லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 3 of 6)

விஷ்ணுபுரம் விழா- 2021

2021 க்கான விஷ்ணுபுர விருது விழா கோவையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பது உறுதியானதும்  எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக நானும் மகன்களும் விழாவில் கலந்து கொள்வது குறித்து பேசிக்கொள்ள  துவங்கினோம்

இந்த முறை இளையவன் தருணும் டேராடுனிலிருந்து  விடுமுறையில் வந்திருந்தான். சரண் மேற்படிப்புக்கான திட்டங்களுடன்  இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு விழாவில்  கலந்து கொள்ள முடியாதென்பதால் மூவரும் வெள்ளி மாலையே கோவை செல்ல முடிவு செய்து, ராஜஸ்தானி அரங்கின் அருகிலேயே விடுதி அறை ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

விழா தேதி  நெருங்க  நெருங்க நோய் தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுவிடுமோ என்னும் அச்சம் இருந்தது. அடிக்கடி செய்திகளை பார்த்து அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். விழா நாயகரான விக்கிரமாதித்யன் அவர்களின் கவிதைகளையும் பிற விருந்தினர்களின் படைப்புகளையும் மூவருமாக கலந்து  வாசித்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.

கல்லூரி திறந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாக இருந்தாலும்,  விழா நடைபெறவிருந்த சனி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் விடுப்பு எடுப்பது குறித்து கவலை இல்லாமல் இருந்தேன். ஆனல் எதிர்பாரா விதமாக விழாவிற்கு இரு நாட்கள் முன்பு சரணுக்கு நல்ல காய்ச்சல் தொடங்கியது.மருத்துவமனை சென்று அது கவலை படும்படியான காய்ச்சல் இல்லை என்பதை உறுதிசெய்தேன்.  எனினும்  வெள்ளிக்கிழமை கல்லூரியில் மனம் ஏதோ இனம்புரியாத சங்கடத்தில் இருந்தது.

கல்லூரி முடிந்து வீடு வந்து  தான் நலமாக இருப்பதாகவும் ஆனால் காய்ச்சலுடன் விழாவிற்கு  வருவது நோய்தொற்று சமயத்தில் சரியாக இருக்காது என்பதால் வரவில்லை என்றும் சொன்ன  சரணை அரைமனதுடன் வீட்டில் விட்டுவிட்டு நானும் தருணுமாக கோவை  வந்தோம்.

வெள்ளி இரவு ராஜஸ்தானி அரங்கில்  நீங்கள் இருந்த அறைக்கதவை  தயக்கத்துடன் திறந்தேன். வழக்கம்போல கட்டிலில் நீங்களும் நாற்காலிகளிலும்,  தரையிலும் நண்பர்களுமாக அமர்ந்து தீவிர  உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

அப்போதே விழா மனநிலை தொடங்கிவிட்டிருந்தது. அனங்கன், ஜாஜா, சாகுல், சுபா, நிகிதா உள்ளிட்ட பலர் இருந்தார்கள்.  இரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் புறப்படும்வரை இருந்துவிட்டு பின்னர் விடுதிக்கு சென்றேன். மறுநாள் நிகழ்வு குறித்த எதிர்பார்ப்பும், தனியாக வீட்டில் இருக்கும் மகனின் நினைவிலும் தூக்கமின்றி கழிந்தது இரவு .

சனியன்று அதிகாலையிலேயே , உறங்கும்  தருணுக்கு காத்திராமல் விழாவிற்கு புறப்பட்டு  விடுதிக்கு வெளியே இருக்கும் ஒரு ஆட்டோவை அழைத்தேன் அந்நேரத்துக்கு அழைத்ததும் பரபரப்பாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜஸ்தானி அரங்கம் என்றதும் கேள்வியுடன் என்னை பார்த்தார். பின்னர் ’’என்னம்மா மார்கழி மாசம், தலைக்கு ஒரு குல்லா போட்டுக்க கூடாதா? இப்படி வரீங்களே ? என்றார்.  எனக்கு  குளிர் உறைக்கவே இல்லை என்பது அப்போதுதான் உறைத்தது.  ராஜஸ்தானி  அரங்கம்  வந்து அங்கே ஆள் நடமாட்டம் இல்லாதிருப்பதில் அவர் குழம்பி, ’’இங்கேதானாம்மா’’ ? என்றார் ஆம் என்றேன். குழப்பத்துடன் அவர் புறப்பட்டு சென்றார்

பனி போர்வை போல  மூடியிருந்தது.  யோகேஸ்வரனும், உமாவும் விருந்தினர்களுக்கான  அறை சாவிகளுடன் வாசலிலேயே காத்திருந்தார்கள்.. உமா அந்த அதிகாலையில் அங்கிருந்தது ஆச்சரியமளித்தது அவளுக்கு சிறு மகள் இருக்கிறாள். மகளை தன் கணவர் பார்த்துக்கொள்வார் என்றாள் அத்தனை தூரத்திலிருந்து அந்த அதிகாலையில் கடும் குளிரில் உமா வந்திருந்தது நெகிழ்ச்சி அளித்தது..

. சென்னையிலிருந்து  மதுவும் இன்னும் பலரும் வரத்துவங்கியதும் உமாவும் யோகேஷும் பரபரப்பாக அறைகளை ஒதுக்கி சாவியை கொடுக்க துவங்கினார்கள். யோகேஷ் விருந்தினர்களை வரவேற்க ரயில் நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தார்.

அந்நேரத்துக்கே அனைவருக்கும் தேநீர் வந்திருந்தது.  பெட்டிகள் பிரிக்கப்பட்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டு கொண்டிருந்தன. நூற்பு ஆடைகள் இருந்தன. தன்னறத்தினர்  சின்ன சின்ன மலர்க்கோலங்களை வாசல் தரையில் அமைத்தார்கள். அவற்றுடன்  ஓரிகாமி காகித பறவைகள்  மற்றும் வண்ணத்துப்பூச்சி வடிவங்களையும் ஆங்காங்கே அமைத்தார்கள்.அத்தனை புதிய  புத்தகங்களை பார்க்க பரவசமாக  இருந்தது.

திருச்செந்தாழை, நாஞ்சில் நாடன், சோ தர்மன், பாவண்ணன், வசந்த சாய்  என்று விருந்தினர்களும்  வரத்துவங்கினார்கள். .எதிர்பார்த்தது போலவே விஜயசூரியன் உணவளித்து கொண்டிருந்தார்.

நீங்கள் வழக்கம் போல் குன்றா உற்சாகத்துடன்  சுற்றி நிற்பவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்.. அந்த ஆற்றல் என்னை எப்போதும் வியப்படைய வைக்கும் நள்ளிரவு வரை உரையாடிக்கொண்டு, பயணித்துக்கொண்டு இருந்தாலும்  அதிகாலையில் புத்தம் புதிதாக மலர்ச்சியுடன் தீவிரமான உரையாடலில் நீங்கள் இருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். உங்களின் அந்த விசை உடனிருப்பவர்களையும் செலுத்திக் கொண்டிருக்கும்.

வரிசையாக 7 பைக்குகளில் இளைஞர்கள் வந்தபோது நான் அவர்கள் இடம் மாறி வந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் அவர்கள் விஷ்ணுபுரம் விழாவிற்கு தான் வந்திருந்தார்கள். இந்த முறை வழக்கத்தை காட்டிலும் அதிக இளைஞர்கள் விழாவில். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் இடத்தில் பணிபுரிபவள் என்பதால் , இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு அதிகாலையில் இலக்கிய பரிச்சயம் உள்ள அத்தனை இளைஞர்கள்  வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

அரங்கில் இரம்யா, சுஷீல்,  கல்பனா, ஜெயகாந்த், ஜெயந்தி , காளி பிரசாத், கதிர்முருகன், குவிஸ்செந்தில், பாலு  உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பல நண்பர்கள் விழா தொடர்பான  ஏதோ ஒரு முக்கிய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை யாரும் வழிநடத்தவில்லை.  ஆனால் எல்லா வேலைகளும் கச்சிதமாக  விஷ்ணுபுரம் விழவிற்கே உரிய மாறா ஒழுங்குடனும் மகிழ்வுடனும்  நடந்துகொண்டிருந்தன. மேடை இலக்கிய விவாதத்தின் பொருட்டு ஒருங்கிக்கொண்டிருந்தது.  விருந்தினர்கள் ஒவ்வொருவராக  வரவேற்கப்பட்டு  அரங்கில் அமர செய்யப்பட்டனர். உணவு  தயாராக  இருந்தது அறைகள்  காத்திருந்தன, புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன. அரங்கு நிரம்ப துவங்கியது..

கண்ணுக்கு தெரியாத  மாபெரும்  வலையொன்றினால்  இணைக்கப்பட்டிருப்பது போல அத்தனை திசைகளிலும் பணிபுரிந்தவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு விழா அரங்கும், விழாவும் தயாராகிக்கொண்டிருந்தது.  அவ்வலையின்  மத்தியில்  மானசீகமாக உங்களை  நிறுத்தியே அனைவரும் பணிபுரிந்தார்கள்.

அஜிதனை, பார்த்தேன் முன்பே  அலைபேசியில்  பேசி அறிமுகமாகி நட்புடனிருந்த  அத்தானி ஆனந்த் மனைவியுடன் வந்திருந்தார், ஆவடியில் இருந்து தேவி, திருச்சியிலிருந்து டெய்ஸி ஆகியோரையும்  முதல்முறையாக பார்த்து பேசினேன். விக்கிரமாதித்யன் அரங்குக்குள் நுழைந்தார்.அவரை பார்க்கையில் அவர் ஒரு காட்டுச்செடி என்று மனதில் நினைத்தேன்., மழையும், வெயிலும், புயலும் ,காற்றும்  எதுவும் பொருட்டேயில்லாத காட்டுச்செடி.அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு வணங்கினேன். என்னை  அவருக்கு தெரிந்திருந்தது.

விழா குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது.   இலக்கிய விவாத அமர்வுகள் துவங்கின, வழக்கமாக மேடையை அலங்கரிக்கும் ஜெர்பரா பெருமலர்க்கொத்துகள்  இந்த முறை முதல் நாள் அமர்வுகளின் போது வைக்கப்பட்டிருக்க வில்லை. மறுநாள் விழா மேடையில் வழக்கம் போல் அவை இடம்பெற்றிருந்ததை காணொளிகளில் பார்த்தேன்.

விழா  அரங்கு வண்ண மயமாக இருந்தது, நல்ல கூட்டம். ஆஸ்டின் செளந்தர் மகளும் புதுமணப்பெண்ணுமான பார்கவி கணவருடன் வந்திருந்தாள்.  காகித வண்ணத்துப்பூச்சியை தன் சிறு மகளுக்கு  எடுத்துக் கொடுத்து  ’’பட்டர்ஃப்ளை’’ என்று அவளுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார் ஒருவர்.   சொல் திருந்தியிருக்காத அவள் ’’டட்டட்டை’’ என்றாள் மலர்ந்து.  அந்த பச்சை வண்ண காகித வண்ணத்துப்பூச்சியை பரவசத்துடன் கைகளில் எடுத்துக்கொண்டு தளர்நடையிட்ட அவள் இரு எட்டுக்கள் வைப்பதும் பின்னர்  ’’ட ட்டட்டை’’ என்று சொல்லி விட்டு அண்ணாந்து  வானில் பறக்கும் மானசீக வண்ணத்துப்பூச்சியை கண்டதுபோல பரவசமடைவதும் பின்னர் மீண்டு சில எட்டுகள் வைத்துவிட்டு டட்டட்டை என்று சொல்லி அண்ணாந்து பார்த்து பூரிப்பதுமாக இருந்தாள்.

இலக்கிய அமர்வுகளின் போது இந்த முறை  வழக்கத்தை  காட்டிலும் கூடுதல் கேள்விகள் வந்ததை கவனிக்க முடிந்தது. பல புதியவர்கள் ஆழமான கேள்விகள் எழுப்பினார்கள். நீங்கள் பெரும்பாலும் ஏதும் கேட்கவில்லை.

மதிய உணவிற்கு பின்னர் செந்தில் ஜகன்னாதன் அமர்வு துவங்கிய போது  சரண் கடும் காய்ச்சலும்,  குறைந்து கொண்டே வரும் ரத்த திட்டுக்களின் எண்ணிக்கையுமாக  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வந்தது. பதற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பினேன். தருணுக்காக   அரங்கின் வாசலில்  காத்திருக்கையில்  திருச்செந்தாழை பார்த்து  விசாரித்துவிட்டு ’’கவலைப்படவேண்டாம் சரியாகிவிடும்’’ என்றார்

2 மணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்தேன், விழாவை தவறவிட்டு வர காரணமாயிருந்ததற்கு  சரண் பலமுறை அந்த கடும்காய்ச்சலிலும் மன்னிப்பு  கேட்ட படியே  இருந்தான்.  கண்ணீருடன் அணைத்துக்கொண்டேன்.   இரண்டாம் நாள் விழாவை மருத்துவமனையில் இருந்தபடி  நண்பர்கள் அனுப்பிய காணொளிகளிலும் புகைப்படங்களிலும்  பார்த்துக்கொண்டிருந்தேன். விழா நிறைவில் எடுத்துக்கொள்ளப்பட்ட குழு புகைப்படத்தில் நானும் மானசீகமாக ஒரு ஓரத்தில் நின்றேன். விழாவை தவறவிட்டதன்  இழப்புணர்விலிருந்து விழா குறித்த கடிதங்களை  வாசிப்பதன் மூலம்  மீண்டு வருகிறேன். இதோ ஜனவரி  வந்துவிட்டது இன்னும் 10 மாதங்களில்  அடுத்த விஷ்ணுபுர விழா வந்துவிடும் என்று இப்போதே மனதை தேற்றிக்கொண்டு, எதிர்பார்க்க  துவங்கிவிட்டேன்

அருணாவின்  ‘பனி உருகுவதில்லை’  ஆனந்தின் டிப் டிப் டிப், உள்ளிட்ட எந்த புத்தகங்களையும் வாங்க முடியாமல் போனதில் கூடுதல் வருத்தம்

மகன் உடல் தேறி வீடு வந்துவிட்டான்.  இன்னும் விழா உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கையிலிருந்த காகித வண்ணத்துப்பூச்சியை பார்த்துக்கொண்டு, மனதிலிருக்கும் வண்ணத்துப்பூச்சி பறப்பதை கற்பனையில் கண்டு களித்த  அந்த குழந்தையை போல,   கலந்துகொண்ட ஒருநாளின் நினைவில் தவறவிட்ட மற்றொரு நாளை கண்டுகொண்டிருக்கிறேன்.

உருட்டும் பூமரும்,

 இந்த யுகத்தின்  இளைஞர்களுக்கான  புது வழங்கு சொற்களை வீட்டில் அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் அல்லது எப்போதும் தருண் தான். அரிதாக நானும் கல்லூரியில் கேட்பவற்றை சொல்லுவதுண்டு.

சரணோ சுவாமி  அனுகூலனந்தாவின் சமீபத்திய போதனைகளை, அமெரிக்க நன்றி தெரிவிக்கும் நாளின் பின்புலத்தை, வெண்முரசின் பூரிசிரவஸ் இழந்த பெண்களை, உருமாறியதாக சொல்லப்படும் வைரஸின் உண்மைத் தன்மை போன்றவற்றை பேசும் வழக்கம் கொண்டவன்.அரிதாக குழந்தைகளின் காணொளிகளை அந்த குழந்தைகளை காட்டிலும் குழந்தைமையோடு பகிர்ந்துகொள்வதும் உண்டு.

ஆனால் தருண் மிக சிறியவனாக இருக்கையிலேயே  புதுபுத்தன் திசை நோக்கியே தன் கவனத்தை குவித்திருப்பவன். எல் கே ஜி ‘ல் படிக்கையில் ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வந்து உதட்டின் இரு கோடிகளையும் விரல்களால் ஆன மட்டும் இழுத்து பிடித்துக் கொண்டு ’’போண்டா, டீ’’ என்று வேக வேகமாக சொன்னால் அது ;பொண்டாட்டி’ என்று ஒலிக்கும் விந்தையை செய்து காண்பித்தான். அவன் விரல்களை எடுத்துவிட்டு அத்தனை சிரமப்பட வேண்டியதில்லை உதடுகளை சாதாரணமாக வைத்துக்கொண்டே ’பொண்டாட்டி’ என்று’’சொல்லலாம் என்றேன். ‘’ஓ! அது அப்ப கெட்ட வார்த்தை இல்லையா’’ என்று சந்தேக நிவர்த்தி செய்து கொண்டான்   நண்பர்கள் உபயமாயிருக்கும் அந்த நவீன யுக்தி எல்லாம்.

அவன் நண்பர்களும் அவன் போலவேதான் அடங்காதவர்களும் அசராதவர்களும். மாலை நேரம் பள்ளியில் இருவரையும் அழைக்க செல்கையில் தருணின் பைகளையும் அணைத்துக்கொண்டு மைதானத்தில் கலைந்த தலையுடன் களைத்துப்போய் சரண் வழக்கமான இடத்தில்  காத்துக் கொண்டிருப்பான், சரண், நான், கார் ஓட்டுநர் செந்தில் இன்னும் சில மாணவ தன்னார்வலர்கள் இணைந்து எங்கு தருண் தனது நண்பர்களுடன் புழுதி பறக்க விளையாடிக்கொண்டிருகிறான் என்று தேடும் பணியை துவங்கி சுமார் அரைமணி நேரத்தில் கண்டுபிடித்து குண்டுக் கட்டாக தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றுவோம். 

தருணின் நண்பன் ஒருவன் தேமே என்றிருக்கும் சரணை கைகளில் காம்பஸால் குத்தி காயப்படுத்தி இருந்தான் ’’இளமுருகு ஏண்டா  சரணை குத்தினே’’? என்று மறுநாள்  கேட்டதற்கு ’’நான் சும்மாதான் இருந்தேன் ஆண்ட்டி, காம்பஸ் அதுவே போய் சரண் அண்ணாவை குத்திருச்சு’’ என்றான்.

தருணும் நண்பர்களும் ஓடிப்பிடித்து விளையாடிய ஒரு நாளில் ஓங்கு தாங்கான  தருணின் நண்பன் ஒருவன் வேகமாக ஓடிவந்து அங்கு நின்று கொண்டிருந்த, அப்போதுதான் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்திருந்த ஒரு ஒல்லிப் பெண்ணின் மீது விசையுடன் மோதியதில் கீழே விழுந்து அந்த பெண்ணின் கை எலும்பு முறிந்துவிட்டது. குணமான பின் அவள் செய்த முதல் வேலை அந்த பள்ளி வேலையை ராஜி வைத்ததுதான்.

ஆனால் பெற்றோர் ஆசிரியக் கூட்டங்களின் போது தருணைக்குறித்த பராட்டுப்பத்திரங்கள் அவனது ஆசிரியர்களால் வாசிக்கப்படும் விந்தையை இன்று வரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

8 ஆம் வகுப்பில் தருணுக்கு நடனம் சொல்லி கொடுத்த ஆசிரியர் பள்ளியை விட்டு சொல்லிக்கொள்ளாமல் போனது, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி மட்டை களை அதிகம் பிறரின் மண்டைகளை உடைப்பதற்கும், எப்போதாவது விளையாடுவதற்கும் பயன்படுத்துவது, இப்போது டேராடூன் கல்லூரி விடுதி வார்டனை கண்ணில் குருதி வருமளவுக்கு படுத்தி எடுப்பதுமாக தருணின் விளையாட்டுக்களின் பட்டியல் விரிவானது

புன்னை மரத்தடியில் வளர்ந்திருந்த பெரிய குடைக்காளானொன்றை எனக்கு தெரியாமல் பள்ளிக்கு எடுத்துச்சென்று அவனிடம் தனித்த பிரியத்துடன் இருக்கும் ஆசிரியை ஒருவருக்கு கொடுத்திருக்கிறான். அந்த ஆசிரியை பின்னர் ஒரு வருடம் வரை பள்ளிக்கு வராமலிருந்து, நான் காவலதிகாரிகள் கதவைத்தட்டும் கனவுகள் கண்டு அலறிக்கொண்டு எழுந்த இரவுகள் அனேகம்.

செண்டு மல்லிச்செடிகளில் இருக்கும், தீப்பட்டது போல் கடிக்கும் செவ்வெறும்புகளை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வதை குறித்து விசாரித்த ஆசிரியரிடம் அப்போதுதான் அவன் Ant man ஆகமுடியும் என்று சொன்னது என சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் வீட்டில் உருட்டு என்னும் சொல்லை அதிகமாக புழங்கினான் பேசுகையிலும்,  வாட்ஸப் செய்திகளிலும் அடிக்கடி இடம்பெற்ற அந்த சொல் ’’பொய் சொல்லுதல், உண்மைக்கு புறம்பாக பேசுதல், ஏமாற்றுதல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல். வார்த்தை தவறுதல், இல்லாததை இருப்பதென்று சொல்லுதல்’’ என்று விரிந்த பொருள் கொண்டிருப்பதை காலப்போக்கில் அறிந்துகொண்டேன் . வாட்ஸப் தகவல்களில் உருட்டு என்று சொல்லுவதற்கு பதில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் தேய்த்து உருட்டும் துண்டுக்காணொளியை பயன்படுத்தவும் துவங்கினான்.

சமயங்களில் சாம்பவிக்கும் அவனுக்கும் சண்டை துவங்க இந்த எலுமிச்சை உருட்டே காரணமாகிவிடும். அவள் எதோ ஒன்றை முக்கியமாக சொல்லப் போக இவன் எலுமிச்சையை உருட்டி அனுப்பி உடன் சண்டை தொடங்கி, மள மளவென்று  வளரும்.

இந்த உருட்டு, தருண் மட்டும் உபயோகப்படுத்துவதல்ல,  இது வெளி உலகிலும் புழங்கும் வார்த்தைதான் என்பதும் தெரியவந்தது. எழுத்தாள நண்பர் சுரேஷ் பிரதீப் அவரது வாட்ஸப் நிலைத்தகவலில் ஒரு முறை ’’இந்த நூற்றாண்டின் மாபெரும் உருட்டு மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார்’’. 

 இப்படி உருட்டு உருண்டு கொண்டிருக்கையில் இன்னும் சமீபகாலத்தில் பூமர் என்ற சொல்லும் அவனால் புழங்கப்பட்டு வீட்டின்  வழங்கு சொற்களிலொன்றாகி விட்டிருந்தது அது சமயங்களில் என்னையும் குறிக்க பயன்பட்ட போதுதான் நான் இதுகுறித்து விசாரிக்கத் தலைப்பட்டேன். இந்த காலத்திற்கு பொருந்தாத பலதையும் சொல்லும் பெரிசுகளை குறிக்கும் சொல் அது என்று தெரிந்து, நான் சினந்துகொண்ட பின்னர் என்னை அந்த சொல்லால் குறிப்பிடுவதை குறைத்துக்கொண்டான்.(நிறுத்திக்கொள்ளவில்லை) அதிகம் அந்த சொல்லால் குறிக்கப்பட்டவராக பக்கத்து வீட்டிலேயே வசிக்கும் என் அப்பா இருக்கிறார் என்பதையும் கவனிக்க முடிந்தது.

இந்த சொற்கள் எல்லாம் எங்கு தோன்றி வளர்ந்து எப்படி இவர்களிடையே புழங்கி பிரபலமாகி நிலைபெற்று விடுகிறது என்பதுதான் அதிசயம் .

என் கல்லூரி பேராசிரியர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் தகவல்கள் பகிரும் பலர்  அவனால் பூமர் என்றே அடையாளப்படுத்த படுகிறார்கள்.

