எல்லாம் உங்களால் தான் பிதாவே,
எல்லா பாவிகளையும் எப்போதும் மன்னித்துக்கொண்டே இருந்தால் பிறகெப்படி இருக்கும்?
லோகமாதேவியின் பதிவுகள்
எல்லாம் உங்களால் தான் பிதாவே,
எல்லா பாவிகளையும் எப்போதும் மன்னித்துக்கொண்டே இருந்தால் பிறகெப்படி இருக்கும்?
ஆண்டவரே!
எனக்கு எதிர் தரப்பென்று ஒன்றிருப்பதில் புகாரேதும் இல்லை,
அவர்கள் வலுவற்றவர்களாய் இருப்பதிலும் ஆட்சேபணை இல்லை
இருந்தாலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாகவாவது இருக்ககூடாதா?
கொஞ்சம் பார்த்துப்பண்ணுங்கள் பிதாவே!
மிக இளம் வயதிலேயே வாசிக்கத் துவங்கியிருந்தேன். மிகச்சிறிய வயதிலிருக்கையில், பணிபுரிந்த பள்ளியில் நூலகப் பொறுப்பு அப்பாவிற்கு அளிக்கப்பட்டிருந்தது, அந்த நூலகத்திலிருந்து ஒரு அகராதியை கொண்டு வந்து கொடுத்தார். அதுவே என் நினைவில் இருக்கும் நான் தொட்டுணர்ந்த முதல்புத்தகம். அதன் கனத்த அட்டையை திறந்தால் உள்ளிருந்து ஒரு செவ்வண்ண காகிதத் தாமரை, இதழ் இதழாக எழும்பி நிற்கும். அது எனக்கு பெரும் பரவசத்தை அளித்தது. திறப்பதும் மூடுவதுமாகவே இருந்தேன் அப்பாவிடம் பயம் எப்போதும் இருந்ததால் அதை பத்திரமாகவே கையாண்டேன்.
பிற்பாடு லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த ஊட்டி மாமா அத்தையுடன் சிங்கப்பூர் உறவினர்களின் குழந்தைகளும் எங்களுடன் விடுமுறையின் தங்க வருவார்கள். ஒரு முறை அந்த சிங்கப்பூர் மாமா எங்களுக்கு வழவழப்பான காகிதங்கள் கொண்ட பெரிய அட்லஸ் ஒன்றை பரிசளித்தார். அப்போது 6 அல்லது 7ல் இருந்திருப்பேன். அது எனக்கு பெரிய பொக்கிஷமாக இருந்தது பச்சையும் நீலமும் அதிகம் இருந்த அந்த பெரிய புத்தகத்தில் கண்டங்களை நாடுகளை தொட்டுத் தொட்டுப் பார்த்தது அங்கெல்லாம் சென்று வரும் அனுபவங்களை காட்டிலும் கிளர்ச்சி யூட்டுமொன்றாக் இருந்தது.
அந்த அட்லஸிலிருந்து ஒரு மணம் வீசும் அதை இப்போதும் என்னால் நினைவு கூற முடியும். மூளையில் சிடுக்குகளுக்குள் அந்த மணம் எங்கோ இன்னும் ஒளிந்திருக்கிறது.
தாராபுரம் செயிண்ட் அலோசியஸில் படித்துக் கொண்டிருக்கையில் எம் எல் ஏ பெரியம்மாவின் மாடிவீட்டில் குடியிருந்த சோடா பாட்டில் கண்ணாடி ராஜா அவன் சேகரிப்பில் இருந்த காமிக்ஸ் புத்தகங்களை எங்களுக்கு வாடகைக்கு தருவான். அவனிடம் இப்படி நிறைய வாங்கி படித்திருக்கிறேன்.
மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்தபோது அப்பா இரும்புக்கை மாயாவி, சிஐடி சங்கர் போன்ற கதைப்புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தார், அம்புலிமாமா சில சமயம் வாங்கியதுண்டு. இரும்புக்கை மாயாவி புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றாக சேரும் இடத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கும்.
அது எனக்கு அந்த புத்தகத்தின் லிப்ஸ்டிக் தடவிய உதடு போல தோன்றும். டயானாவும் மண்டையோடும் டெவிலும் மாயாவியும் அவரது செயற்கை கையும் காட்டுவழியில் அவர் பயணமும் சாகசங்களுமாய் இரவில் உறக்கமின்றி அப்பயணங்களில் நானும் உடன் இருந்தேன்.
சி ஐ டி சங்கர் சித்திரக் கதையில் ஜப்பானிலிருந்து வந்து இந்தியாவின் நதிகளில் ஒரு நச்சுக்களைச் செடியை போட்டு வறண்டு போகச்செய்த நாசகாரர்களை சங்கர் களையெடுக்கப்போவார். வில்லனின் மாருமோச்சி என்னும் மகனை சங்கர் மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டு கொன்று விடுவார். அது தெரியாத வில்லன் சங்கரிடம்’’ எங்கே என் மகன் மாருமோச்சி என் கேட்பார்’ பதிலுக்கு சங்கர் ’’அவன் மாடு மேய்க்க போயிருப்பான்’’ என்பார். அதையே பல நூறு முறை படித்து சிரித்துக்கொள்வோம்.
அது சித்திரக்கதை புத்தகம் என்பதால் அந்த காட்சிகள் நேரில் கண்ட அனுபவத்தையே எனக்களித்தது. அதிலிருந்து லேசில் விடுபட முடியவில்லை. மேலும் மாடு மேய்த்தல் போன்ற வட்டார வழக்கில் வாசித்ததும் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.
அது கொடுத்த நம்பிக்கையில் ( ஒரு போதாத வேளையில்) எங்கள் வீடு இருந்த அந்த தெருவில் இருக்கும் என் வயது சிறுவர்களுக்கு நானே கைப்பட எழுதியும் வரைந்தும் ஒரு கையெழுத்து பத்திரிக்கை நடத்த தலைப்பட்டேன்.
சிஐடி சங்கர் கதையின் அந்த ஒரு விஷக்களையின் ஏராளமான விதைகள் நீரில் கலந்து பெருகிப் பெருகி நீர் நிலையை வற்ற வைப்பது என்னும் யுத்தி எனக்கு பெரிதும் ஆச்சர்யமளித்தது. (18-ம் நூற்றாண்டில் லேடி ஹாஸ்டிங்ஸ் இப்படித்தான் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் வெங்காயத்தாமரையை ஹூக்ளி நதியில் அறிமுகப்படுத்தினார்)
ஏறக்குறைய அதைப்போலவே (காப்பி) ஒரு காமிக்ஸ் சித்திரக் கதையை உருவாக்கி துணிந்து கையால் படங்களை வரைந்து அதை சுற்றுக்கு விட்டிருந்தேன். செடிகொடிகளின் மீது ஆர்வம் உண்டாகி இருந்த காலம் அது. வீட்டில் இருந்த கனகாம்பரம் அகத்தி செம்பருத்தி ஆகியவற்றின் மீது பெரும் பிரியம் உண்டாகி இருந்தது.
விடுமுறைகளில் திப்பம்பட்டி தோட்டத்துக்கு போகும் போதெல்லாம் தேங்காய் போடுவது, கட்டுச்சேவல் வளர்ப்பது, எங்களது சேவல் சண்டைக்கு போன உடனேயே மாலை வரவிருக்கும் தோற்ற கட்டுச்சேவல்களின் கறிக்கென மசாலா அரைக்கத் துவங்குவது, வாழை அறுவடை முடிந்து ஊதாக்கூம்புகளாக கிடக்கும் ஏராளமான வாழைப்பூக்களை சாக்கில் கட்டி வயலை சுற்றி பெருக்கெடுத்தோடும் ஆற்றில் வீசுவது, மாட்டு வண்டியின் நடுவில் இருக்கும் பணம் வைத்து கொள்ளும் ரகசியப் பெட்டி முழுக்க இலந்தைப்பழங்களை நிறைப்பது, நிரம்பி வழியும் காட்டுக்கிணற்றின் நீர்ப்பாம்புகளை அஞ்சிக்கொண்டே பார்ப்பது, வெள்ளம் ஓடும் ஆற்றை கண்களை மூடிக்கொண்டு வண்டியில் கடப்பது என இயற்கையுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த காலங்கள் அவை.
தாவரங்கள் மீது ஆர்வமும் அன்பும் அப்போதிலிருந்து பெருகி இன்னுமே அவற்றைக் கற்றுக்கொள்வதில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.
இளங்கலை படிக்கையில் பல கல்விச்சுற்றுலாக்கள் என் யானைப்பசிக்கு போதுமான தீனி போட்டன. முதுகலை நேரடியாக பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்த 5 பேரில் நானும் ஒருத்தியானதால் அங்கு தனியே இருந்த மாபெரும் தாவரவியல் பூங்காவில் பழியாய் கிடந்து,மேலும் மேலும் தாவரங்களை நோக்கியே பயணித்தேன்.
இடையில் வாசிப்பும் தொடர்ந்தது. பல்கலைக்கழகத்தில் தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்தேன். அங்கு fine arts clubல் சேர்ந்து அசட்டு கவிதைகள் எல்லாம் எழுதி வாசித்தேன்.அதன் பிறகு எங்கிருந்தோ எழுதவேண்டும் என்னும் கொதி வந்து சேர்ந்தது.
பல கதைகளை எழுதி விகடன் தினமணிக்கதிர் குங்குமம் குமுதம் என்று அனுப்புவேன். தவறாமல் விடுதி விலாசத்துக்கு அவை திரும்பி வரும். ஆனாலும் மனம் தளராமல் எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பேன்.
பொள்ளாச்சி வீடு இருந்த தெருவின் கடைசியில் ஒரு பெரும் பணக்காரரின் விவசாய நிலம் இருந்தது. அங்கே அவ்வப்போது சில ஏழைச்சிறுவர்கள் வேலிக்குள் நுழைந்து மாங்காயும் வெள்ளரியும் பூசணியும் வெண்டைக்காய்களுமாக திருடுவது வழக்கம்.
ஒருக்கில் அங்கு விளைந்திருந்த பூசணிக்காய்களை திருடி வீடுகளுக்கு விற்று சில்லறைக்காசு பார்த்துகொண்டிருந்த சிறுவனொருவன் எங்கள் வீட்டுக்கும் வந்தான். அப்போது பல்கலை விடுமுறையில் வீட்டில் இருதேன். அப்பா அந்த பூசணியை பார்த்து அவனை அடிக்க போய் கடுமையாக திட்டி ’’இந்த வயசிலேயே திருடியவன் நாளைக்கு என்ன வேணும்னாலும் செய்வே’’ என ஏசி துரத்தி விட்டார். முன்னங்கைகளில் முள் வேலிக்குள் நுழைந்த காயங்கள் இருந்த அந்தப்பையன் பூசணிக்காயை வாசலிலேயே விட்டுவிட்டு அழுதுகொண்டே ஓடிபோனான்..
அவன் போனபின்பு அம்மாவை அழைத்த அப்பா’’பாப்பாத்தி, பூசணிக்காய உள்ளே எடுத்து வை ’’ என்றார்.
அந்த சம்பவம் என்னை என்னவோ செய்தது. ஒரு காயம் அல்லது ஒரு ஆழமான தொந்தரவு உண்டாயிருந்தது உள்ளே. சாம்பல் பூசணி என்று தலைப்பிட்டு அந்த அனுபவத்தை அப்படியே கதையாக எழுதி தினமணிக்கதிருக்கு அனுப்பினேன்.அடுத்த மாதம் ஞாயிறு அன்று என் பெயரில் அந்த கதை பிரசுரமானது.
அச்சில் என் கதையை, என் பெயரை பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதை இப்போதுகூட எழுத்தில் கொண்டு வர முடியாது. பெருமிதம் கர்வம் மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான உணர்வு. மேலும் அந்த கசப்பான அனுபவம் உண்டாக்கி இருந்த அசெளகரியம் குறைந்தும் விட்டிருந்தது.
பின்னர் முனைவர் பட்ட ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டேன் எனினும் வாசிப்பு தொடர்ந்தது. அனேகமாக தினமும் வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது பயணம் அதிகம், பொள்ளாச்சியிலிருந்து கோவை பல்கலைக்கழகம் அங்கிருந்து கோத்தகிரி வனக்கல்லூரியில் லேப் நான் வாடகைக்கு எடுத்திருந்த நிலம் தொண்டாமுத்தூரில் இருந்தது அங்கும் அவ்வப்போது சென்று ஆய்வுக்கான தாவரங்களின் வளர்ச்சியை பார்ப்பது என ஒவ்வொரு நீண்டபயணத்திலும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
டெல்லி பயணங்கள், இந்த NGM கல்லூரியில் வேலை பின்னர் திருமணம் என்றான பின்னர் அந்த பாலை வாழ்வில் அத்தனை இன்னல்களுக்கிடையில் அவ்வபோது மங்கையர் மலரில் துணுக்குகள் அவள் விகடனில் கவிதை என்றெழுதி அனுப்புவேன்
2 கவிதைகள் விகடனில் வெளியானது அதில் ஒன்று முழுப் பக்கத்துக்கு வந்தது. அபுதாபி வாழ்வின் அவலங்களை அந்த இரண்டே இரண்டு பிரசுரங்கள் மீட்டெடுத்தது என்றே சொல்லலாம்.
இந்தியா வந்தபின்னர் வேலை தேடுதல், யாரையும் சாராமல் வாழ்வைத் தொடரும் சவால் என் பல கஷ்டங்கள், எழுத்தை மறந்தேன் ஆனால் வாசிப்பும் மகன்களுக்கு கதை சொல்லலும் தொடர்ந்தது. ஜெ வின் எழுத்துக்கள் மித்ரா மூலமாக அறிமுகமானது. அதன் பின்னர் வாழ்க்கை முற்றாக மாறியது. ஒரு சுழல் போல அவரின் எழுதுக்களுக்குள் நாங்கள் மூவரும் மூழ்கினோம்.
பின்னிரவுகளில் மரத்தடி கயிற்றுக்கட்டிலில் என் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் மகன்களுக்கு ஜெ வின் கதைகளை வரி வரியாக வாசித்து வாசித்து கதை சொல்லி தூங்க வைத்து ஒவ்வொருவரையாக உள்ளே சென்று படுக்க வைத்துவிட்டு இருவருக்குமிடையில் அக்கதைகளிலிருந்து விலகமுடியாமல் விழித்திருந்த இரவுகள் அனேகம்.
பின்னர் வெண்முரசு.
என் மொத்த வாழ்க்கையும் வெமு வெபி என் இரண்டாக பிரிக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. நான் முற்றிலும் வேறு ஒருத்தியாய் மாறிப்போயிருந்தேன். என் அகமொழி மேம்பட்டிருந்தது. வாழ்க்கை மிக கண்ணியமானதாக மாறி இருந்தது. ஒரு வலைப்பூ துவங்கி எழுதிக்கொண்டிருந்தேன். தாவரங்களை குறித்து நிறைய நண்பர்களுக்கு கைப்பட பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன்.
அப்போதுதான் 2016ல் தினமலரில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு தம்பி மாதவன் இளங்கோவினால் கிடைத்தது. அதில் 4ம் பக்கத்தில் எழுதிகொண்டு இருந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது .பல பள்ளிகளில் என் கட்டுரை வெளியான பக்கத்தை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்தார்கள். தினமலரில் என் போன் நம்பர் வாங்கி நிறைய பேர் அழைத்து பாராட்டியும் ஆலோசனை கேட்டும் தொடர்பு கொண்டார்கள். கல்லூரிகளிலும் கட்டுரைகளை வாசித்தார்கள்.
சமயங்களில் வாரம் 4 கட்டுரைகள் கூட வெளியாகின திரு பொன் வாசுதேவன் கட்டுரைகளை வார்த்தை உச்ச வரம்பிற்குள் எழுத கற்றுக் கொடுத்தார்.
தினமலரில் சன்மானமும் கொடுத்தார்கள். ஏறக்குறைய 3 வருடங்கள் எழுதிய தொகையை கொண்டு ஒரு லேப்டாப் வாங்கினேன்
அதன்பிறகு மேலும் மேலும் எழுதிக்கொண்டே இருந்தேன் இருக்கிறேன்
தமிழில் தாவரவியலை எழுதுவதில் பலசமயம் பொருத்தமான சொல்லை கண்டுபிடிப்பதே சிக்கலாக இருந்தது.
புதிய சொற்களை தேடிப்பிடித்தேன், சிலவற்றை நானே கொஞ்சம் உருவாக்கினேன்.
வெண்முரசில் dicotyledon என்பதற்கு ’’ஈரிலை விதை முளை’’ என்னும் சொல்லை வாசித்த போதும், சங்க இலக்கியப் பாடலொன்றில் அல்லியுமல்லாத புல்லியுமல்லாத மலர்களின் ஒற்றை அடுக்கான tepal/perianth என்பதற்கான அதழ் என்னும் சொல்லை கண்டபோதும் இவற்றையெல்லாம் தொகுத்து தமிழ் தாவரவியல் அகராதி தயாரித்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது.
சொற்களை தேடித் தேடிச் சேகரித்தபோது முடியும் என்னும் நம்பிக்கையும் வந்தது. கடந்த 2022 மே மாதம் என் தளத்தில் அதழ் என்னும் தாவரவியல் அகராதியை தயாரிக்கவிருக்கும் அறிவிப்பை வெளியிட்டேன்.’
இந்த ஒரு வருடகாலமும் அதன்பொருட்டு உழைத்துக் கொண்டே இருந்தேன்
மாதம் 4 கட்டுரைகள் சொல்வனத்திலும் ஆனந்த சந்திரிகையிலும் எழுதுவது, இல் பேணுதல், பயணம், சமையல், கல்லூரி வேலை, பாடங்களுக்கான முன் தயாரிப்புக்கள், தரச்சான்றிதழ்களுக்கான ஆவணங்களை உருவாக்கும் மென்னியை முறிக்கும் வேலை, ஆய்வு, குடும்ப சிக்கல்கள், கல்யாணம், காதுகுத்து, நல்லது அல்லது என போய் வருவது, அப்பா அம்மாவின் சுகவீனங்களை கவனிப்பது மகன்களின் படிப்பு , தோட்டச் செடிகள் பராமரிப்பது, வாசிப்பு, ஆய்வு கட்டுரைகள் எழுதுவது, அம்மாவின் இழப்பு என மூச்சு விடமுடியாத அளவுக்கு பணிச்சுமை.
எனினும் தினமும் ஆங்கில தாவரவியல் சொற்களை தேடித்தேடி சேர்த்துவைப்பதும் நேரம் கிடைக்கையில் தமிழ்சொல்லை பொருத்தமாக எடுத்து எழுதுவதும் தொடர்ந்தது.
எனக்கு ஓய்வு நேரமென்பது மிக குறைந்த அளவே இருந்தது அதிலும் நான் இந்த அகராதி வேலைகளை மட்டுமே பார்த்தேன். இடையில் அரிஸோனா இணைய தளத்தின் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றும் வேலையும் செய்தபோது இந்த அகராதி தயாரிப்பிற்கும் அது உதவியாக இருந்தது.
இதை தனியே செய்ய முடியாது என என்னை உற்சாகம் குன்றச்செய்தவர்கள் பலர். அகராதி பணியை குறித்த கடிதம் ஜெ தளத்தில் வந்தபோது பலர் ஊக்கமளித்தார்கள்.
எல் ஆர் ஜி திருப்பூரில் அப்போது பணியில் இருந்த இப்போது தாராபுரம் அரசுக்கல்லுரி முதல்வராக இருக்கும் Dr பத்மா ஒரு கட்டைப்பை நிறைய தமிழ் தாவரவியல் நூல்கள் எடுத்துக்கொடுத்தார். அவற்றை 6 மாத காலம் வைத்திருந்து தகவல்கள் சேகரித்து பின்னர் திருப்பிக் கொடுத்தேன், அ.வெண்ணிலா இப்போது தமிழில் இருக்கும் தாவரவியல் நூல்களை இதற்கென வாங்கி அனுப்பி இருக்கிறார்.
10 ஆயிரம் ஆங்கில தாவரவியல் சொற்களை இது வரை தொகுத்திருக்கிறேன்.
அவற்றில் 2500 சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை எழுதியாகிவிட்டது
ஆனால் அந்த வேலை தேங்கி கிடப்பதுபோல ஒரு எண்ணம் எனவே நூலாக தொகுக்கும் முன்னர் இன் வலைதளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை பதிவிடலாம் என்று முடிவு செய்து இப்போது ஆங்கில A வில் இருக்கும் சொற்களுக்கு ஆங்கில விளக்கமும் இணையான தமிழ் சொல்லுமாக பதிவிட்டிருக்கிறேன்
இனி தொடர்ந்து பதிவிட்டு z வரை முடித்தபின்னர் பொருத்தமான சிறு படங்களையும் சேர்க்கவிருக்கிறேன்
இதை யாருக்காக எழுதுகிறேன் என்றால், தாவரவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு, தாவரவியல் மானவர்களுக்கு, பின்நாட்களில் இப்படி ஒரு ஆங்கில அறிவியல் சொல்லுக்கான பொருத்தமான இணைத்தமிழ்சொல் இந்த அதழ் அகராதியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும் என்பதற்காக. எனினும் முதன்மையாக நான் இதை எனக்காகத்தான் செய்கிறேன்.
Agaricas என்பதற்கு நிலக்குடைக்காளான், adhesive என்பது பசைமம், african mahogany தான் சீமை நூக்கு, புற்களுக்கென்றெ இருக்கும் தனித்த அறிவியல் Agrostology, capitulam என்பது மலர்தலை, receptacle தான் பூத்தளம், Apicula என்பதை குறுமென்கூரென்றும், தண்டை தழுவி அணைந்துகொண்டிருக்கும் இலையடிச்செதிலென்றும் aggregate fruit என்பதை திரள் கனி என்றெல்லாம் வாசிக்கையில் எனக்குண்டாகும் நல்ல தமிழில் தாவரவியலை கற்றுக்கொள்ளும் மகிழ்வின் பொருட்டுத்தான் இதை உருவாக்குகிறேன். அதழ் அகராதி நிச்சயம் பிறருக்கும் பெரிதும் பயன்படும்.2024 இறுதிக்குள் 10 ஆயிரம் சொற்களையும் வலையேற்றும் உத்தேசத்தில் இருக்கிறேன்.

