப்பதுவும் வீடு வீடாக கனவுகளுடன் சென்று பார்ப்பதுமாய்  ஷீலா அசத்துகிறார். மூக்கும் முழியும் நீளப்பின்னலுமாய் லட்சணமாய் பாத்திரத்துக்கு பாந்தமாய் பொருந்தி இருக்கிறார்..

சந்தோஷ் அபாரமான இயல்பான நடிப்பு. அமுதாவிடம் கடுமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆதிரா ‘’உங்ககிட்டெ பேசலீங்க.‘’ என்று  இவரிடம் சொல்கையில் ஆத்திரத்துடன் ’’நானும் உங்ககிட்டெ பேசலீங்க!’’ என்று கத்துவதொன்றையெ சொல்லலாம் அவரின் அருமையான நடிப்பிற்கு உதாரணமாக. பல காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்வு, சின்ன சின்ன ரொமான்ஸ், மகனின் படிப்பு எதிர்காலம் என கவலைப்படுவது, அவ்வபோது பூசலிட்டுக்கொள்வது என அவர்களின் வாழ்வை மிக அண்மையிலென நாமும் அவ்வீட்டிலிருந்தே காண்கிறோம், ஒவ்வொரு முறை வீடு கிடைப்பதற்காக அலைபேசி ஒலிக்க காத்திருக்கையில் ’’கடவுளே, வீடு கிடைச்சுடனும்’’ என்று நாமும் பிரார்த்திக்க துவங்கிவிடுவோம். அந்த சுட்டிப்பையன் சுவற்றில் வரையும் படங்களும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கின்றது. அழகிய வீடொன்றை வர்ணங்களில் வரைந்துகொண்டிருக்கும் அச்சிறுவன் பிற்பாடு அப்பா அம்மாவுடன் பள்ளியிலிருந்து நேராக வீடு வீடாக தேடிக்கொண்டிருந்ததில் பழகிப்போய் அழகிய வீடு ஒன்றை வரைந்து அதில் to-let என்றும் எழுதுகிறான். நகர வாழ்வின் போதாமைகளும் பொருளியல் சிக்கல்களும், பெரியவர்களுடையதை மட்டுமல்லாது, வளரும் ஒரு அறியாக்குழந்தையின் கனவுகளையும்   சிதைத்து விடுவதை இயல்பாக  காட்டும் காட்சியது.

அவ்வபோது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டு செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.

ஜன்னல் வழியே எதிர்வீட்டின் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருப்பது, சின்ன தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது, விருப்பம் போல சுவற்றில் வரைந்து மகிழ்வது என்று எல்லாவற்றிலிருந்தும் வீடு மாற்றும் நிர்பந்தம் காரணமாக அச்சிறுவன் விலகிக்கொண்டெ வருவது வலிதருகின்றது. ’’அப்பா! இந்த tv  நம்மளுதா, இந்த வண்டி நம்மளுதா என்றெல்லாம் கேட்டு ஆமென்று பதில் சொல்லும் தகப்பனிடம் ’’அப்புறம் ஏம்ப்பா இந்த வீடு மட்டும் நம்பளுதில்லை? ’’ என்று கேட்கையில் அதற்கான பதில் அந்த அப்பாவிடமும் நம்மிடமும் இல்லையென்பதை வருத்தத்துடன் உணருகிறோம்

அந்த வீட்டு எஜமனியம்மாவான ஆதிராவின் கண்டிப்பும் கடுமையுமான நடிப்பு மிகப்பிரமாதம்.  அதட்டலும் அலட்சியமுமாய் அசத்துகிறார். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதை நம்பவே முடியாது, பெரிய அவமதிப்புக்களை சாதாரணமாக அவர்  நிகழ்த்துகையில் கூனிக்குறுகியபடி அமுதாவுடனேயே நாமும் படியிறங்கி வந்து அறைக்கதவை தாளிட்டுக்கொண்டு அழுவோம்.

பணம் தொடர்பான ஒரு சின்ன மனஸ்தாபத்தின் பின்னர் கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருக்கும் அமுதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாக்கட்டிலிருந்தும் இளங்கோ நோட்டுக்களை எடுத்துக்கொடுப்பதும், வீட்டை காலி செய்கையில் ஒட்டடை படிந்திருக்கும் மனைவியின் தலையிலிருந்து மென்மையாக அவற்றை  அப்புறப்படுத்துவதுமாய், நெருக்கடியிலும் அடுத்த கனம் என்னவென்று முன்முடிவு செய்ய இயலா வேதனையிலும் கூட அவர்களுக்கிடையேயான  காதல் இழையோடும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் விதம்அழகோ அழகு

எளிய தளத்திலியங்கும் மனிதர்களின் பிரச்சனைகளை கண் முன்னே கொண்டுவந்து காட்டி நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் செழியனுக்கு வாழ்த்துக்கள். பெருநகரமென்னும் இயந்திரத்தில் சின்னசின்னதான அந்தரங்க வாழ்வின் கனவுகள் எந்த மிச்சமுமின்றி நசுக்கப்படுவதை சொல்லும் படமிது. இந்தப் படத்துக்கு  2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது 65வது தேசிய திரைப்படவிழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும், கோவா வில் நடைபெற்ற 49வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பரிந்துரை விருதினையும் பெற்றது. ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

 தென்னிந்திய சினிமாவின் மரபான பாடல், நடனம், நகைச்சுவை, ஆபாச வசனங்கள் என்னும் எவ்விதக்கேளிக்கைகளும் இல்லாத இத்திரைப்படம் பல ஊர்களில் திரையிடப்படவேயில்லை என்பது வருத்ததிற்குரியது. திரைமொழியை ஒரு உன்னதக்கலை என்று  உணர்ந்தவர்கள் அவசியம் தேடிப் பார்க்க வேண்டிய ஒன்று TOLETtolet

பேரன்பின் அபத்தங்களும் அழகும்!

peranbu-new-300x168
தேனப்பன் அவர்களின் தயாரிப்பில் ராம் எழுதி இயக்கி மலையாளத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்றிருக்கிறார்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா. தேனி ஈஷ்வர் ஒளி இயக்குனர்
ரோட்டர்டாமிலும் ஷாங்காயிலும் நடைபெற்ற பன்னாட்டு திரைவிழாக்களில் முன்திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றபின்னர் பிப்ரவரி 1, 2019 அன்று திரையிடப்பட்ட பேரன்பு, நல்ல படம் , மிக மோசம், கலைப்படம், தேவையில்லாத பேசுபொருள் கொண்டது, மிக அழகிய பேசுபொருளைக்கொண்டது, over sentiment movie, பெரும்மன அழுத்தம் தரும் ஒன்று, வாழ்வின் இயங்கியலில் நடைபெற சாத்தியமே அற்ற ஒன்றை புனைந்து சொல்லுவது என பல்வேறு வகையிலான கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது,

மனைவியைப்பிரிந்து , மூளை வளர்ச்சியற்ற பதின்மவயது மகளுடன் வாழும் அமுதவன் என்னும் தந்தை, மகளின் எல்லாத்தேவைகளையுமே பேரன்புடன் நிறைவேற்ற முயற்சிப்பதை சொல்லும் இக்கதையை இயற்கை என்னும் தலைப்பில் பல அத்தியாயங்களாக பிரித்து பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

குளிர்பிரதேசமொன்றின் ஏரியில் மகளுடன் பரிசலில் பயணிக்கும் தந்தையுடன் துவங்குகிறது இப்படம்
பச்சை போர்த்திய மலைகளும், செறிந்த பைன் மரக்கூட்டங்களுமான பிண்னனியில் அந்த சிற்றாற்றின் கரையில் அமைந்திருக்கும் மரவீடு மிக அழகு .
இது வழக்கமான திரைப்படம் இல்லை என்பதை பாப்பா மூளை வளர்ச்சியற்றவர்களுக்கே உரிய அசாதாரண முகமும் உடலுமாய் தோன்றுகையிலேயே உணரத்துவங்குகிறோம். அவளை பெண் துணையின்றி மம்மூட்டி கவனிக்கப் படும் சிரமங்களை பெற்றோர்களாகிய பார்வையாளார்கள் பதற்றத்துடனேதான் கவனிக்கமுடியும் அதுவும் ‘பாப்பா’’ பருவமடைந்தபின்னர் மனப்பதற்றம் கூடுகின்றது

பாப்பா பெரும்பாலும் தலையசைப்பிலும் சின்ன சின்ன சப்தங்களிலும், அழுகை மற்றும் அலறல் வழியேவும்தான் பிறரை தொடர்பு கொள்கிறாள். எனவே பலரை தன் அத்தைய இருப்பின் மூலம் சங்கடப்படுத்துகிறாள். பாட்டி வடிவுக்கரசிக்கு வசனங்களே தேவையில்லை உடல்மொழியிலேயே வெறுப்பை அப்பட்டமாக காட்டக்கூடிய நடிகை அவர். பாட்டியான அவரும் தம்பி மனைவியும் அக்கம்பக்கத்தினரும் பாப்பாவின் இருப்பை அத்தனை பகிரங்கமாக தீவிரமாக ஆட்சேபிப்பது நம்பும்படியாக இல்லை. மானுடம் இன்னும் அத்தனை கீழ்மையடைந்திருக்கவில்லை என்று ஆழ்மனம் நம்புகிறதோ என்னவோ! மம்மூட்டி அந்த மிகத்தனிமையிலான வீட்டுக்கு மகளுடன் வருவதை நியாயப்படுத்த அந்தனை தீவிர ஆட்சேபணை இருப்பதாக காட்டியிருக்கலாம்
ஆனால் அத்தனை கஷ்டபட்டு வந்த அவ்வீட்டில் வேலைகளுக்கும் பாப்பாவுக்குமான துணைக்குமாக பெண்களே கிடைப்பதில்லை என்பதுவும், ஒரே நாள் வேலைக்கு வந்த பெண் மம்முட்டி அழகனாக இருப்பதால் புருஷன் சந்தேகப்படுவதால் இனி வரலைன்னு சொல்வதும் சம்பளத்தைக் கூட கைகளில் வாங்காமல் தரையில் வைக்கச்சொல்லி எடுத்துக்கொள்வதும் மிகைக்கற்பனை . நன்றாகவும் இல்லை, நம்பும்படியும் இல்லை

அஞ்சலியின் பாத்திரமும் அப்படியே ஒரு சிறப்புக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் அப்படி ஊர் பேர் தெரியாத பெண்னை உதவிக்கு வைத்துக்கொள்வதே நம்பமுடியாத போது சில நாட்களிலேயே அவரை திருமணமும் செய்துகொள்வதென்பது கொஞ்சமும் நம்பமுடியாதவை. படத்தின் பேசுபொருள் பாப்பாவிற்கான துணையா அன்றி மம்மூட்டிக்கான துணையா என கேள்வி வருகின்றது
பின்னர் அஞ்சலியை வெளியேற்றுவதற்கான காரணமும் வலுவற்றது. அக்காட்சிகள் மிகுந்த நாடகத்தன்மையுடன் இருந்தன. அந்த வீட்டை விலைக்கு கேட்கும் கும்பலும் அவர்களின் அச்சுறுத்தலும் கூட வலிந்து திணிக்கப்பட்டது என்பதை உணரமுடிகின்றது
மம்முட்டி அந்த வீட்டுக்கு வர காரணமாக பிறரின் வெறுப்பை சொன்னதுபோலவே அவர் அந்த மரவீட்டை விட்டுவிட்டு போகவும் வலுவற்ற காரணங்களே சொல்லபடுகின்றது.

மூன்றாந்தர விடுதியில் மகளுடன் அவர் தங்குவதும் அங்கு ஆணும் பெண்ணும் நெருக்கமாய் இருப்பதை பாப்பா பார்த்ததால் அந்த இரவு நேரத்தில் விடுதியை காலிசெய்துவிட்டு மகளுடன் அவர் தெருவில் அமர்ந்திருப்பதுமெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அபத்தங்கள். அதற்கு பதிலாக அவர் கதவடைத்துக்கொண்டு பத்திரமாக மகளுடன் அங்கிருந்து விட்டு காலை வெளியேறியிருக்கலாமே!
பின்னர் வருபவை அவற்றையெல்லாம் விட அபத்தங்கள். மகளின் பாலுறவுத்தேவையை அப்பா உணர்துகொள்வதும், அதை தீர்க்க ஒரு துணைக்காக முயற்சிப்பதெல்லாமே அபத்தங்களின் உச்சம். மகளுக்கு திருமணம் செய்துவைப்பதும், ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை தேடுவதும் ஒன்றென அவர் பேசுவதும் அப்படியே! வாழ்வின் எல்லா சிக்கலகளூக்கும் தீர்வு காண்பதென்பதே ஒருவகையில் அபத்தம் தான்.

பாப்பாவை விடுதியில் அப்படி அடிப்பதற்கான காரணமும், அதன்பிறகு அவளை மம்முட்டி பார்க்கவிடாமலிருப்பதும், தொலைக்காட்சியில் தெரியும் ஆணை பாப்பா முத்தமிடுவதுமெல்லாமே மிகு கற்பனைகள் .

