ஜெர்மன் நாட்டுப்புறங்களில் ஆல்ப் என்றொரு கண்ணுக்கு தெரியாத மிகத் தீங்கிழைக்கும் ஒரு ஆவியைப் பற்றிய கதைகள் உண்டு. கதவின் சிறு இடைவெளி, சுவர்களின் துளை, ஜன்னல்களின் விரிசல் என்று எந்த வழியாகவும் உள்ளே நுழைந்து உறங்கிக்கொண்டிருப்பவர்களின் நெஞ்சுக்குள் புகுந்துவிடும் ஆவி அது, அது உடலுக்குள் நுழைந்த பின்னர்தான் அதை உணரவே முடியும். பின்னர் ஆல்ப் பிடித்துக்கொண்டிருப்பவர் பலஹீனமாகி ஆற்றலையும் ரத்தத்தையும் இழந்து மெல்ல மெல்ல உயிரிழப்பார்கள்.
இது வெறும் கதைதான் ஆனால் இப்போது கண்ணுக்குதெரியாத இந்த கெட்ட ஆவியைப்போலவே ஒன்று நம் அனைவரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்து உணவு மேசையிலும் இடம் பிடித்து விட்டிருக்கிறது. அது நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல உறிஞ்சிக்கொண்டு இருப்பதை நம் அறியாமல் இருக்கிறோம்.
இப்போது நாம் அன்றாடம் உண்ணும் பதப்படுத்தபப்ட்ட இறைச்சி, பழச்சாறு, தயிர், மருந்து, பேக்கரித்திண்பண்டங்கள் என பலவகையான உணவுகளில் இருக்கும் இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் என்னும் நம் கண்ணுக்குத்தெரியாத தொழிற்துறை மாவுப்பொருள் தான் ஏராளமான ஆரோக்கியக் கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக மைதா, வெள்ளைச்சோறு, சர்க்கரை இவைதான் உடல்நலனுக்குக் கெடுதல் என்னும் புரிதலும் நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது என்றாலும் 1940-களிலிருந்து உணவு அல்லாத காகிதம், மருந்து, பசை மற்றும் வேறு பல தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் இப்போது பரவலாக உணவுத்தொழிற்சாலைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் அது கலந்திருக்கும் நாம் மிகச் சாதாரணமாகவும், அதிகமாகவும் வாங்கி உண்ணும் உணவுப்பொருட்கள் உண்டாக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளையும் நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை.
இந்த தொழில்துறை மாவுப்பொருள் (Industrial starch) என்பது மக்காச் சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிற, பல்துறை திறன் கொண்ட, இயற்கையான, மட்கக்கூடிய ஒரு கார்போஹைட்ரேட் பாலிமர். இது காகிதத் தயாரிப்பு, ஜவுளி, மருந்துப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒரு மூலப்பொருளாகவும், பல்வேறு உணவு அல்லாத தொழில்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பண்டைய பல நாகரீகங்களில் பாப்பிரஸ் புற்களிலிருந்து உருவாக்கப்பட்ட காகிதங்களை ஒட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்டார்ச் 18,19-ம் நூற்றாண்டுகளில் தொழில்புரட்சியின் போது ஜவுளி, காகிதம் மற்றும் அச்சுத்தொழில்களில் மிக அதிகமான அளவு பயனாகத்தொடங்கியது. பின்னர் அவற்றின் பலவகயான உபயோகங்களின் தேவை அதிகமானபோது அவற்றில் ரசாயன மாற்றங்களும் செய்யப்பட்டு உணவு மருந்து போன்ற தொழிற்சாலைகளிலும் அவற்றின் பயன்பாடு துவங்கியது.
இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் மிக அதிகமாகப் புழங்குவது காகிதத்தொழிற்சாலைகளில்தான். காகிதங்களின் வலிமை, அச்சிடக்கூடிய தன்மை மற்றும் மேற்பரப்பின் மிருதுத்தன்மை ஆகியவை இந்த ஸ்டார்ச்சினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
ஜவுளித்துறையில் நெசவு இழைகளை வலுப்படுத்தவும் இதே ஸ்டார்ச் உபயோகப்படுத்தப்படுகிறது .
மருந்துத்தொழிற்சாலைகளிலும் இந்த ஸ்டார்ச் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களில், செயல்புரியாத ஒரு துணை மூலப்பொருளாக மருந்துகளை ஒன்றிணைக்கும் பசையாகப் பயன்படுத்தபடுகிறது மேலும் அழகுசாதனப் பொருட்களில் சருமத்திற்குள் உறிஞ்சப்படும் பண்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்துறை மாவுப்பொருட்கள் அவற்றின் இயற்கையான வடிவத்திலிருந்து குறிப்பிட்ட தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பிரத்யேகமாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் தொழில்துறை மாவுப்பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை மாற்றி, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கோதுமை ,மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை ஊறவைத்து அரைத்து, பிரித்தெடுத்து உலர்த்துதல் மூலம் மாவுச்சத்தைப் பெற்ற பிறகு, அதன் பாகுத்தன்மை, ஒட்டும் தன்மை மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த இவை மாறுபடுத்தப்படுகிறது (Modified).
மேலும் இந்த மாவுப்பொருட்களிலில் நார்ச்சத்து , க்ளூட்டன் உள்ளிட்ட புரதங்கள், கொழுப்பு, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் முற்றிலுமாக நீக்கப்படுவதால் இதில் அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் என்னும் ஸ்டார்ச் பாலிமர்கள் மட்டுமே இருக்கும். பலமுறை சுத்திகரிக்கப்பட்டு (Refining) தூய மாவாக மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் இவற்றில் மாவல்லாது வேறு எந்த சத்துக்களுமே இருப்பதில்லை.
முன்-ஜெலாட்டினேற்றம் (Pre-gelatinization) போன்ற இயற்பியல் மாற்றத்தில் மாவுப்பொருளை சமைத்து மீண்டும் உலர்த்துவதன் மூலம், அதற்கு குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும் திறன் அளிக்கப்படுகிறது, இது உடனடி உணவுகளுக்கு மிகவும் ஏற்றதோர் இயல்பு.
இறுதியாக, என்சைம்கள் பயன்படுத்தப்பட்டு இந்த மாவின் சங்கிலிகள் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் சிரப், மால்டோடெக்ஸ்ட்ரின்ஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
இந்த மாறுபடுத்தப்பட்ட மாவுப்பொருட்கள் தான் தொழிற்சாலை மாவுப்பொருள் என்னும் பெயரில் அவற்றின் மேம்படுத்தப்பட்ட நிலைப்புத்தன்மை மற்றும் குளிர்ந்த நீரில் கரையும் திறன் போன்ற இயல்புகளின் காரணமாக, உணவு மற்றும் உணவு அல்லாத தொழில்களில் ஒரு அத்தியாவசியமான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பிரதான செயல்பாடுகள்
இந்தத் தொழிற்துறை மாவுப்பொருட்கள் பலவகையான உணவுப் பொருட்களில் கீழ்க்கண்ட பயன்பாடுகளுக்காக உபயோகப்படுதப்படுகின்றன.
ஸ்டார்ச் சூப், சாஸ், புட்டிங் போன்ற உணவுபொருட்களில் திண்மையாக்கியாக (thickening agents) மிக அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பேக்கரிப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களின் உள்ளடக்கங்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது.
தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் நீர் தனியே பிரிவதைத் தடுத்து, இவ்வுணவுகளின் சீரான தன்மையைப் பராமரிக்க உதவுகிறது.
இது கொழுப்புக் குறைக்கப்பட்ட பொருட்களில் கொழுப்பை மாற்றியமைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மிட்டாய்கள், ஜெல்லிகள் மற்றும் பேக்கரி ஃபில்லிங்ஸ் போன்றவற்றில் உறுதியான கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுகிறது.
கேக்குகள், மிட்டாய்கள் மற்றும் பிஸ்கட்டுகளில் மிருதுத்தன்மையை மேம்படுத்துகின்றன.
டெக்ஸ்ட்ரின்ஸ் (Dextrins) போன்ற தொழிற்சாலை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் இனிப்பு வகைகளில் சர்க்கரைப் பூச்சுகளுக்குப் (glazes) பயன்படுத்தப்படுகின்றன.
உறைந்த உணவுகளில் நீர்ச்சத்து பிரிந்து வருவதை இவை தடுத்து நிறுத்துகின்றன.
முன்-ஜெலாட்டினேற்றம் செய்யப்பட்ட மாவுப்பொருள் (Pre-gelatinized starch) உடனடியாகக் கரைந்து, உடனடியாகத் தடிமனாகிறது. எனவே இது உடனடி சூப்கள், சாஸ்கள் மற்றும் டெஸர்ட்களில் அத்தியாவசியமானது.
பழச்சாறுகள் மற்றும் காய்கறிச் சாறுகள் போன்ற பானங்களில் கூழ்மத் துகள்களைப் பிடித்து வைத்திருக்கவும், பானத்தின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்கவும் இம்மாவு பயன்படுத்தப்படுகிறது.
வணிக ரீதியாகத் தயாரிக்கப்படும் வெள்ளை ரொட்டிகளில், கேக்குகள், பேஸ்ட்ரிகள்,மற்றும் பொரித்த பொருட்களின் Chips and Fried Snacks) மேல் பூச்சுக்கு அல்லது பிணைப்புக்கு இந்த மாவுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது
ஊறுகாய்கள் மற்றும் சாஸ்களின் கெட்டிப்புத் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க இந்த மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மயோனைஸ், சூப் மிக்ஸ்கள் மற்றும் இன்ஸ்டன்ட் சூப்கள், மற்றும் சில வணிக ரீதியான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலாப் பொடிகளில் நிரப்பியாகவும் பிணைப்பானாகவும் இந்த ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது.
ஜாம் மற்றும் ஜெல்லிகளுக்குத் தேவையான கெட்டிப்புத் தன்மையைக் கொடுக்க இந்த மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
குறைந்த கொழுப்புள்ள தயிர், ஐஸ்கிரீம் (Low-Fat Dairy) போன்றவற்றில், கொழுப்பை நீக்கியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய (கெட்டியாக்க) இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸின் அமைப்பை மேம்படுத்த இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
பல இனிப்புப் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக புருக்டோஸ் சோளப் பாகு (High Fructose Corn Syrup – HFCS)இந்த வகை ஸ்டார்ச்சில் , இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
சைவ பர்கர்கள் அல்லது மாற்று இறைச்சித் துண்டுகள் (Meat Substitutes) போன்றவற்றில், கூறுகளை ஒன்றாகப் பிணைக்க இந்த ஸ்டார்ச் பயன்படுத்தப்படுகிறது.
விளையாட்டுப் பானங்கள் (Sports Drinks), செயற்கை இனிப்புகள் (Artificial Sweeteners), இன்ஸ்டன்ட் ஓட்ஸ் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன.
ஆரோக்கியக்கேடுகள்:
மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்துக்கள் (Modified Starches) இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது அவற்றின் சர்க்கரை உயர்த்தல் குறியீட்டை (Glycemic Index – GI) பொறுத்து மாறுபடும்.
சாதாரண மாவுப்பொருட்களை விட, அதிக செயலாக்கம் செய்யப்பட்ட மற்றும் என்சைம் மூலம் சிதைக்கப்பட்டஇந்த வகை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் (Maltodextrins, Dextrose) விரைவான இரத்த சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை வேகமாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இந்த வடிவங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
இவற்றின் அதீத பயன்பாடு இதயநோய்களையும் உண்டாக்கலாம். நார்ச்சத்து இல்லாததால் ஜீரணமண்டலம் மற்றும் ஈரலின் செயல்பாடுகளும் இந்த மாவுப்பொருளினால் சீர்கெடும்
போலி ஸ்டார்ச் என்றும் உலகின் மிக மோசமான ஸ்டார்ச் என்றும் அழைக்கப்படும் இவை உணவுப் பொருட்களின் அலமாரி வாழ்வையும் நீட்டிக்கின்றன என்பதால் பெரும்பாலான பேக்கரிகளில் இவை அதிகம் புழங்குகின்றன.
உணவுப்பொருட்களில் கலக்கப்படும் தொழில்துறை ஸ்டார்ச் அதில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவைகளினால் மனித உடலுக்கு நஞ்சாகி, செரிமானக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதன் உணவு சார்ந்த பயன்பாடுகளுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது. இந்த வகை ஸ்டார்ச் கொண்டிருக்கும் உணவுபொருட்களில் இவை எத்தனைச் சதவீதம் இருக்கிறது என்பதையும் இதனால் உண்டாகக்கூடும் ஆரோக்கியக்கேடுகளும் தெளிவாகக்குறிப்பிடப்பட வேண்டும்.
லேபிள்களில் இருந்து தொழில்துறை மாவுப்பொருட்களை கண்டறிதல்:
தொழில்துறை மாவுப்பொருட்கள் அல்லது அதன் வழித்தோன்றல்கள் பல்வேறு பெயர்களில் லேபிள்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு எனப் புரிந்துகொள்ளலாம்:
சுத்திகரிக்கப்பட்ட மாவு (Refined Flour): மிகவும் பொதுவான வடிவம். நார்ச்சத்து முற்றிலும் நீக்கப்பட்டது.
சோள மாவு (Corn Starch): கெட்டிப்பாக்கி அல்லது நிரப்பியாகப் (Thickener or Filler) பயன்படுத்தப்படுகிறது.
மாற்றியமைக்கப்பட்ட மாவுச்சத்து (Modified Starch): இதன் பொருள், சோளம், உருளைக்கிழங்கு அல்லது அரிசியில் இருந்து எடுக்கப்பட்டு வேதியியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட ஸ்டார்ச். இது சாஸ்கள், சூப்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
மால்டோடெக்ஸ்டிரின் (Maltodextrin): இது ஸ்டார்ச்சில் இருந்து பெறப்படும் ஒரு வகை சர்க்கரை/நிரப்பி. அதிக கிளைசெமிக் குறியீட்டைக் (High GI) கொண்டது. விளையாட்டுப் பானங்கள் மற்றும் மசாலாப் பொடிகளில் அதிகம் காணப்படும்.
உருளைக்கிழங்கு மாவு (Potato Starch) / அரிசி மாவு (Rice Starch): இவை பிணைப்பான்களாகப் (Binders) பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஊட்டச்சத்து அட்டவணையைக் கவனிப்பதன் மூலமும் இந்த வகை ஸ்டார்ச்சின் சேர்க்கையைக் கண்டறியலாம்.
குறைந்த நார்ச்சத்து (Low Fiber): ஒரு உணவில் உள்ள மொத்த கார்போஹைட்ரேட்டுடன் ஒப்பிடும்போது, நார்ச்சத்து (Dietary Fiber) மிகக் குறைவாக இருந்தால், அந்த உணவு சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு ரொட்டியின் 20 கிராம் கார்போஹைட்ரேட்டுக்கு 1 கிராம் மட்டுமே நார்ச்சத்து இருந்தால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டது என்று பொருள்.