தாவரவியல் பூங்காக்கள் நடத்தும் மலர் கண்காட்சிகள் மீது எனக்கு தனித்த பிரியமுண்டு. சிறுமியாய் இருக்கையில் எல்லா பள்ளி விடுமுறைகளும் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த அத்தை மாமா வீட்டில்தான் இருப்பேன், எனவே கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி பல வருடங்களாக பரிச்சயமாகி இருந்தது. பிரபல சினிமா நடிகர்கள், எஸ்பிபி, ஜானகிம்மா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் எஸ் வி சேகரின் நாடகம் என பல விஷயங்கள் எனக்கு ஊட்டி மலர் கண்காட்சியில்தான் அறிமுகமானது.
அதிலெல்லாம் கொள்ளை அழகாய் கொட்டிக்கிடக்கும் மலர்களை கண்களை விரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த போதுதான் எனக்குள் தாவரவியல் ஆர்வம் முளைவிட்டிருக்கக் கூடும்.
அதன்பிறகும் கல்லூரி சுற்றுலாக்களில் ஊட்டி மலர் கண்காட்சி அதன் தொடர்ச்சியாக தொட்டபெட்டா செல்வது என எப்போதும் என் மனதில் மலர் கண்காட்சிகளுக்கென தனித்த இடமிருந்தது.
நான் பேராசிரியர் ஆன பின்னர் கொடைக்கானல் ஏற்காடு மூணாறு என எங்கே மலர்க்கண்காட்சி என்றாலும் உடனே மாணவர்களையும் அழைத்து கொண்டு செல்வது வழக்கமானது
சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் விவசாய பல்கலைக்கழக மலர் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது அப்போதும் முழுத்துறையுமே 3 பேருந்துகளில் சென்றிருந்தோம்.
மிக இனிய நினைவு அது ஏராளம் அயல் மலர்களும் இயல் மலர்களுமாக நேர்த்தியாக ஒருகுறையுமில்லாமல் சிறப்பாக நடத்தினார்கள் அப்போது. ட்யூலிப்களும் க்ளேடியோலஸ்களும் டேலியாக்களும் ரோஜாக்களுமாக மலர்ப்பெருங்கடல் அன்று பார்த்தது.
மிக முக்கியமான ஸ்டால்களும் இருந்தன மகன்கள் அப்போது சிறுவர்கள் அவர்களும் உடன் வந்திருந்தனர் அப்போது வாங்கிய ஒரு டூல் செட் இன்னும் சரண் வைத்திருக்கிறான்
இப்போதும் கோவை மலர் கண்காட்சி என அறிவிப்பு எனக்கு வந்து சேர்ந்தது.
எனவே துறையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அனைத்து பேராசிரியர்களும் கண்காட்சி துவங்கும் வெள்ளி 23 /2/24 அன்று (இன்று) செல்வது என முடிவெடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக துறைக்கான AAA எனப்படும் அகடமிக் அட்மினிஸ்ட்ரேடிவ் தணிக்கை வெள்ளி என முடிவானதால் Dr Sarvalingam அதை பார்த்துக்கொள்ளட்டும் என முடிவு செய்து மீதமிருந்த அனைவருமாக புறப்பட்டோம்
அதற்கு முன்னால் இன்னும் மகள்களை வெளியூர் அனுப்ப யோசிக்கும் கொங்கு பெற்றோர்களிடம் தொண்டை வலிக்க தாவரவியலை வகுப்பறைக்கு வெளியே கற்கும் அவசியத்தை பேசி அனுமதிவாங்கி, பேருந்துக்கு ஏற்பாடு செய்து பணம் திரட்டி முதல்வரிடம் எழுத்துபூர்வ அனுமதி வாங்கி என பலகட்ட முன்னெடுப்புக்கள் நடந்தது
கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் என தகவல் வந்ததும் திடுக்கிட்டேன் ஊட்டியில் கூட அத்தனை இல்லை
பொள்ளாச்சி மாணவர்கள் எல்லாம் மிக எளிய பின்புலம் கொண்டவர்கள் அவர்களிடம் பேருந்து கட்டணமல்லாது மேலும் 150 ரூபாய் வாங்க முடியாது. எனவே கோவை ரோட்டரியின் பங்களிப்பு இந்த கண்காட்சியில் அதிகம் இருந்தது என்பதால் ரோட்டரி நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன்
அவர் விவசாய பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரின் எண் கொடுத்தார் அவரை அழைத்துப்பேசி மாணவர்களுக்கு மட்டும் 50 ரூபாய் அனுமதி வாங்கினேன்
ஆசிரியர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்றார்கள் சரி என்று ஒத்துக்கொண்டேன்
ஆனால் 150 ரூபாய் என்றால் பொதுமக்கள் வரவும் குறையும், ஒரு சினிமாவை 120 ரூபாயில் பார்க்கிறோமே!
மீண்டும் அந்த நண்பரிடம் பேசி அவரும் ஏற்பாட்டாளர்களிடம் பேசி அனைவருக்குமே கட்டணம் 100 என்றும் அனுமதிக்கடிதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு 50 என்றும் மீண்டும் முடிவானது
இன்று காலை புறப்படுகையில் இரண்டு பேருந்துகளுக்கு முன்பு அனைத்து மாணவ மாணவர்களையும் நிறுத்தி ஒரு நல்ல உரையாற்றினேன்.
கல்லூரிக்காலத்தில் பயணம் எத்தனை முக்கியம் அதுவும் தாவரவியல் மாணவர்களுக்கு இப்படியான மலர்கண்காட்சிகளுக்கு செல்வது எத்தனை முக்கியம் என்பதையும் அங்கு காணப்போகும் எக்ஸோட்டிக் மலர்களை வேறெங்கும் காண வாய்ப்பில்லை என்பதையும் சொல்லி நான் முன்பு ட்யூலிப் மேனியாவை குறித்து எழுதிய மலர்பித்து என்னும் கட்டுரையின் இணைப்பை அளித்து அதையும் வாசிக்கச் சொல்லி அந்த ட்யூலிப்மலர்களை இன்று அவர்கள் பார்க்க விருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னேன்

