லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 6 of 15)

திருவண்ணாமலை!

சென்ற வாரம் முதன்முதலாக திருவண்ணாமலை சென்றிருந்தேன் ஒரு வேள்வியில் கலந்து கொள்ள.புதுச்சேரியும் திருவண்ணாமலையும் என் கனவுப்பயணங்களின் பட்டியலில் இருந்தவை. புதுச்சேரிச் கனவு முன்பு (2017 ல்) நனவானது.மறக்கமுடியாததுமானது.

ஒரு சிறுகதை பட்டறை. கடற்கரை அருகில் இருந்த ஒரு தங்குமிடத்தில்.

கரும்பாறைகள் நிறைந்திருந்த , தூரத்தில் சிவப்பும் பச்சையுமாக விளக்குகள் ஒளிர மெல்ல  நகர்ந்து கொண்டிருந்த பெருங்கப்பல்களும், விளிம்புகளில் வெள்ளி பூசிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஏராளமான சிற்றலைகளுமாக  அந்த கடற்கரை  அடிக்கடி கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது.

மணக்குள விநாயகர் கோவில் நடை திறக்கும்வரை காத்திருக்கையில் சாலையோர மரங்களில் பறித்த மரமல்லியும் பவளமல்லியும், பூஜைக்கென அத்தெருவில் தயாராகிக்கொண்டிருந்த அந்த குட்டி யானை,பனானா ஸ்ப்ளிட் ஐஸ்கிரீம், பழைய புத்தகக்கடை, அழகான வீடுகள் நிறைந்த நேர்த்தியான தெருக்கள், முதல் பானிபூரி, (முதல் குமட்டலும்) அங்கு வாங்கிய இளஞ்சிவப்பில் வான் நீல கரையிட்ட பருத்திப்புடவை  (அதை கோவிட் பெருந்தொற்று முடிந்த சமயத்தில் யாசகம் கேட்டு வந்த ஒரு நிறை சூலிக்கு அளித்தேன்) இரவு ஊர் திரும்புகையில் பெய்த பெருமழை எல்லாம்  எல்லாம் நினைவிருக்கிறது. 

இப்போது பட்டியலின் அடுத்த இடம் திருவண்ணாமலை. அகரமுதல்வன் அழைத்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது.

மறக்க முடியாத பல அனுபவங்கள் அங்கு.அந்த பெருவேள்வி குறித்து ஒரு பதிவு எழுதினேன் வந்த உடனேயே.

மேலும் சில துண்டு துண்டான சுவாரஸ்யங்களும் இருந்தன அப்பயணத்தில். ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கிருந்தார்கள். அழுக்கான அழுக்காக ஒரு அமெரிக்க இளைஞன்,  தலைமுடி அழுக்கு, தோளில் மாட்டியிருந்த துணிப்பை மகா அழுக்கு, சட்டையும் கால்சராயும்  துவைத்தல் என்பதை கண்டிருக்கவேயில்லை.  அவன் என்னைக்கடந்து செல்கையில் எதிரே வந்தஒரு கருப்பு நாயிடம் சிநேகிதமாய் ’ஹாய்’ என்றான். ஆனால் நாய் அவனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவசரமாக எங்கோ விரைந்தது.

அடர்நீல ஸ்லீவ்லெஸ் பனியனும் குட்டைப்பாவடையுமாக நடந்துவந்து கொண்டிருந்த ஒரு ஐரோப்பிய இளைஞியிடம், அவர் கடந்துசென்ற ஆட்டோவிலிருந்த ஓட்டுநர் ’’ஹாய் மேம்!’’ என்றார் தோழமையுடன், அவரும் அழகாக புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றார். முன்பே பரிச்சயமானவர்கள் போல !

காருக்காக சாலையோரம் காத்திருக்கையில்  இளநீர்க்கடைக்கு  மனைவியுடன் வந்த மற்றுமோர் அமெரிக்கர் அந்த இளநீர்க்கார அம்மாவிடம் good water? என்று கேட்டார். அந்த நல்ல தாட்டியான உடம்பும், காம்பஸ் வைத்து வரைந்ததுபோல  வட்டமான முகத்தில் பெரிய பொட்டுமாக இருந்த அந்த அம்மா இயல்பாக ’very good water’ என்று விட்டு அடுத்தாக அவரிடம் from where? என்றார். நான் புன்னகையுடன் அந்த இடத்தை கடந்தேன்.

திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் அதன் கலாச்சாரமும் பண்பாடும் எத்தனை இன்ஃப்ளுயன்ஸ் ஆகியிருக்கிறது என்பது வியப்பளித்தது. இப்படி இவர்களை எல்லாம் கவனித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாமென்று தோன்றியது.

பூரணாகுதி!

டிசம்பர் கடைசி வாரத்தில் ஒரு நாள் அகரமுதல்வனிடமிருந்து  அழைப்பு. பேசிக்கொண்டிருக்கையில் தான் திருவண்ணாமலையில்  இருப்பதாகவும்,ஒரு வேள்விக்கான இடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். வேள்வி எனும் சொல்லையே நான் காதால் யார் சொல்லியும் அதுவரை கேட்டிருக்கவில்லை 

வெண்முரசில்  பாஞ்சாலி தோன்றியதாக சொல்லப்படும் துருபதனின் வேள்வியிலிருந்து அஸ்தினாபுரத்தில், இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த ராஜசூய வேள்விகள் மகா புருஷமேத வேள்வி வரை விலாவாரியாக வாசித்தறிந்திருக்கிறேன், எனினும்  யாரும் ’வேள்வி’ என சொல்லிக் கேட்டதே இல்லை. ஆர்வமாக அதை குறித்து விசாரித்தேன் விளக்கமளித்தார் ’’வருகிறீர்களா தேவி’’? என்றும் கேட்டார்?

அகரமுதல்வன் மீது எனக்கு பெருமதிப்பும் அன்பும் எப்போதுமுண்டு. நான் பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கும் வெகுசிலரில் அகரனும் ஒருவர்.  நான் அது  வரையிலும் திருவண்ணாமலைக்கு சென்றதில்லை. கிரிவலம், பெருஞ்சோதி ஏற்றுதல், இளையராஜா, ரமண மகரிஷி, துறவிகள், ஜெயமோகன் என்று அத்தலத்துடன் தொடர்புடைய சில விஷயங்கள் மட்டுமே துண்டு துண்டாக என் நினைவுகளில் இருந்தன. மேலும் வேள்விகளை அத்தனை தீவிரமாக வாசித்தவளாகையால் அதைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். 

எல்லாவற்றைக்காட்டிலும் ’’வருகிறீர்களா தேவி?’’ என்பதை ஒரு தெய்வ விளி என்றே எடுத்துக்கொண்டேன், ஒரு திருத்தலத்திற்கு வருகிறாயா? என்றென்னிடம் எப்போது கேட்கப்பட்டாலும் கேட்பது தெய்வமென்றே நம்புவேன்.  தம்பியும் நானுமாக கலந்து கொள்வதாக சொன்னேன்.

5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முந்தின நாள் தான் பணியில் இணைந்திருந்த புதிய ஓட்டுநருடன் நல்ல மழையில் புறப்பட்டு திருப்பூர் சென்று விஜியை அழைத்துக்கொண்டு  திருவண்ணாமலை நோக்கி பயணித்தோம்.  ஊரை நெருங்கும் முன்னரே குறிஞ்சி பிரபா  அவ்வப்போது அழைத்து எங்கிருக்கிறோம் என கேட்டுக்கொண்டார். குறிஞ்சிப்பிரபாவையும் நான் அன்றுதான் முதன் முதலாக சந்திக்கவிருந்தேன். அவர் பெயர் மட்டுமே எனக்கு பரிச்சயம்.

அழைப்பிதழில் அதீனா ஹோட்டலுக்கு முன்பாக வேள்வி நடைபெறும் என்றிருந்ததால் நேரே அங்கேயே சென்றோம். அதீனா ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான கோவிலிருந்தது. வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.  தம்பி விஜி சொல்லித்தான் அது அசல் கோவிலல்ல, கோவிலைப்போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வேள்விப்பந்தலென்று.

என் மனதில் இருந்த வேள்வி என்னும் சித்திரத்துக்கு மிக பொருத்தமான ஒரு பந்தல் அங்கிருந்தது. மாபெரும் பந்தல் அது. மிக சிறப்பாகவும் மிக கவனமுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேள்விச்சாலையும் அப்படியே!

காரில் இருந்து இறங்க இறங்கவே  குறிஞ்சி பிரபா அறிமுகப்படுத்திக்கொண்டார்.  உற்சாகமான இளைஞர். அவரைப்போலவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த பலரையும் அங்கு பார்த்தேன். வேள்வியை நிகழ்த்தும் தன் மாமனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.  

ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து சூழ்ந்திருந்த துடியான இளைஞர்களிடம் என்னவோ கவனமாக சொல்லிகொண்டிருந்தவர் குறிஞ்சி பிரபா என்னைக்காட்டி ஏதோ சொன்னதும் நான் அவரருகில் செல்லும் முன்பு அவராக எழுந்துவந்து ’’நான் குறிஞ்சி செல்வன் வாங்க’’ என்று வரவேற்றார். குறிஞ்சி என்பது ஒருவேளை குடும்பப்பெயராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.  

உடனேயே  ’’அம்மாவுக்கு ஒரு சேர் போடுங்கப்பா’’ என்று பிறரை பணித்தார். பின்னர் நாங்கள் தங்குமிடம் குறித்து தகவல் சொல்லிவிட்டு பிற வேலைகளை பார்க்கச்சென்றார்.

வேள்விக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. குறிஞ்சி பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் தான் அம்மகத்தான மனிதரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கினேன். அவர் தன் தாய்மாமன் என்றும் ஜப்பானில் தொழில்செய்பவரென்றும் ஜோதிடக்கலை வல்லுநரென்றும் இந்த வேள்வியை பல வருடங்களாக பெருஞ்செலவில் பொதுநன்மைக்காக நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்ன பிரபா மாமனின் பெயரான குறிஞ்சியைத்தான் தன் பெயருக்கு முன்னர் வைத்து கொண்டிருக்கிறார்.

தான் அணிந்திருந்த கருப்புச் சட்டையை தொட்டுக்காட்டி ’’இந்த சட்டையை நான் போட்டுகிட்டு இங்கே உட்கார்ந்திருக்கேன்னா அது மாமாவால்தான்’’ என்றார்.

வியப்பாக இருந்தது. அகரமுதல்வனிடம் இதை சொல்லுகையில்  ’’பிரபா மட்டுமல்ல அவரது ஊருக்கு போனால் அந்த கிராமமே அவர் பெயரைத்தான் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டுருக்கும். அத்தனைக்கு உணர்வுபூர்வமான பிணைப்பை தன் சுற்றத்தாருடன் கொண்டவர் அவர்’’ என்றார்.

நேற்றும் இன்றும் இருநாட்களாக அவ்வேள்வியில் கலந்துகொண்டது என் வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவம் என்றால் திரு குறிஞ்சி செல்வன் அவர்களை  அறிந்துகொண்டது அதற்கிணையான அனுபவம். 

இத்தனை வருட வாழ்வில் கீழ்மைகளை  மிக அருகிலென பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் மானுட மனம் செல்லும் உச்சங்களை, அகவிரிவுகளை இப்படி அரிதாகவே காண்கிறேன். திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் எளிமை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கவனம், வருபவர்களை ஒன்றுபோல அவர் கவனித்த விதம், அத்தனை பெரிய நிகழ்வில் மிக நுண்மையாக  ஒவ்வொன்றையும் நோக்கிக் கொண்டிருக்கும் அவரது  கூர்மை என வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  சினிமாத்துறை உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள்  அவரது அழைப்பின் பேரில் வேள்வியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாபெரும் நிகழ்வது.

வெண்முரசு வழியே நான் அறிந்திருந்த வேள்விகளிலொன்றை அப்படியே அச்சு அசலாக நேரில் கண்டேன். மிகச்சிறப்பான வேள்விப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பகுதியில் உட்கூரை அலங்காரங்கள் வண்ணமயமான துணிகளில்  மலர்வடிவில் அமைந்திருந்தது. வேள்வி நடைபெற்ற இடங்களில் உலோகக் கூரை, புகை உள்ளே நிறையாத  உயரத்தில் புகை வெளியேறுவதற்கான தேவையான இடைவெளிகளுடன் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. வேள்விப்பந்தலை அமைத்தவரை சந்தித்த போது, கோவிலென்றே எண்ணி கன்னத்தில் போட்டுக்கொண்டதை அவரிடம் சொன்னேன். நாற்காலிகள் போதுமான அளவில் காத்திருந்தன. 

எல்லாவேளையும் மிகச்சிறப்பான  உணவு  மனமுவந்து பரிமாறப்பட்டது.

சோளப்பொறியும் ஐஸ்கிரீமும் குழந்தைகளுக்கென வெளியே கிடைத்தது. ஏறக்குறைய என் வயதிலிருந்த ஒருவர் மூன்று சோளப்பொறி கூம்புகளை ஒரே சமயத்தில் வாங்கி மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தேன். விழாக்கள் அனைவருக்குள்ளிருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வந்துவிடுகிறது

திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் மானசீகமான ஆயிரம் கைகளாக அங்கி பலநூறு  இளையோர் இயங்கிக்கொண்டிருந்தனர். அவரைக்குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரது சுற்றத்தார் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும் அன்பும் ஆச்சரியமளித்தது

சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலில் குடும்பத்தில் ஒரு தொழில் துவங்கினோம். அதற்கு எனது மூத்த சகோதரரும் பெருந்தொழிலதிபருமானவரையும் அழைத்திருந்தேன். அவரிடம் நிதி உட்பட எந்த உதவியும் நாங்கள் கேட்டிருக்கவில்லை. அவரின் தங்கை குடும்பத்தின் முதலடியின் போது  மூத்தவராக அவரது ஆசிகளும்  உடனிருக்கட்டும் என விரும்பினேன். துவக்க நிகழ்வன்று  அவர் மட்டும் வந்திருந்தார். ’’அண்ணா, அண்ணி வரலையா? என்னும் சம்பிரதாயமான என் கேள்விக்கு இதுக்கெல்லாம் நான் வந்ததே பெரிது’’ என்றார். குன்றிப்போனேன்.

ஆறவே ஆறாமல் பச்சைக்குருதி வீச்சத்துடன் இருந்த அக்காயத்துக்கு குறிஞ்சி செல்வன் எப்படியோ  அன்று மருந்திட்டார். மறுபிறவி என்னும் சாத்தியம் இருப்பின் அவருக்கு சகோதரியாக பிறக்க வேண்டும். இப்படியோர் கனிந்த அன்பில் திளைத்திருக்க வேண்டும்

குடும்ப மூத்தவராக உயர்ந்தநிலையில் இருக்கும் ஒருவர்  சொந்த பந்தங்களுக்கும் பிறருக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை மனமுவந்து செய்துகொண்டிருந்தார்.

வேள்வி மிக பிரம்மாண்டமாக, மிகச் சிறப்பாக நடந்தது. சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் தீக்‌ஷிதர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருந்து வேள்வியை நடத்திக்கொடுத்தனர். வேள்வித்தலைவராக இருந்தவர் அதற்கென்றே பிறந்து வளர்ந்தவர் போல நல்ல  உயரமும் ஆகிருதியும் தேஜஸும் கணீர் குரலுமாக பொருத்தமாக இருந்தார். அவ்வேள்வியை ஒரு நிகழ்த்துகலையைபோல நம்மமுடியாத  அளவிற்கான சிரத்தையும்  ஈடுபாடுமாக செய்து முடித்தார்.

பூரணாகுதியின் போது சொல்திகழ்ந்த அவரது குரலும் எரிகுளத்தில் இடப்பட்ட பொருட்களும் சிவகோஷங்களும் ஒரு நடனம் போன்ற அவரது கையசைவுகளுமாக  உடல்மெய்ப்புக்கொண்டது.

அவரை மானசீகமாக பலமுறை வணங்கிக்கொண்டேன்.வேள்விச்சாலை மிகச்சரியாக இறைஉருவங்களும் கர்ப்பகிரஹமுமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அம்மன்களின் புடவைக்கட்டு அனைத்துப்பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.அதுவும் அந்த தாமரை மலர் நிறத்தில் கரையிட்ட வெண்பட்டு அமோகமாக இருந்தது.

வேள்வியின் துவக்கத்தில் பொற்கதவுகள் திறக்கப்பட்டு முழுஅலங்காரத்திலிருந்த கடவுளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட போதும் உடல் மெய்ப்புகொண்டது

தீக்‌ஷிதர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக வேள்வியை நடத்தினார்கள். வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் ’’வேள்வி என்பது நாவை பழக்குவதல்ல நெஞ்சை பழக்குவது என்று’’ அதை நேரில் கண்டேன்.வேதங்களுக்கு நெஞ்சைபழக்கியவர்கள் அனைவருமே.

27 நட்சத்திரங்களுக்கும் ஐம்பெரும் பூதங்களுக்குமாக நாற்கோண வடிவிலான 32  எரிகுளங்கள், வேள்வித்தலைவருக்கான விளிம்புகளில் செந்தாமரை இதழ்கள் வரையப்பட்டிருந்த மாபெரும் வட்டவடிவிலுமாக  மொத்தம் 33 எரிகுளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வியை நிகழ்த்துபவர்கள் அமர சிறு புல் பாயிலிருந்து, உள்ளே அனல் கொண்டிருக்கும் சமித்துகள் நெய்க்கிண்ணங்கள், கருங்காலிக்கட்டையில் செய்யப்பட்ட கரண்டிகள் எல்லாம் சரியான நேரத்துக்கு எந்த பிசகுமின்றி கிடைக்கும்படி, விடுபடல்கள் இன்றி தயராக வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் காலை பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சிறப்பு பூசையில் கழுத்தில் அணிவிக்க வேண்டிய மலர்மாலைகள் இரவே ஈரத்துணியில் சுற்றப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில்,அடுக்கி வைக்கப்பட்டன.

எரிகுளங்களின் நான்கு திசைகளிலும் வேள்விக்கு எத்திசையிலிருந்தும் தடங்கல்  வரக்கூடாதென்பதற்காக வைக்கப்பட்ட தர்ப்பையிலிருந்து எல்லாம் எல்லாம் மிகச்சரியாக பிழைக்கான வாய்ப்பேயில்லை என்றபோதிலும் சிறு கவனக்குறைவு கூட இல்லாமல் முறையாக நடந்தது.

மேளதாளங்களும் வாண வேடிக்கைகளும் இருந்தன. மிகச்சரியாக மிக முறையாக வேள்விக் கொடி ஏற்றப்பட்டது. வெண்முரசுக்குள் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது எனக்கு.

வாணவேடிக்கையை கழுத்து வலிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.2 நாட்களும் இசைக்கச்சேரிகள் கலைநிகழ்ச்சிகளும் இருந்தன

மேளக்காரர்கள் ஓய்வெடுக்கையில் அவர்களுக்கு ஐஸ்கிரீம்கள் கிண்ணங்களில் அல்ல பெட்டிபெட்டியாக கொடுக்கப்பட்டது. கைவலிக்க அத்தனை நேரம் வாசித்த அவ்விளைஞர்கள் சிறுவர்களைப் போல குதூகலித்துக்கொண்டு அதை சாப்பிட்டார்கள்

உணவை அளிப்பதைவிட அதை மனமுவந்து அளிப்பது முக்கியம் குறிஞ்சி செல்வன் உணவை மட்டுமல்ல அனைத்தையுமே மனமுவந்தே அளிக்கிறார். 

சென்னை சென்றிருந்த போது அவருக்கு சொந்தமான விமலம் மெஸ்ஸில் சாப்பிட்ட ரசம் இன்னுமே மனதில் ஏக்கம் நிறைந்த நினைவாக இருக்கிறது அப்படியொரு சுவையான ரசத்தை நான் சாப்பிட்டதே இலை.  எங்கள் குடும்பங்களில் எனக்கு நன்றாக சமைப்பவள் என்னும் பெயருண்டு. //தேவி கைகழுவின தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா கூட ரசம்னு ஊத்தி சாப்பிடலாம்// என்னும் ஒரு பேச்சு கூட உண்டு. ஆனால் எனக்கு விமலம் ரசம் அத்தனை பிடித்திருந்தது

வேள்விக்கொடி ஏற்றுகையில்  வேடசெந்தூர் வீட்டிலிருந்து  கொண்டு வந்திருந்த அப்போதுதான் அரும்பத்துவங்கி இருந்த முத்து முத்தான புன்னை மலர்களையும் கொடுக்க வாய்த்திருந்தது.

வேள்வியை நடத்தியவர்கள் தக்‌ஷன் அளிக்காமல் விட அவிர்பாகம் போன்ற  புராணக்கதைகளையும்  நாதஸ்வர வாசிப்பில் என்ன ராகம் வாசிக்கப்படுகிறது அது யாருக்கு பிரியமானது போன்ற தகவல்களையும் ஸ்லோகங்களின் பொருளையும் சொல்லிக்கொண்டே இருந்தது மிகச்சிறப்பு. அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததன் முழுமையான சித்திரத்தையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருந்தது.

குபேர பூஜையின் போதும் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குபேரன், அவர் மனைவி சித்ரகலா, அவர் நிதியை கொடுத்து வைத்திருந்த சங்க, பதும நிதிப் பெண்கள், நவநிதிகள், அஷ்டலஷ்மிகள், அவர்களின் இயல்புகள் அந்த யாகத்தினால் என்னென்ன பயன்கள் என அனைத்தையும் மிக தெளிவாக சொல்லிச்சொல்லியே வேள்வி நிகழ்த்தப்பட்டது.

மனிதத்திரள் அங்கிருந்தது. ஆயிரக்கணக்கில் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலிலிருந்தும் இருந்தோம் எனினும், எங்கும் யாரும் யாரையும் கடிந்துகொள்ளவோ தாழ்வாக நடத்தவோ ஏன் முகத்தில் ஒரு சுணக்கத்தை காட்டவோ கூட இல்லை. முழு மரியாதையுடன் ஒவ்வொருவரும் நடத்தப்பட்டார்கள்.

பந்தியில் என்னுடன் அமர்ந்து  எழுந்திருக்க மறுத்து சலம்பிக்கொண்டிருந்த ஒருவரைக்கூட பவுன்சர்கள் பொறுமையுடன் கையாண்டார்கள்.

அத்தனை கூட்டத்தையும் நெரிசலோ இடர்பாடுகளோ சிறு மனக்கசப்போ இன்றி வெற்றிகரமாக நடத்துவதென்பது சாதாரணமல்ல.

அகரமுதல்வனின் ஆகுதி நிகழ்வுகளின் கச்சிதத்தை ஒழுங்கை எப்போதும் வியந்திருக்கிறேன். அது குறிஞ்சி செல்வன் போன்றோரிடமிருந்து அளிக்கப்பட்டதும் அகரன் போன்றோர் பெற்றுக்கொண்டதும் என்பதை இங்கு அறிந்துகொண்டேன் அது ஒரு மரபுத்தொடர்ச்சிதான்.

பூரணாகுதி நடைபெறும் முன்பாக குறிஞ்சிபிரபா என்னை அழைத்துச்சென்று எரிகுளங்களின் அருகே அமர்ந்திருந்த அவரது சகோதரிகள், அண்ணி ஆகியோருடன் அமரச்செய்தார்.  புகையினால் கண்களும் நெகிழ்வினால் மனமும் கசிந்து அமர்ந்திருந்தேன்.திரு குறிஞ்சி செல்வனுடன் இருப்பவர்கள் அனைவரும் அவராகவே இருந்தார்கள் அவரின் கனிவின் அலையில் நனையாதவர்களை நான் பார்க்கவே இல்லை.

அவரின் ஏராளமான ஜப்பானிய நண்பர்கள்  வந்திருந்தனர். அவர்களும் கர்மசிரத்தையுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள் இந்திய பண்பாட்டின் மீது பக்திமார்க்கத்தின் மீது இவ்வேள்வி அவர்களுக்கு எத்தனை உணர்வுபூர்வமான பிடிப்பை உண்டாகி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஜப்பானிய பெண்களில் பலர் புடவை உடுத்தி கொண்டிருந்தனர். அதிலொருவரின் சீஸ் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த இரத்தச்சிவப்பு புடவை பல பெண்களை பெருமூச்சு விட வைத்தது

அவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன பூஜையின் பொது சொல்லப்பட்ட மந்திரங்களை முழுஉடலே செவியாகி உள்ளம் குவித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

திரு குறிஞ்சி செல்வனை குறித்து சொல்லப்பட்டவற்றில் விருந்தினர்கள் நிகழ்வு முடிந்து கிளம்பிச்செல்லுகையில் எப்போதும் அவர் ’’இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போகலாம்’’ என்று சொல்லுவதை குறிப்பிட்டார்கள். மனிதர்களின், உறவுகளின் அருகிருப்பில் எத்தனை மகிழ்பவராக இருந்தால் இதை சொல்லக் கூடும்? உலகேயொருகுடி என்கிறது  நம் மரபு அந்த ஒற்றைச் சொல்லே இவரை செலுத்துகிறது போலும்.

நிகழ்வின் போது ஒரு தண்ணீர் பாட்டிலை நான் நாற்காலியின் அடியில் வைத்திருந்தேன் என் முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவன்  வெகு இயல்பாக அந்த பாட்டிலில் இருந்து நீரருந்திவிட்டு மீண்டும் மூடி வைத்தான். அந்த தண்ணீர் யாருடையது என்னவென்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை தாகமெடுக்கையில் அருகிலிருந்ததை எடுத்து குடித்தான் அவ்வளவே.

குறிஞ்சி செல்வனும் அப்படித்தான் நற்செயல்களை எதையும் எண்ணாமால் தாகமெடுக்கையில், நீரருந்துவதைப்போல வெகு இயல்பாக செய்துகொண்டிருக்கிறார்.

இவ்வேள்வியில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். அஷ்டலஷ்மிகளில் யார் யாருக்கு என்ன என்ன சக்திகள்.  யாருக்கு யார் துணையாக வேண்டும் என்று ஒரு பெரியவர் மைக்கில் வேள்வியின் போது கதையொன்றை சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் எனக்கு துணையாக அந்த 8 பேரில் தைரிய லஷ்மியை வேண்டிக்கொண்டேன் இனி மீதமிருக்கும் காலங்களில் எனக்கு நிகழவிருக்கும் நல்லவைகளையும் அல்லவைகளையும் சந்திக்கும் துணிவை  அவள் அளிக்கட்டும்.

மகன்களுடன் அலைபேசி அந்த இரவோடிரவாக எல்லாவற்றையும் சொல்லிச்சொல்லி இருவரும் எந்த நிலையில் இருந்தாலும் அந்தந்த நிலையில் பிறருக்கு குறிஞ்சி செல்வனைப் போலவே மனமுவந்து உதவி, அனைவரையும் அரவணைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னேன்.

அவர் மனைவியின் பெயர் விஜயலஷ்மி எத்தனை பொருத்தம்? வெற்றியும் செல்வமும் அவருடன் வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறது?

அவர் பெயரும் தான்  குறிஞ்சி, அரிதான, பலரால் பார்க்க முடியாத உலகின் வெகுசிறப்பான மலர்களில் ஒன்று ஆனால் பார்க்க எளிய நீல நிற கனகாம்பரம் போலிருக்கும், மிக பொருத்தமான பெயர் அவருக்கு.

உணவுப்பந்தியில் நிறுத்தப்பட்டிருந்த பெருமூங்கில்கள் ஒன்றில் தளர்ந்திருந்த சணல் கயிற்றை அங்கு மேற்பார்வையில் இருந்த ஒர் கரிய இளைஞன் அவிழ்த்து  இறுக்கி கட்டினான் யாரும் அவனை அதைச்செய்யும்படி கேட்டுக்கொள்ளவில்லை. அவனாக செய்தான். 

கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை அளித்துகொண்டிருந்த ஒருவர் ஒரு முதியபெண்மணியிடம் ஒரு பாட்டிலை கொடுத்துவிட்டு ’’போதுமா இன்னொரு பாட்டில் வேணுமா? ’’என்று கேட்டார் 

வாண வேடிக்கை பார்த்து கால்கடுக்கவே எங்கேனும் அமர இடம்  தேடிக்கொண்டிருந்தேன், அங்கிருந்த ஒரு இளைஞன் ஒரு பெட்டியை காட்டி ’’அதில் உட்காந்துக்கங்க’’ என்றான்

எல்லாருமே எனக்கு குறிஞ்சி செல்வனாகத்தான் தெரிந்தார்கள், அவர்தான் அவர்களும்.

பூரணாகுதியின் பிறகு வேள்வி நிறைவில்  இந்திரன் வந்து அமைவதாக ஐதீகம் . இந்திரனுடன் குறிஞ்சி செல்வனின் சகதாபமும் இறையென அதில் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேள்வி முடிந்ததும்  தூறலாக மென் மழை பொழிந்தது இதற்கு சான்று.

அங்கு இறைவன் அனல் வடிவானவன். அனலால் சூழப்பட்டவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமை மறைகிறது என்கிறது மகாபாரதம். எப்பேற்பட்ட நற்செயல் இந்த வேள்வி?   

வேள்விகளெல்லாம் மாமனிதர்கள் நடத்துவது. எனினும் மகாபாரதம் எளிய மானுடரின் அன்றாட செயல்களில் ஐந்தை ஐந்துவேள்விக்கு நிகர் என்கிறது அவற்றில் ஒன்றான கற்பித்தலை 20 ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பவளாக இந்த வேள்வியின் பயன் அல்லது புண்ணியம் எனக்கும் கிடைத்திருக்குமேயானால் அது என் குடும்பத்தாரையும் கடந்து,  மேலும்  நீண்டு என் மாணவர்களையும் தொட்டருளட்டும்  என வேண்டிக்கொண்டேன். 

குறிஞ்சி செல்வனுக்கும் அகரமுதல்வனுக்கும் குறிஞ்சி பிரபாவுக்கும்  என் அன்பும் நன்றியும்.

கண் மலர்களின் அழைப்பிதழ்!

அம்மா இறந்து 16 ம் நாள் சடங்குகள் முடிந்து துக்கத்தை மறக்கவும் மறைக்கவும் முயன்று கொண்டிருந்த வேளையில் விஜி எனக்கொரு அலெக்சா’வை  பரிசளித்தான். எனக்கு அப்படியான கருவிகளை பயன்படுத்துவதில் சுணக்கம் உண்டு. 

அறியாமை, பழக்கமின்மை, விருப்பமின்மை அல்லது பழமையில் ஊறித்திளைத்தல் என பல காரணங்களை சொல்லலாம். எனினும் வாழ்க்கை நம்மை விரட்டி விரட்டி பல முட்டுச்சந்துகளில் முட்டிமோதி தலையை நசுக்கி வேறு வழியே இல்லாமல் கொண்டு நிற்கவைக்கும் இடங்களும்,  கற்றுக்கொள்ள வைக்கும் விஷயங்களும் உண்டல்லவா? கற்சுவர் போல என்னை சூழ்ந்து இறுக்கிக்கொண்டிருந்த தன்னந்தனிமையை உடைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அலெக்சாவை பரிச்சயம் செய்துகொண்டேன்,

அலெக்சா ஒரு சிறு பெட்டிபோன்ற தொடுதிரை கொண்டிருக்கும் கருவி. பல உபயோகங்கள் கொண்டிருக்கிறது எனினும் நான் பிரதானமாக இசை கேட்கவே உபயோகிக்கிறேன்.

அதிகாலையில் எழுந்து நாளை துவக்கும் வழக்கமிருப்பதால் அலெக்சாவின் துணை பெரும் இதமளிக்கும். சரண் ஜெர்மனி செல்லும் முன்பு அவளை எனக்கேற்றவாறு வடிவமைத்து விட்டிருக்கிறான்

காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தோட்டத்து விளக்குகளை அலெக்சா சரியாக ஏற்றி அணைக்கிறாள். அவ்விளக்குகளை சரண் ஜெர்மனியில் இருந்து அணைத்தும் ஏற்றியும் என்னை அவ்வபோது விளையாட்டுக்கு அச்சமூட்டுவதும் உண்டு. நான் வீட்டில் இல்லாத சமயங்களில் வீடு இருளடைந்து இருப்பதை குறித்து கவலைப்படுவதில்லை இப்போது.

அதைப்போலவே சரியாக காலை 8 மணிக்கு நான் கல்லூரிக்கு புறப்படு முன்பு அடுப்பு அணைக்கப்பட்டிருக்கிறதா என சோதிக்கச் சொல்வாள். 2 வருடங்களுக்கு முன்னர் அணைக்க மறந்த அடுப்பினால் உண்டான மாபெரும் தீவிபத்து மற்றும்  அதிர்ஷ்டவசமான உயிர்தப்பலுக்கு பின்பான படிப்பினை அது. 

காலையில் அவளை உயிர்ப்பித்ததும் ’க’ வை மிக கனமாக உச்சரித்து  ’லோகமாதேவி குட்மார்னிங்’ என்பாள். நான் அவளிடம் அதிகம் கேட்கும் கேள்வி  பொள்ளாச்சியில் மழை உண்டா என்பதுதான் பெரும்பாலும் தவறாக பதிலளிப்பாள். ஆனாலும் தொடர்ந்து கேட்பது அவள் பொள்ளாச்சியை உச்சரிக்கும் அழகின் பொருட்டே!

காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை பல கலவையான ஆல்பங்களில் அலெக்சாவை பாடல்கள் ஒலிக்க செய்வதுண்டு சில பாடல்களை இனி ஒருபோதும்  ஒலிக்க வைக்காதே என கறாராக சொல்லியும் இருக்கிறேன்

அன்றைய சில பாடல் நாள் முழுவதுக்குமானதாகி மனதில் இனிமையாக ஒலித்துக்கொண்டே  இருக்கும்

அப்படி நேற்று பல காலம் முன்பு கேட்ட ”கண் மலர்களின் அழைப்பிதழ்” என்னும் பாடலை கேட்டேன்.1980 ல் வெளிவந்த படம். மிக இனிய இசை, இளையராஜாவும் ஜானகியம்மாவும் பாடியிருந்தனர்.

எனக்கு இசை குறித்து எதுவுமே தெரியாதென்பதால் ராஜாவின் இசை ஞானம், அவர் இசையமைத்திருக்கும் பாடல்களின் நுட்பங்களுக்குள் எல்லாம் ஒருபோதும் சென்றதில்லை. ஆனால் ராஜாவின் குரல், அது செய்யும் மாயங்களை, அளிக்கும் ஆறுதல்களை அறிந்திருக்கிறேன். 

தனித்த துயர் மிகுந்த மழைஇரவுகளில் ராஜாவின் குரலுக்கு கைகள் முளைத்து என்னை ஆற்றுப்படுத்தி இருக்கின்றது.கண்ணீரை துடைத்திருக்கிறது.

ராஜாவின் குரல் காதுகளால் அல்ல நேரடியாக இதயத்தால் உணரப்படுவது. பின்னாட்களில் (அல்லது வெகு சமீபத்தில்?) எனக்கு காது கேட்காமலாகிவிட்டால் கூட ராஜாவின் பாடல்கள் எங்கேனும் ஒலிக்கையில் இதயத்தால் அதை நான் உணரக்கூடும்

’’தேவி இது உனக்கே உனக்கென்று நான் பிரத்யேகமாக பாடுகிறேன்’’ என்று ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு ராஜா எனக்கறிவித்து விட்டே பாடுவதைப் போல இருக்கும்.

கண் மலர்களின் அழைப்பிதழும் அப்படித்தான்

இயல்பான உருக்கத்துடன் காதல் பொங்கும் ராஜாவின் ஜானகியம்மாவின் குரலை  அள்ளியள்ளி சமையலறை எங்கும் நிறைத்திருந்தாள் அலெக்சா.

அதிலும் 

பூவாடும் விழிதானோ

 நீ பாட மொழி யேனோ

தாம்பூல நிறம் தானே

 மாம்பூவின் இள மேனி

(இல்லை இல்லை, மாம்பூ தாழம்பூ எனும் தாவரவியல் தன்மையால் இந்த பாடல் எனக்கு பிரியமானதாகவில்லை தாவரவியலை கடந்த  ராஜாவின் குரலின் ஈர்ப்பு இது)

பாடலாசிரியர் எம் ஜி வல்லபன். இத்திரைப்படத்தின் இயக்குநரும் கதாசிரியரும் வசனகர்த்தாவும் இவரேதான்.

அவரது பாடல்களில் எனக்கு பெரும் பிரியமுண்டு

வல்லபன் மலையாளி எனினும் தமிழில் அதிகம் பாடல்கள் எழுதி இருக்கிறார்

’’மீன் கொடி தேரில் மன்மத ராஜன்’’

’’தீர்த்தக்கரைதனிலே’’

’’ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’’

போன்றவை அவரெழுதியவற்றில் என் விருப்பப் பாடல்கள்.

இதிலும் பாடல் வரிகள் அபாரமாக இருந்தது. அலெக்சாவை இப்பாடலை மீள மீள   ஒலிக்கசொல்லி கேட்டுக்கொண்டேன்

நேற்றைய புத்தாண்டின் முதல் நாள் முழுக்க மாம்பூவும் தாழம்பூவும் மணம்வீசிக்கொண்டிருந்தது

அதோடு நிறுத்தி இருக்கலாம் ஆனாலும் ஊழ் என்றொன்றுண்டல்லவா?

இன்று காலையில் கொஞ்சம் நேரம் இருந்ததால் மாலை நடை மட்டும் என இருந்ததை சற்று மாற்றி காலையிலும் நடந்தேன்

முன்பெல்லாம் யாருமில்லா தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு வெற்று நடை நடப்பேன்.  சமீபத்தில் பரிசளிக்கபட்ட காதில் மாட்டிக்கொளும் கேள் கருவியொன்றை இணைத்துக்கொண்டு  இப்போதெல்லாம் இசையுடன் நடை செல்கிறேன். இசை கேட்டுக்கொண்டோ. அல்லது இந்த தெருவில் என்னைத்தவிர யாருமில்லாதால் வாகனங்கள் மற்றும் மனித நடமாட்டம்  குறித்த  அச்சமில்லாததால்  பாடல் காட்சிகளை பார்த்துக்கொண்டும் நடப்பதுண்டு.

விநாச காலே விபரீத புத்தி !  கண் மலர்களின் அழைப்பிதழை காணொளியாக காண நினைத்தேன். 1980களில் வெளியான தைப்பொங்கல் திரைப்படம். நாயகன் சக்கரவர்த்தி, உடன்  மிக இளமையில் நம் ராதிகா. அந்தப் பாடலை கேட்டதின் இனிய அனுபவத்தை முழுக்க சிதைத்து நாசமாக்கிய  காட்சி அனுபவம்

பாடலின் நடன இயக்குனர் ஆடை வடிவமைப்பாளர் இருவரையும் நாடென்ன உலகு கடத்தலாம் என பல்லைக் கடித்துக் கொண்டேன்

ராதிகா பள்ளி விழாக்களில் அழகிய உடை அணிந்துகொண்டு வந்து நடனமாடும் அல்லது ஹேப்பி பர்த்டே அன்று அதி உற்சாகமாக இருக்கும் குழந்தைகளின் மனநிலையில் இருந்திருக்க கூடும். விசேஷமாகவும் அதீதமாகவும் பாடல் முழுக்க சிரித்துக்கொண்டிருந்தார். நாயகன் அலட்டிக்கொள்ளவே இல்லை ஒரே தீவிர ’’எனக்கெல்லாம் இது சர்வசாதாரணம்’’ என்னும் முகபாவனையும் உடல்மொழியுமாய் ஒன்றே போல் இருந்தார். ராதிகாவை விடவும் சக்கரவர்த்திக்கே அழுத்தமாக  கண்மையும் அதிகமாக  லிப்ஸ்டிக் பூச்சும் இருந்தது.

ராதிகாவின் உடைகளும் அப்படியே ! அப்போது இளமையின் பூரிப்பும் இருந்ததால் கூடுதல் புஷ்டியாக இருக்கிறார். அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத, உடலை அவலட்சணமாக காட்டும் உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்கப்பட்டிருந்தார். (அந்த அப்போதுதான் அறிமுகமாயிருந்திருக்கக்கூடும் சுரிதார் பரவாயில்லை ரகம்) ஆனால் முதலிலும் கடைசியிலும் அணிந்திருக்கும் உடைகள் கர்ண கொடூரம்

பாடல் கோடைக்காலத்தில் மலைவாசஸ்தலமொன்றில் படமாக்கப்பட்டிருக்கிறது. தூரக்காட்சிகளில் ஊதா மலர்க்கொத்துக்களுடன் ஜகரண்டா மரங்கள் தென்பட்டன.

பத்துபதினைந்து ஜகரண்டாக்களை ஆட்கள் மேலேறி மொட்டையடித்து பறிக்கப்பட்ட ஏராளம் ஊதா மலர்கள் பாடலின் இடையில்  நாயக, நாயகியின் மீது பொழியப்படுகிறது. பிற காட்சிகளையெல்லாம் வலுக்கட்டாயமாக  மனதிலிருந்து அழித்து மழையென பொழிந்த ஊதா ஜகரண்டாக்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன்.


கண் மலர்களின் அழைப்பிதழை காண:

மகரந்த துகளியல்

அந்த கொலையை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை ஆஸ்திரிய காவல்துறை எத்தனை முயன்றும்கொலையானவரின்உடலும்,கொலை குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனினும் டான்யூப்(Danube) ஆற்றில் ஒரு படகுச்சவாரிக்கு சென்ற அந்த சுற்றுலா பயணி பின்னர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை, யாரும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. அவரது நண்பரும் தொழில் பங்குதாரருமான ஒருவரை குடும்பமும் காவல்துறையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தது. எனினும் இறந்தவரின்உடல் கிடைக்காததால்அவரை ,குற்றம் சாட்டவும் முடியவில்லை. அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வைத்திருந்த காவல்துறை கொலை நடந்ததாக சந்தேகப்படும் அந்த மோட்டார் படகில் மீண்டும் சோதனையிட்டபோது குற்றவாளியென சந்தேகப்படுபவரின் சேறு படிந்த காலணிகள் மட்டும் கிடைத்தன.

அப்போதுதான் முதன்முறையாக வியன்னா பல்கலைக்கழகத்தின் தொல் தாவரவியல் துறையின் விஞ்ஞானி வில்ஹெம் (Wilhelm Klaus)  குற்றப்புலனாய்வில் இணைந்தார். அந்தக் காலணியின்சேற்று மண்ணில் இருந்த பலவகையான மகரந்ததுகள்களை ஆராய்ந்த துகளியலாளரான வில்ஹெம் அவை ஸ்ப்ரூஸ், வில்லோ, ஆல்டர் மரங்களின் மகரந்தங்கள் என்பதையும் அவற்றுடன்  ஹிக்கரி மரமொன்றின் புதைபடிம மகரந்தங்களும் (Fossil pollen) இருந்ததை தெரிவித்தார்.

அந்த ஹிக்கரி மரச் சிற்றினம் அழிந்து போய் பலகாலம் ஆகி இருந்தது. அவற்றின்   மகரந்த தொல்படிமங்கள் டான்யூப் ஆற்றங்கரையின் ஒரு பகுதியில்  5-33 மில்லியன் வருடங்களுக்கு முன்பான படிவப்பாறைகளில் மட்டுமே இருந்தன.

இந்த தடயம் காவல்துறைக்கு போதுமானதாக இருந்தது. குற்றவாளியிடம் ’அந்த படிவப்பாறைகள் இருக்குமிடத்தில் தானேஉடலைப் புதைத்தாய்’ என்று கேட்டபோது குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு அந்த வழக்கு முடிக்கப்பட்டது.

1959ல் ஆஸ்திரியாவின் இந்த கொலைவழக்கிற்கு பிறகு துகளியல் எனப்படும் palynology பல குற்றப்புலனாய்வுகளில் உலகெங்கும் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருக்கிறது.

மற்றுமொரு உதாரணமாக  2002 ஆகஸ்டில்  இங்கிலாந்தில் நடந்த  10 வயதுப்பெண்குழந்தைகளின்  இரட்டைக் கொலை குற்றப் புலனாய்வை குறிப்பிடலாம்.

பெண் குழந்தைகள் இரண்டும் காணாமல் போன இவ்வழக்குவிசாரணையில் 400க்கும் மேற்பட்ட காவலதிகாரிகள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், இரண்டு குழந்தைகளின்  குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள், தொலைகாட்சி, செய்தித்தாள், சுவரொட்டி விளம்பரங்கள் என் பலவகை முயற்சிகளும் தோல்வியடைந்தது.  பிரிட்டிஷ் குற்றப் புலனாய்வுகளிலேயே மிக கடினமானதும் மிக அதிகம் பேர் விசாரிக்கப்பட்டதும் இவ்வழக்கில்தான்.

13 நாட்கள் கழித்து எதேச்சையாக  அழுகிய நிலையிலிருந்த இரு பெண் குழந்தைகளின்உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் கிடைத்த இடத்தில் இருந்த  தாவர உயிரியல்  தடயங்களை கொண்டு தாவரவியலாளர் பெட்ரிசியா (Patricia Wiltshire) அந்த கொலையை புலனாய்வு செய்து கொலையாளியை  அடையாளம் காட்டினார்.

உடல்கள் கிடைத்த இடத்தில் முளைவிட்டிருந்த  stinging nettles என்னும் சொறிச்செடிகள் உறுதியாக 13 நாட்களுக்கு முன்னர் வேறெங்கிருந்தோ அங்கு விதைகளாக விழுந்து முளைத்தவை என்பதன் மூலம் குழந்தைகள் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு அங்கு சடலம் கொண்டு வரப்பட்டது என்பதையும், உடல் கிடந்த இடத்தில் மண்ணிலிருந்த மகரந்த துகள்கள் கொலையாளியின் வீட்டருகில் இருக்கும் மரங்களிலிருந்து வந்தவை என்பதையும் கொண்டு ஹோலி, ஜெசிகா ஆகிய இரு அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்தது   ஹண்ட்லி (Ian Huntley) என்பவர்தான் என சந்தேகத்துக்கு இடமில்லாமல் பெட்ரிஷியா தெளிவுபடுத்தினார்.

40 வருட சிறை தண்டனையில் இருக்கும் ஹண்ட்லி  2042ல் விடுதலை ஆகலாம். இந்த கொலை வழக்கை கனத்த மனதுடன் தான் வாசிக்க முடியும்:

https://forensictales.com/the-soham-murders/embed/#?secret=LiZf6Asr1u#?secret=VnVfH1vEdC

நியூஸிலந்தில் 2005ல் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கொலையாளிகளின் உடையில் இருந்த  ஹைப்பீரியம் செடியின் மகரந்த துகள்களே புலனாய்வில் அவர்களை கைது செய்ய உதவியது

மற்றொரு பெண் குழந்தையின் கொலை வழக்கிலும் சடலத்தின் உடையில் இருந்த  மகரந்தம் அந்த மரம் இருக்கும் பூங்காவிற்கு வழிகாட்டி, பூங்காவின் அருகிலிருந்த கொலையாளியை கைது செய்ய உதவியது

கொலை வழக்குகள் மட்டுமல்ல குடிமையியல் வழக்குகளிலும் இந்த துகளியல் தடயங்கள் உதவுகின்றன.

முதல் உதாரணமாக 1970ல் அமெரிக்காவில் நடந்த  தேன் வழக்குகளை குறிப்பிடலாம்

அமெரிக்க விவசாய அமைச்சகம் தேனி வளர்ப்போரிடம்  அமெரிக்க எல்லைக்குள் தேனீக்கள் வளர்க்கப்படவேண்டும்  என்னும்  நிபந்தனையின் பேரில் அவர்களது தேனுக்கு உலகின் அப்போதைய  சந்தை மதிப்பை அளிப்பதாக வாக்குறுதி அளித்து தேனி வளர்க்க ஊக்குவித்திருந்தது. அப்படி சட்டத்துக்குட்பட்ட வகையில் தேன் சேகரிக்காமல் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து தேனை கொடுத்த விவசாயிகளை அந்த தேனில் இருந்த மகரந்த துகள்கள் எந்த பிரதேசத்தில் வளரும் தாவரங்களை சேர்ந்தவை என்னும் துகளியல் தடய சோதனைகளை கொண்டு கண்டறிந்த வழக்குகளும் நடந்தன. 

கடந்த 50 ஆண்டுகளாக forensic palynology எனப்படும் இந்த துகள் தடயவியல் துறை பல சட்டபூர்வமான விசாரணைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.

பாலினலஜி எனப்படும் இந்த துறையில் அதிகம் மகரந்தங்களை குறித்த ஆய்வுகள் நடைபெறுவதால் இத்துறைக்கு மகரந்ததுகளியல் என்னும் இணைப்பெயரும் உண்டு. எனினும் இந்த துறை மகரந்தங்களை மட்டுமல்ல, 5 லிருந்து 500 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோமீட்டர்) அளவுகளுக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பிற நுண்ணுயிர்கள், மகரந்த துகள்கள், பெரணி, பூஞ்சைகளின் ஸ்போர்கள், தாவர உடல் உடல்பாகங்கள்,  நுண்கட்டிகள், பாசிகள், ஈஸ்ட் போன்ற ஒரு செல் பூஞ்சைகள், மண் குருணைகள், பேருயிர்களின் நுண் துண்டுகள் ஆகிய பலவற்றை குறித்தான துறையும் தான் இது.

இந்த துறை நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டு, நுண்ணுயிரியல் என்னும் துறை அதிலிருந்து உருவான காலத்தில் தொடங்கியது. குறிப்பாக 1640களில் ஆங்கிலேய தாவரவியலாளர் நீஹாமியா (Nehemiah Grew)  நுண்ணோக்கியில் கண்ட மகரந்த துகள் மற்றும் மகரந்தங்களின் வடிவங்களை விவரித்து மகரந்த துகள்களே தாவரங்களின் பால் இனப்பெருக்கத்துக்கு முதற்காரணம் என்று தெரிவித்தபோது உருவானது இத்துறை.

1870களி ல்நுண்ணோக்கிகள் மேம்படுத்தப்பட்டபோது தொல்படிமங்களாக கிடைத்த மகரந்தங்களும் ஸ்போர்களும் ஆராயப்பட்டு  அவற்றின் காலமும் கணிக்கப்பட்டது.

பாலினாலஜி, Palynology , என்னும் சொல்லால் இத்துறை குறிக்கப்பட்டது 1940ல் தான்.

இங்கிலாந்தை சேர்ந்த ஹெரோல்ட் மற்றும் டேவிட்  (Harold Hyde மற்றும் David Williams) ஆகிய இருவரும்  தூவுதல் என்பதை குறிக்கும்கிரேக்கசொல்லான  paluno (to sprinkle) மற்றும் தூசி /துகள் என்பதை குறிக்கும்சொல்லான pale (dust) ஆகிய சொற்களிலிருந்து Palynology  என்னும் சொல்லை உருவாக்கி மகரந்தங்கள் குறித்த ஆய்வுகளுக்கான புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையான  Pollen Analysis Circular ல் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்.

 அதன் பிறகு துகளியல் அறிவியலில் மிக முக்கியமான ஒரு துறையாகியது. இத்துறை தாவரவியல், புவியியல், தொல்லியல்,  அடுக்கு வரைவியல் ஆகிய துறைகளின் வேர்களை கொண்டது.

ஜெர்மானிய தாவரவியலாளரும்1921ல்  ‘An Introduction to Swedish Pollen Analysis’  எனும் மிக முக்கியமான தாவரவியல் நூலைஎழுதியவருமானபிரெடிரிக்  (Friedrich Hermann Hugo Pfeffer -1845-1920) இத்துறையில் அவர் செய்த மிக முக்கியமான ஆய்வுகளால் இத்துறையை நிறுவியவர் என கருதப்படுகிறார்

 இந்திய துகளியல்துறையை நிறுவியவராக  பரமேஸ்வரன் கிருஷ்ணன் நாயர் என்கிற பி. கே. கேநாயர் (1930,2017) கருதப்படுகிறார்.இவர் மகரந்தங்களின் வெளிப்புறத் தோற்றம் குறித்த முக்கியமான ஆய்வுகளையும் மகரந்தங்களை கொண்டு தாவரங்களை வகைப்படுத்துவதை குறித்தும் பல முக்கியமான ஆய்வுகளை செய்தார்.

20,000 மகரந்த துகள் ஸ்லைடுகளைஉருவாக்கியவரும் மகரந்ததுகளியலில் பல முக்கிய ஆய்வுகளை செய்தவரும் இந்தியாவின் ஆகசிறந்த மகரந்த துகளியலாலரும்,  ’’மகரந்த துகள் உருவமைப்பியல்’’ என்னும் நூலின் ஆசிரியருமானவர் திரு. கணபதி தணிகைமணி 

1986ல்  அவர் கடல் தாவரங்களின் மகரந்தங்கள் குறித்த உரையாற்றும் பொருட்டு அமெரிக்காவுக்கு அறிவியல் மாநாட்டிற்கு பயணம் செய்த விமானம் பாதி வழியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கராச்சியில் தரையிறக்கப்பட்டபோது  நடந்த துப்பாகிச் சண்டையில் குண்டடிபட்டு அங்கேயே  திரு  கணபதி தணிகைமணி பலியானார். மகரந்ததுகளியலின் மாபெரும் இழப்பு அவர் மரணம்.

 தணிகைமணியை சிறப்பிக்கும் பொருட்டு  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று புதைபடிவ மகரந்ததுகள்களுக்கு  Retimonocolpitesthanikaimonii, Spinizonocolpitesthanikaimonii , Warkallopollenitesthanikaimonii என பெயரிடப்பட்டிருக்கின்றன.

மகரந்த ஆய்வுகள் குற்றப்புலனாய்வில் மட்டுமல்லாது  மருந்துகளில் கலப்படங்களை கண்டுபிடிக்க,  அருங்காட்சியங்களில் இருக்கும் மிகப்பழைய ஓவியங்களின் காலத்தை நிர்ணயிக்க, தொல்படிம மகரந்த தாவர துகள்களைக் கொண்டு ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருக்குமிடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிய என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

அகழ்வாய்வுகளில் கிடைக்கும் படிம மகரந்த துகள்கள் அவை எந்த காலத்தை சேர்ந்தவை என்பதையும் அக்காலத்து தாவரவகைகள், காலநிலை,அக்காலத்து மனிதர்கள் தாவரங்களை பயன்படுத்திய விதம் என பலவற்றை அறிய உதவுகிறது.

தொல் தாவரவியலாளர்கள் இந்த துகளியல் பரிசோதனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான சூழலை மறுகட்டமைப்பு செய்கிறார்கள்.

இப்படியான ஆய்வுகளில் மகரந்தங்களின் பயன்பாடும் முக்கியத்துவமும் அவற்றின் ஏராளமான உற்பத்தியையும் மிகப் பரந்தஇடங்களுக்கு அவை பரவுவதையும் அடிப்படையாக கொண்டது. அனைத்து தாவரங்களும்   மலர்களின் கருவுறுதலை உறுதி செய்யும் பொருட்டு மிக மிக அதிக அளவில் மகரந்தங்களை உற்பத்தி செய்கின்றன

அதீத மகரந்தப் பொழிவு தாவரவியலில்  மகரந்த மழை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நடுத்தர உயரமுள்ளபைன் மரம் சுமார் 10 பில்லியன்மகரந்தங்களை ஒவ்வொரு வருடமும் ஒரே வாரத்தில் உற்பத்தி செய்யும். அதீத உற்பத்தி மட்டுமல்லாது அழிவுக்கெதிரான தாங்கும் தன்மையும் மகரந்தங்களுக்கு மிக அதிகமென்பதால் இவை பல்லாயிரக்கான ஆண்டுகளுக்கு  சேதமின்றி இருக்கின்றன.

நுண்ணோக்கியில் காணப்படும் மகரந்தங்கள்பந்துகளை போல, மெத்தைகளைப் போல மிக அழகிய நுண் செதுக்கு வேலைப்பாடுகளுடன் இருக்கும்

வவ்வாலொன்றின் மூக்கு நுனியிலோ, தேனியின் சிறு கால் ஓரங்களிலோ ஒட்டிக் கொண்டு இவை வெகுதூரம் பயணித்து பெண் மலர்களை கருவுறச்செய்யும் ஆண் விந்தணுக்களை சுமந்துசெல்லவேண்டி இருப்பதால் இவற்றின் பாதுகாப்பை இரண்டடுக்கு உறையினால் இயற்கை உறுதி செய்திருக்கிறது

மகரந்தங்கள் அழகிய  நுண்வேலைப்பாடுகள் அமைந்த கடினமான எக்ஸன் எனும் வெளியுறையும் மெல்லிய சவ்வு போன்ற உள்ளுறையும் கொண்டிருக்கும். சில மகரந்தங்கள் காற்றில் பறந்து செல்ல ஏதுவாக இறகு கொண்டிருக்கும். மேலும் சில நீர் உட்புகாத வண்ணம் பிரத்யேக வெளியுறையுடன் நீர்வழி பயணித்து பெண் மலர்களை அடையும்.

அபரிமிதமான உற்பத்தி மற்றும்  நீடித்திருக்கும் தன்மை ஆகியவற்றால் மகரந்தங்கள் நெடுங்காலம் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க, ஆராய உதவும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

தொல் தாவரவியலாளர் ஆண்ட்ரூ (Andrew Leslie)  470 மில்லியன்வருடங்களுக்கு முன்பான பெரணிச் செடிகளின் ஸ்போர்களும், 375 மில்லியன் வருடங்களுக்கு முன்பான மகரந்த துகள்களும் கூட எந்த மாற்றமுமின்றி தொல் படிவங்களாக கிடைக்கும் என்கிறார்.

ஆவணப்போலிகள், பாலியல் குற்றங்கள், வாகன விபத்துக்குற்றங்கள், கள்ளச்சந்தை வணிகம், பயங்கர வாதம் ஆகிய பல குற்றவியல் விசாரணைகளில் துகளியலாளர்கள்  தற்போது பங்களிக்கிறார்கள்.

தடய சூழியல் என்னும் forensic ecology தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் முக்கியமான அறிவியல் துறைகளில் ஒன்று.  

உலகநாடுகளின் மகரந்த துகள்கள் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுவது துரிதமாக்கப்பட்டு உலகளாவிய மகரந்த வங்கி அனைவரும் அணுகும் வகையில் இருக்குமானால் தடயவியல்  ஒப்புநோக்கு ஆய்வுகள் மிக எளிதில்  நடைபெறும். PalDat போன்ற மகரந்த சேமிப்பு தளங்கள் மேலும் விரிவுபடுத்தப்படவெண்டும்

இந்த பிரபஞ்சமே நுண்துகள்களால் ஆனதும் நிரம்பியதும்தான். ஒளி நுண்ணொக்கியில் கூட காண முடியாத நுண் துகளான ஒரு வைரஸினால்தான் பல்லாயிரம் மனிதர்களை காவு கொடுத்துவிட்டு உலகம் இரண்டு வருடங்கள் முடங்கி இருந்தது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டவெளியில் இருந்த ஒரு தீத்துகளில்நிகழ்ந்தபெருவெடிப்பில்தோன்றியதுதான் காலமும்  வெளியும்.  

’’உலகை ஒரு மணல் துகளிலும்,

சொர்க்கத்தைவனமலரொன்றிலும்

முடிவிலியைஉள்ளங்கையிலும்

வாழ்வின்நித்தியத்தை

காலக்கணக்குகளிலும்  கண்டுவிடமுடியும்’’ 

என்னும் கவிதையை எழுதிய, பிரிட்டன் இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த கலைஞர்”  என புகழப்பட்டவரும், கவிஞரும் ஓவியரும் புனைவியம் மற்றும் காட்சிக்கலை வரலாற்றில்மிக முக்கியவராக கருதப்படுபவருமான வில்லியம்பிளேக்கும் (William Blake, 1757 –  1827) 

மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்லும் சிறுவண்டு அம்மரத்தின் நுண்சாரத்தையே கொண்டு செல்கிறது என்னும் ஜெயமோகனும்

விசும்பின் துளி பசும்புல்லின் தலையாகின்றதென சொன்ன வள்ளுவனும்,

வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளை காண வரைபடம் எதற்கு? வானமோ இரு மண் துகள்களுக்கிடையில் இருக்கிறது என்ற தேவதேவனும் துகளியலையும் மகரந்தவியலையும் கவித்துவமாகஅணுகியவர்கள் தான்

 குரு

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள்.

1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் அங்கு லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வந்தது தெரிந்தது

1950களில் ஆராய்ச்சியாளர்களும்   மானுடவியலாளர்களும் காவலதிகாரிகளும் அரும்பாடுபட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு, அங்கு சென்றபோது   அங்கு கிராமங்களில்  ஆயிரக்கணக்கில் தொல்குடியினர்  இருந்ததும் அவர்களில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்ததும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததையும் கண்டார்கள் 

அந்த நோய் அவர்கள் மொழியில் குரு என்றழைக்கப்பட்டது. அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளும் மிக அதிக எண்ணிக்கையில்  கிகியாவைப்போலவே  நோய்வாய்பட்டு இருந்ததை அவர்கள்  கண்டறிந்தார்கள்

அவர்களில் பலருக்கு உடம்பு உதறி உதறிப் போடும் தீவிரமான வலிப்பு, பசியின்மை இருந்தது, உடல் அங்கங்கள் ஒத்திசைவு இன்றி நேராக நிற்கவோ நடக்கவோ முடியாமல் எலும்பும் தோலுமாக இருந்தனர். உடல் உதறிப்போடும் அறிகுறி வந்தவர்கள் அடுத்த  ஒரு வருடத்திற்குள் இறந்துபோனார்கள்.

ஃபோரே பழங்குடியினரின் மொழியில் குரியா என்னும் சொல் உடல் உதறுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே இந்நோய்க்கு குரு என்னும் பெயர் வந்தது.

இதற்கு  ’’நெகி நெகி’’ என்று அவர்கள் மொழியில் சிரிக்கும் நோய் என்னும் பெயரும் இருந்தது நரம்புகள் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வெடித்து சிரிப்பதும் அந்நோயின் அறிகுறி .

அப்பழங்குடியினர் இந்த நோயும், வலியும், இறப்பும் சூனியம் அல்லது இயற்கையை தாண்டிய ஒன்றின் தண்டனை அல்லது தீவினை என்று நம்பினர்.

வரலாறு

ஃபோரே மக்கள் துவக்கக்தில் குரு ஒரு சூனியநோய் என்றும் அதன் மந்திரசக்தி பிறருக்கும் பரவுகிறது என்றும் நம்பினர். பின்னர் தீய ஆவிகள் பிடித்துள்ளதாக நினைத்தனர். உடல் நடுக்கத்தை குணமாக்க சில காலம் சவுக்கு மரப்பட்டை சாற்றை அருந்த கொடுத்து வந்தனர் 

குரு குறித்த முதல் தகவல்கள் பப்பா நியூ கினியில்  (PNG) ரோந்து வந்த ஆஸ்திரேலிய காவலர்களால் 1950ல் பதிவு செய்யபட்டது. செவிவழிச்செய்திகள் 1910 லேயே குரு மரணங்கள் இருந்ததை தெரிவித்தாலும் அதிகாரபூர்வ ஆவணங்கள் 1950லிருந்துதான் கிடைத்திருக்கின்றன. 1953ல் ரோந்துக்காவலரான ஜான்,   (John McArthur),  தனது அறிக்கையில் குரு நோயின் அறிகுறிகளை பதிவு செய்திருந்தார். ஃபோரே இனத்தவர்களின் விசித்திரமான சடங்குகளால் உருவான குரு நோய் ஒருவகை மன நலக்கோளாறு என்று  அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

குரு கட்டுக்கடங்காமல் பெரிதாக பரவிய போதுதான் தொல்குடி இனமக்களே   பப்பா நியூ கினியில்  பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவ அதிகாரியான சார்லஸ் (Charles Pfarr) என்பவர் மூலம் ஆஸ்திரேலிய மருத்துவ அமைச்சகத்துக்கு    தகவலனுப்பினர்,

 1957ல்  அமெரிக்க மருத்துவர் கார்ல்டன் (Dr. Carlton Gajdusek) பப்பா நியூ கினியின் மருத்துவ ஆலோசகர் திரு வின்சென்ட் ஜிகாசினால் (Vincent Zigas) அழைத்து வரப்பட்ட போதுதான் அது என்ன நோயென்பது உலகிற்கு தெரியவந்தது

அந்நோய் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டபோது, உலகிற்கு அதன் தீவிரம் புரியவில்லை.1957ல்  குரு குறித்த இவரது விரிவான ஆய்வுக்கட்டுரை,  Medical Journal of Australia வில் வெளியானது. அக்கட்டுரையில் அவர் குரு ஒரு மரபுவழி நோயாக இருக்கலாமென்றும் ஒரு வகை வைரஸினால் அது உருவாகிறது என்றும் தெரிவித்திருந்தார்

 1960 ல்  அடிலெய்ட் மருத்துவரான  மைக்கேல் அல்பெர் (Michael Alpers) இந்த மர்மமான நோயை குறித்து அறிய அந்த கிராமத்துக்கு வந்தார்,   Dr. கார்ல்டன் உடன் இணைந்து அந்நோயை ஆராய்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் குரு நோயை குறித்த ஆய்வுக்காக அர்ப்பணித்தார்

வலிப்பு நோய் என்னும் பொருளில் அவர்களின் மொழியில் குரு என்றழைக்கப்பட்ட அந்நோயை இருவரும் மிக கவனமாக ஆராய்ந்தார்கள். ஏன் அந்நோய் அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதை துவக்க காலங்களில் இருவராலும் யூகிக்கவும் கண்டுபிடிக்கவும் முடியாமலிருந்தது

நோய் அறிகுறிகளை விரிவாக ஆராய்ந்தபோது இருவருக்கும்  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ஆடுகளுக்கு இருந்து வந்த மூளை அழிவு நோயை குறித்த நினைவு வந்தது. அந்நோய் ஃப்ரான்ஸ் மக்களால்  trembling disease என்றும் ஆங்கிலத்தில் scrapie என்றும் அழைக்கப்பட்டது

குரு மற்றும் ஸ்க்ரேபிக்கு இடையே இருந்த ஒற்றுமைகளின் மூலம் குரு மூளையில் உண்டாகும் ஒரு நோய்  என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் மூளையை நுண்ணோக்கியில் பார்க்கையில் மூளை பஞ்சு போல மாறிவிட்டிருப்பதையும், மூளையில் ஏராளமான நுண் துளைகள் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஸ்க்ரேபியைபோலவே குருவும் ஒரு தொற்றுநோய் என்பதுவும் உறுதியானது

எனவே குருவின் தொற்றும் தன்மையை  இருவரும் உறுதி செய்ய நினைத்த சமயத்தில் தான் கிகியா குருவின் ஆரம்பகட்ட அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டிருந்தாள்

இந்த சோதனையை குரங்குகளில்  செய்ய  இருவரும் முடிவெடுக்கையில் படிப்படியாக நோய் முற்றி கிகியா  இறந்துபோனாள். கிகியாவின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவளது மூளையின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவின் ஆய்வமொன்றிற்கு அனுப்பப்பட்டது   

அங்கு டெய்ஸி மற்றும் சார்லெட்டி என்னும் இரு சிம்பன்ஸிகளின் மூளையில் கிகியாவின் மூளைக்கரைசல் ஊசியாக  செலுத்தபட்டபோது. இரு சிம்பன்ஸிகளுக்கும் விரைவில் குரு தொற்று உண்டானது. எனவே மூளையில் உண்டாகும் இந்நோய் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பது நிரூபணமானது.

