அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 18 of 38

உருட்டும் பூமரும்,

 இந்த யுகத்தின்  இளைஞர்களுக்கான  புது வழங்கு சொற்களை வீட்டில் அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் அல்லது எப்போதும் தருண் தான். அரிதாக நானும் கல்லூரியில் கேட்பவற்றை சொல்லுவதுண்டு.

சரணோ சுவாமி  அனுகூலனந்தாவின் சமீபத்திய போதனைகளை, அமெரிக்க நன்றி தெரிவிக்கும் நாளின் பின்புலத்தை, வெண்முரசின் பூரிசிரவஸ் இழந்த பெண்களை, உருமாறியதாக சொல்லப்படும் வைரஸின் உண்மைத் தன்மை போன்றவற்றை பேசும் வழக்கம் கொண்டவன்.அரிதாக குழந்தைகளின் காணொளிகளை அந்த குழந்தைகளை காட்டிலும் குழந்தைமையோடு பகிர்ந்துகொள்வதும் உண்டு.

ஆனால் தருண் மிக சிறியவனாக இருக்கையிலேயே  புதுபுத்தன் திசை நோக்கியே தன் கவனத்தை குவித்திருப்பவன். எல் கே ஜி ‘ல் படிக்கையில் ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வந்து உதட்டின் இரு கோடிகளையும் விரல்களால் ஆன மட்டும் இழுத்து பிடித்துக் கொண்டு ’’போண்டா, டீ’’ என்று வேக வேகமாக சொன்னால் அது ;பொண்டாட்டி’ என்று ஒலிக்கும் விந்தையை செய்து காண்பித்தான். அவன் விரல்களை எடுத்துவிட்டு அத்தனை சிரமப்பட வேண்டியதில்லை உதடுகளை சாதாரணமாக வைத்துக்கொண்டே ’பொண்டாட்டி’ என்று’’சொல்லலாம் என்றேன். ‘’ஓ! அது அப்ப கெட்ட வார்த்தை இல்லையா’’ என்று சந்தேக நிவர்த்தி செய்து கொண்டான்   நண்பர்கள் உபயமாயிருக்கும் அந்த நவீன யுக்தி எல்லாம்.

அவன் நண்பர்களும் அவன் போலவேதான் அடங்காதவர்களும் அசராதவர்களும். மாலை நேரம் பள்ளியில் இருவரையும் அழைக்க செல்கையில் தருணின் பைகளையும் அணைத்துக்கொண்டு மைதானத்தில் கலைந்த தலையுடன் களைத்துப்போய் சரண் வழக்கமான இடத்தில்  காத்துக் கொண்டிருப்பான், சரண், நான், கார் ஓட்டுநர் செந்தில் இன்னும் சில மாணவ தன்னார்வலர்கள் இணைந்து எங்கு தருண் தனது நண்பர்களுடன் புழுதி பறக்க விளையாடிக்கொண்டிருகிறான் என்று தேடும் பணியை துவங்கி சுமார் அரைமணி நேரத்தில் கண்டுபிடித்து குண்டுக் கட்டாக தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றுவோம். 

தருணின் நண்பன் ஒருவன் தேமே என்றிருக்கும் சரணை கைகளில் காம்பஸால் குத்தி காயப்படுத்தி இருந்தான் ’’இளமுருகு ஏண்டா  சரணை குத்தினே’’? என்று மறுநாள்  கேட்டதற்கு ’’நான் சும்மாதான் இருந்தேன் ஆண்ட்டி, காம்பஸ் அதுவே போய் சரண் அண்ணாவை குத்திருச்சு’’ என்றான்.

தருணும் நண்பர்களும் ஓடிப்பிடித்து விளையாடிய ஒரு நாளில் ஓங்கு தாங்கான  தருணின் நண்பன் ஒருவன் வேகமாக ஓடிவந்து அங்கு நின்று கொண்டிருந்த, அப்போதுதான் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்திருந்த ஒரு ஒல்லிப் பெண்ணின் மீது விசையுடன் மோதியதில் கீழே விழுந்து அந்த பெண்ணின் கை எலும்பு முறிந்துவிட்டது. குணமான பின் அவள் செய்த முதல் வேலை அந்த பள்ளி வேலையை ராஜி வைத்ததுதான்.

ஆனால் பெற்றோர் ஆசிரியக் கூட்டங்களின் போது தருணைக்குறித்த பராட்டுப்பத்திரங்கள் அவனது ஆசிரியர்களால் வாசிக்கப்படும் விந்தையை இன்று வரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

8 ஆம் வகுப்பில் தருணுக்கு நடனம் சொல்லி கொடுத்த ஆசிரியர் பள்ளியை விட்டு சொல்லிக்கொள்ளாமல் போனது, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி மட்டை களை அதிகம் பிறரின் மண்டைகளை உடைப்பதற்கும், எப்போதாவது விளையாடுவதற்கும் பயன்படுத்துவது, இப்போது டேராடூன் கல்லூரி விடுதி வார்டனை கண்ணில் குருதி வருமளவுக்கு படுத்தி எடுப்பதுமாக தருணின் விளையாட்டுக்களின் பட்டியல் விரிவானது

புன்னை மரத்தடியில் வளர்ந்திருந்த பெரிய குடைக்காளானொன்றை எனக்கு தெரியாமல் பள்ளிக்கு எடுத்துச்சென்று அவனிடம் தனித்த பிரியத்துடன் இருக்கும் ஆசிரியை ஒருவருக்கு கொடுத்திருக்கிறான். அந்த ஆசிரியை பின்னர் ஒரு வருடம் வரை பள்ளிக்கு வராமலிருந்து, நான் காவலதிகாரிகள் கதவைத்தட்டும் கனவுகள் கண்டு அலறிக்கொண்டு எழுந்த இரவுகள் அனேகம்.

செண்டு மல்லிச்செடிகளில் இருக்கும், தீப்பட்டது போல் கடிக்கும் செவ்வெறும்புகளை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வதை குறித்து விசாரித்த ஆசிரியரிடம் அப்போதுதான் அவன் Ant man ஆகமுடியும் என்று சொன்னது என சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் வீட்டில் உருட்டு என்னும் சொல்லை அதிகமாக புழங்கினான் பேசுகையிலும்,  வாட்ஸப் செய்திகளிலும் அடிக்கடி இடம்பெற்ற அந்த சொல் ’’பொய் சொல்லுதல், உண்மைக்கு புறம்பாக பேசுதல், ஏமாற்றுதல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல். வார்த்தை தவறுதல், இல்லாததை இருப்பதென்று சொல்லுதல்’’ என்று விரிந்த பொருள் கொண்டிருப்பதை காலப்போக்கில் அறிந்துகொண்டேன் . வாட்ஸப் தகவல்களில் உருட்டு என்று சொல்லுவதற்கு பதில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் தேய்த்து உருட்டும் துண்டுக்காணொளியை பயன்படுத்தவும் துவங்கினான்.

சமயங்களில் சாம்பவிக்கும் அவனுக்கும் சண்டை துவங்க இந்த எலுமிச்சை உருட்டே காரணமாகிவிடும். அவள் எதோ ஒன்றை முக்கியமாக சொல்லப் போக இவன் எலுமிச்சையை உருட்டி அனுப்பி உடன் சண்டை தொடங்கி, மள மளவென்று  வளரும்.

இந்த உருட்டு, தருண் மட்டும் உபயோகப்படுத்துவதல்ல,  இது வெளி உலகிலும் புழங்கும் வார்த்தைதான் என்பதும் தெரியவந்தது. எழுத்தாள நண்பர் சுரேஷ் பிரதீப் அவரது வாட்ஸப் நிலைத்தகவலில் ஒரு முறை ’’இந்த நூற்றாண்டின் மாபெரும் உருட்டு மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார்’’. 

 இப்படி உருட்டு உருண்டு கொண்டிருக்கையில் இன்னும் சமீபகாலத்தில் பூமர் என்ற சொல்லும் அவனால் புழங்கப்பட்டு வீட்டின்  வழங்கு சொற்களிலொன்றாகி விட்டிருந்தது அது சமயங்களில் என்னையும் குறிக்க பயன்பட்ட போதுதான் நான் இதுகுறித்து விசாரிக்கத் தலைப்பட்டேன். இந்த காலத்திற்கு பொருந்தாத பலதையும் சொல்லும் பெரிசுகளை குறிக்கும் சொல் அது என்று தெரிந்து, நான் சினந்துகொண்ட பின்னர் என்னை அந்த சொல்லால் குறிப்பிடுவதை குறைத்துக்கொண்டான்.(நிறுத்திக்கொள்ளவில்லை) அதிகம் அந்த சொல்லால் குறிக்கப்பட்டவராக பக்கத்து வீட்டிலேயே வசிக்கும் என் அப்பா இருக்கிறார் என்பதையும் கவனிக்க முடிந்தது.

இந்த சொற்கள் எல்லாம் எங்கு தோன்றி வளர்ந்து எப்படி இவர்களிடையே புழங்கி பிரபலமாகி நிலைபெற்று விடுகிறது என்பதுதான் அதிசயம் .

என் கல்லூரி பேராசிரியர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் தகவல்கள் பகிரும் பலர்  அவனால் பூமர் என்றே அடையாளப்படுத்த படுகிறார்கள்.

அவன் போனில் அடிக்கடி ’’டேய் உருட்டாதடா,  போதும் உருட்டினது, இந்த உருட்டெல்லாம் என்கிட்டே வேண்டாம்,  அந்தாள் ஒரு பூமர்டா, அய்யோ  அந்த பூமர் வகுப்பா இப்போ’’ என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

அவனை கானுலாக்களுக்கு உடனழைத்து செல்வதாக  கூறிவிட்டு கடைசி நிமிடத்தில் பயணத்தை  ரத்து செய்யும் ஒரு நண்பனை போனில் ’உருட்டு’ என்றே பெயர் பதிவு செய்திருக்கிறான். 

உறவினர் வருகையொன்றின் போது அவர்களிடம் வழக்கம்போல் சாதியை குறித்து அப்பா பேசிக்கொண்டிருக்கையில்  தருண் உரக்கவே ’’பூமர்’’ என்று சொன்னதை அப்பா கேட்டும் அது என்னவென்று அவரால் உய்த்துணர முடியாத்தால் விஷயம் அத்தோடு போனது.

சிலநாட்களுக்கு முன்னர் ஒரு திருமண வரவேற்பிற்கு போயிருந்தோம்.  விருப்பத் திருமணம். மாப்பிள்ளைக்கு நாங்கள் நெருங்கிய உறவு. மணப்பெண் உற்சாக மிகுதியில் இருந்தாளோ என்னவோ, உடலில் ஒரு துள்ளலுடன்  அவ்வப்போது லேசாக எம்பி எம்பி குதித்தபடி சிரித்துக்கொண்டே இருந்தாள். அது எனக்கு புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.

வரிசையில் நின்று பரிசுகள் கொடுத்து புகைப்படம் எடுத்துகொள்ளுவதில் அப்படி நகைச்சுவையாக ஏதும் இல்லை. பெண்ணின் உடையில்  மேடையின் அலங்கார இரவு விளக்குகளின் ஒளியை பிரதிபலிக்கும் பெரிய கற்கள் ஏராளம் பதிக்கப்பட்டு அவளே ஒரு அருமணி போல் ஜொலித்துகொண்டிருந்தாள்.

ஒரு நீண்ட பாவாடையும் , நீளக் கை வைத்த ரவிக்கையும், பட்டை பட்டையாக உடைக்கு பொருத்தமான நிறங்களில்  ஆபரணங்களும், ஆர்கிட் மாலைகளுமாக அழகான ஒப்பனை. மாராப்பு அல்லது மேல் புடவை போன்ற எதுவும் இல்லை வட இந்திய சோளி போன்ற உடை.

என் திருமணத்தின் போது மாலைகளின் சுமையினால் லேசாக ஒதுங்கி இருந்த புடவையை நான் கவனித்திருக்கவில்லை. மேடைக்கு கீழிருந்து கவனித்து, பாய்ந்து மேடையேறி அங்கு ஓடிக்கொண்டிருந்த வயர்களில் தடுக்கி விழுந்து முட்டி பெயர்ந்தபின்னரும், நொண்டியபடி வந்து என் புடவை தலைப்பை சரி செய்த லீலாவதி அத்தையின் பேரனுக்குத்தான் அன்று வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. அத்தை கீழே ஒரு நாற்காலியில் அமர்ந்து நிகழ்வை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

 பஃபே  இரவுணவு அல்லது உண்டாட்டு. ஆப்பச்சட்டிகளின் முன்னே எச்சில் தட்டுடன் காத்துக்கொண்டிருந்தவர்களில், என் திருமணத்தில் அப்பா வந்து முறையாக பந்தி விசாரிக்கவில்லை என்பதால் கோபித்துக்கொண்டு, உடன் மதுவும் அருந்திவிட்டு ஏகத்துக்கும் சலம்பிக்கொண்டிருந்த  மாரிமுத்து மாமாவும் இருந்தார். 

நிகழ்வில் உறவினர்களில்  பலர் தருணின் நீண்ட கேசத்தை குறித்து கேள்வி எழுப்பி அறிவுரைகளும், அறவுரைகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவன் மானசீகமாக ’பூமர், பூமர்’ என்று சொல்வது  எனக்கு தெளிவாக கேட்டது. 

நிகழ்வு முடிந்து  வீடு திரும்புகையில் ’’எதுக்குடா அந்த பொண்ணு கெக்க பிக்கேன்னு சிரிச்சுகிட்டே இருக்கா? மேடையில் கொஞ்சம் மரியாதையாக  இருக்கலாம் இல்ல ’’ என்றேன். ’பூமர், பூமர் பேசாம இருக்கியா’’ என்றான் தருண்.

கேட்டுக்கேட்டு எனக்கும் அந்த வார்த்தைகள் மனசிலாகி விட்டிருக்கின்றன.

பேராசிரியர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கடந்த வாரம் நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் செய்தோம். சமாதானமாக போகச்சொல்லி, நிர்வாகத்தின் தரப்பை எங்களுக்கு ஒருவர் விளக்கி சொல்லிக்கொண்டிருக்கயில் ’’உருட்டு உருட்டு’’ என்று சத்தம் கேட்டது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன், வேறு யாரும் இல்லை என் மனக் குரல்தான்

இன்று வரை செயல்படுத்தப்பட்டிருக்காத என் இரண்டு பதவி உயர்வுகள், அவற்றிற்கான ஊதிய உயர்வுகள்  இந்த மாதமாவது வருமா என அலுவலகத்தில் கேட்டால் போன ஜனவரியில் சொன்னது போலவே’’ நிச்சயம் 2 வாரத்தில் வந்துவிடும்’’ என்றார்கள்,  என்ன ஒரு உருட்டு?

இன்று காலையில் அவனைப்போலவே கானுயிர் புகைப்படங்களில் ஆர்வம் கொண்டிருக்கும்  அவன் தோழியிடம் இருந்து டாப் ஸ்லிப் போகலாம் என்று அழைப்பு வந்தது. தருண் புறப்பட்டு காத்திருந்தான். காரில் வந்த அவளுடன் கிளம்பி டாப்ஸ்லிப் யானைகளை ஆவணப்படுத்த சென்றுவிட்டான். இவற்றை கவனித்துக்கொண்டிருந்த அப்பா மெல்ல  என்னிடம் வந்து ‘ இந்த வயசுல இப்படி அனுப்பறதெல்லாம் சரியில்லை நான் சொல்றதை சொல்லிட்டேன் ‘ பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் வைக்கலாமா? என்றார்’’ நான் மனதுக்குள் ‘பூமர்’ என்றேன்.

தாமரையும் அல்லியும்!

நீர்வாழ் பல்லாண்டுக் கொடித்தாவரமான தாமரையின் அறிவியல் பெயர் நெலும்போ நூசிஃபெரா (Nelumbo nucifera).  இது நெலும்போனேசி குடும்பத்தை சேர்ந்தது. தாமரை மலர் பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாக போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்குரியதாகவும் இருந்தது. தாமரையின், வடிவங்கள் அக்காலச் சமயத் துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களில்  அதிகமாக இடம்பெற்றிருந்தது. தாமரை ஓட்டமில்லாத நீர்நிலைகளிலும் நீர்தேக்கங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரும்.

 இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய மலரும் தாமரையே.(செந்தாமரை) இந்த நீர்வாழ் தாவரத்தில் தற்போது உலகில் இருப்பது இரண்டே இரண்டு சிற்றினங்கள்தான். ஆசியாவிற்கு  சொந்தமான இளஞ்சிவப்பில் இருக்கும் செந்தாமரை என்று பொதுவாக அழைக்கப்படும் நெலும்போ நூசிஃபெரா (Nelumbo nucifera) மற்றும் வட மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு சொந்தமான இளமஞ்சள் மற்றும் வெண்ணிற தாமரையான நெலும்போ லூட்டியா (Nelumbo lutea.)

நெலும்போ என்னும் லத்தீன் சொல் ’புனிதமான  உணவு’ என்று  தாமரையின் சத்துக்கள் நிறைந்த உண்ணக்கூடிய விதைகளையும் பல கலாச்சாரங்களில் இருக்கும் இம்மலரின் புனித தன்மையையும் குறிக்கும் ’நிலம்பா’ என்னும் சிங்கள மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இரண்டு வகை தாமரைகளின் அறிவியல் பெயர்களின் சிற்றினப்பெயர்களில் இருக்கும் .நியூசிஃபெரா  விதைகளை கொண்டிருக்கிற என்றும், லூட்டியா  சேறு எனவும் பொருள்படும்..

தாமரை வேர்கிழங்கிலிருந்து நேராக வளரும். நீர் ஒட்டாத, மெழுகுப்பூச்சு கொண்ட, பெரிய இலைகளையும் காற்றுப்பைகள் கொண்டிருக்கும் தண்டுகளையும் கொண்டிருக்கும் தாமரை இதழ்களிலும் நுண்ணிய காற்றுப்பைகள் இருப்பதால் மலரிதழ்களும் நீர்ல் நனையாது.   

இளஞ்சிவப்பு தாமரையானது, புனித தாமரை, ஆசிய தாமரை  அல்லது இந்திய தாமரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாமரை இந்தியா, சீனா,  வியட்நாமில் மிக முக்கியமான சமய சடங்குகளில் பயன்படுத்தப்படும் மலர். 3000 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனாவில் சாகுபடிசெய்யப்பட்டு வரும் இந்த தாமரை இந்து மதம் மற்றும் புத்த மதங்களின் மிக முக்கியமான குறியீடாகவும் உள்ளது. .இந்திய தொன்மங்களில்  குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான மலர்களில் தாமரையும் ஒன்று. 

 எகிப்திய, வியட்நாமிய மற்றும் இந்தியக் கோவில்களின் சுவர்களிலும் கூரைகளிலும் தாமரை மலர்கள் வரையபட்டிருக்கும், கோலங்களும் பச்சைகுத்தும் மற்றும் மருதாணி சித்திரங்களும் தாமரை மலர் வடிவில் இருக்கும். உலகெங்கிலுமே ஆபரணங்களில் தாமரை வடிவம்  நூற்றாண்டுகளாக மக்களின் விருப்பத்துக்குகந்ததாக இருக்கிறது.

 புராதன கட்டிடங்களின் முகப்புகள் தாமரை வடிவில் இருப்பதை காணலாம். புத்தர் உள்ளிட்ட பல கடவுள்களின் இருக்கையாக தாமரை மலர் இருக்கும். தாமரைத்தண்டு திரிகளில் விளக்கேற்றுவதும் தாமரை விதை மாலைகளை பூசையறையில் வைத்திருப்பதும் இந்துக்களின் வழக்கம்.

புத்த மதம் கூறும் 8 புனிதங்களில் தாமரையும் ஒன்று. டுடன் காமன் கல்லறை  திறக்கப்பட்டபோது அவரது உடலின் மீது தாமரை இதழ்கள் தூவபட்டிருந்ததை கண்டார்கள்.

தாமரை இறந்தவர்களை மீட்டெடுக்கும் என்றும், சில மந்திரங்கள் ஒரு நபரை தாமரையாக மாற்றிவிடும் எனவும் எகிப்தியர்கள் நம்பினார்கள்.  எகிப்திய நீலத் தாமரை எனப்படும் நீர் அல்லி,  பல்வேறு சடங்குகளில் பயன்படுத்தப்ட்டது

பண்டைய பெர்சியா (ஈரானில்) தாமரை தூய்மை, பிரபுத்துவம், பரிபூரணம், ஆன்மீகம், பெண்மை மற்றும் வாழ்க்கைசுழலை குறிக்கிறது.

சீன வரலாறு மற்றும்  கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றுள்ள  தாமரை  சீன மொழியில் ‘லியான்ஹுவா ( Lianhua)  என அழைக்கப்படுகிறது. சீன உணவுகள் சூப்புகள் திண்பண்டங்களில் தாமரைக்கொடியின் பாகங்கள் இருக்கும் . சீனாவின் பிரபல மூன் கேக் தாமரை விதைகளின் விழுதில் தயாரிக்கபடுவது.

தாய்லாந்தில், ‘புவா’ என்று அழைக்கப்படும் தாமரை புத்த மதம் சார்ந்த பல சடங்குகள் மற்றும் வழிபாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது.  இங்கு பிரார்த்தனைகளின் போது மெழுகுவர்த்திகள் மற்றும்  தூபக் குச்சிகளுடன்  தாமரைகளையும் வைத்து வழிபடுகிறார்கள்.

தாய்லாந்தின் நோங் ஹான் ஏரியின் ஆழமற்ற நீரில் செழித்து வளரும் ஆயிரக்கணக்கான அழகிய இளஞ்சிவப்பு தாமரைகள் சுற்றுலாப்பயணிகளை பல வருடங்களாகவே ஈர்த்துவருகிறது. 

இந்து மதமும் தாமரையை கொண்டாடுகிறது. தாமரை இல்லாத இந்து தொன்மங்களோ கலாச்சாரமோ இல்லை என கொள்ளலாம். விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வளர்ந்த  தாமரையிலிருந்து, படைப்பாளரான பிரம்மா தோன்றினார் என்கிறது இந்துமதம்.. தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்று வர்ணனைகளும், தாமரைச்செல்வி, தாமரைக்கனி, தாமரைக்கண்ணன், செந்தாமரை என்ற பெயர்களும்  தமிழகத்தில் பிரபலம்.

யோகாசனங்களிலும் தாமரை வடிவிலான பத்மாசனம் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

இந்து மற்றும் புத்த மதங்களில் உள்ள சிக்கலான வடிவியல் வடிவமைப்புகளைக் கொண்ட பிரபஞ்சத்தின் காட்சிப் பிரதிநிதித்துவம் மண்டலம் எனப்படும் இதில் தாமரை மண்டலம் என்பதும் ஒன்று. ஆன்ம மண்டலமான இவை தியானத்தின் போது மனதை குவிக்க பயனபடுத்தப்படுகிறது. புத்த மதத்தின் , அறிவொளிக்கான பாதையையும் வாழ்க்கை சுழற்சியையும் அடைய உதவும் கொண்டிருக்கும்  Unalome சின்னம் தாமரை வடிவத்தையும் கொண்டிருக்கும்.  உலகெங்கிலும் ஆற்றலுக்கான பச்சைகுத்துதலின் பிரபல வடிவமாக இந்த சின்னம் இருக்கிறது.

பகவத் கீதையிலும் கிருஷ்ணர் ”எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.என்கிறார்.

மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.  மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகின்றது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது

மூன்று நாட்களுக்கு காலையில் மலர்ந்தும் இரவில்  மூடியும் மீண்டும் காலை மலர்ந்தபடியும் இருக்கும் தாமரையை மலர்ந்த ஐந்து நாட்களுக்கு வழிபாட்டுக்கு பயன்படுத்தலாம் என்கிறது புஷ்பவிதிகளை சொல்லும் நூல். சித்தரான உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் மிதந்து வந்த தாமரை மலர்களை வழிபட்ட ஒன்பது ஊர்களில் தான் நவ கைலாயங்களான  சிவாலயங்கள் இருக்கின்றன. மகாலட்சுமி உறையும் இடமும் தாமரையே.

