தாவரங்களின் இருபெயரீட்டு விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின் ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica) நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக, வெளிப்படையாக விமர்சிப்பவரான ஜோஹேன் சீகஸ் பெக் (johann siegesbeck) மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு முன்புதான் சீகஸ்பெக் மலர்களின் இனப்பெருக்க உறுப்புக்களின் அடிப்படையில் லின்னேயஸ் உருவாக்கிய தாவர வகைப்பாட்டியலை மிக மோசமானதென்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட சிறு மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும், அதுவரை பெயரிட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்காத ஒரு சிறு களைச்செடிக்கு தனது பெயரை வைத்துSigesbeckia orientalis, என்று லின்னேயஸ் அந்நூலில் பெயரிட்டிருந்தது அவரை வெகுவாக மகிழ்வித்தது. சீகஸ்பெக் லின்னேயஸுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். சில நாட்களில் லின்னேயஸிடமிருந்து பதிலுக்கு ஒரு சிறு பொட்டலம் தபாலில் வந்தது. பொட்டலத்தின் மேல் Cuculus ingratus என்று எழுதப்பட்டு உள்ளே சிறு சிறு விதைகள் இருந்தன. புதிதாக பெயரிடப்பட்ட தாவரமொன்றின் விதைகளாக இருக்கலாமென்று எண்ணிய ஜோஹனும் அவற்றை வீட்டு தோட்டத்தில் விதைத்தார் அவை வளர்ந்த பின்னரே அவருக்கு தெரிந்தது தான் லின்னேயஸால் எப்படி அறிவியல்பூர்வமாக அவமதிகப்பட்டிருக்கிறோம் என்று.
அந்த விதைகளிலிருந்து வளர்ந்தது அவரின் பெயரிடப்பட்டிருந்த Sigesbeckia orientalis, எனப்படும் மிகச்சிறிய, எந்த முக்கியதுவமும் இல்லாத மிகவும் நாற்றமடிக்கும் ஒரு களைச்செடிதான். லின்னேயஸின் வகைப்பாட்டியலின் அடிப்படையை வெளிப்படையாக விமர்சித்த தன்னை அவமதிக்கவே, அந்த நாற்றமடிக்கும் செடிக்கு தன் பெயரை வைத்தார் என்றும் அவரனுப்பிய பொட்டலத்தின் மேல் எழுதப்பட்டிருந்த Cuculus ingratus என்பது ””நன்றிகெட்ட குக்கூ”” என தன்னை சொன்னது என்பதையும் அவர் தாமதமாகவே தெரிந்துகொண்டார்
பின்னர் அவர் லின்னேயஸை இதுகுறித்து தொடர்பு கொள்ள எத்தனை முயன்றும், பலர் இதில் இடைபட்டும் லின்னேயஸ் அவரை சந்திக்கவில்லை மாறாக ””மிக நன்றிகெட்ட குக்கூ”” ingratissimus cuculus.என எழுதிய பொட்டலத்தில் மேலும் சில விதைகளை அவருக்கு அனுப்பி வைத்தார். புகைந்து கொண்டிருந்த பகை அதன்பின்னர் தழலாட தொடங்கி இரண்டு அறிஞர்களும் பின்னர் வாழ்நாளின் இறுதி வரை விரோதிகளாகவே இருந்தனர்.
இப்படி ஒரு விநோதமான அவமதிப்பை செய்த லின்னேயஸ்தான் நவீன தாவர வகைப்பாட்டியலின் தந்தை.ஒருபோதும் தன்னை விமர்சித்தவர்களை, ஏமாற்றியவர்களை, துரோகம் செய்தவர்களை, அவர் மன்னிக்கவே இல்லை. அறிவியல் பெயர்களிலேயே அவர்களை பழி வாங்கினார்.
லின்னேயஸின் சீடர்கள்1 என அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படும் அவரது 17 மாணவர்கள் மேற்கொண்ட ஆபத்தான சாகச பயணங்களின் பலனாக கிடைத்த பல தாவரங்களை கொண்டுதான் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் பல முக்கிய நூல்களை எழுதினார். அந்த 17 சீடர்களில் 7 மாணவர்கள் அத்தனை இளம்வயதில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை செய்துவிட்டு, லின்னேயஸையும், அவரவர் குடும்பங்களையும் பார்க்காமலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். வெற்றிகரமாக திரும்பியவர்களில் பலர் விசுவாசமாக கண்டறிந்தவற்றையும் சேகரிப்புக்களையும் லின்னேயஸுக்கே சமர்பித்தனர்.
அதில் ஒருவரான டேனியல் ரோலேண்டர் (Daniel Rolander). லின்னேயஸின் வழிகாட்டுதலின் பேரில் தென்னமெரிக்காவை அடுத்திருந்த ஒரு சிறிய நாட்டுக்கு தேடுதல் பயணம் மேற்கொண்டு ஏராளமான புதிய தாவரங்களையும் பூச்சி இனங்களையும் கண்டறிந்தார் ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் நாடு திரும்ப சில வருடங்கள் தாமதமானது.