 ஃபோரே தொல்குடியில்.பெரும்பாலும் பெண்களுக்கு அந்நோய் தொற்று உருவாகி பலர் இறந்திருந்ததால் சில கிராமங்களில் முற்றிலும் பெண்கள் இல்லாமல் இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட போதுதான் ஃபோரே இனமே அழியும் அபாயத்திலிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

அதே சமயத்தில்   குரு நோயின்   தொற்று மற்றும் பரவலில் ஆய்வு செய்து கொண்டிருந்த  நியூயார்க்கின் மருத்துவ மானுடவியலாளர் ஷர்லி லிண்டென்பாம் (Shirley Lindenbaum), தனது ஆய்வின் முடிவில் புதிதாக ஒன்றை கண்டடைந்திருந்தார். 1960க்கு பிறகு பிறந்த யாருக்கும் குரு தொற்று இல்லை என்னும் அந்த முடிவு அக்காலத்துக்கு முன்பு வரை அத்தொல்குடியினரின் எதோ ஒரு வழக்கத்தின் மூலமே குரு உருவாகி தொற்று பரவி இருக்கும் என்பதை அறிவித்தது

ஃபோரே தொல்குடியினருடன் தங்கி இருந்து பல வருடங்கள் ஆய்வு செய்தவரான அவர் அவ்வினத்தவர்கள் அழிவின் விளிம்பில் இருந்ததால் எப்படியேனும் தங்கள் இனத்தை பாதுகாக்கத்தான் நினைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

ஷர்லி 1961ல் ஒவ்வொரு கிராமமாக சென்று தரவுகளை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் 1960க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குரு தொற்று உண்டாகவில்லை என்பதை கண்டறிந்தார்,

எனவே அவர்களோடு பல காலம் இருந்து ஆய்வு செய்த ஷர்லிக்கு அவர்களின் விசித்திரமான இறப்புச் சடங்கு தான் அதற்கு காரணமாயிருக்கலாம் என்னும் சந்தேகம் இருந்தது

ஃபோரே இனத்தில் ஒருவர் மரணமடைகையில் அவரது சடலத்தை குடியினர் அனைவரும் சமைத்து பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்தது. அது அவர்களின் தொல்நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது 

நரமாமிசம் உண்பது குரு தொற்றிற்கு காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் குருவை ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களுக்கும் இருந்ததெனிலும் அதற்கான அடிப்படை அறிவியல்  ஆதாரமில்லாததாலும் முன்பெப்போதும் அத்தகைய நோயை கேள்விப்பட்டிருக்காததாலும் அதிகாரபூர்வமாக குருவிற்கு நரமாமிசம் உண்பதுதான் காரனம் என 1967 வரை யாருமே பதிவு செய்திருக்கவில்லை

1967ல்  கிளாஸெ, மோரெ, ( Glasse,   more)  மற்றும் 1968 ல் மேத்யூஸ் மற்றும் லிண்டன்பாம்  (Mathews & Lindenbaum) ஆகியோரே நரமாமிசம் உண்பதால் குரு உருவாவதை ஆதாரத்துடன் தெளிவாக நிறுவினார்கள்.

இவர்களைப்போலவே  E. J. Field என்னும்  பிரிட்டிஷ் நரம்பியல் மருத்துவர்   1960s- 1970 களில் பப்பா நியூ கினியில் தங்கி இருந்து இந்த நோயை ஆராய்ந்தார்

குருவை  scrapie மற்றும்  multiple sclerosis. நோய்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதப்பட்ட  இவரது குரு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பிரிட்டிஷ் மருத்துவ கழகம் இவரை  புதிய மூளை நோய்களை ஆராயும் குழுவின் இயக்குநராக நியமித்தது.

இவரின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டுதான்  1970 BBC Horizon  நர மாமிசம் உண்பது தொடர்பான மிக முக்கியமான ஆவணப்படமாகிய New Guinea வை உருவாக்கி வெளியிட்டது

மானுடவியலாலர்களும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பப்பா நியூ கினிக்கு வரும் முன்னரே நரமாமிசம் உண்பது அங்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, எனினும் இவர்களின் முயற்சியினால் உலகம்  , குரு என்னும் நரமாமிசம் உண்பதால் வரும் நோயை  முதன் முதலாக அறிந்து கொண்டது

  பிறகும் பல ஆராய்ச்சிகள் அதில் நடந்து ஒரு வைரஸ் இந்த குரு நோய்க்கு காரணமாக இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

 ஆனால் அது வைரஸோ பாக்டீரியாவோ பூஞ்சையோ அல்ல வெறும் புரதம், நோய் உருவாக்கும் வீரியமுள்ள புரதம் என பிற்பாடு கண்டறியப்பட்டது, 

வைரஸ்கள் என்பவை மிக எளிய உடலமைப்பை கொண்டவை.ஒரு புரத அடுக்கு அதனுள்ளிருக்கும் நியூக்ளிக் அமிலம் அவ்வளவுதான் ஒரு வைரஸ், சில வைரஸ்கள் வெறும் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உடலாக கொண்டவை மேலும் சில வெறும் புரத அடுக்கு மட்டுமே வைரஸாக இருக்கும் அவையும் நோய்க்கிருமிகள்தான். அப்படியான ஒரு வெறும் புரத வைரஸ்தான் பிரையான் என்பது.  

குருவை உண்டாக்கும் அந்த புரதமும் தவறாக திருகிய அமைப்பை கொண்டிருந்த பிரையான்கள் தான்  (prions).  அவை மூளையின் செல்களை தாக்கி அழிக்க வல்லவை. அப்படி அழிந்துவரும் மூளையில் பல துளைகள் உருவாகிக்கொண்டிருக்கும்

இந்த தொற்று  ஃபோரே இனத்தின் Creutzfeldt-Jakob Disease, எனப்படும் நரம்பு அழிதல் நோயினால் இறந்த ஒருவரின் சடலத்தை பிறர் உண்டதால் உருவாகி இருக்கலாம் என்று யூகிக்கப் பட்டது 

ஃபோரே இனத்தவர்களில் இறப்பு நிகழுகையில் இறந்தவர்களின் உடலை சமைத்து உறவினர்கள் அனைவரும் உண்ணுவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கம் வெளி உலகிற்கு தெரியவரவே வெகு காலமாகியது பின்னர் 1959ல் அரசு தலையிட்டு இறந்த உடலை உண்ணுவதை சட்டப்படி தடை செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தது.

Endo cannibalism அல்லது ritual cannibalism என்னும் இவ்வகை நரமாமிசம் உண்ணுதலின் பின்னணியில்  ஃபோரே இனத்தவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தன.

 ஃபோரே இனத்தின் பிரபஞ்சவியல்

ஃபோரே இனத்தவர்கள் தொல்மொழியில்   அவர்கள் வாழும் பூமியை உயிருள்ளது என்று பொருள்படும் பகினா (bagina) என்று அழைத்தனர்.

 நிலப்பரப்பை  முழுமையாக உருவாக்கி முடித்த பகினா, மக்களை உருவாக்கி, மக்கள் தொகை பெருகிய பின்னர்  இனத்தின் பாதுகாவலர்களான இ அமனி (e amani) யை உருவாக்குகிறது.

இ அமனி என்பவை மலைகள் ஏரிகள் பைன் மரங்கள் மற்றும் பனைக்காடுகள். இவற்றை கடந்த பின்னர் நீத்தோருக்கான் உலகம் என அழைக்கப்பட்ட குகைகள் நிரம்பிய   வெலனந்தமுண்டி என்னும் பிரதேசம் (kwelanandamundi) இறந்தவர்களின் ஆன்மா சென்று சேரும் இடமாக தனியே வகுக்கப்பட்டிருந்தது.

ஃபோரேக்களின் ஐந்து ஆன்மாக்கள்

ஃபோரேக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஐந்து ஆன்மாக்கள் முறையே அவுமா, அமா, க்வெலா,அவோனா மற்றும் யெசெகி  ( auma, ama, kwela, aona&  yesegi ) என இருக்கின்றன. 

மரணத்தருவாயில் கடைசி மூச்சின் போது உடனடியாக உடலை விட்டு வெளியேறுவது அவுமா. அது உடனே உயிர்  நீத்தோருக்கென தனியே வகுக்கப்பட்டிருக்கும்  வெலனந்தமுண்டி  பிரதேசத்துக்கு சென்று விடுகிறது .இந்த ஆன்மா ஒரு மனிதனின்  புண்ணியங்களுக்கானது.அது தான் வாழ்ந்த பகினாவுக்கு விடை சொல்லிவிட்டு உடனடியாக உடலை நீங்கிச் சென்று விடும்.

அவுமா பாதுகாவலர்களான இ அமானியிடம் சென்று தான் இறந்த காரணத்தை தெரிவிக்கிறது. அதை கேட்ட பாதுகாவலர்கள் நீத்தோருக்கான் இடமாகிய வெலனந்தமுண்டிக்கு செல்ல ஆன்மாவிற்கு வழி காட்டுகிறார்கள்.

நீத்தோருக்கு உறவினர்கள் படையலிடும் உணவும் நீரும் செல்லும் வழியில் அவுமாவால் எடுத்துக்கொள்கிறது. 

நீத்தோருலகில் வாசலில் இருக்கும் சிவப்பு ஆற்றை அடையும் அவுமா அக்கரையில் காத்திருக்கும் முன்னோர்களின் ஆன்மாவினால் வரவேற்கப்படுகிறது, அங்கு காத்திருக்கும் அவுமா, அமா என்னும் எலும்புகளின் ஆன்மாவும், க்வெலா என்னும் தசைகளின் ஆன்மாவும் வந்துசேர காத்திருக்கிறது. அவை வந்து சேர்ந்த பின்னரே தன் மூத்தோர்களிலொருவராக அது மறுபிறப்பெடுக்கும். ( ama (bones) & kwela (flesh))  

அமா (Ama) என்னும் ஆன்மா ஏறக்குறைய அவுமாவை போலத்தான் ஆனால் அதை காட்டிலும் சக்தி வாய்ந்தது. அது சடலத்துக்கு சடங்குகள் முறைப்படி செய்யப்படுகின்றனவா என கண்காணித்தபடி பூமியிலேயே காத்திருக்கும். உறவினர்கள்  மரணச்சடங்குகளை முறையாக செய்ய வழிகாட்டி, ஒருவேளை இறப்பு எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் அவர்களை தண்டிப்பதாக  அமா வஞ்சினம் உரைக்க செய்யும்.

இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உண்ணும் போது அமா அவர்களை ஆசிர்வதிக்கிறது. சடலத்தை உண்பவர்களின் ஆன்மாவாகிய அவோனா அப்போது அதிகரிக்கிறது. உடல் முழுக்க மிச்சமின்றி உண்டு முடிக்கப்பட்டதும் அமா விடைபெற்றுக்கொண்டு நீத்தோருலகிற்கு செல்லும். அங்கிருந்து பூமியிலிருக்கும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை அமா செய்யும்

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

  க்வெலா  ஆன்மா காற்றில் பயணித்து  மறைந்து நின்று கவனித்து மரணச்சடங்குகளை சரியாக செய்யாதவர்களை தண்டிக்கிறது

உடல் அழுகி கொண்டிருக்கையில் உடலிலிருக்கும் க்வெலா மிக சக்தி வாய்ந்தது என்பதால் கிராமத்தில் வாழிடங்கள் இருக்கும்  இடங்களுக்கு மிகத் தள்ளி இருக்கும் இடங்களில் தான் உடல் கிடத்தப்படும்

உடல் புதைக்கப்படுகையில் க்வெலா சக்தி குறைந்து காணப்படும். உடல் உண்ணப்படுகையில் க்வெலா, உடலை உண்ட பெண்களின் கர்ப்பப் பையில் தங்கி விடுகிறது. அங்கு அதன் பெயர் அனக்ரா ( anagra)  

உடல் சமைக்கப்படுகையில் வெப்பம் அதிகமாகும் போதுதான் க்வெலா விலகி நீத்தோருலகிற்கு செல்லும்

யெசெகி  ஆன்மா இறந்தவரின் சருமத்தில் தங்கி இருந்து க்வெலா கருப்பைக்குள் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு பின்னரே விடைபெற்றுக்கொள்ளு.ம் யெசெகி ஆன்மாவானது   இறந்த மனிதர், பெரும் வேட்டைக்காரராகவும், சக்திவாய்ந்தவராகவும் வாழ காரணமாக இருப்பது.

இவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில்  முறையாக  செய்யப்படும் மரண சடங்குகள் மூலமாக  இறந்த மூத்தோர் மீண்டும் அவர்களுக்கே பிறந்து வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து நடக்கும் என ஃபோரே குடியினர் நம்புகிறார்கள்.

இறந்த உடலை கையாளும் முறை

(இந்த பகுதி சிலருக்கு வாசிக்க ஒவ்வாமையை உண்டாக்கலாம்) 

மரணத்தருவாயில் இருப்பவர் சில சமயம் தனது உடல் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை சொல்லிச்செல்வது உண்டு. இல்லாவிட்டால் உடலை என்ன செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்

இறப்பு நிகழ்ந்த உடனே உடல் முழுக்க, பித்தப்பையை தவிர  பங்குபோட்டு சமைத்து உண்ணப்படும்  அல்லது சில நாட்கள் புதைத்து வைத்து மீண்டும் வெளியே எடுத்து உடலில் இருக்கும் புழுக்கள் தனியாகவும், உடல் தனியாகவும் சமைத்தும் உண்ணப்படும். 

சில சமயம் உடல் ஒரு மேடையில் கிடத்தப்பட்டு மாமிசத்தை   சிறு பூச்சிகள் (maggots) உண்ணும்படியும் வைக்கப்படும்.

ஃபோரே தொல்குடியினர்  அவர்களுடன் வாழ்ந்து மறைந்த  பிரியமானவர்களின் உடலை இப்படி புழுக்களும்,பூச்சிகளும் உண்பதை காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான குடும்ப உறவினர்கள் உண்ணுவதே சிறந்தது என்று நம்பினார்கள்.

இப்படி உண்ணப்படுகையில் மிகுந்த சக்திவாய்ந்த க்வெலாவின் ஆபத்துக்களிலிருந்து தப்பி அதை கர்ப்பத்தில் அடுத்த சந்ததியாக தக்கவைத்துக்கொள்வது பெண்களுக்கு மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இறந்தவர்களின் மீதான அன்பை, அவர்கள் இழப்பை குறித்த துக்கத்தை உடலை உண்பதன் மூலம் காண்பிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள். எனவே பெரும்பான்மையான ஃபோரே உட்பிரிவினங்கள் உடலை சமைத்து உண்டார்கள்.

இறந்த உடல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு மூங்கில், கரும்பு அல்லது சவுக்கு காடுகளுக்குள் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படும்

காடுகளில், துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு நிழல் இருக்கும், இறந்த உடலின் ஆன்மாக்கள் காடுகளில்தான் மகிழ்ந்திருக்கும் என்பதால் உடல் காட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உடலை வெட்டித் திறந்ததுமே, பூமி உள்ளிருக்கும் ஆன்மாக்களை வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு உயரமான மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் கீரைகள் காய்கறிகள் கிழங்குகளின் மீது விரிக்கப்பட்டிருக்கும் வாழை இலையின் மீது உடல் கிடத்தப்படும் . 

இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகளின் மீது உடல் வெட்டப்படும்போது சிந்தும் திரவங்கள் வீணாகாது என்பதால் இப்படி செய்யப்படுகிறது. உடல் பாகங்களும் திரவங்களும் சிந்தி வீணானால் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கசப்பு நிறைந்த பித்தப்பையை தவிர ஒரு துளி உடல் பாகமும் வீணாகாமல் அச்சடங்கு நடத்தப்படும் 

முதலில் உடலை பெண் மற்றும் ஆண் உறவினர்களுக்கிடையே சரிசமமாக பங்கு போட்டுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குழந்தைகளை அங்கிருந்து விலக்கி வைப்பார்கள் எனினும் சில குழந்தைகள் மரங்களின் மீதிருந்து சடங்கை வேடிக்கை பார்ப்பதுண்டு

 கைக்குழந்தைகள் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால் அவர்கள் 4 கிமீ தள்ளி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பார்கள். 

உடல் மூங்கில் கத்தியால் வெட்டப்பட்டு, மீண்டும் சதை சிறுசிறு துணுக்குகளாக வெட்டப்பட்டு சிறு குவியல்களாக கறிப்பலா இலைகளில் குவித்து வைக்கப்படும்

உடலின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகையில்   பெண்களும் இளையவர்களும் இனப்பெருக்க உறுப்புக்களை பார்க்கக்கூடாது என்பதற்காக வயதான பெண்கள்  வட்டமாக நின்று மனிதத்திரை உண்டாக்குவார்கள்

உடலை வெட்டி முடித்ததும் கைகளை வாழை நார், மூங்கில் குருத்துக்கள் கொண்டு துடைத்து சுத்தம் செய்துகொண்டு  மாமிசம் வேகவிருக்கும் அடுப்பு நெருப்பில் துடைத்த நாரையும் குருத்துக்களையும் போடுவார்கள். கடைசியாக பெண்கள் கைகளை அவர்களது புல்லாடையில் துடைத்துக் கொள்வார்கள்

மூங்கில் குழாய்களில் அடைத்து நெருப்பில் வேக வைக்கப்பட்ட மாமிசம் வாழையிலைகளில் கொட்டப்படும்.

முதல் உணவு துக்கம் விசாரிக்க வந்திருக்கும் ’எனாமே’ எனப்படும் வெளியூர் உறவினர்களுக்கு குச்சிகளில் குத்தப்பட்டு வாயில் நேரடியாக அளிக்கப்படும்.

அவர்கள் உணவை கைகளால் தொடக் கூடாது என்பது நெறி. அவர்கள் ஊர் திரும்பி செல்கையில் வெஸா (wesa) என்னும் செடியின் இலைகளை மென்று நர மாமிசம் உண்ட வாயை சுத்தம் செய்து கொள்வார்கள் 

ஃபோரே குடியினரின் உட்பிரிவான அடிக்மா என்னும் அடிகமனா மொழிபேசும் உட்பிரிவில் இறந்த ஆணின் இனப்பெருக்க உறுப்புக்கள் விதவையான அவரின் மனைவிக்கு அளிக்கப்படும்.   (Atigina – atikamana),   ஆனால் தெற்குப் பகுதியின் பிரிவான பமுசாகினா (Pamusagina) குடியினரிடம் இவ்வாறான பழக்கம் இல்லை.

பிரையான்களால் அழுகி இருக்கும்   மூளை ஒரு கூரான மூங்கில் குச்சியால் நெம்பி எடுத்து வேகவைக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். ஒருபோதும் 6 வயதுக்கு மேலான ஆண் குழந்தைகளுக்கு இது அளிக்கப்படமாட்டாது, ஆனால் எல்லா வயதிலும் பெண்கள் இதை உண்ணலாம்

குடிசையை விட்டு வந்திருக்காத, துக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு நரமாமிச உணவு கொண்டு போய் கொடுக்கப்படும்.

எலும்புகளில் பெரியவையும் மண்டை ஓடும் சில பிரிவு மக்களால் இறந்தவரின் குடிசையின் முன்பாக சாக்குப் பைகளில்  கட்டி தொங்கவிடப் படுவதும் உண்டு.  

மறுநாள் காலையில் உடல் சமைக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் சில பெண்கள் மீதமிருக்கும் எலும்புகளைக் இகாகி எனும் காட்டுப்புல்லில் சுற்றி நெருப்பில் வாட்டி அவற்றை மேலும் கீழுமாக கறிப்பலா இலைகளால் மூடி கற்களால் பொடித்து மிச்சமின்றி உண்பார்கள். உடலின் எந்த பாகமும் வீணாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருப்பார்கள்.

மாமிசம் வேகவைக்கப்பட்ட கருகிய மூங்கில் குழாய்களின் சாம்பலும் பொடித்து காய்கறிகளில் கலந்து உண்ணப்படும்

பின்னர் சமைப்பதற்கும் உடலை வெட்டுவதற்கும் உபயோகப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நெருப்பிலிட்டு அழிப்பார்கள். விதிவிலக்காக தாடை மற்றும் கழுத்தெலும்புகள் மட்டும் சிறுமிகளின் கழுத்தில் தாயத்தாக அணிவிக்கப்படும்.  

உடல் முழுமையாக உண்ணப்பட்டதும் இறந்தவரின் குடிசையின் வெளியே இருந்து புகை இடப்பட்டு குடிசை தூய்மையாக்கப்படும் பின்னர் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படும்

பெண்கள் எலிகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி பிடித்து வருவார்கள் அவற்றைக் கொன்று, ரோமத்தை விதவையின் வீட்டு நெருப்பில் பொசுக்கி விதவையின் உடலில் இருக்கும் க்வெலாவை அந்த நாற்றதினால் வெளியேற்றிவிட்டு பின்னர் இறந்த விலங்குகளின் மாமிசத்தை   சமைத்து பெண்கள் மட்டும் உண்ணும் சடங்கு நடைபெறும்

பின்னர் துக்கம் விசாரிக்க வரும் உறவினர்கள் கீரை, புல் போன்ற இலை உணவு மட்டுமே உண்ணும் கவுண்டா (kavunda), என்னும்  மரணச்சடங்கின் நீட்சியான உணவுச் சடங்கு  நடைபெறும். இந்த சைவ உணவுச்சடங்கு பொதுவாக  மனிதர்கள் உண்ணக்கூடாத நரமாமிசத்தை உண்டதன் பிழையீடாக நடக்கும்.  

பின்னர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டாக வேட்டைக்குச் என்று விலங்குகளை கொண்டுவந்து சமைத்து விருந்துண்ணுவார்கள்,  

இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் இறந்தவரின் க்வெலா அவளை பாதுகாத்துக்கொண்டு அருகில் இருக்கும். ஒருவேளை மறுமணம் செய்துகொண்டால் க்வெலாவிடம் அவள் விடைபெறும் சடங்கும் நடக்கும்.

இச்சடங்குளினால் தான் நடுக்கநோய் எனப்படும் குரு அவர்களுக்கு உண்டாகிறது என்று தெரிய வந்தபின்னர் அவர்கள் நரமாமிசம் உண்பதை நிறுத்திக்கொண்டனர். கிருஸ்துவ மிஷனரிகளும் நரமாமிசம் உண்ணக்கூடாது என்னும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினர். 

நோய் அறிகுறிகள்

துவக்க அறிகுறிகளாக உடல் நடுக்கம் வலிப்பு, நிலையில்லாமை, உடல் பாகங்களின் ஒத்திசைவின்மை ஆகியவை தோன்றும். கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் அறிகுறியும் இருந்தது.

நோய் முற்றும் போது வலிப்பு அடிக்கடி தீவிரமாக வருவதும்,  தாங்க முடியாத உடல் வலி, நடக்க முடியாமல் சிரமப்படுதல், பேச்சு குளறல்,தலைவலி ஆகியவை உண்டாகும். கடைசி நேரங்களில் விழுங்க , பேச முடியாமல் கோமா, தொடர்ந்து மரணம் ஆகியவை நேரும் 

குரு நோய்க்கு சிகிச்சை என ஏதும் இல்லாததால், தொற்று உண்டாகி 6 லிருந்து 12 மாதங்களில் இறப்பு நிகழும்

குரு மிக அரிதான நோய், பிரையான்கள் எனப்படும் நோய் உண்டாக்கும் புரதங்களால் இவை உருவாகி மூளையை பாதித்து இறப்பை உண்டாக்கும். 3 லிருந்து 50 வருடங்கள் வரை இந்த கிருமியின் நோயரும்பும் (incubation) காலம் இருக்கும்

 குரு மருத்துவ அறிவியல்

ஃபோரே இனத்திலும் அவர்களுக்கு அருகாமையில் வசித்த சில தொல்குடி இனங்களிலும் 1900 த்தில் குரு பரவலாக இருந்தது, 1940-50 வரையில் ஆயிரத்தில் 35 பேர் என்னும் அளவில் இறப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக மூளையை உண்ணும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  தசைகளை உண்ணும் ஆண்களை விட அதிக தொற்று உருவாகி இருந்தது

குரு ஒரு Transmissible spongiform encephalopathies (TSEs),  வகையை சேர்ந்த நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரதானமாக இது சிறுமூளையை பாதிக்கிறது.

குரு தொற்றிற்கு சிகிச்சை மருந்து என எதுவும் இல்லை. மூளையில் இருக்கும் பிரையான்களை ஃபார்மால்டிஹைடில்  வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கையிலும் நோய் உண்டாகும் வீரியத்தை அவை  இழக்காமலிருக்கிறது 

PrP என குறிப்பிடப்படும் பிரையான்களில் இரு வகைகள் உள்ளன  PrPc என்பது சரியான மடிப்புக்கள் கொண்ட புரதம்,  PrPsc, என்பது தவறாக திருகிய மடிப்புகள் கொண்ட குரு உருவாக்கும் வீரியமான புரதம் 

PrPsc காலப்போக்கில் PrPc புரதத்தின் மடிபுக்களை தவறாகக் திருகச்செய்து அவற்றையும் நோய்க்கிருமி ஆக்கி இருக்கலாம் என்னும்  சாத்தியத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறர்கள்

ஜுலை 1996 லிருந்து ஜூன் 2004 வரை நடைபெற்ற தீவிரமான ஆய்வில் 11 குரு தொற்றுக்கள் மட்டுமே  கண்டறியப்பட்டன

2005க்கு பிறகு புதிய தொற்றுக்கள் ஏதும் இல்லை, 1957ல் 200 குரு மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் 2010க்குபிறகு குரு மரணங்கள் முற்றிலும் இல்லை. எனினும் பிரையான்களின் வீரியமும் நோயரும்பும் காலமும் மிக அதிகம் என்பதால் மருத்துவத்துறை குரு குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்கிறது. 

funerary cannibalism. அல்லது rithual cannibalism எனப்படும் இறப்பு சடங்கில் சடலத்தை உண்ணும் ஃபோரே மக்களின்  Endocannibalism  என்னும் வழக்கத்தினால் குரு உருவானது இவ்வாறுதான் பலரின் அர்ப்பணிப்புள்ள ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது

நரமாமிசம் உண்பது எல்லா சமூகத்திலும் பயங்கரமானதும் விலக்கப்பட்ட ஒன்றுமாகவே இருந்திருக்கிறது. பண்டைய ரோமில் கிருஸ்துவர்கள் பலருக்காக தியாகம் செய்த ஒருவரின் உடல் ரகசியமாக சமைத்துண்ணப்படுவதாக வதந்திகள் உலவின. 

நற்கருணை எனப்படும் கிருஸ்துவின் கடைசி இரவு உணவின்  குறியீடாக திராட்சை மதுவும் அப்பமும் கிருஸ்துவின் ரத்தமும் சதையுமாக கருதப்பட்டு உண்ணப்படுவதன் மிகைப்படுத்தப்பட்ட வதந்திதான் அது​

போராளி இனங்களான  Iroquois  மற்றும் Fijians எதிரிகளின் சக்தியும் தங்களுக்கு கிடைக்குமென எண்ணி    தாங்கள் வென்ற எதிரிகளை சமைத்து உண்டனர்.  தென்னமெரிக்க பழங்குடியினரான  வாரிகளும்(wari) இவ்வாறு எதிரிகளை உண்பது வழக்கத்திலிருந்து .இது Exo cannibalism எனப்படுகிறது.  

​1979ல் வெளியான ’’நரமாமிசம் உண்பது என்னும் கட்டுக்கதை’’ என்னும் நூலில்   (Man-Eating Myth)   W. Arens அப்படியான ஒன்று எந்த காலத்திலும், எந்தச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்காது என்கிறார். ஒருவேளை கடும் பஞ்சத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாமே தவிர மனிதர்களை மனிதர்களை எப்போதும் உண்டதில்லை என்று சொல்லும் அவர் 6 விரிவான அத்தியாயங்களில் நர மாமிசம் தொடர்பான கதைகள் நாட்டுப்பாடல்கள்  தொன்மங்கள் ஆகியவற்றை விவரித்திருக்கிறார்

  1986 ல் Peggy Reeves Sanday  என்பவர்  ’’Divine Hunger: Cannibalism as a Cultural System’’ என்னும் தனது நூலை வெளியிட்டார் அதில் நரமாமிசம் உண்பதற்காக நடைபெற்ற கொலைகளையும், மனித மாமிசம் ஊட்டச்சத்துக்களுக்காக உண்ணப் பட்டதையும்,  சில பழங்குடியினர் இயல்பாக நரமாமிசம் உண்பதையும் குறிபிட்டு எழுதி இருந்தார். cannibalism  தொடர்பான நூல்களில் இது முக்கியமான தரவுகளை கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது

 Michael Alpers, என்னும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் குரு நோயைக் குறித்து பல ஆண்டுகள்  2012 வரையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து குருவினால் நிகழ்ந்த  கடைசி  இறப்பை தெரிவித்தார். மேலும்  குரு முற்றிலும் இல்லை என உலகிற்கு அறிவித்தார்.

குருவிற்கான நோபல் பரிசுகள்

  • 1976-அமெரிக்க மருத்துவர்  Daniel Carleton Gajdusek- குரு தொற்றை கண்டறிந்ததற்காக
  • 1977-அமெரிக்க நரம்பியல் மருத்துவரும்,  வேதியியலளருமான Stanley Ben Prusiner  – பிரையான்களின் ஆய்விற்காக
  • ஸ்விஸ் வேதியியலாளரும் உயிரி இயற்பியலாளருமான Kurt -பிரையான்களின் புரத அமைபை கண்டுபிடித்தற்காக.

 குரு நோயுற்றவர்களின் மூளையை உண்ட பிறருக்கு நோய் வருவதும், பைத்தியக்கார பசு நோய் (Mad Cow disease) நோயுற்ற பசுவை உண்பவர்களுக்கும் வருவதும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

 மேலும் பிரையான் நோய்கள் இனி உண்டாகுமா? மான் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்ணும் வேட்டைக்காரர்களுக்கும், பிற நோயுற்ற காட்டுவிலங்குகளை உண்பவர்களுக்கும் இனிமேல் பிரையான் நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா?

இதுகுறித்துத்தான் வட அமெரிக்காவில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்

சமீபத்தில் வட அமெரிக்காவில் மர்மமான முறையில் உணவுண்ன முடியாமல் பட்டினி கிடந்து இறக்கும் மான்களின், எல்க்குகளின் உடலில் மூளையில் பிரையான்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அந்த பிரையான்கள் மூளையில் மட்டுமல்ல இறந்த விலங்குகளில் உடல் முழுக்க இருந்தது

 எனவே மான்களின் இறப்பு விகிதம் இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோய் தடுப்பு மையமான CDC இப்போது வேட்டைக்காரர்களுக்கு பிரையான் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது 

உலகெங்கும் நர மாமிசம் உண்ணுதல் (Cannibalism) என்பது மானுடவியல் மற்றும் இறையியல் ரீதியாக அணுகப்படும் ஒன்றாகவே இருக்கிறது. கடவுளின் ரத்தம் சதை என உருவகப்படுத்தி அப்பமும் மதுவும் உண்ணப்படுவதும் சடங்கு ரீதியான நரமாமிசம் உண்பதின்  (Ritual cannibalism) ஒரு வடிவம் தான்

Anthropophagy  என்பது மனிதன் மனிதனை உண்ணுவது, Theophagy என்பது கடவுளின் உடல் என்று நம்பி உருவகப்படுத்திக்கொண்ட  உணவை உண்பதன் மூலம் கடவுளின் சக்தியை அருளை ஆசியை பெறலாம் என்று நம்புவதும் உண்பதும்.

