நியூயார்க்கின் வடக்கு பகுதியில் வாழ்ந்த 6 இனக்குழுக்களின் ( Cayuga,Mohawk, Oneida,Onondaga,Seneca and Tuscarora.) கூட்டான பழங்குடியமைப்பு இரா குயிஸ் (Iroquois) வேட்டையாடிகளும், விவசாயிகளுமான மக்களை கொண்டது. இவர்களனைவருக்குமான பொதுவான சட்டங்களும் வரையறைகளும் உள்ளன.
இப்பழங்குடியினரின் தொன்மங்களிலொன்று இரட்டை ஆண்குழந்தைகளின் மகப்பேறில் இறந்த ஆகாயதேவதையின் உடலிலிருந்து மகன்களுக்கு உணவளிக்கும் பொருட்டு முளைத்த மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் செடிகள், பின்னர் அம்மக்களனைவருக்கும் உணவளித்ததென்கிறது.
இணைபிரியாத மூன்று சகோதரிகள் பற்றிய இம்மக்களின் மற்றொரு தொன்மம் டியோ-ஹா-கோ (Deo-ha-ko) என்றழைக்கப்படும் இச்சகோதரிகள் இம்மூன்று பயிர்களையும் காப்பதாக சொல்லுகின்றது.
மக்காச்சோளப் பயிர் பூமியில் விளைவிக்கப்பட்ட தானியப் பயிர்கள்களில் மிகப்பழமையானது. பலவிதமான பழங்களை அளிக்கும் ஸ்குவாஷ் கொடியின் காய்களும் கனிகளும் பலநாட்களுக்கு சேமித்து வைக்கும் படியான கடினமான வெளித்தோலை கொண்டவை. கிமு 20 ஆம் நூற்றாண்டிலேயே மெசோ அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட ஆரம்பகால பழக்கப்பட்ட பயிர்களில் பீன்ஸ் செடியும் இருக்கிறது. புரதம் நிரம்பிய இதன் காய்களும் விதைகளும் இன்றுவரையிலும் உலகெங்கிலும் மிக முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது,
இராகுயிஸ் மக்களே மூன்று சகோதரி பயிர்களென்னும் மக்காச்சோளம் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பழங்களை ஒன்றாக பயிரிடும் முறையை உருவாக்கியவர்கள். ஒன்றுக்கொன்று துணையாகவும், பயனுள்ளதாகவும் இவை மூன்றும் இருந்ததால் இவை சகோதரி பயிர்கள் என அவர்களால் அழைக்கப்பட்டன. இப்பயிரிடும் முறையை பிற பழங்குடி இனங்களும் கற்றுக்கொண்டு இம்முறையை பரவலாக்கினர்
பீன்ஸ் பயிர்கள் தென்அமெரிக்காவிலும்,மத்திய அமெரிக்காவில் ஸ்குவாஷ் பயிர்களும் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவற்றிற்கு ஆயிரமாண்டுகளுக்கு பின்பே மக்காச்சோள பயிர் உருவானது என்பதால் இம்மூன்றும் எப்போதிலிருந்து ஒன்றாக பயிரிடப்பட்டன என்று துல்லியமான கணக்குகள் கிடைக்கவில்லை. எனினும் தொல்லியல் ஆதாரங்கள் இம்மூன்று பயிர்களும் சுமார் 3500 வருடங்களுக்கு முன்பிருந்து துணை பயிர்களாக விளைவிக்கப்பட்டதற்கான சான்றுகளை அளிக்கிறது.
பீன்ஸ் கொடி பற்றி படர மக்காச்சோள செடி தனது உயர்ந்து வளரும் தண்டுகளை அளிக்கிறது, பீன்ஸ் கொடி தனது வேர் முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது, பூசணிக்காய் குடும்பத்தை சேர்ந்த ஸ்குவாஷ் செடி நிலத்தில் பரவிப் படர்ந்து தனது அகலமான இலைகளால் நிலத்தை மூடி, ஈரத்தை வேர்களுக்கடியில் சேமித்து, களைகள் முளைக்கா வண்ணம் செய்கிறது.
30 செமீ உயரமும் 50 செமீ அகலமமும் கொண்ட தட்டையாக்கப்பட்ட மண் மேடுகளின் நடுவில் ஏராளமான மக்காச்சோள விதைகள் விதைக்கப்பட்டு அவற்றிற்கு உரமாக மீன்களும் புதைக்கப்படுகின்றன. 15 செமீ உயரத்துக்கு மக்காச்சோள பயிர்கள் வளர்ந்ததும் அவற்றின் அடியில் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிர்களின் விதைகள் அடுத்தடுத்து விதைக்கபட்டு கொத்துக்கொத்தாக இம்மூன்று பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இப்பயிரிடும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த மாற்றமுமின்றி பின்பற்றப்படுவருகின்றது
வடஅமெரிக்காவின் வறட்சியான பகுதிகளில் மட்டும் நான்காவது சகோதரியாக ஸ்குவாஷ் மற்றும் பீன்ஸ் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகளை கவரும் மலர்கள் கொண்ட செடியான Cleome serrulata வையும் பயிரிடுகிறார்கள். சிலநாடுகளில் மூன்று சகோதரிப்பயிர்களுடன் , தோட்டத்தின் வடக்குப் பகுதியில் இச்செடிகளுக்கு நிழல் தராதவாறு சூரியகாந்தி செடிகளும் வளர்க்கப்படுகிறது.
மக்காச்சோளம் வளருகையில் மண்ணின் நைட்ரஜன் சத்தை முழுவதுமாக உறிஞ்சி கொண்டுவிடும். மண்ணில் குறையும் நைட்ரஜனை பீன்ஸ் பயிர் மீண்டும் கொண்டு வரும், மண்ணில் இருக்கும் ஈரம் காய்ந்துவிடாமல் தனது அகலமான் இலைளால் காபந்து செய்து கூடவே வளரும் ஸ்குவாஷ் செடிகள் மக்காச்சோளம் உண்டாக்கும் மண் அரிப்பையும் தடுக்கின்றன. பயிர் சுழற்சியால் மட்டுமே சாத்தியமாகும் இழந்த சத்துக்களை, மண்ணில் மீண்டும் நிறைக்கும் முறையை, பயிர் சுழற்சி இல்லாமலேயே மூன்று சகோதரி பயிர்கள் கொடுக்கின்றன
கூட்டு பயிரிடும் முறையான இது இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் சிறு விவசாயிகள் பின்பற்றும் வெற்றிகரமான ஒரு விவசாய முறையாக இருக்கிறது. அமெரிக்காவில் மிக பரவலாக இருக்கும் இம்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு மூன்று சகோதரி பயிர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க நாணயமொன்று 2009 ல் வெளியிடப்பட்டது.
அமெரிக்க பழங்குடியினரின் விவசாய முறையான இதிலிருந்து கிடைக்கும் மூன்று விளைபொருட்களில் மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச்சும், பீன்ஸில் இரருந்து புரதமும், ஸ்குவாஷ் பழங்களிலிருந்து வைட்டமின்களும் கிடைப்பதால் சரிவிகித உணவினால் உடலாரோக்கியமும் இக்கூட்டு விவசாயமுறையினால் மண்வளமும் மேம்படுகிறது. அமெரிக்க பழங்குடியினரின் இந்த முறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றும் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளில் தயாரிக்கப்படும் சிறப்பான உணவுகளில் இம்மூன்று விளைபொருட்களும் கலந்து இருக்கும்.
அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன் இருந்தார்.
சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று விஷமளிக்கும் பணியாளரை அழைத்துவந்தான். கைதி அவரை நேராக நிமிர்ந்துபார்த்து ‘’ நான் இப்போது என்ன செய்யவேண்டும்‘’ என எந்த தயக்கமும் பதட்டமுமின்றி கேட்டார். கையிலிருந்த விஷக்கோப்பையை காட்டி ‘’இதை முழுவதுமாக அருந்திவிட்டு மெல்ல நடந்துகொண்டிருங்கள், கால்கள் கனக்க துவங்கியதும் அமர்ந்துகொள்ளலாம்’’ என்று அவர் பதிலளித்தார்.
எந்த மாறுபாடும் இல்லாத அதே மலர்ந்த முகத்துடன் ‘’நான் இதை அருந்தும் முன்பு ஏதேனும் சொல்லலாமா அதற்கு அனுமதியுண்டா’’ என்று கைதி கேட்டபோது. ’’தேவையான நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்’’ என்று பதில் வந்தது,
கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ‘’இப்பூமியில் இருந்த மகிழ்ச்சி கல்லறைக்கப்பாலும் தொடரட்டும் என்று வேண்டிக்கொள்ளுவோம் இதுவே என் பிரார்த்தனை இது நிறைவேறட்டும்’’ என்றவர் எந்த தயக்கமுமின்றி கோப்பையிலிருந்த ஹெம்லாக் நச்சுத்தாவரத்தின் சாறான அந்த விஷத்தை அருந்தினார்
அதுவரையிலும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த அவரது நண்பர்களும் மாணவர்களும் அவர் கடைசித்துளி விஷத்தையும் அருந்தி முடித்தபோது கட்டுப்பாடுகளை இழந்து கதறி அழத்துவங்கினர்
ஒருசிலர் அழுதபடி அந்த அறையிலிருந்து வெளியேறினர், இன்னும் சிலர் முகத்தை துணியினால் மறைத்தபடி அத்தனை நல்ல மனிதரை என்றென்றைக்குமாக இழந்துவிடப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் விம்மி அழத்துவங்கினர்.
’’என்ன இது, ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்? இப்படி நடக்கக்கூடாதென்றுதான் பெண்களை முன்பே வெளியேறச் சொன்னேன் இப்போது நீங்களும் அழுதால் எப்படி?. மரணமென்பது அமைதியாக அல்லவா நிகழவேண்டும்? என்று அவர் சொன்னதும். அருகிலிருந்த அனைவரும் தங்களை சமநிலைப்படுத்திக்கொண்டு அமைதியானார்கள்.
அந்த அறையிலேயே மெல்ல நடந்துகொண்டிருந்தவர், கால்கள் கனத்து, குளிரத் துவங்கியதும் அங்கிருந்த பீட்த்தில் அமர்ந்தார். தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்ட அவரை உதவியாள், முதுகை சாய்த்து மல்லாந்து படுக்க உதவினான்.
அவரது பாதங்களை தொட்டும் தேய்த்தும் அந்த தொடுகையை உணர முடிகின்றதா என உதவியாள் கேட்டபோது இல்லையென பதிலளித்தார். பின்னர் கணுக்காலுக்கு மேலே ஆடுசதையை மெல்ல கிள்ளியபோதும் அதை உணரமுடியவில்லை என்றவரின் முழங்காலுக்கு மேலும் குளிர துவங்கியதும் ’’இனி விஷம் நேராக இதயத்துக்கு சொன்று விடும்’’ என்றான் அந்த அடிமை சிறுவன்.
கை மணிக்கட்டுகளும் குளிர்ந்து விரைக்க துவங்கியபோது தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி ’’கிரிட்டோ, நான் அஸ்கிலிபியஸுக்கு ஒரு சேவலை நேர்ந்து கொண்டிருக்கிறேன், அதை மறக்காமல் நிறைவேற்றிவிடுகிறாயா’’ என்றார். ‘’நிச்சயம் செய்துவிடுகிறென் வேறு எதாவது சொல்ல வேண்டுமா’’ என்ற அவரது மாணவன் கிரிட்டோ கேட்ட கேள்விக்கு முழுவதும் குளிர்ந்துவிட்ட அவரிடமிருந்து பதில் வரவில்லை ,கண்கள் நிலைத்துவிட்டிருந்த்து.
கிரிட்டொ அவரது வாயையும் கண்களையும் மெல்ல மூடினான். அத்துடன் முடிந்தது ஆகச்சிறந்த மெய்யியலாளரும், மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்ந்தவரும், பகுத்தறிவாளருமான சாக்ரடிஸின் வாழ்வு.
சாக்ரட்டிஸ் மரண தண்டனை பெற்று நஞ்சருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளை அப்போது உடன் இருந்த அவரது நண்பனும் மாணவனுமாகிய பீடோ உரையாடல்கள் மூலம் எக்கிகிரேட்டஸ் என்பவருக்கு விளக்குவது போல பிளேட்டோவால் எழுதப்பட்ட நூலான ’பீடோ’வில் இவையனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஹென்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160’ல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழியிலும், பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய மொழிகளிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
சிறுவனாக இருந்தபோதிலிருந்தே கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சாக்ரட்டிஸினால் கேள்விகள் வழியாகவே பிறரின் சிந்தனைகளை தூண்டிவிடும் ’’சாக்ரட்டிஸ் தத்துவ முறை’’ உருவாகி இருந்தது. அவரது மரணத்துக்கு பிறகும் அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா?, இறந்த பிறகு உயிரின் நிலை என்ன? எங்கு போகும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
சாக்ரட்டீஸ் (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15) பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸில் பிறந்த ஒரு அறிஞர், ஆசிரியர் மற்றும் மெய்யியலாளர். 469 அல்லது 470 இவற்றில் எந்த ஆண்டு இவர் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை கேள்விகளை கேட்டு சிந்தனையை தூண்டும் அவரது சாக்ரட்டிஸ் முறையானது, தர்க்கம் மற்றும் தத்துவத்தின் மேற்கத்திய அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளரும் இவரே..
சிற்பியான சோப்ரோனிஸ்கஸுக்கும் மருத்துவச்சியான ஃபீனாரீட்டேவுக்கும் பிறந்த சாக்ரடீஸ், அடிப்படை கிரேக்கக் கல்வியைப் பெற்ற பின்பு இளம் வயதிலேயே தனது தந்தையின் தொழிலை கற்றுக்கொண்டார். தனது வாழ்க்கையை தத்துவத்திற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் சிற்பியாகவும் பணியாற்றினார்..
சாக்ரடீஸ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மிர்ட்டோவின் மூலம் இரண்டு மகன்கள். மிர்ட்டோவின் மரணத்துக்குப் பிறகு அவரைக்காட்டிலும் மிக இளையவரான ஸாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஸாந்திப்பிக்கு பிறந்த மற்றொரு மகனுமாய் லாம்ப்ரோக்கிள்ஸ், சோஃப்ரோனிஸ்கஸ் மற்றும் மெனெக்செனஸ் (Lamprocles, Sophroniscus , Menexenus) ஆகிய மூன்று மகன்களுக்கு தந்தையான சாக்ரட்டிஸுக்கு .குடும்ப வாழ்வில் அக்கறை காட்டுவதை விட ஏதெனிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையாக இருந்திருக்கிறது. இதனால் கணவர் மீது ஸாந்திப்பிக்கு மனக்குறை இருந்திருக்கிறது.
ஏதென்ஸின் ஆண்கள் 18 லிருந்து 60 வயதுக்குள் எப்போது அழைத்தாலும் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்னும் சட்டமிருந்தது. சாக்ரடிஸும் முகமூடி அணிந்த கவச காலாட்படையான ஹாப்லிட்’ல் (hoplite) ல் பணிபுரிந்தார்
பண்டைய கிரேக்கத்தில் மிகப்பெரிய ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்த ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவிற்கும் கிமு 431-405 வரை நடைபெற்ற பெலொபோனிஷிய போரில் ஈடுபட்டிருந்தபோது சாக்ரட்டிஸ், அல்சிபயடீஸ் என்னும் புகழ்பெற்ற ஏதெனிய தளவபதியின் உயிரை போர்க்களத்தில் காப்பாற்றினார்
முடிந்தவரை அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்துவந்த சாக்ரட்டிஸ், பெலொபோனிஷியப் போரின் முடிவைத் தொடர்ந்து இருதரப்பிலிருந்தும் நண்பர்களை தேடிக்கொண்டார். கிமு 406’ல் பண்டைய கிரேக்க ஜனநாயகமான டெமோக்ரேஷியாவின் (Demokratia) மூன்று கிளைகளில் ஒன்றான, எக்லீசியா சட்டமன்றத்தில் பணியாற்றும்படி (Ekklesia) சாக்ரடிஸுக்கு அழைப்பு வந்தது.
அவர் அங்கு பணியாற்றுகையில், ஸ்பார்டாவிற்கு எதிரான போரில் இறந்தவர்களை மீட்கத் தவறியதற்காக ஏதென்ஸின் உயர்மட்ட ஜெனரல்களின் குழுவை குற்றம் சாட்டும் ஒரு சட்டவிரோத முன்மொழிவுக்கு சாக்ரடீஸ் தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் சாக்ரடீஸின் சட்டமன்ற சேவை முடிந்ததும் அந்த தளபதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதெனியன் அரசு சாக்ரடீஸை ’’குற்றத்தின் நிழல் கூட படிந்திருக்காத ’’ என்று பிளேட்டோவால் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய பிரமுகரும், நேர்மையாளருமான லியோனின் கைது மற்றும் மரணதண்டனையில் பங்கேற்குமாறு கட்டளையிட்டபோது, அவர் மறுத்துவிட்டார் இதன் பொருட்டு அவருக்கு அரசின் கட்டளைகளை அவமரியாதை செய்த குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் சாக்ரடீஸைத் தண்டிப்பதற்கு முன்னர் கொடுங்கோலர்கள் அதிகாரத்திலிருந்து இறங்கினர்,
தத்துவ சிந்தனைகளில் தீவிரமாக ஆழ்ந்த சாக்ரட்டிஸ் பலருடன் கலந்து உரையாட துவங்கினார். ஏதென்ஸின் மூலை முடுக்குகளிலும் தெருக்களிலும் அவரது உரைகளை கேட்கவும் விவாதங்களில் பங்கேற்கவுமாக எப்போதும் இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. நண்பரும் நாடக ஆசிரியருமான அரிஸ்டோஃபேனியஸின் முகில் என்னும் நாடகமொன்றில் கோமாளி வேடமிட்டு வேடிககை பேச்சுக்களை போலவே உயர்ந்த தத்துவங்களை கூறிய சாக்ரட்டிஸ் மேலும் புகழ்பெற்று பரவலாக அறியப்பட்டார். சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது ஏதென்ஸ் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது.