கோபமடைந்த லின்னேயஸ் டேனியலுக்கு செய்துவந்த எல்லா உதவிகளையும் நிறுத்தியதோடு அவருக்கிருந்த செல்வாக்கினால் பிறரும் டேனியலுக்கு உதவி செய்யாதபடி பார்த்துக்கொண்டார் டேனியலின் மன்றாட்டுகளுக்கும் சண்டைகளுக்கும் செவிசாய்க்காத லின்னேயஸ் அவர் எந்த வேலையிலும் சேர முடியாதபடியும் அவரது ஆய்வுக்கட்டுரைகள் எங்கும் பிரசுரம் ஆகாமலும் அவர், ஒரு வீடு வாங்கி தங்கக் கூட முடியாதபடியும் கவனமாக காய்களை நகர்த்தினார்.
மழைக்காடுகளில் அலைந்து திரிந்ததால் உடல்நிலை சீர்கெட்டு, மதுவடிமையும் ஆகிப்போன டேனியல் மனம் வெறுத்து,லின்னேயஸுக்கு தான் கொண்டு வந்த உலர் தாவரங்களையும் பூச்சி இனங்களையும் தர மறுத்துவிட்டார். கோபமுற்ற லின்னேயஸ் டேனியல் இல்லாத போது அவரது வீட்டுக் கதவை உடைத்து கிடைத்த சேகரிப்புக்களை எடுத்துக்கொண்டார். பின்னர் ஒரு சின்னஞ்சிறு வண்டுக்கு Aphanus rolandriஅதாவது யாருக்குமே தெரியாத/யாருமற்ற ரோலேண்டர் என்ற பொருளில் பெயரிட்டு பழிதீர்த்து கொண்டார். அவரது ஆணைகளை சிரமேற்கொள்ளும் மாணவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்த லின்னேயஸ் சிறு மீறலையோ அல்லது மறுப்பையோ கூட சகித்து கொண்டதில்லை.
கூரான முட்களை கொண்டிருக்கும் மரமொன்றிற்கு, தனக்கு வேண்டாதவரான பிரேஸில் தாவரவியலாளர் வில்லியம் பைசோ’வின் (Willem Piso) பெயரை வைத்து பைசோனியா( Pisonia) எனவும், மிக கம்பீரமான ஆனால் கண்ணுக்கே தெரியாத நுண் மலர்களைக் கொண்டிருக்கும் மரத்திற்கு தான் அவ்வளவாக மதிக்காத தாவரவியல் ஆய்வுகளை செய்த ஹெர்மண்டெஸின்(Francisco Hernández) பெயரால் ஹெர்மாண்டியா எனவும் (Hernandia), விரைவில் நிறமிழந்து மங்கிப்போகும் மலர்களுடைய முசுக்கொட்டை இனத்தாவரத்திற்கு டோர்ஸ்டினியா (Dorstenia) என தியடோர் டோர்ஸ்டன் [Theodor] Dorsten.) என்னும் தன்னை விமர்சித்த தாவரவியலாளர் பெயரையும் வைத்தார். .பைசோ, ஹெர்மாண்டஸ் மற்றும் டோர்ஸ்டன் ஆகியோர் இந்த பெயரிடலின் போது நல்லவேளையாக உயிருடன் இல்லை. அறிவியலை பிறரை சிறப்பிக்கவும் பழி தீர்க்கவும் ஒரு கருவியாக பயனபடுத்திய முதலும் கடைசியுமான அறிஞர் லின்னேயஸாகத்தான் இருக்கும்.
1735 ல் வெளியான இயற்கை வகைப்பாடு (Systema Naturae)என்னும் பிரபல நூலில் லின்னேயஸ் மலர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பைகொண்டு தாவரங்களை நூதன முறையில் வகைப்படுத்தி இருந்தார். உதாரணமாக மலர்களில் மகரந்தம் கொண்டிருக்கும் 8 ஆண் உறுப்புகளையும், சூலகத்தில் ஒரே ஒரு முட்டையை கொண்டிருக்கும் பெண் உறுப்பையும் கொண்டிருத்த தாவரங்களை “Octandria Monogynia” என்னும் பிரிவின் கீழ் வகைப்படுத்தினார். கிரேக்க மொழியில் octo-எட்டு, andros -ஆண, “Monogynia” ஒரு பெண் என்று பொருள்படும்.
மேலும் இந்த இனப்பெருக்க இயல்புகளை வெளிப்படையாக மனிதர்களின் காதல் மற்றும் கலவியுடன் இணைத்து // ஒரு மணப்பெண்ணின் அறையில் 8 மணமகன்கள் இலைகளே படுக்கை// என்றும்,பெண் ஜனன உறுப்புக்களை மலர்களின் இனப்பெருக்க உறுப்புக்களுடன் அப்பட்டமாக ஒப்பிட்டும் விவரித்திருந்தார். இவற்றைத்தான் பல்வேறு தாவரவியலாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.
விமர்சனம் செய்தவர்களை அவமதிக்க மட்டுமல்ல தனக்கு உதவியவர்களை, தன் பிரியத்துக்குரிய மாணவர்களை தான் மதிப்பவர்களை சிறப்பிக்கவும் அதே அறிவியலைத்தான் பயன்படுத்தினார் லின்னேயஸ். 1753 ல் இவரது முக்கிய நூலான ”சிற்றினத் தாவரங்கள்” (Species plantarum) வெளிவர உதவிய லாசோன் (Isaac Lawson). என்பவரின் பெயரை மருதாணிச்செடியின் பேரினமாக்கினார். மருதாணிச்செடியின் அறிவியல் பெயர் லாசோனியா இனெர்மிஸ்.(Lawsonia inermis).