அமெரிக்க தாமரையான வெண்தாமரை அமெரிக்க பழங்குடியினரால் வடஅமெரிக்காவில் பரவலாக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. 

ஆசிய தாமரையான Nelumbo nucifera ஆசியாவில் மட்டுமே இயற்கையாக நீர்நிலைகளில் தானாகவே வளரும். இவற்றை வேறெங்கும் இயற்கையாக காண முடியாது. பல நாடுகளில் இவற்றை நீர்நிலைகளில் வளர்க்கிறார்கள் .இந்த தாமரையின் இணை அறிவியல் பெயர்கள்: Nelumbium speciosum, Nelumbo komarovii Nymphaea nelumbo. தாமரை மலர்கள் மகரந்த சேர்க்கை செய்ய வரும் பூச்சி இங்னகளுக்கேற்ப  மலரின் வெப்பநிலையை மாற்றியமைத்துக்கொள்ளும் என்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன.

வெண்தாமரையான Nelumbo lutea பெரும்பாலும் வட அமெரிக்காவிலும் சிலசமயம் மத்திய அமெரிக்கவிலும் காணப்படும்.. இவை தூய வெள்ளை நிறத்திலும் சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

தாமரைகளையும் அல்லிகளும் ஒன்றெனவே நினைப்பவர்கள் பலருண்டு. பழைய தாவர வகைப்பாட்டியல் முறைகளில் தாமரை அல்லி குடும்பத்தில் வைக்கப்பட்டிருந்தது  (Nelumbo as part of the Nymphaeaceae) பின்னர் இவற்றை அடையாளம் காண்பதில் உண்டான பிழைகளால் ,இவையிரண்டும் தனித்தனியான குடும்பங்களில் வைக்கப் பட்டன.  

அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். 

எகிப்தில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.இவைகளும் எகிப்திய தாமரைகள் என அழைக்கப்படுகின்றன. 

மேலும் ஆங்கிலத்தில் தாமரை லோட்டஸ் எனப்படுகிறது தாவரவியலில் லோட்டஸ் என்னும் பெயரில் முற்றிலும் தாமரையை காட்டிலும் வேறுபட்ட மலர்களைக் கொண்டிருக்கும் வேறு ஒரு பேரினமும் இருப்பதால் (a genus called Lotus)  தாமரையை இனங்காண்பதில்  குழப்பம் உண்டாகிறது.  

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடித்தாவரத்தையும் அதன் மலரையும் குறிக்கிறது. அல்லிக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனை களிலும், சிற்றாறுகளிலும் காணப்படும். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன.

அல்லிகள் நிம்ஃபயேசி (Nymphaeaceae) குடும்பத்தை சேர்ந்தவை.நிம்ஃபயேசி குடும்பத்தில் 5 பேரினங்களும், 70க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன .அல்லி அமெரிக்காவை தாயகமாக கொண்டது. வெள்லை அல்லியான Nymphaea alba ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது.

பங்களாதேஷின் தேசிய மலர் அல்லி. ஆந்திரபிரதேசத்தின் மாநில மலரும் அல்லியே .(தெலுங்கானா பிரிவினைக்கு முன்பு வரை அல்லி இப்போது ஆந்திராவிற்கு மல்லிகையும், தெலுங்கானாவிற்கு ஆவாரையும் மாநில மலர்கள்.)  இலங்கையின் தேசிய மலராக நீல அல்லி (Nymphaea stellata இருக்கிறது.

நீர்நிலைகளின் மலர்ந்திருப்பவற்றை பொதுவில் தாமரையென்றே பலரும் நினைப்பதுண்டு. அல்லிகளையும் தாமரைகளையும் பிரித்தறிய பலருக்கு தெரியாது. தாமரையும் அல்லிகளும் தாவரவியல் ரீதியாக இருவேறு பேரினத்தைச் சேர்ந்தது என்றாலும் இரண்டும் ஒன்றல்ல.. இரண்டு  தாவரங்களுக்கும்,  மலர்களுக்கும்  இடையே அடிப்படையான மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன

நீர் அல்லிகள் நிலத்தில் உறுதியாக பதிந்திருக்கும் வேர்களையும் நீர்பரப்பில்  மிகக்கும் வட்ட வடிவமான இலைகளையும் மலர்களையும் கொண்டிருப்பவை.

தாமரையின் வேர்களும் நீர்நிலைகளின் அடியில் மண்னில் ஆழ ஊன்றியிருக்கும், இவற்றின் தட்டையான முட்டைவடிவ/ஏறக்குறைய வட்ட வடிவத்திலிருக்கும் இலைகள் அலையலையான விளிம்புகளை கொண்டிருக்கும். இலைக்காம்புகளும் மலர்த்தண்டுகளும் நீர்ப்பரப்பை காட்டிலும் சற்று உயர்ந்து இருப்பதால் தாமரை  மலர்களும் இலைகளும் நீர்ப்பரப்பிற்கு மேலே  காணப்படும்.இலைக்காம்பு, இலையின் அடிப்பகுதியில் மத்தியில் காணப்படும் இவ்வமைப்பு பெல்டேட் எனப்படும்.(peltate)

peltate leaves

அல்லி இலைகளின் நடுவில் தெளிவாக  முடிச்சு போன்ற ஒரு அமைப்பிருக்கும். வெளிவிளிம்பிலிருந்து உள்நோக்கிய ஒரு வெட்டினால் இலைகள் இரண்டாக பிளவுபட்டிருக்கும்.

அல்லி மலரிதழ்கள் அகலம் குறைவாக  நுனி கூராகவும் அடிப்பகுதி தடித்தும் இருக்கும்.தாமரை இதழ்கள் அகலமாகவும், முனை மழுங்கியும் மெலிதாகவும்  இருக்கும்.ஒரு தாமரை மலரில் குறைந்தது 8 லிருந்து அதிகபட்சம் 20 இதழ்கள் வரை இருக்கும்.

அல்லிகளே உலகில் தாமரைகளை காட்டிலும் அதிகமாக பரவியிருக்கின்றன

நீரின் மேற்பரப்பில் அல்லி மலர் -சற்று உயர்ந்து தாமரை

 தாமரை மலரின் மத்தியில்   இருக்கும் விதைகள் நிறைந்திருக்கும் கூம்பு வடிவ மெத்தை போன்ற  கனியும் அல்லிகளில் இருக்காது.

அல்லி மலர்களின் மத்தியில் இப்படி கனிகளை காணமுடியாது. அல்லிக்கனிகள் உருண்டையாக கடினமான தோலுடன்  ஸ்பான்ஞ் போன்ற  மென்மையான உட்பகுதியுடன்  இருக்கும். வெள்ளையான கனியின் சதை ஆயிரக்கணக்கான் நுண்விதைகளை கொண்டிருக்கும். விதைகள் பழுப்பு அலல்து கருப்பு நிறத்திலிருக்கும். இவ்விதைகள் பொறித்து உண்ணப்படுகின்றன.  அல்லியின் அனைத்து பாகங்களுமே உண்ணத்தக்கவை.

அல்லிக்கனிகள்

பலநூற்றாண்டுகலாக மாவுச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களை கொண்ட சுவையான தாமரை வேர்க்கிழங்குகளும் விதைகளும் சீனாவில் உண்ணப்பட்டுவருகின்றன.

தாமரைக்கனிகளும் விதைகளும்

தாமரை வேர்க்கிழங்கை (Rhizome) தூளாக்கி மாவாகவும் அங்கு உபயோகிப்பது உண்டு. சீனா கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் தாமரை இதழ்கள், வேர் மற்றும் இலைகளிலிருந்து   தேநீர் தயாரிப்பதும் பிரபலம். தாமரைத்தண்டுகளும் உண்ணத்தக்கவை. இந்தியா முழுவதிலுமே தாமரைத்தண்டுகள் உண்ணப்படுகின்றன.

Nymphaea lotus என்னும் அறிவியல் பெயருடைய எகிப்திய தாமரை என்றழைக்கப்படுபவை  வெள்ளிஅல்லிகளே. அவை தாமரைகள் அல்ல .

நீலத்தாமரை என எகிப்தில் குறிப்பிடபப்டுபவைகளும் தாமரைகள்அல்ல அவை , Nymphaea  caerulea எனப்படும் நீல நீரல்லிகள்.

Nelumbo nucifera எனப்து ஆசியாவின், இந்தியாவின் செந்தாமரை

Nelumbo-lutea அமெரிக்காவின் வெள்ளை அல்லது இளம் மஞ்சள் தாமரை. இது முன்பு Nelumbium luteum and Nelumbo pentapetala போன்ற அறிவியல் பெயர்களால் அறியப்பட்டன.இப்போதும் இவை இணைப்பெயர்களாக பயன்பாட்டில் இருக்கின்றன. 

தாமரைகள் செல்வம், வளமை மற்றும்  மறுபிறப்பு, இறைமை ஆகிவற்றின் குறியீடாக  உலகின் பல சமயங்களில் கருதப்படுகின்றது,  ஜோதிடவியலில் உதிக்கும் சூரியனை குறிக்க தாமரை பயன்படுகிறது 

அல்லிகளிலும் பல கலப்பின வகைகளுள்ளன. அவற்றில் மிக பிரபலமானது சிவப்பும் மஞ்சளும் கலந்த அல்லியான Nymphaea Wanvisa.பிரகாசமான நீல இதழ்களும் மஞ்சள் மத்தியப்பகுதியுமாக இருக்கும் Nymphaea Blue Aster அல்லியும் மிக அழகானது 

இதுபோன்ற இரட்டை வண்ணங்கள் கொண்ட கலப்பினங்கள்  தாமரைகளில் இல்லை. ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ர தாமரைகள் எனப்படும் கலப்பின தாமரைகள் கேரள தமிழக கோவில்களிலும் தனியார் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.  

கேரளா திருப்புனித்தராவை சேர்ந்த கணேஷ் தாமரைக்கொடிகளை கலப்பினம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரது முயற்சியால் பல தாமரை கலப்பின வகைகள் உருவாகி இருக்கின்றன .கோவிட் பெருந்தொற்றின் முதல் அலைக்காலத்தில் இவர் வீட்டில் ஆயிரமிதழ் கொண்ட தாமரை மலர்ந்தது

.சீனாவின் ஷாங்காய் உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர்  டாய்க்கே டியான் (Daike Tian) 2009ல் சீனாவில் Zhinzun Qianban என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்த தாமரைக்கொடியை கண்டறிந்தார். அவரிடமிருந்து கணேஷுக்கு பரிசாக வழங்கப்பட்டஇந்த தாமரைதான் இப்போது வளர்ந்து மலர்ந்திருக்கிறது.

சகஸ்ர தாமரை-கணேஷ்

இவர் அமெரிக்காவிலிருக்கும்   சர்வதேச நீரல்லி மற்றும் நீர்த்தோட்டக்கலை அமைப்பிலும் (International Waterlily and Water Gardening Society (IWGS)) உறுப்பினராக இருக்கிறார். 2015ல் இவர் முதன்முதலாக உருவாகிய  தாமரை கலப்பினத்துக்கு தனது அன்னையின் பெயரையே  Nelumbo ‘alamelu’ என்று வைத்திருக்கிறார்.

இந்தியாவில் ஒற்றை இதழ் வரிசை கொண்டவை பல அடுக்கு மலரிதழ்களை கொண்டவை என இளஞ்சிவப்பு மற்றும் வெண்தாமரைகள் மலர்கின்றன. அஸ்ஸாமில் வெண்தாமரை இதழ் நுனிகளில் சிறிது இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் பொற்குளத்தில் வெண்மஞ்சள் தாமரை மலர்ந்திருக்கும். 

அஸ்ஸாமிய தாமரை

அல்லிகளின் அரசி எனப்படும் அமேசான் காடுகளின் மாபெரும் அல்லிகளான Victoria amazonica வைத் தவிர்த்து அனைத்து அல்லிகளும் தாமரைகளும் நீருக்கடியில் 2 அல்லது 3 மீட்டர் உயரமுள்ள தண்டுகளை கொண்டிருக்கும். நீருக்கு மேலே தாமரைகளின் தண்டுகள் 4 -6 அடிகளும், அல்லிகள் 2-3 அடிகளும் உயரம் கொண்டிருக்கும். அல்லி தாமரை இருமலர்களுமே மென் நறுமணம் கொண்டவை.

அரச அல்லிகள்

 அரச அல்லியின் இலைகளும் மலர்களும் மிகப்பெரியவை. அரச அல்லிகளின் இலைகள் 35 லிருந்து 40 கிலோ எடையை தாங்கும்.

பிங்டி அல்லது பிங்டோ தாமரைகள் எனப்படுபவை சீனாவில் மட்டும் காணப்படும் ஒற்றை மலர் தண்டில் ஒட்டியே மலரும் இரட்டை தாமரை மலர்களாகும். (Bingdi  Bingtou lotus). கியான் பென் தாமரைகள் எனப்படும் இவை தாவர உலகின் அரிய மலர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.( Qianban lotus)

சீன இரட்டை தாமரை

தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகைகளில், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தாமரை மலர்  இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.   தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு  உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.

தாமரையின் பிற பெயர்கள்:

அரவிந்தம்,பங்கேருகம், கோகனகம், பதுமம், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம், பங்கஜம், அம்புஜம்

இரண்டு மலர்களையும் வேறுபடுத்தி காண உதவும் காணொளி: https://youtu.be/7aKS4286hG4

சோளபாப்பியும், ஓபியம் பாப்பியும்

“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்

சிலுவைகளுக்கிடையில்

காற்றில் ஆடுகின்றன  பாப்பிச்செடிகள்,

துப்பாக்கிச் சத்தங்களுக்கிடையே

மெலிதாக கேட்கிறது இத்தனைக்கும் பிறகும்

பாடிக்கொண்டிருக்கும் வானம்பாடிகளின் குரல்,

சில நாட்களுக்கு முன்பு வரையிலும்

உதயத்தையும், பொன்னொளிரும்

அந்தியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம்,

நேசித்துக்கொண்டும்,  நேசத்துக்குரிய வர்களாகவும்

வாழ்ந்திருந்த நாங்கள், இதோ,

ஃபிளாண்டர்ஸ் வயல்களின் கல்லறைகளில்

கிடத்தப்பட்டிருக்கிறோம்.

,

வீழ்கையில் எங்கள் கரங்களிலிருந்து

வீசியெறியப்பட்ட வெற்றிச்சுடரை உயரே

ஏந்திப்பிடித்தபடி இனி,

நீங்கள் தொடங்குங்கள் எதிரிகளிடம் போரை!

ஏனெனில்., எங்கள் கல்லறைகளுக்கருகில்

பாப்பிச்செடிகள் மலர்ந்தாலும்

வெற்றி செய்தியை கேட்கும் வரை

எங்களால் உறங்க முடியாது’’

இந்த துயரக் கவிதையை  லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே போரில் இறந்த அவரது நண்பரின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் எழுதினார்.  

உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா கலாச்சாரங்களிலும்  போர்ச்சூழலில் பாடல்களும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன, எனினும், இந்த கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும், மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இதை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கிறது. ஏன் கல்லறைத் தோட்டத்தில் பாப்பிச்செடிகள்  அப்படி செழித்து வளர்ந்திருந்தன?

ஃபிளாண்டர்ஸ் போர்க்களமானது தென் பெல்ஜியத்தில்   1914 லிருந்து 1917 வரை முதல் உலகப் போர் நடைபெற்ற  மாபெரும் வெளி. அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பாப்பிச்செடிகள் வளர்ந்திருக்கவில்லை. அந்நாட்டின் வயல்களில் அவை சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும் ஃபிளாண்டர்ஸ் களத்தில் அதுவரையிலும் அவை வளர்ந்திருக்கவில்லை

இங்கு நடந்த போரில்  50 நாடுகளை சேர்ந்த ஏறத்தாழ 10 லட்சம் வீரர்கள்  உயிரிழந்தனர். பலர் காணாமல் போனார்கள் மேலும் பலர் படுகாயமுற்றனர். போர் துவங்குகையில் வெறும் தரிசு நிலமாக வெறுமையாக காணப்பட்ட இடத்தில், போர் நடந்து கொண்டிருந்த 2’வது வருடமான 1915’ல் போர்க்களத்திலும், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகளுக்கிடையிலும்  பாப்பிச்செடிகள் ஏராளமாக முளைத்து வளரத் துவங்கின. அங்கு வளர்ந்திருந்தவை வளமிக்க நிலங்களில் மட்டுமே செழித்து  வளரும் சோள பாப்பிச் செடிகள் .

அதுவரை வலியும், இறப்பும், துயரும், குண்டு வீச்சும், குருதியும், பிணங்களும் ஓலங்களும் நிறைந்திருந்த இருந்த இடத்தில் அழகிய கிண்ணங்களைப்போல அடர்சிவப்பு மலர்களுடன் பாப்பிச்செடிகள் செறிந்திருந்தது போரில் ஈடுபட்டிருந்த அனைவருக்குமே புத்துணர்வையும் நம்பிக்கையையும் அளித்தது. 

அதன்பின்னர் . போர்க்களத்திலிருந்து ஊருக்கு வரும் எல்லா கடிதங்களிலும் தழலைப்போல் சிவந்த மலர்களுடன் இருக்கும் பாப்பிச்செடிகளை குறித்த வர்ணனைகளும் இடம்பெற்றிருந்தன.

‘’உதயத்திலும்,  அந்தியில் நட்சத்திரங்கள் மினுங்கும் வானின் கீழும்

மெல்லிய காம்புகளில் தாங்கப் பட்டிருக்கும்

சிவந்த மலர்களைக் கொண்ட பாப்பிச்செடிகளை காண்கிறேன்,

கல்லறைகளை தழுவிக்கொண்டிருக்கும் அவற்றின்

செந்நிற மலர்கள் எங்களை உற்சாகப் படுத்தி,

சோர்வுறும் நாட்களில் நம்பிக்கை அளிக்கின்றன,

ஊழின் கருணை இருப்பின், வீடு திரும்பிய பின்னர்

கல்லறைகளுக்கிடையில்  கண்ட பாப்பிகளை

சோளக்காட்டில் கதிர்களுக்கிடையிலும்  பார்ப்பேனாயிருக்கும்’’

  என்னும் கவிதை  லெஃப்டினேண்ட் கர்னல் கேம்பெல் கால்பிரெய்த் என்பவரால் 1917ல் அவரது வீட்டுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்தது. (Lieutenant-Colonel W. Campbell Galbraith )

 தொடர்ந்த போரினால் நிலம்  பலமுறை கிளரவும், அகழவும் பட்டதால் நிலத்தடியில் புதைந்திருந்த பாப்பிச்செடிகளின் விதைகள் மேற்பரப்புக்கு வந்து ஆயுதக்கழிவுகளிலிருந்தும்,  வெடிமருந்துகளிலிருந்தும் கிடைத்த நைட்ரஜனையும், இடிந்த  கட்டிடங்களின் சுண்ணாம்பும் கலந்திருந்த மண்ணில் செழித்து வேகமாக வளரத் துவங்கின.

மேலும், போரில் இறந்த பல லட்சக்கணக்கான  வீரர்களின், குதிரை கழுதை மற்றும் நாய்களின் இரத்தம் மற்றும் எலும்புகளும் அந்நிலத்தை வளமாக்கி இருந்தன. போர் நீடிக்க நீடிக்க இறப்புக்களும் நீடித்தன இறப்புக்கள் நீடித்தபோது பாப்பிகளும் அதிகம் வளர்ந்தன.

 அச்சமயத்தில் தான் மே 2 ,1915 அன்று மருத்துவ முகாமில் பணியாற்றிக்கொண்டிருந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் மெக்ரேவின் (Lieutenant-Colonel John McCrae) உற்ற நண்பரும் அப்போரில் பணியாற்றியவருமான லெஃப்டினண்ட் கர்னல் அலெக்ஸிஸ் ஹெல்மெர்  ஒரு பீரங்கி தாக்குதலில்  உடல் சிதறி இறந்தார். ஹெல்மெரின் உடல் பாகங்களை தேடி, சேகரித்து இறுதி சடங்குகள் நடத்தி புதைத்த பின்னர், அந்த ஃப்ளேண்டர்ஸ் கல்லறைத்தோட்டத்திலேயே துயரம் நிறைந்த மனதுடன் புத்தம் புதிதாக உருவாகிக்கொண்டிருகும் கல்லறை மண் மேடுகளையும் அவற்றிற்கிடையே வளர்ந்து மலர்ந்திருக்கும் பாப்பி செடிகளையும் பார்த்தபடி உலகப்புகழ்பெற்ற ’’ஃபிளாண்டர்ஸ் வயல்களில்’’ என்னும் இந்த கவிதையை எழுதினார்

 டிசம்பர் 8, 1915 அன்று நாளிதழ்களில் வெளியான இந்த கவிதை உடனடியாக போர்ச்சூழலில் வெகுவாக  பாராட்டப்பட்டு பிரபலமானது,    அப்போதிலிருந்து பாப்பி மலர்கள் போரில் இறந்த வீரர்களின் அடையாளமானது.போரில் இறந்தவர்களின் ஆன்மாவே லட்சக்கணக்கான பாப்பிச்செடிகளாக மலர்ந்திருக்கிறது என்றும் மக்களால் கருதப்பட்டது. 

 நிலத்தின் சுண்ணாம்பும் நைட்ரஜனும் உறிஞ்சப்பட்ட பிறகு பாப்பி செடிகள் காணாமல் போவதும் பின்னர் மீண்டும் வளர்வதுமாக இருந்த நாட்களில்,ஜனவரி 28, 1918’ல் ஜான் மெக்ரேவும் நிமோனியாவால் உயிரிழந்தார்.  அவரது கல்லறையில் வைப்பதற்கு பாப்பி செடிகளின் மலர்கள் அவரது நண்பர்களுக்கு கிடைக்காதபோது செம்பட்டு துணியால் செய்யப்பட்ட செயற்கை பாப்பி மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையமொன்றை தயாரித்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.      

போரில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஏதேனும் உதவிகள் செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த ​​அமெரிக்காவை சேர்ந்த  ஆசிரியை மொய்னா பெல்லி மைக்கேல் இந்த கவிதையால் ஈர்க்கப்பட்டார், போரில்  அவருடைய மாணவர்களும் நண்பர்களும் உயிரிழந்திருந்தனர். ஏறக்குறைய ஒற்றைப்பெண்ணாக, மொய்னா சிப்பாய்களை கௌரவிப்பதற்கும், நினைவுகூருவதற்கும் செயற்கை சிவப்பு பாப்பி மலர்களை சின்னமாக நிறுவவும், அந்த சின்னம் என்றென்றும் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காகவும்  வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

பல லட்சக்கணக்கான, பட்டி (Buddy) என்றழைக்கபடும் செயற்கை பாப்பி மலர்களை செம்பட்டுத்துணியில் உருவாக்கி விற்பனை செய்து கிடைத்த 106,000 டாலர் தொகையையும் முதல் உலகப்போரில் இறந்த, காயமுற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு  உதவ அளித்தார். இவர் வரலாற்றில் பாப்பி பெண்மணி என்றே குறிப்பிடப்படுகிறார் 

ப்ரான்ஸின் அன்னா குவென் (Anna Guerin) என்னும் பெண்மணியும் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் போர் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமொன்றை  அணுகி செம்பட்டு பாப்பி மலர்களை நீத்தோர் நினைவுநாளுக்கு அடையாளமாக்கும் யோசனையை தெரிவித்தார், அப்போதிலிருந்துதான் நவம்பர் 11 நினைவு நாளாகவும், பாப்பி தினமாகவும் அங்கீகரிக்கபட்டு அன்னாவும் பாப்பி பெண் என்றே அறியப்பட்டார்.  

