லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 12 of 14)

பெருங்காயம்

பெருங்காயம்

மசாலாக்களின் உபயோகத்தில் மிகப்பிரபலமான இந்தியச் சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்றான  பெருங்காயம் ’ஃபெருலா’ -Ferula என்னும் தாவர பேரினத்தின் பல சிற்றினங்களிலிருந்து பெறப்படுகின்றது. Ferula assafoetida, F. foetida ,  F. narthex. ஆகிய மூன்று மரங்களிலிருந்தே உலகின் பெருமளவு பெருங்காயம் தயரிக்கப்படுகின்றது.  ஈரானில் Ferula suaveolens , Ferula persica  மற்றும் மத்திய ஆசியாவில்  Ferula galbaniflua ஆகியவையும் வளர்ந்து பயன் தருகின்றன.

இதன் ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida), Ferula asafoetida என்னும் இதன் தாவரப்பெயருக்கு கிரேக்க மொழியில் ’’நாற்றமடிக்கும் பசையை கொண்டிருக்கும் ’’ எனப்பொருள்.

இந்திய மொழிகளில் பெருங்காயத்தின் பெயர்கள்;

Hindi : Hing Bengali : Hing Gujarati : Hing Kannada : Hinger,Ingu Kashmiri : Yang, Sap Malayalam : Kayam Marathi : Hing Oriya : Hengu Punjabi : Hing Sanskrit : Badhika, Agudagandhu, Telugu : Inguva, Ingumo Urdu : Hing

 அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம், காயம் ஆகியவையும் பெருங்காயத்தின் பெயர்களே.

English : Devil’s dung, Persian : Angustha-Gandha, French : Ferule Asafoetida,  German : Stinkendes steckenkraut, Arabic : Tyib, Haltheeth, Sinhalese : Perumkayam

 இம்மரம் கேரட்டின், கொத்துமல்லியின், சோம்பின் குடும்பமான ‘ஏபியேசியே’வை சேர்ந்தது (Apiaceae). சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods) எனவும் இதற்கு பல்வேறு ஆங்கிலப் பெயர்கள் உள்ளன.

பெருங்காய மரங்கள்

பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (ஈரான்). 2 – 7 மீட்டர் உயரம் வரை செடியாகவும், குட்டை மரமாகவும் வளரும் இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சளிலும். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாகவும் இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு நிறச்சாறு இருக்கும். வேர்கள் கிழங்கை போல கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பற்றுடனும் இருக்கும். தாவரத்தின் எல்லா பாகங்களும் நலல் நெடியுடன் இருக்கும்.

செடி வளர்ந்த 4 ஆண்டுகளுப்பிறகே  வேரில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக,மார்ச்- ஏப்ரல் மாதங்களில், தண்டின் அடிப்பகுதியுடன் சேர்ந்த வேர்ப்பகுதியை நறுக்கி, அதை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போல கெட்டியாக  வடிந்திருக்கும் பெருங்காயப் பிசினைச் சுரண்டி எடுத்துவிட்டு,மீண்டும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள பிசினை சுரண்டி எடுப்பார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசினை முழுவதுமாக  தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் ஒரு செடியின் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசை கிடைக்கும்..
  6 ம் நூறாண்டிலேயெ கிழக்காசியாவிலிருந்து, இன்றைய லிபியாவுக்கு பெருங்காயம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பண்டைய ரோமானியர்கள் பெருங்காயத்தை மருந்துப்பொருளாக உபயோகித்திருக்கின்றனர்.

 Dr KT Achaya’ வின் ’’இந்திய உணவுகளின் வரலாறு’’ என்னும் நூல் மகாபாரதத்தில் ஊனுணவில் பெருங்காயம் கலக்கப்பட்டதை  குறிப்பிடுகிறது. மாவீரர் அலெக்ஸாண்டர் அவரது வெற்றிப் பயணப்பாதைகளில் பெருங்காயத்தை பல இடங்களுக்கு கொண்டு சென்றார் என்கிறது வரலாறு.

பெருங்காய மலர்கள்

வேதியியலில் oleo gum resin  எனப்படும் பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. இவற்றுடன் வெங்காயம், பூண்டில் இருக்கும் சல்ஃபரும் மிக அதிக அளவில் இருக்கின்றது. (Resin (40–64%), gum (25%) and essential oil (10–17%)


ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது.  காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும். செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல், மாதவிலக்கு உண்டாக்குதல் போன்ற பல மருத்துவ குணங்களை உடையது. சமைக்காத பொழுது அதிக நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் உருவாக்குகிறது. வெங்கயமும் பூண்டும் உணவில் சேர்த்துக்கொள்ளாத இந்தியாவின் பிராமணர்கள், ஜைனர்கள் போன்ற சமயத்தினரும் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்கின்றனர்

இந்தியாவில் பெருங்காயம் விளைவதில்லை. எனவே . ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது

தில்லியின் தாவர மரபணு வளங்களின் தேசிய பணியகத்தின் ( National Bureau of Plant Genetic Resources-NBPGR), முன்னெடுப்பில்  1963 லிருந்து 1989 வரையிலான காலத்தில் இந்தியாவில்  இறக்குமதி செய்யபட்ட பெருங்காய விதைகளிலிருந்து பெருங்காயம் பயிரிடும் முயற்சி துவங்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது

மீண்டும் 2017லிருந்து இமாலயப் பகுதிகளில் பெருங்காயத்தைப் பயிரிடும் முயற்சியில் சிஎஸ்ஐஆர் மற்றும்  இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஐஹெச்பிடி (CSIR &Institute of Himalayan Bioresource,  IHBT), NBPGR உடன் இணைந்து  ஈடுபட்டுள்ளது.

ஈரானிலிருந்து தருவிக்கபட்ட 6 வகைகளிலான  பெருங்காய விதைகளை  நோய் தொற்று, வளர்ச்சி, உள்ளிட்ட பலவித சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி கட்டுப்படுத்தப்ப்பட்ட சூழலில் அவற்றை முளைக்க வைத்து, இப்போது  800 பெருங்காய நாற்றுக்கள் இமாச்சலபிரதேசத்தின் லாஹெளல் –ஸ்பிடி பள்ளத்தாக்கில்   நடப்பட்டிருக்கின்றன.

கின்னாவுரில் பெருங்கய சாகுபடிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலம்

 கடல் மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் குலு, மணாலி மற்றும் கின்னாவுர் மாவட்டங்களிலும்  நாற்றுக்கள் சோதனை முயற்சியாக நடப்பட்டிருக்கின்றன. இவை வெற்றிகரமாக வளர்ந்தால், இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியாவில் பெருங்காய வளர்ப்பை பல்லாயிரம் ஏக்கர்களில் விரிவாக்கும் திட்டமும்  ICAR க்கு இருக்கிறது  

பெருங்காய விதைகள்

  பெருங்கயத்தின் விதை உறக்ககாலம் மிக நீளமென்பதாலும், 100ல் இரண்டு விதைகளே முளைக்கும் திறன் கொண்டிருப்பதாலும் இந்திய நிலங்களில் பெருங்காயத்தின் விரிவான சாகுபடி சவாலானதுதான் என்றாலும் இதில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இதை செய்யமுடியுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லடாக் மற்றும் உத்ரகாண்டிலும் சாகுபடியை சோதிக்கும் முயற்சிகளும் தற்போது துவங்கியுள்ளது. லாகூர் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது.  .

 பெருங்காயத்தின் இரண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றது.பால் பெருங்காயம் எனப்படும் (Kabuli Sufaid- Milky white asafoetida) மற்றும் சிவப்பு பெருங்காயம்.(Lal Asafoetida).

பால் பெருங்காயம்

காந்தாரி பெருங்காயம் என அழைக்கப்படும் ஆஃப்கனிலிருந்து கிடைக்கும் பெருங்காயமே உலகின் மிக தரமான பெருங்காயமென கருதப்படுகின்றது

பொடித்த தூளாகவும், குருணைகளாகவும், வில்லைகளாகவும், கட்டியாகவும்  பெருங்காயம் சந்தையில் கிடைக்கின்றது. பெருங்காயப் பசையை நீராவியில் காய்ச்சி வடிகட்டி பெருங்காய எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

 ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்.  அறுவடையான பெருங்காயப்பிசினை அப்படியே நாம் உணவில் சேர்க்க முடியாத அளவிற்கு அதன் காரமும் நெடியும் மிக அதிகமாக இருக்கும். எனவே கட்டியாக இருக்கும் பெருங்காயத்தை பொடித்து கருவேலம் பிசின், கோதுமைமாவு அல்லது அரிசி மாவு சேர்க்கப்பட்டு கூட்டுப் பெருங்காயம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது

ஆஃப்கான் பெருங்காயம்

 
 Ferula வின் galbaniflua என்னும் சிற்றினத்தின் பசை ஊதுவர்த்திக்கள் செய்ய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. உணவுபொருட்களில் மிக அதிகமாக கலப்படம் செய்யப்படுவது பெருங்காயப்பிசினில்தான். கோதுமைக்குப் பதிலாக  மைதாவையும்.  பெருங்காயத்தின் கழிவுகள், களிமண், செம்மண், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றையும் கருவேலம்பிசினுடன் கலந்து வாசனைக்காக பெருங்காய எஸென்ஸ் மட்டும் சிறிது சேர்க்கப்பட்ட,   5 சதவீதம் கூட அசல் பெருங்காயம் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் போலிப்பெருங்காயம் கிராமப்புறங்களில் அதிகம் விற்பனையாகின்றது.  

நாம் உபயோகிக்கும் காயம் அசலா, போலியா என  எளிதாக வீட்டிலேயே கண்டு பிடிக்கலாம். தரமான கலப்படமில்லா பெருங்காயமானது, கசடுகள் இல்லாமல் நீரில் மூழுவதுமாக கரைந்து நீரை பால்நிறமாக்கிவிடும். சிறு துண்டு பெருங்காய கட்டியை நெருப்பில் காட்டி அது முழுவதும் எரிந்தால் அதுவும் தரமானதே.

சதுர தர்பூசணியும் ஐங்கோண ஆரஞ்சுகளும்

கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon – வாட்டர்மெலோன்).இது  ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள பச்சையாகவும், உட்புறம் இனிப்பான சிவப்பு சதைப்பகுதி சாறுடனும் காணப்படும். தர்பூசணியில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ஆகியவற்றுடன் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.
எதிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நாடு ஜப்பான்!

ஜப்பானிலும் தர்பூசணிப்பழங்கள் கோடையில் மிக அதிகமாக விரும்பி உண்ணப்படுகின்றன. உருவில் பெரியதாய், உருண்டு வளர்ந்து குளிர்சாதனப்பெட்டியிலும், கடைகளிலும் நிறைய இடத்தை ஆக்கிரமித்து, இடப் பிரச்னை ஏற்படுத்தியதால், ஜப்பானிய விவசாயிகள் வித்தியாசமாக, சதுர வடிவில் அழகிய தர்பூசணியை பயிர் செய்கிறார்கள். டொமொயுகி ஓனோ (Tomoyuki Ono) என்னும் ஜப்பானியப் பெண்ணே 1978ல், முதன்முதலில் இதுபோன்ற சதுர வடிவப் பழங்களை உருவாக்கி சாதனை புரிந்தார். ஒருபுறம் திறந்திருக்கும் சதுர வடிவ கண்ணாடிப் பெட்டியில், தர்பூசணி சிறிய காயாக இருக்கும்போதே உள்ளே வைத்து எளிதாக சதுர வடிவில் விளைவிக்கிறார்கள். இது மட்டுமல்ல; பிரமிட், இதய வடிவ தர்பூசணிகளும் உருவாக்கப்படுகின்றன.


தற்போது விவசாய ஆராய்ச்சியாளர்கள், பல புதிய வகை தர்பூசணி ரகங்களையும் கண்டுபிடித்திருப்பதால், மஞ்சள், வெள்ளை நிறங்களிலும், சுவையான உட்சதை கொண்ட தர்பூசணி பழங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் சந்தைகளில் கிடைக்கின்றன.

2014க்குபிறகு இவற்றுடன் ஐங்கோண் ஆரஞ்சுகளையும் ஜப்பானில் விளைவிக்கிறார்கள். இவை அதிர்ஷ்டம் தரும் என்றும் பரவலாக நம்பிக்கை இருப்பதால் அதிகம் சந்தையில் புழங்கும் பழமாக இருக்கின்றது.  ஆரஞ்சுப்பழங்கள் சிறியதாக இருக்கையிலேயே ஐங்கோண் வடிவிலான சட்டங்களை அதன் மீது பொருத்திவிடுவதால் வளரும் மென்மையான கனி சட்டங்களின் வடிவினுள்ளே பொருந்தி ஐங்கோண வடிவிலேயே முதிர்ந்துவிடுகின்றது.

இந்த பழத்தை கையில் வைத்துக்கொண்டால் தேர்வில் வெற்றி பெறும் அதிர்ஷ்டத்தை வழங்குவதாகவும் நம்பிக்கை இருப்பதால் மாணவர்கள் மத்தியிலும் இது வெகு பிரபலம். இதன் ஜப்பானியப்பெயரான ‘Gokaku no Iyokan’ என்பதற்கு தேர்வில் வெற்றிபெறுவதற்கான இனிப்பு வாசனை என்று பொருள்.