அவர்களை ஒரு பேரனுபவத்திற்கு மனதளவில் தயராக்கி பின்னர்புறப்பட்டோம்
நல்ல வெயிலில் 9.45க்கு வந்து சேர்ந்தோம்.தாவரவியல் பூங்கா இருக்கும் இடத்துக்கு பேருந்து செல்லமுடியாது நெரிசலாகும் என்று எதிரிலிருக்கும் விவசாய பல்கலைக்கழகத்துக்குள் பேருந்தை நிறுத்த சொல்லி அங்கிருந்து வெகுதூரம் நடந்து வந்து சாலையை கூட்டமாக கடக்க காவலர்கள் உதவி பின்னர் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு ஒருவழியாக வந்தோம்
வாழ்க்கையை விட பல பல திருப்பங்கள் கொண்டிருந்த மூங்கில் கழிகளால் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக வழியில் நடந்து நடந்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடம் வந்ததும் UPI அல்லது பணம் இரண்டில் எது என்னும் கேள்வி, தொகையாக செலுத்துகிறேன் என்றதும் அதற்கு மேலும் சில திருப்பங்கள் செல்ல வழி காட்டினார்கள்
சலிக்காமல் அங்கும் நடந்து முதல்வரின் கடிதம் வேண்டும் என கேட்டிருந்தார்கள் அதை கொண்டு வந்திருந்தோம் காட்டினோம் ஆனால் சலுகை இல்லை அனைவரும் 100 கட்ட வேண்டும் என்றார்கள். நான் தொடர்பு கொண்ட பேராசிரியரின் பெயரை சொல்லி அவர் போனில் அனுமதி அளித்திருக்கிறார் என்றேன்
பதிலுக்கு அவரிடம் போய் எழுதி வாங்கி வாருங்கள் என்றார்கள் எனக்கு பொறுமை குறைய தொடங்கியது. நாங்கள் வெளியூரிலிருந்து வந்து எங்கேயென்று இங்கிருக்கும் ஒரு பேராசிரியரை தேடிப்போவோம் 100க்கும் மேற்பட்ட இளம் மாணவ மாணவிகள் கடும் வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபித்துகொண்டதும் யாரோபோய் எங்கேயோ எழுதி வாங்கி வந்து ஒருவழியாக சலுகை கட்டணம் மாணவர்களுக்கு அளித்தார்கள்
கைகளில் அணிந்துகொள்ளும் காகித பேண்ட் ஒன்றை தீவிரமாக ஒரு பெண் எண்ணி எண்ணி எடுத்துக்கொடுத்தாள். 100 ரூபாய்க்கு பச்சை 50 க்கு இளம் சிவப்பு
வாங்கிகொண்டு வெளியே வந்து கைகளில் அணிந்துகொண்டிருக்கையில்தான் 25 எண்ணிக்கை குறைவாக பேண்ட் கொடுத்திருந்தார்கள் என்பது தெரிந்தது.
மீண்டும் அதே இடத்துக்கு சென்று மீண்டும் எண்ணி வாங்கிகொண்டு வந்து ஏராளம் கெடுபிடிகளுக்கு மத்தியில் மலர் கண்காட்சி முகப்புக்கு வந்தோம்
Birds of paradise எனும் அரிய மலர்களை கத்தரித்து நிலத்தில் நட்டு முகப்பில் அலங்கரித்திருந்தார்கள்’அதை அப்படியே தொட்டிகளில் வைத்திருக்கலாம் இன்றே அனைத்தும் வாடிவிடும் என்று ஆதங்கமாக இருந்தது

முகப்பில் கோவை மலர்கண்காட்சி என்பதையே மலர்களில் அமைத்திருந்தார்கள்.
அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்
உள்ளே மேலும் கெடுபிடி இரண்டிரண்டு பேர்களாக வரவேண்டும் என்று. அப்படியே சென்றோம், ஒரு ஸ்கேனர் வழியாக செல்ல பணிக்கப்பட்டோம்.
எனக்கு ஆர்வம் அதிகமானது இத்தனை கனகச்சித ஏற்பாடுகள் இருப்பதால் முன்னைக் காட்டிலும் பிரமாதமான கண்காட்சியாக இருக்கும் என்று.
கோவை ரோட்டரி தொண்டாமுத்தூர் எல்லாம் எங்களை வரவேற்கும் அலங்கார தட்டிகள் ஆங்காங்கே நின்றன.
முகப்பில் ஒரு ரோட்டரி தட்டி ஒன்று தலைகுப்புற விழுந்து கிடந்தது அதை சரி செய்ய யாரையும் காணோம்.

ஒரு மரத்தடியில் ட்யூலிப் கள் தெரிந்ததும் ஆர்வமாக முதலில் அங்கே போனேன்
மஞ்சள் வெள்ளை சிவப்பு என எல்லா நிறங்களில் இருந்த ட்யூலிப்கள் புதுமண பெண்கள் போல் தலை குனிந்து நிலம் பார்த்திருந்தன
அருகில் சென்றால் அவை அனைத்தும் செடியில் இருக்கும் மலர்களல்ல வெட்டப்பட்ட மலர்த்தண்டுகளை பச்சை ஸ்பாஞ்சில் நட்டுவைத்திருந்தார்கள்.

முதல் நாள் காலையிலேயே அத்தனை வாடி தலைகவிழ்ந்திருக்கும் இவை இன்னும் இரண்டு நாட்களில் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டோம் அன்னப்பட்சிகள் முயல் என் சில மலரலங்காரங்கள் நல்ல தகிக்கும் வெயிலில் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் செருகப்பட்டிருந்த மலர்கள் 1மணி நேரத்தில் வாடிவிடும் அளவுக்கு வெயில் அறைந்துகொண்டிருந்தது
இதுபோன்ற மலரலங்காரங்கள் ஊட்டியின் சீதோஷ்ணத்துக்கு எந்த இடத்திலும் வைக்கலாம் கடுங்கோடை துவங்கி இருந்த கோவை பூங்காவில் நிழலான இடங்களில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்
என்னதிது ஆரம்பமே இப்படி என உள்ளே என்னவோ எச்சரிக்கை மணி அடித்தது.
அவசர அவசரமாக வெட்டப்பட்ட தாவரங்களின் மிச்சம்மீதிகள் எல்லாம் அலங்காரங்களுக்கு அருகில் பெருக்கி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே குப்பையாக கிடந்தன.

வரிசையில் கையில் அடையாள பேண்ட் கட்டிக்கொண்டு ஸ்கேனர் வழியாக வந்த எங்களுக்கு முன்னால் எந்த ஸ்கேனரிலும் வந்திருக்க சாத்தியமில்லாத தெரு நாய்கள் குப்பைகளை கடித்துக்கொண்டு திரிந்தன. திகைப்பாக இருந்தது’, எதற்கு வாசலில் அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் உள்ளே நாய்கள் திரிகையில்?

குஞ்சு குளுவான்களாக கிண்டர்கார்டன் குழந்தைகள் எல்லாம் கூட்டமாக பேருந்துகளில் வந்திருந்தார்கள்.
கோடைக்காலமென்பது ரேபிஸ் காலமும்தான் அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கவேண்டாமா?
முகப்பிலிருந்து வழியெங்கும் செடிகளுக்கு நீர் ஊற்றப்படாமல் வறண்டு நிலம் இறுகிக்கிடந்தது இன்றிலிருந்து கண்காட்சி, ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதற்காக அல்ல கோடையில் செடிகளுக்கு நீர் விடவேண்டாமா?

நிலத்திலிருக்கும் செடிகளுக்கு மட்டுமல்ல தொட்டிச்செடிகளும் வாடி பாவமாக இருந்தன. தொட்டிகளின் மண்ணையும் தொட்டுப் பார்த்தேன் பாறைபோல் இறுக்கம்
ஆனால் வேடிக்கையாக செயற்கை நீரூற்றுக்களில் நீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது
என்ன அநீதி எத்தனை முரண்?
தாவரங்களை பார்க்கவென்று 60 கிமீ தொலைவில் இருந்து கட்டணம் செலுத்தி உள்ளே வந்திருக்கிறோம் செடிகளுக்கு நீர் இல்லாமல் வாடிகிடக்கையில் செயற்கை நீரூற்றில் நீர் ?
மேலும் மேலும் பெருந்துகளில் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் வந்தபடியே இருந்தனர்.
எங்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு கைகளில் வண்ணப்பட்டைகள் இல்லை. உள்ளே ஏராளமான ஸ்டால்கள்.

வரும் சிவராத்திரிக்கு இலவச அமர்வுக்கு அணுகினார்கள் வருவதானால் விண்ணப்பிக்கிறேன் என்று சொல்லி விலகினேன்
கண்பார்வையை சோதித்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் பின்னாலேயே வந்தார்.
பலமுறை மறுத்து என்னை விடுவித்துக்கொண்டேன்
அடுத்து தைராய்டு செக் பண்ணிகொள்ளச் சொல்லி வற்புறுத்தல். மறுத்து அவசரமாக விலகினோம்.
வீட்டுக்கடன் தரும் நிறுவனம் நொச்சுப்பண்ணிக்கொண்டே இருந்தார்கள் கைகளில் ஏராளமாக் துண்டுச்சீட்டு களும் விளம்பரங்களும் நிறைத்தார்கள்.

எதற்கு வந்தோம் என்ன நடக்கிறது என்று யோசித்து கொண்டே நடந்தேன். அல்லிக்குளத்தில் காலி தண்ணீர் பாட்டில்கள் குப்புற கிடந்தன துணையாக காலி சிப்ஸ்பாக்கட்டுகளும் மிதந்தன.
ஸ்டால்களை தவிர எங்குமே குப்பைத்தொட்டிகள் இல்லை நோட்டீஸ்கள் எல்லாம் கசக்கி போடப்பட்டு பூங்காவெங்கும் இரைந்து கிடந்தன.

என்னிடம் இருந்தவற்றை போட குப்பை தொட்டி தேடி எங்கும் கிடைக்காமல் ஒருமரத்தடியில் வேறு வழியே இல்லாமல் போட்டேன்
டென்னிஸ் கோர்ட் போல் ஒரு மலரமைப்பு அங்கும் மலர்செடிகள் இல்லை வரிசையாக பச்சை ஸ்பாஞ் வைத்து அதில் வெண்ணிற மலர்கள் அமைத்திருந்தார்கள் அதுவும் நல்ல வெயிலில்.

கோழிகொண்டை பூச்செடிகள் வைத்திருந்த தொட்டிகள் எல்லாம் நீரின்றி பரிதாபமாயிருந்தன.