சில காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. அஞ்சலையின் தாய்மாமா கட்டிலிலும் மம்மூட்டி தரையிலும் படுத்துக்கொண்டிருக்கையில் அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது.. மம்முடியின் பின்னே எரியும் தழலின் நிழல் தாய்மாமவின் முகத்தில் தெரிவதும் அவரின் உணர்ச்சிகளை துல்லியமாக கட்டும் முகமும் அப்போது மம்முட்டி மிக இயல்பாக பேசும் வசனங்களும் அருமை.

அஞ்சலி மிக எளிய உடைகளில், குறைந்த ஒப்பனையில் அழகு மிளிர வருகிறார். கண்களும் உதடுகளும் பேசுகின்றன அவருக்கு. நள்ளிரவில் தேனீர் தயாரித்துக்கொடுக்கும் அந்த காட்சியில் தளர்ந்திருக்கும் மம்மூட்டியை அணைத்துக்கொண்டு ஆற்றுப்படுத்தவேண்டும் என்று அரங்கிலிருக்கும் அனைவருமே விரும்பியிருப்போம். அவரும் அதையே செய்கிறார்

பாப்பா பாப்பா என்று பதறுவதும் , தாயன்புடன் ஆடிப்பாடி கதை சொல்லி கவனித்துக்கொள்வதும், சேனிடரி நேப்கின்களைக்கூட மாற்ற உதவுதுமாக மம்முட்டி சிறப்பு குழந்தையொன்றின் அப்பாவாகவே மாறிப்போகிறார். அவரின் வயதை கொஞ்சமும் காட்டாத உடற்கட்டு உண்மையிலேயெ வியப்படைய வைக்கிறது. very much fit and smart for this age. பனிபொழியும் கதைக்களம், மூளை வளர்சியில்லாத பெண், மரவீடு என்று இப்படம் மூன்றாம் பிறையை அதிகம் நினவுக்கு கொண்டு வந்துகொண்டே இருக்கின்றது.

மகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே இரவு காரில் காத்திருந்து அங்கிருந்து கொண்டே மகளின் கதறலை, வீறிடலை கேட்டுக்கொண்டு கலங்குமிடத்திலும் மம்மூட்டி அசத்துக்கிறார்.

இறுதியில் வரும் அந்த மாற்றுப்பாலினத்தவரான மீரா பாத்திரமும் மிக நன்று. மிக அருமையான நடிப்பு அவருடையது. ஆனால் அப்பாத்திரம் இக்கதையின் மையப்பேசுபொருளின் தீர்வாக காட்டப்படுவதே கதையின் இறுதி அபத்தம்.

திரைப்படத் தொகுப்பு மிகச்சரியாகவே இருப்பினும் கதையில் நிறைய குழப்பங்கள். மம்முட்டி மகளை கவனித்துக்கொள்ள துணை தேடுகிறார். ஆனால அவர் அஞ்சலியை மணம் புரிந்துகொள்கிறார். அஞ்சலிக்குப்பிறது வீட்டையும் விட்டுவிட்டு நகரத்துக்கு வந்து மகளுடன் சீரழிகிறார் பாலுணர்வுதூண்டல் உட்படஅவளின் எல்லாத்தேவைகளையும் தீர்க்க மெனக்கெடுகிறார். மகளை வெறுக்கும் மனிதர்களிடமிருந்து விலகி நீரில் இருவருமாக மூழ்கி உயிரைவிடவும் எடுக்கவும் துணிகிறார். பின்னர் ஒரு மாற்றுப்பாலினத்தவரை அவர் திருமணம் செய்துகொள்வதுடன் படம் நிறைவடைகின்றது.
மூளை வளர்ச்சியற்ற மகளின் பாலுணர்வுத்தேவைக்கு அப்பாவின் மாற்றுப்பாலினத்தவருடனான மறு திருமணம் எப்படி தீர்வாகும்?
மிக அழகாகத்துவங்கி , சுமாராக கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமாக முடிந்த படம் இது

சாதனாவின் நடிப்பு பிரமாதம் அப்படி தொடர்ந்து உதடுகளை கோணிக்கொண்டு நாக்கை வளைத்து துருத்தியபடி, கை விரல்களயும் மடக்கிக்கொண்டு பாதங்களையும் வளைத்தபடிக்கே அவர் படம் முழுக்க வரும் அத்தோற்றம் மனதைபிசைகிறது
ஒரு சிறப்பு பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படி கஷ்டபடுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாக தீர்க்க வேண்டிய ஒன்றென காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை

இயற்கையின் பன்முகங்களையும் பாரபட்சமுடன் அது உயிர்களை படைப்பதையும் குறித்து கோனார் நோட்ஸ் போடாத குறையாக அத்தியாயங்களாக பிரித்து விளக்காமல் பார்வையாளர்களே அதை புரிந்துகொள்ளும் படி கொண்டுபோயிருக்கலாம்
படம் முடியும் போது நாம் எத்தனை அருளப்பட்ட வாழ்விலிருக்கிறோம் என்னும் மகிழ்வைவிட கருணையின்றி படைக்கப்பட்டிருக்கும் உயிர்களின் மீதான பச்சாதாபமே மனதில் மேலோங்கி இருக்கும் என்பது இப்படத்தின் வெற்றியெனக்கொள்ளலாம்

லாலிபாப்பால் உதடுகளின் மேல் பாப்பா வருடிக்கொள்வது பனியை நம் மீதும் படரவிடும் துல்லியமான அழகிய ஒளிப்பதிவு. மாற்றுப்பாலினத்தவராகிய அஞ்சலி அமீரின் சிறப்பான நடிப்பு, மலையாளத் திரைஉலகின் நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி, நட்சத்திரங்களை எண்ணும் காட்சி, சிறப்பான ஒளிப்பதிவு என பாராட்டவும் பல அம்சங்கள் இருக்கின்றன இதில்.

எனினும் மூளை முடக்குவாதத்துடனிருக்கும் மகளை, மனைவியும் சகமனிதர்களின் பரிவும் புரிதலுமின்றியும் அன்புடன் கவனித்து வளர்க்கும் அப்பாவின் கதையாக இல்லாமல் அவளின் பாலுணர்வுதேவைகளுக்குமாக மெனக்கெடும் பேரன்புடனிருக்கும் அதிசய அப்பாவாக கதையைக்கொண்டு போனதுதான் பிழையாகிவிட்டது

 

Green Book

green book

GREEN BOOK

பீட்டர் ஃபாரெல்லியின் இயக்கத்தில் 2018’ல் வெளிவந்த 1960ல் நடைபெறும் கதைக்களத்துடனான Green Book என்னும் இந்த ஆங்கிலத்திரைப்படம் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஜாஸ் பியானோ இசைமேதையுமான திரு டான் ஷர்லி  (Don shirley)  மற்றும்  அவரின் கார் ஓட்டுனரும் பாதுகாவலருமாகிய இத்தாலிய அமெரிக்கரும்  பவுன்ஸரான டோனி வேலிலங்கா (Tony vellelonga) ஆகிய இருவரையும் குறித்தான ஒரு உண்மைக்கதையை சொல்கிறது.

இசை, இனவெறி மற்றும் அசாதாரண தோழமை ஆகியவற்றை மிக அழகாக சொல்லிச்செல்லும் படம் இது

திரைக்கதையை இயக்குனர் பீட்டர், பிரையன் பியூரி மற்றும் டோனி வேலிலங்காவின் மகனாகிய ’’நிக் வேலிலங்கா’’ வுடன் இணைந்து எழுதியுள்ளனர். நிக் தனது அப்பா மற்றும் டான் ஷர்லியுடனான நேர்காணல்கள் கடிதங்கள் நாட்குறிப்புகள் என பலவற்றின் உதவியுடன் திரைகதையை செம்மையாக்க பெரிதும் உதவியிருக்கிறார் கதைக்களம் 1960களில் நடைபெறுவதுபோல அழகாக  காட்சிப்படுத்தபட்டிருக்கின்றது எவ்விதப்பிழையுமின்றி

கருப்பினத்தவர்களை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் நகரை விட்டு வெளியேறச்சொல்லும்,வெள்ளையரல்லாதோர் உபயோகிக்கக்கூடாத பொதுஇடங்களின் பட்டியலை வைத்திருக்கும், இதற்கென பிரத்யேக சட்டங்களையும் விதிகளையும் வன்முறைகளையும் பின்பற்றும், வெள்ளையர்கள் மட்டும் வசிக்கும் அமெரிக்காவின் Sun down towns  எனப்படும்  தெற்கிலிருக்கும் நகரங்களுக்கு தொடர்ச்சியாக இசைக்கச்சேரிகள் செய்யவிருக்கும் வடக்குப்பகுதியைச் சேர்ந்த   உளவியலிலும் இசையிலும் டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கும் கருப்பின இசை மேதையொருவர், தனக்கு அங்கு ஏற்படக்கூடும் என அஞ்சும் தாழ்மைகளுக்கும், உள்ளாகக்கூடுமென்னும் அச்சுறுத்தல்களுக்கும்,  துணைக்கும், பாதுகாப்பிற்கும் காரோட்டுவதற்குமாக  பணத்தேவையிலிருக்கும் ஒரு வெள்ளையரை 8 வாரங்களுக்கு பணியிலமர்த்திக்கொள்ளுவதும் அந்த பயணமும், கலவையாக அங்கு நடைபெறும் சம்பவங்களும் அவர்களுக்கிடையே முகிழ்க்கும் அழகிய தோழமையும் நம்மை  திரைப்படத்துடன் ஒன்றச்செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது

கருப்பினத்தவர்கள் அந்நகரங்களில் எங்கெங்கு மட்டும் தங்கலாம், உணவு உண்ணலாமென்னும்  விவரங்களடங்கிய GREEN BOOK என்னும் பயணக்குறிப்பேட்டை/கையேட்டை டோனி உடன் கொண்டுசெல்வதால் இப்படத்திற்கு இந்தப்பெயர்.  1936 லிருந்து 67 வரையிலுமே  பயன்பாட்டிலிருந்த இந்த பயணக்குறிப்பேடு  சாலைவழிப்பயணங்களில் கருப்பினத்தவர்கள் அந்நகரங்களை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், அங்கு தங்குவதையும் ஓரளவிற்கேனும் சாத்தியமாக்கியிருக்கிறது

எப்போதும் உணவுண்ணுதலில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கும், ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும், பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கும்,   மனைவியும், இரு மகன்களும் சுற்றங்களுமாக நிரம்பிய வாழ்விலிருக்கும் வெள்ளையரான டோனிக்கும், உலகம் முழுதும் பிரபலமான பெரும் இசைமேதையான, தன்னந்தனிமையில் ஒரே ஒரு உதவியாளருடன், பகட்டான ஒரு வாழ்விலிருக்கும், வரவழைத்துக் கொண்ட மிடுக்கும் நிமிர்வுமாய்,  மிக சொற்பமாகவே பேசும்  கருப்பினத்தவரான ஷர்லியுமாய் தொடர்ந்து  பயணிப்பதும், மிக வேறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்த இவ்விருவரும் அந்த பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராமைகளும், அவை  மெல்ல மெல்ல ஷர்லியை மாற்றுவதும் அவர்களுக்கிடையே ஒரு பந்தம் உருவாவதும்  இப்படத்தில்  மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது

1927ல் ஃப்ளோரிடாவில்  வசதியான கருப்பினக்குடும்பத்தில் பிறந்த கருப்பினத்தவரான ஷர்லி, 1930ல் பிறந்த டோனி வேலிலங்காவை  பணியில் அமர்த்திக்கொண்டதும், எந்தப்பொருத்தமுமில்லாத இந்த இணையர் மேற்கொண்ட நெடிய சாலைப்பயணத்தில்  பரஸ்பரம் மற்றவரின் உலகை அவற்றின் பலவீனங்களுடன்  அறிந்துகொண்டு,  2013 ஆம் வருடம் இருவருமே இறந்து போகும் வரை உற்ற நண்பர்களாயிருந்ததும் இப்படத்திற்கு வலுவையும் ஆர்வத்தையும் சேர்க்கும் உண்மை பின்புலக் காரணங்கள்

அமெரிக்க நடிகரும்  2017 ல் ஆஸ்கர் வென்ற  முதல் இஸ்லாமிய நடிகருமான

(Mahershala Ali). மகிர்ஷாலா அலி, டான் ஷர்லியாகவும்,  அமெரிக்க நடிகர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர் அகாடமி விருது ,கோல்டன் குலோப் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் எனும் பல சிறப்புகளை உடைய   விகோ மோர்டென்சன் (Viggo Mortensen) டோனி லிப் வேலிலங்காவாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர்

கிரிஸ்’ன் உறுத்தாத  இசையும்,  நெடும்பயணத்தை,  உணர்வெழுச்சிகளை உடல்மொழியின் மாற்றங்களை, இசைக்கும் விரல்களை, இழிவுபடுத்தப்படுகையில் புண்படும் நாயகனை, பொங்கும் தோழனை  அந்த சாலைகளை, பனியை, காவல் நிலையத்தை, விடுதிகளை, சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் மாபெரும் அரங்குகளை  துல்லியமாக காண்பிக்கும் சீயான் போர்ட்டரின் காமிராவும்,  தொய்வின்றி கதையை சொல்லிச்செல்லும் விட்டோவின் அருமையான படத்தொகுப்பும் நம்மையும் அவர்களுடனேயே பயணிக்க வைக்கிறது.