இயற்கையான வடிவில் இருக்கும் பழங்களை விட இவ்வித புதுமையான வடிவிலிருப்பவை 5 மடங்கு விலையென்றாலும் புதுமையை விரும்பும் ஜப்பானியர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவற்றை வாங்குகிறார்கள். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் இப்பழங்கள் உள்ளூர் மக்களாலும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வசதியாக இருப்பதாலும், நண்பர்களுக்கு பரிசளிக்கவும் விலையைக்குறித்து கவலைப்படாமல் வாங்குகிறார்கள்.

இயற்கையின் அசெளகரியங்களை ஆபத்துகளையெல்லாம் தங்கள் விடாமுயற்சியாலும் அழகுணர்ச்சியாலும் வென்றுகொண்டே இருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.

இதய வடிவ தர்பூசணி

பலகை வேர்கள், Buttress Roots

  தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு.

 பண்டைய கட்டிடங்களின் சுவர்களின் அருகில் அவற்றை ஆதரவாக தாங்கிப்பிடிக்க அமை்க்கப்படும் அமைப்புக்கள் Buttress எனப்படும். அதைப்போலவே  சிலவகை மரங்களின் பக்கவாட்டில் வளர்ந்திருக்கும் பலகைகளைபோன்ற அகன்ற பக்கவாட்டு வேர்களுக்கு ‘பட்ரஸ்’ வேர்கள் என்று பெயர் ( Buttress Roots)

வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில், ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரஸ் ரூட்ஸ்) எனப்படும்.

இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன.

மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் அவற்றின் வேர்கள் அதிக ஆழத்துக்கு செல்வதில்லை. எனவெ பெருமரங்கள் சரிந்துவிடாமலிருக்க உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அவற்றை தாங்கிப்பிடிக்கின்றன.

 பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.

அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது.

மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் இலவம் பஞ்சு, அத்தி, பலா மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்

பெங்களூரு லால் பார்க்கில் இலவம்பஞ்சு மரம் பலகை வேர்களுடன்

பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவில் பலகை வேர்களுடனிருக்கும் பல மரங்களை காணலாம். பெங்களூரு லால் பாக்கிலும் பெரும் இலவம்பஞ்சு மரமொன்று பலகை வேர்களுடன் இருக்கும். தாவரவியல் அதிசயங்களில் இவையும் ஒன்று.

கிராம்பு


இந்தியச்சமையல் அதன் பலவகைகளிலான வறுத்தலும், பொடித்தலும், பொரித்தலும், அரைத்தலும் உள்ளடக்கிய மசாலாமணம் வீசும்  உணவு வகைகளுக்கு பிரபலமானது.  இந்தியசமமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலாப்பொருட்களுமே செரிமானத்தை தூண்டுவதிலிருந்து புறறுநோய்க்கு எதிராக செயல்பபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பவை. இவற்றில் கிராம்பு மிக அதிகமாக அசைவ உணவு வகைகளில் உபயோகப்படுத்தபடும் ஒன்று.

ஆங்கிலப் பெயர்: ‘கிளாவ்’ (Clove)
தாவரவியல் பெயர்: ‘சிசிஜியம் அரோமாடிகம்’ (Syzygium Aromaticum)
தாவரக் குடும்பம்: ‘மிர்டேசியே’ (Myrtaceae)
வேறு பெயர்: லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்

சமையலில் நறுமணப் பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 2,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாயகம் இந்தோனேசியாவின் மலுகா தீவுகள். மரமாக வளரும் இந்தத் தாவரத்தின் நறுமணம் உள்ள உலர்ந்த, விரியாத மலர் மொட்டுகளே கிராம்பு எனப்படுகிறது.
கிரேக்க மொழியில் ‘கிளாவஸ்’ (Clavus) என்றால் ஆணி என்று பொருள். கிராம்பு மொட்டுகள் துருவேறிய ஆணி போல இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

கிராம்பு மலர்கள்

கிராம்பு குட்டையான கிளைகளை உடைய பசுமை மாறா மரம். 8 முதல் 12 மீட்டர் உயரம் வரை அடர்ந்து வளரும். பளபளப்பான இலைகளும் அடர்சிவப்பில் மூன்று மலர்கள் உள்ள சிறுசிறு கொத்துகளும் கொண்டது.

மலர் மொட்டுகள், இளஞ்சிவப்பாய் 1.5 முதல் 2 செ.மீ. வரை நீளம் இருக்கும்போது, கைகளால் அறுவடை செய்யப்படும். பூக்கள் 9 மாதங்களில் முதிர்ந்து கனியாகும். மரத்திலிருந்து ஆண்டு முழுவதும் கிராம்பை அறுவடை செய்யலாம்.

கிராம்பு மொட்டுகளில் குவிந்து உருண்டையாக இருக்கும் 4 இதழ்களும், வெளியில் சிறிய முக்கோண வடிவிலிருக்கும் 4 அல்லிகளும் இருக்கும். மொட்டுகளை உலர்த்தி, அவை துருவின் நிறத்தை (Rust color) அடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றன.

மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் 72 முதல் 90 சதவீதம் இருக்கும் ‘யூஜினால்’ (Eugenol) என்னும் எண்ணெயே இதன் நறுமணத்திற்கும் மருத்துவக் குணங்களுக்கும் காரணம். இது தவிர, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, டி, ஏ, போன்றவையும் உள்ளன.மேங்கனீஸ் சத்து கிராம்பில் அதிகம் உள்ளது.

கிராம்பு எண்ணெயின் பயன்கள்

நறுமணத்தைக்கொண்டு நோய்களை குணமாக்கும் Aromatherapy  யில் கிராம்பு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.  மலர் மொட்டுகளிலிருந்தும், இலைகளிலிருந்தும் குச்சிகளிலிருந்தும் கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

செரிமானக் கோளாறு, கிருமி, பூஞ்சைத்தொற்று போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும், துத்தநாகத்துடன் கலக்கப்பட்டு பற்குழிகளை நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. வாசனைத்திரவியங்களிலும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. கிராம்பு புற்றுநோய்கெதிராகவும், ஈரல் பாதுகாப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

கிராம்பு உற்பத்தியில் இந்தியா, மடகாஸ்கர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சிறந்து விளங்கினாலும் ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்து இந்தோனேசியாவே முதல் இடத்தில் உள்ளது. மடகாஸ்கர், தான்ஸானி்யா மற்றும் ஜான்ஸிபர் நாடுகளே கிராம்பு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன,

தேயிலையும் தேநீரும்,

மனிதன் அருந்தும் திரவ உணவுகளனைத்தும் பானங்கள் எனப்படுகின்றன. தாகம் தீர்க்கும் தண்ணீரிலிருந்து பால், பழச்சாறுகள், காப்பி, தேநீர் உள்ளிட்ட பலவகையான பானங்கள் அனைத்துக் கலாச்சாரங்களிலும் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகின்றது. பானங்களில் மென்பானங்கள், சூடான பானங்கள் மற்றும் மது பானங்கள் என பலவகைகள் இருக்கின்றன.

 உலகின் மிக அதிகமக்களால் அருந்தப்படும் விருப்பபானங்களில் முதன்மையாக குடிநீரும் தொடர்ந்து தேநீரும், பின்னர் மூன்றாவதாக பியரும் இருக்கின்றது.

தேநீரென்பது உலர்த்தி, பொடித்து, பதப்படுத்திய (Camellia sinensis) கமெலியா  சினென்ஸிஸ் என்னும் தாவரத்தின் இலைகளை கொதிநீரில் இட்டு உண்டாக்கப்படுவது.

இதன் தாவரப்பெயரிலிருந்து இவை சீனாவை தாயகமாக கொண்டவை என அறிந்துகொள்ள முடியமென்றாலும் தேயிலையின் தாயகம் இந்தியாதானென்கின்றன ஆய்வுகள். அஸ்ஸாமின் காடுகளில் இயற்கையாக செறிந்து வளர்ந்திருந்த Thea assamica  என்னும் தாவரத்தின் விதைகள், இந்தியாவிற்கு வந்துசென்ற சீனப்பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டு பின்னர் அதுவே கமெலியா சினென்ஸிஸ் ஆனது என்பதே தாவரவியல் அடிப்படையிலான வரலாற்று உண்மை

தேயிலைச்செடிகளில் இரண்டு முக்கியவகைகளே உலகெங்கும் பெருமளவில் பயிராகின்றது ;

Camellia sinensis என்னும் சிறிய இலைகளை கொண்ட சீன வகை

Leavea of Assamica and Sinensis

Camellia assamica  என்னும் சற்றே பெரிய இலைகளை கொண்ட இந்திய வகை

தேயிலைச்செடிகள் நல்ல உயரமான மரமாக வளரும் இயல்புடையவை. ஆனால் இவற்றிலிருந்து தளிரிலைகளை தொடர்ந்து அறுவடை செய்வதன் பொருட்டு,இவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் குட்டையாக கத்தரித்துக்கொண்டே இருப்பதால் இவை புதர்களைப்போல தோன்றுகின்றன.

தேயிலைகளின் ஒரு இலையரும்பு மற்றும் அதனடியிலிருக்கும் இரண்டு தளிரிலைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த இலையரும்பும் இருஇலைகளுமான பகுதி Golden flush எனப்படும். இவை மூன்று வருடங்களான தேயிலைச்செடிகளிலிருந்து நூறு ஆண்டுகள் வரை 7 லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேயிலை ரகத்துக்கும்  மாறுபடும்

Golden Flush உடன் மேலும் இரண்டு கீழடுக்கு இலைகளும் சேர்ந்த 5 இலைகள் அடங்கிய பகுதி flush எனப்படும் இவையும் பல நாடுகளில் அறுவடை செய்யப்படுகின்றது.

அறுவடை செய்யப்பட்ட இலைகள் உலர்த்தப்பட்டு,  அவற்றில் ஆக்ஸிஜனேற்றம் நடைபெரும் வகையில்  காயப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, நொதிக்கவைக்கப்பட்டு ,பின்னர்  1500க்கும் மேற்பட்ட பலவகைகளில் தேயிலைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்றத்தை பொருத்தே தேயிலைக்ளின் தரம் வேறுபடுகின்றது.  (உண்ணப்படாத வாழைப்பழங்கள் ஒருசிலநாட்களில் கருத்துப்போவது ஆக்ஸிஜனேற்றத்தால்தான்).  

100 சதவீதம் முழுமையான ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டவை

Black Tea

நாம் அனைவரும் சாதரணமாக அருந்தும் ’Black tea’ எனப்படும் கருப்புத்தேயிலை. 50 சதவிதம் மட்டுமே ஆக்ஸிஜனெற்றம் நடந்தால் கிடைப்பது.  ’Oolong tea; எனப்படும் ஊலாங் தேயிலை, பசுந்தேனீர் ’Green tea’ எனப்படுவது ஆக்ஸிஜனேற்றதுக்கே உட்படுத்தப்படாத உலர்ந்த தேயிலைகளிலிந்து தயாரிக்கப்படுவது.

இம்மூன்று வகைகள் அல்லாது இன்னும் நூற்றுக்கணக்கான ரகங்களில் தேயிலை உலகெங்கிலும். சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பசுந்தேநீரை உலரவைக்கையில் சிறு சிறு வட்டங்களாக சுருண்டு கொள்ளும் ரகம் அதன் தோற்றத்தினால்  ’Gunpowder tea’. எனப்படுகின்றது.

Gun powder Tea

White tea, என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே ஆக்ஸிஜனேற்றம் செய்கையில் கிடைபப்து. இது மிகவும்  மென்மையான் மணத்தையே கொண்டிருக்கும். வெள்ளை தேயிலை சீனாவுக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும்

 Yellow tea மஞ்சள் தேயிலையென்பது மூடிவைக்கப்பட்ட இலைகளில் ஆக்சிஜனேற்றம் துவங்கப்பட்டு, பச்சையம் மஞ்சளாக ஆனவுடன் நிறுத்தப்பட்டு பதப்படுத்தப்படுவது

Twig tea, குச்சி தேநீர் அல்லது குக்கிச்சா தேநீரென்பது (Kukicha tea) தேயிலைச்செடியின்  இலைகளுக்கு பதிலாக  குச்சிகளையும் தண்டுகளையும் மட்டுமே பதப்படுத்தி  பொடித்து தயரிக்கப்படும் தேநீராகும். இவ்வகைத்தேநீர் ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். குச்சிகளையும் கிளைகளையும் மூன்று வருடங்களுக்கு மேலான தேயிலைச்செடிகளிலிருந்து மட்டுமே எடுப்பதனால் இத்தேநீருக்கு மூன்றுவருட தேநீரென்றும் ஒரு பெயருண்டு. (Three year Tea ) .இதில் காஃபின் துளியும் இLலையென்பதால் உறக்கமிழப்பு, பக்கவிளைவுகள் என எந்தகவலையும் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் எத்தனைகோப்பைகள் வேண்டுமானாலும் அருந்தலாம்.