சர்க்கரை அளவு (Sugar Content): மால்டோடெக்ஸ்டிரின் அல்லது HFCS போன்ற ஸ்டார்ச்-சார்ந்த இனிப்பான்கள் சேர்க்கப்பட்டிருந்தால், “சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின்” (Added Sugars) அளவு அதிகமாக இருக்கும்.
தயாரிப்புத் தகவலை சரிபார்த்தல்:
உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பைப் பற்றி அளிக்கும் விளக்கங்களையும் கவனிக்கலாம்:
முழு தானிய முத்திரை (Whole Grain Stamp): உண்மையாக நார்ச்சத்து நிறைந்த முழு தானிய உணவுகளில், “100% முழு தானியம்” என்னும் வாசகமோ அல்லது அதற்குரிய முத்திரையோ இருக்கிறதா என்று பார்க்கலாம். இந்த முத்திரை இல்லை என்றால், அது பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளின் கலவையாக இருக்கலாம்.
“மைதாவற்றது” அல்லது “நார்ச்சத்து நிறைந்தது” (Maida-Free or High-Fiber): ஒரு உணவுப்பொருள் இந்தத்தகவல்களைக்கொண்டிருந்தால், வாங்கும் முன்பு உள்ளடக்கப் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவது நல்லது.
காகிதத் தொழிற்சாலைகள், ஜவுளித் துறை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் வரை தொழில்துறை ஸ்டார்ச்சின் பங்கு இன்றியமையாதது. அதன் பரந்த பயன்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக அமைகிறது என்றாலும் அதன் பயன்பாட்டின் மறுபக்கம் மறைக்கப்பட்ட, நம் கண்ணுக்குத்தெரியாத ஆபத்துகள் நிறைந்திருக்கிறது. இந்தத் தொழில்துறை மூலப்பொருளின் உணவு சார்ந்த பயன்பாட்டிற்கு சரியான கவனம் அளிக்கப்படாவிட்டால் மனித ஆரோக்கியத்திற்கு இது நிச்சயமாக அச்சுறுத்தலாக மாறக்கூடும்.
வீடுகளில் சமைப்பது குறைந்துபோய் ஹோட்டல்களில் இருந்தும் பேக்கரிகளில் இருந்தும் வரவழைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டிருக்கும் இந்த அவசரயுகத்தில் உணவு சார்ந்த ஆரோக்கியக்கேடுகள் வராமலிருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். படிப்பு மற்றும் வேலைகளின் பொருட்டு வீட்டை, சொந்த மாநிலத்தை, நாட்டைவிட்டு வெளியே தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த கண்ணுக்கு தெரியாத ஸ்டார்ச் பெரும் ஆபத்துக்களை உண்டு பண்ணக் கூடும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
2025-ல் 14.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் இந்த வகை மாவுப்பொருட்களின் உலகச்சந்தை மதிப்பு 2030-ல் 17.30 பில்லியனாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பு, அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த மாவுப்பொருட்களின் உலகளாவிய தேவையைக் காட்டுகிறது. எனவே இவ்வகை ஸ்டார்ச் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு, சத்தான உணவுகுறித்த விழிப்புணர்வு போன்றவை மிக மிக அவசியமாகிவிட்டிருக்கிறது.
(தன்னறம் வெளியீடாக 2025-ல் வந்த கல்லெழும் விதை, தந்தைப்பெருமரம் ஆகிய இரு நூல்களுக்கு ஜெ -வின் முன்னுரை)
இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய ஓர் இலக்கியத்துறை என்பது அறிவியல் இலக்கியம். அறிவியல்புனைவு என ஒன்று உண்டு, அது இலக்கியத்திற்கான கருப்பொருட்களையும் படிமங்களையும் அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்வதுதான் அது. அறிவியல் இலக்கியம் என்பது அறிவியலையே இலக்கியமாக எழுதுவது. அறிவியலில் உள்ள தகவல்களும் கொள்கைகளும்தான் எழுதப்படும். கற்பனைக்கு இடமே இல்லை. ஆனால் அந்தத் தகவல்களையும் கொள்கைகளையும் கொண்டுவாசகனின் கற்பனையை விரிவாக்கி அறிவியலை புகட்டுபவை அறிவியல் இலக்கியங்கள்.
நான் அப்படிப் படித்த முதல்நூல் சோவியத் ருஷ்ய வெளியீடான யாக்கோப் பெரெல்மான் எழுதிய பொழுதுபோக்குப் பௌதீகம் என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட நூல். என் பள்ளிப்பருவத்தில் எந்த ஒரு மாயாஜாலப் படைப்பையும் விட என்னை ஆட்கொண்டது அந்த புத்தகம்தான். அந்நூலில் ஜூல்ஸ்வெர்ன் போன்ற அறிவியல் புனைவெழுத்தாளர்களை தொடர்ந்து மேற்கோள் காட்டியிருந்தார். பல நாவல்களை நான் முதன் முதலில் கேள்விப்பட்டதே அந்நூல் வழியாகத்தான்.
தொடர்ந்து சோவியத் வெளியீடுகளான அறிவியல்நூல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ‘அனைவருக்குமான உடலியங்கியல்’ என்னும் நூலை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பயின்றதை நினைவுகூர்கிறேன். அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய அறிவியல்நூல்கள் மேல் பெரும் பித்தே எனக்கு உருவாகியது. என்னை ஆங்கில அறிவியல் இலக்கியத்திற்குள் கொண்டுசென்ற நூல் டெஸ்மண்ட் மோரிஸ் எழுதிய நிர்வாணமான குரங்கு.இன்றுவரை அத்தகைய எழுத்துக்களின் தீவிரமான வாசகன் நான். அவற்றில் ரிச்சர்ட் ரிஸ்டாக், கார்ல் சகன் போன்ற அறிவியலாளர்கள் உண்டு. கொஞ்சம் கூடுதலான ஊகங்களை அளிக்கும் லயால் வாட்ஸன் போன்றவர்கள் உண்டு. பெரும்பாலும் புனைவா என்ற ஐயம் தோன்றச்செய்யும் எரிக் வான் டேனிகன் போன்றவர்களும் உண்டு.
தமிழில் அறிவியல் எழுத்துக்கு பலரும் சுஜாதாவை மேற்கோள் காட்டுவதுண்டு. எனக்கு சுஜாதாவின் நல்ல சிறுகதைகள், அதைவிட நாடகங்கள் மேல் பெருமதிப்புண்டு. தமிழின் சிறந்த சூழல்சித்தரிப்பாளர் என்ற எண்ணமும் உண்டு. ஆனால் அவர் மேலோட்டமான அறிவியல் எழுத்தாளர் , மிக மோசமான முன்னுதாரணம் என நினைக்கிறேன். நல்ல அறிவியல்நூல்கள் இல்லாத பொதுவாசிப்புச் சூழலில் அறிவியலை வேடிக்கையான துணுக்குச் செய்திகளாக கொண்டுசென்றவர். அறிவியல்கொள்கைகளை விளக்குவதற்கான மொழியோ புரிதலோ அவருடைய எழுத்தில் வெளிப்பட்டதில்லை.
பாமரர்களுக்கும் அறிவியலைக் கொண்டுசெல்வது என்பது அறிவியலை பாமரத்தனமாக ஆக்குவதோ, பாமர மொழியில் அறிவியலைச் சொல்வதோ அல்ல. சுஜாதாவுக்கு அறிவியல் சுவாரசியமாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆகவே அறிவியலை எப்போதுமே மிக மேலோட்டமாகவும், பெரும்பாலும் அரைகுறையாகவும்தான் அவர் சொன்னார். (அதை அவர் சுருக்கிச் சொல்வது என நினைத்துக்கொண்டார்) பாமரவாசகர்களைக் கவரும் வேடிக்கை, கிண்டல் ஆகியவற்றை ஊடாகக் கலந்துகொண்டார். பெரும்பாலும் அவருடைய வாசகர்கள் அவருடைய அறிவியலெழுத்தில் ரசித்தது அந்த சில்லறை வேடிக்கைகளைத்தான். அத்தகைய விடலைத்தனமான மொழியில் எழுதப்படும் அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஏராளமாக உருவாக்கினார் என்பதனால்தான் அவர் மோசமான முன்னுதாரணம்.
அறிவியல் இலக்கியம் சுவாரசியத்திற்காக அறிவியலுக்கு அப்பால் எதையும் நாடவேண்டியதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் , இந்த உயிர்வெளியின் ஆழத்து மர்மங்களை நோக்கித் திறப்பது என்பதனாலேயே அறிவியல் பெரும் வசீகரம் கொண்டது. கற்பனையை அதன் எல்லை வரைக்கும் கொண்டுசெல்லக்கூடியது. தமிழில் அத்தகைய அறிவியல் சார்ந்த எழுத்துக்களை என்.ராமதுரை ஓரளவுக்கு எழுதியிருக்கிறார்.ஆனால் சூழியல் தளத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களே மெய்யாகவே அறிவியல் இலக்கியம் என்று சொல்வதற்கான தகுதி கொண்டவை.
தியடோர் பாஸ்கரன் வாசகனை மொழியால் கிச்சுகிச்சு மூட்டவில்லை. அவர் அவனுடைய முதிர்ச்சியை நம்பினார். அறிவியல் செய்திகளைக் கொண்டு வாசகனை திகைப்படையச் செய்யவுமில்லை. அறிவியலின் தரவுகளையும் கொள்கைகளையும் கூரிய மொழியில், தெளிவாக முன்வைத்தார். அதற்குரிய கலைச்சொற்களை தானே உருவாக்கினார் . தனியொருவராக சுற்றுச்சூழலியல் அறிவியலை தமிழ் வாசிப்புலகில் நிலைநிறுத்தினார். அறிவியல் செல்லும் அறிதலின் ஆழங்களை, அது உருவாக்கும் பிரபஞ்ச தரிசனங்களையே தியடோர் பாஸ்கரன் முன்வைத்தார். தமிழில் அவர் அதற்கு மகத்தான முன்னுதாரணம்.
தியடோர் பாஸ்கரனின் வழியில் வந்த முதன்மையான அறிவியல் இலக்கிய ஆசிரியர் என்று லோகமாதேவியைச் சொல்வேன். அவர் தாவரவியல் நிபுணர், ஆய்வாளர், பேராசிரியர். தாவரங்களைப் பற்றிய அளப்பரிய ஆர்வத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர். தன் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட ஓர் ஆசிரியர் என்ன செய்யமுடியும் என்பதற்கான சான்றாக அமையும் சிலரையே நாம் வாழ்க்கையில் சந்திக்க முடியும். லோகமாதேவி அத்தகையவர்களில் ஒருவர். அவ்வகையில் தமிழில் தாவரங்களைப் பற்றி பொதுவாசகர்களுக்காக உருவாக்கப்படும் இலக்கிய மரபு ஒன்று இனி உருவாகும் என்றால் அவரே அதன் முன்னுதாரணமும் முன்னோடியுமாகக் கருதப்படுவார்.
லோகமாதேவி அறிவியல் திரட்டியுள்ள தரவுகளையும், அறிவியல் நிரூபித்துள்ள கொள்கைகளையும் மட்டும்தான் சொல்கிறார். ஆனால் அவற்றை இன்றைய வாழ்க்கைச்சூழலுடன் இணைத்துக்கொண்டு, நாம் அறிந்த நம் சூழலில் நாமறியாத என்னென்ன உள்ளது என்ற பிரமிப்பை உருவாக்கும்படி முன்வைக்கிறார். அந்தப் பிரமிப்பு இயற்கை என்னும் இந்த மாபெரும் உயிர்வெளி பற்றிய ஒரு மெய்யியல்தரிசனமாக வாசகனில் விரிவடைகிறது. அந்த தரிசனமே அவருடைய கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவற்றை இலக்கியமாகக் கொள்ளச் செய்கிறது.
உதாரணமாக, ஒரு தாவரவியலாளரின் பார்வையில் பயிர் என்றும் களை என்றும் பேதமில்லை. எல்லாமே செடிகள்தான். களைகளும் ஓரு சூழலின் பிரிக்கமுடியாத பகுதிதான், அவையும் ஒருவகை தேசியச் செல்வம்தான், அரசு களைகளின் அழிவையும் கண்காணிக்கவேண்டும் என்று லோகமாதேவி சொல்லும் இடம். எனக்கு அது மெய்சிலிர்ப்பூட்டும் ஒரு வேதாந்த தரிசனமாகவே இருந்தது. களை,களையப்பட வேண்டியது என்னும் சொல்லே தாவரங்கள்மீதான பொறுப்பற்ற பார்வையை காட்டுவது என நினைத்தேன்.
தமிழில் சூழியல் பற்றிப் பேசியவர்களே அதிகமும் இயற்கை பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இயற்கையின் அழிவைப் பற்றிய அபாயமணியை அடிப்பவர்களாக, அதற்காகக் கொஞ்சம் அறிவியலை கடந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, சீமைக்கருவேலத்தை ஒரு மாபெரும் நோய்க்கூறாக அவர்கள் சித்தரிப்பதைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் சொல்லும் எந்தத் தீங்கையும் சீமைக்கருவேலம் இழைப்பதில்லை, அதற்கான ஒரு அறிவியல்சான்றுகூட உருவாக்கப்படவில்லை என்று லோகமாதேவி சொல்லுமிடத்தைக் குறிப்பிடலாம்.
இயற்கையை காக்கும் பொறுப்புள்ளவனாக மனிதனை லோகமாதேவி சித்தரிக்கவில்லை. இயற்கை மேல் பரிவுணர்ச்சி (sympathy) கொள்ள மனிதனுக்கு தகுதி உண்டா என்ன? இயற்கையைப் புரிந்துகொள்ள, அதில் தன்னை இணைத்து உணர மட்டுமே அவருடைய கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. அவற்றிலுள்ளது ஓர் ஆழ்ந்த தன்மய உணர்வுதான் (empathy). உதாரணமாக நகரங்களில் செயற்கை மின்வெளிச்சத்தில் இரவெல்லாம் நின்றிருக்கும் தாவரங்கள் இரவும் பகலும் மாறிவருவதை உணரமுடியாதபடி ஆகின்றன, இது ஒரு சித்திரவதை, அவற்றின் உயிரியல்பே தாறுமாறாகிவிடுகிறது என்னும் குறிப்பைச் சுட்டிக்காட்டுவேன். இங்கே எவருமே யோசிக்காத ஒரு கோணம் அது.