லின்னேயஸின் மாணவரும், அவரது வழிகாட்டுதலின் பேரில் வடஅமெரிக்க தாவரங்களை சேகரித்தவரும், ஃபின்னிஷ் ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளருமான பீட்டர் கால்ம் (1716-1779- Peter Kalm) பெயரில் சில தாவரங்களை பெயரிட்டார். ’பரந்த இலைகளுடன்’ என்று பொருள் படும் கால்மியா லத்தீஃபோலியா(Kalmia latifolia) என்று ஒரு தாவரத்திற்கும், அதன் மற்றொரு குறுகிய இலைகளுடன் இருக்கும் சிற்றினத்திற்கு கால்மியா ஆங்ஸ்டிஃபோலியா (Kalmia angustifolia) என்றும் பெயரிட்டார். லின்னேயஸ் என்னும் பெயரிலும் பல தாவரங்கள் பெயரிடப்பட்டது.2
மனித இனத்தை “அறிவாளியாகிய மனிதன்” என்னும் பொருள்படும் ஹோமோ-சேபியன்ஸ் என்று 1758’ல் பெயரிட்டதும் இவரே.இயற்கை வகைப்பாட்டியல் (Systema naturae) நூலில் லின்னேயஸ் ஹோமோ சேபியன்களை ஐந்து துணைக் குழுக்களாக பிரித்திருந்தார்: ஆஃபர், அமெரிக்கனஸ், ஆசியாடிகஸ், யூரோபியஸ் மற்றும் ஹோமோசேபியன் மான்ஸ்ட்ரோசஸ். இவற்றில் ஆஃபர், அமெரிக்க மற்றும் ஆசிய குழுக்கள் “தந்திரமான”, “பிடிவாதமான” அல்லது “பேராசை” கொண்டவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். மாறாக யுரோபியஸ் குழுவை “கண்டுபிடிப்பாளர்கள்”, “மென்மையானவர்கள்” மற்றும் “சட்டத்தை மதிப்பவர்கள் என்று வகைப்படுத்துகிறார் லின்னேயஸ். ஒரு தீவிர மத நம்பிக்கையாளராக இருந்த,மாபெரும் விஞ்ஞானியான லின்னேயஸ் இன பேதங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தது விந்தைதான். பழமை வாதத்தில் மூழ்கி இருந்த லின்னேயஸ் தன்னிடம் ஆய்வில் சேர ஒரு போதும் பெண்களுக்கு இடமளிக்கவில்லை பெண்கள் வீட்டுக் காரியங்களை பார்த்துக்கொண்டு சமையலை திறம்பட செய்தால் போதும் என்று நம்பினார். அவரது பெண்களுக்கே கூட அரைகுறையான கல்வியையே அளித்தார்.
உயிரினங்களின் இருபெயரிடும் முறையை (Binomial nomenclature) கண்டறிந்தவரான லின்னேயஸின் பெயரும் ஒரு சுவாரஸ்யமான வரலாறை கொண்டுள்ளது.
லின்னேயஸ் மே 23 1707 ல் தெற்கு ஸ்வீடன் பகுதியில்- பிறந்தார் அவரது தந்தை நில்ஸ் (Nils Ingemarsson,) தேவாலயத்தில் உயர் பதவியில் இருந்தார், மேலும் தாவரவியலில் அதீத ஆர்வமுடையவாராகவும் மரங்களை நேசிப்பவராகவும் இருந்தார். இளம் லின்’னையும் அவருடன் எப்போதும் தோட்டவேலைக்கும் செடிகொடிகளை பார்வையிடவும், ரசிக்கவும் உடனழைத்துச் சென்றார். ஆர்வமும் துடிப்பும் நிறைந்த சிறுவனான லின் தந்தையை ஊன்றி கவனிக்கும் வழக்கம் கொண்டிருந்தான்.
1700 க்கு முன், ஸ்வீடன் மக்கள் தங்கள் தந்தை யார் என்று தெரிவிக்கும் பெயர்களையே பயன்படுத்தினார்கள், உதாரணமாக: கார்ல் நில்’லின் மகன் நில்சன், அல்லது ஓலாஃப் ஸ்வென்னின் மகன் ஸ்வென்சன். பின்னர் பல ஐரோப்பியர்கள் தங்களுக்கு பிரியமான லத்தீன் வார்த்தைகளில் இருந்து தேர்வு செய்த கடைசி பெயர்களை தங்கள் குடும்பபெயர்களாக வைத்துக் கொண்டனர்..
நில்ஸ் இங்கமர்சன்,(Nils Ingemarsson,) இங்கமரின் மகன் என்று பொருள்படும் பெயரில் இருந்த லின்னேயஸின் தந்தை அவரது பல்கலைக்கழக சேர்க்கைக்கு,, ஒரு துணைப்பெயர் அவசியமானபோது, லத்தீன் மொழியில், தங்களுக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்த ஒரு மிகப் பெரிய எலுமிச்சை மரமான ’’லிண்டன்’’ மரத்தை கெளரவிக்க தனது குடும்பத்திற்கான பெயராக மரத்தின் ‘லின்’ என்னும் பெயரை சேர்த்துக்கொண்டார். ஸ்வீடிஷ் மொழியில்ல் Linnæus, என்பது linden மரத்தை குறிக்கிறது.