மிக நேர்த்தியான உயர்தர  உடைகளும், துல்லிய, இலக்கண சுத்தமான ஆங்கிலமும், மேட்டுக்குடியினருக்கே உரித்தான மேம்பட்ட நாகரீகமும் நாசூக்கும் கொண்டவராய்,  மேடையில் தனக்கு அளிக்கப்படும் கெளரவங்களுக்கு அடியில் கருப்பினத்தவர் என்னும் எள்ளலும் கேலியும் வெறுப்பும் மண்டிக்கிடப்பதை உணர்ந்தவராக , கச்சேரியின் இடையில் கழிப்பறையை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுகையிலும் உணவகங்களுக்குள் நுழைவொப்புதல் இல்லாதபோதும் சமநிலை இழக்காமல் இருப்பதுவுமாய் அலி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.  வெள்ளையர்களுக்கான   இறுதிக்கச்சேரியை ரத்து செய்துவிட்டு கருப்பின மக்களுக்கான் பிரத்யேக விடுதியில் அனைவருக்குமாய் தன் மேட்டுகுடித்தனங்களையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக இசையை ரசித்து துள்ளலாக மெல்லிய நடன அசைவுகளுடன் எந்த பாசாங்கும் இன்றி பியானோ வாசிப்பதும், தானும் தன் இசையும் உண்மையில் யாருக்கு சொந்தமென்பதை உணர்ந்திருப்பதை உடல்மொழியிலேயெ வெளிப்படுத்துவதுமாக அசத்துகிறார் அலி

டோனி படம் முழுதும் வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன்  எதிர்கொள்ளும் சாமான்யராகவே நடித்திருக்கிறார்

துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கருப்பினப்பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை  புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும் , ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யபட்ட ஷர்லியை  காவலர்களிடமிருந்து மீட்பதும் (அந்த அசந்தர்ப்பத்தின் பொருட்டு  மாடிப்படிகளின் மேலிருந்து மன்னிப்பு கேட்கும் ஷர்லியிடம், கீழே நின்றவாறு, வாழ்வின்  சிக்கலான  பல அடுக்குகளை கண்டிருக்கும் தனக்கு இதை புரிந்துகொள்ள முடிகின்றது என்று   அவர்  எளிதாக சொல்லுவதும் அப்போது ஷர்லியின் புன்னகையும், கவிதை).  அவரின் இசைமேதமையால் கவரப்பட்டு அவரை ஆராதிக்க துவங்குவதுமாக விகோவும் வேலிலங்காவாகவே மாறியிருக்கிறார். மனைவிக்கு மொக்கையாக கடிதமெழுதும் டோனிக்கு ஷர்லி கவித்துவமான கடிதங்களை எழுத உதவுவதும் பின்னர் டோனியே அப்படி எழுதமுற்படுவதுமாக அவர்களின் தோழமையை மிக அழகாக சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றன

பயணம் துவங்குகையில் டோனியின் அசுத்தமென்று நினைக்க வைக்கும் வழமைகளால் ஷர்லிக்கு ஒவ்வாமை எற்படுவதும் பின்னர் திரும்பும் பயணத்தில்  வேலிலங்காவை பின் இருக்கையில் தூங்கச்செய்து இவரே காரோட்டுவதும், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் குறுக்கிடுகையில் வழக்கத்துக்கு விரோதமாக  ஷர்லி  பேச முற்படுவதும், காவலரும் எதிர்பாராவிதமாக உதவுவதுமாய் காலம் மாறிக்கொண்டிருப்பதையும், இனவெறியிருட்டினூடே நம்பிக்கையின் ஒளிக்கீற்று புலப்படுவதையும்  பார்வையாளார்களும்  காண முடிகின்றது.

பல நுட்பமான செய்திகளை அழகாக போகிற போக்கில் சொல்லிச்செல்லும் இத்திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்

2018 ஆம் வருடத்தின் மிகசிறந்த திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகருக்கான விருதை அலியும், உண்மைத்திரைக்கதைக்கான விருதை நிக் வேலிலங்காவும் பெற்று, இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கும் இத்திரைப்படம் வழக்கமான திரைப்படங்களினின்றும் மாறுபட்ட  படம் மட்டுமல்ல வரலாற்றின் கறுப்புப்பக்கங்களை குறித்து அறியாத  நமக்கெல்லாம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட  ஒரு பாடமும் கூட.

 நெடும்பயணமொன்றின் பிறகு அந்த இளநீலவண்ண 1962 மாடல் கெடிலாக் செடான் காரிலிருந்து இறங்கி, பனிபொழியும் கிருஸ்துமஸ் இரவில் நமக்கென வீட்டில் காத்திருப்பவர்களை காண,  தோழமையில் நிரம்பியிருக்கும் இதயத்துடன் செல்லும் உணர்வுடனேதான் திரையரங்கிலிருந்தும் வெளியேறுவோம்.

-____________________________________________________________________________________________

நீதிக்கு புறம்பாக பலரால் பொது இடத்தில் கொல்லப்படுதல், துன்புறுத்தபடுதல், எந்த சொத்துக்களையும் அவர்கள் வங்கும் உரிமையை  சட்டபூர்வமாக மறுத்தல், வெளிப்படையாக அவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று அறிவிக்கும் பலகைகளை உணவகங்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட  பல பொது இடங்களில் வைத்திருத்தல், நிறவேறுபாடுள்ளவர்களை நெருப்பிட்டு கொளுத்துதல், பலர் முன்னிலையில் தூக்கிடுதல், உயிர்போகும் வரையில் துன்புறுத்துதல் (Lynching)  இந்த  வதைகளை  புகைப்படமெடுத்து வாழ்த்து அட்டைகளாக வைத்துக்கொள்ளுதல் போல பல அநீதிகள் அந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. சமூகவியலாளர்  James W. Loewen  2005’ ல்எழுதிய ’’Sundown Towns: A Hidden Dimension of American Racism , என்னும் புத்தகம் இவற்றையெல்லாம் விரிவாக பேசுகின்றது.

மகேஷிண்டெ பிரதிகாரம்-A Sweet revenge !

 

திரைக்கதை  எழுதியிருக்கும் ஸ்யாம் புஷ்கரன் தன்  பால்யத்தில் கேட்டிருந்த அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவரும் தந்தையின் தோழருமான தம்பான் புஷ்கரன் என்பவரது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தினை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில்  காதல் மட்டுமே கற்பனை. ஃபகத் ஃபாஸில், அனுஸ்ரீ, செளபின், அலென்சியர், சுஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கியப் பாத்திரமேற்றிருக்கின்றனர். இயக்குனராக திலீப் போத்தனுக்கு முதல் படம். திகிலான பழிவாங்கும் கதைகளுக்கு மத்தியில் இது ஒரு  இனிய  பழிவாங்கும் கதை.

பழைய பாபு ஆண்டனியின் சாயலில் இருக்கும் ஜிம்சனுடனான ஒரு தெருச்சண்டையில் அடிபடும், கேவலப்படும் ஃபகத் மீண்டும் ஜிம்சனை அடித்தபின்னரே  ஒரு குறிப்பிட்ட காரியத்தை  செய்வதாய்  சபதமெடுப்பதே கதை.  ஜிம்சன் துபாய்க்கு வேலைக்கு போனதால் அவன் திரும்பி வரும் வரை காத்திருக்கையில் புகைப்படக்கலையென்பது பாஸ்போர்ட் புகைப்படம் எடுப்பதல்ல என்பதை  அப்பா ஆண்டனியிடமிருந்து ஃபகத் கற்றுக்கொள்கிறார். முதல் காதல் கைநழுவிபோகின்றது, பின்னொரு அழகிய காதல் முகிழ்க்கிறது

நாயகன் ஃபகத்திற்கு இயல்பான நடிப்பு குருதியிலேயே கலந்துள்ளது. முதல்காட்சியிலெயே வெள்ளையில் நீலவாரிட்ட செருப்பை கழுவி, நீரில் மிதந்து வரும் நட்சத்திரப்பழங்களை சேகரித்தபடி குளத்தில் குளிக்கும், ஃபாசிலைப்போல இயல்பாக நடிக்க இனிபிறந்து வரணும் பிறமொழியிலெல்லாம் நடிகர்கள். சிலுவை சுமந்து வருவோரின் கால்களிலும் பின்னர் காட்டப்படும் அச்செருப்புக்களுக்கு  கதையில் மிக முக்கிய இடம் இருக்கின்றது

புதுமுகங்கள் பலர் இருந்தாலும் அத்தனைபாத்திரங்களுக்கும் அனைவரும் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். அந்த கிராமத்து மக்களும் அப்படியே இயல்பாக அணிந்திருக்கும்  உடையிலேயே பல காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இயக்குனர் திலீப் போத்தனும்  புஷ்கரனின் மனைவி உன்னிமாயாவும் கூட நடித்திருக்கின்றனர்.

ஆர்ட் டைரக்டர் அஜயன்  சாலிசேரி  ஒவ்வொரு காட்சியிலும் மிகக்கவனமெடுத்து அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களிலிருந்து  சுவற்றில் இருக்கும் புகைப்பட சட்டங்கள் வரை இடுக்கியின் கலாச்சாரத்தை திரையில் அப்படியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்

நாயகன் உட்பட அனைவரும் பெரும்பாலான காட்சிகளில் கிராமத்தினரிடமிருந்து புது உடைகளை கொடுத்து  பதிலாக வாங்கிய  அவர்களின் உபயோகப்படுத்தபட்ட உடைகளையே அணிந்திருப்பதால் காட்சிகளில் அத்தனை உயிரோட்டம்

செளம்யாவின் திருமணத்தன்று  தனிமையில் கதறி அழுகும் ஃபகத்தின் துயரை கரைப்பது,  அக்கிராமத்தின் பச்சையை நனைத்து  நனைத்து இன்னும் அடர்த்தியாக்குவது, தேவாலயத்தில் குடையுடன் எதிரெதிரே கடக்கும் ஃபகத், செளம்யா இருவரின் மீதும் காதலென பொழிவது, மரவள்ளிக்கிழங்கு காடுகளில் இலைப்பரப்பை கோதியபடி கடந்துசெல்வது என பெரும்பாலான மலையாளப்படங்களைப்போலவே இக்கதையிலும் மழை ஒரு பாத்திரமாகவே  இருக்கிறது.

இடுக்கிமாவட்டத்தின்  இயற்கை எழில்  நிரம்பிய பிரகாசம் எனும் ஒரு மலையடிவார கிராமத்தில் நல்ல மழைக்காலத்தில் 45 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள்

இரண்டு சண்டைகள் மட்டுமே. சண்டை இயக்குனர்  குங்ஃபூ சஜித்.  கதை துவங்குவதற்கு காரணமான சண்டையே கதையை முடித்தும் வைக்கின்றது. ஷாஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பும் அபாரம்

பீஜ்பால் இசையமைத்து இரண்டு பாடல்களும் பாடியிருக்கிறார். கவிஞர் அஹமத் ஒரேநாளில் எழுதிய கவிதையான  ‘’ இடுக்கி ’’  பாடலில்  கேரளத்தின் ஜீவனை நுட்பமாகவும் துல்லியமாகவும் கண்டுவிடமுடியும்  அத்தனை அற்புதமான பாடல்

காதலியை மகேஷ் சந்திக்க  ஏதுவாக பேபிச்சேட்டன் காண்பிக்கும் மார்வலியென்னும் ’’நம்பர்’’ எக்குத்தப்பாய் மாறிப்போவது போல  திரைக்கதையினூடே மெல்லிய நூலாக மிகையில்லா இயல்பான நகைச்சுவைக்காட்சிகள் பல  இருப்பினும் செளபின் ஷாகிர் வரும் காட்சிகளையெல்லாம். புன்முறுவலுடனேயே பார்க்கமுடியும், குறிப்பாய் அந்த ’’கிரிஸ்பின்’’

’’தெளிவெயிழலகும், மழையுட குளிரும்’’ பாடல் கொள்ளை அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது

ஒப்பனை அறவே இல்லாத சோனியாமோளாக வரும் லிஜிமோள் ஜோஸின் இயற்கை அழகும் செளபினுடனான  அவரின் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ‘’நீயும் சுந்தரனாடா’ என்று சொல்லப்படுகையில் அலென்சியர்  முகத்தில் காட்டுவது அசலான பெருமிதம். பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத் ஃபாஸிலின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும்  பிரமாதம்,  ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது  நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளை தெருவிலிருந்தபடி பார்த்து  ஃபாஸில் புன்னகைகும்  காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.

