வெகு உயரத்தில் இருந்து பார்க்கையில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தின் ஒரு பகுதி அடர்ந்த காடு போல தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் திம்மம்மா ஆலமரம் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் படர்ந்து வளர்ந்திருக்கும் மிகப்பெரிய ஒற்றை ஆலமரம்தான் அப்படி காடு போல் தோற்றமளிக்கிறது. இந்த மரத்தின் மேல் பரப்பு 19,107 m2 (4.721 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய ஒற்றை மர இலைப்பரப்பு .
“மரி என்பது ஆல் என்றும் மானு என்பது மரத்தையும் குறிப்பதால் ஆந்திர மக்களால் திம்மம்மா மாரிமானு என்றழைக்கப்படும் இப்பெருமரம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இம்மாபெரும் இலைப்பரப்பின்பொருட்டு 1989ல் இடம் பெற்றிருக்கிறது
இம்மரத்திற்கு சுமார் 550 வருடங்கள் வயதிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இம்மரம் காண்பதற்கு அளிக்கும் வியப்பைப்போலவே மரத்தின் பின்னிருக்கும் தொன்மமும் மிக ஆச்சர்ய மளிக்குமொன்றுதான்.
ஆந்திரமக்களின் வாய்வழிச் செய்திகளின்படி அந்த ஊரில் கி.பி. 1394 ல் வாழ்ந்து வந்த சென்னக்க வெங்கடப்பா, மங்கம்மா ஆகியோரின் மகள் திம்மம்மாவை பால வீரைய்யா என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். பாலவீரைய்யா 1434 ல் தொழுநோயால் இறந்தபோது அக்கால வழக்கப்படி கணவருடன் திம்மம்மாவும் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கணவனும் மனைவியும் இறந்த சிலநாட்களில் அந்த சிதைச் சாம்பலின் வடகிழக்கு பகுதியிலிருந்து ஒரு ஆலமரம் முளைத்ததாகவும் அதற்கு தெய்வீக சக்திகள் இருப்பதாகவும் அம்மக்களால் நம்பப்பட்டு அதுவே திம்மம்மா மரம் எனப்படுகின்றது
அங்கு திம்மம்மா தம்பதியினருக்கு ஒரு சிறு கோவிலும் மரத்தடியில் இருக்கிறது. மத வேறுபாடின்றி இங்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகிறார்கள்.
திம்மம்மாவை வேண்டிக்கொண்டால் நல்ல குடும்ப வாழ்வும் குழந்தைபேறும் கிடைக்குமென்னும் நம்பிக்கை இருப்பதால் புதுமணத் தம்பதியினரின் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. தாவரவியல் ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் இம் மரத்தை கண்டு மகிழ்கிறார்கள்
இந்த ஆலமரத்தின் அடியில் சிவராத்திரி நாளில் ஜத்ரா என்னும் விழா நடத்தப்படுகிறது. இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
இம்மரத்தில் இரவில் பறவைகள் தங்குவதில்லை என்றும் இம்மரத்திற்கருகில் இருக்கும் எந்த உயிரையும் தாங்கள் தீண்டுவதில்லை என்று நாகங்கள் சத்தியம் செய்திருப்பதாகவும் இம்மரம் குறித்த சில கதைகளும் அங்கு காலம்காலமாக உலவுகின்றன.
இந்த மரத்தை முதன் முதலில் கவனித்து, உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்மற்றும் ஒளிப்படக் கலைஞரான சத்யநாராயண ஐயர் என்பவர். இவரே பின்னர் கின்னஸ் உலக சாதனை பதிவில் இந்த மரத்தை பதிவு செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டார். 2017ல் கின்னஸ் புத்தகத்தின் இப்பதிவு திருத்தப்பட்ட மரத்தின் அளவுகளுடன் மேம்படுத்தப் பட்டிருக்கிறது.
உலகின் மாபெரும் மரங்களில் இந்தியாவில் இருக்கும் 7 மரங்களில் திம்மம்மா ஆலும் ஒன்று . 4000த்திற்கும் அதிகமான விழுதுகள் மண்ணில் இறங்கி இம்மரத்தை மாபெரும் பசும்குவையாக்கி விட்டிருக்கின்றன. சுமார் 20 ஆயிரம் மக்கள் இதன் நிழலில் ஒரே சமயத்தில் இளைப்பாற முடியும் என்னும் அளவிற்கு இம்மரம் பரந்துவளர்ந்திருக்கிறது. இந்தனை நூற்றண்டுகளில் பல இயற்கைசீரழிவுகளை சந்தித்திருந்தும் இம்மரம் சேதமின்றி கம்பீரமாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது.
பொதுவில் ஆலமரம் நீளாயுள் மற்றும் வளர்ச்சியின் குறியீடாக இந்தியாவில் கருதப்படுகின்றது. இந்துமதத்தின் பல புண்ணிய மரங்களைப்போலவே மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மரமும் வழிபடப்படுகிறது எனினும் இப்போது இந்த மரம் மிகப்பிரபலம் ஆகிவிட்டிருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் அங்கு வருவதால் இம்மரத்தின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிட்டிருக்கிறது. பக்தியின் பேரில் இம்மரத்தில் ஆணி அடித்து தொட்டில்கட்டுவதும் பலவண்ண துணிகளை கட்டி விடுவதுமாக அன்றாடம் நூற்றுக்கணக்கில் வழிபாடுகள் நடக்கின்றன. காலப்போக்கில் இவ்வழக்கங்கள் மரத்திற்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடும்.
கிராம வன அலுவலர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு இம்மரத்தின் வேர்களை பாதுகாக்க மூங்கில் கழிகளை நட்டுவைத்தும், மக்கள் கூட்டத்தை ஒழுங்கு செய்து வழிபடும் பாதை அமைத்தும் இம்மரத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கிறார்கள். சமீபத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து இம்மரத்துக்கு கிடைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன அவ்வாறு அளிக்கப்பட்டால் இம்மரத்தை அழிவிலிருந்தும் இதுபோன்ற பாதுகாப்பின்மைகளிலிருந்தும் நிச்சயம் காப்பாற்ற முடியும்.
திம்மம்மா மரம் பிபிசியின் ‘தி ட்ரீ ஸ்பிரிட்ஸ்’ (29 ஆகஸ்ட் 2017) தொடரின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
2015 ஏப்ரல் 16 அன்று ஜப்பானில் வெளியான அந்த ஆவணப்படம் பிற ஆவணப்படங்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது. மிக அழகிய கேமரா கோணங்கள், ஒளியின் ஜாலங்கள், மெல்லிய உறுத்தாத இசை, எல்லாவற்றையும் விட , ஒரு தேசத்தின் கலாசாரத்துடன் ஒன்றிணைந்து விட்ட 2000 வருட பழமையான ஒன்றைக்குறித்தான அதன் பேசுபொருள், அதுதான் அந்த ஆவணப்படத்தை வித்தியாசப்படுத்தியது. The birth of sake, ‘ஸாகேவின் பிறப்பு’ என்னும் 94 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த ஆவணப்படம் பிரபல புகைப்பட நிபுணரும், திரைப்பட இயக்குநருமான எரிக் ஷிரோயினால் உருவாக்கப்பட்டு அவருக்கு சிறந்த இயக்குனர் விருதை பெற்றுத்தந்து, மிகச்ச்கிறந்த ஆவணப்படத்திற்கான விருதையும் பெற்றது
துவக்கக் காட்சியில் வடக்கு ஜப்பானில் இசிகாவா பிரதேசத்தில் கடலை பார்த்தபடி அமைந்திருக்கும் வடிசாலைக்கு கடும் பனிக்காலமொன்றில் குளிருக்கு உடலைக்குறுக்கியபடி வரிசையில் செல்கிறார்கள் சீருடைப் பணியாளர்கள்.
2000 வருடங்களாக ஜப்பானியர்களின் குருதியில் கலந்துள்ள அரிசி மதுவான ஸாகேவை 144 வருடங்களாக பாரம்பரிய முறையில் தயாரிக்கும் அந்த யோஷிடா ஷுஜொ (Yoshida Shuzo) வடிசாலையின் முகப்பில் செடார் தளிரிலைகளல் உருவாக்கிய பச்சைப் பந்து ஒன்று கயிற்றில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கிறது.
மூட்டைகளிருந்து பிரித்து கொட்டப்பட்டு, ஊற வைக்கப்படும் அரிசி, பெரிய கொள்கலன்களில் நீராவியில் வேகவைக்கப்படுகின்றது வேகும் அரிசியின் மணத்தை கவனமாக அதே வடிசாலையில் 60 வருடங்களாக பணியாற்றும் முதியவர் தன் முகத்தை அந்த நீராவிப்புகை எழும்பும் கலனுக்கு வெகு அருகில் வைத்துக்கொண்டு கவனித்துக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் நீரவியின் அளவை சிறிது அதிகரிக்கச்சொல்லி உத்தரவிடுகிறார்.
பணியாளர்களின் முகபாவனைகள், வயதான டோஜி எனப்படும் ஸாகே உற்பத்தியில் வல்லுநராக இருப்பவரின் (Tōji) சுருக்கங்கள் நிறைந்த முகத்தின் தீவிரம், அரிசித்தாளங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் அரிசியை கையில் அள்ளி முகத்தோடு வைத்து அழுத்தி அதன் மணத்தை நுகர்ந்து வாயிலிட்டு மென்று அதன் சுவையை முதியவர் ஒருவர் அறிவது போன்ற மிக நுட்பமான பல காட்சிகளும் இதிலுண்டு.
குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்கும் ஒரு அறையில் பணியாற்றுபவர்களின் முகத்தில் பூக்கும் வியர்வைத் துளிகள், நீரவிப்புகையின் பின்புலத்தில் தெரியும் பணியாளர்கள், உணவு இடைவேளையில் பாரம்பரிய முறையில் மூத்தோருக்கான மரியாதையுடன் பணியாளர்கள் உணவருந்துவது, பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் துணிப்பொதியிலிருந்து மெல்லிய புகைப்படலம்போல தூவப்படுவது, இவற்றோடு இடையிடையே உலர்ந்து கொண்டே வரும் பச்சை செடார் இலைப்பந்தின்மீது மெளனமாய் பனி பெய்துகொண்டே இருப்பதுவமாக கவிதைக்காட்சிகள் இதில் பெரும்பாலானவை. ஸாகே உற்பத்தி மட்டுமல்ல ஜப்பானிய கலாச்சாரத்தையும் இந்த ஆவணப்படம் கூடவே காட்டுகிறது.
ஸாகே உருவான பின்னர் பணியாளர்கள் அங்கிருக்கும் கடவுள் படங்களுக்கு முன்னர் பாரம்பரிய முறையில் வணங்கி நன்றி தெரிவித்து வழிபடுவதுடன் முடிகிறது இந்த ஆவணப்படம்.
கடவுளின் பரிசாக நெல் கருதப்படுவதால் அரிசி உணவு ஜப்பானியர்களின் பிரியத்துக்குரிய பிரதான உணவு. அரிசியிலிருந்து. உருவாகும் மதுவான ஸாகேவும் அப்படியே ஜப்பானியர்களின் தனித்த பிரியத்துகுரியதொன்று.
ஸாகே மூன்று விதங்களில் அங்கு முக்கியத்துவம் பெறுகிறது முதலாவதாக கடவுள்களுக்கு படைக்கப்படும் உணவுகளில் ஸாகே முதன்மையான உன்னதமான ஒன்று. எப்போது அருந்தினாலும் ஸாகேவை முதலில் கடவுளர்க்கு படைத்தபின்னரே அருந்துவார்கள், இரண்டாவது இது பிற மது வகைகளை போலவே மன மகிழ்ச்சியளிக்கும் பானம், மூன்றாவதாக மருத்துவ உபயோகங்களுக்காகவும் ஸாகே அதிகம் விரும்பப்படுகிறது. ஜப்பனிய மது என்று பொருள் படும் ஸாகே (sake) ஜப்பானிய மொழியில் செய்ஷு (seishu) எனப்படுகிறது
ஜப்பனிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணை விழுங்க வரும், எட்டாவது வருடம் அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர் அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில் கடும் ஸாகே மதுவை நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம் கொண்டிருந்த மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள் நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று
யுவர் நேம் என்கிற ஜப்பானிய பிரபல அனிமே சித்திரப் படத்தில் (your name- kimi – no nava) ஒரு காட்சியில் முக்கிய நாயகியான மிட்ஸுஹா மியாமிஜூயும் அவளது தங்கையும் அவர்களின் குலவழக்கப்படி தொன்மையான சடங்கு ஒன்றில் ஈடுபட்டிருக்கும் காட்சி இருக்கும். அக்குலத்தில் பெண்களே சடங்குகளை செய்யும் உரிமைகொண்டவர்கள்.
பாரம்பரிய உடையில் தொல்குடிப் பாடலை மென்மையாக பாடியபடி கையில் வைத்திருக்கும் ஒரு சிறு மணியை இசைத்துக்கொண்டு சுழன்று சுழன்று ஆடிமுடிக்கும் இருவரும், அங்கிருக்கும் சிறு துணிப்பொதியை மெல்ல அவிழ்க்கிறார்கள். அதனுள் இருக்கும் வெண்ணிற குழைந்த அரிசிசோற்றை மந்திரங்களை முணுமுணுத்தபடி வாயிலிட்டு மென்று, கைகளில் வைத்திருக்கும் சிறு மரப்பெட்டியில் வாயை துணியால் மறைத்தபடி உமிழ்கிறார்கள். பெட்டியை மூடி வண்ணத் துணிகளால் கட்டி அதை ஸாகே வடிசாலைக்கு அனுப்புகிறார்கள்.
2000 வருடங்களுக்கு முன்பு இந்த அரிசி மது, வாயிலிட்டு மென்று உருவாக்கிய ஸாகே என்று பொருள்படும் ’குச்சிகாமி ஜாகே’ (kuchikami-zake) என்னும் பெயரில் இப்படித்தான் தொல்குடியினரின் எச்சில் கலந்த சோற்றிலிருக்கும் நுண்ணுயிரிகளாலும் நொதிகளாலும் உருவாக்கப்பட்டது.
பூஞ்சைக்காளானாகிய கோஜி கண்டுபிடித்த பின்னர் இந்த வழக்கம் மறைந்து போய்விட்டதென்றாலும் இதை ஒரு சடங்காக இன்னும் தொடரும் பழங்குடிகளும் இருக்கிறர்கள். இம்மதுவைக் குறித்த வரலாற்று ஆவணங்கள் கிடைத்திருக்கும் காலத்துக்கு முன்பே ஸாகே உருவாகி புழக்கத்திலும் இருந்தாலும், துல்லியமாக இம்மதுவகை எப்போது எங்கே யாரால் உருவக்கப்பட்டது என்றறிய முடியவில்லை. எனினும் கிமு 500ல் சீனாவில் தோன்றி 700களில் ஜப்பனுக்கு வந்திருக்கலம் என்று பொதுவாக வரலாற்றாய்வாளர்களால் நம்பப்படுகிறது,
வரலாறு
பண்டைய ஜப்பானிய விருந்துகளை குறித்து விரிவாக சொல்லும் 551 – 554 ல் தொகுக்கப்பட்ட நூலான Wei Shu வில் தான் முதன்முதலாக விருந்துகளில் வழங்கப்பட்ட மதுவகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
712, ல் தொகுக்கப்பட்டு வெளியான ஜப்பானிய வரலாறு, தொன்மங்கள், ஆளுமைகள், அரசர்களின் கொடி வழிகள் கடவுள்கள், வாய்வழியாக கடத்தப்பட்ட மரபுகள் மற்றும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை மிக விரிவாக சொல்லும் ஜப்பானிய நூலான கொஜிகி’யில் (Kojiki) ஜப்பானிய மதுவகைகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.ஸாகே வகை அரிசி மதுவின் பிறப்பு குறித்த துல்லியமான விவரங்கள் இதிலும் இல்லையெனினும், அரிசி, நீர், ஈஸ்ட் மற்றும் கோஜி எனப்படும் அஸ்பர்ஜில்லஸ் ஒரைஸே என்னும் பூஞ்சை வகையும் கொண்டு தயாரிக்கப்படும் ஸாகே, நரா வம்ச ஆட்சியின் போது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஜப்பானில் நம்பப்படுகிறது.(Nara period – 710–794).
மடங்களிலும் அரண்மனைக் கோவில்களிலும் சடங்குகளின் போது அருந்தவென ஸாகே தயாரிக்கப்படத்துவங்கிய 10 ம் நூற்றாண்டு வரை இந்த மது ஜப்பானிய அரசால் மட்டுமே தயாரிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்த 500 வருடங்களில்தான் மெல்ல மெல்ல இன்றைய தெளிந்த நீர் போன்ற வடிவத்துக்கு இது வந்து சேர்ந்திருக்கிறது. பண்டைய ஜப்பானிய ஸாகே குறைந்த ஆல்கஹால் அளவுடன் அடர்த்தியான மஞ்சள் நிற திரவமாக இருந்தது
காய்ச்சி வடிகட்டும் தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வந்த 16ம் நூற்றாண்டில் ஜப்பானின் ரூகியூ (Ryukyu) பிரதேசத்தில் வடித்தெடுக்கபட்ட சோச்சு (shōchū ) எனப்பட்ட எரிசாராய வகைகளான கோமே அரிசி மது, முகி பார்லி மது, சட்ஸுமாஇமோ சர்க்கரவள்ளி கிழங்கு மது, சோபா கோதுமை மது மற்றும் கொகுட்டொ எனப்படும் கரும்பு சர்க்கரை மது ஆகியவை காய்ச்சி வடிகட்டி உருவாக்கப்பட்டன. (kome, mugi, satsuma-imo,soba, kokutō),
அப்போது எள், உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டிலிருந்தும் கூட மதுவகைகள் அங்கு உருவாக்கப்பட்டன. இவற்றின் சராசரி ஆல்கஹால் அளவு 25 சதவீதம் இருந்தது. 17 லிருந்து 19 ம் நூற்றாண்டு வரை ஜப்பானின் பிரதான தொழி்ல்களில் ஒன்றாக ஸாகே உற்பத்தி இருந்தது. ஸாகே ஜப்பானின் தேசிய பானமும் கூட.
ஸாகே மதுவகைகள் புழக்கத்தில் வந்து பிரபலமான போது வசதி இருந்த அனைவருமே தங்களுக்கென சொந்த வடிசாலையை உருவாக்கி கொண்டனர். அப்போது சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வடிசாலைகள் அப்பகுதியில் மட்டும் செயல்பட்டன. தாமதமான விழித்துக்கொண்ட அரசு தனியார் வடிசாலைகளுக்கு வரி விதித்த பின்னர் அவற்றின் எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்தது.
மெல்ல மெல்ல பிற வகைகளின் தயாரிப்பும் அவற்றின் மீதான விருப்பமும் குறைந்து அரிசி மதுவே ஜப்பானின் பிரியத்துக்குரியதானது. 20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸாகே பாரம்பரிய தயாரிப்பு முறைகளிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருந்தது. குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டும் பலநூறு வருடங்கள் தொன்மையான முறையில்தை உருவாக்கினர் என்றாலும் ஸாகே நவீன வடிசாலைகளில்தான் பிரதானமாக தயாரானது.
அரிசி பற்றாக்குறை நிலவிய முதல் உலகப்போரின் போது ஸாகே உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. போருக்கு பின்னர் மீண்டும் புத்துயிர் பெற்ற ஸாகேவுடன் பிற மது வகைகளான பியர் வைன் போன்றவைகளும் பிரபலமாக இருந்தது. முதலும் கடைசியுமாக 1960ல் ஸாகேவை காட்டிலும் அதிகமாக பியர் அருந்தப் பட்டது. அதன் பின்னர் எப்போதும் முதலிடத்தில் ஸாகேதான் இருக்கிறது. ஜப்பானில் இப்போது சுமார் 20000 ஸாகே வடிசாலைகள் இருக்கின்றன. வீடுகளில் சிறிய அளவில் ஸாகே தயாரிப்பதை ஜப்பானிய அரசு 1904–1905ல் தடைசெய்தது. அந்த தடை இன்றும் நீடிக்கிறது.
இடுபொருட்கள்
ஸாகே தயாரிப்பில் மிக முக்கியமான நான்கு இடுபொருட்கள்:
புரதம் குறைவான அரிசி,
குறிப்பிட்ட சத்துக்கள் கொண்டுள்ள சுவையான நீர்
அஸ்பெர்ஜில்லஸ் ஒரைஸே எனப்படும் கோஜி பூஞ்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்ட்.
இந்த நான்குமே மிகத் தரமானதாக இருப்பது அவசியம்
அரிசி ரகங்கள்
உலக மக்கள் தொகையில் சரிபாதியினரின் உணவுத்தேவையை நிறைவேற்றும் ஆசிய அரிசியான ஒரைஸா சட்டைவாவின் ஏராளமான வகைகளில் முதன்மையானவை இந்தியாவின் Oryza sativa subsp.indica மற்றும் ஜப்பானில் உபயோகப்படுத்தப்படும் இருவகைகளான Oryza sativa subsp. japonica மற்றும் Oryza sativa subsp.javanica ஆகிய மூன்று.
இந்திய வகை அரிசி மணி நீளமாக அமைலோஸ் என்னும் மாவுச்சத்துடன் பசைத்தன்மை குறைவாகவும், ஜப்பானிய வகை குட்டையாக அதிக பசைத்தன்மைடனும் இருக்கும். சாப்ஸ்டிக்குகள் எனப்படும் உணவுக்குச்சிகளில் எடுத்து சாப்பிட அமைலோ பெக்டின் எனப்படும் மாவுச்சத்து அதிகம் இருக்கும், பசையுள்ள அரிசி வகைகளே ஜப்பானிய உணவுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவை. ஜவானிக்கா வகை ஜப்பானின் வறண்ட நிலப்பகுதிகளில் மட்டும் பயிராகிறது.
ஜப்பானிய அரிசி வகை சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய சீனாவின் யாங்ஸி ஆற்றுபடுகையில் பயிராகியது. அங்கிருந்து ஜப்பானுக்கு அறிமுகமான இந்த வகை அரிசி இன்று வரை ஜப்பானின் முதன்மை உணவுப்பயிராக இருந்து வருகிறது. அரிசி ஜப்பானுக்கு அறிமுகமானபோதிலிருந்தே அரிசி மதுவும் தோன்றியிருக்கக் கூடும்
1951லிருந்து உணவுத் தேவைக்கான ஷின்பாகுமாய் (shinpakumai) அரிசியிலிருந்து வேறுபட்ட, ஸாகே தயாரிப்பிற்கு உதவும் பிரத்தியேக அரிசி வகைகள் பயிராக்கப்பட்டன இந்த அரிசி வகை ’’ஸாகே மது உருவாக்க பயன்படும்’’ என்று பொருள் படும் ’’shuzo kotekimai’’ என்றழைக்கப்பட்டன. jozoyo genmai என்னும்’’ பட்டை தீட்டப்படாதா ஸாகே விற்கான வகை’’ என்றும் இவற்றிற்கு பெயருண்டு.
1998 ல் ஜப்பானிய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் “Hatsushizuku” என்னும் புதிய மேம்படுத்தப்பட்ட ஸாகே மதுவுக்கான அரிசி வகை ஒன்றை உருவாக்கியது இவற்றின் மூன்று முக்கிய ரகங்கள் ஜின்பு, சுய்செய் மற்றும் கிடாஷிஜுகு ஆகியவை (Ginpu, Suisei & Kitashizuku). 90 வகையான ஸாகே அரிசி ரகங்கள் ஜப்பானில் மட்டும் சாகுபடியாகிறது.
அரிசியில் எவ்வளவு குறைவாக புரதம் இருக்கிறதோ அத்தனை அதிக தரத்துடன் ஸாகே கிடைக்கும் என்பதால் அரிசி ரகங்கள் ஸாகேவிற்கென உருவாக்கப்படுகையில் புரத அளவும் மிக முக்கியமாக கவனிக்கப்படும்
அரிசியின் கண் எனப்படும் மத்தியில் இருக்கும் ஷின்பாகு (shinpaku) வெள்ளை திட்டு இந்த வகை அரிசிகளில் பெரியதாக இருக்கும். ஸாகே வுக்கான அரிசியை தேர்ந்தெடுக்கையில் இந்த வெள்ளைத்திட்டின் அளவு சதவீதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கப்படும்.
வடிசாலைகளில் மாவுச்சத்து நிரம்பிய இந்த வெள்ளைத்திட்டை செல்லமாக கண்மணி என்னும் பொருளில் மென்டாமா (mentama) என்பார்கள். கோஜி பூஞ்சைகள் இந்த கண்மணியின் வழியாக எளிதில் அரிசியை ஊடுருவும் என்பதால் ஸாகே அரிசி வகைகளில் இது மிக இன்றியமையாததாக கருதப்படுகிறது
அதிக வெள்ளைத்திட்டு, கூடுதல் பசைத்தன்மை, குறைந்த புரதம் ஆகியவை மதுவிற்கான அரிசியின் விரும்பத்தக்க இயல்புகளாக கருதப்படுகின்றன
அரிசியின் அளவில் ஏறக்குறைய பாதி அளவுக்கு வெள்ளை திட்டுக்கள் கொண்ட Yamada nishiki என்னும் ரகமே ஸாகே மதுவுக்கான உயர் ரகமாக ஜப்பானில் கருதப்படுகிறது.