லோகமாதேவி ஒரு வாசகராக எனக்கு அறிமுகமானவர். கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தவரை கட்டுரைகள் எழுதும்படி கோரி, வற்புறுத்தி எழுதச் செய்தேன். ஏனென்றால் தமிழில் அறிவியல் இலக்கியம் உருவாகவேண்டும் என்னும் விழைவு எனக்கு இருந்தது. மிகமிகக் குறைவாகவே பொறுப்புணர்வுடன், அறிவார்ந்த நடையில், எழுதப்படும் அறிவியல் இலக்கியம் தமிழில் வெளிவருகிறது. அதற்கான வாசகர்கள் இங்கே இன்னும் பெருவாரியாக உருவாகவில்லை. அறிவியலை வேலைக்கான கல்வியாகவே நாம் கற்கிறோம், அறிவுத்தேடலுக்காக வாசிப்பதே இல்லை. ஆயினும் அறிவியக்கச் செயல்பாடு என்பது அது இயல்பானது என்பதனால், தேவை என்பதனால் நிகழவேண்டியதே ஒழிய சூழலின் ஆதரவு அதற்கு ஒரு பொருட்டு அல்ல என எண்ணினேன்.
லோகமாதேவி என் இணையப்பக்கத்தில்தான் நீண்ட அறிவியல் கட்டுரைகளை எழுதினார். பல கட்டுரைகள் எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இன்று லோகமாதேவியின் பலநூல்கள் வெளிவந்துவிட்டன. அவர் ஓர் ஆய்வாளராக சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார். தாவரவியல் வகுப்புகள் நடத்துகிறார். தமிழகத்தில் தேவையான,முற்றிலும் புதிய ஓர் அறிவுத்தளத்தை அறிமுகம் செய்யும் வாசகராகவும் அறியப்பட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
நீர்நிலைகளின் கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் உயரமான புல் வகைத் தாவரங்கள் நாணல் எனப்படுகின்றன. நாணல் பூங்கொத்துக்கள் பெரிய அளவில் தூய வெள்ளையிலும் இளஞ்சிவப்பிலும் ஊதாநிறத்திலும் பறவையின் இறகுபோல இருக்கும்.
புல் குடும்பமான போயேசியை சேர்ந்த இவற்றின் அறிவியல் பெயர் Phragmites australis. பேரினப்பெயரான Phragmites வரப்புகளில் புதராக வளர்பவை என்றும் சிற்றினப்பெயர் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை என்றும் பொருள் கொண்டிருக்கிறது.
60 செ மீ நீளமுள்ள இலைகளுடன் இவை சுமார் 2 லிருந்து 4 மீ உயரம் வரை வளரும். கோடைக்காலத்தின் இறுதியில் இளம் ஊதா நிற மலர்மஞ்சரிகள் 40 செமீ அளவில் உருவாகும். கூர்மையான சிறு மலர்களின் நுனியில் சாம்பல் நிறத்தில் பட்டுப்போன்ற நீளமான இழைகள் இருக்கும். இவ்விழைகள் நாணலின் நுண் விதைகளைக் காற்றில் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல உதவும்.
இவை உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களில் (அண்டார்டிகாவைத் தவிர) காணப்படுகிறது. உயரமான, மெல்லிய, அதிக உற்பத்தித் திறன் கொண்ட புல் வகையான நாணல் பல்லாயிரமாண்டுகளாக மனிதர்களுக்குப் பல விதங்களில் பயன்படுகிறது.
நாணல்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் விவசாயம் , தீவனம் கூரை, சுவர்கள், மீன் பொறிகள் முதலிய கட்டுமான நோக்கங்களுக்காகவும் ,காற்று , உறைபனிக்கு எதிராகப் பாதுகாக்கும் பாய்கள், வேலிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், கூழ் மற்றும் காகிதம் உருவாக்கும் தொழில்துறையை உள்ளடக்கிய பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கும், எரிபொருளாக ஆற்றல் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.
ஏராளமான இதன் இலைகள் மலிவான, எளிதில் கிடைக்கும் ஓலைப் பொருளாகக் கூரைவேய்வதில் உலகெங்கும் மிக அதிகம் பயன்படுகிறது. இவற்றிற்கு நீர் நாணல் என்றும் பெயருண்டு.
இந்த நாணல் மட்டுமல்லாது நாணலில் பல வகைகள் உண்டு
பெருநாணல்
பெருநாணலான Arundo donax என்பது 6 லிருந்து 10 மீ உயரம் வளரக்கூடியது. இதற்கு யானைப்புல் என்றும் பெயருண்டு.இதன் தண்டுகளிலிருந்து இசைக்கருவிகள் செய்யப்படும். இதன் நாரிழைகளிலிருந்து துணிகளும் நெய்யப்படுகின்றன. வெட்ட வெட்டth தொடர்ந்து 25 வருடங்களுக்கு வளர்ந்துகொண்டே இருக்கும் இவற்றிலிருந்து உயிரி எரிபொருளும் உருவாக்கப்படுகின்றது.
பல பழங்குடியினர் இதன் மாவுச்சத்து நிறைந்த வேர்க்கிழங்குகளிலிருந்து மதுபானமும் உருவாக்குகிறார்கள். புல்லாங்குழல் உள்ளிட்ட பல காற்றிசைக் கருவிகள் இதிலிருந்து செய்யப்படுகின்றது. தெற்கு பிரான்ஸ் பகுதியில் இசைக்கருவிகளுக்கென இப்பெருநாணல் சாகுபடி செய்யப்படுகின்றது.
பர்மா நாணல்
Neyraudia reynaudiana என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த நாணல் பட்டு நாணல், போலிநாணல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Reynaudia என்னும் க்யூபாவின் நீலப்பச்சை புல்லின் பெயரை மாற்றியமைத்து வைக்கப்பட்டது. 3 அடி நீளம் கொண்ட ஆயிரக்கணக்கான நுண்மலர்களை கொண்ட பட்டுப்போன்ற மலர் மஞ்சரியினால் இந்த நாணலுக்கு பட்டுநாணல் என்னும் பொயர் வந்தது
ரிப்பன் நாணல்
Phalaris arundinacea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ரிப்பன் நாணல் இளஞ்சிவப்பு இலைகளுடன் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கும். இவை நீரிலிருக்கும் மாசை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் என்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. சத்து நிறைந்த இலைகள் கால்நடைதீவனமாகவும் உலர் இலைகள் கட்டிகளாக்கப்பட்டு எரிபொருளாகவும் பயனாகின்றன.
இனிப்பு நாணல்
Glyceria maxima என்னும் இனிப்பு நாணல் சீனாவை சேர்ந்தது. இந்த நாணல் கால்நடை தீவனமாகப் பயனாகிறது. இதன் நாரிலிருந்து கூடைகள் பின்னப்படுகிறது
சிறு நாணல்
Calamagrostis பேரினத்தின் 200-க்கும் அதிகமான சிற்றினங்கள் அனைத்தும் சிறு நாணல் எனப்படுகின்றன. மிக அழகிய தோற்றம் கொண்ட குட்டையான நாணல் வகையான இவை அலங்கார புல்வகைகளாகப் பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன
சூழலுக்கு இணக்கமான இந்த நாணல்களின் பல்வேறு வகைகளும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உலகின் பல பாகங்களிலும் மீண்டும் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.
சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.
எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்
. ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.
.. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“
என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.
அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?
கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.
தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.
கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.
ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை
இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.
இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.
..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.
..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..
..நானா, நான் எப்படா சொன்னேன்..?
... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.
..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..
“... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.
வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.
சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.
அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.
அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.
தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.
// இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ
மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். அந்த shield ஐயும் கடந்து உள்ளே செல்லும் கூர்நுனிகள் உண்டாக்கும் காயங்களுக்கான கண்ணீரை மிக நெருங்கியவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள்.
ஆனால் அகரமுதல்வன் இயக்கத்தில் ரமேஷ் பிரேதனின் அம்மை, அப்பன், அயோனிகன் ஆவணப்படம் பார்க்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதன் இறந்த செய்தியைக் கேட்டபோது மெய்யாகவே வருந்தினேன்தான். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் விருதுக்கான வாழ்த்து தெரிவித்த எனக்கு ’’நன்றி தோழர்’’ என்று ரமேஷ்பிரேதன் முதலும் கடைசியுமாகப் பதிலனுப்பி இருந்தார்.
ஒரு அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், அத்தனை திரளான வாசகர்களையும் அந்த விழாவையும் அந்த அங்கீகாரத்தையும் நேரில் அனுபவித்தபின், இந்த விருதை வாங்கிய பின் அவர் இறந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன், எனினும் தேற்ற யாருமில்லாத தனிமையில் பெருகிய அந்தக்கண்ணீர்தான் ரமேஷின் இழப்புக்கான என் இதயபூர்வமான அஞ்சலி.
இந்த ஆவணப்படப்படபிடிப்பின் பல வித்தியாசமான களங்கள், மாந்தர்கள். பிரபலங்களின் நினைவுத்தொகுப்புக்கள், மிகச்சிறப்பான இயக்கம், mystic ஆன ஒரு பொதுத்தனமை எல்லாவற்றையும் விட பிரேமாவின் இழப்பின் துயரும் அவரின் உடைந்த இதயத்தின் குருதிக் கசிவெனப் பெருகிய கண்ணீரும்தான் எனக்கு முதன்மையாகத் தெரிந்தது. ’’என்னைப் பிரேமான்னு கூப்பிடமாட்டாரு பன்னிக்குட்டின்னு, பூனைக்குட்டின்னு கூப்பிடுவாரு’’ என்று அவர் கண்ணீர் பெருக்கியபோது நானும் உடைந்து அழுதேன்.
அவரைப் பருமனான உடலுடன் கழிவறைக்கு அழைத்துச்செல்கையில் எடை தாளாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விடுவதை கண்ணீரும் சிரிப்புமாகச்சொன்னதும், தான் கோபித்துக்கொண்டு இருந்தாலும் ’’பன்னிக்குட்டி வா உனக்கு வைன் வாங்கித்தரேன்’’ என்று ரமேஷ் சொல்லுவதையும், இன்னும் அவர் தன்னோடு தான் இருக்கிறார் என்ற அவரின் காதலில் தோய்ந்த நம்பிகையுமாக, ஜெ சொல்லி இருப்பது போல தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, அன்பென்பதை மறந்தே போயிருக்கும் மொத்த மானுடமே அவருக்கு கடமைப்பட்டிருப்பதாவே எண்ணுகிறேன். ரமேஷ் பிரேதனின் நூலில் பிரேமாவை மழையெனச் சித்தரித்திருப்பதுதான் எத்தனை பொருத்தம். அப்படித்தான் அன்பை அவர் ரமேஷ் பிரேதன் மீது பொழிந்துகொண்டிருந்தார்,
ரமேஷ் செயலாக இருக்கையில் பிரேமா அவரிடம் சென்று சேரவில்லை அவர் படுக்கையில் இருக்கையில்தான் அவரிடம் சென்றிருக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவரை நேசித்திருக்கிறார்.அந்த அன்பில், நேசத்தில், காதலில் தளும்பிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது ரமேஷின் இழப்பு உண்டாக்கியிருக்கும் துயரைத்தான் என்னால் தாளமுடியவில்லை.
அசலான காதலோ நேசமோ இப்போதெல்லாம் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது, காணக்கிடைக்கிறது. சொல்லப்போனால் பெரும்பாலான இப்போதைய நேசம், உறவு,காதல் எனப்படுவதெல்லாமே மிக வெளிப்படையான கணக்கீடுகள் அல்லது ஏமாற்றுதல்கள் மட்டுமே. நம்பிக்கையூட்டும் அணுகுமுறைகள், மிக எளிய நாடகங்கள் மூலமே அன்பைப்பெறமுடிகிறது பலருக்கும். பின்னர் அணுகியதைக் காட்டிலும் எளிதாக விரைவாக அதிலிருந்து விடுபட்டுப் புதியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.
ஆகப்பெரிய நம்பிக்கைத்துரோகங்கள் படுக்கையிலல்ல இப்படியான விலக்குதல்களிலும் விலகிச்செல்லுதல்களில்தான் நிகழ்கின்றன. எனினும் ஆணும் பெண்ணுமாக இருபாலாருக்கும் நேசமென்பது மிகத்தேவையாக இருப்பதால் அதன்பொருட்டு தொடர்ந்து பலியாகிக் கொண்டும் பலிவாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இளமையில் இருப்போருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் உண்மையான அன்பு கொண்டிப்பவர்களுக்கும் மிக நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இதுவே நிகழ்கையில், இளமை இறங்கு முகத்திலிருக்கையில், குணப்படுத்த முடியாத மரபுரீதியான உடல்நிலையும், அசாதாரணமான உடலெடையும் கொண்ட சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார நிலையுமில்லாத ரமேஷ் பிரேதன் மீதான பிரேமாவின் தூய அன்பு என்னை அசைத்துவிட்டது, I sway!
விஷ்ணுபுரம் விழாவன்று பிரேமாவை இறுகக்கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த வருடத்திய பயணங்களின் பட்டியலில் முதன்மையாகப் பிரேமாவைச் சந்திக்கவிருக்கிறேன் ஆரத்தழுவிக்கொள்ளப்போகிறேன்.
அந்தத் தூய அன்பை, கண்ணீரையும் துயரத்தையும் விழுங்கும் முயற்சியில் தோற்று கட்டுக்கள் அவிழ்ந்து அவர் உடைந்தழுவதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
பிரேமாவையும் ரமேஷ்பிரேதனையும் நினைத்தால் பொறாமையாகவும் இருந்தது. மிகத்தூய அன்பை அளித்தும் பெற்றுக்கொண்டுமிருந்த இருவரல்லவா?
ஒரு பிழையீட்டைப் போலப் பிரேமாவின் காதலின்பொருட்டும் இழப்பின் பொருட்டும் நானும் அழுது கொண்டிருந்தேன்
13 வருடங்கள் ஒரே அறையில் படுக்கையிலேயே வாழ்ந்து, எழுந்து நடக்கவும் வெளி உலகை, வானைக்காண பெருவிருப்பம் கொண்டிருந்தவரின் மறைவுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்து, வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்த சிட்டுகுருவியை அது அவர்தான் என்று பிரேமா சொன்னது உண்மைதான். நான் நம்புகிறேன் அவரது ஆன்மா 16 நாட்கள் அங்கேயே தான் இருந்திருக்கும்.
எடை கொண்டிருந்த உடலற்ற ஆன்மாவாகவாவது பரந்த வானை அந்தச் சில நாட்களில் பார்க்கவும் அனுபவிக்கும் வாய்ப்பிருந்தும், தன்னை எந்தக் கணக்கீடும் நோக்கமும் இல்லாமல் நேசித்த பிரேமாவுடன் 2 நாட்கள் இருக்கவும் சிட்டுகுருவியென வந்தது ரமேஷ் பிரேதன் தான்.
அம்மா சிலவருடங்களுக்கு முன்பாக ஒரு பண்டிகை நாளில் இரவில் நெஞ்சடைத்து இறந்துபோனார்கள். தினமும் மாலையும் குளிக்கும் பழக்கம் அம்மாவுக்கும் இருந்தது என்னைப்போலவே அல்லது எனக்கிருக்கிறது அம்மாவைபோலவே.
