தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம்.
ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான பின்னணியையும் பொருளையும் கொண்டிருக்கும். தாவர வகைப்பாட்டியலின் தந்தையென கருதப்படும் லினேயஸினால் 17ஆம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட இப்பெயர்கள் இன்று வரை எந்த குழப்பமும் இல்லாமல் உலகெங்கிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றது. அதிலொன்றுதான் சங்குபுஷ்பம் எனப்படும் Clitoria ternatea. பெயரை மட்டுமல்லாது இச்செடியை குறித்து அறிந்து கொள்ள வேறு பல முக்கிய விஷயங்களும் உள்ளன.
சங்கு போன்ற தோற்றத்தில், அடர்நீல நிறத்தில் இருக்கும் இம்மலர் பூஜைக்குகந்ததாகவும், தாவர மருத்துவத்தில் மிக முக்கியமானதொன்றாகவும் இருக்கின்றது.
குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதம்பரநாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது.
பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும், கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
”மணி கண்டு அன்ன மா நிற கருவிளை ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய” – நற் 221/1,2.
(பகன்றையும் கருவிளையும் நிறத்தால் மாறுபட்டவை) மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68) கண் என கருவிளை மலர – ஐங் 464/1 நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294
அழற்படுகாதையில் இளங்கோவடிகள் நால்வகைச்சாதியினரில் உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளனை உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனக்குறிப்பிடுகிறார். திருத்தில்லையில் பட்டினத்தாரும் ’’காமப் பாழி, கருவிளை கழனி தூமைக் கடவழி’’ என்கிறார்.
இலக்கியங்களில் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் தலைவியும், தோழியும் குவித்து விளையாடி தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் இதுவும் ஒன்று.
ஆசியாவில் தோன்றி, தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும் காணப்படுகின்ற இத்தாவரத்திற்கு ‘’காக்கணம், உயவை, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சங்குப்பூ ,சங்கு புஷ்பம், கன்னிக் கொடி, இரிகன்னு, கருவிளை, காக்கரட்டான், சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதை, ஸ்வேதா’’ எனவும் பெயர்களுண்டு. கிரிகணிக்கி, கிர்குணா என்று கன்னடத்திலும், ஷேங்கபுஷ்ப என்று மராத்தி மற்றும் கொங்கணியிலும், கோகர்ணிகா, அர்த்ரகர்ணி என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகின்ற இக்கொடி அவரை, துவரை, உளுந்து போன்ற பயறு வகைகளின் குடும்பமாகிய ஃபேபேசியே’வை சேர்ந்தது. இலங்கையில் இது நீல காக்கணை.
மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் அபராஜிதாவும், ஆண்டாள் ’கார்க்கோடப் பூ” என்பதுவும் இதே மலரைத்தான். ”கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார் இதை அரவிந்த அன்னை. நீலக்குருவியொன்றை ’’கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம்’’ என்கிறார் ஜெயமோகன் வெண்முரசின் நீலத்தில்
இதன் ஆங்கிலப்பெயர்கள்; Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea, Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea.
சிவாலயங்களில் காலை, மாலை, பகல் பூஜைகளுக்கென்று தனித்தனியே மலர்களை குறிப்பிடும் ஆகமம் சங்குபுஷ்பத்தை பகல்நேர பூஜைக்கு உகந்ததாக குறிப்பிடுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவனுக்கு செய்யப்படும் விசேஷபூஜையில் மிக முக்கியமானதாக கருதப்படுவதும் வெண்சங்கு புஷ்பமே. அதற்குப்பிற்குதான் வில்வமும், கொன்றையும், மகிழமும், மல்லிகையும்.
கோயம்புத்தூர், கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமேஸ்வரர். ஆலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் இறைவனுக்கு சங்கீஸ்வரன் என்றே பெயர். இவரை வழிபட்ட விஜயநகரப் பேரரசுக்கு சங்கவம்சம் என்ற பெயரும் உண்டு.
பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, நோயை, நோய் தீர்க்கும் வழிகளை, நோய் அணுகாதிருக்கும் வழிமுறைகளை, உணவை, மரணத்தை, இயற்கையை, மண்ணை, என வாழ்க்கையின் அனேக துறைகளை உள்ளடக்கிய நூலான சரக மகரிஷி தொகுத்தளித்த சரகசம்ஹிதையில், கற்கும் திறன், பகுத்தறிவு, ஞாபகத்திறன் ஆகியவற்றை அதிகரிக்க உதவும் நான்கு மூலிகைகளாக வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி, சங்குபுஷ்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது…
சங்குப்பூச்செடி, காடுகள், தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக காற்றில் பரவிவரும் சிறு விதைகளால் முளைத்து வளர்கின்றது. ஈரப்பதமான மண்ணில் செழித்து வளரும் ஏறு கொடி வகையை (Climber) சார்ந்த இவை, மாங்களையோ கொழுகொம்புகளையோ பற்றிக்கொண்டும் பற்றுக் கொம்பில்லாதபோது தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவியும் வளரும். இச்செடி இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் மலர்களையும் உடையது. 4×3 செமீ அளவில், நன்றாக விரிந்து மலர்ந்திருக்கையில், சங்கைப்போல தோன்றும் இதன் மலர்கள் வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட இருக்கின்றன. நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட செடிகளும் அரிதாக வளர்வதுண்டு. சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10 தட்டையான விதைகள் இருக்கும். ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள் இக்குடும்பத்தின் பிற தாவரங்களைப்போலவே வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.
வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளிலுமே இலை, வேர், மலர்கள், விதை ஆகிய அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுபவை.
ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் செடியான இதன் மலர் உள்ளிட்ட அனைத்து பாகங்களில் இருக்கும் பல வேதிப்பொருட்களில் ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides ஆகியவை மிக முக்கியமானவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும் anthocyanins வகையைச்சேர்ந்த delphinidin. என்னும் நிறமியால் உணடானது.
தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும் Clitoria ternatea தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora, செருவிளை (கரிசண்ணி, வெள்ளைக்காக்கணம்) எனவும் அழைக்கப்படுகின்றன…
இதன் (Genus/Generic name) பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பின் பகுதியான clitoris என்பதை குறிக்கின்றது.
இச்செடி முதன் முதலாக 1678 ல் Johann Philipp Breyne எனும் ஜெர்மானிய தாவரவியலாளரால் இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’வில் கண்டறியப்பட்டபோது Flos clitoridis ternatensibus என்று பெயரிடப்பட்டது.
பிறகு David krieg என்பவர் 1698’ல் நீல நண்டுகளுக்கு பெயர்பெற்ற மேரிலாண்டில் கிடைத்த சங்கு புஷ்ப செடிகளை, Clitoria mariana என்னும் பெயரில் குறிப்பிட்டு உலர்தாவரமாக்கினார். இந்த ஹெர்பேரியம் இன்றும் Edinburg ,Royal botanical garden அருங்காட்சியகத்தில் ல் பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கின்றது.
ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக பெண்ணுறுப்பைக்குறிக்கும் பெயரை ஒரு தாவரத்திற்கு வைத்ததற்கு, தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள். ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் இன்று வரையிலுமே நிலைத்திருக்கிறது. தாவரங்களுக்கு இருபெயரிடும் binomial முறையைக்கொண்டு வந்தபோது லினேயஸ் Genus எனப்படும் பேரினத்துக்கு அதே clitoria வையும் Species எனப்படும் சிற்றினத்திற்கு ternatea என்பதையுமே வைத்தார்.
பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இம்மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும். வேகமாக வளரும் இயல்புடைய, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்.
கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது. அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத இப்பகுதியை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant) இன்னும் இருக்கின்றது.
மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்த பத்து வாயுக்களும் நம் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன, இவையே நம் உடலை பாதுகாப்பவையும் கூட. இவற்றில் பிராணன், ஆபானன், வியானன், உதாதனன், சமானன் ஆகியவை பஞ்சபிராணன் எனப்படும். உடம்பில் நடுப்பகுதியில் உள்ள, உணவை செரிக்க உதவும் சமானன் வாயுவின் பணியில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யக்கூடிய ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.
சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனஅமைதியின்மை, உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கும் சங்கு புஷ்பக் கொடி நிவாரணமளிக்கின்றது. ஆயுர்வேதத்தில் மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ரத்தக்குழாய் அடைப்புக்கும், யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள், மலர்ச்சாறு ஆகியவை சிறந்த மருந்தாகும். சங்கு புஷ்பக் கொடியின் விதை மற்றும் வேர்ப் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம். சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும். சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தையும் இச்சாறு குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இயற்கை மருத்துவமுறை இது.
சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் சேர்த்து பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களையும் விதைகளையும் கூட உணவில் சேர்த்துக்கொள்லாம்.
பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும் சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறதென்பதை அறிகையில் மனித உடல் உறுப்புக்களின் வடிவிலிருக்கும் தாவர பாகங்கள் அதே உடலுறுப்பின் குறைகளை, நோய்களை தீர்க்குமென்பதைச்சொல்லும் doctrines of signature என்பதின் முக்கியத்துவத்தை நினைக்கவேண்டியிருக்கிறது.
மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிப்பொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று.
மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை அமைதிப்படுத்துகின்றது. வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.
மலர்ச்சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும். செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகள் அதிகமென்பதால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில் அரிசிச்சோற்றை நீலநிறமாக்க சங்குப்பூச்சாறு பயன்படுத்தப்படுகின்றது.
மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும் உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில் dok anchan எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும் நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தின் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பும் சங்குப்பூவைக்கொண்டு செய்யப்படுகிறது.
பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். பலநாடுகளில் இம்மலரின் சாறை ஜின் போன்ற பானங்களிலும் சேர்த்து, நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிப்போன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)
இத்தனை அழகிய, எளிதில் வளரக்கூடிய நலம்பயக்கும், நோய்தீர்க்கும் பக்கவிளைவுகளற்ற சங்குப்பூச்செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யப்படுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் அதிகம் விற்பனையில் இருக்கின்றன.
தென்னிந்திய கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களின் சிறு வயது நினைவுகளில் மருதாணி வைத்துக்கொண்டதும் நிச்சயம் பசுமையாக இருக்கும். மருதாணி்ச் சிவப்பில் பளபளக்கும் விரல் நுனிகளும் இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொண்டு தூங்காமல் கழித்த இரவுகள், யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்னும் ஒப்பீடுகள், கைகளைக் கழுவியவுடன் சாப்பிடும் உணவில் வீசும் மருதாணி வாசமும் இந்த தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்காதவைகள். இன்றும் தென்னிந்திய கிராமங்களில் கை விரல்களுக்கு மருதாணி வைத்துக்கொள்ளும் பழக்கம் பரவலாக புழக்கத்தில்தான் இருக்கிறது. நகர்ப்புறங்களில்தான் ரசாயன ஹென்னா பசைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
மருதாணிப் பசையில் உடலில் சித்திரங்கள் வரையும் கலை மிக மிகப் பழமையானது. மருதாணி எப்போதிலிருந்து அழகுப் பொருளாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது என்றாலும் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழகு சாதனப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் மருதாணி இருந்திருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
மருதாணி பற்றிய தொல்லியல் சான்றுகள் எகிப்திலிருந்து கிடைத்திருக்கின்றன. மம்மிகளாக்கப்படும் முன்பு இறந்த உடல்களின் கை மற்றும் கால்விரல் நகங்களில் மருதாணிப் பசை பூசும் வழக்கம் எகிப்தில் இருந்திருக்கிறது. கிளியோபாட்ரா மற்றும் இரண்டாம் ராம்செஸ், ஆகியோரின் மம்மி ஆக்கப்பட்ட உடல்களில் மருதாணி சாயத்தில் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலை சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணி சித்திரங்களை வரைந்து கொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது மிக பழமையான இந்திய கடவுள்களின் சித்திரங்களிலும் மருதாணி வடிவமிட்ட கைவிரல்களை பார்க்க முடியும்..
இறைத்தூதர் நபி அவர்கள் இஸ்லாமிய ஆண்கள் தங்கள் தாடிகளை மருதாணியால் சாயமேற்றிக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமியப் பெண்களும் அவரது வழிகாட்டுதலின் பேரில் கை விரல்களையும் உள்ளங்கைகளையும் மருதாணிச் சித்திரங்களாலும் வடிவங்களாலும் சாயமேற்றி அழகுபடுத்திக் கொள்ளுகிறார்கள்.
ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வாழும் ’பெர்பெர்’ பழங்குடியினத்தவர்களில் மருதாணி வைத்துக்கொள்வது மிக முக்கிய சடங்கு. பருவமடைந்த பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது அவள் நல்ல குழந்தைகளை பெற்றுத்தர வழிவகுக்கும் என்றும் பெண்களை தீய சக்திகள் நெருங்காமலிருக்கவும் மருதாணி உதவும் என்று நம்புகிறார்கள். மருதாணி விழுதை அவர்கள் சியலா ( Siyala ) என்கிறார்கள்.
இந்தியாவிற்கு மருதாணி முகலாயர்களால் 12ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், மருதாணியை உடலில் பூசிக்கொள்ளும் கலையை ஷாஜகானின் காதல் மனைவி மும்தாஜ் அறிமுகப்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. முகலாய அரச குடும்பத்து பெண்கள் வடிவங்கள், சித்திரங்களை வரைந்துகொள்ளாமல் கைகளையும் பாதங்களையும் மருதாணி சாற்றில் முழுவதும் நனைத்து சிவப்பாக்கி கொள்ளும் வழக்கமே இருந்திருக்கிறது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட அழகிய இயற்கை வடிவங்களை வரைந்து கொள்வது 1940க்குப் பிறகு வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
மருதாணியே உலகின் மிகப் பழமையான இயற்கை ஒப்பனை பொருள் என்பதில் சந்தேகமில்லை. உலகின் பல கலாச்சாரங்களில் கொண்டாட்டங்கள்,விழாக்கள் மற்றும் குடும்ப மற்றும் பொது நிகழ்வுகளின் போது அழகு படுத்திக் கொள்ளும் பொருட்டு மருதாணி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மருதாணி / மருதோன்றி / மயிலாஞ்சி என அழைக்கப்படும் செடியின் தாவரவியல் பெயர் Lawsonia inermis. இது லைத்திரேசியே (Lythraceae) குடும்பத்தைச் சேர்ந்தது. வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கும் இத்தாவரம் பலுசிஸ்தானில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்தே இது உலகெங்கிலும் பரவியிருக்க வேண்டும்
’மெஹந்திக’ என்னும் மருதாணி செடியை குறிக்கும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே ’மெஹந்தி‘ என்னும் சொல் வந்தது. மருதாணி அலங்காரத்திலும் அதில் வரையப்படும் வடிவங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. பிரதானமாக அராபிய, வடிவம் இந்திய வடிவம் மற்றும் பாகிஸ்தானிய வடிவங்கள் உள்ளன. மரபான பல மருதாணி சித்திரங்கள் செல்வம், வளமை, அதிர்ஷ்டம் மற்றும் மக்கட்பேறுக்கான ரகசிய குறியீட்டு வடிவங்களாகவும் இருக்கின்றன.
பல நாடுகளில் இது வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. Lawsonia inermis என்னும் இத் தாவரத்தின் அறிவியல் பெயரின் வேரை தேடினால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தாவர வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படும் லின்னேயஸின் (Linnaeus) நண்பரும் லின்னேயஸின் நூல்களை பிரசுரம் செய்வதில் மிக உதவியாக இருந்தவருமாகிய லாசோன் (lawson) என்பவரை கவுரவிக்கும் விதமாக இதன் பேரினத்துக்கு இப்பெயரை லின்னேயஸ் இட்டிருக்கிறார். inermis என்னும் சிற்றினப் பெயருக்கு ’கூரிய முட்களற்ற’ என்று பொருள். தமிழில் இச்செடி அலவணம், ஐவணம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மருதாணி செடி கிளைகள் நிறைந்த குறுமரம் ஆகவோ அடர்ந்த புதராகவோ வளரும் இயல்புடையது. ஒரு சில வகைகளில் மட்டுமே முற்றிய தண்டுகளில் முட்கள் காணப்படும். உறுதியான தண்டுகளும் எதிரடுக்கில் மிகக்குறுகிய இலை காம்புகளுடன் சிறிய நீள் முட்டை வடிவ இலைகள் இருக்கும். வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களில் கொத்து கொத்தாக நறுமணமுள்ள மலர்கள் காணப்படும். சிறிய உருண்டை வடிவ, நான்கு பகுதிகளாக இருக்கக்கூடிய ஏராளமான உலர்விதைகளுடன் கனிகள் இருக்கும். விதை உறை மிக கடினமானது.
லாசானியா பேரினத்தில் இருக்கும் ஒற்றைச் சிற்றினம் இனர்மிஸ் மட்டுமே ஆகும் எனவே இது ’monotypic genus’ எனப்படுகின்றது. இச்செடி நல்ல வெப்பமான காலநிலையில் மட்டும் செழித்து வளரும். 11 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் இச்செடி வளர்ச்சி குறைந்து இறந்துவிடும்.
.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கைகளையும் கால்களையும் மருதாணி விழுதால் அழகுபடுத்திக் கொள்வதும், மணப்பெண்ணின் உடல் முழுக்க மருதாணி சித்திரங்கள் வரைந்து விடுவதும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மொராக்கோவில் கர்ப்பிணிகள் மருதாணி இட்டுக் கொள்வதால் தங்களை தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் இன்னும் பல சமுதாயங்களில் மருதாணி இட்டுக் கொள்வது மங்கலம் என்றும் நம்பப்படுகிறது. இன்னும் சில கலாச்சாரங்களில் மணமகன் பெயரை மணமகளின் உடலில் மறைவாக மருதாணியால் எழுதிவிட்டு மணமகன் அதை அவர்கள் சந்திக்கும் முதல் இரவில் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் வழக்கம் இருக்கிறது.
பாகிஸ்தானில் மருதாணி விருந்து என்பது மணமகள் குடும்பத்தினரால் கொண்டாடப்படும் முன் திருமண நிகழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும் பங்களாதேஷில் சம்பிரதாயபூர்வமாக மருதாணி இட்டுக் கொள்வது இருநிகழ்வுகளாக மணமகன் மற்றும் மணமகள் இருவரின் தரப்பிலும் மிக விரிவாக நடத்தப்படும். பல நாடுகளில் மணமகள் கைவிரல்களில் மருதாணி சாயம் முற்றிலும் அழிந்து போகும் வரையில் அவள் புகுந்த வீட்டு வேலை செய்ய வேண்டியதில்லை என்னும் பழக்கம் இருக்கிறது. எத்தனை அதிகமாக சிவக்கின்றதோ.அத்தனைக்கு தம்பதியினர் அன்புடன் இருப்பார்கள் என்னும் நம்பிக்கையும் பல சமூகங்களில் இருக்கிறது. இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் எனும் இடத்தில் மருதாணி நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறும்.
இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்களில் மருதாணி மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் ’ரொங்கலி பி’கு என்னும் நிகழ்வில் மருதாணி மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
வட இந்தியாவில் கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க,கார்த்திகை மாத முழு நிலவுக்கு பின்னரான நான்காம் நாளில் மனைவியர் நோன்பிருக்கும் ’கர்வா செளத்’ (Karwa Chauth) என்னும் பண்டிகையின் போது அனைத்து பெண்களும் விரல்களில் மருதாணி இட்டுக் கொள்ளும் சடங்கு முக்கியமானதாக இருக்கும்
மருதாணி இலைகளில் 2-hydroxy 1.4 naphthoquinone (Lawson) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது இதுவே இலைச்சாற்றின் அடர்செம்மண் நிறத்துக்கு காரணமாகும். நல்ல வெப்பமான இடங்களில் வளரும் மருதாணி செடிகளின் இலைகளின் அதிகமாக காணப்படும் இந்த வேதிப்பொருள் சருமத்தை இளம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து கருஞ்சிவப்பு நிறம் வரை சாயமேற்றும். பித்த உடல் கொண்டவர்களின் சருமம் கருஞ்சிவப்பிலும் பிறருக்கு செம்மண் நிறத்திலும் மருதாணி சாயமுண்டாக்கும். இவ் வேதிப்பொருள் இலை நரம்பிலும் தளிரிலைகளிலும் அதிகம் காணப்படும்.
இலைகளை அரைக்கையில் இந்த வேதிப்பொருள் கசிந்து வெளியேறி பின்னர் சருமத்திலும் நகங்களிலும் உள்ள புரதங்களுடன் இணைந்து சிவப்பு சாய மூட்டுகிறது. உடலின் பிற பாகங்களை விட உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளின் தடித்த சருமத்தில் மருதாணி சாறு மிக நன்றாக சாயமூட்டி பல நாட்கள் மருதாணிச்சிவப்பை அவ்விடங்களில் தக்கவைக்கிறது.
மருதாணி விழுதில், எலுமிச்சை சாறு, கிராம்பு சாறு, புளி, சர்க்கரைக் கரைசல், காப்பி, டீ ஆகியவற்றை சிறிதளவு சேர்க்கையில் சாயத்தை இன்னும் அடர்த்தியாக்கும். மருதாணி இலைகளை அரைத்த விழுதை சருமத்தில் பூசிய பின்னர் நீராவியில் காட்டுவதாலும் சாயம் அடர்த்தியாகும்.
நான்கிலிலிருந்து ஆறு மணிநேரம் சருமத்தில் வைத்திருந்த பின்னர் நீரில் கழுவுகையில் ஆக்ஸிஜனேற்றம் (oxidation) ஏற்பட்டு சாயத்தின் அடர்த்தி குறையும் என்பதால் உலர்ந்த மருதாணியைத் தாவர எண்ணெயைக்கொண்டு அகற்றலாம். காய்ந்த மருதாணி விழுதை வெதுவெதுப்பான உப்பு நீரிலோ, சர்க்கரை கலக்கபட்ட தேங்காய் எண்ணையாலோ அல்லது உப்பு சேர்க்க்கப்பட்ட ஆலிவ் எண்ணெயாலோ அகற்றுகையில் சருமம் உலர்வது தடுக்கபட்டுச் சிவப்பு நிறமும் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும்.
மருதாணியை அரைத்துப் பூசுகையில் சாயம் சருமத்தின் ஒவ்வொரு அடுக்காக ஊடுருவிச்சென்று சாயமேற்றுகின்றது. சருமத்தின் மேலடுக்கு அடர்ந்த நிறத்திலும் கீழே செல்லச் செல்ல நிறம் குறைந்து கொண்டே வரும். ஒரு மாதம் வரைக்கும் இருக்கும் இந்த சாயம் பின்னர் மெல்ல மெல்ல புதிய சரும அடுக்குகள் உருவாகும் போது மங்கிக்கொண்டே வரும்.
மருதாணி தலைமுடியையும் நிறமூட்டுகின்றது. தலைக்கு மருதாணி சாயமேற்றிக்கொள்கையில் அது முடி வளர்ச்சிக்கு உதவி தலையில் பேன் மற்றும் பொடுகு களையும் அழித்துவிடுகிறது. தலைமுடிக்கு உபயோகப்படுத்தும் போது அரைத்த மருதாணி விழுதை 8 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும் விழுது தலைமுடியில் 20 நிமிடங்கள் இருந்தால் போதும்.
பண்டிகை காலங்களிலும்,, திருமண விழாக்களிலும் அழகுபடுத்தி கொள்வதற்காக மருதாணி சாறு அதிகம் பெண்களாலும் குறைந்த சதவீதத்தில் ஆண்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சில நாடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்கும் மருதாணியிட்டு அழகு பார்க்கிறார்கள் கால்நடைகளின் உடலில் வரும் சிறு சிறு காயங்களுக்கும், கொப்புளங்களுக்கும் இந்திய கிராமங்களில் மருந்தாக மருதாணி அரைத்து பூசும் வழக்கம் இருக்கிறது..
கோடையில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்து தலையில் பூசி குளிக்கையில் உடல் வெப்பம் பெருமளவில் குறையும் கைகால்களில் மருதாணி இட்டுக்கொள்வது உடலை குளிர்விக்கும். மருதாணி மலர்களை ஒரு துணியில் கட்டி தலையணைக்குள் வைத்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும். மருதாணி இட்டுக் கொள்வதால் மன அழுத்தம் தலைவலி காய்ச்சல் சரும வியாதிகள் ஆகியவை நீங்கும்
மருதாணி உடலை குளிர்விப்பதால் பெண்கள் இதை வைத்துக் கொள்ளுகையில் அவர்களின் மாதவிலக்கை ஒத்திப்போடலாம். இதன் பொருட்டே பல சமூகங்களில் முக்கிய மங்கல விழாக்களின் போது குடும்பத்தின் அனைத்து பெண்களும் மருதாணி வைத்து தங்களை அழகு படுத்திக் கொள்ளும் வழக்கம் வந்தது. மருதாணியின் மணம் பாலுணர்வை தூண்டும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஜந்தா குகை ஓவியங்களில் மருதாணிச் சாற்றின் வண்ணங்களை இன்றும் காணலாம். மருதாணி சாற்றில் வலம்புரி ஸ்வஸ்திகம் வரைந்து கொள்வது வட இந்திய வியாபாரிகளிடம் பலகாலமாக இருந்து வரும் வழக்கமாகும்.
மலர்களிலிருந்து நல்ல மணமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மருதாணி எண்ணெய் எடுக்கப்படுகிறது. இலைச்சாறு தசையினை இறுக்கும் தன்மை கொண்டது. கிருமிகளையும் அழிக்கும். துணிச்சாயமாகவும் கூட இவை அதிகம் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மருதாணி வணிகரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் மிக அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ராஜஸ்தான் பாலி கிராமத்தில் 150 வருடங்களாக மருதாணி முக்கிய பயிராக இருக்கிறது..
3 மாதங்கள் வளர்ந்த மருதாணி செடிகளிலிருந்து தொடர்ந்து இலைகளை எடுத்துக்கொண்டு இருக்கலாம் மருதாணி எல்லா விதமான மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைகளிலிருந்தும் போத்துகள் எனப்படும் வெட்டிய தண்டுகளிலிருந்தும் மருதாணி சாகுபடி செய்யலாம் விதைகள் கடினமான விதையுறையுடன் இருப்பதால் சில நாட்கள் நீரில் ஊற வைத்த பின்னர் முளைக்க வைக்க வேண்டும்.
மருதாணியைப்போலவே சாயமேற்றப்பயன்படுத்தப்படும் மற்றொரு தாவரம் லிப்ஸ்டிக் மரம் என அழைக்கப்படும் Bixa orellana. அமெரிக்க பழங்குடியினரால் இதன் விதைச்சாற்றிலிருந்து,Annatto எனப்படும் சாயம் எடுக்கப்பட்டு உடலில் பலவகையான சித்திரங்களை தீட்ட பயன்படுகிறது. பிரேசில் பழங்குடியினரும் இதே விதை சாற்றை உடலில் வண்ணங்கள் தீட்டி கொள்ளப் பயன்படுத்துகிறார்கள்
கருநீல வண்ணத்துக்காக Genipa Americana என்னும் தாவரத்திலிருந்து ஜாகுவா எனபப்டும்( jagua) சாறு எடுக்கப்பட்டு வட மற்றும் தென் அமெரிக்க பழங்குடியினரால் உபயோகப்படுத்தப்படுகிறது.
தற்போது பரவலாக புழக்கத்தில் இருக்கும் வெள்ளை மருதாணி இயற்கையான மருதாணி அல்ல அது தோலில் ஒட்டிக்கொள்ளும் பிளாஸ்டிக் .அதைப்போலவே நடனமாடுபவர்க்ளும், திரை நடிகர்களும் கைவிரல்களலும், பாதங்களிலும் பூசிக்கொள்ளும் ’அல்டா’ எனப்படும் செம்பஞ்சுக்குழம்பு மருதாணி அல்ல முன்பு வெற்றிலை சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட அல்டா தற்போது அரக்கு மற்றும் செயற்கை வேதி பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகின்றது. இச்சாயம் மருதாணி போல அதிக நாட்கள் நீடிக்காது.
சந்தையில் கிடைக்கும் மருதாணியில் வேறு இலைகளின் பொடிகளும் வேதிப்பொருட்களும் அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது.அழகியல் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் உலர்ந்த மருதாணி இலைகளின் விலை கிலோ 50 ரூபாய்கள். பல விவசாய நிலங்களில் உயிர்வேலியாகவும் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் மருதாணி பயிரிடப்படுகின்றது. பூச்சியோ நோயோ தாக்குவதில்லை என்பதால் எந்த செலவுமின்றி இதை வளர்க்கலாம். அழகு சாதனப்பொருட்கள், கேசத் தைலம், இயற்கைச் சாயம் மருந்து பொருட்கள் எனப் பல தொழில்களில் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுவதால், மருதாணி வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஒரு பிராந்தியத்தில் இயற்கையாக தோன்றியிராத, ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பகுதியில் பல்கிப்பெருகி, இந்த புதிய வாழ்விடங்களில், பூர்வீக பல்லுயிர் பாதிப்பு, பொருளாதார இழப்புக்கள் , மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற தாவரங்களே ஆக்கிரமிப்பு தாவரங்கள் (Invasive plants).
உணவுப் பொருட்கள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் இறக்குமதியாகும் போது அவற்றுடன் கலந்து இப்படியான ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகள் தவறுதலாக ஒரு புதிய சூழலுக்கு அறிமுகமாகும்.. பல சந்தர்ப்பங்களில், அலங்கார, மலர் வளர்ப்பு அல்லது விவசாய பயன்பாடுகளுக்காka வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களும் ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறிவிடுவதுண்டு
உதாரணமாக வெப்பமண்டல அமெரிக்க புதர் லந்தானா (Lantana camara லந்தனா கமாரா) 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு அலங்கார தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது; இது இப்போது கிராமங்கள், விளைநிலங்கள், நகர்புறங்கள், அடர் காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது.
ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’ Phenotypic plasticity எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.பெரும்பாலும், மனிதர்களாலும், சாலைப் போக்குவரத்து, மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றினால் ஆக்கிரமிப்பு தாவரங்கள் பல்கிப் பெருகுகின்றன.
2015 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் , குரோமோலேனா ஓடோராட்டா, லந்தானா மற்றும் தோட்ட மரமாக அறிமுகமான குடை மரம் எனப்படும் மீசோப்சிஸ் எமினி (Siam weed Chromolaena odorata, lantana and umbrella tree Maesopsis eminii) ஆகியவற்றினால் அச்சூழலின் இயல் தாவரங்களுக்கு உண்டாகியிருக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகள் கண்டறியபட்டது. இது சமீபத்திய ஒரு முக்கிய உதாரணம்
2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு இந்தியாவில் மட்டும் சுமார் . 200 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் உள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக இந்தியாவையும் சுட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்ட லந்தானாவுடன், பார்த்தீனியம், சியாம் களை, மெக்ஸிகன் பிசாசு (ஏகெரடினா அடினோஃபோரா – Ageratina adenophora ) மற்றும் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா – Prosopis juliflora) ஆகியவை இந்தியாவின் மிகவும் மோசமான ஆக்கிரமிப்புகளில் சில. வெங்காயத்தாமரை (ஐச்சோர்னியா கிராசிப்ஸ் – Eichhornia crassipes) பல உள்நாட்டு நீர் நிலைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளது., பொன்னாங்கண்ணி கீரை போலவே இருக்கும் அலிகேட்டர் களையான (ஆல்டர்னான்திரா பிலாக்ஸீராய்டெஸ் – Alternanthera philoxeroides) இந்தியாவில் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களை வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது.
இவற்றில் மிக குறிப்பிட்டு சொல்லும்படியான உலகளாவிய இடையூறுகளை கொடுத்துக்கொண்டிருப்பது பார்த்தீனியம் களைச்செடி. இதன் அறிவியல் பெயர்: – Parthenium hysterophorus L.
பிற அறிவியல் பெயர்கள்; (synonyms)
Argyrochaeta bipinnatifida Cav.
Argyrochaeta parviflora Cav.
Parthenium glomeratum Rollins
Parthenium lobatum Buckl.
பிற மொழிப்பெயர்கள்
English: barley flower; bastard feverfew; bitterweed; broomweed; carrot grass; congress grass; congress weed; dog flea weed; false ragweed; featherfew; feverfew; mugwort; ragweed parthenium; Santa Maria feverfew; star weed; white top; white top weed; whiteheads; wild wormwood; wormwood
கேரட் களை, காங்கிரஸ் களை, வெள்ளை தொப்பிக்களை, நச்சு பூடு என பலபெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பார்த்தீனியம் சூரியகாந்தி குடும்பமான அஸ்டரேசியேவை சேர்ந்த ஆண்டுக்கொரு முறை பூத்துக் காய்க்கும் களைச்செடி. மத்திய அமெரிக்காவை சேர்ந்த இது விவசாய நிலங்களில் தரிசு நிலங்களில்,மற்றும் சாலையோரங்களில் காணப்படும் மிக மோசமான களைச் செடிகளில் ஒன்று. பார்த்தீனியம் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், கடற்கரையிலும், வீட்டு தோட்டங்களிலும், வறண்ட நிலப்பரப்புகளிலும் என எங்கெங்கும் பரவி வளரும் ஒரு ஆக்கிரமிப்பு அயல் களை செடியாகும்.( Invasive, exotic weed) .
பார்த்தீனியம் இந்தியா முழுக்க விவசாய நிலங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. முற்றிலும் இவற்றை அழிக்க முடியவில்லை. ரசாயன களைக்கொல்லிகள் உபயோகித்தும் அழியவில்லை, சூழல் இன்னும் மாசுபட்டது. அதை உண்ணும் வண்டுகளை மெக்சிகோவிலிருந்து வருவித்தும் பலனில்லை. ஆடு மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்து உயிரியல் கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்தும் தோல்வி. தீ வைத்து எரிப்பது, உப்பு நீரை தெளிப்பது என்று எல்லா முயற்சிகளுக்கும் அசையவே இல்லாமல் உலகின் எல்லா கண்டங்களிலும் பரவி உலகின் மோசமான களைச்செடிகளின் பட்டியலில் இருக்கிறது.