துக்கவீட்டில் காதலிக்கு கும்பிலியப்பம் சாப்பிடக்கொடுப்பது,  கப்பைக்கிழங்களைகொத்துக்கொத்தாகப் பிடுங்கி சீவுவது,  தட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் பொன்மஞ்சள் நிறப் பலாச்சுளைகள் ,  வீட்டு வாசலில் வாழைக்குலை, பச்சைபிடித்த கிராமம், நைட்டியில் பெண்கள், அச்சு அசலாக  கேரளக்கிருத்துவ சாவு வீடும் திருமணமும்,  மென்பஞ்சுக்குலையுடன் பறக்கும் எருக்கம்பூ விதைகளின் பிண்ணனியில் தெரியும் ஜிம்சி, பேருந்தில் நேந்திரன் சிப்ஸ், லாட்டரிச்சீட்டு விற்பனை, தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் பெண்கள்,  மினுங்கும் சருமத்துடன் அடர்கூந்தலும்  மையெழுதிய அகலகண்களுமாய் கேரளத்துச்சுந்தரிகள், மழை, நதி, கட்டஞ்சாயா என்று ஷைஜுவின்  காமிரா கேரளத்தை கண்ணிலும் மனசிலும் கொண்டு வந்து கொட்டி நிறைப்பதில் படம் முடிந்து அரங்கைவிட்டு புறப்படுகையில்,  ஏதோ கேரளகிராமம் ஒன்றிலிருந்து புறப்படுவது போலவே இருந்தது

திரைக்தையின் எளிமை உண்மையில் திகைப்பூட்டும்.  இத்தனை எளிய மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து தொட்டுத்தொட்டு அழகிய முழுநீளத்திரைச்சித்திரத்தை தீட்டுவதென்பது இம்மொழியிலல்லாது வேறெந்த மொழியிலும்  நிகழாச்சாத்தியமே!

ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவிற்குபிறகு அமெரிக்காவின் மிக அதிக வசூலைப்பெற்ற மலையாளப் படமும் இதுவே! 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு பிப்ரவரி 5 2016 ல் வெளியாகி  18 கோடி வசூலுடன் வணிகரீதியாகவும் வெற்றி பெற்று வட அமெரிக்க திரைவிருது, பன்னாட்டு  திரைப்படவிருது வனிதா விருது மாநில மற்றும் தேசிய விருதுகள் உள்ளிட்ட  23  விருதுகளை அள்ளிக்குவித்திருக்கும் இந்த அ,ரிய அழகிய திரைப்படத்தைப் பார்க்கத்தவறினால் அது திரைக்கலையை நேசிப்பவர்களுக்கு  நிச்சயம் பேரிழப்பாகும்.

ஃபகத்தின் அப்பா படத்தில் சொல்லியிருப்பது உண்மை என்பதை உணர்ந்தபடியேதான் அரங்கிலிருந்து வெளியெ வருவோம்

’’ஆம் இ ஜீவிதம் சுந்தரமானு’’

 

பேட்ட

எந்திரன் 2.0 வெளியாகி ஒரு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ரஜினி படம். ஜனவரி 10, 2019  தைப்பொங்கல்  அன்று வெளியான ,கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட (Petta) ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத்ரவிச்சந்திரன்  இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு திரு,   படத்தொகுப்பாளர் விவேக் அர்சன்.

சீனியர் மாணவர்கள் அட்டகாசமும் வில்லத்தனமும் அதிகமிருக்கும் ஒரு கல்லூரி விடுதிக்கு காப்பாளராக ரஜினி வருகிறார். அங்கிருக்கும் பிரச்சனைகளை துரிதமாக சரிப்படுத்தி மாணவர்களை கட்டுக்குள்  கொண்டு வரும் ரஜினி மாணவர்களில் ஒருவனை  கொல்லச் செய்யப்படும் முயற்சிகளை முறியடிகிறார். அதன்பொருட்டே அங்கு அவர் வந்திருகிறார் என்பதும், அவருக்கும் அந்த மாணவனுக்குமான உறவென்ன என்னும் புதிருமே கதைக்கரு.

கண்ணைக்குளிர்விக்கும் டார்ஜிலிங்கில் துவங்கி மதுரைக்கு வந்து உத்தரப்பிரதேசத்தில் முடிகின்றது கதை. அறிமுகக்காட்சியில் ரஜினி சோளக்கதிர்களை சுடும் நெருப்பின் பொறி பறக்கும் பிண்ணனியில் திரையில் தோன்றுகையில் பல்லாண்டுகளாக திரையரங்கில் எழும்  அதே ஆர்ப்பரிப்பும் ஆட்டமும் பாட்டமும் விசிலுமாக  அரங்கு அமளிப்பட்டது.  ரஜினி வரும் காட்சிகளில்  தேவதூதன் சிலை ஒரு குறியீட்டைபோல காண்பிக்கப்படுகிறது.  முதன்முதலாக திரைத்துரைக்குள் நுழைந்ததைப்போலவே மூடியிருக்கும் கதவுகளை தள்ளித்திறந்தபடியே  பல காட்சிகளில் வருகிறார் ரஜினி.

கபாலியில் வயதான ரஜினி ரசிகர்களை ஏமற்றி கொஞ்சம் விலகிச்சென்றார் இதில்  அப்படியல்ல 80/90ல் பார்த்த அதே  ஸ்டைல் மன்னன். ஒப்பனை மிகப்பொருத்தமாக இருப்பதுடன் ரஜினியின் ஃபிட்னஸ் வியப்பூட்டுகின்றது. நடனக்காட்சிகளில் அதே 80 களின் ரஜினி தெரிகின்றார்.

20 வருடங்களுக்கு முன்னதான மதுரை ப்ளேஷ் பேக்கும் கல்லூரி அடிதடியுமாக  விரைவாக நகரும் கதை, கொஞ்சம்  தள்ளாடி  உத்தர பிரதேசத்தில்  நுழைந்ததும் ஏராளமாய் துப்பக்கி சுடுதல். ரஜினி இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், சிம்ரன், த்ரிஷா நவாஸுதீன், சசிகுமார், ஆடுகளம் நரேன் என நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும் கதை ரஜினியை நம்பியே நகருகின்றது. மாலிக் ஆக சசிகுமார் வருகையில் பாட்ஷாவை நினைப்பதை தவிர்க்கவே முடியவைல்லை.

சில காட்சிகளில் வரும் சிம்ரன் அழகு, நன்றாக மெலிந்து சிலிம்ரன் ஆகவும் இருக்கிறார். ஆடுகிறார் பாடுகிறார், ரஜினியை காலம்கடந்து காதலிக்கவும் செய்கிறார் எனினும் உயிரோட்டமின்றி சாவி கொடுக்கபட்ட பொம்மையைப்போல நடிக்கிறார். அவரது தோற்றத்திற்கும் மங்களம் என்னும் பெயருக்கும் பொருத்தமுமில்லை. த்ரிஷா சிம்ரனை விட மிகக்குறைந்த காட்சிகளில் வருகிறார். படத்தில் அவரும் இருக்கிறார். அவ்வளவே. கதாநாயகிகள் இருவருக்குமே எந்த முக்கியத்துவமும் இல்லை.

ராட்சச நடிகரென்று பாலிவுட்டில் பெயரெடுத்திருக்கும் நவாஸுதீன் சித்திக் என்னும் அற்புதமான கலைஞனை இங்கு அவ்வளவாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. மதுரைக்காரராக அவரது வடஇந்திய முகம் ஒட்டவில்லை மேலும் தமிழிலான வசன உச்சரிப்பும் அவருக்கு பொருந்தவில்லை. ரஜினி என்னும் ஆலமரத்தின் கீழ் எந்தச்செடியும் செழித்து வளரமுடியாதுதான். இயக்குனர் மகேந்திரனும் இருக்கிறார் தளர்ந்திருக்கிறார்.

பீட்ஸாவிலும் ஜிகிர்தண்டவிலும் இருந்த கார்த்திக் சுப்புராஜை இதில் காணமுடியவில்லை முழுக்க முழுக்க ரஜினி படம் இது. சனந்த் ரெட்டி மேகா ஆகாஷ் காதல் ஜோடி பரவாயில்லை. அவருக்கே உரித்தான கரகர குரலுடன் ராம்ஸும் இருக்கிறார்

பாடல்களை விவேக், கு.கார்த்திக் மற்றும் தனுஷ் எழுதியிருக்கின்றார்கள். மரணமாஸ் துவக்கபாடலை s.p பாலசுப்ரமனியமும் அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனிருத்  பாடல்களிலும் பிண்ணனியிலும் கொட்டிமுழக்கி இருக்கிறார் மாமனுக்காக. இளமை துள்ளுதே பாடலை மருமகன் தனுஷ் எழுதியிருகிறார். உல்லாலா பாடல் சுராங்கனியையும் பம்பரக்கண்ணாலேவையும் நினைவூட்டினாலும் இனிமை.

ஒரு காட்சியில் சிகரட் பிடிப்பது கெடுதலென்றும் அதை அனுபவத்தில் உணர்ந்தே சொல்லுவதாகவும் ரஜினி சொல்கிறார். 165 ஆவது படத்தில், 60 வயதைத்தாண்டி அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினி சொல்வதை, அவரைப்போலவே ஸ்டைலாக புகைபிடிக்கத்துவங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்று தெரியவில்லை

திரு ஒளிப்பதிவு அபாரம்.  டார்ஜீலிங்கில் Eastern Forest Rangers   கல்லூரி வளாகம் அத்தனை அழகு. சர்ச்சில் மெழுகுவர்த்தி ஒளியுடனான காட்சிகளும் டார்ஜிலிங்கின் மலைப்பாதையும், பனிப்பொழிவும் கண்ணில் நிறைகின்றது  சண்டை இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஹேன்ஸ் அடித்து நொறுக்கியிருக்கிறார். மார்க்கெட் மர்றும் சர்ச் சண்டைகளை மிக உற்சாகமாக இயக்கியிருக்கிறார்.

புதுசா வந்தா விரட்டுவீங்களாடா இது உங்க கோட்டை இல்லை என் பேட்டை, சம்பவம் காத்திருக்கு, ஸ்வீட் சாப்பிடப்போறோம் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசியல் பன்ச்சுகளும் உண்டு

விஜய் சேதுபதி அப்படியே உத்தரபிரதேச வெறியராக வருகிறார். கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். பொருந்தி நடித்திருக்கிறார் எனினும் கொஞ்சம் ஃபிட்னஸ் குறித்தும் யோசிக்கனும். கிளைமாக்ஸுக்கு பின்னரும் இன்னொரு ட்விஸ்ட் காத்திருக்கு ரசிகர்களுக்கு.

ரஜினி ஸ்டைலாக துப்பாக்கி சுடும் காட்சியொன்றில் ஒரு கேரளா நண்பர் ரஜினியிடம் சொல்லுவார் ‘’சாரே , கொலை மாஸானு’’ என்று அதுதான் படத்திற்கான  ஒற்றை வரி விமர்சனமும்.

 

 

 

 

maxresdefault

2015  லிருந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிலிருந்த  “2.0’’ நவம்பர் 29, 2018 அன்று உலகெங்கிலும் தமிழ் , ஹிந்தி மற்றும்  தெலுங்கு என் மூன்று மொழிகளில் வெளியானது.  மிக அதிக தயாரிப்புச்செலவில் இது வரை வெளியாகியிருக்கும் , (ஆங்கிலமல்லாத) திரைப்படங்களின் வரிசையில் , ஒன்பதாவது இடத்திலிருக்கிறது , சுமார் 545 கோடி இந்திய ருபாய் மதிப்பில் தயாராகியுள்ள 2.0.

படப்பிடிப்பு முடிவடைந்து அதன் தொழிநுட்ப வேளைகளுக்காகவே பெரும் செலவும் அதிக காலமும் ஆகியிருக்கிறது. உலகெங்கிலும் இருந்து  30,000 தொழிநுட்பக்கலைஞர்கள் இதன் பிண்ணனியில் உழைத்திருக்கிறார்கள்.

 ஜென்டில்மேனில் துவங்கிய சங்கரின் வழக்கமான சமூக அக்கறையுடனான  படங்களின் வரிசையில்தான் வருகின்றது 2.0. சங்கரின் திரைப்படங்கள் எல்லாமே பிரமாண்டத்திற்கு பெயர்போனவை அதிலும் இது முப்பரிமாணமென்பதால் பிரம்மாண்டம் இன்னும் பலமடங்கு பெருகி பிரமிப்பளிக்கிறது. மனிதர்களைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் பறவைகளும், பறவைகளைவிட 10000 மடங்கு அதிகமாயிருக்கும் புழுபூச்சிகளுமாக நிறைந்திருக்கும் இவ்வுலகை ’’அலைபேசுதல்’’ என்னும் தொழில்நுட்பத்தை அளவிற்கு அதிகமாக  உபயோகிப்பதால் நாம் அழித்துக்கொண்டிருப்பதைப் பற்றிப்பேசும் படம்

காற்றில் மிதந்து வரும் மென்சிறகொன்றினுடன் துவங்குகின்றது படம், வழக்கமான நாயக அறிமுகக்காட்சிகளின் ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல்  மிகச்சாதாரணமாக  முதல் காட்சியில் ஆய்வகத்துக்குள் வருகை தருகிறார் ரஜினி.  அதே தோரணை அதே ஸ்டைல் ,அதே சுறுசுறுப்பு. அதே அட்டகாச சிரிப்பு.