அன்று மாலையும் குளித்து, உடல் துவட்டிய ஈரிழைத்துண்டை இனி ஒருபோதும் உடலைத் துவட்டப்போவதில்லை, நெருப்புக்கு தின்னக்கொடுக்கபோகிறோம் என்றறியாமல். வராந்தா கம்பி மீது கடைசியாகக் காயப்போட்டிருந்தார்கள்.
அம்மா இறந்து உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த நள்ளிரவில் எதேச்சையாகக் கவனித்தபோது அந்தத் துண்டில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிஒன்று அமர்ந்திருந்தது. அதே துண்டின் மீது 2 நாட்கள் அந்தப் பூச்சி அசையாமல் அமர்ந்திருந்து எங்கள் கதறலை, கண்ணீரை, பொருளற்ற சடங்குகளை, இனி யார் மீதும் பிரயோகிக்க முடியாத, அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் ஆணவத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது.
பின்னர் எங்கோ எப்படியோ மறைந்துவிட்ட அந்தப்பூச்சி அம்மாவின் அஸ்தியை மின்மயானத்திலிருந்து வாங்கிக்கொண்டு வருகையில் தம்பி விஜியின் முதுகிலும் அஸ்தியை பாரதப்புழாவில் கரைத்துவிட்டு திரும்புகையில் உடனிருந்த இன்னொருவரின் தோளிலும் இருந்தது. அது அம்மாதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த ஆவணப்படத்தின் மிஸ்டிக்கான பகுதிகளாக கருப்புவெள்ளையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளும் அந்த வண்ணத்துப்பூச்சியும் பறக்கும் பன்றியுமிருந்தன என்றாலும் பிரேமாவின் கண்ணீரும் அவர் சிட்டுகுருவியைப்பற்றி தொண்டையடைக்கச் சொன்னதும் தான் ஆவணப்படத்தின் உச்சம்.
இந்த ஆவணப்படத்தின் இறுதியில் இயக்கம் அகரமுதல்வனென்னும் பெயரைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளித்திரையில் இதே பெயரின் ஓரெழுத்து சிவப்பில் தனித்துத் தெரிகையில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்கக் காத்திருக்கிறேன்.
தங்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமென்பதற்காகச் சொந்தச் சகோதரியின் 16 நாட்களேயான பெண் குழந்தையை கால்களால் மிதித்தே கொன்ற மூன்று சகோதரிகளைக் குறித்து நவம்பரில் செய்திகள் தொடர்ந்து வந்தன. எனக்கு அதற்குள் சென்று மேலும் அறிந்துகொள்ளும் துணிவில்லை. எனினும் இதற்கிணையான அல்லது இதைக்காட்டிலும் வன்முறையானவற்றை செய்தவர்களை இந்த வருடமும் அறிந்துகொண்டேன்.
துரோகங்களை அதிகம் மிக அண்மையில் சந்தித்தவளாதலால் கழுத்தறுபடுகையில் வெளியாகும் முதல் குருதிச்சொட்டின் பச்சை வீச்சத்தை என்னால் உடனே தெரிந்துகொள்ளமுடியும். புதிதாக வருந்த ஏதுமில்லை என்றாலும் அதே துரோகம் மகன்களுக்கும் நடப்பதுதான் துயரளிக்கிறது. இந்த உலகில்தான் அவர்களை நான் விட்டுச்செல்லவிருக்கிறேன் என்பதும் பெருந்துயரளிக்கிறது. எதுவுமே மாறவில்லை. சுழன்று சுழன்று வந்துகொண்டே இருக்கிறது. எனக்கு நிகழ்ந்ததே மகன்களுக்கும் நிகழ்கிறது.
தருண் சிறகு கொண்டவன் அவனுக்கு உலகே வீடு என்பதால் காயங்களை அவன் பெரிதாக கவனிப்பதில்லை, சொல்லப்போனால் புதிய காயங்களுக்காக மனதை திறந்து தயாராக வைத்துக்கொள்பவன் அவன். ஆனால் சரண் வேர்கொண்டவன் அவனுக்கு குடும்பமும் வீடும்தான் உலகு. மேலும் மனிதர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன் அவன். அவனால் காயங்களிலிருந்து விரைவில் விடுபடமுடிவதில்லை. எப்போதும் மானசீகமாக அவன் தலைகோதும் கரமொன்று எனக்கிருக்கிறது. ஆழமான அந்தத் தழும்புகளை அவ்வப்போது நிரடிப்பார்த்துக் புன்னகைத்துக் கொள்ளும் மனவலிமையுடன் அவன் முற்றிலுமாக மீண்டு வரவேண்டும் என்பதுதான் இப்போது என் ஒரே விருப்பமும் வேண்டுதலுமாக இருக்கிறது. தெய்வங்களே காத்துக்கொள்க!
வழக்கத்தைக் காட்டிலும் தீவிரமான வருடமிது. அதிகம் பயணித்த, அதிகம் வாசித்த, அதிகம் எழுதிய, அதிகம் கற்றுக்கொண்ட வருடமும் கூட.
அதிகம் மோசமான அனுபவங்களிலிருந்து ஆகச்சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட வருடமும் கூட. இன்னும் அத்தகைய பாடங்களின் பொருட்டு ஆசிரியர்கள் எனக்கெதிரே நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்றும் அறிந்திருக்கிறேன்.
மிக முக்கியமாக நான் மகிழ்ந்திருந்த வருடமும் இதுதான். தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரையைக்காட்டிலும் ஆகப்பெரிய அங்கீகாரம் இனி வேறு ஏதுமில்லை. நிறைய மேடை உரைகள் நிறைய நிறைய அங்கீகாரங்கள் நிறைய விருதுகள் புதிய தோழமைகள், மகிழ்வளிக்கும் சில விலகல்கள் என கலவையான வருடமிதுவும்.
முத்தச்சிறுகிளை நூலுக்காக செந்தமிழ்க்கோதை விருது சிவகாசியில் அளிக்கப்பட்டது, இந்திய மருத்துவக்கழகம் ‘’women of wonder’’ விருதளித்தார்கள். டிசம்பர் இறுதியில் உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் சிறப்பு விருதும் 50,000 காசோலையும் அளிக்கப்பட்டது. அந்தத்தேதியில் நான் வெள்ளிமலையில் (மூன்றாவது வகுப்பு இது) இருந்ததால் தருண் சென்று விருதை வாங்கிக்கொண்டான். அதே நாள் நான் திருமணத்திற்கு முன்பு இந்தத் துறையில் பணியாற்றிய போது படித்த மாணவர்கள் எனக்கு outstanding educator award அளித்தார்கள். அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாததால் அதையும் நான் திரும்ப வந்து பெற்றுக்கொண்டேன்.
வேடிக்கையாக ஒன்று நிகழ்ந்தது. திருப்பூரின் சக்தி விருது எனக்களிக்கப்பட்டிருப்பதாக அழைப்பிதழ் வந்தது. பலர் அவர்களுக்கும் செய்தி தெரிந்து வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் என்னை இன்று வரையிலும் அழைத்து முறையாக விருது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. விருதுபெறுபவர்கள் விழா நடக்குமிடத்தை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொண்டு நேரில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்த விருதை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
சரண் கல்லூரிக்கு வந்து ethics of AI என்று ஒரு உரையாற்றினான். அவனை உண்மையில் நான் என் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றுதான் சொன்னேன் ஆனால் அழைப்பு வந்தபோது ’’இல்லம்மா நான் வரேன் மாணவர்களுக்காக’’ என்று சொல்லி வந்தான். சிறப்பான உரை, அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பெருமிதமாக கவனித்துக்கொண்டிருந்தேன்.
இறுதித்தளையொன்றிலிருந்தும் விடுபட்டேன். மிகுந்த தாமதமாகிவிட்டதுதான் இருந்தாலும் என் தரப்பில் தாமதிக்கச் சில காரணங்கள் வலுவாக இருந்தன. என்னை இந்த வெர்ஷனில் ஏற்றுக்கொள்ள பலருக்கு தயக்கமிருக்கிறது அதைக்குறித்து எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் நான் இப்படித்தான் இனி நான் இருக்கப்போகிறேன். ’’அறிக இவ்வுலகு இனி நான் தனியள் தன்னந்தனியள்’’ என்று ஏதேனும் ஒரு குன்றின் மீதிருந்து கூவலாமென்றிருக்கிறது. என் இந்த வெர்ஷனை எதிர்கொள்ளச் சங்கடப்படுபவர்கள் தள்ளிநில்லுங்கள் அல்லது விலகிச்செல்லுங்கள்.
வாழ்வு மொத்தத்தையும் பொருளற்ற சடங்குகளுக்காகவும் வற்புறுத்திப் போர்த்தப்பட்ட புனிதப்போர்வைகளுக்காகவும் என்னால் பலியிடமுடியாது .என் ஆத்தா, அம்மா, அத்தைகள், சித்திகள் அண்ணிகளைப் போல ஒருகூரைக்குக்கீழ் கடித்துக்குதறப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து சமூகத்தின் முன்னால் பட்டுப்புடவையும் கூந்தலில் பூச்சரமும் கழுத்தில் காதில் நகைகளும் முகத்தில் வரவழைத்துக்கொண்ட புன்னகையுமாய் வாழும் நாடகத்தில் எனக்கு விருப்பமில்லை. அப்படியொரு முகமூடியை நான் இதுவரை அணிந்து கொண்டதுமில்லை. நான் அன்னை மட்டுமே என்று பெருமிதமாகத்தான் என்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேன்.
மேலும் மணவுறவின் பிணக்குகள் தீர்க்கமுடியாமலாகும் போது வெளியேறி மூச்சுவிட்டுக்கொண்டு மகிழ்ந்துவாழலாம் என்பதற்கு பின்வருங்காலத்துப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.
எனக்கு என் குடும்பத்தில் அப்படிச் சொல்லிக்கொள்ள யாருமில்லை. கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளத்துடன் செத்துப்போய் சடலமாகக் கிடந்த பெண்கள் இருக்கிறார்கள், அம்மாவைப்போல் கடைசிநாள் வரை வதையனுபவித்து கண்ணீருடன் மின்மயானம் சென்றவர்கள் இருக்கிறார்கள், மனதில் ஒருவரை மறக்கவே முடியாமல் கணம் கணமாக நினைத்துகொண்டு வேறொருவருடன் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு செத்துப்போனவர்கள் இருக்கிறார்கள், படிப்பும் வேலையும் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகி இளமை, அழகு, பொருளாதாரம், ஆற்றல், ஓய்வு நேரம் என அத்தனையும் சுரண்டும் ஆணை முற்றிலும் சார்ந்து இருப்பதே குடும்ப தர்மம் என்னும் முட்டாள்தனத்தில் மூழ்கி மடிந்தவர்களும், வாழ்பவர்களுமான வரலாறு கொண்டது என் குடும்பம். நான் அவர்களில் ஒருத்தி அல்ல அல்லவே அல்ல .
பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்களல்ல, மேலும் பல மடங்கு வலிமையானவர்களும்தான். என் சுதந்திரம் என்பது வேலி சாடுவதல்ல எதுவரை போகலாம் என்றறிந்திருக்கிறேன், எத்தனை உயரம் பறக்கமுடியுமோ அத்தனைக்கு பறக்கவிருக்கும் சுதந்திரம் இது. எனக்கு பிடித்தமானவைகளை செய்தேன், செய்கிறேன் இனியும் செய்யவிருக்கிறேன்.
என்னவானாலும் மகன்களின் கைகள் என்னை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது. சரண் இந்தியா வந்திருக்கிறான் இந்தியாவிலேயே இனி இருப்பதாகவும் இருக்கிறான் மும்பையில் பணியாற்றவிருக்கிறான். தருண் கடைசி செமஸ்டரில் இருக்கிறான், அவனுக்கும் வேலை கிடைத்திருக்கிறது காலூன்றி விட்டார்கள் இருவரும்.
முன்பொருமுறை தருணை தோளிலும் சரணை கையிலும் பிடித்துக்கொண்டு அம்பராம்பாளையம் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்கையில் முழுப் பைத்தியக்காரனொருவன் (அப்படி தனித்து யாரையும் அடையாளப்படுத்த முடியாதென்றாலும்) ஒரு பெரிய பாறாங்கல்லை வேகமாகச்சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்னால் போட்டுவிட்டடான். திடீரென பிரேக் பிடித்து நின்ற பேருந்திலிருந்து வாசலுக்கருகில் நின்றிருந்த நானும் மகன்களும் தூக்கி எறியப்பட்டோம். பேருந்தின் படிக்கட்டுக்கு கீழே என் பாதி உடலிருந்தது ஆனாலும் பேருந்துக்குள்ளே இருந்த சரணையும் தருணையும் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன். இனியும் இப்படி பாறாங்கற்களுடன் பைத்தியக்காரர்கள் குறுக்கே வருவார்களென்னும் கவனம் எனக்கும் மகன்களுக்குமிருக்கிறது. அவர்களின் நலனைத்தவிர வேறு எதுவுமே இவ்வுலகில் எனக்கு பொருட்டல்ல அல்லவே அல்ல.
அவர்களைப் புரிந்துகொள்ளாதவர்கள், அவர்களை ஏமாற்றுபவர்கள் அவர்களைச் சுரண்டுபவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு என் வாழ்விலும் இடமில்லை. சட்டையில் படியும் புழுதியைத் தட்டி உதறுவதுபோல எளிதாக நான் அவர்களை ஒரு சிறு தட்டலில் உதறிவிடுவேன்.
மனிதர்கள் குறைநிறைகளுடன் எனக்கும் தேவையாக இருக்கிறார்கள் தான். இப்படி பலரும் என் வாழ்வில் தோழமையுடன் இருக்கிறார்கள், எனினும் ஒரு கோடு இருக்கிறது எனக்கு அந்தக்கோட்டையும் தாண்டிச்செல்பவர்களுக்கு ஒருபோதும் என் வாழ்வில் இடமில்லை.
வெட்கப்படும் விஷயங்களையும் செய்திருக்கிறேன் இந்த வருடம். எங்களது SR (service register)-ல் பணிக்காலத்து தவறுகளை கரும்புள்ளியில் குறிப்பிடும் வழக்கமிருக்கிறது.