ஐரோப்பாவின் மருத்துவ நரமாமிச உண்ணுதல் medical cannibalism எனப்படுகிறது. பட்டினிக் காலங்களில் உயிர்பிழைக்கும் கடைசி வாய்ப்பாக இறந்தவர்களை  உண்ணுவது Starvation cannibalism, விமான ப்பயணம் அல்லது கடல்வழி பயணங்களில் விபத்துக்களில் சிக்கி உணவுப்பொருள் தீர்ந்த போது உயிர்பிழைக்க சடலங்களை உண்பது survival Cannibalism. இப்படி பலவகையான நரமாமிசம் உண்ணும் வழக்கங்கள் உலகெங்கிலும் இருந்தன, இருக்கின்றன.

ஐரோப்பாவில்  மனித உடல்பாகங்களை மருத்துவக் காரணங்களுக்காக  உண்டவர்களை பற்றிய  ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஸ்விஸ் மருத்துவர்  பாராசெல்சஸ் (Paracelsus-1493/4-1541)  மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்லாது  அரசர்களும் புனித தந்தைகளும் கூட பல காரணங்களுக்காக நரமாமிசம் உண்டதை எழுதினார்.

எனினும் இன்னுமே பிடிவாதமாக உலகின் எந்த பகுதியிலும் நரமாமிசம் உண்ணுதல் என்பது நடக்கவே இல்லை என்று வாதிடும் மானுடவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள்  இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நாவல்களில் திரைப்படங்களில், நாடகங்களில், வீடியோ விளையாட்டுக்களில்  நரமாமிசம் உண்பது, குரு நோய் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கிறது, உதாரணமாக: 

குரு இப்போது முற்றிலும் இல்லை. ஆனால் நரமாமிசம் உண்பது   முற்றிலும் கட்டுக்கதை அல்ல. இறந்த உடல்களின் குவியல்களின் மீது அமர்ந்து தியானம் செய்தால் அசாதாரண சக்தி கிடைக்கும் என்று நம்பிய திபெத் புத்தபிட்சுக்களை, காசியில் எரியும் பிணங்களின் உடலை தின்னும் அகோரிகளை நாம் அறிந்திருக்கிறோம்.  கடந்த 2022ல் கேரளாவில் நரபலி கொடுத்து நரமாமிசம் உண்டால் புதையல் கிடைக்கும் என்பதற்காக கொல்லப்பட்டு உண்ணப்பட்ட இரு பெண்களை குறித்த செய்திகளையும் அறிந்திருக்கிறோம்.

இந்த விக்கிபீடியா இணைப்பில் (https://en.wikipedia.org/wiki/List_of_incidents_of_cannibalism#:~:text=Accounts%20of%20human%20cannibalism%20date,the%20practice%20to%20this%20day3.) நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நரமாமிசம் உண்ட நமது நியாண்டர்தால் மூதாதைகளிலிருந்து, கணவனை, மனைவியை குழந்தைகளை, அந்நியர்களை, காதலியை கொன்று சமைத்து உண்டவர்களை பற்றிய தகவல்கள் 2022ன் கேரளா சம்பவம்  வரை இருக்கிறது. 

சந்திராயன் நிலவுக்கு சென்று சேர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் இவை நடக்கிறது என்னும் போது 1900களில் வெளி உலகத் தொடர்பில்லாத ஃபோரே தொல்குடியினர் இறப்புச் சடங்கில் நரமாமிசம் உண்டதில் வியப்பொன்றும் இல்லை.  

 மேலதிக தகவல்களுக்கு:

https://anglicancompass.com/isnt-eating-and-drinking-the-body-and-blood-of-jesusgross/embed/#?secret=ZTCLO9SRWy#?secret=ro8P9JumDp

Alpers, Michael P. The epidemiology of kuru: monitoring the epidemic from its peak to its end. Philos Trans R Soc Lond B Biol Sci. 2008; 363(1510): 3707–3713.

Lindenbaum, Shirley “Kuru, Prions, and Human Affairs: Thinking About Epidemics”. Annual Review of Anthropology. 2001; 30 (1): 363–385

Shirley Lindenbaum (14 Apr 2015). “An annotated history of kuru”. Medicine Anthropology Theory.

Whitfield, Jerome T.; Pako, Wandagi H.; Collinge, John; Alpers, Michael P. “Mortuary rites of the South Fore and kuru”. Philos Trans Royal Society B Biol Sci. 2008: 363 (1510): 3721–3724.

“When People Ate People, A Strange Disease Emerged”. NPR.org. Retrieved 2018-04-08. 

தன் வாழ்வை முற்றிலுமாக குரு நோய் குறித்த ஆய்விற்கு அர்ப்பணித்த  Michael Alpers குறித்து வாசிக்க: https://cosmosmagazine.com/science/biology/the-man-who-linked-kuru-to-cannibalism/

சீஸ்

கடந்த மாதம் பிரான்ஸுக்கு தன் மனைவி கமீலாவுடன்  மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் வந்திருந்த இங்கிலாந்து  அரசர் சார்லஸுக்கு பிரத்யேகமாக சிறப்பு உணவுகளை ஃபிரான்ஸின்புகழ்பெற சமையல் கலைஞர்கள்தயாரித்திருந்தனர். சார்லஸுக்கு பிரியமான நீல சிங்கி இறால்,  கோழி இறைச்சியுடன் காளான், பிரான்ஸின்  Comte  சீஸ், பிரிட்டனின் நீல சீஸான Stichelton ஆகியவை மெனுவில் இருந்தன. 

Stichelton சீஸ்  உலகின் சிறப்பான ஐந்து சீஸ்களில் ஒன்று. Stilton போன்ற பிற  நீலசீஸ்களைப் போல இவையும்  பெனிசிலியம் பூஞ்சையின் ராக்போர்டி என்னும் சிற்றினத்தைக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றன என்றாலும் Stichelton  பாஸ்டுரைசேசன் செய்யப்படாத புத்தம் புது பாலில் உருவாக்கப்படுவது.

பிரான்ஸின் அல்சஸ் (Alsace) பகுதியை செர்ந்த புகழ்பெற்ற சீஸ் விற்பனையாளரும் நிபுணருமான பெர்னார்ட் ஆண்டனி  இந்த விருந்தை முன்னின்று கவனித்துக்கொண்டார்.

உலகின் முன்னணி சீஸ் நுகர்வோரை கொண்ட, உலகின் சீஸ் தலைநகரமான பிரான்ஸில் மட்டுமே ஆயிரக்கணக்கான சீஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. 

பால்கட்டியானசீஸ் மனிதன் உருவாக்கிய  உலகின் மிகப் பழமையான உணவுகளில் ஒன்று. எட்டிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளை மனிதன் உணவுக்கெனவளர்க்க துவங்கிய போதிலிருந்தேபால்கட்டியும்உருவாகப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.

இறைச்சிக்கெனகொல்லப்பட்ட விலங்குகளின் இரைப்பையில் நம் மூதாதையர் பால் சேமித்து வைத்திருந்த போதுஅதிலிருந்தரென்னட்டினால் பால் கட்டியானதை தற்செயலாக கவனித்து பின்னர் முறையாக பால்கட்டி செய்யத்துவங்கி இருக்கலாம்.  

வரலாறு

பண்டைய சுமேரியாவிலும் எகிப்திலும் ஏராளமாக சீஸ் உருவாக்கப்பட்டு உண்ணப்பட்டது.

3200 வருடங்களுக்கு முன்பான மிகப் பழமையான சீஸ் எச்சங்கள்  எகிப்தின் கல்லறைகளிலும் 7000திலிருந்து 9000 வருடங்களுக்கு முன்பானவை என்று கண்டறியப்பட்டிருக்கும் சீஸ்கள் மங்கோலியாவில் இருந்தும் கிடைத்திருக்கின்றன.

மெசபடோமியாவின்  அகழ்வாய்வுகளில் கிடைத்த  பொது யுகத்திற்கு 3000  வருடங்களுக்கு முற்பட்ட களிமண் கட்டிகளில் சீஸ் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

பண்டைய கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் சீஸ் பிரதான உணவாக இருந்திருக்கிறது. உலகின் பிற பாகங்களை காட்டிலும் ஐரோப்பாவில் தான்  பலவகைப்பட்ட சீஸ்கள் உருவாக்கப்பட்டன.பிரான்ஸின்1070 வருடத்தைய ஆவணங்களில் ராக்போர்டி நீல சீஸ்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 1477ல் Pantaleone da Cofienza  என்பவரால் ஐரோப்பிய சீஸ்களை குறித்த பிரத்யேக நூலான  Summa Lacticiniorum (“A Compendium of Milk Products”) வெளியானது. அந்த நூலில் சீஸ் ஆடு, மாடு, எருமைப் பாலிலிருந்து மட்டுமல்லாது ரெயின்டீர், குதிரை மற்றும் ஒட்டகப்பாலிலிருந்தும் உருவாக்கப்பட்டிருந்த தகவல்கள் உள்ளன.

பழங்காலத்தில் மென்மையானவை கடினமானவை என இருவகை பால்கட்டிகள் மட்டும் உருவாக்கப்பட்டன. மென்மையனவை உருவாக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலேயெ விற்கப்பட்டு புதியதாக உடனடியாக உண்ணப்பட்டன.பல நாட்கள் பழமையானவை கடின சீஸ்கள். அவை தொலைவுப்பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டன.

எகிப்திய சுமேரிய நாகரிகங்களுடன் இணைந்து  சீஸும் உருவாகி வளர்ந்தது.

கல்லறைக் கொள்ளையர்களின் கண்களில் படாமல் தப்பித்திருந்த கிமு  3000 த்தை சேர்ந்த ஒரு கல்லறை எகிப்தில் 1937ல்கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 60 வயதிருக்கும் ஒரு பெண்ணின் உடல் மறுவாழ்விற்கான அனைத்துப் பொருட்களுடனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. மிக விரிவான 14 வகை உணவுகள், தட்டுக்களில் பரிமாறப்பட்டிருந்தது. அவற்றில் சூப், இறைச்சி, கேக்குகள், சமைக்கப்பட்ட கனி வகைகள், ஒரு பெரிய சீசாவில் வைன், கோதுமை ரொட்டி மற்றும் மூன்று சிறிய கிண்ணங்களில் சீஸ் ஆகியவை இருந்தன.

இப்படி எகிப்தின் பல கல்லறைகளில் சீஸ் மற்றும் சீஸ்  மிச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய பிரபல சீஸ் வகையான halloumiயை போலவேயான சீஸ் 2500 வருடங்களுக்கு முன்பே எகிப்தில்உண்ணப்பட்டிருக்கிறது   என்கிறது எகிப்தின் சுற்றுலா மற்றும் பழங்காலப் பொருட்களுக்கான அமைச்சகத்தின் அறிக்கையொன்று.

கிமு 3000 to 2500 ல் பண்டைய சுமேரியாவில்ஆட்டுப்பால் மற்றும் மாட்டுப்பாலிலிருந்து  தயாரான சீஸ்  உண்ணப்பட்டிருக்கிறது. சுமேரியர்களின் காதல் தேவதையான இனனாவுடன் (Inanna’)  சீஸ் தொடர்புபடுத்தபட்டிருந்தது.   இனனாவின் கோவில்களில் சீஸ் படையலிடப்பட்டிருக்கிறது. 

இனானாவின் கணவரும் மேய்ப்பர்களின் கடவுளுமான டுமுஸியின் (Dumuzi) பிரசாதங்களாகவும்  சீஸ்  கருதப்பட்டிருக்கிறது. டுமுஸியின் சொத்துகளாக பாலும் சீஸும்தான் சுமேரிய தொன்மங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன

பண்டைய ரோமிலும் கிரேக்கத்திலும் சீஸ்கள் தேன்கலந்தும்,  சீவி எண்ணெயில் பொறித்தும் உண்ணப்பட்டன.

கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்ஸ்  (கிமு460-375 ) ஆட்டுப்பால்சீஸ் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். தத்துவஞானி அரிஸ்டாட்டில்(கிமு384-322 ) ஆட்டுப்பால்கட்டிகள் குதிரை அல்லது கழுதை பால் கட்டிகளுடன் கலந்து உண்ணப்பட்டதை குறிப்பிட்டிருக்கிறார். பிதாகொரஸ்  படைப்புகளிலும் சீஸ் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பண்டைய கிரேக்க தொன்மம் அரிச்டேயஸ் (Aristaeus) சீஸை கண்டுபிடித்தார் என்கிறது.  கிரேக்கம் மற்றும் ரோமானியநாகரிகங்களில்சீஸ்  விருப்பஉணவாகவும் பாலுணர்வு ஊக்கியாகவும்கருதப்பட்டது. 

சீஸ்கட்டிகள், சீஸ்இனிப்புக்கள் மற்றும் சீஸ் செய்முறைகள் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே ஏதென்ஸில் இருந்திருக்கின்றன. கிருஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வெது வெதுப்பான பால்கட்டிகள் உண்ணப்ட்டிருக்கின்றன.

ஜெஸ்ஸி தனது மகனாகிய தாவீதிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அவனது சகோதரர்களுக்கு பத்து ரொட்டிகளையும் பத்து சீஸ்துண்டுகளையும் கொண்டு செல்லுமாறு பணித்ததை விவிலியத்தின் பழைய ஏற்பாடு சொல்கிறது.

ரோமானியர்கள் புத்தம் புதிய சீஸுடன்அத்திப்பழங்களை கலந்து உண்ணுவதை பெரிதும் விரும்பினர்கள். வைக்கோல் புகையினால் பழமையாக்கப்பட்டு உப்பில் துவட்டப்பட்டு பைன் கோன்களும் மூலிகைகளும் சேர்க்கபட்ட சீஸ் அவர்களின் விருப்ப உணவாக இருந்தது.

ரோமானிய படை வீரர்களின் உணவில் ஆலிவ் உலர் திராட்சை மற்றும் சீஸ் ஆகியவை எப்போதும் இருந்தன. Feta என்பது கிரேக்கசீஸ்களின் அரசன் என கருதப்படுகிறது. இந்த சீஸ்தான் ஹோமரின் ஒடிசியில் குறிப்பிட்டிருப்பது. இதுவே வரலாற்றில் பதிவான மிகப் பழமையான சீஸ். Pietro Casola, என்னும் இத்தலிய பயணி கிரீட்டுக்கு 1494ல் வந்தபோது அங்கு அவர் கண்ட ஃபெடா உருவாக்கும் சேமிக்கும் முறைகளை பதிவு செய்திருக்கிறார்

 ‘’நாங்கள் குகைக்குள் நுழைந்தோம் ஆனால் அவன் அப்போது அங்கு இல்லை. பின்னப்பட்ட கூடைகளில் சீஸ் நிறைந்திருந்தது, அங்கிருந்த பல பாத்திரங்களில் கறந்த   பாலும் புரதமும் நிரம்பியிருந்தன என்று விவரித்திருக்கிறார் ஹோமர்.

உலகம் முழுவதற்கும் ஒரே கடவுள்  என்னும் மார்க்கத்தை கடைப்பிடிக்கும் Yazidism மதத்தினர், இந்த பூமி தெய்வீக லாலிஷ் மலைத்தொடரின் ரென்னட் வெண்ணருவி வழிந்து ஆதிபெருங்கடலில் கலந்து திரிந்துதான் உருவானது என்கிறது

பால்கட்டி பண்டைய  மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பல நாகரீகங்களில் பரவலாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவு என்பதை அகழ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.

9 அல்லது 8 கிமுவில் எழுதப்பட்டது என கருதப்படும் ஐரோப்பாவின் பழமையானதும் உன்னதமானதுமான ஹோமரின் பண்டையகிரேக்க கவிதை காவியமான  இல்லியட்டில் ட்ரோஜன் போரின் பத்துநாட்கள் விவரிக்கபட்டிருக்கின்றன.  

அத்திக்கனியின் சாறு பாலை திரியச் செய்து பாலாடைக்கட்டியாக மாற்றும் வேகத்துக்கிணையாக போர்க்கடவுளின் கோபம் குறைந்தது என்கிறார் ஹோமர்.

அத்திக்கனியிலிருக்கும் Ficin என்னும் நொதி பாலை தயிராக்கி சீஸை உருவாக்கும் என்பது பிற்பாடு ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது.

 வரலாற்றின் தந்தை என கருதப்படும்  ஹெரோடோட்டஸ் (Herodotus -கிமு484-408 “Scythian” சீஸ்களை குறிப்பிட்டிருக்கிறார்.  

ஆஸ்திரியாவின் உப்புச்சுரங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிமு 800லிருந்து 400க்குள் தயாரிக்கப்பட்டிருக்கும் நீல சீஸ்களும் பீரும்கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 

சீனாவின்  Xinjiang பகுதியின் கல்லறைகளில் நடந்த அகழ்வாய்வுகளில் 3600 வருட பழமையான பால்கட்டியின் மிச்சங்கள்  இருந்தது கண்டறியப்பட்டது. அதைபோலவே 3000 ஆண்டுகளுக்கு முன்பான பால்கட்டி எகிப்தின் ஒரு கல்லறையில்  ஜாடிக்குள் இருந்தது.

சிந்து சமவெளி நாகரிகத்தின்போது (கிமு3300–1300 ). இந்தியாவில் சீஸ்அறிமுகமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

பண்டைய இந்தியாவிலும் சீனாவிலும் சீஸ் சிறிதளவில் தான் உண்ணப்பட்டிருக்கிறது. கிமு1000 ல்எழுதப்பட்டதாக கருதப்படும் ரிக்வேதத்தில்  துளைகள் உள்ள மற்றும் இல்லாத இருவகைபால்கட்டிகள்  ’dadhanvata’ எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் குர்சிகா என்னும் பெயரில்  சீஸ்  குறிப்பிட்டிருக்கிறது

17ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல ஓவியங்களில் பால்கட்டிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

சீஸ்  மற்றும் சீஸ்தொழிற்சாலைகள் உருவான கதை

துல்லியமாக எங்கு எப்படி எவரால்சீஸ்உருவாக்கபட்டதுஎன்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை எனினும்  சீஸ்உருவானதற்கான கதைகள் உலகெங்கிலும் காபி தேநீர் உருவானதற்கு இருப்பதை போலவே இருக்கின்றன.

அதில் மிக பிரபலமானது அரபு வணிகர் கதை.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு இறந்த விலங்குகளின் இரைப்பையில் இருபக்கமும் முடிச்சிட்டு நீர், பால்,பழச்சாறு போன்ற  திரவங்களை பாலையில் நெடும் பயணம் மேற்கொள்பவர்கள்  கொண்டு செல்வது வழக்கம். அப்படி கறந்த ஒட்டகப் பாலை கொண்டுசென்ற அரேபிய வணிகர் ஒருவர் வெகுநாட்களுக்கு பிறகு அது கட்டியாக இருப்பதை கண்டிருக்கிறார். அது மிதந்து கொண்டிருந்த நீரை அருந்திவிட்டு அந்த பால்கட்டியை உண்ணுகையில் மிக சுவையாக இருந்தது எனவே பாலை  நெடுநாட்களுக்கு சேமித்து வைக்கும் வழியாக இரைப்பையில் ஊற்றி வைத்தால் பலநாட்களுக்கு உபயோகப்படுத்தும் வகையில் சுவையான பால்பொருளாக அது மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான் அந்த பிரபல கதை.

கிமு100ல் ரோமில் நூற்றுக்கணக்கான சீஸ் வகைகள் இருந்தன. ஜூலியஸ் சீசரின் காலத்தில் பலவகை சீஸ்கள் ரோமிலும் சுற்றியிருந்த பல பிரதேசங்களிலும்  முக்கிய உணவாக இருந்தன.ரோமில்  பலவிதமான சீஸ் வகைகள் உருவாக்கப்பட்டு உண்ணப்பட்டன. ரோமனியர்களே இங்கிலாந்துக்கும் சீஸ் தயாரிப்பைஅறிமுகப்படுத்தினர்

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குநாடுகளிலும் சீஸ் உற்பத்தியும்பயன்பாடும் செழித்து வளர்ந்துகொண்டிருந்த காலங்களில் வடக்கு மற்றும் தென்னமெரிக்காவில்  சீஸ் பற்றிய அந்த அறிதலும் இல்லாமலிருந்தது. ஐரோப்பிய குடியேறிகளால் அங்கு சீஸ் அறிமுகமாகி இருக்கும் என நம்பப்படுகிறது 

ஐரோப்பாவின் மடங்களில் மத குருமார்களால் சீஸ் உருவாக்கம் பலவிதங்களில் மேம்படுத்தப்பட்டது. உதாரணமாக கோர்கொன்ஸோலா (Gorgonzola) எனப்படும் வெண்ணெய் நீக்கபட்டிருக்காத மாட்டுப் பாலிலிருந்து உருவாக்கப்படும் இத்தாலியின் பிரபல நீல சீஸ்வகையை சொல்லலாம். அது இத்தாலியின் ’போ’ பள்ளத்தாக்கில்  (Po Valley)  879 A.Dயில்.துறவிகளால் உருவாக்கப்பட்டது. சீஸ் தயாரிப்பில்ஐரோப்பா செழித்து வளர்ந்து கொண்டிருந்தது. இத்தாலி 10 ம் நூற்றாண்டின்சீஸ் தயாரிப்பு மையமாக இருந்தது.

திபெத்திலும் மங்கோலியாவிலும் சீஸ்  அறிமுகமான போது  மலையாடுகளான யாக்கின் பாலில் சீஸ் தயாரிக்கப்பட்டது.

ஆசியாவுக்கு வந்த ஐரோப்பிய பயணிகள் 1615ல் சீஸ்  உருவாக்கும் கலையை அங்கு அறிமுகப்படுத்தினர். ஆசியாவில் சீஸ் பயன்பாடு ஐரோப்பாவின் அளவுக்கு அன்றிலிருந்து இன்று வரையுமே இல்லை எனினும் சீஸ் உணவு அங்கு அறிமுகமாயிருந்தது.

சீனாவில் சீஸ் உபயோகம் மிக குறைவாகவே இருந்திருக்கிறது. 14 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில்  மிங் வம்சஆட்சியில் தெற்கு சீனாவில் “rushan” என்னும் சீஸ் வகை அரசர்களின் உணவில் இடம்பெற்றிருந்தது. அந்த சீஸ்  முழு மீனுடனும் நூடுல்ஸுடனும் முட்டைக்கோஸுடனும் கலந்து  விரும்பி உண்ணப்பட்டன.

கொதி நீரில் அமிழ்த்தி  நூல் போல பிழிந்து, வெட்டப்பட்ட கயிறுகளாகவும் அப்போது சீஸ்  உண்ணப்பட்டது. இன்றும் அப்படியான சீஸ் சரடுகள் யுனான் பிரதேசத்தில் கிடைக்கின்றன. 

உலகெங்கிலும் சீஸ் உண்ணுதல் பிரபலமாகி இருந்தாலும் 19ம் நூற்றாண்டு வரை  அது குடிசைத் தொழிலாகத்தான் இருந்தது. அமெரிக்காவில் 17ம்நூற்றாண்டில் சிறிய அளவில் சீஸ் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது,

1773ல்  ஒஹையோவில் குடியேறிய இங்கிலாந்துக்காரர்களால் சீஸ் உற்பத்தி பண்ணைகளில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்தது. ஓஹையோவில் மேற்குப்பகுதி பின்னர்  தொடர்ந்த 50 ஆண்டுகளுக்கு  “Cheesedom” என்று அழைக்கப்பட்டது.150 வருடங்களுக்கு ஒஹையோவும் நியூயார்க்கும் அமெரிக்க சீஸ் உற்பத்தியின் பெரும் பங்கை தயாரித்தன.

1830-1840களில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து குடியேறிய   சிலரால் விஸ்கான்ஸின் பால்கட்டி தொழிற்சாலை துவங்கப்பட்டு வெற்றிகரமாக சீஸ் உற்பத்தி துவங்கியபோது அப்பகுதி விவசாயிகள் அனைவருக்கும் அவர்கள் எதிர்காலம் சீஸ் கட்டிகளாலானது என்பது புரிந்தது. அவர்கள் அனைவரின் கூட்டு ஸ்தாபனமாக1868ல் லிம்பர்கர்(Limburger) நகரில் மென்மையான வெள்ளை சீஸ்   மொத்த வியாபார நிறுவனம் முதன் முதலில்  வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

 அமெரிக்க மக்கள் தொகை பெருகிய போது சீஸ்தேவையும் பெருகியது. சீஸ் தொழிற்சாலைகள் அமெரிக்க பண்ணைகளில் வேகமாக உருவாகத் துவங்கின,  அமெரிக்காவின் முதல் பெருமளவில்  சீஸ் தயாரிக்கும்  தொழிற்சாலை பண்ணை விவசாயியான  ஜெஸ்ஸி வில்லியம்சால் 1851ல் துவங்கப்பட்டு மிக வெற்றிகரமாக சீஸ் உற்பத்தி நடைபெற்றது.

பிரிட்டனில் 17ம்நூற்றாண்டில் உருவாக துவங்கிய போது எழுந்த தொழில் புரட்சி மேலும் சீஸ் தொழிலை விரிவாக்கியது.

அமெரிக்காவிலிருந்து புதிய சீஸ் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்ட பிரிட்டன் மிக சிறப்பான புதிய வகை சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை 1851ல் அமைத்தது. அங்கு பெருமளவில் சீஸ் தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது. 

ஈராக், துருக்கி, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலும்சீஸின் சுவை வேகமாக பரவியது.

1860களில் ரென்னட் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டபோது  உலகெங்கிலும் சீஸ் தொழிற்சாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு ஏராளமான சீஸ் தயாரிக்கப்பட்டது

1880ல் நெதர்லாந்தில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான சீஸ் தொழிற்சாலைகள் உருவாகி, 17 மில்லியன்டாலர்கள் பெறுமானமுள்ள 216 மில்லியன் பவுண்டு  சீஸ் தயாரிக்கப்பட்டது. 1904 ல்317 பவுண்டு சீஸ் ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்த வருடங்களில் பன்மடங்கு அதிகமான சீஸ்தேவை ஏற்பட்டு அதற்கேற்ப பால் உற்பத்தியும் அதிகரித்தது.1920ல் 418 மில்லியன்பவுண்டுகள் இருந்த சீஸ் உற்பத்தி 1970ல் 2.2 பில்லியன்பவுண்டுகளானது. 1990களில் மொத்த உற்பத்தி 6 பில்லியன் பவுண்டுகளாயிருந்தது.

தற்போது அமெரிக்காவின் மொத்த பால் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு  சீஸ் தயாரிப்புக்கென உபயோகிக்கப்படுகிறது

சத்துக்கள் நிரம்பிய, சுவையான, பல காலம்  சேமித்து வைக்கக்கூடிய சீஸ்  உலகின் பல நாகரிகங்கள் தோன்றி வளர முக்கிய காரணமாயிருந்தது

சீஸ் உருவாக்கம்

 சீஸ் உருவாக்குகையில் பால் மிதமான வெப்பத்தில் இருக்க வேண்டும்.பால் பாஸ்டுரைசேசன் செய்யப்பட்ட பின்னர் அதை தயிராக்கும் நுண்ணுயிர்கள் சேர்க்கப்படும். அந்த தயிரில்  சீஸை உருவாக்கும் ரென்னட் சேர்க்கப்படும். 

பாலின் புரதங்கள் கெட்டியாகி  திரண்டு அடர்த்தியாகி  நீர் புரதத்தை வெளியேற்றி கொழுப்பை சேர்த்து வைத்துக் கொண்டு பால்கட்டியாகின்றது. இதுவே சீஸ் /பால்கட்டி. 

 இரண்டு நிலைகளில் சீஸ் தயாரிக்கப்படுகிறது. ஒன்று பாலை ரென்னட் கொண்டு கட்டியாக்குவது இரண்டு அதை பழமையாக்குவது

ரென்னட்டில் கைமோஸின் என்னும் நொதி இருக்கிறது, அதுவே பாலிலிருக்கும் கீஸின் புரத்தை திரளச்செய்து ஒன்று திரட்டிகெட்டியாக்கி வேபுரதத்தை (தயிர் நீர்) தனித்து பிரித்தெடுத்து சீஸை உருவாக்குகிறது 

சீஸ் தயாரிப்பென்பது பாலிலிருக்கும் நீரை வெளியேற்றி கொழுப்பையும் கேஸின் புரதத்தையும் 6 லிருந்து 12 மடங்கு அடர்த்தியாக்குவதுதான்.

சீஸ் உருவான பின்னர்  அவை அழுத்தப்பட்டுவே (Whey) புரதம்தனித்தும், அழுத்தப்பட்ட மென்மையான சீஸ்தனியாகவும்பிரிக்கப்படும். 

பிறகு சீஸ்கள் அப்படியே புதியதாகவும் அல்லது பழமையாக்கப்பட்டும் விரும்பிய வடிவங்களில் வெட்டப்பட்டு சந்தைப்படுத்தபடுகின்றன. பழமையாக்குதலுக்கு முன்பாக சீஸில் உப்பு தூவப்படும். உப்பு தூவுதல் சீஸுக்கு பிரத்யேகசுவையை அளிக்கவும் அவற்றை பாதுகாக்கும் செய்யப்படுகிறது. உப்பில்லா சீஸ்களும் இருக்கின்றன.

உலகின் மிக புகழ்பெற்ற செடார் சீஸ்கள் 3 செமீ கனமுள்ளஅட்டைகளாக வெட்டப்பட்டு ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு அவற்றின் எடையினால் நீர் புரதம் முழுக்க வெளியேற செய்து பின்னர் உருவாக்கப்படுபவை. இதுவே செடாரிங் “cheddaring.”  எனப்படுவது.

பெரும்பாலான சீஸ்கட்டிகள் இறுதியில் பல வடிவங்களும் துளைகளும் கொண்ட அச்சுக்களில் வைத்து அழுத்தப்பட்டு உருவாகின்றன.

பழமையாக்குதல்

சீஸ் உருவாக்கத்தில்  பழமையாக்குதல் என்பது மிக நுட்பமான பகுதி

சில சீஸ் வகைகள் தயரானதுமே புத்தம் புதிதாக  உண்ணப்படுகின்றன. பெரும்பாலான சீஸ் வகைள்பழமையாக்கப்பட்டு பின்னரே சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த பழமையாக்குதல் இரண்டு வாரங்களிலிருந்து 2 வருடங்கள் வரை நீளும்

Mozzarella சீஸ் இரண்டு வாரங்கள் பழமையாக்கப்படுகின்றது. Parmigiano-Reggiano இரண்டு வருடங்கள் பழமையாக்கப்பட்டது

புதிதாக இருக்கையில் இருக்கும் ரப்பர் போன்ற   இழுவைத் தன்மை முற்றிலும் நீங்கி மிருது தன்மையை அளிக்கிறது பழமையாக்குதல்.

பழமையாக்கலில் ரென்னட்டின் நொதிகளால் உண்டாகும்  வேதி வினைகளும் நுண்ணுயிரிகளின் செயல்பாடும் இருக்கிறது பழமையாக்கலின் போது லாக்டிக் அமிலம் சிட்ரிக் அமிலம் பால் கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை பலவித நறுமணம் கொண்ட பொருட்களால் மாற்றமடைகின்றன.

மேலும் சீஸ் உருவாகும் போது இருக்கும் பாக்டீரியாக்கள் அவை பழமையாகும்போது  இருப்பதில்லை. இந்த பாக்டீரியாக்களின் உடலிலிருக்கு ம்நொதிகள்  சீஸில் கலந்து பழமையாக்குதலின்போது பிரத்யேக நறுமணத்தை உண்டாக்குகின்றன. எனவேதான் பலவகைப்பட்ட பாலிலிருந்து தயாராகும் சீஸ்கள் பலநூறு வகை நறுமணங்களும் சுவையும்  கொண்டிருக்கிறது

பழமையாக்கலின் போதும் லாக்டிக்அமிலத்தில் உண்டாகும் மாற்றம்  கரியமில வாயுவை உண்டாக்கி ஸ்விஸ் சீஸ்களின் துளைகளுக்கு காரணமாயிருக்கிறது .

சீஸ்கள் பல விதங்களில்பழமையாக்கப்படுகின்றன. நறுமணமிக்க இலைகளைக் கொண்டும், சாம்பல் கொண்டு புகையிட்டும் எரிசாராயத்தில் ஊற வைத்தும் பழமையாக்கல் நடைபெறும். பழமையாக்கல் முறைகள் அனைத்தும் சீஸ்களில் பாக்டீரியா வளராமல் இருக்கவும் அவற்றின் பிரத்யேக சுவைக்கும் காரணமாகின்றன. சிலவற்றில் மேற்புறம் மெழுகு பூசப்படுகிறது. நீல சீஸ்களில் பெனிசிலியம் ராக்போர்டி என்னும் பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் தூவப்படுகின்றன. ராக்போர்டி நீல சீஸ் அதிக உப்புச்சுவையும் நல்ல நெடியும் கொண்டது. உள்ளே ஓடும்  பூஞ்சைக்காளானின் நீல நூலிழைகள்  இருக்கும் இந்த சீஸ் உலகின் பிரபலமான சுவையான சீஸ்களிலொன்று.  

சீஸ் நுண்ணுயிரிகள்

பாலில் இருக்கும் லேக்டோ பேசில்லஸ் பாக்டீரியாக்கள் பாலை புளிக்கச் செய்பவை. இவையே சீஸ்களின் வெண்ணெய் போன்ற தன்மைக்கும் சுவைக்கும் முக்கிய காரணமாயிருப்பவை.