அவன் போனில் அடிக்கடி ’’டேய் உருட்டாதடா,  போதும் உருட்டினது, இந்த உருட்டெல்லாம் என்கிட்டே வேண்டாம்,  அந்தாள் ஒரு பூமர்டா, அய்யோ  அந்த பூமர் வகுப்பா இப்போ’’ என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

அவனை கானுலாக்களுக்கு உடனழைத்து செல்வதாக  கூறிவிட்டு கடைசி நிமிடத்தில் பயணத்தை  ரத்து செய்யும் ஒரு நண்பனை போனில் ’உருட்டு’ என்றே பெயர் பதிவு செய்திருக்கிறான். 

உறவினர் வருகையொன்றின் போது அவர்களிடம் வழக்கம்போல் சாதியை குறித்து அப்பா பேசிக்கொண்டிருக்கையில்  தருண் உரக்கவே ’’பூமர்’’ என்று சொன்னதை அப்பா கேட்டும் அது என்னவென்று அவரால் உய்த்துணர முடியாத்தால் விஷயம் அத்தோடு போனது.

சிலநாட்களுக்கு முன்னர் ஒரு திருமண வரவேற்பிற்கு போயிருந்தோம்.  விருப்பத் திருமணம். மாப்பிள்ளைக்கு நாங்கள் நெருங்கிய உறவு. மணப்பெண் உற்சாக மிகுதியில் இருந்தாளோ என்னவோ, உடலில் ஒரு துள்ளலுடன்  அவ்வப்போது லேசாக எம்பி எம்பி குதித்தபடி சிரித்துக்கொண்டே இருந்தாள். அது எனக்கு புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.

வரிசையில் நின்று பரிசுகள் கொடுத்து புகைப்படம் எடுத்துகொள்ளுவதில் அப்படி நகைச்சுவையாக ஏதும் இல்லை. பெண்ணின் உடையில்  மேடையின் அலங்கார இரவு விளக்குகளின் ஒளியை பிரதிபலிக்கும் பெரிய கற்கள் ஏராளம் பதிக்கப்பட்டு அவளே ஒரு அருமணி போல் ஜொலித்துகொண்டிருந்தாள்.

ஒரு நீண்ட பாவாடையும் , நீளக் கை வைத்த ரவிக்கையும், பட்டை பட்டையாக உடைக்கு பொருத்தமான நிறங்களில்  ஆபரணங்களும், ஆர்கிட் மாலைகளுமாக அழகான ஒப்பனை. மாராப்பு அல்லது மேல் புடவை போன்ற எதுவும் இல்லை வட இந்திய சோளி போன்ற உடை.

என் திருமணத்தின் போது மாலைகளின் சுமையினால் லேசாக ஒதுங்கி இருந்த புடவையை நான் கவனித்திருக்கவில்லை. மேடைக்கு கீழிருந்து கவனித்து, பாய்ந்து மேடையேறி அங்கு ஓடிக்கொண்டிருந்த வயர்களில் தடுக்கி விழுந்து முட்டி பெயர்ந்தபின்னரும், நொண்டியபடி வந்து என் புடவை தலைப்பை சரி செய்த லீலாவதி அத்தையின் பேரனுக்குத்தான் அன்று வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. அத்தை கீழே ஒரு நாற்காலியில் அமர்ந்து நிகழ்வை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

 பஃபே  இரவுணவு அல்லது உண்டாட்டு. ஆப்பச்சட்டிகளின் முன்னே எச்சில் தட்டுடன் காத்துக்கொண்டிருந்தவர்களில், என் திருமணத்தில் அப்பா வந்து முறையாக பந்தி விசாரிக்கவில்லை என்பதால் கோபித்துக்கொண்டு, உடன் மதுவும் அருந்திவிட்டு ஏகத்துக்கும் சலம்பிக்கொண்டிருந்த  மாரிமுத்து மாமாவும் இருந்தார். 

நிகழ்வில் உறவினர்களில்  பலர் தருணின் நீண்ட கேசத்தை குறித்து கேள்வி எழுப்பி அறிவுரைகளும், அறவுரைகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவன் மானசீகமாக ’பூமர், பூமர்’ என்று சொல்வது  எனக்கு தெளிவாக கேட்டது. 

நிகழ்வு முடிந்து  வீடு திரும்புகையில் ’’எதுக்குடா அந்த பொண்ணு கெக்க பிக்கேன்னு சிரிச்சுகிட்டே இருக்கா? மேடையில் கொஞ்சம் மரியாதையாக  இருக்கலாம் இல்ல ’’ என்றேன். ’பூமர், பூமர் பேசாம இருக்கியா’’ என்றான் தருண்.

கேட்டுக்கேட்டு எனக்கும் அந்த வார்த்தைகள் மனசிலாகி விட்டிருக்கின்றன.

பேராசிரியர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கடந்த வாரம் நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் செய்தோம். சமாதானமாக போகச்சொல்லி, நிர்வாகத்தின் தரப்பை எங்களுக்கு ஒருவர் விளக்கி சொல்லிக்கொண்டிருக்கயில் ’’உருட்டு உருட்டு’’ என்று சத்தம் கேட்டது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன், வேறு யாரும் இல்லை என் மனக் குரல்தான்

இன்று வரை செயல்படுத்தப்பட்டிருக்காத என் இரண்டு பதவி உயர்வுகள், அவற்றிற்கான ஊதிய உயர்வுகள்  இந்த மாதமாவது வருமா என அலுவலகத்தில் கேட்டால் போன ஜனவரியில் சொன்னது போலவே’’ நிச்சயம் 2 வாரத்தில் வந்துவிடும்’’ என்றார்கள்,  என்ன ஒரு உருட்டு?

இன்று காலையில் அவனைப்போலவே கானுயிர் புகைப்படங்களில் ஆர்வம் கொண்டிருக்கும்  அவன் தோழியிடம் இருந்து டாப் ஸ்லிப் போகலாம் என்று அழைப்பு வந்தது. தருண் புறப்பட்டு காத்திருந்தான். காரில் வந்த அவளுடன் கிளம்பி டாப்ஸ்லிப் யானைகளை ஆவணப்படுத்த சென்றுவிட்டான். இவற்றை கவனித்துக்கொண்டிருந்த அப்பா மெல்ல  என்னிடம் வந்து ‘ இந்த வயசுல இப்படி அனுப்பறதெல்லாம் சரியில்லை நான் சொல்றதை சொல்லிட்டேன் ‘ பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் வைக்கலாமா? என்றார்’’ நான் மனதுக்குள் ‘பூமர்’ என்றேன்.

கனவும் நினைவும்

சிறு வயதிலிருந்தே அல்லது நினைவு தெரியத்துவங்கி, கள்ளமற்ற சிறுமித்தனம் அகன்று குடும்ப நிகழ்வுகள், அப்பா என்பவரின் வன்முறைகளை எல்லாம் கவனித்து, அது உண்டாக்கிய  அச்ச உணர்வில் மனம் நிரம்பியிருந்த காலத்திலிருந்தே கனவுகள்  வருவதும் அவை அப்படியே நினைவில் இருப்பதும், மனதில் மறைந்திருக்கும் ஏராளமானவை கனவுகளாக வருகையில்,  ஒரு சில சமயங்களில் ஆழ்ந்த உறக்கத்தில்  ஆழ்மனம் விழித்துக்கொண்டு பூதாகரமாக எதிரில் அப்போது நிற்பவற்றை கண்டு அலறி விழிப்பதும், இன்று வரையிலும் வாடிக்கையாகி விட்டிருக்கிறது

 இதன் பொருட்டே வெளியாட்கள் யாருடனும் இரவு தங்குவதில்லை.  இளமையில் இருந்து  என்னை அச்சுறுத்தும் ஒரு தொடர் கனவென்றால் பொள்ளாச்சி கடைவீதிகளில் நான் அதிகம் புழங்கி இருக்கும் குறிப்பிட்ட சில தெருக்களில் மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு இருக்கும் ஒரு மாபெரும் கையொன்று குருதி வழிய என்னை துரத்திக் கொண்டு வருவதுதான். எத்தனையோ இரவுகளின் உறக்கத்தை,  தலை தெறிக்க கண்ணீருடன்  அந்த கைக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும்  அதே கனவு  சிதைத்திருக்கிறது.

துரத்திக்கொண்டிருந்த அந்த கையை பல வருடங்களுக்கு பின்னர் சரண் தருணின் பிஞ்சுக் கரங்கள்  விரட்டி விட்டிருக்கின்றன,

 எல்லாக் கனவுகளும் விழித்தெழுந்த பின்னரும் மறக்காமலிருப்பதால் கனவிலிருந்து முழுமையாக விலகாமலே, பல வருட பயிற்சியால் உள்ளம் விழித்து உடலை அன்றைய தினத்துக்கு தயார் செய்து விடுகையில்,, கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்ட ஒரு வெளியில் சில கணங்கள் தடுமாறுவேன்.

கனவுகளில் நிறங்கள் தெரியாது அனைத்து கனவுகளும் கருப்பு வெள்ளைதான் என   வாசித்திருக்கிறேன் ஆனால் என் கனவுகள் எல்லாம் வண்ணமயமான வைகளே. செக்கச்சிவந்த குருதியும் பல வண்ண மலர்களும், பல நிறங்களில் உடையணிந்திருப்பவர்களும் நிறைந்திருக்கும் பிறிதொரு இணை உலகில் தான் நான் கனவுகளில் திகழ்கிறேன் எல்லா கனவுகளும் எனக்கு தரும் ஆச்சரியத்தை விட,கனவுகள் நிகழும் அந்த  முற்றிலும் புதிய, நான் இதுவரை அறிந்திருக்காத இடங்கள், வீடுகள், அறைகள், மரச்சாமன்கள் கழிப்பறைகள் ஆகியவையே எனக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிப்பவை.கழிப்பறைகள், மிக அசுத்தமான கழிப்பறைகள் அடிக்கடி கனவுகளில் வருகிறது

ஒரு மங்கிய ஒளி நிறைந்திருக்கும் மாலைப்பொழுதில் அத்தனை துலங்கித்தெரியாத காட்சியில் கோவில் இருக்கும் ஒரு சந்தடி மிக்க கடைத் தெருவில் சைக்கிளில் கனகாம்பர சரம் விற்றுச்செல்லும் ஒருவர் அங்கே ஸ்தூல வடிவில் நிற்கும் என்னிடம் ஒரு கனகாம்பர மலர்ச்சரத்தை  கொடுப்பதை நானே மிக உயரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கனவு பல முறை வந்திருக்கிறது. அதைப்போல் ஒரு கோவில் தெருவை எங்கும் எப்போதும் நான் கண்டதே இல்லை.

 கனவுகளில் இறந்து போகும் உறவினர்கள் சிலர் கனவுக்கு அடுத்த நாட்களில் இறந்து போயிருக்கிறார்கள். இறந்த பலர் பின்னர் கனவுகளில் தொடர்ச்சியாக வந்து கொண்டும் இருக்கிறார்கள். 

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவர்கள் என் கனவுகளின் இத்தனை வகைகளை கேட்டால்  திகைத்துப்போய் விடுவார்கள் குடும்ப உறுப்பினர்களில் மகன்களும் அடிக்கடி  வருவதுண்டு

எனக்கு பெரும் அச்சத்தை  கொடுக்கும்  ஆழமான நீர் நிலைகள், கொந்தளிக்கும் கடல், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆறுகளும் அவற்றின் நடுவே திசையறியாது செய்வதறியாது நின்றிருக்கும் நானும் பல கனவுகளில் வருவதுண்டு.

மிக உயரமான மலைச்சரிவுகளில் விளிம்புகளை பற்றிக் கொண்டபடி நடக்கும் சாகச ஆபத்து பயணங்களும்    கனவுகளில்உண்டு

பல தெய்வ சன்னதிகள் வருவதுண்டு. சில அம்மன் கோவில்கள் அடிக்கடி வரும் எனக்கு தெரிந்த கோவில்கள் என்றால் அங்கு   கனவிற்கு பிறகு நேரில் செல்வதுமுண்டு 

பல கோவில்கள் நான் அறிந்திருக்காதவை. சமீபத்தில்  வந்த கனவொன்றில் நானும் தருணும் பேருந்தில் பயணிக்கிறோம், வேட்டக்காரன்புதூரில் என் தாத்தாவின் வீட்டை பேருந்து கடைக்கையில் ‘’ தருண், தருண் இதுதான் எங்க வீடு’’ என்று உற்சாகமாக கூச்சலிடுகிறேன். தருண் மண்  நிறத்தில் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு என் அருகில் அமர்ந்திருக்கிறான் அடுத்த காட்சி (ஆம் காட்சிதான்) நாங்கள் இருவரும் ஒரு பழங்காலத்து சிதிலமடைந்த தாழ்வான ஒட்டு வீட்டின் முன்பாக நிற்கிறோம்.

 அந்த வீட்டுக்கு முன்பெப்போதோ நான் வந்திருப்பதாகவும் அந்த இடம் என்னில் ஏதோ அதிர்வுகளை உண்டாக்குவதாகவும் தருணிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கையில் கதவு திறக்கிறது. அது ஒரு வீடல்ல ஒரு கோவில் , உள்ளே வெகு தூரத்தில் கரிய சிலையாக அம்மனும் அவளுக்கு பூசை செய்யும் ஒரு பெண்ணும் மங்கலாக தெரிகிறார்கள்

  காற்று அதிகம் இல்லாத இருட்டான அக்கருவறை எதிரே விபூதி சிதறிக்கிடக்கும் தரையும் கம்பிகளும் இருக்கும் இடத்தில் நான் நிற்கிறேன் தருணை திரும்பி பார்க்கையில் அவன் மேல்சட்டை இல்லாமல் இருக்கிறான்.

.எனக்கு முன்பாக இருபெண்கள் அங்கு வழிபட வந்திருக்கிறார்கள் கற்பூர ஆரத்தி தட்டை கொண்டு வுந்தால் அதில் வைக்க பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று பதறி ’’தருண் உன்கிட்டே பணம் இருக்கா’’ என்று கேட்கிறேன் அவனும் பர்ஸ் கொண்டு வரவில்லை என்கிறான்

இரு பெண்களில் பின் கொசுவம் வைத்த புடவை அணிந்த ஒருத்தி மட்டும் குனிந்து நெற்றியில் விபூதியிட்டு கொண்டே என்னை கடந்து வெளியேறுகிறாள்  

நான் அங்கிருந்த விபூதி கொட்டப்பட்டு கிடந்த உண்டியலின் மீது வைத்திருந்த உலர்ந்த மருகு கட்டொன்றிலிருந்து கொஞ்சம் பிய்த்து எடுத்து என் தலை பின்னலில்,வைத்துக்கொள்கிறேன்

இந்த கனவில் வெகு தெளிவாக தெரிந்தது கோவில் நுழைவாயிலில் கதவின் நிலவுக்கு வெகு அருகே மேல்பகுதி சுவற்றில் செண்பக படித்துறை அம்மன் கோவில் என்று எழுதியிருந்த வாசகங்கள் தான்.

கங்காபுரம் வாசித்த அன்று ஒரு பெரும் வணிகவளாகம் போல, அல்லது அரண்மனை போலிருக்கும் ஓரிடத்தின் அகன்ற பெரும் படிக்கட்டுகளில் அமர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருகையில் அவ்வழியே வரும் ஒரு காரில் இருந்து செல்வச் செழிப்புள்ள பெரியகுடும்பத்தை சேர்ந்தவள் என்று  தோற்றத்திலேயே தெரியும்  இளம்பெண்ணொருத்தி வுந்து காரிலிருந்து இறங்கி ’’ஓசை எழுப்ப வேண்டாம் சித்தி வந்திருக்கிறார்கள்’’ என்றாள்.

 நான்அந்த கட்டிடத்துக்கு  உள்ளே செல்கையில் தூரத்தில் ஒரு திண்ணையில் கேரள முண்டைபோல் ஒரு தந்த நிற புடவையில் ஒரு மூதாட்டி அல்லது பேரரசி அமர்ந்திருக்கிறார்கள் ஒரு காலை மடித்தும் மற்றோரு காலை தொங்கவிட்டும். அவரது வெள்ளிநிற கூந்தல் அலையலையாக படிந்திருக்கிறது. சிவப்பில் குங்குமப்பொட்டு பெரிய வட்டமாக நெற்றியில்.

 என்னை நிமிர்ந்து பார்த்து ’வா’ என்று சைகை செய்கிறார்கள் கைகளால். அருகில் சென்று காலடியில் அமர்கிறேன் அவரது சுருக்கங்கள் நிறைந்த தூய பாதங்களையும் ஒரு விரலில் கம்பி போல அணிந்திருக்கும் மெட்டியையும் பார்க்கிறேன் அவரது மடியில் தலைவைத்து பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தேன் நெடுநேரம்.

கனவுகளை  நடுராத்திரியில்  எழுதி குறித்துக் கொள்வதும் உண்டு இறந்துபோன ராஜமத்தை  மாமா பலமுறை வந்திருக்கிறார் சமைத்து போடச்சொல்லி, சமையலைறையில் தரையில் அமர்ந்து சாப்பிட்டார் அதுவும்  பொள்ளாச்சி பழைய வீட்டில்

அந்த வீடு. துரத்தும் அந்த  கைகளைப்போன்றே எத்தனை விலக்க முயன்றும் மனதில், நினைவில். கனவில் அப்பிக்கொண்டு போக மறுக்கிறது அங்கு நானிருந்த  காலங்களின் நினைவை எப்படியாவது நீக்க, அகற்ற, அழிக்க முயன்று கொண்டே இருக்கிறேன்

 துயர் நிறைந்த ,வலி நிறைந்த அப்பா என்பவரின் ஆணவமும் வன்முறையும் கேள்வி கேட்க ஆளில்லாததால் தலைவிரித்தாடிய காலங்களில் எந்த துணையுமில்லா சிறுமிகளான எங்களிருவருக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகள் அவை உண்டாக்கிய  மனச்சிதைவுகளை எல்லாம் எப்படியாவது மறக்க வேண்டும் நிராதரவான இருசிறுமிகளின் துயர்களும் வலிகளும் அவமானங்களும் பசியும் நிறைந்திருக்கும் வீடு அது

 அந்த வீட்டை நான் என் நினைவிலிருந்து அழிக்க முயன்றுகொண்டே இருக்கிறேன் ஆனால் கனவில் அடிக்கடி வருகிறது அவ்வீடு இப்போதும்  அந்த  வீட்டின் வாடகையை ஓட்டுநர் செந்தில் அப்பா என்பவருக்காக  வாங்கப்  போகையில் நான் வீட்டிலிருந்து வெகு தூரம் தள்ளி காரை நிறுத்தச்சொல்லி வீட்டு எதிர்ப்புறமாக அமர்ந்து கொள்ளுவேன் எனினும் என் அகம் அந்த வீட்டை அந்த வீட்டில் எனக்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் திரும்பி வெகு நெருக்கமாக பார்த்துக்கொண்டிருக்கும் அன்றைக்கெல்லாம் இரவில் அலறிக்கொண்டே தான் எழுவேன்.

சிலநாட்களுக்கு முன்னரும் கனவில் அதே வீட்டில் நானும் மகன்களும் இருக்கிறோம் சமீபத்தில் இறந்துபோன சரண் அப்பாவின் பெரியம்மா அதே கம்பீர  உடல்வாகுடன் அதே ஈரோட்டுப்பக்கம் கைம்பெண்கள் உடுத்தும் காவி புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக  கைகளில் சிறு துணி மூட்டையுடன் கணீர் குரலில் ’தேவி’ என்றழைத்து கொண்டு வருகிறார்

 நான் கல்லூரிக்கு புறபட்டுக்கொண்டிருக்கிறென் அவசரமாக. துறைத்தலைவரிடம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அலைபேசியில்  சொல்கிறேன்.  அந்த பெரியம்மா அந்த வீட்டில் இருக்கும் சிறு பால்கனி போன்ற வெளித் திண்ணையில் படுத்துக்கொள்வதாக சொல்லி ஒரு தலையணை கேட்கிறார் கொடுக்கிறேன் அப்போது நல்ல இளங்காற்று மழை மணத்துடன் வீசுகிறது. மறு நாள் லஷ்மமி சொல்லுகிறாள் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செய்யும் முக்கிய நாளான மாகாளய அமாவாசை அந்த முந்தின நாளென்று

. ஜெ சில முறை கனவில் வந்திருக்கிறார் ஒரு கனவில் அவருக்கு தாளமுடியாத முதுகு வலி. அருணாவும் சிலமுறை உடன் இருந்திருக்கிறார்

கல்லூரி முகப்பில் இருக்கும் ஒரு மகிழ மரத்தடியில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் எனக்கு வேண்டிய, முகம் தெளிவில்லாத ஒருவர் எனக்காக காத்துக்கொண்டிருக்கும் கனவு அடிக்கடி வரும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கும் அவர் எனக்கு முன்பே வந்து என்னை கண்டதும் எழுந்து புன்னகைத்தபடி என்னை நோக்கி வருவார்.

அதே நபர் இந்த வேடசெந்தூர் வீட்டில் சிறப்பாக வீட்டிலிருப்போரால்  உபசரிக்கப்பட்டு,  இல்லாத ஒரு கதவு  வழியே வெளியே வந்த கனவும் வந்தது

அவர் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் வருவது வழக்கம்

நேற்றைய அல்லது இன்றைய அதிகாலை கனவு விரிவாக இருந்தது அதிகாலை வரை துண்டு துண்டாக மூன்று முறை கனவு நீண்டது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவில் அமர்கிறேன் அடுத்த பகுதியில் எனக்கு முன்னால் என் பழைய மாணவியும் அவளது காதல் திருமணத்தில் நான் இடைபட வேண்டியிருந்த போது என்னுடன்  மிக நெருக்கமாக இருந்து பின்னர் ஒரு புள்ளியில் முற்றிலுமாக விலகிய சங்கீதா,  அவளது சிறு மகன், கணவர் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்னருகில் மூன்றாவதாக அமரும் பெண் ஒரு வெள்ளை மூட்டையை காலடியில் வைக்கிறாள் அதற்கருகில் என் வீட்டில் இருக்கும் பச்சை நிற வயர் கூடையில் என் பிரிய குட்டி லேப்டாப் வைக்கப்பட்டிருக்கிறது

அந்தப் பெண் விசித்திரமாக என்னிடம் ’’ஏன் உன் காதலனை உன்னால் கல்யாணம் செய்துகொள்ள முடியவில்லை’’ என்று விசாரணை போல் கேட்கிறாள்

வீடு திரும்பி, அது ஒரு புதிய வேறு வீடு, சாம்பவியிடம் இதை சொல்லி கொண்டிருக்கையில் லேப்டாப் பையை கொண்டு வந்தேனா இல்லையா என்று சந்தேகிக்கிறேன் சாம்பவி பதட்டமாக உள்ளே போய்,  அது பத்திரமாக இருப்பதை பார்த்து சொல்லுகிறாள்

பின்னர் மித்ரா வீட்டில் இருக்கிறேன்மிகப்புதிதான ஒரு இடமது மாடிஅறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு சு.ராவை  அல்லது மித்ரா மாமனாரை நினைவூட்டும் ஒரு வேட்டி சட்டையிலிருக்கும் முதியவரும் அவருக்கு எதிரில்  தரையில் சுவற்றில் முதுகை சாய்த்து அமர்ந்திருக்கும் நாகராஜுமாக இருக்கிறார்கள். நான் யாருடனும் பேசாமல் அங்கு தரையில் அமர்கிறேன் அந்த முதியவர் நாகராஜிடம் தனக்கு பிரியமான அந்த திண் பண்டம் எங்கே என்று கேட்கிறார் அந்த ’ப ’வில் தொடங்கும் பண்டத்தின் பெயர் எனக்கு மிக புதிதாக இருக்கிறது கனவிலும் அப்பெயர் மனதில் படியவில்லை அந்த பண்டம் வைக்கப்படும் சிறு பெட்டி என் முன்னால் இருக்கிறது அதை திறந்து பார்க்கிறேன் முந்திரி பருப்பின்  வடிவில் அதே அளவில் ஆனால்  அல்வாவின் அடர்சிவப்பில் மென்மையான, இனிப்பான  மூன்று துண்டங்கள்  இருக்கிறது அருகில் இருந்த சிறுமி தான் அதை வாங்கி வருவதாக சொல்லி ஓட்டமாக ஓடுகிறாள் .

