அறிவியல் ஆய்வுகளின் முன்னோடி என்று கருதப்படும் வில்லியம் டேம்ப்பியர். (William Dampier) 17/18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இளம் வயதில் பெற்றொரை இழந்த இவர் 16 வயதிலிருந்தே கடல் சாகச பயணங்களை மேற்கொண்டவர். அவகேடோ, பார்பிக்யூ, பிரெட் ஃப்ரூட் கட்டமரான், சாப்ஸ்டிக்ஸ் (Avocado, Barbecue, Breadfruit, Cashew, Catamaran, Chopsticks ) போன்ற பல நூறு சொற்களை உலகிற்கு தனது கடற்பயண நூல்களில் முதன் முதலில் எழுதி அறிமுகப்படுத்திய இவர் ஒரு கடற்படை தலைவர் மாலுமி, இயற்கையாளர் மற்றும் உலகை மூன்று முறை கடல் வழி சுற்றி வந்த முதல் மனிதர் என்னும் பெருமைக்குரியவரும் கூட. 1697 ல் வெளியான இவரது A New Voyage Round the World மிகப்பிரபலமான கடற்பயண நூல்.
வில்லியம் தனது பயணங்களில் பல இனக்குழுக்களை சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வின் இயங்கியலை அறிந்துகொள்வதிலும் இயற்கையின் அம்சங்களை கூர்ந்து அவதானிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். அவரது கடல்பயண அனுபவங்களை பல நூல்களாக எழுதியிருக்கிறார். அப்படி ஒரு நூலில் போர்ச்சுக்கீசியர்கள் ஒரு மரத்தின் பெயரை காஜு என்று பெயரிட்டிருப்பதை செவிவழி கேட்டு அதை கேஷூ என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார் என்கிறது வரலாறு அப்படி வில்லியம்ஸினால் கேஷு என்று குறிப்பிடப்பட்டதுதான் நமது முந்திரி மரம்.
Anacardium occidentale என்னும் அறிவியல் பெயருடைய பசுமை மாறா முந்திரி மரங்கள் மத்திய மற்றும் வடகிழக்கு பிரேசிலை சேர்ந்தவை. ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு முன்பு அங்கிருந்த பழங்குடியினரால் இம்மரம் , மருந்து மற்றும் எரிபொருளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது
1558ல் ஃப்ரென்ச் இயற்கையாளர் திவெட்’டினால் (Thevet) முந்திரியின் முதல் சித்திரம் வெளியானது 16ம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுக்கீசியர்கள் பிரேசிலிலிருந்து முந்திரி மரக்கன்றுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். 1703ல் வெளியான வில்லியமின் ’’ஹாலந்துக்கான புதிய கடற்பயணம்’’ என்னும் நூலில்தான் முதன்முறையாக cashew என்று இம்மரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.1 பிரேசில் பழங்குடியினரின் துபி (tupi) மொழியில் முந்திரியை கொட்டை என்னும் பொருள்படும் அகாஜு (acaju) என்று குறிப்பிடப்பட்டதை போர்ச்சுக்கீசியர்கள் காஜு என்று அழைத்தார்கள்.
காட்டு முந்திரி மரங்கள் பருமனான திருகிய தண்டுடன் பத்து மீட்டருக்கும் மேலன உயரத்தில் வளர்பவை. தற்போது முந்திரிக்கனிகள் அறுவடை செய்யப்படுவது தோட்டக்கலை துறையினரால் உருவாக்கப்பட்ட குட்டையான ஒட்டுரகங்களிருந்தே!
இம்மரங்களின் நுண்ணிய நட்சத்திர வடிவத்திலிருக்கும், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும். இவை சார்ந்திருக்கும் அனகார்டியேசி குடும்பத்தின் மாமரத்திலும் இப்படித்தான் ஒரே பூங்கொத்தில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும் இதை தாவரஅறிவியல் polygamous என்கிறது.
இருபால் மலர்கள் கருவுற்றதும் சிறுநீரக வடிவிலான கொட்டை என்னும் கனி உருவாகும். மலர்களிலிருந்து கனி உருவாக சுமார் 55 லிருந்து 70 நாட்கள் தேவைப்படும். முந்திரிக்கொட்டை என்று அழைக்கப்படும் இவையே அம்மரத்தின் கனிகள். கொட்டை முழுவளர்ச்சி அடைந்த பின்னரே கனியெனப்படும் பகுதி முழுவளர்ச்சி அடையும். இக்கனியின் மேல்தோல் மிகமெல்லியதாக இருக்கும் நல்ல நறுமனத்தையும் கொண்டிருக்கும்
மலர்க்கொத்தின் காம்பானது (peduncle) கனிக்கொட்டை உருவாகுகையில் விரிந்து சதைப்பற்றுடன் பிரகாசமான மஞ்சள் அரஞ்சு நிறத்தில் தலைகீழ் இதய வடிவில் வளரும். இதுவே பொதுவில் முந்திரிக்கனி அல்லது முந்திரிப்பழம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சதைப்பற்றான மலர்க்காம்பு பழமென்று அழைக்கப்பட்டாலும் இது பொய்ப்பழம் . அசல் பழமென்பது முந்திரியின் கொட்டைதான்
இம்மரத்தின் அறிவியல் பெயரான அனகார்டியம் என்பது இந்த சதைப்பற்றான பழத்தின் தலைகீழ் இதயவடிவை குறிக்கின்றது ’அன’ என்றால் தலைகீழ் கார்டியம் என்றால் இதய வடிவம்
ஆக்ஸிடெண்டாலிஸ் என்னும் சிற்றினப்பெயர் ’மேற்கிலிருந்து’ என்று பொருள்படுகிறது. ‘cashew apple’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தலைகீழ் இதயவடிவிலிருக்கும் இந்த போலி முந்திரிப்பழம்தான்.
உலகெங்கிலும் மிக அதிகம் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளிலொன்றாக இருக்கும் முந்திரிக்கொட்டையின் உலக உற்பத்தி 2018ல் மட்டும் 6மில்லியன் டன். இதில் 70 சதவீதம் வியட்நாம் மற்றும் இந்தியாவில் உற்பத்தியானது. 2018 ல் முந்திரிக்கனியின் 1.7 டன் மொத்த உற்பத்தியில் பிரேசில் மட்டுமே 90 சதவீதம் பங்களித்திருந்தது
முந்திரி தொழிற்சாலைகளில் கொட்டையோடுகளின் எண்ணெய் உபரித்தயரிப்பாக இருக்கிறது இதில் அனகார்டிக் அமிலம் ,கார்டோல் மற்றும் கார்டனோல் ஆகியவை அடங்கி இருப்பதால் இந்த எண்ணெய் பலநூறாண்டுகளாகவே மருந்தாகவும் மரச்சாமான்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது
முந்திரி கொட்டையின் இரட்டை அடுக்கு உறையில் இருக்கும் பிசின் வகையை சேர்ந்த அனகார்டிக் அமிலம் சரும அழற்சியை உண்டாக்கும். முந்திரி கொட்டையின் ஒவ்வாமை என்பது பெரும்பாலும் இந்த உறையின் இந்தெ வேதிச்சேர்மானங்களால் உண்டாகும் ஒவ்வாமையே. ஒவ்வாமை உண்டாக்கும் கொட்டைஉறயின் அமிலம் cashew nut shell liquid, CNSL) எனகுறிப்பிடப்படுகின்றது
ஐரோப்பியர்களால் முந்திரி பிரேசிலில் 1558 ல் கண்டறியப்பட்டபோது இந்த ஒவ்வாமையினால் இக்கொட்டைகள் உண்ண தகுந்தவையல்ல என்றே கருதப்பட்டது. ஆனால் துபி பழக்குடியினர் குரங்குகள் கற்களைக்கொண்டு கொட்டையின் மேற்தோலை உடைத்தும், பாறைகளில் கொட்டைகளை தேய்த்தும் ஓட்டை அகற்றி விட்டு உண்பதை கண்டபின்பு அவர்களும் அதே முறையை பயன்படுத்தி உண்ண துவங்கினர். பின்னர் கொட்டைகளை வறுத்து ஓட்டை நீக்கி எப்படி அதன் ஒவ்வாமையை நீக்குவது என்பதை கண்டறிந்து அம்முறையை ஐரோபியர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள்
போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன
. கி மு 200 – 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ள பர்குட் (Bharhut) ஸ்தூபிகளில் இரு சீதாப்பழங்களும் இரு முந்திரிப்பழங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்புகட்டபட்ட கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
வேதங்களில் குறிப்பிட்டிருக்கும் கஜுதக்கா மற்றும் வ்ருத அருஸ்கரா (Kazutaka & Vritta Aruskara), என்பதும் முந்திரிகளையே குறிக்கின்றது எகின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தியர்கள் முந்திரியின் சுவையையும் மருத்துவ குணங்களையும் சேர்த்து கண்டுகொண்ட பின்னர் 16 ம் நூற்றாண்டின் பிற்பாதியில் முந்திரி இந்தியாவில் வேகமாக பிரபலமாகியது.
கிழக்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதே சமயத்தில் முந்திரி அறிமுகமானது, வறுத்த முந்திரியின் மணம் பரவி பல கலாச்சாரங்களிலும் முந்திரி முக்கிய இடம் பிடிக்க துவங்கியது. கடற்கரை மணலரிப்பை தடுக்கும் பொருட்டு ஹவாய், மடகாஸ்கர் இலங்கை உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலும் அச்சமயத்தில் முந்திரி அறிமுமானது.
அமெரிக்கவிற்கு முந்திரி 1905ல் அறிமுகமானதாக வரலாறு குறிப்பிடுகிறது 1920 வரையிலும் அங்கு அத்தனை பிரபலமாகி இருக்காத முந்திரி 1941ற்கு பிறகே பெரும்பான்மையான புழக்கத்திற்கு வந்திருக்கிறது 1941 க்கு பிறகு இந்தியாவிலிருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு வருடத்திற்கு சுமார் 20,000 டன் முந்திரிக்கொட்டைகள் கடல் வழி ஏற்றுமதியானது
வறுத்த முந்திரிக் கொட்டையின் சுவையை மகிழ்ந்தனுபவித்த போர்த்துகீசியர்கள் கோவாவில் பயிரான மரங்களிலிருந்து கொட்டைகளின் அறுவடைக்கு பின்னர் வீணாகும் ஏராளமான பழங்களை உபயோகப்படுத்தும் விதமாக கனிச்சாற்றிலிருந்து மதுவை உருவாக்கி அருந்தினர் . அந்த மரபு இன்னும் அங்கு நானூறாண்டுகளாகவே நீடிக்கிறது
முந்திரிப்பழத்தின் சதையை கூழாக்கி நொதிக்க செய்து கோவாவில் மட்டும் தயாரிக்கப்படும் மதுபானம் ஃபெனி அல்லது ஃபென்னி எனப்படுகின்றது.
இரட்டை வடித்தல் மூலம் கிடைக்கும் 45 சதவீத்திற்கும் அதிகமான ஆல்கஹாலை கொண்டிருக்கும் ஃபெனி கோவாவின் அடையாளங்களிலொன்றாகவே கருதப்படுகிறது
முந்திரி கனிகளில் பிரக்டோஸ், குளுக்கோஸ், கனிமத்தாது உப்புக்கள், பல முக்கிய அமினோ அமிலங்கள், மற்றும் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளன
.ஃபெனியின் தோற்றம் குறித்த முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை 1740ல் போர்ச்சுக்கீசியர்கள் ஃபெனியிலிருந்து மதுபானம் உண்டாக்கும் முறையை கோவா நகர மக்களுக்கு கற்றுக்கொடுத்ததகவே பெரிதும் நம்பப்படுகிறது.
ஃபெனி உருவாக்கம்
கனியின் சதைப் பகுதி பாறை கற்களால் நசுக்கப்பட்டு கூழாக்கப்பட்டு சிறு மலைபோல குவிக்கப்படும். முன்பு கற்களால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நசுக்குதல் இப்போது அழுத்தும் கருவியான பிங்ரி’யினால் செய்யப்படுகின்றன.{pingre (cage.} . கால்களால் நசுக்கப்படும் முறையும் பயன்பாட்டில் இருக்கிறது.
கைகளால் பிசையப்பட்டு நூடி என்னும் காட்டுக்கொடியால் கட்டப்படும் (vine- nudi,) சதைக்கூழ் குன்றுகள் ஒரு கனமான பாறைக்கல்லினால் இரவு முழுவதும் அழுத்தப்படுகிறது.
கனிகளை கொட்டி நசுக்கும் கற்களால் ஆன இந்த தரைப்பகுதி கோல்மி (collmi) எனப்படும். இக்கூழ் குன்றிலிருந்து வடியும் சாறு நீரோ (neero)
நீரோ முந்திரிக்கனிச்சாறு நிலத்தில் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும் குடம் போன்ற மண் அல்லது செப்பு பாத்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு. பல நாட்கள் இயற்கையாக நொதிக்க செய்யப்படுகிறது. நொதித்த திரவம் 3 நாட்களுக்கு பிறகு பான்ஸ் எனப்படும் செம்புக் கொதிகலன்களில் ‘(bhanns ) இவை காய்ச்சி வடித்தலுக்கு உள்ளாகின்றன.
எந்த நுண்ணுயிர்களும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாத ஃபெனி வடித்தல் பாட்டி எனப்படுகிறது (‘bhatti).
ஒற்றை வடித்தலுக்கு பிறகு கிடைக்கும் 15 சதவீத ஆல்கஹால் கொண்ட பானம் அரக் (urrac) எனப்படுகிறது.
உர்ரக் மீண்டும் நீரோவுடன் கலக்கபட்டு 40-42 சதவீத ஆல்கஹால் இருக்கும் திரவமான காஜுலோ (cazulo) கிடைக்கின்றது. காஜுலோ மீண்டும் உர்ரக்குடன் கலக்கப்பட்டு வடித்தலுக்கு உள்ளாகையில் 45 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கொண்டிருக்கும் ஃபெனி ஆகிறது. ஃபெனி நெடியுடைய மது
ஃபெனி என்பது நுரையை குறிக்கும் சமஸ்கிருத சொல்லான ‘phena’விலிருந்து உருவானது. குசுக்கப்பட்ட பாட்டிலிலிருந்து கோப்பைகளில் ஊற்றப்படுகையில் நுரைத்துப் பொங்கும் இம்மதுவின் இயல்பால் இப்பெயர் வைக்கப்பட்டது
கோவாவில் முந்திரியிலிருந்தும் இளநீரிலிருந்தும் ஃபென்னி தயாரிக்கப்படுகிறது. இளநீர் ஃபெனி மாட்டல்ஃபெனி எனப்படுகிறது. (Maddel fenny ) 2009ல் ஃபெனி புவிசார் குறியீடு பெற்றிருகிறது.2 கோவா அரசு ஃபெனிக்கு கலாச்சார அந்தஸ்தும் அளித்திருக்கிறது3 .இந்திய மது வகைகளில் புவிசார் குறியீடு பெற ஒரே மது வகை ஃபெனியே. ஃபெனி கோவாவில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது
கோவாவில் மட்டும் சுமார் 4000 வடிசாலிகள் ஃபெனிக்கென்றே இயங்குகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் ஃபெனியில் சுமர் 70 சதவீதம் கோவா மக்களுக்கே செலவாகிறது மீதியே சுற்றுலாப்பயணிகளுக்கு சந்தைப் படுத்தப்படுகிறது. வடிசாலிகளில் மட்டுமல்லாது பல குடும்பங்களில் அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலேயே ஃபெனி உருவாக்கபடுகிறது.
கோவாவின் பிரத்யேக ஃபெனி அருந்தும் முறையென்பது ஃபெனியை தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி அருந்துவதுதான். ஃபெனி ஐஸ்கட்டிகள் கலந்தும், கலக்காமலும் அருந்தப்படுகிறது. அதனுடன் கடல் உணவுகள் பொருத்தமானதாக அமையும். ஒரு துண்டு எலுமிச்சை அல்லது உப்பு தூவப்பட்ட பச்சைமிள்காயுடனும் ஃபெனியை அருந்துபவர்களும் உண்டு
கோவாவை சேர்ந்த நந்தன் குட்சத்கர் ஃபெனி அருங்காட்சியகம் ஒன்றை கோவாவின் அழகிய கடற்கரை கிராமமொன்றில் அமைந்திருக்கிறார். இங்கு ஃபெனியை குறித்த ஆயிரக்கணக்கான தகவல்களும் ஃபெனி சீசாக்களின் மாதிரிகளும் உள்ளன. நூற்றண்டுகள் பழமையான ஃபென்னியும் அங்குள்ளது
இந்தியாவின் முந்திரி தொழிற்சாலை துவக்கம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் அதிகம் இல்லை எனினும் 1920களில் இலங்கையிலுருந்து கொல்லம் வந்த ரோச் விக்டோரியா (Roch Victoria) என்பவர் வணிக ரீதியான பெரும் முந்திரி தொழிற்சாலையை அங்கு உருவாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன
கொல்லத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டு, வறுத்து நச்சு நீக்கபட்ட தரமான முந்திரிகள் அமெரிக்கவிற்கு ஏற்றுமதியாகி இருக்கின்றன
டான்ஸானியாவில் உலர்ந்த முந்திரிக்கனிகளிலிருந்து சாறெடுத்து வடித்தலுக்கு உள்ளாக்கி உண்டாக்கப்படும் மிகக் கடும் மது வகை கோங்கோ (gongo.) எனப்படுகிறது.
முந்திரிப்பழங்களிருந்து நொதித்தலுக்கும் வடித்தலுக்கும் உட்படுத்தப்படாத ஆல்கஹால் சிறிதும் இல்லாத பானம் காஜுனா (Cajuína). ஆல்கஹாலுக்கு எதிரான நடவடிக்கையாக பிரேசிலின் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட இந்த பானம் இப்போது பிரேசிலில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது
முந்திரிக்கொட்டைகளை கனியிலிருந்து பிரித்து நச்சுநீக்கம் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு கொட்டையின் ஓட்டு எண்ணெயால் உடல் பாதிப்புகள் உருவாகின்றன மேலும் கனியிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுப்பது அதிக உடலுழைப்பை கோரும் பணி இதனாலேயே முந்திரி கொட்டைகள் விலை கூடியவைகளாக இருக்கின்றன
இந்தியாவின் முக்கிய முந்திரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா.. மொத்த உலக உற்பத்தியில் இந்தியா 23 சதவீதத்தை பங்களிக்கிறது
1 A voyage to New Holland, &c. in the year (1703).
விடியலின் வெள்ளி மினுங்கலுக்கும் கடலின் பச்சை பளபளப்புக்கும் இடையே அந்த படகு ஹார்விச் துறைமுகத்தை அடைந்து கூட்டமாய் மக்களை விடுவித்தது. அந்த கூட்டத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் போல் இருந்தார் நாம் தொடர வேண்டிய நபர். அவருடைய விடுமுறைக்கானவை போலிருந்த உடைகளுக்கும், தீவிரமான முகபாவத்திற்குமான வேறுபாட்டைத் தவிர அவரை குறிப்பிட்டு கவனிக்க வேறு எதுவுமில்லை. வெள்ளை மேலங்கியும் அதற்கு மேல் வெளுத்த சாம்பல் வண்ண ஜாக்கெட்டும், சாம்பல் நீல ரிப்பனை கொண்டிருந்த வெள்ளி நிற வைக்கோல் தொப்பியுமாக அவரது உடையும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத உத்தியோகபூர்வமான ,முகமுமாக இருந்தார்.
அவரது இருண்ட ஒடுங்கிய முகத்தில் ஸ்பானியர் என கருத இடமளிக்கும் கருப்பு தாடி இருந்தது. சோம்பேறிகளின் தீவிரத்துடன் அவர் சிகெரெட் புகைத்து கொண்டிருந்தார்.
அவரது சாம்பல் வண்ண ஜாக்கெட்டுக்குள் குண்டுகள் நிரப்பிய கைத்துப்பாக்கி இருப்பதும், அவரது மேலங்கியில் காவல் துறையின் அடையாள அட்டை இருப்பதும், ஐரோப்பாவின் அதிபுத்திசாலித்தனத்தை அந்த வைக்கோல் தொப்பி மறைத்திருக்கிறது என்பதையும் யாராலும் யூகித்திருக்க முடியாது.
ப்ருஸெல்ஸிலிருந்து லண்டனுக்கு அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கைதொன்றை செய்யும் பொருட்டு பாரீஸ் காவல் துறையின் தலைவரும், உலகின் மிக பிரபலமான விசாரணை அதிகாரியுமான வேலெண்டீனே நேரில் வந்திருக்கிறார்.
மகா குற்றவாளி ஃப்ளேம்போ இங்கிலாந்தில் இருந்தான். மூன்று நாடுகளின் காவல் துறைகளும் அவனை கெண்ட்’லிருந்து புருஸ்ஸெல்ஸுக்கும், பின்னர் புருஸ்ஸெல்ஸிலிருந்து ஹாலந்தின் ஹூக் நகருக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருந்த நற்கருணை மாநாட்டின் கூட்டத்தையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவன் ஒரு கீழ்மட்ட உத்யோகஸ்தனை போலவோ அல்லது அந்த மாநாட்டுக்கு தொடர்புடைய செயலராகவோ மாறு வேடத்தில் அங்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேலண்டீனுக்கு அவனை குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. உண்மையில் ஃப்ளேம்போவை யாராலுமே கணிக்க முடியாது.
உலகை கொந்தளிக்க செய்துகொண்டிருந்த அவனால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் குற்றங்கள் ரோலண்டின் மரணத்திற்கு பிறகு திடீரென்று நின்று போனபோது உலகமே அமைதியாக இருந்தது.
ஆனால் அவன் செல்வாக்கின் உச்சத்திலிருக்கையில் (அதாவது மோசமான பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கையில்) அவன் சர்வதேச அளவில் ஒரு பேரரசனை போல புகழுடன் இருந்தான். பெரும்பாலான காலைகளில், தினசரி நாளிதழ்களில் அவன் ஒரு அசாதாரணமான குற்றத்தின் விளைவுகளிலிருந்து தப்பிக்க மற்றொரு குற்றத்தை செய்த செய்தி இடம் பெற்றிருக்கும்.
அவன் பிரம்மாண்டமான அச்சமூட்டும் உடற்கட்டை கொண்டிருந்தான். அந்த உடற்கட்டுடன் அவன் ஒரு நீதிபதியை மன அமைதிக்கு வழிகாட்டுவதாக சொல்லி தலைகீழாக நிற்க வைத்தது, டிரெவோலி சாலையில் கைக்கொன்றாக இரு காவலர்களை தூக்கி கொண்டு ஓடியது போன்ற செய்கைகள் பலதரப்பட்ட கதைகளாக நகரில் உலவியது.
ரத்தம் சிந்தவில்லை என்றாலும் இது போன்ற கண்ணியமற்ற செயல்களுக்கு அவனது அசாதாரண உடல்வலிமை காரணமாயிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி வேடிக்கை கதைகள் அவனைக்குறித்து உலவினாலும் அவனது பெருங்கொள்ளைகள் உண்மையில் மிக புத்திசாலித்தனமான நடத்தப்பட்டவை. அவனது ஒவ்வொரு திருட்டுக்கும் தனித்தனியே கதைகளும் உருவாகின.
அவனது அனைத்து செயல்பாடுகளிலும் இருந்த எளிமை பிரத்தியேகமானது. உதாரணமாக, ஒரு நள்ளிரவில் தெருக்களின் அடையாள பலகைகளின் எண்களை மாற்றி எழுதி ஒரு பயணியை அவன் திசை திருப்பி சிக்க வைத்தான்.
ஃப்ளேம்போ லண்டனின் தைரோலியன் பால் நிறுவனத்தை மாடுகளோ வண்டிகளோ பாலோ எதுவுமே இல்லாமல் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் நடத்தி வந்தான்.
மிக எளிதாக வீட்டு வாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் பிற பால் நிறுவனங்களின் பால் கேன்களை எடுத்து அவனது வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது அத்தனை எளிதானதாயிருந்தது அவனுக்கு.
அவன் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த போதும் அவளின் அனைத்து கடித தொடர்புகளையும் துருவி துருவி ஆராய்ந்தும் ஃப்ளேம்போவை குறித்த ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் புகைப்படம் எடுத்து நுண்ணோக்கியால் மட்டுமே பார்த்து வாசிக்க முடியும் அளவுக்கு மிக நுண்ணிய அளவில் அவனது கடித எழுத்துக்கள் இருந்தன.
நகர்த்தக்கூடிய தபால் பெட்டிகளை உருவாக்கி புறநகர் சாலை முனைகளில் அவற்றை வைத்து அதை உபயோகப்படுதுபவர்களின் தபால்களை திருடும் வழியையும் அவனே கண்டுபிடித்தான்.
அவன் பிரம்மாண்ட உடற்கட்டை கொண்டிருந்தாலும் ஒரு வெட்டுக்கிளியை போல தாவி மரக்கூட்டங்களுக்கிடையே அவன் மறைந்து விடுவதை அனைவரும் அறிந்திருந்தனர். திறமைசாலியான வேலண்டீனுக்கு ஃப்ளேம்போவை தேட துவங்கியபோதே தெரிந்திருந்தது அவனை இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதோடு அவரது வேலை முடிந்துவிடாதென்று.
ஆனால் அவனை எப்படி கண்டுபிடிப்பது?. வேலண்டீனின் இதுகுறித்த யோசனைகள் முடிவடையாமல் இருந்தன. ஃப்ளேம்போவை குறித்த இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் எந்த மாறு வேடத்திலும் மறைக்க முடியாத அவனது அதீத உயரம் தான்.
இந்த தேடலில் வேலண்டீன் உயரமான ஒரு ஆப்பிள் விற்கும் பெண்ணையோ, ஒரு உயரமன படைவீரனையோ அல்லது சுமரான உயரம்கொண்ட ஒரு சீமாட்டியை பார்த்திருந்தால் கூட அவர்களை கைது செய்திருப்பார். ஆனால் அந்த ரயில் பயணத்தில் அப்படி வழக்கத்துக்கு மாறான உயரத்தில் அப்பயணத்தில் யாரையும் வேலண்டீன் கண்டிருக்கவில்லை. அந்த இடத்தில் இருக்கும் ஒருவரை ஃப்ளேம்போ என சந்தேகப்படுவது ஒரு பூனையை ஒட்டகச்சிவிங்கி என சொல்வதை போலத்தான்.
இந்த படகு பயணத்தில் வேலண்டீனுடன் வெறும் 6 பிரயாணிகளே இருந்தார்கள். கடைசி நிறுத்தம் வரை பயணித்த குள்ளமான ஒரு ரயில் நிலைய ஊழியர், இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஏறிய சுமாரான குள்ளமாயிருந்த மூன்று தோட்டக்காரர்கள், எஸ்ஸெக்ஸ் கிராமத்திலிருந்து ஏறிய மிக குள்ளமான ஒரு விதவைப் பெண்மணி மற்றும் மிக மிகக்குள்ளமான ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார்.
கடைசியாக ஏறிய அந்த பாதிரியாரை பார்த்ததும் வேலண்டீன் ஏறக்குறைய சிரித்து விட்டார். கிழக்கு பகுதிக்கே உரிய மந்தமான முகமும், வடக்கு கடலை போன்ற வெறுமையான கண்களும் கொண்டிருந்த அவன் தூக்கமுடியாமல் பல பழுப்பு காகித பெட்டகங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.
அந்த நற்கருணை மாநாட்டிற்கு அந்த பாதிரியை போலவே மூடநம்பிக்கையுடன் புற்றீசல்கள் போல பலரும் வந்து கொண்டிருந்தார்கள்.
கடவுள் நம்பிக்கை அற்றவரான வேலண்டீனுக்கு பாதிரிகளை பிடிக்காது, சொல்லப்போனால் அவர்கள் மீது அவருக்கு கொஞ்சம் இரக்கம் கூட உண்டு. இந்த குள்ளப்பாதிரியோ பார்ப்போர் அனைவரின் இரக்கத்திற்கும் உரியவனை போலிருந்தார்.
பயணச்சீட்டின் எந்த முனையை பிடித்து கொள்வது என்று கூட தெரிந்திருக்காத அவரிடம் அடிக்கடி கீழே விழுந்தபடி இருக்கும் மலிவான பெரிய குடை ஒன்று இருந்தது
அவர் வெள்ளந்தியாக பெட்டியிலிருந்த அனைவரிடமும் தன் கையில் உள்ள பழுப்பு பெட்டகங்களொன்றில் இருக்கும் அசல் வெள்ளியில் செய்யப்பட்டு, நீல அருமணிகள் பதிக்கப்பட்டிருக்கும் அரிய பொருளை தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொண்டே இருந்தார் .
எஸ்ஸெக்ஸின் அப்பாவித்தனமும் துறவிக்கான எளிமையுமாக இருந்த அந்தக் கலவை டோடென்ஹேமில் இறங்கிச் சென்று, மீண்டும் திரும்பிவந்து , மறந்துவிட்ட குடையை எடுத்துக்கொண்டு திரும்பிச்செல்லும் வரை வேலண்டீனுக்கு வேடிக்கையாகவே இருந்தது
அவர் அப்படி குடையை எடுக்க திரும்பி போது வேலண்டீனே அந்த அரிய பொருளை குறித்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை என்று அவரை எச்சரித்தார்.
பயணத்தின் போது வேலண்டீன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்று 6 அடிக்கு மேல் இருப்பவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். ஏனெனில் ஃப்ளேம்போ அதற்கும் 4 இன்சுகள் அதிகமான உயரம் கொண்டவன்.
ரயிலிலிருந்து இறங்கி லிவர் பூல் தெருவில் நடந்து கொண்டிருந்த அவர் குற்றவாளியை தான் இன்னும் நழுவ விடவில்லை என்று தானே தன் மனச்சாட்சியிடம் சொல்லிக்கொண்டார். பின்னர் ஸ்காட்லாந்து யார்டுக்கு சென்று தனக்கு தேவைப்படும் போது அங்கிருந்து உதவிகள் கிடைப்பதை உறுதி செய்துகொண்டார் மீண்டுமொரு சிகரெட் புகைத்தபடி லண்டன் தெருக்களில் உலாவிக் கொண்டிருந்தார்.
விக்டோரியாவின் தெருக்களிலும் சதுக்கத்திலும் நடந்துகொண்டிருந்த அவர் திடீரென்று நின்றார். லண்டனுக்கே உரித்தான பழமையான அமைதியான அந்த சதுக்கம் அப்போது தற்செயலாக அசைவற்று இருந்தது. அங்கிருந்த உயரமான வீடுகள் ஒரே சமயத்தில் செல்வச் செழிப்புடனும் யாருமற்றும் இருப்பது போல் தோன்றின.
சதுக்கத்தின் மத்தியிலிருந்த புதர்ச் செடிகள் கைவிடப்பட்ட தீவைப்போல் காட்சியளித்தன. அவற்றின் நான்கு பக்கங்களில் ஒன்று பிறவற்றை காட்டிலும் சற்று உயரமாக மேடை போலிருந்தது. அங்கு அவ்விடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது போல லண்டனின் வியக்கத்தக்க உணவகம் ஒன்று சொஹோவிலிருந்து தவறுதலாக அங்கு வந்தது போல அமைந்திருந்தது.
குட்டையான செடிகளும் நீளநீளமான, மஞ்சள் மற்றும் வெள்ளை பட்டைகளுடன் அமைந்திருந்த திரைமறைப்புக்களுடன் காரணம் சொல்ல முடியாத வசீகரத்துடன் இருந்தது அந்த உணவகம்.
லண்டனின் வழக்கமான சமமான கட்டிட அமைப்புகளுக்கு மாறாக அது தெருவுக்கு மேலே விசேஷமாக உயர்ந்து நின்றது, அதன் வாசற்படி, முதல் மாடி ஜன்னல் வரை செல்லும் ஒரு தீபாதுகாப்பு வழியை போல செங்குத்தாக அமைந்திருந்தது.. வேலண்டீன் அந்த மஞ்சள் வெள்ளை திரைமறைப்புக்களுக்கு முன்பு நின்று சிகரெட் புகைத்தபடி அவற்றின் அதிக நீளத்தை அவதானித்தார்.
அற்புதங்களின் வியக்கத்தக்க விஷயம் என்பது அவை நிகழ்வதுதானே. மேகங்கள் ஒன்றிணைந்து மனிதனின் கண்களை போல வடிவு கொள்ளக்கூடும். ஒரு தேடல் பயணத்தின் போது வழியில் காணும் மரமொன்று கேள்விக்குறியை போல தோற்றமளிக்க கூடும்.
இவை இரண்டையுமே நான் இந்த கடைசி இரு நாட்களில் கண்ணுற்றேன். நெப்போலியனுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற, வெற்றி என்று பெயரிடப்பட்ட கப்பலில் இருந்த கடற்படை அதிகரியான நெல்சன் வெற்றிக்கனியை சுவைப்பதற்குள் இறந்தார். வில்லியம்ஸ் என்னும் பெயருடைய ஒருவர் வில்லியம்சன் என்னும் ஒருவரை தற்செயலாக கொலை செய்ததும் அப்படித்தான் சிசுக்கொலையை போல தோன்றுகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் இப்படியான ஊழின் விளையாட்டுக்களை வாழ்வை எந்த மாற்றமும் இன்றி எதிர்கொள்ளும் சாமான்யர்கள் எப்போதும் கவனிக்க தவறுகிறார்கள் ஆனால் ’போ’ விதியின் முரண்பாட்டின் படி வாழ்வின் எதிர்பாராமையை எதிர்பார்ப்பதே அறிவு .