பதப்படுத்தப்பட்ட தேயிலைச்செடியின் குச்சிகள்

காப்பியிலும் கொக்கோ பீன்ஸ்களிலும் இருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தேநீரிலும் இருக்கின்றது. 250 மிலி அளவுள்ள ஒருகோப்பை தேநீரில் காஃபினின் அளவானது;

Black tea-  45-65 மில்லி கிராம்

Green, white and ooloog teas: 25- 45  மில்லி கிராம்

 தேநீரின் காஃபின் அளவானது தேயிலைதூளின் அளவு, நீரின் கொதிநிலை, தேயிலைத்தூள் கொதிக்கும் நேரம் ஆகியவற்றைப்பொருத்து மாறுபடும். பொதுவாக அதிகநேரம் கொதிக்க வைக்கையில் காஃபினின் அளவும அதிகமாகும்.

ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத, தரமான தேயிலைகளிலிருந்து உண்டாக்ப்பட்ட தேநீரை அருந்துவது இதயத்தை பாதுகாத்து, புற்றுநோய்க்கு எதிரக செயலபட்டு, உடலெடையை குறைத்து ரத்தத்தின் கொழுப்பையும் கட்டுப்படுத்துகின்றது

தேயிலைச்செடி வளரும் மண்ணில் இருக்கும் அலுமினியம் இலைகளிலும் இருக்கிறதென்றாலும் தினசரி சில கோப்பைகள் தேநீர் அருந்துகையில் இவை உடலாரோக்கியத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்குவதிலை. நாளொன்றூக்கு 30 கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்தும் போதுதான் இந்த அலுமினிய உலோகம் நஞ்சாகி ஆரோக்கியகேட்டை உண்டாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத ஆர்கானிக் தேயிலைகளும் இப்போது சந்தைப்படுத்தப்  பட்டிருக்கின்றன.

Bubble Tea

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான் தேநீர் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் பால் கலக்காத கருப்புத்தேநீரும் பால் கலந்த தேநீரும் பிரபலம். தைவானில் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து செய்யப்படும் சிறு சிறு உருண்டைகளை தேநீரில் போட்டு தரப்படும் குமிழித்தேநீர் (Bubble tea) மிகபிரபலம். கீரைக்குழம்பைபோல பசுங்குழம்பாக அருந்தபடும் மாச்சா தேநீர் ஜப்பானின் பாரம்பரியத்துடன் கலந்துள்ள மிக்கியமான ஒன்று.

மாச்சா

எல்லா வகையான தேயிலைகளிலும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன என்றாலும் தேயிலையின் வகைகளைப்பொருத்து இவற்றின் அளவு மாறுபடும். பொதுவாக பசும் தேயிலை மற்றும் வெள்ளைத்தேயிலையில் Epigallocatechin or ECGC எனப்படும் மிக முக்கியமான, ஆன்டிஆக்சிடன்ட்டுகள்  அதிகம் நிறைந்துள்ளது.. இவை இதயப்பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிசெய்கின்றன

தென்னாப்பிரிக்காவில் வளரும் சிவப்புத்தேயிலைச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆக்ஸிஜனேற்றமே செய்யப்டாத தேயிலைகளிலிருந்து கிடைப்பதே   Rooibos tea எனப்படும் செந்தேநீர்

Pu’er Tea

சீனாவின் யுனான் மாகாணத்தின் பிரத்யேக வகையான pu’er tea எனப்படுவது தேயிலைகளை நுண்ணுயிர்களால் நொதித்தலுக்கு உள்ளாக்கி பின்னர் ஆக்ஸிஜனேற்றமும் செய்யப்பட்டு கட்டிகளாக விற்பனை செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஒரு தேயிலை வகையாகும். இது முதியவர்களின் நோய் பிரச்சனைகளுக்கு  அருமருந்தாக கருதப்படுகின்றது

ஊதா தேயிலை எனப்படுவது  உலகின் மிக சமீபத்திய புதிய தேயிலை வரவாகும்

கென்யாவின் ஊதா தேயிலைச்செடிகள்

கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலைச்செடிகளிலிருந்தே இவை கிடைக்கின்றது. நேரடியான சூரிய ஒளிபடும்படி வளர்க்கப்படும் இந்த செடிகளின் இலைகளில் நீல நிறமியான ஆந்தோசையானினின் அளவு பல ம்டங்கு அதிகரித்து இந்த ஊதா நிறம் வருகின்றது. இவை பல நுண்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் கொண்டவை. உடலெடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும் இந்த ஊதா தேநீர் பெருமளவில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலைத்தூளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம்வரை வேறுபடுகின்றது  எனினும் தங்கத்தைக்காட்டிலும் 30 மடங்கு அதிகமான விலையுள்ள தேயிலையும் சந்தையில் உள்ளது

சீனாவின் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும், குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த ’வூயி’ மலைப்பகுதியின் 1000 வருடங்களைக்கடந்த 3 தாய் தேயிலைச்செடிகளிலிருந்து  கிடைக்கும் ’’டா ஹாங் பாவ்’’  (Da Hong Pao) தேயிலையே உலகின் மிக விலையுயர்ந்த தேயிலை. இது கிராம் 1400 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகின்றது. பொதுவாக இத்தேயிலையில் உண்டாக்கப்படும் தேநீர் சீனாவிற்கு வருகைதரும் பிறநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. தாவரப்பொருட்களிலேயே விலையர்ந்ததும் இதுவே.

டா ஹாங் பாவ் தேயிலைச்செடிகள்

வஸாபியும் வாஷோகுவும்!

 தேநீர் விருந்துகள், ஹனமி செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள், ஹைகூ கவிதைகள், இகபானா மலரமைப்புக்கள், தனித்துவமான தோட்டங்கள், ஓரிகாமி காகிதவடிவங்கள் மற்றும் பாரம்பரிய கலைகளுக்காக ஜப்பான் உலகளவில்  வெகு பிரபலம்.

ஹனமி கொண்டாட்டம்
ஓரிகேமி காகித மலர்கள்

1950’களிலிருந்தே ஜப்பானின் பதிப்பகத் துறையில் முக்கிய பகுதியாகியிருக்கும், அனைத்து வயதுக்காரர்களுக்குமான மாங்கா வரைகதை வடிவம், நூற்றாண்டுகளின் பாரம்பரியம் கொண்ட சுமோ மல்யுத்தம், தோளோடு தோள் சேர்ந்து நிற்குமளவிற்கான நெரிசலில் இயங்கும், நின்றபடியே மதுவருந்தும் டேக்கினோமியா (Tachinomiya) பார்கள், வண்ணமயமான நடைபாதைக்கடைகள், அவற்றில் கிடைக்கும் பலவிதமான உணவுகள், அடுக்கிவைக்க வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட சதுர தர்பூசணிகள், இதய வடிவிலான தர்பூசணிகள், அறுகோண ஆரஞ்சுகள், புகழ்பெற்ற  அனிமே (Anime)   இயங்குபடங்கள், என்று ஜப்பான் அதன் வரலாறு, பாரம்பரியம், உணவு, கலாச்சாரம், தொழில்நுட்பம், மக்களின் சுறுசுறுப்பு, ஒழுங்கு மற்றும் பணிவு,  உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் உலகநாடுகள் அனைத்துமே வியந்து பார்க்கும் நாடாக இருக்கின்றது. ஜப்பானே, பிரபல மீனுணவுகளான சுஷி மற்றூம் சஷிமியின் பிறப்பிடமுமாகும்,  

பல சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பானிய உணவு வகைகள் மட்டுமே ஜப்பானுக்கு செல்லப்போதுமான காரணம்! அதிலும் பலருக்கு சுஷி’யை சுவைப்பது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

 பல நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய உணவு முறை, புதிய புதிய தாவரப்பொருட்கள், கடல்வாழ்உயிரிகள் மற்றும் கடற்பாசிகளின்  சேர்மானம், பருவகால உணவுகள், சில எளிய ஆனால்  பிரத்யேக  சுவையை அளிக்கும் சுவையூட்டிகளும் இணைந்தது.

’’வாஷோகு’’ என்பது ஜப்பானிய உணவு, சமையல் மற்றும், ஒன்றுக்கொன்று மிகப்பொருத்தமாக சேர்ந்துகொண்டு சுவையளிக்கும் ஜப்பானிய உணவு வகைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.  Wa (வா)  என்பது ஜப்பானின் பாரம்பரியத்தையும் Shoku (ஷோகு) என்பது உணவையும் உணவு கலாச்சாரத்தையும்,  உண்ணுதலையும் சேர்த்தே குறிக்கின்றது. முதலில் கண்களால் உணவை உண்டபின்பே வாயினால் உண்ணவேண்டும் என்பது ஜப்பானியர்களின் பொதுவான கூற்று. அத்தனை வண்ணமயமாக, அழகாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும். மிசெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்டிருக்கும் உணவகங்களை அதிகம் கொண்டிருக்கும் முதல் மூன்றுநாடுகளிலும்  ஜப்பான்  இருக்கிறது.

இறைச்சி உணவை பெரும்பாலும் தவிர்த்தே வந்த ஜப்பானியர்கள், பேரரசர்  மெய்ஜி தலைமையில் 1868’ல் நடைபெற்ற  ஜப்பானின் நவீனமயமாக்கலுக்கு பிறகே பாரம்பரிய உணவிலும் இறைச்சியை சேர்த்துக்கொண்டனர்.

ஜப்பானிய உணவில் பிரதானமான அரிசிச்சோற்றுடன், ஏராளமான  பக்க உணவுகள், தொடுகறிகள், மீன், “சுகேமோனோ”  எனப்படும், காய்கறி ஊறுகாய்கள், டோஃபூ, பாலாடைக்கட்டி, சோயா, காளான்கள், நூடுல்ஸ், என கலவையான, அதிகம் வேகவைக்கப்படாத, பெரிதும் பச்சையாகவே தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இருக்கும், முழுமையான ஜப்பானிய உணவு முறை எத்தனை ஆரோக்கியமானதென்பதை ஜப்பானியர்களின் நீளாயுளையும், உடற்கட்டையும் பார்த்தே அறிந்துகொள்ளலாம். ஜப்பானில். கொழுத்த உடலுடையவர்களை அரிதாகவே காணமுடியும் .

ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைகொண்ட சிறப்பான பலசேர்மானங்களையும், விதம் விதமான உணவு வகைகளை உருவாக்கும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வாஷோகு, 2013 ஆம் ஆண்டில்  யுனெஸ்கோவின் புலனாகா கலாச்சார பாரம்பரிய அந்தஸ்தை (UNESCO Intangible cultural heritage) பெற்றது, ஜப்பானில் இத்துடன் சேர்த்து 23 யுனெஸ்கோ அந்தஸ்துகள் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. உண்ணுதல் மட்டுமல்ல, வாஷோகு ஒரு சமையல் அனுபவமும் கூட .

ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சைநிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியை சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.

ஆனால் உருளைக்கிழங்குகளைப் போலவே விளையும் வஸாபிச்செடியின் சதைப்பற்றான, சத்துக்களும் பச்சையமும் நிறைந்துள்ள கிழங்குகளைப்போலிருக்கும், தண்டுப்பகுதியின் நீட்சிகளை (Stem tubers)  துருவி எடுக்கப்படுவதே வஸாபி. வஸாபிதான் சுஷி, சஷிமியுடனான மிகப்பொருத்தமான இணையுணவு. இதன் பிரத்யேக சுவை, வாசனை மற்றும் எரிவு உலகின் வேறெந்த தாவரப்பொருட்களுக்குமே இருக்காது, மேலும் இது மிக மிக புதிதாகவே பரிமாறப்படுமொன்று.

ஷஷிமியுடன் வஸாபி விழுது

சுஷியை சுவைத்திருப்பவர்கள் வஸாபியையும் சுவைத்திருக்கக்கூடும் ஆனால் அது அசல் வஸாபிதானா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜப்பானிலேயே 5 சதவீதம்தான் அசல் வஸாபி கிடைக்கின்றதென்றும், இப்போது வஸாபி என அளிக்கப்படுவதும் சுவைக்கப்படுவதும் வஸாபியல்ல, வஸாபியின் நிழல் அல்லது சாயல் என்கிறார்கள் தலைசிறந்த  ஜப்பானிய சமையல் கலை வல்லுநர்கள்.

போலி வஸாபி விழுதில், வஸாபி  இலை, இலைக்காம்பு, கடுகு மற்றும் வஸாபியின் தாவரக்குடும்பத்தை சேர்ந்த முள்ளங்கி வகையொன்று (Cochlearia armoracia ), பச்சைசாயம், மிகக்குறைந்த அளவில் வஸாபியின் மலர்கள்  ஆகியவைகள் கலக்கப்பட்டிருக்கும்.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கடுகு ஆகியவற்றின் குடும்பமான பிராசிகேசியேவை (Brasicaceae) சேர்ந்த வஸாபியா ஜப்பானிகா, (Wasabia japonica,  இணை அறிவியல் பெயர் Eutrema japonica) செடிகள் மெதுவாக வளரும் இயல்புடைய, ஆண்டு முழுதும் பூக்கும்,  வெண்ணிற இருபால் மலர்களையும், தடிமனான அடித்தண்டும், நீளகாம்புகளுள்ள சிறுநீரக வடிவிலான பெரிய இலைகளையும் கொண்டவை.