நான் புறப்பட்டு ராஜமத்தையிடம் சொல்லிக்கொள்ள சமையலறைக்கு போகிறேன் அந்கு மித்ரா தலையில் ஷாம்பூ நுரையுடன் சமையலறையில் கண்ணீருடன் ஏதோ கடிதமொன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். அது மித்ரா என்பதை கேசம் ,குறைவாக  இருக்கும் அவளது தலையின் பின்புறத்தை கொண்டே  அடையாளம் காண்கிறேன்

அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் அனைவரும் எனக்கு முகம் காட்டாமல் முதுகை காண்பித்தபடி

வெளியில் இருட்டான ஒரு முற்றம் அங்கு நிற்கும் ராஜமத்தையிடம் விடை பெற்றுக் கொள்கிறேன் அந்த சிறுமியும் அருகில் இருக்கிறாள் அத்தை மித்ராவை  குறித்து என்னவோ இகழ்ச்சியாக சொல்லுகிறது 

என்னால் அங்கிருந்தே பிரதான சாலையை காண முடிகிறது நல்ல இருட்டு பேருந்துகளின் முகப்பு வெளிச்சமும், ஒலியும் சீறி சீறி சென்று கொண்டிருக்கிறது விரைந்து சாலையின் இருபுறமும் பார்த்தபடி கடக்கிறேன் சாலையின் ஒரு ஓரத்தில் பல ஆட்டோக்களும் அவற்றின் எதிரே ஆட்டோ டிரைவர்களும் நிற்பது மங்கலாக தெரிகிறது.

 நான் கடக்கையில் சாலையில் ஒரு வாகனம் கூட இல்லை எதிர்ப்புறம் சென்று நின்று கைப்பையிலிருந்து சில்லறை காசுகளை எடுக்க எத்தனிக்கையில் ஒரு ஒல்லியான   30 வயதிலிருக்கும் ஒரு பச்சை நிறபுடவைக்காரி என்னை அவசரப்படுத்தி ’’ஏறு  ஏறு’’ என்று அப்போது வந்து நிற்கும் ஒரு பேருந்தில் ஏற சொல்லிவிட்டு அவள் எனக்கு முன்பாக ஏறியும் விடுகிறாள் நான் பேருந்தின் முதற்படியில் காலை வைக்கையில் உள்ளிருந்து கண்டக்டர் ’’காந்திபுரம் காந்திபுரம்’’ என்று கூவும் சத்தம் கேட்கிறது உடனே நான் காலை பின்னால் எடுத்து விடுகிறேன் ’’நான் உக்கடமல்லவா போகனும் பொள்ளாச்சி போக’’  என்று மனதில் கனவில் நினைத்துக்கொள்கிறேன்

.

இறங்கி கைப்பையில் இருந்து  5 ரூபாய் நாணயமொன்றை கையில் எடுக்கையில் முன்பு வந்தவளை காட்டிலும் இளையவளாக  வட்டமுகம் கொண்ட இன்னுமொரு பச்சைப் புடவைக்காரி ’’இந்த பஸ்ஸில்ஏறு’’  ஏன்று கட்டளைபோல சொல்லிவிட்டு அப்போது வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறி விடுகிறாள் பஸ் உக்கடம் செல்லும் என்று எனக்கு எப்படியோ தோன்றி நானும் ஏறிக்கொள்கிறேன் 

அந்த பேருந்து மிக விசாலமாக உள்ளே ஒரு தடுப்புசுவருடன் இரு பகுதிகளாக பிரிந்திருக்கிறது எனக்கு முன்னே ரோஸ் கலரில் பத்திக் டிஸைன் போட்ட புடவையில் ஏறிய ஒரு பெண்ணிடம் கண்டக்டர் அந்த இன்னொரு பகுதியிலிருந்து, கிண்டலாக ’’பஸ் 2 மணிக்குதான் புறப்படும் இறங்குமா’’ என்கிறார்  அவர்கள் முன்பே பரிச்சயக்காரர்கள் போல,  அவள் சிரித்துக்கொண்டு ’’நானென்ன  சொல்லிட்டேன் இப்போ’’ என்கிறாள்

 நானும் உள்ளே வந்துஅங்கே உட்கார இருக்கைகளே இல்லாமல் நிற்க மட்டும் இடம் இருப்பதை  பார்க்கிறேன் மேலிருந்த கம்பியிலிருந்து கை பிடித்துக்கொள்ளும் கயிறுகள் ஏராளமாக தொங்குகின்றன. நிறைய  இளம்பெண்கள் நிற்கிறார்கள்

அத்தனை பேரும் சிவப்பில் உடை அணிந்திருக்கிறார்கள். சீருடை போலல்ல, விதம் விதமான சிவப்பு உடைகளில்.  என் எதிரே நின்ற ஒருத்திக்கு மிக சின்ன செப்பு உதடுகள் யாரையோ கோபமாக திட்டிக்கொண்டிருக்கிறாள். நான் அவளிடம் இந்த  பஸ் உக்கடம் போகுமா?  என்று கேட்டதை அவள் கவனிக்கவே இல்லை அவனருகில் இருந்த இன்னொருத்தி புன்னகையுடன் ’’உக்கடம் போகும் ‘’ என்கிறாள்.

பின்னர் நான் ஏதோ ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிறேன் தோளில்  ஒரு பையுடன்

ரயில்நிலைய வாசலில் மகாபாரத நாடகம் நடந்து நான் வரும் போது நிறைவுறுகின்றது கையில் புல்லாங்குழலும் முகத்தில் நீல ஒப்பனையிலுமாக கிருஷ்ணராக வேடமிட்டவரை வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொரு நடிகர் கைகளில் நிறைய கருப்புக்கயறுகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கிறார் நான் அவருக்கு மிக அருகில் இருக்கிறேன் அதிலொன்றை தருணுக்கு வாங்கிக்கொண்டு போய் அவன் கைகளில் கட்ட நினைக்கிறென் தருணைக்குறித்து கொஞ்ச நாட்களாகவே சுகக்கேடு எதோ வந்துவிடுமென்று இனம்புரியா அச்சத்தில் பீடிக்கபட்டிருபபதை கனவிலும் நினைத்துக்கொள்கிறேன்

அவர் எனக்கு இரண்டாவதாக கயிற்றை கொடுத்தாலும் நடந்த தள்ளுமுள்ளு களில் அக்கயிறு கீழே விழுந்து விடுகிறது மீண்டும் வெகுவாக முயற்சிக்கிறேன் நிறைய கயிறுகள் கீழே விழுகின்றன அவற்றிலொன்றை எடுக்கமுற்படுகையில் நான் எடுக்கும் அதே கயிற்றை இன்னுமொரு பச்சைப்புடவை மாமியும் எடுக்கிறார் நான் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொள்கிறேன் மாமிக்கு அதை தரக்கூடாது எனக்கே வேண்டும் என்னும் வேகத்தில் இருக்கிறேன் ஆனால்  மாமி புன்னகையுடன் ’’பாக்கியம் உண்டாகட்டே’’ என்கிறாள்

பின்னர் தென்னம்பாளையம் சாலையில் செல்கிறேன் எனக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர்,  வழியில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு பைக்கை காண்பித்து, எதோ பேசியபடி கடக்கிறார்கள்.நானும் பார்க்கிறேன் யாருமற்று, கவிழ்ந்து கிடக்கும் ஒரு பைக்கின் அருகில் கருப்பு சட்டை பேண்டில் ஒரு இளைஞன் முகம் குப்புற கிடக்கும்படி அசைவின்றி கிடக்கிறான்.

அதன் பின்னர் எங்கோ ஏதோ ஒரு கூட்டம் நானும் அங்கிருக்கிறேன் ஏனோ கூட்டத்தின் பின்பகுதியில் படுத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவர்  வந்து என் உடை ஈரமாகி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் குர்த்தி அணிந்திருக்கிறேன் அதை இழுத்து ஈரத்தை மறைக்கிறேன். அவர் அருகில் நின்று ’ஏன் பதட்டமா இருக்கே,  நிமம்தியா தூங்கு’’என்கிறார்  அவர் கைகளை எடுத்து என்   காதுக்க ருகில் வைத்துக்கொண்டதும் கிடைத்த  பாதுகாப்பு உணர்வில் ஆழ்ந்து உறங்குகிறேன். 

 எதோ ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் தாவர ’’அதிகாரம்’’ என்று நான் எழுதி இருக்கும் கட்டுரை பிரசுரமாகி இருக்கிறது ஆர்வமாக பிரித்துப் பார்க்கிறேன்

இந்த பல கட்டங்களாக, பல காட்சிகளாக நிகழ்ந்த கனவுகளுக்கிடையில் நான்  விழித்து தண்ணீர் குடித்து,  கனவுகளின் குறிப்புகளையும் எழுதிக்கொண்டேன்.

காலையில் எப்படி நிஜம் போலவே கனவு வந்தது என்றல்ல. இத்தனையும் கனவா நிஜமில்லையா? என்னும் திதைப்பே என் முன்னால் நின்றது

சின்னஞ்சிறு வயதில் ,

அய்யப்பன் கோவில் அருகில் இருந்த அந்த வாடகை வீட்டில் கழிந்த என் பால்யம் என்றென்றைக்கும் மறக்கவியலாததாகி விட்டிருக்கிறது. இன்றும்கூட  மனது பாரமாகும் நாட்களில் அந்த தெருவுக்கு போய் இப்போது அடையாளம் தெரியமலாகிவிட்டிருந்தாலும அந்த முன்னறையின் பச்சைவண்ணமடித்த கம்பிகளுடனான ஜன்னல்  மட்டும் அப்படியே இருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வருவதுண்டு. அந்த ஜன்னல் என் பால்யத்துக்குள் நான் நுழையும் வாசலாகி விட்டிருக்கிறது.

அந்த வீட்டில் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் வரைதான் இருந்திருக்கிறேன், அம்மா தம்பி விஜியை வயிற்றில் கொண்டிருந்ததால்..3ம் வகுப்புக்கு வேட்டைக்காரன் புதூரிலும், பின்னர்  ராஜா ராமண்ணா நகர்  சொந்த வீடு கட்டப்பட்ட பின்பு அம்மாவுடன் தாராபுரம் போய் செயின்ட் அலொஷியஸில் 4 ம் வகுப்பும் படித்தேன்

ஆனால் அந்த வெங்கடேசா காலனி வீட்டின் அமைப்பு  அப்படியே நினைவில் இருக்கிறது. இரண்டு அறையும் பின்னால் கரி படிந்த விறகடுப்பு டன் கூடிய சமையலறையும்,துவைக்கும் கல்லுடன் கூடிய , கீழே அமர்ந்து , பாத்திரம் கழுவும் இடத்துடன் பின் கதவுடன் முடியும் பெரிய பின் முற்றமும், பின் கதவை திறந்து கொஞ்சம் நடந்தால் தனியே வரிசையாக கட்டப்பட்டிருக்கும்  எடுப்பு பொதுக்கழிவறைகளுமாக 3 குடித்தனங்கள் ஒரே காம்பவுண்டில்.

 இதில் நாங்களும் கமலா அத்தை ராமு மாமா குடும்பம் பக்கம் பக்கமாக இரட்டை வீடுகளில். குருவாயூரப்பன் வீடு மட்டும் எங்கள் இருவரின் வீட்டுக்கு பின்னால் பக்கவாட்டில் திரும்பி கோபித்து கொண்டதுபோல் அமைந்திருந்க்கும். அவன் யாருடனும் அதிகம் ஒட்ட்டியதில்லை.  வீட்டு பெரியவர்களும் அப்படியே. வீட்டு மதில் சுவரும் அடுத்திருந்த ஐயப்பன் கோவில் மதிலும் ஒன்றே. அந்த பால ஐயப்பனும் எங்கள் களித் தோழன்தான்.

எனக்கு எப்படி இது நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை எனினும் துல்லியமாக என்னால் நினைவு கூற முடிந்த ஒரு நினைவென்றால் முன்னறையின் வாசல் நிலையில் அம்மா என்னை மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அறையின் கோடியில் பச்சை இரும்பு மடக்கு நாற்காலியில் அப்பா அமர்ந்து முன்னால் இருந்த மர ஸ்டூலில் சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு டம்ளரில் தண்ணீர், சோப்பு நுரையுடன் ஷேவிங் பிரஷ் சகிதம் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார். நான் அம்மாவின் ரவிக்கைக்குள் இருந்து முலையை எடுத்து அதன் காம்பை திருகி கொண்டிருப்பதை அம்மா புன்னகையுடன் அப்பாவிடம் சுட்டி காண்பிக்கிறார், திரும்பி பார்க்கும் அப்பா மறுமொழி ஏதும் சொல்லாமல் புன்னைகையைபோல எதோ செய்கிறார். 

ஆச்சர்யமாக இருக்கிறது ஏனெனில் ஒரு வேளை  அம்மா எனக்கு 2 வயது வரை முலைகொடுத்திருப்பினும் அந்த நினைவுகள் இன்னும் அழியாமல் இருப்பது விநோதம்தான்.

அந்த வீட்டில் தான் அப்பா கலைக்களஞ்சியம் என்னும் ஒரு கெட்டி அட்டை போட்ட வண்ண புத்தகம் கொண்டு வந்து தந்தார்.கனத்த அதன் அட்டையை திறந்ததும் உள்ளே ஒருகாகித செந்தாமரை மலர் விரியும் அமைப்பு இருக்கும். மனம் அப்போது அப்படி பொங்கி ததும்பும்.என்  சின்னஞ்சிறு கரங்களில் மீள மீள அச்செந்தாமரை மலர்ந்தபடியே இருந்தது.  அட்லஸ் வழியே உலகை முதன் முதலில் பார்த்ததும் அதில்தான். அது அளித்த பரவசம் பின்னர் வேறெதிலும் கிடைத்ததில்லை..

 நேரம் கிடைக்கையில் எல்லாம் அந்த முழு உலக வரைபடத்தையும் பின்னர் அடுத்தடுத்த பக்கங்களில் தனித்தனி கண்டங்களையும் அவற்றின் வழவழப்பையும் தொட்டுத்தொட்டு பார்த்தபடியே இருப்பேன். அங்கெல்லாம் சென்று வந்தது போலவே பெரும் பரவசமளித்த அனுபவம் அது. அப்பா அப்போது பார்த்து வந்த ஆசிரியப்பணியுடன் கூடுதலாக நூலக  பாதுதுகாப்பும் அவர் பொறுப்பில் இருந்ததால் அதைக் கொண்டு வந்திருந்தார்..என் வாழ்வின் முதல் நூல் பரிச்சயமது.கமலா அத்தையின் மகன் ராமுவும் நாங்களும் ஏக வயது எனவே எல்லா விளையாட்டுகளிலும் அவனுமிருப்பான். அவனுடனும் கலைக்களஞ்சியத்தை வாசிப்போம் அல்லது பார்ப்போம். 

கமலா அத்தையின் வீட்டு கூடத்தில் டைனிங் டேபிளுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரம் இருக்கும், அதில் அவ்வப்போது காபிக்கொட்டைகளை வறுத்தரைத்து அத்தை போடும் பில்டர் காபி கமகமக்கும்., அத்தையின் கீழுதட்டின் சின்ன சதைத் திரட்டு அளிக்கும் கவர்ச்சியாலேயே நான் அவர்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தேன்.

 பிரபாவுக்கென அத்தை தயிர்சாதத்தில்  மாம்பழத்தை பிசைந்து ஊட்டுவார். வாசனை அபாரமாயிருக்கும்.  ஒருமுறை அத்தையின் உறவினரான கிளியுடன் விளையாடுகையில் , ஆம் அவள் பெயரே கிளிதான், மூன்று வரிசையில் இருந்த சிவப்பு சி்மெண்ட் பூசப்பட்டு கோடுகள் இடப்பட்டிருக்கும் வீட்டு வாசற் படிகளில் தடுக்கி விழுந்து மித்ரா நாக்கை துண்டித்துக்கொண்டாள், அப்பா அவளை தூக்கிக்கொண்டு அடுத்த தெரு தாமஸ் டாக்டர் வீட்டுக்கு ஓடி நாக்கை தைப்பதற்குள் அவரது வெள்ளை வேட்டி முழுக்க சிவப்பானது, பலமுறை அதே தாமஸ் டாகடரிடம் சின்ன சின்ன விஷக்கடிகளுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறோம். மித்ராவால் அவளது நுனி நாக்கை இப்போதும் முழுதாக மடிக்க முடியும்

வீட்டு வாசலில் எப்போதுமிருக்கும் கனகாம்பர பூச்செடிகள். அம்மா மாலையில் அவற்றை தொடுத்து தலையில் வைத்துக்கொள்வார்.பெரிய பெண்ணானதும் அப்படி நானும் வைத்துக்கொள்ளனுமென்று  ரகசியமாக  மனதில் நினைத்துக் கொள்வேன்.

கமலா அத்தை வீட்டு வாசலில் நின்ற சிவப்பு செம்பருத்தி மரங்களில், பூக்கள் பறிக்க வரும் ஐயப்பசாமி மாலை போட்ட  என்னால் ஊமை மாமா என்றழைக்கப்பட்ட ஊமை பக்தர் ஒருவர் எல்லா வருடமும் தவறாமல் வந்து மலர்களை பறித்துசென்றுவிட்டு, கோவிலிலிருந்து திரும்புகையில் ஒருநாள் கூட தவறாமல் பொங்கலும் புளியோதரையுமாக பிரசாத தொன்னையை என் கையில் கொடுப்பார்.

அந்த தெருவில் தினமணிக்கதிர் பேப்பர் வாங்குவதால் கதிரக்கா என்றழைக்கப்டும் ஒரு பெண்ணின் வீடிருந்தது. அங்கே அநேகமாக தினமும் அந்த பேப்பரை நான் சென்று வாசிக்க வாங்கி வந்து பின்னர் திரும்ப கொடுப்பேன், அந்த கதிரக்காவின் குதிகால் வரை நீண்டிருக்கும் அடர்ந்த கூந்தலை அவரது அம்மா துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து அரப்பிட்டு தேய்த்து கழுவுவார், கூடவே ’’ஆளைக்கொல்லும்டீ  இத்தனை முடி’’ என்று கடிந்து கொள்வார்.

 ’’சீமெண்ணே ’’என்று கூவியபடி அவ்வபோது வாசலில் ஒற்றை மாட்டு வண்டி வரும்.  தகர டின்னில் மண்ணெண்ணெய் வாங்குவது வழக்கம் அப்போது., ஒருநாள் பிரபா உரக்க ’’எங்கம்மா இன்னிக்கு தீட்டு சீமெண்ண வேண்டாம்’’ என்று வீட்டு வாசலிலிருந்தே  கத்த ராமு மாமா பின்னாலிருந்து காதை திருகி உள்ளே கூப்பிட்டு போனார். ‘’திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சீமெண்ன  நாராயணா ’’ என்று கோரஸாக அந்த வண்டி வருகையில் நாங்கள் மூவரும் பாடுவோம்.  கபாலத்தின் கடின ஓடே இல்லாமல் பிறந்த பிரபாவின் தங்கை ப்ரியாவை, வெகு பத்திரமாக கமலா அத்தை பார்த்துக் கொள்ளுவார்.5 வயதான பின்னரே அவளுக்கு சரியானது

அடுத்த தெருவில் பெரும் பணக்கார குடும்பமான சுஜியின் வீடிருந்தது. அதில் இருந்த நிலவறை பெரும் மர்மம் கலந்த வசீகரம் அளித்தது எனக்கு.

மேரி  நிம்மி,பாபு என்னும் ஒரு கிறிஸ்தவ குடும்பமும் நட்பிலிருந்தார்கள்.   அவர்கள் வீட்டிலிருக்கும் இப்போது’’ பெயிண்டர் பிரஷ் குரோட்டன்’’ என நான் தெரிந்து கொண்டிருக்கும் பலவண்ணச் சிதறல்கள் இருக்கும் இலைகளுடனான குரொட்டன் செடியும் நிலவறை அளித்த அதே ஈர்ப்பை அளிக்கும் எனக்கு., 

பெயிண்டர்ஸ் பிரஷ் குரோட்டன்

அம்மா பணிபுரிந்த பெண்களுக்கான அரசு விடுதி  வீட்டின் நேரெதிர் கட்டிடத்தில் இருந்தது, அங்கு நான் அம்மாவுக்கு தெரியாமல் ஹாஸ்டல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட கஞ்சியும் கொள்ளுத்துவையலும்,அதன் பொருட்டு வாங்கிய  அடிகளுமாக நிறைந்திருந்த காலமது. அங்கிருந்த ஒரு சிறு பப்பாளி மரத்தின் உச்சி வரை நான் ஏறி விளையாடுவேன்.  தங்கம்மாவும் நாகம்மாவும் இறங்கச் சொல்லி கூச்சலிடுவார்கள்.ஹாஸ்டலின் வேப்ப மரத்தின் பாதி நிம்மி வீட்டில் நிற்கும். 

 ஹாஸ்டல் சமையல்கார நாகம்மா என்னை மடியில் படுக்க வைத்து சொல்லிய கதைகள் ஏராளம் பெரும்பாலுமவை அவரின் சொந்த வாழ்வின் கதைகள் என்பதை இப்போது உணர்கிறேன் அப்பா அம்மா எனக்கு கதைகள் சொல்லியதே இல்லை ஆனால் நாகம்மாவே என் உலகில் கதைகளை புகுத்தியவர் அவை அனைத்துமே  துயரக்கதைகளானாலுமே.

மிக இளம் வயதிலேயே குறை பட்டுபோன நாகம்மாவின்  கறை படிந்திருக்கும் வெள்ளைச்சேலையின் வாசம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,, கால்களை நீட்டி என்னை படுக்க வைத்து நாகம்மா அடிக்கடி ’’கிங்கிங் கிங்கிங் காணலையே, எங்கயும் காணலியே, எங்கயும் காணலியே வாழமரத்தடியே மாமியார் வீடிருக்க’’ என்று  துவங்கும் பூ வங்கி வரச்சென்ற  தன் கணவனான ஆண் தவளை ஒரு பஸ் சக்கரத்தில் நசுங்கி செத்துப் போனது தெரியாமல் போனவர காணோமே என்று கண்ணீருடன் தேடும் பெண் தவளையின் பாடலை பாடுவார்., எப்போது அதை பாடினாலும் சொட்டு சொட்டாக நாகம்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் வெம்மையை இப்போது சக ஹிருதயளாக உணர்கிறேன்,

 நாகம்மா தன் ஒரே ஆசையாக கருப்பு செருப்புக்களை போட்டுக் கொள்ள விரும்பினார் என்னிடம் விளையாட்டாக எப்போது நான் வேலைக்கு போனாலும் சம்பளத்தில் செருப்பு  வாங்கி தர வேண்டும் என்று சொல்லுவார். ஆய்வு மாணவிக்காக அளிக்கபட்ட சலுகைக்கட்டணம் வாங்கிய முதல் மாதமே நாகம்மாவிற்க்கு செருப்புக்கள் வாங்கினேன். ஆனால் போது அவர் அவற்றை அறிந்துகொள்ள முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் சில நாட்களில் மறைந்துவிட்டார்.

கருப்பு செருப்புகளும், தவளைகளும், வெள்ளைச்சீலையும் எப்போதும் எனக்கு  நாகம்மாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது

 இன்னொரு உதவியாளர் தங்கம்மாவும் என்னை வளர்த்தவரில் ஒருவர். நாகம்மா என் செவிக்குணவளித்தார். தங்கம்மா  வயிற்றுக்கு.