கன்னிமை, கருவறை கொண்டிருக்கும் எனப்பொருள்படும் இதன் அறிவியல் பெயரான Parthenium hysterophorus, எங்கெங்கும் அழிக்க முடியாதபடிக்கு விரைவாக பெருகிக் கொண்டிருக்கும் இதன் இயல்பினால் வைக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அடர்வனங்களில் கூட காட்டுசெடிகளை அழித்துவிட்டு அவை வளர வேண்டிய இடங்களில் எல்லாம் பார்த்தீனியம் பெருகிக்கொண்டே இருக்கிறது. பாலாடை நிறத்தில் சின்னச் சின்ன வெள்ளை நட்சத்திர பூக்களுடன் அழகிய. ஆனால் ஆபத்தான ஆக்ரமிக்கும் களையான இதை, மிக வேகமாக பரவும் களையாக ஆப்பிரிக்காவில் முதலில் 1880ல் கண்டறிந்திருக்கிறனர் அதன் பின்னர் இது உலகெங்கிலும் பரவத்தொடங்கி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது
அமெரிக்காவில் அதிகமாக இருக்கும் உணவு தானியங்களை, அப்போதைய டாலர் மதிப்புக்கு இணையான இந்திய ரூபாய்களில் 50 சதவீதமும், கூடுதலாக கடல் வழிச்செலவும் கொடுத்து வாங்கும் Public Law 480 எனப்படும் PL 480 அமெரிக்க இந்திய பொருளாதார ஒப்பந்தத்தின் பேரில் கப்பலில் வந்த கோதுமை மணிகளுடன் கலந்து பார்த்தீனிய விதைகளும் 1910’ல் இந்தியாவுக்கு வந்தது. நம்மிடமிருந்து IPKF ராணுவத்தினருக்கு உணவுக்கென 1987’ல் அனுப்பி வைக்கப்பட்ட செம்மறியாடுகளின் உடலில் ஒட்டிக்கொண்ட விதைகளின் மூலம் இலங்கைக்கு போனது.
ஆனால் தாவரவியல் ஆவணங்களில் பார்த்தீனியம் இந்தியாவில் 1810லிருந்தே காணப்பட்டதற்கான சான்றுகளாக அப்போது பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உலர் தாவரங்கள் எனப்படும் ஹெர்பேரியங்களும் இருக்கின்றன என்றாலும் அப்போது இதன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்திருக்கலாம்.. விதைகளின் மூலம் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கும் இவை பரவியது.
உடல் முழுவதும் மென்மையான ரோமங்களை கொண்டிருக்கும், கிளைகளுடன், 2 மீட்டர் உயரம் வரை நேராக வளரும் இயல்புடைய, 3-20 செமீ நீளமும் 2-10 செமீ அகலமும் உடைய, விளிம்புகளில் ஆழமான கிழிசல்கள் போன்ற மடிப்புகள் இருக்கும் மாற்றடுக்கு இலைகளும், 4 மி மி அளவுள்ள நட்சத்திரம் போன்ற மலர் தொகுப்பையும், (floral heads) ஏராளமான மிருதுவான கருப்பு விதைகளையும் கொண்டது பார்த்தீனியம்.
சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும் பார்த்தீனியம் நல்ல நெடியுடையது, இவற்றின் ஆணிவேர்த் தொகுப்பு ஆழமானது. முதிர்ந்த செடிகளின் இலைகளின் அளவு, இளம் செடிகளின் இலைகளை விட சிறியதாக காணப்படும். ஒரு சிறிய தாவரம் 800க்கும் மேற்பட்ட மலர் தொகுப்புக்களை உருவாக்கும். 5 இதழ்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு மலரும் கைப்செல்லா எனப்படும் கனிகளையும், அவற்றினுள் 2-2.5 மிமி அளவுள்ள நீள் முட்டை வடிவ அக்கீன்கள் எனப்படும் விதைகளையும் உருவாக்கும். பிற சூரியகந்தி குடும்பச் செடிகளில் சாதாரணமாக காணப்படும் விதைகள் பரவ வகைசெய்யும் மெல்லிய நூலிழைகள் போன்ற பேப்பஸ் (Pappas) இதில் இருக்காது. விதைகளின் முளைப்பு திறன் 85%.ஆகும்.
பார்த்தீனியத்தில் தூய வெள்ளை நிற மலர்களை கொண்டிருப்பது, வடஅமெரிக்க இனமாகவும் சற்று பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற மலர்களை கொண்டிருப்பது தென் அமெரிக்க இனமென்றும் அறியப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவில் பரவும் வேகத்தில் வேறுபடும் இரண்டு வகைகள் – Biotypes உள்ளன. Toogoolawah biotype வகையானது முளைத்து வளரும் இடத்தில் இருந்து அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் பரவுகிறது ஆனால் Clermont biotype அதிகபட்சமாக 520,522 km2 வரை பரவுகிறது இவ்விரண்டிற்கும் இடையே விதை முளைப்புத்திறன், மகரந்த சேர்க்கையின் வழிமுறைகள் உள்ளிட்ட நுட்பமான மாறுபாடுகளும், மரபு ரீதியான மாற்றங்களும் உள்ளன.
பார்த்தீனியம் விதைகளின் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். தண்டுகள் அல்லது வேர்களிலிருந்து இவை இனப்பெருக்கம் செய்வது இல்லை. விதைகள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண அளவில் இருக்கும் ஒரு செடி 15 லிருந்து 20 ஆயிரம் வரைக்கும் விதைகளை உருவாக்குகிறது. பெரிய புதர் போன்ற செடி 1 லட்சம் விதைகளுக்கு மேல் உருவாக்குகின்றது.
இவற்றின் ஒவ்வொரு மலர்க்கொத்திலிருந்தும் சுமாராக 168,192 என்னும் அளவில் 15 – 20 μm அளவுள்ள உருண்டையான மகரந்த துகள்கள் உருவாகின்றன. அதாவது ஓரு செடியிலிருந்து சுமார் 624 மில்லியன் அளவில் உருவாகும். மகரந்தத்துகள்கள், காற்று மண்டலத்தில் எப்போதும் காணப்படுகின்றன.
நிலத்தின் மேற்பரப்பில் விழும் விதைகள் உடனே முளைத்து விடுகின்றன. ஆழப்புதைந்து விடுபவை 6-10 வருடங்கள் வரை முளைக்கும் திறனுடன் காத்திருக்கின்றன. செம்மண், கருப்பு, களிமண் அமிலத்தன்மை அதிகம் உள்ளவை, காரத்தன்மை அதிகம் உள்ளவை, வண்டல் மண் என எல்லா வகையான மண்ணிலும் இவை செழித்து வளரும். எந்த உயரத்திலும், எந்த தட்பவெப்பத்திலும் மழைப்பொழிவு நன்றாக இருக்கும் இடங்களிலும், குறைவாக இருக்கும் இடங்களிலும், எங்கும் பார்த்தீனியம் வளரும். 2002 ல் நடந்த ஒரு ஆய்வில் 10 வருடங்கள் கழித்து முளைத்த பார்த்தீனிய விதைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
பார்த்தீனியம் அருகிலிருக்கும் செடிகளை அழிக்கும் அல்லது வளர்ச்சியை பாதிக்கும் சில வேதிப்பொருட்களை சுரந்து மண்ணில் கலப்பதால் அதனருகில் பெரும்பாலும் பிற தாவரங்கள் வளருவதில்லை (allelopathic effects).
தற்சமயம் இந்தியாவில் பார்த்தீனியம், பருத்தி, கரும்பு, கத்தரி, கொண்டைக்கடலை, வெண்டை, எள், ஆகியவற்றையும், பழ மரங்கள், முந்திரி, திராட்சை ஆகிய பயிர்களின் விளைச்சலையும் பெருமளவு குறைத்து விட்டது
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாண்டிலும் மேய்ச்சல் நிலங்களில் வனப்பகுதிகளில் இவையே ஆக்கிரமித்திருக்கின்றன.
எத்தியோப்பியாவில் சோளம், உருளைக்கிழங்கு வெங்காயம், கேரட், எலுமிச்சை, வாழை. பாகிஸ்தானில் சோளம், மக்காச்சோளம் கோதுமை, அரிசி கரும்பு பூசணி மற்றும் தர்பூசணி, மெக்சிகோவில் பெரும்பாலான காய்கறி மற்றும் உணவுப் பயிர்களின் வளர்ச்சியை இக்களைச்செடி பெருமளவில் பாதித்திருக்கிறது. பயறு வகைத் தாவரங்களின் (Legumes) வேர் முடிச்சுகளில் இருக்கும் வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தும் பேக்டீரியாக்களின் செயல்பாட்டை பார்த்தீனியம் குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் விந்தையாக Bursera மற்றும் மிக பெரியதாக வளரும் Ipomoea தாவரங்களுடன் இணைந்து அவற்றை எந்த பாதிப்பிற்கும் உள்ளாக்காமல் பார்த்தீனியம் வளர்கிறது. இயற்கையில் உயிர்களுக்குள் இருக்கும் இப்படியான புரிதலை மனிதனால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இவற்றின் விதைகள் காற்றிலும், நீர்ப்பாசனத்தின் வழியாகவும் வாகனப் போக்குவரத்தில், மனிதனின் மூலம், தீவனப்பயிர்கள் வழியே, விலங்குகள், விலங்கு கழிவுகள், விவசாய இயந்திரங்கள் என்று பலவற்றின் வழியாகவும் பரவுகிறது
கட்டிட பணிகளுக்கு கொண்டுவரப்படும் மணல் மற்றும் மண் ஆகியவற்றிலிருந்து நகர்புறங்களுக்கு பார்த்தீனியம் பரவுகிறது. கண்டங்களுக்கிடையேயான பரவல் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் விவசாய இயந்திரங்களில் ஒட்டி இருக்கும் விதைகளின் மூலம் நிகழ்ந்திருக்கிறது
பார்த்தீனியச் செடியின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் caffeic acid, ferulic acid, vanicillic acid, anisic acid, fumaric acid, sesquiterpene lactones, parthenin, hymenin ஆகிய வேதிப்பொருட்களே பிற உணவு மற்றும் தீவனப்பயிர்களின் அழிவுக்கு காரணமாகின்றன.
மேய்ச்சல் நிலங்களை ஆக்ரமித்துள்ள பார்த்தீனியம் கால்நடைகளின் ஆரோக்கியம், பால் உற்பத்தி, இறைச்சியின் தரம் ஆகியவற்றிலும் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. கால்நடைகளுக்கு பார்த்தீனியத்தின் sesquiterpene lactone, parthenin, ஆகியவை தோல் வியாதிகளையும், குடல்பிரச்சனைகளையும்- ஏற்படுத்துகின்றது. பார்த்தீனியத்தை நுகரும், சிறிதளவு அவற்றின் பசுந்தழைகளை உண்ணும் கால்நடைகளின் இறைச்சியிலும், பாலிலும், தேனிலும் கூட பார்த்தீனியத்தின் வேதிப்பொருட்கள் இருக்கின்றது.
பார்த்தீனிய த்திற்கு இயற்கையில் கொன்று தின்னும் எதிரிகள் (Predators) இல்லையென்பதாலும், கால்நடைகள் இதன் இலைகளை எப்போதாவது மிகக்குறைவாகவே உண்ணுவதாலும், இவை சுரக்கும் நஞ்சினால் பிற தாவரங்கள் அந்நிலத்தில் வளரமுடியாமலாவதாலும், இவை உருவாக்கும் ஏராளமான மகரந்தம் மற்றும் விதைகளின் பரவலாலும், உலகிங்கிலும் இவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகிக்கொண்டே இருக்கிறது. உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் பார்த்தீனியத்தினால் சூழல் சமநிலையும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது
பார்த்தீனியப்பெருகல், மண் வளத்தை பெருமளவு குறைத்து, இயல் தாவரங்களின் வளர்ச்சியையும் மிக மிகக் குறைத்து விட்டிருக்கிறது. மழை மற்றும் பாசன நீரில் கழுவி வரப்படும் இவற்றின் நச்சுப்பொருட்கள் நீர்நிலைகளில் கலந்து அங்கிருக்கும் தாவர விலங்கினங்களையும் பாதிக்கின்றது.
மனிதர்களுக்கும் சுவாசப்பிரச்சனை, தோலழற்சி உள்ளிட்ட பல ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றது. பார்த்தீனிய ஒவ்வாமைக்கான சிகிச்சைகளும் மருந்துகளும் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் இதனால் உண்டாகும் நோய்களின் தீவிரம் இன்னும் கூடியிருக்கிறது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 7 சதவீத மக்கள் பார்த்தீனிய ஒவ்வாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். இச்செடியின் ஹெபட்டொ டாக்ஸினான Parthenin செம்பு உலோகத்துடன் வினைபுரிந்து இந்தியக் குழந்தைகளின் ஈரல் செயலிழப்பு நோயை Indian Childhood (Cirrhosis (ICC)) உண்டாக்குகின்ற தாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோல் அழற்சி, சளி கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல்,அரிப்பு,ஆஸ்துமா,ஆகியவை பார்த்தினியத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் 50 சதவீதம் மக்களுக்கு அதன் மகரந்தத்தால் ஏற்படுகிறது.
இக்களைச்செடியை இயற்கையான முறையில் அழிக்க கடந்த 20 வருடங்களாக பல முயற்சிகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலை வண்டான Zygogramma bicolorata மற்றும் தண்டு துளைக்கும் அந்துப்பூச்சியான Epiblema strenuana, பக்ஸினியா (Puccinia) என்னும் ஒரு வகை பூஞ்சை ஆகியவை பார்த்தீனியத்தின் இயற்கை எதிரிகளாக கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் சூரியகாந்தி செடிகளை தாக்கும் வண்டுகளான Pseudoheteronyx sp.மற்றும் இந்தியாவில் சணல் அந்துபூச்சி எனப்படும் Diacrisia obliqua எனப்படும் சணல் அந்துபூச்சி மற்றும் அவற்றின் புழுக்கள் பார்த்தீனியத்தை உண்ணுகின்றன
இந்தியாவிலும், க்யூபாவிலும் தக்காளி மற்றும் உருளைக்கிழங்குகளை தாக்கும் (Tomato yellow leaf curl virus, Potato X virus and Potato Yvirus) வைரஸ்களும் பார்த்தீனியத்தை தாக்குகின்றன. ஆனால் இவற்றால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான வளர்ச்சி குறைப்பை செய்ய முடியவில்லை.
இச்செடிகள் பூக்கும் காலத்துக்கு முன்னரே வேருடன் பிடுங்கி நெருப்பிட்டு அல்லது குழி தோண்டி புதைத்து அழிப்பது அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரே சிறந்த வழியாகும்.
இக்களைச்செடிகளின் பரவலால் நிலத்தின் மதிப்பு வெகுவாக குறைந்திருக்கும் எத்தியோப்பியாவில் பார்த்தீனியக்களை கட்டுப்பாடுகளை குறித்து தொலைக்காட்சி, வானொலி, சுவரொட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லாண்டில் இக்களை உடனடியாக அழிக்கப்பட வேண்டிய P2 பிரிவின் கீழ் இருக்கிறது. விவசாய தரக்கட்டுப்பாட்டு விதிகளின் பேரில் பார்த்தினிய விதைகளை கொண்டு வரும் வாகனங்களுக்கும் இங்கு தடை விதிக்கப்படுகிறது, பிற விதைகளுடன் பார்த்தீனிய விதைகள் கலந்துவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்தப்படுகின்றது.
கென்யாவின் நச்சுக்களை சட்டம் (Noxious Weeds Act of 2010) நில உரிமையாளர்களை அவரவர் நிலங்களிலிருந்து பார்த்தீனியத்தை முற்றிலும் அழிக்க சொல்லுகின்றது
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நச்சுக்களையின் பரவலை கட்டுப்படுத்த இப்படியான எந்த சட்டபூர்வமான கட்டுப்பாடுகளும், விதிகளும் இல்லை.
ஆவாரை, யூகலிப்டஸ், வேம்பு ஆகியவற்றின் இலைச்சாறு பார்த்தீனியத்தின் முளை திறனையும், வளர்ச்சியையும் ஓரளவிற்கு மட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் பல கிராமங்களில் பார்த்தீனியத்தை வேருடன் பிடுங்கி குழிதோண்டி கல் உப்பிட்டு புதைத்துவிட்டு அவ்விடங்களில் ஆவாரையை வளர்க்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இம்முறையில் பார்த்தீனிய வளர்ச்சியை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். சமையல் உப்பை நீரில் கரைத்து நல்ல வெயில் நேரத்தில் இவற்றின் மீது தெளிப்பதால் இவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறைகள் முற்றிலும் தோல்வியுறும் சமயங்களில் atrazine, dicamba, 2 ,4-D, picloram and glyphosate போன்ற ரசாயனங்கள் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படுகின்றன. பிறகளைகளுக்கு பொதுவில் உபயோகப்படுத்தப்படும் களைக்கொல்லிகளான imazapyr, oxadiazon, oxyfluorfen, pendimethalin thiobencarb, ஆகியவையும் பார்த்தீனியத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்துகின்றன.
இதன் ஒரு சில பயன்களாக இதை மட்கச் செய்து உரமாக பயன்படுத்தலாம் என்பதையும், இதன் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களை கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்கலாமென்பதையும் சொல்லலாம்.
இப்பூமியில் பயனற்ற தாவரங்களே இல்லையென்பதால் களைச்செடிகளை ‘ A right plant in the wrong place” என தாவர அறிவியல் குறிப்பிடுகின்றது ஆனால் பார்த்தீனியம் எல்லா நாடுகளிலுமே ”wrong plant in the right place’’ தான்
எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின் கொழுக்கட்டை போன்ற மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன் அவை வெடிக்கும். கிராமங்களில் சிறுவர்களிடையே இது ஒரு விளையாட்டாகவே நடக்கும் .
சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் இருந்த சில வருடங்களில் கைவைத்தியமாகப் பல மூலிகைச் செடிகள் புழக்கத்தில் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். அவற்றில் எருக்குதான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
எடுக்கமுடியாமல் ஆழமாக காலில் முள் குத்தினால் எருக்கம்பாலை அந்த இடத்தில் வைத்து, அதை எருக்கின் இலைகளின் மீதிருக்கும் மெழுகுப்பூச்சைச் சுரண்டி மூடிவைக்கும் வழக்கம் கிராமமெங்கிலுமே இருந்தது. அந்த பாலின் வெம்மையில் மேல் தோல் வெந்து, லேசாக அழுத்தினாலே முள் வெளியே வந்துவிடும் சில மணி நேரத்திலேயே. பாம்பு, தேள். குளவி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கும் கடிவாயில் எருக்கிலைவிழுதை வைத்துக் கட்டுவார்கள்.
மிக அதிகமாகப் பார்த்ததென்றால் குதிகால் வலிக்கு, சூடான செங்கல்லின் மீது பழுத்த எருக்கிலைகளை வைத்து அவற்றின் மீது காலை வைத்து எடுப்பதை. இவ்வழக்கம் அங்கு பரவலாக நல்ல நிவாரணம் அளிக்குமொன்றாக இருந்தது. எருக்கஞ்செடியின் குச்சிகள் கருக்கலைப்புக்கும் உபயோகப்பட்டது.
Crown flower plant என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் Calotropis procera என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இந்த எருக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளில் மிக முக்கியமான தாவரம். வடக்கு ஆப்பிரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இச்செடி உலகெங்கிலும் தற்போது பரவியுள்ளது.
பொதுவாக எருக்கில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனினும் மிக அதிகமாக காணப்படுவது வெள்ளெருக்கான Calotropis procera, (Calotrope) மற்றும் இளம் ஊதா நிறமலர்களுடனான நீல எருக்கு எனப்படும் Calotropis gigantea (Giant calotrope) ஆகிய இரண்டு வகைகள்தான். இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக நுண்ணியதாக, தாவரவியலாளர்களாலேயே எளிதில் கண்டுபிடித்து விட முடியாதாக இருக்கும். இதழ்களின் ஓரங்களில் மட்டும் அடர் ஊதா நிறம் தொட்டு வைத்தது போலிருக்கும் ராம எருக்கு எனப்படும் ஒரு வகையும் இந்த இரண்டில் ஒன்றுதான் என்று கருதப்படுகின்றது. இவை இரண்டிலிருந்தும் சிறிது வேறுபடும் Calotropisaciaஎன்னும் ஒரு வகையும் சமீபகாலங்களில் பரவலாக காணக்கிடைப்பதாக தாவரவியலாளர்கள் க்ரதுகிறார்கள்.
சமஸ்கிருதத்தில் இது அர்க்கா (Arka) – சூரியனின் கதிர் என்று குறிப்பிடப்படுகின்றது. தன்வந்திரி நிகண்டுவில் சுக்ல அர்க். ராஜ அர்க் மற்றும் ஸ்வேத அர்க்.(Sukla arkah, Raja arkah, and Svetaarkah) என மூன்று எருக்கு வகைகள் குறிப்பிடபட்டிருக்கின்றன.
இரண்டிலிருந்து ஆறு மீட்டர் உயரம் வரை வளரும் இத்தாவரத்தின் வேர்கள் மூன்று மீட்டர் ஆழம் வரை மண்ணில் இறங்கி இருக்கும். வெளிறிய நிறத்தில் இருக்கும் தண்டு உறுதியாகவும், அதன் மரப்பட்டை சொரசொரப்பாக வெடிப்புகளுடன் காணப்படும். அகன்ற சிறு காம்புடன் கூடிய இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். மெழுகால் செய்தது போல் இருக்கும் எருக்கு மலர்களின் நடுவில் இருக்கும் அழகிய கிரீடம் போன்ற அமைப்பினால்தான் ஆங்கிலத்தில் இது Crown flower என்று அழைக்கப்படுகிறது.
மலர்களின் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் ஐங்கோண வடிவில் ஒரு சிறு மேடைபோல் இணைந்து அதனடியிலிருந்து ஐந்து அழகான வளைவுகளுடன் பீடம் போன்ற அமைப்பினால் தாங்கப்பட்டிருக்கும். இதன் தாவரவியல் பெயரில் Calo -tropis என்பது கிரேக்க மொழியில் ’’அழகிய- படகு போன்ற’’ என்னும் பொருளில் இதன் மலர்களின் நடுவில் இருக்கும் அழகிய பீடம் போன்ற அமைப்பை குறிக்கும். (kalos – beautiful and tropos – boat ) procera என்றால் உயரமான, gigantea என்றால் மிகப் பெரிதான என்று பொருள்
பிற மலர்களைப் போல் மகரந்தம் இதில் துகள்களாக இருக்காது. ஐங்கோண மேடை இணைந்திருக்கும் ஐந்து புள்ளிகளிலும் மகரந்தம் நிறைந்த தராசைப் போன்ற இரு பைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.(pollinia). வெடித்துச் சிதறும் இயல்புடைய பச்சை நிற கடினமான ஓட்டுடன் கூடிய கனிகள் சிறிய பலூனை போல இருக்கும். ஏராளமான எடை குறைவான விதைகள் பட்டுபோன்ற இழைகளுடன் உள்ளிருக்கும். இவை வருடம் முழுவதும் பூத்துக்காய்க்கும்.
எருக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்திய, அரபு, யுனானி மற்றும் சூடான் உள்ளிட்ட பல பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
வேதங்களிலும், புராணக்களிலும் பழம்பாடல்களிலும் எருக்கு அதிகம் இடம்பெற்றிருக்கிறது. அதர்வண வேதத்தில் எருக்கஞ் செடியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்கு எருக்கம் பால் வைத்து படைக்கப்பட்டதை நாரத புராணம் குறிப்பிடுகிறது. மன்னர் எருக்கம்பூ மாலை அணிந்து சென்றால் வெற்றி பெறுவார் என்கிறது அக்னி புராணம். சிவமஞ்சரி எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர் “எருக்கம் மலர்” என்று கூறப்படுகிறது.
சங்க காலத்திலும் இச்செடிக்கு “எருக்கு” என்பதே பெயர்.பல சங்க இலக்கிய புலவர்கள் தங்கள் பாடல்களில் எருக்கஞ் செடியை குறிப்பிட்டுள்ளனர்.
“குறுமுகழ் எருக்காவ் கண்ணி” என நற்றிணையிலும்,
“குவியினார் எருக்கு” எனக் கபிலரும்,
“புல்லெருக்கங்கண்ணி நறிது” எனத் தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது.
“வாட்போக்கி கலம்பகம்” எனும் நூலிலும் எருக்கம் செடியை பற்றியும் இதன் பால் கொடியது. ஆயினும் மருந்துக்கு பயன்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை கடவுள் பேணேம் என்னா”
நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று கூறாமல் ஏற்று கொள்வார் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கபிலர் குறிப்பிடுகிறார்.
ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் முறையான மடலேறுதலில்,. மடலேறும் தலைவன் எருக்க மாலை, ஆவிரம் பூ மாலை முதலியவற்றை அணிந்து வருவது வழக்கம் என்று
மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரின் முடிவில் அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கிறார். அது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதும் ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கின் இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர். இன்றைக்கும் ரதசப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை உடலில் வைத்து சூரியனை நோக்கி வழிபடுகிறார்கள்.
திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தல மரமாக இருப்பது வெள்ளெருக்கு. இத்தலங்களில் விழாக்காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் சிறப்பு பூஜைகளும் நடக்கும்.
இறை வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் மலர்கள் குறித்த நூலான , ‘புஷ்ப விதி’ யில் தோஷங்களற்ற, ‘நன் மா மலர்கள்’ என குறிப்பிட பட்டிருக்கும் அஷ்ட புஷ்பங்களான ’’புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவட்டை, அரளி, நீலோத்பலம், தாமரை’’ ஆகியவற்றில் எருக்கு உயிரோட்டம் நிறைந்த மலராக கருதப்படுகிறது.
‘’வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை’’.யனான சிவன் எருக்க மலர் பிரியன். சிவன் கோவில்களில் எருக்கம்பூ மாலை சாற்றி வழிபடும் வழக்கம் நம் மரபில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கொங்கு வட்டாரங்களில் அநேகமாக எல்லா விநாயகர் கோவில்களிலும் வெள்ளை எருக்கு மலர் மாலை சாத்தும் வழக்கம் இருக்கிறது, விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மாலைகளுக்கு மிகவும் தேவை இருக்கும்
ஆறு வருடங்களான எருக்கின் வடக்கு பக்கமாக செல்லும் வேரிலிருந்து விநாயகர் உருவத்தை செய்து விற்பார்கள். வெள்ளெருக்கன் வேர்க்கட்டை வீட்டில் இருந்தால் பூச்சிகள், விஷ வண்டுகள் வராது என்கிற நம்பிக்கையும் தமிழகத்தில் உள்ளது.
கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய எருக்கு, பனிரெண்டு ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட எந்த பாதிப்பும் இன்றி வளர்ந்து, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காய்க்கும் தன்மை கொண்டது
வெள்ளெருக்கம் பூவானது,சித்த மருத்துவத்தின் முக்கிய மருந்து தயாரிப்பான ‘சங்கு பஸ்பம்’ செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றும் வழக்கம் இந்தியாவில் பல கிராம பகுதிகளில் இருக்கிறது.
’’ஏழைக்கு வைத்தியம் எருக்கு’’ என்றொரு முதுமொழியும் உண்டு, சிறிய உடல் நோய்க்கெல்லாம் கூட உடனே மருத்துவரை நாடும் நகர்புற மக்களை போலல்லாமல், கிராமங்களில் கைவைத்தியமாக எருக்கின் பாகங்களை பலவிதங்களில் உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர்.
மராத்திய இனத்தவர்களின் முக்கிய விழாவான பஞ்ச பல்லவா (Pancha Pallava) எனப்படும் ஐந்து இலைகள் கொண்டு பூஜை செய்யும் முக்கிய விழாவில் எருக்கின் இலைகளும் உண்டு. எருக்கை அவர்கள் ’ரூய்’ (Rui) என்று குறிப்பிடுகிறார்கள்.
சமஸ்கிருதத்திலும் இது அர்க்கா (Arka) – சூரியனின் கதிர் என்றே குறிப்பிடப்படுகின்றது. தன்வந்திரி நிகண்டுவில் சுக்ல அர்க். ராஜ அர்க் மற்றும் ஸ்வேத அர்க்.(Suklarkah, Rajarkah, and Svetaarkah) என மூன்று எருக்கு வகைகள் குறிபிடபட் டிருக்கின்றன.
நவக்கிரக வனங்களில் ஒன்பது கோள்களுக்குமான தாவரங்களில் சூரியனுக்குரியதாக இருக்கும் தாவரம் எருக்குதான். பைபிளை தழுவி எழுதப்பட்ட ஜான் மில்டனின் இழந்த சொர்க்கத்தில் (Paradise lost) Sodom apple என்று குறிப்பிடப்படும் இச்செடியின் பழங்களைத்தான் ஆதாமையும் ஏவாளையும் விலக்கப்பட்ட கனியை சுவைக்க தூண்டிய பின்னர் சாத்தான் புசித்ததாக சொல்லப்பட்டிருக்கின்றது.
திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்கு தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.
பழங்குடியினரில் பல இனங்களில் நோயுற்றவர்களின் தலைமுடியை சிறிது எருக்கஞ்செடியில் கட்டிவிட்டால் நோயை செடி எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
உயர் இரத்த சர்க்கரை சிகிச்சைக்கு phytotherapy எனப்படும் தாவர மருத்துவத்தில், இரண்டு பாதங்களிலும் உள்ளங்கால்களில் எருக்கிலையின் மேற்புறம் படுமாறு வைத்து அதன்மேல் சாக்ஸ் அணிந்து ஒரு வாரம் நடந்து கொண்டிருந்தால் சர்க்கரை அளவு சீராகிவிடும் என்று சொல்லப்படுகின்றது.
ஜமைக்கா மற்றும் கம்போடியாவில் இன்றைக்கும் பழுத்து வெடிக்கும் எருக்கின் கனியின் உள்ளிருக்கும் விதைகள் வெடித்து பரவ உதவி செய்யும் பட்டுப்போல் மினுங்கும் இழைகளை அடைத்து தலையணை செய்கிறார்கள். எருக்கஞ்செடியின் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் உறுதியான நார் , வில்லின் நாண், மீன்பிடி வலை, ஆடைகள்,போன்றவை தயாரிக்க உதவுகிறது.
இன்னும் சில பழங்குடியினர் இதன் பாதி பழுத்திருக்கும் காயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி காயின் கடினமான ஓட்டினுள் ஆட்டுப்பாலை நிரப்பி அருந்துவதை பல நோய்களுக்கு சிகிச்சையாக செய்கின்றனர்.
எருக்கின் இளம் தளிர்களை ஒற்றை தலைவலிக்கு பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் உபயோகிக்கின்றனர்.
எருக்கின் தாவர பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்களில் உஷரின், கேலோடாக்சின், கேலோட்ரோபின் மற்றும் ஜிஜாண்டின் (uscharin, calotoxin, calotropin, and gigantin) போன்றவை மிகுந்த நச்சுத்தனமை உடையவை. நச்சுத்தன்மை கொண்ட எருக்கின் பாலை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடும் வழக்கமும் பழங்குடியினரிடம் இருக்கிறது ’வூடூ’ கலை தோன்றிய மேற்கு ஆப்பிரிக்காவின் ’பெனின்’ நாட்டில் மட்டும் எருக்கின் பால் கலந்து மிக அதிக விலையுடைய உடைய ஆட்டுப்பால் சீஸ் செய்கிறார்கள். காமம் பெருக்கும் (Aphrodisiac) குணத்திற்காகவும் இச்செடி பாரம்பரிய மருத்துவ முறையில் உபயோகிக்கபடுகிறது.
ஹவாயில் 1871 ல் இச்செடி அறிமுகமானது. எருக்கம் மலரில் செய்யப்படும் leis எனப்படும் மலர்மாலைகளும், மலராபரணங்களும், விசிறி, வளையல் போன்றவையும் இங்கு மிகப்பிரபலம். ஹவாய் அரசின் கடைசி மகாராணியான லில்லியொ கலானி (Liliʻuokalani) எருக்கு மலராபரணங்களை வளமை மற்றும் செல்வத்தின் குறியீடாக கழுத்தில் எபோதும் விரும்பி அணிந்து வந்ததால், ஹவாய் கலாச்சாரத்தில் இம்மலர் மாலைகள் மிகச் சிறப்பான இடம் பெற்றிருக்கின்றன.
ஹவாயில் இம்மலர்களின் வெளிஅடுக்குகளை மட்டும் கோர்த்து, உள்ளிருக்கும் கிரீடம் போன்ற அமைப்பை மட்டும், அல்லது முழுமலரையுமே கோர்த்து, அரும்புகளை மட்டும் கோர்த்து என எருக்க மலர் மாலைகளும் ஆபரணங்களும் பல அழகிய நிறங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கும்.
ஹவாயில் உள்ளிட்ட பல தீவுகளிலும், இந்தியாவில் அஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பழங்குடி சமூகத்தில் பரவலாக திருமணம் மற்றும் இறப்பு சடங்குகளில் எருக்கு மலர் மாலைகளை பயன்படுத்துகிறார்கள்.
பிரபல பாலிவுட் மாடலும் நடிகருமான மிலிந்த் சோமன் திருமணத்தில் மணமக்கள் இருவரும் எருக்கு மலரில் மாலைகளும் தலை அலங்காரங்களும் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. அவரது மனைவி அஸ்ஸாமியப் பெண்.
எருக்கன் இலையை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு எருக்கிலையின் அடியில் முட்டையிடும் மோனார்க் வகைப் பட்டுப்பூச்சிகள் தமது வாழ்க்கைச் சுழற்சிக்கு எருக்கையே நம்பியுள்ளன. புறநகர் பகுதிகளில் எல்லாம் நகரம் விரிந்து கொண்டே வருவதால் வெகுவிரைவாக அழிந்து வருகின்றன எருக்கும், மொனார்க் பட்டுப்பூச்சிகளும்.
அரிதினும் அரிதான கெரட்டோ கன்ஜக்டிவிடிஸ் (Crown flower keratoconjunctivitis) எனப்படும் பார்வையிழப்பு எருக்கின் பால் கண்களில் படுவதால் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் Crown Flower keratitis என்று குறிப்பிடப்படும் இக்குறைபாடு எருக்கு மலர் மாலைகளை மிக அதிகமாக தயார் செய்யும் தாய்லாந்து மற்றும் ஹவாய் பகுதியில் மட்டும் அரிதாக ஏற்படும். மலர்களை பறிக்கையிலோ அல்லது மலர்களை மாலையாக தொடுக்கையிலோ, விரல்களில் ஒட்டியிருக்கும் பால் தவறுதலாக கண்களில் படுவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
எல்லா பாகங்களுமே சிறந்த மருத்துவப் பயன்களை உடைய இச்செடி, கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் உடல்நலனுக்கான கடவுளான அஸ்கிலிப்பியஸின் பெயரிலான ASCLEPIADACEAE என்னும் குடும்பத்தை சேர்ந்தது இந்த தாவர குடும்பமே Milkweed family எனப்படும்.
பொதுவாக எருக்கு நச்சுச்செடியெனவே கருதப்பட்டாலும், இதன் ஏராளமான மருத்துவ பயன்களை பார்க்கையில் நஞ்செனும் அமுதென்றுதான் இவற்றை கருதவேண்டும்.
பவளப் பாறைகளுக்கும், எரிமலைகளுக்கும் மழைக் காடுகளுக்கும் புகழ்பெற்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான, மடகாஸ்கருக்கும், மொரிஷியசுக்கும் அருகிலிருந்த ரியூனியன் தீவில்1 இருந்த தனது பண்ணையில் அதன் உரிமையாளர் ஃபெரோல்,2 அடிமைச் சிறுவனான எட்மண்டுடன் தனது வழக்கமான காலை நடையில் இருந்தபோது, அந்த நாள் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்க போவதை அவரும் அறிந்திருக்கவில்லை.