அரிஸ்டடே வேலண்டீன் முழுக்க முழுக்க பிரெஞ்சுக்காரர். பிரெஞ்சு புத்திசாலித்தனம் என்பது மிகச் சிறப்பானதும் தனித்துவமானதும் கூட. அவர் வெறும் சிந்திக்கும் இயந்திரமல்ல. சிந்திக்கும் இயந்திரம் என்பதே நவீன ஊழ்வினைக் கொள்கையும், பொருள்வாதமும் இணைந்து உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான சொற்றொடர்.
சிந்திக்க முடியாதென்பதனால்தான் ஒரு இயந்திரம் வெறும் இயந்திரமாக இருக்கிறது. ஆனால் இவர் ஒரு சிந்திக்கும் மனிதர். மிக எளிமையானவரும் கூட.
அவருடைய பெரும் வெற்றிகள் அனைத்தும் மந்திர வித்தையால் அடையப்பட்டவை போல தோன்றினாலும் உண்மையில் அவை தர்க்கபூர்வமாக அடையப்பட்டவையும் துல்லியமான சமயோஜித சிந்தனையால் பெறப்பட்டவையும்தான்.
வெறும் முரண்பாட்டை குறித்த விவாதங்களை துவங்கியல்ல, மெய்யியலை சரியாக கையாண்டே பிரெஞ்சுகாரர்கள் உலகை பிரமிக்க வைக்கிறார்கள் .சொல்லப்போனால் பிரெஞ்சுக்காரர்கள் மெய்யியலை அளவு கடந்தும் எடுத்துச்சொல்வார்கள், ஃப்ரெஞ்ச் புரட்சியில் நடந்தது போல.
ஆனால் வேலண்டீன் தர்க்கத்தை மட்டுமல்ல அதன் எல்லைகளையும் உணர்ந்திருந்தார். மோட்டார்களை குறித்து எதுவுமே தெரியாத ஒருவனே பெட்ரோலை தவிர்த்துவிட்டு மோட்டாரை குறித்து பேசுவான்
தர்க்கங்களை பற்றி எதுவும் தெரியாத ஒரு மனிதன் மட்டுமே தர்க்கங்களின் அடித்தளமாக இருக்கும் வலுவான, மறுக்க முடியாத அனுமானங்களை தவிர்த்துவிட்டு தர்க்கத்தை குறித்து பேசுவான்.
ஆனால் வேலண்டீனுக்கு இங்கு வலுவான அனுமானங்கள் ஏதும் இல்லை. ஃப்ளேம்போ ஹார்விச்சில் காணாமலாகியிருந்தான். அப்படியே அவன் லண்டனில் இருந்திருந்தாலும் அவன் விம்பிள்டன் காமனின் உயரமான ஒரு நாடோடியில் இருந்து ஹோட்டல் மெட்ரோபோலின் உயரமான அறிவிப்பாளர் வரை யாராகவும் இருந்திருக்கும் சாத்தியங்கள் இருக்கிறது.
இத்தகைய வெளிப்படையான அறிவின்மையை எதிர்கொள்ள வேலண்டீனுக்கு அவருக்கேயான பிரத்யேக பார்வையும் வழிமுறையும் இருந்தது.
இத்தகைய தர்க்கரீதியான பாதையை பின்பற்ற முடியாத சந்தர்ப்பங்களில் ,அவர் எதிர்பாராததை கணக்கிட்டு, சாத்தியம் குறைவான பாதையை கவனமாகவும் துணிச்சலாகவும் தேர்ந்தெடுப்பார். வழக்கமாக காவலர்கள் தேடிச்செல்லும் இடங்களான வங்கிகள், காவல் நிலையங்கள் மற்றும் சந்திப்புக்களுக்கான பிரத்யேக இடங்களை தவிர்த்து, அவற்றிற்கு மாறான இடங்களிலேயே தேடிச்செல்வார், ஒவ்வொரு காலியான வீட்டுக்கதவையும் தட்டுவார் முட்டுச்சந்துக்குள் திரும்புவார், குப்பை கூளங்கள் நிறைந்திருக்கும் சந்துகளுக்குள் தேடிப்போவார். நேரான பாதைகளை தவிர்த்து விட்டு சுற்று வழிகளில் பயணிப்பார்.
ஏனெனில் தேடப்படுபவனின் கண்களுக்குப் படும் வாய்ப்புகளும் விசித்திரங்களும் தேடுபவனின் கண்களிலும் தென்படலாமல்லவா? ஒரே ஒரு சிறு துப்பு இருந்தால் கூட இதுபோன்ற வழக்கத்துக்கு விரோதமான வழிகள் மோசமானவைகள் என்று சொல்லி விடலாம், ஆனால் எந்த துப்பும் இல்லாத போது அதுவே சிறந்த வழியாகிவிடும் என்று. இந்த பைத்தியக்காரத்தனத்தை அவர் தர்க்கபூர்வமாகவும் விளக்குவார்.
எங்காவது ஒரு மனிதன் தொடங்க வேண்டும், அந்த இடம் மற்றொருவர் தனது தேடலை நிறுத்திய இடமாக இருப்பது இன்னும் சிறப்பு .
விநோதமாக மேலேறும் அந்த உணவகத்தின் படிகளிலோ, அல்லது அந்த உணவகத்தின் அமைதியிலும் வசீகரத்திலுமோ ஏதோ ஒன்று அந்த துப்பறிவாளரின் உள்ளுணர்வை தூண்டியது. தோராயமாக ஒரு முயற்சி செய்ய எண்ணி படிகளில் ஏறி மேலே சென்றவர், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஒரு கருப்புக் காப்பிக்கு சொன்னார்.
ஏறக்குறைய முற்பகலாகி விட்டிருந்தது. அவர் காலையுணவும் உண்டிருக்கவில்லை மேசைகளில் சிதறிக்கிடந்த உணவின் மிச்சங்கள் அவருக்கு பசியை நினைவூட்டியதால் காப்பியுடன் பொறித்த முட்டையும் சொன்னார்.
காப்பியில் சர்க்கரையை இட்டு கலக்கியபடியே ஃப்ளேம்போ இதுவரை தப்பித்த விதங்களை குறித்து எண்ணிக் கொண்டிருந்தார். வெறும் நகவெட்டிகளைக்கொண்டே தப்பித்திருந்தான் ஒருமுறை. இன்னொரு முறை வீட்டை தீயிட்டு கொளுத்தி தப்பித்தான்
முத்திரை வைக்கப்பட்டிருக்காத தபால்தலைக்கு பணம் கொடுப்பதாக ஒருமுறையும், உலகை அழிக்க வரும் வால் நட்சத்திரம் ஒன்றை மக்கள் தொலைநோக்கியில் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த போது இன்னொரு முறையும் தப்பித்திருந்தான்.
அவர் தனது துப்பறியும் மூளை குற்றவாளியின் மூளைக்கு இணையானது என்று நம்பினார். அது உண்மையும் கூட. அப்படி ஒப்பிடுவதலிருக்கும் பிழையையும் அவர் அறிந்திருந்தார். குற்றவாளி ஒரு கலைஞன், துப்பறிவாளனோ வெறும் ஒரு விமர்சகன், இதை எண்ணிக்கொண்டே காப்பிப்கோப்பையை உதட்டுக்கு கொண்டுவந்து ஒரு வாய் பருகியவர் கோப்பையை வேகமாக கீழிறக்கினார். சர்க்கரைக்கு பதில் அவர் உப்பை கலந்து விட்டார்
அந்த வெள்ளை நிற பொடி வைக்கப்பட்டிருந்த சீசாவை அவர் பார்த்தார். உறுதியாக அது சர்க்கரைக்கானதுதான். எப்படி ஷேம்பெயின் பாட்டிலில் ஷாம்பெயின்தான் இருக்குமோ அப்படி சர்க்கரையை கொண்டிருக்க வேண்டிய சர்க்கரை சீசாதான் அது. அதில் ஏன் உப்பை வைத்தார்கள் என அவர் வியந்தார்.
வேறு ஏதேனும் சீசாக்கள் இருக்கிறதா என அவர் ஆராய்ந்தார். இருந்தன இரு உப்பு புட்டிகள் நிறைந்து காணப்பட்டன. அதில் எதேனும் விசேஷமாக இருக்கலாம் என்று அவர் அவற்றை சுவைத்து பார்த்தார், இனித்தது ஆம் அது உப்பல்ல, சர்க்கரை
உப்பையும் சர்க்கரையையும் மாற்றி வைத்த அந்த வித்தியாசமான ரசனைக்கான வேறு தடயங்களும் அங்கு இருக்கிறதா என வேலண்டீன் அந்த உணவகத்தை புதிய ஆர்வத்துடன் சுற்றி பார்த்தார்.
வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்த சுவரில் வீசியெறியப்பட்ட ஏதோ ஒரு திரவத்தின் கறையை தவிர அந்த இடம் மிக சுத்தமாகவும் சாதாரணமாகவும் தான் இருந்தது. சிப்பந்தியை வரவழைக்க அவர் மேசையிலிருந்த மணியை அடித்தார்
அந்த காலை வேலையில் தூக்க கலக்கக்துடன், கலைந்த தலையுடன் வந்த சிப்பந்தியிடம் அந்த சர்க்கரையை சுவத்துப் பாரத்து அந்த உணவகத்தின் தரத்துக்கு அது ஏற்புடையதுதானா? என்று சொல்ல சொன்னார் அதைப்போன்ற எளிய நகைச்சுவைகளை விரும்பும் அந்த துப்பறிவாளர்.
ஒரு துளி வாயிலிட்டு சுவைத்த அந்த சிப்பந்தி தூக்கம் விலகி அவசரமாக ஒரு கொட்டாவியை வெளியேற்றி சுதாரித்துக்கொண்டான்
’’இப்படித்தான் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு நாள் காலையிலும் வேடிக்கை செய்கிறீர்களா? என்று கேட்டார் வேலண்டீன்
சர்க்கரையையும் உப்பையும் மாற்றி வைப்பது உங்களுக்கு அலுக்கவில்லையா? என்று அவர் கேட்டதும் சிப்பந்தி விஷயத்தின் தீவிரத்தை புரிந்தவராக தடுமாறி அப்படியான எண்ணம் ஏதும அந்த உணவகத்துக்கு இல்லையென்றும் எப்படியோ இந்த தவறு நிகழ்ந்து விட்டிருக்கிறதென்றும் பணிவுடன் கூறினார்
சர்க்கரை சீசாவையும் உப்பு சீசாவையும் எடுத்து உற்றுப் பார்த்த சிப்பந்தியின் முகம் மேலும் மேலும் குழப்பமடைந்தது. ‘’மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னபடி விரைந்து அங்கிருந்து விலகிய அவர் சில நொடிகளில் உணவகத்தின் உரிமையாளருடன் திரும்பி வந்தார். சர்க்கரை உப்பு சீசாக்களை ஆராய்ந்த உரிமையாளர் முகமும் குழம்பியது
அவவசரமாக பலவற்றை சொல்ல முயன்ற சிப்பந்தி ’’நான் நினைக்கிறேன் நான் நினைக்கிறேன் அந்த இரு பாதிரியார்கள்தான்’’ என்று திணறினார்.
’’என்ன அந்த இரு பாதிரிகள்?’’ என்றார் வேலண்டீன்.
’’அவர்கள்தான், அந்த பாதிரிகள்தான் சூப்பை சுவரில் வீசி எறிந்தார்கள்’’ என்றார் சிப்பந்தி
’’சூப்பை சுவற்றில் எறிந்தார்களா?’’ என்ற வேலண்டீன் இது வேறு ஏதாவதொன்றிற்கான இத்தாலிய படிமமாக இருக்குமோ என்று யோசித்தார்.
’ஆம்! ஆம்! ’’ என்று உணர்வு மேலிட சொல்லிய அந்த சிப்பந்தி சுவற்றின் கறையை சுட்டிக்காட்டி ’’அங்கேதான்! அங்கேதான்! சூப்பை வீசினார்கள்.’’ என்றார்
வேலண்டீன் இப்போது உரிமையாளரை கேள்வியுடன் பார்த்தார். அவரும் ’’ஆம் உண்மைதான் ஆனால் அதற்கும் சர்க்கரையும் உப்பும் இடம்மாறியதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.’’
’’இன்று அதிகாலையில் கடையை திறந்தவுடன் இரு பாதிரியார்கள் வந்து சூப் அருந்தினார்கள் இருவரும் மிக அமைதியாக மிக கெளரவமானவர்களாக தோன்றினார்கள்’’.
’’இருவரில் ஒருவர் பணத்தை செலுத்தி விட்டு வெளியேறினார் கொஞ்சம் நிதானமாக புறப்பட்ட மற்றொருவர் சில நொடிகள் தாமதமாக தனது பொருட்களை சேகரிக்க துவங்கினார். கடையை விட்டு வெளியேறும் முன்பு வேண்டுமென்றே அவர் பாதி அருந்தி வைத்திருந்த சூப் கப்பை எடுத்து சுவற்றில் வீசி எறிந்தார்’’.
’’நான் பின்னாலிருக்கும் என் அறையில் இருந்தேன் இந்த சிப்பந்தியும் அங்கு தான் இருந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த போது இங்கு யாருமே இல்லை!’’ பெரிய சேதமொன்றும் இல்லைதான் எனினும் அவர்களின் இந்த செய்கை குழப்பமேற்படுதியது.
’’அவர்களை பிடிக்க ஓடிச்சென்று தெருவில் தேடினேன் ஆனால் அவர்கள் வெகு தூரம் சென்று விட்டிருந்தார்கள், அடுத்த தெருவில் திரும்பி அவர்கள் கார்ஸ்டேர்ஸ் தெருவை நோக்கி செல்வதை மட்டும் பார்க்க முடிந்தது’’ என்றார் உரிமையாளர்.
அவர் பேசி முடிக்கையில் வேலண்டீன் கைகளில் தடியுடன் புறப்பட்டு விட்டிருந்தார், ஊழ் முதலில் சுட்டிக்காட்டும் விநோதமான வழியில் செல்வது என அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.. இந்த வழி போதுமான அளவுக்கு விநோதமாகத்தான் இருந்தது. அவசரமாக பணத்தை செலுத்திவிட்டு கண்ணாடிக்கதவை தனக்கு பின்னால் அறைந்து சாத்திவிட்டு விரைவில் அடுத்த தெருவுக்கு வந்தார்
இத்தனை பரபரப்பிலும் அவரது கண்பார்வை அதிர்ஷ்டவசமாக துல்லியமாகவும் நிதானமாகவும் இருந்தது.. ஒரு கடையை தாண்டுகையில் அவரது கண்களில் மின்னல் போல எதோ ஒன்று பளீரிட்டது. அவர் திரும்பி அதை பார்க்க அங்கு வந்தார்
அது ஒரு பிரபல பச்சை காய்கறிகளும் பழங்களும் விற்கும் கடை. ஏராளமான பொருட்கள் பெயரும் விலைப்பட்டியலும் வைக்கபட்ட அட்டைகளுடன் வெளியே விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஆரஞ்சுகளும் முந்திரிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வரிசையில் முந்திரிக்கொட்டைகளின் குவியல் மீது இரண்டு ஆரஞ்சுகள் ஒரு பென்னி என்று தெளிவாக நீல சாக்கட்டியால் எழுதப்பட்ட அட்டை சொருகி இருந்தது.
தரமான பிரேஸில் முந்திரி கொட்டைகள் ஒரு பவுண்ட் 4 டைம் என்னும் அட்டை ஆரஞ்சுகளின் மீது வைக்கப்பட்டிருந்தது. வேலண்டீனுக்கு இதே போன்ற நுட்பமான வேடிக்கையை முன்பே, மிக சமீபத்தில் பார்த்திருப்பது நினைவுக்கு வந்தது.
தெருவை அளப்பது போல மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த சிவந்த முகம் கொண்ட பழக்கடைக்கரரை அணுகிய வேலண்டீன் அதை சுட்டிக்காட்டினார். பழக்கடைக்காரர் ஒன்றுமே சொல்லாமல் அட்டைகளை மட்டும் இடம் மாற்றி சரியாக வைத்தார்
ஒயிலாக கைத்தடியை ஊன்றி அதன் மீது சாய்ந்தபடி கடையை நோட்டமிட்ட வேலண்டீன் கடைக்கரரிடம். ’’தொடர்பில்லாமல் கேட்பேனாகில் மன்னியுங்கள் எனக்கு உளவியல் ரீதியாக உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது“ என்றார்
எரிச்சலுடன் பார்த்த, சிவந்த முகம் கொண்ட கடைக்காரரிடம் கைத்தடியை சுழற்றியபடியே ’’ஏன்? ஏன்? பாதிரிமார்கள் லண்டனுக்கு சுற்றுலா வந்ததுபோல பொருத்தமில்லாமல் விலை அட்டைகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தன?’’, என்று கேட்டார்
’’ஒருவேளை நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லை எனில் தெளிவாகவே கேட்கிறேன் முந்திரிகளென குறிககப்பட்டிருக்கும் ஆரஞ்சுகளுக்கும் நெட்டையாகவும், குட்டையாகவும் இருந்த இரு பாதிரிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார்
நத்தையை போல கண்கள் வெளியே தெறிக்கும் படி வெறித்துப் பார்த்த, வேலண்டீன் மீது பாயப் போவது போல் தோற்றமளித்த அந்த கடைக்காரர் கோபமாக ’’இதில் உங்களுக்கு என்ன தொடர்பு என தெரியவில்லை, ஆனால் அவர்கள் உங்கள் நண்பர்கள் எனில் மீண்டும் என் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுத்தினால் பாதிரிகள் என்று கூட பார்க்காமல் அவர்களை உதைத்து விடுவேன் என்று சொல்லுங்கள்’’ என்றார்
’’அப்படியா?’’ என்ற வேலண்டீன் ’’உங்கள் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுதினார்களா?’’ என்றார் அனுதாபத்துடன்.
கோபம் தணிந்திருக்காத கடைக்காரர் ’’ஆம் ஆம் அவர்களில் ஒருவன் ஆப்பிள்களை கொட்டி தெருவில் ஓடவிட்டான் ஆப்பிள்களை பொறுக்க வேண்டி இருந்ததால்,அவர்களை பிடிக்காமல் விட்டுவிட்டேன்’’ என்றார்
’’அவர்கள் எந்த வழியே போனார்கள்?’’’ என்று கேட்டார் வேலண்டீன். வலது பக்கமாக இருக்கும் அந்த இரண்டாவது தெருவில் மேலேஏறி பின்னர் அந்த சதுக்கத்தை கடந்து போனார்கள்’’ என்றார் கடைக்காரர்.
‘’நன்றி’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமானார் வேலண்டீன், இரண்டாம் சதுக்கத்தில் நின்றிருந்த காவலரிடம் ’’இது மிக அவசரம், நீங்கள் தொப்பியுடன் இருந்த இரு பாதிரிகளை பார்த்தீர்களா?’’ என்று கேட்டார்.
”அந்த காவலர் அவசரமாக தலையாட்டியபடி ’’ஆம்! பார்த்தேன் அவர்களில் ஒருவன் குடித்திருந்தான், போதையில் சாலையின் நடுவில் நின்று அவன்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வேலண்டீன் விரைந்து குறுக்கிட்டு ’’எந்த வழியாக போனார்கள்? ‘’ என்று கேட்டார்.
’’அவர்கள் ஹேம்ஸ்டீடு போகும் மஞ்சள் நிற பேருந்தில் சென்றார்கள்’’ என்றார் காவலர்.
வேலண்டீன் தனது அடையாள அட்டையை அவரிடம் காட்டி ’’உடனே இரு காவலர்களை என்னுடன் தேடலுக்கு வர சொல்லுங்கள்’’ என்றபடியே அந்த காவலர் பணிந்து வணங்கியதை கூட கவனிக்காமல் சாலையை கடந்து மறுபக்கம் விரைந்தார்.
ஒன்றரை நிமிடங்களில் எதிர்ச்சாலையின் நடைபாதையில் வேலண்டீனுடன் ஒரு இன்ஸ்பெக்டரும் சாதாரண உடையில் இருந்த மற்றொரு காவலரும் இணைந்து கொண்டார்கள்
அந்த இன்ஸ்பெக்டர் உரையாடலை துவக்கும் பொருட்டு ’’இப்போது என்ன?’’ என்று சொல்ல முற்படுவதற்குள் தன் கையில் இருந்த கைத்தடியினால் தூரத்தில் இருந்த பேருந்தை சுட்டிக்காட்டி ’’எல்லாவற்றையும் அந்த பேருந்தில் வைத்து சொல்கிறேன்’’ என்றார் வேலண்டீன்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி ஒரு வழியாக மூவரும் அந்த பேருந்தில் மேல்பக்க இருக்கைகளில் அமர்ந்ததும்,’’ இதைக்காட்டிலும் நான்கு மடங்கு வேகமாக நாம் டாக்ஸியில் சென்றிருக்கலாமே’’என்றார் இன்ஸ்பெக்டர்.
‘’ஆம்! ஆனால் அது நாம் போகுமிடம் தெரிந்திருந்தால்தானே’’ என்றார் வேலண்டீன்
’’நாம் இப்போது எங்குதான் செல்லவிருக்கிறோம்?’’ என்றார் அந்த இரண்டாமவர். அமைதியாக இரண்டு நொடிகளுக்கு சிகெரெட் புகைத்த வேலண்டீன் சிகெரெட்டை அகற்றிவிட்டு ’’ஒருவன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவனுக்கு முன்னால் செல்ல வேண்டும், ஆனால் ஒருவன் என்ன செய்வான் என்று யூகிக்க அவ்னை கவனமாக பின்தொடர வேண்டும்’’ என்றார்
’’அவன் விலகினால் நாமும் விலகி, அவன் நின்றால் நாமும் நின்று, அவன் வேகத்துக்கு இணையாக நாம் செல்லவேண்டும்’’. ’’அப்போதுதான் அவன் காண்பவற்றை நாமும் கண்டு அவன் செய்பவற்றை நாமும் செய்யமுடியும்’’ இப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் விந்தைகளை காணும் பொருட்டு நம் கண்களை திறந்து வைத்திருப்பதுதான்’’ என்றார் அவர்
’’எப்படியான விந்தைகளை?’’என்றார் இன்ஸ்பெக்டர் ’’எப்படிப் பட்டவைகளாக இருந்தாலும்’’ என்ற வேலெண்டீன் மீண்டும் அமைதியில் மூழ்கினார்
முடிவற்று சென்று கொண்டிருப்பது போல அந்த மஞ்சள் பேருந்து வடக்கு சாலையை நோக்கி மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மேற்கொண்டு அந்த துப்பறிவாளர் விளக்கமேதும் அளிக்காததால் உதவியாளர் இருவருக்கும் அவரின் நோக்கத்தின் மீதும் அந்த பயணத்தின் மீதும் ஐயம் எழுந்தது
கூடவே மதிய உணவிற்கான வேளையும் கடந்து விட்டதால் அவர்களுக்கு கடும் பசியும் உண்டாகி இருந்தது. வடக்கு லண்டன் சாலைகளில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்வது போல் நீண்டு கொண்டிருந்த அந்தப்பயணம், டஃப் நெல் பூங்காவின் துவக்கத்திற்கு தான் வந்திருந்தது
லண்டன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் மறைந்துபோய், கைவிடப்பட்ட கட்டிடங்களும், அழுக்கான சத்திரங்களும் தென்பட்டு லண்டன் முடிந்து விட்டதென்றும், பளபளக்கும் விஸ்தாரமான சாலைகளும், பிரம்மாண்டமான விடுதிகளும் இடைப்பட்டு பேருந்து இன்னும் லண்டனில் தான் இருக்கிறது என்பதையும் நினைவூட்டிக்கொண்டிருந்தன..
பேருந்துப்பயணம் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் 13 ஒழுங்கற்ற நகரங்களை கடந்து செல்வது போலிருந்தது. குளிர்காலத்தின் அந்தி நெருங்கிக்கொண்டிருந்த வீதிகளின் முகப்புக்கள் இருபுறமும் விரிந்து மறைவதை பார்த்தபடி பாரீஸ்காரரான அந்த துப்பறிவாளர் சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தார்..
திடீரென வாலண்டீன் துள்ளி எழுந்து அவர்களின் தோள் மீது கையை ஊன்றிய்போது காவலர்கள் திடுக்கிட்டனர். ஓட்டுநரை நோக்கி வண்டியை நிறுத்தும்படி கத்தினார் அவர். கேம்டென் நகரத்தை தாண்டியபோது ஏறக்குறைய தூங்கியே விட்டிருந்த. காவலர்கள், படிகளில் அவருடன் அவசரமாக இறங்கி, எதற்காக இறங்கினோமென்று அறியாமல் சுற்றும் முற்றும் குழப்பமாக பார்த்த போது வேலண்டீன் சாலையின் வலது புறம் இருந்த கட்டிடமொன்றின் ஜன்னலை வெற்றிகரமாக சுட்டிக்காட்டுவதை கண்டார்கள்
அங்கிருந்த உயர்குடியினருக்கான ஒரு உணவகத்தின் ஒரு பகுதியில் இருந்த, மற்ற ஜன்னல்களை போலவே சித்திர வேலைப்பாடுகளை கொண்டிருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி பனிப்பாளத்தில் நட்சத்திரம் போல நடுவில் பெரிதாக உடைந்திருந்தது
கைத்தடியை வீசியபடி’’ உடைந்த ஜன்னலுடன் ஒரு கட்டிடம், ’’நாம் தேடி வந்தது கிடைத்து விட்டது’’ என்று கூவினர் வேலண்டீன்.
’’என்ன ஜன்னல்? என்ன கிடைத்துவிட்டது’’ என்றார் முதல் உதவியாளர். ‘’எந்த ஆதாரம் அங்கு இருக்கிறது? அவர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ?
பிரம்பு கைப்பிடியை உடைத்துவிடும் அளவுக்கு ஆவேசமானார் வேலண்டீன்.
’’ஆதாரமா!’’ அவர் அலறினார் ’’கடவுளே, கடவுளே இந்த மனிதன் ஆதாரத்தை தேடுகிறான். ஆம் கிடைத்திருப்பது ஆதாரமாக இருப்பதற்கான சாத்தியம், 20ல் ஒன்றுதான். ஆனால் நம்மால் வேறென்ன செய்ய முடியும்? இப்போது நம் முன்னே இருப்பது கிடைத்திருக்கும் இந்த யூகத்தைதொடர்ந்து செல்வது அல்லது வீட்டுக்கு திரும்பி சென்று படுக்கையில் உறங்குவது என்னும் இரண்டே சாத்தியங்கள் தானே? என்று சொல்லிக்கொண்டே வேலண்டீன் அதிரடியாக அந்த உணவகத்துக்குள் உதவியாளர்கள் தொடர நுழைந்தார்
உணவு மேசைகளில், சென்று அவர்கள் விரைவாக அமர்ந்து ஜன்னல் கண்ணாடி உடைந்து நட்சத்திரம் போல் விரிசலிட்டிருப்பதை உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் அந்த கண்ணாடியின் உடைசலிலிருந்து இவர்களுக்கு புதிதாக எதும் கிடைப்பதுபோல் தெரியவில்லை
’’உங்களது ஜன்னலொன்று உடைந்திருக்கிறதே!’’ என்றார் வேலண்டீன் உணவக சிப்பந்தியிடம் பில் தொகையை கொடுத்தவாறே.
தொகையை குனிந்து எண்ணிக்கொண்டிருந்த சிப்பந்தி, வேலண்டீன் கொடுத்த தாராளமான சன்மானத்தின் பொருட்டு மெல்ல முதுகை நிமிர்த்தி ’’ ஆமாம், மிக விசித்திரம் தான் சார்’’ என்றான்.
’’அப்படியா? அதுகுறித்து சொல்லுங்களேன்’’ என்று அதை கேட்பதில் பெரிதாக ஆர்வமில்லாதது போல கேட்டார் வேலண்டீன்
’’மாநாட்டுக்காக ஊரெங்கும் வந்திருக்கும் கருப்பு உடை அணிந்திருக்கும் பாதிரிகளில் இருவர் இங்கு வந்திருந்தார்கள். இருவரும் எளிய உணவை உண்டபின் ஒருவர் பில் தொகையை செலுத்திவிட்டு வெளியேறினார். மற்றொருவரும் சிறிது தாமதமாக வெளியேறும் முன்புதான் எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையை காட்டிலும் மூன்று மடங்கு கொடுத்திருப்பதை பார்த்தேன்’’
’’இதோ பாருங்கள்! எனக்கு மூன்று மடங்கு அதிகமாக கொடுத்துவிட்டீர்கள்! ,என்று நான் உரக்க சொன்னதும், திரும்பி ’’அப்படியா? என்ற அவரிடம் நான் பில் தொகையை காண்பிக்க முயன்றபோதுதான் குழப்பம் துவங்கியது’’ என்றான்
’’என்ன சொல்கிறீர்கள்?’’ என்றார் வேலண்டீன்.
’’ஏழு பைபிள்களில் வேண்டுமானலும் நான் சத்தியம் செய்து சொல்வேன். நான் பில்லில் எழுதியது 4 ஸ்டெர்லிங்தான் ஆனால் அப்போது பில்லில் அச்சடித்தது போல 14 ஸ்டெர்லிங்குகள் என்று இருந்தது’’ என்றான் அவன்..
’’அப்படியா!’’ என்று கூவிய வேலண்டீன் ’’பிறகு’’ என்றார் ஆவலுடன்.’’கதவருகில் நின்ற அந்த பாதிரி என்னிடம் ’’ பில் தொகையில் குழப்பமேற்படுத்தியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்,, அந்த கூடுதல் தொகையை, இந்த ஜன்னலுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் ‘’ என்றான்
’’எந்த ஜன்னல்?’’ என்று நான் கேட்டபோது ’’இதோ நான் இப்போது உடைக்க போவது தான்’’ என்று சொல்லியபடியே கையிலிருந்த குடையால் ஜன்னலை ஓங்கி அடித்து கண்ணாடியை உடைத்துவிட்டான்’’ என்றான்
கேட்டுக்கொண்டிருந்த மூவரும் வியப்பொலி எழுப்பினார்கள். அந்த காவலர் மூச்சொலியில் ’’நாம் பைத்தியக்காரர்களையா தேடி சென்று கொண்டிருக்கிறோம் ‘’ என்றார்.
உணர்வு மேலிட்டு அந்த சிப்பந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்.’’ஒரு நொடி எனக்கு எதுவும் புரியவில்லை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வெளியேறி அந்த மூலையில் காத்திருந்த தன் நண்பனுடன் சேர்ந்துகொண்டான்., நான் கம்பிகளை தாண்டி ஓடியும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இருவரும் புல்லக் தெருவுக்குள் சென்றனர்’’ என்றான்
’’புல்லக் தெரு’’ என்று சொன்ன வேலண்டீன், பாதிரிகள் சென்ற அதே வேகத்தில் அந்த தெருவுக்கு சென்றார். கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு கட்டப்பட்டிருந்த நடைபாதைகளிலும், சுட்ட செங்கற்களாலான குகைப்பாதைகளிலும், ஒரு சில விளக்குகளே இருந்த, ஜன்னல்களற்ற இருட்டு சாலைகளிலும் அவர்கள் பயணித்தார்கள்.
இருட்டிக்கொண்டே வந்ததால் லண்டனின் காவலர்களாகிய அவர்களுக்கே சென்று கொண்டிருக்கும் திசை சரியாக புலப்படவில்லை. அந்த இன்ஸ்பெக்டருக்கு அந்த பாதை ஹேம்ப்ஸ்டட் ஹீத்தின் ஏதோ ஒரு இடத்தில் முடியும் என்று மட்டும் தெரிந்தது
ஒரு பிரகாசமான சிறிய மிட்டாய்க்கடையின் விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்த ஜன்னலொன்று சாலையின் இருட்டை துண்டித்தது வேலண்டீன் அந்த கடை முன்னால் நின்றார்
ஒரு கண தயக்கத்துக்கு பிறகு கடைக்குள் நுழைந்த வேலண்டீன் அங்கிருந்த வண்ணமயமான மிட்டாய்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு பதிமூன்று சாக்லேட் சுருட்டுக்களை வாங்கிக்கொண்டு, விசாரணையை எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்
ஆனால் அதற்கு அவசியமேற்படவில்லை..
எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் முகத்துடன் இருந்த அந்த கடைக்காரப் பெண், அதிகார தோற்றத்தில் இருக்கும் இவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே கதவுக்கு பின்னால் சீருடையில் இருந்த காவலரை பார்த்துவிட்டால். சுதாரித்துக் கொண்டு அவளாகவே ’’ஓ! அந்த பெட்டகத்துக்காக வந்திருக்கிறீர்களா?’’ நான் அதை முன்பே அனுப்பிவிட்டேனே’’ என்றாள்
’’பெட்டகமா?’’ என்றார் வேலெண்டீன். இப்போது வியப்படைவது அவர் முறையாகிவிட்டது
’’அதுதான் அந்த பாதிரிகள் விட்டு சென்ற பெட்டகம்’’ என்றாள் அவள்
’கடவுளே ’தயவு செய்து என்ன நடந்ததென சொல்லுங்கள்’’ என்றார் வேலண்டீன் முதன் முறையாக ஆவலை வெளிக்காட்டும் குரலில்
’’இரு பாதிரிகள் கடைக்கு அரைமணி நேரத்துக்கு முன்பு வந்து பெப்பர்மிண்டுகள் வாங்கிவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.. பிறகு ஹீத்தைநோக்கி அவர்கள் போன சில நொடிகளில் அவர்களில் ஒருவர் மட்டும் கடைக்கு வேகமாக திரும்பி வந்து ’’எதாவது பெட்டகத்தை நான் கடையில் விட்டுவிட்டு சென்றேனா?’’ என்று கேட்டார்
நான் எல்லா பக்கமும் பார்த்தபின்பு ’’அப்படி எதுவும் இல்லை’’யென சொன்னேன். ’’பரவாயில்லை, ஒருவேளை பெட்டகமேதும் உங்கள் கண்ணில் பட்டால், அதை இந்த முகவரிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று சொல்லி முகவரியையும், அந்த சிரமத்திற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்’’.
’’நன்றாக பார்த்து விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் அவர் ஒரு பழுப்பு காகித பெட்டகமொன்றை விட்டுச்சென்றிருந்ததை பிறகுதான் பார்த்தேன் அதை அவர் கொடுத்திருந்த முகவரிக்கு அனுப்பி விட்டேன்.’’
’’அந்த விலாசம் எனக்கு இப்போது சரியாக நினைவிலில்லை ஆனால் அது எங்கோ வெஸ்ட்மிஸ்டரில் இருக்கும் இடம். ஒருவேளை அது முக்கியமான பொருளாக இருந்து அதன்பொருட்டுதான் காவலர்களாகிய நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்’’ என்றாள்
’’ ஆம், அதன்பொருட்டு தான்’’ என்ற வேலண்டீன் ’’இங்கிருந்து ஹேம்ப் ஸ்டட் ஹீத் எத்தனை தொலைவு?’’ என்று கேட்டார். ’’நேராக சென்றால் பதினைந்து நிமிடங்களில் போய் விடலாம்’’ என்றாள்.. கடையிலிருந்து பாய்ந்து வெளியே ஓடிய அவரை விருப்பமின்றி பெருநடையில் தொடர்ந்தார்கள் உதவியாளர்களும்
இருண்டிருந்த அந்த குறுகிய சாலையிருந்து வெளியே வந்து பரந்த வானின் கீழ் நிற்கையில்தான் இன்னும் அத்தனை பொழுதாகிவிடவில்லை நல்ல வெளிச்சம் இன்னும் இருக்கிறதென்பது தெரிந்தது
தொலைவில் அடர்ந்திருந்த மரக்கூட்டங்களின் இருட்டில் மயில்பச்சைநிற வானத்தை அந்திச்சூரியன் சிவப்பக்கிக்கொண்டிருந்தது. ஒளிர்ந்த அந்திவானத்தில் ஒன்றிரண்டு நட்சத்திர பொட்டுக்களும் தென்பட்டன. பகற்பொழுதின் .சந்தடிகள் மெல்ல அடங்கி அன்றைய தினத்தின் மிச்சம் ஹேம்ஸ்டெனின் பிரபல வேல் ஆஃப் ஹெல்த் பூங்காவில் அந்தியின் பொன்னிற ஒளியில் குளித்துக் கொண்டு இருந்தது. .
விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இன்னும் அங்கும் இங்குமாக பூங்காவில் இருந்தார்கள்.. சில ஜோடிகள் அங்கிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். தொலைவில் ஒரு சிறுமி ஊஞ்சலில் உற்சாக கூச்சலுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
ஒரு சரிவில் நின்று கொண்டு பள்ளத்தாக்கின் குறுக்கே பார்த்துக்கொண்டிருந்த வேலண்டின் தான் தேடிக்கொண்டிருந்ததை கண்டார். தொலைவில் கருப்பு உடைகளில் கலைந்து சென்று கொண்டிருந்தவர்களில் அந்த இருட்டிலும் மிகத்தனித்து நெட்டையும் குட்டையுமாக இருந்த இரு கருப்பு உருவங்கள் அவர் கண்களுக்கு தென்பட்டன.
அங்கிருந்து பார்க்கையில் அவர்கள் சிறு பூச்சிகளை போலத்தான் தெரிந்தார்கள் எனினும் வேலண்டீனுக்கு அதில் ஒருவன் மற்றவனை விட மிக சிறிதாக இருப்பது தெளிவாக தெரிந்தது
மற்றொருவன் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு லேசாக குனிந்து கொண்டிருந்தாலும் வேலண்டீனுக்கு அவன் ஆறடிக்கு மேலும் உயரமாயிருந்ததை பார்க்க முடிந்தது.
பொறுமையிழந்து கைத்தடியை சுழற்றியபடியே பல்லைக்கடித்தபடி அவர் முன்னோக்கி சென்றார். அவர்களுக்கிடையிலிருந்த தொலைவு குறைந்து அவ்விருவரின் உருவங்களும் உருப்பெருக்கியில் தெரிவதுபோல கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி தெரிய ஆரம்பித்த போது அவருக்கு மற்றுமொரு புதிய விஷயமும் தெரியவந்தது. திடுக்கிட செய்த அந்த உண்மையை எப்படியோ அவர் எதிர்பார்த்துமிருந்தார்.
அந்த உயரமான பாதிரி யாரென்று தெரியாவிட்டாலும், சந்தேகமில்லாமல் அந்த குள்ளமானவரை அடையாளம் தெரிந்தது. அவன் அன்று அவருடன் ஹார்விச் ரயில் பயணத்தில் அவருடன் பயணித்த, அவரால் பழுப்பு நிற காகித பெட்டகங்கள் குறிதது எச்சரிககபட்ட அதே எஸ்ஸெக்ஸ் குளளப்பாதிரிதான்
இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்னால் எல்லாமே எல்லாவற்றுடனும் பொருந்தி சரியாக வந்தது
இன்று காலையில் பாதிரியார் பிரெளன் எஸ்ஸெக்ஸிலிருந்து விலைமதிப்பற்ற நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் ஒரு வெள்ளிச்சிலுவையை மாநாட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு இறைப் பணியாளர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு கொண்டு வந்திருப்பதை அவர் தனது விசாரணையில் அறிந்திருந்தார்.
வேலண்டீன் கண்டுபிடித்ததை ஃப்ளேம்போவும் கண்டுபிடித்திருப்பதில் எந்தஆச்சரயமும் இல்லை. இப்போது ஃப்ளேம்போ எல்லாவற்றையும் அறிந்துவிட்டான். நீலச்சிலுவையை குறித்து அறிந்துகொண்ட ஃப்ளேம்போ அதை திருடிச்செல்ல முயற்சித்ததிலும் ஏதும் ஆச்சரயமில்லை. வரலாற்றில் இயற்கையாக இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது
ஃப்ளேம்போ அந்த குடையையும் காகித பெட்டகங்களையும் கொண்டிருந்த அப்பாவி பாதிரியை அப்படி தனியே திருட்டுக்கான நோக்கத்துடன் அழைத்து சென்றிருப்பதிலும் ஏதும் ஆச்சர்யமில்லை தான். அந்த பாதிரியை அப்படி யாரும் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்ல முடியும்தான்
ஃப்ளேம்போவை போல தேர்ந்த நடிகனொருவன் பாதிரியின் வேஷத்தில் பாதிரியார் பிரெளனை ஹேம்ஸ்டெட் ஹீத் வரையிலும் அழைத்து வந்திருப்பதிலும் எந்த ஆச்சர்யமுமில்லை.. இதுவரையிலும் குற்றம் தெளிவாகவே தெரிந்தது.
அந்த அப்பாவி பாதிரி பிரெளனின் மீது அவருக்கு கனிவு உண்டானாலும் அப்படியான எளிய ஒருவனை ஏமாற்ற துணிந்த ஃப்ளேம்போவின் நாயகத்தன்மை மீது அவருக்கிருந்த அபிப்பிராயம் வெகுவாக குறைந்து விட்டிருந்தது.
எனினும் ஏறக்குறைய வெற்றிக்கனியை பறிக்கவிருந்த இந்த சமயத்தில் வேலண்டீனுக்கு சமீபத்தில் நடந்த சில விஷயங்களை கிடைத்தவற்றுடன் பொருத்திப் பார்க்க முடியாமல் இருந்தது
எஸ்ஸெக்ஸ் பாதிரியிடமிருந்து நீலச்சிலுவையை திருடுவதற்கும், சூப்பை சுவற்றில் வீசி எறிவதற்கும் என்ன தொடர்பு? எதன் பொருட்டு ஆரஞ்சுகள் முந்திரிகளென மாற்றி அழைக்கப்பட வேண்டும்? ஏன் முன்கூட்டியே பணம் கொடுத்துவிட்டு ஜன்னல் கண்ணாடியை உடைக்க வேண்டும்
அவுர் தேடலின் முடிவுக்கு வந்துவிட்டார் ஆனால் அவரின் தேடல் கதையின் நடுவில் சில பக்கங்கள்தான் காணாமல் போயிருந்தன.அரிதாக அவர் தோற்றிருந்த நேரங்களிலும் குற்றவாளியை தப்ப விட்டிருந்தாலும் தடயங்களை கண்டுபிடித்து இருப்பார். ஆனால் இந்த முறை அவர் குற்றவாளியை நெருங்கியும் தடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை
அங்கிருந்த குன்றின் பசும் மடிப்புக்களின் குறுக்காக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அவ்விருவரும் கருப்பு பூச்சிகளைப் போல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்கள்
உரையாடலில் மூழ்கியிருந்த அவர்களிருவரும் சென்று கொண்டிருக்கும் திசையைகூட கவனிக்கவில்லை. ஆனால் உறுதியாக அவர்கள் ஹீத்தின் அடர்ந்த அமைதியான இடங்களை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை நெருங்க, மான் வேட்டையாடுபவர்களைப்போல புல்தரையில் தவழ்வதும், மரக்கூட்டங்களுக்கிடையில் ஒளிந்து கொள்வது போன்ற கண்ணியக்குறைவான செயல்களிலும் இவரகள் ஈடுபட வேண்டி இருந்தது.
இத்தனை ரகசிய நடவடிக்கைகளுடன் மெதுவாக அவர்களை நெருங்கிய போது அவர்களின் உரையாடல் கூட லேசாக கெட்டது. முழுக்க தெளிவாக இல்லையென்றாலும் தர்க்கம் எனும் சொல் அடிக்கடி கீச்சுக் குரலில் உச்சரிக்கப்பட்டது கேட்டது
அடர்ந்த மரக் கூட்டங்கள் இடைப்பட்ட ஒரு பகுதியில் அவர்களை காவலர்கள் பார்வையிலிருந்து தவற விட்டனர்.பதட்டமான பத்து நிமிடங்களுக்கு அவர்கள் இருக்கும் சுவடே தெரியவில்லை பின்னர் அந்த அடர்ந்த பகுதியை தாண்டியதும் கதிரணைந்து கொண்டிருந்த சரிவில் ஒரு அழகிய தனிமையான இடத்தில் ஒரு மரத்தடியிலிருந்த சேதமான பெஞ்சில் அவர்களிருவரும் அமர்ந்திருந்தது தெரிந்தது. இன்னும் தீவிரமான உரையாடலில் தான் அவர்களிருவரும் இருந்தார்கள்.
இருட்டிக்கொண்டிருந்த தொடுவானில் பசுமஞ்சள் நிறம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது ஆனால் தலைக்கு மேலிருந்த மயில்பச்சை கார்நீலமாகி விட்டிருந்தது. தனித்து துலங்கிய நட்சத்திரங்கள் ஆபரணங்களை போல் பிரகாசித்தன.
உதவியாளர்களுக்கு சைகை காண்பித்துவிட்டு ஓசையற்று அந்த பெருங்கிளைகள் கொண்ட மரத்தின் பின்னால் மறைந்து நின்றிருந்த வேலண்டீனுக்கு அந்த இரு புதிரான பாதிரிகளும் பேசிக்கொண்டிருந்தது முதல் முறையாக துல்லியமாக கேட்டது
ஒன்றரை நிமிடங்களுக்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டவருக்கு தான் ஹீத்தின் இருளுக்குள் இரு காவலர்களை கூட்டிக்கொண்டு இவ்வளவு தூரம் வந்த சிரமம் எல்லாம் விழலுக்கு நீர் இறைத்தது போல வீணான வேலையோ என்று பயங்கரமான சந்தேகமே வந்துவிட்டது
ஏனெனில் அந்த ஒரு பாதிரிகளும் அசல் பாதிரிகளை போலவே பொறுமையாக இறையியலின் நுண்மையான சாராம்சத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்
பாதிரி பிரெளன் தனது வட்ட முகத்தை, துலங்கிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை நோக்கி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். மற்றவனோ தான் நட்சத்திரங்களை பார்க்கவும் தகுதியற்றவன் என்பது போல தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான்
கருப்பினத்தவர்களுக்கான ஸ்பானிய தேவாலயங்களிலோ அல்லது வெள்ளையர்களுக்கான இத்தாலியின் தேவாலயங்களிலோ கூட அத்தனை இறைமை ததும்பும் உரையை கேட்க முடியாது
முதலில் அவர் கேட்டது ’’இதுதான் மாசுபடுத்த முடியாத சொர்க்கமென்று இடைக்காலத்தில் அவர்கள் சொன்னதெல்லாம்’’ என்று எஸ்ஸெக்ஸின்பாதிரி பேசி முடித்த வாக்கியத்தின் கடைசி பகுதியைத்தான். பின்னர் அவர்களின் உரையாடல் தொடர்ந்தது
உயரமான பாதிரி தலையை ஆமோதிப்பது போல் அசைத்து ’’ஆம் நவீன காப்பிரிகள் தர்க்க பூர்வமாக அனைத்தையும் அணுகுகிறார்கள்.எனினும் இத்தனை கோடி நட்சத்திரங்களையும் கோடானு கோடி உலகங்களையும் கொண்டிருக்கும் இந்த அற்புதமான பிரபஞ்சத்தில் எங்கேனும் எல்லா தர்க்கங்களும் பொருளற்றும் போகுமல்லவா’’ என்றான்
’’இல்லை ’’என்றார் பாதிரி பிரெளன் ’’தர்க்கம் என்றைக்குமே, ,கடைசி தீர்ப்பு நாளன்று கூட பொருளற்று போகாது’’ ’’எனக்கும் தெரியும் தேவாலயங்கள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவைகள் என மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது. ஆனால் இப்பூமியில் தேவாலயங்கள் மட்டும்தான் தர்க்கங்களை அவற்றிற்கு உரிய உயரிய இடத்தில் வைத்திருக்கின்றன. இதே தேவாலயங்கள் தான் இறைவனும் தர்க்கங்களால் கட்டுண்டவர் என்பதை உறுதிபட கூறுகின்றன’’என்றார்.
மற்றவன் நிமிர்ந்து நட்சத்திரங்கள் தூவப்பட்டிருந்த வானை நோக்கி ’’யாரால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடியும் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தில்’’ என்றான்
’’பருவடிவில் எல்லையற்றது தான் எனினும் சத்திய விதிகளில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு எல்லையற்றதல்ல இப்பிரபஞ்சம்’’ என்றார் பிரெளன்.
மரத்துக்கு பின்னிருந்து தன் விரல் நகங்களை வேலண்டீன் கடித்து துப்பிக்கொண்டிருதார். மிகப் பிரமாதமான யூகத்தின் பேரில் தான் அழைத்து வந்த இரு காவல் உதவியாளர்களும் இந்த பாதிரிகள் நிதானமாக விரிவாக விவாதித்துக்கொண்டிருக்கும் மெய்யியல் ரகசியங்களை கேட்டு, தன்னை ஏளனம் செய்யப்போவதை மனக்கண்களால் அவரால் காணவே முடிந்தது.
பொறுமையிழந்து இவற்றை சிந்தித்து கொண்டிருந்ததில் உயரமானவன் சொன்ன அதே அளவுக்கான விரிவான பதிலை கேட்க தவறிவிட்டிருந்த வேலண்டீன் இப்போது மீண்டும் பாதிரி பிரௌன் பேசுவதை கேட்டார்.
’’தர்க்கமும் நீதியும் எப்போதும் மிக மிக தொலைவிலும் தனிமையிலும் இருக்கும் நட்சத்திரங்களைக்கூட அணுகி விடுகின்றன. அந்த நட்சத்திரங்களை பாருங்கள் அவை ஒற்றை வைரங்களாகவும், நீலமணிகளாகவும் தெரியவில்லையா?’’
’’உதாரணமாக தாவரவியல் அல்லது புவியியலை கூட கற்பனை செய்து கொள்ளலாம். பெரும் காடொன்றின் மரங்களின் பசும் இலைகளனைத்தும் மரகதங்களென்று எண்ணலாம்.. இந்த நிலவை கூட நீலநிலவென்று எண்ணிப்பாருங்கள், ஒரு மாபெரும் நீலக்கல். இது போன்ற எந்த கற்பனாவாத மாற்றங்களாக இருப்பினும் அந்தந்த இடங்களுக்கான தர்க்கமும் நியாமமும் மாறா உண்மையென அங்கேயிருக்கும்.’’.
’’முத்து முகடுகள் கொண்ட அமுதக் கற்களினாலான சமவெளியில் கூட திருடாதீர்கள் என்ற எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருக்கும்’’.
இவற்றை கேட்டுக்கொண்டிருந்த வேலண்டீன், தன் வாழ்வின் ஆகப்பெரிய தவறை நினைத்து வருந்தியபடி மெல்ல தான் மறைந்திருக்கும் இடத்திலிருந்து அகன்று செல்ல முடிவெடுத்தார் .ஆனால் உயரமானவனின் திடீர் அமைதியால் அதைச் செய்யாமல் அவன் பேசும் வரை அங்கேயே காத்திருந்தார்
ஒருவழியாக அவன் பேசினான் தலை குனிந்தபடி கைகளை முழங்கால்களில் வைத்துக்கொண்டு ’’ஆனால் நான் இன்னும் நம்புகிறேன். பிற உலகங்கள் நம் தக்ர்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம். பரமண்டலத்தின் மர்மங்களை,நம்மால் புரிந்து கொள்ள முடியாது வணங்க மட்டுமே முடியும்’’ என்றவன்., தலையை குனிந்தவாறே தனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இன்றி ’’உன்னிடம் இருக்கும் நீலச்சிலுவையை என்னிடம் கொடுத்துவிடு. நாம் இங்கே தன்னந்தனிமையில் இருக்கிறோம் நீ மறுத்தால் உன்னை துண்டு துண்டாக்கி விடுவேன்’’ என்றான்
குரலிலும் பாவனையிலும் எந்த மாற்றமுமின்றி சொல்லப்பட்டதால் அந்த சொற்கள் மிக பயங்கரமாக இருந்தன.
ஆனால் எந்த திகைப்பும் ஆச்சர்யமுமின்றி, அந்த சிலுவை பாதுகாப்பாளன் மெல்ல முகத்தை திருப்பினார். நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் இன்னும் கூட அதே முட்டாள்தனம் தான் நிறைந்திருந்தது
ஒருவேளை என்ன நடக்கிறது என அவருக்கு புரியவில்லையா அல்லது என்ன நடக்கிறது என்று தெரிந்து அச்சத்தினால் அப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரா?
’’ஆம்’’ என்றான் அந்த உயரமான பாதிரி அதே மெல்லிய குரலில், ’’ஆம் நான் தான் ஃப்ளேம்போ. கொடுக்கிறாயா அந்த நீலச்சிலுவையை என்னிடம்’’ என்றான்
’’இல்லை’’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் பாதிரி பிரெளன்
சட்டென்று தனது பாசாங்குகளை எல்லாம் தூக்கி எறிந்த ஃப்ளேம்போ இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு மெல்ல சிரித்தான். ’’என்னது முடியாதா? என்னிடம் கொடுக்க மாட்டாயா அதை? இறுமாப்பு கொண்ட மதகுருவே, எளியவனே! ’’நீ ஏன் கொடுக்கமாட்டாய் என்று நான் சொல்லட்டுமா? அதைத்தான் நான் ஏற்கனவே என் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறேனே’’ என்றான்
எஸ்ஸெக்ஸின் பாதிரி அந்த இருளில் பிரமித்தது போல் தெரிந்த முகத்துடன் ஆர்வமுடன் கோழைத்தனமும் நாடகத்தனமுமான குரலில் ’’என்னது உன்னிடம் இருக்கிறதா? உண்மையாகவா?’’ என்றார்
மகிழ்ச்சியில் கூச்சலிட்ட ஃப்ளேம்போ ’’ அடடா , நீ நாடகத்தில் நடிக்கலாம். ’’ஆமாண்டா கூமுட்டை, நிச்சயமாக தான் சொல்கிறேன் நான் உன்னிடமிருந்து நீல சிலுவையை எடுத்துக்கொண்டு போலி சிலுவை இருந்த பெட்டகத்தை மாற்றி வைத்து விட்டேன் நீ வைத்திருப்பது போலி, அசல் நீலச்சிலுவை என்னிடம் இருக்கிறது. அரதப்பழசான திருட்டு வேலையடா இது’’ என்றான்
தலைமுடியை கைகளால் கோதிகொண்டே பாதிரியார் பிரெளன் புதிரான குரலில் ’’ஆம் பழசுதான், நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன்’’ என்றார்.
திருட்டுவேலைகளில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலியான ஃப்ளேம்போ திடீர் ஆர்வத்துடன் ஏறக்குறைய பாதிரியார் பிரெளன் மீது சாய்ந்துகொண்டு ’’கேட்டிருக்கிறாயா?, எப்போது கேட்டாய்’’? என்றான்
’’அவன் பெயரை உன்னிடம் சொல்லமுடியாது. அவன் என்னிடம் பாவமன்னிப்பு கேட்க வந்தவன். இதே வித்தையை, காகித பழுப்பு பெட்டகங்களை இடம் மாற்றிவைக்கும் இதே வித்தையை செய்து 20 வருடங்கள் மிக செழிப்பாக வாழ்ந்தவன். உன் மீது சந்தேகம் வந்தவுடனேயே அந்த பாவபப்ட்டவனைபோலவே நீயும் செய்யப்போகிறாயே’’ என்றுதான் நினைத்தேன்
’’என்னது என்னை சந்தேகித்தாயா? என்றான் அந்த சட்ட விரோதி. ‘’ஹீத்தின் இந்த தனிமையான இடத்திற்கு உன்னை அழைத்து வந்திருப்பதால் என்னை சந்தேகப் படும் அளவுக்கு அத்தனை கூர்மதி கொண்டவனா நீ “
மறுத்து தலை ஆட்டியபடி ‘’ இல்லை இல்லை நாம் முதல்முதலாக பார்த்த போதே சந்தேகித்தேன்’’ ’’உன்னைப்போன்ற ஆட்கள் கைகளில் மாட்டியிருக்கும் முட்கள் கொண்ட காப்பினால் வீங்கி இருக்கும் சட்டைக்கையே உங்களை காட்டிக்கொடுக்குமே’’ என்றார்
புருவத்தை உயர்த்தியபடி ’’எல்லாம் சகவாச தோஷம்தான்’’ என்றார் பாதிரியார் பிரெளன் ’’ஹார்டில்பூலில் நான் உபகுருவாக பணிபுரிகையில் அங்கிருந்த மூன்று நபர்கள் இதுபோன்ற முள்காப்பை கைகளில் அணிந்திருந்தனர். எனவே உன்னை பார்த்ததுமே சந்தேகம் கொண்டு நீலச்சிலுவையின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டேன்’’
’’உன்னை கண்காணித்துக்கொண்டே இருந்தேன். நீ பெட்டகத்தை மாற்றிய பின்னர், நீ பார்க்காத போது மீண்டும் அவற்றை இடம் மாற்றினேன் அசல் நீலச்சிலுவை இருக்கும் பெட்டகத்தை அந்த மிட்டாய் கடையில் விட்டுவிட்டு வந்தேன்’’ என்றார்
’’என்னது விட்டுவிட்டு வந்தாயா’’? என்று அலறினான் ஃப்ளேம்போ. முதல்முறையாக அவன் குரலில் வெற்றியல்லாத ஒரு தொனி கலந்திருந்தது
அதே மாறுபடில்லாத குரலில் தொடர்ந்தார் பாதிரியார் பிரெளன் ’’நான அந்த மிட்டாய்க்கடைக்கு முதலில் திரும்பசென்ற போது ஏதேனும் பொட்டலமொன்றை விட்டுவிட்டேனா?’’ என்று கேட்டு அப்படியேதும் கிடைத்தால் அனுப்பிவைக்கும்படி ஒரு முகவரியை கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் அப்போது அங்கு எதையும் விட்டுவிட்டு வரவில்லை என்று எனக்கு தெரியும்’’
’ மீண்டும் அங்கு சென்று அசல் நீலச்சிலுவை இருந்த பெட்டகத்தை அங்கே வைத்து விட்டு வந்தேன். அதன்பிறகு அவர்கள் என் பின்னால் தேடிக்கொண்டு வராமல் நான் கொடுத்திருந்த வெஸ்ட்மின்ஸ்டர் முகவரியில் இருக்கும் என் நண்பருக்கு அதை அனுப்புவார்கள் என்று அறிந்திருந்தேன்.’’ என்றவர்
சற்றே சோகமாக ’’நான் இதையும் ஹார்டில் பூலின் திருடனிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவன் ரயில்நிலையங்களில் திருடும் கைப்பைகளை இப்படித்தான் தபாலில் அனுப்புவான். இப்போது அவன் ஒரு மடாலயத்தில் இருக்கிறான். ஒரு பாதிரியாக இருப்பதால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களை பாவ மன்னிப்பின் போது மக்கள் தெரியப்படுத்தி விடுகிறார்கள்’’ என்றார்
ஃப்ளேம்போ சட்டைக்குள்ளிருந்து ஒரு பழுப்பு காகித பெட்டகத்தை எடுத்து அதை அவசரமாக கிழித்தான். அதற்குள்ளே வெறும் ஈயக்குச்சிகளே இருந்தன.
அவன் எழுந்துநின்று உரக்க கத்தினான். ’’நான் நம்பமாட்டேன் உன்னைப்போல ஒரு அடிமுட்டாள் இத்தனை சாமர்த்தியமாக இதைசெய்திருக்கவே முடியாது’’
’’அந்த நீலச்சிலுவையை நீதான் வைத்திருக்கிறாய். ஒழுங்காக கொடுத்துவிடு, உன்னை என்னிடமிருந்து காப்பாற்ற இங்கு யாருமில்லை. நாமிருவரும் இங்கு தனியாக இருக்கிறோம். என்னால் உன்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியும்’’ என்றான்.
’’முடியாது’’ என்றார் பாதிரியார் பிரெளன் எழுந்து நின்றபடி ’’ உன்னால் என்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் என்னிடம் அது இல்லை’’
இரண்டாவது ’’நாம் இங்கு தனியாகவும் இல்லை’’ என்றார்
அவரை நோக்கி நகர எத்தனித்த ஃப்ளேம்போ இதைக்கேட்டதும் அப்படியே திகைத்து நின்று விட்டான்
’’மரங்களுக்கு பின்னால்’’ என்று சுட்டிக்காட்டிய அவர் சொன்னார் ’’அங்கே இரண்டு பலசாலிகளான காவலர்களும், உலகின் மிகச்சிறந்த துப்பறிவாளர் ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு எப்படி வந்தார்கள் என நீ கேட்கலாம், நான் தான் அவர்களை அழைத்து வந்தேன் நான் எப்படி இதை செய்தேன் என தெரிந்து கொள்ள நீ விரும்பினால் அதை சொல்கிறேன். ஏனெனில் குற்றவாளிகளிடம் புழங்குகையில் இதுபோல பலவற்றை நாம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்’’
’’நீ ஒரு திருடன் தானா, என்று எனக்கு அத்தனை உறுதியாக தெரிந்திருக்கவில்லை. ஒரு பாதிரியாகிய என்னால் மற்றொரு பாதிரியை அப்படி திடீர் என்று குற்றம்சாட்டி விடமுடியாது. எனவே நீயாக உன்னை வெளிப்படுத்தும் தருணங்களை உருவாக்கினேன்’’
’’பொதுவாக உணவகங்களில் காப்பியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு கலந்திருந்தால் அதை பெரிய பிரச்சனையாக்குவார்கள், ஆனால் அப்படி பிரச்சனை ஏதும் பண்ணாமல் அமைதியாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும். சர்க்கரையையும் உப்பையும் நான்தான் மாற்றி வைத்தேன் ஆனால் நீ உப்பை சுவைத்த பின்னரும் அமைதியாகவே இருந்தாய்’’
‘’பில் கட்டணம் அதிகமாக இருந்தால் யாராக இருந்தாலும் அதை ஆட்சேபிப்பார்கள். அப்படி ஆட்சேபிக்காமல் அந்த அதிக தொகையையும் ஒருவன் தருவானானால், அவன் தன்னை யாரும் கவனிக்க கூடாது என்று எண்ணுபவனாகத்தான் இருப்பான். உன் பில் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் படி நான் தான் மாற்றினேன் அதையும் நீ செலுத்தினாய்’’ .
அனைவருமே ஃப்ளேம்போ ஒரு புலியைப்போல தாவிக்குதித்து தப்பியோடி விடுவானென்றே எதிர்பார்த்தனர், ஆனால் அவன் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உண்மையில் இப்போது நடந்தவற்றை குறித்து அறிந்து கொள்ள பெரும் ஆர்வம் கொண்டிருந்தான்.
மீண்டும் தெளிவான குரலில் தொடர்ந்த பாதிரியார் பிரெளன், ’’சரி தேடிக்கொண்டிருக்கும் காவலர்களுக்கு நீ எந்த தடயங்களையும் விட்டுவிட்டு வரவிடாவிட்டாலும் யாராவது ஒருவர் தடயங்களை உண்டாக்க வேண்டுமல்லவா? என்று கேட்டார்
நாமிருவரும் சென்ற எல்லா இடங்களிலும், நாம் அங்கிருந்து சென்ற பின்னர் முழு நாளும் நம்மை பற்றியே அவர்கள் பேச வேண்டும் என்பது போல எதோ ஒரு காரியத்தை செய்துவிட்டு வந்தேன். ஆனால் அவை எல்லாம் பெரிய குற்றங்களொன்றுமில்லை, ஒரு சுவற்றை பாழ்படுத்தினேன், ஆப்பிள்களை கொட்டினேன், ஜன்னல் கண்ணாடியை உடைத்தேன் ஆனால் நீலச்சிலுவயை காப்பாற்றிவிட்டேன் ஏனெனில் சிலுவை எப்போதும் காப்பாற்றபப்டும்.
’’இப்போது நீலச்சிலுவை வெஸ்ட்மின்ஸ்டரில் பாதுகாப்பாக இருக்கும். நல்லவேளை, நீ .கழுதை விசிலை உபயோகித்து என்னை தடுத்துவிடுவாயோ என்று கூட நான் நினைத்தேன்’’
’’எதைக் கொண்டு?’’ என்றான் ஃப்ளேம்போ
முகத்தை சுருக்கியபடி ’’நல்லவேளையாக நீ அவற்றை கேள்விப்பட்டிருக்க வில்லை’’ என்ற பாதிரியார் பிரெளன் அது ஒரு மோசமான விஷயம் நீ அந்த விசிலடிப்பவனை காட்டிலும் நல்லவன் என்று நான் அறிவேன்’’ என்றார்
’’ஒருவேளை உனக்கு அது தெரிந்திருந்தால், நான் புள்ளி வித்தை வழிமுறையை உபயோகித்துக் கூட உன்னை பிடித்திருக்க முடியாது ஏனெனில் .என் கால்களில் அத்தனை வலுவில்லை’’
’’அட! புள்ளி வித்தை வழிமுறையாவது உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்’’ என்று ஆச்சரியப்பட்ட பாதிரியார் பிரெளன் . நீ இன்னும் அத்தனை மோசமாக ஆகியிருக்கவில்லை போலிருக்கிறது என்றார்.
’’நீ எப்படி இந்த மோசமான வழிமுறைகளையெல்லாம் அறிந்து கொண்டாய்?’’ என்று கூச்சலிட்டான் ஃப்ளேம்போ
அவரது வட்டமான எளிய முகத்தில் புன்னகையில் சாயல் வந்து போனது ’’ஒரு எளிய பாதிரியாக இருந்து தான் இவற்றை கற்றுக்கொணடிருந்திருப்பேனாக இருக்கும். ஆனால் உனக்கு தெரியவில்லையா? அன்றாடம் மனிதர்களின் பாவங்களை கேட்பதை தவிர வேறேதும் செய்யாமல் இருப்பவனுக்கு மனிதர்களின் தீமையை குறித்து அனைத்தும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று?’’