முதல் பாகத்தின் நாயகி ஐஸ்வர்யாபச்சன் இதில்  ஒன்றிரண்டு  அலைபேசிவழி கொஞ்சல் வசனங்களுடன் ‘’ Cameo role ‘’ மட்டும் செய்திருக்கிறார். ரோபோ நாயகியாக , சிட்டியின் காதலியாக எமிஜாக்சன், அவர் உடலே உருவிவிட்டது போல இருப்பதால் ரோபோ பெண் பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். வசீகரனும், புது சிட்டியும் , பழைய சிட்டியும், குட்டி ரோபோ 3.0 வுமாக  படம்  சிறுவர்களை வழக்கமான ரஜினி படங்களைப்போலவே  வசீகரிக்கின்றது.

எதிர்நாயகன் என்று சொல்லவே முடியாதபடிக்கு  இணைநாயகனாக வருகிறார், பக்‌ஷிராஜாவான அக்‌ஷய்குமார்.  தீமையின் குறியீடாக அல்லாமல், நாயகனைக்காட்டிலும் சமூக அக்கறை அதிகம் கொண்டவராக. பறவைகளுக்காக, அவற்றின் பாதுகாப்புக்காக போராடும் பறவை  ஆர்வலராக, அவற்றுக்காகவே உயிரையும் விடுபவராக, பறவையியலாளர் திரு.சலீம் அலி அவர்களைப்போலவே உருவ ஒற்றுமையுடன், சூழல் போராளியாக வரும் அக்‌ஷய்குமாரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது

திரைமொழி எந்த தொய்வுமில்லாமல் செல்பது படத்தின் பெரிய பிளஸ். ஜெயமோகனின், ஆழமும்  அவருக்கே உரித்தான நுட்பமான பகடியும் கொண்ட வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

மிகச்சிறியதோர் கதையை  பிரம்மாண்டமும் தொழில்நுட்ப சாகசங்களுமமாக விரித்து நமக்கு அளிக்கிறார் சங்கர்.  ஒளிரும் திரையில் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகளுடன் கோடிக்கணக்கான அலைபேசிகள்  சுழலாக வந்து ஆட்களை சுருட்டி  விழுங்குவதும்,   அவை கன்டைனர் லாரியின் உள்ளிருந்து வெடித்து பீரிட்டு வருவதும்,  வயிற்றுச்சதை பிதுங்கி, கொப்பளித்து,  கிழிந்து உள்ளிருந்து குருதிதோய்ந்த அலைபேசி வெளியே வருவதும், அலைபேசிகளெல்லாமே சேர்ந்து ஒரு ராட்சத பறவையாகி வருவதுமாக மிரட்டுகிறது படம்.

நெடுஞ்சாலையே  ஒளிரும் அலைபேசிகளாலாவது, காடுகளின் மரங்கள் எல்லாமே அலைபேசியாகவே மாறி மிரட்டுவவதெல்லாம் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்கள்.  பிரம்மாண்டத்தினால் மட்டுமல்லாது தொழிநுட்ப காட்சிகளின் தரத்திலும் கதையின் பேசுபொருளினாலும் 2.0விற்கு தமிழ்படம் என்னும் பிம்பத்திலிருந்தும், ஏன் இந்தியத்தன்மை என்பதிலிருந்துமே ஒரு விலக்கம் இருப்பது போலிருக்கிறது. ஆனால் வழக்கமான  இந்திய சினிமாவின் எந்த ஃபார்முலாவும் இதில் இல்லை என்பதே  இதன் வெற்றியும் கூட.

அலைக்கற்றை நீளம், அதிர்வலைகள் என கணினி தொடர்பான  பல வசனங்களும் காட்சிகளுமே படத்தின் பேசுபொருள் என்றாலும் முடிந்த வரை எளிமைப்படுத்தி எல்லா தரப்பினருக்கும் புரியும் படியாகவே எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

இசை ஏ ஆர் ரகுமான். மூன்றே பாடல்கள். ’புள்ளினங்காளில்’ நா. முத்துக்குமாரின்   கவிதை மிளிர்கிறது. ’ராஜாளி’யில் இசை துடித்து துள்ளிச்செல்கிறது. ’’எந்திரலோகத்துச்சுந்தரியே’’ இளைஞர்களின் பிரியத்துக்குரிய பாடலாய் வெகுகாலத்திற்கு இருக்கும்..

3D   தொழில்நுட்பத்திலேயே படம்பிடிக்கப்பட்ட  முதல் இந்தியத்திரைப்படமான இதில் ஒளி இயக்குனர் நீரவ் ஷாவின்  உழைப்பு பாராட்டத்தக்கது. படம் வெளியான முதல் வாரத்திலேயே மிக அதிக வசூலான முதல் இந்தியசினிமா என்னும் புகழுக்கும் உரித்தானதாகிவிட்டது 2.0. ரசுல் பூக்குட்டியின்  புதிய 4D   ஒலிக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கான இன்னோரு முக்கியக்காரணம். சண்டைகாட்சிகளில் நாயகனுக்கு எதிரில் இருப்பது தொழில்நுட்பஎதிரி என்பதால்  ஸ்டண்ட் கோரியொகிராபர்  Kenny Bates மெனக்கெட்டிருப்பது படத்தைப் பார்க்கையில் தெரிகின்றது. விஷுவல் எஃபெக்ட்ஸின் அதிகபட்ச சாத்தியங்கள் அனைத்துமே சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது

சிட்டி ரோபோ வரும் காட்சிகளில் ,  சிறுவர்களின் ஆராவாரமும் , மகிழ்ச்சிக்கூச்சலும், ரஜினி ரசிகர்களின் கைதட்டல்களும் விசிலுமாக அரங்கு நிறைந்து ததும்பி வழிந்தது. ரஜினி என்னும் ரோபோ பிம்பத்தை வைத்துக்கொண்டெ அவரின் காலத்திற்கு பின்னாலும் வெற்றிகரமாக ரஜினி படங்கள் தயாரிக்கலாம்  என்னும் சாத்தியத்தை 2.0 உறுதிப்படுத்துகின்றது.

 சிட்டி ரோபோவின் காதலியான நிலா ரோபோவுடனான, ரொமான்ஸ் காட்சிகளில்  20 வருடங்களுக்கு முன்னரான ரஜினியைப்பார்க்க முடிகின்றது. எனினும், நிலா ரோபோவின் மேல்சட்டையை முதுகுப்பக்கமாக திறக்க சிட்டி முயற்சிப்பதெல்லாம் தவிர்த்திருக்கலாம். வணிகத்திரைப்படங்களில் பெண்கள்  ரோபோவாக வந்தாலுமே துகிலுரிக்கவேண்டிய அவலம் இந்திய சினிமாவின் சாபக்கேடுதான்.  சிட்டி என்னும் ஆண் ரோபோ உலகை காப்பாற்றுவார் நிலா என்னும் பெண் ரோபோ எடுபிடிவேலைகளுக்கு! பெண்கள் ரோபோவேவானாலும் பலகீன பாலினம்தானென்கிறதா 2.0 ?

  தளர்ந்த நடையுடன் முதியவராக  வரும் அக்‌ஷய்குமார் மரணத்திற்கு பின்னர்  எப்படி சிட்டி என்னும் ரோபோவால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் அளவிற்கான  தீவிரத்துடன் இருக்கும் ஒரு அதீத சக்தியானார் என்னும்  விளக்கமுமில்லை

சிந்திக்க அறிந்துகொண்ட சிட்டிக்கு ஏற்படும் காதல், அதனாலான  அகப்போராட்டம் போன்ற முதல் பகுதியில் சிட்டிக்கு இருந்த உணர்வெழுச்சிகளெல்லாம் இதில் இல்லை என்பதும் குறைதான். கலாபவன் ஷாஜன் சிட்டுக்குருவி லேகியத்தைப்பற்றி  பேசும்  வசனங்களும், அப்போதான அவரின் உடல்மொழியும்  ஆபாச ரகம் . தவிர்த்திருக்கலாம்

வெறும் அறிவியல் புனைவென்றோ, பேண்டஸி படமென்றோ மட்டும் படத்தை பொதுவில் கொண்டு வந்துவிடமுடியாது. நாயகனான ரஜினியை மட்டுமே முழுக்க  நம்பியது என்றும் சொல்ல முடியாதபடிக்கு ரஜினியின் எந்த மரபான ஃபார்முலாவுமே இதில் இல்லை.  ஆனாலும், 2.0 வெறும் திரையனுபவமாக இருக்காமல் ஒரு கொண்டாட்டமாக இருக்குமென்பது உத்திரவாதம்.  ஜெயமோகன் அவர்களே சொன்னதுபோல 2.0 ஒரு தொழில்நுட்பக் களியாட்டம்தான் சந்தேகமில்லாமல்!

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் பார்த்து முடித்த அடுத்த கணத்திலிருந்து இதை எழுதுகிறேன். காலச்சுவடில் விமர்சனம் வாசித்தேன் எனினும் உண்மையில் திரைமொழியைவிட  வேறெதுவும் இத்தனை வீரியமாக இக்கதையைச்சொல்லிவிடமுடியாது என்பதை பார்த்தபின்பே உணர்ந்தேன். இது  ஒரு திரைப்படம், பொழுதுபோக்குவதற்கானது என்னும் எண்ணத்தில்தான் ஒரு தன்ணீர்பாட்டிலும் கொஞ்சம் நொறுக்குத்தீனியுமாய்  நொச்சிமரத்தடி மேசையில் என் மடிகணினியுடன் பார்க்கத் துவங்கினேன்

இது பொழுதைபோக்கும் படமல்ல  விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, அதன் அவலங்களை  ஆதிக்கச்சாதியினரின் வெறியை, இவற்றை அறியாமல் முகிழ்க்கும் ஒரு பதின்பருவக்காதலை இப்படிப்பலதை நம் இதயத்தைக்கீறிக்கீறி , அழுத்தமாகச்சொல்லும் படம் என்பதை  படம்  துவங்கிய சில காட்சிகளிலேயே அறிந்தேன்.

அவசானக்காட்சிகளில், ‘’ கொல்லுடா அவனை’’ என ஈரக்கண்களுடன் உரக்க சத்தமிட்டுக்கொண்டிருந்தது நான்தான் என்பதை இப்போதும் எந்த கூச்சமும் இன்றி நினைவு கூறுகிறேன்.  புகழாரங்களுக்கும், பரபரப்புக்களுக்கும் மத்தியில் வலம்வரும் சர்க்காரும், 96ம் , திரையிடப்படுகையில் அவற்றுடன் வெளியாகியிருக்கும் இதுபோன்ற படங்களுக்கு என்னுடையதைபோல  மனமார்ந்த ஒரு சில எதிர்வினைகளாவது வேண்டுமல்லவா!

எப்படியோ துவக்ககாட்சியிலேயே அந்த கருப்பியின் அறியாக்கண்களை கண்டதும் அதன் முடிவை மனம் யூகித்துவிட்டது. காலடியில் எச்சில் சோற்றுக்கு வாலாட்டிக்கொண்டிருக்க வேண்டிய நாய்கள் உருவிவிட்ட உடலுடன் துள்ளும் இளமையும் திமிறும் உடலுமாய்  நேர்க்கொண்ட பார்வையுடன் வேட்டைக்கு சென்றால், ரயிலுக்கடியில் கூழாக வேண்டும் என்பதை ஆதிக்கச்சாதியினரின் பார்வையில்  நமக்கு சொல்லிவிடுகிறது படம்

பாத்திரத்தேர்வு மிக அருமை. செல்வத்தின் செழுமை கன்னத்தில் பளபளக்க அறியாப்பெண்ணாய் அவள், கொதிக்கும் குருதியுடன்  இளமைக்கெ உரிய ஆர்வமும், தாழ்த்தபப்ட்ட சாதியினருக்கான தயக்கமும் , இயல்பானநேர்மையும் , நடக்கும் காரியங்களின் குழப்பம் கண்களிலுமாக, கதிர், அந்த வாடகைக்கொலையாளியைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கும் நபர் உண்மையிலேயே திகிலைக்கிளப்பினார் எனக்கு. துளிதயக்கமும் இல்லமல் உறுதியான காலடிகளுடன் அவர் இரையை நெருங்குவது, உயிருடன் இருக்கும் பெண்ணையும் சாகடித்து தூக்கில் மாட்டுவது, பேருந்தில், மிக இயல்பாக ஒரு கைநகர்த்தலில் அந்த இளைஞனை கொல்வது,  நீரில் மூழ்கியபபடியே இன்னொரு அறியாச்சிறுவனைக் கொல்வது, கெளரவக்கொலையை குலச்சாமிக்கு வேண்டுதலைப்போல பெருமையுடன் செய்வது, எந்த உணர்ச்சியுமின்றி தவலையில் வாய் வைத்து விலங்குபோல நீரருந்துவது, அவரின் உடல்மொழியும் பட்டைபெல்ட்டும் கட்டுமஸ்தான உடலும் என்னைக்கலக்கியது

ஹாலிவுட் படங்களில் கூட இப்பாத்திரத்துக்கு இத்தனை சரியான தேர்வு இருந்ததில்லை. இறுதிக்காட்சிகலில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சண்டையிட உருண்டுவரும் காட்சிகளிலெல்லாம் அபாரமாக  நடித்திருந்தார்