 இதன் தாவர அறிவியல் பெயரின் பேரினப்பெயரான Wasabia’வின் பொருள் சரிவர எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. வஸாபி என்னும் ஜப்பானிய புழங்குபெயரின் லத்தீன் வடிவமாக வஸாபியாவே வைக்கப்பட்டது. சிற்றினமான japonica  ஜப்பானை பிறப்பிடமாக கொண்டதை குறிப்பிடுகின்றது. இதுபோலவே தாவர அறிவியல் பெயர்களின் சிற்றினங்களில் indica என்பது இந்தியாவை, sinensis என்பது சீனாவை, Canadensis  கனடாவை என்று அவற்றின் தாயகத்தை குறிப்பிடும் பெயர்களில் அமைந்திருக்கும் 

இக்குடும்பத்தின் அனைத்து தாவரங்களுமே விசேஷமான நொதியான மைரோசினேஸை, குளுகோசினோலேட்டுக்களை, அய்சோதயோனேட்டுக்களை  கொண்டிருக்கும்.  ((Myrosinase, Glucosinolates. Isothiocyanates). இச்செடிகளை அல்லது செடிகளின் பாகங்களை நறுக்கும் போதும், காயப்படுத்தும் போதும்  இவை ஒன்று கலந்து கசப்பும், எரிவும், மணமுமாக வெளிப்படுகின்றன.  முட்டைக்கோஸிலிருக்கும் அய்சோதயோனேட்டின் அளவை விட வஸாபியில் 3000 மடங்கு அதிகமென்பதால் இதன் சுவையும், மணமும், எரிவும் அலாதியாக இருக்கின்றது.

வளர்ந்த இச்செடியின் அடித்தண்டு சுமார் 18 லிருந்து 24 மாதங்களில், 12 லிருந்து 18 இன்ச் உயரமும் 40 மிமி அகலமும் வளர்ந்ததும் முழுச்செடியும் வேருடன் அறுவடை செய்யப்படும். இலைகள் நீக்கப்பட்ட அடித்தண்டுகளே வஸாபி கிழங்குகள். இவை மேலும் வளருமென்றாலும் இந்த அளவில் அடித்தண்டுகள் இருக்கையிலேயே வஸாபி விழுதின் பிரத்யேக சுவையும் எரிவும் மிகச்சரியாக இருக்கும்..

வஸாபி ஜப்பானில் எப்போதிலிருந்து, யாரால், எங்கு விளைவிக்கபட்டதென்பதை குறித்து ஜப்பானிலேயெ பலவிதமான வாய்வழிக்கதைகளும்  கருத்துக்களும் நிலவுகின்றது.

  பன்னெடுங்காலத்திற்கு முன்பு வேட்டைக்காரர்களாக இருந்த, மீனும், விலங்குகளும், கனிகளும் விதைகளும் கடலுணவுகளுமாக உண்டு கொண்டிருந்த ஜப்பானியர்கள் அப்போதே காடுகளில் இயற்கையாக கிடைத்த வஸாபி கிழங்குகளையும் உணவில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாமென்று பரவலாக நம்பப்படுகின்றது. சாமுராய் வீரர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக பரிசளிக்கப்பட்டன வஸாபி பண்ணைகள் என்றும் சொல்லப்படுகின்றது.

மியி மாகாணத்தில்  786ல் புத்த துறவியான  கோஹ்போ-டாய்ஷி ( Kohbou-Daishi) காடுகளில் வளர்ந்திருந்த வஸாபி செடிகளை கொண்டு வந்து கோயா மலைகளிலும் (Mount Koya) அதன் அடிவாரத்திலும் பயிரடச்செய்ததற்கான ஆவணங்களே வஸாபியைக்குறித்து கிடைத்திருக்கும் முதல் வரலாற்று சான்று. 794’ல் உருவான ஜப்பானிய  தாவரவியல் அகராதிகளிலும்  வஸாபி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  918’ல் ஃபுகானே நோ சுககிட்டோ (Fukane-no-Sukehito) தொகுத்தளித்த ஹோன்ஸோ வாம்யோ (Honzo Wamyo) எனப்படும் ஜப்பானின் மிகப்பழமையான மூலிகைஅகராதியில் மலைகளைக்குறிக்கும் சொல்லான ’யாமாய்’ என்று அழைக்கப்பட்ட, மலைகளில் மட்டும் வளர்ந்த  இந்த இச்செடியின் பெயர் பின்னர்  மருவி வஸாபி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இவை 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜப்பானில் இயற்கையான வாழிடங்களில் வளர்பவையென்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் எங்கிஷ்கி (Engishiki) எனப்படும் ஜப்பானிய அரசுக்கான சட்டதிட்டங்கள், சடங்குகள் குறித்தான பழமையான் நூலிலும்  வரிசெலுத்தியவர்கள் பணத்துக்கு பதிலாக வஸாபி கிழங்குகளை அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது .

931–938 ல் தொகுக்கபட்ட வாம்யோ ருயிஜுஷா (Wamyo Ruijusho)  எனப்படும் ஜப்பானின் முதல் அகராதியிலும் வஸாபியைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஜப்பான் வெற்றி பெற்ற பல போர்களுக்கு பிந்தைய உண்டாட்டுகளில் வஸாபியை உணவில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புக்கள் பல ஆவணங்களில் இருக்கின்றன.

ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த வஸாபி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து மருந்துப்பொருளாகவே இருந்து, பின்னர் படிப்படியாக உணவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 1338 லிருந்து  1573 வரைக்குமான காலத்தில், ஜப்பானின் அரசகுடும்பங்களில் மட்டும்  உணவில் சேர்க்கப்பட்டிருந்த வஸாபி,. 1596-1615க்கு இடைப்பட்ட காலத்திலிருந்துதான்  வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது. 

 ஜப்பானிய சமையலில் கடுகைப்போல ஒரு மசாலாப்பொருளாக பயன்பாட்டிலிருந்த வஸாபி, பின்னர் மெல்ல மெல்ல சுஷி, பிற மீனுணவுகள்,  நூடுல்ஸ் மற்றும் சூப்பில் வாசனைக்காக சிறிதளவு சேர்க்கப்பட்டது

17ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜப்பானை ஒன்றிணைத்த மூவரில் ஒருவரான  லியாஷு டோகுகவா (Ieyasu Tokugawa)  வஸாபி பிரியராக இருந்திருக்கிறார் 

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வஸாபி பொதுமக்களுக்கும் கிடைத்திருக்கிறது. 1971  வரை பசையாக்கப்பட்ட வஸாபிதான் பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. 1973’ற்கு பிறகுதான் புத்தம் புதிய கிழங்குகளிலிருந்து வஸாபியை துருவி உண்ணும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

ஜப்பானில் பல்லாண்டுகளாகவே வஸாபி உணவிலும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும்,  20 ஆம் நூற்றாண்டில் சுஷி/சஷிமி உணவுகள் பிரபலமானதும் அதன் இணைஉணவான வஸாபியும் உலகளவில் மிகபிரபலமடைந்தது. சுஷி உணவுக்கும் வஸாபிக்குமான பொருத்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக ஜப்பானியர்கள் வேடிக்கையாக சொல்லுவதுண்டு. சுஷியின் பச்சை வாசனையை மறைக்க, பச்சை சுஷியின் கிருமிகளால் பாதிப்பு வராமலிருக்க பொருத்தமான  துணையுணவாக வஸாபி அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது

  20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வஸாபியை தூளாக்கி சந்தைப்படுத்துதலும் துவங்கியது. இதன் சுவை புதிய வஸாபி விழுதைப்போல இருக்காதெனினும் இதையும் ஏராளமானோர் வீட்டு உபயோகத்திற்கென வாங்குவார்கள். தற்போது  (-196°C) உறை நிலையில் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்பட்டு வஸாபியின் சுவையும் நிறமும் மணமும் பாதுகாக்கப்படுகின்றது.

வஸாபி கிழங்கை துருவுதல் என்பது உண்மையில் தேய்த்தல்தான் இவற்றிற்கென இருக்கும் விசேஷ சுறாத்தோலினால் உருவாக்கப்பட்ட ஓரோஷி (oroshi) சதுரத்துருவான்களிலோ, அல்லது கருங்கல்லிலோ, உலோகத்துருவான்களிலோ  கிழங்குகள் வட்டசுழற்சியில்  தேய்ககப்பட்டு விழுதாக்கப்படும். வஸாபியின் சுவையும் மணமும் குணமும் அது துருவப்படும் விதத்தை பொருத்தும் மாறுபடுகிறது..

இதிலிருக்கும் எளிதில் ஆவியாகக்கூடிய வேதிச்சேர்மங்களின்  சுவையை அனுபவிக்கவேண்டி பாரம்பரியமான உணவகங்களில் வஸாபி, அவ்வப்போது புத்தம் புதிதாகவே விழுதாக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. சில உயர்தர உணவகங்களில் வஸாபியை வாடிக்கையாளர்களே துருவிக்கொள்ளவும் வசதியுண்டு. பரிமாறப்பட்ட 15 நிமிடங்களில் வஸாபியை சுவைக்காவிட்டால் அதன் அசல்சுவை மறைந்துவிடும்.

பச்சைத்தங்கமெனப்படும் வஸாபி நாவில் பட்டதும் மூளையில் ஒரு மெல்லிய உதையை, நாசியில் உடனே ஒரு எரிச்சலை, பின்னரே நாவில் அதன் சுவையை உணருவீர்கள் என்கிறார்கள் ஜப்பானியர்கள். தேள் கொட்டியது போலவும் தீயில் சுட்டுக்கொண்டது போலவுமிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

வஸாபியின் புகைகலந்த செவிகேட்காதவர்களுக்கான தீவிபத்து எச்சரிக்கை கருவியை வடிவமைத்த ஜப்பானிய தொழில்நுட்பத்திற்கு அசாதாரண அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான   Ig நோபல் பரிசு 2011ல்  கிடைத்தது. இதன் எரிச்சல் அத்தனை துரிதமாக மூளைக்கு செல்லும்.

 வஸாபியின் எரிவு, மிளகாயிலிருக்கும் கேப்ஸைஸினைபோல் நெடுநெரம் தங்கி இருக்காமல் விரைவில் நாக்கிலிருந்து நீங்கிவிடும்  வஸாபி விழுதை உண்ணுகையில் கண்களிலும் மூக்கிலும் நேரடியாக பட்டுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். வஸாபி மிகசிறிதளவே உணவில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் இதன் சுவை மறைந்திருந்து மிக குறைவாக தென்படுமொன்றல்ல, முழு உணவையும் முன்னின்று வழிநடத்திச்செல்லும் சுவை கொண்டதென்கிறார்கள் ஜப்பானியர்கள். மிககுறைந்த அளவிலேயெ இவ்விழுது எடுத்துக்கொள்ளப்படுவதால்  இதன் பக்கவிளைவுகள் வெகு அரிதாகவே இருக்கும். வஸாபியை பொருத்தவரை குறைவே மிகுதி.

துருவிய அல்லது தேய்த்த வஸாபியின் மணமும் சுவையும் நிலைபெற இரண்டே இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பின்னர் இவை பரிமாறப்படும். கண்ணீல் நீரை நிறைத்து மூக்கை தூண்டி எரிச்சலடைய வைத்து எரிவை உடனடியாக மூளையில் உணரச்செய்யும் வஸாபியின் சுவையை வேறெந்தெ சுவையுடனும் ஒப்பிடவே முடியாது.

வஸாபி பண்ணை

ஜப்பானுக்கு செல்லாதவர்கள் ஜப்பான் முழுவதும் பச்சைப்பசேலெனெ செழித்து வளர்ந்திருக்கும் வஸாபிக்காடுகள் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளவேண்டாம். வஸாபி அத்தனை எளிதில் வளரும் தாவரமல்ல.. நேரடியான சூரியஒளிபடாத ஆற்றங்கரைகளிலும் மலைச்சரிவுகளிலும் வேர்கள் தூயநீரில் மூழ்கி இருக்கும்படியே இவை வளரும். சாதாரணமாக நம்வீட்டு தோட்டங்களில் எலுமிச்சை கறிவேப்பிலை வளர்பப்தைபோல வஸாபியை வளர்க்கமுடியாது. இவற்றை கட்டுப்படுத்திய சூழலில் பசுங்குடில்களில் வளர்க்கும் முயற்சிகள் அவ்வளவாக  வெற்றி பெறவில்லை. வஸாபி கிலோ 160லிருந்து 250 டாலர்கள் வரை விலை இருக்கும். மிககுறைந்த அளவில் விளைச்சலும், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான உலகளாவிய தேவையும் கொண்டது வஸாபி.

டோக்கியோவின் ஷிஜுவோகாவில் பல நூற்றாண்டுகளாக இயற்கையான வாழிடங்களில் வஸாபி பயிரிடப்படுகின்றது. ஜப்பானில் வருடா வருடம் விளையும்  வஸாபி கிழங்குகளில் சரிபாதி இங்கிருந்துதான் கிடைக்கின்றது  

நீரோடைகளின் பாறைகளின் மீதடுக்கப்பட்ட சரளைக்கற்களின் மீது மணலைப்பரப்பி வஸாபியை  பயிரிடும் பழமையான முறை டட்டாமி இஷி (tatami ishi) எனப்படும். இம்முறையில் நீர் இயற்கையாகவே வடிகட்டப்படுவதால் வஸாபியின் சுவையும் தரமும் முதல் தரத்திலிருப்பதாக சொல்லப்படுகின்றது.