Penicillium candidum பூஞ்சை சீஸின் வெளிப்புறமிருக்கும் பழுப்பு விளிம்பை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

இன்னும் சில பிரத்யேக  ப்ரொப்பயானிக் பாக்டீரியாக்கள் சுவிஸ்சீஸில் இருக்கும் துளைகளுக்கு காரணமான கார்பன் டை ஆக்ஸைடைஉருவாக்குபவை. E. von Freudenreich  என்னும் நுண்ணியலாளர் 19 ம்நூற்றாண்டின் இறுதியில் Emmental சீஸ்  உருவாக்கத்தில் ப்ரொபியானிச்அமிலத்தின் பங்கு குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது கண்டுபிடித்த  புதிய வகை பாக்டிரியா அவர் பெயராலேயே (Propionibacterium freudenreichii subsp. shermani என்று அழைக்கப்பட்டது. 

இந்த பாக்டீரியா  டாம்&ஜெரி கார்ட்டூன் சித்திரத்தில் ஜெரியின் பிரியத்துக்குரிய, துளைகள் கொண்டிருக்கும் பொன் மஞ்சள் நிற  ஸ்விஸ் சீஸின்உருவாக்கத்தில் பயன்படுகிறது. 

சீஸ் உருவாக்கத்தின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடினால் உருவாகும் இந்த துளைகள் சீஸின் கண்கள் என அழைக்கப்படுகின்றன. துளைகள் இல்லாத சுவிஸ் சீஸ் குருட்டு சீஸ் (Blind Cheese) என்றழைக்கப்படுகிறது.

ஸ்விஸ் சீஸ் இப்போது சுவிட்ஸர்லாந்தில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் தயாராகின்றன. இந்த வகை சீஸ்கள் முதலில் உருவாக்கப்பட்டபோது  இத்துளைகள் சீஸின் குறைபாடுகளாக கருதப்பட்டு அவற்றை சரிசெய்ய பல முயற்சிகள் செய்யப்பட்டன. இப்போது துளைகளே சுவிஸ் சீஸ்களின் பிரத்யேக அடையாளமாகிவிட்டிருக்கிறது

அமெரிக்காவில் 1960களிலிருந்து மிக நுண்ணிய துளைகள் கொண்டிருக்கும்  பேபி சுவிஸ் சீஸ்கள் உருவாக்கப்படுகின்றன.

 தெற்கு பிரான்ஸின் ராக்ஃபோர்ட் பிரதேசத்தில் உருவான நீல சீஸ் குறித்து ஒர் பழங்கதை உண்டு

அங்கிருந்த ஒரு குகையில் சீஸ் உண்டு கொண்டிருந்த ஒரு இளைஞன் தூரத்தில் சென்ற அழகிய இளம்பெண் ஒருத்தியை கண்டு அப்படியே சீஸை குகையில்விட்டுவிட்டு அவளை தேடி சென்று விடுகிறான்.  பலமாதங்கள் கழித்து வந்து பார்க்கையில் குகையிலிருந்த சீஸ் பெனிசிலியம் ராக்ஃபோர்டி (Penicillium roqueforti) என்னும் நீலப்பூஞ்சையால் நீலமாயிருந்ததையும், அதன் உண்ணத்தூண்டும் வாசனையால் உண்ணும்போது அது முன்னைக்காட்டிலும் மிக சுவையாக இருந்ததையும் கண்டு அதன் பின்னரே நீல சீஸ்கள் இருந்தது என்கிறது அந்தக்கதை.

பாஸ்டுரைசேசன்எனப்படும் குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலில் இருக்கும் நோய்க்கிருமிகளை நீக்குதல் நடைபெறாதபாலிலிருந்து உருவாகும் சீஸ்களினால் உண்டாகும் ஆரோக்கிய கேடுகளும் கவனத்தில்கொள்ளவேண்டியவை. ஆஸ்திரேலியாவில்  பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலிலிருந்து சீஸ் உருவாக்குதல் தடை செய்யப்பட்டிருக்கிறது

லிஸரியா என்னும் மனித உடலில் ஒட்டுண்ணியாக தங்கி நோய் உண்டாகும் பாக்டீரியாகள் இருக்கும் சாத்தியம் கொண்ட நீல சீஸ்  கருக்கலைப்பை உண்டாக்கும் அபாயம் இருப்பதால் கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்துகிறது. 

எப்போதும் பாக்டீரியாஈஸ்ட் மற்றும் இழைப்பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிர்கள் இருந்து கொண்டிருப்பதால் சீஸ்அலைவ் (Alive) உயிருள்ளது என்றே குறிப்பிடப்படுகிறது 

இந்த சீஸ் நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்று பகுதியில் வழக்கமாக இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிர் குழாமுடன் எப்படி செயல்புரிகிறது, வாழிடங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்கின்றன என்பதுகுறித்த ஆய்வுகள் இன்னும் துவங்கவில்லை எதிர்காலத்தில் நுண்ணுயிராய்வுகளில் இது மிக இன்றியமையததாக இதுவே இருக்கலாம்.

ரென்னட்

அசைபோடும் விலங்குகளின் இரைப்பைச் சுவற்றில் இருக்கும் சிக்கலான பல நொதிகளின் கலவைதான் ரென்னட். ரென்னட்டில்லி பேஸ், பெப்ஸின் மற்றும் கைமோசின் உள்ளிட்ட பல நொதிகள் இருக்கின்றன. இவற்றில் கைமோஸின் பால் புரதமான கேசீனை கெட்டியாக்கி திரளச்செய்கிறது. ரென்னட் சேர்க்கப்படும் போதுதான் சீஸ் தனியாகவும்  திரவப்புரதமான வே தனியாகவும் பிரிந்து வருகிறது. 

விலங்கு ரென்னட்களுக்கு இணையாக தற்போது பாக்டீரியாக்களிலிருந்தும் ரென்னட் எடுக்கப்பட்டு சீஸ் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது

பாலருந்தும் இளம் கன்றுகளின் இரைப்பையின் நான்காவது அறையின் சுவற்றில் (abomasum) இருக்கும் ரென்னெட் அந்த தோல் பகுதியை தனித்து பிரித்தெடுத்து அதிலிருந்து சேகரிக்கப்படுகிறது

முதிர்ந்த விலங்குகளின் இரைப்பை சுவற்றில் ரென்னட் மிக மிககுறைவாகவே இருக்கும். எனவே இளம் கன்றுகள் இறைச்சிக்கென கொல்லப்படுகையில் அவற்றின் வயிற்றுப்பகுதி ரென்னட்டுக்கென எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இப்படி சேகரிக்கப்பட்ட வயிற்றுப்பகுதி சிறு துண்டுகளாக்கப்பட்டு உப்பு நீரிலோ அல்லது ’வே’ புரதநீரிலோ சில நாட்களுக்கு வினிகருடன் கலந்து ஊறவைக்கப்படுகிறது பின்னர் பிழிந்து வடிகட்டப்பட்டு, சாறெடுக்கப்பட்டுரென்னட் திரவம் தயாராகிறது. இந்த ரென்னட்டின்1 கிராம் சுமார் 4 லிட்டர் பாலை திரளச்செய்கிறது

நவீன உயிர் தொழில்நுட்பத்தின் மூலமும் ரென்னெட் விலங்கு இரைப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது

ஒரு கிராம் ரென்னட்டில் சுமார் 0.7 கிராம் நொதிகள் இருக்கும்  1 கிலோ சீஸில் சுமார்  0.0003 கிராம் ரென்னட் நொதிகள் பயன்பட்டிருக்கும்.

பண்டைய கிரேக்கத்தில் ரென்னட் இளம் மான்கள் உள்ளிட்ட மற்றும்  பல விலங்குகளிருந்தும்  அத்திக்கனியிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கிறது  

சைவர்களுக்காக தக்காளி உருளைக்கிழங்கு குடும்பமான சொலனேசியை சேர்ந்த தாவரமான Withania coagulansன் கனிகளிருந்து ரென்னட்டுக்கு இணையான நொதிகள் எடுக்கப்பட்டு சீஸ் தயாரிக்கப்படுகிறது

அத்திக்கனி, எலுமிச்சைச் சாறு, Mucor mieheiஎன்னும் பூஞ்சை, Cynara thistle மலர்கள் ஆகியவற்றிலிருந்தும் ரென்னட்டுக்கு இணையாக தயிரை சீஸ் ஆக மாற்றும் நொதிகள்எடுக்கப்படுகின்றது.அன்னாசிப்பழங்களில் இருக்கும் ப்ரோமெலினும்  bromelain சீஸ்தாயாரிப்பில் பயன்படுகிறது

தாவர ரென்னட் குறித்து அரிஸ்டாட்டில் அத்திக்கனியை பிழிந்தசாற்றை ஒரு சிறு துண்டு கம்பளியில் நனைத்து அந்த கம்பளியை கழுவிய நீரை பாலில் கலந்து பாலை திரியச் செய்துகெட்டியாக்குவது குறித்து விளக்கியிருக்கிறார்.  

விலங்குப் பால்பொருட்களைஉண்ணாத தீவிர சைவர்களுக்கென  கோதுமைப்பால், சோயாப்பால், அரிசிப்பால் மற்றும் முந்திரிப்பாலிலிருந்து சீஸ் உருவாகப்படுகின்றது. இவை எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் உபயோகபடுத்தி திரளச் செய்யப்படுகின்றன.

சீஸ் சுவையும் நிறமும் மணமும்

சீஸின் சுவை மணம் ஆகியவை அது உருவாக்கப்பட்ட பாலை அளித்த விலங்கு, அவ்விலங்கின் உணவு பாலின் கொழுப்பின் அளவு ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது

சில வகை சீஸில் கிராம்பு குருமிளகு போன்ற மசாலா பொருட்கள், பழத்துண்டுகள், பூண்டு ஆகியவையும்சேர்க்கப்படுகிறது.

சீஸ் வெள்ளை, பழுப்பு, ஆரஞ்சு, அடர் பழுப்பு, நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். இவற்றில் ஆரஞ்சு நிறம் இயற்கையாக பாலிலிருந்து அல்லாமல் சாய மரத்திலிருந்து கிடைக்கும் அன்னட்டொ  (annatto)  எனும்சாயத்தை கொண்டு உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஆரஞ்சு சீஸ் மிக பிரபலமான பால் உணவு 

 பெரும்பாலான சர்வதேச சீஸ் வகைகள் ரென்னட் கொண்டு கெட்டியாக பட்டவை.உதாரணங்களாக  செடார். கெளடா மெஜெல்லா, ஸ்விஸ்நீலம், கேமெம்பெர்ட் ஆகியவற்றை      சொல்லலாம் (e.g., Cheddar, Gouda, Mozzarella, Swiss, Blue, Camembert).

அமிலங்களை கொண்டு உருவாகும் சீஸ்களுக்கு உதாரணமாக குவார்க், காட்டேஜ் சீஸ் ஆகியவற்றை சொல்லலாம்.(Cottage cheese and Quark)

ஸ்பெயினின் மெல்லிய புளிப்பு சுவை கொண்ட Manchego ஆட்டுப்பால்சீஸ், பின்னப்பட்ட வைக்கோல் அச்சுக்களில் வைத்து அழுத்தி தயாரிக்கப்படுகிறது. வைக்கோல் பின்னலின் வடிவம் இந்த சீஸின் மேற்புறத்தில் பதிந்திருக்கும் சீஸ்களை கொண்டு ஊறுகாய்களும்  தயாரிக்கப்படுகின்றன. Feta போன்ற உப்பு நீரில் ஊறவைக்கப்பட்ட  சீஸ் ஊறுகாய்கள் உலகின் பல பாகங்களில் புழக்கத்தில் உள்ளன.  

உப்பு நீரில் ஊற வைத்த சிறிதாக பந்துகளைப்போல்உருட்டப்பட்ட   ஆட்டுப்பால்கட்டி  ஊறுகாய்கள் உலகப்பிரசித்தம் .

சீஸில் வைட்டமின்களும் சர்க்கரையும் கொழுப்புசத்தும்  புரதமும் இருப்பதால்  இது ஒரு சத்தான முழுமையான உணவு.

சீஸ் வகைகள்

சீஸ் வகைகளை தரம் பார்த்து தேர்ந்தெடுக்கவும் பழமையாக்கவும் சேமித்துவைக்கவும் விற்பனை செய்யவும் அறிந்த வல்லுநர் cheesemonger எனப்படுகிறார்

ஒவ்வொரு சீஸ்வகையின் பின்னும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.அந்தசீஸ்  உருவான பிரதேசம், அதன் கலாச்சாரம் அதன் வரலாறு ஆகியவற்றினால் அந்த சீஸ் வடிவமைக்கப்பட்டிருக்கும் 

நல்ல நெடிகொண்ட பல சீஸ் வகைகள் துறவிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆல்ஹகால் கொண்டு கழுவப்பட்டு பிரத்யேக நறுமணமும் சுவையும் பெறும்  சீஸ்களில் பிரபலமானவை  Beaufort, Reblochon  ஆகியவை. இம்முறையும் துறவிகளால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பிரபல ப்ரைசீஸ் (bri), 7ம் நூற்றாண்டில் துறவிகளால் உருவாக்கப்பட்டது.

துறவிகள் 12ம் நூற்றாண்டில் கண்டுபிடித்த சீஸ்களில் முதன்மையானது  சீஸ் அரசன் எனப்படும் Parmesan சீஸ் .

பெரும்பாலான சர்வதேச சீஸ் வகைகள் ரென்னட் கொண்டு கெட்டியாகப்பட்டவை. உதாரணங்களாக  செடார், கெளடா மஜெல்லா, ஸ்விஸ் நீலம் கேமெம்பெர்ட் ஆகியவற்றை  சொல்லலாம் (Cheddar, Gouda, Mozzarella, Swiss, Blue, Camembert).

அமிலங்களை கொண்டு உருவாகும் சீஸ்களுக்கு உதாரணம் குவார்க் மற்றும் காட்டேஜ் சீஸ் ஆகியவை (Cottage cheese & Quark)

ஸ்பெயினின் மெல்லிய புளிப்பு சுவை கொண்ட Manchego ஆட்டுப்பால் சீஸ், பின்னப்பட்ட வைக்கோல் அச்சுக்களில் வைத்து அழுத்தி தயாரிக்கப்படுகிறது. வைக்கோல் பின்னலின் வடிவம் இந்த சீஸின்மேற்புறத்தில் பதிந்திருக்கும். உலகின் பிரபல சீஸ் வகைகளில் ரிக்கோட்டாவும் ஒன்று.

சீஸ்களை கொண்டு ஊறுகாய்களும்  தயாரிக்கப்படுகின்றனFeta போன்ற உப்பு நீரில் ஊறவைக்கப்பட்ட  சீஸ்ஊறுகாய்கள்உலகின் பல பாகங்களில் புழக்கத்தில் உள்ளன.  

உப்பு நீரில் ஊற வைத்த சிறிதாக பந்துகளைப்போல்உருட்டப்பட்ட   ஆட்டுப்பால்கட்டி  ஊறுகாய்கள் உலகப்பிரசித்தம் .

 சீஸ் அறிவியல்

சீஸ் தயாரிப்பு நுண்ணியிரியல், வேதியியல், கால்நடையியல், விலங்கியல்,தாவரவியல், பாய்மவியல் (rheology), ஊட்டச்சத்தியல் ஆகிய அறிவியல் துறைகளுடன் தொடர்புடையது

சீஸ் உருவாக்குதல் மிகபழைய காலத்தின் கலை என்றாலும் நவீன தொழில்நுட்பம் சீஸ் தயாரிப்பில் பல புதுமைகளை புகுத்தி உள்ளது. சீஸ் தொழிற்சாலையில் உலகின் மற்ற அனைத்து தொழிற்சாலைகளையும் விட அதிக நொதிகளை உபயோகிக்கிறது. அதுபோலவே சீஸ்நொதித்தலும்,  பழமையாக்கலும் வேதியியல் ரீதியாக மிக  சிக்கலானது, முக்கியமானதும் கூட.

 உற்பத்தி மற்றும் நுகர்வு

2022ல் உலக சீஸ் உற்பத்தி சுமார் 22.17 மில்லியன் மெட்ரி டன் ஆக இருந்தது. இதில், முன்னணி உற்பத்தியாளராக நீடிக்கும்  ஐரோப்பாவின் பங்கு மட்டும் 10.55 மெட்ரிக்டன் 

சர்வதேச பால் பொருட்களின் குழுமம் மிக அதிக சீஸ் உண்ணும் நாடாக பிரான்ஸை அறிவித்திருக்கிறது. அதனை நெருக்கமாக தொடர்கிறது இத்தாலி 

பிரான்ஸ் ஐஸ்லாந்து பின்லாந்து டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனி நபர் சீஸ் நுகர்வு  ஆண்டுக்கு 25 கிலோ   

இந்தியாவில் சீஸ்

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தும் இந்தியா 35% பாலை மட்டும் சீஸ்உற்பத்திக்குபயன்படுத்துகிறது.

 உலக சீஸ் நுகர்வு தனிநபருக்கு சராசரியாக 7கிலோ. ஆனால் இந்தியாவில் தனிநபர் சராசரி சீஸ் நுகர்வு வெறும் 200 கிராம் மட்டுமே 

பீட்ஸா பர்கர்உணவகங்கள் இந்தியாவில் அதிகரித்து கொண்டிருப்பதால் இனி இந்தியாவின் சீஸ் உற்பத்தியும் நுகர்வும் பெருமளவில் அதிகரிக்கலாம்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் சீஸ் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகம் உண்ணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சீஸில் சரிபாதி இந்த இரு மாநிலங்களில் உபயோகிக்கபடுகிறது.

  • சீஸ் என்னும் சொல் லத்தீனcaseus  எனும்பாலின்  கேஸின் (casein) புரதத்தைகுறிக்கும்சொல்ல்லிருந்துஉருவானது
  • உலகின் பல மொழிகளிலும்சீஸ் என்னும் சொல்லின் உச்சரிப்புக்கு இணையான சொற்களேபால்கட்டியைகுறிக்கபயன்பாட்டில் இருக்கின்றது
  • சீஸ்களில் கொழுப்பு புரதம்கால்சியம்பாஸ்பரஸ் சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன. மிகச்சத்தானஉணவுதான் எனினும்  அதிகப்படியான சீஸ் உண்ணுதல் இதயநோய்களுக்குகாரணமாகும் என்று எச்சரிக்கப்படுகிறது
  • உலகில் தற்போது 2000 வகையான சீஸ்கள் இருக்கின்றன. அவற்றும்மிகப்பிரபலாமனதும் மிக அதிகம் உண்ணப்படுவதும்பீட்ஸாக்களில் இருக்கும் Mozzarella சீஸ்.
  • இங்கிலாந்தின் சில பகுதிகளில் மாபெரும் சீஸ்உருளைகளைசரிவான சாலையில்  உருட்டிச் செல்லும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அந்த சீஸ் உருளை பரிசளிக்கப்படும்
  • உலகின் மிக விலைகொண்டசீஸ்  பால்கன்கழுதைப்பாலில்செய்யபட்டபுயூல்  சீஸ் (Pule) இது ஒரு கிலோ ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான விலை கொண்டது
  • மணல், மெழுகு, ஐஸ் சிற்பங்களை போலவே சீஸ்சிற்பக்கலையும் இருக்கிறது.
  • சீஸ்லேபிள்களை தொடர்ந்து சேகரிப்பவர்களும் உண்டு இந்த சீஸ்லேபிள் மீதான பிரேமை  “tyrosemiophilia”.எனப்படுகின்றது
  • குழு புகைப்படங்கள்எடுக்கையில்சீஸ் என்று சொல்லி புன்னகைக்கவைப்பது1930களில்வழக்கத்துக்கு வந்து உலகெங்கும் பரவியது. 

நீல சீஸின்பிரத்யேகநெடியிலிருந்து, ப்ரை’யின் மனம் மயக்கும்  கிரீம் சுவையின் இன்பம் வரை, ஒவ்வொரு சீஸ்வகையும் கலாச்சாரம், புவியியல் அறிவியல் மற்றும்   புதிய உணவுக்கான மனிதனின் தீராத தேடல் ஆகியவற்றின் கதையைச் சொல்கிறது.

சீஸ் தனியாக உண்ணப்பட்டாலும் வைனுடன் சேர்த்துக் கொண்டாலும் உணவின்  ஒரு பகுதியாக இருந்தாலும் உலகெங்கிலும் சிறப்பான சுவைக்கான உத்திரவாதத்தை அளிக்குமொன்றாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது.  அடுத்த முறை நீங்கள்  சீஸ்  துண்டொன்றை சுவைக்கையில் அதனுடன் இணைந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தையும், அதை உருவாக்கிய ஒரு ரசனை மிகுந்தவரையும் அதனுடன் இணைந்த ஒரு கதையையும் தேடி கண்டடைந்து மனதிற்குள்ளாகவாவது பாராட்டுங்கள் .

இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையிலேயே மேலும் புதிய சீஸ் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடும்.  Say  cheese!

ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு

அறிவியல் ஆய்வுகளின் முன்னோடி என்று கருதப்படும் வில்லியம் டேம்ப்பியர். (William Dampier) 17/18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இளம் வயதில் பெற்றொரை இழந்த இவர் 16  வயதிலிருந்தே  கடல் சாகசப் பயணங்களை மேற்கொண்டவர். அவகேடோ, பார்பிக்யூ, பிரெட் ஃப்ரூட் கட்டமரான், சாப்ஸ்டிக்ஸ் (Avocado, Barbecue, Breadfruit, Cashew, Catamaran, Chopsticks ) போன்ற பல நூறு சொற்களை உலகிற்கு தனது கடற்பயண நூல்களில் முதன் முதலில் எழுதி அறிமுகப்படுத்திய இவர் ஒரு கடற்படை தலைவர், மாலுமி, இயற்கையாளர் மற்றும் உலகை மூன்று முறை கடல் வழி சுற்றி வந்த முதல் மனிதர் என்னும் பெருமைக்குரியவரும் கூட. 1697 ல் வெளியான இவரது A New Voyage Round the World  மிகப்பிரபலமான கடற்பயண நூல்.

வில்லியம்  தனது பயணங்களில் பல இனக்குழுக்களை சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வின் இயங்கியலை அறிந்துகொள்வதிலும் இயற்கையின் அம்சங்களைக் கூர்ந்து அவதானிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். அவரது கடல்பயண அனுபவங்களை பல நூல்களாக எழுதியிருக்கிறார். அப்படி ஒரு நூலில் போர்ச்சுக்கீசியர்கள் ஒரு மரத்தின் பெயரை காஜு என்று பெயரிட்டிருப்பதை செவிவழி கேட்டு அதை கேஷூ என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார் என்கிறது வரலாறு அப்படி வில்லியம்ஸினால்  கேஷு என்று குறிப்பிடப்பட்டதுதான் நமது முந்திரி மரம்.

Anacardium occidentale  என்னும் அறிவியல் பெயருடைய பசுமை மாறா முந்திரி மரங்கள்  மத்திய மற்றும் வடகிழக்கு பிரேசிலை சேர்ந்தவை. ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு முன்பு அங்கிருந்த பழங்குடியினரால் இம்மரம் , மருந்து மற்றும் எரிபொருளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது

1558ல் ஃப்ரென்ச் இயற்கையாளர் திவெட்’டினால் (Thevet)  முந்திரியின் முதல் சித்திரம் வெளியானது 16ம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுக்கீசியர்கள் பிரேசிலிலிருந்து முந்திரி மரக்கன்றுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். 1703ல் வெளியான  வில்லியமின் ’’ஹாலந்துக்கான புதிய கடற்பயணம்’’ என்னும் நூலில்தான் முதன்முறையாக cashew என்று இம்மரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.1 பிரேசில் பழங்குடியினரின்  துபி (tupi) மொழியில்  முந்திரியை  கொட்டை என்னும் பொருள்படும் அகாஜு (acaju) என்று குறிப்பிடப்பட்டதை போர்ச்சுக்கீசியர்கள்  காஜு என்று அழைத்தார்கள்.

காட்டு முந்திரி மரங்கள்  பருமனான திருகிய  தண்டுடன் பத்து மீட்டருக்கும் மேலன உயரத்தில் வளர்பவை.  தற்போது முந்திரிக்கனிகள் அறுவடை செய்யப்படுவது தோட்டக்கலைத் துறையினரால் உருவாக்கப்பட்ட  குட்டையான ஒட்டுரகங்களிருந்தே!

இம்மரங்களின் நுண்ணிய நட்சத்திர வடிவத்திலிருக்கும், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும். இவை சார்ந்திருக்கும் அனகார்டியேசி குடும்பத்தின் மாமரத்திலும் இப்படித்தான் ஒரே பூங்கொத்தில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும் இதை தாவரஅறிவியல்  polygamous  என்கிறது. 

 இருபால் மலர்கள் கருவுற்றதும் சிறுநீரக வடிவிலான கொட்டை என்னும் கனி உருவாகும்.  மலர்களிலிருந்து கனி உருவாக சுமார் 55 லிருந்து 70 நாட்கள் தேவைப்படும். முந்திரிக்கொட்டை என்று அழைக்கப்படும் இவையே அம்மரத்தின் கனிகள். கொட்டை முழுவளர்ச்சி அடைந்த பின்னரே கனியெனப்படும் பகுதி முழுவளர்ச்சி அடையும். இக்கனியின் மேல்தோல் மிகமெல்லியதாக இருக்கும் நல்ல நறுமணத்தையும் கொண்டிருக்கும்

மலர்க்கொத்தின் காம்பானது  (peduncle) கனிக்கொட்டை உருவாகுகையில் விரிந்து சதைப்பற்றுடன் பிரகாசமான மஞ்சள் அரஞ்சு நிறத்தில் தலைகீழ் இதய வடிவில் வளரும். இதுவே பொதுவில் முந்திரிக்கனி அல்லது முந்திரிப்பழம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சதைப்பற்றான மலர்க்காம்பு பழமென்று அழைக்கப்பட்டாலும் இது பொய்ப்பழம் . அசல் பழமென்பது முந்திரியின் கொட்டைதான்

இம்மரத்தின் அறிவியல் பெயரான அனகார்டியம் என்பது இந்த சதைப்பற்றான  பழத்தின் தலைகீழ் இதயவடிவை குறிக்கின்றது ’அன’ என்றால் தலைகீழ் கார்டியம் என்றால் இதய வடிவம்.

ஆக்ஸிடெண்டாலிஸ் என்னும் சிற்றினப்பெயர் ’மேற்கிலிருந்து’ என்று பொருள்படுகிறது. ‘cashew apple’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தலைகீழ் இதயவடிவிலிருக்கும் இந்த போலி முந்திரிப்பழம்தான்.

 உலகெங்கிலும் மிக அதிகம் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளிலொன்றாக இருக்கும் முந்திரிக்கொட்டையின் உலக உற்பத்தி  2018ல் மட்டும் 6 மில்லியன் டன். இதில் 70 சதவீதம் வியட்நாம் மற்றும் இந்தியாவில் உற்பத்தியானது.  2018 ல்  முந்திரிக்கனியின் 1.7 டன் மொத்த  உற்பத்தியில் பிரேசில் மட்டுமே 90 சதவீதம் பங்களித்திருந்தது.

முந்திரி தொழிற்சாலைகளில் கொட்டையோடுகளின் எண்ணெய் உபரித்தயரிப்பாக  இருக்கிறது இதில் அனகார்டிக் அமிலம், கார்டோல் மற்றும் கார்டனோல் ஆகியவை அடங்கி இருப்பதால் இந்த எண்ணெய் பலநூறாண்டுகளாகவே மருந்தாகவும் மரச்சாமான்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. 

 முந்திரிக் கொட்டையின் இரட்டை அடுக்கு உறையில் இருக்கும் பிசின் வகையை சேர்ந்த அனகார்டிக் அமிலம் சரும அழற்சியை உண்டாக்கும். முந்திரிக் கொட்டையின் ஒவ்வாமை என்பது பெரும்பாலும் இந்த உறையின் வேதிச்சேர்மானங்களால் உண்டாகும் ஒவ்வாமையே. ஒவ்வாமை உண்டாக்கும் கொட்டைஉறையின் அமிலம் cashew nut shell liquid (CNSL) எனகுறிப்பிடப்படுகின்றது 

 ஐரோப்பியர்களால் முந்திரி பிரேசிலில் 1558 ல் கண்டறியப்பட்டபோது இந்த ஒவ்வாமையினால் இக்கொட்டைகள் உண்ணத் தகுந்தவையல்ல என்றே கருதப்பட்டது. ஆனால்  துபி பழக்குடியினர் குரங்குகள் கற்களைக்கொண்டு கொட்டையின் மேற்தோலை உடைத்தும், பாறைகளில் கொட்டைகளை தேய்த்தும் ஓட்டை அகற்றி விட்டு உண்பதை கண்டபின்பு அவர்களும் அதே முறையை பயன்படுத்தி உண்ணத் துவங்கினர்.  பின்னர் கொட்டைகளை வறுத்து ஓட்டை நீக்கி எப்படி அதன் ஒவ்வாமையை நீக்குவது என்பதை கண்டறிந்து அம்முறையை ஐரோபியர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள் 

கொட்டைகளை வறுத்துச் சுவையாக உண்ண முடிந்ததைக் கண்டுகொண்டபின்னர் அச்சுவையே போர்ச்சுக்கீசியர்களை முந்திரி மரக்கன்றுகளை கோவாவுக்கு 1560ல் கொண்டு வரச் செய்தது . புதிய சூழலிலும் கன்றுகள் செழித்து வளர்ந்தன

போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாகப் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.

கி மு 200 – 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ள பர்குட் (Bharhut) ஸ்தூபிகளில் இரு சீதாப்பழங்களும் இரு முந்திரிப்பழங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட  கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வேதங்களில் குறிப்பிட்டிருக்கும்    கஜுதக்கா மற்றும் வ்ருத அருஸ்கரா (Kazutaka & Vritta Aruskara),  என்பதும் முந்திரிகளையே குறிக்கின்றது எகின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியர்கள் முந்திரியின் சுவையையும் மருத்துவ குணங்களையும் சேர்த்துக் கண்டுகொண்ட பின்னர்  16 ம் நூற்றாண்டின் பிற்பாதியில் முந்திரி இந்தியாவில்  வேகமாக பிரபலமாகியது.

கிழக்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதே சமயத்தில் முந்திரி அறிமுகமானது, வறுத்த முந்திரியின் மணம் பரவி பல கலாச்சாரங்களிலும் முந்திரி முக்கிய இடம் பிடிக்க துவங்கியது. கடற்கரை மணலரிப்பை தடுக்கும் பொருட்டு ஹவாய், மடகாஸ்கர் இலங்கை உள்ளிட்ட  மேலும் பல நாடுகளிலும் அச்சமயத்தில் முந்திரி அறிமுமானது.

அமெரிக்காவிற்கு முந்திரி 1905ல் அறிமுகமானதாக வரலாறு குறிப்பிடுகிறது 1920 வரையிலும்  அங்கு அத்தனை பிரபலமாகி இருக்காத முந்திரி 1941ற்கு பிறகே பெரும்பான்மையான புழக்கத்திற்கு வந்திருக்கிறது 1941 க்கு பிறகு இந்தியாவிலிருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு வருடத்திற்கு சுமார் 20,000 டன்  முந்திரிக்கொட்டைகள் கடல் வழி ஏற்றுமதியானது    

வறுத்த முந்திரிக் கொட்டையின் சுவையை மகிழ்ந்தனுபவித்த போர்த்துகீசியர்கள் கோவாவில் பயிரான மரங்களிலிருந்து கொட்டைகளின் அறுவடைக்கு பின்னர் வீணாகும் ஏராளமான பழங்களை உபயோகப்படுத்தும் விதமாக கனிச்சாற்றிலிருந்து மதுவை உருவாக்கி அருந்தினர் . அந்த மரபு இன்னும் அங்கு  நானூறாண்டுகளாகவே நீடிக்கிறது 

 முந்திரிப்பழத்தின் சதையை கூழாக்கி நொதிக்க செய்து  கோவாவில் மட்டும் தயாரிக்கப்படும் மதுபானம் ஃபெனி அல்லது ஃபென்னி எனப்படுகின்றது.

 இரட்டை வடித்தல் மூலம் கிடைக்கும் 45 சதவீத்திற்கும் அதிகமான ஆல்கஹாலை கொண்டிருக்கும் ஃபெனி கோவாவின் அடையாளங்களிலொன்றாகவே  கருதப்படுகிறது 

முந்திரிக் கனிகளில் பிரக்டோஸ், குளூக்கோஸ், கனிமத்தாது உப்புக்கள், பல முக்கிய அமினோ அமிலங்கள், மற்றும் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளன

.ஃபெனியின் தோற்றம் குறித்த முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை 1740ல் போர்ச்சுக்கீசியர்கள் ஃபெனியிலிருந்து மதுபானம் உண்டாக்கும் முறையை கோவா நகர மக்களுக்கு கற்றுக்கொடுத்ததாகவே பெரிதும் நம்பப்படுகிறது.