அலங்கார வாழைமரங்களில் பாதியை அப்போதுதான் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 11 30 மணிக்கு மேலும் பல பெட்டிகளில் மலர்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை
அழைப்பிதழில் 9 – 7 மணி என்றிருந்தது
ஆனால் முற்பகலாகியும் எதுவுமே துவங்கப்பட்டிருக்கவில்லை

அரசுப்பொருட் காட்சியை நினைவூட்டும் உணவுக்கடைகள் அலங்காரபொருட்கள் விற்கும் கடைகள் துவங்கி இருந்தன
வீடு துடைக்கும் மாப் விவசாயபொருட்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஊறுகாய்கள் விற்கபட்டன
வழிகாட்டும் அறிவிப்புக்கள் இல்லை, எங்கு சென்று எதைபார்த்தபினன்ர் எதைப்பார்க்க வேண்டும் என்பதை நாங்களாகவே முடிவு செய்தோம்.

அழகிய ஊதா மலர்களுடன் படர்ந்திருந்த பெட்ரியாவின் மலர்களை ஒரு குடும்பமே இஷ்டத்துக்கு பறித்து தலையில் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்து கொண்டார்கள். தடுக்க யாரும் இல்லை. ’நான் அவர்களிடம் உங்களுக்கு பின்னால் வருபவர்கள் இந்த பூக்களை பார்க்க வேண்டாமா? என்றேன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தார்கள்.
காபி குடிக்கலாம் என்றார்கள் உடன்வந்த பேராசிரியர்கள் வாங்கினோம் காபியாக இல்லாமல் பாயசத்தின் அக்காவாக தித்தித்தது. கீழே ஊற்றிவிட்டு நடந்தேன்
ஒரே மாதிரியாக அடீனியம் போன்ஸாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன
பூங்காவின் கடைக்கோடியில் நர்சரி இருந்தது அங்கிருந்து வாசல்வரைக்கும் செடிகளை வாங்கியவர்கள் சுமந்துகொண்டு செல்ல கஷ்டமாயிருக்கும். எப்போதும் கண்காட்சிகளில் இதுபோன்ற செடி விற்பனை எக்ஸிட்டுக்கு அருகில்தான் இருக்க வேண்டும்
பலர் இதற்கு சங்கடப் பட்டுக்கொண்டே வாங்காமல் சென்றார்கள் சிலர் புலம்பிக்கொண்டே வாங்கினார்கள்
நானும் கொடி ரோஜாச் செடிகள் வாங்கினேன்
வைத்துக்கொண்டு போகும் கவரொன்று 10 ரூபாய்க்கு கொள்ளை விலை சொன்னார்கள் சரியென்று வாங்கினேன் வேறு வழியில்லை வாசல் வரை சுமக்கனுமே?
ஆனால் வாங்கிய செடிக்கு பில் கேட்டால் இல்லை என்றார்கள்.’உண்மையிலேயே கடுப்பாக இருந்தது
3 கவர்களுக்கு 30 ரூபாய் கொடுத்தபின்னர் 2 கவர்தான் இருக்கிறதென்றார்கள்
என் பொறுமை விளிம்புக்கு வந்து அதலபாதாளத்தை நோக்கி பாயத்துவங்கலாம் என்னும் எச்சரிக்கை அடைந்தேன். எனவே விரைந்து அங்கிருந்து நகர்ந்தேன்
கழிப்பறைக்கு சென்று விட்டு உணவருந்தலாம் என்று தேடினோம். கழிப்பறை என்னும் அம்பு குறி அதிசயமாக எங்களுக்கு வழிகாட்டியது
கொடுமைகளில் மகா கொடுமையாக அத்தனை கூட்டத்துக்கு 3 தான் இருந்தது. மூன்றும் தற்காலிக கழிப்பறைகள். அவை மூன்றுமே உள்ளே பெண்கள் அமர்ந்து உபயோகிக்க முடியாதபடி கான்சன்ட்ரேஷன் கேம்ப் அறைகளைபோல மிக மிக குறுகலானவை.
கழிப்பறைகளுக்கு முன்பாக பள்ளிப்பெண்களின் வரிசை நீண்டிருந்தது. மூன்றிலிருந்தும் கழிவு நீர் வெள்ளமென வெளியெ வழியத்துவங்கியிருந்தது. உள்ளே பக்கட் மட்டும் இருக்கு மக் இல்லை என ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது
அங்கே நிற்க முடியாமல் அடையாள அட்டை அணிந்திருந்த ஊழியர்களை விசாரித்து, செடிகளையும் சுமந்துகொண்டு நடந்து நடந்து நடந்து கண்டுபிடித்த விளையாட்டு திடலுக்கருகே இருந்த கழிப்பறை மகா கோரமாக பலர் உபயோகித்து சேறும் சகதியும் நாற்றமுமாக இருந்தது

வேறு வழியில்லாமல் அதையே உபயோகிக்கச் சென்றால் அங்கு கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை ஒருவர் உள்ளிருக்க ஒருவர் வெளியில் கதவை பிடித்துக் கொண்டு பயன்படுத்தினோம்
அருகில் பல பெண்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குறிப்பாக ரோட்டரி அமைப்பை ஏகத்துக்கும் வசைபாடிக்கொண்டிருந்தார்கள்
நாங்களும் அதே!

பூங்கவெங்கும் உணவு மிச்சங்கள் காகிதங்கள் இறைந்து கிடந்தன
தெருநாய்கள் நடமாடினது போதாமல் நாய் கண்காட்சியும் இருந்தது.
பல கல் பெஞ்சுகளின் அருகில் அகற்றப்படாத குப்பைகள் குவிந்தும் பைகளில் கட்டப்பட்டும் கிடந்தன
இப்படி பல பரிதாபங்களுக்கு இடையில் மாணவர்களுக்கு சிலவற்றை காண்பித்தேன்
எனினும் விவசாய பல்கலையின் முக்கிய அங்கமான தாவரவியல் பூங்காவின் மரங்கள் கூட பெயரிடப்பட்டிருக்கப்படவில்லை என்பதை என்ன சொல்வது?
முன்பு இல்லாவிட்டாலும் கண்காட்சியின் பொருட்டாவது எழுதியிருக்கலாமே!
நீரில்லாத, பேரில்லாத செடிகளை காணவா கட்டணமும் கெடுபிடிகளும் சோதனைகளும் நீண்ட பயணமும்?
எத்தனையோ மறக்கமுடியாத மலர் கண்காட்சிகளின் நினைவுகளுக்கு நடுவே முள்ளாய் உறுத்தும் இந்த கோவை 6 வது மலர் கண்காட்சி என்னும் பெயரில் நடந்த பரிதாப காட்சிகள்.


உலகின் மிகப்பழமையான மரமான மெத்தூசலா பைன் மரம் (Pinus longaeva), உலகின் மிக பெரியதான அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் செக்கோயா தேசிய பூங்காவில் உள்ள சுமார் 2,500 க்யூபிக் மீ அளவு கொண்ட செக்கோயா மரம் (General Sherman), 115.92 மீ உயரத்துடன் உலகின் மிக உயரமான மரம் என்னும் பெருமைக்குரிய ஹைப்பீரியான் இவற்றுடன் உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலர்களை உருவாக்கும் கடல் தாவரங்கள் ’கடற்புற்கள்’ – seagrass எனப்படுகின்றன. நான்கு தாவரக்குடும்பங்களை சேர்ந்த சுமார் 60 கடற்புல் சிற்றினங்கள் உலகில் உள்ளன.ஏறக்குறைய 70 லிருந்து 100 மில்லியன் வருடங்களாக இவை கடலில் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது.

ரிப்பன் போன்ற நீண்ட தட்டையான இலைகளுடன் கடற்பரப்பில் அடர்ந்து வளரும் இவை புல்வெளிகளைப்போலவே காணப்படும். கடற்கரையை ஒட்டிய ஆழம் குறைவான பகுதிகளில் இவை வளரும்.
அவற்றில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதிகளில் வாழும் Posidonia australis என்னும் கடற்புல் உலகின் மாபெரும் பரப்பில் வளரும் ஒற்றைத்தாவரமாக 2022ல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
உலக பாரம்பரிய சின்னம் என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய கடற்கரையின் ஷார்க் பே பகுதியில் (Shark Bay) அறிவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட இந்த கடற்புல் மாபெரும் தாவரம் மட்டுமல்ல உலகின் மாபெரும் உயிரினமும் கூடத்தான்.
1–15மீ ஆழத்தில் மணலில் புதைந்திருக்கும் வேர்கிழங்குகளிலிருந்து வளரும் இவற்றில் ஆண்பெண் மலர்கள் தனித்தனியே அமைந்திருக்கும்.

இவை மழைக்காடுகளை காட்டிலும் 35% அதிக கார்பனை சேமித்துக்கொள்கின்றன.
2022 ஜூனில் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை சுமார் 180 கிமீ தொலைவிற்கு பரந்து வளர்ந்த ஒற்றைத்தாவரம் இது என்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை தெரிவிக்கிறது, கடலின் அடிப்பரப்பில் சுமார் 49,000 ஏக்கரில் இவை வளர்ந்திருக்கின்றன.
இந்த கடற்புல்லின் வயது சுமார் 4,500 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பழமையான ஒற்றைத்தாவரமும் இதுதான்.
கிரேக்க தொன்மத்தில் கடலின் கடவுளான் Poseidon -ன் பெயரே இதன்பேரினப்பெயராக வைக்கப்பட்டிருப்பதும் பொருத்தமாக அமைந்துவிட்டது. இதன் சிற்றினப்பெயரான ஆஸ்திரேலிஸ் என்பது இது ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது என்பதைக் குறிக்கிறது.
IUCN இந்த கடற்புல் அழிவின் அருகில் இருப்பதாக தெரிவிக்கிறது.