ஸாகே உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அரிசியின் எடைக்கு விலையென்றில்லாமல் குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்புக்கு குத்தகையைப்போல விலை பேசிக்கொள்கிறார்கள். எனவே இயற்கை சீற்றங்களினால் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு நஷ்டம் உண்டாவதில்லை. அனைத்து ஜப்பாய விவசாயிகளும் ஸாகே மதுச்சாலைகளுக்கு அரிசியை கொடுப்பதை பெரும் கெளரவமாக கருதி விளைச்சலை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றனர்.
அரிசியின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை மற்றும் அரிசியின் வெளிப்புறம் கடினமாகவும் உட்புறம் மிருதுவாகவும் இருப்பதும் மது தயாரிப்பில் மிக முக்கியம் .
நீர்
ஜப்பானின் ஏழு பெரிய நகரங்களிலொன்றான கோபெ’யின் கிரானைட் படுகைகள் வழியே பாயும் ஆற்று நீர்தான் ஸாகே உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாகவும் இரும்புச்சத்து குறைவாகவும் உள்ள இந்த ஆற்று நீரில் ஸாகே தயாரிப்பின் உபயோகம். 1830-44 ல் கண்டறியப்பட்டது. ஃபுஷிமி பகுதியில் (Fushimi) மட்டும் கிடைக்கும் தூய மிகச்சுவையான இயற்கை ஊற்று நீரும் பயன்படுகிறது.
கோஜி பூஞ்சை
ஸாகே உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் அஸ்பெர்ஜில்லஸ் ஒரைஸே என்னும் கோஜி பூஞ்சை ஜப்பானின் தேசிய பூஞ்சை என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறது
சோயா சாஸ், மிஸோ மற்றும் வினிகர் தயாரிப்பிலும் பங்காற்றும் இந்த பூஞ்சை நொதித்தலில் ஈஸ்டுகள் பயன்பாட்டுக்கு முன்னர் 1333- 1573 ல் முராமாச்சி காலத்திலிருந்தே சந்தைப்படுத்த பட்டிருந்தது. ஈஸ்டு்களால் அரிசியின் சர்க்கரை சத்துகளை நேரடியாக ஆல்கஹாலாக மாற்ற முடியாது அதன்பொருட்டு ஈஸ்டுகளுக்கு தேவைப்படும் என்ஸைம்களை கோஜி பூஞ்சை அளிக்கிறது இவ்விரண்டு பூஞ்சைகளின் புரிதலில் ஸாகே மது உருவாகிறது.
ஈஸ்டு
ஈஸ்டுகளின் 30 க்கும் மேற்பட்ட பல வகைகள் ஸாகே தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றன. 1893 ல் கிகுஜி யபே என்னும் ஸய்மாலஜிஸ்ட் (நொதித்தலில் ஈஸ்டுகளின் பங்கைக்குறித்த சிறப்பு துறையான ஸய்மாலஜியில் வல்லுநர்-zymology) பிரித்தெடுத்த ஈஸ்ட் வகை 1895 லிருந்து அவரது பெயராலேயே Saccharomyces sake Yabe என வழங்கப்பட்டது . இந்த வகை ஈஸ்டுகளும் பரவலாக ஸாகே தயாரிப்பில் பங்களிக்கிறது .
தயாரிப்பு
புத்தம் புதிதாக வேகவைக்கப்பட்ட மதுவிற்கான பிரெத்யேக அரிசியின் மாவுச்சத்து சர்க்கரையாக நொதித்து பின்னர் ஆல்கஹாலாக மாறி ஸாகே உருவாகிறது
தேர்ந்தெடுக்கப்பட்ட அரிசி உமி தவிடு நீக்கி சுத்தமாக்கப்பட்டு நீரில் ஊற வைக்கப்படுகிறது. ஊற வைத்த அரிசி (உணவுகான அரிசியைப்போல நீரில் வேகவைக்கப்படாமல்) நீராவில் வேக வைக்கப்படுகிறது. நீராவியில் வேகவைத்த அரிசியின் மேற்புறம் கடினமாகவும் உட்பகுதி மென்மையாகவும் இருக்கும். அந்தப் பதமுள்ள அரிசியிலிருதே நல்ல தரமான ஸாகே உருவாக்கப்படும்
வேகவைக்கப்பட்ட குழைந்த அரிசி நன்கு பரத்தப்பட்டு கைகளால் பிசைந்தும் உதிர்த்தும் கட்டிகளின்றி சீராக்கப்பட்டு பின்னர் குளிர்ந்த காற்றில் உலர செய்யப்படுகிறது
பின்னர் இவை கோஜி எனப்படும் அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் ஸ்போர்கள் தூவப்படும் அறைக்கு கொண்டு செல்லப்படும். சுமார் 48 மணி நேரம் எடுக்கும் இந்த ஸ்போர் தெளித்தல் , கிருமிகளை அழிக்கும் இயற்கை பிசின் கொண்டிருக்கும் செடார் மரப்பலகைகளால் ஆன கோஜி முரோ என்னும் (koji muro) அறையில் நடைபெறும். இவ்வறையின் வெப்பம் எப்பொதும் கோஜிக்கு தேவையான் 30 -32 டிகிரியில் இருக்கும் இந்த அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சைதான் வேகவைத்த அரிசியின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றி ஸாகே திரவத்திற்கு பனிவெண்மையை அளித்து இனிப்பு சுவையும் நறுமணத்தையும் அளிக்கிறது.
குளிர்ந்த ஊற்று நீரில் பிசையப்பட்ட கோஜி ஸ்போர்கள் கலந்த அரிசி டொகோ எனப்படும் நீண்ட மேசைகளில் விரிக்கப்பட்டிருக்கும் துணியில் கொட்டப்பட்டு குளிரவைக்க படுகின்றது. பின்னர் இக்கலவை ஈஸ்டுடன் கலக்கப்பட்டு பெரும் கொள்கலன்களில் கொட்டப்படும். மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த நொதித்தலின் போது மூன்று முறை இந்த கலங்கள் நிறைக்கப்பட்டு வேறு கலன்களுக்கு மாற்றப்படும். 21 நாட்கள் மூன்று கட்டங்களாக நடைபெறும் நொதித்தலின் போது அரிசியின் சர்க்கரைச்சத்தை ஆல்கஹாலாக ஈஸ்டுகள் மாற்றுகின்றன இப்போது கிடைக்கும் கலங்கலான மரொமி (moromi) என்னும் திரவம் பெரும் மரத்துடுப்புக்களால் அடிக்கடி கிளறிவிடப்படும். ஒவ்வொருநாளின் இறுதியிலும் இத்திரவத்தின் அமில மற்றும் ஆல்கஹால் அளவுகள் கணக்கிடப்படும்
தேர்ந்த ஸாகே வல்லுநர்களால் கவனமாக கண்காணிக்கப்படும் இந்த மரொமி முதிர்ந்தவுடன் துணிப்பைகளில் சேகரிக்கப்பட்டு மரக்கட்டைகளால் அழுத்தி முதல் கட்ட ஸாகேவான “arabashiri.” பிரித்தெடுக்கபடுகிறது. நவீன வடிசாலைகளில் யபுட்டா (yabuta0 எனப்படும் இயந்திரங்கள் கொண்டும் இது அழுத்தப்படுகிறது
Hiire எனப்படும் வெப்பமூட்டுதல் முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட இறுதி ஸாகே கோ(go) எனப்படும் தொல் அளவை முறையில் அளக்கப்பட்டு கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்படுகிறது. (6 அவுன்சுகள் ஒரு கோ)
1, 2, 4 அல்லது 10 கோ அளவுகள் கொண்ட ஸாகே மது பாட்டில்களில் அடைக்கப்படுகிறது. (180 mL (1 go), 360 ml (2 go), 720 mL (4 go), 1800 mL (10 go,)
ஸாகே உருவாக்கம் மொத்தம் 45 லிருந்து 60 நாட்களுக்கும் முடிந்துவிடும். உருவானதிலிருந்து 1 வருடத்திற்குள் ஸாகே அருந்தப்படவேண்டும் பிற மதுவகைகளைப்போல பழமையாக்குதல் ஸாகேவின் தரத்தை உயர்த்துவதில்லை. ஸாகே’யின் ஆல்கஹால்அளவு 15 லிருந்து 20 சதவீதம் இருக்கும். தோராயமாக 800 கிராம் அரிசியிலிருந்து 720 மி லி ஸாகே கிடைக்கிறது.
ஸாகே தயாரிப்பு துவங்குகையில் செடார் மரங்களின் இளம் இலைகளை கொண்டு sugidama எனப்படும் ஒரு பந்து உருவாக்கப்பட்டு வடிசாலைகளின் முகப்பில் தொங்கவிடப்படுகிறது. ஸாகே உருவாகி முடியும்போது செடார் இலைப்பந்து உலர்ந்து வடிசாலை வழியே செல்வோருக்கு ஸாகே தயாராகி விட்டது என்பதை அறிவித்துவிடும்.
ஸாகே மதுபானம் மட்டுமல்லாது பாரம்பரிய ஜப்பனிய சமையலிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. நொதிக்க வைத்த அவரை விதை விழுது, (miso) சோயா சாஸ் மற்றும் கடற்பாசி மீன் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் ஜப்பனிய டாஷி (dashi) ஆகியவற்றுடன் நான்காவதாக ஸாகே ஜப்பனியர்களின் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கியமானது. ஸாகே அசைவ உணவுகளின் இறைச்சி நெடியை வெகுவாக குறைந்து விடுவதால் அதிகம் அசைவ உணவுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
வகைகள்
ஸாகேவின் இரு முக்கிய வகைகளில் ஒன்றான Jozo-shu வில் நொதித்தலுக்கு பிறகும் கூடுதலாக ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும். மற்றொரு வகையான junmai-shu வில் நொதித்தலின் போது உருவாகும் ஆல்கஹால் மட்டுமே இருக்கும்.
Kijo shu எனப்படும் ஸாகே பெண்களுக்கான பிரத்யேக வகை. சாதாரணமாக ஸாகே தயாரிப்பில் 100 கிலோ அரிசிக்கு 130 லிட்டர் நீர் தேவைப் படும் கிஜோ ஷூ தயாரிக்கு 100 கிலோ அரிசிக்கு 60 லிட்டர் நீர் மட்டுமே உபயோகப்படுத்தபடுகிறது
கிகிசோக்கொ (Kikichoko) எனப்படும் அடிப்புறத்தில் இரு நீல வளையங்கள் கொண்டிருக்க்கும் பீங்கான் கோப்பையில் தான் ஸாகே வல்லுநர்கள் மதுவின் தரத்தை நிர்ணயிப்பார்கள்.
அருந்தும் முறை
டோக்குரி என்னும் கழுத்து நீண்ட கண்ணாடிக் குடுவையில் ஸாகே நிரப்பப்பட்டிருக்கும் அதனுள்ளே அமிழ்ந்திருக்கும் சின்னஞ்சிறு சாடியில் நிறைந்திருக்கும் ஐஸ் துண்டங்கள் ஸாகேவை குளிர்விக்கும்.
ஜப்பனிய சைப்ரஸ் மரங்களிலிருந்து செய்யப்படும் சிறு சதுர மரப்பெட்டியான மாஸு (Masu) ஸாகே தயாரிக்கையில் அரிசியை அளக்க பயன்படுத்தபடுவது. ஜப்பானிய பழங்குடியினர் அந்த பெட்டியின் ஓரத்தில் சிறிது உப்பை தடவி அதில் ஸாகே ஊற்றி அருந்துவார்கள். அதிமுக்கியமான விருந்தினர்களுக்கு ஸாகே பரிமாறுகையில் கோப்பையை மரப்பெட்டியில் வைத்து அதில் நிரம்பி வழியும்படி ஸாகே ஊற்றுவதும் மரபு. மாஸு ஒரு சம்பிரதாயத்துக்காக ஸாகே பரிமாறப் படுகையில் மேசையில் வைக்கப்படுவதும் உண்டு
அருந்து முன்பு ஸாகே டோக்கிரி (tokkuri) என்னும் பீங்கான பானைகளில் சூடாக்கப்பட்டு வெதுவெதுப்பாகவும் அருந்தப்படும் ஸாகேவிற்கென கன்ஜாகே (kanzake) என்னும் பிரத்யேக பெயருமுண்டு. 108 லிருந்து 122 டிகிரி வரை மட்டுமே சூடாக்காப்படும் ஸாகேவின் ஆல்கஹால் விரைவில் ரத்தத்தில் கலந்துவிடும் மேலும் மனம் மயக்கும் அரிசியின் நறுமணமும் கொண்டிருக்கும். ஸாகேவிற்கான ஒசொகோ கிண்ணங்கள் ஜோடியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது
பிற பெயர்கள்
மனைவியே அன்னையாகவும் காதலியாகவும் களித்தோழியாகவும் இருப்பதைபோல் ஸாகே ஒவ்வொரு தருணங்களிலும் சிறப்பான பெயர்களை கொண்டிருக்கும்
ஹனமி மலர் கொண்டாட்டங்களின் போது சகுரா மரங்களினடியில் அருந்துகையில் இதன் பெயர் ஹனமி ஜாகே ( Hanami Zake)
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உறவு நிலைப்படுதற்கான உறுதிமொழிகளுடன் ஸாகே மதுக்கோப்பைகளை கை மாற்றிக்கொண்டு அருந்துகையில் இதன் பெயர் டோஸோ (Toso)
இலையுதிர்கால முழுநிலவு நாளில் அருந்துகையில் இது ஸுகிமி ஜாகேT(sukimi Zake)
பொழியும் பனியை ரசித்துக்கொண்டே வீட்டுக்குள் இருந்து அருந்துகையில் இது யுகிமி ஜாகே (Yukimi Zake)
ஸாகேவில் மூலிகைகள் கலந்து புத்தாண்டில் அனைவரும் உடல்நலனுடன் இருக்க அருந்துகையில் அது ஓ டோஸோ (o-toso)
மெக்ஸிகோவில் மட்டுமே டெக்கீலா தயாரிக்கப்படும் என்பது போன்ற விதிகள் எல்லாம் ஸாகே’விற்கில்லை உலகின் பல பாகங்களிலும் ஸாகே தயாரிக்கப்படுகின்றது.
நூதன முயற்சிகள்
ஃபுகுஷிமா பகுதியை சேர்ந்த ஸாகே தயாரிப்பாளர் ஒருவர் தனது வடிசாலையில் மொசார்ட்டின் இசைக்கோவையை ஒரு குறிப்பிட்ட ஒலி அளவில் எப்போதும் ஒலிக்கச் செய்கிறார். நொதித்தலில் ஈடுபட்டிருக்கும் ஈஸ்டுகள் இந்த இசையினால் தூண்டப்பட்டு குறைந்த கசப்புச்சுவையும் நல்ல தரமும் கொண்ட ஸாகேவை உருவாக்குகிறதென்று நம்பும் அவரின் இந்த நூதன முயற்சியும், இசையறிந்த ஈஸ்ட்டுகளால் உருவாகும் ஸாகேவும் ஜப்பானெங்கும் புகழ்பெற்றிருக்கிறது
கியோட்டொவின் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸாகே உற்பத்தியாளர் ஒருவர் பொதுவாக நொதித்தலில் உபயோகப்படும் ஈஸ்டுகளை தவிர்த்துவிட்டு அடுக்கு செர்ரி மலர்களின் இதழ்களில் இருந்து தானே கண்டறிந்த ஈஸ்டுகளை மட்டும் பயன்படுத்தி ஸாகே தயாரிக்கிறார் செர்ரி மலர்கள் மட்டுமல்லாது ரோடோடென்ரான் மற்றும் பெகொனியா மலர்களின் இதழ்களின் ஈஸ்டுகளை இப்படி முயற்சிப்பவர்களும் ஜப்பானில் இருக்கிறார்கள் .
ஜப்பானின் கோச்சி பகுதியில் விண்வெளி ஸாகே (Space Sake) வகை புதிதாக உருவாகி கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்ய விண்கலம் ஒன்றின் மூலம் விண்வெளிக்கெடுத்துச் செல்லப்பட்டு 8 நாட்கள் விண்வெளியில் இருந்த ஈஸ்ட் வகையிலிருந்து உருவான ஈஸ்டுகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த விண்வெளி ஸாகே பலரின் பிரியதுக்குரியதாக விற்பனையாகின்றது
2013ல், 15 ஸாகே உற்பத்தியாளர்கள் ஒண்றிணைந்து ஸாகே பாட்டில்களை கடலுக்கு அடியில் இருக்கும் கம்பிக்கூண்டிற்குள் வைத்து 6 மாதங்கள் பழமையடைய செய்கிறார்கள் . இம்முயற்சியும் கவனம் பெற்று வருகிறது
ஜப்பானில் ஸாகே
Hakutsuru Sake Brewery Museum — ஜப்பானில் ஒரு பழைய ஸாகே வடிசாலையை ஸாகே அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார்கள். தொன்மையான ஸாகே மது நொதித்த செடார் மரத்தொட்டிகளிலிருந்து ஸாகே அரிசி ரகங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இங்கு ஸாகே உருவாக்கும் படிநிலைகள் அனைத்தும் புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புத்தம் புதிதாக ஸாகே சுவைத்துப்பார்க்கவும் அளிக்கப்படுகிறது. ஆளுயர பொம்மைகள் ஸாகே தயாரிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும், ஸாகே தயாரிப்பின் காணொளிகளும் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது
இன்னும் சில நாட்களில் அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று ஜப்பானில் ஸாகே நாள் கொண்டாடப்படும். அக்டோபரில் நெல்அறுவடை முடிந்திருக்குமாதலால், அக்டோபர் முதள் நாளில் அரிசி மதுவுக்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும். 1978லிருந்து ஜப்பானில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ல ஸாகே பிரியர்களும் இந்நாளை கொண்டாடுவார்கள்.
ஸாகே ஜப்பனியர்களின் அனைத்து சடங்குகளிலும் இடம்பெற்றிருக்கும் . புதிதாக வீடு கட்டும் போது நிலத்தில் ஸாகேவை ஊற்றி அதை கடவுளுக்கு அளித்துவிட்டு பின்னர் பூஜைகள் நடைபெறும். ஸாகே வடிசாலைகள் அனைத்திலும் சிறிய பூஜை அறை இருக்கும். அன்றாடம் ஸாகேவை சிறு கிண்ணங்களில் கடவுளுக்கு படைக்தபின்னரே வடிசாலை பணிகள் துவங்கும்.
நமது திருமணங்களில் மாலை மாற்றிக்கொள்வதைப்போலவே ஜபபானிய திருமணங்களில் மணமக்கள் மூன்று முறை மூன்று கிண்ணங்களில் இருக்கும் ஸாகேவை மாறி மாறி அருந்துவது வழக்கம். இந்த சடங்கு san-san-ku-do அதாவது ’மூன்று -மூன்று- ஒன்பது- ஒன்பது முறை’ என்று அழைக்கப்படும். ஒவ்வொரு கோப்பையிலிருந்தும் மூன்று முறை ஸாகேவை அருந்தி இனி அவர்கள் கணவனும் மனைவியும் என்று பிறருக்கு அறிவிப்பார்கள்.
அலுவலகங்களிலும் குடும்ப நிகழ்வுகளும் உறவை வலுவாக்க அடிக்கடி ஸாகே விருந்துகள் ஏற்படுத்தப்படும். ஜப்பானிலும் சமுதாய அடுக்குகள் பல இருக்கின்றன எனினும விருந்துகளில் அந்த ஏற்றத்தாழ்வுகளை ஸாகே கரைத்தழித்துவிடும், அங்கு யாரும் யாருக்கும் மதுவை பரிமாறி மகிழலாம்.
ஸாகே பீப்பாய்களின் மரமூடிகளை திறக்கும் சடங்கு Kagami-biraki, எனப்படும் கண்ணாடி பதித்திருக்கும் இந்த பீப்பாய் மூடிகளை திறந்து அனைவரும் ஸாகேவை அருந்துவது உறவை பலப்படுத்தும் என்றும் நல்ல ஆரோக்கியத்தை அருந்தும் அனைவருக்கும் அளிக்கும் என நம்பப்படுகிறது.
ஜப்பானின் தேசிய வரி நிறுவனம் கொரோனா தொற்றுக்கு பிறகு ஜப்பானிய இளைஞர்கள் ஸாகே மதுவை குடிப்பது மிக குறைவாகிவிட்டதால்’ sake viva‘ என்னும் பிரச்சாரத்தை துவங்கி மதுவை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் புதிய யோசனைகளை தெரிவிப்போருக்கு பரிசுகளை அறிவித்திருக்கிறது.1 உலகின் பிற நாடுகளின் விமர்சனங்களை ஜப்பானிய அரசு இதன்பொருட்டு சந்தித்துக்கொண்டிருப்பினும், இதற்கான யோசனைகளும் குவிந்துவருகின்றன.
ஜப்பானில் கடவுளர்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஊடகமாகவும் ஏற்றத்தாழ்வுகளை கடந்து மனிதர்களும் ஒன்றிணைக்கும் பாலமாகவும் ஸாகே இருக்கிறது. மதுவினால் சீரழியும் குடும்பங்கள் பல்லாயிரக்கக்கில் இருக்கும் இந்தியாவிலிருந்து கொண்டு உறவுகளை பலப்படுத்தும் ஜப்பானிய மதுவகை ஒன்றை அறிந்துகொள்வது வேறுபட்ட அனுபவமாக இருக்கிறது.
ஜப்பானிய தேநீர் சடங்கை போலவே ஸாகே அருந்துவதும் ஒரு சிறப்பான சடங்குதான். 18 ம் நூற்றாண்டில் ஸாகே சடங்குகள் குறித்த விரிவான் நூலகள் வெளியாகின. இன்றும் ஸாகே விருந்துகளில் ஒடுக்கு நெறிகள் மறற்றும் செலுத்துநெறிகள் கற்றுத்தரப்படுகின்றன. அவற்றை விரிவாக அறிந்துகொள்ள; Basic Sake Etiquette | JSS (japansake.or.jp)
உலகெங்கிலும் விதவிதமான உணவு வகைகளும் அவற்றை தயாரிக்க ஆயிரக்கணக்கான சேர்மானமற்றும், மசாலாப்பொருட்களும் உள்ளன. இந்த அடிப்படை பொருட்களில்லையெனில் பல உணவுகளை செய்ய இயலாது.உலகின் ஒருசில பகுதியில் மட்டும் பயன்படுத்தப்படும் பிரத்யேக மசாலா வகைகளும் பல இருக்கின்றன. இவற்றில் சில பொருட்கள் மிக அத்தியாவசியமானவை. அப்படியானஒன்றுதான் இந்தியாவின் பிரபலமான உணவுச்சேர்மானமான புளி.
.இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இருவகைகளில் புளி இருக்கிறதென்றாலும் அதிகம் சமையலில்உபயோகப்படுவது புளிப்பு வகைதான்.
16ம்நூற்றாண்டில் புளி ஆப்பிரிக்காவிலிருந்துமெக்ஸிகோ மற்றும் போர்ச்சுகலுக்கு வணிகர்களால்அறிமுகமானதுபின்னர்அங்கிருந்துஉலகின்பலபகுதிகளுக்கும்பயணித்தது,அரேபியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் புளியமரத்தையும் அதன் கனிகளியும்முதன்முதலில்கண்டபோது அதை இந்தியாவின்பேரீச்சை என்னும் பொருளில் dates of India அதாவது tamar-al-hindi, என அழைத்தார்கள். எனவேஇம்லி என்றும் இந்திய பேரீச்சை என்றும் அழைக்கப்படும் புளியின் ஆங்கில பெயர் டாமரிண்ட்என்றானது.மார்க்கோபோலோபுளியைடேமரண்டி என்று குறிப்பிட்டிருக்கிறார்tamarandi.
தென்னிலங்கையில்இது வடுபுளி எனப்படுகிறது.. பேபேசிகுடும்பத்தைச் சேர்ந்தஇதன் கனி புளிப்புச்சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களைஅளிக்கும்புளிய மர வகைகள் உள்ளன
புளியின்தாவர அறிவியல் பெயர் டாமரிண்டஸ்இண்டிகா(.Tamarind –Tamarindus indica)இவ்வாறு அறிவியல் பெயரின் இரண்டாம் பாதியில் வரும் பிரதேச அல்லது நாட்டின் பெயர்கள் அந்த தாவரம் எந்த பகுதியைச்சேர்ந்தது என்பதை குறிக்கும் என்றாலும் புளியின் பெயரில் இருக்கும் இந்தியாவுக்கு அது சொந்தமான மரம் இல்லை. ஆப்பிரிக்காவை சேர்ந்த புளிய மரம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்குமுன்பிருந்தேஅறிமுகப்படுத்தப்பட்டிருந்ததால்இந்தியாவுக்கும்சொந்தமென்று கருதி அதன் அறிவியல் பெயரின்பிற்பாதியில் இந்தியா சேர்க்கப்பட்டிருக்கிறது.