கல்லூரிக்காட்சிகளும் இயல்பாக இருக்கின்றது, ஆங்கிலவழிப்போதனையில் சிரமப்படும் முதலாமாண்டுமாணவர்கள், அந்த பேராசிரியை ’’ஆத்திச்சூடி’’ படி போ’’ என்று கத்தியபொழுது, கடந்த மாதம் எங்கள் மத்தியில் நாஞ்சில் சார் சொன்னதை நினைத்துக்கொண்டேன்.  நிலவின் பிறை போலிருக்கும் வெள்ளை ஆத்திமரத்தின் ( அகத்தி ) மலரைச்சூடியவனே! என்னும் பொருளறியாது ஒரு ‘’ச்’’ இடையில் சேர்த்து தப்பாகவே இன்னும் அது கற்றுக்கொடுக்கப்படுகின்றது என்றும் ’ச்’ சேர்க்காமல் ஆத்தி சூடி’ யென்றே அது சொல்லப்படவேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்தார்

ஆங்கிலத்துக்கு தமிழ் பரஸ்ரம் உதவிக்கொண்டு பரீட்சையில் பாஸாவது, சின்ன பெரிய C ,  இதெல்லாம் வெகு இயல்பு மற்றும் உண்மை

அந்த PTM   காட்சியில் அப்பா’’நடிகர்’’ அபாரமாக நடித்திருந்தார்

சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம் பல சமயங்களில்   காமிரா பெரும்பாலும் சென்னிறப்பரப்பும்  இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாக காண்பிக்கிறது

அந்தப்பெண்னின் குறுகுறுப்பை  அகலக்கண்களின் வெளிப்பாடுகளை, காதலில் குழையும் உடலை, அறியா மழலைப்பேச்சை நாம் உடனிருப்பதுபோல் அத்தனை துல்லியமாக காமிரா காண்பிக்கின்றது

அதைப்போலவே அவ்விளிம்பு நிலை மனிதர்களின் வாழிடத்தை அத்தனை தத்ரூபமாகக்காண்பித்திருக்கிறார்கள்  அடிக்கடி கொண்டாட்டமாய் நடனம், குளித்து நாளான அழுக்கு உடைகள் பெரும்பாலும் மேல்சட்டையில்லா ஆண்கள்,  காவல் நிலையக்காட்சிகள்,

அந்த தூக்கில் மாட்டப்பட்டு இறக்கும் பெண்னின் வீட்டில் அவள் அம்மாவாக நடித்தவர் மிகப்பிரமாதம்.   தொழில் முறை நடிகைகள் கூட தோற்றுப்போகும் நடிப்பு

’’அவங்களுக்கு வயலும் வரப்பும், நமக்கு வாயும் வயிறும் ’’ ‘’ஒண்ணாப்படிச்சா ஒண்ணாயிருவீங்களாடா’’ எனும் வசனங்கள் மொத்தக்கதையின் சாராம்சம்

கல்யாணவீட்டில் கதிரை அடிக்கும் காட்சிக்குப்பின்னரான,  பிண்ணனியில் பாடல் ஒலிக்கும் காட்சியில் சாதியசாயம் நீலமாக நாய்க்கும் சின்னஞ்சிறு அம்மணக்குழந்தைக்கும் கூட பூசியிருப்பதும் காலம்காலமாக அவர்களை தளைக்கும் கயிறுகளால்  அவ்விளைஞன் கட்டப்பட்டிருப்பதும் அவன் அதிலிருந்து விடுபட திமிறுவதும்  நூற்றாண்டுகளாக அவர்களுக்குள் அடக்கப்பட்ட அந்த இழிவு நஞ்சென, நாகமென வழுக்கிக்கொண்டு அவன் காலடியில் செல்வதுமாய் அருமையாக கட்டமைக்கபட்டிருந்தது

அந்த ஸ்டோர் ரூமில் வாழைத்தாரிலிருந்து கைக்கு கிடைத்த எல்லவற்றிலும் கதிரை நிஜமாகவே அடிக்கிறார்கள். பதை பதைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன் அக்காட்சியை

பரியனின்/கதிரின் அப்பவைப்பற்றிய கேள்விக்கெல்லாம் எப்போதும் ஏன் மழுப்பலாக தடுமாறிக்கொண்டு பதிலளிக்கிறான் என்னும் கேள்விக்கும் மிக நெகிழ்சியான பதிலிருக்கின்றது கதையில்

அவருமென்ன அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார்?

அந்த மனிதரின் நசுங்கியது போன்ற முகமும், ஒடுங்கிய தேகமும் வறுமையில் சுக்காக  காய்ந்திருக்கும் உடலும் கைவிடப்பட்டவர் போன்ற தோற்றமும் ஒட்டுமொத்தமாக பல யுகங்களாக காலடியின் கீழிட்டு மண்ணோடு மண்ணாக மிச்சமின்றி நசுக்கியும் இழிவுபடுத்தியும் வைத்திருக்கும் கீழ்த்தட்டு மக்களின் பிரதிநிதியாகவே  அவரைக்காட்டுகிறது என்றே எனக்குத்தோன்றியது

கண்கள் கசிய நான் திரைப்படம் பார்த்து பல ஆண்டுகளாயிற்று என்பதை அந்த அப்பா பாத்திரம் வரும்போதெல்லாம் உணர்ந்தேன்

அந்த ஜோவின் அப்பா பாத்திரமும் நல்ல தேர்வு, மகள் மேலுள்ள பாசமும், சாதீயபற்றும், அறத்தின் மீதான மிச்சமிருக்கும்  கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுமாக அவரும்  பிரமாதப்படுத்தியிருக்கிறார்

ஜோ அவளின் கையில் பேனாவால்  jo என்று எழுதிவிட்டு, அதன் கீழே மெல்ல  p எழுதுகையில் தயங்கி மெல்ல அவ்வட்டத்தினை பூர்த்தி செய்வது  ஒரு சிறு கவிதையின் அழகு

கல்லூரி துவக்கத்தில் பரியனின் மீது ஆச்சர்யமும் அவன் அறியாமையின் மீது பச்சாதாபமும் பின் மெல்ல நட்பும் பிரியமும் முகிழ்ப்பதை அழகாக உடல்மொழியில் காட்டியிருக்கிறார் நாயகி

பின்வரிசையிலிருந்து முன்வரிசைக்கு பரியன் வரும் காட்சிகள் எல்லாம் அருமை. கழிவறைக்குள் அவன் தள்ளிவிடப்பட்டபோது எனக்கே ஆயாசமாக இருந்தது மேலெழுந்து வருவது என்பது இனி எப்போதும் சாத்தியமில்லை எனும் அவநம்பிக்கையில் நொந்துபோனேன்

அவ்வப்போது கொச்சையான  குரலில் நாடன்பாடல்கள் பிண்ணனியில்  ஒலிப்பது கதைக்கு சொல்லவொன்னா துயரையும் வலுவையும் சேர்க்கின்றது. அந்த பரியனின் அப்பா நடிகர் பெண்வேடமிட்டு ஆடும் காட்சியிலும் காதலை பிரிவை ஏக்கத்தை சொல்லும் உச்ச்ஸ்தாயியிலான அப்பாடலும்  மனதைப்பிழிகின்றது

அந்த நடனத்தை நாமும் பரியனின் கண்களின் வழியே துயருடன் தான் பார்க்கிறோம்

காரின் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டு அந்த துவாரம் வழியெ  காறி உமிழ்ந்தபின்னர் பரியன்  கேட்பதெல்லாமே ஆதிக்கச்சாதியினரை, நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகச்சொல்லும் கேள்விகள்.

ஜோவின் அப்பா இறுதியில் ‘’ பார்க்கலாம் தம்பி நல்லாப்படிங்க, இனிமே என்ன நடக்கும்னு  யாருக்குத்தெரியும் மாறலாம் இந்நிலைமை’’ என்பதுபோல சொல்லும் ஒரு வசனத்தில் அடக்கபட்ட வர்க்கத்தினருக்கான ஒரு நம்பிக்கை இழை தெரியுதென்று நான் நினைப்பதற்குள், பரியன் ’’இல்லை நாங்க நாயா இருக்கனும்னு நினைக்கும் நீங்க நீங்களா இருக்கும் வரைக்கும் எதுவுமே மாறாது’’ என்று அந்நினைப்பில் மண்ணள்ளிப்போடுகிறார்

 கருப்பியைப்பாடையில் தூக்கிச்செல்லும் காட்சியிலும் பிண்ணனிப்பாடல் இதையே சொல்கிறது ‘’ நாயல்லடி நீ  நானல்லவா நீ’’ என்று

மாரிசெல்வராஜின் ’’ஆண்பால் பெண்பால் அன்பால் ‘’ வாசித்தபோது அவரை நேரில் பார்த்து வாழ்த்துச்சொல்லனும் பாரட்டுகக்ளைத் தெரிவிக்கனும்னு நினைத்திருந்தேன், இப்படத்தின் இறுதியிலும் வெள்ளை வேட்டிசட்டையில் ஆதிக்கச்சாதியினரான ஜோவின் அப்பாவும், மேலெழுந்துவரும், நேர்மையான அடக்கப்பட்ட ஆத்திரத்தையும், எதோ ஒரு நம்பிக்கையில் புதைத்துக்கொண்டு நிமிர்ந்துநடக்கும் அச்சமுதாயத்தின் பிரதிநிதியாக பரியனும் இவர்களுக்கிடையில் அறியாபபென்ணாய் பச்சைப்புடவையும் மல்லிகையுமாக துள்ளிக்கொண்டு சதிகளும் வஞ்சமும் சாதியும் தொட்டிருக்காத பிரியத்தின் தூய்மையுடன் அப்பெண்ணுமாய் முடியும்போது  மாரியைச்சந்தித்து அழுத்தமாக கைகுலுக்கனும் என்று விரும்பினேன்

சமீபத்தில் இப்படி ஒரு முழுநாளை ஒரு திரைப்படத்தை பார்க்கவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் எழுதவுமாய் செலவழித்ததே இல்லை

மனம் நிறைந்தும் கனத்தும் இருக்கின்றது

96

 

 

கொஞ்சநாளாகவே கல்லூரியிலும் விபு குழுமத்திலும் 96 பாட்டே பாடிக்கொண்டிருந்தார்கள்.

பலர் திரையரங்கைவிட்டு கண்ணீர் மல்கியபடியே வெளிவந்தார்களென்றும் இதைப்போல முன்காதலைச்சொல்லும் திரைப்படத்தை பார்த்ததில்லை என்றுமே பரவலாக பேச்சிருந்தது. நான் இந்தத்திரைப்படத்தைப் பார்க்கனுமென்று நினைக்கவேயில்லை. எனக்கு எப்போதுமே தமிழ்த்திரைப்படங்களின் மீது அத்தனை அபிமானமிருந்ததில்லை.

பார்வையாளர்களை அடிமுட்டாள்களென்று நினைப்பவையும், நகைச்சுவை என்னும்பெயரில் மூன்றாந்தர ஆபாசங்களை பேசவைப்பதையும், கட்டிக்கொடுத்தால் எட்டுப்பிள்ளை பெற்றுத்தருபவள் போலிருப்பவளை (நன்றி ஜெமொ-சுட்டிப்பெண்) 2ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையின் உடையில் காண்பித்து அதை கவர்ச்சியென்று சொல்லி சித்ரவதை செய்வதுவும்,  தமிழ்நாட்டில் இளைஞர்களே இல்லாத பஞ்சம் நிலவுவதுபோல 60 வயது கதாநாயகனை 14 வயதுப்பெண்ணின் காதலராக மனசாட்சியே இல்லாமல்  ஜோடி சேர்ப்பதும், திரைக்கதையைப்பற்றியும் அதிலிருக்கும் ஓட்டைகளைப்பற்றியெல்லாம் பெரிதாக  அலட்டிக்கொள்ளாமலும் இருப்பதால் அவற்றை பெரும்பாலும் தவிர்ப்பேன். ஒருசில நல்லுதாரணப்படங்களை அவ்வப்போது பார்ப்பதுவும் உண்டு

சமிபத்தில் வந்த கோகோ ஒரு உதாரணம்

அதிகம்கருப்பு வெள்ளைத்தமிழ்ப்படங்கள், மலையாளம் கொரியன் மற்றும் ஆங்கிலப்படங்களையே விரும்பிப்பார்ப்பேன்

எனவே 96 பார்ப்பது குறித்து  எனக்கு எந்த சிந்தனையும் இல்லாமலிருக்கையில் ஆயுதபூஜை விடுமுறையில் வீட்டுக்குவந்த சரண் 96 பார்க்கலாமென்றான். அவன் நண்பர்கள் இதை மிகவும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கெளென்பதால் அவன் பார்க்க விரும்புகிறானென்பதால் இருவருமாக பார்த்தோம்

உண்மையில் இந்த விமர்சனம் எழுத எனக்கு தயக்கமும் அச்சமுமாகவே இருக்கின்றது. அனேகமாக பலநாடுகளின் வசிக்கும் ஆறிவுஜீவி விபு குழும நண்பர்கள் ஒட்டுமொத்தமாக 96க்கு பாராட்டுப்பத்திரம் வாசித்துவிட்டிருக்கும் இச்சமயத்தில் இதுகுறித்து நான் என்நேர்மையான  எண்ணங்களைச் சொல்ல உண்மையிலேயே தயங்குகிறேன்

நேற்று நண்பர் செளந்தர் காற்றின் நிழலில் 96 திரைப்படத்தைப்பற்றி எழுதியிருந்தார் முதலில் திகைத்தேன் இவருமா? என்று ஆனால் அவர் திரைப்படத்தை பற்றி ஓரிரு வரிகளும் பார்வையாளர்களைப்பற்றி பலவரிகளுமாய் சொல்லி மய்யமாய் எழுதியிருந்தார். நிம்மதியாயிருந்தது.