எட்மண்டை அடிமையாக வைத்திருந்த அவரது சகோதரி அவனை இங்கு உதவிக்கு அளித்ததிலிருந்து அவருக்கு துணைவனும் நண்பனும். எட்மண்ட் தான். 12 வயதே ஆன சிறுவனாக இருந்தபோதிலும் பண்ணையின் தாவரங்களுடனான அவனது அணுக்கமும் அறிவும் ஃபெரோலை எப்போதும் ஆச்சரியப்படவைக்கும்.
அந்த மாபெரும் பண்ணையை சுற்றி வருகையில், 20 வருடங்களுக்கும் மேலாக வளர்ந்து வரும் ஒரு கொடியில் இரு பச்சை நிறக் காய்களை கண்டு அப்படியே மலைத்து நின்றவர் ’’இவை எப்போது காய்த்தன’’ என்று எட்மண்டிடம் கேட்டார். ’’நான் சில நாட்களுக்கு முன்பு கைகளால் இதன் மலர்களுக்கு மணம் செய்துவைத்தேன், எனவேதான் காய்கள் வர தொடங்கி இருக்கின்றன’’ என்ற எட்மண்டை அவர் அப்போது நம்பவில்லை. ஏனெனில் 20 வருடங்களாக காய்களை அளிக்காமல் மலர்களை மட்டும் அளித்து வந்த அந்த கொடி இப்போது காய்த்திருப்பது இந்த 12 வயது சிறுவனால் என்பதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இவை நடந்தது 1841ல்..
ஐரோப்பா நூற்றுக் கணக்கான வருடங்களாய் முயற்சி செய்து தோல்வியுற்ற ஒரு விஷயத்தை ஒரு ஆப்பிரிக்க கருப்பின அடிமை சிறுவன் எப்படி இத்தனை சுலபமாக செய்யமுடியுமென்பதே அவரின் சந்தேகமாயிருந்தது. ஆனால் சில நாட்களில் மேலும் சில காய்கள் வந்தபோது எட்மண்டை ’’கைகளால் அம்மலர்களுக்கு எப்படி மணம் செய்து வைத்தாய்’’ ? என்று மீண்டும் செய்து காண்பிக்க சொன்னார் ஃபெரோல்.
ஒரு சிறு மூங்கில் குச்சியை கொண்டு அந்த மலர்களின் ஆண் (pollen bearing Anther), பெண் (Stigma) உறுப்புகளை பிரித்து தன்மகரந்தச் சேர்க்கையை தடுக்கும் (self pollination) ரோஸ்டெல்லம்3 எனப்படும் மெல்லிய சவ்வை மெல்ல விலக்கி, இனப்பெருக்க உறுப்புகளை ஒன்றோடொன்று சேர்த்து மென்மையாக தேய்த்து எட்மண்ட் அதை செய்து காட்டினான். ஃபெரோல் அன்றே பக்கத்து பண்ணையாளர்களை வரவழைத்து எட்மண்டின் அந்த எளிய செய்முறையை அவர்களையும் காணச்செய்தார். பின்னர் எட்மண்ட் அந்த தீவு முழுக்க பயணித்து, ’’வெனிலா கல்யாணம்’’ என அழைக்கப்பட்ட அந்த செய்முறையை பல அடிமைகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் செய்து காட்டி பயிற்சியளித்தான். 5 அன்று தொடங்கி இன்று வரையிலும் அம்மலர்களில் அப்படித்தான் மகரந்த சேர்க்கை செய்யப்படுகின்றது.
அந்த கொடி வெனிலா ஆர்கிட் கொடி. அதன் பிறகே மெக்சிகோவுக்கு வெளியேவும் அக்கொடிகளில் காய்கள் காய்த்தன.
அந்த சிறுவன் எட்மண்ட், ரியூனியன் (பர்பான்) தீவில் செயிண்ட் சுஸானா என்னும் சிறு நகரில் 1829 ல் பிறந்தான் 4. அடிமைப் பணியிலிருந்த அவன் தாய் மெலிசா மகப்பேறில் இறந்தாள் தந்தை யாரென எட்மண்ட்டுக்கு தெரியாது. மிகச்சில வருடங்களிலேயே அவன் எல்விர் சீமாட்டிக்கு அடிமையாக விற்கப்பட்டான். எல்விர், எட்மண்டை அவரது சகோதரனான ஃபெரோலுக்கு ஒருசில வருடங்களில் அளித்துவிட்டாள்.
பெரும் பண்ணை உரிமையாளரான ஃபெரோல், எட்மண்டின் தாவரங்களின் மீதான விருப்பத்தையும் அறிவையும் எப்போதும் மெச்சுபவர். எட்மண்ட் தனது ஓய்வு நேரங்களிலும் பண்ணையின் தாவரங்களுடன் இருப்பது வழக்கம். அந்த தீவில் 1819 லிருந்து வெனிலா செடிகள் வளர்க்கப்பட்டாலும், அவை காய்களை அளிக்காமல் மலர்களை மட்டும் அளித்த மலட்டுக் கொடிகளாகவே இருந்தன. தன்னை மகனைப்போல நடத்தும் எஜமானருக்கு அக்கொடி காய்களை அளிக்காததில் வருத்தமென்பதால் எட்மண்ட், அக்கொடியை அடிக்கடி கவனித்தவாறே இருந்தான்.
வெனிலாக் கொடிகள் காய்க்க துவங்கிய பின்னர் எட்மண்டின் புகழ் அந்த தீவெங்கும் பரவியது. அடிமைகளுக்கு குடும்பப்பெயர் வைத்துக்கொள்ளும் உரிமை இல்லாததால் வெறும் எட்மண்டாக இருந்த அந்த சிறுவனுக்கு, ஃபெரோல் லத்தீன் மொழியில் ’வெள்ளை’ என பொருள் படும் Albius என்ற பெயரை எட்மண்டுக்கு பின்னால் சேர்த்துக் கொள்ளும்படி பெயரிட்டார்.6 பின்னர் அவனை அடிமை வேலையிலிருந்தும் 1848’ல் விடுவித்தார்.
எட்மண்ட் ஆல்பியஸின் மீது பலருக்கு, குறிப்பாக பல தாவரவியலாளர்களுக்கு பொறாமை இருந்தது. ஜான் மிஷெல் க்ளாட் ரிச்சர்ட் 7 என்னும் பிரெஞ்ச் தாவரவியலாளர் தான் சில வருடங்களுக்கு முன்னர் எட்மண்டுக்கு இந்த மகரந்த சேர்க்கை முறையை கற்றுக் கொடுத்ததாக கூட கூறினார். ஆனால் அதை அவரால் நிரூபிக்க முடியவில்லை.
சுதந்திர வாழ்வுக்கு ஆயத்தமான எட்மண்டுக்கு, பொய் குற்றச்சாட்டில் திருட்டு வழக்கொன்றில் ஐந்து வருட சிறை தண்டனை கிடைத்தது. ஃபெரோல் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தண்டனையை மூன்று வருடங்களாக குறைத்தார்.
எட்மண்டுக்கு முன்பே 1836ல் பெல்ஜியம் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர் சார்லஸ் மோரியன்8 மற்றும் 1837 ல் பிரெஞ்ச் தோட்டக்கலையாளர் ஜோசஃப் ஹென்ரி நியூமேன்9 ஆகியோர், செயற்கையாக வெனிலா மலர்களை மகரந்த சேர்க்கை செய்யும் முறையை கண்டுபிடித்திருந்தனர், எனினும் மிக கடினமான, அதிக நேரம் பிடித்த அந்த முறைகள் வணிக ரீதியாக வெனிலாவை பயிரிடுவதற்கு உதவியாக இல்லாததால் அவை தோல்வியுற்றன. எட்மண்டின் இந்த எளிய முறைதான் விரைவாக அக்கொடிகளை பயிர்செய்து காய்களை பெற உதவியது.
தனது எஜமானர் ஃபெரோல், வெனிலா ஏற்றுமதி வணிகத்தில் கோடீஸ்வரரானதற்கும், கோடிகளில் புழங்கும் வெனிலா தொழிலுக்கும் காரணமாயிருந்த,எட்மண்ட் வறுமையில் வாடி தனது 51 வது வயதில், 1880 ல் இறந்த போது நாளிதழ்களில் ஒரு சிறு செய்தி மட்டுமே வந்தது. அவர் இறந்து நூறு வருடங்களுக்கு பின்னரே எட்மண்ட் பிறந்த ஊரில் வெனிலா மலர்கொடியின் ஒரு சிறு கிளையை கைகளில் வைத்திருக்கும் ஒரு சிலை அவருக்கு வைக்கப்பட்டது. அவர் பெயரில் ஒரு தெருவும் ஒரு பள்ளியும் கூட அங்கிருக்கின்றன.10
எட்மண்டின் கண்டுபிடிப்பு அங்கிருந்து சிஷெல்ஸ், மொரிஷியஸ், மற்றும் மடகாஸ்கர் தீவுகளுக்கும் பரவியது. 1880களில் ரியூனியனை சேர்ந்த வெனிலா பண்ணையாளர்கள் மடகாஸ்கரில் வெனிலாவை அறிமுகப்படுத்தினர். மிக சாதகமான தட்ப வெப்ப நிலை அங்கு நிலவியதால் அன்றிலிருந்து இன்று வரை மிக அதிக அளவில் வெனிலா உற்பத்தி மடகாஸ்கரில் தான் நடக்கின்றது.
வெனிலாவின் வேர்களை வரலாற்றில் தேடிச் சென்றால் மிக சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
வெனிலாவின் வரலாறு மெக்ஸிகோவின் வளைகுடாப் பகுதியில் உள்ள மஸாண்ட்லா பள்ளத்தாக்கில் வாழ்ந்த டோடோனாக் பழங்குடிகளிலிருந்து துவங்குகின்றது. வெராக்ரூஸ் மாநிலத்தின் வடக்கிலும், பாபன்ட்லா நகரத்திலும் மெக்ஸிகோ வளைகுடாவின் கரையோரப் பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்த டோடோனாக்குகள், இயற்கையாக அங்கு விளைந்த வெனிலா கொடியின் காய்களை பயன்படுத்தி வந்தனர். அங்கு மட்டுமே வாழும் ஒரு வகையான வண்டுகள் மலர்களில் மகரந்தச் சேர்க்கை செய்ததால் வெனிலாக்காய்கள் அக்கொடிகளில் விளைந்தன. காய்கள் முற்றி கருப்பான பின்பு அவற்றை பானங்களில் பொடித்த கோக்கொ விதையுடன் சேர்த்து அருந்திய அப்பழங்குடியினர் காய்ந்த பின்னர் கருப்பு நிறத்திலிருந்த அந்த காய்களை கருப்பு மலர் என்னும் பொருளில் “tlilxochitl” என்றழைத்து அவற்றையே நாணயமாகவும் புழங்கினர். அரச குடியினருக்கும், அறிவாளிகளுக்கும், வீரர்களுக்குமான பானங்களில் அக்காய்களின் சாறு சேர்க்கப்பட்டது.
டோடோனாக் தொன்மமொன்று, டோடொனாக் அரசர் மூன்றாம் டெனிஸிடியின் மகளும் இளவரசியுமான ’ச்கோபோன்சிஸா’ ஒரு சாதாரண இளைஞன் மீது காதல்வயப்பட்டு அவனுடன் ஒரு நாள் அரண்மனையை விட்டு சென்றுவிட. காதலர்ளை திரும்ப அழைத்து வந்து அரசகுடியினர் தலைகொய்து கொன்ற இடத்தின் உலர்ந்த ரத்தத்திலிருந்து உயர வளர்ந்த ஒரு கொடி சில நாட்களில் நல்ல நறுமணம் வீசும் மலர்களை உருவாக்கியதாகவும் அதுவே வெனிலா என்றும் சொல்கிறது.
கொல்லப்பட்ட இளம் காதலர்களின் தூய ஆத்மாவே வெனிலாவின் நறுமணமாகிவிட்டதென்றும் அவர்கள் நம்புகிறார்கள். இன்றும் டொடோனாக்குகள் வெனிலா மலர்களை Caxixanath அதாவது மறைந்திருக்கும் மலர்கள் என்றே அழைக்கிறார்கள்.
அஸ்டெக்குகள் (Aztecs) பதினைந்தாம் நூற்றாண்டில் டோடோனாக்குகளுடன் போர்புரிய மெக்ஸிகோவின் மத்திய சமவெளிகளிலிருந்து ஊடுருவினர்,டொட்டோனாக் நிலத்தையும் மக்களையும் கைப்பற்றிய அஸ்டெக் பேரரசர் இட்ஸ்காட்ல் (1427-1440) கப்பமாக கிடைத்த பதப்படுத்திய வெனிலா காய்களையும் அவற்றின் சாறு கலந்த பானங்களையும் அருந்தி, அக்கொடிகளின் வளர்ப்பு முறை, காய்களை பதப்படுத்தும் முறை, ஆகியவற்றை அறிந்து கொண்டார், பின்னர் அவரது காலத்தில் “xocolatl.” என்னும் பெயரில் வெனிலா சாறுடன், கொக்கோ தூள் கலக்கப்பட்டு, உணவாகவும் பானமாகவும் பெருமளவில் உபயோகிக்கப்பட்டது.
1520ல் மெக்ஸிகோவை கைப்பற்றிய ஸ்பானிய போர்வீரரான ’ஹெர்னன் கோர்டிஸ்’ அஸ்டெக் அரசில் கால்பதித்தார். அழகிய மஞ்சள் நிற மலர்களை கொடுக்கும், அப்போது வெனிலா என்று பெயரிடப்பட்டிருக்காத அக்கொடியின் காய்களிலிருந்து சுவையான பானமொன்றை அருந்தி வந்த அஸ்டெக்குகள் கோர்டிஸை வரவேற்று அவருக்கு தங்ககிண்ணத்தில் ’xocolatl’ என்னும், வெனிலாச்சாறும், மக்காச்சோள மாவும், தேனும், கோக்கோ தூளும் கலந்த பானத்தை அளித்தனர். அந்த பானத்தின் சுவையில் மயங்கிய கோர்டிஸ், ஆஸ்டெக் மன்னரிடம் வெனிலா பானத்தின் ரகசியத்தை கேட்டறிந்தார். 11
நாடு திரும்புகையில் விலையுயர்ந்த அருமணிகள், தங்கக்கட்டிகளுடன் வெனிலா காய்களையும், கோக்கோ விதைகளையும் கோர்டிஸ் கொண்டு வந்தார், ஸ்பெயின் மக்கள் அக்காய்களுக்கு ஸ்பானிய மொழியில் வய்னா, (vaina) ‘’சிறு நெற்று’’ என்று பொருள் படும் ’வெனிலா’ என்று பெயரிட்டனர்.
80 வருடங்களுக்கு சாக்லேட்டில் கலந்து அருந்தும் பானமாகவே புழக்கத்தில் இருந்த வெனிலாவை கொண்டு இனிப்பூட்டப்பட்ட இறைச்சி உணவுகளுக்கு வாசனையூட்டலாமென்பதை 1602ல் முதலாம் எலிசபெத் மகாராணியின் தனி மருத்துவர் ஹ்யூ மோர்கன் கண்டறிந்தார்.
ஆனால் மெக்சிகோவுக்கு வெளியே வெனிலா கொடிகளை வளர்க்க முடிந்தாலும் அவற்றில் மகரந்த சேர்க்கை நடத்தும் கொடுக்குகளற்ற மெலிபோனா தேனீக்கள்12 மெக்ஸிகோவில் மட்டுமே இருந்ததாலும், தன்மகரந்த சேர்க்கை நடக்க வழி இல்லாத வகையில் அமைந்துள்ள மலர்களுடன் அக்கொடி பல நூற்றாண்டுகளுக்கு, பலரின் முயற்சிகளுக்கு பலனளிக்காமல் மலடாகவே இருந்தது. மெலிபோனா தேனீக்களை மெக்ஸிகோவிற்கு வெளியே வளர்க்க செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்த இரு நூற்றாண்டுகளுக்கு மெக்ஸிகோவே வெனிலா பயிரிடுவதில் ஏகபோக உரிமையுடன் இருந்தது. அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு தருவிக்கப்பட்ட வெனிலாவின் சுவை பலரின் விருப்பமாகிவிட்டிருந்தது.
வெனிலா சுவையின் மீது காதல் கொண்ட ஐரோப்பியர்கள் 1800களில் ஏராளமான வெனிலாக்காய்களை உயர்குடி விருந்துகளுக்கென பெரும் பொருட்செலவில் மெக்ஸிகோவிலிருந்து தருவித்தார்கள். எட்மண்ட்டின் மகரந்த சேர்க்கை முறைக்கு பின்னர் உலகின் பிற பாகங்களுக்கும் வெனிலாவின் நறுமணம் வேகமாக பரவியது.
ஐஸ்கிரீமில் வெனிலா சுவையை 1780 களில் அறிமுகபடுத்தியவராக ’தாமஸ் ஜெஃபெர்ஸன்’ அறியப்படுகிறார். அவர் பாரிஸில், அமெரிக்க தூதுவராக இருந்தபோது. அறிந்துகொண்ட வெனிலா சுவையூட்டும் ஒரு செய்முறையை நகலெடுத்து, நாடு திரும்புகையில் கொண்டு வந்திருந்தார், அதைக்கொண்டே அமெரிக்காவில் வெனிலா சுவையுடன் ஐஸ்கிரீம்கள் உருவாக துவங்கின. இப்போதும் அந்த செய்முறை நகல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
வெனிலாவின் புகழ் உலகெங்கிலும் பரவி, கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒரு மசாலாப்பொருளாக, வாசனை திரவியமாக, ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வு ஊக்கியாக (Aphrodisiac) வெனிலா அப்போது பயன்படுத்தப்பட்டது,
பிரான்சில் திருமணத்தன்று இரவு மணமகன்கள் வெனிலா நறுமண மூட்டப்பட்ட பானங்களை அருந்துவது வழக்கத்தில் இருந்தது. 15 ஆம் லூயிஸின் மாலைகள் சாக்லேட் கலந்த வெனிலா பானங்களால் அழகானது. அவரின் காதலி, லூயிஸின் வெனிலா பிரியத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
ஆண்மைக் குறைபாட்டிற்கான மருந்தாக வெனிலா அப்போது மிக அதிகமாக பரிந்துரைக்கப்பட்டது. 1762 ல் ’’அனுபவங்களிலிருந்து’’ என்னும் தனது நூலில் ஜெர்மானிய மருத்துவர் பிஸர் ஜிம்மர்மேன் 13 ஆண்மை குறைபாடு உள்ள 342 நபர்களுக்கு வெனிலா அருந்த கொடுத்து அவர்கள் பல பெண்களின் மனங்கவர்ந்த காதலர்கள் ஆனதை குறிப்பிட்டிருக்கிறார்.
600 மூலிகைகள் குறித்து விளக்கும் 1859 ல் வெளியான அமெரிக்கன் டிஸ்பென்சேட்டரியில் அதன் ஆசிரியரான Dr. ஜான் கிங் ’’ நறுமணமுள்ள, மூளையை தூண்டுகின்ற, துக்கத்தை விலக்கி தசை செயல்பாட்டை அதிகரித்து, பாலுணர்வு ஊக்கியாகவும் செயல்புரியும்’’ என வெனிலாவை குறிப்பிடுகிறார். 14
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதிக விலைகொடுத்து வெனிலாவை வாங்கி அருந்த முடியாத பல காதலர்கள்,காதுகளுக்கு பின்னும், மணிக்கட்டிலும் வெனிலா சாறை கொஞ்சமாக தடவிக்கொண்டு காதலிகளை சந்திக்க சென்றார்கள்.
வெனிலாவை குறித்த முதல் குறிப்பும், சித்திரமும் 1552 ல் நவாட்டி மொழியில் ’மார்டின் டெ லா க்ரூஸி’ னால் எழுதப்பட்டு ’ஜுவான் படியானோ’வால் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது ஆர்க்கிடுகளை பற்றிய முதல் பிரசுரமும் இதுதான். ஆங்கிலத்தில் வெனிலா முதலில் குறிப்பிடப்பட்டது 1764 ல் தாவரவியலாளர் ’பிலிப் மில்லர்’ ‘’தோட்டக்கலை அகராதி’’யில் இப்பயிரை குறிப்பிட்ட போதுதான். 15,16
எட்மண்ட் 1841ல் அந்தமகரந்த சேர்க்கையை கைகளால் செய்து காண்பித்த போது மெக்ஸிகோவில் மட்டுமே வருடத்துக்கு 2000க்கும் குறைவாக வெனிலா காய்கள் காத்துக்கொண்டிருந்தது. இப்போது மெக்சிகோ உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து வருடத்துக்கு ஐந்து மில்லியன் வெனிலா காய்கள் கிடைக்கின்றன.
பூக்கும் தாவர குடும்பங்களில் சூரிய காந்தி குடும்பத்துக்கு (Asteraceae) அடுத்து இரண்டாவது பெரிய குடும்பமான அலங்கார மலர் செடிகளுக்கு புகழ்பெற்ற, 763 பேரினங்களும் 28,000 சிற்றினக்களும் கொண்ட ஆர்க்கிடேசி குடும்பத்தை (Orchidaceae) சேர்ந்தது தான் இந்த வெனிலாவும். இந்த பெரிய தாவர குடும்பத்தில் உண்ணத்தகுந்த காய்களை கொடுப்பது வெனிலா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உலகின் பல நாடுகளில் தற்போது பயிரிடப்படுவது வெனிலாவின் மூன்று சிற்றினங்கள் தான். மடகாஸ்கர் மற்றும் இந்தியபெருங்கடல் தீவுகளில் பயிராகும் வெனிலா ப்ளேனிஃபோலியா/இணைப்பெயர் வெனிலா ஃப்ரேக்ரன்ஸ் (Vanilla. planifolia -syn. V. fragrans), தென் பசிபிக் பகுதிகளில் பயிராகும் வெனிலா தஹிடியென்சிஸ், (Vanilla. tahitensis), வெஸ்ட் இண்டீஸ், மத்திய, மற்றும் தென் அமெரிக்காவில் பயிராகும் வெனிலா பொம்பானா (Vanilla pompona)
உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் பயிராவது வெனிலா ப்ளேனிஃபோலியா வகைதான் இது ரியூனியன் தீவின் முந்தைய பெயருடன் இணைத்து பர்பான் வெனிலா என்றும் மடகாஸ்கர் வெனிலா என்றும் அழைக்கப்படுகிறது. மடகாஸ்கர் வெனிலாக்களே பிற அனைத்து வகைகளையும் விட தரமானவையாக கருதப்படுகின்றன.
ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் கொடியான இவை காம்புகளற்ற இலைகளையும், சதைப்பற்றான பச்சை தண்டுகளையும் கொண்டிருக்கும். தண்டுகளின் கணுக்களில் பற்று வேர்கள் இருக்கும். கொடியாக வளரும் இவை பற்றி படர்ந்து ஏறும் மரங்களுக்கு ட்யூட்டர் என்று பெயர். (tutor).நட்டு வைத்த மூன்றாவது வருடத்தில் இருந்து மலர்கள் உருவாகும் எனினும் ஏழாவது வருடத்திலிருந்தே அதிக மலர்கள் உருவாக தொடங்கும். மேலே ஏறிச்செல்லும் கொடியை, ஒரு ஆள் உயரத்துக்கு மடக்கி இறக்கி படர விடுவதாலும் மலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும் இக்கொடியில் ஒற்றை மலர்க்கொத்தில் 80 லிருந்து 100 வரை பெரிய அழகிய வெள்ளை மற்றும் பச்சை கலந்த நிறத்தில் மெழுகுபூசியது போன்றிருக்கும் இதழ்களுடன் மலர்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும். மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் காய்கள் உருவாகி அவை பச்சை நிறத்திலிருந்து இளமஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்யப்படும்.
மலர்ந்த ஒரே நாளில் வெனிலா மலர்கள் வாடிவிடுமென்பதால் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஒவ்வொரு மலரிலும் கைகளால் மகரந்த சேர்க்கை செய்யப்படவேண்டும். எனவேதான் வெனிலா பயிரிடுவது கடும் மனித உழைப்பு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
பிற ஆர்க்கிட் செடிகளின் விதைகளை போலவே வெனிலாவின் விதைகளும் அதன் வேரிலிருக்கும் பூஞ்சையில்லாமல் முளைக்காது எனவே வெனிலாக்கொடியின் தண்டு்களை வெட்டியே அவை பயிராக்கப்படுகின்றன.
ஒரு ஆரோக்கியமான கொடி வருடத்திற்கு 50 முதல் 100 காய்கள் வரை உற்பத்தி செய்கிறது; அறுவடைக்கு பிறகு அக்கொடி மீண்டும் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு உற்பத்தித்திறன் உள்ளதாக இருக்கிறது.
வெனிலாவின் வர்த்தக மதிப்பு காய்களின் நீளத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. 15 செ மீ நீளத்திற்கும் அதிகமாக இருந்தால் இது முதல்தர வகையிலும், 10 முதல் 15 செ மீ நீளமாக இருந்தால் இரண்டாவது தரமாகவும் 10 செ மீ க்கும் குறைவானவை மூன்றாவது தரமாகவும் கருதப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட பச்சைக்காய்கள் அப்படியே விற்கப்படலாம் அல்லது சிறந்த சந்தை விலையை பெறுவதற்கு உலர வைக்கப்படலாம். வெனிலா பச்சைக்காய்களின் விலை கிலோ ரூ 300-4000. பதப்படுத்தப்பட்டால், கிலோ ரூ 2200- 30,000 .
வெனிலாவை உலரவைப்பதற்கு ,காய்களை கொதிநீரிலிட்டு விதைகளின் பச்சையத்தை அழித்தல், வியர்ப்பூட்டுதல், மெதுவாக-உலரவைத்தல் மற்றும் தகுந்தமுறையில் பாதுகாத்தல் என நான்கு அடிப்படை நிலைகள் இருக்கின்றன: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கள் சேமிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பாரஃபின் உறையில் கட்டாக சுற்றி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஒரு பவுண்டு பதப்படுத்தப்பட்ட வெனிலா காய் களை பெற ஐந்திலிருந்து ஆறு பவுண்டுகள் பச்சை வெனிலாக்காய்கள் தேவைப்படும் பதப்படுத்தப்பட்ட வெனிலாகாய்கள் சராசரியாக 2.5% வெனிலினைக் கொண்டிருக்கிறது.
கைகளால் மகரந்த சேர்க்கை செய்யப்பட வேண்டி இருப்பதால் மிக அதிக மனித உழைப்பு தேவைப்படும் பயிர்செய்கையான இதில் மற்றுமொரு சிக்கல், கால்சியம் ஆக்ஸலேட் குருணைகள் நிறைந்திருக்கும் வெனிலா தண்டின் சாறு, உடலில் பட்டால் உண்டாகும் சரும அழற்சி தான். வெனிலா தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த சரும அழற்சியும் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
வெனிலாவின் சாறில் உள்ள வெனிலின் (4-ஹைட்ராக்ஸி-3-மெத்தாக்ஸி பென்ஸால்டிஹைட்) இதன் வாசனைப்பண்பு மற்றும் நறுமணத்திற்கு காரணமாகிறது. மற்றொரு சிறிய துணைப்பொருளான பைபரானல் (ஹெலியோடிராபின்). உள்ளிட்ட பலஉட்பொருட்கள் வெனிலாவின் வாசனைக்கு காரணமாகின்றன. வெனிலின் முதல்முறையாக 1858 ஆம் ஆண்டு கோப்லே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது.
வெனிலாவின் சாரம் (Essence) இரண்டு வடிவங்களில் கிடைக்கின்றது. வெனிலா விதைகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சாரம் மற்றும் போலி அல்லது செயற்கை வெனிலா சாரம். இயற்கை சாரத்தில் வெனிலின் உள்ளிட்ட பல நூறு வேதிச்செர்மானங்கள் அடங்கி இருக்கும். (vanillin, acetaldehyde, acetic acid, furfural, hexanoic acid, 4-hydroxybenzaldehyde, eugenol, methyl cinnamate, and isobutyric acid.) செயற்கை வெனிலா சாரத்தில் செயற்கை வெனிலின் எத்தனால் கரைசலில் கலந்திருக்கும்..
1874, ல் வெனிலினை போலவேயான மற்றொரு சாரம் பைன் மரப்பட்டை சாற்றிலிருந்து பிரித்தெடுக்கபட்டபோது, வெனிலினின் வர்த்தகத்தில் தற்காலிகமாக ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ஆய்வகங்களில் கிராம்பின் யூஜீனாலிலிருந்தும், மரக்கூழ் மற்றும் மாட்டுசாணத்தில் இருக்கும் லிக்னின் ஆகியவற்றிலிருந்தும் செயற்கை வெனிலின் தயாரிக்க முடியுமென்பது கண்டறியப்பட்டது. பிரேசிலின் தெற்குப்பகுதில் இயற்கை வெனிலினுக்கு மாற்றாக Leptotesbicolor என்னும் தாவரத்திலிருந்து வெனிலினை போலவேயான சாரம் பிரிதெடுக்கப்பட்டு புழக்கத்திலிருக்கிறது.
வெனிலாவின் சாரம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வெனிலின் ஆகியவை தற்போது நறுமண சிகிச்சையிலும் (Aroma therapy) பயன்படுத்தப்படுகின்றன
கடந்த நூறு வருடங்களில் வெனிலா உலகின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. வெனிலா பயிரிடுவதில் மடகாஸ்கரும் இந்தோனேஷியாவும் முன்னிலையில் இருக்கின்றன. மடகாஸ்கரில் சுமார் 80,000 விவசாயிகளின் வாழ்வாதாரமாக வெனிலாவே உள்லது. உலகின் மொத்த வெனிலா உற்பத்தியில் 60 சதவீதம் மடகாஸ்கரில் விளைகின்றது.
வெனிலா வணிகத்தில் புதிதாக உகாண்டா, இந்தியா, பப்புவா நியூ கினி, டோங்கா தீவுகள் ஆகியவையும் நுழைந்திருக்கின்றன என்றாலும் இவை இந்த வணிகத்தில் நிலைபெற இன்னும் பல ஆண்டுகளாகும். சீனாவும் யுனானில் வெனிலாவை பயிரிட்டு இருக்கிறது.
1990களிலிருந்து இந்தியாவில் சுமார் 24,000 ஹெக்டேர் நிலப்பரப்பில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெனிலா சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ற பிரத்யேக நறுமணத்தையம் கொண்டிருப்பதால் வெனிலாவில் பலநூறு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
உலகின் மிக பிரபலமான வாசனை பொருளாகவும், விலை உயர்ந்த வாசனை பொருட்களில் குங்குமப்பூவுக்கு அடுத்த படியாகவும் இருக்கும் வெனிலா, கோகோ கோலா, பெப்ஸி, ஐஸ் கிரீம், பிஸ்கட், சாக்கலேட்டுகள் உள்ளிட்ட சுமார் 18,000 பொருட்களில் சேர்க்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிக வெனிலா உபயோகிப்பது கோகோ கோலா தான். அதிகம் வெனிலாவை விரும்பி உபயோகிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் தொடர்ந்து ஐரோப்பாவும் இருக்கின்றன.
வெனிலா பயிரிடும் பல நாடுகளில் சுற்றுலாப்பயணிகளுக்கு வெனிலா பயிரிடுதல், மலர்களை கைகளால் மகரந்த சேர்க்கை செய்தல், காய்களை அறுவடை செய்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகிவற்றிற்கான நேரடி பயிற்சிகளும் ஏராளமான் வெனிலா சுவையுள்ள உணவுகளை சுவைக்கவுமான சிறப்பு சுற்றுலாக்கள் இருக்கின்றன. இவற்றில் மிக பிரபலமானதும் புகழ்பெற்றதும் கோஸ்டா ரிக்காவின் ’’வில்லா வெனிலா’’ சுற்றுலாக்களே.
அசல் வெனிலினின் விலையை விட செயற்கை வெனிலின் இருபது மடங்கு விலை குறைவென்பதால் நாம் வெனிலா சுவையென்று அருந்துவதும், உண்ணுவதும், நுகர்ந்து மகிழ்வதுமெல்லாம் 98 சதவீதம் போலிகளைத்தான். நமக்கு அசல் , இயற்கை வெனிலா கிடைப்பதற்கு வெறும் 1 சதவீதமே சாத்தியமிருக்கிறது..
வெனிலா பயிரிடுவதை விடவும் எளிதாக லாபம் கிடைக்குமென்பதால் மடகாஸ்கர் விவசாயிகள் ஆரஞ்சுதோட்டங்களுக்கும், எண்ணெய் வயல்களுக்கும் கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்
உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானிகள் ஏற்கனவே செயற்கை வெனிலினை ஈஸ்டுகளின் உதவியால் பெறுவதையும் சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெனிலின் தயாரிப்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். இனி மெல்ல மெல்ல இயற்கை வெனிலா மறக்கப்படவும் கூடும்.
ஃபெரோல் எத்தனை முயற்சித்தும் எட்மண்டுக்கு அரசிடமிருந்து எந்த பண உதவியும் இந்த மாபெரும் கண்டுபிடிப்புக்காக பெற்றுத்தர முடியவில்லை. எந்த பலனும் கிடைக்காமல் மறைந்துவிட்ட எட்மண்ட் ஆல்பியஸுக்கு நம்மில் பலரின் விருப்பமான வெனிலா நறுமணத்தை , சுவையை இனி எப்போது அனுபவித்தாலும் ஒரு நன்றியையாவது மனதுக்குள் சொல்லிக்கொள்ளலாம்.
Written in Nahuatl by Martín de la Cruz Martin de la Cruz -an, Indian who was baptised with this Christian name and translated to Latin by Juan Badiano in 1552.
கருத்தரங்குகளில் கலந்து கொள்வதும், ஆராய்ச்சி கட்டுரைகளை பிரசுரிப்பதுமாக பரபரப்பான முனைவர் பட்ட ஆய்வின் இறுதி வருடங்களில் கர்நாடகத்தின் விவசாய பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. நானும் என்னுடன் அதே துறையில் ஆய்வு செய்து கொண்டிருந்த தோழியும் கலந்துகொண்டோம். ஹெப்பல் என்னுமிடத்தில் நடந்த அந்த ஆய்வரங்கு அப்போதைய கர்நாடக முதல்வரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆய்வாளர்களும் அரசியலாளர்களுமாக ஆயிரக்கணக்கில் பங்கேற்பாளர்கள். முதல் நாள் அமர்வுகள் முடிந்த பின்னர் வருகை தந்திருக்கும் அதி முக்கிய பிரமுகர்களின் விமான பயண சீட்டுக்களுக்கான கட்டணத்தை திரும்ப கொடுக்கும் பணிக்கு எங்களை பணித்தபோது ஆர்வமாக ஒத்துக்கொண்டு, 1 மணி நேரத்தில் 6 லட்சம் ரூபாய்களை எந்த குளறுபடியும் இன்றி உரியவர்களுக்கு கொடுத்துவிட்டோம். முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயம் போனதும் எங்களிருவருக்கும் அன்றிரவு நடக்க இருந்த பெரும் விருந்துக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழ் அட்டையையும் கொடுத்தனுப்பினார்.