தாவரங்கள் பற்றிய அறிதலையும், விருப்பத்தையும் தந்தையிடமிருந்து பெற்றார் லின்.. ஐந்து வயது லின்’னிற்கு, நில்ஸ் தோட்டத்தின் ஒரு சிறு பகுதியை சொந்தமாக அவனுக்கு விருப்பமான தாவரங்களை வளர்க்கவென்று அளித்தார். அதுவே லின்னேயஸுக்கு தாவரங்களை குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக அமைந்தது. லின்’னிற்கென்றே பிரத்யேகமாக ஒரு ஆசிரியரை அவருக்கு 7 வயதாக இருக்கையில் நில்ஸ் ஏற்பாடு செய்தார். இறையியலும், லத்தீன் மொழியும், தாவரவியலும் அவருக்கு கற்பிக்கபட்டது.
பள்ளி மற்றும் உயர்கல்வியிலும் அப்போது கிரேக்கம், ஹீப்ரூ, கணிதம் மற்றும் இறையியல் ஆகியவையே மிக முக்கிய பாடங்களாக கருதப்பட்டது ஆனால் லின்’னுக்கு தாவரவியலை தவிர எதிலும் ஆர்வம் இல்லை. அவனது ஆசிரியர்களில் யாருமே லின்’னின் தாவரவியல் ஆர்வத்தை கவனத்தில் கொள்ளவுமில்லை.
லின்னேயஸின் தாயார், மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது எல்லா ஸ்வீடன் நாட்டு மருத்துவ மாணவர்களும் ஸ்வீடனுக்கு வெளியே சென்றுதான் பட்டம் பெற வேண்டும் என்பதால் லின்’னும் நெதர்லாந்திற்கு சென்று மருத்துவப்படிப்பை முடித்தார்.மருத்துவப்படிப்பில் மலேரியாவின் காரணங்களை ஆய்வு செய்திருந்தார். மருத்துவபடிப்பு முடிந்தபின்னரும் லின்னேயஸ் அங்கேயே மேலும் மூன்றுஆண்டுகள் தங்கி இருந்து பிரபல தாவரவியலாளர்களுடனும், பல்துறை அறிஞர்களிடமும் தொடர்பில் இருந்தார். அவரது பேராசிரியர்களில் ஒருவர் லின்னேயஸின் தாவரவியல் ஆர்வத்தை கவனித்து தன் தோட்டத்தில் அவரை வேலைசெய்யவும் அங்கிருந்த தாவரங்களை அறிந்து கொள்ளவும் அனுமதியளித்தார்
அங்குதான் லின்னேயஸ் மருத்துவரும் ,பேராசிரியருமான ஜான் ரோத்மேன் என்பவரை சந்தித்தார்.(Johan Stensson Rothman (1684–1763)) ரோத்மேன் லின்னேயஸுடன் இணைந்து அவரின் தாவரவியல் அறிவை பலமடங்காக்கினார்
1730 ல் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால் உரையாடும் மிக இளம் வயது பேச்சாளராகவும் இருந்தார் லின்னேயஸ். ஸ்வீடன் திரும்பிய லின்னேயஸ் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவராக தொழிலை துவங்கினார். சாராவை மணமுடித்தார் மருத்துவராக தன் பணியை மிக குறுகிய காலமே செய்தலின்னேயஸ் உப்சாலா பல்கலைக்கழக பூங்காவின் தலைவராக பணி மேற்கொண்டார்.
25 வயதான லின்னேயஸ் 1732 ல் கடவுச்சீட்டும் ஸ்வீடிஷ் அரசின் பரிந்துரைக்கடிதமுமாக ஊசியிலைக்காடுகள் செறிந்த லேப்லாந்துக்கு பயணித்தார். அங்கு தங்கி இருந்து, அங்கிருக்கும் பழங்குடியினத்தவர்களான ஸாமி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லின்னேயஸ், அவர்களின் பாரம்பரிய உடைகள் மிது பெருவிருப்பம் கொண்டு அவற்றை பின்னர் விரும்பி அணிய துவங்கினார். இறுக்கமான ஸ்வீடிஷ் உடைகளை காட்டிலும் தளர்வான ஸாமி உடைகள் அவரை கவர்ந்தன. .அந்த நிலப்பரப்பு, அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம், அப்பகுதியின் தாவர, விலங்கு வகைகள் குறித்து லின்னேயஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரை, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது. அந்த பயணத்திற்கு பிறகு அவர் பயணிப்பது குறைந்தது, அவர் சார்பாக உலகெங்கிலும் அவர் மாணவர்களே பிரயாணம் செய்தார்கள்.