’’மேலும் எனது இறைப்பணியின் மற்றொரு அனுபவத்தினாலும் நான் உன்னை சந்தேகித்தேன்’’
’’ அது என்னது ? ‘’ என்றான் அந்த திருடன் அதிர்ந்துபோய்
புன்னகையுடன் ’’நீ தர்க்கத்தை சாடினாய், அது முறையான இறையியலல்ல!’’ என்றார் பாதிரியார் பிரெளன்
பாதிரின் பிரெளன் தனது உடைமைகளை எடுக்க திரும்புகையில் மரங்களின் இருட்டிலிருந்து மூன்று காவலர்களும் வெளியே வந்தார்கள். நல்ல கலைஞனும் விளையாட்டு வீரனுமான ஃப்ளேம்போ இரண்டெட்டு பின் வைத்து தலை குனிந்து வேலண்டீனுக்கு வணக்கம் தெரிவித்தான்
துல்லியமான குரலில். ’’என்னை வணங்காதே, நண்பா!’’ நாமிருவரும் நமது ஆசானாகிய இவரை வணங்குவோம்’’ என்ற வேலண்டின் பாதிரியார் பிரெளனை கைகாட்டினார்
இருவரும் தங்களது தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு குனிந்து வணக்கம் சொல்லியபோது பாதிரியார் பிரெளன் தனது குடையை தேடிக்கொண்டிருந்தார்.
***
குறிப்பு :-
நீலச்சிலுவை லண்டனை சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தின் ஆங்கில எழுத்தாளர். இலக்கிய விமர்சகர், சிந்தனையாளர், நாடகாசிரியர் , பேச்சாளர், இதழியலாளர், மற்றும் இறையியலாளரான கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன் (Gilbert Keith Chesterton- May 29, 1874 – June 14, 1936) எழுதிய சிறுகதைகளில் ஒன்று. இது செப்டம்பர் 1910’ல் “The Storyteller”. என்ற இதழில் வெளியானது
இந்த சிறு கதையில்தான் அவரது நெருங்கிய நண்பரான ஒரு பாதிரியின் சாயலில், துப்பறியும் பாதிரியாரான பிரெளன் என்னும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை முதன் முதலில் உருவாக்கி இருந்தார்.. இக்கதைக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து இதே துப்பறியும் பாதிரியார் இடம்பெறும் மேலும் பன்னிரண்டு கதைகளின் முதல் தொகுப்பான ’’தி இன்னோசன்ஸ் ஆஃப் ஃபாதர் பிரவுன்” 1911’ல் வெளியிடப்பட்டது இந்த பாதிரியார் பாத்திரம் தொலைக்காட்சி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது
இவர் துப்பறியும் கதைகளை மட்டுமல்லாது குற்றப்புலனாய்வை அடிப்படையாக கொண்ட கதைகளை எப்படி எழுதுவது என்று பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
அவரின் செயலாளராக இருந்த எழுத்தாளரும் பாடலாசிரியருமான ஃப்ரான்சிஸ் ஆலிஸையே அவர் மணந்து கொண்டார். பிரான்ஸிசின் ’’பெத்லஹேம் இன்னும் எத்தனை தொலைவு’’ என்னும் கவிதை மிக புகழ்பெற்றது
செஸ்டர்டன் நல்ல கம்பீரமான ஆகிருதி கொண்டவர். 6 அடிக்கு மேல் உயரமும் நல்ல பருமனும், அதற்கேற்ற உடல் எடையும் கொண்டவர். உன்னத ஆடைகளின் பிரியரும் கூட. எப்போதும் பெரிய தொப்பி அணிந்து, வாயில் புகையும் சுருட்டுடன் காணப்படுவார்
இவர் 80 நூல்கள் 2000 கவிதைகள் 200 சிறுகதைகள், 4000 கட்டுரைகள் மற்றும் ஏராளமான நாடகங்களை எழுதியிருக்கிறார். 1932 ல் இருந்து தனது இறுதிக்காலம் வரையிலும் சுமார் 40 பிரபல உரைகளை BBC வானொலிக்கு அளித்திருந்தார்.
. இறை நம்பிக்கை இல்லாத குடும்பத்தை சேர்ந்த இவர் தனது 48 ஆவது வயதில் கத்தோலிக்க மதத்தை தழுவினார். ’’கத்தோலிக்க தேவாலாயங்களும் மத மாற்றமும்’’ என்னும் இவரது நூல் மிக பிரபலமானது.
பிரெளன் பாதிரியின் புத்திகூர்மையை வாசகர்கள் மெச்சவேண்டும் என்ற கூடுதல் கவனத்தில், கதை சொல்லலில் சில நுண்மையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மறந்துவிட்டார், பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளையும், நிரப்பபடாத இடைவெளிகளையும் கொண்டிருக்கிறது என்னும் விமர்சனமும் நீலச்சிலுவையின் மீது உண்டு.
உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் மலர்களின், மலர் வடிவங்களின் தாக்கம் இருக்கிறது. பண்டைய எகிப்திய ரோமானிய மற்றும் கிரேக்க நாகரிகங்கள் அனைத்திலுமே மலர்கள் அலங்காரத்திற்காகவும், வழிபாட்டிலும், தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டன.
உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின் மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள், குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.
உலக நாகரீகங்கள் அனைத்திலுமே மலர்களின் தாக்கம் இருக்கிறது எனினும் ஜப்பானிய கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் மலர் அமைப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும். மலர்ப் பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு ஜப்பானிய பண்பாட்டை அறிய முடியாது. ஹன கொத்தோபா என்பது (hana kotoba) ஜப்பானிய ரகசிய மலர் மொழியை குறிக்கும் சொல். அதன்படி ஜப்பானிய மலர்களுக்கு அவற்றின் வண்ணம், அவற்றின் முட்களும், காம்பும், காம்பின் உயரம், மாலைகளில் இணைக்கப்பட்டிருக்கும் மலர்களின் கலவை ஆகியவற்றிற்கான தனித்தனியே சங்கேத அர்த்தங்கள் இருக்கின்றன
’’விண்ணும் மண்ணும் மலர்களே
புத்தரும் பிற கடவுளரும் மலர்களே
மனிதனின் இதயமும் ஆன்மாவும் மலர்களே’’!
பிரபல ஜப்பானிய கடவுள் துதி ஒன்று இந்த வரிகளுடன் துவங்குகிறது,
எப்போதும் நமக்கு மறுபக்கத்தில்தான் செழிப்பு இருக்கிறது என்பதை சொல்லும் சொல்லாட்சிகள், முதுமொழிகள் அநேகமாக உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் இருக்கின்றன ’’அக்கரைக்கு இக்கரை பச்சை என்னும் நமது பிரபல முதுமொழியை போல ஜப்பானில் ’’அடுத்த வீட்டுக்காரனின் தோட்ட மலர்கள் அனைத்தும் சிவப்பு ’’ என்பார்கள்.
உலகின் அனைத்துக் கலாச்சாரங்களை காட்டிலும் ஜப்பானிய கலாச்சாரம் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. ஜப்பானிய ‘ஓரிகாமி’ என்னும் காகிதங்களின் மடிப்புகளில் வடிவங்களை உருவாக்கும் கலையில் ’காகிதம்’ என்னும் சொல்லுக்கான ஜப்பானிய சொல்லான ’காமி’ என்பதே கடவுளுக்குமான சொல். இயற்கையிலிருந்து உருவாகும் காகிதமும் கடவுளே அங்கு. ஜப்பானிய போன்ஸாய் கலையும் பிரபஞ்சத்தின் மீச்சிறு வடிவை மரங்களில் உருவாக்குவதுதான். ’ஹனா’ என்றால் ஜப்பானிய மொழியில் மலர். (hanami) ஹனாமி என்னும் ஜப்பானிய செர்ரி மலர்க்கொண்டாட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஜப்பானில் பல பெண்களின் பெயரில் ஹனா இருக்கும் .
ஜப்பானிய கலைகளின் சிறப்புகளில் ஒன்று மிகக்குறைந்த அளவிலேயே பிற நாட்டுக்கலைகளின் சாயலை அவை கொண்டிருப்பது. புத்த மதம் அங்கு தோன்றிய போது உருவான இகபானா மலர்க்கலை ஜப்பானின் சிறப்புகளில் ஒன்று. ஜப்பானிய மூன்று முக்கிய நுண்கலைகளில் கொடொ (kōdō) என்னும் வாசனை பத்திகளின் வழிபாட்டு உபயோகம், சாடோ(chadō) என்னும் தேநீர்ச்சடங்கிற்கும் அடுத்தபடியாக இகபானா மலரமைப்பு இருக்கிறது
ஜப்பானிய மொழியில் இக-பானா (Ikebana) என்பது மலர்களை அமைப்பது என்று பொருள்படும். -ikeru என்றால் அமைப்பது -hana என்பது மலர்களை குறிக்கும். இச்சொல் ’மலர்களுக்கு உயிரளிக்கும் படி அமைப்பது’ என்னும் பொருளிலும் வழங்கப்படுகிறது
இகபானாவை பயில்பவர்கள் ’கடோகா’ என அழைக்கப்படுகின்றனர் இகபானா ’கடோ’ (kadō) என்றும் அழைக்கப்படுகின்றது. கடோ என்றால் ’மலர்களின் வழி’ எனப்பொருள்.
இகபானாவின் துவக்கம்.
அனைத்து பருவங்களிலும் மலர்களை ஆராதிப்பதென்னும் வழக்கம் பண்டைய ஜப்பானில் பிரபலமாக இருந்தது
ஹேயான் காலத்தை சேர்ந்த (Heian-794–1185) பிரபல ஜப்பானிய வாகா கவிதைத் தொகுப்புக்களில் (Waka) மலர்கள் குறித்த எராளமான கவிதைகள் இருக்கின்றன. புத்தமதம் அங்கே உருவானபோது புத்தரை மலர்ளை கொண்டு வழிபடுவது பொதுவான ஒரு கலாச்சாரமாக உருவானது
புத்தமதம் தோன்றிய இந்தியாவில் தாமரையே மிக அதிகம் புத்த வழிபாட்டில் இருந்ததென்றாலும் ஜப்பானில் அந்தந்த பருவத்திற்கான மலர்களே வழிபாட்டுக்கென எடுத்துக்கொள்ளப்பட்டன. சீனாவின் புத்த துறவிகள் பலவகையான மலர் அமைப்புக்களை கொண்டு புத்தரை வழிபடும் பாணியை ஜப்பானில் துவங்கினார்கள்
துவக்க காலங்களில் அவர்கள் எந்த குறிப்பிட்ட அர்த்தமும் இல்லாமல் பொதுவாக மலர்களை ஆலயங்களில் புத்தர் முன்பாக அமைத்து வழிபட்டனர்.
பின்னர் உருவான கூஜ் (kuge) எனப்படும் புத்தருக்கான பிரத்யேக மலர் வழிபாட்டில் மூன்று மலர்க்காம்புகள் நீரிலிருந்து ஒன்றாக இணைந்து நிற்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. ஷின், சோ மற்றும் ஹைகாய் (shin, soe & hikae) எனப்பட்ட அம்மூன்றும் சொர்க்கம், மனிதன். மற்றும் பூமியை குறித்தன.
தொடர்ந்த கமாகுரா காலத்தில் மிட்ஷு குசோக்கு (mitsu-gusoku) எனப்படும் புகையும் வஸ்து, மெழுகுதிரி மற்றும் அழகாக அமைக்கப்பட்ட மலர்கள் இவைகளை கொண்டு வழிபடும் முறை உருவாகி வந்தது. 1392 வரை இம்முறை புழக்கத்தில் இருந்தது. பின்வந்த காலங்களில் புத்த சமய திருநூல்கள் பலவும் மலர்களின் பெயர்கள் கொண்டு உருவாக்கப்பட்டன. முராமோச்சியின் (1336–1573), காலத்தில் ஆலயங்கள் மற்றும் மடாலயங்களின் உள் அலங்கார அமைப்புக்கள் உருவானபோது மலர்களின் பயன்பாடு அதிகரித்தது
முதன்முதலில் நேர்த்தியும் ஒழுங்குமாக நியதிகளுக்குட்பட்ட ஒரு மலர்க்கலை தோன்றியது 14 ம் நூற்றாண்டில் ஜப்பானில் ஷின் நோ ஹனா (Shin- no- hana) என்னும் ’மையத்தில் மலர்களை அமைக்கும் கலை’ உருவான போதுதான், பைன் போன்ற ஊசியிலை மரங்களின் சிறு கிளையொன்றை கிண்ணங்களில் மையப்பகுதியில் நேராக நிற்கும்படி அமைத்து அதனைச் சுற்றிலும் 3 அல்லது 5 பருவகால மலர்களை அமைக்கும் எளிமையான இந்த மலரமைப்புக்களை 14 ஆம் நூற்றாண்டு ஜப்பானிய ஓவியங்களில் காணமுடியும். இந்த கலையில் மரக்கிளைகள் சேய்மையின் இயற்கைக் காட்சியையும் மலர்கள் அண்மை இயற்கை காட்சியையும் குறிப்புணர்த்தின
ஜப்பானிய ராணுவ தளபதிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கலை ஆர்வத்தில் உதவவென்றே பிரத்யேக உதவியாளர்களாக டோபோஷுக்கள் இருந்தனர். (Doboshu) இதில் ஒருசிலர் உருவாக்கிய மலர் அலங்கார வடிவங்களே தத்தேபானா என்னும் மலரமைப்புக்கலையின் முன்வடிவங்கள் (tatebana)
14ஆம் நூற்றாண்டில் சாமுராய்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க நினைத்தார்கள் அப்போது டோகொனோமா என்னும் (tokonoma) சாமுராய்களின் கவச உடைகள், படைக்கலன்களை மலர்களுடன் இணைத்து காட்சிப்படுத்தும் வழக்கம் பிரபலமாக இருந்தது அப்போதைய மலரலங்காரங்கள் ’’நிற்கும் மலர்கள்’’ என்று பொருள்படும் தத்தேபானா /தத்தேஹனா (tatebana or tatehana) எனப்பட்டன. இதுவே இகபானாவின் தூய ஆதி வடிவம்
15ஆம் நூற்றாண்டு வரை மிக மெல்ல வளர்ந்த இக்கலை அந்நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் புத்துயிர் பெற்று புத்தம் புதிதாக முகிழ்த்தது. தேநீர் சடங்குகள் புகழ்பெற துவங்கிய 15 ம் நூற்றாண்டின் இறுதியில் இக்கலை மறுமலர்ச்சி அடைந்தது. தேநீர் விருந்துகள் நிகழும் அரங்குகளின் முகப்பு அறைகளில் காக்கேமோனோ (kakemono) என்னும் சுருள்துணிச் சித்திரம் மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும் அதனுடன் எளிய மலரமைப்பு ஒன்றும் வைக்கப்பட்டபோது தேநீர் சடங்குகளின் வசீகரம் மேலும் கூடியது.
1436-1490 வை சேர்ந்த அஷிகாகா (Ashikaga)வம்சத்தின் எட்டாவது ஷோகனான அஷிகாகா யோஷிமஸா(Ashikaga Yoshimasa) சா நோ யூ (cha-no-you) என்னும் தேநீர் சடங்கையும் இகபானாவையும் இணைத்து சா-பானா என்னும் கலையாக அழகுபடுத்தியவர்களில் முதன்மையானவர்
யோஷிமஸாவின் சமகாலத்தைய இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்த மலரமைப்பின் மேம்படுத்துதலில் பெரும் பங்காற்றினார்கள்
16 ம் நூற்றாண்டில் (1477-1561) வழிபாட்டு தலங்களிலும் தேநீர் விருந்துகளிலும் பயன்படுவதைக்காட்டிலும் மேலான ஒரு இடத்தை இகபானா மலர் அமைப்புக்கள் அடைந்தன.அச்சமயத்தில் இகபானா ரிக்கா (Rikka) என்றழைக்கப்பட்டது. அதிலிருந்து மாறுபட்ட இகபானாவின் மற்றோர் வடிவமான நாஜெயிரிபானாவும் (nageirebana)ஏக காலத்தில் தோன்றி பிரபலமடைந்தது.
நூற்றாண்டுகளுக்கு இவ்விரண்டு வகை மலரமைப்புக்களும் புழக்கத்தில் இருந்தன. ரிக்கா அலங்காரமானதாகவும் நாஜெயிரி மிக எளிமையாக இயற்கையுடன் ஒத்திசைவு கொண்டதாகவும் அமைந்திருந்தது தொடர்ந்த காலங்களில் ரிக்காவுடன் போட்டியிட முடியாத நாஜெயிரி வடிவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராட வேண்டி இருந்தது பின்னர் மெல்ல மெல்ல அது தனித்த மலரலங்காரக்கலையாக பிரபலமடைந்தது. 16 ம் நூற்றண்டின் இறுதியில் நாஜெயிரியின் எளிமையும் இயற்கையான அமைப்பும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. பின்னர் இகபானா ஜப்பானின் பாரம்பரியங்களில் குறிப்பிடத்தக்க கலையானது. ஆண்களும் பெண்களும் எல்லா வயதிலும் இகபானாவை கற்றுக்கொள்ள விழைந்தனர். பலநூறு பள்ளிகளும் இகபானாவுக்கென உருவாகத் துவங்கின
19 ம் நூற்றாண்டில் இகபானாவில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு சிறந்த கணவர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர்கள் ஆகச்சிறந்த இல்பேணுநர்களாகவும் அன்னைகளாகவும் ஆவார்கள் என்றும் நம்பிக்கை இருந்தது
இகபானா நூல்கள்
கெனெயி (Kenei) காலமான 1206 லிருந்து எடோ (Edo) காலமான 1660-1704 வரை இகபானா குறித்த ஏராளமான நூல்கள் வெளியாகின. அவற்றில் செண்டென்ஸ்போ (Sendensbo) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது இகபானாவின் அடிப்படை விதிகளை விளக்கும் அந்நூல்களில் அனைத்து வகையான மலரமைப்புக்களுக்கும் சித்திரங்களும் இடம்பெற்றிருந்தன
அதை தொடர்ந்து இகனோபு (lkenobu) எழுதிய கண்டென்ஸ்போ (Kandensbo) என்னும் நூலும் இகபானா வளர்ச்சியில் மிக முக்கியமானது. கண்டென்சோவில் இகபானாவின் விதிகளும் குறிக்கோள்களும் தெளிவாக விவரிக்க பட்டிருந்தன அதன் பிறகு இகபானா மலர் அலங்காரம் வெகுவாக புகழ்பெற்றது.
17ஆம் நூற்றாண்டில், மரப்பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்கள் மீது பளபளப்பான வண்ணப்பூச்சுகள் பூசும் லாகர் (Lacquer) கலையில் தேர்ந்தவரான கொரின் (Korin) இகபானா வடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். அவரது ஈடுபாட்டினால் இகபானா அமைப்புக்கள் வைக்கப்படும் கிண்ணங்கள் தட்டுக்கள் மற்றும் கொள்கலன்களில் பல அழகிய வடிவங்களும் வண்ணங்களும் உருவாக்கப்பட்டு, இகபானா அதன் அழகின் உச்சத்தில் இருந்தது. அந்த காலகட்டத்தில் இகபானாவை பல்லாயிரக்கணக்கானோர் கற்றுத்தேர்ந்தனர்
இகபானா வடிவம் முழுமையடைந்ததும் அப்போதுதான். 17ஆம் நூற்றண்டின் இறுதியில் இகபானாவின் இரு பிரபல வடிவங்களில் ஒன்றும், மிக அலங்கரமான மலர் அமைப்பு முறையுமான ரிக்காவின் மீதான விலக்கமும் உருவாகி இருந்தது. அப்போதிலிருந்து நாஜெயிரி வகையே இகபானா அமைப்புக்களுக்கு பயன்படுகிறது. (இவ்விரு கலைகளையும் பயிற்றுவிக்கும் கலைஞர்களும், இவற்றை கற்க விரும்பும் மாணவர்களும் இன்னும் இருக்கிறார்கள்). இதன்பிறகு இகபானா கலை உச்சத்தை நோக்கி பயணிக்க துவங்கியது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரிக்காவிற்கும் நாஜெயிரிக்கும் இடையேயான ஒரு கலப்பு வகையான செயிக்கா (Seika) உருவானது செயிக்கா என்றால் புத்தம் புதிய மலரென்று பொருள். செயிக்கா சமச்சீரற்ற முக்கோண அமைப்பில் இருக்கும்.
ஜென் மற்றும் இகபானா
ஜென் மார்க்கத்திற்கும் இகபானாவுக்கும் இருக்கும் ஒற்றுமைகளாக;
சமநிலை, எளிமை மற்றும் ஒத்திசைவு
இயற்கையுடனான நெருக்கம்
பருவ காலத்தை அறிந்திருத்தல்
அன்றாடங்களின் எளிய அழகை ஆராதித்தல்
மா (ma) எனப்படும் காலி இடங்களை கண்டுகொண்டு அதையும் ஆராதித்தல். (இகெபானாவில் மலர்கள் அமைந்திராத வெற்று இடங்களும் உண்டு
வேற்றுமை பாராட்டாதிருத்தல்
தன்னை மறத்தல். (இகபானாவில் ஆழ்ந்து காலத்தை மறத்தலுக்கு இது இணையாக சொல்லப்படுகின்றது)
எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்தல்
இறையை உணர்தல்
ஆழ்ந்த அமைதியை உணர்தல் -ஆகியவை சொல்லபடுகின்றன,
இகபானா கலவைகள்
இகபானாவின் பல வடிவங்களுக்கும் பல வகையான அடிப்படை கலவைகள் உள்ளன
சொர்க்கம் (அல்லது மெய்மை)- மனிதன்- பூமி என்பது போல பூமி- காற்று- நீர், அன்னை- தந்தை- மகவு என பல கலவைகளும் உபயோகிக்க படுகின்றன
அடிப்படை விதிகள்
தென்மே (Tenmei) காலத்துக்கு பிறகு இகபானா தனது தூய வடிவத்திலிருந்து சற்றே மாறி செயற்கையான சில இணைவுகளுடன் உருவானது. அந்த வடிவம்தான் இப்போதைய சொர்க்கம், மனிதன் மற்றும் பூமி ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய இறுதி இகபானா வடிவம்
இப்போதைய இகபானாவின் மூன்று பள்ளிகளான இகனோபு, என்ஷூ ரியூ மற்றும் மிஷோ ரியூ ,(Ike nobu, Enshiu- Ryu, Misho-Ryu) ஆகியவை இந்த விதிகளையே பின்பற்றுகின்றன. இப்போதும் டோக்கியோ மற்றும் கியோட்டோவில் இகபானாவின் பழைய தூய வடிவங்களை இன்னும் கோ ரியூ, கோ ஷின் ரியூ (KO- Ryu, Ko Shin- Ryu) என்னும் பெயர்களில் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
இகபானாவின் பிற விதிகள்
மலரமைப்புக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும், மலரமைப்பின் வடிவத்தை நிர்ணயிப்பதிலும் இருளும்-ஒளியும், கடவுளும்-சாத்தானும், நல்லதும்-கெட்டதும் போன்ற இரு எதிரெதிரானவைகள் அவசியம் இருக்கவேண்டும்.
ஒரே வண்ண மலர்கள் அமைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என கருதப்படுகின்றது. சிவப்பின் நிறம் இறப்புடன் தொடர்புடையதால் பெரும்பாலும் இகபானாவுக்கு அவை விரும்பப்படுவதில்லை. மேலும் சிவப்பு நெருப்பின் நிறமாதாலாலும் ஜப்பானிய வீடுகள், எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும்படியான பொருட்களால் கட்டப்படுவதால் அவை இகபானாவில் உபயோகிப் படுவதில்லை
அதுபோலவே ஒற்றைப்படை எண்ணிக்கையில் மலர்களை அமைப்பதும் துரதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது. அப்படி ஒற்றைப்படையில் இருக்கும் எதுவும் சமச்சீரான வடிவத்தை அமைக்காது என்பதால் அவ்வகையான அமைப்புக்கள் இயற்கையின் அம்சமாக இருக்காது என ஜப்பானின் அனைத்து கலை வடிவங்களிலும் ஒற்றைப்படை எண்ணிக்கை பெரும்பாலும் விலக்கப்பட்டிருக்கும்
கொள்கலன்கள்; அடுத்த முக்கிய விதி எந்த கொள்கலனில் மலர்கள் அமைக்கப்படுகின்றன என்பதில் இருக்கிறது. ஜப்பானிய இகபானா கொள்கலன்கள் அனைத்தும் திசைகாட்டியைப்போல் நான்கு திசைகளையும் குறிப்பவையாக கருதப்படுபவை தான். எந்த திசையில் எவற்றை அமைப்பது என்பதை குறித்த தளர்வற்ற விதிகள் இகபானாவில் உள்ளது
இகபானாவின் கொள்கலன்களில் வாயகன்றவை, உயரமானவை மூங்கில் அல்லது உலோகத்தால் ஆனவை என பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான ஜப்பானியர்கள் இகபானாவை வெண்கல கிண்ணங்களில் அமைக்க விரும்புகிறார்கள் வெண்கல நிறமே பூமியின் நிறமென அங்கு கருதப்படுகிறது. வெள்ளியும் விருப்பத்துக்குரியதாகவே இருக்கிறது. கொள்கலன்களில் மூன்றில் ஒரு பங்கு நீர் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும்
இகபானா மலர்மொழி
இகபானாவின் எந்த அமைப்பானாலும் நாம் அவற்றின் மலர்மொழியை புரிந்துகொள்ளும்படியே அவை அமைக்கப்பட்டிருக்கும்
முக்கிய நிகழ்வுகளிலும், மங்கல நிகழ்சிகளிலும் விருந்தாளிகளின் வருகையின் போதும் மட்டுமல்லாது வீட்டிலிருந்து பயணம் செல்லுகையிலும் பூட்டிய வீட்டில் இகபானா அமைக்கப்படும். மணமுடித்து தேனிநிலவு செல்லும் தம்பதியர்களின் வீட்டில் நீடித்த, மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் குறியீடாக கருதப்படும் வில்லோ மரக்கிளைகள் கொண்ட இகபானா அமைக்கப்பட்டிருக்கும்
நீண்ட பயணம் செல்வதற்கான இகபானா அமைப்பில் வளைந்து ஒரு வட்டம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இளந்தண்டுகள் பத்திரமாக பயணம் முடிந்து அவர்கள் வீடு திரும்புவதை குறிக்கும்
புதிய வீடுகளின் புகுமுக விழாவில் பரிசளிக்கப்படும் இகபானாக்களில் எப்போதுமே நீரைக் குறிக்கும் தூய வெண்ணிற மலர்கள் அமைந்திருக்கும். கட்டாயமாக வீடுகளில் சிவப்பு நிறம் உபயோகத்தில் இருக்கவே இருக்கக்கூடாது. புதிய சொத்துக்கள் வாங்கப்படுகையிலும் குழந்தைகளின் பிறப்பின்போதும் நீண்ட காலம் வாடாமலிருக்கும் சாமந்தி போன்ற மலர்கள் அமைக்கப்படவேண்டும்.
மங்கல நிகழ்வுகளுக்கென இருப்பது போல் அமங்கல நிகழ்வுகளுக்கும் தனித்தனி விதிகள் உண்டு
இகபானா பரிசளிக்க படுகையில் எப்போதும் அரும்புகள் மட்டுமே உபயோக்கிக்கவேண்டும்.. அப்போதுதான் பரிசு பெற்றுக் கொள்பவர்கள் அவற்றின் மலர்தலை கண்டு மகிழ முடியும்
இகபானா அமைத்தல்
இகபானா உருவாக்கத்தின் முதல்படியாக குபாரி (kubari) எனப்படும் ஆதாரமான குச்சி நிறுவப்படும். இந்த குச்சியின் வடிவம் ஒவ்வொரு பருவத்திற்கும் வேறுபடும், நுனியில் பிளவு படாதவை, இரண்டாக பிளவுபட்டது, மூன்று பிளவுகளை கொண்டவை என இவை வேறுபட்டிருக்கும்
நீரில் கென்ஸான் (kenzan)என்னும் ஊசிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மெத்தை போன்ற அமைப்பை கொள்கலனில் வைத்து மலர்க்காம்புகள் ஊசிகளில் செருகி அமைக்கப்படும்
மலர்களை தேர்ந்தெடுக்கையில் ஆதாரவிதியான சொர்க்கம்- மனிதன்- பூமி என்பதை அவை குறிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
அமைக்கப்பட இருக்கும் வடிவம் வெட்டி எடுத்த மலர்களை காட்டுவதாக இல்லாமல் உயிருள்ள மலர்களை காட்டுவதாக இருக்க வேண்டும்
இகபானாவின் இறுதி வடிவம் அப்போதைய பருவத்தை குறிக்க வேண்டும்
எந்த நிகழ்வுக்கு இகபானா அமைக்கப்படுகின்றது என்பதை கருத்தில்கொண்டு மலர்களையும் உலர்ந்த இலைகளையும் அரும்புகளையும் சரியான இடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்
மலர்த்தண்டுகளும், கிளைகளும் கொள்கலத்தின் நீர்மட்டத்துக்கு மேல் 4 இன்ச் உயரத்தில் ஒன்றாக இணைத்த பின்னரே அமைக்கப்படவேண்டும்’
கிளைகளும் இலைகளும் ஒன்றை ஒன்று ஒருபோதும் குறுக்கிடக்கூடாது
அமைக்கப்படும் மலர்களின் பிரத்யேக இயல்பு மறைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்
கிளைகளோ, மலர்களோ, இலைகளோ ஒருபோதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைந்துவிடக்கூடாது
சொர்க்கத்தை குறிப்பவை பிறவற்றை விட உயரமாகவும் மலரமைப்பின் மத்தியிலும் இருக்க வேண்டும்
மனிதனுக்கான இரண்டாவது அமைப்பு சொர்க்கத்தின் நீளத்தைவிட பாதியைத்தான் கொண்டிருக்கவேண்டும்
மூன்றாவதும் மிகசிறியதுமான பூமியை குறிப்பது, மனிதனுக்கு வைக்கப்பட்டிருக்கும் மலரின் உயரத்தில் பாதி இருக்க வேண்டும்
மலர்களை தேர்ந்தெடுக்கையில் நீண்ட மலர்க்காம்புள்ளவைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். மேலும் ஒரே திசையில் இருக்கும் இரு கிளைகள் ஒரே நீளம் கொண்டவையாக இருக்க கூடாது. ஒன்றை ஒன்று மறைக்கும் இலைகளை இறுதியில் கத்தரித்து நீக்க வேண்டும்
மலர்களோ, இலைகளோ கிளைகளோ மற்றவற்றை முழுமையாகவோ அல்லது அவற்றின் விளிம்புகளையோ மறைக்கும் படி அமைந்திருக்க கூடாது, முழுமையாக அனைத்தையும் அமைத்தபின்னரெ தேவையற்றவை எவை என முடிவு செய்ய வேண்டும். இகபானா அமைப்பை மிக மிக பொறுமையுடன் செய்யவெண்டும்
அனைத்து இகபானா அமைப்புக்களிலும் மனிதனை குறிக்கும் முழுமையாக மலர்ந்த மலர்களும், பூமியை குறிக்கும் அரும்புகளும் சொர்க்கத்தை குறிக்கும் பாதி மலர்ந்த மலர்களும் கலந்திருக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட முழுமையாக மலர்ந்த மலர்கள் இருப்பின் ஒன்றையடுத்து ஒன்று என உயரம் குறைவாக இருக்கும்படி அமைக்கவேண்டும்.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மலர்கள் சரியான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதும் மாறா விதிகளில் ஒன்று
கடுங்காற்று வீசும் மார்ச் மாதங்களில், இகபானா அமைப்புக்களின் தண்டுகள் காற்றில் வளைந்தவை போல அமைக்கப்பட்டிருக்கும். கோடைக்காலங்களில் அகலமான நீர்நிரம்பிய தட்டுக்களில் மலர்களும் இலைகளும் அமைக்கப்படும்.
பைன் மரங்கள் நீளாயுளுக்கும், சாமந்திகள் உயர்குடியினரை குறிக்கவும் தாமரை உடல் மற்றும் உள்ளத்தின் தூய்மையையும் பிற பருவ கால மலர்கள் அழகையும் வசீகரத்தையும் குறிக்கின்றன. இகபானாவின் மையப்பகுதி புத்தரை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. அனைத்து மலர்களின் அருகிலும் இலைகள் இருக்க வேண்டும்.