399’அம் ஆண்டில் ஏதெனிய கடவுள்களை மதிக்கத் தவறியதற்காகவும், ஓரினச்சேர்க்கையாளரென்றும், இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், இளைஞர்கள் மனதை கலைத்து, அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் 70 வயதாயிருந்த சாக்ரடீஸ் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாக பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
இந்த வழக்கு ஏதென்ஸின் மையப்பகுதியில் நடந்தது, பார்வையாளர்கள் கூடியிருந்த அக்கூடத்தில் நீதிபதிகள். சாக்ரடீஸை குற்றம்சாட்டிய அம்மூவருக்கும் தங்கள் வழக்கை முன்வைக்க மூன்று மணிநேரம் ஒதுக்கினார்கள், அதன் பிறகு, சாக்ரட்டிஸ் தனது தரப்பினை விளக்கவும் மூன்று மணிநேரம் அளிக்கபட்டது. கிரேக்க நீதி மன்றங்களில் நேரக்கணக்கு நீர்க்கடிகாரங்களின் மூல்ம் கணக்கிடபப்ட்டது
அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும்படி வாதிட்டனர். சாக்ரடீஸுக்கு தனது தரப்பை சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டபோது, தனக்கு தண்டனை அளிப்பதற்கு பதில் தனது செயல்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்ற கிண்டலான பரிந்துரையை வழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிக்குழுவினரிடம் அவரது குற்றத்தின் பேரில் வாக்களிக்குமாறு கேட்கப்பட்டது.
மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகளில் வட்டுக்களை செலுத்தி வாக்களிக்கும் முறையில் நீதிக் குழுவின் 501 ஆண்களில் 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். குற்றம்சாட்டியவர்களும் சாக்ரடிஸும் அவரவர் தரப்பை தொகுத்து முன்வைத்த இறுதிக்கட்ட விசாரணையின்போது சாக்ரட்டிஸ் தனக்கு அபராதம் விதிக்கும்படியும், எதிர்தரப்பினர் மீண்டும் மரணதண்டனையையும் பரிந்துரைத்தனர். மீண்டும் வாக்கெடுப்பு நடத்தபட்டபோது, 300 வாக்குகள் மரணதண்டனையையும் 140 வாக்குகள் அபராதத்தையும் முன்மொழிந்ததால், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சாக்ரடீஸுக்கு நச்சு ஹெம்லாக் சாற்றை குடித்து இறக்கும் மரணதண்டனையை அந்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
டிலோஸ் என்னுமிடத்தில் ஏதென்ஸின் தெய்வங்களுக்கு திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இந்த மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. பூசைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டிலோஸ் சென்று திரும்பி வரும் ஒரு மாத நோன்புக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் மரணம் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, சாக்ரடீஸ் அருகிலுள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்,.
அந்த சமயத்தில் அவரது நண்பர்கள் சாக்ரட்டிஸை ஏதென்ஸிலிருந்து தப்பிக்கவைக்க காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயன்றார்கள் ஆனால் தான் அரசின் இந்த தீர்ப்பை மதிப்பதாகவும் இறுதிவரை சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாகவே இருக்க போவதாகவும் கூறிய சாக்ரட்டீஸ் அதற்கு உடன்படவில்லை. தனது கடைசி நாட்களிலும் அவரது உடல்மொழியிலும் நடவடிக்கைகளிலும், பேச்சிலும் எந்த அச்சமும் கலவரமும், கவலையும் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்வுடனும் அவர் இருந்ததாக பிளேட்டோ கூறுகிறார்.
பிளேட்டோ தனது Apology of Socrates * நூலில் விசாரணையின் போது தனது நற்பண்புகளையும், தான் குற்றமற்றவரென்பதையும் உணர்வுபூர்வமாக நடுவர் மன்றத்தின் முன் விவரித்த சாக்ரட்டீஸ், இறுதியில் அவர்களின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகிறார். இந்த விசாரணையின் போதுதான். சாக்ரடீஸ் இப்போது புகழ்பெற்றிருக்கும் சொற்றொடரான “ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது” என்று கூறினார்
ஏதென்ஸ் அரசியலில் பழைய கணக்குகளை தீர்க்கவும், தனிமனித மேம்பாட்டுக்கும், கைதிகளை கொல்லவும், தற்கொலைக்கும் அப்போது ஹெம்லாக் நஞ்சே பயன்படுத்தபட்டது. கேரட் குடும்பமான ஏபியேசியேவை சேர்ந்த ஹெம்லாக்கின் தாவர அறிவியல் பெயர் கோனியம் மேகுலாட்டம். (Common Hemlock; Conium maculatum). கோனியம் எனும் சொல்லுக்கு கிரேக்க மொழியில் தலைசுற்றல் என்று பொருள் இந்த செடியின் நஞ்சு உடலில் தோற்றுவிக்கும் விளைவுகளில் பிரதானமானதை இது குறிப்பிடுகின்றது மேகுலாட்டம் என்பது புள்ளிகள் என்ற பொருளில் செடியின் மீதுள்ள ஊதா புள்ளிகளை குறிப்பிடுகிறது.
நச்சு ஹெம்லாக் என்று அழைக்கப்படும் இத்தாவரம் வளர்ந்த இரண்டாம் வருடம் மலர்களை கொடுக்கும் பையென்னியல் (Biennial) வகையை சேர்ந்தது முதல் வருடத்தில் கொத்துமல்லியை போல் இருக்கும் இலைகள் மட்டுமே செழித்து வளரும், சதைப்பற்றான வேர்கள் பழுப்பு நிறத்தில் கேரட் வடிவில் இருக்கும். .உள்ளே வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் மேல் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் புள்ளிகளும், தீற்றல்களும் காணப்படும். அந்த ஊதாநிறமே இச்செடியின் நச்சுத்தன்மையை சொல்லுவது போலிருக்கும்
இரண்டிலிருந்து மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடியின் தட்டையான குடை போலிருக்கும் மஞ்சரியில் சிறு வெண் மலர்கள் செறிந்திருக்கும். ஒவ்வொரு செடியும், கடும் நஞ்சுள்ள நுண்விதைகளை ஏராளமாக உருவாக்கும் .
மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்தில் பரவியிருக்கும் இச்செடி நீர்நிலைகளின் அருகிலும் சாலையோரங்களிலும் ,தரிசு நிலங்களிலும் சாதாரணமாக காணப்படும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நஞ்சு.
எல்லா பாகங்களிலும் நஞ்சு நிறைந்திருக்கும் இந்த தாவரத்தின் எட்டு முக்கியமான ஆல்கலாய்டுகளில் கொனைன், சி-கொனிசைன், கொன்ஹைட்ரைன், சூடோகொன்ஹைட்ரின் மற்றும் என்-மெத்தில் கொனைன் ஆகிய ஐந்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. (coniine, c-coniceine, conhydrine, psuedoconhydrine and N-methylconiine.). புகையிலையின் நிகோட்டினுக்கு இணையான வேதிக்கட்டமைப்பை கொண்டிருக்கும் கொடிய நஞ்சான கொனைன் மிகச்சிறிய அளவிலேயே மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி, சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் மூச்சுதிணறலில் மரணத்தை உண்டாக்கும் .
இவை வளரும் நாடுகளில் மிகச் சாதாரண களைச்செடிகளைப்போலவே காணப்படும் இவற்றை குறித்த அடிப்படை அறிதலாவது இருப்பது அவசியம். இலைகள் கசக்கப்படுகையில், ஒவ்வாமை அளிக்கும் நாற்றம் உண்டாகும். இவற்றை தொட்டாலோ, இதன் மகரந்ததுகள்களை நுகர்ந்தாலோ, இதன் வாசனையோ முகர்ந்தாலோ எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இவை கேரட் அல்லது பார்ஸ்லி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு உணவாக எடுத்துக்கொள்ளும் அசந்தர்ப்பங்களில் தான் ஆபத்தாகின்றது.
நீர் ஹெம்லாக் எனப்படும் மற்றோரு தாவர இனமான சிகுட்டா தாவரங்கள் (water hemlocks-Cicuta species) நச்சு ஹெம்லாக்கை போலவே இருந்தாலும் அவற்றின் இலைநரம்பமைப்பை கொண்டு அவற்றை வேறுபடுத்தலாம் நீர் ஹெம்லாக்குகளும் நஞ்சு நிறைந்தவையே.
சாக்ரட்டிஸ் நஞ்சூட்டி கொல்லப்பட்ட நிகழ்வு வரலாற்று ஆய்வாளர்களுக்கு எத்தனை முக்கியமானதோ, அதற்கு இணையாக இது மருத்துவ உலகிலும் சர்ச்சைக்குரியதாவே இருக்கின்றது
சாக்ரடிஸுக்கு அளிக்கபட்ட நஞ்சு ஹெம்லாக் தாவரத்தின் சாறு அல்லது அதன் இலைகளை காய்ச்சி எடுத்த பானமென்றுதான் பிளேட்டோவின் நூலிலிஉர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பீடோ நூலில் சாக்ரட்டிஸின் மரணத்தருவாயை பற்றிய விளக்கங்களில் முதலில் அவரின் கால்கள் கனத்து, விரைத்து, குளிர்ந்துபோவதும், பின்னர் உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து தசை செயலிழப்பு மேல் நோக்கி செல்வதுமாக, மிகச்சரியாக ஹெம்லாக் நஞ்சின் விளைவுகள்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நூல் சாக்ரடிஸின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் அப்போது 29 வயதாயிருந்த அவரது மாணவரான பிளேட்டொவினால் எழுதப்பட்டது.ஆனால் சாக்ரடிஸ் விஷமருந்தி மரணித்த போது பிளேட்டொ அவரருகில் இருக்கவில்லை அப்போது உடனிருந்த அவரது சகமாணவரான பீடோ மற்றூம் கிரிட்டோ ஆகியோரின் விவரணைகளை அடிப்படையாக கொண்டே பிளேட்டோ அந்நிகழ்வை எழுதினார்.
கிரேக்க மொழியில் எழுதப்பட்டு லத்தீன மொழியாக்கம் செய்யப்பட்ட அதன் சில பத்திகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது , இறப்பின் போது நிகழந்தவையும் நஞ்சின் பெயரும் கிரேக்க மொழியின் உபயோகப்படுத்தப்பட்டிருந்த அதே சொற்களின் பொருளில் மொழியாக்கம் செய்யபட்ட்து.
விஷம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணம் சம்பவித்ததும், உயிரிழப்பிற்கு முந்திய கணம் வரை சாக்ரட்டிஸ் நினைவுடன் இருந்ததும், கைகளை அசைத்து முகத்தின் துணியை அகற்றியதும், பேசிக்கொண்டிருந்ததும் எல்லாம் ஹெம்லாக் நஞ்சின் இயல்புகளைத்தான் காட்டுகின்றது
ஆனால் சாக்ரட்டிஸுக்கு கடும் வலியோ, குமட்டலோ, வாயுமிழ்தலோ, வலிப்போ வந்ததாக பிளேட்டொ குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால், அவருக்கு அளிக்கப்பட்டது ஹெம்லாக் சாறாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒருதரப்பும் அப்போது கிரேக்க அரசியல் கொலைகளில் பலவற்றிற்கு காரணமாயிருந்த ஹெம்லாக்தான் சாக்ரட்டிஸுக்கும் அளிக்கபட்டிருக்கும் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தார்கள்.
சாக்ரட்டிஸுடன் அப்போது உடனிருந்தவர்கள் அவரது இறப்பை மிக கெளரவமாக உலகிற்கு காட்ட வேண்டி குமட்டல், வலி போன்ற அறிகுறிகளை பதிவுசெய்யாமல் இருந்திருக்கலாமென்றும், விரும்பத்தகாத விளைவுகளை ஹெம்லாக் உண்டாக்குமென்பதை அறிந்து அவருக்கு அந்நஞ்சுடன் அதிக அளவில் ஓபியம் கலந்திருக்கலாமென்றும் கருதப்பட்டது.
ஹெம்லாக் தாவரத்தின் வளர்பருவங்களுக்கேற்றபடி, நஞ்சின் அளவிலும் இயல்பிலும் மாற்றமிருக்குமென்பதால், ஹெம்லாக் நஞ்சூட்டப்பட்ட எல்லா கொலைக்கைதிகளின் இறப்பு அறிகுறிகளும் ஒன்றெபோலிருக்காதெனவும் ஒரு வாதம் இருக்கிறது
சாக்ரடிஸின் வாழ்விலிருந்த அழகியலும் பெருமையும் அவரது மரணத்திலும் இருக்கவேண்டும் என அவரது மாணவர்களும் நலம் விரும்பிகளும் நினைத்து அவரது மரண நிகழ்வை புனிதப்படுத்தி விட்டார்கள், அவரது இறப்பு திரித்து சொல்லப்பட்டுவிட்டது, சில உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என இரண்டாயிரமாண்டுகளுக்கு பின்னும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்தன.
1970 ல்களில் பண்டைய சிந்தனைகள் மற்றும் தத்துவ ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோஃபர் கில்’லும் (Christopher Gil ) நோயியல் நிபுணரான வில்லியம் ஓபரும் பிளேட்டொ வேண்டுமென்றேதான் சில அறிகுறிகளை பதிவுசெய்வதை தவிர்த்துவிட்டு சாக்ரடிஸின் இறப்பை புனிதப்படுத்திருக்கிறார், ஹெம்லாக் நஞ்சு நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என உறுதியாக தெரிவித்தார்கள். 1, 2
மீண்டும் 1991’ல் இதே சர்ச்சை தலைதூக்கிய போது பிளேட்டோ அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையென்றும் சாக்ரட்டிஸின் மரணம் ரகசியமாக நடக்கவில்லை, அவரருகில் அப்போது ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். எனவே பிளேட்டோ நேர்மையாகத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று அப்போதும் விவாதங்கள் எழுந்தன.
பிளேட்டோ அவரது பதிவில் எங்குமே ஹெம்லாக் என்று குறிப்பிட்டிருக்கவில்லை கிரேக்க மொழியில்’’kôneion’’ மருந்து என்ற பொருளிலேயே கோப்பையில் இருந்த திரவத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். கிரேக்க மொழியின் kôneion லத்தீன மொழியாக்கத்தில் cicuta ’வாக மாறி பின்னர் ஆங்கிலத்தில் hemlock ஆகிவிட்டிருக்கலாமென்றும் கருதப்பட்ட்து
எந்த ஹெம்லாக், எத்தனை அளவில், எப்படி தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதென்பதையெல்லாம் இன்றும் தாவரவியல், நோயியல், மெய்யியல், மொழியியல் என்று பல கோணங்களில் .விவாதத்திற்குரியவையாகி விட்டிருக்கின்றன.
ஹெம்லாக்கின் கொல்லும் தன்மை மற்றும் செயல்புரியும் வேகம் ஆகியவை ஓபியம் போன்ற மூலிகளுடன் கலக்கப்படுகையில அதிகரிப்பதாக தாவரவியல்துறையின் தந்தையான தியோஃப்ரேஸ்டஸ் குறிப்பிட்டிருக்க்கிறார். சிலமணிநேரங்களிலேயே மரணம் நிகழ்ந்த்தால் சாக்ரடிஸுக்கு நஞ்சினை தயாரித்தவர் இதை செய்திருக்கும் சாத்தியமும் இருக்கிறது.
19ஆம் நுற்றாண்டின் மருத்துவர்களும், விஞ்ஞானிகள் பலரும் ஹெம்லாக் நஞ்சின் வீரியத்தை பல்வேறு வழிகளில் சோதித்தார்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோயாளிகளுக்கும் ஹெம்லாக் நஞ்சினை வேறு வேறு அளவுகளில் கொடுத்து விளைவுகளை கண்காணித்ததுடன், பல நச்சியலாளர்கள் தாங்களே அதை அருந்தி சோதித்ததும் நடந்திருக்கிறது . இவர்களிள் ஜான் ஹெர்லி (John Harley ) குறிப்பிட்டு சொல்லும்படியானவர். ஹெம்லாக் சாறை பல அளவுகளில் அருந்தி அதன் விளைவுகளை கவனித்து அவற்றை புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சாவின் விளிம்பு வரையிலும் சென்று மீண்டு ஹெம்லாக் நஞ்சினை குறித்து எழுதிய இவரின் கட்டுரைகள் மிக முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.3
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் இறந்துமிருக்கிறார்கள். ஒரு ஸ்காட்டிஷ் தையல்காரரான கெள 1845’ல் ஹெம்லாக்கை பார்ஸ்லி என்று நினைத்து அதைக்கொண்டு உண்டாக்கிய ஒரு சாண்ட்விச்சை உண்ட 3 மணி நேரத்தில் உயிரிழந்தார். அவரை மரணத்துக்கு இட்டுச்சென்ற அறிகுறிகள் அனைத்துமே சாக்ரட்டிஸின் மரணத்தில் இருந்ததாக பிளேட்டோ எழுதியவைகளுடன் ஒத்துப்போனது. கெள’விற்கும் கடைசி வரை நினைவிருந்தது அவருக்கும் வலியோ, வாயுமிழ்தலோ, குமட்டலோ வலிப்போ இல்லை. கால்களிலிருந்து செயலின்மை துவங்கி உடலின் மேல்பாகங்களுக்கு பரவி பின்னர் மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்தது
எடின்பர்க் மருத்துவமனையில் கெள உயிரிழந்தபோது அங்கு ஜான் ஹூக் பென்னெட் மருத்துவராக பணியிலிருந்தார். அப்போது பெரிய விவாத ப்பொருளாக இருந்த சாக்ரட்டிஸின் இறப்புடன் தொடர்புடைய கெள’வின் இறப்பின் அதிமுக்கியத்துவம் பென்னெட்டுக்கு தெரிந்தது. கெள’வின் இறப்பின் போது உடனிருந்தவர்கள், அந்த சாலையில் அப்போது பயணித்தவர்கள். அவரை மருத்துவமனையில் அனுமதித்தவர்கள் என அனைவரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் கெள’வின் பிரேதப்பரிசோதனையையும் அவரே நடத்தி கெள உட்கொண்டது கோனியம் மேகுலேட்டமென்னும் ஹெம்லாக்தான் என்பதையும் உறுதிசெய்தார்.பென்னெட் சாக்ரடிஸின் மரணத்தை கெள’வின் மரணத்துடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் மிக முக்கியமானதாக இன்றளவிலும் கருதப்படுகின்றது.4
தாவரவியல், நோயியல் மற்றும் மொழியியல் மர்மங்கள் விலகி சாக்ரடீஸின் மரணம் குறித்த பலநூற்றாண்டுகால , தொடர்ச்சியான சர்ச்சை இவ்வாறாக பண்டைய மற்றும் நவீன ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணித்து முடிவை எட்டியது.