 ஜப்பானில் இயற்கையாக விளையும் வஸாபி ஹான் வஸாபி எனப்படும்.(Hon wasabi). விதைகள் மூலம் நிலத்தில் பயிராகும் வஸாபி ஹடக் வஸாபி எனப்படும் (Hatake-wasabi) “hatake” என்றால் நிலமென்று பொருள். நிலத்தில் வளர்க்கப்படும் செடிகளிலிருந்து கிடைக்கும் வஸாபிக்கிழங்குகளை விடநீரில் வேர்களை பதித்து நிலத்தில் இலைகளுடன் இருக்கும் சவா செடிகளே (sawa wasabi) தரமான  வஸாபிக்கிழங்குக்ளை கொடுக்கின்றன தரம்குறைவான் ஓக்கா வஸாபியும் அதிகம் பயிரிடப்படுகின்றது (oka wasabi ). ஜப்பானிய வஸாபியில் தருமா வகை( Daruma  ) அழகிய வசீகரிக்கும் இளம் பச்சையிலும், மசுமா வசாபி (Mazuma ) நல்ல எரிவுடனுமிருக்கும்.  

ஜப்பானில் உணவுகள் மிகப்பிரபலமென்றாலும் உணவுகளுக்கு நாம் பெருந்தொகையை செலவிட வேண்டியதில்லை, பெரும்பாலும் ஒரு  முழு பாரம்பரிய உணவுக்கு  5 முதல்  10 அமெரிக்க டாலர் வரைதான் செலவாகும். வஸாபி உணவுக்கட்டணம்  2 லிருந்து 5 டாலர் வரையே இருக்கும்

துணை உணவாக மட்டுமன்றி வஸாபியின் மருத்துவகுணங்களுக்காகவும்  ஜப்பானியர்கள்  வஸாபியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வஸாபியின் வேதிப்பொருட்கள் ஜீரணத்தை துரிதப்படுத்தி வயிற்றுப்புண்களை ஆற்றுதல், புற்றுநோய்கெதிராக செயல்படுதல், பற்சிதைவை  தடுப்பது,  ரத்தக்கட்டிகளின் சிகிச்சைக்கு என பல்வேறு முக்கிய மருத்துவப்பயன்களையும் கொண்டிருக்கின்றது ஒவ்வாமை நோய்களுக்கும் ஆஸ்த்மாவுக்கும் கூட வஸாபி மருந்தாகின்றது. வஸாபி கிழங்குகளில் அதிக அளவில் வைட்டமின் C, முக்கிய தாது உப்புக்கள்,பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் சத்துக்களும் உள்ளது

உலகநாடுகள் பலவற்றிலும் உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்குகந்த  வஸாபி தேவைக்கேற்ற அளவுகளில் விளைவிக்கப்படாததால்தான் வஸாபி போலிகளும் சந்தையில் அதிகம் புழங்குகின்றது.

பசுங்குடில்களில் வஸாபி

எளிதில் நோய்வாய்ப்படுவது , மிகத்தூய நீர் தேவைப்படுவது, கிழங்குகள் முற்றி அறுவடை செய்ய ஏறத்தாழ 2 வருடங்கள் தேவைப்படுவது ஆகிய காரணங்களினால்தான் வஸாபி அதிகம் பயிராவதில்லை. 2013 ல்  ஜப்பானில் மட்டும் 17.000 டன் வஸாபி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டும் உலகளாவிய இதன் தேவை பலமடங்கு அதிகமாவே இருந்துவருகிறது

புவியியல் ரீதியாக, வசாபி சந்தை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உட்பட ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வஸாபி சந்தை 279.7 மில்லியன் அமெரிக்க டாலர்களக மதிப்பிடப்பட்டிருக்கிறது, 2027’ல் இது 590 மில்லியனாக உயருமென்றும் அனுமானிக்கப்படுகிறது

தற்போது வஸாபி சாகுபடி அமெரிக்கா, கனடா, தைவான், ஆகிய நாடுகளிலும் வேகம் பிடித்திருக்கிறது. நியூஸிலாந்தில் நீரியல் வளர்ப்பில் LED விளக்கொளியில் வஸாபி க்ளோன்களை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

வஸாபி கிழங்குகளாகவும், தூளாக்கப்பட்டும், விழுதாகவும், துருவியும் சந்தையில் கிடைக்கின்றது. ஜப்பானுக்கு செல்லுகையில் அசல் வஸாபியை சுவைக்கும் அனுபவத்தை  தவறவிடக்கூடாது. வஸாபி ஐஸ்கிரீம்களாகவும், பியரில், ஜின்னில், சோளப்பொறியில், நூடுல்ஸீல், சிற்றுண்டிகளில்  கலக்கப்பட்டும் ஜப்பானில் பரவலாக கிடைக்கின்றது. வஸாபி விழுது கலக்கப்பட்ட பழரசங்களும் உண்டு. இனிப்பும் காரமும் வஸாபி மணமுமாக இளம்பச்சைநிற கிட்கேட் சாக்லேட்டுக்கள் ஜப்பானில் வெகு பிரபலம். வஸாபியின் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் வஸாபி  பொம்மைகளும் ஜப்பானிய குழந்தைகளுக்கு பிரியமானவை.

வஸாபி கிட் கேட்

எந்திரனில் நீலகண்ணழகி ஐஸ்வர்யாவை வைரமுத்து’’ செந்தேனில் வஸாபி ‘’ என்றிருப்பார். அப்படியொரு வித்தியாசமான சுவைதானிது

யூ ட்யூபில் வஸாபி சாகுபடியைக் குறித்தும், விழுதின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் சுவை குறித்தும் ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன . இவற்றில் தலைமுறைகளாக வஸாபி பயிரிடும் குடும்பத்தினரின் பண்ணையைக்குறித்த  உணர்வுபூர்வமான   காணொளி இந்த இணைப்பில் இருக்கின்றது.

 https://www.youtube .com/watch?v=fhlklE9wBSY

வஸாபி ஐஸ்கிரீம்

பியர்- கசக்கும் உண்மை,

மனித மூதாதையர்கள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்தியிருப்பதற்கான  சாத்தியங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.குகை ஓவியங்கள், தகவல்கள் பொறிக்கப்பட்ட களிமண் கட்டிகள், அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மிச்சங்கள், பாப்பிரஸ் சுருள்களின் குறிப்புக்கள், கல்லறை சித்திரங்கள், எகிப்து பிரமிடுகளின் சீசாக்களும் மதுக்கோப்பைகளும் குடுவைகளும், என நமக்கு கிடத்திருக்கும் எல்லா ஆதாரங்களுமே மதுபானங்கள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றிருந்ததை சொல்கின்றன.

மதுவைக் குறித்துப் பேசாத உலக இலக்கியங்களே இல்லை. தண்ணீரை திராட்சை ரசமாக்கியதுதான் ஏசு நிகழ்த்திய முதல் அதிசயமே. நோவா, திராட்சை ரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகி சுயநினைவிழந்து படுத்திருந்தததை சொல்லுகின்றது விவிலியம். வளர்பிறையில் வளர்ந்து தேய்பிறையில் சிறுத்துக்கொண்டு போகும் சோமனுக்குரிய கொடியை பிழிந்து எடுக்கும் சோமபானம் நம்மை துயரிலிருந்தும் பிணியிலிருந்தும் விடுவிக்குமென அதர்வவேதம் குறிப்பிடுகின்றது. வேதகாலத்தில் வாழ்ந்த அசுரர்களும், கிராதர்களும் அரிசி, பார்லி மற்றும் தினை மாவுகளிருந்து தயாரிக்கப்பட்ட சுர’ பானம் அருந்தியதாக  வேதம் கூறுகிறது

 புராதன இந்தியாவில்  வாழ்ந்த ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்த சரக மகரிஷி (Charaka) சுரபானத்தை  வலிநீக்கியாகவும், மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தியதற்கும், அவருக்கும் முந்தைய காலத்தை சேர்ந்த சுஷ்ருதர் கருச்சிதைவான பெண்ணொருத்திக்கான சிகிச்சையின் போது அவளுக்கு வலிதெரியாமலிருக்க சுரபானத்தை அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன.

 ராமாயணத்தில் பல இடங்களில் மதுஅருந்துதல் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரத்திலும் யவனமது, தேறல் உள்ளிட்ட பலவகையான் மதுவை ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி அனைவரும்   அருந்தியிருப்பதை காணலாம்.  கடவுளின் கட்டளையின்படி சேகரித்த தாவங்களை கடலில் கரைத்து அமிர்தமெடுத்து பருகி வலிமைமிக்கவர்களாவதை  குறிப்பிடுகின்றது வால்மீகி ராமாயணம் .புத்தமத நூல்கள் கரும்பின் சாற்றுடன் பல தாவரங்களை சேர்த்து உண்டாக்கும் சுரா என்னும்  பானத்தையும், தேனை புளிக்க வைத்து உண்டாக்கும் மதுவையும் பற்றி சொல்லுகின்றது

  சங்க இலக்கியங்களில் தமிழர் பயன்படுத்திய மதுவகைகள் குறித்துப் பல செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன.  மனிதகுலத்தின் வரலாறோடு இணைந்தேதான் இருந்திருக்கிறது போதையூட்டும் பானங்களும் பிற வஸ்துக்களும்.

பழமரங்கள் தங்களின் விதை பரவுதலை பழங்களை உண்ணும் விலங்குகளின் மூலம் உறுதிப்படுத்த   முற்றிக்கனிந்த பழத்தின் வாசனையிலேயே அவற்றில் சர்க்கரை உள்ளதையும் அவை உண்ணத் தகுந்ததாயிருப்பதையும் விலங்குகளுக்கு தெரிவிக்கிறது.

உதிர்ந்து கேட்பாரற்றுக் கிடக்கும் அழுகிய பழங்களின் சர்க்கரைகளை இயற்கையாகவே காற்றிலும் மண்ணிலும்  இருக்கும் ஈஸ்ட்கள் உட்கொள்ளத் தொடங்கும் போது சர்க்கரை ஆல்கஹாலாக மாறுகிறது இவற்றை உண்ணும் குரங்குகள்  போதையை அறிந்து, பின்னர் தொடர்ந்து இத்தகைய கனிந்த, நொதித்த பழங்களையே உண்ணத்துவங்குகையில், விலங்குகளையும் பறவைகளையும் பின்தொடர்ந்தே, உண்ணக்கூடிய உணவையும் தேவையான மருந்தையும் கண்டறிந்த ஆதிமனிதர்களும் அதையே    உண்ணத்துவங்கி, பின்னர் தேவைக்கேற்ப பழங்களை நொதித்தலுக்கு உள்ளாக்கி  மதுவை உருவாக்க துவங்கியிருக்கலாமென்கிறது மதுபானங்களின் வரலாற்றை சொல்லும் பல அனுமானங்களில் மிகபிரபலமான ஒன்றான  drunken monkey hypotheis.

   ஆதிமனிதர்கள்  உணவைப் பாதுகாக்கவும், வேட்டையாடவும் விவசாயம் செய்யவும்  வழியற்ற குளிர்காலங்களுக்கான உணவை சேமிக்கவும், பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தினர், அதிலொன்றுதான் தானியங்களை உடைத்து மாவாக்கி கரைத்து கொதிக்கவைத்து நொதித்தலுக்குள்ளாக்குவது .

 பண்டைய மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க  திருப்புமுனைகளில் ஒன்றாக  இயற்கைபொருட்களிலிருந்த  சர்க்கரையை புளிக்கவும் நொதிக்கவும் வைத்து  ஆல்கஹால்  உருவாகும் நுட்பத்தை அறிந்துகொண்டதும் சொல்லப்படுகின்றது. கற்கால மனிதர்கள் மட்டுமல்லாது பூச்சிகள், பறவைகள், யானைகள், பழ வெளவால்கள், குரங்குகள் என  அனைத்துமே மதுவின் நுகர்வுக்கு ஆட்பட்டிருந்தவைதான் மனிதனும் பிற விலங்குகளும் மதுபானங்கள், அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த நன்மைகளுக்கு ஏற்பத்தான் பரிணாமம் அடைந்திருக்கிறோம் .  

பலவகையான பானங்கள் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும்  திராட்சை ரசத்திலிருந்து  வைனும் தானியங்களிலிருந்து கிடைத்த பியரும் அவற்றுள் முக்கியமானது.  தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்தபடியாக உலகின் மிக அதிகமாக அருந்தப்படும் விருப்ப பானமாக பியரே இருக்கின்றது. பியரை உருவாக்கும் கலையும் அறிவியலும் ஜைத்தாலஜி (Zythology)  எனப்படுகின்றது..  பியர் பிரியர்களுக்கு Zythophiles என்று பெயர்.

 பியரின் வரலாறும் மிகச்சுவையானது, உண்மையில், மனித நாகரிகத்தின் வரலாறென்பதே பியரின் வரலாறுதான் என்கிறார்கள்  மானுடவியலாளர்கள்.  மனிதன் வேட்டை வாழ்விலிருந்து விலகி, தானியங்களை பயிரிடும், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்க்கைக்கு மாறியபோதே பியர் தயாரிப்பும் தொடங்கியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. . தாவரப்பயன்பாட்டியலான Economic Botany’யும், பல்லாயிரம் வருடங்ளுக்கு முன்பு, தானிய வகைகள் சாகுபடி செய்யப்பட்டபோதே பியரும் உருவாகியிருக்கக்கூடும் என்கிறது.

 சுமேரியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள் மற்றும் பிரிட்டிஷ் உட்பட பல கலாச்சாரங்களிலும் நாகரிகங்களிலும் பியர் அழுத்தமான அடையாளத்தை பதித்திருக்கிறது.

அகழ்வாய்வில் 5000 வருடங்களுக்கு முன்பான சுமேரயாவின் களிமண் கட்டிகளில் ரொட்டியின் கடவுளான நின்காசி (Ninkasi) பியரின் தயாரிப்பை பலருக்கு கற்றுக்கொடுத்ததற்கான குறிப்புகள் இருந்தன.. பாபிலோனியர்கள் சுமேரியாவை வென்று சுமேரியர்களின் பியர் தயாரிக்கும் திறன்களைப் பின்பற்றினர். பாபிலோனிய மன்னர், ஹமுராபி, பியர் தயாரிப்பின் சட்டங்களை அறிவித்து பியரை 20 வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தியிருந்தார்

சுமேரியாவின் பியர் கலாச்சாரம் பின்னர் எகிப்துக்குள்ளும் நுழைந்து, எகிப்திய கலாச்சாரத்தின்  முக்கிய பகுதியாக மாறியது எகிப்தியர்கள் பார்லி மற்றும் பண்டைய கோதுமை வகையான எம்மர் உள்ளிட்ட பல தானியங்களிலிருந்தும் பியரை காய்ச்சினர். அவர்களிடம் அடர்ந்த நிற, இனிக்கும், கலங்கிய, நட்புக்கான, அழகுபடுத்தப்பட்ட, சத்தியத்தின் பியர்களும், மறு வாழ்விலும் நீடிக்கும் இறுதிச் சடங்குகளுக்கான தனித்த வகையும், கல்லறைகளுக்கு “புளிப்பில்லாதவையும்”  இறப்பற்ற நித்திய பியருமாக பல வகைகள் இருந்தன. பிரமிடுகளை கட்டியவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளிகளுக்கு நாளொன்றிற்கு 4 லிட்டர் பி்யரே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது

பல நாகரிகங்களின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான பானங்களில் ஒன்றாக பியர் வேகமாக புகழ்பெற்றது.  கூடவே காய்ச்சும் முறைகளின், சேர்மானங்களின் மாற்றங்களுக்கு தகுந்தபடி பியரின் சுவையும், இயல்பும் மாறிக்கொண்டுமிருந்தது. பாபிலோனியர்கள் அடர்ந்த கலங்கலான தானியமிச்சங்கள் அப்படியே இருக்கும் பியரை  வைக்கோலால் உறிஞ்சிக் குடித்தார்கள். பல நாடுகளில் ஆலிவ் எண்ணெய், பாலாடைக்கட்டி, புல்வகைகள்,, கேரட் போன்றவற்றையும், கஞ்சா மற்றும் பாப்பி போன்ற மயக்கமூட்டிகளையும் கூட பியரில் கலந்து அருந்தினார்கள்

.அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் இருந்த உலகின் மிகப்பழமையான மதுபானம் பியரே. எனினும் கசப்பு சுவையுடன் இருக்கும் பியர் கி.பி 822 வரை உருவாகி இருக்கவில்லை.

பல சோதனை முயற்சிகள் பியரின் சுவையை மேம்படுத்தவும் முளைவிட்ட தானியங்களின் இனிப்புச்சுவையை மட்டுப்படுத்தவும் உலகின் பலபகுதிகளில் நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. இந்த சேர்மானங்கள் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு  இடம் மாறுபட்டிருந்தது. பிற வாசனைப்பொருட்கள் சேர்க்க்கபட்டவை க்ரூட்’பியர் (Gruit beer) என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்டன.(“Gruit” என்பது ஜெர்மானிய மொழியில் மூலிகை என பொருள்படும்)

செம்பருத்தி, தேயிலை. உலர்ந்த ஆரஞ்சின் தோல், பலவகையான கிழங்குகள், லவங்கப்பட்டை, லாவண்டர் அரும்புகள், Achilea milefolium  எனப்படும் Yarrow, நல்ல நெடியுடைய  செடியான ஹிஸ்ஸாப் (Blue giant hyssop), ஜூனிபர் பழங்கள், இஞ்சி, கேரவே விதை, சோம்பு, ஜாதிக்காய், புதினா, கிராம்பு, குருமிளகு, சீரகம், வனிலா, கொத்துமல்லி நெல்லிக்கனிகள், பைன் மர ஊசியிலைகள், சில கடல்பாசிகள், கொக்கோ, மிளகாய்கள், கசகசாவிதைகள், மஞ்சள்   என பலதாவரப்பொருட்கள் பியரில் கலந்து சுவை மாறுபாடு சோதிக்கப்பட்டது

 நாம் கிணற்று நீர் இனிப்புச் சுவையாக மாற நெல்லிமரக்கட்டைகளை போடுவது போல்  குறிப்பிட்ட சில மரங்களின் சிறு சிறு கிளைகளை உடைத்து கொதிக்கும் பியரில் சேர்க்கும் வழக்கம் கூட இருந்திருக்கிறது. இனிப்பை அதிகமாக்கவும் ஆப்ரிகாட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆகியவற்றை சேர்த்திருக்கிறார்கள்.

ஹாப்ஸ் மஞ்சரி

பியர் வெகுநாட்களுக்கு கெட்டுப் போகாமலிருக்கவும் சுவையை மேம்படுத்தவும் அலமாரி வாழ்வை (Shef life) அதிகரிக்கவும் பியரில் பல்வேறு தாவரங்களும் தாவர பொருட்களும் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில்,   மடாலயங்கள் இப்படி சுவை மாறுபாட்டிற்காக சேர்க்கப்படும் மூலிகைகளுக்கு வரி விதித்ததால் அந்த வரிவிதிப்பு பட்டியலில் இல்லாத பிறவற்றை சோதித்து பார்க்கும் முயற்சியாகத்தான் அப்போது மருத்துவத்தாவரமாக பயன்பட்டுக்கொண்டிருந்த ஹாப்ஸ் என்கிற ஹுமுலஸ் லுபுலஸ் (Humulus lupulus) என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தச்செடி பியர் உலகிற்குள் கொண்டு வரப்பட்டது,  பின்னர் பியரின் கசப்புச்சுவை வரலாறானது.

ஹாப்ஸின் பயன்பாடு துவங்கிய பின்னர் சுவைக்காக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்த பிற தாவர  உபயோகங்கள் மெல்ல மெல்ல குறைந்து பின்னர் இல்லாமலே ஆனது. 1516ல் ஹாப்ஸின் உபயோகம் குறித்து சட்டமே இயற்றும் அளவிற்கு ஹாப்ஸ் பியருக்கு அளித்த சுவையும் நன்மையும் இருந்தது

பியரின் தூய்மை விதி எனப்படும் 1487ல் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் 23 ஏப்ரல் 1516’ல் அமலாக்கப்பட்ட ஜெர்மனியின் “ரெய்ன்ஹீட்ஸ்ஜ்போட்” (Reinheitsgebot) பியர் தூய்மைச் சட்டம் நீர், ஹாப்ஸ் மற்றும் பார்லி தவிர பிற அனைத்தையும் பியரை காய்ச்சும் பொருட்களிலிருந்து நீக்கியது. ஜெர்மனியின்  இந்த பியர் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான கட்டுப்பாட்டு விதியே உலகின் முதல் உணவுசார்ந்த தரக்கட்டுப்பாட்டு விதியாகும். பின்னர் 300 ஆண்டுகளுக்கு பின்னரே நொதித்தலில் ஈஸ்ட்டின் பங்கு லூயிஸ் பாஸ்டரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவ்விதியில் ஈஸ்ட் நான்காவதாக  சேர்க்கப்பட்டது

தானியங்களுடனும் பழக்கூழ்களுடனும் ரொட்டித்துண்டுகளை சேர்த்து    நொதித்தலுக்கு உ்ள்ளாக்கி மதுபானங்களை உண்டாக்குவது நம் வரலாற்றில் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இருந்தும், லூயிஸ் பாஸ்டருக்கு முன்பு ரொட்டித்துண்டுகளில்  ஈஸ்ட் இருப்பது தெரியாமலேயே உபயோகப்படுத்திக் கொண்டிருந்தது  ஒரு மர்மம்தான்.

 இன்றளவும் பியர் தயாரிப்பில் ஈஸ்ட்டின் இரண்டு வகைகளான, நொதித்தல் முடிந்தபின்னர் பியர் திரவத்தின் மேலே மிதக்கும் சக்காரோமைஸீஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae)  மற்றும் அடியில் வண்டலாக படிந்துவிடும் சக்காரோமைஸீஸ் கார்ல்பெர்ஜென்ஸிஸ் (Saccharomyces carlsbergensis).) ஆகியவையே உபயோகப்படுத்தப் படுகின்றன. முந்தையது top beer எனப்படும் Ale , பிந்தையது bottom beer எனபடும் Lager.

பியரில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஹாப்ஸ் செடிகள் வேறு பயன்பாட்டிற்காக வளர்க்கப்பட்டிருக்கலாம்..  கிபி 7ஆம் நூற்றாண்டில்  பலவகையான தானியங்களை நீரில் கலந்து கொதிக்கவும் நொதிக்கவும் வைத்து, கசக்கும் மலர்களும் கலந்து செய்யப்படும் பலபெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஒரே சுவையுடன் இருந்த போதையூட்டும் பானெமென்று பியரை குறிப்பிட்டிருக்கிறார். இயற்கைஆர்வலரும் தீராப்பயணியுமான ப்ளைனி தனது இயற்கையின் வரலாறு ( Naturalis Historia) நூலில்.

ஹாப்ஸ் தோட்டங்கள்

 கி.பி 822 ல் வடக்கு பிரான்ஸின்  பிகார்டியில் பெனடிக்டைன் மடத்தின் மடாதிபதி அடால்ஹார்ட் எழுதிய மடத்திற்கான நெறிகளைக் குறித்தான நூலில் பியர் தயரிக்கும் பொருட்டு காடுகளிலிருந்து ஹாப்ஸ் மலர்க்கொத்துக்களை சேகரிப்பதும் குறிப்பிடப்பட்டிருந்ததே ஹாப்ஸின் பயன்பாடு குறித்த முதல் முக்கிய வரலாற்று ஆவணம். 1150,களில் ஜெர்மானிய மடாதிபதிகள் கசப்புச்சுவைக்கும், அதிக நாட்கள் பியர் கெட்டுப்போகாமல் இருக்கவுமாக   ஹாப்ஸின் பயன்பாட்டை அதிகமாக்கினர்.

பியர் தயரிப்பில்  சேர்க்கப்பட்ட இந்த மலர்க்கொத்து அத்தனை ஆயிரமாண்டு கால  பியர் சுவையை  மாற்றியமைத்தது. ’க்ரூட்’ தாவரங்களின் விற்பனையில்  வருமானம் பெற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபைகள் ஹாப்ஸின் பயன்பாட்டை, கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஹாப்ஸ் பியரின் வரலாற்றில்  ஆழமாக வேர்களை வளர்க்கத் தொடங்கியது.

கசப்பு, பிரத்யேக சுவை மற்றும் நறுமணத்திற்காக உலகெங்கிலும் பியரில் சேர்க்கபட்ட ஹாப்ஸ் , வணிக ரீதியாக பெருமளவில் பயிராக்கவும் பட்டது. மாசசூசெட்ஸ் நிறுவனம் 1629 ஆம் ஆண்டில் ஹாப்ஸை வட அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இது ஒரு முக்கியமான வணிகப் பயிர் ஆவதற்கு 1800 வரை ஆனது.  இன்று பெரும்பாலான ஹாப்ஸ் ஒரிகான், வாஷிங்டன், இடாஹோ மற்றும் கலிபோர்னியாவில் வளர்க்கப்படுகின்றன.  

மஞ்சள் நிறப்பிசினுடன் பெண்மஞ்சரிகள்

பார்லி அல்லது பிற தானியங்களை ஊறவைத்து பின்னர் அவற்றை முளைக்கச்செய்து, வறுத்து,உடைத்து, பொடித்து, நீர் கலந்து கொதிக்க வைத்த பின்  கிடைக்கும் இனிப்புச்சுவையுடன் இருக்கும் கலவையான வொர்ட் (wort) ல் குறிப்பிட்ட சமயத்தில் இந்த ஹாப்ஸ் செடியின் பெண்மலர்கொத்துக்களை (சிறு சிறு மலர்கள் நெருக்கமாக இணைந்திருக்கும் கனகாம்பர மலர்க் கொத்தைபோன்ற மலர்மஞ்சரிகளை) உருவிப்போடுவார்கள். பின்னர் நொதித்தலுக்காக ஈஸ்ட்  சேர்க்கப்பட்டு பியர் தயாரிக்கப்படும்

கசக்கும் பியருக்கான் விருப்பம் உலகெங்கிலும்  பரவி. ஹாப்ஸின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியபோதே இதன் கலப்பினங்களும்  உருவாக்கப்பட்டன. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஆண்டு முழுவதும் பூத்துகாய்க்கும் வகையான, கஞ்சாச்செடியின் கன்னாபேசியே cannabaceae  குடும்பத்தைச் சேர்ந்தது இந்தத்தாவரம்.  இதன் பெண்மஞ்சரிகளை மட்டுமே பியர் தயாரிப்பில் பயன்படுத்துவதாலும் இம்மஞ்சரிகள் சரங்களாக தொங்கிக் கொண்டிருப்பதாலும் தமிழில் இவற்றை சரலதை என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.   