எப்போது என்னை பார்த்தாலும் எனக்கென்று அம்மாவுக்கு தெரியாமல் நான் சாப்பிடும் ஒரு ரகசிய தின்பண்டம் வைத்திருந்து கொடுப்பார்.அதில் தங்கமையின் வியர்வையின் வாசம் இருக்கும். அன்பின் வாசமது

திலேப்பி மீன்களீன் சதையை கீறி அவற்றில் மசாலாவை திணிக்கும் மெலிந்த எலும்பு புடைத்திருக்கும் கரிய தங்கம்மாவின் கைவிரல்கள் வளர்த்த உடலிது.

 முதன் முதலாக  வீட்டுக்கு வாங்கிய ஒரு சின்ன நாய் குட்டியின் கழுத்தில் கயிறு கட்டி ஜன்னலுக்கு உள்ளிருந்து கிணற்றில் தண்ணீர் சேந்துவதுபோல  இழுத்து, அதை தூக்கிட்டு அறியாமல் நான் கொன்றேன். அது ஏன் அசையாமல் என்னிடம் விளையாடாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறதென்பதை முதுகில் நாலு விழுந்த பின்னே தெரிந்துகொண்டேன். எனக்கு தெரியவந்த முதல் மரணம் அது.

எதன் பொருட்டோ எப்போதுமே வீட்டின் சந்தில் நின்றுகொண்டிருந்தது  சிமெண்ட் தள்ளிக்கொண்டு போகும் சிறு வண்டியொன்றூ. அதனருகில் அமர்ந்து நிம்மியும் பிரபாவும் நாங்களும் பேசிய கதைகளில் பெரும்பாலும் ஒரு பெருங்காடிருக்கும் அதனுள் நுழைந்ததுமே கனிகள் செறிந்திருக்கும் பழமரங்களும் அண்டாக்களில் நிரம்பியிருக்கும் எலுமிச்சை சர்பத்துமாகவே இருக்கும். கேட்பாரற்ற அந்த உணவுகளை கற்பனைக்கதைகளில், அள்ளி அள்ளி புசிப்போம் அப்போ்து. 

அங்கமர்ந்துதான் அப்போது எங்களுக்கு தெரிந்த இரண்டு சிற்றுண்டிகளான வாழைப்பழத்துக்கு அடுத்ததான நறுக்கிய தக்காளி துண்டுகளில் சர்க்கரை தடவி சாப்பிடுவோம், அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துளி நீர் ஊற்றி வைத்த  சர்க்கரை டப்பாவில் மறுநாள்  கிடைக்கும் சிறு சர்க்கரை வில்லையளித்த குதூகலத்தை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் எந்த அடுக்கில் கைவைத்தாலும் மகன்களுக்கு கிடைக்கும் பட்டை சாக்லேட்டுகள் அளிக்கவே முடியாது.

 பள்ளியின் ,NCC  ஆபீசரான அப்பா சுவரில் தொங்க விட்டிருக்கும்  கார்க் குண்டுகள் சுடும் வெற்றுத் துப்பாக்கியை கொண்டு எங்களிருவரையும், அந்த அறியா வயதின் தவறுகளின் பொருட்டு  சுட்டுவிடுவதாக சொல்லி மிரட்டுவார். வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வழிய சுவரோடு சுவராக பல்லியை போல அழுந்தியபடி அஞ்சி நின்ற இரு சிறுமிகளை நானே இப்போது அந்த பச்சை கம்பி ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.

’’கண்ணீரும் கனவும்’’ என்று அருணா அவர்களின் இன்றைய பதிவை வாசித்ததும் எனக்கும்  பால்யத்தின் நினைவுகள் கொப்பளித்து கிளம்பியதால் அவற்றை எழுத தொடங்கியிருக்கிறேன். ஜன்னல் வழி பயணம் இன்னும் தொடரும்

ஒரு நாள், பெருநாள், ஏப்ரல் 6,2021

 தேர்தல் திருவிழா

 தேர்தல் கமிஷன் அறிவிப்பு வந்ததிலிருந்தே  தேர்தல் நடக்குமா நடக்காதா என்று இரு விதமான கருத்துக்கள் வலுவாக  நிலவி வந்தது. பெருந்தொற்று காரணமாக தேர்தல் நடைபெறாது என்றே பரவலாக கருத்து நிலவியது. ஆனால் நான்கு மாநிலங்கள்  மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறும்  என்று   பிப்ரவரி 11 ம் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில்  அறிவித்த பின்னர்தான் பலருக்கு நம்பிக்கையே வந்தது.

தமிழ்நாட்டில். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் மட்டும் என  நிர்ணயிக்கப்பட்டது வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு, அதற்கேற்ப தேர்தல் பணியாளர்களும் அதிகரிக்க பட்டனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால்  தபால் வாக்கு அளிக்கும் வசதியும் இம்முறை இருந்தது.

தமிழகத்தில்  234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் களம் கண்டார்கள், இவர்களில் .2  இடைப்பாலினத்தவர்களும் இருந்தார்கள். அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், குறைந்த பட்சமாக வால்பாறையில் 6 வேட்பாளர்களும் இருந்தார்கள்

வேட்பு மனு தாக்கலுக்கு,  பரிசீலனைக்கு, திரும்ப பெறுவதற்கான கால அட்டவணைகள் வழக்கம்போலவே வெளியாகின. தமிழகத்தில் வாக்களிக்க தகுதியானோர் இம்முறை   6  கோடியே 28 லட்சம் பேர் இருந்தனர்

கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த இரு பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்களான செல்வி ஜெயலலிதாவும் கருணாநிதியும்  உயிரோடு இல்லாத சமயத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அனைவராலும் கவனிக்கப்படும் ஒன்றாகவே இருந்தது. கட்சியினருக்கு இது வாழ்வா சாவா என்னும் முனையிலிருந்து நடக்கும் தேர்தலானது

 தேர்தல் கூட்டணி அமைப்பதில் தொடங்கிய இழிபறி சில நாட்களுக்கு நீடித்தது பல எதிர்பாரா கூட்டணிகள் உறுதியானது, சில கட்சிகள் வெளியேறின, சில கட்சிகள் புதிதாக இணைந்தன, பல கட்சித் தாவல்கள் நடந்தன பலருக்கு ஏமாற்றத்தையும், பலருக்கு அதிருப்தியும், சிலருக்கு திருப்தியையும் அளித்தது இந்த தேர்தலுக்கான கூட்டணிகள் .பல திரைப்பிரபலங்கள் இம்முறை களம் கண்டார்கள்.

 தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பே முடித்தாக வேண்டிய பரப்புரை பரபரப்பாக துவங்கியது. தமிழக அரசியல் வரலாறு இதுவரை கண்டிராத அளவில் தேர்தல் பரப்புரைகளில் அனல் வீசியது மிக வித்தியாசமான கீழ்த்தரமான பரப்புரைகள் அநேகமாக எல்லாக் கட்சியிலும் நடந்தது பொது வாழ்வை மட்டுமல்லாது, குடும்ப வாழ்வை, அந்தரங்க வாழ்வை கூட விமர்சித்தார்கள் .வேட்பளர்களுக்கு மக்கள் போட்டுபோட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்தார்கள் வேட்பாளர்கள் நடனமாடினார்கள். மேடைபோட்டு சினிமா பாடல்களுக்கு நடனங்களை ஏற்பாடு செய்தார்கள்.

சாலையில் வாகன போக்குவரத்தை பல மணி நேரம் ஸ்தம்பிக்க செய்து பிரச்சாரம் செய்தார்கள். முன்னறிவிப்பின்றி ஒரு முக்கிய பிரமுகர் கடலில் குதித்து, மீனவர்களுடன் நீந்தியபடியே அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், மீன் பிடித்தார். இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினார்கள். கடைகளை அடைக்க சொல்லி கல்லெறிந்தார்கள். ஆட்சேபணைக்குரிய விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பதிந்துவிட்டு பின்னர் நான் அதை செய்யவே இல்லை நாசவேலைதான் காரணமென்றார்கள் சில கட்சிகளில் வேட்பாளர்களை வலை வீசி தேடினார்கள்.

மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு பிரமுகர் சிறையிலிருந்து வெளிவந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு பழிதீர்க்க போ வதாக வஞ்சினமெல்லாம் உரைத்துவிட்டு பின்னர் சில நாட்களிலேயே அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளுவதாக அறிவித்தார்.

ஒரு முக்கிய கட்சித்தலைவரின் மகன் பிரச்சாரத்தின் போது கட்சியினருக்கு உண்வளிக்க, சொல்லாமல் கொள்ளாமல் சாலையோர கடையிலிருந்த பிரியாணி அண்டாவையே வண்டியில் தூக்கிகொண்டு சென்றார்.

மிக சுவாரசியமான சில விஷயங்களும் நடந்தது ஒரு முக்கிய வேட்பாளர் தனக்கிருந்த உடல் பிரச்சினைகள் எல்லாம் எடுத்துக் கூறினார் ’’எனக்கு பிபி சுகர் இருக்குது, உடல் எடையே 8 கிலோ குறைந்து நிச்சயமா எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருங்க’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்’

இன்னொருவரோ ’’இத்தனை பாடுபட்டு இந்த தொகுதிகளில் எத்தனை வேலைகளை செய்து இருக்கிறேன் என்னை நீங்கள் வெற்றி பெற செய்யாவிட்டால் இதே தொகுதியில் நான் உயிரை விடுவேன்’’ என்று பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் இன்னொரு வேட்பாளர் ’’எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கலைன்னா சூனியம் வச்சிருக்கேன் ரத்தமா கக்கி செத்துபொயிருவீங்க’’ என்றார். பலரிடம் குலதெய்வங்களின் மீது சத்தியம் வாங்கிக்கொண்டு வாக்குக்கு பணம் அளிக்கபட்டது.

 எல்லா கட்சியினரும் ஏராளமான நலத்திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார்கள் இல்லத்தரசிகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள், மாதா மாதம் உதவித்தொகை உள்ளிட்ட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நலத்திட்டங்கள் மாற்றி மாற்றி வெளியிடப்பட்டு கொண்டே இருந்தன.அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஐம்பதிலிருந்து 59  ஆகி இப்பொழுது 60 ஆகிவிட்டது.

வழக்கமான தேர்தல் ஸ்டைலான மூதாட்டிகளை அணைத்து முத்தமிடுவது, எதிர்பாராமல் வீடுகளுக்குள் நுழைந்து உணவு உண்பது, கைக் குழந்தைகளுக்கு பெயரிடுவது, குழந்தைகளை எடுத்துக் கொஞ்சுவது போன்றவைகளோடு இம்முறை வேறு சில சுவாரசியமான விஷயங்களும் நடந்தன சில வேட்பாளர்கள் பெரும் தொற்றால் பள்ளிகள் இல்லாததால் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர் இன்னும் சிலர் அடி பம்பில் நீர் இறைத்து பெண்களுக்கு குடங்களை நிரப்பிக் கொடுத்தார்கள் இட்லி கடையில் இட்லி வேகவைத்து, இட்லி சாப்பிட்டார்கள், சலவை தொழிலாளி ஒருவருக்கு உதவியாக சில துணிகளை இஸ்திரி போடுவதும் நடந்தது

  சில பல கட்சி தாவல்களுக்குப்  பிறகு ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரு  முன்னாள் முன்னணி நடிகை ’ என்னை சட்டைசபைக்கு  அனுப்புவீர்களா அனுப்புவீர்களா? என்று மழலைத் தமிழில் ஆவேசமாக திரும்பத் திரும்ப கேட்டது ரசிக்கும்படி தான் இருந்தது

  பரப்புரைகளை இப்போது வரும் சினிமாக்களை காட்டிலும் மிக சுவாரசியமாக இருந்ததால் அந்த காணொளிகள் பல லட்சம் பேர்களால்  பார்க்கப்பட்டன ஒரு கட்சியினர் உருவாக்கிய காணொளிகளின் வரிகளில்  திருத்தமும்  கிண்டலும் செய்து செய்து  எதிர்க்கட்சியினரும் அதே வரிகளோடு பழிக்குப்பழி காணொளிகளும் வெளியிட்டார்கள் . பல முக்கிய தலைவர்கள் கண்ணீருடன் இறைஞ்சியதையும் பார்க்க முடிந்தது

 படித்த வாக்காளர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இம்முறை களம் காணும் ஒரு அறிவு ஜீவி என்னும் பிம்பம் உடைய ஒரு பிரபல வேட்பாளர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நீட் தேர்வு குறித்த ஒரு அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல் ’’தான் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனது கட்சியினரிடம் கேட்டால் இதை சொல்வார்கள்’’ என்றும் சொன்னார் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த பல இளைஞர்களுக்கு அந்த நேர்காணல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது

 தனது மகளை பிரச்சாரத்தின் போது தெருவெங்கும் நடனமாட விட்டார் ஒரு வேட்பாளர். குடும்பத்தினரையும் அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபடச்செய்தார் இன்னொருவர். ஒருவர் மீது ஒருவர் வசைபாடி கொண்டார்கள் புகார் அளித்து கொண்டார்கள் அடித்துக் கொண்டார்கள்

  அரசு ஊழியர்கள் ஆனதால் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை எதிர்பார்த்திருநதோம்,  எனினும் எங்களுக்கும் இந்த தேர்தல் நடைபெறும், நடைபெறாது என்று இரு விதமான கருத்துக்கள் இருந்தது.  தேர்தல் பணிக்கான படிவங்களை பூர்த்தி செய்யச் சொல்லி   கல்லூரி முதலவரிடமிருந்து ஆ்ணை வந்ததும்தான் நாங்களும் தேர்தல் பணிக்கு செல்வது உறுதியானது. 

அரசு ஊழியர்களில் கல்லூரி பேராசிரியர் மட்டுமல்லாது பொது நல வாரியம் மின்சார வாரியம்  என்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்தமுறை தேர்தல் பணிக்கான அழைக்கப்பட்டிருந்தார்கள் எந்த காரணம் கொண்டும் இதனை தவிர்க்கவே முடியாது என்பது வழக்கம் போலவே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது 

 மூன்று பயிற்சி வகுப்புகள் இருந்தன அவரவர் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவிலேயே வழக்கம்போல பயிற்சிகள் இருந்தன. எந்த தவறும் நிகழ்ந்து விடாமல்  கன்ட்ரோல் யூனிட், யாருக்கு வாக்களித்தோம் என்னும் சின்னத்துடன் கூடிய தாளை ஏழு நொடிகளுக்கு காண்பிக்கும் இன்னொரு இயந்திரம், வேட்பாளரின் சின்னங்கள் அடங்கிய பேலட்பாக்ஸ் ஆகிய மூன்று இயந்திரங்களையும் எப்படி எந்த தவறும் இல்லாமல் இயக்குவது, பாதுகாப்பது , எப்படி பாதுகாப்பாக மாதிரி தேர்தல் நடத்துவது தேர்தல் முடிந்த பின்னர் அவற்றை காவல் அதிகாரிகளின் உதவியுடன் எப்படி முறையாக சீல் வைத்து சமர்ப்பிப்பது என்கின்ற பயிற்சி மூன்று நாட்களும் திரும்பத் திரும்ப எங்களுக்கு அளிக்கப்பட்டது

  எந்த தவறும் வாக்குப்பதிவில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொன்னார்கள் எனக்கு கோவையில் சூலூரில் பணியாணை வந்திருந்தது அந்தப் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதோ ஒன்றில் எனக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருந்தது

 பல தேர்தல்களை இதற்கு முன்னர் நான் பணியாற்றி இருந்தேன் எனினும் கடந்த தேர்தலில் பல கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன நான் பணியாற்றிய குக்கிராமத்தில் தேர்தல் தொடங்கி ஒரு மணி நேரத்திலேயே கன்ட்ரோல் யூனிட் இயந்திரம் கோளாறு இயந்திரத்தை மாற்றி ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் தேர்தலை தொடங்க வேண்டி இருந்தது அதன் பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்னும் தாள்களை 7 நொடி காட்டும் அந்த இயந்திரம் இரண்டு முறை பழுதாகி மூன்றாவது இயந்திரம் மாற்ற வேண்டி வந்தது இந்த தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து எதுவும் அறியாத வெளியே வரிசையில் காத்திருந்த கிராமத்தவர்களிடமிருந்து ஏராளமான கண்டனங்களும் வந்தது இரவு ஏழு மணிக்குப் பிறகும் 50 பேருக்கு மேல் வாக்களிக்க காத்திருக்கையில் எதிர்பாராமல் வந்த இடி மின்னலுடன் கன மழையினால் மின்சாரம் தடைபட்டு மீண்டும் வாக்களிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது அதன் பின்னர் வாக்களிப்பதை முடித்து இயந்திரங்களை சீல் வைத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிய பின் மறுநாள் அதிகாலை வீடு திரும்பி இருந்தேன்

 அந்த கசப்பான அனுபவங்களின் பிறகு இந்த முறையாவது வாக்குச்சாவடிக்கு செல்லாத, தேவைப்படும்போது மட்டும் அழைக்கப்படும் ரிசர்வ் பணி எனக்கு  அளிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்னும் நப்பாசையுடன்  நான் சூலூர் சென்றேன் மிகப் பிரபலமான  கல்லூரி வளாகத்தில் காரில் இருந்து இறங்கியதுமே அங்கிருந்து ஒரு பெரிய மரத்தில் ரிசர்வ் என்று எழுதி ஒட்டப்பட்ட அம்புக்குறி கண்ணில் பட்டது. குணா கமல் கோவிலில் லட்டு வாங்க போகும் போது அவரை வழி நடத்தும் அம்புகளைப் போல எனக்கும் இது ஏதோ ஒரு நிமித்தமாயிருக்குமோ என்று மனதில் தோன்றியது.

 எதிர்பார்த்தபடியே நான் உள்ளிட்ட சுமார் 300 அரசு ஊழியர்கள் ரிசர்வ் என்று அறிவிக்கப்பட்டு கல்லூரி வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டோம்

வாக்குச்சாவடி அதிகாரிகளில் யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் எதிர்பாரா நிகழ்வுகளால் அவர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலோ ரிசர்வில்  காத்திருக்கும் நாங்கள் அழைக்கப்படுவோம்.

 ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் என்னைபோன்ற வாக்குச்சாவடி அதிகாரி ஒருவரும் அவருக்கு உதவியாக 3 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்

ரிசர்வில் இருந்த  நாங்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய கலை அரங்கத்தில் நோய்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சமூக இடைவெளிகளும் இல்லாமல் தங்க வைக்கப்பட்டிரு்தோம்

 காலை பத்து மணிக்கு கலையரங்கு சென்ற அனைவரும் இரவு எட்டு மணி வரை குடிநீரோ தேநீரோ உணவோ வழங்கப்படாமல், எந்த அதிகாரிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் காத்திருந்தோம். 8 மணிக்கு மேல் அங்கு வந்திருந்தவர்களில் சிலர் அதிகாரிகளிடம் அலைபேசியில் அழைத்து சண்டையிட்டபின்பே அருகில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள்.

 அங்கும் மிகப் பெரியதோர் கூடத்தில் ஆண்களும் பெண்களுமாய் அனைவருமே ஒரே இடத்தில் இரவு தங்க வைக்கப்பட்டோம் நோய் தொடர்பான எந்த  பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 10 மணிக்கு மேல் கொங்கு நாட்டின் பிரபல உணவான கோதுமை ரவா உப்புமா அனைவருக்கும் இரவு உணவாக வழங்கப்பட்டது

 தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம் ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று’’ என்றெல்லாம்

  ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி  கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’’ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்’’ என்றார்

 இந்த தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் விளக்கு அளிக்கப்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கடினமான அறிவுறுத்தல்கள் வந்திருந்தன நான் தங்கியிருந்த இந்த கல்யாண மண்டபத்தில் இருவருக்கு கடுமையான காய்ச்சலும் இருமலும் இருந்தது. ஒரு பெண்மணி சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பினால் ஒரு கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது அவரும் பணிக்கு வந்திருந்தார் அவர் கழிப்பறை செல்லவும் படிகளில் ஏறவும் நாங்கள் கைபிடித்து உதவ வேண்டி இருந்தது. கணவனும் மனைவியுமாக இருவரும் அரசுப் பணியாளர்கள் என்பதால் இரு குழந்தைகளுடன்  வந்து குடும்பமாக தங்கியிருந்தனர்  இருவர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த வயிற்ரை கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டபடியே இருந்த  ஒரு இளம் பெண்ணுமிருந்தார் இப்படி ஏராளமானவர்களை கவனிக்க முடிந்தது.

ஒரு பேராசிரியர் ஸ்விக்கியில் அனுப்பாணை பிறப்பித்து சிக்கன் பிர்யாணி வாங்கி சாப்பிட்டுக்கொண்டுபோனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கையில் அவரது மனைவி அழைக்க இவர் அலட்டிக்கொள்லாமல் ‘’நான்தான் பூத்தில் முக்கிய வேலையில் இருப்பேன் ரெண்டு நாளைக்கு கூப்பிடாதேன்னு சொன்னேன்னில்ல. இப்போ ஒட்டுப்போட ஜனங்க கூட்டமா நிக்கறாங்க, உன்கிடே பேசிட்டு இருக்க முடியுமா’’ என்று கோபமாக கேட்டதும் மறு முனை அவசரமாக துண்டிக்கப்பட்டது. எங்களை பார்த்து கண் சிமிட்டிவிட்டு’’ 1 மாசமா தேர்தல் பணி, தேர்தல் பணின்னு புலம்பிட்டு இப்போ கலயாண மண்டபத்தில் பிரியாணி சாப்டுட்டு இருக்கேன்னு சொல்ல முடியாதில்ல ‘’ என்றார்.

 தேர்தல் பணிக்கு வந்து இருப்பவர்களுக்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், நியாயமான  காரணங்களின் பெயரில் அவர்களுக்கு பணியிலிருந்து விலக்களிக்கவும்  அதிகாரிகளுக்கு நேரமிருக்கவில்லை என்பது மிகப்பெரிய விளைவுகளை பின்னர் உருவாக்கும்  என நான் எதிர்பார்த்தபடியே தேர்தலுக்குப் பிறகு நோய் தொற்று பல மடங்கு ஆகியிருக்கிறது 

 நான் பணிபுரியும் கல்லூரியிலேயே தேர்தல் பணியாற்றி வந்த பல ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது

நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு ஆரம்பப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன இங்கிருந்து வாக்குச்சாவடி நிகழ்வுகளை பார்க்க முடிந்தது வாக்குப்பதிவு நடைபெறும்  அறைக்கு முன்பு மட்டுமே சமூக இடைவெளி்யுடனான அடையாளப்படுத்திய  வட்டங்களுக்குள் வாக்காளர்கள் நின்று வாக்களித்தனர்

 வாக்குச்சாவடிக்கு வெளியே இரண்டு சுகாதாரத் துறை அலுவலர்கள்  உடல் வெப்ப பரிசோதனை செய்து  கைகளுக்கு சானிடைசர் களையும் பிளாஸ்டிக்கை உ்றையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிளாஸ்டிக் கையுறைகளை ஓட்டு போட்ட பிறகு அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கழற்றி போட்டு விட்டு செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது பிளாஸ்டிக் இல்லாத பிரதேசங்களான நீலகிரி போன்ற இடங்களில் இந்த பிளாஸ்டிக் கையுறைகள் கடினமான ஆட்சேபத்திற்கும் கண்டனத்துக்கும் உள்ளானது

 ஆனால் தேர்தல் கமிஷன் இந்த புகார்ளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை வாக்களிக்க நின்ற பத்து பதினைந்து பேரை தவிர வாக்குச்சாவடிக்கு வெளியே அனைவரும் முகக்கவசம் இல்லாமல் தகுந்த சமூக இடைவெளி இல்லாமல் தான் காணப்பட்டனர்

 இவர்களை சொல்வானேன் பரப்புரையின் போது தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும்,  பொது மக்களும், கட்சியினரும் யாருமே சமூக இடைவெளியை, முக கவசம் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொஞ்சம்கூட கவனத்தில் கொள்ளவே இல்லை

  தேர்தல் முடிந்து இரண்டாம் நாளிலிருந்து மறுபடியும் அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வுகளுடனான் ஊரடங்கினால் எந்தப் பயனும்  இல்லாத அளவிற்கு பெருந்தொற்று வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது

     வாக்குப்பதிவு பகல் ஒரு மணிவரை மிக மந்தமாகவே நடந்தது மதிய உணவின் போது 50 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவு நடந்து இருந்து தமிழகம் முழுவதும் 6 மணியிலிருந்து 7 மணி வரை நோய் தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கும் சமயம் என்பதால் வாக்குச்சாவடி அதிகாரிகள் முழு கவச உடை அணிந்து தயாராக காத்திருந்தனர் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைவான எண்ணிக்கையிலேயே தொற்று உள்ளவர்கள் வாக்களித்தனர்.  பிரபல கட்சி தலைவரின் மகள் மருத்துவ மனையிலிருந்து முழு கவச உடையில் வந்து வாக்களித்தார்.