 1921’ல்  9 மில்லியன் செம்மட்டு பாப்பிமலர்களை, அந்த வருட நீத்தோர் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நவம்பருக்குள்  விற்றது அந்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம். செயற்கை பாப்பி மலர்களை அணிவது பிரபலமான போது ரிஷ்மண்டில் 1933’ல் லட்சக்கணக்கான செயற்கை மலர்ளை வருடந்தோறூம் உருவாக்கும் தொழிற்சாலையும் உருவாகி, போர்வீரர்களின் விதவைகளுக்கும் குடுமபத்தினருக்கும் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டது

கடந்த 11 ஆம் தேதி, (நவம்பர் 11, 2021) அன்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் 100’வது நீத்தோர் நினவு மற்றும் பாப்பி தினம் விமரிசையாக நடைபெற்றது. 1921 லிருந்து பாப்பி மலர்களின் வடிவம் சிறிது சிறிதாக மாறி இருந்தாலும் நீத்தோரின் நினைவு நாளன்று செம்பட்டு பாப்பிகளை உடையில் அணிந்துகொள்வது இன்றும் தொடர்கிறது.  

பாப்பி மலரை  இடது பக்கத்தில், இதயத்தின் மீது அணிய வேண்டும். நினைவு தினத்தின் புனித சின்னமாக இருப்பதால், இம்மலரை ஊசியால் பிணைக்காமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒட்டும் கொக்கிகளால் உடையுடன் அவை இணைக்கப்படுகின்றன.,  ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் கடைசி வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 11 வரை, கனேடியர்கள் போர் வீரர்கள் செய்த தியாகங்களுக்கான நினைவின் அடையாளமாக பிரகாசமான செம்மட்டு செயற்கை பாப்பி மல்ர்களை அணிந்துகொள்ளுகிறார்கள். வீரர்களின் கல்லறைகளிலும் பாப்பிமலர்களை சமர்ப்பிக்கிறார்கள்.

70’க்கும் மேற்பட்ட பாப்பி செடி வகைகள் உலகில் இருக்கின்றன, அனைத்தும் பொதுவில் பப்பாவரேசி (Papaveraceae) குடும்பத்தை சேர்ந்த பாப்பிச்செடிகள் என அழைக்கப்பட்டாலும் இவற்றின் வளரியல்பு, செடிகளின் உயரம், மலரிதழ்களின் அடுக்குகள் மற்றும் எண்ணிக்கை, கனிகளின் அளவு மற்றும் வடிவம், வேதிச்சேர்மானங்களின் அளவும் வகைகளும் என பல வேறுபாடுகள் இருக்கிறது.

பாப்பிகளின் பல வகைகளில் ஆண்டுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு இரண்டு முறை மற்றும் பல்லாண்டுகள் பூத்துக் காய்க்கும் வகைகள் உள்ளன. ஒரே ஒரு முறை மலர்ந்து அழிந்துவிடும் மானோகார்பிக் வகைகளும் உண்டு.(Monocarpic). பெரும்பாலான பாப்பிச்செடிகளில் பால் வடியும். .கிழக்காசிய  பாப்பியின் மகரந்தங்கள் அடர்நீலத்திலும், சோளப்பாப்பியின் மகரந்தங்கள் அடர் பச்சையிலும் இருக்கும். 

 ஃபிளாண்டர்ஸ் தோட்டங்களில் வளர்பவை சோளப்பாப்பி எனப்படும் பப்பாவர் ரோயோஸ்  (Papaver rhoeas)  வகைகள். சோளப்பாப்பியின் கலப்பின வகைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன. .இவற்றில் பல இனங்கள் பல்லாண்டுத்தாவரங்களாகவும் இருப்பதால் லாபம் தரும் அலங்கார செடிகளாக விவசாயிகளால் விரும்பப்படுகிறது .இந்திய சமையலில் பயன்படும் கசகசா விதைகளை அளிக்கும் ஓப்பியம்  பாப்பி  “opium poppy” (Papaver somniferum). செடிகளல்ல இவை

 மேலும் சில பாப்பி வகைகள் உலகில் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் கிழக்காசிய பாப்பி எனப்படும் ஓரியண்டல் பாப்பி செடிகள் (Oriental poppy.-Papaver orientale) இறகுகள் போன்ற அழகிய இலைகளும், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற கிண்ணங்களை போன்ற மலர்களையும் கொண்டிருக்கும்.

ஐஸ்லாந்து பாப்பி அல்லது ஆர்க்டிக் பாப்பிகள் (Iceland Poppy -Papaver nudicaule) மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு கிண்ணங்களை போன்ற மலர்களை கொண்டிருக்கும்’

Iceland Poppy -Papaver nudicaule

இமாலய பாப்பிகள் (Himalayan Poppy -Meconopsis grandis)  மிக அழகிய வான் நீல மலர்களை கொண்டிருக்கும்,

Himalayan Poppy -Meconopsis grandis

தோகை பாப்பிகள் (Plume Poppy- Macleaya cordata) மிக அலங்காரமாவை. இவற்றின் வெண்ணிற மலர்கள்  கிண்ணங்களை  போல இருக்காமல் கொத்துக்கொத்தான தோகை போன்ற மஞ்சரிகளில் அமைந்திருக்கும்.

Plume Poppy- Macleaya cordata

சாலையோரங்களில் வளரும் சிலாண்டைன் பாப்பிகள் (Greater Celandine – Chelidonium majus), வருடத்திற்கு இருமுறை மஞ்சள் மலர்களை கொடுக்கும்.

Chelidonium majus

இரத்தப்பாப்பிகளும் (Bloodroot -Sanguinaria canadensis) பாப்பிச்செடிவகைதான் என்பதே  வியப்பளிக்கும், தண்டுகளில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக இலைகளும் மலர் காம்புகளும் உண்டாகும் இதில் மலர்கள் வெண்ணிறத்தில் இருக்கும். இச்செடியின் வேர்களை நறுக்குகையில் செந்நிறச்சாறு வருவதால் இதற்கு இரத்தச்செடி என்று பெயர்.

சில பாப்பி வகைகள் 4 அடிவரை வளரும். இலைகளில் மெல்லிய ரோமங்கள் இருக்கும். இதழ்களின் அடியில் கருப்பு நிற விளிம்பிருக்கும்.  கூட்டிலைகள்  ஏராளமான மடிப்புக்களையும், பற்களை கொண்ட இலை விளிம்புகளையும் கொண்டு இலைகாம்புகளின்றி நேரடியாக  இலையின் அடிப்புறம் தண்டுகளின் மீது மாற்றடுக்கில்  இணைந்திருக்கும்.

கசகசா செடியான ஓபியம் பாப்பியிலிருந்துதான் (Opium Poppy -Papaver somniferum) ஓபியம், ஹெராயின் மற்றும் பல போதை பொருட்களும், மருந்துகளும் கிடைக்கிறது இச்செடிகளில் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு ஊதா மற்றும் வெள்ளை மலர்கள் இருக்கின்றன. சாம்பல் பச்சை இலைகளுடன் இருக்கும் இவை ஒரு மீட்டர் உயரம் வரை வளர்ந்து, 15 செமீ விட்டமுள்ள மலர்களை  உருவாக்கும். மலர்கள் 4 அல்லது 6 இதழ்களை கொண்டிருக்கும். மலரிதழ்கள் பிரகாசமான நிறங்களில், அடுக்கிலோ அல்லது ஒற்றை வரிசையிலோ அமைந்திருக்கும். அரும்பாக இருக்கையில் இதழ்கள் சுருங்கி இருக்கும்

ஓபியம் பாப்பி மலர்

  கனியிலும் தண்டுப்பகுதியிலும் இருக்கும் பால் போன்ற திரவத்தில் போதையேற்றும் வேதிச்சேர்மானங்கள் (opiate alkaloids) இருக்கின்றன. ஒரு செடி சுமார் 15,000-20,000 விதைகளை உற்பத்தி செய்கின்றது.

ஓபியம் பாப்பிகள் துருக்கியை தாயகமாக கொண்டது. பாப்பியின் காய்களில் இருக்கும் போதையூட்டும் தன்மை இல்லாத  விதைகளான கசகசாவிற்காகவும் இவை பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன் சிறிதாக, சிறுநீரக வடிவில் இருக்கும் கசகசா விதைகள் சாம்பல், கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கிறன.

உருண்டையான கனிகளின் உச்சியில் சூலகமுடிகள் ஒன்றிணைந்து தட்டையாக மூடியைப்போல அமைந்திருக்கும்.  சூலகத்தின் கழுத்துப்பகுதியில் இந்த மூடியின் அடியிலிருக்கும் துளைகள் வழியே முதிர்ந்த விதைகள்  காற்றில் கனிகள் அசைகையில் வெளியேறும். இவ்விதைகள் பல ஆண்டுகளுக்கு முளைக்காமல் மண்ணிற்கடியிலேயே இருக்கும். தேவையான வளம் மண்னில் நிறைந்த பின்னர் இவை முளைக்கும். இதை ’’நிலவிதை வங்கி’’ என்கிறது தாவர அறிவியல்  (soil seed bank).

செக் குடியரசின் நீலக்கசகசா விதைகள்

ஓப்பியம் பாப்பியின் துணைச்சிற்றினங்களில்  Papaver somniferum subsp. setigerum  என்பது  வணிக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இதிலும் பல கலப்பினங்களும் வகைகளும் உள்ளன. Papaver somniferum var. Paeoniflorum என்பதில் இரட்டை அடுக்கிதழ்களுடன் மலர்கள் இருக்கும். Papave somniferum var. Laciniatum ஆழமான கிண்ணப்பகுதியும் அடுக்கு மலரிதழ்களும் கொண்டிருக்கும். கசகசா விதைகளுக்கான பிரத்யேக வகையான சுஜாதா என்னும் ஒரு  கலப்பின வகையின் கனிகளின் பிசினில் ஓபியம் அறவே இருக்காது.

 ஓபியம் பாப்பி செடியிலிருந்து மார்ஃபின், கோடின், தெபெய்ன், ஓரிபாவின், பப்பாவரின் மற்றும் நோஸ்கேபின் ஆகிய ஆல்கலாய்டுகள் கிடைக்கின்றன. இந்த பாப்பி செடிகளை பயிரிடுவதன்  மூன்று முதன்மை நோக்கங்களில் ஒன்று, கசகசா விதை என்று அழைக்கப்படும் உண்ணப்படும் விதைகளை உற்பத்தி செய்வது. இரண்டாவது, மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்காக அபினி என்கிற ஓபியத்தை உற்பத்தி செய்வது.  மூன்றாவது மற்ற ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்வது, முக்கியமாக தெபெய்ன் மற்றும் ஓரிபாவின் போன்றவற்றை.  ஒபியம் பாப்பி செடியிலிருந்தே மிக வீரியமுள்ள வலி நிவாரணியான மார்ஃபின் கிடைக்கிறது.

ஓபியம் பாப்பிகள் கிழக்கு மற்றும் தெற்காசியாவில் அதிகம் விளைகின்றது. தென்கிழக்கு ஐரோப்பாவிலும்  சாகுபடி செய்யப்படும் இவற்றின் பல வகைகள் மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. எல்லா பாப்பி வகைகளுமே மருத்துவ குணங்களை கொண்டவை. ஃப்ளேண்டர்ஸ் பாப்பிகள் மனிதர்களில் போதை உண்டாக்கும்  ரோயடின் என்னும் வேதிச்செர்மானத்தை கொண்டிருக்கிறது, ஆனால் ஒப்பியத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைவான விளைவுகளையே உண்டாக்குகிறது 

 பாப்பிச்செடியின் விதைகள் உள்ளிட்ட பாகங்கள் மருந்தாக மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகப்படுத்த பட்டிருக்கிறது.

கிரேக்க தொன்மங்கள் இறந்தவர்கள் விண்ணேகும் முன்பு முந்தைய வாழ்வை முற்றிலும் மறப்பதற்கு  நீரருந்தும்  ’லீத்’ ஆற்றின் கரைகளில் பாப்பிகள் வளர்ந்திருந்ததை குறிப்பிடுகின்றன.  கிரேக்க மற்றும் ரோமானிய கல்லறைகளில் நிரந்தர உறக்கத்தையும், மறுவாழ்வையும் குறிப்பிட  பாப்பி மலர்கள் வைக்கப்பட்டன. பாப்பி மலர்களின் குருதிச் சிவப்பு நிறம் மறுபிறப்பின் சாத்தியங்களை உறுதிப்படுத்தும் அடையாளமாகவும் அவர்களால் கருதப்பட்டது.

வெள்ளை கசகசா விதைகள்

கிபி.1324’ல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் டூடன்காமன் கல்லறையிலும்,   அவரது கழுத்தணியிலும்,  சில மரவேலைப்பாடுகளிலும் பாப்பி மலர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருந்தது.  டூடன்காமன் ஆட்சியில் ஓபியம் பயன்பாடு மற்றும் வர்த்தகம் செழித்திருந்தது. பல எகிப்த்திய கல்லறைகளில் பாப்பி மலர்களின் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது

பண்டைய  எகிப்தில் பாப்பிமலர்கள் மரணத்தின் கடவுளான  ஒசைரிஸை குறித்தன. உறக்கம், அமைதி, மறுபிறப்பின் குறியீடாகவும் பாப்பிகள் எகிப்தில் கருதப்பட்டன. கிரேக்க ரோமானிய மற்றும் பல கலாச்சாரங்களில் இறந்தவர்களுக்கு பாப்பி மலர்களை படைத்து வழிபடும் வழக்கமும், கல்லறைகளில் பாப்பி மலர்களின் சித்திரத்தை செதுக்கும் வழக்கமும் இருந்தது.  எகிப்திய தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த அரசியரின் காதணிகளும் பாப்பி மால்ர் வடிவங்களில் இருந்தன.

ஆல்ப்ஸ் மலைகளில் கிடைத்த நியோலித்திக் மனித மிச்சங்களின் அருகே சிறுசிறு பொதிகளில் கோதுமை பார்லி மற்றும் கசகசா விதைகள் இருந்தன. ஸ்பெயினில் 1935ல் அகழ்வாய்வின் போது கிமு 4000 ’ சேர்ந்த புதைகுழிகளில் பாப்பிவிதைகள் இருந்தன. 

 கிரீட் தீவில் வளர்ந்தோங்கிய வெண்கலக் காலத்திய மினோவன் நாகரிகத்தை சேர்ந்த (Minoan civilization)  3000 ஆண்டுகள் பழமையான பாப்பி பெண் தெய்வச்சிலையொன்று பாப்பி கனிகளால் ஆன தலையணியுடன் காணப்படுகின்றது

poppy godess

கிபி 6000’த்திலிருந்து 3500’க்குள் ஓபியம் பாப்பிகள் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பழங்குடியினரால் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்டிருக்கலாமென்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள், எனினும் பாப்பிச்செடிகளிலிருந்து ஓபியம் முதலில் சுமேரியர்களால்தான் கண்டறியப்பட்டது. இதற்கு சுமேரியர்களால் ‘ஹல் கில்’ அதாவது ’’மகிழ்வூட்டும் செடி’’ என்ற பெயரிடப்பட்டிருந்த்து.

பாப்பிபயிர் சாகுபடியும் கனிகளிலிருந்து பிசின் அறுவடை செய்யும்  கலையும் சுமேரியர்களிடமிருந்து அசீரியர்களுக்கும், பாபிலோனியர்களுக்கும் பின்னர் எகிப்தியர்களுக்கும் கடத்தப்பட்டது. ஓபியம்/அபினி கண்டுபிடிக்கப்பட்டதற்கான சரியான தேதி கிடைதிருக்கவில்லை என்றாலும், அதன் போதை மற்றும் வலி நிவாரணி விளைவுகளுக்காக அது உட்கொள்ளப்பட்டது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.  இந்த போதை மருந்து பல நூற்றாண்டுகளாக ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 

வலி மற்றும் பதட்டத்தை குறைக்கவும், தூக்கக் கோளாறுகளுக்கும், அழும் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை அமைதிப்படுத்தவும்  பண்டைய பழங்குடியினரால் ஓபியம் பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஓபியம் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

 கசகசா விதை பல  பண்டைய நாகரிகங்களின் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு 1550 இல் எழுதப்பட்ட, எகிப்திய எபிரஸ் பாப்பிரஸ் சுருள், கசகசா விதையை மயக்க மருந்து என்று குறிப்பிடுகிறது.     பல பண்டைய நாகரீகங்களும் அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த  பால்,ஓபியம் மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தியது. குழந்தைகளுக்கு ஓபியம் அளிக்கப்பட்டதால்தான் இதன் லத்தீன அறிவியல் பெயரின் பேரினம்  “papaver” என்பது மழலை உணவு ( baby food) என்றும் சிற்றினத்தின் somnifera என்பது உறக்கத்தை அளிக்கும் எனவும் பொருள்படுகிறது. 

ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டுகளில்தான் கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் பட்டுப்பாதையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டபோது ஓபியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாலை ஐரோப்பாவை இந்தியா, சீனா மற்றும் மத்திய ஆசியாவிற்கு இணைத்தது, பின்னர் ஓபியமும் பாப்பிவிதைகளும் பட்டுப்பாதைகள் வழியே உலகின் பலபாகங்களை சென்றடைந்தன. 

பல அரபு அறிஞர்கள் மயக்க மருந்து, அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரணி போன்ற துறைகளில் அதன் வளர்ச்சிக்கு பங்களித்தனர். பாக்தாத்தில்தான் ஓபியம் மாத்திரைகளாகவும், தொழுநோய்க்கான களிம்புகளாகவும் மாற்றப்பட்டது. அல்-கிண்டி மற்றும் அல்-ரஸி போன்ற மருத்துவர்கள் மயக்க மருந்து உட்பட பல்வேறு நோய்களுக்கு சரியான அளவு ஓபியத்தை வழங்கிய முன்னோடிகள்.

 உலக நாடுகள் பலவற்றில் ஓபியம் 15 ஆம் நூற்றாண்டில் மகிழ்வூட்டும்   நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது ஒரு அரிய மருந்தும் கூட  என்பதால், மிக அதிக விலையை கொண்டிருந்த இதன் பயன்பாடு குறைவாகவே இருந்தது. 17ஆம் நூற்றாண்டு வரை அபினியைப் பயன்படுத்துவது சீன வரலாற்றின் வழக்கமான பகுதியாக மாறியிருக்கவில்லை, பின்னர் , அபினி புகையிலையுடன் கலக்கப்பட்டு சீனாவில் புகை பிடிக்கப்பட்ட போதுதான் இதன் அடிமையாக்கும் இயல்பு முதலில் கவனிக்கப்பட்டது.17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் கிரேட் பிரிட்டனும் பிற மேற்கத்திய நாடுகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அபினியை ஏற்றுமதி செய்து சீனாவுக்கு விற்றபோது அபினி வர்த்தகம் முழுவீச்சில் தொடங்கியது.

ஓபியத்துகாக பாப்பிகள் வளர்கப்படுகையில் பழுக்க துவங்கும் லேசான மஞ்சள் நிறம் கொண்டிருக்கும் பச்சைக் கனிகளில் மிகக்கூரான கத்திகளால் லேசான கீறல்கள் உண்டாக்கபட்டு பிசின் சேகரிக்கப்படும்.மழை காற்று, பனிப்பொழிவு இவற்றால் பிசின் கலப்படமாகாமல் இருக்க அதிக கவனத்துடன் இந்த கீறல்கள் பெரும்பாலும் மதிய நேரத்தில் உண்டாக்கப்படும்

ஆஃப்கானிஸ்தானில் ஓபியம் சேகரிப்பு

இந்தியா,ஈரான்,ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் பாப்பியின் கனிகளில் கீறலை உண்டாக்க பிரெத்யேகமாக நிஷ்தார் (nishtar) எனும் உபகரணம் புழக்கத்தில் இருகிறது பெர்ஷிய மொழியில் நிஷ்தார்  ’’கூரிய கத்தி’’  என பொருள்படும்.

நிஷ்தாரில் 2 அல்லது 3 கூரிய சிறிய கத்திகள் 3 மிமி இடைவெளியில் ஒரே கைப்பிடியில் அமைந்திருக்கும் இவறைக்கொண்டு ககசா கனிகளில் கீழிருந்து மேலாக ஒரு சில முறை கீறல்கள் 1’லிருந்து 3 நாட்களுக்கு இடைவெளி விட்டு உண்டாக்கப்படும். ஒவ்வொரு கீறலுக்கு பிறகும் மறுநாள் காலையில் கசகசா கண்ணீர் (Poppy tear) என குறிப்பிடப்படும் வடிந்து காய்ந்திருக்கும் பாலின்  பிசுபிசுப்பான பசை சுரண்டி சேகரிக்கப்படும்  .இப்படி ஒரு ஏக்கரில் சுமார் 5 கிலோ ஓபியம் சேகரிக்கலாம்.

 ரஷ்யாவில் கனிகளை குறுக்கில் காயப்படுத்தி மூன்று முறை ஓபியம் பசை சேகரிக்கப்படும். சீனாவில் கனிகளின் மேற்பகுதி சீவப்பட்டு, பின்னர் சொரசொரப்பான ஊசிகளால் கனிகள் துளையிடப்பட்டு, 48 மணிநேரத்திற்கு பின்னர் பசை சேகரிக்கப்படுகிறது. 

1803 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் பிரெட்ரிக் செர்ட்யூனர் முதல் முறையாக பாப்பி கனிகளின் பிசினிலிருந்து மார்ஃபினை தயாரித்தார், மேலும் இதன்  மூலப்பொருட்களையும் கண்டுபிடித்தார், கிரேக்க கனவுகளின் கடவுளான மார்பியஸின் பெயரால், தூக்கத்தை ஏற்படுத்தும் அதன் இயல்பின் அடிப்படையில் மார்ஃபின் எனபெயரிட்டார்.

மார்ஃபின் கண்டுபிடிக்கப்பட்டது  மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்பட்டது. புற்றுநோய் உள்ளிட்ட உச்சவலிகளுக்கு நிவாரணமாக இன்று வரையிலும் மார்ஃபினே பயன்படுத்தப்படுகின்றது. ஓபியம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாப்பிகளின் பயிரிடப்படும் வகைகளில் காணப்படும் முதன்மையான ஆல்கலாய்டு மார்ஃபின் ஆகும்.  கச்சா ஓபியத்தில் உலர்ந்த எடையில் 8-14% மார்ஃபின் உள்ளது,  

ஆல்கஹாலில் கரைத்த ஓபியம் லாடானம் எனப்படும் (Laudanum). இதை 1527ல் பார்செல்ஸஸ் என்பவர் தயரித்தார். 19 ஆம் நூற்றண்டு வரை இந்த லாடானம் பல்வேறு பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்பட்டது

எடின்பரோவின் டாக்டர் அலெக்சாண்டர் வுட் 1843’ல் மார்ஃபினை ஊசி மூலம் செலுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். ஊசி மூலம் செலுத்தப்பட்ட மார்ஃபினின் விளைவுகள் உடனடியாகவும், மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருந்தன.

அலெக்ஸாண்டர் வுட்

 ஓபியம் பிசினில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மார்ஃபின் பிசினின்  மொத்த எடையை 88% குறைக்கிறது. பின்னர் இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்த ஹெராயின் ஆக மாற்றப்பட்டு, சந்தை மதிப்பிலும் அதிகரிக்கிறது. பிசினாக கடத்தப்படுவதை காட்டிலும் குறைக்கப்பட்ட எடைகொண்ட  மார்ஃபின்  கள்ளச்சந்தைக்கு  கடத்துதலை  எளிதாக்குகிறது.