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரமே தேர்தல் அதிகாரியாக பணியாற்ற வேண்டிய விண்ணப்பங்கள் கொடுத்துவிட்டார்கள், நான் அப்போதே பூர்த்தி செய்து கொடுத்து விட்டேன். தேர்தல் பணி கடுமையானதாகத் தான் இருக்கும் அடிப்படை வசதிகள் அற்ற பள்ளிக்கூடங்களில் கவுன்சிலர்களின் அலப்பறைகளுக்கு மத்தியில் அதிகாலையிலிருந்து சரியான உணவோ தேநீரோ கூட இல்லாமல் பணி புரிந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல பலரும் அப்படித்தான் எனினும் நான் ஒருபோதும் எந்தக்காரணம் கொண்டும் தேர்தல் பணியை மறுதலித்ததோ அன்றி பொய்க்காரணங்கள் சொல்லி தவிர்த்ததோ கிடையாது
அரசுப்பணியினால் மட்டுமே என்வாழ்க்கை இத்தனை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் நினைவில் கொண்டிருக்கிறேன். எனவே அரசுப்பணி சார்ந்த எதுவும் எனக்கு அதிமுக்கியமானவைகள்தான்.
ஆனால் அரசியல் குறித்தான அறிதல் எனக்கு மிக மிக குறைவுதான் அதில் அத்தனை சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை அரசியல்வாதிகளிடம் எனக்கு பரிச்சயம் இல்லை செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் இல்லாததால் அரசியல் மாசுபடாத வீடு இது.
இதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. செல்வேந்திரனும் குறளரசியும் கல்லூரிக்கு வந்திருந்தனர். அவர்கள் வருவது முன்பே எனக்கு தெரியும் என்பதால் அவர்களை வரவேற்க முதல் தளத்திலிருந்து கீழிறங்கி வந்தேன்.
முதல்வர் அறையின் முன் இருக்கும் வரவேற்பறையில் தொலைவில் செல்வேந்திரன் குறளரசி இன்னும் சிலர், அவர்களுக்கு மத்தியில் தொலைவிலிருந்தே முக்கியஸ்தர் என்று அறிந்து கொள்ளும்படியான மற்றொருவரும் இருந்தார்கள். நல்ல உயரமும் நிறமுமாக பொள்ளாச்சியின் பெரும்பாலான மருத்துவர்களை போன்ற தோற்றம் அவருக்கு, உன்னதமான உடைகள்.
செல்வேந்திரன் என்னை பார்த்ததும் அவரிடம் ’’இவங்கதான் நான் சொல்லிட்டு இருந்த லோகமாதேவி’’ என்று துவங்கி என்னை குறித்து பெருமையாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். பதிலுக்கு அவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றெண்ணிக் கொண்டிருக்கையில் அப்படி செல்வேந்திரன் செய்யாதது எனக்கு ஆச்சர்யமளித்தது.
மறந்திருப்பாராக இருக்கும் என நினைத்துக்கொண்டு நானே ’’தம்பி இவர் யாரு?’’ என்றேன். அந்த இடமே மயான அமைதியானது சில நொடிகளுக்கு. அந்த முக்கியஸ்தர் சுதாரித்துக் கொண்டு தன்னை’’நான் பொள்ளாச்சியின் MP ஷண்முக சுந்தரம் ’’என்று அறிமுகப்படுத்தி கொண்டார்
தர்மசங்கடமாகத்தான் இருந்தது எனினும் என் மீது பிழையொன்றும் இல்லை எனக்கு அவரை தெரிந்திருக்கவில்லை அன்றுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.
அரசியலில் என் அறியாமையை எண்ணிக்கொண்டிருக்கையில் வேட்டைகாரன் புதூர் கிராமத்தில் நானிருந்த இரண்டு வருடங்களும் பெரியதுரையும் நினைவுக்கு வந்தார்கள். அம்மாவின் பணி மாறுதல்களின் போதெல்லாம் நானும் மித்ராவும் ஊர் ஊராக பந்தாடப்படுவோம்.
அப்படி எல்கேஜி யூகேஜி பொள்ளாச்சி புனித லூர்தன்னை கான்வென்ட்டில், 1ம் வகுப்பு வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2 வது மீண்டும் புனித லூர்தன்னை மடிக்கு வந்த நாங்கள் 3வது மீண்டும் வேட்டைக்காரன்புதூர் பள்ளிக்கே திரும்பினோம். 4ம் 5ம் தாராபுரம் செயிண்ட் அலோசியஸ் கான்வென்ட்.
களைப்பும் சோர்வும் அழுக்கு உடைகளும் பசியுமாக பூட்டிய வீட்டுக்கதவுக்கு வெளியே மணிக்கணக்காக காத்திருக்கும் வயதை அடைந்திருத்தால் 6லிருந்து பொள்ளாச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும் தொடர்ந்து படித்தோம்
அந்த 2 வருடங்கள் கிராமத்தில் ஆத்தா அப்பாருவுடன் இருந்தது உண்மையிலேயே பொற்காலம்.
பொள்ளாச்சி வீட்டில் ஏகத்துக்கும் அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. எப்போது நினைத்தாலும் அச்சமூட்டும் இளமைப்பருவம் அங்குதான் கழிந்தது. ஆனால் நேர்மாறாக வேட்டைக்காரன்புதூர் வீட்டில் மகிழ்ந்திருந்தேன்
என் தோழி குஞ்சி அவளது இளைய சகோதரர்கள் பெரிய துரை மற்றும் சின்ன துரை, நான் எங்கள் நால்வர் கூட்டணி வெகு பிரபலம் அப்போது. அவர்கள் வீடு வளவில் இருந்ததால் அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று பலமுறை கண்டிக்கப் பட்டிருக்கிறேன் என்றாலும் நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. உள்ளே ஒரு மீறல் துளிர்த்திருந்த காலம் அது.
மித்ரா எங்களுடன் சேர்ந்ததில்லை அவள் அப்போதே சாதிப் பற்றினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.
குஞ்சியும் சகோதரர்களும் பள்ளிக்கு செல்லவில்லை ஒரு தோட்டத்தில் அவர்கள் குடும்பமே வேலை செய்தது. என் விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த மாலைகளிலும் நால்வருமாக வேட்டைகாரன்புதூரை அங்கும் அங்குலமாக சோதித்தறிந்திருக்கிறோம்.
அரசியலுக்கு வருகிறேன்.
பெரியதுரை சின்னதுரை இருவருமே சாம்பல் வண்ணத்தில் அரைகால் சட்டை அணிந்து மட்டுமே என் நினைவுகளில் இன்னும் இருக்கிறார்கள். மேல்சட்டையுடன் அவர்களை என்னால் நினைவு கூற முடியவில்லை குஞ்சி அவளது அப்பாவின் பழைய சட்டையும் பாவாடையுமாய் இருப்பாள்.
எங்களின் விளையாட்டுகளில் ஒன்று அரசியல் உரை.பெரியதுரை ஒரு பழந்துணியை வெற்றுத்தோளில் துண்டாக அணிந்துகொள்வான்.ஒரு சிறு பாறை மீது அவன் நிற்க நாங்கள் மூவரும் கீழே தரையில் அமர்ந்து கொள்வோம். அவனது கைமுஷ்டியை மைக் போல மடக்கி வாயருகில் பிடித்துகொண்டு பிரசங்கத்தை ’’ தாய்மார்களே! வாக்காளப்பெருமக்களே’’ என்பதற்கு பதிலாக தாயையும் சகோதரியையும் குறிப்பிடும் கிராமத்தின் ஆகக்கேவலமான கெட்ட வார்த்தைகள் இரண்டைச்சொல்லி துவக்குவான். அப்போது சிரிப்பாகத்தான் இருந்தது எனக்கு.
இப்போது நினைக்கையில் 10 அல்லது 12 வயதிருக்கும் அந்த சிறுவனின் நகைச்சுவை உணர்வு வியப்பளிக்கிறது. கூடவே அவனுக்கு அரசியல் குறித்த ஞானமும் இருந்திருக்கிறது போல.
வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையிலிருந்தவர்களின் முகமுழியே வேண்டாம் என்றுதான் பெரும்பாலும் நினைப்பது ஆனால் சந்திக்க விரும்பும் வெகு சிலரில் பெரிய துரை என்னும் நண்பன் இருக்கிறான்.