மிகவும் கவனிக்க வேண்டிய இன்னொன்றும் இந்த தேர்தலில் நடந்து இருக்கிறது. மனநல பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாமா ? என்ற ஒரு கேள்வி எழுந்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலிருந்தவர்களில் அரசியல் புரிதல் உடையோர், கட்சிகள், வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து தெரிந்தவர்கள் ஆகியன குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர் பரிசோதனை செய்ததன் அடிப்படையில், 56 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 84 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வாக்களித்துவிட்டு வரும் போது அவர்களிடம் நிருபர்கள் கேட்ட சமகால பிரச்சனைகளான petrol diesel உயர்வு பற்றிய கேள்விகளுக்கெல்லாம் பொருத்தமான பதிலை கூறினார்கள். வாக்களிக்காமல் இருந்த அந்த 28%பேருக்கு இந்த செய்தி ஒருவேளை குற்றவுணர்வை தருமோ என்னவோ?

https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/mentally-retarted-persons-voted-for-a-first-time-in-assembly-election/tamil-nadu20210406191859062

ஒரு வாக்குச்சாவடியில் முழுக்க பெண்களே பணியிலிருந்தார்கள் அந்த வாக்குச்சாவடி மட்டும் மலர்களாலும் வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்னும் சில சுவாரசியமான மற்றும் வேதனையான விஷயங்களும் நடந்தன.. ஒரு முதியவர் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வெளியே வந்து வாக்குச்சாவடி வாசலிலேயே மாரடைப்பினால் உயிரிழந்தார்.

 பச்சிளம் குழந்தையுடன் வந்த இளம் தாயிடமிருந்து காவலர் குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டு அவர் வாக்களித்துவிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தா. ர் ஆந்திராவில் இருந்து வந்திருந்த சர்க்கரை நோயாளியான காவலர் ஒருவர்  உணவு ஏதும் அளிக்கப்படாததால் மயக்கம் போடும் நிலைமைக்கு வந்து விட்ட பின்னர் வாக்களிக்க வந்த ஒருவர் அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்து திரும்ப கொண்டு வந்து விட்ட மனிதாபிமானமிக்க செயலும் நடந்தது

 பல முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சக்கர நாற்காலிகள் அளிக்கப்படாத வாக்குச் சாவடி ஒன்றில் மாற்றுத்திறனாளியான ஒரு இளம்பெண் படிகளில் தவழ்ந்தே சென்று வாக்களித்தார். ஒரு வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து வாக்களிக்க வந்த பொதுமக்களில் 5 பேர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்

பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு சில மணி நேரம் தடைபட்டது ஒரு பிரபல வேட்பாளர் விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்னும் சின்னத்தை 7 நொடிகள் காண்பிக்கும் இயந்திரத்தை சரியாக கவனிக்காமல் தான் வாக்களித்த சின்னம் அதில் வரவில்லை என்று அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கி அவரை சமாதானப்படுத்த சில மணி நேரங்கள் தாமதமானது.

இன்னும் சில இடங்களில் கட்சி சின்னங்களை எதை அழுத்தினாலும் வேறு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஓட்டு விழுவதாக புகார்கள் வந்து வாக்குப்பதிவு தடைபட்டது. பல கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகிக்க தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினர் 

குறிப்பாக பேலட் பாக்ஸ் எனப்படும் வேட்பாளர்களின் சின்னங்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருக்கும் அந்த இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்துவது என்று தெரியாமல் சின்னங்கள் ஒட்டப்பட்டு இருக்கும் இடத்தில் அழுத்தியபடி பலர் தடுமாறுவதும் பிறகு அதிகாரிகள் உதவுவதுமாக வழக்கமான குழப்பங்களும் நடந்த வண்ணமே இருந்தன 

உடன் பணியாற்றுபவர்கள் இதுபோன்ற வாக்குச்சாவடி நிகழ்வுகளை அலைபேசியில் பகிர்ந்ததால் கேட்டுக் கொண்டே இருந்தோம் எங்களைப் போலவே பல இடங்களில் ரிசர்வ் தங்கியிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குச் சாவடியில் பணியில் இருந்தவர்களுக்கும்  உணவு குடிநீர் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

 அதிகாலையிலேயே குளித்துவிட்டு மண்டபத்துக்கு வெளியில் ஒரு நாள் முழுவதும் அங்குமிங்குமாக அமர்ந்தபடியே இருந்து பெண்கள் சிறூ குழுவாக குடும்பக் கதைகளை பகிர்ந்து கொண்டும், ஆண்கள் பெரிய குழுவாக வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள் இரவு ஒரு மணிக்கு கூட தூங்குபவர்களை எழுப்பி வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றார்கள் தேர்தல் அன்று மாலை 3 மணி வரை கையில் வெள்ளைத்தாளுடன் அதிகாரிகள் வருவதும் பெயர்களை வாசித்து ஒவ்வொருவராக கூட்டிச் செல்வதும் நடந்துகொண்டே இருந்தது 

 தேர்தல் நேரம் முடிந்தவுடன் கல்யாண மண்டபத்துக்கு அதிகாரிகள் வந்து எங்களுக்கான சன்மானத்தை கவரில் வைத்து கொடுத்து ஒவ்வொருவராக அனுப்பினார் சன்மானமாக அளிக்கப்பட்ட சில நூறு ரூபாய்களை  வாங்கிக்கொண்டோம்

  இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாதான் இனி வரப்போகும் ஐந்து ஆண்டுகளுக்கு இத்தனை நெருக்கடியில் இருக்கும் தமிழகம் இனி யாருடைய ஆட்சியின்கீழ் இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் இந்த பெரும் தொற்று காரணமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக நடக்காததால் நிச்சயம் அதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்

 மேலும் பல தேர்தல்களில் நான் பணியாற்றி இருப்பதால் வாக்குப்பதிவு மிக அதிகமாக நடக்கும் பொழுது அது ஆளும் கட்சிக்கு எதிரான முடிவை கொண்டு வரும் என்றும் தேர்தல் மந்தமாக நடந்தால் இப்போதுள்ள ஆட்சியை நீடிக்கும் என்பது பொதுவாக பணியாற்றும் எங்களின் அனுமானம் இப்பொழுதும்  72 சதவீதம் மட்டுமே மொத்த வாக்குப்பதிவு என்பதால்  நான் அப்படியே தான் அனுமானிக்கிறேன் 

 நான் தங்கியிருந்த இடத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு வீடு வந்து சேர்ந்து உறங்கி எழுந்த பின்னர் ஊடகங்களில் வந்திருந்த காணொளிகள் பெரும் அதிர்ச்சி அளித்தன பிழைகள் ஏதும் நடக்காமல் ஒரே ஒரு ஓட்டு எண்ணிக்கை கூட  குறையவோ கூடவோ இருக்கக்கூடாது , தவறு நடந்துவிடக் கூடாது என்று திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கடுமையான பயிற்சிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன.

 நான் பணிபுரியும் கல்லூரியிலேயே ஒரு மாதத்துக்கு முன்னரே தேர்தல் பணிக்கான இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன அங்கிருந்துதான் அவை தமிழகத்தின் பள்ளிகளுக்கு  எடுத்துச் செல்லப்பட்டன

 ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் ஒரு கண்டெய்னர் லாரி முழுவதும் வாக்கு இயந்திரங்கள் எந்த ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதும் தேர்தல் கமிஷனால் அமர்த்தப்பட்ட இரு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் சென்று  அவை சாலையில்  தவறி விழுந்து அங்கு  பொது மக்கள் ஒரு சிறு கும்பலாக கூடி எப்படி இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இப்படி போலீசாரின் பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று பெரிய சண்டையும் சச்சரவும் ஆன காணொளிகள் பெரும் அதிர்ச்சியை அளித்தது

 அரசு ஊழியர்களுக்கு அத்தனை பயிற்சி  அளித்து அத்தனை சிரமங்களுடன் நாங்கள் பணியாற்றி வந்த பின்னர்  எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஓட்டுப் பெட்டிகள் இப்படி வெளியே எடுத்து வர முடியும் என்றால் எதன் பொருட்டு நாங்கள் இத்தனை பயிற்சி எடுத்துக் கொள்கிறோம் என்று புரியவில்லை 

மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கை இந்த தேர்தலிலும் பறக்கும் படையினரின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணமும் பரிசுகளும் அளிக்கபட்டிருக்கின்றன. பணம் பத்தும் செய்யும் அறம் ஏதேனும் செய்யுமாவென்று காத்திருந்து பார்க்கலாம்

சர்க்கார்பதி – நிறைவு

மேற்குத்தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான ஆனைமலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, நவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்று இவர்களுக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் உள்ளது.

இவர்களில் மகா மலசர்கள் அல்லது மலமலசர்கள் கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் பலதலைமுறைகளாக  வசித்து வருகின்றனர்.  மேல் சர்க்கார்பதி, கீழ் சர்க்கார்பதி என இரண்டு கிராமங்கள் இருக்கின்றன.  இரண்டு கிராமங்களிலும் சேர்த்து 130 பழங்குடியினர் குடும்பங்கள் இருக்கின்றன.  பெரும்பாலும் வருடத்தில் 10 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும் கிராமமென்பதால் பசுமை அடர்ந்து கிடக்கும் வனப்பகுதியாக இருக்கிறது சர்க்கார்பதி. மழைவாழ்மக்கள் குழந்தைகளுக்கான் துவக்கப்பள்ளியும் அங்கு இருக்கின்றது.

மேல்சர்க்கார்பதியில் ஒருசில மலமலசர் பழங்குடியினரே இருக்கின்றன இவர்களின் தெய்வம் மகா மாரியம்மன். இவர்கள் ஒருசில சிறுதெய்வங்கள மூங்கில் தப்பைகளால் தடுக்கப்பட்ட பாறைமீது எழுப்பப்பட்ட எளிய சிறு கோவில்களில் வழிபடுவதோடு அனைவருக்கும் பொதுவான இறையாக மாகா மாரியையே வழிபட்டு வருகின்றனர்

பதிமலசர்கள் எனப்டும் கீழ்சர்க்கார்பதியை சேர்ந்த பழங்குடியினர் அங்குள்ள கோவிலில் அருள் புரிந்துகொண்டிருக்கும் குண்டத்து மாரியம்மனை வணங்குகிறார்கள்.

மேல்சர்க்கார்பதியின் மகாமாரியம்மனை பலஆண்டுகாலம் இப்பழங்குடியினர் சிற்றாலயமொன்றீலேயே வழிபட்டுவந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இங்கு கோவில் எழுப்பப்பட்டது.  மூன்று வருடங்களுக்கு முன்னரே குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.

சின்னதும் பெரியதுமாக அருவிகளும் சிற்றாறுகளும் நிறைந்த வனப்பகுதியென்பதால் இங்கு மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. இதன்பொருட்டான் தடுப்பணையொன்றின் அருகில் ஏரளமான கூந்தல்பனைகளும்,அரசும், வில்வமும், ஆலும், அத்தியும் இன்னபிற காட்டுமரங்களும் சூழ ,அருவியின் ஓசை பிண்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்க தொடர்மழையிலும், அடர்நிழலிலுமாக நிரந்தரமாக குளிர் நிரம்பியிருக்கும் அந்த இடத்தில்  மிகச்சிறிய அழகிய கோவிலில் மகாமாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கோவில் வளாகமெங்கும்  கால் வைக்க இடமின்றி வில்வமரத்தின் கனிகள் உதிர்ந்து தரையெங்கும் நிறைந்து கிடக்கின்றன. கோவில் வளாகமே இயற்கையான  சூழலில் காட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. பல்லாண்டு வயதுள்ள அரசப்பெருமரங்கள் அதிகம் இருப்பதால் அவற்றின் சின்னஞ்சிறு கனிகள் மணலைப்போல தரையெங்கும் நிறைந்துகிடக்கின்றன.

எதேதோ பச்சிலைகளின் வாசம் நாசியில் நிறைய கோவிலுக்கு சென்றால் நுழைவு வாயிலிலேயே வனக்காவலர்களின் காவல் கண்காணிப்புக்கோபுரம் அமைந்துள்ளது. ஏராளமான இடத்தில் சுற்றிலும் பரிவாரத்தெய்வங்கள் தனித்தனியே நல்ல இடைவெளியில் அமைந்திருக்க மத்தியிலிருக்கும் சிமிழ்போன்ற சிறு ஆலயத்தில் அம்மனிருக்கிறாள்

 சற்றுத்தள்ளி சிறிய பீடங்களில் துர்க்கையும், உயரமான மேடையில் நவக்கிரகநாயகர்களும் உள்ளனர். ஆலயத்திற்கு எதிரே பாசிபிடித்திருக்கும் கற்படிகளில் சற்று தாழ்வான பகுதியில் இறங்கிச்சென்றால் சப்தகன்னியரின் சன்னதி. ஆண்டாளைப்போல கொண்டையிட்ட சர்வலட்சணம் பொருந்திய  எண்ணைப்பூச்சில் மெருகேறி பளபளக்கும் சப்தகன்னியரின் சிலைகளிலிருந்து கண்ணை அகற்றவே முடியாது். அத்தனை அழகு. சற்றுத்தள்ளியிருகும் மிகபெரிய அரசமரத்தடி மேடையில் விநாயகர், மேடையின் வெளிப்புறமர்ந்திருக்கும் தக்‌ஷிணாமூர்த்தியுடன் அருள்பாலிக்கிறார்.

மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தின் பரிபூரண தனிமையில்,  ஒவ்வொரு மரத்திலும் கிளையிலும் இலைகளினசைவிலும் இறைமையை உணரலாம்.  சுப்ரமணி என்னும் பூசாரி அம்மனுக்கு தினசரி 3 வேளை பூசைகளை செய்துகொண்டிருக்கிறார்.. ஏராளமான பறவைகளின் கீச்சிடல், மரங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் குரங்குகளின் ஓசை, அருவியின் பேரிரைச்சல் மூலிகைவாசம் இவற்றுடன் கோவில் மணியோசையும் இணைகையில் உடல் மெய்ப்பு கொள்கின்றது. அம்மன் மிக எளிய பச்சைப்புடவையில் மூக்குத்தி மின்ன காலடியின் இரு அகல்விளக்குகளிலும், ஒற்றை தொங்கு விளக்கிலும் தீபச்சுடர் மலர்மொட்டுப்போல் அசையாது சுடர்விட புன்னகை தவழ அமர்ந்திருக்கிறாள்

அன்று அமாவாசை. வனச்சரக உயரதிகாரியொருவரின் கட்டளையாக அம்மனுக்கும் சப்தகன்னியருக்கும் பிற  மூர்த்திகளுக்கும் அகன்ற அரசிலையில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைக்கப்பட்டிருந்தது. 

இந்த மகாமாரியமன் ஆனைமலை மாசாணியின் தங்கை என கருதப்படுகிறாள். உலகபுகழ்பெற்ற மாசாணியம்மன் பூமிதித்திருவிழாவின்  கொடியேற்றுதலுக்கு சர்க்கார்பதி வனத்திலிருந்தே பெருமூங்கில் பல்லாண்டுகளக வெட்டிவரப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலை கொடிமரத்துக்கென வெட்டுகையிலேயே அடுத்த ஆண்டுக்கான மூங்கிலையும் தெரிவு செய்து மஞ்சள் துணி சுற்றி அடையாளம் செய்துவைத்து அடுத்த ஒரு வருடம் அதை கடவுளாகவே எண்ணி பூசிக்கிறார்கள் மலசப்பழங்குடியினர்.அந்த மிகநீளமான பருமனான கொடிமர மூங்கில்களை வெட்டி இங்கு மகாமரியம்மன் சன்னதியில் வைத்து பூசித்து அனைவருக்கும் அன்னதானமிட்டபின்னரே பலகிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆனைமலைக்கு  கால்நடையாக பக்தர்களால், சுமந்து செல்லப்படுகின்றது. இந்நிகழ்வும் பன்னெடுங்காலமாகவே மிகப்பெரும் விழாவாக இங்குள்ள பழங்குடியினரால் கொண்டாடப்படுகின்றது.

எதிரிலிருக்கும் அருவிக்கரையில் ஏராளமான் காட்டு நாவல் மரங்கள் ,கொழுத்த, விரல்களில் அப்பிக்கொள்ளும் அடர் ஊதா சாறு நிரம்பிய கனிகளை உதிர்த்தபடி நின்றிருக்கின்றன. சுற்றிலும் காட்டு அத்திமரங்களும் நிறைந்துள்ளன. மரத்தடியில் கொழுத்த இளஞ்சிவப்பு அத்திபழங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

PC Tharun

மிக நெருக்கத்தில் மான்கூட்டங்களையும், திமில் பெருத்த காட்டெருதுகளையும், பெயர்தெரியா பல பறவைகளையும், அரிதாகவே காடுகளில் காணக்கிடைக்கும் மரங்களிலிருந்து மரங்களுக்குத் தாவும் பறக்கும் பாம்புகளையும் இங்கு காணமுடிந்தது.

Chrysopelea ornata  Golden flying snake- @ sarkarpathi forest- PC Tharun
இரையை விழுங்கும் பாம்பு- Pc Tharun

ஆலயத்தின் உள்ளே மட்டுமல்ல மகாமாரியம்மனை அங்கு எல்லா இடத்திலும் உணரமுடிந்தது அடர்ந்த அந்தக்காடும் அதனுள்ளே வீற்றீருக்கும்  பேரியற்கையென்னும் சக்தியின் அங்கமான அம்மனுமாக அந்தத் தலம் அளிக்கும் உணர்வை அங்கு சென்றால்தான் உணர முடியும்.

அங்கே வழங்கப்பட்ட சர்க்கரைப்பொங்கலை அந்த இறையனுபவத்தின் சுவையுடன் கலந்து உண்டோம் நான் காட்டிற்குள் நுழைகையில் மிஸ், பின்னர் லெக்சரர், அதன்பின்னர் கல்லூரி புரஃபஸர், பின்னர் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அக்கா ஆகியிருந்தேன். எதிர்ப்படும் அனைவரிடமும் ’’அக்கா வந்திருக்காங்க’’ என்று வாயார மனமார சொல்லியபடியே வந்தார். அதுவும் மனநிறைவை அளித்தது. .துவாரகர் நல்ல கீர்த்தனைகள் பாடுவாரென்பதையும் அப்படி கோவில்களில் கீர்த்தனை பாடுகையில்தான் தன் வருங்கால மனைவியை சந்தித்திதாரென்பதையும் சொன்னார். அத்திப்பழங்களையும் மலைநெல்லிகளையும் நாவல்களையும் சேகரித்து கொடுத்தபடியே இருந்தார்.

 மீண்டும் பள்ளிக்கு சென்று மதிய உணவுண்டோம். கேரியரை பார்த்ததுமே “அக்கா அதிகாலை 4.30க்கு எழுந்திரிச்சாத்தான் இதெல்லாம் செஞ்சுகொண்டு வரமுடியும்” என்றார். ஆமென்றேன். வாழ்வின் இயங்கியலில் பிறரையும் அவர்களின் பக்கக்து நியாய அநியாயங்களையும் அறிந்தவர் என்று அவர் மீது கூடுதலாக மரியாதை வந்தது எனக்கு. உணர்ச்சி வசப்பட்டு 10 பேருக்கான் உணவை கொண்டு வந்திருந்தேன்

நிறைய உணவு மீந்துவிட்டிருந்தது. காரில் அவற்றை எடுத்துக்கொண்டுபோய் மழைவாழ்மக்கள் குடியிருப்பில் நிறுத்தி ’’சந்திரா’’ என்று  துவாரகர் குரல்கொடுத்ததும் 10/12 வயதுச்சிறுமி எட்டிப்பார்த்தாள். அவளது தூய அழகை எப்படி எழுதியும் விளக்கிவிட முடியாது. மிகச்சரியான பளபளக்கும் மான் நிறம்,.மாவடுபோல சிறிய பளிச்சிடும் அழகிய கண்கள், சின்ன மூக்கு சின்னஞ்சிறு குமின் உதடுகள். மையிட்டுக்கொள்ளவில்லை பவுடர் பூச்சோ வேறு எந்த ஒப்பனைகளுமோ இல்லை ஒரு சின்ன சாந்துபொட்டு புருவ மத்தியில் ,வெள்ளைப்பிண்னணியில் நீலப்பூக்கள் போட்ட மலிவுவிலை நைட்டி, கையில் எதற்கோ ஒரு சின்னத் தடி. உயரமான இடத்திலிருந்து துள்ளலாய் இறங்கி வந்து ’’என்ன சார்’’ என்றாள். சாருடன் புதியவர்களைக்கண்ட வெட்கம் உடனே கண்களில் குடியேறியது. எனக்கு அவள் மீதிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை. அவளை தொட்டுக்கொண்டு மீதமிருக்கும் உணவுகளை வாங்கிக்கொள்வாளா என்று கேட்டேன் மகிழ்ந்து சரியென்று சொல்லி மீண்டும் துள்ளிக்கொண்டு மேலேறிச்சென்று சில பாத்திரங்களுடன் வந்தாள். உணவுகளை அதில் மாற்றிவிட்டு நான் வழக்கமாக கல்லூரிக்கு ஊறுகாய் கொண்டுபோகும் ஒரு சிறு எவர்சில்வர் சம்புடத்தை ஊறுகாயுடன் அவளிடம் கொடுத்து ’’என் நினைவா இதையும் நீயே வச்சுக்கோ’’ என்று கொடுத்தேன் கண்களில் ஒரு கூடுதல் மின்னலுடன் சரியென்று தலையாட்டிவிட்டு மேலே ஏறிச்சென்று அங்கிருந்த குட்டிகுட்டி தடுப்புக்களுடன் கூடிய மண்சுவர்களாலான வீடு என்னும் அமைப்புக்குள் சென்று மறைந்தே விட்டாள்.

என்னதான் நாம் உரமிட்டு நீரூற்றி பராமரித்து வளர்த்தாலும் காட்டுச்செடிகளின் தூய அழகை வீட்டுசெடிகளில் காணவே முடியதல்லவா? சந்திராவின் சருமப்பளபளப்பு ஒளிவிட்ட சின்னக்கண்கள், துள்ளல், முகமே சிரிப்பாக வந்துநின்றது, அவளது கள்ளமின்மை எல்லாமாக என் மனதில் இனி என்றைக்குமாக நிறைந்திருக்கும். அம்மனை மீண்டும் தரிசித்தேனென்றுதான் சொல்லனும்

மகா மலசர்களின் வீடுகளுக்கு சென்று சிலரைச் சந்தித்து பேசினேன். பச்சை தென்னை ஓலை முடைந்துகொண்டிருந்த லச்சுமி என்னும் ஒரு மூத்த பெண்ணிடம்  பேசினேன்.