புளிய மரம் மிக பிரமாண்டமாக வளரும் இயல்புடையதுஇறகுக்கூட்டிலைகளும், மஞ்சள் பழுப்பு கலந்த மலர்களும்கொண்டிருக்கும்இம்மரம் சுமார் 90 அடி உயரம் வரை வளரக்கூடியது. வருடத்துக்கு சுமார் 225 லிருந்து300 கிலோ கனிகளைஅளிக்கின்றது.மிக மெதுவாக வளரும் இவை பல்லாண்டுகளுக்குபூத்துக்காய்த்து உயிர் வாழும்.
மிக பருத்த தடிமனான அடிமரத்தைகொண்டிருக்கும் புளியமரம் பெரும்பாலும் பசுமை மாறமல் இருக்கும். மண் நிறத்தில் உலர்ந்த ஓடுகளுடன் ஒழுங்கற்ற வளைவுகளுடன்கொத்துக் கொத்தாக தொங்கிக்கொண்டிருக்கும்வெடியாக்கனிகளானபுளியங்காய்கள்10 இன்ச் நீளம் இருக்கும்பட்டும் படாமல் புழகும்இயல்பைதமிழத்தில் ’’ஓடும் புளியம்பழமும் போல ’’என சொல்லுவார்கள்.. ஏனெனில் புளியின்ஓடானது அதன் சதையோடுஒட்டுவதில்லை. 10லிருந்து12 விதைகள்கனிகளினுள் காணப்படும்
இந்தியர்களின்விருப்ப உணவுகள் பலவற்றில் புளி சேர்க்கப்பட்டிருக்கும்அசைவசைவ உணவுகள் இரண்டிலும் புளி இங்கு சேர்க்கப்படுகிறது.. தென்னிந்தியாவின்பயணஉணவென்றே பெயர் பெற்றிருக்கும் புளியோதரை, தென்னிந்தியகலாச்சாரத்துடன்புளிக்கு இருக்கும் நெருக்கமான தொடர்புக்குசாட்சியளிக்கிறது
புளியில்பாலிஃபீனால், மெக்னீசியம்,செம்பு, செலினியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் இருக்கின்றன.இவற்றுடன் பல வகையான வைட்டமின்கள்பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும்புளியில்நிறைந்துள்ளன.
இந்தியாவின் பஞ்ச காலங்களில் ஊற வைத்த புளியங்கொட்டைகள் உணவாகி இருக்கிறது. இன்றும் புளியங்கொட்டைகளை வறுத்து சாப்பிடும் பழக்கம் தென்னிந்தியகிராமங்களில் இருக்கிறது. கொட்டையைசுற்றியிருக்கும் நார் நிறைந்த சதைப்பற்றான பகுதியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் இருக்கும் இதுவே புளியின்சுவைக்கு காரணம்
கெய்ரோவில்புளித்தண்ணீரில்தயாரிக்கப்பட்ட இனிப்பு பானகம் தெருவொரக்கடைகளில்விற்கப்படுவது பல்லாண்டு கால வழக்கமாக இருக்கிறது
புளிய மரங்கள் நிதானமாக எரியும் தன்மை கொண்டவையாதலால் சமையல் அடுப்புக்குஎரிவிறகாகபயனாகிறது.புளியமரக்கட்டைகள் மரச்சாமன்கள் செய்யவும் பயன்படுகின்றன புளியமரம் வண்டிச் சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும்மரப்பொருட்கள் செய்யவும்பயன்படுகிறது..இம்மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, இறைச்சிக் கடைகளில் அடிப்பலகையாகபயன்படுத்தப்படுகின்றது.
இந்தியாவெங்கிலும்கோவில்களிலும்வீடுகளிலும்செம்புச்சிலைகள் வெண்கல, பித்தளை பாத்திரங்களைதுலக்கபுளியேஉபயோகிக்கபடுகிறது. புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வார்னிஷ்களில்கலக்கபடுகிறது
தென்னிந்தியசாலைகளின் இருமருங்கிலும் நிழல் தரும் இம்மரங்களின்பெயரால்பலகிராமங்களின் பேருந்து நிறுத்தங்கள்உள்ளன.
4ம்நூற்றாண்டிலிருந்தே பண்டைய எகிப்திலும்கிரேக்கத்திலும் புளி பரவலாக உணவில்சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு உணவு வகைகளிலும்புளியின்சதைப்பகுதிசுவைக்காகவும், அதன் உணவை பாதுகாக்கும்தன்மைக்கெனவும்சேர்க்கப்படுகின்றது. இம்மரத்தின் தளிரிலைகளும், இளம் காய்களும்மலர்களும்துவையலாகஅரைத்துஉண்ணப்படுகின்றன.
பல.இந்தியகிராமங்களில் வெற்றிலை போடுகையில்சுண்ணாம்புக்கு பதில் புளியமரத்தின் இளம்தண்டுகளைசேர்ப்பதுண்டு. இதன்மரப்பட்டையிலிருந்து சாயம் எடுக்கப்படுகின்றது பல்வேறு பாரம்பரியமருத்துவமுறைகளில்இம்மரத்தின் பல பாகங்கள்சிகிச்சைக்கெனபயன்பாட்டில் இருக்கிறது
புளிய மரம் இந்தியக்கலச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இம்மரத்திற்கடியில்உறங்கக்கூடாது என்னும் பொதுவான நம்பிக்கைக்கு காரணம் இதன் உதிரும் இலைகள் உடையில் கறையை ஏற்படுத்துவதால் இருக்கலாம்.
பர்மாவில்மழைக்கடவுள்புளிய மரங்களில் வசிப்பதாக நம்பிக்கை நிலவுவதால் அங்கு இம்மரங்கள்வழிபடப்படுகின்றன. பல கிராமங்களில்அரசமரத்துக்கும்வேம்புக்கும் திருமணம் செய்துவைப்பதைப்போல, சிலஇந்தியகிராமங்களில்மழை வேண்டி புளியமரத்துக்கும் மா மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
ஆப்பிரிகாவில்புளியமரபட்டையை ஊற வைத்த நீரில் சோளத்தை கலந்து கால்நடைகளுக்குதீவனமாக கொடுத்தால் அவை காணாமல் போனாலும் திருட்டுப்போனாலும் திரும்ப உரிமையாளரிடம்வந்துவிடும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
இந்தியாவில் பிறந்த குழந்தைக்குநாக்கில் தேன் தடவுவது போல மலேயாவில் புளித்தண்ணீரில்தேங்காய்பால் கலந்து தடவும் வழக்கம் இருக்கிறது. பல நாடுகளில் புளிய இலைகளை உண்ணக்கொடுத்தாலயானைகள்கட்டளைகளுக்கு எளிதில் கீழ்படியும் என்னும் நம்பிக்கை உண்டு.
பல்லாங்குழிகளில்சோழிகளுக்கு பதில் புளியங்கொட்டைகளைபன்னெடுங்காலமாக தமிழர்கள் உபயோகிக்கிறார்கள்.பலநாடுகளில்புளியமரம்தபால்தலைகளில்இடம்பெற்றுள்ளது.
உலகெங்கும் புளி பயணித்து வந்திருக்கும் பாதைகளைட்ரினிடாட்டாம்பரன் இனிப்பு- புளிப்பு உருண்டைகளும்(tambran balls) இந்தியாவின் சாம்பாரும், ரசாமும், புளியோதரையும், மெக்ஸிகோவின்புல்பரிண்டோ (pulparindo) மிட்டாய்களும்அகுவாஃப்ரெஸ்கா (agua fresca) பானமும், நைஜீரியாவின்காலையுணவுகஞ்சியானகுனான்சமியாவும்(kununtsamiya,) இந்தோனேஷியாவின்சம்பல்சாஸும் (sambal sauce) பிலிப்பைன்ஸின்சினிகேங்சூப்பும் (sinigang soup.) சுவையாக சொல்லிக் கொண்டிருக்கின்றன .தற்போது இந்தியா புளி உற்பத்தியில்முதலிடத்தில் இருக்கிறது
கமலா ஆரஞ்சு பழங்களை நாம் சுவைத்திருப்போம், கமலா என்னும் பெயரில் நமக்கு தெரிந்தவர்களும் நிச்சயம் இருப்பார்கள். Mallotus philippensis என்னும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் தாவரச்சாயமான பிரகாசமான பொன்மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த கமலா நிறத்தில் இருப்பதால் அந்த வகை ஆரஞ்சு கனிகளுக்கு அப்பெயர் வந்தது. நல்ல சிவப்பாக பிறக்கும் இந்திய பெண் குழந்தைகளுக்கு அப்படியே கமலாவென்று முன்னர் பெயரிடப்பட்டது.
காலப்போக்கில் கமலா என்பது ஒரு தாவரச்சாயம் என்பதே மறந்து போய் வழக்கமான பெண்பெயர்களில் ஒன்றாக கமலா ஆகிவிட்டிருந்தது கமலா ஆரஞ்சு என்பதன் பெயர்க்காரணம் தெரியாமலேயே பலநூறு ஆரஞ்சுப்பழங்கள் சுவைக்கப்படுகின்றன.
கமலா மரமான இது நெல்லிக்காய் மரங்களின் குடும்பமான யுபோர்பியேசியை சேர்ந்தவை. இவற்றின் சிவந்த கனிகளின் வெளிப்புறம் குங்குமம் பூசியது போல படிந்திருக்கும் மேல்பூச்சிலிருந்து எடுக்கப்படும் சாயமே கம்பளி, பட்டு, பருத்தி போன்ற நூலிழைகளை மஞ்சள் ஆரஞ்சு நிறமேற்றும் இயற்கை கமலாச்சாயம்
இம்மரம் கமலா, கபிலம் செந்தூரம், ரோஹிணி, செந்தூரி, கங்கை, குங்குமமரம், குரங்கு மஞ்சநாறி, செங்காலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் இது (banato) பனடோ என அழைக்கப்படுகிறது.
இந்த செம்பழங்களில் குரங்குகள் முகத்தை தேய்துக்கொள்ளுமென்பதால் இவற்றிற்கு குரங்கு முக மரம் என்று பெயர் வந்தது .இந்தியாவெங்கும் காணப்படும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும் சிவப்பு கமலா சாயப்பொடியுடன் இரும்பை சேர்த்து அழகிய பச்சை சாயமும் உருவாக்கப்படுகின்றது
பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்லாந்து, சீனா, இலங்கை ஆப்கானிஸ்தான், யேமன் உள்ளிட்ட பல நாடுகளில் மலைப்பாங்கான பகுதிகளிலும், பசுமை மாறா காடுகளின் ஓரங்களிலும் காணப்படும் இவை ஒரு குறுமரமாகவோ அல்லது அடர்ந்த புதர் போலவோ வளரும் இயல்பு கொண்டவை
.இவை 4 லிருந்து 10 மீ உயரமே வளரும். மரப்பட்டை சாம்பல் வண்ணத்தில் சொறசொறப்பாக காணப்படும். சிறு கிளைகளிலும், இளம் இலைகளிலும் ரோமங்கள் போன்ற வளரிகள் காணப்படும். பளபளப்பான பச்சையில் இருக்கும் முட்டைவடிவ இலைகள் கூர் நுனிகளுடன் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். .இலைவிளிம்பில் பற்கள் போன்ற அமைப்பும் இருக்கு
பிலிப்பைன்ஸில் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரையில் மலரும் இவை பிற நாடுகளில் ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மலரும். ஒரே மரத்தில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியான கொத்துக்களாக மஞ்சள் பழுப்பு வண்ணங்களில் மலரும்.
கொத்தாக காய்த்திருக்கும் அடர் சிவப்பு நிற சிறு கனிகள் 5-7 மி மி அளவிலிருக்கும். கனியின் வெளிப்பகுதி முழுவதும் நுண்ணிய ஆரஞ்சு சிவப்பு குருணைகள் பூசப்பட்டது போல் படிந்திருக்கும். இந்த அடர்சிவப்பு குருணைகளை ஆல்கஹாலில் கரைத்தெடுத்துத்தான் கமலாச்சாயம் தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு கனியிலும் மூன்று கருப்பு விதைகள் இருக்கும்.
இவற்றில் புரதம், பிசின், எண்ணெய்ச்சத்து, நிறமிகள், ஆல்கலாய்டுகள் சப்போனின்கள், டேனின்கள், பீனால் ஆகியவை அடங்கி இருக்கின்றன. இவற்றில் இருக்கும் மலோடோயின் மற்றும் கமலின் ஆகியவை மிக முக்கியமான மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது. (mallotoin & kamalin).
கமலாவிலிருந்து இயற்கைச்சாயம் மட்டுமல்லாது சமையல் எண்ணெயும், காகிதக்கூழும் மருந்துகளும், இயற்கை உரமும் கிடைக்கிறது.
கமலா மரத்தின் பாகங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை. இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை குணமாக்கும். இதன் வேர்கள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாகிறது. கட்டிகளை குணமாக்குவதில் கமலா மரம் மஞ்சளை காட்டிலும் அதிக வீரியத்துடன் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அரேபியர்கள் இம்மரத்தின் கமலாச்சாயத்தை தொழுநோயை குணமாக்க பயன்படுத்துகின்றனர். குடல் அழற்சி மற்றும் சீரணக்கோளாறுகளுக்கும் இம்மரத்தின் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மரப்பட்டைச் சாறு சரும நோய்களுக்கு எதிராக செயல்புரிகிறது. இந்த சிவப்பு சாயம் உணவுக்கு நிறமூட்டவும் பயனாகின்றது, குறிப்பாக பானங்களுக்கு நிறமூட்ட.
இதிலிருந்து கிடைக்கும் ரோட்லரின் (Rottlerin) என்னும் மருந்துப்பொருள் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அருமருந்தாக கருதப்படுகின்றது.
முடக்கு வாதம், ஆஸ்துமா, கல்லீரல் வீக்கம், குடற்புழு, தோல் அழற்சி போன்றவைகளுக்கு இம்மரத்தின் பாகங்கள் சிகிச்சை அளிக்க பயனாகின்றன
இனி கமலா என்னும் பெயரைக்கேட்டாலும், கமலாக்களை பார்த்தாலும், கமலா ஆரஞ்சுகளை சுவைக்கையிலும் இந்த குங்கும மரங்களை நினைத்துக் கொள்ளலாம்
1892 இல் ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற காபூலி வாலா ( কাবুলিওয়ালা ) என்னும் வங்காள மொழிச் சிறுகதை வெளியானது. அஃப்கானிஸ்தானிலிருந்து கல்கத்தாவிற்கு வருடா வருடம் பழங்கள் விற்பனை செய்ய வரும் ரஹ்மத் எனும் வியாபாரிக்கும், அவரது மகளை நினைவூட்டும் ஐந்து வயது மினி என்னும் சிறுமிக்கும், மினியின் தந்தைக்கும் மினிக்குமான அன்பை சொல்லும் கதை இது. காபூலில் இருந்து வந்த வியாபாரி ஆதலால் கதையின் தலைப்பு காபூலி வாலா என்று இருந்தது. இக்கதையை தழுவி திரைப்படங்களும் உருவாயின.[1]
உண்மையில் இந்தியாவில் அதேபோன்றதொரு காபூலிவாலா கதை மும்பையில் நடந்தது.
1890 ல் செருப்புக் கூட இல்லாத கால்களுடன் ஒரு வியாபாரி உலர் பழங்கள், கட்டிப் பெருங்காயம் மற்றும் பேரீச்சைகளை மும்பையில் விற்பனை செய்ய அஃப்கானிஸ்தானின் காபூலில் இருந்து குதிரையில் வந்திருந்தார். அவரிடம் பெருங்காயத்தை வாங்கியவர் லால்ஜி கோது (Laljee Godhoo) என்னும் ஒரு சிறு வியாபாரி. லால்ஜி அப்போது கிராம்பையும் கற்பூரத்தையும் சிறிய அளவில் விற்பனை செய்து கொண்டிருந்தார். பெருங்காயத்தின் நெடியை கவனித்த அவர் மசாலா பொருளாக அதன் எதிர்கால விற்பனைக்கான சாத்தியங்களையும் மிகச் சரியாகக் கணித்தார். அதைக் கொண்டு வந்த காபூலிக்காரரிடம் அஃப்கானிஸ்தானில் பெருங்காயத்தின் பயன்பாட்டையும் கேட்டறிந்து கொண்டு அந்த வியாபாரத்தை இரண்டு வருடங்களில் சிறிய அளவில் துவங்கினார்.
அந்த பெருங்காயப் பிசின் நிறுவனம்தான் இன்று ஐந்துதலைமுறைகளாக இந்தியாவில் பெருங்காய விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் L G கூட்டுப் பெருங்காய நிறுவனம்
1894 ல் லால்ஜியின் தெற்கு மும்பை வீட்டில் ஒரு காலி அறையில் தொடங்கப்பட்டு, பெருங்காய பிசினை கைகளால் உடைத்துத் தூளாக்கி மாவுடன் கலந்து விற்பனை செய்த எல் ஜி (LG) நிறுவனம் இப்போது இந்தியாவில் 70 சதவீத விற்பனை பங்குகள் கொண்டிருக்கும் முன்னணி பிரபல பெருங்காய நிறுவனமாக இருக்கிறது.
அஃப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருங்காய பிசினுடன் கருவேலம் பிசின், கோதுமை மாவு ஆகியவற்றை கலந்து மதிப்புகூட்டி, நெடியை குறைத்து கூட்டுப்பெருங்காயமாக விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் நாகப்பட்டினக் கிளையை லால்ஜியின் மகன் கிம்ஜி 1920 ல் துவங்கினார். [2]
இப்போது ஐந்தாவது தலைமுறையாக நிறுவனத்தின் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் லால்ஜியின் கொள்ளுப்பேரன் பிமல் நிறுவனத்தை துவங்கிய கொள்ளுப்பாட்டன் லால்ஜியின் புகைப்படம் கூட தங்களிடமில்லை என்று வருந்துகிறார்.
1970 லிலும் 1980 லிலும் சென்னை, கும்பகோணம், மும்பை மற்றும் நாசிக்கில் LG கிளைகள் விரிவடைந்தன. பிமலின் தந்தையான அஜித் கிம்ஜி நிறுவனங்களை இயந்திரமயமாக்கினார் அப்போது நாளொன்றுக்கு 150 கிலோ பிசின் பிற பொருட்களுடன் கலக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்டது ’90களில் பிமல் நிறுவனத்தின் பொறுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு 40 நிமிடங்களில், 1000 கிலோ கூட்டுப்பெருங்காயம் தயராகிறது
ஒவ்வொரு மாதமும் பிமல் கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரான அல்மாட்டிக்குச் சென்று அறுவடையாகும் பிசினை நேரடியாகப் பார்வையிட்டுப் பிறகு கொள்முதல் செய்கிறார். சூடானிலிருந்து நேரடியாக கருவேலம் பிசினையும் இறக்குமதி செய்யும் பிமல் தற்போது LG கூட்டுப் பெருங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூபாய் நான்கு ஆயிரத்திலிருந்து, எட்டு ஆயிரம் வரை என்கிறார்.
எல் ஜி நிறுவனத்தின் பிரத்யேக வெள்ளை டப்பாக்களில் கிடைக்கும் இந்த கூட்டு பெருங்காயம் இந்தியாவில் மிகப் புகழ்பெற்றது. விற்பனைப் போட்டியில் அத்துமீறல்களையும் போலிகளையும் சமாளிக்க இந்த நிறுவனம் அவர்களின் வெள்ளை டப்பாக்களில் கியூ.ஆர். பட்டைக் குறியீடு கொண்டிருக்கிறது.
நான் சிறுமியாக இருக்கையில் மஞ்சள் நிற செவ்வக அட்டைப்பெட்டியில் வரும் மந்தாரை இலையில் சுற்றப்பட்ட பெருங்காயத்தை பாட்டி அம்மிக்கல்லில் உடைத்து சிறு துண்டுகளாக்கி சேமித்து வைப்பதை பார்த்திருக்கிறேன். என் அம்மா காலத்தில் மந்தார இலை மெல்லிய பிளாஸ்டிக் உறையானது இப்போது நான் கட்டிப் பெருங்காயத்தையும் தூளாக்கப்பட்ட பெருங்காயத்தையும் உபயோகிக்கிறேன்
சைவம் அசைவம் என்னும் பாகுபாடில்லாது அனைத்துவித உணவுகளிலும் இந்தியாவில் சேர்க்கப்படும், உணவுக்கு வெங்காயம் மற்றும் பூண்டின் எரிமணத்தை அளிக்கும் இந்த பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும். உலகப் பெருங்காய உற்பத்தியில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் உபயோகிக்கப்பட்டாலும் இந்தியா அஃப்கானிஸ்தான் மற்றும் இரானிலிருந்தே இத்தனை வருடங்களாக பெருங்காயத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அஃப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வருடா வருடம் ₹942 கோடிக்கு 1200 டன் பெருங்காயம் இறக்குமதியாகிறது,.
உலக மசாலாக்களில் பெருங்காயம் இடம்பெற்ற கதையும் பெருங்காயத்தின் சுவையைப்போலவே வித்யாசமும் சுவாரஸ்யமுமானது. மனிதர்கள் நாவால் உணரும் உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படை சுவைகளுடன் கூடுதலாக ஐந்தாவதாக உமாமி என்னும் சுவையை அறிவியல் உலகில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்[1] . பெருங்காயத்தின் வேதிச்சேர்மானங்கள் வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கும் சல்ஃபர் பொருட்களுக்கு இணையானவை என்பதால் வித்தியாசமான் நெடியுடன் கூடிய எரியும் அதன் சுவை உமாமி சுவை எனப்படுகின்றது
அலெக்சாண்டரின் படைகள் இமயமலையின் உப மலைத்தொடரான, வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு அஃப்கானிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் இந்துகுஷ் மலைத் தொடருக்கு 4ஆம் நூற்றாண்டில் வந்த போது அங்கு இயற்கையாக வளர்ந்திருந்த பெருங்காய மரங்களையும் அதிலிருந்து கிடைத்த பெருங்காயத்தையும் கண்டார்கள்.
பெருங்காயத்தை அவர்கள் சில்ஃபியம் என்னும் (silphium) தாவரத்துக்கிணையானதாக கருதினார்கள். சமைக்கப்படும் இறைச்சியை மிருதுவாக்கிய சில்ஃபியம், மருத்துவ உபயோகங்களும் கொண்டிருந்தது. மிக அதிகமான பயன்பாட்டினால் அப்போது அழியும் நிலையில் இருந்த அந்த அரிய தாவரத்துக்கு இணையாக நெடியுடன் கூடிய பிசினை அளித்த பெருங்காய மரத்தின் நாற்றுகளை தங்களுடன் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் எடுத்துச்சென்றர்கள் என்கிறது வரலாறு.
சில்ஃபியம் பண்டைய கிரேக்கத்திலும் ரோமிலும் பாலுணர்வு ஊக்கியாக, கருத்தடை மாத்திரையாக, இறைச்சியை மிருதுவாக்க, நறுமணப் பொருளாக என்று பலதரப்பட்ட பயன்பாடுகளை கொண்டிருந்தது. கிரேக்கப் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்குமளவுக்கு சில்ஃபியத்தின் புழக்கம் இருந்தது. பண்டைய கிரேக்க நாணயங்களில் சில்ஃபியத்தின் தண்டுகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. எகிப்தில் சில்ஃபியம் செடிகளைக் குறிக்கவென்றே பிரத்யேக சித்திர எழுத்து இருந்தது. ரோமில் இவை கடவுளின் பரிசாகக் கருதப்பட்டன. இவற்றைக் குறித்த கவிதைகளும் பாடல்களும் அப்போது புழக்கத்தில் இருந்தன.
இதன் தோற்றத்தை தியோஃப்ராஸ்டஸ் ‘கொழுத்த கருப்புத் தோலால் மூடப்பட்டிருக்கும் வேர்களையும் பொன்னிற இலைகளையும் சோம்பின் செடியினைப் போல வெற்றிடம் கொண்ட தண்டுகளையும்’ கொண்டிருந்ததாக விவரித்திருக்கிறார்
குறிப்பிட்ட மண் வகைகளில் மட்டுமே பயிரான சில்ஃபியம் அதன் தேவை அதிகமானபோது அதீத பயன்பட்டினால் அழியத்துவங்கியதென்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்
கிரேக்க ரோமானிய உணவுகளில் சில்ஃபியம் உபயோகப்படுத்தப்பட்டிருந்ததை முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ரோமானிய சமையல்கலை நூலான Apicius குறிப்பிடுகிறது
சில்ஃபியத்துக்கு இணையான பயன்பாடுகளைக் கொண்டிருந்ததால் அலெக்ஸாண்டரால் அறிமுகமான பெருங்காயம் யூரோப்பில் வெகுவிரைவாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
சீனாவில் Awei என்னும் பெயரில் பெருங்காயம் சுயி வம்சா ஆட்சியில் அறிமுகமானது (Sui dynasty 581-618). அறிமுகமான உடனேயே மருந்துப் பொருளாக உடனடிப் புழக்கத்துக்கு வந்த பெருங்காயம் சீனாவின் முதல் மருந்துப் பொருட்களுக்கான நூலில் (xinxiu bencao) இடம்பெற்றது. அதுவே பெருங்காயம் குறித்த முதல் எழுத்துக் குறிப்பு. சீனாவின் இயல்தாவரமான பைஸி என்றழைக்கப்பட்ட (baizhi) Angelica dahurica வைப் போலவே தோற்றமளிக்கும் இத்தாவரத்தின் வேர்களிலிருந்து கிடைக்கும் மிகுந்த நெடியுடைய மருந்து மற்றும் மசாலாப்பொருள் என்று இது குறிப்பிடப்பட்டது. தீய சக்திகளிடமிருந்து பெருங்காயம் விடுவிக்கும் எனும் நம்பிக்கை அப்போது சீனாவில் பரவலாக இருந்தது. பெருங்காய வில்லைகள் பேய் பிடித்திருப்பதாக நம்பப்படும் நபரின் அருகில் அவர் புகையைச் சுவாசிக்கும்படி நெருப்பிலிடப்பட்டன.