மிக இளம் வயதிலிருந்தே மலர்களின் காதலனாக இருந்த லின்னெயஸுக்கு மிகப்பிரியமான தாவரங்களில் ஒன்றாக இருந்த இரட்டையாக மலரும் மலர்களை தன் அடையாளமாகவே வைத்துக்கொண்டு அதற்கு தன்பெயரையே இணைத்து லின்னேயா போரியலிஸ் (Linnaea borealis) என்று பெயரிட்டார். பெரும்பாலான புகைப்படங்களில் லாப்லாந்தின் ஸாமி மக்களின் பாரம்பரிய உடையில் லின்னேயஸ், அவரது தனிப்பட்ட சின்னமாக மாறிய இந்த இரட்டை மலர்களை கைகளில் வைத்திருப்பார்.
.பின்னர் 1738 ல்ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி முழுமையாகஉருவாக காரணமாயிருந்த லின்னேயஸ் அதன் முதல் தலைவராகவும் இருந்தார். அச்சமயத்தில்தான் ஸ்வீடிஷ் அகாடமியின் உதவியுடன் 17 மாணவர்களை உலகெங்கும் அனுப்பி தாவர வகைப்பாட்டியலை விரிவாக்கினார். பெரும் புகழும் செல்வமும் கொண்டவராக ஆன லின்னேயஸ் மாணவர்களின் தேடல் பயணத்திலிருந்து மட்டுமே 5,900 தாவரங்களையும் 4,378 விலங்குகளையும் கிடைக்கப்பெற்றார்.
.
உப்சாலா பல்கலைக்கழகத்தில் லின்னேயஸ் ஓலாஃப் செல்சியஸ் ( Olof Celsius ) என்னும் இறையியல் பேராசியரை சந்தித்து நட்பானார். இந்த ஒலோஃப் செல்சியஸ் செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்த ஆண்டர்ஸ் செல்சியஸின் (Anders Celsius) நெருங்கிய உறவினர். .ஓலாஃப் உப்சாலா பூங்காவின் அனைத்து தாவரங்களின் பெயர்களையும் லின்னேயஸ் அறிந்து வைத்திருப்பதை வியந்து பாராட்டினார். அதன்பிறகு லின்னேயஸ் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ளவும்,பல்கலைக்கழக நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தார்.
அந்த சமயத்தில்தான் லின்னேயஸ் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை அடிப்படியாக கொண்டு அவற்றை வகைப்படுத்துதல் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுதி வெளியிட்டார். அக்கட்டுரையால் கவரப்பட்ட மற்றுமொரு பேராசிரியரான ஒலாஃப் ரூத்பெக் (Olof Rudbeck), லின்னேயஸை பேராசிரியராக தாவரவியல் துரையில் பணியமர்த்தினார்.
பத்து வருடங்கள் கழித்து 1748 ல் லின்னேயஸ் தாவரவியல் தத்துவங்கள் (Philosophia Botanica) என்னும் நூலில் 46 தாவரங்களை மலரும் காலங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி horologium florae என்றழைக்கப்பட்ட மலர்க்கடிகாரத்தை3உருவாக்கினார்.
லின்னேயஸ் மும்முரமாக பல கண்டுபிடிப்புகளை செய்து கொண்டிருந்த அச்சமயத்தில் ஸ்வீடன் ரஷ்யாவுக்கு எதிரான போரிலும், நார்வே, டென்மார்க் மற்றும் ப்ரூஷியாவுடனான போர்களிலும் தோற்றிருந்தது. தோல்விகளால் துவண்டு இருந்த. ஸ்வீடன், லின்னேயஸினால் மீண்டும் புகழ்பெற்று தலை நிமிர துவங்கியது.
1761 ல், ஸ்வீடன் அரசர் லின்னேயஸுக்கு பிரபு பட்டம் வழங்கி கௌரவித்த பின்னர் லின்னேயஸ் கார்ல் வோன் லின் என (CARL VON LINNÉ) அழைக்கப்பட்டார் பட்டம் கிடைத்த பின்னர் லின்னேயஸ் உலக புகழ் பெற்றார். உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகளும் அரசகுடும்பத்தினரும் அவரை தொடர்பு கொண்டனர்.. ரஷ்ய பேரரசி இரண்டாம் கேத்தரீன் ரஷ்யாவிலிருந்து பல விதைகளை லின்னேயஸுக்கு அனுப்பிவைத்தார், ஆஸ்திரியாவின் லின்னேயஸ் என அழைக்கப்பட்ட தாவரவியலாளர் ஜோஹன் ஸ்கோபோலியஸ் (Johannes Antonius Scopolius)) லின்னேயஸுடன் தொடர்பில் இருந்தார் தனது அனைத்து ஆய்வுகளையும் அவர் லின்னேயஸுடன் பகிர்ந்துகொண்டார். உதாரணமாக லின்னேயஸ் அறிந்திருக்காத olm என்னும் நீர்வாழ் உயிரி ஒன்றையும் dormouse எனப்படும் கொறித்துண்ணியொன்றையும் குறித்து எல்லா தகவல்களைம் விவரமாக லின்னெயஸுக்கு அனுப்பி இருக்கிறார்..
ஸ்கோபோலியஸின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த லின்னேயஸ் சொலனேசிய குடும்பத்தின் பேரினமொன்றிற்கு ஸ்கொபோலியா என்று பெயரிட்டார். .ஸ்கொபோலியா பேரினத்திலிருந்தே ஸ்கொபோலமைன் என்னும் மிக முக்கிய வேதிப்பொருள் கிடைக்கிறது. இவர்கள் இருவரும் ஒரு முறை கூட சந்தித்துக்கொண்டதே இல்லை . .