சர்வதேச மாநாடுகளில் ஓபியத்தின் போதை  காரணமாக பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு பாப்பி செடிகள் பயிரிடப்படுவதை கண்காணிப்பதின் தேவையை குறித்து 1900’த்தில்  பல நாடுகளை சேர்ந்தவர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

 ஓபியம் பாப்பிகளை வளர்ப்பது அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதன் பிறிதொரு வகையான இரட்டை அடுக்கிதழ்களை கொண்டிருகும்  Papaver paeoniflorum வளர்க்கவும்  அங்கு சட்டப்படி  தடை இருக்கிறது 

மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியில், கசகசா செடிகளை வளர்ப்பது சட்டபூர்வமானது. ஜெர்மனிக்கு இவற்றை சாகுபடி செய்ய உரிமம் தேவைப்படுகிறது. செக் குடியரசில் ஜனவரி 1999 முதல், 100 சதுர மீட்டருக்கு அதிகமான பெரிய வயல்களில் வளரும் கசகசா செடிகள் அரசின் கண்காணிப்புக்கு உரியதாகின்றது  ஐக்கிய இராச்சியத்தில் கசகசா செடி சாகுபடிக்கு உரிமம் தேவையில்லை, ஆனால்  மருத்துவப் பொருட்களுக்காக பிசினிலிருந்து  அபினி பிரித்தெடுக்க உரிமம் தேவையாகிறது.

கசகசா விதைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் தயாரிப்புகள், மற்றும் ஆல்கலாய்டுகள் ஆகியவற்றை வைத்திருப்பது, தேடுவது அல்லது பெறுவது ஆகியவற்றை  கனடா தடை செய்கிறது.

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், இவற்றை பயிரிடுவது சட்டவிரோதமானது, ஆனால் டாஸ்மேனியாவில், உலக விநியோகத்தில் சுமார் 50% பயிரிடப்படுகிறது. நியூசிலாந்தில், தடை செய்யப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படாத வரை கசகசா செடிகளை பயிரிடுவது சட்டபூர்வமானது. தென் கொரியாவில், அபினி கசகசா பயிரிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டபூர்வமான அபினி/ஓபியம் உற்பத்தி  அரசின் கண்காணிப்புடன் மத்தியபிரதேசம் உத்தரபிரெதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் நடக்கிறது. ஓபியம் கசகசா பயிரிட உரிமம் பெற்ற விவசாயிகள் தங்கள் உரிமங்களை தக்க வைத்துக்கொள்ள 56 கிலோ கிராம் கலப்படமற்ற பச்சைஓபியம் பசையை சேகரிக்க வேண்டும். பசையின் விலையானது, தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப அரசாங்கத்தால் சராசரியாக கிலோகிராமுக்கு சுமார் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.. கசகசா கனிகளை உலர்த்தி விதைகளை சேகரிப்பதன் மூலமும்  விவசாயிகளுக்கு  கூடுதல் லாபம் கிடைக்கும்.

ராஜஸ்தானில் பாப்பி வயல்

மேலும்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவைக்காட்டிலும் சற்றே அதிகமாக  ஒரு சிறிய பகுதி ஓபியம் அவர்களின் நெருக்கமான வட்டத்தில் நுகரப்படும் அல்லது கள்ளச்சந்தைக்கு திருப்பிவிடவும்படும். ஓபியம் பசை உலர்த்தப்பட்டு, ஏற்றுமதிக்காக   அரசாங்க ஓபியம் மற்றும் ஆல்கலாய்டு தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுகிறது. குறிப்பிட அளவு பசையின் வேதிச்செர்மானங்களின் சுத்திகரிப்பு இந்தியாவில் செய்யப்படுகிறது, பெரும்பலான பசை அப்படியே வாங்கப்பட்டு வெளிநாட்டு இறக்குமதியாளர்களால் அந்தந்த நாடுகளிலும்  செய்யப்படுகிறது. 

இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து சட்டத்துக்குட்பட்ட அபினி இறக்குமதி அமெரிக்காவில் மல்லிங்க்ரோட், நோராம்கோ, அபோட் ஆய்வகங்களால், நடத்தப்படுகிறது, மேலும் சட்டபூர்வமான  அபினி உற்பத்தி கிளாக்ஸோ, ஸ்மித்கிளைன், ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் நடத்தப்படுகிறது  

ஓபியம்  பாப்பியிலிருந்து கிடைக்கும் கசகசா விதைகள் ஒரு முக்கியமான உணவுப் பொருளாகவும், பல பயன்பாடுகளைக் கொண்ட சமையல் எண்ணெயான கசகசா விதை எண்ணெயின் ஆதாரமாகவும் உள்ளன, விதைகள் மிகவும் குறைந்த அளவு மயக்க மருந்துகளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் இன்னும் குறைவாகவே இவற்றைக்கொண்டுள்ளது. 

கசகசா விதைகள் மாவ் என்னும் பெயரில்   பறவை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றில் தயாமின், ஃபோலேட்   கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம்  உட்பட. பல சத்துக்கள் நிறைந்துள்ளன. கசகசா விதைகள் 6% நீர், 28% கார்போஹைட்ரேட், 42% கொழுப்பு மற்றும் 21% புரதம்  ஆகியவற்றையும்  கொண்டவை.

 நல்ல உறக்கத்தை அளித்தல்,  மன அழுத்தத்தை அகற்றுதல், வாய் புண் சிகிச்சை, உடல், மன ஆற்றலை  அதிகரித்தல்,மன ஆரோக்கியத்தை அதிகரித்தல், எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்றவை கசகசா விதைகளின் குறிப்பிடத்தக்க நன்மைகளாகும்.  

 2018 ஆம் ஆண்டில், கசகசா விதைகளின் உலக உற்பத்தி 76,240 டன்களாக இருந்தது, இதில் துருக்கியின் பங்களிப்பு மட்டும் மொத்த உற்பத்தியில் 35% ஆக இருந்தது., அதைத் தொடர்ந்து செக் குடியரசு மற்றும் ஸ்பெயின் முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன . பப்பாவர் சாம்னிஃபெரம் செடியைத்தவிர மற்ற பாப்பி  வகைகளின் விதைகள் உண்ணப்படுவதில்லை, ஆனால் அவையனைத்தும் அழகிய மலர்களுக்காக அலங்காரச்செடிகளாக பயிரிடப்படுகின்றன.

 2005 லிருந்து சீனாவில் கசகசா விதை மற்றும் கசகசா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் மசாலா கலவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  பல்வேறு மத மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு விதிகளின் பேரில் சவுதி அரேபியாவிலும் கசகசா விதைகள் தடை செய்யப்பட்டுள்ளது.   

கசகசா விதைகள் ஊக்கமருந்து சோதனையில் தவறான நேர்மறையான முடிவுகளை (false positive) ஏற்படுத்துவதால், இந்திய விமான நிலையங்களில் கசகசாவை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவை தடை செய்யப்பட்டிருக்கும்  ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  செல்லும் பயணிகள் கசகசா விதைகளால்   சிரமங்களுக்கும், கடுமையான தண்டனைகளுக்கும் ஆளாகிறார்கள்.

மார்ஃபின் உள்ளடக்கம் காரணமாகவும், முளைக்கும் திறன் உள்ள விதைகள் கலந்திருக்கும் சாத்தியங்களினாலும் சிங்கப்பூரிலும், தைவானிலும் கசகசா விதைகள் ’’தடை செய்யப்பட்ட பொருட்களின்’’ பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. 

ஓபியத்துக்கான சில வட்டார வழக்கு சொற்களில் அதிகம் புழக்கத்தில் இருப்பவை “பிக் ஓ”,(Bio O) “ஷாங்காய் சாலி”, “மயக்கமருந்து (Dop)”, “ஹாப்”, “நள்ளிரவு எண்ணெய்”, “ஓ.பி.”(OP).ஆகியவை

 “தார் என்பது  ஹெராயினை குறிக்கிறது. பாரம்பரியமாக அபினி புகைப்படும் நீண்ட குழாய்  “கனவு குச்சி”  (Dream Stick) என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுப்பான திரவங்களை அதுவரையிலும் குறித்துவந்த ‘Dop’ என்னும்  சொல்.    ‘மயக்கமருந்து’  என்று பொருளில், புகைபிடிக்க  தயாராக இருக்கும்போது, பிசுபிசுப்பாக இருக்கும் ஓபியத்தையும் 1888 முதல் குறிக்க பயன்படுத்தப்படுகிறது,

விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான பாப்பிச் செடிகளில் இருந்து  2500 வெவ்வேறு வகையான வேதிச்சேர்மங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்   இவற்றில் முக்கியமான வகையான. ஓபியாயிட்’கள் உச்ச வலி நிவாரணிகளாக மருத்துவத்தில் பயன்படுகிறது.

ஓபியாயிட் மருந்துகளின் சந்தைப்படுத்துதலை  மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்த முடியாததற்கு  இவற்றின் இந்த வலிநிவாரணம் தரும் இயல்பே காரணமாக இருக்கிறது.  ஓபியாய்டுகளுக்கு  சிறந்த மாற்றுகள் கண்டுபிடிக்கப்படும் வரை, இவை வலி நிவாரணி என்னும் வடிவில் புழக்கத்தில்தான் இருக்கும்

சட்டவிரோத போதைப்பொருள்கள் பயன்படுத்துவதில் ஒட்டுமொத்த உலக (0.70%) மற்றும் ஆசிய நாடுகளின் (0.46%) சராசரியைவிட இந்தியாவின் (2.06%) சராசரியே மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய UNODC அறிக்கை எச்சரிக்கிறது. என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளதும் கவலை அளிக்கிறது.(Narcotics drugs and Psychotropic Substances act 1985)

 இந்தியாவில் திரைப்பட பிரபலங்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்குகள் மீதான கூடுதல் ஊடக கவனம், போதைப்பொருள் பயன்பாடென்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் இயல்பு என்ற தவறான தோற்றத்தை உருவாக்குகிறது. ஊடகங்கள் தெரிவிப்பதற்கு மாறாக போதை மருந்துகள் இந்தியாவின் எல்லா சமூக அடுக்களிலும் பரவியிருக்கும் ஒரு பரவலான, மிக முக்கியமான பிரச்சினையென்பதுதான் உண்மை.

கல்லறைகளில் மலர்ந்த பாப்பிக்களின் நினைவாக செம்பட்டு பாப்பிமலர்களை அணிவதன் 100 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் நடந்த அதே நவம்பர் 11 அன்று இந்தியாவில் மருந்துசீட்டுக்கள் மூலம்  வாங்கப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அபாயகரமான அளவிற்கு அதிகரிதுள்ளது  என மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கவலை தெரிவித்திருக்கிறது.

.செம்பட்டு சோளப்பாப்பி மலர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாய்நாட்டுக்காக உயிரிழந்த பல லட்சம் வீரர்களின் இழப்பிலிருந்தும் துயரிலிருந்தும், தலைமுறைகளாக நம்பிக்கையும், அவர்களின் தியாகத்தின் பொருட்டான நன்றியும் வளர்ந்து கொண்டிருப்பதை  காட்டுகிறது. ஆனால் ஓபியம் பாப்பிகளோ அணு ஆயுதப்போர், உயிரிஆயுத போர்களுக்கடுத்து போதைப்பொருள் போரின் சாத்தியங்களை காட்டுகிறது.

குன்றிமணி-கொல்லும் அழகு

மாட்டிறைச்சிக்காக நடைபெறும் கால்நடை திருட்டு , மாட்டிறைச்சி உண்பது ஆகியவை  நவீன இந்திய அரசியலில் சூடான விவாதங்களுக்கு உரியவை, எனினும் 1800’ல் இருந்து இந்தியாவில் நிகழ்ந்த கால்நடை திருட்டு  மற்றும் கொலை குறித்த பழமையான  வரலாறு மற்றும் அதன் பின்னால் இருந்த தாவர நஞ்சொன்றின் பங்கை குறித்து அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அப்போது கால்நடைகளை குறிப்பாக பசுக்களை கொல்ல இரண்டு வழிகளே அதிகம் பயன்பாட்டில் இருந்தன. ஒன்று மிக எளிதாக கிடைத்த ஆர்சனிக்கை,  தீவனத்தில் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுப்பது. இரண்டாவது சுதாரி அல்லது சுயி (‘sutaris’ / ‘suis) ’எனப்படும் குன்றிமணி நஞ்சினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கூர் ஆயுதத்தினால் பசுவின் உடலில்  காயப்படுத்துவது. 

வங்காளத்திற்கான அப்போதைய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட  ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும்  நூலில், அவர்  நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும்,  ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த  சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக  எழுதியிருக்கிறார்.1. அந்த கைதிக்கு தண்டனையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. குன்றிமணி விதைகளிலிருந்து சுதாரி செய்வதை அந்த கைதி   நேரடியாக செய்து காட்டினான்.  

மேல் தோல் நீக்கப்பட்ட 30 அல்லது 40  குன்றிமணி விதைகள்  உடைக்கப்பட்டு, பத்து நிமிடங்களுக்கு நீரில் ஊறவைக்க படுகின்றன, பின்னர் அம்மியில் எருக்கம்பால் சேர்த்து, இவை மை போல அரைக்கப்பட்டு 6 கூர் நுனி கொண்ட ஒரு இன்ச் நீளமுள்ள சிறு கூம்புகளாக கைகளால் உருட்டப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டு கடினமாக்க படுகின்றன. நீர் உட்புகாமல் இருக்க ஒரு இரவு முழுவதும்  விலங்கு கொழுப்பில் அமிழ்த்தி வைக்கப்பட்ட இவை உலோகங்களை விட கடினமானதாகின்றன. பின்னர் இவை கற்களில் தீட்டப்பட்டு மேலும் கூராக்கப் படுகின்றன.

.  

Abrus precatorius, threaded seeds.

3 அல்லது 4 இத்தைகைய கூரான நச்சு முட்களை செருகி வைத்துக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் 3 இன்ச் அளவுள்ள   மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கைப்பிடிகளில் இவை  செருகப்பட்டு கொலை ஆயுதங்களாகின்றன. செருப்பு தைக்க பயன்படும் குத்தூசிகளைபோல் இருக்கும் இவற்றால் எந்த தடயமுமின்றி கால்நடைகளும்  மனிதர்களும் அப்போது கொலை செய்யபட்டிருக்கின்றனர்.

   மேஜர் ராம்ஸே அந்த கைதி உருவாக்கிய சுதாரியை சோதிக்க ஒரு பசுவை வரவழைத்தார் அந்த கைதி அப்பசுவின் கொம்புகளுக்கு அடியில், மூளையை தொடும்படி ஒரு முறையும், பசுவின் நாக்கிற்கு அடியில் இரண்டு முறையும், சுதாரி ஊசி நுனிகளால். மிக விசையுடன்  குத்தி, கைப்பிடியை திருகி உடைந்த முள் பசுவின் உடலில் தங்கிவிடும்படி உருவி எடுத்தான். குத்தப்பட்ட எந்த காயமும், சுவடுமின்றி அந்த பசு 34 மணிநேரத்தில் இறந்தது. குத்திய இடத்தில் சீழ் முத்தொன்றை தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அப்பசுவின் உடலில்

 இறந்த பசுவின் உடலில் இருக்கும் குன்றிமணியின் விஷம் ஆர்சனிக்கை கண்டுபிடிப்பதை காட்டிலும் கடினமானது.ஒரு  வளர்ந்த பசுவை கொல்ல சுமார் 600 மில்லி கிராம் குன்றிமணி நஞ்சு  போதுமானது. மேலும் விரைவாக பசுக்களை கொல்ல வேண்டி இருக்கையில் குன்றிமணி விழுதுடன் பாதரசம், ஊமத்தை இலைச்சாறு மற்றும் ஆர்சனிக்கும் சேர்க்கப்படும்.

அப்போது ஆர்சனிக் ’’அரிசி’’ என்னும் பெயரில் கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்பட்டிருக்கிறது. நன்கு விளைந்த சோள விதையை குடைந்து அதில் 2  அவுன்ஸ்  ஆர்சனிக் நிரப்பப்பட்டு விதையின் வெளிப்புறத்தை மூடி இவை  தீவனத்தில் கலக்கப்படும்  

தோலுக்காக பசுக்களையும் எருதுகளையும் மட்டுமல்லாது மனிதர்களை கொல்லவும் குன்றிமணி விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.முதன்முதலாக 1854ல் வடமேற்கு இந்தியாவில் முதல் குன்றிமணியால் கொல்லபட்ட பசுக்கொலை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அந்த விசாரணையின் போதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன

சுதாரிகளால் பசுக்கொலைகளை செய்தவர்கள் இந்திய பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரும், எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாதியை சேர்ந்தவர்களுமான,  சாமர் எனப்படுபவர்கள் (Charmar).2  இவர்கள்  வட இந்தியா,  பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம்  வாழ்பவர்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் தோல் பொருள் தயாரிப்பாளர்கள். கொலையான பசுக்களின் உடலை அகற்றும் சாமர்களுக்கு அப்பசுவின் தோலும் இறைசியும் சொந்தமென்பதால்  தோலை அகற்றி விற்பனை செய்துவிட்டு இறைச்சியை உண்ண எடுத்துக்கொள்வார்கள். நோயுற்ற மற்றும் நஞ்சூட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை உண்ட இவர்களுக்கு அதனால் எந்த உடல் கோளாறுகளும் உண்டாகவில்லை என்பதை அவர்களுடன் இருந்து கவனித்த ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். 

பிராமணர்களுக்கு இறந்த பசுக்களை தொடுவது பாவம் என்பதால் இயற்கையாக மரணிக்கும் எல்லா பசுக்களும் சாமர்களுக்கு அப்போது சொந்தமானது. அவர்கள் இறந்த அப்பசுவின் உடலை அப்புறப்படுத்திவிட்டு தோலை உரித்து பதனிட்டும், இறைச்சியை உணவாகவும் எடுத்துக்கொண்டனர். 

1850களில் இருந்து சாமர்கள் சட்டவிரோதமாக மாடுகளை குன்றிமணி நஞ்சு மற்றும் ஆர்சனிக் உபயோகித்து கொல்லத்துவங்கினர். சுதாரியால் குத்தபட்டு இறந்த பசுக்களின் உடலில் நஞ்சூட்டியதற்கான எந்த தடயமும் இருக்காது என்பதால்,  அவை இயற்கையாக இறந்ததாகவே நம்பபட்டது.  அவற்றின் தோல் பெரும்பாலும்  பாட்னா மற்றும் கல்கத்தாவை சேர்ந்த  இஸ்லாமிய தோல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வியாபாரிகளும் மாடுகளை கொல்லுவதற்கு ஆர்சனிக்கையும் , குன்றிமணி விதைகளையும் அதிக  அளவில்  சாமர்களுக்கு கொடுப்பதும் வழக்கமாக இருந்தது.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல்பொருட்களின் தொழிற்சாலைகளும் விரிவுபடுத்தப்பட்ட 1870 களுக்கு  பிறகு இந்த பசுக்கொலைகள் மிக அதிகமாகி சாமர்கள் பசுவைகொல்லும் பிரிவினராகவே அறியப்பட்டனர்..3

முறைப்படுத்தப்பட்ட  குற்றமாகவே இக்கொலைகள் நடைபெற்றுவந்த 1880 மற்றும் 1890 களில் மட்டும் 7 மில்லியன் மாட்டுத்தோல்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 1900-01 ல் மட்டும் சுமார் 113 மில்லியனுக்கு  தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பசுக்கொலைகளோடு மனிதர்களும் குன்றிமணி நஞ்சூட்டி கொல்லப்பட்டனர். 1880’ல்  பெங்காலின் காவல்துறை ஆவணமொன்றில் 1871’ல்  சுதாரியால் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஜோடி சுதாரிகளால் உடலின் பக்கவாட்டு பகுதியில்  குத்தப்பட்டு இறந்தவரும், உறங்குகையில் சுதாரியால் குத்தப்பட்டு, சுதாரி நுனியை சதையை தோண்டி அகற்றிவிட்டாலும் 3 நாட்களுக்கு பிறகு  உயிரிழந்த மற்றொருவரும், கன்னங்களில் சுதாரி குத்தப்பட்டதால் உயிரிழந்த இன்னொருவருமாக, இந்த கொலைகள் அந்த ஆவணத்தில் விளக்கமாக பதிவாகி இருக்கின்றன்.

குற்றவாளிகளான சாமர்கள் மிகுந்த வறுமையில் இக்கொலைகளை மிகக்குறைந்த கூலிக்காகவும், செய்திருப்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஒரு கொலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி 16.5 ரூபாய்கள் தான்.

1865-69 வட இந்தியாவில் மட்டும், 1462 பசுக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 1900;ல் உச்சத்தை எட்டியது.  அனைத்து கொலைகளையும் சாமர் இனத்தவர்களே செய்தனர்.

அக்கொலை விசாரணைகள், பல கைதுகளுக்கு பிறகு சாமர்கள் ஆர்சனிக் மற்றும் குன்றிமணிகளை வைத்திருப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1899ல் பெங்காலில்  148 மாடுகள் இறந்ததை ஆராய்ந்த வேதியியல் ஆய்வாளர் இறந்தவைகளில் 75 சதவீதம் நஞ்சூட்டப்பட்டிருந்ததை  தெரிவித்தார்.

 இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்பதாலும் அவற்றின் தோலை அகற்றி விற்பதாலும், அவர்களின் சுத்தமின்மை காரணமாக தீண்டத்தகாதவர்களாக உயர்குடியினரால் அக்காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட இனமாக இருந்த சாமர்கள் இப்பசுக்கொலை விசாரணைகளின் போது பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் சந்தித்தனர். காவல்துறையினரின் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளினாலேயே இப்பசுக்கொலைகள் மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகின்றது.

.ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் அமர் சித்ர கதா வில் வங்காளத்தில் உண்டான ஒரு பஞ்சத்தின் போது மக்களுக்கு வித்யாசாகரும் அவரது தோழர்களும் உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில்  ஒரு சாமருக்கு எண்ணையை தரப்போன அவரது தோழர் மிகத் தொலைவில் நின்று அவருக்கு வழங்கியதை கண்டித்து, வித்யாசாகர் சாமரை தொட்டுத் தழுவி ’’இவரைத் தொட்டால் ஒன்றுமில்லை’’ என்று சொல்வது போல் ஒரு கதையில் சித்தரிக்கபட்டிருக்கிறது. 

 இந்திய தலித் பிரிவில் ஒரு துணை பிரிவான இவர்களின் பெயரான  சார்மர் அல்லது சாமர் என்னும் சொல் ’’தோல் பதனிடுபவர்’’ என்று பொருள் கொண்ட சார்மகரா- ‘Charmakara’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது.

இந்திய தொன்மங்களில் சாமர்களின் தோற்றம் பற்றிய கதைகள் பல உண்டு.  உயர்குடியில் பிறந்த, இறந்த பசுவின் உடலை வேறு வழியின்றி அகற்றிய இளைஞன்  ஒருவனே முதல் சாமர் என்றும், இறந்த எருதின் உடலை தனியே அகற்ற முடியாத உயர்குடி இளைஞன் ஒருவனுக்கு சிவன் உதவிசெய்து,  இறந்த பசுவின் உடலின் மீது சிறுநீர் கழிக்க சொல்லிய போது அந்த உடலிலிருந்து எழுந்து வந்தது முதல் சாமர் என்றும் கதைகள் உள்ளன

இமாச்சலபிரதேசம்,  டில்லி, ஹரியானா, பீகார், பஞ்சாப் உத்தரபிரதேசம் மற்றும் நேபாளில் இவர்களுக்கு ’’சாம்பார் போளி, சாம்பாரி மற்றும் சாம்ரி எனவும் பெயர்களுண்டு. செருப்பு தைப்பது, தோல் பதனிடுதல் மற்றும் விவசாய வேலைகளை செய்துவந்த இவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

சுமார் 90 மில்லியன் சார்மர்கள் இந்தியாவில் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 சதவீதம் சாமர்கள். தற்போது அவர்களில் பலர் மிகப்பெரிய சமூக அந்தஸ்துடன் இருக்கிறார்கள்

இப்போது பஞ்சாப்பில் இவர்கள் இரு பிரிவினராக ஆதிதர்மிகள்  மற்றும் ரவிதாஸர்கள் என்று பெரும் செல்வாக்குடைய இனத்தவர்களாக இருக்கிறார்கள். பல பஞ்சாபி சாமர்கள் ராணுவத்தில் உயர் பதவியில் இருக்கிறார்கள் பஞ்சாபின் சம்கிலா உள்ளிட்ட பல பிரபல பாடகர்களும் கவிஞர்களும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் .