சீன மருத்துவர்களும் சவங்களிலிருந்து வெளியாகும் qi எனப்படும் தீய சக்தி பிடிக்காமல் இருக்க பெருங்காய மாத்திரைகளை விழுங்கும்படி பரிந்துரைத்தார்கள்.
சன் சிமயா (sun simiao) என்னும் புகழ்பெற்ற சீன மருத்துவர் 581-682ல் முதன்முதலாக வயிற்றிலிருக்கும் சிறு சிறு கட்டிகளைக் கரைக்க பெருங்காயத்தைப் பயன்படுத்தினார். அவரது மருத்துவக் குறிப்புக்களில் பெருங்காயம் இந்தியாவைச் சேர்ந்தது என குறிப்பிட்டிருக்கிறார்.
கிபி 752ல் வாங் டோ (Wang tao) வின் மருத்துவக் குறிப்புக்களின் திரட்டு நூலான ’’இன்றியமையாதவைகளின் ரகசியங்கள்’’ என்னும் நூலிலும் பெருங்காயத்தின் தீய சக்திக்கெதிரான குணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அழகிய தோற்றத்தில் உருமாறி வந்து இளம் பெண்களை மயக்கி உறவு கொள்ளும் விலங்குகளின் ஆவிகளைப் பெருங்காயம் விரட்டும் எனவும் பண்டைய சீனாவில் நம்பப்பட்டது
பின்னர் xing que/ xingu எனவும் சீன மொழியில் அழைக்கப்பட்டு மருந்தாகவும், மசாலா பொருளாகவும் பிரபலமாகியிருந்த பெருங்காயப்பிசின் ஒரு புத்தத் துறவி பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமென்னும் 5 பிசின்களில் ஒன்றாக புத்தமத கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டது.
சீன பௌத்தத் துறவிகள் பயணங்களின் போது பெருங்காயம் குறித்த பல புதிய தகவல்களைச் சேகரித்து கொண்டிருந்தனர். சீன பௌத்த மடாலயங்களில் பெருங்காயம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் 1 லியாங் அளவுள்ள பெருங்காயம் (1 லியாங் =91.3 அவுன்ஸ்) 7செம்புக்காசுகளுக்கு விற்பனையானது.
8 மற்றும் 9 ம் நூற்றாண்டுகளில் குடற்புழு நீக்கும் மருந்தாக பெருங்காயம் சீனா முழுவதும் அறியப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையாக நோயை உருவாக்குவதாக நம்பப்பட்ட பேய் பிசாசு பில்லி சூனியம் ஆகியவற்றை விரட்டவும், இவை தொடர்பான சடங்குகளிலும் பெருங்காயம் அதிகம் பயன்பட்டது.
கிமு எட்டாம் நூற்றாண்டில் பாபிலோனிய மன்னர் மர்டுக்-அப்லா-இடினா II பட்டியலிட்டிருந்த தோட்டங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களில் பெருங்காயமும் இருந்தது. . அசீரிய மன்னர் அஷூர்பானிபாலின் நூலகத்தில் உள்ள மருத்துவத் தாவரங்களின் பட்டியலிலும் பெருங்காயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 மற்றும் 8 ம் நூற்றாண்டுகளில் உலகச் சந்தைகளில் பெருங்காயம் வெகுவாக புழங்கியது.
9 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பட்டுப்பாதை வழியே இந்தியா மற்றும் அஃப்கானிஸ்தானிலிருந்து பெருங்காயமும் அதனைக் குறித்த தகவல்களும் உலகின் பல நாடுகளுக்கு சென்றன. பெருங்காயம் awei /xing que/ xingu என்று சீனாவிலும் agi என்று ஜப்பானிலும் awi என்று கொரியாவிலும் a ngui என்று வியட்னாமிலும் அழைக்கப்பட்டது. பெருங்காயத்தைக் குறித்து எழுதிய யாரும் அந்த மரத்தை பார்த்திருக்கவில்லை செவிவழிச் செய்திகளின் பேரிலேயே பெருங்காய மரத்தையும், அதிலிருந்து எடுக்கப்படும் பிசினை குறித்தும் எழுதினார்கள்
கோவில்களிலும் சந்தைகளிலும் சேமித்து வைக்கப்பட்ட,. மருந்துப்பொருளாகவும், உணவுக்கு சுவை சேர்க்கும் மசாலாவாகவும் புகழ்பெற்றிருந்த பெருங்காயத்தின் தேவை அதிகரித்து அதன் விலை பல மடங்கு அதிகரித்தது. சோங் வம்சத்தில் ஒரு பெரிய கட்டி பெருங்காயமும், சீனப்பச்சைக்கல்லும் சீனப்பேரசருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. பெருங்காயத்தின் கள்ளச்சந்தை வணிகமும் பெருகியது
10லிருந்து 12 நூற்றாண்டுகளில் அதிக அளவில் பெருங்காயம் சீனாவில் இறக்குமதியானது
மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அறிமுகமான பெருங்காயம் அங்கு xingu என அழைக்கப்பட்டது. வினய என்னும் பௌத்தத் துறவியின் ’’பத்துப் பாராயணங்கள்’’ என்னும் நூலில் இந்த சொல் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது
ஒரு நூற்றாண்டு கழித்து தென்னிந்தியாவின் சோழர்கள் காலத்தில் சீன அரசருக்குப் பரிசாக, மிருதுவான துணி, காண்டாமிருகத்தின் பற்கள், கிராம்பு[2] , பன்னீர் மற்றும் பெருங்காயம் அளிக்கப்பட்டன.
16 ஆம் நூற்றாண்டில் பெருங்காயத்தின் பரவல் வேகம் பிடித்தது. அப்போது சீனாவில் Li Shizhen (!518-1593) எழுதிய மருந்துப் பொருட்கள் குறித்த நூலான பென்சோ காங்மு (Bencao gangmu) வில் பெருங்காயம் குறித்த விளக்கமான குறிப்புகள் இருந்தன. இந்நூல் பல உலக மொழிகளில் மொழி மாற்றப்பட்டது.
போர்த்துக்கீசிய மருத்துவரும் மருந்து மற்றும் மசாலாப்பொருட்களில் நிபுணருமாகிய கார்சியா (garcia da orta) கோவாவில் மருத்துவம் பயின்றார். அவரது இந்திய அனுபவங்களை நூலாக்கியபோது இவரே முதன் முதலாக பெருங்காயத்தின் அரபி, இந்தியப் பெயர்கள் உள்ளிட்ட பழமொழி வழங்கு பெயர்களை குறிப்பிட்டிருந்தார். பெருங்காயம் ஒரு மரத்தில் உண்டாக்கப்படும் வெட்டுக் காயத்திலிருந்து வடியும் பிசின் என்றும், தான் அந்த மரத்தை பார்த்ததில்லை எனவும் நேர்மையாக அதில் எழுதியிருந்தார்.
உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த பெருங்காயத்தின் புகழை கேள்விப்பட்ட ஜெர்மானிய மருத்துவர் எங்கல்ஃபெர்ட் கெம்ஃபர் (Englbert Kaempfer 1651-1716) பெருங்காயப் பிசின் அறுவடை செய்யப்படுவதை நேரில் காண பெர்சியாவுக்கு சென்றார். அங்கிருந்து இந்தியா, ரஷ்யா, சயாம் மற்றும் ஜப்பானுக்கும் பயணித்த அவர் தனது பயண அனுபவங்களைத் தொகுத்து 1712ல் நூலாக்கியபோது (Amoenitatum exoticarum) 17 பக்கங்களை பெருங்காயத்துக்கென ஒதுக்கி இருந்தார். அவற்றில் பெருங்காய மரத்தின் சித்திரமும் பிசின் அறுவடை குறித்த விளக்கமும் இருந்தது.
அவரைத் தொடர்ந்து பல யூரோப்பிய இயற்கையாளர்கள் பெருங்காயத்தைக் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களால் கொண்டு வரப்பட்ட பெருங்காய விதைகள் யூரோப்பிய தோட்டங்களில் விதைக்கப்பட்டன.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் ஜான் பால்ஃபோர் (john balfour 1808-1884) முழுத் தாவரத்தின் பூண்டு நெடி, மலர்களின் இனிப்பு நெடி, கனிகளின் பெருங்காய நெடி, இளம் தளிர்களின் குறைந்த நெடி, வேரின் கசப்பு நெடி ஆகியவற்றை தனித்தனியாக விவரித்துக் கட்டுரைகள் எழுதினார்
இந்த கட்டுரை பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு பல அறிஞர்களின் கவனத்திற்குச் சென்றது. ஜப்பானின் புகழ்பெற்ற தாவரவியலாளர்களும் மருத்துவர்களும் யூரோப்பிய பெருங்காயக் கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து, ஜப்பானிய மொழியில் மாற்றிப் பிரசுரித்தார்கள்.1815 ல் ’’டச்சு தாவரவியல் அறிதல்களின் சாராம்சம்’’ எனும் நூலில் மரம் உயிரோடு இருக்கையிலேயே தொடர்ந்து பிசின் எடுக்கப்பட்டது, பிசினின் நெடி தாள முடியாத அளவுக்கு இருந்தது ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. கடும் நெடியினால் இது சாத்தானின் உணவு, சாத்தானின் சாணம் எனப் பல நாடுகளில் அழைக்கப்பட்டது.
பெருங்காயத்தின் புகழ் பரவிக் கொண்டிருக்கையிலேயே அதுகுறித்த பல வதந்திகளும் உருவாகின. பெருங்காய மரம் நச்சுத்தன்மை கொண்டது, அதனருகில் செல்லும் விலங்குகளும் நஞ்சூட்டப்படுகின்றன என்பது அதிலொன்று.
பலர் பெருங்காய மரத்தின் நெடியினால் நஞ்சூட்டப்பட்ட ஆடுகளின் இறைச்சியும் நஞ்சானதை எழுதினார்கள். அதே சமயத்தில் சந்தைகளில் கலப்படப் பெருங்காயம் விற்பனையாகிக் கொண்டிருந்தது தரமான அசல் பெருங்காயத்தைக் கலப்படப் பெருங்காயத்தில் இருந்து பிரித்துக் காண்பது குறித்தும் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்தன
இந்தியாவில் பரவலான உபயோகத்திலிருக்கும் பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பதை 1670 ல் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவரான ஜான் பிரியர் முதன்முதலில் குறிப்பிட்டார்
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பலவகையான பெருங்காய மரங்களின் வகைகள், பிசினின் வேறுபாடுகள் ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டு, கட்டுரைகள் வெளியாகின. 19 நூற்றாண்டில் ஜின்’னிற்கு சுவையூட்டவும், சில நறுமண திரவியங்களிலும் கூட பெருங்காயம் சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் முகலாய மன்னர்களின் காலத்தில் அறிமுகமான பல மசாலா பொருட்களில் பெருங்காயமும் ஒன்று. முகலாய அரசவைப் பாடகர்கள் குரல் வளத்தின் பொருட்டு, நெய் கலந்த பெருங்காயத்தை மென்றுவிட்டு நதி நீரில் நின்று சாதகம் செய்திருக்கின்றனர்.
பெருங்காயம் தோன்றிய நாட்டை விடவும், இந்தியாவில் இந்த நாட்டின் சொந்த மசாலாப் பொருளாகவே கருதப்படுகிறது.’Hing’ என்று பொதுவாக அழைக்கப்படும் பெருங்காயம் அஃப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஈரானை சேர்ந்த ஃஃபெருலா அசாஃபோடிடா (Ferula assa-foetida ) என்னும் மரத்தின் நெடியுடன் கூடிய வேர் பிசினின் மதிப்பு கூட்டப்பட்ட மசாலாவாகும்.
’Ferula’ என்றால் கொண்டிருக்கும் என்றும் ’asa’ அன்றால் பிசின் என்றும் ’foetida’ என்றால் நாற்றமடிக்கும் என்றும் லத்தீன் மற்றும் அரபிமொழிகளில் பொருள். ஃஃபெருலா பேரினத்தின் 60 சிற்றினங்களும் மத்தியா ஆசியா , ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் இயற்கையாக விளைகின்றன
ஃபெருலா பேரினத்தில், அஸஃபோடிடாவுடன் இன்னும் சில முக்கிய வேரிலிருந்து பிசினை அளிக்கும். Ferula asafoetida; Ferula alliacea, Ferula rubricaulis, Ferula narthex மற்றும் Ferula foetida. ஆகிய சிற்றினங்கள் இருக்கின்றன Ferula fukanensis மற்றும் Ferula sinkiangensis ஆகியவை சீனாவில் மட்டுமே இருக்கும் பெருங்காய தாவரங்கள் .இவை அனைத்தும் ஒரே மாதிரியான வாழிடங்களில் தான் வளர்கின்றன.
கேரட் குடும்பமான ஏபியேசியை சேர்ந்த பெருங்காய மரங்கள் 3 லிருந்து 5 அடி உயரம் வரைசிறிய மரம் போல வளரும். இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும். ஆண் பெண் மலர்கள் தனித்தனியே மலர் மஞ்சரிகளில் காணப்படும் இவை பல்லாண்டுத்தாவரங்கள்.பசுமஞ்சள் குடைகளாக காணப்படும் மலர்களை கொண்டிருக்கும் மலர்த் தண்டுகளிலும் பிசின் இருக்கும். முட்டை வடிவ சிவந்த தட்டையான கனிகளிலும் பால் வடியும். பருத்த சதைப்பற்றான வேர்களில் பிசின் அதிகம் இருக்கும் தாவரத்தின் அனைத்து பாகங்களும் கடும் நெடி கொண்டிருக்கும். அஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பெருங்காயம் விளையும் பிரதேசங்களில் இதன் இலைகளும் இளம் தண்டுகளும் உணவாக பயன்படுகின்றன. மலர்ஞ்சரிகளும், பிசின் வடிந்தபின்னர் வேர்கள் அரைக்கப்பட்ட மாவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன
4-5 வருடங்களான பெருங்காய மரத்தின் 12-லிருந்து 15 செ.மீ விட்டம் கொண்ட வேர்கள் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மலர்வதற்குச் சற்று முன்னர் மண்ணிலிருந்து வெளியே தெரியும்படி மண்ணைத் தோண்டி எடுத்து, தண்டுடன் ஒட்டியிருக்கும் வேரின் தலைப்பகுதி லேசாக சீவி விடப்படும். சீவிய காயத்தில் இருந்து பால் போன்ற திரவம் கசியத் துவங்குகையில் வெட்டிய காயம் குச்சிகள் மற்றும் மண்ணைக்கொண்டு மூடப்படும்.
சிலநாட்கள் கழித்து வடிந்து உலர்ந்திருக்கும் பிசின் சுரண்டி எடுக்கப்பட்ட பின்னர் புதிதாக வேரில் காயம் உண்டாக்கப்பட்டு மீண்டும் மூடப்படும். சில சமயங்களில் வெட்டிய வேர்ச்சீவலும் பிசினுடன் சேர்த்து எடுத்து சேமிக்கப்படும். மீண்டும் மீண்டும் பிசின் வடிந்து 3 மாதங்களில் அரை கிலோவிலிருந்து 1 கிலோ வரை பிசின் வடிந்து தீரும் வரை வெட்டுக்கள் உண்டாக்கப்பட்டு, பிசின் தொடர்ந்து சேகரிக்கப்படும். இவ்வாறு காயங்கள் ஆழமாக உண்டாக்கப்பட்டு பிசின் சேகரிக்கப்படுவதால்தான் தமிழில் இது பெருங்காயம் எனப்படுகின்றது.
காயமான வேரிலிருந்து சாம்பல் வெள்ளை நிறத்தில் வடியும் பிசின் உலருகையில் மஞ்சளாகிப் பின்னர் சிவப்பிலும், இறுதியில் மண் நிறத்திலும் இருக்கும். உலர்ந்த வேர்ச்சீவல்களும் மலிவுவிலைப் பெருங்காயமாக விற்பனை செய்யப்படும்.
மரத்தின் வேரைக் காயப்படுத்தாமல் இயற்கையாகவே வடியும் பெருங்காயமே மிக அரியதும், தூயதும், முதல் தரமுமான பெருங்காயம் எனக் கருதப்படுகிறது இது நீர்த்துளி பெருங்காயம் எனப்படுகிறது இவ்வகை நாம் சாதாரணமாக புழங்கும் வகையை விட மிக மிருதுவாக இருக்கும்.
வடியும் வேர்ப்பிசின் வியாபாரிகள் மற்றும் அறுவடை செய்பவர்களால் கண்ணீர் என குறிப்பிடப்படும், முதல் கண்ணீர் துளிகள் இரண்டாம் கண்ணீர்துளிகள் என இவை குறிப்பிடப்பட்டு சேமிக்கப்படும். ’kokh’ எனப்படும் முதல் கண்ணீர் துளி மிக குறைந்த அளவே கிடைக்கும். மிக அதிக நெடி கொண்டிருக்கும். இவையே பிறவற்றை காட்டிலும் அதிக விலையும் கொண்டிருக்கும்.
பெருங்காயத்தில் 40–64% பிசினும், 25% பசையும், 10–17% எண்ணையும், and 1.5–10%சாம்பலும் உள்ளன, அசரேனினோடேன்னல்கள் ‘A’ மற்றும் ‘B’, பெருலிக் அமிலம், அம்பெல்லிஃபெரோன் மற்றும் நான்கு வரையறுக்கப்படாத சேர்மங்களை பெருங்காயப் பிசின் கொண்டுள்ளது
30 சதவீத பிசினுடன் வட இந்தியாவில் கோதுமை மாவு/தென்னிந்தியாவில் அரிசி மாவு/ மைதா மாவு மற்றும் கருவேலம் பிசின் ஆகியவை கலக்கபட்ட கூட்டுப்பெருங்காயமே நமக்கு சந்தைகளில் கிடைக்கிறது
அஃப்கானிஸ்தானில் காந்தாரி பெருங்காயம் முதல் தரமானது, ஹெராட் வகை இரண்டாம் தரம். இந்தியாவில் வெள்ளை காபூலி வகைக் காயமே மிகப்பிரபலம்.
தில்லியில் வருடத்துக்கு 630,000 கிலோ பெருங்காயம் விற்பனை செய்யும், பெருங்காயத்திலேயே பிறந்து வளர்ந்தவரென்று தன்னை சொல்லிக்கொள்ளும் மூன்றாம் தலைமுறை விற்பனையாளரான அஞ்சய் பாட்டியா ’காபூலி ராஜா’ பெருங்காய வகையே இங்கு சுடச்சுட விற்பனையாகும் பிசின் என்கிறார். மிக குறைவான விலையில் கிடைப்பது இனிப்புச் சுவையும் ஆரஞ்சின் மணமும் கொண்டிருக்கும் ஹதா வகை
இந்தியாவில் பெருங்காயம் உற்பத்தி ஆவதில்லை என்றாலும் கடும் நெடி உடைய பெருங்காயத்தை சமையலுக்கு தகுந்தவாறு தயாராக்குவது இந்தியாவில்தான் நடைபெறுகிறது குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ்(Hathras) நகர் இதில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பெருங்காயக் கலப்படத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் அசல் பெருங்காயம் நெருப்பில் கற்பூரம் போல பற்றி எரியும். போலிப் பெருங்காயம் எரியாது. அசல் பெருங்காயம் நீரில் கலந்து பால் போல நீர் மாறும். போலிப் பெருங்காயம் நீரின் அடியில் தங்கும்.
உணவுப் பயன்பாட்டுக்கிணையாக இப்பிசின் மருந்தாகவும் உலகெங்கிலும் பயன்படுகிறது. அஃப்கானிஸ்தானில் மனநோய்களுக்கும், இருமலுக்கும், ரத்தக்கொதிப்பிற்கும் பெருங்காயம் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
எகிப்தில் வலி நிவாரணியாகவும், குடற்புழு நீக்கவும், பெருங்காயம் பயன்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆஸ்துமாவிற்கும், பிரேஸிலில் பாலுணர்வை தூண்டவும் பெருங்காயத்தை பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் மாதவிலக்குப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெருங்காயத்தை பயன்படுத்துகின்றனர்.
ஆயுர்வேத மற்றும் பல பாரம்பரிய மருத்துவ முறைகள் பெருங்காயத்தை வயிற்று உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்துகின்றனர். ஓபியத்தின் போதையை முறிக்கவும் பெருங்காயம் அளிக்கப்படும்.
ஜமைக்காவில், ஆவிகள் குழந்தையின் உச்சிப்பொட்டு வாயிலாக நுழைவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, குழந்தையின் முன்புறத் தலைப்பகுதியில் பெருங்காயப் பிசின் துண்டு, துணியில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவ்ல் வூடூ வித்தைகளில் சாபமிடவும், சாபங்களிலிருந்தும், பேய் பிசாசு போன்றவைகளின் பிடியிலிருந்தும் விடுபடவும் பெருங்காயம் உபயோகிக்கப்படுகிறது.
உலகில் வேறெங்கும் பெருங்காயம் பயிராவதில்லை. இயற்கையாக வறண்ட மலைப்பிரதேசங்களில் விளையும் இவற்றை முதன் முதலில் பயிராக்கும் முயற்சியில் பெருங்காய இறக்குமதிக்கு மிக அதிக செலவு செய்து கொண்டிருக்கும் இந்தியாதான் ஈடுபட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) மற்றும் தேசிய தாவர மரபியல் வளப்பேழையகம் (NBPGR) 1963 மற்றும் 1989 ல் ஈரானிலிருந்து பெருங்காய விதைகளை தருவித்து இந்திய மலைப்பகுதிகளில் அவற்றை பயிராக்க செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்திய காலநிலை பெருங்காய மரங்கள் வளர ஏதுவானதாக இல்லை ..
இமயமலையின், உயிர்வளத் தொழில்நுட்ப நிறுவனம் (HIBT- Himalayan institute of bioresource technology) மீண்டும் CSIR உடன் இணைந்து 2017 அக்டோபரில் இருந்து பெருங்காயத்தை சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இமாசலப் பிரதேசத்தில் குவாரிங் கிராமத்தில் லாஹால் பள்ளத்தாக்கின் ( Kwaring village in Lahaul valley, Himachal Pradesh) வறண்ட குளிர்ப்பாலைகளில் பெருங்காய வளர்ச்சிக்கு ஏற்ற கால நிலை நிலவுவதால் அங்கு இந்த சோதனை முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான ICAR ன் எல்லா ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு 6 தொகுதிகளாக விதைகள் ஈரானிலிருந்து தருவிக்கப்பட்டன. (EC966538 with Import Permit-318/2018 and EC968466-70 with Import Permit-409/2018) இவற்றைச் சாகுபடி செய்வதில் இருந்த மிகப்பெரிய சவாலென்பது விதைகளின் உறக்கநிலைதான் பெருங்காய விதைகள் புதிய சூழலில் முளைக்கும் சாத்தியம் என்பது வெறும் ஒரு சதவீதம் தான்
எனவே இந்த உறக்க நிலையில் இருந்து விதைகளை விடுவிக்க சில முயற்சிகளை 2 மாதங்கள் செய்தபின்னரே அவை ஆய்வகங்களில் முளைக்கச் செய்யபட்டன
முளைவிட்ட முதல் பெருங்காய நாற்று IHBT’யின் இயக்குநர் திரு சஞ்சய் குமாரால் லஹால் பள்ளத்தாக்கில் அக்டோபர் 15, 2020 அன்று நடப்பட்டது.. இந்த பள்ளத்தாக்கில் 7 விவசாயிகளுக்கு சொந்தமான 4 நிலங்களில் இந்த பெருங்காய சாகுபடி இப்போது செய்யப்பட்டிருக்கிறது
இவை வளர்ந்து பலன் கொடுக்கும் வரை வருடத்திற்கு ஒரு ஹெக்டருக்கு 3 லட்சம் செலவாகும் என்றும் ஐந்தாம் வருடத்திலிருந்து பத்துலட்சம் லாபம் வருமென்றும் யூகிக்கப்படுகிறது.