பெரிய துரை எனக்கு அறிமுகம் செய்த சாகசங்களில் முக்கியமானது நிலத்தில் பதிந்திருக்கும் பெரும்கற்களை புரட்டி அவற்றினடியில் இருக்கும் சிற்றுயிர்களை கலைத்து ஓடச்செய்வதும் ஆராய்வதும்.அதை நான் பலமுறை தனித்தும் செய்துவந்தேன்
ஒருக்கில் நான் மட்டும் ஒரு பரந்த மைதானத்தில் செடிகொடிகளின் மறைவில் என்னால் தூக்கவே முடியாத பெரிய தட்டையான கல்லை சிரமப்பட்டு தூக்கி அதனடியில் இருந்த ஏராளமான சில்லறைக்காசுகளை கண்டேன். அவற்றில் என் சிறு கைகளில் எடுத்துக்கொள்ள முடிந்த அளவு எடுத்துக்கொண்டு வந்து ஆத்தாவிடம் கீழே கிடந்ததாக சொல்லிக் கொடுத்தேன். ஆத்தா காசுகளை அஞ்சறைப்பெட்டியில் வைத்துக்கொண்டார்
அடுத்த வாரமும் அப்படியே கொண்டு வந்தபோது ஆத்தா சந்தேகத்துடன் என்னை விசாரித்தார். நான் ஒரேயடியாக கீழேதான் கிடந்தது என்று சாதித்தேன். உண்மையை சொன்னால் கற்களை புரட்டியதற்காக அடிகிடைக்கும் என தெரிந்திருந்தேன்
பின்னர் என்னை ராமராஜ் சித்தப்பா தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அறியாமல் மீண்டும் நில வங்கியிலிருந்து சில்லறைகளை எடுத்தபோது சித்தப்பா அவற்றை முழுவதுமாக வாரி எடுத்து லுங்கியில் கட்டிக்கொண்டு வீடு வந்தார். அங்கே குண்டு விளையாடும் பையன்கள் சேர்த்துவைத்த காசுகள் அவை என்பதை பிற்பாடு தெரிந்துகொண்டேன்.
வேட்டைகாரன்புதூர் பள்ளிக்கூடமும் என் அழியாத நினைவுகளில் இருக்கிறது. சிறிய ஓட்டுக்கட்டிடம் கேட்டை திறந்தால் ’ப’ வடிவ அறைகளுடன் கட்டிடமும் ஒவ்வொரு அறையின் முன்பும் நெட்டிலிங்க மரங்களும் ஒரே ஒரு வகுப்பறையின் முன்னால் மட்டும் வேம்பும் நிற்கும். நடுநாயகமாக தலைமை ஆசிரியர் அறை, வாசலில் சூரிப்பழங்களும் இலந்தை பழங்களும் வேகவைத்த மரவள்ளி கிழங்கும் விற்கும் ஒரு பாட்டி.
இந்த 2024 புத்தாண்டன்று அந்த வழியே கோவிலுக்கு சென்றேன். அதே கட்டிடம் ஒரு மாற்றமுமில்லாமல் இருந்தது. வேம்பு மட்டும் இல்லை. 3 வது படிக்கையில் என் ஆராய்ச்சியெல்லாம் எப்படி நெட்டிலிங்கமரம் இலைகளை உதிர்க்காமல் அப்படியே நின்றமேனிக்கு நிற்கிறது. வேம்பின் இலைகள் மட்டும் மஞ்சளாகி கொட்டிக்கொண்டே இருக்கிறது என்பதில் தான் இருந்தது . அதற்கு உடம்பு சரியில்லை என்று ஒரு எண்ணம் இருந்த்தால் வேம்பின் மீது பெரும் பரிவுமுண்டாகி இருந்ததும் தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது.
என் 1ம் வகுப்பின் ஒரே ஆசிரியை சரஸ்வதி எனும் பெயருடன் இருந்ததும் தற்செயலல்ல.அவர் அப்போது ஒய்வு பெறும் வயதில் இருந்திருக்கலாம், எனக்கு அவரை மூதட்டியாகத்தான் நினைவு கொள்ளவே முடிகிறது. வகுப்பில் பாடம் என்பது சிலேட்டில் அவர் ’அ’ என்று முழு சிலேட்டையும் அடைத்து எழுதிக்கொடுக்க அந்த ’அ’ வின் மீது மீண்டும் மீண்டும் சுவையான சிலேட்டுப்பென்சிலால் நாங்களும் ’அ’ எழுதிக்கொண்டே இருப்பதுதான்.
அப்பாரு தினம் காலை எனக்கும் மித்ராவுக்கும் சில்லறை காசுகள்,கொடுப்பார் 1 அல்லது 2 பைசாக்கள். அதில் திண்பண்டங்கள் வாங்கிக்கொள்வோம்
அப்பாரு ஊர்த்தலைவர் என்பதால் பள்ளியில் சகோதரிகளான எங்களுக்கு பள்ளியில் நல்ல மரியாதையும் இருந்தது
3 ம் வகுப்பில் இருக்கையில் ஆண்டு விழாவுக்கு ஒரு நடனம் ஆட (தலைமையாசிரியரின் போதாத காலம்) எங்களிருவரையும் தேர்வு செய்தார்கள்,இடுப்பை வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு அவ்வப்போது இடுப்பில் இருந்து ஒரு கையை மட்டும் எடுத்து மேடையில் இருக்கும் காந்தியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி ‘’காந்தி தாத்தா நம் தாத்தா’’ என்ற பாடலுக்கு நடனம் ஆட பயிற்சி அளிக்கப்பட்டது.
வெடுக் வெடுக் என்று ஆட்ட இடுப்பு என்னும் ஒரு பாகம் எனக்கு இல்லாமலிருந்ததுதான் நடனப்பயிற்சியின் பெரும் சிக்கலாக இருந்தது. புஷ்டியாக பூரிப்பாக ஒரே சதைத்திரட்சியாகத்தான் இருப்பேன் அப்போது. மித்ரா கொஞ்சம் சமாளித்துக்கொண்டு ஆடினாள். ஆண்டுவிழாவில் ஆடிய நினைவிலில்லை. பயிற்சியில் மூச்சுவாங்கிய என்னிடம் தலைமைஆசிரியர் கடுப்பில்’’ நீங்க ரெண்டு பேரும் லலிதா பத்மினின்னு நினச்சு கூப்பிடலை டேன்ஸ் ஆட உங்ககிட்டதான் கவுன் இருக்குன்னு கூப்பிட்டேன்’’ என்று திட்டியதும், நடனப் பயிற்சியும் மட்டும் நினைவில் இருக்கிறது. பள்ளி பிரேயர் போதும் அருமையான ஒரு பாடல் பாடுவோம்
’’அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே
அச்சமற்ற தூய வாழ்வு வாழ வேண்டும் நாட்டிலே
இன்பமான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும்
அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே!’’
என்று துவங்கும் பாடலது.
வீட்டிலிருந்து நடந்து வரும் தொலைவில்தான் பள்ளிக்கூடம். சமயங்களில் அப்பாருவுடன் கூண்டு வண்டியிலும் வருவோம். அப்பாரு பிரபல குதிரை மற்றும் மாட்டுவியாபாரி சந்தைகளுக்கு போனால் பலநாட்கள் கழித்துத்தான் வீடு வருவார் அப்படி வரும்போது அகாலங்களில் பள்ளிக்கு வந்து திண்பண்டங்கள் கொடுத்து கொஞ்சிவிட்டு செல்வதும் உண்டு
பள்ளியில் மிகப்பெருமையான வேலை என்பது ஆசிரியர் வந்தவுடன் தலைமை ஆசிரியர் அறையிலிருந்து வருகைப்பதிவேடு எடுத்து கொண்டு வருவதுதான். அது ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்கு அளிக்கப்படும். நான் அந்த வேலையை கெஞ்சிக் கேட்டு வாங்குவதுண்டு.
ஒருநாள் அப்படி அந்த வேலையைவாங்கி சிட்டாக பறந்து சென்று தலைமை ஆசிரியரிடம் அந்த நோட்டை வாங்கிக்கொண்டு திரும்பி நடந்து வருகையில் அப்பாரு எதிர்பாராமல் பள்ளிக்கு வந்திருந்தார். நான் வகுப்பில் இல்லாமல் மைதானத்தில் தனியே இருந்ததையும் என் கையில் இருந்த அந்த நோட்டையும் பார்த்த அவர் பொங்கி ’’என்ற பேத்தி என்ன உனக்கு பியூனா’’ என்று அன்றைக்கு என் வகுப்பாசிரியரை ஏகத்துக்கும் கடிந்துகொண்டார். பிறகெப்போதும் எனக்கு அந்த வேலை கொடுக்கப்படவே இல்லை.
மூன்றாவதில் தமிழுக்கென்று ஒரு ஆசிரியர் இருந்தார் அவர் வகுப்பில் அவ்வப்போது முந்தைய வகுப்பின் பாடங்களில் கேள்வி கேட்பார் பதில் சொன்னால் அப்போதே எழுந்து வீட்டுக்கு போகலாம். அவர் வகுப்புக்களில் என் பைக்கட்டை கைகளால் முன்கூட்டியே பிடித்துகொண்டு நான் துடிப்புடன் அமர்ந்திருப்பேன் . எப்படியும் அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் எனக்கு பதில் தெரியும். அப்படி பலநாட்கள் பதில்சொல்லி விட்டு பைக்கட்டை மித்ராவிடம் கொடுத்துவிட்டு நான் பெரிய,சின்ன துரைகளுடன் ஊர்சுற்ற கிளம்பி இருக்கிறேன்.
அதுபோன்ற நாட்களில் மட்டுமல்ல எப்போதும் நான் என் பள்ளிக்கு பையை எடுத்துச்சென்றது இல்லை அது எப்போதும் மித்ராவின் வேலை அவளே எனக்கும் சேர்த்து எடுத்துகொண்டு வருவது எழுதப்படாத விதியாக என்னால் சமைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் கோபித்துக்கொண்டு ’’நான் எதுக்கு உனக்கு வேலை செய்யனும் நீயே எடுத்துட்டு வா’’ என்று தெருவில் மித்ரா என் புத்தகப்பையை (அதாவது சிலேட்டுப்பை) வைத்துவிட்டாள். நான் கிஞ்சித்தும் கவலைப்படாமல் என் ஊர் சுற்றும் வேலையை பார்க்க சென்று விட்டேன் பின்னர் வீட்டில் கிடைக்கவிருக்கும் அடிகளை எண்ணி பயந்து அழுதுகொண்டே அவளே எடுத்து கொண்டு வந்தாள்
அந்த பள்ளியின் வேறு வகுப்பின் ஆசிரியை ஒருவர் ஒருநாள் என்னிடம் அவர் மதிய உணவு சாப்பிட்ட பித்தளை தூக்குப்போசியை கொடுத்து கழுவித் தர சொன்னார். அந்த அவமானத்தை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.நான் ஒருபோதும் அப்படியான வேலைகளை மட்டுமல்ல எந்த வேலைகளையுமே வீட்டில் செய்ததே இல்லை
ஆனால் ஆசிரியர் என்பதால் மறுக்கவும் முடியவில்லை வாங்கி அதை குழாயடியில் அலசிக் கழுவினேன். கழுவுகையிலேயே என் மனம் எல்லா திட்டங்களையும் தீட்டியது. நானே வலிய அவரிடம் ’’டீச்சர் இதை வீட்டில் கொண்டு போய் கொடுத்துறட்டுமா’’ என்றேன். அவர் மகிழ்ந்து சரி என்றார் அந்த ஆசிரியை வீடு எனக்கு தெரியும் (எனக்கு தெரியாத வீடுகள் சந்துகள் பொந்துகள் ஏதும் அங்கு இல்லை) காமாட்சியம்மன் கோயில் பின்புறத்தில் ஒரு சிறு இருளடைந்த வீடுஅது கண் தெரியாத அவரின் மாமியார் வாசல் திண்ணையில் ஒரு குச்சியுடன் அமர்ந்திருப்பார், சத்தம் கேட்டால் குச்சியை முன்னால் நீட்டி தட்டி யாரு? என்பார்.
நான் அந்த தூக்குப்போசியின் மூடியை கழற்றி வைத்துக்கொண்டு அடிப்பாத்திரத்தை மட்டும் அவர் முன்னால் ஓசையெழ வைத்துவிட்டு ’’டீச்சர் தூக்குப்போசியை கொடுத்துட்டு வர சொன்னாங்க’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
ஆத்தாவிடம் அந்த மூடியைகொடுத்து வழக்கமான பொய்யான’’ கீழே கிடந்தது’’ என்பதை சொன்னேன். விலைக்குப்போட பழைய பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் அட்டாலியில் ஆத்தா அதை வீசியெறிந்தார்கள்
என்னிடம் நூற்றுக்கணக்கான முறை தூக்குப்போசியின் மூடி எங்கே என்று கேட்ட அந்த ஆசிரியருக்கு ஒரே பதிலாக ’’பாட்டிட்ட கொடுத்துட்டேன்டீச்சர்’’ என்பதையே சொல்லிக்கொண்டிருந்தேன். பணி ஓய்வு பெறும் வரை அவர் மாணவர்களிடம் எந்த வேலைகளையும் ஏவியிருக்க மாட்டார்.
இதுபோன்ற எனது செயல்கள் வீட்டினரால் ‘’திண்ணக்கம்’’ என்னும் இப்போது வழக்கொழிந்து விட்டிருக்கும் சொல்லால் அவ்வப்போது குறிப்பிடப்படும்.
புகையிலை வாசத்துடன் அப்பாருவின் கருப்பு கம்பளிக்குள் பொதிந்துகொண்டு அவர் சொல்லும் மகாபாரதக் கதைகளை கேட்டது, வறுத்த ஈசல் உருண்டையுடன் கருப்பட்டிகருப்பு காப்பியை மேலெல்லாம் வழிய குடித்தது , வீட்டுக்குள் வெளிச்சம் வர ஓட்டில் ஓரிடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின் வழியே தரையில் இறங்கி இருக்கும் வெளிச்ச சதுரத்தில் தட்டை வைத்துக்கொண்டு மித்ராவுடன் சண்டையிட்டுக்கொண்டு சாப்பிட்டது என ஏராளம் நினைவுகள் மலரும் அவ்வப்போது.
கள்ளிப்பழத்தை முட்களுடன் வாயிலிட்டு நாக்கெல்லாம் முள்குத்தி வாயை மூடமுடியாமல் திறந்த படியே அலறிக்கொண்டு வீடுவந்து மேலும் அடிவாங்கியது, வேப்பமுத்துக்களை படிப்படியாக பொறுக்கிச்சேர்த்து காசாக்கியது, ஆத்தா களை எடுத்த காட்டில் மதிய உணவின் போது மல்லிகை அரும்புபோலிருந்த பச்சைமிளகாய்ப்பிஞ்சை பறித்து கடித்துக்கொண்டு பழஞ்சோற்றை கரைத்து குடித்தது, சூரிப்பழங்களின் கொட்டைகளை உடைத்து உள்ளே எண்ணெய் தடவினது போல மினுங்கும் விதைகளை எடுப்பது, சீனி புளியங்காயின் கருப்பு விதைகளை காயமில்லாமல் உரிப்பது, எருக்கம் பூக்களின் அரும்புகளை ஓசையெழ அழுத்தி வெடிக்கச் செய்வது, வாரா வாரம் வியாழக்கிழமைகளில் ஆத்தா சாணி மெழுகும் வாசலுக்கு நீலக்கரையிடவென்று அவுரிச்செடிகளை பறித்தரைத்து சாயமெடுத்தது, அத்தைகளுடன் பருத்திபறித்தது, இரட்டைஜடையில் ஊதா டிசம்பர் பூக்களை சூடிக்கொண்டது, மஞ்சள் நிற (Hibiscus glanduliferus) மலர்களை நீரில் கசக்கி எண்ணையாக்கி கொட்டங்குச்சியில் சோறாக்கி விளையாடியது ( எப்போதும் சின்ன துரை வாயில் வண்டி ஓட்டிக்கொண்டு அலுவலகம் போகும் அப்பா ரோல்தான் செய்வான், அலுவலகம் போகும் முன்னர் நானோ குஞ்சியோ கொட்டாங்குச்சிகளில் மண் நிரப்பி ஆக்கி வைத்திருப்பதை ’’என்னடி சோறாக்கி இருக்கே’’ என்று காலால் தவறாமல் எத்துவான்) என வேட்டைக்காரன்புதூரில் தான் எனக்கு தாவரங்களுடனான அணுக்கமும் துவங்கியது
அப்பாருவின் பெயர் மயில்சாமி என்பதால் ஆத்தா ம, மை என்னும் வார்த்தைகளை சொல்லமாட்டார். அப்போது மைதா வந்திருந்தது, ஆத்தா அதை ரக்கிரிப்பொடி என்பார்.
அம்மாவும் அப்பாவின் பெயர் அழுக்கு ராஜ் என்பதால் அழுக்கு என்றே சொன்னதில்லை ’’துணியை கசக்காதே வீணாப் போயிரும் போட்ட துணியெல்லாம் துவைக்கப் போடு’’ இப்படி அழுக்கு என்பதை சொல்லாமல் தவிர்த்தே பேசுவார். கணவன் பெயரை சொன்னால் அவருக்கு ஆயுசு குறையும் என்னும் நம்பிக்கை ஆத்தாவுக்கு இருந்ததில் வியப்பில்லை ஆனால் அப்பாவின் மன அழுக்குக்களையெல்லாம் முற்றாக அறிந்திருந்த அம்மாவுக்கும் இருந்ததுதான் நம்ப முடியவில்லை. அம்மா விரும்பியபடியே அப்பாவை நிறையாயுளுடன் விட்டுவிட்டு மறைந்துவிட்டார்.
இன்றென்னவோ பழைய நினைவுகள், வேட்டைகாரன்புதூர் வாசனைகள்.

கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை உணவில் சயனைடு கலந்தளித்து கொலை செய்த கேரளாவின் ஜோலி ஜோசப் 2019 ல் கைது செய்யப்பட்டார் .வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த 2023 டிசம்பர் 22ல் நெட்ஃப்ளிக்ஸில் இதுகுறித்த ’’கறியும் சயனைடும்’’ என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. கொலையானவர்களில் இரண்டு வயதுப் பெண்குழந்தையும் உண்டு.1
இப்படி உணவில் நஞ்சூட்டி கொலை செய்வது வரலாறெங்கும் நடந்திருக்கிறது. பிரிட்டனின் முதல் பெண் தொடர் கொலையாளி எனப்படும் மேரி ஆன் காட்டன், உணவில் ஆர்சனிக் நஞ்சூட்டி அவளது 4 கணவர்கள், 2 காதலர்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர்களை கொலை செய்தாள்( Mary Ann Cotton 1832-1873). குற்றம் நிரூபிக்கப்பட்டு மேரி ஆன் தூக்கிலிடப்பட்டார். இங்கிலாந்த்தின் மிக கொடூரமான கொலைகளிலொன்றாக கருதப்படும் இவ்வழக்கில் மேரி தூக்கிலிடப்படுகையில் கழுத்தெழும்பு முறிந்தல்ல மூச்சுதிணறியே அவர் கொல்லப்படவேண்டும் என்பதற்காக தூக்குகயிற்றின் நீளம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டது என்றும் ஒரு பேச்சிருக்கிற்து. 2.

ஆர்சனிக்கை உணவில் கலந்துகொடுத்து கொலை செயவ்து ரோமானிய கிரேக்க அரசுகளில் மிக சாதாரணமாக நடந்தது. அப்போதைய அரியணை போட்டிகளில் வெல்ல போரைக்காட்டிலும் ஆர்சனிக்கே பெரிதும் கைகொடுத்தது. ஆர்சனிக்குக்கு நஞ்சுகளின் அரசனென்றும், அரசர்களின் நஞ்சென்றும் இரட்டைப்பெயருண்டு.
கிரேக்க ரோமானிய வரலாற்றில் நஞ்சூட்டி கொல்லுதல் மிக சாதாரணமாக நிகழ்ந்துள்ளது. கிரேக்கர்களுக்கு நச்சு ஹெம்லாக் செடியைப்போல, ரோமானியர்களுக்கு ஆர்சனிக் இருந்தது.