நான் பொதுவாக குரல் உயர்த்துவதில்லை எந்த சிக்கலான காலத்திலும் அப்படிச்செய்ததே இல்லை வருத்தத்துடன், கோபத்துடன் விலகி இருக்கிறேன் சொல்லிக்கொண்டும் சொல்லிக்கொள்ளாமல். ஒருபோதும் குரலுயர்த்திக் கத்தியதில்லை எனினும் கல்லூரியில் கடந்த செமஸ்டரில் ஒரு முக்கியமான மீட்டிங்கில் தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவர் சிக்கலை எதிர்கொள்ள முடியாத போது தப்பிக்கும் விதமாக வழக்கமாகக் கத்துவதைப் போலத்தான் என்னிடமும் கத்தினார் என்றாலும் நான் எப்படியோ பொறுமையிழந்து எல்லாக்கட்டுக்களும் தளர்ந்து பதிலுக்கு கத்திவிட்டேன். குற்றவுணர்வு கொள்கிறேன் இப்போதும் அதன்பொருட்டு. போர்ட் ரூமுக்கு வெளியே காத்திருந்த ஆங்கிலத்துறை ராதா ’’…அக்கா நீயாக்கா ஏங்க்கா…’’ என்றாள் அந்தக்கேள்வி நானே என்னைக் கேட்டுக்கொண்டதுதான் என்பதால் பதிலளிக்கவில்லை.shame on me
அதுபோலவே வீட்டில் ஒரு போன் அழைப்பு எனக்கு உண்டாக்கிய குமுறல் அடங்காமல் ’’..மீ போனை எடுக்காதே..’’ என்று தருண் சொல்லச்சொல்லவே அந்தக் கணத்தின் உணர்வுநிலையில் அடித்துச்செல்லப்பட்டு போனை எடுத்து நானும் மறுதரப்புக்கு இணையாகவே பேசிவிட்டேன். அப்படிப் பேசியது வருத்தமென்றால் அதை தருணும் கேட்டது மேலும் வருத்தம் இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த வருடத்தில் எனக்கு நானே வைத்துக்கொண்ட கரும்புள்ளிகள் தான்.
வழக்கம் போல ஆர்வமாகவும் விரிவாகவும் சமையல் செய்கிறேன் சாப்பிடுகிறேன். புதிய புதிய சமையல் செய்முறைகளையும் கற்றுக்கொண்டு முயற்சிக்கிறேன். 2025-ல் வீட்டுக்கு வெளியே சாப்பிட்டதில் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பான உணவுகள் ஏதுமில்லை. மிக நெருங்கிய நண்பர்களுடன் சாப்பிட்ட நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ஆனாலும் சிறப்பான உணவு என்றால் தீபாவளிக்கு தருண் சமைத்துக் கொடுத்ததுதான். அன்று அழுக்குசுவாமி கோயிலுக்குபோய் விட்டு வீடு திரும்பவே மதியம் 2 மணி ஆனது அதன் பின்னர் தருண் ஆட்டுக்கறி வறுவலும் சாதமும் உப்புப்பருப்பும் சமைத்து சாப்பிட 3,30 ஆனது நான் 1 மணிக்கப்புறமாக சாப்பிட்டதே இல்லை எப்போதுமே பசி தாங்காதவளான நான் அன்று மிகத்தாமதமாக தருணின் அந்தச் சமையலை ரசித்துச்சாப்பிட்டேன் இந்த வருடத்திற்கானது மட்டுமல்ல எப்போதைக்குமான மிகச்சிறப்பான அசைவ உணவு அதுதான்.
சாப்பிடுகையில் தருணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண்ணைக் குறித்த பொறாமை எழுந்துவந்து தழலாடியதை தவிர்க்கவே முடியவில்லை.
// தேவி கைகழுவின தண்ணியில் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டாக்கூட ரசம்னு ஊத்திச்சாப்பிடலாம்//போன்ற என்னைக்குறித்த அதிபுனைவுகளையெல்லாம் காற்றில் ஊதிப்பறக்க விட்டுவிட்டான்.
விரிவாகச் சமைத்து விரிவாக பேக் செய்து கல்லூரிக்கு கொண்டு செல்கிறேன். பலர் என்னிடம் எதிர்பார்க்கும் ’’…ஒருத்திக்கு என்னன்னு தனியா செய்யறது எலுமிச்சைசாதம், புளிசாதம் செஞ்சு கொண்டு வந்தேன்..’’ என்று சொல்லும் தியாகத்திருவுருத் தாயெல்லாம் நானில்லை எனக்குப் பிடித்தவற்றை செய்து சாப்பிடுகிறேன்.
உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன். புதிதாக ஜப்பானிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன், உண்மையிலேயே பயனுள்ளதுதான். (தகவல் தேவைப்படுபவர்கள் தனியே கேட்டுக்கொள்ளவும்) அதிகாலையில் நடக்கிறேன் நானிருக்கும் தெருவில் 5 வீடுகளில் 3-ல் தான் புழக்கம், அதில் நான் சமையலை முடித்துவிட்டு,நடப்பேன் காமாட்சியின் வீட்டில் மட்டும் பருப்பும் காயும் புளியும் வேகும், சோறு வடிக்கும் மணமும் அடிக்கும். சமயங்களில் வீட்டிலிருக்கும் மகிழமோ பாரிஜாதமோ ட்ரசீனாவோ செண்பகமோ மணக்கும். இளையராஜா, யுவன், சங்கர் மகாதேவன், ரஹ்மான் அல்லது வித்யாசாகர் என்று குறிப்பிட்ட யாரோ ஒருவரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு நடப்பேன்.
வெள்ளிக்கிழமைதான் விளக்கேற்றனும், வியாழக்கிழமைகளில் மட்டும் சாய்பாபா, செவ்வாயில் முருகன் என்றெல்லாம் எனக்கு நாள் கால பேதமில்லை எல்லா நாளும் விளக்கேற்றுவேன், கூட்டமில்லாத நாட்களில் தோன்றினால் கோவிலுக்குப் போவேன் எப்போதும் வீட்டைத்துடைத்து சுத்தமாக அழகாக உருளிகளில் மலர்களிட்டு அழகாக வைத்துக்கொள்வேன்,
வழக்கம்போல காலை 5-லிருந்து இரவு 11 வரை ஒருநாளுக்கான நேரமாக இருக்கிறது எனக்கு. எழுந்ததும் ஜெ தளத்தை முழுக்க வாசிக்கிறேன். வெண்முரசை மீள மீள வாசிக்கிறேன் நேரம் கிடைக்கையிலெல்லாம்.
இந்த வருடத்திய disaster என்றால் முதல் தளம் வீடு கட்டநினைத்து, அதை செயல்படுத்தியதுதான். மகன்கள் சிறுவர்களாக இருக்கையில் அப்போதிருந்த பொருளாதார மற்றும் வங்கிக்கடன் வாங்கும் வசதிக்கேற்ப சமையலறை உட்பட 4 அறைகள் கொண்ட சிறிய வீட்டைக் கட்டினேன். இப்போது ஊரிலிருந்து மகன்கள் வந்தால் சூட்கேஸ் வைத்தாலே வீடு நிறைந்துவிடுகிறது இனி கல்யாணம் காட்சி என்று சொந்தங்கள் அதிகரிக்கக்கூடும் எனவே மேல்தளம் எடுக்கலாம் என நினைத்தேன்.
பலரை சந்தித்துப் பேசியும், நம்பிக்கையூட்டும் பொறியாளர்கள் அமையவில்லை எனவே தள்ளித்தள்ளிப் போனது. சரண் ஜெர்மனியில் இருந்து சில நாட்கள் விடுமுறையில் வந்திருந்து வீடு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு செல்லவிருந்தான் எனவே தருணின் நண்பன் இன்னொரு தருண் கட்டுமானப் பொறியாளர், அவன் பரிந்துரைத்த இரு இளைஞர்களை முழுமையாக நம்பி கட்டிட வேலையை துவங்கினேன்.
சமீபத்தில் எனக்கேற்பட்ட ஆகப்பெரிய துயரம் வருத்தம் சங்கடம் எல்லாம் அந்த இளைஞர்களை நம்பியதுதான் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வழக்கமாகிவிட்ட துவக்கத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொண்டு போகப்போக தேய்வதை இவர்களும் நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டு வேலைகளை நிறுத்தவும் முடியாமல் ஏகப்பட்ட பணத்தை முடக்கி, தொடரவும் முடியாமல் பெரும் சங்கடமாகியது.
தனியாக வீடு கட்டுவது பெரும் சவாலென்றால் எந்தத்திறமையும் பொறுப்புமில்லாத முடிந்தவரை ஏமாற்றுபவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் அது எப்படிப்பட்ட சவாலாக இருக்கும்?
மேல்வீட்டு பணியின் அதிர்வுகளை சமாளிக்க கீழ்வீடு முழுக்க பெரிய தூண்கள் நிறுவப்பட்டிருந்தன எனவே எனக்கு நடமாட்டம் மிகச்சிக்கலானது பணியாளர்கள் வீட்டுக்கெதிரே குடிசைபோட்டு தங்கி இருந்தார்கள் மாலைவேளைகளில் துவைக்கும் கல்லருகே அவர்கள் குளிப்பது வழக்கமாதலால் நான நடைசெல்வது வாசலில் அமர்வது எல்லாமே நின்றுபோனது. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு புது பிரச்சனை உருவாகும் அதைச்சரி செய்வது குறித்து பொறியாளர்களுக்கும் வீட்டிலேயே தங்கிக்கொண்ட மேற்பார்வையாளர் என்று அமர்த்தப்பட்டிருந்த ஒருவருக்கும் மொத்தக்குழுவினருக்குமே எதுவும் தெரியாது.
திரும்ப அவற்றை நினைத்துப்பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
கடைசி நாளில் மதில்சுவற்றில் அவர்கள் அடைக்காமல் விட்டிருந்த ஒரு துளையை அடைக்கச் சொன்னதற்கு, மேற்பார்வையாளரான மேஸ்திரி, அவரது வெறும் கைகளில் சிமெண்ட் கலவையை எடுத்து அந்தத் துளையில் அப்பி அடைத்துவிட்டு கையைகழுவி விட்டுப் போன அந்த அலட்சியமாக செயல்தான் முழு வீட்டு கட்டுமானத்துக்கும் நடந்ததது. எலக்ட்ரீஷியனோ ப்ளம்பரோ மேசனோ ஒருவருக்கும் எந்த திறமையும் துறைசார்ந்த அறிவும் இல்லாமல் குழப்பி அடித்தார்கள் ஆனால் ஒப்பந்தப்படி பணம் மட்டும் சரியாக கொடுக்க வேண்டி இருந்தது.
என் சுபாவமே மாறிப்போய் கடும் தலைவலியும், பின் கழுத்தில் வேதனையும் பாரமுமாக எப்போதுமிருந்தேன். ஒப்பந்தத் தொகைக்கும் ஆன செலவுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லமாலானது. இளமையின் மீதும் கல்வியின் மீதும் எனக்கிருந்த நம்பிக்கையை முழுவதுமாக அவர்கள் இருவருமழித்தார்கள்.
மனஅழுத்தம் தாங்க முடியாமல் வெண்ணிலாவிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்களும் உண்டு. கடைசியில் கையெடுத்து வணங்கி அவர்களை அனுப்பவேண்டி இருந்தது. இதோ இன்று வரை அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு இப்போதைக்கு குடி போகவே முடியாது.
இந்த வருடத்தின் மாபெரும் தவறு அவர்களை நம்பியதுதான் காலம்காலமாக இதை நினைத்து வருத்தப்படப்போகிறேன்.
வீடு கட்டியதில் ஒரே ஒரு நல்ல நினைவு மற்றும் கிடைத்த உதவி என்றால் திரு பாலு மனைவி மகன்களுடன் இரண்டு நாட்கள் செலவழித்து வீட்டுக்குத் தேவையான டைல்ஸ் போன்றவற்றை கோவையில் வாங்கிக் கொடுத்ததுதான். அந்த உதவியை ஒருபோதும் மறப்பதற்கில்லை. வீடுகட்டிய நினைவுகளில் மற்ற எல்லாமே மறக்க வேண்டியவை. வாழ்நாள் முழுவதுக்குமான மிகக் கசப்பான நினைவு இதுதான். கட்டிடப்பணியின் பொது நிரந்தரமாக ல்யூகோபில்லம் ஃப்ரூட்டிகோசம், மொசுண்டா, ஒரு போன்சாய், தெபியா ஆரியா, சில ரோஜாக்கள் மற்றும் சில செம்பருத்திச்செடிகளை இழந்தேன். அன்னைமரமாக இருந்த நாவலைக் கொல்லவேண்டி வந்தது.
சில இறப்புகளும் மறக்கமுடியாதவைகள் இந்த வருடம். தாவரவியலாளர் டொனோவன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து இறந்தது பெரும் துக்கமளித்தது. 51 வயதுதான் அவருக்கு. அதிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை. ஜேன் குடாலின் இழப்பும் துயரளித்தது என்றாலும் அவர் நிறை வாழ்வு வாழ்ந்து இயற்கையாக மரணித்தார். எனக்குப்பிரியமான மலையாளத் திரைப்பட நடிகர் சீனிவாசன் மறைந்தார்.
கரூர் நெரிசலில் இறந்தவர்களை நினைத்து பெரிதும் வருந்தினேன். துக்கம் விசாரிக்க குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டதும், அவர்கள் இறப்புக்கு பணம் வாங்கிக்கொண்டதும் எனக்கு பெரும் அவமானமாக இருக்கிறது இன்றும்.
கேரள நடிகை ஆக்கிரமிக்கப்பட வழக்கின் தீர்ப்புக்காக நானும் காத்திருந்தேன், ஆனால் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது . இத்தனை வெளிப்படையாக ஒருவர் சட்டத்திலிருந்து தப்பியது எனக்குத்தெரிந்து இதுதான் முதல்முறை. தீர்ப்பு நாளில் அந்த நபரின் கைகளில் ஏகப்பட்ட நிறங்களில் கோவில் கயிறுகள் நெற்றியில் குங்குமமும் சந்தனமும். அவரைக் காப்பாற்றிய கடவுளர்கள் நடிகையை ஏன் கைவிட்டார்கள்? அந்த மனக்குமுறல் எனக்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இடவேலா பாபுவும் சித்திக்கும் மொழிமாற்றியதில் எனக்கு ஆச்சர்யமேதும் இல்லை ஆனால் பிந்து பணிக்கர் செய்தது வருத்தமளித்தது ஒரு பெண்ணால் கூட நடந்த அநீதியை புரிந்துகொள்ள முடியவில்லை.
எல்லாவற்றையும் விட தீர்ப்பை ஒரு பெருங்கூட்டம் நீதிமன்றத்தின் வாசலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடியதுதான் பெரும் வெட்கக்கேடாக இருந்தது . எதைக் கொண்டாடினார்கள் அப்படிக் கூட்டமாக? அந்தகூட்டத்தில் சில பெண்களுமிருந்தார்கள், குழந்தை மிதிபட்டுச் செத்துபோன அன்னை ’’..விஜய வரச்சொல்லுங்க..’’ என்று கத்தியதற்கு இணையானதுதான் அதுவும்.