பிளேட்டோ சொன்னது போலவே சாக்ரடீஸ் ஹெம்லாக் விஷமருந்தி, அமைதியாக இறந்தார். பிளேட்டோ அம்மரணத்தின் உண்மையை மருத்துவ துல்லியத்துடன்தான் பதிவுசெய்திருக்கிறார். ஏசு கிருஸ்துவுக்கு சிலுவையைப்போல, சாக்ரட்டிஸின் மரணத்துடன் ஹெம்லாக் நஞ்சு அழிவின்றி உடனிருந்து கொண்டிருக்கிறது.
வரலாற்றில், ஹெம்லாக் நஞ்சளித்து கொல்லப்பட்டவர்களில் ஏதென்ஸின் அரசியலாளரும், தளபதியும், பெலொபோனிஷிய போரின் இறுதிப்பகுதியில் பெரும்பஙகாற்றியவருமான திராமினிஸூம், நல்லவர் என்று செல்லப்பெயரிடப்பட்டிருந்த நேர்மையாளரும் புகழ்பெற்ற அரசியலாளருமான ஃபோசியானும் முக்கியமானவர்கள்.
1.Christopher Gill (’The Death of Socrates’, Classical Quarterly, 23, 1973, pp. 25-8)
2. William Ober (’Did Socrates Die of Hemlock Poisoning?’, New York State Journal of Medicine, 77.1, Feb., 1977, pp. 254-8)
3. Harley, J., The Old Vegetable Neurotics: Hemlock, Opium, Belladonna and Henbane, Macmillan, 1869)
4. Bennett, J. H., Clinical Lectures on the Principles and Practice of Medicine, Samuel & Wood, New York, 1860, pp. 413-8.
*.Apology of Socrates- கிரேக்க மொழியில் Apology என்பது மன்னிப்பென்றல்ல . ’’defence’’ என்னும் பொருள் கொண்டிருக்கிறது
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை, அமெரிக்காவின் பிரபல வானியல் நிபுணரான ஆண்ட்ரூ டக்ளஸ் (Andrew Ellicott Douglass,-1867-1962,) முதிர்ந்த மரங்களின் ஆண்டு வளையங்களையும், சூரிய சுழற்சி எனப்படும் 11 ஆண்டுகால சூரியனின் மாற்றத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, மரங்களின் வயதை கணக்கிடும் மரவளைய காலக்கணக்கீட்டு துறையை உருவாக்கினார்.
ஆங்கிலத்தில் Dendrochronology எனப்படும் இந்த அளவீட்டின்படி மரங்களின் வயதை கணக்கிடுவதன் மூலமாக வரலாற்றின் காலநிலை மாற்றங்கள், சூழல் மாற்றங்கள், புராதனப்பொருட்களின் காலம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியுமென்பது அறிவியலில் ஒரு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. பண்டைய கிரேக்க சொல்லான dendron மரத்தையும், khronos என்பது காலத்தையும் குறிக்கின்றது.
இளம் வானிலை ஆய்வாளராக அரிஸோனாவின் லோவெல் வானிலை ஆய்வுக்கூடத்தில் (Lowell Observatory) பணியாற்றிக்கொண்டிருந்த டக்ளஸுக்கு சூரியனை அறிந்துகொள்வதில் பெரும் ஆர்வமிருந்தது. குறிப்பாக சூரிய மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடுகளின் அடிப்படையில் அளவிடப்படும் சூரிய சுழற்சியின் மாறுபாடுகளை அவர் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிந்தார்.
அவ்வாய்வின் போதுதான் மரங்களின் ஆண்டுவளையங்களின் அளவிற்கும், அவை வாழுமிடத்தின் காலநிலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை அவர் முதன்முதலாக கண்டறிந்தார். அரிஸோனா பல்கலைக்கழகத்தில் ஒரு மர வளைய ஆய்வகத்தையும் உருவாக்கி, மரங்களின் ஆண்டுவளையங்களின் அடுக்குகளைக்கொண்டு அவை கடந்துவந்த காலங்களை, அக்காலங்களின் முக்கிய நிகழ்வுகளை, இடர்பாடுகளையெல்லாம் கண்டறியும் இம்முறையையும் இவர் உருவாக்கினார். cross-dating எனப்படும் ஒரு மரத்தின் ஆண்டுவளையங்களை பிற மரங்களின் ஆண்டு வளையங்களுடன் ஒப்பிட்டு காலநிலையின் வரலாற்றை கணிக்கும் அடிப்படை ஆய்வு முறையையும் இவரால் உருவாக்கப்பட்டதுதான்.
மரவளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர் தாவரவியலின் தந்தையான தியொஃப்ரேஸ்டஸ், லியோ நார்டோ டாவின்ஸி துவங்கி மேலும் பலர் மரவளையங்களை குறித்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பதிவு செய்திருக்கின்றனர்.
ஒரு மரத்தின் உயரமானது அதன் வாழ்விடத்தின் மண் வளம், மண்ணின் நுண்ணுயிரிகள் மற்றும் கடல் மட்டதுக்கு மேலான அச்சூழலின் உயரம் ஆகியவறினால் நிர்ணயிக்கப்படுகின்ற்து. எனினும், மரங்களின் பருமனானது பெரும்பாலும் காலநிலை காரணிகளாலேயெ உண்டாகிறதென்பதால் மரங்களின் வயதை மரவளையங்களின் இயல்பைக்கொண்டு கணக்கிடுவது மிகச்சரியான கணக்கீட்டு முறையாக இருக்கின்றது
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மரம் அல்லது கட்டை என்ற சொல் முதிர்ந்த மரங்களின் நடுவிலிருக்கும் கழி எனப்படும் xylem’ பகுதியை குறிக்கிறது. ஒரு மரத்தின் வளர்பருவத்தில், இரண்டாம் நிலை வளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெறும் பொழுது, வெளிறிய நிறத்திலிருக்கும் வெளிப்பகுதி சாற்றுக்கட்டை (Alburnum) அல்லது மென்கட்டை (early wood) எனவும். கருமையான நிறத்திலுள்ள மையப்பகுதி வைரக்கட்டை (Duramen) அல்லது மென்கட்டை (late wood) எனவும் அழைக்கப்படுகிறது இவையிரண்டிற்கும் முறையே Heart wood, sap wood என்றும் பெயருண்டு.
மரம் வளருகையில், இவ்விரண்டு கட்டைகளுமாக சேர்ந்து வளையங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கேற்றபடி வசந்த காலத்தில் வெளுத்த நிறத்திலிருக்கும் வளையங்களையும், இலையுதிர்காலத்தில் அடர்நிறத்தில் வளையங்களையும், குளிர்காலத்தில் மிகத்துல்லியமான வளையங்களையும் உருவாக்குகின்றன.
இவ்வாறு பெருமரங்கள் வாழ்நாளில் கடந்துவந்த காலங்களை அவற்றின் வளையங்களிலிருந்து கணக்கிட்டு மரங்களின் வயது கணக்கிடப்படுகின்றது, ஈரப்பதம் மிக அதிகமாகவும், நீண்ட வளர்பருவமும் இருக்கையில் அகலமான ஆண்டு வளையங்களும், வறட்சியான வருடங்களில் மெலிதான வளையங்களும் உருவாகும்
பொதுவாக மர வளையங்களின் இயல்பு மரங்களின் வாழிடங்களை பொருத்து மாறுபடும். மலையுச்சியில் வாழும் மரத்தின் அகலமான வளையம் வெப்பமான காலத்தையும், மெல்லிய வளையம் குளிர்நிரம்பிய காலத்தையும் காட்டுகின்றது
இறந்த மரங்களில் மட்டுமல்லாமல் உயிருடன் இருக்கும் மரங்களிலும் அவற்றை சேதப்படுத்தாமல் வளையங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒரு பென்சிலின் அளவுள்ள மரத்தின் உட்பகுதி, பிரத்யேகமாக இக்கணக்கீடுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் increment borer என்னும், சிறிய விட்டம் கொண்ட ஒரு எளிய உலோக துளைப்பானை, மரத்தின் நடுப்பகுதி வரை செலுத்தி நீண்ட உருளைகளாக சேகரிக்கப்படுகின்றது. இதனால் மரங்களில் உண்டாகும் சிறு காயம் இயற்கையாகவே விரைவில் ஆறிவிடும்.
இக்கணக்கீட்டில், இவ்வாறு எடுக்கப்பட்ட உட்பகுதி உருளை குச்சிகளின் வளையங்களை, அதே வாழிடத்தை சேர்ந்த இறந்த மற்றும் உயிருள்ள மரங்களின் பலநூறு மாதிரி வளையங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் உயிருள்ள மரங்களின் வயது கணக்கிடப்படுகிறது. இறந்த மரங்களின் குறுக்கு வெட்டு பகுதியின் வளைய அளவுகளை ஒரு வரைபடத்தாளில் குறிப்பிட்டு கணக்கிடுகையில், அம்மரத்தின் ஒவ்வொரு வளையத்தையும், அவை எந்த ஆண்டு உருவானதென்று கணக்கிட முடியும், இது crossdating முறை என்ப்படுகின்றது
புராதன மரப்பொருட்களின் வயதை கணக்கிடுவதற்கும், வரலாறு, தொல்லியல், கலை உள்ளிட்ட பல துறைகளிலும் இக்கணக்கீடு பெரிதும் உதவியாக இருக்கிறது.
இறந்த மரங்களின் வயது, அவை வாழ்ந்த காலத்தின் முக்கிய சூழல் நிகழ்வுகள், மரங்களுக்கு உண்டான இடர்பாடுகள் என பலவற்றை இக்கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக வளையங்கள் மிக மெல்லியதாக அதிக இடைவெளியுடன் இருப்பது கடும் வறட்சியான காலத்தையும், மெல்லிய, அடுக்கடுக்கான, நெருக்கமாக அமைந்திருக்கும் ஏராளமான வளையங்கள் அம்மரம் வறட்சியிலிருந்து மீண்டு வந்ததையும் காட்டுகிறது.
வளையங்களின் நிறம் அளவு மட்டுமல்லாது, வேதியியல் சோதனைகளும், கதிரியக்க கரிம காலக்கணக்கீட்டியல் எனப்படும் ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating) முறைகளும் இணைந்து, இக்கணக்கீட்டு முறையின் பயன்பாட்டை மேலும் பல துறைகளில் முன்னெடுத்து செல்கின்றது.
கலிஃபோர்னியாவின் மெதுசில்லா பகுதியின் பிரிஸ்டில் கோன் பைன்மரம் இம்முறையில் கணக்கிடப்பட்டபோதுதான், அது 4852 வருடங்களுக்கு முன்பிருந்தே வளர்ந்துவரும் உலகின் மிகப்பழமையான உயிருள்ள மரமென்று அறியப்பட்டது.
இத்துறையின் உட்பிரிவுகளான காலநிலைமாற்றங்களை கணக்கிடும் Dendroclimatology , சூழல் மாற்றங்களை ஆய்வு செய்யும் Dendroecology, பனிப்பாறை உருகிய வண்டல்கள், பனிப்பாறை விரிவாக்கம், அவற்றின் பின்வாங்கல் மற்றும் கீழிறங்கும் நிகழ்வுகளை குறித்த ஆய்வுகளுக்கு இக்கணக்கீட்டினை பயன்படுத்தும் முறையான Dendroglaciology , தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை சோதிக்கும் Dendroarchaeology ஆகியவற்றில் மிக முக்கியமான ஆய்வுகள் நடைபெறுகின்றன.
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் புனரமைப்புத்துறையில் (Paleo environmental reconstruction) இக்கணக்கீடு மிகவும் நம்பத்தகுந்த துல்லியமான காலக்கணக்குகளை தெரிவிக்கிறது.
நெருப்பிலிருந்து தப்பிய மரங்களின் தீத்தழும்புகளை சுற்றி புதிய வளையங்கள் உண்டாகி இருக்கும். இவற்றைக் கொண்டு அம்மரங்கள் வாழ்ந்த காலத்தின் தீ விபத்துக்களை பற்றி அறிந்துகொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளின் எரிமலை வெடிப்புக்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், காட்டுத்தீ, பெருவெள்ளம், போன்ற பல சூழல் முக்கியத்துவமுள்ள காரணிகளை ஆய்வுசெய்ய இம்முறை பெரிதும் பயன்பட்டது..
மரத்தடயவியல் (Wood forensics) ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இக்கணக்கிட்டினால் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று நம்பப்பட்டு வந்த, லண்டன் அருங்காட்சியகத்திலிருந்த ஸ்காட்லாந்தின் அரசி மேரியின் ஓவியத்தின் மரச்சட்டத்தின் வயதை கணக்கிட்டபோதுதான் அது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.
அகழ்வாய்வாளர்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு ஜெர்மனியில் விபத்துக்குள்ளாகி இருந்த ஒரு கப்பலின் மரக்கட்டைகளின் வளையங்களை கணக்கிட்டபோது அவை 1448-1449 ஆண்டுகளின் குளிர்காலத்தில் வெட்டப்பட்ட மரங்கள் என தெரிய வந்தது. இப்படி பலநூறு முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு இத்துறை உதவி வருகின்றது.
1990’லிருந்து அமெரிக்காவில் இயங்கி வரும் சர்வதேச மரவளைய தகவல் வங்கி ( The International Tree-Ring Data Bank (ITRDB)) உலகெங்கிலும் இருக்கும் மரவளைய ஆய்வாளர்களுக்கு தேவையான தகவல் உதவிகளை அளித்து வருகின்றது.
தாவர அறிவியலில், மரவளையங்களைக்கொண்டு காலங்களுக்கிடையில் முன்னும் பின்னுமாக பயணித்து பல முக்கிய கண்டுபிடிப்புக்களை அளிக்கும் இத்துறை மிக முக்கியமானதும் சுவாரஸ்யமானதும் கூட. அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து இன்னும் பற்பல கண்டுபிடிப்புக்களுக்கான சாத்தியஙகளையும் இத்துறை தற்போது அளித்திருக்கிறது.
ரம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழ மரத் தாவரம். ‘சாப்பின்டாசியே’ (Sapindaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தில். ஆண், பெண் மரங்கள் தனித்தனியாகவும், ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே மரத்திலுமாகவும் காணப்படும். இது கிழக்கு ஆசியா (சீனா), தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகிறது.
13லிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையில் இந்திய பெருங்கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபிய வணிகர்களால் இப்பழமரங்கள் உலகின் பல பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
75 வருடங்களுக்கு முன்பு இலைங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இந்தியாவிற்கு அறிமுகமான இம்மரங்கள், முதலில் கேரளாவில் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் அறிமுகமானது.
ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. பழத்தின் தோலும், பழுப்பு நிற விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் லேசான புளிப்பு கலந்த இனிப்பான வெண்மையான நுங்கு போன்ற வழுவழுப்பான, சாறு நிறைந்த சதைப் பகுதி மட்டுமே உண்ணத்தகுந்தது.. இது ஒரு குளுமையான பழம்
ஈரிலைத் தாவரமாகிய ரம்புட்டான் மரம் 12 முதல் 20 மீட்டர் வரை வளரும். மரத்தின் குறுக்களவு 60 செ.மீ. அளவிலும், பசுமை மாறா இலைகள் மாற்றொழுங்கானவையாக (Alternate ) 10 முதல் 30 செ.மீ. நீளம், 3 முதல் 11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலையாகவும் இருக்கும். சிற்றிலைகள் 5 முதல் 15 செ.மீ. நீளமும், 3 முதல் 10 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த மரத்தை விதை மற்றும் ஒட்டுக்கன்று முறைகளில் வளர்க்கலாம். நடப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் பழம் கொடுக்கத் தொடங்கிவிடும்.
பழம் முழுமையாகப் பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். பிஞ்சாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலும் இந்தப் பழம் இருக்கும். பழங்களின் உள்ளே சிறிய பழுப்பு நிற கொட்டை இருக்கும்.ரகங்களுக்கு ஏற்றார்போல இந்த மரம் மார்ச் மாதத்திலிருந்து மே வரை நறுமணம் மிக்க வெள்ளை கலந்த பச்சை நிறப்பூக்களையும், ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் 80 முதல் 200 கிலோ வரையிலான பழங்களையும் கொத்துக்கொத்தாகத் தரும். களிமண் அல்லது வண்டல் நிறைந்த வளமான மண்ணில் மிக நன்றாக வளரும்.
நிறைய மாவுச்சத்தும் புரதமும் நிறைந்த இந்தப் பழம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் அகியவற்றைக் குணமாக்கும். வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், செம்புச் சத்து (Copper), இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை, உடல் எடை குறைப்பு, சருமப் பளபளப்பு போன்றவற்றிற்கும் உதவும். இந்தப் பழத்தின் விதையிலிருந்து மஞ்சள் நிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சோப்பு, மெழுகுவத்திகள் தயாரிக்கவும் உதவுகிறது. ரம்புட்டான் பழங்களும் மரத்தின் பிற பாகங்களும் மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும் பல நூறு ஆண்டுகளாக மருந்தாக உபயோகிக்கப்படுகிறது.
ரம்புட்டான் பழங்கள் வாங்கும்போது புதிதாகவும், மேல்தோலின் நிறம் அடர்ந்த மஞ்சளுடன் கூடிய சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். . பழங்களின் மேற்புறத்தில் முடியானது விறைப்பாக இருக்க வேண்டும்.
சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்களும், குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரையிலும் இப்பழத்தினை வைத்திருந்து பயன்படுத்தலாம். 200 க்கும் மேற்பட்ட வகைகளில் ரம்புட்டான் பழங்கள் இருந்தாலும் அதிகம் சந்தைப்படுத்தப்பட்டிருப்பது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப்பழங்களே.
கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியேவை சேர்ந்த manchineel tree என்றழைக்கபடும் Hippomanemancinella என்னும் தாவர அறிவியல் பெயரைக்கொண்ட மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை கொண்டது.
இதன் பேரினமான hippomane என்பது இதன் இலைகளை உண்ட குதிரைகளுக்கு பித்து பிடித்ததால், கிரேக்க மொழியில் குதிரை -பித்து என்னும் பொருளில் hippo- mane வைக்கப்பட்டது. சிற்றினப்பெயரான mancinella என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறிய ஆப்பிள் எனறு பொருள் படும் இம்மரத்தின் பச்சை நிறப்பழங்களும் இலைகளும் ஆப்பிள் மரத்தை போலவே இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது. விஷக்கொய்யா மரமென்றும் இதை அழைக்கிறார்கள்
இதன் தற்போதைய ஸ்பானிஷ் வழங்குபெயரான manzanilla de la muerte, என்பது சிறு மரண ஆப்பிள் என்று பொருள் படும் (“little apple of death )
பால் வடியும் இம்மரத்தின் தண்டு, பட்டை, இலை, மலர், கனி என அனைத்துபாகங்களிலும் இருக்கும், எண்ணற்ற் நச்சுப்பொருட்கள் இம்மரத்தின் பாலில் கலந்திருக்கும்.
அலையாத்திக்காடுகளுக்கு அருகில் கடற்கரையோரங்களில் இவை பெரும்பாலும் காணப்படுவதால் இவற்றிறகு பீச் ஆப்பிள் மரம் என்றும் பெயருண்டு. சிவப்பும் சாம்பல் வணணமும் கலந்த நிறத்திலிருக்கும் மரப்பட்டைகளை கொண்டிருக்கும் பசுமைமாறா இம்மரம், சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளரும். கூம்பு வடிவ மலர் மஞ்சரிகளில் சிறு மலர்கள் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் இலைகள் பளபளப்பான பச்சை நிறத்திலிருக்கும். பசுமஞ்சள் நிறக்கனிகள் தோற்றத்தில் ஆப்பிளை ஒத்திருக்கும். இதிலிருக்கும் கொடும் நஞ்சு தோலில் பட்ட உடனே கொப்புளங்களை உருவாக்கும்.
மழைக்கு இம்மரத்தடியில் ஒதுங்கினால் கூட உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாகும். கண்களில் இம்மரத்தின் பால் பட்டால் பார்வையிழப்பும் உண்டாகும். மரத்தடியில் மழைகாலங்களில் நிற்கும் கார்களின் வண்ணம் உரிந்து வந்துவிடும். அறியாமல் இம்மரத்தின் கனிகளை உண்பவர்களுக்கு குடல் புண்ணும், இரத்தப்போக்கும், கைகால் வீக்கமும் உண்டாகின்றது.
கனிகள் முதலில் இனிப்பாகவும் பின்னர் குருமிளகின் காரத்தைப்போலவும் தொடர்ந்து நெருப்பு வைத்தது போன்ற எரிச்சலையும் உண்டாக்கி தொண்டையை இறுகச் செய்துவிடும். பின்னர் பாதிக்கப்பட்டவர்களால் எதையுமே விழுங்கமுடியாமலாகிவிடும்.மரக்கட்டைகளை தீயில் எரிக்கையில் வரும் புகையும் ஆரோக்கிய சீர்கெடுகளைஉண்டாக்கும்.
இம்மரத்தின் இலைகளில் droxyphorbol-6-gamma-7-alpha-oxide, hippomanins, mancinellin, sapogenin, phloracetophenone-2,4-dimethylether ஆகிய நச்சுப்பொருட்களும் கனிகளில் i physostigmine மற்றும் Phorbol போன்ற நஞ்களும் உள்ளன.
மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் பலமர்மங்களில் ஒன்றாக இம்மரத்தின் விஷக்கனிகளை உண்டு அதிலேயே வாழ்கின்றன கருப்பு பேரேந்திகளான (black-spined iguana- Ctenosaura similis) எனும் விலங்கினங்கள்.
கரீபியத்தீவின் பழங்குடியினர் இம்மரத்தின் இலைகளைக்கொண்டு எதிரிகளின் நீர்நிலைகளை நஞ்சூட்டியிருக்கின்றனர். கொலம்பஸின் இரண்டாவது தேடல் பயணத்தில் கலந்துகொண்டவரும், ஃப்ளோரிடாவின் முதல் அதிகரபூர்வமான் தேடல்பயணத்தை வழிநடத்தியவரும், கரீபியன் தீவின் (PUERTO RICO) புவேட்டோ ரீகோ’வின் முதல் கவர்னருமான ஜான் லியோன் (Juan Ponce de León), 1521ல் 200 பயணிகளுடன் இரு கப்பல்களில் ஃப்ளோரிடாவின் தென் பகுதியில் தேடல் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இவரை அங்கிருந்த பழங்குடியினர் இம்மரத்தின் பாலில் தோய்த்த அம்பில் தாக்கினர். அதன் நச்சுநுனி தொடையில் தைத்து ஜான் லியோன் மரணமடைந்தார்.
ஆனால் இம்மரத்தின் கனிகளை உலரவைத்தும், பாலை உறைய வைத்தும் அப்பழங்குடியினர் பல நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்கின்றனர். மரக்கட்டைகளை வெயிலில் உலர்த்தி அதன் பாலைநீக்கிவிட்டு விறகாகவும் உபயோகிக்கின்றனர்..
பிரபல கடற்பயணி ஜேம்ஸ் குக்கி’ன் கப்பலில் இருந்த மருத்துவர் தனது நாட்குறிப்பில் கரிபியன் தீவில் விறகுக்காக மரங்களை வெட்டப்போன குழுவினர் மரத்தின் பால் கண்களில் பட்டு முழுக்குருடானதை குறிப்பிட்டுள்ளார்.
The Buccaneers of America’ வை எழுதிய அலெக்ஸாண்டர் (ALEXANDRE EXQUEMELIN, தான் கரீபியன் தீவிலிருக்கையில் கொசுக்கடியிலிருந்து தப்ப இம்மரத்தின் சிறு கிளையை ஒடித்து அதை விசிறியாக உபயோக்கித்த உடனேயே முகம் முழுவதும் கொப்புளங்களால் வீங்கி மூன்று நாட்களுக்கு கண் குருடானதை எழுதியிருக்கிறார்.. நாட்குறிப்புகள் எழுதியவர்களில் மிகபிரபலமானவரான NICOLES CRESSWELL லின் நாட்குறிப்பில் இம்மரத்தின் ஒரு கனி 20 நபர்களை கொல்லும் நஞ்சை கொண்டிருந்தது குறிப்பிடபட்டிருக்கிறது.
1865’ ல் பிரபலமாயிருந்த L’AFRICAINE என்னும் ஓபரா நாடகத்தின் கதா நாயகி இம்மரத்தின் மலர் மஞ்சரிகளை எரித்து அதன் புகையை நுகர்ந்து இறக்கிறாள். மரணதண்டனை கைதிகளை இம்மரத்தில் கட்டிவைத்ததும், கொல்ல வேண்டிய எதிரிக்கு இம்மரத்தின் இலைகளை சிகரெட் போல் சுருட்டி புகைக்க கொடுத்ததுமாக ஏராளமான வரலாற்றுக்குறிப்புகள் இம்மரத்தின் நஞ்சைக்குறித்து சொல்லுகின்றன.
அமேஸான் ஸ்டுடியோவின் தொலைகாட்சிதொடரானHOMECOMING (2018) ல், இம்மரம் இடம்பெற்றிருக்கிறது. உலகின் மிகக்கொடிய நஞ்சைக்கொண்ட மரமாக கின்னஸ்புத்தகமும் இதை குறிப்பிடுகிறது,
Flora of Florida வை எழுதிய Roger Hammer இம்மரத்தின் கனிகளை உண்டு இறந்த மாலுமிகளை பற்றி எழுதியிருக்கிறார்.கரீபிய கடற்கரைகளிலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தென் ஃப்ளோரிடாவிலும் அதிகம் காணப்படும் இம்மரங்களில் எச்சரிக்கை வாசகங்களும், பெரிதாக X குறியும் எழுதிய பலகைகள் மாட்டப்பட்டு இதன் ஆபத்தை தெரிவிக்கின்றன..
இது மிகவும் ஆபத்தான மரம்தான் என்றாலும் இதைக்காட்டிலும் கொடிய நஞ்சைக் கொண்டுள்ள சிறு செடிகளும் ஃப்ளோரிடாவில் உள்ளன, நீர் ஹெம்லாக் (Cicuta maculata). எனப்படும் நச்சுச்செடியின் கால் அங்குல தண்டு ஒரு நபரை கொல்லப் போதுமானது, இது வட அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் கொடிய நஞ்சைகொண்டுள்ள செடியாகும்.
ஒரு பிராந்தியத்தில் இயற்கையாக தோன்றியிராத, ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பகுதியில் பல்கிப்பெருகி, இந்த புதிய வாழ்விடங்களில், பூர்வீக பல்லுயிர் பாதிப்பு, பொருளாதார இழப்புக்கள் , மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற தாவரங்களே ஆக்கிரமிப்பு தாவரங்கள்.(Invasive plants).
உணவுப் பொருட்கள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் இறக்குமதியாகும் போது அவற்றுடன் கலந்து இப்படியான ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகள் தவறுதலாக ஒரு புதிய சூழலுக்கு அறிமுகமாகும்.. பல சந்தர்ப்பங்களில், அலங்கார, மலர் வளர்ப்பு அல்லது விவசாய பயன்பாடுகளுக்கு வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களும் ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறிவிடுவதுண்டு
உதாரணமாக வெப்பமண்டல அமெரிக்க புதர் லந்தானா (Lantana camara லந்தனா கமாரா) 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு அலங்கார தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது; இது இப்போது கிராமங்கள், விளைநிலங்கள், நகர்புறங்கள், அடர் காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது.
ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’ Phenotypic plasticity எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.. பெரும்பாலும், மனிதர்களாலும், சாலைப் போக்குவரத்து, மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றினால் ஆக்கிரமிப்பு தாவரங்கள் பல்கிப் பெருகுகின்றன.
.2015 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் , குரோமோலேனா ஓடோராட்டா, லந்தானா மற்றும் தோட மரமாக அறிமுகமான குடை மரம் எனப்படும் மீசோப்சிஸ் எமினி (Siam weed Chromolaena odorata, lantana and umbrella tree Maesopsis eminii) ஆகியவற்றினால் அச்சூழலின் இயல் தாவரங்களுக்கு உண்டாகியிருக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகள் கண்டறியபட்டது. இது சமீபத்திய ஒரு முக்கிய உதாரணம்
2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு இந்தியாவில் மட்டும் சுமார் . 200 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் உள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக இந்தியாவையும் சுட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்ட லந்தானாவுடன், பார்த்தீனியம், சியாம் களை, மெக்ஸிகன் பிசாசு (ஏகெரடினா அடினோஃபோரா-Ageratina adenophora ) மற்றும் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா- Prosopis juliflora) ஆகியவை இந்தியாவின் மிகவும் மோசமான ஆக்கிரமிப்புகளில் சில. வெங்காயத்தாமரை (ஐக்கோர்னியா கிராசிப்ஸ்- Eichhornia crassipes) பல உள்நாட்டு நீர் நிலைகளை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது., பொன்னாங்கண்ணி கீரை போலவே இருக்கும் அலிகேட்டர் களையான (ஆல்டர்னான்திரா பிலாக்ஸீராய்டெஸ்-Alternanthera philoxeroides) இந்தியாவில் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களை வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது. இவற்றில் மிக குறிப்பிட்டு சொல்லும்படியான உலகளாவிய இடையூறுகளை கொடுத்துக் கொண்டிருப்பது பார்த்தீனியம் களைச்செடி
உலகளவில், ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது. சில ஆக்கிரமிப்பு களைகள் உள்ளூர் பொருளாதாரத்தை எதிர்மறையாகவும் பாதிக்கலாம்.
இக்களைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வழங்கக்கூடும் என்றாலும், விவசாயத்தில் விளைச்சலைக் குறைக்கின்றன, . சில ஆழமான வேரூன்றிய ஆக்கிரமிப்பு களைகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளுகின்றன. இன்னும் சில பயிர்களை தாக்கும் பூச்சி இனங்களுக்கு உணவுகளை வழங்குகின்றன.
அலிகேட்டர் களை
மேய்ச்சல் நிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல களைகள் பூர்வீக தீவன தாவரங்களுடன் போட்டியிடுகின்றன, மேய்ச்சல் நிலங்களில் ஆக்கிரமிப்பு களைகளிலிருந்து தீவன இழப்பு அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மகரந்தச் சேர்க்கை களில் இடையூறு மற்றும் பழ உற்பத்தியில் இழப்பு ஆகியவையும் இவற்றின் ஆக்கிரமிப்பால் எற்படுகின்றன.
காலநிலை மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்பு தாவர இனங்களால் உண்டாகி இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் பெரும்பாலும் சர்வதேச அளவில் இல்லாமல் உள்நாட்டு அளவில் தான் கவனிக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த செயல் திட்டம் கொண்டு வரப்பட்டால் இவற்றை மெல்ல மெல்ல குறைக்கவும் அழிக்கவும் முடியும்
இன்றிலிருந்து ஏறத்தாழ 250 வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 1, 1766 அன்று பாரிஸின் ரோஷ்ஃபோர் துறைமுகத்திலிருந்து பூடேஸ் என்னும் கடற்படை கப்பலும்[2] அதற்கு தேவையான எரிபொருள்கள் மற்றும் உணவுகளுடன் இன்னொமொரு சிறிய கப்பலான இட்வாலும்[3] இணைந்து ஒரு புதிய தேடல் பயணத்தை துவங்கின.
102 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்ட இட்வால், 480 டன் எடை கொள்ளும்; எட்டு அதிகாரிகள் மற்றும் 108 பணியாளர்கள் அதிலிருந்தனர்.
பூடேஸ் மிக உயரமான பெரிய விரைவுக் கப்பல், அதை துறைமுகங்களில் நிறுத்துகையில், கட்டிவைக்கவே 25 மைல்களுக்கு மேல் கயிறு தேவைப்பட்டது.
அப்போது ஃப்ரான்ஸின் கடற்படை கப்பல் பயணங்களில் பெண்கள் பயணிக்க சட்டப்படி தடை இருந்ததால், இரண்டு கப்பல்களிலும் சேர்த்து 400 ஆண்கள் மட்டும் இருந்தனர். .இந்த பயணத்தின் தளபதி , ஒரு சிறந்த விஞ்ஞானி, கணிதவியலாளர், சிப்பாய், மீகாமன், இராஜதந்திரி மற்றும் ஃப்ரான்ஸின் அரசரான பதினைந்தாம் லூயியின் நண்பருமான ’’லூயி ஆன்ட்வான் டு பூகென்வீயெல்.’’[4]
“இண்டீஸ் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகளுக்கு இடையில் உள்ள நிலங்களை‘ ஆராயுங்கள், நமது சேகரிப்புக்களும் கண்டுபிடிப்புகளும் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் மேலும் ஃப்ரான்சுக்கு பயனுள்ளதாக இருக்கும் எதையும் கையகப்படுத்த வேண்டும்,’’ இதுவே பூகென்வீல்ல கப்பல் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பயணத்தின் துவக்கத்தில் சொன்னது.
இந்த பயணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, (1756─1763) ல் நடந்த பிரெஞ்சு-(அமெரிக்க)இந்தியப் போரில், ஃப்ரான்ஸ் வட அமெரிக்காவில் தனது நிலப்பரப்பை இழந்திருந்தது. இங்கிலாந்துடன் நடந்த போர்களின் போது இழந்த பெருமைகளை மீண்டும் பெற விரும்பிய ஃப்ரான்ஸ், உலகெங்கிலும் பயணம் செய்வதற்காகத் துவக்கிய பல கடற்பயணங்களில் இதுவே முதலாவது. தென் பசிஃபிக் பகுதியில் காலனித்துவ புறக்காவல் நிலையங்களை நிறுவுவதும் இப்பயணத்தின் ஒரு ரகசிய குறிக்கோளாக இருந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கடல் பயணங்களை மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருந்தது. சென்று சேரவேண்டிய இடத்தை அடைவதில் நிலவிய நிச்சயமற்ற தன்மையும், உணவுப் பற்றாக்குறை, விபத்து, நோய் மற்றும் கடல்கொள்ளை ஆகியவற்றின் அச்சுறுத்தல்களும் எப்போதும் இருந்தன.
கடற்படை கப்பல் பூடேஸ்
13ஆம் நூற்றாண்டில் இருந்துதான் புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடல்சார்வியல், வானிலை ஆய்வு ஆகியவற்றிற்கான முன்னெடுப்புக்களுக்காகக் கடற்பயணங்கள் அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டன.
அறிவியல் ஆய்வின் புதிய சகாப்தம் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தொடங்கியது, அறிவியல் சங்கங்களை நிறுவி, இயற்கை வரலாற்றாசிரியர்கள், பத்திரிகைகளில் வெளியிட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் பெரும் புகழை பெறத் துவங்கியிருந்த காலமும் அதுதான். என்வே உலகின் ஆராயப்படாத பகுதிகளின் தாவரங்களையும் விலங்குகளையும் கண்டுபிடித்து ஆய்வு செய்ய பிற நாடுகளைப் போலவே ஃப்ரான்ஸும் விழைந்தது.
பயணத்தின் மற்றொரு குறிக்கோள், ஃப்ரெஞ்சு தோட்டங்களுக்கான உணவுப் பயிர்கள், மருந்துகள் மற்றும் அழகிய மலர்ச்செடிகளை கண்டுபிடிப்பதாகும். ஏனெனில் தோட்டக்கலை அப்போது வெகு பிரபலமாக இருந்தது.