முதல் நூற்றாண்டிலிருந்தே ஆர்சனிக் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்றாலும் 1250 ல் இதன் வேதியியல் ரீதியான கண்டுபிடிப்புக்கு ஆல்பெர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus) என்பவரே காரணம். நச்சியலின் தந்தையான பாராசெல்சஸ் (Paracelsus) தனது படைப்புக்களில் ஆர்சனிக் நஞ்சை குறிப்பிட்டிருக்கிறார்.
நெப்போலியனின் மரணத்துக்கே சிறுகச்சிறுக அளிக்கப்பட்ட ஆர்சனிக் காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து சிறுகச் சிறுக அளிக்கப்படுகையில் அது உயிராபத்தை விளைவிக்கும். ஒரு வளர்ந்த மனிதனை கொல்ல பட்டாணி அளவுக்கு ஆர்சனிக் போதுமானதாக இருக்கும்.
கிபி 1550ல் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்தின் ஈபர்ஸ் பாப்பிரஸ் மருத்துவநூலில் ஆர்சனிக் நஞ்சாதல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போரில் நஞ்சூட்டுவதற்கும் ஆர்சனிக் பயன்பட்டிருக்கிறது. முதல் உலகப்போரில் ஜெர்மனி ஆர்சனிக் நஞ்சூட்டுதலை போர் வழிமுறைகளிலொன்றாக கையாண்டிருந்தது.
உள் நோக்கமற்ற ஆர்சனிக் நஞ்சூட்டுதல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக 1900த்தில் இங்கிலாந்தில் பியர் தயாரிப்பில் உட்பொருட்களில் ஆர்சனிக் இருந்ததால் ஏராளமானோர் ஆர்சனிக் நஞ்சூட்டப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
1950களில் ஜப்பானில் குழந்தைகளுக்கான பால்பொடியில் அதிக ஆர்சனிக் இருந்து பாதிப்புண்டானது. பங்களாதேஷில் ஆர்சனிக் இருந்த நிலத்தடி நீரை பயன்படுத்தியதால் பெரிய அளவில் ஆர்சனிக் பாதிப்பு உண்டானது
ஆர்சனிக் உணவின் மூலமாக தொடர்ந்து உடலில் சேர்வதால் ஆபத்தை சந்திக்கவிருக்கும் நிலைமை உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
இப்போது பல நாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஆர்சனிக் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் ஆசியாவில் ஆர்சனிக் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்தான் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆர்சனிக்கை உணவில் கலந்து கொலை செய்வது சுலபமாக இருந்தது ஏனென்றால் ஆர்சனிக் நஞ்சூட்டப்பட்டதின் துவக்க அறிகுறிகள் அனைத்தும் கெட்டுப்போன உணவினால் உண்டாகும் அறிகுறிகளான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்றுவலி ஆகியவைதான். எனவே உணவில் இதை கலந்து கொடுப்பது எளிதாகவும் ஆர்சனிக் கொலை என்று கண்டுபிடிக்க முடியாமலும் இருந்தது .
1836 ல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் மார்ஷ் (James Marsh) உடலிலிருக்கும் ஆர்சனிக்கை எளிய பரிசோதனைகள் மூலம் கண்டறியும் முறையை கண்டுபிடித்த பிறகு ஆர்சனிக் நஞ்சூட்டுதல்கள் மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது. இந்த பரிசோதனை முறைகளுக்கே மார்ஷ் முறை என்றே பெயர்.
உணவில் ஆர்சனிக் கலந்து கொடுத்து கொலைசெய்த வரலாற்றுக்காலங்கள் போய் இப்போது நாமனைவரும் உண்ணும் உணவிலேயே ஆர்சனிக் இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியூட்டும் கவலையளிக்கும் உண்மை. மனிதசெயல்பாடுகளால் காற்றும் நீரும் நிலமும் மாசடந்து சூழலில் இருக்கும் ஆர்சனிக் போன்ற நஞ்சுகள் நம் உணவுச்சங்கிலியில் நிரந்தரமாக இணைந்துவிட்டன.
நமது அன்றாட காலை உணவான இட்லி தோசையிலிருந்து, மதிய உணவு, பொங்கல் பண்டிகையில் புதுப்பானையில் பொங்கும் புத்தரிசி, இறைச்சிச்சாற்றில் வேகவைக்கப்பட்ட அரிசி உணவான இத்தாலிய ருஸாட்டோ, இந்தோனேஷியாவின் நாசி கோரெங், இலங்கையின் கிரிபாத், சீன ப்ரைடு ரைஸ், மீனும் இறைச்சியும் காய்கறிகளுடன் கலந்து சமைக்கப்பட்ட ஜப்பானிய டோன்புரி, சுஷி வரை உலகின் பல பகுதிகளில் அரிசி உணவு தான் பல லட்சம் மக்களின் விருப்பத்துக்குகந்த பிரதானமான உணவாக இருக்கிறது.

உலக மக்களில் 50 சதவீதத்தினர் அரிசி உணவை விரும்பி உண்கிறார்கள். உலகின் மொத்த அரிசி உற்பத்தியில் 90 % ஆசியாவில் உற்பத்தி ஆகிறது. ஆசியாவில்தான் உலகின் அதிக அரிசி உணவு உண்ணப்படுகிறது. ஆசியாவின் பெரும்பாலான அரிசி வகைகளில் ஆர்சனிக் நஞ்சு இருக்கிறது
மனிதனின் மிகப் பழமையான தானிய உணவுகளில் அரிசியும் ஒன்று. அரிசியின் தோற்றம் குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை எனினும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அரிசி, உணவாக பயன்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சீன இந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன.
நெல்/அரிசி சீனாவில் தோன்றி சீன ஆற்றுப்படுகைகளில் முதன்முதலில் சாகுபடி செய்யப்பட்டது என்றும் இமாலய பகுதியின் காட்டுப்புல்லான Oryza rufipogon லிருந்து தோன்றியதுதான் அரிசி அங்கிருந்துதான் சீனாவுக்கு சென்றது என்றும் இரு வலுவான கருத்துக்கள் நிலவுகின்றன.
சீனாவின் சியான் ரென் குகையில் கிமு 11 000–12 000 காலத்தை சேர்ந்த அரிசியின் தொல்படிவங்கள் கிடைத்திருக்கின்றன. எனினும் கங்கை ஆற்றுப்படுகையில்தான் தொல்காலத்திலேயெ நெல்சாகுபடி செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க அரிசி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது
எங்கு தோன்றியது என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் நெற்பயிர் உலகின் முக்கியமான உணவுப்பயிர்களிலொன்று. மக்காச்சோளம், கோதுமைக்கு அடுத்தபடியாக உலகில் நெல்லே மிக அதிகம் சாகுபடியாகிறது.
உலகின் பெரும்பான்மையான அரிசி சாகுபடியாகும் ஆசியாவின் கலாச்சாரத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிறது நெல், நெற்பயிர், அரிசி மற்றும் அரிசி உணவு ஆகியவை.
இந்தியாவில் அரிசி மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களின் அறுவடை திருநாள் விழாக்கள் பெரும்பாலும் நெற்பயிரை முக்கியமானதாகக் கொண்டே நடக்கின்றன.