1764 ல் ஸ்வீடன் பட்டத்து இளவரசர் அடால்ஃப் ஃப்ரெட்ரிக் லின்னேயஸுக்கு ஒரு ரக்கூனை செல்லப்பிராணியாக பரிசளித்தார் ஸுப் (‘Sjupp’) என பெயரிப்பட்டிருந்த அது லின்னேய்ஸின் ஆய்வுக்குறிப்புக்களில் இடம்பெரும் அளவிற்கு அவருக்கு நெருக்கமானதாக இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு தன்னுடன் அதை எடுத்து வருவார் லின்னேயஸ். ஒரு கட்டுரையில் ’’ஸுப் பிடிவதம் நிறைந்தது, அன்பானது, முட்டை, பழங்கள், இனிப்புகள், மீன், உலர் திராட்சை மற்றும் வினிகரில் தோய்த்த எதுவானாலும் விரும்பி உண்ணும்’’ என குறிப்பிடுகிறார் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஸுப் ஒரு நாயால் கடித்து குதறப்பட்டு கொல்லபட்டது
உயிரின வகைப்பாட்டியலின் இருசொல் பெயரிடும் முறையின் படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என வரிசையாக அமைக்கப்பட்டிருகிறது. இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவ் வகைப்பாட்டின் கீழ்நிலை அலகு சிற்றினம்(Species) ஆகும்.
சர்வதேச தாவரவியல் விதிகளின் படி, தாவரங்களுக்கு பெயரிட்டவரை அறிவியல் பெயரின் பின்னால் சுருக்கமாக குறிப்பிட வேண்டும். லின்னேயஸ் பெயரிட்ட தாவரங்களின் பெயர்களின் பின்னால் எனL.என்ற தாவரவியலாளர் பெயர் சுருக்கக் குறியீடு (author citation) இருக்கும். உதரணமாக அரசமரத்தின் அறிவியல் பெயர் Ficus religiosa L. மிகப்பழைய வெளியீடுகளில்Linn. என்றிருக்கும்
லின்னேயஸ் உயிரினங்களை பெயரிட்டு, வகைப்படுத்தி, அறிவியலை எளிமை படுத்துவதற்கு முன்பு, தாவரங்கள் வழக்கமாக பல பெயர்களுடன் நீண்ட விளக்கமான லத்தீன் பெயர்களைக் கொண்டிருந்தன, இவற்றை கற்பதும் நினைவில் கொள்ளுவதும் மிக கடினமாக இருந்தது. தாவரத்தை விவரிக்கும் தாவரவியலாளரின் விருப்பத்தின் அடிப்படையில் பெயர்கள் பலமுறை மாற்றப்பட்டன. ஒவ்வொரு தாவரத்திற்கும் உலகளாவிய பெயர்களும் இல்லை, எனவே உலகெங்கிலும் தாவரங்களின் பெயர்கள் குறித்த பெரும் குழப்பம் நிலவியது
லின்னேயஸுக்கு முன்பு பலரும் உயிரினங்களை வகைப்படுத்த முனைந்தார்கள் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில். (கி மு. 384 – 322) விலங்குகளை நடப்பன, ஊர்வன, நீந்துவன என்றும் முதுகெலும்பிகள், முதுகெலும்பற்றவைகளை குருதியுள்ளவை, குருதியற்றவைகளெனவும் எளிமையாக வகைப்படுத்தினார், தாவரங்களை, மரங்கள், புதர்கள், சிறு செடிகள் என வகைப்படுத்தினார். அவரால் வகைப்படுத்த முடியாதவற்றை பெயரற்றவைகளின் தொகுப்பு என்னும் வகைக்குள் கொண்டு வந்தார்.
பாட்டனி என்னும் சொல்லை உருவாக்கியவரும் தாவரவியலின் தந்தை என்றறியப்படுபவருமான் தியோ ஃப்ரேஸ்டஸ் ((373–288 BC)) பல படிநிலைகளில் தாவரங்களை வகைப்படுத்த முயன்றிருக்கிறார். விதைகளிலிருந்து வந்தவை வேர்கள் இருந்து வந்தவை என எளிய வகைப்படுத்தல்கள்தான் அவையும்.
ரோமானியர்கள் காலத்தில் வரலாற்றாய்வாளர் பிளைனியும் (Pliny the Elder, 23–79 BC) தாவர விலங்குகளை வகைப்படுத்தி இருந்தார். மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெகுவாக பிரயாணங்களை மேற்கொண்டு பல்லாயிரம் புதிய தாவர, விலங்கு, பூச்சி இனங்களை கண்டறிந்தார்கள். அக்காலகட்டத்தில் புதிய உயிரினங்களை பெயரிடுவதிலும், வகைப்படுத்துவதிலும் மிக மும்முரமாக அறிஞர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
பல சொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காஸ்பர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையை செம்மையாக்கி,விதிகளை உருவாக்கி, பெரிதும் ஒழுங்கு படுத்தினார் லின்னேயஸ். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டே சிற்றினத்தாவரங்கள் நூலை இயற்றினார்.