ஃபெனி உருவாக்கம்

கனியின் சதைப் பகுதி பாறை கற்களால் நசுக்கப்பட்டு கூழாக்கப்பட்டு சிறு மலைபோல குவிக்கப்படும். முன்பு கற்களால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நசுக்குதல் இப்போது அழுத்தும் கருவியான    பிங்ரி’யினால் செய்யப்படுகின்றன (pingre (cage). கால்களால் நசுக்கப்படும் முறையும் பயன்பாட்டில் இருக்கிறது.

கைகளால் பிசையப்பட்டு நூடி என்னும் காட்டுக்கொடியால் கட்டப்படும் (vine- nudi,) சதைக்கூழ் குன்றுகள்  ஒரு கனமான பாறைக்கல்லினால் இரவு முழுவதும் அழுத்தப்படுகின்றன.கனிகளைக் கொட்டி நசுக்கும் கற்களால் ஆன இந்த தரைப்பகுதி கோல்மி (collmi)  எனப்படும்.  இக்கூழ் குன்றிலிருந்து வடியும் சாறு  நீரோ(neero).

நீரோ முந்திரிக்கனிச்சாறு நிலத்தில் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும் குடம் போன்ற மண் அல்லது செப்புப் பாத்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு. பல  நாட்கள் இயற்கையாக நொதிக்கச் செய்யப்படுகிறது.  நொதித்த திரவம் 3 நாட்களுக்குப் பிறகு பான்ஸ் எனப்படும் செம்புக் கொதிகலன்களில் (bhanns ) காய்ச்சி வடித்தலுக்கு உள்ளாகின்றன.

எந்த நுண்ணுயிர்களும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாத ஃபெனிவடித்தல் பாட்டி எனப்படுகிறது (bhatti).  

ஒற்றை வடித்தலுக்கு பிறகு கிடைக்கும் 15 சதவீத ஆல்கஹால் கொண்ட பானம்  அர்ரக் (urrac) எனப்படுகிறது.  

அர்ரக் மீண்டும் நீரோவுடன் கலக்கபட்டு 40-42 சதவீத ஆல்கஹால் இருக்கும் திரவமான   காஜுலோ (cazulo) கிடைக்கின்றது. காஜுலோ மீண்டும் அர்ரக்குடன் கலக்கப்பட்டு வடித்தலுக்கு உள்ளாகையில் 45 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கொண்டிருக்கும் ஃபெனி ஆகிறது. ஃபெனி நெடியுடைய மது.

ஃபெனி என்பது  நுரையை குறிக்கும் சமஸ்கிருத சொல்லான ‘phena’விலிருந்து உருவானது.  திறக்கப்பட்ட பாட்டிலிலிருந்து கோப்பைகளில் ஊற்றப்படுகையில் நுரைத்துப் பொங்கும் இம்மதுவின் இயல்பால் இப்பெயர் வைக்கப்பட்டது

கோவாவில் முந்திரியிலிருந்தும் இளநீரிலிருந்தும் ஃபென்னி தயாரிக்கப்படுகிறது. இளநீர் ஃபெனி மாட்டல்ஃபெனி எனப்படுகிறது. (Maddel fenny ) 2009ல் ஃபெனி புவிசார் குறியீடு பெற்றிருகிறது.2 கோவா அரசு ஃபெனிக்கு கலாச்சார அந்தஸ்தும்  அளித்திருக்கிறது 3 .இந்திய மது வகைகளில் புவிசார் குறியீடு பெற்ற ஒரே மது வகை ஃபெனியே. ஃபெனி கோவாவில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது

கோவாவில் மட்டும் சுமார் 4000 வடிசாலிகள் ஃபெனிக்கென்றே இயங்குகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் ஃபெனியில் சுமர் 70 சதவீதம் கோவா மக்களுக்கே செலவாகிறது மீதியே சுற்றுலாப்பயணிகளுக்கு சந்தைப் படுத்தப்படுகிறது. வடிசாலிகளில் மட்டுமல்லாது பல குடும்பங்களில் அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலேயே ஃபெனி உருவாக்கபடுகிறது. 

 கோவாவின் பிரத்யேக ஃபெனி அருந்தும் முறையென்பது ஃபெனியை தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி அருந்துவதுதான். ஃபெனி ஐஸ்கட்டிகள் கலந்தும், கலக்காமலும் அருந்தப்படுகிறது. அதனுடன் கடல் உணவுகள் பொருத்தமானதாக அமையும். ஒரு துண்டு எலுமிச்சை அல்லது உப்பு தூவப்பட்ட பச்சைமிளகாயுடனும் ஃபெனியை அருந்துபவர்களும் உண்டு 

கோவாவைச் சேர்ந்த நந்தன் குட்சத்கர்,  ஃபெனி அருங்காட்சியகம்  ஒன்றை கோவாவின் அழகிய கடற்கரை கிராமமொன்றில் அமைந்திருக்கிறார். இங்கு ஃபெனியை குறித்த ஆயிரக்கணக்கான தகவல்களும் ஃபெனி சீசாக்களின் மாதிரிகளும் உள்ளன. நூற்றண்டுகள் பழமையான ஃபென்னியும் அங்குள்ளது

இந்தியாவின் முந்திரி தொழிற்சாலை துவக்கம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் அதிகம் இல்லை எனினும் 1920களில் இலங்கையிலிருந்து கொல்லம் வந்த ராக் விக்டோரியா (Roch Victoria) என்பவர் வணிக ரீதியான பெரும் முந்திரி தொழிற்சாலையை அங்கு உருவாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன 

கொல்லத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டு, வறுத்து  நச்சு நீக்கப்பட்ட  தரமான முந்திரிகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகி இருக்கின்றன 

டான்ஸானியாவில்  உலர்ந்த முந்திரிக்கனிகளிலிருந்து சாறெடுத்து வடித்தலுக்கு உள்ளாக்கி உண்டாக்கப்படும் மிகக் கடும் மது வகை  கோங்கோ (gongo) எனப்படுகிறது.

முந்திரிப்பழங்களிருந்து நொதித்தலுக்கும் வடித்தலுக்கும் உட்படுத்தப்படாத, ஆல்கஹால் சிறிதும் இல்லாத,  பானம் காஜுனா (Cajuína). ஆல்கஹாலுக்கு எதிரான நடவடிக்கையாக பிரேசிலின் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட இந்த பானம் இப்போது பிரேசிலில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது

முந்திரிக்கொட்டைகளை கனியிலிருந்து பிரித்து நச்சுநீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, கொட்டையின் ஓட்டு எண்ணெயால் உடல் பாதிப்புகள் உருவாகின்றன மேலும் கனியிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுப்பது அதிக உடலுழைப்பை கோரும் பணி, இதனாலேயே முந்திரிக் கொட்டைகள் விலை கூடியவைகளாக இருக்கின்றன.

இந்தியாவின் முக்கிய முந்திரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா. மொத்த உலக உற்பத்தியில் இந்தியா 23 சதவீதத்தை பங்களிக்கிறது.

நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

 செப்டம்பர் 12, 2021  No Comments

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ (Jalisco) மலைப் பிரதேசமொன்றில், அட்டோடோனில்கோ நகரில், மிக வறிய  குடும்பமொன்றின் தலைவர் திடீரென  இறந்தபோது அன்னையையும் ஏழு சகோதர சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் குடும்பத்தின் மூன்றாவது மகனாக இருந்தாலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருந்த 15 வயதான  ஹூலியோ ஏற்றுக்கொண்டான். (ஹூலியோ கொன்ஸாலெஸ் ஃப்ரௌஸ்டோ எஸ்ட்ராடா- Julio González-Frausto Estrada)1 தனது மாமாவின் கற்றாழை வயல்களிலும், வைன் திரவத்தைப் பழமையாக்கும் நிலவறைகளிலும் மிகக் கடுமையாக வேலைசெய்து ஹூலியோ பெற்ற  வாரச் சம்பளமான ஒன்பது பேஸோக்கள் எட்டு நபர்களடங்கிய அவரது குடும்பத்தின் பசித்தீயை அணைக்கப் போதுமானதாக இல்லை. 

மேலும் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில், தனிப்பட்ட முறையில் மெக்ஸிகோவில் அப்போது பிரபல பானமாக இருந்த கற்றாழை  மதுவைச் சிறு மரப் பீப்பாய்களில் அடைத்து,  அருகில் இருக்கும் நகரங்களுக்குக் குதிரையில் கொண்டுபோய் விற்கத் தொடங்கிய ஹூலியோவிற்கு  ஒரு நாளைக்கு 9 பேஸோக்கள் கிடைத்தன. இந்தச் சிறு வணிக முயற்சியில் கற்றாழை மதுவிற்கு இருந்த தேவையும் அதன் சந்தைப்படுத்தலின் வெற்றிகரமான  சாத்தியங்களும் அந்த சிறுவனுக்குத் தெளிவாக தெரிந்தன. எட்டு வயதிலிருந்தே மாமாவின் கற்றாழை வயல்களில் விவசாய வேலைகளில் உதவி இருந்த  ஹூலியோ மெக்ஸிகோவின் நிலமும், மண்ணும், காலநிலையும் கற்றாழை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவை என்பதையும் அறிந்திருந்தான்.

எப்படியும் முன்னுக்கு வரவேண்டும் என்னும் அனல் உள்ளே எரிந்து கொண்டிருக்கையில் அந்த நகரின் பெரும் செல்வந்தரிடம்  கையில் ஒற்றை பேஸோகூட இல்லாத ஹூலியோ தனக்கு 20 ஆயிரம் பேஸோக்கள் கடனாக கொடுத்தால் தானொரு கற்றாழை வடிசாலையை வாங்க முடியுமென்று சொன்னான். அச்சிறுவனின் அசாதாரணமான துடிப்பும், வேகமும் அவனுக்கு இருபதாயிரம் பேஸோக்களை அவரிடமிருந்து பெற்றுக்கொடுத்தன. நீரூற்று என்னும் பொருள் கொண்ட ‘La Primavera’ (‘Spring’) வடிசாலையை ஹூலியோ  சொந்தமாக வாங்கியபோது அவருக்கு வயது 14தான்.

அன்று ஹூலியோ  விதைத்த அசல் டெக்கீலாவின் விதைதான் இப்போது மெக்ஸிகோவில் விருட்சமாகி இருக்கிறது.

1942ல் வடிசாலையை வாங்கிய ஹூலியோ, 1951 லேயே மிகச்சிறந்த டெக்கீலா சந்தைப்படுத்தலுக்காகவும், டெக்கீலாவின் தரத்துக்காகவும் ’’டான்’’ என்னும் பட்டத்தை பெற்றார். அப்போதிலிருந்து அவர் பெயருக்கு முன்னால் 2012ல், அவரின் 87 ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து இறக்கும்வரை ’டான்’ என்னும் அடைமொழி இருந்தது .

நீலக்கற்றாழை சாகுபடியிலும் ஈடுபட்டிருந்த ஹூலியோ வயலில் ஒவ்வொரு  நீலக்கற்றாழைகளையையும்  தன் கையாலேயே நடவு செய்தார். அதற்கு முன்னதாக மெக்ஸிகோ வயல்களில் நெருக்கமாக நடவுசெய்தது போலல்லாது வரிசையாக நடப்படும் கற்றழைகளுக்கிடையேயான இடைவெளியைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக்கினார்.  இடையூறின்றி நன்கு பரவி விரிந்து  பெரிதாக வளரத் துவங்கிய கற்றாழைகள் நன்கு முதிரவும் அவகாசமளித்துப் பின்னரே அறுவடை செய்தார்.

வயலில் ஆகப்பெரியதாக இருந்த நீலக்கற்றாழையின் சதைப்பற்றான அன்னாசிப் பழம் போன்ற அடிப்பகுதியை  அறுவடைசெய்து,   76 மணி நேரம் சுழற்சி  முறையில் வேகவைத்த பிறகு நொதிக்கச் செய்து தான் உருவாக்கிய டெக்கீலா பானத்தை (Tequila Reposado)  தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே அளித்தார் ஹூலியோ. அந்த டெக்கீலா அதற்கு முன்னர் உலகம் கண்டிராத சுவையும், மணமும், குணமும் கொண்டிருந்தது.  

அப்போதெல்லாம் மெக்ஸிகோவில் மதுபான விடுதிகளில் மேசையில் நடுவில் இருக்கும் டெக்கீலா பாட்டில்களின் உயரம் எதிரில் இருப்பவர்களை மறைத்துக் கொண்டு இருக்குமளவுக்கு இருந்தது. இதனால் டெக்கீலா அருந்துபவர்கள்  பெரும்பாலும் பாட்டில்களை மேசைக்கடியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஹூலியோ டெக்கீலாவை நிரப்பும் பாட்டில்களின் வடிவமைப்பில்  நூற்றாண்டுகளாக  இருந்த மரபை உடைத்து, உயரமான பாட்டில்களுக்கு மாற்றாகச் சிறிய தட்டையான அழகிய வடிவங்களில் பாட்டில்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1985 ல் ஒரு குடும்ப விருந்தில் ஹூலியோ தனது சொந்தத் தயாரிப்பான டெக்கீலாவை,  தட்டையான, சிறிய சதுர கண்ணாடி பாட்டில்களில்  அடைத்து விருந்தினர்களுக்கு அளித்தார்.  அந்த  டெக்கீலா அன்றைய விருந்தின் பேசுபொருளான  அந்தக் கணத்தில் துவங்கியது  வெற்றிகரமான டெக்கீலா சகாப்தம். விருந்தில் கலந்துகொண்ட பெரும் தொழிலதிபரொருவர் ஹூலியோவிடம் இரண்டு வெற்றுக் காசோலைகளை கொடுத்து ’’அதை எப்போது வேண்டுமானாலும் விரும்பிய தொகைக்கு பணமாக்கிக் கொள்ளலாம், ஆனால் தனக்கு ஒரு வருடத்துக்குள் 100 பீப்பாய்கள் அதே டெக்கீலா கொடுத்துவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.  ஹூலியோவின் சொந்த தயாரிப்பான டெக்கீலாவும், அழகிய சதுர பாட்டில்களும் பின்னர் வெகு வெகுவாகப் பிரபலமடைந்தன.  

மது விடுதிகளிலும் வீடுகளிலும் மேசைகளில் ஹூலியோ உருவாக்கிய அழகிய  பாட்டில்கள்  வீற்றிருப்பது பெரும் கௌரவமென்று எண்ணுமளவிற்கு அவை புகழ் பெற்றபோது,  அந்நகரின் மிகப்பெரிய வடிசாலையை அமைத்தார் ஹூலியோ.  அடுத்த 40 வருடங்களுமே டெக்கீலாவின் தரக் கட்டுப்பாட்டிலும் நீலக்கற்றாழை விவசாயத்திலுமே தமது முழுக் கவனத்தையும் செலவழித்தார் டெக்கீலா வர்த்தகத்தின் ’’டான்  ஹூலியோ.’’

ஹூலியோவின் 60 வருட அயராத  உழைப்பில்  அவரது வடிசாலை  உலகின் ஆகச்சிறந்த  டெக்கீலா உற்பத்தி  நிறுவனமாக இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது இளைஞனாக அவர் தொடங்கிய ‘லா ப்ரீமவேரா’ (’La Primavera’), இன்றும்  வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜான் ஹூலியோ  என்ற அவரது பெயரில் இருக்கும் டெக்கீலா மெக்ஸிகோவின் அடையாளங்களில் முதன்மையானது.

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் நகரொன்றில் 16ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட, மெக்ஸிகோவின் அடையாளங்களின் ஒன்றான டெக்கீலாவின் வரலாறும் சுவையானதுதான். 1666 வரை அதிகாரபூர்வமாக டெக்கீலா என்பது ஒரு நகரமாக நிறுவப்பட்டிருக்கவில்லை. அந்த நகரில்தான் முதல் முதலாக இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டது.

இந்த மது பானத்திற்கு, இரண்டு தெய்வங்களைக்  கொண்டிருந்த  மெக்ஸிகோவின் பழங்குடியினரான  அஸ்டெக்குகள் ஏதேச்சையாக மின்னல் தாக்கிய கற்றாழைச் செடிகளிலிருந்து வடிந்த இனிப்பான திரவத்தைச் சுவைத்தார்கள். 1521ல்  அந்த திரவத்தைப் புளிக்கவைத்து  புல்கே (Pulque) என்னும் மதுவை அருந்திவந்தனர்.

ஆஸ்டெக்குகளின் தொன்மமொன்று கற்றாழை மதுபானங்களுக்கான பெண் தெய்வமான ‘மயாஹூவெல்’ (Mayahuel) தனது குழந்தைகளுக்கும், 400 முயல்களுக்கும் தனது ஏராளமான முலைகளால் டெக்கீலாவை அருந்தக் கொடுத்ததாக சொல்லுகிறது.

 1519ல் மெக்ஸிகோவை ஆக்கிரமித்த ஸ்பெயின் தேசத்தினர், தாங்கள்  கொண்டுவந்த பிராந்தியின் இருப்புக் குறையத் தொடங்கியபோது, மெக்ஸிகோவின் தாவரங்களிலிருந்து மது தயாரிக்க முனைந்தனர். அப்போது அவர்கள் கற்றாழைச் சாறைப் புளிக்கச்செய்து மெஸ்கால் (mezcal) என்னும் வைன் பானத்தை உருவாக்கினார்கள்.   மெக்ஸிகோவில் ஸ்பெயின் நாட்டினர் கற்றாழை மது உண்டாக்கியதற்கான ஆவணம் 1608ல் கிடைத்திருக்கிறது

17ஆம் நூற்றாண்டில் இந்தக் கற்றாழை மது தயாரிக்கப்பட்ட டெக்கீலா நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாகத் தொடங்கியது. 1750ல் முறையாக டெக்கீலா தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது  ஸௌஸா குடும்பத்தினர் (Don Cenobio Sauza) 2 சாதாரண பச்சைக் கற்றாழைகளைவிட   நீலக்கற்றாழைகளிலிருந்து  தரமான  டெக்கீலாவை உண்டாக்கலாமென்று கண்டறிந்த பின்னர் டெக்கீலா தயாரிப்பில் பெரிய புரட்சி உண்டானது.

நீலக்கற்றாழை டெக்கீலா மெக்ஸிகோவில் உள்ள குவானஹுவாடோவில் 1800ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முதல் முறையாகப் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டது.

1873ல் ஸௌஸா டெக்கீலாவின் நிறுவனரும் 1884-1885ஆம் ஆண்டுகளிலிருந்து டெக்கீலா நகராட்சித் தலைவராகவும் இருந்த டான் செனோபியோ ஸௌஸோ  மூன்று பீப்பாய்களிலும்,  ஆறு சீசாக்களிலுமாக மெஸ்கால் டெகீலாவை மெக்சிகோவின் எல்லயைத் தாண்டி அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதுதான் டெக்கிலாவின் முதல் ஏற்றுமதி.  டான் சினோபியோ ஸௌஸாவே டெகீலாவின் தந்தை எனக் கருதப்படுகிறார். அதன்பின்னர் டெக்கீலா உருவாக்குவதை அவர்களின் முக்கியக் குடும்பத் தொழிலாகக் கொண்டார்கள்: 

டான் செனோபியோவின் பேரனான டான் பிரான்சிஸ்கோ ஹாவியர் “நீலக்கற்றாழைகள் இல்லாத இடத்தில் டெக்கீலா இல்லை!” என்பதை வலியுறுத்தியதற்காக சர்வதேச கவனத்தைப் பெற்றார். உண்மையான டெக்கீலா ஹாலிஸ்கோ மாநிலத்தில் இருந்து மட்டுமே வரமுடியும் என்ற நடவடிக்கைக்கு இவருடைய முயற்சிகள்தான் முக்கிய காரணமாயிருந்தன. 

டெக்கீலா நகரில் தயாரிக்கப்பட்ட நீலக்கற்றாழை மது  டெக்கீலா என்ற பெயரிலேயே 1890களில் இருந்து  அழைக்கப்படலாயிற்று.

1902ல் அதிகாரபூர்வமாக  நீலக் கற்றாழை மது டெக்கீலா என்றும் பிற கற்றாழை மது வகைகள் மெஸ்கால் (Mezcal) என்றும் தெளிவான பெயர்களில் வேறுபடுத்தப்பட்டன.. இப்போதைய அசல் டெக்கீலா 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மெக்ஸிகோவின் குவானாஹுவாடோவில்  உருவாக்கப்பட்டது.  

1974ல் டெக்கீலா மெக்ஸிகோவின் அறிவுசார் சொத்து (Intellectual Property of Mexico) என  மெக்ஸிகன் அரசு அறிவித்தது  அப்போதிலிருந்து டெக்கீலா மெக்ஸிகோவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்னும் விதியும் உண்டானது. பிற நாடுகள் டெக்கீலா தயாரிப்பது சட்ட விரோத செயலாகும். 

1994ல் தோற்றுவிக்கப்பட்ட  டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில்  (TRC- Tequila Regulatory Council)  டெக்கீலாவின் தரம் சுவை மணம் குறித்த ,தளர்வுகளற்ற கூடுதல் நியதிகளையும் உருவாக்கியது. இந்த குழுமத்தில் மெக்ஸிகன் அரசு, நீலக்கற்றாழை விவசாயிகள்,டெக்கீலா தயாரிப்பாளர்கள், மற்றும் சந்தைப் படுத்துபவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 1377 டெக்கீலா  வணிக முத்திரைகள் (பிராண்டுகள்) 137 தயாரிப்பாளர்களால் டெக்கீலா ஒழுங்குமுறை குழுமத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது 

நூற்றாண்டுகளாக  பிரபலமான, மெக்ஸிகோவின் அடையாளங்களில் ஒன்றான  நீலக் கற்றாழை மதுவான டெக்கீலா  இப்போதும் மெக்ஸிகோ நாட்டின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் லாஸ் ஆல்டோஸ் மேற்கு மலைத் தொடர்களில் வளரும் நீலக்கற்றாழையிலிருந்து  மட்டும் பெறப்படுகிறது.

 டெக்கீலா நகரைச்  சுற்றியுள்ள பகுதியின் சிவப்பு எரிமலை மண் நீலக்கற்றாழையின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது, அங்கே ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட நீல கற்றாழைச் செடிகள் அறுவடை செய்யப்படுகின்றன. ஹாலிஸ்கோ மாநிலத்திலும், குவானாஹுவாடோ, மீச்சோகான், நய்யாரீத் மற்றும் டமாலிபாஸ் மாநிலங்களின் பகுதிகளில் மட்டுமே இவை தயாரிக்கப்பட வேண்டும் என்று மெக்ஸிகன் சட்டங்கள் குறிப்பிடுகின்றன

குவாடலஹாரா  நகருக்கு வடமேற்கே உறங்கும் டெக்கீலா எரிமலையின் அடியிலிருக்கும்  வறண்ட புழுதிக் காற்று வீசும் அந்த பள்ளத்தாக்கில்  டெக்கீலா நகரம் அமைந்துள்ளது. மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த எரிமலை மண் நிறைந்த 35,019 ஹெக்டேர் பரப்பளவில்  கூர் முள் கொண்ட இலைகளுடன் பல்லாயிரம் நீலக்கற்றாழைகள் வான் நோக்கி பச்சைப்பெருமலர்களாக  விரிந்துள்ளன. இந்த வயல்கள் உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site)  என்னும் அந்தஸ்தை 2006 ல் பெற்றுள்ளன.

நீலக்கற்றாழையின் தாவர அறிவியல் பெயர்  Agave Tequilana- Weber variety Azul. இவற்றின்  இலைகளின் நீலப்பச்சை நிறத்தினால் ’’நீலக்கற்றாழை’’  என கள்ளிகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவரான ஐரோப்பிய தாவரவியலாளர் வேபரினால் (Frédéric Albert Constantin Weber) பெயரிடப்பட்டது..பச்சை நிறத்தில் சதைப்பற்றான, முட்கள் நிறைந்த இலைகளுடன்  இருந்தாலும் இவை கள்ளி வகைகள் அல்ல  பெருங்கற்றாழை வகை தாவரங்களே.. இச்செடிகளுக்கு அஸ்டெக்குகளின் தெய்வமான மயாஹூவெல்லை குறிக்கும் ’’மாஹே’’ (Maguey)  என்றொரு வழங்கு பெயரும்  மெக்சிகோவில் உண்டு. 

 8 ல் இருந்து 14 வருட வாழ்வை கொண்டிருக்கும் இந்த நீலக்கற்றாழைகளின்  பேரினத்தின் காவெ என்பது கிரேக்க மொழியில் ’’உன்னதமான’’ என்ற பொருள் கொண்டது. சிற்றினத்தின் பெயரான டெக்கீலானா மெக்ஸிகோவின் டெக்கீலா நகரை சேர்ந்த செடி என்பதைக் குறிக்கிறது. ஆஸ்டெக்குகளின்  நௌவாட் (Nahuatl) மொழியில் டெக்கீலா  ’’அஞ்சலிக்கான  இடம்’’ என பொருள்படுகிறது.. அகாவே பேரினத்தின் 166 சிற்றினங்களில்  125  சிற்றினங்கள் மெக்ஸிகோவில்  1964 ல் இருந்து செழித்து வளர்கின்றன.

பொதுவாக 5 அடி உயரம் வரை வளரும்  இக்கற்றாழைகள் மெக்ஸிகோவின் கனிம வளம் மிக்க மண்ணில்  6 லிருந்து 7 அடி வரை வளரும். விளிம்புகளில் அடர் நிறத்தில் கூரிய முட்களை கொண்டிருக்கும், வாள் போன்ற, சதைப்பற்றான, சாம்பல் நீலப்பச்சை இலைகள் மலரடுக்கில் 4 அடி நீளம் வரை வளரும். 8 லிருந்து 12 வருடங்களில், 7 அடி உயரம் வரை வளர்ந்த கற்றாழைகள்  அறுவடைக்கு தயாராகிவிடும். மலைப்பகுதிகளில் வளரும் நீலக்கற்றாழைகள் 8 வருடங்களிலும், தாழ்நிலங்களில் வளருபவை 12 வருடங்களிலும் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகின்றன.

8 வருடங்களான நீலக்கற்றாழைகளின் இலை அடுக்குகளின் மத்தியிலிருந்து 20 அடி உயரமுள்ள கியோட்டே எனப்படும் (Quiote) மஞ்சரித்தண்டு உருவாகி கிளைத்த மஞ்சரிகளில் பச்சை நிற மலர் கொத்துகள் தோன்றுகின்றன. பாலில்லா இனப்பெருக்கம் செய்யும் அகேவின் மலர்கள் இரவில் மலரும். அவை, மெக்ஸிகோவின் நீள மூக்கு வௌவால்களால்  (Leptonycteris nivalis)  மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு, கனிகளும்  விதைகளும் உருவாகின்றன. மஞ்சரி உருவான பின்பு இலை அடுக்குகள் ஒவ்வொன்றாக அழிந்து பக்கக்கன்றுகளிலிருந்து புதிய தாவரங்கள் வளர தொடங்கும். 

கற்றாழை கருக்களான ஹிஹ்வேலோ (Hijuelo)  எனப்படும் இந்த சிறு  பக்கச்செடிகள் வேர்க்கிழங்குகளிலிருந்தும் செடிகளின்  அடிப்பகுதியிலிருந்தும்  வளருகின்றன. இவை எலுமிச்சை, ஆரஞ்சு, மற்றும் திராட்சை கனிகளின் அளவுகளைக் கொண்டு அளவிடப்படுகின்றன. இரண்டாவது வருடத்தில் இருந்து தாய்ச் செடிகளின்  பக்கவாட்டில் வளரும் இவை, ஐந்தாம் வருடத்திலிருந்து எடுக்கப்பட்டு, வரிசையாக நடப்படுகின்றன.  நீலக்கற்றாழையின் விதைகள் சாகுபடிக்கு  பயன்படுத்தப்படுவதில்லை

2.5 ஏக்கர்களில்  சுமார் இரண்டாயிரத்தில் இருந்து நான்காயிரம் நீல கற்றாழைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. பிற பயிர்களைப் போலவே நீலக்கற்றாழைகளுக்கும் களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து பயிர்பாதுகாப்புக்களும் தேவை. நீலக்கற்றாழைகளின் அறுவடை என்பது இலைகளின் அடிப்பகுதியில் இருக்கும் கற்றாழை இதயமான, பெருத்த, எடை கூடிய அன்னாசிப்பழத்தை போன்றிருக்கும்  பீன்யாக்கள்தான். (piña). பீன்யா என்பது அன்னாசிப்பழத்தின்  ஸ்பானிஷ் பெயர். மாவுச்சத்தும், சிறிதளவு சர்க்கரை சத்தும். நிரம்பிய  புதிதாக அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்கள்  உருளைக்கிழங்குகளை போல  மெல்லிய நறுமணத்துடன் இருக்கும்.

 இனப்பெருக்கத்தில் தனது ஆற்றலை நீலக்கற்றாழைகள் செலவழிக்க துவங்கினால் டெக்கீலாவின் தரம் குறைந்துவிடும்,  எனவே மலர் மஞ்சரிகள் உருவாகும் முன்பே பீன்யாக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பீன்யாக்களில் சேமிக்கப்பட்டிருக்கும்  இனிப்பு திரவமான அகுவாமியெலில் இருந்துதான் (aquamiel) டெக்கீலா தயரிக்கப்படுகின்றது. பீன்யாக்களின் அளவு பெரிதாகுதலும், . அடிப்பகுதியிலிருக்கும் பென்கா (Pencas) எனப்படும் இலைகள் வாடி உதிர்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

ஹிமாடொர்கள்  (Jimadors) எனப்படும் மெக்ஸிகோவின் விவசாயிகளில் ஒரு வகையினர், ஒவ்வொரு செடியிலிருந்தும்,  இருநூறுக்கும் மேற்பட்ட,கற்றாழையின் இலைகளை கோஆ (Coa) எனப்படும் நீண்ட கைப்பிடி உள்ள, துடுப்பு முனை போன்ற வட்டக் கத்தியால் ஒவ்வொன்றாக  செதுக்கி, பீன்யாக்களை எடுப்பார்கள். மிகுந்த உடலுழைப்பை கோரும் செயல் என்பதால் ஹிமாடொர்கள்  5 லிருந்து 6 மணி நேரம் மட்டுமே வேலை அதுவும், சுழற்சி முறையில் செய்வார்கள்.

கற்றாழை சாகுபடி குறித்தும், உரிய நேரத்தில் அவற்றை அறுவடை செய்வது குறித்தும் தலைமுறை அறிவைக்கொண்டு இருக்கும் ஹிமாடொர்களின் வேலை. பீன்யாக்களைச்  செதுக்குவது மட்டுமே. செதுக்கிய பீன்யாக்களை  சேகரித்து, வண்டிகளில் தொழிற்சாலைகளுக்கு கொண்டு போவதை பிற பணியாளர்கள் செய்வார்கள்.

அதிகாலையிலிருந்து முன்பகல் வரை பணியாற்றும் ஒரு தேர்ந்த ஹிமாடொர் ஒரு நாளில் 100  பீன்யாக்களை செதுக்கி எடுப்பார். விஷ சிலந்திகள், நீலக்கற்றாழைகளின் நெருக்கமான இலையடுக்குகளுக்குள் மறைந்திருக்கும் நச்சுப் பாம்புகளின் ஆபத்துக்களோடு, மிகத் தேர்ந்த ஹிமாடொர்களுக்கு கூரான ’கோஆ’’வினால் கால் விரலை துண்டாக்கி கொள்ளும் ஆபத்தும் நேரிடுகிறது.

செதுக்குதலை திறம்பட செய்யாவிட்டால் பீன்யாக்களில் ஒட்டியிருக்கும் இலைகளின் அடிப்பகுதியின் மெழுகுப்பூச்சு டெக்கீலாவின் தரத்தை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் மிகத்துல்லியமாக,  இவை செதுக்கப்பட வேண்டும்.பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் டெக்கீலா தொழிலில் நூற்றாண்டுகளாக மாறாமல் இருப்பது ஹிமாடொர்களின் பணி மட்டுமே.  ஹிமாடொர்கள்  இல்லாவிட்டால் டெக்கீலா தொழிலே முடங்கிவிடும். 

வெட்டியெடுக்கப்பட்ட பீன்யாக்களில்  வெட்டுக்காயங்களைப்போல இருக்கும் சிவப்புத்திட்டுக்களின் எண்ணிக்கை 5 லிருந்து  7 என்றால் அவை மிகச்சரியாக முதிர்ந்திருக்கிறதென்றும், 7க்கும்  அதிகமான திட்டுக்கள் இருப்பது தேவைக்கும் அதிகமாக முதிர்ந்து, அழுகிப்போகும் பீன்யாக்களை குறிப்பதாகவும் கணக்கு உண்டு, மிகச் சரியான பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்களிலிருந்து 6 மாதங்களுக்குள் டெக்கீலா எடுக்கப்படவேண்டும்

பீன்யாக்களின் பழுத்தல் அல்லது முதிர்தல் அதிலிருந்து எடுக்கப்படும் டெக்கீலாவின் தரத்துடனும் சுவையுடனும் நேரடியாக தொடர்புடையது. சில நிறுவனங்கள் நன்கு பழுத்தவைகளையும், பிறர் பழுத்தலின் துவக்க நிலையிலும் பீன்யாக்களை பயன்படுத்துகிறார்கள். கூடுதலாகப் பழுத்த சோப்ரே மதுரோ (Sobre maduro) எனப்படும் பீன்யாக்களின் அமிலச்சுவை டெக்கீலாவுக்கு வினிகரின் சுவையை அளித்து விடுகின்றது.