அதர்வ வேதம், தைத்ரீய பிராமணம், சதபத பிராமணம், மகாபாரதம் ஆகியவை அரிசியை ,நெல்லை, அன்னம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றன. இந்தியத் திருமணங்களில் மஞ்சள் கலந்து அரிசி அக்ஷதை தூவப்படுகிறது.
கேரளாவில் மணமகள் முதன்முதலில் தான் வாழவிருக்கும் வீட்டுக்குள் நுழைகையில் கால்களால் நெல் நிறைந்த கலனை தட்டிவிட்டு நுழைவது செழுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்திய மாநிலங்கள் பலவற்றில் குழந்தைகளுக்கு முதலுணவாக அரிசிச்சோற்றை அளிப்பது ஒரு மங்கல நிகழ்வாக கோவில்களில் நடைபெறும். அரிசிக்கஞ்சியை கொப்புளங்களுக்கு வைத்துக்கட்டுவது, அரிசி கழுவிய நீரில் தலைமுடியை அலசுவது போன்ற மருத்துவம், அழகுப்பராமரிப்பு சார்ந்த உபயோகங்களும் அரிசிக்கு இருக்கின்றன, வாய்க்கரிசி என்னும் இறப்புச்சடங்கிலும் அரிசி மிக முக்கிய இடம் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அரிசி பொன்னியம்மன் என்னும் கடவுளாக வழிபடப்படுகிறது. அன்னலக்ஷ்மி என்பதும் அரிசியின் தெய்வமே.
அதர்வவேதம் அரிசியை இறப்பே இல்லாத சொர்க்கத்தின் பிள்ளை என்கிறது. சகோதரர்கள் வேகவைத்த அரிசியை போல இணைந்து ஆனால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்னும் ஒரு முதுமொழியும் இந்தியாவில் உண்டு. இந்தியாவில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் சடங்கின்போது தாலத்தில் பரப்பப்பட்டிருக்கும் அரிசியில் பெயர் எழுதப்படும். வேள்விகளில் அவியளிக்கவும் அரிசி பயனாகிறது. சீனப்பெருஞ்சுவர் கட்டுமானத்தில் வேகவைத்த அரிசிகஞ்சி பயன்படுத்தப்பட்டது.
ஜப்பானிய அரிசி மதுவான ஸாகேவிற்கென்றெ நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் பிரத்யேகமாக அங்கு சாகுபடியாகிறது.
இந்தியாவின் மருத்துவ உபயோகங்கள் கொண்ட அரிசி வகைகளான ’காந்தி பான்கோ’ சட்டீஸ்கரிலும் ( Kanthi Banko), மெஹர், சரய்ஃபூல், தன்வர் ஆகிய ரகங்கள் ஒரிஸாவிலும் (Meher, Saraiphul & Danwar), அதிக்கயா மற்றும் கரிபட்டா ரகங்கள் ( Atikaya & Kari Bhatta ), கர்நாடகத்திலும் விளைவிக்கப்படுகின்றன.
செந்நெல்லு, குஞ்சிநெல்லு, எருமக்காரி, கருத்த செம்பாவு போன்ற அரிய பிரத்யேக நெல் ரகங்கள் கேரளாவில் சில பகுதிகளில் மட்டுமே விளைகின்றன.2022 ன் புள்ளிவிவரம் இந்தியாவில் 46 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடியாகிறது என்கிறது.
நிறங்களைக் கொண்டு அரிசி வெள்ளை, பழுப்பு, கருப்பு, சிவப்பு என என பலவகைகளாகவும் நறுமணத்தின் அடிப்படையில் கிழக்காசிய பாஸ்மதி, தாய்லாந்தின் மல்லிகை அரிசி, இந்திய மாம்பழ மற்றும் கடலை வாசனை கொண்டவை, சீரக சம்பா போன்ற மெலிதான நறுமணம் கொண்டவை, இத்தாலிய ஆர்பொரியோ நறுமண ஆரிசி, ஒரு கிலோ 100 டாலர்களுக்கும் அதிகமான விலையில் கிடைக்கும் ஜப்பானிய கின்மீமய் (Kinmemai) அரிசி என்று அரிசியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வகைகள் உலகெங்கும் இருக்கின்றன.
அரிசிமணிகளின் அளவு அவற்றின் மாவுச்சத்து, நறுமணம், நிறம் என பல வேறுபாடுகள் இவ்வகைகளில் இருக்கின்றது எனினும் அரிசியின் அளவை பொருத்தவரை நீள, குட்டை மற்றும் நடுத்தர ரகம் என 3 வகைகளே உள்ளன.
ஆசியாவில்தான் நெல் சாகுபடி முதன்முதலாக கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. Oryza rufipogan என்னும் அறிவியல் பெயருடைய காட்டு நெல்லினத்திலிருந்து ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் உருவாக்கப்பட்டு பயிரிடப்பட்டன. ஒரைஸா சட்டைவாவின் துணை சிற்றினங்களில் ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும் இண்டிகா மற்றும் அதிக ஒட்டும்தனமை கொண்ட ஜப்பானிகா ஆகியவை உள்ளன.
நெல் ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத் தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் அரிசி என்னும் உணவாகிறது.
நெல்லின் அறிவியல் பெயரான Oryza sativa வில் சட்டைவா என்பது சாகுபடி செய்யப்பட்டது என்பதை குறிக்கிறது. ஒரைஸா என்னும் சொல், அரிசி என்பதை குறிக்கும் தமிழ்ச் சொல்லிருந்து வந்ததாகவும் தமிழின் அரிசியே ஆங்கில ரைஸ் ஆகவும் கிரேக்க ஒரைஸா ஆனதாகவும் கருதப்படுகிறது. அப்படி இல்லை அரிசியை குறிப்பிடும் ஒரைஸா கிரேக்க சொல்லிலிருந்தே வந்தது என்னும் கருத்தும் உண்டு.
நெற்பயிரிலிருந்து அரிசி மட்டுமல்லாது தட்டை, வைக்கோல், உமி போன்ற கால்நடை தீவனங்களும், தவிட்டிலிருந்து எண்ணெய் என பல்வெறு பயன்களும் கிடக்கின்றன. அரிசியில் சிறிதளவு புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து ஆகியவையும் பிரதானமாக கார்போஹைட்ரேட் அல்லது ஸ்டார்ச் எனும் மாவுச்சத்தும் உள்ளது.
புழுங்குதல் (Parboiling) மூலம் அரிசி மணிகளுக்குள் நெல்மணிகளின் மேலுறையில் இருக்கும் சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. பச்சரிசியில் இந்த சத்துக்கள் இருக்காது.3
சங்கப்பாடல்களில் வேகவைத்த பிறகு கட்டைவிரல் தடிமனில் இருந்த ஒரு வகை நெல் உள்ளிட்ட பல நெல்வகைகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 2 லட்சம் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது நாம் அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டிருக்கிறோம்
அரிசியின் சர்க்கரை உயர்த்தல் குறியீடு ( glycemic index ) 20 லிருந்து 73 வரை இருப்பதால் ரத்த சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை குறைவாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
ரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு பழுப்பு /மட்டை/சிவப்பு அரிசி வெள்ளை அரிசியைக்காட்டிலும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது
ஆனால், பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றிய, ஆசியா முழுவதிலும் சாகுபடியாகின்ற, உலகின் பாதி மக்கள் தொகையின் பிரதான உணவாயிருக்கிற, பல நாகரிகங்களின், தொன்மங்களின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாகி விட்டிருக்கிற அரிசி உணவில் உயர் சர்க்கரை உயர்த்தல் குறியீடு மட்டும்தான் ஆபத்தா? என்றால் இல்லை அதைக்காட்டிலும் ஆபத்து அரிசி உணவில் இருக்கிறது.
நமது அன்றாட உணவில் ஏதோ ஒரு வடிவில் கட்டாய இடம் பிடித்திருக்கும் அரிசி உணவில் ஆர்சனிக் நஞ்சு(arsenic -As)) இருக்கிறது. தொடர்ந்து அரிசி உணவை உண்ணுவதால் உடலில் சேர்ந்துவிடும் ஆர்சனிக் தீங்கு விளைவிக்கிறது.
ஆர்சனிக் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் காற்றிலும் இருக்கும் ஒரு மாசு. ஆர்சனிக் பூச்சிக்கொல்லி, நிறமிகள், தளவாடங்கள், கண்ணாடி, ஆடைகள், தோல்பதனிடுதல் மற்றும் மருந்து உற்பத்தி ஆகிய தொழிற்சாலைகளின் கழிவுகளில் காணப்படும் ஒரு நஞ்சு. ஆர்சனிக் கொண்டுள்ள பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் உலகநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சூழலில் சேர்ந்திருக்கும் ஆர்சனிக் சுமார் 9000 வருடங்களுக்கு அச்சூழலில் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். 4
நிலத்தில் இருக்கும் ஆர்சனிக் அங்கு சாகுபடியாகும் தாவரங்கள் வழியாக நம் உணவு சங்கிலியில் இணைந்துகொள்கிறது.ஆர்சனிக் கரிம, கரிமமற்ற (organic & inorganic ) என்னும் இருவகைகளில் சூழலில் இருக்கிறது.கரிம ஆர்சனிக்கை காட்டிலும் கரிமமற்ற ஆர்சனிக் கடும் நஞ்சுள்ளது.
உணவில் இருக்கும் ஆர்சனிக்கின் வகை, அதன் அளவு, அதை எடுத்துக் கொள்ளும் நபரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை பொருத்து அதன் விளைவுகள் இருக்கும்
நேரடியாக நிலத்திலும் பாசனத்துக்கு உபயோகப்படுத்தும் நீரிலும் ஆர்சனிக் இருக்கும். பல தாவரங்கள் நிலத்தில், காற்றில் நீரில் இருக்கும் ஆர்சனிக்கை கிரகித்துக்கொள்கின்றன. நெற்பயிரும் புகையிலைப்பயிரும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. புகைப்பிடிப்பதன் ஆரோக்கிய கேடுகளில் ஆர்சனிக்கும் சேர்ந்து விட்டிருக்கிறது. தக்காளி, கேரட் போன்ற காய்கறிப் பயிர்கள், கீரைகள் ஆகியவையும் ஆர்சனிக்கை எடுத்துக்கொள்கின்றன.
அமெரிக்காவின் நச்சுப்பொருட்களால் உருவாகும் நோய்க்கான அமைப்பு (Agency for Toxic Substances and Disease Registry) தனது தளத்தில் தீங்கிழைக்கும் பொருட்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் ஆர்சனிக்கை முதலிடத்தில் பட்டியலிட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் பொருட்களின் முதன்மைப்பட்டியலில் ஆர்சனிக் இருக்கிறது.
ஆர்சனிக் உடலில் அதிக அளவில் சேர்வது ஆர்சனிக் நஞ்சாதல் -Arsenicosis எனப்படுகிறது. இந்த அதிகரித்த ஆர்சனிக் அளவுகள் வாந்தி,வயிற்றுவலி மூளைக்கோளாறு, இருதயக் கோளாறு மற்றும் புற்றுநோயை உருவாக்கும். அதிக ஆர்சனிக் ரத்தசர்க்கரை நோயையும் உண்டக்குகிறது. 5
தொடர்ந்து ஆர்சனிக் மாசடைந்த நீரை அருந்துவதாலும், ஆர்சனிக் கொண்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணுவதாலும் உடலில் அதிக அளவில் ஆர்சனிக் சேரும். ஆர்சனிக் மாசுபட்ட இடங்களில் வாழ்வதும் இதற்கு ஒரு காரணமாகும்.
குடிநீர்லிலிருந்து மட்டுமே 200 மில்லியன் மக்கள் உடலில் பாதுகாப்பற்ற அளவுகளில் ஆர்சனிக் சேர்கிறது. மிக அதிக ஆர்சனிக்கை குடிநீரினால் உடலில் கொண்டிருப்பவர்களில் மேற்கு வங்க மற்றும் பங்களாதேஷ் மக்கள் இருக்கிறார்கள்.
தீவிரமான அளவுகளில் ஆர்சனிக் உடலில் சேர்வது அரிதாகவே நிகழ்கிறது என்றாலும் தொடர்ந்து உடலில் சேர்ந்து கொண்டிருக்கும் ஆர்சனிக் அந்த நிலைக்கு நிச்சயம் இட்டுச்செல்லும். உலக சுகாதார அமைப்பு ஒரு லிட்டரில் 10 மைக்ரோகிராம் அளவிலான ஆர்சனிக் இருப்பது பாதுகாப்பற்றது என்கிறது.
பல நாடுகளில் இருக்கும் இயற்கை கொதிநீர் ஊற்றுக்களும் மிக அதிக அளவு ஆர்சனிக்கை கொண்டிருக்கின்றன. நீர், காற்று, நிலம், உணவு இந்த நான்கிலிருந்தும் ஆர்சனிக் நம் உடலில் சேரும் வாய்ப்புள்ளது.6
நெற்பயிர் சாகுபடியின் போது வளர்ச்சிக்கு தேவையான கனிங்களை அவை வளரும் நிலத்திலிருந்து எடுத்துக்கொள்ளும், அப்போது நிலத்திலிருக்கும் ஆர்சனிக் போன்ற நச்சுப்பொருட்களையும் நெற்பயிர் கிரகித்து, நெற்பயிரின் கனியான நெல்மணி உள்ளிட்ட தாவர பாகங்கள் அனைத்திலும் ஆர்சனிக்கை சேமித்துவைக்கிறது . மாசடைந்த ஆர்சனிக் போன்ற நச்சுபொருட்கள் இருக்கும் நீர் நெற்பயிரை சுற்றிலும் நெடுநாட்கள் தேங்கி இருக்கும்படி (flodding) நெல்சாகுபடி முறைகள் இருப்பதாலும் பிற பயிர்களைக்காட்டிலும் நெல்லில் ஆர்சனிக் அளவு அதிகரிக்கிறது.
அரிசியில் இருக்கும் ஆர்சனிக் வகைகள் arsenite (As (III)), arsenate (As (V)), methylarsonic (MMA), மற்றும் dimethylarsinic acid (DMA). இவற்றில் ஆர்சனைட்டும் ஆர்சனேட்டும் கரிமமற்ற வகை. MMA, DMA இரண்டும் கரிம வகை.
கடந்த சில வருடங்களாகவே இந்திய அரிசியின் ஆர்சனிக் அளவுகள் ஆய்வுக்குரியதாகி இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களில் இந்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் ( 2015/10006 ) கரிமமற்ற ஆர்சனிக் அளவு உணவுக்கான அரிசியில் அதிகபட்சமாக 0.10 mg/kg இருக்கலாமென்கிறது ஆனால் பச்சரிசி புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட அரிசி வகைகளின் ஆர்சனிக் அளவு 0.20 & 0.25 mg/ kg ஆக இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் ,பீஹார் விவசாய பல்கழைக்கழகம் மற்றும் பாஸ்மதி ஏற்றுமதி வளர்ச்சிக்கான நிறுவனமான BEDF, ஆகியவற்றுடன் இணைந்து அரிசி வகைகளின் ஆர்சனிக் அளவுகளை ஆய்வு செய்து வருகின்றன.
கடலுணவுகள், கோழி இறைச்சி, ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்கள் என அனைத்திலும் ஆர்சனிக் இருக்கிறது எனினும் அரிசியிலிருப்பதை விட இவற்றில் மிக குறைவாகவே இருக்கிறது.பிற தாவரங்களை காட்டிலும் சாகுபடியின் போது அதிக அளவு நீர் தேவைப்படுவதால் நெற்பயிர் அதிக ஆர்சனிக்கை எடுத்துக்கொள்கிறது. ஆர்சனிக் பல உலக நாடுகளின் நிலத்தடி நீரில் மிக அதிக அளவில் இருக்கிறது.
எல்லா அரிசி வகைகளிலும் ஆர்சனிக் இருக்கிறதா என்றால் ஆம். மாசுபட்ட நிலத்தில், மாசுபட்ட நீரில்தான் நெல் உலகெங்கிலும் சாகுபடியாகிறது.
வெள்ளை அரிசியில் மட்டை/பழுப்பு/சிவப்பு அரிசியில் இருப்பதை காட்டிலும் மிககுறைவாகவே ஆர்சனிக் இருக்கிறது. பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியைக்காட்டிலும் 60-80% அதிக ஆர்சனிக் இருக்கிறது.பாஸ்மதி, மல்லிகை அரிசி வகைகளில் இயற்கையாகவே ஆர்சனிக் அளவு மிக மிக குறைவாக இருக்கிறது. நேபாளம், வட இந்தியா, மற்றும் வடக்கு பாகிஸ்தானில் காற்றிலும் நீரிலும் நிலத்திலும் ஆர்சனிக்கின் அளவு மிக குறைவு என்பதால் அங்கு விளையும் நெல் வகைகளில் ஆர்சனிக் நஞ்சு மிகக்குறைவு.7
அரிசியின் ஆர்சனிக் அளவு சோதனைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். உணவில் ஆர்சனிக் இருக்கலாம் என்று சந்தேகமும் வருத்தமும் கொள்பவர்கள் அவர்கள் பயன்படுத்தும் நீரில் அரிசியில் ஆர்சனிக் அளவை சோதித்துக்கொள்ளலாம். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையில் உடலின் ஆர்சனிக் அளவு தெரியவரும்.
அரிசியை உணவில் முற்றாக தவிர்க்க முடியாது எனினும் எந்த அரிசியை, எப்படி சமைத்து, எவ்வளவு உண்கிறோம் என்பதில் கவனமாக இருந்தால் பெருமளவு ஆபத்தை தவிர்க்கலாம்.
அரிசியில் ஆர்சனிக்கை நீக்கும் எளிய வழிகள்:
பலமுறை கழுவி கஞ்சி வடிக்கையில் அரிசியிலிருக்கும் சத்துக்களும் நீக்கப்படுகின்றன. எனவே அரிசிஉணவுடன் காய்கறிகள் பருப்பு கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாகவே உணவுண்ணும் தட்டின் பாதியளவு காய்கறி, பழத்துண்டுகள், கீரை ஆகியவையும் கால்பாகம் புரதத்திற்கான பருப்பு/ இறைச்சியும் மீதமிருக்கும் கால்பாகத்தில் குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடும் குறைந்த ஆர்சனிக்கும் இருக்கும் நறுமண அரிசியும் இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.
உணவின் மூலமாக உடலில் ஆர்சனிக் நஞ்சு சேர்வது உலகின் தற்போதைய மிக முக்கியமான ஆரோக்கிய பிரச்சனையாகி இருக்கிறது. மற்ற தானியங்களைக் காட்டிலும் அரிசியில் பத்து மடங்கு ஆர்சனிக் அளவு அதிகமென்பதும் அரிசியே பலரின் பிரதான உணவு என்பதும் கவலைக்குரிய விஷயங்கள். அரிசியில் இருக்கும் கரிமமற்ற ஆர்சனிக் (arsenate & arsenite) புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் ஒன்று.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருக்கும் இந்தியாவில் அரிசியின் ஆர்சனிக் அளவுகள் துல்லியமாக சோதிக்கப்படவேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.
ஆர்சனிக் நஞ்சினை உடலில் கண்டுபிடிப்பது எளிதானபின்பு, கொலைசெய்யும் பொருட்டான ஆர்சனிக் நஞ்சூட்டுதல் இப்போது இல்லைதான் எனினும் நாம் வாழும் பூமியை முழுக்க மாசுபடுத்தி நஞ்சூட்டியிருக்கிறோம் எனவே உணவில் நஞ்சூட்டும் அவசியமின்றி உணவே நஞ்சாயிருக்கிறது.
பயிர்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் பூச்சிமருந்தை உபயோகப்படுத்துபவர்கள், தொழிற்சாலை கழிவுகளை முறையின்றி, நீர்நிலைகளில் வெளியேற்றுபவர்கள், ஏன் குப்பைகளை எந்த பொறுப்புமின்றி தெருவில் வீசுபவர்களும் ஜோலி ஜோசப்பும், மேரிஆனும்தான்.
உசாத்துணை
2. Mary Ann Cotton – Wikipedia
3. புழுங்கல் அரிசி-Parboiled Rice – அதழ் (logamadevi.in)
4.The relation between rice consumption, arsenic contamination, and prevalence of diabetes in South Asia – PMC (nih.gov)
6. Arsenic-Contaminated Soil, Hazards of Short-Term Exposure, 1999 Report (wa.gov)
7. Arsenic in brown rice: do the benefits outweigh the risks? – PMC (nih.gov)
© 2026 அதழ்
Theme by Anders Noren — Up ↑