பெருங்காயத்துடன் பாதாம், உலர் திராட்சை, அத்திப்பழம் மற்றும் பிஸ்தா பருப்பு ஆகியவையும் அஃப்கானிஸ்தானிலிருந்துதான் நமக்கு இறக்குமதியாகிறது. தாலிபான்களின் கட்டுக்குள் அஃப்கானிஸ்தான் வந்தபிறகு இவை அனைத்தின் சந்தை விலையும் அதிகமாகி இருக்கிறது. முன்பு 1400 ரூபாய் களாக இருந்த அஃப்கான் பெருங்காயம் இப்போது 2000 ரூபாய்களாகி இருக்கிறது கொல்கத்தாவின் மொத்த வியாபாரச் சந்தையான பாரா பஜார் வணிகர்கள் இது தொடக்கம்தான், விலை இன்னும் அதிகமாகும் என யூகிக்கின்றனர்.
எனவே இந்தியாவில் பெருங்காய உற்பத்தி இமாசல் பிரதேசத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாறுதலை அளிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இனிப் பெருங்காயம் உற்பத்தியாகும் என பலர் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் 22 பெருங்காய இறக்குமதி நிறுவனங்களில் ஒன்றான சேட்டன் தாஸ் லக்ஷ்மண் தாஸ் நிறுவனத்தின் சஞ்சய் பாட்டியா, அப்படிக் கொண்டாடும் அளவுக்கு ஒன்றுமில்லை என்கிறார். ’’இன்னும் சில வருடங்கள் கழித்தே வேரில் பிசின் தேவையான அளவுக்கு கிடைக்குமா என்று தெரியும், அப்படியே கிடைத்தாலும் வருடந்துக்கு ஒரு மரத்திலிருந்து 1கிலோ பிசினாவது கிடைக்கவில்லை எனில் அது இந்தியாவில் வளர்ந்தும் பிரயோஜனமில்லை, ஐந்து வருடங்கள் கழித்து கந்தஹாரின் தங்கத்தரம் வாய்ந்த காந்தாரி பெருங்காயத்தின் தரத்தில் இங்கும் கிடைத்தால் அப்போது கொண்டாடிக் கொள்ளலாம்’’ என்கிறார் இவர்.
உலகச் சந்தையில் தரமான பெருங்காயத்தை இந்தியா அளிக்குமா அல்லது ’’இந்தியக் காயமே அது பொய்யடா’’ என்று ஆகிவிடுமா வென்று இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
***
[1] காபூலிவாலா கதை திரைப்படமாக இந்தியிலும் வங்க மொழியிலும் வெளியாகி இருப்பதாகத் தெரிகிறது. வங்க மொழிப் படத்துக்கு இங்கிலிஷில் மொழிபெயர்த்த படக் குறிப்புகளுடன் திரைப்படத்தைப் பார்க்க முடியும். அதற்கான முகவரி: https://www.youtube.com/watch?v=9b5HQXgHgR4
[2] இந்த முகவரியில் உள்ள ஒரு படத்தைப் பார்க்கலாம். இது தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட கடை: https://www.laljeegodhoo.com/company-profile/
17 ஆம் நூற்றாண்டில் (1670) கர்நாடகாவில் (அப்போதைய மைசூர்) சிக்மகளூர் பழங்குடியின கொள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தொடர்ந்து நடந்த கொள்ளைகளில் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் உண்டாகி கொண்டே இருந்ததால். அங்கிருந்த மக்கள் அடிக்கடி கொள்ளையர்களுக்கு அஞ்சி இடம் மாறிக்கொண்டே இருந்தனர்.
சிக்மகளூரைச்சேர்ந்த பாபா புதான் என்னும் சூஃபி துறவி ஒருவரும் அவரது சீடர்களும் அவ்வாறு கொள்ளையர்களிடமிருந்து விலகி விலகி சென்று கொண்டே இருந்த பயணத்தில் கடைசியாக சந்திரகிரியின் ஒரு பெருங்குகையில் குடிஅமைந்தார்கள்.
குகையிலிருக்கையில் பாபா மெக்கா புனிதப்பயணத்துக்கு புறப்பட்டார், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சந்திரகிரி குகையிலேயே தங்கியிருந்தனர்.
புனித பயணத்தின் போது மெக்காவில் அனைத்து பயணிகளுக்கும் அருந்த அடர் கருப்பு நிற பானமொன்று சூடாக அளிக்கப்பட்டது. அதன் சுவையில் மெய்மறந்த பாபா அதைக் குறித்து விசாரித்தார். கஹ்வா (Qahwah) என்றழைக்கப்பட அப்பானம் சில வருடங்களாகவே மெக்கா வரும் பயணிகளுக்கு அளிக்கப்படுவதாகவும் மோகா துறைமுகத்திலிருந்து அவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதையும் கேட்டறிந்தார்.அவர் மெக்காவில் தங்கி இருந்த நாட்களிலெல்லாம் அவருக்கு அப்பானம் வழங்கப்பட்டது.
அது ஒரு புதர்ச்செடியின் கனிகளிலிருந்து எடுக்கப்படும் விதைகள் என்பதையும் அறிந்து கொண்ட பாபா இந்தியாவிற்கு திரும்புகையில் அக்கொட்டைகளை கொண்டு போக விரும்பினார்
மெக்காவிலிருந்து புறப்பட்டு ஏமானின் மோகா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த பாபா அங்கும் அதே பானத்தை அருந்தினார். அங்கு ஏராளமான கப்பல்களில் வறுத்த காபி கொட்டைகள் ஏற்றுமதியாவதையும் கவனித்தார்.
அரேபியர்கள் காபி பயிரிடுதல் வேறெந்த நாடுகளுக்கும் கிடைத்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள். எனவே அனைத்து காபிக் கொட்டைகளும் வறுக்கப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்யப்பட்டன. மோகா துறைமுகம் அப்போது காபி ஏற்றுமதிக்கு மிக பிரபலமாக இருந்தது
அரேபியாவிலிருந்து பச்சைக் காபி கொட்டைகளை பிற நாடுகளுக்கு எடுத்துச்செல்வது சட்டப்படி அப்போது தடை செய்யப்பட்டிருந்தது. பாபா கடினமாக முயற்சி செய்து பச்சைக் காபிக்கொட்டைகள் சேகரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அங்கிருந்து 7 பச்சைக் காபி கொட்டைகளை எடுத்துக்கொண்டார்.
மோகா துறைமுகத்திலிருந்து கப்பல்களில் சொந்த நாட்டுக்கு திரும்பும் பயணிகளை கடுமையாக சோதனை செய்வார்கள் என்பதால் அந்த 7 கொட்டைகளையும் தனது அடர்ந்த தாடிக்குள் பொதிந்து மறைத்து வைத்துக்கொண்டு யாரிடமும் பிடிபடாமல் கர்நாடகத்தின் சந்திரகிரி குகைக்கு வந்து சேர்ந்தார் பாபா.
அந்த காபிக் கொட்டை விதைகள் ஏழும் அவர்கள் தங்கி இருந்த அதே மலைக் குகையை சுற்றி நட்டு வைக்கப்பட்டன. சந்திரகிரியின் சாதகமான காலநிலையில். அனைத்து விதைகளும் முளைத்து காபி பயிராக வளர்ந்தன,
அந்த காபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான் கொண்டு வந்தது காபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது
அந்த 7 காபி தாய் பயிர்களின் சந்ததிகள் தற்போது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளையும் காபி பயிர்களில் கலந்திருக்கின்றன.
இப்போதும் கர்நாடக காபி வகைகளில் தாடி வைத்த துறவியின் சித்திரமும், 7 விதைகள் மற்றும் புதான் என்னும் பெயருள்ள காபியகங்களும் பிரபலமாக இருக்கிறது.
காபி ஏராளமாக பயிராகும் மேற்குத்தொடர்ச்சிமலையின் பகுதியான அந்தப்பகுதியே இப்போது பாபா புதான் குன்று என்று அழைக்கப்படுகிறது. பாபாவின் சமாதியும் அங்குதான் அமைந்துள்ளது
காபி கதைகள்
உலகின் மூன்று பிரபல பானங்களிலொன்றான காபி (தேநீருக்கும், தண்ணீருக்கு அடுத்தபடியாக) உருவான கதைகளும், காபி உலகெங்கும் பாபா புதானின் தாடிக்குள் ஒளிந்து வந்ததுபோல் பல வழிகளில் பயணித்ததும் மிக சுவாரசியமானவை. பலநூறு கதைகள் காபி பானம் கண்டுபிடிக்கப்பட்டதை குறித்து உலகெங்கிலும் இருக்கின்றன.
ஒரு புதர்ச் செடியின் பழங்களில் இருக்கும் சிறு விதையானது உலகின் இரண்டாவது மிக அதிகமாக சந்தைப்படும் பொருளாக உருவாகி இருக்கிறது என்பதை காபியின் வரலாறு மூலம் அறிந்துகொள்கையில் மிகவும் ஆச்சரியமூட்டும் .
மொராக்கோவை சேர்ந்த சூஃபி ஞானியான அக்பர் நூருதீன் அபு அல் ஹசன் (Ghothul Akbar Nooruddin Abu al-Hasan al-Shadhili) எதியோப்பியாவுக்கு பயணம் மேற் கொண்டிருக்கையில் ஒரு சில இடங்களில் பறவைகளின் விநோதமான செயல்களை கண்டார், சாதாரணமாக இருக்கும் அந்த பறவைகள் ஒரு குறிப்பிட்ட வகை புதர்களின் ரத்தச் சிவப்பு பழங்களை உண்ட பின்னர், மிகுந்த உற்சாகமடைந்து பரபரப்பாக இருப்பதை கவனித்த அக்பர் தானும் அப்பழங்களை உண்டார். அவருக்கும் பறவைகளைப் போலவே உற்சாக மிகுதியும் புத்துணர்வும் உண்டானது. அவர் அப்பழங்களின் கொட்டைகளிலிருந்து காபி உருவாக்கினார் என்பது ஒரு பிரபல காபிக்கதை.
மற்றுமொரு கதையில் அக்பரின் சீடரும், பிரார்த்தனைகள் மூலமே நோயாளிகளை குணப்படுத்தும் சக்தியும் கொண்டவரான ஓமர் என்பவர் ஒருமுறை மோகாவிலிருந்து பாலைவனம் வழியே பயணிக்கிறார். குசாப் (Ousab). என்னுமிடத்தில் இருந்த கடும்பாலை குகையொன்றிற்கு வந்து சேர்ந்த அவர் பசியிலும் சோர்விலும் தாகத்திலும் களைத்திருந்தார். உயிர் பிழைக்க வேண்டி அங்கிருந்த புதர்ச்செடிகளின் கசக்கும் பழங்களை கொட்டையுடன் உண்டார்.அவை மிக கடினமாக இருந்ததால் நெருப்பு மூட்டி அவற்றை வறுத்தும் அவை கடினமாகவே இருந்திருக்கிறது. பிறகு அங்கிருந்த சிறிதளவு குடிநீரில் அவற்றை வேகவைத்து கிடைத்த நல்ல மணமுள்ள பின்னாட்களில் காபி என்றழைக்கபட்ட அந்த பானத்தை அருந்தினார்.அதன் பிறகு அவர் பல நாட்களுக்கு பசியின்றியும் புத்துணர்வுடனும் இருந்தார்.இதுவும் ஒரு புகழ் பெற்ற காபிக்கதைதான்
இவற்றில் மிக பிரபலமானதும் உலகெங்கிலும் பரவலானதுமான கதையென்றால் அது மகிழ்ச்சியான ஆடுகளும் ஆட்டிடையனும் கதைதான். எத்தியோப்பிய (அப்போதைய அபிஸீனியா) ஆட்டிடையனான கல்தி குறிப்பிட்ட சில புதர்ச்செடிகளின் பழங்களை உண்டபின் ஆடுகள் புதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கவனித்தார். பழங்களை உண்டபின்னர் அவை உற்சாக மிகுதியில் நடனமிடுவதும் ஓடியாடுவதுமாக இருந்தன. சாதாரணமாக அவை அவ்வாறு செய்வதில்லை எனவே அந்த பழங்களில் என்னவோ புதுமையாக இருப்பதை யூகித்தார்.
அப்பழங்களை உண்ட கல்திக்கும் அதே உணர்வுகள் தோன்றியதால் அவர் அக்கொட்டைகளிலிருந்து பானமொன்றை தயாரித்த்தார் அதுவே காபி.
இக்கதையின் நீட்சியாக கல்தி தனது கண்டுபிடிப்பை ஒரு துறவியிடம் பகிர்ந்து கொண்டதாகவும் இரவெல்லாம் விழித்திருக்க ஒரு வழியை தேடிக் கொண்டிருந்த அத்துறவி அப்பழக்கொட்டையிலிருந்து உருவான பானத்தை விழிப்புடன் இருக்க மிகச்சரியான தீர்வாக கண்டுகொண்டாரென்றும், அவரிடமிருநதே காபி பானம் உலகெங்கும் பிரபலமாகியது என்றும் ஒரு துணைக்கதை உண்டு.
இக்கதைகளின் தோற்றம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இப்படியான கதைகளில் எதுவுமே 16ம் நூற்றாண்டுக்கு முன்பாக எழுத்து வடிவில் இல்லை. எனவே இக்கதைகளில் உண்மையின் சதவீதம் எத்தனை என்பதும் கணிக்க முடியாது. எனினும் காபி எத்தியோப்பியாவில் தான் தோன்றியது என்பது உண்மைதான்.இவை நடந்ததாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து சுமார் 800 வருடங்கள் கழித்து தான் இக்கதைகள் எழுத்து வடிவில் கிடைத்தன்
1583ல் லியோனார்டு ராவுல்ஃப்(Leonhard Rauwolf) என்னும் ஜெர்மன் நாட்டு தாவரவியலாளர் 10 ஆண்டுகள் அண்மைக் கிழக்கு நாடுகளில் பயணம் செய்த திரும்பிய பின்பு வெளியிட்ட தன் பயணக்குறிப்புகளடங்கிய நூலில் அவர் பயணித்த நாடுகளில் கரிய நிறத்தில் உள்ள காப்பியைக் காலையில் மக்கள் விரும்பி பருகுவது பற்றியும், அப்பானம் பல்வேறு வயிற்று நோய்களுக்குத் தடுப்பாக இருந்தது என்றும் எழுதினார்
“ A beverage as black as ink, useful against numerous illnesses, particularly those of the stomach. Its consumers take it in the morning, quite frankly, in a porcelain cup that is passed around and from which each one drinks a cupful. It is composed of water and the fruit from a bush called bunnu.’’
காபியின் பயணம்
எத்தியோப்பிய பழங்குடிகளே காபிக்கொட்டைகளை அரைத்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து உற்சாகம் அளிக்கும் பானத்தை முதன் முதலாக தயாரித்து அருந்தி உலகிற்கும் அறிமுகப்படுத்தியவர்கள் .இந்த பானத்தை அவர்கள்தான் ’’தூக்கத்தை தடுக்கும்’’ என்னும் பொருளில் “qahwa” என்று அழைத்தர்கள். இதே சொல்லுக்கு’ கொட்டைகளில் இருந்து உருவாக்கப்படும் மது’ என்றும் பொருள் இருக்கிறது
செங்கடல் வழியே காபி கொட்டைகள் எத்தியோப்பியாவிலிருந்து முதன் முதலில் யேமனுக்கு மோகா துறைமுகம் வழியே 15 ம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தது.பல்லாயிரம் ஆண்டுகளாக காட்டுப்பயிராக இருந்த காபி 1400ல் இருந்து யேமனில் பயிராகத் துவங்கியது பின்னர் 1500களில் அங்கிருந்து பெர்சியா, எகிப்து, சிரியா மற்றும் துருக்கியில் பயிராக்கப்பட்டது 1526 ல் துருக்கி ஹங்கேரியில் போர் தொடுத்த போது ஐரோப்பாவுக்கும் அறிமுகமான காபிப் பயிர் அங்கிருந்து ஆஸ்திரியா, மால்டா மற்றும் இத்தாலிக்கும் சென்றது.
மோகாவில் முதன் முதலாக காபி இறக்குமதியானதால் அக்காலத்தில் இருந்து மோகா என்பதே காபி என்பதற்கு இணையான சொல்லாக இருந்தது.
காபி குறித்த முக்கியமான தடயங்களும் ஆவணங்களும் 15 ஆம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் தான் யேமனின் சூஃபி மடங்களில் இருந்து கிடைத்தன.யேமனில் காபி ஏராளமாக பயிரிடப்பட்டது, யேமனிய சூஃபீக்கள் உற்சாக மனநிலையில் மந்திரங்களை உச்சரிக்க காபியை தொடர்ந்து அருந்தினார்கள்
அங்கிருந்து பின்னர் காபி மெக்கா, மெதி்னா மற்றும் மாபெரும் நகரங்களான கெய்ரோ, டமாஸ்கஸ் மற்றும் கான்ஸ்டண்டினோபிலுக்கும் அறிமுகமானது.1414 ல் காபி மெக்காவில் வெகுவாக புழக்கத்தில் இருந்திருக்கிறது.
1500 களில் வட ஆப்பிரிக்காவிற்கு அறிமுகமான காபி .அங்கு அரேபிய மது என்று அழைக்கப்பட்டு பிரத்யேக கடைகளில் விற்கப்பட்டு மேலும் பிரபலமடைந்தது. இந்த காபிக்கடைகள் அறிவாளிகள் கூடும் இடம் என்று அழைக்கப்பட்டது. 1500களில் மது என்று பொருள்படும் பெயரில் இருந்த குழப்பத்தால் மெக்காவில் காபி மத ரீதியான காரணங்களைக்காட்டி தடைசெயபட்ட பானம் என அறிவிக்கபட்டது. அதே காலகட்டத்தில் எகிப்திலும் எதியோப்பாவிலும் காபி தடைசெய்யபட்டது
இந்த தடைக்கெதிராக தொடங்கிய போராட்டங்கள் பெரும் வன்முறையில் முடிந்ததால் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
கிழக்கே இந்தியா, இந்தோனேஷியாவிலும், மேற்கே இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பிறபகுதிளுக்கும் காபி அறிமுகமாகி வேகமாக பிரபலமாகியது
ஐரோப்பாவிற்கு காபி மால்டா தீவுகளில் 16 ஆம் நூற்றாண்டில் அடிமை வர்த்தகத்தின் வழியே (1565ல்) நுழைந்தது. துருக்கிய இஸ்லாமிய அடிமைகள் மால்டா தீவுகளில் சிறைவைக்க பட்டபோது சிறையில் அவர்கள் தங்களுடன் கொண்டுவந்திருந்த காபிக்கொட்டைகளிலிருந்து அவர்களின் பாரம்பரிய பானமான காபியை தயாரித்து அருந்தினார்கள். அவ்வழக்கம் பின்னர் சிறைக்கு வெளியேவும் பரவியது
காபி தேவைப்படும் நாடுகள் அவற்றை ஏமனிலிருந்து இறக்குமதி செய்தனர். ஏமனிய அரசு இதை மிகக்கவனமுடன் செய்தது எந்தக்காரணத்தை கொண்டும் காபி விற்பனயை பிற நாடுகள் செய்யாவணணம் பாதுகாத்தது. ஏற்றுமதி செய்யப்படும் கொட்டைகள் அனைத்துமே வறுக்கப்பட்டு முளைதிறன் இழந்தவைகளாக இருப்பதை மிக மிக கவனமுடன் சரிபார்த்த பின்னரே எற்றுமதி செய்யப்பட்டன. அப்போதுதன் பாபா புதான் அவற்றிலிருந்து 7 கொட்டைகளை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.
பல்லாண்டுகள் கழித்து ஒரு டச்சு குடும்பத்தினரும் ஏமனிலிருந்து காபி கொட்டைகளை திருடி ஹாலந்தில் பயிரிட முனைந்தனர். ஆனால் ஹாலந்தின் காலநிலையில் காபிக்கு தேவையான வெப்பம் கிடைக்கததால் காபி பயிர் அப்போது அங்கு வளரவில்லை
இதே சமயத்தில் மிக சரியாக டச்சு கவர்னருக்கு இலங்கையிலிருந்து சில காபி கொட்டைகள் பரிசளிக்கப்பட்டன அதன் பிறகு காபி பயிரிடுதல் பலமுறை தோல்வியுற்றாலும் 1704ல் அங்கு காபி வெற்றிகரமாக பயிராகியது
1669ல் ஃப்ரான்ஸில் காபி அறிமுகமானது. அங்கும் காபி கடைகளில் ஆண்கள் கூடுவதும் நேரம் செலவழிப்பதும் வழக்கமானது. 1674ல் கணவர்கள் காபி கடைகளிலிருந்து வீட்டுக்கே வருவதில்லை என்னும் காரணததைக்காட்டி பெண்கள் காபி கடைகளை மூட பொதுநல வழக்கு தொடுக்கும் அளவுக்கு காபி கடைகளில் ஆண்கள் கூட்டம் இருந்தது. 18 ம் நூற்றாண்டில் 14 ம் லூயிஸ் மன்னருக்கு ஆம்ஸ்டர்டாம் மேயரால் காபி நாற்று பரிசளிக்கபட்டது. எனினும் அது நன்கு வளரவில்லை எனவே அது பிரத்யேக பசுமைக்குடிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது பின்னர் அந்த சிறு செடி பாரிஸின் ராயல் தாவரவியல் பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டது
ஃப்ரன்ச் கப்பற்படை தளபதியான டி க்ளூ (Gabriel Mathieu de Clieu) பாரீ்ஸூக்கு வந்திருந்த போது அவர் அங்கிருந்த காபி செடியை (அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ) எடுத்துச் சென்றிருக்கிறார்
அங்கிருந்து கரீபிய தீவுகளுக்கு கடல்வழி பயணித்த டி க்ளூ அந்த நீண்ட பயணத்தில் அச்செடி வாடிவிடாமல் பாதுகாக்க அரும்பாடு பட்டிருக்கிறார் அவருக்கென வழங்கபட்ட குடிநீரை செடிக்கு ஊற்றிவிட்டு பலநாட்கள் அவர் தாகத்தில் இருந்திருக்கிறார்
கரீபியன் தீவுகளுக்கு வந்து சேர்ந்த டி க்ளூ பிறசெடிகளுடன் காபிச்செடியை ரகசியமாக கலந்து நட்டு வைத்தார். 3 வருடங்களில் கரீபியன் தீவுகளிலும் அதனை சுற்றியிருந்த பகுதிகளிலும் காபி பயிரிடுதல் பரவி இருந்தது.
இப்போது காபிக்கு பிரபலமாயிருக்கும் பிரேஸிலுக்கு காபி வந்த கதையும் கொஞ்சம் வித்தியாசமும் ரம்மியமுமானதுதான்
1727ல் பிரேசிலின் ராணுவ அதிகாரியான ஃப்ரான்ஸிஸ்கோ (Francisco de Melo Palheta) கியானாவுக்கு, டச்சு மற்றும் ஃப்ரான்ஸூக்கு இடையேயான ஒரு பிரச்சினையை பேசித் தீர்த்துவைக்க அனுப்பப்பட்டிருந்தார். உண்மையில் ஃப்ரான்ஸிஸ்கோவின் நோக்கம் சண்டையை தீர்ப்பது மட்டுமல்ல காபி செடியை பிரேசிலுக்கு கொண்டுவருவதும்தான்.
ஃப்ரென்ச் கவர்னரிடம் ஃப்ரான்ஸிஸ்கோ காபிச்செடிகளை கேட்டபோது அவருக்கு அது மறுக்கப்பட்டது. ஃப்ரென்ச் கவர்னரின் மனைவிக்கு சில நாட்களில் நெருக்கமாகிக் விட்ட ஃப்ரான்ஸிஸ்கோ காதலியாகிவிட்டிருந்த அவரிடமிருந்து ரகசியமாக சில காபி செடிகளின் நாற்றுக்களை எளிதில் பெற்றுக்கொண்டார்
அப்படி மணவுறவுக்கு வெளியெயானதொரு பந்தத்தில் பிரேஸிலுக்குள் நுழைந்த காபிச்செடிகளிலிருந்து 1822லிருந்து காபி உற்பத்தி துவங்கி 1852 லிருந்து இன்று வரைஉலகின் முன்னனி காபி உற்பத்தியாளராக பிரேஸிலே இருந்துவருகிறது
அட்லாண்டிக் கடலை கடந்த காபி அமெரிக்காவில் தேயிலைக்கு மாற்றாக புரட்சியாளர்களால் 1773 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹவாயில் 1825 ல் காபி பயிராக துவங்கியது. அமெரிக்காவில் மிக மிக குறைந்த அளவே காபி பயிராகின்றது. எனினும் உலகின் முன்னணி காபி இறக்குமதியாளராக இருப்பது அமெரிக்காதான்.
19 ஆம் நூற்றாண்டில், காபி உலகாளவில் புகழ்பெற்ற விருப்ப பானமாகிவிட்டிருந்தது.