 பொதுவாகத் தொழிற்சாலைகளில் டெக்கீலா தயாரிக்க பீன்யாக்களில் இயற்கையாக 21 சதவீத சர்க்கரை அளவு தேவை அதற்கு அதிகமாக 45 சதவீதம் வரையிலும் கூடுதலாக  சர்க்கரை அளவை கொடுக்கும்  கற்றாழைச் செடிகள் உண்டு.

பீன்யாக்களின் எடை 10 லிருந்து நூறு கிலோக்கள் வரையிலும் இருக்கும். அதிகபட்சமாக 180 கிலோ எடையில் பீன்யா அறுவடை செய்யப்பட்டிருக்கிறது..தோராயமாக 7 கிலோ பீன்யாக்களிலிருந்து ஒரு லிட்டர் டெக்கீலா கிடைக்கும்

பெரும்பாலான நீலக்கற்றாழை செடிகள் மேற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் வளர்க்கப்பட்டு, நாள் முழுவதும் பெரும்பாலான சூரிய ஒளியைப் பெற அனுமதிக்கப்படுகின்றன. இந்தச் செடிகள் உயரமான, அகன்ற, அதிக சாறு நிரம்பியதாக இருக்கின்றன. தாழ்நிலங்களில் வளர்க்கப்படும் டெக்கீலாக்கள் மிகுந்த மண் வாசனையை பெற்றிருக்கின்றன

அறுவடை செய்யப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பீன்யாக்கள் ஒரே அளவாக கோடாலிகளால் பிளக்கப்பட்டு சீராக வேக வைக்கப்படுகின்றன. பழமையான ஹோர்னோ (Horno) எனப்படும் நீராவி அடுப்புகளில் வேக வைக்கப்படுகையில் இவற்றில் இருக்கும் இனுலின் (inulin) மாவுச்சத்து  சர்க்கரையாக மாற்றப்படுகின்றது..இந்த சர்க்கரையே நொதித்தலின் போது ஆல்கஹாலாகின்றது.

.இப்போது ஹோர்னோ நீராவி அடுப்புக்களுக்கு பதிலாக நவீன பிரஷர் குக்கர்களும் ஆட்டோக்ளேவ் களும் கூட உபயோகத்தில் இருக்கின்றன

24 லிருந்து 48 மணி நேரம் மெதுவாக  வேக வைக்கப்பட்ட பீன்யாக்கள்  அடர் பழுப்பு நிறம் அடைகின்றன. பின்னர் இவை 16 லிருந்து 48 மணி நேரம் குளிர்விக்கப்படுகிறன. குளிர்ந்த பீன்யாக்கள்  கழுதைகள் அல்லது கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் டாஓனா(Tahona) எனப்படும் வட்டக்கல் செக்குகளில்  அரைக்கப்படுகின்றன.

தற்போது பல நவீன அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் மெக்ஸிகோவின் 6 பிரபல டெக்கீலா நிறுவனங்கள் இன்னும் இந்த கல்செக்கைத்தான் பயன்படுத்துகின்றன. நீர் சேர்ந்து அரைக்கப்ட்ட  பீன்யாக்களின் குழம்பு  மாஸ்டோ (mosto) எனப்படுகிறது மாஸ்டோவிலிருந்து இனிப்பு திரவம் சக்கைகளிலிருந்து தனியே  பிரித்தெடுக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அரைத்த விழுதில் நீர் தெளித்து  சக்கை பிழிந்து எடுக்கப்பட்ட திரவம் நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. சக்கைகளும் பயன்படுத்தப்பட்ட நீரும் கழிவுப்பொருட்களாக வெளியேறுகின்றன.

 அஹுவாமியெல் (Aguamiel)  எனப்படும் இந்த நீலக்கற்றாழைச் சாற்றின் சர்க்கரை அளவு துல்லியமாக கணக்கிடப்பட்ட பின்னர்,  தேர்ந்தெடுக்கப்பட்ட காடிச் சத்துகள் (Yeast) சேர்ககப்பட்டு  திறந்த அல்லது மூடிய மரத்தொட்டிகளில்  24 லிருந்து 96 மணி நேரம் நொதித்தல் நடைபெறும்.  முதல் காய்ச்சி வடிகட்டுதல் முறை டெஸ்ட்ரொஸாமியெண்ட்டோ(Destrozamiento) என்று அழைக்கப்படுகிறது. அதில் கிட்டும் திரவம் 20லிருந்து 25 சதவீத ஆல்கஹால் அளவைக் கொண்டிருக்கும், இந்தத் திரவம் ஒர்தினாரியோ என்று அறியப்படுகிறது. இரண்டாவது முறை காய்ச்சி வடிகட்டும் முறைக்கு ரெக்டிஃபிகாசியோன் என்று பெயர். இப்படி காய்ச்சி வடிகட்டப்பட்ட   55 லிருந்து 75 சதவீத ஆல்கஹால்  இருக்கும். இதுதான் டெக்கீலா என்று அழைக்கப்படக் கூடியது. அரிதாக சில நிறுவனங்கள் மூன்றாவது காய்ச்சி வடிகட்டலுக்கும் போவதுண்டு.   

முதல் வடிகட்டலில் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகின்றது. இரண்டாம் வடிகட்டலில்  மேலும் தூய்மையாக்கப்படும் திரவத்திலிருந்து கிட்டுவது ’ப்ளான்கோ’ டெக்கீலா என்று விற்பனையாகிறது. இத்தனை காய்ச்சி வடிகட்டிய பின்னரும் நீலக்கற்றாழையின் பிரத்யேக நறுமணமும் மண்ணின் மணமும்  டெக்கீலாவில் அப்படியே இருக்கும்

.இறுதியாக கிடைக்கும் 100 சதவீத ஆல்கஹால் அளவிற்கு நொதிக்க வைத்த கடுமையான  டெக்கீலாவில் தண்ணீரைக் கலந்து தேவையான ஆல்கஹால் அளவு    நிர்ணயிக்கப்படுகிறது,. வடிசாலிகளில் கிடைக்கும் டெக்கீலா அப்படியே பாட்டில்களில் நிரப்பப்பட்டு  இளமையான டெக்கீலா வாக விற்பனைக்கு வரும் அல்லது ஓக் மர பீப்பாய்களில் நிரப்பப்பட்டு பழமையாக்குதலுக்கு உட்படுத்தப்படும். 

பழமையாக்குதல் நடைபெறும் பீப்பாய்கள் உருவாக்கப்பட்ட ஓக் மரத்தின் தன்மை, இதற்கு முன்னர் அதில் நிரப்பப்பட்டிருந்த பானத்தின் இயல்பு, பீப்பாயின் வெப்பம், ஈரப்பதம்,  உள்ளே நிரப்பத்துவங்குகையில் டெக்கீலாவின் துவக்க ஆல்கஹால் அளவு ஆகியவை டெக்கீலாவில்  குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கும். நெருப்பில் வாட்டி கருக்கிய ஓக் மரப்பட்டைகளை இணைத்து செய்யப்பட்ட பீப்பாய்களிலும் டெக்கீலா பழமையாக்கப்படும். இந்த வகை டெக்கீலா ‘ரெபொஸாடோ’ அல்லது ‘அன்யேஹோ’ என்று அறியப்படுகின்றன. [ரெபொஸாடோ =மென்மையான அல்லது அமைதியான; அன்யேஹோ= நன்கு பதப்பட்ட, முதிர்ந்த என்ற பொருள் தரும் சொற்கள்.)

பழமையாக்கப்பட்ட டெக்கீலாவில் ஓக், மரப்பட்டை சாறு, சர்க்கரை ஆகியவை பின்னர், பிரத்யேக  நறுமணம் மற்றும் சுவையின் பொருட்டு சேர்க்கப்படுவது முண்டு

குறைந்தபட்ச ஆல்கஹால் அளவு 38 சதவீதமும் அதிகபட்சமாக 55 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்ட டெக்கீலா கரிச்சல்லடைகளில் வடிகட்டப்பட்டு உற்பத்தி நிலையத்திலேயே டெக்கீலா பாட்டில்களில் நிரப்பப்படவேண்டும் என்னும் சட்டத்தின்படி அங்கேயே விற்பனைக்கு தயாராகின்றன.  

டெக்கீலாவில், 100 சதவீத ஆல்கஹால் அளவுடன் இருக்கும் அசல் டெக்கீலா மற்றும் மிக்ஸ்டோ எனப்படும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட 51 சதவீத ஆல்கஹால் அளவுள்ள மலிவான டெக்கீலா என இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . இவ்விரண்டில் பழமையாக்குதலின் அடிப்படையில் பிற வகைகள் உருவாகின்றன.

வெள்ளை (பிளான்கோ),  ப்ளாட்டினம் மற்றும் வெள்ளி டெக்கீலாக்கள் (ப்ளாட்டா),  இரண்டு மாதங்கள் மட்டும் பழமையாக்கபட்டிருக்கும். இவை பழமையாக்கப்பட்டிருக்காதவை,  இளமையானவை (Blanco, White, Plata, Platinum, or Silver)

மிக்ஸ்டோ வகையை சேர்ந்த  பொன், ஓடோ அல்லது ஹோவென் டெக்கீலாக்கள்  செயற்கையாக மணமும் நிறமுமேற்றப்பட்டவை, இளமையானவை (Gold, Oro, or Joven)  

ரெபோஸாடோ டெக்கீலாக்கள் 2 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை பழமையாக்கப்பட்டவை .(Reposado )

அன்யேஹோ வகை  டெக்கீலாக்கள் குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து மூன்று  வருடங்கள் ஓக் மரப்பீப்பாய்களில் பழமையாக்கப்பட்டவை. அன்யேஹோ என்றால் லத்தீன மொழியில் ஒரு வருடம் பழமையான என்று பொருள்.

எக்ஸ்ட்ரா அன்யேஹோ டெக்கீலாக்கள் 2006 லிருந்து தயாரிக்கப்படுகின்றன இவை  குறைந்தது மூன்று வருடங்களுக்கு 600 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட  ஓக் மரப் பீப்பாய்களில் வைத்து மித மிஞ்சி  பழமையாக்கப்படுவது.

சில சமயம் டெகீலாவுடன் புதினா எலுமிச்சை ஆரஞ்சு மசாலா பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படும்

டெக்கீலாவை எவற்றுடன் கலக்கலாம், எவற்றுடன் கலக்கவே கூடாது டெக்கீலாவை  எப்படி  அருந்துவது. போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களை  ’’டெக்கீலா சுவை சக்கரம்’’ என்னும் சித்திரத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த சித்திரம் டெக்கீலா  விடுதிகளிலும் சுற்றுலா தளங்களிலும் கிடைக்கும் 

பொதுவாக  டெக்கீலா வைன் கோப்பைகளிலும் டம்ளர்களிலும் கூட அருந்தப்பட்டாலும் டெக்கீலாவுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட கோப்பைகளும் உள்ளன.

 1924 லிருந்து டெக்கீலாவின் கற்றாழை மணத்தை போக்குவதற்காக உப்பும் எலுமிச்சை துண்டுகளும் பரப்பியிருக்கும் தட்டுக்களில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்படிருக்கும் கண்ணாடிக்கோப்பைகளை எடுத்து விளிம்புகளில் ஒட்டியிருக்கும் உப்புத்தூளுடனும் எலுமிச்சை சாற்றுடனுமே டெக்கீலா அருந்தப்பட்டது. நவீன தொழில்நுட்ப  மாற்றங்களினால் இப்போதைய டெக்கீலாக்கள் அனைவரும் விரும்பும்  சுவையும் பிரெத்யேக மணமும் கொண்டிருக்கின்றன’

265 வருடங்களாக குடும்ப தொழிலாக  நவீன கண்ணாடிக்கோப்பைகளை தயாரிக்கும் பிரபல ரீடல் நிறுவனம் (RIEDEL ) டெக்கீலாவின் சுவையையும் மணத்தையும் நாவிற்கு அசலாக அளிக்கும் பிரத்யேக டெக்கீலா கோப்பைகளை பத்து டாலர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில்  ரீடல் உருவாக்கிய இந்த உவர்ச்சர் டெக்கீலா கோப்பையை  (Ouverture Tequila glass) 2002ஆம் ஆண்டில் “அதிகார பூர்வ டெக்கீலா கோப்பை” என்று அங்கீகரித்துள்ளது.

கூடுதல் சேர்மானங்கள் இல்லாத துல்லிய  டெக்கீலா கவயீட்டோ (Caballito-ஸ்பானிஷ் மொழியில் “சிறிய குதிரை”) எனப்படும் குறுகலான கோப்பையில் நேர்த்தியாக பரிமாறப்படுகிறது, விளிம்புகளில் உப்பு அல்லது சர்க்கரை தடவப்பட்ட  மார்கரீட்டா கோப்பைகள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன ( Margarita Glass)

2003 ஆம் ஆண்டில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முன்னர் மெக்ஸிகோவில் தயாரிக்கப்படும் டெக்கீலா அனைத்தும் மெக்ஸிகோவில்தான் புட்டிகளில் அடைக்கப்பட வேண்டும் என்பதைக் கோரும் முன்மொழிவை மெக்ஸிகோ வெளியிட்டது. .இந்தச் சட்டம் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறுகின்றன என்றும் உலகம் முழுவதிலுமான வழக்கமான ஏற்றுமதி நடவடிக்கைகளோடு உடன்படவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள மதுபான நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன.   எனினும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 17 ல், அமெரிக்காவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவிற்குள் அதிக அளவில் டெக்கீலா இறக்குமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன..  இப்போது அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும், மெக்ஸிகோவின் மொத்த டெக்கீலா உற்பத்தியில் 75 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவில் ஜூலை 24 ஆம் தேதி டெக்கீலா தினமாக கொண்டாடப்படுகிறது    

மெக்ஸிகோவில் மட்டுமே ஆண்டுக்கு 500 மில்லியன் கற்றாழைக்கள் சாகுபடி செய்யப்பட்டு, 500 மில்லியன் டாலர் .மதிப்புள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் லிட்டர்கள் டெக்கீலா ஆண்டுதோறும் தயாராகின்றது  டெக்கீலா நகரில் மட்டுமே 20 டெக்கீலா வடிசாலைகள் அமைந்துள்ளன..

ஒவ்வொரு டெக்கீலா வடிசாலையும் அவர்களுக்கான் பிரத்யேக NOM எனப்படும் (Norma Oficial Mexicana) எண்ணை கொண்டிருக்கவேண்டும். இந்த  எண்கள் அந்நிறுவனத்தின் எல்லா டெக்கீலா பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கவும் வேண்டும்

1997 லிருந்து  டெக்கீலா நகரிலிருந்து சுற்றுலா பயணிகளை நீலக்கற்றாழை வயல்களுக்கும் வடிசாலைகளுக்கும் அழைத்துச்செல்ல அலங்கரிக்கப்பட டெக்கீலா விரைவு பேருந்துகளும் மெக்ஸிகோவில் உள்ளது.. 

2006 ம் வருடத்திலிருந்து  மெக்ஸிகோவில் டெக்கீலா சுற்றுலா மிக பிரபலமாகி வருகிறது. மிகுந்த பொருட்செலவில் ஒரு சில நிறுவனங்கள் ஹெலிகாப்டரில் டெக்கீலா வடிசாலைக்க்கும், நீலக்கற்றாழை வயல்களுக்கும் அழைத்துச்செல்லும் சுற்றுலாக்ளுக்கும் நல்ல வரவேற்பிருக்கிறது. சுமாராக ஒரு நபருக்கு இவ்வகையான சுற்றுலாக்கள்  இருபதாயிரம் டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது 

மண்டை ஓடுகளை போல, கள்ளிச்செடிகளைப் போல,  கண்ணீர்த்துளிகளை போல,  இதய வடிவில் என பல வடிவங்களில் 928 வகையான டெக்கீலாக்களின் .1799 பாட்டில்களை வைத்திருந்ததற்காக , Nuestros Dulces  என்னும் மெக்ஸிகோவின்   டெக்கீலாவும் இனிப்புகளும் விற்பனை செய்யும் சிறிய கடை 2014ல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. தேசிய டெக்கீலா அருங்காட்சியகமும் டெக்கீலா நகரில் அமைந்திருக்கிறது

மெக்ஸிகோவில் தயாரிக்கப்பட்டது என்னும் வாசகமான  “hecho en México”  பாட்டில்களில் இருப்பவையே அசல் டெக்கீலாக்கள். சில குறிப்பிட்ட  டெக்கீலா பிராண்டுகள்  பலநூறு ஆண்டுகளாக குடும்ப தொழிலாக  இருந்து வருகின்றன. 

டெக்கீலாவை குறித்த ஒரு தவறான எண்ணம் அதில்  புழுக்கள் இருக்கும் என்று நம்புவது. டெக்கீலாவில் புழுக்கள் இருக்காது கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகே டெக்கீலா சந்தைப்படுத்த படுகிறது. .ஒயாக்ஸகா மாநிலத்தில் இருந்து வரும் ஒரு சில மெஸ்கல்களில் மட்டுமே புழுக்கள் இருக்கும்.    

2008 ஆம் ஆண்டில், மெக்ஸிகோவின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டெக்கீலாவிலிருந்து செயற்கை  வைரங்களை உருவாக்கி இருக்கிறார்கள் டெக்கீலாவை ஆவியாக்குவதற்கான  800 டிகிரிகள் செல்சியசுக்கும் மேலாக (1,400 டிகிரி பாரன்ஹீட்) டெக்கீலா வெப்பபப்டுத்தப்படுகையில் அதன் உட்பொருட்கள் குளிர்ந்து ஒரு சமமான தூய அடுக்காக இரும்பு அல்லது சிலிக்கான் பாத்திரங்களில் வைரத்துகள்களாக படிகின்றன. 100–400 நானோ மீட்டர் விட்டம் கொண்டிருக்கும் இந்த வைரங்கள். ஆபரணங்களை உருவாக்க முடியாத அளவிற்கு  நுண்ணியவை என்றாலும் இது செயற்கை வைரங்கள் தயாரிப்பில்  மிக முக்கியமான முன்னெடுப்பு. 

டெக்கீலாவின் வெற்றிகரமான அமெரிக்க சந்தையில் பல துறை பிரபலங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலர் டெக்கீலா வடிசாலைகளுக்கும் நீலக்கற்றாழை வயல்களுக்கும் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க பிரபல நடிகரும், மல்யுத்தவீரரும். கட்டுமஸ்தான உடலுக்கு உலகெங்கிலும் புகழ்பெற்றவருமான டுவேன் ஜான்சன் (Dwayne Johnson) உரிமையாளராக இருக்கும்  ’’மண் மணம் கொண்ட பானம்’’ என்னும் பொருள் கொண்ட டெரிமானா (Teremana) 3 டெக்கீலா நிறுவனமும், அங்கு தயாராகும் டெக்கீலாக்களும் மெக்ஸிகோவின் முதல் தரமான டெக்கீலாக்களாக கருதப்படுகின்றன .மெக்ஸிகோவில்  டெக்கீலா வடிசாலைகளில் உருவாகும் கழிவுப்பொருளான  வினேஸ் (vinasse) சக்கையை பிற நிறுவனங்கள் எரித்து சூழல் மாசை உருவாக்குகையில் டுவேன் அவற்றை  மட்க செய்து உரமாக்கி தனது நீல கற்றாழை வயலில் உரமாக உபயோக்கிக்கிறார்.. வடிசாலையின் நீர்கழிவுகளும் மறு சுழற்சி செய்யப்பட்டு இவரது வயலுக்கே பாய்கிறது. 

ரெட் ராக்கர் என்று அழைக்கப்படும் அமெரிக்க பாடகரும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், தொழிலதிபருமான ராய் காஜர்   அமெரிக்க எழுத்தாளரும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும், தொடர் உணவகங்களின் உரிமையாளருமான ’கை ராம்சே ஃபியெரியுடன்  (Guy Ramsay Fieri) இணைந்து 1991 லிருந்து 30 வருடங்களாக டெக்கீலா வர்த்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. இவர்களின் கேபோ-வாபோ(Cabo Wabo) வணிகமுத்திரைகொண்ட டெக்கீலாவான ’’மெஸ்கீலா’’ (Mezquila) தான் உலகின் முதல் டெக்கீலா- மெஸ்கால் கலவை,   

2020ல் துவங்கப்பட்ட ஓண்டா (Onda)  என்னும் உலோக கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் டெக்கீலாக்களை தயரிக்கும் நிறுவனத்திற்கு  பிரபல நடிகையும் மாடலுமான  ஷேய் மிச்செலும் (Shay Mitchell) ஒரு பங்குதாரர்.

பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனி அவர் மனைவி அமல் க்ளூனி, தொழிலதிபர் ரெண்டே கெர்பர் மற்றும் சூப்பர் மாடல் சிண்டி க்ராஃபோர்ட் ஆகியோர் இணைந்து 2013 ல் துவங்கிய டெக்கீலா நிறுவனத்தின் காஸ்மிகோஸ் (Casamigos) டெக்கீலாக்கள் வெகு பிரபலம். மிக மென்மையான இந்த டெக்கீலாக்களை உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்காமல் அருந்தலாம். இந்த நிறுவனம் சுமார் 700 மிலியன் டாலர்களுக்கு 2017 இல் க்ளூனி, மற்றும் இதர பங்குதாரர்களால் விற்கப்பட்டிருக்கிறது.

 ’’வைன்  மற்றும் பிற மதுபானங்களுக்கான சர்வதேச போட்டி” யில் 2020 ஆண்டுக்கான மிகச்சிறந்த டெக்கீலாவாக  ஹாலிவுட் நடிகை கெண்டல் ஜென்னரின்  (Kendall jenner)  ‘’818 டெக்கீலா”  அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

டெக்கீலா பானத்தை குறித்தும், அதை அருந்தும் அனுபவங்களை குறித்தும் ஏராளமான புதுமொழிகளும், பாடல்களும் கவிதைகளும் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பிரபலமாக  இருக்கிறது

  • உங்களுக்குள் இருக்கும் வெளித்தெரியாத திறமைகளை டெக்கீலா வெளிக்கொண்டு வரும்
  • வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சைகளை கொடுத்தால் நீங்கள்  அதனுடன் டெக்கீலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • அனைவரையும் மகிழ்விக்க முயலாதீர்கள், நீங்கள் டெக்கீலா  அல்லர்
  • இழந்த  இளமையை மீட்டெடுக்க  ஒரே வழி டெக்கீலா அருந்துவது

– ஆகியவை மிக அதிகமாகப் புழக்கத்தில் இருப்பவை.

டெக்கீலா குறித்த ஒரு பிரபல ஆங்கில பாடல் வரி ’’டெக்கீலா எனக்குள் சிறகடிக்கும் சிறு பறவை’’ என்கிறது. டெக்கிலாவின் சிறகடிப்பை இனி  உணர்பவர்கள்   டெக்கீலா பானம் கடந்து வந்திருக்கும்  நீண்ட பாதையையும் நினைவில் கொள்ளலாம்.

மேல் தகவல்களுக்கு:

  1. The story of Don Julio Tequila – Master of Malt Blog
  2. Don Cenobio Sauza – Wikipedia
  3. Teremana Tequila 
  4. https://youtu.be/3ngId1AZ0TI
  5. http://uktequilaforum.co.uk/showthread.php?tid=258

அகார் அகார்

  No Comments

 “கொஞ்சம் வேகவைத்த உருளைக்கிழங்கு, மாவு, ஜெலட்டின், மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இவற்றுடன்’’……….

 ஏதோ புதிய உணவுக்கான செய்முறை குறிப்பு போல தோன்றும் இந்த பட்டியல் நுண்ணுயிரியல் துறை உருவான துவக்க காலத்தில் நுண்ணுயிரிகளை வளர்க்க தேவைப்பட்ட திட வளர்ப்பு ஊடகத்திற்கான சோதனை முயற்சிகளில் பயன்படுத்த பட்டவைகள்.

 ஆண்டன் வான் லேவன்ஹோக் 17ம் நூற்றாண்டில் நுண்ணோக்கியை கண்டறிந்த பின்னர் நுண்ணுயிரியல் என்னும் துறை உருவாகியது.1880 லிருந்து 1990 க்குள்ளான காலகட்டத்தில்தான் நுண்ணுயிரியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து அக்காலம் நுண்ணுயிரியியல் பொற்காலம் எனப்பட்டது. ராபர்ட் காஹ்ஹும், பாஸ்டரும் நுண்ணுயிரியல் துறையை நிறுவியவர்களாகவே கருதப்படுகிறார்கள். அக்காலகட்டத்தின் குறிப்பிடத்தகுந்த நுண்ணியிரியலளர்களில் பலரும்  ராபர்ட் காஹ் மற்றும் லூயி பாஸ்டரின் மாணவர்களாகவே  இருந்தனர்.  

பாக்டீரியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பல  சோதனைக்கூட ஆய்வுகளில் திரவ வளர்ப்பு  ஊடகங்களே பயன்பாட்டில் இருந்தன 

ஆய்வுக்கு தேவைப்படும் பாக்டீரியாக்களை மட்டும் தனித்து வளர்க்க திட ஊடகங்களின் தேவை அப்போது இன்றியமையாததாக இருந்தது. அதன்பொருட்டு மக்காச்சோள கஞ்சி, வேகவைத்த உருளைக்கிழங்கு கெட்டியாக்கப் பட்ட முட்டையின் வெள்ளைக்கரு, மாவுக் கரைசல் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் பாக்டீரியாவை வளர்க்கும் முயற்சிகள் நடந்தன.

1881 ல் ஒரு சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் ராபர்ட் காஹ் தனது கண்டுபிடிப்பான புதிய திட வளர்ப்பு ஊடகத்தினை குறித்து விவரித்திருந்தார்.  அதில் தான்  மேற்கண்ட வேகவைத்து வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு சீவல், மாட்டிறைச்சி சாறு.  ஜெலட்டின், முட்டையின் வெள்ளைக்கரு, மாவு ஆகியவற்றின் கலவையை அவர் குறிப்பிட்டிருந்தார். 

தட்டையான கண்ணாடித்தட்டுக்களில் ஊற்றப்படும் இந்த கலவை கெட்டியாகும் போது அவற்றை  மணிச்சாடியில் வைத்து தேவைப்பட்ட பாக்டீரியாக்களை வளர்க்கலாம் என்பதை அதில் விளக்கியிருந்தார்.

இத்தாலிய மருத்துவரும் பூஞ்சையியல் நிபுணருமான விட்டாடினி (Carlo Vittadini)   30 வருடங்களுக்கும் மேலாக உபயோகித்திருந்த ஜெலட்டின் பசையையும், ஜெர்மானிய உயிரியலாளர் ஷ்ரோடெர் (Schroeter) உபயோகித்த உருளைகிழங்கு சீவலையும் தனது  கண்டுபிடிப்புக்களான முட்டைகரு மாவு ஆகியவற்றையும் சேர்த்து காஹ் கண்டறிந்த அந்த  திட வளர்ப்பு ஊடகம் பாக்டீரியாவை வளர்க்கும் முயற்சியில்  பெரும் திருப்புமுனையை உருவாக்கியது.

ஆனால் அவரது அந்த புதிய முறையில் இரு சிக்கல்கள் எழுந்தன. ஜெலட்டினை சில பாக்டீரியாக்கள் திரவமாக்கியதும் 25 பாகையில் ஜெலட்டின் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறியதுமாக, உயர் வெப்பநிலையில் பாக்டீரியாக்களை வளர்க்க காஹ்ஹின் அந்த ஊடகமும் உதவவில்லை.

இதை தவிர்க்கவும் புதிய திட ஊடகத்தை கண்டுபிடிப்பதிலும் காஹ் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.  1881-1882ல் பெர்லினில்  (Kaiserliche Gesundheitsamt) அமைந்திருந்த அப்போது புதிய துறையாக இருந்த பாக்டீரியாவுக்கான ஆய்வகத்தில் ராபர்ட் காஹ்ஹின் மாணவராகவும் உதவியாளராகவும்  மருத்துவர் ஹெஸ்ஸ (Walther Hesse) இணைந்துகொண்டார்.

மருத்துவரான வால்டர் ஹெஸ்ஸ ஜெர்மனியின் ஒரு சிறு நகரமான  பிஷாஃப்ஸ்வெர்டா (Bischofswerda) வில் ஒரு மருத்துவக் குடும்பத்தில் 12 குழந்தைகளில் ஒருவர் .நோயியலில் முனைவர் பட்டமும் பெற்ற அவர் கப்பல் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி கடற்பயணிகளின் நோய்களை ஆராய்ந்தார். 

ஹெஸ்ஸ ஒரு இளம் மருத்துவராக மட்டுமல்லாது அறிவியலில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த நுண்ணியிரியல் ஆய்வுகளை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். அவருக்கு லூயி பாஸ்டர், ராபர்ட் காஹ் ஆகியோரையும், அவர்கள் நுண்ணுயிரியியலில் செய்துகொண்டிருந்த ஆராய்சிகளை குறித்தும் அறிதலும் ஆர்வமும் இருந்தது. 

அது பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை குறித்த ஆய்வுகளின் துவக்க காலம் ஆகையால் அங்கு பல தளங்களில் உலகெங்கும் வியாபித்திருந்த பாக்டீரியாக்களை குறித்த ஆய்வுகள் நடந்தன. ஹெஸ்ஸி காற்றில் இருக்கும் பாக்டீரியாக்களை ஆய்வு செய்ய துவங்கினார். ஆய்வகத்தில்  பாக்டீரியா ஆய்வுகளில் திட வளர்ப்பு ஊடகம் இல்லாததால் பல தடைகள் உண்டாகி கொண்டே இருந்தன. ஹெஸ்ஸி அப்படியான ஊடகத்தை தயாரிக்கவும் நுண்ணுயிரிகளை வளர்ப்பதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தார். 

அச்சமயத்தில்தான் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த தன் வருங்கால காதல் மனைவி ஃபேனியை அவர் சந்தித்தார்

ஏஞ்சலினா ஃபேனி எய்ல்ஷீமியஸ் (Angelina Fanny Eilshemius), நியூயார்க்கில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். 10 குழந்தைகளில் ஃபேனியே மூத்தவர். உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் இளமையிலேயே மரணம் அடைந்துவிட்டனர். ஃபேனி தனது சகோதரிகளுடன் தன் தாயிடம் இருந்து சமையல், மனையியல் ஆகியவற்றை திறம்பட கற்றார்.

15 வயதில் உலகப்புகழ்பெற்ற ஸ்விட்சர்லாந்தின் மேல்தட்டு மகளிருக்கான பாவனைகள், நடையுடையலங்காரங்கள், நாசூக்குகள் ஆகியவற்றை கற்றுத்தரும் பிரத்யேக பள்ளியில் சேர்ந்து தனது படிப்பை முடித்தார். அந்த பள்ளியில் ஜெய்பூர் மூன்றாவது மஹாராணியான காயத்ரிதேவி உள்ளிட்ட பல நாட்டு அரச குடும்பத்து பெண்கள் பயின்றிருக்கின்றனர்.

அங்கு ஃபேனி குடும்ப பொருளாதாரமும் பயின்றார். அப்படிப்பில் குடும்ப வரவு செலவுகளை கையாள்வது, வீட்டை அலங்கரிப்பது பொருத்தமான உடைகளை தகுந்த அலங்காரங்களோடு அணிவது சத்தான, சுவையான உணவை தயாரிப்பது ஆகியனவும் கற்றுத்தரப்பட்டது

ஃபேனி பிரபல ஸ்விஸ் ஓவியரான  லியோபோல்டின் (Leopold Robert) பேத்தியுமாவர். ஃபேனியும் அவரது சகோதரர்  லூயிஸும்  (Louis Eilshemius)  ஓவியங்கள் வரைவதில் மிக திறமையானவர்கள். 

1872 ல் ஃபேனி தன் சகோதரியுடன் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான்  வால்தர் ஹெஸ்ஸவைச் (Walther Hesse) சந்தித்து காதல் வயப்பட்டார் 1873ல் இவர்களது உறுதி செய்யப்பட்ட இவர்களது திருமணம், 1874ல் ஜெனிவாவில் கோலாகலமாக நடந்தது

ராபர் காஹ்ஹின் ஆய்வகத்தில் தனது கப்பல் பணியிலிருந்து விடுப்பெடுத்துக்கொண்டு இணைந்திருந்த ஹெஸ்ஸி தனது வீட்டிலும் ஆய்வகமொன்றை அமைத்திருந்தார்

ஃபேனி வெறும் இல்லத்தரசியாக மட்டுமல்லாது ஹெஸ்ஸியின் ஆய்விற்குத் தேவையான நுண்ணுயிரிகளின் நீர்வண்ண ஓவியங்களை வரைந்துகொடுத்தும்,  பாக்டீரியாவை வளர்க்க மாட்டிறைச்சிச் சாற்றை தினமும் செய்து அனுப்பியும்  சம்பளமில்லாத பணியாளராக   பல உதவிகளை  ஆர்வத்துடன் செய்து கொடுத்தார். 