பெங்களூருவின் பூங்காக்களில் ஒன்றில் இரவு விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. மாபெரும் உண்டாட்டு அது அங்கேதான் அழகிய வைன் கோப்பைகளை முதன் முதலில் பார்த்தேன். முதன் முதலாக மாநில எல்லையை கடந்திருந்த கிராமத்துப் பெண்ணான எனக்கு அந்த கோப்பைகளின் ஒயிலும் வடிவங்களும் பரவச மூட்டியது. பழரச பானங்கள் இருக்கும் பகுதியிலிருந்து தூரத்தில் வைன் அருந்தி கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் அதுவரை சாதாரண கண்ணாடி டம்ளர்களை மட்டுமே பார்த்திருந்ததால், அந்த மெல்லிய தண்டுகளுடன் கூடிய, பளபளக்கும், பல வடிவங்களில் இருந்த கோப்பைகளின் தோற்றம் வசீகரமாயிருந்தது.
அங்கிருந்து வந்து பல வருடங்களாகியும் மனதின் அடியாழத்தில் அவ்வபோது அக்கோப்பைகள் மினுங்கிக் கொண்டேயிருந்து, கல்லூரி பணிக்கு வந்து பல வருடங்களுக்கு பிறகு வைன் நொதித்தலில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு, வைன் நொதித்தலின் வேதிவினைகள் குறித்தெல்லாம் கற்பிக்கும் வாய்ப்பு அமைந்தபோது மீண்டும் அக் கோப்பைகளின் நினைவு மேலெழுந்து வந்தது.
கத்தரிக்கப்பட்ட தண்டுகளிலிருந்து திராட்சைக் கொடிகளை வளர்த்து பழங்களை அறுவடை செய்யும் அறிவியல் மற்றும் கலையான விட்டிகல்ச்சர்- (Viticulture) தாவரவியலின் பிற துறைகளை போலவே வெகு சுவாரசியமாக இருந்தது. திராட்சை பழங்களின் சர்க்கரையே பின்னர் ஆல்கஹாலாக மாறுவதால், பழங்களின் brix எனப்படும் சர்க்கரை அளவை, ஊசி போட்டுக்கொள்ளும் சிரிஞ்சை போன்ற ஒரு எளிய உபகரணத்தால் பழங்களில் குத்தி கணக்கிட்ட பின்னர் திராட்சை தோட்டங்கள் ஏலம் எடுக்கப்படுகின்றன. இத்துடன் திராட்சைக் கொடிகள் வளரும் மண்ணின் கார அமிலத்தன்மை, வளம், அவற்றிற்கு பாய்ச்சப்பட்ட நீரின் நுண் சத்துக்கள், பெய்த மழையின் அளவு, அவற்றின் மீது விழுந்திருக்கும் சூரிய ஒளியின் அளவு இப்படி பல காரணிகளும் ஏலம் எடுக்கையில் கணக்கிடப்படுகின்றன. அறுவடையான பழங்களிலிருந்து வைன் தயாரிக்கும் கலை வினாலஜி (oenology) என்றழைக்கப்படுகிறது. இத்துறையில் ஆழ்ந்திருக்கையில்தான் வைன் கோப்பைகளை குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
கண்ணாடி பொது வருடத் துவக்கத்துக்கு முன்னர் 4000 ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தும், அதன் உலகளாவிய பெருமளவிலான பயன்பாடு 18ஆம் நூற்றாண்டுக்கு பிறகே இருந்தது. கண்ணாடிக் கோப்பைகளின் வரலாறும் கண்ணாடியின் பயன்பாடு வந்ததிலிருந்தே இருக்கிறது.
இறந்த விலங்குகளின் கொம்புகளை்க குடிகலன்களாக பயன்படுத்திய ஆதி காலத்துக்கு பிறகு மரக் கோப்பைகளும் தோல்பைகளுமே திரவக்கொள்கலங்களாக இருந்தன. ப்ளைஸ்டொஸீன் காலத்தில்தான் களிமண் கோப்பைகள் புழக்கத்திற்கு வந்தன. பின்னர் வெண்கலக் காலத்தில் செம்பு உள்ளிட்ட உலோகக் கோப்பைகள் பல வடிவங்களில் இருந்தன. ரோமானியர்கள் இரட்டை இலையும் ஒற்றை மொக்கும் பொறிக்கப்பட்ட பொன் மற்றும் வெள்ளிக் கோப்பைகளை அறிமுகப்படுத்தினர். பொதுயுகம் 5 ஆம் நூற்றாண்டில் உயர் குடியினருக்கு கண்ணாடிக் கோப்பைகளும் சாமானியர்களுக்கு மண்குடுவைகளும் என பருகும் கோப்பைகளில் வேறுபாடு காணப்பட்டது. அதன் பின்னர் பலவிதமான கோப்பைகள் பல வடிவங்களில் பற்பல பயன்பாடுகளுக்கான இருந்தன..
1600’க்கு பிறகு புழக்கத்திலிருந்த சில சுவாரஸ்யமான கோப்பைகளின் பட்டியல்
Piggin-சிறிய தோல் கோப்பை
Noggin-மரக் குடுவை
Goddard-pewter –தேவாலயங்களில் சமய சடங்குகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோப்பைகள்
Bombard-உயரமான அலங்கரங்கள் மிகுந்த சீசாக்கள் போன்ற கோப்பைகள்
Hanap-கூடைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் அலங்காரமான பெரிய பீப்பாய்கள்.
Tappit-இரவு தாமதமாக புறப்பட்டு செல்லும் விருந்தினர்களுக்கு, அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னர் அருந்த பானம் நிறைத்துக் கொடுக்கும் மூடிகளுடன் கூடிய கோப்பை
Fuddling cup- இரண்டு மூன்று சிறு சிறு கோப்பைகளை ஒன்றாக இணைத்த புதிர் வடிவம். இதில் இருக்கும் பானத்தை சிந்தாமல் அருந்துவது ஒர் விளையாட்டாக இருந்திருக்கிறது
Toby jugs- மாலுமிகளும், பாதிரிமார்களும் காவலதிகாரிகளும் மட்டும் உபயோகப்படுத்தியவை
Rhyton- யுரேஷியாவில் பிரபலமாயிருந்த உலோகங்களால் செய்யப்பட்ட விலங்குகளின் தலையை[போலிருக்கும் கோப்பைகள்
விளிம்பில் வெள்ளி வளையம் இருக்கும் தேங்காய் சிரட்டை மற்றும் நெருப்புகோழியின் முட்டையோட்டு கோப்பைகள்
வைனின் சுவையை, தரத்தை சோதிப்பவர்களுக்கான சிறப்பு பீங்கான் கோப்பைகள்
அளிக்கப்பட்டிருக்கும் பானத்தில் நஞ்சு கலந்திருக்க வில்லை என்பதை உணர்த்தும் இருபுறமும் கைப்பிடிகள் வைத்திருந்த கோப்பைகள்.
இருகண்ணாடித்தகடுகளை ஒன்றாக சிறிய தட்டை போல இணைத்த அடிப்பாகத்துடன் கூடிய கோப்பை. கடைசித்துளி பானத்தை அருந்தினால் மட்டுமே இந்த அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனின் சித்திரம் புலனாகும்
ஒன்றின் மீது ஒன்றாக இரட்டை அடுக்கு கோப்பைகள் தூரதேசம் செல்லவிருக்கும் தோழர்களை வழியனுப்புகையில் கொடுக்கும் விருந்தின்போது பயன்படுத்தப்பட்டது அதில் நட்பை குறிக்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்
திருமண விருந்துகளில் இரட்டை அடுக்கும் அலங்காரங்களும் கொண்டிருக்கும் வைன் கோப்பைகள் இருந்தன. மேலடுக்கு வைனை மணமகனும், பின்னர் கீழடுக்கில் உள்ளதை மணமகளும் அருந்துவர்
இந்திய திருமணங்களில் மாலை மாற்றிக் கொள்ளுதல் போல ஜப்பானிலும் மணமக்கள் மூன்றடுக்கு வைன் கண்ணாடிக் கோப்பைகளை மூன்று முறை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்தது.அதன் பின்னர் அவ்வடுக்கு கோப்பை மதுவை மணமக்கள் அருந்துவார்கள்.
பானங்களில் நஞ்சு கலந்திருந்தால், நிறம் மாறி அதை அடையாளம் கட்டும் கோப்பைகளும், கொதிநீர் ஊற்றுகளிலிருந்து நரடியாக நீரை பிடித்து அருந்தும் ஸ்பா கோப்பைகளும், உள்ளே நிறைக்கப்படும் பானங்க்களுக்கு ஏற்ப நிறம் மாறும் கோப்பைகளும், பேரரசர்களின் பிரத்யேக பொன்கோப்பைகளுக்கென தனியே காவல்காரர்கள் கூட இருந்தனர்
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்கை வரலாறு மற்றும் புவியியல் நிகழ்வுகளை ஆராய்வதில் கழித்தவரான, ரோம எழுத்தாளரும், வரலாற்றாளரும், தீராப்பயணியும் இயற்கை மெய்யிலாளருமான பிளினி (Pliny -23-79 A.D.) கண்ணாடி கோப்பைகளின் வரவுக்குப் பின்னர் பொன் மற்றும் வெள்ளிக்கோப்பைகளைத் தவிர்த்து அனைவரும் கண்ணாடிக்கோப்பைகளையே பெரிதும் விரும்பியதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிளினி, பீனிசிய வணிகர்கள் பொ.யு. மு. 5000 வாக்கில் சிரியாவின் பிராந்தியத்தில் முதல் கண்ணாடியை உருவாக்கியதாக கூறினாலும், தொல்லியல் ஆதாரங்கள், கண்ணாடி தயாரித்த முதல் மனிதன் பொ.யு.மு. 3500 வாக்கில் கிழக்கு மெசபடோமியா மற்றும் எகிப்தில் இருந்ததாக உறுதியளிக்கிறது.
பொ.யு.மு. 1ஆம் நூற்றாண்டில், சிரிய கைவினைஞர்கள் ஊதுகுழாய் முறையில் கண்ணாடி உருவாக்குவதை கண்டுபிடித்த பின்னர் கண்ணாடி உற்பத்தி எளிதாகவும், வேகமாகவும், மலிவாகவும் ஆனது. ரோமப் பேரரசில் கண்ணாடி உற்பத்தி செழித்து இத்தாலியிலிருந்து அதன் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியது. பொ.யு. 100’ல் எகிப்திய நகரமான அலெக்ஸாண்டிரியா கண்ணாடி உற்பத்தியின் மிக முக்கியமான மையமாக இருந்தது. தொடர்ந்த இரண்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் கண்ணாடிக்குடுவைகளும், வைன் உள்ளிட்ட பானங்களை பருகுவதற்கான கோப்பைகளும் செய்யப்பட்டது.
தொடர்ந்து நிறமற்ற ஒளி உட்புகும் கண்ணாடிகளே உருவாக்கப்பட்டு கொண்டிருக்கையில் நாலாம் நூற்றாண்டில்தான் காடுகளிலிருந்து பொட்டாசியமும், இரும்புச்சத்தும் கொண்ட மணலிலிருந்து பச்சைக் கண்ணாடி தயாரிக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் வைன் பாட்டில்களும், வைன் கோப்பைகளும் பச்சை நிறக் கண்ணாடியில் உருவாக்கப்பட்டன. பானம் ஊற்றப்படும் மேல் பகுதி குறுகலாகவும், நீளமாகவும் செய்யப்பட்டு வந்த கோப்பைகள் காலப்போக்கில் குறுகிய வடிவிலிருந்து அகலக்கிண்ணங்களாகின.
உள்ளே ஊற்றப்படும் வைனின் நிறத்தை பச்சைக் கண்ணாடி மறைத்து விடுவதால் பச்சை தண்டுகளும், நிறமற்ற கிண்ணங்களுடனான கண்ணாடி கோப்பைகள் பின்னர் புழக்கத்தில் வந்தன. குறிப்பாக Rieslings மற்றும் Gewürtztraminers. இரண்டு வைன் வகைளும் இப்படி பச்சை தண்டுகளை உடைய கண்ணாடி கோப்பையில் மட்டுமே பரிமாறப்பட்டன.
13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் கண்ணாடி கோப்பைகளின் உற்பத்தி மையமாக இருந்தது. அப்போதுதான் கண்ணாடி கோப்பைகளுக்கு பொன்முலாம் பூச்சிடுவதும், சித்திரங்கள் பொறிக்கப்படுவதும் துவங்கியது.
15 ஆம் நூற்றாண்டில் இரும்பு ஆக்ஸைடுகளினால் உருவாகும் பச்சை அல்லது மஞ்சள் நிறங்கள் இல்லாத தூய ஒளி ஊடுருவும் கிரிஸ்டல்லோ கண்ணாடி கோப்பைகள், (Cristallo) மாங்கனீஸ் ஆக்சைடு கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் லேட்டிமா எனப்படும் தூய வெண்ணிற பால் கோப்பைகளும், கருப்பு,இளஞ்சிவப்பு மண் நிறங்களிலும் கோப்பைகளும் வடிவமைக்கப்பட்டு பிரபலமாயின.
பின்னர் கோப்பைகளில் பலவகையான அலங்காரங்களும், சித்திர வேலைப்பாடுகளும் நுண்ணிய அலங்காரங்களும் சேர்க்கப்பட்டு மிக ஆடம்பரமான கோப்பைகள் வடிவமைக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி கோப்பைகள் பெரும்பாலானோரின் விருப்பத்திற்குரியவைகளாக இருந்தன.
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோப்பையின் தண்டுகளில் திருகு வேலைப்பாடுகள் இருந்த Air Twist கோப்பைகளும், கண்ணாடி நூலிழைகள் இருக்கும் Opaque Twist கோப்பைகளும் மிகப் பிரபலமாயிருந்தன. 1700களில் ரோமானியர்கள் கண்ணாடிக் கோப்பைகளை செய்யத் தொடங்கினார்கள். பிறகு கிண்ணப்பகுதியிலும் தண்டிலும் உள்ளே காற்றுக்குமிழ்கள் இருக்கும் கோப்பைகளும், அலங்காரங்கள் ஏதுமில்லா மெல்லிய கண்ணாடித்தண்டுகளுடன் கூடிய கோப்பைகளும் 1740’ல் திடீரென பிரபலமாயின.
பிரிட்டனில் 1746’ல் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியில் கண்ணாடி தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரி மிக அதிகமாக இருந்ததால் கண்ணாடி கோப்பைகளின் அளவு மிக சிறியதாக இருந்தது 1811ல் இவ்வரி விலக்கப் பட்டபோது பெரிய அளவிலான கோப்பைகள் மீண்டும் புழக்கத்தில் வந்தன. இங்கிலாந்தில் பெரும்பாலும் 125 மிலி கொள்ளளவுள்ள கோப்பைகளே பயன்பாட்டில் இருந்து வந்தது பலவருடங்களுக்கு பின்னர்தான் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிறிய அளவிலான கோப்பைகளும் சந்தைக்கு வந்தன
துல்லிய ஒளி ஊடுருவும் கண்ணாடி கோப்பைகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டன. ஒரே ஒரு அவுன்ஸ் கொள்ளளவுள்ள கோப்பைகள் 19 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு ஜோடிகளாக விற்பனை செய்யப்பட்டன.1950ல் தான் தற்போது புழக்கத்தில் இருக்கும் வடிவில் தண்டும் கிண்ணப்பகுதியுமான் கோப்பைகள் சந்தைக்கு வந்தன.
பெரும்பாலான வைன் கோப்பைகள் தண்டுடன் இணைக்கப்பட்ட அகலக்கிண்ணமும் அடியில் வட்டத்தட்டு போன்ற பகுதியும் கொண்டவை ( bowl, stem, and foot). பரிமாறப்பட்ட வைனின் சுவை மணம் இவை அருந்துபவரின் நாசிக்கும் உதட்டிற்கும் மிகச்சரியான கோணத்தில் இருந்தால் மட்டுமே முழுமயாக சுவையை அனுபவிக்க முடியும், அதன்பொருட்டே ஒவ்வொரு வகையான வைனுக்கும் பிரத்யேக வடிவங்களில் கோப்பைகள் வடிவமைக்கபட்டிருகின்றன.
எல்லாக்கோப்பைகளுமே அகலமான கிண்ணங்களை கொண்டவையல்ல. குறுகலான நீளமான குழலைபோன்ற கிண்ணப்பகுதிகளைக் கொண்டிருப்பவைகளும், தண்டுகள் இல்லாமல் கிண்ணங்கள் மட்டுமேயான கோப்பைகளும் கூட புழக்கக்தில் உள்ளன.
சிவப்பு வைனுக்கான கோப்பைகள் அகலமான கிண்ண அமைப்பு கொண்டவை. காற்றின் பிராணவாயு சிவப்பு வைனுடன் கலந்து oxidation நடக்க இந்த அகலப்பகுதி உதவுகின்றது
சிவப்பு வைனுக்கான கோப்பைகள் பலவகைப்படும்
Bordeaux glass: இது உயரமான காம்புடன் அகலக்கிண்ணமும், அருந்துகையில் வாயின் உட்புறத்துக்கு நேரடியாக வைனை செலுத்தும்படியும் வடிவமைக்கப்பட்டது
Burgundy glass: முன்பு சொல்லபட்டிருப்பதை விட அகலம் அதிகமான கிண்ணப்பகுதி கொண்டவை, pinot noir போன்ற துல்லிய சுவையுடைய வைனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது, இது வைனை நாவின் நுனிக்கு கொண்டு வரும்.
வெண்ணிற வைனுக்கான கோப்பைகளின் அளவுகளும் வடிவங்களும் பல வகைப்படும். குறுகிய நீண்ட மேற்புறமுள்ளவை, அகலமான ஆழம் குறைவான கிண்ணங்களுள்ளவை என்று பலவிதங்களில் இவை உள்ளன. வெண்ணிற வைன் சிவப்பைப்போல அதிகம் oxidation தேவைப்படும் வகையல்ல எனவே மேற்புறம் அகலம் குறைவான வடிவிலேயே இக்கோப்பைகள் இருக்கும். இளஞ்சிவப்பு வைனும் வெண்ணிற வைனுக்கான கோப்பைகளிலேயே வழங்கப்படுகின்றது.
ஷேம்பெயின் போன்ற மினுங்கும் வைன் வகைகளுக்கு குறுகிய குழல் போன்ற கிண்ணங்கள் இருக்கும் கோப்பைகளே பொருத்தமானவை. sparkling வைனுக்கான கோப்பைகள் நீளமாகவும் ஆழமான கிண்ணங்களுடையதாகவுமே இருக்கும். இக்கோப்பைகள் demi flute, flute narrow, tall flute & glass என நான்கு வகைப்படும்
ஷெர்ரி கோப்பைகள் நல்ல நறுமணமுள்ள, ஆல்கஹால் அளவு அதிகமான பானஙகளான sherry, port, aperitifs, போன்றவற்றிற்கானவை ஷெர்ரி கோப்பைகளில் copita மிக பிரபலமானது.
பொக்காலினோ கோப்பைகள் பிரத்யேகமாக சுவிட்ஸர்லாந்தின் அடர் நீல நிற திராட்சைகளிலிருந்து பெறப்படும் மெர்லாட் வைனுக்கானவை. இவை 200 மிலி மட்டுமே கொள்ளும்
தற்போது வைன் கோப்பைகள் உடையும் சாத்தியங்களை குறைக்க கண்ணாடியுடன் டைட்டானியம் சேர்க்கப்படுகின்றது .
வைன் சுவைத்தல் என்னும் வைனின் தரத்தை சோதிக்கும் நிகழ்வு கோடிகளில் புழங்கும் வைன் தொழிற்சாலைகளின் மிக முக்கிய நிகழ்வாதலால் (ISO 3591:1977) ISO தரக்கட்டுப்பாடு மிகத்துல்லியமாக பின்பற்றப்படும். அந்த சோதனைக்கு உபயோகப்படும் கோப்பைகள் மிகத்துல்லியமான அளவுகளிலும்,வடிவங்களிலும் தயாரிக்கப்படும்.
பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது. ஒரே வைனை வேறு வேறு கோப்பைகளில் அருந்துகையில் சுவையும் மாறுபடுகிறது என்று வைன் பிரியர்கள் சொல்லக் கேட்கலாம். வைனை விரும்பும் அளவுக்கே வைன் கோப்பைகளை விரும்புபவர்களும் சேகரிப்பவர்களும் உண்டு.
கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.
ஒரே கோப்பையில் அனைத்து விதமான வைன்களையும் அருந்தலாம் எனினும் வைனை அருந்துதல் என்பது தனிமையில் நிலவின் புலத்தில் நனைந்தபடிக்கோ அன்றி மென்சாரலில் மலைச்சரிவொன்றை நோக்கியபடி கவிதையொன்றை வாசிப்பதை போலவோ மிக நுட்பமான ஒரு அனுபவம் என்பதால் கோப்பைகளின் வேறுபாடு சுவையுடன் தொடர்புடையதாகி விட்டிருக்கிறது. ஊற்றப்பட்ட வைனை கோப்பையின் உள்ளே மெல்ல சுழற்ற ஏதுவாக கிண்ண பகுதியின் அளவு இருத்தல் அவசியம்
வைன் கோப்பை வடிவமைப்பில்:.
எளிதில் கவிழ்ந்துவிடாமல் இருக்க உறுதியான அடிப்பகுதி.
கின்ணப்பகுதியை விரல்கள் தொட்டுவிடாத தூரத்தில் பிடித்துக்கொள்ள ஏதுவான நீளத்தில் தண்டுப்பகுதி.
வைனை சுழற்றி நுகர்வதற்கு வசதியான அகலத்திலும் ஆழத்திலும் உள்ள கிண்ணப்பகுதி
கோப்பையின் உறுத்தும் விளிம்பை உதடுகள் உணராவண்ணம் கவனமாக உருவாக்கப்பட்ட மென் விளிம்புகள்.
இவை நான்கும் மிக முக்கியமானவை
இப்போது கண்ணாடி கிண்ணங்களை காட்டிலும் உறுதியும், நுட்பமான வேலைப்பாடுகளும் கொண்ட கிரிஸ்டல் கிண்ணங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. தண்டுப்பகுதி இல்லாமல் வெறும் கிண்ணம் மட்டுமே இருக்கும் சாசர் போன்ற கோப்பைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன என்றாலும் தண்டுகள் உள்ளவையே மிக அதிகம் பேரின் விருப்பத்துக்கு உகந்தவை
வைன் பிரியர்களின் ஏகோபித்த கருத்து கோப்பைகளின் வடிவத்திற்கும் வைனின் ருசிக்கும் தொடர்பிருக்கிறது என்பதுதான் எனினும் இப்படிச் சொல்லுபவர்களுக்கும் அதன் அடிப்படையை சொல்லத் தெரி்வதில்லை. இதற்கு அறிவியல் ஆதாரமும் இல்லைதான். எனினும் வைன் கிண்ணங்களின் வடிவத்திற்கும் வைனின் சுவைக்குமான. குறிப்பாக ஆண்களின் சுவைக்கான தொடர்பு உளவியல் காரணங்களைக் கொண்டது என்று சொல்லலாம்
வைன் கோப்பைகளின் வடிவத்திற்கான சுவாரஸ்யமான பின்னணிக்கு வரலாம். அறுவடை குறைவு, பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு இவற்றால் தவித்த மக்களின் மன்றாட்டுக்கு பதிலாக ’’ரொட்டி இல்லை என்றால் அவர்கள் கேக் உண்ணலாம்’’ என்று பதிலளித்ததாக சொல்லப்படும் பிரஞ்சு புரட்சியின் போது கில்லட்டில் தலை துண்டித்து கொல்லப்பட்ட மேரி அண்டோய்னெட் (1755-1793, (16ஆம் லூயிஸி ன் மனைவி) என்னும் சீமாட்டியின் மார்பகங்களின் வார்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட தண்டுப்பகுதிகளற்ற வைன் கோப்பைகள் வெகு பிரசித்தம், என்றும் அவரது மார்பின் மெழுகு அச்சுக்களிலிருந்தே வைன் கோப்பைகள் அப்போது தயாரிக்கப் பட்டதாகவும், வைனை அக்கோப்பைகளில் அருந்துபவர்கள் அனைவரும் மேரியின் ஆரோக்கியதிற்கென அருந்துவதாகவும் நம்பிக்கை நிலவியது
15 ஆம் லூயிஸ் காதலியான ட்யூ பொம்பாதோர் (1721-1764): தன் காதலின் சாட்சியாக தன் மார்பகங்களின் மீது பித்துக்கொண்டிருந்த லுயிஸூக்கு மார்பின் மெழுகு வார்ப்பை எடுத்து தயாரிக்கப்பட்ட கோப்பைகளிலேயே ஷாம்பெயின் பரிமாறினாராம்
இதே போன்ற மார்பக மெழுகு வார்ப்பு கோப்பை கதையே நெப்போலியனே திகைக்கும் அளவிற்கான ஷேம்பெயின் செலவு கணக்குகள் கொண்டிருந்த நெப்போலியனின் மனைவியான பேரரசி ஜோஸ்பினுக்கும் சொல்லப்படுகின்றது
இரண்டாம் ஹென்றியின் காதலியான டயானாவின் (1499-1566): இடது மார்பகத்தின் வடிவிலான கோப்பைகளில் மார்பகங்களின் சித்திரங்களும் வரையப்பட்டிருந்ததாக சொல்லபடுகின்றது
Helen of Troy புகழ் ஹெலெனின் அழகிய மார்பகங்களின் வார்ப்புக்கள் அவளது கணவர் மெனிலாஸ் எடுக்கப்பட்டு அவருக்கான வைன் கோப்பைகளை வடிவமைத்துக்கொண்டாரென்கிறது மற்றுமொரு கதை.
இவ்வாறு பெண்களின் மார்பக வடிவே வைன் கோப்பைகளின் ஆதார வடிவம் என்பதற்கான கதைகள் ஏராளம் இருப்பினும், உண்மையில் தண்டுப்பகுதி அற்ற அகலக்கிண்ண கோப்பைகளை 17 ஆம் நூற்றாண்டில் ஒரு துறவியே கண்டுபிடித்தார். 1663’ல் இங்கிலாந்தில் கண்ணாடி கோப்பைகள் தண்டுகளின்றி உருவாக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. அக்காலகட்டத்தில் மேற்சொன்ன எந்த காதலிகளும் இருக்கவில்லை.
ஆயினும் எப்படியோ வைன் அல்லது வைன் கோப்பைகளின் வரலாற்றில் மார்பக வடிவங்கள் குறித்து பல கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அரச குடும்பத்து விருந்துகளில், எந்த இளம் பெண்ணின் மார்பகங்கள் காலி வைன் கோப்பைகளுக்குள் கச்சிதமாக பொருந்துகிறதோ அவர்களே இளவரசர்களுடன் நடனமாட தெரிவு செய்யப்பட்டனர் என்கிறது மற்றொரு கதை
இங்கிலாந்தின் சூப்பர் மாடலாகிவிட்டிருக்கும் அழகிய மார்பகங்களுக்கு சொந்தக்காரியான கேத்தரினை (Katherine Ann Moss) அறியாத இளைஞர்கள் இங்கிலாந்தில் இருக்கவே முடியாது. தன் திறந்த மேனியை ப்ளேபாய், வேனிட்டி ஃபேர், போன்ற சஞ்சிகைகளில் ஏராளமாக வெளியிட்ட பெருமைக்குரியவரான இவரின் மார்பகங்களின் வடிவில் லண்டனின் புகழ்பெற்ற உணவகம் வைன் கோப்பைகளை வடிவமைத்திருக்கிறது. அவரின் மார்பக அளவான் 34 என்பதுதான் உணவகத்தின் பெயரும். வைன் கோப்பை வரலாற்றின் பக்கங்களில் உண்மையும் இருக்கிறதென்கிறது இச்சம்பவம்.
ஒருவேளை வழங்கப்பட்ட வைனின் சுவையோ தரமோ சரியில்லை என்று புகாரளிக்கும் வாடிக்கையாளர்களை புளகாங்கிதப்படுத்தி வாயை அடைக்க செய்யப்பட்ட வியாபார யுத்தியோ என்னவோ?
பெண்களின் மார்பக மாதிரியில் வைன் கோப்பைகள் வடிவமைக்க பட்டதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் இல்லைதான் என்றாலும், மார்பகங்கள் மீதான ஆண்களின் மையலுக்கு வைன் கோப்பை வடிவங்களும் காரணமாக இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
வரலாற்று நாயகர்களில் பலருக்கு திரண்ட மார்பகங்கள் உள்ள பெண்களைக்காட்டிலும் கச்சிதமான சிறிய மார்பகங்களுள்ள பெண்களே பிரியத்துக்கு உகந்தவர்களாயிருந்திருப்பதை அறிந்திருக்கிறோம்
இவ்வாறு புனைவுகளும், வதந்திகளும், கற்பனைக் கதைகளும், ஆதாரபூர்வமான உண்மைகளும் பின்னிப்பிணைந்து நமக்கு காட்டுவது என்ன? ஆண்கள் மார்பகங்கள் மீதான ஈர்ப்பில்தான் அந்த வடிவத்திலிருக்கும் கிண்ணங்களில் போதையூட்டும் பானங்களை அருந்துகின்றார்களா? அல்லது பெண் என்பவள் வெறும் சதைத்திரளே, பெண்கள்,ஆண்களை மகிழ்விக்கும் பொருட்டே பிறவியெடுத்திருக்கின்றனர் என்றெண்ணும் ஆணின் ஆதிக்க மனோபாவத்தைத்தான் இக்கதைகள் நமக்கு காட்டுகின்றனவா? அருந்தியதும் தூக்கி வீசலாம், உடைக்கலாம், வேறு வேறு வடிவங்களில் இருக்கும் கோப்பைகளை முயற்சிக்கலாம். சலிப்பின்றி ஒன்றிலிருந்து இன்னுமொன்று தேடிச்செல்லலாம். போன்ற வேறேதேனும் காரணங்கள் இதன் பின்னனியில் இருக்குமா?
அன்னை முலையருந்துதல் என்னும் குறியீடு பலவகைகளில் புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
ஹெர்குலிஸ் ஹெராவின் சம்மதமின்றி அவள் முலையருந்தியே கடவுளானார் என்கின்றது ரோமானியப்புராணம். கோபமுற்ற ஹீரா முலைகளை கிழித்தெறிகையில் சொட்டிய துளிகளே பால் வெளியெங்கும் இப்போது மின்னி கொண்டிருக்கிறதாம். ஹெராவின் முலையருந்தியதாலே அவர் ஹெர்குலிஸ் எனப்பட்டார்.
Tiber ஆற்றில் விடப்பட்டு, ஓநாய் முலையளித்து காப்பாற்றிய இரட்டையர்களான ரோமுலஸும் ரீமஸுமே ரோமனிய பேரரசை நிறுவினர் என்கிறது ரோமானிய புராணங்கள்
இப்படி பெண்ணினத்தின் முலைகள் புராண காலத்திலிருந்தே ஆட்சியின் அன்பின் சக்தியின் தெய்வீகத்தனமையின் குறியீடாகவே கருதப்பட்டும் நம்பப்பட்டும் வந்திருக்கிறது,
15 ஆம் நூற்றாண்டின் நூலான Tristan de Nanteuil, நடுக்கடலில் தன் பச்சிளம் சிசுவுக்கு பாலூட்டமுடியாமல் வருந்திய இளம்தாயொருத்தி கன்னிமேரியை வேண்டிகொண்டதும் மார்பகங்களில் பால் வெள்ளமெனப்பெருகியதை சொல்கின்றது. யாலோமின் ’’மார்பகங்களின் வரலாறு’’ நூல் கன்னி மேரியின் முலைப்பாலானது தேவகுமாரனின் குருதிக்கு இணையாகவே புனிதமானதாகவும், பல அற்புதங்களை நிகழ்தியதாகவும் குறிப்பிடுகின்றது.
ஐரோப்பாவின் தேவாலயங்கள் அனைத்துமே கன்னி மேரியின் முலைப்பால் பொடியை பாதுகாத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இறக்கும் தருவாயில் மாமனிதர்களின் உதடுகளில் வீழும் அன்னைத்தெய்வதின் முலைப்பால் துளிகளால் அவர்கள் உயிர்மீண்ட பல கதைகளை நாமும் கேட்டிக்கிறோமே.
பேரரசர் சார்லிமேக்னி கன்னி மேரியின் முலைப்பால் துளிகள் அடங்கிய தாயத்தை அணிந்துகொண்டே போர்களுக்கு சென்றார் என்கின்றது மற்றோரு கதை
பெத்லஹேமில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் செல்லும் பால் குகை தேவலயமான Milk grotto வில்தான் கன்னிமேரி குழந்தை இயேசுவுக்கு முலையளிக்கையில் பால் துளிகள் கீழே சிந்தியதாக தொன்மையான நம்பிக்கை நிலவுகிறது
கிரேக்க புராணங்கள் (mastos) மாஸ்டோஸ் எனப்படும் மார்பகங்களைப்போலவே முலைக்காம்புடன் கூடிய கிண்ணம்போன்ற அமைப்பிலிருக்குமொரு வைன் கோப்பையை பற்றிச்சொல்லுகின்றது இரட்டைக் கைப்பிடிகளுள்ள இக்கோப்பை அன்னை தெய்வங்களுக்கான பூசனைகளின் போது மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளரான அட்ரியானி மேயர் ‘’வைன் கோப்பைகளும் மார்பகங்களும்’’ என்னும் ஆய்வுக்கட்டுரையில் மார்பக வடிவுக்கும் அளவுக்கும் வைன்கோப்பை வடிவமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு நேரடியானது என்று குறிப்பிடுகிறார்.
பல சமூகங்களில் இந்த மார்பக வடிவ விருப்பம் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. 1983ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட கவர்ச்சிகரமான சிக்கன உடையணிந்து தாராளமாக மார்பகங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் Breastaurants தொடர் உணவகங்கள் இன்றும் வெகு பிரபலம். குழந்தைகளின் பால் பாட்டில்களிலுள்ளதைப்போலவே நிப்பிள்களுடன் இருக்கும் பீர் டின்கள், Boob Tube beer bong,எனப்படும் முலைவடிவ பீர் உறிஞ்சும் உபகரணங்கள், பெண்களின் உள்ளாடையைப்போலவே வடிவமைக்கப்ட்ட வைன் பாட்டில்களின் அலமாரிகள் என வைனும் மார்பக வடிவங்களும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாகவே தான் இருந்து வருகிறது.
”நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும்,இந் நொய்து இலங்கை போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள் மூக்கு அறவும், வாழ்ந்தேன் ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்?”
கம்பராமாயணத்தின் இவ்வரிகளுக்கு பெரும்பாலான உரைகள் சீதையின் முலையின் மீதான் விருப்பத்தினால் வேண்டியவர்களை இழந்து தங்கையின் மூக்கு அறுபட்டு இருப்பதாக ராவணன் வருந்துவதாகவே இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு காவிய முகாமில் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் இவ்வரிகளுக்கு வெகு சிறப்பானதொரு பொருள் அளித்தார். /ஒருத்தி முலைக்கிடந்த ஏக்கறவால்// என்பது ’ஒரு அன்னையின் முலைஅருந்திய உறவால்’ என்றார். அது மிகப்பொருத்தமல்லவா? அத்தகைய உன்னத உறவல்லவா அன்னைக்கும் மக்களுக்கும் இருப்பது. அதனுடனொப்பிட முடியாத சிற்றின்பங்களலல்லவா நம்முன்னே கொட்டிக்கிடப்பவை?
பச்சிளம் சிசுவாக அன்னை முலையருந்தியதிலிருந்து, மதுக் கோப்பைகள் வரையிலான பயணத்தில், கோப்பையின் வடிவங்களில் இருக்கும் அடிப்படை உளவியலலை நோக்குகையில் ஆண்கள் விலகி வெகுதூரம் வந்துவிட்ட அன்னைமையின் மீதான் ஈர்ப்பாகவே அது இருக்க முடியும்
அன்னை முலையருந்திய நாட்கள் அளித்த பாதுகாப்புணர்வின் ஆழ்மன ஏக்கத்தையே வைன் கோப்பைகளின் வடிவங்களில் தீர்த்துக் கொள்கிறார்களா ஆண்கள்?
ரோமானிய தொன்மத்தில் வளமை மற்றும் விடுதலையின் கடவுளான சனியின் (Saturn) மனைவி ஓபிஸ் (Opis) நிலம்,மிகுதியான வளம் மற்றும் அறுவடையின் கடவுளாக கருதப்படுகிறார். ஓபிஸின் கைகளில் செங்கோலும், சோளக்கதிர்களும், தானியங்கள் நிரம்பி வழியும் கொம்புக்கொள்கலனும் இருக்கும்.
1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’ (foreign acacia) என்றழைக்கப்படும், தென் மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்ட தாவரத்தின் அறிவியல் பெயரான புரோசோபிஸ் ஜுலிஃப்ளோரா’வின் (Prosopis juliflora ) ‘pros’, என்பது கிரேக்க மொழியில் ‘towards’, என்றும் ‘Opis’, என்பது மிகுதியான வளத்தின் கடவுளான இந்த ஓபிஸின் பெயரையும்தான் குறிக்கின்றது. சிற்றினத்தின் juliflora (julus, சிறு சாட்டைக் கயிறு போல தொங்கும் இதன் மலர்க்கொத்தை (flora) குறிக்கின்றது. இதன் பல்கிப்பெருகும் இயல்பையும், மிகுதியான இதன் பயன்களையும் இதன் அறிவியல் பெயரே சொல்லிவிடுகின்றது. இதன் ஆங்கில வழங்குபெயர் மெஸ்கித் (mesquite.)
சீமைக்கருவேலம், வேலிக்காத்தான், வேலிக்கருவை, உடைமரம், டெல்லி முள் செடி, மலையாளத்தில் முள்ளன், தெலுங்கில் முள்ளு தும்மா எனவும் அழைக்கப்படும் இந்த மரத்தின் விதைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் மிக அதிக எண்ணிக்கையில் எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டதென்றாலும், 1877-ம் ஆண்டே வெள்ளையர்களால் இவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன.
சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, போன்ற மரங்களை ஏராளமாக தங்களின் தேவைகளுக்கென உபயோகப்படுத்தி, அழித்த ஆங்கிலேயர்கள் அவற்றிற்கு பதிலாக, அடர்ந்த வேர்த்தொகுப்புக்கள் மண் அரிப்பைத் தடுக்கும், உறுதியான மரம் விறகுக்கு ஏற்றது, வறட்சியை தாங்கி விரைவாக வளருமென்பதால் தரிசு நில மேம்பாடு போன்ற காரணங்களை முன்வைத்து இம்மரங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
தென்னிந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் விளைவிக்க இம்மரத்தின் விதைகளை அப்போதைய மதராஸின் வடக்கு மாகாண வனப்பாதுகாவலராக இருந்த பெண்டோம் (Col. R.H. Bendome) 1877’ல் ஜமைக்காவிலிருந்து தருவித்தார். இதன் பொருட்டு அவரெழுதிய கடிதம் இன்னும் அரசுஆவணங்களில் இருக்கிறது அதன் ஒரு பகுதி;
“The Prosopis dulcis, the Prosopis pubescens and P. glandulosa – are stated to grow best on dry arid soil. They yield hard and valuable timber and also an abundance of sweet succulent pods which are used for cattle feeding and also ground into meal. It is very desirable to introduce these trees into the fuel plantations in our dry districts; and I have the honour to suggest that the British Consuls at Galveston and San Francisco should be applied to for the seed. The Prosopis juliflora is a species growing in Jamaica which I should be very glad to get seed of
Request for Prosopis seed made by Lt. Col. RH Bedome, Conservator of Forests of Northern Circle (Madras) to the Secretary of the Revenue Department of Madras in 1876
Prosopis பேரினத்தின் 44 சிற்றினங்களில் பலவற்றை அப்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தாலும் ஜூலிஃப்ளோராவும், பல்லிடாவுமே இங்கு செழித்து வளரந்தது. இப்போதும் P. juliflora P.pallida இரண்டுமே தோற்றம், வளர்ச்சி , பூக்கும் காலம் உள்ளிட்ட பல ஒற்றுமைகளை கொண்டிருப்பவை. இவ்விரண்டையும் அத்தனை சுலபத்தில் வேறுபடுத்திவிட தாவரவியலாளர்களாலேயே முடியாது. இதன் சிற்றினங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துதலில் பலமுறை இனங்காணுதலின் பிழைகள் (taxonomical errors) ஹவாய், சூடான் மற்றும் பெரு’வில் பலமுறை நடந்து பின்னரே சரி செய்யப்பட்டது.
அப்போது அத்தனை விரைவாக இந்தியாவில் பரவியிருக்காத இவற்றை 1953ல் மதராஸ் கால்நடைதீவனத்துறை விறகுக்காகவும் தீவனத்திற்காகவும் அதிகம் வளர்க்க முடிவுசெய்தது. இவற்றின் விதைகளும் நாற்றுக்களும் கிடைக்குமிடங்கள் நாளிதழ்களில் கூட விளம்பரப்படுத்தப்பட்டன. பின்னர் இதன் பயன்களை தெரிந்து காமராஜர் இவற்றை தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் அறிமுகப்படுத்தினார்.
நிலத்தடி நீரை நாடிச்செல்லும் வேர்களைக் கொண்டிருக்கும் phreatophyte வகையைச் சேர்ந்த தாவரமான இம்மரத்தில் பசுமஞ்சள் உருளைகளாக மலர்க்கொத்துக்களும், சங்கிலி்களைப்போலிருக்கும் வெடிக்காத கனிகளும், மிக உறுதியான முட்களும் இருக்கும். சிறிய கூட்டிலைகளையும் பிசினையும் கொண்டிருக்கும் இவை நீர்வளம் இருக்கும் பகுதிகளில் வளருகையில் தரமான தேனையும் கொடுக்கும். நட்ட மூன்றாவது வருடத்திலிருந்து பூத்துக்காய்க்க துவங்கும். பூக்கும் காலங்களில் மழைப்பொழிவிருப்பின் 3 அல்லது 4 மடங்கு கனிகளை உருவாக்கும்.
இந்தியாவில் இவை அறிமுகப்படுத்தபட்டபோது இதன் விதைகளை வாங்க உழவர்கள் வரிசையில் காத்திருந்தனர். உயிர்வேலியாக இதன் உபயோகத்தை கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தார்கள். இனிக்கும் இம்மரத்தின் காய்களை ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிட்டன. தமிழக சத்துணவு கூடங்களின் அடுப்புகளில் சீமைக்கருவேல விறகுகள் எரிந்து பல்லாயிரக்கணக்கான் குழந்தைகளின் பசியாற்றியது,. இதனால் விறகுக்காக முன்னர் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த பிற காட்டு மரங்களும் பிழைத்தன.
8 மாதங்களுக்கு முற்றிலும் மழையில்லாவிட்டாலும் பசுமை மாறாத மரங்களாகவே இருக்கும். செடியாகவும், அடந்த புதராகவும், விறகுக்காகவெனில் மரங்களாகவும் இவற்றை தேவைக்கேற்ப வளர்க்கலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளில் உலகின் பலபகுதிகளிலும் சாதாரணமாக காணப்படும் மரமாகிவிட்ட இவற்றின் ஆயிரக்கணக்கான விதைகள் விழுந்து ஏராளமான நாற்றுக்களும் முளைத்தன. இதன் விதைகளை உண்ணும் கால்நடைகளின் சாணத்திலிருக்கும் செரிமானமாகாத விதைகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளுக்கு பல்கிப்பரவி, அறிமுகப்படுத்தபட்ட சில வருடஙகளிலேயே இதன் பயன்பாடுகள் குறித்த வெற்றிக் கதைகளினால் Royal plant என்றழைக்கப்பட்ட சீமைக்கருவேலம், பின்னர் ஆக்ரமிக்கும் இதன் இயல்பினால் 2004ல் உலகின் மிகக்குறைவாக விரும்பப்படும் 100 தாவரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்து சாத்தானின் செடி என்று பெயர் வாங்கியது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியிருக்கும் இவை இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசத்தை தவிர அனைத்துப்பகுதிகளிலுமே பரவியிருக்கின்றது
கடும் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடிய, நோயோ பூச்சிதாக்குதலோ நெருங்காத எதிர்ப்புச்சக்தி கொண்டிருக்கும், சீராக புகைகுறைவாக எரியக்கூடிய விறகையும், நல்ல தரமான கரிக்கட்டிகளையும் தரக்கூடிய, மனிதர்களுக்கு உணவாக, கால்நடைத்தீவனமாக, நல்லசுவையான. உயர்தர ஒரு மரப்பூக்களின் தேனை ( monofloral honey) கொடுக்கின்ற, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல உபயோகங்களுள்ள பிசினையும் தருகின்ற, மரச்சாமான்களை செய்ய அழகிய வண்ணங்கள் உள்ள உறுதியான மரத்தையும் கொடுக்கின்ற, வேர்கள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்துவதால் மண்ணை வளமாக்குகின்ற, பாலை நிலங்களில் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்துகிற, மரப்பட்டையிலிருந்து உறுதியான நாரை தருகிற என இதன் பயன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். உலகின் பல பகுதிகளில் வளமான நிலங்கள், பாலையாகுதல் (Desertification) எனும் வறட்சிக்கு உள்ளாகுதலையும் இந்த மரம் மட்டுமே தடுத்து நிறுத்தியது.
இவை மண் அரிப்பை தடுக்கும், பாலைகளை பசுமையாக்கும், கனிகளின் பொடி உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. கிராமப்புறங்களின் எரிபொருள் தேவைகளை இப்போதும் இம்மரங்களே தீர்க்கின்றன.
விறகாக, கரியாக, கரித்துகளாக மாற்றம் செய்யப்பட்ட இம்மரம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கும், நீராவியால் இயங்கும் ஆலைகளுக்கும், சுண்ணாம்பு களவாய்களுக்கும் எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கரும்பு ஒரு டன் விலை இரண்டாயிரத்திலிருந்து நாலாயிரம் ரூபாய்கள், ஆனால் ஒரு டன் சீமைக்கருவேலங்கரி 8’லிருந்து 11 ஆயிரம் வரை விலை போவதால், இவை வளரும் பகுதிகளில் விறகு வெட்டும் தொழில் அதிகளவில் நடக்கிறது. கார்பன் மற்றும் லிக்னின் அதிகமாக இருப்பதால் நல்ல வெப்பத்துடன் சீராக எரியும் உறுதியான விறகுகள் இதிலிருந்தே கிடைக்கின்றது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரம் வளர்த்தி, விறகாக வெட்டி கரிமூட்டம் போட்டு விற்பனை செய்வது அதிக அளவில் நடக்கும் தொழில். குஜராத் வியாபாரிகள் இம்மரத்தின் கரிகளை ஏராளமாக வாங்கி மும்பை உள்ளிட்ட பல பகுதிகளிலும் விற்பனை செய்கிறார்கள்.
சீமைக்கருவேல மரங்களின் விறகை கரிமூட்டம் போட்டு எடுக்கப்படும் செங்கற்களைப் போன்ற பெரிய கரிக்கட்டிகளைக் கொண்டு உறுதியான கட்டிடச்சுவர்களும் கட்டப்படுகின்றது. விவசாயம் செய்யவே முடியாத வறண்ட நிலங்களில் எரி்கரிக்காக இவற்றை வளர்த்து பல குடும்பங்கள் நிமிர்ந்திருக்கின்றன
பெரு மற்றும் அர்ஜெண்டினாவில் அலுவா (Aluá) மற்றும் அல்காரோபினா (Algarrobina) எனப்படும் மிதமான போதையூட்டும் பானங்கள் பொடியாக்கப்பட்ட இதன் கனிகளுடன் பாலை கலத்து நொதிக்கவைத்து தயாரிக்கப்படுகின்றது, பன்னெடுங்காலத்திலிருந்தே இதன் கனிகளை தூளாக்கிய மாவிலிருந்து கஞ்சியும் இப்படியான பானங்களும் தயாரிக்கப்படுகின்றன.
மெக்சிகோவில் இதிலிருந்து தயாரிக்கப்படும் “mezquitamal,” “mezquiteatole,” “pinole,” ஆகிய மது வகைகள் மிகப்பிரபலம். இதன் மருத்துவப்பயன்களுக்காகவும் இவை பெரிதும் அறியப்பட்டிருக்கின்றன.
தென்னமரிக்காவில் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருந்தொன்று இதிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. கிருமித்தொற்றை, புற்றுக்கட்டிகளை குணமாக்க இம்மரத்தின் இலைகளுள்ளிட்ட பல பாகங்களும் பழங்குடி இனத்தவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
மரப்பட்டைகளிலிருந்து கிடைக்கும் ’டானின்’ தோல்பதனிடும் தொழிலில் உபயோகப்படுகின்றது. பூச்சிஅரிக்காத, உளுத்துப்போகாமல் நீடித்து உழைக்கும் தன்மையுடைய மரமாதலால், வீடுகளின் கட்டுமானப்பணிகளிக்கு, மரச்சாமான்கள் செய்ய, மரத்தரை அமைக்க (Parquet Wood Flooring) என இதன் பயன்கள் மிக அதிகம்.
அதிக புகையோ, தீக்கொழுந்துகளோ இல்லாமல் மந்தமாக எரியும் கடினத்தன்மை மிகுந்த இம்மரத்தின் எரிகரிதான் பார்பிக்யூ அடுப்புக்களிலும் உபயோகப்படுத்தப் படுகிறது.. அமெரிக்க பார்பிக்யூ அடுப்புக்களுக்கு உபயோகப்படும் எரிகரியின் பெரும்பகுதி வடக்கு மெக்சிகோவின் சொனாரா பாலையின் ப்ரொசாபிஸ் மரங்களிலிருந்தே வருகின்றது
தமிழ்நாட்டில் 2016’ல் இம்மரங்களின் தீமைகள் குறித்து பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டபோது மதுரை மற்றும் சென்னை நீதிமன்றங்கள் உடனே இவற்றை வேருடன் அகற்ற உத்தரவிட்டிருந்தது. அப்போது சீமைக்கருவேலத்தையும் நாட்டுக்கருவேலத்தையும் பிரித்தறியத்தெரியாமல் பல இடங்களில் அவற்றுடன் சேர்த்து நாட்டுக்கருவேலங்களும் வெட்டப்பட்டன. (கருவேலமரம் (Acacia nilotica), மஞ்சள் நிற சிறு சிறு உருண்டை பந்துகளாக மலர்களை கொண்டிருக்கும். சீமை கருவேலமரம் சங்கிலிகளை போல தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சள் மலர்மஞ்சரிகளை கொண்டிருக்கும்.) பின் தாவரவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் தலையிட்டபின்னர் இதன் பின்னிருக்கும் உண்மைகளும், அறிவியல் பூர்வமான தகவல்களும் கேட்கப்பட்டிருக்கின்றது.
இம்மரங்களின் மீது வைக்கப்படும் ’’மேய்ச்சல் நிலங்ளை ஆக்ரமித்தல். இயல் தாவரங்களுக்கு வலுவான போட்டியாக இருத்தல், நீராதாரங்களிலிருந்து அதிக நீரை உறிஞ்சுதல்’’ போன்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கின்றது எனினும் இதை உண்ணும் விலங்குகள் மலடாகின்றன, 150 அடிஆழம் வரை இம்மரத்தின் வேர்கள் இறங்கும், ஆக்ஸிஜனை குறைவாகவே இது வெளியிடும், போன்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை,
அறிமுகப்படுத்தப்பட்டபோது பாராட்டி சீராட்டி வளர்த்து பயன் பெற்றுவிட்டு இப்போது பட்டிதொட்டிகளிலெல்லாம் பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வந்தபின்னால் இவற்றை வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றமென்பதைபோல ஒரேயடியாக குற்றம்சாட்டி, இப்போது இம்மரங்ளின் மீதுவெறுப்பு அலையே வீசுகிறது. குற்றம் சாட்டும் பலருக்கு இம்மரத்தை அடையாளம் காணக்கூட தெரியாது. சீமைக்கருவேலம் மட்டுமல்ல எந்த தாவரமுமே இப்படி பேயைப்போல, அரக்கனைப்போல, வில்லனைப்போல சித்தரித்து வெறுக்கத்தக்கதல்ல.
இவை முற்றிலுமாக அகற்றப்பட்டால் விறகுக்காக பிற காட்டுமரங்கள் வெட்டப்பட்டு, வனவளம் வெகுவேகமாக குறைந்துவிடும் அபாயம் இருக்கின்றது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சீமைக்கருவேல மரங்கள் விறகுக்காகக் கொண்டு செல்லப்படுவதை சாலையில் பயணிக்கையில் பார்க்கலாம். எரிபொருளின் தேவைகள் இன்னும் அதிகமாகும் சாத்தியங்கள் இருக்கையில் அவசரப்பட்டு இவற்றை முற்றிலுமாக அகற்றக்கூடாது.
நீர்நிலைகளின் அருகில் இருப்பவற்றை கட்டாயமாக வேருடன் பிடுங்கி அகற்றவேண்டும். மூன்று அல்லது நான்கு வருடங்கள் தொடர்ந்து இவற்றின் வளர்ச்சியை கவனமாக கண்காணித்து மண்ணுக்குள்ளிருக்கும் விதைகள் முளைக்கையில் உடனே அவற்றை அகற்றிக் கொண்டுமிருந்தால் இவற்றை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தரிசு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் வளரும் இவற்றை அழிக்கவேண்டியதில்லை. இவற்றின் பயன்பாடுகளை பரவலாக அறியச்செய்து இவை நீர்நிலைகளின் அருகில் வளர்வதை கவனமாக கட்டுக்குள் கொண்டு வந்தால் போதும்
வேகமாக வளர்கிறது அதிகமாக பரவுகின்றது என்பதற்காக இவற்றை எல்லா இடங்களிலும் வேரோடு அழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது சரியல்ல .
சீமைக்கருவேலத்தின் அறிவியல் பெயரிலிருக்கும் வளங்களை அள்ளிக்கொடுக்கும் நிலத்தின் கடவுளான ஓபிஸ் என்னும் பேரினப்பெயருக்கு ஏற்றாற்போல, இம்மரமும் பல விதங்களில் பயனாகிறது. இதை வழிபடும் நாடுகள் கூட இன்றும் உள்ளன.இம்மரங்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வெனிஸுலா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவின் மூரித்தானியா (MauritanIa) வில் ப்ரொசாபிஸ் தபால் தலைகளில் இடம்பெற்றிருக்கின்றது.
கோவை வன மரபியல் மற்றும் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனமான IFGTB (institute of forest genetics and tree breeding) சீமைகருவேலங்களை முற்றிலும் அழிப்பதென்பது சாத்தியமில்லை இவற்றின் விதைகளிலிருந்து இவை மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டேதான் இருக்குமென்கிறது
ஜோத்பூருக்கு அருகிலிருக்கும் மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனமும்,(Central Arid Zone Research Institute (CAZRI)) வேருடன் அழித்தாலும் சில ஆண்டுகளிலேயே மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் விதைகளின் மூலம் இவை மீண்டும் பல்கிப்பெருகுமென்றே தெரிவிக்கின்றது.
இதன் விதைகளை வறுத்துப்பொடித்து ஜூலி காஃபீ (juli coffee) என்னும் காஃபித்தூளையும், இதன் விதைத்தூளுடன் பழச்சாறூம் பாலும் சேர்த்து ஒரு சத்துபானத்தையும் தயாரித்து புழக்கத்தில் கொண்டு வந்திருக்கின்றது இந்த ஆராய்ச்சி நிறுவனம். விதை நீக்கிய கனிகளை பொடித்து கால்நடைத்தீவனக்கட்டிகளும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன..
இனிப்புச்சுவையுடைய இந்த கட்டிகளை ஆடுமாடுகளும், பாலையில் ஒட்டகங்களும் வனவிலங்குகளும் விரும்பி உண்ணுகின்றன .இப்படி உபயோகமாக ஆய்வுகள் செய்யலாம், உடனே வெட்டி அகற்ற உத்தரவுகள் போடாமல்.
சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றியவுடன் மண் வளம் சீராகிவிடும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிடும் என்பதெல்லாம் இல்லை. ஒரிடத்தில் ஏராளமாக பரவி, அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் தாவரங்களை ஒரேயடியாக அகற்றுகையில் அந்த இடத்தின் தட்ப வெப்பம் உடனே மாறும்; அதை ஈடு செய்ய மாற்று நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துவிட்டே இவற்றை அகற்ற முனையவேண்டும்
மேலும் இந்த மரங்களின் விறகை, இதிலிருந்து எடுக்கப்படும் தேன், பிசின் மற்றும் கரி ஆகியவற்றை மட்டும் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் வறண்ட பூமியைச்சேர்ந்த குடும்பங்களையும் நினைத்துப்பார்க்க வேண்டும்.
இந்தியாவின் மொத்த தாவர இனங்களில் 40 சதவீதம் யூகலிப்டஸ், சீமைக்கருவேலம், பார்த்தீனியம் உள்ளிட்ட அயல்தாவரங்கள்தான் இந்த 40% ல் 25% சதவீதம் ஆக்ரமிக்கும் தாவரங்கள். ஆனால் சீமைகருவேலத்தைக்குறித்து மட்டும் எப்படியோ ஒரு பெரும் வெறுப்பு மக்களிடையே உண்டாகிவிட்டிருக்கிறது
எந்த பயனுமற்ற நச்சுச்செடியான பார்த்தினிய ஒழிப்பிற்கெல்லாம் யாருமே மெனக்கெடவில்லை நீதிமன்றம் தலையிட்டதில்லை. மாநில மரமான பனைகளை வெட்டி செங்கல் சூளைகளுக்கு லாரிலாரியாக கொண்டு செல்லப்படுவதறகு யாரும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. சீமைக்ருவேல ஒழிப்பிற்கு தனி இயக்கம் துவங்கியவர்கள் மாநில மரமான பனை பாதுகாப்பிற்கு ஏன் இயக்கம் துவங்க நினைக்கவில்லை என்பது புதிர்தான், ஆக்ரமிப்புகளைகளை அகற்றுவதில் இருக்கும் முனைப்பு மாநில மரங்களின் பாதுகாப்பிற்கும் இருக்கலாமென்பதே என் ஆதங்கம்
சீமைக்கருவேலங்களை செங்கல் சூலைகளுக்கு பயன்படுத்தினால் பனைகளும் காப்பாற்றப்படும் இவற்றின் ஆக்கிரமிப்பும் கட்டுக்குள் வரும்.
சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடிநீர் அதிகம் உறிஞ்சப்படுவதென்பது உண்மைதான் ஆனால் இந்த மரங்களை விட அதிகம் நீர் உறிஞ்சும் மினரல் வாட்டர் தொழிற்சாலைகள், கழிவுகளை நீரில் கலக்கும் ஆலைகள், யானை வழித்தடங்களை ஆக்ரமித்திருக்கும் ரிசார்ட்டுகள் ஏராளம் இருக்கின்றனவே!
சீமைக்கருவேலமரங்களின் விஷயத்தில் சூழல் ஆர்வலர்களுக்கும். தாவரவியலாளர்களுக்கும் இடையிலிருக்கும் இடைவெளியை குறைத்தாலே இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
புதிய சூழல்களுக்கு அறிமுகமாயிருக்கும் தாவரங்களை அரசும் சூழலியலாளர்களும் தாவரவியலாளர்களும் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவை ஆக்ரமிப்புக்களைகளாக மாறியபின்னர் அவற்றை அகற்ற இயக்கங்கள் தொடங்கி, பொது நல வழக்குகள் போடுவதைவிடவும் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவலை கட்டுக்குள் வைப்பதைக்குறித்து ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்
தற்போது சூழலுக்கு புதிய அச்சுறுத்தல்களாகி இருக்கும் சந்தைகளில் பொன்னாங்கண்ணி கீரை என விற்பனை செய்யப்படும் கழிவுநீரில் வளர்ந்து அந்நீரின் உலோக மாசுக்களை இலைகளில் சேமித்து வைத்திருக்கும் சீமைப்பொன்னாங்கண்ணி ( Alternanthera philoxeroides ), செழித்து வளர்ந்து வேகமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து வெறும் மணல் தடங்களாக மாற்றிக்கொண்டிருக்கும் நெய்வேலி காட்டாமணக்கு (Ipomea carnea), உலகெங்கிலுமே ஆக்ரமிப்பு களையாக நீர்வழிபோக்குவரத்துக்கு பெரும் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொண்டிருக்கும், 1890 ல் பிரிடிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹாஸ்டிங்ஸின் மனைவியால் ஹூக்ளி நதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆகாயத்தாமரை (Eichhornia crassipes) ஆகிய அயல் ஆக்ரமிப்பு தாவரங்களின் பரவலும் உடனடி கவனம் கோருபவை.
சென்ற பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழுக் கூட்டம் முடிவடைந்த பின் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் எண்ம ரூபாய்களில் முதலீடு செய்பவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அதை செய்யவேண்டும் என்றும் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது தன் கடமை என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்!
கடந்த சில வருடங்களாக பிட்காயின், எதீரியம், சொலோனா, ஷிபாஇனு, டோஜ் காயின் மேட்டிக், டெதர், டெரா, கார்டோனா போன்ற நுண் நாணயங்களிலும், எண்ம நாணய குறியீடுகளிலும் ஏராளமானோர் பங்கு வர்த்தக முதலீடுகள் செய்து லாபமும் அடைந்து வருகின்றனர்.
எனினும் தனியார் எண்ம நாணயங்களில் செய்யப்படும் அதிகப்படியான முதலீடுகள் இந்தியாவின் பருப்பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அவற்றின் சமநிலையை குலைத்துவிடும் என்று சொன்ன சக்திகாந்ததாஸ், 17 ஆம் நூற்றாண்டின் ஆகப்பெரிய பொருளாதார சிக்கலான ட்யூலிப் மலர் பித்தை (Tulipmania) உதாரணமாக காட்டி அதுபோல மீண்டும் நடந்துவிடக்கூடாது என எச்சரித்திருந்தார். 1
இந்த அறிவிப்பு வெளியான சில நொடிகளில் இருந்து ட்யூலிப் மேனியா என்றால் என்னவென்று பல்லாயிரக்கணக்கானோர் தேடுபொறியில் தேடத் தொடங்கினர். 2
17ம் நூற்றாண்டில் ட்யூலிப் மலர்களின் அசல் மதிப்பிற்கல்லாது லாபத்தின் பொருட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட விலையேற்றத்தால் ட்யூலிப் கிழங்குகளின் பங்கு வர்த்தக சந்தை உச்சத்தை தொட்டு, திடீரென சரிந்து பல்லாயிரக்கணக்கானோர் நஷ்டமடைந்தனர் உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட பொருளாதார சிக்கல் இதுவே என வரலாற்றாய்வாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. 1634-37 ல் நிகழ்ந்த இந்த ட்யூலிப் மலர்கள் மீது மக்களுக்கு உண்டான பித்து மிக சுவாரஸ்யமானது.
மத்திய ஆசியாவின் காட்டுப்பயிரான ட்யூலிப் செடிகள் துருக்கியில் 1000 மாவது ஆண்டிலிருந்து பயிராக்கப்பட்டன.
ஏறக்குறைய 600 வருடங்கள் ஆட்சிபுரிந்து 1922 ல் முடிவுக்கு வந்த உலகின் மிகப்பெரியதும் சக்தி வாய்ந்ததுமான ராஜ்ஜியமான துருக்கிய பழங்குடியினரின் ஒட்டமான் பேரரசின் (Ottoman Empire, 1299–1922), குறியீடாகவே ட்யூலிப் மலர்கள் இருந்தன.
அரண்மனை தோட்டங்களில் மட்டும் பயிராகிக்கொண்டிருந்த ஒட்டமான் அரச வம்சத்தினரின் விருப்பத்துக்குகந்த ட்யூலிப் மலர்ச்செடிகள் மெல்ல மெல்ல நாடெங்கிலும் பரவி வளர துவங்கின. ட்யூலிப் மலர்களின் அழகுக்காக அவை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. ஒட்டமான் மன்னரான சுல்தான் இரண்டாம் செலிம் சிரியாவிலிருந்து 50ஆயிரம் ட்யூலிப் கிழங்குகளை தருவித்து நாடெங்கும் அவற்றை பயிரிட்டார்.
அப்போது ஓட்டமான் அரசவையில் மிகச்செல்வாக்குடன் இருந்த வியன்னாவின் தூதுவர் ஓஜெர் கைஸெலின் டி பஸ்பெக் (Ogier Ghiselain de Busbecq) , ட்யூலிப்களை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தார். எழுத்தாளரும் மூலிகை நிபுணருமான இவர் அரிய பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரே 6 ம் நூற்றாண்டை சேர்ந்த டயாஸ்கொரிடஸின் தெ மெடீரியா மெடிகா வின் அசல் பிரதியை தேடிக்கண்டடைந்தவர். இவர் துருக்கியின் ட்யூலிப் மலர்களை பெரிதும் ஆராதித்தார்.
துருக்கி மக்களுக்கு ட்யூலிப் மலர்களை தலைப்பாகையில் சூடிக்கொள்ளும் வழக்கமிருந்தது. ஒருமுறை பயணத்திலிருக்கையில் வழியில் பலர் ட்யூலிப் மலர்களை தலைப்பாகையில் செருகிக் கொண்டிருப்பதை பார்த்த ஓஜெர் தலையிலிருக்கும் அம்மலர்களின் பெயரென்ன? என்று கேட்கையில் அவருக்கு தலைப்பாகையின் பெயரான ’ட்யூலிபா’ பதிலாக சொல்லப்பட்டது. அதையே அவர் அம்மலர்களின் பெயராக தவறாக நினைத்துக் கொண்டார் என்கிறது தாவரவியல் வரலாறு. எனவே ட்யூலிபா என்றே அவர் அம்மலர்களை குறிப்பிட்டார்.(துருக்கியமொழியில் ட்யூலிபா என்றால் தலைப்பாகை.)
1551ல் இவர் ட்யூலிப் விதைகளை துருக்கியிலிருந்து ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஐரோப்பாவெங்கும் ட்யூலிப் செடிகள் பயிராக துவங்கின.
பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரின் மாபெரும் துறைமுகத்துக்கு 1562ல் ஒட்டோமான் பேரரசின் தலைநகரமான கான்ஸ்டண்டினோபிலிலிருந்து சரக்கு கப்பலில் வந்த ட்யூலிப் கிழங்குகள் ஐரோப்பாவின் ட்யூலிப் தோட்டக்கலை துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
16 ம் நூற்றாண்டின் மிகப்புகழ்பெற்ற தோட்டக்கலை நிபுணரும் நவீன தாவரவியல் துறையை தோற்றுவித்தவரும் ஃப்ரெஞ்ச் தாவரவியலாளருமான கரோலஸ் க்ளூசிஸ் (Carolus Clusius) ஐரோப்பாவில் பல புதிய ட்யூலிப் வகைகளை பயிராக்கிய பெருமைக்கு உரியவர். ட்யூலிப் மலர்களின் நிற வேறுபாடு குறித்து ஏராளமான ஆய்வுகளையும் இவர் செய்தார். இன்றைய டச்சு ட்யூலிப் வணிகத்துக்கு அடித்தளமிட்ட கரோலஸ் அழகிய தோட்டங்களின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார் இவரே உருளைக்கிழங்கையும், வெங்காயத் தாமரையையும் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்
1573 லிருந்து 1587 வரை வியன்னாவின் புனித ரோமப்பேரரசர் பூங்காவின் இயக்குநராக இருந்த காலத்தில் அங்கு அவரால் வளர்க்கபட்ட ட்யூலிப் செடிகளே டச்சு ட்யூலிப் தொழிலை துவங்கிவிட்டன.
1590ல் கரோலஸ் க்ளூசிஸ் லெய்டன் பல்கலைக்கழகத்தில் (University of Leiden) ட்யூலிப் தோட்டத்தை உருவாக்கிய போதுதான் துருக்கியிலிருந்து இவரது நெருங்கிய நண்பரான ஓஜெர் கைஸெலின் ட்யூலிப் விதைகளை அனுப்பி வைத்திருந்தார். இவர் எழுத்துபூர்வமாக “tulipam” என்று இவற்றின் பெயரை குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பியதால் அதிகாரபூர்வமாக இவை லத்தீனமொழியில் ட்யூலிபா என்று அழைக்கப்பட்டு பின்னர் ட்யூலிப் என்பது ஆங்கிலப்பெயராகியது
ட்யூலிப் பூங்காவிற்கு வருகை தந்த மக்களை ஆழ்ந்த நிறங்களில் மணி வடிவில் இருந்த பெரிய ட்யூலிப் மலர்களின் அழகு வெகுவாக வசீகரித்தது. 1596 மற்றும் 1598 ல் அதுவரை ஒற்றை நிறங்களில் மட்டும் இருந்த ட்யூலிப் மலரிதழ்களில் வைரஸ் தொற்றினால் பிற நிறங்களும் தீற்றல்களாக உருவானபோது அந்த மலர்கள் வெகுவாக விரும்பப்பட்டது
அப்போது ட்யூலிப் தோட்டத்திலிருந்து தீற்றல்களுடைய ட்யூலிப் செடிகளின் விதைகள் பலமுறை திருடப்பட்டன. வெகுவிரைவில் இவற்றின் விதைகள் பரவி ட்யூலிப் மலர் வர்த்தகமும் மலர்ந்து விரிந்தது. அப்போது இதன் மீது பித்துக் கொள்ள துவங்கி இருந்த மக்களால் உருவானதுதான் 1633-37 வரை நீடித்திருந்த ட்யூலிப் பித்துக்காலம்.