1932ல் பொருளாதார காரணங்களால் பிரேஸில் தனது விளையாட்டு வீர்களை லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கிற்கு அனுப்ப முடியாமல் போனபோது வீரர்கள் பயணிக்கும் கப்பல் முழுக்க காபி கொட்டைகள் நிரப்பப்பட்டன கப்பல் கரையணையும் பகுதிகளிலெல்லாம் காபிக்கொட்டைகளை விற்பனை செய்தே அவர்கள் எந்த நிதி பற்றாக்குறையும் இன்றி லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சேர்ந்தனர்.
காபியின் பெயர்
அரபு மொழிச் சொல்லான கஹ்வா ஆட்டோமன் துருக்கி மொழியின் கஹ்வே (kahve) என்பதில் இருந்து பெறப்பட்டது.. இது இத்தாலிய மொழியில் caffè என்றும் பிரெஞ்ச்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ் மொழிகளில் café என்றும் வழங்கப்பட்டது.
முதன் முதலில் 16 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் coffee என்னும் பெயர் ஐரோப்பாவில் வழங்கத் தொடங்கினாலும், ஏறத்தாழ 1650 வாக்கில் தான் ஆங்கிலத்தில் cahve, kauhi, coffey மற்றும் caufee என்றெல்லாம் அழைக்கப்பட்ட காபி இந்த காபி என்னும் இறுதி வடிவத்துக்கு வந்தது
ஐரோப்பாவில் காபியை Caffee என்னும் பெயரில் பரவலாக்கியவர்கள் இத்தாலியர்கள் அரபி மொழியின் Qahwah பீன்ஸ்களிலிருந்து கிடைக்கும் மது என்னும் பொருள் கொண்டது.
இந்திய காபி
இந்தியாவில் காபி அருந்தப் பட்டதை குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம் 1616 ல் ஜஹாங்கீர் அரசவையில் ஜேம்ஸ் மன்னரின் தூதராக இருந்த சர் தாமஸ் என்பவரின் மதகுருவான எட்வர்ட் டெர்ரி என்பவரால் எழுதப்பட்டது
டெர்ரி அவரது நூலில் ’’பல இந்தியர்கள் தங்களின் மத கோட்பாடுகளின் படி மது அருந்துவதில்லை, எனினும் அவர்களில் பலர் மதுவைக் காட்டிலும் சுவையான கறுப்புக்கொட்டைகளை நீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் காபி எனும் பானத்தை விரும்பி அருந்துகிறார்கள் அந்த பானம் ஆறிப்போனால் நீர்த்து, சுவை இழந்து விடுகிறது சூடாக அருந்துகையில் வெகுவாக புத்துணர்ச்சி அளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
டெர்ரியின் ஆவணத்துக்கு பிறகு சுமார் 200 ஆண்டு்கள் கழித்தே 1840 ல் பிரிட்டிஷ் இந்தியாவில் வணிகரீதியான காபி பயிரிடுதல் துவங்கியது.
19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா முழுவதும் ஏராளமான காபியகங்கள்/காபி பானமருந்தும் கடைகள் உருவாகின. இந்தியாவின் முதல் காபிக்கடை1827ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட பெங்கால் காபி கிளப். அதனை தொடர்ந்து மெட்ராஸ் காபி கிளப் 1832 லும் பெங்களூர் கிளப் 1863லும் தொடங்கப்பட்டன.
விக்டோரிய அரச விருந்துகளில் இரவுணவுக்குப் பிறகு காபி அருந்தும் சம்பிரதாயம் பரவலானபோது மக்களிடையேயும் காபி அருந்தும் பழக்கம் வேகமாக பரவியது
மொத்த காபி உற்பத்தியில், மிக தரமான காபியை உற்பத்தி செய்யும் உலகநாடுகளில் 6 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 16 வகையான மிக தரமான காபி வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சம் காபி சாகுபடியாளர்கள் உள்ளனர்.
தென்னிந்தியாவில் கேரளா தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இந்தியாவின் பிற பகுதிகளை விட மிக அதிகம் காபி விளைகிறது
தென்னிந்தியாவின் டிகிரி காப்பியின் பெயர் வந்த கதையும் சுவாரஸ்யமானதுதான்
பாலின் அடர்த்தியையும் பாலில் கலந்துள்ள நீரையும் அளக்கும் லேக்டோ மீட்டர் அளவுகளுக்கு பிறகு தரம் பிரிக்கப்படும் முதல் தரமான பால் டிகிரி பால் என்றழைக்கப்பட்டது
அவ்வாறான முதல்தர டிகிரி பாலில் கலக்கப்பட்ட முதல் டிகாக்ஷனிலிருந்து பெறப்பட்ட காபியே டிகிரி காப்பி.
இன்றைய காபி கடந்து வந்த பாதை
200 வருடங்களில் காபி சாகுபடியிலும் காபி கொட்டைகள் பக்குவ்படுத்தப்படுவதிலும் வறுத்தரைக்கும் வெப்பநிலையிலும் கொண்டுவரப்பட புதிய உத்திகளும் மாற்றங்களுமாக காபி ஏராளமான மாற்றங்களை அடைந்திருக்கிறது
1818ல் பாரிஸ் உலோகவியலாளர் ஒருவரால் தயரிக்கப்பட்டது உலகின் முதல் காபி வடிகட்டும் இயந்திரம்.1865 ல் அதன் மேம்படுத்திய வடிவம் அமெரிக்காவில் கண்டறியபட்டு ஜேம்ஸ் நேசன் என்பவர் அதற்கு காப்புரிமையும் பெற்றார்
1864 ல் நியூயார்க்கை சேர்ந்த ஜேபெஸ் பர்ன்ஸ் என்பவரால் (Jabez Burns) முதல் காபி கொட்டை வறுக்கும் இயந்திரம் உருவானது
1871ல் ஜான் அர்பக்கில் (John Arbuckle) காபித் தூளை அளந்து, காகித கவர்களில் கொட்டி, சீல் வைத்து, முத்திரைத்தாள் ஒட்டும் தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்தார்
1886 ல் ஜோயெல் சீக் (Joel Cheek) பிரபல Maxwell House என்னும் பெயரில் புதிய காபி வகையை உருவாக்கினார். மேக்ஸ்வெல் உடனடி காபி தூள் (instant coffee) இரண்டாம் உலகப்போரின் போது குடிமக்களும் ராணுவ வீரர்களும் ஏராளமாக அருந்திய பானமாக இருந்தது.
1900 ல் நெஸ்ட்லே நிறுவனம் குளிர வைத்த அரைத்த காபி குழம்பை பதப்படுத்தி உலர செய்து அதிலிருந்து உடனடி காபியை கண்டுபிடித்தது. இன்றும் நெஸ்ட்லே வின் இந்த தயாரிப்புத்தான் உலகளவில் முன்னிலையில் இருக்கிறது
பணி இடைவேளைகளில் விரைவில் காபி அருந்திவிட்டு பணிக்கு திரும்ப செல்ல வசதியாக காபி தயாரிக்கும் நேரத்தை குறைப்பதற்கு லூயிகியால் (Luigi Bezzera) காபித்தூளில் நீரையும், நீரவியையும் கடும் அழுத்தத்தில் சல்லடை வழியே பீய்ச்சி அடித்து உருவாகும் எஸ்பிரெசோ காபி இயந்திரம் 1901 ல் இத்தாலியில் உருவாக்கப்பட்டது.. பின்னர் அது பலரால் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது
1933. Dr. Ernesto Illy முதல் தானியங்கி எஸ்ப்ரெசோ இயந்திரத்தை கண்டுபிடித்தார் அவரது கூற்றுப்படி நல்ல தரமான எஸ்ப்ரெசோ காபியின் நிறம் நாக்கில் ஒட்டிக் கொள்ள வேண்டும் .இவரே எஸ்ப்ரெசோவின் தந்தை என கருதப்படுகிறார்
1908 ல் ஒரு ஜெர்மானிய பெண்மணி தனது மகனின் பழைய பள்ளி புத்தக காகிதங்களை உபயோகித்து எளிய காகித காப்பி வடிகட்டியை உண்டாக்கினார்.அதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது
1960களில் காபி இன்னொரு புரட்சிகரமான மாற்றதுக்கு உள்ளானது அல்ஃப்ரெட் பீட் (Alfred Peet) எனும் டச்சு அமெரிக்கர் ஒருவர் ஹாலந்தில் காபி விற்பனை செய்து கொண்டிருந்த தனது தந்தையிடமிருந்து காபி கொட்டையை வறுக்கும் கலையை அறிந்து கொண்டு. 1966ல் கலிஃபோர்னியாவில் பீட் காபி நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார். மிக வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த அந்த நிறுவனத்துக்கு பிறகு 1971 ல் பீட் சியாட்டிலில் ஒரு புதிய கிளையை துவங்கினர் அதுவே ஸ்டார்பக்ஸ் நிறுவனம்.( Starbucks.)
முதலில் வறுத்த காபி கொட்டைகள் மட்டும் இங்கு விற்பனை செய்யப்பட்டன.பின்னர் காபி பானமாகவும் விற்பனை செய்யப்பட்டது.
1982 ல் இத்தாலியின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று விதம் விதமான காபி தயாரிப்புக்களை குறித்து கற்றுத்தேர்ந்த, காபி பான விற்பனையில் தேர்ந்த அனுபவமும் கொண்டிருந்த ஹவர்ட் ஷ்யூல்ட்ஸ் (Howard Schultz), ஸ்டார் பக்ஸின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொள்கை ரீதியான சில கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு 1984ல் ஹவர்ட் அதிலிருந்து விலகி தனது சொந்த காபி நிறுவனமான Il Giornale வை துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். ஹவர்ட் குறுகிய காலத்திலேயே ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தை சொந்தமாக $3.8 மில்லியனுக்கு வாங்கி இத்தாலிய கலவையுடன் மிகத்தரமான சுவையான காபியை வழங்கினார். பின்னர் ஸ்டார்பக்ஸ் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு பரந்து விரிந்து கிளை பரப்பி உலகெங்கும் காபியின் பேரலையை உருவாக்கியது.
உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் 30,000 கிளைகள் உலகெங்கும் மிக வெற்றிகரமாக செயல்படுகின்றன இதனை தொடர்ந்து இருப்பவை Dunkin’ Donuts, Tim Hortons, Costa Coffee, மற்றும் McCafe ஆகிய நான்கு நிறுவனங்கள்.
நான்கு மிகப்பெரிய காபிக்கொட்டைகளை வறுக்கும் நிறுவனங்கள் Kraft, P&G, Sara Lee மற்றும் Nestle. இவை நான்கும் உலகின் மொத்த காபி உற்பத்தியில் 50 சதவீதத்தை வாங்கிக்கொள்கிறார்கள் .
காபி பயிர்
600 பேரினங்களும் 13, 500 இனச்செடி வகைகளும் உள்ள ருபியேசி (Rubiaceae) குடும்பத்தைச் சேர்ந்த காபி பயிர்கள் பசுமை மாறா புதர்கள் அல்லது குறுமரங்களாக 10 லிருந்து 15 அடி உயரம் வரை வளரும். இவற்றின் எதிரடுக்கில் அமைந்திருக்கும் அகலமான அடர் பச்சை இலைகள் பளபளப்பானவை, வெளை நிற அழகிய மலர்கள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும்
காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான சிற்றின வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு, காபி பானம் தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டு இனங்களின் அறிவியல் பெயர்கள் காப்பியா அராபிக்கா (Coffea arabica) மற்றும் காபியா கன்னெஃபோரா (Coffea canephora) (காபியா ரொபஸ்ட்டா (Coffea robusta) என்பது இதன் இணைப்பெயர்). மேலும் சில காபி பயிர்வகைகள் இருப்பினும் வணிகரீதியான வெற்றிகரமான இருவகைகள் அராபிகா மற்றும் ரொபஸ்டா ஆகியவையே
அராபிகா காபி என்பது”மலை காபி” என்றும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு அரேபியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டு வரும் இந்த வகையே காபியின் முதல் இனம் என்று நம்பப்படுகிறது. வணிக ரீதியாக வளர்க்கப்படும் மற்ற பெரிய காபி இனமான Coffea canephora வை (robusta) விட இது சிறந்த காபியை உற்பத்தி செய்கிறது ரொபஸ்டா காபி வகைகளை விட அரேபிகாவில் காஃபின் அளவும் குறைவுதான்.
ரொபஸ்டா மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய காபி வகை. அங்கு கொனிலன் (Conillon) என்று அழைக்கப்படும் இப்பயிர் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் வளர்க்கப்படுகிறது,
காபி செடியிலிருந்து முதிர்ந்த பழங்கள் இயற்கையான உலர்ந்த முறை மற்றும் ,கழுவிய ஈரமாக்கப்பட்ட முறை ஆகிய இரண்டு விதங்களில் பக்குவப்படுத்தப் படுகின்றன.
சந்தைப்படுத்த பட்டிருக்கும் காபி பயிரின் நான்கு முக்கிய இனங்கள்
Arabica, Robusta, Excelsa, மற்றும் Liberica இவை நான்கும் உலகின் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் காபியின் முக்கிய நான்கு வகைகள் . நான்குமே அவற்றிற்கான பிரத்யேக சுவையும் மணமும் கொண்டிருப்பவை
அரேபிகா
இதுவே உலகின் மிக பிரபல காபி வகை. உலகின் 60 சதவீத காபி அரேபிகா காபிதான். பால் கலக்காத கருப்பு காபிக்கேற்றது இந்த வகைதான்.
ரொபஸ்டா
அரேபிகாவிற்கு அடுத்ததாக இருக்கும் ரொபஸ்டா உலகின் இரண்டாவது அதிக உற்பத்தியாகும் காபி இனம். பாலும் சர்க்கரையும் கலந்து உண்டாக்கப்படும் காபி வகைகளுக்கு ஏற்றது ரொபஸ்டா.
லிபெரிகா
லிபெரிகா காபிகொட்டைகள் கடினமானவை. பிற வகைகளை காட்டிலும் இவை அளவில் பெரியவை, மேலும் காபிக்கொட்டை வகைகளில் இவைதான் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. இந்தோனேஷியாவில் இவ்வகை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றின் நறுமணமும் பிரத்தியேகமானது
எக்ஸெல்சா
இவை வித்தியாசமான பழங்களின் நறுமணம் கொண்ட கொட்டைகள் Coffea liberica var. dewevrei என்னும் இவ்வகை 2006 ல் தான் சரியாக தாவரவியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டது தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் விளையும் இவை மொத்த காபி உற்பத்தில் வெறும் 7 சதவீதம் தான்.
இவற்றுடன் இப்போது புதிதாக அட்ரினோ என்னும் மஞ்சள் பழங்களைக் கொண்டிருப்பது மற்றும், பப்பா நியூ கினி காப்பியான ஜமைக்காவின் நீல மலைக்காப்பி ஆகிய இரு வகைகளும் பிரபலமடைந்திருக்கின்றன.
கஃபின் ஆல்கலாய்டு
காபி அருந்தப்படுவதற்கு அதிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தான் காரணம் என்பது எத்தனைக்கு உண்மையோ அத்தனை உண்மை அதிக காஃபின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதுவும்.
Friedlieb Ferdinand Runge, என்பவரால் 1819 ல் காபி கொட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த காஃபின் ஆஸ்பிரின், அசெட்டமினோஃபென் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளின் செர்மானங்களில் ஒன்றாக இருக்கிறது
பச்சிளம் குழந்தைகளுக்கும், அறுவை சிக்கிசை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் காஃபின் ஒவ்வாமையை உருவாக்கும் பெரும்பாலான காஃபின் காபி கொட்டைகளிலிருந்தல்லாது செயற்கையாகவும் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகிறது.
காஃபின் நீக்கம் (Decaffeination)
காபியின் சுவை மட்டும் இருந்தால் போதும் அதில் இருக்கும் காஃபின் வேண்டாம் என்பவர்களுக்காக உருவானதுதான் காஃபின் இல்லாத காபி. சில வேதிச்செயல்களின் மூலம் காஃபின் நீக்கப்படுகிறது.
விலையுயர்ந்த காபி வகைகள்
உலகின் மிக அதிகவிலையுள்ள காபி புனுகு பூனைகளுக்கு காபி பழத்தை உண்ணக்கொடுத்து அவற்றின் கழிவில் செரிமானமாகாமல் வந்திருக்கும் காபிக்கொட்டைகளிலிருந்து பெறப்படும் கோப்பி லூவாக் (Kopi Luwak) காப்பிதான் .அதிக விலை கொண்ட தாவர உணவுகளின் பட்டியலில் இருக்கும் கோப்பி லுவாக்கின் விலை கிலோ 400 டாலர்கள்.
இதைப்போலவே காபி பிரியர்கள் அவசியம் சுவைத்து பார்க்கவேண்டிய ஒரு புதுமையான காபி கருப்பு தந்தக்காபி வகை(Black ivory coffee) இதில் பசும் புல்லின் வாசனையும் தானியங்கள், சாக்கலேட் மற்றும் காபியின் மென் கசப்புச்சுவை ஆகியவை கலந்திருக்கும் பிரெத்யேக நறுமணம் இருக்கும்
மேலும் இந்தக்காபி அருந்துவதன் மூலம் அளிக்கபப்டும் தொகையானது ஆசிய தங்க முக்கோண யானை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு நேரடியான உதவியாக சென்று சேரும்
மிகத் தூய அரேபிகா காபி கொட்டைகளும், அரிசிச்சோறு, வாழைப்பழம், புளி ஆகியவையும் கலக்கப்பட்டு யானைகளுக்கு உணவாக கொடுக்கப்படும். 12 லிருந்து 72 மணி நேரத்தில் யானையின் கழிவில் இருந்து செரிமானமாகாத காபிக்கொட்டைகள் பிரித்தெடுக்கப்paடுகின்றன.வறுத்து அரைக்கப்பட்டு தயாராகும் இக்காபி ஒரு கிலோ இந்திய ரூபாய்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகிறது. சுமார் 33 கிலோ காபிக்கொட்டைகளிலிருந்து ஒருகிலோ இவ்வகை காப்பி கிடைக்கிறது
தாய்லாந்தில் உருவாகும் இதுவே உலகின் அரிய வகை காபியுமாகும்
காபி இப்போது
21ஆம் நூற்றாண்டில் வாடிக்கையாளர்களின் தொடர்ந்து மாறிவரும் தேவையை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. நறுமணத்தை பாதுகாக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் காபி குளிகைகளில் அடர்காபி திரவம் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது
இவற்றை உடைத்து கொதிநீரிலோ அல்லது பாலிலோ கலந்தால் சுவையான நறுமணம் கொண்ட காபி தயாராகிவிடும். இந்த காபி குளிகைகள் இப்போது இணைய தளத்திலும் விற்பனையாகின்றன.
இன்று காபி உலகின் இரண்டாவது அதிக சந்தைப்படுத்தப்படும் பொருள்,(முதலிடத்தில் கச்சா எண்ணை இருக்கிறது) . தற்போது சுமார் 500 மில்லியன் மக்கள் உலக காபி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது உலக வங்கியின் புள்ளி விவரம்.
2020ல் உலக காபி வர்த்தகம் சுமார் 465.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது உலகின் அனைத்து விதமான காபி வகைகளின் ஒட்டு மொத்த மற்றும் சில்லறை வணிகங்களை உள்ளடக்கிய மதிப்பு
காபி புத்துணர்ச்சி அளிப்பதோடு அதிலிருக்கும் முக்கிய சத்துக்களான வைட்டமின்களும் புரதங்களும் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. அதிக அளவில் அருந்துகையில் காபி தூக்கமின்மை பரபரப்பு ஆகியவற்றையும் உருவாக்கும்.அதிக காபி ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்கும்.குழந்தைகளும் கர்ப்பிணிகளும் முதியவர்களும் அதிக காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் மிக அதிக சர்க்கரை சேர்க்கப் பட்ட காபி நிச்சயம் எல்லா வயதினருக்கும் ஆபத்துதான்
உலகெங்கும் மிகப்பிரபலமான 30 வகைகாபிகளில் முதல் இடங்களில் இருப்பது பாலில்லாத கருப்பு காப்பி, பால் கலந்த காபி, க குளிர் காபி ,கேப்பசீனோ மற்றும் எஸ்பிரெசோ ஆகியவை.(பிரபல கேப்பசீனோ காபி கேப்பசின் துறவிகளின் துறவாடையின் அடர் மண் நிறத்தில் இருப்பதால் அப்பெயரை கொண்டுள்ளது)
உலகின் மிக அதிக காபி ஏற்றுமதி நாடுகள் பிரேஸில், வியட்னாம் இந்தோனேஷியா, கொலம்பியா, மற்றும் இந்தியா ஆகியவை. காபி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 2.6 மில்லியன் டன் பச்சைக்காபிக்கொட்டைகள் பிரேசிலில் உற்பத்தி செய்யப்படுகின்றது
சென்ற வாரம் ஏற்காடு காபி தோட்டத்தில் அதிகாரியாக இருக்கும் மாணவி ஒருத்தியை பார்க்க சென்றிருந்த போது அங்கு பலநூறு ஏக்கர்களில் காபியா ரொபஸ்டா மற்றும் காபியா அராபிகா வகைகள் பயிராகிக்கொண்டிருந்தன. புதிய புதிய ஆய்வுகள் காபி பயிர்களில் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு அங்கு செய்யப்பட்டு கொண்டிருக்கிருந்தன. அன்று காபித்தோட்டத்தின் சில்வர் ஓக் மரங்களினடியில் அமர்ந்து அருமையான நறுமணம் மிக்க மிகச் சுவையான காபியை அருந்துகையில் சூஃபி துறவியின் தாடிக்குள் மறைந்துகொண்டு சுமார் 6500 கிமீ பயணித்து வந்த காபியின் பயணத்தை நினைத்துக் கொண்டேன்.
தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு மலைமுடியான அகஸ்திய மலையில் பல்ப்பு புஷ்பாங்கதன்1 தன் குழுவினரோடு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அது 1987ன் டிசம்பர் மாதம். புஷ்பாங்கதன் கேரளா, ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆய்வு நிறுவனத்தின்(JNTBGRI-Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) அப்போதைய இயக்குநர். அகஸ்திய மலைதான் காணி2 பழங்குடியினரின் வசிப்பிடம். அவருடன் அனைத்திந்திய ஒருங்கிணைந்த இன உயிரியல் ஆராய்ச்சித் திட்டத்தை (All India Co-ordinated Research Project on Ethnobiology-AICRPE) சேர்ந்த ஆய்வாளர்களும் இருந்தனர். பழங்குடி தாவரவியல் ஆய்வுக்காக அக்குழு மலையேறிக்கொண்டிருந்தது
அந்த மலையின் பழங்குடிகளான மல்லன் மற்றும் குட்டிமாத்தன் காணிகளும் வழிகாட்டிக்கொண்டு அவர்களுடன் வந்தனர்.
மார்ச் 2016 ல் யுனெஸ்கோ புதிதாக பட்டியலிட்டிருக்கும் 20 உயிர்க்கோள காப்பகங்களில் (Biosphere reserves ) அகஸ்திய மலையும் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1868 மீ உயரத்தில் இருக்கும் அகஸ்திய மலை அடர்ந்த புதர்க்காடுகள், மரக்கூட்டங்கள் செங்குத்தான பாறைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், பல துண்டிக்கப்பட்ட சிகரங்கள் ஆகியவற்றை கொண்டது. கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின் பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை எடுத்து உண்பதை அவர்கள் கண்டார்கள்
குழுவினர் மிகக்களைத்துப் போனபோது மலையேற்றம் தடைப்பட்டது. அப்போது அவர்களுக்கும் அக்கனிகள் பழங்குடியினரால் வழங்கப்பட்டன அவற்றை உண்டதும் குழுவினருக்கு களைப்பும், பசியும், சோர்வும் போன இடம் தெரியாமல் புத்துணர்வும் உற்சாகமும் அடைந்தனர்.
பழங்குடியினர் பயன்படுத்தும் தாவரங்கள் குறித்த ஆய்வுக்காகத்தான் அந்த மலையேற்றம் நடந்துகொண்டிருந்தது. எனவே வழிபடப்போன தெய்வம் கூடவே வந்ததைப்போல மகிழ்ந்த ஆய்வுக்குழுவினர் எத்தனை முறை கேட்டும் காணிகள் அப்பழங்கள் குறித்த மேலதிக விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
காணிகள்3 மேற்கு தொடர்ச்சி மலையின் மூலிகைகளை ஆரோக்கியத்திற்காகவும், பல்வேறு சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தும் பாரம்பரியத்தை கொண்டவர்கள். காடுகளில் இவர்கள் அறியாத தாவரங்களோ விலங்கினங்களோ உயிரினங்களோ இல்லை. இவர்களில் பிளாத்தி எனப்படும் பழங்குடி மருத்துவர்கள் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக, தலைமுறைகளாக கடத்தப்பட்ட மருத்துவ அறிவை கொண்டிருப்பவர்கள்
காணிகளின் தொல்மரபுப்படி பிளாத்திகளே மூலிகைகளின் பயன்பாட்டை குறித்து பிறரிடம் பகிர்ந்து கொள்ள உரிமை உள்ளவர்கள்.