லச்சுமி

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். தருணுக்கு தேவையான பல அரிய புகைப்படங்கள் கிடைத்தன. அருவியொன்றில் கேன் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு சூடாக இட்லி வைத்து சாப்பிட அகன்ற பசும் தேக்கிலைகளையும் நிறைய பறித்துக்கொண்டு சேம்புச்செடிகளும் விதைகளுமாக  காரையே ஒரு சின்ன வனமாக மாற்றியபின்னர்  அனைவருமாக கிளம்பினோம்.

கிளம்புகையில் 2 கீர்த்தனை பாடுவதாக சொல்லிக்கொண்டே இருந்த துவாரகரிடம் நான் ’’அட கீர்த்தனையா, பாடுவீங்களா’’ என்று கேட்கவே இல்லியே!  

துவாரகரை அவரது தோப்பில் விட்டுவிட்டு சூர்யாவையும் அவனது வீட்டில் விட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.

இரவு நல்ல களைப்பில் சீக்கிரம் உறங்கப்போகையில் தான் நினவு வந்தது அந்த பிரதாப்  வரவே இல்லை டிசி வாங்க.

இந்த பள்ளிக்கு மாறுதலை வேண்டி விரும்பிக் கேட்டு வாங்கி 8 வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கும் துவாரகரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் அன்பும் ஏற்பட்டுவிட்டது Ethnobotany யில் ஆய்வுமாணவிகள் என் வழிகாட்டுதலில் பல பழங்குடியினரின் தாவரப்பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருப்பதால் பல மழைவாழ் மக்களின் வாழிடங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் சர்க்கார்பதி ஒரு புதிய நிறைவான அனுபவம்.

——————————————————-x————————–

சர்க்கார்பதி -2

வனத்துவக்கத்தின் சாலை

அவரின் தோப்பிலிருந்து காடு 30 கிலோ மீட்டர்தான். பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் ஊரெல்லைகள் முடிவுற்று காடு துவங்கிவிட்டது. சீவிடுகளின் இடையறாத சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது பச்சிலை வாசனையும் காட்டின் எல்லையில் social forestry செயல்பாடுகளால் நட்டுவைக்கப்பட்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களின் வாசனையுமாக பசுமை  நுரையீரலை நிறைத்தது.  20 கிலோ மீட்டருக்கும் மனித சஞ்சாரமே இல்லை. இணையாகவோ எதிரிலோ ஒரு வாகனம்கூட வரவில்லை மயில்கள் அடிக்கடி எதிர்ப்பட்டன. யானைச்சாணமும் வழியெங்கும் இருந்தது

.

துவாரகரும் செந்திலும்,

காடு வர 20 நிமிடங்கள் ஆனது அதற்குள் துவாரகநாதரின் சுயசரிதையை 400 /500 பக்கங்களுக்கு எழுதும்படியான அளவுக்கு எனக்கு அவரைக்குறித்த தகவல்கள் கிடைத்திருந்தது. அவரது குடும்பம் சகோதர சகோதரிகள் அவர்களின் திருமண உறவுகள் குழந்தைகள், குழந்தைகளின் இயல்புகள், குறும்புகள். அண்ணன் மகள் தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனை; விவசாயியாக தன் வாழ்வு அவர் படிப்பு வேலை காதல் (ஆம் காதலியைத்தான் கைப்பிடிக்க விருக்கிறார்)  சில வருடங்களுக்கு முன்பாக இறந்துபோன அவரின் தந்தை சமீபத்தில் இறந்த அவரது தாய், அவருக்கும் வேதியியலுக்கும் உள்ள தொடர்பு (அவர் chemistry mphil.)  அவருக்கும் பெருமாளுக்கும் உள்ள நெருங்கின தொடர்பு (இறைவன் பெருமாளே தான்) இப்படி அநேகம் தெரிந்தாகிவிட்டது.

சிற்றாறுகளும் ஓடைகளும் குறுகிட்டன. கொஞ்சம் பெரியதாகவே இரைச்சலுடன்  இருந்த ஒரு ஆற்றின் கரையில் செக்போஸ்ட் இருந்தது 3 சீருடை வனக்காவலர்கள் இருந்தார்கள். துவாரகரை அவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்றனர். தகவல் சொல்லி அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். காவலர்களிடம் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் தன் உறவினர் என்று என்னை அறிமுகப்படுதினார் துவாரகர்.

ஒற்றையடிப்பாதை கற்களும் குழிகளுமாக, நீண்டு சென்று கொண்டே இருந்தது 10 /12 வயதுடைய  ஒருசில  பழங்குடிச்சிறுவர்கள் எதிர்ப்பட்டார்கள். காரை நிறுத்தி துவாரகர் இறங்கி அதில் உயரமான ஒருவனை தோளைப்பிடித்து உலுக்கி ’’டே, கெளசிக்கு, பிரதாப்ப வரச்சொல்லுடா ஸ்கூலுக்கு, அவன் இன்னும் tc வாங்கலை நேத்தும் வந்தேன் ஆளே வரலை’’ என்றார். அவன் இவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை அவன் உடல்மொழியிலும் ஒரு ஆசிரியரை, அதுவும்  தலைமைஆசிரியரை கண்ட பாவனை ஏதும் தெரியவே இல்லை கண்களில் மட்டும் புதியவர்களை. வெளியாட்களைக்கண்ட வெட்கம் கொஞ்சூண்டு, அவ்வளவுதான்.வழியில் அவ்வப்போது எதிர்ப்பட்ட ஒரு சிலரிடமும் அந்த பிரதீப் இன்னும் tc வாங்கலைன்னும் அவனை வரச்சொல்லியும் அதை வாங்கினாலே அவன் 6 ஆம் வகுப்பில் சேரமுடியுமென்றும் சொல்லிச்சொல்லி மன்றாடினார்.

எனக்கு என்ன ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததென்றால் இவரைக்கண்டால் அங்கிருப்பவர்களிடம் தெரியவேண்டிய அந்த பணிவுகலந்த உடல்மொழி இல்லவே இல்லை.

அடர்ந்த காடு, காட்டு மாமரங்கள், அத்திகள், நாவல்பெருமரங்கள் இந்தனை வருட தாவரவியல் அனுபவத்தில் நான் பார்த்தும், கேட்டும், அறிந்துமிராத  பெயர் தெரியா பல மரங்கள், செடி கொடிகள் என்று நல்ல சூழல் தருண் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல இருந்தான் இப்படி ஒரு காட்டில் நாளை செலவழிக்க வேண்டும் என்பது  அவனின் கனவு. நினைத்துக்கொண்டாற்போல சடசடவென மழையும் பின்னர் இளவெயிலுமாக காலநிலை விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது

.

காட்டின் முகப்பில் காட்டிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பாழடைந்த என்று சொல்லுவதற்கு கொஞ்சம் முந்தின நிலையிலிருக்கும்  வனக்காவலர்கள் மற்றுமதிகாரிகளின் சில குடியிருப்புக்கள், ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருக்கும் இரண்டு  நெட்டிலிங்க மரங்களால் பந்தலிடப்பட்ட அழகிய முகப்புடன்  சின்னதாக சிமிழ் போல வனச்சரக அலுவலகம் இவற்றை கடந்தால் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டிடம் , அதன் வாசலிலிருந்த கம்பிக்கதவு பிய்த்தெறியப்பட்டிருந்தது. சிவப்பு சிமெண்ட் போட்ட வழவழப்பான் திண்ணையும், சற்று தூரத்தில் 3 நாய்களும்

பள்ளிக்கூடம்

 அந்த திண்ணை, உள்ளே இரண்டு நாற்காலிகளும் ஒற்றை மேசையும் போட்டிருக்கும் ஒரு ஆசிரியர் அறை , இரண்டு வகுப்பறைகள்,  ஒரு சின்ன இடைநாழியை கடந்தால் விறகடுப்புடன் ஒரு சமையலறை. யூகலிப்டஸ் மரங்களின் விறகுகள் உள்ளிருக்கும் பிசினின் பளபளப்புடன் அடுக்கி வைக்கபட்டிருந்தது.அதுதான் பள்ளிக்கூடம்.

யானைகள் சேதப்படுத்திய கேட் இருந்த இடம்

சர்கார்பதிக்கு காலையும் மாலையுமாக 2 முறைகள் மட்டும் வரும் ஒரே அரசுப்பேருந்தை தவறவிட்டால் இங்கேயே அவர் தங்கிக்கொள்ள வசதியாக அக்கட்டிடம் வீடும் பள்ளியும் இணைந்த ஒரு அமைப்பாக இருந்தது. கட்டிடத்தை ஒட்டி கழிவறை குளியலறை. பின்புறமாக காட்டுநெல்லிப்பெருமரமொன்று. சொப்பிக்காய்த்தலென்று கொங்கு வட்டாரத்தில் சொல்லிக் கேட்டிருக்கவில்லையெனில் அம்மரத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கீழே நிலமெங்கும் கொட்டிக்கிடந்த சிறு மலைநெல்லிக்கனிகளின் சுவையை எழுதியெல்லாம் தெரிவிக்க முடியாது. உண்மையில் இயற்கையின் சுவையது.

 எல்லாருமாக திண்ணையில் அமர்ந்து  கொண்டு வந்திருந்த  மசாலா தேநீரை அருந்தினோம் இளமழை திடீரென பெய்தது அந்த மழைக்கு, குளிருக்கு தேநீர் மிக இதமாக இருந்தது. நாய்கள் மூன்றும் மெல்ல நடந்து வந்து திண்ணைக்கு அருகில்  சுருண்டு படுத்துக்கொண்டு சோம்பலாக கொட்டாவி விட்டன. சமீபத்தில் ஜெ சொல்லியிருந்தார் நாய்கள் இப்படி மனிதர்களின் அரு்காமையில்  இருக்க பிரியப்படும் என்று.

கேட்டை சமீபத்தில் யானைகள் பிய்தெறிந்துவிட்டது என்றார் துவாரகர். பள்ளியைச்சுற்றிலும் யானைச்சாணம் கிடந்தது. எப்போதும் யானைகள் சுற்றித்திரியும் சூழல் என்பது ஆர்வமூட்டியது. கூடவே இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தரவென அவர் மெனக்கெடுவதையும் அங்குவிரும்பி மாற்றல் கேட்டுக்கொண்டு தினம் அந்த அத்துவானக்காட்டுக்கு வந்து பணிசெய்துகொண்டிருப்பதையும் நினைத்து மனம் கனத்தது. ஆசிரியமென்பது ஒரு தொழிலல்ல வாழ்வுமுறையென்பதை எனக்கு உணர்த்திய வெகுசிலரில் துவாரகரும் ஒருவர். அந்த சூழலே கற்றலுக்கானது அல்ல, ஆயினும் அக்குழந்தைகள் படித்து எப்படியும் முன்னேறவேண்டும் என நினைக்கும் நல்லுள்ளம் கொண்டஅவரை நி்னைத்து பெருமிதமாயிருந்தது.

பூட்டியிருந்த பள்ளியின் சாவியை ஒரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார் அந்த பெண்ணை அழைத்தால், தான் இன்னொரு ஊரில் இருப்பதாகவும், சாவியை தன் மகள் சந்திராவிடம் வாங்கிக்கொள்ளூம்படியும் சொல்லிவிட்டாள்.  அந்த சந்திராவை சாரல் மழையில் தேடிச்சென்றோம்..

எனக்கு ஜெ வின் கொரோனாக்கால நூறுகதைகளில் ஒன்றான யானையில்லா’வின் சந்திரி நினைவுக்கு வந்தாள். சந்திரா ஆற்றுக்கு குளிக்க போயிருந்ததால்  காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லையென்றானது. தருணும் சூர்யாவும் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள் நானும் செந்திலும் துவாரகரும் அங்கிருந்த  அகன்ற கால்வாயையும் அங்கு பெருக்கெடுத்தோடிய நீரையும் பார்த்தபடிக்கே நடை சென்றோம்.  பேச்சில் எங்களை முழுக்காட்டிக்கொண்டே உள்ளே அழைத்துச்சென்றார்.

வழியில் ஒரு பரட்டைத்தலை சிறுவன் எதிர்ப்பட்டான். அவனை பார்த்ததும் இவர் பரவசமாகி ‘’டே கொஞ்சும் குமரா, (அதான் பெயரே! என்ன அழகுப்பெயர்  இல்லையா?) பிரதாப்ப வரச்சொல்லுடா’’ என்றார்.

அந்த கொஞ்சும் குமரன் என்னும் 6/7 வயதிருக்கும் முந்திரிக்கொட்டை கேட் வாக் குமரிகளைப்போல ஒரு காலை லேசாக முட்டிபோட்டு தெற்குநோக்கியும் இன்னொரு காலை  நீட்டி வடக்கிலும் வைத்துக்கொண்டு ஒரு கையை பின்னே வளைத்து தலையை தொட்டுக்கொண்டு ‘இன்னா’’ என்னும் தொனியில் இவரை பார்க்கிறான். எனக்குள் இருந்த ஆசிரிய ரத்தம்’’ டேய் காட்டுப்பயலே, HM டா ‘’ என்று கொந்தளித்தது. அவனோ இவருக்கு பதில் கூட சொல்லாமல் மேலேறி எங்கோ சென்றான். பிரமிப்பாக இருந்தது இவர்களின் ஆசிரிய மாணவ உறவு. சிலநாட்களாக ஜெ தளத்தில் எஸ்ரா ஞானி கட்டுரை, ஆசிரிய மாணவ உறவு சர்ச்சை எல்லாம் ஒடிக்கொண்டிருக்கே, இவர்கள் நாமிருக்கும் யுகத்திற்கு பலயுகங்களின் தொலைவில் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

துவாரகர் எதிர்ப்படும் பலருக்கு இவராக வணக்கம் சொல்லுவதும் அந்த டிசி வாங்காத கடங்காரன் பிரதாப்பை வரச்சொல்லி தூதுவிடுவதுமாகவே இருந்தார்.

எனக்கு இதற்குள் துவரகரைக்குறித்த ஒரு சுமாரான சித்திரம் கிடைத்திருந்தது. எளிமையான மனிதர். அவருக்கென்று சில நியமங்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக்கொண்டு அவற்றை தீவிரமாக நம்பி வாழ்வை மிக எளிமையாக வாழ்ந்து வருபவர். இந்தகாட்டுப்பள்ளிக்கு விருப்ப மாறுதல் வாங்கிக்கொண்டு வந்திருப்பதில் இப்போது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

மேலும் அவருடனான உரையாடலை, எப்படி கொண்டு போகிறாரென்றூம் பிடிகிடைத்தது. ஓயாத பயிற்சியாயிற்றே!

பேசிக்கொண்டிருக்கையிலேயே எதாவது ஒரு முக்கியமான பாயிண்ட் சொல்லும்போது ( அதாவது அவரைப்பொருத்த வரைக்கும் முக்கியமானது) அதை மீண்டும் சொல்லத்துவங்கி  பாதியில் அந்த வாக்கியத்தை நிறுத்தி என்னைப்பார்த்து ’’எப்படி, எட்டாம் கிளாசிலேயே?’’ என்பார் நான் சுதாரித்துக்கொண்டு ’’ஃபெயிலானப்புறமும்’’ என்று அதை முடிப்பேன் அகமலர்ந்து மீண்டும் தொடருவார். எதிரிலிருப்பவர் பேச்சை கவனிக்கிறாரா என்று சோதிக்கும் அற்புதமான உத்தி இது.

உமாகரன் ராசையா என்னும் இலங்கைப் பேச்சாளரின் உரைகளை கேட்டிருக்கிறீர்களா?  துவாரகரின் இதேஉத்தியைத்தான் அந்த இளைஞனும் கடைப்பிடிக்கிறான், பேச்சின் இடையே’’ எப்படி’’? என்பான் நம்மிடம் பின்னர் முன்பு சொன்னதை மீண்டும் ஒருமுறை அழுத்திச்சொல்லுவான்.  அத்தனை   அ ழகாக இருக்கும் அவன் தமிழைக்கேட்பது. இணையத்தில் கிடைக்கும் அவனது உரைகள், கேட்டுக்கொண்டிருங்கள். நான் மீண்டும் தொடருகிறேன்

சர்க்கார்பதி

வன உயிர்களை புகைப்படம் எடுக்க விரும்பும் தருணை அவன் விடுதியில் இருக்கையிலிருந்து ஏறக்குறைய 20 முறைக்கு மேல்  வனப்பகுதிகளுக்கு அழைத்துச்செல்வதாகச் சொல்லி திட்டமிட்டு ஏற்பாடும் பண்ணி அனுப்ப முடியாமல் எல்லாவற்றையுமே தவிர்க்க இயலாமலும் எதிர்பாரா காரணங்களாலும் ரத்துசெய்திருந்தேன். எனவே இந்த கொரோனா காலத்தில்  எப்படியும் போகத்தீர்மானித்து அது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் முறையான அனுமதி வாங்க முயற்சித்து ஏகப்பட்ட குழப்பங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிலநாட்கள் முன்பு, அந்த பகுதியில் பரிச்சயம் இருக்கும் தமிழ்த்துறை மாணவனும் எங்கள் உறவினருமாகிய சூர்யாவின் துணையோடு அதிகா்லையிலேயே எழுந்து விரிவான சமையல் பண்ணி எடுத்துக்கொண்டு  வெயிலேறத்துவங்கும் முன்பே காலையில் கிளம்பிப் போனோம்.

 அந்த வனத்தில் ஆதிதிராவிடபழங்குடியின நலத்துறையின் ஒரு பள்ளிக்கூடம் (துவக்கப்பள்ளி) இருக்கின்றது. அந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் செல்லும் வழியில ஒரு கிராமத்தில் தான் இருக்கிறார் தானும் கூடவந்து உதவுவதாக சூர்யாவின் மூலமாக தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். எனவே அவரையும் அழைத்துக்கொள்ளச்சென்றோம்.  அவரது வீடும்  தோப்பும்   வீட்டிலிருந்து 20 நிமிஷம்தான் கார் பயணத்தில். தோப்பு முழுவதுமே கரைபுரண்டு ஓடும் அம்பராம்பாளையம் ஆற்றின் கரையில் இருந்தது, கடைசி ஒருவரிசை மரங்கள் எல்லாமே ஆற்றை நோக்கி தான் வளர்ந்திருந்தன.

தேங்காய்கள் முற்றி கீழே விழுந்து ஆற்றோடுபோய் விடாமல் இருப்பதற்காக ஒரு தடுப்பணைபோல விழுந்த மரங்கள் மட்டைகளை எல்லாம் போட்டு வைத்திருக்குமளவுக்கு செழுமை.

 அக்கா தங்கை அண்ணன் தம்பி என எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் இருக்கும் அழகிய வீடு. நண்டும் சிண்டுமாக ஏழெட்டு குழந்தைகளுக்கும் 2 நாய்க்குட்டிகளுக்குமாக ஒரு அம்மாள் இப்போதைய  பெரும்பாலான இல்லத்தரசிகளின் default உடையாகிவிட்டிருக்கும் நைட்டியும் ( பகல்டி ) மேலே சம்பிரதாயத்துக்கு ஒரு துண்டுமாக உணவு  ஊட்டிக்கொண்டு இருந்தார்கள் மாஸ்க் எல்லாம் முறையாக போட்டுக்கொண்டு காரிலேயே சானிடைசரையும் கொண்டுபோயிருந்த எங்களுக்கு ’’கொரோனாவா ? கிராம் என்ன விலை’’ன்னு கேட்கும்படியான  அவர்களின் வாழ்வின் இயங்கியல் அதிர்ச்சியளித்தது.

 அரசு பள்ளி பள்ளிக்கூட தலைமை ஆசிரியரென்பதால்    அவரை குறித்த ஒரு சித்திரத்தை என் மனதில்  முன்கூட்டியே உருவாக்கி வைத்திருந்தேன்.

அதாவது என்னுடன் வந்த  தற்போது முதுகலை தமிழ் பட்டம் முடித்திருக்கும் மாணவனுக்கு அவர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து இப்போது தலைமை ஆசிரியராக இருக்கிறாரென்பதால் என் வயதிலிருப்பாரென யூகித்திருந்தேன். இதை வாசிக்கையிலேயே உங்கள் மனதிலும் இப்படியான  சித்திரமே இருந்திருக்கும்

’’வெள்ளை வேட்டி சட்டை, கொஞ்சம் காதோரம் நரை, கண்ணாடி, சட்டை பாக்கட்டில் ஒரு பேனா இப்படி, (டெல்லி கணேஷ் சார், ராதாரவி சார்,ஆடுகளம் நரேன் சார்)’’ போல.

P C Sri Harsha Digesh

ஆனால் அங்கே எங்களை வரவேற்றது  முழு மொட்டைத்தலையும் பெரிய செந்தூர திலகமும் பெரிய மூக்குமாக (மொட்டைத்தலையும் செந்தூரமும் பார்த்தாலே எனக்கு தெலுங்கு அம்மன் வில்லன் ஜண்டாடாடாடா!!!!!!! நினைவு வந்து பயமாகிவிடும் ஆனா இவர் நல்லவேளையாக அத்தனை புஷ்டியாக இல்லை) நம்ம தமிழ் திரை நடிகர் rs shivaji  நினவிருக்கின்றதா? (பார்க்க, புகைப்படம் ) அவரின்  இன்னொரு வடிவம் போல அல்லது பத்து விட்ட தம்பி போல ஒருவர் அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத  பிரகாசமான மஞ்சளும் கருப்புமாக பெரிய கட்டங்கள் போட்ட சட்டையிலும் டக் இன் பண்ணியும் கால்சட்டையின் அரணை மீறிக்கொண்டு வெளிவர முயற்சிக்கும் தொப்பையுமாக இருந்தார். அந்த சட்டை அவருக்கல்ல, ஒட்டுமொத்த ஆண்குலத்துகே பொருந்தாத அநியாய கலர் காம்பினேஷனில் இருந்தது

R S Shivaji

இவற்றுக்கும் மேலே அவர் என்னை மிஸ் என்று அழைத்ததில் இன்னும் கொஞ்சம் அசெளகரியமாக உணர்ந்தேன் எனக்கு இந்த விளி எபோதுமே பயங்கர ஒவ்வாமையை கொடுக்கும். ஆனால் இந்த துவக்க பிரச்சனைகள் அதிர்ச்சிகள் எல்லாத்தையுமே மறக்கடித்துவிட்டது சூழல்

கரைபுரண்டோடும் ஆறு காலெட்டும் தூரத்தில்,  ஆங்காங்கே அடர் ஊதா நிற  பூங்கொத்துக்களுடன் வெங்காயத்தாமரைகளின் கூட்டம். மேடான பகுதியிலிருந்து குட்டி குட்டியாக அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தது

சேம்பும் தெங்கும் கமுகும் மூலி்கைகளூம், உதிர்ந்து சேகரிக்கப்படாமல் சிதறிக்கிடக்கும் ஏராளமான தேங்காய்களுமாக வளமை கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும். காலடி அழுந்திய தடத்தில் உடனே நீர் நிரம்பும் வளம் அங்கே! கண்ணைக்கட்டும் பசுமையின் நிறைவு அது

அங்கேயே தருண் ஏராளமாக புகைப்படம் எடுத்தான். 2மணி நேரங்கள் அங்கே செலவழித்த பின்னர் சர்க்கார்பதி போக பயணித்தோம். காரில்  ஓட்டுநர் செந்திலுக்கு அருகில் அவர் முன்சீட்டில், நான் தருண், சூர்யா பின் சீட்டில்

கார் கிளம்பியதும் அவர் துவங்கினார்  பெருமழை பெய்வதைப்போல ஓயாத பேச்சை.

ஆனால் அவர் மீது தவறில்லை, என் பேரென்னவென்று அவர் கேட்டதும் சொல்லிவிட்டு பதிலுக்கு நானும் கேட்காவிட்டால் மரியாதையாக இருக்காதல்லவா எனவே ‘’ சார் உங்க பேரு?’’ என்று கேட்டேன்

அவர் துவாரகநாதன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டு உரையாடலை முடிச்சிருக்கனுமில்லியா அங்கேதான் நான்  வெண்முரசால அகப்பட்டுக்கொண்டேன் ’’ஆஹா, அருமையான பேராச்சே’’ன்னு குழாயை மொத்தமாக திறந்து விட்டுட்டேன். அதன்பின்னர் ஓயாத பிரவாக பேச்சு மாலை வரை. இப்போது என் தலையை லேசாக சாய்க்க சொன்னீர்களென்றாலும் அவர் பேசினதெல்லாம் என் காதிலிருந்து பொலபொலவென்று கொட்டும் அப்படி நிறைந்திருக்கின்றது காதுகள்.