சரலதை (பெயரிட்ட சுபாவுக்கு நன்றி)

ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும் பல்லாண்டுத்தாவரமான இது சுமார் 50 வருடங்கள் தொடர்ந்து பலன் தரும். ஆண் பெண் கொடிகள் தனித்தனியே காணப்படும். ஆண் பூக்கள் தளர்வான மஞ்சரிகளகவும் ,பெண் மஞ்சரி சரமாக, நெருக்கமாக, இலைச்செதில்களால் சூழப்பட்ட சிறிய மலர்களுடனும் காணப்படும். பொதுவாக உலகெங்கிலும் பயிரிடப்படுவது Humulus lupulus  ஜப்பானில் பயிரிடப்படுவது, Humulus japonicas, சீனாவில் பயிரப்படுவது Humulus yunnanensis  என்னும் வகைகளாகும்.;

இந்தியாவில் இமாச்சலபிரதேசத்தின் லஹால் (Lahaul ) பழங்குடியினரின் கிராமத்தில்தான் 1973ல் ஹாப்ஸ் சாகுபடி  துவங்கியது. அதற்கு முன்பு வரை இம்மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

ஹாப்ஸ் கொடிகள் வைன்ஸ் (Vines) என்றழைக்கப்படுவதற்கு மாறாக பைன்ஸ்’ (Bines) என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால்  அருகிலிருக்கும் ஆதரவை தனது வளைந்த கொடிபோன்ற தண்டுகளால் சுற்றி வளைத்துக்கொண்டு ஏறும் வைன்களை போலல்லாது இவை தண்டுகளிலிருக்கும் கடினமான முட்களைப் பயன்படுத்தி  ஆதரவை பற்றிக்கொண்டு, கடிகார வளைவில் சுற்றிக் கொண்டு ஏறுகின்றன.   

ஹாப்ஸ் கொடிகள்

இதயவடிவில்  பற்களுடன் கூடிய விளிம்புகளை கொண்டிருக்கும், எதிரடுக்கில் அமைந்திருக்கும் இலைகளுடன் இருக்கும் இக்கொடிகளின் பெண் மஞ்சரிகள்   மகரந்த சேர்க்கை நடைபெறும் முன்னர் அறுவடை செய்யப்பட்டுவிடும். விதைகளுக்காக மட்டும் 200 பெண் கொடிகளுக்கு ஒன்று  என்னும் விகிதத்தில் விட்டுவிட்டு மற்ற ஆண் கொடிகள் அகற்றப்பட்டுவிடும். .

ஆழமான ஆணிவேர்களையும் நீரை சேகரிக்கும் மேற்பரப்பு வேர்களையும் அடிக்கிழங்கையும் கொண்டிருக்கும் இவை, கிழங்குகள், நறுக்க்கபட்ட தண்டுகள் மற்றும் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை விரைந்து வளரும் இயல்புடையவை, 30 அடிவரை வளரும் இவை 18 அடியில் நறுக்கபட்டு அடர்த்தியாக வளர்க்கப்படும். ஒரு ஏக்கரில் சுமார் 1000 கொடிகளை வளர்த்தலாம்..  

ஹாப்ஸ் மலர்கள் கசப்புச்சுவையை மட்டும் அளிக்கும் ஆல்ஃபா மலர்கள் மற்றும்  நறுமணம் அளிக்கும் அரோமா மலர்கள் என இருவகைப்படும். இரண்டு பண்புகளையும் கொண்ட மலர்களுக்கான கலப்பின முயற்சிகள் தாவரவியலாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பியரின் கசப்புச்சுவைக்கும் பிற இயல்புகளுக்கும் காரணமாயிருப்பது இம்மலர்களில் உள்ள ஆல்ஃபா அமிலங்களான ஹுமுலோன், பீட்டா அமிலங்கலான லுபுலோன் உள்ளிட்ட ஏராளமான வேதிச்சேர்மானங்கள் ( humulones , lupulones , leucine, valine, isoleucine, cohumulone colupulone, adhumulone, adlupulone),  இவை மலர்களின் எடையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முளைவிட்ட பார்லியின் மிதமான இனிப்புச்சுவையை  ஈடுகட்ட ஹாப்ஸ் பெண்மலர்களிலிருக்கும் மஞ்சள் நிறப்பிசினின் கசப்புச்சுவை மிகபொருத்தமானது. ஹாப் மஞ்சரிகள் பழுத்து, பிசினின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் இவை  பிசின் உதிர்ந்துவிடமால் கவனமாக உலர்த்தப்படுகின்றன.

பொதுவாக ஹாப்ஸ் மலர்கள் புத்தம் புதியதாக கொதிக்கும் பியர் கலவையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக உலர்ந்த மலர்க்கொத்துக்களும், பிசினை உலர்த்தி பொடித்த பொன்மஞ்சள் பொடியும், மலர்கொத்துக்களை உலர்த்தி அரைத்து பிசைந்து செய்யபட்ட கட்டிகளும் கூட உபயோகப்படுத்தபடுகின்றன 

ஹாப்ஸ் உலர் கட்டிகள்

ஹாப்ஸ் மலர்கள் கொதிக்க வைக்கப்படும் நேர அளவு, அவற்றின் கசப்பின் அளவீடு (IBUs), மலர்களின் தரம் ஆகியவையே இறுதியில் பியரின் சுவை மணம் தரம் ஆகியவற்றை முடிவுசெய்கின்றது

ஹாப் பிசின்களின் பியர் நுரையை மேம்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன மற்றும்  வொர்ட் கலவையை தெளியவைத்து அதிலிருக்கும் நுண்ணியிரிகளை நீக்குகின்றன. கோப்பைகளில் பியர் ஊற்றப்படும் போது கோப்பையின் விளிம்பில்  பொங்கி நுரைத்து நிலைத்து நிற்கும் ’head’  என்னும் இயல்பையும் அதிகப்படுத்தும். பிரத்யேக வாசனையையும், விரும்பத்தக்க கசப்புச்சுவையையும் அளிக்கும் நெடுங்காலம் பியரை சேமித்துவைக்கவும், பியர்  கெட்டுப்போகாமலும்,  புளித்து விடாமலும் பாதுகாக்கும். இதிலேயே அதிக கசப்புடைய storng hoppy beers, மிதமான கசப்புடைய  weaker hoppy beer ஆகிய வேறுபடும் உள்ளது

உலகெங்கிலுமே சாகுபடி செய்யப்படும் இந்த ஹாப்ஸ் அவை வளரும் சூழலை, நிலப்பரப்பை பொருத்து வளரியல்புகளிலும் வேதிச்சேர்மாங்களிலும் நுண்ணிய மாற்றங்களை கொண்டிருக்கும்.

ஜெர்மனியின் Hallertau  பகுதியில்தான் உலகின் அதிகமான ஹாப்ஸ் கொடிகள் பல்லாண்டுகளாக பயிரிடப்பட்டு வந்தன.  இப்போது அதிகமாக,  அதாவது உலகின் மொத்த ஹாப்ஸ் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு  ஹாப்ஸ் சாகுபடி செய்யும் நாடு  அமெரிக்காதான்

பியரின் கசப்புச்சுவை சர்வதேச கசப்பு அலகில் IBU (international bittering units) அளவிடப்படும் வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச்சுவையை அளவிட்டு விளம்பரப்படுத்துகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு  0-1,000 ஆகும், ஆனால் மனித சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும். 20க்கும் குறைவான IBU உள்ளவைகள் மிக மிக குறைவான ஹாப்ஸ் சேர்ககப்பட்டவையென்றும், 20 லிருந்து 45 வரை IBU உள்ளவை சாதாரண கசப்பு சுவையுள்ளவையென்றும், 45க்கும் மேல் இருப்பவையே மிகத்தரமான  அதிகளவு ஹாப்ஸ் சேர்க்கப்பட்டவையென்றும் பியர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அரிதாக 70 கும் மேல் IBU அளவு இருக்கும் வகைகளும் தயாரிக்கப்படுகின்ற்ன

ஹாப்ஸ் பியருக்கென்றே உருவான தாவரமென்றே சொல்லலாம். பியரின் ஆன்மா என்றழைக்கப்படும் ஹாப்ஸ் மலர்களைக்குறித்த ஆய்வுகள் தொடர்ந்து பலவருடங்களாக நடந்தபடியே இருக்கின்றன. இம்மலர்களின் வேறு பல பயன்பாடுகளும் பரிசீலனையில் உள்ளன ஹாப்ஸ் ஆராய்ச்சியென்பது ஹாப்ஸின் இனப்பெருக்கம, வளர்ச்சி, அறுவடை மற்றும் உலர்த்தல், அவற்றின் வேதியியல் மற்றும் பியர் தரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம்  என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில்  விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களால் விரிவான சர்வதேச ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.   

பியரின் சுவை மேம்பாட்டிற்கான  சோதனை முயற்சிகள் இன்னும் தீரவில்லை. இப்போதும் ஃபின்லாந்தின் ஒரு வகை பியரை ஜுனிபர் மரக்கிளைகளின் வழியே ஊற்றி வடியச்செய்து பின்னர் அருந்துகிறார்கள். நோக்னே (Nøgne) என்னும் நார்வீஜியாவின் புதிய வகை பியரில் ஒன்றுக்கு மூன்று வகையான ஈஸ்ட் உபயோகப்படுத்தப்பட்டு ஹாப்ஸும் தேனும் சேர்க்கப்படுகின்றது

கடந்த 100 ஆண்டுகளில் உலகளாவிய பீர் உற்பத்தி ஏழு மடங்கு அதிகரித்திருக்கின்றது. தானியங்களின் இனிப்பை மட்டுமல்லாது, வாழ்வின் கசப்பையும் பியரின் கசப்பு சமன்செய்கிறதோ என்னவோ, கடந்த நான்கு தசாப்தங்களில் (1970–2010) உலகளாவிய பியர் உற்பத்தி 630 மில்லியனிலிருந்து 1846 மில்லியன் ஹெக்டாலிட்டர்களுக்கு அதிகரித்திருக்கிறது.  உலகின் அதிகம் விரும்பி அருந்தப்படும் மதுபானங்களில் முதன்மையானதாக பியர் இருப்பதற்கு காரணமாயிருக்கும் ’ஹாப்ஸ்’ தாவர உலகம் நமக்களித்திருக்கும் எண்ணற்ற பயன்களில் மற்றுமொன்று.

வெனிலா (Vanilla)

வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும்  வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod)  என்பதிலிருந்து பெறப்பட்டது 

உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா;  (Vanilla  planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் , (Vanilla tahitensis, )  மற்றும் வெனிலா பம்போனா (Vanilla pompona,), ஆகிய மூன்று முக்கியமான இனங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் வெனிலா பிளானிஃபோலியா அதிகம்பயிரிடப்படுகின்றது .இச்செடி1808.ல் அறிவியல் பெயரிடப்பட்டது.

கொடியாக வளரும் வெனிலா, ஏதேனும் ஒருமரம், அல்லது பிற ஆதாரங்களில் சதைப்பற்றுள்ள வேர்களால் பற்றிக்கொண்டு மாற்றடுக்கில் அமைந்திருக்கும் தடிமனான அடர்பச்சைஇலைகளுடன் 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.ஒற்றை மலர்க்கொத்தில் 100 வரை பெரிய அழகிய வெள்ளை மற்றும் பச்சை கலந்த நிறத்தில் மலர்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

நீண்ட சதைப்பற்றுள்ள 10-20 செமீநீளமுள்ள, நறுமணம் உள்ள காய்கள் சிறிய விதைகளைக்கொண்டிருக்கும். பூக்கள் ஆண் (மகரந்தப்பை) மற்றும்பெண் (மலர்சூலகம்) ஆகிய இரண்டு இனப்பெருக்கஉறுப்புகளையுமே கொண்டிருக்கின்றன; இருப்பினும் சுய-மகரந்த சேர்க்கையைத் தவிர்க்க ஒருசவ்வு இந்த இரண்டு உறுப்புகளையும் பிரித்து வைக்கிறது. வெனிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத்தொடங்கும். மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் காய்கள் உருவாகி அவைபச்சை நிறத்திலிருந்து இளமஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில்அறுவடைசெய்யப்படும்.

வெனிலாபயிர்களில் மெலிபோன் தேனியால் நடைபெறுவதை தவிர சுயமகரந்த சேர்க்கை நடைபெற 1% வாய்ப்பே உள்ளதால் 1836 ஆம்ஆண்டு, தாவரவியலாளரான சார்லஸ்பிரான்கஸ் மோரன் கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்வதை பரிசோதிக்கத்தொடங்கினார்.   1841 ஆம் ஆண்டு, கையால் மகரந்தச்சேர்க்கை செய்யும் எளிய முறைஒன்று  12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்ற அடிமையால் உருவாக்கப்பட்டது.