கம்மர்சன்
இந்த கப்பல் பயணத்துக்குச் சில மாதங்கள் முன்பாக, ஃப்ரான்ஸில் பூங்காவொன்றின் பசுமை போர்த்தியிருந்த நடைபாதையில் ஓங்குதாங்கான ஆகிருதியுடனிருந்த தாவரவியலாளர் ஃபிலிபேர் கம்மர்சனிடம்[5] அவரது உதவியாளரா[6]ன ஒல்லியான உயரமான ‘பாரெ’ ஆயிரமாவது முறையாக கேட்டார் ‘’நீங்கள் உறுதியாகத்தான் சொல்லுகிறீர்களா? பிடிபட்டால் இருவருமே சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருக்கிறீர்களா?’’
கம்மர்சன் பதிலுக்கு, ’’இல்லை, பிடிபட வாய்ப்பேயில்லை உன்னால் இதை திறம்பட செய்ய முடியும் எனக்ககாக செய்ய மாட்டாயா இதை?” என்றார். பாரெடிடமிருந்து சிறிதும் தயக்கமின்றி பதில் வந்தது’’ நிச்சயம், உங்களுக்காக நான் எதையும் செய்வேன்.’’
பின்னர் சில நாட்களிலேயே கம்மர்சன் பாரெடிடம், “பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தாவரவியலாளர்கள் என்ற வகையில், என்னுடையதுடன், உன் பெயரையும் உலகெங்கிலும் செல்லப்போகும் ஒரு பயணத்துடன் இணைத்திருக்கிறேன்,” என்றார்
லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லி
“புகழ்பெற்ற லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லயின் தலைமையில் ஒரு பயணம்,” என்ற பாரெ புன்னகையுடன் கூறினார, “நிச்சயமாக எனக்கிது ஒரு பெரிய மரியாதை, அத்தகைய பெரிய அட்மிரல் மற்றும் ஆராய்ச்சியாளருடன் இணைந்திருப்பதும், உங்களுடன் பயணிப்பதும்.”
ரோஷ்ஃபோர் துறைமுகத்தில் பூகென்வீல்லயின் தலைமையிலான தேடல் பயணத்தில் பாரெ மற்றும் கம்மர்சன் இணைந்தனர். கம்மர்சன் முதலிலும், கப்பல் புறப்படுவதற்கு சற்று முன்னர் கம்மர்சனுக்கு அறிமுகமற்றவர் போல பாரெடும் வந்து, அவருக்கு அந்தப் பயணத்தில் உதவியாளனாக இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு பயணத்தில் இணைந்தார்.
அவர்கள் இருவரும் இட்வாலில் பயணம் செய்யும்படி ஏற்பாடானது. ஏனெனில், கம்மர்சன் கொண்டு வந்திருந்த தாவரங்களை சேகரிக்கவும், உலரவைத்து பாடமாக்கவுமான ஏராளமான உபகரணங்கள் காரணம். இட்வால் கப்பலின் கேப்டன் ’ஃப்ரான்சுவா செனார்ட் டி லா கிராடாய்ஸ்’, கப்பலில் தனக்கான கழிப்பறையுடன் இணைந்திருந்த பெரிய அறையை கம்மர்சன் மற்றும் அவரது புதிய “உதவியாளருக்கு” விட்டுக் கொடுத்தார்.
முதல் சில மாதப் பயணத்தில் சொல்லிக்கொள்ளும்படியான சேகரிப்புக்களும், கண்டுபிடிப்புகளும் இன்றி பயணம் சாதாரணமாகவே இருந்தது, வழியில் பல இடங்களில் கப்பல் கரையணைந்து கொண்டே இருந்தது.
கப்பல் கரை சேரும்போதெல்லாம், நிலப்பரப்பில் கம்மர்சனும், பிற பயணிகளும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு பாரெ துணிந்து சென்றார். அவர்களால் சுமக்க முடியாத பல சுமைகளை எளிதாக அவர் எடுத்துச் சென்றார். கம்மர்சனுக்கு தேவையான அனைத்தையும் முன்னின்று அதிக அக்கறையுடன் செய்துவந்தார். பெரும்பாலான கரையணைதல்களில், நோய்வாய்ப்பட்டிருந்த கம்மர்சனை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாரெ தானே தாவரங்களை ஆராய்ந்து, குறிப்பெடுத்து, அவற்றை உலர்த்தி, பாடமாக்கி, சேகரிப்பதைச் செய்தார்.
கப்பல் ரியோ த ஹனைரோ[7] சென்றபோது, அங்கிருந்த கடுமையான வன்முறை நிறைந்த சூழலில் இட்வால் கப்பலின் பாதிரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அப்படியும் பாரெ அங்கிருந்து முக்கியமான பல நூறு தாவரங்களை சேகரித்தார்
ஜூன் 21, 1767 இல் தென் அமெரிக்காவின் ரியோ த ஹனைரோவின் எல்லையில் உள்ள கடற்கரையில், கம்மர்சன் காலில் இருந்த ஆறாக்காயத்திற்கான பெரிய கட்டுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கடலை ஒட்டி வளர்ந்திருந்த புதிய பல தாவரங்களை கத்தரித்து மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்த அழுத்தும் கருவிகளில் வைத்து பாதுகாத்து கொண்டிருந்த பாரெயைப் பார்த்துக்கொண்டிருந்தார்
திடீரென பாரெ ஒரு கொடியை துண்டித்து கொண்டு வந்து உற்சாகமாய் ’’இங்கே பாருங்கள், இது எத்தனை அழகு,’’ என்று கூவினார்,
பாரெ கொண்டு வந்த பளபளக்கும் இலைகளை கொண்டிருந்த நீண்ட உறுதியான கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.
’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract) எனப்படும் மலரடிச் செதில்கள், உள்ளே சிறிய குச்சிகளைப் போல வெண்ணிறத்தில் இவற்றால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள்,‘’ என்றார் பாரெ.
இளஞ்சிவப்பு மலரடிச்செதில்களால் சுழபட்ட மூன்றூ போகன்வில்லா மலர்கள்
மாணவப் பருவத்தில் பேராசிரியர்கள் உரையாற்றும் போதே குறுக்கிட்டு, பிழைகளை சுட்டிக்காட்டும் அறிவும் துணிவும் கொண்டிருந்த, பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த கம்மர்சனை, அனுபவ அறிவால் பாரெ விஞ்சி நின்ற பல தருணங்களில் அதுவும் ஒன்று. வியந்து போய் ‘’ ஆம் உண்மைதான்,’’ என்ற கம்மர்சன், ’’இந்த புதிய தாவரத்திற்கு என்ன பெயரிடலாம்’’ என்ற போது சற்றும் தயக்கமின்றி ’’தேடல் குழுவின் தலைவரின் பெயரைத்தானே வைக்கவெண்டும்,’’ என்றார் பாரெ.
அப்படியே அந்த புதிய தாவரத்திற்கு பூகென்வீலியா (Bougainvillea brasiliensis ) ப்ராஸிலியன்ஸிஸ்[8]. (இப்போது (Bougainvillea spectabilis) பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்)[9] என்று பெயரிடப்பட்டது. ”இதை கண்டறிந்தவராக நீங்களும் உலகெங்கிலும் அறியப்படுவீர்கள்,” என்ற பாரெடிடம், “இல்லை அன்பே, இதை நீயல்லவா கண்டறிந்தாய்? எனது கண்டுபிடிப்புகள் என இவ்வுலகம் இனி சொல்லப் போவதெல்லாம் நீ கண்டுபிடித்தவை தானே?’’ என்றார் துயருடன்.
தன் அடையாளத்தை மறைத்து ஆணென வேடமிட்டு அந்த கப்பலில் பயணித்த ழ்ஜான் பாரெ, கம்மர்சனின் உதவியாளரும் காதலியுமாவார். திருமணம் செய்துகொண்டிருக்கவில்லையெனினும் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான், ஆனால் ஒரு வருடத்துக்குள் இறந்து போனான்.
கப்பல் புறப்பட்ட சில நாட்களிலேயே பாரெடைக் குறித்த பல சந்தேகங்களும் வதந்திகளும் உலவத்துவங்கியது. அவரின் மெல்லிய குரல், மீசையில்லா முகம், மொழு மொழுவென்றிருந்த மோவாய், மறந்தும் பிறர் முன்னிலையில் உடைகளை மாற்றாதது, எப்போதும் கம்மர்சனின் அறையிலே தங்கியது என பற்பல விதங்களில் அவர் மீதான் சந்தேகங்களையும், புகார்களையும் பிற பயணிகளும், பணியாளர்களும் குழுத்தலைவர் பூகென்வீல்லயிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பூகென்வீல்லயோ அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாரெடின் துணிவையும் தாவர அறிவியலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கடின உழைப்பையும் அவரது முக்கிய சேகரிப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் வியந்து பாராட்டியவாறிருந்தார்.
கம்மர்சனும் அந்த புகார்களில் தனக்கு ஆர்வம் இல்லாதது போலவே காட்டிக்கொண்டார்
தஹிடி தீவில் கரயணைந்த இடம்
1767, ஏப்ரலில் தஹிடி தீவில் கப்பல் கரையணைந்த போது பாரெடும்[1] , [2] கம்மர்சனும் இறங்கி தீவுக்கு வந்தனர். அப்போது வழக்கத்திலிருந்தது போல ஆண் பயணிகளை நோக்கி ஓடிவந்த தீவுப்பெண்கள் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கையில் ஆண் வேடத்திலிருந்த பாரெடை நோக்கிய தீவின் ஆண்கள் வியப்புடன் ’’ஆ, ஒரு பெண் கப்பலில் வந்திருக்கிறார்,’’ என்றபடியே கூவிக்கொண்டு பெண்கள் தீவுக்கு வருகை தருகையில் செய்யப்படும் மரியாதைகளை செய்யத் தொடங்கியபோதுதான் பாரெடின்[3] குட்டு வெளிப்பட்டது. கண்ணீருடன் தலைகுனிந்து நின்றிருந்த பாரெடை[4] பூகென்வீல்ல மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்.திரும்ப கப்பலுக்கு வரவழைக்கப் பட்ட பாரெடை[5] பல வகையிலும் பிற பயணிகள் சித்ரவதை செய்ய முயன்றனர். அவரின் ஆடைகளை உருவவும் பல முறை முயற்சிகள் நடந்தன.
அடுத்துக் கரைசேர்ந்த நியூ அயர்லாந்தில் (இன்றைய பாபுவா நியூ கினி), இது குறித்து விசாரணை நடந்தது. பூகென்வீல்ல தன் முன் அப்போதும் ஆண் உடையில் நின்றிருந்த பாரெடிடம்[6] ’’எப்படி பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் கப்பல் பயணத்தை நீ அடையாளத்தை மறைத்து மேற்கொள்ளலாம்?’’ என்று வினவினார்
’’உடல்நலிவுற்றிருந்த கம்மர்சனுக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டது, எனக்கும் தாவரங்களுக்கான தேடலே வாழ்வின் ஆகச்சிறந்த கனவென்பதால் இதற்கு துணிந்தேன்,’’ என்றார் பாரெ. உண்மையில் பூகென்வீல்லவுக்கு பாரெ எப்படி அத்தனை காலம் அந்த கப்பலில் தாக்குப்பிடித்தார் என்பதே அதிசயமாக இருந்தது. தான் பல தொல்லைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அவற்றை சகித்து கொண்டதாகவும், எல்லை மீறிப்போகையில் உதவிக்காக ஒரு கைத்துப்பாக்கியையும் வைத்திருந்ததையும் பாரெ அப்போது தெரியப்படுத்தினார்.
’’ஏன் இத்தனை ஆபத்துக்களை சந்தித்து இந்த பயணத்தில் இணைந்தாய்?” என்ற கேள்விக்கு, ’’ஏன் செய்யக்கூடாது? என்றே பதில் கேள்வி கேட்ட பாரெ, ’’ஒரு பெண் அறிவியலில் ஆர்வம் கொள்ளக்கூடாதா, ஆய்வுகள் செய்யக்கூடாதா புதியவற்றைக் கண்டுபிடிக்க கூடாதா, ஆண்கள்தான் இவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு மாற்றாக இனி என்னை இவ்வுலகம் எடுத்துக்காட்டாக சொல்லட்டுமே,’’ என்றார்.
பூகென்வீல்லவுக்கு தாவரங்களின் தேடலுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து கடற் பயணத்தை மேற்கொண்ட பாரெ[7] மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. ழ்ஜானுக்கு தண்டனை ஏதும் தரகூடாதென்றே அவர் பரிந்துரைத்தார்.
18 மாதங்கள் அந்த கப்பலில் தனது மார்பகங்கள் வெளியே தெரிந்துவிடாமலிருக்க பட்டையான லினென் துணிகளால் இறுக்க கட்டிக்கொண்டு, ஆண்கள் தூக்கும் எடையை காட்டிலும் அதிக எடையைச் சுமந்தபடி பனியிலும், வெயிலும், மழையிலும், கல்லிலும், முள்ளிலும் அலைந்து பல்லாயிரக்கணக்கான புதிய பல தாவரங்களை கண்டுபிடித்த ழ்ஜான் பாரெக்கு அப்பயணம் துவங்கியபோது 26 வயதுதான்.
இந்த கடற்பயணத்தில் கம்மர்சன் பதப்படுத்திய ஒரு தாவரம்
ழ்ஜான் பாரெ ஜூலை 27, 1740 அன்று ஃப்ரான்சின் பர்கண்டி ஃப்ராந்தியத்தில் ’லா காமெல்’ கிராமத்தில் பிறந்தார்[10]. ஞானஸ்நானம் குறித்த அவரது பதிவில் ஜீன் பாரெ மற்றும் ஜீன் போச்சார்ட் ஆகியோரின் மகளென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றரை வயதில் தாயையும் 15 வயதில் தந்தையையும் இழந்த ழ்ஜான் கல்வி பெறவில்லை என்பதை அவரது தந்தையின் இறப்பு சான்றிதழில் அவரது கையெழுத்து இல்லாததை வைத்து முடிவு செய்யும் வரலாற்றாய்வாளர்கள், பின்னர் கம்மர்சனே ஜேனுக்கு கல்வியளித்திருக்கலாமென்றும் யூகிக்கின்றனர். எளிய விவசாய குடும்பத்தில் கல்வியறிவற்ற பெற்றோருக்கு மகளாக பிறந்த ழ்ஜான் அதற்கு முன்பு தனது ஊரிலிருந்து 20 மைலுக்கு மேல் வெளியே பயணித்ததில்லை.
பிரசவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்துவிட்டு மனைவி இறந்து போன பின்னர், அடிக்கடி உடல் நலிவுற்றுக் கொண்டிருந்த தாவரவியலாளர் கம்மர்சனுக்கு உதவியாளரான ழ்ஜான் குறுகிய காலத்திலேயே, தனது தாவர வகைப்பாட்டியல் ஆர்வத்தினால், அவரின் காதலியுமாகி ஒரு மகனுக்கும் தாயாகியிருந்தார்.. பாரிஸிலிருந்து கப்பல் புறப்படுமுன்பே கம்மர்சன் தனது முக்கிய சொத்துக்களை ழ்ஜானின் பெயருக்கு உயிலெழுதியும் வைத்து விட்டிருந்தார். கம்மர்சனுக்கும் ழ்ஜானுக்கும் பிறந்த மகன் அப்போதே வளர்ப்புத் தாயிடம் கொடுக்கப்பட்டவன், ஒரு வயதாகுமுன் இறந்து போனான். திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை, அன்றைய ஃப்ரான்ஸில் மோசமானது.
விவசாய பின்னணி கொண்டவராதலால் ழ்ஜானுக்கு கம்மர்சனிடம் உதவியாளராக சேரும் முன்பே ஏராளமான மூலிகைகள், பிற தாவரங்கள் குறித்த நல்ல அனுபவ அறிவிருந்தது. நோயாளியான கம்மர்சனின் மீதிருந்த அன்புக்கு இணையாக தாவரங்கள் மீதும் அன்பு கொண்டிருந்ததால் அவரை இப்பயணத்தில் பிரிய முடியாத ழ்ஜானும் கம்மர்சனுமாகப்[8] போட்ட இந்த திட்டத்தால் தான் அந்த பயணம் சாத்தியமானது, அந்த சாகசப் பயணத்தில் இருந்து கிடைத்ததுதான் உலகெங்கிலும்[9] காணப்படும் பல வண்ண பிரகாசமான மலர்களுடன் கூடிய அலங்கார செடியான தமிழில் காகிதப்பூச்செடி என அழைக்கப்படும் பூகென்வீலியா.
அங்கிருந்து மொரிஷியசுக்கு சென்ற கப்பல்களிரண்டும் காற்று திசை மாறும் பொருட்டு நீண்ட நாட்கள் அங்கு காத்திருக்க வேண்டியிருந்தது. மொரிஷியசில் கவர்னராக இருந்த, தாவரவியலாளர் பியரி கம்மர்சனின் நெருங்கிய நண்பராதலால், அவரும் ழ்ஜானும் தேடல் குழுவில் இருந்து விலகி மொரீஷியசில் தங்குவதாக தீர்மானித்தனர். மொரிஷியஸ் தாவரவியல் பூங்காவின் பொறுப்பை கம்மர்சன் ஏற்றுக்கொண்டார்.
பூகென்வீல்லயும் இதற்கு சம்மதித்ததால் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு இரண்டு கப்பல்களும் மொரிஷியஸை விட்டு புறப்பட்டன. அதன் பின்னர் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் சிக்கல்களை சந்தித்த கப்பல்களிரண்டிலும் எலிகளும் காவல் நாய்களும் கூட உணவாக்கப்பட்டன, பலர் நோயால் இறந்து போனார்கள். பல சோதனைகளை கடந்து உயிருடன் இருந்த பிற பயணிகளுடன் கப்பல்கள் இரண்டும் தட்டுத்தடுமாறி டச்சு ஈஸ்ட் இண்டீஸில் 1769ல் கரைசேர்ந்து அந்த தேடல் பயணத்தை நிறைவு செய்தன.