ட்யூலிப்கள் விதைகளிலிருந்தும் வேர்க்கிழங்குகளிலிருந்தும் பயிராகும் என்றாலும் விதைகளிலிருந்து உருவாகும் செடிகளை காட்டிலும் விரைவாக கிழங்குகளிலிருந்து செடிகள் உருவாகி மலர்களும் விரைவாக உருவானதால் பெரும்பாலும் இவை கிழங்குகளிலிருந்தே பயிர் செய்யபட்டன.
ஹாலந்தில் ட்யூலிப் கிழங்குகளை வாங்குவதும் விற்பதும் கோடைக்காலத்தில் தான் நடைபெறும். ஜூன் மாதம் மலர்ந்து முடிந்துவிட்ட ட்யூலிப்செடிகளின் கிழங்குகள் தோண்டி எடுக்கப்பட்டு காகிதங்களில் சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டு மீண்டும் அக்டோபரில் நட்டு வைக்கப்படும்.அல்லது மண்ணிலேயே விட்டுவைக்கப்படும்
தொடரும் குளிர்காலம் முழுவதும் மண்ணிற்கடியில் இருக்கும் கிழங்கு முளைத்து வளர்ந்து அடுத்த மலரும் காலத்தில்தான் மீண்டும் மலரும். இந்த குளிர்காலகட்டம் உலர் கிழங்கு மாதம் எனப்பட்டது.
ட்யூலிப் செடிகளை குறித்து நன்கு அறிந்திருக்கும் ஒரு நிபுணர் மலரும் காலம் முடிந்து இலைகள் பழுக்க துவங்குகையில் செடிகளை பார்வையிட்டு வேர்க்கிழங்குகளையும் சோதித்து, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் அதைக்குறித்து விளக்குவார் . பின்னர் கிழங்குகள் கைமாறி பணப்பரிமாற்றம் நிகழும். அடுத்த பருவத்தில் அக்கிழங்குகள் புதிய உரிமையாளரின் நிலத்தில் விளைந்து மலரும்.
பிரகாசமான நிறங்களில் இருந்த ட்யூலிப் மலர்கள் அனைவரின் விருப்பத்துக்குமுரியதாயின. ட்யூலிப் மலர்களை தோட்டத்தில் அல்லது பூச்சாடிகளில் வைத்திருக்காதவர்கள் மிக மோசமான ரசனைக்காரர்களாக கருதப்பட்டார்கள்.
செல்வச் செழிப்பின், ஆடம்பரத்தின், உயர்குடியினரின் அடையாளமாக மாறிய ட்யூலிப் மலர்களின் உற்பத்தி அதன் தேவையை காட்டிலும் மிக குறைவாக இருந்ததால் அதன் சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது,
1610ல் ஒரு குறிப்பிட்ட வகை ட்யூலிப் கிழங்கு திருமணத்தின் போது மணமகள் சார்பில் வரதட்சணையாக அளிக்கப்பட்டது. ஃப்ரான்ஸின் புகழ்பெற்ற வடிசாலை ஒன்று அவர்களது பிரபல பியர்வகை ஒன்றை ஒரு ட்யூலிப் கிழங்குக்கு பதிலாக அளித்தது.
விரைவில் ட்யூலிப் மலர்கள் டச்சு மக்களின் அந்தஸ்தின் அடையாளமாகின. இதழ்களில் குறிப்பிட்ட நிறங்களில் தீற்றல்களை கொண்டிருந்த மலர்கள் அரிதென கருதப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பனையாகின.
இப்படி பிற தாவர வர்த்தகங்களை போலவே நிகழ்ந்து கொண்டிருந்த ட்யூலிப்களின் வர்த்தகத்தில் புதிதாக உருவான பலநிற தீற்றல்களை கொண்ட மலர்களின் மீது உருவான பெரும் பித்தினால் 1634ல் பெரும் மாற்றம் உண்டானது
ஒரு மூட்டை கோதுமை வாங்க ஒரு ஃப்ளோரின் போதுமானதாக இருந்த காலத்தில் தீற்றல்களையும் நெருப்பின் பிழம்புகளைப்போன்ற நிறக்கலவையையும் கொண்டிருந்த செம்பர் அகஸ்டஸ் (Semper Augustus) என்னும் ஒரு மலர்ச்செடியின் கிழங்கு சுமார் 6,000 ஃப்ளோரின்களுக்கு விற்பனையானது .
மற்றுமொரு வர்த்தகத்தில் ஒருவர் தனது 2 சாம்பல் நிற குதிரைகளையும் 4600 ஃப்ளோரின் களையும் கொடுத்து ஒரு செம்பர் அகஸ்டஸ் கிழங்கை வாங்கி இருந்தார். வைஸ்ராய் வகை ட்யூலிப் கிழங்கொன்று நான்கு கொழுத்த காளைகள் ,8 அன்னங்கள்,12 முதிர்ந்த ஆடுகள், மற்றும் 1000 பவுண்ட் பாலாடைக்கட்டிகள் கொடுத்து வாங்கப்பட்டது.
சாகுபடி முறைகள் மேம்படுத்தப்பட்டு அதிக அளவில் ட்யூலிப் மலர் செடிகள் பயிரானபோது பங்கு வர்த்தகர்கள் இந்த வணிகத்தில் இறங்கினார்கள்.. ஒரு கட்டத்தில் பங்கு வர்த்தகர்களின் செல்வாக்கினால் ஒற்றை மலரின் விலை ஒரு வீட்டின் மதிப்பைக் காட்டிலும் கூடுதலாகவும் இருந்தது. செல்வந்தர்கள் மட்டுமல்லாது, சாதாரணர்களும் ட்யூலிப் பங்குகளில் முதலீடு செய்ய துவங்கினர்..வீடுகள் எஸ்டேட்டுகள் தொழிற்சாலைகள் என பலவற்றையும் பணயம் வைத்து ட்யூலிப்பில் முதலீடு செய்யப்பட்டது.
கிழங்குகள் மண்ணுக்கடியில் இருக்கையிலேயே உத்தேசமாக அவற்றின் எடை கணக்கிடப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. அவை தோண்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே அவற்றின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் காகிதங்களில் அவை விற்பனையாகின.
பருத்த எடை கூடிய அன்னைக்கிழங்குகளிலிருந்து புதிய குருத்துச்செடிகள் அதிகம் வரக்கூடுமென்பதால் ஒரு அன்னைக்கிழங்கிலிருந்து எத்தனை புதிய செடிகள் வரக்கூடும் என்றும் யூகிக்கப்பட்டு அவற்றின் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பலர் ட்யூலிப் கிழங்குகளை கண்ணால் கூட பார்த்திருக்கவில்லை. ஒரே நாளில் 10 கைகளுக்கு மேல் கிழங்குகளின் விலை எழுதபட்டிருந்த ஒப்பந்தங்கள் கைமாற்றி மாற்றி மேலும்மேலும் அதிக விலைக்கு விற்கபட்டன. 1633-37 வரையிலான காலத்தில் இந்த ட்யூலிப் பித்து அதன் உச்சத்தில் இருந்தது சந்தையின் உச்சத்தில், அரிதான ட்யூலிப் கிழங்குகள் ஒரு சராசரி நபரின் ஆண்டு சம்பளத்தை விட ஆறு மடங்குக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஹாலந்திலிருந்து இந்த மலர்பித்து பிரான்சுக்கும் பரவியது. அங்கும் ட்யூலிப் கிழங்குகளும் மலர்களும் மிக அதிக விலைக்கு விற்பனையாகின. அருமணிகளுக்கிணையான விலையில் விற்கப்படும் ட்யூலிப் மலர்களை வாங்கி அணிந்து கொள்ள பெண்கள் விரும்பினர்.
பிரான்ஸின் உயர்குடிப் பெண்கள் விருந்துகளின் போது மேலாடையின் கழுத்துப்பட்டைகளில் ஆபரணங்களுக்கு பதில் ட்யூலிப் மாலைகள் அணிந்து கொண்டனர்.
1637 ல் பிளேக் நோய் அங்கு பரவியது. அப்போது நடைபெற்ற ஒரு ட்யூலிப் ஏலத்தில் பெரும்பாலான பங்குதாரர்களால் கலந்து கொள்ள முடியாமல் போன போது, பங்குகளின் விலை திடீரென சரிந்து ஒரே நாளில் பல முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இதுவே ட்யூலிப்மேனியா எனப்படும் உலகின் முதல் பெரும் பொருளாதார குமிழி வெடிப்பு.
டச்சு அரசு இந்த பொருளாதார சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுத்தது. வெறும் பத்து சதவீத கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து ஒப்பந்ததாரர்களை விடுவித்தது. எனினும் பல்லாயிரக்கணக்கானோர் சொத்துக்களையும் சேமிப்புகளையும் இழந்தார்கள்
ட்யூலிப் பித்து 1637ல் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் ட்யூலிப் மலர்களின் மீதான விருப்பம் ஆழ வேர்பிடித்திருந்தது.
இன்றுவரையிலும் இந்த ட்யூலிப் மலர் பித்து அதிகப்படியான பேராசையால் உண்டாகும் ஆபத்துகளுக்கு ஒரு உவமையாக சொல்லப்படுகிறது.
ட்யூலிப்கள் லில்லியேசியே என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. தற்போது உலகெங்கிலும் ஏராளமாக வளர்க்கப்படுகின்றது .6 செ மீ அளவிலுள்ள இந்த ட்யுலிப் மலர்களில் அகன்ற அடிப்பகுதியும் கூர் நுனியுமுள்ள 6 இதழ்கள் இரட்டை அடுக்கில் மூன்று மூன்றாக நெருக்கமாக அமைந்திருக்கும். அல்லி வட்டத்தின் மூன்று இதழ்களும் புல்லிவட்டத்தின் மூன்று இதழ்களும் இணைந்து ஒன்றே போல் தோற்றமளிக்கும். இவை ஆங்கிலத்தில் tepal எனப்படும். ஒரு செடியிலிருந்து உருவாகும் 2 அடிநீளமுள்ள ஒற்றை மலர்த்தண்டில் பெரும்பாலும் ஒரே ஒரு மலர் மலர்ந்திருக்கும். அரிதாக இரு மலர்கள் உருவாகும். 2 லிருந்து 6 வரை மத்திய பகுதியில் அகன்றும் மேல் கீழ் நுனிகளில் குறுகியும் இருக்கும் நீளமான சதைப்பற்றுள்ள ரிப்பனைப்போன்ற நீலப்பச்சை இலைகள் காம்புகளின்றி நேரடியாக இச்செடியின் தண்டுகளின் அடிப்பகுதியிலிருந்து உருவாகி மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மண்ணிற்கடியில் உருண்டையான பளபளப்பான கிழங்குகள் இருக்கும். இவற்றின் சிறு வெடி கனி ஏராளமான சிறிய விதைகளை கொண்டிருக்கும். மென்மணம்கொண்டிருக்கும் ட்யூலிப்பின் இருபால் மலர்கள் ஏப்ரல் மே மாதங்களில் மலரும்.
தூய வெள்ளை நிறத்திலிருந்து சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் என தனி நிறங்களிலும், பல நிறங்கள் இணைந்தும், கலவையான நிறத்தீற்றல்களுடனும் இருக்கும் ட்யூலிப் மலர்கள் நீல நிறத்தில் மட்டும் இல்லை. நீல வைரம் என அழைக்கப்படும் வகையும் இளம் ஊதா நிற ட்யூலிப் மலர்தான். தோட்டக்கலை நிபுணர்கள் நீல ட்யூலிப்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஸ்விட்சர்லாந்தின் தாவரவியளாலரான கொனார்ட்கெஸ்னெரே (Conrad Gessner -1516-1565) ட்யூலிப்களின் நிறங்களை குறித்து முதலில் எழுதி ஆவணப்படுத்தியவர். 1559 ல் அவர் பவேரியாவின் தோட்டமொன்றில் ட்யூலிப்மலர்களை கண்டு பிரமித்து ’’ஒற்றை சிவப்பு மலர் பெரிதாக ஒரு லில்லியைப்போல’’ என்று குறிப்பிட்டார்.
மலரிதழடுக்குகளின் எண்ணிக்கை, மலரின் அளவு, மலர்செடியின் அளவு, மலரும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 4000 வகைகளில் ட்யூலிப்கள் உள்ளன. Tulipa gesneriana, என்னும் அறிவியல் பெயரை கொண்டிருக்கும் தோட்ட ட்யூலிப் செடிகளிலிருந்து கலப்பினம் செய்யப்பட் வையே பிற வகைகள்.
இவற்றில் ஒற்றை நிற இதழ்களை கொண்டவை ’செல்ப் கலர்’ என்றும் தாவர வைரஸ் தொற்றினால் வேறு நிற தீற்றல்களை கொண்டிருப்பவை ’புரோக்கன்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.
ட்யூலிப் கிழங்குகளும் மலரிதழ்களும் உண்ணத்தகுந்தவை குறைந்த அளவு ஒவ்வாமை உண்டாக்கும் tuliposide A என்னும் வேதிப்பொருள் இவற்றில் இருந்தாலும் இவை உண்ணப்படுகின்றன. இரண்டாமுலகப் போரின்போது டச்சு அரசு எவ்வாறு ட்யூலிப் கிழங்குகளை ஆபத்தின்றி உணவாக்கலாமென்று கையேடுகள் வெளியிட்டனர். கஞ்சியும் சூப்பும் மட்டுமல்லாது அப்போது கிழங்குகளை மாவாகி ரொட்டிகளும் செய்யப்பட்டன. ட்யூலிப் மலரிதழ்களும் உணவாகின்றன.
இப்போது இவை நட்சத்திர உணவகங்களில் பிரத்யேக விலை உயர்ந்த உணவாக கிடைக்கின்றன.
1600ல் பலரால் விரும்பப்பட்ட மலரிதழ்களின் நிற வேறுபாடுகள் தாவர வைரஸினால் உருவானவை என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. 1931ல்தான் தாவரவியலாளர்கள் அவை ஆபத்தற்ற வைரஸினால் உருவாகின்றன என்பதையும் அந்த வைரஸ், செடிப்பேன் மூலமாக பரவுகின்றன என்பதை கண்டறிந்தார்கள்
சுல்தான்கள் காலத்திருந்தே ட்யூலிப் மலர் வடிவங்கள் உலகின் புகழ்பெற்ற வடிவங்களாக இருக்கின்றன. ஜெர்மானிய ஓவியர் ஜேகப் மரேல் (jacob Marrel-1614-1681) ட்யூலிப் மலர் வடிவங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு நூலை வெளியிட்டார்.
அதன்பிறகு ஆடை ஆபரண, கட்டிடக்கலை வடிவங்களில் ட்யூலிப் மலர்கள் தவறாமல் இடம் பிடித்தன.
1800களில் பிரபல ஆளுமைகளின் முழு உருவ சித்திரங்கள் வரையப்பட்டபோது ட்யூலிப் மலர்களும் ஓவியங்களில் இடம்பெற்றன.1800ல் தான் பிரபல ட்யூலிப் டிஃப்ஃபானி அலங்கார விளக்குகள் உருவாகி புகழ்பெற்றன.
பெரும்பாலான ட்யூலிப் மலர்களில் நறுமணம் இல்லையெனினும் ஒருசில வகைகளில் மென்மணமும் நல்ல இனிமையான நறுமணமும் இருக்கும். ட்யூலிப் மலர்களில் நறுமணங்களை உருவாக்கும் 130 வேதிச்சேர்மங்கள் இருப்பதாக குறிப்பிடும் ஜப்பானின் 2012 ல் நடந்த ஆய்வொன்று நறுமணங்களின் அடிப்படையில் ட்யூலிப்களை
இனிப்பு மணம் கொண்டவை
பசுந்தழை யின் வாசம் கொண்டவை
பாதாம் நறுமணம் கொண்டவை
ஆரஞ்சின் மணம் கொண்டவை
தேன் மணம் கொண்டவை
ரோஜாமணம், மூலிகை மணம், மற்றும் மரங்களின் மணம் கொண்டவை என வகைப்படுத்துகின்றனது
17ஆம் நூற்றாண்டிலேயே ட்யூலிப் மலர் பித்து முடிவுக்கு வந்துவிட்டாலும் ட்யூலிப் களின் மீதான தனித்த பிரியம் அம்மக்களின் கலாச்சாரத்துடன் ஒன்று கலந்து விட்டிருக்கிறது..
நெதர்லாந்தில் 2015 லிருந்து உருவாக்கப்பட்டு வரும். நான்கு தீவுகளின் கூட்டான ட்யூலிப் தீவின் நிலத்தோற்றம் அழகிய காம்புடன் கூடிய ட்யூலிப் மலரைப் போலவே இருக்கிறது. இந்த ட்யூலிப் தீவில் 12000 ட்யூலிப் வகைகளும் வளர்க்கப்படுகின்றன. (துபாயின் பானை வடிவ தீவு டச்சு வல்லுநரால்தான் கட்டப்பட்டது. )
துருக்கியில் ட்யூலிப்கள் எப்போதும் மிகவும் பிரபலமாகவே இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ட்யூலிப்களின் காலமென்றே அழைக்கப்பட்டது. அப்போதுதான் ட்யூலிப் திருவிழாக்களும் துவங்கின. தலைநகரை தவிர பிற பகுதிகளில் ட்யூலிப் விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகவும் இருந்தது.
20 ஆம் நூற்றாண்டில் சுருக்கங்கள் கொண்ட மலரிதழ்களுடன் ட்யூலிப் மலர்கள் உருவாகின. வைரஸ் தொற்றினால் அவற்றின் நெருப்பின் தழல்போல சிவப்பு தீற்றல்கள் இருந்த வகைகள் பெரிதும் விரும்பப்பட்டன
பிரிட்டனிலும் இந்த மலர் பித்து அப்போது பரவியது இங்கிலாந்துக்கு ட்யூலிப் கிழங்குகள் 1577 ல் அறிமுகமாயின.. அப்போடிலிருந்தே இவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. புதிய கலப்பினங்களும் ஏராளம் உருவாகின, அவைகளுக்கு இங்கிலாந்தின் தாவரவியலாளர்களின் பெயர்களும் வைக்கப்பட்டன.
19ஆம் நூற்றாண்டில் ட்யூலிப்களின் விலை உச்சத்தில் இருக்கையில் பல ட்யூலிப் சாகுபடியாளர்கள் ட்யூலிப் மலர்களுக்கென்று தனித்த அமைப்புக்களையும் நூற்றுக்கணக்கில் உருவாக்கினார்கள்.
வருடாவருடம் ட்யூலிப் மலர்க்கண்காட்சிகளும் தொடர்ந்து நடந்தன. கண்காட்சிகளின்போது மிக அழகிய ட்யூலிப் வகைகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன. 1849ல் யார்க்கில் (York) நடந்த ஒரு மலர்க்கண்காட்சியில் போட்டியில் 2000 வகை ட்யூலிப்கள் இருந்ததால் நடுவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவழித்து பரிசுக்குரிவற்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.
ஆனால் முதல் உலகப்போருக்கு பின்னர் இந்த அமைப்புக்கள் பொலிவிழந்து மறைய துவங்கின 1936ல் ராயல் ட்யூலிப் அமைப்பு மூடப்படும்போது எஞ்சி இருந்தது வடக்கு இங்கிலாந்து ட்யூலிப் அமைப்பு மட்டுமே. 1836ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றும் செயல்படுகிறது. மே 2020 ல் நடக்க இருந்த அதன் 185 வது மலர் கண்காட்சி பெருந்தொற்றினால் துரதிர்ஷ்டவசமாக ரத்தானது.
ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் வரைந்த ஒரே ஒரு மலர் ட்யூலிப் தான் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அவரது மனைவி சேஸ்கியாவை ரோமானிய தொன்மங்களில் வளமை மற்றும் வசந்தத்தின் தேவதையான ஃப்ளோராவாக சித்தரித்து வரைந்த ’’தி ஃப்ளோரா’’ என தலைப்பிடப்பட்ட ஓவியத்தில் சேஸ்கியாவின் தலையலங்காரத்தில் ஒரு அருமணியைபோல தீற்றல் நிறங்களுடன் இருக்கும் ஒரு ட்யூலிப் மலர் வரையப்பட்டிருக்கிறது (the portrait “Flora”) 3
இந்த ட்யூலிப் நகலெடுத்து உருவாக்கப்பட்ட ரெம்பிராண்ட் ட்யூலிப் உள்ளிட்ட பல புது பிரபல கலப்பின ட்யூலிப்கள் இப்போது உலகெங்கிலும் வளர்கின்றன ஹாலந்தின் 7 ரெம்பிராண்ட் கிழங்குகள் 4 டாலர்களுக்கு இப்போது கிடைக்கின்றது.
ஐஸ்கிரீம்ட்யூலிப் என்றும் ஒரு புதிய வகை சமீபத்தில் உருவாக்கபட்டுள்ளது. இளஞ்சிவப்பு அடிப்பகுதியும் தூயவெண்ணிற நுனிப்பகுதியும் கொண்டிருக்கும் மலரரும்புகள் ஐஸ்கிரீம் போலவே தோற்றமளிக்கிறது.
’டான்ஸலைன்’ என்னும் புதிய ட்யூலிப் வகை வெள்ளை பல அடுக்கு மலரிதழ்களில் வைன் நிற சிறு பட்டைகளை கொண்டிருக்கும்.
ஒற்றை மலர்த்தண்டில் 5 சிவப்பு ட்யூலிப் மலர்களை கொடுக்கும் ’எஸ்டாட்டிக்’ வகையும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
முழு வெள்ளை மலரரும்புகள் முதிர முதிர ஊதா நிறம் கொண்டு முழு ஊதாவாக மாறும் வகையும் இப்போது புதிய வரவாகி இருக்கிறது.
வருடத்திற்கு 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்தி செய்தும் அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் உலகின் ட்யூலிப் வளர்ப்பில் நெதர்லாந்து முதலிடம் வகிக்கிறது . ட்யூலிப் மலர்களுக்கான திருவிழாக்கள் உலகெங்கிலும் நெதர்லாந்து ,ஸ்விட்சர்லாந்து, வாஷிங்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல இடங்களில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற தால்ஏரி அருகே ஜபர்வான் மலையடிவாரத்தில் உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்திராகாந்தி நினைவுத் தோட்டத்தில் 46 வகையைச் சேர்ந்த 20 லட்சம் ட்யூலிப் மலர்ச் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு ட்யூலிப் கண்காட்சி காஷ்மீரில் நடைபெறும். பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்ப்பதற்காக உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வருவார்கள் இந்த கண்காட்சியில் தோட்டத்திற்கு வெளியே உணவு அரங்கம், கைவினைப்பொருட்கள் அரங்கம் ஆகியவை காஷ்மீர் பாரம்பரியத்துடன் அமைக்கப்படும். அத்துடன் உலகின் தலைசிறந்த உருது கவிஞர்களும் இந்த விழாவில் பங்குபெறுவார்கள். இந்த வருட கண்காட்சி மார்ச் 20 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1962 ல் இதே மார்ச் மாதம் 18 ம் தேதி ஒரு சிகிச்சையின் பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய சில்வியா பிளாத்துக்கு அளிக்கப்பட்ட ட்யூலிப் மலர் செண்டை குறித்து அவர் எழுதிய பிரபல கவிதையின் தலைப்பும் ’ட்யூலிப்’ தான். மரணத்தை அணைத்துக்கொள்வதா அல்லது மீண்டும் துயர் நிறைந்த உலக வாழ்வுக்கு திரும்புவதா என்னும் கேள்வியை பித்துப்பிடிக்க வைக்கும் அழகு கொண்டிருக்கும் டியூலிப் மலர்கள் தன் முன்னே எழுப்புகின்றன என்றும் மிக எளிமையான மரணத்திற்கு முன்னர் அத்தனை அலங்கரமான ட்யூலிப்கள் இருப்பதன் பொருத்தமின்மையையும் இந்தக்கவிதையில் சில்வியா சொல்லுகிறார். மரணத்தின் அமைதியை கொண்டிருக்கும் மருத்துவமனையின் தூய வெண்ணிற அறையில்,உயிர்ப்புள்ள ரத்த சிவப்பு நிற ட்யூலிப் மலர்களின் இருப்பு எத்தனை முரணாக இருக்கிறது என்பதை சொல்லும் மிக அழகிய கவிதை இது. 4
ட்யூலிப்கள் மறுபிறப்பின், தயாள குணத்தின் ஆழ்ந்த அன்பின் அடையாளங்களாக கருதப்படுகின்றன. சமச்சீரான வடிவில் இருக்கும் இம்மலர்கள் 11 வது திருமண நாளின் பரிசாக அளிக்கப்படுகின்றன. மேலும் வெள்ளை மலர்கள் மன்னிப்பையும் மஞ்சள் புதிய துவக்கத்தையும், சிவப்பு புதிய உறவுகளையும் இளம் சிவப்பு நட்பையும் குறிக்க அளிக்கப்படுகின்றன.
ஹாலந்தின் கோகென்ஹா;ஃப் (Keukenhof) ட்யூலிப் தோட்டமே உலகின் மாபெரும் ட்யூலிப் தோட்டம். இங்கு சுமார் 7 மில்லியன் ட்யூலிப்கள் மலர்கின்றன. இந்த மாதத்தில் அத்தோட்டம் வானவில் தவறி பூமியில் விழுந்தது போல தோற்றமளிக்கும். அன்று துவங்கி இன்று வரையிலுமே உலகின் முன்னணி ட்யூலிப் உற்பத்தியாளராக 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்தி செய்யும் ஹாலந்து தான் இருக்கிறது.
நெதர்லாந்தின் பெரும்பகுதி மார்ச் முதல் மே வரை பெரும் மலர்க்கடலைப் போலிருக்கும் மார்ச்சில் குங்குமப்பூ மலர்வு தொடர்ந்து டஃபோடில்கள் பின்னர் ஹயாசிந்த்துகள். இறுதியாக ட்யூலிப்கள் என மே முதல் வாரம் வரையிலும் தொடர்ந்து மலர்கள் மலர்ந்திருக்கும்
இப்போது அங்கு சென்று அந்த பேரழகு மலர்க்கடலை பார்க்கையில் ட்யூலிப் மலர்கள் 17ம் நூற்றாண்டு மக்களுக்கும் மரணத்தை விழைந்த சில்வியாவிற்கும் அளித்திருக்கும் பித்து எப்படிப்பட்டது என கண்கூடாக காணமுடியும்.
லண்டனின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் லிஸ்தான் சிறுநீர்ப்பை கற்களை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். நோயாளியை மருத்துவ உதவியாளர்கள் பலமாக அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அறுவை சிகிச்சையின் இடையில் வலி தாங்க முடியாத நோயாளி திமிறி தன்னை விடுவித்துக் கொண்டு அறையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஓடி சற்று தொலைவில் இருந்த கழிப்பறையில் புகுந்து உள்ளே தாழிட்டுக் கொண்டார். மிக உறுதியான மருத்துவரான லிஸ்தான் குருதி தோய்ந்த கத்தியுடன் அவரை தொடர்ந்து ஓடிவந்து கழிப்பறை கதவை உடைத்து திறந்து, அலறிக் கொண்டிருந்த நோயாளியை தூக்கிக்கொண்டு வந்து மீண்டும் சிகிச்சையை தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.
இப்படியான அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கும் அறுவை சிகிச்சை கதைகள் பல 1846 க்கு முன்பு வரையிலும் அடிக்கடி நாளிதழ்களில் வெளியாகும்.
1841 ஜூலை 21 தேதியிட்ட நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கையில் மற்றொரு அறுவை சிகிச்சை குறித்த கட்டுரை இப்படி விவரிக்கின்றது.
//அந்த அறையில் நீண்ட உலோக மேசையில் பதினைந்து வயதே ஆன ஒல்லியான வெளுத்த அந்த சிறுவன் படுக்க வைக்கப்பட்டு இருந்தான். அவன் மிகவும் அமைதியாகவும் தைரியமாகவும் தெரிந்தான். அவனது கண்கள் ஒரு துணியால் மறைத்துக் கட்டப்பட்டிருந்தன.
அவனது தொடையில் உருவான ஒரு கட்டி, சிகிச்சைக்குக் கட்டுப்படாமல் ஆழமாக வளர்ந்து சீழ்பிடித்ததில் அவன் காலையே தொடையிலிருந்து வெட்டி நீக்க வேண்டி வந்தது. இல்லாவிட்டால் அவன் உயிருக்கு ஆபத்து. அந்த அறுவை சிகிச்சைதான் அப்போது நடக்கவிருந்தது. வெட்டி அகற்றப்பட வேண்டிய காலை ஒரு உதவியாளர் உயர்த்தி பிடித்துல் கொண்டிருந்தார். குருதி இழப்பைத் தடுக்கும் பட்டை தொடையில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது அந்த சிறுவனுக்குச் சிறிது மது புகட்டப்பட்டது.
அறுவை சிகிச்சை மருத்துவர் பளபளக்கும் கூர் கத்தியினால் தொடையின் எலும்பைத் துல்லியமாக அடையாளம் கண்டு மிக வேகமாகவும் கவனமாகவும் அறுக்கத் துவங்கினார். அந்த சிறுவனின் அலறல் மருத்துவமனை முழுவதும் கேட்டது. அவன் தலையை பின்னிருந்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்த அவன் தந்தையின் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவரோ பதட்டமின்றி அவர் வேலையில் மட்டும் கவனம் குவித்திருந்தார்//.
இன்றைய நவீன மருத்துவத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நமக்கு இக்காட்சியையும், அந்த நோயாளியின் வலியையும் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியாது. 1846-க்கு முன்பு வரை அறுவை சிகிச்சைகள் இப்படித்தான் தாங்க முடியாத வலியை நோயாளிக்களித்தபடி நடந்தன.
அப்போதைய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கையாண்டவை பித்தப்பை கற்களை அகற்றுவது, உடலின் மேற்பரப்பின் காயங்கள், புற்றுநோய் கட்டிகள் இவற்றை அகற்றுவது ஆகிவற்றை மட்டும்தான். அரிதாகவே உடலுறுப்புக்களை நீக்கும் சிகிச்சைகள் நடந்தன. வயிற்றின் உட்பகுதி, நெஞ்சுக்கூடு மற்றும் தலையோட்டுக்குள் வரும் சிக்கல்களுக்கு அறுவை சிகிச்சை அப்போது அளிக்கப்பட்டிருக்கவில்லை. அவையெல்லாம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ’’செல்லக் கூடாத பகுதிகளாக’’ மருத்துவ உலகம் அடையாளப்படுத்தி இருந்தது.
அக்காலங்களில். ஒரு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் என்பவர் மிக வேகமாகச் செயலாற்றுபவராகவே இருந்தார். ஏனெனில் அவரே அதீத குருதி இழப்பினால் நோயாளி இறப்பதை தடுப்பவர்.
பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் அப்போது நோயாளியை கட்டிலில் சேர்த்துப் பிணைந்து அவரின் அலறல்களை உதாசீனப்படுத்தியபடியே நிகழ்ந்தன. பல நோயாளிகள் அந்த கட்டிலிலேயே இறப்பதும், தப்பி பிழைத்தவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல்களினால் இறப்பதும் அதிகம் நடந்தது. கடவுளின் கருணை இருந்தவர்கள் அச்சத்தில் மயங்கினால் வலியறியாமல் இறக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அறுவை சிகிச்சையின் போது முழு நினைவுடன் இருந்த நோயாளிகள் உச்சகட்டப் பெருவலியை அனுபவித்தார்கள்.
மயக்கமூட்டும் சிகிச்சையான அனஸ்தீசியா கண்டறியப்பட்ட பின்னர் இவை அனைத்தும் மாறியது. அறுவை சிகிச்சைகள் மெதுவாக நடந்தன, செல்லக் கூடாத பாகங்களுக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பளபளக்கும் கத்திகள் தயக்கமின்றி நுழைந்தன.
மருத்துவத் துறை வரலாற்றில் பல சாதனைகள் படிப்படியாக அடையப்பட்டிருக்கின்றன என்றாலும் பெருவலியை அளிக்கும் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளை சிகிச்சையின் வலியறியாமல் நினைவிழக்கச் செய்யும் மருந்துகளின் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
அறுவை சிகிச்சைகளில் ஈதரும் குளோரோஃபார்மும் 19 -ம் நூற்றாண்டில்தான் பரவலாக உபயோகபடுத்தப்பட்டது. ஆனால் தாவர மயக்கமூட்டிகள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பெரிதும் பயன்பாட்டில் இருந்தன. தாவர மயக்கமூட்டிகளின் பயன்பாடு மிகப் பண்டைய காலத்தில் சுமேரியர்கள், பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்ட நாகரீகங்களில் இருந்திருக்கின்றது.
உலகின் முதல் வலி நீக்கியாகவும் நினைவிழக்கச்செய்யும் மருந்தாகவும் கடுமையான மது வகைகளே முன்பு அளிககப்பட்டன. குறிப்பாக போர் வீரர்களுக்கும் போரில் காயமுற்றவர்களுக்கும்.
கிமு.4200 லிருந்தே ஓபியம் பாப்பி கனிகளின் பால் மயக்கமூட்டியாக பயன்பாட்டிலிருந்திருக்கிறது.
கிமு 2250 BC ல் ஹென்பேன் (henbane) அல்லது கிறுக்குச்செடி எனப்படும் ஹையொசயாமஸ் நைஜர் (Hyoscyamus niger) செடியின் சாறு, பாப்பி கனிச்சாறு, ஹெம்லாக், மற்றும் மாண்ட்ரேக் சாறுகளில் நனைத்த பஞ்சை நோயாளியின் மூக்கில் வைத்து மயக்கமூட்டும் வழக்கம் ரோமானியர்கள் மற்றும் அரேபியர்களிடம் இருந்தது. இந்த மயக்கமூட்டும் பஞ்சுகளை சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள் (Spongia Somnifera).
கிமு 1500 முதல் ஓபியம் பாப்பி கனிச்சாறு அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்பட்டது ஆவணப்படுத்த பட்டிருக்கிறது. பின்னர் கிமு 1100- ல் சைப்ரஸ் மற்றும் அருகிலிருந்த பிரதேசங்களில் இதன் பொருட்டே பாப்பி செடிகள் பயிராக்கப் பட்டன.