லத்தீன் மொழியில் உயிரினங்கள் அனைத்துக்குமான உலகப்பொதுப் பெயரை இருபெயரீடு முறையில் உண்டாக்கும் லின்னேயஸ் முறையானது, அதற்கு முன்னர் இருந்த பலபெயரீட்டு முறையின் கடினங்கள், சிக்கல்கள், ஏதும் இல்லாமல் இரண்டே இரண்டு சொற்களில் அமைக்கப்பட்ட பெயர்கள் அறிவியலை ஒரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றது.லின்னேயஸின் இம்முறையில் ஒவ்வொரு தாவரமும் அந்த தாவரத்திற்கான பிரத்யேக பெயரைக் கொண்டிருந்ததால் அப்பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதும் வசதியாக இருந்தது.
லின்னேயஸ்‘’என் அன்புக்குரிய தாவரவியலாளர்களான உங்களுக்கு, நான் வகுத்துள்ள விதிகளை, என் விருப்பப்படி சமர்ப்பிக்கிறேன். அவை உங்களுக்கு தகுதியானதாக தோன்றினால், பயன்படுத்துங்கள் இல்லையெனில், அதை காட்டிலும் சிறந்த ஒன்றை தயவு செய்து முன்வையுங்கள்’’என்றார். 300 ஆண்டுகளுக்கு பின்னரும் உயிரின வகைப்பாடு பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவியால் வெகுவாக முன்னேறி பெருமளவில் மாற்றங்களுக்கு உள்ளாகி இருப்பினும் லின்னேயஸின் வகைப்படுத்தல் விதிகள் தான் சர்வதேச பெயரிடும் அமைப்பின் முதுகெலும்பாக இருக்கின்றது.
உலகெங்கிலும் பின்பற்றப்படும் தாவர அறிவியல் பெயரிடும் முறையான அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறையும் (International Code of Nomenclature for algae, fungi, and plants -ICN) , லின்னேயஸ் பெயரிடும் முறையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றது.தாவர , விலங்கு, மனித, பூச்சியினங்களோடு, லின்னேயஸ் நறுமணங்களையும்,, மண் வகைகளையும், தாது உப்புக்களையும் வகைப்படுத்தி இருக்கிறார்.
அவரது காலத்தில் தாவரவியல் துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கினார் லின்னேயஸ். உலகின் எந்த மூலையில் தாவரவியல் குறித்த சந்தேகங்கள் வந்தாலும் புதிய தாவரங்கள் கண்டறியப்பட்டாலும் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ லின்னேயஸை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்காமல் அடுத்த நகர்வு சாத்தியமில்லை என்னுமளவுக்கு லின்னேயஸின் செல்வாக்கு இருந்தது.
1735 ல்வெறும் 14 பக்கங்கள் கொண்ட சிறிய நூலாக பிரசுரரமானலின்னேயஸின் முதல் இயற்கை வகைப்பாடு நூல, . 1766-1768 ல் மூன்று தொகுதிகளாக 12 வது தொகுப்பு வெளிவந்தபோது 2300 பக்கங்களை கொண்டிருந்தது. .லின்னேயஸ் அவரது வாழ்நாளில் மொத்தம் 7,700 தாவரங்களையும், 4.400 விலங்கினங்களையும், வகைப்படுத்தி பெயரிட்டிருந்தார்
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான மாணர்களுடன் லின்னேயஸ் உப்சாலா பல்கலைகழகத்தில் நடத்திய தாவர அறிவியல் தேடல் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் மிக பிரபலமாயிருந்தது.
1750’ல் உப்சாலாவை சுற்றியிருந்த ஹம்மர்பி, சாவ்ஜா மற்றும் எடிபி ஆகிய (Hammarby, Sävja & Edeby) ஆகிய மூன்று பண்ணைகளை லின்னேயஸ் வாங்கினார் அவையே அவரது குடும்பத்தின் கோடைவாசஸ்தலங்களாக இருந்தன. 1766ல் நிகழ்ந்த தீ விபத்தில் உப்சாலாவின் சேகரிப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு எரிந்து போன பின்பு தனது ஹம்மர்பி பண்ணையின்குன்றின் பின்புறம் கருங்கற்களால் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கி தனது சேகரிப்புக்களை அதில் பத்திரப்படுத்தினார் லின்னேயஸ்.. நோய்வாய்ப்பட்டிருந்த தனது இறுதிக் காலத்தில் அவர் ஹம்மர்பி பண்ணை வீட்டில் தங்கி இருந்தார்.