மொரிஷியஸில் இருந்து கம்மர்சனுடன் 1770–1772-ல் மடகாஸ்கருக்கும், இன்னும் சில தீவுகளுக்கும் சென்ற ழ்ஜான்மேலும் பல புதிய தாவரங்களைக் கண்டறிந்தார். 1772 வாக்கில் உடல்நிலை மேலும் நலிவுற்று மார்ச் 1773 இல் தனது நாற்பத்தைந்தாவது வயதில், அந்த பயணத்தின் கண்டறிதல்களை வெளியிடாமலேயே கம்மர்சன் இறந்தார்.
அவரது மரணத்திற்குப் பிறகு ழ்ஜான் மொரிஷியஸில் ஒரு மதுபான விடுதி நடத்தினார். 1774 ஜனவரி 27 ஆம் தேதி, முன்னாள் ஃப்ரான்ஸ் இராணுவ சார்ஜென்ட் ஜீன் டு பெர்னாட்டை மணந்து, அவருடன் ஃப்ரான்சுக்கு திரும்பினார், 22 மாதங்கள் கடற் பயணத்தில் 6000 தாவரங்கள் உள்ளிட்ட ழ்ஜான் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளின் பொருட்டு, பூகென்வீல்லயின் பெருமுயற்சியால் அந்த பயணத்திற்குப் பத்து வருடங்கள் கழித்து அவருக்கு ஃப்ரான்ஸ் கடற்படை அமைச்சகத்திலிருந்து ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது. முதன் முதலாக தனது கண்டுபிடிப்புக்களுக்கு அரசு ஒய்வூதியம் பெற்ற பெண்ணும் ழ்ஜான்தான்.
கடற்பயணத்தில் உலகை முதன் முதலில் சுற்றி வந்த பெருமைக்குரிய தாவரவியலாளர் ழ்ஜான் பாரெ 1807 ஆகஸ்ட் 5 அன்று தனது 67 ஆவது வயதில் இறந்தார்.
ழ்ஜான் பாரேயின் சாகசப் பயணம் குறித்து உலகம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. கம்மர்சனின் நாட்குறிப்புக்கள் மற்றும் இட்வாலின்மருத்துவரான ஃப்ரான்சுவா வீவ்[11] எழுதியிருந்த குறிப்புகள் பெருமளவில் அவரைக்[10] குறித்து தெரிவித்தன. பூகென்வீல்லயின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த நாசாவ்-சீகனின் இளவரசர், பாரெடின் சாதனைகளைக் குறிப்பிட்டு. “அவளுடைய துணிச்சலுக்கான அனைத்துப் பெருமைகளையும் நான் அவளுக்கு கொடுக்க விரும்புகிறேன்,” என்று தனது நினைவுக் குறிப்புகளில் எழுதினார்.மேலும் “அத்தகைய பயணத்தில் ஒருவர் நிச்சயமாக எதிர்பார்க்கக்கூடிய மன அழுத்தம், ஆபத்துகள் மற்றும் நடந்த அனைத்தையும் எதிர்கொள்ள அவள் துணிந்தாள். அவளது சாகசம், பிரபலமான பெண்களின் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போது கடற்பயணிகளின் உடையாக அறியப்பட்டிருந்த வரிக்கோடுகளிட்ட உடையும் புரட்சியாளர்களுக்கான சிவப்பு தொப்பியும் கைகளில் தாவரங்களுமாக இருக்கும் ழ்ஜானின் சித்திரம் கூட அவரைக்குறித்த வாய்வழிச்செய்திகளின் அடிப்படையில் அவரது மறைவுக்கு பின்னர் வரையப்பட்டதுதான்[11] ..
கம்மர்சனுடன் இணைந்து ழ்ஜான் பாரெ கண்டறிந்த ஆயிரக்கணக்கான தென் அமெரிக்க தாவரங்கள் உலர் தாவரங்களாக (Herbaria) இன்றும் ஃப்ரான்ஸ் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன.
1789 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஏ.எல். டி ஜூஸ்ஸோவின் புகழ்பெற்ற ஜெனிரா பிளாண்டேரியத்தில், பூகென்வீல்லா பட்டியலிடப்பட்டபோது, “Buginvilla” என்று தவறுதலாக எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டது. 1930ல் க்யூ ராயல் தாவரவியல் பூங்கா தொகுத்த புதிய தாவரங்களின் பட்டியல் வெளியாகி அது சரி செய்யப்படும் வரை இந்த எழுத்துப்பிழை அப்படியே நிலைத்திருந்தது.
பூகென்வீலியாவின் இரண்டு இனங்கள் – பூகென்வீலியா. ஸ்பெக்டாபிலிஸ் மற்றும் பூகென்வீலியா கிளாப்ரா – 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின. பின்னர் யூரோப்பிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன; கியூ ராயல் தாவரவியல் பூங்காவிலிருந்து 1923 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களின் பட்டியலில் பூகென்வீலியாவின் பெயரும் இருக்கிறது.
பூகென்வீலியா மேற்கு பிரேசிலிலிருந்து பெரு வரையிலும், தெற்கு ஆர்ஜென்டினாவையும் தென் அமெரிக்காவையும் தாயகமாகக் கொண்ட பல்லாண்டு தாவரமாகும். நாலு மணிப்பூ எனப்படும் அந்திமந்தாரை, பவளமல்லி ஆகியவை அடங்கிய நைக்டஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தை சேர்ந்த பூகென்வீலியா 18 சிற்றினங்களை கொண்டது. இப்போது 300க்கும் மேற்பட்ட உட்கலப்பு (inbreeding) வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. வளர்ந்த முதல் வருடத்திலிருந்து, மூன்று ஆண்டுகளில் மலர்களை அளிக்க துவங்கும், பூகென்வீலியா வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையது.
பசுமை மாறா பளபளப்பான இலைகளும், உறுதியான கொடித்தண்டும் கொக்கிகளை போன்ற கூர்முட்களையும் கொண்ட பூகென்வீலியா கொடி 12-15 மீட்டர் நீளம் வரையிலும் பற்றிப் படர்ந்து வளரும் இயல்புடையது, எனினும் இவற்றை தொடர்ந்து கத்தரித்து, குட்டையாக தொட்டிகளிலும், குறுமரங்களை போலவும் கூட வளர்க்க முடியும். பூகென்வீலியாக்களை அரிதாகவே நோயும் பூச்சிகளும் தாக்கும்.
பூகென்வீலியாவின் மலரென்பது, மூன்று அல்லது ஆறு பிரகாசமான காகிதம் போன்ற மலரடி செதில்களால் சூழப்பட்டிருக்கும் மூன்று குழல் போன்ற சிறிய வெண்ணிற மலர்களின் தொகுப்புதான். இதன் கனி மிகச்சிறியது, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். வெள்ளை ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரடி செதில்கள் இருக்கும்.
உலகின் எந்த பகுதியாக இருப்பினும் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ஒரு பூகென்வீலியாவையாவது பார்த்துவிடலாம் என்னும் அளவிற்கு இந்தக் கொடி உலகெங்கும் பிரபலமான, பலரின் விருப்பத்துக்குரிய அலங்காரச் செடியாகி விட்டிருக்கிறது. தோல் அழற்சியை உண்டாக்கும் இதன் இலைச்சாற்றை உலகின் பல பழங்குடியினத்தவர்கள் மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்துகின்றனர்.
இனி இவற்றை அழகான பூக்கள் இருக்கும் ஒரு செடி என்று மட்டும் எளிதில் கடந்து போகாமல் ழ்ஜான் பாரெடின் [12] சாகச கடற் பிரயாணத்தின் பொருட்டாவது நின்று ஒரு கணம் அதன் அழகை ஆராதித்து விட்டே செல்லவெண்டும்.
மலரடிச் செதில்களால் மறைக்கப்பட்டிருக்கும் பூகென்வீலியா மலர் போலத்தான், 250 வருடங்களுக்கு முன்னர் இப்போதுகூட பெண்கள் எண்ணிப்பார்க்க முடியாத ஆபத்துக்களை துணிவுடன் சந்தித்து, பல புதிய தாவரங்களை தனது காதலனின் பெயரில் பெருந்தன்மையுடன் உலகிற்கு தந்த ஜேனும் தாவரவியல் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறார்.
கம்மர்சனின் மறைவுக்கு பின்னர் அவரின் கண்டுபிடிப்புகள் பலரும் பிரசுரித்தனர். ஆனால் யாருமே ழ்ஜான் பாரெடைக் குறித்து ஒரு வார்த்தையையும் குறிப்பிடவில்லை பிரபல பரிணாமக் கொள்கையை அறிவித்தவரான ’ழ்ஜான் – பாட்டீஸ்ட் லமார்க்’ மட்டுமே ழ்ஜான் பாரெடின்[13] பங்களிப்பையும் அவரது துணிச்சலையும் குறிப்பிட்டு எழுதிய ஒரே ஒருவர்.
சுமார் 70 தாவரங்கள் இப்போது கம்மர்சனின் பெயரில் இருக்கின்றன. தன் பெயரை, நண்பர்கள், உறவினர்கள் பெயரை பல தாவரங்களுக்கு வைத்த கம்மர்சன் காதலின் பொருட்டு உலகில் எந்த பெண்ணும் செய்ய துணிந்திராத சாகசத்தை செய்தவளான தன் காதலியின் பெயரை அடர் பச்சையில், ஒரே மரத்தில் பல வடிவங்களில் இலைகளையும், வெண்ணிற மலர்களையும் கொண்டிருந்த ஒரே ஒரு மடகாஸ்கர் குறுமரத்திற்கு மட்டும் Baretia Bonafidia என்று வைத்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக கம்மர்சனின் அறிக்கை பாரிஸ் சென்று சேரும் முன்னே அந்த மரத்துக்கு மற்றொரு பெயர் (Turraea) வைக்கப்பட்டுவிட்டது. பிரசுர முன்னோடி விதிகளின் படி பாரெடின்[14] பெயரை அந்த மரத்துக்கு வைக்கமுடியாமலானது[12].
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு 2012 ல் கண்டுபிடிக்கப்பட்ட உருளைகிழங்கு, தக்காளியின் குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரத்திற்கு மட்டுமே Solanum baretiae, என்று பாரெடின்[15] பெயரிடப்பட்டிருக்கிறது.
2020ல் அவரது 280 வது பிறந்த நாளை கூகில் டூடுல் பூகென்வீலியா கொடிகளால் சூழப்பட்டிருக்கும் ழ்ஜானின் புகைப்படத்துடன் சிறப்பித்தது.
The 2010 ல் பாரெடின் சுயசரிதை The Discovery of Jeanne Baret, என்னும் பெயரில் க்லெனிஸ் ரிட்லி[13] யால் எழுதப்பட்டது ஆனால் அந்நூலில் பல கண்ணிகள் விட்டு போயிருப்பதாகவும் பல தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பின்னர் கடந்த 2020 ல் வெளியான டானியெல் க்ளோட்[14] , எழுதிய நூலிலிருந்து ழ்ஜான் பாரெடின் வாழ்வைக் குறித்து நம்பகமான தகவல்கள் ஓரளவுக்கு உலகிற்கு தெரிய வந்திருக்கிறது[15].
கடந்த செப்டம்பர் 2019 இல், 77 வயதான பிரிட்டிஷ் பெண் ஜீன் சாக்ரடீஸ்[16], உலகத்தை தனியாக கடல்வழியே சுற்றிவந்த முதல் வயதான பெண்ணாக அறியப்பட்டார். அவர் தான் சந்தித்த சவால்களையும் இடர்களையும் சொல்லித் தான் விடாமுயற்சியுடன் அவற்றை எதிர்கொண்டு பயணத்தை நிறைவு செய்ததாகச் சொன்னதை, ழ்ஜான் உயிருடன் இருந்து கேட்டிருந்தால் புன்னகைத்திருப்பாளாயிருக்கும்.
[13] Glynis Ridley: The Discovery of Jeanne Baret: A Story of Science, the High Seas, and the First Woman to Circumnavigate the Globe; Hardcover, 288 pages
Published December 28th 2010 by Crown ; ISBN: 0307463524 (ISBN13: 9780307463524)
[14] In Search of the Woman who Sailed the World by Danielle Clode
Paperback, 352 pages
Published October 1st 2020 by Picador; ISBN: 1760784958 (ISBN13: 9781760784959)
டோஃபூ (Tofu) என்பது சோயா பயிர் விதையிலிருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியினைப்போன்ற ஒரு உணவுப்பொருளாகும். இது சோயா தயிரென்றும் பீன்ஸ் தயிர் என்றும் அழைக்கப்படுகிறது. சின்ன சின்ன சதுரங்களாக இவை விற்பனையில் உள்ளன.
சோயா செடி
சீனா, ஜப்பான், கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் உணவு வகைகளில் டோஃபு தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். இது ஹான் வம்சத்திலிருந்து (கிமு 206 – 220 .) புழக்கத்தில் இருந்து வருகிறது என்று நம்பப்படுகிறது.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலும் ஜப்பானிலும் டோஃபூ வின் உபயோகம் இருந்துள்ளது.1770 ல் டோஃபூ வைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்புக்களும், புத்த மத துறவிகள் இதை உணவில் பெரும்பாலும் சேர்த்துக்கொண்டு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
சோயா விதைகள்
உலர்ந்த சோயாபீன்கள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, வேக வைக்கப்படுகிறது. வேகவைத்த கலவையிலிருந்து சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது . சோயா பாலில், கால்சியம் சல்பேட், மெக்னீசியம் குளோரைடு. எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து அதை தயிராக்கி பின்னர் அதை கெட்டிப்படுத்தி சதுர அச்சுகளில் ஊற்றி டோஃபூ தயாரிக்கப்படுகின்றது.
சோயாபால்
. டோஃபு உற்பத்தி முறையைப் பொறுத்து மென்மையான, கூடுதல் மென்மையான, கடினமான மற்றும் குளிர்பதனப்பெட்டிகளில் சேமிக்க தேவையில்லாத உலர்ந்த டோஃபு ‘வாகவும் சந்தையில் கிடைக்கிறது.
பல சுவையான உணவுப்பொருட்களைப் போன்ற டோஃபூவும் சீனாவிலிருந்தே உருவானது. 8 ஆம் நூற்றாண்டில், ஒரு சீன சமையல்காரர் தற்செயலாக சோயா பாலை தயிராக்கி இதை கண்டுபிடித்து, ஒகாபே (Okabe) என்று பெயரிட்டார். சீன மொழியில் ஒகாபே என்றால் வெள்ளைச் சுவர் என்று பொருள். கெட்டியாக வெள்ளையாக இருந்த டோஃப்ஃபுக்கு இந்தபெயரே வெகுகாலம் இருந்துவந்தது பிற்பாடு 19 ஆம் நூற்றாண்டில்தான் டோஃபூ என்னும் பெயர் வழங்கப்பட்டது. டோஃபு என்பது ஜப்பானிய மற்றும் சீன மொழிகளில் பீன்ஸ்( beans) என்று பொருள்படும்
இதில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்து செல்ல பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக உடல் அதிக ஆற்றலைப் பெறுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும் இது உதவும்.
மிகக்குறைவான கலோரியும் அதிக அளவில் புரதம் (6-8%). இரும்புச்சத்து, மெக்னீசியம் கால்சியம்,பொட்டாசியம் உள்ளிட்ட பல தாது உப்புக்களும் அதிகம் கொண்ட இந்த டோஃபு நல்ல வாசனையையும் கொண்டது. டோஃபூ உற்பத்தியின் உபபொருட்களான ஒகரா (Okara) என்னும் திடப்புரதமும், வே ( Whey) எனப்படும் நீர்த்த புரதமும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.. டோஃப்ஃபுவில் மிக முக்கியமான் 8 அமினோ அமிலங்கலும் உள்ளன.
Okara
ஆசிய உணவுகளில் கடந்த 20 ஆண்டுகளாக மிக அதிக அளவில் இடம்பெற்றிருக்க்கிறது இந்த சோயாப்பன்னீரான டோஃபூ,
உலகில் மிக அதிகமாக உண்ணப்படும் சோயா பொருட்களில் டோஃபூவே முதலிடம் வகிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 50 டன் வரை தயாரித்து ஜப்பான் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது.
டெம்ப்பே (Tempeh) என்பதுவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட சோயா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புரத உணவாகும். இதில் டோஃபுவை காட்டிலும் அதிக புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறது
Tempeh
சோயாவில் இருக்கும் ஒரு சில எதிர் ஊட்டச்சத்துக்கள் (Ant nutritional substances) சோயாவை ஊற வைத்து வேக வைத்த பின்னர் டோஃபூ தயாரிக்கப்படுவதால் டோஃபூவில் இருக்காது.
டோஃபூ ஊறுகாய்
உறைய வைத்த டோஃபூ, , டோஃப்ஃபூ ஊறுகாய்கள், சோயா பாலாடை என பல விதங்களில் அதிக புரதம் இருக்கும் டோஃபூ உணவுகள் கிடைக்கின்றன.
டோஃபூ பாலாடை
சோயாவிலிருந்து மட்டுமல்லாமல் பாதாமில் இருந்து, முட்டையிலிருந்து,கொண்டைக்கடலை, வேர்க்கடலை, மற்றும் எள்ளிலிருந்தும் கூட டோஃப்ஃபூ தயாரிக்கப்படுகின்றது.