இந்திய ராணுவத்தின் மிக புகழ்பெற்ற, ஏராளமான விருதுகளை வழக்கமாக பெற்றுக்கொண்டிருக்கும்   படைப்பிரிவான சீக்கிய காலாட்படை, பெரும்பாலும் சாமர் மற்றும் மஷாபி சீக்கியர்களை கொண்டுள்ளது.

முன்னாள் இந்திய துணை பிரதமர்- ஜகஜீவன் ராம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கன்ஷிராம் மற்றும்  நான்கு முறை உத்திரபிரதேச முதலவராக இருந்த   மாயாவதி ஆகியோர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள்

உலகம் முழுவதும் தாவரத்திலிருந்து பெறப்படும் விஷத்தில் முதல் இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.4 ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றிமணி போதுமானது. குன்றிமணியின் பயன்களையும் நச்சுத்தன்மையையும் குறித்து உலகின் பல பாகங்களிலும் பல நூல்களிலும், ஆய்வறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு களைச்செடி போல எங்கும் படர்ந்து வளர்ந்து இருக்கும், பட்டாணி குடும்பமான ஃபேபேசியை  சேர்ந்த குன்றிமணி உறுதியான நடுத்தண்டும், மெல்லிய கிளைத்தண்டுகளும், சிறிய இளம்பச்சை  கூட்டிலைகளும், அவரை போன்ற காய்களுடன் மரங்களிலும், புதர்களிலும் பற்றி படர்ந்து வளரும் ஒரு பல்லாண்டு கொடித் தாவரம்.

குன்றிமணி செடியின் தாவர அறிவியல் பெயர்  Abrus precatorius. கிரேக்க மொழியில் Abrus  என்பது அழகிய மென்மையான என்னும் பொருளில் இச்செடியின் அழகிய இலைகளை குறிக்கின்றது,  precatorius என்பது பிரார்த்தனைக்குரிய என்று பொருள்படும். குன்றிமணி விதைகள் ஜெபமாலைகள் செய்ய பெரிதும் பயன்பாட்டில் இருந்ததால் சிற்றினத்துக்கு இந்த பெயரிடப்பட்டது.   ஆப்ரஸ் பேரினத்தில் 17 சிற்றினங்கள் இருப்பினும் உலகெங்கிலும் அழகிய விதைகளின் பொருட்டு பிரபலமாயிருப்பது குன்றிமணி எனப்படும் Abrus precatorius  கொடிகளே! (Abrus precatorius L.) 

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இச்செடியின் விதைகளான குன்றிமணிகள் பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன,.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாவரம் ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக ஹவாய், கரீபியன் தீவுகள், பாலினேஷியா மற்றும் அமெரிக்காவின் சில குறிப்பிட்ட பகுதிகளில்  அறிவிக்கப்பட்டது. ஃப்ளோரிடாவின் உயரமான மனிதர்களின் நடமாட்டமே இல்லாத ஊசியிலை மலைக்காடுகளில் கூட இவை பரவியுள்ளன

மிக ஆழத்தில் வேறூன்றி இருக்கும் குன்றிமணியின் உறுதியான வேர்கள் காட்டுத்தீயில் கூட அழியாது  மாற்றடுக்கில் அமைந்திருக்கும் இறகுகளை போன்ற,மிதமான இனிப்பு சுவையுடன் இருக்கும், அழகிய கூட்டிலைகள் 8 லிருந்து 20 சிற்றிலை ஜோடிகளை கொண்டிருக்கும். 10லிருந்து 20 அடி நீளம் வளரும் இக்கொடித்தண்டுகள் முற்றிய பின்னர் நல்ல உறுதியானவைகளாக இருக்கும்.

 வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த சிறு மலர்கள் கொத்தாக மலரும்.3 செ மீ  நீளமுள்ள காய்கள் 1 செ மீ அளவுள்ள  3 அல்லது 5 கடினமான பளபளப்பான அடர் சிவப்பில் கருப்பு மருவுடன் இருக்கும் அழகிய விதைகளை கொண்டிருக்கும். இவையே குன்றிமணி எனப்படுகின்றன.

குன்றிமணியின் பல்வேறு ஆங்கில பெயர்கள்;  jequirity, Crab’s eye, rosary pea, paternoster pea, love pea, precatory  bean, prayer bead, John Crow Bead, coral bead, red-bead vine, country licorice, Indian licorice, wild licorice, Jamaica wild licorice, Akar Saga, coondrimany, gidee gidee, Jumbie bead ratti/rettee/retty, goonjaa/gunja/goonja ,weather plant. &  paternoster pea,

குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி,குலாகஞ்சி குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை,குன்னி குரு பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும்  குன்றி மணி நூற்றாண்டுகளாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் பல்வேறு சிகிச்சைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் வண்ணமயமான பளபளக்கும் மணிகளைப்போல இருக்கும் விதைகளால் இத்தாவரம் பரவலாக அறியப்படுகிறது .குன்றிமணி விரைவில் பல்கி பெருகும் இயல்புடையது. 

குன்றிமணி விதைகளில் இருக்கும் ஆப்ரின் நஞ்சு (Abrin) 5 மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் தன்மையுடையது. ஆப்ரின் நஞ்சில் A B என  இரு முக்கியமான புரதங்கள் உள்ளன. இவையே மனிதர்களின் உடலில் புரதம் உருவாகாமல் தடுத்து பிற   மோசமான விளைவுகளை துரித படுத்துபவை. ஒரே ஒரு மூலக்கூறு ஆப்ரின் மனித உடலின் 1500 ரிபோசோம்களை ஒரு நொடியில் செயழிழக்க செய்துவிடும்.

ஆப்ரினின் வடிவம்

 ஆப்ரினின் நச்சுத்தன்மை ஆமணக்கு விதைகளில் இருக்கும் ரிசினின் நச்சுத்தன்மையை காட்டிலும் (Ricin) இருமடங்கு அதிகம் எனினும் இரண்டிற்குமான நஞ்சின் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். ஆமணக்கின் கனியை கடித்து மென்று விழுங்கினால் சிகிச்சைக்கு பிறகு பிழைப்பது ஓரளவுக்கு சாத்தியம் ஆனால் குன்றிமணியை கடித்து விழுங்கினால் உயிரிழப்பு  நிச்சயம் உண்டாகும் கடிக்காமல் தவறுதலாக முழுதாக விழுங்கப்பட்ட குன்றிமணி எந்த நோய் அறிகுறியையும், ஆபத்தையும் விளைவிப்பதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் கூட  நரம்பு மண்டலம் தொடர்பான கடுமையான சில நோய்கள் உருவாகும்..மனிதர்களின் உயரிழப்புக்கு 0.1 மி கி அளவு ஆப்ரினே போதுமானதாக இருக்கிறது, குதிரைகளும் மனிதர்கள் அளவுக்கே குன்றிமணி நஞ்சினால் பாதிப்படைகின்றன.

 .குன்றிமணியை  கடித்து உண்டால் வாந்தி, கடும் காய்ச்சல், தொடர்ந்து அதிக அளவில்  எச்சில் ஒழுகுதல், ஈரல் சேதம், சிறுநீரக செயழிழப்பு, கண்களில் ரத்தம் வடிதல் வலிப்பு, சிகிச்சை அளிக்காத பட்சத்தில் உயிரிழப்பு ஆகியவை உண்டாகும். 

முழு சிவப்பிலிருக்கும், கருப்பும் சிவப்புமான  மணிகள் ஆபரணங்களில் அதிகமாக  இணைக்கப்படுகின்றன. இவற்றை துளையிட்டு ஆபரணங்களாக்கும் தொழிலாளிகளுக்கும் இந்த நஞ்சினால் ஆபத்துகள் உண்டாவதாக ஆதரங்களற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரின் நஞ்சை குறித்த மிக முக்கியமான  256 ஆய்வறிக்கைகளில் ஒன்றில் கூட குன்றிமணியை தொழில் ரீதியாக கையாளுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை

முழு வெள்ளை, சிவப்பும் கருப்பும் கலந்தது, முழு சிவப்பு, முழு கருப்பு, பச்சை, நீலம் மஞ்சள்  என இம் மணிகளில் பல வகைகள் உள்ளன.அனைத்து விதைகளும் கடும் நஞ்சுள்ளவை. மருத்துவர்கள் அளிப்பதை தவிர இத்தாவரத்தின் எந்த பாகங்களையும் சுயமாக முயன்று பார்ப்பதும், மருந்தாக உபயோகிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவமனைகளில் குன்றிமணி நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஞ்சின் வீரியத்தை குறைக்க செயற்கை சுவாசம் அளித்து இரத்தை சுத்தம் செய்வது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். குன்றிமணி நஞ்சுக்கு முறிமருந்து என்று ஏதும் இல்லை என்பதும் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது. 

1877ல்  வெளியான உதய் சந்த் தத்தின் ’’இந்துக்களின் மருந்துசரக்குகள்’’ ( The Materia Medica of the Hindus ) நூலில் குன்றிமணியின் விவரிப்பும் அதன் பாலுணர்வு தூண்டுதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் விரிவாக குறிப்பிடபட்டுள்ளது .

அமரசிம்மரின் பிரபல சமஸ்கிருத நூலான ”அமரோக்‌ஷா” வின் காடுகளிலிருந்து கிடைக்கும் மருந்து பொருட்கள் பற்றிய இரண்டாவது அத்தியாயத்தில் குன்றிமணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1889 ல் வெளியான ஆஸ்திரேலியாவின் முக்கிய தாவரங்கள் என்னும் நூலில் இத்தாவரத்தின் பாகங்களின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99  தாவரங்களில் குறுநறுங்கண்ணி எனப்படுவது குன்றிமணியே.இவை நாளடைவில் பிற விதைகளைப்போல சுருங்குவதில்லை என்பதால் தங்க நகைகளில் இவற்றை பதிப்பது பல நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.

.

 மேற்கிந்திய தீவுகளில் குன்றிமணி பதிக்கப்பட்ட கைப்பட்டைகளை அணிந்துகொள்வது தீய ஆவிகளில் இருந்து காப்பாற்றும் என்னும் நம்பிக்கை   உள்ளது.

இவ்விதைகள் எடையில் மிகவும் சீரானவை, நீர் ஊடுருவ முடியாத  கடின விதையுறையின் காரணமாக வெவ்வேறு ஈரப்பத நிலைமைகளின் கீழ் கூட இவற்றில் ஈரம் புகுவதில்லை. குப்பையில் இருந்தாலும் குன்றி மணி சுருங்காது என்னும்பழஞ்சொல்லும் உண்டு;

குன்றிமணி விதைகள் தங்கத்தை துல்லியமாக அளவிட முன்பு பயன்பாட்டில் இருந்தது .இந்தியாவில் குன்றிமணியை கொண்டு அளவிடும் அளவைகளுக்கு ராட்டை என்று பெயர். தோராயமாக 130 மி கி எடை கொண்டிருக்கும் ஒரு குன்றிமணி 2 கோதுமை மணிகளின் எடைக்கும், 3 பார்லி மணிகளின் எடைக்கும் 4 அரிசிகளின் எடைக்கும் 18 கடுகுகளின் எடைக்கும் சமமானதாக இருக்கும்.

  8 ராட்டை = 1 மாஷா

 12 மாஷா = 1 டோலா (11.6 கிராம்)

மூன்றே முக்கால் குன்றி மணி எடை  ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை ஒரு விராகன் எடை.

இரண்டு குன்றி மணி எடை       ஒரு உளுந்து எடை.

பத்து விராகன் எடை        ஒரு பலம்.

இவ்வாறு  பொன்னை அளவிடுதல் போன்ற நுட்பமான நிறுத்தல் அளவுகளுக்கு குன்றிமணி  பயன்படுத்தப்பட்டதால் தான் குந்துமணித்தங்கம் என்னும் சொற்பிரயோகம் புழக்கத்தில் இன்னும் கூட இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குன்றிமணி குறிப்பிடப்பட்டுள்ளது.

1915 ல் வெளியான பிரஜேந்திரநாத்தின் பண்டைய இந்துக்களின் நேர்மறை அறிவியல் என்னும் நூலில் (The Positive Sciences Of The Ancient Hindus) ஒரு பொற்கொல்லரிடம் பொன் பேசுவதாக வரும் இரு வரிகளில் ’’ நான்  முதல் தரமான பொன் என் தரத்தை கருப்பு முகமுடைய மணிகளைக் கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்’’என்றிருக்கிறது

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றிமணியை குறிக்கிறது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே விதை குன்றி மணிதான்  

“புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து’ 

குன்றிமணியின் சிவப்பு போல் வெளித்தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பார்கள் என்பது இதன்  கருத்து.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்

. என்னும் மற்றொரு குறள் குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள். என்கிறது.

திருப்புகழில்

”குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்

வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை

கொன்ற குமரேச குருநாதா ” 

என்னும் பாடல் வரிகள். குண்றிமணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி,

தனது அழகிய கூர்மையான வாயில் அந்தப் பாம்பை கொத்திக்

கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே என்கிறது. .

முழு வெள்ளையில் இருக்கும் குன்றிமணிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாலுணர்வு ஊக்கியாக பயன்படுகிறது. குன்றிமணி கொடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் காய்ச்சலுக்கும், இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் விதைகள் கொதிநீரில் இடப்பட்டு நஞ்சு நீக்கிய பின்னர் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது.

 ஆயுர்வேதம் இத்தாவர பாகங்களை விலங்குகளால் உண்டான  சிராய்ப்புகள், மற்றும் காயங்களுக்கு மருந்தாக உபயோகிக்கிறது. உள்மருந்தாக வெண்குஷ்டம், ஜன்னி மற்றும் வெறிநாய்க்கடிக்கும் ஆயுர்வேதம் குன்றிமணியிலிருந்து தயாரித்த மருந்தையே கொடுக்கிறது. ஆயுர்வேதம்  தலைமுடி வளர்ச்சிக்கு குன்றிமணியை உபயோகப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இவ்விதைகள் பாலில் 3 மணி நேரம் வேக வைக்கப்பட்ட பின்னரே சிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

குன்றிமணி விதைகளை பாலில் வேகவைத்து பின்னர் உலர்த்துவது, ஆமணக்கு எண்ணெயில் குன்றிமணி பொடியை கலந்து  நஞ்சை நீக்குவது போன்ற இதன் நஞ்சினை நீக்கும் பல்வேறு வழிகளை ”சுத்திசெய்தல்”  என்னும் தலைப்பில் சித்தர்கள் விவரித்துள்ளனர். 

இந்தியா, பிரேசில், ஜமைக்கா போன்ற நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குன்றிமணியை கண் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ,தேனுடன் இலைச் சாற்றை கலந்து வீக்கங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றன. 

இந்தியாவில் பல மாநிலங்களில் குன்றிமணிகளை பூஜை அறையில் வைத்து பூசை செய்வது வழக்கம். குன்றிமணிகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது தீய சக்திகள் நெருங்காது என்னும் நம்பிக்கை இந்தியாவின் பல பாகங்களில்  இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஜுலு மக்கள் குன்றிமணிகளை கொண்டு ஆபரணங்கள் செய்து பொருளீட்டுவதை முக்கிய தொழிலாகவே செய்கின்றனர்.

சுஷ்ருதர் குன்றிமணியின் மருத்துவ  உபயோகங்களை குறிப்பிட்டிருப்பதால் மிகபழங்காலத்திலிருந்தே  இது மருந்தாக பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை அறியலாம்

.இந்தியாவைப்போலவே, இலங்கையிலும் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்கு குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றில் குன்றிமணி பயன்படுத்தப்படும். சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாக கருதப்படுகிறது.பல்லாங்குழி, தாயம் ஆகிய விளையாட்டுக்களிலும் குன்றிமணியை உபயொகிப்பது இன்றும் தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. 

பிள்ளையார் சதுர்த்தியின் போது கைகளால் பிசைந்து வீடுகளில் செய்யப்படும் பிள்ளையாருக்கு கண்களாக குன்றிமணியை பதிப்பது இந்தியா முழுவதிலுமே பொதுவான வழக்கம். குன்றிமணிச் சம்பா  என்று சற்றே தடிமனான செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை தமிழகத்தில் இருந்தது.

கருப்பு குன்றிமணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பு குன்றிமணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அங்கு காளியின் அம்சமாக கருப்பு குன்றிமணி கருதப்படுகிறது. 

ராஜஸ்தானின் புகழ்பெற்ற நாட்டுபுறப்பாடலான  சிர்மி பாடல் குன்றிமணியை குறித்தானது. திருமணமான பெண்ணொருத்தி தன்னை காண  புகுந்த வீட்டுக்கு வரும் தன் தந்தையையும் சகோதரனையும் காண குன்றிமணி செடிகளின் மீது ஏறி நின்று பாடும் ”சிர்மி” அங்கு மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல். ராஜஸ்தானில் சிர்மி என்பது குன்றிமணியை குறிக்கும் சொல்

அரளி விதைகள், ஊமத்தை இலைகள், குன்றிமணிகள், ஆமணக்கு கொட்டைகள், செங்காந்தள் வேர் என  கொடிய நஞ்சினை கொண்டிருக்கும்  தாவரங்களை குழந்தைகள் தவறுதலாக கடித்தும் விழுங்கியும் உயிராபத்தை வரவழைத்துக் கொள்வது பல வளரும் நாடுகளில் மிக அதிகம் நிகழ்கிறது.

ஆச்சர்ய படும்படியாக இந்த தாவரம் மிக அதிகமாக காணப்படும் இலங்கையில்  இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு கடந்த பத்து ஆண்டுகளில் 9 குழந்தைகள் மட்டுமே குன்றிமணியை கடித்ததால் மருத்துவமனைக்கு வந்தவர்கள். அதேபோல் குன்றிமணி அதிகம் விளையும் கேரளாவிலும் இதனால் பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. 

கேரளா குருவாயூரில் குழந்தைகளுக்கு சோறூட்டும் அன்னபிரசன்னம் நிகழ்வில் குழந்தைகள் கைகளால் அளைவதற்கென்று  உருளியில் நிறைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற மணிகள் மலையாளிகளால் சில சமயம் குன்னிக்குரு என்றழைக்கப் பட்டாலும் அவை  குன்றிமணிகள் அல்ல Adenanthera pavonina என்னும்   மஞ்சாடியின் விதைகள்.

மஞ்சாடி விதைகளும் மஞ்சரியும்

தாவர நஞ்சினால் உலகெங்கிலும் மிக அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே! குன்றிமணியின் ஆபத்துக்களில் முதலாவது இதை உட்கொண்ட பலமணி நேரம் கழித்தே அறிகுறிகள் தெரிவது, இரண்டாவது இதை உட்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இந்த தாவரம் வளர்ந்திருக்கும் இடங்களிலோ, விளையாடும் இடங்களிலோ அலல்து பள்ளியிலோ இருப்பதால் விஷயம் பெரியவர்களுக்கு தெரியவர நேரம் ஆகிவிடுகிறது மூன்றாவதும் மிக முக்கியமானதும் குன்றிமணி இத்தனை நஞ்சுள்ளதென்பது அநேகம் பேருக்கு தெரியாது என்பதுதான்.

குன்றிமணி நம் சுற்றுப்புறங்களில் மிகச் சாதாரணமாக தென்படும் ஒரு களைத்தாவரம்.  நம் கலாச்சாரத்தில் பல சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருக்கும் இதன் அழகிய  விதைகளை குழந்தைகள் அதிகம் கையாளும்,  பயன்படுத்தும் சாத்தியங்களும் அதிகமிருப்பதால் குன்றிமணியின் நச்சுத்தன்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் விபத்துகளை தவிர்க்க முடியும்.

 பள்ளிக்கூடங்களில் சுற்றுபுறங்களில்  எளிதாக காணப்படும்  இதுபோன்ற நச்சுத் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரைகளை, நாடகங்கள் நிகழ்ச்சிகளை அவசியம் நடத்த வேண்டும். A  for Apple, C for Carrot  என்று கற்றுக் கொள்வதோடு நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களையும் பள்ளியில் அடிப்படை கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். இதன் மூலம்  தாவரங்களை குறித்த முறையான அறிவும், ஆபத்துக்களை தவிர்க்கும் அறிதலும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும்.

மேலும் தகவல்களுக்கு:

  1. Detective Footprints, Bengal, 1874-1881: With Bearings for a Future Course

Major h m ramsey dysp bengal. 

2.Chamar – Wikipedia 

3 History of Cattle Poisoning in British India – Telangana Mata

4. 10 Most Poisonous Plants in the World | Planet Deadly

5.Abrin – Wikipedia

அண்ணாத்தே!

கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 2021 ல் வெளியானது ரஜினியின் ’’அண்ணாத்தே’’. கோவிட் தொற்று காலத்துக்கு பிறகு திரையரங்குகளில் திரையிடப்பட்டதாலும், தீபாவளி  ரிலீஸ் என்பதாலும் வழக்கமாக இருக்கும் அதீத எதிர்பார்ப்பை விட இந்த முறை மிக அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்களும் பொதுமக்களும் காத்திருந்தார்கள். முதல் சில நாட்களில் டிக்கட் விலை பல்லாயிரங்களில் இருந்தது.

ரஜினியுடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, பாண்டியராஜன், ஜகபதி பாபு,, லிவிங்ஸ்டன், கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், யோகி பாபு என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை என்று எதுவும் இல்லை. பாசமலர் உள்ளிட்ட பல பழைய படங்களை, ரஜினியின் பழைய படங்கள், அண்ணன் தங்கை செண்டிமெண்டில் எடுக்கப்பட்ட அஜித் மற்றும் கார்த்தி ஆகியோர் படங்களை எல்லாம் எடுத்து கலக்கி கொடுக்கப்பட்ட திரைக்கதை நிறைவை கொடுக்காவிட்டால் போகிறது எரிச்சலை கொடுக்கிறது.

அலுப்பூட்டும் தொடர் நாடகம் பார்க்கும் உணர்வு முதல்பாதியிலேயெ வந்துவிடுகிறது. மிக தளர்ந்திருக்கும் ரஜினியும் அவருடன் காதல் காட்சிகளில் ஒட்டாமல் நடித்திருக்கும் நயன்தாராவும்,  படு பயங்கரமான ஒப்பனையில் கண்ணைப் பறிக்கும் நிறத்திலான ஆடைகளில் மீனா மற்றும் குஷ்புவும், சகிக்க முடியாத நகைச்சுவை என்னும் பேர் கொண்ட காட்சிகளில் லிவிங்ஸ்டனும் பாண்டியராஜனுமாக காட்சிக்கு காட்சி சொதப்பலும் எரிச்சலுமாக இருக்கிறது

அண்ணன் ரஜினி மீது அத்தனை உயிரை வைத்திருக்கும் தங்கை ஊர் நடுவே ’’உன் முடிவுதாண்ணா என் முடிவும், உன் விருப்பம் தாண்ணா என் விருப்பமும்’’ என்று நிஜமாகவே மைக் வைத்து சொல்லிவிட்டு, கல்யாணத்துக்கு முந்தின நாள் காதலனுடன் அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போவதும், அதையும் மன்னிக்கும் பாசக்கார அண்ணன் திடீரென்று ஏழையாகும் தங்கைக்கு. அவளுக்கு தெரியாமல் உதவி, சிக்கலிலிருந்து மீட்பதுதான் படத்தின் கதையாம்.