கோடையில் பசும் இலைகள் மிக அதிகம் இருக்கும்படியும்,இலையுதிர் காலத்து அமைப்புகளில் பொன்மஞ்சள் நிறத்தில் பழுத்திருக்கும் இலைகள் ஆங்காங்கே இருக்கும்படியும் அமைந்திருக்கும் இதே விதிகளின் படி தொங்கும் ஜாடிகளிலும் இகபானா அமைக்கப்படுவதுண்டு
அரிதாக பிரத்யேக காரணங்களின் பேரில் சிறப்பு நிகழ்வுகளுக்கென இலைகளின்றி மலர்கள் மட்டுமோ அல்லது மலர்களின்றி இலைகள் மட்டுமோ கொண்டும் இகபானா அமைக்கப்படும்
இலைகளின் சுருளுக்குள் இருக்கும் சிறு பூச்சிகளுடனும், கிழிந்த இலைகளும், அழுகும் கனிகளும் கூட இகபானாவில் அமைக்கப்பட்டு இயற்கையின் அதே காட்சியை பிரதிபலிப்பதும் உண்டு
இகபானாவின் பால் பேதங்கள்
ஜப்பனியர்கள் பாறைகளில், கற்களில், அருவிகளிலும் கூட பால் வேற்றுமையை காண்பவர்கள். மலர்களின் பருவங்களிலும் கூட இவ்வாறு பால் பேதம் உண்டு அரும்புகள் பெண், மலர்ந்தவை ஆண், மலர்ந்து வாடியவை மீண்டும் பெண் என ஜப்பானில் கருதப்படும்
இகபானா அமைப்புக்களில் இலைகளின் அடியில் இருக்கும் மலர்ந்த மலர்கள் பெண்மையை குறிப்பதாக கருதப்படும் இது (In) இன் எனப்படும். எப்போதும் பெண்மைக்கு இடப்பக்கமே பூமி இருக்கவேண்டும். (yo) யோ எனப்படுவது ஆண்மையை குறிக்கும் இதற்கு வலப்பக்கம் பூமி இருக்க வேண்டும். இகபானாவில் இலைகளின் பின்புறம் ஆணென்றும் முன்புறம் பெண்ணென்றும் கருதப்படும். இரட்டை இலைகள் இணைந்து அமைந்திருக்கையில் கொள்கலனின் வெளிப்புறத்தை நோக்கி இருப்பது ஆண். உள்நோக்கி இருப்பது பெண்.
இப்படியான இகபானா மலரமைப்பின் இந்த பால் வேறுபாடுகளுக்கான நியதிகள் ஜப்பானில் மட்டுமே முறையாக பேணப்படுகின்றன. ஜப்பானுக்கு வெளியேயான இகபானா அமைப்புக்களில் இவை தளர்த்த பட்டிருக்கும்.
மலர்கள் வாடாமலிருத்தல்
இகபானாவில் அதிமுக்கியமானது அலங்காரமாக அமைக்கப்பட்டிருக்கும் மலர்கள் வாடாமல் நீண்ட நாட்களுக்கு இருப்பதற்கான ரகசிய வழிமுறைகள் தான். இகபானா ஆசிரியர்கள் பலரும் இதற்கான மருந்துக்கலவை என்ன என்பதை மிக ரகசியமாக வைத்துக்கொண்டு கல்விகற்று முடித்து பட்டம் வாங்குகையில் மாணவர்களுக்கு தெரிவிப்பது உண்டு. எப்போதுமே அந்த ரகசியங்களை வெளிப்படுத்தாமல் மரணப்படுக்கையில் இருக்கையில் மாணவர்களுக்கு தெரிவிக்கும் ஆசிரியர்களும் உண்டு.
பலவகையான மூலிகை மருந்துகளும், அவற்றின் ரகசிய கலவைகளும் இகபானா மலர்கள் வாடாமலிருக்க உபயோகப்படுத்தபப்டுகின்றன.
மலர்கள் வாடாமல் இருக்க மலர்க்காம்பின் அடிப்புறத்தை வேகவைப்பது, எரிப்பது, நீராவியில் காட்டுவது, நசுக்குவது என பல்வேறு ரகசிய வழிமுறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் பிரத்யேகமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ரசாயன பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன என்றாலும் மலர்க்காம்புகளை நீருக்கடியில் வைத்து வெட்டுவது இவற்றில் அடிப்படையான ஒன்று. இதுவே இகபானா மலரமைப்புக்களை நெடுநாட்கள் வாடாமல் வைத்திருக்கிறது இம்முறை மிஸுகிரி (mizugiri) எனப்படுகிறது
இகபானா பள்ளிகள்
இகபானா கலைக்கான பள்ளிகள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமாக ஜப்பானில் மட்டும் உள்ளது. உலகின் பிறபாகங்களிலும் இகபானா பள்ளிகள் உள்ளன, இவற்றில் மிக பிரபலமானது இகனோபு பள்ளி, அடுத்தது ஷோகெட்ஷு பள்ளி
இகனோபு (I K E N O B U), 70 0 AD
ஓனோ நோ இமோகோ (Ono- no- Imoko) வினால் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இதுவே இகபானா பள்ளிகளில் மிக பழமையானதும் சிறப்பானதாகவும் ஜப்பானில் கருதப்படுகிறது இதன் முதன்மை ஆசிரியர் எப்போதும் இகனோபு என்றே அழைக்கப்படுவார். இப்பள்ளியின் இப்போதைய ஆசிரியர் 45 ஆவது தலைமுறையை சேர்ந்தவர்
இகபானா கற்றுக்கொள்பவர்களுக்கு முதலில் கண்களை இயற்கையின் நுண்மையான அழகுகளை காணும் பயிற்சி அளிக்கப்படும். மலர்களின் மெய்யான அழகை ஆராதிக்க துவங்குபவர்களே இகபானாவில் இறங்கமுடியும்.
கராத்தே பள்ளிகளின் கருப்பு பெல்ட்டை போலவே இகபானா கல்வியிலும் மதிப்பீட்டு முறைகள் உள்ளன. இகபானா கல்வியில் உயர்ந்தபட்ச மதிப்பீடு என்பது க்யூ (kyu) எனப்படும். க்யூ அடைந்தவர்கள் வெகுகாலம் இகபானா கலையை பயிற்றுவிக்கும் தகுதி கொண்டவர்கள் ஆகிறார்கள்.
கத்தரிக்கோலை எப்படி பிடிப்பது, குச்சிகளை எப்படி உடைக்காமல் வளைப்பது ,மரபை உணர்த்தும் மலர்களை தெரிவு செய்வது, சரியான கிண்ணங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கான பயிற்சிகளே இகபானா கல்வியில் பாலபாடங்கள்.
இகபானா மலர்களையும் பிற பொருட்களையும் சூழலுடன் பொருத்திப் பார்த்து அவற்றின் அழகை ஆராதிக்கவும் ஒவ்வொரு பருவத்திற்கான சிறப்புகளை உணரவும் கற்றுக்கொடுக்கிறது
பாணிகள்
ரிக்கா; இயற்கையின் அழகை போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படுகிறது ரிக்கா பாணி. ரிக்கா அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்னும் கருத்தை விளக்குவதுதான்.பிரபஞ்சத்தின் ஒரு துளியை அழகுற இயற்கையின் அங்கங்களை கொண்டு அமைப்பதே ரிக்காவின் அடிப்படை.இம்முறையில் மலர்கள் நேராக நிற்கும்ப டி அமைக்கப்படும்
நாஜெயிரி; இந்த பாணி ”அப்படியே வீசி எறிவது ” என்னும் பொருளில் இயற்கையின் ஒழுங்கற்றமையில் இருக்கும் நேர்த்தியை சொல்வது.
மொரிபானா; மொரிபானா ’மலர்களை அடுக்குவது’ என்று பொருள்படும் கலை இதில் சுய்பான் (suiban) எனப்படும் தட்டையான ஆழம் குறைவான அகலமான நீர் கொள்கலன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலும் மரபாக அதுவரை இகபானாவில் உபயோகப்படுத்தப்பட்டவகளை காட்டிலும் பல புதிய பொருட்களும் இணைந்தன. மொரிபானாவில் நிலக்காட்சிகளை பிரதிபலிக்கும் ஷாகேய் (shakei) என்னும் அமைப்புக்களும் அதிலிருந்து உருவாகியது.
செயிக்கா (Seika) என்பது மிக எளிய பாணி. இதில் மூன்று மலர்கள் மட்டும் உபயோகப்படுத்தப்படும்
சா பானா (cha-bana) என்பது தேநீர் சடங்குகளின் போது அமைக்கப்படும் பிரத்யேக இகபானா அமைப்புகள்
நவீன இகபானா
ஏறக்குறைய 600 வருட பழமையான கலையான இகபானா இன்றும் சிறப்பாக ஜப்பானில் திகழ்கிறது. பிரபல ஜப்பனிய கலை வடிவங்களான மாங்கா மற்றும் அனிமேவிலும் இகபானா முக்கிய இடம் பெற்றிருக்கின்றது.
1957ல் இகபானா என்று ஒரு திரைப்படம் வெளியானது. 2017ல் வெளியான ’வாளும் மலரும்’ என்னும் திரைப்படம் 16 ம் நூற்றாண்டில் இகபானா உருவான வரலாற்றை சொல்கிறது.
நவீன இகபானாவில் செயற்கை சாயங்களில் பல வடிவங்கள் இலைகள் மீது தீட்டப்படுகின்றன தண்டுகளும் கிளைகளும் வேண்டிய வடிவங்களில் கத்தரிக்கப்படுகின்றன.
1912ல் இகபானாவின் முதல் நவீன பள்ளி அன்ஷின் ஒஹாராவினால் துவங்கப்பட்டது இவர் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இகபானாவில் புகுத்தினார். ஒன்று மேற்கத்திய மலர்களை இகபானாவில் இணைத்துக் கொள்வது, இரண்டு ஆழம் குறைவான வட்ட வடிவ கொள்கலன்களை உபயோகிப்பது. இந்த இரு மாற்றங்களினால் இகபானா ஜப்பானின் கூடுதல் பிரியத்துக்குரியதாகி விட்டிருக்கிறது
சொகெட்ஸுபள்ளி (Sogetsu) 1927ல் சொஃபு டெஷிகாஹராவால் (Sofu Teshigahara) துவங்கபட்டபோது இகபானா சிற்பக் கலைக்கு நிகரான இடத்தை பெற்றது. இவரே அதுவரை இகபானாவில் இல்லாதிருந்த, ஆனால் இயற்கையின் அம்சங்களான தூசி, அழுக்கு, பாறைத்துண்டுகள் மற்றும் பாசிகளையும் இகபானாவின் அங்கங்களாக்கினார். சொகெட்ஸு பள்ளியின் இகபானா பாணி பிளாஸ்டிக், காகிதம் மற்றும் உலோகங்களையும் இணைத்துக் கொண்டது.
நவீன இகபானா ஆழம் குறைவான கிண்ணங்களில் அமைக்கப்படும் மொரிபானா பாணி மற்றும் உயரமான ஜாடிகளை கொண்ட பழைய நாஜெயிரி பாணி ஆகிய இரண்டு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது
தற்போது இகெனொபு, மொரிபானா(ஒஹாரா) மற்றும் சோகெட்ஸு ஆகிய மூன்று பாணிகளுமே ஜப்பானில் பிரசித்தம்.
20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இகபானா சர்வதேசமயமானது எலென் கோர்டொன் ஏலென் (Ellen Gordon Allen) என்னும் ஜப்பானில் தங்கி இகபானா கலையை கற்றுக் கொண்ட அமெரிக்க பெண் ,1956ல் ஜப்பானின் முக்கிய இகபானா பள்ளிகளை ஒன்றிணைத்து சர்வதேச இகபானா அமைப்பை நிறுவினார் அவரது செயல்நோக்கம் இகபானா வின் மூலம் தோழமையை உருவாக்குவது-
தற்போது இகபானா கலையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமான மையக்கருத்தென்பது தோழமையே. இகபானாவில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களுக்கிடையேயும், இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கிடையேயும், ஆசிரியர்களுடனும் தோழமையை உருவாக்குவதே நவீன இகபானாவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது
ஜப்பானில் மட்டுமே சுமார் 15 மில்லியன் ஆர்வலர்கள் தற்போது இகபானாவை கற்று கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்கள்
ஜப்பானில் பிரபலமான இகபானா பள்ளி சோஹோ ஜி ஆலய வளாகத்திலிருக்கிறது. இங்கு ஆசிரியர்கள் மட்டுமே 60 ஆயிரம் பேர்.
இகபானா கண்காட்சிகளும் போட்டிகளும் வருடாவருடம் நடைபெறும். இதில் ஆகச்சிறந்த இகபானா கலைஞர்கள் போட்டியிடுவார்கள்
இகபானா இப்போது ஜப்பானின் ஒவ்வொரு முக்கிய விழாக்களிலும் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. மார்ச் 3ஆம் தேதியில் கொண்டாடப்படும் இளம்பெண்களுக்கான விழாவான ஹினா மாட்சுரியின் போது (Hina Matsuri) பீச் மரங்களின் சிறு மலர்க்கிளைகளுடன் மலர்களும் பொம்மைகளும் வைத்த இகபானா அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது
அதுபோலவே மார்ச் 5 அன்று கொண்டாடப்படும் ஆண்மைக்கான விழாவில் ஜப்பானிய ஐரிஸ் மலர்கள் இகபானாவில் அமைக்கப்பட்டிருக்கும். ஜூலை 7 அன்று நடைபெறும் டனபாடா (Tanabata) என்னும் நட்சத்திர விழாவில் இகபானாக்கள் மூங்கிலில் அமைக்கப்படும். செப்டம்பரில் ஜப்பானியர்கள் நிலாக்காயும் நிகழ்வான சுகிமி (tsukimi) நடைபெறுகையில் மக்கள் கூடுமிடங்களில் அப்பருவத்தில் செழித்து வளரும் புல் வகையான பம்பஸ் புற்கள் கலந்த இகபானா அமைப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கும்
ஆஸ்திரேலியரான ஹாலண்ட் பிரசவத்தில் மனைவி இறந்த பின் தாயை இழந்த தன் சிறு மகள் எலனுடன் தெற்கு வேல்ஸ் நகரில் ஒரு பெரும் பண்ணையை விலைக்கு வாங்கி குடிபெயர்ந்தார். ஹாலண்டின் இரு பெரும் சொத்துக்கள் அவரது பண்ணையின் நூற்றுக்கணக்கான யூகலிப்டஸ் மரங்களும் அவரின் பேரழகு மகள் எலனும் தான். பதின்ம வயது எலனின் அழகு அந்த ஊர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அவள் திருமண வயதை எட்டிய போது அந்த நாடே அவள் பேரழகை ஆராதித்தது.
வெற்று நிலமாக இருந்த அப்பண்ணையில் ஹாலண்ட் யூகலிப்டஸ் மரங்களை நடத்துவங்கினார். அம்மரங்களின் அழகும் கம்பீரமும், தைலமணமும் அவரை வசீகரித்ததில், யூகலிப்டஸ் மரங்களின் மீது அவருக்கிருந்த ஆசை பித்தாக மாறியது. தேடித்தேடி யூகலிப்டஸின் நூற்றுக்கணக்கான வகைகளை அங்கு வளர்க்க துவங்கினார்.அம்மரங்களுடன் எலனும் வளர்ந்தாள்.
எலனை மணமுடிக்க பலரும் முன்வந்தபோது ஹாலண்ட் தேவதைக் கதைகளில் வருவதுபோல ஒரு போட்டியை அறிவித்தார். அவரது பண்ணையில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்களை சரியான பெயர்களுடன் இனங்காணும் இளைஞனுக்கு எலன் மணமுடித்து தரப்படுவாள் என்னும் அப்போட்டி மிக விநோதமானது, இருந்தும் எலனின் தூய அழகின் பொருட்டு நூற்றுக்கணக்கானவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
எனினும் எவராலும் அப்பெருங்காடென பரந்து விரிந்திருந்த பண்ணையின் அத்தனை யூகலிப்டஸ் வகைகளையும் அடையாளம் காண முடியவில்லை.
அந்த போட்டியில் விருப்பமில்லாமல் யூகலிப்டஸ் பெருங்காட்டிற்குள் தன்னந்தனிமையில் தன்னை ஒடுக்கிக்கொண்ட எலன், அக்காட்டில் மர்மமும், வசீகரமும் கலந்த ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவன் அவளுக்கு பல சுவாரஸ்யமான கதைகளை சொல்லுகிறான். அந்நிய தேசங்களிலும், பாலை நிலங்களிலும் மழைக்காடுகளிலும் நடக்கும் அக்கதைகளில் ஒரு தந்தையும் மகளும் இருந்தனர் அம்மகளின் ஒரு விசித்திரமான காதலும் கதைகளில் இருந்தது.
தனது பெயரை கூட சொல்லாத அவனும் எலனும் விரைவில் காதல் வயப்படுகின்றனர். அதே சமயத்தில் பூமியின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் காணும் கோக் எனும் ஒரு இளைஞன் ஹாலண்ட் சொல்லியபடியே பண்ணையின் அனைத்து யூகலிப்டஸ் மரங்களையும் சரியான பெயர்களுடன் அடையாளம் காண்கிறான்.
எலன் போட்டியில் வென்றவனையா அல்லது தன் மனம் கவர்ந்தவனையா, யாரை திருமணம் செய்துகொண்டாள்?
இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட ’யூகலிப்டஸ்’ மிக அழகிய காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்
முர்ரே பெயில் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்தார்.. அவர் தற்போது சிட்னியில் வசிக்கிறார்.
1998ல் வெளியான இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சி பலமுறை துவங்கப்பட்டு கைவிடப்பட்டது. காதலை ஆஸ்திரேலிய கலாச்சாரத்துடன் சொல்லும் இந்நாவலின் துண்டு துண்டான சிறு பகுதிகள், சம்பவங்களை எல்லாம் தைல மணத்துடன் கூடவே வரும் யூகலிப்டஸ் மரங்கள் இணைத்து அழகான தொடர்ச்சியை கொண்டு வந்துவிடுகின்றன. இந்த நாவலை ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்று என்றும் கூறலாம்
யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்கின்றன. 10 நிமிட நடையில் ஒரு யூகலிப்டஸ் மரத்தை அங்கு பார்த்துவிடலாம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆஸ்திரேலிய பாடல்களில், சிறார் இலக்கியங்களில், பயணக்கட்டுரைகளில், திரைப்படங்களில் என்று எங்கும் யூகலிப்டஸ் மரங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆஸ்திரேலிய எழுத்தாளர் மே கிப்ஸின் (May Gibbs) ’ஸ்னக்கில்பாட்டும் கட்லி பையும்’ (Snugglepot and Cuddlepie) என்னும் பிரபல சிறார் இலக்கிய கதைத்தொடரில் 2 யூகலிப்டஸ் மலர்களின் கனிகளின் வடிவிலிருக்கும் குட்டி மனிதர்கள் இருப்பார்கள். இதில் இடம்பெறும் குட்டிப் பெண் குழந்தைகளின் தலைமுடி, இடையாடை, மற்றும் தொப்பி ஆகியவை யூகலிப்டஸ் மலர்களை போல் அமைந்திருக்கும். இக்கதை பல தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்தது.. 1985ல் மே கிப்ஸை கௌரவிக்கும் பொருட்டு இந்த கதையை சித்தரிக்கும் ஒரு தபால் தலை ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
ஐரோப்பாவில் ஊசியிலை மரங்களின் பல வகைகள் உள்ளன. வட அமெரிக்கா பைன், ஓக் ஆகியவற்றால் நிறைந்த அடர் காடுகளையும், புல்வெளிகளையும் கொண்டவை. ஆப்பிரிக்கா புல்வெளிகள், பாலைநிலங்கள் மற்றும் மழைக்காடுகள் நிறைந்தது. அண்டார்டிக்கா பல மரங்களின் புதைபடிவங்களை கொண்டிருக்கிறது, மழைக்காடுகளையும் அவற்றின் மரங்களையும் கொண்டிருக்கிறது தென்னமெரிக்கா. ஆனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் பிற தாவரங்களை காட்டிலும் யூகலிப்டஸே பெருமளவில் இருக்கிறது.(சுமார் 70சதவீதம்) .
யூகலிப்டஸின் 52 மில்லியன் வருடங்களுக்கு முன்பான தொல்புதைபடிவம் தென்னமெரிக்க தீவில் கிடைத்தது. ஆஸ்திரேலிய யூகலிப்டஸ் புதைபடிவங்கள் சுமார் 42 மில்லியன் வருடங்கள் பழமையானவை என்றாலும் ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தான் பரவிப் பெருகி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்
சிற்றினங்கள்
யூகலிப்டஸின் 800 சிற்றினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவையே. ஒரு சில வகைகள் மட்டும் நியூ கினியா மற்றும் இந்தோனேசியாவை தாயகமாக கொண்டது.
பழங்குடியினரின் யூகலிப்டஸ் பயன்பாடுகள்
ஆஸ்திரேலிய பழங்குடியினர் இம்மரத்தின் கட்டைகளிலிருந்து ஈட்டிகள், கேடயங்கள், படகுகள் மற்றும் அம்புகளை செய்தார்கள். இம்மரங்களில் பூச்சிகள் இடும் துளைகளில் இருந்து கசியும் சுவையான மன்னா (Manna) எனப்படும் இனிப்பு திரவத்தை பழங்குடியினர் உண்பார்கள்
இம்மரத்தின் தடிமனான மரப்பட்டைகளை உரித்தெடுத்து நீர் கொள்கலன்களாகவும், தண்டின் முடிச்சுகளை (gnarled round growth) டாருன்க் (tarnuks) எனப்படும் பாத்திரங்களாகவும் உபயோகித்தார்கள்.
’முரே’ ஆற்றங்கரையோர பழங்குடியினர் இம்மரத்தின் உறுதியான பட்டையை நெடுக உரித்து அவற்றைக்கொண்டு கேனோஸ் (canoes) என்னும் சிறு மீன்பிடி படகுகள் செய்வர்கள்.
பல ஆண்டுகள் பழமையான யூகலிப்டஸ் மரங்களில் பழக்குடியினர் பட்டை உரித்தெடுத்த தழும்புகளும் சில எழுத்துக்களும் காணப்படும் இதுபோன்ற மரங்கள் தழும்பு மரங்கள் எனப்படும். இவற்றை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவீன்ஸ்லாண்டிலும் காணலாம்.
வரலாறு
டிசம்பர் 2, 1642 ல் வெளியான ஜன்ஸூன் டாஸ்மானின் (Abel Janszoon Tasman) கடற் பயணக்குறிப்பில் ஃபிஜி தீவுகளில் இருந்த கோந்துகளை சுரக்கும் மரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
சில ஆரம்பகால ஐரோப்பிய இயற்கையியலார்களால் யூகலிப்டஸ் மரங்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும் 1777 வரை இம்மரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வில்லை. கேப்டன் ஜேம்ஸ் குக் குடன் ஆஸ்திரேலிய கடற்கரையில் வந்திறங்கிய ஜோசப் (Joseph Banks) மற்றும் டேனியல் (Daniel Solander) ஆகியோர் அங்கிருந்த யூகலிப்டஸ் (E. gummifera) மரங்களின் பாகங்களை சேகரித்தனர். குயின்ஸ்லேண்டின் ஆற்றங்கரையோரமிருந்து மற்றொரு (E. platyphylla) மரத்தின் பாகங்களையும் சேகரித்தனர். அப்போது இவ்விரண்டுமே யூகலிப்டஸ் என்று பெயரிடப்பட்டிருக்கவில்லை.
1777 ல் ஜேம்ஸ் குக்கின் மூன்றாவது பயணத்தின் போது உடனிருந்த டேவிட் (David Nelson) கிழக்கு டாஸ்மானியாவிலிருந்த ஒரு யூகலிப்டஸ் மரத்தின் பாகங்களை சேகரித்தார். அவை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பிரெஞ்ச் தாவரவியலாளர் ஹெரிடியர் (L’Héritier) அம்மரத்துக்கு Eucalyptus obliqua என்று பெயரிட்டார். இதன் பேரினப்பெயர் ’யூகலிப்டஸ் என்பதில் கிரேக்க சொல்லா eu என்பது ’நன்றாக’ என்றும் calyptos என்பது ’மூடப்பட்டிருக்கும்’ என்றும் பொருள் தரும். யூகலிப்டஸ் மரங்களின் மலரரும்புகளை மூடியிருக்கும் தொப்பி போன்ற அமைப்பைக்கொண்டு இவர் அந்த பெயரை உருவாக்கினார்
சிற்றினப்பெயர் Obliquus இம்மரத்தின் இலைக்காம்பின் இருபுறமும் இருக்கும் சமச்சீரற்ற அடிப்பகுதிகளை குறிக்கிறது.
1788-89 ல் வெளிவந்த இம்மரத்தின் இந்த விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையே தாவரவியல் அடிப்படையில் யூகலிப்டஸின் முதல் ஆவணம். மிகச்சரியாக ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஏக காலத்தில்தான் நடந்தது. பின்னர் 19 நூற்றாண்டுக்குள் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் சிட்னி பகுதியில் கண்டறியபட்டு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பான்மையானவை ஆங்கிலேயே தாவரவியலாளர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித்தினால் (James Edward Smith) அடையாளம் காணப்பட்டன
1867 ல் வெளியான ’ஆஸ்திரேலியாவின் தாவரங்கள்’ (Flora Australiensis) என்னும் மிக முக்கிய நூலில் பல நூறு ஆஸ்திரேலிய தாவரவியலாளர் களின் யூகலிப்டஸ் குறித்த பங்களிப்புக்கள் இருந்தன.3
பரவல்
ஆஸ்திரேலியாவிலிருந்து 1770 க்குப் பிறகு யூகலிப்டஸ் பல நாடுகளுக்கு அறிமுகமானது குறிப்பாக கலிபோர்னியா, தென் ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தென்னமெரிக்கா.
1774 ல் இவற்றின் விதைகள் இங்கிலாந்து கியூ பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன ஆனால் கடும் பனி பொழிவிருந்த காலங்களாதலால் அவை அங்கு வளரவில்லை. மீண்டும் 1800 ல் டாஸ்மானியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகள் வளரத்துவங்கின
1800 களில் இவற்றின் பல வகைகள் ஐரோப்பா அல்ஜீரியா, தெகிடி, இந்தியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அமெரிக்கவிற்கு அறிமுகமாகின.
இலங்கையில் இவை 19 ம் நூற்றாண்டில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் காற்றுத்தடுப்பிற்கென அறிமுகமாயின.தற்போது யுகலிப்டஸின் 10 சிற்றினங்கள் அங்கு இருக்கின்றன
1850 ல் கலிபோர்னியாவுக்கு தங்க வேட்டைக்கு சென்ற ஏராளமானவர்கள் யூகலிப்டஸ் விதைகளை அங்கு பயிரிட்டனர்.
இந்தியாவில் யூகலிப்டஸ் 1790 ல் மைசூரில் திப்பு சுல்தானால் அறிமுகம் செய்யப்பட்டது. அவரது அரண்மனை தோட்டங்களில் முதலில் 16 வகைகள் வளர்ககப்பட்டன.
1843 ல் நீலகிரி பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவை பின்னர் அதிக அளவில் இந்தியாவின் பல பகுதிகளில் பண்ணை நிலங்களில் வளர்க்கப்பட்டன. தற்போது யூகலிப்டஸின் 170 சிற்றினங்கள் இந்தியாவில் இருக்கின்றன.அவற்றில் மைசூர் கோந்தை உருவாக்கும் யூகலிப்டஸ் வகை (E. tereticornis) மிக பிரபலமானது. இத்துடன் E. grandis, E. citriodora, E. globulus, and E. camaldulensis.ஆகியவையும் இந்தியாவில் அதிகமாக வளர்கின்றன
இந்தியாவில் 1960-80 க்குள் ஏராளமான யூகலிப்டஸ் பண்ணைகள் உருவாகின. சமுக காடுகள் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டன.
வோன் முல்லர் (von Müller) 1884 ல் வெளியிட்ட Descriptive Atlas of the Eucalypts of Australia – Eucalyptographia என்னும் நூல் இலைகளிலிருந்து தைலம் எடுப்பதையும், தைலத்தின் பல்வேறு பயன்களையும் விரிவாகப் பேசுகிறது. முல்லர் யூகலிப்டஸ் தைலத்தையும் விதைகளையும் பிரான்ஸ், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.
20 ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் இவை பரவலாக காணப்பட்டது வேளான் விஞ்ஞானி எட்மண்டோ (Edmundo Navarro de Andrade) வின் முயற்சியால் பெருமளவிலான தென்னமெரிக்க நிலப்பரப்புகள் யூகலிப்டஸ் காடாகின
தாவரவியல் பண்புகள்
மிர்ட்டேசியே குடும்பத்தை சேர்ந்த இவை வேகமாக வளரக்கூடியவை. யூகலிப்டஸின் வெகுசில வகைகளே இலை உதிர்ப்பவை, மற்ற அனைத்துமே பசுமை மாறாதவை
இலைகள்: பசுமைமாறா பளபளப்பான இலைகள் வளைந்து கதிரரிவாள் போலிருக்கும். இலைகளில் எண்ணெய் இருப்பதால் இவை பிரத்யேக தைல வாசனையுடன் இருக்கும்
காம்பற்ற இளம் இலைகள் சாம்பல், வெள்ளி அல்லது நீலப்பச்சை வண்ணம் கொண்டிருக்கும். முதிர்ந்த மரங்களின் இலைகள் காம்புடன் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இளம் இலைகள் காம்பற்று எதிரடுக்கில் அமைந்திருக்கும். இலையமைப்பு இளம் மரங்களிலும் முதிர்ந்த மரங்களிலும் முற்றிலும் வேறு பட்டிருக்கும், இலைகள் எளிதில் வாடாது.
மலர்கள்: மூன்றிலிருந்து 6 வருடங்களில் யூகலிப்டஸ் மரங்கள் மலரத் துவங்கும். இவை பெரும்பாலும் கோடையில் மலரும். மலர்கள் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும். மலர் நிறமென்பது ஆண் பகுதியான மகரந்த தாள்களின் நிறமே. பல நிறங்களில் மலர்கள் இருப்பினும் பெரும்பான்மையான மலர்கள் வெள்ளை அல்லது மங்கிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இவற்றில் மலரிதழ்கள் என்று தனித்த அமைப்புகள் இல்லை. மலர்கள் அரும்பாக இருக்கையில் அல்லி மற்றும் புல்லி வட்டங்கள் இணைந்த சிறிய மூடி போன்ற அமைப்பினால் மூடப்பட்டிருக்கும். (operculum). அரும்புகள் மலருகையில் இந்த மூடி உதிர்ந்து விழுந்துவிடும்
கனிகள்: மிக கடினமான இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கும் கனிகள் கோந்துக் கொட்டைகள் எனப்படுகின்றன (gum nuts). பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள் 250 லிருந்து 400 வருடங்கள் உயிர் வாழும்
அலங்கார மரங்களாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. பூந்தொட்டிகளிலும் குட்டை மர வகைகள் வளர்க்கப்படுகின்றன.
இணைப்பேரினங்கள்
யூகலிப்டஸின் ஏராளமான வகைகளை தாவரவியலாளர்கள் மூன்றாக வகைப்படுத்துகிறார்கள். இவற்றில் மிக அதிகமானவை யூகலிப்டஸ் வகை, வடக்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் இருப்பவை கோரிம்பியா ( Corymbia) மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் வளரும் அங்கோஃபோரா வகை. (Angophora). கோரிம்பியா மற்றும் அங்கோஃபோரா இரண்டு வகையும் யூகலிப்டஸின் இணைப்பேரினங்கள் என கருதப்படுகின்றன.
மரப்பட்டை
யூகலிப்டஸ் மரங்களின் சிறப்பியல்பாக அவை பட்டை உரிப்பதை சொல்லலாம். மரங்கள் வளர்கையில் பட்டையை உரித்து, உள்ளிருக்கும் பளபளப்பான வெளிறிய புதிய உள்பட்டையை வெளிக்காட்டும். வானவில் யூகலிப்டஸ் பல வண்ணங்களில் உள்பட்டையை கொண்டிருக்கும்
சில மரங்களின் பட்டை மென்மையாக வழவழப்பாக இருக்கும். மேலிருந்து கீழ் பாதி மரங்கள் மட்டும் பட்டை உரித்து மீதி பழைய பட்டையுடன் இருக்கும் மரங்களையும் சாதாரணமாக காணமுடியும். அடிக்கடி நிலத்தில் தீப்பிடிக்கும் இடங்களில் வளரும் மரங்களின் கீழ்ப்புற பட்டை மட்டும் மிக தடிமனாக சொறசொறப்பாக காணப்படும்
சில மரங்களில் நாரிழைகள் நிறைந்த பட்டை காணப்படும். சிலவற்றில் கரிய சொற சொறப்பானவையும், இன்னும் சிலவற்றில் மேடுகளும் பள்ளங்களும் வரிகளும் உள்ள பட்டைகளும், ரிப்பன்களை போன்றவைகளும் இருக்கும்.
இவற்றிற்கு காய்ச்சல் மரம், நீல கோந்து மரம், எலுமிச்சை யூகலிப்டஸ் மற்றும் வெள்ளி ஓக் இரும்பு பட்டை மரம் என்று பல வழங்கு பெயர்கள் உள்ளன. அடிக்கடி இவற்றின் கனமான கிளைகள் உடைந்து விழுந்து மர அறுவையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் இறப்பு நேர்வதால் இவை விதவைகளை உருவாக்கும் மரங்கள்- Widow maker trees என்றும் அழைக்கப்படுகின்றன.