இந்த வருடத்துக்கான சில பயணங்களை திட்டமிட்டிருக்கிறேன். கோடையில் காஷ்மீர் ட்யூலிப் கொண்டாட்டத்துக்கு செல்லவிருக்கிறேன். நண்பர்கள் உடன் வரவிருக்கிறார்கள். ’’…காஷ்மீரா அங்கே போனால் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விடுவார்கள்…’’ என்று ஒருசிலர் பயப்படுத்தினார்கள், ட்யூலிப் தோட்டத்தில் இருக்கையில் நெஞ்சில் குண்டு பாயுமானால் அதைக்காட்டிலும் நல்லிறப்பு தேவிக்கென்ன இருக்கமுடியும்?
அந்தமான் செல்லவேண்டும் என்னும் விருப்பம் பல ஆண்டுகளாக இருக்கிறது அதை இந்த வருடம் செயலாக்கவேண்டும்
அடுத்து லவ்டேலுக்கு சென்று நான் சுற்றிய தெருக்களை, நீலப்பச்சை இலைகள் கொண்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களை, பனிக்கட்டிபோல சில்லிட்டிருக்கும் சிற்றோடைகளை வழியெங்கும், குட்டிக்குட்டிப் பட்டுதலையணைகளைபோல மலர்ந்திருக்கும் ஹைட்ராஞ்சியாக்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏன் அதை ஒத்திப்போடவேண்டும் இப்போதே போகலாம் என்று மகன்கள் சொன்னதால் விஷ்ணுபுரம் விழாவிலிருந்து அப்படியே சாம்பவியையும் அழைத்துக்கொண்டு லவ்டேல் சென்றோம்.
எனக்கு பால்யத்தின் சொல்லிக்கொள்ளும்படியான நினைவுகளென்றால் அது லவ்டேலில் மட்டும்தான் இருந்தது. எல்லா பள்ளி விடுமுறைகளும் லவ்டேலில்தான் இருந்தேன். அத்தையின் அன்பு, லாரன்ஸ் பள்ளியின் ஆடம்பரம், அருமையான உணவு, கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் என்று மகிழ்ந்திருந்தேன் அங்கு.
பிள்ளையில்லாத அபயமத்தை அந்தக்குளிரில் அண்டாவில் வெந்நீர் வைத்து அத்தனை தலைமுடிக்கும் அரப்பு போட்டுக் குளித்துவிட்டது, அப்போதுதான் அறிமுகமாயிருந்த கோன் ஐஸ்கிரீமை பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு, தனியே கோன் பிஸ்கட்டுகளை சேர்த்துவைத்து சாப்பிட்டது, 1 ரூபாய்க்கு கிடைக்கும் கோழிமுட்டை மிட்டாயை பலவண்ணங்களில் வாங்கி வாயில் அதக்கிக்கொண்டே திரிந்தது, பள்ளி சமையலறையில் எண்ணெய் சட்டியில் முட்டையை உடைத்து ஊற்றி பூரி போல ஆம்லெட் போடுவதையும், கஸ்டர்ட் என்று ஒன்றிருப்பதையும் தெரிந்துகொண்டது, தினந்தோறும் கஸ்டர்டுடன் விரிவான மதிய உணவு சாப்பிட்டது, அங்கே எனக்கென நான் தெரிவு செய்து வைத்துக்கொண்ட நீலவிளிம்பு கொண்ட குழிவான வெள்ளை பீங்கான் தட்டு(இன்னும் அப்படி ஒரு தட்டை தேடிக்கொண்டிருக்கிறேன்), மாலைவேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்பட்டு வெள்ளுடைப்பணியாளர்கள் பரிமாறிய தேநீரும் வாட்டிய ரொட்டியும், கமல் ,ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஹேமமாலினி, அமிதாப் என தினமும் ஷுட்டிங் பார்த்தது. மலைரயில் பயணம், பொட்டானிக்கல் கார்டன் செல்வது, பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்த வான் நீலத்தில் ஒரு ஸ்வெட்டரை சேரிங் கிராஸ் நடைபாதைக்கடையில் வாங்கிப்போட்டுக்கொண்டது, பொட்டனிக்கல் கார்டனின் ரோலிங் க்ராஸிலிருந்து உருண்டு உருண்டு சரிந்து விளையாடியது என லவ்டேலின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க ஆசையாக இருந்தது.
லாரன்ஸ் பள்ளியை மீண்டும் பார்த்தது அத்தனை பரவசமளித்தது. நான் விளையாடிய லவ்டேல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டேன்.
லவ்டேலில் தங்கி இருந்த வில்லாவில் காரை விட்டு இறங்கியதுமே புல்வெளி எங்கும் மலர்ந்துகிடந்த வெள்ளைக்ளோவரை பார்த்துவிட்டேன். அதைபறித்து முகர்ந்ததும் எனக்கு தெரிந்தது என் நினைவில் எங்கேயோ ஆழத்தில் இருந்த லவ்டேலின் வாசனை அந்த க்ளோவரின் வாசனைதான் என்று. எத்தனையோ மலைப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கும் நான் இதுவரை லவ்டேலில் அல்லாமல் அந்த க்ளோவரை வேறெங்குமே பார்க்காமலிருந்ததும் விநோதம்தான். க்ளோவர் மலர்களை தலையிலும் வைத்துக்கொண்டேன். நான் லாரன்ஸ் பள்ளி வளாகத்தின் பக்கவாட்டு எல்லையிலிருந்து சறுக்கி கீழிறங்கி ஒருபெட்டிக் கடைக்கும் செல்லும் வழியும், அந்தக்கடையும் இருந்தது அருகில் ஒரு பஸ் நிலையம் கூடுதலாக.
லாரன்ஸ் பள்ளியில் அத்தை மாமாவின் மரவீட்டுக்கருகே இருந்த வீட்டில் அப்பள்ளியின் ஃப்ரெஞ்ச் ஆசிரியரின் வீடு இருந்தது. அங்கேயும் சென்று விளையாடுவேன். அந்த வீட்டுப்பெண் நல்ல பருமனாக வெள்ளை வெளேரென்று இருப்பார் பெயர் நினைவிலில்லை. அவர் கணவர் தான் பிரஞ்ச் ஆசிரியர் மஞ்சள் நிறத்தில் இருப்பார் எப்போதும் ஏதோ எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பார். அவரின் மயிரடர்ந்த புறங்கை எனக்கு நினைவிருக்கிறது. அடிக்கடி அந்தப்பெண் என்னை அதிகாலைகளில் அழைத்துக்கொண்டு பல ஏக்கரில் பரந்து விரிந்திருந்த லாரன்ஸ் பள்ளியின் பின்புறம் இருந்த பல சிற்றோடைகளின் கரையிலிருக்கும் கேலா லில்லிகளை
(சதைப்பற்றான புனல் வடிவ வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்குமே அது ) பறிக்க அழைத்து செல்வார்.
அவரது கைகளில் சிறிய ஆனால் மிகக்கூரிய கத்தி இருக்கும், பத்துப் பதினைந்து மலர்களை அவற்றின் நீளக்காம்புகளுடன் நறுக்கி இருவருமாக எடுத்துக்கொண்டு வருவோம். அவர் உடைந்த தமிழில் பேசுவார் ‘’..உறக்கத்துக்காக அதிகாலைகளை தவறவிடக்கூடாது..’’ என்பார் என்னிடம். கண்ணாடிக் குடுவைகளில் நீர் நிரப்பி பூக்களை அதில் இருவருமாக அடுக்குவோம்,
அடிக்கடி தங்கச் சரிகை சுற்றிய சாக்லெட்டுகள் தருவார் அருமையாக இருக்கும். அவருடன் நடக்கையில் எனது நீலவார்களிட்ட ஹவாய்செருப்புகள் புல்லின் மீதிருக்கும் பனியில் ஒட்டிக்கொண்டு நடக்க சிரமப்பட்டது நினைவுக்கு வருகிறது.
அந்த நினைவுகளின் நீட்சிதான் நான் இன்று வீட்டில் மலர்களை அமைக்கிறேன் போலும்.
வழக்கம் போல வேடசெந்தூரில் மழையும்,வெயிலும்,குளிரும் இருந்தது.இந்த வருடம் ஏராளமாக சீம்பால் இனிப்பு சாப்பிட்டு ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டினேன். வீட்டு மரங்களின் மாம்பழங்ளை கணக்கு வழக்கில்லாமல் ருசித்தேன். எனக்கு மிகப் பிரியமான முந்திரி நிறைந்த ஜப்பான் கேக்கை இந்த வருடம் சாப்பிடவே இல்லை, எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.
நான் மலையடிவாரத்திலிருந்து இத்தனையாண்டு காலமாக மெல்ல மெல்ல மேலேறி வந்துகொண்டிருந்தேன். வழியில் பல வகையான அனுபவங்கள், கைகோர்த்து இறுதிவரை உடன் பயணிப்பதாகச் சொன்னவர்கள் காணாமல் போனார்கள், பயணத்துணையாக சேர்த்து வைக்கப்பட்டவர்கள் லாயக்கில்லாதவர்களாக இருந்தார்கள், கடந்துசென்ற குளிர்மேகங்களைப் போல சிலர் இனிய நினைவுகளுடன் பிரிந்து போனார்கள், சிலர் முதுகுக்கு பின்னாலிருந்து தள்ளிவிட்டார்கள், சிலசமயம் நானே காலிடறி விழுந்திருக்கிறேன், தலைகுப்புற விழுந்த அனுபவங்களும், ஆழம் தெரியாமல் கால்விட்ட சம்பவங்களும் கொல்விலங்குகளிடமிருந்து மயிரிழையில் தப்பித்த, பிரியமான மலர்மரங்களுக்கருகில் மகிழ்ந்து கழித்த சமயங்களும் உண்டு.
இந்தப்பயணத்தில் இந்த வருடம் ஒரு சில மயிலிறகுகளையும் சேகரித்து மனப்பக்கங்களுக்கிடையே பத்திரமாக வைத்திருக்கிறேன். சமீபத்தில் கருக்கிருட்டில் சென்ற ஒரு கார்ப்பயணத்தில் அப்படியொரு மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டேன். சென்னைத் தெருக்களில் 7 மணி நேரம் காரில் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டு கூடவே பாடிக்கொண்டு being judged என்னும் கவனமோ கவலையோ இல்லாமல் மகிழ்ந்து பயணித்த மற்றொரு கார்ப்பயணமும் நான் பாடம் பண்ணியிருக்கும் என்றைக்கும் வண்ணம் குறையாத மயிலிறகு. பூமார்க்கெட்டுக்குள் சுற்றிவந்த நாளொன்று, என சில மயிற்பீலிகள் என்றென்றைக்குமாக பாடமாகி பொக்கிஷமாக மனதிற்குள் இருக்கின்றன. மேலும் சில வண்ணச்சிறகுகளும் கூழாங்கற்களும் மினுங்கும் காக்கைப்பொன்னும் கண்ணாடிச்சில்லுகளுமாக மனதின் மூலையிலல்ல, நட்டநடுவிலொரு சிறு பெட்டியில் சேகரித்துவைத்திருக்கிறேன்.
பொதுவாகப் பரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் வழக்கத்துக்கு விரோதமாக இந்த வருடம் சில பரிசுகளை பெற்றுக்கொண்டேன். ,அதில் புடவைகள், புத்தகங்கள், மலர்ச்சரங்கள், இனிப்புகள் அடக்கம்.
எனக்கு மிகப்பிரியமான ஜகரண்டாவின் இளம் ஊதா நீறப்புடவையொன்று பரிசளிக்கப்பட்டது. மனமுவந்து பெற்றுக்கொண்டேன். எங்கள் குடும்பங்களில் பெண்களின் சடலத்தின் மீது அவர்களுப்பிரியமான அல்லது வளைகாப்பு, கல்யாணப் புடவையைப் போர்த்திய பின்னரே எரிக்க எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி அம்மாவுக்கு பிரியமான புடவையை கட்டிவிட முயன்று, உடல் விரைத்துவிட்டதால் தோற்று உடம்பில் சுற்றிக்கட்டிவிட்டோம். அந்தப்புடவை சுற்றப்பட்டிருந்த அம்மாவின் மீதுதான் விஜி மின்மயானத்தில் கற்பூரக்கட்டியை ஏற்றினான்.
இனி மலையுச்சியிலிருந்து மறுசரிவில் இறங்கும் காலமெனக்கு. மிக நல்ல நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள் அவர்களின் தோழமையில் இந்த இறங்குமுகப் பயணத்தை மகிழ்ந்து செல்லவிருக்கிறேன்.
‘’…ஏன் நானழைத்தபோது போன் எடுக்கவில்லை..’’ என்று குறைப்பட்டுக்கொண்டது ’’…தேவி என்னை ஒருமுறை அழைத்து நான் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது முறை அழையுங்கள் எடுக்கவில்லை என்றால் மூன்றாவது முறை அழையுங்கள் அப்போதும் எடுக்கவில்லை என்றால் நான் எடுக்கும்வரை தொடர்ந்து விடாமல் அழைத்துக்கொண்டே இருங்கள்…’’ என்று சொல்லும் நண்பர், ஏழு பேருந்துகள் மாறி மாறி ஊரிலிருந்து கோவை வந்து வீட்டுத்தோட்டத்துக்கு கொடுக்கவென உலர்ந்த வாழையிலைச் சருகுகளில் பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு மண்ணில் பொதியப்பட்ட 8 வாழைக்கன்றுகளை சுமந்துகொண்டு வந்து கையளித்த நண்பர், ஒன்றுமே சொல்லாமல் திடீரென ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று பவோபாப் மரத்தைக்காட்டி நான் அதை வாயை பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்கையில் பின்னிருந்து என்னை புகைப்படமெடுத்து கொடுத்த நண்பர், நான் மிகப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் அண்மையை அளிக்குமொருவர், ’’…அம்மா வீட்டுக்குவர லேட் ஆயிருச்சு இங்கே ஒருபக்கம் பயணத்தில் இருக்கேன் என்று சொல்லுகையில்’’.. ஜாலியா இருடா மெதுவா வா ஒன்னும் பிரச்சனை இல்லை..’’ என்று சொல்லும் சரண்,’’… நீ ஏன் பாண்டிச்சேரி போகமுடியலைனு வருத்தப்படறே நான் இன்னிக்கே நைட் புறப்பட்டு வரேன் நான் கூட்டிட்டுப்போறேன்..’’ என்று கவனமாக இருக்கும் தனது அட்டெண்டன்ஸ் குறித்து கவலைப் படாமல் புறப்பட்டு வரும் தருண், என் மகிழ்ச்சியான வெர்ஷனாக நானே திரும்பப் பார்த்துக்கொள்ளும் சாம்பவி, லடாக்கில் இருந்து எனக்கென wind chimes வாங்கி வந்த, நான் வருடங்களாக தேடிக்கொண்டிருந்த காலையில் தூய வெள்ளையில் மலர்ந்து மாலை அது இளஞ்சிவப்பாகி, மறுநாள் குருதிச்சிவப்பாகும் மலர்களை அளிக்கும் ஹைபிஸ்கஸ் ம்யூட்டாபிலிஸ் செடியையும் வாங்கிக்கொடுத்த நண்பர், எந்தெந்த நாடுகளில் இருந்தோ இலைகளையும் மலர்களையும் பார்த்த உடனே எனக்கு புகைப்படமெடுத்து அனுப்பும் தோழமைகள் என்னுடன் இருக்கிறார்கள்.
