ரிஸ்ட்ரா- Ristra
மிளகாய்களை உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை கிரிஸ்டோஃபர் கொலம்பஸைத்தான் சேரும். அவரே மெக்ஸிகோவிலிருந்து அவற்றை பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார் என்கிறது வரலாறு.
மிளகாய்களின் பிறப்பிடம் மெக்ஸிகோ என்று சொல்லப்பட்டாலும். தாவரவியல் ஆய்வாளர்கள் மிளகாய்கள் மெக்ஸிகோவிலிருந்து அல்ல பொலிவியாவிலிருந்தே தோன்றின என்றும் அங்கிருந்து அவை பறவைகளின் மூலம் மெக்சிகோவிற்கு அறிமுகமாகியிருக்கும் என்றும் கருதுகிறார்கள். மிளகாயின் காரம் மனிதர்களைப் போல் பறவைகளுக்கு உரைப்பதில்லை என்பதும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.
தக்காளி உருளைக்கிழங்கின் குடும்பமான சொலனேசியை சேர்ந்த மிளகாய் ஆங்கிலத்தில் chillies, chiles அல்லது peppers என அழைக்கப்படுகின்றன
கிரிஸ்டோஃபர் வருமுன்னரே பழங்குடிகளான அஸ்டெக்குகள் மற்றும் மாயன்களின் கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாதபடி ஒன்றி இருந்தது மிளகாயும் அதன் காரமும்.
மிளகாய்கள் உணவுக்கான உபயோகங்களுக்கு மட்டுமல்லாது அவற்றின் மருத்துவ குணங்களுக்காகவும், பூச்சிகள் அண்டாமல் இருக்க வீடுகளுக்கு புகை போடவும் மெக்ஸிகோவில் பெரிதும் உபயோகத்திலிருந்தன. மெக்ஸிகோவின் டெவாகனா பள்ளத்தாக்கில் (Tehuacán Valley) மிளகாய்கள் கிமு 50000 வருடங்களுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மெக்ஸிகோவின் உணவுகளில் மிளகாய் பிராதான இடம்பெற்றிருக்கிறது உலர்ந்தவைகளும் புத்தம் புதியவைகளுமாக பலநூறு மிளகாய் வகைகள் மெக்ஸிகோவில் விளைந்து,பயன்பாட்டிலும் உள்ளன. மெக்ஸிகோவின் வறண்ட, வெப்பம் மிகுந்த காலநிலை மிளகாய்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அவற்றின் பூச்சித்தாக்குதலுக்கு எதிராகவும் இருப்பதால் அங்கே மிளகாய்கள் அதிகம் விளைகின்றன
மெக்ஸிகோவில் மிளகாய்கள் அனைத்துவிதமான உணவுகளிலும் சேர்க்கப்படும் சாக்கலேட்டுகளிலும், பானங்களிலும், இனிப்புகளிலும் மட்டுமல்லாது ஊறுகாய்களாகவும், பசையாகவும் பொடிகளாகவும் இவை கிடைக்கின்றன
மெக்ஸிகொ பழங்குடிகள் மிளகாய்கள் உலர்ந்திருக்கையில் அவற்றை சேமித்து வைக்கவும் தொலைதூரங்ககளுக்கு எடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதை கண்டறிந்திருந்தார்கள் அவ்வாறு உலர்ந்த மிளகாய்களை கட்டு கட்டாக சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அவ்வழக்கம் அவர்களின் வளமையின் குறியீடாகவே காலப்போக்கில் மாறிப்போனது.
இன்றளவிலும் மெக்ஸிகோ நகரின் பொது இடங்களில். அலங்கார வளைவுகளில், வணிக வளாகங்களில், வீடுகளின் முகப்புகளில் என்று பார்வையில் படும்படி உலர்மிளகாய்களின் நீண்ட கொத்துக்களை கயிற்றில் அல்லது நாரில் கட்டி அலங்காரமாக தொங்கவிடும் பழக்கம் தொடர்கிறது.
இதுபோன்று அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்கும் மிளகாய் கொத்துக்கள் ஆங்கிலத்தில் Ristras எனப்படுகின்றன. இவை வரவேற்புக்காகவும், வளமை மற்றும் செல்வத்தின் அறிகுறியாகவும் அதிர்ஷ்டம் தரும் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இப்படி பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாறு ரிஸ்ட்ராக்களாக்கப்பட்ட மிளகாய்கள் தீய சக்திகளை விரட்டும் என்றும் அடுத்த வருட விளைச்சலை பெருக்கும் எனவும் மெக்சிகோ மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது
ரிஸ்ட்ரா என்றால் ஸ்பானிய மொழியில் ’ கோர்த்த மணி’ என்று பொருள் தென்மேற்கு அமெரிக்காவின் அடையாளங்களாக கருதப்படும்’ சகுரா கள்ளி, கெளபாய் பூட்ஸ்’ இவற்றுடன் மிளகாய் ரிஸ்ட்ராக்களும் இருக்கின்றன.
தரமான தேர்ந்தெடுத்த மிளகாய்களை நன்கு வெயிலில் உலர வைத்து கயிறுகளில் இறுக்கமாக மாலை தொடுப்பதுபோல் கட்டி பல வடிவங்களில் வட்டமாகவும், நீளமாகவும், தனித்தனி கொத்துக்களாகவும், பலகொத்துக்களை ஒன்றிணைத்தும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படும். இவற்றை பல வருடங்களுக்கு சேமித்து வைக்க முடியும்.
பல வீடுகளில் இவ்வாறு உலர செய்து ரிஸ்ட்ராக்களாக இருக்கும் மிளகாய்களை தேவைப்படும்போது சமையலுக்கும் பயன்படுத்துவதுண்டு.
உலகின் பல பகுதிகளிலும் இப்படி ரிஸ்ட்ராக்கள் காய்,கனிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன. பூண்டு ரிஷ்ட்ராக்கள் தென்னிந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முற்றிய மக்காச்சோளக்திர்களிலும், இலங்கையில் நிலக்கடலை மற்றும் பூண்டிலும் இந்தியாவில் கேரளாவில் முற்றிய நெற்கதிரிலும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் நெற்றுத்தேங்காய்களிலும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படுகின்றன.
மெக்சிகோவிற்கு இனி செல்பவர்கள் மிளகாய் ரிஸ்ட்ராக்களை அவசியம் கவனித்து பார்க்கலாம்,
நாமனைவருமே அந்தந்த பிரதேசத்தின் பிரபல காய்கறிகளை உலர செய்து ரிஸ்ட்ராக்களை உருவாக்கலாம். இணைய வர்த்தகத்திலும் ரிஸ்ட்ராக்கள் விற்பனையாகின்றன.