தைலம்
யூகலிப்டஸ் மரங்களின் இலைகள், கனிகள், மலரும்புகள் மற்றும் இளங்கிளைகளில் இருக்கும் எளிதில் ஆவியாகும் இன்மண எண்ணெயின் (Essential oil) அளவு 1.5 லிருந்து 3.5%. இருக்கும்
யூகலிப்டஸில் அடங்கி இருக்கும் அதன் மருத்துவ பண்புகளுக்கு காரணமான வேதிசேர்மங்கள்; சிட்ரொனெல்லால், யூகலிப்டால் , கேம்ஃபீன் ஃபென்சீன்( fenchene), லிமோனீன், ஃபெல்லாண்ட்ரீன் மற்றும் பைனீன் ஆகியவை. இந்த எண்ணெய்களில் இம்மரங்களின் நறுமணத்திற்கு, தைல வாசனைக்கு காரணமான யூகலிப்டால் 70 லிருந்து 95% இருக்கிறது.( eucalyptol)
1778 ல் டென்னிஸ் மற்றும் ஜான் வயிட் ( Dennis Considen & John White) ஆகிய இரு அறுவை சிகிச்சை நிபுணர்கள் யூகலிப்டஸ் இலைகளை காய்ச்சி வடிகட்டுதல் மூலம் அவற்றின் இலை எண்ணையை தைலம் ஆக்கினார்கள் எனினும் அவர்களால் பெருமளவில் தைலத்தை தயாரிக்க முடியவில்லை
.1852 ல் ஜோசப் போஸிஸ்டோ (Joseph Bosisto) என்னும் மெல்பர்ன் நகரின் பிரபல மருந்தாளுநர் வணிகரீதியான யூகலிப்டஸ் தைல தயாரிப்பை துவங்கினார்.
1870 ல் யூகலிப்டஸ் தைலம் ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான தொழிற்சாலை உற்பத்தி பொருளானது. அப்போதிலிருந்து சர்வதேச சந்தைகளில் ஆஸ்திரேலிய யூகலிப்டஸ் தைலம் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.
ஒரு பவுண்டு தைலம் உருவாக்க சுமார் 50 பவுண்டு யூகலிப்டஸ் தேவைப்படுகிறது. இதன் வலிநிவாரண, குடற்புழு நீக்க, கிருமி நீக்க பண்புகள் இந்த எண்ணெயை உலகின் மிக அதிக பயன்படுத்தப்படும் தைலமாக முன்னிலையில் வைத்திருக்கிறது. இலைத்தைலம் நுண் கிருமிகளுக்கு, எதிரானது, பல்வலி, சுவாசக்கோளாறு, வைரஸ் தொற்று போன்ற சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. நறுமண சிகிச்சையிலும் இந்த தைலம் வெகுவாக உபயோகத்திலிருக்கிறது
முதல் உலகப்போரின் போது யூகலிப்டஸ் தைலம் வெகுவாக தேவைப்பட்டது. 1919 ல் பரவிய தொற்று வியாதிகள் குணமாக பெரிதும் இந்த தைலம் உபயோகிக்கப்பட்டது.
யூகலிப்டால் (சினியோல் என்றும் இது அழைக்கப்படும்- cineole) உட்கொள்பவர்களுக்கு கடும் பாதிப்புகளை உண்டாக்கும். யூகலிப்டஸ் இலைகளை யாரும் உண்பதில்லை எனினும் இலைகளை உலர்த்தி தேநீர் உண்டாக்கி சளி காய்ச்சல் சமயங்களில் அருந்தும் வழக்கம் பல நாடுகளில் இருக்கிறது.
தேநீராக தயாரிக்கப் படுகையில் யூகலிப்டாலின் அளவு மிக குறைவாக, உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவிற்கே இருப்பதாக சொல்லப்பட்டாலும், தேவைக்கதிகமான பயன்பாடு குடல் அழற்சி, மனச்சிதைவு, மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் உயிரிழப்பை உண்டாக்கும்
2013ல் மஞ்சள் பெட்டக மரம் என்றழைக்கப்டும்.Eucalyptus mellidora பூச்சித் தாக்குதலை தவிர்க்க தன் இலை மணத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்
உயரம்
இவை பொதுவாகவே மிக உயரமான மரங்கள்.. 85 மீட்டர் க்கும் மேல் வளரும் இயல்புடைய மலை சாம்பல் மரம் (E. regnans) உலகின் மிக உயரமான மர வகைகளில் ஒன்று. 4
கிழக்கு டாஸ்மேனியாவில் இருக்கும் 99.6 மீட்டர் உயரமுள்ள ”நூறான்” என்றழைக்கப்படும மரமே உலகின் மிக உயரமான யூகலிப்டஸ். ஹைபெரியன் (Hyperion) செம்மரத்தின் உயரம் இதைவிட 16 மீட்டர்தான் அதிகம். (115.6)
1881ல் ஜார்ஜ் விக்ட்டோரியா பகுதியில் விழுந்து கிடந்த ஒரு யூகலிப்டஸின் உயரம் 114.3 மீ என்று அளக்கப்பட்டது. ஹைபெரியன் இதை 1 மி உயரம் குறைவு
1872ல் வில்லியம் 133 மீ உயரமுள்ள யூகலிப்டஸ் விழுந்துகிடப்பதை பதிவுசெய்தார்
100 மீ உயரத்துக்கும் அதிகமாக வளரும் மர வகைகளும் அதிகபட்சமாக 10 மீ உயரம் வளரும் புதர் வகைகளும் யூகலிப்டஸில் உண்டு
வளரியல்பு
மாலி (mallee)
யூகலிப்டஸின் புதர் வகைகள் மாலி எனப்படுகின்றன.கிளைத்த தண்டுகளுடன் இவை அதிகபட்சம் 10 மீ உயரம் வரை வளரும்.இவற்றின் புடைத்த வேர் தரைமட்டத்திற்கு மேல் காணப்படும்
மர்லோக் (marlock)
கிளைகளற்ற குறுமரங்களான இவற்றில் முட்டை வடிவ வெளுத்த இலைகள் அடர்த்தியாக அமைந்திருக்கும்.
மாலட் (mallet)
இவை மெல்லிய நடுத்தண்டும் சிறு கிளைகளும் கொண்டவை தண்டுகளில் செம்புளிகள் இருக்கும்
பிற முக்கிய வகைகள்
உலகின் உயரமான மர வகைகளில் ஒன்றான மலைச்சாம்பல் மரம் ( Mountain ash -Eucalyptus regnans)
முண்டுகளுடன் காணப்படும் பனி மரம்- (gnarly snow gum -Eucalyptus pauciflora)
பல கிளைகளுடன் அடர்ந்து வளரும் மாலி வகை. (mallee -Eucalyptus behriana)
ஆப்பிள் யூகலிப்டஸான பேய் கோந்து மரம் (apple ore ghost gum -Corymbia flavescens)
கிளைகள் திருகி காணப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் சிவப்பு கோந்தை அளிக்கும் மரம். (twisted Sydney red gum -Angophora costata).
மரப்பட்டை உரிந்து தெரியும் உள் மரப்பட்டை பல வண்ணங்களில் இருக்கும் வானவில் மரம். (Rainbow Eucalyptus-Eucalyptus deglupta)
எலுமிச்சை யூகலிப்டஸ் (Eucalyptus citriodora)
பளபளக்கும் வெள்ளி நிற இலைகளை கொண்டிருக்கும். வெள்ளி இளவரசி. (silver princess – Eucalyptus caesia ).இவை தாழ்ந்து நிலம்தொடும் கிளைகளை கொண்டிருக்கும் மரப்பட்டை சிவப்பு நிறத்திலிருக்கும்.
நீல மரம் (Eucalyptus Baby Blue – Eucalyptus pulverulenta) இவற்றின் இலைகள் வெள்ளைப் பொடி தூவிய நீலச்சாம்பல் நிறம் கொண்டிருக்கும்
வெள்ளித்துளி மரம் (Eucalyptus Silver Drop -Eucalyptus gunnii). அழகிய வெள்ளி நிற இலைகள் கொண்ட இவை செடார் கோந்து மரம் என்றும் அழைக்கப்படும்.
வெள்ளி நாணய மரம்-(Silver Dollar Eucalyptus Tree -Eucalyptus cinerea) நாணயம் போன்ற வெள்ளி நிற வட்ட வடிவ இலைகள்
கொண்டிருக்கும். 15மீ உயரம் வரை வளரும் இதன் இலைகள் அலங்காரத்துக்காக உபயோகிக்க படுகின்றன.
இனிப்பு கோந்து மரம்-(Sugar Gum Tree -Eucalyptus cladocalyx). இவற்றின் மரப்பட்டை மஞ்சள் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கும். உண்ணக்கூடிய கோந்து இனிப்பு சுவையுடன் இருக்கும்.
செம்புள்ளி மரம்(Red Spotted Gum Tree -Eucalyptus mannifera). சாம்பல் வண்ண மரப்பட்டையை கொண்டிருக்கும்
வட்ட இலை மரம்.(Round Leaved Moort -Eucalyptus platypus)
மலைக் கோந்து மரம். (Mountain Gum -Eucalyptus dalrympleana) இதன் இலைகள் இலவங்க பட்டையின் மணம் கொண்டிருக்கும்
பனிக்கோந்து மரம். (Snow Gum Tree -Eucalyptus pauciflora).அளவான உயரம் கொண்டிருக்கும் இவற்றின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று திருகி பின்னிக் கொண்டிருக்கும்
யூகலிப்டஸ் இளவரசன்.(The Prince of the Eucalypts –Eucalyptus globulus) யூகலிப்டஸ் மரங்களில் மிக விலை அதிகமான கட்டையையும் நீலக்கோந்தையும் அளிக்கும் இதன் அழகிய மலர்களே டாஸ்மேனியாவின் மலர் சின்னமாக இருக்கிறது.
யூகலிப்டஸ் கிறுக்கல் மரம்- (Scribbly Gum tree-Eucalyptus haemastoma) மரத்தின் கோந்து மரப்பட்டையில் கிறுக்கல்களைப்போல ஒழுகி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. கிறுக்கல் கோந்து அந்து பூசியான Ogmograptis scribula கோந்து ஒழுகல்களி குடைந்து வழி உண்டாக்கி மரப்பட்டைகளில் முட்டையிடுவதால் இவ்வடிவங்கள் உருவாகின்றன.
ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான முக்கியத்துவம் கொண்ட காரி (Eucalyptus diversicolor, karri) மற்றும் ஜரா (Eucalyptus marginata-s jarrah) யூகலிப்டஸ் வகைகள்
யூகலிப்டஸும் நெருப்பும்
இவற்றின் எண்ணெய் நிறைந்த இலைகளும் உலர்ந்த மரப்பட்டையும் எளிதில் தீ பிடிக்கும் இயல்புடையவை.
இலைகளின் எண்ணெயும் ஏராளமான இலைகள், கிளைகள் உதிர்ர்து மரங்களினடியில் சேர்ந்திருக்கும் இலைக்குப்பைகளின் அழுத்தமும் சேர்ந்து எளிதில் யூகலிப்டஸ் காடுகள் தீப்பிடிக்கிறது.ஆஸ்திரேலியா வெங்கும் எரிந்த யூகலிப்டஸ் இலைகளின் மணம் பரவியிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இக்காடுகளில் அடிக்கடி தீப்பிடிக்கிறது. தைலமணம் கொண்ட காற்று நெருப்பு வேகமாக பரவ வழி செய்கிறது .
இவற்றில் பெரும்பாலான மரங்கள் நெருப்பில் எரிந்தாலும் மீண்டும் தழைக்கும், பல மரங்கள் நெருப்பில் பாதிப்படையாத கனிகளும் விதைகளும் கொண்டவை . முழுவதுமாக எரிந்தாலும் சில யூகலிப்டஸ் மரங்கள் அவற்றின் மரப்பட்டைகளுக்குள் பொதிந்திருக்கும் இலை மொட்டு களிலிருந்து மீண்டும் துளிர்த்து வளரும்.
இப்படி நெருப்பை தாங்கி வளர்பவை, முழுவதும் நெருப்பில் எரிந்த பின்னும் முளைவிட்டு தளிர்ப்பவை, நெருப்புக்கு பின்னர் சேதமடையாத கனிகளிலிருந்து, விதைகளிலிருந்து மீண்டும் புது வாழ்வை தொடரும் தாவரங்கள் பைரோஃபைட்டுகள் (Pyrophytes) எனப்படுகின்றன. பல தொல்குடி இனங்களின் தலைவர்கள் இவ்வாறு எரிந்த காட்டில் கிடைக்கும் சாம்பலாகாத உறுதியான மரக்கம்புகளைத்தான் கைகளில் வைத்துக் கொள்வார்கள்
2019-20ல் நிகழ்ந்த ஆஸ்திரேலிய புதர் தீ விபத்தில் 18.6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு முழுவதும் எரிந்து சாம்பலானது.
பயன்கள்
தைலம்,மரக்கூழ்,கரிக்கட்டை மற்றும் அறுவை மர தொழிற்சாலைகளில் இம்மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன
டிஜெரிடூ எனப்படும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவர்களின் இசைக்கருவியும் பூமராங்கும் யூகலிப்டஸ் மர்ங்களிலிருந்து செய்யபடுகின்றன
டிஜெரிடூ உருவாக்க கரையான்களால் நடுப்பகுதி துளையிடப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் மட்டும் தேர்வு செய்யபடுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் சவப்பெட்டிகளும் கூட யூகலிப்டஸ் மரங்களிலிருந்து செய்யப்படுகின்றன.
ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும், நீராவி ரயில்களின் எரிபொருளாகவும் யூகலிப்டஸ் மரக்கட்டைகள் பயன்படுத்தபடுகின்றன. கினோ கோந்து எனப்படும் யூகலிப்டஸ் கோந்துகள் மருந்து பொருட்களாக பயன்பாட்டில் இருக்கின்றன. சில குறிப்பிட்ட வகை சிகரட்டுக்களிலும், பல நறூமண திரவியங்களிலும் யூகலிப்டஸ் தைலம் சேர்க்கப்படுகின்றது.
மரக்கட்டைகளின் செல்லுலோஸை கொதிக்கவைக்கையில் கிடைக்கும் நாரைழைகளைக்கொண்டு ஆடைகளும் உருவாக்கப்படுகின்றன
ஆஸ்திரேலியாவின் O Estado de São Paulo நாளிதழின் குறிப்பிட்ட சில வருட இதழ்கள் முழுக்க யுகலிப்டஸ் மரக்கூழிலிருந்து உருவாக்கப்பட்டன. உறுதியான இம்மரங்களில் இருந்து வீடுகட்டும் மரப்பலகைகள், வண்டிகள், மரச்சாமான்கள் மற்றும் பாலங்கள் உருவாக்கப்படுகிறது
இம்மரங்களிலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, பச்சை மற்றும் சாக்கலேட் நிறங்களில் சாயங்கள் எடுக்கப்படுகின்றன. சாயமெடுத்தபின் எஞ்சியிருக்கும் மரக்கழிவு நல்ல உரமாக பயன்படுகிறது
சமீபத்தில் நிலத்திலிருக்கும் பொன் துகள்களை யூகலிப்டஸ் இலைகளில் சேமித்து வைத்திருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்தியா போன்ற தாவர நார்களின் பற்றாக்குறை நிலவும் நாடுகளில் யூகலிப்டஸ் மரங்கள் பெருமளவில் உதவுகின்றன
உலகின் பலபகுதிகளிலும் இதன் கட்டைகள் எரிவிகாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. மலரலங்காரங்களிலும் நிர்ப்பிகள் (fillers) எனப்படும் மலரல்லாத தாவர பொருட்களில் அதிகம் உபயோகப்படுவது விரைவில் வாடிவிடாத யூகலிப்டஸின் இளம் இலைகள் தான்.
மொனார்க் பட்டுப்பூச்சிகள் குளிர்காலங்களில் யூகலிப்டஸ் மரங்களில் தஞ்சமடைகின்றன. தேனி வளர்ப்பின் மூலம் மலர்களின் அமுதிலிருந்து மிகத்தரமான ஒரு மலர்த் தேன்(uni floral honey) எடுக்கப்படுகிறது
வேகமாக வளரும் இவை வரிசையாக நெருக்கமாக வளருகையில் காற்றுத்தடை மரங்களாகவும் பயன்படுகின்றன
விலங்குகளுடன் தொடர்பு
யூகலிப்டஸ் இலைகளின் எண்ணெய் அதிக அளவில் உட்கொண்டால் ஆபத்தை விளைவிக்கும் எனினும் கோலா கரடி மற்றும் சில சிறு விலங்குகள் (marsupial herbivores) அவற்றை தொடர்ந்து அதிக அளவில் உண்ணுகின்றன’. இலைகளில் சத்துக்கள் மிக குறைவாகவே இருந்தாலும் இலைகளின் தைல மணத்தை இவ்விலங்குகள் வெகுவாக விரும்புகின்றன
யூகலிப்டஸ் மலர்கள் ஏராளமான மலரமுதினை (Nector) கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய பல்லியினங்கள் பல இம்மலர் சாற்றை விரும்பி உண்ணும்.
யூசொசியா (Eusocia) வண்டுகள் எப்போதும் இம்மரங்களில் வசிக்கின்றன.
யூகலிப்டஸ் மரங்களின் எடை மிகுந்த கிளைகள் எளிதில் உடையும் இயல்பு கொண்டவை.குறிப்பாக கோடைக்காலங்களில் கிளைமுறிதல் அதிகமாயிருக்கும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலநாடுகளின் பூங்காக்களில் யூகலிப்டஸ் மரங்களினடியில் செல்கையில் கிளைமுறிந்து விழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்
பிரபல ஆஸ்திரேலிய சிறார் இலக்கியக் கதையான ஏழு குட்டி ஆஸ்திரேலியர்களில் (Seven Little Australians) வரும் ஜூடி என்னும் சிறுமி ஒரு பூங்காவில் முறிந்த யூகலிப்டஸ் கிளைகளின் அடியில் சிக்கி உயிரிழக்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள நீல மலைத்தொடர் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏழு தேசியப் பூங்காக்கள் மற்றும் ஒரு சரணாலயம் உள்ளது. மாபெரும் இந்த நீல மலைத்தொடர் 1.03 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இங்கு பலவகையான உயிர்த்தொகுதி இருப்பினும் 70 சதவீதம் அவற்றில் யூகலிப்டஸ் மரங்களே இருக்கின்றன. இங்கு மட்டுமே காணப்படும் பல அரிய உயிரினங்களுடன் 91 யூகலிப்டஸ் சிற்றினங்களும் உள்ளன.
நீல மலைத்தொடர்கள் என்னும் பெயர் இவற்றின் மீதிருக்கும் நீலப்புகைப்படலங்களினால் வந்தது. யூகலிப்டஸ் இலைகளின் எண்ணெய் திவலைகள், புழுதி மற்றும் நீராவியுடன் கலந்து நீலக்கம்பளி போல் மலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் அற்புதமான காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் தினமும் கண்டு களிக்கின்றனர். 5
யூகலிப்ட் ஆஸ்திரேலியா (Eucalypt Australia) என்பது ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு இயற்கை அறக்கட்டளையின் பெயர். இந்த அமைப்பு யூகலிப்டஸ் மரங்களின் பாதுகாப்பு, அவற்றைக்கு்றித்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. யூகலிப்டஸ் தொடர்பான பணிகளுக்கு உதவித்திட்டங்கள், நிதி உதவிகள் மற்றும் பரிசுகளையும் இவ்வமைப்பு அளிக்கின்றது.
சர்ச்சைகள்6
யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும் , இவை வளர மிக அதிக நீர் தேவைப்படும். இவை மண் வளத்தை குறைத்துவிடும் ஆகிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானவை
யூகலிப்டஸ் நீரைஅதிகம் உறிஞ்சும் என்றாலும் 25 அடி ஆழத்துக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர் இம்மரங்களின் வேரினால் உறிஞ்சப் படுவதில்லை மரங்களின் வேர்கள் 20 அடிக்கு கீழ் வளருவதில்லை. அதிகபட்சமாக இம்மரங்களின் ஆணிவேர் தொகுப்பு 2-4 அடி வரை இறங்கி இருக்கும். நிலத்தடி நீர யூகலிப்டஸ் மரங்களினால் குறைந்ததற்கான எந்த ஆதாரமும் அறிவியல் அடிப்படையில் இதுவரை இல்லை என்பதை பல ஆய்வுகள் என்று திட்டவட்டமாக நிரூபித்திருக்கின்றன
இந்திய தேசிய பசுமை ஆணையம் 2015ல் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் யூகலிப்டஸ் எந்த சூழல் கேடையும் உருவாக்குவதில்லை என்றும் பிற விவசாய பயிர்கள் மற்றும் மரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே இவை நீரை எடுத்துக் கொள்கின்றன என்பதையும் தெரிவித்திருந்தது
பிரபல வேளான் விஞ்ஞானியான தினேஷ் குமார் தனது ’இந்தியாவில் யூகலிப்டஸ் -கடந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்’ என்னும் நூலில் இம்மரத்தின் சூழலுக்கு சாதகமான பல இயல்புகளை விவரித்திருக்கிறார்
வனவிஞ்ஞானியன வினயக்ராவ் படில் தனது’’ யூகலிப்டஸ் – ஒரு இந்திய அனுபவம்’’ எனும் நூலில் ( Vinayakrao Patil Eucalyptus—An Experience in India” (1995), )
யூகலிப்டஸ் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுவதில்லை
இவை வளர மிக அதிக நீர் தேவையில்லை
இவை பிற தாவரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நில வளத்தை உறிஞ்சிக்கொள்வதில்லை
இவை மண் வளத்தை குறைப்பதில்லை
என்பதை தெரிவித்திருக்கிறார்.
இவை நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை வளமற்றதாகும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள்.
உலக நாடுகளில் அதிக அளவில் யூகலிப்டஸ் மரங்களை உற்பத்தி செய்பவர்கள் சீனா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், தென்னாப்ரிக்கா ஆகியவை
அழகிய கம்பீரமான தோற்றம், அபாரமான உயரம், பிரகாசமான மலர்கள், பசுமை மாறா நறுமணமிக்க இலைகள், தேன் கொண்டிருப்பது, நெருப்பையும் தாங்கி சாம்பலிலிருந்து முளைத்தெழும் இயல்பு என யூகலிப்டஸ் பிற மரங்களை விட தனித்துவம் வாய்ந்தது
கிரேக்க தொன்மவியலில் ஆகாயம் இடி ஆகியவற்றின் கடவுளான ஜீயஸ் தனது சகோதரர் பொசைடனைச் சந்திக்கச் சென்றபோது, சைனாரா என்ற அழகான பெண்ணைக் கண்டார். உடனடியாக அவள் மீது காதலில் விழுந்த அவர்அவளை ஒரு தேவதையாக்கி தன்னுடன் ஒலம்பஸ் மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிகவும் தனிமையிலிருந்த சைனாரா ஜீயஸுக்கு தெரியாமல் தனது குடும்பத்தைப் பார்க்க ரகசிய பயணங்களை மேற்கொண்டார். ஜீயஸ் இவற்றைக் கண்டுபிடித்தவுடன் கோபமடைந்து, ஒலிம்பஸ் மலையில் இருந்து சைனாராவை ஒரு கூனைப்பூவாக மாற்றி கீழே தள்ளிவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.
இக்கதையின் பேரில்தான் கூனைப்பூ என்னும் ஆர்டிசோக் (artichoke ) கின் அறிவியல் பெயரும் சைனாரா கார்டன்குலஸ் (Cynara cardunculus, variety scolymus) என வைக்கப்பட்டது.
மனிதர்களின் பழமையான உணவுகளில் கூனை மலர்களும் ஒன்று இந்த சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சதைப்பற்றான உண்ணக்கூடிய மலரரும்புகள்தான் ஆர்டிசோக்குகள் . இவை உருண்டை அல்லது பிரெஞ்ச் ஆர்டிசோக்குகள், முள் முட்டைக்கோசு ஆகிய பெயர்களிலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.
ஆங்கில சொல்லான artichoke என்பது 16 ம் நூற்றாண்டில் ’கூரிய’ என்னும் பொருள் கொண்ட (அரபிச்சொல்லின் வேர்களை கொண்ட) இத்தாலிய சொல்லான articiocco என்பதிலிருந்து பெறப்பட்டது.
மத்திய தரைக்கடல் பகுதிக்கும் வட ஆப்பிரிகாவுக்கும் சொந்தமான இந்த தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே உணவாகப் பயன்பட்டுவருகின்றன. இத்தாலியில் 1400 ம் ஆண்டில் கூனைப்பூ உண்ணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அப்போது இதன் தளிரிலைகளும் உண்ணப்பட்டன.
இவை பண்டைய கிரேக்கத்தில் மருந்தாகவும் உணவாகவும் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய ரோமானிய செல்வந்தர்கள் மட்டும் இவற்றை உணவில் விரும்பி உண்டார்கள் அக்காலத்தில் ரோமானிய குடிமக்களில் வறியவர்கள் கூனை மலர்களை உண்ணத் தடை இருந்தது. பல நாடுகளில் கூனைமலர்கள் பாலுணர்வை தூண்டும் இயல்புடையதென்பதால் பெண்கள் அவற்றை உண்ணவும் தடை இருந்தது.
15 ம் நூற்றாண்டில் இவை ஐரோப்பாவில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. டச்சு மக்களால் இங்கிலாந்துக்கு 1530 ல் ஆர்டிசோக்குகள் அறிமுகமாயின. 19 ம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு பிரஞ்சு குடியேறிகளால் கொண்டு வரப்பட்ட இவை லூசியானாவில் முதலில் சாகுபடி செய்யபட்டன
7 அடி உயரம் கொண்ட பல்லாண்டுத் தாவரங்களான கூனைச்செடிகள் 9 அடி சுற்றளவுக்கு பரந்து வளரும். ரோஜா மலர்களைப்போல சுற்றடுக்கில் அமைந்திருக்கும் அடர்பச்சை இலைகள் 1 மீ நீளம் .வரை வளரும் ஒவ்வொரு வருடமும் மலரும் காலம் முடிகையில் இலைகளும் வாடி உதிர்ந்து பின்னர் மீண்டும் புதிதாக தளிர்க்கும்
தாவரம் வளரத்துவங்கிய 6 வது மாதத்திலிருந்து மலர் அரும்புகளை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு மலர்த்தண்டிலும் 1 லிருந்து 5 கூனைப்பூக்கள் உருவாகும். ஒரு வருடத்தில் ஒரு தாவரத்தில் சுமார் 20 கூனைப்பூக்கள் உருவாகும்.
இச்செடிகளின் மலர்கள் மலர்ந்து விரியும் முன்னர் மலரும்புகளின் கூர் நுனி கொண்ட தோல் போன்ற தடித்த இதழ்களைப்போலிருக்கும் மலரடிச்செதில்களின் (bracts) உள்ளிருக்கும் சதைப்பற்றான மாவுபோன்ற பொருள் உண்ணத்தகுந்தது. அரும்புகளின் இதயம் எனப்படும் சதைப்பற்றான மையப்பகுதி மிகச்சுவையானது.
அறுவடை செய்யாத அரும்புகள் அழகிய ஊதா நிற மலர்களாக மலரும். 8 வருடங்கள் வரை பலனளிக்கும் இவை விதைகளை உருவாக்கினாலும் தாவரங்களிலிருந்து தோன்றும் பக்கச்செடிகளிலிருந்தும் வேர்த்துண்டுகளிலிருந்தும் இவற்றை எளிதாக வளர்க்கலாம்.
ஆர்டிசோக்குகளில் பொட்டாஷியம், வைட்டமின் C , நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
சிறிய அரும்புகள் அதிக சுவையுடன் இருக்கும். இவற்றை முழுமையாக நீரில் அல்லது நீராவியில் வேகவைத்தும், சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம்
இவற்றில் பல நிற மலர்கள் இருந்தலும் மிக அதிகம் சாகுபடி செய்யபடுவது பசைநிற மலர்வகைகளே. உணவுப்பயிர்களாகவும் அலங்காரச்செடிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன.
உலகின் மிக அதிக ஆர்டிசோக் உற்பத்தியாளராக இத்தாலி, எகிப்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன. பிரபல இத்தாலிய மதுவகையான சைனார் (Cynar) ஆர்டிசோக் மலர்ரும்புகளை நொதிக்கச்செய்து உருவாக்கப்படுகின்றது. 16 சதவீத ஆல்ஹகாலை கொண்டிருக்கும் இம்மது உணவுக்கு முன்னர் பசியுணர்வை தூண்ட அருந்தும் மதுவகைகளில் மிக பிரபலமானது. (aperitif).
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இவை மிக அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கலிஃபோர்னியாவின் மாண்டெரே (Monterey) பகுதி உலகின் ஆர்டிசோக் மையம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மார்ச் 16 ஆர்டிசோக் நாளாக கொண்டாடப்படுகிறது கலிஃபோர்னியாவின் வருடா வருடம் நடைபெறும்அர்டிசோக் கொண்டாட்டங்களில் 59 வது கொண்டாட்டம் 1948ல் நடைபெற்ற போது மர்லின் மன்றோ ஆர்டிசோக் அரசியாக பட்டமளித்து சிறப்பு செய்யப்பட்டார்.
கார்டூன் எனபடும் இவற்றின் காட்டுமூதாதை (Cynara cardunculus) யின் இளம் இலைகளும் மலரும்புகளும் தண்டுகளும் வேர்களும் கூட உண்ணத்தகுந்தவை இவையும் இப்போது ஆர்டிசோக்குகளுடன் சாகுபடியாகின்றன
.
ஜெருசேலம் ஆர்ட்டிசோக் எனப்படுபவை இந்த கூனைப்பூக்கள் அல்ல. Helianthus tuberosus என்னும் தாவரத்தின் கிழங்குகள்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன.. வியட்நாமில் இதிலிருந்து தேநீர் தயாரித்து மருத்துவக் காரணங்களுக்காக அருந்தப்படுகிறது
இவை சுவைக்காக, உடல்நலனுக்காக,, ஈரல் பாதுகாப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கான சிகிச்சைக்கு என பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காவும் உண்ணப்படுகின்றன. இவற்றின் இரு முக்கிய வேதிப்பொருட்கள் சையனாரின் மற்றும் சிலிமாரின் (cynarin and silymarin).
ஆர்டிசோக் மலரரும்புகளை எளிதாக சமைத்து உண்ணுதலை கற்றுத்தரும் காணொளி: https://youtu.be/CPwEX4Q1QAs
பயறுவகைத்தாவரங்களின்பேபேசிகுடும்பத்தின்துணைக்குடும்பமானஸிசல்பீனியேசி (Caesalpiniaceae)குடும்பத்தை சேர்ந்தஇம்மரம்மடகாஸ்கரைதாயகமாக கொண்டது.
உலகநாடுகள் பலவற்றில் பல பெயர்களில் இம்மரம் அழைக்கப்படுகிறது,.அமெரிக்காவில் தீக்கொன்றை மரங்களை அறிமுகப்படுத்திய ’’பிலிப் டிலாங் வில்லியர்ஸ் போயின்சி’’- (Phillippe de Longvilliers de Poincy) என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ராயல்போயின்ஸியானா –Royal Poinciana என அழைப்பதுண்டு.
கேரளாவில் ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையில் இருந்த இம்மரத்தின் மீது ஏசுவின் ரத்தத்துளிகள் சிதறியதில் இம்மலர்கள் ரத்த சிவப்பு நிறம் வந்ததாக நிலவும் ஒரு நம்பிக்கையில் இம்மரத்தின் மலர்களை கல்வாரிப்பூ எனக்குறிபிடுகிறார்கள். கேரளாவில் இவற்றை வாகையென்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்
வியட்நாமில் ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க படுகையில் இவை மலர்வதால்இம்மரம் அங்கு மாணவ மரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் 200 வருடங்களுக்குமுன்பிருந்தே காணப்படும் இம்மரம்பிரிட்டிஷ் இந்தியாவில் தேயிலை தோட்டங்களில் நிழல் தரும் பொருட்டு பிரிட்டிஷாரால்அறிமுகப்படுத்தபட்டது. மடகாஸ்கரில்19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வென்ஸலாஸ்போஜரால் (Wenceslas Bojer) கண்டறியப்பட்டஇம்மரங்களின் எண்ணிக்கை இப்போது மடகாஸ்கரில்அருகிவிட்டாலும்உலகின் பல பகுதிகளில் இவை ஏராளமாக சாலையோரம் நிழல் தரும் அழகு மரங்களாகவும், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின்வளாகங்களில்அழகுக்காகவும்வளர்க்கப்படுகின்றன..
தீக்கொன்றை மரங்கள் 15 மீட்டர் உயரம் வளரக்கூடியவை.மரத்தண்டு2 மீட்டர் அகலம் வரை பெருத்திருக்கும். பெரும்பாலும் பசுமை மாறாமரமாக இருக்கும், இது குறைந்த காலத்துக்கு குறிப்பிட்ட மாதங்களில்உலகின் சில இடங்களில் மட்டும் இலைகளை உதிர்க்கும்இயல்புடையது. இவற்றின் மலரும் காலம் இந்தியாவில் மே முதல் ஜூலை வரை ஆனால் பிற நாடுகளில் இந்த காலம் வெகுவாகமாறுபட்டிருக்கும்.இந்தியாவில் தீக்கொன்றைகள்மார்ச்சில் இருந்து ஜூலை வரை இலைகளை உதிர்த்திருக்கும்.