 டைட்டில் காட்சியில் படம் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது, வன்முறை நிறைந்தது என்று காட்டுகிறார்கள். பார்வையாளர்கள் மீது காட்டப்பட்ட வன்முறைதான் அது என்பது பிறகே தெரிகிறது

எக்கச்சக்க உணர்ச்சி பொங்கல்கள் படம் முழுவதும். தங்கை, அண்ணன்,அண்ணனின் காதலி, பாட்டி  என ஒருவர் பாக்கி இல்லாமல் நெஞ்சை கசக்கி பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.

ரஜினி நயனின் காதல் காட்சிகள் என்னும் பெயரில் ’’பட்டூ. காள்ஸ் என்னும் கொஞ்சல்கள் எல்லாம் தலைவலிக்க வைக்கும் அளவுக்கு செயற்கை.சூரி தனியே காமடி பண்ண முயற்சிக்கிறார் மொத்த படமும் பார்வையாளர்களை பார்த்து சிரிப்பதால் தனியே காமெடி எடுபடவில்லை.

  ரசிகர்களின் துவக்க கூச்சல்களும்  ஆரவாரங்களும் அடங்கிய பின்னர் அரங்கில் மயான அமைதி நிலவுகிறது. ரஜினி என்னும் பிம்பம் அவர் நடிக்க வந்தபோது பிறந்தே இருக்காத இன்றைய இளைஞர்களின் நெஞ்சில் உருவாக்கும் எழுச்சி அவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து உருவாகியதுதான். ரஜினி நடிக்கவேண்டும் என்பதில்லை ஒரு திரைப்படத்தில் அவரது புகைப்படமோ அவரது பெயரோ இடம் பெற்றிருந்தாலும் கூச்சலிட்டு அதை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்னும் போது திரைக்கதை தேர்வில் அவர் இன்னும் எத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டில் புதிதாக  என்ன?  என்று ரஜினி  கதை சொல்ல படுகையில் ஏன் கேட்கவில்லை? படப்பிடிப்பில் அரைத்து, புளித்து , நொதித்து கள்ளாகிவிட்ட காட்சிகளே மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகையில்  கூட ‘’ஏன் இதையே  எடுக்கிறோம். புதிதாக ஒன்றும் இவற்றில் இல்லையே? என்று  ஏன்  அவர் கேட்கவில்லை, 

திரைக்கதை  அபத்தம், காட்சிகள் அபத்த களஞ்சியம் என்றால் பாடல்களும் இசையுமாவது கேட்கும்படியாக இருக்கலாம் அதுவும் இல்லை, இசை பாடல் இயக்கம், ஒப்பனை ,கதை என எதுவுமே உருப்படியாக இல்லை 

படத்துக்கான எதிர்வினைகளில் ரசிகர்கள் ஏமாற்றத்தை கோபமாகவும் அழுகையாகவும் வெளிப்படுத்தினார்கள். இயக்குனர் சிவாவை சகட்டுமேனிக்கு வசை பாடினார்கள்

ரஜினி தன் வயதுக்கேற்ற பாத்திரங்கள் இருக்கும்படி  சொல்லப்படும் கதைகளை கேட்க ஏன் முன்வருவதில்லை. கடைசி காட்சியில் தங்கையான கீர்த்தி சுரேஷிடம் ’’நீ வயசுக்கு வந்தப்போ கூட’’  என்று துவங்கி ரஜினி பேசும் வசனங்களெல்லாம் தணிக்கை செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டு பெண்களை பெற்ற ரஜினிக்கு சக்தி வாய்ந்த ஊடகத்தில் பேசும் இந்த வசனத்தை பற்றி ஆட்சேபமேதும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது

தர்பார், கபாலி, காலாவிலிருந்தே திரைக்கதை என்ற  ஒன்றே இல்லை என்பதை ரஜினி இன்னும் கவனிக்கவில்லை. இளமையை இழந்து விட்ட பின்பு கதையில் கவனம் செலுத்த வேண்டியது தான் வெற்றிகரமாக இருந்த அதே துறையில் கண்ணியமாக  நீடித்திருக்க ஒரே வழி என்பதும் ரஜினிக்கு தெரியவில்லையா?

என் துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?என்று ரஜினி முன்பு பாடலில் தெரிவித்திருக்கிறார். முதல் காட்சிகளிலிருந்து ஆயிரங்களும் நூறுமாக ரசிகர்கள் செலவு செய்திருக்கும் பணத்திற்கும் அதன்பொருட்டு அவர்கள் சிந்தி இருக்கும் ஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் பதிலாக ரஜினி செய்திருப்பது வெறும் அநியாயம் மட்டுமே.

அந்த தற்கொலை செய்தி

ஒரு தற்கொலை செய்தி அல்லது ஒரு வன்கொடுமை செய்தியை கேள்விப்பட்டு அதற்கு எதிர்வினையாற்றி கொண்டிருக்கையிலேயே மற்றுமொன்று நிகழ்ந்துவிடும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு கொரோனா  ஊரடங்கால் கொஞ்சம் அடங்கி இருந்தவர்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்.

இத்தகைய பெருந்தொற்றும், கண்முன்னே உற்றோரும் உறவுமாக கொத்துக்கொத்தாக மரணமடைந்து, இறப்பென்பது எங்கோ செய்திதாளில் வாசித்ததென்பது போக, அது நம்வீட்டுகதவை தட்டி நடுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த காலத்துக்கு பிறகும் தப்பி பிழைத்து புத்தி வராமல்,,  அடுத்தவர்களின்  பெண்களிடம் அத்துமீறுவதும், அழிப்பதுமாக இருக்கும்,இவர்களே தொற்றுக்கிருமியை காட்டிலும் அபாயகரமானவர்கள்

இந்த குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை  கிடைப்பதில்லை அல்லது, குற்றத்தின் தீவிரத்துகேற்றபடி தண்டனை கொடுக்கப்படுவதில்லை. விஷயம் வெளி உலகிற்கு தெரிய வந்த சில மாதங்கள் ஊடகங்கள் அதை சுறு சுறுப்பாக கவனத்தில்  எடுத்துக்கொண்டு பின்னர் அடுத்த விஷயத்துக்கு போய்விடுகிறார்கள்

பல ஓட்டைகள் வழியாக அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து வெளிவருகிறார்கள்’. சட்டத்தின் பிடி என்று ஒன்று உண்டா என்பதும் கேள்விக்குரியதே.

 பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரும் வழியில், அவர்கள் வாங்கிக்கொடுத்த பிரியாணிக்காக சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு அனுமதித்த  காவலர்களுக்கும் இருக்குமல்லவா பெண் குழந்தைகள்?

அவர்களின் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவளித்த  ஒருவனிடம் பிரியாணி வாங்கி சாப்பிட முடியுமா அவர்களால்? அடுத்தவர் பெண்ணும், தனது பெண்ணும் வேறு வேறென்று நினைக்கும் இவர்களுக்கும்,மாணவியிடன் அத்துமீறும் ஆசிரியர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை 

உயர்கல்வித்துறையில் கடந்த 20 வருடங்களாக ஆசிரியபணியிலிருப்பவள்  என்னும் வகையில் இப்படியான அத்துமீறல்களில் அச்சுறுத்தல்களில் பாதிக்கப்படும் மாணவிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல்கலைக்கழகங்களில் நிலைமை கொஞ்சம் பரவயில்லை பிரச்சனையை குறித்து சக மாணவர்களிடம் பேசவும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் மறுக்கவும் துணிகிறார்கள் இப்போது. ஆனாலும் எல்லையை தாண்டிய அச்சுறுத்தல்களும் அவமரியதைகளும் வருகையில் மனமுடைந்து வேறு முடிவை தேடிக்கொள்கிறார்கள்

பள்ளிக்குழந்தைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. இது போன்ற பிரச்சனைகள் எப்போதும் இருக்கிறது எனினும் அவற்றை குறித்து  பேசவும் வீட்டில் தெரிவிக்கவுமான சூழல் வீடுகளில் இல்லை என்பதுதான் இன்னும் பரிதாபத்துக்குரியது 

ஒரு ஆசிரியையாக, அன்னையாக இந்த பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வாக இப்போது சுடச்சுட பல கல்வி நிறுவனங்களில் செய்து வரும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவது, கவுன்சிலிங் அளிப்பது மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரைகள் ஏற்பாடு செய்வது போன்றவை எனக்கு பொருளற்றவையாக தெரிகிறது.  பதிலாக முதலில் வீட்டில் பெற்றோர்களிடம், வீட்டு பெரியவர்களிடம் பேசுவதுதான் அவசியம்.

பெண்  குழந்தைகளுக்கு பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் ,அலுவலகத்தில், பேருந்தில், ரயிலில், விமானத்தில், கழிப்பறையில் திரையரங்குகளில், ஷாப்பிங் மால்களில், எங்கு  வழக்கத்திற்கு மாறான, அவர்களுக்கு பிடிக்காத, அவர்களுக்கு தொந்தரவு தரும் விஷயங்கள் நடந்தாலும் முதலில் வீட்டில் பெற்றோர்களிடமும் சகோதர, சகோதரிகளிடமும் அதை வெளிப்படையாக சொல்லலாம் என்னும் நம்பிக்கையை, புரிதலை முதலில் குடும்பம் என்னும் அமைப்பு அளிக்க வேண்டும்

அங்குதான் பிரச்சனை தொடங்குகிறது. விதி விலக்குகள் இருக்கும் ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தேர்வு முடிவுகளில் வரும் எண்களுக்கு கொடுக்கும் மரியாதையை குழந்தைகளின் உடல், மன நலனுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கும் கொடுப்பதில்லை

குழந்தைகளின் உலகில் பெற்றோர்கள் இருப்பது அவசியம் தொடக்கக்கல்வியில் இருந்தே பல சிறப்பு வகுப்புகள், அபாகஸ், நீச்சல், ஓவியம் ஸ்லோகம் உள்ளிடட பயிற்சிகள், பின்னர் சலங்கை பூஜை போன்ற அறிவித்தல் விழாக்கள் என குழந்தைகள் நாள் முழுவதும் எதிலாவது ஈடுபட்டுக்கொண்டும், படித்துக்கொண்டும், பரீட்சை எழுதிக்கொண்டும் இருப்பதில் பல பெற்றோர்கள் வெகு கவனமாக இருக்கிறார்கள் 

 அந்த வயதுக்கென தேவைப்படும் விளையாட்டுக்கள், தோழமைகள், ஓய்வு, குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் இவை எதுவுமே கிடைக்கப்பெறாமல் ஒரு கேள்விக்கான பதிலை நூற்றுக்கணக்கான முறை பதில் எழுதி எழுதி  மனனம் செய்துகொண்டு எந்த புரிதலும் அரவணைப்பும் இல்லாத, மதிப்பெண்களையும் அதன்பேரில் செலவிட்டிருக்கும் பெருந்தொகையையும் சொல்லி சொல்லி காட்டி மேலும் அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்களையும் கொண்ட குழந்தைகள் எப்படி இதுபோன்ற தலையாய பிரச்சனைகளை  வீட்டில் சொல்ல துணிவார்கள்?

. குழந்தைகளின் உலகின் தானும் இருந்தபடி, அவர்களின் தேவைகளை, சிக்கல்களை புரிந்து கொண்டு, எதுவானாலும் நான் இருக்கிறேன் உன்னுடன் என்னும் நம்பிக்கயளிக்கத்தவறும் பெற்றொர்கள் தான் முதல் குற்றவாளிகள்

பாடப்புத்தகங்களை தவிர பிற வாசிப்புக்கு அனுமதிக்காத , பயணங்களில் ஈடுபடுத்தாத,  ஒருநாளின் ஒருவேளை உணவையாவது குழந்தைகளுடன் குடும்பமாக அமர்ந்து சாப்பிடாத, ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும்  பாரபட்சமாக பாவிக்கிற, சில மணி நேரங்களைக்கூட அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத, அதே பருவத்தை கடந்து வந்தவர்கள் நாம் என்பதை மறந்து விட்ட,வெறும்  மதிப்பெண்களால் மட்டும்  கிடைக்கவிருக்கும் ஒரு மாயப் பொன்னுலகை குறித்த  பகற்கனவை கொண்டிருக்கும், அக்கனவின் பேரில்  குழந்தைகளை சித்திரவதை செய்கிற பெற்றோர்களும் குற்றவாளிகள் தான்

 மகளை இழந்தவர்களின் கண்ணீர்க்கதைகளையும் பெண்களிடம் அத்து மீறுவோரை குறித்து ஆவேசமாக எதிர்வினையாற்று பவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும் நீதி கேட்போரையும் ஊடகங்களில்  பார்க்கிறேன்,

அவர்களில் எத்தனை பேருக்கு மகன் அல்லது மகளின் உடல் மொழியில், உணவுண்பதில், உறங்குவதில், பேசுவதில், இருக்கும் நுண்மையான மாறுபாடுகளை கவனிக்கத் தெரியும்? எத்தனை பேர் அவர்களின் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்க  தயாராக இருந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தன் அலுவலக வேலைகளை, அன்றைய நாளை,குடும்ப விஷயங்களை, தான் வாசித்தவற்றை, பார்த்தவற்றை, குழந்தைகளுடன் பகிர்ந்து, அதே பகிர்தலை அவர்களும் எதிர்பார்கிறார்கள் என்பதையெல்லாம் புரிய வைத்திருக்கிறார்கள்?

சில நாட்கள் முன்பு பெட்ரோல் நிலையமொன்றில் வரிசையில் பெட்ரோல் போட காத்திருக்கையில் முன்னால் இருந்த காரில் பள்ளி சீருடையுடன் ஒரு சிறுவன் வெளியே ஏதோ ஒன்றை கவனித்து முகம் கொள்ளா சிரிப்புடன் அருகிலமர்ந்திருக்கும் அம்மாவை பலமுறை தொட்டு தொட்டு அழைக்கிறான், மும்முரமாக செல்போன் திரையில் ஆழ்ந்திருந்த அவர்,அழைக்கும் மகனின் சிறு கையை தட்டிவிடுகிறார். அந்த சிறுவன் பள்ளியில் நடக்கும் ஒரு அவமதிப்பை, ஒரு சிக்கலை எப்படி அம்மாவிடம் சொல்லுவான்.

ஆன்லைன் வகுப்புக்களை சரிவர கவனிக்காமல் விளையாடியதற்கே நெஞ்சுக்கூடு உடையும் படி முதுகில் பலமாக தொடர்ச்சியாக அறையும் ,அச்சமூட்டும் ஆளுமையாக இருக்கும் பெற்றோர்களிடம் சிறு மகனோ மகளோ நாளை என்ன அந்தரங்க பிரச்சனையைத் தைரியமாக சொல்ல முன்வருவார்கள்?

வேரில் நோய் தாக்குதல் இருக்கையில் இலைகளுக்கும் கிளைகளுக்கும் மருந்தடிப்ப்துபோலத்தான் இப்போது கல்வி நிறுவனங்களை குறைசொல்லிக்கொண்டிருப்பதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதுமெல்லாம்.,

கல்விநிலையங்களில் மட்டுமல்ல, எங்கும் இருக்கும் இப்படியான சிக்கல்களும் ஆபத்துக்களும். வீடு என்னும் அமைப்பு அதற்கான முன்தயாரிப்பை நம்பிக்கையை, பாதுகாப்பை அளிக்கும் இடமாக இருக்கிறதா என்பதுதான் முதன்மையான பிரச்சனை இப்போது.  வயது வந்த பிள்ளைகள் முன்பாக  சண்டையிடும் பெற்றோரிடம் எந்த குழந்தையும் தன் சிக்கல்களை சொல்லாது.

வீட்டில் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் பொழுதுகளை கவனமாக உருவாக்கி மகிழ்ச்சியான சூழலை தக்க வைத்திருக்க வேண்டும். அடிக்கடி தொட்டும், கைகளை பிணைத்துக்கொண்டும், தட்டிக்கொடுத்தும்  பெற்றோர்கள் தங்கள் அண்மையை, நெருக்கத்தை அந்த தொடுகையில் தெரிவிக்கவேண்டும். குழந்தைகளை  பெற்றோர்கள் தொடுவதே இப்போது அபூர்வமாகி விட்டிருக்கிறது

 இவற்றில் எதுவுமே செய்யாத பெற்றோர்கள்   எவர்  மீதும் கல்லெறியும் அருகதை அற்றவர்கள்,  குற்றத்தின் கூட்டுப்பங்காளிகளும் கூட.

இறுதியாக மற்றுமொன்று. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதிலிருந்தே கல்லூரியிலும், ஊரிலும், பல நாடுகலிலிருக்கும்நண்பர்களிடமிருந்தும் மகன்கள் இருவரும் படித்த சின்மயாபள்ளிதானே இது ? என்ன இப்படியான பள்ளியிலா மகன்களை சேர்த்தீர்கள்? எங்களுக்கும் பரிந்துரைத்தீர்கள் ? என கேள்விமேல் கேள்விகள்.

இல்லை அது சின்மயா சர்வதேச உறைவிட ப்பள்ளி. இந்த அசம்பாவிதம் நடந்தது சின்மயாவித்யாலயா. இந்த பெயரில் இந்தியாவில் கோவையில் பல பள்ளிகள் இருக்கின்றன.ஆனால் மகன்கள் படித்த இன்னும் தொடர்பில் இருக்கிற இனியும் என்றென்றைக்கும் தொடர்பில் இருக்கபோகிற பள்ளியான CIRS -Chinmaya international residential school இந்தியாவிலேயே ஒன்றுதான் இருக்கிறது. அங்கு மகன்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன், எந்த மன அழுத்தமும், சிக்கலும், அச்சுறுத்தலும் இல்லாமல் படித்தார்கள் படிக்கிறார்கள் ,இனியும் படிப்பார்கள்

கொடிவழியும் குருதிக்கலப்பும்

”என்னடா எந்நேரமும் அந்த ——-ஷா   கூடவே பேசிட்டு இருக்கியே, இதாவது சீரியஸா போகுதா?’

(ஷாவில் முடியும் எந்த பெயரானாலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள். த்ரிஷா, ஹர்ஷா, வர்ஷா, மனிஷா, விதுஷா இப்படி!)

” சீரியஸ்னுதான் நினைக்கறேன் மீ, ஆனா கொஞ்சம் க்ளைமேக்ஸ் கஷ்டமாத்தான் இருக்கும் போல”

”கஷ்டமா? எதை சொல்லறே?”

”அவங்க வீட்டில் ஒத்துக்குவாங்களான்னு தெரியலை அனேகமா மாட்டாங்கன்னுதான் நினைக்கறேன்”

”ஏன் பெரிய லாடு வீட்டு லட்டா அவ? சொல்லப்போனா எனக்கு உண்மையில் அவளை அத்தனை பிடிக்கலை கேட்டுக்கோ, ஏன்னா நான் முன்னாடியே உங்க ரெண்டு பேருகிட்டயுமே சொல்லிருக்கேன் பொண்ணு பார்க்க முன்னப்பின்ன இருந்தாலும் தலைமுடி மயில் தோகை போல் இருக்கனும்னு. இவளுக்கு கொத்தமல்லி கட்டுமாதிரியில்ல இருக்கு? நானே ஒண்ணும் சொல்லாதப்போ இவங்களுக்கு என்னடா, பெரிய இதாட்டம் சும்மா இருக்கச் சொல்லிரு ஆமா!

”அய்யோ நீ வேற ஏம்மீ, அவ ஷார்ட்டா வெட்டிக்கிட்டா இல்லாட்டி நீ சொல்லுவியே அப்படி யக்‌ஷி மாதிரிதான் இருக்கும் அவ தலைமுடி”

”என்னமோ போ! நீயாச்சு அவளாச்சு.  எனக்கென்ன, ”அவங்க வீட்டில் எதுக்குடா வேண்டாம்பாங்க?  ஏன்? உன்னவிட நல்ல பையனா பார்த்துருவாங்களா? கிடச்சுருமா? இல்ல கேட்கறேன்! ”கிடைக்கவே கிடைக்காதுன்னு சொல்லி வை,  வேற கிரகத்தில் கூட உன்னைபோல ஒருத்தன் இருக்கமாட்டான்”

”மீ!! வேற கிரகத்தில என்னப்போல மட்டுமல்ல யாரப்போலவும் இருக்கவே மாட்டாங்க, மனுஷங்களே இல்ல அங்கே,  ரொம்ப பண்ணாதே நீயி”

”சரிடா விஷயத்துக்கு வா ,ஏன் ஒத்துக்க மாட்டாங்களாம், கொத்தமல்லி வீட்டில் சரி சரி முறைக்காதே, யக்‌ஷி வீட்டில்?

”அவங்கல்லாம் மலையாளிக மி!”

”அட என்னடா நாமளும் மலையாளிதானே? நாந்தான் நல்லா மலையாளம் பேசறேனே? இதை சொல்லிப்பார்க்கலாம் இல்லைனா நம்ம வீடு கூட பாலக்காட்டுக்கு பக்கத்தில்தான் இருக்குன்னு வேண்ணா சொல்லிப்பார்க்கலாமா?”

”அய்யோ மீ,   எதாவது உருப்படியா சொல்லேன் ப்ளீஸ்!’”

”மலையாளிகளில் நிறைய பிரிவு இருக்குமே அதில் இவ யாராம்?”

”போ, மீ அதெல்லாம் கேட்டுக்கிட்டா இருப்போம்?

”அட கேட்டு வைடா. நம்பூதிரியா இருக்க வாய்ப்பில்லை நம்பூதிரி பொண்ணுங்கெல்லாம் நல்ல வெள்ளையா, தலைமுடி கணுக்காலுக்கு இருக்கும், இவளுக்குத்தான்,,  ஓகே ஓகே விடு!

ஒருவேளை நாயர்னா பிரச்சனையே இல்லடா, நாமளும் நாயர்தானே, பேசி முடிச்சுக்கலாம்”

”என்னது  நாம நாயரா? கவுண்டர்னுதானே இத்தனை நாளா சொல்லிட்டு இருந்தே?”

”அதெல்லாம் ஜெ வை வாசிக்கறதுக்கு முன்னாடிடா, விவரமில்லாதவனா இருக்கியே, இப்போ ஜெ யாரு?”

”எழுத்தாளர்”

”டேய்!”

”சரி,  பெரிய எழுத்தாளர்”

”அட, அதில்லை அவரு நாயருடா!”

”அவரு நாயர்னா நாம எப்படி மீ நாயராவோம்?”

”என்னடா இப்படி இருக்கே? நாம எங்கே இருக்கோம்,  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்தானே?”

”நாம இல்லை நீ இருக்கே”

”நான் இருந்தா அது நாம எல்லாரும் இருக்கறதுன்னுதான் அர்த்தம். ஜெ சொல்லிருக்காரே //அன்னையரை, அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடனும்னுட்டு//

”ஆனாலும் நீ ஜெ எழுதறதெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு பண்ணற அட்டகாசமிருக்கே ! சரி சொல்லு”

”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் யாரோடது ஜெவோடது,ஜெ  யாரு ? நாயர், குல நாயர்.  விஷ்ணுபுரம் வட்டம்ங்கறது ஒரு அமைப்பில்லடா குடும்பம் நாம ஜெ எல்லாம் ஒரே குடும்பம்னா நாமளும் நாயர்தானே! இதைச் சொல்லி பொண்ணு கேட்றலாம் கவலைப்படாதே!”

”போ மீ நீ, நான் என்னவோ நீ நிஜமா சொல்லறீயோன்னு நினச்சேன்”

”அட நிஜம்தாண்டா!  உங்கண்ணன் ஒரு பிராமின் பொண்ணோட அடிக்கடி பேசிட்டு இருக்கானே அது  ஒருவேளை செட் ஆச்சுன்னா ஒரு பிரச்சனையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சுரும். நீதான் நாயர் கீயர்னு குழப்பியடிக்கறே!”

