இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மிக முக்கிய புரத உணவாக இருப்பது கொண்டைக்கடலை எனப்படும் chick pea . பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த  இதன் அறிவியல் பெயர் Cicer arietinum. சென்னா, கடலை, கொண்டைக்கடலை, சுண்டல் கடலை என்று தமிழில் அழைக்கப்படும் இதன் பிறமொழிப் பெயர்கள்   chole, gram,  Bengal gram, garbanzo, garbanzo bean , Egyptian pea, ceci, cece & channa.Kichererbsen

உலகின் மிகப்பழமையான பயறு வகை தாவரங்களிலொன்றான கொண்டைக்கடலையின் 7500 வருட பழமையான தொல்எச்சங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்திருக்கின்றன. 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டைக்கடலை தாவரம் துருக்கியில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவை பயிராகிக்கொண்டிருக்கின்றன. மொத்த உலக உற்பத்தியில் 70 சதவிதத்தை அளிக்கும் இந்தியாவே கொண்டைக்கடலையின்  உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

 உலகின் மூன்றாவது முக்கிய பயறு வகையான இவற்றில் அளவில் சிறிய அடர் நிறம் கொண்டவை நாட்டு ரகங்கள் (Cicer arietinum desi varity). முதிராக்காய்களின் கடலைகள் அதிக சத்துக்களுடன் சிறியதாக பச்சை நிறத்திலும் கிடைக்கின்றன.

அளவில் பெரிய நாட்டு வகைகளைக்காட்டிலும் சற்று மென்மையான, வெளுத்த  ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்தவகை காபூலி வகை எனப்படும்.Cicer kabulium -( kabuli variety)

பல்லாண்டுகளாக இவை இரண்டுமட்டுமே புழக்கத்தில் இருந்தன . தற்போது தெற்கு இத்தாலியில் மட்டும் விளைவிக்கப்படும் Ceci neri என்னும் அறிவியல் பெயருடைய கருப்பு கொண்டைக்கடலைகளும் சந்தையில் உள்ளன.

Ceci neri

இவற்றை வேகவைத்தும், வறுத்தும்,  கடலைமாவாக பொடித்தும்  தாயாரிக்கப்படும்  கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  பல வகை உணவுகள் உலகெங்கும்   மக்களின் விருப்ப உணவுகளாக இருக்கின்றன..

இவற்றை தோல் நீக்கி  உலரவைத்து இரண்டாக உடைத்ததுதான் கடலைப்பருப்பு. வறுத்து உடைத்தவையே வறுகடலை அல்லது பொட்டுக்கடலை

வறுத்து அரைக்கப்படும் கொண்டைக்கடலை  காபியாகவும் அருந்தப்படுகிறது முதல் உலகப்போரின் போது உண்டான காபி தட்டுப்பாட்டினால் இவை காபிக்கொட்டையை போலவே வறுத்தரைக்கப்பட்டு காபி தயாரிக்கப்பட்டது. இந்த பானம் இன்றும் உலகின் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் இவை வறட்சியையும் தாங்கும் திறன் கொண்டவை. 20 லிருந்து 60 செமீ உயரம் வரை வளரும் இவை இறகுக்கூட்டிலைகளையும் வெள்ளை அல்லது சிவப்பு சிறு  மலர்களையும் கொண்டிருக்கும். சிறு படகு போன்ற பச்சைக்காய்களில்  ஒன்று அல்லது மூன்று விதைகள் எனப்படும் சிறு அலகு போன்ற நீட்சியை உடைய கொண்டைக்கடலைகள் காணப்படும். தாவரம் முழுக்க மென்மையான ரோமம் போன்ற வளரிகள் காணப்படும் .இப்பயிர் சுமார் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிறுத்தி நிலவளத்தையும் இவை பாதுகாக்கின்றன.

கொண்டைக்கடலையில்  இரும்பு மற்றும் செம்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.  கொண்டைக்கடலையில்  குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்கின்றது.

 கொண்டைக்கடலையின் இளம் காய்களும், இலைகளும் பச்சையாக உண்ணப்படுகின்றன புரதச்சத்துக்காக இவை கால்நடைகளுக்கும் தீவனமாக அளிக்கப்படுகின்றன

hummus

தென்னிந்தியாவில் கடலைமாவில் செய்யப்படும் பஜ்ஜி, மைசூர்பாக்கை போலவே உலகளவில் வேகவைத்து மசித்த கொண்டைக்கடலையுடன்  ஆலிவ் எண்ணெயும், எலுமிச்சைச்சாறும்,அரைத்த எள்ளும் கலந்து செய்யப்படும் Hummus  வெகு பிரபலம்.

குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவைத்து மிருதுவாக்கப்பட்ட கொண்டைக்கடலையை வேகவைக்கையில் அதிலிருக்கும் ஒவ்வாமையை அளிக்கும் சில பொருட்கள் நீங்கிவிடுகின்றன.  இவை 2 லிருந்து 3 நாட்கள் வரை ஊறவைத்து ,முளைவிட்டதும் உணவில் சேர்க்கப்படுகையில் கூடுதலான சத்துக்கள் கிடைக்கின்றன. ஒருபோதும் கொண்டைக்கடலையை ஊற வைத்த, வேகவைத்த நீரை உணவில் சேர்க்கக்கூடாது. அந்த நீரில் கொண்டைக்கடலையின் ஒவ்வாமையை உருவாக்கும் (antinutritinal substances) கரைந்திருக்கும்.  வேகவைப்பதால் கொண்டைக்கடலையின் சத்துக்கள் அதிகமாகின்றன. இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  நவராத்திரி விழாக்களின் கொலு பூஜைகளின் போது கொண்டைக்கடலை பிரசாதம்  கட்டாயம் இருக்கும்.

மேலதிகமாக இவற்றைக்குறிது அறிந்து கொள்ள;https://toriavey.com/the-history-science-and-uses-of-chickpeas/