எனக்குப் பிடித்தமான நான் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் இந்த தாவரவியல் துறை இன்னும் வாசிக்க வேண்டிய எழுதவேண்டியவைகள் என்று இப்போது மலையின் மறு சரிவிலிறங்குகையிலும் ஏராளம் பணிகள் காத்திருக்கின்றன.
புதிய வருடத்திற்கான தீர்மானங்கள் ஏதுமில்லை
வாழ்க்கை அத்தனை இனியது அத்தனை துயர் மிக்கது எப்படியாகினும் அதை மகிழ்ந்து வாழவிருக்கிறேன்.
என்னுடன் இருந்தவர்களுக்கும், என்னவானாலும் உடன் நிற்பவர்களுக்கும், விலகிச்சென்றவர்களுக்கும், இனி இணைந்து பயணிக்க விருப்பவர்களுக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு!
இந்தப்பாடல்களையெல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது என்று நம்புகிறேன் .
இந்த கிருஸ்துமஸ் காலத்தில், சமீபத்தில் பிரபலமான காந்தா ஞானும் வரான் திருச்சூரு பூரம் காணாம் பாடலை சாந்தா, ஞானும் வராம் திருச்சூரு கரோல் காணாம் “என்று மாற்றி மெட்டமைத்ததும் கூட நன்றாகத்தான் இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்
ஆனாலும் மன்மத ராசா மெட்டில் மன்மத ஏசு மன்மத ஏசு'' கொஞ்சம் வரம்பு மீறிவிட்டதுதானே ? இதையெல்லாம் கொஞ்சம் தட்டிக்கேட்கக்கூடதா?
பிதாவே இந்தப்பாவிகளை மன்னிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று காலைதான் புன்னை மரத்தில் crustose லைக்கன்கள் வளர்ந்திருப்பதைப்பார்த்தேன். ஏகத்துக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் கூட்டுயிரிகளான லைக்கன்கள் எனப்படும் கீழ்நிலைத்தாவரங்கள் தூய சூழல்களில் மட்டுமே வளர்பவை. வேர்களற்ற இவை நேரடியாகக்காற்றிலிருந்து உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்பவை எனவே மாசுபட்ட்ட சூழலில் இவை வளரவே வளராது. இந்தத் துண்டு நிலத்தில் 17 வருடங்களாக உரங்களோ பூச்சிக்கொல்லிகளோ ரசாயன மருந்துகளோ எதுவுமே பயன்படுத்தாமல் இருந்ததில் இப்போது லைக்கன்கள் வளர்ந்திருக்கின்றன. தூய சூழல் இருக்கும் இடம் இந்த வீடுஎன்பதை இந்த லைக்கன்கள் காட்டுகின்றன.
இயற்கையான இடங்களில் வளர்ந்திருக்கும் லைக்கன்கள் அந்தசூழல் மாசுபடும் போது,மெல்ல மெல்ல அங்கிருந்து மறைந்துவிடுவதால் அவற்றிற்கு pollution indicatorஎன்றே பெயருண்டு. crustose, foliose fruticose எனப்பலவகை லைக்கன்கள் உண்டு வீட்டில் இருப்பது crustose.
ஜெ தளத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் அவருக்கு வழங்க விருப்பதாக செய்தி வந்ததுமே அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு தக்ஷசீலா பல்கலைக்கழகத்துக்குச் செல்லவேண்டும் என முடிவெடுத்தேன். ஜெ மீது இருக்கும் மரியாதை ஒரு பக்கம், முனைவர் பட்டத்தின் மீது இருக்கும் மரியாதை மறுபக்கம் என எனக்கு இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது.
முனைவர் பட்டத்தின் மீதான வசீகரம் எனக்கு இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்று முதுகலை தாவரவியல் படிப்பில் சேரும் போது முனைவர் பட்ட ஆய்வுகளைக் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. அங்கு சென்று அதைத் தெரிந்துகொண்டு அந்தபட்டத்தின் மீது பித்துப்பிடித்ததை ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.
நான் முதுகலை வகுப்பில் சேர்ந்து ஒரு வாரத்திலேயே tribal pulse -ல் ஆய்வு செய்த ராஜாராம் என்பவரின் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித்த்தேர்வு நடந்தது. எல்லா மாணவர்களும் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது, என்னவோ மீட்டிங் என நானும் போய் உட்கார்ந்திருந்தேன், அப்போது துணைவேந்தராக ஜெனிடிக் எஞ்சினீயரான மாரிமுத்து இருந்தார்.அவரும் அரங்கில் இருந்தார். ராஜாராம் அண்ணன் அவரது ஆய்வு முடிவுகளை வழங்கினார் நான் அசுவராஸ்யமாக கையில் என்னவோ சாப்பிடக் கொடுத்திருந்தார்கள் அதை பின் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திடீரென இனிமேல் ராஜா ராம் டாக்டர் ராஜாராம் என அழைக்கப்படுவார் என்று துணைவேந்தர் சொல்ல அனைவரும் பலமாக கைதட்டியதும் பித்துபிடித்தது போலானது. 12ம் வகுப்பு முடிந்ததும் டாக்டருக்கு படிக்க விரும்பினேன்.லட்சக்கணக்கில் செலவாகும் முடியவே முடியாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். பிறகு கால்நடை மருத்துவமாவது படிக்கக்கேட்டேன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் அந்தப்படிப்பு படிப்பவர்கள் காக்கி பேண்ட் ஷர்ட் போடவேண்டும். நம்ம குடும்பத்துப் பெண்கள் பேண்ட் ஷர்ட் போடுவதா என அதுவும் கைவிட்டுப் போனது.
எனவே தாவரவியல் படித்தும் டாக்டர் ஆகலாம் என்பது அன்றிலிருந்து ஒரு ஜுரம் போல என்னைப் பிடித்துக்கொண்டது, பிறகு நான் தென்னை நார்க்கழிவில் ஆய்வு செய்து மூன்றே வருடங்களில் முனைவராகி டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டது தனிக்கதை. இந்தக்கல்லூரியில் வேலைக்குச்சேர்ந்த புதிதில் கையெழுத்திடுகையிலும் பெயருக்கு முன்னால் dr என்று போட்டு அப்போது துறைத்தலைவராக இருந்த ss sir லோகமாதேவி, இங்க வா என்ன சைன் போடும்போதும் இப்படி டாக்டர்னு போடுவியா என்று ஒரு நாள் கடிந்துகொண்டபோதுதான் அது தவறென்று தெரிந்தது.;)
எனவே இந்த விழாவுக்குப் போவதென்று முடிவு செய்து கோவையிலிருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் என்னை அழைத்துப்போவதாகவும் மற்றொருவர் உடன் இணைந்துகொள்வதகவும் சொன்னார்கள். நம்பினேன்.
நவம்பர் விடுமுறைக்காலம் என்பதால் ஒத்துக்கொண்ட ஒரு நிகழ்வுக்காக இடையில் சென்னை செல்லவேண்டி இருந்தது சென்னையிலிருந்து வந்த அன்று கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி. மறுநாள் திண்டிவனம் செல்லவேண்டும். சென்னையிலிருந்தே கோவை நண்பர்களிடம் பேசியபோது கட்டாயம் போகலாம் என்று சொன்னதால் அதைக்குறித்து கவலையில்லாமல் இருந்தேன், ஆனால் அன்று மாலையில், என்னை அழைத்துச் செல்வதாக சொன்னவர் பல்கலைக்கழக நிகழ்வன்றே அவரது தொழில் சார்ந்த ஒரு மீட்டிங் இருப்பதால் அநேகமாக வர முடியாது என்றார். திகைப்பாக இருந்தது அப்படி கட்டக்கடைசியில் சொன்னால் நான் மாற்று ஏற்பாடுகள் கூட செய்யமுடியாது.
உடன் வருவதாகச்சொன்ன மற்றொருவர் நான் அழைத்துக்கேட்ட பின்னர் கேப்பிட்டல் லெட்டரில் NO என்று பதில் அனுப்பினார்.
அத்தனை தூரம் தனியே செல்வதும் தனியே அறை எடுத்துத்தங்குவதும் எளிதல்ல. ஒரே நாள் நிகழ்வுகளுக்கு நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை ஆனால் இது அப்படியல்ல எனவே நிஜமாகவே மனமுடைந்தேன்.
மாலை சரண் தருணிடம் வீடியோ அழைப்பில் பேசும் போது கண்கலங்கினேன். சரண் ’’உனக்கு தனியா போக என்ன கஷ்டம்? நான் ரூம் போட்டுத்தரேன்’’ என்றான், மகன்கள் ஒருபோதும் நான் மனக்கஷ்டப் படுவதை அனுமதிப்பது இல்லை. கூடவே சரண் நான் கோவை நண்பர்களைக் குறித்து குறைப்பட்டுக் கொண்டபோது ’’யாரையும் குறையா சொல்லாத மீ, அவங்களுக்கு என்ன நெருக்கடியோ விடு, நான் உன்னை எப்படியும் அனுப்பறேன் , பாண்டிச்சேரிக்கு போய் அங்கே தங்கிட்டு அங்கிருந்து 1மணி நேரத்தில் அந்தபல்கலைக்கழகம் இருக்கும் போயிட்டு வந்துரு செலவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே உனக்கும், டிரைவருக்கும் தனித்தனியா நல்லரூம் போட்டுத்தறேன்’’ என்றான் சரணின் மனமுதிர்ச்சி எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும்,
நான் தயங்கினேன், உடனே தருண் ’’ மீ நான் 3 நாள் லீவ் போடறேன் இன்னைக்கு நைட் கிளம்பி பஸ்ஸில் பொள்ளாச்சி வரேன் காலியில் நேரத்திலயே புறப்படலாம் நான் உன் கூட வரேன் கவலைப்படாமல் வா ஜாலியா போயிட்டு வரலாம்’’ என்றான். தருண் எப்போதுமே சரணைப்போலவே படிப்பில் அக்கறை கொண்டவன் வருகை 100 சதவீதம் இருப்பதில் மிகக் கவனமாக இருப்பவன் ஆனாலும் 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவே புறப்பட்டான்.
நானும் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வெளியூரிலிருந்து வந்த பேராசிரியர்களுக்கெல்லாம் சன்மானத்தொகையை வாங்கிக் கொடுத்து அவர்களை அனுப்பவே பின்மாலையானது. பின்னர் கார் டயர் சோதித்து பெட்ரோல் டேங்க் நிரப்பி வீடுவந்து சேர்ந்து கைக்குக்கிடைத்த உடைகளை அவசரமாக எடுத்து வைத்து உறங்கச் செல்லும்போது, டிரைவர் அழைத்து தனக்கு காய்ச்சலென்றும் பாண்டிச்சேரி வரமுடியாதென்றும் சொன்னான். அயர்ந்துபோனேன். எத்தனை தடங்கல்கள்
பிறகு 10, 15 ஆக்டிங் டிரைவர்களைக் கேட்டு அலுத்துப்போய் எப்படியோ ஒருவனைப்பிடித்தேன். தருண் டிரைவர் கிடைக்கலைன்னா நானே ஒட்டிட்டுவரேன் என்றான் எனினும் இரவெல்லாம் பயணித்து வந்து மீண்டும் 450கிமீ ஓட்டுவது எளிதல்ல என்பதால் ஒரு டிரைவரை அமர்த்திக்கொண்டேன்.
மறுநாள் காலை நல்ல மழை. 8 மணிக்குப் புறப்பட்டு அருமையான சாலையில் பொறுமையாகப் பிடித்த பாடல்களைக்கேட்டபடி பயணித்து மதியம் 3 மணிக்கு பாண்டிச்சேரி வந்தோம்.
சரண் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலும் அறையும் மிக நன்றாக இருந்தது. நல்ல குளிர், மாலை கடற்கரைக்கு சென்றோம் நானும் தருணும்.
பாண்டிச்சேரி அத்தனை ஜனத்திரள் இல்லாமல் இருந்தது டீக்கடைகளில் துணிக்கடைகளில் சாலைகளில் எங்குமே கூட்டமில்லை, 70-களில் சென்னை இருந்தது போல் என்று நினைத்துக்கொண்டேன். கடற்கரையிலும் கூட்டமில்லை.
கடலைப்பார்த்தபடி ஒரு தம்பதி பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அந்தி சாய்ந்துகொண்டிருந்தது மேகமூட்டமாகவும் இருந்ததால் வானும் கடலும் இணைந்து அவர்களுக்கெதிரே கருநீலத்தில் ஒற்றைப்பெரும் பரப்பாய் விரிந்திருந்தது. தருண் அவர்களை பின்னாலிருந்து அழகாக ஒரு புகைப்படம் எடுத்தான். முகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்ததால் அவர்களிடம் நானும் அவனுமாகப்போய் அதைக்காட்டி அவர்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விட்டு புகைப்படத்தை அழித்துவிடுகிறோம் என்று சொன்னோம் இருவரும் ஒரே குரலாக போட்டோ எங்களுக்கு வேண்டாம் அழித்துவிடுங்கள் என்றார்கள்.
எனக்கு ஒரே ஆச்சர்யம் ’’அத்தனை அழகான புகைப்படம் அது அதைப்போய் வேண்டாம்னு சொல்றாங்களே? என்னை யாராவது இப்படி எடுத்திருந்தா அதை ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி இருப்பேன்’’ என்று புலம்பிக்கொண்டெ வந்தேன் தருண் மெதுவாக ’’இல்லம்மா ஒருவேளை அவங்க கணவன் மனைவியா இல்லாமல் கூட இருக்கலாமில்லையா ஏதோ நிம்மதியா உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க நாம போட்டோ எடுத்திருக்கக்கூடாது விடு’’ என்றான். இந்த மனமுதிர்ச்சியும் ஆச்சர்யமாக இருந்தது.
கடற்கரையில்தான் விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு பெரும் கூட்டமாக பாண்டிச்சேரி வந்திருப்பதை தெரிந்துகொண்டேன், எல்லாருமே கடற்கரையில் இருந்தார்கள். ஜெ அத்தனை நேரம் அங்கே இருந்துவிட்டு அப்போதுதான் புறப்பட்டார் என்றார்கள்.
கடற்கரை முழுக்க கற்பாறைகள் இருந்ததால் கடல்நீரில் கால் நனைக்க முடியவில்லை. கால் நனைக்காமல் பிறகென்ன கடல்? நான் ஆர்வமிழந்து திரும்பலாம் என்றேன். கடற்கரையெங்கும் கொகோலோபா யுவிஃபெரா என்னும் கடல் திராட்சை மரங்கள் நின்றன கூடவே தென்னையும் புன்னையும் பூவரசும் கொஞ்சமாக.