சில சொலனேசி குடும்பத் தாவரங்கள், மாண்ட்ரேக், ஹென்பேன் மற்றும் ஊமத்தையின் பல சிற்றினங்களில் இருந்த ட்ரோபேன் ஆல்கலாய்டுகள் வீரியமிக்கவை என்பதால் பண்டைய ரோமிலும் கிரேக்கத்திலும் இவை மயக்கமூட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஹிப்போகிராடெஸ் மற்றும் ப்ளைனி ஆகியோர் ஓபியம் மற்றும் சொலனம் தாவரங்களின் வலி நிவாரணம் அளிக்கும் மற்றும் நினைவழிக்கும் பண்புகள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அமெரிக்க பழங்குடியினர் கொகேய்ன் மரத்தின் இலைகளை மயக்கமூட்டியாக பயன்படுத்தினர். இன்கா பழங்குடிகள் இந்த இலைகளை மென்று காயங்களின் துப்பி சருமம் மரத்துப் போனபின்பு காயங்களை சுத்தம் செய்து தைத்து சிகிச்சை அளித்தார்கள்.
பாபிலோனியர்களும் பல் சிகிச்சையின் போது வாய் மரத்து போக கொகேய்ன் இலைகளை பயன்படுத்தினார்கள்.
தென்னமெரிக்க பழங்குடியினத்தவர்கள் அம்பு நுனிகளில் தடவும் தாவர நஞ்சான க்யூராரி (Curare) வேட்டைவிலங்குகளைச் செயலிழக்கச் செய்யும். தசைகளை இலகுவாக்கி நோயாளிகளை அமைதிப்படுத்தும் பொருட்டு இந்த க்யூராரி அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தபட்டது.
இப்படிப் பல நூறு தாவரங்கள் பழங்குடியினரால் இன்றும் மயக்க மூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் பன்யாரோ (Banyoro) பழங்குடியினர், சிக்கலாகிவிடும் பிரசவங்களின் போது வாழைப்பழங்களின் மதுவை கர்ப்பிணிகளுக்கு அளித்து, பாதி நினைவிலிருக்கும் அவர்களையும் ஒத்துழைக்கச் செய்து வலியில்லாமல் சிசேரியன் பிரசவங்களை நடத்துகிறார்கள்.
கோலக்காய் (Wintergreen) எனப்படும் நறுமணத் தாவரங்களிலிருந்து கிடைக்கும் எண்ணையும் முடக்கு வாதம் மற்றும் பல வலிகளுக்கு நிவாரணியாகவும் அறுவை சிகிச்சையில் மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது.
ஆப்பிரிக்க க்கனிமரமான Vitex doniana வின் மரப் பட்டைச்சாறு நாள்பட்ட காயங்களை வலியின்றி சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது. (இந்தக் கனியை கருப்பு ப்ளம் என்றும், அதையே நாவல் பழம் என்றும் சில தளங்கள், குறிப்பாக விக்சனரியும் சொல்கின்றன.)
சூரிய காந்தி குடும்பத்தை சேர்ந்த பல்வலிப்பூண்டு என்று அழைக்கப்படும் Spilathes acmella இலைகளும் மலர் மஞ்சரிக் கூம்புகளும் முடக்கு வாத வலி சிகிச்சையிலும் பல் சிகிச்சையிலும் மரத்துப்போகும் உணர்வை அளிக்கும் பொருட்டு பன்னெடுங்காலமாக பழங்குடியினரால் மாற்று மருத்துவச் சிகிச்சைகளில் பயன்படுத்தபடுகிறது.
ஆஃப்ரிக்காவின் கோந்து மரமான Sterculia tragacantha வின் மரப்பிசின், தீக்காயங்களின் சிகிச்சையின் போது உணர்விழக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது.
உடலின் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் உணர்விழக்க செய்யும் மருந்தான கொகேய்ன் கொக்கோ இலைகளிலிருந்து பெறப்பட்டது. பச்சைமிளகாயிலிருந்து கிடைக்கும் காயீன் மற்றும் கேப்சாய்சின் ஆகியவையும் மயக்கமூட்டிகளாக பயன்படுத்தப்பட்டன. (cayenne. capsaicin).
யாரோ (Yarrow – Achillea millefolium) என்ற தாவரத்தின் வேர்களின் சாறு, மது, கஞ்சா இலைகள் பாப்பி கனியின் பால், சணப்பை புகை (hemp) கிராம்பு எண்ணை ஆகியவை பண்டைய மருத்துவ முறைகளில் வலி நீக்கியாகவும் மயக்கமூட்டி களாகவும் அதிக பயன்பாட்டில் இருந்தன.
அஸிரியர்களும், எகிப்தியர்களும் கிபி 400 ஆண்டுகளுக்கு முன்பே கழுத்தில் சிரசுத் தமனியை (Carotid artery) அழுத்திப் பிடித்துத் தற்காலிகமாக நோயாளியை நினைவிழக்கச் செய்தும் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
பண்டைய சுமேரியர்களும் அஸிரியர்களும் உலர்ந்த பாப்பிச் செடியின் பாலை மதுவில் கரைத்தளித்து, அந்த போதையில் நோயாளியை நினைவிழக்க செய்து அறுவை சிகிச்சைகளை நடத்தினார்கள்.
பண்டைய எகிப்தியர்கள் ஓபியத்தையும், ஓபியத்துக்கு இணையான செயல்திறன் கொண்டிருந்த மேண்ட்ரேக் (Mandragora officinarum) வேர்களையும் இலைகளையும் மயக்கமூட்டப் பயன்படுத்தினார்கள். மேலும் பல தாவர சேர்க்கைகளை மயக்கமூட்டிகளாக அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தினார்கள். இவற்றை குறித்து பண்டைய எகிப்திய நூலான ஏப்ரஸ் பாபிரஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மயக்கமூட்டிகளை முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியவரான, அறுவை சிகிச்சை முறைகளின் தந்தையான சுஷ்ருதர், நோயாளி நினைவிழக்கும் வரை கஞ்சா இலைச்சாறு கலக்கப்பட்ட மதுவைப் புகட்டி பின்னரே அறுவைசிகிச்சையை தொடங்கி இருக்கிறார். கஞ்சா இலைப் புகையையும் நுகரச் செய்து மயக்கமூட்டி இருக்கிறார் சுஷ்ருதர்.
சித்த வைத்தியத்தில் அறுவை சிகிச்சை அரிதாகவே செய்யப்பட்டிருக்கிறது. தேவ, மானுட, அசுர சித்த வைத்திய வகைகளில் அறுவை சிகிச்சையை கடைசி வழியாக அசுர வைத்தியம் எனும் வகையில்தான் வைத்திருக்கிறார்கள். அப்போது மயக்கமூட்டியாக கோரக்கர் என்னும் சித்தர் கஞ்சா இலைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார். மயக்கமூட்டியாகவும் உளம் பிறழ்ந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கஞ்சா சித்தர்களால் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.
பண்டைய இந்தியா மற்றும் சீனாவில் ஓபியம் அறிமுகமாகும் முன்பே கஞ்சா இலைப் புகையும், நஞ்சுகளின் அரசி எனப்படும் அகோனிட்டமும் மயக்கமூட்ட மற்றும் வலியை கட்டுபடுத்த மருத்துவ சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்பட்டன.
அரேபிய வணிகர்கள் ஓபியத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அறிமுகப்படுத்தும் முன்பு பயன்பாட்டில் இருந்த தாவரப் பொருட்கள் குறித்து தனது ஹிஸ்டோரியா பிளாண்டாரத்தில் தியோஃப்ராஸ்டஸ் (கிமு 371-287 ) குறிப்பிட்டிருக்கிறார்.]
புகழ்பெற்ற சீன மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணருமான பியன் சிய ( Bian Que. 300 BC) பொது மயக்கமூட்டிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சைகள் செய்தார்.
ஓபியம் பல பண்டைய நாகரிகங்களில் வழிபடப்பட்டது என்றே சொல்லலாம். வலி நீக்கியாகவும், மனம் மயக்கவும் மட்டுமல்லாது வலியற்ற சிகிச்சைகளுக்காகவும் ஓபியம் பயன்படுத்தப்பட்டது. தாவர நஞ்சான ஹெம்லாக்குடன் கலக்கப்பட்ட ஓபியம் வலியற்ற இறப்புக்காக மரண தண்டனைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்டது.
பண்டைய கிரேக்கர்கள் ஓபியத்தை உறக்கத்தின் கடவுளான ஹிப்னோ, இரவின் கடவுளான நிக்ஸ் மற்றும் இறப்பின் கடவுளான தனடோஸ் ஆகியோருடன் தொடர்பு படுத்தினார்கள் .இவர்கள் ஊமத்தை சாற்றை மயக்கமூட்டியாக சிகிச்சைகளின் போது உபயோகப்படுத்தினார்கள். ஹோமரின் ஒடிஸியில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாக்ராடிஸைக் கொன்ற ஹெம்லாக்கும் இதுபோலவே மயக்கமூட்டியாக புழக்கத்தில் இருந்திருக்கிறது.
கிரேக்க அறுவை சிகிச்சை நிபுணரான டயாஸ்கொரிடஸ், மேண்ட்ரேக் (Mandrake) என்னும் தாவரத்தின் வேரை மயக்கமூட்டியாக பயன்படுத்தினார். மந்திர தந்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த தாவரத்தைக் குறித்து பல அசாதாரண நம்பிக்கைகளும் நிலவி இருக்கின்றன.
இவற்றுடன் கொகேய்ன் மரமான Erythroxylum coca விலிருந்து கொகேய்ன், தைமஸிலிருந்து தைமோல், கிராம்பிலிருந்து யூஜினோல் ஆகியவையும் வலிநிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுத்தப்பட்டன. ( thymol & Eugenol ),
பண்டைய சீனாவிலும் கஞ்சா இலைப் புகை நுகருதலும், வீரியமிக்க பல வகை எரி மதுவகைகளும் வலி மிகுந்த சிகிச்சைக்கு முன்னர் தரப்பட்டிருக்கிறது. அரேபிய மற்றும் பெர்ஸிய மருத்துவர்கள் முதன்முதலில் நுகரும் மயக்கமூட்டிகளை பயன்படுத்தினார்கள்.
கிபி 1600-லிருந்து சீன பாரம்பரிய மருத்துவத்தில் குத்தூசி மருத்துவ மயக்கமூட்டல் (Acupuncture anesthesia) முறை பயன்பாட்டில் இருக்கிறது.
சீனா ஹான் வம்ச ஆட்சியின் கடைசிக் காலங்களில் ஆட்சியைப் பிடித்த ஒரு வட்டார ராணுவத் தலைவனுக்கு அரச மருத்துவராகப் பணியாற்றக் கட்டாயப்படுத்தப்பட்ட ஹுவா டுவோ (Hua Tuo) பிரத்யேக தாவர மயக்க மருந்து கலவையை வலி மிகுந்த சிகிச்சைகளின் போது பயன்படுத்தினார். Mafeisan என்ற இந்த மருந்துத் தயாரிப்பு முறைகளை பரம ரகசியமாக வைத்திருந்தார். சிகிச்சை மூலம் தன்னைக் கொல்லச் சதி செய்வதாக ஐயப்பட்ட அரசரால் மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஹுவா டுவோ, தன் மருத்துவக் குறிப்புகளை எழுதிய சுருளை சிறை அதிகாரியிடம் கொடுக்க முயன்ற போது, அரசரின் கோபத்துக்குப் பயந்த அதிகாரி அவற்றை வாங்க மறுத்ததாகவும், அதனால் ஹுவா டுவோ தன் இறப்புக்கு முன்னர் தனது அனைத்து மருத்துவக் குறிப்புக்களையும் நெருப்பிட்டு அழித்தாரென்றும் சொல்லப்படுவதாக விக்கிபீடியா குறிக்கிறது.
ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறையப் பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.
தவிர கன்ஃபூசிய அறப் பார்வையில் உடல் புனிதமானதாகக் கருதப்பட்ட காரணத்தால், அறுவை சிகிச்சைகள் ஹூவா டுவோவின் காலத்துக்குப் பிறகு சீனாவில் கைவிடப்பட்டிருந்தன என்று விக்கிபீடியா குறிப்பு சொல்கிறது.
கிபி 940 – 1040 ல் ஸொராஸ்டிரியன் துறவிகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ மது வகை ஒன்று அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிக்கு புகட்டப்பட்டது.
கிபி 1000 -வது ஆண்டில் அபு அல் காசிம் அல் சஹ்ராவி ( Abu al-Qasim al-Zahrawi-936-1013), என்னும் அரேபிய மருத்துவர் 30 பகுதிகளாக பிரசுரித்த அறுவை சிகிச்சையின் அடிப்படைகள் குறித்த மருத்துவ நூலான Kitab al-Tasrif ல் பொது மயக்கமூட்டிகள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
கிபி 1020-ல் இப்ன- சீனா என்னும் மருத்துவர், (Ibn Sīnā -980–1037) நுகரும் மயக்கமூட்டிகளின் பயன்பாட்டை விரிவாக பதிவு செய்திருக்கிறார்.
இப்- ஜூர் என்னும் (Ibn Zuhr -1091–1161) என்னும் மற்றொரு அரேபிய மருத்துவரும் தனது மருத்துவப் பாடநூலான Al-Taisir ல் முழு மயக்கமூட்டுதல் சிகிச்சை (General anaesthesia) குறித்து விவரித்திருக்கிறார்.
நுகரும் மயக்கப்பஞ்சு மருந்தை கொண்டு பல வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் செய்தவர்களில் இவர்கள் மூவரும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
13 -ம் நூற்றாண்டில் மருத்துவப் பரிந்துரைகளில் மயக்கமூட்டும் பஞ்சுகள் இடம்பெற துவங்கின. மல்பெரி காய்கள், ஆளி விதை, மாண்ட்ரேக் இலைகள், ஹெம்லாக் ஆகியவற்றின் கலவையான இந்த பஞ்சை வெப்பமூட்டி மூக்கில் வைத்து அதிலிருந்து வரும் புகையை நோயாளிகள் சுவாசித்து நினைவிழந்தார்கள்.
மயக்கமூட்டுவதில் துல்லியமான அளவை நிர்ணயிப்பது, தாவர மயக்கமூட்டிகளின் சிக்கலாக இருந்தது. குறைவாக அளிக்கையில் நினைவிழக்காமல் இருப்பதும், அளவு கூடிப்போகையில் உயிரிழப்பும் நடந்தது.
கிபி 1200 – 1500 வரை இங்கிலாந்தில் கணைய சுரப்பு நீர், ஓபியம், ஹெம்லாக் உள்ளிட்ட பல தாவர சேர்மானங்கள் இருந்த dwale என்னும் ஒரு மருந்து கலவை மயக்கமூட்டியாக பயன்படுத்தப்பட்டது. 1
இந்த கலவை ஜான் கீட்ஸின் புகழ்பெற்ற கவிதையான “Ode to a Nightingale”மற்றும் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் உள்பட பல பிரபல இலக்கிய படைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஹோமர் நெபெந்தி (nepenthe)என்னும் ஒரு தாவர மயக்கமூட்டிக் கலவையை குறிப்பிட்டிருக்கிறார்,அது கஞ்சா மற்றும் ஓபியத்தின் கலவையாக இருந்திருக்க கூடும். பண்டைய தாவர மயக்கமூட்டிகளுக்கு சிகிச்சைக்கு பின்னரான விரும்பத்தகாத பக்க விளைவுகளும் இருந்தது. மேலும் பஞ்சில் நனைத்து நுகரச்செய்யும் மயக்கமூட்டும் மருந்துகளின் அளவும் துல்லியமாக கணிக்கப்படுவதில்லை என்பதாலும் நவீன மயக்கமூட்டிகளின் தேடலும் கண்டுபிடிப்புகளும் 13 -ம் நூற்றாண்டில் இருந்து துவங்கின. இந்த தேடல் பயணம் மிக நீண்ட தாயிருந்தது. 1275-ல் டை ஈதைல் ஈதரை கண்டுபிடித்தவராக ரசவாதியான ரமோன் யூல் (Ramon Llull ) அறியப்படுகிறார்.
ஈதரின் வலிநிவாரணப் பண்புகள் ஆரியோலஸ் தியோஃப்ராஸ்டஸ் (Aureolus Theophrastus -1493–1541) என்பவரால் 1525- ல், கண்டறியப்பட்டது. ஜெர்மானிய வேதியியலாளர் சிக்மொண்ட் ஃப்ரோபீனியஸ் இதற்கு Spiritus Vini Æthereus என்று 1730-ல் பெயரிட்டார்.
1493–1541ல் மருத்துவரான பாராசெல்சஸ் (Paracelsus) விலங்குகளுக்கு மயக்கமூட்ட ஈதரை பயன்படுத்தினார்.
1540-ல் ஜெர்மனிய மருத்துவர்/தாவரவியலாளர் வாலெரியுஸ் கார்டுஸ் (Valerius Cordus -1515–1544), ஓர் வேதிக்கலவையை தயாரித்து மயக்கமூட்டியாக சிகிச்சைகளுக்கு உபயோகப்படுத்தினார். அதன் சேர்மானங்களை அவர் தெரியப்படுத்தவில்லை.
ராபர்ட் போய்ல் (Robert Boyle -1627–1691) ஓபியத்தை பூஞ்சிறகுகளில் தொட்டு விலங்குகளின் ரத்த நாளங்களில் தடவி மயக்கமூட்டி சிகிச்சை அளித்தார்.
ஆக்ஸிஜனை பிரித்து எடுத்த ஜோஸப் ப்ரீஸ்ட்லி (Joseph Priestley -1733–1804) மயக்கமூட்டியாக நைட்ரஸ் ஆக்ஸைடை முதன் முதலில் முயற்சித்தார்.
மனவசியக்கலையை தோற்றுவித்தவரான ஃப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (Franz Anton Mesmer-1734–1815) வசிய முறைகளையும் காந்த சிகிச்சைசைகளையும் பயன்படுத்தி நோயாளிகளை நினைவிழக்க செய்தார்.
ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy -1778–1829) நைட்ரஸ் ஆக்ஸைடினால் மயக்கமூட்டுகையில் அறுவை சிகிச்சையின் வலி மற்றும் குருதி இழப்பு பெருமளவு குறைக்கிறது என்று ஆய்வு கட்டுரை வெளியிட்டார்.
ஜப்பானிய மருத்துவர் செய்ஷு ஹனோகா ( Seishu Hanaoka -1760–1835) ஊமத்தை, ஆஞ்சலிகா மற்றும் சில தாவரச் சாறுகள் கலந்த Tsusensan என்னும் ஒரு சூடான பானத்தை உருவாக்கி,நோயாளியின் உடல் எடை மற்றும் வயதுக்குத் தகுந்த துல்லியமான அளவுகளில் அதை அளித்து புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்கையில் உபயோகப்படுத்தினார். இது கொஞ்சம் அதிகமானாலும் உயிரிழக்கச் செய்யும் கலவை.
அட்டைகளை கடிக்க வைத்து தோல் மரத்துப்போனதும் ரத்தமிழக்க செய்யும் வலி இல்லாத சிகிச்சை பண்டைய காலங்களிலிருந்தே ஆயுர்வேதத்தில் இருக்கிறது(rakthamokshan). ஃபிரெஞ்ச் மருத்துவரான ஃப்ரேன்கோயிஸ் (François-Broussais -1772–1838) இதே அட்டை முறையை பல நோய்களுக்கு உபயோகித்தார்.
18-ம் நூற்றாண்டில் மயக்கமூட்டும் வாயுக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. விஞ்ஞானியும் மதபோதகருமான ஜோசப் பிரீஸ்ட்லி மற்றும் தாமஸ் பெடோஸ் ஆகியோர் (Joseph Priestley -1733-1804, Thomas Beddoes -1760 – 1808) பல வாயுக்களை குறிப்பிட அளவுகளில் கலந்து நோயாளிகளை நினைவிழக்கச்செய்யும் சோதனைகளை தொடர்ந்து செய்தார்கள்.
இந்த சோதனைகள் குறித்து 1775-ல் பிரீஸ்ட்லி ’’பலவிதமான வாயுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளும் முடிவுகளும்’’ என்னும் 6 பகுதிகள் கொண்ட நூலில் விவரித்தார்.( Experiments and Observations on different kinds of Air). அந்தச் சோதனைகளின் அடிப்படையில் வாயு சிகிச்சை நிறுவனமொன்றையும் 1798-ல் துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே ஜேம்ஸ் வாட் மற்றும் ஹம்ஃப்ரி டேவி அகியோரும் இவர்களுடன் இணைந்த பின்னர் (James Watt (1736 – 1819) and Humphry Davy (1778 –1829) வாயு சிகிச்சைகளுக்கான மருந்துகளை தயாரிப்பதில் இந்நிறுவனம் முன்னணியில் இருந்தது
இங்குதான் டேவி நைட்ரஸ் ஆக்ஸைடின் மயக்கமூட்டும் பண்புகளை கண்டறிந்து அதற்கு மகிழ்ச்சி வாயு அல்லது சிரிப்பூட்டும் வாயு என்று பெயரிட்டார்.
இந்த நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவின் வலிநிவாரணப் பண்புகளின் சோதனைகளில் மிக வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியும் நடந்தது.
Dr. வெல்ஸ் மற்றும் சாமுவேல் ஆகியோர் (Wells & Samuel Colt) நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்கமூட்டியாக சந்தைப்படுத்த முயன்றார்கள். இதன் பொருட்டு ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு சிகிச்சையை நடத்த திட்டமிட்டார்கள். அவ்வாறு நடந்த பல் பிடுங்கும் சிகிச்சையில் நோயாளிக்கு போதுமான அளவு மயக்க மருந்து அளிக்க தவறியதால் அவர் வலியில் கதறி அழுது அவர்களின் அம்முயற்சி படு தோல்வியடைந்தது
அந்த தோல்வியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாத Dr. வெல்ஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலை செய்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கமூட்டும் பயன்பாடு ஏறக்குறைய நின்று போனது.
பிரிஸ்ட்லி, டேவி, பெட்டோஸ் மற்றும் வாட் ஆகியோரின் வெற்றிகளிலிருந்தும், வெல்ஸ் மற்றும் சாமுவேலின் தோல்வியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொண்ட பிற்கால மருத்துவர்கள், மயக்கமூட்டும் வாயுக்களை சிகிச்சைகளில் பயன்படுத்துவதில் வெற்றி கண்டனர்.
அதிலொன்றுதான் மார்டன் நடத்திய அறுவை சிகிச்சை. நவீன மயக்கமூட்டும் துறையை தோற்றுவித்தவர் வில்லியம் கிரீன் மார்டன் என்னும் பல் மருத்துவர். (William T.G. Morton (1819-1868). இளம் மருத்துவராக பாஸ்டனில் பணிபுரிந்து கொண்டிருந்த மார்டன் அப்போது மயக்கமூட்டியாக பயன்பாட்டில் இருந்த நைட்ரஸ் ஆக்ஸைடை காட்டிலும் மேம்பட்ட மயக்கமூட்டியை தேடும் ஆர்வம் கொண்டிருந்தார், தேடலில் அவருடன் ஜான் கோலின்ஸ் வாரேன் என்னும் அறுவை சிகிச்சையாளரும் இணைந்து கொண்டார்.
விடாமுயற்சியாலும் இயல்பாகவே அவருக்கிருந்த மருத்துவ அறிவினாலும் அவர் ஈதரின் மயக்கமூட்டும் பண்புகளைக் கண்டறிந்தார். அக்டோபர் 16, 1846 அன்று உலகின் வெற்றிகரமான மயக்கமூட்டி அளித்து நோயாளியை நினைவிழக்க செய்த அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு தனி மனிதராக மார்டன் ஈதர் வாயுவை துல்லியமான அளவுகளில் மயக்கமூட்டியாக அளித்து நோயாளி வலியை உணராமல் அறுவை சிகிச்சையை நடத்தலாம் என்று உலகிற்கு நிரூபித்தார்.
கில்பெர்ட் அபோட் என்பவரின் தாடையின் கீழிருந்த ஒரு கட்டியை அகற்றிய அந்த அறுவை சிகிச்சை மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பொதுமக்கள் முன்னிலையில் மாஸச்சூஸெட்ஸ் (Massachusetts) பொது மருத்துவமனையில் அந்த நோயாளிக்கு ஈதர் அளிக்கப்பட்டது அவர் நினைவிழந்ததும் அறுவை சிகிச்சை எளிதாக, வெற்றிகரமாக நடந்தது. அப்போதைய நாளிதழ்களில் இந்த அறுவை சிகிச்சை படிப்படியாக விவரிக்கப்பட்டு விரிவான கட்டுரைகள் வெளியாகின.
அமெரிக்க அறுவை சிகிச்சையாளர் க்ராஃபோர்டு லாங் (Crawford Long) 1842ல் ஈதரை மயக்கமூட்டியாக பயன்படுத்தி இருந்தாலும் அவர் பொதுவெளியில் அந்த பயன்பாட்டை தெரிவித்திருக்கவில்லை. எனவே மார்டனே ஈதரை மயக்கமூட்டியாக முதன் முதலில் பயன்படுத்தியவர் என்று மருத்துவ வரலாற்றில் பதிவானது.
தனது 48 -வது வயதில் மாரடைப்பால் காலமான மார்ட்னின் இறப்பை உறுதி செய்த மருத்துவர் தனது மாணவர்களிடம் ’’மனித குலத்தின் வலியை நீக்க அரும்பாடுபட்ட ஒருவரின் உடல் இது’’ என்று சொன்னதாக அப்போது உடனிருந்த மார்டனின் மனைவி பின்னர் கூறினார்
மார்டனின் கல்லறையில் இப்படி எழுதியிருக்கிறது
’’எவருக்கு முன்பு வரை அறுவை சிகிச்சைகள் மிகுந்த துயரளிப்பவைகளாக இருந்தனவோ, எவரால் அறுவை சிகிச்சைகளின் வலி தவிர்க்கப்பட்டதோ, எவருக்கு பிறகு அறிவியல் வலியை கட்டுக்குள் கொண்டு வந்ததோ அவர் இங்கே உறங்குகிறார்.’’
மோர்டானின் இந்த சிகிசையளிப்புக்கு சில வாரங்களுக்கு பின்னர் லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு காலை வெட்டி அகற்றும் சிகிச்சைக்கும் ஈதர் உபயோகப்படுத்தப்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.அதன்பிறகு ஈதர் மிகப்பிரபலமான மயக்கமூட்டியாக இருந்தது.
1846-ல் ஆலிவர் வெண்டல் ’’நினைவு- இன்றி’’ என்று பொருள் படும் அனெஸ்தீசியா எனும் சொல்லை உருவாகினார்.
குளோரோஃபார்ம் எடின்பர்க் நகரில் மகப்பேறியல் மருத்துவர் ஜேம்ஸ் சிம்சனால் 1847ல் கண்டறியப்பட்டது. குளோரோஃபார்ம் மயக்கமூட்டியாக நல்ல பலனளித்தது என்றாலும் அதன் பக்க விளைவுகள் அதிகமாக இருந்தன, சிகிச்சையின் போது உயிரிழப்பு அல்லது சிகிச்சைக்கு பின்னர் ஈரல் செயலிழப்பு ஆகியவை உண்டாகியது. ஆயினும் அதன் பயன்பாடும் அதிக அளவில் இருந்தது. அடுத்த 40 வருடங்களில் மயக்கமூட்டிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
1853-ல் பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் எட்டாவது பிள்ளைப்பேற்றின் போது (Prince Leopold) அவரது மருத்துவரான ஜான் ஸ்னோ அரசிக்கு மயக்கமூட்டியை அளிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
குழந்தை மருத்துவரான ஜோஸஃப் ஓட்வையர் (Joseph O’Dwyer- 1841-1898) முதன்முதலாக சுவாசப்பாதையில் குழாய்களைச் செருகி, மயக்கமூட்டிகளை அதன் வழியாக செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும் முறையை கண்டறிந்தார், (metal “O’dwyer” tubes).
இந்த சிகிச்சைகளில் மேலும் பல முக்கியமான மாறுதல்களை செய்தவர்களாக ஆர்தர் குடெல் ( Arthur Guedel (1883-1956), ரால்ஃப் வாட்டர்ஸ் ( Ralph M. Waters -1883-1979), செவாலியர் ஜேக்ஸன் (Chevalier Jackson -1865-1958) ஆகியோர் கருதப்படுகின்றனர்.
19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் ஓபியத்தின் வரவு வரையிலும் ஈதர் குளோரோஃபார்ம் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகளின் மருத்துவ பயன்பாடுகள் உயர்த்தும் சரிந்தும் கொண்டிருந்தன.
பின்னர் ஓபியம் மயக்கமூட்டுதல் வெகுவேகமாக பிரபலமானது. மருந்தாளுநர் பிரெட்ரிக் வில்ஹெம் மார்ஃபீனைப் பிரித்தெடுத்த பின்னர் இதன் உபயோகம் மிக அதிகரித்தது.
மார்ஃபீன் புகழுடன் இருக்கையிலேயே ஓபியத்திலிருந்து ஆக்ஸிகோண்டின், ஓபியம் மாத்திரைகள், லாட்னம், கோடின், ஹெராயின், ஹைட்ரோ கோடின் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றில் சில இன்று வரையிலும் வலிநீக்கிகளாக இருக்கின்றன.
மார்ஃபீனுக்கு அடிமையாவதும், அதிக அளவு உட்கொள்வதால் மரணமும் அவ்வபோது ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் இவற்றின் மருத்துவ உபயோகங்கள் வெகுவாக புகழ்பெற்றிருந்தன. அச்சமயத்தில் தான் மாற்று மயக்கமூட்டியாக கொகேய்ன் அறிமுகமானது.
1860 ல் ஆல்பர்ட் நீமேன் (Albert Niemann) கொக்கோ இலைகளை மெல்லுவது வாயை மரத்துப் போகச் செய்யும் என்பதைக் கண்டறிந்தார். அவரே கொகெய்னை பிரித்தெடுத்து கொகேய்ன் என்னும் பெயரையும் வைத்தவர்.
இவரது ஆய்வறிக்கையை வாசித்த சிக்மண்ட் ஃப்ராய்ட். மார்ஃபீன் அடிமைகளுக்கு கொகெய்னை மருந்தாக அளித்தார்.அவரது பரிந்துரையின் பேரில் அவரது நண்பரும் வியன்னா கண் மருத்துவருமான கார்ல் கொல்லர் (Carl Koller), 1884’ல் ஒரு துளி கொகேய்ன் கரைசலை கண் விழிகளில் இட்டு கண் மரத்துப் போனதும் கண் புரை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்தார்.
அதற்கு முன்பு வரை பல் மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்ட கொக்கோ இலைச்சாறு இந்த பயன்பாட்டுக்கு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1884ல் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் மரத்து போகச் செய்ய கொகேய்ன் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தது.
இவற்றின் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மருத்துவர்கள் இவற்றைப் பரிந்துரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் மருத்துவ உபயோகங்களுக்கான ஓபியத்தின் கட்டுப்படுத்தபட்ட பயன்பாடுகள் குறித்த அமெரிக்க அரசின் தீவிர சட்டங்கள் 1909’ல் தான் நடைமுறைக்கு வந்தன
1900-களில் மேலும் புதிய பக்க விளைவுகளற்ற மயக்கமூட்டிகள் வந்தன அறுவை சிகிச்சைகள் மருத்துவருக்கும் நோயாளிக்கும் எளிதாக அமைந்தன.
1910ல் மயக்கவியல் சிகிச்சைகளின் போது சுவாசத்தை கட்டுப்படுத்துவது அறிமுகமானது. இந்த சிகிச்சை முறைகள் பின்னர் 1920 மற்றும் 1930களில் மேம்படுத்தப்பட்டன/
அதன்பிறகு மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறைக்கும் மருந்துகளை இரத்த நாளங்கள் வழியே செழுத்தி மயக்கமூட்டுதல் 1932-ல் துவங்கியது (barbiturates).
1940 மற்றும் 1950களில் கியூராரே, ஹென்பேன் போன்ற தசைகளை இலகுவாகும் மயக்கமூட்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன.
அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்தது பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரான ஜோசப் லிஸ்டர் (Joseph Lister, 1827 –1912) .
இவரே அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர் , செயல்திறன்மிக்க மயக்கமூட்டிகளுடன் ஜோசப் லிஸ்டரின் கிருமி தடுப்பு முறைகளும் சேர்ந்து அறுவை சிகிச்சைகளின் போதும், சிகிச்சைக்கு பின்னருமான மரணங்களை வெகுவாக குறைத்தன.
20 -ம் நூற்றாண்டில் மயக்கமூட்டுதல் மிகப் பாதுகாப்பானதாகி, மயக்கமருந்துகளின் செயல்திறனும் மேம்பட்டது. சுவாசக்கட்டுப்பாட்டுக் கருவிகளாலும், மருந்தியக்கவியல் துறையின் முன்னேற்றங்களினாலும், தொழில்நுட்பங்களினாலும் மயக்கமூட்டிகள் மேம்படுத்தபட்டன.
மயக்கவியல் நிபுணர்களுக்கும் மயக்கவியல் உதவியாளர்களுக்குமான அறிவியல் பயிற்சிகளும் இந்த காலகட்டத்தில் உலகெங்கும் நடந்தன.
20 மற்றும் 21 -ம் நூற்றாண்டுகளில் சீன பாரம்பரிய மருத்துவத்தின் குத்தூசி மயக்கமூட்டும் முறை மீண்டும் பரவலாகியது, முக்கியமான நீண்ட அறுவை சிகிச்சையின் போது உடலின் சில குறிப்பிட்ட புள்ளிகளின் மீது ஊசிகள் குத்தி வைக்கப்பட்டன. சில சமயங்களில் அந்த ஊசிகளை இணைத்து லேசான மின்னதிர்வு அளிக்கப்படுகிறது இந்த ஊசிகள் உடலின் பக்கவாட்டு நரம்பு மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை தூண்டி வலி நிவாரணமளிக்கிறது.
நவீன மயக்கமூட்டிகள் முழுமையான நினைவிழக்க செய்பவைகள், உடலின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் நினைவிழக்க செய்பவைகள் என இரண்டு பிரிவுகளில் இருக்கின்றன.
நினைவிழக்கச் செய்யும் மருந்துகள் இப்போது பல சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. இவை அறுவை சிகிச்சை அரங்கில் மட்டும் அளிக்கப் படுபவை அல்ல. விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள், மகப்பேறியல் அவசர சிகிச்சைகள், நாள்பட்ட மற்றும் உச்சகட்ட வலிகளை கட்டுப்படுத்த,மற்றும் நோயாளிகளை இடம் மாற்றுகையில் என பல நிலைகளில், பல்வேறு வகையான நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது
இப்போதைய மயக்கமூட்டிகள் மிகப் பாதுகாப்பானவை, அறுவை சிகிச்சைகளின் போது மயக்கமூட்டிகளால் நிகழும் இறப்பு இப்போது 3 லட்சத்தில் ஒருவர் என்னும் விகிதத்தில் தான், அதுவும் கவனக்குறைவால் தான் நிகழ்கின்றது.