பெண்களின் மாதவிலக்கு நின்றுபோகும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியும் நின்றுவிடும் எனவே பெண்கள் அப்போதிலிருந்து அதிகம் டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
டோஃபூவில் இருக்கும் தாவர ஈஸ்ட்ரோஜன் மனித உடலின் ஈஸ்ட்ரோஜென்னை போலவே செயலாற்றுவதால் மாதவிலக்கு நின்றுபோகும் சமயங்களில் உண்டாகும் உடல் உபாதைகளில் இருந்து விடுபடசோயா உணவுகள் பலனளிக்கும்
உபயோகப்படுத்தாத டோஃபுவை குளிர்பதனப்பெட்டியில் அல்லது நீரில் சேமித்து வைத்திருக்க வேண்டும்
அசைவ புரதத்திற்கு மாற்றாக இந்த தாவர புரதமான டோஃபூவை சைவ உணவுக்காரர்கள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு நகர்களில் மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகளுக்கும் அருகிலிருக்கும் சின்ன சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணி பெண்கள் குங்குமச்சிமிழ் போன்ற சிறு பெட்டிகளில் 700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம் குங்குமப்பூ வாங்கி செல்லுவதை சாதாரணமாக காணலாம்.
உண்மையில் இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் செல்லுவது குங்குமப்பூவே அல்ல, அவை பெரும்பாலும் உலர வைக்கப்பட்ட பீட்ரூட் துருவல்களாகவோ அல்லது சாயமேற்றப்பட்ட பெருஞ்சாமந்தி மலரிதழ்களாகவோ தான் இருக்கும். அரிதாகவே அசல் என்று மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைப்பதில், குங்குமப்பூவின் சூலகமுடிகளின் அடிப்புகுதி சிறிதளவு இருக்கலாம்
இப்படி போலிகளை விற்பதும் வாங்குவதும் முட்டாள் தனம் என்றால், கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை குங்குமப்பூவின் நிறத்தில் இருக்கும் என்னும் நம்பிக்கை அதைக்காட்டிலும் முட்டாள் தனமானது. குங்குமப்பூ குறித்தும், அதன் நன்மைகளை, அதிகம் உட்கொண்டால் உண்டாகக்கூடிய உடல் உபாதைகளை, ஆபத்துக்களை, அசலையும் போலியையும் பிரித்தறியும் முறைகளையெல்லாம் அறிந்து கொள்வது அவசியமாகிவிட்டிருக்கிறது.
குங்குமப்பூ மிகவும் சுவாரஸ்யமான ஒரு தாவரம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக. அதன் நிறம், சுவை, மணம், பயன்கள் மற்றும் அறுவடைக்கு செலவழிக்கபப்டும் நேரம் ஆகியவற்றின் பொருட்டு உலக வரலாறு முழுவதும் போற்றப்படுகிறது.
அகழ்வாய்வுகளில் 50 ஆயிரமாண்டுகளுக்கு முன்பு குங்குமப்பூ சாயமேற்றப்பட்ட பொருட்களின் எச்சங்கள் மேற்கு ஈரானில் கண்டறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள் குங்குமப்பூ கலக்கப்பட்ட பானங்களை மந்திர தந்திரங்களுக்கும் , பூசனைகளுக்கும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர். பண்டைய பெர்சியாவில் தெய்வங்களுக்கும அரச குடும்பத்தினருக்குமான உடைகளனைத்தும் குங்குமப்பூ சாயமேற்றப்பட்டன.
மாவீரர் அலெக்ஸாண்டர் தனது போர் காயங்களுக்கு பெர்ஷியாவின் குங்குமப்பூவை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார். கிளியோபாட்ரா தன் கன்ன மேடுகளுக்கு குங்குமப்பூக்களால் செம்மையூட்டியதையும், ரோமானியர்கள் குங்குமப்பூ இழைகளால் நிரப்பப்பட்ட தலையணைகளில் படுத்துறங்கியதையும், குளியல் தொட்டிகளில் குங்குமபூக்களிட்டு செஞ்சிவப்பு நீரில் குளித்ததையும் வரலாறு சொல்லுகின்றது.
பாலில் குங்குமப்பூ கலந்து அருந்துவது பாலுணர்வை தூண்டும் என்பதால் புதுமணத் தம்பதிகளுக்கு பல கலாச்சாரங்களில் இப்பானம் அளிக்கப்பட்டு வருகின்றது..
மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ எனப்படும் இந்த சாஃப்ரன் (saffron) குரோக்கஸ் சடைவஸ் (Crocus sativus), என்னும் இரிடேசீயே (Iridaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுத் தாவரம். இது சிவப்புதங்கம், (Red Gold) எனவும் அழைக்கப்படுகின்றது.. saffron என்னும் பிரெஞ்சு மொழி சொல்லின், வேர் அரபி மொழியில் ’மஞ்சள்’ என பொருள்படும் லத்தீன் சொல்லான safranum என்பதில் இருக்கிறது
மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் அவற்றை ஒத்த , உலர்ந்த கோடைத் தென்றல் வீசும் பகுதியிலும் அதிகமாக வளரும் இவை உறைபனி களையும், குளிர் மிகுந்த பனிக்கட்டி மூடியிருக்கும் சூழலையும் தாங்கி வளரக்கூடியவை.
குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. காட்டு குங்குமப்பூ- wild saffron, குரோக்கஸ் கார்ட்ரைட்டியானஸ் (Crocus cartwrightianus) செடியை இனவிருத்தி மற்றும் கலப்பினம் செய்ததன் மூலம் நீளமான சூலக முடிகளை (Style ) கொண்ட இப்போது அதிகம் பயிரிடப்படும் Crocus sativus செடி உருவாக்கப்பட்டது. முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவிலும் ஸ்பெயினிலும் துவங்கிய குங்குமப்பூ சாகுபடி பின்னர் மெதுவாக ஈரான், இந்தியா, ஸ்வீடன் நாடுகளுக்கு பரவியது.
குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருட்களை கொண்ட, தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர் பாய்ச்சப்பட்ட, சுண்ணாம்பு நிறைந்த களி மண் வகைகள் (clay-calcareous) உகந்தவை. நல்ல சூரிய ஒளியில் அவை மிகச்சிறப்பாக வளர்வதால், சூரிய ஒளியை நோக்கி சரிவாக அமைந்த நிலப்பகுதிகளில் பாரம்பரியமான மேட்டுப்பாத்தி முறையில் இச்செடிகள் பயிர் செய்யப்படுகிறது
குங்குமப்பூ சாகுபடிக்கு வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் மிக உகந்தவையாகும். இவற்றின் இள ஊதா நிறப் பூக்கள் முளைக்கும் திறன் உள்ள விதைகளை உருவாக்குவதில்லை அதனால் நிலத்துக்குக் கீழே இருக்கும் பழுப்பு நிறமான 4.5 செ.மீ அளவுள்ள குமிழ் போன்ற தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து நட்டு வைப்பதன் மூலம் இவற்றை பயிரிட முடியும்.. ஒரு கிழங்கை உடைத்து, பிரித்து நடுவதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட புதிய தாவரங்களைப் பெறலாம்
கோடை காலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள், இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இவை அக்டோபர் மாதத்தில்,பல மென் வரிகளைக் கொண்ட சாம்பல் கலந்த ஊதா நிறமுடைய பூக்களை உருவாக்கும்.. பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின் சராசரி உயரம் 30 சென்டி மீட்டருக்கும் குறைவாக இருக்கும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழைப் பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது
இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடை மிக வேகமாக நடக்கும்.
3 அல்லது 4 நாட்கள் வரையே உதிராமல் இருக்கும் மலர்களை கைகளால் பறித்து, கூடைகளில் சேகரித்து, குறிப்பிட்ட வெப்ப நிலையிலிருக்கும் அறைகளின் கூரையிலிருந்து தொங்க விடுவார்கள். மலர்கள் உலர்ந்ததும் சூல் முடிகள் கவனமாக பிரித்தெடுக்கப்படும். இந்த தயாரிப்புக்களே ஏறக்குறைய ஒரு வாரகாலம் நடக்கும்
ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகள் உடைய சூல் தண்டுகள் (style) உருவாகின்றன . அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ அளவில் கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் (stigma) காணப்படுகின்றன. பூ என பொதுவில் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்த சூல் முடிகளே குங்குமப்பூ என அறியப்படுபவை. தனித்த உலர்ந்த சூலகமுடியின். நீளம் சுமாராக 20 மி.மீ இருக்கும்.
குங்குமப்பூவின், உலர்ந்த வைக்கோல் போன்ற மணத்திற்கும், நிறத்திற்கும், சுவைக்கும் மருத்துவ குணங்களுக்கும் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்களும் பல ஆவியாகாத செயல்மிகு வேதிக் கூறுகள் உள்ளன.
இவற்றில் ஜியாஸேந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள் ஆகியவை முக்கியமானவை. குங்குமப்பூவின் தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு நிறத்திற்கு ஆல்ஃபா (α) குரோசினும். கசப்பான சுவைக்கு குளுக்கோசைட்டு பிக்ரோகுரோசினும் காரணமாகும். உலர்ந்த குங்குமபூவில் 65% கார்போஹய்ட்ரேட்டுக்களும், 6% கொழுப்பும், 11% புரதமும் இருக்கும்.. உலர்ந்த குங்குமப்பூவை, வளிமண்ட ஆக்ஸிஜனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்
150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவைப்படுகின்றது. இது ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் பயிரிடுதலுக்குச் சமமானது மேலும் 150,000 பூக்களை கைகளால் பறிப்பதற்கு நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.
பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே தரமான புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.
உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. ஸ்பேனிஷ் சுபீரியர்’ (Spanish Superior) என்றும், ‘கிரீம்’ (Creme) என்றும் வணிகப்பெயர்களைக் கொண்ட வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை
அதிக சாஃப்ரானல்,, வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் ,அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது இத்தாலியின் “அக்குய்லா” குங்குமப்பூ (zafferano dell’Aquila), மற்றொன்று காஷ்மீரி “மாங்ரா” அல்லது “லசா” குங்குமப்பூ (crocus sativus kashmirianaus). குங்குமப்பூவில் முதல்தரம் சாகி, என்றும் இரண்டாம்தரம் மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சா என்றும் அழைக்கப்படுகின்றது
ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். ஈரான் உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து இயற்கை உரமிட்டு வளர்க்கப்படும் பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் கிடக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron) சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.
நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 2 லட்சம் இந்திய ரூபாய்கள்).
இந்திய குங்குமப்பூ
குறிப்பிடத்தக்க சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் குங்குமப்பூ வகை உலகின் அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது . இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூ சாகுபடிக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள குங்குமபூ நகரமென்றூ அழைக்கபடும் பாம்போர் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் குங்குமப்பூ பயிரடப்படும் சுமார் 5,707 ஹெக்டேர் நிலபரப்பில் ஆண்டுக்கு 16 ஆயிரம் கிலோ குங்குமப்பூ கிடைக்கின்றது. இதில் 4,496 ஹெக்டேர்கள் ஜம்மு காஷ்மீரில் மட்டும் இருக்கின்றது.
உலகெங்கிலும் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட உணவு வகைகளும் பானங்களும் இனிப்புக்களும் வெகு பிரபலம், காஷ்மீரில் குங்குமப்பூ, பட்டை, ஏலக்காய் கலந்து நறுக்கிய பாதாமினால் அலங்கரிக்கபட்ட கெவா ( kehwa ) என்னும் பச்சைத்தேநீர் வெகு பிரசித்தம்
kehwa
சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும்உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குங்குமப்பூ ஆஸ்த்மா, இருமல், தூக்கமின்மை, இதய நோய் மற்றும் சருமப்பாதுகாப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
1959ல் மரகதம் என்னும் திரைப்படத்தில் அரிதான, விலைமதிப்பற்ற, தங்கத்திற்கு இணையான குங்குமபூவுடன் காதலியை ஒப்பிட்டு ஆர் பாலு வரிகளில் ’’குங்குமபூவே’’ என்னும் பாடலை சந்திரபாபு பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் அதற்குப் பிறகு குங்குமப்பூ எந்தப்பாடலிலுமே இல்லையென்றே நினைக்கிறேன். இந்திய தேசியக்கொடியின் மூவர்ணங்களிலொன்றூம், புத்த துறவிகளின் உடைகளும் குங்குமபூவின் காவி நிறமே.
பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் குங்குமப்பூவில் அதிகம் கலப்படமும் உள்ளது. மாதுளம் தோட்டின் உட்புறமிருக்கும் நார்களையும், சிலவகை புற்களையும், பீட்ரூட் துருவல்களையும் சாயமேற்றியும் , marigold எனப்படும் துளிர்த்தமல்லியின் இதழ்களை காயவைத்தும், கலப்படங்களும், குங்குமப்பூ போலிகளும் சந்தைப்படுத்தப் படுகின்றது.
குங்குமப்பூவின் கலப்படத்தை எளிதில் கண்டுகொலலாம். அசல் குங்குமப்பூ ஆழ்ந்த சிவப்பு நிறத்துடன், வைக்கோல் அல்லது மண் வாசனையும், மென் கசப்புச்சுவையும் கொண்டிருக்கும். விரல்களுகிடையில் வைத்து சில இழைகளை நசுக்கி தேய்க்கையில் விரல்களில் பொன் மஞ்சள் நிறம் படிந்தால், அது அசல் குங்குமப்பூ. தூய நீரில் எளிதில் கரைந்து நிறமிழந்து வெளிறிப்போகாமல், நீர் பொன்மஞ்சளாக மெல்ல மெல்ல நிறம் மாறூகையில் இழைகள் நிறமிழக்காமலிருப்பதும் அசலே. அசல் குங்குமப்பூவின் ஒவ்வொரு இழையின் நீளமும் ஒரே அளவில் இருக்காமல் ஒரு நுனி சற்றுப் பெரிதாக இருக்கும்
கர்ப்பிணிகள் குங்குமப்பூ உட்கொண்டால் பிறக்கும் குழந்தையின் சரும நிறம் மேம்படும் (அதாவது சிவப்பாகும்) என்பது எந்த அறிவியல் ஆதாரமுமில்லாத, தொன்று தொட்டு நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கை. குழந்தைகளின் சரும நிறம் பெற்றோர்களின் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கபடுகின்றது.
குங்குமப்பூவில் இருக்கும் வேதிச்சேர்மங்கள் கருப்பையை சுருங்கி விரியச்செய்யும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துவங்கி வைக்கும் குணம் கொண்டவை (oxytocic). எனவே குங்குமப்பூவை தொடர்ந்து அதிகமாக உட்கொள்கையில் கருக்கலைப்பும் சிறுநீரக செயலின்மையும் ஒருநாளைக்கு 20 கிராமுக்கு அதிகமாகையில் உயிரழப்பும் கூட ஏற்படும் ஆபத்துள்ளது. குங்குமப்பூவுக்கு ISO தரக் கட்டுப்பட்டு நிரணயமிருப்பதால் அசலை கண்டறிந்து வாங்கவேண்டும்.( ISO 3632)
பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும் கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் காணவேண்டி அங்கேயே செல்லலாமென முடிவானது. ஏமாற்றத்தை தவிர்க்க முன்கூட்டியே கானுலாக்களுக்கும், கபினியாற்றிலும், கழிமுகத்திலுமான படகுப்பயணங்களுக்கும் விண்ணப்பித்தோம். வைரஸ் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்து பயணங்களை தவிர்த்து, அன்னூர்-சத்தியமங்கலம் வழி மைசூர் செல்ல வெறும் 200 கிமீதான் என்பதால் காரிலேயே செல்ல திட்டமிட்டோம்.
புதனன்று போகிப்பண்டிகையென்பதால், எதிர்வரும் கோடைக்கால நோய்த்தொற்றுகளின் இயற்கைத்தடுப்புகளான வேம்பு மற்றும் மாவின் இலைகள், சிறுபீழை மற்றும் ஆவாரம் மலர்களாலான கொத்துக்களால் வீடெங்கும் காப்புக்கட்டுதலை முடித்த பின்னர், பொள்ளாச்சியிலிருந்து அன்னூர் வழியே பயணத்தை துவங்கினோம். இந்த மாதம் முழுவதுமே இடைவிடாத மழையானதால், அக்கம்பக்கம் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டு வயல்களும் தோப்புக்களும் நிரம்பி கடவு வழிந்தோடிக்கொண்டிருந்த சாலைகளில் குளிர் நிரம்பியிருந்தது.
அன்னூர் சத்தியமங்கலம் மலைப்பாதையின் 27 கொண்டை ஊசி வளைவுகளும் முன்பு போல் தொடர் சரக்கு லாரி போக்குவரத்தினால் இடைஞ்சல் வராதபடிக்கு நன்கு விரிவாக்கப்பட்டிருந்ததால் எளிதில் மலைஏறி இறங்கினோம்.
சத்தியமங்கலம் மைசூரு செல்லும் வனச்சாலையின் 40 கிமீ தூரமுமே சாலையென்றே சொல்ல முடியாத வகையில் குண்டும் குழியும் கற்களுமாக இருந்தது. ஆனால் காட்டின் விளிம்பிலும், காடு முழுவதும், பல்லாயிரக்கணக்கான் மூங்கில்கள் பொன் போல் பூத்து நின்றதை பார்த்ததும் பயணத்தின் சிரமமெல்லாம் பெரிதாகப்படவில்லை. மூங்கில்கள் பூப்பது ஒரு அரிய நிகழ்வு அதுவும் ஒருவர் ஒருமுறை பார்ப்பதே அரிது. நான் இரண்டாம் முறையாக பார்க்கிறேன். 2016’ல் தாவர வகைப்பாட்டியல் பயிற்சியின் பொருட்டு சென்றிருக்கையில் கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கு, சைரந்திரி வனத்தில் மூங்கில்பூப்பை முதன்முதலாக பார்த்திருந்தேன்
மூங்கில் பூப்பதென்பது மூங்கில் அழிவதுதான். வாழ்நாளின் இறுதியில் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை பூத்துக்காய்த்து அழியும் Monocarpic வகையை சேர்ந்த மூங்கில்கள் இப்படி சொல்லி வைத்தாற்போல ஒட்டுமொத்தமாக 48 லிருந்து 50 வருடங்கள் கழித்து பூத்து பின்னர் ஏராளமான மூங்கிலரிசி எனப்படும் விதைகளை உருவாக்கிவிட்டு மடிந்துவிடும்.