குழுவினர் பலமுறை வற்புறுத்திக்கேட்டு, அவர்களின் ஆராய்ச்சியின் நோக்கத்தை சொல்லி புரியவைத்த பின்னர், அந்த பழங்கள் குறித்தும் அது பெறப்பட்ட தாவரத்தைக் குறித்தும் தகவல்களை அறிந்துகொள்ள பிளாத்தியிடம் குழுவினரை அழைத்து செல்ல காணிகள் சம்மதித்தனர்.
பிளாத்தி அந்த மூலிகை ’ஆரோக்கிய பச்சை’ என்னும் தாவரம் என்பதை அவர்களுக்கு தெரிவித்தார். அம் மூலிகையின் அறிவியல் பெயர் Trichopus zeylanicus ssp. Travancoricus என்பதை குழுவினர் அறிந்திருந்தும் அதன் மருத்துவப்பண்புகளை அன்றுதான் கண் கூடாக கண்டுகொண்டனர்
ஆரோக்கியபச்சையின் அசாதாரண மருத்துவ குணங்களை நேரிடையாக அனுபவித்து அறிந்திருந்த புஷ்பாங்கதன் அதனை முறையாக ஆய்வு செய்து அது பாதுகாப்பான மூலிகையென்னும் பட்சத்தில் அதனை வெற்றிகரமாக சந்தைப்படுத்தும் சாத்தியங்கள் குறித்து சிந்தித்தார்.
ஆரோக்கியபச்சையின் சில செடிகளை அங்கிருந்து ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு குழுவினர் மலையேற்றத்தை முடித்தனர்.
முதல்கட்டமாக ஆரோக்கிய பச்சை இலைகள் மற்றும் பழங்களின் சோர்வு நீக்கும் பண்புகளை ஜம்முவின் பிராந்திய ஆய்வு நிறுவனம் உறுதி செய்தது (Regional research laboratory, Jammu) பின்னர் ஆரோக்கிய பச்சையில் பலகட்டங்களாக வேதிஆய்வுகள் புஷ்பாங்கதனின் ஆய்வுக்கூடத்தில் நடந்தன.சுமார் 8 வருடங்கள் நீடித்த அந்த மிக முக்கியமான ஆய்வுகளில் ஆரோக்கிய பச்சையின் பழங்கள் மட்டுமல்லாது அதன் இலைகளும் அதிமுக்கியமான மருத்துவப் பயன்பாடுகளை கொண்டிருப்பதை தெரியவந்தது. குறிப்பாக சோர்வு மற்றும் மன அழுத்தம் நீக்குதல் மற்றும் நோயெதிர்ப்பை தூண்டும் பண்புகள்.
ஆரோக்கிய பச்சை கட்டிகள் உருவாவதை தடுக்கவும், கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கவும், உடலின் இயற்கை பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதையும் ஆய்வுகள் திட்டவட்டமாக தெரிவித்தன
எட்டாவது வருடம் புஷ்பாங்கதன் தலைமையிலான ஆய்வுக்குழு ஆரோக்கிய பச்சையின் மருத்துவ குணங்களுக்கு காரணமான 12 முக்கியமான வேதிப் பொருட்களை பிரித்தெடுத்தது. இந்த வேதிப்பொருட்களுடன் மேலும் மூன்று முக்கிய மூலிகைகள் சேர்க்கப்பட்டு ’ஜீவனி’ என்னும் சத்து மருந்து உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திலும் (R&D) ஜீவனியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. நோயுற்றவர்கள்,, ஆரோக்கியமானவர்கள், மன அழுத்தம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், கடுமையான உடல் உழைப்பை கோரும் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் மற்றும் அசாதாரண சூழலில் பணிபுரிபவர்களுக்கு ஜீவனி அளிக்கப்பட்டு முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
சோதனைகளின் முடிவுகள் மிக வெற்றிகரமாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தன. சீனாவின் ஜின்செங்கிற்கு இணையான மருத்துவப்பண்புகளை ஆரோக்கியபச்சையிலிருந்து தயாரிக்கபட்ட ஜீவனி கொண்டிருப்பதை இச்சோதனைகள் வழியே ஆய்வுக்குழு நிறுவியது.
ஜீவனியின் சந்தைப்படுத்துதல் இந்திய மூலிகை மருந்துகளின் உலகளாவிய சந்தைப்படுத்துதலின் வாய்ப்புகளை மேலும் பிரகாசமாக்கும் என்பது அனுமானிக்கப்பட்டது.
திரு புஷ்பாங்கதன் குழுவினர் ஜீவனிக்கு அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு (Intellectual Property Protection) கிடைத்தால் மட்டுமே அதன் சந்தைப்படுத்தல் வெற்றிகரமாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். மேலும் ஜீவனி உருவாக முழுமுதற் காரணமாயிருந்த காணி பழங்குடிகளுக்கும் இதன் சந்தை லாபத்தில் பங்கிருக்கவேண்டும் என்னும் நியாயத்தையும் புஷ்பாங்கதன் உணர்ந்திருந்தார்.
எனவே ஜீவனியை சந்தைப்படுத்தும் முன்பாக புஷ்பாங்கதன், இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) ஒத்துழைப்புடன் 1994ல் ஜீவனிக்கு இந்திய காப்புரிமை அலுவலகத்தில், காப்புரிமை பெற முயற்சிகளை மேற்கொண்டார்.
2007 ல் புஷ்பாங்கதன் உத்தரபிரதேசத்தின் அமிட்டி மூலிகை மற்றும் உயிர் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். (Amity Institute for Herbal & Biotech Products Development -AIHBPD). அமிட்டியிலிருந்து ஜீவனிக்கான காப்புரிமை விண்ணப்பத்தை புஷ்பாங்கதன் மீண்டும் அனுப்பினார்.
காப்புரிமை விண்ணப்பத்திற்கான வரிசை எண் (No. 2319/DEL/2008) 2010ல் அளிக்கபட்டது. எனினும் ஜீவனிக்கு காப்புரிமை இன்னும் அளிக்கப்படவில்லை.
JNTBGRI ஒரு ஆய்வு நிறுவனமாதலால் அதன் தயரிப்புக்களை சந்தைப்படுத்த முடியாது எனவே கோயம்பத்தூரின் ஆர்ய வைத்ய மருந்தகத்தில் (Arya Vaidya Pharmacy Ltd-AVP) இதற்கென உரிமம் பெற்று ஜீவனியை தயாரிக்க செய்ய முடிவானது.இந்த ஒப்பந்தத்தின் படி ஜீவனி விற்பனை லாபத்தில் 2 சதவீதம் ராயல்டி தொகை JNTBGRI க்கு என்று முடிவானது 1995ல் AVP, 7 வருட உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உரிமத்தொகையாக 50 ஆயிரம் டாலர்களை JNTBGRI க்கு அளித்தது. இந்த உரிமம் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது
ஜீவனி விற்பனை பரவலாக துவங்கி இருந்தபோது மற்றொரு சிக்கல் காட்டிலாகாவில் இருந்து வந்தது. காணிகளின் வாழ்விடம் காட்டிலாக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜீவனிக்காக அகஸ்திய மலையின் ஆரோக்கிய பச்சை செடிகள் அதிக அளவில் அழிக்கப்படுவதை காரணம் காட்டி, முன் அனுமதி இன்றி காணிகளோ அல்லது வெளியாட்களோ ஆரோக்கிய பச்சை செடிகளை மலையிலிருந்து எடுக்க காட்டிலாகா தடை விதித்தது. அதன்பின்னர் ஜீவனி தயாரிப்பில் தொய்வு உண்டானது.
பின்னர் புஷ்பாங்கதன் குழுவினர் பல்லாண்டுத் தாவரமான ஆரோக்கிய பச்சையின் முழுத்தாவரமும் ஜீவனி தயாரிக்க தேவையில்லை, இலைகளும் கனிகளும் போதும், முழுத்தாவரத்தை அழிக்காமல் தேவையான பாகங்களை மட்டும் அறுவடை செய்யலாம் என்று அறிவித்தனர்..
அக்டோபர் 2997ல் October 1997, வனத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து (ITDP), ஆரோக்கியபச்சையை சாகுபடி செய்யும் பொருட்டு தேவைப்படும் விதைகளுக்கான விலையையும் ஜீவனிக்காக தேவைப்படும் இலைகளுக்கான விலையையும் காணிகளுக்கு வழங்கும் திட்டத்தை புஷ்பாங்கதன் முன்மொழிந்தார். இது ஒரு நிலையான தீர்வாக மட்டுமல்லாது காணிகளுக்கு மேலதிக வருமானம் கிடைக்கவும் வழிகாட்டியது,
ஜீவனி தயாரிப்பிற்கு AVP க்கு மாதாமாதம் சுமார் 50 டன் இலைகளை JNTBGRI அளிக்கவேண்டி இருந்தது. எனவே அகஸ்திய மலையின் உற்பத்தியை மட்டும் நம்பி இருக்க முடியாது என்னும் உண்மையை அனைவரும் உணர்ந்தனர். 1994-1996ல் ஆரோக்கிய பச்சையை சாகுபடி செய்யும் முயற்சிகள் துவங்கின. 50 காணி குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் அளிக்கப்பட்டு ஆரோக்கிய பச்சையை சாகுபடி செய்ய ஊக்குவிக்கபட்டனர். .
இம்முயற்சி வெற்றிகரமாக நடந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான காணி பழங்குடியினர் ஆரோக்கிய பச்சை சாகுபடியில் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கப்பெற்றதுடன் அம்மூலிகையின் சாகுபடி மற்றும் முறையான அறுவடை குறித்த பயிற்சியும் பெற்றதால், AVP நிறுவனத்திற்கு ஆரோக்கிய பச்சை இலைகள் தடையின்றி தொடர்ந்து கிடைத்து வந்தன.
மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லாயிரம் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் குறித்த பாரம்பரிய அறிவு தலைமுறைகளாக காணி பழங்குடியினத்தவர்களிடம் இருந்துவந்தது .காணிகளின் உதவி இல்லாமல் ஜீவனி தயாரிப்பு சாத்தியமாயிருக்காது.
காப்புரிமை நேரடியாக காணிகளை தொடர்பு படுத்தவில்லை எனினும் புஷ்பாங்கதன் குழுவினர் இந்த தயாரிப்பில் காணிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒருபோதும் மறந்துவிடவில்லை
மேலும் தலைமுறைகளாக மூலிகை குறித்த அறிதல்களை கொண்டிருக்கும் பிளாத்திகளின் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்த புஷ்பாஙதன் குழுவினர் ஜீவனியின் சந்தைப்படுத்துதலின் லாபத்தில் காணிகளுக்கும் பங்கிருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.
1997 நவம்பரில் 9 காணிபழங்குடியினர் உறுப்பினர்களாக இருக்கும்’ கேரள காணி சமுதாய ஷேம அறக்கட்டளை; நிறுவப்பட்டு ஆரோக்கிய பச்சை குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்த குட்டிமாத்தன் மற்றும் மல்லன் ஆகியோர் அந்த அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டனர். இந்த அறக்கட்டளையின் குறிக்கோள்களாக காணி பழங்குடியினரின் நல மேம்பாடு, காணி மக்களின் பாரம்பரிய மூலிகை அறிவுகுறித்த பல்லுயிர்பதிவை (Bio diversity register) உருவாக்குவது, மற்றும் உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவையே
இவ்வறக்கட்டளைக்கு ஒரு சில காணி இனத்தவர்களின் எதிர்ப்பிருந்தாலும் முதல் தவணையாக மார்ச் 1999ல் ஜீவனியின் லாபத்தில் 12500 டாலர்கள் காணிகளுக்கு வழங்கப்பட்டபோது இவ்வறக்கட்டளையின் முக்கியத்துவத்தை அவர்கள் அனைவரும் உணர்ந்தார்கள்.
அத்தொகையில் காணிகளின் வாழ்விடங்களில் முதன்முதலாக தொலைபேசி வசதியும், கர்ப்பகால மற்றும் விபத்துக்காப்பீடுகளும் உருவாக்கப்பட்டன
காணிகளுக்கும் JNTBGRI க்கும் இடையிலான இந்த லாபத்தை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தம் உலகெங்கிலும் பழங்குடிகளின் அறிவை பயன்படுத்தும் எல்லா திட்டங்களுக்கும், ஆய்வுகளுக்குமான மாதிரி ஒப்பந்தமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் பல்லுயிர் பாதுகாப்பில் ஈடுபடும் அமைப்புக்களுக்கு அளிக்கும் உயரிய Equator விருது 2002ல் வழங்கபட்டது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவையும் .( United Nations Environment Program and the World Trade Organization) பழங்குடியினருடன் லாபத்தை பகிரும் இந்த ஒப்பந்தத்தை பழங்குடியினரின் அறிவை முறையாக பயன்படுத்துவதற்கான உலகளாவிய அளவிலான முன்மாதிரி ஒப்பந்தம் என்று புகழ்ந்தன.
ஜீவனியின் அற்புத பலன்கள் உலகெங்கும் அறியப்பட்டிருந்தாலும் இதன் காப்புரிமை சிக்கல்கள் மற்றும் காப்புரிமை பெற செலவழிக்க வேண்டியிருந்த அதிக தொகை காரணமாக AVP ஜீவனியின் சர்வதேச சந்தையை எட்ட முடியாமல் இருந்தது
ஆனால் 1999ல் நியூயார்க்கின் Nutrisciences Innovations என்னும் நிறுவனம் ஜீவனிக்கான அமெரிக்க காப்புரிமையும் பிரெத்யேக விற்பனை முத்திரையும் கோரி விண்ணபித்ததோடல்லாமல் ஜீவனியை அங்கு விற்பனையும் செய்யத்துவங்கியது. இந்த விஷயம் JNTBGRI க்கு எட்டியதும் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்னும் நடைபெறுகிறது எனினும் Nutrisciences நிறுவனம் ஜீவனி விற்பனையை 2001ல் நிறுத்தியதொடு முத்திரை கோரிய விண்ணப்பத்தையும் திரும்பப்பெற்றுக்கொண்டது.
2000த்தில் நியுயர்க்கின் Great Earth நிறுவனமும் ஜீவனி விற்பனைக்கு முயன்றது. ஒரு ஆற்றல் பானமாக ஜீவனியை “Jeevani Jolt 1000” என்னும் பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தியது
இது JNTBGRI ன் கவனத்துக்கு வந்தாலும் United States Patent and Trademark Office (USPTO) அமெரிக்க காப்புரிமை மற்றும் முத்திரை அலுவலத்தில் JNTBGRI ஜீவனிக்கான முத்திரையை அவர்கள் பதிவு செய்திருக்கவில்லையாதலால் பானமாக இதனை தயாரிப்பதை தடைசெய்யமுடியவில்லை. எனவே வட அமெரிக்க முழுவதும் ஜீவனி ஆற்றல் பானம் பரவலாக பிரபலமாகியது
இந்த விற்பனை வெற்றியை பார்த்து மேலும் பல அமெரிக்க மருந்து நிறுவனங்கள் ஜீவனியை தயாரிக்க முனைந்தனர்.
சர்வதேச சந்தைபடுத்தலின் சிக்கல்கள் இன்னும் நீடிக்கிறதென்றாலும் ஜீவனியின் விற்பனை JNTBGRI, AVP மற்றும் காணி பழங்குடியினருக்கு சந்தேகமில்லாமல் பெரும் வெற்றியை அளித்தது.
காணிகளின் வாழ்வில் மிக குறிப்பிடத்தக்க பொருளாதார ரீதியான மாற்றங்களை ஜீவனி உருவாக்கியது
தற்போது உரிமத்தொகை 2 லிருந்து 4 சதவீதமாய் இருப்பதால் மேலும் பல முன்னேற்றங்களுக்கு இது வழிவகுத்திருக்கிறது
ஜீவனியில் ஆரோக்கியபச்சையுடன் அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா கிழங்கு (ashwaganda – Withania somnifera), குருமிளகு (pepper Piiper nigrum) மற்றும் விஷ்னு கிரந்தி (Evolvulus alsinoides) ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆரோக்கிய பச்சை பாலுணர்வை தூண்டும், ஈரலை பாதுகாக்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், நுண்ணியிர்களை கொல்லும் பண்புகளையும் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி மூலிகை தயாரிப்பு நிறுவனமாகிய AVP யின் வெற்றிகரமான மூலிகை தயாரிப்பாக ஜீவனி இருக்கிறது. குருணைகளாக கிடைக்கும் ஜீவனியை அரை தேக்கரண்டி சூடான நீரிலோ அல்லது பாலிலோ கலந்து அருந்தலாம். இணைய வர்த்தகத்திலும் ஜீவனை கிடைக்கிறது.75 கிராம் 160 ரூபாய் விலை.
JNTBGRI 1979ல் கேரளத்தில் துவங்கப்பட்டது.300 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான மூலிகைகளும் அரிய வகைத்தாவரங்களும் இங்கு இருக்கின்றன. இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் தாவர பாதுகாப்பு மற்றும் அவற்றின் முறையான பயன்பாடு ஆகியவையே. எனினும் ஆரோக்கிய பச்சை கண்டுபிடிப்பிற்கு இங்கு மூலிகை மருந்துகளுக்கான ஆய்வுகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சொரியாசிஸ் எனப்படும் கடும் தோல் அழற்சி நோய்க்கான களிம்பு இங்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்நோய்க்கான Psoriasis என்னும் சொல்லை அப்படியே வரிசை மாற்றி மருந்துக்களிம்பின் பெயரை “Sisairosp” என்று வைத்திருப்பது சுவாரஸ்யம்.
இயற்கை எனும் கடவுள் நமக்களித்திருக்கும் எண்ணற்ற மருந்துகளை பார்வையிடுவது போல JNTBGRI வளாகத்தில் மூலிகை தோட்டத்தை பார்த்தவாறு ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரியின் கரிய அழகுச்சிலை அமைந்திருக்கிறது..
2017ல் திருவனந்தபுரத்தில் மட்டும் காணப்படும் ஒரு மர நண்டு கண்டுபிடிக்கபட்டது. அதற்கு Kani maranjandu என்று காணிகளின் பெயரிடப்பட்டிருக்கிறது. காணிபழங்குடிகளின் பெயரை அறிவியல் பெயரில் கொண்டிருக்கும் ஒரே ஒரு உயிரினம் இதுமட்டும்தான்.
நிலத்தாவரங்களில் சதாவரிக்கிழங்கு மற்றும் பீட்ரூட் (asparagus and beets) போன்ற ஒரு சிலவற்றை தவிர பிற தாவரங்கள் கடல்நீரின் உப்பின் அளவில் பத்தில் ஒரு பங்கைக்கூட தாங்கிக்கொண்டு வளரமுடியாது. ஆனால் எப்போதும் மிக அதிக அளவில் உப்பு இருக்கும் நிலத்திலும் செழித்து வளரும் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சில குறிப்பிட்ட வகை தாவரங்கள் உள்ளன..
உதாரணமாக வட அமெரிக்காவின் சதுப்பு நில உப்புப்புல்லான ஸ்பார்டினாவின் வேர்கள் எப்போதும் கடல்நீரிலேயே அமிழ்ந்திருக்கும், (Spartina alterniflora)
இவ்வாறு உப்பு அதிகமுள்ள கடல் முகத்துவாரங்கள்,, அலையாத்திக்காடுகள் சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகள் உப்புப் பாலை நிலங்கள் போன்ற சூழல்களில் வளரும் தாவரங்கள் உவரி நிலத்தாவரங்கள் அல்லது ஹேலோஃபைட்ஸ் (Halophytes) எனப்படுகின்றன உவரி நிலங்கள் சதுப்புநிலமாக இருக்கையில் அங்கு வளர்பவை சதுப்பு நிலத் தாவரங்கள் /அலையாத்தி தாவரங்கள் அல்லது உப்புத் தாவரங்கள் என அழைக்கப்படும்.
பூமியின் மொத்த தாவரங்களில் இரண்டு சதவீதமே உப்புத்தாவரங்கள். இவ்வகைத்தாவரங்கள் மிக அதிக உப்பை தாங்கும் தகவமைப்புகள் கொண்டுள்ளமையாலும், அச்சூழலின் பாதகங்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்புச்சக்தியையும் கொண்டுள்ளதாலும் அவற்றிற்கு அச்சுழலில் போட்டித்தாவரங்கள் இருக்காது எனவே அவை அங்கு செழித்து வளரும்
உவர்நிலத் தாவரங்கள் இருப்பது 16ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. 1563..ல் ஜெர்மானிய பழங்குடி இனத்தை சேர்ந்த தாவரவியலாளர் ரெம்பெர்ட் டோடென்ஸ் (Rembert Dodoens) Plantago maritima என்னும் உப்புச்சூழலில் வாழும் தாவரத்தை குறித்து முதன் முதலில் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டார்.
பின்னர் 1576 ல் பிரெஞ்சு தாவரவியலாளரும் முதன்முதலாக ஒருவித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்களுக்கிடையேயான வேறுபாடுகளை விவரித்தவருமான லொபெலியஸ் (Lobelius) சலிகோமியா (Salicomia) என்னும் கடலோர உப்புத்தாவரமொன்றை குறிப்பிட்டார். அயர்லாந்த்தின் தாவரவியலாளரான ஸ்லோன் 1695ல் (Sloane) அவிசென்னியா சதுப்பு நிலத்தவரத்தையும அதன் சிறப்பு வளரியல்புகளையும் விவரித்தார்.
தனது 15 ம் வயதிலேயே மலைகள் உருவாவது குறித்த கருதுகோள்களை முன்வைத்த தாவரவியலாளர் பீட்டர் சிமன் பல்லாஸ் (Peter Simon Pallas) .1809 ல் இவ்வகையான் தாவரங்களுக்கு ஹேலோஃபைட்டுகள் என்று பெயரிட்டார்,
சதுப்புநிலங்களில் அதிக உப்பு மட்டுமல்லாது சல்ஃபேட்டுக்களும் கார்பனேட்டுக்களும் , பைகார்பனேட்டுக்களும் அதிக அளவில் இருக்கும் மண்ணின் pH அளவும் மிக அதிகமாக இருக்கும் அத்துடன் சீர்குலைந்த காற்றோட்டம் கொண்ட மோசமான மண் அமைப்பும் அவ்வாழிடங்களில் காணப்படும்
தகவமைப்புக்கள்
எளிதில் நீரை உறிஞ்சிக் கொள்ளும் வசதியற்ற நிலங்களில் வளரும் இவை பாலை நில தாவரங்களுக்கான தகவமைப்புக்களையும் கொண்டிருக்கும்
சதுப்பு நிலங்களில் சீரற்ற காற்றோட்டம் இருக்குமாதலால் பூமிக்கு மேல் வளரும் நுண் துளைகளை கொண்டிருக்கும் Pneumatophores எனப்படும். காற்று அல்லது சுவாச வேர்களை இத்தாவரங்கள் உருவாக்கிக்கொண்டு அவற்றின் மூலம் சுவாசிக்கும்
சதுப்புநிலங்களின் தளர்வான மண்ணில் இவை வேரூன்றி உறுதியாக நிற்க முடியாததால் சாதாரண வேர்களுடன் கூடுதலாக பொய்க்கால் மற்றும் முட்டு வேர்களையும் கொண்டிருக்கும் (stilt & prop roots) எடுத்துக்காட்டாக பொய்க்கால் வேர்களை கொண்டிருக்கும் ரைசோஃபோராவை சொல்லலாம் ( Rhizophora mucronata ).
சில சமயங்களில் இந்த தாவரங்களின் மிக அகலமான உறுதியான துணைவேர்கள் தண்டின் அடிப்பகுதியில் இருந்து உருவாகி இவற்றை தாங்கி நிற்கும் இத்தகைய அகன்ற வேர்கள் பலகை வேர்கள் அல்லது உதைப்பு வேர்கள் எனப்படும் (Root buttresses)
இவற்றின் இலைகள் தடித்து முழுமையாக சதைப்பற்றுடன் சிறிய அளவில் இருக்கும். கடற்கரையோர உவர்நிலத்தாவரங்களின் இலைகள் பெரும்பாலும் பளபளப்பாக இருக்கும் இலைகளின் மேற்பரப்பில் வளரிகள் (trichomes) எனப்படும் நுண்முட்கள் போன்ற வளர்ச்சிகள் காணப்படும். நீரடியில் மூழ்கி இருக்கும் உவர்நிலத்தாவரங்களின் இலைகள் மெல்லியதாக காணப்படும்
இவற்றின் கனிகளும் விதைகளும் எடையற்று இருக்கும் கனியின் வெளிச்சுவற்றில் காற்றுத்துளைகளும் காற்றறைகளும் காணப்படும் எனவே நீரில் மிதந்தபடி இருக்கும் இவற்றின் விதைகள் கனிகள் மற்றும் முளைத்த இளம் நாற்றுகள் நீரோட்டத்தில் கலந்து புதிய சூழல்களை அடைந்து அங்கு வளரும்
பொதுவாக அனைத்து உவரிநில தாவரங்களிலும் காணப்படும் தகவமைப்பென்பது அவற்றில் இருக்கும் உப்புச்சுரப்பிகள்தான் இவை தாவர உடலில் சேரும் உப்பை சேகரித்து பின்னர் இலைகள் அல்லது தண்டின் வெளிப்புறம் வழியாக வெளியேற்றிவிடும்
சில உவர்நிலத்தாவரங்களின் இலைகளின் வெளிப்பகுதியில் நுண் பைகள் அமைந்திருக்கும் இவற்றில் வெளியேறும் உப்பு சேகரமாகி பின்னர் சூழலில் கலந்துவிடும் இன்னும் சில தாவரங்களோ உறிஞ்சி எடுத்துக் கொண்ட அத்தனை உப்பினாலும் எந்த பாதிப்புமின்றி இருக்கும்
கடற்கரையோரம் வளரும் உவர் நிலத் தாவரங்களில் விவிபேரி (vivipary) எனப்படும் கனி மரத்தில் இருக்கையிலேயே அதன் விதைகளிலிருந்து நாற்றுகள் முளைவிடுவது நிகழும். விதையின் கரு கனியிலிருந்தே தான் வளரத்தேவையான உணவையும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.. பின்னர் நன்கு வளர்ந்து கூரான உறுதியான கத்தி போன்ற கூம்பு வேர்களுடன் கனியிலிருந்து விடுபட்டு நிலத்தில் குத்திட்டு விழுந்து அங்கு ஊன்றி வளர தொடங்கும்.