”ஏன், நாமளும்  பிராமின்ஸ்னு சொல்லப்போறீயா?

”சொல்லறதென்ன நாம பிராமின்ஸ் தாண்டா!’

”மீ ,ரொம்ப ஒவரா பண்ணறே!’

”அட! நிஜமாத்தண்டா ” ”நீயே சொல்லு, இப்போ நம்ம  கணேஷ் மாமா யாரு?”

”எந்த கணேஷ் மாமா? ஜெனிவா மாமாவா?” தெரிலை நீயே சொல்லிரு

”ஆமா அவரேதான் யாரு ?அசல் பிராமணர்!”

’”ஓகே அதுக்கு நாம எப்படிம்மா பிராமின்ஸ் ஆவோம்?”

”இருடா ,வரேன்,  கணேஷ் மாமா யாரு?

”என்ன மீ , இப்போதானே சொன்னே, அசல் பிராமின்ன்னுட்டு? திரும்பத்திரும்ப பேசறே நீ ஆமா”

இல்லடா அது ஜெனிவா கணேஷ் மாமா, இப்போ கேட்கறது சிங்கை கணேஷ் மாமா மாதங்கி அத்தை, சுபா அத்தை, அந்த சிங்கை மாமா!

ஓ பாட்டு மாமாவா ? அவரு யாரு?

என்னடா நீ அவரும் அசல் பிராமணர்”

”ஓகே மீ அவங்கஎல்லாம் மாமாதான்னாலும் நம்ம ரத்த  சொந்தமில்லையே எப்படி நாம் பிரமின்ஸ்னு சொல்லறே?”

”வரென் வரேன், இரு . உங்க விஜி மாமனிருக்கானே அவன் யாருங்கறே?

”மீ , வேண்டாம் சொல்லிட்டேன் விஜி மாமா உன் கூட பிறந்த தம்பி அவரையும்  பிராமின்னு சொல்லிறாதே!”

”அவன் என் தம்பியா இருந்ததெல்லாம் உங்க லக்‌ஷ்மி அத்தையை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முந்தின நாள் வரைக்கும்தாண்டா,

”எப்போ பிராமணப்பொண்ணான அவளைக் கல்யாணம் பண்ணி முழுநேரமும் அவளுக்கு புருஷனாவும் ஒழிஞ்ச நேரத்தில் கம்பெனியை பார்க்கறதுன்னு ஆயிட்டானோ.  அப்போ அவனும் பாதி ப்ராமின் தானே? வர ஆவணி அவிட்டதுக்கு உங்க மாமன் பூணூல் போட்டுக்கப்போறானே, தெரியுமா தெரியாதா உனக்கு?.

இன்னும் கேளு!”நம்ம மாதவன் மாமா யாருங்கறே?”

பெல்ஜியம் மாமாவா?

”அவரேதான் ப்ரியா அத்தையை கல்யாணம் பண்ணி இருக்கறதால அவரும் பாதி பிரமின் தாண்டா! உண்மையை சொல்லப்போனா நம்மளை சுத்தி எல்லா வேண்டியவங்களும் பிராமின்ஸ்தான் இனி உங்க ரெண்டு பேருக்கும் கவுண்டர் வீட்டில் பொண்ணு கேட்டா தரமாட்டாங்க பிராமின்ஸ்கெல்லாம் நாங்க தரமாட்டோம்னு சொல்லிருவாங்க பாரேன்.”

”நீவேணா, இந்த  – ஷா செட் ஆகலைனா பிராமின் யாராவதை பாரேன், தலை முடி கொஞ்சம் நீளமா இருக்கறாப்பல”

”மீ என்ன மீ ,என்னமோ இந்த கடை இல்லைனா, வேற கடைங்கறா மாதிரி ஈஸியா சொல்லிட்டு இருக்கே காதல் மீ, காதல்!

”சரி சரி விடு நாயருக்கே வரலாம், என்ன பண்ணறாங்க அந்த லாடு வீட்டில்?”

”அப்பா காலேஜ் ப்ரொஃபஸர், அம்மா எழுத்தாளர்

”பார்ரா! இனி என்ன எல்லாமே முடிஞ்சுருச்சுன்னு நினச்சுக்கோ, நானும் எழுத்தாளர், அதாவது கட்டுரையாளர்னா எழுத்தாளர்னும் சொல்லிக்கலாம்னு ஜெ  சொல்லிருக்காரு, நானும் ப்ரொஃபஸர், ஒரே குடும்பம் வாத்தியர் குடும்பம் அவ்வளவுதான். இனி என்ன சொல்லு”

”போமீ, உருப்படியா எதாச்சும் சொல்லு, ப்ளீஸ்’”

’”சரிடா, அவங்களை வெண்முரசு வாசிக்க சொன்னீன்னா, நாம எல்லாரும் ஜெ ஸ்கூலில் ஒண்ணா படிக்கறவங்க ஆயிடுவோம், அப்புறம் ஜாதியாவது இனமாவது குலமாவதுன்னு ஒண்ணு மண்ணா கலந்து சொந்தக்காரங்களாயிருவோமே! சொந்தத்தில் கட்டிக்க பிரச்சனையே இல்லையே!

”இல்லைன்னா அரங்கா மாமா, விஜயசூரியன் மாமாவவிட்டு நாம வெண்முரசு கொடி வழியில் வந்தவங்கன்னு அந்த நாயர்ட்ட  சொல்லச்சொல்லிட்டா அவங்களும் என்னமோ ஏதோ பெரிய கொடி வழிபோலன்னு நினச்சுக்கிட்டு பொண்ண தந்துருவாங்க,

அட எதுவுமே வேலைக்காகலைன்னு வச்சுக்கோ, இருக்கவே இருக்கு பிரம்மாஸ்திரம் அதை எடுத்துரலாம்”

”என்ன மீ அது?”

நான் நேரா ஜெ வீட்டுக்கே போய், சார், இப்படி இப்படி விஷயம் நீங்க பார்க்க வளர்ந்த பையன், அவனும் பிடிச்ச பொண்ணை கல்யாணம பண்ணி உங்களையும அருண்மொழியையும் போல கல்யாணதுக்கப்புறமும் தொடரும் பேரன்போட இருக்க வேண்டாமா? நம்மைச்சுற்றிலும் அறிவார்ந்த ஒரு உலகம் இயங்கிட்டு இருக்குன்னே தெரியாத ஆளுங்க இருக்காங்கன்னு சொல்லுவீங்களே, அப்படியாப்பட்ட வீட்டில் லவ் பண்ணிட்டான், அதனால நீங்க ஒருவார்த்தை பொண்ணு வீட்டில் பேசுங்கன்னு, வேண்டிக்கேட்டுகிட்டா நிச்சயமா சார் போனிலாவது பேசுவார்,

அவர் பொண்ணோட அம்மா அப்பாட்டெ ’’இங்க பாருங்க உண்மையில் குருதி கலப்பில்லா குலம்னு எதாச்சும், இருக்கா? இப்போ உலகளாவிய பெருந்தொற்றுக்கப்புறம் பிழச்சுகிடக்கற நாமெல்லாம் ஊழை உச்ச விசையுடன் எதிர்த்து நின்று, குலம் இனம் மொழியையெல்லாம் மறந்து  கல்யாணம் பண்ணி சந்ததியை பெருக்கினாதானே உலகம் உய்யும், பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடு போல வாழ்க்கைக்குள் விதி ஊடுருவியிருக்குங்கறத மறந்துட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்துட்டு இருக்கீங்களே’’ன்னெல்லாம் பேசினா,  கதறிட்டு உனக்கு மட்டுமல்ல ,இன்னொரு பொண்ணிருந்தா உங்க அண்ணனுக்கும் சேர்த்து கொடுத்துருவாங்களே!

”நான் பார்த்துக்கறேன் கவலையில்லாம இரு, ஆனா அந்த கொத்தமல்லியை மட்டும் கொஞ்சம் கீரைக்கட்டாட்டமாவது வளர்க்க சொல்லு போ போ!”

ஜெய்பீம்

ஜெய்பீம்

நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் சமீபத்தில் மிக அதிகம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வெற்றிப்படமுமான ஜெய்பீம் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நல்ல தமிழ்ப்படம்.

திரைப்படங்கள் கேளிக்கைக்கானவைகள் மட்டுமல்ல மக்களுக்கு பல முக்கிய விஷயங்களையும், சகமனிதர்களுக்கு நிகழும் அநீதிகளையும், சொல்லவும் இந்த சக்திவாய்ந்த ஊடகம் பயன்படுமென்பதை ஜெய்பீம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.

நீதிமன்ற வழக்கை அடிப்படையாக கொண்டு ஜோதிகாவை வைத்து  எடுத்த  ’பொன்மகள் வந்தாள்’ படத்திற்கான பிழையீடாக இந்த திரைப்படத்தை சூர்யா சொந்த தயாரிப்பில் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

நீண்ட வழக்கு விசாரணைகளை, சோர்வடைய வைக்காமல் பார்வையாளர்களையும் விசாரணையுடன் ஒன்றச்செய்யும் விதமாக அமைத்திருக்கிறார்கள். கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, பின்னணி இசை, ஒளி இயக்கம், படத்தொகுப்பு,  இயக்கம் ,சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே வெகு சிறப்பு

 நீதிமன்ற வழக்கை அடைப்படையாக கொண்டு வந்திருக்கும் முந்தைய திரைப்படங்களிலிருந்து ஜெய்பீம் வேறுபடுவது எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது  இதில் பழங்குடியினப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதும், அந்த இனத்துக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதிலும்தான்.

  1995’ல் ஹேபியஸ் கார்பஸ் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிபிக்கபட்ட வழக்கொன்றை நீதியரசர் சந்துரு என்பவர் கையிலெடுத்து, அவ்வழக்கில் நீதியை பெரும் போராட்டத்துக்கு பின்னர் வாங்கிக்கொடுத்தார் அந்த உண்மை வழக்கையே ஜெய்பீம் ஆக்கி இருக்கிறார் சந்துருவாக நடித்திருக்கும்  சூர்யா.

அப்பாவியான ராஜாக்கண்ணு என்னும் பழங்குடியின இளைஞனொருவனை திருட்டு வழக்கில்  முறையின்றி கைதுசெய்து, பின்னர்  லாக்கப்பிலிருந்து அவன் தப்பி விட்டதாக சொன்ன காவல்துறைக்கெதிரே வழக்கு தொடர்ந்து, தன் கணவனை கண்டுபிடிக்க போராடிய கர்ப்பிணியான செங்கேணியின் கதை இது

.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து கொண்டிருப்பவர்களிடம் நேரிடையாக அவரவர் ஜாதியை கேட்டு அதன்படி அவர்களை  வரிசையில் நிற்க வைக்கும் காட்சியும், விடுதலையாகி வரப்போகும் கைதிகளுக்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவர்களின் எளிய பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், அவர்கள் கண்முன்னே கைதிகளுக்கு நடக்கும் கொடுமையுமாக தொடக்க காட்சியிலேயே  நம் மனதை கலங்கடிக்கிறார்கள்

எண்ணெய் காணாத தலைமுடியும், ஒட்டி உலர்ந்த தேகமுமாக இருக்கும் அவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஷ்பிரயோகமும் வன்முறையையும்  பார்வையாளர்களால் மறக்க முடியாத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது

திரைப்படம் காட்டுவது உண்மையில் நடந்தவற்றில் மிக்குறைவு என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது.

சூர்யாவுடன் திரைக்கதையும் இணைநாயகனன்று சொல்லுமளவுக்கு கச்சிதமாக, சிறப்பாக  இருக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.கலை இயக்குனருக்கு தனித்த பாராட்டுக்கள்.

மணிகண்டனின் திரைவாழ்வில் என்றென்றைக்குமாக அவர் பேர் சொல்லப்போகும் முக்கியமான திரைப்படம் இது. மகேஷிண்டெ பிரதிகாரத்தில் குட்டிப்பெண்ணாக வந்த லிஜோமோளா செங்கேணியாக  இத்தனை சிறப்பாக நடித்திருப்பது என்றூ வியக்காமல் இருக்கமுடியவில்லை.

பிரகாஷ்ராஜ் மகுடத்தில் ஜெய்பீம் மேலுமொரு அருமணி. நிதானமான, கம்பீரமான  மனசாட்சியுடனிருக்கும் காவலதிகரியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்

 காவல்துறையின் அதிகார எல்லைகள், விசாரணைக்கொலைகள்,  சாதீய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை குறித்து தமிழில் இத்தனை விரிவாக, இத்தனை சிறப்பாக முன்பு திரைப்படங்கள் வந்ததில்லை.

பாடல்கள் அனைத்துமே திணிக்கப்பட்டவைகளாக இல்லாமல் கதையுடன் காட்சியுடன் இணைந்து படத்துக்கு இன்னும் வலுசேர்க்கின்றன.
 

ஆவணப்படமாக மாறக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக இருந்தும் கதை சொல்லும் சாமார்த்தியத்தால் சுவாரஸ்யம் குறையாமல் இதை அழகிய திரைப்படமாக்கியதற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். தொடக்க காட்சிகளுக்கு பிறகு திரைப்படம் பார்க்கும் உணர்வு காணமல் போய், கதாபாத்திரங்களின் உணர்வுகளும், இழப்பும் வலியும் துயரும் அச்சமும் எல்லாமுமே நமக்கே உண்டானதைப் போல படத்துடன்  ஒன்றிப் போகிறோம்.  பிரச்சாரநெடியும் இல்லாமல் கவனமாக படமாக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.

நகைச்சுவையும், பாட்டும்.நடனமும், மசாலாவுமான படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாயிருக்கும் சூர்யா இந்த சந்துரு பாத்திரதை ஏற்று சிறப்பாக நடித்திருப்பதும், இந்த படத்தை சொந்த தயாரிப்பில் உருவாக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது..

 முதல் ஒருமணிநேர திரைக்கதை நம் மனதில் உண்டாக்கும் வலியும் தொந்தரவும் இனி எப்போதும் நீடித்திருக்கும், அத்தனைக்கு  அசலான காட்சிகள் அசலான நடிப்பு. அலறல் நிஜம் அடி நிஜம் துயரம் நிஜம் என்று மனதை கசக்கும் காட்சிகள். அதுவும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு லாக்கப்பில் நடப்பதை பார்க்க மனோதைரியம் வேண்டும்.

 இரண்டாம் பாதியில் படம் இன்னும் வலுவாக, இன்னும் ஆழமாக செல்கின்றது. வாத பிரதிவாதங்களின் போது சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். 2.45 நிமிடம் நீளமென்றாலும் தொய்வின்றி இருக்கை நுனியில் நம்மை கொண்டு வரும் பல காட்சிகளுடன் இருக்கிறது ஜெய் பீம். பழங்குடியினருக்கு கல்வியளிக்கும் ஆசிரியை பாத்திரமும் சிறப்பு

 ஷான் ரோல்டனின் இசை திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வையும் வலியையும் பார்வையாளர்களுக்கும் கடத்துவதில்  இசையும் முக்கியப்பங்காற்றுகிறது.

எந்த எந்த காரணங்களுக்காக தங்களை காவல்துறை கைது செய்தார்கள் என்பதை சிறுவர்களும், பெண்களும் வயதானவர்களுமாக பழங்குடியினர் விவரிக்கையில் நம்மால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியாது.

  இணையத்தில் ராஜாக்கண்ணுவின் வழக்கும், சந்துரு அவர்களின் விசாரணையும், தீர்ப்பும் பிற விவரங்களும் கிடைக்கிறது படத்தை பார்க்கும் முன்பு அவற்றை குறித்தும் அறிந்துகொள்வது படத்தை மனதுக்கு இன்னும் அணுக்கமாக்கும் சகமனிதர்களின் துயரை மிகச்சரியாக அறிந்துகொள்ளவும்  முடியும்.

செங்கேணியின் மகள் அல்லியாக வரும் சிறுமியின் இயல்பான நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. அத்தனை துயரங்களுக்கு இடையிலும் அல்லி எழுதப்படிக்க கற்றுக்கொள்ளுவதும் இறுதியில் சூர்யாவுக்கு இணையாக அவளும் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாளிதழை வாசிப்பதும் காலம் மாறும் என்னும் நம்பிக்கையை விதைக்கும் காட்சிகள்.

அமேஸான் பிரைமில் இருக்கும் ஜெய்பீம் அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். லாக்கப் வன்முறைக்காட்சிகள் பெரியவர்களுக்கே மன நடுக்கத்தை தருமென்பதால் குழந்தைகளுடன் பார்க்க உகந்ததல்ல.

தந்திச்செடி

தொட்டாச்சிணுங்கியை அறிந்திருக்கும் பலருக்கு தொழுகண்ணியை குறித்து தெரிந்திருக்காது.  Codariocalyx motorius எனப்படும் இந்த  தொழுகண்ணி  சூரியனை நோக்கி அசையும் இலைகளை கொண்டிருப்பதாலும் சூரிய ஒளியில் இலைகள் வேகமாக அசைந்துகொண்டே இருப்பதாலும் உலகின் அனைத்து மொழிகளிலும் இது நடனமிடும் செடி அல்லது தந்திச்செடி என்று அழைக்கப்படுகின்றது.( இணையறிவியல்பெயர்: Desmodium motorium)

   பட்டாணி குடும்பத்தை சேர்ந்த 25-35 இன்ச்உயரம் வரை வளரும் குறுஞ்செடிவகையை சேர்ந்த தொழுகண்ணி உலகெங்கிலும் வனப்பகுதிகளில் காண்படுகிறது. இவற்றின் அடர்பச்சை நீள்முட்டை வடிவ இலைகள் பெரியதும் சிறியதுமாக இரண்டு வகையிலும் காணப்படும். ஒவ்வொரு பெரிய இலையின் அடியிலும் இரண்டு சிறு இலைகள்அமைந்திருக்கும்

 காயகல்ப மூலிகயான இதன் சணப்பையை போலிருக்கும் இலைகள் அசைந்து அருகிலிருக்கும் இலையுடன் இணைந்து  தொழும் கைகளை போல கூப்பியும் விலகியும் அசைவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.

2 வருடங்கள் வரை வாழும் இச்செடியில்,வண்ணத்துப்பூச்சிகளை கவரும் சிறிய இளம்ஊதா நிற மலர்கள் குளிர்கால துவக்கத்தில் தோன்றும். அவரையை போன்ற இளம் பச்சை நிறக்காய்களில் சிறிய கருப்பு  நிற விதைகள் இருக்கும். விதைகளிலிருந்தும், நறுக்கிய  தண்டுகளிலிருந்தும் இச்செடியை வளர்க்கலாம். இவற்றின்விதைகள் கடிமான விதையுறையை கொண்டிருப்பதால் 10 லிருந்து 12 மணி நேரம் இவற்றை நீரில் ஊற வைத்தபின்னரே அவை முளைக்கும் திறனை அடையும்

 சூரியன் உச்சியில் இருக்கும் போது இலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் பிரிந்தும்  வேகமக அசைந்துகொண்டெ இருக்கும் சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனால் இது நிகழலாம் என்கிறது தாவர அறிவியல். ஆசியாவை தாயகமாக கொண்ட இந்த தாவரம், சதுரகிரி மலையில் அதிகம் காணப்படுகின்றது. இந்த மூலிகை உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 சூரிய ஒளி படுகையில் சிற்றிலைகள் முதலில் வேகமாகவும், அவற்றை தொடர்ந்து பெரிய இலைகள் மெதுவாகவும் அசைந்து கொண்டே இருப்பது மனிதர்களுக்கு கேட்காத சங்கீத்தின் தாளத்துக்கேற்றாற்போல் அவை நடனமிடுவது போலிருக்கும். எப்போது அசையவேண்டும் என பெரிய இலைகளுக்கு, சிற்றிலைகள் தகவல் சொல்லுகிறது என்னும் பொருளில்  இவற்றிற்கு  தந்திச்செடி என்றும் பெயருண்டு

 அதிசயதக்க விதமாக அதிக அளவிலான ஒலியிலும் இவற்றின் இலைகள் அசைகின்றன. ஒலி மற்றும் ஒளிக்கேற்ப இலைகள் அசையும் காரணத்தை இன்னும் துல்லியமாக அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை

Dr.  ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த தாவரத்தில்தான் பல ஆய்வுகளை செய்தார். அசையும் தாவரங்களின் ஆற்றல் என்னும் தனது நூலில் சார்லஸ் டார்வினும் இந்த செடிகளை குறித்து விவரித்திருக்கிறார் (The Power of Movement in Plants1880.)

இதன் வேர்கள் பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில் முடக்குவாதம், வெட்டுக்காயங்கள் மலேரியா, மற்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் பல வேதிச்சேர்மானங்கள் நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே இதனை மருந்தாக உட்கொள்ள வேண்டும். இவை அலங்காரச்செடிகளாக உலகெங்கிலும்  தொட்டிகளிலும் வளர்க்கப்படுகிறது.

இலைகளின் நடனத்தை காண: https://youtu.be/m3-LJmFZ5X4

கனவும் நினைவும்

சிறு வயதிலிருந்தே அல்லது நினைவு தெரியத்துவங்கி, கள்ளமற்ற சிறுமித்தனம் அகன்று குடும்ப நிகழ்வுகள், அப்பா என்பவரின் வன்முறைகளை எல்லாம் கவனித்து, அது உண்டாக்கிய  அச்ச உணர்வில் மனம் நிரம்பியிருந்த காலத்திலிருந்தே கனவுகள்  வருவதும் அவை அப்படியே நினைவில் இருப்பதும், மனதில் மறைந்திருக்கும் ஏராளமானவை கனவுகளாக வருகையில்,  ஒரு சில சமயங்களில் ஆழ்ந்த உறக்கத்தில்  ஆழ்மனம் விழித்துக்கொண்டு பூதாகரமாக எதிரில் அப்போது நிற்பவற்றை கண்டு அலறி விழிப்பதும், இன்று வரையிலும் வாடிக்கையாகி விட்டிருக்கிறது

 இதன் பொருட்டே வெளியாட்கள் யாருடனும் இரவு தங்குவதில்லை.  இளமையில் இருந்து  என்னை அச்சுறுத்தும் ஒரு தொடர் கனவென்றால் பொள்ளாச்சி கடைவீதிகளில் நான் அதிகம் புழங்கி இருக்கும் குறிப்பிட்ட சில தெருக்களில் மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு இருக்கும் ஒரு மாபெரும் கையொன்று குருதி வழிய என்னை துரத்திக் கொண்டு வருவதுதான். எத்தனையோ இரவுகளின் உறக்கத்தை,  தலை தெறிக்க கண்ணீருடன்  அந்த கைக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும்  அதே கனவு  சிதைத்திருக்கிறது.

துரத்திக்கொண்டிருந்த அந்த கையை பல வருடங்களுக்கு பின்னர் சரண் தருணின் பிஞ்சுக் கரங்கள்  விரட்டி விட்டிருக்கின்றன,

 எல்லாக் கனவுகளும் விழித்தெழுந்த பின்னரும் மறக்காமலிருப்பதால் கனவிலிருந்து முழுமையாக விலகாமலே, பல வருட பயிற்சியால் உள்ளம் விழித்து உடலை அன்றைய தினத்துக்கு தயார் செய்து விடுகையில்,, கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்ட ஒரு வெளியில் சில கணங்கள் தடுமாறுவேன்.