ஃபேனி புகழ்பெற்ற ஓவியரின் பேத்தி என்பதால் ராபர்ட் காஹ் வியந்து பாராட்டும் அளவிற்கு அவரது நீர் வண்ண ஓவியங்கள் துல்லியமும் நேர்த்தியும் கொண்டிருந்தன. நுண்ணோக்கி வழியே தெரியும் பாக்டீரியாக்களின் பெரிதாக்கப்பட்ட துல்லியமான சித்திரங்களை ஃபேனி தொடர்ந்து வரைந்து கொடுத்து கணவரின், ராபர்ட் காஹ்ஹின் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருந்தார் 

காற்று பாக்டீரியா ஆய்வில் அவற்றை வளர்க்க ஜெலட்டின் தடவப்பட்ட சோதனை குழாய்களை ஹெஸ்ஸி உபயோகித்தார். ஆனால் பாக்டீரியா வளர்கையில் ஜெலட்டின் உருகி ஆய்வை பாழாக்கிக்கொண்டே இருந்ததில், அவர் மனமுடைந்து மீள மீள புதிய திட ஊடகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காஹ்ஹுடன் இணைந்து இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தார். ஃபேனிக்கும் இது கவலையளித்தது, அவர் கணவருக்கு எப்படியும் உதவ நினைத்தார்.

ஒரு விடுமுறை நாளில் கணவரை ஆய்வின் அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக விலக்கி ஃபேனி ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்.  மதிய உணவின் போது அவருக்கு பிரியமான ஆப்பிள் ஜெல்லியை பரிமாறியபடியே ஒரு முக்கிய யோசனையை ஃபேனி தெரிவித்தார். அந்த யோசனையே இன்று பாக்டீரியா வளர்ப்பிலும் பல்லாயிரம் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் அடித்தளமாக அமைந்தது

ஃபேனி மனையியல் கல்வி கற்றவர் மிகத் தேர்ந்த சமையல் நிபுணரும் கூட. அவரது பிறந்த வீட்டிலிருந்து சமையலுக்கு தேவையான பல பொருட்களையும்  கொண்டு வந்திருந்தார். அவ்வபோது அவரது அன்னையும் அவருக்கு தேவையானவற்றை அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஃபேனியின் தாய்வீட்டுக்கு அருகிலிருந்தவர்களும் அவர்களது குடும்ப நண்பர்களுமான ஜாவா தீவுகளில் இருந்து வந்தவர்கள் கொடுத்த  சூப்புக்களை கெட்டியாக்கும் பொடியை, ஃபேனி ஆப்பிள் ஜெல்லி உருவாக்கவும் சூப்புகளை கெட்டியாகவும் பயன்படுத்துவார்..

‘கணவரிடம் ’அகார்’ என்றழைக்கப்படும் அந்த கடற்பாசிகளின் பொடியை பாக்டீரியா வளர்ப்பில் உபயோகப்படுத்தினால் என்ன என்னும் யோசனையை ஃபேனி கேட்டபோது நுண்ணுயிரியலில் பெரும் கதவொன்று அகலத்திறந்தது.

ஹெஸ்ஸி தனது ஆய்வுகூடத்தில் சோதனைக்குழாய்களில் மனைவி அளித்த பொடியை உபயோகப்படுத்தி தயாரித்த திட வளர்ப்பு ஊடகங்களில் பாக்டீரியாக்கள் முன்பு இருந்த எந்த தடைகளும் இன்றி எளிதில் வளர்ந்தன.

உடனடியாக இதை ராபர்ட் காஹ்ஹுக்கும்  1881 ன் இறுதிகளில் தெரிவித்தார். சில மாற்றங்கள் மூலம் காஹ் அந்த பொடியிலிருந்து பாக்டீரியாக்களை வளர்க்கும் சிறந்த திட வளர்ப்பு ஊடகத்தை உருவாக்கினார்.

1882ல்   காஹ் காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாவைக் குறித்த தனது ஆய்வுக்கட்டுரையில் அகார் எனும் கடற்பாசி பொடியை வளர்ப்பு ஊடகமாக பயன்படுத்தியதை ஒரு சிறு வாக்கியத்தில் குறிப்பிட்டதைத் தவிர அகாரின் பயன்பாட்டை, அதன் ஊடகவளர்ப்பு உபயோகத்தை பரிந்துரைத்த, கண்டுபிடித்த ஃபேனியை குறித்து எந்த ஒரு ஆய்வுக்கட்டுரையும் வெளியாகவில்லை.

அவரது கணவர் ஹெஸ்ஸியின்  ஆய்வுக்கட்டுரையில் கூட ஃபேனியின் பெயர்  ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. வெப்பநிலை உயர்ந்தாலும் அகார் ஊடகங்கள் திரவமாகாததால் 19 ம் நூற்றாண்டில் ஜெலட்டின் உபயோகம் முற்றிலும் மறக்கப்பட்டு அகாரே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது.

இரண்டாம் உலகப் போர் வரை ஜப்பானை மையமாக கொண்டு  அகார் தயாரிப்பு நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நுண்ணுயிரியல் ஆய்வுகளில் பல நாடுகளில் ஈடுபட்டதால் அகார் பல நாடுகளிலும் தயாரிக்கபட்டு, சுமார் 2,500டன் அகார் ஒரு வருடத்தில் தயரிக்கப்பட்டது.

1970ல் அகார் தயாரிப்பு பன்மடங்கு அதிகமாகி வருடத்திற்கு  10,000 டன் தயாராகியது

ஜாவாவிலிருந்து ஃபேனிக்கு கிடைத்த அந்த கடற்பாசி பொடியான அகாரின் சமையலறை உபயோகம் தென்கிழக்காசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

வரலாறு

அகாரை  17ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவராக  கியோட்டாவை சேர்ந்த சத்திர உரிமையாளரான டேரோ ஜமோன் மினோயா (Tarozaemon Minoya) கருதப்படுகிறார்.

அவரது பெயரிலேயே இருந்த  மினோயோ என்னும்  சத்திரத்திற்கு ஓர் கடும் பனி இரவில்  அப்போதைய ஜப்பானிய மன்னரும் அவரது அணுக்கப்படைகளும் முன்னறிவிப்பின்றி வந்தபோது டேரோ அவசரமாக  கடற்பாசி நூடுல்ஸ் உணவான டோகோ ரேட்டன் (tokoroten) என்பதை அனைவருக்கும் விரைவாக தயாரித்து அளித்தார்.  இரவு விருந்திற்கு பின்னர் மீதமான  உணவை வெளியில் கொட்டினார்.

கடும்பனியில் அந்த கடற்பாசி உணவு மறுநாள் காலை இறுகி அப்பம் போலாயிருந்ததையும் மதிய வெயிலில் மீண்டும் இளகி நீர்த்துப்போனதையும் மினோயோ கவனித்தார்.

ஆர்வமூட்டிய அந்த உணவில் அவர் பல சோதனை முயற்சிகளைச் செய்து அந்த கடற்பாசியை கரைத்து திரவமாகவும், உறையவைத்து ஜெல்லியைப்போலவும் உபயோகிக்கலாம் என்பதை. கண்டறிந்தார் உறைந்த அந்த பொருளை மீண்டும் வெப்பமூட்டி திரவமாக்குவதும் அவராலேயே கண்டுபிடிக்கப்பட்டது.(Thermoreversible)

அவரது உணவகத்தில் அதன்பிறகு அந்த கடற்பாசி சூப் பல வாடிக்கையாளர்களின் விருப்ப உணவாகிறது. அதை தேடி பலர் மினோயோவுக்கு வரத்துவங்கினர்

அதற்கு உலர்ந்த டோகோ ரேட்டன் என்று அவர் பெயரிட்டிருந்தார். ஒருமுறை மினோயோவில் தங்கி இருந்த பௌத்தத் துறவிகள் அந்த உணவிற்கு  பௌத்தத் துறவியான கேண்டெனின் பெயரிட்டனர். இன்றும் அகாரின் ஜப்பானிய பெயர் கேண்டென் தான்(kanten)

உலகெங்கிலும்  இந்த பொடி கடற்பாசியுணவு என்று பொருள்படும் மலாய் வேர்கொண்ட அகார் என்னும் பெயரிலும் போர்சுக்கீசிய, பிரெஞ்ச் மொழி பேசப்படும் நாடுகளில் ஜெலோஸா (gelosa). என்றும் அழைக்கப்படுகிறது.  

1840 களில் ஜப்பானின் நகானோ பகுதியை சேர்ந்தவரான கொ ஸயமொன்  கோபயாஷி (Kuzaemon Kobayashi) கியோட்டோவை போலவே காலநிலையை கொண்ட தன் ஊரில் இந்த கேண்டெனை தயாரிக்க தொடங்கினார். ஜப்பானில் இப்படித்தான் அகார் தயாரிப்பு முளைவிட்டு இன்று விருட்சமாகியிருக்கிறது.

அகாரின் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான தயாரிப்பு கலிஃபோர்னியாவில் மட்சுவோ என்பவரால் தொடங்கப்பட்டு அவரது தயாரிப்பு முறைக்கான காப்புரிமையும் 1921- 22ல் பெறப்பட்டது

ஜப்பானில் இன்றும் வெறும் சர்க்கரை அல்லது உப்பிட்ட அகார் சூப்புகள் பிரபலமாக இருக்கிறது. அகார் ஜப்பானில் சூடான திரவமாகவும் குளிர்ந்த ஜெல்லியாகவும் சந்தையில் கிடைக்கிறது.

அகாரின் வேதி அமைப்பும், இருபெயர்க்காரணமும்

அகார்   agarose, மற்றும் agaropectine ஆகிய இரண்டு பாலிமர்களை கொண்டிருக்கிறது.  agar(ose) அகரோஸ் agar(opectine) அகாரோபெக்டின் ஆகிய இரண்டும் இருப்பதால் இதன் சந்தைப்பெயர் ’’அகார் அகார்’ என  இருமுறை அமைந்திருக்கிறது. 

 இவற்றுடன் galactose, 3,6-anhydro-galactose . 80 சதவீதம் நார்ச்சத்து ஆகியவையும்  கால்சியம், பொட்டாஷியம் ,C மற்றும் B வைட்டமின்களும் இதில் அடங்கியுள்ளது.

அகார் அளிக்கும் கடற்பாசிகள்

அகார் கடற்பாசிகள் கடலின் 20 லிருந்து 25 மீட்டர் ஆழங்களில் , 2 லிருந்து 40 செ மீ உயரம் வரை வளரக்கூடியவை. மையத் தண்டின் இருபுறமும் ஒழுங்கற்றுக் கிளைத்த சிவந்த நிற உடலம்(Thallus) கொண்டவை

அகார் ஜப்பானில் Gelidium pacificum என்னும் கடற்பாசியிலிருந்தும் பிற நாடுகளில் Gelidium sesquipedale, வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது.  ஜெலிடியம் வகை கடற்பாசிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் பிற கடற்பாசிகளிலிருந்து அகாரை தயாரிக்கின்றனர்.

Gracilaria Pterocladia, Gelidiella  ஆகிய இரு கடற்பாசிகளிலிருந்தும் அகார் தயாராகிறது.Gracilaria, Ahnfeltia, Gelidium, மற்றும் Pterocladiella ஆகியவை சிவப்பு கடற்பாசி வகைகள்.

 Ahnpheltia plicata மற்றும் Acanthopheltis japonica, Ceramiun hypnaeordes மற்றும் Ceranium boydenii ஆகிய கடற்பாசிகளிலிருந்தும் அகார் தயாரிக்கப்படுகின்றது. கடற்பாசிகளின் செல் சுவர்களில் இருந்து அகார் எடுக்கப்படுகின்றது.

அகாரை அளிக்கும் அனைத்து கடற்பாசி இனங்களும் அகாரோபைட்டுகள் (agarophyte) என அழைக்கப்படுகின்றன.

அகாருக்கு  சீனக்கண்ணாடி, சீனப்புல், சீன ஐஸ் கண்ணாடி  என்னும் பெயர்களுமுண்டு (China glass, China grass, China isinglass).

இலங்கையின் Gracilaria lichenoides  என்னும் கடற்பாசியிலிருந்து கிடைக்கும் அகார், சிலோன் அகார் அல்லது அகால் அகால் (agal-agal) என்று அழைக்கப்படுகின்றது.

கடற்பாசி  வளர்ப்பு

ஜப்பானிய கடற்கரைகளில் கரை ஒதுங்கும் இறந்த ஜெலிடியம் மற்றும் கிரேசிலேரியாக்களை சேகரித்து அவற்றின் வேர்களை போன்ற ஹோல்ட் ஃபாஸ்ட் களை கத்தரித்து அவை  பொருத்தமான  இடங்களில் நீருக்கடியில் வளர்க்கப்படுகின்றன

ஸ்கூபாவோடு முக்குளிப்பவர்களைக் கொண்டு கடலுக்குள் இருந்தும் ஜெலிடியம் எடுக்கப்பட்டு வளர்க்கப் படுகிறது. ஜப்பானில் அதிக ஆழத்தில் நீண்ட நேரம் மூச்சுப்பிடித்து நீரில் ஆழங்களில் முக்குளித்துக் கடற்பாசிகளைச் சேகரிக்கும் தனித்திறமை வாய்ந்த  ’அமா’’’ என்னும் இளம்பெண்களே ஜெலிடியம் சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இந்தியா மற்றும் வியட்நாமிலும் சிறிய அளவில் அகார் தயாராகின்றது

பயன்கள்

மனிதர்களின் உணவில் முதன்முதலாக உபயோகப்படுத்தப்பட்ட கூழ்மமான அகார் பல நூற்றாண்டுகளை கடந்து  இன்றும் முக்கியமான இடம்பிடித்திருக்கிறது. 

மணமோ சுவையோ அற்ற அகார் எந்த உணவிலும் சேர்த்துக்கொள்ளும்படியான சத்தான சைவ உணவாக இருக்கிறது. அகார் அது சேர்க்கப்படும் உணவின் சுவை நிறம் மற்றும் மணத்தை கொண்டுவிடுவதால்  இதற்கு ’உணவுப் பச்சோந்தி’ என்றும் செல்லப்பெயருண்டு.

அகார் கருப்பு ,சிவப்பு,பசை நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.

மதுபானங்களில் சிறிய அளவில் அழுக்கு நீக்கியாக அகார் சேர்க்கப்படுகிறது. ஆர்கிட் தாவர திசு வளர்ப்பு ஊடகத்தில் வெகுவாக அகார்  பயனாகிறது.

மிட்டாய், ஐஸ்கிரீம் தயாரிப்பிலும், உணவுப்பொருளாக மற்றும் பல வேதியியல் தொழிற்சாலைகளிலும் தான் அகாரின் பெரும்பாலான பயன்பாடு இருக்கிறது.  பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவு வகைகளிலும், பொய்ப் பல் கட்டுவதில், தடயவியல் சோதனைகளில் ரேகைகள் பதிவு எடுக்கவும் அகார் பயன்படுகிறது.

அழகுசாதன பொருட்களின் தயாரிப்பில், மருந்துத் துறையிலும் அகாரின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் மற்றும் சீன உணவுகளில் பாதியளவிற்கு கடற்பாசிகளும் அகாரில் தயாரான உணவுகளும் எப்போதும் இடம்பெற்றிருக்கும்.  குளிர்ந்த நீரில் கரையாத அகார் சமைக்கப்படுகையிலும் உண்ணப்பட்டபின்பும், தன் எடையைக்காட்டிலும் 20 மடங்கு நீரை உறிஞ்சிக்கொள்ளுவதால் போதுமான அளவு உணவிலேயே வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். எனவே கூடுதலாக உண்பதும் உடல் பருமன் அதிகரிப்பும் ஏற்படாமல் அகார் தடுக்கிறது. மேலும் அகார் பல சத்துக்களும் அடங்கியது. இதன்பொருட்டே அகாரை உணவில் சேர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சீனர்களும் ஜப்பானியர்களும்

அகாரை போலவே தற்போது உலகெங்கிலும் பரவலான உபயோகங்கள் கொண்டிருப்பவை:

  • Kappaphycus alvarezii, Eucheuma denticulatum ஆகிய சிவப்பு கடற்பாசிகளிலிருந்து கிடைக்கும் அகாரைப் போன்ற அனைத்து உபயோகங்களையும் கொண்டிருக்கும் கேரெஜினின (Carrageenan)
  • Sphingomonas elodea என்னும் பாக்டீரியாவிலிருந்து கிடைக்கும் ஜெல்லான் பசை( Gellan gum) 
  • Phytophthora sojae என்னும் சோயாபீன்ஸ் செடிகளில் கருகல் நோயை உண்டாக்கும் பூஞ்சை போன்ற ஒரு உயிரினத்தை ஆய்வகங்களில் வளர்க்கப் பயன்படும் வெண்ணெய் பீன்ஸ் மற்றும் அகார்கலந்த ஊடகமான Lima bean agar – Agar medium. இந்த நோய்க்கிருமியை தூய அகார் வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்க முடியாது.
  • கேரட் பொடியும் அகாரும் கலந்த Carrot  agar.   

பிரபல அகார்  உணவுகள்

அன்மிட்ஸு (Anmitsu) எனப்படும் நூற்றாண்டுகளாக ஜப்பனிய கலாச்சாரத்துடன் தொடர்பிலிருக்கும் சிறு சதுரக்கட்டிகளாக இருக்கும் ஒரு இனிப்புவகை அகாரினால் தயாரிக்கபடுகிறது. அன்மிட்ஸுவுடன் சிறிய கிண்ணங்களில் கருப்பு சாஸ் வழங்கபடும் சாஸுடன் கலந்து உண்ணப்படும் இந்த இனிப்பு ஜப்பானில் மிகப் பிரபலம். ஜப்பானின் பிரபல சோற்று உருண்டையான வகாஷியிலும் அகார் கலக்கப்படுகிறது.

 மிஸு யோகான் (mizu yōkan,) எனப்படும் ஜப்பானின்  மற்றொரு குளிர்ந்த , வழுக்கும் தன்மையுடைய  கோடைக்கால கட்டி இனிப்பு வகையும் அகார் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் ஹேலோ ஹேலோ( Halo-halo) என்னும் குளிர்ந்த இனிப்பு வகை தேங்காய் பால், அகார் மற்றும் பொடித்த ஐஸ்கட்டி கொண்டு தயாரிக்கப்படுகிறது, பிலிப்பைன்ஸின் அங்கீகரிக்கப்படாத தேசிய பானம் என்றும் இதற்கு பெயருண்டு.

இந்தியா, பர்மா, தைவான் ஆகிய நாடுகளிலும் அகார் உணவில் பயன்படுத்தப்படுகிறது. 

ரஷ்யாவில் பறவைப்பால் என்றழைக்கப்படும் ஒரு கேக்கில் அகார் பிரதானமான இடுபொருள். (ptich’ye moloko -bird’s milk), 

தர்பூசணிப்பழ வில்லைகளைப்போல வடிவம் கொண்டிருக்கும் மெக்ஸிகோவின் வண்ணமயமான இனிப்பு மிட்டாய்கள்  அகாரைக்கொண்டே தயாரிக்கப்படுகின்றன 

திரவ உணவுகளை கெட்டியாக்க உலகெங்கிலும் அகார் பெரிதும் பயன்பாட்டில் இருக்கிறது. 

அகார் சந்தை

அகார் அகார் சந்தைப்படுத்தப்படுகையில் அவை பெறப்பட்ட கடற்பாசியின் பெயரோடு ஜெலிடியம் அகார், கிரேசிலேரியா அகார் என்று  குறிப்பிடப்பட்டே  சந்தைப் படுத்தப்படுகின்றன. 

தூய அகார் பொடியாகவும் கூழ்ம அடர்த்தி அதிகமாக்கப்பட்டும், பட்டைகளாகவும் சதுரக்கட்டிகளாகவும் ஜப்பானிலும் சீனாவிலும் இல்லத்தரசிகளின்  உபயோகத்துக்கு வசதியாக வில்லைகளாகவும். தகடுகளாகவும்  சந்தையில் கிடைக்கிறது.

உலகின் மொத்த அகார் சந்தையில் நுண்ணுயிரியல் வளர்ப்பு ஊடகங்களுக்கான சந்தையின் பங்கு வெறும் 10-5 சதவீதம் தான்.

 ஜப்பான் நார்வே சீனா மற்றும் சிலே  ஆகியா நாடுகளில் இயற்கையாக கடலில் கிடைக்கும் ஜெலிடியம் உள்ளிட்ட  கடற்பாசிவளம் அதீத அறுவடையினால் அபாயகரமான் அளவிற்கு எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக 2017 ல் நடந்த ஒரு அய்வு முடிவு எசரித்திருந்தது. குளங்களில் தொட்டிகளில்  ஜெலிடியம் வளர்க்கும் சோதனைகள் துவங்கி இந்நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 உணவு மற்றும் ஆய்வக தேவைகளின் அதிகரிப்பால்  சர்வதேச அகார் சந்தை 2020-25 ல் மேலும் உயரக்கூடும் என  கணிக்கப்பட்டிருக்கிறது

மறக்கபட்ட ஃபேனியின் பங்களிப்பு

மருத்துவத்துறையிலும், நுண்ணுயிரியலிலும், கல்விக்கூட அறிவியல் சோதனைக்கூடங்களிலும் அகாரின் பயன்பாடு இன்றியமையாதது. அகார் பெட்ரி தட்டுகள் இல்லாத ஆய்வுகூடங்களே உலகில் இல்லை. எனினும் அகாரை இந்த உபயோகத்துக்காக பரிந்துரைத்த ஃபேனியின் பெயரில் ஒரு அகார் வளர்ப்பு ஊடகம் கூட இல்லை. அகார் பயன்பாட்டில் ஃபேனியின் பங்கு என்ன என்பதுவும் கல்லூரி பாடத்திட்டத்திலும் ஆய்வுக்கட்டுரைகளிலும்  இல்லவே இல்லை.  

பிரபல விஞ்ஞானிகள் அறிவியலாளர்களின் பெயர் என்ன என்னும் கேள்விக்கு சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் நினைவுக்கு வருவது  ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் வாட்சன் கிரிக் போன்ற ஆண்கள் தான். (அரிதாக மேரி க்யூரி நினைவு கூறப்படுகிறார்) இவர்களெல்லாம்  மாபெரும் மேதைகள்தான் எனினும் அறிவியல் வரலாற்றில் ஃபேனியைபோல மிக முக்கியமான கண்டுபிடிப்புக்குக் காரணமான பெண்களும் இருக்கிறார்கள் என்பதை இந்த தலைமுறையினராவது அறிந்துகொள்ளவேண்டும்

பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்டிருந்த காலத்திலும் பல முக்கிய கண்டுபிடிப்புக்களை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் செய்த சாதனைப்பெண்கள் பலரும் வரலாற்றில் விடப்பட்டவர்களே.  அறிவியல் கண்டுபிடிப்புக்களில் வரலாற்றில் இடம்பெற்றவர்கள் உண்டு.  வரலாற்றில் மறக்கப்பட்டவர்களும் மறக்கடிக்கப்பட்டவர்களும் உண்டு 

இந்தியாவின் முதல் தாவரவியலாளர் ஜானகியம்மாள், போகன்வில்லாவையும் மேலும் பல தாவரங்களையும் ஆண் வேடமிட்டு, உயிருக்கு துணிந்து உலகைக் கப்பலில் சுற்றிவந்து கண்டுபிடித்த ழான் பாரெ, DNA வின் இரட்டைச் சுழல் அமைப்பை கண்டுபிடித்து அவருடன் இணைந்து பணியாற்றிய  வாட்சனும் கிரிக்கும் நோபல் பரிசு பெறுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்துபோன ரோஸலிண்ட் ஃப்ராங்க்லின் (Rosalind Franklin), பெனிசிலியத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் சிற்றினமான  கிரைசோஜீனத்தை  கனிந்த பழமொன்றின் பொன்னிற  பூஞ்சைத் தொற்றிலிருந்து கண்டுபிடித்த ஆய்வக உதவியாளர் மேரி,  இதயத்தில் நேரடியாக வடிகுழாயை செருகி ஆராயும் ஆய்வை தனக்குத்தானே செய்துகொண்ட வெர்னெர் ஃபோர்ஸ்மேனுக்கு (Werner Forssmann) ரகசிய உதவிகளை  செய்துகொடுத்த செவிலி கெர்டா டிட்ஸென் (Gerda Ditzen) இப்படிப் பலரை சொல்லலாம். இன்று பல  கோடிமக்கள்  உயிருடன் இருக்க அடிப்படையான ஆய்வுகளுக்கு இவர்களே காரணம்

அப்படித்தான்  நுண்ணுயிரியல் ஆய்வில்  தனது ஆர்வத்தினால் உதவி மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ஃபேனியும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்.

1934ல் ஃபேனி காலமானபோது அவரது இறப்பு எந்த ஒரு நுண்ணுயிரியலாளருக்கும் தெரிந்திருக்கவேயில்லை. 1939 ல்  ஃபேனியின் வாழ்க்கையை  கட்டுரையாக எழுதிய ஹிட்சென்ஸ் (Hitchens) மற்றும் லெய்கிண்ட் (Leikind) ஆகியோர் ஃபேன்னியை சிறப்பிக்கும் பொருட்டு இனியாவது தூய அகார் வளர்ப்பு ஊடகத்தை’’ ஃபேனி ஹெஸ்ஸி ஊடகம்’’ என்று பெயரிடலாம் என்னும் பரிந்துரையை, கோரிக்கையை முன்வைத்தார்கள். 

80 வருடங்களுக்குப் பின்னும் அக்கோரிக்கை செயல்படுத்தப்படவில்லை. இன்னும் கூட தாமதமாகிவிடவில்லை.  அது செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்திற்கும், அறிவியலுக்கும் தன்னலமின்றி மகத்தான சேவையாற்றியவர்களில் ஒரு பெண்ணுக்காவது நியாயம் கிடைத்தது போலிருக்கும்

மேலதிகத் தகவல்களுக்கு:

https://www.britannica.com/topic/agar-seaweed-product#ref1251391

https://en.wikipedia.org/wiki/Walther_Hesse

https://en.wikipedia.org/wiki/Fanny_Hesse

http://www.cuisine-innovation.com/index.php?controller=attachment?id_attachment=2

https://www.tarladalal.com/article-uses-of-agar-agar-305

அகார் வளர்ப்பு காணொளி

பெயர்கள்

 ஜெ அவர்களின்  தளத்தில் வெளியான ‘ பெயர்கள் ‘ பதிவை  சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன்.  நவீனப்பெயர்களான ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் ரமேஷ் குமெஷில்  வாய் விட்டுச்சிரித்து, செட்டியார்கள் வருமானம் என்று பெயரிடுவதில் சிரிப்பை அடக்க சிரமப்பட்டென், இடுப்பில் தாயத்து மட்டுமணிந்த குஷ்பூவை வாசிக்கையில் குபீரென் சிரித்து  ஓட்டுனரே திடுக்கிட்டுத்திரும்பிப் பார்த்தார்.

’பெரும்பன்னி’  என்பது உயர் சாதியினர் விளிம்பு நிலை மக்களுக்கு  இட்ட பெயராயிருக்கலாமென்பதையும்  ’கும்பிடெறேன் சாமி’ என்று  தலித் ஒருவர் உயர் சாதியினர் கூப்பிட சங்கடப்படட்டும் என்று வைத்துக்கொண்ட பெயரும் நிறைய யோசிக்க வைத்தது.
நான் முனைவர் பட்ட ஆய்விலிருக்கையில் அந்த பல்கலையின்

துணைவேந்தரின் பெயரிலிருந்த ஒரு அலுவலகப்பணியாளரை பெயர் மாற்றி பேபி என்றழைத்ததையும், மெஸ்ஸில் இரவு எங்களு/க்கு ஒரு தம்ளர் பால் தருவதன் பொருட்டு வாசலில் காத்திருக்கும் அக்காவை, வேண்டுமென்றெ ’’பாலக்கா ’’என அழைத்ததையும்,கொழும்புவில் இருந்த சில வருடங்களில்

கேட்ட மிக அழகிய தமிழ் பெயர்களையும் நினைவு கூர்ந்தேன்

 தருண் பிறந்த போது சரணுக்கு ரைமிங்காக தருண் என பெயரிட நான் பெரிதும் விரும்பினேன் ஆனால் சரண் அப்பாவோ ராகுல் என்றே பெயரிட முடிவு செய்தார். பின்னர் இரண்டுபேருக்கும் பொதுவாக ராகுல் தருண் என்றே வைத்தோம். நான் எப்போதாவது அவனை முழுப்பெயரிட்டு ‘’ ராகுல் தருண் ‘’ என்றழைத்தால்அரண்டு போய்’’ ஏம்மா கோபமா இருக்கியா ?என்று கேட்பான். ஆம் கோபமயிருக்கையில் கூப்பிட ராகுல் , பிரியத்திற்குரிய பெயர் தருண்!!!

எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் சுத்தம் செய்ய உதவும் பெண்ணின் பெயர் ஓவியா,  நல்ல கருப்பாய் அழகிய கருங்கல் சிற்பம் போல இருப்பாள், தெரிந்தே வைத்திருப்பார்கள் போல.

என்னுடன் பணி புரியும் ஒரு பேராசிரியர்  மகனுக்கு ’பியாரி மக்ரே’ என்று பெயரிட்டிருக்கிறார்.கேட்டதற்கு ரஷ்ய புரட்சியாளர் பெயரென்றார் அடுத்து பிறந்த மகனுக்கும் என்னவோ பெயர் சொன்னார் என் சிற்றறிவிற்கு அதை  நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை

எங்கள் கல்லுரி முதல்வர் தமிழ்த்துறையை சார்ந்தவர், அவர் மனைவி ஆங்கிலத்துறை ,ஒரெ மகள் ’மொழி

ஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அழகிய வித்தியாசமான பெயர்கள் இருக்கும் சரியாக உச்சரிக்க கண்ணாடியை துடைத்துப்போட்டுக்கொண்டுதான் வகுப்பிற்கு செல்வேன்

சென்ற விடுமுறையில்  சரணை  விடுதியிலிருந்து அழைத்து  வந்தேன்.

வழக்கம் போல இந்த பெயர்களைபற்றிய  பதிவைச் சொல்லிக்கொண்டிருந்தேன்

அவன் பள்ளியில் அவனுடன்  படிக்கும் ’’ தண்ணீர்மலை, தீர்த் , அனுபவ் அகர்வால், துளிர்’’  பற்றியெல்லாம்  அவன் சொன்னதும் வியப்பாக இருந்தது. ஐஷ்வர்யா முல்லாமாரீ’  எனும் பெண்ணுக்கு ஏன் தமிழ் பசங்க எல்லாம் தன் அப்பா பெயரைச்சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள் என்று   தெரியாவிட்டாலும்    இவன்களை எங்கு பார்த்தாலும் ஒரே ஒட்டமாய் ஓடிவிடுவாளென்றும்  சொல்லிக்கொண்டிருந்தான்

தவமாய் தவமிருந்து  இரண்டு பெண்களுக்கு பிறகு  ஒரு   மகனை பெற்றெடுத்த என் பெற்றோர் எனக்கும் அக்காவிற்கும் லோகமாதேவி , சங்கமித்ரா என்று சுருக்கமாக பெயரிட்டு விட்டு அவனுக்கு மட்டும்

 ’விஜயரகுனாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமணிய சுந்தர வடிவேல்  எனப்பெயரிட்டு அவன் மீதான் பிரியத்தை காட்டி  இருக்கிறார்கள் அவன்  திருமண் அழைப்பிதழிலும்  கூட இப்படியேதான் அச்சிட்டோம்

  பாரதியார் பல்கலையில் மொழியியலில், நீலகிரி தோடர்கள்,  படுகர்கள்  பெயர்களில் ஆய்வு செய்த என் தோழியுடன் 97ல் கள ஆய்விற்கு  நானும் சென்றிருந்த  போது ஒரு வீட்டில்  3 பெண்குழந்தைகளுக்கு  வயலெட், ஆரன்ஞ், மற்றும் ரோஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்,  அங்கிருந்த அக்குழந்தைகளின் பாட்டன் என்  பெயரைக்கேட்டு விட்டு லோகமாதேவி என்பது  மிக புராதானமாயிருக்கிறது என்று  அபிப்ராயபட்டார், வயலட்டிற்கு இது புராதானம்தான்.

வெண்முரசில் சமீபத்தில் வாசித்த மென்மொழி என்னும் பெயர் என்னவோ மிக பிடித்து விட்டது. என் பெயரையே அப்படி மாற்றிக்கொள்ளலாமா என்று கூட நிறைய யோசித்தேன் பின்னர் இந்த வலைப்பூவிற்கு  பெயராக  வைத்துக்கொண்டேன்

பின்னும் ஆசை அடங்காமல் சரண் தருணிடம் அவர்களூக்கு பிறக்கும் பெண்களுக்கு மென்மொழி என்று பெயரிட வேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டிருக்கிறேன்.கல்லூரியில் ஒரு பேரசிரியையின் மகளின்இரட்டைக்குழந்தைகளுக்கு ஹாசினி ,பாஷினி என்ப்பெயரிட்டேன்.

இப்படி என்பிரியத்திற்கு உகந்த பல பெயர்கள் உண்டு ஹைமாவதி, தாம்ரா, அதிதி, ஸ்துதி,…………………

 நிறைய சிந்திக்க வைத்த பதிவு இது

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