காதலையும் முன்காதலையும் சொல்லிச்சொல்லி இன்னும் அலுக்கவேயில்லை தமிழ்கூறும் நல்லுலகிற்கு. எத்தனையோ கதைக்களங்களை பலமொழிகளில் உலகத்திரைப்படங்களில் எடுத்தாளத்தொடங்கி பல வருடங்கள் ஆனபோதிலும் நாம் இன்னும் காதலைக் கைவிடவேயில்லை

இதிலும் முன்காதலும், பதின்பருவத்துக்காதலுமே மையமுடிச்சு ஆனால் புதிதாகவோ புனிதமாகவோ ஏதுமில்லை. அழகியில் சொல்லப்பட்டதுதான் ஆனால் அழுத்தமின்றி  சொல்லப்பட்டிருகின்றது.

திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு வருவது சகஜமே. ஏனெனில் ஒரு கதைக்கரு திரையில் வருவதற்குள் பலரின் தாக்கம் அதில் சேர்ந்திருக்கும்  அதைத்தவிர்க்கவே முடியாது .ஆனால் முழுக்கதையுமே   தொங்குபாலத்தில் தொங்கிக்கொண்டு செல்வது எரிச்சலாக இருந்தது .

ராம் ஜானகி பள்ளிப்பருவத்தில் காதல், எப்படியோ பிரிவு பின் பல வருடங்கள் கழித்து முன்னாள்  மாணவர்கள் சந்திப்பில் மீண்டும் சந்திக்கிறார்கள் இதை எலாஸ்டிக் போல இழுத்துஇழுத்து 2 மணிநேரத்திற்கும் மேல் கொண்டுபோயிருக்கிறார்கள்.

திரைப்பட விவாதத்திலேயே ஒன்றை முடிவு செய்துவிட்டார்கள் போல, இதற்கு முன்பு வந்த எந்தகாதல்கதையின் சாயலும் இருக்கக்கூடாதென்று எனவே வழமைக்கு மாற்றாக இதில் ஆண் அச்சம் மடம் நாணம் பயிர்ப்புடனும் பெண் கொஞ்சம் துடுக்குடனும் இருக்கிறாள்

இன்னொன்றும் முடிவுசெய்திருக்கிறர்கள், அது இந்த ராம் ஜானகி இருவர் மீதும் ஒரு கெட்டியான புனிதப்போர்வை போர்த்திவிடுவது அதை ஜானகி விமானத்திற்கு செல்லும் போதுதான் அகற்றுவது என.

இருவரையும் physical intimacy  குறித்து எள்ளளவும் நினைக்காத புனிதக்காதலர்களாகவே காட்டியிருக்கிறார்கள். நிச்சயம் அவர்களிருவரும் படுக்கையில் இருந்திருக்கவேண்டியதில்லை ஆனால் ஒரு தழுவலோ ஒரு முத்தமோ கூட இல்லையென்பது இயல்புக்கு எதிரானது. அதில் ஒன்றும் கெட்டுப்போயிருந்திருக்காது அவை அன்பை ஆதரவை கனிவை பிரியத்தை ஏக்கத்தைத் தெரிவிக்கும் உடல்மொழிகளில் சில அவ்வளவே. அதையும் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்

அப்படியான மென் உணர்வுவெளிப்படுதல்களில் ஈடுபட்டால் அது அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திவிடும் என்று பயந்து அதை தவிர்த்தார்கள் என்றால் மனதிற்குள் நினைத்துவெளீயில் காட்டாமல் மறைத்தார்கள் என்றே பொருள்

கற்பை கற்பூரக்கட்டிபோல உள்ளங்கையில் வைத்து பொதிந்து காப்பாற்றும் முயற்சியில் இருப்பது போலக்காட்டியிருப்பதும்  எரிச்சலாக இருந்தது

பள்ளியில் பதின்பருவத்தில் வருவது இயற்கையாக ஆணுக்கு பெண்ணுடலின் மாற்றங்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சியின்பேரிலான காதலே.  பத்தாம் வகுப்பில் தெய்வீகக்காதெலெல்லாம் சாத்தியமே இல்லை

பெண்ணுக்கு ஆணின் உடல் ரீதியான கிளர்ச்சி எந்த வயதிலும் வராது எனினும் பதின்பருவத்தில் ஹார்மோன்களின் கலவரம் இருக்கும் அதே பள்ளிப்பருவத்துக்காதல் என்னும் புள்ளியில் நின்றுவிட்ட ராம் எப்படி உடல் ரீதியான எந்த ஈர்ப்புமின்றி ஜானுவை தவிர்க்கமுடியும் என எனக்குபுரியவில்லை. இதில் அவரை பலூன் எல்லாம் வைத்துக்கொண்டு ஒளீந்துகொண்டிருப்பவராக, நெஞ்சுபடப்டப்பில் மயங்கிவிழுபவராக வேறு காட்டுகிறார்கள்

மேலும் நாட்டுகட்டை வர்ஜின் என்னும் வர்ணனைகள் சங்கடப்படுத்தியது. இதற்கு பேசாமல் ஒருமுறை கட்டியணைத்து முத்தமிட்டிருக்கலாம்

Dialogue delivery  யில் எப்போதும் விசே ஒரே மாடுலேஷனை காட்டுவாரென்றாலும் அவரை (96க்கு முன்பு) எனக்குப்பிடிக்கும். கூத்துப்பட்டறையிலிருந்து வந்தவர், சினிமாவை காதலிப்பவர், புதுமைகளை முயற்சிப்பவர், வசீகரக்குரல், மனதைக்காட்டும் கண்கள்  அழகிய உடல்மொழி, கூடவே விரிந்த தோள்கள்

எல்லா பிம்பத்தையும் இதில் விசே  தகர்த்துவிட்டார்

காட்சிஊடகமென்னும் பெரிய சக்தியில் முன்னனியில் இருப்பவர் கொஞ்சமாவது ஃபிட்னஸ் குறித்த கவனத்துடன் இருக்கவேண்டாமா/? தசைகள் தளும்பி உடல் கட்டின்றி வளர்ந்து shapeless  ஆக இருக்கிறார். அந்தந்த துறைக்கான   சின்சியாரிட்டி வேண்டாமா என்ன?

மிக மிக லோவாக அவர் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது

அதே 10 ஆம் வகுப்பு பையனாக ஜானுவைப்பார்க்கும் போது மட்டும் இருக்கும் ராம் தனது மாணவிகளிடம் நல்ல கம்பீரமான ஆளுமையாக இருக்கிறார். டைட்டில் பாடலுக்குப்பிறகு காமிராவை அவர் தொடவேஇல்லை அவரின் கதாபாத்திரத்தை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை

’’எனக்கு உன்கூட இருக்கனும் நிறைய பேசனும் அவ்வளவுதான்’’  என்று தெளிவாக ராமிடம் சொல்லும் ஜானு,  ஏர்போர்ட் செல்ல்லும் வழியில் கியர் மாற்றும் போது ராம்  தன் கைகளைப்பற்றிக் கொள்ள வேண்டும் என விழைந்து அங்கு தன்  கையை வைத்துக்கொள்வதும், தன்வீட்டுக்கட்டிலில் ஜானு படுத்துக்கொள்ள ரொம்ப மரியாதையுடன் தரையில் படுத்துக்கொள்ளும் ராம் அப்போது மட்டும் ,ஜானுவின் கைகளைபற்றிக்கொண்டே கியர் மாற்றுவதும், தமாஷ்

தொட்டுக்கொள்ளும் விழைவென்றால் தொட்டுக்கொள்வதுதான் அதில் degree  வேறுபாடு இருக்கா என்ன? கைகளை மட்டும் தொட்டுக்கொல்ளலாம், ஏர்போர்ட் போகும்போது மட்டும் கொஞ்சம் கொள்கையை தளர்த்திக்கொள்ளலாம் அப்படியா?

இழந்த காதலினால் வேறு திருமணம் செய்துகொள்ளாமல் தொழிலில்  அர்ப்பணிப்புடன் கவனமாக இருந்து  அவ்விழப்பை ஈடுகட்டி அத்துறையில் வெற்றி பெற்றிருக்கிறாரா? அவரை அறிமுகப்படுத்த ஒரு தொழிலைகாட்டி இருக்கிறார்கள் அவ்வளவே!

உடல்மொழியில் எண்ணங்களை காட்டுவதில் ஃபர்ஹான் அக்தரிடமும் ஃபகத் ஃபாசிலிடமும் பாடம் படிக்கனும் இவங்கஎல்லாம்

த்ரிஷாவும் அத்தனை உணர்வெழுச்சியுடன் இதிலில்லை

அவர்  கல்லுரியில் தன்னைப்பார்க்க வந்தது ராம் என்று தெரிந்து குளியலறையில் கதறிஅழும் காட்சியில் மனம் ஒன்றவே இல்லை

மின்னலே’ வில்  ரீமாசென் வெண்மதி பாடலில் குளியலறையில் அழுவது கூட காட்சியுடன் ஒன்றவைக்கும் நம்மை

கல்லூரிக்கு அத்தனைவருஷம் கழித்து பார்க்க வந்த ராம் வசந்தியின் நோட்டுப்புத்தகத்தை வாங்கி முட்டாள் தனமாக ஏன் ஜானகி என்று எழுதிக்கொடுத்தார் கே ராமச்சந்திரனென்றல்லவா எழுதிக்கொடுக்கனும்?

எல்லாக்காட்சிகளுமே மிகைபடுத்தபட்ட நாடகத்தனம்  தெரிந்தது. செயற்கையாக நிறைய நாடகபாணியிலான காட்சிகள் சிரமமாக இருந்தது. மேலும் கதை நத்தை வேகத்தில் நகர்கின்றது. நேர்க்கோட்டில் மிக மிக மெதுவே செல்லும் கதையில் திருப்பம் இல்லாவிட்டால்  போகிறது, ஒரு சந்து கிந்து வளைவு?  ஒன்றுமேயில்லை

நண்பர்கள்  சந்திப்பில் முன்காதலர்கள் சந்தித்தால் , அவர்களுக்குள் ஏதேனும் நடந்தால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர்களை சிங்கப்பூர்காரன் கேள்விகேட்பான் என்று தேவதர்ஷினியும் நண்பரும் கவலைபப்டுவது அபத்தம். நிகழ்சி ஏற்பட்டாளர்கள் எதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்?

10 ல் படிக்கும் பையனும் பென்ணும் ஸ்கூல் வாட்ச்மேனிடம் காதலைபகிர்ந்துகொள்ள முடியுமென்பதும் அபப்டியே. வாட்ச்மேன் அவர்களின் காதலை  கவனிப்பதுபோல காட்டியிருக்கலாம்

த்ரிஷா ராமின் வீட்டில் பேசும் பல வசனங்களில் நுட்பமோ அழகுணர்வோ ஆழ்ந்த, இழந்த காதலின் வலியோ  இல்லை உண்மையில் ஜெயமோகனைப்படிக்கும் நான் கூட அந்த சந்தர்பத்தில் மிக ஆழமான உணர்வெழுச்சியுடன் வசனங்களை எழுதியிருக்க முடியுமென்றே  தோன்றீயது J

பள்ளிக்காலத்திலும் கல்லூரிக்காலத்திலும் காதலை யாரும் தவிர்த்துவிடவே முடியாது

காதல், கல்யாணத்திலும், கல்யாணம் ஆகாதபொழுதும் முடிவதுமில்லை இப்படி முறிந்த, நிறைவேறாத, இழந்த, தொலைத்,த சொல்லாத பல காதல்கள் இன்னும் இருக்கின்றன

கல்லூரியிலேயெ இருக்கும், இன்னும் இன்னுமென காதலின் பல வடிவங்களை அனுபவத்தில் பார்க்கும் எனக்கு, அழகாக  கொண்டு போயிருக்கலாம் இப்படத்தை  என்று ஆதங்கமாகத்தான் இருந்தது பார்க்கையில்

 

பலருக்கு கிடைக்காத காட்சி ஊடகமென்னும் அரிதாக கிடைத்த ஒரு வாய்ப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மக்களுடன் தொடர்பில் உள்ள  வாய்ப்பினை  இப்படி வீணடிக்க  எப்படி முடிந்தது இவர்களுக்கு என்று வருந்தினேன்

இப்படம் மிக அருமை பலமுறை பார்த்தென் என்றெல்லாம் சொல்பவர்கள்  மனதில் ஒளிந்துகொண்டிருக்கும் காதலொன்றை மற்றவர்களுக்கு சொல்லிக்கொள்ள இப்படத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறார்களா என்ன?