கனவுகளில் நிறங்கள் தெரியாது அனைத்து கனவுகளும் கருப்பு வெள்ளைதான் என   வாசித்திருக்கிறேன் ஆனால் என் கனவுகள் எல்லாம் வண்ணமயமான வைகளே. செக்கச்சிவந்த குருதியும் பல வண்ண மலர்களும், பல நிறங்களில் உடையணிந்திருப்பவர்களும் நிறைந்திருக்கும் பிறிதொரு இணை உலகில் தான் நான் கனவுகளில் திகழ்கிறேன் எல்லா கனவுகளும் எனக்கு தரும் ஆச்சரியத்தை விட,கனவுகள் நிகழும் அந்த  முற்றிலும் புதிய, நான் இதுவரை அறிந்திருக்காத இடங்கள், வீடுகள், அறைகள், மரச்சாமன்கள் கழிப்பறைகள் ஆகியவையே எனக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிப்பவை.கழிப்பறைகள், மிக அசுத்தமான கழிப்பறைகள் அடிக்கடி கனவுகளில் வருகிறது

ஒரு மங்கிய ஒளி நிறைந்திருக்கும் மாலைப்பொழுதில் அத்தனை துலங்கித்தெரியாத காட்சியில் கோவில் இருக்கும் ஒரு சந்தடி மிக்க கடைத் தெருவில் சைக்கிளில் கனகாம்பர சரம் விற்றுச்செல்லும் ஒருவர் அங்கே ஸ்தூல வடிவில் நிற்கும் என்னிடம் ஒரு கனகாம்பர மலர்ச்சரத்தை  கொடுப்பதை நானே மிக உயரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கனவு பல முறை வந்திருக்கிறது. அதைப்போல் ஒரு கோவில் தெருவை எங்கும் எப்போதும் நான் கண்டதே இல்லை.

 கனவுகளில் இறந்து போகும் உறவினர்கள் சிலர் கனவுக்கு அடுத்த நாட்களில் இறந்து போயிருக்கிறார்கள். இறந்த பலர் பின்னர் கனவுகளில் தொடர்ச்சியாக வந்து கொண்டும் இருக்கிறார்கள். 

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவர்கள் என் கனவுகளின் இத்தனை வகைகளை கேட்டால்  திகைத்துப்போய் விடுவார்கள் குடும்ப உறுப்பினர்களில் மகன்களும் அடிக்கடி  வருவதுண்டு

எனக்கு பெரும் அச்சத்தை  கொடுக்கும்  ஆழமான நீர் நிலைகள், கொந்தளிக்கும் கடல், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆறுகளும் அவற்றின் நடுவே திசையறியாது செய்வதறியாது நின்றிருக்கும் நானும் பல கனவுகளில் வருவதுண்டு.

மிக உயரமான மலைச்சரிவுகளில் விளிம்புகளை பற்றிக் கொண்டபடி நடக்கும் சாகச ஆபத்து பயணங்களும்    கனவுகளில்உண்டு

பல தெய்வ சன்னதிகள் வருவதுண்டு. சில அம்மன் கோவில்கள் அடிக்கடி வரும் எனக்கு தெரிந்த கோவில்கள் என்றால் அங்கு   கனவிற்கு பிறகு நேரில் செல்வதுமுண்டு 

பல கோவில்கள் நான் அறிந்திருக்காதவை. சமீபத்தில்  வந்த கனவொன்றில் நானும் தருணும் பேருந்தில் பயணிக்கிறோம், வேட்டக்காரன்புதூரில் என் தாத்தாவின் வீட்டை பேருந்து கடைக்கையில் ‘’ தருண், தருண் இதுதான் எங்க வீடு’’ என்று உற்சாகமாக கூச்சலிடுகிறேன். தருண் மண்  நிறத்தில் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு என் அருகில் அமர்ந்திருக்கிறான் அடுத்த காட்சி (ஆம் காட்சிதான்) நாங்கள் இருவரும் ஒரு பழங்காலத்து சிதிலமடைந்த தாழ்வான ஒட்டு வீட்டின் முன்பாக நிற்கிறோம்.

 அந்த வீட்டுக்கு முன்பெப்போதோ நான் வந்திருப்பதாகவும் அந்த இடம் என்னில் ஏதோ அதிர்வுகளை உண்டாக்குவதாகவும் தருணிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கையில் கதவு திறக்கிறது. அது ஒரு வீடல்ல ஒரு கோவில் , உள்ளே வெகு தூரத்தில் கரிய சிலையாக அம்மனும் அவளுக்கு பூசை செய்யும் ஒரு பெண்ணும் மங்கலாக தெரிகிறார்கள்

  காற்று அதிகம் இல்லாத இருட்டான அக்கருவறை எதிரே விபூதி சிதறிக்கிடக்கும் தரையும் கம்பிகளும் இருக்கும் இடத்தில் நான் நிற்கிறேன் தருணை திரும்பி பார்க்கையில் அவன் மேல்சட்டை இல்லாமல் இருக்கிறான்.

.எனக்கு முன்பாக இருபெண்கள் அங்கு வழிபட வந்திருக்கிறார்கள் கற்பூர ஆரத்தி தட்டை கொண்டு வுந்தால் அதில் வைக்க பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று பதறி ’’தருண் உன்கிட்டே பணம் இருக்கா’’ என்று கேட்கிறேன் அவனும் பர்ஸ் கொண்டு வரவில்லை என்கிறான்

இரு பெண்களில் பின் கொசுவம் வைத்த புடவை அணிந்த ஒருத்தி மட்டும் குனிந்து நெற்றியில் விபூதியிட்டு கொண்டே என்னை கடந்து வெளியேறுகிறாள்  

நான் அங்கிருந்த விபூதி கொட்டப்பட்டு கிடந்த உண்டியலின் மீது வைத்திருந்த உலர்ந்த மருகு கட்டொன்றிலிருந்து கொஞ்சம் பிய்த்து எடுத்து என் தலை பின்னலில்,வைத்துக்கொள்கிறேன்

இந்த கனவில் வெகு தெளிவாக தெரிந்தது கோவில் நுழைவாயிலில் கதவின் நிலவுக்கு வெகு அருகே மேல்பகுதி சுவற்றில் செண்பக படித்துறை அம்மன் கோவில் என்று எழுதியிருந்த வாசகங்கள் தான்.

கங்காபுரம் வாசித்த அன்று ஒரு பெரும் வணிகவளாகம் போல, அல்லது அரண்மனை போலிருக்கும் ஓரிடத்தின் அகன்ற பெரும் படிக்கட்டுகளில் அமர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருகையில் அவ்வழியே வரும் ஒரு காரில் இருந்து செல்வச் செழிப்புள்ள பெரியகுடும்பத்தை சேர்ந்தவள் என்று  தோற்றத்திலேயே தெரியும்  இளம்பெண்ணொருத்தி வுந்து காரிலிருந்து இறங்கி ’’ஓசை எழுப்ப வேண்டாம் சித்தி வந்திருக்கிறார்கள்’’ என்றாள்.

 நான்அந்த கட்டிடத்துக்கு  உள்ளே செல்கையில் தூரத்தில் ஒரு திண்ணையில் கேரள முண்டைபோல் ஒரு தந்த நிற புடவையில் ஒரு மூதாட்டி அல்லது பேரரசி அமர்ந்திருக்கிறார்கள் ஒரு காலை மடித்தும் மற்றோரு காலை தொங்கவிட்டும். அவரது வெள்ளிநிற கூந்தல் அலையலையாக படிந்திருக்கிறது. சிவப்பில் குங்குமப்பொட்டு பெரிய வட்டமாக நெற்றியில்.

 என்னை நிமிர்ந்து பார்த்து ’வா’ என்று சைகை செய்கிறார்கள் கைகளால். அருகில் சென்று காலடியில் அமர்கிறேன் அவரது சுருக்கங்கள் நிறைந்த தூய பாதங்களையும் ஒரு விரலில் கம்பி போல அணிந்திருக்கும் மெட்டியையும் பார்க்கிறேன் அவரது மடியில் தலைவைத்து பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தேன் நெடுநேரம்.

கனவுகளை  நடுராத்திரியில்  எழுதி குறித்துக் கொள்வதும் உண்டு இறந்துபோன ராஜமத்தை  மாமா பலமுறை வந்திருக்கிறார் சமைத்து போடச்சொல்லி, சமையலைறையில் தரையில் அமர்ந்து சாப்பிட்டார் அதுவும்  பொள்ளாச்சி பழைய வீட்டில்

அந்த வீடு. துரத்தும் அந்த  கைகளைப்போன்றே எத்தனை விலக்க முயன்றும் மனதில், நினைவில். கனவில் அப்பிக்கொண்டு போக மறுக்கிறது அங்கு நானிருந்த  காலங்களின் நினைவை எப்படியாவது நீக்க, அகற்ற, அழிக்க முயன்று கொண்டே இருக்கிறேன்

 துயர் நிறைந்த ,வலி நிறைந்த அப்பா என்பவரின் ஆணவமும் வன்முறையும் கேள்வி கேட்க ஆளில்லாததால் தலைவிரித்தாடிய காலங்களில் எந்த துணையுமில்லா சிறுமிகளான எங்களிருவருக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகள் அவை உண்டாக்கிய  மனச்சிதைவுகளை எல்லாம் எப்படியாவது மறக்க வேண்டும் நிராதரவான இருசிறுமிகளின் துயர்களும் வலிகளும் அவமானங்களும் பசியும் நிறைந்திருக்கும் வீடு அது

 அந்த வீட்டை நான் என் நினைவிலிருந்து அழிக்க முயன்றுகொண்டே இருக்கிறேன் ஆனால் கனவில் அடிக்கடி வருகிறது அவ்வீடு இப்போதும்  அந்த  வீட்டின் வாடகையை ஓட்டுநர் செந்தில் அப்பா என்பவருக்காக  வாங்கப்  போகையில் நான் வீட்டிலிருந்து வெகு தூரம் தள்ளி காரை நிறுத்தச்சொல்லி வீட்டு எதிர்ப்புறமாக அமர்ந்து கொள்ளுவேன் எனினும் என் அகம் அந்த வீட்டை அந்த வீட்டில் எனக்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் திரும்பி வெகு நெருக்கமாக பார்த்துக்கொண்டிருக்கும் அன்றைக்கெல்லாம் இரவில் அலறிக்கொண்டே தான் எழுவேன்.

சிலநாட்களுக்கு முன்னரும் கனவில் அதே வீட்டில் நானும் மகன்களும் இருக்கிறோம் சமீபத்தில் இறந்துபோன சரண் அப்பாவின் பெரியம்மா அதே கம்பீர  உடல்வாகுடன் அதே ஈரோட்டுப்பக்கம் கைம்பெண்கள் உடுத்தும் காவி புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக  கைகளில் சிறு துணி மூட்டையுடன் கணீர் குரலில் ’தேவி’ என்றழைத்து கொண்டு வருகிறார்

 நான் கல்லூரிக்கு புறபட்டுக்கொண்டிருக்கிறென் அவசரமாக. துறைத்தலைவரிடம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அலைபேசியில்  சொல்கிறேன்.  அந்த பெரியம்மா அந்த வீட்டில் இருக்கும் சிறு பால்கனி போன்ற வெளித் திண்ணையில் படுத்துக்கொள்வதாக சொல்லி ஒரு தலையணை கேட்கிறார் கொடுக்கிறேன் அப்போது நல்ல இளங்காற்று மழை மணத்துடன் வீசுகிறது. மறு நாள் லஷ்மமி சொல்லுகிறாள் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செய்யும் முக்கிய நாளான மாகாளய அமாவாசை அந்த முந்தின நாளென்று

. ஜெ சில முறை கனவில் வந்திருக்கிறார் ஒரு கனவில் அவருக்கு தாளமுடியாத முதுகு வலி. அருணாவும் சிலமுறை உடன் இருந்திருக்கிறார்

கல்லூரி முகப்பில் இருக்கும் ஒரு மகிழ மரத்தடியில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் எனக்கு வேண்டிய, முகம் தெளிவில்லாத ஒருவர் எனக்காக காத்துக்கொண்டிருக்கும் கனவு அடிக்கடி வரும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கும் அவர் எனக்கு முன்பே வந்து என்னை கண்டதும் எழுந்து புன்னகைத்தபடி என்னை நோக்கி வருவார்.

அதே நபர் இந்த வேடசெந்தூர் வீட்டில் சிறப்பாக வீட்டிலிருப்போரால்  உபசரிக்கப்பட்டு,  இல்லாத ஒரு கதவு  வழியே வெளியே வந்த கனவும் வந்தது

அவர் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் வருவது வழக்கம்

நேற்றைய அல்லது இன்றைய அதிகாலை கனவு விரிவாக இருந்தது அதிகாலை வரை துண்டு துண்டாக மூன்று முறை கனவு நீண்டது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவில் அமர்கிறேன் அடுத்த பகுதியில் எனக்கு முன்னால் என் பழைய மாணவியும் அவளது காதல் திருமணத்தில் நான் இடைபட வேண்டியிருந்த போது என்னுடன்  மிக நெருக்கமாக இருந்து பின்னர் ஒரு புள்ளியில் முற்றிலுமாக விலகிய சங்கீதா,  அவளது சிறு மகன், கணவர் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்னருகில் மூன்றாவதாக அமரும் பெண் ஒரு வெள்ளை மூட்டையை காலடியில் வைக்கிறாள் அதற்கருகில் என் வீட்டில் இருக்கும் பச்சை நிற வயர் கூடையில் என் பிரிய குட்டி லேப்டாப் வைக்கப்பட்டிருக்கிறது

அந்தப் பெண் விசித்திரமாக என்னிடம் ’’ஏன் உன் காதலனை உன்னால் கல்யாணம் செய்துகொள்ள முடியவில்லை’’ என்று விசாரணை போல் கேட்கிறாள்

வீடு திரும்பி, அது ஒரு புதிய வேறு வீடு, சாம்பவியிடம் இதை சொல்லி கொண்டிருக்கையில் லேப்டாப் பையை கொண்டு வந்தேனா இல்லையா என்று சந்தேகிக்கிறேன் சாம்பவி பதட்டமாக உள்ளே போய்,  அது பத்திரமாக இருப்பதை பார்த்து சொல்லுகிறாள்

பின்னர் மித்ரா வீட்டில் இருக்கிறேன்மிகப்புதிதான ஒரு இடமது மாடிஅறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு சு.ராவை  அல்லது மித்ரா மாமனாரை நினைவூட்டும் ஒரு வேட்டி சட்டையிலிருக்கும் முதியவரும் அவருக்கு எதிரில்  தரையில் சுவற்றில் முதுகை சாய்த்து அமர்ந்திருக்கும் நாகராஜுமாக இருக்கிறார்கள். நான் யாருடனும் பேசாமல் அங்கு தரையில் அமர்கிறேன் அந்த முதியவர் நாகராஜிடம் தனக்கு பிரியமான அந்த திண் பண்டம் எங்கே என்று கேட்கிறார் அந்த ’ப ’வில் தொடங்கும் பண்டத்தின் பெயர் எனக்கு மிக புதிதாக இருக்கிறது கனவிலும் அப்பெயர் மனதில் படியவில்லை அந்த பண்டம் வைக்கப்படும் சிறு பெட்டி என் முன்னால் இருக்கிறது அதை திறந்து பார்க்கிறேன் முந்திரி பருப்பின்  வடிவில் அதே அளவில் ஆனால்  அல்வாவின் அடர்சிவப்பில் மென்மையான, இனிப்பான  மூன்று துண்டங்கள்  இருக்கிறது அருகில் இருந்த சிறுமி தான் அதை வாங்கி வருவதாக சொல்லி ஓட்டமாக ஓடுகிறாள் .

நான் புறப்பட்டு ராஜமத்தையிடம் சொல்லிக்கொள்ள சமையலறைக்கு போகிறேன் அந்கு மித்ரா தலையில் ஷாம்பூ நுரையுடன் சமையலறையில் கண்ணீருடன் ஏதோ கடிதமொன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். அது மித்ரா என்பதை கேசம் ,குறைவாக  இருக்கும் அவளது தலையின் பின்புறத்தை கொண்டே  அடையாளம் காண்கிறேன்

அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் அனைவரும் எனக்கு முகம் காட்டாமல் முதுகை காண்பித்தபடி

வெளியில் இருட்டான ஒரு முற்றம் அங்கு நிற்கும் ராஜமத்தையிடம் விடை பெற்றுக் கொள்கிறேன் அந்த சிறுமியும் அருகில் இருக்கிறாள் அத்தை மித்ராவை  குறித்து என்னவோ இகழ்ச்சியாக சொல்லுகிறது 

என்னால் அங்கிருந்தே பிரதான சாலையை காண முடிகிறது நல்ல இருட்டு பேருந்துகளின் முகப்பு வெளிச்சமும், ஒலியும் சீறி சீறி சென்று கொண்டிருக்கிறது விரைந்து சாலையின் இருபுறமும் பார்த்தபடி கடக்கிறேன் சாலையின் ஒரு ஓரத்தில் பல ஆட்டோக்களும் அவற்றின் எதிரே ஆட்டோ டிரைவர்களும் நிற்பது மங்கலாக தெரிகிறது.

 நான் கடக்கையில் சாலையில் ஒரு வாகனம் கூட இல்லை எதிர்ப்புறம் சென்று நின்று கைப்பையிலிருந்து சில்லறை காசுகளை எடுக்க எத்தனிக்கையில் ஒரு ஒல்லியான   30 வயதிலிருக்கும் ஒரு பச்சை நிறபுடவைக்காரி என்னை அவசரப்படுத்தி ’’ஏறு  ஏறு’’ என்று அப்போது வந்து நிற்கும் ஒரு பேருந்தில் ஏற சொல்லிவிட்டு அவள் எனக்கு முன்பாக ஏறியும் விடுகிறாள் நான் பேருந்தின் முதற்படியில் காலை வைக்கையில் உள்ளிருந்து கண்டக்டர் ’’காந்திபுரம் காந்திபுரம்’’ என்று கூவும் சத்தம் கேட்கிறது உடனே நான் காலை பின்னால் எடுத்து விடுகிறேன் ’’நான் உக்கடமல்லவா போகனும் பொள்ளாச்சி போக’’  என்று மனதில் கனவில் நினைத்துக்கொள்கிறேன்

.

இறங்கி கைப்பையில் இருந்து  5 ரூபாய் நாணயமொன்றை கையில் எடுக்கையில் முன்பு வந்தவளை காட்டிலும் இளையவளாக  வட்டமுகம் கொண்ட இன்னுமொரு பச்சைப் புடவைக்காரி ’’இந்த பஸ்ஸில்ஏறு’’  ஏன்று கட்டளைபோல சொல்லிவிட்டு அப்போது வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறி விடுகிறாள் பஸ் உக்கடம் செல்லும் என்று எனக்கு எப்படியோ தோன்றி நானும் ஏறிக்கொள்கிறேன் 

அந்த பேருந்து மிக விசாலமாக உள்ளே ஒரு தடுப்புசுவருடன் இரு பகுதிகளாக பிரிந்திருக்கிறது எனக்கு முன்னே ரோஸ் கலரில் பத்திக் டிஸைன் போட்ட புடவையில் ஏறிய ஒரு பெண்ணிடம் கண்டக்டர் அந்த இன்னொரு பகுதியிலிருந்து, கிண்டலாக ’’பஸ் 2 மணிக்குதான் புறப்படும் இறங்குமா’’ என்கிறார்  அவர்கள் முன்பே பரிச்சயக்காரர்கள் போல,  அவள் சிரித்துக்கொண்டு ’’நானென்ன  சொல்லிட்டேன் இப்போ’’ என்கிறாள்

 நானும் உள்ளே வந்துஅங்கே உட்கார இருக்கைகளே இல்லாமல் நிற்க மட்டும் இடம் இருப்பதை  பார்க்கிறேன் மேலிருந்த கம்பியிலிருந்து கை பிடித்துக்கொள்ளும் கயிறுகள் ஏராளமாக தொங்குகின்றன. நிறைய  இளம்பெண்கள் நிற்கிறார்கள்.

அத்தனை பேரும் சிவப்பில் உடை அணிந்திருக்கிறார்கள். சீருடை போலல்ல, விதம் விதமான சிவப்பு உடைகளில்.  என் எதிரே நின்ற ஒருத்திக்கு மிக சின்ன செப்பு உதடுகள் யாரையோ கோபமாக திட்டிக்கொண்டிருக்கிறாள். நான் அவளிடம் இந்த  பஸ் உக்கடம் போகுமா?  என்று கேட்டதை அவள் கவனிக்கவே இல்லை அவனருகில் இருந்த இன்னொருத்தி புன்னகையுடன் ’’உக்கடம் போகும் ‘’ என்கிறாள்.

பின்னர் நான் ஏதோ ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிறேன் தோளில்  ஒரு பையுடன்.

ரயில்நிலைய வாசலில் மகாபாரத நாடகம் நடந்து நான் வரும் போது நிறைவுறுகின்றது கையில் புல்லாங்குழலும் முகத்தில் நீல ஒப்பனையிலுமாக கிருஷ்ணராக வேடமிட்டவரை வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொரு நடிகர் கைகளில் நிறைய கருப்புக்கயறுகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கிறார் நான் அவருக்கு மிக அருகில் இருக்கிறேன் அதிலொன்றை தருணுக்கு வாங்கிக்கொண்டு போய் அவன் கைகளில் கட்ட நினைக்கிறேன் தருணைக்குறித்து கொஞ்ச நாட்களாகவே சுகக்கேடு எதோ வந்துவிடுமென்று இனம்புரியா அச்சத்தில் பீடிக்கப்பட்டிருபபதை கனவிலும் நினைத்துக்கொள்கிறேன்.

அவர் எனக்கு இரண்டாவதாக கயிற்றை கொடுத்தாலும் நடந்த தள்ளுமுள்ளுகளில் அக்கயிறு கீழே விழுந்து விடுகிறது மீண்டும் வெகுவாக முயற்சிக்கிறேன் நிறைய கயிறுகள் கீழே விழுகின்றன அவற்றிலொன்றை எடுக்கமுற்படுகையில் நான் எடுக்கும் அதே கயிற்றை இன்னுமொரு பச்சைப்புடவை மாமியும் எடுக்கிறார் நான் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொள்கிறேன் மாமிக்கு அதை தரக்கூடாது எனக்கே வேண்டும் என்னும் வேகத்தில் இருக்கிறேன் ஆனால்  மாமி புன்னகையுடன் ’’பாக்கியம் உண்டாகட்டே’’ என்கிறாள்

பின்னர் தென்னம்பாளையம் சாலையில் செல்கிறேன் எனக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர்,  வழியில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு பைக்கை காண்பித்து, எதோ பேசியபடி கடக்கிறார்கள்.நானும் பார்க்கிறேன் யாருமற்று, கவிழ்ந்து கிடக்கும் ஒரு பைக்கின் அருகில் கருப்பு சட்டை பேண்டில் ஒரு இளைஞன் முகம் குப்புற கிடக்கும்படி அசைவின்றி கிடக்கிறான்.

அதன் பின்னர் எங்கோ ஏதோ ஒரு கூட்டம் நானும் அங்கிருக்கிறேன் ஏனோ கூட்டத்தின் பின்பகுதியில் படுத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவர்  வந்து என் உடை ஈரமாகி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் குர்த்தி அணிந்திருக்கிறேன் அதை இழுத்து ஈரத்தை மறைக்கிறேன். அவர் அருகில் நின்று ’ஏன் பதட்டமா இருக்கே,  நிம்மதியா தூங்கு’’என்கிறார்  அவர் கைகளை எடுத்து என்   காதுக்க ருகில் வைத்துக்கொண்டதும் கிடைத்த  பாதுகாப்பு உணர்வில் ஆழ்ந்து உறங்குகிறேன். 

 எதோ ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் தாவர ’’அதிகாரம்’’ என்று நான் எழுதி இருக்கும் கட்டுரை பிரசுரமாகி இருக்கிறது ஆர்வமாக பிரித்துப் பார்க்கிறேன்.

இந்த பல கட்டங்களாக, பல காட்சிகளாக நிகழ்ந்த கனவுகளுக்கிடையில் நான்  விழித்து தண்ணீர் குடித்து,  கனவுகளின் குறிப்புகளையும் எழுதிக்கொண்டேன்.

காலையில் எப்படி நிஜம் போலவே கனவு வந்தது என்றல்ல. இத்தனையும் கனவா நிஜமில்லையா? என்னும் திகைப்பே என் முன்னால் நின்றது.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