 மகாபாரதத்தில் பீஷ்மரின் இறுதிகடன்கள், ராமாயணத்தில் ல‌ஷ்மணனின் அண்ணனுக்கு அடங்கிய  குணம், சீதையின் குணநலன்கள், பெருமாள் மகிமை, கொரோனாவின் தீவிரம், அம்மாவுக்கு உதவ வேண்டியதின் அவசியம் (இது தருணுக்கு) இப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இன்னதுதானென்று முன்கூட்டியே யூகிக்க முடியவே முடியாத தலைப்புக்களில் தாவித் தாவி பேசிக்கொண்டே இருந்தார். வயது 43 தடைபட்டுக்கொண்டே போன திருமணம் இப்போதுதான்  கூடி வந்து வரும் 30 அன்று திருமணமாம். மனதார வாழ்த்தினேன் அந்த மணப்பெண்ணுக்கு கூடுதலாக சில ஜோடி காதுகள் இருந்தால் பிழைத்தாள்

P C Sri Harsha Digesh

ஆனால் அவர் எத்தனை தன்மையானவரென்றும் , அன்புள்ளவரென்றூம், அவரைப்போன்றவர்களை இப்போது பார்ப்பதென்பது அரிதினும் அரிதென்பதையும் சில மணி நேரங்களிலேயே உணர்ந்தேன்.பேச்சு சுவாரஸ்யத்தில் ஊர்களையும் வயல்வரப்புக்களையும் தாண்டி வனப்பகுதி கண்ணில் தெரியும் தூரம்வரை வந்துவிட்டிருந்தோம். மிக அருகில் வனத்துறையினரின் செக்போஸ்ட் தெரிந்தது

மீண்டும் தொடருகிறேன்

இணைய வழி: கற்றலும் கற்பித்தலும்!

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது.  மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப்பார்த்துக்கொண்டு கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்து கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்து கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொருநாளும் உணர்கிறேன்.

என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கே இப்படியென்றால் நல்ல காலத்திலேயே வகுப்பறைக்கு வந்து கற்றுக்கொள்ள சுணங்கும் மாணவர்களுக்கு கேட்கவேண்டுமா என்ன?

இனிமேல் இணையவழிகற்றல்தான் என்று அறிவிப்பு வந்தபோது அத்தனை பயமாக இல்லை. கணினி உபயோகிக்கத் தெரியும் என்றாலும் அதன்வழியே கற்றுக்கொடுப்பது குறித்து அதுவரை சிந்தித்ததில்லையென்பதால் பெரிதாக ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை மேலும் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது, இதோ எல்லாம் சரியாகிவிடும், வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வகுப்பில் பாடமெடுக்கப்போகிறோம் என்று மனம் நம்பிக்கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல வைரஸ்தொற்று உலகளாவிய பெரும் ஆபத்தாகி, லட்சக்கணக்கானோர் இறந்ததும், மிகப்பெரிய ஆளுமைகளும் செல்வந்தர்களும், பிரபலங்களும் கூட தொற்றுக்கு ஆளாகி அவர்களில் சிலர் உயிரிழந்ததுமாக வயிற்றில், உப்பு, புளி, காரம் எல்லாம் சேர்த்து கரைத்தது போல கலவரமானது

பின்னர் ஒருநாளில் ஆன்லைனில் கற்பிப்பதை மறுநாளே துவங்க முதல்வரிடமிருந்து, (கல்லுரி முதல்வர்) தகவல் வந்தே வந்துவிட்டது

வீட்டில் மகன்களுக்கும் அப்படியே!

தட்டச்சுவதை எப்படியோ முன்பின்னாக செய்து பழகி இருந்தாலும் கணினியை எனக்கு அவ்வளவாக தெரியாது, கணினிக்கும் என்னை அத்தனை தெரியாது பாவம்

இனி நாங்கள் இருவருமாக நேர்ந்து கலந்து சேர்ந்து வேலை செய்வதன் சாத்தியங்கள் எனக்கு மிகதொலைதூரத்தில் தான் தெரிந்தது

நல்லவேலையாக சரண் வீட்டில் இருந்ததால் முதலில் நான் இணையவழி கற்பித்தலின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன் கூகிள் மீட், ஜூம் மீட் எல்லாம் போய் டெஸ்ட் மீட் நடத்தி கொஞ்சம்  பரிச்சயப்படுத்திக்கொண்டேன் ஆ்ன்லைன் வகுப்புக்களை.

ஆனால் முதல்நாள் உண்மையாகவே கண்ணைக்கட்டி கம்ப்யூட்டர் முன்னால் விட்டது போலத்தான் இருந்தது

வகுப்பில் யாரையும் பார்த்துப்பேசமுடியாது என்னும் விஷயமே அப்போதுதான் உரைத்தது. அப்படி ஒரு கற்பித்தலைக்குறித்து சிந்தித்ததே இல்லையாதலால் அடுத்தஅடி எடுக்கவே முடியவில்லை. 

50/60 மாணவர்களின் மத்தியில் உயரமான மர மேடையில் நின்றபடியும் அவ்வப்போது இறங்கி அவர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகளுக்குள் நடந்து, சின்ன சின்ன கேள்விகளை கேட்டு பதில்பெற்றுக்கொண்டு, பலவண்ண உடைகளில்  கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களை கண்ணுக்கு கண் சந்தித்து பாடமெடுத்ததுக்கு மாற்றாக, நான் யாரை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல்  40/50  நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது. வருகையை பதிந்துவிட்டு  சில விஷயங்களை மட்டும் தெரிவித்துவிட்டு முதல் நாள் வகுப்பை சுருக்கமாக முடித்தேன்.

பின்னர் வந்த நாட்களில் மெல்ல மெல்ல இம்முறைக்கு பழகினேன் ஆனால் முன்புபோல பாடம் கற்பித்தலில் இருக்கும் ஆர்வமும் நிறைவும் எள்ளளவும் இல்லை என்பதை உணர்ந்தேன் இனி அப்படியான நிறைவு ஏற்படவும் போவதில்லை என்னும் உண்மையும் புரிந்தது குறிப்பாக தாவரங்களின் சித்திரங்களை வரைந்து, கற்றுக்கொடுப்பதற்கான் சாத்தியமே இல்லையாதலால், ஒருநாள் கூட நிறைவுடன் வகுப்பை முடித்த உணர்வு வரவேயில்லை.

கல்லூரிக்கு அலைபேசியை கொண்டுவந்ததற்காக  முந்தின மாதங்களில் கண்டித்த அதே ஆசிரியர்கள் அலைபேசியிலும், கணினியிலும் பாடம் நடத்தி அதை மாணவர்கள் அலைபேசியில் கவனிக்கவேண்டி வந்தது துர்லபம்தான்.

அளிக்கப்பட்ட எல்லாவாய்ப்புக்களிலும் சந்து பொந்துகளை  கண்டுபிடித்து தப்பிக்கமுயலும் மாணவர்கள் இந்த இணைய வழியேயான கற்பித்தலிலும்  குறுக்கு வழிகளை கண்டறிந்து விட்டிருந்தார்கள். வருகையை உறுதிசெய்த மறுகணம் அலைபேசி அல்லது மடிக்கணினியில் நான் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் திரையை கீழிறக்கிவிட்டு வேறேதும் படங்களை பார்ப்பது, மாணவர்கள் மைக்கை அணைத்து வைத்திருக்க வேண்டுமென்பதால்  பாட்டுக் கேட்பது, போனில் நண்பர்களுடன் உரையாடுவது அல்லது போனை அங்கேயே விட்டுவிட்டு வேறெங்காவது போவது என்று ஏராளமான வழிகளில் அவர்களுக்கு முக்கியமென்று தோன்றுபவற்றை, இளமைக்கே உரிய அறியாமையுடன்  செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.  வழக்கமான சின்சியர் சிகாமணிகள் மட்டும்   ”வகுப்பை” கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

வீட்டில் அனைவரும் எப்போதுமே இருந்து கொண்டிருப்பதால் சமையல் உள்ளிட்ட வழக்கமான வீட்டுவேலைகள் பலமடங்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. பாடங்களை முன்பு போல மனதிலிருந்தும் நினைவிலிருந்தும் எடுத்து  கரும்பலகையில் எழுதி, வரைந்து கற்றுத்தர வாய்ப்பில்லாததால் பக்கம் பக்கமாக தட்டச்சு செய்யும் வேலையும் சேர்ந்து உடல் ஓய்ந்துபோனது

எனக்கென அந்தரங்கமான வாசிக்கவும் எழுதவும் சிந்திக்கவும் தோழமைகளுடன் பேசவும், இரவுகளில் வானின் கீழ் அமர்ந்தபடி இசைகேட்பதும், பொழியும் நிலவில் மகன்களுக்கு கதை சொல்லுவதும். புன்னை மரத்தடியில் அமர்ந்து துளசிமாடப்பிறையில் காற்றில்  பதறும் தீபச்சுடரை பார்த்தபடிக்கு,  இருத்தலை மட்டும் உணர்ந்துகொண்டு அமர்ந்திருப்பதுமான பிரத்யேக சமயங்களும் முற்றிலுமாக இல்லாமல் ஆனது. .

முன்பைக்காட்டிலும் அதிகாலையில் எழுந்து பின்னிரவு வரை விழித்திருந்து, மகன்களுடன் சேர்ந்து பேசுவதென்ன ஒன்றாக அமர்ந்து உணவுண்பதும் கூட இல்லாமல் போய் அவரவர்க்கு இடைவேளை இருக்கையில் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவதும், ஒரே வீட்டில் தனித்தனி தீவுகளாக படுக்கையறையில், வாசல் திண்ணையில் , கூடத்தில் என்று அமர்ந்து கணினியை கட்டிக்கொண்டே நாள் முழுதும் கழிக்கிறோம்.

யெஸ்சார், யெஸ்மேம், ஏம் ஐ ஆடிபிள்? ஸ்கீரீன் தெரியுதா போன்ற வார்த்தைகளால் வீடு நிறையத்துவங்கி விட்டிருந்தது. இப்படி இரண்டாம் வருடம், மூன்றாம் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதை குறித்து வருந்திக்கொண்டிருப்பதெல்லாம் வெறும் டிரைய்லர்தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் என்பதுபோல 2 மாதங்கள் கழித்து வந்து சேர்ந்தார்கள் கல்லூரிப்படிப்பென்பது கருப்பா சிவப்பாவென்று கூட   தெரிந்திருக்காத  பள்ளி வாசனை அப்படியெ மீதமிருக்கும்  முதலாம் ஆண்டு மாணவர்கள்.

 கல்லூரி வாழ்வே மிகப்புதிது,  கணினியிலும், அலைபேசியிலும் ஆசிரியர்களை சந்திப்பதும் அதிலேயே கற்றுக்கொள்ளுவதும் மிக மிகப் புதியது. பொள்ளாச்சி போன்ற 18 பட்டிகளால் சூழப்பட்டிருக்கும் கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு கலவையான ஊரில் , பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழிக் கற்றலில் பள்ளிப்படிப்பை முடித்து ஆங்கில வழிக்கற்றல் குறித்த அச்சமும் பிரமிப்புமாக வந்திருக்கும் வேளையில் இணைய வழிக்கற்றல் இருதரப்புக்கும் ஏகப்பட்ட சேதாரங்களை உண்டாக்கியது.

வழக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புக்கு முதல் நாளே சென்று ஒவ்வொருவராக, கைகுலுக்கி பெயர் கேட்டு ’’என்ன பூ  வச்சிருக்கே தலையில்,  அழகா இருக்கே? ஆஹா! அருண்மொழியா பேரு பிரமாதம், தமிழ்ச்செல்வின்னு நல்ல தமிழ்பேருகேட்டு எத்தனை நாளாச்சு, என்னது? நீயும் கோட்டூரா? நானும் அங்கேதான் பக்கத்தில், கார் ஒட்டுவியா சூப்பர், கவிதை பிரமாதம், என்ன இத்தனை உயரமா இருக்கே? ஏன் என் கண்ணையே நேரா பார்க்கமாட்டேங்கறே? நிமிர்ந்து பாரு, இப்படி  ஏதோ ஒன்றை புகழ்ந்தும் அணுக்கமாகவும் பேசி, துவக்க நாட்களிலேயே நான் அவர்களுக்கு மிக நெருக்கமான சொந்தமெனும் உணர்வை அளிக்கும், எதையும் பகிர்ந்து கொள்ளலாமென்று நம்பிக்கை அளிக்கும் ஒருத்தியாக மாறிவிட்டிருப்பேன். பின்னர்  3 வருடங்களும் என் பின்னால் அன்புடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது கொரோனா

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியில் உண்டாக்கி கொடுத்திருக்கும் வாட்ஸப் குழுமத்தில் இணையத் தெரிந்திருந்தது அவ்வளவே. நான் அதில் கொடுக்கும் வகுப்பிற்கான இணைப்பை திறந்து வகுப்பில் இணையத் தெரியவில்லை பலருக்கு. பகீரத பிரயத்தனம் எல்லாம் செய்து அவர்களுக்கு புரியவைத்து ஒருவழியாக  இணைந்த பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல்,  எனக்கு பதிலாக  present பொத்தானை அழுத்தி share the screen என்று வந்தபின்னால் நான் எதுவும் ஸ்லைட் போடமுடியாமலாகி அவர்களை கெஞ்சிக்கூத்தாடி அதை நிறுத்தச்சொல்லவேண்டி இருக்கும்

இன்னும் சிலருக்கு அவரவர் ஊர்களில் வீடுகளில் இணையவேகம் இருக்காது மரியானில் பார்வதி பாடுவது போல ’’வந்து வந்து’’ போய்க்கொண்டிருப்பார்கள். வந்தாலும்  ஆடியோவை உயிர்ப்பிக்க தெரியாமல் சைகைமொழியில் எனக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

படாத பாடுபட்டு unmute செய்ய சொல்லிக்கொடுத்தால் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விடும். அவரவர் வீட்டு பின்னணி ஓசைகள் பலவிதமாயிருக்கும், கலவரமாகவுமிருக்கும்.  தொலைக்காட்சி ஓசை, சமையலறை ஓசை, விடாமல் நாய் குரைப்பதெல்லாம் ஆடியோ குறுக்கீடுகளென்றால் அவ்வப்போது வந்து கேமிராவில் குட்டித்தங்கை அல்லது தம்பி என்று குஞ்சுகுளுவான்கள் எட்டிபார்ப்பார்கள்,அல்லது யாரேனும் திறந்த முதுகுடன் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு காமிராவை கடந்து செல்வார்கள்

ஒருவழியாக 10 நாட்களில் அவர்கள் வகுப்பில் இணைவதை கற்றுக்கொண்டாலும் அவரவர் பெயர்களில் அலைபேசி வழியே யாருமே இணைந்திருக்காததால் ஒவ்வொருவரின் பெயர்களை எழுதிக்கொள்ள   மேலும் சில  சிலநாட்கள் ஆகியது

சொந்தப்பெயரைத்தவிர எல்லா விதமான பெயரகளிலும் மாணவர்கள் நுழைகையில் எனக்கு திகிலாக இருக்கும். மெர்சல் வெற்றி, தல ரசிகன், தளபதி வெறியன், proud Brahmin, ஹிந்து வெறியன், தலை தளபதி ரசிகன் என மாணவர்கள் ஒருபுறம் கொலைவெறிப்பெயர்களுடன் வருகையில், மாணவிகள் வாயாடி, வாயாடி பெத்தபுள்ளை, அப்பா செல்லம் புஜ்ஜிம்மா, தேனு, உனக்காவே நான், போன்ற பெயர்களில் வருவார்கள். ஓருத்தி வெத்திலைக்கொடியென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாள் இன்னொருத்தனோ ’முடிஞ்சாகண்டுபிடி’ என்ற பெயரில்.

சரி பெயர்கள் தான் இப்படி, புகைப்படங்களாவது அவரவருடையதை வைத்துக்கொள்ளலாமல்லவா? நேரில் தான் பார்க்க முடியவில்லை தோற்றம் எப்படியிருக்குமென்று தெரிந்துகொள்ளலாமென்றால், பெரும்பாலான மாணவர்கள் விஜய் அல்லது அஜித் புகைப்படங்களையே வைத்திருக்கிறார்கள். எனக்கு விஜய்க்கும், அஜீத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் தாவரவியல் கற்றுக்கொடுக்க தயக்கமாக இருந்தது. எங்கள் கல்லூரி பாலக்காட்டுச்சாலையில் இருப்பதாலும் கேரளா அரைமணி நேரப்பயணத்தில் வந்துவிடுமென்பதாலும் நிறைய கேரளமாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஒருநாள் வகுப்பில் லாலேட்டன் காத்திருந்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. லாலேட்டனின் பெயர் வினீத்.

 மாணவிகள் ரோஜாப்பூ, நஸ்ரியா அல்லது தலைமுடி காற்றில் பறக்கும் அழகு போஸில் அவரவர் புகைப்படம் . இதுகொஞ்சம் தேவலையாகஇருந்தது.

மம்மூட்டியின் அழகனில் மொட்டைமாடியிலிருந்து குதித்துவிடுவதாக மிரட்டும் ஒரு குட்டிப்பையன் கடைசியில் ’’எனக்கு இறங்கத்தெரியலையே’’ என்பான் அதைப்போல ’’மேம் எனக்கு எப்படி என் பெயரையும் புகைப்படத்தையும் போனில் மாத்தறதுன்னு தெரியலைன்’’னு  ஒருத்தன் சொல்லியபோது நான் அவசரமாக பேச்சை மாற்றினேன் எனக்கும் தெரியாதே அதெல்லாம்!

இப்படி  ரத்தம் சிந்தி இணைய வழிக்கற்றலுக்கு  மாணவர்களை  தயாராக்கி, ஒருமாதத்தில் உள்ளே நுழைந்து வணக்கம் சொல்லவைத்ததே பெரும் சாதனையாக இருக்கையில்  துறைத்தலைவர், ’’மேம் பாடமெல்லலாம் சீக்கிரம் முடிச்சுருங்க, எப்போ வேணா தேர்வு இருக்கும்’ என்ற போது, சென்ற வருடம் பள்ளியில் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கையிலேயே மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அங்கேயே விழுந்து செத்துப்போன கீதா மிஸ்ஸையும், பிரின்சிபால் அறையை விட்டு வெளியே வந்து தன் அறைக்கு வரும் வழியிலேயே நெஞ்சடைத்து செத்துப்போன உடுமலை கல்லூரி பேராசிரியரையும் நினைத்துக்கொண்டு, என் இருமகன்களும் தாயில்லாமல் வளரும்படி செய்து விடுமோ இந்த ஆன்லைன் வகுப்புக்கள் என்று விசனப்பட்டுக்கொண்டேன்

துவக்க நாட்களில் எல்லா மாணவர்களின் மைக்கையும் உயிர்பித்து வைக்க சொல்லி அவர்களிடம் பேசியபடியே பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். சிலநாட்களிலேயெ அவ்வழக்கத்தை நிறுத்த வேண்டிவந்துவிட்டது. மும்முரமாக பூஞ்சைக்காளானின் உணவுமுறைகளையோ அலல்து  பேக்டீரியாவில் எப்படி பாலினப்பெருக்கம் நடைபெறுகின்றது என்றோ மாய்ந்து மாய்ந்து விளக்குகையில் பின்னணியில் கேட்கும் ’’பிளாஸ்டிக் குடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கடைகீரேய்’’, போன்ற கூவல்களூம், ’’உறைக்கு செல்விக்காட்ட தயிர் வாங்கிட்டு வர’ச்சொல்லும் சிற்றேவல்களும்,  ’’டேய், மல்லித்தழைய மார்கெட்டுக்கு கொண்டு போகாம போனை நோண்டிகிட்டு இருக்கியா’’ போன்ற அதட்டல்கள் மட்டுமல்லாது  ’’இந்தம்மா என்னடா 9 மணிக்கு வகுப்புக்கு எட்டேமுக்காலுக்கே வந்துருது’’ என்று எனக்கான கண்டனங்களும் வந்துகொண்டிருந்ததால் ஒருநாளைக்கு சிலரைமட்டும் மைக்கை உயிர்பிக்க சொல்லிவிடுவேன் அவர்களிடமும் வீட்டில் பின்னணிச்சத்தம் இருந்தால் அணைத்துவிடும்படி முன்கூட்டியே வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளுவேன்

அதற்கும் ஆபத்து வந்தது. ஒருநாள், ரேபிஸ் வைரஸுக்கும் ஹெச் ஐ வி வைரஸுக்குமான தோற்ற ஒற்றுமைகளை குறித்து  விளக்கிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு மாணவனிடமிருந்து ’’கதை வுடாதே அதெல்லாம் ஒண்ணும் கிடையாது’’ என்று சத்தமாக  எதிர்வினை வந்ததும் திகைத்துப்போனேன். ஆனால் வீடியோவில் என்னை 48 மாணவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதால் புன்னைகை தவழும் முகத்துடன் ‘’ தமிழ்செல்வன் மைக்கை அணைக்கறிங்களா ‘’ என்று ஆங்கிலத்தில் மென்மையாக கேட்டதும் அங்கிருப்பது சீமானோ என்று சந்தேகம் வரும்படியாக ’’ வாய்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை’’ என்று பதில் வந்தது. என்னை கட்டுப்படுத்திக்கொண்டு  வகுப்பு ரெப்ரஸெண்ட்டேட்டிவை ‘’ செல்வம்’’ என்று ஒரு அதட்டல் போட்டதும் அவன் இவனைக்கூப்பிட்டு சொல்லியிருப்பான் போல, சற்று நேரத்தில் தமிழ்ச்செல்வன் லெஃப்ட் த மீட்டிங்!

சாயங்காலமாக தமிழ்ச்செல்வன் என்னை அழைத்து மைக் ஆன் செய்து  இருப்பதை மறந்து நண்பனிடம் அன்று நடக்கவிருந்த IPL  போட்டியைக் குறித்து பேசியதற்காக மன்னிப்பு தெரிவித்தான்.( பெயர்கள் மாற்றபட்டிருக்கின்றது)

கேள்வி கேட்டால் என்னையே ம்யூட் செய்வது, வேண்டுமென்றெ எதிரொலி கேட்பதுபோல  மைக்கை வாய்க்கு மிக அருகே கொண்டு போய் பேசி விட்டு’’ டவர் சரியில்லை மேம்’’ என்பதை மட்டும் தெள்ளத்தெளிவாக சொல்லுவது போன்ற வில்லத்தனங்களும் நடக்கின்றது.

  என்னவென்று சொல்லுவது, எப்படித்தான் கண்டிப்பது? எனக்கே இத்தனை அசெளகரியங்கள் இருக்கையில், நல்ல நாளில் வகுப்பறைக்கு வரும்போதே கற்றலின் அவசியத்தை சரிவர உணராத இளம்பருவத்தினரை,  அவர்களைக் கவரும் ஆயிரக்கணக்கான கேளிக்கைகள் சூழ்ந்திருக்கையில், கவர்ந்திழுக்கையில்  இணைய வழிக்கற்றலின் வழிக்கு திருப்புவது அத்தனை எளிதல்லவே!