வேகமாக வளரும் இவை 3 வருடங்களில் சுமார் 8 மீட்டர் உயரம் வரை வளர்ந்து விடும் 4 லிருந்து5 வருடங்களில் மலர துவங்கும்.
மயிலிறகு போல அகன்ற இருகூட்டிலைகள்அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் சுமார் 60 செமீநீளமும்20 லிருந்து40 ஜோடி கூட்டிலைகளை எதிர் எதிராகவும்கொண்டிருக்கும். மரத்தின் மேற்பரப்பு ஏராளமான இலைகளையும்பெருங்கொத்துக்களாகமலர்களுடனும் அகன்று இருக்கும்.
கூட்டிலைக்காம்பு சற்று பருத்திருக்கும், கிளை நுனிகளிலும், கணுவிடுக்குகளிலிருந்தும், மலர் மஞ்சரிகள் உருவாகும். மஞ்சரிகளில்மலர்க்காம்புகளின் நீளம் ஓரளவுக்கு சரிசமமாக இருக்கும். கிளை நுனியில் தோன்றும் மஞ்சரிகள் அளவில் பெரியதாக இருக்கும். மலர்களின் நிறம் அடர் சிவப்பிலிருந்து ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என வேறுபடும். 4லிருந்து 5 செமீஅளவுள்ள பெரியமலர்கள் ஐந்து இதழ்களுடன் இருக்கும். 4 இதழ்கள்சிவப்பிலும் ஒருஇதழ் சற்று பெரிதாக மஞ்சள் வெள்ளை தீற்றல்களுடனும் இருக்கும்
இதழ்கள் பெரிதான நகங்களை போலிருப்பதால் கிரேக்கமொழியில் dilo என்பது’’தெளிவாக’’என்னும் பொருளிலும் onix என்றால்’’நகங்கள்’’(Claws) என்றும் பொருள்தரும் இருசொற்களை சேர்த்து இம்மரத்தின்பேரினத்தின்பெயரிடப்பட்டது. சிற்றினமான ரீஜியா என்பது’’அரசனைப்போல’’என்றுபொருள்தரும் இலத்தீன சொல்லிலிருந்து பெறப்பட்டது
தீக்கொன்றையைபோலவே சிறப்பான இயல்புகளைகொண்டிருக்கும் பலதாவரங்களின் சிற்றினங்களுக்கு ரீஜியா எனபெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
5 செமீ அகலமும் 30 லிருந்து 60 செமீ நீளமும் கொண்டிருக்கும் நீண்ட தட்டையான கனிகள் கடினமான தோலுடன் இருக்கும். பளபளப்பான பெரிய விதைகளும் கடினமான விதையுறையைகொண்டிருக்கும்.. 20லிருந்து40 விதைகள்கனியில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..விதைகள் மூலம் இனப்பெருக்கம் நடக்கும்..
மரப்பட்டை சாம்பல் கலந்த மண் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்..விதைகள் மிக கடினமான வெளியுறைகொண்டிருப்பதால் கொதி நீரில் மூழ்க வைத்து எடுத்து. ஈர காகிதங்களில்பொதிந்து வைத்து உலராமல்பாதுகாத்தால்.ஒரு வாரத்தில் இவை முளைக்கும். இயற்கையாக விதைகள்முளைக்க வருடங்களாகும்
இதன் மரம் அடர்த்தி குறைவானெதென்பதாலும், கரையான் மற்றும் பூச்சி தாக்குதலுக்குஆளாவதாலும்இவற்றிலிருந்து மரச்சாமான்கள்செய்யப்படுவதில்லை. சிறு பொம்மைகள் செய்வது, சமையலறை கத்திகளின்கைப்பிடிகள் ஆகியவை செய்யவே இவற்றை பயன்படுத்துகிறார்கள். கிளைகள் குச்சிகள் ஆகியவை விறகுக்காக பயன்படுகின்றன
மரப்பட்டையில் கிடைக்கும் பிசின் நீரில் கரைந்து கொடுக்கும் பசை மாத்திரைகளைபிசைந்து உருவாக்க பயன்படுகிறது..
அழகிய பளபளப்பான விதைகளைக் கொண்டு ஆபரணங்கள் செய்யப்படுகிறது இனிப்பு சுவையும்புரதமும் கொண்ட பிஞ்சுக்காய்களும்இலைகளும்மனிதர்களுக்கும்கால்நடைகளுக்கும்உணவாகிறது
இலைச்சாறு பல வேதிச்சேர்மங்களை கொண்டிருப்பதால் களை கொல்லியாகவும்பயன்படுத்தப்படுகின்றது. பார்த்தீனியநச்சுக்களைவளர்ச்சியை இதன் இலைச்சாறு ஓரளவுக்கு கட்டுபடுத்துவது சமீபத்திய ஆய்வுகளில்கண்டறியப்பட்டிருக்கிறது
விதைகளும்மரப்பட்டையும், பாரம்பரிய மருத்துவ முறைகள் பல்வேறு சிகிச்சைகளுக்குமருந்தாக பயன்படுகிறது.
சத்து நிறைந்த மலர்கள் பசியை தூண்டும், பலவீனம் போக்கும்,வயிற்றுப்போக்கு மூக்கில் ரத்தம் வடிதல், சர்க்கரை வியாதி, ஆகியவற்றிற்கு மருந்தாகும், பழங்குடியினர் மரப்பட்டைசாற்றை தலைவலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.மரப்பட்டை சாறு வெட்டுக்காயங்களில் ரத்தப்பெருக்கைஉரையச்செய்து கட்டுப்படுத்தும், சிறு நீர் பெருக்கும் வலி நிவாரணமளிக்கும்.
அரிதாக மஞ்சள் மலர்கள் இருக்கும் வகையும்தீக்கொன்றைகளில் காணப்படுகிறது.Delonix regia var. flavida என்னும் அறிவியல் பெயர் கொண்டிருக்கும் மஞ்சள் கொன்றை மரத்திற்குபதிலாக பலநூல்களில் இயல் வாகை மரத்தின் பெயரும்படமும் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கும்.தீக்கொன்றைகளில் பொன்ஸாய் மரங்களும் உருவாக்காப்படுகின்றன.
தீக்கொன்றைகள் பல நாட்டு தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்,அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத , மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற வரிகளுக்கு கணிசமான பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அப்படியான கவிதைகளே அப்பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் அந்த பத்திரிகையில் என் படைப்பு ஏதேனும் வெளிவர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. எனக்கு கவிதைகளில் நல்ல ரசனை உண்டு ஆகச்சிறந்த கவிதைகள் வாசிப்பவள். எனினும் கவிதை முயற்சிகள் செய்திருக்கிறேனே தவிர நல்ல கவிதையொன்றை இன்று வரை எழுதவில்லை. அந்த பத்திரிகையில் வந்திருப்பவைகளைப்போல ஒரே நாளில் பல நூறு கவிதைகள் என்னால் எழுத முடியும். எனவே அப்போதே வெகு சுமாரான சில வரிக்கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். இரண்டு நாட்களில் என் கவிதை பிரசுரிக்க தேர்வான தகவல் வந்து, இரண்டாவது வாரம் பிரசுரமாகி அடுத்த மாதம் சன்மானத்தொகையும் வந்தது.
ஆனால் அச்சில் என் பெயருடன் கவிதையை பார்த்ததும் எனக்கு என்னை குறித்தே மிக தாழ்வான அபிப்பிராயம் உண்டானது. ஏதோ உள்ளுண்ர்வின் தூண்டுதலால் அக்கவிதைக்கு பிழை என்றே தலைப்பிட்டு இருந்தேன். எப்போதும் வாட்ஸ்அப் நிலைத்தகவல்களில் என் படைப்புகள் குறித்த தகவல்களை வைக்கும் நான் இதை ரகசியமாக வைத்துக் கொண்டேன்
போகன் சங்கரின்
‘’ஒரு தோல்வியை எங்கு வைப்பது என்று தெளிவாக தெரிந்திருந்தும் ஒரு வெற்றியை ஒளித்து வைப்பது’’ என்னும் அருமையான கவிதை ஒன்று இருக்கிறது.
அப்படி அந்த கவிதை பிரசுரத்தை ஒளித்து வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எனக்கு தெரிந்த யாரும் இதுவரை அதை பார்க்கவில்லை. எனினும் நல்ல கவிதையொன்றை எழுதும் கொதி அதிகரித்திருந்தது.
மார்ச்சில் நண்பர் சாம்ராஜ், லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் ஆனந்த்குமார் நடத்தும் கன்னியாகுமரி கவிதை அரங்கு குறித்து தகவல் சொன்னார். அந்த கவிதை பிரசுரமானதன் பிழையீடாக இக்கவிதை அரங்கில் கலந்து கொள்ள விரும்பினேன். மேலும் சித்திரை முழுநிலவன்று கடற்கரை கவிதையரங்கு என்னும் கற்பனையே வசீகரமாக இருந்தது
கடல் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை. இத்தனை வயதில் நான் மொத்தமாக நாலோ ஐந்தோ முறை தான் கடற்கரையில் இருந்திருக்கிறேன். சென்னை மெரினா, திருச்செந்தூர்,ராமேஸ்வரம் என்று. ஆனால் அங்கெல்லாம் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போல கூடியிருந்த ஜனக்கூட்டங்கள் தான் கடலா கடலலையா என்று எண்ண வைக்கும் . கடல்கண்டு திரும்பிய பின்னரும் எனக்கு நினைவில் கடலோ அலையோ இருந்ததில்லை. உடல் கசகசப்பு, மாங்காய் பத்தை, குதிரைச் சவாரி, பலூன், நெரிசல் இவைகளே நினைவிலிருக்கும். நீர்நிலைகளின் அருகில் செல்கையில் உண்டாகும் இனம்புரியா அச்சமும் இருப்பதால் அதிகம் கடலை நெருங்கியதுமில்லை
எனவே கடல், அங்கு நடக்க இருக்கும் கடற்கரை கவியரங்கம் என்று உற்சாகமாக இருந்தது.
எனினும் தனியே அத்தனை தொலைவு செலவது குறித்தும் யோசனையாக இருந்தது. ஆனால் சரணும் தருணும் தனியே போய்த்தான் ஆகவேண்டும் பழகிக்கொள் என்று படித்துபடித்து பாடம் எடுத்தார்கள்.அவர்களின் வற்புறுத்தலின் பேரில் ரயில் இரவுப்பயணத்திற்கென சரணுடன் சென்று எனக்கு பழக்கமில்லாத குர்த்திகளை வாங்கினேன். ஆபத்பாந்தவனாக ஆனந்த் அழைத்து கோவையிலிருந்து கதிர்முருகனும் வருவதாக சொன்னார். இருவரும் இணைந்துசெல்ல முடிவானது.
புறப்படும் அன்று. மாலை கனமழை வீட்டு வாசலில் இருந்து காரில் ஏறுவதற்குள் முழுக்க நனைந்தேன். 8 மணி ரயிலுக்கு மாலை 6 மணிக்கே ரயில் நிலையம் போயிருந்தேன்.
நான் நினைத்துக்கொண்டிருந்தது போலல்லாமல் ரயில் நிற்கும் இடத்தை கண்டுபிடிக்க அத்தனை சிரமமெல்லாம் இல்லை. சரண் போனில் வழிகாட்ட நேராக சென்று குறிப்பிட்ட ரயில் பெட்டியின் எதிரே அமர்ந்து கதிருக்கு காத்திருந்தேன்.
தம்பி கதிர்ருமுருகனும் வந்தார். இரவுணவை இருவருமாக இருக்கையில் அமர்ந்து உண்டோம். கோவிட் தொற்றுக்கு பிறகு இப்போதுதான் ரயிலில் போர்வை கம்பளி எல்லாம் கொடுக்கிறார்கள். எங்கள் பெட்டியில் இரு இளைஞர்கள் இருந்தார்கள் மிக உரக்க பேசிக்கொண்டு பாடல்கள் ஒலிக்க செய்து கொண்டுமிருந்தார்கள். இரவு நெடுநேரமாகியும் அப்படியே தொடர்ந்தார்கள்.கதிர் மென்மையாக சொல்லிப் பார்த்தும் பிரயோஜனமில்லை. பின்னர் டிக்கெட் பரிசோதகரை அழைத்துவந்து கண்டித்த பின்னர் அவர்கள் அமைதியானார்கள்.முப்பது வயதுக்குள்தான் இருக்கும் அவர்களுக்கு
குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி முன்னதாகவே நாகர்கோயில் வந்துசேர்ந்தோம் ரயில் நிலைய வாசலிலேயே எங்களை வரவேற்க இலைகளைக் காட்டிலும் அதிக மலர்களுடன் தங்க அரளிச்சிறு மரமொன்று நின்றிருந்தது
அதே ரயிலிலும் ,சில நிமிட இடைவெளியில் வந்த மற்றொரு ரயிலிலுமாக சுதா மாமி, மதார், ஆனந்த ஸ்ரீனிவாசன்,நேசன் உள்ளிட்ட பதினைந்து பேர் இருந்தோம் அந்த நேரத்திலேயே ஆனந்தகுமார், லக்ஷ்மி மணிவண்ணன் இருவரும் காரில் வந்திருந்தார்கள் எல்லாருமாக புறப்பட்டு லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் கடையருகில் தேநீர் அருந்திவிட்டு அந்த கடற்கரை விடுதிக்கு வந்தோம்.
ஊருக்கு மிக ஒதுக்குப்புறமான விடுதி. அத்தனைஅ ருகில் கடல் இருக்கும் நான் எண்ணி இருக்கவில்லை. முதலில் எனக்கு கடலின் சீற்றம் மனசிலாகவே இல்லை. அருகில் எங்கோ பேருந்துகள் சீறிக் கொண்டு செல்கின்றன என்றே நினைத்தேன் . அத்தனை அருகில் கடலை, அத்தனை நீண்ட தூய மணற் கடற்கரையை, புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை பார்த்ததும் முதலில் திடுக்கிட்டேன் கற்பனையில் நான் நினைத்திருந்ததை காட்டிலும் மிக வசீகரமான கடல் யாருமற்று தன்னந்ததனித்திருந்தது.
அந்த கடற்கரையில் பாறைகள் அதிகம் என்பதால் யாரும் அங்கு குளிக்க இறங்க வேண்டாம் என்று அப்போதிலிருந்தே பலமுறை எச்சரிக்கப்பட்டோம்.
தனித்தனி குடில்களாக தங்குமிடம். நானும் சுதா மாமியும் ஒரு குடிலில். அந்த குடிலின் கட்டுமானம் பிரமிப்பளித்தது, மிகச்சிறிய ஒழுங்கற்ற இடங்களை மிக சமார்த்தியமாக உபயோகித்து அறையை வடிவமைத்திருந்தார்கள். குடிலறையிலும் அரங்கிலும் எங்கெங்கும் மணல் காலடியில் நெறி பட்டது.
.
குளித்து கடல் பார்த்து ,கால் நனைத்து நல்ல உணவுண்டு அமர்வுகளுக்கு தயாரானோம். விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் பலர் இருந்தார்கள் அவர்களை எல்லாம் எப்போது பார்த்தாலும் ’குடும்பத்தில் எத்தி’ என்று நினைத்து நெஞ்சம் பொங்கும் எனக்கு.
விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் பார்த்திருக்காத பலர் இருந்தார்கள். அதிகம் இளைஞர்களும்
சுதந்திர வல்லி , சுதா மாமியுடன்
லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களின் மனைவி மக்களும் வந்திருந்தார்கள் அவர் மனைவி சுதந்திர வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பறவையுடையதைப் போல மிக இனிமையான குரல் அவருக்கு. பேசப் பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருந்தது
அருண்மொழியும் வந்துவிட்டார்கள் அமர்வுகள் துவங்கும் முன்பே. .அருணாவை 2017 ஊட்டி காவிய முகாமில் சந்தித்து அறிமுகமாயிருந்தேன். இந்த வருடம்தான் அவரது தொடரை வாசித்து, பின்னூட்டமிட்டு, அடிக்கடி பேசி என்று நெருக்கமாயிருந்தேன். ஜெவையும் அருணாவையும் வெண்முரசையும் கொஞ்சமும் அறியாதவர்களும் இருந்தார்கள் அவர்கள் பல எதிர்பாராத ஆனால் சுவாரஸ்யமான கேள்விகள் கேட்டார்கள்.அவற்றிற்கெல்லாம் நான் முன்புபோல பதட்டப்படாமல் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். மனமுதிர்ச்சி மட்டுமல்ல எனக்கு வயதாகிவிட்டதையும் முதன்முதலாக அப்பதில்களின் போது உணர்ந்தேன் . ஒரு சிலர் மறக்க முடியாதர்வளாகிவிட்டிருக்கிறார்கள்
அருகில் அருணா பின் வரிசையில் கதிர்முருகண், ஜி எஸ் வி நவீன்
அமர்வுகள் துவங்கும் முன்பு அனைவரும் அறிமுகம் செய்து கொண்டோம் அருணா தான் கவிதைகளை கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதாக சொன்னார். இளைஞர்களில் இருவர் சிறுவர்களைப்போல 7 அல்லது 8ல் படிப்பார்கள் என்று எண்ணத்தக்க தோற்றத்தில் இருந்தார்கள் எனக்கு எப்போதுமே இலக்கிய கூட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
ஆனந்த் சீனிவாசன் மிக இனிமையான, பொருத்தமான சரஸ்வதி துதியொன்றை பாடி அமர்வுகளை துவக்கி வைத்தார்,தாடி இல்லாமல் இருந்த அண்ணாச்சியை வெகு நேரம் கழித்தே அடையாளம் கண்டு கொண்டேன்.
லக்ஷ்மி மணிவண்ணன்
விக்ரமாதித்யன்
கண்டராதித்தன், சபரி, அதியமான் உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் அமர்வுகள், பின்னர் தேநீர் இடைவேளை அதன் பிறகு போகன் சங்கர் அமர்வு
போகன்
கவிதைகளில் என்ன இருக்கலாம், இருக்கவேண்டியதில்லை, தோல்வியுறும் கவிதைகளின் அழகு என்று மிக விரிவான, வேறெங்கும் கிடைக்கப் பெறாத தகவல்களுடன் அமர்வு களைகட்டி இருந்தது
மதிய உணவு முதன் முதலாக வல்லரிச்சோறுடன் நாகர்கோவில் பக்க உணவு
எனக்கு இந்த முகாம் கலந்து கொண்டதில் பல முதன் முதலாக இருந்தன
அப்படி துவரன், தீயல், வல்லரிச்சோறு, பிரதமன் என்று சிறப்பான உணவு. விஷ்ணுபுர குழுமம் எப்போதும் குடும்பமாக கூடியிருந்தே விழாக்கள் நடைபெறும் என்பதால் இங்கும் விளம்புவதும், இலைபோடுவதும், சுத்தம் செய்வதுமாக பலர் முனைந்திருந்தனர் புதியவர்களும் இதைக்கண்டு இயல்பாக கலந்து புழங்கினார்கள்
கவிழ்ந்து விழுந்த எச்சில் இலைகள் நிறைந்து இருந்த ஒரு பீப்பாயை சிவாத்மா பொறுமையாக நிமிர்த்தி சரியாமல் நிற்கவைத்து கொண்டிருந்தார்,
அருணாவும் சுதந்திராவுமாக எனக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உணவு வகைகளின் செய்முறைகள் சொல்லிக்கொடுத்தார்கள் இருவருமாக ஒரு புத்தகம் எழுதினால் பிரமாதமாக இருக்கும். அருணா சக்கையை அரைத்து செய்யும் ஒரு இனிப்பை அவரது வழக்கம்போலான அபிநயத்தில் சொல்லி அங்கே காணாப்புலத்தில் எங்கள் முன்னிருந்த அந்த இனிப்பை ஒரு கரண்டி எடுத்து , ரொட்டியில் தடவி சுவைத்ததை பார்க்கவே நாவூறியது. அவசியம் செய்து பார்க்க போகிறேன் அவற்றை.
ஆனந்த்குமார் அமர்வு அபாரம் குறிப்பாக அந்த பழங்குடியினரின் மொழிக் கவிதையை அவர் மொழியாக்கம் செய்து, அவர்களின் மொழியிலும் வாசித்தது இன்னும் காதில் ஒலிக்கிறது
’வீழ்ந்து கிடந்த மரக்கொம்பில் உயிர் இருக்கோ இல்லியோ’ என்று துவங்கிய அக்கவிதை, அக்கொம்பில் முளைக்கும் இருதளிர்களில் ஒன்றில் அன்பென்றும் மற்றொன்றில் வாழ்வென்றும் எழுதியதாக செல்கின்றது.முகாமில் வாசிக்கப்பட்ட அனைத்திலுமே அதுவே அபாரமானது
மரக்கொம்பு- சாந்தி பனக்கன்
***காட்டிலொரு மரக்கொம்புமுறிந்துகிடக்கிறது
இறந்துவிட்டதாஉயிர் உள்ளதா? தினமும் நானதை கடந்து போகிறேன்
ஒரு நாள் அதில்இரண்டிலை தளிர்த்தது
ஓரிலையில் நான் அன்பென்றெழுதினேன்
மற்றொன்றில் வாழ்வென வேர் நீர் பிடித்து தண்டு உரம் பிடித்து
நீலக்கல் வைத்த ஆகாயம் தொட்டது. உழுதிட்ட வயலைக் காணதலை நீட்டி நீட்டிகொம்பு மரமானது
மகனொரு ஏறுமாடம் கட்டினான்
மகளொரு ஊஞ்சலிட்டாள்
பறவையொரு குடும்பம்சேர்க்க
இலையொரு நிழல்விரித்தது நானொரு குடில் கட்டிவேலி நடவும்வேர்கள் எல்லை கடந்தன
அதனால்தான் அதனால்தான்நாங்கள் அதை வெட்டியிட்டோம்
கொண்டுபோக உறவில்லாமல்உதிரம் துடிக்கக் கிடக்கிறது
நேற்று நான் கண்ட கொம்பும்நாளை நான் காண விழைந்த காடும்.-
.-சாந்தி பனக்கன் பணியர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர். கேரளத்தின் வயநாடு மாவட்டம் நடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.(தகவல் நன்றி: நிர்மால்யா, ஆவநாழி)
மாலை கதிரணைவை பார்க்க கடற்கரை சென்றோம். கடலுக்குள் மெல்ல இறங்கும் மாபெரும் தீக்கோளம் கண்ட பிரமிப்பு நீங்கு முன்பே சுதந்திரா சுட்டிக்காட்டியதும் எதிர்திசையில் திரும்பினால் வெள்ளித்தாம்பாளமாக முழுநிலவு மெல்ல எழுந்துகொண்டிருந்தது, உண்மையில் அத்தனை பரவசமாக இருந்தது. நெஞ்சு பொங்குதல் என்றால் என்ன என்று அப்போது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனந்த்குமார் அங்கிருந்தவர்களுக்கு மணலில்அமர்ந்து சில கவிதைகளை வாசித்து காட்டினார் . குளித்துவிட்டு வீடு நுழையும் ஒருவனுடன் பிரியமான நாய்க் குட்டியை போல தொடர்ந்து நீர்த்துளிகளும், ஈரக்கால்சுவடும் வருவதை சொல்லும் கவிதை. அருமையான இனி ஒருபோதும் மறக்கவியலாத கவிதை அது
sargassum
கடற்கரையில் ஒரு பதின்பருவ மீனவப்பெண் பிளவு பட்ட இதய வடிவில் கடற்கரையெங்கும் பரவி வளர்ந்திருந்த சிறு செடிகளின் இலைகளை சேகரித்துக்கொண்டிருந்தாள். மான் நிறம் பளிச்சிடும் சிறிய கண்கள். எண்ணெய் மினுங்கும் சருமம் கொள்ளை அழகு . பெயர் ஜென்ஸி என்றாள், ஒரு எளிய நைட்டியில் அத்தனை அழகாக ஒருத்தி இருக்கமுடியுமென்பதை யாரேனும் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்கமாட்டேன். இந்த இலைகளை ஆடுகளுக்கா எடுத்துபோகிறாய்? என்று கேட்டேன் ‘’இல்ல மொசலுக்கு ‘’ என்றாள் புதியவர்களை கண்ட கூச்சத்தில் நாணி இன்னும் அழகானாள். அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டாள்
”’இந்த செடிக்கு என்ன பேரு’’?/என்றென் ’’மாமனுக்கு தான் தெரியும் ‘’என்று சற்று தூரத்தில் சவுக்கு மரங்களுக்கிடையில் தெரிந்த ஒருவரைக்காட்டினாள். காடு நீலி நினைவில் வந்தாள் இவள் கடல்புரத்து நீலி
நிறைய கிளிஞ்சல்கள், கடல் குச்சிகள், சங்குகள் சேகரித்தேன். சர்காசம் என்னும் காற்றுக்குமிழிகளை கொண்டிருக்கும் ஒரு கடற்பாசி உலர்ந்து கரை ஒதுங்கி இருந்தது. இராவணன் மீசை என்னும் ஒரு கடற்கரை மணலை பிணைக்கும் வேர்களை கொண்ட, கொத்துக் கொத்தாக புற்களை கொண்டிருக்கும் புல்வகையை பல வருடங்களுக்குப் பின்னால் பார்த்தேன்.Spinifex littoreus என்னும் அதை எனக்கு ராமேஸ்வரத்தில் காட்டி விளக்கிய மறைந்த என் பெருமதிப்புக்குரிய பேராசிரியரை நினைத்துக்கொண்டேன். மலையாளத்தில் எலிமுள்ளு எனப்படும் இப்புல் C4 மற்றும் CAM ஒளிச்சேர்க்கைகளை விளக்கும் மிக முக்கியமான பரிணாம வரலாற்றை கொண்டிருப்பவை. இவற்றின் கூரிய விதைகள் காற்றிலும் நீரிலும் பரவி மணலில் குத்தி நின்று கடற்கரை எங்கும் வளரும்.
ராவணப்புல்
இரவு கவிதை அமர்வில் பல புதியவர்களும் இளைஞர்களும் கவிதைகள் வாசித்தார்கள் பல கவிதைகள் கறாராக விமர்சிக்கப்பட்டன. யாமம், பிரளயம் போன்ற சிக்கலான வார்த்தைகளை தேவையற்று உபயோகிப்பதை குறித்தும் சொல்லப்பட்டது. சிலர் அவர்களுக்கு பிடித்த கவிதைகளையும் வாசித்தார்கள். கவிதைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த நான்கு நாட்கள் விடுமுறையில் பொதுவாக இளைஞர்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களுக்கு செல்லாமல் கவிதை முகாம் வந்து சாதாணரமாகவேனும் கவிதைகளை வாசிக்கும் இளைஞர்கள் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
அந்த இளைஞர்கள் நிச்சயம் பேரருவியின் முன் நின்று ஊளையிடமாட்டார்கள் காடுகளில் பீர்பாட்டிலை உடைத்து வீசமாட்டார்கள் ரயிலில், பிற பொது இடங்களில் சகமனிதர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்னும் உறுதி எனக்கு இருந்தது
கவிதை முகாமின் முதல் நாள் நிறைவாக பள்ளி மாணவனை போலிருந்த அந்த துடிப்பான இளைஞன் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதையாக ,
’’சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்’’
என்பதை வாசித்தார்
கடல்மணல் காலடியில் நெறி பட்டுக்கொண்டிருந்த, கடலின் சீற்றம் கேட்டுக் கொண்டிருந்த ஓர் அரங்கில் அக்கவிதை அன்றைய நிகழ்வை முடித்துவைக்க மிகப்பொருத்தமானதாக இருந்தது.மனம் கனத்திருந்தது.
இரவுணவிற்கு பிறகு அனைவருமாக முன்னிரவில் கடற்கரை சென்றோம் ஆங்காங்கே சிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு கடல் பார்த்தோம். முழு நிலவின் ஒளி புறண்டெழுந்து மடங்கி, உருண்டு, பாறைகளில் அறைபட்டு வேகம் குறைந்து தவழ்ந்தபடி கரை நோக்கி வரும் அலைகளின் நுனிகளை வெள்ளியாக மினுக்கியது. எனக்கு கடலே புதிது, அதுவும் இந்த கடல் தூய கடற்கரையுடன் மிகப்புதிது, சித்திரை முழுநிலவில் இப்படி நிலவொளியில் மினுங்கும் அலைவிளிம்புகளை பார்த்துக்கொண்டிருந்தது மிகமிக புதியது. காரணமில்லாமல் கண் நிறைந்தது.
முதலில் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின்னர் அமைதியனோம் அனைவருமே அவரவர் கடலுடனும், நிலவுடனும் தனிக்திருந்த கணங்கள் அவை. கடற்கரையில் விடுதியின் ஏராளமான நாய்கள் திடீரென வெறியேறி ஒன்றுடன் ஒன்று உருண்டுபுரண்டு சண்டையிட்டுக் கொண்டன பின்னர் தனித் தனியே அவையும் அமர்ந்து அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருந்தன. அவை எப்போதும் முழுநிலவில் அப்படி பார்க்குமாயிக்கும். நாங்கள் தான் எப்போதாவது பார்க்கிறோம்.
மனம் துடைத்து கழுவியது போலிருப்பது என்பார்களே உண்மையில் அப்படித்தான் இருந்தேன். எந்த பராதியும் யார் பேரிலும் அப்போது இல்லை மிகத் தூய தருணம் என் வாழ்வில் அது. கரையை மீள மீள தழுவிக்கொள்ள யுகங்களாய் புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை, பொழிந்துகொண்டிருந்த நிலவொளியில் பார்க்கையில் என்னவோ உள்ளே உடைந்தும், முளைத்தும் இழந்தும் நிறைந்தும் கலவையாக மனம் ததும்பி கொண்டிருந்தது
.
எனக்கு ஒருவரிடம் தீராப்பகை இருந்தது. சாதரணமான கோபம் இல்லை மாபெரும் வஞ்சமிழைக்கப்பட்ட. உணர்வில் நான் கொந்தளித்த காலத்தின் கோபம்.
ஜெ நஞ்சு சிறுகதையில் சொல்லி இருந்தது போல அது வெறும் அவமதிப்பல்ல, இளமை முதலே பேணி வந்திருந்த ,என் அகத்தில் இருந்த, நான் என்று எண்ணி வருகையில் திரண்டு வரும் ஒன்று உடைந்த நிகழ்வது, அதன் பின்னால் அந்த நபரின் எண்ணை நான் தடைசெய்து விட்டிருந்தேன். அந்த வீழ்ச்சியிலிருந்தும் எழுந்துவந்து விட்டிருந்தேன்
.
அத்தனை வருடங்கள் கழித்து, கவிதை முகாமிற்கு வரும்போது ரயிலில் தடைசெய்யப்பட்டிருந்த அந்த எண்ணிலிருந்து பலமுறை தவறிய அழைப்புக்கள் வந்திருந்ததை பார்த்தும் பொருட்படுத்தாமலிருந்தேன்
நிலவை கண்டுவிட்டு நள்ளிரவில் குடிலறைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் வந்த அழைப்பை எடுத்து எந்த கொந்தளிப்புமில்லாமல் சாதரணமாக பேசிவிட்டு வைத்தேன். நிலவு மேலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் விடுதலையுணர்வை அடைந்தேன். முழுவதுமாக அதிலிருந்து என்னை நான் மீட்டுக் கொண்டிருந்தேன். என் வாழ்வை நான் மீண்டும் திரும்பி பார்க்கையில் என்னைக்குறித்து நானே பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரு சிலவற்றில் இதுவும் இருக்கும். அந்த நஞ்சை நான் கடந்து விட்டிருந்தேன்.
வழக்கம்போல கனவும் நனவுமாக இல்லாமல் ஆழ்ந்து உறங்கி அதிகாலை எழுந்தேன் கடலின் இரைச்சல், இடியின் ஒலி, இளமழையின் குளிர்ச்சியுமாக இருந்தது புத்தம் புது காலை
யாரும் எழுந்திரித்திருக்க வில்லை நான் குளித்து தயராகி அந்த அதிகாலையில் கடலுக்கு சென்றேன். பொன்னாவாரை மலர்ந்து கிடந்தது வழியெங்கும்.
முந்தியநாளின் இரவில் நாங்கள் அமர்ந்திருந்த இடங்களில் அப்போது கடல் இருந்தது.நிலவு மிச்சமிருந்தது தூரத்தில்அலைகள் உயரத்தில் இருந்து கொண்டிருந்தது. கரையோரம் நடந்தேன். அங்கேயே பலமணி நேரம் இருந்தேன்
நானும் கடலும் மட்டும் தனித்திருந்தோம். எங்களுக்குள் உரையாடிக் கொள்வதுபோல அலைகள் என்னை தொட்டுத்தொட்டு திரும்பிக்கொண்டிருந்தன. கிளிஞ்சல்களை கொண்டு வந்து அளிப்பதும் பிறகு அவற்றை எடுத்து செல்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது கடல். மிகச்சிறிய மணல் நிறத்திலேயே இருந்த நண்டுகள் ஊர்ந்துசென்ற புள்ளிக்கோலங்களையும் அலை அழித்தழித்துச் சென்றது.