சுவாசக்கோளாறு மற்றும் காய்ச்சலால் அவதியுற்ற லின்னேயஸுக்கு 1773 ல் மாரடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம் உண்டானது. 1776 ல் இண்டாம் மாரடைப்பு அவரை நினைவிழக்கச் செய்தது. டிசம்பர் 1777 ல் அடுத்த மாரடைப்பு அவரை மேலும் பலவீனமாக்கி ஜனவரி பத்து, 1778ல் லின்னேயஸ் உயிரிழந்தார்.தன் உடலை ஹம்மர்பியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்னும் லின்னேயஸின் விருப்பத்திற்கு மாறாக அவரது உடல் உப்சாலா தேவாலயத்தில் ஜனவரி 22ல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு பின்னர் லின்னேயஸின் மகன் கார்ல் தந்தையின் சொத்துக்களுக்கும் சேகரிப்புக்களும் உரிமையாளரானார். ஜோசப் பேங்க்ஸ் (Joseph Banks) என்னும் பிரபல தாவரவியலாளர் லின்னேயஸின் சேகரிப்புகளை பெரும் பொருள்கொடுத்து வாங்க முயன்றபோது கார்ல் மறுத்துவிட்டார்.
ஆனால் எதிர்பாராவிதமாக 1783ல் கார்ல் இறந்தபோது ஸாரா லின்னேயஸ் ஜோஸபிடம் அவற்றை விற்க முயன்றார், ஆனால் ஜோஸப் அப்போது மனம் மாறி அவற்றை வாங்க மறுத்துவிட்டார்.பின்னர் 24 வயதான மருத்துவ மாணவர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் (James Edward Smith)லின்னேயஸ் சேகரிப்புக்களான 14,000 தாவரங்கள், 3,198 பூச்சி இனங்கள், 1,564 கிளிஞ்சல்கள், 3000 கடிதங்கள் மற்றும் 1600 நூல்களை ஸாராவிடமிருந்து வாங்கினார். அவையனைத்தும் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் தோற்றுவித்த லண்டன் லின்னேயஸ் சொசைட்டியில் பாதுகாக்கப்படுகின்றன.
லின்னேயஸின் கொடிவழி, திருமணம் செய்து கொள்ளாமலேயே இறந்த அவரது மகனின் இறப்புக்கு பிறகு அறுந்து விட்டது. லின்னேயஸ் பெயர் சொல்ல அவரது மகள்கள் வழி சந்ததியினர் மட்டும் இப்போது இருக்கிறார்கள்.
1778. லின்னேயஸ் இறந்தபோது ஐரோப்பா முழுவதுமே பிரபலமானவராக இருந்தார். லின்னேயஸின் அனைத்து நூல்களுமே பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யபட்டன, போலி செய்யபட்டன, தழுவி எழுதப்பட்டன.
ஏராளமான நூல்கள் எழுதிய லின்னேயஸின் மறைவுக்கு பின்னரும் அவரால் எழுதபட்ட நூல்கள் பலரால் வெளியிடபட்டன.4அவரின் இறுதிக்காலங்களில் எழுதப்பட்ட ’’இயற்கை பொருளாதாரம்’’ மற்றும் ’’இயற்கை அரசியல்’’ ஆகிய நூல்கள் மிக முக்கியமானவை அவரது மறைவுக்கு பின்னர் வெளியான ’’இறைமை கைம்மாறு’’ நூல் (Nemesis Divina) அவரது ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளை தெரிவித்தது .இந்நூலில் தன்னை எதிர்த்தவர்கள், தன்னிடம் சரியாக நடந்துகொள்ளாதவர்கள் என்று அவரால் கருதப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். லின்னேயஸ் நம்பிய ஒழுக்க விதிகளின் நூல் என்று கூட இதை சொல்லலாம்.
ஸ்வீடிஷ் தாவரவியலாளர், வகைப்பாட்டியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் மற்றும் கவிஞரான லின்னேயஸின் பெரும்பான்மையான படைப்புக்கள் லத்தீன் மொழியில் இருந்தது. அவரது பெயரை லத்தீன் மொழியில் எழுதும் வழக்கமும் அவருக்கிருந்தது. லின்னேயஸ் உயிரியலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.
’’ஏதேன் தோட்டத்துஆதாம் உலகின் முதல் உயிர்களை பெயரிட்டு அறிந்தான், நான் இரண்டாம் ஆதாம், உலகின் அனைத்து உயிர்களையும் வகைப்படுத்தி பெயரிட்டேன்’’என்று அறிவித்த லின்னேயஸ் இயற்கை வகைப்பாடு நூலின் முன்னட்டையில் இரண்டாம் ஆதாமாகவே தன்னை சித்தரித்திருந்தார்.
“கார்ல் லின்னேயஸ்”, “கரோலஸ் லின்னேயஸ்”, கார்ல் வொன் லின்னே, “கார்ல் லின்னே” போன்ற பல்வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்த, குடும்பப்பெயராக எலுமிச்சை மரத்தின் பெயரை கொண்டிருந்த , உலகின் உயிரினங்களை பெயரிட்டு வகைப்படுத்திய லின்னேயஸ் ”முதன்மையானதாவரவியலாளர் ’(Princeps Botanicorum)என்று அவர் விரும்பியபடியே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் கல்லறையில் மகனுடன் உறங்குகிறார்.
- https://en.wikipedia.org/wiki/Apostles_of_Linnaeus\
- “Linnea”, Plants of the World Online, Royal Botanic Gardens, Kew
- https://en.wikipedia.org/wiki/Linnaeus’_flower_clock
- Carl Linnaeus bibliography – Wikipedia
இதுவரை கண்டறியப்பட்ட தாவரங்களின் அறிவியல் பெயர்களைஅறிந்துகொள்ள: International Plant Names Index (IPNI)