இப்போதைய நவீன மருத்துவ உபகரணங்களும், மிகச்சிறந்த மயக்கவியல் நிபுணர்களும், நவீன நோயறிதல் முறைகளும், உடற்கூறியலின் மேம்பட்ட புரிதல்களும் மயக்கவியல் துறையை மேலும் நவீனமாக்கி இருக்கிறது.
கடந்த மாதம் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த என் இளைய சகோதரன் மைதானத்தில் வழுக்கி விழுந்து இடது கையில் எலும்பு முறிந்துவிட்டது. திருப்பூரில் பிரபல எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். மயக்கவியல் நிபுணர் தோள்பட்டையில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்துகள் செலுத்திய பின்னர் தம்பிக்கு எந்த வகையான பாடல் பிடிக்கும் என்று கேட்டு. அவனுக்கு விருப்பமான இளையராஜாவின் இசையை அறுவைசிகிச்சை அரங்கில் மெலிதாக ஒலிக்க விட்டுக்கொண்டு ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை முடித்தார்,
குருதிக்காயத்துடன் சிகிச்சை அரங்கிலிருந்து தப்பித்துப்போய் கழிப்பறைக்குள் தாழிட்டுக்கொண்ட நோயாளியிலிருந்து, இசைகேட்டுக்கொண்டு சிகிச்சை செய்துகொள்ளும் இந்தக்காலம் வரையிலான, பெருவலி நிறைந்த, மயக்கமூட்டிகள் வந்து சேர்ந்திருக்கும் பாதையை திரும்பி பார்க்கையில் மருத்துவ வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மயக்கமூட்டிகள் தான் என்பதை சந்தேகத்துகிடமின்றி சொல்லலாம்.
அறுவை சிகிச்சையின் போது மயக்கவியல் நிபுணர் குழந்தைகளின் பெயர்களையோ அல்லது எண்களையோ சொல்ல சொல்லுவார். ஒன்று, இரண்டு, மூன்று என எண்களை சொல்லச்சொல்ல நினைவிழந்துவிடுவோம். இனி துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு சிகிச்சைக்கு ஆளாக நேர்ந்தால் நினைவிழக்கும் வரை எண்களுக்கு பதிலாக மயக்கமூட்டிகளை கண்டறிந்த சுஷ்ருதரை, கோரக்கரை, ஆல்பர்ட் நிமானை, கார்ல் கொல்லரை, மார்டனை எல்லாம் வரிசையாக நினைத்துக்கொள்ளலாம்.
கிரேக்க மெய்யியலாலரான ஹோரஸ் (Horace) என்கிற க்வின்டஸ் ஹோராசியஸ் ஃபிளாக்கஸ் (Quintus Horatius Flaccus), கிமு 65’ல் பேரரசர் அகுஸ்டஸின் காலத்தில் வாழ்ந்த முன்னணி இத்தாலியக் கவிஞர். இவரே உலகில் முதன்முதலாக தன் வரலாற்றை எழுதியவர். தன் வாழ்வை, ஆளுமையை, வளார்ச்சியை, கலையை என தன்னை குறித்த அனைத்தையும் மிக விரிவாக எழுதிய ஹோரஸ் தனது, உணவு முறைகள் பற்றி குறிப்பிடுகையில் தன்னால் ’’ஆலிவ், நீல மேலோ மற்றும் சிக்கரி’’ இவைகளைக் கொண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என குறிப்பிட்டிருக்கிறார். இவர் குறிப்பிட்டிருந்தது சிக்கரி இலைகளை.
இவர் மட்டுமல்லாது வர்ஜில், ஓவீட் மற்றும் பிளீனி உள்ளிட்ட பலர் சிக்கரியின் பயன்பாடுகளை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றனர். கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் உடற்கூறாய்வாளருமான கேலன் (கிரேக்க உச்சரிப்பு காலினோஸ்) சிக்கரியை ’ஈரலின் தோழன்’ என குறிப்பிடுகிறார்.
பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பயிராக்கப்படும் உணவுப் பயிர்களில் சிக்கரியும் ஒன்று. கிமு 1550’ ல் எழுதப்பட்ட எகிப்தின் ஈபர்ஸ் பாப்பிரைஸ் நூலில் சிக்கரியின் இலை மற்றும் வேர்கள், அவற்றின் பயன்பாடுகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்தியர்கள் சிக்கரி இலைகள் வேர்கள் மற்றும் மலர்களை மருத்துவ சிகிச்சைக்கு உபயோகித்தார்கள், குறிப்பாக மஞ்சள் காமாலை மற்றும் முடக்குவாத சிகிச்சைகளுக்கு பயன்படுத்தினர்.
பண்டைய எகிப்தில் சிக்கரி திறக்காத கதவுகள், பெட்டிகள், பூட்டுக்களை எல்லாம் திறக்கும் வல்லமை பெற்றது என்று நம்பினார்கள். சிக்கிரியின் சாற்றை உடலில் பூசிக் கொள்வதன் மூலம் நினைத்தது நடக்கும் என்றும், வேண்டியவர்களின் அன்புக்கு பாத்திரமாவோம் என்றும் அவர்களிடையே நம்பிக்கை இருந்தது. இப்படியான மந்திர சக்திகளை அளிக்க சிக்கரியை நடுநிசியில் பொன்னாலான கத்தியில் அறுவடை செய்ய வேண்டும் என்றும் நம்பினார்கள்.
சிக்கரிக்கு மந்திர பண்புகள் இருப்பதாகவும் காதல் உணர்வை சிக்கரி தூண்டுவதாகவும் பல பண்டைய நாகரிகங்களில் நம்பிக்கை நிலவியது. போருக்கு செல்கையில் சிக்கரி உண்பது வெற்றியை தரும் என்றும் நம்பப்பட்டது.
மலர் மருத்துவத்தை தோற்றுவித்தவரான எட்வர்ட் பாக் ( Edward Bach) சிக்கரி மலர்கள் நிபந்தனையற்ற அன்பை பெற்றுத் தரும் என்கிறார்.
பண்டைய ரோமில் முளை விட்ட இளம் சிக்கரி இலைகளை அவை சுருளும் வரை குளிர் நீரில் இட்டு வினிகர், ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்த்து தயாராக்கப்பட்ட புண்ட்ரெல்லா (Puntarelle) என்னும் சாலட் வெகு பிரசித்தம்.
சிக்கரியின் வேர் மற்றும் இலை என இரண்டுமே மிக பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் வேர்கள் மருத்துவ சிகிச்சையிலும், இலைகள் தீவனமாகவும், தளிரிலைகள் உணவிலும் பயன்படுத்தப்பட்டன. கசப்புச் சுவை கொண்டிருந்தாலும், பல சத்துக்கள் கொண்டிருந்த இலைகள் பலரின் விருப்பத்துக்குரிய உணவாகவே இருந்திருக்கிறது.
பண்டைய கிரேக்கத்திலும், ரோமிலும் சிக்கரி வேர் பசியை தூண்டவும் சத்துக்கள் நிறைந்த இலைகள் உணவிலும் பயன்படுத்தப்பட்டன. கிபி முதல் நூற்றாண்டில் டியாஸ்கொரீடஸ் (Dioscorides) தாவர மருந்துகளின் தயாரிப்பு, பண்புகள் மற்றும் சோதனை முறைகளை விளக்கும் தனது ’மட்டீரியா மெடிக்கா’ நூலில் சிக்கரியின் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளை விவரித்துள்ளார்.
ஐரோப்பாவில் இடைக்காலத்தில் மருந்துத் தாவரமாகவும், தீவனமாகவும் மட்டும் பயன்பாட்டிலிருந்த காட்டு சிக்கரி செடிகளிலிருந்து பெனெடிக்டீன் துறவிகள் உணவுக்கான சிக்கரி கலப்பின வகைகளை உருவாக்கினர் என்று சொல்லபடுகிறது.
சிக்கரி பண்டைய பட்டுப்புழு வளர்ப்பு குறித்தான நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிக்கரி இலைகள் விரும்பி உண்ணப்பட்டன. சிக்கரியின் நீல மலர்கள் காதலை சொல்லுமென்றும், அடைத்த கதவுகளை திறக்குமென்றும் சொல்லும் ஐரோப்பிய நாட்டுப்புற பாடல்கள் உண்டு.
காலையில் மலர்ந்து நண்பகலில் வாடிவிடும் சிக்கரி மலர்களும் வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் உருவாக்கிய மலர் கடிகாரத்தில் இருந்தன.
மருந்தாகவும், தீவனமாகவும், உணவாகவும் இருந்த சிக்கரி எப்படிகாஃபியில் கலக்கப்பட்டது? கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பொருளாதார சிக்கல், கொஞ்சம் கலாச்சாரம், கொஞ்சம் சுவை மாறுபாடு ஆகிய கலவைதான் சிக்கரி-காபி கலவைக்கும் காரணமாயிருந்தது. நம் சமையலறைக்கு வர சிக்கரி கடந்து வந்த பாதை மிக நீண்டது.
மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த காட்டு சிக்கரி எனப்படும் சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளரும் செடியின் முற்றிய வேர்கள் சத்துக்கள் நிறைந்தது என்பதால் வேகவைக்கப்பட்டு நெடுங்காலமாக உண்ணப்பட்டன, இலைகள் மற்றும் இனிப்பான இளந்தண்டுகள் ஆகியவை தீவனம், மருந்து மற்றும் உணவாக அவை வளர்ந்த பிற நாடுகளிலும் 1600 வரை இருந்தது.
காபி அறிமுகமாவதற்கு முன்பே காட்டுச்சிக்கரியின் வேர்கள் மருத்துவ தேநீர் உண்டாக்கவும் இலைகள் சாலட்டிலும், இனிப்பான இளம் சிக்கரி வேர்கள் உணவாகவும் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டாலும் ஆனால்காஃபி ஐரோப்பாவுக்குள் நுழைந்த 16’ம் நூற்றாண்டில்தான், சிக்கரி சாகுபடி துவங்கியது ஐரோப்பிய காலனியாக்குதலின் போது சிக்கரி சாகுபடி வடஅமெரிக்காவிலும் அறிமுகமானது.
புகையிலை மற்றும் தேயிலையைப் போல காஃபியும் அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. காஃபி புத்துணர்வூட்டி சோர்வை நீக்குமென்பது அதன் பரவலான உபயோகத்திற்கு காரணமாயிருந்தது. அறிமுகமான காலத்தில்காஃபி மதுவுக்கு மாற்று பானம் என்றுகூட கருதப்பட்டது. 17’ம் நூற்றாண்டில் ஐரோப்பிய சந்தைகளுக்குள் நுழைந்தகாஃபி வேகமாக கண்டம் முழுவதும் பரவ துவங்கியது. அறிமுகமான பத்தாண்டுகளிலேயே லண்டன், ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் போன்ற முக்கிய நகரங்கள் உலகின் முக்கியகாஃபி வணிக மையங்கள் ஆகின..
1718ல் மிஸிஸிப்பியில் நியூ ஆர்லின்ஸ் நகரை நிர்மாணம் செய்கையில் ஃப்ரான்ஸ் தனது வர்த்தக உறவுகளை கண்டம் முழுவதும் வலுவாக்கி இருந்தது. சில ஆண்டுகளிலேயே அங்கு காஃபி அருந்துதல் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகி விட்டிருந்தது. வில்லியம் யூக்கர்ஸின் ’’காபியை குறித்த அனைத்தும்’’ 1 நூலில் அப்போது நியூ ஓர்லின்ஸின் ஆற்றங்கரையோரம் நிறுவப்பட்டகாஃபி கடைகள் பெருமளவில் வர்த்தகம் செய்துகொண்டிருந்ததும், காஃபி மற்றும் சிக்கரியின் நறுமணங்களால் அந்நகரின் தெருக்கள் நிறைந்திருந்ததும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காபி அருந்துதல் செல்வாக்கின் அடையாளமாகவும் ஆனது. காஃபியின் மீதான விருப்பம் கூடி காஃபி பயன்பாடு மேலும் மேலும் அதிகரித்தபோது, காஃபி சாகுபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மையின் பொருட்டு காஃபியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக, காஃபி இறக்குமதிக்கு இடைக்காலத் தடைகளும் புதிய வரிகளும் பல நாடுகளில் விதிக்கப்பட்டன. இதில் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
காபியின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், ஐரோப்பியர்கள்காஃபி பதிலிகளாக கோதுமை, பார்லி, கஷ் கொட்டை(chest nuts), புல்லரிசி, பாதாம், ஓட்ஸ் போன்றவற்றை கருக வறுத்து, தூளாக்கி உபயோகப்படுத்தினார்கள்.
வளர்ந்த நாடுகளின் வேதியியலாளர்கள் ஆர்வத்துடன் பல வகையான கனிகளின் கடினமான விதைகள், கொட்டைகள், உலர் பழங்கள், கொக்கோ கனியின் ஒடுகள் கிழங்குகள் பயறு வகைகள் என பலவற்றையும் உபயோகித்து பல சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
1733ல் கலைக்களஞ்சிய உருவாக்குநர் யோஹான் ஹைன்ரிச் சேட்லர், ’’சிலர் வறுத்த பார்லியிலிருந்து காஃபி தயாரித்து அருந்துகிறார்கள், அது அசல் காஃபியை போல இருப்பதாகவும் சொல்கிறார்கள்’’ என்று பதிவு செய்திருக்கிறார்.
1763, ல் ஹாலந்தில் சிக்கரி வேரை வறுத்து கலப்பது முதன் முதலாக கண்டறியப்பட்டது, பின்னர் இந்த முறை வடக்கு ஐரோப்பா, இங்கிலாந்து ப்ரஷ்யா, பெல்ஜியம் மற்றும் பிரான்சுக்கும் மெல்ல அறிமுகமானது.
1766ல் ப்ரஷ்ய மன்னரான இரண்டாம் ஃபிரடெரிக் காஃபி இறக்குமதியை பொருளாதார காரணங்களால் முற்றிலும் தடை செய்தார். காஃபிக்கு பதில் உள்நாட்டு தயரிப்பான பியரை அருந்த மக்களை அறிவுறுத்தினார். அப்போது காஃபி சுவைக்கு வெகுவாகப் பழகிவிட்டிருந்த மக்கள், கள்ளச்சந்தை வணிகம் காஃபியின் விலையை வெகுவாக உயர்த்தி விட்டிருந்ததால், காஃபி பதிலிகளை மும்முரமாக தேட துவங்கினர். சிக்கரியும் அந்த சோதனை முயற்சிகளில், இருந்ததென்றாலும், சிக்கரி-காபி பானம் அத்தனை பிரபலமாகி இருக்கவில்லை.
1769/70களில் சிக்கரி வேர்களை வறுத்து பொடித்து காஃபியில் மிகச்சரியான விகிதத்தில் கலந்து பானமுண்டாக்குவதை ஜெர்மனியின் பிரன்ஸ்விக்(Brunswick) நகரை சேர்ந்த கிறிஸ்டியன்(Christian Gottlieb Förster) கண்டறிந்து அதை தயாரிப்பதற்கு அனுமதியையும் பெற்றார். 1795 வாக்கில் 22, சிக்கரி தொழிற்சாலைகள் பிரன்ஸ்விக் நகரில் உருவாகி இருந்தன.
சிக்கரி கலந்த காஃபி தூள் முதன்முதலில் 1770களில் ஜெர்மனியில் சந்தைப்படுத்தப்பட்ட போது காஃபி வர்த்தகத்தில் அது ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த சிக்கரி காஃபியை கலப்படக் காஃபி என்றல்லாது உயர்தர சிக்கரி கலந்த காஃபி என்றும், காலனி காப்பிக்கு மாற்றான தேசிய காஃபி, அசல் காஃபி என்றெல்லாம் விளம்பரப்படுத்தியதில் அந்த யுக்தி பெரும் வெற்றி பெற்றது.
ஏற்கனெவே சிக்கரியின் இலைத்தாவரம் அங்கு பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுக் கொண்டிருந்ததால் விவசாயிகள் விரைவாக சிக்கரி செடிகளை வேருக்காகவும் சாகுபடி செய்து பொருளீட்ட துவங்கினார்கள். விரைவில் ஜெர்மனி எங்குமே சிக்கரி தொழிற்சாலைகள் உருவாகின. ஜெர்மனியின் பல நகரங்களில் பெண்கள் வீடுகளில் சிக்கரித் தூளை தயாரிப்பதை மும்முரமாக செய்ய துவங்கி இருந்தார்கள். இப்போதும் சிக்கரி காஃபியின் இணைப்பெயராக இருப்பது ஜெர்மனி காஃபி என்ற பெயர்தான். . தினசரிகளில் அப்போது சிக்கரியின் நன்மைகள், மருத்துவ பலன்கள் குறித்து ஏராளமான விளம்பரங்கள் வந்தபடியே இருந்து.
லண்டனை சேர்ந்த, விவசாய ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவரும் பயிர் வகைகளுக்காகவே பல நாடுகளுக்கு பயணம் செய்த வருமான ஆர்தர் யங் (Arthur Young-1741-1820) தனது ஃப்ரான்ஸ் பயணத்தின் போது (1787-1789) சிக்கரி விதைகளை சேகரித்திருக்கிறார்.2
பயிர் சாகுபடியில் விருப்பம் கொண்டிருந்த ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் ஆர்தருக்கும் இடையில் பல வருட கடிதப்போக்குவரத்தும் விதை பரிமாற்றங்களும் இருந்தது. ஃப்ரான்ஸில் சேகரித்த சிக்கரி விதைகளை ஜெனரல் வாஷிங்க்டனுக்கு ஆர்தர் யங் அனுப்பி வைத்தார். அவற்றில் சில விதைகளை வாஷிங்டன், விவசாய முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த தாமஸ் ஜெஃபெர்சனுக்கு பரிசாக அளித்திருந்தார்.
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் முதன் முதலில் தாமஸ் ஜெஃபர்சன் சிக்கரியை சாகுபடி செய்ததை ஆவணப்படுத்தி இருக்கிறார். பரிசாகக் கிடைத்த சிக்கரி விதைகளை தனது பண்ணையில் விதைத்ததையும். ‘’ஒரு விவசாயின் ஆகச்சிறந்த சொத்தாக நான் சிக்கரியை சொல்லுவேன்;’’ என்றும், தனது ’பண்ணை கட்டுரைகளில்’ குறிப்பிட்டிருக்கிறார் தாமஸ் ஜெஃபெர்சன் அங்கு சிக்கரி சாகுபடி செய்யப்பட்டதற்கான முதல் ஆவணமாக இதுவே கருதப்படுகிறது.
1806ல் ஃப்ரான்ஸ் துறைமுகங்களை இங்கிலாந்து ஆக்ரமித்தது. அதே வருட இறுதியில் ஃப்ரான்ஸில் பிரிட்டிஷ் பொருட்களை பயன்படுத்த நெப்போலியன் தடை விதித்தார். 1807ல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸுக்குமான பொருளாதார போரை துவங்கிய நெப்போலியன்காஃபி உள்ளிட்ட அனைத்து வணிகப்பொருட்களும் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லாமல் தடுத்தார். அக்காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் கடிதப் போக்குவரத்து கூட ஃப்ரான்ஸில் தடை செய்யபட்டிருந்து.
இத்தடையினால் இருதரப்புக்கும் காஃபி தட்டுப்பாடு கடுமையாக உண்டானது. ஹாலந்தில் சிக்கரியை காஃபியில் கலப்பது குறித்து பிரெஞ்சுக்காரர்கள் கேள்வி பட்டிருந்தார்கள். எனினும் அது அங்கு பிரபலமாகி இருக்கவில்லை. ஃப்ரான்ஸில் காஃபி-சிக்கரி கலவை 1801ல் காஃபி வணிகத்தின் முன்னோடிகள் என கருதப்படும் ஓர்பன் மற்றும் கிராட் (M. Orban and M. Giraud) ஆகியோரால் அறிமுகமாகும் வரை பொதுமக்களுக்கு அதைக் குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை. இந்த காஃபி தடையின் பிறகு சிக்கரி விலை மலிவு. மேலும் சிக்கரி தூளை தயாரிப்பதும் எளிது என்பதால் சிக்கரி காஃபி கலவை வேகமாக ஃப்ரான்ஸ் முழுவதும் பிரபலமாகியது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வறுத்து பொடித்து காஃபியுடன் கலக்கப்படும் சிக்கரி வேரின் உபயோகம் பரவலாக துவங்கி, சிக்கரி வணிகம் ஃப்ரான்ஸில் வேர் பிடித்தது. ஃப்ரான்ஸின் காஃபி இறக்குமதி தடை நீங்கி பொருளாதார நிலை சற்று மேம்பட்ட பின்னரும், சிக்கரியின் மென் கசப்புடன் காஃபி அருந்துவதற்கு மக்கள் பழகி விட்டிருந்ததால் காஃபியுடன் சிக்கரி கலப்பது அங்கு வாடிக்கையாகி விட்டிருந்தது.
நெப்போலியன் தடையை நீக்கிய 1860ல் மட்டும் ஃப்ரான்ஸ் 16 மில்லியன் பவுண்டுகள் சிக்கரியை ஏற்றுமதி செய்தது. அன்று துவங்கி இப்போது வரை உலகப்புகழ் பெற்றகாஃபி நிறுவனமான Cafe Du Monde சிக்கரி காஃபி தூளை தயாரித்து வருகிறது.
அதே நூற்றாண்டில் சிக்கரியின் உறக்கம் உண்டாக்கும் திறன் கண்டறியப்பட்ட பின்னர், கேஃபீன் (caffeine) ஆல்கலாய்ட் தூக்கமிழக்க செய்வதால்காஃபியின் பயன்பாட்டை குறைத்து கொண்டிருந்தவர்களும் அதை சமன் செய்யும் சிக்கரியை காஃபியில் கலக்கத் துவங்கி, இதன் பயன்பாடு மேன்மேலும் அதிகரித்தது.
1835, ல் ஃப்ரான்ஸ் 1.25 மில்லியன் பௌண்டுகள் சிக்கரியை ஏற்றுமதி செய்திருந்தது. 25 வருடங்கள் கழித்து இது 16 மில்லியன் பவுண்டுகளானது. அதே காலகட்டத்தில் பெல்ஜியமும் டென்மார்க்கும் ஏறக்குறைய ஃப்ரான்ஸ் அளவிற்கே சிக்கரியை பயன்படுத்தினார்கள்.
ஃப்ரெஞ்சுகாரர்களிடமிருந்து பிரிட்டிஷாருக்கு அறிமுகமாயிருந்த சிக்கரி, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவிற்கும் அறிமுகமானது. இந்தியாவில் சிக்கரி காஃபி கலவை பலரின் விருப்ப பானமாகியது.
1861லிருந்து 1865 வரை நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டு போரின் போது சிப்பாய்கள் காஃபி தட்டுப்பாட்டை சமாளிக்க சிக்கரியை காஃபித்தூளுடன் கலந்து பருக துவங்கினர்.
1832ல் சிக்கரி மேலும் அதிகமாக பிரபலமாக அப்போதைய ராணுவ ஜெனரல் ஆன்ட்ரூ ஜாக்ஸன் காரணமானார். சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருந்த ரம் மற்றும் பிராந்திக்கு பதிலாக சிக்கரி கலந்தகாஃபியை அறிவித்தார். அப்போது காஃபி இறக்குமதி 12 மில்லியனிலிருந்து ஒரே தாவலில் 38 மில்லியன் புவுண்டுகளானது.
அக்கால கட்டத்தில் ஒவ்வொரு 100 கிலோ காப்பித்தூளுக்கும் 2 பவுண்டுகள் சிக்கரி கலப்பது வழக்கத்தில் இருந்தது.
1876ல் சிக்கரி- சர்க்கரை-காஃபி கலவையை கொதிக்க வைத்த அடர் திரவம் கேம்ப்காஃபி என்னும் பெயரில் ஸ்காட்லாந்தின் Paterson & Sons நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாலைக் கலந்தால் போதும் மிக சுவையான காஃபி தயாராகும் என்பதால் இந்த கேம்ப்காஃபி தீயாய் பரவியது. இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போதுதான் பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு கேம்ப்காஃபி கொடுக்கப்பட்டது. இன்றும் இதே கேம்ப்காஃபி ஸ்காட்லாந்து சந்தைகளில் கிடைக்கிறது.
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த இந்திய சிப்பாய்களின் விருப்ப பானமாக இருந்த கேம்ப்காஃபி தமிழக மற்றும் கேரளத்துக்கும் அவர்களால் அறிமுகபடுத்தப்பட்டு பிரபலமானது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியின் பாட்டாளி மக்களின் வாழ்வில் சிக்கரி காஃபி அருந்துதல் அன்றாட வழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டிருந்தது. அதுவரை கஞ்சி அல்லது சூப்பாக இருந்த அவர்களின் காலையுணவு, ஒரு பெரிய கிண்ணம் நிறைய சிக்கரி காஃபியும் ரொட்டியுமாக மாறியது.
இப்போது உலகெங்கிலும் சிக்கரி-காஃபி கலவை பலரின் விருப்ப பானமாக இருக்கிறது.காஃபியினால் உண்டாகும் தூக்கமிழப்பு மற்றும் கேஃபீன் இல்லாத சிக்கரி அகிய இரண்டு காரணங்களால் இது தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறது. அசல் காஃபியின் சுவையை சிக்கரி பாழாக்கி விடுகிறதென்று சொல்பவர்களும் சிக்கரியை விரும்புவோருக்கு இணையாகவே இருக்கின்றனர்.
உலகளாவிய சிக்கரி சந்தை 2027ல் 316.71 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
காசனை அல்லது காசினி என்றும் அழைக்கப்படும் இயற்கையாக வளரும் காட்டு சிக்கரியின் தாவர அறிவியல் பெயர் Cichorium intybus. சிக்கரி என்னும் சொல் ஃப்ரெஞ்ச் சொல்லான சிகோரி (chicoree) என்பதிலிருந்து பெறப்பட்டது. பேரினப்பெயரான சிக்கோரியம் என்பது கிரேக்க மற்றும் லத்தீனத்தில் ’நிலத்தில்’ என்றும் சிற்றினப்பெயர் இண்டிபஸ் என்பது ’பிளவுகளுள்ள இலை விளிம்புகளையும், வெற்று நடுப்பகுதியைகொண்ட அதன் தண்டுகளையும்’ குறிக்கிறது.
Cichorium intybus var. sativum என்பது காஃபியில் கலக்கப்படும் சிக்கரித்தூளை கொடுக்கும் வேர்களுக்காக பயிரிடப்படும் வேர்சிக்கரி. தாவர அறிவியல் பெயர்களில் சட்டீவம் என்றால் சாகுபடி செய்யப்படும்/ பயிரிடப்படும் என்று பொருள். cichorium intybus var. foliosum என்பது இலைச்சிக்கரி..
டேண்டெலையன் செடிகளை ஒளியற்ற இடங்களில் வளர்த்து அதன் வேரின் கசப்பு சுவையை குறைக்கும் forcing என்னும் ஒளி படாத இடங்களில் செடியை வளர்க்கும் முறை பெல்ஜியத்திலும் அருகிலுள்ள பிரதேசங்களிலும் இருந்துவந்தது.
1875ல் பெல்ஜியம் அரசரின் தோட்டக்காரர் அதே முறையை சிக்கரி செடிகளுக்கும் பயன்படுத்தி முதல் சிக்கரி இலை மொட்டுகளுக்கான கலப்பினமான Cichorium endivia வை வெற்றிகரமாக உருவாக்கினார். endives என பொதுவில் அழைக்கப்படும் இவை, வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில் வாழைப்பூக்களைபோல அடர் இலை மொட்டுக்களை கொண்டிருக்கும் குறைந்த கசப்பு சுவையுடன் இருக்கும் இவை இன்றும் பெல்ஜியம் மக்களின் விருப்பத்துக்குரியது.
இலைமொட்டு சிக்கரியிலும். Cichorium endivia var. crispum எனப்படும் சுருள் சுருளான இலைகளைக் கொண்டிருக்கும் வகையும்(Curly endive) Cichorium endivia var. latifolium எனப்படும் நீண்ட இலைகளை கொண்டிருப்பவையுமாக (escarole) இரு வேறு வகைகள் உள்ளன. சுருள் கீரைகளை காட்டிலும் எஸ்கரோல் கீரைகள் அகலமாகவும் கசப்பு குறைவாகவும் இருக்கும்.இவை chicon, மற்றும் Witloof chicory என்றும் அழைக்கப்படுகின்றன.
சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த சிக்கரி செடி ஒரு பல்லாண்டுத் தாவரம். இவை 40-110 செ மீ உயரம் வரை வளரும். வரிகள் கொண்ட உறுதியான ஒற்றை தண்டும், சிறிதளவு பளபளப்பு கொண்டிருக்கும் கிளைகளையும் கொண்டிருக்கும். செடியின் அடிப்புறத்தில் இலைகள் வட்ட வடிவத்தில் மலரிதழ்களைப்போல் அமைந்திருக்கும் இலைப் பரப்பின் அடிப்பகுதியில் மெல்லிய வளரிகள் படர்ந்திருக்கும். இலை விளிம்புகள் ஆழமான ஒழுங்கற்ற மடிப்புக்களை கொண்டிருக்கும். தண்டுகளின் இலைகளும் இதே அமைப்பில்தான் இருக்குமென்றாலும் அடியிலைகளை காட்டிலும் சிறிய அளவில், குறைவான மடிப்புக்களை கொண்டிருக்கும். உறுதியான வேர்கள் நிலத்துக்கு கிழே 5 அடிவரை வளரும்.
கூட்டு மலர்மஞ்சரிகளில் (Synflorescence) பிரகாசமான நீல நிற மலர்கள் தோன்றும். அரிதாக வெள்ளை மற்றும் சிவப்பு மலர்கள் தோன்றுவதுண்டு. தட்டையான நீளமான மஞ்சரித்தண்டு 15 லிருந்து 20 மலர்களைக் கொண்டிருக்கும். சிறிய வெடியா உலர் கனிகள் இழைகளுடன் இருக்கும்.(non dehiscent dry fruit-Achene)
இலைகள், மலர்கள்.விதைகள் மற்றும் வேர்களில் புரதம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், ஃபாஸ்பரஸ், செலினியம் போன்ற பல நுண் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வேரிலிருக்கும் இனுலின் என்னும் இயற்கை நார்ச்சத்து சமீப காலங்களில் சிக்கரியின் மற்றொரு முக்கியமான பயன்பாடாகி இருக்கிறது.
.21 ஆம் நூற்றாண்டிலிருந்து சர்க்கரையின் பதிலியாகவும், இயற்கை நார்ச் சத்துக்காகவும், உடலாரோக்கியத்துக்கு மிக அவசியமானது (prebiotic) என்பதால் இனுலின் தயாரிப்பிற்காகவும், சிக்கரி இப்போது வெகுவாக பயன்பாட்டில் இருக்கிறது. பொதுவாக, பயிரிட்ட 120 நாட்களில் மலர்கள் தோன்றிய பின்னர் வேர் அறுவடை செய்யப்படும். பயன்படும் பாகங்களைப் பொறுத்து, இவற்றில் 2 வாரங்களிலிருந்து 1 வருடம் வரை அறுவடை செய்யப்படும் வகைகளும் உள்ளன.
கிருமித் தொற்றுக்கு எதிரானது, வலி நிவாரணி, இதயம் மற்றும் ஈரலை பாதுகாப்பது, உறக்கம் கொடுப்பது, புண்களை ஆற்றுவது என சிக்கரியின் மருத்துவ பயன்கள் அதிகம்.
இந்தியாவிற்கு சாகுபடிக்கான சிக்கரி பயிர் 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் யூரோப்பியர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய விவசாயிகள் தாங்கள் அதுவரை பயிரிட்டுக் கொண்டிருந்த சிக்கரி பயிர் வணிக ரீதியாக தரமானது அல்ல என்பதைப் பின்னர் அறிந்துகொண்டார்கள். தேர்ந்தெடுத்த சிக்கரி கலப்பின வகைகள் அதன் பிறகு அதிக அளவில் இந்தியாவில் பயிராகின.
சாதகமான காலநிலைகள் குஜராத்திலும் உத்தரபிரதேசத்திலும் இருப்பதால் இந்தியாவின் மொத்த சிக்கரி உற்பத்தியில் 97 சதவீதம் அந்த மாநிலங்களில்தான் பயிராகின்றது. இந்தியாவின் சிக்கரி ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்தவாறே இருக்கிறது.
உலகின் மொத்த சிக்கரி உற்பத்தியில் பாதியை கொடுக்கும் பெல்ஜியம் முதலிடத்திலும், தொடர்ந்து பிரான்ஸ், போலந்து, நேதெர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவும் இருக்கின்றன. சிக்கரியின் முன்னணி ஏற்றுமதியாளராக ஸ்பெயினும் முன்னணி இறக்குமதியாளராக ஜெர்மனியும் இருக்கின்றன. சிக்கரி வேர்ச்செடி உலகின் 20 நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு (2014ல்) நேதர்லாந்திலிருந்து சீனாவுக்கு அறிமுகமான சிக்கரி அங்கு பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக சீனாவில் சிக்கரி பசுங்குடில்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
சிக்கரி வேர்கள் இயந்திரங்கள் கொண்டு பிடுங்கப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, வறுத்தெடுக்கப்பட்டு, அரைத்து தூளாக்கி சந்தைப்படுத்தப் படுகிறது.
உணவு தரக்கட்டுபாட்டு விதிகளின்படி உலகெங்கிலும் 20% to 45% சிக்கரியைகாஃபியில் கலக்க அனுமதி இருக்கிறது. தென்னிந்தியாவில் காஃபியில் கலக்கப்படும் சிக்கரியின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை காட்டிலும் அதிகம். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில். 45%லிருந்து 50% சதவீதம் வரை சிக்கரி கலக்கபட்ட பிரபல உடனடி காஃபி வகைகள்(instant) இந்திய சந்தைகளில் இருக்கின்றன.
கோவிட் தொற்றினால் பணியாளர்கள் இல்லாமல் காஃபி தோட்டங்களில் அறுவடை குறைந்து, 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு காஃபியின் விலை இப்போது கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. கிலோ ₹ 1, 200–1, 500 க்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்த சிக்கரியின் விலையும் ₹2,350 ஆக உயர்ந்து விட்டிருக்கிறது.
சிக்கரியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதைகள் அறிந்த சுவை இருக்கிறது. இதுவரை முயற்சிக்காதவர்கள் இதன் பொருட்டேனும் முயற்சிக்கலாம்.
https://www.etymonline.com/word/dandelion -டாண்டெலையன் என்பது ஃப்ரெஞ்சுச் சொல்லிலிருந்து வந்த பெயர். dent de Lion- சிங்கப் பல். கொடுக்கப்பட்ட வேர்ச்சொல் விளக்கப் பக்கம் இந்தச் சொல் டாண்டெ என்பது இந்திய மொழிகளிலும் உள்ள ஒரு சொல் என்று கவனிக்கிறது. தந்தம், தாந்த் போன்றன அவை.