ஒரு ஆரோக்கியமான கொடி வருடத்திற்கு 50 முதல் 100 காய்கள் வரை உற்பத்திசெய்கிறது; அறுவடைக்கு பிறகு கொடி மீண்டும் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு  உற்பத்தித்திறன்  உள்ளதாக இருக்கிறது.

இதனுடைய வர்த்தகமதிப்பு காய்களின் நீளத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றது.  15 செமீ நீளத்திற்கும் அதிகமாக இருந்தால் இது முதல்தரவகையிலும். 10 முதல் 15 செமீ நீளமாக இருந்தால்   இரண்டாவது  தரமாகவும் 10 செமீக்கும் குறைவானவை மூன்றாவது தரத்தின் கீழும் வருகின்றன.

சாகுபடி செய்யப்பட்ட பச்சைக்காய்கள் அப்படியே  விற்கப்படலாம் அல்லது சிறந்த சந்தைவிலையை பெறுவதற்கு   உலரவைக்கப்படலாம். வெனிலா பச்சைக்காய்களின் விலை கிலோ ரூ 3500. இதுவே பதப்படுத்தப்பட்டால், கிலோ ரூ 22,500.

வெனிலாவை உலரவைப்பதற்கு சந்தையில் நான்கு அடிப்படை நிலைகள் இருக்கின்றன: அழித்தல், வியர்ப்பூட்டுதல், மெதுவாக-உலரவைத்தல் மற்றும்  தகுந்தமுறையில் பாதுகாத்தல். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கள் சேமிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பாரஃபின் உறையில் கட்டாக  சுற்றி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உலரவைக்கப்பட்ட வெனிலாகாய்கள் சராசரியாக 2.5%  வென்னிலினைக் கொண்டிருக்கிறது.

வெனிலாக்காய்கள்..பிரத்யேகவாசனையுள்ள மூலப்பொருள்கள் நிறைந்தது. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் (4-ஹைட்ராக்ஸி-3-மெத்தாக்ஸிபென்ஸல்டெஹைட்) இதன் வாசனைப்பண்பு மற்றும் நறுமணத்திற்கு காரணமாகிறது. வென்னிலின் முதல்முறையாக 1858 ஆம் ஆண்டு கோப்லே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. 

மற்றொரு சிறிய துணைப்பொருளான பைபரானல் (ஹெலியோடிராபின்).உள்ளிட்ட   பலஉட்பொருட்கள் வெனிலாவின் வாசனைக்கு காரணமாகின்றன.

உலகச்சந்தையில் குங்குமப்பூவிற்கு அடுத்த இடத்திலிருக்கும் வெனிலா, உணவுவகைகளிலும், அழகுசாதன தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெனிலாவின் உலகளாவிய உற்பத்தியில் பாதியளவிற்கு. மடகாஸ்கரிலிருந்தே வருகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  

வெனிலாவின் அத்தியாவசிய எண்ணைகள் மற்றும் வென்னிலின் ஆகியவை தற்போது நறுமணசிகிச்சையிலும் (Aroma therapy) பயன்படுத்தப்படுகின்றன.

நள்ளிருள் நாறி

நள்ளிருள் நாறி / பிரம்ம கமலம் Epiphyllum oxypetalum

பிரம்மகமலம் நள்ளிருள் நாறி, இரவு ராணி, நிஷாகந்தி, குலேபகாவலி மலர், நள்ளிருள் ஒளிரி, அனந்த சயன மலர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அரிய அழகு மலர்ச்செடி கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. (Cactaceae)

இதற்கு Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman’s Pipe. King of the Himalayan Flowers,  Queen of the Night,  Orchid cactus,  என்னும் ஆங்கிலப் பொதுபெயர்களும் உள்ளன.  இதன் அறிவியல் பெயரான Epiphyllum oxypetalum  என்பதில்  epi, phylum என்றால் இலையில் மேற்பரப்பிலிருந்து என்றும்  oxus என்றால் கூரிய,  petalum என்றால் இதழ்கள் என்றும் பொருள், இலைகளின் மேற்பரப்பிலிருந்து உண்டாகும் கூரிய நுனிகளையுடைய  இதழ்களுடனான மலர்களைக் கொடுக்கும் தாவரம் என்று பொருள்

உண்மையில் இவை இலைகளிலிருந்து மலர்களை தோற்றுவிப்பதில்லை. கள்ளி இனமாதலால் தண்டுகளே தட்டையாக இலைகளைப்போல இருக்கும். இந்த இலைத்தண்டிலிருந்தே மலர்கள் உருவாகும். வழவழப்பான, கொடியைப்போல இருக்கும் இவற்றை தாங்கும் இளம் காம்புகள் சிவப்புநிற செதில் போன்ற அமைப்புக்களால் சூழப்பட்டிருக்கும் எனவே பார்ப்பதற்கு தொப்புள் கொடியைப் போலவே இருக்கும். எனவேதான் இது பிரம்மகமலம் என்று இந்தியாவின் பல மொழிகளில் அழைக்கப்படுகின்றது, பிற பூக்களைப்போல, பகலில் பூத்து, இரவில் உதிர்ந்து விடாமல். பிரம்ம கமலம், இரவில் பூத்து, பகலில் உதிரும். 

வெண்ணிறத்தில் மயக்கும் நறுமணத்துடன் பெருமலர்கள் பின்னிரவில் மலரும்.  ஒரே செடியில் ஒரே சமயத்தில்  40 -100’ க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களைப்போலல்லாது, இவற்றின்   இலைகளைப் போலிருக்கும் தண்டுகளை நறுக்கி நட்டு வைத்தாலே புதியசெடி முளைத்துவிடும்.  இந்த மலர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இவை  இரவில் மலர்வதனால் நிலவொளியில் இவற்றை   வௌவால்களும், Humming bird moth எனப் பெயர் கொண்ட பெரும் அந்திப்பூச்சிகளும்  (moths) தான் மகரந்தச்சேர்க்கை செய்யும். இரவின் நிலவு, நட்சத்திரம் ஆகியவற்றின் மிகக்குறைந்த ஒளியிலும் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு உயிரினங்களுக்கு இவற்றின் இருப்பு தெரியவேண்டுமென்றே இவை வெண்ணிறத்திலும். நல்ல வாசனையுடனும் இருக்கின்றன.  இப்படி இரவில் மலர்ந்து இரவாடிகள் எனப்படும் (nocturnals ) இரவில் மட்டும் செயலாற்றும் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்யpபடும் மலர்கள் அனைத்திற்கும் பொதுவாக நிலவு மலர்களென்று பெயர்.( moon light flowers ) இந்தப் பூவின் நறுமணத்திற்கு காரணம் இதிலிருக்கும் , Benzyl Salicylate என்னும் வேதிப் பொருள்.

2லிருந்து 3 மீட்டர் உயரம் வரையே இவை வளரும் அதிகம் வளர்கையில் இலைத்தண்டுகளை வெட்டி எடுத்து வேறு புதிய இடங்களில் நட்டு வளர்க்கலாம்.. இச்செடி வளர்ந்து 3 வருடங்களில் 12லிருந்து 17 செமீ அளவிலிருக்கும், மெழுகுபோன்ற வழவழப்பான இதழ்கள் கொண்ட மலர்களை அளிக்கத்துவங்கும்

 சமூக ஊடகங்களில் சொல்லப்படும்  //இது  இமய மலைகளில் மட்டும் வளரும். பத்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வளரும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள்// இமயத்தில் மட்டுமல்ல , எங்கும் வளரும் இயல்புடையது இச்செடி ,

  தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ காடுகளைக் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. நல்ல வளமான மண்ணில் அதிகம் சூரியஒளி படாதவாறு அருகில் இவை பற்றிப்படர கொழுகொம்போ அல்லது மரமோ இருக்குமிடங்களில் வளர்க்கலாம் மரங்களினடியில் வளருகையில்  விரைவாக அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறி வளரும். மிக அதிகமாக நீர் விடத் தேவையில்லை

இரவின் மலர் என பொருள்படும் இந்த நிஷாகந்தி மலையாள இலக்கியங்களில் சிறப்பான இடம்பெற்றிருக்கின்றது. கேரளத்தில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு    ‘நிஷாகந்தி விழா’ என்றே பெயர்.

பின்னிரவில் மலர்ந்து நல்ல மணம் வீசும் இம்மலர் பழந்தமிழ்ப் பாடல்களில் நள்ளிருள் நாறி என்று அழகிய பெயரில் குறிப்பிடபட்டுள்ளது.  இருவாட்சி மற்றும் முல்லையும் இதே பெயரில் சில இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனினும் இவையிரண்டும் பகலில் மலர்ந்து மாலை மணம் வீசுபவை. பிரம்மகமலமே இரவில் மலர்ந்து மணம்பரப்பும் எனவே இதற்குத்தான் இப்பெயர் மிகபொருத்தமாந்தாக இருக்கும்.


 Epiphyllum  பேரினத்தில் 15 சிற்றினங்கள் இருப்பினும் oxypetalum என்னும் சிற்றினமே உலகெங்கிலும் அதிகம் வளர்ககப்படுகின்றது. இலங்கையில் இதன் இரண்டு சிற்றினங்கள் வளர்கின்றன பிரமம்கமலத்தை விட மெல்லிய மலரிதழ்களை கொண்டிருக்கும்  Epiphyllum hookeri யும் இங்கு அதிகம் காணப்படுகின்றது

பிரம்மகமல மலர்கள் சில உடல் நோய்களுக்கு சிகிச்சைக்காக  உண்ணப்படுகின்றன. ஆனால் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மலராதலால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவற்றை உண்ணுதல் கூடாது

 வியட்நாமில் இம்மலரிதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருந்தை பாலுணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் இம்மலர் பெண் மலட்டுத்தன்மையை நீக்க பழங்குடியினரால் உண்ணப்படுகின்றது. இதயநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ரத்தக் கொழுப்பை குறைக்கவும் இம்மலர் பயன்படுகின்றது

  மிக மிக அரிதாகவே இச்செடியில் சிறு விதைகளுடனிருக்கும் இளஞ்சிவப்பு கனிகள் உருவாகும். கலப்பின செடிகளில் நிஷாகந்தி மலர்கள் வெள்ளயல்லாத ஆரஞ்சு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு  நிறங்களிலும்   இருக்கின்றன.

பல கலாச்சாரங்களில் இம்மலரை காண்பது நல்ல சகுனமென்றும், மலரைக் காண்கையில் நினைத்தது நடக்குமென்றும், இந்தச்செடி மலர்வது,  நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் கருதப்படுகின்றது சில தென்தமிழக கிராமங்களில் இச்செடியில் மலர் விரியும் இரவில் அதற்கென பூசைகள் கூட செய்யப்படுவதுண்டு.  சிலர் தங்கள் வீடுகளில் இம்மலர் பின்னிரவில் மலருகையில் நண்பர்களுக்கு விருந்துவைத்து மகிழ்வதும் உண்டு.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக  இம்மலரை கருதி இதை பெத்லகேமின் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.

இலங்கை இந்தியா சீனா ஜப்பான் ஆகிய பலநாடுகளின் தொன்மங்களில் இம்மலர் பலவிதங்களில் இறைத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இலங்கையில் புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகுக்கு வரும் மலரின் வடிவமாக கருதப்படும் இது சொர்க்க மலர் என்று அழைக்கப்படுகிறது.   

சீனாவில் இம்மலர்களை பற்றிய குறிப்புக்கள் 1645ல் எழுதப்பட்ட நூல்களில் உள்ளது. சீனாவில் இது தோன்றியதும் மறைந்துவிடும் புகழின் நிலையாமைக்கு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் இம்மலரை  கெக்கா பிஜின் அதாவது நிலவில் காணும் அழகு என்று அழைக்கிறார்கள்.  (Gekka Bijin)

 பொதுவாக இதை தாய் மகளுக்கும், நண்பர்கள் பிற  நண்பர்களுக்கும் பரிசாக அளித்து வளர்ப்பதென்றும் ஒரு வழக்கம் இருக்கிறது இச்செடிகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது யாரிடமேனும் பரிசாக வாங்கவேண்டும் என்னும் நம்பிக்கையும் உலகின் பலநாடுகளில் பொதுவாக இருக்கிறது.

உலகின் மிக விலையுயர்ந்த மலர்களில் இதுவும் ஒன்று சந்தைகளில் விற்கப்படாத மலரும் கூட.

சோற்றுக்கற்றாழை-Aloe vera

ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera)  உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.

 இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.

உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில்  பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.

நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும்

எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில்  கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே  சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும்  களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன்  பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை  ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.

புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது.  சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான  “papyrus of Eber”  ல்  சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig)  பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.

ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.

இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில்  2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட  50  மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.

1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள்.  இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe  என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’  என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.

பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு  பயன்களை  இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது

பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும்  நிறைந்துள்ளது

 உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது.  3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள்  செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

 இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

சருமப்பாதுகாப்பு

புற்றுநோயை தடுக்கும்

மலமிளக்கி

கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்

உடலை குளிர்விக்கும்

வயிற்று உபாதைகளை குணமாக்கும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

புண்களை ஆற்றும்

நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்

 நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்

இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.

நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்

  மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார்  100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