மூங்கிற்சாவு எனப்படும் இந்த நிகழ்வு பெரும் பஞ்சத்தையும் அழிவையும் கொண்டு வருமென்று இந்தியாவின் பலபாகங்களில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் ஏராளமான அளவில் உருவாகும் மூங்கிலரிசியை உண்ணும் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணும் விலங்குகள் பல்கிப்பெருகி பிறதானியங்களையும் உண்ணத்துவங்கி, உண்டான உணவுத்தட்டுப்பாட்டினால் இந்தியா சந்தித்திருந்த பல பெரும் பஞ்சங்கள் விட்டுச்சென்ற கோர நினைவுகளால் இப்படியொரு நம்பிக்கையும் அச்சமும் நிலைபெற்று விட்டது. மூங்கிலின் மிகுபூப்பிற்கும் (Gregarious flowering of Bamboo) தொடரும் பஞ்சத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் எந்த தொடர்புமில்லை
புல் குடும்பத்தை சேர்ந்த தாவரமான மூங்கிலின் 1200 வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. இவற்றில் 24 பேரினங்களின் 138 சிற்றினங்கள் இந்தியாவில் வளருகின்றன. இதில் 3 மட்டுமே அயல் தாவரங்கள் மற்ற அனைத்துமே இயல் தாவரங்கள். உலகெங்கிலுமே மூங்கில் பூப்பென்பது அரிய நிகழ்வுதான்.
இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் 53 சிற்றினங்களும், அருணாச்சலபிரதேசத்தில் 50 சிற்றினங்களுமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த மூங்கிலின் 50 சவீதத்திற்கும் மேற்பட்ட வகைகள் விளைகின்றன. இப்பகுதிகளில் இசைக்கருவிகள், காகிதங்கள், தொப்பிகள். ஆயுதங்கள், மேசை நாற்காலிகள், வீடுகளின் கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்விற்கான 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மூங்கிலினால்தான் செய்யப்படுகின்றன.
மூங்கில் குருத்தும், மூங்கிலரிசியும் அம்மக்களின் மிக விருப்பமான முக்கியமான உணவாகும். சாப் ஸ்டிக்ஸ் எனப்படும் உணவுக்குச்சிகளாகவும், எரிவிறகாவும் மூங்கிலே இங்கு பயன்படுகின்றது. ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானப்பணிகளில் இங்கு விளையும் உறுதியான, நீண்ட கணுவிடைவெளிகளும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும் நெடுமூங்கில்களே சாரம் கட்டப் பயன்படுகின்றன. மூங்கிலின் இலைகளும் கால்நடைத் தீவனமாக பயன்படுகின்றது.
அஸ்ஸாமிய மூங்கிலான Dendrocalamus tulda விலிருந்து செய்யப்படும் புல்லாங்குழல்தான் அங்கு கோவில் விழாக்களில் இசைக்கப்படுகின்றது. இக்குழலிசை துஷ்டசக்திகளை விரட்டுவதாக அங்கு நம்பிக்கை. நிலவுகின்றது
வடகிழக்கிந்தியாவில், மக்களின் வாழ்வுடன் இரண்டறக்கலந்துள்ள மூங்கில் பூப்பதென்பது பெரும் அபசகுனமென்றும், அழிவுக்கான அறிகுறியென்றும் நெடுங்காலமாகவே நம்பிக்கை நிலவுகின்றது
மிசோரத்தின் மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட முள்ளி மூங்கிலிலிருந்தே (Muli Bamboo) தொட்டில்களும், கிறிஸ்துவமதம் அதிகம் பரவியிருப்பதால் சவப்பெட்டிகளும் கூட செய்ப்யபடுகின்றன.
tabasheer
இப்பகுதிகளில் வளரும் Phyllostachys bambusoides எனப்படும் பிறிதொரு மூங்கில் வகையின் கணுக்களிலிருந்து சுரக்கும் மணலைப்போன்ற சொரசொரப்பான ஒரு வடிதலை சுரண்டி சேகரிக்கப்படும் தபஷீர் (tabasheer) உள்ளூர் மக்களால் பல நோய்களுக்கு மருந்தாகவும், பாலுணர்வு ஊக்கியாகவும் (Aphrodisiac) பயன்பாட்டிலிருக்கின்றது. தரைமட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளை அசைத்து, தாளத்திற்கேற்ப அவற்றின் இடைவெளிகளில், மூங்கில் தலையணியுடன் பாரம்பரிய உடையிலிருக்கும் மிசோர மக்கள் ஆடும் செரா (Cheraw) நடனம் உலகப்புகழ்பெற்றது
செரா நடனம்
அஸ்ஸாமிலும் மிசோரத்திலும் மூங்கிலை முழுநிலவன்றும், செவ்வாய் சனிக்கிழமைகளிலும் வெட்டுவது அமங்கலமென்று கருதப்படுகின்றது.
ஏழு சகோதரி மாநிலங்களெனப்படும் இம்மாநிலங்களின்பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் மூங்கில் மிக முக்கிய தாக்கமுண்டாக்கும் ஒரு தாவரமாக இருந்து வருகின்றது, குறிப்பாக மிசோரத்தில் இதன் முக்கியத்துவம் மிக அதிகம். மிசோரம் மாநிலத்தின் மொத்த நிலப்பகுதியில் 49 சதவிகிதப் பகுதியில் மூங்கில் காடுகள்தான் உள்ளன.
மிசோ மொழியில் மூங்கில் பூப்பதை மௌடம் என்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய ஒரு மெளடம் நிகழ்வினைத்தொடர்ந்து பெரும் பஞ்சமும் பல்லாயிரம் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு 1958 ல் மற்றுமொரு மெளடம் நிகழ்வும் தொடர்ந்த பெரும் பஞ்சமும் வந்திருக்கிறது. அக்காலத்தில், அஸ்ஸாமின் கீழ் இருந்த இப்பகுதி மக்கள் மூங்கில் பூப்பு மற்றும் தொடர் பஞ்சத்துக்கான முன்கூட்டிய நிவாரணம் மற்றும் தடுப்பு ஏற்பாடுகளின் பொருட்டு அரசுக்கு விடுத்த கோரிக்கைகளையும், மூங்கில் பூப்பைக்குறித்த முன்னெச்சரிக்கையையும் மதிக்காத அரசை எதிர்த்து மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புதான் பின்னர் மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணிப்போராளியாயிருந்த ’லால்தெங்கா’ தான் மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த’ சோரம்தெங்கா’வே தற்போது மிசோரம் முதலமைச்சராக உள்ளார்.
சோரம்தெங்காவின் தலைமையில் மிசோரத்தின் 2006-2007‘லான மூங்கில் பூப்பை ஒட்டி இந்திய இராணுவம் , கொன்ற எலிகளின் வாலுக்கு 2 ரூபாய்கள் என் அறிவித்தும், மூங்கில் பூக்கும் சமயத்தில் தானியங்களை பயிரிடாமல் எலிகள் உண்ணாத இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரடும் பரிந்துரையை அளித்தும் எலிப்பெருக்கத்தையும் அழிவையும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியது.
இப்பகுதி மக்கள் மூங்கிலை சூடு பண்ணுகையில் கிடைக்கும் எளிதில் எரியும் தன்மையுடைய பிசினை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலிசிக் அமிலம் நிறைந்துள்ள மூங்கிலின் கெட்டியான கணுக்களை மட்டும் நறுக்கி துண்டுகளாக்கி, வறுத்துப்பொடித்து அதிலிருந்து காபியைப்போல ஒரு மணமுள்ள பானம் தயாரித்து அருந்துவதும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவலாக உள்ள ஒரு உணவுப்பழக்கமாகும்.
மூங்கில் மிகுபூப்பு லாவோஸ், மடகாஸ்கர், ஜப்பான் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கின்றது. சீனாவில் 1980ல் பசானியா ஃபாங்கியானா (Bashania fangiana) என்னும் மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால், முதன்மை உணவாக மூங்கிலையே எடுத்துக்கொள்ளும் பாண்டா (Giant Panda) விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவிலெல்லாம் மூங்கில் காடுகள் இருக்கின்றதென்றாலும் சீனாவின் மூங்கில் காடுகளே உலகில் மிகப்பெரியவை. ஆந்தோசயானின் நிறமிகள் அடர்ந்துள்ள கருப்பு மூங்கில் உள்ளிட்ட சுமார் 300 மூங்கில் சிற்றினங்கள் சீனாவில் விளைகின்றன. சீனா மட்டுமே ஆண்டுக்கு 57 பில்லியன் ஜோடிகள் உணவுக்குச்சிகளை (Chosticks) தயாரிக்கின்றது. இக்குசிகளில் குழந்தைகளுக்கானவை, தம்பதிகளுக்கான ஜோடிகள், ஒற்றை மற்றும் மீள் உபயோகத்துக்கானவை என ஏராளமான வகைகள் உள்ளது.
ஜப்பானிலும் மூங்கில் மிக முக்கியமான தாவரம். பைனுடன் சேர்ந்து, மூங்கிலையும் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி மற்றும் தூய்மையின் அடையாளமாக கொண்டிருக்கின்றனர். புத்தாண்டுக்கு முன்னதாக வீடுகளின் நுழைவாயிலை பைன் மற்றும் மூங்கில் கிளைகளால் அலங்கரிப்பது, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருமென இவர்கள் நம்புகின்றனர் ஜப்பானில் சாகனோ மூங்கில் காடுகளின் மூங்கில் தண்டுகளின் இடையே புகுந்து வரும் காற்றின் ஒலியை ஜப்பானிய அரசாங்கம் “பாதுகாக்கப்பட வேண்டிய ஜப்பானின் நூறு ஒலிகளில்” ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.
டேக்கினொக்கொ- (takenoko) எனப்படும் சுவையான சத்தான மூங்கில் குருத்துணவு ஜபபானில் வெகு பிரபலம். தற்போது மூங்கில் குருத்து உணவுகள் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட உணவகங்களில் கிடைக்கின்றது. ’’பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’’ என்னும் நமது பழஞ்சொல்லுக்கு நிகராக ஜப்பானில் மூங்கில் காடுகளின் சலசலப்பை கொண்டு பழங்சொல்லொன்று, அதே பொருளில் புழக்கத்தில் இருக்கிறது..
மூங்கில் பூக்கும் காலத்தில் எலி பெருச்சாளி போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத்திற்கான கூடுதல் தூண்டலுண்டாகுமென்பதும் இயற்கையின் மற்றுமொரு விநோதம்.
மகாபாரதத்தில் திரெளபதி ஜெயத்ரதனால் இழுத்துச்செல்லப்படுகையில் ’’மூங்கில் பூத்த பின்பு வரும் பஞ்சத்தில் உயிர்கள் அழிவது போல, நீ அழிவாய்’’ என்று சாபமிடுவாள். வெண்முரசிலும் ஃபல்குனையாக இருக்கும் அர்ஜுனனிடம் நாகர்களின் படைவல்லமையை சொல்லும் ஒரு எதிர்தரப்பு வீரன் அவர்கள் மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் போல பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.
பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருப்பினும் ஒரே இனத்தை சேர்ந்த எல்லா மூங்கில்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்படி ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாக பூத்து, அழிகின்றதென்பதை தாவர அறிவியலாலும் விளக்க முடியவில்லை
புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்தை, அவை பழுத்து உதிரும் காலத்தை, பட்டாம்பூச்சிகளின் முதல் பறத்தலின் காலத்தை, வலசைப்பறவைகள் பயணம் துவங்கும் கணத்தை, என சூழலுக்கும் உயிர்களின் வாழ்வுக்குமான தொடர்புகளின் அறிவியலான Phenology உலகெங்கிலுமான மூங்கில் பூப்பைக் குறித்து ஆய்வுகளை செய்தபடியே இருக்கிறது, மூங்கில்களின் அடியில் இருக்கும் கிழங்குகளில் (Rhizome) தலைமுறைகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பூக்கும் காலத்தைக் குறித்த கணக்குகள் சரியான நேரத்தில் அதே இனத்தைச்சேர்ந்த அனைத்து மூங்கில்களுக்கும் கடத்தப்படுகின்றன அல்லது எப்படியோ அனுப்பப்படுகின்றன என்று மட்டுமே இப்போதைக்கு அனுமானிக்கப்பட்டிருக்கின்றது.
Rhizome
இப்படி குறிப்பிட்ட காலஇடைவெளியில் பல்லாயிரம் கிமீ தொலைவிலிருப்பினும் மொத்தமாக பூக்கும் தாவரங்களான மூங்கில், குறிஞ்சி போன்றவை ‘Plietesials’ எனப்படுகின்றன. இத்தனை துல்லியமான காலக்கணக்குகளை எவ்வாறு இவை நினைவில் வைத்திருக்கின்றன என்பதெல்லாம் மர்மம்தான். குறிஞ்சியில் 12 ஆண்டுகளுக்கொரு முறையும் 9 ஆண்டுகளுக்கொரு முறையும் மலரும் வகைகளுக்குள் எவ்வித குழப்பமுமில்லாமல் காலம் காலமாக மிகச்சரியாக பூத்துக்கொண்டே இருப்பதும் தாவரவியலின் அதிசயங்களில் ஒன்று.
எல்லா மூங்கில் இனங்களும் 48-50 வருட இடைவெளியில் தான் பூக்குமென்பதில்லை. ஜாவா வகையான Schizostachyum elegantissimum , மற்றும், Arundinaria wightiana மூங்கில்கள் மூன்று வருடஙகளுக்கொரு முறையும், Phyllostachys bambusoides , எனப்படும் சீன மூங்கில் 120 வருடங்களுக்கு ஒரு முறையும், Bambusa vulgaris வகை 150 வருடங்களுக்கு ஒருமுறையும் மலர்ந்து அழியும். பூக்காமலே அழியும் மூங்கில் இனங்களும் உள்ளன
மூங்கிலின் 30’லிருந்து 40 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் கிளைத்த, உலர்ந்த மஞ்சரிகளின் பொன்னிற மலர்களால் நிறைந்திருந்த, அந்தக்காட்டையும, வழியோரங்களிலும் பூத்து நிறைந்திருந்த மூங்கில்களையும் உடன்பயணித்த வாகனங்களில் வந்த ஒருவர் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சாலையோரங்களிலேயெ சாதாரணமாக தென்பட்ட புள்ளிமான் கூட்டங்களையும், யானைகளையுமே வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இனி இவ்வழியில் மற்றுமொரு மூங்கில் மிகுபூப்பை காண இன்னும் 50,60 வருடங்கள் ஆகுமே, இப்படி தவற விடுகிறார்களே இவ்வரிய நிகழ்வை என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது.
மூங்கில் மலர்கள்
பொதுவாகவே காட்டுயிர் என்றாலே அது பெரும்பாலானவர்களுக்கு விலங்குகள் மட்டும்தான் புலி, சிங்கம், மான், யானை ,கரடிதான். Wild life என்பது flora and fauna இரண்டும் தான் என்பதே பலருக்கும் தெரிவதில்லை
தாவரங்களைக்குறித்த அறிதலும் அபிமானமும் உலகெங்கிலுமே மிகக் குறைவாகவே இருக்கின்றதென்பது என் அபிப்பிராயம். மூங்கில்களைக்குறித்தும் அப்படித்தான். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாஸ்து மூங்கில் / அதிர்ஷ்ட மூங்கில் என அழைக்கப்பட்டு சிறு கிண்ணங்களில் வளர்க்கப்படும் தாவரம்., மூங்கிலே அல்ல. சீனா மற்றும் தாய்வானில் வளர்க்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அஸ்ப்ராகேசியே குடும்பத்தை சேர்ந்த டிரசீனாதான் மூங்கிலென்று விற்பனை செய்யப்படுகின்றது. . Dracaena sanderiana என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இவற்றின் கணுக்களும் கணு இடைவெளிகளும் மூங்கிலைப்போல இருப்பதால் இவை மூங்கிலென்று அழைக்கப்படுகின்றன.
lucky bamboo
மூங்கில்கள் இப்படி பூத்தபின்பு அம்மலர்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பெண் மலர்கள் கருவுற்று விதைகள் உண்டாகி அவை உதிர்ந்து பின்னர் புதிய மூங்கில்கள் உருவாகி, நிலைத்து வளர எப்படியும் 7லிருந்து 9ஆண்டுகள் ஆகிவிடும். அது வரையிலும் மூங்கில் குருத்துக்களையும் பசும் இலைகளையும் விரும்பியுண்ணும் அக்காட்டின் யானைகளும் காத்திருக்க வேண்டியதுதான்.
சத்தியமங்கலம் சாலையில் பழுத்துதிரும் பொன்மஞ்சள் இலைகளும் நெடிதுயர்ந்த மலர் மஞ்சரிகளுமாக இருந்த மூங்கிலின் அடர்ந்த புதரொன்றினருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலைகவிழ்ந்தபடி, அசையும் துதிக்கை நுனியை பார்த்தபடிக்கு வெகுநேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. என்ன நினைத்து கொண்டிருந்தன அல்லது என்ன பேசிக்கொண்டிருந்தன அப்பேருயிர்களிரண்டும்? இயற்கையின் பல்லுயிர்களுக்கிடையேயான பகிர்வாழ்வின் மர்மங்களும் ரகசியங்களும் மனிதர்களால் அறிந்துகொள்ளவே முடியாதவை. அறியாக்கரங்களால் வரையப்பட்ட ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது அக்காட்சி.
ஒரு கையளவு சாலையில் உதிர்ந்துகிடந்த மூங்கில் நெல்மணிகளை மட்டும் சேகரித்துக்கொண்டேன். வீடு திரும்பியதும் அவற்றை உடைத்து வைக்கப்போகும் மூங்கிலரிசி பாயஸத்தில் இயற்கையின் அரிய சுவையும் பயணத்தின் இனிய சுவையும் கலந்திருக்கும்.
மூங்கில் அரிசி
இன்னும் 60 வருடங்கள் கழித்து என் மகன்கள் அவர்களின் பேரப்பிள்ளைகளுடன் இவ்வழியே வருகையில் மீண்டுமொரு மூங்கில் பூப்பை பார்க்கும்படி அருளப்படுவார்களாக என்றெண்ணியபடி பயணத்தை தொடர்ந்தேன்!