வகைகள்
இந்த வகை தாவரங்கள் சதைப்பற்றானவை, சதைப்பற்றில்லாதவை மற்றும் சதுப்பு நிலத்தில் வாழ்பவை கடல்நீரில் வளர்ப்பவை என பல வகைப்படும்
பயன்கள்
இயற்கையாக உப்புத் தன்மைக்கு ஏற்ற வளரியல்பை கொண்டிருக்கும் இத்தாவரங்கள் பாதகமான சூழலில் வளரும் தாவரங்களின் அழுத்த சகிப்புத்தன்மையை (stress tolerance) புரிந்துகொள்வதற்கான மாதிரித்தாவரங்களாக கருதப்படுகின்றன.
இவை பெருமளவில் மண்ணரிப்பை தடுப்பதுடன், கடல் நீர் நன்னீர் நிலைகளில் கடக்காவண்ணம் உயிர்வேலியாக காத்து நிற்கின்றன இத்தாவரங்கள் கரையோர சூழலை காத்து சூழல் சமனிலையையும் பாதுகாக்கின்றன.
இவற்றில் சில தாவரங்கள் கால்நடை தீவனங்களாக பயன்படுகின்றன. சிலவற்றில் இருந்து உயிரி எரிபொருளும் கிடைக்கின்றன
Suaeda monoica என்னும் தாவரத்தின் சதைப்பற்றான இலைகளை பல பறவைகள் உணவாக கொள்கின்றன. சோமாலியாவிலும் கென்யாவிலும் இவற்றை ஒட்டகங்களும் ஆடுகளும் உண்கின்றன
பலநூறு நீர்வாழ் பறவைகளுக்கும் உயிர்களுக்கும் இவை புகலிடங்களாகவும் வாழிடங்களாகவும் இருக்கின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இவற்றின் மருத்துவப்பயன்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
உவர் நிலத்தாவரங்களில் கடினமான தண்டுகளை கொண்ட குறு மரங்களும், மரங்களும் கண்டல் தாவரங்கள் அல்லது அலையாத்தி தாவரங்கள் (Mangroves) என அழைக்கப்படுகின்றன. இவை செறிந்து வளர்ந்திருக்கும் காடுகள் கண்டல் அல்லது அலையாத்தி காடுகள் எனப்படும்.(Mangrove forests)
உப்பு, வெப்பம், அலை, சேறு என்று எவ்விதமான பாதகங்கள் இருக்கும் நிலப்பரப்பாக இருந்தாலும், அலையாத்தி காடுகள் எளிதில் வளர்ந்துவிடும். பெரும்பாலும் ஆறுகள், கழிமுகங்களின் இடைப்பட்ட பகுதிகளிலேயே இக்காடுகள் உருவாகும்.
தமிழ்நாட்டில் 44.83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் உள்ளன . கங்கையாற்று படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரியது. .கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை. சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும். குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன
உலக அளவில் 112 நாடுகளில் அலையாத்திக்காடுகள் உள்ளன. இவற்றின் சூழல் முக்கியத்துவம் அறிந்து தற்போது இவை இல்லாத நாடுகளிலும் செயற்கை அலையாத்திக்காடுகள் உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
தென்னமெரிக்காவில் தோன்றியது என கருதப்படும் நிலக்கடலைப் பயிர் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் வழியில் ஐரோப்பிய இயற்கையாளர்களால் ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அடிமைகளை கொண்டு சென்ற கப்பல்கள் வழியே உலகின் பிற பாகங்களுக்கு கடலைப்பயிர் அறிமுகமானது.
1800களில் அமெரிக்காவின் முதன்மை பயிர்களில் ஒன்றாக நிலக்கடலை இருந்தது. அச்சமயத்தில்தான் கடலை மனிதரான கார்வர் லோவா விவசாய கல்லூரியில் முதுகலை தாவரவியல் படித்துக்கொண்டிருந்தார்.
கார்வர் அடிமைகளாக விற்கபட்ட அவரது பெற்றோர்களுக்கு பிறந்து அவரை தத்தெடுத்த நல்ல மனம் கொண்ட உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டவர் கருப்பினத்தவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட அக்காலத்தில் பல சிரமங்களுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
1888ல் கார்வருக்கு அயோவா (Indianola, Iowa). சிம்ஸன் கல்லூரியில் கலை துறையில் அனுமதி கிடைத்து. அக்கல்லூரியின் முதல் கருப்பின மாணவர் கார்வர்தான்
கார்வரின் ஆசிரியை எட்டா புட் அவரது அசாதாரணமான அறிவை கண்டு, லாவா மாநில விவசாய கல்லூரியில் அவரை தாவரவியல் படிப்பை தொடர சொல்லி அறிவுறுத்தினார்.
.அயோவா விவசாயக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பின மாணவரும் இவரே. பட்டப்பிடிப்பில் அவர் சமர்பித்த ’’மனிதனால் மாற்றப்பட்ட தாவரங்கள்’’ என்னும் ஆய்வேடு அவருக்கு அங்கேயே 1894ல் பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்பளித்தது. கார்வரின் தாவரங்கள் குறித்த அறிவினால் அவர் அங்கு மிகவும் பிரபலமாக இருந்தார். அருகிலிருந்த வயல்களில் உருவாகும் தாவர நோய்களுக்கு சிகிச்சை அளித்து அவைகளை காப்பாற்றியதால் அனைவரும் கார்வரை தாவர டாக்டர் என்று அழைத்தார்கள்.
மேற்படிப்பின் போது லூயிஸ் என்னும் கனிவான பேராசிரியரின் வழிகாட்டுதலில் கார்வெர் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியலில் பல ஆய்வுகளை செய்தார். 1896ல் முதுகலை பட்டம் வாங்கும் முன்பே கார்வெர் ஒரு சிறந்த தாவரவியலாளராக அங்கிருந்தோரால் அறியப்பட்டார்.அயோவா மாநில கல்லூரியின் முதல் கருப்பின பேராசிரியரும் ஆனார் கார்வர்.
1896, ல் டஸ்கெகீ நிறுவனத்தில் இணைந்த கார்வெர் தன் இறுதிக்காலம் வரை அங்கேயே பணியாற்றினார். (இப்போது Tuskegee University),முதன்முறையாக அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கார்வரே கற்றுக்கொடுத்தார் பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும் என்பதை அங்கிருந்த விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் விவசாய முறையை மாற்றினார்..
கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைபயிறு சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார்.
பயிரிடுவதோடு மட்டுமல்லாது சத்தான பயிறு வகைகளை விவசாயிகள் உணவாக எடுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அவர் மக்களுக்கு புரிய வைத்தார்
வறுமையில் வாடிக் கொண்டிருந்த அப்பகுதி விவசாயிகளின் சொந்த உணவுத்தேவைக்கும் வாழ்வாதாரத்திற்கும் கார்வர் காட்டிய பயிர் சுழற்சி வழி மிக உதவியாக இருந்தது அம்முறைகளை பின்பற்றி நல்ல மகசூல் கிடைத்து ஏராளமான நிலக்கடலையும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளும் கிடைத்தபோது அவற்றிலிருந்து பலநூறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் கார்வர் கண்டறிந்தார். அங்கிருந்த பல கருப்பின விவசாயிகளுக்க தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் செய்யும் வழியையும் அவர் காட்டினார்.
கடலைப்பால், கடலைப்பாலடைக்கட்டி,நி லக்கடலை உலர் மாவு, நிலக்கடலை விழுது, முகச்சவர கிரீம்கள், காகிதங்கள், சாயங்கள், குளியல் சோப், சரும அழகுப் பசைகள், மை,ஆகியவை நிலக்கடலையில் இருந்து அவர் உருவாக்கிய 300 பொருட்களில் சில
நிலக்கடலையிலிருந்து சில நோய்களுக்கு மருந்துகளையும் அவர் உருவாக்கினார். சர்க்கரை வள்ளிக்கிழங்குகளிலிருந்து கார்வர் 73 வகையான சாயங்கள், கயறு, காலை உணவுக்குருணைகள், ஷுக்களுக்கு கருப்பு பாலிஷ், பட்டை ஒத்த நூலிழை ஆகியவற்றையும் உருவாக்கினார்
பல இடங்களுக்கு பயணித்து பயிர் சுழற்சி முறை, இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிலக்கடலையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்வது ஆகியவை குறித்து கற்றுக் கொடுத்தார். ஒரு பெரிய வேனை நகரும் வகுப்பறையாகவும் ஆய்வகமுமாக அவரே வடிவமைத்து இந்த கற்பித்தலுக்கு பயன்படுத்தினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதுடன் சூழல்பாதுகாப்பிலும் கார்வர் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இனவெறி உச்சத்திலிருந்த அந்தக்காலத்தில் கருப்பினத்தவர்களை கடந்தும் அவர் புகழ் பரவியது. அவரது சூழல் பங்களிப்புகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் வெள்ளையர்களால் பல விருதுகள் அளிக்கப்பட்டது.
1916ல் கார்வர் நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள் மற்றும் 105 கடலை உணவுகளுக்கான செய்முறை என்னும் செய்திமடலை பிரசுரித்தார்
அவரது ஆய்வு கூடத்தில் அவரும் அவரது மாணவர்களும் அலபாமாவின் களிமண்ணும், நிலக்கடலை எண்ணெயும் கலந்த இயற்கை சாயத்தை உபயோகித்து பல இயற்கை காட்சிகளின் ஓவியங்களும் வரைந்தார்கள். ஓவியங்கள் மட்டுமல்லாது கடலைத் தோலில் செய்யப்பட்ட கழுத்தணிகள், கோழியின் இறகில் செய்யபட்ட கலைப் பொருட்கள், இயற்கை நாரிழைகளில் பின்னப்பட்ட பொருட்கள், சாயமேற்றப்பட்ட விதைகள், சணல் பாயில் தையல் வேலைப்பாடுகள் என அறிவியல் ஆய்வுகளுக்கு மத்தியிலும் அவர் இவற்றை செய்துகொண்டிருந்தார்.
அவரது ஓவியங்களுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்ததோடு உள்ளூர் விவசாயிகளின் எளிய வீடுகளை இயற்கை சாயங்களால் அழகுபடுத்தவும் கற்றுக்கொடுத்தார்.டஸ்கெகீ நிறுவனம் கருப்பினத்தவர்களின் விடிவுக்கான பொன் வாசல் என்றுமவர் கருதினார்.ஒரு தேவாலயம் முழுதாகவே களிமண்ணில் இருந்து அவர் உருவாக்கிய இயற்கை சாயத்தினால் வர்ணமடித்தார்.
மண் வள மேம்பாடு. இயற்கை உரத்தின் பயன்பாடு மற்றும் பயிர்சுழற்சி இம்மூன்றையும் அவர் மக்களிடம் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருந்தார் கருப்பின குழந்தைகளுக்கு ஓய்வு நேரங்களில் தாவரவியலும், விவசாயமும் இறையியலும் கற்றுக்கொடுத்தார், குப்பைகளை உரமாக்குவது,தாவர எரிபொருள் தயாரிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார். களைகள் என கருதப்பட்ட டேன்டேலியன் மலர்களை, பர்சிலேன் கீரைகளை சேகரிக்கவும், சமைக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும் பயிற்றுவித்தார்,
விவசாயிகளை அவர்களின் நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வரச்சொல்லி அவற்றிலிருந்த குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளையும் கால்நடைகளை முறையாக பராமரிக்கவும் கற்றுக்கொடுத்தார்.
வேர்க்கடலை கண்டுபிடிப்புக்களையும் செய்முறைகளையும் “பேராசிரியர் கார்வரின் ஆலோசனை” என்ற செய்தித்தாள் பத்தியில் வெளியிட்டார். இத்தனை ஆய்வுகள், பயணங்கள் தேடல்களுக்கு மத்தியிலும் கார்வர் ஓவியங்கள் வரையவும் கம்பளி பின்னவும், அலங்கார தையல் கலையிலும் நேரம் செலவழித்தார். அவற்றை அவரது நண்பர்களுக்கு பரிசளித்தார். தன்னை சுற்றி இருந்த உலகை மிக பெருமையுடனும் அன்புடனும் கவனித்த கார்வருக்கு அன்பு செலுத்த பல்லாயிரம் காரணங்கள் இருந்தனவே ஒழிய புகார்களே இல்லை. கார்வர் திருமணம் செய்துகொள்ளவில்லை வாழ்நாள் முழுவதையுமே மண் வளத்தை காப்பாற்றவும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் தன்னிறைவுடன் வாழ உதவிசெய்யவுமே அர்ப்பணித்துக்கொண்டார்.
1920ல் கார்வர் அமெரிக்க நிலக்கடலை விவசாயிகள் சங்கத்தில் ஒரு உரை ஆற்றினார், பயிர் பாதுகாப்பு நிதி குறித்த அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு 1922ல் அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.அதன் பிறகு அனைவராலும் அன்புடன் கடலை மனிதர் என்றே அழைக்கப்பட்ட கார்வர் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் பேச்சாளராகவும் (Speaker for the United States Commission on Interracial Cooperation) தேர்ந்தெடுக்கப்பட்டு 1933வரை அப்பதவியிலிருந்தார்.
1935ல் அமெரிக்க விவசாய அமைச்சகத்தின் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியல் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்வர் பூஞ்சை தொற்றுக்களில் பல முக்கிய ஆய்வுகள் செய்து, ஏராளமான பூஞ்சைகளை கண்டறிந்தார். இரண்டு பூஞ்சைகளுக்கு கார்வரின் பெயரிடப்பட்டிருக்கிறது.(Metasphaeria carveri Cercospora carveriana)
மிகப்பழைய கோட்டும் ஒட்டு போடப்பட்டிருந்த ஏப்ரனுமாக எளிய தோற்றத்தில் இப்போதும் நினைவு கூறப்படும் கார்வர் அசாதாரணமான வாழ்க்கைப் பின்னணி கொண்டவர். (George Washington Carver- (1860s – January 5, 1943) ஜனவரி 5, 1943 ல் இறந்த கார்வர் தனது வாழ்நாள் சேமிப்பான 60ஆயிரம் டாலர்களையும் அவரது அனைத்து சேமிப்புகளையும் டஸ்கெகீ பல்கலைகழகத்துக்கு விட்டுச் சென்றார்.
1943 ல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஜார்ஜ் கார்வரை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த ஊரான டயமண்ட் நகரில் நினைவுச்சின்னம் எழுப்ப நிதி ஒதுக்கினார் அமெரிக்க அதிபர அல்லாதவர்களுக்கான சிலைகளில் இவருடையதே முதல் சிலை. கார்வரின் பெயரில் அமெரிக்க தேசிய பூங்கா தொடங்கப்பட்டது அதில்தான் 9 அடி உயர சிறுவனாக கார்வரின் உருவச்சிலை அங்கு அழகாக அமைந்திருக்கிறது.
கார்வெர் இயறகை மனிதர்களுக்கு பயன்படும் கருவியல்ல, மனிதன் இயற்கையின் பிரிக்கமுடியா அங்கம் என்று நம்பினார். மண் வளமே மக்கள் வளமென்றும் உறுதியாக நம்பினார் கார்வெர்
பரவலாக நம்மபடுவது போல பீ நட் பட்டர் எனப்படும் கடலை விழுது கார்வெரால் உருவாகப்படவில்லை இன்கா பழங்குடியினர் அதை கி மு 950லேயெ கண்டுபிடித்திருந்தனர்,அதன் மேம்பட்ட வடிவத்தை 1895ல் ஜான் ஹார்விகெல்லாக் (Dr. John Harvey Kellogg), கண்டறிந்திருந்தார்
கிரேக்க தொன்மவியலில் ஆகாயம் இடி ஆகியவற்றின் கடவுளான ஜீயஸ் தனது சகோதரர் பொசைடனைச் சந்திக்கச் சென்றபோது, சைனாரா என்ற அழகான பெண்ணைக் கண்டார். உடனடியாக அவள் மீது காதலில் விழுந்த அவர்அவளை ஒரு தேவதையாக்கி தன்னுடன் ஒலம்பஸ் மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிகவும் தனிமையிலிருந்த சைனாரா ஜீயஸுக்கு தெரியாமல் தனது குடும்பத்தைப் பார்க்க ரகசிய பயணங்களை மேற்கொண்டார். ஜீயஸ் இவற்றைக் கண்டுபிடித்தவுடன் கோபமடைந்து, ஒலிம்பஸ் மலையில் இருந்து சைனாராவை ஒரு கூனைப்பூவாக மாற்றி கீழே தள்ளிவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.
இக்கதையின் பேரில்தான் கூனைப்பூ என்னும் ஆர்டிசோக் (artichoke ) கின் அறிவியல் பெயரும் சைனாரா கார்டன்குலஸ் (Cynara cardunculus, variety scolymus) என வைக்கபட்டது. மனிதர்களின் பழமையான உணவுகளில் கூனை மலர்களும் ஒன்று .இந்த சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சதைப்பற்றான உண்ணக்கூடிய மலரரும்புகள்தான் ஆர்டிசோக்குகள் . இவை உருண்டை அல்லது பிரெஞ்ச் ஆர்டிசோக்குகள், முள் முட்டைகோசு ஆகிய பெயர்களிலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.
ஆங்கில சொல்லான artichoke என்பது 16 ம் நூற்றாண்டில் ’கூரிய’ என்னும் பொருள் கொண்ட (அரபிச்சொல்லின் வேர்களை கொண்ட) இத்தாலிய சொல்லான articiocco என்பதிலிருந்து பெறப்பட்டது.
மத்திய தரைக்கடல் பகுதிக்கும் வட ஆப்பிரிகாவுக்கும் சொந்தமான இந்த தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே உணவாகப் பயன்பட்டுவருகின்றன. இத்தாலியில் 1400 ம் ஆண்டில் கூனைப்பூ உண்ணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அப்போது இதன் தளிரிலைகளும் உண்ணப்பட்டன.
இவை பண்டைய கிரேக்கத்தில் மருந்தாகவும் உணவாகவும் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய ரோமானிய செல்வந்தர்கள் மட்டும் இவற்றை உணவில் விரும்பி உண்டார்கள் அக்காலத்தில் ரோமானிய குடிமக்களில் வறியவர்கள் கூனை மலர்களை உண்ணத் தடை இருந்தது. பல நாடுகளில் கூனைமலர்கள் பாலுணர்வை தூண்டும் இயல்புடையதென்பதால் பெண்கள் அவற்றை உண்ணவும் தடை இருந்தது
15 ம் நூற்றாண்டில் இவை ஐரோப்பாவில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. டச்சு மக்களால் இங்கிலாந்துக்கு 1530 ல் ஆர்டிசோக்குகள் அறிமுகமாயின. 19 ம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு பிரஞ்சு குடியேறிகளால் கொண்டு வரப்பட்ட இவை லூசியானாவில் முதலில் சாகுபடி செய்யபட்டன
7 அடி உயரம் கொண்ட பல்லாண்டுத் தாவரங்களான கூனைச்செடிகள் 9 அடி சுற்றளவுக்கு பரந்து வளரும். ரோஜா மலர்களைப்போல சுற்றடுக்கில் அமைந்திருக்கும் அடர்பச்சை இலைகள் 1 மீ நீளம் .வரை வளரும் ஒவ்வொரு வருடமும் மலரும் காலம் முடிகையில் இலைகளும் வாடி உதிர்ந்து பின்னர் மீண்டும் புதிதாக தளிர்க்கும்
தாவரம் வளரத்துவங்கிய 6 வது மாதத்திலிருந்து மலர் அரும்புகளை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு மலர்த்தண்டிலும் 1 லிருந்து 5 கூனைப்பூக்கள் உருவாகும். ஒரு வருடத்தில் ஒரு தாவரத்தில் சுமார் 20 கூனைப்பூக்கள் உருவாகும்.
இச்செடிகளின் மலர்கள் மலர்ந்து விரியும் முன்னர் மலரும்புகளின் கூர் நுனி கொண்ட தோல் போன்ற தடித்த இதழ்களைப்போலிருக்கும் மலரடிச்செதில்களின் (bracts) உள்ளிருக்கும் சதைப்பற்றான மாவுபோன்ற பொருள் உண்ணத்தகுந்தது. அரும்புகளின் இதயம் எனப்படும் சதைப்பற்றான மையப்பகுதி மிகச்சுவையானது.
அறுவடை செய்யாத அரும்புகள் அழகிய ஊதா நிற மலர்களாக மலரும். 8 வருடங்கள் வரை பலனளிக்கும் இவை விதைகளை உருவாக்கினாலும் தாவரங்களிலிருந்து தோன்றும் பக்கச்செடிகளிலிருந்தும் வேர்த்துண்டுகளிலிருந்தும் இவற்றை எளிதாக வளர்க்கலாம்.
ஆர்டிசோக்குகளில் பொட்டாஷியம், வைட்டமின் C , நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
சிறிய அரும்புகள் அதிக சுவையுடன் இருக்கும். இவற்றை முழுமையாக நீரில் அல்லது நீராவியில் வேகவைத்தும், சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம்
இவற்றில் பல நிற மலர்கள் இருந்தலும் மிக அதிகம் சாகுபடி செய்யபடுவது பசைநிற மலர்வகைகளே. உணவுப்பயிர்களாகவும் அலங்காரச்செடிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன.
உலகின் மிக அதிக ஆர்டிசோக் உற்பத்தியாளராக இத்தாலி, எகிப்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன. பிரபல இத்தாலிய மதுவகையான சைனார் (Cynar) ஆர்டிசோக் மலர்ரும்புகளை நொதிக்கச்செய்து உருவாக்கப்படுகின்றது. 16 சதவீத ஆல்ஹகாலை கொண்டிருக்கும் இம்மது உணவுக்கு முன்னர் பசியுணர்வை தூண்ட அருந்தும் மதுவகைகளில் மிக பிரபலமானது. (aperitif)
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இவை மிக அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கலிஃபோர்னியாவின் மாண்டெரே (Monterey) பகுதி உலகின் ஆர்டிசோக் மையம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மார்ச் 16 ஆர்டிசோக் நாளாக கொண்டாடப்படுகிறது கலிஃபோர்னியாவின் வருடா வருடம் நடைபெறும்அர்டிசோக் கொண்டாட்டங்களில் 59 வது கொண்டாட்டம் 1948ல் நடைபெற்ற போது மர்லின் மன்றோ ஆர்டிசோக் அரசியாக பட்டமளித்து சிறப்பு செய்யப்பட்டார்
கார்டூன் எனபடும் இவற்றின் காட்டுமூதாதை (Cynara cardunculus) யின் இளம் இலைகளும் மலரும்புகளும் தண்டுகளும் வேர்களும் கூட உண்ணத்தகுந்தவை இவையும் இப்போது ஆர்டிசோக்குகளுடன் சாகுபடியாகின்றன.
ஜெருசேலம் ஆர்ட்டிசோக் எனப்படுபவை இந்த கூனைப்பூக்கள் அல்ல. Helianthus tuberosus என்னும் தாவரத்தின் கிழங்குகள்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன.. வியட்நாமில் இதிலிருந்து தேநீர் தயாரித்து மருத்துவக் காரணங்களுக்காக அருந்தப்படுகிறது
இவை சுவைக்காக, உடல்நலனுக்காக,, ஈரல் பாதுகாப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கான சிகிச்சைக்கு என பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காவும் உண்ணப்படுகின்றன. இவற்றின் இரு முக்கிய வேதிப்பொருட்கள் சையனாரின் மற்றும் சிலிமாரின் (cynarin and silymarin)
ஆர்டிசோக் மலரரும்புகளை எளிதாக சமைத்து உண்ணுதலை கற்றுத்தரும் காணொளி: https://youtu.be/CPwEX4Q1QAs