மறுநாள் காலையில் மணக்குளம் விநாயகர் கோவில் போனோம். பிரபலமான கோயில் என்றார்கள். அல்லியும் தாமரையும் அருகும் கட்டுக்கட்டாக விற்றுக்கொண்டிருந்தார்கள். சேவித்துவிட்டு வெளியே வருகையில் கொஞ்சம் செவ்வல்லி மலர்களை வாங்கிக்கொண்டேன். கோவிலுக்கு உள்ளே போகையில் அல்லிகளைக் கொண்டுபோனவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
வாசலில் வெண்பொங்கல் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் தருணும் தங்கி இருந்த ஹோட்டலில் காம்ப்ளிமென்ட் காலை உணவை சாப்பிட்டிருந்தோம். அதிலும் இந்த வாரம் சொல்வனத்துக்கு ஜெ வும் அருணாவும் மேப்பிள் மரங்களுக்கிடையில் நின்றிருந்த புகைப்படங்களைப் பார்த்ததால் உணவு குறித்த தொடருக்கு அடுத்ததாக மேப்பிள் சிரப் பற்றி எழுதலாம் என்று முந்தினநாள் இரவுதான் தருணிடம் சொன்னேன். காலை உணவில் மேப்பிள் சிரப்பும் பேன்கேக்கும் வைத்திருந்தார்கள். நான் முதன்முதலாக அங்குதான் சுவைத்தேன் அதை. எனவே பசிக்கவில்லை.
பொங்கலை தொன்னையில் நிறைத்து அடுக்கி வைத்திருந்தார்கள் அத்தனை வேண்டாம் ஆனால் கோயில் பிரசாதம் சாப்பிடவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றேன்.
பொங்கலைக் கொடுத்துக்கொண்டிருந்த இருவரில் ஒரு பெண் முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு ’’அந்தப்பக்கம் வாங்க’’ என்றார். நான் ’’எனக்கு அத்தனை வேண்டாம் எனவே காலித்தொன்னையை எடுத்துக்கொண்டு கொஞ்சமாக வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி தொன்னையை எடுத்தேன் அவர் மீண்டும் நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்து ’’அந்தப் பக்கம் வச்சிருக்கும்மா’’ என்றர் சிடுசிடுப்புடன் நான் பொறுமை இழக்காமல் எனக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லி ஒரு ஸ்பூன் அளவு வாங்கிக் கொண்டேன். நானும் தருணுமாகச்சாப்பிட்டோம். சுவை அபாரமாக இருந்தது. உணவு அளிப்பவர்கள் கொஞ்சம் மனமுவந்து முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாலென்ன?
பின் அச்சுபிச்சு என்று என்னன்னவோ விற்கும் கடைகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்கெங்கிலும் மதுபானக்கடைகள் இருந்தன வடிசாலைகளும் நிறைய. பெண்கள் எல்லோருமே பேரழகாக, மிகப்பொருத்தமாக அழகிய நவீன உடைகளில் இருந்தார்கள். தருணை விட நான்தான் பெண்களை அதிகமாக வேடிக்கை பார்த்தேன். தருண் பாண்டிச்சேரி போன்ற ஒரு இடத்திற்கு தனது இளமையின் உச்சத்தில் அம்மாவுடன் வரவேண்டி இருந்த துயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி வருந்தினான். ’’இன்னொரு நாள் நண்பர்கள் கூட வந்துக்கோடா இப்ப என்ன பெங்களூருவில் இருந்து பக்கம்தானே?’’ என்று சமாதானம் பண்ணினேன்.
முற்பகல் 11. 45-க்கு 5 கார்களில் பாண்டிச்சேரி நண்பர்கள் இணைந்து பல்கலைக்கழகம் செல்லலாம் என நண்பர் சிவாத்மா தெரிவித்திருந்தார். எனவே குறிப்பிட இடத்துக்கு வந்தோம். அங்கிருந்து எல்ல்லாருமாக பல்கலைக்கழகம் சென்றோம். மாபெரும் கட்டிடங்களால் ஆகி இருந்தது பல்கலைக்கழகம்.
எல்லோருமே குடும்ப விழாவுக்கான மனநிலையில் இருந்தோம். நான் உள்ளே வரும்போது ஜெ வும் அருணாவும் மதிய உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஜெ வுக்கு வாழ்த்துச் சொன்னேன். தருண் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தி தெரிவித்தான்.
எங்கள் அனைவருக்குமே உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டு நிகழ்வு அரங்கிற்கு வந்தோம். முந்தின நாளே அந்தப்பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மகாகவி என்னும் ஒரு பெண் என்னை அழைத்துப் பேசி இருந்தாள். நாங்கள் அவசரமாக இடம்பிடித்து அமர்ந்து கொண்டோம்.விழா சிறப்பாக நடந்தது. ஜெ வரும்போதும் பேசும் போதும் அவரைக்குறித்து ஆவணப்படம் போடப்பட்டபோதும் பட்டம் அளிக்கப்பட்ட போதும் ரஜினி படத்துக்கு ரசிகர்கள் செய்வதுபோல் நாங்கள் கூச்சலிட்டு கைதட்டி கத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் கூட அமைதியாக இருந்தார்கள்.
ஜெ சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசினார். பி டி உஷாவும் இருந்தார் அவரும் சுருக்கமான உரைதான். விழா முடிந்து ஜெ வும் முக்கியஸ்தர்களும் உள்ளே சென்றார்கள். ஜெ கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றார்.
நானும் தருணும் இன்னும் சிலருமாக அவரைச்சந்திக்க அங்கே செல்லமுயன்றபோது ஒரு பெண் குறுக்கிட்டு தடுத்து ’’யாரைப் பார்க்கணும்? என்றாள் நான் ’ஜெ’ வை என்று சொன்னேன். அவரைப்பார்த்து ’’விஷ் பண்ணவா? என்றாள். ‘’ஆம்’’ என்றேன். ’’மேம் அவர் இப்போ கான்ஃபெரென்ஸ் ஹாலில் இருக்கார் அங்கெல்லாம்’’ என்று அவள் சொல்லத் துவங்கையிலேயே உள்ளிருந்து விஷ்ணுபுரம் நண்பர் ஒருவர் வேகமாக வெளியே வந்து என்னிடம் ’’ஜெ எல்லாரையும் உள்ளே வரச்சொல்லறார்’’ என்று கூவினார். திகைத்துப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பெண்னை சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு நானும் மற்றவர்களும் திமு திமுவென உள்ளே போய் ஜெ வை சூழ்ந்துகொண்டோம்
ஜெ உற்சாகமாக இருந்தார். முகம் கொள்ளாத சிரிப்பு வழக்கம் போல. அவருக்கு பொன்னாடை போர்த்துவதும் புகைப்படம் எடுப்பதும் வெடித்துச் சிரிப்பதுமாக டிபிகல் விஷ்ணுபுர கூடுகை அது. ’’எல்லாரையும் உள்ளே வரச்சொல்லுங்க எல்லாரையும் வரச்சொல்லுங்க’’ என்று ஜெவும் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்தப்பல்கலைக்கழகம் இப்படி ஒரு முக்கியஸ்தரைச் சுற்றி இந்தனை பேர் கூட்டமாக நின்று கட்டித் தழுவிக் கொண்டாடுவதை அதுவரையிலும் பார்த்திருக்க மாட்டர்கள் இனியும் பார்க்கப்போவதில்லை. அன்பெனும் பெரு வெளி அது.
பாண்டிச்சேரி நண்பர்கள் சார்பாக ஜெ வுக்கு ஒரு சாக்லேட் மாலை போடப்பட்டது. நான் முதன்முதலாக இப்படி சாக்லேட்டில் மாலை போடுவதைப் பார்க்கிறேன். அந்த மாலையை ஜெ கழற்றிய மறுநிமிடம் நண்பர்கள் அதிலிருந்து சாக்லெட்டுகளை பிய்த்தெடுத்து சாப்பிட்டு எனக்கும் ஒன்று கொடுத்தார்கள்.கட்டற்ற அன்பும் பிரியமும் ஜெ’வை சூழ்ந்திருந்தது.
நான் அவருக்கு பொன்னாடை அளித்தபோது ’’தருண் எங்கே’’ என்று கேட்டு அவனை வரச்சொல்லி இறுகத் தழுவிக்கொண்டார். எனக்கு பெருமிதத்தில் மூச்சடைத்தது.
பிறகு விடைபெற்றுக்கொண்டு அறைக்கு வந்தோம். சிவாத்மா இரவுணவை சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் தருண் அசைவம் சாப்பிட விரும்பினான். சிவாத்மாவுடன் அசைவம் சாப்பிடுவது அத்தனை சரியாக இருக்காது என்பதால் அவரிடம் சொல்லி விட்டு அகரமுதல்வன் பரிந்துரையின் பேரில் மன்னா மெஸ்ஸில் சாப்பிட்டோம். உணவு சுவையாக இருந்ததோடு பரிமாறிய பெண்களும் அத்தனை வாஞ்சையுடன் அருகிருந்து பார்த்துப்பார்த்து பரிமாறினார்கள். என்னவோ உறவினர்கள் வீட்டுக்கு போய்ச் சாப்பிட்டதுபோல் இருந்தது.
தருணை அங்கிருந்தே பெங்களூரு அனுப்பி விட்டு மறுநாள் காலை புறப்பட்டு 3 மணிக்கு வீடுவந்தேன். என்னமோ நானே மீண்டும் ஒரு பெரிய பட்டம் வாங்கினதுபோல பூரித்திருந்தேன்.
பிரமிளாவைத் தெரியும் தானே? 70- 80களில் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நாயகி, மகள், மருமகள், தங்கை வேடங்களில் நடித்து ஒரு அமெரிக்கரைக் காதல் திருமணம் செய்துகொண்டு கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகியவர்.
ஒருவேளை மறந்திருந்தாலும் இதைச்சொன்னால் நிச்சயம் தெரியும் தங்கப்பதக்கத்தில் ஓவராக உணர்ச்சிவசப்படும் சிவாஜியிடம்(அவர் எல்லாப்படங்களிலும் தான் ஓவர் இல்லையா) “… மாமா காஞ்சு போன நதியெல்லாம்…“ வசனம் பேசியவர். முகத்தில் பருக்கள் நிறைந்திருக்கும் அழகி. பிரமிளா என்னும் பெயரும் இப்போது அதிகம் புழக்கத்திலில்லை. எனக்குத்தெரிந்து பிசிக்ஸ் ஷண்முகப்பிரியாவின் மகள் பெயர் தான் பிரமிளா என் இத்தனை பெரிய உலகில். ஆச்சர்யம்தான்.
இன்று பிரமிளாவையும் அந்த வசனத்தையும் நினைத்துக்கொள்ள வேண்டி வந்தது. கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஆசிரியர்களுக்காக இந்தியன் ஓவெர்சீஸ் வங்கிக்கிளை ஒன்று இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு நான் இங்கு பணி புரிகையில் சம்பளம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொள்ளாச்சிக்கிளையில் சேர்ப்பிக்கப்படும். அப்போதெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லையே எனவே பஸ் ஸ்டேண்ட் தாண்டி நடையாய் நடந்து நேரில் சென்று தேவுடுகாத்து பணம் எடுப்போம்.
மெய்யாலுமே வங்கிப்பணியாளர் அவரது இருக்கைக்கு வர 11 மணி ஆகிவிடும், வந்து அமர்ந்து வரிசையில் நிற்பவர்களை அவர் ஏறிட்டுப்பார்க்க மேலும் ஒரு அரைமணிநேரமாகும் பின்னரே பரிவர்த்தனை நடக்கும். பிற்பாடு இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளை வளாகத்துக்குள்ளேயே வந்தது எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களைப்போலவே வங்கி அலுவலர்களும் நேரத்துக்கு வந்துவிடுவார்கள் சிறிய கிளை, சொற்பமான அலுவலர்கள் என்பதால் எங்களுடன் நட்புடன் இருப்பார்கள், துறைசார்ந்த விழாக்களுக்கு அவர்களை அழைப்பதும் அவர்கள் கலந்துகொள்வதுமாக ஒரு பெருங்குடும்பத்தின் அங்கத்தினர்களாக்த்தான் இருக்கிறோம்.
பிரமிளாவுக்கு வருகிறேன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கியிலிருந்து எனக்கு //நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்கான வட்டியை சரியான தேதியில் செலுத்துங்கள்// என என் வங்கிக்கணக்கு எண்ணைக்குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்துகொண்டிருந்தது. வங்கியில் கடனேதும் வாங்கியதில்லை எனவே நேரில் சென்று சொன்னபோது அது எதாவது கணினிப்பிழையாக இருக்கும் அல்லது கடன் வாங்கியவர் தவறுதலாக உங்கள் தொடர்பு எண்ணைக்கொடுத்திருப்பாராயிருக்கும், கவலைப்பட வேண்டாம் விட்டுவிடுங்கள் என்றர்கள்.
ஆனாலும் சில நேரங்களில் இந்தத்தேதியில் கட்டனும் இல்லையென்றால்நடவடிக்கை வரும் என்றெல்லாம் செய்திவருகையில் பதறி மீண்டும் வங்கிக்குச் செல்வேன் மீண்டும் திருப்பி அனுப்புவார்கள்.
இன்று காலை நீளமாக ஒரு செய்தி வந்திருந்தது -//வட்டியே மாதா மாதம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் நீங்கள் பலமுறை தகவலனுப்பியும் கட்டவில்லை, எனவே நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்// என்று. பதட்டமானேன் வட்டியே லட்சக்கணக்கில் என்றால் அசல் எத்தனை லட்சம் வாங்கி இருப்பார் அந்தப் பாழாய்போன என் தொடர்பு எண்ணை வங்கியில் கொடுத்த கடங்காரன்(!).
11 மணிக்கு வங்கிக்குப் போய் “… என்னங்க இது இப்படியெல்லாம் மெசேஜ் வருதே…“ என்றதும் நம்ம பிரமிளாவின் வசனம் போலவே அந்தப் பெண் அதிகாரி அவரது போனை எடுத்துக்காண்பித்து “…மேடம் என்னத்தை சொல்லறது ஒரு மாசமா எங்களுக்கும் இப்படி கடன் இருக்கு வட்டிகட்டனும்னு இஷ்டத்துக்கு மெசேஜ் வருது நீங்க அந்தச் செய்தியை எல்லாம் கண்டுக்காதீங்க எங்களுக்கே கடுப்பாத்தான் இருக்கு…“ என்றார்.
“….மாமா வங்கிகணக்கு வச்சிருக்கறவங்க எல்லாம் ஒரு பிரச்சனைன்னா வங்கி அதிகாரிகளைத்தான் போய்ப்பார்க்கிறோம், ஆனா அந்த அதிகாரிகளுக்கே இப்படி பிரச்சனை வந்தா யாரால எங்களுக்குஆறுதல் சொல்ல முடியும்?…“