ஓய்வும் நிறைவும் இல்லாமல் இப்படியே நாட்கள் செல்வது துயரளிக்கிறது. தேர்வுகளில் ஒருசிலரைத்தவிர அனேகமாக அனைவருமே போனில் இணையத்தை பயன்படுத்தி கேள்விகளை தட்டச்சி பதிலை காப்பியடிப்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தும் திருத்தி மதிப்பெண்கள் தரவேண்டி இருக்கிறது. நேரான பாதையில் செல்லும் தெளிவும், குறுக்கு வழிகளில் செல்லக்கூடாதென்னும் அறிவும், சுயஒழுக்கமும் தானாய் எல்லாருக்கும் வராத இளம்வயதில் இவர்களைச் சொல்லுவதிலும் குற்றமில்லை. விடைத்தாள்களை ஸ்கேன் செய்து ஆசிரியர்களுக்கு அனுப்பும் அவசரத்தில் ஒரு மாணவன் அவன் காப்பி அடித்த புத்தகப்பக்கத்தையும் அப்படியே ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பி இருந்தான். நொந்துகொண்டு அவனை கூப்பிட்டு கண்டித்தேன். அவன் செய்த தவறுக்கு தண்டனை தரும் காலமல்ல இது, என்றாலும் ஒரு ஆசிரியையாக அவன் தவறு செய்தது எனக்கு தெரிந்திருக்கிறது, என்பதையாவது அவனுக்கு தெரிவிக்க வேண்டுமல்லவா?

  மாணவர்களின் சிறப்பம்சங்களென்ன என்று அறிந்துகொள்ள முடியவில்லை சோர்வுடன், பசியுடன், கவனச்சிதறலுடன் இருப்பவர்களை கண்டு வேண்டியதை செய்து அவர்களை ஊக்கப்படுத்தி கற்றலை தொடரச்செய்ய முடியவில்லை..

மொத்தத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஆளுமை உருவாக்கக்கல்வி அல்லவென்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை ஜெ.சைதன்யா கிண்டு விடியாலாவில் சேர்ந்த அன்று மதியமே ’’ஒக்கார சொல்லிட்டாங்க, ஒக்கார சொல்லிட்டாங்க’ என்று கதறியபடி வீடு திரும்பியதைபோல லோகமாதேவிக்கும் இப்படி உட்கார்ந்து வகுப்பெடுப்பதில் கொஞ்சமும் பிரியமும் சம்மதமும் இல்லவே இல்லை.

இப்படியெல்லாம் இயந்திரங்களுடன்  வாழ்வை இணைக்கவேண்டியிருக்கும் என்று தெரியாமல் சாதாரண சோர்வுகளுக்கும் பணிச்சுமைகளுக்கெல்லாம் கூட ’’இயந்திரத்தனமான வாழ்க்கை’’ என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

இந்த இணைய வழிக்கற்றலில் ஆசிரியைகள் இல்பேணுவதும், கல்லூரி/ பள்ளி கற்பித்தலை சரியாக நேரத்துக்கு செய்வதும்,  வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளை கவனிப்பதுமாக ஓய்வின்றி உழைப்பதையும் மிகுந்த மன அழுத்தத்திலும், உடல்சோர்விலும் இருப்பதையும் பார்க்கின்றேன். வழக்கம்போல எந்த தொற்றானாலும், வாழ்வில் எந்த மாற்றமானாலும் பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களின் எல்லாத்தேவைகளும் வழக்கம் போல பூர்த்தியாகி, அவர்களுக்கேயான ஓய்வு, உல்லாசம் போன்றவைகளுக்கான் நேரத்தில் மகிழ்ந்திருப்பதுமாத்தான் இருக்கிறார்கள்

கல்லூரியில் படிக்கும் மகனின்  இளம் ஆசிரியை ஒருவர் காலை 8.45க்கு  கலைந்த தலையும் சோர்ந்த கண்களுமாக நைட்டியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க துவங்கியதை கரிசனத்துடன் தான் பார்த்தேன். இன்னொரு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் பச்சிளம்குழந்தையின் வீறிடல் கேட்டதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வீடியோவை அணைத்துவிட்டு சில நிமிடங்களில் மீண்டும் வந்தமர்ந்தார். அவர் கண்களில் தெரிந்த சோர்வும்  குழப்பமும், தூக்கமின்மையும், அலுப்பும், ஒரு அன்னையாக எனக்கு துயரளித்தது.

என்னுடன் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் தான் கணினி முன்பு உட்கார்ந்தாலே அவளின் மாமியார் அதை தொலைக்காட்சிப்பெட்டியின் திரையென எண்ணிக்கொண்டு எந்நேரமும் சினிமா பார்ப்பதாக திட்டுகிறார் என்றார். இன்னொரு ஆசிரியையின் கணவர் அவர் பாடமெடுக்கையில் மட்டும் தனக்கு வேண்டிய உணவுகளை செய்துதரச் சொல்லி தொந்தரவு செய்வதை சொல்லி வருந்தினார்.

பல கணவர்களுக்கு ஆசிரியப்பணியிலிருக்கும் மனைவிகள் எப்படி என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்னும் அறிதல் இல்லை. எனவே, இப்போது அழகிய ஆங்கிலத்தில் கற்பிக்கின்ற,  கண்டிப்பாகவும் அறிவாளியாகவும், கம்பீரமான மதிக்கத்தக்க ஆளுமையாகவும் மனைவியை வீட்டில் பார்க்கையில் எங்கோ சீண்டப்படுகிறார்கள். வைரஸ் தொற்றுக்காலத்தில் அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைகளில் பெரும்பாலானவை ஆசிரியைகளுக்கும் நடக்கின்றது.

அதிகாலை எழுந்து வீட்டுவேலைகளை முடித்து, வீட்டுப்பெரியவர்களுக்கு உதவி, குழந்தைகளை தயார் செய்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் தயாராகி காலை உணவை தவிர்த்துவிட்டோ அல்லது நின்றபடியே அவசரமாக விழுங்கிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், களைத்து மாலை வந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து வேலையை துவங்குபவர்கள், மாத இறுதியில் சம்பளப்பணத்தை சுளையாக தன்னிடம் தருகிறவர்கள் என்று இருந்தகாலம் போய் இப்போது இப்படியான கம்பீர ஆளுமை என்னும் ஒரு சித்திரத்தை கணவர்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பல தோழிகளின் வீட்டில் இது நடந்து கொண்டிருக்கிறது இத்தனைக்கும் நானுள்ளிட்ட அவர்களனைவருமே எப்போதும் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொண்டேதான் கற்பித்தலையும் செய்கின்றோம்.

நாளோ கிழமையோ வைரஸ் தொற்றுக்காலமோ, வீடடங்கு நேரமோ  எதுவானாலும்  வீட்டிலிருப்பவர்கள் பெண்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதும் அனுசரிப்பதும் அரிதினுமரிதாகவே நடககின்றது.  பெண்களை புரிந்துகொள்ளாத, மதிக்காத, அவர்களை இம்சிக்கிற, அடிமையாக நடத்துகிற  பல வீடுகளில்  கடந்த 9 நாட்களும் விதம் விதமான சுண்டல் இனிப்புக்களுடன் அக்கம் பக்கத்தினரை வரவழைத்து நவராத்திரியை  கொண்டாடினார்கள். பண்டிகைகள், விழாக்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே வாழ்வின் இயங்கியலை நமக்கு கற்றுத்தருவதன்பொருட்டு ஏற்படுத்தப்பட்டவையல்லவா? பக்திப்பைத்தியங்களும் படித்தமுட்டாள்களும் நிரம்பி இருக்கும் உலகமிது. ‘’படிப்பது ராமாயணம் இடிப்பது, பெருமாள் கோவில் ‘’ என்பார்களே, அதுதான்  இது.

மாற்றுக்கல்வி, சோற்றுக்கல்வி, புதிய கல்வி,  கலைக்கல்வி ,அறிவியல் கல்வி சமச்சீர்க்கல்வி என்று பலவற்றை பார்த்தோம். இனி  இந்த இணையக்கல்வியையும் உலகம் பழகிக்கொண்டு நிரந்தரமாக கல்விமுறையே இதற்கு தக்கபடி மாறிவிடுமா  அல்லது கொரோனாவை போலவே இதற்கு முன்பும்,  லட்சக்கணக்கானோர் இறப்புக்கு காரணமாயிருந்த  பிளேக். அம்மை போலியோ, போன்ற கொள்ளை நோய்களைப்போல இதுவும் வந்த சுவடை ஆழப்பதித்துவிட்டு காணாமல் போனபின்பு வழக்கம்போல கல்லூரிக்கு  பருத்திப்புடவையும் கண்ணாடியுமாக போய் வகுப்பெடுத்துக்கொண்டு, தாமதமாக வருபவர்களின், அரதப்பழசான ’’பஸ் லேட் மேம்’’ போன்ற பொய்களை சகித்துக்கொண்டு,  செல்லமாக கண்டித்து உள்ளே அனுமதித்துக்கொண்டு வகுப்பெடுக்கும் நாட்களும் விரைவில் வந்துவிடுமா? பிந்தையதின் சாத்தியங்களையே மனம் மிகவும் நம்புகின்றது);

 ஒரு கூடுகையின் பொருட்டு கல்லுரிக்கு சென்றவாரம் முறையான பாதுகாப்புடன் சென்றிருக்கையில் அடைக்கப்பட்டிருந்த வகுப்பறைகளும், என்னை மறந்துவிட்டு யார் என்று வினவிய காவலாளியும்,  தூசு படிந்திருந்த என் இருக்கையும் மனதை கனக்க வைத்து கண்ணை நிறைத்தது.

ஆசிரியமென்பது ஒரு பணியல்ல அது ஒரு வாழ்வுமுறை.. இந்த புதிய வாழ்வுமுறைக்குள் என்னால் என்னை முழுமையாக பொருத்திக்கொள்ளவே முடியவில்லையெனினும், இதுவரையிலும் எங்கு பிடுங்கி நடப்பட்டாலும் வேர்பிடித்து வளரும் இயல்புடையவளாகவே இருந்திருக்கிறேன். விரைவில்  இதற்கும் பழகிக்கொள்ளுவேன் என்றே நினைக்கிறேன்

Once a teacher always a learner ,அல்லவா. கற்றுக்கொண்டே இருப்பேன் கடைசிக்கணம் வரைக்கும்

அரியதும் தற்காலிகமானதும்!

2018 ல் பின்தெருவில் புதுக்குடித்தனம் வந்தார்கள் ஒன்றரை வயது மகனுடன் ஒரு தம்பதியினர். குடிவந்த மறுநாளே அதிகாலை அந்தப்பெண் என்னை சமையலறை ஜன்னல்வழியே அழைத்து பின்மதிலுக்கு வெளியே செறிந்து மலர்ந்திருக்கும் தங்கரளி மலர்களை பறித்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதிலிருந்து எங்கள் ஸ்நேகிதம் தொடங்கியது. செல்வம் ரேகா தம்பதியினர், மகன் தர்ஷன்

செல்வம் ஒவ்வொரு, வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உணவு/ சமையல் கலையில் பட்டம் பெற்றிருக்கும், கின்னஸில் இடம் பிடித்திருக்கும், தேனியருகிலிருக்கும் ஒரு ஊரை சேர்ந்தவர். 20 வருடங்கள் ஹாலிவுட் உணவகமொன்றில் chef ஆக பணிபுரிந்துவிட்டு இங்கு ஆழியாறு அணையருகே ஒரு உணவகம் துவங்கும் திட்டத்துடன் வந்திருக்கிறார்.

முன்வாசல் எனக்கு கொஞ்சம் நடக்கவேண்டும் என்பதாலும் சமையலறையின் மிக அருகே பின் வாசலும் மதிலும் இருப்பதாலும், மதிலைத்தாண்டி கைநீட்டியே பால், காய்கறி, கீரை வாங்குதல், அங்கேயே கொடியில் துணி உலர்த்த கறிவேப்பிலை கிள்ள என்று பெரும்பாலான புழங்குதல் பின்வாசலில்தான். எனவே அடிக்கடி பார்த்துப்பேசி  விரைவிலேயெ அவர்கள் நல்ல அணுக்கமாகிவிட்டனர். தர்ஷன் என்னை கண்டால் வெட்குவதும் முறுக்கு மீசையுடன் சரணைக்கண்டால் அஞ்சி உள்ளே ஓடுவதுமாக சிலநாட்கள் இருந்தான்.

பின் மெல்ல மெல்லப்பழகினான். என்ன  காரணத்தினாலோ 2 வயதை நெருங்கும் அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லாமே சைகையில்தான். மருத்துவர்கள் குழப்பமேதுமில்லை காத்திருக்கலாமென்றார்கள், ஆனால் வெகுபுத்திசாலி.

கொரோனா விடுமுறையில் தேனிக்கு சென்றவர்கள் அங்கிருந்து ஓரிரவில் தர்ஷன் எனக்கு ‘’டே,யட்டை, சன்னன்னா, நுன்னைட்’’ என்று தேவியத்தைக்கும் சரணன்னாவுக்கும் குட்நைட் சொன்னதை குரல் பதிவாக வாட்ஸப்பில் அனுப்பினார்கள்

ஊர் திரும்பியவன் பேசாமலிருந்த 2 வருஷங்களுக்குமாக சேர்த்து பேசுபேசென்று பேசத்துவங்கினான். சன்னன்னாவுடன் ஒரே ஒட்டுதல் எந்நேரமும் ஈஷிக்கொண்டே இருப்பான். செல்வம் ஹாலிவுட்டில் இருந்ததால் திரைப்படங்கள் பார்ப்பதில் அவனுக்கும் அலாதி பிரியம். வீட்டுக்கூடத்தில் பிரம்மாண்டமான திரையில் எந்நேரமும் எதாவது படம் ஓடிக்கொண்டிருக்கும். தர்ஷனுக்கு தமிழில் ஆங்ரிபேர்ட் அல்லது லயன்கிங் நாளெல்லாம் திரும்பத் திரும்ப ஓடவேண்டும். அவன் எளிதாக அந்த டப்பிங் தமிழை கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தான்

 ’’கப்பல் முழுகுது எல்லாரும் ஓடிவாங்க அடி செம தூள், ஆபத்து காப்பாற்றுங்கள், மக்கள் எல்லாரும் எங்கே போறாங்க? என்ன அருமையான காலம், உற்சாகம் பொங்குமே, தொல்லையில்லை கவலையேதுமில்லை, என்றெல்லாம் கலந்துகட்டி  பேசத்துவங்கினான்.

மேலும் அவன் உலகமே கேள்விகளாலாயிருந்தது

தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் ’’ பச்சைதண்ணியா, சுடுதண்ணியா’’?

8 மணியானால் என்னிடம் ‘’ நீ காரேஜ்(காலேஜ்) கிளம்பித்தியா’’? யாரை  எதிரில் பார்த்தாலும் நல்லாக்கியா?சாப்பித்தியா?

சண்ணன்னா பெயர் எப்படியோ வாயில் வந்தாலும் தருணன்னனா வரவேயில்லை எனவே தருண் ’இன்னோன்னு சண்ணன்னா’’ வாகிவிட்டான்

கோகுலகிருஷணன் போல தெருவில் எல்லார் வீட்டிலும் எப்போதும் இருந்தான் மதிலுக்கு பின்னிருந்துஉருவம் தெரியாமல் ’’தூக்கு தூக்கு என்று கீச்சுக்குரல் கேட்டு, எட்டிப்பார்த்தால் கைகளிரண்டையும் தூக்கிக்கொண்டு நிற்பான். யாரோ ஒருத்தர் தூக்கி விடவும் மீண்டும் இறக்கிவிடுவதுமாக ஒருநாளைக்கு பலமுறை உடற்பயிற்சி செய்துகொண்டிருப்போம். எப்போதும். என்னுடன் சரிக்குச்சரி பேசிக்கொண்டு கூடவே இருப்பான். ஓயாத அவன் கேள்விகளால் என் காதிரண்டும் நிரம்பி வழியும். ’’ஏன் இந்தச்செடி இந்தகலர்ல பூக்குது, அந்த செடி வேற கலர்ல பூக்குது’’? போன்ற என்னால் விடையளிக்க இயலாத கேள்விகளும் இருக்கும்.

யாரிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தாலும் பேசிக்கொண்டிருக்கையிலே அவனிடம் என்னை அழைத்தவரின் பெயரை ஜாதகத்துடன் சொல்லி என்ன பேசுகிறோம் என்பதையும் சுருக்கமாக சொல்லியே தீரவேண்டும். சில சமயம் பேசும் விஷயத்தையும் கவனித்து, ’என்ன லீவ்’ என்றோ ’யாருக்கு காய்ச்சல்’ ’ஏன் இன்னும் சம்பளம் வரலை’ என்றும் கேள்விகள் வரும்.

இன்னும் தீவிரமாக, போனில் யாரு ? என்பதற்கு பதிலாக ”என்  பிரண்டு சுபா” எனறால் ’’ இல்ல சுபா என் பிரண்டு, என் பிரண்டு என்று ஆவேசமாய் ஆட்சேபித்து  சண்டைக்கு வருவதும் நடக்கும்.

லாக் டவுன் காலங்களில் ஆன்லைன் வகுப்புக்களுக்கும் பழக்கமாகிவிட்டான். அவன் வருகையில் நாங்கள் கணினி முன்பாக அமர்ந்திருந்தால் ரகசியமாக ’’காஸா? என்பான் (கிளாஸா) ஆமென்றால் அமைதியாக பிஸ்கட் இருக்குமிடம் தெரியுமாதலால் எடுத்துக்கொண்டுவந்து சமர்த்தாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். சம்மணம் கட்டி அவன் அமர்வதும் மழலையில் முதிர்ச்சியான பேச்சுக்களை பேசுவதும் அத்தனை அழகு.

ஜாமுக்கு பிரட்டையும் சாஸுக்கு பூரியையும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அவன் வழக்கம் .அவ்வப்போது ‘எமன்’ ஜுஸ் கேட்பதும் உண்டு.

சப்பாத்தி தேய்க்கிறேன் பேர்வழியென்று சமையலறையின் புலனையும் தாண்டி கூடம் வரை கோதுமைமாவு பறக்க, குட்டிக்காலில் மிதித்து வீடெல்லாம் மாவை பரப்பி  எனக்கு சமையலில் உதவி செய்வதும் உண்டு. என் எல்லா நாட்களிலும் அனைத்து வேலைகளிலும் தர்ஷனின் பங்களிப்பு இருக்கும்.

என் வாட்ஸப் நிலைத்தகவல்களை தொடர்ந்து பார்க்கும் ஒரு  மூத்த பேராசிரியர் வேறு ஒரு அலுவலின் பொருட்டு ஒருமுறை என்னை அழைத்தபோது  ’’எப்படி மேடம் இத்தனை வேலைகளை தினம் செய்யறீங்க என்று கேட்கையில் தர்ஷனும் உடனிருந்தான்.  

ஜெ அதற்கு முந்தின வாரம் ’’வாழ்க்கை அரியதும் தற்காலிகமானதும் கூட இதில் சோம்பலுக்கு கொடுக்க பொழுதே இல்லை’’  என்று சொல்லி இருந்தாரென அந்த பேராசிரியரிடம் சொல்லி அதான் நான் எந்நேரமும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்றேன்.   எதிர்பார்த்தபடியே ’’என்ன வாழ்க்கை’’? என்று தர்ஷன் கேட்டன்

அரியதும் தற்காலிகமானதும் என்பதை இவனுக்கு எப்படி சொல்லுவதென்று யோசித்து ’’நாம காலையில் எழுந்திருச்சு சாப்பிட்டு விளையாடிட்டு மறுபடி சாப்பிட்டு மறுபடி தூங்கறோமில்ல அந்த வாழ்க்கை ஒரு பப்பிள் மாதிரி சீக்கிரம் உடைஞ்சு காணாம போயிரும்,அதைதான் சொன்னேன்’’ என்றேன் ’’வாழ்க்கை ஒரு பப்பிளா’’ என்று எதிர்க்கேள்வி கேட்டான், ’’ஆமா வாழ்க்கையே ஒரு பப்புள், அவ்வளவுதான்’’ என்றேன்.

அந்த சொற்றொடர் என்னவோ  அவனுக்கு மிகப்பிடித்துவிட்டது அடிக்கடி ’’வாழ்க்கையே ஒரு  பப்பிள்’’ என  ரைம்ஸ் சொல்லுவது போல் சொல்லத்துவங்கினான்.

’’சின்னப் பையனுக்கு இதைப்போய் சொல்லியிருக்கியே?’’ என்று சரண் என்னை கோபித்துக்கொண்டு அப்படி சொல்லக்கூடாது என்று அவனை மிரட்டியும் வைத்தான். அதன்பின்னர் இன்னும் தீவிரமாக பிடிவாதமாக அடிக்கடி சொல்லத்துவங்கினான்.   அவனுடைய மூன்று சக்கர சைக்கிளை தோழர்கள் தோழிகளுடன் ஓட்டும் ஒருமாலையில் ’பூனிக்கா’ என அவனால் அழைக்கப்படும் பூரணியிடம் ’’பூனீக்கா வாழ்க்கையெ ஒரு பப்பிள்’’ என்று கூவியபடியே பின்னால் துரத்திக்கொண்டு சென்றதை பார்த்தேன்

காகங்களுக்கு உணவு வைக்க பின் கதவைத் திறக்கும் அதிகாலைகளில்  சிலசமயங்களில்  அப்போதுதான் கண்விழித்து வாசலுக்கு வரும் அவன் என்னைப்பார்த்து, ‘’ டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’ என்பான். அதிகாலையில் வாழ்வை அத்தனை தத்துவார்த்தமாக  துவங்குவது எனக்கே பகீரென்றுதான்  இருக்கும்.

சென்றவாரம் இரவு 11 மணிக்கு மேல் கட்டிலில் உயரமாக அடுக்கி வைத்திருக்கும் தலையணைகளின் மீது ஏறி கீழே குதிக்கும் சாகசச்செயலில் தர்ஷன் ஈடுபட்டிருக்கையில் கணக்குத் தவறி அவன் முகம் தரையில் பட்டு நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமாகிவிட்டது.

அடித்துப்பிடித்து எங்கள் குடும்ப மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். கோவிட் தொற்றால் தினமும் ஓய்வொழிச்சலின்றி பணி புரிந்து களைத்துப்போயிருந்த மருத்துவர் தையல் போட்டுமுடித்துவிட்டு ’’ஏண்டா போன மாசம் மூக்கில் அடிபட்டு தையல், இப்போ நெத்தியிலா, சும்மாவே இருக்க மாட்டியா?’’ என்ற கேட்டபடி கொரோனாவால் வாழ்க்கை எப்படி தலைகீழால மாறிவிட்டதென்பதை பொதுவாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

வாழ்க்கை என்று காதில் கேட்டதும் இவன்  திரும்பி‘வாழ்க்கையே ஒரு பப்பிள் ‘’ என்றிருகிறான். இறப்பையும் பிறப்பையும் மிக அருகில் தினம் சந்திக்கும் மருத்துவர் திகைத்து பேச்சிழந்து என்ன சொல்லறான்? என்று கேட்டிருக்கிறார்.’’ தேவிக்கா  ஜெயமோகன்னு ஒருத்தர் சொன்னதை இவனுக்கு சொல்லி இருக்காங்க’’ என்று விளக்கியிருக்கிறார்கள்.அநேகமாக மருத்துவர் இரவு உறங்கியிருக்க மாட்டாரெண்ணிக்கொண்டேன்.

  வைரஸ் தொற்று உலகளவில் 3 கோடியை தாண்டிவிட்டதை செய்தியில் கேட்டு வருந்திக்கொண்டிருந்த போது நெற்றியில் தையல் பிரித்துவிட்டு உற்சாகமாக  வீட்டுக்கு வந்து ’’டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’என்றான். இனி துயருற்றுக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லையல்லவா,  அவனை வாரி எடுத்து அழுந்த முத்தமிட்டு ’ஆமாண்டா’! என்றேன். ஜெ’வின் மிக இளைய வாசகன் தர்ஷன்தானென்பதை, வாழ்க்கையே ஒரு பப்பிளாயிற்றே, அவருக்கு சீக்கிரம் எழுதவேண்டும்.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