எனக்கு இப்படம் ஏமாற்றத்தையே அளித்தது. ரோமாபுரியிலும் என்னால் பொள்ளாச்சிக்காரியாகவேதான் இருக்கமுடிகின்றது

இந்தத்திரைப்படத்தில் பாரட்டும்படி ஒன்றுமேயில்லை என்று  சொல்லிவிடமுடியாது  சிலவற்றை சொல்கிறேன்

நண்பர்கள் சந்திப்பு ராம் ஜானு தவிர மற்றபடி அழகாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது

ஒரு நண்பரைகுறித்த ஏதோ ஒன்றை சொல்லப்போக மற்றவர்கள் அவரை தள்ளி விழுந்துபுரண்டு வாயடைக்கும் காட்சி

தேவதர்ஷினியின் இயல்பான உடல்மொழியும் குரலும், ராம் பாத்திரத்துக்கு தேர்வுசெய்யப்பட பையனும் அவனின் கல்லூரிக்கால கொஞ்சம் மூத்த ஒருத்தனும் நல்ல தேர்வு

ஜானு குளியலறையிலிருந்து கொடுத்த ஈரத்துணிகளை ராம் பிழிந்துகாயப்போடுவது நல்ல  இயல்பானகாட்சி (ராம் அவள் மாங்கல்யத்தை தொட்டுக்கும்பிடுவதெல்லாம்  ரொம்பவே மிகை)

நஸ்ரியாவின் சற்றே பெரிதுபடுத்தபட்ட வெர்ஷன் போலிருக்கும்   விசேவிற்கு காரோட்டும் , அவரை அவ்வபோது விழுங்கிவிடுவதுபோல பார்க்கும்  அந்தப் பெண்ணும் அழகு

எனக்கு மிக மிக அந்தரங்கமாக பிடித்த  ஒன்றென்றால் இறுதிக்காட்சியில் ராம் தன்னந்தனியே பால்கனியில் நின்றிருக்கையில் அவருக்கு பின்னே இரண்டு பக்கமும் தொட்டிகளில் இருந்த பசுஞ்செடிகள் தான் J

 

 

 

கோலமாவு கோகிலா

 

நண்பர்கள் சுரேஷும் செளந்தரும் இத்திரைப்படத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்லியிருந்தார்கள்.  நல்ல படம் , பார்க்கலாமென்று சுரேஷ் பரிந்துரைத்திருந்தார். செளந்தர்  விமர்சனம் எழுதியிருப்பதாய்  சொன்னார். நேற்று விபு  குழுமத்திலும் இதைக்குறித்துப்பேசினோம். சரி ஒருநாள் பார்க்கனும்னு  நினைச்சேன்.

அமேசான் ப்ரைமில் சீக்கிரம் வந்துரும்னு கூட நினைத்தென். என்னமோ  நினைத்துக்கொண்டாற்போல், விடுப்பில் வீட்டிலிருந்த சரணும் நானுமாக மதியம் திடீரெனக்கிளம்பி  பஸ் பிடித்து சென்றேவிட்டோம்.

விகடன் உள்பட  எதிலும் விமர்சனம் பார்க்கலை , கேட்கலை, செளந்தர் எழுதினதும் இன்னும் வாசிக்கலை. கிரேஸி மோகன் ஒரு நூலின் முன்னுரையில் //புத்தகத்தை வாசிக்கும் அல்லது  திரைப்படத்தை பார்க்கும் முன்னர் விமர்சனம் தெரிஞ்சுகிட்டு பின்னர் அதை வாசிக்கறப்போ அல்லது பார்க்கறப்போ என்னமோ ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்ட மாதிரி இருக்கும்//னு சொல்லியிருந்தது போல நான் முன்கூட்டியே தெரிஞ்சுக்காமத்தான் எப்போவும் போவேன்

படம் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த நல்ல படமா இருந்தது. அலுப்புத்தட்டாத திரைக்கதை.  திரைப்படங்களின் லாஜிக், நம்பகத்தன்மை பற்றியெல்லாம் நான் எப்போவும் மெனக்கெடுவதிலை எனவே மிகப்பிடித்திருந்தது. முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வுதான் அதுவுமந்த வேன் காட்சிகள் தேவைக்கும் அதிகமான நீளம்

ஆனால் striking feature of the movie  என்று சொன்னால் சந்தேகமில்லாமல் நயன்தாராதான். முழுக்க முழுக்க அவங்களை நம்பியே எடுக்கப்பட்ட படம். வாட்ட சாட்டமான நாயகன் இல்லை, டூயெட் பாடல்கள் இல்லை, காமெடியன்கள் (நல்லவேளையாக) இல்லை, 5 பாடல்களும்,  குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றைச்சமன் செய்ய 5 சண்டைக்காட்சிகளும் என்னும் தமிழ்சினிமாவின் மரபான   frame ற்குள்ளும் இத்திரைப்படம் வரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாடல்களும் இல்லை. இத்தனை இல்லை’களையும் ஈடுகட்ட ஒரே ஒரு நயன்தாரா இருக்கிறார் என்பதே படத்தின் பலம்

நயன்தாராவை பிடிக்கும் எனக்கும்’ னு சொல்லவேண்டியதில்லை ஏனெனில் எல்லாருடைய ப்ரியப்பட்ட  நடிகை என்றும் அவங்களைச்சொல்லலாம். அப்படி ஒரு தூய அழகு அவங்களுடையது. நயனின் அந்தரங்க வாழ்வின் அவலங்கள் துயர்கள் எல்லாம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் வழக்கமாக உருவாகும் கசப்பும் கீழ்மையான, தாழ்மையான அவதானிப்புகளும்  ஏளனமும், அவர் மேல் வராமல் இன்னும் எல்லா மனதிலும் அழகாக அமர்ந்திருக்கிறார். காழ்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தூய அழகு அவருடையது

இந்தப்படத்தில் அவருக்கென்றே பிரத்யேகமாய் ஒரு காமிராவை நிறுத்தினது போல எல்லா ஃப்ரேமிலும் நயன் நயன் நயன். அவங்களை விட்டு வேறெதிலும் நம் சித்தத்தை குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த  மிகச்சாதாரணமான, கவர்ச்சியாக அவர்களைக்காட்டவே காட்டாத சட்டையிலும், கணுக்கால் வரையில்மட்டுமே இருக்கும் பாவாடையிலுமாக வேறு யாரும் இத்தனை கொள்ளை அழகாக இருக்கவும், தெரியவும் முடியாது. எளிய ஆயில் மேக்கப், கொஞ்சமாக நிறமேற்றபட்ட கேசம்,  gun மெட்டலில் சின்னஞ்சிறிய தோடு அவ்வளவுதான், ஆனால் திரையில், அந்த சிதிலமடைந்த மிகப்பழைய வீடும்,  மங்கின சூழலும் நயன் வந்ததும்  பிரகாசமாகிவிடுகின்றது. அவரின் பட்டுப்  போன்ற  சருமத்தின் மென்மையை பார்க்கிறவர்கள் தொட்டுப்பார்க்காமலேயே உணரமுடிகின்றது.

முகத்தில் கால்பாகமும், வெள்ளித்திரையில் பாதியளவிற்கும் இருக்கும்  நயனின் அகன்ற கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. அதுவும் அடிக்கடி,  நீர்நிரம்பிய குளம்போல தளும்பி ஒருகணம் தயங்கி பின் சட்டென உடைந்து அகலமாக மையெழுதிய கரைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் சொட்டுவது அத்தனை ரசிக்கும்படி இருக்கு, ஆம் நயன் அழுவதும் அத்தனை அழகு.

அழகென்று சொல்கையில் இன்னொன்றும் சொல்லனும்,   பொதுவாக அலங்காரச்செடிகளை நர்சரியிலோ வேறு யாருடைய வீட்டிலோ பார்க்கையில் சிலசமயம்  இதுபோல செடிகள் நம் வீட்டில் இல்லையேன்னு ஏக்கமாக வருத்தமாக இருக்கும், சிலசமயம் இதெல்லாம் நம்ம வீட்டுக்கு பொருந்தாதுன்னு தோணும், சிலதைப்பார்க்கையில் அறவுணர்வு எல்லாம் மறந்து, திருட்டுத்தனமாகவேணும் கொஞ்சம் கிள்ளியாவது எடுத்துட்டுபோய் வீட்டில் நட்டு வச்சுக்கணும்னு  தூண்டல் இருக்கும்,   ஆனால் துளசிச்செடியை  மாடத்தில் பார்க்கையில் ஒரு நிறைவு இருக்கும் நமக்கு. இதுபோல வேணும் வேண்டாம்னு எதுவும் தோணாம நிறைவு மட்டுமெ இருக்கும்

அப்படி அழகு நயனுடையது. பிற நாயகிகளைப்பார்க்கையில் அவர்களின் தளுக்கும் மினுக்கும் செயற்கையான பாவனைகளும், அதீத ஒப்பனையும்,  ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். (எனக்கு). ஆனால் நயனைப்பார்ககையில் அவர்களின் அழகு ஒரு  divine and dignified  என்று தோன்றும். ஷோபனாவைப்பார்க்கையில் மட்டும் அப்படியிருக்கும் எனக்கு முன்னால் எல்லாம்.  Sex appeal  இல்லாத நிறைவு மட்டுமே உண்டாக்கும் அபூர்வ அழகு இது

அலியா பட் , மீரா ஜாஸ்மின் இரண்டுபேரும் கூட இப்படியான நிஷ்களங்கிகள் தானென்றாலும் அவர்களிடம் இருக்கும் அந்த சிறுமித்தனம் நயனிடம் இல்லாமல் ஒரு கண்ணியமும் முதிர்ச்சியும் இருக்கும்

ஒரு காட்சியில்  வீட்டு வாசலில் நயனும் அவள் அப்பாவும் அமர்ந்திருப்பார்கள் மிகக்குறைந்த வெளிச்சத்தில் பக்கவாட்டுத்தோற்றத்தில் அந்த சீர்மையும் கூர்மையுமான மூக்கும் , பெரிய இமைப்பீலியும் கலைந்த கேசம் நெற்றிக்கு முன்னால் வந்துவிழ உணர்வுகள் மாறி மாறி  நிழலாடிக்கொண்டிருக்கும் நயன்  ஒரு கவிதைத்துணுக்குபோலிருந்தார். அந்தக்காட்சியே ஒரு கவிதைதான்

We are the millers  என்னும் படத்தின்  தழுவலென்று சரண் இப்போது சொல்கிறான் அதுபற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை

சுமாரான திரைக்கதை ஆனால்  எல்லாவற்றையும் compensate  செய்துவிடுகிறது நயனின் இருப்பு

முதல்காட்சியிலிருந்தே மிகவும் underplay  தான் நயன் செய்வது, மிகக்கொஞ்சமாக  அவர்  பேசினாலும் மிக மிக அதிகமாக அவரின் கண்கள் பேசுகின்றது.  வசனங்களும் மிக மென்மையான மாடுலேஷனில் தன் நயனுக்கு

துவக்கக்காட்சியில் தவறாக அவரை அழைக்கும் மேலாளரிடன் நயன் பேசும் மறுமொழி நச்

சரண்யா பொன்வண்னன் மீள மீள  ஒரே மாதிரியான அம்மாவாகவே இருக்கிறார். அந்த அப்பா கதாபாத்திரம் என்னவோ எனக்கு கொஞ்சம் பொருந்தாத தேர்வெனத்தோன்றியது. வேறுயாரையாவது போட்டிருக்கலாம். டெல்லி கணேஷ் சாரைப்போல  உணர்வுகளை இயல்பாக வெளிக்காட்டும் நடிகராக இருந்திருக்கலாம். இவர் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் கடனேனு வந்துபோவது போலிருந்தது. அந்த இரண்டு காதலர்களும் ஓகே நகைச்சுவைஇல்லாத குறைக்கு இருக்கிறார்கள்.

கடத்தல் மற்றும்  பாலியல் அத்துமீறல்கள் நடக்கும் காட்சிகளிலெல்லாம் இந்துக்கடவுள்களை அதிகம் காட்டி கேவலப்படுத்துகிறாரகள்,  என்பதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களையெல்லாம் நான் கவனிக்கவே இல்லை,  (அல்லது நயன் கவனிக்க விடவில்லை).  இதுபோன்ற   விதிமீறல்கள் எல்லாம் மதம் இனம் மொழியையெல்லாம் கடந்தது அல்லவா? பின்பாதியில் வேனிலேயே ரொம்பநேரம் பயணித்ததில் இடுப்பு வலித்தது, மேலும் அதிகம் இழுவை காட்சிகள்.

தலைப்பை நியாயப்படுத்த இறுதியில் நயன் கோலமாவு விற்காவிட்டாலும் எனக்கு படம் பிடித்துத்தான் இருந்திருக்கும்.

நல்ல பொழுதுபோக்குஅம்சங்களுடனான படம், வழக்கமான மொக்கைத்தமிழ் படங்களினின்றும்  மாறுபட்ட படமும் கூட

 

 

 

 

 

 

 

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