என்னை தழுவிக்தழுவி ஆற்றுப்படுத்தி. கழுவிக்கழுவி தூயவளாக்க அலைகளை அனுப்பிக் கொண்டே இருந்தது கடல்.
சில பேரலைகள் காலடி மண்ணுடன் என்னையும் சேர்த்து உள்ளே இழுத்தன. பிரிய நாய்குட்டிகள் வா வாவென்று நம்மையும் விளையாட அழைக்குமே அப்படி அலைகள் என்னை அழைத்தன. ஒரு கட்டத்தில் அந்த அழைப்புக்களை தட்ட முடியாதவளாகி இருந்தேன் ஒரு பித்துநிலை என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.
கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்று முறை கடலுக்குள் இறங்க நினைத்தேன். கடலுக்குள் இறங்கி அப்படியே காணாமலாகிவிடுவதை எந்த பயமும் இன்றி விரும்பி எதிர்பார்த்த கணம்அது. எப்படி அவ்விழைவிலிருந்து மீண்டு வந்தேன் என இப்போதும் தெரியவில்லை
அலைகள் வேகம் குறைந்தன, காலடியில் இருந்த .சில சங்குகளில் உள்ளே மெல்லுடலிகள் உயிருடன் இருந்தன.அத்தனை மெல்லிய உடலுக்கு எத்தனை கடின ஓடு? மிகஅருகே வந்த அலையொன்று ஒரு பெரிய வெள்ளை சிப்பியை கொண்டுவந்து தந்தது.
பட்டாம்பூச்சியின் ஒற்றைச்சிறகு போன்ற அச்சிப்பியின் மேற்புறத்தில் ஒரு புள்ளியிலிருந்து துவங்கி அகல விளிம்பு வரை நீளும் நூற்றுக்கணக்கான மெல்லிய இணை வரிகள் இருந்தன
அந்த வரிகளை அதே அளவில் , அதே இடைவெளிகளில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தவறில்லாமல் வரைய சில நாட்களாவது வேண்டும் மனிதனுக்கு. எப்படி, எதற்கு ஒரு சிப்பிக்கு இத்தனை ஒரு அழகு வடிவம்?அந்த சிப்பியை மொழுக்கென்று ஒரே வெண்பரப்பாக கூட படைத்திருக்கலாமல்லவா இந்த பேரியற்கை?
இப்படி கோடானுகோடி சிப்பிகளை, கோடானுகோடி வடிவங்களை, உயிர்களை, ரகசியங்களை கொண்டிருந்த கடல் கண்முன்னே இருந்தது. அச்சிப்பியை பத்திரமாக எடுத்துக்கொண்டேன். என் மகன்களை காட்டிலும் முக்கியமென நான் ஒருவேளை யாரையேனும் நினைப்பேனேனெறால் அவளுக்கு அல்லது அவனுக்கு அதை பரிசளிக்கவிருக்கிறேன்
முகாமிற்கு வந்திருந்த கலியபெருமாள் என்பவர் கடற்கரையில் தனித்திருந்த என்னை தூரத்திலிருந்து படம்பிடித்து பின்னர் அனுப்பினார்.
சரியான முக்கோண வடிவில் ஒரு கல் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல ஒவ்வொருவராக கடல் காண வந்தார்கள் சுதா மாமியும் ஜெயராமும் மணல் வீடு கட்டினார்கள் ஜெ சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களை இழப்பதில்லை என்று.
ஜெயராம் மணல்மேட்டில் ஒரு வினாயகர் முகத்தை அமைத்து அதன் தந்தங்களை நீட்டி நீட்டி கடலலயை பருகும்படி அமைத்தான் தும்பிக்கை ஒரு மாநாகம் போல வெகுதூரம் சென்றிருந்தது.
ஜெயராம்
ஜெயராமுடன் நாய்கள் ஓடிப்பிடித்து கடற்கரையில் விளையாடின. திடீரென ஒரு மாபெரும் வானவில் எங்கள் முன்னே எழுந்தது. ஒரு நாளில் எத்தனை பரிசுகள் ? திகைப்பாக பரவசமாக இருந்தது
அங்கே அமர்ந்திருக்கையில் ஒரு புதியவர் வேள்பாரியையும் வெண்முரசையும் ஒப்பிட்டால் எது சிறந்தது என்னும் கேள்வியை முன்வைத்தார். அப்படி வெண்முரசுடன் ஒப்பிடும் படியான படைப்புக்கள் ஏதும் இல்லை என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லியதோடு அக்காலை இனிதே நிறைவுற்றது.
பின்னர் ஜெ வந்ததும் மேலும் மெருகேறியது அமர்வுகள். அருணா உணர்வுபூர்வமாக முந்தின நாளின் அமர்வுகளை குறித்தும் கவிதைகளை குறித்தும் உரையாற்றினார். அவர் பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பார்ப்பது மேலும் அழகு கண்களின் உருட்டல், உணர்வு மேலீட்டில் மிகலேசாக திக்குவது, கம்மலும் தெளிவுமாக கலவையான அவர் குரல், விரல்களின் நாட்டியமும் உடலசைவுமாக ரம்மியம் எப்போதும் போல
அவரது நினைவாற்றலையும் வாசிப்பின் வீச்சையும் வழக்கம் போலவே பிரமிப்புடன் கவனித்தேன். வெள்ளைப் பல்லி விவகாரம் வெளியிடப்பட்டது.வாங்கி வந்திருக்கிறேன் வாசிக்கவேண்டும்
வெள்ளைப்பல்லி விவகாரம்
பிறகு ஜெவின் ஆக சிறந்த அந்த உரை. கவிதைக்கு இன்றியமையாத மூன்று இன்மைகளை பற்றி சொன்னார்.
கூடவே இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் இருக்கும் மூன்று தேவையில்லாதவைகளையும் விளக்கினார், அந்த பிரபல பத்திரிகையில் வந்த என் கவிதையின் நினைவு வந்து வெட்கினேன் ஊருக்கு வந்ததும் என் இணையப் பக்கத்திலிருக்கும் அதைப் போன்ற அசட்டுக்கவிதைகளையெல்லாம் ஒரேயடியாக நீக்கிவிட முடிவு செய்துகொண்டேன்
அந்த அமர்வுடன் அன்றைய நிகழ்வும் கவிதை முகாமும் முடியவிருந்தன . மதிய உணவிற்கு பின்னர் கலையலாம் என்றும் சொல்லப்பட்டது அனைவரும் இறுதி நிகழ்வில் லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் உரையை கவனித்துக்கொண்டிருந்தோம் ஜன்னல்வழியே பார்க்கையில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் உணவுண்ணும் மேசைகளை ஒரு பழந்துணியால் பொறுமையாக ஒருமுறைக்கு பலமுறையாக துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார். கண்ணும் நெஞ்சும் நிறைந்தது இது குடும்பம் இது குடும்பம் என்று மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அந்த விடுதியின் ஆரஞ்சு வண்ண சீருடையிலிருந்த முதல்நாளிலிருந்தே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு துரும்பை கூட எடுத்து போடாத, நான் குந்தாணி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட அந்த பெண் பணியாளர் அவர் துடைப்பதை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
.லக்ஷ்மி மணிவண்ணன் நிறைவுரையில் சரஸ்வதி தேவி பலிக்கல்லில் இருபது வருடங்களாவது படுக்கப்போட்டு பலிகொடுத்த பின்னரே நல்ல கவிதை வருமென்றார்.
அப்படியனால் நான் என் அபத்தக்கவிதைகளை அழிக்க வேண்டியதில்லை. இன்னும் 19 வருடங்களில் நிச்சயம் செறிவும் கவிதைக்கணங்களும் நிறைந்த, புரட்சியும் தன்னிரக்கமும், பொய்யுமில்லாத நல்ல கவிதையை என்னாலும் எழுத முடியும்
சிவாத்மாவின் சுருக்கமான இனிமையான பாடலுடன் விழா நிறைவுற்றது
மதிய உணவுக்கு பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டனர். கடைசியாக கடலை காண சென்றேன் விடைபெற்றுகொள்கையில் என் காலடிச்சுவடை ஒரு பேரலை வந்து அள்ளிச்சென்றது.
என்னை அருணா கன்னியாகுமரி சுற்றி காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் நான் அனைவரும் புறப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்
லக்ஷ்மி மணிவண்ன அவர்களும் ஆனத்குமாரும் ஒய்வொழிச்சலும் உறக்கமும் இன்றி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்கள். ஆனந்த் சோர்வை காட்டிக்கொள்ளவே இல்லை பம்பரமாய் சுற்றி புறப்பட ஏற்பாடு செய்வது, அங்கிருந்த நாய்களுக்கு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாத படிக்கு தனிதனியே உணவிடுவது, எல்லா வேளைக்கும் அந்த குந்தாணி அம்மாவுக்கு அவர் கொண்டு வந்த அனைத்து பாத்திரங்களிலும் நிறைய உணவை கொடுப்பதுமாக இருந்தார்.
ஆனந்துக்கு விருது என தெரியவந்ததும் அவர் நாய்களுக்கு சோறிட்டதும் அந்த அம்மாளுக்கு அவரளித்த சோறும் அதன் பின்னரே அவர் கவிதைகளும் நினைவுக்கு வந்தன
இவ்விருதை வாங்க மிக பொருத்தமான கவிஞர், மிகப் பொருத்தமான மனிதரும் கூட
அனைவரும் சென்ற பின்னர் நான் அருணா, கதிர் மற்றும் நவீன் கன்னியாகுமரி சென்றோம்.
நல்ல கடைத்தெருவொன்றை அங்கு பார்த்தேன்.பலவித பொருட்கள் சங்கு, சங்கு வளை, கிளிஞ்சல், சோழி, சங்குகளில் திரைச்சீலை, தொப்பிகள், மலிவு விலை உடைகள் பொம்மைகள் என்று ஏராளம். ஒவ்வொன்றாக பார்த்ததே எல்லாவற்றையும் வாங்கியதுபோல மகிழ்ச்சி அளித்தது
முதன்முதலாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டேன் அருணா வாங்கிக்கொடுத்து. நான் நினைத்திருந்தது போல அது பயங்கர காரமெல்லாம் இல்லை கடலை மாவு தோல் போர்த்திய பசுதான் அது. காந்திமண்டபம் சென்றோம். குமரி முனையில் பாசம் வழுக்கி விடாமல் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நானும் அருணாவும் கால் நனைத்துக்கொண்டோம்.
வள்ளுவர் சிலை, மாயம்மா ஆலயம், காந்திமண்டபம் என்று ஒவ்வொன்றாக பார்த்தோம்
அருணா எல்லாவற்றையும் புத்தம் புதிதாக பார்க்கும் உற்சாக மனநிலையிலேயே இருக்கிறார். எங்களை யாரேனும் கவனித்திருந்தால், கன்யாகுமரியில் பிறந்து வளர்ந்த நான் அருணாவை அங்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று நினைத்திருக்க கூடும் அப்படி எல்லாவற்றையும் ஒரு சிறுமியின் குதூகலத்துடன் பார்க்கிறார் ரசிக்கிறார். அருணாவே எனக்கு ஓரிரவில் திடீரென வளர்ந்து பெரிதாகிவிட்ட சிறுமியை போலத்தான் தெரிந்தார்.
மேலும் அருணா ஒரு தகவல் சுரங்கம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் வள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்குமான படகுச்சவாரி குறித்து கேட்டதும் அந்த இரு படகுகளின் பெயர்களையும் சவாரி நேரங்களையும் கூட துல்லியமாக சொன்னார்.
பிறகு குமரி அன்னை ஆலயம் . திரையிட்டிருந்தார்கள். கூட்டமே இல்லை
சிறப்பு அனுமதியில் முன்னால் ஒரு இளம் தம்பதியினர் சிறுமகளுடன் அமர்ந்திருந்தனர்.
நீலப்பட்டாடை அணிந்திருந்த அந்த குழந்தை தன் சதங்கைச்சிறுகாலினால் முன்னிருந்த ஒரு கயிற்றை உதைத்துக்கொண்டும் அவள் முன்னே ஒரு வாளியில் கொட்டிகிடந்த செந்தாமரை மொட்டுக்களை எடுக்க தாவுவதுமாக இருந்தாள். குமரித்துறைவி நினைவுக்கு வந்தது.
திரை விலகி பல சுடராட்டுக்களில் அன்னையும் சிறுமியுமாக கண்ணார தரிசனம் கிடைத்தது.சங்குவளைகள் இரு ஜோடிகள் வாங்கிக்கொண்டேன். வெளியே வந்தோம் வள்ளுவர் சிலை ஜகஜ்ஜோதியாக விளக்குகளுடன் ரம்மியமாக இருந்தது.
பிறகு சுசீந்திரம். ஓட்டுநர் சந்தேகித்த படி வாகன நெரிசல் இல்லாமல் விரைவில் போய் சேர்ந்தோம் அங்கே காரில் காத்திருந்த ஆனந்த் என்னிடம் ’’அக்கா உங்களுக்கு பழம் பறி வாங்கி கொடுக்க நினச்சிருந்தேன் இந்தாங்க’’ என்று நீட்டினர் குடும்பமல்லாது இது வேறென்ன?
கோவிலுக்குள் நுழைகையில் தலவிருட்சம் சரக்கொன்றை பொன்னாய் பூத்து நிறைந்திருந்தது வாசலிலேயே. நல்ல தரிசனம் அங்கே. வெளியே போலி முத்து மாலைகளும் பலவித உணவுகளும் விற்றார்கள்.கடலை வறுபடும், கடலை மாவு, வேகும், சோளம் வாட்டும் வாசனை கூடவே வந்தது. பல வண்ண ரப்பர் பேண்ட் களை விற்கும் இரு சிறுமிகள் அங்கமர்ந்திருந்த முழங்கால்களுக்கு கீழ் இரு கால்களையும் இழந்த்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் பணத்தை கொடுத்து சில்லறை மாற்றி கொண்டிருந்தார்கள்
ஒரு நல்ல உணவகத்தில் இரவுணவு .முதன்முதலாக ரசவடை. என்னது ரசத்தில் வடையை போடுவார்களா? என்று முதலில் துணுக்குற்றாலும் சரி சாம்பார் வடை இருக்கிறது தயிர் வடையும் இருக்கிறது இடையில் இருக்கும் ரசத்திலும் இருப்பதுதானே நியாயம் என சமாதானமானேன்
இனிய தோழி அருணா, அவருடன் பழகுகையில் பேசுகையில் எனக்குள் எந்த தயக்கமும் இல்லை பல்லாண்டுகள் பழகிய உணர்வை அவரால் அவரருகிலிருப்பவர்களுக்கு அளிக்க முடிகின்றது.
என்னையும் கதிரையும் ரயிலடியில் விட்டுவிட்டு அருணா சென்றார் நினைவுகளின் எடையில் மூச்சு திணறிக்கொண்டு உறக்கமின்றி ரயிலில் இரவு கழிந்தது. காலை கோவையில் கதிரும் நானும் விடைபெற்றுக்கொண்டோம். சொந்த தம்பியை காட்டிலும் அன்புடனும் பொறுப்புடனும் என்னுடன் கதிர் வந்தார்
பொள்ளாச்சி வந்து கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு குளிக்கச் செல்ல கைக்கடிகாரத்தை கழற்றினேன். கடிகார பட்டைக்குள்ளிருந்து மேசையில் உதிர்ந்தது கொஞ்சம் கடற்கரை மணல்
என்னை வா வாவென்று அழைத்தும் நான் வராததால், கடல் தானே கொஞ்சம் என்னுடன் வந்துவிட்டிருந்தது.
ஸ்ரீபதி பத்மநாபாவின் ஒரு கவிதை இருக்கிறது. ஒரு காதலனும் காதலியும் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நடந்து சென்று ஒரு பேருந்துக்காக காத்து நிற்பார்கள் வழக்கத்துக்கு மாறாக காதலி அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டதும் காதலன் இனி காதலைப் பற்றி தான் கவிதை எழுத வேண்டியதில்லை என்று நினைப்பதாய் முடியும் அது
மனம் முழுக்க ராவணப்புல்லாக பிடித்து இறுக்கியபடி நிறைந்திருக்கும் கவிதை முகாமின் இனிய நினைனவுகளே போதும், ஒருபோதும் நல்ல கவிதைகளை எனனால் எழுதமுடியாவிட்டலும் என்று தோன்றியது.
20 கிராம் சுமார் 28 000 அமெரிக்க டாலர்கள் விலைகொண்ட ட-ஹாங்- போ (Da-Hong Pao ) தேயிலைகளையும், யானைகளுக்கு சாக்கலேட், சோளம் மற்றும் உயர்தர காபி பழங்களை உணவாக கொடுத்து அவற்றின் சாணத்தில் செரிமானமாகாமல் கிடைக்கும் காபிக்கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் ஒரு கிலோ சுமார் 400 டாலர்கள் விலை கொண்ட கருப்பு தந்த காபித்தூளைபோல (Black ivary coffee) மேலும் பல அரிய, அதிக விலைகொண்ட தாவரபொருட்கள் உள்ளன.அவற்றில் கொமட்சுனோ கீரையும் ஒன்று இது யமஷிடா கீரை என்றும் அழைக்கப்படுகிறது:
டோக்கியோவை சேர்ந்த அஸஃபுமி யமஷிடா (Asafumi Yamashita) 25 வருடங்களுக்கு முன்பு பாரிஸுக்கு சென்றார். பொன்ஸாய் கலைஞரான அவர் தான் உருவாக்கிய அழகிய பொன்ஸாய் மரங்களை அங்கு விற்று பொருளீட்டி வாழ்ந்தார். உலகெங்கும் பொன்சாய் மரங்கள் திருட்டுப் போவது போலவே யமஷிட்டாவின் தோட்த்திலிருந்தும் 2 போன்ஸாய் மரங்களை தவிர அனைத்தும் ஒரு துரதிர்ஷடமான் நாளில் திருட்டு போயின.
மனம் வெறுத்துப்போன யமஷிட்டா பொன்ஸாய் தொழிலை கைவிட்டு தான் கொண்டுவந்திருந்த சில அரிய ஜப்பனிய வகை காய்கறிகளின் விதைகளை கொண்டு பாரீஸில் கிடைக்காத ஜப்பனிய கீரைகளையும் காய்கறிகளையும் அந்த தோட்டத்தில் பயிரிட்டார்.
3000 சதுர அடிமட்டுமே கொண்ட அவரது தோட்டத்தில் 50 வகையான அரிய ஜப்பானிய தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பாரிஸின் மிக அதிக பொருளீட்டும் தோட்டக்காரராக யமஷிடோ இப்போதுஅறியப்படுகிறார்.
அவரது சின்னஞ்சிறு தோட்டத்தில் வளரும் அரிய வகை தாவரங்களில் ஹினோனா என்னும் ஊதா டர்னிப் கிழங்குகளும், (hinona), கொமாட்சுனா என்னும் கீரையும் (komatsuna), சிவப்பு கத்தரிக்காய்களும், அரிய பட்டாணி வகைகளும் குட்டித்தக்காளிகளும் பாரிஸீல் உயர்தர உணவகங்களின் வாடிக்கையாளர்களின் விருப்ப உணவாகி விட்டிருக்கிறது.
அதிக நார் சத்து நிறைந்த இந்த கொமாட்சுனா கீரைகள் ஒரு கிலோ 400 டாலர்கள் வரை விலைகொண்டவை. இந்த கீரைகளை அவர் ஃப்ரான்ஸின் மிஷெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களின் சமையற்கலைஞர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்
இந்த கொமாட்சுனா கீரையின் தாவர அறிவியல் பெயர் Brassica rapa var. perviridis. இந்த கடுகுக்கீரை வகை ஜப்பானிலும் தாய்லாந்திலும் மட்டுமே வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகின்றது.
கொமாட்சுனா என்றல் ஜப்பானிய மொழியில் ’’கொமாட்சின் கீரை’’ என்று பொருள்.. ஜப்பானிய கிராமமான கொமாட்ஸுகாவா வை சேர்ந்த கீரைகள் இவை (Komatsugawa). அந்த கிராமத்தில் 17 ம் நூற்றாண்டிலிருந்து இக்கீரைகள் சாகுபடியாகின்றன.
ஜப்பானிய பேரரசர்களால் நியமிக்கப்படும் ஷோகன் எனப்படும் மிக செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய ராணுவ அதிகாரிகளில் எட்டாவது அதிகாரியான டோக்குகவா யொஷிமுனே (Tokugawa Yoshimune) என்பவர் அந்த கிராமத்துக்கு 1719ல் வேட்டைக்கு சென்று திரும்பும் வழியில் மதிய உணவுக்கு வந்திருந்தார். ஒரு எளிய மடாலயத்தில் அவருக்கு காய்கறி சூப்பும் வேகவைத்த அரிசியும் வதக்கிய உள்ளூர் கீரைகளும் கொடுக்கப்பட்டன. அந்த கீரையின் சுவையிலும் மணத்திலும் மயங்கிய அவர் அங்கே ஓடிகொண்டிருந்த கொமட்ஸு ஆற்றின் பெயரையே வைத்து கொமட்ஸுனா கீரை எனப் பெயரிட்டர் இப்போதும் அந்த ஷின் கொய்வா கட்டொரி மடாலயத்தில் புத்தாண்டின் போது இந்த கீரை உணவு அனைவருக்கும் வழங்கப்படுகிறது (Shin-Koiwa Katori Shrine). அந்த மடாலயத்தின் தெய்வங்களுக்கும் அன்று இந்த கீரையே படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது
இந்த கீரைச்செடியின் எந்த பருவத்திலும் கீரைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். முற்றிய அல்லது இளங்கீரைகள் இரண்டுமே நல்ல சுவையான சத்தானவை. அடர் பச்சை இலைகளுடன் 20 லிருந்து 80 நாட்களில் வளரும் இந்தச்செடி சுமார் 30 செமீ உயரம் வரை வளரும். அதிக வெப்பத்தை தாங்காத இந்த செடி நல்ல நிழலான இடங்களிலும் பசுமைகுடில்களிலும் மட்டுமே வளரும்.
கீரைகளை நறுக்கி எடுத்தபின்னர் அடித்தண்டுகளிருந்து மீண்டும் 3 முறை கீரைகள் வளர்ந்து அறுவடை செய்யப்படும்
லேசான இனிப்புச்சுவையையும் நல்ல மணமும் கொண்டிருக்கும் இந்த கீரையை சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம், வேகவைத்தோ, வாட்டியோ, வதக்கியோ அல்லது பொறித்தோ உண்ணலாம். சாலட்களிலும் சூப்புகளிலும் சேர்க்கலாம். இந்த கீரையிலிருந்து ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகின்றன.
கால்சியம், நார்சத்து போன்றவைகளையும் பல வைட்டமின்களையும் கொண்டிருக்கும் இந்த கீரை ஜப்பானியர்களின் விருப்ப உணவுகளில் ஒன்று,
பின்னலாடைத் தொழிலில் இயற்கை நாரிழைகளின் நீடிக்கும் தன்மையில் உள்ள சிக்கல்கள், மேலும் பல புதிய இயற்கை நார் இழைகளை குறித்த ஆராய்ச்சிகளுக்கு வழி வகுத்துள்ளன.
உலகெங்கிலும் பல்வேறு தாவரங்களில் இருந்து இழைகள் பெறப்படுகின்றன. கற்றாழை, வாழை, யானைக்கற்றாழை, சணல், சணப்பை, மூங்கில், பால் நார், சோளம், சோயா, புல்நார், நிலக்கடலை ஓடு, காபி பீன்ஸ் கழிவுகள், அன்னாசி இலைகள் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அவற்றில் சில.
இயற்கை இழைகள் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை சர்வதேச இயற்கை இழைகளின் ஆண்டாக அறிவித்தது – IYNF
samatoa
பின்னலாடை தொழிலில் மிகவும் விரும்பத்தக்க வடிவம் இறைவழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய தாமரை மலரின் வடிவம்தான், பிற மதங்களை காட்டிலும் இந்து மற்றும் புத்த மதம் தாமரையுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவை. புத்த மதத்தின் மிக முக்கிய குறியீடு தாமரை. பண்டைய காலத்தில் கம்போடிய புத்த துறவிகள் தாமரை நாரிழைகளால் பின்னப்பட்டு இயற்கை சாயமிடப்பட்ட ஆடைகளையே தூய்மை, தெய்வீகத்தன்மை மற்றும் அமைதியை குறிக்க அணிந்தனர். தாய்லாந்திலும் மியான்மரிலும் தாமரை நாரிழைகளிலான ஆடைகள் மிக ஆடம்பரமான உயர்தர ஆடைகளாக கருதப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட பாரம்பரிய நாரிழைகளும் ஆடைகளும் உள்ளன. கம்போடியாவின் தாமரை நாரிழைகளாலான ஆடைகள் அவ்வாறான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மற்ற இயற்கை இழைகளுடன் ஒப்பிடும்போது இவை மிக்குறைவாகவே பிரபலமாயிருக்கின்றன.
தாமரை நாரிழைகளின் பயன்பாடு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு 1910 ல் டா சா ஊ என்னும் இந்த்தா (intha)பழங்குடி இனப்பெண் ஒருவரால் துவங்கப்பட்டது. (Daw Sa Oo) அப்பெண்மணி தாமரை இலைகளின் நீண்ட காம்புகளை கத்தரித்து அவற்றிலிருந்து நார்களை சேகரித்து அடுத்த ஒருவருடம் முழுவதும் அவற்றைக்கொண்டு ஆடைகளை நெய்வதில் ஈடுபட்டிருப்பார். அருகிலிருந்த புத்த மடத்தின் துறவிகளுக்கென அவர் அந்த ஆடைகளை உருவாக்கினார்.அவரது மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தினரால் சிறிய அளவில் இத்தொழில் செய்யபடது
தாமரை இழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே உலகின் ஆகச்சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் புனிதமான ஆடை என கருதப்படுகிறது, ஒரு காலத்தில் துறவிகளுக்கு மட்டுமே பயன்பட்ட இவற்றை. இப்போது வணிகமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்ப்ட்டிருக்கின்றன..
கம்போடியாவின் தாமரை சாகுபடி செய்யப்படும் நீர்வயல்களிலிருந்து Padonma-kya என்று அவர்களால் அழைக்கப்படும் இந்திய தாமரையான Nelumbo nucifera வின் தண்டுகள் அதிகாலைகளில் நறுக்கி அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.
அறுவடை செய்யப்படும் இலைத்தண்டுகளில் நீளவாக்கில் சுமார் 20ருந்து 30 நாரிழைகள் வரை இருக்கும், அவை உருவி எடுக்கப்பட்டு திருகித் திருகி ஒற்றை இழையாக்கப்பட்டு பின்னர் கழுவி உலர்ந்தபின்னர் மூங்கில் தறிகளில் நெய்து ஆடையாக்கப்படுகின்றன.
தாமரை இழைகளை நெய்கையில் அவ்வப்போது நீர் தெளித்துக்கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை பயன்படுத்த முடியாத அளவிற்கு உலர்ந்துவிடும். தண்டுகள் அறுவடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவற்றை நெய்துவிடவேண்டும் இல்லாவிட்டால் நார்கள் வீணாகப்போய்விடும். தாமரை இழை நெய்தலில் ஒரு சிறு துண்டு நார் கூட வீணாவதில்லை நீளமான நாரிழைகள் ஆடைகளுக்கு பயன்படும் என்றால் உடைந்த சிறு நாரிழைகள் விளக்குத் திரிகளாக உபயோகிக்கப்படும்
அறுவடையிலிருந்து ஆடை உருவாக்கம் வரை முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்படும் இச்செயல் அதிக நேரத்தையும், அதிக உடலுழைப்பையும் கோருவது. சுமார் 1,20,000 தண்டுகளிலிருந்து ஒரு ஆடை உருவாக்கப்படும். அதாவது ஒரு சதுர மீட்டர் அளவிலான துணியை உருவாக்க 8000 தாமரைத்தண்டுகளும் 20 நாட்களும் தேவைப்படுகிறது.
முழுக்க முழுக்க இயற்கையான வழிகளில் இந்த நாரிழைகளிலிருந்து ஆடைகள் உருவாவதால் இவற்றிற்கு GOTS எனப்படும் உலகின் மிக சிறந்த சூழலுக்குகந்த ஆடையிழைகள் என்னும் அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. (Global Organic Textile Standard)
தாமரை இழை ஆடைகள் புற ஊதாகதிர்களை தடுக்கும், ஈரத்தை உறிஞ்சும், காற்றை உள்ளே அனுமதிக்கும், மிக மிருதுவாகவும் செளகரியமாகவும் அணிபவர்களுக்கு இருக்கும் மேலும் இவை நீடித்தும் உழைக்கும் தாமரை இழையாடைகளில் கறை படியாது தாமரையைப் போலவே இவையும் தூய்மையானவை.
இந்த ஆடைகளை அணிபவர்களுக்கு மனஅமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது, பருத்தி மற்றும் லினென் துணிகளுடன் ஒப்பிடுகையில் தாமரை இழைகளே உயர்ந்த தரத்துடன் இருக்கின்றன
தாமரை இழைநார் ஆடைகள் மருத்துவதுறை மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கான உடைகளை உருவாக்க பயன்படுகிறது
ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இவ்விழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. புத்த துறவிகளும் இவற்றையே விரும்பி அணிகிறார்கள்
உலகளவில் தாமரை இழைகளில் உருவாக்கபட்ட ஆண்களின் ஆடைகளில் Nomark சட்டைகளும், பெண்களுக்கான Kyar hi கழுத்துகுட்டைகளூம் (scarf) பிரபலம். 2012ல் யுனெஸ்கோவின் தனிச்சிறப்பான SOE முத்திரை அந்தஸ்தையும் இவ்விழையாடைகள் பெற்றிருக்கின்றன. (Seal of Excellence). Samatoa என்னும் பிரபல பெயரிலும் தாமரை இழைஆடைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
கழுத்துக்குட்டை
சாயமேற்றப்படாத இழைகளின் நிறம் பால் வெண்மையில் இருக்கும், இயற்கை சாயங்களில் ஆரஞ்சு மஞ்சள் நீலம் பச்சை ஆகியவையே இவ்வாடைகளுக்கு நிறமேற்ற அதிகம் பயன்படுகின்றன.
மருத்துவ காரணங்களுகாகவும், தண்டு, வேர்க்க்கிழங்கு ஆகியவற்றின் சத்துக்கள் மற்றும் சுவைக்காக உணவுக்காகவும், அழகிய தூய மலர்களுக்காகவும் மட்டும அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இவற்றின் இலைத்தண்டுகள் வீணாகிக்கொண்டிருந்தன. தற்போது அவற்றிலிருந்து உலகின் மிக அதிக விலையுள்ள மிகத் தரமான ஆடைகள் உருவாககப்படுகின்றன
கம்போடியா, வியட்னாம் மற்றும் மியான்மரிலும், இந்தியாவின் மணிப்பூர் மற்றும் குஜராத்திலும் தாமரைகள் நாரிழைகளின் பொருட்டு சாகுபடி செய்யப்படுகின்றன. தாமரை இழைகளிலிருந்து ஆடைகள் மட்டுமல்லாது ஆபரணங்களும் உருவாக்கப்படுகின்றன.
மணிப்பூரின் பிஷ்ணூபுர் மாவட்ட்த்தைச் சேர்ந்த 27 வயது பிஜியஷாந்தி ( Bijiyashanti Tongbram) தாமரை இழையாடை தொழிலை 2019ல் அங்கு பிரபலமாக்கியவர். தாவரவியல் பட்டதாரியான அவரது வீட்டிற்கருகேதான் இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தின் மிகப்பெரிய நீர்நிலையான லோக்டாக் நன்னீர் ஏரியும் (Loktak lake) அதனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தாமரைக்கொடிகள் வளர்ந்திருக்கும் பும்டி என்கிற நூற்றுக்கணக்கான மிதக்கும் மணிபூரின் பிரெத்யேகமான சிறு தீவுத்தொடர்களும் உள்ளன.கம்போடியாவின் தாமரைநாரிழை தொழிலைக்கேள்விப்பட்டு அது குறித்தான ஏராளமான காணொளிகளையும் பார்த்து தானும் தாமரைநார் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார் பிஜியஷாந்தி
பிஜியஷாந்தி
அவருடைய சொந்த நிறுவனமான சனாஜிங் சனா தம்பால் (‘Sanajing Sana Thambal’) தாமரை நாரிழைகளை தயாரிப்பதோடு அந்த ஊர்பெண்களுக்கும் இத்தொழிலில் வேலைவாய்ப்பும் வழங்குகின்றது. சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் திரு நரேந்திர மோடி பிஜிஷாந்தியின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.
தாவரவியல் அகராதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் நினைத்ததைக்காட்டிலும் பெரும்பணியாக இருக்கிறது. பல தமிழ்சொற்களுக்கு வாரக்கணக்கில் தேடுகிறேன். அப்படி perianth/tepal என்னும் அல்லியும் புல்லியும் சேர்ந்த மலரின் இதழைபோன்ற பகுதிக்கு அதழ் என்னும் பெயர் கிடைத்தது. எத்தனை அழகான பெயர்! இந்த தளத்தின் பெயரையும் மென்மொழிகளிலிருந்து அதழ் என்றே மாற்றிவிட்டேன்.